பெரிய திருமொழி
மூன்றாம் பத்து
நான்காம் திருமொழி
ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி
உலகனைத்தும் ஈரடியாலொடுக்கி * ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாளணைவீர் ! * தக்ககீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி யைந்தும்
அங்கங்களவை யாறும் இசைகளேழும் *
தெருவில் மலிவிழா வளமும் சிறக்கும், காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. 3.4.1 காழிச்சீராம விண்ணகரம்
நான்முகன் நாள்மிகைத் தருக்கை, இருக்கு வாய்மை
நலமிகுசீர் உரோமசனால் நவிற்று * நக்கன்
ஊன்முகமார் தலையோட்டு ஊண் ஒழித்த எந்தை
ஒளிமலர்ச் சேவடி அணைவீர் ! * உழுசேயோடச்
சூன்முகமார் வளையளைவாய் உகுத்த முத்தைத்
தொல்குருகு சினையென்னச் சூழ்ந்தியங்க * எங்கும்
தேன்முகமார் கமலவயல் சேல் பாய், காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. 3.4.2 காழிச்சீராம விண்ணகரம்
வையணைந்த நுதிக்கோட்டு வராகமொன்றாய்
மண்ணெல்லாம் இடந்தெடுத்து மதங்கள் செய்து *
நெய்யணைந்த திகிரியினால், வாணன் திண்தோள்
நேர்ந்தவன் தாளணைகிற்பீர் ! * நெய்தலோடு
மையணைந்த குவளைகள் தம் கண்களென்றும்
மலர்க்குமுதம் வாயென்றும் கடைசிமார்கள் *
செய்யணைந்து களைகளையாது ஏறும், காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. 3.4.3 காழிச்சீராம விண்ணகரம்
பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து, முன்னாள்
பாய்விடைகள் ஏழடர்த்துப் * பொன்னன் பைம்பூண்
நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட
நின்மலன் தாளணைகிற்பீர் ! * நீலமாலைத்
தஞ்சுடைய இருள் தழைப்பத் தரளம் ஆங்கே
தண்மதியின் நிலாக் காட்டப் பவளந் தன்னால் *
செஞ்சுடர் வெயில் விரிக்கும் அழகார், காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. 3.4.4 காழிச்சீராம விண்ணகரம்
தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு
திருக்குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து *
வெவ்வாய மாகீண்டு வேழம் அட்ட
விண்ணவர் கோன் தாளணவீர் ! * விகிர்தமாதர்
அவ்வாய வாள் நெடுங்கண் குவளை காட்ட
அரவிந்தம் முகம் காட்ட * அருகே ஆம்பல்
செவ்வாயின் திரள் காட்டும் வயல் சூழ், காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. 3.4.5 காழிச்சீராம விண்ணகரம்
பைங்கண் விறல் செம்முகத்து வாலி மாளப்
படர் வனத்துக் கவந்தனொடும் * படையார் திண்கை
வெங்கண் விறல் விராதனுக விற்குனித்த
விண்ணவர் கோன் தாளணைவீர் ! * வெற்புப் போலும்
துங்கமுக மாளிகை மேல் ஆயங்கூறும்
துடியிடையார் முகக்கமலச் சோதி தன்னால் *
திங்கள் முகம் பனிபடைக்கும் அழகார், காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. 3.4.6 காழிச்சீராம விண்ணகரம்
பொருவில் வலம்புரி அரக்கன் முடிகள் பத்தும்
புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த *
செருவில் வலம்புரி சிலைக்கை மலைத்தோள் வேந்தன்
திருவடி சேர்ந்து உய்கிற்பீர் ! * திரை நீர்த்து எள்கி
மருவி வலம்புரி கைதைக் கழியூடாடி
வயல் நண்ணி மழைதரு நீர் தவழ் கால்மன்னித் *
தெருவில் வலம்புரி தரளம் ஈனும், காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. 3.4.7 காழிச்சீராம விண்ணகரம்
பட்டர வேரகலல்குல் பவளச் செவ்வாய்
பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாம் இன்சொல் *
மட்டவிழும் குழலிக்கா, வானோர் காவில்
மரம் கொணர்ந்தான் அடியணைவீர் ! * அணில்கள் தாவ
நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ
நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு * பீனத்
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும், காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. 3.4.8 காழிச்சீராம விண்ணகரம்
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப்
பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்துக் *
கறை தங்குவேல் தடங்கண் திருவை, மார்பில்
கலந்தவன் தாள் அணைகிற்பீர் ! * கழுநீர்கூடித்
துறை தங்கு கமலத்துத் துயின்று, கைதைத்
தோடாரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணிச் *
சிறை வண்டு களிபாடும் வயல் சூழ், காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. 3.4.9 காழிச்சீராம விண்ணகரம்
செங்கமலத்து அயனனைய மறையோர், காழிச்
சீராமவிண்ணகர் என் செங்கண்மாலை *
அங்கமலத் தடவயல் சூழ் ஆலிநாடன்
அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் *
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன்
கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன *
சங்கமுகத் தமிழ் மாலை பத்தும் வல்லார்
தடங்கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. 3.4.10 காழிச்சீராம விண்ணகரம்