பெரிய திருமொழி
நான்காம் பத்து
நான்காம் திருமொழி
மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும்
மற்றவர்தம் காதலிமார் குழையும் * தந்தை
கால்தளையும் உடன்கழல வந்து தோன்றிக்
கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர் *
நூற்றிதழ் கொளரவிந்தம் நுழைந்த பள்ளத்து
இளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின் *
சேற்றளையில் வெண்முத்தம் சிந்தும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே. 4.4.1 திருத்தெற்றியம்பலம்
பொற்றொடித்தோள் மடமகள் தன் வடிவு கொண்ட
பொல்லாத வன்பேய்ச்சி கொங்கை வாங்கிப் *
பெற்றெடுத்த தாய் போல மடுப்ப, ஆரும்
பேணா நஞ்சுண்டுகந்த பிள்ளை கண்டீர் *
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்
இருஞ்சிறைய வண்டொலியும் * நெடுங்கணார்தம்
சிற்றடி மேல் சிலம்பொலியும் மிழற்றும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே. 4.4.2 திருத்தெற்றியம்பலம்
படலடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப்
பசுவெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும் *
அடலடர்த்த வேற்கண்ணார் தோக்கை பற்றி
அலந்தலைமை செய்துழலும் ஐயன் கண்டீர் *
மடலெடுத்த நெடுந்தெங்கின் பழங்கள் வீழ
மாங்கனிகள் திரட்டுருட்டா வருநீர்ப் பொன்னி *
திடலெடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே. 4.4.3 திருத்தெற்றியம்பலம்
வாராரும் முலைமடவாள் பின்னைக்காகி
வளைமருப்பில் கடுஞ்சினத்து வன்தாளார்ந்த *
காரார் திண் விடையடர்த்து வதுவையாண்ட
கருமுகில் போல் திருநிறத்து என்கண்ணன் கண்டீர் *
ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி, எங்கும்
எழில்மதியைக் கால் தொடர விளங்கு சோதிச் *
சீராரும் மணிமாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே. 4.4.4 திருத்தெற்றியம்பலம்
கலையிலங்கும் அகலல்குல் கமலப்பாவை
கதிர்முத்த வெண்ணகையாள் கருங்கணாய்ச்சி *
முலையிலங்கும் ஒளிமணிப் பூண்வடமும் தேய்ப்ப
மூவாத வரை நெடுந்தோள் மூர்த்தி கண்டீர் *
மலையிலங்கு நிரைச் சந்தி மாடவீதி
ஆடவரை மடமொழியார் முகத்து * இரண்டு
சிலைவிலங்கி மனஞ்சிறை கொண்டிருக்கும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே. 4.4.5 திருத்தெற்றியம்பலம்
தான்போலும் ஏன்றெழுந்தான் தரணியாளன்
அதுகண்டு தரித்திருப்பான் * அரக்கர் தங்கள்
கோன்போலும் ஏன்றெழுந்தான் குன்றமன்ன
இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர் *
மான் போலும் மென்னோக்கின் செய்ய வாயார்
மரகதம் போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு *
தேன்போலும் மென்மழலை பயிற்றும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே. 4.4.6 திருத்தெற்றியம்பலம்
பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப்
பொல்லாத குறளுருவாய்ப் பொருந்தா வாணன் *
மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு
மண்ணகலம் குறையிரந்த மைந்தன் கண்டீர் *
கொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த
குங்குமத்தின் குழம்பளைந்த கோலந்தன்னால் *
செங்கலங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே. 4.4.7 திருத்தெற்றியம்பலம்
சிலம்பினிடைச் சிறுபரல் போல் பெரிய மேரு
திருக்குளம்பில் கணகணப்பத் திருவாகாரம்
குலுங்க * நிலமடந்தை தனை இடந்து புல்கிக்
கோட்டிடை வைத்தருளிய எங்கோமான் கண்டீர் *
இலங்கிய நான்மறை யனைத்தும் அங்கமாறும்
ஏழிசையும் கேள்விகளும் எண்திக்கெங்கும் *
சிலம்பிய நற்பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே. 4.4.8 திருத்தெற்றியம்பலம்
ஏழுலகும் தாழ்வரையும் எங்கும் மூடி
எண்திசையும் மண்டலமும் மண்டி * அண்டம்
மோழை யெழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்
முன்னகட்டி லொடுக்கிய எம் மூர்த்தி கண்டீர் *
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து
ஓங்கிய நான்மறை யனைத்தும் தாங்கு நாவர் *
சேழுயர்ந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே. 4.4.9 திருத்தெற்றியம்பலம்
சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலைக் *
கூரணிந்த வேல் வலவன் ஆலிநாடன்
கொடிமாட மங்கையர் கோன் குறையலாளி *
பாரணிந்த தொல்புகழான் கலியன் சொன்ன
பாமாலை இவை யைந்து மைந்தும் வல்லார் *
சீரணிந்த உலகத்து மன்னராகிச்
சேண்விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே. 4.4.10 திருத்தெற்றியம்பலம்