ஸ்ரீ :
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
அருளிச்செய்த
அருளிச்செயல் ரஹஸ்யம்
த்வய ப்ரகரணம்
அவதாரிகை
ப்ரியமும் ப்ரியதரமுமான ஐஸ்வர்ய கைவல்யங்களிற் காட்டில் ப்ரியதமமாகத் திருமந்த்ரத்தில் அறுதியிட்ட கைங்கர்யமாகிற உத்தம புருஷார்த்தத்திலும், ஹிதமும் ஹிததரமுமான பக்திப்ரபத்திகளிற்காட்டில் ஹிததமமாகச் சரம ஶ்லோகத்தில் அறுதியிட்ட ஸித்தஸ்வரூபமான சரமோ
பாயத்திலும், ஆசையும் துணிவும் பிறக்கையாலே ப்ரயோஜநாந்தரபரரிலும் ஸாதநாந்தரநிஷ்டரிலும் வ்யாவ்ருத்தனான அதிகாரி உபாயத்தைப் பற்றும் படியையும் கைங்கர்யத்தை இரக்கும் படியையும் அறிவிக்கிறது த்வயம்.
‘த்வய‘ நிர்த்தேஶஹேது
இரண்டர்த்தத்தையும் இரண்டிடத்திலே ஒதுகிற இரண்டு வாக்யத்தையும் அநுஸந்தித்தவாறே த்வயமாயிற்று.
ரஹஸ்யத்ரய ஸம்ப்ரதாய பௌர்வாபர்ய நிரூபணம்
மூன்று ரஹஸ்யமும். உபநிஷத்திலும் கீதோபநிஷத்திலும்
கடவல்லியிலும் ஓதப்பட்டு, மூன்று சிஷ்யர்களுக்கும் எம்பெருமான் தானே வெளியிட்டதாயிருக்கும். ப்ராப்ய ப்ராபகஜ்ஞாநம் அநுஷ்டாந ஶேஷமாகை யாலே. மந்த்ரமும் விதியுமான இரண்டு ரஹஸ்யத்திலும் அநுஷ்டாநரூபமான த்வயம் பிற்பட்டது. உபாயவரணம் ப்ராப்யத்துக்கு முற்படவேண்டுகையாலே ப்ராபகத்திலே நோக்கான மத்யம ரஹஸ்யத்தை வெளியாக்குகிற பூர்வ வாக்யம் முற்பட்டு, ப்ராப்யத்திலே நோக்கான ப்ரதமரஹஸ்யத்தினுடைய
விஶதாநுஸந்தாநமான உத்தரவாக்யம் பிற்பட்டது.
த்வயோபஷ்டம்பகப்ரமாண நிரூபணம்
( திருமாலை 38 ) மேம்பொருளிலே விஶதமாகிற இரண்டர்த்தத் தையும் ( திருவாய் 2-8-4 ) ‘புலனைந்து மேயும்’ என்று உபதேஶிக்கக் கேட்ட வர்கள் அநுஷ்டானரூபமான திருப்பாவையிலும். ( பெரிய திரு 1-9 ) தாயே தந்தையிலும் ஸ்தோத்ர கத்யங்களிலும் த்வயத்திலடைவு காணலாம்.
த்வயத்தினுடைய வைதிக பரிக்ரஹம்
திருமந்த்ரத்தை ஶாஸ்த்ரங்களங்கீகரித்தது; சரம ஸ்லோகத்தை ஶாஸ்த்ரங்களுக்குள்ளீடானவன் ஆதரித்தான்; த்வயத்தை அவன் தனக்கும் உள்ளீடான ஜ்ஞாநிகள் பரிக்ரஹித்தார்கள். ப்ரமாண ப்ரமேயங்களினுடைய அங்கீகாரங்கள் போலன்றிறே. ப்ராமாணிகரான ப்ரமாதாக்களுடைய பரிக்ரஹம்.
த்வயத்தின் பரமகுஹ்யத்வம்
பூர்வாசார்யர்கள் இரண்டு ரஹஸ்யத்திலும் அர்த்தத்தை மறைத்து ஶப்தத்தை வெளியிடுவார்கள். இதிலர்த்தத்தைப் போலவே ஶப்தத்தையும் மறைப்பர்கள். இப்படிச் செய்கைக்கடி இது அதிக்ருதாதிகாரமா கையிறே.
த்வய வைபவம்
( பெரிய திரு 5-8-9 ) வளங்கொள் மந்திரமும், ( நாச் திரு 11-10 ) மெய்ம்மைப் பெருவார்த்தையும் அருளிச்செய்த வாயாலே ‘த்வய வக்தா’ ‘ ‘த்வயமர்த்தாநுஸந்தாநேந’ என்று இரண்டினேற்றமும் வெளியிடப்பட்டதிறே. கற்றவர்கள் சொல்லக்கேட்டாலும் கற்பித்தவர்கள் ( திருநெடு 14 ) கைகூப்பிக் காலிலே வணங்கும்படியிறே இச்சொல்லிலேற்றம். ( திருவாய் 1-10-8 ) செல்வ நாரணனென்ற சொல் வழிப்போக்கர் சொல்லிலும் அகலாதே உள்ளே புகுரும்படி பண்ணுமதாய், (திருப்பாவை 30 ) ‘எங்கும் திருவருள் பெற்று’ என்னும்படி தோற்கன்றுக்கிரங்கிச் சுரக்கும் ஸுரபியைப்போலே, நம்மைப் பாராதே முன்பு சொன்னவர்களைப் பார்த்து இரங்கும்படி அவன்றன்னையும்
பண்ணுமதிறே. நம் முதலிகள் மூன்று ரஹஸ்யத்தையும் தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருக்கச் செய்தேயும் ( திருவாய் 5-7-10 ) ‘ஆறெனக்கு நின் பாதமே சரணாகத்தந்தொழிந்தாய்’ என்றிருக்கிற தம்மோடொக்க விமுகரையும் ( திருவாய் 4-1-1 ) ‘திருநாரணன்தாள் காலம்பெறச் சிந்தித்துய்ம்மினோ’ என்ன லாம்படி ஸர்வாதிகாரமாகையாலும் ( திருவாய் 6-8-6 ) ‘உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்’ என்னும்படி ஆசார்யருசி பரிக்ருஹீதமாகையாலும்
( திருவாய் 10-5-7 ) ‘மாதவனென்றென்றோத வல்லீரேல்’ என்னும்படி புத்திபூர் வகமான அபசாரத்துக்கும் பரிஹாரமாகையாலும் ( திருவாய் 9-10-5 ) ’மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்’ என்னும்படி ஶரீராவஸாநகாலத்திலே மோக்ஷமாகையாலும். த்வயத்தையே தஞ்சமாக நினைப்பார்கள். ஸம்வாதங் களும் வ்யாக்யாநங்களும் ஆசார்யவசநங்களும் ருசிவிஸ்வாஸங்களுக் குறுப்பாக இவ்விடத்திலே அநுஸந்திக்கப்படும்.
ஶாஸ்த்ர ஶாஸ்த்ர ஸார தாத்பர்ய நிரூபணம்
ஶாஸ்த்ரங்களும், சரமஶ்லோகமும் ஆத்மேஶ்வரர்க ளுடைய ஸ்வாதந்தர்யத்தைக் காட்டும். திருமந்த்ரமும் த்வயமும் ஆத்மபரமாத்ம பாரதந்த்ர்யத்தை வெளியிடும். ஶாஸ்த்ரங்களுக்கு ஆத்மாவி னுடைய தேஹபாரதந்த்ர்யத்திலே நோக்கு. திருமந்த்ரத்துக்கு ஆத்மா வினுடைய தேஹிபாரதந்த்ர்ய ததீயபாரதந்தர்யத்திலே உறைப்பு. சரம ஶ்லோகத்துக்குக் கர்மங்களினுடைய ஈஶ்வர பாரதந்த்ர்யத்திலே நினைவு. த்வயத்துக்கு ஈஸ்வரனுடைய ஆஶ்ரிதபாரதந்த்ர்யத்திலே கருத்து.
வாக்யார்த்த நிரூபணம்
இதில் முற்கூறு – மறுக்கவொண்ணாத புருஷகாரத்தை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளை உபாயமாகப் பற்றும்படியை
அறிவிக்கிறது. பிற்கூறு சேர்வாரோட்டைச் சேர்த்தியிலே அவனுக்குச் செய்யும் அடிமையில் இரப்பை வெளியிடுகிறது.
அவதாரிகை ஸமாப்தை.
ப்ரதமபதார்த்தம்
ஆறுபதமானவிதில் முதல்பதத்திலே இரண்டாம் பதத்தை வெளியிடுகிற மூன்றாம் பதத்தில் உபாயத்துக்கு அபேக்ஷிதமான புருஷகார குண விக்ரஹங்கள் மூன்றும் தோன்றும்.
ஸ்ரீஶப்தார்த்தம்
‘ஸ்ரீ’ என்கிறவிது புருஷகாரமான விஷ்ணுபத்னியினுடைய
ஸ்வருபநிரூபகமான முதல் திருநாமம். ஸேவையைக் காட்டுகிற தாதுவிலே யான இப்பதம் – ‘ஸ்ரீயதே’ ‘ஸ்ரயதே’ என்று இரண்டுபடியாக – மூன்று வகைப் பட்ட ஆத்மகோடியாலும் ஸேவிக்கப்படுகிறமையும். தான் நிழல்போலே எம்பெருமானை ஸேவிக்கும்படியையும் காட்டக்கடவது. சேரவிடுவார்க்கு இரண்டிடத்திலும் உறவு வேண்டுகையாலே சேதனர்க்குத் தாயாய் முன்னிலை தேடாமல் பற்றி. ஸ்வரூபம் பெறலாய், அவனுக்கு திவ்யமஹிஷியாய்க் கிட்டித்தன் ஸ்வரூபம் பெறலாய் ( இர திருவ 56 ) ‘ நங்கள் திரு’ ( திருவாய் 10-10-2 ) ‘உன் திரு’ என்னலாம்படி இரண்டிடத்திலும் விடவொண்ணாத பந்த முண்டு. ( நாச் திரு 10-10 ) ‘செல்வர் பெரியர்’ (1-10-8 ) ‘அவனெவ்விடத்தான் யானார்’ ( திருவாய் 4-7-1 ) ‘செய்வினையோ பெரிதால்’ என்று அவன் பெருமையையும் தங்கள் தண்மையையும் அபராதத்தின் கனத்தையும் நினைத்து அஞ்சினவர்கள் ( பெரிய திரு 2-3-7 ) ‘இலக்குமனோடு மைதிலியும்’ என்னும்படி தன்னோடு ஒரு கோர்வையான இளைய பெருமாளோபாதி ( பெரிய திரு 5-8-1,2) கீழ்மகன், மற்றோர் சாதி, ( பெரியாழ் திரு 3-10-6 ) சிறுகாக்கை,
( பெரிய திரு 10-2-8 ) ‘புன்மையாளன், ( பெரியாழ் திரு 4-9-2 ) ‘அடியார்’ என்று தண்மை பாராமல் நாடும் காடும் மேடும் கல்லும் கடலும் ஒருவெளுப்பாம்படி ( திருவாய் 9-2-1 ) ‘பங்கயத்தாள் திருவருள்’ என்கிற தன்னுடைய காருண்ய வர்ஷத்தைச் சொல்லுகிற ( திருவிருத்தம் 52 ) மழைக்கண்களையுடைய
( பெரிய திரு 2-6-2 ) பார்வண்ணமட மங்கையாய். அஶரண்ய ஶரண்யையான
இவளே நமக்குப் புகலென்று புகுந்து கைங்கர்யப்ராப்தியுபாயத்தில் அபேக்ஷைகள் தோற்ற விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளைக் கேட்டு ‘அஸ்து தே’ என்று தொடங்கி இவர்கள் வினைகள் தீர்த்துத் ( பெரிய திரு 3-7-9 ) தூவி சேரன்னமான தன் சிறகிலே இட்டுக்கொண்டு. ஈஸ்வரன் இத்தலையில் பிழைகளை நினைத்து ( நான் திரு 21 ) எரிபொங்கி ( பெரியாழ்
திரு 1-8-5 ) அழல விழித்துச் ( திருநெடு 6 ) சலம்புரிந்து அங்கு அருளின்றிக்கே சீறிக்கலங்கினவளவிலே ( பெரிய திரு 7-2-7 ) நன்னெஞ்சவன்னமானமை தோற்றக் கால்வாங்கிக் கடக்க நின்று இரண்டு தலையும் பட்டதுபட, நங்கோலரை(ற!)யான குடியிருப்பை முதல் திருத்தவேணுமென்று பார்த்து ஹிரண்யவர்ணையான தன்னுடைய ( பெரியாழ் திரு 3-10-5 ) பான்மொழி களாலே ப்ரியஹிதங்கள் குலையாதபடி இடமற வார்த்தை சொல்லி ஆறவிட்டு ( இர திருவ 82 ) வடிக்கோலவாள் நெடுங்கண்களாலே தேற்றி ( முதல் திருவ 42 ) ‘திருமகட்கே தீர்ந்தவாறு’ என்னும்படி திருவுள்ளம் மாறாடினவளவிலே, ஓடமேற்றிக் கூலி கொள்வாரைப்போலே அபராதங்களைப் பொறுப்பித்துப்
( நான் திருவ 49 ) பொன்பாவையானமை தோற்றும்படி விளக்குப் பொன் போலே இரண்டு தலையையும் பொருந்தவிட்டு ( திருவாய் 4-5-8 ) ‘நமக்கும் பூவின்மிசை நங்கைக்குமின்பன்’ என்னும்படி ஏகரஸமாக்கிப் பின்பு அந்தப் புரத்தில் ஆளாய்நின்று ( திருச்சந்த 101 ) ‘இரந்துரைப்பதுண்டு’, ( பெரிய திரு 6-3-7 ) ‘வேறே கூறுவதுண்டு’, ( திருவிரு 1 ) நின்று கேட்டருளாய்’, ( திருப்பாவை 29) போற்றும் பொருள் கேளாய் என்று இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளை ( நாச் திரு 8-4 ) திருமங்கை தங்கிய ( திருவாய் 6-8-10 ) என் திருமார்வற்கு ( திருவாய் 1-4-7 ) ஒருவாய் சொல் ( திருவாய் 9-7-6 ) ‘என் வாய் மாற்றம்’ என்னும்படி சேரவிருந்து திருச்செவி சாத்துகையாலே, ‘ஶ்ருணோதி’ ‘ஶ்ராவயதி’ என்கிறவிரண்டாலும் புருஷகாரமான இவளுடைய செயல்களைச் சொல்லுகிறது. ( பெரிய திரு 5-8-2 ) ‘செய்தகவினுக்கில்லை கைம்மாறு’ என்று இரண்டு தலைக்கும் தலைதடுமாறாக உபகரித்துத் தன் சொல்வழி போக வேண்டும்படியான திருவடியோடே மறுதலைக்குமவள். ( மூன்-திருவ 100 ) தான் முயங்கும்படியான போக்யதைக்குத் தோற்று எத்தைச் செய்வோமென்று தலைதடுமாறி ( பெரியாழ் திரு 3-10-7 ) நின்னன் பின்வழி நின்று. ( பெரிய திரு 2-5-6 ) ‘அதனின் பின்னே படர்ந்தான்’ என்னும்படி விளைவதறியாதே முறுவலுக்குத் தோற்றுத் தன் சொல்வழி வருமவளைப் பொறுக்குமென்னு மிடம் சொல்ல வேண்டாவிறே.
மதுபர்த்தம்
மதுப்- இவனுமவளுமான சேர்த்தி எப்போதுமுண்டென்கிறது.
ஒருவரை ஒருவர் பிரிந்தபோது நீரைப்பிரிந்த மீனும் தாமரையும்போலே ஸத்தையழிவது முகம் வாடுவதாகையாலே அவனுமிவ ளோடு ( பெரிய திரு 2-4-1 ) அன்பளவி, இவளும் ( இர-திருவ 82 ) செவ்விப் படிக்கோலம் ( திருவாய் 6-10-10 ) அகலகில்லேனென்றிருக்கையாலே ( நான் திருவ 82 ) ‘என்றும் திருவிருந்தமார்வன் சிரீதரன்’ என்னும்படி நித்யயோகம் குலையாது. பிரிந்தபோது ஜகத்தைப் பரிவர்த்திப்பன், யுகாந்தாக்னி கூற்றறுத்தோ சுடுவதென்னும்படி நாடு. குடிகிடவாதே. கூடினபோது
( திருவாய் 7-10-1 ) ‘ஏழுலகையின்பம் பயக்க’ என்னும்படி நாடுவாழ்கையாலே இச்சேர்த்திதானே ஜகத்ரக்ஷணத்துக்குறுப்பாயிருக்கும்.
அபராதம் கனத்திருக்க இவள் ஸந்நிதியாலே காக சூர்ப்பணகைகளுக்குத் தலைபெறலாயிற்று. அபராதம் மட்டாயிருக்க இவள் அருகில்லாமையாலே ராவண தாடகைகள் முடிந்தார்கள். ( மூன்-திருவ 30 ) ‘சேர்ந்த திருமால்’ என்கிறபடியே பரத்வம் முதலாக ஈஶ்வரகந்தமுள்ள இடமெல்லாம் விடாதே சேர்த்தியும் அநுபவமும் உகப்பும் மாறாமையாலே. காலம் பாராதே ருசி பிறந்த போதே ( திருவாய் 4-1-2 ) திருமாலை விரைந்தடி சேரக் குறையில்லை. இவள் சேரநிற்கையாலே ஸ்வதந்த்ரனுக்கும் பிழை நினைந்து கைவிடவொண்ணாது. ஸாபராதனுக்கும் உடனிருக்கிறமையை நினைத்துக் கால்வாங்க வேண்டா.
நாராயணபதார்த்தம்
அபராதத்தாலே அமுக்குண்டு புருஷகாரத்தாலே தலையெடுத்து சேர்ப்பாரே ( பெரியாழ் திரு 4-9-2 ) சிதகுரைக்கிலும் மறுதலைத்துக் கைவிடாதே நோக்கும்படியான வாத்ஸல்யாதிகளைச் சொல்லு
கிறது நாராயணபதம். விட்டபோது கைக்கொண்டு விடுவிக்கவொண்ணாதபடி காட்டிக்கொடுத்தவள் தன்னையும் விட்டுப் பற்றும்படியிறே ஈஶ்வரனுடைய குணாதிக்யமிருப்பது. ( திருவாய் 1-2-10 ) ‘ஈறிலவண் புகழ்’ என்கிற ( பெரிய திரு 5-7-2 ) எண்ணில் பல் குணங்களும் இதுக்கர்த்தமேயாகிலும், உபாய ப்ரகரணத் திலே ( திருவாய் 6-10-10 ) ‘நிகரில் புகழாய்’ என்று தொடங்கி ஆழ்வார் அருளிச் செய்த நாலு குணங்களும் இதுக்கு ப்ரதாநார்த்தமாகக் கடவது. அதில் வாத்ஸல்யமாவது – அன்றீன்ற கன்றினுடம்பில் அழுக்கை போக்யமாகக் கொண்டு பாலைச்சுரந்து கொடுத்து வளர்த்து வேறொன்றை நினையாதே தன்னையே நினைத்துக் குமிறும்படி பண்ணி. முன்னணைக் கன்றையும். புல்லிட வந்தவர்களையும், விட்டுக் கட்டுவாரையும் நலியத் தேடுகிறவர்க ளையும் உதைத்து நோக்குகிற தேநுகுணமிறே. அப்படியே இவனும் இன்று ஜ்ஞாநம் பிறந்தவனுடைய அழுக்குடம்பை ( திருவாய் 9-6-5 ) உருவமு மாருயிருமுடனே ‘ என்னும்படி போக்யமாகக்கொண்டு,
( பெரிய திருவ 58 ) பாலே போல் சீரில் ( பெரிய திரு 5-8-1 ) இன்னருள் சுரந்து கொடுத்து வளர்த்துத் ( முதல் திருவ 30 ) தாய்நாடு கன்றேபோல் ( பெரிய திரு 7-3-2 ) தன்னையே நினைக்கச்செய்து. ( பெரியதிரு 7-1-1 ) மறவாதழைக்கப் பண்ணி. ஸூரிகளையும் ( பெரியாழ் திரு 5-4-8 ) ‘அனந்தன் பாலும் கருடன் பாலும்’ ( திருமாலை 44 ) ‘தவம் செய்தார் வெள்கி நிற்ப’ என்கிறபடியே திருமகளையும் உபேக்ஷித்து இவனை நோக்கக் கடவனாயிருக்கும்.
இப்படிச் செய்கைக்கடியான குடல் துடக்கு – ஸ்வாமித்வ மாவது. இவன் (திருவிருத்தம் 95 ) யாதானும் பற்றி ( நான் திருவ 88 ) ஓடும் போதும் விடாதே தொடர்ந்து உருவழியாமே ( திருவாய் 10-7-6 ) ஒருமாவயிற்றி னுள்ளே வைத்து நோக்கி அத்வேஷம் தொடங்கி அடிமையெல்லையாகத் தானே உண்டாக்கி. இழவுபேறு தன்னதாம்படி உடையவனாயிருக்கும் உறவை – ஸ்வாமித்வமென்கிறது.
இந்த குணத்தைக் கண்டு ( திருவாய் 1-10-7 ) வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் ( திருவாய் 1-5-1 ) வானோரிறையைக்
( திருமாலை 34 ) கள்ளத்தேன் நானும் ( திருக்குறு 12 ) எச்சில் வாயால்
( பெரியாழ் திரு 5-1-1 ) வாய்க்கொள்ளமாட்டேனென்று அகல்வாரளவில் பெருமை சிறுமைகள் பாராதே இவர்கள் நினைவைத் தன் பேறாக மேல் விழுந்து ஒருநீராகக் கலக்கை – ஸௌஶீல்யம்.
( திருவாய் 7-7-11 ) கட்கரிய திருமேனியை ( திருச்சந்த 16 ) நிலைக்கணங்களும் காணும்படி கண்ணுக்கிலக்காக்குகை – ஸௌலப்யம்.
( திருவாய் 3-10-1 ) சன்மம் பல பல செய்து ( திருவாய் 3-10-6 ) கண்காணவந்து ஓரொருத்தர்க்கு ஒரொரு தேஶகாலங்களிலே வடிவைக் காட்டின ஸௌலப்யம்
பரத்வமென்னலாம்படி எல்லா தேஶகாலங்களிலும் ( திருவாய் 9-2-7 ) இம்மட உலகர் காணலாம்படி பண்ணின அர்ச்சாவதார ஸௌலப்யம் விஞ்சி யிருக்கும்.
தோஷம் பாராதே கார்யம் செய்யுமென்று. வெருவாதே
கண்டு பற்றினவர்களுக்குக் கார்யம் செய்கைக்குறுப்பான ஜ்ஞாந ஶக்தி க்ருபைகளும் இதிலே அநுஸந்திக்கப்படும்
( திருவாய் 1-4-5 ) ‘நல்கித் தான் காத்தளிக்கும்’ என்று வாத்ஸல்யமும், ( திருவாய் 2-7-2 ) ‘முழுவேழுலகுக்கும் நாதன்’ என்று ஸ்வாமித்வமும் ( திருவாய் 9-3-1 ) ‘நங்கள் பிரான்’ என்று ஸௌஶீல்யமும்,
( திருவாய் 9-8-7 ) ‘நாவாயுறைகின்ற’ என்று ஸௌலப்யமும். ( திருவாய் 4-7-1 ) ‘ஞாலமுண்டாய் ஞானமூர்த்தி’ என்று ஜ்ஞாந ஶக்திகளும். ( திருவாய் 5-9-10 ) ‘நல்லருள் நம்பெருமான்’ என்று க்ருபையும் நாராயண ஶப்தத்துக்கு அர்த்த மாக ஆழ்வார் அநுஸந்தித்தருளினார்.
“சரணௌ” ஶப்தார்த்தம்
‘சரணௌ’ – என்று. பிராட்டியும் எம்பெருமானும் விடிலும்
விடாத ( திருவாய் 1-2-10 ) திண் கழலாய் ( பெரிய திரு 5-8-5 ) முழுதும் வந்திறைஞ்சும் ( பெரிய திரு 7-4-8 ) மென்தளிர் போலடியாய் வந்திறைஞ்ச விராதே ( அமலனாதி 1 ) ‘கமல பாதம்வந்து’ என்னும்படி ( திருவாய் 1-9-11,
1-10-1, 5-9-8 ) நீள் கழலாய்ச் ( முதல் திரு 100 ) சாடுதைத்தவொண் மலர்ச் சேவடியாகையாலே. ( திருவாய் 6-3-7 ) யாவர்க்கும் வன் சரணாய்.
( பெருமாள் திரு 5-1 ) அழும் குழவிக்கும் ( பெரியாழ் திரு 1-2-1 ) பேதைக் குழவிக்கும் தாரகமுமாய், போக்யமுமாய், ( பெரிய திரு 1-8-3 ) ‘இணைத் தாமரையடி’ என்னும்படி சேர்த்தியழகையுடைத்தான திருவடிகளைச் சொல்லுகிறது.
அவன் ‘மாம்’ என்று தன்னைப் பற்றச் சொன்னாலும் ஶேஷ பூதர் ( திருவாய் 10-5-1 ) ‘கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்’
( திருமாலை 9 ) “எந்தை சுழலிணை பணிமின்” ( பெரிய திரு 1-10-8 ) ஆயனடியல்லது ( பெரிய திரு 7-7-2, 3, 5, 6 ) நின்னடியன்றி மற்றறியேன்’ என்று ( திருவாய் 3-10-10 ) கண்ணனைத் தாள் பற்றக் கடவர்களிறே.
( திருவாய் 7-1-10 ) இணைத்தாமரைகட்கு அன்புருகி நிற்கும் அது நிற்கச் ( பெரிய திரு 1-6-2 ) சிலம்படியிலே மண்டுகிறவனுக்கு அன்ன மென்னடையை அருவருக்கும்படி, ( பெரிய திரு 9-7-2 ) சேவடிக்கே மறவாமை யை உண்டாக்கி ( திருவிருத்தம் 2 ) அன்புசூட்டப்பண்ணி; ( திருவாய் 5-7-10 ) பாதமே சரணாகக் கொடுத்து ( திருவாய் 5-9-3 ) ‘கழல் காண்டுங் கொல்
( திருவாய் 9-2-2 ) ‘தலைக்கணியாய்’ ( திருவாய் 5-8-7 ) ‘சரணம் தந்தென் சன்மம் களையாய்’ என்றிருக்கிற அபேக்ஷைகளையுண்டாக்கி. ( திருவாய் 10-4-3 ) ‘தாள் கண்டு கொண்டு என் தலைமேல் புனைந்தேன்’ ( திருவாய் 10-4-9 ) ‘காண்டலுமே விண்டேயொழிந்த’ என்கிற பேறுகளைக் கொடுத்து. ( பெரியாழ் திரு 5-3-4 ) ‘அங்கோர் நிழலில்லை நீருமில்லை’ என்கிற விடாயை ( திருவாய் 10-1-2 ) அடி நிழல் தடத்தாலேயாற்றி ( திருச்சந்த 66 ) பாதபோதையுன்னி வழிநடத்தி.
( திருவாய் 3-10-10 ) தாளிணைக் கீழ்ப்புகும் காதலுக்கீடாகத் ( திருவாய் 7-5-10 ) தாளின் கீழ்ச்சேர்த்து. ( திருவாய் 2-9-10 ) வேறே போக விடாதே. ( திருவாய் 5-1-1 ) அடிக்கீழிருத்தி, ( திருவாய் 4-9-9 ) திருவடியே சுமந்துழலப்பண்ணி.
( திருவாய் 1-4-2 ) அடிக்கீழ் குற்றேவலிலே மூட்டி. ருசி ஜநகத்வம் முதலாக நித்ய கைங்கர்யம் எல்லையாக நடத்துவது திருவடிகளைக் கொண்டிறே.
இத்தால் புருஷகாரமான (பெரிய திரு 2-2-9 ) பனி(மா)மல ராள் வந்திருக்குமிடமாய். ( பெரிய திரு 7-10-6 ) சுடர் வான் கலன் பெய்த மாணிக்கச் செப்புப்போலே ஸ்வரூபகுணங்கள் நிழலெழும்படியாய். . ‘திருமேனி கிடந்ததுவே’ என்னும்படி அவையொழியவும் தானே கார்யம் செய்யவற்றாய். சிசுபாலனோடு சிந்தயந்தியோடு வாசியற ஸித்தஸாத்ய ரூபமான உபாயங்களால் செய்யும் கார்யத்தையும் தானே செய்து ( பெரியாழ் திரு 4-3-5 ) ‘அலவலைமை தவிர்த்த’ ( திருவாய் 5-3-4 ) ‘காதல் கடல் புரைய விளைவித்த’ என்னும்படி அத்வேஷத்தையும் பரபக்தியையும் உண்டாக்கித் தன்னோடே சேர்த்துக்கொள்ளும் திருமேனியை நினைக்கிறது.
ஶரண ஶப்தரார்த்தம்
(ஶரணம் ) என்று திருவடிகளைப் பற்றும்படியைச்
சொல்லுகிறது. அவித்யை முதலாக தாபத்ரயம் முடிவாக நடுவுள்ள அநிஷ்டங்களையும் போக்கி ( பெரிய திரு 9-8-3 ) பிணிவளராக்கை
நீங்குகை முதலாக ( திருவாய் 8-3-8 ) நின்றேயாட்செய்கை முடிவாக நடுவுள்ள இஷ்டங்களையும் தரும் உபாயமாக.
‘சரணௌ ஶரணம்’ என்று – ( மூன்றாம் திரு 4 ) ‘மருந்தும் பொருளும் அமுதமும் தானே’ என்கிறபடியே அம்ருதமே ஔஷதமாமாப் போலே ( இர.திருவ 84 ) அங்கண்மாஞாலத்தமுதமாய். அம்ருதத்துக்கு ஊற்றுவாயான அடியிணையை அம்ருதஸஞ்ஜீவிநியாகக் கல்லும் கரிக்கொள்ளியும் பெண்ணும் ஆணுமாம்படி விரோதியைப் போக்கு மென்கிறது.
இத்தால் ( திருப்பாவை 29 ) ‘பொற்றாமரை’ ( மூன் திரு 96 ) ‘அடித்தாமரை” ( பெரிய திரு 7-3-5 ) ‘தாமரையன்ன பொன்னாரடி’ என்கிற படியே ப்ராப்யமே ஸாதநமென்று உபாயாந்தரங்களில் வ்யாவ்ருத்தியைத் தெரிவிக்கிறது.
“ப்ரபத்யே” ஶப்தார்த்தம்
‘ப்ரபத்யே’ என்று – அணையையுடைத்து ஆன ஆற்றுக்
கால்போலே உபாயமான ( திருமாலை 36 ) மதுரவாற்றுக்கால் போகத்தை
விளைக்கைக்கு உறுப்பான சேதனனுடைய விலக்காமையைத் தெரிவிக் கிறது.
இவன் நெஞ்சாலே தணிந்தாலிறே உபாயந்தான் கார்யம்
செய்வது. வ்யஸநங்கள் வருதல், பேறு தாழ்த்தல். ஈஶ்வரன் ஶோதித்தல் செய்தாலும், துணிந்த சிந்தை குலையாமல் ( பெருமாள் திரு 5-1 ) ‘சரணல்லாமல் சரணில்லை’ என்றிருக்கிலிறே பேறுள்ளது.
( திருவாய் 9-2-2 ) ‘மனமதொன்றித்துணிவினால் வாழ’ என்கிறபடியே இந்நினைவு நெஞ்சாலேயமையுமேயாகிலும் ( பெரிய திரு 1-6-9 ) ‘உன்தன் சாணமே சரணமென்றிருந்தேன்’ ( பெரிய திரு 7-4-6 ) ‘திருவடியே துணையல்லால் துணையிலேன் சொல்லுகின்றேன்’
( திருவெழுகூற்றிருக்கை ) ‘அடியிணை பணிவன்’ என்று மூன்றும் நடவா நின்றதிறே. உபாயஸ்வரூபம் புருஷகாரகுண விக்ரஹங்களோடே கூடிப் பூர்ணமாகிறப்போலே ( திருவாய் 6-5-11 ) சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் ஸ்வீகாரமுண்டானால் அதிகாரி(ர) பூர்த்தியுண்டாகக் கடவது.
ஸ்வஸ்வரூபஜ்ஞாநமும். ப்ராப்யருசியும், உபாயாந்தர
நிவ்ருத்தியும் பிறந்தாரடைய ( பெரிய திரு 5-8-9 ) உலகமளந்த பொன்னடிக்கு
ஆளாகையாலே பற்றும் அதிகாரியைக் காட்டிற்றில்லை.
பற்றுகிறேன் என்கிற லட்டு ( ) ( திருவாய் 5-8-3 ) ‘வாணாள் சென்னாள் எந்நாள் அந்நாள்’ என்று ஶரீராவஸாநத்தளவும் உபாயாந்தரங்கள் கலசாமைக்கும் ( திருவாய் 1-6-7 ) நாள்கடலைக் கழிக்கைக் கும் ( திருமாலை 38 ) ‘சோம்பரையுகத்தி’ என்கிற உகப்புக்கும் ( திருச்சந்த 101 ) நிரந்தரம் நினைக்கையாகிற பேற்றுக்குமாக ( திருவாய் 5-10-11 ) நாடொறும் ஏக சிந்தையனாய்ச் செல்லுமிடத்தை வெளியிடுகிறது.
உத்தரவாக்யார்த்தம்
( முதல் திரு 52 ) “திருமாலைக் கைதொழுவர்” ( திருவாய் 1-5-7 ) “அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை” என்கிறபடியே புருஷகாரம் முன்னாகப் பற்றி ப்ரயோஜநங்களைக் கொண்டகலாதே. அவற்றையொழிந்து ( திருவாய் 4-9-10 ) ஒண்டொடியாள் திருமகளும் அவனுமான சேர்த்தியிலே அடிமையே பேறென்று கீழ்ச்சொன்ன பலத்தைக் காட்டுகிறது பிற்கூறு.
உத்தரவாக்ய ப்ரதமபதார்த்தம்
‘ஸ்ரீமதே’ – பெரியபிராட்டியாரோடே கூடியிருக்கிறவனுக்கு. ( ) ‘நீ திருமாலே’ என்னும்படி “மாம், அஹம்” என்கிறவிடத்தில் ஸ்ரீ ஸம்பந்தத்தை வெளியிடுகிறது. முன்னில் ஸ்ரீமச்சப்தம் சேர்க்கைக்குறுப் பான சேர்த்தியைச்சொல்லிற்று. கட்டிலும் தொட்டிலும் விடாத தாயைப் போலே அகாரதத்விவரணங்களில் உண்டான லக்ஷ்மீஸம்பந்தத்தை விஶத மாக்குகிற இந்த ஸ்ரீமச்சப்தம் அடிமையை வளர்க்கைக்குக் கூடியிருக்கும்படி யைக் காட்டுகிறது.
திவ்யாத்ம ஸ்வரூபத்தை விடாதே ( நான் – திருவ 53 ) திருவில்லாத்தேவரில் தான் ( நான் – திருவ 62 ) நின்ற பக்கத்துக்குப் பெருமையையுண்டாக்கி ஸ்வாமிநியாய் ( நாச்.திரு 8-4 ) ‘தன்னாகத் திருமங்கை’ என்னும்படி மார்பைப்பற்றி ஸத்தைபெற்று ( பெரிய திருவந் 6-9-6 ) ‘திருமார்பில் மன்னத்தான் வைத்துகந்தான் மலரடியேயடை’ என்று மார்பைப் பார்த்துக் காலைக்கட்டலாம்படி புருஷகாரமாய் ( திருவாய் 6-5-8 ) ‘திருமாமகளிரும் தாம் மலிந்திருந்து’ என்னும்படி படுக்கையிலே ஒக்க விருந்து ( திருவாய் 5-8-7 ) பிரியாவடிமையைக்கொண்டு ப்ராப்யையாய் மூன்றாகாரத்தோடுகூடின ஜ்ஞாந்தஶையில் தன்னைப்போலே அநந்யார்ஹ ராக்கி வரணதஶையில் தன்னைப் போலே அநந்யஸாதனராக்கி ப்ராப்யாவஸ் தையில் தன்னைப்போலே அநந்யபோகராக்குகையாலே ( மூன் திருவந் 100 ) ‘சார்வு நமக்கு’ என்னும்படியாயிற்று இவளிருப்பது. ( திருவாய் 8-10-2 ) ‘சயமேயடிமை தலை நின்றார்’ ( முதல் திருவந் 53 ) ‘திருமாற்கரவு’ ( மூன். திருவந் 57 ) ‘மலிந்து திருவிருந்த மார்பன்’ என்னும்படி செய்கிற வடிமை
அல்லாதார்க்கும் ஸித்தித்து வர்த்தித்து ரஸிப்பது – ( திருவாய் 6-9-3 ) ‘கோலத்திருமாமகளோடு’ என்கிற சேர்த்தியிலே ஆசைப்பட்டாலிறே. ( பெரிய திரு 2-2-2 ) காதல்செய்து ( பெரிய திருமடல் 145 ) பொன்னிறங் கொண்டெழா நிற்கத் தனித்தனியே விரும்புகையாலேயிறே தங்கையும்
தமையனும் (பெரிய திரு 10-2-3 ) கொண்டுபோந்து கெட்டான்’ ( பெரிய திரு 3-9-4 ) ‘கதறியவளோடி’ என்னும்படி தலை சிதறி முகமும் கெட்டது. ( பெரிய திரு 10-2-4 ) ‘அவன் தம்பியே சொன்னான்’ என்னும்படி சேர்த்தியிலே நினை வாயிறே ( பெரிய திரு 6-8-5 ) செல்வவிபீடணன் ( பெரியாழ் திரு 3-9-10 ) நீடரசுபெற்று ( பெரிய திரு 4-3-6 ) அல்லல் தீர்ந்தேனென்னும்படி வாழ்ந்தது.
நாராயண ஶப்தார்த்தம்
‘நாராயண’ பதம் அடிமை கொள்ளுகிறவனுடைய ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது. ( திருவாய் 7-10-1 ) ‘எழில்மலர் மாதரும் தானுமான சேர்த்தியிலே இன்பத்தை விளைக்கிறாப்போலே ( திருவாய் 4-5-3) ‘வீவிலின்பம் மிக வெல்லை நிகழ்ந்த’ என்கிறபடியே ஸ்வரூபகுண விக்ரஹ விபூதிகளோடே கூடி ஆனந்தத்தை விளைத்து அடிமையிலே மூட்டும்வனு டைய பூர்த்தியைக் காட்டுகிறது. ( திருவாய் 6-5-8 ) ( திருவாய் 1-6-4 ) பிணங்கியமரர் ( திருவாய் 4-2-4 ) பேதங்கள் சொல்லும் குணங்களெல்லாம்
அநுபாவ்யங்களேயாகிலும் வகுத்தவிஷயத்தில் இனிமைக்குத் தோற்று
( பெரியாழ் திரு 4-2-6 ) ஏவிற்றுச் செய்யவேண்டுகையாலே ( திருவாய் 3-3-1) ‘எழில் கொள் சோதி’ ( திருநெடுந் 5 ) ‘மலர்புரையும்’ என்கிற ஸ்வாமித்வ போக்யதைகளிலே இதுக்கு நோக்கு.
விபக்த்யர்த்தம்
“ஆய’ – என்கிற சதுர்த்தி கைங்கர்யத்தில் இரப்பைக்
காட்டுகிறது. ( திருவாய் 4-1-9 ) ‘எய்தியும் மீள்வர்கள்’ என்கிற போகம் போலன்றிக்கே ( திருவாய் 9-8-4 ) மீளாவடிமைப் பணியாய் ( திருவாய் 4-9-10) சிற்றின்பம் போலன்றிக்கே ( திருவாய் 2-6-5 ) அந்தமிலடிமையாய். வந்தேறி யன்றிக்கே ( திருவாய் 9-2-3 ) ‘தொல்லடிமை’ என்னும்படி ஸஹஜமாய்
( திருவாய் 10-8-10 ) ‘உகந்து பணிசெய்து’ என்னும்படி ப்ரீதியாலே வரக் கடவதாயிருக்கிற அடிமையைக் கருத்தறிவார் ( திருவாய் 8-1-1 ) ‘ஏவமற்றமரர் ஆட்செய்வார்’ என்னும்படி சொற்பணி செய்யுமாப்போலே
( திருவாய் 8-5-7 ) முகப்பே கூவிப்பணி கொண்டருள வேணுமென்கிற இரப் போடே பெறவேணும்.
நமஶ் ஶப்தார்த்த,ம்
நம: என்று அடிமைக்குக் களையான அஹங்கார மமகாரங்களைக் கழிக்கிறது. ( திருவாய் 2-8-4 ) நலமந்தமில்லதோர் நாட்டிலே ( திருவாய் 10-9-11 ) அந்தமில் பேரின்பத்திலே இன்புற்றிருந்து
( திருவாய் 2-9-8 ) வேதவிமலர் விழுங்குகிற ( திருவாய் 2-5-4 ) அப்பொழுதைக்கப்பொழுதாராவமுதமான விஷயத்துக்குத் தான் நிலையா ளாக உகக்கப் பண்ணுகிற அடிமை தனக்கு போகரூபமாக இருக்குமாகில்
( திருவாய் 4-3-5 ) ‘கண்ணி எனதுயிர்’ என்னும்படி போகத்துக்குப் பூமாலை யோ பாதி இருக்கிற ஸ்வரூபத்துக்குக் கொத்தையாகையாலே நானெனக்கு இனிதாகச் செய்கிறேன் என்கிற நினைவு கிடக்குமாகில் ( திருவாய் 9-6-7 ) ஆட்கொள்வானொத்து உயிருண்கிறவனுடைய ஊணிலே புழுவும் மயிரும் பட்டாப்போலே போகவிரோதியென்று இவற்றைக் கழிக்கிறது. ( திருவாய் 4-3-3 ) ‘ஆவியல்லல் மாய்த்தது’ ( திருவாய் 10-3-9 ) ‘உன்தன் திருவுள்ளமிடர் கெடுந்தோறும்’ என்று அத்தலையுகப்பே பேறானால் தனக்கென்றிருக்குமது கழிக்க வேணுமிறே.
ஜ்ஞாந தஶையில் ஸமர்ப்பணம் போலே போக தஶையில் ஶேஷத்வமும் ஸ்வரூபத்துக்குச் சேராது. ( திருவாய் 9-6-5 ) திருவருள் செய்பவன் போலே ( திருவாய் 9-6-7 ) ஆட்கொள்வானொத்து
( திருவாய் 9-6-3 ) நீர்மையால் வஞ்சித்துப் புகுந்து முறைகெடப் பரிமாறப் புக்கால் தன்னை உணருகை படுக்கையில் முறைகேடிறே. கைங்கர்யதஶை
யில் தன் ஸ்வரூபத்திலும் அவன் ஸௌந்தர்யத்திலும் கண்ணும் நெஞ்சும் போகாமல் அடக்கவேண்டும். இதிலருமையிறே ( திருப்பாவை 29 ) ‘மற்றைநங்காமங்கள் மாற்று’ என்று அவனையபேக்ஷிக்கிறதும். ( திருவாய் 10-8-7 ) ‘அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்’ என்று களிக்கிறதும்.
நிவர்த்யவிரோதி நிரூபணம்
‘உகார நமஸ்ஸு’க்களிலே ஸ்வரூபவிரோதம் கழிந்தது. ‘பரித்யஜ்ய’ ‘ஏகம்’ என்கிறவிதிலே உபாயவிரோதி, தடையுண்டது.
‘அஹம்’ ‘மோக்ஷயிஷ்யாமி’ என்கிறவிதிலே ப்ராப்திக்கு இடைச்சுவர் தள்ளுண்டது. இந்த ‘நமஸ்ஸு’ ப்ராப்யத்தில் களையறுக்கிறது.
` த்வய வாக்யார்த்த நிகமநம்
ஸ்ரீமந் நாராயணனுடைய சேர்த்தியழகையுடைத்தான
திருவடிகளை உபாயமாக அத்யவஸிக்கிறேன். ஸ்ரீமந் நாராயணனுக்கு ஸர்வவித ஶேஷவ்ருத்தியிலும் அவனுக்குப் பேறாம்படி செய்யப்பெறுவே னாக வேணும் என்று தலைக்கட்டுகிறது.
ப்ரமாணோபந்யாஸம்
( பெரிய திரு 5-8-1 ) ‘ஏழையேதலனும்’ ( திருவாய் 6-10-10 ) ‘அகலகில்லேனும்’ முற்கூற்றிலர்த்தம். ( திருவாய் 2-9-4 ) ‘எனக்கேயாட்செய்’ ( திருவாய் 6-5-8 ) ( திருப்பாவை 29 ) ‘சிற்றம் சிறுகாலே’ என்கிற பாட்டு பிற்கூற்றுக்கர்த்த,ம்.
த்வய ப்ரகரணம் ஸமாப்தம்.
அருளிச் செயல் ரஹஸ்யம் முற்றிற்று.
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்.
சாற்றுக்கவிகள் –
திருத்தாழ்வரை தாதன் தேவன் தாள் வாழி
மருத்தார் கொடைப் பெற்றார் வாழி–கருத்தாபம்
தீர்த்த மணவாளன் வாழியரோ வாழியவன்
கோத்த தமிழ்மாறன் குறிப்பு.
மணவாளன் மாறன் மனமுரைத்தான் வாழி
மணவாளன் மன்னு குலம் வாழி–மணவாளன்
வாழ் முடும்பை வாழி வடவீதி தான் வாழி
தேன் மொழியான் சொல்வாழி தேர்ந்து.
தந்தருளவேணும் தவத்தோர் தவப்பயனாய்
வந்த முடும்பை மணவாளா-சிந்தையினால்
நீயுரைத்த மாறன் நினைவின் பொருளனைத்தென்
வாயுரைத்து வாழும் வகை.