[highlight_content]

Thiruppavai 3000Padi Vyakya

–  

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்த மூவாயிரப்படி வ்யாக்யானம்

திருப்பாவை – முதற்பாட்டு

மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

        நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்*

        சீர்மல்கு மாய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

        கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*

ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்*

        கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்*

        நாராயணனே நமக்கே பறைதருவான்*

        பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – முதற்பாட்டில் இந்நோன்புக்கு ஒரு காலம் நேற்படுவதே! என்று காலத்தைக் கொண்டாடுகிறார்கள் “மார்கழி திங்கள்” என்று தொடங்கி, “சிறுமீர்காள்” என்னுமளவும் ப்ராப்யம்; மேல் ப்ராபகம்; ப்ராப்ய ப்ராபக ஸங்க்ரஹமென்றுமாம்.

வ்யாக்யானம் – (மார்கழி திங்கள்) “நாதிஶீதா ந கர்மதா” என்கிற ந்யாயத்தாலே அத்யுஷ்ணமாதல் அதிஶீத மாதலன்றிக்கேயிருக்கும் மாஸம், நாளுக்கு ப்ராஹ்ம முஹூர்த்தம்போலே ஸம்வத்ஸரத்துக்கு இம்மாஸ மாகையாலே ஸத்வோத்தரமான காலம்.  “மாஸாநாம் மார்கஶீர்ஷோஹம்” என்று “மாஸங்களில் வைத்துக்கொண்டு மார்கழிமாஸமாகிறேன்” என்று அவன்தானே அருளிச்செய்கையாலே, வைஷ்ணவமான மாஸம்.  ஸர்வ வஸ்துக்களும் அங்குரிக்கும் காலமாகையாலே; தங்களுடைய உந்மேஷத்துக்கு அர்ஹமான காலம்.  (மார்கழி திங்கள்) கோபவ்ருத்தர் குளிருக்கு அஞ்சி புறப்படமாட்டாத காலம். 

தங்களுக்கு உத்தேஶ்யம் கிடக்கக் காலத்தைக் கொண்டாடுகிறதென்? என்னில், “சைத்ரஸ் ஶ்ரீமாநயம் மாஸ:” என்று ஒரு ஸம்ருத்தியைப்பற்றக் காலத்தைக் கொண்டாடிற்றிறே.  (சைத்ர:) அல்லாததிற்காட்டில் பெருமாளுக்கு உள்ள ப்ராதாந்யம் போலே மாஸங்களெல்லாவற்றுக்கும் முதலான மாஸம்.  (ஶ்ரீமாந்) அவர் எல்லாருக்கும் ராஜாவாக ப்ராப்தரானாற்போலே; சைத்ர மாஸம் ஸர்வர்க்கும் ஸுககரமாகையாலே, மாஸங்களுக்கெல்லாம் ராஜாவென்கிறது.  (அயம் மாஸ:) அபிஷேக மநோரத ஸமயத்திலே ஸந்நிஹிதமான தன்னேற்றம்.  அங்கு, ஶேஷியை ஶேஷபூதர் லபிக்கைக்குக் கொண்டாடுகிற கொண்டாட்டம்.  (புண்ய: புஷ்பித காநந:) “பாவந: ஸர்வ லோகாநாம் த்வமேவ” என்றும் ”பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்”  என்றும் அவர்க்கு இரண்டாகாரமு மானாற்போலே, இக்காலமும் பாவநமுமாய்  போக்யமுமாயிருக்கை.  (புஷ்பித காநந:)  படைவீடுபோலே நாம் அலங்கரிக்கவேண்டாதே தானே அலங்கரிக்கை.  (புஷ்பித காநந:) பெருமாள் பொன்முடி சூட, காடு பூமுடி சூடிற்று. 

(மதிநிறைந்த) மாஸம் நேர்பட்டாபோலேயிருந்ததீ பக்ஷமும் நேர்பட்டபடி. “ஆபூர்யமாணே பக்ஷே புண்யே நக்ஷத்ரே” என்று மங்களகார்யம் செய்வார்க்கு விதிக்கிற விதியும் இவர்களுக்குக் கோல்விழுக்காட்டிலே சேர விழுந்தது.  பகவத்ப்ரவணராயிருப்பாருடைய தேஹ யாத்ரையை விதிதான் பின்செல்லக் கடவதாயிறே யிருப்பது; “த்வதீய கம்பீர மநோநுஸாரிண:” என்னக்கடவதிறே.  ஒருவரையொருவர் முகங்கண்டு அநுபவிக்கைக்கும், எல்லாரும் கூடிச்சென்று க்ருஷ்ணனை எழுப்புகைக்குமாக நிலா உண்டாகப்பெற்றது.  “நல்லிருட்கண்” (நாச்சி திரு – 23) என்னவேண்டாவிறே இவர்களுக்கு.  விரோதிக்கக்கடவ அவ்வூராரே இசைந்து மேலெழுத்திடப்பெற்றதிறே.

(நன்னாளால்) மாஸத்துக்கும் பக்ஷத்துக்கும் நாயகக்கல்போலேயிருப்பதொரு நாள் நேர்பட்டபடி என்! நம்மை க்ருஷ்ணனோடு கிட்டே ஒட்டாதவர்கள் தாங்களே க்ருஷ்ணனோடு சேருகைக்கு ப்ரமாணம் பண்ணிக்கொடுத்த நாளாகப்பெற்றதே! பகவத் ப்ரஸாதத்துக்கு இலக்காகப்பெற்ற நாளிறே இவ்வாத்மாவுக்கு நன்னாளாகிறது; “க்ஷிபாமி” என்ற அவன்தானே “ததாமி” என்னப்பெற்ற நாளிறே.  ஸர்வேஶ்வரனோடே எதிரம்பு கோக்கை தவிர்ந்து “அவன் நமக்கு ரக்ஷகன்” என்னும் விஶ்வாஸம் பிறந்த நாளிறே நன்னாளாகிறது.  “அத்ய மே ஸபலம் ஜந்ம ஸுப்ரபாதா ச மே நிஶா” என்று “கம்ஸன் சோறுண்டு வளர்ந்த எனக்கு இங்ஙனேயொரு நல்விடிவு  உண்டாகப்பெறுவதே! என்றானிறே அக்ரூரன்.

மாஸத்தைக் கொண்டாடுவது, பக்ஷத்தைக் கொண்டாடுவது, நாளைக் கொண்டாடுவதாய், இதிலே இவர்களுக்குக் கிடைக்கிற த்வரை வெள்ளம் என்தான்! இவர்கள் ப்ராப்ய ருசி இருக்கிறபடி. 

(நீராட) க்ருஷ்ண விரகத்தால் பிறந்த தாபம் ஆறும்படிபோய் குளிக்கை; இத்தால் இவர்கள் நினைக்கிறது க்ருஷ்ண ஸம்ஸ்லேஷம்; தமிழரும் கலவியை “சுனையாடல்” என்றார்கள்.  “ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே ஶீதமிவ ஹ்ரதம்” என்று பகவத் ஸம்ஸ்லேஷத்துக்கு க்ரீஷ்ம காலத்தில் குளிர்ந்த மடுவை த்ருஷ்டாந்தமாகச் சொல்லிற்றிறே.  தாங்கள் நினைத்தபடி சொல்லுகைக்கீடான முறை உண்டாயிருக்கச் செய்தேயும் அத்தைத் தவிர்ந்து பகவத் ஸம்பந்தத்தையே பார்த்து கௌரவித்து, “நீராட” என்கிறார்கள்; புத்ரர்களாகவுமாம், ஶிஷ்யர்களாகவுமாம், பகவத் ஸம்பந்தமுடையாரை கௌரவ்யர் என்கிறது; “பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்” (திருநெடு – 19) என்னக்கடவதிறே.  இத்தால், தங்கள் ப்ராப்யத்தைச் சொல்லுகிறது.

அல்ப பலமான ஸ்வர்க்காநுபவத்துக்கு அதிகாரார்த் தமாகப் பண்ணவேண்டும் தேவைகளுக்கு ஓரெல்லையில்லை.  இந்த நிரவதிக ஸம்பத்தைப் பெறுகைக்கு எவ்வளவு யோக்யதை வேணும்? என்னில், (போதுவீர் போதுமினோ) இச்சையே அதிகாரம்.  அது அப்ராப்த விஷயமாகையாலே அதிகாரி ஸம்பத்தி உண்டாக்கிக்கொண்டு இழியவேணும்; இது வகுத்த விஷயமாகையாலே இச்சைக்கு மேற்பட வேண்டுவதில்லை.  நெடுங்காலமிழந்ததும் இவன் பக்கல் இச்சையில்லாமை.  ஆகையாலே இந்த இச்சையே வேண்டுவது.  ஶக்தியும் ப்ராப்தியும் அத்தலையிலே பூர்ணமாகையாலே இச்சைக்கு மேற்பட வேண்டுவதில்லை.  இனி இவன் சேதநனான வாசிக்கு இச்சையேயிறே வேண்டுவது.  அது இல்லையாகில் இவனுக்கு இது புருஷார்த்தமாகமாட்டாதிறே.  க்ஷுத்ர விஷயாநுபவத்துக்குத் தனி தேட்டமானாற்போலே, அபரிச்சின்னமான விஷயத்துக்குத் துணை தேட்டமாகையாலே ஸஹகாரிகளைச் சொல்லு கிறார்கள்.  (போதுமினோ) ப்ரதிகூலரையுமகப்பட “தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி” என்னுமவர்கள் அபிமுகரைப் பெற்றால் விடுவர்களோ?  (போதுமினோ) நாங்கள் வாழும்படி புறப்பட்டு இங்ஙனே நடக்கலாகாதோ? அவர்கள் முன்னே போக, அந்நடையழகு கண்டு தாங்கள் பின்னே போகவிறே நினைக்கிறது.

(நேரிழையீர்) விலக்ஷணமான ஆபரணத்தையுடையீர்! இவர்கள் “போதுமினோ” என்ற பின்பு, அவர்கள் வடிவிலே பிறந்த புதுக்கணிப்பு இருந்தபடி.  அன்றிக்கே, “கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழிய” (நாச்சி திரு – 8.7) என்கிறபடியே க்ருஷ்ணனுடைய வரவை கடாக்ஷித்து, அவன் எப்போது வந்து மேல் விழும்?” என்று அறியாதபடியாலே, தங்களை எப்போதும் அலங்கரித்தபடியேயிருப்பார்களென்றுமாம்.  “வஸதி ஹ்ருதி ஸௌம்யரூப:” என்னுமாபோலே முன்புத்தை க்ருஷ்ணனோட்டைக் கலவியால் பிறந்த புகர் இப்போது தோற்றும்படியிருக்கையாலே சொல்லவுமாம். 

(சீர்மல்குமாய்ப்பாடி) இவ்வூரில் ஐஶ்வர்யம் வழிந்துபோய் வேறோரூருக்கு வெள்ளமிடப் போந்திருக்கை.  அதாவது – க்ருஷ்ணனுடைய இங்குத்தை நீர்மை பரமபதத்திலும் சென்று அலையெறியும்படியாயிருக்கை.  வஸ்துவுக்கு குணத்தாலேயிறே உத்கர்ஷம்; அங்கு தன்னில் குறைந்தவரில்லாமையாலே குணத்துக்கு விஷய மில்லை; ஆகையாலே, தர்மியைப்பற்றிக் கிடக்குமத்தனை அங்கு;  அந்தகாரத்தில் தீபம்போலே ப்ரகாஶிப்பதும் இங்கேயாகையாலே, ஐஶ்வர்யம் பூர்ணமாய்த்து இங்கேயிறே, தன்னை நியாம்யமாக்கி வர்த்திக்கிற ஊரிரே.  பண்டே கோஸம்ருத்தி யுண்டாயிருக்கச் செய்தே, பிள்ளைகள் கால் நலத்தாலே கறப்பன கடைவனவற்றால் குறைவற்றிருக்கை; நாழிப்பால் நாழிநெய் போருகையென்றுமாம்.

(ஆய்ப்பாடி) பரமபதம்போலே தேஹாந்தரபரிக்ரஹம் பண்ணிச் சென்று அநுபவிக்கவேண்டாத ஊர்.  ஆசாரப்ரதாநரான  ஶிஷ்டாதிகள் வர்த்திக்கிற திருவயோத்யைபோலன்றிக்கே, இடக்கையும் வலக்கையுமறியாத இடையர் வர்த்திக்கிற ஊர், பெருமாள் குணங்கண்டு உகக்குமூர் போலன்றியே, க்ருஷ்ணன் தீம்பு கண்டு உகக்கும் ஊர். 

(செல்வச் சிறுமீர்காள்) இவ்வாத்மாவுக்கு நிலை நின்ற ஐஶ்வர்யமாவது பகவத் ப்ரத்யாஸத்தியிறே.  ராஜ்யத்தை விட்டு வெறுங்கையோடே பெருமாள் பின்னே போன இளையபெருமாளை “லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந:” என்றதிறே.  ராவண பவநத்தினின்றும் கால்வாங்கிப் பெருமாள் இருந்த தேஶத்தைக் குறித்து வருவதாக “பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச” என்று ஸர்வத்தையும் விட்டு ஆகாஶஸ்தனான விபீஷணாழ்வானை “அந்தரிக்ஷகத: ஶ்ரீமாந்” என்றதிறே.  அவனை ரக்ஷகனாக அத்யவஸித்துத் தன் பக்கல் முதலற்று கைவாங்கின ஶ்ரீகஜேந்த்ராழ்வானை “ஸ து நாகவர: ஶ்ரீமாந்” என்றதிறே.  அப்படியே இவர்களும்.  இங்கு ஐஶ்வர்யமாகச் சொல்லுகிறது க்ருஷ்ண ப்ரத்யாஸத்தியை.  அதாவது – வலி பாதி, வழக்கு பாதி, தர்மம் பாதியாகப் பஞ்சலக்ஷங்குடியிற் பெண்களில் இவனால் புஜிக்கப் படாதாரொருவருமில்லை, வலியாகிறது – தன் செல்லாமை; வழக்காகிறது – மைத்துனமை; தர்மமாவது – ஆந்ருஶம்ஸ்யம்.

(சிறுமீர்காள்) க்ருஷ்ணனோடொத்த பருவமாயிருக்கை, “துல்ய ஶீல வயோ வ்ருத்தாம்” என்கிறபடியே எல்லாவற்றிலும் அவனுக்கு ஈடாயிருக்கை.  பருவம் நிரம்பின ஸ்த்ரீகளையும்  புருஷர்களையும் கண்டால், தேவதாந்தரபஜநம் பண்ணினாரையும், தந்தாமுக்காக நினைத்திருப்பாரையும்போலே நினைத்திருக்கும்; தனக்கு அநந்யார்ஹளாக நினைத்திருப்பது இவர்களை.  இத்தால், அவனுக்கேயாயிருக்கிற போக்யதையைச் சொன்னபடி.  ஜ்ஞானலவ துர்விதக்தரன்றியே இடக்கையும் வலக்கையும் அறியாத கந்யைகளாயிருக்கை; இவனுடைய விஷயீகாரத்தாலே இளகிப்பதிக்கை.  (அங்கோலத்தைலத்திற் குறைந்த க்ருஷ்ணகடாக்ஷமில்லையிறே.  அதாவது – கோவிந்தனுக்கல்லால் வாயில் போகாதிருக்கை).

(கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தன்) ஶ்ரீநந்தகோபர் முன்பு பசும்புல் சாவ மிதியாதவராய்த்து; நம் சிறியாத்தானைப்போலே ஆந்ருஶம்ஸ்ய ப்ரதாநரா யாய்த்துப் போருவது.  பிள்ளைகள் பிறந்த பின்பு அவர்கள் மேலுண்டான வாத்ஸல்யத்தாலே “அவர்களுக்கு என் வருகிறதோ!” என்று அஞ்சி, புகரெழக் கடைந்து வேல் பிடிக்கத் தொடங்கினார்.  (கொடுந்தொழிலன்) தொட்டிற்கீழே எறும்பு புகுரிலும் ஸிம்ஹத்தின்மேலே விழுமாபோலே சீற்றத்தின் மிகுதியாலே உதிரக்கையரானார்.  “ந ஹிம்ஸ்யாத் ஸர்வபூதாநி” என்கிற ஸாமாந்ய விதி, “அக்நிஷோமீயம் பஶுமாலபேத்” என்கிற விஶேஷத்தில் வாராதிறே.  ஸ்வார்த்தமாகச் செய்யுமன்றிறே நிஷித்தமாவது.  “அத்தலைக்கு என் வருகிறதோ!” என்று அஞ்சிச் செய்யுமன்று தர்மமாகக்கடவது; “மந்நிமித்தம் க்ருதம் பாபம்” இத்யாதி.  “நின்பால் பொறுப்பறியனகள் பேசில் – ஆங்கே தலையை அறுப்பதே கருமங்கண்டாய்” (திருமாலை – 8) என்றதிறே.  (நந்தகோபன்) பிள்ளையைக் கண்ட ப்ரீதியாலே ஆநந்தத்தை யுடையரென்று சொல்லுதல்; நாமதேயமாதல்.  இப்போது பெயரைச் சொல்லுவானென்னென்னில் –  உத்தேஶ்ய வஸ்துவை நோக்கித்தருமவரென்னும்  ப்ரீதியாலே, “நந்தகோபாலா எழுந்திராய்” என்று எழுப்பிக் கார்யங்கொள்ளலாம்படியிறே இவர்களுக்கு அவர் விதேயராயிருக்கும்படி.  (குமரன்) “வெண்ணெய் களவுகண்டான், பெண்களை களவு கண்டான், ஊரை மூலையடியாக்கினான்” என்று எல்லோரும் வந்து முறைப்பட்டால், “என் கண் வட்டத்திலே வந்து தோற்றினானாகில் நியமிக்கக்கடவேன்” என்று பெரிய உத்யோகத்தோடேயிருந்தால், அவர் முன்பு தோற்றும்போது ஸவிநயமாகத் தோற்றுகையாலே “கெட்டேன்! இவனையோ இங்ஙனே பழிவிட்டது!” என்று அவர்களையே பொடியும்படியாயிருக்கை.  யஶோதைப் பிராட்டி பொடியும்போதும் “உந்தமடிகள் முனிவர்” என்றன்றே பொடிவது.  “படிறு பல செய்து இப்பாடியெங்குந்திரியாமே கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேனே” என்றிறே இவள் இருப்பது. 

(ஏரார்ந்த கண்ணி யஶோதை) யசோதைப் பிராட்டி கண்ணிலே அழகு குடிகொண்டாய்த்திருப்பது பிள்ளையை மாறாதே பார்த்துக்கொண்டிருக்கையாலே அவ்வாசியடைய கண்ணிலே தோற்றும்படியாயிருக்கும்.  “அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் – தொழுகையும் இவை கண்ட” (பெருமாள் திரு – 7.8) கண்ணிறே.  “அம்பன்ன கண்ணாள் அசோதை” (பெரிய திருமொழி – 6.8.6)  என்னக்கடவதிறே.  (யசோதை) “யசோதாய் அறிவுறாய்” (திருப்பாவை – 17) என்று எழுப்பி கார்யங்கொள்ளலாம்படியிறே இவர்கள் திறத்தில் அவள் அநுகூலித்தி௫க்கும்படி.

(இளஞ்சிங்கம்) ஶ்ரீநந்தகோபர் ஹிதகாமராகையாலே அங்கு விநயந்தோற்ற நின்றபடியைச் சொல்லிற்று; இவள் ப்ரியமே நடத்துபவளாகையாலே, செருக்கும் மேனாணிப்பும் தோற்ற நின்ற நிலையைச் சொல்லுகிறது.  “அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும்” (நாச்சி திரு – 3.6) என்று இவன் செய்ததெல்லாம் உத்தேஶ்யமாயிறே இவள் நினைத்திருப்பது.  ஆரேனும் வந்து முறைப்பட்டால் (அஞ்ச உரப்பாள்) இவன் தீம்பிலே தகணேறும்படியாகவாய்த்து உரப்புவது.  (இளஞ்சிங்கம்) சிறுமியர்க்கு ஒத்த பருவமாயிருக்கை.  “சிங்கக் குருகு” என்று பட்டர் அருளிச் செய்வர். 

(கார்மேனி) நம்முடைய ஸகல தாபங்களும்  ஆறும்படியான வடிவு.  “தூநீர் முகில்போல் தோன்றாய்”  (திருவாய்மொ.ழி – 8.5.3) என்று ப்ரார்த்தித்த வஸ்துவிறே இவர்களுக்கு ப்ரத்யக்ஷித்து நிற்கிறது.  மாதாபிதாக்கள் தங்களை மறைத்து வைத்தாலும் விடவொண்ணாத வடிவழகு.

(செங்கண்) அத்திருமேனிக்குப் பரபாகமான சிவப்பையுடைய திருக்கண்கள்.  அகவாயில் வாத்ஸல்யமடையத் திருக்கண்களிலே தோற்றும் படியாயிருக்கை.  ஐஶ்வர்யத்தாலும் குதறியிருக்குமிறே. வடிவாலே அணைத்துக் கண்ணாலே குளிரநோக்குகையிலேயிறே கருத்து.

(கதிர்மதியம் போல் முகத்தான்) ப்ரதாபத்துக்கும் குளிர்ச்சிக்கும் ஆதித்யனுடைய புகரை ஊட்டின சந்த்ரனைப் போலேயாய்த்துத் திருமுகம் இருக்கும்படி.  ப்ரதிகூலர்க்கு அநபிபவநீயனாய் அநுகூலர்க்குக் கிட்டிநின்று அநுபவிக்கலாம்படியிருக்கை.  “தத்ர கோவிந்தமாஸீநம் ப்ரஸந்நாதித்ய வர்ச்சஸம்” என்னக்கடவதிறே.  (கதிர் மதியம் போல் முகத்தான்) ப்ரகாஶகமுமாய்  ஆஹ்லாதகரமுமான முகத்தையுடைய வனென்னவுமாம்.  (முகத்தான்)  அவ்வளவிலும் உபமானம் நேர்நிற்கமாட்டாமையாலே  உபமேயந் தன்னையே சொல்லுகிறது. 

(நாராயணனே) கோவர்த்தநோத்தரணாதி அதிமாநுஷ சேஷ்டிதங்களாலே ஸர்வேஶ்வரத்வம் பெண்களுக்கும் தெரியும்படியாயிறே இவ்வவதாரந்தானிருப்பது.  தேவதாந்தரங்களையறியாத கோபவ்ருத்தர்கள் நோன்புக்கு அங்கமாக ஜபிக்கும் மந்த்ரமாக உபதேஶிக்கையாலே சொல்லுகிறார்களென்னவுமாம்.  இன்னமும், தன்னுடைய தகப்பன்மார் சொல்லவும் கேட்டிருக்குமிறே.  “நன்மை தீமைகளொன்றுமறியேன் நாராயணா என்னும் இத்தனையல்லால்” (பெரியாழ்வார் திரு – 5.1.3) என்றும், “நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்” (பெரிய திரு – 1.1.1) என்றும், “திண்ணம் நாரணமே” (திருவாய் – 10.5.1) என்றும், “நாரணனை நன்கறிந்தேன்” (நான்மு திரு – 96) என்றும்,  இவ்வர்த்தத்திலே ரிஷிகளும்  “நாராயண ஶப்தமாத்ரம்” என்றும், “ஏஷ நாராயண: ஶ்ரீமாந்” என்றும்; ஶ்ருதியும் “நாராயண: பரம்ப்ரஹ்ம” என்றும் பலவிடத்திலும் சொல்லிற்று.  (நாராயணனே நமக்கே பறை தருவான்) ஸர்வ ஸ்வாமியானவனே நம்முடைய அபேக்ஷித ஸம்விதாநம் பண்ணுவான்.  இத்தலை இசையாதவன்றும் தான் விடமாட்டாத வாத்ஸல்யம்.  அவதாரணத்துக்குக் கருத்து – ஸமிதை பாதி ஸாவித்ரி பாதியன்றிக்கே தானே சென்று தலைக்கட்ட வல்லனென்கிற ஸாதந நைரபேக்ஷ்யம் சொல்லுகையிலே நோக்கு.  நாராயணத்வம் ஸர்வ ஸாதாரணமன்றோவென்னில், (நமக்கே)“அத்தலையாலே  பேறு” என்றிருக்கிற நமக்கு என்றபடி.  அகிஞ்சநராய் அவன் கை பார்த்திருக்கிற நமக்கே என்றுமாம்.  (பறை தருவான்) நாட்டுக்கு “பறை” என்று ஒரு வ்யாஜமாய், தங்களுக்கு அபிமதமான அடிமையையாய்த்து நினைக்கிறது.  இத்தை ஸாதித்துத் தருவார் ஆரென்னில் – இவர்கள் தாங்களேயிறே.  “இற்றை பறை கொள்வான் அன்று காண்” என்று மேலே சொன்னார்கள்.  (தருவான்) ப்ராப்தியுண்டானாலும் அவன் தரக் கொள்ளவேணுமென்னுமிடம் தோற்றுகிறது, 

(பாரோர் புகழ) க்ருஷ்ணனையும் நம்மையும் சேரவொட்டாதவர்கள் தாங்களே கொண்டாடும்படி; “க்ருஷ்ணன் வேண்டும் உபகரணங்கள் கொடுக்க, பெண்கள் நோன்பாலே உபக்ரமித்தார்கள்; நாடு அடங்க, அநாவ்ருஷ்டி தீர்ந்து ஸம்ருத்தமாய்த்து. 

“நீராடப் போதுவீர் போதுமினோ” என்று அந்வயம்.  (ஏல் ஓர்) பாதத்தைப் பூரித்துக் கிடக்கிறது.  (எம் பாவாய்) எங்கள் நோன்பு என்னுதல்; எங்கள் சந்தஸ் என்னுதல். 

@@@@@

இரண்டாம் பாட்டு

        வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு

        செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்

        பையத் துயின்ற பரமன் அடி பாடி

        நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே  நீராடி

                மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

        செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

        ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி

        உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

 அவதாரிகை – இரண்டாம் பாட்டு.  க்ருத்யாக்ருத்ய விவேகம் பண்ணுகிறது.  இதர விஷயங்களில் விடப்படுமவை விடவும் அரிதாயிருக்கும்; பற்றப்படுமவை பற்றவும் அரிதாயிருக்கும்.  அதுக்கு அடி இவனுடைய கர்மாநுகுணமாக நன்றாயும் தீதாயும் தோற்றுகிற இத்தனை போக்கி, ஸ்வத: விஷயத்தைப் பற்றி வருவதொரு நன்மையும் தீமையுமில்லை.  எங்ஙனேயென்னில், – ஒருநாள் ஒருவன் ஒன்றை யாதரித்து அவன்தானே, பின்பு சில நாள் சென்றவாறே அதுதன்னையே உபேக்ஷியா நின்றான்; முன்பு உபேக்ஷித்தது தன்னையே பின்பு ஒரு நாளிலே ஆதரிப்பதும் செய்யா நின்றான்; ஆகையால் இவனுடைய கர்மமடியாக நன்றாயும் தீதாயும் தோற்றுகிற இத்தனை போக்கி, விஷயத்தைப் பற்ற வரில் என்றும் ஒருபடிப்பட்டிருக்க வேண்டும்; அது இல்லாமையால் புறம்புள்ளவை  விடவும் அரிது பற்றவும் அரிது; விடுகிறவற்றுக்கும்   பற்றுகிறவற்றுக்கும் வாசி தெரிவிக்க அரிதாகையாலே, இங்ஙனன்றியே அல்பமும் அஸ்திரமுமாய் ஹேயமுமாயிருக்கிற விஷயங்களை விட்டு ஸமஸ்த கல்யாணகுணாத்மகனைப் பற்றுகையாலே, விடுகையும் பற்றுகையும் இரண்டும் எளிதாயிருக்கும்.  கீழிற் பாட்டில் – ப்ராப்ய ஸ்வரூபத்தையும் ப்ராபக ஸ்வரூபத்தையும் அதிகாரி ஸ்வரூபத்தையும் சொல்லிற்று; இதில், அந்த அதிகாரிக்கு ஸம்பாவித ஸ்வபாவங்களைச் சொல்லுகிறது. 

வ்யாக்யானம் –  (வையத்து வாழ்வீர்காள்) ஸர்வேஶ்வரன் திருவாய்ப்பாடியிலே க்ருஷ்ணனாய் வந்து திருவவதரித்துத் தன்னைத் தாழவிட்டுப் பரிமாறுகிற காலத்திலே வாழப்பிறந்த பாக்யவதிகாள்! இங்குத்தை வாழ்ச்சிக்கு பரமபதமும் ஸத்ருஶமன்று.  அங்கு மேன்மை காணலாமித்தனை போக்கி, நீர்மை கண்டு அநுபவிக்கலாம்படியிருப்பது இங்கேயிறே.  அங்கு போக்தாக்கள் அஸங்குசிதராயிருப்பார்கள்;  இங்கு போக்யம் அஸங்குசிதமாயிருக்கும்.  தயநீயருண்டான இடத்திலேயிறே தயாதி குணங்கள் அநுபவிக்கலாவது; அங்கு விஷயமில்லாமையாலே தயாதி குணங்கள் ப்ரகாஶிக்கப் பெறாதே; அக்குறை தீர்க்கைக்காகவிறே நித்ய ஸூரிகள் இங்கே வந்து அநுபவிக்கிறது.  அவதாரத்தில் நீர்மையிலே அகப்பட்டார்க்கும் மற்றோரிடம் பொறாதபடியாயிருக்கும், “பாவோ நாந்யத்ர கச்சதி” என்றானிறே திருவடி.  “அச்சுவை பெறினும் வேண்டேன்” (திருமாலை – 2) என்றாருமுண்டிறே.  “கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” (அமலநாதி – 10) என்றாரிறே.  அதவா, மருபூமியில் தண்ணீர் போலே இருள் தருமாஞாலமான ஸம்ஸாரத்திலே இருந்துவைத்து க்ருஷ்ணாநுபவம் பண்ணி வாழப்பிறந்தீர்காள்! என்றுமாம்.  (வாழ்வீர்காள்) அவ்வூர் தன்னில் பிறந்து வைத்து பருவம் நிரம்பியிருக்கையன்றிக்கே, அவனுடைய கடாக்ஷத்துக்கு இலக்காம்படி ஒத்த பருவமாயிருக்கை; க்ருஷ்ணாவதாரத்துக்கு முன்னாதல் பின்னாதலின்றிக்கே  ஸமகாலத்திலே பிறக்கப்பெறுவதாய்; அதுதன்னிலும் அவ்வூரையொழிந்த இடத்தேயன்றியே இவ்வூரிலே பிறக்கப் பெறுவதாய்; அதுதன்னிலும் அவனோடொத்த பருவமாகப் பெறுவதாம்; இது ஒரு பாக்யாதிஶயம் இருக்கும்படியென்? (வாழ்வீர்காள்) அவ்வூரில் வர்த்தனமென்றும் வாழ்ச்சியென்றும் இரண்டில்லை காணும்! அவன் நித்யவாஸம் பண்ணுமிடத்தில் வர்த்தநமே வாழ்ச்சியாயிருக்குமிறே; “வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்”! (திருவாய் – 10.7.1) என்னக்கடவதிறே.  இது கோயிலில் வர்த்தநம்போலே காணும், சொல்லுகிற தங்களுக்கும் வாழ்ச்சி ஒத்திருக்க, “வாழ்வீர்காள்” என்று பிறரைச் சொல்லுகிறதென்?  என்னில் – தாங்கள் தனியே அநுபவிக்கும் அநுபவம் ரஸாநுபவமாய் தோற்றாமையாலே அத்தை ரஸமாக்கித் தருமவர்களைக் கொண்டாடுகிறார்கள். 

(நாமும்) “அத்தலையிலே பேறு” என்று இருக்கிற நாமும், அவனாலே போறாகிலும் ருசி இருந்தவிடத்திலே இருக்கவொட்டாதிறே; இந்தப் பலம் ஒரு நாள் வரையிலே கைவந்ததாகவற்றே! என்று இருக்கிற நாமும் என்னவுமாம்.  (நம் பாவைக்கு) நம்முடைய நோன்புக்கு.  அவனையும் அவனுடையாரையும் அழிக்கைக்குப் பண்ணும் இந்த்ரஜித் ப்ரப்ருதிகளுடைய யாகம் போலன்றியே,  ததீயரும் அவனும் வாழுகைக்குப் பண்ணும் யாகம்; ப்ரயோஜநாந்தரபரமான நோன்பன்றியே, க்ருஷ்ணனும் க்ருஷ்ண விபூதியும் உண்டாகைக்குப் பண்ணுகிற நோன்பு.

(செய்யும் கிரிசைகள்) பண்ணக்கடவ க்ருத்யங்கள்.  சேதநனாகையாலே, ப்ராப்ய ஸித்தியளவும் காலக்ஷேபத்துக்காக  இழிந்து அநுபவிக்கக்கடவ அநுஷ்டானமென்றபடி.  ஆரம்பித்துத் தவிருமவையல்ல, பத்தும் பத்தாகச் செய்து அறவேணும்; மடல்போலக் காட்டிவிடுமதல்ல.  (கேளீரோ) “பெண்கள் கிடாய், க்ருஷ்ணன் கிடாய்” என்று நிஷேதிக்கிற ஊரிலே, இங்ஙனே ஒரு சேர்த்தியுண்டாவதே! பகவத் விமுகர் கோலாஹலத்திலே க்ருஷ்ணாநுபவத்துக்கு இத்தனை பேருண்டாவதே! என்று அவர்கள் இந்த லாபாநுஸந்தாநத்தாலே ஸ்தப்தைகளாயிருக்கையாலே “கேளீரோ” என்கிறார்கள்.  மேய்ச்சல் தலையிலே அசையிடுவாருண்டோ? இந்த நாலு நாளும் போனால் நம்மை ஒருவரையொருவர் சேரவொட்டுவர்களோ? (கேளீரோ) “ஸம்ஶ்ரவே மதுரம் வாக்யம்” என்னும்படியே ஶ்ரவணந்தானே ப்ரயோஜநமாயிருக்கிறபடி.  “புருஷார்த்தோயமேவைக: யத் கதாஶ்ரவணம் ஹரே:” என்றானிறே.  சொல்லுகிறவர்கள்தான் ஆசார்யபதம் நிர்வஹிக்கைக்காகச் சொல்லுகிறார்களல்லர்; கேட்கிறவர்கள் தங்களுக்கு அஜ்ஞாதமாய்க் கேட்கிறவர்களல்லர்; “போதயந்த: பரஸ்பரம்” என்று இவ்வளவேயல்லது போதுபோகாமலிருந்தபடி.

“எங்களுக்கு எதனால் நல்லது ஆகில் சொல்லலாகாதோ?” என்ன – மேல் சொல்லுகிறார்கள்.   – (பாற்கடலுள் பையத்துயின்ற) பரமபதத்தில் நின்றும் ஆர்த்தரக்ஷணத்துக்காகத் திருப்பாற்கடலளவும் ஒரு பயணமெடுத்துவிட்டு ஜகத்ரக்ஷணசிந்தையிலே அவஹிதனாய், ஆர்த்தத்வநிக்குச் செவிகொடுத்துக் கொண்டு கிடக்கிறபடி.  (பையத்துயின்ற) “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே – கள்ள நித்திரை கொள்கின்ற” (பெரியாழ்வார் திரு – 5.1.7) என்னக்கடவதிறே.  இவ்வுறக்கத்தின் உண்மை அறிந்தவர் “கள்ளம்” என்று வெளியிட்டாரிறே.  (பையத்துயின்ற) பிராட்டிமாரோடே போகத்துக்கு இடங்கொடாதே “ஆராலே ஆருக்கு என்ன நலிவு வருகிறதோ!” என்று அதிலே அவஹிதனாய்க் கொண்டு சாய்ந்தபடி.  முதற்பாட்டில் – நாராயணத்வம் சொல்லி, இப்பாட்டில் அங்கு நின்றும் திருவவதாரார்த்தமாகத் திருப்பாற்கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறது.  (பரமன்) தகட்டிலழுத்தின மாணிக்கம்போலே திருவநந்தாழ்வான்மேலே சாய்ந்தருளின பின்பு வடிவிற்பிறந்த புகரின் பெருமையைச் சொல்லுகிறது.  அன்றியே, ஜகத்ரக்ஷணார்த்தமாக வந்து கண்வளர்ந்தருளுகையாலே குணத்தினேற்றத்தைச் சொல்லிற்றாகவுமாம்.  ஸர்வத்தாலும் அதிகனென்றபடி.  (அடிபாடி) அவனுடைய ஆதிக்யத்தினெல்லையை அநுஸந்தித்தால், பின்னை தங்கள் தாழ்ச்சியினெல்லையிலே நிற்குமத்தனையிறே.  ஔசித்யத்தாலும் போக்யதை யாலும் க்ருஷ்ணன் திருவடிகளைப் பாடாதே திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளுகிறவனைப் பாடுவானென்னென்னில் – இரண்டிடமும் ஒருவனே யாகையால், “நோன்பு நோற்கப்புக்கவர்கள் க்ருஷ்ணனைப் பாடாநின்றார்கள்” என்று சொல்லாமைக்காக ஒரு தைவத்தின் பேரைச் சொல்லிற்றாகச் சொல்லுகிறார்கள்.

(பாற்கடலுள் பைய துயின்ற) க்ருஷ்ணனை அநுபவிக்கப் புகுந்து க்ஷீராப்திநாதனைச் சொல்லுகிறது என்னென்னில் – க்ருஷ்ணனைச் சொல்லிப் பண்டே ஶங்கித்திருக்கிற இடையர் நமக்கு தைவம் தந்த இச்சேர்த்தியை அழிக்கிறார்களோ? என்று பயப்பட்டு, க்ருஷ்ணனுக்கடியான க்ஷீராப்திநாதனைச் சொல்லு கிறார்கள்.  “ஏஷ நாராயண: ஶ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந: நாகபர்யந்தமுத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்” என்னக்கடவதிறே.  (அடிபாடி) மஹிஷிகளோடு அல்லாதாரோடு வாசியற ஶேஷத்வம் ஸமாநமாயிருக்கையாலே, திருவடிகளைப்பாடி என்கிறார்கள்.  “பள்ளிகொள்ளுமிடத்தடி கொட்டிட” (நாச்சியார் – 4.1) என்னக்கடவதிறே.  அவனுடைய வடிவழகை ப்ரீதிப்ரேரிதைகளாய்க் கொண்டு பாடி,

(பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம்) போக்யாந்தரங்களில் அந்வயியோம்; உண்டாற்கு உண்ணவேண்டாவிறே.  இவர்கள் உண்டார்களா? என்னில் – ஓம்.  “உண்ணாநாள் பசியாவதொன்றில்லை – நமோ நாரணாவென்று உன பாதம் நண்ணா நாள் அவை பட்டினி நாளே” (பெரியாழ்வார் திரு – 5.1.6) என்றும், “எல்லாம் கண்ணன்” (திருவாய் – 6.7.1) “கூறைசோறிவை வேண்டுவதில்லை” (பெரிய திருமொழி – 5.1.4) என்றும், “பாதேயம் புண்டரீகாக்ஷ நாமஸங்கீத்தநாம்ருதம்”  என்றும், “வாஸுதேவ: ஸர்வம்” என்றும் இப்படியேயிறே ஜ்ஞாநம் பிறந்தாலிருப்பது.  “குடியோம்” என்னாதே “உண்ணோம்” என்பானென்? என்னில் – “உண்ண” என்று குடிக்கைக்குச் சாதிப் பேச்சு.  ஆகையிறே, “நெய்யுண்டான், வெண்ணெயுண்டான்” என்று க்ருஷ்ணனுக்குப் பேராகிறது.  முதல் தன்னிலே க்ருஷ்ணன் பிறந்தபின்பு அதில் வ்யுத்பத்தி இல்லாமை, அவன் வருமளவும் உபவாஸ க்ருஶைகளாயிருக்கக் கடவோம், இவர்கள்தாம் ஆரைக் கெடுக்கப் பட்டினி கிடக்கிறது? என்னில் – இவர்கள் உண்ணாதொழிந்தால் பட்டினி விடுவான் அவன்போலே காணும்; ஆகையிறே, இவர்கள் இங்ஙனே சொல்லுகிறது.

(நாட்காலே நீராடி) அவன் வந்தால் குளிக்க இராதே, முன்பே தன்போகயோக்யமாகக் குளித்து, விடிவோரைப் போய் குளிக்கக் கடவோம்; அவன் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தருளினதை அஸத்கல்பமாக்கக்கடவோம்; மஹிஷியானவள் ஸ்வரக்ஷணத்திலே ப்ரவர்த்திக்கும் படியாக இருக்கைக்கு மேற்பட புருஷனுக்கு அவத்யமில்லையிறே.  அதாவது – தங்கள் த்வரையாலே அத்தலையில் உபாயபாவத்தை அழிக்கிறார்கள்.  “ஓதிநாமங்குளித்துச்சி தன்னாலொளிமாமலர்ப் பாதநாளும் பணிவோம் நமக்கே நலமாதலில்”  (பெரிய திருமொழி – 9.3.9) என்கிறார்கள்.   ஶ்ரீ பரதாழ்வானைப் போலே, விரஹதாபமாறுகைக்காக “நோன்பு” என்று ஒரு வ்யாஜத்தையிட்டுக் குளிக்கத் தேடுகிறார்களிறே; “அத்யந்த ஸுகஸம்வ்ருத்த: ஸுகுமார: ஸுகோசித: கதம் த்வபரராத்ரேஷு ஸரயூமவகாஹதே” என்கிறபடியே.

(மையிட்டெழுதோம்) முதலிலே மையக்கண்ணாளிறே, இனி அஞ்ஜநமிடுவதும் மங்களார்த்தமாகவிறே; அது தவிரக் கடவோம் என்கையாலே – அவனுக்கு அவகாஶப்ரதாநம் பண்ணக்கடவோமல்லோம் என்கிறார்கள்.  இவர்கள் அஞ்ஜநமெழுதப்புக்கால் குறையும் தலைக்கட்டுவான் அவனேயிறே.  பரிபூர்ண விஷயத்தில் இப்படி அவகாஶப்ரதாநம் பண்ணப் பெறாதவன்று கிஞ்சித்கரித்ததாக விரகில்லையிறே. அவனும் பரம ப்ரணயியாகையாலே “இங்கே கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெறவேணுமென்றிருக்கும்.

(மலரிட்டு நாம் முடியோம்) “சுரும்பாற்குழற்கோதை” (நாச்சியார் – 9.10) என்றும், “வாசம் செய் பூங்குழலாள்” (திருவாய் – 10.10.2) என்றுமிறே இருப்பது.  இனி, பூவுக்குத்தான் நாற்றங்கொடுக்கைக்காகவாய்த்துப் பூ முடிப்பது; அது செய்யக் கடவோமல்லோம் என்கை.  (நாம் முடியோம்) அவன்தான் மாலையைக் கொடுவந்து மயிரை முடித்து அலங்கரித்து விரல்கவ்வி “இது வாங்காதொழியவேணும்” என்னுமாகில், செய்யலாவ தில்லை; அவன் தீம்பாலே செய்யுமத்தை நம்மால் செய்யலாவதில்லையே; தாமாகச் செய்யாதொழியு மித்தனையிறே வேண்டுவது.  “அத்ரோபவிஶ்யவா தேன காபி புஷ்பைரலங்க்ருதா அந்யஜந்மநி ஸர்வாத்மா விஷ்ணுரப்யர்ச்சிதோ யயா” என்னக்கடவதிறே.

(செய்யாதன செய்யோம்) விதியுண்டாகிலும், பூர்வர்கள் ஆசரித்ததற்கு மேற்பட ஆசரிக்கக்கடவோமல்லோம்.  அதாகிறது, “ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம்”  என்று – அவன் ஸர்வபூதஸுஹ்ருத்தாக இருந்தானேயாகிலும், ததீயரை முன்னிட்டுக் கொண்டல்லது அவனைக் கிட்டக்கடவோமல்லோம் என்கை.  பெண்களில் முற்பட  உணர்ந்தார் ஒருவரையொருவர் எழுப்பி, எல்லாருங்கூடியல்லது க்ருஷ்ணனைக் கிட்டக்கடவோ மல்லோமென்கை.  “நிவேதயத மாம் க்ஷிப்ரம்” என்றும் “பிதாமஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத” என்றும் இவையிறே ப்ரமாணங்கள்.  ஶ்ரீபரதாழ்வானை முடிசூடச் சொன்னவிடத்தில் ஸர்வப்ரகாரத்தாலும் யோக்யதை யுண்டாயிருக்க, “இக்குடியில் இதுக்கு முன்பு செய்யாதன நான் செய்யமாட்டேன்” என்றானிறே. 

(தீக்குறளை சென்றோதோம்)  பிறர்க்கு அநர்த்தா வஹமாகப் பொய் சொல்லக்கடவோமல்லோம்; பிராட்டி பெருமாள் பக்கல் ஏகாந்தத்தில் ஏகாக்ஷிகள் ஏககர்ணிகள் நலிந்தபடி சொல்லிற்றாக  இல்லையே ஶ்ரீ ராமாயணத்தில்.  நம்மில் நாம் “நப்பின்னை நங்காய்” (20) என்றும் ”நாயகப்பிள்ளாய்” (7) என்றும், “பேய்ப்பெண்ணே” (7) என்றும் ஒருவர்க்கொருவர் இட்டீடுகொண்டு சொன்னவை க்ருஷ்ணன் செவிப்படுத்தக் கடவோமல்லோம்.

(ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி) ஐயமாவது – யோக்ய விஷயத்திலே குருவாக வ்யயிக்குமது; பிச்சையாகிறது – ப்ரஹ்மசாரிகளுக்கும் ஸந்யாஸிகளுக்கும் இடுமது, “இங்கு க்ருஷ்ணாநுபவம் பண்ணுவோம்” என்பார்க்கு அவனை அநுபவிப்பித்தும், “ததீயரை அநுபவிப்போம்” என்பார்க்கு அவர்களை அநுபவிப்பித்தும் போரக்கடவோம்.  (ஆந்தனையும்) அவர்கள் கொள்ளவல்லவராந்தனையும், அர்த்திகள் ஆமளவும்.  (கை காட்டி) ஸர்வத்தையும் கொடுத்தும் “ஒன்றும் செய்யப்பெற்றிலோம்” என்றிருக்கை.  இவர்களை க்ருஷ்ணாநுபவம் பண்ணி வைத்தும், “இவர்கள் திறத்தில் ஒன்றும் செய்யப்பெற்றிலோம்” என்றிருக்கையைச் சொல்லுகிறது.  அதவா, ஐயமாகிறது – ஈஶ்வரனுடைய ஸ்வரூப குண விஷய ஜ்ஞாநம் ; பிச்சையாகிறது – ஆத்ம ஸ்வரூப மாத்ர ஜ்ஞாநம்; இவற்றைத் தனக்கு உள்ளவளவும் உபதேஶிக்கை யென்றுமாம்.  (கை காட்டி) இப்படி ஜ்ஞானோபகாரக னானாலும் அவ்வுபகாரம் தன்னெஞ்சில் தட்டாதிருக்கை. 

(உய்யுமாறெண்ணி) இந்த ப்ரகாரங்களினாலே உஜ்ஜீவிக்கும் படிகளை எண்ணி, பகவத்விஷயத்திலே உள்புக்கவன்றிறே இவன் உஜ்ஜீவித்தானாகிறது; அது இல்லாதபோது ”அஸந்நேவ”விறே.  (எண்ணியுகந்து) மநோரதவேளையே தொடங்கி ரசிக்கிறபடி.  “ஸுஸுகம் கர்த்துமவ்யயம்” என்கிறபடிய – ஸ்மர்த்தவ்ய விஷயத்தின் ரஸ்யதையாலே ஸ்ம்ருதி வேளையே தொடங்கி ரசிக்குமிறே.  “எண்ணியுகந்து – செய்யும் கிரிசைகள்  கேளீரோ” என்று அந்வயம்.

@@@@@

மூன்றாம் பாட்டு

        ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

        நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்

        தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாறி பெய்து

        ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகளப்

        பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்

        தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

        வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

        நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – மூன்றாம் பாட்டு – ஸ்வர்க்கார்த்தமாக யஜிக்குமவனுக்கு ஸ்வர்க்கம் ப்ரதாநபலமாயிருக்கச் செய்தேயும், “ஆயுஶாஸ்தே” என்கிறபடியே ஆயுஸ்ஸு புத்ரன் என்று அவாந்தரபலமாயிருப்பன  சில உண்டாயிருக்கும்; இவர்களுக்கு அங்ஙனம் ஒன்றுமின்றிக்கே, “ஸர்வ லாபாய கேஶவ:” “மாதா பிதா ப்ராதா” “சேலேய் கண்ணியரும்” (திருவாய் – 5.1.8) என்று, எல்லாம் அவந்தானேயாகையாலே, தங்களுடைய நோன்புக்கு அநுமதி பண்ணினார்க்கு வரக்கடவதான பலமிருக்குபடியைச் சொல்லுகிறார்கள்.  “அநஸூயவே” என்று அஸூயையைப் பண்ணாதொழிய அமையுமிறே அதிகாரிகளாகைக்கு.  “யத்ராஷ்டாக்ஷரஸ் ஸம்ஸ்தித:” இத்யாதியாலே ஒருத்தனைச் சொல்லக்கடவது; ஆனபின்பு இவர்கள் இத்தனை பேர் இருந்தால் நாடு வாழச் சொல்லவேண்டாவிறே.

வ்யாக்யானம் – (ஓங்கியுலகளந்த ) இவர்கள் முதலே தொடங்கி நாராயணன்என்று உபயவிபூதியோகத்தைச் சொல்லி “பாற்கடலுள் பைய துயின்ற”  என்று அவதாரார்த்தமாகப் பள்ளிகொண்டருளினபடியைச் சொல்லி, அங்கு நின்றும் போந்து அவதரித்தவளவும் வர அடியொற்றுகிறார்கள்.

 (ஓங்கி) ஜகத்ரக்ஷணார்த்தமாகத் திருப்பாற்கடலிலே சாய்ந்தருளினபோது ஆர்த்த ரக்ஷணம் பண்ணப் பெறாமையாலே, பனிப்பட்டுச் சாய்ந்த மூங்கில் போலேயாய், அது ஆதித்ய கிரணம் பட்டுக் கிளம்புமாபோலே, மஹாபலியாலே நோவுபட்ட தேவர்களார்த்தித்வநி கேட்டபின்பு பேர்ந்து வளர்ந்தபடி.  பிறர் கார்யஞ்செய்யப் பெறுகையாலே வளர்ந்தபடி என்னவுமாம்.  “உவந்த உள்ளத்தனாய் உலகமளந்து” (அமலநாதி – 2) என்னக்கடவதிறே.  அங்ஙனன்றிக்கே, இரப்புப் பெறுவதற்கு முன்னே வாமநனானவன்  இரப்பு வாய்த்த ப்ரீதியாலே வளர்ந்தபடியாகவுமாம்.  கையில் நீர் விழுந்தபின்பு வளர்ந்த கடுமை, ப்ரஹ்மா திருவடிகள் விளக்கின நீரும் கூட விழுந்தபடியிறே.  (உலகு அளந்த) “விசக்ரமே ப்ருத்வீமேஷ ஏதாம்” என்கிறபடியே குணாகுண நிரூபணம் பண்ணாதே ஸர்வ ப்ராணிகள் பக்கலிலும் திருவடிகளை வைத்தபடி. வ்யாப்தியில் வரைதலில்லாதாபோலேயாய்த்து இதுவும். வ்யாப்திக்குக் கருத்து – இவற்றினுடைய ஸத்தை உண்டாக்கு  கைக்காக.  இங்கு இவற்றோட்டை ஸ்பர்ஶம் தனக்கு தாரகமாகவிறே நினைத்திருப்பது.  இவற்றுக்கு அபேக்ஷிதமின்றிக்கேயிருக்கச் செய்தேயும், உறங்குகிற ப்ரஜையை அணைத்துக்கொண்டு கிடக்கும் மாதாவைப்போலே, இவற்றோட்டை ஸ்பர்ஶந் தனக்குத்தான் உகக்கிறானிறே.  வரையாமையும், அதிமானுஷசேஷ்டிதங்களும், வடிவழகும் க்ருஷ்ணாவ தாரத்தோடு ஒத்திருக்கையாலே, ஶ்ரீவாமநாவதாரத்தை அநுபவிக்கிறார்கள்.

(உத்தமன்) இத்தை, இவர்களுக்கு ஒரு உபகாரம் பண்ணினானாகவன்றிக்கே தன் பேறாக நினைத்தி ருக்கிறபடி; பிறரை ஹிம்ஸித்துத் தன் வயிற்றை வளர்க்கவேண்டுமென்று இருக்குமவன் – அதமன்; பிறரும் ஜீவிக்கவேணும், நாமும் ஜீவிக்கவேணும் என்று இருக்குமவன் – மத்யமன்; தன்னை அழியமாறியாகிலும் பிறர் ஜீவிக்கவேணுமென்னுமவன் – உத்தமன்.  “பக்தாநாம்” “அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்”  என்றிருக்கை. 

(பேர் பாடி) இக்குணங்களுக்கு வாசகமான திருநாமங்களை ப்ரீதிபூர்வகமாகப் பாடி “உத்தமன்பேர்” என்கிறது – திருமந்த்ரத்தை . முதற்பாட்டில், “நாராயணன்” என்கையாலும், இரண்டாம் பாட்டில் “பரமன்” என்று அந்த மந்த்ரார்த்தமான குணபூர்த்தியைச் சொல்லுகையாலும், இதில் மந்த்ரோக்த வ்யாப்திக்கு ப்ரத்யபிஜ்ஞாகரமான த்ரைவிக்ரமாபதாநத்தை  சொல்லுகையாலும், திருமந்த்ரத்தைச் சொல்லுகிறது.  திருமங்கையாழ்வார் “மந்திரத்தை மந்திரத்தால்” என்று மந்திரத்தைச் சொல்லி, அநந்தரத்திலே அதில் உக்தமான வ்யாப்திக்கு ப்ரத்யபிஜ்ஞாகரமான த்ரைவிக்ரமாப தாநத்தை அநந்தரம் பாட்டிலே அருளிச்செய்தாரிறே.  (உத்தமன் பேர்) அவன்தனக்கும் பிறரக்குமுண்டான வாசி போரும், அவனுக்கும் திருநாமத்துக்கும்.  கட்டி பொன்போலே அவன்; பணிப்பொன்போலே திருநாமம். அவன்தன்னை இல்லை செய்கிறவர்களும் திருநாமங்கொண்டு கார்யங்கொள்ளா நிற்பர்.  அதாவது – வ்யாதி பரிஹார்த்தமாகத் திருநாம  ஸங்கீர்த்தநத்தை விதித்தால் அப்போதே அத்தைச் செய்ய நிற்பர்கள்.  இனி, மாத்ருகாதுகனுக்கும் கை நொந்தால் “அம்மே” என்ன ப்ராப்தியுண்டாமாபோலே, திருநாமம் சொல்லுகைக்கு எல்லாருக்கும் ப்ராப்தியுண்டாயிருக்கும்.  திருநாமஞ்சொல்லுகைக்கு யோக்யதை ஸம்பாதிக்க வேண்டா.  இதுதானே யோக்யதையைப் பண்ணிக் கொடுக்கவற்று. 

(நாங்கள்) திருநாமத்தை வாயாலே சொல்லாவிடில் தரிக்கமாட்டாத நாங்கள்.  “நெஞ்சு காவலிருக்கிற ஊரிலே, இது நமக்கு ஸித்திப்பதே!” என்று ப்ரீதைகளாய், தங்களை ஶ்லாகிக்கிறார்களென்னவுமாம்.  (நம் பாவைக்கு) ப்ராபகதயாவன்றிக்கே, ப்ராப்யருசி இருந்தவிடத்தில் இருக்கவொட்டாமல் செய்கிற நோன்புக்கு.  (பாவைக்கு சாற்றி நீராடினால்) ஸம்பந்த ஜ்ஞாநபூர்வகமாக க்ருஷ்ண ஸம்ஶ்லேஷம் பண்ணினால், பலமும் பல ப்ரதாதாவான உலகளந்தபடியாகை.

(தீங்கின்றி நாடெல்லாம்) நாட்டில் வ்யாதி துர்பிக்ஷாதி அமங்களமெல்லாம்  போய் ஸம்ருத்தமாய், தந்தாமுடைய ஸுக்ருதம் அநுபவிக்கிலிறே அவ்வளவிலே நன்மையாவது, “ராமே ராஜ்யம் ப்ரஶாஸதி” என்கிறபடியே தந்தாமுடைய புண்யாநுகுணமாகவன்றிக்கே பெருமாநுடைய வாக்யத்தாலே “ப்ரஹ்ருஷ்டமுதிதோ லோக:” என்று ராஜ்யம் சென்றாற்போலே இவ்வூரேயன்றிக்கே இவ்வூரோடு ஸம்பந்தித்த  நாடெல்லாம் மங்களமாகை.  (திங்கள் மும்மாரி பெய்து) வெள்ளக்கேடும் வறட்கேடும் இன்றிக்கே “ஊறெண்ணெய் விட்டாற்போலேயிருக்கை; “ஒன்பது நாள் வெயிலும் ஒருநாள் மழையுமாய்”  “நிகாமே நிகாமே ந: பர்ஜந்யோ வர்ஷதி” என்று அபேக்ஷித்த காலத்திலே உண்டாயிருக்கை.  (ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள) கீழ் சொன்ன திருவுலகளந்தருளின ஸர்வேஶ்வரனோடு ஒத்திருக்கை. விடிவோரை நட்டு நாயிறு பட்டபோது வந்து பார்த்தால் கை கவித்துப் பார்க்கவேண்டும்படி இருக்கை.  “மாரீசன் பெருமாளை “வ்ருக்ஷே வ்ருக்ஷே பஶ்யாமி” என்றாற்போலே, இவர்களுக்கும் ஶ்ரீவாமந நிமித்தமாக “வ்ருக்ஷே வ்ருக்ஷே பஶ்யாமி” இருக்கிறபடி.  (ஓங்கு பெருஞ்செந்நெல்) ஒரு முதலே ஒரு செய்யை விளாக்குலை கொண்டு அங்ஙன் ஒரு வரம்பில்லாமையாலே ஆகாஶ அவகாஶமுள்ளவளவும் வளர்ந்திருக்கை.  (ஊடு கயல் உகள) செருக்காலே யானைக்கன்று போலே வளர்ந்த கயல்களானவை செந்நெல்களின் உள்ளே புக்கு போர இடம் பெறாமையாலே துள்ளா நிற்கும்;  விழுக்காடறியாமே அகப்பட்டபடி.  திருவுலகளந்தருளின ஸர்வேஶ் வரனைக்கண்ட அநுகூலர் பட்டது படாநிற்குமாய்த்து இவை.

(பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப) பூத்த குவளையிலே என்னுதல், காலத்திலே தர்ஶநீயமான குவளைப்பூவிலே என்னுதல்.  (பொறி வண்டு கண் படுப்ப) மதுபானத்தாலும் அந்யோந்ய ஸம்ஶ்லே‌ஷத்தாலும் பிறந்த புகரடைய வடிவிலே தொடை கொள்ளலாம்படி இருக்கிற வண்டுகள் தன்னில்தான் ஒரு மகாபாரதத்தைப் பாரித்துக்கொண்டு புக்கு புஷ்பத்திலே ஸ்பர்ஶ ஸௌக்யத்தாலே நஞ்சுண்டாரைப்போலே உறங்கி, உணர்ந்து எழுந்திருக்கும்போது “என்னை நீ எழுப்பிற்றிலை” “என்னை நீ எழுப்பிற்றிலை” என்று ஒன்றுக்கொன்று “சீறு, பாறு” என்னா நிற்கும்.  “பள்ளி கமலத்திடைப்பட்ட பருவாயலவன் முகம் நோக்கி நள்ளியூடும்” (பெரிய திருமொழி – 6.7.8) என்னக்கடவதிறே.  (ஊடு கயல் உகள – பூங்குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப) குவளைப் பூவிலே வண்டு மதுபாநம் பண்ண என்று படிந்த தசையிலே கயல் ஊடே உகள, செந்நெல்லும் குவளையும் ஒக்க அசைந்து, தூங்கு மெத்தையிலே உறங்கும் ராஜபுத்ரர்களைப்போலே வாயில் மதுவோடே வண்டு கண்படுப்ப என்றபடி.

இது வயலின் ஸம்ருத்தி.  இனி, ஊரில் ஸம்ருத்தி யிருக்கும்படி சொல்லுகிறது.  (தேங்காதே புக்கிருந்து) எத்தனையேலும் முன்கை உரவியராயிருப்பார் இழியவேணுமாய்த்து பசு கறக்கப் புகும்போது; இதுக்கு அடி – பால் மாறாமையாலே எழுந்திருக்கப் போகாது. இத்தால், பால் போரும் பெருமையை அநுஸந்தித்தவாறே கறக்க ஒருப்படுவாரில்லை.  திருவடி ஸமுத்ரம் கடக்க ஒருப்பட்டாற்போலே, ஒருப்பட்டுக்கொண்டு இழியவேண்டும்படியாய்த்து இருப்பது.  (இருந்து) பால் மாறிலிறே எழுந்திருக்கலாவது.  ஸ்தாவரப்ரதிஷ்டைபோலே இருந்து (சீர்த்த முலை) விரலிட்டு சுற்றிப் பிடிக்கவொண்ணாது இரண்டு கையாலும் அணைத்துக் கறக்கவேண்டும்படி கனத்திருக்கை.  (பற்றி வாங்கக் குடம் நிறைக்கும்) வாங்குகை – வலிக்கையாய்; பற்றிக்கறக்கக் குடம் நிறைக்கும் என்னுதல், முலையைப்பற்றிக் கைவாங்க தானே நின்று பால் சொறியுமென்னுதல், இட்ட குடங்கள் வாங்க வாங்க நிறைக்கும் என்னுதல், குடமிடாதார் இழக்கிறது பசுவின் குற்றமன்றே. இச்சையுடையார் ஈஶ்வரனைப்பற்றி க்ருத க்ருத்யராமாபோலேயாய்த்து இவையும்.

(வள்ளல்) கீழே பால் போரும் பெருமையைச் சொல்லிற்றாகில், இனி, வள்ளல்தன்மையாவது என்னென்னில், – க்ருஷ்ணன் படி இவற்றுக்கும் உண்டாயிருக்கை.  ஆரேனும் இவன் கழுத்திலே ஓலை கட்டி “தூது போ” என்றால் போமாபோலேயாய்த்து, இவையும்;  இது ப்ரஜைகளுக்குங்கூட கட்டவும் அடிக்கவுமாம்படி தன்னைக் கொடுத்துக்கொண்டு நிற்கை. (பெரும் பசுக்கள்) புல்லும் தண்ணீரும் தாரகமாக வளர்ந்தவையன்றிக்கே, க்ருஷ்ண ஸ்பர்ஶமே தாரகமாக வளர்ந்தவையாகையாலே, ஶ்ரீ ஶத்ருஞ் சயனைப் போலேயாய்த்து இருப்பது. 

(நீங்காத செல்வம் நிறைந்து) அழிவில்லாத ஸம்பத்து நிரவதிகமாம்படி, சேதநருடைய புண்ய பாபாநுரூபமாக படிவிடும் ஸர்வேஶ்வரனடியாக வந்த ஸம்பத்தாகிலிறே அளவுபட்டிருப்பது.  “பாபாநாம் வா ஶுபாநாம் வா” என்னுமவநடியாக வந்த ஸம்பத்தாகையாலே ஊற்றுடைத்தாயிருக்குமிறே இது.  ஆகையாலே, “நீங்காத செல்வம்” என்கிறது. 

@@@@@

நான்காம் பாட்டு

       ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

        ஆழியுள் புக்கு முகந்துகொ(டு) ஆர்த்தேறி

        ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்

        பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்

        ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

        தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

        வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

        மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – நான்காம் பாட்டு.  உபயவிபூதியுக்தனான ஸர்வேஶ்வரன் இங்கே க்ருஷ்ணனாய் வந்து தன்னைத் தாழவிட்டு, பெண்கள் சொல்லிற்றுச் செய்யும்படிக்கு ஈடாகத் தான் கையாளாய், அவர்களுடைய அபேக்ஷித ஸம்விதாநம் பண்ணிப் போருகிறபடி கண்டால் இதர தேவதைகளுக்குச் சொல்லவேண்டாவிறே. இவர்களும் அவனுமான சேர்த்தியிலே கிஞ்சித்கரித்து அத்தாலே ஸ்வரூப லாபமாயிருக்குமிறே.  “த்ரவந்தி தைத்யா: ப்ரணமந்தி தேவதா:” என்கிறபடியே பகவத் ஸமாஶ்ரயணம் பண்ணினார்க்கு தேவதைகள் தாங்களே வந்து உபஸ்திதராகக்கடவரிறே; “ஸ்வ புருஷம்” இத்யாதி.  இந்த ஶ்லோகார்த்தத்தைத் திருமழிசைப் பிரான் அருளிச்செய்தார் “திறம்பேன்மின்” இத்யாதி (நான்முகன் – 68) ஆக இப்படி பகவத் ஸமாஶ்ரயணம் பண்ணினாரை இதர தேவதைகள் அநுவர்த்திக்கக்கடவராகையாலே, வர்ஷ தேவதையான பர்ஜந்யன், “நாம் இச்சேர்த்தியிலே கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெறவேணும்” என்று வந்து, “நான் இங்குத்தைக்குச் செய்யவேண்டும் அடிமையை நியமிக்கவேணும்” என்ன, செய்யக்கடவபடியை “இன்னபடியும்” “இன்னபடியும்” என்று கையோலை செய்து கொடுக்கிறார்கள். 

வ்யாக்யானம் – (ஆழிமழைக்கண்ணா) கம்பீர ஸ்வபாவத்தையுடையவனாய், வர்ஷத்துக்கு நிர்வாஹக னானவனே! ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை ப்ரஹ்ம ருத்ரர் தலையிலே பொகட்டு ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த பாலநவிதியைத் தான் நடத்துமாபோலே, நாட்டாரைக் கட்டுவது விடுவதாகிற க்ரௌர்ய வ்யாபாரத்தை யமாதிகள் தலையிலே ஏறிட்டு, “நம்மோபாதி ஜகத்தை ஈரக்கையாலே நடத்தி நோக்க வல்லான்” என்று ஈஶ்வரனாலே மதிக்கப்பட்டவனல்லையா நீ? இத்தால் நாட்டார் சிறுமை பாராதே, உன் பெருமைக்கு ஈடாக வர்ஷி என்கை.  “ஆழி மழை” என்று மண்டலவர்ஷமாக்கி, மண்டலவர்ஷத்துக்கு நிர்வாகக னானவனே! என்னவுமாம்.  ஸுக்ருதம் பண்ணினார் இருந்தவிடத்தே வர்ஷித்தும், பாபம் பண்ணினாரி ருந்தவிடத்தே வர்ஷியாதும் போருவதொன்றுண்டிறே.  எங்கள் பாக்யத்தையே நினைத்து புஜிக்கும் நாடாகையாலே, நீ அங்ஙன் புதைத்து பார்க்கவொண்ணாது.  “பாபானாம் வா ஶுபானாம் வா”   என்கிற எங்கள் கோடியிலேயாகவேணும்.  நாட்டுக்கு இட்ட நினைவைக் கொண்டு படுக்கைப் பற்றிலே செல்லாதே கொள்.  இவனை இங்ஙனே சொல்லுவானென்? என்னில், இப்பெண்கள் பாலைகளாகையாலே இவன் பேர் சொல்ல அறியார்கள்.  ஆகையாலே, இவன் அதிகரித்தக் கார்யந்தன்னையிட்டே சொல்லுகிறார்கள். 

(ஒன்றும் நீ கை கரவேல்) உன்னுடைய ஔதார்யத்தில் ஒன்றும் மாறாதபடி தோற்றவேணும்.  “கை” என்று “கொடை”.  கரக்கை – மாறுகை.  சேதநநுடைய நன்மை தீமைகளைக் கணக்கிட்டுப் படிவைக்கும் குசாண்டுள்ள ஈஶ்வர கோஷ்டியைப் பார்த்து விஷமமாக வர்ஷியாதே, “ந கச்சின் நாபராத்யதி”, என்று பாபமே பச்சையாக ரக்ஷிக்கும் எங்கள் படியைப் பார்த்து எங்குமொக்க வர்ஷிக்கவேணும். 

(ஆழியுள் புக்கு) ஸகரர் கல்லின சிறு குழியிலன்றிக்கே, ஸமுத்ரத்திலே போய்ப் புகவேணும், அதிலும் வாய்கரையிலேயாகவொண்ணாது, நடுவே சென்றிழிய வேணும்.  (முகந்து கொடு)  இழிந்தால், மேற்பட்ட ஜலம்கொண்டு போரவொண்ணாது; கடலை மணல் ஶேஷிக்கும்படி க்ரஹிக்கவேணும்.  (ஆர்த்து) இராமடம் ஊட்டுவாரைப்போலே, முகம் தோற்றாமல் நின்று ரக்ஷிக்கும் ஸர்வேஶ்வரனைப் போலேயாகவொண்ணாது; அநஶநத்திலே தீக்ஷித்த முதலிகளடைய திருவடி வரவாலே ஸத்தைப் பெற்று ஸம்ப்ரமித்தாற்போலே, நாடடைய உங்களுடைய த்வநி கேட்டு வாழும்படி மின்னி முழங்கி வில்லிட்டுக்கொண்டு பெரிய ஸம்ப்ரமத்தோடே வந்து தோற்றவேணும்.  (ஏறி) ஆகாஶாவகாஶம் இடமடையும்படி உங்கள் வடிவைக் கொண்டு பாரிக்கவேணும்; “விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல்” (நாச்சியார் – 8.1) என்றும், “மதயானை போலெழுந்த மாமுகில்காள்” என்றும் சொல்லுகிறபடியே.

(ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து) ஜகத்காரணபூதனானவனுடைய வடிவுபோலே இருக்க வேணும்.  இந்நிர்தேஶத்துக்குக் கருத்து என்னென்னில் – நெடுநாள் தன் பக்கலிலே ஸம்ஹ்ருதமாய்க் கிடந்த ஜகத்தை உண்டாக்குவதாக ஸங்கல்பித்தவாறே, பண்டுபோலன்றிக்கே கருவடைந்த பயிர்போலே நிறத்திலே வருவது ஒரு வேறுபாடுண்டு; அத்தை நினைக்கிறார்கள்.  காலோபலக்ஷித ஸகல பதார்த்தங்களையும் உண்டாக்கினவனுடைய வடிவு உங்களுக்கு உண்டாகவேணும்.  (மெய் கறுத்து) அகவாயில் நீர்மை உங்களால் உண்டாக்க வொண்ணாதிறே.  வர்ஷித்தால் அநந்தரம் வெளுத்துபோமவையிறே இவை. 

(பாழி அம் தோள்) “பாஹுச்சாயாமவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந:“ என்கிறபடியே உபய விபூதியும் ஒதுங்கினாலும் ஒதுங்கின ரக்ஷ்ய வர்க்கம் அளவுபட்டு, ரக்ஷகனுடைய காவல்துடிப்பே மிக்கிருக்கை.  (பாழியந்தோள்) வலியுடைய தோள் என்னுதல், இடமுடைய தோள் என்னுதல்.  (அம் தோள்) அழகிய தோள்.  அன்றிக்கே, குழைச்சரக்கேயாகிலும் விடவொண்ணாத போக்யதை மிக்கிருக்கை.  ரக்ஷகமுமாய் அதுதானே போக்யமுமாயிருக்கை.  (பாழியந்தோளுடை பற்பநாபன்) பிள்ளைகளைத் தொட்டிலிலே வளர்த்திப் புற்பாயிட்டு பூரித்து ஆயுதங்கொண்டு நோக்கியிருப்பாரைப்போலே, திருநாபீ கமலத்திலே வ்யஷ்டி ஸ்ருஷ்டிக்குக் காரணபூதநாந ப்ரஹ்மாவைப் பெற்றுவைத்துத் திருத்தோள்களாலே காத்துக்கொண்டிருக்கிறவன்.  (பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி) ஸ்ருஷ்டிக்கு முதலான ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்தத் திருநாபீகமலத்தையுடைய ஸர்வேஶ்வரன் கையில் திருவாழியோபாதி மின்னவேணும்.   இந்நிர்பந்தத்துக்குக் கருத்து என்? என்னில், “புத்ரஸ்தே ஜாத:” என்றால் அத்தால் வந்த ஹர்ஷம் விஞ்சியிருக்கச் செய்தேயும் காம்பீர்யத்தாலே அது தோற்றாதிருப்பார்கள். அவ்வவர்க்கு உரிய அகம்படியரானவர்கள், அந்த ப்ரீதிக்குப் போக்குவிட்டு நெய்யாடல் போற்றிக்கொண்டு திரியுமாபோலே ப்ரதமஜனான ப்ரஹ்மா உண்டானபின்பு ஸர்வேஶ்வரனுக்குப் பிறந்த ஹர்ஷத்துக்குப் போக்குவிட்டுக் கொண்டாடினான் திருவாழியாழ்வான்.  ஆகையாலே அவனை ஒப்பாகச் சொல்லுகிறது. 

(வரம்புரிபோல் நின்று அதிர்ந்து) பாரத ஸமரத்தில் ஶ்ரீபாஞ்சஜந்ய த்வநி போலே இருக்கவேணும்.  “ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயானி வ்யதாரயத்”  என்கிறபடியே அநுகூலர் வாழவும், ப்ரதிகூலர் முடியவும் ஆகவேணும்.  (நின்று அதிர்ந்து) அதுபோலே ஒருகால் முழங்கி விடவொண்ணாது.  மாறாதே நின்று அதிரவேணும்.  (தாழாதே) நோன்பிலே நின்று உபக்ரமித்து உபவாஸக்ருஶைகளாயிருக்கிற எங்கள் வடிவு இருந்தபடி கண்டாயிறே.  அத்தனை கால விளம்பத்தோடே ஆகவொண்ணாது.  ஆர்த்திக்கு முற்பாடனாக ரக்ஷிக்கும் ஈஶ்வரனைப்போலே ஆகவேணும்.  தேவமாத்ருகம் போலன்றிக்கே பகவத் ஸமாஶ்ரயணம்.  ததீயமாத்ருகம்போலே சரதமென்கை.  (சார்ங்கம் உதைத்த சரமழைபோல்) இரை பெறாத பாம்பு போலே, முன்பு விஷயம் இல்லாமையாலே அடங்கியிருந்த ஶ்ரீ சார்ங்கம், சக்ரவர்த்தித் திருமகன் கடைக்கணித்தவாறே நூறாயிரம் ஶர வ்ருஷ்டியைத் தானே பண்ணிற்று.  “எய்வண்ண வெஞ்சிலையிறே” (திரு நெடு – 21)  உடையவன் அம்பு பெருக்கியிடுகை. (சார்ங்கமுதைத்த) அகம்படியர் கிளர்ந்தால் அரசனானாலும் அடங்கப்போகாதிறே; அதுபோலே பெருமாள் கடைக்கணித்தபின்பு பெருமாளாலும் விலக்கவொண்ணாதிருக்கை. “அவஷ்டப்ய மஹத்தநு:” என்னக்கடவதிறே.  (சரமழை) “ஶரவர்ஷம் வவர்ஷ ஹ”. என்கிறபடியே.  (வாழ உலகினில் பெய்திடாய்) த்ருஷ்டாந்தமான ஶரவர்ஷத்தில் ராக்ஷஸஜாதியடங்க முடிந்தது.  அங்ஙனொண்ணாது.  அநுகூலர் ப்ரதிகூலர் விபாகமின்றிக்கே  லோகமாக வாழவேணும். 

அழகிது! ஈஶ்வராஜ்ஞையாலே  நான் முன்பே அதிகரித்ததொரு கார்யமன்றோ, இங்குத்தைக்கு நான் கிஞ்சித்கரித்தவனாம்படி என்? என்ன, (நாங்களும் மார்கழி நீராட)  நாங்கள் காலத்திலே போய் மார்கழி நீராடக்கடவோம்.  அதுவும் ஊராய நிஶ்சயித்த தொன்றன்றோ, இப்போது வந்த தன்னேற்ற மென்னென்ன, (மகிழ்ந்து) நாங்களும் நோன்பு நோற்றோமாய், அந்த நோன்புக்குப் பலமான வர்ஷமுமுண்டாய்த்தாய், க்ருஷ்ணனோட்டை ஸம்ஶ்லேஷத்தாலே மகிழ்ந்து நீராடக்கடவோம்.  (மகிழ்ந்து) ஊரார்க்கு மார்கழி நீராடுகைக்கு மேலே ப்ரீதி பூர்வகமாகக் குளிக்கவேண்டுவதொரு நிர்ப்பந்த மில்லையே; உனக்கு  ப்ரியகரமான க்ருஷ்ணனும், நாங்களும் மகிழ்ந்து குளிக்கிறோம் என்கிறார்கள்.  (“ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித:“)

@@@@@

ஐந்தாம் பாட்டு

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்று மணி விளக்கைத்

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – அஞ்சாம் பாட்டு.  பெண்பிள்ளைகளிலே ஒருத்தி, நாம் இப்படியே கனக்கப் பாரித்துக்கொண்டு இழியா நின்றோம்; நமக்குத்தான் இது தலைக்கட்டுகைக்கு விஶ்வாஸமென்? அநாதிகால ஸஞ்சிதமான கர்மங்கள் இதுக்கு விரோதத்தைப் பண்ணாதோ? “ஶ்ரேயாம்ஸி பஹு விக்நாநி” அன்றோ? என்று ப்ரஶ்நம் பண்ண, அவர்களிலே வேதாந்த ஜ்ஞாநமுடையாளொருத்தி “நாம் நம்முடைய விரோதிகளைப் போக்கிக்கொண்டு வந்து இதிலே இழிகையென்று ஒரு பொருளில்லை.  நமக்கு அடைந்த பகவதநுபவத்தைப் பண்ணாநின்றால் சேர்பால் போகரூபமாகப்  பருகுமவனுக்குத் தன்னடையே பித்தம் போமாபோலே, இவை தன்னடையே விட்டு ஓடிப்போம்; ஆனபின்பு இனி அயோக்யதையைப் பார்த்து அகலவேண்டா” என்கிறாள். 

“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தில் தோன்றும் மணிவிளக்கைத் தாயைக் குடல் விளக்கஞ்செய்த தாமோதரனைச் செப்பு; போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” என்கிறாள். 

வ்யாக்யானம் – (மாயனை) பரமபதத்திலே அயர்வறுமமரர்களதிபதியாய்க் கொண்டு (திருவாய்மொழி – 1.1.1) தன் ஐஶ்வர்ய வ்யாவ்ருத்தி தோற்றவிருக்கும்  இருப்பை நினைத்து, அதுதான் வாசாமகோசரமாயிருக்கையாலே “மாயன்” என்கிறது.  க்ருஷ்ணாவதாரத்தில் நீர்மை தங்களுக்கு நிலமல்லாமையாலே பரமபதத்திலே அநுபவிக்கக்கோலி, அதுதானும் நிலமல்லாமையாலே “எத்திறம்” என்கிறார்கள்.  (மாயனை) ஓரூருக்குத் தன்னைக் கொடுத்துக்கொண்டிருக்கிற நீர்மை யாகையாலே ஏற்றமுண்டே அங்குத்தைக்கு.  அன்றிக்கே, “ஜாதோஸி தேவதேவேஶ ஶங்கசக்ரகதாதர” என்கிறபடியே நித்ய ஸூரிகளுக்கும் நேர் நின்று பார்க்கவொண்ணாத நிரங்குஶ ஐஶ்வர்யத்தை யுடையவன்  கிடீர் அவதரித்தான் என்று, அவதார ஸௌலப்யத்தை அநுஸந்தித்து அந்த ஆஶ்சர்யத்தைச் சொல்லுவதற்கு முன்பே ஆழங்காற்கட்டு “எத்திறம்”! என்கிறார்களாகவுமாம்.  (ஜாதோஸி) தேவகி வயிற்றில் பன்னிரெண்டு மாஸம் குடியிருந்துப் பிறந்த பிள்ளைத்தநத்தில் குறைவற பிறந்தவனுக்கும் இல்லைசெய்யவொண்ணாதபடி மூதலித்துக் கொடுக்க லாயிருக்கை.  (தேவதேவேஶ) இப்படியிருந்தவன் ஆரென்னில், ஒரு காலத்திலும் கர்மஸம்ஸ்பர்ஶ மில்லாத நித்ய சூரி பரிஷத் நிர்வாஹகனான அயர்வறும் அமரர்கள் அதிபதி என்கை.  அது அறியும்படி என்னென்னில் (ஶங்கசக்ரகதாதர:) “தமஸ: பரமோதாதா ஶங்கசக்ரகதாதர:” என்று பரமபதநிலயமுமாய்  ஸூரி நிர்வாஹகமுமான வஸ்துவுக்கு அஸாதாரண சிஹ்நமான ஆழ்வார்களோடே அவதரிக்கையாலே.

(மன்னு வட மதுரை) பகவத் ஸம்பந்தம் மாறாத தேஶம்.  முன்பு ஸித்தாஶ்ரமமாய் ஶ்ரீவாமநன் நெடுங்காலம் தபஸ் பண்ணி, ஶத்ருக்நாழ்வான் வன்னியமறுத்துப் படைவீடு செய்து ஸர்வேஶ்வரன் எப்போதும் இப்படி அவதரித்து போருவதொரு தேஶம்.  (வட மதுரை) “மதுரா நாம நகரீ புண்யா பாபஹரீ ஶுபா யஸ்யாம் ஜாதோ ஜகந்நாதோ ஸாக்ஷாத் விஷ்ணு: ஸநாதந:”  (மதுரா நாம) “நலமந்தமில்லதோர் நாடு” என்னுமாபோலே, பரமபதம்போலே போக்யதையால் ப்ரஸித்தமான ஊர்.  (நகரீ) பரமபதம் கலவிருக்கை என்னும்படி.  பிறந்து விரும்பின படைவீடு.  (புண்யா) அவனைத் தருகைக்கு உபாயமாகை (பாபஹரீ) விரோதி நிரஸனத்துக்கும் தானேயாகை.  (ஶுபா) ப்ராப்யமும் தானேயாகை.  (யஸ்யாம் ஜாத: ) இத்தலைக்கும் அடி திருவவதரித் தருளுகை.  (ஜகந்நாத:) தன் ப்ரஜைகள் பட்ட ஆபத்தை நீக்குகைக்கு அவர்களை இழக்கமாட்டாமல் பிறந்தபடி.  (ஸாக்ஷாத்) “அங்கு வைத்து இங்குப் பிறந்த” (திருவாய் – 3.5.5) என்னுமாபோலே அஜஹத்ஸ்வபாவனாய் கொண்டு    (விஷ்ணு: ) வ்யாபக வஸ்து வ்யாப்யைக தேஶத்திலே அந்தர்பவித்தபடி.  (ஸநாதந: ) நித்யநாநவன் ஆஶ்ரித ஸஜாதீயனாய்ப் பிறந்த மெய்ப்பாடு.  (மைந்தனை) மிடுக்கனை.  “தந்தை காலிற்பெருவிலங்கு தாளவிழ நல்லிருட்கண், வந்தவெந்தை” (பெரிய திருமொழி – 7.5.1) என்று மாதாபிதாக்கள் காலில் விலங்கு கழலவைத்துத் திருவவதரித்தபடி.  பிள்ளை என்றுமாம்.  திருவவ தரித்து எனக்கு உபகரித்தபின்பு இளகி பதித்தபடியாதல்;  ராஜாவென்றுமாம்.  தன்னழகைக் காட்டி இருந்ததே குடியாக    தன் வசமாக்கினபடி. 

(தூய பெருநீர் யமுனைத் துறைவனை) விரஜைபோலே, போந்தவிடத்துக்கு ஓராறு உண்டானபடி.  (தூய) “வசுதேவோ வஹன் க்ருஷ்ணம் ஜாநுமாத்ரோதகோ பபௌ” என்று ஶ்ரீ வஸுதேவர் எழுந்தருளுவித்துக் கொண்டு போகிறபோது பாங்காக வற்றிக் கொடுத்தபடி. க்ருஷ்ணனும் பெண்களும் மாறி மாறிக் கொப்பளிக்கையாலே வந்த தூய்மையாகவுமாம்.  “ப்ரஸாதம் நிம்நகாயாதா” என்று – நீரில் தெளிவைச் சொல்லிற்றாகவுமாம். (பெருநீர்) “யமுநாம் சாதி கம்பீராம் நாநாவர்த்த ஜஷாகுலாம்” என்று அத்யகாதமான  ஆறு பாங்காக வற்றிக் கொடுத்தது;  மநோஹரமாகையாலும் பாவநமாகையாலும் ஶ்லாக்யதையைச் சொல்லிற்றாகவுமாம்.

(யமுனை துறைவனை) திருக்குறவை ஸ்தாந மாகையாலே பெண்கள் படும் துறையை உடையவனை.

(ஆயர் குலத்தினில் தோன்றுமணிவிளக்கை) பரமபதத்திற்காட்டில்  குணங்கள் இடைச்சேரியிலே அத்யுஜ்ஜ்வலமானபடி; அந்தகாரத்தில் தீபம்போலே. (தோன்றும்) “அச்யுத பாநுநா தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம்” என்றுகொண்டு கர்ப்பத்தில் தொற்றில்லாமை.  கீழை திக்குக்கு ஆதித்யனோடு உள்ள ஸம்பந்தம் இவளோடு அவனுக்கு உள்ளது.  ஶ்ரீ மதுரையிலே அவதரித்திருக்கச் செய்தே திருவவதார ப்ரகாஶம்  திருவாய்ப்பாடியிலே சென்றது என்றுமாம்.  (ம(அ)ணிவிளக்கை) திருவாய்ப்பாடிக்கு மங்களதீப மென்றுமாம்.

(தாயை குடல் விளக்கம் செ\ய்த தாமோதரனை) வயிற்றில் தழும்பாலே யசோதைப் பிராட்டியை விளங்கப் பண்ணினவனை,  (தாயை குடல் விளக்கம் செய்த) “கௌஸல்யா ஸுஶுபே தேந புத்ரேண அமிததேஜஸா” என்றும், “என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப்பெற்ற வயிறுடையாள்” (பெரியாழ் திருமொழி – 2.2.6) என்றும் நாட்டார் புகழ்ச்சியாலே பெற்ற வயிற்றுக்குப் பட்டங்கட்டினவனை.  (தாமோதரனை) தன்னுடைய பவ்யதையாலும் அவளை நாட்டார் கொண்டாடும்படி பண்ணினவனை.  நம்முடைய பந்தம் நம்மாலறுக்கப்போகாதாப்போலே, அவனுடைய பந்தமும் அவனால் அறுக்க வொண்ணாதிறே. இந்த பந்தத்தை அநுஸந்தித்தால் ஆஶ்ரிதருடைய ஸம்ஸாரபந்தம் போமென்கை. 

(தூயோமாய் வந்து நாம்) அங்குத்தைக்கு நாம் யோக்யரோ அயோக்யரோ என்று பாராதே, இருந்தபடியே வந்து; இருந்தபடியே வருகைக்கு மேற்பட ஶுத்தி தேடவேண்டாவிறே.  “ஶுத்தம் வேத்தி விபீஷணம்” என்றிறே இருந்தபடியே வந்த விபீஷணாழ்வானை (வந்து நாம்) அவன் வர இருக்கக்கடவ  நாம் வந்து, “உபஸ்தேயைருபஸ்தித:” என்றும், “பத்ப்யாமபிகமாச்சைவ” என்றுமிறே அவன் வார்த்தை.  முறைகெட வருவானென்? என்னில், உபாயத்தில் துணிவு புறப்படவொட்டாதாபோலே உபேயத்தில் த்வரை முறை பார்த்திருக்கவொட்டாதிறே.

(தூமலர்) “மிக்கச்சீர் தொண்டரிட்ட பூந்துளவம்” (பெரிய திருமொழி – 11.1.9) என்றும் “சூட்டு நன் மாலைகள் தூயனவேந்தி” (திருவிருத்தம் – 21) என்றும் அநந்யப்ரயோஜனமான பூவிறே.  (மலர்) யோக்யமென்றும் அயோக்யமென்றும் பாராதே கண்ணுக்குத் தோற்றின மலரென்றுமாம்.  (தூவி) “யதாததாவாபி” என்னும் ந்யாயத்தாலே அடைவுகெட பரிமாறி.  ப்ரேமம் அடைவு பார்க்கவொட்டாதிறே.

(தொழுது) அவனுக்குப் பொறுக்கவொண்ணாதபடி அஞ்சலியைப்பண்ணி, “ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாந்நாபஸர்பதி” என்றிறே அவன் படி.  அவனைத் தொழுவித்துக்கொள்ளுமவர்களிறே தொழுகிறார்கள்.  பித்ராதிகளுக்கு அடைவு கேடென்று தோற்றாதபடி அஞ்சலி பண்ணுகிறார்கள் என்றுமாம். 

(வாயினால் பாடி) வாய் படைத்த லாபம் பெற்றோமென்று திருநாமத்தைச் சொல்லி மநஸ்ஸஹகாரமின்றிக்கேயென்றுமாம்.  “உவாச ச” என்னுமாபோலே.  வருகைக்கு மேலே சொல்லுவதும் செய்தோமென்றுமாம்.  (மனத்தினால் சிந்திக்க) மனஸ்ஸை படைத்த லாபம்  பெற்றோமென்று “யம் புருஷோ மநஸாதிகச்சதி  யத்தி மநஸா த்யாயதி தத்வாரா வததி தத் கர்மணா கரோதி” என்று மநஸ்ஸடியாக  வரக்கடவ உக்தியும் வ்ருத்தியும் தவிர்ந்து, “தொழுது” “வாயினால் பாடி” “மனத்தினால் சிந்திக்க” என்று தனித்தனியே கரணங்கள் மேல் விழுந்தபடி சொல்லுகிறது. 

(போய பிழையும் புகுதருவான் நின்றனவும்) உத்தர பூர்வாகங்கள் (தீயினில் தூசாகும்) நெருப்பிலிட்ட பஞ்சுபோலேயாம்.  தூசு – பஞ்சு; பாலும் கண்ட சர்க்கரையும் குடிக்கப் பித்தம் தன்னடையே போமாபோலே, பகவதநுபவம் பண்ண நெருப்பிலிட்ட பஞ்சுக்குவைபோலே உருமாய்ந்துபோம்.  “இஷீக தூல மக்நௌ ப்ரோதம் ப்ரதூயதே” என்றுமுண்டிறே

(செப்பு) சொல்ல அமையுமென்கை.  பூர்வாகமாவது – அநாதிகாலம் புத்தி பூர்வகமாகப் பண்ணிப் போந்தவை.  உத்தராகமாவது – பகவத்ஜ்ஞாநம் பிறந்தபின்பு ப்ரக்ருதி வாஸனையாலே ப்ரமாதிகமாகப் பிறந்தவை. 

@@@@@.

ஆறாம்பாட்டு

       புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்

        வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ

        பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

        கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

        வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை

        உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

        மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ  ரெம்பாவாய்.

அவதாரிகை – ஆறாம்பாட்டில் – முதல் பாட்டில் பகவத் ஸம்ஶ்லேஷமே ப்ராப்யம்;  அநந்ய ஸாத்யமான இதுக்கு ஸாதநமும் அவனே; அந்த ஸாதநத்திலே அந்வயிக்கைக்கு அதிகாரிகளும் அந்த ப்ராப்யத்தில் இச்சை உடையவர்களே! என்று ஸாத்ய ஸ்வரூபத்தையும் ஸாதந ஸ்வரூபத்தையும் அதிகாரி ஸ்வரூபத்தையும் ஸாதித்து;  இரண்டாம் பாட்டில் – ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் ஈஶ்வரனே என்றிருக்கும் இச்சாதிகாரிகளுக்கு ஸம்பாவிதமாய் குர்வத்ரூபமான கரணங்களுக்கு வகுத்த வ்யாபார விஷயங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டுகையாலும், காலக்ஷேபத்துக் காகவும் ராகப்ரேரிதமாக அநுஷ்டேயமான கர்த்தவ்யாம் ஶத்தைச் சொல்லுகிறது;  மூன்றாம் பாட்டில் – பகவதநுபவ ஸஹகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருத்யதிஶயத்தாலே  அவர்களுக்கு யாவை யாவை சில அபேக்ஷிதங்கள், அந்த ஸம்ருத்திகளடைய அபேக்ஷிக்கக்கடவதென்றது;   நான்காம் பாட்டில் – தேவதாந்தர ஸ்பர்ஶரஹிதராய் இப்படி அநந்ய ப்ரயோஜனராய், பகவதேக ப்ரவணராய், பகவதநுபவோ பகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யுமென்னுமிடம் சொல்லிற்று;  ஐந்தாம் பாட்டில் – இப்படியே பகவதநுபவத்திலிழிந்தவர்களுக்கு வரும் அநுபவ விரோதிகளை அவ்வநுபவந்தானே நிரோதிக்கு மென்னுமிடம் சொல்லிற்று.  ஆக, இப்படி கீழ் அஞ்சு பாட்டாலே ப்ரஸ்தாபமான க்ருஷ்ணாநுபவத்துக்கு ஏகாந்தமான உபகரணங்களைச் சொல்லி அநந்தரம் மேல் பத்து பாட்டாலே அந்த உபகரணங்களைக் கொண்டு அநுபவிக்குமவர்களை எழுப்புகிறது. 

தந்தாமுக்கே அவ்வநுபவத்துக்கு ப்ரதாநோபகரணமான ப்ரேமமும், கர்த்தவ்யதயா உக்தமான உபகரணங்களும், அநுபாவ்யனான க்ருஷ்ணனும், அதுக்கு ஏகாந்தமான காலமும், ஊரில் கோபவ்ருத்தருடைய இசைவும் உண்டானபின்பு தனித்தனியே அநுபவிக்க அமைந்திருக்க, ஒருவரையொருவர் எழுப்பவேண்டுகிறது என்? என்னில் – பெருங்காற்றிலிழிவார்க்குத் துணை தேட்டமாமாபோலே, “காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்” (பெரிய திருவந்தாதி – 34) என்றும், “உயிர்காத்தாட்செய்மின் (திருவாய் – 10.7.1) “ஆழியோடும் பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னாரென்ற றியேன்” (பெரிய திருமொழி – 10.10.9) என்றும் இழிந்தாரை குமிழிநீரூட்டக்கடவதான விஷயத்திலே இழிந்தவர்களாகையாலே, துணை தேட்டமாய் ஒருவரையொருவர் எழுப்புகிறார்கள்.  “அடியார்கள் குழாங்களை உடன்கூடுவது என்றுகொலோ” (திருவாய் – 2.3.10) என்று சொல்லுகிறபடியே பராவஸ்த்தையில் புருஷோத்தமனை அநுபவிக்கும்போதும், விஸ்ருங்கல ஜ்ஞாநபலங்களையுடையரான நித்யசூரிகளுக்கும் துணை தேட்டமாகாநிற்க, “இமையோர்தமக்கும் – செவ்வே நெஞ்சாலே நினைப்பரிதால் வெண்ணையூணென்னும் எனச்சொல்” என்று அந்த நித்யசூரிகளுக்கு அநுபவிக்கவொண்ணாதபடி நீர்மைக்கும் மேன்மைக்கும் அழகுக்கும் நிரவதிக ஸாகரமான க்ருஷ்ணனை அநுபவிக்குமிடத்தில் இடக்கையும் வலக்கையுமறியாத இடைச்சிகளுக்கு துணை தேட்டம் என்னுமிடம் சொல்லவேணுமோ? அதுக்கு மேலே, “ஏக: ஸ்வாது ந புஞ்சீத” என்று நிரதிஶய போக்யமான அவ்விஷயத்தைத் தனியநுபவிக்கமாட்டாத ப்ரக்ருதிகளாகையாலும் எழுப்புகிறார்கள்;  அதுக்கு மேலே, இவ்வஸ்துவை அநுபவிக்கைக்கு ருசியுள்ளவராயிருக்குமவர்கள், இழக்கவொண்ணாதென்னும் நினைவாலும் எழுப்பு கிறார்கள்;  அதுக்கு மேலே, பகவத் விஷயத்தை அநுபவிக்கும்போது ததீயரை முன்னிட்டல்லது அநுபவிக்கமாட்டாதவர்களாகையாலும் எழுப்புகிறார்கள். 

விஷயம் தனியநுபவிக்க அரிதாகையாலும், இவர்கள் தனியநுபவிக்கவல்ல ப்ரக்ருதிகளல்லாமையாலும், ருசியுடையாரிழக்கை நெடுந்தட்டு என்றிருக்கையாலும், ததீயரையொழிய  அநுபவிக்கமாட்டாமையாலும், முந்துற உணர்ந்தவர்கள் உறங்குகிறவர்களை எழுப்பத் தட்டில்லை. 

எல்லார்க்கும் ஒக்க க்௫ஷ்ணாநுபவத்தில் கௌதுகம் ௮விஷ்டமாயி௫க்குமாகில், எழுப்பச் சிலர் உறங்குகை கௌதுகதுக்கு குறையண்றோவென்னில்அநுபாவ்யமான க்௫ஷ்ணகுணங்கள் , நஞ்சூண்டாரைப் போலே சிலரை மயங்கபண்ணுகையாலும், சிலரை     இருந்தவிடத்தில் இருக்கவொட்டாதே துடிக்கபண்ணுகையாலும், ௮வர்கள் கௌதுகத்துக்குக் குறை இல்லாமையாலே, சிலரைச் சிலர் எழுப்பத் தட்டில்லை

இதில் இப்பாட்டுக்கு வாக்யார்த்தம் – பகவத் விஷயத்தில் புதியளாகையாலே இந்நோன்பின் சுவடறியாதாளொருத்தியை எழுப்புகிறார்கள்.

வ்யாக்யானம் – (புள்ளும் சிலம்பின காண்) இப்பெண்பிள்ளைகள் “போதோடே வாசலிலே சென்று உணர்த்தக்கடவதாக ஸங்கல்பித்துப் போது விடியச்செய்தே கிடந்து உறங்குவதே! என்று ஶிஷ்டகர்ஹை பண்ணியவாறே, “போது விடியவேண்டாவோ  எழுந்திருக்க?” என்ன, “உறங்கினார் உணரிலன்றோ விடிவுக்கு அடையாளமாவது; “உண்டோ கண்கள் துஞ்சுதல்” (திருவிருத்தம் – 97) என்கிறபடியே உங்களுக்கு உறக்கமுண்டோ?  உங்கள் உணர்த்தி விடிந்தமைக்கு அடையாளமன்று, வேறு அடையாளமுண்டோ?” என்ன, (புள்ளும் சிலம்பின காண்) “போது விடிந்(த)து; பக்ஷிகளகப்படக் கிளம்பி இரை தேடிப் போகாநின்றனகாண்” என்ன, “அது விடிந்தமைக்கு அடையாளமோ?” என்ன, “ஏன் அல்லவோ?” என்ன, “ஓம். அல்லவீ” என்ன, “ஆவதென்?” என்ன, “நீங்கள் அவற்றை உறங்கவொட்டாமல் கிளப்பினவாறே கிளம்பிற்றின வல்லது விடிந்தமைக்கு அடையாளமோ?” இவ்விடத்திலே பிள்ளை பிள்ளையாழ்வான் “பகவத் ஸமாஶ்ரயணத்துக்கு அநுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கிற பக்ஷிகளின் நாதமல்லது இவ்வாத்மாவுக்கு உத்தேஶ்யமில்லை என்று பணிக்கும்” என்று அருளிச்செய்வர். “நீங்கள் பிறந்தவூரில் பக்ஷிகளுக்கு உறக்கமுண்டோ?” “காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள் – மாலின் வரவு சொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ?”  (நாச்சி திரு – 9.8) என்றன்றோ இருப்பது; வேறு அடையாளமுண்டாகில் சொல்லுங்கோள்” என்று கிடந்தாள். 

(புள்ளரையன் இத்யாதி) அது கிடக்கிடாய்; இதுவும் உன் செவிப்பட்டதில்லையோ? புள்ளுக்கு நிர்வாஹகனான பெரிய திருவடி உண்டு, அவனுடைய கோவுண்டு ஸர்வேஶ்வரன்.  அவனுடைய இல் என்னுதல்; புள் என்று – பக்ஷியாய், அத்தாலே பெரிய திருவடியாய், அவனுக்கு நிர்வாஹகனானவனுடைய கோயில் என்னுதல்;  திருப்பள்ளியெழுச்சியில் ஶங்கத்வநி கேட்டிலையோ? க்ருஷ்ணன் திருவவதரித்துத் திருவாய்ப்பாடியிலே இருந்ததே குடியாக அவனழகிலே பத்தபாவராய்ச் செல்லுகிற காலத்திலே கொண்டாடுகைக்கு ஒரு திருமுற்றமுண்டோ? என்னில், சக்ரவர்த்தித் திருமகன் திருவவதாரம் பண்ணி இருந்ததே குடியாக அவனழகிலே ஈடுபட்டுச் செல்லாநிற்க, “ஸஹ பத்ந்யா விஶாலாக்ஷ்யா நாராயணமுபாகமத்” என்று அவர் நம் பெரிய பெருமாளை ஆஶ்ரயிக்குமாபோலே, க்ருஷ்ணனையும் கூப்பீடு கொள்கைக்கு ஒரு திருமுற்றமுண்டு.  (புள்ளரையன்) பெரிய திருவடியை நிரூபகமாகவுடையவன்; ஆஶ்ரிதர் தனக்கு நிரூபகமாம்படியிறே இவர்களுக்குக் கொடுத்த ஐஶ்வர்யம்.  “லக்ஷ்மணபூர்வஜம் ச” என்றிறே இருப்பது.  பகவத்விஷயத்தில் வழியே இழியுமவர்களாகையாலே பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்.  (வெள்ளை விளி சங்கு) சங்கு வெளுத்திருக்குமது விடிந்தமைக்கு அடையாளமோ? இது வ்யர்த்த விஶேஷணம்.  (விளிசங்கு) சாமங்கள் தோறும் முறையுடையாரை அழைக்கிறார்களாகில் போது விடியவேணுமோ? அங்ஙனல்ல.  (பேரரவம்) “விடிந்தமைக்கு அடையாளமன்றோ; பாஞ்சஜந்யத்வநியிலும் இது அதிகமாகவன்றோ த்வநிக்கிறது.  நீயும் உணருகைக்கு போரும் த்வநி”.  இவர்கள் சங்கின் வெளுப்புச் சொல்லுகையென்னென்னில், சங்க த்வநி வழியே ஊதும்போதை முகமுத்ரையும் சங்கின் வெளுப்பும் உத்தேஶ்யமாகையாலே.  (விளிசங்கு) விளிக்கை – அழைக்கை;  “கைவிளிக்கின்றதும் கண்டே நின்றேன்” (பெரியதிருமொழி – 6.5)  என்னக்கடவதிறே.  கையாலே அழைக்கை என்றபடி.  ஸத்வோத்தரமான காலத்திலே அடிமை செய்ய வாருங்கோளென்று அழைக்கிறபடி.  (கேட்டிலையோ) இது கேட்க பாக்யமின்றிக்கே யொழிவதே!

இவர்கள் இப்படிச்சொல்ல, பின்பும் திருத்தரையாய்க் கிடந்தாள்;  (பிள்ளாய் எழுந்திராய்) பகவத் விஷயத்தில் புதியையிறே; பாகவத ஸம்ஶ்லேஷத்தில் இனிமை அறியாயிறே; அநுபாவ்யங்களில் காஷ்டா பூமியான பாகவத ஸம்ஶ்லேஷம் பிறக்குமளவும் பகவத் விஷயத்திலே அவகாகிக்கப் பெற்றிலையே.  நாங்கள் உன்னைக்காண ஆசைப்பட்டவோபாதி நீயும் எங்களைக்காண ஆசைப்படவேண்டாவோ?

அறிந்திருக்கிற உங்களை எழுப்பினாராரென்ன, (பேய்முலை இத்யாதி) எங்களை எழுப்பினாரில்லை;  தந்தாம் காரியஞ்செய்வார் த்வநிகேட்டு எழுந்திருந்தோம் என்கிறார்கள்.  (பேய் முலை நஞ்சுண்டு) பெற்ற தாயும் உதவாத தனிமையிலே பாதிக்கவந்த பூதனையை முடித்து; இத்தலையை முடிக்க வந்தவள் தன்னோடே போம்படி பண்ணி. 

(கள்ளச்சகடம்) பேயாகில் ஆராய்ந்து கொள்ளலாம்.  தாயே ரக்ஷையாக வைத்த சகடம்.  அசுராவேஶத்தாலே பிறந்த அபாயமாகையாலே “கள்ளச் சகடம்” என்கிறது.  (கலக்கழிய காலோச்சி) சகடமானது கலக்கழியும்படி திருவடிகளை ஓச்சி, முலை வரவு தாழ்த்ததென்று மூரி நிமிர்ந்ந திருவடிகள் பட்டு முறிந்தது.  இப்பொழுது இவ்வபதாநங்கள் சொல்லுகிறது – பிறந்த அபாயங் களைக் கேட்டுத் துணுக்கென்று எழுந்திருக்கைக்காக.

(வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை) இவ்வபாய ப்ரசங்கமில்லாதவிடத்திலே, பரிவனான திருவநந்தாழ் வான்மேலே சாயப்பெற்றதே! என்று ஹ்ருஷ்டை களாகிறார்கள்.  (வெள்ளம்) ஸௌகுமார்யத்துக்குச் சேர குளிர்ச்சியுண்டானபடி.  (அரவில்) அந்நீர் உறுத்தா மைக்குப் படுத்தப் படுக்கை; மென்மை, குளிர்த்தி, நாற்றங்கள் ப்ரக்ருதியான திருவநந்தாழ்வான் மேலே.  இவன் மூச்சுப்பட்டு மதுகைடபர்கள் பொடிபட்டுப் போகையாலே, பயப்படவும் வேண்டாவென்கை.  (துயில்) ஜகத்ரக்ஷணசிந்தை.  “பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டோடி வந்தென் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பி” (பெரியாழ்வார் திரு – (5.4.9) என்று ஓராஶ்ரிதருடைய ஹ்ருதயத்தைக் கணிசித்துக் கிடக்குமென்னவுமாம்..  (அமர்ந்த) பிராட்டிமார் திருமுலைத் தடத்தாலே நெருக்கினாலு முணராமை.  (வித்தினை) திருவவதாரத்துக்கு  நாற்றங்கால்.  பிறந்த பிறவிகள் போராமே திரியப் பிறக்கைக்கு அடியிட்டபடி. 

(உள்ளத்துக்கொண்டு) “அரவத்தமளியினோடுமழகிய பாற்கடலோடும் அரவிந்த பாவையுந்தானும் அகம்படி வந்து புகுந்து” (பெரியாழ்வார் திரு – 5.2.10) என்கிறபடியே திருப்பாற்கடலோடும் திருவநந்தாழ்வானோடும் நாய்ச்சியாரோடுங்கூடத் தங்கள் நெஞ்சிலே கொண்டு (முனிவர்களும் யோகிகளும்) யோகாப்யாஸம் பண்ணுகிறவர்களும் மநநஶீலரும்; அவர்களாகிறார் வ்ருத்தி நிஷ்டரும் குணநிஷ்டரும்;  இங்கு உறங்குகிறவர்களையும் எழுப்புகிறவர்களையும் போலே இருக்கிறார்கள்.  (மெள்ள எழுந்து) கர்ப்பிணிகள் ப்ரஜைகளுக்கு நோவு வாராதே எழுந்திருக்குமாபோலே;  “ஹ்ருதயேநோத்வஹன் ஹரிம்” என்று வளையம் அலையாமே என்றிறே எழுந்திருப்பது. திருவாய்ப் பாடியிலே முனிவர்களும் யோகிகளு முண்டோவென்னில்,  க்ருஷ்ணன் வந்து அவதரித்த பின்பு இடையருடைய பசுநிரைக் கொட்டில்களிலே வந்து அவர்கள் எல்லோரும் படுகாடு கிடப்பர்கள்.  (அரி என்ற) அரி என்கையாவது “ஹரிர் ஹரதி பாபாநி” என்கிறபடியே பகவதநுபவ விரோதிகளைப் போக்கியருளவேணுமென்கை.  பின்னை இவர்களுக்கு பாபமாவது – க்ருஷ்ணனுக்கு அசுரர்களாலே வரும் தீங்கு; அத்தை அவன்தானே போக்கித் தந்தருளவேணுமென்று மங்களாஶாஸனம் பண்ணுகை என்றுமாம்.  “அத ஸோ அபயங்கதோ பவதி” என்று அவனாலே பயங்கெட்டார் பின்பு அத்தலைக்கு பயப்பட்டுத் திருப்பல்லாண்டு பாடுமித்தனையிறே.  பகவத் ஸம்பந்த ஜ்ஞாநம் பிறப்பதற்கு முன்பு இழவு பேறுகள் தன்னளவிலேயாயிருக்கும்;  ஸம்பந்த ஜ்ஞாநம் பிறந்தபின்பு இழவு பேறுகள் அவனளவிலே யாயிருக்கக்கடவதிறே.  (பேரரவம்)  பஞ்சலக்ஷங் குடியிலும் இந்த த்வநியாயேயிருக்கை.  எல்லாரும் ப்ரபுத்தரான காலமாகையாலே ஒருவர் சொல்லுமளவன்றிக்கே எல்லோரும் சொல்லுகை. 

(உள்ளம் புகுந்து குளிர்ந்து) படுக்கைக்கீழே வெள்ளங்கோத்தாற்போலே, திருநாமம் செவிவழியே புகுந்து வவ்வலிட்டது;  அவன் அவர்கள் நெஞ்சிலே புகுந்து ஆநந்திப்பித்தாற்போலே க்ருஷ்ணன் விரஹத்தாலே கமர் பிளந்து கிடக்கிற நெஞ்சு பதஞ்செய்யும்படி இவர்களுடைய த்வநியும் எங்கள் நெஞ்சிலே புகுந்து எங்களை ஆநந்திப்பித்தது;  ஆகையாலே எழுந்திராய் என்கிறார்கள். 

@@@@@

ஏழாம்பாட்டு

                கீசு கீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

        பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!

        காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

        வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

        ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ

        நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

        கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

        தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – ஏழாம்பாட்டு.  பகவத்விஷயத்தில் சுவடறிந்தே மறந்து கிடக்கிறாளொருத்தியை எழுப்புகிறார்கள். 

வ்யாக்யானம் – “போது விடிந்தது. எழுந்திராய்” என்ன, “விடிந்தமைக்கு அடையாளம் என்?” என்ன, “ஆனைச்சாத்தன் கீசு கீசு என்னாநின்றது”.  கீசு – அநக்ஷரமாயிருக்கை.  “ஓரானைச்சாத்தன் பேசுங் காட்டில், போது விடிந்ததாக வேணுமோ?” என்ன, “எங்கும் பேசாநின்றது” என்ன, “அவற்றைக் கலக்குகைக்கு நீங்களுண்டே” என்ன, “எங்களாலன்று, தாமே உணர்ந்தன” என்ன, “அதுக்கு அடையாளம் என்?” என்ன, (கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ) “கலந்து பேசினபடி அறிந்தபடி என்?” என்ன, “பிரிந்து போனால் பகலெல்லாம் தரிக்கும்படி கலந்து, பிரியப் புகா நின்றோம் என்னும் தளர்த்தி தோற்றப் பேசுகிற மிடற்றோசை கேட்டிலையோ?” “கேளாமைக்கு அங்கே ஆரவாரம் உண்டாகாதே செல்லுகிறது என்று மர்மம் சொல்லுகிறார்கள் “கேட்டிலையோ” என்று.  (பேய் பெண்ணே) “இவர்களாகில் இப்படி சொல்லுகையே பணி” என்று பேசாதே கிடக்க, “அறிந்து வைத்துக் காற்கடைக் கொள்வாயே! மதிகேடீ!” என்கிறார்கள்.  இவர்களுக்கு அறிவாகிறது – பகவத் விஷயத்திலும் ததீய விஷயம் நன்றென்று அறிகை.  அத்தை அறிந்துவைத்துப் பேசாதே கிடக்கையாலே சொல்லுகிறார்கள்.  

என்னறியாமையைச் சொல்லாதே விடிந்தமைக்கு அடையாளம் சொல்லுங்கோளென்ன, தயிர் கடைகிற ஓசை கேட்டிலையோ? (காசும் பிறப்பும்) அச்சுத்தாலியும் முளைத்தாலியும்.  (கலகலப்ப) கடைகிறபோதை வ்யாபாரத்தாலே “அரவூறு சுலாய் மலைத் தேய்க்குமொலி” (திருவாய் – 7.4.2)  என்னுமா போலே த்வநிக்கை.  (கை பேர்த்து) தயிரின் பெருமையாலும், இவர்கள் ஸௌகுமார்யத்தாலும் மலைபேர்த்தாற்போலே கைபேர்க்கப் போகாதபடி.  க்ருஷ்ணன் ஸந்நிதி யில்லாமையாலே கை சோர்ந்தது என்னவுமாம்;  அன்றியே, அவன்தானே ஸந்நிஹிதனாய் நின்று  “தயிரை மோராக்கவொட்டேன்”  என்று கையைப்பற்றி   நாலுகையாலே என்றுமாம்.  “மோரார் குடமுருட்டி”  (சிறிய திருமடல் – 33) என்னக்கடவதிறே.  (வாஸம் இத்யாதி) ஆயாஸத்தாலே மயிர்முடி நெகிழ்ந்து பரிமளந்தானே புறப்பட்டு ப்ரவஹிக்கிறபடி.  (மத்தினால் ஓசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ) மந்தரத்தாலே கடலைக் கலக்கினாற்போலே இந்த கோஷமும் செவியிற்பட்ட தில்லையோ?  “உத்காயந்தீனாமரவிந்த லோசநம் வ்ரஜாங்கநாநாம் திவமஸ்ப்ருஶத் த்வநி:” “தத்நஶ்ச நிர்மந்தந ஶப்த: மிஶ்ரிதோ நிரஸ்யதே யேந திஶாமமங்களம்” என்று அவன் கண்ணழகிலே தோற்றுப் பாடுகிற த்வநியும், கடைகிற தயிரோசையும், ஆபரணவோசையும் கிளர்ந்து ஊர்த்வ லோகங்களிலே சென்று கிட்டுவதான ஓசை உன் செவியிற்படாதொழிவதே!

இவ்வூரில் “முப்போதும் கடைந்தீண்டிய வெண்ணெய்” (பெரியாழ்வார் திரு – 3.1.5) என்று இரவும் பகலும் இடைவிடாதே தயிர் கடைகை ஸ்வபாவமன்றோ?  என்று பேசாதே கிடக்க – (நாயக பெண்பிள்ளாய்) “இப்பெண்களுக்கெல்லாம் நிர்வாஹகையானபடி இதுவோ?” என்கிறார்கள்.  சொல்லிற்றுக்கெல்லாம் மறுமாற்றம் சொல்லிக்கிடக்கிறது  – உன்னுடைய ஐஶ்வர்ய செருக்காலே என்னவுமாம்.  “பேய் பெண்ணே” என்றதோடு “நாயக பெண்பிள்ளாய்” என்றதோடு வாசியில்லையிறே.  அகவாயில் பாவ (பந்தம்) ஒன்றாகையாலே, எந்தவிடத்திலும் வாய் திறவாமையாலே (நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ) நீ எழுந்திருப்புதி என்று நாங்கள் பாட, அதுவே குறங்கு குத்தக்கிடந்து உறங்குகிறாயோ? (நாராயணன்) முகம் தோற்றாமே நின்று வாத்ஸல்யத்தாலே ரக்ஷிக்கக்கடவ ஸர்வேஶ்வரன். (மூர்த்தி) தன்னுடைய ஸௌஶீல்யத்தாலே பிறந்தது.  (கேசவனை) கண்ணுக்குத் தோற்ற நின்று தம் விரோதிகளைப் போக்குமவனை.  (பாடவும்) இப்படி வாத்ஸல் யத்தையும், ஸௌஶீல்யத்தையும், ஆஶ்ரித விரோதிநிரஸநத்தையும் பேசின விடத்திலும், பின்னையும் இவர்கள் பேச்சே தனக்கு தாரகமாகக் கிடக்கையாலே “கேட்டே கிடத்தியோ”? என்கிறார்கள் இவள் துணுக்கென எழுந்திருக்கைக்காக.  “நிருபாதிக ஸ்வாமியான   ஸர்வேஶ்வரன் ஆஶ்ரித வாத்ஸல்   யனாய் க்ருஷ்ணனாய் வந்து அவதரித்தவிடத்திலே கேஶி வந்து நலியப்புக, அவனை க்ருஷ்ணன் கொன்றான்காண்” என்ன, அதுக்கும் பேசாதே கிடந்தாள்.  (பாடவும் நீ கேட்டே கிடத்தியோ) அவனுடைய விஜயத்தைக் கேட்டு, கேசி வந்து நலியப் புக்கான் என்கிற துணுக்கும் கேட்டு, கரவதாநந்தரம்  “பர்த்தாரம் பரிஷஸ்வஜே” என்று சக்ரவர்த்தித் திருமகனை ஶ்ரீ ஜநகராஜன் திருமகள் அணைத்தாற்போலே, நீயும் க்ருஷ்ணனை அணைக்கப் புறப்படுவாயோ? என்று சொன்னோம்; அதுவும் உனக்கு க்ருஷ்ணவிரோதி பயம் தீர்ந்து மார்பிலே கை வைத்து உறங்கலாம்படியாய்விடுவதே! என்றுமாம். 

(தேசமுடையாய் திற) உன்னைக் காணப்பெறாதே அந்தகாரமாய் கிடக்கிற எங்களுக்கு கதவைத்  திறந்து புறப்பட்டு, உன்னுடைய நிரவதிக தேஜஸ்ஸாலே வெளிச்செறிப்பிக்கைக்காகவும் உன்னுடைய அழகு காண்கைக்காகவும் நீயே வந்து திற.  (தேசமுடையாய் திற) இவள் பின்னையும் பேசாதே கிடக்கையாலே, இவளுக்கு க்ருஷ்ண விஷயஸந்தான ப்ரீதியாலே  வடிவிற் பிறந்த புகரைக்கண்டு “கிண்ணகத்தை அணை செய்யாதே வெட்டிவிடாய்” என்கிறார்களாகவுமாம். 

@@@@@

எட்டாம்பாட்டு

        கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

        மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

        போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை

        கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய

        பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

        மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

        தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

        ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்.

 அவதாரிகை – எட்டாம் பாட்டு.  எல்லாரும் வந்து அழைக்கும்படி க்ருஷ்ணனாலே வேண்டற்பாடுடை யாளொருத்தியை எழுப்புகிறார்கள். 

வ்யாக்யானம் – (கீழ்வானம் வெள்ளென்று) “கிழக்கு வெளுத்தாலும் கிடந்து உறங்குமித்தனையோ?  எழுந்திராய்” என்கிறார்கள்.  “கிழக்கு வெளுத்ததன்று.  உங்களிலே யாரேனும் அத்திக்கைப் பார்க்கையாலே உங்கள் முகத்திலொளி ப்ரதிபலிக்கையாலே கிழக்கு வெளுத்ததாயிருக்கிறது; இவர்கள் தாங்கள் “திங்கள் திருமுகத்துச் சேயிழையார்” (திருப்பாவை – 30) இறே.  “அது அந்யதா ஜ்ஞாநம்; மற்று அடையாளமுண்டோ?” என்ன, (எருமை சிறு வீடு மேய்வான் பரந்தனகாண்)  பனிப்புல் மேய காலத்திலே விட்டு வயல்களெங்கும் பரந்தன காண்; ஶ்ரீ நந்தகோபர்க்கு முத்திறமும் உண்டே; அவற்றின் பின்னே க்ருஷ்ணன் போம்.  பின்னே யாரைக் காண்பது?  எழுந்திராயென்ன.

உங்கள் முகத்திலொளியைக்கண்டு இருள் திரைந்து போகிறதித்தனை.  அது உங்களுடைய விபரீத ஜ்ஞாநமிருக்கிறபடி.  ஸத்வ நிஷ்டர் ஸந்நிதியில் அந்தகாரம் நில்லாதிறே.  பெரியாழ்வார் பெண்பிள்ளை அக்நிஹோத்ராநுஷ்டானம் அறிகையொழிய, சிறுவீடு வாசியறியும்படியான மெய்ப்பாடு.  அருணோதயத்துக்கு அஞ்சி இருள் சிதறிப்போகிறது என்னவுமாம்;  “மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்” என்று இவள் தகப்பனார் எம்பெருமானை எழுப்பினார்; இவள் இவர்களை எழுப்புகிறாள்.  “நாங்கள் ப்ரமித்தோமாயிடுக; நீ விடிந்ததில்லை என்று அறிந்தபடி எங்ஙனே?” என்ன, “பஞ்சலக்ஷம் குடியில் பெண்களில் உங்களையொழிய அல்லாதார் உணராமையாலே” என்ன, (மிக்குள்ள பிள்ளைகளும்) உன்னையொழிந்தாரெல்லாரும் ஆற்றாமையாலே போனார்கள்.  நீயே எழுப்பக் கிடந்தாய்.  (போவான் போகின்றாரை) அர்ச்சிராதிகதி, அக்ரூரயாநம், திருவேங்கட யாத்ரைபோலே போகையே ப்ரயோஜனமாகப் போகாநின்றார்கள்; “நான் இனி எங்கே போக அவர்கள் போனார்களாகில்?” என்ன, (போகாமல் காத்து) “செய்யாதனச் செய்யோம்” (2) என்று அடியில் தம்முடைய வ்யவஸ்த்தையை உணர்த்தி, நீ வந்ததில்லை என்று அவர்கள் போகாதபடி தடுத்து (உன்னை கூவுவான்) உன் வாசலிலே வந்து எழுப்பினோம் என்னும் தரம் பெறுகைக்கு,  (வந்து) “உத்தரம் தீரமாஸாத்ய” என்னுமாபோலே (நின்றோம்) “கஸ்த எவ வ்யதிஷ்டத” என்று நிலை பெற்று நின்றோம். 

“எல்லார்க்கும் க்ருஷ்ணனோட்டை ஸம்பந்தம் ஒத்திருக்க, நீங்கள் என் பக்கல் ஸாபேக்ஷராய் வந்தோமென்று சொல்லக்கடவிகளோ?” என்ன, (கோதுகலமுடைய பாவாய்) உன்னை முன்னிட்டுக் கொண்டு செல்ல, க்ருஷ்ண விஷயீகாரம் உண்டென்னும்படி அவனாலே கொண்டாடப் படுமவளிறே.  பத்நீத்வம்  அவிஶிஷ்டமானாலும் வல்லபை நீயன்றோ?  நாங்கள் அவனுக்கு நல்லோம்; நீ அவனோட்டை ஸம்பந்தத்தாலே எங்களுக்கு நல்லையாயிருப்புதி.  ஆகையாலே, அவனிலும் ததீயரை உகக்குமென்னும் வேண்டற்பாடுடையை நீயன்றோ?  (பாவாய்) “நாரீணாமுத்தமாவதூ” என்கிறபடியே நிருபாதிக ஸ்த்ரீத்வமுடையளாய், பாரதந்த்ர்ய பராகாஷ்டையுடையவளன்றோ என்கை.  (எழுந்திராய்) இப்போது எழுந்திராயாகில் அவையெல்லாம் அஸத்ஸமமாய்கிடாய்.  “பெண்ணின் வருத்தமறியாதவனை” (நாச்சி திரு – 13.1) போலன்றிக்கே அறியக்கடவ நீ கிடக்கக்கடவையோ?  (எழுந்திராய்) எழுந்திருக்கும்போதை பரிஸ்பந்தம் காண்கைக்காக; நாங்கள் உணர்த்த நீ உணர்ந்தாயாகிற ஏற்றத்தை எங்களுக்குத் தாராய். 

எழுந்திருந்து செய்வது என்னென்ன – (பாடிப் பறைகொண்டு) இதுக்கு முன்பு நாம் பெற்ற  ஐஶ்வர்யம் போலேயோ இப்போது நாம் பெறப் புகுகிற ஐஶ்வர்யம்? முன்பு “க்ருஷ்ணன் கிடாய், பெண்கள் கிடாய்”  என்கிற நாட்டாற்குத் தெரியாதபடி நெஞ்சாலே க்ருஷ்ணனை அநுபவித்து, அவ்வநுபவஜநித ப்ரீதியானது புறம்பொசியாதபடி அடக்கிப் போந்தோம்; இப்போது நாட்டார் தாங்களே அநுமதி பண்ணுகையாலே வாய்க்கால் வெட்டி நெஞ்சிலே கங்கும் கரையும் அறப்பெருகுகிற க்ருஷ்ண குணாநுபவம் ப்ரீதிக்குப் போக்கு அணை வெட்டிவிட்டு க்ருஷ்ண குணங்களை நாம் வாயார நினைத்தபடிப் பாடக்கடவோம்.  பறை கொள்ளுகையாவது – நாட்டார்க்கு நோன்பு; தங்களுக்கு சேவிக்கையே பலம். 

பாடுவது எத்தையென்ன – (மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய) க்ருஷ்ணனுடைய வீர சரிதங்களைப்  பாடி, (மாவாய் பிளந்தானை) நமக்காகக் கேசியைப் பிளந்து, நம்மையும் தன்னையும் உண்டாக்கித் தந்தவனை தன்னை நாம் கிட்டி அநுபவிக்கைக்கு ஈடாக, இடையில் வன்னியம் அறுத்த ஆண்பிள்ளையைப் பாடக்கடவோம்.  (மல்லரை மாட்டிய) “ஶக்ய: பஶ்யத:” என்கிறபடியே அவ்வூரில் பெண்களுக்கு உதவினபடி; அது தங்களுக்கு உதவிற்றென்று இருக்கிறபடி.  (தேவாதி தேவனை) “ஜாதோஸி தேவதேவேஶ” என்றும், “ஸோஹம் தே தேவதேவேஶ” என்றும் சொல்லுகிறபடியே அயர்வறும் அமரர்கள் அதிபதியாயிருக்கிறவனை, “நகரஸ்த்ரீ கலாலாபா மதுஶ்ரோத்ரேண யாஸ்யதி.  மதுராம் ப்ராப்ய கோவிந்த: கதம் கோகுலமேஷ்யதி” என்கிறபடியே பெரிய மேன்மையுடையவனாயிருக்கிறவன் ஶ்ரீமதுரையிலே போய் குவலயாபீட சாணூர முஷ்டிகரை  அழியச் செய்து படைவீட்டிற் பெண்பிள்ளைகளோட்டை பழக்கத்தாலே பெரிய விதக்தநானவன் இடக்கையும் வலக்கையும் அறியாத நம் பக்கலிலே வரக்கூடுமோ? என்ன, (சென்று) குறைக்கொள்ளியான நம் ஶரீரத்தை அவன் கண்டு புண்படும்படி அவனிருந்தவிடத்தே செல்லக்கடவோம்.  அவன் வேண்டற்பாட்டிலே இருக்கிலோவென்னில் – (சென்று) அவன் வர ப்ராப்தமாயிருக்க நாம் சென்று “உபஸ்தேருபஸ்தித:” என்றும், “பத்ப்யாமபிகமாச்சைவ” என்றும் இவர்கள் சொல்லுகை அத்தலைக்கு மிகுதியாயிறே இருப்பது.  (நாம் சேவித்தால்) அத்தலை இத்தலையானால்.

(ஆவாவென்று ஆராய்ந்து அருள்) “நம்மாலே பேறு என்று நாம் வர பார்த்திருக்குமவர்கள் நாம் இருந்தவிடத்தே வந்தது இவர்கள் செல்லாமையிறே” என்று இரங்கி நமக்கும் உகந்தருளும்காண். ப்ரணயித்வம் போனாலும் ஆர்த்த ரக்ஷணம் தவிருமோ?  “ஆந்ருஶம்ஸ்யம் பரோ தர்ம:” என்று சொல்லிவைத்து, அநுஷ்டியாதொழியுமோ? ஆனபின்பு, அவனருளுக்கு ஹேதுபூதையான நீ எழுந்திராய்.

“ஆவாவென்று ஆராய்ந்தருள்; கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய்” என்று அந்வயம். 

@@@@@

 ஒன்பதாம் பாட்டு

        தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்

        தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்

        மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்

        மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்

        ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?

        ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

        மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

        நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – ஒன்பதாம் பாட்டு.  “க்ருஷ்ணன் வந்தபோது வருகிறான்” என்று தான் போகையை அநாதரித்துக் கிடக்கிறாளொருத்தியை எழுப்புகிறார்கள்.  அதாவது – ஸ்வரூபத்தை உணர்ந்து வந்து அநுபவிக்கையும் அவன் கார்யமிறே.  “தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்” என்று இருப்பாளொருத்தி என்கை.

வ்யாக்யானம் – (தூமணி மாடத்து) “துவளில் மாமணி மாடம்” (திருவாய்மொழி – 6.5.1) என்று குற்றம் எடுத்துக் கழிக்கவேண்டாத தன்மையையுடைய மணியாலே செய்த மாடம்.  ஸம்ஸார கந்தமுண்டாய்க் கழிந்த முக்தர்க்கும், அஸ்ப்ருஷ்டஸம்ஸாரகந்தரான நித்யர்க்கும் உண்டான வாசி போந்திருக்கை.  (சுற்றும் விளக்கு எரிய) மாணிக்கத்தினொளியாலே பகல்விளக்குப் பட்டிருக்கச் செய்தே மங்களார்த்தமாக விளக்கு எரிகிறது.    (சுற்றும் விளக்கு எரிய) க்ருஷ்ணன் வந்தால் தன் கையை பிடித்து உலாவுமிடமடையப் படுக்கையும் விளக்குமாக்கி வைத்தபடி.  புறம்பு நிற்கிறவர்களுக்கு உள்ளே விளக்கெரிந்தது தெரிகிறபடி எங்ஙனே?  என்னில், மாணிக்கக்குப்பிபோலே, புறம்பே நிற்க உள்ளுள்ள தெல்லாம் தோற்றாநிற்கும்.

(தூபம் கமழ) புகைகாணாவொண்ணாதே பரிமளம் வெள்ளமிட சீருற்றவகிர்புகைஇத்யாதியிற் சொல்லுகிறபடியே எங்களுக்கு ௮ஸஹ்யமான பிரிமளம் உனக்கு   ஸஹ்யமானபடி எங்ஙனே என்கை. துயிலணை மேல் கண் வளரும் க்௫ஷ்ண விரஹத்தையும் ஆற்றவற்றான படுக்கையிலே உறங்குகிற எங்களுக்கு மென்மலர்ப்பள்ளி     வெம்பள்ளியாயிருக்க, உனக்கு படுக்கை பொருந்தி கண்ணுறங்குவதே!

(மாமான்மகளே) ஸ்வாமிநியாயும் தோழியாயும் ௮நுபவித்ததொழிய ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலும் ஆண்டாள் ௮நுபவிக்கிறாள். “மாமான்மகளேஎன்று இட்டீடுகொள்ளுகைக்கு விடவொண்ணாத உறவு சொல்லுகிறாள்; திருவாய்பாடியிலே ஒரு ப்ராக்ருத ஸம்பந்தம் தனக்கு உஜ்ஜீவநமென்றிருக்கிறாள். பகவத்ஸம்பந்திகளுக்கு எல்லாம்   ௮டிகழஞ்சு பெற்றிருக்கிறபடி. (மணிக்கதவம் தாள் திறவாய்) நீங்களே திறந்துகொண்டு புகுருங்கோள் என்ன; மாணிக்கங்களின் ஒளியாலே தான் தெரிகிறதில்லை, நீயே திறவாய்யென்கிறார்கள்.

“அவர்கள் அழையா நிற்க  நீ பேசாதே கிடக்கிறதென்?” என்று தாயார் கேட்க, புறம்பு நிற்கிறவர்கள் அது கேட்டவாறே “மாமீர்! அவளை எழுப்பீரோ” என்கிறார்கள்.  (மாமீர்) அவளுடைய திருத்தாயார் என்று அவ்வுறவாலே சொல்லுகிறார்கள்.  பின்னையும் உணரக்காணாமையாலே சிவிட்கென்று “உன் மகள்தான் ஊமையோ?” என்கிறார்கள்.  வ்யவஹாரயோக்யையன்றோ என்கிறார்கள்.  (அன்றிச் செவிடோ) ஊமைக்கும் கேட்டுவந்து திறக்கலாமே.  அதுக்குமேலே, “செவியில் துளையில்லையோ? எங்கள் வார்த்தை கேளாதபடி அந்யபரையோ? (அநந்தலோ) நெடும்போது க்ருஷ்ணாநுபவம் பண்ணி படுக்கையில் சாய்ந்தது இப்போதோ?  (ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ)  “ஏமம்” என்று – காவல்.  எழுந்திராமைக்கும் காவலிட்டாருண்டோ? நெடும்போது உறங்கும்படி மந்திரவாதம் பண்ணினாருண்டோ? “மையலேற்றி மயக்க உன் முகம் மாயமந்திரந்தாங்கொலோ”  (நாச்சி – 2.4) என்று அம்மான்பொடி தூவினாருண்டோ? என்கை.

“அவளுணரும்படி திருநாமங்களைச் சொல்லுங்கோள்” என்று திருத்தாயார் சொல்ல, “நாங்கள் சொன்ன திருநாமங்கள் அனேகமன்றோ” என்கிறார்கள்.  “அவைதான் எவை” என்னச் சொல்லுகிறார்கள்.  (மாமாயன்) ஆஶ்சர்ய குண சேஷ்டிதங்களால் அபலைகளான பெண்களை எழுதிக்கொண்டவன்  (மாதவன்) அதுக்கடியான ஶ்ரீய:பதி;  அந்த ஸௌலப்யத்துக்கு குருகுலவாஸம் பண்ணினவிடம்.  (வைகுந்தன்) ஶ்ரீய:பதித்வத்தாலே வந்த மேன்மைக்குத் தகுதியான தேசவிஶேஷத்தை உடையவன்.  அப்பெரிய மேன்மையுடைய ஶ்ரீய:பதியானவன்கிடீர் பெண்களுக்கு எளியனானான் என்கை. 

மேன்மைக்கு அடியான திருநாமங்களும், நீர்மைக்கு அடியான திருநாமங்களுமாக, இரண்டுக்கும் நிதானமான ஶ்ரீய:பதித்வத்துக்கு வாசகமான திருநாமங்களுமாக ஒரு ஶ்ரீ ஸஹஸ்ரநாமத்துக்குப் போரும் திருநாமங்கள் சொல்லிற்றென்கிறார்கள். 

நாமம் பலவும் நவின்று – மாமீர் அவளை எழுப்பீரோ – என்று அன்வயமாகவுமாம். 

@@@@@

பத்தாம் பாட்டு

      நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

        மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

        நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்

        போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்

        கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்

        தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ

        ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே

        தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – பத்தாம் பாட்டு.  பெண்களெல்லாரும் “க்ருஷ்ணன்” என்றால் படும் பாட்டை அவன்தான் பட்டு “தண்ணீர்” “தண்ணீர்” என்னும்படி வீறுடையாளொ ருத்தியை எழுப்புகிறார்கள்.  “ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வான்” என்னாதே, “ஏஷ ஹ்யேவாநந்தயாதி” என்றிருப்பாளொருத்தி என்னவுமாம்.  க்ருஷ்ணன் அசல் திருமாளிகையாய் நடுவீடசலாகையாலே ஒரு போகியாயநுபவிக்கிறாள் என்றுமாம். 

வ்யாக்யானம் – (நோற்று சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்) வைகினபின்பும் எழுந்திராமையாலே “அம்மே! அழகிதாக நோற்று ஸுகம் பெறக்கோலினாய்!” என்று ஸ்தோபிக்கிறார்களென்றுமாம்.  நோற்க வேண்டாதபடி நோன்பின் பலம் கைபுகுந்தவளிறே இவள் என்றுமாம்.  (நோற்று) ஸித்த ஸாதனையாகையாலே உபாயாம்ஶத்தில் நிர்ப்பரையா யிருந்தாள்.  அவனுடைய ரக்ஷகத்வத்தை உணர்ந்ததால் தனக்கு யத்நம் பண்ண ப்ராப்தியில்லை.  தன் ஶேஷத்வத்தை உணர்ந்தாலும் ப்ராப்தியில்லையிறே.  “விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்வதோ யே தேஷாம் ராஜந் ஸர்வ யஜ்ஞா ஸமாப்தா” என்றிறே இருப்பது.  எழுப்புகிறவர்களுக்கும் இதுவன்றோ ஸ்வரூபமென்னில், ஸித்தோபாய நிஷ்டர்க்கு விளம்பஹேதுவில்லாமையாலே ப்ராப்யத்தில் த்வரை யாலே பதருகிறார்கள்.  ஸித்தோபாய நிஷ்டர்க்கும் கர்ம ஜ்ஞாந பக்திகளுண்டு; இவர்களுடைய க்ரியாகலாபம் கைங்கர்யத்திலே அந்விதமாயிருக்கும்.  ஜ்ஞாநம் ஸ்வரூபத்திலே அந்விதம்; பக்தி ப்ராப்ய ருசியிலே அந்விதம்.  (சுவர்க்கம் புகுகின்ற) ஸுகத்தை இடைவிடாதே அநுபவிக்கிற.  இவர்களுக்கு க்ருஷ்ணாநுபவமிறே ஸுகம்.  “யஸ் த்வயா ஸஹ ஸ்வர்கோ நிரயோ யஸ் த்வயாவினா” என்று, ஸ்வர்க்க ஶப்தம் ஸுகவாசி.  (அம்மனாய்) ரக்ஷகையானவளே! நீ ரக்ஷகையாக நாங்கள் உனக்கு குழச்சரக்கைபடி அழகிதாயிருந்தது.  அவள் பேசாதே கிடப்பாள் என்னென்னில் திருவடிவாரத்தில் பிராட்டி ”ப்ரஹர்ஷேணாவருந்தா ஸா வ்யாஜஹார ந கிஞ்சன” என்றிருந்தாற்போலே “ஸம்ஶ்ரவே மதுரம் வாக்யம்” என்னும்படியே இவர்கள் பேச்சே அமையுமென்று கிடக்கிறாள்.  “தங்களடியேனாயிருக்கிற என்னை அம்மனாய் என்பதே” என்று கிடக்கிறாளாகவுமாம்.

(மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்) இவள் வாய் பேசாதே கிடக்கிற இது பொறுக்கமாட்டாமையாலே ”மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்” என்கிறார்கள். வாசல் செம்மினால் வாயும் செம்மவேணுமோ? ஐஶ்வர்யம் மிக்கார் பந்துக்களை ஏன் என்னலாகாதோ? “போதயந்த: பரஸ்பரம்” என்கிற ந்யாயமும் தவிர்ந்ததோ?  உடம்பை க்ருஷ்ணனுக்குக் கொடுத்தால் எங்களுக்கு பேச்சாகிலும் தரலாகாதோ?  கண்ணும் செவியும் ஒக்கப் பட்டினி கொள்ளவேணுமோ? “மதுரா மதுராலாபா” என்றிறே இவள் பேச்சு இருப்பது. 

“நீங்கள் பழி இடுகிறதென்? அவன் இங்கு உண்டோ?” என்ன, (நாற்றத்துழாய் முடி) கோயிற் சாந்தை உன்னால் ஒளிக்கப் போமோ? “இப்போது உண்டாக வேண்டா, அவன் ஒருகால் அணைத்துவிட்டால் அவை அஞ்சாறு குளிக்குப் பரிமளம் நிற்குமே.  “கட்டுங் காவலுமாயிருக்கிற வாசலிலே புகுரப்போமோ அவனுக்கு?” என்ன, (நாராயணன்) அவனுக்கு எங்களைப் போலே கதவு திறக்கப் பார்த்திருக்க வேணுமோ? வ்யாப்திக்கு ப்ரயோஜனம் வேண்டினவிடத்தே ஸ்புரிக்க வல்லனாகையன்றோ?  உகவாதாரையும் விடாதவன் உகந்த உன்னை விடுமோ?

(நம்மால் போற்றப்  பறை தரும் புண்ணியன்) வெறுமையே பச்சையாக இடைச்சிகளுக்கும் சென்று ஆஶ்ரயிக்கலாம்படியான தார்மிகன்.  இவர்களுடைய ஆஶ்ரயணம் உபாயமன்று, ருசியாலே.  (புண்ணியன்) “க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம்” என்று இவர்களுக்கு உபாயம் அவன்தானிறே; ஸ்நேஹோக்தியாகவுமாம். 

இவனால் (பண்டு ஒருநாள்) “முன்பு உன்னைப்போலே உணராதே படுத்தினாருண்டுகாண்” என்ன, (பண்டு ஒருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த) “ரிபூணாமபி வத்ஸலரான” பெருமாள் பக்கலிலே தப்புச் செய்த (கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ) உறக்கத்தில் நிபுணனானவனும் உனக்குத்தோற்றுத் தன் உறக்கத்தையும் தானே தந்து போனானோ? அவனது – துயில்; உன்னது – பெருந்துயில்.  அவன்  ஒருத்தியையிறே பிரித்தது; நீ ஊராக பிரிந்து உறங்கா நின்றாயே.

(ஆற்ற அநந்தலுடையாய்) இப்படிச் சொல்லக்கேட்டும் பெரிய அனந்தலோடே “க்ருஷ்ண” “க்ருஷ்ண” என்ன, ”எங்களுக்கு அங்கே போய் துயிலெழப் பாடவேணுமோ?  நீ உணரும்படி காண அமையாதோ?  (அருங்கலமே) எங்களுக்கெல்லாம் ஶிரோபூஷணமில்லையோ? ஹாரத்தைப் பண்ணி அதுக்குக் கல்லை அழுத்தினாற்போலே, நீ புகுந்து இக்கோஷ்டியை ஸநாதமாக்காய்” என்கிறார்கள்.  எங்களுக்குப் பெறுவதற்கு அரியளல்லையோ நீ என்னவுமாம்.

இவர்களார்த்தியைக்கண்டு துணுக்கென்று வரப்புக்காள்.  (தேற்றமாய் வந்து திற) இரண்டாம் நிலத்திலே கிடக்கிறவளாகையாலே “தடுமாறாதே தெளிந்து வந்து திற” என்கிறார்கள்.  (தேற்றமாய் வந்து திற) ஊராகத் திரண்டு கிடக்கிறது.  படுக்கையிற்கிடந்தபடியே வாராதே ஸதஸ்யையாய் வந்து திற”.  “ஸா ப்ரஸ்கலந்தீ” என்னும்படி வாராதேகொள் என்கிறார்கள். 

@@@@@

பதினோராம் பாட்டு

        கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

        செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

        குற்றமொன்றில்லாத  கோவலர்தம் பொற்கொடியே

        புற்றரவல்குல் புனமயிலே போதராய்

        சுற்றத்துத்தோழிமார் எல்லாரும் வந்து நின்

        முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்

        சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி நீ

        எற்றுக்கு உறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – பதினோராம் பாட்டு.  எல்லாவற்றாலும் அபிஜாதையாயிருப்பாளொருத்தியை எழுப்புகிறார்கள்.  ஆபிஜாத்யத்தால் க்ருஷ்ணனோடு ஒப்பாள் ஒருத்தி இவள். 

வ்யாக்யானம் – (கற்றுக் கறவை) எல்லாம் தலை நாகுகளாயிருக்கை.  இதுக்கு ஹேது – நித்ய சூரிகள் பகவத் ஸ்பர்ஶத்தாலே பஞ்ச விம்ஶதி வார்ஷிகர்களாயிருக்குமாபோலே இப்பசுக்களும் க்ருஷ்ண ஸ்பர்ஶத்தாலே கீழ் நோக்கி ப்ராயம் புகுகை.  “பவாமி த்ருஷ்ட்வாச புநர்யுவேவ” என்று – பகவத் ஸ்பர்ஶம் இளகிப் பதிக்கப் பண்ணுமிறே.  (கணங்கள் பல) தனித்தனியே எண்ணி முடியாமையன்றிக்கே, ஸமூகங்களும் எண்ண முடியாது.  “ரதகுஞ்சர வாஜிமான்” என்னுமாபோலே, “பல” என்னுமித்தனை.  ஆத்மாக்களுக்குத் தொகையுண்டானாலிறே பசுக்களுக்குத் தொகையுள்ளது. (கறந்து) ஈஶ்வரன் ஒருவனுமே ஸர்வாத்மாக்களுக்கும் நியமநாதிகளைப் பண்ணுமாபோலே, இடைச்சாதியில் மெய்ப்பாட்டாலே அடங்கக் கறக்கவல்ல ஸாமர்த்யம்.  பாலும் நெய்யும் கொண்டு விநியோகமில்லாதபடி ஸம்ருத்தமாகையாலே முலைக் கடுப்புக் கெடக் கறந்து என்றுமாம்.

(செற்றார்) இவர்களுக்கு ஶத்ருக்களாகிறார்கள் – க்ருஷ்ணனுடைய பெருமை பொறாதவர்கள்.  (திறலழிய) “தேவர்களும் எனக்கெதிரன்று” என்று இருக்கும் கம்ஸாதிகளுக்கு புகுரவொண்ணாத மிடுக்கையுடையவர்கள்.  (சென்று செருச்செய்யும்) எதிரிகள் வந்தால் பொருகையன்றிக்கே, இருந்தவிடங்களிலே சென்று பொருகை.  “அபியாதா ப்ரஹர்த்தா ச”  என்று சக்ரவர்த்தித் திருமகனைப்போலே இவர்கள் வீரம். 

(குற்றமொன்றில்லாத) எடுத்துவரப் பார்த்திருக்கும் குற்றமில்லை.  கையில் ஆயுதம் பொகட்டவர்களை எதிர்க்கும் குற்றமில்லை என்றுமாம்.  அழியச் செய்ய நின்றார்களென்று க்ருஷ்ணனுக்கு முறையிட்டால் “செய்தாரேல் நன்று செய்தார்” (பெரியாழ்வார் திரு – 4.9.2) என்னும்படி பிறந்தவர்கள் என்றுமாம்.  “ஸாதுரேவ ஸ மந்தவ்ய:” என்றிறே அவன் படி.  (கோவலர்தம் பொற்கொடியே) “ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா” என்னும்படியே ஊருக்காக ஒரு பெண்பிள்ளை,  (பொற்கொடி) தர்ஶநீயமாயிருக்கையும், “பதி ஸம்போக ஸுலபம் வய:” என்கிறபடியே பர்த்தாவாகிற கொழுகொம்பையொழிய ஜீவியாமையும்.  “ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலாலறிகிலேன் யான்” (திருவாய்மொழி – 10.10.3) என்றிறே இருப்பது.

(புற்றரவல்குல்) “தன்னிலத்தில் ஸர்ப்பம்போலே ஒசிவையும் அகலத்தையுமுடைய அல்குலை யுடையாய்!”  இவர்கள் இத்தனை சொல்லுவானென்? என்னில், “யா: ஸ்த்ரியோ த்ருஷ்டவத்யஸ்தா: பும்பாவம் மநஸா யயு:” என்னும்படியே பெண்களை ஆண்களாக்கும் அழகிறே;  “பும்ஸாம்  த்ருஷ்டி சித்தாபஹாரிணம்” என்று அவன் ஆண்களையும் பெண்ணுடையுடுக்கப் பண்ணுமாபோலே.  (புனமயிலே) தன்னிலத்தில் மயில். க்ருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்றவல்ல அளகபாரத்தையுடையளாகை.  “பொற்கொடியே” என்கையாலே ஸமுதாய ஶோபையைச் சொல்லிற்று; மேல் விஶேஷணத்தாலும் – அவயவஶோபை சொல்லுகிறது.  (போதராய்) “ஶோபயன் தண்டகாரண்யம்” என்னும்படியே நாங்கள் நிறக்கும்படி புறப்படாய்.

“நான் புறப்பட எல்லாரும் வந்தாரோ?”  என்ன, (சுற்றம் இத்யாதி) “சுற்றத்து தோழிமார்” என்கிறது – இவ்வூரடங்க இவளுக்கு உறவுமுறையாகையாலே.  (நின் முற்றம் புகுந்து) “உத்தரம் தீரமாஸாத்ய” என்கிறபடியே எங்களுக்கு ப்ராப்யமான முற்றத்திலே புகுந்து; இவர்களுக்கு ப்ராப்யமானபடி என்னென்னில், “முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்” (பெரிய திருமொழி – 10.8.5) என்றும், “முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டி” (நாச்சி – 2.9) என்றும் ஶேஷியானவனுக்கும் ப்ராப்யமான முற்றமாகையாலே, ஶேஷபூதைகளான எங்களுக்குச் சொல்லவேணுமோ? புகுந்து கொள்ளப் புகுகிற கார்யமென்? என்ன, – (முகில் வண்ணன் பேர்பாட) நீ உகக்கும் அவனழகிலும் ஔதார்யத்திலும் ஈடுபட்டு அவன் திருநாமத்தைப் பாடச்செய்தேயும்.

(சிற்றாதே பேசாதே) “முகில் வண்ணன்” என்றவாறே, அவன் படியை நினைத்துப் பேசாதே கிடந்தாள்.  (சிற்றாதே) சிற்றுதல் –  சிதறுதல்.  உணர்ந்தமைக்கு அடையாளமான சேஷ்டையைப் பண்ணாதே.  இவள் சேஷ்டிதமும் வார்த்தையும் தங்கள் கண்ணுக்கும் செவிக்கும் போக்யமாகையாலே இன்னாதாகிறார்கள்.  (செல்வப் பெண்டாட்டி நீ) உன்னோடு கூடுமது எங்களுக்கு எல்லா ஐஶ்வர்யமுமான நீ; க்ருஷ்ணகுணாநுஸந்தாநத்தாலே புஷ்கலையான நீ என்னவுமாம். 

“இங்கே கூடுபூரித்துக் கிடந்ததோ?” என்ன, – இல்லையாகில், (எற்றுக்கு உறங்கும் பொருள்) எங்கள் பாடே புறப்படாதே உறங்குகைக்கு ஒரு ப்ரயோஜனமுண்டோ?  (அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?” (திருவாய்மொழி – 2.3.10) என்று திரளோடே அநுபவிக்கும் அநுபவத்தை விட்டு, கைவல்யம் போலே கிடக்கிற கார்யமென்? என்னவுமாம்.  (எற்றுக்கு உறங்கும் பொருள்) உன்னுடைய உத்தேஶ்யத்தைப் பாராதே, எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே க்ருஷ்ணனுடைய நிரதிஶய போக்யதையைப் பாராதே எதுக்காகக் கிடக்கிறாய்? 

@@@@@

பன்னிரண்டாம்பாட்டு.

        கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

        நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

        நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

        பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றிச்

        சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

        மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்

        இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்

        அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.

 அவதாரிகை – பன்னிரண்டாம் பாட்டு.  க்ருஷ்ணனைப் பிரியாதே இளையபெருமாளைப்போலே இருப்பா னொருவன் தங்கையாகையாலே ஶ்லாக்யையா யிருப்பாளொருத்தியை எழுப்புகிறார்கள். 

வ்யாக்யானம் – (கனைத்து) கறப்பாரில்லாமையாலே முலைகடுத்துக் கதறுகை.  (இளங்கற்றெருமை) இளங்கன்றாகையாலே பாடாற்றமாட்டாமை.  (கன்றுக்கு இரங்கி) தன் முலை கடுப்புக் கிடக்க, “கன்று என் படுகிறதோ!” என்று இரங்கி, எம்பெருமான் ஆஶ்ரிதர் விஷயத்திலிருக்கும்படிக்கு நிதர்ஶனமிறே.  இத்தால் சொல்லிற்றாய்த்து – அவன் எருமைகள் கறவாவிட்டால் அவை படும் பாட்டை நாங்கள் உன்னாலே படாநின்றோமென்கை.  (நினைத்து முலை வழியே இத்யாதி) கன்றை நினைத்து பாவனாப்ரகர்ஷத்தாலே முலையிலே வாய் வைத்ததாகக் கொண்டு பால் சொரியா நிற்கும்.  (முலை வழியே) கைவழி தவிர (நின்று பால் சோர) நினைவு மாறாமையாலே, திருமலையிலே திருவருவிகள் போலே, பால் மாறாதே சொரிகை.  இவன் எருமை கறவாதொழிவானென்? என்னில் – இளையபெருமாள் க்ஷத்ரிய தர்மமான அக்நி கார்யத்துக்கு உறுப்பாமன்றிறே, இவன் எருமைகள் விட்டுக் கறப்பது;  அதுவென்னென்னில், “ந தேவலோகாக்ரமணம் நாமகரத்வம் அஹம் வ்ருணே” என்னுமாபோலே, க்ருஷ்ணனைப் பிரிய க்ஷமனல் லாமையாலே; “பரித்யக்தா மயா லங்கா” என்னும்படியாலே ப்ராப்யவிரோதிகளில் நசையற்ற படியாகவுமாம்.  (நனைத்து இல்லம் சேறாக்கும்) பாலின் மிகுதியாலே அகம் வெள்ளமிடும்; அத்தாலே துகையுண்டு சேறாகும்;  இத்தால் – சேறாகையாலே புகுரவொண்கிறதில்லை என்கை.  (நற்செல்வன்) தோற்றி மாயும் ஸம்பத்தன்றிக்கே நிலைநின்ற ஸம்பத்து.  அதாகிறது – க்ருஷ்ணன் திருவடிகளில் நிரந்தர சேவை.  “லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன:” என்கிறபடியே கைங்கர்ய லக்ஷ்மியிறே இவ்வாத்மாவுக்கு நிலைநின்ற ஸம்பத்து.  “லக்ஷ்மி ஸம்பன்ன:” என்றது.  “ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல்” (திருவாய் – 6.7.2) என்கிறபடியே – தன் வைஷ்ணவ ஶ்ரீயாலே ஜகத்துக்களடைய வைஷ்ணவத்வமுண்டாம்படி இருக்கை.  (நங்காய்) குணஹானிக்கு “ராவணஸ்யாநுஜோ ப்ராதா” என்னுமாபோலே குணத்துக்குத் தமையனில் தன்னேற்றமுடையளென்கை.

(பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி) மேல் வர்ஷம் வெள்ளமிட, கீழ் பால் வெள்ளமிட, நடுவு மால் வெள்ளமிட நின்றநிலையாகையாலே  தெப்பம் பற்றுவாரைப்போலே நின் வாசற்கடையில் தண்டியத்தைப் பற்றிக் கிடக்கிற இந்த தர்மஹாநி அறிகிறிலை. 

இப்படி சொன்னவிடத்திலும், இவர்கள் படும் அலமாப்பு காண்போம் என்று பேசாதே கிடக்க – (சினத்தினால்) “பெண்களைத் தீரா மாற்றாக நெஞ்சாரல் பண்ணும் க்ருஷ்ணனையொழிய, பெண் பிறந்தார்க்குத் தஞ்சமான சக்ரவர்த்தித்திருமகனைச் சொல்லுவோம் இவள் எழுந்திருக்கைக்காக” என்று ராமவ்ருத்தாந்தத்தைச் சொல்லுகிறார்கள் – (சினத்தினால்) தண்ணீர்போலேயிருக்கிற சக்ரவர்த்தித்திருமகனுக்கும் சினமுண்டோ? என்னில் – ஆஶ்ரித ஶத்ருக்கள் இவர்க்கும் ஶத்ருக்களிறே.  “ததோ ராமோ மஹாதேஜா: ராவணேன க்ருதவ்ரணம் த்ருஷ்ட்வா ப்லவங்கஶார்தூலம் கோபஸ்ய வஶமேயிவான்” மஹாராஜர்க்கு சீற்றம் பிறந்தபோது வாலியை எய்தார்; அவரழுதபோது கூட அழுதாரிறே.  “த்விஷதன்னம் ந போக்தவ்யம்” என்றிறே இருப்பது.  (தென்னிலங்கை கோமானை) “யத்யதர்மோ ந பலவான் ஸ்யாதயம் ராக்ஷஸேஶ்வர: ஸ்யாதயம் ஸுரலோகஸ்ய ஶக்ரஸ்யாபி ரக்ஷிதா” என்று திருவடி மதித்த ஐஶ்வர்யத்தையுடையவனை.  (செற்ற) ஓரம்பாலே தலையைத் தள்ளிவிடாதே படையைக்கொன்று, தேரை அழித்து, ஆயுதங்களை முறித்து, “தான் போலும்” (பெரிய திருமொழி – 4.4.6) இத்யாதி “கோன்போலும்” என்றெழுந்து கிளர்ந்து வந்த மானத்தையழித்து நெஞ்சாரல் பண்ணிக் கொன்றபடி.

(மனத்துக்கினியானை) “வேம்பேயாக வளர்த்தாள்” (நாச்சி – 13.7) என்னும்படியே “பெண்களை படுகுலையடிக்கும் க்ருஷ்ணனைப் போலன்றிக்கே, ஏகதாரவ்ரதனா யிருக்கை; பெண்களை ஓடி யெறிந்து  துடிக்கவிட்டுவைத்தும் பின் இரக்கமுமின்றிக் கேயிருக்குமே.  க்ருஷ்ணனை யொழிய “ஸஞ்சாத பாஷ்ப: பரவீரஹந்தா” என்று – ஶத்ருக்களுக்கும் கண்ணநீர் பாயுமவனை என்றுமாம்.  (பாடவும் நீ வாய் திறவாய்) “கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்” (திருவாய்மொழி – 9.5.8) என்று நம்மை நலியும் க்ருஷ்ணனுடைய பேரைக் காற்கடைக் கொண்டு “இத: உபரி ம்ருதஸஞ்சீவநம் ராமவ்ருத்தாந்தம்” என்னும்படியே க்ருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதஞ்செய்யும்படியான சக்ரவர்த்தித் திருமகனைப் பாடச்செய்தேயும்  (நீ வாய் திறவாய்) நீ வாய் திறக்கிறிலை.  ப்ரீதிக்குப் போக்குவிட வேண்டாவோ?

(இனித்தான் எழுந்திராய்) எங்களாற்றாமை அறிவித்த பின்பும் உறங்கக்கடவையோ? எழுந்திராய்.  (ஈதென்ன பேருறக்கம்) “பகவதஸ்த்வராயை நம:” என்றுகொண்டு பிறர் ஆர்த்திக்கு த்வரித்து உணருமவனோடே பழகிவைத்து, இங்ஙனே உறங்குவதே! என்கிறார்கள்.  ஆபந்நற்காக உணருமவன்படியுமன்றிக்கே, காலம் உணர்த்த உணரும் ஸம்ஸாரிகள் படியுமன்றிக்கே இருப்பதே உன் உறக்கம்? 

(அனைத்து இல்லத்தாரும் அறிந்து) பெண்களெல்லாரும் வந்து உன் வாசலிலே அழைக்கிறமை ஊராக அறியவேணுமென்றிருந்தாயாகில், எல்லாரும் அறிந்தது;  இனி எழுந்திராய்.   “பகவத் விஷயம் ரஹஸ்யமாக அனுபவிக்குமித்தனை; புறம்பு இதுக்கு ஆளுண்டோ?  என்று கிடக்கிறாயாகில், அது எங்கும் ப்ரஸித்தமாய்த்து என்றுமாம்.  எம்பெருமானார் திருவவதரித்தாற்போலே  காணும் இப்பெண்பிள்ளையும். 

@@@@@

 பதின்மூன்றாம் பாட்டு

        புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

        கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

        பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்

        வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

        புள்ளும் சிலம்பின காண் போதறிக்கண்ணினாய்

        குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே

        பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்

        கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

 அவதாரிகை – பதின்மூன்றாம் பாட்டு.  நம் கண் உண்டாகில் நானே வருகிறேனென்று கிடக்கிறாளொருத்தியை எழுப்புகிறார்கள்.

வ்யாக்யானம் – (புள்ளின் வாய் கீண்டானை) “பள்ளத்தில் மேயும்” (பெருயாழ்வார் திரு – 2.5.4) இத்யாதி.  பகாஸுரனைப் பிளந்தபடி.  (பொல்லா அரக்கனை) தாயையும் தமப்பனையும், உடலையும் உயிரையும் பிரித்தாற் போலே பிரித்த நிர்க்ருணன்.  ”சுரிகுழல் கனிவாய்” (பெரிய திருமொழி – 5.7.7) இத்யாதி.  “முன்பெலா விராவணன்” (திருக்குறு – 15) என்னுமித்தனை போக்கி அவன் தண்ணிமைக்கு ஒரு பாஶுரமும் இல்லையிறே.  அத்தாலேயிறே பிராட்டியும், “த்வம் நீச ஶஶவத் ஸ்ம்ருத:” என்றது.  “விபீஷணஸ்து தர்மாத்மா” என்று – நல்ல அரக்கனும் உண்டென்கை.  (கிள்ளிக் களைந்தானை) திருவிளையாடு சூழலில் நோய் புக்கவிடங்களைக் கிள்ளி பொகடுமாபோலே தோஷாம்ஶத்தை வாங்கி பொகட்டபடி.  (கீர்த்திமை) “ஶத்ரோ: விக்யாத வீர்யஸ்ய” என்று எதிரிகளுக்கும் நெஞ்சு உளுக்கும்படியான வீர சரிதத்தை “ரஞ்சனீயஸ்ய விக்ரமை:” என்று உகவாதார்க்கும் விடவொண்ணாத வீரம், உகந்த பெண்களுக்குச் சொல்லவேணுமோ? “லோகாம்ஸ்ச லோகாநுகதான் பஶூம்ஶ்ச ஹித்வா ஶ்ரிதாஸ்த்வச்சரணாதபத்ரம் பரஸ்பரம் தத்குணவாதஶீது பீயூஷநிர்யாபித தேஹயாத்ரா:”  “  ராவணன் பெருமாள் வீரத்துக்கு இலக்கானான்; தங்கை அழகிலே கண் கலங்கினாள்; தம்பி ஶீலத்துக்கு இலக்கானான்.  .  (பாடிப்போய்) இவர்களுக்குப் பாதேயம் இருக்கிறபடி, “பாதேயம் புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்தநாம்ருதம்” என்று வழிக்கு தாரகம் திருநாமமிறே “தன தாள் பாடி” (திருநெடு – 6) என்னக்கடவதிறே. 

(பிள்ளைகள் இத்யாதி) நாம் சென்று எழுப்பவேண்டும் பாலைகளும் உனக்கு முன்னே உணர்ந்து புறப்பட்டார்கள்.  (பாவைக்களம் புக்கார்) க்ருஷ்ணனும் தாங்களும் கழகமிடும் ஸங்கேத ஸ்தலம் புக்கார்கள். 

“அவர்கள் போகைக்குப் போது விடிந்ததோ? என்ன, (வெள்ளி யெழுந்து வியாழமுறங்கிற்று) வெள்ளி உச்சிப்பட்டது, வியாழம் அஸ்தமித்தது.” உங்களுக்கு நக்ஷத்ரமெல்லாம் வெள்ளியும் வியாழமுமாயிறே இருப்பது” என்ன, அதுவேயன்று (புள்ளும் சிலம்பின காண்) புட்கள் உணர்ந்தமாத்ரமேயன்றிக்கே இரைதேடிச் சிலம்பிப் போயிற்றின,

(போதரிக்கண்ணினாய்) புஷ்பம் போலேயும் மான் போலேயும் இருந்துள்ள கண்.  அரியென்று – மான்.  அன்றிக்கே, பூவில் வண்டு இருந்தாற்போலே என்றுமாம்.  அரி என்று வண்டு.  அன்றியே, போதை ஹரிக்கிற கண் என்றுமாம்.  பூவோடே சீறுபாறென்னும் கண் என்னவுமாம்.  (குள்ளக் குளிர) ஆதித்யனுதித்து நீர் கொதிப்பதற்கு முன்னே (குடைந்து நீராடாதே) “ஸரயூமவகாஹதே” என்னும்படியே க்ருஷ்ணவிரஹமாற நீராடப்போகாதே, நமக்குச் செல்லுகிற க்ருஷ்ண விரஹதாபம் ஶமிக்கைக்கும், இனி ஒருகால் க்ருஷ்ண விஸ்லேஷம் பிறவாமைக்காகவும் க்ருஷ்ண குணங்களிலே அவகாஹித்து அநுபவிக்கப்பெறாதே (போதரிக் கண்ணினாய்) உன் கண்ணாலே க்ருஷ்ணனைத் தோற்பித்து அவன் கண்ணாலே குமிழி நீருண்ணப் பாராதே, “நெடுங்கண் இளமானிவள்” (திருவாய்மொழி – 6.7.10); அனைத்துலகுமுடைய “அரவிந்தலோசனன் அவன்” இருவர் கண்ணுக்கும் இலக்கானவர்களிறே இவர்கள்; உன்னுடைய ஸௌந்தர்யம் எங்கள் பேற்றுக்கு உடலென்றிருந்தோம்; அங்ஙனன்றிக்கே, இழவுக்கு உடலாகாநின்றதோ?  (பள்ளிக் கிடத்தியோ) க்ருஷ்ண ஸ்பர்ஶமுடையதொரு படுக்கையை மோந்துகொடு கிடக்கிறாயோ? விளைந்து கிடக்க உதிரி நெல் பொறுக்குகிறாயோ?

(பாவாய் நீ) தனிக்கிடை கிடக்கவல்லளல்லையோ நீ!  (நன்னாளால்) க்ருஷ்ணன் கிடாய், பெண்கள் கிடாய் என்கிற நாட்டாரும் இசைந்து அவனும் நாமுமாய் ஜலக்ரீடை பண்ணி அவன் மடியிலே சாயலாம் காலத்தைப் பெற்றுவைத்து, படுக்கையை மோந்துகொடு கிடப்பதே!  (நன்னாளால்) மேல் வருகிற நாள் ராவணாதிகளைப்போலே பிரிக்கிற நாளிறே.  (கள்ளம் தவிர்ந்து கலந்து) கள்ளமாவது – தனியே க்ருஷ்ண குண சேஷ்டிதங்களை நினைத்துக் கிடக்கை.  அத்தைத். தவிர்ந்து எங்களோடே கலந்து, எங்களுக்கு உன்னைக் காட்டாதே  மறைக்கையாகிற ஆத்மாபஹாரத்தைத் தவிர்ந்து எங்களோடே கல”  என்றுமாம்.  ஶேஷத்வத்தை அபஹரித்தால் ஶேஷியை க்ஷமைகொள்ளலாம்.  ஶேஷித்வத்தை அபஹரித்தால் பொறுத்தோமென்பாரில்லை.  குற்றம் நின்றே போமித்தனை.

கலந்து – குள்ளக் குளிர குடைந்து நீராடாதே பள்ளிக்கிடத்தியோ என்று அந்வயம்.

  @@@@@

 பதினான்காம் பாட்டு

        உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

        செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

        செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்

        தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்

        எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

        நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!

        சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

        பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை பதினான்காம் பாட்டு, இவையெல்லாவற்றுக்கும் தானே கடவளாய், எல்லாரையும் தானே எழுப்பக்கடவதாகக் சொல்லிவைத்து, ௮து செய்யாதே ௨றங்குகிறாளொருத்தியை ௭ழுப்புகிறாள்

வ்யாக்யானம் – (உங்கள் புழக்கடை இத்யாதி) செங்கழுநீர் அலர்ந்து ஆம்பல் மொட்டிக்கும்படி போது விடிந்தது; உறங்குவதே இன்னம்? என்ன, “நீங்கள் வயலிலே போனிகளோ”? என்ன, “புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்தன” என்ன, “அது பின்னை நீங்கள் வலிய அலர்த்தினிகொள்” என்ன, (உங்கள் புழக்கடைத் தோட்டத்து செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின) எங்களுக்குப் புகுரவொண்ணாதே அசூர்யாம்பச்யமான உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியிலுள்ள செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் மொட்டித்தன.  வெயில் பட்டன்றிக்கே காலபாகத்தாலே என்கை.  இவள் எழுந்திராத இன்னாப்பாலே “உங்கள் புழக்கடை” என்று வேறிட்டுச் சொல்லுகிறார்கள். 

அலரப்புகுகிறவளவிலே கழிய அலர்ந்ததென்று சொல்லுகிறிகோள்.  வேறு அடையாளம் உண்டோ? என்ன, (செங்கல் பொடிக்கூறை இத்யாதி) அழற்றும் பொடியாலே புடவையைப் புரட்டி, ப்ரஹ்மசர்யம் தோற்ற பல்லை விளக்கி தண்டபரிஹாரார்த்தமாக தபோ வேஷத்தை உடையவரான ஶிவத்விஜருங்கூடத் தங்கள் தேவதைகளை ஆராதிக்குங்காலமாய்த்து.  “திருக்கோயில்” என்றது – அவர்கள் சொல்லும் பாஶுரத்தாலே.  சங்கு என்று ஆராதநோபகரணத்துக்கு உபலக்ஷணம்.  குச்சியிட என்றுமாம்.  இத்தால் அஶுத்தருங்கூட எழுந்திருக்கும் காலமாய்த்து என்கை.  ஸந்யாஸிகள் ஸந்த்யாவந்தனம் பண்ணி தங்களுடைய அகங்களிலே திருவாராதனம் பண்ணும் காலமாய்த்து என்றுமாம்.

தம:ப்ரசுராநுஷ்டானம் ப்ரமாணமோ?  “தர்மஜ்ஞஸமய: ப்ரமாணம் வேதாஸ்ச” அன்றோ?  என்ன, “தர்மஜ்ஞையான உன்னுடைய ஸமயமும் ப்ரமாணமன்றிறே? என்கிறார்கள்.  (எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்) எல்லாரையும் நானே எழுப்புகிறேனென்று சொன்னது உன் பக்கல் கண்டிலோமீ என்கிறார்கள்.  (வாய் பேசும்) உக்திமாத்ரமாய்;  அநுஷ்டானம் இன்றிக்கே இருக்கை.  க்ருஷ்ணனோடே பழகின உனக்கு பொய் சொல்லுகை வம்போ? (நங்காய்) பூர்ணையிறே.  எனக்கு உங்களையொழியச் செல்லாதென்று சொல்லும்படியும் உன் நைரபேக்ஷ்யமும் எல்லாம் கண்டோமிறே.  சொலவும் செயலும் சேராதார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ? (எழுந்திராய்) எங்கள் குறை தீர்க்க எழுந்திராய். 

(நாணாதாய்) சொல்லிவைத்துச் சொன்னபடி செய்யப்பெற்றிலோமென்னும் லஜ்ஜையுமின்றிக்கே யிருந்ததீ!  நீ இருந்தவூரில் பூசனியும் காயாதோ? என்கை.  (நாவுடையாய்) என்னை க்ஷேபித்துக் கொண்டாகிலும் வருகிறதென்? என்ன, “நாந்ருக்வேத விநீதஸ்ய நாயஜுர்வேத தாரிண:” என்றும், “நூநம் வ்யாகரணம் க்ருத்ஸ்நம்” என்றும், “ஸம்ஶ்ரவே மதுரம் வாக்யம்” என்றும் உன் பேச்சிலினிமை கேட்க;  இவள் எல்லாம் படுத்தினாலும் விடவொண்ணாத நாவீறுடைமை.

உங்களுக்குச் செய்யவேண்டுவதென்? என்ன, (சங்கு இத்யாதி) திருவாழியையும் ஶ்ரீபாஞ்சஜன்யத்தையும்  ஏந்தி அந்த ஸ்பர்ஶத்தாலே வளர்ந்த திருக்கைகளை உடையவனாய், ஆழ்வார்களிலே வந்து அலையெறிகிற கண்களை உடையவனை, “இளவாய்ச்சியர் கண்ணிலுள் விடவே செய்து, விழிக்கும்பிரான்” (திருவாய்மொழி – 1.7.5) என்று இவர்களைத் தோற்பித்துக்கொள்ளும் கண்ணிறே.  “ஆழியொடும் பொன்னாற்சார்ங்கமுடைய அடிகளை இன்னாரென்றறியேன்” (பெரிய திருமொழி – 10.10.9) என்று – அநுபவிப்பாரைப் பிச்சேற்றக்கடவ திருவாழியையும், திருமேனிக்குப் பரபாகமான ஶ்ரீபாஞ்சஜன்யத்தையும், முற்பட தன்னை எழுதிக்கொடுத்துப் பின்னை எழுதிக்கொள்ளுகிற திருக்கணகளையுமுடையவனை.  (பாட) உன் ப்ரீதிக்குப் போக்குவிட்டு எங்களையும் உஜ்ஜீவிப்பிக்க. க்ருஷ்ணன் கையில் இப்போது ஆழ்வார்களுண்டோ? என்னில், எப்போதுமுண்டு.  அது பெண்களுக்குத் தோற்றும்; அல்லாதார்க்குத் தோற்றாது.  “உபஸம்ஹர” என்றதும் உகவாதார்க்குக் கூசியிறே, இவர்களுக்குத் தோற்றத் தட்டில்லையே.

@@@@@

பதினைந்தாம் பாட்டு

        எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

        சில்லென் அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்

        வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்

        வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.

        ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடைமை

        எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக் கொள்

        வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

        வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – பதினைந்தாம் பாட்டு.  எல்லாருடைய திரட்சியும் காணவேண்டியிருப்பாளொருத்தியை எழுப்புகிறார்கள்.

வ்யாக்யானம் – (எல்லே இளங்கிளியே) “சங்கொடு சக்கரம் ஏந்துந்தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாட” (14) என்ற அசலகத்துப் பெண்பிள்ளையை எழுப்புகிற பாஶுரத்தைக் கேட்டு, இவள் அந்த பாஶுரத்தைத் தன் மிடற்றிலேயிட்டுப் பாட, எழுப்புகிறார்கள்.  அந்த த்வநி வழியே கேட்டுச் சென்று இவள் பேச்சிலினிமையாலே (எல்லே இளங்கிளியே) என்கிறார்கள்.  (இளங்கிளியே) கிளியை வ்யாவர்த்திக்கிறது.  கிளி இவள் பேச்சுக்கு ஒப்பாமித்தனை; பருவத்துக்கு ஒப்பன்றென்கை.  (எல்லே) என்னே! எல்லே என்று பேச்சிலினிமையாலே ஆஶ்சர்யப்படுகிறார்கள்.  (இன்னம் உறங்குதியோ) இவர்களழைக்கிறது தன் அநுஸந்தானத்துக்கு விக்நமாகையாலே பேசாதே கிடக்க, “இன்னமுறங்குதியோ” என்கிறார்கள்.  க்ருஷ்ண விரஹத்தாலே தளர்ந்து உறக்கமின்றிக்கே உன் கடாக்ஷமே பற்றாசாக நாங்கள் நின்ற பின்பும் உறங்குமித்தனையோ?  க்ருஷ்ணாநுபவத்துக்கு ஏகாந்தமான காலம் ஸித்தித்திருக்க உறங்கக்கடவையோ?  என்னவுமாம். 

உத்தேஶ்யம் கைபுகுந்தாலும் உறங்குவாருண்டோ?  என்ன, (சில்லென்றழையீன்மின்) தன் அநுஸந்தா நத்துக்கு இவர்களழைக்கிறது விக்நமாகையாலே “சிலுகிடாதே கொள்ளுங்கோள்” என்கிறாள்.  “இவர்கள் வார்த்தை அநுஸந்தேயமோ?” என்னில், திருவாய்மொழி பாடா நின்றால் செல்வரெழுந்தருளுகையும் அஸஹ்யமாபோலே  (நங்கைமீர் போதர்கின்றேன்) நாங்களும் எங்கள் சொல்லும் பொறாதபடி உன் பூர்த்தி இருந்தபடி என்? என்ன, சிவிட்கென கூசி (நங்கைமீர் போதர்கின்றேன்) நீங்கள் வாய் திறவாதிருக்கவல்லிகோளாகில்  நான் புறப்படுகின்றேன்.  என்ன,

(வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்)  நங்கைமீர் என்ற உறவற்ற சொல்லாலே வெட்டிமையெல்லாம் சொல்லவல்லை என்னுமிடம் நாங்கள் இன்றாக அறிகிறோமோ? சொல்லிற்றைச் சொல்லி எங்கள் தலையிலே குற்றமாம்படி வார்த்தை சொல்லவல்லை என்னுமிடம் பண்டே அறியோமோ? என்றுமாம்.

(வல்லீர்கள் நீங்களே) இன்னம் உறங்குதியோ என்றும், வல்லையுன் கட்டுரைகள் என்றும்,  வெட்டிமை உங்களதன்றோ? என்ன, “உன் வாசலிலே வந்து எழுப்ப, “சில்லென்றழையீன்மின்”  என்றது உன்னதன்றோ வெட்டிமை? என்ன, அது என் குற்றமன்று.  அதுவும் உங்கள் குற்றமே;  நம்முடைய வார்த்தை கேட்க உகந்திடுமிவள் நம் வார்த்தை அஸஹ்யமாம்படியிறே க்ருஷ்ண குணங்களிலே அவகாஹித்தது என்று உகக்கவேண்டியிருக்க, அதிலே தோஷத்தை ஏறிட்ட உங்களதன்றோ குற்றம்? அது கிடக்க “பரஸ்பர நீசபாவை:” என்றன்றோ ஸ்வரூபமிருப்பது;  ஆகையாலே, (நானேதானாயிடுக) இல்லாத குற்றத்தையும் சிலர் “உண்டு” என்றால், இல்லை செய்யாதே இசைகையிறே வைஷ்ணவலக்ஷணம்.  “மத்பாபமேவாத்ர நிமித்தமாஸீத்” என்று – பிறர் குற்றத்தையும் தன்னுடைய பாபபலம் என்றானிறே ஶ்ரீபரதாழ்வான்.

உங்களுக்குச் செய்யவேண்டுவதென்?  என்ன,  (ஒல்லை நீ போதாய்) எங்களுக்கு ஒரு க்ஷணமும் உன்னையொழியச் செல்லாமையாலே எங்கள் திரளிலே சடக்கென புகுந்துகொடு நில்லாய்.  “சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே” (பெரியாழ்வார் திரு – 3.6.10) என்று அவளுக்கும் இத்திரளேயிறே ப்ராப்யம்.  (உனக்கென்ன வேறுடையை) பஞ்சலக்ஷங்குடியில் பெண்களுக்கு உன்னதொழிய, தனியே ஸ்வயம்பாகம் பண்ணுவாரைப்போலே உனக்கு வேறே சில உண்டோ? வைஷ்ணவ விஷயத்தை பஹிஷ்கரித்தும் பற்றும் பகவத்விஷயத்தோடு தேவதாந்தரத்தோடு வாசியில்லை.  நீ ஒருவர்க்கும் விரோதியில்லை.  நீ புக்கு திருவடி தொழு” என்ன, ஆழ்வான் வார்த்தையை நினைப்பது. 

(எல்லாரும் போந்தாரோ) “எனக்கு உங்களையொழிய ஸுகமுண்டோ?  உணர அறியாத  சிறு பெண்களும் உணர்ந்ததால் புறப்படவிருந்தேன்.  எல்லாரும் போந்தாரோ? என்ன, (போந்தார்) க்ருஷ்ண விரஹத்தாலே துவண்ட பெண்களடைய உன்னைக் காண்கைக்கு உன் வாசலிலே வந்து கிடந்தார்கள்” என்ன, ஆகில், உள்ளே புகுர விடுங்கோள் என்ன, (போந்து எண்ணிக்கொள்) புறப்பட்டு மெய்காட்டுக்கொள்.  மெய்காட்டுக் கொள்ளுகைக்கு ப்ரயோஜனம் தனித்தனியே பார்க்கையும் அநுபவிக்கையும்.

நாமெல்லாரும் உன்னால் செய்வதென்? என்ன, (வல் ஆனை கொன்றானை) குவலயாபீடத்தைக் கொன்று நம் ஜீவநமான தன்னை நோக்கித் தந்தவனை. (மாற்றாரை மாற்றழிக்க வல்லானை)  எதிரிட்ட விரோதிகளை அநாயாஸேன நஶிப்பித்து, “ந ஸமம் யுத்தமித்யாஹ” என்று அஞ்சின பெண்களை வாழ்வித்தானை.  (மாயனை) தன் கையில் அவர்கள் படுமத்தை தான் பெண்கள் கையில் படுமவனை.  (வல் ஆனை கொன்றானை) அங்கே குவலயாபீடத்தைக் கொன்றார்போலே நம்முடைய ஸ்த்ரீத்வாபிமானத்தைப் போக்கியவனை.  (மாற்றாரை மாற்றழிக்க வல்லானை) சாணூர முஷ்டிகாதிகளை நிரஸித்தாற்போலே நம்மை தன்னோடு சேரவொட்டாத இடையருடைய ஸங்கல்பத்தை போக்கினவனை.  (மாயனை) எதிரிகளைத் தான் தோற்பிக்குமாபோலே நம் கையில் தோற்ற ஆஶ்சர்யபூதனை.  (பாட) தனக்கு அவன் தோற்கும் தோல்விக்குத் தோற்றுப் பாட.

@@@@@

 பதினாறாம் பாட்டு

        நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

        கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண

        வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்

        ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

        மாயன் மணிவண்ணன் நென்றலே வாய் நேர்ந்தான்

        தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவான்

        வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ

        நேசநிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – பதினாறாம் பாட்டு.  கீழில் பத்து பாட்டாலும் – முற்பட உணர்ந்தவர்கள் உறங்குகிறவர்களை எழுப்ப, எல்லாருங்கூடி வந்து ஶ்ரீநந்தகோபர்  திருமாளிகையிலே சென்று கோயில் காப்பானையும், திலுவாசல் காப்பானையும் எழுப்புகிறார்கள்.  “செய்யாதனச் செய்யோம்” (2) என்று பண்ணின ப்ரதிஜ்ஞையை அநுஷ்டான பர்யந்தமாக்கவேணுமே; ததீயரை முன்னிட்டுப் பற்றாதவன்று  முறை தப்பின சூர்ப்பனகைப் பட்டது படுமத்தனை.  “வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும்” (நாச்சி – 10.10) என்னும் பெரியாழ்வார் திருமகளிறே இவள்.

வ்யாக்யானம் – (நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே) ஶ்ரீ நந்தகோபர் திருமாளிகைக்குக் காவலாய், எங்களுக்கு நிர்வாஹகனானவனே!  “நாயகன்” என்று – ஶ்ரீ நந்தகோபரைச் சொல்லிற்றாகவுமாம்.  இவர்களால் பெருமவனன்றோ நாயகனாவான்.  இவனை “நாயகன்” என்கிறது என? என்ன, “பாபிஷ்ட: க்ஷத்ரபந்துஶ்ச புண்டரீகஶ்ச புண்யக்ருத் ஆசார்யவத்தயா முக்தௌ தஸ்மாதாசார்யவான் பவேத்” என்று – பலஸித்தி ஆசார்யனாலேயாகையாலே உபகாரகனை “நாயகன்” என்கிறார்கள்.  ப்ரதான ஶேஷியிற்காட்டில் த்வார ஶேஷிகளே எங்களுக்கு ஶேஷிகளென்கிறார்கள்.  (நந்தகோபனுடைய கோயில்) நாங்கள் ஆஶ்ரயிக்கிறவன் பரதந்த்ரன், தங்களை ஶேஷிகளாக வைக்க இசைபவரோடே கலந்து பரிமாறவிறே  இவன் இங்கு வந்து அவதரித்தது.  “அடியார் நிலாகின்ற வைகுந்தமோ” (திருவிரு – 75) என்று பரமபதத்திலும் நாம் பரதந்த்ரராய் அவர்களிட்ட வழக்காயிறே இருப்பது.  (கோயில் காப்பானே) சிறு பெண்களாகையாலே அவன் தொழிலையிட்டுச் சொல்லுகிறார்கள்.  “இன்னது பிடிப்பான்” என்னுமாபோலே, அவனும் உகக்கும்படியாலே சொல்லுகிறார்களாகவுமாம்.  இத்தால் – ஶேஷவ்ருத்தி ப்ரயுக்தமான பேரே இவ்வாத்மாவுக்கும் பேர் என்னுமிடம் தோற்றுகிறது.  “யதோசிதம்  ஶே‌ஷ இதீரிதே ஜனை:” என்னக்கடவதிறே.

(கொடித்தோன்றும் தோரணவாசல் காப்பானே) அவன் கண்ணாலே “போங்கோள்” என்று சொல்ல, திருவாசல் காக்கிறவனை வந்து எழுப்புகிறார்கள்.  “கோயில் காப்பான்” என்று அங்குத்தைக்கு நிர்வாஹகனாய், அவன் தன்னையே கொடித்தோன்றும் தோரணவாசல் காப்பானென்னவுமாம்.  க்ஷேத்ராதிபதிதன்னை “கோயில் காப்பான்” என்று வேறே திருவாசல் காப்பானைச் சொல்லிற்றாகவுமாம்.  “ஆர் விக்நம் பண்ணுகி றார்களோ” என்று பயப்பட்டு எல்லார் கால்களிலும் விழுகிறார்கள்.  (கொடித் தோன்றும் தோரணவாசல் காப்பானே) ஆர்த்த ரக்ஷணத்துக்கு கொடிகட்டித் தோரணமும் நட்டுவைத்தாற்போலே, பெண்கள் தடுமாற்றம் தீர முகம் தருகைக்கன்றோ உன்னை இங்கு வைத்தது.

(மணிக்கதவம் தாள் திறவாய்) “பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு” (பெரிய திருமடல் – 73) என்னுமாபோலே புகுவாரைத் தன்னழகாலே காற்கட்டும்.  கதவினுடைய தாள் திறவாய் திருவாசலுக்குள் புகுவாரை காற்கட்டும் இது.  அவன் புக்காரை காற்கட்டும் தன்னழகாலே.

“தாள் திறவாய்” என்றவாறே அவன் “பயமுள்ள தேசத்தில் மத்யராத்ரத்திலே வந்து திறக்க அழைக்கிற நீங்கள் ஆர்?” என்ன, “பயானாம் அபஹாரி” இருந்தவிடத்தில் பயம் என்?” என்ன, “காலம் த்ரேதாயுகமாய், தமப்பனார் சம்பராந்தகனுமாய், பிள்ளைகள் தாங்களும் ஆண் புலிகளாய், மந்திரிகள் வஸிஷ்டாதிகளுமாய், ஊரும் திருவயோத்யையாய், பயமற்றிருக்கிறதோ? காலம் கலிக்குத் தோள்தீண்டியாய் த்வாபராந்தம், தமப்பனார் ஸாது ஶ்ரீ நந்தகோபர்,  இவர்கள் சிறு பிள்ளைகள்.  அதுக்கு மேலே தீம்பர்கள்.  ஊர் இடைச்சேரி, கம்ஸன் ஶத்ரு, எழும் பூண்டுகளெல்லாம் அஸுரப் பூண்டுகள்.  பயம் கெட்டிருக்கலாமோ? என்ன, எங்களுக்கு பயப்படவேண்டுமோ?  என்ன, “சூர்ப்பணகை பெண்ணன்றோ?” என்ன, “அவள் ராக்ஷஸி.  நாங்கள் ஆயர் சிறுமியர்.  இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையர்க்குப்  பிறந்தவர்களன்றோ?” என்ன, “பூதனைக்குப் பின்பு இடைச்சிகளுக்கன்றோ பயப்படவேண்டுகிறது” என்ன, (ஆயர் சிறுமியரோமுக்கு)  க்ருத்ரிமமறியாத சிறு பெண்கள்” என்ன,

“வார்த்தையிலே அறியலாம், வந்த காரியத்தைச் சொல்லுங்கோள்”  என்ன, (அறைபறை) “நோன்புக்குப் பறை வேண்டி வந்தோமென்ன, “அதுவாகில், திருப்பள்ளியுணர்ந்தால் விண்ணப்பம் செய்கிறோம்” அவ்வளவும் நில்லுங்கோள்” என்ன, (மாயன் இத்யாதி) “நீ இன்று அறிவிக்க வேண்டாதபடி நென்னேற்றே சொல்லிப் போந்தான்”  (மாயன்) பெண்கள் கோஷ்டியில் தாழ நின்று பரிமாறினபடி.  (மணிவண்ணன்) தாழநில்லா விடிலும் விடவொண்ணாத வடிவழகு.  பூவலர்ந்தாற்போலே வார்த்தை சொல்லுகிறபோதை “ஓஷ்ட ஸ்புரண”மென்னவுமாம்.  “வாக்மி ஶ்ரீமான்”  (நென்னலே) உன் காலைப் பிடிக்க வேண்டுகிற இன்றுபோலேயோ?  அவன் காலைப் பிடிக்க இருந்த நென்னேற்றும் ஒரு நாளே!” என்கிறார்கள்.  (வாய் நேர்ந்தான்) “ஓலக்கத்திலே ஒரு வார்த்தை சொன்னானாகில் மெய்யாகவேணுமோ?” என்ன, “க்ருஷ்ணே! ந மே மோகம் வசோ பவேத்”  என்று ஒருத்திக்குச் சொன்ன வார்த்தை அவள் விஷயத்தில் பழுதாய்த்தாகிலன்றோ இவ்வார்த்தையும் பழுதாவது” என்ன;

“சொன்னானேயாகிலும் நீங்கள் ப்ரயோஜநாந்தர பரர்களன்றோ?” என்ன, (தூயோமாய் வந்தோம்) “பறை” என்று ஒரு வ்யாஜம்.  அநந்யப்ரயோஜனைகள் நாங்கள்.  அதாவது, அவனுக்கு மங்களாஶாஸனம் கண்ணுமதொழிய தங்களுக்கு ஒன்றின்றிக்கேயிருக்கை.   (வந்தோம்) அவன் செய்வதை நாங்கள் செய்தோமென்கை.  “நீங்கள் அநந்யப்ரயோஜனை களென்கைக்கு அடையாளமென்? என்ன, (துயிலெழ பாடுவான்) திருப்பள்ளியெழுச்சி பாட வந்தோம்.  “ஸமயா போதித: ஶ்ரீமான் ஸுக ஸுப்த: பரந்தப:” என்று பிராட்டி உறங்குகிறபடியைக் கண்டு உகந்தாள்.  இவர்கள் உணரும்படியைக் காண ஆசைப்படுகிறார்கள்.

“அங்ஙனேயாகில் திறக்கிறேன்  நில்லுங்கோள்” என்ன, (வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே) “எங்களை முற்பட நிஷேதியாதொழியவேணும்.  நெஞ்சால் நினைத்தாயாகிலும் வாயாலே நிஷேதியா தொழியவேணும்.  உன் கையது கிடாய் இவர்களுக்கு; அவன் கையதிறே வாணாள்.  “வத்யதாம்” என்பவர்தானே “அஸ்மாபிஸ்துல்யோ பவது”  என்றபின்பிறே அவன் ஸத்தைப் பெற்றது.  (அம்மா) பச்சையிடுகிறார்கள்.  உள்ளிருக்கிறவனோ நாதன், நீயல்லையோ” என்ன, “தாளையுருவி கதவைத் தள்ளிக்கொடு புகுருங்கோள்” என்ன, (நீ நேச நிலைக்கதவம் நீக்கு) “அது உன்னிலும் பரிவுடைத்தான கதவு.  எங்களால் தள்ளப் போகாது.  நீயே திறக்கவேணும்” என்கிறார்கள்.  சேதனாசேதன விபாகமன்றியே இவ்வூரிலுள்ளோரெல்லாம் அநுகூலமாயிருக்கிறபடி.  கம்ஸன் படைவீட்டில் எல்லாம் ப்ரதிகூலமாயிருக்குமாபோலே.  (நேச நிலைக்கதவம்) செறிந்திருக்கிற கதவையும் நிலையையும் (நீக்கு) நீயே வந்து திறக்கவேணும்.

@@@@@

 பதினேழாம் பாட்டு

       அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

        எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்

        கொம்பனார்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே

        எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்

        அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த

        உம்பர்கோமானே உறங்காது எழுந்திராய்

        செம்பொற்கழலடி செல்வா பலதேவா

        உம்பியும் நீயும் உறங்கேல் ஓரெம்பாவாய்.

அவதாரிகை – பதினேழாம் பாட்டு.  இவர்களைத் திருக்காப்பு நீக்கி உள்ளே புகுரவிட ஶ்ரீ நந்தகோபர் தொடக்கமானாரை எழுப்புகிறார்கள்.  முற்பட, “க்ருஷ்ணனைப் பெண்கள் களவு காண்கிறார்களோ” என்று நினைத்துக் காவலாகப் புறக்கட்டிலே கிடக்கிற ஶ்ரீ நந்தகோபரை எழுப்புகிறார்கள்.  அநிருத்தாழ்வானை யகப்படக் களவுகாணக்கடவ பெண்கள் அவனழகுக்கும் வாய்த்தலையாய் “ஸாக்ஷான் மன்மத மன்மத:” என்கிற க்ருஷ்ணனைக் களவுகாணச் சொல்லவேணுமோ?

வ்யாக்யானம் – (அம்பரமே இத்யாதி) புடவையோடு, தண்ணீரோடு, சோறோடு வாசியற வேண்டுபவர்க்கு வேண்டுவதெல்லாம் புஷ்கலமாகக் கொடுக்கை.  ஏவகாரத்தாலே – இதுவோ இவன் கற்றது என்னும்படி கொடுக்கை.  (அறம் செய்யும்) பலாபிஸந்திரஹிதமாக ஆந்ருஶம்ஸ்யத்தாலே கொடுக்கை.  இத்தால் – நாட்டுக்கு தாரகாதிகளை கொடுக்கிற நீ எங்கள் தாரகத்தையும் தாராயென்கை.  (எம்பெருமான் இத்யாதி) எங்களுக்குத் தாரக போஷக போக்யங்களெல்லாமான க்ருஷ்ணனைப் பெற்றுத் தந்த ஸ்வாமீ! எழுந்திராய்.  “ஏகைக பலலாபாய ஸர்வ லாபாய கேஶவ:” உண்ணுஞ்சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லா பேறும் தானேயானவனிறே க்ருஷ்ணன்.  (எம்பெருமான்) நாட்டில் பெண்களுக்கு தானம் கொடுப்பாரில்லை; தானம் கொள்ளுகைக்கு அதிகாரிகளல்லாமையாலே;  “வாஸுதேவ: ஸர்வம்”  என்று இருக்கிற எங்களுக்கு க்ருஷ்ணனைத் தரப்புகுகிற நீ விஶேஷித்து எங்களுக்கு நாயகனன்றோ?

உணர்ந்து அவன் அனுமதி பண்ணினபடிதோற்றக் கிடக்க (கொம்பனார் இத்யாதி) பிராட்டி முன்னாக அவனை எழுப்புமாபோலே, இவள் முன்னாக ஶ்ரீ நந்தகோபரை எழுப்பாவிட்டதென்னென்னில், பிள்ளைமேல் ஸங்கத்தாலே அணித்தாக உள் கட்டிலே கிடக்கையாலே பிற்பட அவளை எழுப்புகிறார்கள்.  (கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே) “நாரீணாம் உத்தமா வதூ:”  என்று – பெண் பிறந்தார்க்கெல்லாம் தலையாகப் பிறந்தவளே!  (கொம்பனார்) கொம்பு – வஞ்சிக்கொம்பு.  அனார் – அத்தை அனையவர்கள்; அத்தை ஒத்தவர்கள்.  (குல விளக்கே) இக்குலத்துக்கு மங்களதீபமானவளே! பெண் பிறந்தார்க்கெல்லாம் த்ருஷ்டியான விளக்கே! என்னவுமாம்.  (கொழுந்தே) பெண்களுக்கு ஒரு குறை வரில் உன் முகமன்றோ வாடுவது.  (எம்பெருமாட்டி) க்ருஷ்ணனைப் பெற்றுத்தந்து எங்களுக்கு ஸ்வாமினியானவளே!   (யசோதாய்) ஶ்ரீ நந்தகோபரைப் போலன்றியே ஸஜாதீயையாகையாலே நோயறியு மவளே!  ஹிதகாமரான ஶ்ரீ நந்தகோபர் எழுந்திருக்கச் செய்தேயும் ப்ரியகாமையாயிருக்கிற நீ கிடக்கக் கடவையோ?  (அறிவுறாய்) நீ அறிந்தால் எங்களுக்கு ஒரு குறையுண்டோ? என்கை,

அவள் ஸம்வாதத்தாலே  உள்ளே புக்கு க்ருஷ்ணனை எழுப்புகிறார்கள்.  (அம்பரமூடறுத்தோங்கி) ப்ரயோஜ நாந்தரபரரான தேவர்களுக்காக ஆகாஶாவகாஶத்தை யெல்லாம் அடங்க ஒரு ப்ரதேஶநியதியில்லாதபடி ஊடறுத்து விம்ம வளர்ந்து.  இத்தால் நிருபாதிக ரக்ஷகனாகையாலே ரக்ஷகத்வமே விளைநீராக வளர்ந்தபடி.  (உலகளந்த) உறங்குகிற ப்ரஜையைத் தழுவிக்கொண்டு கிடக்கும் தாயைப்போலே இருந்ததே குடியாக எல்லார் தலையிலும் ஊறெண்ணெய் பார்த்தாற்போலே திருவடிகளைக் குளிர வைத்தபடி.  (உம்பர் கோமானே) அச்செயலாலே தேவர்களை எழுதிக்கொண்டபடி நித்யசூரிகளை என்னவுமாம்.  அதாவது, “நமக்கு ஶிரோபூஷணமான திருவடிகளையிட்டுக் காடும் ஓடையும் அளப்பதே!  இது ஒரு வாத்ஸல்யமே!”  என்று வாத்ஸல்யத்துக்குத் தோற்கை.  (உறங்காது எழுந்திராய்) ஆண்களுமாய் ப்ரயோஜநாந்தரபரர்களாகவேணுமோ முகம் கொடுக்கைக்கு?  அநந்யப்ரயோஜனைகளுமாய் அபலைகளுமானால் ஆகாதோ? எங்களுக்கு முகம் காட்டும்போது  சிறுப்பது பருப்பதாகவேணுமோ?  இருக்கிறபடியே காட்டவமையாதோ? உன் வாசியறியாதே அந்யபரமான நாட்டுக்கு ஸுலபமான திருவடிகளை உன் வாசியறியும் எங்களுக்குக் காட்டலாகாதோ?  (உறங்காதெழுந்திராய்) எங்களை உறக்கம் எழுப்பவந்த நீ உறங்கக்கடவையோ? “அநித்ர: ஸததம் ராம:” என்று கேட்டிருந்தபடி அழகிதாயிருக்கிறது!

இப்படிச் சொல்லவும் எழுந்திராமையாலே, முந்துற நம்பி மூத்தபிரானை எழுப்பாதே, முறைகேடாகச் செய்தோமென்று அவனை எழுப்புகிறார்கள் – (செம்பொற்கழலடி செல்வா பலதேவா) பிள்ளைப் பிறக்கைக்குப் பொற்கால் பொலியப் பிறந்த ஶ்ரீமானே! (உம்பியும் நீயும் உறங்கேல்) உனக்கு பவ்யனான தம்பியும், அவனுக்கு பவ்யனான நீயும் உறங்காதொழியவேணும்.  “ஸந்தேஶை: ஸாமமதுரை: ப்ரேமகர்ப்பைரகர்விதை: ராமேணாஶ்வாஸிதா கோப்யோ ஹரிணா ஹ்ருதசேதஸா” என்று – எங்களையும் பொருந்தவிடுபவளல்லையோ நீ?

@@@@@

பதினெட்டாம் பாட்டு

        உந்து மதகளிற்றன் ஓடாத  தோள் வலியன்

        நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

        கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்

        வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – பதினெட்டாம் பாட்டு.  இப்படி எழுப்பினவிடத்திலும் எழுந்திராமையாலே தங்களுக்கு புருஷகாரபூதையான நப்பின்னை பிராட்டியை எழுப்புகிறார்கள்.  அவள் புருஷகாரமாக அவனைப் பற்றுவதே பலவ்யாப்தமாவது.  இதுதான் காகவிபீஷணாதிகள் பக்கலிலே காணலாம்.  அவளை அநாதரித்து இவனைப் பற்றின சூர்ப்பணகை அநர்த்தப்பட்டாளிறே.  பெருமாளையொழிய பிராட்டியைப் பற்றின ராவணனும் அநர்த்தப்பட்டான்.  இருவரையும் பற்றினாலிறே விபீஷணாழ்வானைப் போலே வாழ்வாவது.  அபிநிவேஶ ப்ரேரிதை களாகையாலே முந்துறவே க்ருஷ்ணன் பக்கலிலே மேல் விழுந்தார்கள் இவர்கள்.  அங்கு கார்யம் பலியாமையாலே வழியே போகவேணுமென்று புருஷகாரத்தில் இழிந்தார்கள்.  ஆஶ்ரயணவேளை யிலேயிறே   க்ரமம் பார்ப்பது.  போகவேளையிலே க்ரமம் பார்க்கப்போகாதே.  

வ்யாக்யானம் – (உந்து மதகளிற்றன்) மதத்தை உந்தா நின்றுள்ள களிறு – மத்தகஜம்போலேயிருக்கும் பலத்தை உடையவன்.  ஆனைகளோடே பொரும்படியான மிடுக்கை உடையவனென்கை.  (ஓடாத தோள்வலியன்) “யுத்தே சாப்யபலாயனம்” என்கிறபடியே ப்ரதிபக்ஷத்தைக் கண்டால் பிற்காலியாத தோள் வலியை உடையவன்.  நாட்டில் நடையாடாத தோள் வலியன் என்னவுமாம்.  இப்போது இவருடைய மிடுக்குச் சொல்லிற்று.  தங்களுக்குத் தஞ்சமான இம்மிதுனத்துக்குக் காவலுண்டென்று தங்கள் பய நிவ்ருத்திக்காக “அங்கோராய்க்குலம்” என்று கம்ஸன் படைவீடான ஶ்ரீ மதுரையை நினைத்து அஞ்சினார்க்கு அஞ்சவேண்டாத ஊரிரே.  (தோள் வலியன்) “ந பிபேதி குதஶ்சன” என்று நம்முடைய அநீதிகளை நினைத்தால் எம்பெருமான் தோள் வலியை நினைத்து பயம் கெடுமாபோலே க்ருஷ்ணனுடைய தீம்புகளை நினைத்தால் இவருடைய தோள் வலியை நினைத்து பயம் கெடலாயிருக்கை. கம்ஸன் மாளிகை நிழலின் கீழே க்ருஷ்ணனுக்கு ஒரு தீங்கு வாராதபடி வளர்க்கவல்ல மிடுக்கை யுடையவனிறே.  (நந்தகோபன் மருமகளே) “ஶ்ரீகும்பர் மகளே” என்னாதே மாமனாரைச் சொல்லிற்று – “ஸ்நுஷா தஶரதஸ்யாஹம் ஶத்ரு சைந்ய ப்ரதாபின:” என்னுமாபோலே, அதிலும் இவளுக்கு இது ப்ரியமாகையாலே.  (நப்பின்னாய்) “திருவாய்ப்பாடியில் க்ருஷ்ணன் பிறந்ததுக்குப் பின்பு ஶ்ரீ நந்தகோபருக்கு மருமகளல்லாதாருண்டோ? நமக்கென் என்று பேசாதே கிடக்க “நப்பின்னாய்” என்கிறார்கள்.

(கந்தம் கமழும் குழலீ) பரிமளந்தான் நிறம் பெறுவது இவள் திருக்குழலிலே சேர்ந்தவன்று என்கிறது.  “வாஸஞ்செய் பூங்குழலாளிறே”.

“ஸர்வகந்த:” என்கிறவனுக்கும் நாற்றம் கொடுக்கும்படி பரிமளம் மிக்க II (கடைதிறவாய்) க்ருஷ்ணனுடைய பரிமளமும் உன்னுடைய பரிமளமுமாகத் தேங்கி நிற்கிற வெள்ளத்தை, கதவைத்திறந்து புறப்படவிட்டு எங்கள் விடாயைத் தீராயென்கிருர்கள்; கிண்ணகத்தை அணைசெய்தாற்போலே அடைத்துக்கொண்டு கிடவாதே வெட்டிவிடாய்.

‘மத்யராத்ரியிலே எழுப்புகிறதென்?’ என்ன; ‘போது விடிந்தது’ என்ன; ‘விடிந்ததுக்கு அடையாளமென்?’ என்ன, – (கோழியழைத்தனகாண்) கோழி கூவாநின்றது என்ன; ஒருகோழி கூவினவாறே விடிந்ததாமோ?’ என்ன, (வந்தெங்கும் கோழியழைத்தன காண்)  துடைதட்டி எழுப்புவாரைப்போலே ஸர்வதோதிக்கமாகக் கோழி கூவாநின்றன.

‘உணர்ந்தவையெல்லாம் கூப்பிடும், பின்னையுறங்குமதுதான் சாமக்கோழி” என்ன-(மாதவிப்பந்தல்மேல் இத்யாதி)  ஸுகஸ்பர்ஸ்த்தாலே “நோபஜநம் ஸ்மரந்” என்னும்படியான படுக்கையிலே உறங்குகிறவை உணரும்போது விடிய வேண்டாவோ?’ என்ன; ‘ஒருகுயில் ஒருகால் கூவுங் காட்டில் விடிந்ததோ?’ என்ன- (பல்காற் குயில் கூவிற்றுக்காண்) உன்னுடைய நோக்கும் ஸ்பர்ஸமுமே தாரகமான குயில், விடிந்தும் உன்னைக் காணப்பெறாமையாலே பலகால் கூவாநின்றது.  ‘ஒரு குயில் பலகால் கூவினது ப்ரமாணமோ?’ என்ன; உன்னைக் காணப்பெறாமையாலே நாக்கு ஒட்டினமை தோற்ற.  (குயில் இனங்கள் கூவினகாண்) இனமினமாகக் குயில்கள் பலகாலும் கூவினகாண்.

(பந்தார் விரலி) பந்தும் கையும் பொருந்தியிருக்கிறபடி. நாங்கள் சைதந்யத்தை விட்டு அசேதநமாகப் பெற்றிலோமே! ‘அது என்?’ என்னில்: உன் கைக்குள்ளே கிடக்கலாமே! இப்போது பந்தின் ப்ரஸங்க, மென்னென்றால் – க்ருஷ்ணனோடே பந்தடித்து அவனைத் தோற்பித்து, அவனை ஒரு கையாலும் பந்தை ஒருகையாலும் அணைத்துக்கொண்டு கிடக்கை. அவன் இவளுக்கு; போகோபகரணம்; பந்து லீலோபகரணம். ஒருகையில் நாரமாய்த்து ஒரு கையில் நாராயணனாய்த்து.  ஒருகையிலே விபூதியாய்த்து; ஒருகையிலே விபூதிமானாய்ந்து இத்தால் – “அஸ்யேஶாநா ஐக, தோ விஷ்ணுபத்நீ” என்கிறபடியே உபய ஸம்படந்த,த்தால் வந்த புருஷகாரபாவம் தோற்றுகிறது. “நீங்கள் வந்ததென்?” என்ன; – (உன் மைத்துனன் பேர்பாட) நீயும் அவனும் மைத்துனமையாடி ஒருவர்க்கொருவர் ஒன்றுக்கு ஒன்பது சொல்லி இட்டீடு கொள்ளும்போது, உன்பக்ஷத்திலே நாங்கள் நின்று அவன் தோல்விக்கு வசைபாட அவனுக்கு உள்ளதெல்லாம் சொல்லிக்கொடுக்கைக்கும், இருவரும் ஒன்றாய்ச்செல்லுமன்று செல்லவும். பிரிந்தால் தாய்பக்ஷத்திலேயிறே ப்ரஜைகள் நிற்பது.

அவள், ‘இங்ஙனேயாகில் திறந்து கொண்டு புகுருங்கோள்’ என்ன;-(செந்தாமரைக்கையால் இத்யாதி) நீதானே வந்து திறக்கவேணும். செந் தாமரைக்கை – அவனும் ஆசைப்படும் கை. “பவேயம்  ஶரணம் ஹி வ: ‘ஈஸ்வர ஸ்வாதந்தர்யத்துக்கு நீங்கள் அஞ்சவேண்டா’ என்னும் கை. அவள் ‘அப்படியே செய்கிறோம்’ என்று முன்கையில் வளையைக் கடுக்கித் திறக்கப் புக்காள்:  (சீரார்வளை  ஒலிப்ப) – வளைக்குச் சீர்மையாவது-கழலாதிருக்கை.  சங்குதங்கு முன்கை நங்கையிறே.   நாங்களும் அந்த த்வநிகேட்டு வாழும்படி  தங்கள் கைகள்,   “இருகையில் சங்கிவை நில்லா ” என்றிறே இருப்பது;   “சூடகமே தோள்வளையே’  என்று-  அவர்களிருவரும் கூடிப் பூட்டினாலிறே இவர்களுக்கு உள்ளது. இப்பாட்டு, எம்பெருமானார் விாேஷித்து உகந்தபாட்டு

(வந்து திறவாய்) யந்த்ரத்தாலே திறக்கவொண்ணாது, உன்னுடைய நடையழகு காணும்படி வந்து திற. (மகிழ்ந்து) ‘அர்த்தி,கள் வாசலிலே நிற்க வேறு அநுபவமுண்டோ?’ என்று தர்மத்துக்குத் திறக்கையன்றிக்கே, பேறும் உன்னதாகவேணும். (மகிழ்ந்து) க்ருஷ்ணஸம்ஸ்லேஷத்தாலே வந்த ஹர்ஷப்ரகர்ஷம் முத்திலே தோற்றும்படி என்னவுமாம்.

@@@@@

பத்தொன்பதாம் பாட்டு

        குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்

        மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

        கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

        வைத்துக்கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்

மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை

எத்தனைபோதும் துயிலெழ வொட்டாய் காண்

எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்.

 அவதாரிகை – பத்தொன்பதாம் பாட்டு.  இவள் திறக்கப் புக, “நம்முடையார்க்கு இவள் திறக்க முற்பட்டாளென வொண்ணாது” என்று இவளைத் திறக்கவொட்டாதே கட்டிக்  கொடு கிடக்கிற க்ருஷ்ணனை எழுப்பி, அங்கு மறுமாற்றம் கொள்ளாமையாலே மீளவும் அவனை உணர்த்துகைக்காக அவளை எழுப்புகிறார்கள்.  இத்தால் – ஆஶ்ரிதர்க்கு மாறி மாறிப் பரிகைக்கு “என்னடியார் அது செய்யார்” (பெரியாழ்வார் திரு – 4.9.2) என்னுமவனும், “ந கஶ்சிந்நாபராத்யதி” என்னுமவளும் இருவரும் உண்டென்கை. 

வ்யாக்யானம் – (குத்து விளக்கெரிய இத்யாதி) அர்த்திகள் வாசலிலே நிற்க ஓரநுபவமுண்டோ? என்கிறார்கள்.  எங்களைப்போலே ஊராரிசைவும் வேண்டாதே, “கீழ்வானம் வெள்ளென்றது” (8) என்கிற பயமுமின்றிக்கே, “நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்” (நாச்சி – 12.3) என்று இருட்டுத் தேடவும் வேண்டாதே பகலை இரவாக்கிக்கொண்டு விளக்கிலே க்ருஷ்ணன் முகத்தைப் பார்த்துக்கொண்டு படுக்கையிலே கிடக்கப் பெறுவதே! இதென்ன ஐஶ்வர்யம்! என்கிறார்கள்.  “அதீவ ராம: ஶுஶுபே” என்று இவள் அவனுக்கும் ப்ரகாஶகமான விளக்காயிருக்க, ஓர் நிலை விளக்கு உண்டாவதே! (கோட்டுக்கால் கட்டில் மேல்) குவலயாபீடத்தின் கொம்பைப் பறித்துக் கொண்டுவந்து செய்த கட்டிலிறே.  வீரபத்நியாகையாலே இவளுக்கு இதிலல்லது கண் உறங்காது.  எங்களைப்போலே ஶ்ரீ ப்ருந்தாவநம் தேடிப் போகவேண்டாதே உள்ளகத்துக்குள்ளே கூச்சமறக் கிடக்கப் பெறுவதே! இது என்ன பாக்யம்!  (கட்டில்) மாணிக்கத்தாலே செய்யிலும் “கட்டில்” என்று ஜாதிப்பேச்சு.  (மெத்தென்ற) நாங்கள் ஆர்த்தைகளாய் வந்து கிடக்க, படுக்கையின் உள் மானம் புற மானம் கொண்டாடிக்கொண்டு படுக்கைப்  பொருந்துவதே!  கண் உறங்குவதே!  (பஞ்ச சயநத்தின் மேலேறி) பஞ்ச விதமான படுக்கையில் மேலேறி, அதாவது – அழகு, குளிர்த்தி, மார்த்தவம், பரிமளம், தாவள்யம் ஆக இவை.  இவர்களுக்கு “மென்மலர் பள்ளி வெம்பள்ளி”யாயிறே இருப்பது (திருவாய் – 9.9.4)     அஞ்சு உருவிட்டுச் செய்த படுக்கை என்றுமாம்.  பஞ்சாலே செய்த படுக்கை என்னவுமாம்.  (மேலேறி) “பாதேநாத்மாரோஹதி”  என்று நாங்கள் மிதித்தேறி னாலன்றோ  நீ படுக்கையிலே ஏறுவதென்கை. 

(கொத்தலர் பூங்குழல் நப்பின்னை) திருக்குழலில் ஸ்பர்ஶத்தாலே கொத்துக்கொத்தாக அலரா நின்றுள்ள பூவையுடைத்தான குழல்.  காலம் அலர்த்துமாபோலே, அவளோட்டை ப்ரணய கலகத்தாலே அலருகை.  “வாசஞ்செய் பூங்குழலாளிறே” (கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா) கொங்கையை தன் மேல் வைத்துக் கிடக்கை, கொங்கைமேல் தன்னை வைத்துக்கிடந்த என்னவுமாம்; “ந ஶாஸ்த்ரம் நைவ ச க்ரம:” என்றிறே ப்ரணயம் இருப்பது.  “பர்யாயேண ப்ரஸுப்தஶ்ச” என்றும் உண்டிறே.  “மலையை அண்டைகொண்டு ஜீவிப்பாரைப் போலே”.  மலராள் தநத்துளான்” என்னக்கடவதிறே (மூன்றாம் திரு – 3).  (மலர்மார்பா) திருமுலைத் தடங்கள் உறுத்துகையாலே அகன்றிருந்துள்ள மார்பு.  இவ்விக்ருதியால், “ஸதைகரூபரூபாய” என்றதோடு விரோதியாதோ? என்னில், விரோதியாது; அது ஹேயகுணங்களில்லை என்கிறது.  ஆஶ்ரித ஸம்ஶ்லேஷத்தில் அவிகாரித்வம் அவத்யமித்தனையிறே.  (வாய் திறவாய்) உன் கம்பீரமான மிடற்றோசையாலே ஒரு வார்த்தை சொல்லாய்.  “ஆர்த்தோ யதி வா த்ருப்த:” என்ற உனக்கு உன்னாலல்லது செல்லாதே உன் புறப்பாடு பார்த்திருக்கிற எங்களுக்கு ஒரு வார்த்தையும் அரிதோ? அவள் புறப்படவொட்டாளாகில் கிடந்தவிடத்தே கிடந்து “மா ஶுச:” என்று ஒரு உக்தி நேருகையும் அரிதோ?

(மைத்தடங்கண்ணினாய்) இவள் மறுமாற்றம் சொல்லப்புக, நம்மையொழிய தாங்களே எழுப்புவதே! என்று, கண்ணாலே “வாய்வாய்” என்று வாயை நெரித்தாள்.  அழகாலும் பரப்பாலும் கண்ணிலே அகப்பட்டவள் அக்கடலை கரைக்கண்டாலிறே நம்மைப் பார்ப்பது!  “ந ஜீவேயம் க்ஷணமபி” என்னப்பண்ணும் கண்ணிறே.  “மையிட்டெழுதோம்” (2) என்றிருக்கிற எங்களையும் மையிடப்பண்ணினாலன்றோ நீ கண்ணுக்கு மையிடுவது; உன்னுடைய கண்ணிலழகும் பெருமையும் எங்கள் பேற்றுக்கு உடலென்றிருந்தோம், அது இழவுக்கு உடலாவதே!

(நீ) அவனைப் பெறுகைக்கு  அடியான நீ அவனை விலக்கக் கடவையோ?  (உன் மணாளனை) “கோபீ ஜந  வல்லப:” என்றும் “லோக பர்த்தாரம்” என்றும் சொல்லுகிற பொதுவையொழிய உனக்கே ஸ்வம்மாய் நீ புருவம் நெரித்தவிடத்திலே கார்யம் செய்யும்படி பவ்யனாயிருக்கும் இருப்பு எங்களுக்குடலென்றி ருந்தோம், அங்ஙனன்றிக்கே இனி உனக்கே ஶேஷமென்றிருக்கிறோம் என்கிறார்கள்.  (எத்தனை போதும் துயிலெழவொட்டாய் காண்) ஒரு க்ஷணமும் அவனை எழுந்திருக்கவொட்டுகிறதில்லை, புணர்ச்சிக்காகப் பிரியவும் பயப்படுவுதி.

(எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்) அது உன் குறையோ?  அவனை க்ஷணகாலமும் பிரியமாட்டாத உன்னுடைய பலஹானியின் குறையன்றோ?  “அகலகில்லேன் இறையும்” (திருவாய் – 6.10.10) என்று க்ஷணகால விஶ்லேஷமும் பொறுக்கமாட்டாமையாலே, அவளோட்டை நித்திய ஸம்யோகம் எங்களுடைய லாபத்துக்கு உடலாகையொழிய விபரீத பலமாவதே!

(தத்துவம் அன்று தகவு) தத்வம் – ஸத்யம்; தகவன்று – தர்மமன்று; எங்களறியாமையில் சொல்லுகிறோ மல்லோம்; மெய்யே தர்மமன்று.  (தகவு – தத்வமன்று) “பாபானாம் வா ஶுபானாம் வா” என்னும் உனக்கு “அஹத்வா ராவணம் ஸங்க்யே” என்ற அவனில் வாசியில்லை என்றிருக்கிறோம்.  அதவா, (தத்துவமன்று) தத்வம் – ஸ்வரூபம்; உன் ஸ்வரூபத்துக்கும் போராது, (தகவன்று) உன்னுடைய ஸ்வபாவத்துக்கும் போராது; உன்னுடைய புருஷகாரபாவத்துக்கும் போராது; க்ருபைக்கும் போராது.

@@@@@

இருபதாம் பாட்டு

        முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

        கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்

        செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

        வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!

        செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

        நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்!

        உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை

        இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – இருபதாம் பாட்டு.  அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ எங்களை நீராட்டுவது என்று க்ருஷ்ணனையும் நப்பின்னைப் பிராட்டியையும் கூட எழுப்புகிறார்கள்.

வ்யாக்யானம் – (முப்பத்து மூவர்) ரக்ஷணத்துக்கு ஸங்க்யா நியதியுண்டோ? பஞ்சலக்ஷம் குடியில் பெண்களானால் ரக்ஷிக்கலாகாதோ?  ஆர்த்தியே கைம்முதலாக ரக்ஷிக்குமவனல்லையோ? (அமரர்க்கு) எல்லாவளவிலும் சாவாதார்க்கோ உதவலாவது? உன் நோக்குப் பெறாவிடில் சாகும் எங்களுக்கு உதவலாகாதோ? முகாந்தரத்தாலே ஜீவிப்பார்க்கோ உதவலாவது? உன் முகத்தாலே ஜீவிப்பார்க்கு உதவலாகாதோ? ப்ரயோஜநாந்தரபரருமாய், மிடுக்கரு மானார்க்கோ உதவலாவது? அநந்யப்ரயோஜனை களுமாய், அபலைகளுமாயிருப்பார்க்கு உதவலாகாதோ?  (முன் சென்று) நோவு வருவதற்கு முன்னே சென்று.  ஏற்கவே ரக்ஷிக்கக்கடவ நீ நோவுபட்ட எங்களை ரக்ஷிக்கலாகாதோ?  (சென்று) நீ சென்று உதவக்கடவ உனக்கு, உன் வாசலிலே வந்த எங்களுக்கு உதவலாகாதோ? உன் பக்கலிலே வருகை மிகை என்னுமவனல்லையோ? எழுதுமென்னுமிது (திருவாய் – 9.3.9) மிகையாயன்றோ இருப்பது.  (கப்பம் தவிர்க்கும்) “கம்பம்” என்கிற இத்தை “கப்பம்” என்று வலித்துச் சொல்லுகிறது; அதாகிறது – நடுக்கம்.  கம்பம் தவிர்கையாவது  – “தேவா: ஸ்வர்க்கம் பரித்யஜ்ய” என்று – அஸுர ராக்ஷஸாதிகளாலே குடியிருப்புமகப்பட இழந்து க்லேஶித்த அத்தைத் தவிர்க்கை.  நாட்டார் நடுக்கத்தைத் தவிர்க்கக்கடவ நீ எங்களை நடுங்கப்பண்ணாதே கொள்ளாய்.  துக்க நிவ்ருத்தியை ஆசைப்பட்ட தேவர்களுக்கோ உதவலாவது? நீ உணறும்படி காண ஆசைப்பட்டார்க்கு உதவலாகாதோ?  (கலியே) மிடுக்கையுடையவனே! அபலைகளான எங்களுக்கு உன் மிடுக்கையொழியவுண்டோ?  அரணிமையை உடையவனே என்றுமாம்.  (துயிலெழாய்) தேவதைகளுக்கு குடியிருப்பும் ஜீவனமும் போலே எங்களுக்கு நீ உணரும்படி காண்கை.  (செப்பமுடையாய்) ஆஶ்ரிதர்க்கு செவ்வை அழியாதிருக்குமவனே!  எங்களுக்குச் செவ்வை அழியாதிருக்க வேண்டாவோ?  செப்பம் – ரக்ஷ என்றுமாம்.  (திறலுடையாய்) திறல் – பராபிபவன ஸாமர்த்யம்.  அநாஶ்ரிதற்கன்றிக்கே எங்களுக்கு அணுகவொண்ணாதிருக்கைக்கோ?  (செப்பமுடையாய் திறலுடையாய்) பாண்டவர்களுக்கு செவ்வியனாய், துர்யோதனாதிகளுக்கு அநபிபவநீயனானவனே!  திறல் – மிடுக்காகவுமாம்.

(செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா) நீ ஆஶ்ரித விரோதிகளுக்கு துக்கத்தைப் பண்ணும்.  “செய்குந்தா வரும் தீமை” (திருவாய் – 2.6.1) இத்யாதி. இப்போது அநுகூலர் பக்கத்திலாய்த்தோ?  விமலா  என்றது – ஸம்பந்தம் ஒத்திருக்க ஆஶ்தர்க்காக கண்ணற்று அழிக்கவல்ல ஶுத்தி.  (துயிலெழாய்) அம்பு எய்யவேணுமோ எங்களுக்கு? எழுந்திருந்து நோக்க அமையாதோ?

(செப்பென்ன மென்முலை) அவன் பக்கல் மறுமாற்றம் பெறாமையாலே புருஷகாரபூதையான நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள்.  மேல், அவன் அகப்படும் சுழிகள் சொல்லுகிறது.  நிதி கிடக்கும் செப்புபோலே அவன் கிடக்குமிடம்.  “மலராள் தநத்துள்ளான்” (மூன்றாம் திரு – 3) என்னக்கடவதிறே.  செப்புபோலே ஸந்நிவேஶம் என்னவுமாம்.  (மென்முலை) விரஹ க்ஷமனன்றிக்கே இருக்கை.  (செவ்வாய்) அவனை தனக்காக்கிக் கொள்ளும் ஸ்மிதம்;  அந்த முலையிலே யிருந்து அநுபவிக்கும் ஜீவநம்.  (சிறு மறுங்குல்) அதரத்தை புஜிக்கும்போது துணுக்கோடே இருக்கவேண்டியிருக்கை.  (சிறு மருங்குல்) மேலும் கீழும் கொண்டு “இடையுண்டு” என்று அறியும்படி பயஸ்த்தானமாயிருக்கை.  (நப்பின்னை நங்காய்) பூர்ணையானவளே!  பூர்த்தியாகிறது – அநுக்த ஸௌந்தர்ய ஸமுச்சயம்.  (திருவே) “ஒசிந்த ஒண்மலராள்” (திருவாய் – 6.7.8) என்னுமாபோலே ஸம்ஶ்லேஷத்தாலே வந்த துவட்சி.  (துயிலெழாய்) நீ உணர்ந்து  எங்கள் ஸத்தையை உண்டாக்காய்.  (திருவே துயிலெழாய்) பிராட்டியைப் போலே ஆஶ்ரிதைகளான எங்களுக்காக உணரவேண்டாவோ?  ஆஶ்ரிதர்க்காக அன்றோ பத்து மாஸம் உறங்காதிருந்தது.

எழுந்திருந்து உங்களுக்கு செய்ய வேண்டுவது என்? என்ன, (உக்கமும் இத்யாதி) உக்கம் – ஆலவட்டம்;  தட்டொளி – கண்ணாடி.  பறை என்றுமாம்.  (உன் மணாளனை) உன் புருவம் நெரித்தவிடத்திலே கார்யம் செய்யும்படி பவ்யனானவனே.  உக்கத்தோபாதி அவனையும் இவள் தரவேணுமென்கை.  உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு என்றுமாம்.  (இப்போதே) பிற்றைப்போதைக்கு இராத எங்களை.  (எம்மை) “ஏஹி பஶ்ய ஶரீராணி” என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறார்கள்.  (எம்மை) “பேய்ப் பெண்ணே”   என்றும், “நாயகப் பெண்பிள்ளாய்”  என்றும் தங்களைத் தாங்களே சொல்லுமித்தனை, பேற்றில் வந்தால் எல்லாரும் ஒத்திருப்பார்கள் என்றுமாம். 

(எம்மை) எங்களையும் அவனையும் கூட முழுக்கூட்டவேணும் என்றுமாம்.  (நீராட்டு) “தாரா: பித்ரு க்ருதா இதி” என்னுமாபோலே இவர்கள் உகப்பது இவள் தந்த க்ருஷ்ணனென்று.  பெருமாள், பிராட்டியுடைய ஸௌந்தர்யாதிகள் கிடக்க, ஐயர் பண்ணிவைத்த  விவாஹமென்று உகப்பர்; அதுபோலே, க்ருஷ்ணன் பக்கல் ப்ராப்தியும் போக்யதையும் கிடக்க, இவள் தந்த க்ருஷ்ணன் என்று உகப்பர்கள். 

@@@@@

இருபத்தொன்றாம் பாட்டு

        ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப

        மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்

        ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்!

        ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில்

        தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்

        மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசற்கண்

        ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே

        போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்

அவதாரிகை – இருபத்தொன்றாம் பாட்டு.  நப்பின்னைப் பிராட்டி, “போகத்திலே வந்தால் நானும் உங்களிலே ஒருத்தியன்றோ? நாமெல்லாருங்கூடி க்ருஷ்ணனை அர்த்திக்க வாருங்கோள்“ என்ன, அவன் குணங்களிலே தோற்றார் தோற்றபடி சொல்லி எழுப்புகிறார்கள். 

வ்யாக்யானம் – (ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப) ஏற்ற கலங்களெல்லாம் எதிரே பொங்கி வழியும்படி.  கலமிடாதார் தாழ்வே.  இட்ட கலங்களெல்லாம் நிறையும்; ஏலாத கலங்கள் நிறையாதொழிகிறது பாலின் குறையன்றே.  (ஏற்ற கலங்கள்) பெருமை சிறுமை இல்லை; கடலை மடுக்கிலும்  நிறைக்குமித்தனை; இவையும் க்ருஷ்ணன் படியாயிருக்கை;  அர்த்தியாதார் குற்றமத்தனைபோக்கி அவன் பக்கல் குறையில்லை; ஸ்வீகாரமே அமையுமிறே அவனுக்கு.  (மாற்றாதே பால் சொரியும்) முலைக் கடுப்பாலே கலமிடுவாரில்லை யென்னா அது தவிறாது.  (வள்ளல்) சிலருக்கு உபகரித்ததாக இல்லையன்றிக்கே தன் கார்யம் செய்ததாக உபகரிக்கை.  க்ருஷ்ணனைப்போலே பெண்ணுக்கும் பேதைக்கும் அணைக்கலாம்படி பவ்யமாயிருக்கை என்றுமாம்.  (பெரும் பசுக்கள்) க்ருஷ்ணன் ஸ்பர்ஶத்தாலே வளருகையாலே ஶ்ரீ ஶத்ருஞ்சயனைப்போலே இருக்கை.

(ஆற்றப் படைத்தான்) “கழியாறும் கனசங்கும் கலந்தெங்கும் நிறைத்தேறி வழியார முத்தீன்று வளம் கொடுக்கும் திருநறையூர்”.  அதாவது – தொகை யின்றிக்கே இருக்கை.   (படைத்தான் மகனே) அவர்க்கு ஆர்ஜித்து வந்தது.  இவன் பிறந்து படைத்த ஸம்பத்து.  இத்தால் – “பதிம் விஶ்வஸ்ய” என்கிறதிற்காட்டிலும் ஶ்ரீ நந்தகோபர் ஸம்பத்துக்கு இட்டுப் பிறந்த ஏற்றம்;  பரமபதம் போலேயும் நாராயணத்வம் போலேயும் தான்தோன்றியன்றே இது.  (அறிவுறாய்) ஸர்வஜ்ஞனானவனை உணர்த்தவேண்டியிறே உள்ளு செல்லுகிறது.  கைபட்ட பெண்களை சரக்கிலே வாங்கி, கைப் படாதவர்களை கைப்படுத்துகைக்காக உண்டான உபாயாந்யபரதையாலே எழுப்புகிறார்களாகவுமாம். 

(ஊற்றமுடையாய்) த்ருட ப்ரமாணஸித்தனாகை.  (பெரியாய்) “அப்ராப்ய மநஸா ஸஹ” என்றும், “யஸ்யாமதம் தஸ்ய மதம்” என்றும், அந்த ப்ரமாணங்களுக்கும் தன்னுடைய அவதி காணவொண்ணாதிருக்கை.

(உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே) என்னும் ஓலைப்புறத்திலே கேட்டுப் போகையன்றிக்கே எல்லாரும் காணலாம்படி அஜஹத் ஸ்வபாவனாய்க் கொண்டு அவதரித்து “ஸகலமநுஜ நயநவிஷய தாங்கத”னானவனே!  (சுடரே) ஸம்ஸாரிகளைப்போலே பிறக்கப் பிறக்கக் கறையேறுகையன்றிக்கே, சாணையிலிட்ட மாணிக்கம்போலே ஒளிவிடாநிற்கை.  “ஸ உ ஶ்ரேயான் பவதி ஜாயமான:” என்றும், “மாநுஷீம் தநுமாஶ்ரிதம் பரம்பாவமஜாநந்த:” என்றும், “நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளிவருமுழுநலம்” (திருவாய் – 1.3.2) என்றும் சொல்லக்கடவதிறே.

(ஊற்றமுடையாய்) ஆஶ்ரித விஷயத்தில் பண்ணின ப்ரதிஜ்ஞையை மஹாராஜருள்ளிட்டாரும் விடவேண்டு மென்றாலும் விடாதே முடிய நின்று தலைக்கட்டுகை. (பெரியாய்) அந்த ப்ரதிஜ்ஞா ஸம்ரக்ஷணத்த ளவன்றியேயிருக்கும் பலமென்றுமாம்.  (பெரியாய்) ஆஶ்ரித விஷயத்தில் எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யப்பெற்றிலோம் என்றிருக்கை என்றுமாம்; தன் பேறாயிருக்கை என்றுமாம்; தன் பெருமைக்கீடாக ரக்ஷிக்குமவனென்றுமாம்.  (உலகினில் தோற்றமாய் நின்ற) கீழ்ச் சொன்ன ஆஶ்ரித பக்ஷபாதம் லோகத்திலே ப்ரஸித்தமாம்படி இருக்கை.  அதாவது – ஶிஶுபால துர்யோதனாதிகளுக்கும் பாண்டவர்கள் பக்கல் பக்ஷபாதம் தோற்ற இருக்கை.  (சுடரே) லோகத்திலே தோற்றின பின்பு நிறம்பெற்றபடி.  (துயிலெழாய்) இப்போது உணராமையாலே அந்த குணமும் மழுங்கவிறே புகுகிறது. 

(மாற்றார் இத்யாதி) ஶத்ருக்களானவர்கள் உன் மிடுக்குக்குத் தோற்று போக்கடியில்லாமையாலே உன் திருவடிகளிலே வந்து விழுமாப்போலே;  மாற்றார் தங்கள் வலி மாண்டு வந்து விழுமாபோலே என்றுமாம்.  மாற்றார் என்று ஶத்ருக்கள்.  நாராயணனாகையாலே ஸம்பந்தம் எல்லாரோடும் ஒத்திருக்க, இவனுக்கு ஶத்ருக்கள் உண்டோ?  என்னில், ஆஶ்ரித விரோதிகள் இவனுக்கு ஶத்ருக்கள்.  இத்தால், அம்புக்குத் தோற்று எதிரிகள் வருமாபோலே உன் குணங்களுக்குத் தோற்று வந்தோமென்கை.  அவர்களுக்கு முடிந்து பிழைக்கலாம், குணஜிதற்கு அதுக்கும் விரகில்லையிறே.  ப்ரஹ்மாஸ்த்ரம் விடவேண்டும்படி பிராட்டி பக்கலிலே அபராதத்தைப் பண்ணி, “த்ரீன் லோகான் ஸம்பரிக்ரம்ய – ஸ பித்ரா ச பரித்யக்த:” என்று ஓரிடத்திலும் புகலற்று “தமேவ ஶரணங்கத:” என்று பெருமாள் திருவடிகளிலே விழுந்த காகம்போலே இருக்கை.  “ஸத்யேந  லோகான் ஜயதி” என்று அம்பு பட்டாரோபாதி குணஜிதரென்றதிறே.

(போற்றி) போற்றுகையாவது – திருப்பல்லாண்டு பாடுகை; பெரியாழ்வார் போலே வந்தோம்.  (யாம் வந்தோம்) அவர் தம்மைப் பேணாதே உன்னைப் பேணினாற்போலே  நாங்களும் எங்கள் ஸ்வரூபத்தைப் பாராதே ஆற்றாமை இருந்தவிடத்தே இருக்க வொட்டாமையாலே வந்தோம்.  நசை முடியவொட்டாது.  ஆற்றாமை இருந்தவிடத்தே இருக்கவொட்டாதிறே. 

(யாம் வந்தோம்) ஶத்ருக்கள் துரபிமாநத்தாலே “ந நமேயம்” என்றிருக்குமாபோலே, ஸ்வரூப ஜ்ஞாநத்தாலே, “தத்தஸ்ய ஸத்ருஶம் பவேத்” என்று இருக்கும் நாங்கள் ஆற்றாமை இருக்க வொட்டாமையாலே வந்தோம்.  (புகழ்ந்து) எங்களைத் தோற்பித்த குணங்களைச் சொல்லி.

@@@@@

இருபத்திரண்டாம் பாட்டு

        அங்கண் மாஞாலத்தரசர் அபிமான

        பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற் கீழே

        சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

        கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே

        செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ

        திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்

        அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

        எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – இருபத்திரண்டாம் பாட்டு.  கீழ் பாட்டில் தங்களுடைய அபிமான ஶூந்யதையைச் சொல்லிற்று; இப்பாட்டில் – அநந்யார்ஹஶேஷத்வம் சொல்லுகிறது. 

வ்யாக்யானம் – (அங்கண்) அழகிய இடம்.  ப்ரஹ்மாவுக்கும் தன் போகோபகரணங்களோடு அநுபவிக்கலாயிருக்கை; பிபீலிகைக்கும் தன் போகோபகரணங்களோடே அநுபவிக்கலாயிருக்கை.  (மா ஜ்ஞாலத்து அரசர்) மஹா ப்ரித்வியில் ராஜாக்கள்.  “இப்பரப்பெல்லாம் என்னது” என்று அபிமாநம் பண்ணுகை.  “யாவையும் யாவரும் தானாய் அமைவுடை நாரணன்” (திருவாய் – 1.3.3) என்கிறத்தை பௌண்ட்ரக வாஸுதேவனைப்போலே அநுகரிக்கிறபடி.  (அபிமான பங்கமாய் வந்து) அபிமான ஶூந்யராய் வந்து.  ராஜ்யங்களை இழந்து எளிவரவுப் பட்டு வந்து.  (நின் பள்ளிக் கட்டில் கீழே) அந்த ராஜ்யங்களைக் கொடுத்து “போங்கோள்” என்றாலும், பழைய எளிவரவை நினைத்து அவை வேண்டா என்று, உன் ஸிம்ஹாஸநத்தின் கீழே.  (சங்கம் இருப்பார் போல்) திரளவிருந்து அணுக்கோலக்கமாக இருக்குமவர்களைப்போலே.  அவர்கள் போக்கற்றுப் புகுந்தார்கள்; இவர்கள் கைங்கர்யத்திற்குப் புகுந்தார்கள்.  “குணைர் தாஸ்ய முபாகத:” என்று – இளையபெருமாளைப்போலே இவர்களையும் க்ருஷ்ணகுணம் தோற்பித்து, அடிமையிலே மூட்டிற்று.  (வந்து தலைப் பெய்தோம்) கீழ் எல்லாரையும் எழுப்பி பட்ட வ்யஸநமெல்லாம் ஸபலமாம்படி வந்து கிட்டப்பெற்றோம்.  அநாதிகாலம் இந்த ஸம்பந்தத்தை இழந்து போந்த நாங்கள் இன்று நிர்ஹேதுகமாகக் கிட்டப்பெற்றோம்.  “மந்யே ப்ராப்தா: ஸ்ம தம் தேஶம் பரத்வாஜ: யமப்ரவீத்” என்னுமாபோலே, ஒருபடி வந்து கிட்டப் பெறுவதே!” என்கை.  “வாநராணாம் நராணாஞ்ச கதமாஸீத் ஸமாகம: –  ராம ஸுக்ரீவயோரைக்யம் தேவீ ஏவம் ஸமஜாயத”  என்று விஸத்ருஶமான இது ஸங்கதமாகப் பெறுவதே! ஆக, இந்த ராஜாக்கள் தந்தாமுடைய அபிமாநங்களை விட்டும் அம்புக்குத் தோற்று உன் கட்டில் காலிலே படுகாடு கிடக்குமாபோலே, நாங்களும் எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமாநத்தை விட்டும், வேறு உண்டான போகங்களை விட்டும், உன்னுடைய குணஜிதராய்கொண்டு வந்தோம்.  அதவா, அந்த ராஜாக்களைப்போலே, நாங்களும் அநாதிகாலம் பண்ணிப்போந்த தேஹாத்மாபிமானத்தை விட்டு தேஹாத்பரனான ஆத்மாவின் பக்கல் ஸ்வாதந்த்ர்யத்தையும் விட்டு, அநந்யப்ரயோஜனராய் வந்தோம் என்றுமாம். 

(கிங்கிணி வாய்ச் செய்த தாமரைபூப்போலே) ஆதித்யனைக் கண்டால் அலரக்கடவ தாமரைப் பூப்போலே; எங்கள் ஆற்றாமைக்கு அலருமவையிறே இவை.  அர்த்திகளைக் கண்டால் அலருமவையிறே இந்தத் தாமரைப்பூ.  (செங்கண்) வாத்ஸல்யத்தாலே சிவந்திருக்கை.  உபமாநம் நேர் நில்லாமையாலே உபமேயந்தன்னையே சொல்லுகிறதாகவுமாம்.  (சிறுச்சிறிதே) ஒரு நீர்ச்சாவியிலே  வெள்ளமாகாமே ஸாத்மிக்க ஸாத்மிக்க என்கை.  ப்ரதம பரிஸ்பந்தமே பிடித்து காணவேணுமென்றுமாம்.  (எம்மேல் விழியாவோ) கோடையோடின பயிரிலே ஒரு பாட்டம் என்னுமாப்போலே, சாதகம் வர்ஷதாரையை ஆசைப்படுமாபோலே, “விழியாவோ” என்று தங்கள் மநோரதம்.

(திங்களும் இத்யாதி) ப்ரதிகூலர்க்கு அணுக வொண்ணாமையும், அநுகூலர்க்கு தண்ணளி மிக்கிருக்கையும்;  அஜ்ஞாநாந்தகாரம் போகைக்கும் உன்னைப் பெறாத விடாய் அறுகைக்கும் என்றுமாம்.  “ப்ரஸந்நாதித்ய வர்ச்சஸம்”.  தண்ணளியும் ப்ரதாபமும் கூடியிறே இருப்பது.  (அங்கணிரண்டும் கொண்டு) சந்த்ர சூர்யர்கள் கோப ப்ரஸாதங்களுக்கு ஒப்பல்ல என்கை.  “சந்த்ர காந்தாநநம் ராமமதீவ ப்ரியதர்ஶனம்” என்னக்கடவதிறே.  (இரண்டும் கொண்டு) முழு நோக்கு பொறுக்குமளவானவாறே இரண்டும் என்று சொல்லுகிறார்கள்.  (எங்கள் மேல்) உன் நோக்குப் பெறாதே உறாவின எங்கள் பக்கல்.  (நோக்குதியேல்) தங்கள் தலையால் கிட்டுவதொன்றன்றே.  (எங்கள் மேல் சாபம் இழிந்து) யாதநா ஶரீரம் போலேயும், ஶாபோபஹதரைப்போலேயும், விஶ்லேஷவ்யஸனமே படுகிற எங்கள் துக்கம், அநுபவித்தே விடவேண்டுகையாலே “சாபம்” என்கிறது.  அன்றியே,  விஷஹாரியானவன் பார்க்க விஷம் தீருமாபோலே, அவன் நோக்காலே ஸம்ஸாரமாகிற விஷந்தீரும்;  ஆகையால், அங்கணிரண்டுங்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழியும் என்று அந்வயம். 

@@@@@

இருபத்து மூன்றாம் பாட்டு

        மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

        சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

        வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

        மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு

        போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்

        கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

        சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த

        காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – இருபத்திமூன்றாம் பாட்டு.  “வசஸா ஸாந்த்வயித்வைநம்” என்று – ஹிதபரரைப்போலே சாந்த்வநம் பண்ணுமவனாகையாலே, பெண்களை சாந்த்வனம் பண்ணியருளினான்;  அவ்வளவிலே, “நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டருளவேணும்” என்கிறார்கள்.

வ்யாக்யானம் – (மாரி மலை முழைஞ்சில்) வர்ஷகாலம் ராஜாக்கள் படைவீடுவிட்டுப் புறப்படாதாபோலே, ஸிம்ஹமும் வர்ஷகாலம் முழைஞ்சை விட்டுப் புறப்படாது;  பெருமாள் வர்ஷகாலம் மால்யவானிலே எழுந்தருளியிருந்தாற்போலே.  விஶ்லேஷித்தார் கூடுங்காலமுமாய், கூடியிருந்தார் போகரஸம் அநுபவிக்கும் காலமுமாயிருக்க, நாங்கள் உன் வாசலிலே நின்று துவளக்கடவோமோ? என்கை.  (மன்னிக்கிடந்து) மிடுக்காலே ஒருவர்க்கும் அஞ்வேண்டாமையாலே குவடுபோலே பொருந்தி வீசுவில்லிட்டு எழுப்பினாலும் எழுப்பப் போகாதாயிருக்கை.  (மன்னிக் கிடந்து உறங்கும்) தன் பேடையோடே ஏகவஸ்து என்னலாம்படி பொருந்திக் கிடக்கிற என்றுமாம்.  இங்கு “நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா” (19) என்று நப்பின்னைப் பிராட்டிக்கு ஓராபரணம் என்னலாம்படியிறே முலையோடு பொருந்தி கிடக்கிறபடி.  (உறங்கும்) ஸம்ஸாரிகள் உறக்கம்போலே தமோபிபூதியாலன்றே இவனுறக்கம்; வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வருமளவும். ஆகையாலே, அவ்வுறக்கத்திற்கு ஸ்மாரகமாயிருக்கை.  (சீரிய சிங்கம்) உறக்கத்திலும் க்ஷுத்ர ம்ருகங்கள் மண்ணுண்ணும்படி வீரஶ்ரீயையுடைத்தாயிருக்கை.  “ஸ மயா போதித: ஶ்ரீமான்” என்னும்படிக்கு ஸ்மாரகமாயிருக்கை. 

(அறிவுற்று) பூ அலர்ந்தாற்போலே காலம் உணர்த்த உணருகை.  ஸம்ஸாரிகள் காலம் உணர்த்த உணருவார்கள்;  இவன் ஆஶ்ரிதர் ஆர்த்தி உணர்த்த உணரும்.  (தீ விழித்து) ப்ரதம கடாக்ஷஸந்நிபாதத்திலே  பேடைக்கும் நிற்கவொண்ணாதிருக்கை.  ஐஶ்வரமான தேஜஸ்ஸு முன் ஒருவர்க்கும் நிற்கவொண்ணா திருக்கை.  (வேரி மயிர் பொங்க) வேரி – பரிமளம்.  ஜாத்யுசிதமான கந்தம்.  உளை மயிர் பொங்க – சிலும்ப.  “ஸர்வ கந்த:” என்னும்படிக்கு  ஸ்மாரகமாயிருக்கை.  (எப்பாடும் பேர்ந்துதறி) ஒரு காரியப்பாடு இல்லாமையாலே நாலுபாடும் பேருகிறபடி.  (உதறி) அவயவங்களை தனித்தனியே உதறினபடி.  (மூரி நிமிர்ந்து) உடல் ஒன்றாக நிமிர்ந்தபடி.  (முழங்கி) ஸ்வ வ்யதிரிக்த ம்ருகங்கள் முழுக்காயாக அவிந்து கிடக்கும்படி;  “பெண்காள்! வந்திகோளே!” என்கை. 

மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டுப் போதருமாபோலே நீ போதரவேணும்;  “ஸிம்ஹமே நமக்கு த்ருஷ்டாந்தமோ?” என்ன, (நீ பூவைப்பூவண்ணா) காம்பீர்யத்துக்கு த்ருஷ்டாந்தமாக ஒன்றைச் சொன்னோமித்தனை; வடிவழகையும் நிறத்தையும் உன்னைப்போலே பண்ணப்போமோ?  பூவைப்பூவின் நிறம் உனக்கு த்ருஷ்டாந்தமானவன்றிறே ஸிம்ஹம் உனக்கு த்ருஷ்டாந்தமாவது என்னவுமாம்.

(உன்கோயில்நின்று இங்ஙனே i போந்தருளி) j 1. “பர்வதாதிவே நிஷ்க்ரம்ய ஸிம்ஹோ கிபூரிகுஹாஶய:” என்று பிராட்டி மங்களாஸாஸநம் பண்ண ஸுமந்த்ரனோடே புறப்பட்டாற்போலே காணவேணும். (போந்தருளி) “சதுர்க்கஆதியிறே; – நடையிலே, ரிஷத்தினுடைய வீறும், மத்தகஜத்தினுடைய மதிப்பும், புலியினுடைய சிவிட்கும், ஸிம்ஹத்தினுடைய பரா பிபவநஸாமர்த்யமும் தோற்றியிருக்கை. நமக்கு இவையெல்லாம் நம்பெருமாள் நடையழகிலே காணலாம். (இங்ஙனே போந்தருளி) படுக்கையில் வார்த்தையாய்ப் போகாமே, தனி மண்டபத்தில் வார்த்தையாகவேணும்.

(உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி) படுக்கையில் வார்த்தையாய் போகாமே, தனி மண்டபத்தில் வார்த்தையாகவேணும்.

(கோப்புடைய) சராசரங்களடைய தொழிலாக வகுப்புண்டிருக்கை.  உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டிருக்கை என்னவுமாம்.  தர்ம ஜ்ஞானாதி களாலும், அதர்ம அஜ்ஞானாதிகளாலும் கோப்புடைய ஸிம்ஹாஸனம் என்றுமாம்.  (சீரிய சிங்காசனம்) இந்த ஸிம்ஹாஸநத்திலிருந்து நினைப்பிட்டது என்றால் அறுதியாயிருக்கை.  “கடற்கரையில் வார்த்தை” என்னுமாபோலேயும், “தேர்தட்டில் வார்த்தை” என்னுமாபோலேயும்.  பெண்களும் க்ருஷ்ணனுமே யாயிருந்து சொல்லிலும் அமோகமா யிருக்கை.  அணுவாகிலும் க்ருஷ்ணனோடொத்த வரிசையை கொடுக்கவற்றான ஸிம்ஹாஸனம் என்றுமாம்.  (இருந்து) நடையழகு போலே இருப்பில் வேண்டற்பாட்டையும் காணவேணுமென்கை.  “கண்ணிணைக் குளிர புதுமலராகத்தைப் பருகு – இருந்திடாய்” என்னுமாபோலே, உன்னைக் காண விடாய்த்த கண்களின் விடாய் கெட்டு அநுபவிக்கலாம்படி இருந்து (திருவாய் – 9.2.9) 

(யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்) அநந்ய ப்ரயோஜனைகளான நாங்கள் வந்த காரியம் ஆராய்ந்தருளவேணும்.  “உபஸ்தேயைருபஸ்தித:” என்று ஶ்ரீ தண்டகாரண்யத்தில் ரிஷிகளுடைய துக்க நிவ்ருத்திக்கு நாம் முற்பாடராகப் பெற்றிலோமென்று வெறுத்தாற்போலே, பெண்கள் நோவுபட பார்த்திருந்தோமாகாதே என்று வெறுத்து, அவர்களை அழைத்து “உங்களுக்கு செய்யவேண்டுவது என்?” என்ன, இங்ஙனே சொல்லவொண்ணாது; பேரோலக்கமாக இருந்து கேட்டருளவேணுமென்கிறார்கள்.  நப்பின்னை பிராட்டி பரிக்ரஹமாயிருக்க சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் என்று அநந்யகதிகளாகச் சொல்லுவதே என்று பொறுத்திலள்.  அழகர் கிடாம்பியாச்சானை அருள் பாடிட்டு ஒன்று சொல்லிக்காண் என்ன – அபராத ஸஹஸ்ர பாஜநம் என்று தொடங்கி அகதிம் என்ன, “நம் ராமானுசனை உடையையாயிருந்து வைத்து, அகதிம் என்னப்பெறாய்!” என்று அருளிச்செய்தார்.  ஆகையாலே இருப்பில் வேண்டற்பாட்டையும் காணவேணும்.  வந்த காரியத்தை சிற்றஞ்சிறுகாலைக்கு   வைக்கிறாள் இப்போது சொல்லாதே.  இதுக்கு அடியென்? என்னில், – அவஸரத்தில் சொல்லவேணுமென்று நினைத்து; அதாவது – “ஏபிஶ்ச ஸசிவைஸ்ஸார்தம் ஶிரஸா யாசிதோ மயா” என்று – அவர்களுடைய அர்த்தியையும் காட்டித் திருவடிகளிலே சென்று விழ இரங்குவர் காண் என்று நினைத்து வந்த ஶ்ரீ பரதாழ்வானுக்கும், “அபித: பாவகோபமம்” என்று அவன் நினைத்து வந்ததுக்கு அங்கு அவஸரமில்லாமையாலே அநபிபவநீயரானார்;  ஆகையாலே அவஸரத்திலே சொல்லக்கடவோம் என்றிருந்தார்கள்.  (ஆராய்ந்தருள்) நீங்கள் என் பட்டிகோள்! என் செய்திகோள்! என்கை.  அதாவது – பெண்களை எழுப்புவது, வாசல் காப்பானை எழுப்புவது, ஶ்ரீ நந்தகோபர் உள்ளிட்டாரை எழுப்புவது, நம்மை எழுப்புவதாய் போர வ்யஸநப்பட்டிகோளாகாதே! என்கை.  எதிர்சூழல்புக்குத் திரியுமவனுக்கு இவையெல்லாம் தன்குறையாகத் தோற்றுமிறே. (திருவாய் – 2.7.6) 

@@@@@

இருபத்து நாலாம் பாட்டு

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

        சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி

        பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி

        கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி

        குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி

        வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி

        என்றென்று உன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்

        இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – இருபத்திநாலாம் பாட்டு.  நாங்கள் அபேக்ஷித்தபடியே செய்த குணம் கண்டு வந்த கார்யத்தை மறந்து அத்திருப்பள்ளியறையில் நின்றும் திவ்ய ஸிம்ஹாஸநத்தளவும் நடக்கிற போதை நடையழகுக்குத் திருப்பல்லாண்டு பாடுகிறார்கள்.  காணுமளவுமிறே “அது வேணும்; இது வேணும்” என்பது.  கண்டால் அவனுக்குப் பரியுமத்தனையிறே. 

வ்யாக்யானம் – (அன்றிவ்வுலகமளந்தாயடிபோற்றி) தன் விபூதியை மஹாபலி அபஹரிக்க நோவுபட்டிருக்கிற அன்று; தன்னைப் பிரிந்து தாங்கள் ஆர்த்தியாலே நோவுபட்ட இன்று.  ஜகத்தை மஹாபலியினுடைய அபிமானத்தினின்றும் மீட்ட அன்று;  எங்களுடைய ஸ்த்ரீத்வாபிமானத்தினின்றும் மீட்ட இன்று.  நாட்டுக்கெல்லாம் தன் திருவடிகளை தூளிதானம் பண்ணின அன்று; அழகையும் ஶீலத்தையும் எங்களுக்குத் தூளிதாநம் பண்ணின இன்று.  இதிறே ஶ்ரீ க்ருஷ்ணனுக்கும் ஶ்ரீ வாமநநுக்கும் ஸாம்யம்.  (இவ்வுலகமளந்தாய்) பிராட்டிமார் பூத்தொடுமாபோலே கூசிப்பிடிக்கும் திருவடிகளைக்கொண்டு காடுமோடையும் அகப்பட அளப்பதே! என்கை.  அன்று எல்லை நடந்து மஹாபலிபக்கல் நின்றும் பூமியை மீட்டுக் கொண்டாற்போலே நடையழகைக் காட்டி விஶ்லேஷத்தினின்றும் மீட்டுக்கொண்டாயென்கை.  (அடி போற்றி) தாங்கள் சொல்லுமளவில் புறப்பட்டு ஸுகுமாரமான திருவடிகளைக் கொண்டு உலாவியருளினபடி – திருவுலகளந்தருளின ஆயாஸம் போரும் என்று மங்களாஶாஸநம் பண்ணுகிறார்கள்.  திருவுலகளந்தருளுகிறபோது இரண்டடியிறே இட்டது; இப்போது எங்களுக்காக பத்தெட்டடி இடுவதே! திருவுலகளந்தருளின அன்று, இந்திரன் ப்ரயோஜனத்தைக் கொண்டு போனான்; மஹாபலி ஔதார்யம் பெற்றுப்போனான்; தாங்கள் அன்று உதவப்பெறாத இழவு தீரத் திருப்பல்லாண்டு பாடுகிறார்கள் என்றுமாம்.  (அடி போற்றி) “உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு” (திருப்பல்லாண்டு – 1) என்னுமவர்களிறே. 

(சென்றங்கு இத்யாதி) அழகுக்கு இலக்காகாதாரை அம்புக்கு இலக்காக்கினபடி.  (சென்றங்கு) புலி கிடந்த தூற்றிலே செல்லுமாபோலே பிராட்டியைப் பிரிந்த பையலிருந்தவிடத்தே செல்லுவதே!  (சென்று) வழிப்போக்கிலே கர, கபந்த, விராதாதிகளை அழியச்செய்தபடி என்றுமாம்.  (அங்கு) நின்றவிடத்தே நின்று பூவலர்ந்தாப்போலே அநாயாஸேன அளந்தவன்றிக்கே, “கானகப்படி உலாவி உலாவி” (பெரியாழ்வார் திரு – 3.6.4) என்னுமாபோலே, கொடிய காட்டிலே அந்தத் திருவடிகளைக் கொண்டு நடப்பதே! என்கை.  “எவ்வாறு நடந்தனை” (பெருமாள் திரு – 9.2) என்று வயிறு பிடிக்கை இவர்களுக்குக் குடிப்பிறப்பு.  (தென்னிலங்கை) அழகியதான கோட்டையையும் அரணையும் உடைத்தாய், குளவிக்கூடு கொண்டாற்போலே ஹிம்ஸகர் சேர்ந்த தேசம்.  (செற்றாய்) ஆஶ்ரித விரோதிகள் தனக்கு விரோதிகள் என்கை.  (திறல் போற்றி) மதிளுக்கு மதிளிடுமாபோலே மிடுக்குக்குத் திருப்பல்லாண்டு பாடுகிறார்கள்.  “மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா” (திருப்பல்லாண்டு – 1) என்னுமவர்களாகையாலே குடிப்பிறப்பாலே வந்தது.  “இலங்கை பாழாளாக படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதும்” (திருப்பல்லாண்டு – 3) என்னுமவர்களிறே.

(பொன்ற இத்யாதி) ராவணனைப்போலே விரோதி என்று இறாய்க்கவொண்ணாத அபாயம்.  (பொன்ற) மாரீசனைப்போலே குற்றுயிராக்கி மேல் அனர்த்தம் விளைக்க வையாதே முடிக்கப் பெற்றபடி.  (புகழ் போற்றி) தாயுங்கூட உதவாத தசையிலே அநாயாஸேன திருவடிகளாலே ஶகடாஸுரனை அழித்த புகழ்.  (போற்றி) ராமாவதாரத்திற்காட்டில் மங்களாஶாஸநம் பண்ணவேண்டியிருக்கை.  ராமாவதாரத்துக்கு பிதா ஸம்பராந்தகன்;  ஊர் திருவயோத்யை;  புரோஹிதர் மந்த்ரவாதிகளான வஶிஷ்டாதிகள்;  பிள்ளைகள் “ஆண்திறல் மீளிமொய்ம்பிலரக்கன் குலத்தைத் தடிந்தவர்கள்” (திருவாய் – 7.6.9) “இச்சாம:” என்னும்படி தாங்கள் குணவான்கள்; இங்கு மாதாபிதாக்கள்  ஸாது இடையர்;  ஊர் இடைச்சேரி; கம்ஸாதிகள் எதிரிகள்; ஶ்ரீ ப்ருந்தாவநத்தில் முளைத்தெழும் பூண்டுகளடைய ராக்ஷஸர்கள்; தமையன் ஒரு க்ஷணம் தப்பில், பாம்பின் வாயிலே விழும் தீம்பன்.  பூதனாதிகளாலே பிறந்த அபாயங்களுக்கு ஓர் அவதியில்லை;  ஆனபின்பு, இனி மங்களாஶாஸநமொழிய காவலில்லை. 

(கன்று இத்யாதி) ஶத்ருவையிட்டு ஶத்ருவை எறிந்தால் ஸங்கேதித்து வந்து இருவருமொக்க மேல்விழுந் தார்களாகில் என் செய்யக்கடவோம்! என்று வயிறு பிடிக்கிறார்கள்;  குஞ்சித்தத் திருவடிகளுக்குத் திருப்பல்லாண்டு பாடுகிறார்கள்.  (கன்று குணிலா) கன்றை எறிதடியாக.  குணில் – எறிதடி. 

(குன்று இத்யாதி) இதுக்கு முன்பு இந்த்ரனுக்காகச் செய்த செயல், இப்போது அவன்தான் பகையானபடி.  மலையைக்குடையாக எடுத்துப் பசுக்களுக்கும் இடையர்க்கும் வந்த ஆபத்தைப் போக்கினபடி.  அநுகூலன் ப்ரதிகூலித்தால், செய்யலாவ தில்லையிறே.  (குணம் போற்றி) பசி க்ராஹத்தாலே கை காயுந்தன்னையும் வர்ஷிக்க, மலையெடுத்துக் கொண்டு நின்ற ஆந்ருஶம்ஸ்ய குணத்திற்கு மங்களாஶாஸனம் பண்ணுகிறார்கள். 

(வென்று பகை கெடுக்கும் இத்யாதி) இவன் பக்கல் பரிவாலே, இவன் மிடுக்கைக் கண்டு கண்ணெச்சிற் படுவர் என்று பயப்பட்டு அத்தை விட்டு, “இவ்வேலன்றோ இவ்யாபாரமெல்லாம் பண்ணிற்று” என்கிறார்கள்.  “மிடுக்கில்லாமையால் நான் மெலிந்தேன்” (பெரியாழ்வார் திரு – 1.1.9) என்றிறே இவர்கள் படி.  சக்ரவர்த்தி விற்பிடிக்கப் பெருமாளும் விற்பிடித்தாற்போலே “கூர்வேல் கொடுந்தொழிலன்” (1) என்னுமவர் மகனாகையாலே, வேலே ஆயுதம்.  (வென்று பகை கெடுக்கும்) ஆஶ்ரித விரோதிகளான ப்ரதிபந்தத்தை அறச்செய்து மாய்க்கை.  (நின் கையில் வேல் போற்றி) வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்கவேண்டியிருக்க, அதுக்குமேலே வேலைப் பிடிப்பதே!  என்று வேல் பிடித்த கைக்குத் திருப்பல்லாண்டு பாடுகிறார்கள்.  “வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும்  பல்லாண்டு” (திருப்பல்லாண்டு – 2) என்று ஆயுதங்களுக்கு மங்களாஶாஸனம் பண்ணினாரிறே தமப்பனார்.  “கதே ஜலே சேதுபந்தனம்” தமப்பனாருக்கும் மகளுக்கும் பணி” என்று ஜீயர் அருளிச் செய்வர். 

(என்றென்று) இதுதானே ப்ரயோஜனமென்கை.  “தேஹி மே ததாமி தே” என்னுமவர்களன்றே.  ஸம்ஸாரிகள் புறம்பும் கொள்வார்கள்; இவன் பக்கலிலும் கொள்வார்கள்.  இவர்கள் புறம்பும் கொள்ளார்கள்; இவன் பக்கலிலும் கொள்ளார்கள்.  “ஒன்று நூறாயிரமாகக் கொடுத்துப் பின்னுமாளுஞ்செய்வன் (நாச்சி – 9.7) என்று – அவனுக்கும் தான் கொடுத்து, “ஆந்தனையும் கைகாட்டி” (2)என்று புறம்பும் தானே கொடுக்குமென்கை.  (உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்) உன்னுடைய வீர சரிதமே ஏத்தி உன்னை அநுபவிக்கைக்காக “உன்னுடைய விக்கிரமமொன்றொழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம்பால் சுவர் வழி எழுதிக்கொண்டேன்” (பெரியாழ்வார் திரு – 5.4.6) என்னுமவர்களிறே.

(இன்று) இசைவு பிறந்த இன்று என்னுதல்; நீ உறங்க நாங்கள் உறங்காத இன்று என்னுதல்.  நென்னேற்று வந்தோமோ?  ஊராக இசைந்த இன்று என்றுமாம்.  (யாம்) பந்துக்களாலே நெடுங்காலம் நலிவுபட்ட நாங்கள்.  (வந்தோம்) வ்ருத்தைகள் உறங்க நாங்கள் ஆற்றாமையாலே வந்தோம்.  எங்களிழவுகளெல்லாம் உன்னாலே தீரும்.  (யாம் வந்தோம்) எங்கள் வரவு உனக்குப் புண்ணாயிருக்க, நாங்கள் ஆற்றாமையாலே வந்தோம். (இரங்கு) எல்லாம் பட்டாலும் அவனிரங்கினாலல்லது  கார்யகரமாகாமை.  அத்தலைக்கு இரங்குகை ஸ்வரூபம்; “அவனுக்கு என் வருகிறதோ?” என்றிருக்கை இத்தலைக்கு ஸ்வரூபம்.  தாங்கள் பண்ணின மங்களாஶாஸநம் ஸாதனமன்று என்று இருக்கிறார்கள்.

@@@@@

இருபத்தைந்தாம் பாட்டு

        ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

        ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

        தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த

        கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

        நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

        அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்

        திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

        வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – இருபத்தைந்தாம் பாட்டு.  உங்களுக்கு வேண்டுவது என்? என்ன, “ஏதேனும் ப்ரதிபந்தகம் உண்டேயாகிலும், நீயே போக்கி எங்கள் துக்கமெல்லாம் கெட விஷயீகரிக்கவேணும்” என்கிறார்கள்.

வ்யாக்யானம் – (ஒருத்தி) “அந்த ப்ரவிஷ்ட: ஶாஸ்தா ஜனானாம் ஸர்வாத்மா” என்கிறபடியே ஸர்வ லோகங்களுக்கும் நியாமகனானவனையும் கூட நியமிக்குமவர்களாகையாலே நாட்டில் தனக்கு ஒப்பற்றிருக்குமவள்.  (ஒருத்தி மகனாய்) “பூதானாம் யோ அவ்யய: பிதா” என்று ஸர்வ லோகங்களுக்கும் பிதாவானவன் ஒருத்தி மகனாவதே! சக்ரவர்த்தி தபஸ்ஸு பண்ணி மாணிக்கம்போலே நாலு பிள்ளைகளைப் பெற்றாற்போலே, நால்வருங்கூடி தபஸ்ஸு பண்ணி ஒரு மகனைப் பெற்றபடி.  (மகனாய்ப் பிறந்து) பிறந்தபோதே சொல்லிற்றுச் செய்கை.  சக்ரவர்த்தித் திருமகன் பக்வனான பின்பு பித்ருவசன பரிபாலனம் பண்ணினான்; இவன் பிறந்தபோதே “உபஸம்ஹர ஸர்வாத்மன்”  என்று சொல்ல, ஆழ்வார்ளையும் தோள்களையும் மறைத்தானிறே.

(பிறந்து) கர்மவஶ்யர் படுவதெல்லாம் க்ருபாவஶ்யராய்க் கொண்டு  பட்டபடி.  (பிறந்து) ஆவிற்பவிக்கலாகாதோ? பத்து மாஸம் வயிற்றிலே இருப்பார்களாகில், பன்னிரெண்டு மாஸம் வயிற்றிலே இருந்து பிறக்கவேணுமோ?   “பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட” ( பெரியாழ்வார் திரு – 3.2.8) இறே.  “தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மனா” என்று – “பிறந்தான் என்கை அவத்யம்” என்று பரிஹரித்தான் ரிஷி; – அதுதான் அவத்யம் என்று பிறந்தான் என்கிறார்கள்.  நம்முடைய கர்மம் நம்மோடே அவனை ஸஜாதீயனாக்கும்; அவனுடைய க்ருபை நம்மை அவனோடே ஸஜாதீயமாக்கும்; “பரமம் ஸாம்யமுபைதி” என்னக்கடவதிறே.  “அவன் பிறவி நமக்கென்று கோல, நம் பிறவி அவன் மாதாபிதாக்கள் காலில் விலங்கு பட்டது படும்”.  நம் பிறவி – நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாயிருக்கும்; அவன் பிறவி இருவரும் அணுகுகைக்கு உடலாயிருக்கும்.

(ஓர் இரவில்) அவ்விரவிலே யசோதைப் பிராட்டிக்கும் பிள்ளையாக வேண்டுகையாலே திருவாய்ப்பாடியிலே புக்கு நாய்க்குடலுக்கு நறுநெய் தொங்காதாப்போலே, கம்ஸாதிகள் தண்மை சூதிகா க்ருஹத்திலே ஓரிரா தங்கவொட்டிற்றிலை என்கை.  (ஓர் இரவு) அவ்விரவை ஒக்கும் இரவு முன்பும் இல்லை, பின்பும் இல்லை.  (ஓரிரவில்) காலக்ருத பரிணாமமில்லாத தேஶத்தில் வஸ்து காலாதீதமான தேஶத்திலே பிறப்பதே! அவர்கள் தங்களோபாதியும் பெற்றிலள் என்கை.  (ஒருத்தி மகனாய்) ஒருத்தி “இவனை மகனாய்ப் பெறவேணும்” என்று ஆஶ்ரயிக்க, அவளுக்கு அவதார ரஸத்தைக்கொடுத்து, இவளுக்கு லீலா ரஸத்தை அநுபவித்திட்டபடி; ஓரவதாரத்திலே யாதவ ஸஜாதீயனுமாய், கோபஜாதீயனுமானபடி; “அம்ஶாவதாரோ ப்ரஹ்மர்ஷே யோ அயம் யதுகுலோத்பவ:” என்ற ரிஷிதானே, “கோபாலோ யாதவ வம்ஶம் மக்நம் உத்தரிஷ்யதி” என்றானிறே.  (மகனாய்) பிறப்பில் புரையில்லாதாபோலே, இவன் மகனானவிடத்திலும் புரையற்றிருக்கை.  (ஒளித்து வளர) கம்ஸனுடைய விஷத்ருஷ்டி படாமே வளர்ந்தபடி.  நாட்டார் செய்வன செய்யப்பெறாதே கள்ளர் பட்டது படுவதே! உள்ளேயிருக்கச் செய்தேயும் இவனில்லையென்று எழுத்திடுமவன், முகம்காண ஸம்மதிக்குமோ?  என்கை.  அந்தர்யாமியாய் —நிற்கிறது – பிச்சேறின ப்ரஜை தாய் முன்னே நிற்கில் தாயைக் கொல்லும்; அவள் பேர நிற்கில் தன்னை முடித்துக்கொள்ளும்; – அதுக்காக முகம் தோற்றாதே நின்று, இரண்டு தலையையும் நோக்கும் மாதாவைப்போல் இசைந்து அம்மே! என்றால் ஏன் என்கைக்கு கிட்டவிருக்கிறபடி என்றுமாம்.  பேர் சொல்லாதே “ஒருத்தி” என்றது – “அத்தத்தின் பத்தாம் நாள்” என்றவர் மகளாகையாலே பயத்திலே ஒளிக்கிறாள்.  அபிசரிக்கிலும் அதுவோ இதுவோ என்று ஸந்தேஹிக்கைக்காக.

(தரிக்கிலானாகி) “க்ருஷ்ணன் வளராநின்றான்” என்று கேட்டபின்பு அவன் தரிக்கமாட்டிற்றிலன்.  ஈஶ்வரஸத்தையையும் பொறாத ஆஶ்ரயமிறே.  (தான் தீங்கு நினைந்த) பயத்தாலே பரிந்து மங்களாஶாஸனம் பண்ணும் விஷயத்திலே தீங்கு நினைத்தது, துஷ்ப்ரக்ருதியாகையாலே.  (தான்) உத்தர க்ஷணத்திலே படப்புகுகிற பாடறியாத தான்.  (தீங்கு நினைந்த) தங்கள் வாயாலே சொல்லமாட்டாமையாலே தீங்கு என்கிறார்கள்.  அதாவது – பூதனையுள்ளிட்டாரை வரக்காட்டியும், வில் விழவுக்கு என்று அழைத்தும் நலிய தேடினபடி.  (கருத்தை பிழைப்பித்து) பூதனை முதலானார் நலிவுகளைப் பண்ணப்புக, அத்தை தப்பித் தன்னை நமக்கு தந்தபடி;  அவன் நினைவை அவன்தன்னோடு போம்படி பண்ணினான் என்றுமாம்.  (கஞ்சன் இத்யாதி) கம்ஸன் அநாதிகாலம் ஸஞ்சிதமான பாபமத்தனையும் கண்ட காட்சியிலே அநுபவித்து அறும்படி நின்றவன்.  ஆஶ்ரிதர் வயிற்றில் நெருப்பை கம்ஸன் வயிற்றில் கொளுத்தினவனென்கை.  அதாவது – பயாக்நி கொளுத்துகை.  (நெடுமாலே) இதெல்லாம் படவேண்டிற்று ஆஶ்ரிதர் பக்கல் வ்யாமோஹத்தாலே என்கை.  அப்போது ஶ்ரீ வஸுதேவர் பக்கலிலும் ஶ்ரீ தேவகியார் பக்கலிலும் திருவுள்ளம் மண்டினபடி என்றுமாம். 

(உன்னை) அர்த்தித்வத்தில் நிரபேக்ஷனான உன்னை;  ஶ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாய் இவ்வளவும் வந்தது ஆர் அபேக்ஷித்து? (நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம்) பண்டே வ்யாமுகனான உன்னை அரத்திக்கையாலே பிச்சின்மேலே பிச்சேற்ற வந்தோம்.  அர்த்தித்வத்தின் அளவு எங்கள் வடிவைப் பார்க்க அமையும். 

(பறை தருதியாகில்) எங்களுக்கு உத்தேஶ்யம் செய்குதியாகில்.  ஆகில் என்றது – நம்முடைய அரத்தித்வாதிகள் அப்ரயோஜகம்; அவன் நினைவாலே பலமென்கை.  உன் அழகாலே பிழைப்பியாதே செய்தருளப் பார்ப்பாயாகில் என்னவுமாம். 

(திருத்தக்க செல்வமும்) “யஸ்ய ஸா ஜநகாத்மஜா – அப்ரமேயம் ஹி தத்தேஜ:” என்று ஶ்ரீய:பதித்வத்தால் வந்த ஸம்பத்தையும் பிராட்டி ஆசைப்படும் ஸம்பத்தென்னவுமாம்.  (சேவகமும்) அத்தை காத்தூட்டவல்ல வீர்யம்.  (யாம் பாடி) உன் பேர் சொல்லப்பெறாத நாங்கள் உகப்போடே அத்தைச் சொல்ல.  (வருத்தமும் தீர்ந்து) உன்னைப் பிரிந்து படும் துக்கமும் தீர்ந்து;  பிரிந்தார் படும் பாடறிய உன்னை நீ பிரிந்தறியாயே? (மகிழ்ந்து) கைவல்யம் போலே துக்க நிவ்ருத்தி மாத்ரமேயன்று, ப்ரீதிக்குப் போக்கு விடும்படியாகவேணும்.

@@@@@

 இருபத்தாறாம் பாட்டு

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

        மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

        ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

        பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே

        போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே

        சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே

        கோல விளக்கே கொடியே விதானமே

        ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – இருபத்தாறாம் பாட்டு.  “உங்களுக்கு அபேக்ஷிதம் என்?” என்ன, நோன்புக்கு வேண்டும் உபகரணங்களையும் அபேக்ஷிக்கிறார்கள்;  “க்ருஷ்ண ஸம்ஶ்லேஷரஸோத்ஸுக்தரான இவர்கள் இவற்றை அபேக்ஷிக்கைக்கு அடியென்? என்னில், – அந்த ஸம்ஶ்லேஷத்துக்கு ஏகாந்தமான நோன்பை ப்ரஸ்தாபிக்கையாலும், க்ருஷ்ணன் முகத்தை வெளியிலே காண்கைக்கு ஹேதுவாகையாலும், அவனுடைய திருநாமங்களை வாயாரச் சொல்லுகைக்கு ஹேதுவாகையாலும்.  இடையர்பக்கல் உபகார ஸ்ம்ருதியாலும் நோன்புக்கு அங்கங்களை வேண்டிக்கொள்கிறார்கள்.

வ்யாக்யானம் – (மாலே) முன்பு “நாராயணனே – நமக்கே பறை தருவான்” (1) என்று அபரிச்சேத்யமான மேன்மையையும் நினைத்திருந்தார்கள்; இப்போது இத்தலைக்கு வாத்ஸல்யமே என்று நிலையிட்டார்கள்.  “ஶரணாகத வத்ஸல:” என்று – ஶ்ரீராமாயணத்துக்கு உள்ளீட்டான ப்ரதான குணத்தைப் பிராட்டி நிலையிட்டாள்; மஹாபாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை “மாலே” என்கிற ஸம்போதனத்தாலே இவர்கள் நிலையிட்டார்கள்.  இவர்கள் பேச்சு கேட்டபின்பு  பண்டையிலும் பெரும்பித்தனானபடி.  (மணிவண்ணா) அபரிச் சேத்யனாய் இருக்கச் செய்தேயும்  முந்தானையிலே முடிந்து ஆளலாம்படி இருக்கை.  கீழ்ச் சொன்ன வ்யாமோஹம் வடிவிலே நிழலிடுகை.  இந்நீர்மையின்றிக்கே காதுகனானாலும் விடவொண்ணாத வடிவழகு.  பெண்கள் பிச்சுக்கு நிதானமான வடிவென்னவுமாம். “மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை” (நாச்சி – 1.4.3) என்னக்கடவதிறே. 

“நீங்கள் வந்தது என்?” என்ன, – வந்த காரியத்தைச் சொல்லுகிறார்கள்;  (மார்கழி நீராடுவான்) மார்கழி நீராடுகைக்கு உபகரணங்கள் வேண்டி வந்தோம்.  ஆஸ்திக்யாதிரேகத்தாலே  அங்கி கைப்பட்டிருக்கச் செய்தேயும் அங்கத்தை விடாதொழிகிறார்கள்.  மார்கழி நீராட்டமாவது என்? என்ன, – இது ப்ரஸித்தமன்றோ? என்ன, “ஸ்வர்க்க காமோ யஜேத”  என்னுமாபோலவும், “நிதித்யாஸிதவ்ய:” என்னுமாபோலவும் ப்ரஸித்த மாயிருந்ததோ? என்ன, (மேலையார் செய்வனகள்) அவைபோலும் அல்லகாண் இது; ப்ரஸித்ததமம் காண் இது.  ஶ்ருதி ஸ்ம்ருதிகளிலும் “தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம் வேதாஶ்ச” என்றும், “யத்யதாசரதி ஶ்ரேஷ்ட:” என்றும் ஶிஷ்டாசாரமிறே ப்ரஸித்த ப்ரமாணம்.  “ஆகில் வேண்டுவது சொல்லுங்கோள்” என்ன;  (வேண்டுவன கேட்டியேல்) கேட்புதியாகில் என்கிறது அந்யபரதையாலே; அந்யபரதை என்னென்னில், – பஞ்சலக்ஷங்குடியில் பெண்களும் முன்னே நிற்கையாலே, இவர்கள் முலையிலும் இடையிலும் கண்ணிலும் முகத்திலும் துவண்டு ஆனைக்குப் பாடுவானாப்போலே இருக்கையாலே தட்டி எழுப்புகிறார்கள்.  இத்தால் – ஸ்வாபதேஶத்தில், ஜ்ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது.  இவையிறே – ஓரதிகாரிக்கு அழகாகிறது.  காண்கைக்கு ஹேதுவாகையாலே கண் என்று – ஞானத்தைச் சொல்லுகிறது; போகோபகரணமாகையாலே முலை என்று – பக்தியைச் சொல்லுகிறது;  கார்ஶ்யத்தாலே இடை என்று வைராக்யத்தைச் சொல்லுகிறது.  கார்ஶ்யத்தாலே வைராக்யம் தோற்றுமோ? என்னில், – கார்ஶ்யத்தாலே விரக்தியைச் சொல்லிற்றாய், அத்தால் – விஷயாந்தரஸ்பர்ஶராஹித்யத்தைச் சொல்லுகிறது.  “மதுரா மதுராலாபா” என்கிறபடியாலே உங்கள் வடிவு கண்ணுக்கு போக்யமானவோபாதி, உங்கள் வார்த்தை செவிக்கு போக்யமன்றோ? சொல்லுங்கோள்” என்ன, சொல்லுகிறார்கள் – (ஞாலத்தை இத்யாதி) “ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயானி வ்தாரயத்” என்னும் அளவன்றிக்கே, ஜகத்தெல்லாம் வாழும்படி த்வநிக்கைக்கு இடமுடைத்தானவை.  “பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலி” (நாச்சி –    )யிறே தாரகம்.  அப்படியே நாடெல்லாம் இந்த த்வநி கேட்டு வாழவேணும்.  இவர்கள் தாங்களும் வலம்புரிபோல நின்று அதிரவேணும் (4) என்றிறே சொல்லிற்று.  (பாலன்ன) பாலைத் திறட்டினாற்போலே இருக்கை.  இப்படி இருப்பன பல சங்கு வேணும்.  (போய்ப்பாடு) பேரிடமாயிருக்கை;  இடமுண்டாகிலிறே த்வநி முழங்கியிருப்பது.  புகழ் என்றுமாம்.

பின்னையோவென்ன, (சாலப்பெரும்பறையே)  ஒரு மன்றிலே த்வநிக்கையன்றியே எங்குமொக்க த்வநிப்பதொரு பறை வேணும்.  “யயௌ தூர்யப்ரணாதேன பேரீணாஞ்ச மஹாஸ்வனை:” என்னுமாப்போலே.  பின்னையோவென்ன, – (பல்லாண்டிசைப்பாரே) திருப்பல்லாண்டு பாடிக்கொண்டு போருவார் வேணும்.  பின்னையோவென்ன – (கோல விளக்கே) அழகிய விளக்கு.  அதாகிறது – மங்கள தீபம்.  (கொடி) திருக்கொடி ஆடவேணும்.  (விதானம்) மேல்கட்டி வேணும்.

என்று இவற்றை அபேக்ஷிக்க – சங்கும் பல கிடையாது.  ஶ்ரீபாஞ்சஜந்யத்தை கொள்ளுங்கோள் என்றான்;  தன்னைப்போலே இருப்பார் சிலர் உண்டாகிலிறே புறம்பு ஶ்ரீபாஞ்சஜந்யம் போலே  இருக்கும் சங்கு உண்டாவது.  பறைக்குப் பாரோர்களெல்லாம் மகிழ பறைகறங்க குடக்கூத்தாடினபோது திருவரையில் கட்டின பறையையும், திருப்பல்லாண்டு பாடுகைக்குப் பெரியாழ்வாரையும், விளக்குக்கு நப்பின்னைப் பிராட்டியையும், கொடிக்குப் பெரிய திருவடியையும், மேல்கட்டிக்கு அத்தவானத்தையும் கொள்ளுங்கோள் என்றான்.  விதாநத்துக்கு திருவவதரித்தவன்று பணத்தையிட்டுக் கவித்துக்கொண்டு போந்த திருவநந்தாழ்வானைக் கொடாதொழிவதென்? என்னில், – எல்லாரையும் போகச்சொன்னாலும் தன்னையொழிய ஓரடி இடமாட்டாதவனாகையாலே, அத்தவாநத்தைக் கொடுத்தான்.  பெருமாளரையில் பீதகவண்ணவாடை கொண்டிறே வாட்டந்தணியச் சொல்லிற்று.  ஓரொன்று போறாது.  இப்படி இருப்பன பல வேணும் என்ன, – இல்லாதத்தைத் தேடப்போமோ? என்ன, உனக்கு அரியது உண்டோ? என்ன – எனக்கு எளியதாயிருந்ததோ? என்ன – (ஆலினிலையாய்) சிறியதொரு வடிவைக்கொண்டு ஸகல லோகத்தையும் சிறு வயிற்றிலே வைத்து, பவநாயிருப்பதொரு ஆலந்தளிரிலே கண்வளர்ந்த உனக்கு முடியாதது உண்டோ? லோகத்தில் இல்லாததும் எங்களுக்காக உண்டாக்கவல்லை என்று கருத்து.  (அருள்) வேண்டாதொழியில் செய்யலாவதில்லை; ஶக்தியில்லாமை இல்லை; இத்தலையில் பேற்றுக்கு எல்லாம் ஹேது அவன் ப்ரஸாதமென்கை. 

மாலே மணிவண்ணா என்கிற இத்தால் “மாம்” என்கிற இடத்தில் ஸௌலப்யத்தைச் சொல்லிற்று; “ஆலினிலையாய்” என்கிற விஶேஷணத்தால் “அஹம்” என்கிற இடத்தில் ஸஹாயாந்தர நிரபேக்ஷமான உபாயவேஷத்தைச் சொல்லிற்று; இப்பாட்டில் சொல்லுகிறது – “நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி” என்கிற ஶ்ருத்யர்த்தம்.

@@@@@

இருபத்தேழாம் பாட்டு

        கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்

        பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்

        நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

        சூடகமே தோள்வளையே. தோடே செவிப்பூவே

        பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்

        ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

        மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

        கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – இருபத்தேழாம் பாட்டு.  நோற்றால் அவன் பக்கல் பெறக்கடவ பேறு சொல்லுகிறார்கள். 

வ்யாக்யானம் – (கூடாரை வெல்லும்) ஆந்தனையும் பார்த்தால் “ந நமேயம்” என்பாரை வெல்லுமித்தனை.  அவர்களை வெல்லுமாபோலே, கூடினார்க்கு தான் தோற்குமித்தனை.  (சீர்) எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே; “சசால சாபஞ்ச முமோச வீர:” என்று விற்பிடித்தபடியைக் காட்டி விரோதிகளைத் தோற்பிக்கும்; அநுகூலரை அழகாலும் நீர்மையாலும் தோற்பிக்கும்; ஸர்வஜ்ஞரை எத்திறம் என்னப்பண்ணும் குணமிறே.  அம்புவாய் மருந்தூட்டித் தீர்க்கலாம்;  நீர் கொன்றாற்போலே இதுக்குப் பரிஹாரமில்லை. (கோவிந்தா) கூடுவோமல்லோம் என்னும் அபிஸந்தியில்லாத மாத்திரத்திலே ரக்ஷித்தபடி. 

(உன்தன்னைப்பாடி) “ஹிரண்யாய நம:” என்கை தவிர்ந்து, வகுத்த உன்னுடைய பேரை ஸ்வயம் ப்ரயோஜநமாகச் சொல்லப்பெறுவதே!  என்கை.  கோபீஜன வல்லபனான உன்னைப் பாடுகையே எங்களுக்கு ப்ரயோஜனம் போரும் என்னவுமாம்.  (பறை கொண்டு) ப்ராப்யத்திலே ப்ராபக வ்யவஹாரம்;  ஊருக்குப் பறை என்கிறது – தங்களுக்கு ப்ராப்யம்.  (யாம் பெறு சம்மானம்) தோளில் மாலையை வாங்கியிடுகை இவர்க்குப் பெறாப் பேறு என்கை.  “பதி ஸம்மாநிதா ஸீதா” என்று – பெருமாள் தோளில் மாலையை வாங்கியிட்டார் என்று ஆழ்வான் பணிக்கும்.  அநாதி காலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும்படி கொண்டாடுகை.

(நாடு இத்யாதி) ஒருவன் கொடுக்கும்படியே! சிலர் பெறும்படியே! என்று நாட்டார் கொண்டாடவேணும்.  (நன்றாக) “ப்ரதேஹி ஶுபகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமிநி” என்று இந்திரன் வரக்காட்டின ஹாரத்தைப் பெருமாளும் பிராட்டியும் கூடவிருந்து திருவடிக்குப் பூட்டினாற்போலே  பூணவேணும்.  “தம் ப்ரஹ்மா அலங்காரேண அலங்குர்வந்தி”  என்று சிலரையிட்டு ஒப்பிக்கையன்றிக்கே, தானும் பிராட்டியும் கூடவிருந்து ஒப்பித்தத் தன்னேற்றம்.  ஆபரணத்தைப் பூண்டு அவன் வரவு பார்த்திராதொழிகை என்றுமாம். 

(சூடகமே) ப்ரதமத்திலே ஸ்பர்ஶிக்கும் கைக்கிடும் ஆபரணம்.  பரம ப்ரணயீயாகையாலே தன் தலையிலே வைத்துக்கொள்ளுங்கை.  “அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்” என்று (திருவாய் – 10.3.5) என்று இவர்கள் அவனுக்கு சொல்லுமாபோலே சொல்லி, மார்பிலும் தலையிலும் வைத்துக்கொள்ளும் கைக்கிடும் சூடகம்.  (தோள்வளை) அந்த ஸ்பர்ஶத்தாலே அணைக்க வேண்டும் தோளுக்கு இடும் ஆபரணம்.  (தோடே) “பொற்றோடு பெய்து” என்று – (பெரியாழ்வார் திரு – 3.7.6) பண்டே தோடிட்டாலும் அவனிட்டாற்போலே இராதிறே.  (செவிப்பூவே) ப்ரியாவதம்ஸ இத்யாதியிற் சொல்லுகிறபடியே அணைத்தத் திருக்கையிலே உறுத்தும் ஆபரணங்கள் போலன்றிக்கே, அணைத்தவநந்தரம் ஆக்ராணத்துக்கு விஷயமான இடம்.  (பாடகம்) அணைத்தால் தோற்றுப் பிடிக்கும் காலுக்கு இடும் ஆபரணம்.  (என்று அனைய பல்கலன்) பருப்படுத்தன சில சொன்னோமித்தனை;  நீ அறியுமவையெல்லாம் என்கை.  “பலபலவே ஆபரணமிறே” (திருவாய்மொழி – 2.5.6) .  (யாம் அணிவோம்) வ்யதிரேகத்தில் மலரிட்டு நாம் முடியோம் என்கிறவர்கள் பூண்போம் என்கிறார்கள்.  அவனுக்கு இவர்களநுமதியைப் பண்ணுகையே அமையுமென்கை.

(ஆடை உடுப்போம்) பண்டு உடார்களோ?  என்னில் – அவனுடுத்து உடாதது உடையன்று என்றிறே இருப்பது.  அவன் திருப்பரியட்டம்  இவர்கள் அரையிலேயாம்படி கூறை மாறவேணும் என்றுமாம்.  நோன்பை முடிக்கையாலே நல்ல பரியட்டம் உடுக்க வேணுமென்றுமாம்.  “உடுத்துக் களைந்த” என்னுமவர்களிறே இவர்கள்.  ஸ்வேதகந்தயுக்தமாய் அவனுடுத்து முசிந்த ஆடை என்னவுமாம்.  (அதன் பின்னே இத்யாதி) அதுக்கு மேலே பால்சோறு மூடும்படியாக நெய் பெய்து; இத்தால் – பகவத் ஸம்பந்தமுள்ள திருவாய்ப்பாடியில் ஸம்ருத்தி யெல்லாம் ப்ரியமாயிருக்கிறபடி.  (முழங்கை வழிவார) நம்பி திருவழுதி வளநாடுதாஸர் நெய் படாதோ என்ன; க்ருஷ்ண ஸந்நிதியாலே த்ருப்தையாயிருக்கிற வர்களுக்கு சோறு வாயில் தொங்கிலன்றோ நெய் வாயில் தொங்குவது! என்று பட்டர் அருளிச்செய்தார்.  வ்யதிரேகத்தில் நெய்யுண்ணோம் பாலுண்ணோம் (2) என்று சொன்னவர்கள் இன்று ஆசைப்படுகிறார்கள்.  (கூடி இருந்து) பிரிந்து பட்ட க்லேஶம் தீர கூடித் தொட்டுக்கொண்டிருக்கையே ப்ரயோஜனம்; புஜிக்கை ப்ரயோஜனமன்று.  (குளிர்ந்து) பிரிந்து கமர் பிளந்த நெஞ்சுகள் குளிரும்படி.  நம்பெருமாள் திருநாள் என்று ஒரு பேரையிட்டு ஶ்ரீவைஷ்ணவர்களைத் திரட்டிக் காணுமாப்போலே.  “அஹமன்னம் – அஹமந்நாத:” என்று ஒருவர்க்கொருவர் போக்யமிறே.  “ஸோஶ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஶ்சிதா” என்கிற ஶ்ருத்யர்த்தம் இப்பாட்டில் சொல்லுகிறது. 

@@@@@

இருபத்தெட்டாம் பாட்டு

        கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்

        அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்

        பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்

        குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

        உறவேல் நமக்கு இங்கு ஒழிக்கவொழியாது

        அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

        சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே

        இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

அவதாரிகை – இருபத்தெட்டாம் பாட்டு.  முதற் பாட்டில் “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று ஸங்க்ரஹேண சொன்ன ப்ராப்ய ப்ராபகங்களை, இந்த இரண்டு பாட்டாலே விவரிக்கிறது.  அதில் இப்பாட்டிலே நாட்டார் இசைகைக்காக நோன்பு என்று ஒரு வ்யாஜத்தையிட்டுப் புகுந்தோமித்தனை; எங்களுக்கு உத்தேஶ்யம் அதுவன்று;  உன் திருவடிகளில் கைங்கர்யமே என்று தங்களுக்கு உத்தேஶ்யமான புருஷார்த்த ஸித்திக்கு தங்கள் ஆகிஞ்சன்யத்தையும் ப்ராப்தியையும் முன்னிட்டு, நீயே உபாயமாக வேணுமென்று  அபேக்ஷித்து; இதுக்கு க்ஷாமணம் பண்ணிக்கொண்டு ப்ராப்ய ப்ரார்த்தனம் பண்ணித் தலைக்கட்டுகிறது.  மேலிற்பாட்டிலே – ப்ராப்ய ப்ரார்த்தனம் பண்ணாநின்றதாகில், இங்கு பண்ணுகிறது என்? என்னில் – ப்ராபகம் ப்ராப்யஸாபேக்ஷமாகையாலே சொல்லுகிறார்கள். 

வ்யாக்யானம் – (கறவைகள்) ஜ்ஞானேன ஹீந: பஶுபிஸ்ஸமாந:” என்று – அறிவுகேட்டுக்கு நிதர்ஶநமான பசுக்கள்.  (பின் சென்று) நாங்கள் தேவரைப் பெறுகைக்கு குருகுலவாஸம் பண்ணினபடி – இவற்றை அநுவர்த்தித்தோமித்தனை.  எங்களைப் பார்த்தால் வஶிஷ்டாதிகளுக்கு ஸத்ருஶமாகப் போரும். “க்ருதாநுகாரானிவ கோபிரார்ஜவே” என்று பசுக்கள் அகக்காட்டும் ஆர்ஜவம்.  (கானம் சேர்ந்து) தந்தாமுடைய வ்ருத்திகளாலே ஒரு ன்மைக்கு உடலாம் மனுஷ்யர் திரியும் நாட்டிலே வர்த்தித்திலோம்; புல்லுள்ள காட்டிலே வர்த்தித்தோமித்தனை; இருப்பாலே நன்மையை விளைக்கும் தேஶத்திலே வர்த்திக்கிலோம்; காட்டிலே வர்த்தித்தோமென்றுமாம்.  (சேர்ந்து) ஊரில் கால் பொருந்தாதபடியிறே காட்டிலே பொருந்தினபடி.  (உண்போம்) வைஶ்யருக்கு கோரக்ஷணம் தர்மமானால் ததநுரூபமாகக் காட்டிலே வர்த்திக்கையும் வாநப்ரஸ்தாஶ்ரமிகளோபாதி ஶரீரத்தை ஒருத்து அவ்வருகே ஒரு பலத்துக்காக வர்த்தித்தோமல்லோம்; கேவலம் ஶரீரபோஷணபரராய் வர்த்தித்தோமித்தனை.  இத்தால் – வ்ருத்தியில் குறை சொல்லிற்று.  இதிறே உன்னைப் பெறுகைக்கு நாங்கள் அநுஷ்டித்த கர்ம யோகம் என்கிறார்கள்.

(அறிவொன்றும் இல்லாத) இப்போதில்லையாகில் விடுங்கோள்;  விதுராதிகளைப்போலே ஜந்மாந்தர ஸுக்ருதத்தாலேப் பிறந்த ஜ்ஞானந்தானுண்டோ? என்னில் – அதுவுமில்லை.  (ஒன்றும்) பகவத் ஜ்ஞாநத்துக்கடியான ஆத்ம ஜ்ஞாநமுமில்லை;  தத்ஸாத்யமான பக்தியுமில்லை என்கை;  பக்தி இல்லை என்கிறது – பக்திஶ்ச ஜ்ஞாநவிஶேஷ: என்று பக்தியாவது ஜ்ஞாநவிஶேஷமாகையாலே.  இவர்களலமாப்பு பக்தியன்றோ? என்னில் – அது ஸ்வரூபமாகையாலே உபாயமாக நினையார்கள்.  ஆக, இத்தால் – கர்ம ஜ்ஞான பக்திகளில்லை என்கை.  “அஹமஸ்மி அபராதாநாம் ஆலய:” “நோற்ற நோன்பிலேன்” (திருவாய் – 5.7.1) இத்யாதி.  “குளித்து மூன்றனலை ஓம்பு” “ந தர்ம நிஷ்டோஸ்மி” இத்யாதி.  இவையன்றோ அறிவுடையார் வார்த்தை; அவர்களோடு ஒத்திருந்திகோள் என்ன – (ஆய்க்குலம்) அறிவுண்டென்று ஶங்கிக்கவொண்ணாத குலம்.  கீழ்ச் சொன்ன உபாயஹாநிதோஷமாகாதே குணமாம்படியான ஜந்மம்;  எங்கள் ஜந்மத்தைக் கண்டுவைத்து அறிவுண்டு என்று சொல்லுகிற நீ அறிவுக்கேடநித்தனை. 

ஆனால் விடுமத்தனையோ? என்ன, (உந்தன்னை இத்யாதி) பேற்றுக்கு உடலான புண்ணியமில்லாதார் இழக்குமத்தனையன்றோ? என்ன, அங்ஙன் சொல்லலாமோ எங்களை? புண்ணியத்துக்குச் சோறிட்டு வளர்க்கிறவர்களன்றோ.  (உன்தன்னை) க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநமிறே?  உபாயோபேயத்வே அதிக தத்வம் என்னும்படியான உன்னை.  (பிறவி பெறுந்தனை) நாட்டார் ஆஶ்ரயணீயர் இருந்தவிடத்தே போய் ஆஶ்ரயிப்பார்கள்.  அவர்களைப்போலேயோ நாங்கள்?  ஆஶ்ரயணீயனான நீதான் நாங்களிருந்த விடத்தே எங்களோடே ஸஜாதீயனாய் வந்து அவதரிக்கும்படியன்றோ எங்களுடைய ஏற்றம்?  (புண்ணியம் யாமுடையோம்) ஸித்தஸாதநத்தைப் பற்றினவர்களிலுங்காட்டில் இருந்தவிடத்தே சென்று ஆஶ்ரயிக்கவேண்டாதபடியான ஏற்றத்தையுடையவர்கள் நாங்கள்.  நினைத்தபடி விநியோகங் கொள்ளலாம்படி கைபுகுந்த உன்னை உடையோமன்றோ?

அறிவொன்றுமில்லை என்பது புண்ணியம் யாமுடையோம் என்பதாய்க்கொண்டு வ்யாஹத பாஷணம் பண்ணாநின்றிகோளீ?  என்ன, கண்டிலையோ!  இதுதானேயன்றே அறிவுகேடு; ஆனால் விடுமத்தனையன்றோ? என்ன, (குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா) எங்களுக்குக் குற்றஞ்சொன்னோ மித்தனைபோக்கி உன்னுடைய பூர்த்திக்கு குற்றம் சொன்னோமோ? ஸர்வநிரபேக்ஷனென்கை.  எங்களுடைய அறிவொன்றுமில்லாமைக்கு போராதோ உன்னுடைய குறையொன்றுமில்லாமை? எங்களுக்கு இழக்கவேண்டுவது – உன்னுடைய பூர்த்தியால் ஏதேனும் குறை உண்டாகிலன்றோ?  என்கிறார்கள்.  இப்பள்ளத்துக்கு அம்மேடு நிரப்பப் போராதோ? இப்பாதாளத்துக்கு அப்பர்வதம்  நேர் என்கை.  எங்கள் பக்கல், ஜ்ஞாந வ்ருத்தாதிகள்  ஏதேனும் உண்டோ நாங்கள் இழக்கைக்கு? என்று கருத்து.  இத்தால் – உபாய நைரபேக்ஷ்யம் சொல்லிற்று.  (கோவிந்தா) நீங்கள் என்னை பூர்ணனாக பேசினபடியாலே வேண்டியிரந்தோமாகில் செய்தல், இல்லையாகில் தவிர்தலன்றோ? என்ன, நிரபேக்ஷமான பரமபதத்திலே வந்தோமோ? எங்களையொழியச் செல்லாமையாலே வந்து அவதரித்து எங்களுக்குக் கையாளாயிருக்கிற இடத்தேயன்றோ நாங்கள் அபேக்ஷிக்கிறது?  இத்தால் – ஸௌலப்யம் சொல்லுகிறது.

குறைவாளர்க்கு நிறைவாளர் கொடுக்கக்கட வர்களென்கை.  ஒன்று உண்டாகிலன்றோ என் பூர்த்தியும் உங்கள் அபூர்த்தியும் சொல்லுவது? என்ன, அதுவோ?  (உன்தன்னோடு உறவு) நீ எங்களுக்கு உறவன்றோ?  எங்கள் கார்யம் செய்யவேண்டாவோ?  என்ன – அது கொண்டோ?  ஆனால், ஒரு குட நீரோடே போகிறது என்ன – (உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது) உன்னோடு உண்டான ஸம்பந்தம் உன்னாலும் விடவொண்ணாது; எங்களாலும் விடவொண்ணாது.  இப்படி சொல்லுகிறது என்ன உரப்பு?  என்ன, “நானுன்னையன்றி இலேன் கண்டாய் நாரணனே! நீ என்னையன்றி இலை” (நான்முகன் திரு – 7) என்ற ப்ரமாணத்தைக் கொண்டு என்ன, அவர்கள் உங்களைப் பெற்றவர்களன்றோ? என்ன, ஆனால் நீ எங்கள் கையில் தந்த மூலப்ரமாணத்தில் முதல் எழுத்தைப் பார்த்துக் கொள்ளாய் என்கிறார்கள்; அதாவது – நாராயணனே நமக்கே பறை தருவான் (1) என்று அடியிலே சொன்னோம் என்றபடி.  நீ ஸர்வ ப்ரகார பரிபூர்ணனாகையாலே நாங்கள் நித்ய    ஸாந்நித்ய ஸாபேக்ஷராயிருக்கிற உறவு என்றுமாம்.  தயா பூர்ணனான உன்னோடு தயநீயதயா பூர்ணைகளான எங்களுக்கு உண்டான உறவு என்றுமாம்.

(அறியாத இத்யாதி) கீழ் தாங்கள் நெருக்கின அதுக்கு க்ஷாமணம் பண்ணுகிறார்கள்.  (அறியாத) அநவதாநத்தாலே வந்த அஜ்ஞாநம்.  (பிள்ளைகள்) பால்யத்தாலே வந்த அஜ்ஞாநம்.  (அன்பு) ப்ரேமத்தாலே வந்த அஜ்ஞாநம்.  இந்த ஹேதுக்களால் வந்த அறியாத்தனம் பொறுக்கவேணும்.  “மயா ப்ரமாதாத் ப்ரணயேனவாபி” என்னக்கடவதிறே.  ப்ரேமாந்தரைக் குற்றங் கொள்ளுகையாவது – ஒரு படுக்கையிலே இருந்து கால் தாக்கிற்று கைத்தாக்கிற்று என்கையிறே. (உந்தன்னை இத்யாதி) கோவிந்தாபிஷேகம் பண்ணினபின்பு முதல் திருநாமம் சொல்லுகை குற்றமிறே.  நாராயணன் என்றார்கள் கீழ்.  நீர்மை ஸம்பாதிக்கப் போந்தவிடத்தே  மேன்மை சொல்லுகை குற்றமிறே.

(இறைவா) தன் கைகால் தப்புச் செய்ததென்று பொடிய விரகுண்டோ?  உடைமையை இழக்கை உடையவன் இழவன்றோ?  (இறைவா) பிழைப்பராகிலும் தம் அடியார் சொற்பொறுப்பது பெரியோர் கடனன்றோ? (பெரியாழ்வார் திரு – 5.1.2)  ஐயர் தடுக்கின் கீழேயிருந்து கேட்டறியாயே? நீ இறைவனாகைக்கும் சீறுகைக்கும் என்ன சேர்த்தியுண்டு?  (நீ தாராய் பறை) விலக்காமை பார்த்திருக்கும் நீ எங்கள் அபேக்ஷிதம் செய்யாய். 

    @@@@@

இருபத்தொன்பதாம் பாட்டு

        சிற்றஞ் சிறுகாலே வந்து  உன்னைச் சேவித்து உன்

        பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

        பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ

        குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

        இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

        எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு

        உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்

        மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

அவதாரிகைஇருபத்தொன்பதாம் பாட்டு கீழ் பாட்டிலே உபாய ஸ்வரூபத்தைச் சொல்லி, தங்கள் உத்தேஶ்யம் கைங்கர்யமென்று ப்ரபந்த தாத்பர்யத்தைச் சொல்லி முடிக்கிறார்கள்.  இதில் – ப்ராப்ய ருசியையும் ப்ராப்யந்தான் இன்னதென்னு மிடத்தையும், அத்தை அவனே தரவேணுமென்னு மிடத்தையும் தங்கள் ப்ராப்ய த்வரையையும் அறிவிக்கிறார்கள்.  திருவாய் மொழியில் எம்மா வீட்டிலே (திருவாய் மொழி – 2.9) ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து, அதில் சரமதசையான அர்த்தத்தை நெடுமார்க்கடிமையிலே (திருவாய்மொழி – (8.10) அநுபவித்து முடித்தது;  இதில் முந்துற சரமதசையான  நெடுமாற்கடிமையில் அர்த்தத்தை அநுபவித்து, அது நிலை நிற்கைக்காகவும் அத்தைக் காட்டுகைக்காகவும் எம்மாவீட்டில் அர்த்தத்தோடே தலைக்கட்டுகிறது.

வ்யாக்யானம் – (சிற்றஞ்சிறுகாலே) சிறு பெண்கள் எழுந்திருக்கவொண்ணாத குளிர்போதிலே;  “சிந்தயே தாத்மனோஹதம்” என்று அநாதி அஜ்ஞானாந்தகாரம் நீங்கி பகவத்விஷயம் வெளிச்செறிந்த காலத்திலென்றுமாம்.  “நாரணனைக் கண்டேன் பகற்கண்டேன்” (இரண்டாம் திருவ – 81) என்னக்கடவதிறே.  சிற்றஞ்சிறுகாலே என்று ஜாதிப்பேச்சு;  (வந்து) சேதனற்கு பகவல்லாபம் .அவன் வரவாலே என்றிருக்க, வந்து என்றது ஆதராதிஶயத்தாலே.  இதுதான் அங்குத்தைக்கு மிகையாயிறே இருப்பது.  எங்ஙனே? என்னில் – “பத்ப்யாம் அபிகமாச்சைவ ஸ்நேஹஸந்தர்ஶனேன” என்று நீ இருந்தவிடத்தே வந்து;  ராகம் க்ரமப்ராப்தி ஸஹியாதிறே.  (உன்னை ஸேவித்து) பலம் வேண்டாதே ஸாதநகாலத்திலே ரசிக்கும் உன்னை சேவித்து.  “ஸுஸுகம் கர்த்தும்” என்றும் “பலமுந்து சீர்” (திருவாய்மொழி – 2.8.4) என்றுமிறே இருப்பது.  அதுக்கு மேலே ஓரஞ்சலியையுமுண்டறுக்க மாட்டாத உன்னை சேவித்து எழுதும் என்னும் (திருவாய் – 9.3.9) இது மிகையான உன்னை சேவித்து.  சேவ்யரான நாங்கள் சேவகராம்படி அத்தலையித்தலையாவதே!  “ஸுக்ரீவம் நாதமிச்சதி” என்னக்கடவதிறே. 

(உன் பொற்றாமரை அடியே) மஹார்ஹமாய், போக்யமுமாய், ப்ராப்தமுமாயிருந்த திருவடிகளிலே.  அடியே என்கிற அவதாரணத்துக்குக் கருத்து – “ஸர்வாத்மனா பர்யநுநீயமானோ யதா ந ஸௌமித்ரிருபைதி போகம்” என்னுமாபோலே வேறொரு ப்ரயோஜநத்துக்கு ஆளாகாதிருக்கை. 

(போற்றும்) போற்றுகையாவது – ஸ்வாமிக்கு மங்களாஶாஸநம் பண்ணுகை.  (பொருள் கேளாய்) முன்பே இருக்கிறவனைக் கேளாய் என்பானென்? எனில் – இவர்களுடைய ஸ்தநாத்யவயவங்களிலே அந்யபரனாயிருக்கையாலே.  உன் பராக்கை விட்டு நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேளாய் என்கிறார்கள்.

அவனும், இவர்கள் பேச்சன்றோ என்று கேட்டான்; (பெற்றம் மேய்த்து இத்யாதி) என்றும் ஸாத்திரத்திலே கேட்டுப்போகக் கடவ நீ பசுக்கள் மேய்த்துண்ணக் கடவதான இடைச்சாதியிலே வந்து பிறந்து, எங்களை அடிமைக் கொள்ளாதொழியவொண்ணாது.  (பெற்றம் மேய்த்து உண்ணும் குலம்) ஸுரக்ஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தாலல்லது  தாங்கள் உண்ணாத குலம்; உன் பிறப்பாலும் எங்கள் கார்யம் தலைக்கட்ட வேணுமென்று கருத்து. 

(குற்றேவல்) அந்தரங்க வ்ருத்தி; அன்றிக்கே உசிதமான அடிமை என்றுமாம்.  (எங்களை) பசுக்களுக்கு வேறு ரக்ஷகருண்டானாலும் உன்னையொழிய ரக்ஷகரில்லாத எங்களை.  (கொள்ளாமல் போகாது) உனக்கு விஹிதம். ஶப்தாதி விஷயங்களே தாரகமாயிருக்கிற  எங்களை உன் வடிவழகைக் காட்டி “உண்ணு சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான்” (திருவாய் – 6.7.1) என்னும்படி பண்ணி, ஸ்வரூபாநுரூபமான கைங்கர்யம் தாராதே போகை உனக்குப் போருமோ? என்கை.  “உண்டிட்டாய் இனி உண்டொழியாய்” (திருவாய் – 10.10.6) என்கிறார்கள். 

இவர்கள் சொன்ன ஸமநந்தரத்திலே, நீங்கள் நோன்புக்கு அங்கமானவற்றை கொண்டுபோமித்தனையல்லது, வேறு நீங்கள் அடிமை என்று சொல்லுகிறவையெல்லாம் என்? என்று பறையைக் கொடுக்கப் புக, (இற்றைப் பறை கொள்வான் அன்று காண்)  இன்று ஒரு ப்ரயோஜநம் கொண்டுபோக வந்தோமல்லோம் காண் நாங்கள்; யதா ஶ்ருத க்ராஹியாய் இருந்தாய் நீ.  (கோவிந்தா) பாவஜ்ஞாநமில்லாத ஜன்மமிறே  அபிதா வ்ருத்தியைப் போக்கி, தாத்பர்ய வ்ருத்தியறியாத ஜன்மமிறே.

ஆனால் நீங்கள் சொல்லுகிறது என்? என்ன – (எற்றைக்கும் இத்யாதி) “ந கால: தத்ர வை ப்ரபு:” என்கிற திருநாட்டிலேயிருக்கவுமாம்;  ஆஶ்ரித ஸஜாதீயனாய்க் கொண்டு ஸம்ஸாரத்திலே பிறக்கவுமாம்;  அதில் ஒரு நிர்பந்தமில்லை; காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமைசெய்தாற்போலே யாகவேணும்.  “தேவத்வே தேவதேஹீயம் மனுஷ்யத்வே மானுஷ:” என்னக்கடவதிறே.

(உந்தன்னோடு உற்றோமேயாவோம்) நீ ஸ்வாமியாகவும் நாங்கள் ஸ்வம்மாகவும், இஸ்ஸம்பந்தம் என்றும் ஸித்திக்குமித்தனையே எங்களுக்கு வேண்டுவது என்கிறார்கள்.  பக்தாநாத்ம ஶரீரவத் என்னக்கடவதிறே.  ஓர் உறவைக் குறித்து அதுவாகவேணு மென்னாதொழிந்தது  எல்லா உறவும் நீயேயாக வேணுமென்கைக்காக.  “மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஶரணம் ஸுஹ்ருத்”.  “க்ருஷ்ணாஶ்ரையா:, க்ருஷ்ணபலா: க்ருஷ்ணநாதாஶ்ச பாண்டவா:” “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன் மக்களும்” என்னக்கடவதிறே. 

மற்றும் வேண்டுவது என்?  என்ன, (உனக்கே நாம் ஆட்செய்வோம்) ஸம்பந்தம் ஒத்திருக்கச்செய்தே, ஶ்ரீ பரதாழ்வானைப்போலே விஶ்லேஷித்திருக்கையன்றியே இளையபெருமாளைப்போலே அடிமை செய்யவேணும். உனக்கே என்கிற அவதாரணத்துக்குக் கருத்து – நீ உகந்த அடிமை செய்வோம்; உனக்கும் எங்களுக்குமாயிருக்கிற இருப்பைத் தவிர்ந்து, தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே என்னுமாபோலே  நீ உகந்த அடிமையாகவேணும்; அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தமாகாது.

(மற்றை நம் காமங்கள் மாற்று)  நாங்கள் எங்களுக்கு என்றிருக்குமதுவும், நீயும் இவர்களுக்கு என்றிருக்குமதுவும், இவை இரண்டும் – விரோதியாகையாலே அத்தைத் தவிர்த்துத் தரவேணும் என்கிறார்கள். 

@@@@@

முப்பதாம் பாட்டு

        வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்

        திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

        அங்கப்பறை கொண்டவாற்றை அணிபுதுவைப்

        பைங்கமலத்தண்டெரியற் பட்டர்பிரான் கோதை சொன்ன

        சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

        இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்

        செங்கண் திருமுகத்துச்செல்வத் திருமாலால்

        எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்.

அவதாரிகை – நிகமத்தில், இப்ரபந்தம் கற்றார், பிராட்டியாலும் எம்பெருமானாலும் ஸர்வ காலமும் விஷயீகரிக்கப்படுவார்கள் என்கிறார்கள்.  கற்றார்க்கு அநுஷ்டித்தாரோபாதியும், அநுகரித்தாரோபாதியும் பலம் ஸித்திக்குமென்கை.  கன்றிழந்த தளை நாகு தோற்கன்றுக்கும் இரங்குமாபோலே  இப்பாஶுரம் கொண்டு புக நமக்கும் பலிக்குமென்று பட்டர் அருளிச்செய்வர். 

வ்யாக்யானம் – (வங்கக் கடல்) கடல் கடையாநிற்க, மரக்கலம் அலையாதபடி கடைந்த நொய்ப்பம்.  கடைந்தபோது சுழன்றுவருகையாலே கடலடைய மரக்கலமாய் நின்றபடி என்றுமாம்.  ப்ரயோஜநாந்தர பரர்க்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அபேக்ஷித ஸம்விதாநம் பண்ணும் ஶீலவான் என்கை.  க்ருஷ்ணனையாகில் கவிபாடிற்று, க்ஷீராப்தி மதநம் பண்ணினவத்தை சொல்லுகை  பின்னை சேருமோ? என்னில் – விண்ணவரமுதுண்ண அதில் வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே என்று – தேவர் கார்யமென்று (பெரிய திருமொழி – 6.1.2) ஒரு வ்யாஜத்தையிட்டு பெரியபிராட்டியாகிற பெண்ண முதத்தைப் பெறுகைக்காகக் கடல் கடைந்தபடி – ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜமாக்கிப் பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த க்ருஷ்ணனுடைய ஸ்வபாவத்தோடு ஸத்ருஶமாயிருக்கையாலே சொல்லுகிறார்கள்.  (மாதவனை) ஆஶ்ரயணீயனுமாய், போக்யமுமாயிருக்கும் தத்வம் லக்ஷ்மீஸமேதனா யிருக்குமென்கை.  ஆஶ்ரயித்தார் குற்றத்தைப் பொறுப்பித்து அபேக்ஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டென்கை.  (கடல் கடைந்த மாதவனை) கடல் கடைந்து பிராட்டியை லபித்தவனை.  (கேசவனை) விரோதி நிரஸன ஸ்வபாவனை.  ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான ஸ்வாதந்த்ர்யத்தையும் அந்ய ஶேஷத்வத்தையும் போக்கினவனை.  (மாதவனை கேசவனை) அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனை, விண்ணவர் அமுதுண்ண அதில் வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானை என்கிறபடியே – தான் ஸாக்ஷாத் அம்ருதத்தையுண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் என்று பட்டர் அருளிச்செய்வர்.

(திங்கள் திருமுகம்) க்ருஷ்ண ஸம்ஶ்லேஷத்தாலே குளிர்ந்து மலர்ந்த முகம்.  “கதிர் மதியம் போல் முகத்தான்” (1) என்று அநபிபவநீயத்வமும் உண்டு – அங்கு; இவனை அநுபவிப்பார் முகமும் இப்படியேயிறே இருப்பது. “மதிமுக மடந்தையரிறே”  (திருவாய் – 10.9.10).  (சேயிழையார்) சூடகமே இத்யாதியில் தாங்கள் அபேக்ஷித்தபடியே அவனும் அவளும் கூடவிருந்து பூட்டின ஆபரணத்தை  உடையவர்கள்.  க்ருஷ்ண விஷயீகாரத்தால் பிறந்த புகராலே ஒருபடி ஆபரணம் பூண்டாற்போலே இருக்கிறவர்கள்.  (சென்று) இவ்வொப்பனையோடே வரப்பார்த்திருக்கும் அளவல்லாத த்வரையைச் சொல்லுகிறது.  (இறைஞ்சி) “அன்று இவ்வுலகமளந்தாய் அடி போற்றி”  என்கிறபடியே அவனுக்கு மங்களாஶாஸநம் பண்ணி. 

(அங்கு) திருவாப்பாடியிலே.  (அப்பறை கொண்ட ஆற்றை) நாட்டுக்குப் பறை என்று ஒரு வ்யாஜத்தையிட்டு அடிமை கொண்டபடியை.

(அணி புதுவை) ஸம்ஸாரத்துக்கு நாயகக் கல்லான ஶ்ரீவில்லிபுத்தூர்.  (பைங்கமலத் தண் தெரியல்) ப்ராஹ்மணர்க்கு தாமரைத் தாராகையாலே சொல்லுகிறது.  (பட்டர்பிரான் கோதை சொன்ன) ஆண்டாள் அநுகார ப்ரகாரத்தாலே அநுபவித்துச் சொன்ன.  “ஸஹோவாச வ்யாஸ: பாராஶர்ய:” என்று பராஶரபுத்ரனென்று  ஆப்திக்குச் சொன்னாற்போலே, பெரியாழ்வார் மகளென்கையாலே சொன்ன அர்த்தத்தில் அரத்தவாதமில்லை.

(சங்கத் தமிழ் மாலை) “குழாங்களாய்” (திருவாய் – 2.3.11) என்னுமாபோலே திரள் திரளாக அநுபவிக்க வேண்டும் ப்ரபந்தம்.  பஞ்ச லக்ஷங்குடியில் பெண்கள் திரள் திரளாக அநுபவித்த ப்ரபந்தமிறே.  (தமிழ் மாலை) பிராட்டி ஆண்டாளானாற்போலே உபநிஷத்துத் தமிழானபடி.  (மாலை) பாவனமான அளவன்றிக்கே போக்யமாயிருக்கையும், தலையாலே சுமக்கவேண்டி யிருக்கையும்.  (முப்பதும் தப்பாமே) இதில் ஒரு பாட்டும் குறையாமே.  விலையில்லாத ரத்நங்களாலே செய்த ஏகாவலியிலே ஒரு ரத்நம் குறைந்தாலும் நெடும்பாழாயிருக்குமிறே; அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேரிழவாயிருக்குமென்கை.

(இங்கு) பிற்பட்ட காலத்திலே என்னுதல், ஸம்ஸாரத்திலே என்னுதல்.  (இப்பரிசு உரைப்பார்) இப்பாசுரத்தைச் சொல்லுவார்.  திருவாய்ப்பாடியில் பெண்கள் தாங்கள் க்ருஷ்ணாநுபவம் பண்ணிப் பெற்றார்கள்;  ஆண்டாள் அநுகாரத்தாலே பெற்றாள்.  ஆகையால், இப்ரபந்தம் கற்றார்க்கும் இந்த பலம் கிடைக்கும்.

(ஈரிரண்டு மால்வரைதோள்) இவர்களளவு பாராதே பண்டு பாடினவர்கள் சொல் வழியாலே அநுஸந்திக்கையாலே தோள்கள் பணைக்கும்; உகவாதாற்குத் தோள்கள் இரண்டாய் தோற்றும்;  இவர்களுக்குத் தோள்கள் நாலாய் தோற்றுமிறே.  (செங்கண் திருமுகத்து) அலப்ய லாபத்தாலே சிவந்த கண்கள்.  (செல்வ திருமால்)  உபயவிபூதியுக்தனான ஶ்ரீய:பதியாலே. இப்பாட்டில் – உபக்ரமத்திலே பிராட்டி ஸம்பந்தம் சொல்லி, முடிவிலும் சொல்லுகையாலே, த்வயத்தில் சொன்னபடியிலே இங்கும் சொல்லிற்றென்கை. 

(எங்கும் திருவருள் பெற்று) த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும் பிராட்டியும் தானும் ஸந்நிஹிதமாம்படி ப்ரஸாதத்தைப் பெற்று.  (இன்புறுவர்) பகவத் ஸம்ஶ்லேஷத்தால் வந்த ஆநந்தம் பெறுவர். விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அநுஸந்தித்தல், மாட்டிற்றிலனாகில் சிற்றஞ்சிறுகாலே என்கிற பாட்டை அநுஸந்தித்தல்,  அதுவும் மாட்டிற்றிலனாகில் நாம் இருந்த இருப்பை நினைப்பது என்று பட்டர் அருளிச் செய்வர். 

பெரியவாச்சான்பிள்ளைத் திருவடிகளே ஶரணம்

ஆண்டாள் திருவடிகளே சரணம்

@@@@@

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.