[highlight_content]

Thiruppavai 2000Padi Vyakya

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

திருநாராயணபுரம் ‘ஆய்’ ஜநந்யாசார்ய ஸ்வாமி

அருளிச்செய்த ஈராயிரப்படி வ்யாக்யானம்

திருப்பாவை – முதற்பாட்டு

மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

        நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்*

        சீர்மல்கு மாய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

        கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*

                ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்*

        கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்*

        நாராயணனே நமக்கே பறைதருவான்*

        பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – முதற்பாட்டுக்கு வாக்யார்த்தம் – “ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் நாராயணனே”  என்று அருளிச் செய்கிறார்.

வ்யாக்யானம் – (மார்கழித் திங்கள்) க்ருஷ்ணனோடே தங்களைக் கூட்டின  காலத்தைக் கொண்டாடுகிறார்கள்.  “க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம்” என்று நிலைநின்ற தர்மத்தைப் பற்றுகிற காலம்.  மழை விழுந்து ஹ்ருதயம் குளிர்ந்து ஸத்வோத்தரமான காலம்.  மலையின் உச்சியில் கிடந்த ஸஸ்யங்களும்,  நிலத்தில் கிடந்த ஸஸ்யங்களும் ஒக்கப் பருவம் செய்யும் காலம்.   “சைத்ர: ஶ்ரீமாநயம் மாஸ:”  என்று பெருமாளை அநுபவிக்க வந்தவர்கள் சைத்ரமாஸத்தைக் கொண்டாடினாற்போலே, மார்கழி மாஸத்தைக் கொண்டாடுகிறார்கள்.  (மார்கழித் திங்கள்) “மாஸாநாம் மார்கஶீர்ஷோஹம்” என்று எம்பெருமானும் அபிமானித்த மாஸமாகையாலே வைஷ்ணவமாஸம்.

(மதிநிறைந்த) “ஆபூர்யமாணே பக்ஷே புண்யே நக்ஷத்ரே” என்று பூர்வபக்ஷமுமாகப் பெற்றது.  (மதி நிறைந்த) பஞ்சலக்ஷம் குடியில் சந்த்ரர்களும் திரண்டநாள்.  “திங்கள் திருமுகத்துச் சேயிழையா”ரிறே (திருப்பாவை – 30). (மதி நிறைந்த நன்னாள்)  “அத்ய மே ஸபலம் ஜந்ம   ஸுப்ரபாதா ச மே நிஶா” என்று கம்ஸ ஸம்பந்தத்தாலே “விடிவு காணப் புகா நின்றோமே?” என்றிருந்த அக்ரூரனுக்கு விடிந்தாற்போலே விடிந்த நாள்.  (நன்னாளால்) ப்ரக்ருத்யாத்ம விவேகம் பிறந்த நாள். 

(நீராட) அவனைப் பிரிந்த காலமாகையாலே ஶீத காலமே கோடைக்காலமாய்,  விரக தாபமாறக்குளிக்கை.   எம்மடுவிலேதான் இவர்கள் நீராடுகிறதென்னில்;  “தயரதன் பெற்ற மரதக மணித்தட”திலேயிறே (திருவாய் –10.1.8). தங்கள் குணசேஷ்டிதங்களாலே வையிரவுருக்காக உருக்கிவைத்தார்களாகக் கொள்ளீர்  க்ருஷ்ணனை.  (நீராட) என்றது – மாறி மாறித் தங்கள் மெல்லிய தோளிலே அவன் தோயவும், இவர்கள் அவன் மார்பிலே தோயவுமிறே.  அதாவது – “அப்பன் திருவருள் மூழ்கினள்”   (திருவாய்–8.9.5) இறே.  (போதுவீர்)  இச்சா மாத்ரமே அதிகாரம்.  (போதுவீர் போதுமினோ)  அம்மடுவில் இறங்கும் போது தனி இறங்கவொண்ணாதாய்க் கொள்ளீர்.  “ஏக: ஸ்வாது ந புஞ்ஜீத” என்று – நல்லது கண்டால் தனி புஜிக்குமவர்களன்றிறே. (போதுவீர் போதுமினோ) போருகை தானே ப்ரயோஜநம்.  “அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண” இறே.  (நான்முகன் திரு –39).  அவ்விஷயத்துக்குத் தனி வர்த்தகமானவோபாதி இவ்விஷயத்துக்குத் திரள் வர்த்தகம்.  “தொண்டீரெல்லோரும் வாரீ”ரிறே (திருவாய் – 5.2.3) (நேரிழையீர்) மார்கழி நீராடவென்று நினைப்பிட்டபின்பு பெண்கள் உடம்பிலே பிறந்த செவ்வி.  “உருவுடையார்” (நாச்.திரு – 1.6) என்றபடி வடிவழகு அமைந்திருக்கிறது.  ப்ரதிபத்தியை ஆபரணமாகவுடையார்.

(சீர்மல்குமாய்ப்பாடி) கண்டவிடமெங்கும் க்ருஷ்ணன் தீம்புகளும் அவன் வார்த்தை களுமாய்ச் செல்லுகை. “கோவிந்த தாமோதர மாதவேதி”.  (செல்வச்சிறுமீர்காள்) பெண்களுக்கு ஶ்ரீமத்தையாவது லக்ஷ்மணோ லக்ஷ்மிஸம்பந்ந:” என்று இளையபெருமாளைப் போலேயிருக்கை. (சிறுமீர்காள்) “மறந்தும் புறந்தொழா மாந்தர்”  (நான்முகன்..திரு–68).

(கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்)   நம் அபேக்ஷிதம் செய்து தலைக்கட்டுவான் ஒருவன்;  (கூர்வேல்) பெரியாழ்வார் மகளிறே;  அங்குத்தைக்குக் காவல் உண்டென்று தரித்திருக்கிறாள்.  பிள்ளை பிறந்தவாறே வேலைக் கடைய விட்டான்.  “மாணிக்கமே என் மணியே” யிறே (பெரியாழ்வார் திரு– 2.4.9).  இது உடையவர்கள் காலிலேயிறே லோகமாகக் குனிவது.  (நந்தகோபன்)  “நந்தாமி பஶ்யந்நபி  தர்ஶநேந பவாமி த்ருஷ்ட்வாச புநர்யுவேவயுவேவ வஸுதேவோபூத் விஹாப்யாகதாம் ஜராம்” – பிள்ளையைக் கண்ட ப்ரீதியாலே  ஆநந்தத்தை உடையவனாகவுமாம்.  நரை திரை மாறி இளகிப்பதித்தபடி என்றுமாம்.  (குமரன்) சக்ரவர்த்தி திருமகன்போலே விநயம் பாவித்திருப்பன்.  

(ஏரார்ந்த கண்ணி)  “ஸதா பஶ்யந்தி”  என்று பிள்ளையைக் காண்கைக்குத் திறந்திடு வாஶலாக நிலைக்கதவைப் பிடுங்கி பொகட்டக் கண்கள்.  தமப்பனார் கையிலே வேல் ஒன்றுங்கொண்டு நோக்கும்.  “அம்பன்னக் கண்ணாள் யசோதை” (பெரிய.திரு – 6.8.6)  ஆகையாலே இவள் முகத்தில் அம்பிரண்டு கொண்டு நோக்கும்.   (அசோதை) “அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாடவிட்டிட்டிருக்கும்” (நாச்சி.திருமொழி – 3.9).    அனுமதி பண்ணி நாட்டுக்கும்  யஶஸ்ஸைக் கொடுக்க வல்லள்.  (இளஞ்சிங்கம்) அவனுக்குக் குமரன், இவளுக்கு இளஞ்சிங்கம்.  ஒருத்தரும் முடிசூட்டவேண்டா  அதுக்கு,     தானே     ம்ருகேந்த்ரமிறே.  கம்ஸனை முடியச்செய்யவல்ல மிடுக்குண்டாகை.

(கார்மேனி) நம்முடைய விடாயெல்லாம் தீரும்படியான அழகிய திருமேனி.  (கார்மேனி) ஆஶ்சர்யமான திருமேனி.  “நீலமேகநிப மஞ்ஜநபுஞ்ஜ ஶ்யாமகுந்தளம்” என்று ஆழ்வான் அருளிச் செய்தபடியே இருந்த திருமேனி.  அவர்கள் நீராடப் புக்கவாறே  பின்பு அவனுடம்பிலே இட்ட செவ்வி.  (செங்கண்) நம்பக்கல் வாத்ஸல்யாதிஶயத்தாலே  குதறிச் சிவந்த கண்கள்.  அஞ்சனகிரியில் இரண்டு தாமரைப் பொய்கைப்போலே.  (கதிர் மதியம் போல் முகத்தான்) தங்களாபத்துத் தீர அவனைக்கண்டால் நகடு கழற்றினச் சந்திரனைப் போல  இவர்களைக் கண்ட பின்பு  அவன் முகம் குளிர்ந்தபடி.  (கதிர்மதியம்) இவன் முகம் வெய்யிலிலே   நிலவை ஊட்டினாற்போலேயிருக்கை;  “சந்த்ரபாஸ்கர வர்ச்சஸம்”  “முளைக்கதிரை” (திருநெடு–14) என்று சொல்லும்படியிருக்கை.  ஆஶ்ரிதருக்கு நிலவு போல; அநாஶ்ரிதருக்கு வெய்யில் போலே.  ஆஶ்ரிதருக்குப் புனலுரு;  அநாஶ்ரிதருக்கு அனல் உருவாய் (திருநெடுந்.) இருக்கும்.  ஆஶ்ரிதருக்கு சந்த்ரன்;  அநாஶ்ரிதருக்கு ஆதித்யன்.  (போல் முகத்தான்) நகட்டு சந்திரனும் கார்கால ஆதித்யனும் போலல்லன்.  அம்முகத்தை உடையவன் என்னுமத்தனை.  “என் மகன் முகம் நேர் ஒவ்வாய்” (பெரியாழ்.திரு – 1.4.3) என்றும், சந்த்ரகாந்தாநநம் ராமம் என்றும் சொல்லுமாபோலே.

(நாராயணனே) கோவர்த்தனோத்தரணாதிகளாலே  அபலைகளான பெண்களுக்கும் கூடத் தெரியும்படி  ஈஶ்வரத்வம் இருபொறியிட்டுக்கொண்டு போருகையாலே இத்திருநாமத்தைச் சொல்லிற்று

 ஏஷ நாராயண: ஶ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந:

நாகபர்யங்கமுத்ஸ்ருஜ்ய  ஹ்யாகதோ மதுராம் புரீம்”।।

என்றார்களிறே.  ஸமிதைபாதி ஸாவித்ரி பாதியாகையன்றிக்கே  அவன்தானே செய்யக்கடவனென்கிறது “நாராயணனே” என்ற அவதாரணை.  (நமக்கே) அகிஞ்சனரான நமக்கு.  “வெறிதே அருள் செய்வர்” (திருவாய் – 8.7.8) என்றிருந்த நமக்கு.  ஸ்வயத்நஸாத்யன் என்றிராத நமக்கு.  (பறை தருவான்) நோன்புக்கு உபகரணங்களைப் பறை என்கிறது. அவனோட்டை ஸம்ஸ்லேஷம் அவர்களுக்குப் பறை.  நமக்குக் கைங்கர்யம்.  இது இடைச்சிகள் துடைப்பேச்சு.  ஸகோத்ரிகளறியுமித்தனை.

(பாரோர் புகழ) நன்மை தீமை யறியாதார் புகழ.  க்ருஷ்ணனையும் தங்களையும் சேரவொட்டாத இடையரும் இடைச்சிகளும் கொண்டாடும்படி, அநுகூலர் கொண்டாட, ப்ரதிகூலரும் கொண்டாட, இந்த ரஸமறியார்களாகிலும் நாமும் க்ருஷ்ணனும் சேர்ந்த சேர்த்தி கண்டு நாடு புகழ.  (படிந்து) அபிநிவேஶித்து முன்பு சொன்ன மடுவிலே அவகாஹித்து.  (படிந்து – நீராடப் போருங்கோள்) என்று கீழோடே அந்வயம்.  (ஏலோரெம்பாவாய்) இது பாதபூர்ணார்த்தமான அவ்யயம்.  ஏல் – கேள்;  ஓர் – இத்தை அறுதியிட்டுக்கொள்.  எம்பாவாய் – எம் பிள்ளாய்.  நோன்புக்குச் சந்தஸ் என்றுமாம். 

@@@@@

இரண்டாம் பாட்டு

        வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு

        செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்

        பையத் துயின்ற பரமன் அடி பாடி

        நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே  நீராடி

                மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

        செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

        ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி

        உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

 வ்யாக்யானம் – இரண்டாம்பாட்டு.  (வையத்து வாழ்வீர்காள்) வழியடி உண்கிற தேஶத்திலே முடிவைத்துக்கொண்டிருக்கிற பாக்யவதிகாள்! க்ருஷி பண்ணும் பூமியிலே பலம் புஜிக்கப் பிறந்த பாக்யவதிகாள்!

(நாமும்) “இந்தப்பலம் நமக்கொரு நாள் கைவரவற்றே?” என்று இருந்த நாமும்.  அவனாலே அவனைப்பெறவிருக்கிற நாமும்.  (நம் பாவைக்கு) நம்முடைய நோன்புக்கு.  “இந்த்ரஜித்து நிகும்பிலையிலே ஹோமம் பண்ணினாற்போலேயன்றிக்கே, சக்ரவர்த்தி நாலாஹுதி பண்ணி நாலு ரத்நத்தைப் பெற்றாற்போலே, நமக்கொரு நோன்பு கூடுவதே” என்று கொண்டாடுகிறார்கள்.  (செய்யும் கிரிசைகள்) செய்து தலைக்கட்டும் க்ரியைகள்.  (கேளீரோ) கேட்கைதானே உத்தேஶ்யம்.  ஶ்ரீநாரதபகவான் ஶ்ரீராமாயணத்துக்குப் போக்கு விட்டாற்போல் சொல்லியல்லது தரிக்கவொண்ணாதாய் இருக்கிறபடி.  இவள் ஆசார்யத்வம் ஆசைப்பட்டன்று;  இவர்கள் “சொல்லாய்” என்னச் சொல்லுகிறிலள்

(பாற்கடலுள் பையத்துயின்ற) திருப்பாற்கடலிலே ஆர்த்தருடைய ஆர்த்தநாதம் செவிப்படும்படி அவஹிதனாய்க்கொண்டு, மெத்தெனக் கண்வளர்ந்தருளினபடி; ஜகத் ரக்ஷணசிந்தையிறே.  .  (துயின்ற பரமன்)  உறக்கத்துக்கு ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கை.  “நம் பாற்கடல் சேர்ந்த பரமன்” இறே” (திருவாய் – 3.7.1);  “கிடந்ததோர் கிடக்கை” யிறே (திருமாலை – 23).  அநாஶ்ரிதருக்கு புலி  உறங்கினாற்போலே.  ஆஶ்ரிதர்க்கு என்றும் அபயமாயிருக்கும்.  தொட்டிற்காற்கடையிலே படுத்துக் கொள்ளும் தாயைப் போலே, ஸம்ஸாரார்ணவத்தின் நடுவே கிடக்கை.  (பரமன்) தகட்டிலழுத்தின மாணிக்கம் போலே திருவநந்தாழ்வான்மேலே சாய்ந்த பின்பு நிறம்பெற்றபடி. 

(பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம்) உண்டார்க்கு உண்ண வேணுமோ? பாலைக்குடித்து வேப்பங்காயைத்தின்னவேணுமோ? ஆனால் க்ருஷ்ணனைச் சொல்லாதே க்ஷீரார்ணவஶாயியைச் சொல்லுவானென்னென்னில்;  கோப வ்ருத்தர்கள் தளும்பாமைக்காக ஒரு தேவதையின்  பேரையிட்டுச் சொல்லுகிறார்கள். 

(நெய்யுண்ணோம் பாலுண்ணோம்) திருவடிகளைப் பாடுகையாலே  தெகுட்டி இவற்றால் கார்யமின்றிக்கே இருக்கை.  “நெய்யுண்ணோம்” என்கிறது –  க்ருஷ்ணன் பிறந்தபின்பு  முதலிலே வ்யுத்பத்தியில்லாமை.  (நெய்யுண்ணோம்) பாலில் ஸாரமான  நெய்யைத் தவிர்த்தவர்கள் பாலைத் தவிர்க்கக் கேட்கவேணுமோ?   (நாட்காலே நீராடி) “ப்ராஹ்மே முஹூர்த்தேஇத்யாதிப்படியே ராம விரஹத்தாலே பிறந்த வெக்கையை ஆற்றுதற்காக ஶ்ரீபரதாழ்வான் நீராட்டுப்போலே க்ருஷ்ண விரஹம் தின்ற உடம்பை நீரிலே தோய்க்க என்கிறார்கள்.  ஸாத்விகாக்ரேஸரர் எழுந்திருக்குமாபோலே எழுந்திருக்கை. 

(மையிட்டெழுதோம்) அஸிதேக்ஷணையாகையாலே வேண்டுவதில்லை.  அஞ்ஜந பர்வதத்தின் அந்தராத்மாவைப் பிடித்தாய்த்துக் கொள்ளீர்  இவள் மையெழுதுவது.  (மலரிட்டு நாம் முடியோம்) மாலை முடியோம்.  பறப்பதின் குட்டி தவழுமோ?  சூடிக்களைந்தன சூடுவர்களிறே (திருப்பல்லாண்டு – 9).  மாலாகாரர் மகளிறே.

(செய்யாதன செய்யோம்) விதியுண்டேயாகிலும்  பூர்வர்கள் ஆசரித்தபடியை ஒழிய  செய்யக்கடவோமல்லோம்.  “முடிசூடுகை ஶிஷ்டாசாரமல்ல” என்றிருந்த பரதாழ்வானைப் போல பஞ்சலக்ஷம் குடியிலே இருந்த பெண்களிலே ஒருத்தி  குறையிலும் க்ருஷ்ணன் பக்கல் போகோம் என்கிறார்கள்.  (தீக்குறளை சென்றோதோம்) நம்மில் நாம் “பேய்ப் பெண்ணே” (திருப்பாவை–7) என்று  சொன்னோமாகிலும் க்ருஷ்ணன் செவிகேட்க ஒரு குறை சொல்லோம்.  ஶ்ரீவைஷ்ணவர்கள்  பக்கல் தோஷங்கண்டால் கண்டது நெஞ்சோடே கூட்டோம் என்கிறார்கள்.  நெஞ்சோடே கூட்டுகை – அவனுக்குச் சொல்லுகை.   என் நெஞ்சகம் கோயில்கொண்ட” இறே (பெரிய திருமொழி–9.5.10) அந்தர்யாமியிறே.  “என் நெஞ்சு நிறையப் புகுந்தான்”இறே (திருவாய்–10.8.1) .  ஆகையாலே நெஞ்சோடே கூட்டோம் என்கிறார்கள். 

(ஐயமும் பிச்சையும்) முகந்து இடுகையும், பிடித்து இடுகையும்;  ஐயமாவது – யோக்யருக்கு இடுமது;  பிச்சையாவது – ஸந்யாஸிகளுக்கு இடுமது.  (ஆந்தனையும்) கொள்வாரைப் பெறுந்தனையும்;  கொடுக்கக் கொள்ளுவார்  கொள்ளவல்லராந்தனையும்.  (கைகாட்டி) எல்லாம் கொடுத்தாலும் “நாம் கொடுத்ததுண்டோ?”  என்று அத்தை அநாதரிக்கை.  ஔதார்யத்தின் மிகுதி இருக்கிறபடி.  (உய்யுமாறெண்ணி) இப்படிகளாலே பிழைக்கும் விரகெண்ணி.  (உகந்து) ப்ரீதைகளாய்.  (எண்ணியுகந்து) அநுபவிக்கும்படியை மநோரதித்து;  “உகந்து செய்யும் கிரிசைகள் கேளீரோ” என்று அந்வயம்.   

@@@@@

மூன்றாம் பாட்டு

        ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

        நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்

        தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாறி பெய்து

        ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகளப்

        பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்

        தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

        வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

        நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

வ்யாக்யானம் – மூன்றாம் பாட்டு.  (ஓங்கி) பிறர் கார்யம் செய்ய என்றால்  பணைக்கும் என்கை.  “உவந்த உள்ளத்தனாய்” (அமலநாதி – 2) இத்யாதி, –     பனியில் சாய்ந்த மூங்கில்  ஆதித்யகிரணங்கள் பட்டால் எழுமாபோலே ஓங்குகை.  வெய்யில் – ஆர்த்த நாதம்.  (உலகளந்த) ஏகதேஶத்தையன்றியே எல்லாரையுமடைய குணாகுண நிரூபணம் பண்ணாதே ரக்ஷிக்கை.   (உத்தமன்) தென்றலும் நிலவும்போலே  பிறர்க்கேயாய் இருக்கை.  “ந தே ரூபம்” இத்யாதிப்படியே.  நமக்கு “பகவத ஏவாஹமஸ்மி” போலே, அவனுக்கு “ந தே ரூபம் –  பக்தாநாம்” ஆகையும்;  ஆகையாலே உத்தமனானான்.  (பேர்) பிறர்க்கும் அவனுக்குமுள்ள வாசி போரும் திருநாமத்துக்கும் அவனுக்கும்.  கங்கா ஸ்நாநம் பண்ணுமவனுக்குப் பூர்வத்திலே ஸ்நாநம் வேண்டாதாப்போலே, இதுதானே எல்லாஶுத்தியும்.  (பேர்) இதுதான் எல்லா அதிகாரிகளுக்கும் அபேக்ஷிதம்;  கர்ம யோகிக்கு விரோதி போகைக்கும், கர்மம் செய்து தலைக்கட்டுகைக்கும்.  ஜ்ஞாநயோகிக்கு ஜ்ஞாநம் விஶதமாகைக்கும்  விரோதி போகைக்கும்.  பக்தியோகிக்கு பக்தி வர்த்திக்கைக்கும் விரோதி போகைக்கும்.  ப்ரபன்னனுக்கு சோறும் தண்ணீரும் போலேயாகைக்கும்  திருநாமம் போலில்லை என்றபடி.  (பாடி) “ஆர்வத்தால் பாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல” (பெரிய திருமொழி – 11.7.4) என்றிறே பாட்டுக்கு லக்ஷணம்.

(நாங்கள்) பாடாவிடில் தரியாத நாங்கள்.  உபாயம் அவனேயானால் தாரகமாம் அத்தனையிறே.  (நம் பாவைக்கு) பெறுவது க்ருஷ்ணனையாய், பெறுவிப்பானும் க்ருஷ்ணனேயான நோன்புக்கு.  (சாற்றி நீராடினால்) நாட்டுக்குப் புண்யம், நமக்கு விரஹஶமனம். 

(தீங்கின்றி நாடெல்லாம்) எல்லாப் பொல்லாங்குகளும் போக ஸேஶ்வரமான ஜகத்தடைய வாழ.  (திங்கள் மும்மாரி) நெடுநாள் மழையின்றிக்கே வ்யஸநப்பட்டாற் போலே வெள்ளத்தாலும் கேடாகாமே   ஒன்பது நாள் வெய்யில் எரித்து, ஒருநாள் தலைக்கு எண்ணெய் ஊறவிட்டாற்போலே நன்றாம்படி மழைபெய்ய வேணுமென்கை.  “யத்ர அஷ்டாக்ஷர” இத்யாதிவத்.  “நாட்டிலுள்ள பாவமெல்லாம்  சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே” (பெரியாழ்வார் திரு–5.4.3)  என்று சொல்லுகிறபடியே.

(ஓங்கு பெருஞ்செந்நெல்) கவிழ்ந்து நின்று முதலையிட்டு அநந்தரம் அண்ணாந்து பார்க்க வேண்டுகை.  மேல்நோக்கி உயரும் என்கை.  (ஊடு கயலுகள) “ஒண்மிதியில்” (திருநெடு – 5) என்னுமாபோலே பயிர் மேல் நோக்குந்தனையும் ஆனைக்கன்றுகள்போலே செறுக்கித் திரிகிற கயல்களுக்குத் தாவித் திரியலாம்படி இருக்கை. 

(பூங்குவளைப் போதில்) அழகிய குவளைப்பூவிலே;  “போது” என்று காலபரமாகவுமாம்.  கயலுடைய ஸஞ்சாரத்தாலே பூக்கள் நெகிழ்கிறபடி.  (பொறி வண்டு) ரஸாயந  ஸேவை பண்ணினாற்போலே நரை திரை மாறி இளகிப்பதித்திருக்கை.  (கண் படுப்ப) ஸௌக்யத்தாலே உறங்கி “நீ எழுப்பிற்றிலை நீ எழுப்பிற்றிலை” என்று உணர்ந்து விடிவோறே வெறுத்துத் தன்னில்தான் சீறுபாறென்கை.

(தேங்காதே புக்கிருந்து) இனி ஊரில் ஸம்ருத்தியைச் சொல்லுகிறது.  (தேங்காதே) திருவடி ஸமுத்ர தரணத்துக்கு  ஒருப்பட்டாற்போலே;  முத்துக்கு முழுகுவார்  கடலுக்கு இறாயாதாப்போலேயாய்த்து இறாயாதே புக்கபடி.  (இருந்து) பால் வற்றி எழுந்திருக்க விரகில்லை;  ஸ்தாவர ப்ரதிஷ்டைபோலே.  (சீர்த்த முலை பற்றி)  விரலாலே பிடிக்க வொண்ணாதே  இரண்டு கையாலே அணைக்கவேண்டும்படியிருக்கை.  (பற்றி வாங்க) தொட்டுவிட அமையும்.  (வாங்கக் குடம் நிறைக்கும்)  ஒருகால் பற்றி வலிக்க இட்ட  குடம் நிறைக்கை.  “வைப்பார் தாழ்வே;  வைத்தகுடமெல்லாம் நிறைக்கும்” என்றுமாம்.  (வள்ளல்) சிறுபிள்ளைகளும் கட்டி விடலாய், கழுத்தைக் கட்டிக்கொண்டு நாலலாயிருக்கை.  (பெரும் பசுக்கள்) க்ருஷ்ணனோட்டை ஸ்பர்ஶம் உண்டாகையாலே, ஶ்ரீ ஶத்ருஞ்ஜயனைப்போலே இருக்கை.  (நீங்காத செல்வம்) ஈஶ்வரன் பார்த்தவிடம் போலே ஸாவதியன்றிறே இவர்கள் பார்த்தவிடம். 

@@@@@

நான்காம் பாட்டு

       ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

        ஆழியுள் புக்கு முகந்துகொ(டு) ஆர்த்தேறி

        ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்

        பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்

        ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

        தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

        வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

        மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

 வ்யாக்யானம் – நாலாம்பாட்டு.  (ஆழிமழைக்கண்ணா)  பேரளவை உடைய வர்ஷத்துக்கு நிர்வாஹகனான வருணனே! (ஒன்று நீ கை கரவேல்) தந்தாம் பாக்யத்தளவிலே  கார்யம் செய்யும்போதன்றோ புதைத்துவிடவேண்டுவது.  எங்களுடைய பாக்யமன்றோ புஜிக்கப் புகுகிறது.   (ஆழியுள் புக்கு) முன்வாயிலே ஸகரர் கல்லின குழியிலொழிய, பெருங் கடலிலே புக்கு.  (முகந்துகொடு) பாதாளம் கிட்டி, மணலோடே பருகவேணும்.  (ஆர்த்தேறி) அநஶனத்திலே தீக்ஷித்த முதலிகள் திருவடி த்வநியைக் கேட்டு. இருந்த போதே எழுந்திருந்தாட, பிராட்டியைத் திருவடி தொழுத  ப்ரீதிப்ரகர்ஷத்தாலே  திருவடி ஆர்த்துக்கொண்டு வந்தாற்போலே வரவேணும்.  (ஏறி) “விஶ்ரம்ய விஶ்ரம்ய புந: ப்ரயாந்தி” கர்ப்பிணிகள் நகர்ந்து நகர்ந்து    பெரிய ஏற்றமேறுமாபோலே.  “மதயானை போலெழுந்த மாமுகில்காள்”  (நாச்சி. திரு – 8.9)  “விண்ணீல மேலாப்பு விரித்தாற்போலே (நாச்சி .திரு – 8.1) ஆகாஶாவகாஶமத்தனையும்  இடமடையும்படி   பார்த்துக் கொண்டு வரவேணும்.  (ஊழி முதல்வன் இத்யாதி) ஸ்ருஷ்டித்தால் இவை பண்ணும் நன்மை  தீமைக்குத் தக்கபடி  பார்க்கும் பார்வைபோலன்றிக்கே, ஸ்ருஷ்டிக்கு முன்பு எல்லாரையும் “ஐயோ” என்று ஒக்கப் பார்க்குமாபோலே, நீயும் இங்குத்தைக்கு  ஒத்திருக்கப் பார்க்கவேணுமென்று கருத்து.  “முன்னீர் ஞலம் படைத்த எம்முகில் வண்ணனிறே” (திருவாய்–3.2.1)  (உருவம்போல்) அகவாயில் நீர்மை உங்களால் தேடப் போகாது;  நிறத்தையாகிலும் கொள்ளுங்கோள்.   நாச்சியார் விழிவிழிக்கச் சொல்லுகிறார்கள்.  (மெய் கறுத்து)    அகவாயில் நீர்மை அவனுடைய நீர்மைக்கு நெருப்பு என்னலாம்.  (பாழி) “பாஹுச்சாயாம் அவஷ்டப்த:” ஒதுங்கின ரக்ஷ்யவர்க்கம் பொருந்தும்படி நிழல் மிக்கிருக்கை.  “நிவாஸவ்ருக்ஷஸ்ஸாதூநாம்”   (அந்தோள்) உழறு பால்.  ரக்ஷகமும் தானேயாய், போக்யமும் தானேயாகை.  “ஸுந்தரத் தோளுடை யானிறே” (நாச்சி திரு–9.1)   (பற்பநாபன்) “புத்ரஸ்தே ஜாத:” என்று ப்ரஹ்மாவை உண்டாக்கின அநந்தரம் பிறந்த ஒளி.  (கையிலாழி) வெறும் புறமே அமையும்;   அதுக்கு மேலே திருவாழி;  “நெய்யாராழி”யிறே;.  ஆழியொடும் பொன்னார் ஸார்ங்கமுடைய      அடிகளை இன்னாரென்றறியேன்”  (பெரிய திரு – 10.10.9);   இவர்களைச் சேர்க்கைக்குப் பரிகரமதுவே.  (வலம்புரிபோல் நின்றதிர்ந்து) பாரத ஸமரத்தில் முழக்கம் போலே இருக்கை. “பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்” (நாச்சி திரு–9.9), “கைகழலா நேமியான்” (பெரிய திரு – 87). (வலம்புரி) “உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்”  (நாச்சி .திரு – 7.8).

(தாழாதே) தேவதாந்தர பஜநம் பண்ணினாரைப் போலேன்றிக்கே. பகவத் ஸமாஶ்ரயணம் பண்ணினார்  பெறுமாபோலே, பெறவேணும்.  தேவமாத்ருகம் போலன்றிக்கே, பகவத்ஸமாஶ்ரயணம் நதீமாத்ருகம்போலே    சரதமென்கை.  (சார்ங்கம் உதைத்த) பெருமாள் கடைக்கணித்துப் பார்க்குந்தனையுமாய்த்துப் பார்ப்பது.   பின்னைத் தானே பராக்ரமிக்கும்.   அகம்படி கிளர்ந்தால் அரசனாலும்  விலக்கவொண்ணாது.  “சார்ங்கமென்னும் வில்லாண்டா”னிறே    (திருப்பல்லாண்டு – 12)   (சரமழை) “ஶரவர்ஷம் வவர்ஷ ஹ” (வாழ உலகினில் பெய்திடாய்) ஶரவ்ருஷ்டி பண்ண அன்று  ராக்ஷஸர்மேல் பட்டாற்போலன்றிக்கே, லோகமடைய வாழும்படி வர்ஷிக்கவேணும்.    (நாங்களும் இத்யாதி) நாங்களும் க்ருஷ்ணனும் மகிழ்ந்து நீராட.  “ப்ரஹர்ஷயிஷ்யாமி”   “நாங்கள் வியக்க இன்புறுதும்” (திருவாய்– 10.3.9) “ஏவமுக்தா ஹநுமதா மைதிலீ ஜநகாத்மஜா   உவாச தர்மஸஹிதம் ஹநூமந்தம் யஶஸ்விநீ।।” .

@@@@@

ஐந்தாம் பாட்டு

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்று மணி விளக்கைத்

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

வ்யாக்யானம் – அஞ்சாம்பாட்டு.  (மாயனை) தானே தன்னை அமைத்துத் தரும் அத்தனை அல்லது அணுகவும் பேசவும் ஒண்ணாதபடி  கரைக்கட்டாக் காவேரிபோலே இருக்கும்  பேரளவையுடைய ஶ்ரீவைகுண்டநாதன் என்கை.  (மன்னு வடமதுரை) பகவத்ஸம்பந்தம் மாறாத தேசம்.   (மன்னு இத்யாதி)  ஶ்ரீவைகுண்டத்தில் நின்றும் ஆர்த்த ரக்ஷணார்த்தமாக இங்கே பிறக்கையாலே  உளனானான்.  (வடமதுரை)  “மதுரா நாம நகரீ” (மைந்தனை)   பிறந்த போதே கம்ஸனை  முடிக்கவல்ல மிடுக்கென்றுமாம்.  மாதாபிதாக்களுடைய  காலிலே விலங்கு கழலும்படியிருக்கை என்றுமாம்.  பிள்ளை என்றுமாம். 

(தூய பெருநீர் யமுனை)  கலங்காப் பெருநகரை   (மூன்றாம் திருவந் – 51) விட்டவர்க்குத் திருவாய்ப்பாடிபோலே விரஜையை  மறக்க ஆறுமுண்டானபடி.  “ப்ரஸாதம் நிம்நகா யாதா”, கோதாவரியைப்போலே பிராட்டியைக் கும்பிடுகொண்டு  ஶரணாகத காதுகையாய் இராதே, கம்ஸனுக்கு அஞ்சிப் போகிறபோதைக்கு   உதவ வற்றியும்,   பெண்களுக்கும் க்ருஷ்ணனுக்கும் நீர் விளையாட்டு விளையாடுகைக்குப் பெருகுகையும்; இப்படி அடிமைக்குப் பாங்காயிருந்தபடி.  (தூய) க்ருஷ்ணனும் பெண்களும் மாறி மாறிக் கொப்பளித்த தூய்மையென்றுமாம்.  (பெருநீர்)  ஶ்லாக்யம் என்றுமாம்.  க்ருஷ்ணனுடையவும், பெண்களுடையவும் களவுக்குப் பெருநிலைநிற்கும்.  “பொருநல் சங்கணித் துறைவன்”   (திருவாய் – 10.3.11) என்னுமா போலே பெண்கள் படும் யமுனைத்துறையை உடையவன்.  கவிபாடுவார்க்கு ஊரும் பேரும்  ஆறும் உடையவனென்கை.       

(ஆயர்குலத்தினில் தோன்றும்) மதுரையில் பிறப்பு – பிறவாத ஶ்ரீவைகுண்டத்தோடு ஒக்கும்  திருவாய்ப்பாடியில் பிறப்பைப் பற்ற.    (தோன்றும்) “தேவகீ பூர்வ ஸந்த்யாயாம்“ “அஜோபிஸந்” இத்யாதிப்படியே. (மணிவிளக்கு)  புகையும் எண்ணெயுமில்லை அங்கு;   வெறும் மங்களதீபம்.  (தாயைக் குடல் விளக்கம் செய்த) பெற்ற வயிற்றுக்குப் பட்டம் கட்டுகை.  “கௌஸல்யா ஶுஶுபே  தேந புத்ரேணாமிததேஜஸா”   “என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்”  (பெரியாழ்வார் திரு–2.2.6)  (தாமோதரனை) நம்முடைய பந்தம் நம்மால் அறுக்கவொண்ணாதாப்போலே, அவனுடைய பந்தமும் அவனால் அறுக்கப்போகாது.  “ஶேஷியினுடைய திருவிலச்சினை” என்று பட்டர் அருளிச் செய்வர்.    (தூயோமாய்) அவன் இடையனாகக்கொண்டு  தாங்கள் இடைச்சியான ஶுத்தி;  க்ஷத்ரியன் இடையனானாப்போலே   ப்ராஹ்மணியும் இடைச்சியானபடி.  (தூயோமாய்) வாயிலும் முகத்திலும் நீராடாதே வருகை.  இருந்தபடியே வருகைக்கு சுத்தியும், அசுத்தியும் வேண்டா.  (வந்து நாம்) “உபஸ்தேயை ருபஸ்தித:” “பத்ப்யாம் அபிகமாச்சைவ” “ஹ்ரீரேஷா ஹி மமாதுலா” – அவன் செய்யுமத்தை நாம் செய்யக்கடவோம்.   “வந்துனதடியேன் மனம் புகுந்தாய்” – (பெரிய திருமொ – 3.5.1)) உபேயத்தில்  த்வரை பார்த்திருக்கவொண்ணாது;  அப்படியிருக்கிற நாம்.  (நாம்) நாமே செய்யவேணும்.  (தூமலர்) இலை வாணிபம் பண்ணாத மலர்.  “மிக்கசீர் தொண்டரிட்ட பூந்துளவு” (பெரிய திருமொ – 11.1.9) “சூட்டு நன்மாலைகள்” (திருவிரு – 21) இத்யாதி.  (தூவி) ப்ரணயினிக்கு சடங்கு வேண்டா.  (தொழுது) வீரன் தோற்றாற்போலே, தொழுவித்துக் கொள்ளுமவர்களிறே  தொழுகிறார்கள்.  “இது மிகையாதலில்” (திருவாய் – 9.3.9) அவன் பொறுக்கமாட்டாதே “ருணம் ப்ரவ்ருத்தமிவமே” என்னப் பண்ணுகை.  (வாயினால் பாடி) வாய் படைத்த ப்ரயோஜனம் பெறுகை.  (மனத்தினால் சிந்திக்க) ஜ்ஞானம் அநுஷ்டான ஶேஷம்.  அதுவொண்ணாதபடி வந்த அடைவுகேடு தோன்றாது.  (போய பிழையும் புகுதருவான் நின்றனவும்) பூர்வாக உத்தராகங்கள்.  (தீயினில் தூசாகும்) பூர்வாகமாவது – புத்தி பூர்வகமாகப் பண்ணிப் போந்தவை.  உத்தராகமாவது – பகவத் ஜ்ஞானம் பிறந்தால் ப்ரக்ருதி வாஸனையால்   ப்ராமாதிகமாகப் பிறந்தவை.  (செப்பு) சொல்லவமையும் என்கை.  (மாயனை இத்யாதி அடைவே செப்பு) என்று அந்வயம்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           

@@@@@.

ஆறாம்பாட்டு

       புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்

        வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ

        பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

        கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

        வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை

        உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

        மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

        உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ  ரெம்பாவாய்.

அவதாரிகை – ஆறாம் பாட்டு.  உணர்ந்தவர்கள் அடையச்சென்று உணராதவர்களை எழுப்புகிறார்கள். (புள்ளுமித்யாதி) பகவத் விஷயத்தில் புதியாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

வ்யாக்யானம் – (புள்ளுமித்யாதி) “போது விடிந்தது எழுந்திராய்” என்று ஶிஷ்டகர்ஹை பண்ணுகிறார்கள்.  நாழிகைவட்டில் நீர் நிரம்பினால் விழுமாபோலே இரையறுதியிலே உணரும் புள்ளும் சிலம்பினகாண்.  காலம் உணர்த்துவதாக முன்னே புள்ளும் உணர்ந்தன என்றுமாம்.  (புள்ளரையன் இத்யாதி) திருப்பள்ளியெழுச்சியில் ஶங்கத்வநியும் கேட்டிலையோ?  திருவாய்ப்பாடியில்  திருமுற்றம் உண்டோவென்னில்; உண்டு.  “பாலா அபி க்ரீடமாநா:” இத்யாதிப்படியே, ஒரு தோளே! தோள்மாலையே! ஒரு வளப்பமே! ஒரு முறுவலே! ஒரு நோக்கே! என்றாற்போலே சக்ரவர்த்தி திருமகன் பக்கலிலே பிள்ளைகளுமகப்படச் செல்லாநிற்க.  “ஸஹ பத்ந்யா விஶாலாக்ஷ்யா” என்று அவர் தாமும் பெரியபெருமாளை ஆஶ்ரயிக்குமாபோலே க்ருஷ்ணனையும் கும்பிடு கொள்வானொரு எம்பெருமானுண்டு.  (புள்ளரையன்) அவனுக்கு நிரூபக தர்மமாகப் பெரியதிருவடியை முன்னிடுகிறார்கள்.  “அப்புள்ளின் பின்போன தனி நெஞ்சமே” யிறே (திருவிருத்தம்–3).  “சங்கு வெளுக்குங்காட்டில் போது விடியுமோ?  அழைக்குங்காட்டில் நமக்குப்புறப்படவேணுமோ?  உங்களுக்கு எப்போதும் பாவனை இதுவேயிறே”.  “வெள்ளை விளி சங்கிடங்கையிற் கொண்ட விமலன்”  (நாச்சி.திரு–5.2) என்றும், “பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்”  (நாச்சி திரு – 9.9) என்றுமுண்டிறே.   (பேரரவம்) நீ உணரும்படிக்குப் போரும் த்வநி என்கிறார்கள்.  (கேட்டிலையோ) “இதுவும் கேளாத படியோ அங்குத்தை அந்யபரதை” என்று பழியிடுகிறார்கள் இவள் அது கேட்டு எழுந்திருக்கைக்கு. 

(பிள்ளாய்) “உன்னுடைய இளமையிறே – பகவத் விஷயத்துக்கும் பாகவத விஷயத்துக்கும் வாசியறியாமை” என்ன, “நீங்களன்றோ பிள்ளைகள்;  “ஒருகாலும் பிரிகிலேனே” இத்யாதிவத்.   (பேய்முலை இத்யாதி) போது விடிந்தது, ஈண்டென எழுந்திருக்க வேணும் என்று இவள் துணுக்கென்று புறப்படுகைக்காக “புகுந்த அபாயம் கேட்டிலையோ” என்கிறார்கள்.  (பேய்முலை நஞ்சுண்டு) பெற்ற தாயும்கூட உதவாத தனிமையில் பாதிக்கவந்த பூதனையை முடித்து.  (கள்ளச் சகடமித்யாதி) காவலாக வைத்த சகடமும் அஸுராவேஶத்தாலே தன் மேலே ஊரப்புக, அது கட்டழிந்து சிதறும் படியாகத் திருவடிகளாலே உதைத்து, பரப்பையுடைத்தான திருப்பாற்கடலிலே திருவநந்தாழ்வான் மேலே   யோகநித்ரையில் மிகவும் அவகாஹித்து      ராமாத்யவதார கந்தமாய்  அநிருத்த ரூபியாய்க் கண்வளர்ந்தருளுகிற எம்பெருமானை. 

(உள்ளத்துக்கொண்டு) ஹ்ருதயங்களிலே வைத்துக்கொண்டு; பகவத் குணங்களை நினைத்து.  (முனிவர்களும்) ப்ரவ்ருத்தி க்ஷமரன்றிக்கே மனன ஶீலரான முனிவர்களும்.  (யோகிகளும்) நாராயணனை க்ஷணகால விஶ்லேஷத்திலும் ஸஹியாத யோகிகளும்.  (மெள்ளவித்யாதி) “ஸ்தநந்தய ப்ரஜையை   மார்பிலே ஏறிட்டுக்கொண்டு உறங்கின மாதா, ப்ரஜை உணராமல் க்ரமத்தாலே எழுந்திருக்குமாபோலே அவஹிதராய்க்கொண்டு எழுந்திருந்து “ஹரிஹரி” என்று எம்பெருமானும் உணர்ந்து  கேட்டாரும் வாழும்படி பண்ணின திருநாம ஸங்கீர்த்தனமானது படுக்கைக்கீழே வெள்ளம்கோத்தாற்போல்  க்ருஷ்ணவிஶ்லேஷத்தாலே கமர்பிளந்த எங்கள் ஹ்ருதயங்கள்  நனைந்து தேறிக் குளிரும்படி  வெள்ளமிட்டது;  அதுகாண் எங்களை எழுப்பிற்று என்கிறார்கள்.  (வெள்ளம்) திருமேனியிலே ஸௌகுமார்யத்துக்குச் சேரும்படி  குளிர்த்தியுண்டானபடி.  (அரவு) “ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைகதாமநி”.  ஜ்ஞாநம் – இருவரையுமறிகை;  விஜ்ஞாநம் – எல்லாக் கைங்கர்யமும் பண்ணுகை.  ப்ரக்ருஷ்டம் – தன்னை மறக்கை.  பலம் – பெரியபிராட்டியாரும் தானும் துகைக்கைக்குப் பாங்கான ஶக்தி.  (அமர்ந்த) பிராட்டியார் திருமுலைத் தடத்தாலே நெருக்கிலும் உணராமை.  (வித்தினை) வித்தை விதைக்கைக்கு நீரிலே சேர்த்தாற்போலே.  காரணமிருக்கக் கார்யமுண்டாகச் சொல்லவேணுமோ?    (உள்ளத்துக் கொண்டு)     மதுகைடபாதிகள்  இல்லாதவிடம்.  “பனிக்கடலிலே நீராடி (பெரியாழ்வார் திரு–5.4.9)  உண்ட விடாய் தீர.  மனக்கடலிலேகொண்டு (பெரியாழ்வார் திரு–5.4.9) (முனிவர்களும் யோகிகளும்) “வைகுந்தத்தமரரும் முனிவரும்” போலே.  (திருவாய்–10.9.9) குணவித்தரும் கைங்கர்யபரரும்.  இளையபெருமாளும் பரதாழ்வானும் போலே. திருவாய்ப்பாடியில் முனிவர்களும் யோகிகளும் உண்டோ என்ன, அவன் இங்கே வந்து அவதரிக்கையாலே  அவர்களுமுண்டு.  (மெள்ளவெழுந்து) கர்ப்பிணிகளைப் போலே. ஹ்ருதயேந் நோத்வஹன் ஹரிம்”  (அரி என்ற பேரரவம்) “ஹரிஹரி” என்கையாவது “ரக்ஷது த்வாமஶேஷாணாம்” என்னும்படியே உன்னை நீயே காத்துத் தரவேணும் என்று திருப்பல்லாண்டு பாடுகை.  (பேரரவம்)   பஞ்சலக்ஷம் குடியில் ஒருத்தி த்வநியாய் எழுந்த இத்திருநாமம்   செவி வழியே புக்கு  உடம்பு வவ்வலிட உணர்ந்தோம்.                                                                                         

@@@@@

ஏழாம்பாட்டு

                கீசு கீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

        பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!

        காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

        வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

        ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ

        நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

        கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

        தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – ஏழாம்பாட்டு.  இப்பாட்டில் பழையளாய்வைத்து; புதுமை பாவித்துக் கிடப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

வ்யாக்யானம் – “போது விடிந்தது எழுந்திராய்” என்ன;  “விடிந்தமைக்கு அடையாளம் என்?” என்ன, “கீசு கீசு என்று – எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசா நின்றன” என்கிறார்கள்.  (கீசு) அநக்ஷரமாயிருக்கை. “ஓரானைச் சாத்தன் பேசுங்காட்டில் விடியுமோ?” என்ன, “எங்கும் பேசாநிற்ப”தென்ன. “நீங்கள் அதுக்கில்லையோ?” என்ன, “எங்களாலன்றிக்கே தானே உணர்ந்தன” என்ன, “அதுக்கு அடையாளம் என்?” என்ன: “கலந்து பேசுகிற பேச்சு கேட்டிலையோ?  கேளாமைக்கு மற்ற ஆரவாரமுண்டோ” “நிஸ்வநம் சக்ரவாகாநாம்” இத்யாதி.   இப்பேச்சுக் கேட்டுவைத்து க்ருஷ்ணன் முகத்திலே விழித்துக்கொண்டு நில்லாதே தரிக்கவல்லையாவதே! “ஸௌமித்ரே ஶ்ருணுவந்யானாம்” இத்யாதி.  “விடிவோரே மாளிகையிலே சென்று எழுப்புவாரும் கவி சொல்லுவாரும் வம்ஶாவளி ஓதுவாருமாக எழுந்திருக்கக் கடவ இவர் பக்ஷிகளுக்கு  முன்னே உணரும்படியாவதே! என்ன தர்மஹாநி!” என்று ஆய்த்தான் அருளிச் செய்வர்.  (பேய்ப் பெண்ணே) பகவத் விஷயத்திலும் ததீய விஷயம்   தன்னேற்றம் என்று அறிந்துவைத்துப் பேசாதே கிடக்கையாலே சொல்லுகிறார்கள்;  என்ன அறிவுதான்! “பேய்ப்பெண்ணே” என்றதோடு “நாயகப்பெண்பிள்ளாய்!” என்றதோடு வாசியில்லை,  அகவாயில் பாவம் ஒன்றாகையாலே.

பின்னையும் எழுப்புகிறார்கள் – (காசும் பிறப்பும்) அச்சுத்தாலியும், முளைத் தாலியும், இடைச்சிகள் பூணுமாபரணம்.  (கலகலப்ப) “அரவூறு சுலாய்மலை தேய்க்கும் ஒலி”  (திருவாய்–7.4.2) என்னுமாபோலே.  (கைபேர்த்து)  தயிரின் பெருமையாலும்,  இவர்கள் ஸௌகுமார்யத்தாலும் கைபேர்க்கப்போகாது.  அதுக்குமேலே அவன் ஸந்நிதியிலும் கடையப்போகாது.  அவன் அஸந்நிதியிலும் அப்படியே. 

  (வாச நறுங்குழல்) தயிர் கடைகைக்கு நியமித்து  முடித்துக்கட்டிய மயிர்முடி கடைகிற ஆயாஸத்தாலே குலைந்து, கடைந்த வேர்ப்பாலே அதிபரிமளிதமாய், முடை நாற்றமும் தோற்றாதபடி  கிண்ணகவெள்ளம் கரையை உடைத்துப் பெருகுமாபோலே எங்கும் சுற்று வெள்ளமிடாநின்றது.  பரிமளம் ஊரை உறங்கவொட்டுகிறதில்லை.  (ஆய்ச்சியர்) க்ருஹிணிகளெல்லாரும்.விக்ரேது காமா கில கோபகந்யா” இத்யாதி ஊராகக் கிளர்ந்தது;  மத்தினால் ஓசை படுத்துகிற த்வநியும், இவர்கள் சிலம்பின் ஒலியும்,  குழல்களில் வண்டுகளின் த்வநியும், ஆபரணம் தன்னில் கலகல என்கிற  ஒலியும், கைகளில் வளைகளின் ஒலியும், கிளர்ந்து பரமபதத்திலே சென்று கிட்டி, க்ருஷ்ண குணங்களாய் எங்கும் பரப்புகை.  “கோவிந்த தாமோதர மாதவேதி” போலே.  (அரவம் கேட்டிலையோ) “கெண்டையொண்கண் மடவாளொருத்தி” இத்யாதிப்படியே. ஆண்களான தேவஜாதிக்கு  ஒரு கைப் பற்றுமவன் பெண்களைக்கைவிடான்.   இக்கோலாஹலங் களடையக் காண எழுந்திராய் என்கிறார்கள். “விடிந்தமைக்கு அடையாளம் கேட்டிலையோ தயிர் கடைகிற ஓசை?” என்ன, “க்ருஷ்ணன் அவதரித்த பின்பு  நல்லடிக் காலமாகையாலே எப்போதும் உண்டு” என்ன! (நாயகப்பெண்பிள்ளாய்) “ஶேஷபூதர் ஶேஷிகளுக்குச் சொல்லுவாருண்டோ?  அழகியதாக நிர்வாஹகையானாய்! என்று, அவள் துணுக்கென்று புறப்படுகைக்காக.  கேஶிவத வ்ருத்தாந்தத்தைச் சொல்லுகிறார்கள்.   (நாராயணன் மூர்த்தி)  முகம்தோற்றாதே நின்று வாத்ஸல்யத்தாலே விடாதே ரக்ஷிக்கக்கடவ ஸர்வேஶ்வரன்.  (மூர்த்தி) ஆர்த்தரக்ஷணார்த்தமாக.  “பரித்ராணாய” இத்யாதிப்படியே அவதரிக்கை.  (கேசவனை) பின்னும் நம்முடைய விரோதிகளைப் போக்குமவனை.  (பாடவும் நீ கேட்டே கிடத்தியோ தேசமுடையாய்) “உன்னைக்கண்டு நாங்கள் வாழும்படி வாய் திறவாய்” என்கிறார்கள். 

@@@@@

எட்டாம்பாட்டு

        கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

        மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

        போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை

        கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய

        பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

        மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

        தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

        ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – எட்டாம்பாட்டு.  பின்னையும் ஒரு பெண்பிள்ளை வாசலிலே சென்று எழுப்புகிறார்கள்.

வ்யாக்யானம் – (கீ்ழ்வானமித்யாதி) “கிழக்கு வெளுத்தது, எழுந்திராய்” என்கிறார்கள்.  “ஆண்களும் வ்ருத்தைகளும் உணருவதற்கு முன்னே எழுந்திராய்” என்கிறார்கள்.  “பாஸ்கரேண ப்ரபா யதா” “திங்கள் திருமுகத்துச் சேயிழையார்” (திருப்பாவை–30) என்கிறபடியே நீங்களெல்லாம் கிழக்கு நோக்கி, “விடிந்ததோ இல்லையோ?” என்று பார்க்க,   உங்கள் முகத்தின் ஒளி கீழ்திக்கிலே சென்று தாக்கி, உங்கள் முகத்திலே வந்து ப்ரதிபலிக்கையாலே கிழக்கு வெளுத்ததாயிருக்கிறதத்தனை:  அது அந்யதா ஜ்ஞாநம்;  மற்றை அடையாளமுண்டாகில் சொல்லுங்கோள்” என்ன – (எருமை சிறு வீடு இத்யாதி) சிறுவீடு – பனிப்புல்லு மேய்ச்சலுக்குக் காலமே விட்டு அவை மேய்கைக்காக எங்கும் பரந்தனகாண்;  ஶ்ரீநந்தகோபர்க்கு முத்திறம் உண்டு;  அவற்றின் பின்னே க்ருஷ்ணனும் போம்;  பின்னை யாரைக்காண்பது?  எழுந்திராய்” என்ன; “உங்கள் முகத்தில் ஒளியைக் கண்டு இருள் திரண்டு போகிறின இத்தனை” என்ன, “விடிந்ததில்லை என்று உன்னால் சொல்லலாவது உண்டோ?” என்ன, “பஞ்சலக்ஷம் குடியில் பெண்களுக்காக நீங்கள் இத்தனை பேரோ உள்ளது?  அல்லாதார் உணராமையாலே விடிந்ததில்லை” என்ன  (மிக்குள்ள பிள்ளைகளும்) அவர்கள் ஆராயாதே போனார்கள்;    நீ எழுப்பக் கிடந்தாய்”  (போவான் போகின்றாரை) போகைதானே ப்ரயோஜனமாகப் போனார்களென்ன;  “இனி நாம் அங்கு என் அவர்கள் போனார்களாகில்?” .என்ன – (போகாமல் காத்து) அவர்களைக் காற்கட்டச் செய்தோம்.  “திருவாணை நின்னாணை” (திருவாய்–10.10.2) என்ன வேண்டாவே இவர்களுக்கு.  (உன்னைக்கூவுவான்)  நீங்கள்தான் எழுப்புகிறது என்னென்ன, “இன்னார் வாசலிலே வந்து எழுப்பினார்கள்” என்னும் தரம் பெறுகைக்காக;  எங்களுக்கு இதுவே ப்ரயோஜனம்.  (வந்து) “உத்தரம் தீரமாஸாத்ய”.  (நின்றோம்) “கஸ்த ஏவ வ்யதிஷ்டத”  (கோதுகலமித்யாதி) எங்கள் திறத்தாரோ மிகுத்தள்ளுண்டார்?  (கோதுகலமுடைய)  இங்கே புகுந்து போகவே எம்பெருமான்  கைக்கொள்ளவேண்டும்படி அவனாலே கொண்டாடப்படுமவள்.  (பாவாய்) “நாரீணாம் உத்தமா வதூ:” என்று நிருபாதிகமான ஸ்தீர்த்வமுடையளாகை.  (எழுந்திராய்) நாங்கள் உன்னை உணர்த்த உணர்ந்தாயாகிய பெரிய தநத்தை எங்களுக்குத் தாராய்.  “ஆத்மாநம் பூஜயந் ராம” இத்யாதி. பட்டர் விடியுந்தனையும் கண்வளர்ந்தருள, ஶிஷ்யர்களெல்லாரும் திருவாசலிலே வந்து இருக்குமாபோலே  (பாடிப்பறைகொண்டு) நாட்டுக்கு நோன்புக்குப் பறை;  தங்களுக்கு ஸேவிக்கை பலம்.

(மாவாய் பிளந்தானை) “நாம் சென்றால் நம் அபேக்ஷிதம் செய்யுமோ?” என்னில்;  நமக்காக கேசியைப் போக்கி நம்மையும் தன்னையும் உண்டாக்கித் தந்தவனன்றோ;  ஶ்ரீப்ருந்தாவநம் கேசியோடே வன்னியமற்றது;  பின்பு பெண்ணுக்கும் பேதைக்கும்  பயங்கெட்டு, உலாவித் திரியலாய்த்து.  (மல்லரை மாட்டிய இத்யாதி) இப்போது பெரிய நாகரிகனாய் நமக்கு விநியோகப்பட ஸுலபனாயிருக்கை.  (மல்லரை மாட்டிய) “ஸக்ய:  பஶ்யத” என்கிறபடியே  அவ்வூரில் பெண்களுக்கு உதவின இது  தங்களுக்கும் உதவிற்று என்கிறார்கள்.  (தேவாதி தேவனை)  “ஜாதோஸி தேவதேவேஶ”, “ஸோஹம் தே தேவதேவேஶ” “அவரை நாம் தேவரென்றஞ்சினோமே” (திருநெடு– 21)  (சென்று நாம் ஸேவித்தால்) “பத்ப்யாம் அபிகமாச்சைவ” என்றும் “விபீஷணமுபஸ்திதம்” என்றும், “உபஸ்தேயைருபஸ்தித:” என்றும் அவன் நெஞ்சு புண்படுகைக்கு உடலாக அவன் இருந்தவிடத்தே சென்று  அவன் செய்வதை நாம் செய்துவிடுகிறோம்.  நாம் “ஏஹி பஶ்ய ஶரீராணி” என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறோம். “ப்ராது: ஶிஷ்யஸ்ய தாஸஸ்ய” – ப்ரணயித்வம் போனாலும்  பொதுவான ஆர்த்த ரக்ஷணம் விடுமோ?  (ஆவா என்று ஆராய்ந்து அருள்) “ஆந்ருஶம்ஸ்யம் பரோ தர்ம:” என்று சொல்லிவைத்தும்  அது அநுஷ்டியாதே இருக்குமோ?  அவன் பக்கல் ஒரு தட்டில்லை;  நம் குறை அத்தனை;   கடுகப் புறப்பட அமையும் என்கிறார்கள். 

@@@@@

\ ஒன்பதாம் பாட்டு

        தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்

        தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்

        மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்

        மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்

        ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?

        ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

        மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

        நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – ஒன்பதாம் பாட்டு.  கீழிற்பாட்டில் முக்தர்படிபோலே இருப்பாள் ஒருத்தியை எழுப்பிற்று;  இப்பாட்டில் நித்யமுக்தர்படியே இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறது.  தொடர்ந்து அடிமை செய்யும் இளையபெருமாளையும் இட்டவிடத்தே இருக்கும் ஶ்ரீபரதாழ்வானையும் போலே. 

வ்யாக்யானம – (தூமணிமாடம்) “துவளில் மணிமாடம்” (திருவாய்–6.5.1) என்று குற்றமுண்டாய் எடுத்துக் கழிக்கவேண்டாதே எல்லா நன்மையையுமுடைய  மணியாலே செய்த மாடம்;  அது முக்தனுடைய  அபஹதபாப்மத்வாதிகள் போலே;  இது அவனுடைய அபஹதபாப்மத்வாதிகள் போலே.    திருத்தொலைவில்லி மங்கலத்துக்கு, கழித்தவை கொண்டு செய்தது. அந்தப்புறத்துக்கு நல்லதிட்டுச் செய்து அங்கு கழித்ததிறே தந்தாமுக்கு மாளிகைசெய்வது.  (சுற்றும் விளக்கெரிய) “தானுறுமாகில் நோற்று வருகிறான்” என்று இருக்கிறாள் இவள்.  .மாணிக்கக்   குப்பிபோலே, புறம்பே நிற்க உள்ளுள்ளதெல்லாம் தோற்றா நின்றது என்கை.  ப்ரகாஶத்துக்கு ப்ரகாஶம் வேண்டாமையாலே விளக்கு மங்களார்த்தம். புறம்புள்ள விளக்குகள் புகையாநிற்க என்றுமாம். 

(தூபங்கமழ) பரிமளம் ஸஹ்யமானபடி எங்ஙனேதான் இவளுக்கு?    “சீருற்ற வகிற்புகை”  (திருவாய்–9.9.7)   இத்யாதிப்படியேயிறே அவர்களுக்குச் செல்லுகிறது.  புகையுள்ளிட்டனவன்றிக்கே கந்தமே கமழ.  (துயிலணைமேல்) “மென்மலர்ப்பள்ளி வெம் பள்ளி”யாயிறே  (திருவாய்–9.9.4)    இவர்களுக்கு இருக்கிறது. இருவருக்குப் படுத்தப் படுக்கையிலே ஒருவர்க்குப் படுக்க (உறங்க)ப்போமோ? (கண்வளரும்) இளைய பெருமாளைப் போலே உறங்காமைக்கு நாங்களும், உறங்குகைக்கு நீயுமாயிற்றே! என்கிறார்கள்.  (கண் வளரும்) இங்ஙனே ஆகாதே ஶ்ரீவைஷ்ணவர்கள் சொல்லுவது.  “படுத்தப் பைந்நாகணை” (திருப்பல்லாண்டு–9) இத்யாதிப்படியே தமப்பனார் பகவத் விஷயத்திலே    சொல்லுவது எல்லாம் இவளும் ததீய விஷயத்திலே சொல்லுகிறாள்.  (மாமான் மகளே) இட்டீடு கொள்ளுகைக்கு விடவொண்ணாத உறவை ஸம்பாதிக்கிறார்கள்.  (மணிக்கதவம்) “எங்களுக்குக் கதவும் சுவரும் தெரிகிறதில்லை.   நீயே திற” என்கிறார்கள்.  தேஶிகர்க்கல்லது தாள் திறக்கத் தெரியாதென்கை.  (மாமீர்) “அடியாரடியார் தம்” (திருவாய் – 3.7.10) “தொண்டர் தொண்டர்” (திருவாய் 7.1.11) என்று ஆழ்வாருடைய பாகவதஶேஷத்வத்தில் எல்லைபோல.    இவர்களும் இவளுடைய திருத்தாயாரான  இவளை உறவாகச்சொல்லி தரிக்கிறார்கள்.  (அவளை எழுப்பீரோ)   நீராகிலும் அவளை எழுப்பீரோ என்கிறார்கள்.  “அவளை இவர்களுக்குத் தோற்றுமோ”? என்னில், மாளிகையில் தெளிவாலே தோற்றும்.   தாயார் பாவஜ்ஞையாகையாலே, எழுப்பாள்;.  ஆகையால் (உன் மகள்தான் ஊமையோ) என்கிறார்கள்.  அன்றிக்கே, (அன்றிச் செவிடோ)  நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதபடி அந்யபரையானாளோ?  (அநந்தலோ)  இரவெல்லாம் க்ருஷ்ணனுக்கு  ஆடல் கொடுத்து இப்போதோ உறங்குகிறது?  (ஏமப்பெருந்துயில் இத்யாதி)  ஆர்த்தநாதம் கேளாதபடி காவலிட்டுக் கொண்டு, உணராதபடி உறங்குகைக்கு  ஆரேனும் மந்த்ரித்தார் உளரோ?  மந்த்ரம் இவளுக்கு ப்ரஸித்தமிறே.  “உன் முகம் மாயமந்திரந்தாங் கொலோ”  (நாச்சி திரு – 2.4) என்று  மாயப்பொடி தூவினாருண்டோ?  என்கை.  (மாமாயன்) பெண்களுக்குக் காணாச் சிறையாய்க் கிடக்குமவன்.  (மாதவன்) அதுக்குக் குருகுலவாஸம் பண்ணின இடம்.  (வைகுந்தன்) பெண்களோடொக்க ஆண்களை அடிமைக் கொள்ளுமவன்.  அப்பெருமையை உடையவனாய் ஶ்ரீய:பதியாய் இருக்கிறவன் கிடீர் பெண்களுக்கு எளியனாயிருக்கிறான்.   (என்றென்று நாமம் பலவும் நவின்று)   மேன்மைக்கும் நீர்மைக்கும் ஏகாந்தமான திருநாமங்களை அனேகம் சொன்னோம் என்கிறார்கள்.  “நாமம் பலவும் நவின்று மாமீர் அவளை எழுப்பீரோ” என்று க்ரியையாகவுமாம்.                                                                                                                                                 

@@@@@

பத்தாம் பாட்டு

      நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

        மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

        நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்

        போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்

        கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்

        தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ

        ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே

        தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.

         அவதாரிகை – பத்தாம்பாட்டு.  க்ருஷ்ணனுக்கு அசலகமாய் இடைச்சுவர் தள்ளிப் பொகட்டு ஒருபோகியாய் அநுபவிக்கிறாளொருத்தியை எழுப்புகிறார்கள்.

வ்யாக்யானம் – (நோற்று) ஸித்தஸாதனை.  இவனுடையவும் தன்னுடையவும் ஸ்வரூபங்களை உணர்ந்தால் யத்னம் பண்ண ப்ராப்தியில்லை.  “நாராயணனே நமக்கே பறை தருவான்” (திருப்பாவை – 1) என்கிறபடியே அவன் தலையிலே பாரத்தைப் பொகட்டோமாகில், நமக்கு நீரிலே புக்கு முழுகவேணுமோ?  என்றிருக்கிறாளிவள்.  உபேயத்துக்கன்றோ உபாயம்;  ஸித்தோபாய நிஷ்டருக்கு விளம்பஹேது இல்லாமையாலே ப்ராப்யத்தில் த்வரை இல்லாதார் சேதனரன்று என்றிருக்கிறார்கள்.  (அம்மனாய்) ரக்ஷ்யரக்ஷ்கபாவம் மாறி நிற்கவோ பார்க்கிறது?  அழகிதாக நிர்வாஹகையானாய்! (சுவர்க்கம் புகுகின்ற)  ஸுகமநுபவிக்கை.  “யஸ்த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்க:” .  நிர்வாஹகையாயிருப்பார்க்குக் கண்ணுறங்க விரகுண்டோ?  இவர்கள் பேச்சைக்கேட்டு ஈடுபட்டுப் பேசாதே கிடந்தாள்.  “ஸம்ஶ்ரவே மதுரம் வாக்யம்”.  பழியிடுவதே என்று பேசாதே கிடந்தாளாகவுமாம்.   “அம்மனாய் – என்பதே தங்கள் அடியேனாய் இருக்கிறவென்னை“ என்று பேசாதேயிருந்தாளாகவுமாம்.  “ப்ரஹர்ஷேணா வருத்தா ஸா வ்யாஜஹார ந கிஞ்சந” என்று ப்ரீதியாலே விக்கிப் பேசாதே இருக்கிறாளாகவுமாம். 

இவர்கள் பொறுக்கமாட்டாமை (மாற்றமும் தாராரோ) என்கிறார்கள்.  ஏதேனும் ஒருபடியால்  இவள் பேச்சேயமையும் இவர்களுக்கு.  “துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள்”  (பெரிய திருமொ – 2.7.2) என்கிறபடியே இவளுடைய பேச்சு உஜ்ஜீவநமாய் தாரகமாயிறே இவர்களுக்கிருப்பது.  தர்மபுத்ரன் “க்ருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் என்  புகுகிறதோ?” என்று அஞ்சினவளவிலே யுத்தத்தில் ஶ்ரீபாஞ்சஜந்ய த்வநி கேட்டு தரித்தாப்போலே, இவர்களுக்கு இவள் பேச்சு.   உடம்பை க்ருஷ்ணனுக்குக் கொடுத்தால் பேச்சாகிலும் தரலாகாதோ?  “மதுரா மதுராலாபா கிமாஹ மம பாமிநீ” யிறே  அங்கு  செல்லுகிறது.  கண்ணின் பட்டினி தீராதாகில் செவியின் பட்டினியாகிலும் தீர்க்கலாகாதோ?

“நீங்கள் பழியிடுகிறதென்?  இங்கு அவனுண்டோ?” என்ன – (நாற்றத்துழாய்முடி) மாளிகைச்சாந்து உன்னாலொளிக்கப் போமோ?  “அந்தியம்  போதே வாசலைக் கைக் கொண்டீர்கள்.   அவனுக்குப் புகுர வழியுண்டோ?” என்ன – (நாராயணன்) அவனுக்கு எங்களைப் போலே கதவு திறக்கப் பார்க்கவேணுமோ?    புறப்படுகைக்கு வழிதேடுமத்தனை அன்றோ?                                                                                                

(நம்மால்) வெறுமையே பச்சையாகவுடைய நம்மால்.  (போற்ற) குடிப்பிறப்பால் வந்தது;  உபாயமல்ல.  (பறைதரும்) “இப்படி பெரியவன் நமக்குப் பறைதருமோ?” என்னில் “நாராயணனன்றோ;  பறை தரும்” என்றுமாம்.  (புண்ணியனால்) “க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம்

 (புண்ணியனால் பண்டொருநாள்) “முன்பும் உன்னைப்போலே ஒருத்தனுண்டு காண். உணராதே படுத்தினான்” என்கை.  (புண்ணியனால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த) “கொடுவினைப் படைகள் வல்லையாய்” (திருவாய் – 9.2.10)  “ததோ ராமோ மஹாதேஜா:” என்று நீரிலே நெருப்பு எழுந்தாற்போலே சீறுகைக்குள்ள அருமை.  (கும்பகர்ணனும்) பிராட்டியைப் பிரித்த ராஜத்ரோஹியோடே கூட்டுகிறார்கள்.  அவன் ஒருத்தியைப் பிரித்து வைத்து, உறங்கினான்.  நீ ஊராகப் பிரித்துவைத்து  உறங்குகிறாய்.  (தோற்றும் உனக்கே இத்யாதி) ஶ்ரீ பரஶுராமன் கையில் வில்லை சக்ரவர்த்தி திருமகன் வென்று வாங்கினாற்போலே கும்பகர்ணன் நித்ரையை வென்று வாங்கிக் கொண்டாயோ? 

(ஆற்ற அநந்தலுடையாய்) “இனி கிடக்கில் த்ரோஹிகளாவுதோம்” என்றஞ்சிப் புறப்பட்டு  முகம் காட்டுவோமென்று உணர்ந்தபடி தெரிய “க்ருஷ்ண க்ருஷ்ண” என்றாள்;  நீ உணரும்படி கண்டு வாழ அமையாதோ?  (அருங்கலமே) இனித் தெளிவு கண்டு அநுபவிக்கவேணும். “ஹாரத்தைப் பண்ணினால் அதுக்குக் கல்லழுத்த வேண்டாவோ?  இக்கோஷ்டியை ஸநாதமாக்காய்” என்றவாறே பதறிப் புறப்படப்புக  (தேற்றமாய் வந்து திற)  “மேலில் நிலங்களில் நின்றும் தடுமாறி விழாதே தெளிந்து திற”   “ஸா ப்ரஸ்கலந்தீ” இத்யாதிவத்.   

@@@@@

பதினோராம் பாட்டு

        கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

        செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

        குற்றமொன்றில்லாத  கோவலர்தம் பொற்கொடியே

        புற்றரவல்குல் புனமயிலே போதராய்

        சுற்றத்துத்தோழிமார் எல்லாரும் வந்து நின்

        முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்

        சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி நீ

        எற்றுக்கு உறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – பதினோராம்பாட்டு.  க்ருஷ்ணன் ஊருக்கு ஒரு பிள்ளையானாற்போலே ஆபிஜாத்யமுடையளாய் ஊருக்கு ஒரு பெண்பிள்ளையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

வ்யாக்யானம் – (கற்றுக்கறவை) கன்று நாகுகள் நித்யஸூரிகளைப்போலே பஞ்சவிம்ஶதி வார்ஷிகமாயிருக்கை.  க்ருஷ்ணனுடைய ஸ்பர்ஶத்தாலே கீழ்நோக்கின வயஸ்ஸு புகும் இத்தனை.  ப்ரணயத்துக்கு முலைப்பட்டாராகாதாப் போலே ஆகாது என்கை.  “கன்றுகளை  ரக்ஷிக்கவென்று வ்யவஸ்தையுண்டோ?”  என்னில்; “கன்றுமேய்த்து இனிது உகந்த காளாய்” (திருநெடு – 16) என்றும், “திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி” (திருவாய் – 10.3.10) என்றும் நித்யஸூரிகளிலும் பசு மேய்க்க உகக்கும். அவன் ஶரணாகத வத்ஸலமாமித்தனையிறே.  “யதா தருணவத்ஸா” “கறவா  மடநாகு” (பெரிய திருமொ – 7.1.1)  “ஶரணாகத வத்ஸல:” “த்வயி கிஞ்சித்”.

(கணங்கள் பல) நம்முடைய அநாத்மகுணங்களும் அவனுடைய ஜ்ஞாநஶக்த்யாதி குணங்களும் – நார ஶப்தத்திலே சொன்ன நாரங்களினுடைய ஸமூஹமானாலும் எண்ணலாம், இவை எண்ணப்போகாது.  “ரதகுஞ்ஜரவாஜிமாந்” என்னுமாபோலே.   (பல கறந்து) ஈஶ்வரன் ஒருவனுமே  ஸர்வாத்மாக்களுக்கும் நியமனாதிகள் பண்ணுமாபோலே ஜாதியினுடைய மெய்ப்பாட்டாலே  செய்யவல்ல ஸாமர்த்யம். 

(செற்றார்) “ஶத்ரோஸ் ஶகாஶாத் ஸம்ப்ராப்த:” என்ற அங்கதப் பெருமாளைப் போலே இவ்வைஶ்வர்யம் காணப்பொறாதார் நமக்கு ஶத்ருக்களாயிருக்கிறபடி.  (திறலழிய) கம்ஸாதிகளை மறுமுட்டுப் பெறாதபடி கிழங்கெடுக்கைக்கு மிடுக்கு    உடையார்கள் இவ்வூரார் என்கை.  (சென்று செருச்செய்யும்) எதிரிகள் வந்தால் பொருகை யன்றிக்கே இருந்தவிடங்களிலே சென்று பொருகை.  (குற்றமொன்றில்லாத) எடுத்துவரப் பார்த்திருக்கும் குற்றமில்லை.  கையில் ஆயுதம் பொகட்டால் எதிரியை நிரஸிக்கிற குற்றமுமில்லை.  பகவத் பாகவத விஷயங்களிலே குற்றம் செய்தாரை, அக்நீஷோமீய ஹிம்ஸைபோலே பாராதே கொல்லவல்லார்களென்றுமாம்.  (கோவலர்தம் பொற்கொடியே) ஜநகராஜன் திருமகள்போலே ஊருக்கொரு பெண்பிள்ளை.   (பொற் கொடியே) தர்ஶநீயமாயிருக்கையும் கொள்கொம்பையொழிய ஜீவியாமையும்.  கொடி தரையிலே கிடக்கலாமோ?  ஒரு தாரகம் வேண்டாவோ?  எங்களோடே கூடி நில்லாய் என்கை.  “ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலாலறிகின்றிலேன் யான்”. (திருவாய் – 10.10.3)

(புற்றரவல்குல்) வெய்யில் அடி உண்டு புழுதி படைத்த அரவுபோலன்றிக்கே தன் நிலத்திலே வாழும்  பாம்பின் படமும்  கழுத்தும் போலேயிருக்கை.  இத்தனை சொல்லலாமோ என்னில், பெண்ணைப் பெண் சொல்லுகிறதன்றோ?  “யாஸ்த்ரியோ த்ருஷ்டவத்யஸ்தா: பும்பாவம் மநஸா யயு:” என்று;.  அவன் “பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரி” யானாற்போலே.  (புன மயிலே) இது தன் நிலத்தில் நின்ற மயில்;  க்ருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்றவல்ல அளகபாரத்தை உடையளாயிருக்கை.  (போதராய்) “ஶோபயந் தண்டகாரண்யம்” போலே எங்களை வந்து களிக்கப்பண்ணாய் என்கை.  (சுற்றத்துத் தோழிமார் இத்யாதி) “நான் புறப்படுகைக்கு நீங்களெல்லோரும் வந்திகோளோ?” என்ன – “உத்தரம் தீரமாஸாத்ய” என்னும்படியே எல்லாரும்  வந்து ப்ராப்யதேஶமான உன் திருமுற்றத்திலே வந்து புகுந்தது.  “முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்” (பெரிய திருமொ – 10.8.5) என்றும், “முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து” (நாச்சி திரு – 2.9)  என்றும் ஶேஷியானவனுக்கும் ப்ராப்யமான உன் திருமுற்றம் ஶேஷபூதைகளான எங்களுக்கு ப்ராப்யம் என்னச் சொல்லவேணுமோ?  புகுந்துகொள்ளப் புகுகிற கார்யமென்னென்ன – (முகில் வண்ணன் பேர்பாட) உகக்கும் திருநாமங்களை நீ பாட, நாங்கள் உன் பக்ஷத்தே நின்று கூட்டம் பற்ற;  நீ அவன் அழகிலே ஈடுபட்டுப்பாட, உன் ஈடுபாடு கண்டு நாங்கள் ஈடுபட்டுப்பாட. 

(சிற்றாதே) சேஷ்டியாதே.  கண்ணையும் செவியையும்  பட்டினி விடுவியா நின்றாய்.  (செல்வப் பெண்டாட்டி நீ) உன்னை நீ பிரிந்தறியாயே;  உனக்குக் கூடு பூரித்திருந்தது என்றுமாம்.  (எற்றுக்குறங்கும் பொருள்) “குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ” (திருவாய்–2.3.10) என்று இருப்பார் செய்வதோ இது?  கைவல்ய மோக்ஷம் போலே தனிக்கிடக்கிற கார்யமன்றே என்று. 

@@@@@

பன்னிரண்டாம்பாட்டு.

        கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

        நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

        நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

        பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றிச்

        சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

        மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்

        இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்

        அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.

        அவதாரிகை – பன்னிரண்டாம் பாட்டு.  க்ருஷ்ணன் வளர வளரத் தீம்பிலே கைப்புக்கவாறே இவனைக் காக்கைக்கு இவனைப் பிரியாதே போருகிறான் ஒருத்தன் தங்கையை எழுப்புகிறார்கள். 

வ்யாக்யானம் – (கனைத்து) கறப்பாரில்லாமையாலே “இவ்வகத்துக்குக் கன்று காலியாய் நாம் பட்டதோ!” என்று கூப்பிடாநிற்கும். (இளங்கற்றெருமை) இளங்கன்று பாடாற்றமாட்டாமை.  (கன்றுக்கிரங்கி) எம்பெருமான் ஆஶ்ரிதவிஷயத்தில் இருக்குமா போலே, அவன் எருமை கறவாவிட்டால் அவை படும் பாடு நாங்கள் உன்னாலே படாநின்றோம்.  (நினைத்து) கன்றை நினைத்து பாவனாப்ரகர்ஷத்தாலே முலையிலே வாய் வைத்ததென்று பால் சொரியாநிற்கும்.  (முலை வழியே) கைவழியே தவிர.  (நின்று பால் சோர) கேட்பாரின்றிக்கேயிருக்க ஆற்றாமையாலே பகவத் குணங்களைச் சொல்லுவாரைப்போலே, மேகத்துக்குக் கடலிலே முகந்துகொண்டு வரவேணும்.  இவற்றுக்கு வேண்டா.  (நனைத்தில்லம் சேறாக்கும்)  பாலின் மிகுதியாலே அகம் வெள்ளமிடும்;  அவற்றின் காலிலே துகையுண்டு சேறாம்.  சேறாய்ப் புகுர ஒண்கிறதில்லை.  (நற்செல்வன்) “லக்ஷ்மணோ லக்ஷ்மிஸம்பந்ந:” – தோற்றி மறையும் செல்வமன்று. “ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல்” (திருவாய் – 6.7.2) “வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே” (திருவாய் – 3.3.11) என்கிறபடியே இவனுடைய வைஷ்ணவஶ்ரீ இருந்தபடி. “ஸௌமித்ரே புங்க்ஷ்வ போகாம் ஸ்த்வம்”  (தங்காய்) குணஹாநிக்கு ராவணனைப்போலே.  “ராவணஸ்யாநுஜோ ப்ராதா” என்னும்படி இக்குணத்திலே தஸ்யாநுஜனைப்போலே.  “அந்தரிக்ஷகத: ஶ்ரீமா”னுடைய மகளான அனலையைப்போலே.  ஶ்ரீவிபீஷணாழ்வானுக்குமில்லாத பிராட்டிக்குக் கைங்கர்யம் பண்ண உண்டிறே அனலைக்கு.  (வீழ) மேல் பனி வெள்ளமிட, கீழ் பால் வெள்ளமிட, நடு மால் வெள்ளமிட நின்றலைந்து.  (வாசல் கடை பற்றி)  தண்டியத்தைப் பற்றி நாலாநின்றோம்.  இத்தர்மஹாநியை  அறிகிறிலை. “இவர்கள் படும் அலமாப்புக் காண்போம்” என்று பேசாதே கிடக்க,   (தென்னிலங்கை) “பறைச்சேரி”  என்பாரைப்போலே பெருமாளோடே கூடியிருக்கிற பிராட்டியைப் பிரிந்த படுகுலைக்காரனிருக்குமிடமிறே.  (கோமானை) “யத்யதர்மோ ந பலவாந்” என்று திருவடி மதித்த ஐஶ்வர்யம்.  (செற்ற) ஓரம்பாலே தலையைத் தள்ளிவிடாதே தேரைத்தள்ளி, வில்லை முறித்து, படையைக் கொன்று, ஆயுதங்களை முறித்து, “தான்  போலுமென்றெழுந்தான்”  (பெரிய திருமொ – 4.4.6) இத்யாதிப்படியே பின்னைத் தலையை அறுத்துவிட்டபடி.

(மனத்துக்கினியானை)   வேண்டிற்றுப் பெறாவிட்டால் “சொல்லாய் சீமானே”  என்னுமாபோலே.  (பாடவும் நீ வாய்திறவாய்) ராமவ்ருத்தாந்தம் கேட்டது உறங்குகைக்கு உறுப்பாயிற்றோ?  (வாய் திறவாய்) ப்ரீதிக்குப் போக்குவிடவேண்டாவோ?  தாங்கள் ஒருதலைப்பற்ற வேண்டியிருக்கிறார்கள். 

(இனித்தான்) எங்களுக்காக உணராவிட்டால் உனக்காக உணரலாகாதோ?  சூர்ப்பணகை உள்ளிட்டார்க்குள்ள  இரக்கமும் உன் பக்கல் கண்டிலோமே.  (ஈதென்ன பேருறக்கம்)  எம்பெருமான் பரார்த்தமாக உணரும்.  ஸம்ஸாரிகள் ஸ்வார்த்தமாக உணருவர்கள்.  இது ஒருபடியுமன்று.   ஆர்த்திகேட்டு உணராதொழிவதே! “பையத்துயின்ற பரமன்” (திருப்பாவை – 2) “பகவதஸ்த்வராயை நம:”   என்னும்படி ஆர்த்தி கேட்டால் அப்படி படுமவனோடே வர்த்தித்து இங்ஙனே கிடப்பதே!

        (அனைத்தில்லத்தாருமறிந்து) உன் வாசலிலே வந்தெழுப்ப நீ எழுந்திராதது    எல்லாரும் அறியும்படியாயிற்று.  இனி உணராய்.  ஊராரறியாதபடி பகவத்விஷயத்தை அநுபவிக்க வேணுமென்றிராதே கொள்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

@@@@@

 பதின்மூன்றாம் பாட்டு

        புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

        கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

        பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்

        வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

        புள்ளும் சிலம்பின காண் போதறிக்கண்ணினாய்

        குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே

        பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்

        கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

        அவதாரிகை – பதின்மூன்றாம் பாட்டு.  இவளை எழுப்புகிறது அசல் அகத்தே கேட்டுக் கிடந்தாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள். 

வ்யாக்யானம் – (புள்ளின் வாய் கீண்டானை) கொக்கின் வடிவுகொண்டு வந்த பகாஸுரனைப் பிளந்தவனை.  (பொல்லாவரக்கனை) தாயையும் தமப்பனையும் பிரித்த நிர்க்ருணனை.  “சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன்”. (பெரியதிருமொ–5.7.7)  (பொல்லா) “முன்பொலா   இராவணனிறே” (திருக்குறு – 15) பிராட்டி “த்வம் நீசஶஶவத்” என்றாள்.  “விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித:” என்று நல்ல அரக்கனும்  உண்டென்கை. 

(கிள்ளிக் களைந்தானை) மறுவலிடாதபடி கிழங்கோடே வாங்கினபடி;.  தோஷாம்ஶத்தை வாங்கி பொகட்டபடி.  குணாம்ஶம் ஶ்ரீவிபீஷணாழ்வான்.   (கீர்த்திமை) எதிரிகள் நெஞ்சு உளுக்கும்படியிறே பெருமாள் பராக்ரமம் இருக்கும்படி.  “ஶத்ரோ: ப்ரக்யாத வீர்யஸ்ய” என்னும்படியான வீர்யம்.   ராவணன் வீர்யத்துக்கு இலக்கானான்.  தங்கை அழகுக்கு இலக்கானாள்.  தம்பி ஶீலத்துக்கு இலக்கானான்.   தங்களுக்கு பலம் உண்டாக அவன் விஜயத்தையே அநுஸந்திக்கிறார்கள்;  பரமசேதனன்   உபாயமாமிடத்தில் அது “ஜ்ஞாநஶக்திகருணாஸு” என்கிற ஜ்ஞாந ஶக்தி க்ருபைகள் வேண்டுகையாலே, அவற்றை அநுஸந்தித்து மார்விலே கைவைத்து உறங்குமவர்கள் இவர்கள் “குணவாந் வீர்யவா” னிறே.  (பாடிப்போய்) கால் கொண்டு போய் என்கை.  (பிள்ளைகள் எல்லாரும் இத்யாதி) “இன்னம் உணர்ந்தும் உணராத சிறு பிள்ளைகளை எழுப்பிக்கொண்டு விடிந்தவாறே போகிறோம்” என்ன, “அவர்கள் முன்னே உணர்ந்து   க்ருஷ்ணன் மெய்க்காட்டுக் கொள்ளுமிடம் புக்கார்கள்” என்கிறார்கள்.  (பாவைக்களம்) “போர்க்களம் நெற்களம்” என்பாரைப்போலே.  (பிள்ளைகளெல்லாரும்) எல்லாரும் – நாம் சென்று எழுப்ப வேண்டும்படியான பாலைகளும்.  (பாவைக்களம்) – ஸங்கேதஸ்தலம். “அவர்கள் போனார்களாகிலும்   அகாலத்திலே போகவேணுமோ?  விடிந்தால் போருங்கோள்” என்ன    (வெள்ளியெழுந்து) “நினைக்கிறபடியே வெள்ளி உச்சிப்பட்டு    வியாழனும் அஸ்தமித்தது” என்ன; “நக்ஷத்ரங்கள் கண்டதெல்லாம்  வெள்ளியாயும் வியாழனாயுமன்றோ உங்களுக்குத் தோற்றுவது;  அவை புனர்பூசமும் பூசமுமாகக் கொள்ளீர்:  மற்ற அடையாளமுண்டோ என்ன, “நாங்கள் திரண்டு தோன்றுமதல்லவோ?” என்ன, நீங்கள் பிரியிலன்றோ திரள வேண்டுவது. மற்ற அடையாளம் உண்டோ?’ என்ன, –  (புள்ளும் சிலம்பின காண்)  புள்ளும் சிதறிப் போந்தன.  (போதரிக்கண்ணினாய்) “இக்கண்ணுடைய எனக்கு ஓரிடத்தே புறப்படவேணுமோ என்ன?  என் காலிலே விழுகிறார்கள்”  என்று கிடக்கிறாயோ?  (அரி) வண்டு.  பூவிலே வண்டிருந்தாப்போலே.  “அஸிதேக்ஷணை” யாகையாலே  அவனும் அவன் விபூதியும்  கண்ணில் ஒரு மூலைக்குப் போராது.   இக்கண்ணாலே அவனைக் குமிழிநீருண்ணப் பாராய்.  (குள்ளக் குளிர) ஆதித்ய கிரணங்களாலே நீர் வெதும்புவதற்கு முன்னே.  (குடைந்து நீராடாதே) தாங்களாகையாலே உள்ளே கிடந்தாலும் தங்கள் ஸம்பந்தத்தாலே கொதிக்கும் என்று அறிகிறிலள்.  (பள்ளிக்கிடத்தியோ) _பிள்ளைகள் தாங்களும் படுக்கையைவிட்டுப் போகாநிற்க, நீ படுக்கையிலே கிடப்பதே! அவன் கிடந்துபோன படுக்கையென்று  மோந்துகொண்டு கிடக்கிறாயோ?  பயிர் விளைந்து கிடக்க, கதிர் பொறுக்கி ஜீவிக்கிறாயோ?  (பாவாய் நீ) தனி கிடக்கவல்லளோ   நீ?  (நன்னாள்) அடிக்கழஞ்சு     பெற்ற இந்நாளிலே.   இந்நாலு நாளும் போனால், மேலில் நாள்கள்  ராவணனைப் போலே பிரிக்கும் நாள்கள். 

(கள்ளம் தவிர்ந்து) “சோரேணாத்மாபஹாரிணா” என்று தத்வஸ்துவிலும்  ததீயவஸ்துவை  அபஹரிக்கையன்றோ பெருங்களவு,  “கலந்து குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே” என்று  க்ரியை.      

@@@@@

 பதினான்காம் பாட்டு

        உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

        செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

        செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்

        தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்

        எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

        நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!

        சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

        பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.

         அவதாரிகை – பதினாலாம் பாட்டு.  இதுக்கெல்லாம் கடவளாய் எல்லாருக்கும் முன்னே தான் உணர்ந்து எல்லாரையும் உணர்த்தக்கடவளாக  ப்ரதிஜ்ஞை பண்ணினாள் ஒருத்தியை  எழுப்புகிறார்கள்.

வ்யாக்யானம் – (உங்கள் புழக்கடை இத்யாதி)  இவர்கள் வாசலிலே வந்து “போது விடிந்தது எழுந்திராய்” என்ன. “அடையாளம் என்?” என்ன; “பஞ்சலக்ஷம் குடியில் பெண்களும் போய், பேசுவாரும் பேசாதிருப்பாருமாய் வந்து நிற்கிறது விடிந்தமைக்கு அடையாளமன்றோ?” என்று, செங்கழுநீர் அலர்ந்தாப்போலவும்    ஆம்பல் மொட்டித்தாப் போலேயும் என்று தங்கள் வாயைச் சொல்ல, “உங்கள் வாய் நீ்ங்கள் வேண்டினபோது   அலர்ந்து மொட்டியாதோ?” என்ன; “வயலில் அவையும் அப்படியே”  என்ன;  “நீங்கள் போய் அலர்த்தியும்  மொட்டிக்கப்பண்ணியும் வைத்தீர்கள்” என்ன; “தோட்டத்தில் வாவியில் அவையும் அப்படியே” என்ன;“வயலில் அணித்தன்றோ  உங்களுக்குத் தோட்டத்தில் வாவி” என்ன, “புழக்கடைத் தோட்டத்து வாவிகளிலும் அவை அப்படி அலர்ந்து  மொட்டித்தது”    என்ன, “அது உங்களுக்குக் கைவந்த இடமன்றோ?” என்ன, “அஸூர்யம் பஶ்யமாய் க்ருஷ்ணனுக்கும் புகுரவொண்ணாதபடியான உங்கள் புழக்கடைத் தோட்டத்தில் வாவியில் செங்கழுநீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்தது” என்ன;

“அலரப்புக்க மாத்திரத்திலே கழிய எல்லாம் அலர்ந்தது என்றும் மொட்டிக்க புக்க மாத்ரத்திலே “முட்ட மொட்டித்தது” என்றும் சொல்லுகிறீர்கள்.  இது ஒழிய அடையாளம் உண்டானால்   சொல்லுங்கோள்” என்ன (செங்கற்பொடிக் கூறை இத்யாதி)  அளற்றுப்பொடியிலே  புடவையைப் புரட்டி ப்ரஹ்மசர்யம்  தோற்றப் பல்லை விளக்கி, “ஸபையார் பொடிகிறார்கள்.  கோமுற்றவன் தண்டம்  கொள்ளுகிறான்” என்று போது  வைகிற்றென்று  தபஸிகளும் அகப்பட  உணர்ந்தார்கள்.  (தங்கள் திருக்கோயில்) அவர்கள் சொல்லும் ப்ரகாரம். “சங்கு” என்று குச்சியைச்சொல்லுகிறது. சங்கு ஸமாராதநத்துக்கு உபலக்ஷணம்.  வெள்ளையைத் தவிர்ந்து  காஷாயத்தை உடுத்து, போக உபகரணங்களைத் தவிர்ந்து   தபஶ்சர்யை உடையராயிருக்குமவர்கள்  ஸந்த்யாவந்தனாதிகள் சமைந்து      அகங்களில் திருமுற்றத்திலே  எம்பெருமான்களை ஆராதிக்கும்  காலமாயிற்று என்றுமாம்.  இரண்டு ப்ரகாரத்தாலும் ஸாத்விகரோடு தமோபிபூதரோடு வாசியற உணர்ந்தென்கிறார்கள்.  “தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம்;  வேதாஶ்ச” (எங்களை முன்னம் இத்யாதி) “நேற்று எங்களை எழுப்புகிறேன், க்ருஷ்ணன் பாடு கொடுபோகிறேன்” என்றது கண்டிலோமே என்கிறார்கள்.  (வாய் பேசும்) பொய் சொல்ல உகக்கும் க்ருஷ்ணனோடே யிறே பழகுகிறது.  பொய்யை நினைத்ததுக்கு மேலே பிறர் அறியவேணுமோ?    (நங்காய்) சொன்னத்தோடே சிலவாகிலும்  கூட்டாதே இருப்பார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ?  என்கை.  (எழுந்திராய்) இவர்கள் பேச்சே அமைந்தது இவளுக்கு.  எங்கள் குறை தீராய்.  (நாணாதாய்) “நீ இருந்த ஊரி்ல் பூசணியும் காயாதோ? என்கை.  (நாவுடையாய்) வாயேயிறே உனக்குள்ளது என்கை. 

(சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையன் இத்யாதி)  இவர்களைத் தரிப்பிக்கைக்காக.  நாவாலுள்ள காரியம் கொள்ளுங்கோள்” என்ன, “அவன் திருநாமங்களைப் பாடு” என்கிறார்கள்.  (சங்கொடு சக்கரம்) “இன்னார் என்று அறியேன்” (பெரியதிருமொ – 10.10.9) இத்யாதி.  (பங்கயக்கண்ணானை)  “ஜிதம் தே புண்டரீகாக்ஷ”.  சங்கு சக்கரங்களைக் கொண்டு திருநாபீகமலம் போலேயிருக்கை.  “தூது செய் கண்களிறே”. (திருவாய் – 9.9.9) “இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான்”.                                                                                                                                                                                                                                                                                                   

@@@@@

பதினைந்தாம் பாட்டு

        எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

        சில்லென் அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்

        வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்

        வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.

        ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடைமை

        எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக் கொள்

        வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

        வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – பதினைந்தாம் பாட்டு.  இவர்கள் தங்களிலே கூடிப் பாடின பாட்டைக் கொண்டு  அசல் திருமாளிகையிலே கேட்டுக் கிடப்பாள் ஒரு பெண்பிள்ளையை, தன்னிலே நுடங்கிப் பாடுகிறபடியைக் கேட்டு “எல்லே இளங்கிளியே!” என்கிறார்கள். 

வ்யாக்யானம்‘திருவான பேச்சு இருந்தபடியென்’ என்று கொண்டாடுகிறார்கள்.  யாழிலே இட்டுப் பாடி இனிதானவாறே மிடற்றிலே இட்டுப் பாடுவாரைப் போலே முற்படப் பெண் பாடக்கேட்டு அவர்கள் பாடுகிறார்கள். 

(எல்லே இத்யாதி) “இளங்கிளி” என்று கிளியை வ்யாவர்த்தித்தபடி.  நாங்கள் கிளிகள்.  இவள் இளங்கிளி.  பாட்டில் இனிமையும் அப்படியே;  இதொரு பேச்சே! என்று கொண்டாடுகிறார்கள்.  இவர்கள் பாட்டுக் கொண்டாடினத்தை.  பயத்தாலே தங்களுடைய உடம்பும் வாயும் வெளுத்திருக்க, க்ருஷ்ண ஸம்ஶ்லேஷத்தாலே நம் உடம்பு பசுமை உண்டாய், வாயும் சிவந்திருக்கிறது என்று ஒன்றும் பேசாதே கிடந்தாளாய் இருந்தவாறே  – (இன்னம் உறங்குதியோ) உத்தேஶ்யம் கைபுகுந்தாலும் உறங்குவார் உண்டோ?  (சில்லென்று அழையேன்மின்) தான் அநுஸந்திக்கிற  அநுஸந்தானத்துக்கு இவர்கள் அழைக்கிற சொல் விக்னமாகையாலே “சிலுகிடாதே கொள்ளுங்கோள்” என்கிறாள்.  திருவாய்மொழி பாடாநின்றால் செல்வர் எழுந்தருளுகையும் அஸஹ்யமாமாபோலே.  (நங்கைமீர் போதர்கின்றேன்) இவர்கள் சிவிட்கென்ன. “நாங்களும் எங்கள் சொல்லுமாகாதபடி உன் குறைவறுகை இருந்தபடி என்?” என்ன; “நீங்களன்றோ குறைவற்றீர்கள்; படுத்தாதே கொள்ளுங்கோள்;  புறப்படாநின்றேன்” என்ன, (வல்லை உன் கட்டுரைகள் இத்யாதி) “நீ சொல்லிற்றைச் சொல்லி, எங்களதே குற்றமாம்படி வார்த்தை சொல்லவல்லை என்னுமிடம் இன்றேயல்ல அறிகிறது;  எத்தனைகாலம் உண்டு  உன்னோடே பழகுகிறது” என்ன

(வல்லீர்கள் நீங்களே) உங்கள் வாசலிலே வந்து உங்களாலே படாதது உண்டோ” என்ன, “அது ஸாத்யம்;  இது ஸித்தமன்றோ?  ப்ரத்யக்ஷத்துக்கு அனுமானம் வேணுமோ?” என்ன,  (நானேதான் ஆயிடுக)   என்று.  ஶ்ரீபரதாழ்வான் “மத்பாபமேவாத்ர” என்றாப் போலே.  “மத்பாக்யஸம்க்ஷயாத்” இறே.  பரஸ்துதியோடு ஒக்கும் ஸ்வநிகர்ஷம்.  (ஒல்லை நீ போதாய்) அவள் புகுராவிடில்  தங்களுக்கு ப்ராண ஹாநியாகையாலும், அவளுக்கும் அநர்த்தமாகையாலும்  “சடக்கென புறப்பட்டுக் கொடு நில்” என்ன, வைஷ்ணவ கோஷ்டியைப் பிரியாதிருக்கை நன்று.  (உனக்கென்ன வேறுடையை) “பஞ்சலக்ஷம் குடியில் பெண்களுக்குள்ளதொழிய   உனக்கு வேறே சில உண்டோ?  உன் ஸ்வயம் பாகம் இன்னம் தவிர்ந்ததில்லை. பெரும்பானை கண்டபின்பும்” என்கிறார்கள்.  அதாவது – மத்யமபதமும் மூன்றாம்பதமும். காட்டில் இளையபெருமாளுக்கு  ஶ்ரீபரதாழ்வானைக் காண்கை  அஸஹ்யமானவாறே,  பெருமாள் “ஆகில் நீர் ராஜ்யத்தை ஆளவேணும்” என்ன, இளையபெருமாள் தரைப்பட்டாற்போலே. இவளும் “உனக்கு என்ன வேறுடையை” என்ன, அப்படி தரைப்பட்டாள்.  “சாதுகோஷ்டியுள்  கொள்ளப்படுவார்” (பெரியாழ்வார் திரு–3.6.11) என்கை  புருஷார்த்தம்.  இக்கோஷ்டிக்குப் புறம்பாய் இருக்கைக்கு  மேற்பட அநர்த்தமுண்டோ?  விஷயங்களைப் பற்றி புறம்பாயிருக்கவுமாம்,  ஈஶ்வரனைப்பற்றிப் புறம்பாயிருக்கவுமாம்;  ஆத்மாவைப் பற்றிப் புறம்பாயிருக்கவுமாம்.  “ஸஸைந்யம் பரதம் கத்வா ஹநிஷ்யாமி ந ஸம்ஶய:” “ராஜ்யமஸ்மை ப்ரதீயதாம்” “ஸ்வாநி காத்ராணி லஜ்ஜயா”.

       (எல்லாரும் போந்தாரோ) உங்களையொழிய எனக்கொரு ஸுகமுண்டோ?  உணர அறியாத சிறு பெண்களும் இழக்கவொண்ணாது;  அவர்களும் உணர்ந்தால் புறப்பட வேணும் என்று கிடந்தேன்.  (எல்லாரும் போந்தாரோ) “அடைய வந்து புறப்பட்டு மெய்காட்டுக்கொள்” என்ன, மெய்காட்டுக்கு ப்ரயோஜனம் தொட்டு எண்ணுகையும். தனித்தனி எல்லாரையும் தழுவுகையும். 

(வல்லானை கொன்றானை) “இனி உங்களுக்குச் செய்யவேண்டுவது என்?” என்ன, “உன் அழகிய மிடற்றாலே “வல்லானை கொன்றானை” என்னாய் என்கிறார்கள்.  “ஒரு நாள் செய்த உபகாரம் அமையாதோ நமக்கு” என்று கொண்டாடுகிறார்கள்.  (வல்லானை கொன்றானை)  “புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதான்” (பெரிய திருமொ – 6.5.6) என்று வாசலிலே ஆனையை நிறுத்தி, பிள்ளையை ஆனை நலிந்ததாகக் கேட்போமிறே என்று கம்ஸன் அம்மானாய் இருக்கப் பார்க்க, அத்தைக்கொன்று அவ்வூரில் பெண்களையும் நம்மையும் உளோமாம்படி பண்ணி, ஜீவனமான தன்னை நோக்கித் தந்தவன்.  (மாற்றாரை இத்யாதி) சக்ரவர்த்தி திருமகனைப்போலே “நாளை வா” என்னாதே அக்கணத்திலே கம்ஸாதிகள்  நினைத்த நினைவை  அவர்கள் தங்களோடே போக்கி, தாய் தமப்பன் காலில்   விலங்கைப் போக்கி வாழ்வித்தவன். 

(மாயனை) தன் கையில் எதிரிகள் அகப்படுமவற்றைத் தான் பெண்கள் கையிலே அகப்பட வல்லவன்.  (பாட) நமக்கு அவன் தோற்கும் தோல்விக்குத் தோற்றுப்பாட.  இவ்விஷயத்திலே ஜயம் ப்ரணயித்வத்துக்குக் கொத்தை.  ஆதலால் தோல்வி  விஜயமான இடமிறே    இவ்விடம்.                                                                                                         

@@@@@

 பதினாறாம் பாட்டு

        நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

        கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண

        வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்

        ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

        மாயன் மணிவண்ணன் நென்றலே வாய் நேர்ந்தான்

        தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவான்

        வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ

        நேசநிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.

        அவதாரிகை – பதினாறாம்பாட்டு.  கீழ்ப் பத்துப் பாட்டாலுமாக, பஞ்சலக்ஷம் குடியில் பெண்களையும், ஒருவரை ஒருவர் எழுப்பினமைக்கு உபலக்ஷணமாகையாலே, எல்லோருங்கூட எழுந்திருந்து ஶ்ரீநந்தகோபர் வாசலிலே வந்து நின்று ஶ்ரீநந்தகோபர் உள்ளிட்டாரை எழுப்பி, “செய்யாதன செய்யோம்” (திருப்பாவை – 2) என்றபடி முறை தப்பாமே முதலிகளையும் பிராட்டியையும்  முன்னிட்டுக்கொண்டு எம்பெருமானைப் பற்றப் பார்க்கிறார்கள். 

வ்யாக்யானம் – (நாயகனாய் நின்ற நந்தகோபன்) யேஷாம் த்ரீண்யபதாநாநி  யோநிர் வித்யா ச கர்ம ச / தே ஸேவ்யாஸ்தைஸ்ஸமாயுக்த: ஶாஸ்த்ரேப்யோsபிவிஶிஷ்யதே // , “த்வதீயகம்பீரமநோநுஸாரிண:”  இவர்கள் ஶாஸ்த்ர தாத்பர்யங்களை அரைச் சந்தையாலே சொல்லிவிடுவர்கள்.  “வேதம் வல்லார்களைக் கொண்டு” (திருவாய் – 4.6.8) இத்யாதி.  அவனைப் பெறுமிடத்தில் ததீயர்களை முன்னிட்டுப் பற்றவேணும் என்கை. 

(கோயில் காப்பானே) இவர்களால் லபிக்கிற எம்பெருமான் பக்கலன்று நாயகத்வம். இவர்கள் தங்கள் பக்கலிலே.  “பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய” புருஷகாரம் கார்யகரம் என்கை.  பட்டர் நஞ்சீயருக்கு “பெருமாளைத் தஞ்சமென்று இரும்; பெருமாள் தஞ்சம் என்று  சொல்லுகையாலே நான் தஞ்சம் என்றபடி” என்று அருளிச்செய்தார்.  ஆகையால் ஆசார்யர்களே உபகாரகர் என்று நாயகன் என்கிறாள்.  (நந்தகோபனுடைய கோயில்) எம்பெருமான் பரதந்த்ரனாகையாலே “அடியார் நிலா நின்ற வைகுந்த” (திருவிரு – 75) மிறே. அங்கு “வானிளவரசு” (பெரியாழ்வார் திரு–3.6.3)  ஶ்ரீஸேநாபதியாழ்வானைப்                                                   போலே    இங்கும் ஶ்ரீநந்தகோபர்.  சக்ரவர்த்தியும் அப்படியே.   (கோயில் காப்பானே) சிறு பெண்களாகையாலே அவன் தொழிலையிட்டுப் பேசுகிறார்கள்.  (கொடி இத்யாதி) கோயில் காப்பானென்று  இங்குத்தைக்குமாய், அவன் தன்னையே வாசல் காப்பான் என்கை.  அன்றிக்கே, வேறே திருவாசல் காப்பானைச் சொல்லிற்றாகவுமாம்.  ஆர் விக்நம் பண்ணுகிறார் என்று அறியாமை பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள்.  (மணிக்கதவம்) அழகு உள்ளே போவாரை வழிபறிக்கும்.  “பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு” (பெரிய திருமடல் – 73) “ஸ ததந்த:புரத்வாரம்   ஸமதீத்ய ஜநாகுலம்”  “ஒரு வண்ணம் சென்று புக்கு” (திருவாய் – 6.1.7.)  (மணிக்கதவம்) இது உள்ளே புகுவாரைக் கால்கட்டும்.   அவன் புக்காரைப் புறப்படாதபடி கால்கட்டும்.  (ஆயர் சிறுமியரோமுக்கு)  திருவாசல் காக்குமவன்  “இம்மத்ய ராத்ரிபோதிலே யார்?  திறக்க அழைக்கிற நீங்களார் பயம் மிக்கிருக்கிற தேசத்திலே?” என்ன, “பயம் என்?” என்ன, “சக்ரவர்த்தியும் திருவயோத்யையும், ஆண் புலிகளும், மந்த்ரிகளான வஸிஷ்டாதிகளும் இல்லையே.  இங்கு ஸாது ஶ்ரீ நந்தகோபரும்   சிறுபிள்ளைகளும் இடைச்சேரியுமாய்  இருக்கிறதுக்கு     மேல் கம்ஸன் ஶத்ருவாயிற்று. ஆனபின்பு பயம் கெட்டிருக்கலாமோ?” என்ன, “எங்களுக்கு பயப்படவேணுமோ? பெண்பிள்ளைகளன்றோ?” என்ன;, “சூர்ப்பணகி ராக்ஷஸி அன்றோ?” என்ன, “நாங்கள் இடைப்பெண்கள்” என்ன;, “பூதனைக்குப் பின்பு இடைச்சிகளுக்கன்றோ பயப்பட வேண்டுவது” என்ன,   “நாங்கள் க்ருத்ரிமைகளல்லாத கன்யைகளன்றோ? எங்கள் பருவத்தைப் பாராய்” என்ன, “பருவம் பார்த்துக் கொள்ளுகிறோம்;  வார்த்தையிலே அறியலாம்.  நீங்கள் வந்த காரியம் சொல்லுங்கோள்” என்ன, (அறைபறை) “நோன்புக்குப் பறைவேண்டி வந்தோம்” என்ன,

                “அதுவாகில் கேள்வி கேட்கவேணும்” என்ன , (மாயன் மணிவண்ணன் இத்யாதி) “நேற்றே கேட்டு அவனும் தருகிறேன் என்றான்” என்கிறார்கள்.   (மாயன்) கோஷ்டியிலே தாழநின்று கையைக் காலைப் பிடித்தபடி.  (மணிவண்ணன்) தாழ நின்றதிலும்  அவன் வடிவே போருமென்கை.  பூ அலரும்போது பிடிக்கும் செவ்விபோலே வார்த்தை அருளிச் செய்யும்போதை அழகு.   “வாக்மீ ஶ்ரீமாந்”  (நென்னலே) திருமுளையன்று.  “நேற்று கையார் சக்கரம்” என்னுமாபோலே.  (நென்னலே) “உன் கால் பிடிக்கவேண்டுகிற இன்றுபோலேயோ?  அவன் காலைக் கையைப் பிடிக்க இருந்த நேற்றைநாளும் ஒரு நாளே!”  என்கிறார்கள். (வாய்நேர்ந்தான்) ஓலக்கத்திலே ஒரு வார்த்தை சொன்னானாகில் மெய்யென்றிருக்கவோ? அந்தரங்கமாகச் சொல்லவேண்டாவோ?” என்ன, “ராமோ த்விர் நாபிபாஷதே” யன்றோ;  சொல்லாது ஒழிந்தவன்று செய்யலாவது இல்லை;  சொன்ன பின்பு அவன் வார்த்தையிலே பழுதுண்டோ?  தூயோமாய் வந்தோம் என்கிறார்கள்.  தூய்மை அவனுடைய ரக்ஷையும், அவன் ப்ரயோஜனமும் ஒழிய ஸ்வயத்நம்  ஸ்வப்ரயோஜநமில்லாமல் இருக்கை;  திருவடி திருவாழி மோதிரத்தையும் தன் வடிவையும் காட்டாதே தன் மிடற்றின் ஒசையைக் காட்டி   விஶ்வஸிப்பித்தாற் போலே.  தங்களுடைய ஆர்த்த த்வநியைக் காட்டுகிறார்கள்.  “ப்ரணாதஶ்ச மஹாநேஷ:” என்ற ஆர்த்தநாதம்.  “ஆநயைநம்” என்னப் பண்ணிற்றிறே. 

(வந்தோம்) இங்கு வர்த்திக்கிற உனக்கு அடைவு தெரியாமையில்லை.  (துயிலெழப் பாடுவான்) “ஸ மயா போதித:” என்று பிராட்டி உறங்குகிறபடி கண்டு உகந்தாள்.  நாங்களும் பெரியாழ்வார் பெண்பிள்ளைகள்.  “படுத்த பைந்நாகணை” ( திருப்பல்லாண்டு – 9) “மடியாதின்னே” (திருவாய் – 8.3.5).

(வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே) மனத்தினால் நினைத்தாலும் வாயால் நெருப்பைச் சொரியாதேகொள்.  இவர்களுக்கு இவன் வாயதிறே வாணாள்.  (அம்மா) “அரங்கத்தம்மா” (திருப்பள்ளி – 1) படியே.  (அம்மா) அவன் வாய்நேர்ந்தாலும் இவர்கள் நடத்தாவிடில் கார்யகரமாகாது.  “வத்யதாம்” என்றவாறே. “அஸ்மாபிஸ்துல்ய:” என்னவேணுமிறே.   (நீ நேச நிலைக்கதவம் நீக்கு) உள்ளிருக்கிறவனோ எங்களுக்கு நாயகன்?  நீயன்றோ.   “வாசா தர்மமவாப்நுஹி” பண்ணாயோ?  இவர்களை “தாளை உருவிக் கதவைத் தள்ளிக்கொடு புகுருங்கோள்”  என்ன, “அது உன்னிலும் பரிவுடைய கதவு காண்.  எங்களால் தள்ளவொண்ணாது.  நீயே திற” என்கிறார்கள்.  கம்ஸன் படைவீட்டிலடைய ப்ரதிகூலிக்கும்படி;  இங்கு எல்லாரும் அநுகூலிக்கும்படி.  “படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே” (பெருமாள் திரு – 4.9) இத்யாதி.                                               

@@@@@

 பதினேழாம் பாட்டு

       அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

        எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்

        கொம்பனார்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே

        எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்

        அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த

        உம்பர்கோமானே உறங்காது எழுந்திராய்

        செம்பொற்கழலடி செல்வா பலதேவா

        உம்பியும் நீயும் உறங்கேல் ஓரெம்பாவாய்.

அவதாரிகை – பதினேழாம்பாட்டு.  கருந்தாளை உருவித் திருவாசல் காப்பானும் “உள்ளே புகுருங்கோள்” என்று சொல்ல, உள்ளே புக்கவாறே பிள்ளைக்குக் காவலாகப் பெண்கள் களவு காணப்போவர்கள் என்று நோக்கிக் கிடக்கிற ஶ்ரீநந்தகோபரை எழுப்புகிறார்கள். 

வ்யாக்யானம் – (அம்பரமே தண்ணீரே இத்யாதி) புடவை, தண்ணீர், சோறோடு வாசியற வேண்டுவார்க்கு வேண்டிற்றுத் தடையின்றிக்கே கொடுக்கை.  (அறஞ்செய்யும்) பலாபிஸந்திரஹிதமாக ஆந்ருஶம்ஸ்யத்தாலே கொடுக்கை.  (எம்பெருமான்) பெண்களுக்கு க்ருஷ்ணனைப் பெற்றுத்தந்தவன். “ஸர்வ லாபாய கேஶவ:” “உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்றே” (திருவாய் – 6.7.1) எல்லாமாயிருக்கிறவர்களுக்கு அவ்வொன்றையும் தாராய்.  (நந்த கோபாலா) க்ருஷ்ணனைப் பெற்றுத்தந்த நீர் நாங்கள் பெறும்படி பாரீர்.  ஹிதபுத்தி பிதாக்கள் பாடே உண்டாகையாலே “புகுருங்கோள்” என்றானிறே. 

(கொம்பனார் இத்யாதி) நாங்கள் வருந்தனையுமன்றோ நீ காப்பது என்கை.  “நாரீணாமுத்தமா” என்று பெண்களாய்ப் பிறந்தவர்களுக்கெல்லாம் தலையாகப் பிறந்தவளே!  (குலவிளக்கே) பெண்களாய்ப் பிறந்தார்க்கெல்லாம் த்ருஷ்டியான விளக்கே! (எம்பெருமாட்டி) க்ருஷ்ணனைப் பெற்றுத்தந்து எங்களுக்கு ஸ்வாமினியானவளே! (அசோதாய்) க்ருஷ்ணனுக்கும் பெண்களுக்குமுள்ள சேர்த்திக்கு உகக்குமவளே!  ஸஜாதீயையாகையாலே நோவு அறியுமே அவள்!  (அறிவுறாய்) நீ அறிந்த அன்று எங்களுக்கு ஒரு குறையுண்டோ?  நீ காவலாக அமையும் என்கை.  அவள் அனுமதி பண்ணின மாத்ரத்தோடே க்ருஷ்ணனை உள்ளே புக்கு எழுப்புகிறார்கள்.  (அம்பரம் இத்யாதி) பரதந்த்ரன் என்று கண்ணழிவு சொல்லவொண்ணாது.  அவள் அனுமதி கொண்டோம்;  அநந்யப்ரயோஜனராய் வந்தார்க்கு முகங்கொடுக்கவொண்ணாதோ?  ஆண்களுமாய், ப்ரயோஜநாந்தரபரர்க்கோ கார்யம் செய்யலாவது?  தேவர்களுக்குக் குடி இருப்பைக் கொடுத்த நீ எங்கள் குடியிருப்பை அழிக்கவோ பார்த்தது?  உறங்குவாரைத் தழுவக்கடவ உனக்கு உணர்ந்து வந்தவர்களைத் தழுவலாகாதோ? 

“நம்பி மூத்தபிரானை எழுப்பி நம்மை எழுப்பிற்றிலர்கள்” என்று கிடக்கிறான் என்று பார்த்து அவனை எழுப்புகிறார்கள் (செம்பொற்கழலித்யாதி) பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே! எழுந்திராய்;  அவன் பாரதந்த்ர்யத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்.  இவன் ஆற்றாமையாலே கட்டிக்கொண்டு கிடக்கும் என்கை.  “ஸந்தேஶை: ஸாமமதுரை: ப்ரேமகர்ப்பை: அகர்விதை: ராமேணாஶ்வாஸிதா கோப்ய: ஹரிணா ஹ்ருதசேதஸ:” என்கிறபடி எங்களையும் அவனையும் பொருந்தவிடுமவன் அல்லையோ  நீ?  என்கிறார்கள்.  வெறும் படுக்கையைக் கட்டிக்கொண்டு கிடக்க அமையுமோ?  “சென்றால் குடையாம்” (முதல் திருவ–53) இத்யாதியாக வேண்டாவோ? 

@@@@@

பதினெட்டாம் பாட்டு

        உந்து மதகளிற்றன் ஓடாத  தோள் வலியன்

        நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

        கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்

        வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – பதினெட்டாம் பாட்டு.  இனிமேல் மூன்று பாட்டாலே நப்பின்னைப் பிராட்டியை எழுப்பி, அவள் வழியாலே எம்பெருமானை எழுப்புகிறது.   பிராட்டியை ஒழிந்தால் பலஸித்தி இல்லையோ என்னில், இல்லை.  எங்ஙனே? என்னில் – இளையபெருமாள் பிராட்டி  முன்னிலையாகப் பெருமாளைப் பற்றினார்.  அபராதத்தினுடைய எல்லையிலே நின்றாலும், இவள் ஸந்நிதியாலே காகம் ப்ரபந்நர் பெறும் பேற்றைப் பெற்றது.  திருவடி பிராட்டி கடாக்ஷம் பெற்ற பின்பு “ஸீதாமாஶ்ரித்ய தேஜஸ்வீ” ஆனதுமன்றிக்கே ராம தாஸனானான்.  “ஏஷ ஸர்வஸ்வபூத:” எம்பெருமானாரும் கத்யத்திலும் அப்படியே.  ஆகையாலே இவர்களும் ஒரு பாட்டாலே அவள்தனக்கு அடிமைபுக்கு, பின்னை ஒரு பாட்டாலே உபாயத்துக்கு உடலாக அவனைப் பற்றி, பின்னை ஒரு பாட்டாலே உபேயத்துக்கு உடலாக அவளையும் அவனையும் பற்றுகிறார்கள்.

வ்யாக்யானம் – (உந்துமதகளிற்றன்) உந்துகை – முறுக்குகை.  அதாவது – பொருகிற யானையை நினைவை அறிந்து நடத்த வல்லன் என்றபடி.  மதத்தை உந்து களிறு என்றுமாம்.  களிறு உண்டோ இவனுக்கு என்னில், ஶ்ரீவஸுதேவரும் ஶ்ரீநந்தகோபரும்  ஒரு மிடறாயிருக்கையாலே அங்குள்ளதெல்லாம் இங்கு உண்டு.  ஆனைகளோடு பொரும்படியான மிடுக்கை உடையவனென்கை.  ஆகையன்றோ பிள்ளைகள் போய் ஆனையோடே போருற்றது.  “அவஶ்யம் பிதுராசாரம்” இறே.  “குணைர்தஶரதோபம:” இறே.  (ஓடாததோள் வலியன்) எதிரிகளைக்கண்டு பிற்காலியாதே கொல்லவல்ல மிடுக்கு.  தம்முடைய தனத்துக்குக் காவலுண்டு என்கிறார்கள்.

ஸ்நுஷா தஶரதஸ்யாஹம் ஶத்ருஸைந்யப்ரதாபிந:” என்று பிராட்டி அருளிச் செய்தாற் போலே ஶ்ரீநந்தகோபரைக் கொண்டாடுகிறார்கள்.  அதுதன்னையே “நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்” என்கிறா்கள்.  அவள் பின்னை “திருவாய்ப் பாடியில் பெண்களானவர்கள் நந்தகோபாலன் மருமகளல்லாதாருண்டோ?  என்று பேசாதே கிடந்தாள்.  அதுக்காக “நப்பின்னாய்” என்கிறார்கள். 

(கந்தம் கமழும் குழலீ) முன்பு க்ரமம் அறிகிலோம் என்ன, “என்னை நீங்கள் சொல்லுகிறதென்” என்ன, “எங்களையும் க்ருஷ்ணனையும் சேர்த்துவிடாய்” என்ன, “இங்கு அவன் உண்டோ?” என்ன, “ஆண் நாறா நின்றது.  வ்யாவ்ருத்த பரிமளமும் ஸமுதாய பரிமளமும் அறியோமோ?” என்ன, அவன் “ஸர்வகந்த:” என்று பூவுக்கு நாற்றம் கொடுக்குமாபோலே அவனுக்கு நாற்றம் கொடுக்கவல்ல குழல் இவளது என்கை.  உன் குழலில் பரிமளத்தாலே அவன் அழுந்திக் கிடக்கும்.  அநுபவிக்கைக்கு நாங்கள் வேண்டாவோ?  (கடை திறவாய்) கிண்ணக வெள்ளத்தைக் கரைகட்டினாற்போலே, அடைத்துக் கொண்டு திறவாமல் கிடவாதே வெட்டிவிடாய் எல்லாரும் அநுபவிக்கும்படி.  இவர்கள் அவளுக்கு அவயவமாகையாலும், ஸ்ரக் சந்தனாதிகளோபாதிகளாகையாலும், போகோபகரணமாகையாலும் இவளோடு அவன் புஜிக்கும்போது அவனுக்குத் தன் திருமுலைத்தடத்தாலே நெருக்கினவோபாதி ப்ரியமாகையாலும் அவளை எழுப்புகிறார்கள்.  “உன்தன் திருவுள்ளம் இடர் கெடுந்தோறும்” (திருவாய் – 10.3.9) இத்யாதிவத்.

(வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்) “கதவு திறக்கப் போது விடிய வேண்டாவோ?” என்ன, “விடிந்தமைக்கு அடையாளமன்றோ கோழி கூவுகிறது” என்ன, “ஒரு கோழிக் கூவ போது விடியுமோ?” என்ன; “எங்கும் கோழி கூவாநின்றது” என்ன, அது சாமக்கோழி;.  மற்ற அடையாளம் உண்டோ?” என்ன;, (மாதவி இத்யாதி) இப்பூம்படுக்கை யினின்றும் இவை உணரும்போது விடியவேண்டாவோ?” என்ன;, அது மேலே கூவ நாங்கள் கீழே கூவாநின்றோம்.  (மாதவிப்பந்தல் மேல்) ஸுகஸ்பர்ஶத்தாலே படுக்கையிலே உறங்குகிறவை. 

(பந்தார் விரலி) க்ருஷ்ணனை ஒரு கையாலும், பந்தை ஒரு கையாலும் அணைத்துக் கொண்டு கிடக்கை.  அவன் செண்டை ஒரு கையாலும் இவளை ஒரு கையாலும் அணைத்துக்கொண்டு கிடக்கும்.  அப்பந்தானோமாகில் எங்களைக் கைவிட வேண்டாவே.  இவளுக்கு அவன் போகோபகரணம்;  பந்து லீலோபகரணம்.  (உன் மைத்துனன் பேர்பாட) நீங்கள் வந்தது என் என்ன, “நீயும் அவனும் ஒருவர்க்கு ஒருவர் உத்தரம் சொல்லும்போது ஒத்து நில்லாமே உன் பக்ஷத்திலே நின்று உனக்காக அவனை ஒத்தன சொல்லி அவன் தோல்வி கண்டு உன் விஜயம் பாட,  “அஸ்மின் மயா ஸார்த்தம்” என்று இளையபெருமாள் பிராட்டி பக்ஷத்திலே நின்றாற்போலே பேர் பாட.  “நாமம் பலவுமுடை நாரணநம்பி” (பெரிய திருமொ – 10.8.4)  என்று அவனுக்கு உள்ளவை எல்லாம்  சொல்லிக்கொடுக்கைக்கு. 

(செந்தாமரைக் கையால்) அவனும் ஆசைப்படும் கை.  அவன் உகக்கும் “அணிமிகு தாமரைக்கை”  (திருவாய் – 10.3.5).  எங்களை “மாஶுச:” என்னும் கை.  “நீங்கள் பண்ணுகிற பாபத்துக்கு நீங்கள் அஞ்சவேண்டா.  நானுளேன்” என்கிறது.  இப்பெருமாளுடைய அஞ்சல் என்ற கை.  “பவேயம் ஶரணம் ஹி வ:” என்னும் கை.  “ஈஶ்வர ஸ்வாதந்த்ர்யத்துக்கு நீங்கள் அஞ்சவேண்டா” என்கிறது பெரிய பிராட்டியாருடைய அஞ்சல் என்ற கை.  (சீரார் வளையொலிப்ப)   வளையை ஏறக் கடுக்கித் திறக்கப் புக்காள், அங்ஙன் ஒண்ணாது.  அவனும் நாங்களும் நடையழகைக் கண்டு வாழவேணும். 

(மகிழ்ந்து) பேறு உன்னதாக வேணும்.  தர்மத்துக்குத் திறக்க ஒண்ணாது.  அடியே பிடித்து “பவேயம் ஶரணம் ஹி வ:” என்னவேணும்.  எம்பெருமானார் விஶேஷித்து உகந்த பாட்டு இது. 

@@@@@

பத்தொன்பதாம் பாட்டு

        குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்

        மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

        கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

        வைத்துக்கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்

மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை

எத்தனைபோதும் துயிலெழ வொட்டாய் காண்

எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – பத்தொன்பதாம் பாட்டு.  இவள் திறக்கப் புக, “நம்முடையார்க்கு இவள் முற்பட்டாளாக ஒண்ணாது” என்று இவளைத் திறக்கவொட்டாதே கட்டிக்கொடு கிடந்து, அந்த ஸுகஸ்பர்ஶத்தால் மறந்து  உறங்குகிறவனை எழுப்பி, மறுமாற்றம் கேளாமை பின்பும் அவனை உணர்த்துகைக்காகவும் அவளை எழுப்புகிறார்கள்.

(குத்து விளக்கெரிய) “நமக்குப்போலே இருள் தேடவேண்டாதே பகலையும் இரவாக்கிக்கொண்டு விளக்கு எரியக் கிடக்கப் பெறுவதே இவள்!” என்கை.  (கோட்டுக் கால்) குவலயாபீடத்தைக் கொன்று அதன் கொம்பாலே செய்த கால்களை உடைய கட்டில்:  வீரபத்நியாகையாலே மற்றையவற்றில் கண் உறங்காது.  (கட்டில்) ஜாதிப்பேச்சு.

(மெத்தென்ற) ஆர்த்தராய் அலைந்து கிடக்க,  படுக்கையில் உள்மானம்  புறமானம் கொண்டாடிக்கண் உறங்குவதே! இவர்களுக்கு “மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளி” (திருவாய் – 9.9.4) இறே;   அவனுக்கு நெருப்பு நீராம் ஔஷதமுண்டிறே.  (பஞ்சசயனத்தின் மேலேறி) “பாதேநாத்யாரோஹதி” என்று நாங்கள் மிதித்து ஏறினாலன்றோ  நீ படுக்கையில் ஏறுவது என்கை.  அங்கு ஏறில் அவன் “கோSஸி” என்ன, இவன் “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்னும்;  “ப்ரஹ்மம் நான்” என்னப்போமோ?  என்னில் “பரவாநஸ்மி” என்னுமாபோலே ப்ரகாரமான ப்ரஹ்மம் என்கை.  “ரமமாணா வநே த்ரய:” என்று ஆசைப்படுகிறார்கள். 

(கொத்தலர் பூங்குழல்) பெரிய திருநாளாய்ச் செல்லாநிற்க, குறியழியாதிராதிறே.   ஒரு மஹாபாரதத்தாலே அலருகை.  காலம் அலர்த்துமாப்போலே அவனுடைய ஸ்பர்ஶம்.  “மலரிட்டு நாம் முடியோம்” (திருப்பாவை–2) என்றது மறந்தாயோ?  இழவு சொல்லும்போது தங்களோடே கூட்டுவர்கள். பேறு சொல்லும்போது அவனோடே கூட்டுவர்கள்.  (கொத்தலர் பூங்குழல்) “வாசம் செய் பூங்குழலாள்” (திருவாய் – 10.10.2) என்னுமாபோலே.  (கொங்கைமேல் இத்யாதி) கொங்கையைத் தன்மேலே வைத்துக் கிடத்தல், கொங்கையின் மேலே தன்னை வைத்துக் கிடத்தல்.  “ந ஶாஸ்த்ரம் நைவ ச க்ரம:” “பர்யாயேண ப்ரஸுப்தஶ்ச” “மலராள் தனத்துள்ளான்” (மூன்றாம் திருவ – 3) (மலர் மார்பா) அவனுக்கு உஜ்ஜீவநம்.  (வாய் திறவாய்) “ஆர்த்தோ வா யதி வா த்ருப்த:” என்று சொல்லி வைத்துப் பேசாதே கிடக்குமித்தனையோ? இருவரும் கூடினபின்பு த்வயத்தில் உத்தரார்த்தம் போலே அநுபவிக்கும் இத்தனை.  அங்கு ஒன்றும் காணாமை (மைத்தடங் கண்ணினாய்) என்கிறார்கள்.  இவன் வாய் திறக்கப்போக,  அவள் “நானன்றோ”  என்ன, பேசாதே கிடந்தான்.  நீ கண்ணாலே விலக்கவேணுமோ?  (தடங்கண்ணி) இக்கடலைக் கரைகண்டாலிறே நம்மைப் பார்ப்பது.  “ந ஜீவேயம் க்ஷணமபி” யிறே.  உன்னாலே அவனைப் பெறுகை தவிர்ந்து, இப்போது மற்றைப்படி செய்கையாய்த்தோ?  (உன் மணாளனை) “கோபீஜநவல்லப” என்கை.  இனி உனக்கே ஶேஷம் என்று இருக்கிறோம்.

 (தத்துவம்) ஸத்யம்;  (அன்று தகவு) தகவன்று என்று எங்கள் ஆற்றாமையாலே சொல்லுகிறோமன்று;  மெய்யே தர்மமன்று.  தத்துவமன்று – ஸ்வரூபமன்று. 

@@@@@

இருபதாம் பாட்டு

        முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

        கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்

        செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

        வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!

        செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

        நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்!

        உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை

        இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.

        அவதாரிகை – இருபதாம் பாட்டு.  அங்கு சொல்லுவதெல்லாம் சொல்லி, இவளைப் பற்றி எழுப்பி அவன் உணராவிட்டவாறே “அவன் தனக்கு உரியனோ?  அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ எங்களை நீராட்டுவீ” என்று நப்பின்னை பிராட்டியோடே அர்த்திக்கிறார்கள். 

வ்யாக்யானம் – (முப்பத்து மூவர்) ரக்ஷிக்கைக்கு ஸங்க்யா நியதியுண்டோ?  (அமரர்க்கு) கொன்றாலும் சாவாதாற்கோ உதவலாவது?  (முன் சென்று) நோவு வருவதற்கு முன்னே ரக்ஷிக்க வேண்டாவோ?  (சென்று) சென்று உதவக்கடவ நீ வாசலிலே வந்த எங்களுக்கு உதவினாலாகாதோ?  “மிகை” யன்றோ?  (கப்பம் தவிர்க்கும்) இறை தவிர்க்கை என்றுமாம்.  து:க்க நிவ்ருத்தியை ஆசைப்பட்டார்க்கோ உதவலாவது?  (கலியே துயிலெழாய்) மிடுக்கையுடையவனே! துயிலெழாய்.  எங்களுக்குக் குடியிருப்பும் ஜீவநமும் உணரும்படி காண்கை.

(செப்பமுடையாய்) பராபிபவந ஸாமர்த்யம் எங்களுக்கு அணுகவொண்ணாதபடி யாயிற்றே. (செற்றார்க்கு இத்யாதி) ஆஶ்ரிதவிரோதிகளைப் போக்கி, நெடுங்காலம் தேடின குணமெல்லாம் இழக்கப் புகுகிறாய் என்கை.  வெப்பம் கொடுக்கை அநுகூலர் பாடேயாயிற்றோ!  என்கை.  அம்பெய்ய வேண்டா;  எழுந்திருந்து நோக்காய். 

இங்கு கிடையாதொழிய, நப்பின்னை பிராட்டியை எழுப்புகிறார்கள்.  (செப்பென்ன மென்முலை) இவன் முகம் காட்டாமைக்கு ஹேது இவள் என்கை;  இவள் ஸந்நிவேஶம் அவன் ஜீவநம்.  நிதியிட்டு வைக்கும் செப்பு.  “சீறிய சிங்கம்” (திருப்பாவை – 23) வர்த்திக்கும் மலைத்தாழ்வரை.  (செவ்வாய்) அங்குள்ள கனியை நுகருமாபோலே.  (சிறு மருங்குல்) மலையின் நுனியிலே இருப்பார் விழுகிறோம் என்று பயப்படுமாபோலே.  இம்மலையை புஜிக்கிறவனுக்கு பயஸ்தானமாயிருக்கை.  மேலையும் கீழையும் கொண்டு இடை உண்டு என்று அறியும் இத்தனை.  (நப்பின்னை நங்காய்) அநுக்த ஸௌந்தர்ய ஸமுச்சயம்.  (துயிலெழாய்) எங்கள் ஸத்தையை உண்டாக்காய். 

செய்யவேண்டுவது என்? என்ன – (உக்கம்) – ஆலவட்டம்.   (தட்டொளி) கண்ணாடி.  (தந்து உன் மணாளனை) உன்னோட்டைக் கூட்டுகிறது எங்களுக்கு உறுப்பென்று இருந்தோம்.  (இப்போதே)  “வைதர்ம்யம் நேஹ வித்யதே” என்று மற்றைப் போதைக்கு இறோம் என்கை.  (எம்மை) எல்லார்க்கும் உபாயம் ஒத்திருக்குமாபோலே உபேயமும் ஒன்றேயாகை.  (எம்மை) “ஏஹி பஶ்ய ஶரீராணி”  (எம்மை நீராட்டு) எங்களையும் அவனையும் கூட முழுக்காட்டவேணும்.  (நீராட்டு) “தாரா: பித்ருக்ருதா இதி” என்று – ஐயர் பண்ணிய விவாஹம் என்று உகப்பது.  அப்படியே இவள் தந்த க்ருஷ்ணனும். 

@@@@@

இருபத்தொன்றாம் பாட்டு

        ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப

        மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்

        ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்!

        ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில்

        தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்

        மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசற்கண்

        ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே

        போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.

        அவதாரிகை –இருபத்தோராம் பாட்டு.  கீழ், கண்டாரை எல்லாம் எழுப்பிப் பட்ட வ்யஸநம் தீர, அவன் தன்னையே எழுப்புகிறார்கள்.   நப்பின்னை பிராட்டி “நான் உங்களிலே ஒருத்தியன்றோ?  நாம் எல்லாரும் க்ருஷ்ணனை அர்த்திக்கக் கடவோம்” என்ன எழுப்புகிறார்கள். 

வ்யாக்யானம் – (ஏற்ற கலங்கள் இத்யாதி) கலங்கள் இடுவார் தாழ்வே;  இட்ட கலங்களெல்லாம் நிரம்பி எதிர்பொங்கி வழிந்து வெள்ளமிடும். (மாற்றாதே) கலமிடுவார் இல்லையென்றால் அத்தால் தவிராது.  முலையில் கடுப்பு போகாது.  (வள்ளல்) அபேக்ஷையால் கொடுக்கும் அவனைப்போலே, அவையும் அபேக்ஷித்ததற்காகச் செய்தது என்கை.   (பெரும் பசுக்கள்) ஶ்ரீ ஶத்ருஞ்ஜயனைப் போலேயிருக்கை.  க்ருஷ்ண ஸ்பர்ஶத்தாலே வளர்ந்து அவன் ஏழு வயஸ்ஸிலே பதினாறு வயஸ்ஸு குமாரன் என்னும்படி இருக்குமாபோலே இருக்கும்.  (ஆற்றப் படைத்தான்) மிகவும் படைக்கை.  “கழியாரும் கனசங்கம்” (பெரிய திருமொ–6.9.2) என்று.  திருநறையூரில் முத்தை எண்ணிலும் எண்ணப்போகாது.  (கழியாரும் கனசங்கம்) கர்ப்ப கேதம்.  பெரிய திருநாளுக்கு வருமாபோலே.  (வழியார) தார்மிகர் இம்முத்தை வழித்துறைப்படக் குவிக்க, வழியை மலையாக்குவிக்கும்.  (ஆற்றப் படைத்தான் மகனே) அவர் ஆர்ஜித்துப் படைக்க.  இவன் பிறந்து படைத்த ஸம்பத்து.  பரமபதம்போலே தான்தோன்றியன்று.  (அறிவுறாய்) ஸர்வஜ்ஞனுக்கும் உணர்த்தவேண்டும்படி உள்ளுச் செல்லுகிறபடி.  (ஊற்றம்) த்ருடதர ப்ரமாண ஸித்தன்.  (பெரியாய்) அவைதனக்கும் “அப்ராப்ய மநஸா ஸஹ” “யஸ்யாமதம் தஸ்ய மதம்” என்று சொல்லுகிறபடியிருக்கை.

(தோற்றமாய்) இப்படி பெரியனாயிருந்துவைத்து, இதர ஸஜாதீயனாய் அவதரித்தபடி.  (சுடரே) மநுஷ்யத்வே பரத்வம்.  (ஊற்றம்) மஹாராஜர், பிராட்டி முதலானவர்கள் விட எண்ணினாலும் விடாத ஊற்றம்.  (பெரியாய்) தன்பேறு.  (உலகினில் தோற்றமாய் நின்ற)  துர்யோதனாதிகள் உள்ளிட்டார்க்குப் பாண்டவ பக்ஷபாதி என்னும்படியாய் இருக்கை.  (சுடரே துயிலெழாய்) இப்போது உணராமையாலே   (மாற்றாரித்யாதி) நாங்கள் வருமவர்களோ?  (வலி தொலைந்து)  “ந நமேயம் து கஸ்யசித்” என்கை தவிர்ந்து அம்புக்குத் தோற்றாரோபாதி குணத்துக்குத் தோற்றோம்.  அவர்களுக்கு முடிந்து பிழைக்கலாம்.  “ஸத்யேந லோகாந் ஜயதி” .

(ஆற்றாது வந்து) “ஆள்பார்த்து உழி தருவாய்” (நான்முகன் திரு–60) என்று நீ வரக்கடவையாயிருக்கிற நாங்கள் வந்து.  (உன்னடி பணியுமாபோலே) வணக்கம் ஸ்வரூபத்துக்கு என்று இருக்கை.  (போற்றியாம்) தோற்றார் அவனைப் புகழும் இத்தனை.  அபலைகளை வெல்லுகையும் ஒரு பணியோ?  (புகழ்ந்து) படுத்தின பாடும், வென்று கொண்டபடியும் சொல்லி, கிட்டினார்க்குப் பல்லாண்டு பாடுகை ஸ்வரூபமாயிற்று. 

@@@@@

இருபத்திரண்டாம் பாட்டு

        அங்கண் மாஞாலத்தரசர் அபிமான

        பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற் கீழே

        சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

        கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே

        செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ

        திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்

        அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

        எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.

         அவதாரிகை – இருபத்திரண்டாம் பாட்டு.  கீழ்ப்பாட்டில் தங்கள் அபிமான ஶூந்யதையைச் சொல்லிற்று.  இப்பாட்டில் தங்களுக்கும் பிறர்க்கும் ஆகாதபடியான அநந்யார்ஹ ஶேஷத்வம் சொல்லுகிறது.

வ்யாக்யானம் – (அங்கண்மாஞாலத்தரசர்) இப்பரப்பெல்லாம் தங்களது என்று அபிமானம் பண்ணின ராஜாக்கள்.  இது அடைய தந்தாம் அபிமானத்திலே அடக்கி வைக்கை;  பௌண்ட்ரக வாஸுதேவனைப்போலே.  (அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே) இளைய பெருமாளைப்போலே, “குணைர்தாஸ்யமுபாகத:” இறே.  (சங்கமிருப்பார் போல்) “வெளியே திரியில் பின்னை ராஜ்யம் பண்ணு என்று தலையிலே முடியை வைப்பார்கள்” என்று அஞ்சி அணுகோலக்கத்திலே சேவிப்பார்கள். (வந்து தலைப் பெய்தோம்) கீழ் எல்லாரையும் எழுப்பிப் பட்ட வ்யஸநமெல்லாம் தீர்ந்து கிடக்கப் பெற்றோம்.  பண்டு கைகழிந்தபடியும்  இன்று ஸங்கதி உண்டானபடியும்.  “அந்நலனுடை ஒருவனை நணுகினம் நாமே” (திருவாய்–1.1.3) இறே.  “வாநராணாம் நராணாம் ச கதமாஸீத் ஸமாகம:” (கிங்கிணி வாய்ச்செய்த இத்யாதி) இழவு பேறுகள் அத்தலையிலேயாய் இருக்கிறபடி;  காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணி, பெண்கள் ஆற்றாமை அலரப் பண்ணுகிறபடி.  (செங்கண்) உபமானம் நேரே நில்லாமை  உபமேயம் தனையே சொல்லப் பெறும்படி.  (சிறுச்சிறிதே) ஒரு நீர்ச்சாவியிலே வெள்ளமாகாமை பொறுக்கப் பொறுக்க.  ப்ரதம பரிஸ்பந்தமே பிடித்துக் காணவேணும் என்கை.  (எம்மேல் விழியாவோ) கோடையோடின பயிரிலே ஒரு பாட்டம் வர்ஷியாதோ?  என்னுமாபோலே.  சாதகம் வர்ஷதாரையை ஆசைப்படுமாபோலே.  (திங்களும் ஆதித்யனும் எழுந்தாற் போல்) பெறாதார் விடாய் ஆற்றுகைக்கும், கிடையாதோ என்கிற அஜ்ஞாநாந்தகாரம் போகைக்கும்.  “ப்ரஸந்நாதித்ய வர்ச்சஸம்”.

(அங்கண் இரண்டும் கொண்டு) கார்கால ஆதித்யனும் நகட்டுச் சந்திரனும் போலல்ல.  “சந்த்ரகாந்தாநநம் ராமம்”.  முழு நோக்குப் பொறுக்கும்படியால் உன் அழகிய இரண்டு கண்களையும் இட்டுப் பார்க்கவேணும் நாங்கள் பிழைக்க.  கோப ப்ரஸாதங்களுக்குச் சந்த்ர ஸூர்யர்கள் ஒப்பல்ல. 

(எங்கள் மேல் சாபம் இழிந்து) யாதநா ஶரீரம் போலே உன்னையும் பெறாதே வ்யஸநப்படுகைக்கு அடியான ஶாபோபஹதரான எங்கள் து:க்கம் போக என்கை. விஶ்லேஷ வ்யஸனத்தாலே வரும் துக்கம் அநுபவித்தே விடவேண்டுகையாலே சாபமென்றது.  “சாபமிழிந்து நோக்குதியேல்” என்று அந்வயம்.  “விழியாவோ” என்று மநோரதம்.  “நோக்குதி” என்கிறது அவனைக் குறித்து. 

@@@@@

இருபத்து மூன்றாம் பாட்டு

        மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

        சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

        வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

        மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு

        போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்

        கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

        சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த

        காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – இருபத்து மூன்றாம்பாட்டு.  “பெண்காள்! உங்கள் காரியம் அழகியதாகச் செய்து தருகிறோம்;  உங்களுக்குச் செய்யவேண்டுவது என்?” என்ன; “இங்ஙனே குன்னாங்குருச்சியாகக் கேட்டருள ஒண்ணாது;  புறப்பட்டுக் கேட்டருளவேணும்   என்கிறார்கள்.  “பின்னை நெடும்பணைத்தோள் மகிழ் பீடுடை முன்னை அமரர் முழுமுதலானே”   (திருவாய் – 1.7.8).

வ்யாக்யானம் – (மாரிமலை முழைஞ்சில்) பெருமாள் மால்யவானிலே எழுந்தருளி இருந்தாப்போலே  வர்ஷம் பெய்து வழிகளெல்லாம் தூறு எழுந்து ராஜாக்கள் படைவீட்டிலே இருந்து வினை உண்டானாலும் புறப்படாதாப்போலே, ஸிம்ஹங்கள் கிரிகுகைகளிலே கிடந்து உறங்கும் காலம்.  விஶ்லேஷித்தார் கூடுங்காலம்.  கூடியிருந்தார் ஸம்போகம் அனுபவிக்கும் காலம்.   நாங்கள் உன் வாசலிலே நிற்கும் காலம்.  (மன்னி) ஆருக்கு அஞ்சுமது?  மலைக்குவடுபோலேயிருக்கை.  (கிடந்து உறங்கும் இத்யாதி) ஒருத்தர் முடிசூட்ட வேண்டாதே புறம்பே ம்ருகேந்த்ரனாகையும் நிரங்குஶ வைபவமுண்டாகையும்.  “ஸ மயா போதித: ஶ்ரீமாந்”.  க்ஷுத்ர ம்ருகங்கள் மண் உண்ணும்படியிருக்கை.  “அபித: பாவகோபமம்”  அநுகூலரான தம்பிக்கும் அகப்பட அணுகவொண்ணாதபடி இருக்கை.  (அறிவுற்று) பூ அலர்ந்தாற்போல காலத்திலே உணருகை.  ஸம்ஸாரி உறங்கும்போது தமோபிபூதனாய், உணர்ந்தால் பராநுகர்த்த அனுபவமாயிருக்கும்;  இவன் உறக்கம் வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வருமளவும்.  (தீ விழித்து) ப்ரதமாக்ஷிஸந்நிபாதத்திலே பேடைக்கும் அருகே நிற்கவொண்ணாதென்கை. 

(வேரி மயிர்) உளைமயிர்.  அவனுக்காகில் “ஸர்வ கந்த:”.  (எப்பாடும் பேர்ந்துதறி) ஒரு கார்யப்பாடு இல்லாமையாலே நாலு பாடும் பேருகிறபடி.  (உதறி) அவயவங்களை தனித்தனியே உதறினபடி.  (மூரி நிமிர்ந்து) உடம்பு ஒன்றாய் நிமிர்ந்தபடி.  (முழங்கி) மான் உள்ளிட்ட ம்ருகங்கள் முழுக்காயாகப் பினத்திக் கிடக்கும்படி.  (முழங்கி புறப்பட்டுப் போதருமாப்போலே) “கிரி கஹ்வரத்தில் நின்றும்  இப்படிப்பட்டதொரு ஸிம்ஹம் புறப்பட்டுப் போதருமாபோலே போரவேணும்” என்ன, “பெண்காள்! நரஸிம்ஹம் போருமாபோலே போரவேணுமோ?” என்      ன (நீ பூவைப்பூவண்ணா)  காம்பீர்யத்துக்கு ஒன்றைச் சொன்னோமாகில்   நீ போருமாபோலே போரவேணும் என்கை.  வடிவையும் நிறத்தையும் உன்னைப்போல் பண்ணவொண்ணுமோ? என்கை.  இவனை ஸிம்ஹத்தைப் போலே பாவிக்கிறது நாச்சியார் விழிவிழிக்கைக்காக.  (உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி) நப்பின்னைப் பிராட்டியை ஊன்றிக்கொடுத் திருப்பள்ளி அறையில் நின்றும் பெரிய திருமண்டபத்தேறப் புறப்பட்டருளவேணும்.  “பூர்வாம் திஶம்” இத்யாதிப்படியே பிராட்டி மங்களாஶாஸநம் பண்ணப் புறப்பட்டருளினாப்போலே.  “பர்வதாதிவ நிஷ்க்ரம்ய ஸிம்ஹோ கிரிகுஹாஶய:/ லக்ஷ்மணம் த்வாரி ஸோSபஶ்யத் ப்ரஹ்வாஞ்ஜலிபுடம் ஸ்திதம்|| என்னக்கடவதிறே. 

@@@@@

இருபத்து நாலாம் பாட்டு

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

        சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி

        பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி

        கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி

        குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி

        வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி

        என்றென்று உன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்

        இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.

        அவதாரிகை – இருபத்துநாலாம் பாட்டு.  நப்பின்னை பிராட்டியோடே கூடி திவ்ய ஸிம்ஹாஸநத்திலே இருந்த இருப்பிலே சாத்தியருளின அத்தவாளத்தலைமேலே பறக்க, திருவடிகளைக்கண்டு, அத்திருவடிகளைத் திருமுலைத் தடங்களிலும், திருக்கண்களிலும் ஒற்றிக்கொண்டு “உன் சேவடி செவ்வித் திருக்காப்பு – நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” (திருப்பல்லாண்டு – 1,2)  என்கிறார்கள்.

வ்யாக்யானம் – (அன்றிவ்வுலகமித்யாதி) இவ்வழகிய திருவடிகளைக்கொண்டே காடும் மலையும் அளந்து கொண்டது?  “மலர்மகள் பிடிக்கும்மெல்லடி” (திருவாய் – 9.2.10) யிறே.  (அடிபோற்றி) “உன் சேவடி செவ்வித் திருக்காப்பு”. (சென்றங்கு தென்னிலங்கை இத்யாதி) பிராட்டியைப் பிரித்த ராவணன் இருந்தவிடத்தே நடந்து கொல்லுவதே! புலியிருந்த தூற்றிலே சென்று கொல்லுமாபோலே.  “இலங்கை பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு” (திருப்பல்லாண்டு – 3) என்றவர் மகளிறே.  (பொன்றச்சகடமுதைத்தாய்) ஒருத்தரோடும் விசாரியாதே முடித்தபடி.  மாரீசனைப் போலே குற்றுயிராக்கி மேலே அநர்த்தத்தை விளைக்க வையாதே முடித்தபடி.  (புகழ் போற்றி) ஶ்ரீப்ருந்தாவனத்தில் முளைத்தப் பூண்டகப்பட ராக்ஷஸராகையாலே மங்களாஶாஸனமொழியக் காவலில்லை.  தாய் உதவாத தசையிலே திருவடிகளுக்கு உதவுகை புகழாயிற்று.  (கன்று குணிலா எறிந்தாய் இத்யாதி) “ஶத்ருவையிட்டு ஶத்ருவை எறிந்தால் அவர்கள் இருவரும் ஸங்கேதிக்கில் என் செய்யக் கடவோம்” என்று வயிறு பிடிக்கிறார்கள்.  குணில் – எறிகருவி கன்று. 

(குன்று குடையாயெடுத்தாய் இத்யாதி) இந்த்ரனும் பகையானபடி.  அநுகூலர் ப்ரதிகூலிக்கையால் தலையறுக்கவொண்ணாதே, ஆந்ருஶம்ஸ்யத்தாலே மலை யெடுத்தது.  (வென்று பகை கெடுக்குமித்யாதி) சக்ரவர்த்தி வில் பிடிக்க, பிள்ளையும் வில் பிடித்தாற்போலே.  “கூர்வேல் கொடுந்தொழிலன்” (திருப்பாவை – 1) மகனிறே!  பசுக்களின் பின்னேத் திரியா நின்றால் ஸிம்ஹம் வந்தாலும் வேலாலே குத்திப் புடைத்துப் போமத்தனை. 

(என்றென்று) ப்ரயோஜனம் போருமளவும் சொல்லி, பின்னை “தேஹி மே ததாமி தே” என்னுமவர்களன்று.  இதுதானே ப்ரயோஜனம்.  “ஒன்று நூறாயிரமாக் கொடுத்து” (நாச்சியார் திரு – 9.7) கொண்டதுக்குக் கைக்கூலியும் கொடுப்பார்கள்.  (என்றென்றுன் சேவகமே ஏத்தி) “உன்னுடைய விக்கிரமம் ஒன்றொழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம்பால் சுவர்வழி  எழுதிக்கொண்டேன்” (பெரியாழ்வார் திரு–5.4.8) என்னுமவர்களிறே.  (இன்று) இசைவு பிறந்த இன்று.  நீ யுறங்க நாங்கள் உறங்காதே இருந்த இன்று.  (யாம்) பந்துக்களாலே நெடுங்காலம் நலிவுபெற்ற நாங்கள்.  (வந்தோம்) எங்களாற்றாமையாலே வந்தோம்.  எல்லா இழவுகளும் தீர்ந்தோம்.  (இரங்கு) இத்தலைக்கு இரங்குகை அத்தலைக்கு ஸ்வரூபம்.  “அவனுக்கு என் புகுகிறதோ” என்று இரங்குகை இத்தலைக்கு ஸ்வரூபம். 

@@@@@

இருபத்தைந்தாம் பாட்டு

        ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

        ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

        தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த

        கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

        நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

        அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்

        திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

        வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

        அவதாரிகை – இருபத்தஞ்சாம் பாட்டு.  “பெண்காள்! நோன்ப் ஒழிய உங்கள் நெஞ்சிலே ஒன்று உண்டுபோலே” என்ன, “நாங்கள் உன்னை அர்த்தித்து வந்தோம்” என்ன. “என்னை அர்த்தித்துப் பெற்றார் உண்டோ?” என்ன, “எங்களோட்டையார் பெற்றார் உண்டு” என்கிறார்கள்.

வ்யாக்யானம் – (ஒருத்தி மகனாய்) ஸர்வலோகத்துக்கும் பிதாவானவன் ஒருத்தி மகனாகப் பெறுவதே! “மகன் ஒருவர்க்கு அல்லாத மாமேனி மாயனிறே” (மூன்றாம் திரு – 92) “ஸ்துதோSஹம் யத் த்வயா பூர்வம் புத்ரார்த்திந்யா ததத்ய தே I ஸபலம் தேவி ஸஞ்ஜாதம் ஜாதோSஹம் யத்தவோதராத் II”.  பித்ரு வசந பரிபாலனம்போலே திருவாய்ப்பாடிக்கு வருகை.  நம் பிறவி – நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாயிருக்கும்;  அவன் பிறவி இருவரையும் அணுக வைக்கைக்கு உடலாயிருக்கும்.  “ஆதியஞ்சோதியுருவை அங்கு வைத்து இங்கு பிறந்த” (திருவாய்–3.5.5) வனிறே.  (பிறந்து) “தேவகீ பூர்வஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மந: “பிறந்தவாறும்” (திருவாய்–5.10.1).  (ஓரிரவில்) ஸம்ஸாரிகளின் பொல்லாங்கு ஓரிரா தங்க ஒட்டிற்றிலை என்கை.  அவ் இரவை ஒத்த இரவும் இல்லை.  மாதாபிதாக்கள் கைவிட்டவளவிலே காத்த ராத்ரியிறே.  (ஒருத்தி மகனாயித்யாதி) இருவரும் அவனைப்பெறவேணுமென்று அபேக்ஷித்ததுக்கு அவளுக்கு அவதார ரஸத்தைக்கொடுத்து, இவளுக்கு லீலாரஸத்தை அநுபவிப்பிக்கிறபடி.   (ஒளித்து வளர) விஷத்ருஷ்டிகள் படாமே, நாட்டார் செய்வன செய்யப்பெறாதே கள்ளர் பட்டது படுவதே!  அந்தர்யாமி பட்டது படுவதே! (ஒளித்து வளர தரிக்கிலானாகி) ஈஶ்வர ஸத்தையும் பொறாதொழிகை.  (தான் தீங்கு நினைந்த) “எத்திறம்” (திருவாய் – 1.3.1) என்று மோஹிக்க வேண்டும்  விஷயத்திலேயிறே   தீங்கு நினைத்தது.  துஷ்ப்ரக்ருதி யாகையாலே. 

(கருத்தைப் பிழைப்பித்து) அவன் நினைத்ததைப் பிழைக்கும்படி பண்ணி.  அவன் நினைவை அவனோடே போம்படி பண்ணினான்.  (கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற) ஆஶ்ரிதர் வயிற்றில் நெருப்பை, கம்ஸன் வயிற்றிலே புகும்படி பண்ணி.  (நெடுமாலே) இதெல்லாம் படவேண்டிற்று ஆஶ்ரிதர் பக்கல் வ்யாமோஹாதிஶயத்தாலே என்கை. (உன்னை அருத்தித்து வந்தோம்) அர்த்தித்வாதி நிரபேக்ஷனான உன்னை.  பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம்.  ஶ்ரீவைகுண்டத்தில் நின்றும் வந்தவனிறே.  எங்கள் வடிவைப் பாராய்.  (பறை தருதியாகில்) உன் அழகாலே எங்களை மயக்காதே செய்தருளப் பார்த்தாயாகில்;  செருக்கடியாதே செய்தருளப் பார்த்தாயாகில். 

(திருத்தக்க செல்வமும்) “யஸ்ய ஸா ஜநகாத்மஜா”   (சேவகமும்) இத்தைக் காத்து ஊட்டவல்ல வீர்யம்.  (வருத்தமும் தீர்ந்து)  உன்னை நீ கண்டறியாயே;  பிரிந்தார் படும்பாடு அறியாயே.  (பாடி வருத்தமும் தீர்ந்து) சொல்லப்பெறாத நம் வருத்தமும் தீர்ந்து.  (மகிழ்ந்து) கைவல்யம் போலே து:க்கநிவ்ருத்தியன்று தேட்டம்.  ப்ரீதிக்குப் போக்குவிட வேண்டும்படியாகை. 

@@@@@

 இருபத்தாறாம் பாட்டு

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

        மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

        ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

        பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே

        போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே

        சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே

        கோல விளக்கே கொடியே விதானமே

        ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்.

        அவதாரிகை – இருபத்தாறாம் பாட்டு.  “பெண்காள்! “எளிவரும் இயல்வினன்” (திருவாய் – 1.3.2) என்கிறபடி நம்மை உள்ளபடி அறிந்தீர்கள். உங்களுக்குச் செய்யவேண்டுவது என்?”  என்ன, தங்களுக்குச் செய்ய வேண்டுவது சொல்லுகிறார்கள்.

வ்யாக்யானம் – (மாலே) வாத்ஸல்யமே ஸ்வரூபமானவனே! (மணிவண்ணா) அபரிச்சேத்யனாயிருக்கச்செய்தே முன்தானையிலே முடிந்து ஆளலாம்படி இருக்கை.  காதுகனானாலும் விடவொண்ணாத அழகையுடையவனே! (மார்கழி நீராடுவான்) மார்கழி நீராடுகைக்கு உபகரணம் தேடி வந்தோம்.   அங்கி கைப்பட்ட இடத்திலும் அங்கம் கைப்படாதொழிவதே!  நாஸ்திகரைப்போலே “மார்கழி நீராட்டாவதென்?” என்ன;, “இது அறியாயோ?” என்ன, “ஜ்யோதிஷ்டோமம்போலே ப்ரஸித்தமாயிருக்க வந்தீர்களோ?” என்ன, “எங்களுக்கு ஸ்வர்க்காதிகளில் ஶ்ரத்தையுண்டோ?” என்ன, “நிதித்யாஸிதவ்ய:” என்கிறார்போலேதான் உண்டோ?” என்ன, ப்ரமாணங்களை விஶ்வஸித்தால் பலிக்கிலும் பலிக்கும், தவிரிலும் தவிரும்.  “யத்ய தாசரதி ஶ்ரேஷ்ட:” என்று பூர்வர்கள் அநுஷ்டித்ததாகையாலே பலத்துக்கு இழவில்லை.  அதுவே அமையும்.  நீ இடையில் அறிவது ஒன்றன்று. 

(மேலையார் செய்வனகள்) “என்ன தப்பைச் சொன்னோம்? நம்மை கோபியாதே வேண்டுவன சொல்லலாகாதோ?” என்றான்.  (வேண்டுவன கேட்டியேல்) உன் அந்யபரதை கெட்டால் சொல்லவேணுமே” என்ன, அந்யபரதை என்னென்னில் – பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் முன்னே வந்து நிற்கையாலே இவர்கள் வார்த்தை கேளாதே இவர்கள் வடிவழகிலே மண்டினான் என்கை.  இவர்கள் “உன் கார்யத்துக்கு வந்தோமோ?” என்ன, “உங்கள் வடிவழகு கண்ணுக்கு இலக்கானவோபாதி உங்கள் வார்த்தை என் செவிக்கு இலக்கன்றோ? அதுவும் என் கார்யமன்றோ?  சொல்லுங்கோள்” என்ன

(ஞாலத்தை இத்யாதி) “இடமுடைத்தாய், உன் திருமேனிக்குப் பகைத்தொடையாம் படி பாலைத்திரட்டினாற்போலே இருக்கிற நிறத்தையுடைத்தாய்,  “ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம்” என்கிறபடி அன்றிக்கே நின்று முழங்கக் கடவதுமாய், பல சொல்லி என்?  உன் கையில் பாஞ்சஜந்யம் போலிருப்பன பல சங்கங்கள் வேணும்” என்கிறார்கள்.

(போய்ப்பாடு) புகழ் என்றுமாம்.  “இதுவாயிற்று;  இனியோ?” என்ன (சாலப் பெரும்பறையே) ஒரு மன்றளவில் த்வனிக்கையன்றிக்கே எங்கும் கேட்க த்வநிக்கிறதொரு பறை வேணும்.  “யயௌ தூர்யப்ரணாதேந பேரீணாம் ச மஹாஸ்வநை:”  இதுவாய்த்து; பின்னையோ?” என்ன,  (பல்லாண்டிசைப்பாரே)  திருப்பல்லாண்டு பாடுவாரும் வேணும் என்கை.  (கோலவிளக்கே) மங்களதீபம்.  (கொடி) திருக்கொடி ஆட வேணும். (விதானமே) திருமேல்கட்டு.  இவைவேணுமென்ன;

“பெண்காள்! இவை நம்மால் செய்யலாய் இருந்ததில்லை” என்ன, (ஆலினிலையாய் அருள்) “ஸர்வலோகத்தையும் உன் திருவயிற்றிலே வைத்து ஓராலிலையிலே கண்வளர்ந்த உனக்கு முடியாதது உண்டோ?  தந்தோம் என்னுமத்தனை யன்றோ?” என்ன, “அப்படியாகிறது?” என்று புறம்பு தன்னைப்போலே ஒரு தத்வமுண்டாகிலிறே தன் கையில் சங்குபோலே இருக்கும் சங்கு உண்டாவது.  “தாமுகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ” (நாச்சியார் திரு – 11.1) என்று இவர்கள் உகந்த சங்கு தன்னைக் கொடுத்தான்.  “பாரோர்களெல்லாம் மகிழ பறை கறங்க” (சிறிய திருமடல் – 12)  என்று கூத்தாடுகிற போது அரையில் கட்டின பறையையும்  பறை அடிக்கைக்கு ஶ்ரீஜாம்பவான் மஹாராஜரையும் கொடுத்தான்.  திருப்பல்லாண்டு பாடுகைக்குப் பெரியாழ்வாரையும் நம்மாழ்வாரையும் கொடுத்தான்.  மங்கள தீபத்துக்கு நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்.   கொடிக்குப் பெரியதிருவடியையும் விதாநத்துக்கு திருவநந்தாழ்வானையும் கொடுத்தான். 

@@@@@

இருபத்தேழாம் பாட்டு

        கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்

        பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்

        நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

        சூடகமே தோள்வளையே. தோடே செவிப்பூவே

        பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்

        ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

        மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

        கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

        அவதாரிகை – இருபத்தேழாம் பாட்டு.  கீழில் தன் ஸ்வரூபஸித்தி சொல்லிற்று; இப்போது அவர்களை அலங்கரிக்கிறபடி சொல்லுகிறது.

வ்யாக்யானம் – (கூடாரை வெல்லும்) “எங்களைத் தோற்பித்த நீ யாரை வெல்ல மாட்டாய்?” என்கிறார்கள்.  அதாவது – நாங்கள் முன்னே வந்து நின்று வார்த்தை சொல்லும்படி பண்ணினாயே; ஆந்தனையும் பார்த்தால் கூடாரை வெல்லும் இத்தனை;  கூடினால் தான் தோற்கும் இத்தனை;  (சீர்) எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே; அஜ்ஞரை ஸர்வஜ்ஞராக்கும்; ஸர்வஜ்ஞரை “எத்திறம்” (திருவாய் – 1.3.1) என்னப்பண்ணும்.  “ஸத்யேந லோகாந் ஜயதி” இத்யாதிவத்.  (கோவிந்தா) பசுக்களுக்கும் தோற்குமவனே!

(உன்தன்னைப்பாடி) விலக்கினவது பெற்றபடி.  “ஹிரண்யாய” என்கை தவிர்ந்து உன்னை சொல்லப் பெறுவதே என்கை.  (பாடி உன் தன்னை) பெண்கள் புணர்ப்பே தாரகமாகப் பாடித் திரியும் என்கை.  பாடுகையே ப்ரயோஜநம் என்றுமாம்.  (சீர்) சீலவத்தையின் மிகுதியே என்றுமாம்.  (பறை கொண்டு) ப்ராப்யத்தில் ப்ராபக வ்யவஹாரம்.  ஊருக்குப் பறை என்கிறது.  (யாம்பெறு சம்மானம்) தங்கள் பேறு.  அநாதிகாலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும்படி அவள் கொண்டாடும்படி சொல்லுகிறது. 

(நாடு புகழும் பரிசு) “பாரோர் புகழ” (திருப்பாவை 1) என்னும்படியே “ஒருவர் கொடுக்கும்படியே! “சிலர் பெறும்படியே!” என்று கொண்டாட வேணும்.  (நன்றாக) நாடு சிரிக்கும்படி அன்றைக்கே  “ப்ரதேஹி ஸுபகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமிநி” என்று இந்த்ரன் வரக்காட்டின ஹாரத்தைக் கையிலே பிடித்துப் பிராட்டியும் தானும் திருவடியை அலங்கரிப்பித்தாற்போலே.  (நன்றாக) “தம் ப்ரஹ்மாலங்காரேண அலங்குர்வந்தி” போலே.  (சூடகமே) “அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்” (திருவாய் – 10.3.5) என்னுமா போலே அவள் சொல்லி மார்விலும், தலையிலும் வைத்துக்கொள்ளும் கைக்கு இடும் சூடகம்.  “தம் மணிம் ஹ்ருதயே க்ருத்வா” இத்யாதிவத்.  முந்துறக் காணும் இடம்.  (தோள் வளையே) அத்தலையில் ஸ்பர்ஶம்  அணைக்க வேண்டியிருக்கையாலே, அணைத்த தோளுக்குத் தோள்வளையும் என்கை.  (தோடே) அணைத்தாலும் உறுத்துமவை.  “கண்டேன் கனமகரக்குழையிரண்டும் நான்கு தோளும்” என்னுமாபோலே.  (செவிப்பூவே) ஆக்ராணம் பண்ணுமிடம்.  கண்ணாகவுமாம்.  (பாடகம்) அணைத்தால் துவண்டு விழும் இடம்.  (அனைய பல்கலனும்) பருப்பருத்தன சில சொன்ன இத்தனை.  நீ  அறியும் அவை எல்லாம் என்கை.  (பலபலவே ஆபரணம்” (திருவாய் – 2.5.6) இத்யாதி இத்தசையிலே எண்ணப்போமோ?  (யாமணிவோம்) “மலரிட்டு யாம் முடியோம்” (திருப்பாவை – 2) என்ற இவர்கள் அனுமதி பண்ண அமையும் என்கை. 

(ஆடை உடுப்போம்) “பண்டு உடார்களோ” என்னில்;  அவன் உடுத்தது உடை.  உடாதது உடையன்று என்கை.  அதாவது – கூறை மாறுகை.  “புனையிழை” (திருவாய் – 8.9.5) இத்யாதி.  “அப்பன் திருவருள் மூழ்கினள்” (திருவாய் – 8.9.5) என்கிறபடியே அவனோட்டை ஸம்பந்தமே இவர்கள் நன்மைக்கெல்லாம்  அடி என்கை.  “புதுகணிப்பும்” அவன் உகப்பொழிய, தங்கள் உகப்பு பொகட்டபடி.  (அதன் பின்னே பாற்சோறு இத்யாதி) பகவத் ஸம்பந்தம் உண்டான திருவாய்ப்பாடியில்  ஸம்ருத்திகளெல்லாம் இவளுக்கு ப்ரியமாயிருக்கிறபடி.  (கூடியிருந்து) புஜிக்கக்கடவதன்று.  பிரிந்து பட்ட க்லேஶம் தீர, கூடித் தொட்டுக் கொண்டிருக்கை ப்ரயோஜனம்.  “அஹமந்நம்” இத்யாதிப்படியே ஒருவர்க்கொருவர் போக்யம் என்கை.  (குளிர்ந்து) பிரிந்து கமர் பிளந்த நெஞ்சங்கள் வவ்வலிடும்படி. 

@@@@@

இருபத்தெட்டாம் பாட்டு

        கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்

        அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்

        பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்

        குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

        உறவேல் நமக்கு இங்கு ஒழிக்கவொழியாது

        அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

        சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே

        இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

        அவதாரிகை – இருபத்தெட்டாம் பாட்டு.  “பெண்காள்! நீங்கள் சொன்னவற்றைத் தருகிறோம்;  நாடு உங்கள் பாடே;  நாமும் உங்கள் பாடே  பெற்றோமாக வேணும்;  அதுக்கு உங்களுக்குள்ளது என்?” என்ன, “உனக்குத் தரலாவது ஒன்றும் இல்லையே;  பண்டு தப்பச்சொன்னது உண்டாகில் பொறுக்க வேணும்”  என்று க்ஷமை கொள்ளுகிறார்கள்.

வ்யாக்யானம் –   (கறவைகள்) அறியாமைக்குக் கன்று காலி என்கை.  “ஜ்ஞாநேந ஹீந: பஶுபிஸ்ஸமாந:” இறே.  (பின் சென்று) தாங்கள் குருகுலவாஸம் பண்ணுகிறபடி சொல்லுகிறார்கள்.  (கானம் சேர்ந்து) விஶிஷ்டர் இருந்த விடத்தே சென்று இக்கோயில் புகுவதே! உள்ளுள்ள காட்டிலே வர்த்திக்கும் இத்தனை.  ஊர் கண்டறியோம்.  (உண்போம்) ரிஷிகளைப்போலே தபஸ்ஸுக்கல்ல;  அங்கும் வயிறு வ\ளர்க்க.  (சேர்ந்து உண்போம்) நடந்து உண்ணும் அத்தனை; எங்களைப் பார்க்க பசுக்கள் வஶிஷ்டாதிகளோடு ஒக்கும்.  இத்தால் கர்மமில்லை என்கை. 

(அறிவொன்றுமில்லாத) ஜ்ஞாநபக்திகள் இல்லை என்கிறது;  “பக்திஶ்ச ஜ்ஞாநவிஶேஷ:” என்றாரிறே.  முதல்தான் இல்லை.  இது உண்டோமோ?  “இவர்கள் அலமாப்பு பக்தியன்றோ” என்னில், அது ஸ்வரூபமாகையாலே உபாயமாக நினையார்கள்.  (ஆய்க்குலம்) அதிகாரம் இல்லை.  (உன்தன்னைப் பிறவிப்பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்) “ஆனால் இப்புண்ணியமில்லாதார் இழக்கும் அத்தனையன்றோ?” “என் சொன்னாய்?  எங்களுக்கன்றோ புண்ணியமுள்ளது;  எங்கள் புண்ணியம் முதலில்லாதார்க்கு முதலும், பலிசையும் கொடுக்கும் புண்ணியம் காண்!  ஸாத்ய தர்மத்தைப் பற்றினோமோ?  ஸித்தமாய் வடிவுள்ளதொரு தர்மத்தைப் பற்றினோம்.  இதுவோ எங்களுக்குக் குற்றம்?”  (குறைவொன்றுமில்லாத கோவிந்தா) “உங்களுக்கு ஒன்றுமில்லை என்றீர்களே” என்ன; “உன்னை இல்லை என்றோமோ?” என்ன; “உங்கள் வெறுமைக்கு நாம் செய்வதென்” என்ன;, ராஜாக்கள் வழிபோம்போது மேடுபள்ளம் ஒக்கவிடுமாபோலே உன் குறை இல்லாமையை எங்கள் குறையிலே இட்டு நிரப்புவது. 

(உன்தன்னோடு உறவேல் இத்யாதி) நாங்கள் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம்;  நீ குறையொன்றுமில்லாத கோவிந்தன்.  ஆனபின்பு இப்பிறவி “விதிநிர்மிதமேததந்வயம்” நாராயணனன்றோ. எங்கள் அறிவுகொண்டு கார்யம் உண்டோ?  “உறவு உண்டாயிருக்க துர்யோதனாதிகளை விட்டோமே” என்ன, “உனக்கு விடவொண்ணாத பாண்டவர்களாகக் கொள் எங்களை;  எங்கள் வெறுமையும் உன் பூர்த்தியும் உணர்ந்து  எங்களை விட வொண்ணுமோ?” என்கை.  (அறியாத) அநவதாநம்.  (பிள்ளைகள்)  அஜ்ஞர்.  (அன்பினாலித்யாதி) தவிரவொண்ணாதாகையால் ப்ரக்ருதி உபாயபுத்தியாகிலிறே தப்பாவது என்ன;  “நாராயணன்” என்று, கோவிந்தாபிஷேகம் பண்ணிப் பூர்ணனாய் இருக்கிற என்னை சிறு பேர் சொன்னீர்கள் என்ன, “நாராயணன்” என்கை குற்றமோ?  என்னில்; நீர்மை ஸம்பாதிக்கப் போந்தவிடத்திலே மேன்மை சொல்லுகைக் குற்றமன்றோ? 

@@@@@

இருபத்தொன்பதாம் பாட்டு

        சிற்றஞ் சிறுகாலே வந்து  உன்னைச் சேவித்து உன்

        பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

        பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ

        குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

        இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

        எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு

        உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்

        மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

        அவதாரிகை – இருபத்தொன்பதாம் பாட்டு.  எம்மாவீட்டில் (திருவாய் – 2.9) ப்ராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறது.

வ்யாக்யானம் – (சிற்றஞ்சிறுகாலே) “ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய” “காலை நன்ஞானம்” (திருவிருத்தம் – 93) இத்யாதிகள்.  முன்பு ஒரு போகியாக உறக்கம்;  பின்பு ஒரு போகியாக உணர்ச்சி;  நடுவில் காலமிறே சிற்றஞ்சிறு காலையாவது.  பெண்களாகையாலே சிற்றஞ்சிறுகாலம் என்றபடி.  யோகிகளும் உணர்வதற்கு முன்னே சிறு பெண்களான நாங்கள் உணர்ந்த இந்த தர்மஹாநியைப் பாராய்.  “என்னில் முன்னம் பாரித்து” (திருவாய் – 9.6.10) என்று – நீ  உணருங்காலத்திலே நாங்கள் உணர்ந்து வந்தோம் என்கை. 

(வந்து) இரண்டு ஸ்வரூபத்தையும் அழித்தோம்.  ஸ்வரூபம் நிலையிட்டவர்களிறே.  “பத்ப்யாம் அபிகமாச்சைவ” என்று சொல்லுகையாலே அவன் இருந்தவிடத்தே ஓரடியிட்டுச் செல்ல, இட்ட பதந்தோறும் நெஞ்சுளுக்கும்;  பொறுக்கமாட்டான் என்கை.  (உன்னை சேவித்து) அத்தலை இத்தலையாயிற்று;  ஸேவ்யரான தாங்கள் ஸேவகரானபடி.  “ஸுக்ரீவம் நாதமிச்சதி” – தாமேயிறே பார்த்திருப்பார்.  ஶ்ரீவிபீஷணாழ்வானை முடிசூட்டுகைக்காக லங்கைக்கு நடந்தவனன்றோ. 

(உன் பொற்றாமரையடியே) ஆற்றாமையும் ஸ்வரூபமாகையாலே அடைவுகெட மேலே விழுந்தபடி. (அடியே போற்றும் பொருள்) சூட வந்த பூவுக்கு விலை இடுவாரைப் போலே.  உபாயோபேயங்களிரண்டும் தானே;  ஸ்வீகாரமாத்ரத்திலே நிற்கப் போகாமையாலே போற்றுகிறபடி.  ருசிக்கு அவ்வருகுபட்டால்  பலத்திலே மூளும் இத்தனை.  கவிழ்ந்து நிற்கச்செய்தே விண்ணப்பம் செய்கிறது.  (கேளாய்) நாங்களும் முன்னே நிற்கில் வார்த்தை கேட்க ஒண்ணாதோ?  என்கை.

(பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ) நீயன்றோ முற்றீமை செய்தாய்.  என்றும் கேட்டே போகக்கடவதாயிருக்கிற நீ வந்து இக்குலத்தே பிறந்து இட்டீடுகொண்டு  எளியனானாய் என்கை.  நாங்கள் நீ இருந்தவிடத்தே வந்து பிறந்தோமோ?  வஸிஷ்டாதிகள் விலக்குமிடத்தே வந்தோமோ? (குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது) பெரும் பசியராயிருப்பார் சோற்றை வாங்கி எச்சில் படுத்தி பின்னை உண்ணாதே பொகட்டுப்போமாப்போலே, ஶப்தாதிகள் போக்யாதிகளாக இருக்கிற எங்களை வடிவழகைக்காட்டி “உண்ணும் சோறு” (திருவாய் – 6.7.1) முதலானவை யெல்லாம் நீ என்னப்பண்ணி, ஸ்வரூபாநுரூபமான அடிமை தராதே இருக்கலாமோ? என்கை.

(இற்றைப் பறை இத்யாதி) “இவர்கள் நம்மை விடார்களே இனி” என்று பறை எடுத்துக் கொடுக்க ஒரு கையாலே கும்பிட்டு ஒரு கையாலே ப்ரயோஜநங்கொண்டு போமவர்களோ நாங்கள்?  (கோவிந்தா) பசுக்களின் பின்னே திரிவார்க்குப் பெண்கள் ஶ்ரோத்ரியராகப்போமோ?

ஆனால் செய்ய வேண்டுவதென்னென்ன; (எற்றைக்கும்) “ந காலஸ்தத்ரவை” என்கிற பரமபதத்திலேயானாலும் (ஏழேழ் பிறவிக்கும்) இங்கே பிறந்தாலும்  ஒக்கப் பிறக்கவேணும்.  இளையபெருமாள் காட்டிலும்  படைவீட்டிலும் அடிமை செய்தாற் போலே  “தேவத்வே தேவதேஹேயம்” இத்யாதிப்படியேயாகவேணும் என்கிறார்கள்.

(உன்றன்னோடு உற்றோமேயாவோம்) ஒரு உறவைக்குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது எல்லா உறவுமுறையும்  நீயே ஆகவேணுமென்கை.  “மாதா பிதா ப்ராதா” இத்யாதியின்படியே.  (உனக்கே நாமாட்செய்வோம்) உனக்கும் எங்களுக்கும் பொதுவான அடிமையன்றிக்கே  உனக்கேயாகக் கொள்ளவேணும்.  ஶ்ரீபரதாழ்வானைப் போலன்று.  இளையபெருமாளைப்போலே அடிமை செய்யவேணும். 

(மற்றை நங்காமங்கள் மாற்று) “பாவோ நாந்யத்ர கச்சதி” போலே பண்ண வேணும்.  

@@@@@

முப்பதாம் பாட்டு

        வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்

        திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

        அங்கப்பறை கொண்டவாற்றை அணிபுதுவைப்

        பைங்கமலத்தண்டெரியற் பட்டர்பிரான் கோதை சொன்ன

        சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

        இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்

        செங்கண் திருமுகத்துச்செல்வத் திருமாலால்

        எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்.

அவதாரிகை – முப்பதாம் பாட்டு.  இப்ரபந்தத்தைக் கற்றார்க்கு இவ்வர்த்தம் அநுஷ்டித்தாரோபாதி பலம் ஸித்திக்கும்;  “கன்றிழந்த தலை நாகு தோல் கன்றை மடுக்க, அதுக்கு இரங்குமாபோலே, இப்பாசுரம் கொண்டு புக நமக்குப் பலிக்கும்” என்று பட்டர் அருளிச்செய்வர். 

வ்யாக்யானம் – (வங்கக் கடல்) கீழில் அமுது மேலே எழக் கடையாநிற்க, கடலிலே மரக்கலம் அசையாமல் கடைந்த நொய்ப்பம் சொல்லுகிறது.  கடைந்தபோது சுழன்று வருகையாலே கடலடைய மரக்கலமாய் நின்றபடி என்றுமாம்.  க்ருஷ்ணனே ப்ரயோஜநாந்தரபரர்க்கும் கார்யம் செய்யுமவன் என்கை.  (மாதவனை) தாய் முன்பு பிதாவுக்கு ப்ரஜை குற்றம்  பொறுக்க வேணுமிறே.  (கேசவனை) விரோதி நிரஸந ஸ்வபாவனை.  “விண்ணவரமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதுண்டவ”  (பெரிய திருமொ –  6.1.2) னிறே.  க்ருஷ்ண ஸம்ஶ்லேஷத்தாலே குளிர்ந்து மலர்ந்த முகம்.  அங்கு கதிர்மதியம் போல் முகம் (திருப்பாவை  1) “ஜகத் வ்யாபார வர்ஜம்” என்றுஇதொழிய அல்லாததெல்லாம் கொடுக்கையாலே  இவர்களுக்குக் குளிர்த்தி வேண்டுகையாலே (திங்கள் திருமுகம்) என்கிறது.  “மதிமுக மடந்தைய” (திருவாய்–10.9.10) ரிறே.  (சேயிழையார்) தானும் அவனும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தையுடையவர்கள்.  (சென்று) இவ்வொப்பனையோடே வரப் பார்த்திக்கும் அளவில்லாத த்வரையைச் சொல்லுகிறது.  (இறைஞ்சி) மங்களாஶாஸநம் பண்ணி.  (அங்கு) திருவாய்ப்பாடியிலே.  (அப்பறை) நாட்டுக்குப் பறை என்று அடிமைகொண்டபடியை. 

(அணி புதுவை) ஸம்ஸாரத்துக்கு ஆபரணமான ஶ்ரீவில்லிபுத்தூர்.  (பைங்கமலத் தண் தெரியல்) ப்ராஹமணருக்குத் தாமரைத் தாராகையாலே சொல்லுகிறது.  (பட்டர் பிரான் கோதை சொன்ன) ஆண்டாள் அநுகார ப்ரகாரத்தாலே  அநுபவித்துச் சொன்ன.  “ஸ ஹோவாச வ்யாஸ: பாராஶர்ய:” என்றாற்போலே பெரியாழ்வார் மகள் சொன்னதில் அர்த்தவாதமில்லை. 

(சங்கத்தமிழ்) “குழாங்களாய்” (திருவாய் –2.3.11)  என்னுமாபோலே திரளாக அநுபவிக்க வேண்டும் ப்ரபந்தம்.  (முப்பதும் தப்பாமே) இதில் ஒரு பாட்டும் குறையாமே.  அல்லாதபோது ரத்நம் குறைந்த ஏகாவளி போலே பேரிழவாயிருக்குமென்கை.  (இங்கு) பிற்பட்ட காலத்திலே.  (இப்பரிசுரைப்பார்) இப்பாசுர மாத்ரத்தைச் சொல்லுவார்.  ஆண்டாள் அநுகாரத்தாலே பலம் பெற்றாளாகையாலே இது சொன்னார்க்கும் இங்கே பலன் கிடைக்கும்.   (ஈரிரண்டு மால் வரைத்தோள்) பண்டு பாடினவர்கள் சொல் வழியாலே  அநுஸந்திக்கையாலே தோள்கள் பணைக்கும்.  ஆண்களுக்கு இரண்டாய்த் தோற்றும்.  இவர்களுக்கு நாலாயிருக்கும்.  (செங்கண் திருமுகத்து) அலப்யலாபத்தாலே சிவந்த கண்கள். (செல்வத் திருமாலால்) உபயவிபூதியுக்தனான ஶ்ரீய:பதியாலே.  இப்பாட்டில் உபக்ரம உபஸம்ஹாரங்களில் த்வயத்திற்போலே பிராட்டி ஸம்பந்தம் சொல்லிற்றாய்த்து.    (எங்கும் திருவருள் பெற்று) த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டிலும் பிராட்டியும்  தானும் ஸந்நிஹிதமாம்படி ப்ரஸாதம் பெற்று.  (இன்புறுவர்) பகவத் ஸம்ஶ்லேஷத்தால் வந்த ஆநந்தம் பெறுவர். 

ஆண்டாள் திருவடிகளே சரணம்

திருநாராயணபுரத்து ஆயி திருவடிகளே சரணம்

@@@@@

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.