–
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
திருநாராயணபுரம் ‘ஆய்’ ஜநந்யாசார்ய ஸ்வாமி
அருளிச்செய்த நாலாயிரப்படி வ்யாக்யானம்
திருப்பாவை – முதற்பாட்டு
மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்*
சீர்மல்கு மாய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்*
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்*
நாராயணனே நமக்கே பறைதருவான்*
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – முதற்பாட்டு ப்ரபந்த தாத்பர்யமான ப்ராப்ய ப்ராபக ஸங்க்ரஹம். காலத்தைக் கொண்டாடுகிறது என்றும் சொல்லுவர்கள்.
வ்யாக்யானம் – (மார்கழி) “ஒழிவில் காலம்” (திருவாய் – 3.3.1) என்றும் “அநாதிர் பகவாந் கால:” என்றும் காலத்தைக் கொண்டாடினாற்போலே மாஸத்தைக் கொண்டாடுகிறது. க்ஷுத்ர விஷயங்களில் புக்கால் “ஸமயம் பண்ணின காலம் அறவற்றே” என்றிருக்கும். குணாதிக விஷயங்களில் இழிந்தார்க்கு புஜிக்கிற விஷயத்தில் அக்காலந்தன்னைக் கொண்டாட வேண்டும்படியிருக்கும். ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் எம்பெருமானார் கேட்டருளியிருக்க, “ஒழிவில் காலமெல்லாம் ஒழிவில் காலமெல்லாம்” என்றிங்ஙனே ஒரு நாளெல்லாம் பாடிக்கொண்டே கண்ணநீரோடே விட்டுப்போம்.
(மார்கழி) மழையின்றிக்கே இட்ட பயிர் தீய்தல், வெள்ளமாய் இட்ட பயிர் அழிதல் செய்யாத காலம். மலையுச்சியில் கிடந்த பீஜங்களோடு, நிலத்தில் கிடந்த பீஜங்களோடு வாசியற எல்லாம் பருவம் செய்யும் காலம். (திங்கள்) ஒருநாளில் ப்ரஹ்ம முஹூர்த்தம்போலே ஸம்வத்ஸரத்தில் ப்ராஹ்ம முஹூர்த்தம் என்றபடி. “ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தயேத் ஆத்மநோ ஹிதம்” என்று வெளிறு கழிந்து நிலைநின்ற தர்மத்தையிறே இவர்கள் சிந்திக்கிறது. “மாஸாநாம் மார்க்கஶீர்ஷோஹம்” என்று வைஷ்ணவமான மாஸம். திருவத்யயநம் தொடங்கும் காலமிறே. “சைத்ர: ஶ்ரீமாநயம் மாஸ:” இதொரு காலமே! என்கிறது. ஜகத்தையடைய வாழ்விக்கும் காலம். (புண்ய:) புண்யமும் தானே. அதாவது – அவனை அழைத்துத் தரும் காலம். (புஷ்பித காநந:) படைவீடுபோலே நாம் விதாநிக்க வேண்டா, தானே அலங்கரித்தது. வ்யதிரேகத்தில் “அபி வ்ருக்ஷா: பரிம்லாநா:” இறே. அன்றிக்கே பாதகரான இடையர் உறங்கும் காலமென்றுமாம். “ஸந்த்யை தப்பிற்று” என்று ப்ராஹ்மணரைப்போலே அகரணே ப்ரத்யவாயமில்லாமையாலே உணரார்கள்.
(மதி நிறைந்த) க்ருஷ்ணனும் பெண்களும் சேரவேணுமென்று நினைப்பிட்ட நாளாகையாலே, “நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்” (நாச் திரு – 12.3) என்று இருள் தேடவேண்டாக் காலமென்கை. “இருளன்ன மாமேனி” (பெரிய திருவ – 26) என்று போலியான இருள் தேடவேண்டா; அவனைக் காணப்பெறுகையாலே நிலவுக்கு இறாய்க்கவேண்டாத காலம் பெண்களுக்கு முகம் கண்டு வாழலாம் காலம். திங்கள் முகங்கள் திரண்ட காலம். “திங்கள் திருமுகத்துச் சேயிழையாரிறே (திருப்பாவை – 30). ஜ்ஞாநபலம் பூர்ணமான காலம். “முளைத்தெழுந்த திங்கள் தானாய்” (திருநெடு – 1).
(நன்னாள்) “தாநஹம் த்விஷத: க்ரூரான்” என்று இவற்றின் அபராதத்தை நினைத்து பெற்றதாய் பசலையற்றிருக்கு மாபோலே, குழியைக்கல்லி மண்ணையிட்டு அமுக்குவேனென்னுமிது தவிர்ந்து “ததாமி புத்தியோகம் தம்” என்றும், “ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து” என்றும் இரங்கப் பண்ணும் நாள். ஊராரிசைந்து மேலெழுத்திட்ட நாள். “வத்யதாம்” என்ற மஹாராஜர் “அஸ்மாபிஸ்துல்யோ பவது” என்றாற்போலே அநாதி காலம் பண்ணிப்போந்த விபரீத ருசி தவிர்ந்த நாள். துர்லபமான பகவத்ருசி பிறந்த நாள். “கதாந்வஹம் ஸமேஷ்யாமி” என்று அவனுமுகக்கும் நாள். “ஸுப்ரபாதா ச மே நிஶா” கம்ஸன் சோறுண்டு திரிந்த எனக்கு ஒரு நல்விடிவுண்டாகப்புகாநின்றதோ? என்றிருந்தேன். இப்படியிருந்த எனக்கு ஒருகாலம் அஸ்தமியாதபடி விடிந்தது. “ஸுப்ரபாதா அத்ய ரஜநீ மதுராவாஸயோஷிதாம்” – வில் விழவினன்று ஶ்ரீமதுரை யில் பெண்பிள்ளைகளுக்கு விடிந்தாற்போலே. “பகற்கண்டேன் நாரணனைக்கண்டேன்” (இரண்டா திரு – 81) – இதுக்கு முன்பெலாம் ராந்ரியாயிருந்தபடி. உறங்காத என்னையும் கண்டேன். அஸ்தமியாத ஆதித்யனையும் கண்டேன். பாஹ்யமான விடிவன்றிக்கே ஆந்தரமான விடிவு. நாராயணதர்ஶநம்.
(நீராட) அவனைப் பிரிந்த நாளாகையாலே ஶீதகாலமே கோடையாய்த்து. அவ்விரஹதாபம் தீர எம்மடுவிலேயோ இவர்கள் ஆடப் புகுகிறது? “தயரதன் பெற்ற மரதகமணித்தடம்” (திருவாய் – 10.1.8) “மெல்லியல் தோள் தோய்ந்தாய்” (திருநெடு – 13) “ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே ஶீதமிவ ஹ்ரதம்” – நீராட்டுமவன் முன்னே சமைந்து நின்றான். ஆடுவாரையிறே அழைக்கவேண்டுவது. ருசி பிறந்தபின்பு அவ்வருகுள்ள ப்ராப்யதேஶமும், அர்ச்சிராதி கதி சிந்தையும், ததீயரையும் அவனையும் அநுபவிக்கையும், காலமுமடைய ப்ராப்யத்திலே புகுமத்தனை. (நீராட) தம் மகளை நீராட்டினாலும் ஆழ்வாரென்ன வேண்டுமாபோலே, பகவத்விஷயத்துக்கு அண்ணியாரைத் தோழிமாரென்றும் ஶிஷ்யர்களென்று மில்லை, பூஜ்யராகக் கொண்டாடவேணுமென்கை. இதுக்கு ஒரு ஶிஷ்டாசாரமுண்டு. ஆண்டாள் பட்டர் ஶ்ரீபாதத்தைக் கழுவித் தீர்த்தம் கொள்ளும். (நீராட) க்ருஷ்ணனும் பெண்களும் மாறிமாறி முழுக்கிட. (போதுவீர்) இச்சையே அதிகாரமென்கை. திருவேங்கட யாத்ரைபோலே நீராடப் போகையே உத்தேஶ்யம்.
(போதுமினோ) அவர்களிரந்தார்களல்லர். தன் செல்லாமை யாலே இரக்கிறாள். க்ஷுத்ரவிஷயங்களுக்குத் தனியல்லது ஆகாதாப்போலே, இவ்விஷயத்துக்குத் திரளல்லது ஆகாது. இவ்விஷயத்தில் இச்சாமாத்ரமமைகிறபடி. எங்ஙனே புறம்புள்ளவற்றுக்குப் பெருநெறிகள் செல்லாநிற்க? என்னில் – இங்கு அபரிச்சேத்யமான விஷயமாகையாலும், தானே உபாயமாகையாலும், சேதனனான வாசிக்கு இச்சாமாத்ரம் அமைந்தது. (போதுமினோ) அவர்கள் முன்னேபோகத் தான் பின்னேபோக நினைக்கிறாள். அவர்கள் போக இசைவர்களோ? என்னில் – ஶ்ரீபரதாழ்வானைப்போலே “இவளுக்கு ப்ரியம்” என்றவாறே அத்தையுமிசைவர்கள். போகாதேயிருந்தால் ஆற்றலாமாகில் தவிருங்கோள். (நீராட) க்ருஷ்ணனும் தாங்களும் மாறி மாறி முழுகக் கூப்பிட, ஈடுபாட்டாலே அவர்கள் எழுந்திருக்க க்ஷமரல்லர்கள்” தன் செல்லாமை இவளிரக்கிறாள். ப்ரதிகூலரையுமகப்பட. “தேந மைத்ரீ பவது தே” என்னக்கடவர்களுக்கு அநுகூலரை யொழியச் செல்லுமோ? (நேரிழையீர்) அவனோடு கலந்தார்க்கிறே அவனோடு கலக்கவேணுமென்று ஆற்றாமை மிகுவது. “புனையிழைகளணிவும்” (திருவாய் – 8.9.5) ஆபரணங்களடைய மாறாடியிருக்கை. “ஸௌம்யரூப:”. பெருநாளை, “கையார் சக்கரம்” (திருவாய் – 5.1) என்றால் ஊர் புதுக்கணித்திருக்குமாபோலே, “மார்கழி நீராட” என்ன இவர்கள் புதுக்கணித்தபடி. பாவனாப்ரகர்ஷத்தாலே ஒருபடி பூண்டாப்போலேயிருக்கும். “க்ருஷ்ணன் எப்போது பார்க்குமோ?” என்று எப்போதுமிருந்து கோலம் செய்வார்கள்.
(சீர் மல்குமாய்ப்பாடி) பரமபதத்திலும் திருவயோத்யையிலும் திருவாய்ப்பாடி ஸம்பத்து மிக்கிருக்கை. உழக்கிலே பதக்கிட்டாப்போலே திருவாய்ப்பாடியில் ஐஶ்வர்யம் பெருத்தபடி. எங்ஙனேயென்னில் – “ப்ரீதிரோதமஸஹிஷ்ட ஸா புரீ ஸ்த்ரீவ காந்தபரிபோகமாயதம்” என்கிறபடியே (சீர் மல்குமாய்ப்பாடி) பிள்ளைகள் கால் நலத்தாலே நாழிப்பால் நாழிநெய் போருகை. சீர்மல்குகையாவது – பகவத்குணங்கள் மாறாதே சேரக்கிடக்கை என்றுமாம். அதாகிறது – ஊரடைய க்ருஷ்ணன் தீம்பும் அவன் வார்த்தையுமாய்க் கிடக்கை. (ஆய்ப்பாடி) இக்காலத்துக்கு ஓரூர் நேர்படுவதே! என்கிறாள். திருவயோத்யைபோலே வஸிஷ்டாதிகள் புகுந்து நியமியாதே அநாசாரமான ஊர். பட்டர் திருப்பாவை அருளிச்செய்யாநிற்க, பூணூல் சாத்தாத ஒரு ஶ்ரீவைஷ்ணவர் வர, “கூசாதே உள்ளே புகுவீர், இவ்விடம் திருவாய்ப்பாடியாய்க் காணும் செல்லுகிறது” என்று அருளிச்செய்தார்.
(செல்வம்) “லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந:” நாடெல்லாம் தன்னைப்போலே வாழும்படி வாழப்பிறந்த பாக்யவான். “அந்தரிக்ஷகத: ஶ்ரீமாந்” ராவண ஸம்பந்தமற்றபோதே ஸ்வாபாவிகமான ஶ்ரீவைஷ்ணவஶ்ரீ வந்து மாலையிட்டபடி. “ஸ து நாகவர: ஶ்ரீமாந்” என்று தன் செயலிலே கைவிட்டு அவன் செயலே செயலாக அத்யவஸித்த பின்பு ஶ்ரீகஜேந்த்ராழ்வானை “ஶ்ரீமாந்” என்றாப்போலே. ராவணஸம்பந்தமற்றவோபாதி யாய்த்து ஸ்வாதந்த்ர்யமறு கையும். அவனுக்கு அந்யஶேஷத்வமேயாய் ஸ்வாதந்த் ர்யமின்றியே இருந்தது. இவனுக்கு அந்யஶேஷத்வ மின்றியே ஸ்வாதந்த்ர்யமுண்டாயிருந்தது. இருவர்க்கும் இரண்டும் அற்றவாறே லக்ஷ்மி ப்ராபித்தாற்போலே. (செல்வம்) வலிபாதி வழக்கு பாதி தர்மம் பாதியாக க்ருஷ்ணனாலே எச்சில்படுகை என்னவுமாம். தர்மமாவது – ஆந்ருஶம்ஸ்யத்தாலே மனிச்சு கலக்கும்படி. வழக்கு – மைத்துனமை கொண்டு கலக்கும்படி. வலியாவது – தன் செல்லாமை கொண்டு மேல்விழும்படி. (சிறுமீர்காள்) ஆண்களைக் கண்டால் “நான், என்னது” என்றிருப்பாரைக் கண்டாற்போலேகாணும். பருவம் கழிந்த பெண்களைக் கண்டால், தேவதாந்தரபஜநம் பண்ணினாரைக் கண்டாற் போலே காணும். பாலைகளைக் கண்டால் உகக்கும். அதுவென்? என்றால், பர்த்தாவுக்கு ஸ்நேஹியாத பாலை, அறிந்தவாறே பர்த்தாவுக்கு ஸ்நேஹிக்கும். பரதந்த்ர பரிக்ரஹம் பண்ணினவர்கள் பர்த்தாவுக்காகாதிறே. (சிறுமீர்காள்) அவனுக்கு ஸத்ருஶமான அநந்யார்ஹ ஶேஷத்வமுடையராகை.
“எங்களை நீர் இங்ஙனே கொண்டாடுகிறதென்? நமக்கு இந்நோன்பு தலைக்கட்டித் தருவாரார்?” என்ன, (நந்த கோபன் குமரன்) என்கிறார்கள். அவன் நமக்குச் செய்யுமோ? என்ன, குடிப்பிறந்தவனன்றோ என்கிறாள். (கூர்வேல் கொடுந்தொழிலன்) சக்ரவர்த்தி வில் பிடிக்க, பிள்ளைகள் வில் பிடித்தாப்போலே. இக்குடிக்கு வேலே ஆயுதம். பிள்ளையைச் சொல்லுமிடத்தில் “நின் கையில் வேல் போற்றி” (திருப்பாவை – 24) என்றிறே சொல்லுவது. (கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்) சிறியாத்தனைப்போலே பசும்புல் சாவ மிதியாத ஶ்ரீ நந்தகோபர் தெளியக்கடைந்த வேலைக்கொண்டு பிள்ளைகள் தொட்டிற்கால்கீழே சிற்றெறும்பு வரிலும் ஸிம்ஹத்தின்மேலே விழுமாப்போலே விழுந்து கொல்வார். சாதுவாய் நின்ற பசு கன்றிட்டவாறே அதின் பக்கல் வாத்ஸல்யாதிரேகத்தாலே முன்னீன்ற கன்றையும் புல்லிடவந்தவர்களையுமகப்படக் கொம்பிலே கொள்ளுமாப் போலே படுவர். பெரியாழ்வார் பெண்பிள்ளை யாகையாலே அங்குத்தைக்குக் காவலுண் டென்றிருக்கிறாள். (நந்தகோபன்) “அம்பரமே தண்ணீரே” என்று ப்ராணதாரங் களைக் கொடுக்குமவர். நம்பேரிழவுக்கிரங்கி நம் ப்ராணதாரகத்தைத் தாராரோ? (நந்தகோபன்) பிள்ளையைக் கண்டு இளகிப்பதித்து உகப்பு ஒருவடிவு கொண்டாற்போலே இருக்குமவர். (குமரன்) “வெண்ணைகளைக் களவுகண்டான், பெண்களைத் தீமை செய்தான்” என்று எல்லாரும் வந்து முறைப்பட, கேட்டு, “என் முன்னே தோற்றுங்கிடீர்” என்றிருந்தவர் முன்னே தோற்றினால் “இவனையோ குற்றம் சொல்லுவது” என்று அவர்களை கோபிக்கும்படி சக்ரவர்த்தி திருமகனைப்போலே விநயம் பாவித்திருக்கும்.
(ஏரா்ந்த கண்ணி) அழகார்ந்த கண்ணையுடையவள். அவனை “ஸதா பஶ்யந்தி” யான கண்கள். “அம்பன்ன கண்ணாள்” (பெரிய திருமொ – 6.8.6) என்னுமாபோலே ஓராளுமொருநோக்கும் ஒன்றாயிருக்கை. (அசோதை) “அஞ்சவுரைப்பாளசோதை ஆணாட விட்டிட்டிருக்கும்” என்று அவன் செய்யும் தீம்புக்கும் அவள் அநுமதி பண்ணியி ருக்கும். (இளஞ்சிங்கம்) தமப்பனார்க்கு பவ்யனாய், தாயார் ஸந்நிதியிலே மூலையடியே திரிகை. “சிங்கக் குருகு” என்று பட்டர். அவர்கள் சிறுமியர், இவன் இளஞ்சிங்கம். அநந்யார்ஹஶேஷத்வமும் ஶேஷித்வமும். “ராகவோர்ஹதி வைதேஹீம்” என்னுமாபோலே யிருக்கை.
(கார்மேனி) தமப்பனாரும் தாயாரும் ஒளித்து வைத்தாலும் களவுகண்டாகிலும் காணவேண்டியிருக்கும் விஷயம். (கார்மேனி) தாங்கள் ஆடப்போகிற தடாகம். (செங்கண் கதிர் மதியம்போல் முகத்தான்) அம்மடுவிலே பூத்த தாமரை ஓடத்தை விழவிட்டு வடிவைக் காட்டிக் குளிர நோக்கி, வாயாலே வினவும்படியை நினைக்கிறார்கள். (செங்கண்) ஶ்ரீய:பதித்வத்தாலும் வாத்ஸல்யத்தாலும் சிவந்திருக்கை. (கதிர்மதியம்) நகடு கழற்றின சந்திரன்போலே இருக்கை. “ப்ரஸந்நாதித்ய வர்ச்சஸம்” சந்திரனுடைய குளிர்ச்சியிலே ஆதித்யனுடைய ஒளியையூட்டினாற்போலே இருக்கை. (கதிர்மதியம்) ஆண்களுக்கு அநபிபவநீயனாய், பெண்களுக்கு அணைக்கலாயிருக்கை. “முளைக்கதிரை” (திருநெடு – 14) “விரியும் கதிர்போல்வானை” (நாச்சி திரு – 14.6) “செய்யதோர் ஞாயிற்றைக்காட்டி” (திருவாய் – 4.4.2) “ஸூர்யமிவோதயஸ்த்தம்” பிராட்டி வடிவுக்கு (வரவுக்கு) திருவடி அருணோதயமானாப்போலே மார்கழி நீராட நினைத்தபோது பிறந்த செவ்வி.
(நாராயணனே) ஒட்டொட்டியாய், பெண்களை விடாதேயி ருக்குமவன். இத்தனை நல்லது நமக்குக் கிடைக்குமோ வென்னில், நாம் ”அல்லோம்” என்றிருக்கும் காலத்திலும் நான் “ஆவேன்” என்றிருக்குமவன். ஆசைப்பட்ட விஷயமே வகுத்த விஷயமாயிருக்கிறபடி. (நமக்கே பறை தருவான்) உடையவனே உடைமையை நிர்வஹிப்பான். ஏவகாரத்தாலே மிடல் வைக்கவேண்டாவென்கை. சணற் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்த்ரம்போலே வேறொன்று காணில் விடும். “நமக்கே” என்றதென்? நாராயணத்வம் எல்லார்க்குமே என்னில், அதிகாரி நியமம் பண்ணுகிறது. ஸ்வரூபத்தில் உணர்த்தியும் ஸ்வரக்ஷணத்தில் அஶக்தியும் உடையவனுக்கே என்கிறது. அவனாலே அவனைப்பெற இருக்குமவர்கள் என்றுமாம். இப்படியல்லவாகில், ஸர்வ முக்தி ப்ரஸங்கமாம். “உபாயோபேயத்வே ததிஹ தவ தத்த்வம்” (நாராயணனே) குணஹீநனானாலும் ஸ்வரூபம் நோக்கவேணும். வழிபறிக்காரனுக்கும் பசலுக்குச் சோறிடவேணுமே. பசலுக்குச் சோறிடாதவனுக்கும் தன் வயிறு வளர்க்கவேணுமே. சேதநாசேதநங்கள் அவனுக்கு ஶரீரமிறே. (பறை தருவான்) நாட்டுக்கு நோன்பு ; நமக்குப் பறை. த்வ்யர்த்தகம்.
(பாரோர் புகழ) இந்த ஸம்ஶ்லேஷரஸம் அறியார்களாகிலும் இச்சேர்த்தி கண்டு இனியராம்படி படுத்தும். (படிந்து) அவகாஹித்து. (ஏலோர்) இப்படி அர்த்த ஸித்தி. இத்தை ஓருங்கோள். (எம்பாவாய்) மேல் காமனை நோற்கையாலே அவனஹமுடையாளான ரதியைச் சொல்லிற்றாகவுமாம். சந்தஸ்ஸை என்றும், நோன்பென்றும் அருளிச்செய்து போருவது. (ஏலோரெம்பாவாய்) என்று இரண்டவ்யயமும் பாதபூர்ணார்த்த மென்றுமாம்.
@@@@@
இரண்டாம் பாட்டு
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – இரண்டாம் பாட்டு. விடுமவற்றை விடுகையும், செய்யுமவற்றைச் செய்கையும் இரண்டும் ப்ரியமாகையாலே க்ருத்யாக்ருத்ய விவேகம் பண்ணுகிறது.
வ்யாக்யானம் – (வையத்து வாழ்வீர்காள்) “கொடுவுலகம்” (திருவாய் -0 4.9.7) என்ற இவ்விடத்தே வாழப்பெற்ற பாக்யவதிகாள்! “இங்கேயிருந்து ப்ராக்ருத போகங்களை புஜிக்கிற உங்களுக்கு மேல் சொல்லுகிற அப்ராக்ருத போகம் இவ்வுடம்போடே ஸித்திப்பதே!” என்கிறார்கள். இங்கே க்ருஷ்ண குணங்கள் ஆழமோழையாய்ச் செல்லாநிற்க, வானிலேபோய்ச் சிறையிராதே. அந்த இருப்பு தட்டிலிருப்பாரைப்போலே. இது ராஜ்யப்ராப்திபோலே. அவன் காற்கடைக்கொண்ட பரமபதரொழிய இங்கே பிறக்கப் பெற்றிகோளே! என்கிறது. “அயோத்யாம் அடவீம் வித்தி”. (வாழ்வீர்காள்) திருவயோத்யையில் உள்ளாரைப்போலே வாழக்கோலி பதினாலாண்டு தரைக்கிடைக் கிடந்தாற்போலக் கிடத்த, அவரைப்போலே வாரிப்பிடியாகப் பிடியுண்டுபோய், அநர்த்தப்பட்டாற்போலே படுதல் செய்யாதே அவனோடொக்கப் பிறந்த பாக்யவதிகளன்றோ. திருவடி “பாவோ நாந்யத்ர கச்சதி” என்றிலனோ? “அச்சுவை பெறினும் வேண்டேன்” (திருமாலை – 2) என்றும், “வானுயரின்பம்” (திருவாய் – 8.1.9) என்றும் அவ்விடம் இவர்களுக்கு ஸம்ஸாரமாய்த்து. அவனிருந்தவிடத்தே வாழலாமித்தனையிறே சேதந்நுக்கு அரியதானவிடம். இவ்விடம் அவன்தானே வந்து தன்னைப் பெறுகிற இடமான தன்னேற்றமுண்டு. “உயர்வற உயர்நலமுடையவன்” (திருவாய் – 1.1.1) என்றபோது தெளிவோடே இருந்தார். “உரலினோடு இணைந்திருந்தேங்கிய எளிவே” (திருவாய் – 1.3.1) என்றபோது “எத்திறம்” (திருவாய் – 1.3.1) என்று மோஹித்தார். தெளியப்பண்ணும் விஷயமே மோஹிக்கப் பண்ணும். விஷயமோ சீரியது. அங்கு அவனைத் தொழுமித்தனை. இங்கு “தொழுகையும் இவைகண்ட அசோதை தொல்லையின்பத்திறுதி கண்டாளே” (பெருமாள் திரு – 7.8) என்று அவன் தொழவும் காணலாம். ஆகையாலன்றோ இங்குள்ளார் “விண்ணுளாரிலும் சீரிய” (திருவிரு – 79) ராய்த்து. “வாழ்வீர்காள்” என்கிற பன்மையாலே ஒரு விபூதியாக பகவதநுபவமே யாத்ரையாயிருக்குமாபோலே, ஊராக இதுவே யாத்ரையாயிருக்கை. “அடியோமோடும் நின்னோடும்” (திருப்பல்லா – 2) “வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் (திருப்பல் – 3) என்று கூட்டுத் தேடினார் தம்ப்பனார். இவளுக்கு இங்கே வா.ழுகைக்குக் குழாங்களுண்டானபடி. “ஏகாம் தரணிமாஶ்ரிதோ” என்று நீங்களும் அவனும் ஒரு மண்ணிலே பிறக்கப் பெற்றிகோளே! என்றுமாம். க்ருஷ்ணனொளிக்கவேண்டும் ஆணாகாதே பெண்ணாகப் பெற்றிகோளே! அதுக்குமேலே பருவங்கழிந்த பெண்களாகாதே அவனுகக்கும் பருவத்தில் பெண்ணாகப் பெற்றிகோளே! என்றுமாம்.
(நாமும்) நமக்கும் சில க்ருதாயாக்ருத்யங்களுண்டு; உபாயோபேயங்கள் அவனேயாகையாலே இவை அவற்றில் புகாது. வேறொன்றைக் கொண்டு போதுபோக்க வொண்ணாது; ருசி கிடந்தவிடத்தில் கிடக்கவொட்டாது. (நாமும்) அதனாலே அலமருகிற நாமும். “நாராயணனே உபாயம்” என்று அறுதியிட்டு, “இன்று வந்தித்தனையும் அமுது செய்திடப்பெறில் நானொன்று நூராயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்” (நாச்சி திரு – 9.7) என்று பேற்றை அறுதியிட்ட நாமும்.
(நம் பாவைக்கு) அவனையும் அவனுடைமையையும் அழிக்க நினைத்த இந்த்ரஜித்தின் நோன்பு போலன்றியே அவனையும் அவனுடையாரையும் உண்டாக்கும் நோன்பு. பெண்களையும் அவனையும் எழுப்பிக் கூட்டி ஓலக்கமிருத்திக் காண்கையே ப்ரயோஜனமாயிருக்கை. பெரிய திருவடியைப்போலே ஸாத்யமே ஸாதநமாயிருக்கை. “தூயவமுதைப் பருகிப் பருகி என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே” (திருவாய் – 1.7.3). தர்மம் மேல் பலம் தருவதாயிருக்கை. “ஸுஸுகம் கர்த்தும்” – கைக்கூலி கொடுக்க வேண்டியிருக்கை. கரும்பு தின்னக் கருப்புக்கட்டிக் கூலியாமாப்போலே. “அவ்யயம்” – “தன்னையும் உபயவிபூதியையும் கொடுத்தாலும் போராது இவன் பண்ணின உபகாரத்துக்கு” என்று இவன் பண்ணின அஞ்சலியை நினைத்திருக்கை. “ருணம் ப்ரவ்ருத்தமிவ மே” “ந ஜாது ஹீயதே”.
(செய்யும் கிரிசைகள்) விஹிதத்திலே ப்ரதிஷேதமுள்ளது; இச்சைக்கு விதேயத்வமுண்டோ? நாம் உகந்து செய்யும் க்ருத்யங்கள். (செய்யும் கிரிசைகள்) மடல்போலே காட்டி நடுவே விடுவதல்ல. செய்து தலைக்கட்டியே விடவேணும். (கேளீரோ) “க்ருஷ்ணனையும் நம்மையும் சேர ஸம்மதிப்பதே! இதொரு லாபமே!” என்று இத்தைக் கொண்டாட. “மேய்ச்சல் தரையிலே அசையிடாதே இத்தைக் கொள்ளுங்கோள்” என்கை. “ஶ்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத்” என்று தொடங்கி “புருஷார்த்தமேவைகோ யத் கதா ஶ்ரவணம் ஹரே:” என்னுமளவும் மஹாபாரதத்திலே ஸபாதலக்ஷக்ரந்தத்திலும் தர்மார்த்த காம மோக்ஷங்களைச் சொல்லி, “இவற்றில் நீ எது புருஷார்த்தமாய் இருந்தாய்” என்று வைஶம்பாயந பகவான் தன் ஶிஷ்யனான ஜநமேஜயனைக் கேட்க, “நீ பகவத் குணங்களைச் சொல்லி, நான் கேட்குமதொன்றுமே புருஷார்த்தமாக நினைத்திருந்தேன்” என்றான். (கேளீரோ) இழிந்த துறை தோறும் ஆழங்கால். அவர்கள் கேட்க க்ஷமரல்லர். இவள் சொல்லாதிருக்க க்ஷமையல்லள். இவள் ஆசார்யத்வம் ஆசைப்பட்டல்ல. அவர்கள் அறியாது கேட்கையல்ல. “போதயந்த: பரஸ்பரம்” பண்ண, “ஸம்ஶ்ரவே மதுரம் வாக்யம்”.
உங்கள் வயிறு வளர்க்க அமையுமோ? என்ன, “சொல்லீரோ” என்கிறார்கள். (பற்கடலுள் பையத் துயின்ற) கீழ் “நாராயணன்” என்றது; இங்கு அவன் கிடந்தபடி சொல்லுகிறது. “ஸதா பஶ்யந்தி” என்று. தன்னைப் பிரியால் வாடுமவர்களை விட்டுப் போந்து ஸம்ஸாரிகளோடே கலக்கப் பெறாதே நடுவே தனியே இவற்றின் ஆர்த்தி தீர்த்துக் கலக்கைக்கு உபாயம் சிந்தித்துக் கிடக்கிறபடி. (பையத் துயின்ற) கர்ப்பிணிகள் வயிற்றில் ப்ரஜைகளுக்கு நோவு வராமல் சாயுமாபோலே. அங்கு பிராட்டிமார்களும் கழகங்களு மாய்ச் செல்ல, ஆனைக்குப் பாடுவாரைப்போலே அநாதரித்து, “மஹாபலி போல்வார் நலிந்தார்கள்” என்று கூப்பிடுங்கால் கேட்டுக் கிடக்கை. (துயின்ற) ஜகத்ரக்ஷண சிந்தை பண்ணுகை. (பரமன்) ஸர்வாதிகன். தன்னை பரார்த்தமாக்கி வைக்கும் குணாதிகன், (அடிபாடி) அவன் ஶேஷித்வத்துக்குச் சமைந்தாற்போலேயாய்த்து ஶேஷத்வத் துக்கு இவர்கள் சமைந்தபடி. இத்தையடைய அழிக்கிறோ மென்கை. மடலூர்ந்தால் தலைமை கிடக்கும் ஆர்த்திக்கு உதவிற்றிலன் என்றால் ஸ்வரூபம் அழியும்.
(அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம்) உண்டார்க்கு உண்ணவேணுமோ? “உண்ணாநாள் பசியாவதொன்றில்லை” (பெரியாழ் திரு – 5.1.6) “கூறை சோறிவை வேண்டுவதில்லை” (பெரியாழ் திரு – 5.1.4) “எல்லாம் கண்ணன்” (திருவாய் – 6.7.1) உண்ணோம் என்கிறது க்ருஷ்ணன் பிறந்தபின்பு “உண்ணக்கடவதோ குடிக்கக் கடவதோ” என்று வ்யுத்பத்தி இல்லாமை. இவர்கள் பர்த்தாக்கள் காமரஸமறியிலாய்த்து இவர்கள் இது அறிவது. இவர்கள் பட்டினி அவளைப் பட்டினி கொள்கையிறே. ஆண்களுக்ககப்பட “ந மே ஸ்நாநம்” என்னக்கடவ அவன் – பெண்கள் “மாசுடை உடம்பொடு தலையுலறி” (நாச்சி திரு – 1.8) என்றால் தரிக்கவல்லனோ? (நாட்காலே நீராடி) நாம் முற்பட்டு அவன் மநோரதத்தை அஸத்கல்பமாக்குவோம், ஶ்ரீபரதாழ்வானைப் போலே விரஹதாபம் தீர.
(மையிட்டெழுதோம்) “மையக்கண்ணா” (திருவாய் – 4.5.2) ளாகையாலே மங்களார்த்தமாக இடுமத்தனை. எம்பெருமான் பூர்ணனாய் இருந்துவைத்து இவற்றின் ஸத்தை உண்டாகைக்காக அடிமைகொள்ளுமாபோலே. இவர்களும் அவன் ஸத்தைக்காக அடிமை செய்வார்கள். இப்போது அது செய்யோம். அவனைத் துடிப்பிக்கிறோம் என்று கருத்து. (மலரிட்டு நாம் முடியோம்) “தொடுத்தத் துழாய் மலர் சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்” (திருப்பல் – 9) என்னுமவர்களாகையாலே ஶேஷத்வம் இவர்களுக்கு ஸ்வரூபம். (நாம் முடியோம்) அவன் சூழியில் (கொண்டையில்) கட்டி ஒப்பிக்கில் செய்யலாவதில்லை. ப்ருந்தாவநத்தே கொடுபுக்கு மாலையைச் சூட்டி, ஆணையிட்டு விரல் கவ்வி “கொண்டையை அவிழாதேகொள்” என்னில் செய்யலாவதில்லை. நமக்கு அபேக்ஷையில்லாமையாலே புருஷார்த்தமேயன்று. அவன் தீம்பாலே செய்யில் செய்யுமத்தனை.
(செய்யாதனச் செய்யோம்) முன்பு அநீதிகள் செய்து இப்போது தவிர்கிறோம் என்கிறார்களல்லர். ஶ்ரீபரதாழ்வான் முடி சூடுகைக்கு எல்லாப் படியாலும் வழக்குண்டாயிருக்க, “இக்குடியில் செய்துபோராதது செய்யேன்” என்றாற்போலே பூர்வர்கள் செய்யாதனகள் தவிருகை. ஆழ்வானை “தேவரீர் தேவதாந்தர பஜனம் செய்யாதொழிகிறதென்?” என்ன, “எங்கள் பூர்வர்கள் செய்து போந்திலர்கள்” என்றார். இவர்களுக்கு இவையல்ல பொருள். “ஶ்ரீவைஷ்ணவர்கள் முன்னிலையாக அல்லது எம்பெருமானைப் பாடப்புகோம்” என்றிருக்கை. “நிவேதயத மாம் க்ஷிப்ரம்” “பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரஸீத”. ஶ்ரீஶத்ருக்நாழ்வான் ஶ்ரீபரதாழ்வான் முன்னாகத் திருசித்ரகூட பர்யந்தத்துக்குப் போனாற்போலே. (தீக்குறளை சென்றோதோம்) பிராட்டி, ராக்ஷஸிகள் எய்த தப்பு திருவடிகளுக்கு அருளிச் செய்யாதே மறைத்தாற்போல், தம்மில் தாம் ப்ரணய ரோஷத்தாலே ஏதேனும் தப்பு புகுந்தாலும், எம்பெருமானுக்கு அறிவியாமை. (சென்றோதோம்) கண்ணால் கண்டது நெஞ்சோடு கூட்டோம். அந்தர்யாமியிறே அவன். நினைக்கையாவது அவனுக்குச் சொல்லுகை. “உள்ளுவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்தறியு” (திருமாலை – 34) மவனிறே.
(ஐயமும் பிச்சையும்) (ஐயம்) யோக்யர்க்கு குருவாகக் கொடுக்குமவை. (பிச்சை) ஸந்யாஸிகளுக்கும், ப்ரஹ்மசாரிகளுக்கும் இடுவது. (ஆந்தனையும்) அவர்கள் கொள்ளவல்லராந்தனையும். (கைகாட்டி) ஒன்றும் செய்ததாயிராமை. (உய்யுமாறு) “ஸந்தமேநம்” என்று உஜ்ஜீவிக்கக் கடவர்கள். கைங்கர்யமென்றால் உஜ்ஜீவிக்கச் சொல்லவேணுமோ? (எண்ணி யுகந்து) “நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்றினிதோ நீ அவர்களுக்கு வைகுந்தம் என்றருளும் வான்” (பெரிய திருவந் – 53) என்று மநோரதமாத்ரமே இனிதாம் விஷயம். உய்யுமாறெண்ணி உகக்கையாவது – “தொட்டுதைத்து நலியேல் கண்டாய்” (நாச்சி திரு – 3.2) “குருந்திடைக் கூறை பணியாய்” (நாச்சி திரு – 3.2) என்று தாங்களும் அவனும் இட்டீடு கொள்ளும்படியை மநோரதிக்கை.
@@@@@
மூன்றாம் பாட்டு
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாறி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை: மூன்றாம் பாட்டு. தங்கள் நோன்பாலே லோகத்துக்குப் பலிக்கும்பலம் சொல்லுகிறது. “சாது கோட்டியுட் கொள்ளப்படுவாரே” (பெரியா திரு – 3.6.11) என்று தங்களோடு ஒரு கோர்வையாகக் கூடுகை பரம புருஷார்த்தம். அதில்லாத பின்பு ஐஹிக போக்யத்தையாகிலும் இழவாதே பெற்றிடுவார்களென்கை. “நம்மார்த்தி தீர நாம் குளிக்க நாடு வாழப்பெறுவதே!” என்கிறார்கள். ருஶ்யஶ்ருங்கன் திருவயோத்யையிலே (அங்கதேஶத்திலே?) புகுந்தபின்பு அநாவ்ருஷ்டி நீங்கி ஸம்ருத்தமானாற்போலே. ஶ்ரீபரதாழ்வான் வ்யஸநம் தீர நாடு “ப்ரஹ்ருஷ்டமுதித:” ஆய்த்திறே. இவர்களும் க்ருஷ்ணனும் கூடினபின்பு நாட்டுக்கு வர்ஷஸம்ருத்தியிறே. இவர்கள் விஶ்லேஷமிறே நாட்டுக்கு அநாவ்ருஷ்டி.
வ்யாக்யானம் – (ஓங்கி) “பிறர் காரியம் செய்ய” என்றால் பணைக்குமிறே. “உவந்த உள்ளத்தனாய் உலகமளந்தண் டமுற நிவந்தநீள் முடியன்” (அமலநாதி – 2) – பனியில் சாய்ந்த மூங்கில் ஆதித்யனைக்கண்டால் எழுமாப்போலே பிறர் காரியம் செய்கை ஸத்தாப்ரயுக்தமென்கை. ஓங்குகைக்கடியான வெய்யில் அங்கு. இங்கு ஆர்த்தநாதம். வளர்ந்த சடக்கு – கையில் விழுந்த நீரும் ப்ரஹ்மா விளக்கின திருவடி நீரும் ஒக்க விழும்படியாகை. (உலகளந்த) ஏகதேஶத்துக்கின்றியே இருந்ததே குடியாக குணாகுண நிரூபணம் பண்ணாதே ரக்ஷிக்கை. அகவாயில் வ்யாப்தியில் வரைதலில்லாப்போலே திருவடிகள் புறம்பெல்லாரோடும் கலந்தபடி. அந்யத்ர “அநஶ்நந்நந்ய:” என்று ஒட்டற்று நின்றான். இங்கு தனக்கு தாரகமா க நின்றான். உறங்குகிற ப்ரஜையை தாய் கட்டிக்கொண்டு கிடக்குமாபோலே இவ்விடம் தனக்கு தாரகம். இவ்வவதாரமெல்லாம் இணைந்துபோருகையாலே க்ருஷ்ணா வதாரத்தோடொக்கும். இசையாதார் பக்கல் விழுமவன் இசைந்தார் பக்கல் மேல்விழச் சொல்லவேணுமோ?
(உத்தமன்) தனக்காயிருத்தல் செய்யாதே, தென்றலும் நிலாவும்போலே பிறர்க்கேயாயிருத்தல். “ந தே ரூபம் ந சாகார:” – நிஷேதம் தன்னதென்கையைத் தவிர்க்கிறது. “அஹமபி ந மம பகவத ஏவ அஹமஸ்மி” போலே இவனுக்கு “ந தே ரூபம் – பக்தாநாம்” என்கை. (உத்தமன்) ஸர்வாதிகனென்கை. தான் நிர்ஹேதுகமாக ரக்ஷிக்கையும் அது தன் பேறாயிருக்கையும். ஈஶ்வரர்களுமகப்பட இவன் காலிலே வணங்கப் புகுகையாலே இவனே பரதத்வம். தன் திருவடிகளை க்ருபையாலே தன் பேறாகத் தலைகளிலே வைக்கையாலே ப்ராப்யமும் ப்ராபகமும் தானே.
(பேர்) பிறர்க்கும் அவனுக்குமுள்ள வாசி போரும் திருநா மத்துக்கும் அவனுக்குமுள்ள வாசி. ஒருவன் திருநாமத்தைச் செவியிலே சொல்லி உறவையறிவித்துத் தலையிலே திருவடிகளை வையாமையாலேயன்றோ எனக்கு உன் திருவடிகள் ஸம்பந்தம் அந்தராத்மதையோடொத்து நிலையில்லாதே போய்த்து. (பேர்) “அம்மே” என்பார்க்கு சடங்கு வேண்டா. மாத்ருகாதுகனுக்கும் கைநொந்தால் “அம்மே” என்ன ப்ராப்தி யுண்டாமாபோலே ஸர்வாதிகாரம். ப்ரயதனாய்ச் சொல்லவேண்டாவோ வென்னில், கங்கா ஸ்நாநம் பண்ணப்போமவனுக்கு வேறொரு குழியிலே தோயவேண்டாதாப்போலே, இதுதானே எல்லா ஶுத்தியையும் பிறப்பிக்கும். எம்பெருமானை யொழிந்த ஶுத்திகள் இவனுக்கு துரபிமாநத்தையே பிறப்பித்து, எம்பெருமானை அகலப்பண்ணும். அவன் பண்ணும் ஶுத்தியே ஶுத்தியாக, தான் அஶுத்தனென்று இருக்குமவனுக்கு, தானும் தன்னைவிட்டு, பிறரும் தன்னைக்கைவிட்டு, எம்பெருமான் பரிக்ரஹிக்கைக்கு உடலாய்விடும். “மத்வ்ருத்தமசிந்த யித்வா” . கர்மயோகிக்கு விரோதி போகைக்கும், கர்மம் செய்துத் தலைக்கட்டுகைக்கும், திருநாமம் வேணும். ஜ்ஞாநயோகிக்கு ஜ்ஞாநம் விஶதமாகைக்கும் விரோதி போகைக்கும். பக்திமானுக்கு விரோதி போகைக்கும், பக்தி வர்த்திக்கைக்கும், ப்ரபந்நனுக்கு சோறும் தண்ணீரும்போலே தேஹயாத்ரைக்கும் வேணும். இப்படி எல்லார்க்கும் திருநாமம் போக்கி இல்லை. (பாடி) ஆர்வத்தால் (பெரிய திருமொ – 11.7.4) பாடும் பாட்டிறே பாட்டுக்கு லக்ஷணமாவது. அல்லாதது பாட்டல்ல.
(நாங்கள்) பேர் பாடாவிடில், தரியாத நாங்கள். உபாயாம்ஶம் அவனேயானால் தாரகமுமவனேயா மத்தனையிறே. (நம் பாவைக்கு) அநுஷ்டாநமும் அநநுஷ்டாநமும் விகல்பிக்க லாம்படியிருக்கை. அநுஷ்டித்ததாகில் ஸாதநமென்று கொள்ளவொண்ணாதே ப்ராப்யருசியால் வந்ததென்கை. அநுஷ்டித்த தில்லையாகில், அவனே உபாயமென்கையாலே பலத்தில் அழிவில்லாமை. பெறுமதுவும் க்ருஷ்ணனேயாய், பெறுவிப்பவனும் க்ருஷ்ணனேயான நோன்பென்றுமாம். (சாற்றி நீராடினால்) நாட்டுக்குப் புண்யம்; நமக்கு விரஹ ஶமநம். “வ்ருத: ப்ரக்ருதிபி: நித்யம் ப்ரயாதி ஸரயூம் நதீம்” – ஶ்ரீபரதாழ்வானைப்போலேயென்கை. “ந மே ஸ்நாநம் பஹுமதம்” இத்யாதியால் சொல்லுகிறபடியே அவனுடைய விரஹதாபம் தீரும்.
(தீங்கின்றி நாடெல்லாம்) எல்லா பொல்லாங்குகளும் போகை. தந்தாம் பண்ணின புண்யபலமன்றே அநுபவிக்கிறது. ஸேஶ்வரமான ஜகத்தையடைய வாழ. (திங்கள் மும்மாரி) நெடுநாள் மழையின்றிக்கே வ்யஸநப்பட்டாற்போலே வெள்ளத்தாலும் கெடாமே ஒன்பது நாள் வெய்யிலெரித்து, ஒரு நாள் மழைபெய்து தலைக்கு எண்ணெய் ஊறவிட்டாற்போலே நன்றாம்படி மழைபெய்ய வேணுமென்கை. “யத்ராஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ மஹாபாகோ மஹீயதே ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்பிக்ஷ தஸ்கரா:” என்றும் “நாட்டிலுள்ள பாவமெல்லாம் சும்மெனாதே கைவிட்டோடி தூறுகள் பாய்ந்தனவே” (பெரியாழ்வார் திரு – 5.4.3) என்றும் சொல்லுகிறபடியே.
(ஓங்கு பெரும் செந்நெல்) – கவிழ்ந்து நின்று முதலை நட்டு ௮நந்தரம் ௮ண்ணாந்து பார்கவேண்டுகை, (தி௫வாய் 6-1-1) “செய்கொள் செந்நெலுயர்” ௭ன்னுமாபோலேயும், (பெரியாழ் தி௫ 4-9-8) “வரம்புற்ற கதிர்செந்நெல்” ௭ன்னுமாபோலேயும்.
(ஓங்கு பெரும் செந்நெல்) – சுற்றுடைமையும் ஓக்கமும் வரம்புக்கு அவ்வருகு போகவொண்ணாமையாலே ஒருமுதலே செய்யுள்ளதடையக்கொண்டு, அகாஶத்துக்கு எல்லையில்லாமையாலே மேல் நோக்கி உயராநின்ற தென்கை. (ஓங்கு பெரும் செந்நெல்) “வ்ருக்ஷே வ்ருக்ஷே”. (ஊடு கயலுகள) பயிர் நெருங்கினதனையும் ஆனைக்கன்று போலே செருக்கித் திரிகிற கயல்களுக்குத் தாவித் திரியலாமென்கை. திருவுலகளந்தருளின எம்பெருமானைக் கண்டு அநுகூலர் செருக்கி ப்ரீதிக்குப் போக்குவிட்டு ஸஞ்சரிக்குமாபோலே கயல்கள் திரிகிறபடி.
(பூங்குவளைப் போதில்) அழகியக் குவளைப்பூவிலே. “போது” என்று காலபரமாகவுமாம். கயல்களுடைய ஸஞ்சாரத்தாலே பூக்கள் கட்டு நெகிழ்கிறபடி. (பொறிவண்டு) ரஸாயநஸேவை பண்ணினாரைப்போலே நரைதிரை மாறி இளகிப் பதித்திருக்கை. இவர்களுக்கு அங்குள்ளதெல்லாம் உத்தேஶ்யமாயிருக்கை. (கண் படுப்ப) ஒரு மஹாபார தத்தை நினைத்து வந்து ஏறிப்படுக்கையில் ஸௌக்யத்தாலே உறங்கி விடிந்தவாறே உணர்ந்து “நீ எழுப்பிற்றிலை, நீ எழுப்பிற்றிலை” என்று தன்னில்தான் சீறுபாறென்கை. க்ருஷ்ணனும் பெண்களும் படுவதெல்லாம் படாநிற்கும். “பள்ளி கமலத்திடைப்பட்ட” (பெரியாழ் திருமொ – 6.7.6) இத்யாதி.
(தேங்காதே புக்கிருந்து) இனி ஊரில் ஸம்ருத்தி சொல்லுகிறது. (தேங்காதே) திருவடி ஸமுத்ர தரணத்துக்கு ஒருப்பட்டாற்போலே புக்கு. கடலிலே முழுகுவார் கடலுக்கு இறாயாதாப்போலேயாய்த்து இறாயாதே புக்கபடி. (தேங்காதே) “யதோ வாசோ நிவர்த்தந்தே” என்னும் விஷயத்தை, அத்தலையை உண்டாக்குகைக்காக தம் குற்றம் பார்த்து இறாயாதே ஸ்வீகரிக்குமாபோலே. (இருந்து) பால் ஸம்ருத்தியாலே தேங்குமித்தனை. பால் வற்றி எழுந்திருக்க விரகில்லை. ஸ்தாவரப்ரதிஷ்டை. (சீர்த்த முலைப்பற்றி) விரலால் பிடிக்கவொண்ணாது. இரண்டு கையாலும் அணைக்கவேண்டியிருக்கை. (பற்றி வாங்க) தொட்டுவிட அமையும்.
(வாங்கக் குடம் நிறைக்கும்) ஒருகால் பற்றி வலிக்க, இட்ட குடங்கள் நிறைக்கை. வைப்பார் தாழ்வே. வைத்தகுடமெல்லாம் நிறைக்குமென்றுமாம். (வள்ளல்) சிறு பிள்ளைகளுக்கும் கட்டிவிடலாய், கழுத்தைக் கட்டிக்கொண்டு நாலலாம்படி இருக்கை. (பெரும் பசுக்கள்) கண்ணன் குழலோசையை அசையிட்டு வளருகையாலும், அவனோட்டை ஸ்பர்ஶமுண்டாகையாலும் ஶ்ரீஶத்ருஞ்ஜயனைப்போல இருக்கை.
(நீங்காத செல்வம்) ஈஶ்வரன் பார்த்தவிடம்போலே ஸாவதியன்றிறே இவர்கள் பார்த்தவிடம். புண்யமடியாக வருதல், ஈஶ்வரகடாக்ஷமடியாக வருதல் செய்யுமவைபோலன்று. அவனுடைய ஐஶ்வர்யத்துக்கடியான கடாக்ஷமுள்ளவர்களிறே இவ்வைஶ்வர்யத்துக்கடி. (நிறைந்து) ஏலோரெம்பாவாய்.
“உத்தமன்” – பட்டர் அருளிச்செய்த வார்த்தை “கருமாணியாய் இரந்த கள்வனே உன்னைப் பிரமாணித்தார் பெற்றபேறு” (இரண்டாம் திரு – 61) என்று சிறு காலைக்காட்டி இரந்து பெரிய காலைக்கொண்டு அளந்து நீ பண்ணின ஓரம் உன்னை ஆஶ்ரயித்தார் நிர்ப்பரராகைக்கு அவர்களுக்கு நீ வைத்த சந்தானச் சாபமிறே. இவ்வாந்தராளிக த்ருஷ்டாத்ருஷ்டங்களில் ஒருவர்க்கஞ்சாதே, யமாதிகளுக்கு முழங்கை காட்டிச் செருக்கராய் இவர்கள் திரிகைக்கடியென்? என்னில் – அறிந்தோம். ஒரு பரமதார்மிகன் செவியிலே “துர்ப்பலரான நம்மால் நம் காரியம் நிர்வஹித்துக்கொண்டு கரையிலேறவொண்ணாது; உன்னுடைய ரக்ஷணத்துக்கு ஒரு ப்ரபலனை அண்டைகொண்டு த்ருஷ்டாத்ருஷ்ட விஷயமான உன்னுடைய யத்நங்களையடைய அவன் வசத்திலே பொகட்டு நிர்ப்பயனாயிரு” என்று சொல்லிப்போம். இவனும் அத்தையே விஶ்வஸித்து “அப்படியே” என்றிருக்கும். “எம்பெருமான் கழுத்திலே ஓலைக்கட்டத் தூதுபோயும், மார்பிலே அம்பேற்றும், ஸாரத்யம் பண்ணியும், பகலை இரவாக்கியும், ஸத்யப்ரதிஜ்ஞனாயும், அஸத்யப்ரதிஜ்ஞ னாயும், பொய் சொல்லியும் மெய்சொல்லியும், வார்க்கொத்துக் குத்தியும், எல்லை நடந்தும், இங்ஙனொத்த செயல்களைச் செய்து இவர்கள் கார்யமே நிர்வஹியாநிற்கும்” என்றார்.
“மந்திரத்தால் மறவாதென்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே” (திருநெடு – 4) என்று திருமந்த்ரத்துக்கு அர்த்தமாக “மண்முழுது மகப்படுத்து நின்றவெந்தை மலர்புரையும் திருவடியே வணங்கினேனே” (திருநெடு – 5) என்று அநுஸந்தித்தாற்போலே, இவளும் “ஓங்கியுலகளந்த உத்தமன்” என்று திருமந்த்ரத்தினுடைய அர்த்தத்தை முந்துற அநுஸந்தித்து, பின்னை அதுக்கு வாசகமான திருநாமத்தைப் “பாடி” என்கிறாள்.
@@@@@
நான்காம் பாட்டு
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ(டு) ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – நாலாம்பாட்டு. (ஆழிமழை) “ஸேஶ்வரமான ஜகத்தையடைய இங்கே கிஞ்சித்கரித்துத் தந்தாம் ஸத்தைப் பெறாநின்றது. நம்முடைய ஸத்தையும் பெறுவோம்” என்று வர்ஷத்துக்குக் கடவ பர்ஜந்யன் வந்து “நான் செய்யவேண்டுவதென்?” என்ன, வர்ஷம் பெய்யும்படியை அவனுக்குக் கையோலே செய்து கொடுக்கிறார்கள். ராவணவதாநந்தரம் முன்பு மறந்த இந்த்ரன் தன் பதம் பெறுகைக்காக “ஒரு வரம் கொள்ளவேணும்” என்றான். அங்கு தப்பினார்க்கு இவர்களுளராக அஞ்சவேண்டா. இங்கு தப்பினார்க்கு விநாஶமேயிறே உள்ளது.
இப்படி தேவதைகள் வந்து, இவர்களுக்குச் சொல்லிற்றுச் செய்வர்களோ? என்னில் – “த்ரவந்தி தைத்யா: ப்ரணமந்தி தேவதா:” “பரிஹர மதுஸூதந ப்ரபந்நான்” “இறைஞ்சியும் சாதுவராய்” (நான்முகன் திரு – 68) இத்யாதி. “நாவலிட்டு உழிதருகின்றோம் நமன் தமர் தலைகள்மீதே” (திருமாலை – 1) “உன்தமர்க்கென்றும் நமன்றமர் கள்ளர்போல்” (பெரிய திருமொ – 8.10.7) என்றுமுண்டிறே. இந்த ஆக்கரான தேவதைகளன்றிக்கே ஸாக்ஷாத் தேவதைகளான “அயர்வறும் அமரர்களு” (திருவாய்மொழி – 1.1.1) மகப்பட இவர்களைத் தொழாநிற்பர்கள். எங்ஙனேயென்னில் – “ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாறே” (திருவாய் – 3.5.8) “மலிபுகழ் வானவர்க்காவர் நற்கோவையே” (திருவாய் – 4.2.11) “விரும்புவார் அமரர் மொய்த்தே” (திருவாய் – 3.4.11) “விண்ணுளாரிலும் சீரியர்” (திருவிரு – 79) என்று சொல்லுகையாலே.
ஆழ்வானை ஒரு பட்டன் “தேவதாந்தரங்களை நீங்கள் கண்டால் பண்ணும் ஆசாரமென்?” என்று கேட்க, “ஶாஸ்த்ரவிரோதமாய்க் கேளாதே கொள்ளாய்; தேவதாந்தரங்கள் உங்களைக்கண்டால் பண்ணும் ஆசாரமென் என்று கேளாய்” என்றார். “ஸர்வேஸ்மை தேவா பலிமாவஹந்தி” “தஸ்ய யஜ்ஞவராஹஸ்ய – தேஷாமபி நமோ நம:” – எம்பெருமானுக்குப் பண்ணும் அஞ்சலியேயிறே இவர்களுக்கும் பண்ணுவது. இவர்கள் பெருமைக்கு இடைவிடாதே பண்ணுகிறேன். எம்பெருமானுக்கு ஒருகால் அமையும். ப்ராப்யரான இவர்களுக்கு ஸர்வஸ்வதாநமாகத் தன்னைக்கொடுக்கு மத்தனையிறே.
வ்யாக்யானம் – (ஆழிமழைக்கண்ணா) “ஸம இதி லோகஹிதாஹிதே நியுக்த:” என்று யமனை அக்கார்யத் துக்கிட்டாப்போலே புண்யபாபாநுரூபமாக வேண்டுமளவிலே வர்ஷிப்பிக்கைக்கு ஸர்வேஶ்வரனாலே நியமிக்கப்பட்டு, பேரளவுடையையாய் வர்ஷத்துக்கு நிர்வாஹகனானவனே! தேவதை அப்ரஸித்தமாகையாலும் தங்கள் ராஜகுலத்தாலும் “இன்ன பணிக்குக் கடவன்” என்பாரைப்போலே தொழிலையிட்டுச் சொல்லுகிறார்கள். தந்தாம் பாகத்தள விலே கார்யம் செய்யும்போதைக்கன்றோ புதைத்துவிட வேண்டியது; எங்களுடைய பாக்யபலமன்றோ எல்லாரும் புஜிக்கப் புகுகிறது. சேதநனுடைய நன்மை தீமை கணக்கிட்டுப் படிவைக்கும் குசாண்டுள்ள ஈஶ்வரகோஷ்டியின் படியின்றியே வரையாதே பாபமே பச்சையாகரக்ஷிக்கும் எங்கள் கோஷ்டியிற்படியே நடத்தித் தரவேணும். “மித்ரமௌபயிகம் கர்த்தும்” “விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ:” “ஏவமுக்தா ஹநூமதா” இத்யாதி . “பாபாநாம் வா” “ராஜஸம்ஶ்ரயவஶ்யாநாம்” “அலமேஷா” இத்யாதி. மஹாபாரதம் தூதுபோனவனேற்றமான நீர்மையைச் சொல்லுகிறது. ஶ்ரீராமாயணம் பிராட்டி நீர்மையைச் சொல்லுகிறது.
(ஒன்று நீ கை கரவேல்) அர்த்திகள் “கைபெரியன்” என்று கொண்டாடுமாபோலே உன்படிகளொன்றும் குறையாதபடி வந்து தோற்றவேணும் என்கிறார்கள்.
“என்னை ஸ்தோத்ரம் பண்ணுகிறதென்? உங்களுக்கு வர்ஷிக்கைக்கு நீருண்டோ” என்னில் – (ஆழியுட்புக்கு முகந்துகொடு) என்கிறார்கள். இந்த முன்வாயில் ஸகரர் கல்லின உப்புக்குழியொழிய, பெருங்கடலிலே புக்கு முகந்துகொண்டு பாதாளம் கிடக்க மணலோடே பருகவேணும். (ஆர்த்து) முதலிகள் அநஶநத்திலே தீக்ஷித்துக் கிடந்தவர்கள் த்வநிகேட்டபோதே எழுந்திருந்து ஆடும்படி, திருவடி பிராட்டியைத் திருவடி தொழுத ப்ரீதிப்ரகர்ஷத்தாலே ஆர்த்துக்கொண்டு வந்தாப்போலே வரவேணும். (ஏறி) நாங்களும் ஜகத்தும் கண்ட காட்சியாலே தளிரும் முறியுமாம்படி மின்னி முழங்கி வில்லிட்டுக்கொண்டு வரவேணும். “விஶ்ரம்ய விஶ்ரம்ய புந: ப்ரயாந்தி” – கர்ப்பிணிகள் நகர்ந்து நகர்ந்து பெரிய ஏற்றமேறுமாபோலே ஏறவேணும். “மதயானை போலெழுந்த மாமுகில்காள்” (நாச்சி திரு – 8.9) “விண்ணீல மேலாப்பு விரித்தாற்போலே” (நாச்சி திரு – 8.1) ஆகாஶமவகாஶ மத்தனையும் நிறையும்படி பாரித்துக்கொண்டு வரவேணும்.
(ஊழிமுதல்வன்) ஸ்ருஷ்டித்தால் இவை பண்ணும் நன்மை தீமைக்குத் தக்கபடி பார்க்கும் பார்வையன்றிக்கே, ஸ்ருஷ்டிக்கு முன்பு எல்லாரையும் “ஐயோ” என்று ஒக்க பார்க்கும் பார்வைபோலே நீங்களும் இங்குத்தைக்கு ஒத்திருக்கவேணும் என்று கருத்து. “ஞாலம் படைத்த எம்முகில் வண்ணனே” (திருவாய் – 3.2.1) யிறே. (உருவம்போல் மெய் கறுத்து) அகவாயில் நீர்மையை உங்களால் தேடப்போகாது; நிறத்தையாகிலும் கொள்ளுங்கோள். நாய்ச்சியார் விழிவிழிக்கச் சொல்லுகிறார்கள். ஈஶ்வரனைப்போலே முகம் தோற்றாமல் நின்று உபகரிக்கவொண்ணாது. (ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து) காலோபலக்ஷிதமான ஸர்வ பதார்த்தங்களையும் உண்டாக்கவேணுமென்று திருவுள் ளத்தில் கொண்டதாகையாலே கருவடைந்த பயிர்போலே இருக்கும் திருநிறமென்கை. (மெய் கறுத்து) அகவாயில் நீர்மை அவனுடைய நீர்மைக்கு நெருப்பென்னலாம்.
(பாழி) இடமுடைமை. “பாஹுச்சாயாம் அவஷ்டப்த:” ஒதுங்கின ரக்ஷ்யவர்க்கம் பொருந்தும்படி நிழல் மிக்கிருக்கை. “நிவாஸவ்ருக்ஷஸ் ஸாதூநாம்” (அந்தோள்) உழறுபால். ரக்ஷகமும் தானேயாய் போக்யமும் தானேயாகை. “சுந்தரத் தோளுடையான்” (நாச்சி திரு – 9.1) இறே. படவடித்தாலும் விடவொண்ணாது. (பற்பநாபன்) ”புத்ரஸ்தே ஜாத:” என்று ப்ரஹ்மாவை உண்டாக்கின அநந்தரம் பிறந்த ஒளி. “கொப்பூழில் எழுகமலப் பூவழகர் எம்மானார்” (நாச்சி திரு – 11.2) என்று கொப்பூழிலழகைக்கண்டு கிடக்குமவளிறே. (கையிலாழி) வெறும்புறமே அமையும். அதுக்கு மேலே திருவாழி. ராஜாக்களுக்குப் பிள்ளை பிறந்தால் காம்பீர்யத்தால் அவர்கள் தாங்கள் பேசாதிருக்க, உரியவடியார் நெய்யாடல் போற்றுமாபோலே திருவாழி நின்று ஜ்வலியாநிற்கும். “ஆழியோடும் பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னாரென்றறியேன்” (பெரிய திருமொ – 10.10.9) வெளிச்செறிப்பிக்கைக்கும் அழிக்கைக்கும் பரிகரமதுவே. (வலம்புரிபோல் நின்றதிர்ந்து) பாரதஸமரத்திலே பாஞ்சஜந்யம்போலே முழங்கித் தோற்றவேணும். “ஸ கோஷோ தார்த்தரார்ஷ்ட்ராணாம்” “பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்” (நாச்சி திரு – 9.9) “கைகழலா நேமியான்” (பெரிய திருவந் – 87) இத்யாதி. ஸ்த்ரீத்வத்துக்கு முலைபோலே அவனுடைய பும்ஸ்த்வத்துக்குத் திருவாழி. (வலம்புரி) “உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்” (நாச்சி திரு – 7.8) “பொதுவாக உண்பதனைப்புக்கு நீயுண்டக்கால்” (நாச்சி திரு – 7.9) என்று தம் துறையிலுள்ளதிறே. தேவதாந்தரபஜநம் பண்ணினாரைப்போலன்றியே, பகவத் ஸமாஶ்ரயணம் பண்ணினார் பெறுமாபோலே பெறவேணும். (நின்று) தேவமாத்ருகம் போலன்றிக்கே பகவத்ஸமாஶ்ரயணம் நதீமாத்ருகம்போலே சரதமென்கை.
(தாழாதே) தஶரதாத்மஜன் “ஶரணம்” என்று புகுந்தவர்களைக் கொண்டல்லது தரியாதாப்போலே வரவேணுமென்கை. (சார்ங்க முதைத்த) பெருமாள் கடைக்கணிக்கும்போதும் பெருமாளைப் பார்த்து பின்னைத் தானே பராக்ரமிக்குமென்கை. அகம்படியர் கிளர்ந்தால் அரசனானாலும் விலக்கப் போகாதிறே. “அவஷ்டப்ய மஹத் தநு:” – பெருமாள் தம்மால் அமைக்கவொண்ணாமே பிடித்துக்கொண்டு நின்று ஊசலாடினார். “சார்ங்கமென்னும் வில்லாண்டான்” (திருப்பல் – 12) “சரமாரி” (நாச்சி திரு – 5.3) “வாளிமழை” (திருவாய் – 6.10.4) வார்த்தை முறைப்பட்டது. (சரமழை) “ஶரவர்ஷம் வவர்ஷ ஹ” என்று தானே ஶரவ்ருஷ்டி பண்ணவற்று. (வாழ உலகினில் பெய்திடாய்) அங்கு ஶத்ருக்களான ராக்ஷஸர்மேல் பட்டாப்போலே யன்றிக்கே லோகமடைய வாழும்படியாகப் பெய்யவேணும். எங்கள் வடிவைப் பாராய். மழை வேண்டுவார்க்கு நாளையுமாம்.
இப்படி செய்தால் எனக்கு ப்ரயோஜனமென்? என்ன – உன் கார்யம் செய்து தருகிறோம். (நாங்களும் மார்கழி நீராட) நாங்களும் க்ருஷ்ணனும் மகிழ்ந்து குளித்துத் தருகிறோமென்கிறார்கள். “ப்ரஹர்ஷயிஷ்யாமி” “நாங்கள் வியக்க இன்புறுதும்” (திருவாய் – 10.3.9). இவர்களுக்கு “காட்டேன்மின் நும்முரு என்னுயிர்க்கது காலன்” (திருவாய் – 9.5.7) என்னவேண்டாவே. க்ருஷ்ணனைக் கண்டாற்போல் இருக்கவமையும். “ஏவமுக்தா ஹநுமதா மைதிலீ ஜநகாத்மஜா உவாச தர்மஸஹிதம் ஹநூமந்தம் யஶஸ்விநீ” “தஹ பச” என்றும் “கொள்ளைக்கூத்து” என்றும் ராமகோஷ்டியில் சொல்லும் வார்த்தையைச் சொல்லாதே, எங்கள் குடிப்பிறப்புக்கும் பிறந்த மண்பாட்டுக்கும் தக்கபடி ஶத்ருக்களும் வாழவேணும் எங்கள் கோஷ்டியில் வார்த்தையைச் சொல்லென்று அருளிச்செய்தார்.
@@@@@
ஐந்தாம் பாட்டு
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்று மணி விளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – ஐந்தாம் பாட்டு. (மாயனை) “நாம் இங்ஙனே இலையகப்படுத்தா நின்றோம். “ஶ்ரேயாம்ஸி பஹு விக்நாநி பவந்தி மஹதாமபி” என்கிறபடியே நாம் அநாதிகாலம் பண்ணின பாபங்கள் விக்நப்படுத்தாதோ? சக்ரவர்த்தித் திருமகன் திருவபிஷேகத்திற்கு வஸிஷ்டன் முகூர்த்தமிடுகிறான். பாக்யாதிகரான பெருமாள் முடிசூடவிருக்கிறார். ஜகத்தடைய இதுக்கு “ஸர்வாந் தேவாந் நமஸ்யந்தி” என்று மங்களாஶாஸநம் பண்ணுகிறது. “நாராயணமுபாகமத்” என்று பெரிய பெருமாளை ஆஶ்ரயிக்கிறது. அங்குமன்றோ சில விக்நங்கள் வந்தது” என்று சில பெண்பிள்ளைகள் சொல்ல, “எம்பெருமான் ஸங்கல்பித்த உத்ஸவத்திற்கு விக்நமுண்டாகாது” என்றார்கள் சில பெண்பிள்ளைகள். எங்ஙனேயென்னில், தன் ஸங்கல்பத்தை அழியமாறி ஶ்ரீபீஷ்மன் அர்ஜுநன் ஸங்கல்பத்தை முடிய நடத்துகையாலே, நாம் இம்மஹோத்ஸவத்திலே அதிகரித்துச் செல்லாநிற்கவே அதுக்கு விக்நம் பண்ணக்கடவ உத்தர பூர்வாகங்கள் தன்னடையே நசித்துப்போம் என்கிறார்கள்.
வ்யாக்யானம் – (மாயனை) தானே தன்னையமைத்துத் தரித்தல்லது தன்னை நினைக்கவும் பேசவுமொண்ணாதபடி கரைக்கட்டாக் காவேரிபோலே யிருக்கும் பேரளவுடைய ஶ்ரீவைகுண்டநாதனென்றபடி. இங்கு ஒருகாலொருத்திக்கு உடம்புகொடுக்குமாபோலே எல்லார்க்குமொக்க அங்கு தன்னைக் கொடுத்துக்கொண்டிருக்குமவன். “ஸதா பஶ்யந்தி” (மாயன்) அவ்விருப்புக்கு “எத்திறம்” (திருவாய் – 1.3.1) “வைகுந்தனென்பதோர் தோணி பெறாதுழல்கின்றேன்” (நாச்சி திரு – 5.4) என்னுமவளிறே. இடைச்சேரியோபாதி அவ்விடமும் கைவந்தபடி. நவநீத சௌர்ய நகரக்ஷோபாதிகளை நினைத்து “எத்திறம்” என்றதாகவுமாம். இவ்விடத்தில் திருநாட்டுப் படியை விஸ்தரிப்பது. அவ்விடத்திலே எம்பெருமாநபிமானத்திலே ஒதுங்கி தந்தாமுக்கு என்ற அபிமானமின்றிக்கே இருக்கும். இங்கு தனித்தனியே “ஈஶ்வரோஹம்” என்றிருப்பர்கள். இங்குள்ளார் அங்கே செல்லிலும் “அடியேன்” என்று தெளியப்பண்ணும். “தெளிவிசும்பு” (திருவாய் – 9.7.5) அவ்விடம். அங்குள்ளாரே வரிலும் “என்னது” என்று அறிவு கலங்கப்பண்ணும் “இருள்தரு மாஞாலம்” (திருவாய் – 10.6.1) இவ்விடம்.
(மன்னு வடமதுரை) பகவத் ஸம்பந்தம் மாறாத தேஶம். (மன்னு) ஶ்ரீவைகுண்டத்தில் நின்றும் ஆர்த்த ரக்ஷணார்த்தமாக இங்கே பிறக்கையாலே உளனானான். (ஸம்ஸாரிகளுக்கு ப்ராணன் வரும்) (அடைப்பிலுள்ளது ஐயத்திற்குறியது) ஆர்த்தர்க்கும் ஆஶ்ரிதற்கும் பிறந்தவாறே வயிறெரிந்து மறக்கப் பண்ணாதிருக்கும். (வடமதுரை) (மதுரா நாம) ஶ்ரீவைகுண்டம் போல குன்றாங்குறிச்சி யல்ல. (நகரீ) விட்டுப்போந்தவிடமோ, பிறந்து விரும்பின விடமோ நகரியாவது? (புண்யா) அவனைத்தருகைக்கு உபாயமாகை. (பாபஹரா) விரோதி நிரஸநத்துக்கும் தானே. (ஶுபா) அவையிரண்டும் இல்லையாகிலும் விடவொண் ணாது. பரமபதமும் ஸம்ஸாரமும் வேண்டோ மென்றபடி. ப்ராப்யமும் தானே. (யஸ்யாம் ஜாத:) இத்தனைக்கும் அடி. (ஜகந்நாதஸ் ஸாக்ஷாத் விஷ்ணுஸ் ஸநாதந:) தன் ப்ரஜைகள் பட்ட ஆபத்தை நீக்குகைக்கு அவர்களிட்ட வழக்காய், “வைகுந்தா” (திருவாய் – 2.6.1) என்றும் “அகர்மவஶ்யன்” என்றும் சொல்லுகிறபடியே பிறக்கை. (ஸாக்ஷாத்) “அங்கு வைத்திங்கு பிறந்த” (திருவாய் – 3.5.5) “பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம்” – அத்திக்கில் ஆதித்ய னுக்குள்ள ஸம்பந்தம். ஸ்நேஹத்தில் புரையில்லை இத்தனை. (மைந்தனை) பிறந்தபோதே கம்ஸனை முடிக்கவல்ல மிடுக்கென்றுமாம். தாய் தமப்பன் காலில் விலங்கு கழலும்படி இருக்கை என்றுமாம். பிள்ளை யென்றுமாம்; ராஜாவென்றுமாம்.
(தூயப்பெருநீர் யமுனை) கலங்காப் பெருநகரம் விட்டுப் போந்தவனுக்குத் திருவாய்ப்பாடி என்றொரு அஞ்சினான் புகலிடம் உண்டானாப்போலே, விரஜையை மறப்பிக்க ஒரு ஆறு உண்டானபடி. “ப்ரஸாதம் நிம்நகா யாதா” – கோதாவரியைப்போலே பிராட்டியைக் கும்பிடு கொண்டு ஶரணாகத காதுகையாயிராதே கம்ஸனுக்கு அஞ்சி எழுந்தருளின போதைக்கு வற்றியும், நீர் விளையாட்டு ஆடுகைக்கு பெருகியும், “வஸுதேவோ வஹந் க்ருஷ்ணம் ஜாநுமாத்ரோதகோ யயௌ” – அடியறிந்தார்க் கூடப் போந்து கருத்தறிந்து பரிமாறினாற்போலே அடிக்கு பாங்காயி ருந்தபடி. (தூய) “வல்லவீ வதநோச்சிஷ்ட பவித்ராதர வித்ரும:” – க்ருஷ்ணனும் பெண்களும் மாறிமாறிக் கொப்பளித்த தூய்மை என்றுமாம். (பெருநார்) ஶ்லாக்யதை என்றுமாம். “யமுநாம் சாதி கம்பீராம்” . (யமுனைத் துறைவனை) யமுனையாற்றை உடையவனை. க்ருஷ்ணனுக்கும் பெண்களுக்கும் களவுக்குப் பெருநிலை நிற்கும் ஆறு. “சங்கணித் துறைவன்” (திருவாய் – 10.3.11) என்னுமாபோலே பெண்கள் படும் துறையை உடையவன்.
(ஆயர் குலத்தினில் தோன்றும்) ஶ்ரீவைகுண்டத்தில் குணங்கள் மடிந்து கிடக்கும். இங்கே, “ஒளிவருமுழுநல” (திருவாய் – 1.3.2) மாய்த்து. அந்தகாரத்தில் விளக்குபோலே ஶ்ரீமதுரையில் பிறப்பு. பிறவாத ஶ்ரீவைகுண்டத்தோ டொக்கும் திருவாய்ப்பாடியில் பிறப்பைப்பார்க்க என்கை. ஏக்கத்திலே முலைப்பாலின்றிக்கே யொழிந்தது. நாக்கு ஒட்டி அழமாட்டிற்றிலன். சிலுகு படாமைக்கு அதுவும் கார்யகரமாய்த்து. முலைப்பால் பெற்று அழுதது இவ்விடத்திலேயிறே.
(தோன்றும்) “தேவகீ பூர்வஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா” அஜத்வ, அவ்யயத்வ, ஈஶ்வரங்களுக்கு அழிவு வாராமே பிறக்கையாலே, கீழ் திக்குக்கு ஆதித்யனோடுள்ள ஸம்பந்தம் இவனோடுமிவளுக்குள்ளது. (அணி விளக்கு) புகையும் எண்ணையுமில்லை. (மணி விளக்கு) அதுக்குமேலே மங்களதீபம். (தாயைக் குடல் விளக்கம் செய்த) பெற்ற வயிற்றுக்குப் பட்டம் கட்டுகை. “கௌஸல்யா ஶுஶுபே தேன புத்ரேண அமிததேஜஸா” “என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப்பெற்ற வயிறுடையாள்” (பெரியாழ் திரு – 2.2.6) (தாமோதரனை) தன் வயிற்றில் தழும்பு கண்டார் “இப்படி பவ்யனாவதே!” என்று கொண்டாடப்படுகை. (பட்டம் கட்டுகையாவது) (ப்ரக்ஷிப்தம்) நம்முடைய பந்தம் நம்மால் அறுக்கவொண்ணாதாப்போலே அவனுடைய பந்தமும் அவனால் அறுக்கவொண்ணாது. “பக்தி க்ரீதோ ஜநார்த்தந:” – க்ஷாமத்திலே ஒரு படி தவிட்டுக்கு எழுதிக்கொடுத்தார், நல்லகாலப்பட்டால் ஸார்வபௌமநாங்காட்டில் மீட்கப்போமோ? “தானெழுத்து வாங்கின தழும்பு காட்டி நம்மை எழுத்துவாங்குவித்துக் கொள்ளும் ஶேஷியினுடைய திருவிலச்சினை” என்று பட்டர்.
(தூயோமாய்) அவன் இடையனாகக் கொண்டு தாங்கள் இடைச்சிகளாக ஶுத்தி. க்ஷத்ரியன் இடையனானாப்போலே தாங்களும். வாயிலும் முகத்திலும் நீராடாதே வருகை. பாபத்திலே வந்தவாறே “ஸாதுரேவ” என்றான். புண்யத்தில் வந்தவாறே “பரித்யஜ்ய” என்றான். ஸம்ஸாரிக்குக் குற்றமாவது தனக்கு நன்மையுண்டென்றிருக்கை. “மத்வ்ருத்தம் அசிந்தயித்வா” ஶ்ரீவிபீஷணாழ்வான் கடலிலே மூழ்கியோ வந்தது? த்ரௌபதி தூய்மையாய் குளித்தோ ப்ரபத்தி பண்ணிற்று? அர்ஜுநன் பறையர் நடுவேயன்றோ சரமஶ்லோகம் கேட்டது. இருந்தபடியே வருகைக்கு மேற்பட ஶுத்தியும் தேடவேண்டா, அஶுத்தியும் தேடவேண்டா. (தூயோமாய் வந்தோம்) கையில் மயில்கற்றையில்லை என்றுமாம். அதாவது – “மம சாப்யந்தராத்மாயம் ஶுத்தம்வேத்தி விபீஷணம்” இவனோடு ஸம்பந்தமுடை யார்க்கும் அகப்பட ப்ரயோஜநாந்தர பரதையில்லை என்னும்படி அநந்யப்ரயோஜநதை தோற்ற வந்தான் என்றாற்போலே. அநந்யப்ரயோஜநைகளென்றுமாம். சக்ரவர்த்தி பற்றச்சொன்ன தர்மத்தை த்யஜித்து, விடச்சொன்ன தர்மத்தை அநுஷ்டித்து பற்றச்சொன்ன பலத்தையிழந்து, விடச்சொன்ன பலத்தையே பற்றிப் போந்தான். ருஷிகள் அவனையே உபாயமாகக்கொண்டு பலத்திலே வ்யபிசரித்துப் போந்தார்கள். புல்லுக்கும் எறும்புக்கும் விலக்குகைக்கு பரிகரம் இல்லாமையாலே உபாயோபேயங்களிரண்டும் எம்பெருமானேயாய்விட்டது. ஆநுகூல்யம் பேரிட்டு விலக்குவாரும் ப்ராதிகூல்யத்திலே விலக்குவாருமாய் எல்லாருமிழந்துபோனார்கள். இவள் இளையபெருமாளைப்போலே இரண்டுமவனேயாகப் பற்றிச் செல்லுவோம் என்கிறாள். ஆசும் மாசுமற்றபடி..
(வந்து) அவன் திருவுள்ளத்தைப் புண்படுத்தக் கடவோம். “உபஸ்தேயைருபஸ்தித:” “பத்ப்யாம் அபிகமாச்சைவ” “ஹ்ரீஷோ ஹி மமாதுலா” அவன் செய்யுமத்தை நாம் செய்தோமென்கை. “வந்துனதடியேன் மனம் புகுந்தாய்” (பெரியதிருமொ – 3.5.1) (நாம்) உபாயத்தில் துணிவு முற்படவொண்ணாது; உபேயத்தில் த்வரை முறைபார்த்தி ருக்க வொண்ணாது. அப்படியேயிருக்கிற நாம். (தூமலர்) அயத்நஸித்தமாகக் கைக்கெட்டின பூவெல்லாம்; ஒரு ப்ரயோஜநத்தைக் கணிசியாத மலரென்றுமாம். “மிக்க சீர் தொண்டர் இட்ட பூந்துளவம்” (பெரிய திருமொ – 11.1.9) என்னுமாபோலே அநந்யப்ரயோஜனமான மலர்கள். (தூவி) “யதா ததாவாபி” என்கிறபடியே க்ரமவிவக்ஷையில்லாமை. ப்ரணயிகளுக்கு சடங்கு உண்டோ? (தொழுது) தொழுவார் கண்டால் முறைகெட்டார்கள் என்று தோற்றாமைக்காக தேவதைகளைத் தொழுமாபோலே, ஓரஞ்சலி பண்ணாதே தொழுவித்துக் கொள்ளுமவர்களிறே இப்போது தொழுகிறார்கள். “இது மிகையாதலில்” (திருவாய் – 9.3.9) அவனை “ருணம் ப்ரவ்ருத்தமிவ” என்னப்பண்ணுகை.
(வாயினால் பாடி) வாய்ப்படைத்த ப்ரயோஜனம் பெற்றோமென்று ப்ரீதிபூர்வகமான குணகீர்த்தனம் பண்ணி. (வாயினால் பாடி) மநஸ்ஸஹகாரமில்லாமை. “உவாச ச” “போற்றுதும்” (?) என்னும்படியே அத்தலையை அழிக்கக் கடவோம் என்றுமாம். (மனத்தினால் சிந்திக்க) மநஸ்ஸிலே பகவத்குணங்களை விளைநீரடைத்துக்கொள்ள. (மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்) பாலும் கண்ட சர்க்கரையும் பருக பிச்சுத் தெளியுமாபோலே, நமக்கினிதாக பகவதநுபவம் பண்ணாநிற்கப் பெருநெருப்புப்பட்ட பஞ்சுபோலே பிணமுகம் காணவொண்ணாதபடி நசித்துப்போம். “இஷீகதூலமக்நௌ ப்ரோதம் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே” என்கிறபடியே. பூர்வாகமாவது – அநாதிகாலம் புத்திபூர்வமாக பண்ணிப் போந்த பாபம். உத்தராகமாவது – ஜ்ஞாநம் பிறந்தால் ப்ரக்ருதி வாஸநையாலே ப்ராமாதிகமாகப் பண்ணும் பாபம். பாபங்களாவன – ஸர்ப்பங்களைப்போலே செய்தபோதே மிடற்றைப் பிடிக்குமதல்ல. க்ரியை இங்கே நசிக்கும். கர்த்தா அஜ்ஞனாகையாலே மறக்கும். ஸர்வஜ்ஞன் உணர்ந்து புஜிப்பிக்கும். பூர்வாகத்தை நஶிப்பிக்கும். உத்தராகத்துக்கு “அவிஜ்ஞாதா” வாம். இனி ஆரை அண்டைகொண்டு அவை ஜீவிப்பது? ஸர்வேஶ்வரன் “பொறுத்தோம்” என்னத் தீருமத்தனையிறே. (செப்பு) )மாயனை வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத்துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை – செப்பு) என்று அந்வயம்.
@@@@@.
ஆறாம்பாட்டு
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – ஆறாம் பாட்டு. ஒரு விடாயாற்றுக்கு வேண்டும் பெண்கள் திரண்டு சிலர் இழக்கச் சிலர் புசிக்கமாட்டாமையாலும், எம்பெருமானிலும் இவர்கள் உத்தேஶ்யராயிருக்கையாலும், இவ்விஷயம் தனி அநுபவிக்கவொண்ணாதே திரளாக அநுபவிக்கவேண்டும் விஷயமாகையாலும், மேல் பத்து பாட்டாலும் ஒருவரையொருவர் எழுப்புகிறார்கள். இவ்வநுபவம் ஆண்டாள் இங்கேயிருந்து அநுபவித்தல், பரமபதத்தி லுள்ளார் அங்கேயிருந்து அநுபவித்தல் செய்யுமத்தனை. ஸம்ஸாரிகளுக்கு நிலமல்ல. ஸம்ஸாரிகள் உறங்குகைக்கு ஹேதுவும் வேறே. உணர்ந்தால் அநுபவிக்கைக்கு விஷயமும் வேறே. தமஸ்ஸு அபிபவிக்க உறங்கி காலமுணர்த்த உணர்ந்து, விஷயப்ரவணராவர்கள். எம்பெருமானுடைய உறக்கமும் உணர்ச்சியும் வேறுபட்டிருக்கும். எங்ஙனேயென்னில் – ஆஶ்ரித ஸம்ரக்ஷணோபாய சிந்தை பண்ணுகை உறக்கம். உணருகையாவது அவர்களுடைய ஆர்த்தநாதம் பொறுக்கமாட்டாமை. உணர்ந்தால் அவர்கள் விரோதியைப் போக்கி, அவர்களோடே கலக்கை போகமாயிருக்கும். இவர்களுக்கு உறங்கப் பண்ணுவதும், உணரப்பண்ணுவதும், உணர்ந்தால் மறக்கப் பண்ணுவதும், போய் அதுபவிக்கப் பண்ணுவதும் க்ருஷ்ணகுணங்களே. “சிந்நம் பிந்நம்” இத்யாதிப்படியே ஜ்ரும்பணாஸ்த்ரம் மோஹநாஸ்த்ரம்; சில மோஹிக்கப்பண்ண, சில துடிக்கப்பண்ணுமாபோலே.
மநோரதம் முடிந்து ஓலக்கம் கிளம்பினபோதே தொடங்கி ஒருவரையொருவர் எழுப்பத் தொடங்கினார்கள். ஶ்ரீப்ரஹ்லாதாழ்வானும் ஆஸுரப்ரக்ருதிகளாபத்து கண்டு பொறுக்கமாட்டாமே திருத்தப் பார்த்தான். இவர்கள் ராவணனாபத்து கண்டு பொறுக்கமாட்டாமே திருத்தப் பார்க்குமவர்கள். தந்தாமாபத்து பொறுக்கவல்லவர்களோ?
“செய்யாதன செய்யோம்” என்று இவர்களுடைய ப்ரதிஜ்ஞைதான் ததீயர் முன்னிலையாக எம்பெருமான் பாடே செல்லுகையும், கூட அநுபவிக்கையும். இது ஸ்வரூபமாகையாலும் அவஶ்யம் ஒருவரையொருவர் எழுப்பவேணும். பரதஶைக்ககப்பட அநுபவிக்கக் குழாங்கள் வேண்டாநின்றது. திருவாய்ப்பாடி வ்ருத்தாந்தத்தில் தனி இழியப்போமோ? “வர்ஷாயுதைரித்யாதி” “சதுர்முகாயுரித் யாதி”. “இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணையூண் என்னுமீனச்சொல்லே” (திருவிரு – 98) என்கிறபடியே நித்யஸூரிகளும் “எத்திறம்” (திருவாய் – 1.3.1) என்னுமத்தனை. “மயர்வற மதிநலம்” (திருவாய் – 1.1.1) பெற்றாரும் “எத்திறம்” என்னுமத்தனைதான். தன்னை யநுஸந்தித்தாலும் “ஜந்ம கர்ம ச மே திவ்யம்” என்று ”எத்திறம்” என்னுமத்தனை.
“நாராயணனே நமக்கே பறை தருவான்” (திருப்பாவை – 1) என்று முதலிலே திருமந்த்ரத்தை எடுத்தாள். திருமந்த்ரத்தினுடைய மூன்று பதத்தாலும் மூன்றர்த்தம் சொல்லுகிறது. முதற்பதம் ஆத்மாவினுடைய ஸ்வாபாவிக ஶேஷத்வத்தைச் சொல்லுகிறது. இரண்டாம் பதம் அதுக்கு எதிர்தட்டான அந்ய ஶேஷத்வமும் ஸ்வாதந்த்ர்யமும் அஸஹ்யமாம்படி சொல்லுகிறது. மூன்றாம் பதம் அந்த ஶேஷத்வத்தினுடைய ஸீமையாவது ததீயஶேஷத்வ பர்யந்தமாயிருக்கை என்கிறது. முதற்பதத்திற்சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்தபூதர் இளையபெருமாள். மத்யமபதத்திற்சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்தபூதர் ஶ்ரீபரதாழ்வான்; மூன்றாம் பதத்திற்சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்தபூதர் ஶ்ரீஶத்ருக்நாழ்வான். அவன்படி இவர்களது. “உற்றதுமுன்னடியார்க் கடிமை நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் கண்ணபுரத்துறையம்மானே” (பெரியதிருமொ – 8.10.3) “அவனடியார் நனிமாக்கலவியின்பமே நாளும் வாய்க்க” (திருவாய் – 8.10.7) என்னுமவர்களுடைய பெண்பிள்ளையிறே. ஆகையால் ஒருவரையொழிய ஒருவர்க்குச் செல்லாமை. உணர்ந்தவர்களடையச் சென்று உணராதார் வாசல்களைப்பற்றி எழுப்புகிறார்கள்.
வ்யாக்யானம் – (புள்ளும் சிலம்பின காண்) பகவத் விஷயத்தில் புதியவளாயிருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள். “போது விடிந்தபின்பும் எழுந்திராதொழிவதே?” என்று ஶிஷ்டகர்ஹை பண்ணுகிறார்கள். “விடிந்தமைக்கு ப்ரமாணமென்?” என்ன ”நாங்கள் உணர்ந்து வந்தது போராதோ?” என்ன, ”உறங்கினாரன்றோ உணருவார்; அது வார்த்தையோ” என்ன, “நாங்களேயல்லோம், நோன்பும் உணர்ச்சியுமறியாதே காலமுணர்த்த பூவலருமாபோலேயும், நாழிகை வட்டில் நீர் நிரம்பினால் விழுமாபோலேயும் இரையறுதியில் புள்ளும் சிலம்பிற்றின” என்கிறார்கள். “மின்னாலே இடித்தாற்போலே உனக்கு முன்னே உணர்ந்தன கிடாய்” என்றுமாம். “இது திருவாய்ப்பாடியன்றோ?” “ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல்” (திருவாய் – 6.7.2) “மரங்களுமிரங்கும் வகை” (திருவாய் – 6.5.9) “பக்ஷிணோபி ப்ரயாசந்தே ஸர்வபூதாநு கம்பிநம்” “மமத்வஶ்வா நிவ்ருத்தஸ்ய” “விஷயே தே மஹாராஜ” “ராமோ ராமோ ராமேதி” “காலை எழுந்திருந்து கரிய குருவிக்கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ” (நாச்சி திரு – 9.8) “ஆண்டாள் பிறந்த ஊரில் பக்ஷிகளுக்குத்தான் உறக்கமுண்டோ” என்று ஆச்சான்பிள்ளை.
மற்றையடையாளம் சொல்லுங்கோள் எனன, (புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ”) திருப்பள்ளி யெழுச்சியில் ஶங்கத்வநி கேட்டிலையோ? “திருவாய்ப்பாடியிலும் ஒரு திருமுற்றமுண்டோ?” என்ன, உண்டு. “பாலா அபி க்ரீடமாநா:” இத்யாதி. “ஒரு தோளே! தோள்வளையே! ஒரு வளையமே! முறுவலே! ஒரு நோக்கமே!” என்று சக்ரவர்த்தித் திருமகன் பக்கலிலே பிள்ளைகளுமகப்பட ஈடுபட்டுச் செல்லாநிற்க, “ஸஹ பத்ந்யா விஶாலாக்ஷ்யா நாராயணமுபாகமத்” என்று அவன்தான் பெரியபெருமாளை ஆஶ்ரயிக்குமாபோலே, க்ருஷ்ணனை யும் கும்பிடு கொள்வானொரு எம்பெருமானுண்டு. (புள்ளரையன்) அவனுக்கு நிரூபகதர்மம். “ராமாநுஜம் லக்ஷ்மண பூர்வஜம் ச” “அகஸ்த்யஸ்ய ப்ராதரம்” “நாராயணன்” என்னுமாபோலே. வழியே இழியுமவர்க ளாகையாலே பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள். ”அப்புள்ளின் போன தனி நெஞ்சமே” (திருவிருத்தம் – 3) என்னக்கடவதிறே.
(வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ) “சங்கு வெளுக்குங்காட்டில் போது விடியுமோ? அழைக்குங்காட்டில் நாமாகவேணுமோ? சங்கு முழங்குங்காட்டில் நமக்குப் புறப்படவேணுமோ? உங்குளுக்கெப்போதும் பாவனை அதுவேயிறே” “வெள்ளை விளிசங்கிடங்கையில் கொண்ட விமலன்” (நாச்சி திரு – 5.2) “பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்” (நாச்சி திரு – 9.9) (பேரரவம்) நீயுமுணருகைக்குப் போரும் சங்கின் த்வநி. “மஹாராஜர் வாசலிலே சென்று இளையபெருமாள் சிறுநாணேற் றியெறிந்தார்” என்ன, அநந்தாழ்வான் “தாரையினுடைய ஸ்தநோஷ்மாவைப்பற்றிக் கிடந்த மஹாராஜர் ஆந்த்யமும் தீருகைக்குப் போரும் த்வநி” என்றான்.
(கேட்டிலையோ) “இதுவும் கேளாதபடியே அங்குத்தையில் அந்யபரதை” என்று பழியிடுகிறார்கள். இவள் துணுக்கென்று எழுந்திருக்கைக்காக. “போது விடிந்து சங்கூதுகிறார்களல்லர். பணிக்குக் கடவர்களை அழைக்கிறார்கள்” என்ன, “தூஷணங்கள் தேடிச்சொல்லிப் போது விடிய பார்த்திருப்பதே” என்று இவர்கள் சொல்ல, “அந்தியம்போதே உணரவேணுமோ? அவர்கள் போதறியாதே சங்கூதினார்களத்தனை” என்ன, (பிள்ளாய் எழுந்திராய்) “இந்நோன்புக்குப் புதியையாயிறே நீ உறங்குகிறது. உனக்கு இன்னும் இளமையிறே. அந்தியம்போதுதான் இக்கோஷ்டி உத்தேஶ்யமன்றோ? பகவத் ஸம்ஶ்லேஷத்துக்கும் பாகவத ஸம்ஶ்லேஷத்துக்கும் வாசியறியாயீ” என்ன, “நீங்களன்றோ பிள்ளைகள், அவன்பாடு கார்யங்கொள்ளவன்றோ புகுகிறது; விடியவேணும் நீங்களுத்தேஶ்யைகளாகில் உங்கள் பேச்சே அமையும்” என்ன, அவளுக்கு இவர்கள் பேச்சே அமையாநின்றது. இவர்களுக்கு அவன் வடிவுகாண வேண்டா நின்றது. “இன்பமே நாளும் வாய்க்க” (திருவாய் – 8.10.7) “ஒருகாலும் பிரிகிலேனே” (பெரிய திருமொ – 7.4.4) என்கிற இது ஆண்டாளுக்கு முதலிலே பிறந்து ப்ரக்ருதியாயிருக்கிறது. “இது காண்கைக்கு மேலே அவனோடே அநுபவிக்கவேண்டாவோ?” என்ன, மாறி மாறி இரண்டும் உத்தேஶ்யமாகக்கடவது. (பிள்ளாய்) எல்லாரும் “குரவ: கிம் கரிஷ்யந்தி” என்று போகாநிற்க, சிந்தயந்தி குரு தர்ஶநம் பண்ண, “ப்ரணயித்வத்தில் புதியள்” என்றார்போலே இங்குமிவளை “பிள்ளை” என்கிறது.
“நானோ புதியை? நீங்களன்றோ; காலமறியாதே எழுப்பினிகோள்; உங்களை உணர்த்தினார் ஆர்?” என்ன, தங்களை உணர்த்தினவர்களைச் சொல்லுகிறார்கள். (பேய்முலை இத்யாதி) “போது விடிந்தது. பெண்ணே எழுந்திரு” என்ன, இவள் துணுக்கென்று புறப்படுகைக்காக, “புகுந்த அபாயம் கேட்டிலையோ? பெரியாழ்வாரோடு குடல்துடக்குடையார்க்கு உறங்க விரகுண்டோ?” என்கிறார்கள். பெற்றதாயுமுதவாத தனிமையிலே பாதிக்கவந்த பூதனையை முடித்துக் காவலாக வைத்த ஶகடம் அஸுராவேஶத்தாலே தன்மேலே ஊரப்புக, அது கட்டழிந்து சிதறும்படியாகத் திருவடிகளாலே உதைத்து, கண்வளர்ந்தருளுகைக்கீடாம்படி பரப்பை யுடைத்தானத் திருப்பாற்கடலிலே அக்கடல்போலேயாய் ஸர்ப்பஜாதிக்கு அஸாதாரணமான ஶைத்ய, ஸௌகந்த்ய, ஸௌகுமார்ய ப்ரசுரமான திருவநந்தாழ்வான் மேலே ஜகத்ரக்ஷண சிந்தாத்மகமான யோகநித்ரையிலே மிகவும் அவகாஹித்து, ராமக்ருஷ்ணாத்யவதார கந்தமாய், அநிருத்தரூபியாய்க் கண்வளர்ந்தருளுகிற எம்பெருமானை ஸபரிகரமாக அடக்கவற்றான ஹ்ருதயங்களிலே கொண்டு, பகவத் குணங்கள் ஸ்ம்ருதமானால் ப்ரவ்ருத்தி க்ஷமரன்றிக்கே ஶிதிலாந்த;கரணரான முனிவர்களும், அவனோடு சேர்ந்துகொண்டல்லது நிற்கமாட்டாதே க்ஷணமாத்ர விஶ்லேஷத்திலே மாந்துமவரான யோகிகளும், தங்கள் திருவுள்ளத்திலே கண்வளர்ந்தருளுகிற எம்பெருமானைத் திருப்பள்ளி யுணர்த்துகைக்காக அவனலசாதபடி ஸ்தநந்தய ப்ரஜையை மார்பிலே ஏறிட்டுக்கொண்டு உறங்கும் மாதா அந்த ப்ரஜை உணராமல் க்ரமத்தாலே எழுந்திருக்குமாபோலேயும், ஶ்ரீப்ரஹ்லாதாழ்வானைப் பெரிய கற்களோடேகட்டி மலையில் நின்றும் கீழே தள்ளுகிறபோது, அவன் தன்னுடைய நோவு பாராதே “எம்பெருமானுக்கு என் புகுகிறதோ” என்னும் பயத்தாலே தன் கைகளாலே மார்வை புதைத்துக்கொண்டு “பார்த்தருளீர்” என்றாப்போலேயும் அவஹிதராய்க்கொண்டு எழுந்திருந்து “ஹரி: ஹரி:” என்று எம்பெருமானும் உணர்ந்து கேட்டாரும் வாழும்படிபண்ணின திருநாம ஸங்கீர்த்தனம், உறங்குவாருடைய படுக்கையில் வெள்ளம் கோத்தாற்போலே க்ருஷ்ண விஶ்லேஷத்தாலே கமர்பிளந்த எங்கள் ஹ்ருதயங்களும் நனைந்து தேறிக் குளிரும்படி வெள்ளமிட்டது. அதுகாண் எங்களை எழுப்பிற்று” என்கிறார்கள்.
(பேய்முலை நஞ்சுண்டு இத்யாதி) அவர்கள் பயப்படுகைக்குச் சொன்னார்கள். “விரோதி போகப்பெற்றதே” என்று இவள் பயம் கெடுகைக்கு உடலாயிற்று. (கள்ளச் சகடம்) நம்மை முடிக்க வந்ததென்கை. பேயை ஆராய்ந்து கொள்ளலாம்; தாய் ரக்ஷகமாக வைத்த ஶகடங்கிடீர் என்றஞ்சுகை. (கலக்கழியக் காலோச்சி) அவனகப்பட்டு கொண்டு நின்றான். முலை தாழ்த்ததென்று மூரி நிமிர்ந்த திருவடிகள் அத்தை முடித்ததென்கை. அவனாபத்துக்கும் நம் ஆபத்துக்கும் ரக்ஷை அவன் திருவடிகள். ஆகையாலேயன்றோ நம் இஷ்ட ப்ராப்திக்கும் அநிஷ்டநிவாரணத்துக்கும் அவற்றையே பற்றுகிறது. (வெள்ளத்தரவில் துயிலமர்ந்த) “கீழே பிறந்த ஆபத்துக்குத் தப்பிப்போய் திருவநந்தாழ்வான்மேலே சாயப்பெறுவதே” என்கிறார்கள். (வெள்ளம்) திருமேனியில் ஸௌகுமார் யத்துக்குச் சேர குளிர்த்தி யுண்டானபடி. (அரவு) “ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைகதாமநி” ஜ்ஞாநம் – இருவரையுமறிகை. விஜ்ஞாநம் – எல்லா கைங்கர்யமும் பண்ணுகை. எல்லாவடிமையாகிறது – “சென்றால் குடையாம்” (முதல் திருவந் – 53) இத்யாதி. ப்ரக்ருஷ்டம் – தன்னை மறக்கை. பலம் – பெரிய பிராட்டியாரும் தானும் துகைக்கைக்குப் பாங்கான ஶக்தி. திருமேனி உறுத்தாமைக்குப் படுத்தப் பரிமளப் படுக்கை. பாம்புக்கு நாற்றம் குளிர்த்தி மென்மைகள் ஸ்வபாவம். இனி, திருவிடையாட்டத்தில் பாம்புக்கு வாசிவைத்துக் கொள்ளுமித்தனை. இவன் மூச்சுப்பட்டு மதுகைடபர்கள் பொடிபட்டுப்போகையாலே இப்படுக்கையுடையவனுக்கு பயப்படவேண்டாவென்கை. (அமர்ந்த) பிராட்டிமார் திருமுலைத் தடத்தாலே நெருக்கினாலும் உணராமை. (வித்தனை) வித்தை விரைக்கைக்கு நீரிலே சேர்த்தாபோலே இருக்கை. காரணமிருக்கக் கார்யமுண்டாகச் சொல்லவேணுமோ? என்கை. இதுக்கு முன்பு பிறந்த பிறவிகள் போராமை இனி பிறக்கைக்கு அடியிட்டிருக்கிறபடி.
(உள்ளத்துக்கொண்டு) மதுகைடபர்களில்லாத இடம். பகடலில் விடாய்த்தீர “மனக்கடலிலே கொண்டு” (திருவாய் – 10.9.9) (முனிவர்களும் யோகிகளும்) “வைகுந்தத்தமரரும் முனிவரும்” (பெரியாழ்வார் திரு – 5.4.9) போலே குணநிஷ்டரும் கைங்கர்யபரரும். இளையபெருமாளும் ஶ்ரீபரதாழ்வானும் போலேயிருப்பார். உறங்குகிறவர்களையும் உணர்த்துகிறவர்களையும் போலேயிருப்பர். “திருவாய்ப்பாடி யிலே முனிவர்களும் யோகிகளுமுண்டோ” என்னில் – அவன் இங்கே வந்தவதரிக்க, பின்பு இடையர் பசுநிரைக் கொட்டில்களிலே படுகாடு கிடப்பர்கள். (மெள்ளவெழுந்து) கர்ப்பிணிகளைப்போலே. “ஹ்ருதயேநோத்வஹந்” (அரி என்ற பேரரவம்) “ஹரி ஹரி” என்கையாவது – “ரக்ஷது த்வாமஶேஷாணாம்” என்னும்படியே “உன்னை நீயே காத்துத் தரவேணு” மென்று திருப்பல்லாண்டு பாடுகை. பேரரவமாவது – ஒருவர் “ஹரி” என்னபஞ்சலக்ஷம் குடியிலும் ஒருத்வநியாயெழுகை. முந்துற “அத ஸோபயங்கதோ பவதி” என்று இத்தலையில் பயம் கெட்டால் பின்னை அத்தலைக்குப் பயப்பட்டுத் திருப்பல்லாண்டு பாடுமத்தனையிறே. பண்டு இழவுபேறுகள் தன்னளவிலே; இப்போது பேறிழவுகள் அவனளவிலே. ருஷிகளும் முந்துற “நாகபர்யங்கமுத்ஸ்ருஜ்ய” என்று தொடங்கி “கதஸ்த்வம் ஸ்தாநமுத்தமம்” என்று பயம் கெடுவர்கள். ஶ்ரீபரத்வாஜபகவான் பெருமாள் எழுந்தருளுந்தனையும் “வவந்தே நியதம் முனிம்” என்று வயிறெரிந்தபடியே இருந்தான். (உள்ளம் புகுந்து குளிர்ந்து) படுக்கைக்கீழே வெள்ளம் புகுந்தாற்போலே திருநாமம் செவிவழியே புக்கு உடம்பு வவ்வலிட உணர்ந்தோம்.
@@@@@
ஏழாம்பாட்டு
கீசு கீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – ஏழாம்பாட்டு. சிலரைச் சிலர் எழுப்பினால் அவர்களைக்கொண்டு நோன்புக்குப் போமவர்களல்லரே இவர்கள். பிறருடைய நன்மையே தங்களுக்கு ப்ரயோஜன மென்றிருக்குமவர்களிறே; நாம் வைஷ்ணவர்கள் தந்தாமே சில நன்மைகள் ஸம்பாதித்துக்கொண்டாலும் பொறுக்கமாட்டோமே. பகவத் ஸம்பந்தம் மெய்யாகில் தன் வயிற்றில் பிறந்த ப்ரஜையினுடைய ஸம்ருத்தி, தன்னதென்றிருக்குமாபோலே இருக்கவேணுமிறே. நாம் இவ்வர்த்தம் சொல்லுகை பறையர் ஓத்துசொல்லு மாபோலேயிறே. ஆசாரத்திலும் சிறிதுண்டாகாவிடில், ஜ்ஞாநமில்லை என்னுமத்தனை. ஆட்கொண்ட வில்லி ஜீயர் அருளிச்செய்த வார்த்தைக்கு நஞ்சீயர் அருளிச்செய்த வார்த்தையை நினைப்பது. ஶ்ரீதேவிமங்கலத்தில் கமுகிலே நஞ்சீயர் ஶ்ரீபாதத்தையுடையார் சிலர் இப்போரையடைய அமுது செய்விக்கக்கண்டு பட்டர் பிடாத்தையிட்டுக் கொண்டிருந்து ப்ரீதராய் “நம்முடைய கையிலே சில மெய்யுண்டாயன்று; அடியிலே சில மெய்யருண்டாய் அவர்களுடைய மெய் இவ்வளவும் வரப்பேசுகிறது” என்று அருளிச்செய்தார். “அடியார்கள் குழாங்களைக் – கூடுவது” (திருவாய் – 2.3.10) என்றார் “யதாக்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத: ப்ரேத்ய பவதி” என்கிற தத்க்ரது ந்யாயத்தாலே “அந்தமில் பேரின்பத்தடியரோ டிருந்தமை” (திருவாய் – 10.9.11) என்றார். இங்கே இக்குழாம் இனிதானாலிறே அக்குழாம் ஸித்திப்பது. கலியர் சோறுடையார் வாசலிலே சென்று கூப்பிடுமாபோலே சென்றெழுப்புகிறார்கள்.
கீழ், பகவத் விஷயத்தில் புதியாளொருத்தியை எழுப்பிற்று; இப்பாட்டில், பழையளாயிருந்துவைத்து புதுமை பாவித்துக் கிடக்கிறாளொருத்தியை எழுப்புகிறது.
வ்யாக்யானம் – (கீசு கீசு) “போது விடிந்தது, எழுந்திராய்” என்ன, “விடிந்தமைக்கடையாளமென்?” என்ன, “ஆனைச்சாத்தன் பேசாநின்றது” என்கிறார்கள். (கீசு) அநக்ஷர ரஸமாயிருக்கை. கீழ் பாட்டில் மெள்ள எழுந்து அரி என்ற பேரரவத்தோடு இவற்றினுடைய ஶப்தத்தோடு வாசியற்றிருக்கிறது. விவக்ஷித்தால், திருநாமம் சொன்னத்தோடு அநக்ஷரமான இவற்றின் த்வநியோடு வாசியற உத்தேஶ்யமாயிருக்கிறபடி. “நாராயணாய” என்றத்தோடு “நாராயண” என்றத்தோடு வாசியற்று அவனுக்கு உத்தேஶ்யமா யிருக்குமாபோலே. “ஓரானைச்சாத்தன் பேசுங்காட்டில் விடியுமோ?” என்ன, “எங்கும் பேசாநின்றது” என்ன, “நீங்கள் அங்கில்லையோ?” என்ன, “எங்களாலன்று. தானே உணர்ந்தன” என்ன, “அதுக்கடையாளமென்?” என்ன, (கலந்து) “கலந்து பேசுகிற பேச்சு கேட்டிலையோ” என்ன, “இராவெல்லாம் உறங்கி விடியா நிற்கவோ கலப்பது?” என்ன, “இரவெல்லாம் கலந்து இப்போது பிரிகிறோம் என்று பகலெல்லாம் பிரிந்திருக்கைக்கு விளைநீரடைத்து “பிரியப்புகுகிறோம்” என்று தளர்த்தித் தோற்றப் பேசுகிற பேச்சு கேட்டிலையோ?” என்ன, “மரக்கலமேறுவார் ஆறு மாஸத்துக்குத் தண்ணீரும் சோறும் ஏற்றுமாப்போலே இக்கலவியரவம் கேட்டிலையோ? கேளாமைக்கு மற்று ஆரவாரமுண்டோ செல்லுகிறது?” “நிஸ்வநம் சக்ரவாகாநாம்” இத்யாதி. இப்பேச்சைக் கேட்டுவைத்து, க்ருஷ்ணன் முகத்திலே விழித்துக்கொண்டு நில்லாதே தரிக்கவல்லையாவதே! “ஸௌமித்ரே ஶ்ருணு வந்யாநாம் வல்கு வ்யாஹரதாம் ஸ்வநம்” – விடிவோறே பெருமாள் திருமாளிகையிலே சென்று எழுப்புவாரும் கவி பாடுவாரும் வம்ஶாவளி சொல்லி ஏத்துவாருமாக எழுந்திருக்கக் கடவ அவர்கள் பக்ஷிகளுக்கு முன்னே உணரும்படியாய், வேறே சிலரையும் “இப்பேச்சும் உன் செவியில் பட்டதில்லையோ” என்றெழுப்புவதாய்த்தே! என்ன தர்மஹாநி!” என்கிறான் ருஷி. பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து இடைச்சியாய், கண்ணுறங்காதே எழுப்பித் திரிகிறவர்கள்போலே இவர்களும்.
(பேய்ப்பெண்ணே) அறிந்துவைத்து அறியாதார் பேச்சைச் சொல்லுகை. இவர்களாகில் இப்படி சொல்லுகைப் பணி” என்று பேசாதே கிடக்க, அறிந்துவைத்துக் காற்கடைக் கொள்ளுகையாலே “பேய்ப்பெண்ணே!” என்கிறார்கள். “தத்விஷயத்திலும் ததீய விஷயம் நன்று” என்று அறிந்துவைத்துப் பேசாதே கிடக்கையால் சொல்லுகிறார்கள். என்ன அறிவுதான்! மிதுநமாய்க்கலந்தால், “அடியேன்” என்னிலும் என்பர். எதிர்த்தலையைத் தாழச்சொல்லிலும் சொல்லுவர். “பேய்ப்பெண்ணே” என்றத்தோடு “நாயகப்பெண்பிள்ளாய்” என்றத்தோடு வாசியில்லை அகவாயில் பாவமொன்றாகையால்.
“போது விடியாதிருக்க, விடிந்ததென்கிற நீங்களோ நானோ பேய்ப்பெண்?” என்ன, “விடியச்செய்தே விடிந்ததில்லை என்கிற நீயே பேய்ப்பெண்” என்ன, “விடிந்தபடி எங்ஙனே?” என்ன, “தயிர் கடைகிற ஓசைக் கேட்டிலையோ?” என்கிறார்கள். (காசும் பிறப்பும்) அச்சுத்தாலியும், முளைத்தாலியும். இடைச்சிகள் பூணுமாபரணம். ப்ராஹ்மணர் ஸந்த்யா வேளையில் பூணூலிடுமாபோலே, தங்கள் அநுஷ்டான வேளையில் இவர்களுக்கு ஆபரணம் பூணவேணுமென்கை. (கலகலப்ப) “அலவூறு சுலாய் மலை தேய்க்குமொலி” (திருவாய் – 7.4.2) என்னுமாபோலே. (கை பேர்த்து) தயிரின் பெருமையாலும் இவர்கள் ஸௌகுமார்யத்தாலும் பேர்க்கப் போகாது. அதுக்குமேலே அவன் ஸந்நிதியிலும் கடையப்போகாது. அஸந்நிதியிலும் கடையப்போகாது. என்னென்னில் – காணாவிடில் கை சோரும்; காணில் “தயிரை மோராக்கவொட்டேன்” என்று கையைப் பிடிக்கும். “மோரார் குடமுருட்டி” ( சிறிய திரும – 33) என்னக்கடவதிறே.
(வாச நறுங்குழல்) தயிர் கடைகைக்கு நியமித்து முடிக்கும் மயிர்முடி கடைகிற ஆயாஸத்தாலே குலைந்து கடைந்த வேர்ப்பாலே அதிபரிமளமாய், முடைநாற்றம் தோற்றாதபடி, கிண்ணகவெள்ளம் கரையையுடைத்துப் பரம்புமாபோலே எங்கும் சுழித்து வெள்ளமிடாநின்றது. “தெருவெல்லாம் காவி கமழ் திருக்காட்கரை” (திருவாய் – 9.6.1) என்னுமாபோலே, பரிமளம் ஊரை உறங்கவொட்டுகிறதில்லை. (ஆய்ச்சியர்) ஊராகக் கிளர்ந்தது.
(மத்தினால் ஓசைப்படுத்த) ஒரு மந்தரத்தாலே கடலைப் படுத்துமாபோலே முழங்காநின்றது. “உத்காயதீநாம் அரவிந்த லோசநம் வ்ரஜாங்கநாநாம் திவமஸ்ப்ருஶத் த்வநி: தத்நஶ்ச நிர்மந்தந ஶப்தமிஶ்ரிதோ நிரஸ்யதே யேந திஶாமமங்களம்” “அவன் கண்ணழகிலே தோற்றுப் பாடுகிற த்வநியும், இவர்கள் காலில் சிலம்பின் த்வநியும், குழலில் வண்டுகளின் த்வநியும், ஆபரணங்கள் தன்னில்தான் கலகலவென்கிற த்வநியும், கையில் வளையொலியும் கிளர்ந்து பரமபதத்திலே சென்று கிட்டி, “க்ருஷ்ண குணங்கள் திருவாய்ப்பாடியிலே பரிமாறா நிற்க, இவ்வுயரத்திலே என்ன இருப்பு இருக்கிறிகோள்” என்று அங்குள்ளாரை வசைபாடுவாரைப் போலேயிருக்கிற த்வநியும் கேட்டிலையோ?” என்கிறார்கள். “விக்ரேதுகாமா கில கோபகந்யா முராரிபாதார்ப்பித சித்தவ்ருத்தி: தத்யாதிகம் மோஹவஶாதவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி” எம்பெருமான் பக்கலிலே பிச்சேறிக்கிடக்கிற பெண்களை இவர்கள் அந்யபரதை தீரவேணுமென்று பார்த்து “தயிரும் பாலும் நெய்யும் விற்று வாருங்கோள்” என்று கொடுத்துவிட, விற்கும்போது நெஞ்சில் நினைப்பது க்ருஷ்ணனையாகையாலே “கோவிந்தனைக் கொள்ளுங்கோள், க்ருஷ்ணனைக் கொள்ளுங்கோள், ஶ்ரீய:பதியைக் கொள்ளுங்கோள் என்னா நிற்பர்கள். (அரவம் கேட்டிலையோ) “வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ வாண்முகம் வேர்ப்ப, செவ்வாய் துடிப்ப, தண்டயிர் நீ கடைந்திட்டவண்ணம் தாரோதரா! மெய்யறிவன் நானே” (பெருமாள் திரு – 6.2) என்று சொல்லும்படி, ஆண்களான தேவஜாதிக்கு ஒரு கைப்பற்றுமவன் பெண்களைக் கைவிடானே. அக்கோலாஹலங்களடையக் காண எழுந்திராய் என்கிறார்கள். (தயிரரவம் கேட்டிலையோ) “இது கேளாதபடி தயிர் கடையாநின்றதோ?” என்கை. ப்ரணயரஸம் செல்லாநின்றதோ?” என்கை.
இதுக்கு “இன்று இங்ஙனே கொடுமை சொல்லுகிறிகோள். வந்த கார்யத்துக்கு உடலானவற்றைச் சொல்லமாட்டி கோளோ?” என்ன, “நாங்கள் தவிருவோமோ நீ பேசாதே கிடந்தால்?” என்ன, “விடிந்தமைக்கடையாளம் தயிர் கடைகிற ஓசைக் கேட்டிலையோ என்பானென்? பண்டுபோலே பசுக்களும் பால்களும் அளவுபட்டிருந்ததோ? க்ருஷ்ணன் பிறந்து நல்லடிக்காலமாய், பசுக்களும் பாலும் பெருத்து, கறக்கும்போதறியாதே கடையும்போதறியாதே செல்லுகிற ஊரிலே இதோரடையாளமாகமாட்டாது. வேறடையாளமுண் டாகில் சொல்லுங்கோள்” என்று பேசாதே கிடந்தாள். (நாயகப் பெண்பிள்ளாய்) ஶேஷிக்கு ஶேஷபூதர்தான் சொல்ல விரகுண்டோ? அழகியதாக நிர்வாஹகையானாய். உனக்கிது பரமென்றால் எங்களுக்கோ பரம்? “ என்று. “ததோ மௌநமுபாகமத்” என்கிறபடியே பேசாதே கிடக்க, “உங்களடியேனை இங்ஙனே சொல்லுவதே!” என்ன, “நீ வாய்திறவாவிட்டால் நாங்கள் செய்வதென்?” என்ன, “ஆனால் திறக்கிறேன்” என்ன, இவள் துணுக்கென்று எழுந்தி ருக்கைக்காக கேஶிவத வ்ருத்தாந்தத்தைச் சொல்லுகிறார்கள். (நாராயணன் மூர்த்தி) முகம் தோற்றாதே வாத்ஸல்யத்தாலே விடாதே நின்று ரக்ஷிக்கக் கடவ ஸர்வேஶ்வரனா யிருந்துவைத்து (கேசவனை) கண்ணுக்குத் தோற்றிநின்று நம் விரோதிகளைப் போக்குமவனை. அவன் சேஷ்டிதங்கள் சிலரை அச்சம் கெடுக்கும். (கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ) ஶ்ரோத்ரஸுகமா யிருந்ததுதானே நீர்வாய்ப்பாக உறங்குகிறாயோ? கரவதத்தினன்று போலே தழுவப்பாராய். “தம் த்ருஷ்ட்வா” இத்யாதி.
(தம் த்ருஷ்ட்வா) பண்டு மணக்கோலமிறே கண்டது; இப்போது வீரக்கோலத்தோடே காணப்பெற்றாள். (ஶத்ருஹந்தாரம்) தமக்கொரு வாட்டமின்றிக்கே எதிரிகளை அழியச்செய்யப் பெற்றபடி. (மஹர்ஷீணாம் ஸுகாவஹம்) ப்ரஜையினுடைய ஆர்த்தி தீர்ந்து ஸுகிக்கக் காண்கையிறே தாய்க்கு ஸுகம். பர்த்தாவானவன் பார்யை பக்கல் முகம் பெறாவிட்டால் ப்ரஜையை எடுத்துக்கொண்டு வருமாப்போலே பிராட்டி முகம் பெறுகைக்காகப் பச்சையிடும்படி. (பபூவ) ஶரணாகதருடைய ஆர்த்தியாலும், பெருமாளுக்கு என் புகுகிறதோ? என்னும் பயத்தாலும் அழிந்த ஸ்வரூபம் அவர்களும் அவரும் உளராகப் போருகையாலே இப்போதுண்டாய்த்தது. இரண்டு தலையும் உண்டாக உண்டாய், இல்லையாகில் இல்லையாமவளிறே. (ஹ்ருஷ்டா) அதுக்குமேலே நிரதிஶய ப்ரீதி உண்டாயிற்று. (வைதேஹீ) அவதாரம் ஸப்ரயோஜநமாய்த்து. (வைதேஹீ) வீரவாசி அறியும் குடியிலே பிறந்தவள். ஒரு வில் முறிக்க ஐயர் என்றும் உகந்தபடிக்கும், இன்று தனியே பதினாலாயிரம் ராக்ஷஸரைப் பொடிப்படுத்திநின்ற பெரிய பராக்ரமம் காணப்பெற்றுதோம். (பர்த்தாரம் பரிஷஸ்வஜே) பண்டு ஐயர் கொடுத்தாரென்று அந்த மணக்கோலத்தைத் தர்மத்துக்குத் தழுவினாள். இப்போது வீரக்கோலங்கண்டு “ஆண்” என்று தழுவினாள். அம்புவாய்த் தெரியாதபடி தனது ஸ்தநோஷ்மதையாலே வேதுகொண்டாள். இவர்க்கு ஸந்தாநகரணியும், விஶல்யகரணியுமதுவே. ஜகத்துக்குத் தாயும் தமப்பனும். (கேட்டே கிடத்தியோ) இப்ரமாதம் தப்பப்பெற்றுக் கிடக்கிறாயோ? என்ன, இவர்கள் பேசின பேச்சிலே ஈடுபட்டுக் கிடக்கிற பெண்பிள்ளையைத் திருஜாலகத்தாலே (சென்று) எட்டிப்பார்த்து (தேசமுடையாய் திற) என்கிறார்கள். இவளுடைய நிரவதிக தேஜஸ்ஸைக்கண்டு “உன்னை கண்டு வாழ, தேசமுடையாய் திறவாய்” என்கிறார்கள்.
@@@@@
எட்டாம்பாட்டு
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – எட்டாம்பாட்டு. (கீழ்வானம்) “இதுக்கு முன்பு சென்ற காலங்களுமெல்லாம் தப்பிக் கிழக்கு வெளுத்தது கிடாய்” என்று உணர்ந்த பெண்பிள்ளைகளெல்லாரிலும் கொண்டாட்டமுடையாளொரு பெண்பிள்ளை வாசலிலே சென்று எழுப்புகிறார்கள்.
வ்யாக்யானம் – (கீழ் வானம்) “இடி விழுந்தாலும் கிடந்துறங்குமத்தைனையோ! கிழக்கு வெளுத்ததுகாண், எழுந்திருந்துகொள்ளாய்” என்கிறார்கள். ”ஆண்களும் வ்ருத்தர்களும் உணர்வதற்கு முன்னே எழுந்திராய்” என்கிறார்களாகவுமாம். “வெண்ணிறத்தோய் தயிர்” (பெரியாழ்வார் திரு – 3.8.9) என்று தயிர் வெளுக்கத் தோய்ந்தவாறே விடிந்ததென்றறிகையாலே உறங்காதே பலகால் தயிரைப் பாராநிற்பர்கள். அத்தாலே “கிழக்கு வெளுத்தது” என்ன, “இரவெல்லாம் கிழக்கு நோக்கி விடிந்ததோ இல்லையோ என்று பார்க்கிற உங்கள் முகத்தினொளி கீழ்திக்கிலே சென்று தாக்கி உங்கள் முகத்திலே வந்து ப்ரவேஶிக்கையாலே கிழக்கு வெளுத்ததாயிருக்கிறது. அது அந்யதா ஜ்ஞாநம்; மற்றையடையாளங்கள் உண்டாகில் சொல்லுங்கோள்” என்ன (எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண்) சிறுவீடு – பனிப்புல் மேய, காலத்திலே விட்டு வயல்களெங்கும் பரந்தனகாண்” என்ன, “ஶ்ரீநந்தகோபர்க்கு முத்திறமுண்டு. அவற்றின்பின்னே க்ருஷ்ணன் போம்; பின்னை ஆரைக்காண்பது? எழுந்திராய்” என்ன, “நீங்கள் திங்கள் திருமுகத்துச் சேயிழையார்” (திருப்பாவை – 30) ஆகையாலே உங்கள் திருமுகத்தொளியைக் கண்டு இருள் திரண்டுபோகிறதித்தனை. அந்யதாஜ்ஞானம்” அருணோத யத்துக்கு அஞ்சி இருள் சிதறிப்போகிறதென்னவுமாம். “மேட்டிள மேதியர் தளைவிடுமாயர்கள்” (திருப்பள்ளி – 4) என்று இவள் தமப்பனார் எம்பெருமானை எழுப்பினார். இவர்கள் இவளை எழுப்புகிறார்கள். (சிறு வீடு) “சிறு வீடு பெருவீடு” என்று பெரியாழ்வார் வயிற்றில் பிறந்து அக்நிஹோத்ரத்தில் வாசியறிகை தவிர்ந்து இடைமுடியும் இடைநடையும் இடைப்பேச்சுமாய் இவற்றின் வாசியறிவதே! “எருமை பரந்ததல்ல; ஆதித்யகிரணங்களுக்கு உளைந்து இருள் சிதறிப் போகிறதுகாண்” என்று இவர்களுக்குச் சொல்ல, “நாங்கள் ப்ரமித்தோமாயிடுக, விடிந்ததில்லை என்று உன்னால் சொல்லலாவதுண்டோ?” என்ன, “அஞ்சுலக்ஷம் குடியில் பெண்களுக்கு நீங்களாயிரம் பெண்களவ்வளவோ வுள்ளது? அல்லாராதெல்லாம் உணராமையாலே விடிந்ததில்லை” என்ன, “அவர்களோ தவ தவ நாறுகிறார்கள்; உன்னிலும் பிள்ளைகள்; அவர்கள் ஆராயாதே போனார்கள்; நீ எழுப்பக் கிடந்தாய்” (போவான் போகின்றாரை) “போகையே ப்ரயோஜனமாகப் போனார்கள்” என்ன, “நான் இனி அங்கு என் அவர்கள் போனார்களாகில்?” என்ன (போகாமல் காத்து) “அவர்களைக் காவலிட்டோ செய்தது? செய்யாதனச் செய்யோம் (திருப்பாவை (2) என்ற வார்த்தையை அறிந்திகொளோ? என்று நம்முடைய வ்யவஸ்தையை நீ உணர்த்தி வந்ததில்லையென்ன, விலங்கிட்டாற்போலே நின்றார்கள்; காலையொழிய நடக்கப்போமோ?” “நீங்கள் அவர்களை ஆணையிட்டுத் தடுத்திகளோ?” என்ன, “வாசம் செய் பூங்குழலாள் திருவாணை” என்ன வேண்டாவே இவர்களுக்கு; நீ வந்ததில்லை என்னவமையும்; கால் போகமாட்டார்கள்” “நீங்கள்தான் நின்றதென்?” என்ன (உன்னைக்கூவுவான்) இன்னார் வாசலிலே வந்து எழுப்பினார்கள் என்று தரம்பெற. எங்களுக்கு இதுவே ப்ரயோஜனம் போரும். (வந்து) “உத்தரம் தீரமாஸாத்ய” (நின்றோம்) “கஸ்த ஏவ வ்யதிஷ்டத”.
(கோதுகலமுடைய) எங்கள் திறத்தாரோ இங்குத் தள்ளுண்டு நிற்பர்? “புள்ளுவம் பேசாதே போகு நம்பி” (பெருமாள் திரு – 6.7) “கழகமேறேல் நம்பி” (திருவாய் – 6.2.6) என்னுமிங்குத்தைக்கு எங்களோடு அவனோடு வாசியென்? (கோதுகலமுடைய) இங்கே புகுந்துபோகவே எம்பெருமான் கைக்கொள்ள வேண்டும்படி அவனாலே கொண்டாடப்ப டுமவள். அவனிலும் ததீயரை உகக்கும் வேண்டப்பாடாக வுமாம். (பாவாய்) “நாரீணாம் உத்தமா வதூ:” நிருபாதிக ஸ்த்ரீத்வமுடையளாகை. (எழுந்திராய்) நாங்கள் உன்னை உணர்த்த உணர்ந்தாய் என்கிற பெரிய தரத்தை எங்களுக்குத் தாராய். “ஆத்மாநம் பூஜயந் ராம ப்ருச்சஸ்யஸ்மாந் ஸுஹ்ருத்தயா” இத்யாதிவத். பட்டர் போது விடியுந்தனையும் கண்வளர்ந்தருள, ஶிஷ்டர்களெல்லாரும் கொண்டகோலங்களும் தாங்களுமாய் வந்து கிடக்குமா போலே. “எது கார்யமாக நீங்கள் எழுப்புகிறது?” என்ன, (பாடிப் பறைகொண்டு) நாட்டார் நோன்புக்குப் பறை. தங்களுக்கு ஸேவிக்கைப் பலம். (பாடி) “ஹிரண்யாய நம:” இறே. பண்டு வாய் காவலிடுவர்கள். இப்போது அது வேண்டாவே.
(மாவாய் பிளந்தானை) “நாம் சென்றால் நம் அபேக்ஷிதம் செய்யுமோ?” என்னில், நமக்காகக் கேஶியைப்போக்கி, நம்மையும் தன்னையும் உண்டாக்கித் தந்தவனன்றோ?; ப்ருந்தாவநத்தில் கேஶியோடே வன்னியமறுத்துப் பின்னை பெண்ணுக்கும் பேதைக்கும் பயம் கெட்டு உலாவித்திரியலாய்த்து. (மல்லரை மாட்டியதேவாதி தேவனை) “அவன் பண்டன்றோ காணாச்சிறையாய் கிடந்தது. இப்போது பெரியனாய். “மதுராம் ப்ராப்ய” இத்யாதிப்படியே நாகரிகனாய், நமக்கு வினைக்கொம்பாய்ப் போனான்; நம் க்ருஷ்ணனை இப்போது ப்ராஹ்மணர்களடைய ஸர்வேஶ்வரன் தேவதேவன் என்றுகாணும் சொல்லுகிறது” என்ன, (மல்லரை மாட்டிய) அங்குப்போயும் நம் கார்யமன்றோ செய்தது. “ஸக்ய: பஶ்யத” என்கிறபடியே அவ்வூரில் பெண்களுக்கு உதவினதும் தங்களுக்கு உதவினதென்றிருக்கிறார்கள். “ஜாதோஸி தேவதேவேஶ” “ஸோஹம் தே தேவதேவேஶ” “அவரை நாம் தேவரென்று அஞ்சினோமே” (திருநெடு – 21) என்றும், “அவன் வேண்டப்பாட்டோடே இருக்கிலோ?” என்னில், (சென்று நாம் சேவித்தால்) அது ஆர்க்கழகு? நம் முறையை நாம் பெற்றோமாகிறோம். அவன் முறைகெடில் அலைந்திறே அவர்கள் இருப்பது. (சென்று) “உபஸ்தேயைருபஸ்தித:” “ஶரண்யஶ்ஶரணாகதம்” “பத்ப்யாம் அபிகமாச்சைவ” “விபீஷணமுபஸ்திதம்” “ஸம்ப்ராப்தம்” என்று அவன் நெஞ்சு புண்படுகைக்கு உடலாக அவனிருந்தவிடத்தே நாம் சென்று அவன் செய்வுத்தை நாம் செய்கிறோம். “ஏஹி பஶ்ய ஶரீராணி” விரஹம் தின்ற உடலைக் காட்டுகின்றோம். “மாசுடையுடம்பொடு தலையுலறி” (நாச்சி திரு – 1.8) “உபவாஸ க்ருஶாம் தீநாம்” (சேவித்தால்) ஶ்ரீபரதாழ்வான் படுத்துமத்தை நாம் படுத்துகிறோம். “ஶிரஸா யாசதஸ்தஸ்ய வசநம் ந க்ருதம் மயா” என்னப் பண்ணுகிறோம். (ஏபிஶ்ச ஸசிவைஸ்ஸார்த்தம்) பெருமாள் இரங்குகைக்காக ஆர்த்தர் பலரையும் திரட்டிக்கொண்டு போனபடி. அவர்களுக்கு கைகேயீ ஸம்பந்தமில்லையே. இரங்கவுமாமே. (ஶிரஸா யாசிதோ மயா) பசியர் வயிற்றைக் காட்டுமாபோலே திருவடிகளிலே அடிமை செய்யப் பெறாமையால் உறாவின தலையைக் காட்டுகிறார். “யாவத் ந சரணௌ” “ப்ராது:” உம்முடைய தம்பியல்லேனோ? (ஶிஷ்யஸ்ய) உம்மோடேயன்றோ நாம் மந்த்ரங்கள் கேட்டது. (தாஸஸ்ய) உமக்கு விற்கவும் ஒத்திவைக்கவும் அடியனல்லேனோ? (ப்ரஸாதம் கர்த்துமர்ஹஸி) கீழ்ச் சொன்னவை ஒன்றுமில்லாவிட்டாலும் ஆபத்துக்கண்டால் காகத்துக்கு இரங்கினாற்போலேயாகிலும் இரங்கவேண் டாவோ? (நாம் சேவித்தால்) அத்தலை இத்தலையானால். ஆர்க்கழகு? அவன் ப்ரணயித்வம் போனாலும் பொதுவான ஆர்த்தரக்ஷணம் போமோ?
(ஆவாவென்றாராய்ந்தருளும்) “ப்ரணயித்வம் குடிபோனாலும் ஸத்தாப்ரயுக்தமான ஆர்த்தரக்ஷணம் போமோ? “ஆந்ருஶம்ஸ்யம் பரோ தர்ம:” என்று சொல்லிவைத்து அநுஷ்டியாதே பேசாதிருக்குமோ? அவன் பக்கல் ஒரு தட்டில்லை. நம் குறையே. புறப்படுங்கோள்” என்கிறார்கள்.
@@@@@
ஒன்பதாம் பாட்டு
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – ஒன்பதாம் பாட்டு. கீழில் பாட்டில் முக்தர்போலே இருப்பாளொருத்தியை எழுப்பிற்று. இப்பாட்டில் நித்யர் படியையும் மைத்துன முறைமையையும் உடையாளொருத்தியை எழுப்புகிறது. தொடர்ந்தடிமை செய்யும் இளையபெருமாளையும் இட்டிடத்தேக் கிடக்கும் ஶ்ரீபரதாழ்வானையும் போலே இருவரும்.
வ்யாக்யானம் – (தூமணி மாடத்து) “துவளில் மணிமாடம்” (திருவாய் – 6.5.1) என்னுமாபோலே குற்றமுண்டாய் எடுத்துக் கழிக்கவேண்டாத நன்மையையுடைய மணியாலே செய்த மாடம். அது ஜீவாத்மாவினுடைய அபஹதபாப்மத் வாதிகள்போலே. திருத்துலைவில்லிமங்கலத்துக்கு இங்கு கழித்தவற்றோடு செய்தது. ரஸிகராயிருப்பார் அந்த:புரத்துக்கு நல்லதிட்டுச்செய்து, அங்கு கழித்ததிட்டிறே தந்தாமுக்குச் செய்வது. நிர்தோஷமாய் உள்ளுள்ளதெல்லாம் தெரியும்படி யிருக்கிற ரத்நமயமான மாடத்திலே. (சுற்றும் விளக்கெரிய) மாணிக்கங்களின் ஒளியாலே பகல்விளக்குப் பட்டிருக்கச் செய்தேயும், மங்களார்த்தமாக விளக்கு எரிகிறது. “புறம்பே நிற்கிறவர்களுக்கு உள்ளுள்ளதெல்லாம் தெரியும்படி எங்ஙனே?” என்ன, மாணிக்கக் குப்பிபோல புறம்பே நிற்க உள்ளுள்ளதெல்லாம் தோற்றாநின்றது என்கை. (சுற்றும்) என்கிறது இதஸ்தத: க்ருஷ்ணன் இவளைக் கையைப் பிடித்துக்கொண்டு உலாவுமிடமெல்லாம் எரிகை. (எரிய) என்கிறது “எங்களகங்கள் இருட்டிக்கிடக்க, இங்கு விளக்கெரிகிறது வெறுமனன்று” என்கை. புறம்புள்ள விளக்குகள் புகையாநிற்க, உள்ளுள்ள விளக்கு எரியாநின்றது என்கை.
(தூபங்கமழ) உணர்ந்தபோதைக்குக் கண்ணுக்கிலக்கன்றியே, க்ராணேந்த்ரியத்தாலே அநுபவிக்கும்படி இருக்கிற புகை. (கமழ) பரிமளம் ஸஹ்யமானபடி எங்ஙனே இவளுக்கு? “சீருற்றவகிற்புகை” (திருவாய் – 9.9.7) இத்யாதியேயிறே அவர்களுக்குச் செல்லுகிறது. (கமழ) புகையுள்ளிட்டன வன்றிக்கே கந்தமே கமழ. (துயிலணைமேல்) க்ருஷ்ண விரஹத்தையும் மாற்றவற்றான படுக்கையிலே. க்ருஷ்ணன் வரிலும் இடம் போரும்படியான படுக்கை. “மென்மலர் பள்ளி வெம்பள்ளியாலோ” (திருவாய் – 9.9.4) விறே இவர்களது. இருவர்க்குப் படுத்தப் படுக்கையிலே ஒருவருக்குக் கண்ணுறங்குமோ? ப்ரஹ்மசாரி படுக்கையில் உறங்க மாட்டார்களே. (கண் வளரும்) “இளையபெருமாளைப்போலே உறங்காமைக்கு நாங்களுண்டு. உறங்குகைக்கு நீயுமாயிற்று என்கிறார்கள். ஆர் தொடைக்குத்த உறங்குகிறது? அங்குத்தைக்குத் தாங்கள் ஒலியல்கொண்டு பரிசர்யைப் பண்ண ஆசைப்படுகிறார்கள். (கண் வளரும்) இங்ஙனேயாகாதே வைஷ்ணவர்கள் சொல்லுவது. “படுத்தப் பைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்கு” (திருப்பல் – 9) என்று தமப்பனார் அவ்விஷயத்தில் சொல்லுமதெல்லாம் இவளுக்குத் ததீயவிஷயத்திலேயிறே. “தொண்டனூர்நம்பித் திருவடிச்சார்ந்தார்” என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்ய, “ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு அவர் அடிமை செய்து போந்தபடியாலே திருநாட்டுக்கு நடந்தார் என்னுங்கோள் என்றாப்போலே; நஞ்சீயர் , பிள்ளை ஏறுதிருவுடையார் தாஸரையும் அப்படியே அருளிச்செய்தருளினார்.
(மாமான் மகளே) ஸ்வாமினியாயும் தோழியாயும் அநுபவித்ததொழிய இட்டீடு கொள்ளுகைக்கு விடவொண் ணாத உறவு ஸம்பாதிக்கிறார்கள். பெரியாழ்வார் பெண்பிள்ளை திருவாய்ப்பாடியில் தனக்கு உஜ்ஜீவநமாக ஒரு ப்ராக்ருத ஸம்பந்தமும் உண்டக்கிக் கொள்ளுகிறாள். (மாமான்) வைஷ்ணவர்களோடு எல்லா உறவும் ஶ்லாக்யமாயிருக்கிறபடி. “மாடமாளிகை சூழ் மதுரைப்பதி நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு” (நாச்சி திரு – 4.5) என்று ஶ்ரீமதுரையிலேயும் ஓருறவும் ஓர் மாளிகையும் ஸம்பாதித்தாளிறே. அங்குத்தைக்கு உறவு ஶ்ரீமாலாகாரர். தானுமொரு மாலாகாரர் மகளிறே. “க்ருஷ்ணராமௌ முதா யுக்தௌ மாலாகார க்ருஹம் கதௌ” (மாமான் மகளே) தங்கள் ஸம்பந்தம் சொல்லாதே தங்கள் ப்ராதாந்யத்தைச் சொல்லி இவளை ஸேவிக்கிறார்கள். “ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி” என்னுமாபோலே. அர்ஜுனனுக்கு க்ருஷ்ணனோட்டை மைத்துனமைபோலே இவர்களுக்கு மைத்துனமையகப்படச் சொன்னவாறே உணர்ந்து, “நீங்களே திறந்து புகுருங்கோள்” என்ன, அது மாணிக்கக் கதவுகாண் அப்யாஸமில்லாதார்க்குத் தெரியாது காண்” என்று இவர்கள் சொல்ல, (மணிக்கதவம் தாள் திறவாய்) துர்யோதனன் நீருக்கும் பளிங்கு மண்டபத்துக்கும் வாசியறியாதே அகப்பட்டாற்போலே அகப்படவொண்ணாது. எங்களை சிரிக்கவோ பார்க்கிறது? எங்களுக்குக் கதவும் சுவரும் தெரிகிறதில்லை நீ திறவாய்” என்கிறார்கள். தேஶிகர்க்கல்லது தாள் திறக்கத் தெரியாதென்கை.
இப்படி சொல்லவும் இவள் பேசாதே கிடந்தவாறே, இவள் திருத்தாயார் “இக்காலத்திலே வந்த பெண்பிள்ளைகளுக்கு இவள் வாய் திறவாதே கிடப்பதே” என்று நொந்தமைத் தோற்ற, அவள் உணர்ந்தமையை அறிந்த பெண்பிள்ளைகள் (மாமீரவளை எழுப்பீரோ) என்கிறார்கள். “அடியாரடியார்” (திருவாய் – 3.7.10) என்றும், “தொண்டர் தொண்டர்” (திருவாய் – 7.1.11) என்றும் ஆழ்வாருடைய பாகவதஶேஷத்வம்போலே. “ஒரு மாதுலனும் ஒரு மாமியாருமே” என்று இவள் ஸம்பந்த ஸம்பந்தம் சொல்லுகிறார்கள். அவள்தம்படி “அன்னையும் அத்தனும் என்றடியோமுக்கு இரங்கிற்றிலள்” (பெரிய திருமொ – 3.7.7) என்று பொகட்டுப் போவள். “தாய் என்று பழியிட்டுப் போகவேணுமோ, அடியேனாயிருக்கிற என்னை” என்னும் திருமங்கையாழ்வாழ்வாரை “வெட்டிமையர்” என்றும், எம்பெருமானாரை “கோயிலண்ணன்” என்றும் ஆண்டாள் அருளிச்செய்யும். அத்தை எம்பெருமானார் கேட்டருளி, “நானடியேனல்லேனோ? என்னை இப்படி அருளிச்செய்வதே” என்றார்போலே இத்திருவாய்ப்பாடியும்.
(அவளை எழுப்பீரோ) “இவர்கள் தன் வாசலிலே நின்று அழைத்து நோவுபட இவள் பேசாதே கிடப்பதே” என்று இவள் நெஞ்சில் கிடக்கிறது முகத்திலே தோற்றினபடியைக்கண்டு “நீராகிலும் அவளை எழுப்பீரோ” என்கிறார்கள். “அவளை இவர்களுக்குத் தோற்றுமோ?” என்னில், மாளிகையின் தெளிவாலே தோற்றும். “தாயார்தான் எழுப்பினாலோ” என்னில், பாவஜ்ஞையாகையாலே எழுப்பாள். “இவர்களாற்றாமைக்கு உணராத இவள் இவளுடைய ஆந்ருஶம்ஸ்யத்துக்கு உணருமோ? ஆர்த்த த்வநி கேளாதவள் மத்யஸ்தர் வார்த்தையையோ கேட்கப் புகுகிறாள்?” என்னவுமாம்.
பின்னையும் உணரக்காணாமையாலே சிவிட்கென்று (உன் மகள்தான் ஊமையோ) என்கிறார்கள். வ்யவஹாரயோக்யையன்றோ என்றபடி. (அன்றிச் செவிடோ) நாங்கள் சொன்ன வார்த்தைக் கேளாதபடி அந்யபரதையோ? என்கை. (அநந்தலோ) இராவெல்லாம் க்ருஷ்ணனுக்கு ஆடல் கொடுத்து இப்போதோ உறங்குவது? (ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ) ஆர்த்தநாதம் கேளாதபடி காவலிட்டுக்கொண்டு உணராதே உறங்குகைக்கு ஆரேனும் சவித்தாருண்டோ? மந்திரம் இவளுக்கு ப்ரஸித்தம். “உன்முகம் மாயமந்திரந்தாங்கொலோ” (நாச்சி திரு – 2.4) என்று அம்மான்பொடி தூவினாருண்டோ? என்கை.
திருத்தாயார், “நீங்கள் இவளை எழுப்பும்படி அறிந்திலிகோள். திருநாமத்தைச் சொல்லுங்கோள் உணரும்படி” என்ன, “நாங்கள் சொல்லாத ஶ்ரீஸஹஸ்ர நாமமுண்டோ?” என்கிறார்கள். (மாமாயன்) பெண்களுக்குக் காணாச்சிறை யாய்க் கிடக்குமவன். (மாதவன்) அதுக்குக் குருகுலவாஸம் பண்ணினவிடம். “லக்ஷ்மீபதி:”. (வைகுந்தன்) பெண்களோ டொக்க ஆண்களை அடிமைக் கொள்ளுமவன். அப்பெரிய மேன்மையுடையவனாய், ஶ்ரீய:பதியாயிருக்குமவன்கிடீர் பெண்களுக்கு எளியனாயிருக்கிறான்.
(என்றென்று நாமம் பலவும் நவின்று) “மேன்மைக்கு ஏகாந்தமான திருநாமங்களையும், நீர்மைக்கு ஏகாந்தமான திருநாமங்களையும், ஶ்ரீய:பதித்வத்துக்கு ஏகாந்தமான திருநாமங்களையும் சொன்னோம். எழுந்திராதாரை எங்களால் செய்யலாவதுண்டோ?” என்கிறார்கள். “உணராதாரை நீரைச் சொரிந்து உணர்த்துங்கோள்” என்னுமாபோலே. (நாமம் பலவும் நவின்று மாமீர் அவளை எழுப்பீரோ) என்று க்ரியையாகவுமாம்.
@@@@@
பத்தாம் பாட்டு
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – பத்தாம்பாட்டு. (நோற்று) க்ருஷ்ணன் அசலகமாய் இடைச்சுவர் தள்ளிப் பொகட்டு, ஒருபோகியாக அநுபவிக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.
வ்யாக்யானம் – (நோற்று) நோற்கக்கடவ நோன்பும் இவ்வரவிலே நோற்று, நோன்பின் பலமான க்ருஷ்ணனாகிற ஸ்வர்க்கம் உன் கைபுகுந்ததாகாதே செல்லுகிறது? “க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம்” என்னுமாபோலே. ஆபாஸ தர்மங்கள் இவளுக்கு அஞ்சிக் கைவிட்டதித்தனையிறே. இவளுக்கு ஸாதநமான தர்மம் எம்பெருமானேயிறே. ஸாதநாநுஷ்டானம் பண்ணாதே இவனே உபாயமென்று அறுதியிட்டால், பலத்தில் அந்வயிக்குமத்தனையிறே. “அவனுடைய ஸ்வரூபம் உணர்ந்தார்க்கு யத்நம் பண்ண ப்ராப்தியில்லை. தன் ஸ்வரூபம் உணர்ந்தார்க்கு யத்நம் பண்ண ப்ராப்தியில்லை. விரோதியினுடைய ப்ராபல்யத்தை உணர்ந்தார்க்கும் யத்நம் பண்ண ஸித்தியில்லை. ப்ராப்யத்தினுடைய சீர்மையை உணர்ந்தார்க்கும் யத்நம் பண்ண ப்ராப்தியில்லை. இதரோபாயங்ளுக்கும் அவனே வேண்டுகையாலே யத்நம் பண்ண ப்ராப்தியில்லை” என்றிருந்தாள். “விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்வதோ யே தேஷாம் ராஜந் ஸர்வயஜ்ஞாஸ் ஸமாப்தா:” “செய்த வேள்வியர்” (திருவாய் – 5.7.5) “யே ச வேதவிதோ விப்ரா:” “ஸ ஸர்வவித் பஜதி மாம் ஸர்வபாவேந பாரத” “க்ருதக்ருத்யா: ப்ரதீக்ஷந்தே”. ரக்ஷ்யரக்ஷகபாவம் வ்யவஸிதமானால் ஜ்ஞாநமேயிறே வேண்டுவது. “நாராயணனே நமக்கே பறை தருவான்” (திருப்பாவை – 1) என்கிறபடியே அவன் தலைக்கே பரம் பொகட்டோமாகில் நமக்கு நீரிலே புக்கு முழுகவேணுமோ? என்றிருக்கிறாளிவள். “இவர்களுக்கு உபாயமென்கிற ஶப்தத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்கலாமோ? உபேயத்துக்கன்றோ உபாயம். ஸித்தோபாய நிஷ்டருக்கு விளம்பஹேது இல்லாமையால் ப்ராப்யத்திலே த்வரை இல்லாதார் சேதநரன்று” என்று இருக்கிறார்களிவர்கள். “ஸித்தோபாய நிஷ்டருக்குக் கர்மம் கைங்கர்யத்திலே புக்குப்போம். ஜ்ஞாநம் ஸ்வரூபத்திலே புக்குப்போம். பக்தி ப்ராப்யருசியிலே புக்குப் போம். பேசாதேயிருக்க உபாயமுண்டோ? சிலர் முழுகி நோற்கவும், சிலர் பலம் அநுபவிப்பதாயோ இருப்பது. அழகிதாயிருந்தது உன்படி”. என்கிறார்கள். அவர்கள் க்ருஷ்ணனோடே பலம் புக்கிருக்கிலும், இக்கோஷ்டியிலுள்ளார்க்குத் தனியே அநுபவிக்கை கைவல்யத்தோபாதி குடிப்பழி. (அம்மனாய்) ரக்ஷ்ய ரக்ஷகபாவம் மாறி நிற்கவோ பார்க்கிறது? அழகிதாக நிர்வாஹகையானாய்! (சுவர்க்கம் புகுகின்ற) ஸுகமநுபவிக்கை. “யஸ்த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்க:” நிர்வாஹகையாயிருப்பார்க்குக் கண்ணுறங்க விரகுண்டோ? அநுபவிப்பார் அநுபவிப்பது இடையும் முலையுமொழியவோ? இவர்கள் பேச்சைக் கேட்டு ஈடுபட்டுப் பேசாதே கிடந்தாள். “ஸம்ஶ்ரவே மதுரம் வாக்யம்” . “பழியிடுவதே” என்று பேசாதேயிருக்கறாளாகவுமாம்.
இவர்கள் பாடாற்றமாட்டாமை – (மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்) என்கிறார்கள். ஏதேனும் ஒருபடியான பேச்சேயாகிலும் அமையுமிவர்களுக்கு. படுகுலையடித்தால் நாக்கு நனைக்கத் துளித் தண்ணீரிடவுமாகாதோ? வாசலைச் செம்மினால் வாயையும் செம்மவேணுமோ? “துளம்படு முறுவல்” (பெரிய திருமொ – 2.7.2) இவர்கள் ஜீவநம். “ஆஶயா யதி வா ராம: புநஶ்ஶப்தாயேதிதி”. இவர்களுக்குப் புகுருங்கோள் என்னவுமாம், போங்கோளென்னவுமாம். தர்மபுத்ரன் “எம்பெருமானுக்கும் அர்ஜுனனுக்கும் என்புகுகிறதோ?” என்று அஞ்சுகிற தர்மயுத்தத்திலே, ஶ்ரீபாஞ்சஜந்ய த்வநி கேட்டுத் தரித்தாற்போலே, இவர்களுக்கும் இவள் பேச்சு. உடம்பை க்ருஷ்ணனுக்குக் கொடுத்தால் எங்களுக்குப் பேச்சாகிலும் தரலாகாதோ? “மதுரா மதுராலாபா கிமாஹ மம பாமிநீ” யிறே இங்கு சொல்லுகிறது. நீயும் அவனும் வாழ்ந்து எங்களுக்குப் பரியட்டம் தருகிறபடியோ இது? நாங்கள் செய்தபடி செய்ய; உன் ப்ரீதிக்குப் போக்குவிட்டு தரிக்கவேண்டாவோ? “ஸுகமாஸ்ஸ்வ” “ரமஸ்வ ச”. கண்ணின் பட்டினி தீராதாகில் செவியின் பட்டினி தீர்த்தாலாகாதோ?
“நீங்கள் பழியிடுகிறதென்? இங்கு அவனுண்டோ?” என்ன, (நாற்றத்துழாய் முடி) உன்னைப்போலே புறப்படாத தத்வமோ அவன் சூடின தத்வம்? “விரை குழுவு நறுந்துளவம்” (திருவாய் – 10.6.7). “மாளிகைச் சாந்து உன்னால் ஒளிக்கப்போமோ?” என்ன; “அந்தியம்போதே வாசலைக் கைக்கொண்டிகோள்; அவனுக்குப் புகுர வழியுண்டோ?” என்ன – (நாராயணன்) அவனுக்கு எங்களைப்போலே கதவு திறக்கப் பார்த்திருக்கவேணுமோ? புகுகிற வழி தேடவேணுமோ? புறப்படுகைக்கு வழிதேடுமத்தனை யன்றோ? விடாதாற்கு பேறன்றோ இது? உகவாதாரையும் விடாதவன். உகந்த உன்னை விடுமோ? நீ விலக்கிடாய், “பதிம் விஶ்வஸ்ய” என்று அவன் அழகிதாகப் பொதுவாயிருந்தான். நாராயணதத்வத்துக்கு இன்று தொடங்கி நமஸ்காரம். “கௌஸல்யா லோகபர்த்தாரம்” “நாராயணனே நமக்கே பறைதருவான்” (திருப்பாவை – 1) என்று துணிந்தார்க்கு இப்படியோ? ரக்ஷகனாக வேண்டாவோ? “பறைதரும்” என்று க்ஷேபம்.
(நம்மால்) வெறுமையே பச்சையாகவுடைய நம்மாலே. (போற்ற) குடிப் பிறப்பாலே வந்தது. உபாயமல்ல. (பறைதரும்) “இப்படி பெரியவன் பறை தருமோ?” என்னில், “நாராயணனன்றோ; போற்றாதார் பாடும் புக்கிருக்கி றவனன்றோ; தரும்” என்னவுமாம். (புண்ணியன்) “க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம்” புண்ணியனாகையாவது – ஸர்வ விஷயத்திலும் தண்ணீர்போலே பொதுவாயி ருக்கையாய்த்து. “உன் படிகள் அழகிதாயிருந்தது” என்ன, பின்னையும் அவன் பாசுரமாக ஒன்று பிறக்கக் காணாமையாலே அவனைவிட்டு, “இவள் நம்மிலே ஒருத்தியாய் ஒக்க நோன்பு நோற்று ஒக்க அநுபவிக்கவிருந்து, நம் திறத்தில் செய்தபடி சொல்லாதே, மாற்றாராய்ச் செல்லுவதே?” என்று அவளைத்திரிய எழுப்ப “திரியவும் நம்மைப் பிரித்தார்களாகில், நாம் பேசாதே கிடப்போம்” என்று அவள் வாய் திறவாதே கிடக்க, “உறக்கத்துக்குக் கும்பகர்ணனையும் ஜயித்தாயிருந்ததீ” என்கிறார்கள். (நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியன்) இடைப்பெண்களுக்கும் சென்று ஆஶ்ரயிக்கலாம்படியான தார்மிகன். இவர்கள் அர்த்திகளாகையாவது –போற்றுகைபோலே. (புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த) எல்லாரும் தண்ணீர் குடித்து உஜ்ஜீவிக்கிற ஏரியிலே கல்லைக்கட்டிக்கொண்டு விழுந்து சாவாரைப்போலவும், விளக்கு விட்டில் போலேயும் சாவுகை. (பண்டொருநாள்) “முன்பு உன்னைப்போலே ஒருத்தனுண்டுகாண் உணராதே படுத்தினான்” என்கை. (புண்ணியனால் கூற்றத்தின் வாய்வீழ்ந்த) “கொடுவினைப்படைகள் வல்லையாய்” (திருவாய் – 9.2.10) “ததோ ராமோ மஹாதேஜா:” என்று நீரிலே நெருப்பு எழுந்தாற்போலே சீறுகைக்குள்ள அருமை. (கும்பகர்ணனும்) பிராட்டியைப் பிரித்த ராஜத்ரோஹியோடு கூட்டுகிறார்கள். அவன் ஒருத்தியைப் பிரித்து உறங்கினான். நீ ஊராரைப் பிரித்தன்றோ உறங்குகின்றாய். (தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ) ஶ்ரீபரஶுராமாழ்வான் கையில் வில்லை சக்ரவர்த்தித் திருமகன் வென்று வாங்கினாற்போலே, அவன் நித்ரையையும் வென்று வாங்கிக்கொண்டாயோ?
(ஆற்றவநந்தலுடையாய்) “இனி கிடக்கில் த்ரோஹிகளாவுதோம்” என்று அஞ்சிப் புறப்பட்டு முகம் காட்டுவோம் என்று தான் உணர்ந்தபடி தெரிய, “க்ருஷ்ண க்ருஷ்ண” என்கிறாள். “எங்களுக்கு அங்கேபோய்த் துயிலெழப் பாடவேணுமோ? நீ உணரும்படி கண்டு வாழவமையாதோ? (அருங்கலமே) இனி தெளிவுகண்டு அநுபவிக்கவேணும். “ஹாரத்தைப் பண்ணினால் அதுக்குக் கல்லழுத்த வேண்டாவோ? இக்கோஷ்டியை ஸநாதமாக்காய்” என்றவாறே, பதறிப்புறப்படப்புக, (தேற்றமாய் வந்து திற) மேலில் நிலங்களிலே நின்றும் தள்ளம்பாறி விழாதே தெளிந்து வந்து திற” “ஊராகத் திரண்டு வந்து கிடக்கிறது. படுக்கையில் கிடந்தபடியே வாராதே, ஸதஸ்யையாய்த் திற” என்றுமாம். (அருங்கலமே) எம்பெருமானாரைப்போலே. “மஹதா தபஸா” பெறலாமவளல்லள். தானேத் தன்னைப் பெறுமத்தனை. ஶ்ரீஜநகராஜன் திருமகளைப்போலே. (தேற்றம்) “ஸா ப்ரஸ்கலந்தீ” இத்யாதி.
@@@@@
பதினோராம் பாட்டு
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத்தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – பதினோராம்பாட்டு. க்ருஷ்ணன் ஊருக்கு ஒரு பிள்ளையானாற்போலே, ஆபிஜாத்யமுடையாளாய் ஊருக்கு ஒரு பெண்பிள்ளையாய் இருப்பாளொருத்தியை எழுப்புகிறார்கள். “அரியதைச் செய்யவல்ல குடியிலே பிறந்துவைத்து அரியதைச் செய்யாதேகொள்” என்கிறார்கள். எளியராக வேண்டுமிடத்திலே அரியராகவொண்ணாதே.
வ்யாக்யானம் – (கற்றுக்கறவை) கன்று நாகுகள். நித்யஸூரிகள் பஞ்சவிம்ஶதி வார்ஷிகராயிருக்குமாபோலே. அவர்கள் இப்படி யிருக்கிறது எம்பெருமானை அநுஸந்தித்தன்றோ; க்ருஷ்ண ஸ்பர்ஶத்தால் வந்த தன்னேற்றம் பார்த்துக்கொள்வது. கீழ்நோக்கி வயஸ்ஸுப் புகுமத்தனை. திருவாய்ப்பாடியில் கன்றுகளுக்கும் வாசி தெரியாது. பசுக்களுக்கும் வாசி தெரியாது. (கற்றுக்கறவை) “பவாமி த்ருஷ்ட்வா ச புநர்யுவேவ”. ப்ரணயித்வத்துக்கு முலைப்பட்டாராகாதாப்போலே. கன்றுகளையே ரக்ஷிக்க வேணுமென்றொரு வ்யவஸ்தையுண்டோ?” என்னில், “கன்று மேய்த்தினிதுகந்த காளாய்” (திருநெடு – 16) என்னுமாபோலே. “திவத்திலும் பசுநிரை மேய்ப்புவுதி” (திருவாய் – 10.3.10) நித்யஸூரிகளிலும் பசுமேய்க்க உகக்கும். கன்று மேய்க்கப் போனால் பசுக்களும் நித்யஸூரிகளோடொக்கத் தள்ளுண்டுமத்தனை. பசு மேய்க்க உகக்கும்; கன்று மேய்க்க இனிதுகக்கும். அதாவது – ஸ்வரக்ஷணத்தில் அந்வயமில்லாதாரை உகக்குமென்றபடி. (காளாய்) அவை இளகிப் பதிக்கத் தானுமிளகிப் பதிக்கும். “ய: பூர்வ்யாய வேதஸே நவீயஸே ஸுமஜ்ஜாநயே விஷ்ணவே ததாஶதி யோ ஜாதமஸ்ய மஹதோ மஹிப்ரவத்ஸேதுஶ்ரவோபிர் யுஜ்யம் சிதப்யஸத்” மைந்தனை மலராள் மணவாளனை” (திருவாய் – 1.10.4). அவன் ஶரணாகதவத்ஸலனானால் ஶரணாகதவத்ஸலமாமித்தனையிறே. “யதா த்ருணவத்ஸா வத்ஸம் வத்ஸோ வா மாதரம் சாயா வா ஸத்த்வமநுகச்சேத்” “கறவா மடநாகு தன் கன்றுள்ளி னாற்போல் மறவாதடியேனுன்னையே அழைக்கின்றேன்” (பெரிய திருமொ – 7.1.1) “அபித்வா ஶூர நோநுமோ துக்தா இவ தேநவ:” “ஶரணாகதவத்ஸல:” கன்றிடுகிற முன்னாள் கோமூத்ரமாதல் சாணமாதல் புல்லிலே படில் மோந்துபார்த்துக் காற்கடைக்கொள்ளும். பிற்றைநாள் கன்றிடில், அக்கன்று சாணத்திலும் கோமூத்ரத்திலும் புரண்டாலும் அதுதன்னையே போக்யமாகக் கொண்டு நக்காநிற்கும். முன்னணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலே சூடும். “த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம” “அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி”.
(கணங்கள் பல) “நாரா:” என்னுமாபோலே ஸமூகங்கள் பலவென்னுமத்தனை. (பல) நாரஶப்தத்தில் நாரங்களுடைய ஸமூஹங்களையும், அஸங்க்யாதமான பகவத் குணங்களையும், அவற்றையுங்கூட வெல்லும்படி மலிவான நம்முடைய அநாத்ம குணங்களையும் எண்ணிலும் எண்ணப்போகாது. சொல்லும்போது “ரத குஞ்சரவாஜிமாந்” என்றாற்போலே பலவென்னுமத்தனை. “கழியாரும் கன சங்கம்” (பெரிய திருமொ – 6.9.2) இத்யாதி. (பல கறந்து) ஈஶ்வரன் ஒருவனே ஸர்வாத்மாக்களுக்கும் நியமநாதிகளைப் பண்ணுமாபோலே ஜாதியினுடைய மெய்ப்பாட்டாலே செய்யவல்ல ஸாமர்த்யம்.
(செற்றார்) “ஶத்ரோஸ் ஸகாஶாத் ஸம்ப்ராப்த:” என்ற அங்கதப் பெருமாள் போலே இவ்வைஶ்வர்யம் காண வேண்டாதார் தனக்கு ஶத்ருக்களாயிருக்கிறபடி. (திறலழிய) “சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி எலும்பைப் பூண்டு திரியும் ருத்ரனும் ஒத்துப்போம் ப்ரஹ்மாவும், அந்யபரனாயிருக்கிற எம்பெருமானும் ஸாது இந்திரனும் எனக்கு எதிரோ” என்றிருக்கும் கம்ஸாதிகள் மறுமுட்டுப் பெறாதபடி கிழங்கெடுக்கைக்கு மிடுக்குடையார் இவ்வூராரென்கை. (சென்று செருச்செய்யும்) எதிரிகள் வந்தால் பொருகையன்றிக்கே இருந்தவிடங்களிலே சென்று பொருகை. “அபியாதா ப்ரஹர்த்தா ச”. (சென்று) சக்ரவர்த்தித் திருமகனைப்போலே; ஊராகச் சக்ரவர்த்தித் திருமகனோ டொப்பர்கள் வீரத்துக்கு. “சென்று செருச்செய்கை எங்கே கண்டோம்?” என்னில், “பசுமேய்க்கிறார் இரண்டிடையர் குவலயாபீடத்தின் கொம்பைப் பிடுங்கி விளையாடா நின்றார்கள்” என்று கண்டோமிறே.
(குற்றமொன்றில்லாத) எடுத்துவரப் பார்த்திருக்கும் குற்றமில்லை. எதிரி கையில் ஆயுதம் பொகட்டால் எதிரியையும் ரக்ஷியாதக் குற்றமில்லை என்னவுமாம். “இப்படி அழியச் செய்தார்கள்” என்று எம்பெருமானுக்கு முறைப்பட்டால் செய்தாரேல் நன்று செய்தார்” என்னும்படி பிறந்தவர்கள் என்னவுமாம். “ஸாதுரேவ ஸ மந்தவ்ய:” “தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்” “குன்றனைய குற்றம் செய்யினும் குணங்கொள்ளும்” பகவதநுபவமே தேஹயாத்ரையா யிருப்பவர்களுக்கு அநீதிக்குப் பெருநிலை நிற்கும். வஸ்த்ரான்னபாநாதிகளோடொக்க பகவத்குணங்க ளும் கலசி தாரகமாயிருப்பார்க்கு அநீதி பொறுக்கும். அல்லாதார் அநீதி எம்பெருமானுக்கு அஸஹ்யமாயிருக்கும். “நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந:” பகவத்விஷயத்தில் ஓரடி புகுர நிற்கையிறே ஒருவனுக்கு ஸித்தியாவதென்கை. ஆஶ்ரிதருடைய தோஷத்தை கடலுக்குத் தொடுத்த அம்பை மருகாந்தாரத்திலே விட்டாற்போலே அசல் பிளந்தேற்றல், பகதத்தனுடைய அம்பை மார்விலே ஏற்றாற்போலே தான் அநுபவித்தல், அதுதன்னையே புண்யமாகக் கொள்ளுதல், செய்யுமவன். (குற்றமொன்றில்லாத) “அத்யைவ த்வாம் ஹநிஷ்யாமி” “ஹந்யாமஹமிமாம் பாபாம்” என்று சொல்லுகிறபடியே பகவத்பாகவத விஷயங்களில் குற்றம் செய்தாரை அக்நிஷோமீய ஹிம்ஸைபோலே கண்பாராதே கொல்லவல்லவர் காணென்றுமாம். (கோவலர்தம் பொற்கொடியே) “ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா” என்னுமாபோலே ஊருக்கொரு பெண்பிள்ளை. (பொற்கொடியே) தர்ஶநீயமாயிருக்கையும் கொள்கொம்பை யொழிய ஜீவியாமையும். கொடி தரையிலே கிடக்கலாமோ? ஒரு தாரகம் வேண்டாவோ? பெண்களோடு கூடிக்கொண்டு நில்லாயென்கை. “ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால றிகின்றிலேன் யான்” (திருவாய் – 10.10.3).
(புற்றரவல்குல்) பிடியுண்டு புழுதிபடைத்த அரவுபோலன்றியே தன் நிலத்திலே வாழும் பாம்பின் படமும் கழுத்தும் போலேயிருக்கை. இவர்கள் இத்தனை சொல்லலாமோ? என்னில் – பெண்களைப் பெண்கள் சொல்லுகிறதன்றோ; “யா ஸ்த்ரியோ த்ருஷ்டவத் யஸ்தா: பும்பாவம் மநஸா யயு:” அவன் “பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்” என்கிறபடியே ஆண்களைப் பெண்களாக்கும்; இவள் பெண்களை ஆண்களாக்கும். (புனமயில்) தன்னிலத்தில் மயில். கண்ணனையும் தங்களையும் பிச்சேற்றவல்ல அளகபாரத்தை யுடையளாயிருக்கை. (போதராய்) “ஶோபயந் தண்டகாரண்யம்” என்கிறபடியே எங்களை வந்து உள்தளிர்க்கப் பண்ணாய் என்கை. (போதராய்) உன்னுடைய அழகைக்காட்டி எங்களை உண்டாக்காய். இத்தால் சொல்லிற்றாய்த்து – பகவத்ஸ்பர்ஶமுடையாருடைய தேஹ குணத்தோடு ஆத்ம குணத்தோடு வாசியற எல்லாம் ஆகர்ஷணமாய் இருக்கிறதென்கிறது.
“நான் புறப்படுகைக்கு நீங்கள் எல்லாரும் வந்திகோளோ?” என்ன – (சுற்றத்துத் தோழிமாரெல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட) “உத்தரம் தீரமாஸாத்ய” என்னும்படி எல்லாருமே ப்ராப்யதேஶமான உன் முற்றத்திலே புகுந்தது.. “முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்” (பெரியதிருமொ – 10.8.5) என்றும் “முற்றத்தூடு புகுந்து நின் முறுவல் காட்டிப் புன்முறுவல் செய்து” (நாச்சி திரு – 2.9) என்றும் ஶேஷியானவனுக்கு ப்ராப்யமான முற்றம் – ஶேஷபூதைகளான எங்களுக்கு ப்ராப்யமென்று சொல்ல வேண்டுமோ? “புகந்து கொள்ளப்புகுகிற கார்யமென்?” என்ன – (முகில் வண்ணன் பேர்பாட) நீ உகக்கும் திருநாமங்களைப் பாட , நாங்கள் உன் பக்ஷத்திலே நின்று கூட ஏத்த; நீ அவனழகிலே ஈடுபட்டுப் பாடவும், நீ பாடும் பாட்டு கண்டு நாங்கள் ஈடுபட்டுப்பாட.
(சிற்றாதே) “முகில் வண்ணன்” என்றவாறே வடிவை நினைத்து விடாய்க்கெட பேசாதே கிடந்தாள். (சிற்றாதே) சேஷ்டியாதே. அவர்கள் ஜீவநம். எங்கள் கண்ணையும் செவியையும் பட்டினிவிடுவையாய் நின்றாய். (செல்வப்பெண்டாட்டி நீ) உன்னை நீ பிரிந்தறியாயே? உன் கைங்கர்யம் கூடு பூரித்ததென்னவுமாம். (எற்றுக்குறங்கும் பொருள்) “அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்று கொலோ” (திருவாய் – 2.3.10) என்றிருப்பார் செய்வதோ இது? இவ்வளவும் வந்தார்க்குத் தனித்து பகவதநுபவம் பண்ணுவது குடிப்பழி. “எனக்கு இங்கே கூடு பூரித்திருந்ததோ?” என்ன – “இல்லையாகில் எங்கள் பாடு புறப்படாதே கைவல்யமோக்ஷம்போலே தனிக்கிடக்கிற கார்யமென்?” என்கிறார்களென்றுமாம்.
@@@@@
பன்னிரண்டாம்பாட்டு.
கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – பன்னிரண்டாம் பாட்டு. க்ருஷ்ணன் வளர வளரத் தீம்பிலே கைவளரப்புக்கவாறே ஶ்ரீநந்தகோபர் வ்ருத்தராகையாலும், நம்பி மூத்தபிரான் விலக்கமாட்டாதே அவன் வழியே போகையாலும், இவனைக் காக்க இளையபெருமாளைப்போலே அவனைப் பிரியாதே போகிறான் ஒருத்தன் தங்கையை எழுப்புகிறார்கள்.
வ்யாக்யானம் – (கனைத்து) இளையபெருமாள் அக்நி கார்யத்துக்கு உறுப்பாமன்றிறே இவன் எருமைகளை விட்டுக் கறப்பது. தவிர்ந்தவனோடு செய்கின்றவனோடு வாசியில்லை. இரண்டும் உபாயமன்று. யாதொன்று பேற்றை ஸாதித்துத்தருவது அதுவே உபாயம். அபிசாரத்தைப்பற்ற காம்யகர்மம் புண்ணியம்; ஜ்யோதிஷ்டோமாதிக்கு பக்தி தன்னேற்றம். “எல்லாத்தையும் விட்டு என்னைப் பற்று” என்றவனடைய த்யாஜ்யமாம். ஜீயர் பிள்ளை திருநறையூரரையர்க்கு அருளிச்செய்த வார்த்தை – விடுகையும் உபாயமல்ல; விடுவித்துப் பற்றுவிக்குமவனே உபாயம் என்று. “ந தேவலோகாக்ரமணம்” “பரித்யக்தா” இத்யாதியிற்படியே ப்ராப்யவிரோதிகளில் நசையற்றபடியாக வுமாம். (கனைத்து) கறப்பாரில்லாமையாலே “இவ்வகத்து நாம் கன்று காலியாய்ப் பட்டதோ!” என்று கூப்பிடா நிற்கும். (இளங்கற்றெருமை) இளங்கன்றாகையால் பாடு ஆற்ற மாட்டாமை. (கன்றுக்கிரங்கி) எம்பெருமான் ஆஶ்ரிதர் விஷயத்தில் இருக்குமாபோலேகாணும். அவன் எருமை கறவாவிட்டால் அவை படும் பாட்டை நாங்கள் உன்னாலே படா நின்றோம்.
(நினைத்து) கன்றை நினைத்து. பாவநாப்ரகர்ஷத்தாலே முலையிலே வாய் வைத்ததாய்க்கொண்டு பால் சொறியா நிற்கும். நினைவு மாறிலிறே பால் மாறுவது. (முலை வழியே) கன்றின் வாய் வழியாதல், கறக்கிறார் கைவழியாதலன்றிக்கே முலை வழியே. (நின்று பால் சோர) கேட்பாரின்றிக்கே விம்மலாலே பகவத்குணங்களைச் சொல்லுவாரைப்போலே. மேகத்துக்குக் கடலிலே முகந்து கொண்டு வரவேணும். இவற்றுக்கு அது வேண்டா. (நனைத்தில்லம் சேறாக்கும்) “பாலின் மிகுதியாலே அகமெல்லாம் வெள்ளமிடும். அவற்றின் காலாலே பின்னைத் துகையுண்டு சேறாம். சேறால் புகுரவொண் கிறதில்லை”. என்ன, “அளற்றுப் பொடியிட்டுப் புகுருங்கோள். அவ்வளவின்றிக்கே மேலே மேலே வெள்ளமிட்டதாகில் ஓடமேறிப் புகுருங்கோள்”.
(நற்செல்வன்) “லக்ஷ்மணோ லக்ஷ்மிஸம்பந்ந:” – தோற்றி மறையும் நற்செல்வமல்ல; நிலைநின்ற ஸம்பத்து. (ஸம்பந்த:) “ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல்” “வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம்புகழ” என்னும்படியே அவனுடைய வைஷ்ணவஶ்ரீயாலே ஜகத்துக்களடைய வைஷ்ணவத்வமுண்டாம்படி யிருக்கை. “ஸௌமித்ரே புங்க்ஷ்வ போகாம்ஸ்த்வம்” “யத் விநா பரதம் த்வாம் ச ஶத்ருக்நம் சாபி மாநத” (தங்காய்) குணஹாநிக்கு “ராவணஸ்யாநுஜோ ப்ராதா” என்னுமாபோலே குணத்துக்கு அவனில் இவளுக்குத் தன்னேற்றமும் அத்தனைப் போரும். “அந்தரிக்ஷகத: ஶ்ரீமாந்” என்ற விபீஷணாழ்வானுக்கு மகளான த்ரிஜடைபோலே. ஶ்ரீவிபீஷணாழ்வானைப் போலன்றியே இவள் பிராட்டிக்கு அடிமை செய்யப்பெற்றாளிறே. அப்படியே இங்கு தமையன் க்ருஷ்ணனுக்குத் துணையாய்த் திரிய, இவள் நப்பி்னை பிராட்டிக்கு அடிமை செய்யப் பிறந்தவள். (பனித்தலை வீழ) மேல் பனி வெள்ளமிட, கீழ் பால் வெள்ளமிட, நடுவே மால் வெள்ளமிட நின்றமை இது. (வாசல் கடை பற்றி) “மேலப்படியையும் தண்டியத்தையும் பற்றி நாலாநின்றோம். இத்தர்மஹாநியை அறிகின்றிலை” என்கிறார்கள். “இவர்கள் படும் அலமாப்புக் காண்போம்” என்று பேசாதே கிடக்க, தீராமாற்றமாக நெஞ்சாரல் பண்ணி முகம் காட்டாத க்ருஷ்ணனென்றால், பெண்கள் சிவட்கென்று “இதொரு பித்து” என்பார்கள் என்று பார்த்து, “க்ருஷ்ணனால் பட்ட நெஞ்சாரலடையத் தீர்ந்து நெஞ்சு குளிரும்படி, பெண்பிறந்தார்க்குத் தஞ்சமான சக்ரவர்த்தித் திருகமனைச் சொல்லுவோம் இவளெழுந்திருக்க” என்கிறார்கள்.
(சினத்தினால்) ஆஶ்ரிதர் கார்யம் செய்யாதானாயிரான் க்ருஷ்ணனைப்போலே. இவன் தன் கார்யந்தானாயிருக்கும். “தான் தன சீற்றத்தினை முடிக்கும்” “த்விஷதந்நம் ந போக்தவ்யம்” – ஆஶ்ரிதருடைய ஶத்ருக்களே தனக்கு ஶத்ருக்கள். பகவதபசாராம் பாகவதாபசாரம் என்று இரண்டில்லை போலே இருந்தது. “மம பக்த பக்தேஷு ப்ரீதிரப்யதிகா ந்ருப” என்று, “ஆஶ்ரிதர்க்கு நல்லவர்கள் தனக்கு நல்லவர்கள்” என்றிருக்கும். மஹாராஜர்க்கு சீற்றம் பிறந்தபோது வாலியை எய்தார்; அவர் அழுதபோது கூட அழுதார். “ஸஞ்ஜாத பாஷ்ப:” (தென்னிலங்கை) அவன் செய்த அநீதியை நினைத்து “பறைச்சேரி” என்பாரைப்போலே அத்திக்குங்காண வேண்டாதே யிருக்கிறபடி. ஒரு ப்ராணனை இரண்டாக்கினாற்போலே தாயையும் தமப்பனை யும் பிரித்த படுகொலைக்காரன் இருக்கிற இடமிறே. (கோமான்) “யத்யதர்மோ ந பலவாந் ஸ்யாதயம் ராக்ஷஸேஶ்வர: ஸ்யாதயம் ஸுரலோகஸ்ய ஸஶக்ரஸ்யாபி ரக்ஷிதா” என்று திருவடி மதித்த ஐஶ்வர்யம். (செற்ற) ஓரம்பாலே தலையைத் தள்ளிவிடாதே மொட்டும் நெம்பும் பாறும் கலங்கும்படி தேரையழித்து, வில்லை முறித்து, படையைக் கொன்று, ஆயுதங்களை அறுத்து, “தான் போலுமென்றெழுந்தான் தரணியாளன்” என்று கிளர்ந்து வந்த அபிமானத்தையும் அழித்து, நெஞ்சாரல் படுத்தி, “கச்சாநுஜாநாமி” என்கிறபடியே படையைச் சிரைத்துவிட்ட படியான எளிவரவு மூதலிக்கைக்கு ஆளில்லையாம் என்று கொல்லாதே விட்டார். “யோ வஜ்ரபாதாஶநி” “மாதங்க இவ” “ப்ரஹ்மதண்ட ப்ரகாஶாநாம்” என்று; “தஸ்யாபி ஸங்க்ரம்ய ரதம் ஸசக்ரம் ஸாஶ்வ த்வஜச்சத்ர மஹாபதாகம் ஸஸாரதிம் ஸாஶநிஶூல கட்கம் ராம” ப்ரசிச்சேத ஶரைஸ்ஸுபுங்கை:” “ஸேவமுக்தோ ஹததர்ப்பஹர்ஷ: நிக்ருத்த சாபோ நிஹதாஶ்வஸூத: ஶரார்த்தித: க்ருத்த மஹாகிரீட: விவேஶ லங்காம் ஸஹஸா ஸ ராஜா”
(மனத்துக்கினியானை) வேண்டிற்றுப் பெறாவிட்டால் “சொல்லாய் சீமானே” என்றாற்போலே. “வேம்பேயாக வளர்த்தாள்” என்னும் க்ருஷ்ணனல்லவே. பெண்களைக் கொன்று துடிக்க விட்டுவைத்துத் துளி கண்ணநீரும் விழவிடாதே நிற்கும் க்ருஷ்ணனையொழிய “ஸஞ்ஜாத பாஷ்ப: பரவீரஹந்தா” என்று ஶத்ருக்களுக்கும் கண்ணநீர் பாய்ந்து, “உண்ணாதுறங்காதொலி கடலை யூடறுத்து” தன்னைப்பிரிந்து நாம் படுவுற்றை நம்மைப் பிரிந்து தான் படவல்லன். (பாடவும் நீ வாய் திறவாய்) “இத உபரி ம்ருதஸஞ்ஜீவநம் ராமவ்ருத்தாந்தம்” என்றத்தைக் கேட்டும் உனக்கு உறங்குகைக்கு உறுப்பாயிற்றோ? (வாய் திறவாய்) ப்ரீதிக்குப் போக்கு விடவேண்டாவோ? தாங்கள் ஒருதலைப் பற்றவேண்டி யிருக்கிறார்கள்.
(இனித்தானெழுந்திராய்) எங்களுக்காக உணராவிட்டால் உனக்காக உணரவுமாகாதோ? எங்களாற்றாமை அறிவித்தபின்பும் உறங்கவல்லையாவதே! அகம்பனன் சூர்ப்பணகையுள்ளிட்டார்க்கு உள்ள இரக்கமும் உன்பக்கல் கண்டிலோம். (ஈதென்ன பேருறக்கம்) எம்பெருமான் பரார்த்தமாக உணரும்; ஸம்ஸாரிகள் ஸ்வார்த்தமாக உணருவார்கள். இது இரண்டுபடியுமன்று. ஆர்த்திகேட்டும் உணராதொழிவதே! “பையத்துயின்ற பரமன்” (திருப்பாவை – 2) “பகவதஸ் த்வராயை நம:” ஆர்த்தி கேட்டால் அப்படி புறப்படும் அவனோடொக்கப் பழகிவைத்து இங்ஙனே கிடப்பதே! அக்குணங்கள் தானே உன்னை உறக்குகிறதோ?
(அனைத்தில்லத்தாரும் அறிந்து) “உன் வாசலிலே எல்லாரும் வந்து எழுப்ப நீ எழுந்திராதொழிந்தாய் என்கிற வேண்டப்பாடு எல்லாரும் அறியவேண்டி இருந்தாயாகில் அதுவும் செய்ததுகாண். இனி உணராய்” என்ன “க்ருஷ்ணனையும் நம்மையும் சேரவொட்டாத ஊரிலே, பதினைந்து நாழிகையிலே வந்து எல்லாரும் கேட்க “மனத்துக்கினியான்” என்பது, “க்ருஷ்ணன்” என்பது, ”எழுந்திராய்” என்பதாய்க் கூப்பிட்டால் நம்மை என் சொல்வார்கள்?” என்ன, “நீ நீயாக நாங்கள் நாங்களாக வந்துபோய் ப்ரஸித்தமாயிற்று. இனி அத்தை விடாய்” என்கிறார்கள். “ரஹஸ்யமாக பகவத் விஷயம் அநுபவிக்குமத்தனையொழிய புறம்பிதுக்கா ளுண்டோ” என்றிருந்தாயாகில் “நீ பிறந்தபின்பு இதொரு வ்யவஸ்தையுண்டோ? எல்லாரும் உன்னைப்போலேயாம்படி அதுபோய் ப்ரஸித்தமாயிற்றுக் கிடாய்” என்றுமாம். எம்பெருமானார் திருவவதரித்தாற்போலே காணும்; இந்நாச்சியார் அவதரித்தபின்பு எல்லாரும் பகவத்விஷய மறிந்தது.
@@@@@
பதின்மூன்றாம் பாட்டு
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதறிக்கண்ணினாய்
குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – பதின்மூன்றாம் பாட்டு. இவளை எழுப்புகிறது அசலகத்திலே கேட்டுக்கிடந்தாளொருத்தி தன்னபராதத்தைத் தீர உணர்ந்தாளாய், “பெண்காள்! இங்கும் ராம வருத்தாந்தம் சொல்லி எழுப்பினிகோளோ? “ என்ன, “ராம வ்ருத்தாந்தமும் சொன்னோம், க்ருஷ்ண வ்ருத்தாந்தமும் சொன்னோம், ஶ்ரீராமாயண மஹாபாரதங்களிரண்டும் சொன்னோம்” என்று கண்ணழகியாளொருத்தியை எழுப்புகிறார்கள்.
வ்யாக்யானம் – (புள்ளின் வாய் கீண்டானை) கொக்கின் வடிவு கொண்டுவந்த அஸுரனைப் பிளந்தபடி. “பள்ளத்தின் மேயும்” (பெரியாழ்வார் திரு – 2.5.4). இத்தலைக்கு இசைவேயிறே வேண்டுவது. விரோதி போக்குகை அவன்படி என்றிருக்கை. நம்முடைய அநீதிகளுக்கு ஈஶ்வரன் பண்ணும் அநுமதி வைஷம்ய நைர்க்ருண்யத்தில் புகாதாப்போலே, இவ்வநுமதி உபாயத்தில் புகாது. இருவர்க்கும் இரண்டநுமதிகளும் ஸ்வரூபத்திலே கிடக்குமத்தனை. (பொல்லாவரக்கனை) தாயையும் தமப்பனையும் பிரித்த நிர்க்ருணனை. “சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசையரக்கன்” (பெரிய திருமொ – 5.7.7) (பொல்லா) “முன் பொலாவிராவணன்தன் முதுமதிளிலங்கை வேவித்து” (திருக்குறு – 15) பிராட்டி “த்வம் நீச ஶஶவத் ஸ்ம்ருத:” என்றாள். இவள்தானும் “அன்றில்லாதன செய் சிசுபாலன்” (நாச்சி திரு – 4.7) என்றாள். “விபீஷணஸ்து தர்மாத்மா நது ராக்ஷஸசேஷ்டித:” என்று நல்லவரக்கனுமுண்டென்கை. “ஸீதாயாஶ்சரிதம் மஹத்” என்கிற பிராட்டி வ்ருத்தாந்தம் ஶ்ரீராமாயணமானபடி என்னென்னில் – “குணவான்” என்றது அவனையும் அவளையும் கூட்டி வாழ நினைக்கும வர்களோடு பரிமாறினபடி. “வீர்யவான்” என்பது பிரிக்க நினைத்தார் முடியும்படி. “தர்மஜ்ஞ:” என்றது அவர்கள் ஸ்வரூபம் உணர்ந்திருக்கும்படி.
(கிள்ளிக் களைந்தானை) மறுவலிடாதபடி கிழங்கோடே வாங்கினபடி. திருவிளையாடு சூழலில் புழுத்தவிடம் கிள்ளப் பொகடுமாப்போலே, ஆஶ்ரிதர் குடியில் தோஷாம்ஶத்தை வாங்கிப் பொகட்டபடி. (கீர்த்திமை) எதிரிகள் நெஞ்சு உளுக்கும்படி. “ஶத்ரோ: ப்ரக்யாதவீர்ய:” என்னும்படி இருக்கும் வீரம். ஶத்ருக்களும் மேலெழுத்திட்டுக் கொடுக்கும் வீரம். “க இதி ப்ரஹ்மணோ நாம” என்று பரரானவர்கள் பகவத்பரத்வத்துக்கு மேலெழுத்திட்டுக் கொடுக்குமாபோலே. ஆத்மாபஹாரிகள் எதிரம்பு கோக்கைத் தவிர்ந்து “நமோ நாராயணாய” என்று அவனுடைய ஶேஷத்வத்துக்கு மேலெழுத்திட்டுக் கொடுக்குமாப்போலே. (ரஞ்ஜநீயஸ்ய) தோளாலே நெருக்குண்ட பிராட்டியார் சொல்லுமாபோலே சொல்லுவதே! உகவாதார்க்கும் விடவொண்ணாத வீரம் உகந்த பெண்களுக்கு விடவொண்ணாமைக்குச் சொல்லவேணுமோ? ராவணன் பெருமாள் வீரத்துக்கிலக்கானான்; தங்கை அழகுக்கிலக்கானாள்; தம்பி ஶீலத்துக்கிலக்கானான்; தாங்கள் அபலைகளாகையாலே தங்களுக்கு பலமாக அவன் விஜயத்தை அநுஸந்திக்கிறபடி. கர்மஜ்ஞாநபக்திகள் உபாயமாமிடத்தில் இவனும் கூட வேணும். பரமசேதனனான இவன்தானே உபாயமாமிடத்தில் “பாபீயஸோபீத்யாதி – “த்வத் ஜ்ஞாநஶக்தி கருணாஸு ஸதீஷு” என்று ஜ்ஞாந ஶக்தி க்ருபையே ஸஹகாரமாகையாலே அவற்றை யநுஸந்தித்து மார்விலே கைவைத்துக்கொண்டு உறங்குவார்களிவர்கள். (பாடிப்போய்) இவர்களுக்கு கால்நடை தருகைக்கு மிடுக்குக்கால் கொண்டு போகை. ஸுகுமாரரான பிள்ளைகள் “உண்டுண்டு வழிபோய்” என்னுமாபோலே . “பரஸ்பரம் தத்குணவாதஶீது பீயூஷ நிர்யாபித தேஹயாத்ரா:” “பாதேயமித்யாதி” “போழ்துபோக உள்ளகிற்கும் புன்மை இல்லாதவர்கள் இவர்கள். அவர்களுக்கு “வாழ்துணையா வடமதுரைப் பிறந்தவ” (திருவாய் – 9.1.8) னன்றோ; இவர்களுக்குச் சொல்ல வேணுமோ?
(பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம் புக்கார்) “இன்னமுணர்ந்தும் உணராத சிறுபிள்ளைகளையும் எழுப்பிக்கொண்டு விடிந்தவாறே போகிறோம்” என்ன, “அவர்கள் உனக்கு முன்னே உணர்ந்து க்ருஷ்ணன் மெய்க்காட்டுக் கொள்ளுமிடம் புக்கார்” என்கிறார்கள். (பாவைக்களம்) “போர்க்களம்” “நெற்களம்” என்னுமாபோலே. (எல்லாரும்) நாம் சென்றெழுப்ப வேண்டும்படியான பாலைகளும். (பாவைக்களம்) ஸங்கேதஸ்தலம். “அவர்கள் போனார்களாகிலும் அகாலத்திலே போகவொண்ணாது. வெள்ளி எழுந்ததோ பாருங்கோள்” என்ன – (வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று) நீ நினைக்கிறவளவு தப்பி வெள்ளி உச்சிப்பட்டு வியாழம் அஸ்தமித்தது.
“நக்ஷத்ரம் கண்டதெல்லாம் வெள்ளியாயும் வியாழமாயு மன்றோ உங்களுக்குத் தோற்றுவது; அவை புனர்பூசம் பூசங்களாகக் கொள்ளீர். மற்றையடையாளமுண்டோ?” என்ன, நாங்கள் திரண்டதொன்றுமல்லவோ?” என்ன – (புள்ளும் சிலம்பின காண்) அது ப்ரமாணமன்றாகில் புள்ளும் சிதறிப் போயிற்றின. பண்டு ஒருகால் “புள்ளும் சிலம்பின” (திருப்பாவை – 6) என்றது; அப்போது கூட்டிலே இருந்து சிலம்பிற்று. இப்போது பறந்துபோகத் தொடங்கிற்று என்கை. (போதரிக்கண்ணினாய்) “உங்கள் வார்த்தை பழகிறிலேன்” என்று பேசாதே கிடக்க, “இக்கண்ணுடைய எனக்கு ஓரிடத்திலே புறப்படவேணுமோ? எல்லாரும் என் காலிலே வந்து விழுகிறார்கள் என்று கிடக்கிறாயோ? (போது அரி) பூவும் மானும் போன்ற கண். பூவிலே வண்டிருந்தாற்போலே என்றுமாம். பூவோடே சீறுபாறென்றுமாம். “அஸிதேக்ஷணை” யாகையாலே “புண்டரீகாக்ஷன் பக்கல் போகவேணுமோ? என்னும். தான் “நெடுங்கணிளமான்” (திருவாய் – 6.7.10); அவன் அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன்” (திருவாய் – 6.7.10); அவனும் அவன் விபூதியும் இக்கண்ணிலே ஒரு மூலைக்குப் போராது. (போதரிக்கண்ணினாய் இத்யாதி) இக்கண்ணிலே அவனைக் குமிழிநீரூட்டி அவன் கண்ணிலே நாம் குமிழிநீருண்ணப் பாராய் என்கை. (குள்ளக்குளிர) ஆதித்யகிரணத்தாலே நீர் வெதும்புவதற்கு முன்னே புறப்பட்டு. பெண்களும் புறப்பட்டு, நீர் வெதும்புவதற்கு முன்னே என்னவுமாம். (குடைந்து நீராடாதே) தாங்களாகையாலே உள்ளே குடைந்தாடும் தங்கள் ஸம்பந்தத்தாலே கொதிக்குமென்று அறிகிறிலள்.
(பள்ளிக் கிடத்தியோ) பிள்ளைகள் படுக்கையிலே விட்டுப் போகாநிற்க, நீ படுக்கையிலே கிடப்பதே அவன் கிடந்துபோன படுக்கையை மோந்துகொண்டு! பயிர் விளைந்து கிடக்கக் கதிர் பொறுக்கி ஜீவிக்கிறாயோ? (பாவாய் நீ) தனிக்கிடக்கவல்லளோ நீ? (நன்னாள்) அடிக்கழஞ்சு பெற்ற நாளிறே; இந்நாலு நாளும் போனவாறே மேல் நாள்கள் ராவணனைப்போலே பிரிக்கும் நாட்கள். ஆண்டாள் திருவேகாதஶி பட்டினி விட்டு பட்டரை “தீர்த்தம் தாரும்” என்ன, “இப்பெரிய திருநாளிலே இதொரு திருவேகாதசி எங்ஙனே தேடி எடுத்துக் கொண்டிகோள்” என்றருளிச் செய்தார்.
(கள்ளம் தவிர்ந்து) “சோரேணாத்மாபஹாரிணா” என்ற தத்வஸ்துவிலும் ததீயவஸ்துவை அபஹரிக்கையன்றோ பெருங்களவு. “என்னுடை நாயகனே” (பெரியாழ்வார் திரு – 5.4.3) என்னும்படியே ஸ்வாமித்வத்தைச் சொல்லி, ஶேஷபூதனுக்கு ஶேஷத்வத்தை அபஹரித்தால் ஶேஷியை க்ஷமை கொள்ளலாம். ஶேஷிக்குத் தன் ஶேஷித்வத்தை அபஹரித்தால் க்ஷமை கொள்ளுகைக்குப் பொறுத்தோம் என்பாருமில்லையே; குற்றம் நின்றேபோமித்தனை. “கலந்து குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே பாவாய் பள்ளிக் கிடத்தியோ” என்று க்ரியை. “தஸ்யோபவநஷண்டேஷு” இத்யாதி.
@@@@@
பதினான்காம் பாட்டு
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – பதினாலாம் பாட்டு. இதுக்கெல்லாம் கடவளாய், எல்லார்க்கும் முன்னே தானுமுணர்ந்து, எல்லாரையும் உணர்த்தக்கடவளாக ப்ரதிஜ்ஞை பண்ணினாளொருத்தியை எழுப்புகிறது.
வ்யாக்யானம் – (உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்) இவள் வாசலிலே வந்து “போதுவிடிந்தது காண் எழுந்திராய்” என்ன, “விடிந்தமைக்கு அடையாளமென்?” என்ன, பஞ்சலக்ஷம் குடியில் பெண்களும் வாய் பேசுவாரும், பேசாதிருப்பாருமாய் வந்து நிற்கிறது விடிந்தமைக்கு அடையாளமன்றோ?” என்று செங்கழுநீர் அலர்ந்தாற் போலேயும் ஆம்பல் மொட்டித்தாற்போலேயும் என்று தங்கள் வாயைச்சொல்ல, “உங்கள் வாய் நீங்கள் வேண்டினபோது அலர்ந்து மொட்டியாதோ?” என்ன, “வயலிலவையும் அப்படியே” என்ன, “நீங்கள் போய் அலர்த்தியும் மொட்டிக்கப் பண்ணியும் வந்திகோள்” என்ன, “தோட்டத்து வாவியும் அப்படியே” என்ன, “வயலணித்தன்றோ உங்களுக்குத் தோட்டத்து வாவி” என்ன, “புழக்கடை தோட்டத்து வாவியும் அலர்ந்து மொட்டித்தது” என்ன, “அது உங்களுக்குக் கைவந்ததன்றோ?” என்ன, “அஸூர்யம் பஶ்யமாய் க்ருஷ்ணனுக்கும் புகவொண்ணாத புழக்கடையில் தோட்டத்து வாவியில் செங்கழுநீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்தது” என்ன;
“அலரப்புக்க மாத்ரத்திலே கழிய அலர்ந்ததென்றும், மொட்டிக்கப் புக்க மாத்ரத்திலே முட்ட மொட்டித்தது என்றும் சொல்லுகிறீர்கள்; இதுவொழிய வேறு அடையாளமுண்டோ சொல்லுங்கோள்” என்ன, “ஸாத்விகரோடு தமோபிபூதரோடு வாசியற உணர்ந்தது பார்” என்கிறார்கள். (செங்கல் பொடிக்கூறை இத்யாதி) அளற்றுப்பொடியிலே புடவையைப் புரட்டி ப்ரஹ்மசர்யம் தோற்றப் பல்லை விளக்கி “ஸபையார் பொடிகிறார்; கோமுற்றவன் தண்டம் கொள்ளுகிறான்” என்று போதுவைகிற்றென்று போம் அஶுசிகளுமகப்பட உணர்ந்தார்கள்” (தங்கள் திருக்கோயில்) அவர்கள் சொல்லும் ப்ரகாரம். “சிறுபதத்தூற்றத்துறையிலே ஒரு தபசி பரிசிலேறி ஆற்றினுள்ளே புக்கு, காவேரி தேவிக்குச் சங்கூதுகிறேனென்று அங்கே ஊத, பரிசிலிலே போகிற குதிரை மிதித்து அதிலேறின மனிச்சரடைய செத்துப்போச்சுது” என்று எம்பாரருளிச்செய்தவார்த்தை. “சங்கு” என்று குச்சியைச் சொல்லிற்றாகவுமாம். வெள்ளை தவிர்ந்து, காஷாயத்தை உடுத்து, போக்ய போகோபகரணங்களைத் தவிர்ந்து, தபஶ்சர்யையை உடையராயிருக்குமவர்கள். ஸந்த்யாவந்தனாதிகளைச் சமைந்து அகங்களிலே திருமுற்றத்தெம்பெருமானை ஆராதிக்குங்காலமாயிற்று என்றுமாம். சங்கு ஸமாராத நத்துக்கு உபலக்ஷணம். “தமப்ரசுரர் லக்ஷணத்தையோ ஸத்வஸ்த்தரான நமக்குச் சொல்லுவது. “தர்மஜ்ஞஸமய: ப்ரமாணம் வேதாஶ்ச” என்று, ஸத்வஸ்த்தர்படியைச் சொல்லவேண்டாவோ?” என்ன, “ஸத்வஸ்த்தைகளான நாங்கள் சொன்னபடியையும் செய்கிறிலை” என்கிறார்கள்.
நான் செய்ததென்னென்ன (எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்) நேற்றே எங்களை எழுப்புகிறேனென்றும், க்ருஷ்ணன் பாடேகொண்டு போகிறேனென்றும் சொன்னது கண்டிலோமே” என்கிறார்கள். (வாய் பேசும்) பொய்சொல்லத் தகும் க்ருஷ்ணனோடேயிறே பழகுகிறது; பொய்யே நினைத்து அதுக்குமேலே பிறரறிய வேணுமோ? (நங்காய்) சொன்னத்தோடே செயல் கூடாதேயிருப்பார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ? என்கை. (எழுந்திராய்) இவர்கள் பேச்சே அமைந்தது இவளுக்கு. உன் பூர்த்தியாலே எங்கள் குறையையும் தீராய். “இப்படிச் சொல்லிவைத்துச் செய்யப் பெற்றிலோம்” என்னும் லஜ்ஜையும்கூட இன்றிக்கே இருப்பதே? (நாணாதாய்) நீயிருந்த ஊரில் பூசணியும் காயாதோவென்கை. (நாவுடையாய்) வாயேயிறே உனக்குள்ளதென்கை. “நாந்ருக்வேதவிநீதஸ்ய” இத்யாதி. இவள் எல்லாம் படுத்தினாலும் விடவொண்ணாத நாவீறுடைமை. விண்ணப்பம் செய்வார் எல்லா அநீதிகள் செய்யினும் ஸத்துக்கள் தலையாலே சுமக்கிறது நாவீறன்றோ.
நான் உங்களுக்குச் செய்யவேண்டுவதென்னென்ன (சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக்கண்ணானைப்பாட) “இவர்களிதெல்லாம் சொல்லுகிறது தங்களார்த்தியிறே” என்று பார்த்து இவர்களைத் தரிப்பிக்கைக்காக, “நாவாலுள்ள கார்யம் கொள்ளுங்கோள்” என்ன, அவன் திருநாமங்களைப் பாடென்கிறார்கள் (ஏந்து தடக்கையன்) பூவேந்தினாற்போலே திருவாழியையும் ஶ்ரீபாஞ்சஜந்யத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்ஶத்தாலே வளர்ந்த திருக்கைமலர்களை உடையவனாயிருக்கை. “இன்னாரென்றறியேன்” (பெரிய திருமொ – 10.10.9) என்று மதிகெடுக்கும் கையில் திருவாழியையும் சொல்லுகிறது. (பங்கயக்கண்ணானை) “ஜிதம் தே புண்டரீகாக்ஷ” “தாமரைக்கண்ணானை விண்ணோர் பரவும் தலைமகனை” (திருவாய் – 2.6.3) என்னப்பண்ணும் கண்ணையுடையவனை. “ஆங்கு மலரும்” (மூன்றாம் திரு – 67) இத்யாதி. ஶ்ரீபாஞ்சஜந்யத்தை சந்த்ரனென்றும் திருவாழியாழ்வானை ஆதித்யனென்றும், திருநாபீகமலம் மொட்டிப்பது அலருவதாமாபோலே கண்ணாகிற தாமரையும் மொட்டிப்பது அலருகிறதாமென்கை. சந்த்ர ஸூர்யர்களையும் தாமரைப்பூவையும் ஒரு கலம்பகமாலையாகத் தொடுத்தாற்போலே இருக்கும்படியைச் சொல்லுகை. (பங்கயக்கண்ணானை) கண்ணாலே நமக்கு எழுத்து வாங்கி நம்மை எழுத்துவாங்குவித்துக் கொள்ளுமவன். “தூதுசெய்கண்கள்” (திருவாய் – 9.9.9) “இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான்” (திருவாய் – 1.7.5) (பாட) உன்னுடைய ப்ரீதிக்குப் போக்குவிட்டு எங்கள் வறட்கேட்டைத் தீராய்.
@@@@@
பதினைந்தாம் பாட்டு
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடைமை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – பதினைந்தாம் பாட்டு. பெண்களெல்லா ருடையவும் திரளைக்காண வேண்டியிருப்பாளொருத்தியை எழுப்புகிறார்கள்.
வ்யாக்யானம் – இவர்கள் தங்களிலே கூடிப் பாடின பாட்டான “சங்கொடு சக்கரமேந்தும் பங்கயக் கண்ணனைப் பாட” என்ற பாட்டைக்கேட்டு, அசல் திருமாளிகையிலே கிடந்தாளொரு பெண்பிள்ளை தன்னிலே கிடந்து நுடங்கிப் பாடுகிறபடியைக் கேட்டு, (எல்லே இளங்கிளியே) “திருவான பேச்சிருந்த படியென்!” என்று கொண்டாடுகிறார்கள். யாழிலே இட்டுப்பாடி இனிதானவாறே மிடற்றிலேயிட்டுப் பாடுவாரைப்போலே முந்துற பெண்கள் பாடக்கேட்டு, இவள் பாடுகிறாள். (இளங்கிளியே இன்னம் உறங்குதியோ) “எல்லே” என்றது என்ன ஆஶ்சர்யம் என்றபடி. ஸம்போதநமாகவுமாம். (இளங்கிளியே) கிளியை வ்யாவர்த்தித்தபடி. தாங்கள் கிளிகள், இவள் இளங்கிளி. பாட்டின் இனிமையாலே உறங்கி இவள் பேச்சுக் கிடையாதென்னும்படி இருக்கை. “இதொரு பேச்சு” என்று கொண்டாடினார்கள். இவர்கள் பேச்சைக்கேட்டுக் கொண்டாடிச் சொன்னத்தை, தன் பயத்தாலே தங்களுடைய உடம்பும் வாயும் வெளுத்திருக்க, க்ருஷ்ண ஸம்ஶ்லேஷத்தாலே நம்முடைய உடம்பு பசுமையுண்டாய், வாயும் சிவந்திருக்கிறது என்கிறார்கள். இவ்வளவிலே வாய் திறக்கில், பழியிடுவார்கள் என்று நினைத்து “நானிங்ஙனே பசுகுபசுகென்று சிறகுகளும் தானுமாயிருந்தேனோ?” என்று பேசாதே கிடந்தாள். (இன்னமுறங்குதியோ) உத்தேஶ்யம் கை புகுந்தால் உறங்குவாருண்டோ? எங்களுக்கு க்ருஷ்ண விரஹத்தாலே தளர்வதற்குமேலே உறக்கமில்லை. அதுக்கு உன் கடாக்ஷமும் பெறாதொழிவதே! உன் பாட்டுக் கேட்கப் பெறாதொழிவதாய் உயிர்கொலையாக்கி இட்டுவைத்தால் தரிக்கவொண்ணுமோ?
(சில்லென்றழையேன்மின்) பிராட்டிமாரோடே கூட எழுந்தருளியிருந்தாலும் படிக்கத்தோபாதி அந்தரங்கனா யிருக்கக் கடவ ஶ்ரீநாரதபகவானை ஶ்வேதத்வீபத்துக்கு எழுந்தருளினபோது உள்ளே புகப்புக்கவாறே இவன் வெட்டத்தனம் அவர்களுக்குப் பொறாதென்று “நீ இங்கே நில்லு” என்று எழுந்தருளினாப்போலே, தான் அநுஸந்திக்கிற அநுஸந்தானத்துக்கு இவர்கள் அழைக்கிற சொல் விக்நமாகையாலே “சிலுகிடாதே கொள்ளுங்கோள்” என்கிறாள். “இவர்கள் வார்த்தை அஸஹ்யமோ?” என்னில் திருப்புன்னைக்கீழே திருவாய்மொழி பாடாநின்றால், செல்வர் எழுந்தருளுகையும் அஸஹ்யமாமாப்போலே. (நங்கைமீர் போதர்கின்றேன்) இவர்கள் சிவிட்கென்று “நாங்களும் எங்கள் சொல்லும் ஆகாதபடி உன் குறைவறுகை இருந்தபடியென்?” என்ன, “நீங்களன்றோ குறைவற்றிகோள்; என்னை படுத்தாதே கொள்ளுங்கோள்; புறப்படா நின்றேன்” என்ன (வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்) “நங்கைமீரென்ற உறவற்ற சொல்லாலே நீ சொல்லிற்றைச் சொல்லி, எங்கள் திறத்தே குற்றமாம்படி வார்த்தை சொல்லவல்லை என்னுமிடம் இன்றேயல்ல; எத்தனை காலமுண்டு உன்னோடே பழகுகிறது” என்கிறார்கள்.
(வல்லீர்கள் நீங்களே) “இன்னமுறங்குதியோ வல்லையுன் கட்டுரைகள்” என்னும் வெட்டிமை உங்களதே. நான் உங்கள் வாசலிலே வந்து படாததுண்டோ?” என்ன, “ அது ஸாத்யம். இது ஸித்தமன்றோ; ப்ரத்யக்ஷத்துக்கு அநுமாநம் வேணுமோ” என்கிறார்கள். (நானேதானாயிடுக) பதகம் மூட்டினவாறே சிறிது போதாகிலும் பேசாதிருப்பார்களிறே என்று “நானேதானாயிடுக” என்கிறாள். ஒருவனுக்கு வைஷ்ணவத்வமாவது ஸ்வதோஷத்தை இல்லை செய்யாதே இல்லாதத்தையும் சிலர் உண்டென்றால் அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்றாகிறது. ஶ்ரீபரதாழ்வான் “மத்பாபமேவாத்ர நிமித்தமாஸீத்” என்றான். பரஸ்துதியோடொக்கும் ஸ்வநிகர்ஷம். அத்தோஷம் என் தலையிலே கிடக்கிறது. “உங்களுக்கு இப்போது செய்யவேண்டுவதென்?” என்ன, அரைக்ஷணம் தங்களுக்கு அவளையொழியச் செல்லாமையாலும் , அவளுக்குத் தங்களையொழியச் செல்லாமையாலும் சடக்கெனப் புறப்பட்டுக்கொண்டு நில்லென்கிறார்கள். (ஒல்லை நீ போதாய்) உன் படுக்கையில் கிடக்கிற க்ருஷ்ணனை இட்டுவைத்து நீ கடுகப்போராய். “அரைக்ஷணம் வைஷ்ணவகோஷ்டியைப் பிரிய நின்று வரும் மாத்யஸ்த்யம் எனக்கென் செய்ய” என்கிற ஸுப்ரஹ்மண்ய பட்டர் வார்த்தையை ஸ்மரிப்பது. (உனக்கென்ன வேறுடையை) அஞ்சுலக்ஷம் குடியில் பெண்களுக்குள்ளதொழிய உனக்கு வேறே சில உண்டோ? உன் ஸ்வயம்பாகம் இன்னம் தவிர்ந்திலையோ எங்கள் பெரும்பானை கண்டபின்பும்? அதாவது – மத்யமபதமும் உத்தரபதமும் “ஸோஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஶ்சிதா” என்னக்கடவதிறே. “கோதில் வாய்மையினாயொடுமுடனே உண்பன் நான் (பெரிய திருமொ – 5.8.2) என்னுமாபோலே. இளையபெருமாள் கைகேயியின் மகன் வருகிறானென்று ஶ்ரீபரதாழ்வானைச் சீறி, “வில்லையோட்டிக் கொல்ல” என்ன, பெருமாளுக்கு அது அஸஹ்யமாய் “பிள்ளைக்குச் சொல்லிக்கொள்கிறோம், நீ இங்ஙன் அலமாக்கிறது ராஜ்யத்தை ஆசைப்பட்டன்றோ; நீ ராஜ்யத்தைப் பண்ணு” என்று சொன்ன வார்த்தையைக்கேட்டு, இளையபெருமாள் தரைப்பட்டாற்போலே இவளும் “உனக்கென்ன வேறுடையை” என்ன அப்படிப்பட்டாள். “ஸஸைந்யம் பரதம் கத்வா ஹநிஷ்யாமி ந ஸம்ஶய:” “ராஜ்யமஸ்மை ப்ரதீயதாம்” “ஸ்வாநி காத்ராணி லஜ்ஜயா” “சாது கோட்டியுள் கொள்ளப்படுவார்” (பெரியாழ்வார் திரு – 3.6.11) என்று புருஷார்த்தமான இக்கோஷ்டிக்குப் புறம்பாயிருக்கைக்கு மேற்பட்ட அநர்த்தமுண்டோ? விஷயங்களைப்பற்றிப் புறம்பாயிருக்கவுமாம். ஈஶ்வரனைப் பற்றிப் புறம்பாயிருக்கவுமாம். ஆத்மாவைப்பற்றிப் புறம்பாயிருக்கவுமாம்.
(எல்லாரும் போந்தாரோ) “உங்களையொழிய எனக்கொரு ஸுகமுண்டோ? உணரவறியாத சிறு பெண்களுமகப்பட இழக்கவொண்ணாதென்று பார்த்து, அவர்களுமுணர்ந்தால் புறப்படவேணுமென்று கிடந்தேனித்தனை. எல்லாரும் போந்தார்களாகில் புறப்படுகிறேன்” என்றாள். (போந்தார் போந்தெண்ணிக்கொள்) மெய்க்காட்டுக்கு ப்ரயோஜனம் தொட்டெண்ணுகையும் தனித்தனியே எல்லாரையும் தழுவுகையும்.
“எல்லாரும் வந்தாராகில் இனி உங்களுக்குச் செய்யவேண்டுவதென்?” என்ன, “வேறுண்டோ? உன்னுடைய அழகிய மிடற்றாலே ஒருகால் “வல்லானை கொன்றானை” என்னாய்” என்கிறார்கள். (வல்லானை கொன்றானை) “ஒருநாள் செய்த உபகாரம் அமையாதோ நமக்கு” என்று கொண்டாடுகிறார்கள். “புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதான்” (பெரிய திருமொ – 6.5.6) என்று வாசலிலே யானையை நிறுத்தி. பிள்ளையை யானை நலிந்ததாகாதே கேட்போமிறே என்று கம்ஸன் அம்மானாய் முறைகேடாக்கியிருக்கப் பார்க்க, அதனைக்கொன்று அவ்வூரில் பெண்களையும் நம்மையும் உளோமாம்படி பண்ணி, நம் ஜீவநாத்ருஷ்டமான தன்னை நோக்கித் தந்தவன். (மாற்றாரை மாற்றழிக்க வல்லானை) சக்ரவர்த்தித் திருமகனாரைப்போலே நாளை வாவென்று விடாதே அக்ஷணத்திலே கம்ஸாதிகள் நினைத்த நினைவை அவர்கள் தங்கள் நினைவோடே போக்கி, தாய் தமப்பன் கால் விலங்கைப் போக்கி வாழ்வித்தவனை.
(மாயனை) தன் கையில் ஶத்ருக்கள் படுமற்றைப் பெண்கள் கையிலே படுமவன். (பாட) நமக்கு அவன் தோற்கும் தோல்விக்குத் தோற்றுப்பாட. இவ்விஷயத்தில் விஜயம் ப்ரணயித்வத்துக்குக் கொத்தையாய், தோற்க அத்தோல்விக்கு அவனைப் பாடவேணும்.
@@@@@
பதினாறாம் பாட்டு
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்றலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேசநிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – பதினாறாம்பாட்டு. கீழ் பத்து பாட்டாலாக அஞ்சு லக்ஷம் குடியில் பெண்களும் ஒருவரையொருவர் எழுப்பினமைக்கு உபலக்ஷணம். ஆகையாலே எல்லாரும் கூடிவந்து ஶ்ரீநந்தகோபர் திருமாளிகை வாசலிலே சென்று ஶ்ரீநந்தகோபர் உள்ளிட்டாரை எழுப்பி, “செய்யாதன செய்யோம்” (திருப்பாவை – 2) என்கிறபடியே முறை தப்பாமே முதலிகளையும் பிராட்டியையும் முன்னிட்டுக் கொண்டு எம்பெருமானைப் பெறப் பார்க்கிறார்கள். “வேதம் வல்லார்களைக் கொண்டு” (திருவாய் – 4.6.8) இத்யாதி. “காலை நன்ஞானத்துறை படிந்தாடி” (திருவிருத்தம் – 93); துறையாகிறது இத்துறை. இத்துறை தப்பினால் சூர்ப்பணகி பட்டது படுமத்தனை. “சீதைக்கு நேராவான்” (சிறிய திருமடல் – 39) என்றாளிறே. உகந்தருளின நிலங்களில் புகுவார்க்குத் திருவாசலில் முதலிகளை அநுமதிகொண்டு புகவேணுமென்று ஶாஸ்த்ரங்களில் சொல்லுமது – பருவம் நிரம்பாமையாலே இவர்களுக்கு இரந்துபுக வேண்டுகையாலே கோல்விழுக்காட்டிலே அநுஷ்டித்தாராய் விட்டார்கள். “யேஷாம் த்ரீண்யபதாநாநி யோநிர் வித்யா ச கர்ம ச தே ஸேவ்யாஸ் தைஸ்ஸமாயுக்த: ஶாஸ்த்ரேப்யோபி விஶிஷ்யதே” வைஷ்ணவர்களாசாரத்தை ஶாஸ்த்ரங்கள் பின் செல்லுமத்தனை. “வைதிகாஸ்த்வதீய கம்பீர மநோநுஸா ரிண:” ஶாஸ்த்ரத்தை வரியடைவே கற்றாலும் அதில் அர்த்த நிர்ணயத்துக்கும் அநுஷ்டாநத்துக்கும் நெடுங்காலம் செல்லும். அவர்கள் அதின் தாத்பர்யத்தை அரைச் சந்தையாலே சொல்லிவிடுவார்கள். அநந்தரத்திலே அநுஷ்டிக்கலாயிருக்கும். “கட்டின குளிகையைக் கையிலே கொடுத்தால் அப்போதே இரும்பைப் பொன்னாக்கி விடுமாப்போலே” என்று ஜீயர் அருளிச்செய்த வார்த்தை. ஶ்ரீராமாயணம் ஶரணாகத வத்ஸலன் என்கிறது. மஹாபாரதம் ஶரணாகத பக்ஷபாதி என்கிறது. அது சிறையிருந்தவள் நீர்மை சொல்லுகிறது. இது தூதுபோன வன் நீர்மை சொல்லுகிறது. நிருவநந்தபுரத்திலே ஒரு பாகவதரோடே மூன்று பிள்ளைகள் ஶ்ரீராமாயணம் அதிகரித்துச் சொன்ன வார்த்தையை நினைப்பது. உபநிஷத்தும் “முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்யே” என்று நின்றது. அதுக்கு உபப்ருஹ்மணமான அபயப்ரதாநத்துக்கு வாசி அவனைப் பற்றுமிடத்தில் ததீயரை முன்னிட்டுக் கொண்டு பற்றுவதென்கை. “நிவேதயத மாம் க்ஷிப்ரம்” “ஆநயைநம் ஹரிஶ்ரேஷ்ட”.
வ்யாக்யானம் – (நாயகனாய்) “நாயகனாய் நின்ற கோயில் காப்பானே” என்னவுமாம்; “எங்களுக்கு நாயகனான நந்த கோபனுடைய கோயில் காப்பானே” என்னவுமாம். இவர்களால் லபிக்கும் எம்பெருமான் பக்கலிலன்று நாயகத்வம். இவர்கள் தங்கள் பக்கலிலே. “பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரஸீத மத்வ்ருத்தமசிந்தயித்வா” என்றார் ஆளவந்தார். ஸர்வஶாஸ்த்ரங்களையும் ஆராய்ந்தவராகையாலே பெருப்பெருத்த உபாயங்களைப் பார்த்தவிடத்தில் “தன் தலையால் அவனைப் பெறலாயிருந்ததில்லை, பகவத் ஸம்பந்தமுடையாரோட்டை ஸம்பந்தமே பகவத்கடாக்ஷத்துக்கு உறுப்பு” என்றார். அதாகிறது – இவன் அத்யவஸாயம் போட்கனாயிருக்கும்; புருஷகாரம் வலிதாக, அதுவே கார்யகரமாமென்கை. “வல்ல பரிசு வருவிப்பரேல்” (நாச்சி திரு – 10.10) என்று “பெரியாழ்வாராலே பெறுமத்தனையே” என்று அறுதியிட் டாற்போலே. “பாபிஷ்ட: க்ஷத்ரபந்துஶ்ச புண்டரீகஶ்ச புண்யக்ருத் ஆசார்யவத்தயா முக்தௌ தஸ்மாதாசார்யவான் பவேத்” என்னுமாபோலேயும், பட்டர் நஞ்சீயருக்கு “பெருமாளே உமக்குத் தஞ்சமென்றிரும், பெருமாள் தஞ்சமென்று சொல்லுகையாலே நானும் உமக்குத் தஞ்சம்” என்றருளிச்செய்தார். ஆகையால் ஆசார்யர்களை உபகாரகர் என்றிட்டு “நாயகனாய் நின்ற” என்கிறார்கள். (நந்தகோபனுடைய கோயில்) எம்பெருமான் பரதந்த்ர னாகையாலே ஶ்ரீநந்தகோபருடைய கோவில் என்கிறார்கள். பரமபதத்திலும் அப்படியே. “அடியார் நிலா நின்ற வைகுந்த” (திருவிருத்தம் – 75) மிறே. “வானிளவர” (பெரியாழ்வார் திரு – 3.6.3) சிறே. ஶ்ரீஸேநாபதியாழ்வான் பிரம்பின் கீழும், திருவநந்தாழ்வான் மடியிலும், திருவடி சீறகின் கீழும் வளருமித்தனை இத்தத்வம். “யுவராஜமமந்யத” என்று சக்ரவர்த்தி பாரித்துப் போனான். ஶ்ரீநந்தகோபர் பெற்றார். “நந்தகோபாலன் கடைத்தலைக்கே” (நாச்சி திரு – 12.3). ஒரு தண்ணீர்ப் பந்தலைக்கண்டால் “இது வைத்த சீமான் ஆர்?” என்னக்கடவதிறே. “தயரதன் பெற்ற மரதகமணித்தட” (திருவாய் – 10.1.8) மிறே. தங்களை ஶேஷியாக வைக்க இசைவாரோடே பரிமாறவிறே இங்கு வருகிறது. இங்குத்தைக்கு ஶ்ரீஸத்யபாமைப் பிராட்டியை நாடாளவிட்டு, தான் பாண்டவர்களுக்குச் சொல்லிற்றுச் செய்து திரியும். (கோயில் காப்பானே) ஶேஷத்வப்ரயுக்தமான பேரே ஆத்மாவுக்கு நிலைநின்ற பேர். “யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை:”. சிறு பெண்களாகையாலே அவன் தொழிலையிட்டுப் பேசுகிறார்கள். இன்னது பிடிப்பான் என்னுமாபோலே அவனுகக்கும் பேராலே சொல்லிற்றாகவுமாம்.
இவர்களிப்படி தன்னை ஸ்தோத்ரம் பண்ணினவாறே, கண்ணாலே உள்ளே புகுருங்கோள் என்றான். (கொடித்தோன்றும் தோரண வாசல் காப்பானே) கோயில் காப்பானென்று இங்குத்தைக்குமாய், அவன் தன்னையே வாசல் காப்பான் என்றதாகவுமாம்; அன்றிக்கே, க்ஷேத்ராதிபதிகளைக் கோயில் காப்பானே என்று சொல்லி, வேறே திருவாசல் காப்பானைச் சொல்லிற்றாகவுமாம். “ஆர் விக்நம் பண்ணுகிராறோ!” என்று பயப்பட்டு, எல்லார் காலிலும் விழுகிறார்கள். திருத்தோரண வாசல் காக்குமவன் பக்கலிலே சென்று, “ஆர்த்த த்ராணத்துக்காகத் தோரணமும் கொடியும் நட்டுவைத்தாற்போலே, பெண்கள் தடுமாற்றம் தீர முகம் தருகைக்கன்றோ உன்னை இங்கு வைத்தது. (மணிக்கதவம் தாள் திறவாய்) என்கிறார்கள். (மணிக்கதவம்) கதவினழகு உள்ளேப் புகுவாரை வழிபறிக்கும். “பொன்னியலும் மாடக்கவாடங் கடந்து புக்கு” (பெரிய திருமடல் – 73) “ஸ ததந்த:புரத்வாரம் ஸமதீத்ய ஜநாகுலம்” “ஒரு வண்ணம் சென்று புக்கு” (திருவாய் – 6,1,7). திருவாசல் உள்ளே புகுவாரைப் புகாதபடி கால்கட்டும். அவன் புக்காரைப் புறப்படாதபடி கால்கட்டும்.
(ஆயர் சிறுமியரோமுக்கு) “கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரணவாசல் காப்பானே” என்று நம்மை மத்யராத்ரத்திலே வந்து திறக்கவழைக்கிற நீங்களார் பயம் மிக்கிருக்கிற தேசத்திலே?” என்ன, பயமென்னென்ன, “காலமும் கல்லடிக்காலமாய், தமப்பனாம் சக்ரவர்த்தியாய், தாங்களும் ஆண்புலிகளாய், ஊரும் திருவயோத்யையாய், அதுவேயன்றிக்கே, தாங்களும் தீம்பராவது, ஊர் இடைச்சேரியாவது, அதுக்குமேல் கம்ஸன் ஶத்ருவாவது, எழும் பூண்டெல்லாம் அஸுரப்பூண்டாவது, ஆன பின்பு பயம் கெட்டிருக்கலாமோ?” என்ன, “எங்களுக்குப் பயப்படவேணுமோ, நாங்கள் இடைச்சாதியன்றோ?” என்ன, சுகஸாரணர்கள் ஶ்ரீஸேனையோடே கலந்து புகுந்தாற்போலே ,இடையரோடே அஸுரர்கள் கலந்து புகுரிலும் தெரியவொண்ணாது” என்ன, “அதுவுண்டோ, நாங்கள் பெண்களன்றோ” என்ன, “சூர்ப்பணகை பெண்பெண்டாட்டி யன்றோ?” என்ன, “அவள் ராக்ஷஸி. நாங்கள் இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையர்க்குப் பிறந்த இடைச்சிகளன்றோ” என்ன, “பூதனைக்குப் பின்பு இடைச்சிகளுக்கன்றோ மிகவும் பயப்பட வேண்டுவது” என்ன, “நாங்களும் அங்ஙனே ஒரு க்ருத்ரிமமறியாத கன்யகைகளன்றோ; எங்கள் பருவத்தைப்பாராய்” என்ன, “பின்னைப் பருவத்தைப் பார்க்கிறோம், வார்த்தையிலே அறியலாம், நீங்கள் வந்த கார்யத்தைச் சொல்லுங்கோள்” என்ன, (அறைபறை) “நாங்கள் நோன்புக்கு உபகரணமான பறை வேண்டி வந்தோம்” என்ன;
“அதுவாகில் திருப்பள்ளியுணர்ந்தவாறே விண்ணப்பஞ்செய்து கேள்வி கொள்ளுகிறோம்” என்ன, (மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்) “அது வேண்டா; நேற்றே கேட்டு அவனும் தருகிறோம் என்றான்” என்கிறார்கள். (மாயன்) எங்கள் கோஷ்டியிலே தாழ நின்று கையைக்காலைப் பிடித்தபடி. (மணிவண்ணன்) தாழநின்றானாகிலும் விடவொண்ணாத வடிவே போருமென்கை. (நென்னலே வாய் நேர்ந்தான்) பூவலரும்போது பிறக்கும் செவ்விபோலே, வார்த்தையருளிச் செய்யும்போதை அழகு “வாக்மீ ஶ்ரீமாந்” என்னக்கடவதிறே. (நென்னலே) திரமுளையினன்று “நென்னேற்றைக் கையார் சக்கரமிருக்கும்படியென்!” என்னுமாபோலே. “உன் கால் பிடிக்கிற இன்று போலேயோ? அவன் காலைக்கையைப் பிடிக்கவிருந்த நேற்றைநாளுமொருநாளே!” என்கிறார்கள். (வாய் நேர்ந்தான்) “ஓலக்கத்தே ஒரு வார்த்தை சொன்னானாகில் இத்தை மெய்யென்றிருக்கவோ? எங்களுக்கு அந்தரங்கமாகச் சொல்லவேண்டாவோ?” என்ன, “ராமோ த்விர்நாபிபாஷதே” என்றும், “அந்ருதம் நோக்தபூர்வம் மே” என்றும் “க்ருஷ்ணே ந மே மோகம் வசோ பவேத்” என்றும் சொல்லாதொழிந்தவன்று செய்யலாவதில்லை; சொன்னபின்பு அவன் வார்த்தையிலே பழுதுண்டோ? என்ன
(தூயோமாய் வந்தோம்) “பத்தெட்டுத் திருமுகம் மறுக்கப்பெற்றுடையோம்; எங்கள் பணிக்கு அவனோ கடவன்? நாங்கள் ஆராயக்கடவோம்” என்ன, உனக்கு ஆராயவேண்டும் பயமில்லை. நாங்கள் தூயோமாய் வந்தோம்” என்கிறார்கள். “தூய்மை” அவனுடைய ரக்ஷையும் அவன் ப்ரயோஜனமுமொழிய, ஸ்வ யத்நமாதல் ஸ்வப்ரயோஜநமாத லின்றிக்கே இருக்கை. திருவடி, திருவாழிமோதிரத்தையும் தன் வடிவையும் காட்டாதே தன் மிடற்றோசையைக்காட்டி விஶ்வஸிப்பித்தாற்போலே தங்களுடைய ஆர்த்த த்வநியைக் காட்டுகிறார்கள். “ப்ரணாதஶ்ச மஹாநேஷ:” என்ற ஆர்த்த நாதம். “ஆநயைநம் ஹரிஶ்ரேஷ்ட” என்னப் பண்ணிற்றிறே. பண்டுசொன்ன தூயோமில் வார்த்தையடைய இவ்விடத்திற்கு ஆகரம். (வந்தோம்) இங்கு வர்த்திக்கிற உனக்கு அடைவு தெரியாமை இல்லை. அவன் செய்யக்கடவதை நாங்கள் செய்தோமென்கை. “இப்படி ப்ரமாணமென்?” என்று அவன் கேட்க, (துயிலெழப் பாடுவான் வந்தோம்) என்கிறார்கள். “உங்களாற்றாமை பறையினளவல்ல; இன்னும் சொல்லுங்கோள்” என்ன, “உறகலுறகல்” (பெரியாழ்வார் திருமொ – 5.2.9)என்று உணர்வாரையும் அசிர்க்கும் பெரியாழ்வார் பெண்பிள்ளைகள். உன்னையும் அசிர்ப்போம் சிலர்” என்கிறார்கள். பிராட்டி, “ஸ மயா போதித:” என்று அவன் உறங்குகிறபடி கண்டு உகந்தாள். இவர்கள் உணரும்படி காண ஆசைப்படுகிறார்கள். “படுத்தப் பைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்கு” (திருப்பல்லாண்டு – 9) “மடியாதின்னே நீதுயில் மேவி மகிழ்ந்தது தான்” (திருவாய் – 8.3.5) “அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே” (திருப்பள்ளி – 1) என்னுமவர்கள் பெண்பிள்ளையிறே இவர்கள்.
“ஆகில் விடிந்தவாறே பார்த்துக்கொள்ளுகிறோம்; இப்போது போங்கோள்” என்றான் – (வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா) மநஸ்ஸிலே நினைத்தாயாகிலும் வாயாலே நெருப்புச் சொரியாதேகொள்; இவர்களுக்கு இவன் வாயதிறே வாணாள். (அம்மா) அவன் வாய் நேர்ந்தாலும், இவன் காட்டித்தராவிடில் கார்யமாகாதே. “வத்யதாம்” என்றவர்தாமே “அஸ்மாபிஸ்துல்யோ பவது” என்னக்கடவதிறே. “தாநஹம் த்விஷத:” என்றவனே “ததாமி” என்றாலும் இவர்களுக்கு வேண்டாவிடில், “ந க்ஷமாமி கதாசந” என்னுமத்தனை. “பிதாமஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத” (கோயில் காப்பானே) “ஏஷ ஸுப்தேஷு ஜாகர்த்தி” என்கிறபடியே இவனிசைவதற்கு முன்பு அவனுணர்ந்து இவளை நோக்கும். இவனிசைந்தபின்பு இவனுணர்ந்து அவளை நோக்க, அவனுறங்கும்.
(நீ நேசநிலைக்கதவம் நீக்கு) “உள்ளிருக்கிறவனோ எங்களுக்கு நாதன். நாங்கள் த்வாரஶேஷியையொழிய பரஶேஷியை உடையோமல்லோம். நீயன்றோ எங்களுக்கு நிர்வாஹகன். ஆனபின்பு “வாசா தர்மமவாப்நுஹி” பண்ணாயோ? என்று இவர்கள் அர்த்திக்க, “தாளையுருவிக் கதவைத் தள்ளிக்கொண்டு புகுருங்கோள்” என்ன, “அது உன்னிலும் பரிவுடைய கதவு. அதுதான் எங்களால் தள்ளப்போகாது. நீயே திற” என்கிறார்கள். (நேசநிலைக்கதவம்) கதவும் நிலையும் செறிந்த செறிவாகவுமாம். கம்ஸன் படைவீட்டில் சேநாசேதநங்களடைய ப்ரதிகூலமா யிருக்குமாபோலே, இங்கும் அடைய அநுகூலங்களா யிருக்கும். “படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேன்” (பெருமாள் திரு – 4.9) என்னுமாபோலே.
@@@@@
பதினேழாம் பாட்டு
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற்கழலடி செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேல் ஓரெம்பாவாய்.
அவதாரிகை – பதினேழாம்பாட்டு. கருந்தாளையுருவித் திருவாசல்காப்பான் “நீங்கள் உள்ளே புகுருங்கோள்” என்ன, உள்ளே புக்கவாறே பிள்ளைக்குக் காவலாக “பெண்கள் களவு காண்பர்கள்” என்று வாசலிலே நோக்கிக் கிடக்கிற ஶ்ரீநந்தகோபரை எழுப்புகிறார்கள். “பேரனான அநிருத்தாழ் வானை யகப்படக் களவுகாணக்கடவ அவர்கள் ஸாக்ஷாத் மந்மதமந்மதனாய் அழகுக்கு வாய்த்தலையான இவனை விடுவர்களோ?” என்று காத்துக்கொண்டு கிடந்தார்.
வ்யாக்யானம் – (அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்) “புடவையோடு தண்ணீரோடு சோற்றோடு வாசியற வேண்டுவார்க்கு வேண்டுவற்றையடையக் கொடுக்குமவனே!” என்கிறார்கள். ஏவகாரத்தாலே “இதுவேயோ இவன் கற்றது” என்னும்படி யிருக்கை. (அறம் செய்யும்) பலாபிஸந்திரஹிதமாக ஆந்ருஶம்ஸ்யத்தாலே கொடுக்கை. சக்ரவர்த்தியைப்போலே “மஹதா தபஸா ராம” என்னவேண்டுவதில்லையே. “வைத்தமாநிதி” (திருவாய் – 6.7.11) இவன் எடுத்தப் பேராளனிறே. (திருவாய் – 8.1.3) “எங்கள் தாரக த்ரவ்யத்தையும் தாராய்” என்கிறார்கள். (எம்பெருமான்) பெண்களுக்கு க்ருஷ்ணனைப் பெற்றுத்தந்த ஸ்வாமாயாயுள்ளவனே! என்கிறார்கள். “ஏகைக பலலாபாய ஸர்வலாபாய கேஶவ:” என்றும், “உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனெம்பெருமான்” (திருவாய் – 6.7.1) என்றும் ஒன்றே எல்லாமென்றிருப்பவர்களுக்கு அவ்வொன்றையும் தாராய். (நந்தகோபாலா எழுந்திராய்) “நந்தகோபன் குமரன்” (திருப்பாவை – 1) என்று உம்முடைய ஆந்ருஶம்ஸ்யத்தைக் கண்டு உம்முடைய பிள்ளையென்றன்றோ நாங்களாசைப்பட்டது. “குணைர்தஶரதோபம:” பெற்றுத்தந்த நீர் குறையும் நாங்கள் பெறும்படி பாரீரென்கிறார்கள். ஹிதபுத்தி பிதாக்கள் பாடே உண்டாகையாலே “புகுருங்கோள்” என்றாரிறே.
உணர்ந்து அவரும் அநுமதி பண்ணினபடி தோற்றக்கிடந்தார். அவரைவிட்டு உள்ளே புகுந்து அசோதை பிராட்டியை எழுப்புகிறார்கள். (கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெருமாட்டி அசோதாய் அறிவுறாய்) நாங்கள் வருந்தனையுமன்றோ காப்பதென்கை. அசோதைப் பிராட்டியை எழுப்பி ஶ்ரீநந்தகோபரை எழுப்பாமல் ஒழிவானென்னென்னில் பிள்ளைமேல் ஸங்கத்தால் அவனுக்கு அணித்தாகவும் பர்த்ருஸம்ஶ்லேஷத்துக்காகவும் இரண்டுக்கும் நடுவாக உள்கட்டிலே கிடக்கையாலே பிற்பட அசோதை பிராட்டியை எழுப்புகிறார்கள். (கொம்பனாரித்யாதி) “நாரீணாமுத்தமா வதூ:” என்று பெண்களாய்ப் பிறந்தார்க்கெல்லாம் தலையாய்ப் பிறந்தவளே! கொம்பு அனார் – வஞ்சிக் கொம்பு போன்றவளே! (குலவிளக்கே) பெண்ணாய்ப் பிறந்தார்க்கெல்லாம் த்ருஷ்டியான விளக்கென்கை. இக்குடிக்கு மங்களதீபமென் னவுமாம். (எம்பெருமாட்டி) க்ருஷ்ணனைப் பெற்றுத்தந்து எங்களுக்கு ஸ்வாமினியானவளே! (அசோதாய்) பெண்களுக்கும் க்ருஷ்ணனுக்கும் சேர்த்தி கண்டு உகக்குமவளன்றோ நீ. “அஞ்சவுரப்பாளசோதை” (நாச்சி திரு – 3.9) என்றது பற்றாசாகவன்றோ நாங்கள் வந்தது. (அறிவுறாய்) நீ அறிந்தவன்று எங்களுக்கு ஒரு குறையுண்டோ? என்கிறார்கள். இவர்கள் வந்தது தங்களாற்றாமையிறே.
“உள்ளே புகுருங்கோள்” என்று அவளநுமதி பண்ண, அவள் ஸம்மாநத்தோடே உள்ளே புக்கு க்ருஷ்ணனை எழுப்புகிறார்கள். (அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோமானே உறங்காது எழுந்திராய்) என்கிறார்கள். (உம்பர்கோமானே) அச்செயலாலே தேவர்களை எழுதிக்கொண்டபடி. நித்யஸூரிகளை என்னவுமாம். “ஐயரும் ஆய்ச்சியும் சொல்லவேண்டாவோ?” என்ன, பரதந்த்ரன் என்று கண்ணழிவு சொல்லவொண்ணாது. அவர்களை அநுமதி கொண்டோம். எழுந்திராய்” என்கிறார்கள். அநந்ய ப்ரயோஜனராய் அணையவந்தார்க்கு முகம் கொடுக்கலாகாதோ? ஆண்களுமாய் ப்ரயோஜநாந்தரபரருமாய் இருப்பார்க்கோ கார்யம் செய்யலாவது. தேவர்களுக்குக் குடியிருப்புக் கொடுத்த நீ எங்கள் குடியிருப்பை அழிக்கவோ பார்த்தது? உறங்குவாரைத் தழுவக்கடவ உனக்கு உணர்ந்து வந்தவர்களைத் தழுவலாகாதோ? மண்ணைத்தழுவுவது, பெண்ணைத் தழுவலாகாதோ?
அண்ணரை எழுப்பிற்றிலர்களோ? என்ன, “நம்பி மூத்தபிரானை எழுப்ப மறந்தோம், இதொரு தப்புப் பிறந்தது. என்று நம்பி மூத்தபிரானை எழுப்புகிறார்கள். (செம்பொற்கழலடி செல்வா பலதேவா உம்பியும் நீயுமுறங்கேல்) “பொற்கால் பொலியவிட்டுப் பிறந்த சீமானே! எழுந்திராய்” என்கிறார்கள். “பலதேவன்” என்று திருநாமம். “பலைகதாமநி” அவன் பாரதந்த்ர்யத்தாலே கட்டிக்கொண்டு கிடக்கும்; இவன் ஆற்றாமையாலே கட்டிக்கொண்டு கிடக்குமென்கை. “ஸந்தேஶைஸ்ஸாம மதுரை: ப்ரேமகர்ப்பைரகர்விதை: ராமேணாஶ்வாஸிதா கோப்ய: ஹரிணா ஹ்ருதசேதஸ:” என்கிறபடியே எங்களையும் அவனையும் பொருந்தவிடுமவனல்லையோ? என்கிறார்கள். வெறும் படுக்கையைக் கட்டிக்கொண்டு கிடக்கவமையுமோ? திருவநந்தாழ்வானிறே தமையனாய்ப் பிறந்தான். “சென்றால் குடையாம்”. “உன் படுக்கையை” நீ விடாதாப்போலே எங்கள் படுக்கையும் எங்களுக்குத் தாராய்” என்கிறார்கள்
@@@@@
பதினெட்டாம் பாட்டு
உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – பதினெட்டாம் பாட்டு. பெண்பிள்ளைகள் எல்லாரையும் எழுப்பி, திருவாசல் முதலிகளையும், நந்தகோபர் உள்ளிட்டாரையும் எழுப்பினார்கள். இந்நேர்த்தியெல்லாம் பிராட்டியை எழுப்பி, அவனோடே கூட அவளையும் முன்னிட்டு எம்பெருமானைப் பற்றாவிட்டால், பலவ்யாப்தமாக மாட்டாமையாலே, இனி மூன்று பாட்டாலே நப்பின்னைப் பிராட்டியை எழுப்பி, அவ்வழியாலே எம்பெருமானைப் பற்றுகிறது. “பிராட்டியையொழிந்தால் பலவ்யாப்தமாகாதோ?” என்ன, ஆகாது. எங்ஙனேயென்னில் – இளையபெருமாளை நில்லுமென்ன, பிராட்டியைப்பற்றி, அவன் ஸங்கல்பத்தை யழித்துப் பெருமாளோடுகூடப் போனார். காகம் அபராதத்தின் எல்லையிலே நின்றுவைத்து, இவள் ஸந்நிதி யுண்டாகையாலே ப்ரபந்நர் பெறும் பேற்றைப் பெற்றது. ராவணனுக்கு அத்தனை அபராதம் இன்றிக்கேயிருக்க, பிராட்டி ஸந்நிதி இல்லாமையாலே தலையறுப்புண்டு போனான். பிராட்டி ராவணனைக்குறித்து அருளிச்செய்த ஹிதம் – ஶிம்ஶுபா வ்ருக்ஷத்திலே மறைந்திருந்த திருவடிக்கும் விபீஷணாழ்வானுக்கும் அவன் பரிகரத்துக்கும் உடலாய், பிராட்டியை முன்னிட்டுப் பெருமாளைப் பற்றுகைக்கு உடலாயிற்று. எம்பெருமான் அர்ஜுனனை நோக்கி அருளிச்செய்த ஹிதம் நம் ஆழ்வார்கள் கொண்டுபோய் விட்டாற்போலே. திருவடி பிராட்டியைக் காண்பதற்கு முன்பு “வாநரோஹம்” என்றான், பிராட்டியைத் திருவடி தொழுதவநந்தரம் “தாஸோஹம்” என்றான்.
மற்றும் பலபர்யந்தமான இடங்களெல்லாம் ஆராய்ந்தால், இப்படியேயாயிருக்கும். எம்பெருமானார் கத்யத்திலே தமக்கு த்வயநிஷ்டை உண்டாகைக்காக முதலிலே பிராட்டியை ஶரணம் புக்கார். இவர்களும் ஒரு பாட்டாலே அவள்தனக்கு அடிமைபுக்கு, ஒரு பாட்டாலே உபாயத்துக்கு உடலாக அவளைப்பற்றி, ஒரு பாட்டாலே உபேயத்துக்கு உடலாக அவளையும் அவனையும் பற்றுகிறார்கள். “மாசதிரிது பெற்று நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா” என்னக்கடவதிறே. தன்னுடைய கர்மாத்யுபாயங்களாலே எம்பெருமானைப் பெறப்பார்க்கை இளிம்பு. அவற்றைப் பொகட்டு எம்பெருமா னுடைய க்ருபையாலே எம்பெருமானைப் பெறப்புகுகிறது சதிர். அந்த க்ருபைக்கும் அடியான பிராட்டி ஸம்பந்தங்கொண்டு அவனைப் பெறவிருக்கை மாசதிர். “எனக்கே அருள்கள் செய்ய விதிசூழ்ந்ததால்” (திருவாய் – 2.7.6) என்றார். அதுக்கடியாக “மாதவன்” (திருவாய் – 2.7.3) என்றார். “உபாயத்திலே வந்தவாறே உக்தி மாத்ரமே அமைந்தது. பலத்தில் வந்தவாறே ஸம்பந்த ஸம்பந்திகளும் வாழ்ந்து போயிற்று” என்றார். அவருடைய பெண்பிள்ளையன்றோ. முறை தப்பாமல் எம்பெருமானைப் பற்றுகிறாள். எம்பெருமானை முறை தப்பிப் பற்றின சூர்ப்பணகை அந்தரப்பட்டாள். பிராட்டியை முறைதப்பிப் பற்றின ராவணன் அந்தரப்பட்டான். இருவரையும் முறையாலே பற்றின விபீஷணாழ்வான் வாழ்ந்துபோனான்.
வ்யாக்யானம் – (உந்து மதகளிற்றன்) மத்தகஜம்போலே இருந்துள்ள பலத்தையுடையவன். மதமுதிதமான களிற்றையுடையவன் என்றுமாம். உந்துகை – தள்ளுகை யாய் ஊர்ப்படுகை. மிடுக்கையும் மதத்தையும் உந்த களிறு என்னவுமாம். “களிறுண்டோ இவர்க்கு” என்னில், ஶ்ரீவஸுதேவரும் ஶ்ரீநந்தகோபரும் ஒரு மிடறாயிருக்கை யாலே அங்குள்ளதுமொன்றாய்ப் பரிமாறும். “வாரணமாயிரம் சூழவலம்” (நாச்சி திரு – 6.1) இத்யாதி. திருவாய்ப்பாடியில் பசுக்களும் யானைகளும் ஒக்கத் திரியுமத்தனை. தத்துபுத்ரனுக்கு இரண்டிடத்திலும் கூறுண்டாகக் கடவதன்றோ. ஆகையாலேயன்றோ பிள்ளைகள் போய் ஆனைகளோடே போருற்றது. “குணைர்தஶரதோபம:” என்று எல்லாவற்றுக்கும் அவரை ஒப்பாகச் சொல்லவேண்டுகை. (ஓடாத தோள்வலியன்) ப்ரதிபக்ஷம் காணப் பணைக்கும் தோள்வலியையுடையவன். “யுத்தே சாப்யபலாயநம்” என்கிறபடியே எதிரிகளைக் கண்டு பிற்காலியாதே கொல்லவல்ல மிடுக்கு. இப்போது இவர் மிடுக்குச் சொல்லுகிறது தங்கள் பயம் கெடுகைக்காக. கம்ஸனுக்குக் குடிமக்களாயிருந்தே அவனுக்கு அஞ்சார்கள். பசு மேய்க்கிற கோலாலே தகர்க்கிலும் தகர்த்துவிடுவார்கள். “அங்கோர் ஆய்க்குலம்” (திருவாய் – 6.4.5) என்று அஞ்சினான் புகலிடம். ஶ்ரீமதுரையை நினைத்து அஞ்சினார்க்கு அச்சம் கெடுக்குமூர். (தோள் வலியன்) “ந பிபேதி குதஶ்சந” என்று நம்முடைய அநீதியை நினைத்தால் எம்பெருமான் தோளை நினைத்து பயம் கெடுமாபோலே க்ருஷ்ணனுடைய தீம்புகளை நினைத்தால் அவருடைய தோள்களை நினைத்துப் பயம் கெடலாயிருக்கை. நம்முடைய தனத்துக்குக் காவலுண்டென்கிறார்கள்.
(நந்தகோபாலன் மருமகளே) “ஸ்நுஷா தஶரதஸ்யாஹம் ஶத்ருஸைந்யப்ரதாபிந:” என்று பிராட்டி அருளிச்செய்தாப் போலே “ஶ்ரீகும்பர் மகள்” என்னுமதிலும் மாமனாரையிட்டுச் சொல்லுகை அவளுக்கும் ப்ரியமாயிருக்கையாலே மருமகளென்று சொல்லுகிறார்கள். இங்கே மைத்துனமை யாடி வளர்ந்து வாழ்க்கைப்படுகையாலே, ஶ்ரீநந்தகோபர் ஸம்பந்தமல்லது இன்னான் மகளென்றால் அறியார்கள். இப்படிச் சொன்னவாறே “திருவாய்ப்பாடியில் கம்புக் கற்றையுமகப்பட ஶ்ரீநந்தகோபர் மருமகளல்லாதாருண்டோ? நமக்கென்?” என்று பேசாதே கிடந்தாள் – (நப்பின்னாய்) என்று விஶேஷிக்கிறார்கள்.
(கந்தம் கமழும் குழலீ) முன்பு க்ரமமறியாதே அவனையெழுப்பினமை தாழ்க்கைக்கடி என்று முறையாலே எழுப்புகிறார்கள். “என்னை நீங்கள் சொல்லுகிறதென்?” என்ன, “எங்களையும் க்ருஷ்ணனையும் கூட்டிவிடாய்” என்ன, “இங்கு அவன் உண்டோ?” என்ன, “பூ நாறாநின்றது. வ்யாவ்ருத்தப் பரிமளமும் ஸமுதாய பரிமளமும் அறியோமோ?” என்ன, அவன் “ஸர்வகந்தஸ்ஸர்வரஸ:” என்று பூவுக்கு நாற்றம் கொடுக்குமாபோலே, அவனுக்கு நாற்றம் கொடுக்கவல்ல குழல் இவளதென்கை. உன் பரிமளபோகத்திலே அவன் அழுந்திக் கிடக்கும். அநுபவிக்கைக்கு நாங்கள் வேண்டாவோ? (கடை திறவாய்) கிண்ணக வெள்ளத்தைக் கரைக்கட்டினாற்போலே அடைத்துக்கொண்டு கிடவாதே எல்லாரும் அந்வயிக்கும்படி வெட்டிவிடாய். இவர்கள் அவளுக்கு அவயவத்தோபாதி யாகையாலும், ஸ்ரக் சந்தநாதிகளோபாதியாகையாலும், போகோபகரணமாகை யாலும், அவர்களோடே புஜிக்கும்போது தன் திருமுலைத்தடத்தாலே நெருக்கினவோபாதி அவளுக்கு ப்ரியமாயிருக்கையாலும் அவளை எழுப்புகிறார்கள். “உன்றன் திருவுள்ளம் இடர்கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்” என்னக்கடவதிறே.
“மத்யராத்ரத்திலே வந்து எழுப்புகிறதென்? போது விடியவேண்டாவோ?” என்ன, “போது விடிந்தது” என்ன, “விடிந்தமைக்கு அடையாளம் சொல்லுங்கோள்” என்ன. “கோழி கூவா நின்றது” என்ன, “அது சாமக்கோழிகாண்” என்கிறாள். “என்னவொண்ணாது. (வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்) என்கிறார்கள். “உணர்ந்தவையெல்லாம் கூடக் கூப்பிட, பின்னை உறங்கப்புகும். அது அடையாளமாகமாட்டாது. வேறடையாளமுண்டாகில் சொல்லுங்கோள்” என்று பேசாதே கிடந்தாள். (மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்) இப்பூம்படுக்கையில் நின்றும் இவையுணரும்போது விடிந்ததாகவேண்டாவோ? “உன்னுடைய ஸ்பர்ஶமும் நோக்கும் தாரகமாயிருக்கிற குயில்கள் விடிந்தபின்பும் உன்னைக்காணப் பெறாமையாலே நாக்கொட்டிப் பலகால் கூப்பிட்டு நின்றனகாண்” என்கிறார்கள். அவையும் மேலே கூவ, நாங்கள் கீழே கூவா நின்றோம். (மாதவிப்பந்தல்மேல்) ஸுகஸ்பர்ஶத்தாலே “நோபஜநம் ஸ்மரந்” என்கிற படுக்கையிலே உறங்குகிறவை.
(பந்தார் விரலி) பந்தும் கையும் பொருந்தினபடி. க்ருஷ்ணனை ஒருகையாலும் பந்தை ஒரு கையாலும் அணைத்துக்கொண்டு கிடக்க, செண்டை ஒரு கையாலும் அவளை ஒரு கையாலும் அணைத்துக்கொண்டு கிடக்கும். “அந்தப்பந்து நாமாகில் எங்களை கைவிடவேண்டா” என்கிறார்கள். இவன் இவளுக்கு போகோபகரணம்; பந்து – லீலோபகரணம். ஒருகையிலே நாரமாயிற்று, ஒரு கையிலே அயநமாயிற்று. ஒரு கையிலே விபூதியாயிற்று; ஒரு கையிலே விபூதிமானாயிற்று. “இப்போது பந்து ப்ரஸங்கமென்?” என்ன. “க்ருஷ்ணனோடே பந்தடித்து, அவனைத்தோற்பித்த கர்வமோ வாய்திறவாதொழிகிறது” என்னுமத்தாலே. “திறந்தால் நீங்கள் செய்யக்கடவதென்?” என்ன, (உன் மைத்துனன் பேர்பாட) “நீயுமவனும் மைத்துனரை கொண்டாடி ஒன்றுக்கொன்பது சொல்லி இட்டீடு கொள்ளும்போது மத்யஸ்த்தராய் நில்லாதே உன் பக்ஷத்திலே நின்று அவன் தோல்விக்குக் கவிபாடக்கடவோம்” என்கிறார்கள். இருவரும் ஒன்றாய்ச் செல்லுமன்று செல்லவும், பிரிந்தவன்றும் தாய் பக்ஷத்திலே ப்ரஜைகள் நிற்பது. “அஸ்மிந் மயா ஸார்த்தம்” என்கிறபடியே இளையபெருமாள் பிராட்டி பக்ஷத்திலே நின்றாற்போலே. (பேர்பாட) “நாமம் பலவுமுடை நாரணநம்பி” (பெரிய திருமொ – 10.8.4) என்று அவனுக்குள்ளனவெல்லாம் சொல்லிக் கொடுக்கைக்கு.
(செந்தாமரைக்கையால்) அவனும் ஆசைப்படும் கை. அவனுடையது “தாமரைக்கை” (திருவாய் – 7.6.1) யிறே. “ததௌ பஹு” எங்களை “மா ஶுச:” என்னும் கை. “பவேயம் ஶரணம் ஹி வ:” என்னும் கை. “நீங்கள் பண்ணுகிற பாபங்களுக்கு நீங்களஞ்சவேண்டா; நானுளன்” என்கிறது பெருமாளுடைய அஞ்சலென்ற கை. “ஈஶ்வர ஸ்வாதந்த்ர்யத்துக்கு நீங்களஞ்சவேண்டா” என்கிறது பெரியபிராட்டியார் அஞ்சலென்ற கை. (சீரார் வளையொலிப்ப) வளையையேறக்கடுக்கித் திறக்கப்புக்காள். “அங்ஙனொண்ணாது. நாங்களும் அவனும் த்வநிகேட்டு வாழவேணும்” “சங்கு தங்கு முன்கை” (திருச்சந்த – 57) இவளது. “இருகையில் சங்கிவை நில்லா” (திருநெடு – 24) விறே இவர்களுக்கு. கலியர் சோற்றை வர்ணிக்குமாபோலே வர்ணிக்கிறார்கள். “சூடகமே தோள்வளையே” (திருப்பாவை – 27) என்று அவர்கள் பூட்டினாலிறே இவர்களுக்குள்ளது. எம்பெருமானார் விஶேஷித்துகந்த பாட்டு.
(வந்து திறவாய்) யந்த்ரத்தாலே கண்வளர்ந்தருளினபடியே கிடந்து திறக்கப் புக்காள். அதுவொண்ணாது. அவனும் நாங்களும் நடையழகுகண்டு வாழும்படியாக வேணும். (மகிழ்ந்து) பேறு உன்னதாகவேணும். தர்மத்துக்குத் திறக்கவொண்ணாது. வழியே பிடித்து “பவேயம் ஶரணம் ஹி வ:” என்னவேணும்.
@@@@@
பத்தொன்பதாம் பாட்டு
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக்கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்
மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனைபோதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – பத்தொன்பதாம் பாட்டு. இவள் திறக்கப்புக, “நம்முடையார்க்கு இவள் முற்பட்டாளாகவொண்ணாது” என்று இவளைத் திறக்கவொட்டாதே மல்கட்டாகக்கட்டி படுக்கையிலே விழவிட்டுக் கட்டிக்கொண்டு கிடக்க, மறுமாற்றம் கேளாமையாலே பின்னையும் க்ருஷ்ணனை உணர்த்துகைக்காக “நீ திறக்கவேணும்” என்கிறார்கள். இத்தால் ஆஶ்ரிதர்க்கு மாறிமாறிப் பரிகைக்கு இருவருமுண்டென்கை. “என்னடியார் அது செய்யார்” (பெரியாழ்வார் திருமொ – 4.9.2) என்னும் அவன்; “ந கச்சிந்நாபராத்யதி” என்னும் இவள். “அவர்கள் உள்ளு பிறந்த வ்யாபாரம் அறிந்தபடி எங்ஙனே?” என்னில் – ஸகோத்ரிகளாகையாலே அறிவர்களிறே.
வ்யாக்யானம் – (குத்து விளக்கெரிய) நாம் புறம்பே பனியிலே தரையிலே நிற்க, ஊராரிசைவும் வேண்டாதே. “கீழ்வானம் வெள்ளென்றது” (திருப்பாவை – 8) என்கிற பயமுமின்றிக்கே இருட்டுத் தேடவும் வேண்டாதே, பகலையும் இரவாக்கிக்கொண்டு விளக்கெரிய படுக்கையிலே கிடக்கப்பெறுவதே! இவள் தன்னை விளக்காகக் கொண்டு ப்ரகாஶிப்பதொரு நிலைவிளக்குண்டாவது என்றுமாம். அப்போது எம்பெருமானுக்குங்கூட அவள் விளக்காயி ருக்கிறபடி. “அதீவ ராமஶ்ஶுஶுபே”. (கோட்டுக்கால்) குவலயாபீடத்தைக்கொன்று அதின் கொம்பாலே செய்த கட்டில். வீரபத்நியாகையாலே மற்றையவற்றில் கண் உறங்காது. மாணிக்கத்தாலே செய்யிலும் பள்ளிக்கட்டில் என்னுமத்தனையிறே. “நாஹாரயதி ஸந்த்ராஸம்” ஆனையுள்ளிட்டன காட்டிலே கண்டால் முகவிகாஸம் பிறக்குமத்தனை. ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான அச்சமில்லை. அதுக்கடி தனக்கென்னத் தோள் படைக்கையாலே. இத்தால் “பதிம் விஶ்வஸ்ய” இத்யாதியில் ஓதிக்கிடக்கிறபடியே அவனுக்கும் தங்களுக்கும் உண்டான முறையை உணர்ந்திருப்பார்க்கு ஸ்வரூப ப்ரயுக்தமான பயமில்லை என்கை. வீரபத்நிகளுக்குத் தோளில் சரசரப்புக் காணாவிடில் தங்களோட்டைப் பெண்களைத் தழுவினத்தோடொக்கும். “ஜ்யாகிணகர்கஶை:” “உபதாய புஜம் தஸ்ய லோகநாதஸ்ய ஸத்க்ருதம்” “பாஹு ராமஸ்ய ஸம்ஶ்ரிதா” உயிரோடே பிடித்துக் கொம்பை வாங்கும் வீரனுடைய பத்நியிறே. வீரபத்நிகள் படி ப்ரபந்நர் படி. “ஆர்த்தோ வா யதி வா த்ருப்த:” என்னும்போது அவன் பலமே உபாயமாகவேண்டாவோ? புத்திபூர்வகமாகப் பண்ணின ப்ராதிகூல்யத்துக்கு அபுத்திபூர்வகமாகப் பண்ணின ப்ரபத்தி ப்ராயஶ்சித்தமாகும்போது ஶரண்யன் நீர்மையே பலிக்கிறதத்தனை. பலத்தோடே ஸந்திப்பிக்குமதன்றோ உபாயமாவது. அங்ஙனன்றேயாகில் ப்ரபத்தி வேண்டுவானென்னென்னில், சைதந்யகார்யம் வேண்டுகை யாலே. ப்ரபந்நனுக்கும் தத்ஸ்வீகாராதிகளடைய உபாயமாகவேண்டுமோ? அங்ஙனன்றேயாகில் இவன் தன்னுடைய ஸத்தை உபாயமாகவேணுமே. ஸர்வஸ்வதாநமும் தூற்றிலே நெருப்பிடுகையும் ஒத்தாப்போலே இங்கும் “ஆர்த்தோ வா யதி வா த்ருப்த:” என்கிறது. கட்டில் ஜாதிப்பேச்சு.
(மெத்தென்ற) “நாங்கள் ஆர்த்தைகளாய் வந்துகிடக்க, படுக்கையில் உள்மானம் புறமானம் கொண்டாடிக் கண்ணுறங்குவதே!” என்கிறார்கள். இவர்களுக்கு “மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளி” (திருவாய் – 9.9.4) யிறே. அவளுக்கு நெருப்பு நீராம் ஔஷதமுண்டிறே. (மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி) பஞ்சவிதமான சயனத்தின் மேலேறி. அதாவது – உஷ்ணபரிஹாரமும், ஶீதபரிஹாரமும், தர்ஶநீயமாகையும், மெத்தென்றிருக் கையும், பரம்பியிருக்கையும். அஞ்சுருவிட்டுப் பண்ணின படுக்கை என்றுமாம். அழகு, குளிர்ச்சி, மார்த்தவம், பரிமளம், தாவள்யம், பஞ்சாலே செய்த என்றுமாம். (மேலேறி) “பாதேநாத்யாரோஹதி” என்று நாங்கள் மிதித்தேறினாலன்றோ நீ அப்படுக்கையை ஏறுவதென்கை. அங்கேறினால் அவன் “கோஸி” என்னில் – இவன் “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்னக்கடவன். “ப்ரஹ்மம் நானென்னப்போருமோ!” என்னில் “பரவாநஸ்மி” என்னுமாபோலே ப்ரகாரமான ப்ரஹ்மமென்கை. “ரமமாணா வநே த்ரய:” என்று ஆசைப்படுகிறார்கள். “யஸ்ய ஶ்ரீருபபர்ஹணம்” என்று பர்யங்க வித்யையிலே சொல்லுகிறபடியே குறையற்றது. இனி மிதித்தேறுவார் குறை.
(கொத்தலர் பூங்குழல் நப்பின்னை) இவளோட்டை ஸ்பர்ஶத்தாலே கொத்துக்கொத்தாக அலருகிற பூவையும் குழலையுமுடைய நப்பின்னைப் பிராட்டி. (கொத்தலர் பூங்குழல்) பெரிய திருநாளாய்ச் செல்லாநிற்கக் குறி அழியாதிராதிறே. ஒரு மஹாபாரதத்திலே அலருகை. காலம் அலர்த்துமாபோலே அவனுடைய ஸ்பர்ஶத்தாலே அலருகை என்னவுமாம். இங்குத்தைக்குத் திருப்பூ மண்டபம் செய்வானும் தானேயிறே. “மலரிட்டு நாம் முடியோம்” (திருப்பாவை – 2) என்றத்தை மறந்தாயோ? இழவு சொல்லும்போது தங்களோடே கூட்டுவார்கள். அவளுக்கு இரண்டு தலையையும் விடவொண்ணாது. (கொத்தலர் பூங்குழல்) “வாசம் செய் பூங்குழலாள்” (திருவாய் – 10.10.2) என்னுமாபோலே.
(கொங்கைமேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா) கொங்கையைத் தன்மேலே வைத்துக்கிடந்த என்னுதல்; கொங்கைமேலே தன்னை வைத்துக்கிடந்த என்னுதல். “ந ஶாஸ்த்ரம் நைவ ச க்ரம:” “பர்யாயேண ப்ரஸுப்தஶ்ச” “மலராள் தனத்துள்ளான்” (மூன்றாம் திருவ – 3) மலைபார்ஶ்வத்தைப்பற்றி ஜீவிப்பாரைப்போலே. (மலர் மார்பா) அவளுக்கு ஜீவநம். த்வந்த்வம் பரஸ்பராஶ்ரயம். (மலர் மார்பா) திருமுலைத்தடங்கள் உறுத்துகையாலே அகன்றிருந்துள்ள மார்பு. அப்போது “ஸதைகரூபரூபாய” என்பதற்குக் குற்றமன்றோ? என்னில், ஹேயகுணங்க ளில்லையென்கை. இது கல்யாணகுணங்களிலே புகும். (வாய் திறவாய்) “ஆர்த்தோ வா யதி வா த்ருப்த:” என்று சொல்லிவைத்துப் பேசாதே கிடக்குமத்தனையோ? அவன் ஊமத்தங்காய்த் தின்று கிடக்க, இவர்கள் ஆரை எழுப்புகிறது? (வாய் திறவாய்) இருவரும் கூடினபின்பு த்வயத்தில் உத்தரார்த்தம்போலே அநுபவிக்கப் புகுருங்கோள் என்னுமித்தனை. நம்மைப் புறப்படாயென்னில் ராவணனைப்போலேயாவீர்கள். “அலர்மேல் மங்கையுறை மார்பா” (திருவாய் – 6.10.10).
அங்கொன்றும் காணாமையாலே (மைத்தடங்கண்ணினாய்) என்கிறார்கள். இவள் வாய் திறக்கப் புக்கவாறே, “இவர்கள் நம்மையொழிய இவனை எழுப்புவதே!” என்று அவனைக் கண்ணாலே “வாய் வாய்” என்ன, பேசாதே கிடந்தான். “ஆக்யாதி ஹ்ருதயம் ஹ்ருதா:” “நாம் ஆரேனையும் இன்னாதாகிறதென்? நம் பரிகரம் நமக்கு உதவுகிறதில்லை” என்கிறார்கள். இவள் விலக்கவேணுமோ? இக்கண்ணுண் டாகவமையாதோ? இக்கடலைக் கரைக்கண்டாலிறே நம் அநீதியை அவன் பார்ப்பது. “அல்லிமலர்மகள் போமயக்குக்களாகியும் நிற்குமம்மான்” (திருவாய் – 3.10.8) “மணநோக்கமுண்டான்” (பெரிய திருமொ – 8.10.1) “ந ஜீவேயம் க்ஷணமபி” என்னப்பண்ணுமவையிறே. “மையிட்டெழுதோம்” (திருப்பாவை – 2) என்றவர்களையும் உன்படி ஆக்கவேண்டாவோ? உன்னாலே அவனைப் பெறுகைத் தவிர்ந்து மற்றைப்படி செய்கையாய்த்து. (உன் மணாளனை) “கோபீஜநவல்லப:” என்கை. “லோகபர்த்தாரம்” என்கை தவிர்ந்து உனக்கு விலையும் ஒத்தியும் செல்லும்படி இருக்கிற இருப்பெல்லாம் எங்களுக்கு உடலென்றிருந்தோம். இனி உனக்கே ஶேஷமென்றிருக்கிறோம். பண்டு இருவரையும் தங்கள் ஸ்வம் என்றிருக்கையாலே அவனுடைய நீயும் உன்னுடைய அவனும் என்றிருந்தோம். இனி உன்னுடைய மணாளன் என்று கிலாய்க்கிறார்கள்.
(எத்தனைபோதும் துயிலெழவொட்டாய் காண்) கட்டின கை நெகிழ்க்கில் பிழைக்க மாட்டாய். புணர்ச்சிக்காகப் பிரியவும் பயப்படுவுதி. (எத்தனையேனும் பிரிவாற்றகில்லாயால்) “அகலகில்லேன் இறையும்” (திருவாய் – 6.10.10) என்று கிடவா நின்றாய். உனக்காகவன்றோ அவன் புறப்படமாட்டா தொழிகிறது. பிரியில் நீ பிழையாய், இழக்கவொண்ணா தென்று.
(தத்துவம்) ஸத்யம்; (அன்று தகவு – தகவன்று) தர்மமன்று. எங்களாற்றாமையாலே சொல்லுகிறோமன்று; மெய்யே தர்மமன்று. (தத்துவமன்று) ஸ்வரூபமன்று. உன் ஸ்வரூபம் நீர்மையன்று; இனி அவனில் உனக்கு வாசியில்லை என்றிருக்கிறோம். “பாபாநாம்” என்றவிடம் பொய்யென்கிறார்கள். “த்விதா பஜ்யேயம்” என்றத்தோடு “ஶரணம் கதி:” என்றத்தோடு வாசியில்லை. இவள் ஸந்நிதி உண்டானால் பெறுகைக்குக் கபோதியில் கெட்ட பிராட்டியுண்டோ? என்றிருந்தார்கள்.
@@@@@
இருபதாம் பாட்டு
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – இருபதாம் பாட்டு. அங்கு சொன்னதெல்லாம் சொல்லி, இவனைப்பற்றி எழுப்பி, அவன் உணராவிட்டவாறே “அவன் தனக்கு உரியனோ? அவனுக்கும் எங்களுக்குமடியான நீ எங்களை நீராட்டுவி” என்று நப்பின்னைப் பிராட்டியோடே கூட அநுவர்த்திக்கிறார்கள்.
வ்யாக்யானம் – (முப்பத்து மூவர்) ரக்ஷிக்கைக்கு ஸங்க்யா நியதியுண்டோ? அஞ்சு லக்ஷம் குடியில் பெண்களுமாய், அபலைகளுமாய், அநந்யப்ரயோஜனைகளுமானாயாகாதோ? என்கிறார்கள். (அமரர்க்கு) கொன்றாலும் சாவாதார்க்கோ உதவலாவது? உன்நோக்குப் பெறாவிடில் சாம் எங்களுக்கு உதவலாகாதோ? (முன்) நோவுபடாதார்க்கோ உதவலாவது? நோவுபட்டார்க்கு உதவலாகாதோ? (சென்று) உன்னுடைய முறைமை இருக்கிறபடியென்? (சென்று) நீயே சென்று செய்திறே வருவது. “யாம் வந்தோம்” (திருப்பாவை – 21) உன் வாசலிலே வந்தார்க்கு உதவலாகாதோ? என்கை. நாங்கள் வரவிருக்கைக் குற்றமோ என்கிறார்கள். (கப்பம்) “தேவா: ஸ்வர்க்கம் பரித்யஜ்ய” “கம்பம்” வலித்து “கப்பம்” என்றாய் – நடுக்கம். அத்தைத்தவிர்க்கும் என்றபடி. அதவா, கப்பம் தவிர்க்கையாவது – இறைதவிர்க்கையாகை என்னவுமாம். “கூசி நடுங்கி” (பெரிய திருமொ – 6.1) எங்களை நடுங்கப் பண்ணாதே கொள்ளாய். து:க்கநிவ்ருத்தியை ஆசைப்பட்டார்க்கோ உதவலாவது. நீ உணரும்படி காண ஆசைப்பட்டார்க்கு உதவலாகாதோ? (கலியே) மிடுக்குடையவனே! அபலைகளுக்கு பலவான் தேட்டமாமிறே. (துயிலெழாய்) எங்களுக்கு ஜீவநமும் குடியிருப்பும் நீ உணரும்படி காண்கை.
(செப்பமுடையாய்) ஆஶ்ரிதரோடு செவ்வையழியாமே நிற்கும் ஆர்ஜவகுணம். எங்களுக்கு இங்ஙனே செவ்வையாயிருக்க வேண்டாவோ? (செப்பம்) ரக்ஷையென்றுமாம். (திறலுடை யாய்) அபலைகளுக்கு எங்ஙனே உதவிற்று உன் பலம்? பராபிபவநஸாமர்த்த்யம் என்றுமாம். எங்களுக்கு அணுகவொண்ணாதபடி யாயிற்றோ? என்றுமாம். (செப்பமுடையாய் திறலுடையாய்) பாண்டவர்களுக்குச் செவ்வியனாய். துர்யோதனாதிகளுக்கு அநபிபவநீயனா னவனே! (செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா) ஆஶ்ரிதவிரோதிகளைப் போக்கி நெடுங்காலம் தேடின குணமெல்லாம் அழிக்கப் புகுகிறான் என்கை. வெப்பம் அநுகூலர்பாடேயாய்த்தோ? (விமலா) “செய்குந்தா வரும் தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா” (துயிலெழாய்) எங்களுக்கு அம்பெய்யவேண்டா; எழுந்திருந்து நோக்காய்.
அங்கு கிடையாதொழிய நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள். (செப்பன்ன மென்முலை) இவன்தான் முகம் கொடாமைக்கு ஹேது இவளென்கை. இவள் ஸந்நிவேஶம் என்று. “மலராள் தனத்துள்ளான்” (மூன்றாம் திரு – 3) இவன் ஜீவனம் கிடக்குமிடம். நிதியிட்டுவைக்கும் செப்பு. விரஹஸஹமின்றிக்கே இருக்கையாலே “மென்முலை” என்கிறது. “சீறிய சிங்கம்” (திருப்பாவை – 23) என்கையாலே இச்சிங்கம் வர்த்திக்கும் மலைத்தாழ்வரை. (செவ்வாய்) அவனுடைய போக்யம். அங்குள்ள கனியை நுகருமாபோலே. (சிறு மருங்குல்) மலையின் நுனியிலிருப்பார் “விழுகிறோமோ விழுகிறோமோ” என்று பயப்படுமாபோலே இம்முலையிலே புஜிக்கிறவனுக்கு பயஸ்தாநமாயிருக்கை. மேலேயும் கீழேயும் கொண்டு இவையுண்டென்றறியுமித்தனை. (நப்பின்னை நங்காய்) அநுக்தஸௌந்தர்ய ஸமுச்சயம். (செப்பித்யாதி) அவனகப்படும் துறைகள் சுழிகள். (திருவே) “ஒசிந்த ஒண்மலராள்” (திருவாய் – 6.7.8) – ஸம்ஶ்லேஷத்தால் வந்த துவட்சிக்கு அவளோடு ஒத்தால் நீர்மை அங்கு அவளோடொக்கவேண்டாவோ? அவள் ஆஶ்ரிதர்க்காகச் சிறையிலிருந்தபடியறியாயோ? (துயிலெழாய்) எழுந்திருந்து எங்கள் ஸத்தை உண்டாக்காயோ?
செயயவேண்டுவதென்னென்ன – (உக்கமும்) ஆலவட்டமும். (தட்டொளியும்) கண்ணாடியும். பறையென்றுமாம். (உன் மணாளனை) உன்னோட்டைக் கூட்டுறவும் எங்களுக்கு உறுப்பென்றிருந்தோம். அன்றாய்த்தோ? உக்கத்தோபாதி அவனையும் அவள் தரவேண்டுமென்கை. (இப்போதே) “வைதர்ம்யம் நேஹ வித்யதே” என்று மற்றைப்போதைக்கு இரோமென்கை. (எம்மை) “பேய்ப்பெண்ணே” (திருப்பாவை – 7) என்றும் “நாயகப் பெண்பிள்ளாய்” (திருப்பாவை – 7) என்றும் தங்களில் தாங்கள் சொல்லுமத்தனை. பேற்றில் வந்தால் எல்லொருமொத்திருப்பார்கள். எல்லாருக்கும் உபாயம் ஒன்றானாற்போலே உபேயமொன்றாயிருக்கிறபடி. (எம்மை) “ஏஹி பஶ்ய ஶரீராணி” என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறார்கள். (எம்மை நீராட்டு) எங்களையும் அவனையும் கூட நீராட்டவேணும். இவன் முழுக்கூட்டுகைக்காக நிற்கில், முழுக அஞ்சுவோம் என்பார்கள். கையைப் பிடித்துக் கூட முழுகும். (நீராட்டு) “கடியார் இத்யாதி” (பெரியாழ்வார் திரு – 3.3.4) (நீராட்டு) “தாரா: பித்ருக்ருதா இதி” என்று பெருமாள் பிராட்டியுடைய ஸௌந்தர்யாதிகள் கிடக்க, பிராட்டியை உகப்பது ஐயர் பண்ணிவைத்த விவாஹமென்றாய்த்து. அப்படி இவர்களும் “இவள் தந்த க்ருஷ்ணன்” என்று உகப்பார்களாயிற்று.
@@@@@
இருபத்தொன்றாம் பாட்டு
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்!
ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அவதாரிகை – இருபத்தொன்றாம் பாட்டு கீழே, கண்டாரையெல்லாம் எழுப்பிப்பட்ட வ்யஸநம் தீர, அவன் தன்னையே எழுப்புகிறார்கள். நப்பின்னைப் பிராட்டி “நான் உங்களிலே ஒருத்தியன்றோ? நாமெல்லாரும் கூடி க்ருஷ்ணனை அர்த்திக்க வாருங்கோள்” என்ன, அவனை எழுப்புகிறார்கள். “உகவாதார் வீரத்துக்குத் தோற்றுவருமாபோலே உகந்த நாங்கள் உன் நீர்மைக்குத் தோற்று வந்தோம்” என்கிறார்கள்.
வ்யாக்யானம் – (ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப) (ஏற்ற கலம்) கலமிடாதார் தாழ்வே. இட்ட இட்ட கலங்களெல்லாம் நிறைக்கும். அவையும் க்ருஷ்ணன் படியாயிருக்கும். “உதாரா:” “ஸ ஸர்வாந்” ஏலாத கலங்கள் நிரம்பாதொழிகிறது பாலின் குறைவன்றே. அர்த்தியாதார் குறையிறே. ஸ்வீகாரம் வேண்டுவது. (கலங்கள்) “சிறியது பெரியது“ என்கிற நியமமில்லை. கடலை மடுக்கிலும் நிறப்பும். அவன் குணத்தோபாதி பரப்புண்டாகிலும் நிறப்பும். (மாற்றாதே பால் சொரியும்) “கலமிடுவாரில்லை” யென்றால் தான் தவிராது. முலைக்கடுப்புப் போந்தனையும் நின்று பால் சொறியும். (வள்ளல்) அபேக்ஷையால் கொடுக்குமவனைப் போலே இவையும் அபேக்ஷித்ததுக்காக செய்ததென்கை. அர்த்திக்கை உபாயமாகாதோ? என்னில், ரக்ஷணம் அவனுக்கு ஸ்வரூபமானவோபாதி, ஸ்வரூபத்தில் புகலாமிறே. “அர்த்தித்வம் நித்யமாகவேணுமோ?” என்னில் – முக்தனானாலும் வேணும். இல்லையாகில் அது ப்ராப்யமாகமாட்டாதென்கை. ஸம்ஸாரபோகம் ஸாவதியா கையாலே அர்த்தித்வம் ஓரளவிலே பர்யவஸிக்கும். அங்கு நித்யமாகையால் உள்ளதனையும் வேணும். “அகலகில்லேன் இறையும்” (திருவாய் – 6.10.10) “மருந்தே நாங்கள் போகமகிழ்ச்சிக்கு” (திருவாய் – 9.3.4) க்ருஷ்ணனைப்போலே பெண்ணுக்கும் பேதைக்கும் கட்டவும் விடவுமாம்படி பவ்யமாயிருக்கும். (பெரும் பசுக்கள்) ஶ்ரீஶத்ருஞ்ஜயனைப் போலே இருக்கை. க்ருஷ்ண ஸ்பர்ஶத்தாலே வளர்ந்து அவன் ஏழு வயஸ்ஸிலே பதினாறு வயஸ்ஸு குமாரனென்னும்படி இருக்குமாப்போலே இருக்கும்.
(ஆற்றப்படைத்தான்) மிகவும் படைக்கை. “கழியாரும் கனசங்கம்” (பெரிய திருமொ – 6.9.2) என்னும் திருநறையூரில் முத்தெண்ணிலும் எண்ணப்போகாது. (கழியாரும் கனசங்கம்) கர்ப்பிணிகளைப்போலே. (கலந்தெங்கும் நிறைந்தேறி) பெரியதிருநாளுக்கு வருமாபோலே. (வழியார) தார்மிகர் வழித்துறைப்புறப்படவிருக்க, வழியை மலையாக்குவிக்கும். (படைத்தான் மகனே) அவர் ஆர்ஜித்துப்படைக்க, இவன் பிறந்து படைத்த ஸம்பத்து. “பதிம் விஶ்வஸ்ய” இத்யாதிகளிலுங்காட்டில், ஶ்ரீநந்தகோபருடைய ஸம்பத்துக்கு இட்டுப் பிறந்த ஏற்றம். பரமபதம் போலேயும் நாராயணத்வம் போலேயும் தான்தோன்றியன்று. (அறிவுறாய்) ஸர்வஜ்ஞனுக்கும் உணர்த்தவேண்டும்படியிறே உள்ளுச்செல்கிற பராக்கு. (ஊற்றமுடையாய்) த்ருடப்ரமாணஸித்தன். “நம்முடை நாயகனே” (பெரியாழ்வார் திரு – 1.5.3). (பெரியாய்) அவை தனக்கு “அப்ராப்ய மநஸா ஸஹ” என்றும், “யஸ்யாமதம் தஸ்ய மதம்” என்று சொல்லுகிறபடியே இருக்கை.
(தோற்றமாய்) இப்படி பெரியனாயிருந்துவைத்து, இதரஸஜாதீயனாய் வந்து அவதரித்தபடி. (சுடர்) மநுஷ்யத்வே பரத்வம். (ஊற்றம்) பிராட்டி மஹாராஜருள்ளிட்டார் விடவேணுமென்னிலும் ஆஶ்ரிதரை விடாத ஏற்றம். (பெரியாய்) தன்பேறாயிருக்கை. எல்லாம் செய்தாலும் ஆஶ்ரிதர் விஷயத்தில் ஒன்றும் செய்யப்பெற்றிலோம் என்கை. (உலகினில் தோற்றமாய் நின்ற) ஶிஶுபாலன் துர்யோதனன் உள்ளிட்டாரில் இவனுக்குப் பாண்டவர்கள் பக்கத்திலே பக்ஷபாதமுண்டென்று தோற்றவிருக்கை. (சுடரே துயிலெழாய்) இப்போது உணராமையாலே அக்குணங்களெல்லாம் இழக்கப் புகாநின்றாய் என்கிறார்கள். (மாற்றார்) நாங்கள் வருமவர்களோ? பண்டு ஹிரண்ய ராவணாதிகளாய் வந்தோம் நாங்களன்றோ? என்கை. (வலி தொலைந்து) “ந நமேயம் து கஸ்யசித்” என்கை தவிர்ந்து. அம்புக்குத் தோற்றத்தாரோபாதி குணத்துக்குத் தோற்று வந்தோம். அவர்களுக்கு முடிந்து பிழைக்கலாம். உன் குணத்துக்குத் தோற்றார்க்குப் பிழைக்க விரகுண்டோ? “ஸத்யேந லோகாந் ஜயதி”.
(வந்து) “ஆள்பார்த்து உழிதருவாய்” (நான் திருவ – 60) என்று நீ வரக்கடவையாயிருக்கை. (அடி பணியுமாபோலே) வணக்கம் ஸ்வரூபத்துக்கென்றிராதே, ஆற்றாமைக்கென்றி ருக்கை. (போற்றி யாம் வந்தோம்) தோற்றார் பண்புகழுமித்தனை. அபலைகளை வெல்லுகையும் ஒரு பணியோ? (போற்றி யாம் வந்தோம்) பெரியாழ்வாரைப் போலேயன்றோ நாங்கள் வந்தது என்கை. தம்மைப் பேணாதே அத்தலையைப் பேணுவர் அவர். நாங்களும் எங்களைப் பேணாதே உன் வாசலிலே வந்தோம் என்கை. (புகழ்ந்து) நீ எங்களைப் படுத்தின பாடும், வென்றுகொண்ட படியும் சொல்லிக்கிட்டினால் திருப்பல்லாண்டு பாடுகை ஸ்வரூபமாய்விட்டது.
@@@@@
இருபத்திரண்டாம் பாட்டு
அங்கண் மாஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – இருபத்திரண்டாம் பாட்டு. கீழ் பாட்டில் தங்கள் அபிமான்ய ஶூந்யதை சொல்லிற்று. இப்பாட்டில் தங்களுக்கும் பிறர்க்கும் ஆகாதபடியான அநந்யார்ஹ ஶேஷத்வம் சொல்லுகிறது.
வ்யாக்யானம் – (அங்கண்) அழகிய இடம். ப்ரஹ்மாவுக்கும் தானும் தன் பரிகரத்தோடும் அநுபவிக்கலாய், பிபீலிகாதிகளுக்கும் அதன் போகோபகரணத்தோடே அநுபவிக்கலாயிருக்கை. (மாஞாலத்தரசர்) இப்பரப்பித்த னையும் எங்களதென்றபிமாநம் பண்ணின ராஜாக்கள். (கோவாகி) (இரண்டாம் திரு – 69) இதடைய தன் அபிமானத்தே அடக்கிவைக்கை. “யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன்” (திருவாய் – 1.3.3) என்கிறவற்றை அநுஸரிக்கிற பௌண்ட்ரக வாஸுதே வனைப்போலே. (அபிமானபங்கமாய் வந்து) அபிமான ஶூன்யராய் வந்து. (நின் பள்ளிக் கட்டில் கீழே) எங்கேனும் வழிபறியுண்டாலும் ராஜாவின் வாசலிலே கூப்பிடுமாப் போலே. “ராஜாதிராஜஸ்ஸர்வேஷாம்”. அவர்களாகில் ஆற்றாமைக்கும் தாங்கள் ஆகிடுகை. இளையபெருமாளும் “குணைர்தாஸ்யமுபாகத:” . இவர்களுக்கு இவ்வவதாரத்தில் அழகு தோற்பித்து அடிமையிலே மூட்டிற்று.
(சங்கமிருப்பார்போல்) “வெளியிலே திரியில் பின்னையும் ராஜ்யம் பண்ணென்று தலையிலே முடியை வைப்பார்கள்” என்றஞ்சி அணுகோலக்கத்திலே ஸேவித்திருப்பர்கள். “ராஜந்” “கச்சிந்ந துஷ்டோ வ்ரஜஸி” என்று. (வந்து தலைப்பெய்தோம்) கீழெல்லாரையும் எழுப்பிப்பட்ட க்லேஶமெல்லாம் தீர வந்து கிட்டப்பெற்றோமென்கை. வந்து தலைப்பெய்கை – கீழ் கைகழிந்தபடியும், இன்று யாத்ருச்சிக ஸங்கதியுண்டான படியும். “அந்நலனுடை யொருவனை நணுகினம் நாமே” (திருவாய் – 1.1.3) “சிராய மே கூலமிவாஸி லப்த:” “மந்யே ப்ராப்தாஸ்ஸ்ம தம் தேஶம் பரத்வாஜோ யமப்ரவீத்” “வாநராணாம் நராணாம் ச கதமாஸீத் ஸமாகம:” (கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப்பூப்போலே) இழவு பேறுகள் அத்தலையிலேயாயிருக்கிறபடி காலை இளமை மொட்டிக்கப்பண்ணி. பெண்களாற்றாமை அலரப்பண்ணுகிறபடி.
“பெண்காள்! நம்மைக்கிட்டுகையாலே எல்லாம் ஸபலமாயிற்றோ?” என்ன, விஶேஷகடாக்ஷம் பண்ணியருளீர்” (செங்கண்) உபமானம் நேர்நில்லாமை உபமேயம் தன்னையே சொல்லவேண்டினபடி. (சிறுச்சிறிதே) ஒரு நீர்ச்சாவியிலே வெள்ளமாகாமே பொறுக்கப் பொறுக்கவென்கை. ப்ரதமபரிஸ்பந்தமே தொடங்கிக் காணவேணுமென்றுமாம். (எம்மேல் விழியாவோ) கோடையோடின பயிரிலே ஒரு பாட்டம் வர்ஷியாதோ என்னுமாபோலே. சாதகம் வர்ஷதாரையை ஆசைப்படுமாபோலே. “விழியாவோ” என்று மநோரதம். (திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல்) உன்னைப்பெறாத விடாய் ஆறுகைக்கும், கிடையாதோ என்கிற அஜ்ஞாநாந்தகாரம் போகைக்கும்; பித்தம் கழன்று தங்களுக்குத் தண்ணளி மிக்கிருக்கையுமென்றுமாம். ப்ரதாபமும் தண்ணளியும். “ப்ரஸந்நாதித்ய வர்ச்சஸம்”.
(அங்கணிரண்டுங்கொண்டு) கார்கால ஆதித்யனும் நகட்டுச் சந்திரனும் போலல்ல. “சந்த்ரகாந்தாநநம் ராமம் அதீவ ப்ரியதர்ஶநம்” . முழுநோக்குப் பொறுக்கும்படியாகையாலே உன்னழகியயிரண்டு கண்ணையுமிட்டுப் பார்க்கவேணும் நாங்கள் பிழைக்கவென்கை. (அங்கண்) “தாமரைப்பூ” என்றபோது விகஸிக்கைக்குத் தாமரை ஒப்பல்லாதாப்போலே, கோபப்ரஸாதங்களுக்கு சந்த்ர ஸூர்யர்கள் ஒப்பல்ல என்றுமாம். (எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபமிழிந்து) சாபம் விரஹவ்யஸநமாதல், ஸம்ஸார து:க்கமாதல். தண்கண்கள். (எங்கள்மேல் சாபமிழிந்து) யாதநா ஶரீரம்போலே உன்னைப்பெறாதே வ்யஸநப்படுகைக்கடியான ஶாபோபஹதரான எங்கள் து:க்கம் போக என்கை. விஶ்லேஷவ்யஸநத்தால் வரும் து:க்கம் அநுபவித்தே விடவேண்டுகையாலே “சாபம்” என்றது. “சாபமிழிந்து நோக்குதியேல்” என்றந்வயம். “போற்றியாம் வந்தோம் புகழ்ந்து” (திருப்பாவை – 21) என்று கீழோடே.
@@@@@
இருபத்து மூன்றாம் பாட்டு
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – இருபத்து மூன்றாம் பாட்டு. “பெண்காள்! உங்கள் கார்யம் அழகிதாகச் செய்கிறோம். உங்களுக்குச் செய்யவேண்டுவதென்னென்ன, செய்யும்படியை உள்வரி யிட்டுத் தாருங்கோள்” என்ன, பாசுரத்தைச் சுருங்கவிட்டு உள் வரியிட்டுச் செய்துகொடுக்கிறார்கள். “சங்கமிருப்பார்போல்” (திருப்பாவை – 22) என்ற வார்த்தையைக் கேட்டு, “நீங்கள் அநந்யகதிகளென்பதே நப்பின்னைப்பிராட்டி பரிக்ரஹமாயி ருந்துவைத்து” என்று திருவுள்ளம் புண்பட்டு, “உங்களுக்குச் செய்யவேண்டுவதென்?” என்ன, “இங்ஙனம் குன்னாங் குருச்சியாகக் கேட்டருள வொண்ணாது; பேரோலக்கமாக விருந்து நீ கேட்டருளுமா போலே கேட்டருளவேணும்” என்கிறார்கள். புருஷகாரம் – “பின்னை நெடும்பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னையமரர் முழுமுதலானே” (திருவாய் – 1.7.8) அழகர் கிடாம்பியாச்சானை அருளப்பாடிட்டு, “நீ ஒன்று சொல்” என்ன, “அபராதஸஹஸ்ரபாஜநம்” என்று தொடங்கி, “அகதிம்” என்ன, “நம் இராமாநுசனை உடையையாயிருந்து வைத்து, அகதியென்னப்பெறாய்” என்று அருளிச்செய்தாராம். அநந்தாழ்வான் “அமர்யாத:” என்கிற ஶ்லோகத்தை ஆளவந்தார் அருளிச்செய்தார் என்னக்கேட்டு, “எனக்கது சொல்லவேண்டா” என்றான், அவர் ஸம்பந்தத்தாலே. “வசஸா ஸாந்த்வயித்வைநம்” என்றருளி, “ஸாபராதனன்றோ ஸாந்த்வநம் பண்ணுவான்” என்றருளிச் செய்தாப்போலே, “நீங்கள் சொல்லிற்றெல்லாம் நம் குறையாலே வந்தது” என்றருளிச்செய்து, பெண்களை ஸாந்த்வநம் பண்ணியருளினான்.
வ்யாக்யானம் – (மாரிமலை முழைஞ்சில்) பெருமாள் மால்யவானிலே எழுந்தருளியிருந்தாப்போலே வர்ஷம் பெய்து வழிகளெல்லாம் தூறெழுந்து ராஜாக்கள் படைவீட்டி லேயிருந்து வினையுண்டானாலும் புறப்படாதாப் போலே, ஸிம்ஹங்கள் கிரிகுஹரங்களிலே கிடந்துறங்கும் காலம். விஶ்லேஷித்தார் கூடுங்காலம். கூடியிருந்தார் ஸம்போக ரஸம் அநுபவிக்கும் காலமென்றுமாம். நீ எங்கள் வாசலிலே வர ப்ராப்தமாயிருக்க, நாங்கள் உன் வாசலிலே நிற்கும் காலமென்றுமாம். (மன்னி) ஆர்க்கு அஞ்சவேணுமிதுக்கு? மலைக்குவடுபோலே பொருந்தியிருக்கை. தன் பேடையோடே ஏகவஸ்து என்னலாம்படி பொருந்திக் கிடக்கிறது என்றுமாம். இங்கு நம்பிள்ளை “நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்ப” (திருப்பாவை – 19) னிறே. ஹாரவிஶேஷம். “ஶ்ரீஸ்தநாபரணம்” இது முலை; அது மலை. “ஆஷாடே” (கிடந்துறங்கும் சீரிய சிங்கம்) ஒருத்தர் முடிசூட்டவேண்டாதே பிறப்பே ம்ருகேந்த்ரனா கையும். நிரங்குஶவைபவமுண்டாகையும். “ஸ மயா போதித: ஶ்ரீமாந்” இத்யாதி. “பரந்தப:” – க்ஷுத்ர ம்ருகங்கள் மண்ணுண்ணும்படி இருக்கை. “அபி: பாவகோபமம்” அநுகூலரான தம்பிக்குமகப்பட அணுகவொண்ணாதபடி இருக்கை. (அறிவுற்று) பூ அலர்ந்தாப்போலே காலத்திலே உணருகை. ஸம்ஸாரிக்கு நித்ரை மேலிட தமஸ்ஸு அபிபவிக்கை. இவனுக்கு உறக்கம் வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வருமளவும். (தீ விழித்து) ப்ரதமாக்ஷி ஸந்நிபாதத்திலே பேடைகளும் அருகு நிற்கவொண்ணா தென்கை.
(வேரி மயிர்பொங்க) உளை மயிர் சிலும்ப. (வேரி) ஜாத்யுசிதமான கந்தம். அவனுக்காகில் ஸர்வகந்தம். (எப்பாடும் பேர்ந்துதறி) ஒரு கார்யப்பாடில்லாமையாலே, நாலுபாடும் பேருகிறபடி. (உதறி) அவயவங்களை தனித்தனியே உதறினபடி. (மூரி நிமிர்ந்து) உடலொன்றாக நிமிர்ந்தபடி. (முழங்கி) மானுள்ளிட்ட ம்ருகங்கள் முழுக்காயாக அவிந்து கிடக்கும்படி முழங்கி. (புறப்பட்டு) “கிரிகுகையில் நின்றும் இப்படி புறப்பட்டதொரு சிங்கம் புறப்பட்டுப் போருமாபோலே போரவேணும்” என்ன, “பெண்காள்! நரஸிம்ஹம் போருமாபோலே போரவோ?” என்ன –
(நீ பூவைப்பூவண்ணா) காம்பீர்யத்துக்கு ஒன்றைச் சொன்னோமாகில், ந போருமாபோலே போரவேணுமென்கை. வடிவையும் நிறத்தையும் உன்னைப்போலே பண்ணவொண் ணுமோவென்கை. இவன் ஸிம்ஹத்தைப்போலே வருகையாகிற இது நாய்ச்சியார் விழி விழிக்கையா யிருக்கை. (உன் கோயில் நின்றிங்ஙனே போந்தருளி) பிராட்டியோடேயிறே கண்வளர்ந்தருளுவது; அவள் எங்களைத் தனித்தனியே நோக்கியருளும்படி அவள் திருக்கையை ஊன்றிக்கொண்டு திருப்பள்ளியறையில் நின்றும் பெரிய திருமண்டபம் புறப்பட்டருளவேணும். பிராட்டி மங்களாஶாஸநம் பண்ண, பெருமாள் புறப்பட்டருளினாற்போலே புறப்பட்டருள ஆசைப்படுகி றார்கள். “பர்வதாதிவ நிஷ்க்ரம்ய ஸிம்ஹோ கிரிகுஹாஶய: லக்ஷ்மணம் த்வாரி ஸோபஶ்யத் ப்ரஹ்வாஞ்ஜலிபுடம் ஸ்திதம்” கண்வளர்ந்தருளுமழகு காணப்பெற்றோம். இனி நடையழகும் இருப்பில் வேறுபாடும் கண்டு வாழவேணுமென்கிறார்கள். “தடங்கொள் தாமரைக் கண்விழித்து நீயெழுந்துன் தாமரை மங்கையும் நீயும் இடங்கொள் மூவுலகுந்தொழவிருந்தருளாய்” (திருவாய் – 9.2.3) என்கிறார்கள். இப்படி இருந்தருளவேணும். (போந்தருளி) “சதுர்க்கதி” யிறே. “கஜஸிம்ஹகதீ வீரௌ ஶார்தூலவ்ருஷபோபமௌ புண்டரீக விஶாலாக்ஷௌ கட்கதூணீ தநுர்தரௌ” – நடையிலே ரிஷபத்தின் செருக்குத் தோற்றியிருப்பது. மத்தகஜத்தின் திமிர்ப்புத் தோற்றியி ருப்பது. புலியினுடைய உறட்டுத் தோற்றியிருப்பது. ஸிம்ஹத்தினுடைய பராபிபவநமும் தோற்றியிருப்பது. நமக்கிவையெல்லாம் நம்பெருமாள் நடையழகிலே காணலாமிறே. (கோப்புடைய) உபயவிபூதியும் தொழிலாக வகுப்புண்டிருக்கை.
(சீரிய சிங்காசனம்) ராஜாக்கள் இன்ன மண்டபத்திலே, இன்ன ஆஸநத்திலே, இருந்து நினைப்பிட்டதென்றால் அதையறியுமாபோலே. “இங்கு கடற்கரையில் வார்த்தையும், திருத்தேர்தட்டில் வார்த்தையும்” என்னுமாபோலே ஸிம்ஹாஸநத்திலே யிருந்து நினைப்பிட்டதென்றால் பெண்களுக்குப் பொய் சொல்லும் க்ருஷ்ணனேயாகிலும் அமோகமாய்த் தவிரவொண்ணாதிருக்கை. தர்மாஸநம் போலே தர்மாதிபீடமிறே. சீரிய ஸிங்கத்துக்குத் தகுதியான ஆஸநம் – சீரிய சிங்காஸநம் ஓரணுவாகிலும் க்ருஷ்ணனோடொத்த வரிசையைக் கொடுக்கவற்றான ஸிம்ஹாஸநம் என்றுமாம். (யாம் வந்த காரியம்) இப்போது சொல்லார்கள். சிற்றம் சிறுகாலை (திருப்பாவை – 29) க்கு வைக்கிறார்கள். (ஆராய்ந்தருள்) “நீங்கள் என் பட்டிகோள்? என் செய்திகோள்?” என்கை. அதாகிறது – “பெண்களை எழுப்புவது, வாசல் காப்பானை எழுப்புவது, ஶ்ரீநந்தகோபருள்ளிட்டாரை எழுப்புவது, நம்மை எழுப்புவதாய்ப்போர வ்யஸநப்பட்டு வந்திகோளாகாதே” என்கை. ப்ரஜை கிணற்றில் விழுந்தால், தாயன்றோ நோக்காதே பரியவிட்டாளென்பர்கள். அவன் “எதிர்சூழல் புக்கு” (திருவாய் – 2.7.6) திரிந்தால் இன்றிறே இவன் “ஒழிவில் காலம்” (திருவாய் – 3.3.1) என்பது.
@@@@@
இருபத்து நாலாம் பாட்டு
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்று உன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – இருபத்துநாலாம் பாட்டு. அவனைக் காணுமளவுமிறே ”அது வேணும், இது வேணும்” என்பது. கண்டபின் அவனுக்குப் பரியுமத்தனையிறே. நப்பின்னைப் பிராட்டியோடே கூடவிருந்த இருப்பிலே சாத்தியருளின அத்தவாளத்தலை மேலே பறக்க, ஶ்ரீஶடகோபனைக் கோத்துக்கொண்டு மெத்தன எழுந்தருளுகிற திருவடிகளைக்கண்டு, அத்திருவடிகளை திருமுலைத் தடத்திலும் திருக்கண்களிலும் ஒற்றிக்கொண்டு “உன் செவ்வடி செவ்வித்திருக்காப்பு, வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” (திருப்பல் -1,2) என்று திருப்பல்லாண்டு பாடுகிறார்கள். இங்ஙனே போரவேணு மென்ன, நடந்த நடைகண்டு மங்களாஶாஸநம் பண்ணுகிறார்களாகவுமாம்.
வ்யாக்யானம் – (அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி) பகவத்விபூதியை மஹாபலி நெருக்கி அபஹரிக்க நோவுபட்டவன்று; பண்டும் ஒருநாள் இப்படியே எல்லை கடந்து மீட்டுக் கொண்டான் என்கை. இவ்வழகிய திருவடிகளைக்கொண்டோ காடுமோடையுமளந்துகொண்டது? (இவ்வுலகமளந்தாய்) “பிராட்டிமார்க்கும் பூத்தொடுமாப்போலே கூசிப்பிடிக்க வேண்டின திருவடிகளைக்கொண்டு கூசமுமறியாத காடுமோடுமளப்பதே!” என்கை. “வன்மாவையம்” (திருவாய் – 3.2.2) (அடிபோற்றி) “உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு” (திருப்பல் – 1) (சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி) அழகுக்கிலக்காகாதாரை அம்புக்கிலக்காக்கினபடி. “கீழ் நமுசி ப்ரப்ருதிகளேயுள்ளது. பிராட்டியைப் பிரித்த ராவணனி ருந்தவிடத்தே செல்லுவதே!” என்கை. கால்நடை நடப்பித்த கைகேயியை நோக்கினார்கள். (சென்று) புலி நின்ற தூற்றிலே சென்று கொல்லுமாபோலே; “தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச்சென்று” (திருநெடுந் – 28) (சென்று) வழிப்போக்கிலே கர கபந்த விராதாதிகளடைய மணல்கொட்டகமிடறினாற்போலே இடறிக்கொண்டு போனபடி. (தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி) “மைவாயக்களிறொழிந்து” (பெரிய திருமொ – 2.2) இத்யாதி. “ராவணனைக் கால்நடையே நின்று பொருவதே!” என்கை. (திறல் போற்றி) என்ன குடிப்பிறப்பு! மதிளுக்கு மதிளிடுகிறார்கள். “இலங்கை பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே” (திருப்பல் – 3) என்றவர் மகளிறே. (தென்னிலங்கை) ஆரியர்கள் இகழ்ந்த தேசம்.
(பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி) ராவணனைப்போலே நினையாமை முடிந்தபடி. அங்கு பருவம் நிரம்புகையாலே லீலாரஸம் அநுபவித்தானென்கை. இங்கு அந்த லீலையில் நுழையும் பருவமன்று. (பொன்ற) மாரீசனைப்போலே குற்றுயிராக்கி மேலே அநர்த்தம் விளைக்க வையாதே முடிக்கப் பெற்றபடி. (புகழ் போற்றி) ராமாவதாரத்தில் பிதா தஶரதன்; ஶம்பராந்தகன்; ஊர் அயோத்யை; தம்பிமாரோ கல்மதிள்; மந்த்ரவாதிகளான வஸிஷ்டாதிகள் புரோஹிதர்; ஸுமந்த்ராதிகள் மந்த்ரிகள்; நாட்டடையக் காவல்; ஸ்பர்த்தைப் பண்ணுவாரும்”இச்சாம:” என்னும்படியான குணவான்; ஆகையாலே அஞ்சவேண்டா. இங்கு மாதாபிதாக்கள் ஸாது இடையர்; ஊர் இடைச்சேரி; புத்திசொல்லும் மந்த்ரிகளும் இளவிடையர் ஸம்ஸாரிகள்; கம்ஸாதிகள் எதிரிகள்; ஶ்ரீப்ருந்தாவநத்தில் முளைத்த பூண்டுகளகப்பட ராக்ஷஸர்; தமையன் ஒரு க்ஷணம் தப்பில் பாம்பின் வாயிலே விழும் தீம்பன்; பூதனாதிகளால் புகுந்த அபா யங்களவை; இனி மங்களாஶாஸநமொழியக் காவலுண்டோ? தாயுமுதவாத தசையிலே திருவடிகள் உதவுகை புகழாவது. “செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்” (திருவாய் – 5.10.3) என்று காளை முரித்த கன்னிப்போராகையாலே காப்பிடுகிறார்கள். (கன்று குணாலாவெறிந்தாய் கழல் போற்றி) “ஶத்ருவையிட்டு ஶத்ருவை எறிந்தால் அவர்கள் க்ருதஸங்கேதிகளாய் மேல் விழில் என் செய்யக்கடவோம்? என்று வயிறு பிடிக்கிறார்கள். குஞ்சின திருவடிகளுக்குத் திருப்பல்லாண்டு பாடுகிறார்கள். (குணில்) எறிகருவி
(குன்று குடையாயெடுத்தாய் குணம் போற்றி) இதுக்கு முன்பு செய்த செயல்கள் இந்த்ரனுக்கு; இப்போது அவன்தான் பகையானபடி சொல்லுகிறது. “அநுகூலர் ப்ரதிகூலிக்கையால் தலையறுக்கவொண்ணாது. பெரும்பசியாலே அவனை நலிந்தோம்; அவன் கைநோவுந்தனையும் வர்ஷிக்கிறான்; அவ்வளவு கல்லிட்டுக் காப்போம்” என்று ஆந்ருஶம்ஸ்யத்தாலே மலையை எடுத்துக்கொண்டு நின்ற குணத்துக்கு மங்களாஶாஸநம் பண்ணுகிறார்கள். சவலைப்பசல் தன்னைக் கிள்ளப் புக்கால் கைநொந்தவாறே விட்டுப்போகிறதென்று உடம்பு கொடுத்திருக்கும் தாயைப்போலே.
(வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி) ஒரு வ்யக்தியிலே எல்லா அபதாநங்களையும் சொன்னால் த்ருஷ்டிதோஷமாம் என்று பிடித்த வேலுக்கு மங்களாஶாஸநம் பண்ணுகிறார்கள். சக்ரவர்த்தி வில் பிடிக்க, பிள்ளைகள் வில் பிடித்தாற்போலே. “கூர்வேல் கொடுந்தொழிலன்” (திருப்பாவை – 1) மகளிறே. பசுக்களின் பின்பே திரியாநின்றால் ஸிம்ஹம் வராநின்றாலும் வேலாலே குத்திப் பொகட்டுப்போமத்தனை. (நின் கையில் வேல் போற்றி) வெறும் புறமே ஆலத்தி வழிக்கவேண்டியிருக்க, அவ்வழகுக்கு மேல் வில்லைப் பிடித்த அழகு. “வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு” (திருப்பல் – 2).
(என்றென்று) ப்ரயோஜநம் பெறுமளவும் சொல்லி, பின்னை “தேஹி மே ததாமி தே” என்னுமவர்களன்று. இதுதானே ப்ரயோஜநமாயிருக்கும். ஸம்ஸாரிகள் புறம்பும் கொள்ளுமவர்கள்; அவன் பக்கலிலும் கொள்ளுவர்கள். இவள் புறம்பும் கொள்ளாள்; இவன் பக்கலிலும் கொள்ளாள். “ஒன்று நூறாயிரமாகக் கொடுத்து” (நாச்சி திரு – 9.7) “ஆந்தனையும் கைகாட்டி” (திருப்பாவை – 2) புறம்புத் தைக்கும் தானே கொடுக்குமித்தனை. (உன் சேவகமே ஏத்தி) “உன்னுடைய விக்கிரமம் ஒன்றொழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம்பால் சுவர்வழி எழுதிக்கொண்டேன்” (பெரியாழ்வார் திரு – 5.4.6) என்னுமவர் மகளிறே.
(இன்று) இசைவு பிறந்த இன்று. நீயுறங்க நாங்கள் உறங்காதே இருந்த இன்று. வ்ருத்தைகளுறங்க நாங்கள் வந்தோம். “நென்னேற்று வந்தோமோ? ஊராரிசைந்த இன்று வந்தோம்” என்றுமாம். (யாம்) பந்துக்களாலே நெடுங்காலம் நலிவுபட்ட நாங்கள். (யாம் வந்தோம்) “நீ வர ப்ராப்தமாயிருக்க, எங்களாற்றாமையாலே வந்தோம்” என்றுமாம். (வந்தோம்) எங்களாற்றாமையால் வந்த இழவெல்லாம் தீர வந்தோம். (இரங்கு) எல்லாம் பட்டு வந்தாலும் அவன் இரங்கியல்லது கார்யமாகாது. வ்யபிசாரமல்லாத உபாயமிதுவே என்கை. இத்தலைக்கு இரங்குகை அவனுக்கு ஸ்வரூபம். “அவனுக்கு என் வருகிறதோ” என்று இரங்குகை இத்தலைக்கு ஸ்வரூபம்.
@@@@@
இருபத்தைந்தாம் பாட்டு
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – இருபத்தஞ்சாம் பாட்டு. “பெண்காள்! நோன்பொழிய உங்கள் நெஞ்சிலே ஒன்றுண்டிறே” என்ன, “பறை” என்றொருபேர். நாங்கள் உன்னை அர்த்தித்து வந்தோம்” என்ன, “என்னை அர்த்தித்துப் பெற்றாருண்டோ?” என்ன, “எங்களோட்டையார் பெற்றாருண்டு” என்கிறார்கள்.
வ்யாக்யானம் – (ஒருத்தி மகனாய்) ஸர்வலோகத்துக்கும் பிதாவான உன்னை ஒருத்தி மகனாகப் பெறுவதே! “மகன் ஒருவர்க்கல்லாத மாமேனி மாயன்” (மூன்றாம் திரு – 92) (ஒருத்தி) “அந்த: ப்ரவிஷ்டஶ் ஶாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா” என்கிறபடியே ஸர்வலோகங்களுக்கும் நியாமகனானவனை யுங்கூட நியமிக்குமவளென்கையாலே, நாட்டில் தனக்கு ஒப்பின்றிக்கே இருக்குமவள். (மகனாய்) பிறந்தபோதே சொல்லிற்றுச் செய்கை. “ஸ்துதோ ஹி யத் த்வயா பூர்வம் புத்ரார்த்திந்யா ததத்ய தே ஸபலம் தேவி ஸஞ்ஜாதம் ஜாதோஹம் யத்தவோதராத்” சக்ரவர்த்தித் திருமகன் வளர்ந்த பின்பு பித்ரு வசந பரிபாலனம் பண்ணினான். இவன் பிறந்தபோதே தோள்களை மறைத்துத் திருவாய்ப்பாடியில் போகச்சொல்லப் போனான். ஶோபநம் கூறுகைக்கும் வேறாளில்லை. தானே. (பிறந்து) கர்மவஶ்யர் படுமவற்றை அகர்மவஶ்யன் க்ருபாவஶ்யனாய்ப் பிறந்து படுவதே! “உபஸம்ஹர” இத்யாதி. “அஜோபி ஸந் அவ்யயாத்மா” கர்மவஶ்யர் கூறான ஜந்மாதி தோஷங்களின்றிக்கே இருக்கை. என் பிறவாமைக்குத் தட்டு வாராதபடியும், எனக்கு நிறமுண்டாம்படியுங்காண் நான் பிறப்பது. “ஸ உ ஶ்ரேயாந் பவதி ஜாயமாந:” (பூதாநாம் ஈஶ்வரோபி ஸந்) பிறக்கையும் பிறவாமையுங்கிடக்க, பிறக்கும் பிறப்பு நித்யர்க்குமுண்டாகையாலே அவ்வளவேயல்ல; அல்லாதார் பிறப்பையும் நீக்கவல்ல ஸ்வதந்த்ரன் பிறப்பன்றோ என்கை. சிறையர் சிறைக்கூடத்தில் பிணையுண்கைக்குப் புகும். நியாமகன் சிறைக்கூட்டத்தை விடுவிக்கப் புகும். புகுகையிலே இத்தனை நெடுவாசியுண்டு. அவன் பிறந்தால் இவன் பிறவி தனக்குத் தட்டாமையல்ல. நம் பிறவியைப்போக்கி நம்மைத் தன்போலேயாக்க வல்லனாயிருக்கும். “ஜந்ம கர்ம ச மே திவ்யம்” இத்யாதி. நம்பிறவி நம்மையும் அவனையும் உறவறுக்கைக்கு உடலாயிருக்கும். இப்படியல்லனாகைக்கடி சாவுதல் பிறத்தல் செய்யவேண்டாத நித்யமான உடம்புடையனாகை. “ஆதியஞ்சொதி யுருவை அங்கு வைத்து இங்கு பிறந்த” (திருவாய் – 3.5.5) “யத்ராவதீர்ணம் க்ருஷ்ணாக்யம் பரம் ப்ரஹ்ம நராக்ருதி”. அவனுக்குப் பிறக்கையாகிறது – அத்தை நாம் பிறவாதபடி ஸஜாதீயமாக்கிக்கொண்டு தோன்றுகை. “புந்நாம்நோ நரகாத் த்ராயத இதி புத்ர:” என்கிறபடியே இவர்கள் தாளில் தளைகழலப் பிறந்தபடி என்றும். பிறவி நமக்கென்றுகோல நம் பிறவியாக விலக்கப்படும். “அறுவர் தம் பிறவி அஞ்சிறையே” (திருவாய் – 1.3.11) . அவன் பிறப்புக் கூட்டும் நீங்க நம் பிறப்பு. ப்ரபத்தியாவது இந்த ஜ்ஞாநமே. நம்முடைய கர்மம் அவனை நம்மோடே ஸஜாதீயனாக்கும்; அவனுடைய க்ருபை நம்மை அவனோடே “பரமம் ஸாம்யமுபைதி” என்று ஸஜாதீயராக்கும். “பிறந்தவாறும்” (திருவாய் – 5.10.1). (மகனாய்ப் பிறந்து) பிறக்கைத் தவிராதாகில், தமப்பனானாலோ வென்னில், தன்னுடைய பிறவி விஸஜாதீயத்துக்குப் போராதபின்பு ஆராய் பிறக்கிலென் என்றுமாம்.
(ஒருத்தி) இன்னாளென்னாதே தங்கள் பயத்தாலே மறைத்துச் சொல்லுகிறார்கள். “அத்தத்தின் பத்தாம் நாள்” (பெரியாழ்வார் திரு – 1.2.6) என்னுமவர் மகளிறே. (பிறந்து) ஆவிர்ப்பவித்தாலாகாதோ? பன்னிரண்டு மாஸம் வயிற்றிலேயிருந்து பிறக்கவேணுமோ? “தேவகீ பூர்வஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா” என்று. பிறந்தானென்கை அவத்யமாம் என்று பரிஹரித்தான் ருஷி. அதுதான் அவத்யமென்று “பிறந்தவாறும்” என்று “பிறக்கவல்லன்” என்று சொல்லுகிறார்கள். (ஓரிரவில்) நாய்க்குடலுக்கு நறுநெய் வகுக்குமோ? ஸம்ஸாரிகள் பொல்லாங்கு அவனை ஓரிராத் தங்கிப்போக வொட்டிற்றிலை என்கை. அவ்விரவோடொக்கு மிரவுமில்லை; பகலு மில்லை. மாதாபிதாக்கள் கைவிட்டவளவிலே கைதந்த ராத்ரி. பிறவாநின்றால் கண்காணவந்து பிறந்து தூர்யம் கொட்டப்பெறாதொழிவதே! (இரவு) காலக்ருதபரிணாம மில்லாத தேஶத்திலே வர்த்தித்த இவன் காலக்ருத பரிணாமமான தேஶத்திலே பிறந்தால் பெறுவதும் பெறாதொழியவேணுமோ?
(ஒருத்தி மகனாய்) இருவருமிவனைப் பெறவேணுமென்று ஆஶ்ரயிக்க, அவளுக்கு அவதார ரஸத்தைக் காட்டிக்கொடுத்து, இவளுக்கு லீலாரஸத்தை அநுபவிப்பிக் கிறபடி. “அம்ஶாவதாரோ ப்ரஹ்மர்ஷே யோயம் யதுகுலோத்பவ:” என்ற ருஷிதானே “கோபாலோ யாதவம் வம்ஶம் மக்நமப்யுத்தரிஷ்யதி”. அவள் கரும்பின் கேழைக்கொண்டவோபாதி, இவளும் கரும்பின் நடுவைக் கொண்டாற்போலே இருக்கிறது. “ஆப்புண்டு” (பெரிய திருமொ – 10.6.1) “தீங்கரும்பு” (பெரிய திருமொ – 2.5.1). அங்கு ஈஶ்வரத்வ லக்ஷணத்தோடே பிறந்தது பிறப்பில் புறையற்றாற்போலே, இவள் மகனானவளவிலும் பிறப்பில் புறையற்றிருக்கை. (ஒளித்து வளர) கம்ஸாதிகளுடைய விஷத்ருஷ்டிகள் படாமே. நாட்டார் செய்வன செய்யப்பெறாதே கள்ளர் பட்டது படுவதே! அந்தர்யாமியாய் பட்டது பட்டான். உள்ளேயிருக்கச் செய்தே இவனில்லையென்று எழுதி எழுத்திடுமவன் முகம் காண ஸம்மதிக்குமோ? பிச்சேறின ப்ரஜை தாய் முன்பே நிற்கில் தாயைக்கொல்லும். அவள் பேர நிற்கில் தன்னை முடித்துக்கொள்ளும். அதுக்காக முகம் தோற்றாதே நின்று நோக்குமாப்போலே இவனும் முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்குகின்றான். இசைந்து “அம்மே!” என்றால் “அடியேன்” என்கைக்குக் கிட்டவிருக்கிறான்.
(தரிக்கிலானாகி) நாரதாதிகள் “க்ருஷ்ணன் வளரா நின்றான்” என்று சொல்லக் கேட்டபின்பு தரிக்கமாட்டிற்றிலன். “திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான்” (பெரியாழ்வார் திரு – 1.2.16) ஈஶ்வரஸத்தையும் பொராதொழிகை. (தான் தீங்கு நினைந்த) “எத்திறம்” (திருவாய் – 1.3.1) என்று அங்குத்தைக்குப் பரியவேண்டும் விஷயத்திலே தீங்கு நினைத்தது துஷ்ப்ரக்ருதியாகையிறே. (தான் தீங்கு நினைந்த) உத்தர க்ஷணத்திலே படப்புகுகிற தான்; “தீங்கு” என்கிறது அப்பொல்லாங்கு தன் வாயால் சொல்லமாட்டாமை. “அஸ்மாந் ஹந்தும் ந ஸம்ஶய:” “மாய்த்தலெண்ணி” (திருவாய்மொழி – 4.3.4) தங்களை நலிந்ததாயிருக்கை. பூதனையுள்ளிட்டாரை வரக்காட்டியும் வில்விழவுக்கென்றழைத்தும் நலியத்தேடினபடியும்.
(கருத்தைப் பிழைப்பித்த) அவன் நினைத்ததைப் பிழைக்கப் பண்ணுவித்து, அந்நினைவை அவனோடே போக்கினபடி. (கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற) ஆஶ்ரிதர் வயிற்றில் நெருப்பை அவன் வயிற்றில் புகவிட்டபடி. (நெடுமாலே) இதெல்லாம் படவேண்டிற்று ஆஶ்ரிதர் பக்கல் வ்யாமோஹத்தாலே என்கை. வஸுதேவதேவகிப் பிராட்டிகள் பக்கல் திருவுள்ளமன்றே. தாயார்க்கும் தமப்பனார்க்கும் செய்தன இவை. அவர்களையுமொளித்துச் செய்யுமவர்களன்றோ நாங்கள் என்கை. (உன்னை) அர்த்தித்வத்தால் நிரபேக்ஷனான உன்னை. (உன்னை அருத்தித்து வந்தோம்) உன்னைப் பெறவிருக்கிறோம். பிச்சின்மேலே பிச்சேற்ற வந்தோம். ஶ்ரீவைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாய் இவ்வளவும் வந்தவனிறே. எங்கள் வடிவைப் பாராய். “மாசுடையுடம்பும்” (நாச்சி திரு – 1.8) இத்யாதி. (பறை தருதியாகில்) தாழ்ந்தார் உயர்ந்தாரை “திருவுள்ளமாகில் செய்” என்னுமாப்போலே, “உன் அழகாலே எங்களை மயக்கத்தைப் பண்ணாதே செய்தருளப் பார்த்தாயாகில்” என்றுமாம்.
(திருத்தக்க செல்வமும்) திருவுக்குத் தக்க செல்வம். “யஸ்ய ஸா ஜநகாத்மஜா” “அப்ரமேயம் ஹி தத்தேஜ:” என்கிறபடியே. (திருத்தக்க செல்வமும்) பிராட்டி ஆசைப்படும் ஸம்பத்து. “திருவுக்கும் திருவாகிய” (பெரிய திருமொ – 7.7.1) “ஶ்ரிய: ஶ்ரியம்” (சேவகமும்) இத்தைக்காத்தூட்டவல்ல வீர்யம். (பாடி வருத்தமும் தீர்ந்து) கைவல்யம்போலே து:க்க நிவ்ருத்தியன்று தேட்டம். ப்ரீதிக்குப் போக்குவிடும்படி யாகை. “பறை தருதியாகில் உன்னை அருத்தித்து வந்தோம்”.
@@@@@
இருபத்தாறாம் பாட்டு
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – இருபத்தாறாம் பாட்டு. “பெண்காள்! உங்களுக்கு அபேக்ஷிதமென்?” என்று க்ருஷ்ணன் கேட்க, நோன்புக்கு வேண்டும் உபகரணத்தைச் சொல்லி, அவற்றைத் தரவேணும் என்கிறார்கள்.
வ்யாக்யானம் – (மாலே) தங்கள் பக்கலிலே பண்ணின வ்யாமோஹமிருக்கிறபடி. இவர்கள் பேச்சு கேட்டபின்பு பண்டையிலும் பிச்சின்மேலே பிச்சாயிற்று. பண்டு “ஸர்வேஶ்வரன் நிர்வாஹகன் ஸர்வஜ்ஞன் ஸர்வஶக்தி” என்றிருப்பர்கள். இப்போது இத்தத்வத்தை அழகிதாக நிலையிட்டாள். வாத்ஸல்யமே ஸ்வரூபம் என்றபடி. பிராட்டி சக்ரவர்த்தித் திருமகனை “ஶரணாகத வத்ஸல:” என்று ஸ்வரூபத்தை நிலையிட்டாள். அதுவே ஶ்ரீராமாயணத்துக்கு உள்ளீடான ப்ரதாநகுணம். இங்கு இவர்கள் “ஶரணாகத பக்ஷபாதி” என்று நிலையிட்டார்கள். இதுவே மஹாபாரதத்துக்கு உள்ளீடான ப்ரதாநகுணம். (மணிவண்ணா) அபரிச்சேத்யனா யிருக்கச்செய்தே முன்றானையிலே முடியலாம்படி இருக்கும். (மணிவண்ணா) பிச்சு வடிவிலே தெரிந்திருக்கும் என்றுமாம். (மணிவண்ணா) பெண்கள் பிச்சுக்கு நிதாநம். “”மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை” (நாச்சி திரு – 14.3) நீர்மையின்றிக்கே காதுகனானாலும் விடவொண்ணாத வடிவழகென்று. (மாலே) ஶ்ரீவிபீஷணாழ்வான் “விபீஷணோ மஹா ப்ராஜ்ஞோ பூமிம் ஸமவலோகயந்” என்று பெருமாளைக் கிட்டினபின்பு “நம்மைக் கைக்கொண்டு நம்மை உளோமாகப் பண்ண வல்லரே!” என்று தானிருந்த இருப்பைப் பெருமாள் நினைத்திருந்தமை முகத்தில் தோற்றியிருந்தது. முற்பட நினைவுக்கு ரிஷி “உவாச ச மஹாப்ராஜ்ஞ:” என்றான். பிற்பட்ட பெருமாள் ப்ரக்ருதியை அறிந்தபடிக்கு “விபீஷணோ மஹாப்ராஜ்ஞோ பூமிம் ஸமவலோகயந்” என்கிறபடியே நிலையிட்டார்கள் இவர்களும். “நாராயணனே நமக்கே பறை தருவான்” (திருப்பாவை – 1) என்றிருந்தார்கள். “பெண்கள் நம்மைக் கடாக்ஷிப்பது காண்!” என்று இருந்த இருப்பைக்கண்டு தலை சீய்க்கிறார்கள். “நீங்கள் வந்ததென்?” என்ன, வந்த கார்யத்தை இருவரும் மறந்தார்கள். இருவர் நெஞ்சையும் கல்லாலேயன்றோ பண்ணிற்று. ஆகிலும் இவர்கள் விடார்களிறே. இவர்கள் அவனுக்கு வரிசை கொடுக்கிறார்கள். “வைதேஹி ரமஸே கச்சிந் சித்ரகூடே மயாஸஹ”. அவை மாறிநிற்கிறபடி.
(மார்கழி நீராடுவான்) “மார்கழி நீராடுகைக்கு உபகரணம் வேண்டிவந்தோம்” என்ன, அங்கி கைப்பட்டவிடத்திலும் அங்கம் கைப்படாதொழிவதே! நாஸ்திகரைப்போலே “மார்கழி நீராட்டாவதென்?” என்ன, “நீ இதறியாயோ?” என்ன, “ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்ககாமோ யஜேத” என்கிறபடியே ஸித்தமாயிருந்ததோ?” என்ன, “எங்களுக்கு ஸ்வர்க்காதிகளில் ஶ்ரத்தையுண்டோ?” என்ன, “நிதித்யாஸிதவ்ய:” என்கிறாப்போலேதான் உண்டோவென்ன, “ப்ரமாணங்கள் பலத்தில் பலிக்கிலும் பலிக்கும், தவிரிலும் தவிரும். “யத்யதாசரதி ஶ்ரேஷ்ட:” என்று பூர்வர்கள் அநுஷ்டித்துப் போந்தார்களாகையாலே பலத்துக்கு அழிவில்லை. அதுவேயுமன்று. நீ இறையிறை அறிவதொன்றன்று. (மேலையார் செய்வனகள்) என்ன; தப்பச்சொன்னோம். நம்மைக் கோபியாதே வேண்டுவனச் சொல்லலாகாதோ” என்றாள். (வேண்டுவனக் கேட்டியேல்) உன் அந்யபரதைக் கெட்டால் சொல்லவேணுமே” என்ன, அஞ்சு லக்ஷம் குடியில் பெண்கள் உன் முன்னே புகுந்து நிற்கையாலே ஆனைக்குப் பாடுவாரைப்போலே எங்கள் வார்த்தைக் கேளாதே இவர்கள் கண்ணிலும் முலையிலும் இடையிலும் வடிவழகிலே மண்டினானென்கை. இவர்கள் “உன் கார்யத்துக்கு வந்தோமோ? எங்கள் கார்யத்துக்கு வந்தோம்” என்ன, “உங்கள் வடிவழகு கண்ணுக்கிலக்கானவோபாதி உங்கள் வார்த்தை என் செவிக்கு இலக்கன்றோ; அது என் கார்யமன்றோ? சொல்லிகோள்” என்ன,
(ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள்) “இடமுடைத்தாய் உன் திருமேனிக்குப் பகைத்தொடையாம்படியாய், பாலைத்திரட்டினாற்போலேயிருக்கிற நிறத்தையுடைத்தாய், “ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்” என்கிறபடியன்றிக்கே நின்று முழங்கக் கடவதுமாய், பல சொல்லுகிறதென், உன் கையில் ஶ்ரீபாஞ்சஜந்யம் போலேயிருப்பன பல சங்கங்கள் வேணும்” என்கிறார்கள்.
(போய்ப்பாடு) இடமுடைமை, பெருமை, புகழென்றுமாம். ருக்மிணி பிராட்டி மற்றையார்க்கு உதவினதென்கிற புகழ். “பூங்கொள் திருமுகத்து மடுத்தூதின சங்கொலியும்” (நாச்சி திரு – 9.9) இத்யாதி. “இதொன்று; இனியோ?” என்ன, (சாலப் பெரும்பறையே) ஒரு மண்ணளவில் த்வநிக்கையன்றிக்கே எங்கும் கேட்க த்வநிப்பதொரு பறை வேணும். “யயௌ தூர்யநிநாதேந பேரீணாஞ்ச மஹாஸ்வநை:” “பின்னையோ?” என்ன, (பல்லாண்டி சைப்பாரே) திருப்பல்லாண்டு பாடிக்கொண்டு போவார் வேணுமென்ன
“பின்னையோ?” என்ன, (கோலவிளக்கே) மங்களதீபம் வேணுமென்ன; “பின்னையோ?” என்ன, (கொடியே) :திருக்கொடி ஆடவேணும்” என்ன, “பின்னையோ?” என்ன, (விதாநமே) மேல்கட்டு வேணுமென்ன “பெண்காள்! நீங்களிட்ட இவை நம்மால் செய்யலாயிருந்ததில்லை” என்ன (ஆலினிலையாய் அருள்) “ஸர்வலோகத்தையும் தன் சிறுவயிற்றிலே வைத்துப் பவனாயிருப்பதோராலிலையிலே கண்வளர்ந்திருக்கிற உனக்கு முடியாததுண்டோ?” “பெண்காள்! தந்தோமென்னுமித்தனையன்றோ” என்கிறார்கள். புறம்பு தன்னைப்போலே இருப்பதொரு தத்வமுண்டாகிலிறே தன் கையில் சங்குபோலேயிருப்ப தொரு சங்குண்டாவது. “தாமுகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ” (நாச்சி திரு – 11.1) என்று இவளுகந்த சங்குதன்னைக் கொடுத்தான். “பாரோர்களெல்லாம் மகிழப் பறைகறங்க” (சிறிய திரு – 12) கன்றப்பறைகறங்க” (பெரிய திருமொ – 11.5.6) என்று மரக்கால் கூத்தாடுகிறபோது அரையில் கட்டின பறையையும் பறையடிக்கைக்கு ஶ்ரீஜாம்பவான் மஹாராஜரையும் கொடுத்தான். திருப்பல்லாண்டு பாடுகைக்கு “அடியோமோடும் நின்னோடும்” (திருப்பல் – 2) என்று திருப்பல்லாண்டு பாடும் பெரியாழ்வாரையும், பாகவத ஸம்ருத்திக்கு “பொலிக பொலிக” (திருவாய் – 5.2.1) என்னும் நம்மாழ்வாரையும் கொடுத்தான். மங்களதீபத்துக்கு உபயப்ரகாஶகையான நப்பின்னைப் பிராட்டியைக் கொடுத்தான். கொடிக்குப் பெரிய திருவடியைக் கொடுத்தான். விதாநத்துக்குத் திருவவதரித்தவன்றுத் தன் பணத்தையிட்டுக் கவித்துக்கொண்டு போந்த திருவநந்தாழ்வானைக் கொடுத்தான்.
(ஆலினிலையாய்) எல்லாம் கொடுத்தாலும் தன்னைக்கொடுத்ததாகாமையாலே அத்தவாளத்தையும் கொடுத்தான். எல்லாத்தையும் கொடுத்தாலும் தன்னையொழிய ஓரடியிடாத பெண்களாகையாலே. “நயாமி பரமாம் கதிம்” என்கிறபடியே அத்தவாளத்தலையைக் கவித்துக்கொண்டு போனான் என்றும், “கள்வன் கொல்” (பெரிய திருமொ – 3.7) லிற் பிராட்டியைப்போலே ஒளித்துக்கொண்டு போகவேண்டாவோ? அது வேண்டாவே, ஊர் இசைந்ததே. “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்கிறபடி ஒருவனே எல்லா அடிமையும் செய்வானையுடையனாய் நின்றால் “சென்றால் குடையாம்” (முதல் திருவந் – 53) என்கிறபடியே எல்லாவடிமையும் செய்யவல்ல ஒருவனையும் கொடுத்துவிடாதே நித்யவிபூதியிலுள்ளா ரையும் கொடுக்கிறதென்னென்னில் எல்லாரும் ஸ்வரூபலாபம் பெறுகைக்காக.
@@@@@
இருபத்தேழாம் பாட்டு
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே. தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – இருபத்தேழாம் பாட்டு. கீழ் தன் ஸ்வரூப ஸித்தியைச் சொல்லிற்று. அப்போது அவர்களை அலங்கரிக்கும்படி சொல்லுகிறது.
வ்யாக்யானம் – (கூடாரை வெல்லும்) தாங்கள் பட்ட இடரை அறிவித்து அத்தலையைத் தோற்பிக்க நினைத்தார்கள். அவன் தன் தோல்வியைக் காட்டி அவர்களைத் தோற்பித்தபடியைச் சொல்லுகிறது. “எங்களை தோற்பித்த நீ யாரை வெல்லமாட்டாய்?” என்கிறார்கள். அதாவது – நாங்கள் வந்து உன் முன்னே நின்று வார்த்தை சொல்லும்படி பண்ணினாய். ஆந்தனையும் பார்த்தால் “ந நமேயம்” என்று கூடாரை வெல்லுமத்தனை. கூடினார்க்குத் தான் தோற்குமித்தனை. (சீர்) எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே. கூடுவாரை ஶீலத்தாலே வெல்லும்; கூடாதாரை ஸௌந்தர்யத்தாலே வெல்லும். அழகுக்கும் அம்புக்கும் இலக்காக்கும். அஜ்ஞரை ஸர்வஜ்ஞராக்கும். ஸர்வஜ்ஞரை “எத்திறம்” (திருவாய் – 1.3.1) என்னப் பண்ணும். “ஸத்யேந லோகாந் ஜயதி” இத்யாதி. அம்புவாய் மருந்தூட்டித் தீர்க்கலாம். இதுக்கு பரிஹாரமில்லை. நீர் கொன்றார்போலே. “நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து” (திருவாய் – 9.6.3) என்னக்கடவதிறே. ஶத்ருக்களை வில்லைக்காட்டிக் கொல்லுமத்தனை. “சசால சாபம் ச முமோச வீர:” என்று விற்பிடித்தப் பிடியைக்கண்டு வில்லை ராவணன் பொகட்டான். பின்னை வில்லை எடாதேயொழிந்தானாகில் பெருமாளை வென்றே போகலாயிற்று. “விற்கை வீரன் பெருமாள்; வெறுங்கைவீரன் ராவணன்” என்றான் ருஷி. (கோவிந்தா) பசுக்களுக்கும் தோற்குமவன். கூடுவோமென்னும் அபிஸந்தி இல்லாதாரையும் ரக்ஷித்தபடி.
(உன்தன்னைப்பாடி) விலக்கினவது பெற்றபடி. “ஹிரண்யாய நம:” என்கை தவிர்ந்து உன் பேர் சொல்லப்பெறுவதே! என்கை. (உன்தன்னைப்பாடி) பெண்கள் புணர்ப்பே தாரகமாகப் பாடித்திரியும் உன்னைப் பாடுகையே ப்ரயோஜநம் போரும் என்றுமாம். (சீர்) சீலவத்தையின் மிகுதியாகவுமாம். (பறைகொண்டு) ப்ராப்யத்திலே ப்ராபக வ்யவஹாரம். உங்களுக்குப் பறையென்கிறது. (யாம் பெறு சம்மானம்) தங்கள் பேறு. இவ்வளவிலே வெளித்திருமுற்றத்தில் நின்றும் ப்ரஸாதம்கொண்டு ஒருவன் வர, “இது யாம்பெறு சம்மானம் வந்தது” என்று பட்டர் அருளிச்செய்தார். “பதிஸம்மாநிதா ஸீதா” என்று “தோளில் மாலையை வாங்கியிட்டார்” என்று ஆழ்வான் பணிக்கும். பட்டர் “ப்ரணயித்வத்தாலே காலைப் பிடித்து நில் என்றார்” என்பர். “தாம் ஶ்ரீரிதி த்வதுபஸம்ஶ்ரயணாந் நிராஹு:” என்று கொடுத்தால் தட்டென் என்கை. (யாம் பெறு சம்மானம்) அநாதிகாலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும்படி அவன் கொண்டாடும்படி சொல்லுகிறது.
(நாடு புகழும் பரிசு) “பாரோர் புகழ” (திருப்பாவை – 1) என்னும்படியே “ஒருவன் கொடுக்கும்படியே! சிலர் பெறும்படியே!” என்று கொண்டாட. ஸஞ்ஜயனும் ஶுகஸாரணர்களும் இவனுடைய ஆஶ்ரித பக்ஷபாதத்தைப் புகழ்ந்து போனாற்போலே. (நன்றாக) நாடு சிரிக்கும்படி காலன் கொண்ட பொன்னையிட்டு ஆபரணம் பூண்கையன்றிக்கே, “ப்ரதேஹி ஶுபகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமிநி” என்று இந்த்ரன் வரக்காட்டின ஹாரத்தைப் பெருமாள் பிராட்டிக்குக் கொடுக்க, அத்தை ஒரு கையிலே பிடித்து, பெருமாளை ஒரு கண்ணாலும் “இத்தை இவனுக்குக் கொடுப்பது” என்று திருவடியை ஒரு கண்ணாலும் பார்க்க, பெருமாள் அத்தையறிந்தருளி, “ஆஶ்ரிதரை அறிவாய் நீயன்றோ; கொடுக்கலாகாதோ” என்றருளிச் செய்யக் கொடுத்தாற்போலே, இருவரும் கூடிக்கொடுக்கும் ஆபரணமென்கை. “தம் ப்ரஹ்மாலங்கா ரேண அலங்குர்வந்தி” என்று விரஜைக்கு அக்கரைப்பட்டாரை எம்பெருமான் தன்னை ஒப்பிப்பாரையிட்டு ஒப்பிக்கக் கடவது. இங்கு அங்ஙனன்றியே தானும் பிராட்டியுங்கூட ஒப்பித்த தன்னேற்றம் சொல்லுகிறது. (நன்றாக) ஆபரணத்தைப் பூண்டு அவர் வரவு பார்த்திராதொழிகை என்றுமாம்.
(சூடகமே) “வெள்ளி வளைக்கைப்பற்ற” (பெரிய திருமொ – 3.7.1) என்கிறபடியே அநந்யார்ஹைகளாய் பிடித்தக் கைகளிலேயிறே முதலாபரணம் பூட்டுவது. “அடிச்சியோம் தலைமிசை நீயணியாய்” (திருவாய் – 10.3.5) என்னுமாபோலே அவனும் சொல்லி மார்பிலும் தலையிலும் வைத்துக் கொள்ளும் கைக்கு இடும் சூடகம். முந்துறத்தான் உறவு பண்ணுமிடம். “கைத்தலம் பற்ற” (நாச்சி திரு – 6.6) (தோள்வளையே) அத்தலையில் ஸ்பர்ஶமே அணைக்கவேண்டி யிருக்கையாலே அணைத்தத் தோளுக்குத் தோள்வளையுமென்கை. (தோடே) அணைத்தாலுறுத்துமவை. “ப்ரியாவதம்ஸோத்பல” “கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும்” (திருநெ – 22) என்னும்படியே. (தோள்வளையே தோடே செவிப்பூவே) செவிப்பூ – ஆக்ராணம் பண்ணுமிடம். கண்ணாகவுமாம்.
(பாடகமே) அணைத்தால் துவண்டுவிழுமிடம். “அஸிதேக்ஷணை” யாகையாலே “ஜிதம் தே புண்டரீகாக்ஷ” என்று அவன் தோற்றுவிழுமிடம். (அணைய பல்கலன்) பருப்பருத்தன சில சொன்னவித்தனை. நீ அறியுமவை யெல்லாம் வேணுமென்கை. “பலபலவேயாபரண” (திருவாய் – 2.5.6) மிறே. இத்தசையிலேயிருந்து எண்ணப்போமோ? (யாமணிவோம்) “மலரிட்டு நாம் முடியோம்” (திருப்பாவை – 2) என்னுமிவர்கள் அநுமதி பண்ணவும் அமையுமென்கை.
(ஆடையுடுப்போம்) “பண்டு உடார்களோ?” என்னில், (கோவிந்தா உன்தன்னைப் பாடி ஆடையுடுப்போம்) ஒருத்திக்குப் புடவை கொடுத்தது இவர்களுக்குச் செய்யச் சொல்லவேணுமோ? அவன் உடுத்த உடாதது உடையன்று என்றிருக்கை. அதாவது – கூறை மாறாடுகை. “புனையிழைகளணிவும் ஆடையுடையும் புதுக்கணிப்பும் நினையும் நீர்மையதன்று”. “அப்பன் திருவருள் மூழ்கினள்” (திருவாய் – 8.9.5) என்னும்படியே அவனோட்டை ஸம்பந்தமே இவர்கள் நன்மைக்கெல்லாம் அடி. (புதுக்கணிப்பும்) அவனுகப்பொழிய தங்களுகப்புப் பொகட்டபடி. நோன்பு முடிக்கையாலே நல்ல பரியட்டமுடுக்க என்றுமாம். “உடுத்துக்களைந்த” (திருப்பல் – 9) என்னுமவர்களிறே. (அதன் பின்னே பால்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார) பகவத் ஸம்பந்தமுண்டான திருவாய்ப்பாடியில் ஸம்ருத்திகளெல்லாம் இவர்களுக்கு ப்ரியமாயிருக்கிறபடி. நம்பி திருவழுதிவடநாடு தாஸர் “நெய் வாயில் படாதோ?” என்ன ”ஓரவிழ் வாயில் தொங்கிலன்றோ நெய் வாயில் படுவது” என்று பட்டர் அருளிச் செய்தார். க்ருஷ்ணஸந்நிதியாலே த்ருப்தைகளா யிருக்கிறார்கள். பால் தொங்கிலன்றோ நெய் தொங்குவது. “நெய்யுண்ணோம் பாலுண்ணோம்” (திருப்பாவை – 2) என்றது தனியாகை.
(கூடியிருந்து) தனியே புஜிக்கக் கடவதன்று. உண்கை உத்தேஶ்யமன்று. பிரிந்துபட்ட க்லேஶம் தீரக் கூடத் தொட்டுக்கொண்டிருக்கையே ப்ரயோஜனம். “நம்பெருமாள் திருநாள்” என்று ஒருபேரையிட்டு ஶ்ரீவைஷ்ணவர்களை யடையத் திரட்டிக் காணுமாபோலே. “ஸோஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஶ்சிதா” “அஹமந்ந” மித்யாதி. ஒருவர்க்கொருவர் போக்யமாகை. (குளிர்ந்து) பிரிந்து கமர் பிளந்த நெஞ்சுகள் வவ்வலிடும்படி.
@@@@@
இருபத்தெட்டாம் பாட்டு
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்கவொழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – இருபத்தெட்டாம் பாட்டு. “பெண்காள்! நீங்கள் சொன்னவை நாட்டுக்கு; உங்கள் அபிஸந்தி இவ்வளவென்று தோற்றியிருந்ததில்லை. நீங்கள் சொன்னவையும் இன்னும் மேல் சொல்லுமவையும் உண்டாகில், நாம் தருமிடத்தில் உங்கள் பாடே நாமும் சிறிது பெற்றோமாகவேணும். இதுக்கு உங்களுக்குள்ளதென்?” என்ன, உனக்கு உதவுவதாவது எங்கள் பக்கல் ஒன்றுமி்லை. நாங்கள் பண்டு தப்பச் சொல்லிற்றனவுண்டாகில் பொறுக்கவேணும்” என்று க்ஷமை கொள்ளுகிறார்கள். முதற்பாட்டில் “நாராயணனே நமக்கே பறைதருவான்” (திருப்பாவை – 1) என்று ஸங்க்ரஹேண சொன்ன ப்ராப்ய ப்ராபகங்களை இந்த இரண்டு பாட்டாலே விவரிக்கிறது. இப்பாட்டு உபாய விவரணம்.
வ்யாக்யானம் – (கறவை) உங்கள் ஸ்வரூபம் ஏதென்ன, இன்னதென்கிறார்கள். பட்டர் அருளிச்செய்யும் பாட்டையும் இங்கே நினைப்பது. (கறவைகள்) அறியாமைக்குக் கன்று காலி மேய்க்கை. “ஜ்ஞாநேந ஹீந: பஶுபிஸ்ஸமாந:” அறிவில்லாதாரைப் பசுக்களோடொப்பரென்னக்கடவது. (பின் சென்று) பின்னென்று தாங்கள் குருகுலவாஸம் பண்ணும்படி சொல்லுகிறார்கள். (ராவணோ நாம) பரஹிம்ஸையிலே பேர்படைத்தவன். (துர்வ்ருத்த:) பேர்மாத்ரமேயாய் ஸதாசாரமுண்டோவென்னில் அதிலும் புரையில்லை. (ராக்ஷஸ:) ஜந்மத்தால் வரும் நன்மையுண்டோவென்னில், அதுவுமில்லை. காட்டிலே புக்கு நோக்கினாலும் திருத்தப்போகாது. (ராக்ஷஸாதிப:) நியாம்யனோவென்னில், இவன் தனக்கு எல்லாரும் நியாம்யர். (கானம் சேர்ந்து) ஊர் கண்டறியோம். (உண்போம்) ருஷிகளைப்போலே தபஸ் பண்ணுகைக்கல்ல. (சேர்ந்துண்போம்) நடந்து நடந்து உண்ணுமத்தனை. எங்களைப் பார்க்க, பசுக்கள் வஸிஷ்டாதிகளோடொக்கும். எங்கள் இளிம்பு கண்டால் சிரிப்பன பசுக்களாயிற்று. “க்ருதாநுகாராநிவ கோபிரார்ஜவே” என்று பசுக்கள் அசுக்காட்டும் ஆர்ஜவம் எங்கள் படியென்கை. இத்தால் கர்மயோகத்தில் அதிகாரமில்லை என்றபடி.
(அறிவொன்றுமில்லாத) இஜ்ஜந்மத்தில் ஒரு ஸுக்ருதம் இல்லையாகிலும் ஜந்மாந்தரத்தில் புண்யத்தைப் பண்ணி, அத்தாலே விதுராதிகளைப்போலே இஜ்ஜந்மத்திலே அறிவுண்டாமது உண்டோவென்னில், அதுவுமில்லை என்கிறார்கள். (ஒன்றுமில்லாத) ஈஶ்வரஜ்ஞாநத்துக்கடியான ஆத்மஜ்ஞாநமில்லை. இத்தால் ஜ்ஞாநபக்திகளில்லை என்கிறது. “பக்திஶ்ச ஜ்ஞாநவிஶேஷ:” என்று, பக்தியாவது ஒரு ஜ்ஞாநவிஶேஷம். அதுவுமில்லையாகையாவது – கீழிலவையுண்டாக உண்டாமதொன்றாகையால் இதில்லை என்னுமிடம் சொல்லவேண்டாவிறே. “இவர்கள் அலமாப்பு பக்தியன்றோ?” வென்னில், அது ஸ்வரூபமாகையால் உபாயமாக நினையார்கள். இத்தால் கர்ம, ஜ்ஞாந, பக்திகளில்லை என்கை. “அஹமஸ்மி அபராதாநாம் ஆலயோ அகிஞ்சந:” “நோற்ற நோன்பிலேன்” (திருவாய் – 5.7.1) “குளித்து மூன்று” (திருமாலை – 25) “ந தர்மநிஷ்டோஸ்மி” இவையன்றோ அறிவுடையார் வார்த்தை. அவர்களோடொத்திகோள் என்ன, (ஆய்க்குலம்) அதிகாரமே இல்லை. எங்களைக் கண்டுவைத்து அறிவுண்டோவென்று கேட்கிற நீயன்றோ அறிவுகேடன்.
“முதலில்லாதவன் பலிசையிழக்கும்” என்று சொல்லுகிற படியே புண்யமில்லாதார் இழக்குமத்தனையன்றோ என்ன, (உன்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்) என் சொன்னாய்? எங்களுக்கோ புண்ணியம் இல்லாதது? “க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம்” என்று எங்கள் புண்ணியத்துக்குப் பாலும் சோறும் இட்டு வளர்க்கிறோம் நாங்களன்றோ. “உபாயோபேயத்வே ததிஹ தவ தத்த்வம்” என்னும்படியான உன்னை. (பிறவிபெருந்தனை) நாட்டார் ஆஶ்ரயணீயர் இருந்தவிடத்தேபோய் ஆஶ்ரயிப்பார்கள். நாங்களிருந்த விடத்தே எங்களோடே ஸஜாதீயனாய் ஆஶ்ரயணீயனான நீ வந்து அர்த்திக்கும்படியன்றோ எங்களுடைய ஏற்றம். எங்கள் புண்ணியம் முதலில்லாதார்க்கு முதலும் பலிசையும் பலிக்கும் புண்யங்காண்! (புண்ணியம் யாமுடையோம்) ஸாத்யதர்மத்தைப் பற்றினோமோ? ஸித்தமுமாய் வடிவுள்ளதொரு தர்மத்தைப் பற்றினோம். இதுவோ எங்களுக்குக் குற்றம்?
(குறைவொன்றுமில்லாத கோவிந்தா) “உங்களுக்கு ஒன்றுமில்லை என்றிகோளே” என்ன “உன்னையும் இல்லையென்றோமோ?” என்ன, “உங்கள் பெருமைக்கு நாம் செய்யவேண்டுவதென்?” என்ன, ராஜாக்கள் வழிபோம்போது மேடுபள்ளமுமொக்கவிட்டு வழிபோமாபோலே, உன் குறையில்லாமையை எங்கள் குறையிலே இட்டு நிரப்புவது; பெருமாள் கடலைத் தூர்த்து வழிபோனாப்போலே. (கோவிந்தா) “அறிவில்லை என்றிகோளே” என்ன, நீயோ சால அறிவுடையாயிருக்கிறாய்; “அவிஜ்ஞாதா” வன்றோ? உன்னை உணரில் பிறக்க விரகுண்டா? கோல்கொண்டு பசுவின் பின்னே திரிய விரகுண்டோ?
(உன்தன்னோடுறவேல் நமக்கிங்கொழிக்கவொழியாது) நாங்கள் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம்; நீ குறையொன்றுமில்லாத கோவிந்தன். ஆனபின்பு இனி இவ்வுறவு “விதிநிர்மிதமேததந்வயம்” என்கிறபடியே. மேடுபடக்கண்டது பள்ளத்தை நிரப்பவன்றோ? நாராயணத்வமொழிய தயாபூர்த்திக்கு தயநீயதா பூர்த்தியுண்டானபடியாகிற உறவு. “எனக்கறிவுண்டென்று கண்டால் உங்களறியாமை போயிற்றோ?” என்னில் “எங்களறிவுகொண்டு கார்யமுண்டோ உன்னோடு விடவொண்ணாத குடல்துடக்கான உறவுண்டாயிருக்க?” என்ன, “உறவுண்டாயிருக்கச் செய்தேயன்றோ துர்யோதன சிசுபாலனுள்ளிட்டாரை விட்டது” என்ன, “உனக்கு விடவொண்ணாத பாண்டவர்களாகக் கொள் எங்களையும்” என்கிறார்கள். “தங்கள் கர்மம் தாங்கள் செய்கிறோம்” என்றிருப்பாரையன்றோ உனக்கு விடலாவது. “எங்கள் கர்மம் உன்னாலே” என்றிருப்பாரை உன்னால் விடவொண்ணாது. அவர்கள் தங்களாலும் விடவொண்ணா தென்கை. எங்கள் வெறுமையும் உன் பூர்த்தியும் உணர்ந்த எங்களை விடவொண்ணுமோ? என்றுமாம்.
(அறியாத) அநவதாநம். (பிள்ளைகள்) அஜ்ஞர். (அன்பு) தவிரவொண்ணாதாகையால் ப்ரக்ருதி. ப்ரக்ருதி உபாயபுத்தியாகிலிறே தப்பாவது. இம்மூன்றும் குற்றமாக நினைக்க விரகில்லை. “மயா ப்ரமாதாத் ப்ரணயேந வாபி” (அன்பினால் உன்தன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே) “நாராயணன்” என்று, கோவிந்தாபிஷேகம் பண்ணிப் பூர்ணனாயிருக்கிற என்னை, சிறுபேர் சொன்னிகோளேயென்ன, “நாராயணன்” என்கை குற்றமோ? என்னில், நீர்மை ஸம்பாதிக்கப் பிறந்தவிடத்திலே மேன்மையைச் சொல்லுகை குற்றமன்றோ? அர்ஜுனனைப்போலே பொறைகொள்ளுகிறார்கள். “ஒரு படுக்கையிலேயிருந்து கால் தாக்கிற்று கைதாக்கிற்று என்று குற்றம் கொள்ளுவாரைப்போலே அன்புடையாரைக் குற்றம் கொள்ளப்போமோ? பொறுத்தருளாய்” என்கிறார்கள்.
(இறைவா) உன் ஸ்வரூபம் பெறவேண்டாவோ? (நீ தாராய்) ஸ்வீகாரத்தில் செய்தவற்றையும் நீ செய்து, அநுதாபமும் நின் தலையிலே ஆகவேணும். “ஏகம்” என்றபடி. செய்தருளாய். (ஒழிக்க ஒழியாது) நன்மையுண்டாகிலன்றோ பழியிட்டு விடலாவதென்றுமாம். (சீறியருளாதே) உபாயமென்று நினையாதே ப்ரக்ருதி வ்ருத்தி என்று கொள்ளவேணும். இத்தலை பற்றும் பற்றடைய சீற்றத்துக்கு விஷயம். இத்தலைக்குக் குறையும் அத்தலைக்கு ரக்ஷையும் ஸ்வரூப ப்ரயுக்தம். (இறைவா) தன் கைகால் தப்பச் செய்ததென்று பொடிவாருண்டோ? (நீ தாராய்) விலக்குகைக்காளில்லை. நீ தருமித்தனை.
@@@@@
இருபத்தொன்பதாம் பாட்டு
சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
அவதாரிகை – இருபத்தொன்பதாம் பாட்டு. “எம்மா வீட்டி” (திருவாய் – 2.9) ற்போலே ப்ராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறது. திருவாய்மொழியில் இப்ரபந்தத்துக்கு வாசி – முந்துற நெடுமாற்கடிமை (திருவாய் – 8.10) யிலர்த்தத்தை அநுபவித்துக்கொண்டு அது நிலைநிற்கைக்காகவும் அத்தைக் காத்தூட்டுகைக்காகவும் பிற்பட “எம்மா வீட்டி” லர்த்தத்தோடேத் தலைக்கட்டுகிறது.
வ்யாக்யானம் – (சிற்றம் சிறுகாலே) “ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தயேதாத்மநோ ஹிதம்” என்றும், “காலை நன்ஞானத்துறைபடிந்தாடிக் கண்போது செய்து மாலை நன்னாவில் கொள்ளார் நினையாரவன் மைப்படியே” (திருவிருத்தம் -93) என்றும் சொல்லுகிறபடியே இவர்கள் அநுஷ்டிக்கிறார்கள். (காலையாவது) ஆத்மாவுக்கு வெளிச்செறிக்குங்காலம் என்றுமாம். இக்கண்ணுக்கு இவ்வாதித்யன் வெளிச்செறிப்பு பண்ணுமாபோலே அகவாயில் கண்ணுக்கும் வெளிச்செறிப்புப் பண்ணக்கடவ ஆதித்யன் ஶ்ரிய:பதி. “பாஸ்கரேண ப்ரபா யதா” (ஞானமாகிறது) “ஒண்டாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்குமுணர்வு” (முதல் திருவந் – 67) என்கிறபடியே ஶ்ரீய:பதியே தனக்கு விஷயமாக உடைய ஜ்ஞாநம். (நன்ஞானமாகிறது) ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் ஸஹாயாந்தர நிரபேக்ஷமாக அம்மிதுனமே நமக்குப் பலம் தரக்கடவதென்று அத்யவஸாயம். (துறைபடிந்தாடுகை யாவது) குருபரம்பரையில் சொல்லுகிற க்ரமத்தாலே எம்பெருமானைப் பற்றுகை.
பகல் பரஹிம்ஸைப்பண்ணி, இராவெல்லாம் மறந்துகிடந்நு உருகி, விடிந்தால் பரஹிம்ஸையிலே புகும். நடுவே அல்பகாலம் ஸத்வம் தலையெடுத்து வெளிச்செறிப்புள்ள காலம். மநஸ்ஸு ஸ்திரமாம் காலம். முன்பு தான் தனக்குக் கடவனாயிருக்கும். பின்பு எம்பெருமானுக்குப் பரமாயிருக்கும். நடுவிலுணர்ச்சியிறே இக்காலம். மாறநேர் நம்பி சரமதஶையில் கலக்கங்கண்டு பயப்பட்ட பெரியநம்பிக்கு எம்பெருமானார் பயந்தீர்க்க அருளிச்செய்த ஶ்லோகங்களிவை. “ஸ்திதே மநஸி” இத்யாதி. இவை எங்ஙனேயென்ன, ஶ்ரீவராஹ எம்பெருமான் உம்மைப்போலே ஆஶ்ரிதபக்ஷபாதி. அவன் வார்த்தையொழிய என்போல்வார் மத்யஸ்தர் வார்த்தையுண்டாகில் சொல்லுமென்ன, “ந மே பக்த: ப்ரணஶ்யதி” இத்யாதிகளடைய உம்மைப்போல்வார் வார்த்தையாயிராநின்றதென்ன, “இந்த ஜ்ஞாநமுடையவ னுக்குப் புனர்ஜன்மமில்லை என்னுமிடத்துக்கு ப்ரமாணமுண்டோ?” என்ன, “த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந” என்று உண்டென்றருளிச் செய்தார். இவற்றைக் கொண்டு பெரியநம்பி ப்ரீதரானார்.
அந்திம ஸ்ம்ருதி இல்லையென்று அஞ்சவேண்டா, புனர்ஜந்மமுண்டென்று அஞ்சவேண்டா, இந்த ஜ்ஞானமுடையவனுக்கு. ஆளவந்தார் கோஷ்டியிலே “ஸம்ஸாரிக்கு எம்பெருமான் ஸந்நிதியில் விண்ணப்பம் செய்யவடுப்பதென்?” என்ன, சில முதலிகள் “மூடோயம்” இத்யாதி க்ஷத்ரபந்துவின் ஶ்லோகத்தை விண்ணப்பம் செய்கை அழகிதென்ன, “அதிலே பெருந்தேவையுண்டு; நமக்காவது “ஸோஹந்தே” என்கிற காளியன் ஶ்லோகமே” என்றருளிச்செய்தார். “பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்” (இர திரு – 81) – என்னுடைய ஆதித்யன் உதித்தான்; அஸ்தமியாத ஆதித்யனையும் கண்டேன்; உறங்காத என்னையும் கண்டேன்; முன்பு ஒரு போகியாக உறக்கம். பின்பு ஒரு போகியாக உணர்ச்சி. பெண்களாகையாலே “சிற்றம் சிறுகாலே” என்றபடி. “வெட்டவெடியாலே” என்னுமாபோலே. யோகிகளும் உணர்வதற்கு முன்னே சிறு பெண்களான நாங்கள் உறங்கக் கடவ போதிலே உணரக்கடவ இத்தர்மஹாநியைப்பாராய். “என்னில் முன்னம் பாரித்து” (திருவாய் – 9.6.10) என்று நீ உணரும் காலத்திலே நாங்கள் உணர்ந்து வந்தோமென்கை.
(வந்து) இரண்டு ஸ்வரூபத்தையுமழித்தோம். ஸ்வரூபம் நிலையிட்டவர்களிறே. (வந்து) “பத்ப்யாம் அபிகமாச்சைவ ஸ்நேஹஸந்தர்ஶநேந ச” என்று சொல்லுகையால் அவனிருந்தவிடத்தே நாலடியிட்டுச் செல்லில் இட்ட இட்ட அடிதோறும் நெஞ்சுளுக்கும். பொறுக்கமாட்டானென்கை. (வந்துன்னை ஸேவித்து) உன்னை வேண்டாதே ஸாதநகாலத்திலே ரஸிக்கிற உன்னை ஸேவித்து. “ஸுஸுகம் கர்த்துமவ்யயம்” . அதுக்குமேலே ஒரு அஞ்சலி உண்டறுக்க மாட்டாத உன்னைச் சேவித்து. (உன்னைச் சேவித்து) அத்தலை இத்தலையாயிற்றே. ஸேவ்யரான நாங்கள் ஸேவகரானபடி. “ஸுக்ரீவம் நாதமிச்சதி” என்று காலம் பார்த்திருப்பார். லங்கையில் சென்று ஶ்ரீவிபீஷணாழ்வானைக் காலம் பார்த்திருந்தவனன்றோ.
(உன் பொற்றாமரை அடியே) ஆற்றாமை ஸ்வரூபமா கையால் அடைவுகெட மேல்விழுந்தபடி. (அடியே போற்றும் பொருள்) சூடவந்த பூவுக்கு விலையிடுவாரைப்போலே. உனதுபாலென்றுமாம். உபாயோபேயங்களிரண்டும் தானே. ஸ்வீகாரமாத்ரத்தில் நிற்கப்போகாமை போற்றுகிறபடி. ருசிக்கவ்வருகு பட்டால் பலத்திலே மூளுமத்தனை. கவிழ்ந்து நிற்கச் செய்தே விண்ணப்பம் செய்கிறது. (கேளாய்) இவர்கள், அடியே போற்றாநிற்க, தான் இவர்கள் காலைப்பிடிக்கக் கணிசியாநின்றானென்கை. “நாங்கள் முன்னே நிற்கில் வார்த்தை கேட்கவொண்ணாதோ?” என்கை.
(பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ) “கேட்கப் புகாநின்றதோ?” என்ன, “நீயன்றோ முத்தீமை செய்தாய்” என்ன, “எங்ஙனே?” என்ன, என்றும் கேட்டேப்போகக் கடவதான நீ வந்து இக்குலத்திலே பிறந்து இட்டீடுகொண்டு எளியனானாயென்கை. நாங்கள் நீ இருந்தவிடத்திலே வந்து பிறந்தோமோ? வஸிஷ்டாதிகள் விலக்குமிடத்தே வந்தோமோ? (குற்றேவலெங்களைக் கொள்ளாமல் போகாது) பெருபசியிலே உண்ணப்புக்கவன் கலத்திலே கேஶலேஶங்கண்டால் பின்னே உண்ணாமல் பொகட்டுப்போமாபோலே, ஶப்தாதி விஷயங்கள் தாரகமாயிருக்கிற எங்களை வடிவழகு காட்டி “உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணனெம்பெருமான்” (திருவாய் – 6.7.1) என்னப்பண்ணி, ஸ்வரூபாநுரூபமான அடிமைத் தாராதேபோகைக்கு உன்தரமோ? என்கை. “உண்டிட்டாயினி உண்டொழியாய்” (திருவாய் – 10.10.6). நீர் விளாவிவைத்தோ போகப்பார்த்தது? “நிவேதயத மாம் க்ஷிப்ரம்” “அஹமந்நமஹமந்நமஹமந்நம்”. (எங்களை) “வைதர்ம்யம் நேஹ வித்யதே” (போகாது) உன்தரமோ நாங்கள்? நீதான் உனக்குரியையோ? “என்னை நெகிழ்க்கிலும்” (திருவாய் – 1.7.8) இத்யாதி. நப்பின்னைப் பிராட்டி பரிகரம். ஆணையிட்டவர்கள் பெண்பிள்ளை யன்றோ?
(இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண்) இவர்கள் சொல்லிற்றுக் கேட்டு, “இவர்கள் நம்மை விடார்களாயிருந்தார்கள். நம்மைத் தடுத்தும் வளைத்தும் கொள்வர்கள்” என்று “பறையை எடுத்துக்கொள்ளுங்கோள்” என்ன, “தேஹிமே ததாமி தே” என்று ஒரு கையாலே கும்பிட்டு, ஒரு கையாலே ப்ரயோஜநம் கொண்டுபோமவர்களோ நாங்கள்? (கோவிந்தா) யதாஶ்ருதக்ராஹியாயிருந்தாய். “கெடுவாய்! நாங்கள் இற்றைப் பறை கொள்ளுவான் அன்றுகாண்!” என்று பட்டர் அருளிச்செய்த வார்த்தை. இடையனாகையாலே அபிதாநவ்ருத்தி போமித்தனை. தாத்பர்ய வ்ருத்தி போகாதென்கை. “போகு நம்பி” (திருவாய் – 6.2.2) என்று சொல்ல, வரநிற்குமவனல்லையோ? என்கை. பசுக்களின் பின்னே திரிவார்க்கு ஶ்ரோத்ரியராக முடியுமோ?
ஆனால் செய்யவேண்டுவதென்னென்ன – (எற்றைக்கும்) “ந காலஸ் தத்ர வை ப்ரபு:” என்று சொல்லுகிற பரமபதத்தில் போனாலும், (ஏழேழ் பிறவிக்கும்) இங்கே பிறந்தாலும் ஒக்கப் பிறக்கவேணும். க்ருஷ்ணனும் பெண்களுமாய், புறப்படில் அமையுமென்கை. அவனும் “எதிர் சூழல்” (திருவாய் – 2.7.6) என்று இவர்களைப் பெறவேணுமென்று முற்கோலிப் பிறவாநிற்கும் என்றுமாம். இளையபெருமாள் படைவீட்டிலும் காட்டிலுமொக்க அடிமைசெய்தாற்போலே , “தேவத்வே தேவதேஹேயம் மநுஷ்யத்வே ச மாநுஷீ” ஆகவேணுமென்கிறார்கள்.
(உன்தன்னோடுற்றோமேயாவோம்) ஓருறவைக் குறித்து அதுவாகவேணுமென்னாதொழிந்தது எல்லா உறவும் நீயேயாகவேணுமென்கை. “மாதா பிதா ப்ராதா நிவாஸஶ் ஶரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண:” என்றும் “க்ருஷ்ணாஶ்ரயா: க்ருஷ்ணபலா: க்ருஷ்ணநாதாஶ்ச பாண்டவா:” என்றும் “சேலேய் கண்ணியரும்” (திருவாய் – 5.1.8) இத்யாதிப்படியே. (உற்றோமேயாவோம்) உதிரத்தெறிப்புண்டாகவேணும். “நாராயணஸ்த்வம்” “பக்தாநாத்மஶரீரவத்”. இளையபெருமாள் வேலேற்றபோது நீ பட்டாப்போலே உனக்கொன்று வந்தால் நாங்கள் முடியும் ப்ரக்ருதிகளாகவேணும். (உனக்கே) உனக்கும் எனக்கும் பொதுவான அடிமையன்று. “எனக்கே ஆட்செய்” (திருவாய் – 2.9.4) என்னுமாபோலே ஆட்செய்யவேணும். ஶ்ரீபரதாழ்வானைப்போலே கிடவென்ற இடத்திலே கிடக்குமவர்களன்று. இளையபெருமாளைப்போலே “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்று அடிமை செய்து உஜ்ஜீவிக்கவேணுமென்கை.
(மற்றை நங்காமங்கள் மாற்று) கையும் திருவாழியுமாய் நாங்கள் தொழ, மேன்மை காட்டியிருக்கவொண்ணாது. நீ “பெண்காள்” என்ன, நாங்கள் “க்ருஷ்ணனே” என்று ஊடினார் சிறுமுற்றத்திலே உன்னை ஒரு பாச்சல் பாயவேணும். “பாவோ நாந்யத்ர கச்சதி” என்றவனை இசைவித்தாருண்டோ? எங்கள் வாஸனையாலும் உன் தோள் தடிப்பாலுமாகவேண்டா; உன் தரமாகாமலிருக்கிற இருப்பைத் தவிர்க்கவேணும்.
@@@@@
முப்பதாம் பாட்டு
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்டவாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத்தண்டெரியற் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச்செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்.
அவதாரிகை – முப்பதாம் பாட்டு. “பெண்காள்! நீங்களும் நானும் அநுபவித்தோ? பிற்பாடரிழக்குமத்தனையோ?” என்ன, அவர்கள் பெறும்படி சொல்லுகிறார்கள். ப்ரபந்தம் கற்றார்க்கு அநுஷ்டித்தாரோபாதி பலம் ஸித்திக்கிறது. “கன்றிழந்த நாகு தோற்கன்றை மடுக்க அதுக்கிரங்குமாபோலே, இப்பாசுரம் கொண்டுபுக, நமக்கும் பலிக்கும்” என்று பட்டர் அருளிச் செய்வர். “விடிவோறே எழுந்திருந்து முப்பது பாட்டையும் அநுஸந்தித்தல்; அதுவும் மாட்டிற்றிலனாகில், “சிற்றஞ்சிறுகாலே” (திருப்பாவை – 29) என்கிற ஒரு பாட்டையும் அநுஸந்தித்தல், அதுவும் மாட்டானாகில், இன்று நாமிருந்த இருப்பை நினைப்பது” என்று பட்டர் அருளிச் செய்தார்.
வ்யாக்யானம் – (வங்கக் கடல்) கீழிலுள்ள பதார்த்தம் மேலெழக் கடையாநிற்கச்செய்தே, கடலில் மரக்கலம் அலசாமல் கடைந்த நொய்ப்பம் சொல்லுகிறது. கடைந்தபோது சுழன்று வருகையால், கடலடைய மரக்கலமாய் நின்றபடி என்றுமாம். க்ருஷ்ணனே ப்ரயோஜநாந்தரபரர்க்கும் கார்யம் செய்யும் ஶீலவான் என்கை. (மாதவனை) ஆஶ்ரயணீய தத்வம் லக்ஷ்மீ ஸநாதனாயிருக்குமென்கை. தாய் முன்பு பிதாவுக்கு ப்ரஜை செய்த குற்றம் பொறுக்கவேண்டுமாபோலே, ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரமென்கை. அவள் ஸந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது. அவள் ஸந்நிதியில்லாமை அத்தனைக் குற்றமின்றியே யிருக்க, ராவணன் தலையறுப்புண்டான். (கேசவனை) விரோதி நிரஸந ஸ்வபாவனை. (மாதவனை கேசவனை) “கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே! விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமான்” என்று சொல்லுகிறபடியே. “தான் ஸாக்ஷாத் அம்ருதத்தையுண்டு ப்ரஹ்மாதிகளுக்குக் கோதைக் கொடுத்தான்” என்று பட்டர். “மாதவனை” என்று தன் வாயைக்காட்டி, “கேசவனை” என்று கோதைப் பொகட்டார். (கேசவனை) விரோதிநிரஸந ஸ்வபாவனை. ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான ஸ்வாதந்த்ர் யத்தையும் அந்யஶேஷத்வத்தையும் போக்கினவனை.
(திங்கள் திருமுகத்து) க்ருஷ்ணனோட்டைச் சேர்த்தியால் வந்த செவ்வி. அங்கு “கதிர்மதியம்போல் முகம்” (திருப்பாவை – 1) என்றது. “ஜகத்வ்யாபார வர்ஜம்” என்று கொடுப்பார்க்கு இது ஒன்றொழிய அல்லாததெல்லாம் கொடுக்கையாலே, இவர்களுக்குக் குளிர்த்தி வேண்டுகையாலே, “திங்கள் திருமுகம்” என்கிறது. “மதிமுகமடந்தைய” (திருவாய் – 10.9.10) ரிறே. (சேயிழையார்) தானும் அவனும் கூடப் பூட்டின ஆபரணத்தை யுடையராயிருக்கை. (சென்று) இவ்வொப்பனையோடே வரப் பார்த்திராதே சென்று. (இறைஞ்சி) மங்களாஶாஸநம் பண்ணி. (அங்கு) திருவாய்ப்பாடியில். (அப்பறை கொண்டவாற்றை) மறந்து நில்லாதே நாட்டுக்குப் பறையென்று அடிமை கொண்டபடியை.
(அணிபுதுவை) ஸம்ஸாரத்துக்காபரணமான ஶ்ரீவில்லிபுத்தூர். (பைங்கமலத் தண்டெரியல்) பெரியாழ்வாருக்குத் தாமரைத்தாராயிருக்கிறபடி. (பட்டர்பிரான் கோதை சொன்ன) ஆண்டாள் அநுகாரத்தாலே அநுபவித்துப் பேசின. “ஸ ஹோவாச வ்யாஸ: பாராஶர்ய:” என்று ஶ்ரீபராஶரபகவான் “தன் மகன் ஶ்ரீவேதவ்யாஸபகவான்பாடே சென்று நாம் சொன்ன அர்த்தத்துக்கு ப்ரமாணம் கேட்டுக்கொள்ளுங்கோள்” என்னுமாபோலே, பெரியாழ்வார் மகள் சொன்னத்திலும் அர்த்தவாதமில்லை.
(சங்கத் தமிழ்மாலை) “குழாங்களாய்” (திருவாய் – 2.3.11) என்னுமாபோலே பஞ்சலக்ஷம் குடியிற் பெண்கள் திரண்டநுபவித்த ப்ரபந்தமாகையாலே, பகவத் ப்ரேமமுடையார்க்கெல்லாம் ஶிரஸாவஹிக்க வேண்டும்படி இருக்கை. (தமிழ்மாலை) பிராட்டி ஆண்டாளானாப்போலே உபநிஷத்தும் தமிழானபடி. (முப்பதும் தப்பாமே) இதிலொரு பாட்டும் விழவிடாதே. விலையில்லாத ரத்நங்களாலே செய்த ஏகாவளியிலே ஒரு ரத்நம் குறைந்தாலும் நெடும்பாழாயிருக்குமிறே. அப்படி ஒரு பாட்டுக் குறைந்தாலும் பேரிழவாயிருக்குமென்கை. (இங்கு) பிற்பட்ட காலத்திலே. (இப்பரிசுரைப்பார்) இப்பாசுர மாத்ரத்தைச் சொல்லுவார். திருவாய்ப்பாடியில் பெண்கள் தாங்களே க்ருஷ்ணனோடேகூடி அநுஷ்டிக்கப் போனார்கள். ஆண்டாள் அநுகார ப்ரகாரத்தாலே பெற்றாளாகையாலே இப்ரபந்தம் சொன்னார்க்கும் இங்கே பலன் கிடைக்கும். (ஈரிரண்டு மால் வரைத்தோள்) இவர்களளவு பார்க்காதே பண்டு பாடினவர்கள் சொல் வழியாலே அநுஸந்திக்கையாலே தோள்கள் பணைக்கும். அநுபவிக்கத் தோள்கள் பணைத்தாப்போலே.
(செங்கண் திருமுகத்து) அலப்யலாபத்தாலே சிவந்த திருக்கண்கள். (செல்வத் திருமாலால்) உபயவிபூதியுக்தனான ஶ்ரீய:பதியென்கை. இப்பாட்டில் உபக்ரமத்திலும் உபஸம்ஹாரத்திலும் பிராட்டி ஸம்பந்தம் சொல்லியிருக்கையாலே த்வயத்தில் பூர்வகண்டத்திலும் உத்தரகண்டத்திலும் சொன்னபடியே இங்கு சொல்லிற்றாயிற்றென்கை.
(எங்கும் திருவருள் பெற்று) இத்திருப்பாவை சொன்னார்களிடத்தே எங்கும் தானும் பிராட்டியுமாக ஆதரிக்குமென்கை. கிடக்கைப்பாயிலே வெள்ளம் கோத்தாற்போலே. (இன்புறுவர்) இஸ்ஸுகத்தை அநுபவித்து இனியராவர். பிராட்டியும் தாமும் ஸந்நிஹிதமாம்படி ப்ரஸாதத்தைப்பெற்று. (இன்புறுவர்) பகவத் ஸம்ஶ்லேஷத்தால் வந்த ஆநந்தம் பெறுவர். “நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்” (திருவாய் – 9.2.1) “திருமாலால் அருளப்பட்ட சடகோபன்” (திருவாய் – 8.8.11) “திருமாமகளால் அருள்மாரி” (பெரிய திருமொ – 8.6.10) நிரூபகதர்மம். இசலி இசலி இருவரும் பரியக்கடவர்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
திருநாராயணபுரத்து ஆயி திருவடிகளே சரணம்
@@@@@