[highlight_content]

ஞான ஸார வ்யாக்யானம்

ஶ்ரீமதே ராமாநுஜாய நம:

ஜீயர் திருவடிகளே ஶரணம்

விஶதவாக் ஶிகாமணியான மணவாளமாமுனிகள்

திருவாய்மலர்ந்தருளிய

ஞானஸார வ்யாக்யானம்

அருளாளப் பெருமாள் எம்பெருமானார்  விஷயமான

தனியன்

சுருளார் கருங்குழல் தோகையர்வேல்விழியில் துவளும்

மருளாம் வினைகெடும் மார்க்கம் பெற்றேன் மறைநான்கும் சொன்ன

பொருள் ஞானஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்

அருளாளமாமுனி யம்பொற்கழல்க ளடைந்தபின்னே.

அவதாரிகை:

எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்து, ஸகலவேதஶாஸ்த்ர தாத்பர்யார்த்தங்களெல்லாம் அவரருளிச்செய்யக் கேட்டு, தத்வஹிதபுருஷார்த்த யாதாத்ம்யவித்தமராய், “தேவுமற்றறியேன்” (கண்ணி – 2) என்று, அவர் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணி ஸேவித்திருந்த அருளாளப் பெருமாள் எம்பெருமானார், தம்முடைய பரமக்ருபையாலே, இவ்வர்த்தவிஶேஷங்க ளெல்லாரும் அறிந்து உஜ்ஜீவிக்க வேணுமென்று, தத்வஹிதபுருஷார்த்த ஜ்ஞானத்தினுடைய ஸாராம்ஶத்தை பெண்ணுக்கும் பேதைக்கும் தெரியக்கடவதாக த்ராவிட பாஷையாலே இப்ரபந்தமுகேன அருளிச்செய்கிறார்.  ஆகையாலே இதுக்கு ஜ்ஞானஸாரமென்று திருநாமமாயிற்று.

பரமகாருணிகரான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

திருவாய்மலர்ந்தருளிய

ஞானஸாரம்

முதற்பாட்டு

  1. ஊனவுடற்சிறை நீத்தொண்கமலைக் கேள்வனடித்

தேனுகரும் ஆசைமிகு சிந்தையராய் – தானே

பழுத்தால் விழுங்கனிபோல் பற்றற்றுவீழும்

விழுக்காடே தானருளும் வீடு.

பதவுரை:

ஊன – மாம்ஸப்ரசுரமான

உடல் – ஶரீரமாகிற

சிறை – காராக்ருஹத்தை

நீத்து – விட்டு

ஒண்கமலைகேள்வன் – அழகிய தாமரைப்பூவை வாஸஸ்தானமாகவுடைய பெரியபிராட்டியாருக்கு வல்லபனானவனுடைய

அடிதேன் – திருவடிகளின் போக்யதையை

நுகரும் – அநுபவிக்கையிலுண்டான

ஆசைமிகுசிந்தையராய் – ஆசைமிக்கிருந்துள்ள மநஸ்ஸையுடையவர்களாய்

பழுத்தால் – பக்வமானால்

தானேவிழும் – தானேவிழும்படியான

கனிபோல் – பழம்போலே

பற்றற்று – ப்ராப்யாபாஸ ப்ராபகாபாஸங்களில் ஸங்கமற்று

வீழும் – ஸர்வேஶ்வரன் திருவடிகளில் ஶரணாகதராய் (பண்ணுகிற) விழுகிற

விழுக்காடேதான் – விழுகைதானே (ஆர்த்த ப்ரபத்திதானே)

வீடு – மோக்ஷத்தை

அருளும் – (அவிளம்பேன) ப்ராபிக்கும்.

அவதாரிகை – முதற்பாட்டு – ஸகலவேதாந்த தாத்பர்ய பூமியாய், தத்வஹிதபுருஷார்த்த யாதாத்ம்யப்ரதிபாதகமாய் , ஸம்ஸாரிசேதநோஜ்ஜீவனகாமனான ஸர்வேஶ்வரன் தன்னாலே ப்ரகாஶிக்கப்பட்டுள்ளதாய், உபதேஶபரம்பரா ப்ராப்தமாய், தத்வவிதக்ரேஸரான நம்பூர்வாசார்யர்களுக்குப் பரமதனமாய், நித்யாநுஸந்தேயமாயிறே ரஹஸ்யத்ரய மிருப்பது.  அதில் ப்ரதம ரஹஸ்யமாய், பதத்ரயாத்மகமான திருமந்த்ரத்தில், ப்ரதமபதப்ரதிபாத்யமான அர்த்தத்துக்கு விவரணமாயிருந்துள்ள மத்யமசரம பதங்களுக்கு “த்வயேநமந்த்ரரத்நேந” என்கிறபடியே, மந்த்ரரத்னாக்யமாய், மத்யமரஹஸ்யமான த்வயத்தில் பூர்வோத்தர வாக்யங்கள் விவரணமாய், அதில் பூர்வ வாக்யப்ரதிபாத்யமான ஸித்தோபாயவரணம், உபாயாந்தரபரித்யாக பூர்வகமாய் ஸ்வீகாரத்தில் உபாயத்வப்ரதிபத்தி நிவ்ருத்திபூர்வகமாக வேண்டுகையாலும், உத்தரவாக்யப்ரதிபாத்யமாய், பரமபுருஷார்த்தமான கைங்கர்யம், ப்ராப்திப்ரதிபந்தக ஸகலபாபநிவ்ருத்தி பூர்வகமாக  ஸித்திக்கவேண்டுகை யாலும், பூர்வோத்தரார்த்தங்களாலே ததுபயப்ரதிபாதகமாய் சரமரஹஸ்யமான சரமஶ்லோகம் வாக்யத்வயத்துக்கும் விவரணமாய்க்கொண்டு தச்சேஷமாயிருக்கையாலே, ரஹஸ்யத்ரயத்திலும் த்வயமே ப்ரதானமாகவிறே நம்மாசார்யர்களநுஸந்தித்துப் போருமது.  அந்த த்வயந்தன்னில், பூர்வவாக்யத்தால் ப்ரதிபாதிக்கப்படுகிற ப்ரபத்திதான் ஆர்த்த ப்ரபத்தி என்றும் த்ருப்த ப்ரபத்தியென்றும், த்விவிதமாயிறே இருப்பது.  அதில்,    ஆர்த்தப்ரபத்தி முக்யமாய், த்ருப்த ப்ரபத்தி கௌணமாயிருக்கும்.  அந்த ஆர்த்தப்ரபத்தி வேஷத்தை  இப்ரபந்தத்தின் முதற்பாட்டாலே அருளிச்செய்கிறார்.

வ்யாக்யானம் –  (ஊனவுடற்சிறைநீத்து) ஊனாவது – மாம்ஸம்.  ஊன என்றது – ஊனையுடையவென்றபடி.  இத்தால் மாம்ஸமயமான ஶரீரமென்கை.  இத்தேஹத்துக்கு தோஷம் சொல்லுவாரெல்லாம் “ஊனக்குரம்பை” (முதல் திரு – 91)  என்றும், “ஊனேராக்கை” (பெரு.திரு 6.2.3) என்றும், “ஊனுடைக்குரம்பை” (பெரு.திரு 1.6.9) என்றும் இப்படியேயிறே சொல்லுவதும்.  மாம்ஸத்தைச் சொன்னவிது, மற்றுமிதிலுண்டான அஸ்ருக்பூயவிண்மூத்ரஸ்நாயு மஜ்ஜாஸ்திகளான அவாந்தர தோஷத்துக்கெல்லாம் உபலக்ஷணம்.  எல்லாமுண்டானாலும் மாம்ஸப்ரசுரமா யிருக்கையாலே “புண்ணாராக்கை” (பெரு.திரு – 1.9.6) என்றிறே இத்தைச் சொல்லுவது.  “புண்ணைமறையவறிந்து” (திருவாய் – 5.1.5) என்கிறபடியே, தோலைமறைக்கக் கைப்பாணியிட்டு (மணியாஸனம்) மெழுக்கு வாசியிலே ப்ரமிக்கும்படி பண்ணிவைக்கையாலே ஆந்தரதோஷம் தோற்றாதிறே.  அகவாய்ப் புறவாயானால் காக்கைநோக்கப் பணிப் போருமித்தனையிறே.

(உடற்சிறை) இப்படி ஆந்தரதோஷயுக்தமாகையாலும், ஆத்மாவுக்கு ஸங்கோசகரமாகையாலும், ஆரப்த கர்மபலமாகையாலும், அந்த கர்மானுகுணமாக இந்த தேஹத்திலே இட்டு வைத்தவனே விடுவிக்கிலல்லது தன்னால்  விடுவித்துக்கொள்ள வொண்ணாமையாலும், அறிவு பிறந்தார்க்கு இத்தேஹத்திலிருப்பு  காராக்ருஹம் போலே நிரந்தர து:க்காவஹமாகையாலே, இத்தேஹத்தை சிறை என்கிறது.  இதிலே பொருந்தியிருப்பார், இத்தேஹதோஷம் காணமாட்டாத வஜ்ஞரிறே.  “மாம்ஸாஸ்ருக்பூய விண்மூத்ரஸ்நாயு மஜ்ஜாஸ்திஸம்ஹதௌ தேஹேஸ்மின் ப்ரீதிமாந் மூடோபவிதாநரகேபிஸ:” (விஷ்ணு.புரா 1.17.63) (1) என்றாரிறே ஶ்ரீப்ரஹ்லாதாழ்வான்.  தன்னைச் சிறையனாகவும், பெறுங்கடறகபட்டானாகவும், அந்தகனாகவும், விஷதஷ்டனாகவும், அநுஸந்திப்பானென்று ப்ரதிஜ்ஞைபண்ணி, அதுநாலையும் அடைவே விவரிக்கிற பிள்ளைலோகாசார்யர், முதல் வார்த்தையை விவரிக்கிறவளவிலே, தேஹம் சிறைக்கூடமாகவும், தேஹாநுபந்திகளான பார்யாபுத்ராதிகள் கைக்கூடமாகவும், அஹங்காரமமகாரங்கள் வளையலாகவும், நாசமானபாசம் நாரியாகவும், அவிவேகம் பூட்டாணியாகவும், இந்த்ரியங்கள் பிரிவாளராகவும், விஷயங்கள் பிரியலாகவும், மநஸ்ஸு மேல் தண்டலாகவும்,  தான் சிறையனாகவும், எம்பெருமான் விமோசகனாகவும், அநுஸந்திப்பான் என்றாரிறே.

(நீத்து) இப்படியிருந்துள்ள தேஹமாகிற சிறைவிட்டு;  நீத்தல் – விடுதல்.  ராஜபுத்ரன் அழுக்குச் சிறையிலே கிடந்தால், முடிசூடி ராஜ்யம் பண்ணுமதிலும் சிறைவிடுகையே ப்ரயோஜனமாயிருக்குமாப்போலே, ப்ராப்யலாபத்திலும் இதினுடைய விமோசநந்தானே ப்ரயோஜனமாகப் போரும்படியிறே இதினுடைய ஹேயதைதானிருப்பது.

(ஒண் கமலைக்கேள்வன்) “பத்மேஸ்திதாம்” (ஶ்ரீஸூக்தம்) (2) என்கிறபடியே, ஒள்ளிதான தாமரைப்பூவை  வாஸஸ்தானமாகவுடைய பெரியபிராட்டியார்க்கு வல்லபனானவன், இத்தால் அநுபவகைங்கர்ய ப்ரதிஸம்பந்தியாய்க்கொண்டு, ப்ராப்யமான விஷயம் ஒரு மிதுநமென்னுமிடம் சொல்லுகிறது.  இதுதன்னை உத்தரவாக்யத்தில் ப்ரதமபதத்திலே கண்டுகொள்வது.

(அடித்தேன்) அடித்தேனென்று ஶ்ரீய:பதியானவனுடைய திருவடிகளில் போக்யதையைச்சொல்லுகிறது.  “விஷ்ணோ:பதேபரமேமத்வஉத்ஸ:” (விஷ்ணுஸூக்தம்) என்றும், “தேனேமலரும் திருப்பாதம்” (திருவாய் – 1.5) என்றும், சொல்லக்கடவதிறே.   இதுதான் திவ்யமங்களவிக்ரஹ போக்யதைக்குமுபலக்ஷணம்.  திருவடிகளாகிறது – விக்ரஹைகதேஶமிறே.  “நின்மாட்டாய மலர்புரையும் திருவுருவம்” (திருவாய் – 3.1.4) என்கிறதுக்கு.   மட்டை – மாட்டென்று நீட்டிக்கிடக்கிறதாய், “மத்வ உத்ஸ:” என்கிறபடியே, மதுஸ்யந்தியாகையாலே, நிரதிஶயபோக்யமான திருமேனி என்னுதலென்று நம்பிள்ளை அருளிச்செய்தாரிறே.

(தேனுகரும்) நுகருகையாவது – புஜிக்கையாய்.  தேனுகருமென்று – அந்த போக்யதையை அனுபவிக்கையைச் சொல்லுகிறது.  (ஆசைமிகு சிந்தையராய்) என்றது – அந்த போக்யதையை  அநுபவிக்கவேணுமென்று  ஆசைமிக்கிருந்துள்ள மநஸ்ஸையுடையவரென்கை.  இத்தால், ப்ராப்யருசி யினுடைய ப்ராசுர்யம் சொல்லுகிறது.  இந்த ருசியிறே ப்ராப்யலாபநிபந்தனமான வார்த்திக்குக் காரணம்.

(தானே பழுத்தால் விழுங்கனிபோல்) பக்வமானால் தானே விழுந்து நிற்கும் பழம்போலே.  இது ஆர்த்தப்ரபத்திக்கு த்ருஷ்டாந்தம்.  ஆர்த்தப்ரபத்திக்கு வேஷமிருக்கும்படி என்னென்று ஆழ்வானைக் கேட்க, கனிப்பழம் காம்பற்றாற்போலே இருக்குமென்றருளிச் செய்தாரென்று ப்ரஸித்தமிறே.

(பற்றற்றுவீழும் விழுக்காடே) கீழ்ச்சொன்ன ப்ராப்யருசியாலே ப்ராப்யாபாஸங்களிலும், ப்ராபகாபாஸங்களிலும் பற்றற்று, ஆர்த்தியால் வந்த பாரவஶ்யத்தாலே ப்ரபதநரூபேண திருவடிகளிலே விழும் விழுக்காடென்று ஆர்த்தப்ரபத்தியைச் சொல்லுகிறது.  “யதா பராநந்வயிபிர்த்து ஶ்ஶகஸ்ம்ருதிபிர்விநா தேநதத்புத்ரத:பாதஸ்ஸா ப்ரபத்திஸ்ததா பவேத்” (ஸந்த்குமாரஸம்ஹிதை) (4) என்றிந்த ப்ரபத்திவேஷந்தான்  ஸநத்குமார ஸம்ஹிதையிலே ஸங்க்ரஹேண சொல்லப்பட்டதிறே.

(விழுக்காடேதான்) என்றது – விழுக்காடுதானே என்றபடி.

(அருளும் வீடு) என்றது – வீட்டையருளும்.  மோக்ஷத்தைத்தரும் என்றபடி.  வீடென்று ஸம்ஸாரநிவ்ருத்தி பூர்விகையான பகவத்ப்ராப்தியைச் சொல்லுகிறது.  விழுக்காடுதானே மோக்ஷத்தைத் தருகையாவது –  ஆர்த்தப்ரபத்தியாகையாலே  அவிளம்பேன  பலவ்யாப்தியாகை.  “ஆர்த்தாநாமாஶு பலதா ஸக்ருதேவ க்ருதாஹ்யஸௌ” (பகவத் சாஸ்தே) (5) என்னக்கடவதிறே.  அல்லது, ஸ்வீகாரந்தானே பலத்தைத் தருமென்னில், ஸ்வீகார்யத்தினுடைய நைரபேக்ஷ்யத்துக்கும் , ஸ்வீகர்த்தாவினுடைய  பாரதந்த்ர்யத்துக்கும், விருத்தமாமிறே.  ஸ்வீகாரந்தனக் கொருகாலும் அதிகாரி விஶேஷணத்வமொழிய, பலஸாதநத்வத்தில் அந்வயமில்லையென்னுமிடம் தோற்றவிறே.  “ந்யாஸ இதி ப்ரஹ்மாஹிபர:” (தை.நா) (6) என்றும், “ந்யாஸ இத்யாஹுர்மநீஷிணோ ப்ரஹ்மாணம்” (7) என்றும் ஶ்ருதி சொல்லிவைத்தது.   ஆகையாலே, விழுக்காடுதானே வீடருளுமென்றது, ஆர்த்தப்ரபத்தியின் அவிளம்ப பலவ்யாப்தியைச் சொல்லிற்றாமித்தனை.

@@@@@

இரண்டாம் பாட்டு

2.  நரகும் சுவர்க்கமும் நாண்மலராள்கோனைப்

   பிரிவும் பிரியாமையுமாய் – துரிசற்றுச்

   சாதகம்போல் நாதன்றனதருளே பார்த்திருத்தல்

   கோதிலடியார் குணம்.

பதவுரை:

நாள்மலராள்கோனை – ஶ்ரீய:பதியை

பிரிவு – விஶ்லேஷித்திருப்பது

நரகும் – து:க்கமுமாய்

பிரியாமை – ஸம்ஶ்லேஷித்திருப்பது

சுவர்க்கமுமாய் – ஸுகமுமாய்

துரிசற்று – இப்படி யுண்டான ப்ரேமத்தில் உபாயத்வபுத்தியாகிற தோஷமற்று

சாதகம்போல் – வர்ஷதாரையல்லது  தரியாத சாதகம்போலே

நாதன்தனது – வகுத்தஶேஷியான ஸர்வேஶ்வரனுடைய அருள் – பரமக்ருபையே (ப்ராப்திஸாதநமென்று)

பார்த்திருத்தல் – ப்ரதீக்ஷித்திருக்கை

கோதிலடியார் – ப்ராப்யாந்தர ப்ராபகாந்தரங்களில் ஸங்கமாகிற தோஷமற்ற ஶேஷபூதரானவர்களுடைய

குணம் – ஸ்வபாவம்.

அவதாரிகை – இரண்டாம் பாட்டில், “ஆசைமிகுசிந்தையராய்” என்றவிடத்தில் சொன்ன ப்ராப்யருசிதான், பரபக்திரூபையாயிறே இருப்பது; அந்த பரபக்தி பிறந்தவர்களிருக்கும்படியை யருளிச்செய்கிறா ரிப்பாட்டில்.

வ்யாக்யானம் – (நரகும் சுவர்க்கமும்) ஸ்வர்க்கநரக ஶப்தங்கள்தாம், புண்யபாபபலானுபவ பூமிகளுக்கு வாசகங்களாக ப்ரஸித்தங்களாயிருக்கச்செய்தே,  ஸுகது:க்கங்களுக்கு வாசகங்களுமாயிருக்குமிறே.  ஆகவிறே, “துன்பமும் இன்பமும்” (திருவாய் 3.10.7) என்கிற பாட்டுகளுக்கு வ்யாக்யானம் செய்கிற பூர்வாசார்யர்கள், “இன்பமில்வெந்நரகாகி இனிய நல் வான் சுவர்க்கங்களுமாய்” என்கிறவிடத்துக்கு, “உலகங்களுமாய்” என்கிறவிடம் ஆர்ஜநபூமியைச் சொல்லிற்றாகில் இவை போகபூமிகளாகின்றன.  அன்றிக்கே அங்குபோகபூமியைச் சொல்லிற்றாகில் இங்கு ஸுகது:க்கங்களேயாகிற து என்றருளிச் செய்தது.

(நாண்மலராள்கோனைப் பிரிவும் பிரியாமையுமாய்) நாண்மலராள்கோனைப் பிரிவு நரகும், பிரியாமை சுவர்க்கமுமாய் என்றந்வயம்.  அதாவது – செவ்வி தாமரைப்பூவை வாஸஸ்தாநமாகவுடைய பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவனை விஶ்லேஷித்திருக்கை து:க்கமும்,  ஸம்ஶ்லேஷித்திருக்கை ஸூகமுமாமென்கை.  பரபக்தியாவது தத்ஸம்ஶ்லேஷ விஶ்லேஷைக ஸுகது:க்கத்வமிறே.  பெருமாள் காட்டுக்கு எழுந்தருளுகிறபோது, பிராட்டி தானும் கூடப்போவேனென்ன, புரவாஸத்துக்கும் வநவாஸத்துக்கும் உண்டான விஶேஷத்தை தர்ஶிப்பித்து, ஆனபின்பு காட்டிலே போமது து:க்கம்,  படைவீட்டிலே இருக்குமது ஸுகம் என்று பெருமாள் அருளிச்செய்ய, பிராட்டி, அங்ஙனல்ல, ஸுகது:க்கங்கள் வ்யக்திதோறும் வ்யவஸ்திதமாய்க்கா ணுமிருப்பது;  “யஸ்த்வயாஸஹ ஸ்வர்க்கோ நிரயோயஸ்த்வயாவிநா” (ரா.அ – 30.1.8) (8) என்று, யாதொன்று உம்மோடு  பொருந்துமது ஸுகமாகிறது, உம்மையொழியப் படைவீட்டிலிருக்குமிருப்பு து:க்கமாகிறது , “இதி ஜாநந்” – தந்தாமுக்கில்லாதவை பிறர்பக்கலிலே கற்றறியவேணுங் காணும், – “பராம் ப்ரீதிம்” – உம்மைப்போலே நிறுத்தல்லகாணும் என்னுடைய ப்ரீதியிருப்பதென்ன, நம்மிலுமுனக்குப்ரீதி வரையாகச்சொன்னாய், இதுக்கு நம்மைச் செய்யச்சொல்லுகிறதென்னென்ன, “கச்சராம மயாஸஹ”  “அக்ரதஸ்தே கமிஷ்யாமி”  (ரா.அ – 31.25) (9) என்று நாம் புறப்பட்டபடியே , என்னை முன்னே போகவிட்டு,  பின்னே வரப்பாருமென்றாளிறே ஏகாயநையாகையாலே.  “த்வயாஸஹ” “த்வயாவிநா” என்றாளிறே.  அல்லாதாரெல்லாரும் மிதுநாயநராகையாலே, நாண்மலராள்கோவைப் பிரிவும் பிரியாமையுமா என்றருளிச்செய்கிறாரிவர்.  “நசஸீதா த்வயா ஹீநா நசாஹமபிராகவ” (ரா.அ – 53.31) (10) என்று பிராட்டியோடு ஸமப்ரக்ருதியாக இளையபெருமாள் தம்மையருளிச்செய்தது, விஶ்லேஷாஸஹதை இரண்டுதலைக்குமொக்குமென்று  தோற்றுகைக்காக. அல்லது, அவளைப்போலே ஏகாயநராய்ச் சொன்னவரன்றே.  “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ்ஸ்வபதஶ்சதே”  என்றிருக்குமவரிறே. 

(துரிசற்று) அந்யபரதையாகிற தோஷமற்று.  அதாவது – இப்படி யிருந்துள்ளு ப்ரேமமுண்டானால், அத்தை ப்ராப்திஸாதநமாகக்கொள்ளு முபாஸகரைப்போலன்றிக்கே, போஜநத்துக்கு க்ஷுத்துப்போலே, அத்தை ப்ராப்தி ருசியாக்கி, இதின் பக்கல் உபாயத்வ ப்ரதிபத்தி  பண்ணுகையாகிற தோஷமற்றிருக்கை. 

(சாதகம்போல் நாதன்றனதருளே பார்த்திருத்தல்) அதாவது – வர்ஷதாரையல்லது தரியாத சாதகம் த்ருஷ்ணார்த்தமாய்  நாக்கொட்டுமளவிலும் பூகதமான  ஜலத்தைப் புரிந்து பாராதே, வர்ஷத்தையே பார்த்திருக்குமாப்போலே, ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்குகப்பானுமவனேயாம்படி, இவ்வாத்மாவுக்கு வகுத்த ஸ்வாமியாயிருக்குமவனுடைய  பரம க்ருபையே ப்ராப்திஸாதநமென்று  நிஷ்கர்ஷித்து,  “துணியேன் இனி நின்னருளல்லது” (திருவாய் – 11.8.8)  “நின்னருளே புரிந்திருந்தேன்” ( பெரிய திரு – 5.4.1) என்று அவனுடைய அருளே பார்த்திருக்குமென்றபடி.  “ப்ரபந்நஶ்சாதகோ யத்வத் ப்ரபத்தவ்ய: கபோதவத்  ரக்ஷ்யரக்ஷகயோரேதல்லக்ஷ்யம்  லக்ஷணமேதயோ:” (பாஞ்சராத்ரம்) (12) என்னக்கடவதிறே. 

(கோதிலடியார் குணம்) அதாவது – அடியாரென்று பேரிட்டு, ப்ராப்யாந்தரங்களிலேயாதல், ப்ராபகாந்தரங்களிலேயாதல், ஸங்கம்பண்ணியிருக்கும் குற்றமின்றிக்கே, ஸ்வஶேஷத்வா நுரூபமாக  ஸாத்யஸாதநங்களிரண்டுமவனே  என்றிருக்கு மவர்களுடைய  ஸ்வபாவமென்றபடி.  ஆகையாலிப்பாட்டில், பூர்வார்த்தத்தாலே, ஸாத்யமவனென்னுமிடமும்,  உத்தரார்த்தத்தாலே ஸாதநமுமவனென்னுமிடமும் தோற்றச்சொல்லி, இப்படியிருக்கைக் கோதிலடியார்  குணமென்றருளிச் செய்தாராயிற்று. 

@@@@@

மூன்றாம் பாட்டு

3.  ஆனையிடர்கடிந்த  வாழியங்கையம்புயத்தாள்

    கோனைவிடில் நீரிற்குதித்தெழுந்த – மீனெனவே

    ஆக்கைமுடியும்படி பிறத்தலன்னவன்றாள்

    நீக்கமிலாவன்பர் நிலை. 

பதவுரை

ஆனை – கஜேந்த்ராழ்வானுக்கு

இடர் – முதலையினாலுண்டான து:க்கத்தை

கடிந்த – நீக்கின

ஆழியங்கை – திருவாழியை அழகிய கையிலேயுடைய

அம்புயத்தாள்கோனை – ஶ்ரீய:பதியை

விடில் – விஶ்லேஷிக்கில்

நீரில் – ஜலத்தில்நின்றும்

குதித்தெழுந்த – குதித்துக் கிளர்ந்து பிரிந்த

மீனெனவே – மத்ஸ்யம்போலே

ஆக்கைமுடியும்படி பிறத்தல் – ஶரீரம் நஶிக்கும்படியான அவஸ்த்தைபிறக்கை

அன்னவன்தாள் – அப்படிப்பட்ட ஶ்ரீய:பதியின் திருவடிகளை

நீக்கமிலாவன்பர் – பிரியஸஹியாதபடியான ப்ரேமமுள்ளவர்களுடைய

நிலை – ஸ்வபாவம்.

அவதாரிகை மூன்றாம் பாட்டு.  இதில் கீழ்ச்சொன்ன பரபக்தியினுடைய முற்றுதலான பரமபக்திபிறந்தவர்களுடைய  நிலையை யருளிச் செய்கிறார். 

வ்யாக்யானம் – (ஆனையிடர்கடிந்த) “பரமாபதமாபந்நோ மநஸாசிந்தயத்தரிம்” “ஸ து நாகவர: ஶ்ரீமான் நாராயணபராயண:” (விஷ்ணுதர்மம் 69.47) (13) என்கிறபடியே, தேவஸம்வத்ஸரத்திலே ஆயிரம் ஸம்வத்ஸரம் முதலை நீருக்கிழுக்க, தான் தரைக்கிழுக்க, அலைச்சல்பட்டு, அதுக்குத்தன்னிலமாகையாலும், அபிமதஸித்தியாலும், பலம் வர்த்திக்கையாலும், தனக்குத் தன்னிலமல்லாமையாலும் அபிமத அலாபத்தாலும், பலம் க்ஷயிக்கையாலும், துதிக்கை முழுத்தும்படியான தஶைவிளைகையாலே இனி இதுக்குமேலில்லையென்னும்படியான ஆபத்தையடைந்து இத்தஶையில் விரோதிநிரஸநஶீலனான  ஸர்வேஶ்வரனே நமக்கு ரக்ஷகனென்றநுஸந்தித்து, “நாராயணாவோ!” (சிறியதிருமடல்) என்கிறபடியே கூப்பிட்ட  கஜேந்த்ராழ்வானுடைய து:க்கத்தைப் போக்கின.  இவனுக்கு து:க்கமாகிறது – முதலையின் வாயிலே அகப்படுகையாலே சரீரமழிகிறதென்றல்ல;  கையில் பூ செவ்வியழியாமே திருவடிகளிலே சாத்தப்பெறுகிறிலோம் என்னுமது.  “நாஹங்களேபரஸ்யாஸ்ய த்ராணார்த்தம் மதுஸூதந!  கரஸ்தகமலாந்யேவ பாதயோரர்ப்பிதும் ஹரே:” (விஷ்ணு தர்மம்) (14) என்றாரிறே.  அப்படியிருந்துள்ள து:க்கத்தை அவன் நோவுபடுகிற தசையிலே சென்று  முகங்காட்டிப் போக்கினபடியைச் சொல்லுகிறது. 

(ஆழியங்கை) திருவாழியை அழகிய கையிலே உடைய.  கையுந்திருவாழியுமாய்க் கொண்டாயிற்றபோது சென்றது.  “மழுங்காத வைநுதிய சக்கரநல்வலத்தையாய்த் தொழுங்காதற்களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே”. (திருவாய்மொழி 3.1.9) என்றாரிறே ஆழ்வார்.  கையில் திருவாழியை இருந்ததறிந்திலன், அறிந்தானாகில் இருந்தவிடத்தேயிருந்து அத்தையேவிக் காரியங்கொள்ள லாமிறே.  அறிந்தாலும் அப்படிச் செய்யப்போகாதாயிற்று.  “தொழுங்காதற்களிறு” (மூன்றாம் திரு – 99) என்கிறபடியே, கையுந்திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டிருப்ப வனாகையாலும், கையில் பூ திருவடிகளில் சாத்த ஆசைப்பட்டிருக்கிறவனாகையாலும்,  சென்று அவனுடைய து:க்கத்தைத் தீர்க்கவேண்டுகையாலே;  அவ்வளவுமன்றிக்கே சென்றவிடந்தன்னில் இவனுக்குக் காற்கட்டான முதலையை நிரஸித்ததும் திருவாழியைக்கொண்டிறே.  “குட்டத்துக் கோள்முதலை துஞ்சக்குறித்தெறிந்த சக்கரத்தான்” என்கிறபடியே.

(அம்புயத்தாள்கோனை) நளிநவாஸியான  பெரிய பிராட்டியார்க்கு  நாயகனானவனை.  இதுவும் ஸாபிப்ராயம் – “தேவிஹஸ்தாம்புஜேப்ய:” (ஶ்ரீரங்கராஜஸ்தவம் உத்தரசதகம் 56) இத்யாதிப்படியே, பாதாப்ஜ ஸம்வாஹினிகள் திருவடிகள் பிடிக்க, திருவநந்தாழ் வானாகிற படுக்கையில் பெரியபிராட்டியாரையும் திருமார்பிலே அணைத்துக்கொண்டு பள்ளிகொண்டருளா நிற்கச்செய்தேயிறே, இவனுடைய ஆர்த்தநாதம் திருச்செவிப்பட்டது.  அப்போதவர்கள் கையினின்றும் திருவடிகளை வாங்கி, திருப்படுக்கையினின்றும் சடக்கெனவெழுந்திருந்து, திருக்கண்களை மலர விழித்து, சுற்றும்பார்த்து, பிராட்டியுடைய திருமுலைத்தடத்தில் குங்குமக்குழம்பிலே பற்றிக்கிடக்கிற திருமார்பையும் அதில்நின்றும் வாங்கி, பின்னையிறே “அதந்த்ரிதசமூபதிப்ரஹிதஹஸ்தம்” (ர.ஸ்த. 2-57) (16) இத்யாதிப்படியே, பெரியத்வரையோடே எழுந்தருளி, ஶ்ரீகஜேந்த்ராழ்வானுடைய து:க்கத்தைப் போக்கிற்று.  அத்தைப்பற்றவும், ப்ரஜாரக்ஷணம் பண்ணினால் அதுகண்டுகக்கும் மாதாவைப்போலே, இது கண்டுகளிப்பளென்று செய்தருளுகையாலும், அம்புயத்தாள்கோன் என்கிறது.   இத்தால் ஆஶ்ரிதருடைய ஆபத்தஶைகளிலே சென்றுதவி ரக்ஷிக்குமவனாய், அவர்களை ரக்ஷித்தாலது தன்பேறாகக்கொண்டுகக்கும் பெரியபிராட்டியாருக்கு வல்லபனானவனென்கை. 

(விடில்) இப்படியிருக்கிறவனை விஶ்லேஷிக்கில், (நீரில் குதித்தெழுந்த மீனெனவே) நீரிலே நின்றும் குதித்துக்கிளர்ந்து, அத்தைப் பிரிந்த மத்ஸ்யம் போலே. 

(ஆக்கை முடியும்படி பிறத்தல்) ஶரீரம் நஶிக்கும்படியான அவஸ்தைப் பிறக்கை.  ஸம்ஶ்லேஷத்தில் ஸுகமும் விஶ்லேஷத்தில் து:க்கமுமாய்ச் செல்லும் பரபக்தியைக்காட்டில் பரமபக்திக்கு விஶேஷம, விஶ்லேஷத்தில் ஸத்தாஹாநி பிறக்கையிறே.  அத்தை ஸத்ருஷ்டாந்தமாக அருளிச்செய்தாராயிற்று. 

(அன்னவன்தாள் நீக்கமிலாவன்பர் நிலை) கீழ் அம்புயத்தாள் கோனென்றவனை அன்னவனென்று பராமர்ஶிக்கிறார்.  அன்னவனென்றது – அப்படிப்பட்டவனென்றபடி.  அதவா, மத்ஸ்யத்துக்கு ஜலம்போலே, இவ்வாத்மாவுக்கு தாரகனாயிருக்குமவனென்னவுமாம்.  தாள் நீக்கமிலா வன்பாவது – அவன் திருவடிகளைப் பிரிய ஸஹியாதபடியான ப்ரேமம்.   இப்படியிருந்துள்ள ப்ரேமத்தையுடையரானவர்களுடைய ஸ்வபாவம், அவனை விஶ்லேஷிக்கில் ஜலாதுத்ருதமான  மத்ஸ்யம்போலே ஸத்தாஹாநிபிறக்கும்படியாகவென்று கீழோடே ஸம்பந்தம்.  “நச ஸீதா த்வயா ஹீநா நசாஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யாவிவோத்ருதௌ” (ரா.அ 53.31) (17)என்றாரிறே இளையபெருமாள். 

@@@@@

நாலாம் பாட்டு

4.  மற்றொன்றை எண்ணாதே மாதவனுக் காட்செயலே

   உற்றதிதுவென் றுளந்தெளிந்து – பெற்ற

   பெரும்பேற்றின் மேலுளவோ பேறென்றிருப்பார்

   அரும்பேறு வானத்தவர்க்கு.

பதவுரை

மற்றொன்றை – பகவத்கைங்கர்யத்துக்கு வேறானதொன்றை

எண்ணாதே – புருஷார்த்தமாகக் கணிசியாதே

மாதவனுக்கு – ஶ்ரீய:பதிக்கு

ஆட்செயலே – அடிமைசெய்யுமதில்

இது – “இது

உற்றது – ஸ்வரூபத்துக்குச் சேர்ந்தது”

என்று – என்று

உளம் – ஹ்ருதயமானது

தெளிந்து – தேறி (அக்கைங்கர்யம் பெற்றால்)

பெற்ற – ப்ராப்தமான

பெரும்பேற்றின்மேல் – “இம்மஹா புருஷார்த்தத்துக்கு மேலே

பேறு உளதோ – ஒரு புருஷார்த்தமுண்டோ”

என்றிருப்பார் – என்றிருக்குமவர்கள்

வானத்தவர்க்கு – பகவதேகபோகராயிருக்கும் நித்ய ஸூரிகளுக்கும்

அரும்பேறு – பெறுதற்கரிய புருஷார்த்தபூதராவர்கள்.

அவதாரிகை – நாலாம்பாட்டு.  கீழ்ச்சொன்ன மூன்றுபாட்டாலே த்வயத்தில் பூர்வவாக்யத்தால் ப்ரதிபாதிக்கப்படுகிற ப்ரபத்தியினுடைய முக்யவேஷத்தையும், அதுக்கு ஹேது, ஆர்த்தாதிகாரியாலே பண்ணப்படுகையாலே அதிகாரியுடைய ஆர்த்திக்கு ஹேதுவான பரபக்தி தசையின் நிலையிருக்கும்படியையும் அருளிச்செய்தார்.  இனி உத்தரவாக்யத்தால் ப்ரதி பாதிக்கப்படுகிற பரமபுருஷார்த்தமான கைங்கர்யத்தின் சீர்மையையறிந்து, ப்ரயோஜநாந்தர ஸங்கநிவ்ருத்தி பூர்வகமாக, ஸ்வரூபாநுரூபமானவதிலே நிஷ்டரான வர்களுடைய வைபவத்தை அருளிச்செய்கிறார். 

வ்யாக்யானம் – (மற்றொன்றை எண்ணாதே) அதாவது – கைங்கர்யரூப புருஷார்த்தத்துக்கு அந்யமானதொன்றைப் புருஷார்த்தமாக கணியாதேயென்கை.  அந்ய புருஷார்த்தமாவது – இஹலோகபோகமும், பரலோகபோகமும், ஆத்மாநுப வமுமிறே.   அவற்றின்பேர் சொல்லுகையும் அஸஹ்யமாகையாலே மற்றொன்றை என்கிறது.  விரும்பாதே என்னாதே எண்ணாதே என்கிறது  – அவைதன்னையொரு புருஷார்த்தமாக நினைத்தாலிறே விரும்புவதென்றது.  அவற்றை விரும்புவார், தாஸ்யரஸமறியாதவர்களிறே. தாஸ்யரஸஜ்ஞரான வர்களுக்கு, அவை ஊஷரஜலஸேவைபோலே விரஸமாய், ஹேயமாயிறே இருப்பது.  “போகா இமே விதிஶிவாதிபதஞ்ச  கிஞ்ச ஸ்வாத்மாநுபூதிரிதி யா கில முக்திருக்தா  ஸர்வம் ததூஷஜல ஜோஷமஹம் ஜுஷேய ஹஸ்த்யத்ரிநாத தவ தாஸ்மஹாரஸஜ்ஞ:” (வர.ஸ்த 81) (18) என்றாரிறே ஆழ்வான்.

(மாதவனுக்காட்செயலே) ஶ்ரீய:பதிக்கடிமை செய்கையே.  இத்தால் கைங்கர்யப்ரதிஸம்பந்தி மிதுநமென்னுமதுவும், கைங்கர்யமே புருஷார்த்தமென்னுமதுவும் சொல்லுகிறது.  கைங்கர்ய ப்ரதிஸம்பந்தி ஒரு மிதுனமென்னுமிடம், உத்தரவாக்யத்தில் ப்ரதமபதத்திலே  ஸுஸ்பஷ்டமாகச் சொல்லாநின்றதிறே.   திருமந்த்ரத்தில் த்ருதீயபதத்திலும், கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியொரு மிதுனமாயிருக்கச்செய்தே, ஆர்த்தமாகையாலே அவிஶதமாயிருக்கும்;  அத்தைப் பற்றவிறே, இதிலே திருமந்த்ரத்தில் சொன்ன ப்ராப்யத்தை விஶதமாக அநுஸந்திக்கிறதென்று பிள்ளைலோகாசார்யர் அருளிச் செய்தது.  கைங்கர்யமே புருஷார்த்தமென்னுமது திருமந்த்ரத்திலும், இங்குமொக்கச் சொல்லுகையாலே ஸுஸ்பஷ்டம்.  “ஸர்வேஷு  தேஶகாலேஷு ஸர்வாவஸ்தாஸு ச அச்யுத கிங்கரோஸ்மி ஹ்ருஷீகேஶ பூயோபூயோஸ்மி கிங்கர:” (ஜிதந்தே) (19) என்னக்கடவதிறே.  “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டும் நாம்” (திருவாய் – 3.3.1) என்றாரிறே ஆழ்வார். 

(உற்றதிதுவென்று) சீரியதிதுவென்று.  “உறுவதிதுவென்றுனக் காட்பட்டு”  (திருவாய் –  9.4.4)  என்றும், “நீள் குடக்கூத்தனுக்காட்செய்வதே  உறுவதாவது” (திருவாய் – 4.10.10)  என்றும், இதுவுமவர்தாமே அருளிச்செய்தாரிறே.  இது உற்றதென்கையாலே, அல்லாத புருஷார்த்தங்கள்  ஸ்வரூப விருத்தங்களாகையாலே உறாத்தென்னுமிடமும் ஸித்தமிறே.  ஆகவிரண்டு பதத்தாலும், “திருமாலே நானுமுனக்குப் பழவடியேன்” (திருப்பல்லாண்டு 11) என்கிறபடியே, மிதுநஶேஷபூதனானவனுக்கு, “அடிமை செய்வார் திருமாலுக்கே” (திருவாய் – 6-5-11) என்றும், “திருமாற்கரவு சென்றால் குடையாம்” (முதல் திரு – 53) என்றும் சொல்லுகிறபடியே, மிதுநகைங்கர்யமே புருஷார்த்தம் என்னுமிடமும் இவனுடைய ஸ்வரூபாநுரூபத்வ நிபந்தனமான கௌரவமும் சொல்லிற்றாயிற்று. 

(உளந்தெளிந்து) இக்கைங்கர்யந்தன்னில் ஸ்வப்ரயோஜன புத்திக்கடியான  அஹங்கார மமகாரங்கள் போகையாலே, “தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே” (திருவாய் – 2.9.4) என்றும், “உனக்கே நாமாட்செய்வோம்” (திருப்பாவை – 29) என்றும், பரமப்ரயோஜநமென்று செய்யும்படி ஹ்ருதயம் தெளிந்து.  இத்தால், உத்தரவாக்யத்தில், நமஶ்ஶப்தார்த்தம் சொல்லப்பட்டது. 

(பெற்ற பெரும்பேற்றின் மேலுளதோ பேறென்றிருப்பார்) அதாவது – இக்கைங்கர்யமாகிற புருஷார்த்தம் லப்தமானால், இப்படி லப்தமான மஹாபுருஷார்த்தத்துக்கு மேலுமொரு புருஷார்த்தமுண்டோ என்றிருக்குமவர்களென்கை.   பரமபதத்தை விரும்புகிறது, நித்யவிபூதியாகையாலும், ஶுத்தஸத்வமாகையாலே ஜ்ஞாநாநந்தஜநகமாகையாலும், இக்கைங்கர்யமாகிற புருஷார்த்தத்துக்குவிச்சேதமற்ற தேசமென்னுமத்தைப் பற்றவிறே.  ஆகையாலே, மேலுளதோ பேறென்னத் தட்டில்லை.  ஆகவிப்படியிருக்குமவர்கள். 

(அரும்பேறு வானத்தவர்க்கு) அதாவது – அஹ்ருதயஸஹஜதாஸ்யராய், கைங்கர்யநிரதராய், பகவதேகபோகராயிருக்கும் பரமபதவாஸிகளுக்கும், பெறுதற்கரிய புருஷார்த்தபூதராவரென்கை.  இத்தால், ஸதாபஶ்யந்திப்படியே  (புருஷஸூக்தம்) “அப்பொழுதைக் கப்பொழுதென்னாராவமுதமாக அநுபவிக்கிற விஷயத்திற் காட்டிலும், தங்களை துர்லப புருஷார்த்தமாக நினைத்து அநுபவிக்க ஆசைப்படும்படியாவர்கள் என்றதாயிற்று.  “யே ப்ரஹ்மந் பகவத்தாஸ்ய போகைகநிரதாஸ்ஸதா தே ப்ரியாதிதய: ப்ரோக்தா: ஶ்ரீவைகுண்டநிவாஸிநாம் (ஶ்ரீஶாஸ்த்ரே) (20) என்றிவ்வர்த்தம் ஶ்ரீஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டதிறே. 

@@@@@

அஞ்சாம்பாட்டு

5.  தீர்த்தமுயன்றாடுவதும் செய்தவங்கள் செய்வனவும்

   பார்த்தனை முன் காத்தபிரான் பார்ப்பதன்முன் – சீர்த்துவரை

   மன்னனடியோமென்னு  வாழ்வு நமக்கீந்ததற்பின்

   என்ன குறை வேண்டுமினி.

பதவுரை

முன் – பாரதயுத்தத்தில்

பார்த்தனை – ஶோகாவிஷ்டனான அர்ஜுநனுக்கு

காத்தபிரான் – சரமஶ்லோகத்தை யுபதேஶித்து ரக்ஷித்தருளின மஹோபகாரகனானவன்

பார்ப்பதன்முன் – கடாக்ஷித்தருளுவதற்கு முன்பு

தீர்த்தம் – கங்கை முதனால தீர்த்தங்களிலே (பாபக்ஷயார்த்தமாக)

முயன்று – உத்யோகித்து

ஆடுவதும் – அவகாஹிக்குமதுவும்

செய்தவங்கள் – காயஶோஷணார்த்தமாகச் செய்யப்படும் தபஸ்ஸுக்களை

செய்வனவும் – செய்யுமவையும்

சீர்த்துவரைமன்னன் – ஶ்ரீமத்த்வாரகைக்கு நிர்வாஹகனானவன்

நமக்கு – ஶேஷஸ்வரூபமறியாத நமக்கு

அடியோமென்னும் வாழ்வு – அடிமையாகிற ஸம்பத்தை

ஈந்ததற்பின் – அருளினபின்பு

இனி – இனிமேலுள்ளகாலம்

வேண்டும்– உபாயோபேயங்கள் நிமித்தமாகக்.

குறையென்ன – குறைபடவேணுமோ

அவதாரிகைஅஞ்சாம் பாட்டு.  பூர்வவாக்யத்தால் ப்ரதிபாதிக்கப்படுகிற ஸித்தோபாயவரணம் இதரோபாய பரித்யாகத்தை  அங்கமாயுடைத்தாயிருக்குமென்னுமத்தை சரமஶ்லோக முகத்தாலே அறிந்து, உபாயரூப ப்ரவ்ருத்திகளில் அந்வயமற்று, ஸ்வரூபாநுரூபமாக அவன் பக்கலிலே ந்யஸ்தபரராய், ஸ்வீகாரகார்த்தார்த்யத்தை அநுஸந்தித் திருக்குமவர்கள் படியை, ஸ்வநிஷ்டாநுரூபேண வருளிச்செய்கிறார்.

வ்யாக்யானம் (தீர்த்தமுயன்றாடுவதும்) கங்கா, யமுனா, ஸரஸ்வதீ ப்ரப்ருதிகளான தீர்த்தங்களிலே, பாபக்ஷயார்த்தமாகப் பெரிய உத்யோகத்தோடே அவகாஹிக்குமதுவும்.  தீர்த்தங்க ளானவை – பாவநஜலங்கள்.      முயற்சியாவது – உத்யோகம்.  ஆடுகையாவது –  அவற்றிலே மறுநனையப்புகுந்து முழுகுகை. 

(செய்தவங்கள் செய்வனவும்) “ஊன்வாடவுண்ணாது” (திருவாய் – 3.2.1)  “பொறுப்பிடையே நின்றும்” (மூ திருவ 76) “வீழ்கனியு மூழிலையு  மென்னுமிவையே நுகர்ந்து” (பெரிய திருமடல்)   இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே, காயஶோஷணார்த்தமாகச் செய்யப்படும் தபஸ்ஸுக்களைச் செய்யுமவையும்.  இதுதான், தாநயாகாதிகளுக்கு முபலக்ஷணம்.  

(பார்த்தனை முன் காத்தபிரான் பார்ப்பதன் முன்) அதாவது – உபாயாந்தரங்கள் எல்லா முபதேஶிக்கக்கேட்டு, அவற்றினுடைய துஷ்கரத்வத்தையும்  ஸ்வரூப விருத்தத்வத்தையும் அ) நுஸந்தித்து, ஶோகாவிஷ்டனான அர்ஜுநனை “ஸர்வதர்மாந்” (கீதை – 18.66) (21) இத்யாதிகளாலே பூர்வோக்தங்களாயிருந்துள்ள ஸாங்கமான ஸகலதர்மங் களையும் ஸவாஸநமாக விட்டு, ஸௌலப்யாதிகுண விஶிஷ்டனான என்னையே நிரபேக்ஷோபாயமாகப்பற்று;  ஸர்வஜ்ஞத்வாதி குணவிஶிஷ்டனான நான் உன்னுடைய அஜ்ஞத்வாதிகளை அநுஸந்தித்து, என் பக்கலிலே ந்யஸ்தபரனான உன்னை, மத்ப்ராப்தி ப்ரதிபந்தக ஸகலபாபங்களில் நின்றும் விடுவிக்கக்கடவேன்.  ஆனபின்பு, ஶோகியாதேகொள் என்று உபதேஶித்து, முன்பு ரக்ஷித்தருளின மஹோபகாரகனானவன் கடாக்ஷித்தருளு வதற்கு முன்பென்கை.  இத்தால் சரமஶ்லோகார்த்தம் நெஞ்சில் படுவதற்கு முன்பென்றபடி. 

(சீர்த்துவரை மன்னன்) “பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்யத்துவரை  யென்னுமதில்  நாயகராகி வீற்றிருந்த மணவாளர்” (பெரியாழ்.திரு – 4.9.4) என்கிறபடியே, தனக்கநந்யார்ஹராய், அநந்யோபாயோபேயங்களில்  அந்வயமற்றிருந்த திவ்ய மஹிஷிகளுக்கு நாயகனாய்க்கொண்டு ஶ்ரீமத்த்வாரகைக்கு நிர்வாஹகனானவன். 

(அடியோமென்னு வாழ்வு நமக்கீந்ததற்பின்) அவனுக்கு நாம் ஶேஷபூதரென்றறிந்து, ஸ்வரக்ஷணார்த்தமாக ஸ்வப்ரவ்ருத் தியிலன்வயமற்றிருக்கையாகிற ஸம்பத்தை நமக்குத் தந்தருளியபின்பு, அடியோமென்கையாலே, ஜ்ஞாநாநந்தங்களி லுங்காட்டில் ஆத்மாவுக்கு ஶேஷத்வமே அந்தரங்க நிரூபக மென்னுமிடமும், வாழ்வென்கையாலே, இத்தையறியவே ஸ்வயத்ந நிவ்ருத்தி ஸ்வப்ரயோஜந நிவ்ருத்தி ஸித்திக்கையால், இதுவே ஆத்மாவுக்கு ஸம்பத்தென்னுமிடமும், நமக்கீந்ததற்பின் என்கையாலே, அநாதிகாலமிஸ்ஸம்பந்தம் உண்டாயிருக்கச்செய்தே, இத்தை இழந்துகிடந்த நமக்கு இப்ரபத்தி பிறந்ததும் அவனருளாலே என்னுமிடமும் சொல்லுகிறது.  இப்படி அவனிவ்வாழ்வை நமக்குத் தந்தருளினபின்பு.

(என்ன குறை வேண்டுமினி) அதாவது – இனிமேலுள்ள காலம் உபாயோபேயங்களிலொன்று நிமித்தமாகக் குறைபடவேணுமோவென்கை.  இத்தால் அவன் “மா ஶுச:” என்றருளிச்செய்தபடியே, நங்கார்யத்தில் நாம் கரைச்சலற்று  நிர்ப்பரராயிருக்குமத்தனையன்றோ என்றதாயிற்று.  “தாவத்கச்சேத்து தீர்த்தாநி ஸரிதஶ்ச ஸராம்ஸிச  யாவந்நாபூச்சபூபால விஷ்ணுபக்திபரம்மந:” என்று ஶ்ரீவிஷ்ணுதர்மத்தில் சொல்லப்பட்ட வசனமும்,  “கிம் தஸ்ய தாநை: கிம் தீர்த்தை: கிம் தபோபி: கிமத்வரை: யோ நித்யம் த்யாயதே தேவம் நாராயணமநந்யதீ:” (இதிஹாஸஸமுச்சயே 33.89) (23) என்று இதிஹாஸஸமுச்சயத்தில் சொல்லப்பட்ட வசனமும், இப்பாட்டில் பூர்வ வாக்யத்தில் சொல்லப்பட்டவர்த்தத்துக்கு ஸம்வாதமாக அநுஸந்தேயம்.  இதற்குப் பொருள் – “நின்றவா நில்லா நெஞ்சு” என்கிறபடியே, ஒன்றிலும் நிலைநில்லாமல் ஓடித்திரியும் மநஸ்ஸானது, யாதோரளவும் இவ்வாத்மாவுக்கு ப்ராப்யமுமாய், ப்ராபகமுமாயிருக்கும்.  அவன் பக்கல் , பக்தியில் ஊற்றமுடைத்தாகாதவளவும் ஸரித்துக்களும் ஸரஸ்ஸுக் களுமாய்க்கொண்டு பாவனமான தீர்த்தங்களைக் குறித்துப் போவானென்றும் – யாவனொருவன் அந்ய விஷயத்தில் மநஸ்ஸற்று, த்யோதமான அநாதிகுணயுக்தனாய், நாரஶப்தவாச்யமான சேதநஸமூஹத்துக்கு உபாயோபேயங்க ளிரண்டும் தானாகையாலே, நாராயணஶப்தவாச்ய னானவனை ஸர்வகாலமும் அப்படியே அநுஸந்தியாநிற்குமவனுக்கு தாந, தீர்த்த தபோத்வரங்களாலென்ன ப்ரயோஜநமுண்டென்றும் சொல்லிற்றிறே.  ஆகையாலிவை ஸம்வாதமாகக் குறையில்லை. 

@@@@@

ஆறாம்பாட்டு

6.  புண்டரீகைக் கேள்வனடியா ரப்பூமிசையோன்

   அண்டமொருபொருளா வாதரியார் – மண்டி

   மலங்கவொரு மீன்புரண்ட மாத்திரத்தாலார்த்துக்

   கலங்கிடுமோ முந்நீர்க்கடல். 

பதவுரை

புண்டரீகைக்கேள்வன் – ஶ்ரீய:பதியின்

அடியார் – தாஸ்யைகரஸராயிருக்குமவர்கள்

அப்பூமிசையோன் – திருநாபீகமலத்திலுண்டான ப்ரஹ்மாவின் அண்டம் – ஆநந்தஹேதுவான அண்டத்தை

ஒருபொருளா – ஒருசரக்காக

ஆதரியார் – விரும்பமாட்டார்கள்

ஒருமீன் – ஒரு மத்ஸ்யமானது

மண்டி – தன் ஶக்தியெல்லாவற்றோடும் நெருங்கி

மலங்க – நிலைகுலைந்து கலங்கும்படி

புரண்டமாத்திரத்தால் – இடம் வலங்கொண்டு புரண்டமாத்திரத்தால்

முந்நீர்கடல் – மூன்று ஜலத்தையுடைய ஸமுத்ரமானது

ஆர்த்து – நிலைகுலைந்து ஒலித்து

கலங்கிடுமோ – கலக்கத்தை யடையுமோ?

அவதாரிகைஆறாம்பாட்டு.  இப்படி துஷ்கரத்வாதி தோஷ தர்ஶநத்தாலே உபாயாந்தர            கூடிற்றாகிலும், அநாதிகாலம்  ஶப்தாதிகளிலே வாஸனைப் பண்ணிப்போந்த ஆத்மாவுக்கு உபேயாந்தரமான ஐஶ்வர்யத்தைக் கண்டாலாசை செல்லாதொழியுமோ?  அந்த ஐஶ்வர்யோத்ரேகந்தான் அவன் நெஞ்சைக் கலங்கப்பண்ணாதோ?  என்ன, பகவத்தாஸ்யரஸஜ்ஞரானவர்கள் ஐஶ்வர்யத்துக்கு மேலெல்லையான ப்ரஹ்மபதத்தையுமொரு புருஷார்த்தமாக விரும்பார்கள்,  நெஞ்சைக் கலக்கவுமாட்டாரென்கிறார். 

வ்யாக்யானம் – (புண்டரீகைக்கேள்வ னடியார்) பத்மோத்பவையாய், பத்மவாஸிநியாயிருக்கையாலே, பத்மினி என்று திருநாமத்தையுடையவளான, பெரியபிராட்டியாருக்கு வல்லபனானவனுடைய திருவடிகளில் ஶேஷத்வமே தங்களுக்கு நிரூபகமாகவுடையவர்கள்.  இத்தால், “பண்டைநாளாலே நின்றிருவருளும் பங்கயத்தாள் திருவருளுங்கொண்டு” (திருவாய்மொழி 9.2.1) என்கிறபடியே, அவர்கள் இருவருடையவும் விஶேஷகடாக்ஷத்தாலே திருந்தி, தச்சேஷத்வைகநிரூபகராய்,  தத்தாஸ்யைகரஸரா யிருக்குமவர்களென்கை. 

(அப்பூமிசையோன் அண்டமொருபொருளாவதறியார்) ஐஶ்வர்யத்துக்கு மேலெல்லையாக ப்ரஸித்தமாய், திருநாபீகமலோத்பவனான ப்ரஹ்மாவினுடைய ஆநந்தத்துக்கு ஹேதுவாய்,  சதுர்தஶபுவனாத்மகமான அண்டத்தை,  ஒரு சரக்காக ஆதரியார்கள்.  தேஹாத்மாபிமானிகளுக்கும், ஸ்வதந்த்ரர்க்குமிறே, ஐஶ்வர்யம் ரஸாவஹமாய்க்கொண்டு புருஷார்த்தமா யிருப்பது.   பகவத்தாஸ்யமறிந்தவர்களுக்கு, விரஸமாய் ஜுகுப்ஸாவிஷயமாயிருக்குமிறே.   ஆகையாலத்தை ஆதரிப்பார்களோ? 

அப்படிச் சொல்லலாமோ?  அந்த ஐஶ்வர்யத்தினுடைய கிளர்ப்பம் தன்னையாசைப்படும்படி இவர்கள் நெஞ்சைக் கலங்கப் பண்ணாதோ?  என்னும் ஆகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் மேல். 

(மண்டியித்யாதி) ஒரு மத்ஸ்யமானது, தன் ஶக்தியெல்லாவற்றோடுங்கூடி  தள்ளிக்கொண்டு, நிலைகொலைந்து கலங்கும்படி இடம் வலங்கொண்டு புரண்டமாத்ரத்தால், ஆற்றுநீர், ஊற்றுநீர், வர்ஷஜலமென்கிற ஜலத்ரயயுக்தமான ஸமுத்ரமானது, நிலைகொலைந்து உகளித்து க்ஷுபிதமாமோ அந்த மத்ஸ்யத்தினுடைய ஸ்புரணத்தால்.  “அப்ரமேயோ மஹோததி:”  (ரா.யு 19-31) (24)  என்கிற ஸமுத்ரம் கலங்கிலன்றோ, ஐஶ்வர்யத்தினுடைய கிளர்த்தி கண்டால், கம்பீரமான இவர்களுடைய ஹ்ருதயம் கலங்குவதென்று கருத்து.  “ப்ரஹ்மாண்டமண்டலீமாத்ரம் கிம் லோபாய மநஸ்விந: ஶபரீஸ்புரிதேநாப்தே:  க்ஷுப்ததா நைவஜாயதே” (பாகவதம் – 10-20-15) (25) என்னக்கடவதிறே. 

@@@@@

ஏழாம்பாட்டு

7.  தோளார்சுடர்த்திகிரி சங்குடையசுந்தரனுக்கு

    ஆளானார் மற்றொன்றிலன்பு செய்யார் – மீளாப்

    பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு

    நரகன்றோ இந்திரன்றன் நாடு.

பதவுரை

தோளார் – திருத்தோள்களோடே சேர்ந்திருந்துள்ள

சுடர்திகிரி – தேஜோரூபமான திருவாழியையும்

சங்குடைய சுந்தரனுக்கு – ஶ்ரீபாஞ்சஜந்யத்தையு முடையனாகையால் வந்தவழகை யுடையவனுக்கு

ஆளானார் – அவ்வழகுக்குத் தோற்று அடிமையானவர்கள்

மற்றொன்றில் – அவ்வடிமைக்கு வேறான  ப்ராக்ருதவிஷயங்களொன்றிலும்

அன்பு செய்யார் – விருப்பத்தைப் பண்ணார்கள்

மீளா – புநராவ்ருத்தியில்லாததாய்

பொருவரிய – நிரவதிக தேஜோரூபமாயிருக்கையாலே உபமாந ரஹிதமாய்

விண்ணாட்டில் – பரமாகாஶஶப்த வாச்யமான திருநாட்டிலே

போகம் – பரமாநந்தத்தை

நுகர்வார்க்கு – அநுபவிக்கவேணு மென்னுமாசை உடையவர்களுக்கு

இந்திரன் நாடு – இந்திரனுக்கு போகஸ்தானமான ஸ்வர்க்கமானது

நரகன்றோ – நரகப்ராப்யமன்றோ?

அவதாரிகை – ஏழாம்பாட்டு.  தாஸ்யச்சுவடறிந்தவர்கள் ஐஶ்வர்யத்துக் கெல்லையான ப்ரஹ்மபதத்தை விரும்பார்களென்றார் கீழ்.  அவனழகிலே தோற்று அடிமைபுக்கவர்கள்  அந்யவிஷயங்களை ஆதரியார்களென்கிறார் இதில்.

வ்யாக்யானம் (தோளார்சுடர்த் திகிரி சங்குடைய சுந்தரனுக்கு) திருத்தோளோடே சேர்ந்திருந்துள்ள தேஜோரூபமான திருவாழியையும், ஶ்ரீபாஞ்சஜந்யத்தையுமுடைய னாகையாலே வந்த அழகையுடையவனுக்கு.  “மனைப்பார் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதாரத்தோள்” (இர. திருவந் 42) என்கிறபடியே வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்கவேண்டும்படி இருக்கிற தன் அழகாலே.  ப்ராக்ருத ஸகல விஷயஸங்கத்தையும் அறுக்கவற்றானத் திருத்தோள்களோடே.  “அணாயாராழியும் சங்கமும்”  (திருவாய் – 8.3.6) என்கிறபடியே ஸர்வாபரணங்களும் தாமேயாய்ப் போரும்படியிருக்கிற திருவாழியையும், ஶ்ரீபாஞ்சஜந்யத்தையும் ஏந்துகையால் வந்த அழகுங்கூடினால், அழகு இரட்டித்திருக்குமிறே. 

(சுந்தரனுக்காளானார்) இப்படியிருந்துள்ள அழகையுடைய வனுக்கு அவ்வழகுக்குத் தோற்று அடிமையானவர்கள்.  “புண்டரீகைக்கேள்வனடியார்” என்கிறவிடத்திலே சொன்ன தாஸ்யம் ஸ்வரூப ப்ரயுக்தம்.  இது குணக்ருதம்.  சுந்தரனுக்கு – என்றும் ஆளானார் – என்றும் சொல்லுகையாலே ஸ்வரூபப்ரயுக்தமான தாஸ்யத்திலே நிற்குமவர்களையும், அப்போதைக்கப்போது அழகுக்குத் தோற்று எழுதிக்கொடுக்கும்படி பண்ணுமிறே விஷயவைலக்ஷண்யம்.  ஆகையால் இப்போதழகுக்குத் தோற்று அடிமை புக்கவர்களைச் சொல்லுகிறது.

(மற்றொன்றிலன்பு செய்யார்) அதாவது – அப்படி அடிமையானவர்கள், அவ்விஷயத்துக்கு அந்யமாயிருக்கும் ப்ராக்ருத விஷயங்களொன்றிலும் ஸ்நேஹம் பண்ணார்களென்கை.  அப்ராக்ருதமாய், அதிமநோஹரமா யிருக்கும்  விஷயத்தில் வாசியறிந்து,  அதிலே தோற்றிருக்குமவர்கள், அத்யாபாஸமாய், அவிலக்ஷணமான ப்ராக்ருத விஷயங்களை  விரும்புவார்களோ? 

ஐஹிகவிஷயங்களில் அப்படியிருந்தாலும், இத்தைப்பற்ற அதிவிலக்ஷணமான  ஸ்வர்க்காத்யாமுஷ்மிக விஷயங் களைக் கண்டால், அதில் அன்பு செல்லாதோவென்னும் ஆகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் மேல்.

(மீளாப் பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு) அதாவது – “நச புநராவர்த்ததே நச புநராவர்த்ததே” (சாந். 8-15-1) (26) என்கிறபடியே,  புநராவ்ருத்தி ரஹிதமாய், அப்ராக்ருதமாய், ஶுத்தஸத்வமயமாய், நிரவதிக தேஜோரூபமா யிருக்கையாலே உபமாநரஹிதமாய், “ததக்ஷரே பரமே வ்யோமந்” (ப்ரஹ்மாண்டபுராணம்) (27) என்கிறபடியே, பரமாகாஶ ஶப்தவாச்யமான திருநாட்டுள்ளே, போகத்தை புஜிக்கவேணுமென்னு மாசையுடையவர்களுக்கு.

(நரகன்றோ விந்திரன்றன் நாடு) அதாவது – “க்ஷீணேபுண்யே மர்த்யலோகம் விஶந்தி” (கீதை) (28) என்கிறபடியே, புண்யக்ஷயம் பிறந்தவாறே முகம் கீழ்ப்படத்தள்ளி விடும்படி யிருப்பாராய், ப்ராக்ருதமான ஸ்வஸத்ருஶலோகங்கள்  பலவற்றையு முடைத்தாய், கர்மவஶ்யசேதநனான இந்த்ரனுக்கு  போகஸ்தானமான நாடாயிருந்துள்ள ஸ்வர்க்கலோகம் நரகப்ராயமன்றோவென்கை.  இத்தால் இந்த விபூதியில் போகம் து:க்காவஹமா யிருக்குமென்றதாயிற்று.  “தத்பதம் ப்ராப்துகாமாயே  விஷ்ணோஸ்தேஷாம் மஹாத்மநாம் போகா: புரந்தராதீனாம் தே ஸர்வே நிரயோபமா:” (ப்ரஹ்மாண்டடபுராணம்) (29) என்றிவ்வர்த்தம் ப்ரஹ்மாண்டபுராணத்திலே சொல்லப் பட்டதிறே. 

@@@@@

எட்டாம் பாட்டு

8.  முற்றப் புவனமெல்லாம் உண்ட முகில்வண்ணன்

    கற்றைத்துழாய் சேர்க்கழலன்றி – மற்றொன்றை

    இச்சியாவன்பர் தனக்கெங்ஙனே செய்திடினும்

    உச்சியாலேற்கு முகந்து.

பதவுரை

புவனமெல்லாம் முற்ற உண்ட – ஸகல லோகங்களையும் ஒன்றொழியாமல் ப்ரளயத்திலழியாமே தன் திருவயிற்றில் வைத்து நோக்கின

முகில் வண்ணன் – காளமேகநிபமான வடிவையுடையவனுடைய

கற்றைத் – தழைத்திருந்துள்ள திருத்துழாயோடே

துழாய் சேர் – சேர்ந்திருந்துள்ள

கழலன்றி – திருவடிகளையொழிய

மற்றொன்றை – வேறொரு ப்ரயோஜனத்தை

இச்சியாவன்பர் – இச்சியாத படியான ப்ரேமத்தையுடையவர்கள்

தனக்கு – வகுத்த ஶேஷியான தனக்கு (அடிமை செய்யுமிடத்தில்)

எங்ஙனே செய்திடினும் – எப்படி செய்தாலும்

உகந்து – தான் ப்ரீதனாய்க்கொண்டு

உச்சியாலேற்கும் – ஶிரஸா வஹிக்கும்.

அவதாரிகைஎட்டாம் பாட்டு.  அநந்யப்ரயோஜனராய்க் கொண்டு தன் பக்கல் ப்ரேமயுக்தரானவர்கள் அடிமை செய்யுமிடத்தில் ஏதேனுமொருபடி செய்தாலும் அவனத்தையுகந்து ஶிரஸாவஹிக்கு மென்கிறார். 

வ்யாக்யானம் – (முற்றப் புவனமெல்லாம் உண்ட முகில்வண்ணன்) ப்ரளயத்திலழியாமே ஸகலலோகங்களையு மொன்றுமொ ழியாமல் திருவயிற்றிலே வைத்து நோக்குகிறது, தன் பேறென்னுமிடம் வடிவில் புகரிலே தோற்றும்படி யிருந்த காளமேகநிபமான வடிவையுடையவன்.  இப்போதிதைச் சொல்லுகிறது  “தாயிருக்கும் வண்ணமே உம்மைத்தன் வயிற்றிருத்தி யுய்யக்கொண்டான்” (திருவாய் – 11.6.6) என்கிறபடியே ஆபத்தசையிலே அகில லோகங்களையும்  அவை அறியாதிருக்கத் தானறிந்த ஸம்பந்தமே ஹேதுவாக வயிற்றிலேவைத்து ரக்ஷித்தது தன்பேறென்னுமிடம்  தன்வடிவிலே தோற்றும்படி யிருந்தவன்.  இத்தால் அநந்யப்ரயோஜனராய்த் தன்பக்கல் ப்ரேமயுக்தரானவர்கள்  ஸ்வவிஷயத்தில் பண்ணும் ஶேஷவ்ருத்திகளை யாதரித்துக்கொள்ளு மென்னுமிடம் தோற்றுகைக்காக.

(கற்றைத்துழாய் சேர்க்கழலன்றி) தன்னிலத்திலுங்காட்டில்   திருமேனியோட்டை ஸ்பர்ஶத்தாலே “தழைக்குந்துழாய்” (பெரிய திருவ – 39) என்கிறபடியே தழைத்திருந்துள்ள  திருத்துழாயோடே சேர்ந்திருந்துள்ள திருவடிகளையொழிய.  இதுதான் திருவடிகளி லொப்பனைக்கெல்லாம் உபலக்ஷணம்.

(மற்றொன்றை இச்சியா அன்பர்) இப்படி பரமபோக்யமான இத்திருவடிகளையொழிய, வேறொரு ப்ரயோஜனத்தை இச்சியாதபடியான ப்ரேமமுண்டானவர்கள்.  ப்ரயோஜநாந் தரபரராய்,   கிஞ்சித்கரிப்பார் “தேஹி மே ததாமி தே” (யஜீீ. 1-8) (30)    என்கிறபடியே, கொடுத்துக்கொள்ளுகைக்கிறே கிஞ்சித் கரிப்பது.  அங்ஙனன்றிக்கே, “இன்றுவந்தித்தனையும்” (நாச்.திரு. 9-7) இத்யாதிப்படியே கொண்டதுக்குக் கைக்கூலி கொடுக்கும்படியான அநந்யப்ரயோஜனபக்திகரானவர்கள். 

(தனக்கெங்ஙனே செய்திடினும்) வகுத்த ஶேஷியான தனக்கு அடிமை செய்யுமிடத்தில் ப்ரேமபரவஶராய்க்கொண்டு அக்ரமமாகவாதல், ஸக்ரமமாகவாதல் எப்படி செய்யிலும்.

(உச்சியாலேற்கு முகந்து) ப்ரீதனாய்க்கொண்டு ஶிரஸா வஹிக்கும்.  எங்ஙனே செய்திடிலும் உச்சியாலேற்கையாவது – இவன் காலாலே பொகட்டவற்றை அவன் தலையாலே யேற்கை.  பாரதே – மோக்ஷதர்மே யா: க்ரியாஸ்ஸம்ப்ரயுக்தாஸ்ஸ்யு: ஏகாந்தகதபுத்திபி:  தாஸ்ஸர்வாஶ்ஶிரஸா தேவ:  ப்ரிக்ருஹ்ணாதி வை ஸ்வயம்” (பாரத.மோக்ஷ. 353 – 64) (31) என்னக்கடவதிறே. 

@@@@@

ஒன்பதாம்பாட்டு

9.  ஆசிலருளா லனைத்துலகுங்காத்தளிக்கும்

    வாசமலராள் மணவாளன் – தேசுபொலி

    விண்ணாட்டிற்சால விரும்புமே வேறொன்றை

    எண்ணாதார் நெஞ்சத்திருப்பு,

பதவுரை

ஆசில் – ஸஹேதுகத்வமாகிற தோஷமில்லாத

அருளால் – க்ருபையாலே

அனைத்துலகம் – ஸமஸ்தலோகத்தையும்

காத்து – அநிஷ்டங்களைப் போக்கி ரக்ஷித்து

அளிக்கும் – அபிமதங்களைக் கொடுக்கும்

வாசமலராள் மணவாளன் – பெரியபிராட்டியாருக்கு வல்லபனானவன்

தேசுபொலி – தேஜ:ப்ரசுரமான

விண்ணாட்டில் – பரமபதத்திற்காட்டிலும்

வேறொன்றையெண்ணாதார் – தன்னையொழிய வேறொரு ப்ரயோஜனத்தைக் கணிசியாதவர்களுடைய

நெஞ்சத்து – ஹ்ருதயத்தில்

இருப்பு – வாஸம் செய்வதை

சால – மிகவும்

விரும்பும் – ஆதரியாநிற்கும்.

அவதாரிகைஒன்பதாம்பாட்டு.  அநந்யப்ரயோஜனராய் அடிமைச் செய்யுமவர்கள் விஷயத்தில், அவனுக்குண்டான வாதரத்தை அருளிச்செய்தார் கீழ்;  அவ்வளவன்றிக்கே, அநந்ய ப்ரயோஜனரானவர்களுடைய ஹ்ருதயத்திலிருப்பில் அவனுக்குண்டான விருப்பமிருக்கும்படியை அருளிச் செய்கிறாரிதில். 

வ்யாக்யானம் – (ஆசிலருளால்) நிர்ஹேதுக க்ருபையாலே.  ஆசு – குற்றம்;  இல் – அதில்லாமை.  அருளுக்குக் குற்றமாவது – ஸஹேதுகமானபோதொழிய கார்யகரமாகாமலிருக்கை. 

(அனைத்துலகும்) ஸமஸ்தலோகத்தையும்.  ஸஹேதுக க்ருபையாலே செய்யும்போதிறே, குணாகுணநிரூபணம் பண்ணி வரைந்து ரக்ஷிப்பது.  இவ்விடத்தில் லோகஶப்தம் ஜநவாசி.  “லோகஸ்து புவநேஜநே” (32) (நிகண்டு) என்னக்கடவதிறே.  (காத்தளிக்கும்) அநிஷ்டங்களைப் போக்கி ரக்ஷித்து அபிமதங்களைக் கொடுக்கும். 

(வாசமலராள் மணவாளன்) “வேரிமாறாதபூமேலிருப்பாள்”  (திருவாய் – 4.5.11) என்கிறபடியே, எப்போதுமொக்க செவ்விமாறாமையாலே, பரிமளம் அலையெறிகிற புஷ்பத்தை யிருப்பிடமாகவுடைய பெரியபிராட்டியார்க்கு வல்லபனானவன்.  கீழ்ச்சொன்னபடியே, ரக்ஷிப்பதுதான் அவளோடேகூடியிருந்தாலாயிற்று.  “லக்ஷ்ம்யாஸஹ ஹ்ருஷீகேஶோ  தேவ்யா காருண்யரூபையா ரக்ஷகஸ்ஸர்வ ஸித்தாந்தே  வேதாந்தேஷுச கீயதே” (33)என்னக்கடவதிறே.   ரக்ஷணத்துக்கடியான க்ருபையை கிளப்புகையும், ரக்ஷித்தாலதுகண்டு உகக்குகையும்,  அவளுடைய கூறாயிறே இருப்பது.   இப்படியிருக்கிற ஶ்ரீய:பதியானவன், தான் பண்ணின க்ருஷி பலித்து, அநந்ய ப்ரயோஜனரானவர்களுடைய ஹ்ருதயத்திலிருப்பில் பண்ணுமாதரவிஶேஷத்தை யருளிச்செய்கிறார் மேல்.

(தேசுபொலி விண்ணாட்டில்) “அத்யர்க்காநலதீபம் தத்ஸ்த்தாநம்” (பார.ஆர – 16.3.19) (34) என்கிறபடியே, தேஜ:ப்ரசுரமாய், “வைகுண்டே து பரே லோகே ஶ்ரியாஸார்த்தம் ஜகத்பதி: ஆஸ்தேவிஷ்ணுரசிந்த்யாத்மா  பக்தைர்ப்பாகவதைஸ்ஸஹ” (சைவே) (35) என்கிறபடியே பெரியபிராட்டி யாரோடும்,  நித்யஸூரிகளோடுங்கூட  ரஸோத்தரமாக எழுந்தருளியிருக்கிற பரமபதத்திற்காட்டில்.  (சால விரும்புமே) மிகவும் ஆதரியாநிற்குமே. 

(வேறொன்றை எண்ணாதார் நெஞ்சத்திருப்பு) “வாஸுதேவஸ்ஸர்வம்” (கீதை – 7. 19) (36) “எல்லாம் கண்ணன்” (திருவாய் 6.7.1 ) என்றும் சொல்லுகிறபடியே, ஸகல ப்ரயோஜனமும் தானேயாக நினைத்து, வேறொரு ப்ரயோஜனத்தைக் கணிசியாதே யிருக்குமவர்களுடைய ஹ்ருதயத்திலிருப்பை.   இத்தால், அப்ராக்ருதமான தேஶவிஶேஷத்திலுங்காட்டில், இவர்கள் ஹ்ருதயத்திலிருப்பு, தனக்கத்யந்த ரஸாவஹமாயிருக்கையாலே, இதிலே அத்யாதரத்தைப் பண்ணுமென்றதாயிற்று.  “யே அநந்யமநஸஶ்ஶுத்தா: யே தாஸ்யைகமநோரதா:  தேஷாம் மே ஹ்ருதயம் விஷ்ணோர்வைகுண்டாத் பரமம்பதம்” (37) என்று தானே அருளிச்செய்தானிறே. 

@@@@@

பத்தாம்பாட்டு

10.  நாளுமுலகை நலிகின்றவாளரக்கன்

    தோளுமுடியும் துணித்தவன்றன் – தாளில்

    பொருந்தாதா ருள்ளத்தில் பூமடந்தை கேள்வன்

    இருந்தாலு முள்மேலிருப்பு.

பதவுரை

நாளும் – நாள்தோறும்

உலகை – லோகத்தையடைய

நலிகின்ற – ஹிம்ஸியாநிற்கிற

வாளரக்கன் – வாளைத் தனக்கு பலமாகவுடைய ராவணனுடைய

தோளும் – தோள்களையும்

முடியும் – தலைகளையும்

துணித்தவன் – அறுத்துப் பொகட்டவனான

பூமடந்தை கேள்வன் – ஶ்ரீய:பதியானவன்

தன்தாளில் – தன்னுடைய திருவடிகளில்

பொருந்தாதார் – பொறுத்தமற்றிருக்கிறவர்களுடைய

உள்ளத்தில் – ஹ்ருதயத்தில்

இருந்தாலும் – நிர்ப்பந்தத்துக்காக விருந்தாலும்  (அவ்விருப்பு)

முண்மேலிருப்பு – கண்டகாக்ரத்திலிருப்புபோல் து:க்காவஹமாயிருக்கும். 

அவதாரிகை பத்தாம்பாட்டு.  ஶ்ரீய:பதியானவன் ப்ரயோஜநாந்தரபரருடைய

ஹ்ருதயத்திலிருந்தாலும், அவ்விருப்பு அவனுக்கு து:க்காவஹமாகையாலே, அஸஹ்யமாயிருக்கும்படியை யருளிச்செய்கிறார். 

வ்யாக்யானம் – (நாளுமுலகை நலிகின்ற) காதாசித்கமாகவன்றிக்கே நாள்தோறுமொருவரை இருவரையன்றிக்கே, லோகத்தையடைய ஒருகால் இடைவிடுகையன்றிக்கே நலியா நிற்கிற. 

(வாளரக்கன்) முன்பே ருத்ரனை யுபாஸித்து,  அவன் பக்கலிலே பெற்றதொரு வாளைத் தனக்குப் பலமாகப் பிடித்துக்கொண்டிருக்கும் ராக்ஷஸனுடைய. 

(தோளும் முடியும் துணித்தவன்) தோள்களையும் தலைகளையுமறுத்தவன்.  “தோள்கள் தலை துணிசெய்தான்” (திருவாய் – 1.6.7) என்றாரிறே ஆழ்வார்.  அதாவது – அவனைக் கொல்லுகிறவளவில், அகப்படாதவனகப்பட்டான், தப்பாமல் கொன்றுவிடுவோம் என்று பாராதே, தோள்களைக் கழித்து, தலைகளைச் சேதித்து,  போதுபோக்காக நின்று கொன்றபடி.

(பூமடந்தை கேள்வன்) புஷ்பநிவாஸிநியாய், “யுவதிஶ்ச குமாரிணீ” (38) என்கிறபடியே, நித்யயௌவநஸ்வபாவையான பெரியபிராட்டியாருக்கு நாயகனானவன்.  கீழ்ச்சொன்ன ராவணவதந்தனக்கு நாட்டைநலிந்த வளவன்றிக்கே, இவளைப் பிரிந்ததிறே ப்ரதான ஹேது.  “சுரிகுழற்கனிவாய்த் திருவினைப்பிரித்த கொடுமையிற் கடுவிசை யரக்கன் எறிவிழித்திலங்கு மணிமுடிபொடிசெய் திலங்கை” (பெரிய திரு – 5.7.7) என்றாரிறே திருமங்கையாழ்வார்.  இப்படி திவ்யமஹிஷியான பிராட்டியுந்தானுமாய், ரஸோத்தரமாக எழுந்தருளியிருக்குமவன். 

(தந்தாளில் பொருந்தாதா ருள்ளத்தில்) திருவடிகளை யாஶ்ரயித்திருக்கச் செய்தே  ப்ரயோஜநாந்தரங்களில் விருப்பத்தைப் பண்ணி,  தன் திருவடிகளிலே பொருத்தமற்றிருக்கு   மவர்களுடைய ஹ்ருதயத்தில். 

(இருந்தாலும்) முதலிலே இருக்கத்தான் கூடாது;  உபாஸகரானவர்களுடைய நிர்ப்பந்தத்துக்காக இருந்தாலும்.

(முண்மேலிருப்பு) கண்டகாக்ரத்திலிருப்புபோலே, து:க்காவஹ மாயிருக்குமென்றபடி.   “பகவச்சரணத்வந்த்வே  பக்திர்யேஷாம் ந வித்யதே  தேஷாம் ஹ்ருதி ஸ்திதோ தேவ: கண்டகாக்ர இவ ஸ்தித:”  (ப்ரஹ்மாண்டபுராணம்) (39) என்கிற ப்ரஹ்மாண்டபுராண வசனத்தை இவ்வர்த்தத்துக்கு ப்ரமாணமாக வநுஸந்திப்பது. 

@@@@@

பதினோராம் பாட்டு

11.  தன் பொன்னடியன்றி மற்றொன்றில் தாழ்வு செய்யா

    அன்பருகந்திட்ட தணுவெனிலும் – பொன் பிறழும்

    மேருவாய்க்கொள்ளும் விரையார் துழாயலங்கல்

    மாரிமாக்கொண்டல் நிகர் மால்

பதவுரை

விரையார் – பரிமளப்ரசுரமான

துழாயலங்கல் – திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்

மாரி மா கொண்டல் நிகர் – வார்ஷிகமான மஹாமேகம் போன்ற  வடிவழகையுடையனான

மால் – ஸர்வேஶ்வரன்

தன் – நிருபாதிக ஶேஷியான தன்னுடைய

பொன்னடியன்றி – ஸ்ப்ருஹணீயமான திருவடிகளையொழிய

மற்றொன்றில் – வேறொரு ப்ரயோஜநத்தில்

தாழ்வு செய்யா – ப்ராவண்யத்தைப் பண்ணாத

அன்பர் – ப்ரேமத்தை உடையவர்கள்

உகந்து இட்டது – ப்ரீதிப்ரேரிதராய்க் கொண்டு ஸமர்ப்பித்த த்ரவ்யமானது

அணுவெனினும் – அத்யல்பமாயிருந்ததேயாகிலும் (அதை)

பொன்பிறழு – ஸ்வர்ணரூபமாய்க்கொண்டு விளங்கா நின்றுள்ள

மேருவாய் – மஹாமேருவைப்போலே (மஹத்தாக நினைத்து)

கொள்ளும் – அங்கீகரிக்கும்.

அவதாரிகைபதினோராம் பாட்டு.  கீழிரண்டு பாட்டாலே, ஶ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுக்கு, அநந்யப்ரயோஜனருடைய  ஹ்ருதயத்திலிருப்பிலுள்ள விருப்பத்தையும், ப்ரயோஜநாந்தர பரருடைய ஹ்ருதயத்திலிருப்பிலுள்ள து:க்கத்தையும், அருளிச் செய்தார்.  இப்பாட்டில், தன் திருவடிகளில் அநந்யப்ரயோஜந பக்திகரானவர்கள், ஸாதரமாக ஸமர்ப்பித்த த்ரவ்யம் அத்யல்பமாகிலும், அவன் அத்தை அதிமஹத்தாக நினைத்து அங்கீகரிக்கும்படியை யருளிச்செய்கிறார். 

வ்யாக்யானம் – (தன் பொன்னடியன்றி) நிருபாதிக ஶேஷியான தன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளையொழிய.  தன்னடி என்கையாலே, திருவடிகளினுடைய ஸ்வரூபப்ராப்தத்தையும், பொன்னடி என்கையாலே அதினுடைய ஶ்லாக்யதையும் போக்யதையும் சொல்லுகிறது.  (மற்றொன்றில் தாழ்வு செய்யாவன்பர்) இப்படி ப்ராப்தமுமாய், போக்யமுமான திருவடிகளையொழிய வேறொரு ப்ரயோஜநத்தில் ப்ராவண்யம் பண்ணாத  ப்ரேமத்தையுடையவர்கள்.  மற்றொன்றென்று, ஐஶ்வர்யாதிகளைச் சொல்லுகிறது.  தாழ்வாவது – தாழ்ச்சி;  இத்தால் ப்ராவண்யத்தைச் சொல்லுகிறது.  “சதிரிளமடவார் தாழ்ச்சியை” (திருவாய் – 2.10.2) என்கிற விடத்தில் போலே.  ஆகவிப்படி, அநந்யப்ரயோஜந பக்திமான்களானவர்கள்.

(உகந்திட்டது) “அகிஞ்சித்கரஸ்ய ஶேஷத்வாநுபபத்தி:“  என்கிறபடியே, ஶேஷிவிஷயத்தில் கிஞ்சித்காரமல்லாதபோது, ஶேஷத்வஸித்தி யில்லாமையாலே,  நமக்கிது அவஶ்யம் செய்யவேணுமென்று வைதமாகச் செய்கையன்றிக்கே, “உகந்து பணிசெய்து” (திருவாய் – 10.8.10) என்கிறபடியே, ராகப்ராப்தமாக வடிமைசெய்யுமவர்களாகையாலே,  ப்ரீதிப்ரேரிதராய்க்கொண்டு ஸமர்ப்பித்த த்ரவ்யம்.   (அணுவெனிலும்) அத்யல்பமாயிருந்ததே யாகிலும். 

(பொன் பிறழு மேருவாய்க்கொள்ளும்)  அதாவது – ஸ்வர்ணரூபமாய்க்கொண்டு  விளங்கா நின்றுள்ள மஹாமேருவைப்போலே, அதிமஹத்தாக நினைத்து, அங்கீகரியாநிற்குமென்கை.  இவனிட்டதுகொண்டு  த்ருப்தனாகவேண்டும் குறைவாளனாகிலிறே, ஸமர்ப்பித்த த்ரவ்யத்தினுடைய லாகவம் பார்த்து  ஆதரிப்பது;  அங்ஙனன்றிக்கே, ஸமர்ப்பிக்குமவனுடைய ப்ரேமத்தையே பார்க்குமவனாகையாலே.  இவன் ப்ரேமத்தோடே ஸமர்ப்பித்த த்ரவ்யத்தை இப்படி அங்கீகரிக்குமவன்  தானாரென்னில்.

(விரையார் துழாயலங்கல் மாரிமாக்கொண்டல் நிகர் மால்) அதாவது – பரிமள ப்ரசுரமான திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதனாய் வார்ஷிகமான மஹாமேகம்போலே யிருக்கிற வடிவழகையுடையனான ஸர்வேஶ்வரன்.  விரை – பரிமளம்;  அலங்கல் – மாலை;  மாரி – வர்ஷம்;  மா – மஹத்து.  இத்தால், அநந்யப்ரயோஜநபக்திமான்களாய், தன் பக்கல் மநஸ்ஸை வைத்தவர்களுக்கு, அநவரதாநுபாவ்யமாய்,  பக்திவர்த்தகமான வொப்பனை யழகையும், வடிவழகையுமுடையவன் என்றதாயிற்று.  (விரையார் துழாயலங்கல் மாரிமாக்கொண்டல் நிகர் மால் – தன் பொன்னடி என்று தொடங்கி மேருவாய்க்கொள்ளு மென்றந்வயம்) ”பக்தைரண்வப்யுபாநீதம் ப்ரேம்ணாபூர் யேவமேவபவேத்  பூர்யப்யபக்தோபஹ்ருதம்  நமேதோஷாய கல்பதே” (41) என்று பௌஷ்கரஸம்ஹிதையில், தானே அருளிச்செய்தானிறே.  

@@@@@

பன்னிரண்டாம் பாட்டு

12.  மாறாயிணைந்த மருதமிறத்தவழ்ந்த

    சேறாரரவிந்தச் சேவடியைப் – பேறாக

    உள்ளாதாரொண்ணிதியை யீந்திடினும் தானுகந்து

    கொள்ளான் மலர்மடந்தைக்கோன்.

பதவுரை

மலர்மடந்தைகோன் – ஶ்ரீய:பதியானவன்

மாறாயிணைந்த – தன் பக்கல் ஶாத்ரவயுக்தமாய்ச் சேர்ந்து நின்ற

மருதம் – யமளார்ஜுநமானது

இற – முறிந்து விழும்படி

தவிழ்ந்த – தவிழ்ந்துபோன 

சேறாரவிந்தம் – தன்னிலமான சேற்றிலலர்ந்த செவ்வித்தாமரைப்பூப்போலே சிவந்திருக்கிற

சேவடியை – திருவடிகளை

வேறாக – விலக்ஷணமாக (பரமப்ராப்யமாக)

உள்ளாதார் – அநுஸந்தியாதவர்கள் (ப்ரயோஜநாந்தர பரராயிருக்குமவர்கள்)

ஒள்நிதியை – சீரிய தநத்தை

ஈந்திடினும் – ஸமர்ப்பிக்கிலும்

தான் – அவாப்தஸமஸ்தகாமனான தான்

உகந்துகொள்ளான் – விரும்பி அங்கீகரியான்.

அவதாரிகைபன்னிரண்டாம் பாட்டு.  ப்ரயோஜநாந்தர பரரானவர்கள் சீரிய தநத்தை ஸமர்ப்பிக்கிலும், ஶ்ரீய:பதியானவன் அத்தை விரும்பி அங்கீகரியான் என்கிறார். 

வ்யாக்யானம் – (மாறாயிணைந்த மருதமிறத்தவழ்ந்த) தன் பக்கல் ஶாத்ரவயுக்தமாய், நிர்விவரமாம்படி சேர்ந்து நின்ற யமளார்ஜுநமானது முறிந்து விழும்படி தவழ்ந்துபோன.  “சிக்ஷேபசரணாவூர்த்வம் ஸ்தந்யார்த்தீ ப்ரருரோத ஹ” (வி.பு – 5.6.1) (42) என்கிறபடியே, முலைவரவு தாழ்த்தவாறே சீறியழுது, திருவடிகளை நிமிர்க்க, அதுபட்டுச் சகடம் முறிந்து விழுந்தாப்போலேயாயிற்று, வெண்ணையைக் களவிலே யமுதுசெய்தானென்று பெற்றதாயானவள் உரலோடேகட்ட, அதையுமிழுத்துக்கொண்டு, மௌக்த்யத்தாலே, இதின் நடுவே நுழைந்து தவழ்ந்து போகாநிற்க, திருத்தொடைகளினுடைய ஸ்பர்ஶத்தாலே, மருதம் முறிந்துவிழுந்தபடி.  இவன் அந்யார்த்தமாகச் செய்தாலும், ப்ரதிகூலித்துக் கிட்டினால், முடியும்படியாயிறே வஸ்துஸ்வபாவமிருப்பது. 

(சேறாரரவிந்தச் சேவடியை) தன்னிலத்திலே யலர்ந்த செவ்வித்தாமரைபோலே சிவந்திருக்கிற திருவடிகளை.  சிவப்பைச் சொன்னவிது, திருவடிகளில் விகாஸம், செவ்வி, குளிர்த்தி,  பரிமளம், இவற்றுக்கெல்லாமுபலக்ஷணம்.  “யமளார்ஜுநயோர்மத்யே ஜகாம கமலேக்ஷண:” (வி.பு – 5.6.16) (43) என்று மருதுகளின் நடுவே தவழ்ந்துபோனபோது அவை முறிந்துவிழுகிற வோசையைக்கேட்டுப் புரிந்து பார்த்து, அபூர்வதர்ஶனத்தாலே சிவந்து மலர்ந்த திருக்கண்களிலழகை வர்ணித்தார் ருஷி;  தவழ்ந்துபோகிறபோது, முறித்திட்டுப்போந்த திருவடிகளினழகை வர்ணிக்கிறாரிவர்.  “பொருந்திய மாமருதினிடை போயவெம்பெருந்தகா யுன்கழல்காணியபேதுற்று” (திருவாய் 3.8.10). என்றுமாழ்வாரும் அநுபவிக்க வாசைப்பட்டது திருவடிகளையிறே. 

(பேறாகவுள்ளாதார்) வ்யாவ்ருத்தமாக அநுஸந்தியாதவர்கள்; அதாவது – ப்ரயோஜநாந்தர ஸங்கமற்று, இத்திருவடிகளே நமக்கு பரமப்ராப்யமென்று அநுஸந்தியாதவர்களென்கை.  அவன், மருதுகளின் கையிலகப்படாமல், தன்னைநோக்கித் தந்தால் அவன் திருவடிகளே பரமப்ராப்யமென்று அநுபவித்துக்கொண்டு கிடக்கவிறேயடுப்பது.  அதில் மநஸ்ஸின்றிக்கே ப்ரயோஜநாந்தரபரரா யிருக்குமவர்கள்.  

(ஒண்ணிதியை யீண்டிடினும்) ஒண்மை – அழகு;  சீரியநிதியை ஸமர்ப்பிக்கிலும்  (தானுகந்துகொள்ளான் மலர்மடந்தைக்கோன்) ஶ்ரீய:பதியாகையாலே அவாப்தஸமஸ்தகாமனானவன், அத்தை விரும்பி அங்கீகரியானென்கை.  அபூர்ணனாகிலிறே, த்ரவ்யகௌரவம் பார்த்தங்கீகரிப்பது.  அங்ஙனன்றிக்கே, அதிகாரியினுடைய பாவஶுசியைப் பார்த்தங்கீகரிக்குமவனிறே.  ஆகையாலே தன்பக்கல் பக்தியில்லாதப்ரயோஜநாந்தரபரரிட்டதை ஸர்வஸமாஶ்ரயணீயனாகையாலே நமக்கிது கைக்கொள்ளவேணுமேயென்று, தேவையாகச்செய்யும தொழிய, உகந்துகொள்ளானாயிற்று.  “ப்ருதிவீம் ரத்நஸம்பூர்ணாம் ய: க்ருஷ்ணாய ப்ரயச்சதி  தஸ்யாப்யந்யமநஸ்கஸ்ய  ஸுலபோநஜநார்த்தந:” (44) என்னக்கடவதிறே.  கீழ்பாட்டில் சொன்ன ஸம்வாதஶ்லோகத்தில், உத்தரார்த்தத்தாலே இவ்வர்த்தத்தைத் தானே யருளிச்செய்தானிறே. 

@@@@@

பதின்மூன்றாம் பாட்டு

13.  பண்டேயுயிரனைத்தும் பங்கயத்தாள் நாயகற்கே

    தொண்டாமெனத் தெளிந்த தூமனத்தர்க் – குண்டோ

    பலகற்றும் தம்முடம்பைப் பார்த்தபிமானிக்கும்

    உலகத்தவரோடுறவு. 

பதவுரை

பண்டே – முன்னமே (அநாதியாக)

உயிரனைத்தும் – ஸகலாத்மாக்களும்

பங்கயத்தாள்நாயகற்கே – ஶ்ரீய:பதியானவனுக்கே

தொண்டாமென தெளிந்த – ஶேஷபூதராயிருப்பர்களென்று ஸம்ஶயவிபர்யயமறக் கண்டுதெளிந்த

தூமனத்தர்க்கு – பரிஶுத்தாந்த:கரணர்க்கு

பலவும் – ஶாஸ்த்ரங்கள் பலவற்றையும்

கற்று – அதிகரித்து (ஆத்மஸ்வரூபத்தைப் பாராதே)

தன் உடம்பை – ஜாத்யாதிகளுக்கு ஆஶ்ரயமான தங்கள் தேஹத்தையே

பார்த்து – கண்டு

அபிமாநிக்கும் – தங்களை போரப்பொலிய அபிமாநித்திருக்கும்

உலகத்தவரோடு – லௌகிகரோடு

உறவு – ஸம்பந்தமானது

உண்டோ – உண்டோ?

அவதாரிகைபதின்மூன்றாம் பாட்டு.  ஶேஷிவிஷயத்தில் அநந்யப்ரயோஜனராய்க் கிஞ்சித்கரிக்கு மாகாரமுண்டா னாலும் தேஹாத்மாபிமானிகளான லௌகிகரோட்டை ஸங்கம் கிடைக்கில், அந்த அதிகாரத்துக்கு அவத்யமன்றோவென்ன, ஆத்மஸ்வரூபத்தை யதாதர்ஶனம் பண்ணினவர்களுக்கு அவர்களோடுறவுவுண்டோ வென்கிறார். 

வ்யாக்யானம் – (பண்டே) இத்தால், ஶேஷத்வத்தினுடைய அநாதித்வத்தைச் சொல்லுகிறது.  (உயிரனைத்தும்) இத்தால், ஶேஷத்வந்தான் சிலர்க்குண்டாய் சிலருக்கன்றிக்கே யிருக்கையன்றிக்கே, ஸகலாத்ம ஸாதாரணமென்கிறது. 

(பங்கயத்தாள் நாயகற்கே) இத்தால் ஶேஷத்வ ப்ரதிஸம்பந்தி யொருமிதுநமென்னுமிடமும், அவதாரணத்தாலே இதினுடைய அநந்யார்ஹத்வமும், சொல்லுகிறது.

(தொண்டாமெனத் தெளிந்த தூமனத்தர்க்கு) தொண்டென்று, ப்ரதமாக்ஷரத்தில் சதுர்த்தியால் ப்ரதிபாதிக்கப் படுகிற ஶேஷத்வத்தைச் சொல்லுகிறது.   அநாதிகாலமே தொடங்கி அகிலாத்மாக்களும், அப்ஜாஸஹாயனான அகாரவாச்ய னுக்கே ஶேஷமாயிருக்குமென்று,  ஸகலவேத ஸங்க்ரஹமான திருமந்த்ரத்தினுடைய ஸங்க்ரஹமான ப்ரணவத்தில் சொல்லுகிறபடியே, ஸம்ஶய விபர்யயமற தர்ஶித்துத் தெளிந்த பரிஶுத்தாந்த:கரணர்க் கென்றபடி. 

(உண்டோ) இதுக்குமேலே அந்வயம்.

(பலகற்றும் தம்முடம்பைப் பார்த்தபிமானிக்கும்) அதாவது – ஶ்ருதிஸ்ம்ருத்யாதி ஶாஸ்த்ரங்கள் பலவற்றையும் அதிகரித்து, ஜாதிவர்ணாஶ்ரமங்களுக்கெல்லாம் ஆஶ்ரயமாயிருக்கும் தங்கள் தேஹத்தைப் பார்த்து, நாமின்னஜாதியன்றோ, இன்ன வர்ணமன்றோ, இன்ன ஆஶ்ரமிகளன்றோ, என்றிவற்றையிட்டுத் தங்களைப் போரப்பொலிய அபிமாநித்திருக்குமென்கை. 

(உலகத்தவரோடுறவு) இப்படி, அபிமானித்திருக்கும் லௌகிகரோடு ஸம்பந்தமுண்டோவென்று க்ரியை.  இத்தால் அகாரவாச்யனுக்கே ஶேஷமென்று சொல்லிக்கொண்டுவந்த ஶேஷத்வாஶ்ரயமான வாத்மாவை மகாரவாச்யனாகச் சொல்லுகையாலே, ப்ரக்ருதே:பரனாய், ஜ்ஞாநாநந்த லக்ஷணனாய், ஜ்ஞாநகுணகனாய், நித்யனாயிருக்குமென்று தெளிந்திருக்கும் பரிஶுத்தாந்த:கரணர்க்கு, ஆத்மஸ்வரூபத்தைப் பாராதே, தேஹத்தையே பார்த்து, அதில் ஸம்பந்தமடியாக வருகிற ஜாத்யாதிகளையிட்டுத் தங்களைப்பெருக்க நினைத்தபிமானித்திருக்கும் லௌகிகரோடுறவு வுண்டோ!  அவர்களைக் கண்டாலுறவற  வார்த்தைச் சொல்லிப்போமித்தனையன்றோ  உள்ளதென்கை. 

திருவஹீந்த்ரபுரத்திலே, வில்லிபுத்தூர் பகவரென்று ப்ரஸித்தராயிருப்பாரொரு உத்தமாஶ்ரமிகள், ப்ராஹ்மண ரெல்லாரும் அநுஷ்டானம் பண்ணுகிற துறையொழிய, தாம் வேறொரு துறையில் அநுஷ்டானம் பண்ணிப்போருவராய், அவர்களொருநாள் எங்கள் துறையில் உமக்கு  அநுஷ்டானம் பண்ணவொண்ணாதோவென்று கேட்க, “விஷ்ணுதாஸாவயம் யூயம்ப்ராஹ்மணா வர்ணதர்மிண: அஸ்மாகம் தாஸவ்ருத்தீனாம் யுஷ்மாகம் நாஸ்தி ஸங்கதி: நாஸ்திஸங்கதிரஸ்மாகம்  யுஷ்மாகஞ்ச பரஸ்பரம் வயந்து கிங்கரா விஷ்ணோ: யூயமிந்த்ரியகிங்கரா:”  (வில்லிபுத்தூர்ப்பகவர் வார்த்தை) (45) என்று, உறவற வார்த்தைச் சொல்லிப்போனாரிறே.  “ஆவித்ய: ப்ராக்ருத: ப்ரோக்தோ வைத்யோ வைஷ்ணவ உச்யதே ஆவித்யேநநகேநாபி வைத்ய: கிஞ்சித்ஸமாசரேத்” (46) என்னக்கடவதிறே. 

@@@@@

பதினாலாம்பாட்டு

14.  பூதங்களைந்தும் பொருந்துடலினாற்பிறந்த

    சாதங்கள் நான்கினோடும் சங்கதமாம் – பேதங்

    கொண்டென்னபயன் பெறுவீரெவ்வுயிர்க்குமிந்திரைகோன்

    தன்னடியேகாணும் சரண்.

பதவுரை

பூதங்களைந்து பொருதும் – பஞ்சபூதங்களினுடைய ஸமுதாயரூபமான

உடலினால் பிறந்த – தேஹமடியாக வுண்டான

சாதங்கள் நான்கினோடும் – ப்ராஹமணாதி நாலு வர்ணத்தோடும்

சங்கதமாம் – சேர்ந்திருக்கிற

பேதங்கொண்டு – உத்கர்ஷாபகர்ஷ ப்ரதிபத்திஹேதுவான விஶேஷங்கொண்டு

என்ன பயன் பெறுவீர் – என்ன ப்ரயோஜனம் பெறுவுதிகோள்

எவ்வுயிருக்கும் – எல்லாவாத்மாக்களுக்கும்

இந்திரைகோன் தன்னடியே – ஶ்ரீய:பதியானவன் திருவடிகளே

சரண் – புகலென்று

காணும் – காணுங்கோள். 

அவதாரிகைபதினாலாம்பாட்டு.  தேஹமிருக்குந்தனையும், ஜாத்யாதிபேத ப்ரதிபத்தி அநுவர்த்தியாதோவென்ன, அத்தாலென்ன ப்ரயோஜனம், ஸகலாத்மாக்களுக்கும் ஶ்ரீய:பதி திருவடிகளே காணுங்கோள் புகலென்கிறார். 

வ்யாக்யானம்(பூதங்களைந்தும் பொருந்துடலினாற்பிறந்த) “பஞ்சபூதாத்மகே தேஹே” (வி.பு) (47) என்றும், “மஞ்சுசேர்வானெரிநீர் நிலங்காலிவை மயங்கி நின்றவஞ்சுசேராக்கை” (பெரு.திரு 9.7.8) என்றும் சொல்லுகிறபடியே, ப்ருதிவ்யாதி பூதங்களைந்தினுடையவும் ஸமுதாயரூபமான தேஹமடி யாகவுண்டான.  இத்தால், ஆத்மாவோடந்வயமன்றிக்கே, உபசயாத்மகமாய், அநித்யமாய், ஹேயமாயிருக்கிற தேஹமடியாக வுண்டானதாகையாலே, வந்தேறியென் னுமிடம் சொல்லுகிறது. 

சாதங்கள் நான்கினோடும்) சாதமென்று ஜாதியைச்சொல்லுகிறது.  “ஜாதிர் ஜாதஞ்ச ஸாமாந்யம்” என்னக்கடவதிறே.  சாதங்கள் நான்கென்று – ப்ராஹ்மண ஜாதி முதலான நான்கு ஜாதியையும் சொல்லுகிறது. 

(நான்கினோடும் சங்கதமாம் பேதங்கொண்டு) பேதமாவது – இந்நாலினோடும் சேர்ந்திருக்கிற உத்கர்ஷாபகர்ஷ ப்ரதிபத்தி ஹேதுவான விசேஷம்.  இந்த ப்ராஹ்மணஜாதியைப் பற்றியிறே ஆஶ்ரமாதி பேதங்கள் வருவது.  ஆகையாலே, சாதங்கள் நான்கினோடும் சங்கதமாம் பேதமென்றவிதிலே யெல்லாம் சொல்லலாம். 

(என்ன பயன் பெறுவீர்) இந்தபேதங்கொண்டு என்ன ப்ரயோஜனம் பெறுவுதிகோள்.  இத்தால் உங்களுக்கேதேனும் ஸித்திப்பதுண்டோ! அஹங்காரஹேதுவாகையாலே அநர்த்தகரமாமித்தனையன்றோ வுள்ளதென்று கருத்து.  “என்ன பயன் கெடுவீர்” என்று பாடமாகில், இந்த பேதங்கொண்டென்ன ப்ரயோஜனமுண்டு, கெடுவீர்கோ ளென்று உகப்பாலே(?) யருளிச்செய்தாராகக்கடவது. 

(எவ்வுயிர்க்குமிந்திரைகோன் தன்னடியேகாணும் சரண்) இன்னாரினியாரென்னாதே, எல்லாவாத்மாக்களுக்கும் ஶ்ரீய:பதியானவன் திருவடிகளேகாணுங்கோள் புகல்.  ஆகையால், இந்தத் திருவடிகள் ஸம்பந்தத்தையிட்டு நிரூபிக்கும்போது, இந்தபேதங்களொன்று மில்லாமையாலே எல்லாமௌபாதிகம்.  அதுவே நிலைநின்றவேஷமென்று கருத்து.  “தேஹாத்மஜ்ஞாநகார்யேண வர்ணபேதேந கிம்பலம் கதிர்ஸர்வாத்மநாம் ஶ்ரீமந்நாராயணபதத்வயம்” (49)  என்றிவ்வர்த்தந்தான் பரமைகாந்தி தர்மத்தில் சொல்லப்பட்டதிறே. 

@@@@@

பதினஞ்சாம்பாட்டு

15.  குடியுங்குலமுமெல்லாம் கோகனகைக்கேள்வன்

    அடியார்க்கவனடியே யாகும் – படியின்மேல்

    நீர்கொழுவுமாறுகளின் பேரும் நிறமுமெல்லாம்

    ஆர்கலியைச்சேர்ந்திடு மாய்ந்தற்று

பதவுரை

குடியும் – க்ராமமும்

குலமும் – கோத்ரமும்

எல்லாம் – மற்றும் நிரூபகமாய்ப்போரும் ஸூத்ராதிகளும்

கோகநகைக்கேள்வனடியார்க்கு – ஶ்ரீய:பதியானவனுடைய தாஸபூதரானவர்களுக்கு

அவனடியேயாகும் – ஶேஷியானவவன் திருவடிகளில் ஸம்பந்தமேயாகும் (ஔபாதிகமான க்ராமகுலாதி நிரூபகங்கள் போய் ஸ்வாபாவிகமான பகவத்ஸம்பந்தமே நிரூபகமாகுமென்று கருத்து.)

       (இதுக்கு த்ருஷ்டாந்தம் மேல்)

படியின்மேல் – பூமியின்மேல் காணும்படியான

நீர்கெழுவும் – ஜலஸம்ருத்தியையுடைய

ஆறுகளின் – நதிகளுடைய

பேரும் – நாமங்களும்

நிறமுமெல்லாம் – வர்ணங்களுமெல்லாம்

ஆர்கலியை சேர்ந்து – ஸமுத்ரத்தில் ப்ரவேஶிக்கவே

மாய்ந்திடுமற்று – பின்பு காணவொண்ணாதபடி யாகுமாபோலே

அவதாரிகைபதினஞ்சாம்பாட்டு.  எவ்வுயிர்க்குமிந்திரைகோன் தன்னடியே காணும் சரணென்றத்தை ஸ்தாபிக்கைக்காக, ஶ்ரீய:பதிவிஷய ஶேஷத்வைக நிரூபகரானவர்களுக்கு, முன்பு நிரூபகமாய்ப் போரும் க்ராமகுலாதிகளெல்லாம் அவன் திருவடிகளேயாமென்னுமத்தை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச் செய்கிறார். 

வ்யாக்யானம் (குடியுங்குலமுமெல்லாம்) குடி – க்ராமம்;  குலம் – கோத்திரம்;  எல்லாமென்றது – மற்றும் நிரூபகமாய்ப் போருமவை பலவுமுண்டாகையாலே.  அவையாவன – சரணசூத்ராதிகள். 

(கோகனகைக்கேள்வனடியார்க்கு) ஶ்ரீய:பதியினுடைய அடியரானவர்களுக்கு.  கோகனகமாவது – தாமரை.  கோகனகையென்றது – தாமரையாளென்றபடி.  கேள்வனென்றது – நாயகனென்றபடி.  ஏவம்பூதனானவன் திருவடிகளில் ஶேஷத்வமே நிரூபகமாகவுடையவர்களுக்கு.

(அவனடியேயாகும்) அதாவது – முன்பு ஔபாதிக நிரூபகமாய்ப் போந்த குடியும் குலமுமெல் லாம்போய், ஶேஷியானவன் திருவடிகளில் ஸம்பந்தமே நிரூபகமாய்.  அத்தையிட்டு வ்யபதேஶிக்கும்படி யாய்விடுமென்கை.  இதுக்கு த்ருஷ்டாந்த மருளிச் செய்கிறார் மேல். 

(படியின்மேலென்று தொடங்கி) அதாவது – பூமியின்மேலுண்டான ஜலஸம்ருத்தியையுடைய நதிகளின் நாமமும், வர்ணமுமெல்லாம் ஸமுத்ரத்தை ப்ரவேஶிக்கவே, பின்பு காணவொண்ணாதபடி போமாபோலென்கை.  படி – பூமி;  கொழுவுதல் – மிகுவுதல்.  ஆர்கலி – ஸமுத்ரம்.  “ஏகாந்திவ்யபதேஷ்டவ்யோ நைவக்ராமகுலாதிபி: விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ்தஸ்ய ஸர்வம்ஸஏவஹி (விஷ்வக்ஸேந ஸம்ஹிதை) (50) நத்யாநஶ்யதி நாமாதி ப்ரவிஷ்டாயா யதார்ணவம் ஸர்வாத்மநா ப்ரபந்நஸ்ய விஷ்ணுமேகாந்திநஸ்ததா” (பரமைகாந்தி தர்மே) (51) என்னக்கடவதிறே.

@@@@@

பதினாறாம்பாட்டு

16.  தேவர் மனிசர் திரியக்குத் தாவரமாம்

    யாவையுமல்ல னிலகுமுயிர் – பூவின்மிசை

    யாரணங்கின்கேள்வ னமலனறிவேவடிவாம்

    நாரணன் தாட்கே யடிமைநான்.

பதவுரை

நான் – அஹம்ஶப்தவாச்யனான நான்

தேவர் – தேவதைகள்

மனிசர் – மநுஷ்யர்கள்

திரியக்கு – திர்யக்கான பசுபக்ஷ்யாதிகள்

தாவரமாம் – ஸ்தாவரங்களாகிற

யாவையுமல்லேன் – ஸகலமுமல்லேன்.  (அஹம்ஶப்தவாச்யனான ஆத்மா தேஹமாத்ரத்தில் முடிந்த தேவாதி பேத வ்யவஹாரவிஷயமல்ல னென்று கருத்து)

நான் – நான்

பூவின்மிசை – பூவின்மேல் வர்த்திக்கும்

ஆரணங்கின் – பெரியபிராட்டியாருக்கு

கேள்வன் – வல்லபனாய்

அமலன் – ஹேயப்ரதிபடனாய்

அறிவே வடிவாம் – ஜ்ஞாநாநந்தஸ்வரூபனான

நாரணன் – நாராயணனுடைய

தாட்கே – திருவடிகளுக்கே

அடிமை – ஶேஷமானதாய்

இலகும் – ஜ்ஞாநாநந்தாதிகளால் உஜ்ஜ்வலமான

உயிர் – ஆத்மாவாவான்.

அவதாரிகைபதினாறாம்பாட்டு.  ஸ்வரூபயாதாத்ம்ய ஜ்ஞாநம் பிறந்தவர்கள் தந்தாமையநுஸந்தித்திருக்கும்படியை  ஸ்வநிஷ்டாகதநமுகேன வருளிச்செய்கிறார். 

வ்யாக்யானம் – (தேவர்மனிசர்திர்யக்குத் தாவரமாம்) தேவர்கள், மநுஷ்யர்கள், திர்யக்கு, ஸ்தாவரமாகிற.

(யாவையுமல்லன்) ஸகலமுமல்லன்.  ஓராத்மா, தான் அநேக கர்மபேதத்தாலே தேவாதி சதுர்வித யோனிகளிலும் ஜனிக்குமிறே.  அவ்வோ யோநிகளிலே ஜனித்தால், தேவோஹம், மநுஷ்யோஹமென்று அவ்வோ தேஹங்களிலே அஹம்புத்தியைப் பண்ணிப் போரக்கடவதாயிறே  யிருப்பது.  அது ஆத்மஸ்வரூபஜ்ஞாநம் பிறப்பதற்கு முன்பிறே.  இது, ஸ்வரூபஜ்ஞாநம் பிறந்ததற்பின் வார்த்தையிறே. 

(இலகுமுயிர்) ஜ்ஞாநாநந்த லக்ஷணமாய், உஜ்ஜ்வலமான ஆத்மா.  நான் – ஏவம்பூதனான நான்.

(பூவின்மிசை யாரணங்கின் கேள்வ னமலனறிவே வடிவாம் நாரணன் தாட்கேயடிமை) அதாவது – “மலர்மேலுறைவாள்” (திருவாய் – 4.5.2) என்கிறபடியே, பூவின்மேலே வர்த்திப்பாளாய், திவ்யாகாரையான பெரியபிராட்டியாருக்கு வல்லபனாய், ஹேயப்ரத்யநீகனாய், ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூபனான நாராயணனுடைய திருவடிகளுக்கே ஶேஷமானவனென்கை.  அணங்கென்றது – தைவப்பெண் என்றபடி.  அமலனென்றது – மலப்ரதிபடனென்றபடி.  நாரணனென்றது – ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்தவஸ்துக்களும் தனக்கு ப்ரகாரமாய், தான் ப்ரகாரியாயிருக்குமவனென்றபடி.  “நாஹம் தேவோ நமர்த்யோவா நதிர்கத்ஸ்தாவரோபிவா ஜ்ஞாநாநந்தமயஸ்த்வாத்மா ஶேஷோஹி பரமாத்மந: நாஹம்விப்ரோ நச நரபதிர் நோவநஸ்தோயதிர்வா கிந்து ஶ்ரீமத்புவநபவநஸ்தித்யபாயைக  ஹேதோர்லக்ஷ்மீ பர்த்துர்நரஹரிதநோர் தாஸதாஸஸ்யதாஸ:(52) என்னக்கடவதிறே.  

@@@@@

பதினேழாம்பாட்டு

17.  ஒன்றிடுகவிண்ணவர்கோன் செல்வமொழிந்திடுக

    என்றுமிறவா திருந்திடுக – இன்றே

    இறக்கக் களிப்புங் கவர்வுமிவற்றால்

    பிறக்குமோ தற்றெளிந்தபின்.

பதவுரை

விண்ணவர்கோன் – தேவர்களுக்கு நிர்வாஹகனான இந்த்ரனுடைய

செல்வம் – ஐஶ்வர்யமானது

ஒன்றிடுக – (அபேக்ஷியாதிருக்க) தானே வந்து சேர்ந்திடுக

ஒழிந்திடுக – அல்லது, தன்னைவிட்டு நீங்கிடுக

என்றும் – எக்காலத்திலும்

இறவாதிருந்திடுக – மரணமில்லாமல் வாழ்ந்திடுக

           (அப்படியிராமல்)

இன்றே – இப்போதே

இறக்க – மரணமாயிடுக

இவற்றால் – இந்த ஐஶ்வர்யாகமாதிகளாலுண்டாகும்

களிப்பும் – கர்வமும்

கவர்வும் – க்லேஶமும்

தன் – ஸ்வஸ்வரூபத்தை

தெளிந்தபின் – நன்றாக அறிந்தபின்பு

பிறக்குமோ – உண்டாகுமோ?  (ஆத்மஸ்வரூப மறிந்தவர்களுக்கு ஐஶ்வர்யாகமாதிகளாலுண்டாகும் கர்வாதிகளுண்டாகாதென்று கருத்து).

அவதாரிகை – பதினேழாம்பாட்டு.  ஸ்வரூபஜ்ஞானம் பிறந்தவன் தன்னையநுஸந்தித் திருக்கும்படியை ஸ்வநிஷ்டாகதந முகேநவருளிச்செய்தார் கீழ்பாட்டில்.  ஐஶ்வர்யத்தினுடைய ஆகமாபாயங்களும், ஆயுஸ்ஸி னுடைய ஸ்தைர்யாஸ்தைர்யங் களுமடியாக, அஜ்ஞரானவர்களுக்குண்டான கர்வக்லேஶங்கள், ஆத்ம ஸ்வரூபத்தை யறிந்தவனுக்கு உண்டாகாதென்னுமத்தை யருளிச்செய்கிறாரிப்பாட்டில். 

வ்யாக்யானம் – (ஒன்றிடுகவிண்ணவர்கோன் செல்வம்) தேவர்களுக்கு நிர்வாஹகனான இந்த்ரனுடைய ஐஶ்வர்யமானது, அபேக்ஷியாதிருக்கச்செய்தே, தானே வந்து சேர்ந்திடுக. 

(ஒழிந்திடுக) அப்படியிருந்துள்ள வைஶ்வர்யமானது, இனிக்கூடாதென்னும்படி, தன்னோடந்வயமற்றுப் போயிடுக. 

(என்றுமிறவாதிருந்திடுக) எக்காலத்திலும் மரணரஹிதானா யிருந்திடுக. 

(இன்றேயிறக்க) அப்படி தீர்க்கமாகவிராமல் இன்றுதானே மரணமாக.

(களிப்புங்கவர்வுமிவற்றால் பிறக்குமோ தற்றெளிந்தபின்) அதாவது – ஐஶ்வர்யாகமமும், ஆயுஸ்ஸ்தைர்யமும், ஐஶ்வர்யவிநாஶமும், ஆயு:க்ஷயமுமாகப்பிரித்து, இரண்டுவகையாகச் சொன்னவிவற்றால், நாட்டார்க்குப் பிறக்கும் கர்வக்லேஶங்கள், தன் ஸ்வரூபத்தைத் தான் தெளியக்கண்டபின்பு, பிறக்குமோவென்கை.  தற்றெளிகை யாவது – தன்னைத்தெளிகை.   அதாவது – ஸ்வஸ்வரூப ஜ்ஞாநம்.  “ஆகச்சது ஸுரேந்த்ரத்வம் நித்யத்வம் வாத்யவாம்ருதி: தோஷம்வாத்ரவிஷாதம்வா  நைவகச்சந்தி பண்டிதா”|| (53) என்னக்கடவதிறே. 

@@@@@

பதினெட்டாம்பாட்டு

18.  ஈனமிலாவன்பரென்றாலுமெய்திலா

    மானிடரையெல்லாவண்ணத்தாலும் – தானறிய

    விட்டார்க்கெளியன் விடாதார்க்கறியவரியன்

    மட்டார் துழாயலங்கல் மால்.

பதவுரை

மட்டார் – தேன்வெள்ளமிடுகிற

துழாயலங்கல் – திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதனான

மால் – ஸர்வேஶ்வரன்

ஈனமிலாவன்பரென்றாலும் – தன் திருவடிகளில் பழுதற்ற ப்ரேமமுடையவர்களானாலும்

எய்திலா – பகவத்விஷயத்துக்கு ப்ரதிகூலரான

மானிடரை – க்ஷுத்ரமநுஷ்யரை

எல்லா வண்ணத்தாலும் – ஸம்பாஷணாதி ஸர்வப்ரகாரத்தாலும்

தானறிய – ஸர்வஜ்ஞனான தானறிய

விட்டார்க்கு – பரித்யஜித்தவர்களுக்கு

எளியன் – ஸுலபனாயிருக்கும்

விடாதாற்கு – அப்படி அவர்களை விடாதவர்களுக்கு

அறவரியன் – மிகவும் துர்லபனாயிருக்கும்.

அவதாரிகை – பதினெட்டாம்பாட்டு.   ஸர்வேஶ்வரனானவன் தன் பக்கல் பக்திமான்களானாலும், ஶௌரிசிந்தாவிமுகரான ஸம்ஸாரிகளோட்டை ஸம்ஸர்க்கமற்றவர்களுக்கு ஸுலபனாய், அறாதவர்களுக்கு அத்யந்ததுர்லபனா யிருக்கும்படியை அனைவருமறிய வருளிச் செய்கிறார். 

வ்யாக்யானம் – (ஈனமிலாவன்பரென்றாலும்) ஈனமாவது – பொல்லாங்கு.  அதில்லாமையாலே, தன் திருவடிகளில் ப்ரேமமுடையவர்களானாலும்.  “பக்த்யா லப்தஸ்த்வநந்யயா” (கீதை  8-22) (54) என்றாரிறே ஶ்ரீகீதாசார்யர். 

(எய்திலாமானிடரை) “ஆன்விடையேழன்றடர்த்தாற் காளானாரல்லாதார் மானிடவரல்லரென்றென் மனத்து வைத்தேன்” (பெரு திரு. 11.7.9).   என்றும் “செங்கண்மால் நாமம்  மறந்தாரை மானிடமாவையேன்” (இரண்டாம் திரு – 44) என்றும் ஜ்ஞாநிநாமக்ரேஸரானவர்கள் இகழும்படி பகவத் விஷயத்தோடு ஒட்டற்றுத் திரியும் பாபிஷ்டரான க்ஷுத்ர மநுஷ்யரை.  எய்திலாவென்றது – எய்துதலில்லாதபடியாய், பகவத்விஷயத்தினருகு கிட்டாமையைச் சொல்லுகிறது.  எய்திலராமென்று பாடமானபோது பகவத்விஷயத்தில் ப்ரதிகூலரானவென்று பொருளாகக்கடவது. 

(எல்லாவண்ணத்தாலும்) அதாவது – ஸஹவாஸஸத்கார ஸம்பாஷணாதியான ஸர்வப்ரகாரத்தாலுமென்கை.  (தானறியவிட்டார்க்கு) தாங்களும் பிறருமறிந்தவளவன்றிக்கே அந்தர்யாமியாய் “உள்ளுவாருள்ளத்தெல்லா மறியும் ஸர்வஜ்ஞனானதான் அறியவிட்டவர்களுக்கு,  “தானறிந்த வைஷ்ணவத்வமும் வைஷ்ணவத்வமல்ல; நாடறிந்த வைஷ்ணவத்வமும் வைஷ்ணவத்வமல்ல; நாராயணனறிந்த வைஷ்ணவத்வமே வைஷ்ணவத்வம்”  என்று ஆச்சான்பிள்ளை  அருளிச்செய்தாரிறே. 

(எளியன்) அவர்களுக்குக் கிட்டலாம்படி ஸுலபனாயிருக்கும்.   (விடாதார்க்கறிவரியன்) அப்படி விடாதவர்களுக்குக் கிட்டவொண்ணாதபடி மிகவும் துர்லபனாயிருக்கும்.  (மட்டார் துழாயலங்கல் மால்) தன்னிலத்திலுங்காட்டில் திருமேனியின் ஸ்பர்ஶத்தாலே செவ்விபெற்று மதுவெள்ளமிடுகிற திருத்துழாய்மாலையுடைய  ஸர்வேஶ்வரன். திருத்துழாய் மாலை ஸர்வேஶ்வரத்வசிந்ஹமிறே.  “வக்ஷஸ்தல்யாம் துளஸி கமலா கௌஸ்துபைர்வைஜயந்தீ ஸர்வேஶத்வம் கதயதிதராம்” (ர.ஸ்த. 1.113) (55) என்றருளிச்செய்தாரிறே பட்டர்.  “மட்டார் துழாயலங்கல் மால் – ஈனமிலாவன்பரென்று துடங்கி விடாதார்க்கறிவரியன்” – என்றன்வயம்.  “பக்தோபி வாஸுதேவஸ்யஶார்ங்கிண: பரமாத்மந:  லோகேஷணாதி நிர்முக்தோ முக்தோ பவதி நாந்யதா” (56)  என்னக்கடவதிறே.  

@@@@@

பத்தொன்பதாம்பாட்டு

19.  நல்லபுதல்வர் மனையாள் நவையில்கிளை

    இல்லநிலமாடிவை யனைத்தும் – அல்லலெனத்

    தோற்றி யெரிதீயிற் சுடுமேலவர்க்கெளிதாம்

    ஏற்றரும் வைகுந்தத்திருப்பு.

பதவுரை

நல்ல புதல்வர் – குணவான்களான புத்ரர்கள்

மனையாள் – குணவதியான பார்யை

நவையில்கிளை – குற்றமற்ற பந்துக்கள்

இல்லம் – விலக்ஷணமான க்ருஹம்

நிலம் – ஸுக்ஷேத்ரம்

மாடு – பஹுக்ஷீரப்ரதங்களான பசுமுதலானவை

இவையனைத்தும் – இவையெல்லாம்

அல்லலென – து:க்காவஹங்களென்று

தோற்றி – மநஸ்ஸுக்குத் தோற்றி

எரிதீயில் – ஜ்வலிக்கிற அக்நிபோலே

சுடுமேல் – தாபகரமாகில்

அவர்க்கு – இப்படிப்பட்ட அவஸ்தை பிறந்தவர்களுக்கு

ஏற்றரும் – ஸ்வயத்நத்தால் பெறுதற்கரிய

வைகுந்தத்து – பரமபதத்திலேபோய்

இருப்பு – அடியார்குழாங்களுடன் கூடியிருக்குமிருப்பு

எளிதாம் – ஸுலபமாம்.

அவதாரிகைபத்தொன்பதாம்பாட்டு.  புத்ரதாரா பந்துஜந க்ருஹக்ஷேத்ராதிகளெல்லாம்  அக்நிகல்பமாய்க்கொண்டு தாபகரமாம்படியான அவஸ்தை பிறந்தவர்களுக்கு பரமபதப்ராப்தி எளிதாமென்கிறார். 

வ்யாக்யானம் – (நல்லபுதல்வர்) ஸத்புத்ரர்கள்..  அதாவது – குணஹீநராய் து:க்காவஹராயிருக்கை யன்றிக்கேதங்கள் வியோகம் அஸஹ்யமாம்படி குணவான்களான புத்ரரானவர்களென்கை.  (மனையாள்) நல்லவென்கிறவிதை இங்கும் கூட்டிக்கொள்ளக்கடவது.  அதாவது – குணஹீனையாக விருக்கையன்றிக்கே  குணவதியாய் சந்தாநுவர்த்தியான   பார்யை என்கை. 

(நவையில்கிளை) பந்துக்களென்று பேராய் ப்ரதிகூலராயிருக்கையன்றிக்கே, தங்களோட்டை ஸஹவாஸம் அமையுமென்னும்படி நிர்த்தோஷரான பந்துக்கள். நவை – குற்றம்.  இல் – என்பது இல்லாமை. 

(இல்லம்)  கீழ் நல்லவென்று சொன்னதை இதுமுதலாக மேற்சொல்லுகிறவற்றிலும் கூட்டிக்கொள்வது.  நல்லவில்ல மாவது – கண்டவிடமெங்கும் ஶிதிலமாய் ஹேயமாயிருக்கையன்றிக்கே, மாடகூடப்ராஸாதாதி யுக்தமாய், விலக்ஷணமான க்ருஹம்.  நல்லநிலமாவது – ஊஷரமாய்  ஒருமுதல் பற்றாதபடி யிருக்கையன்றிக்கே கட்டு கலம் போரவிளையும்படியான ஸுக்ஷேத்ரம்.  நல்லமாடாவது – கொடுவையாய்க் கட்டிப்பிடிக்க வொட்டாமல், கொண்டியிலே மேய்ந்துதிரிகையன்றிக்கே, விதேயமாய் பஹுக்ஷீரப்ரதங்களான பசுக்கள் முதலானவை.

(இவையனைத்தும்) இப்படி ஓரொன்றே விலக்ஷணமாய் நாட்டார்க்கு ஸூகாவஹமாயிருக்கு மிவையெல்லாம்.  (அல்லலெனத்தோற்றி) து:க்காவஹமென்றே மநஸ்ஸுக்குத் தோற்றி.  அல்லலென்ற ஶப்தம் து:க்கவாசியேயாகிலும் கீழ்ச்சொன்னவற்றைச் சொல்லுகிறதாகையாலே  து:க்காவ ஹமென்று சொல்லவேணும்.  (எரிதீயிற்சுடுமேல்) ஜ்வலிக்கிற அக்நிபோலே தாபகரமாகில். 

(அவர்க்கெளிதாம் ஏற்றரும் வைகுந்தத்திருப்பு) அவ்வவஸ்தைபிறந்த அதிகாரிகளுக்கு ஸ்வயத்நத்தால் துஷ்ப்ராபமான பரமபதத்திலேபோய் அடியார்கள் குழாங்களோடே கூடியிருக்குமிருப்பு ஸுலபமாம்.  அதாவது – இப்படியானவதிகார பாகம் பிறந்தவர்களுக்கு ஈஶ்வரன் ஶீக்ரமாக பரமபதத்தைக் கொடுக்குமென்றபடி.

“க்ஷேத்ராணி மித்ராணி தநாநிநாதபுத்ராஶ்ச தாரா: பஶவோக்ருஹாஶ்ச த்வத்பாதபத்மப்ரவணாத்மவ்ருத்தேர் பவந்தி ஸர்வே ப்ரதிகூலரூபா:”|| (57) என்று ப்ரஹ்மாண்டபுராணத்தில் ஶ்ரீஹஸ்திகிரிமாஹாத்ம்யத்தில் சொல்லப்பட்ட வசநம் இப்பாட்டில் சொன்னவர்த்தத்துக்கு ஸம்வாதமாக ௮நுஸந்தேயம். 

@@@@@

இருபதாம்பாட்டு

20.  விருப்புறினும் தொண்டர்க்கு வேண்டுமிதமல்லால்

    திருப்பொலிந்த  மார்பனருள் செய்யான் – நெருப்பை

    விடாதே குழவிவிழ வருந்தினாலும்

    தடாதேயொழிமோ தாய்.

பதவுரை

விருப்புறினும் – க்ஷுத்ரவிஷயங்களில் விருப்பத்தைப் பண்ணினாலும்

தொண்டர்க்கு – தன் பக்கல் பக்தரானவர்களுக்கு

வேண்டும் இதமல்லால் – அவர்களுக்கு உஜ்ஜீவநத்துக்கு அபேக்ஷிதமான ஹிதத்தையொழிய

திருப்பொலிந்த மார்பன் – பெரியபிராட்டியார் எழுந்தருளியிருக்கையாலே உஜ்ஜ்வலமான திருமார்பை யுடையவன்

அருள் செய்யான் – அபேக்ஷிதமான க்ஷுத்ரவிஷயங்களைக் கொடான்.  (இதற்கு த்ருஷ்டாந்தம் மேல்)

குழவி – விளைவதறியாத சிறு ப்ரஜை

நெருப்பை – அக்நியை

விடாதே – அதின் தேஜஸ்ஸைக் கண்டு விடமாட்டாமல்

விழவருந்தினாலும் – அதிலே விழுகைக்கு யத்நித்தாலும்

தாய் – ப்ரஜைக்கு நாஶகமென்றறிந்த தாயானவள்

தடாதொழியுமோ – அதில் விழாதபடித் தகையாதொழியுமோ?

அவதாரிகை – இருபதாம்பாட்டு.  தன் பக்கல் பக்தரானவர்கள் தங்களுக்கு அஹிதமென்றறியாதே சாபல்யத்தாலே க்ஷுத்ரங்களானவற்றில் சிலவற்றை விரும்பி இத்தைத்தரவேணுமென்ற பேக்ஷித்தாலும் ஹிதபரனான வீஶ்வரன் அத்தைக் கொடாதே மறுத்துவிடு மென்னுமத்தை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச்செய்கிறார். 

வ்யாக்யானம் – (விருப்புறினும்) விருப்பத்தைப் பண்ணினாலும்.  அதாவது – இது கொடாதபோது இவர்கள் க்லேஶப்படுவர்கள் என்னும்படி ஸாதரமாக வபேக்ஷிக்கிலு மென்கை.  (தொண்டர்க்கு) தன் பக்தரானவர்களுக்கு.  தொண்டென்கிற ஶப்தம் – ஶேஷத்வத்துக்கும் வாசகமாய், சாபலத்துக்கும் வாசகமாய்ப் போருவதாகையாலே இவ்விடத்தில் சாபலவாசகமாய்க்கொண்டு பக்தியைச் சொல்லுகிறது. 

(வேண்டுமிதமல்லால்) அதாவது – அவர்களுக்கு வேண்டுவதான ஹிதத்தையொழிய.  வேண்டுமித மென்கிறது – அவர்களுடைய உஜ்ஜீவநத்துக்கு அபேக்ஷிதமான ஹிதமென்றபடி. 

(திருப்பொலிந்த மார்பன்) பெரியபிராட்டியார் எழுந்தருளியிருக்கையாலே உஜ்ஜ்வலமான திருமார்பை யுடையவன்.  திருப்பொலிந்த மார்பனென்றது – திருவால் வந்த பொலிவையுடைத்தான மார்பனென்றபடி.  திருமார்படங்கலும் இவள் திருமேனியின் தேஜஸ்ஸாலே வ்யாப்தமாயிருக்குமாயிற்று.  ஆகவிறே “கருமாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்” (திருவாய் – 8.7.6) என்றும், “கருமாணிக்கமலைமேல் மணித்தடந்தாமரைக்காடுகள் போல்” (திருவாய் – 8.9.1) என்றும் தொடங்கி திவ்யாவயங்களைச் சொல்லுமிடத்தில் அல்லாத அவயவங்களோபாதி சிவந்திருக்குமதாகத் திருமார்பை முந்துறச் சொல்லிற்று.  ஆக இப்படியிருக்கிற திருமார்பையுடையவன். 

(அருள் செய்யான்) அதாவது – இவர்களாசைப்பட்ட பேக்ஷித்தாலும் ஹிதபரனாகையாலே மறுத்துவிடுமத்தனை யொழிய அபேக்ஷித்ததைக் கொடானென்கை.  அருளுதல் – கொடுத்தல்.  அவர்கள் அபேக்ஷியாநிற்கச்செய்தே  அது கொடாதே மறுத்துவிடுமென்றதுக்கு த்ருஷ்டாந்த மருளிச்செய்கிறார் மேல். 

(நெருப்பை இத்யாதி) அதாவது – விளைவதறியாத சிறு ப்ரஜை, அக்நி தாஹகமென்றறியாமல் அதினுடைய ஔஜ்வல்யமாத்ரத்தைக்கண்டு அத்தைவிடாதே அதிலே விழுகைக்கு யத்நித்தாலும் அது ப்ரஜைக்கு நாஶகமென்றறியும் மாதாவானவள் அதில் விழாதபடித்தகையா தொழிமோவென்கை.  இத்தால் அப்படியே அவனும்  அவர்களபேக்ஷித்தாலும் அது கொடாதே மறுத்துவிடுமென்றதாயிற்று. 

“யாசிதோபிஸதாபக்தைர்நாஹிதம் காரயேத்தரி: பாலமக்நௌபதந்தந்து மாதாகிம் ந நிவாரயேத்” என்னக்கடவதிறே. 

@@@@@

இருபத்தோராம்பாட்டு

21.  ஆரப்பெருந்துயரே செய்திடினு மன்பர்கள்பால்

    வேரிச்சரோருகைகோன் மெய்ந்நலமாம் – தேரில்

    பொறுத்தற்கரிதெனிலும் மைந்தனுடற்புண்ணை

    அறுத்தற்கிசைதாதையற்று.

பதவுரை

வேரிச்சரோருகைகோன் – பரிமளப்ரசுரமான தாமரைப்பூவை யிருப்பிடமாகவுடைய பெரியபிராட்டியாருக்கு வல்லபனானவன்

அன்பர்கள்பால் – தன் பக்கல் பக்தரானவர்கள் விஷயத்தில்

ஆரப்பெருந்துயர் – மிகவும் பெருந்து:க்கத்தை

செய்திடினும் – விளைத்தபோதிலும்

தேரில் – ஆராயில்

மெய் நலமாம் – மெய்யான ஸ்நேஹகார்யமாம் (எதுபோல வென்னில்)

பொறுத்தற்கு அரிதெனினும் – பொறுக்கப்போகாதென்று தோற்றியிருந்தாலும்

மைந்தன் – புத்ரனுடைய

உடல் புண்ணை – ஶரீரத்திலுண்டான புண்ணை

அறுத்தற்கு – சேதிக்கைக்கு

இசை தாதையற்று – அநுமதி பண்ணும் பிதாவைப்போல.

அவதாரிகைஇருபத்தோராம்பாட்டு.  ஶ்ரீய:பதியானவன் தன் பக்கல் பக்தரானவர்களுக்கு அதிமாத்ரங்களான து:க்கங்களைச் செய்யினும் அது அவர்கள் பக்கல் ஸ்நேஹகார்ய மென்னுமத்தை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச் செய்கிறார். 

வ்யாக்யானம் – (ஆரப்பெருந்துயரே செய்திடினும்) துயர் – து:க்கம்;  பெருந்துயர் – மஹாது:க்கம்;  ஆரப்பெருந்துயர் என்கையாலே – மிகவும் பெருந்து:க்கம் என்றபடி.  “துயரே” என்கிற அவதாரணத்தாலே நடுவொருஸுகவ்யவதான மில்லாமையைச் சொல்லுகிறது.  செய்திடினு மென்றது – இவர்கள் ப்ராரப்தகர்மபலமாய் வந்ததாகிலும் பலப்ரதன் அவனாகையாலே பூர்வாகோத்தராக ப்ராரப்த கண்டங்களெல்லாம் கழிக்கிறவனுக்கு இத்தையும் கழிக்கவரிதன்றிறே.  ஹிதரூபமாக அவன் அவற்றை அநுபவிப்பிக்கையிறே இவனுக்கு இது அநுபவிக்க வேண்டுகிறது.  இதுதான் இவனுக்குண்டான ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் வைராக்யத்தைப் பிறப்பிக்கைக்காகச் செய்கிறதிறே. 

(வேரிச்சரோருகைகோன்) பரிமளப்ரசுரமான தாமரையை வாஸஸ்தானமாகவுடைய பெரியபிராட்டியாருக்கு வல்லபனானவன், இப்படி இவர்களுக்கு து:க்கத்தை விளைக்கிறதுக்கு அவளும் கூட்டுபோலேகாணும்.  ஹிதரூபமாகையாலே அவளும் கூடுமிறே.  நிக்ரஹத்தாலே செய்யிலிறே நிஷேதிப்பது.  அநுக்ரஹத்தாலே செய்கையாகையாலே அநுமதிபண்ணி யிருக்குமாயிற்று.  

(மெய்ந்நலமாம்)  பாரமார்த்திக ஸ்நேஹகார்யமாம்.  மெய்ந்நலமென்றது – மெய்யான ஸ்நேஹமென்றபடி.  (தேரில்) ஆராயில்.  தேருதல் – ஆராய்தல்.  “வேரிச்சரோருகைகோன் அன்பர்கள்பால் ஆரப்பெருந்துயரே செய்திடினும் தேரில் மெய்ந்நலமாம்” என்றன்வயம்.  இதுக்கு த்ருஷ்டாந்தமாக வருளிச்செய்கிறார் மேல். 

(பொறுத்தற்கித்யாதி) அதாவது – அவனுக்கு இது பொறுக்கப்போகாதென்று தோற்றியிருந்தாலும் புத்ரனுடைய ஶரீரத்தில் க்ரந்தியை ஹிதபுத்தியாலே  சேதிக்கைக்கு அநுமதிபண்ணும் பிதாவைப்போலே யென்கை. 

“ஹரிர்து:க்காநி பக்தேப்யோ ஹிதபுத்த்யாகரோதி வை ஶஸ்த்ரக்ஷாராக்நி கர்மாணி ஸ்வபுத்ராய யதா பிதா” (59) என்னக்கடவதிறே. 

@@@@@

இருபத்திரண்டாம்பாட்டு

22.  உடைமை நானென்று முடையானுயிரை

    வடமதுரை வந்துதித்தா னென்றும்  – திடமாக

    அறிந்தவன்றன் தாளிலடைந்தவர்க்கு முண்டோ

    பிறந்துபடு நீடுயரம் பின்.

பதவுரை

நான் – நான்

உடைமையென்றும் – ஸர்வேஶ்வரனுடைய உடைமை என்றும்

உடையான் – இவ்வாத்மாவை உடையவன்

உயிரை – இவ்வாத்மாவை ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தரிப்பிக்கைக்காக

வடமதுரை வந்து – வடமதுரையில் வந்து

உதித்தானென்றும் – ஆவிர்ப்பவித்தருளின ஶ்ரீக்ருஷ்ண னென்றும்

திடமாகவறிந்து – த்ருடமாக அறிந்து

அவன் தன் தாளில் – ஸ்வாமியானவன் திருவடிகளிலே

அடைந்தவர்க்கு – ஶரணம் புகுந்தவர்களுக்கு

பின் பிறந்து படும் – பின்பு ஒரு ஜன்மம் பிறந்து அநுபவிக்கத்தக்க

நீள் துயரம் – தீர்க்கமான கர்மம்

உண்டோ – உண்டோ?

அவதாரிகைஇருபத்திரண்டாம்பாட்டு.  ப்ராரப்த கர்மாநுபவம் பண்ணவேணுமாகில் இஜ்ஜன்மத்தளவன்றிக்கே ஜந்மாந்தரத்திலும் போயநுபவிக்க வேண்டிவருமோவென்ன;  ஸம்பந்தஜ்ஞாநபூர்வகமாக அவன் திருவடிகளிலே ஶரணம் புகுந்தார்க்குப் பின்பொரு ஜந்மம் பிறந்து அநுபவிக்கத்தக்க கர்மமுண்டோவென்கிறார். 

வ்யாக்யானம் – (உடைமை நானென்றும்) நான் உடைமையென்றும், தன்னுடைய ஸ்வத்வத்தையும்.  (உடையானுயிரை வடமதுரை வந்துதித்தானென்றும்) இவ்வாத்மாவை யுடையவன் இத்தை ஸம்ஸாரத்தில் நின்று மெடுக்கைக்காக ஶ்ரீமதுரையில் வந்து ஆவிர்ப்பவித்து நின்றவனுடைய ஸ்வாமித்வத்தையும். 

(திடமாக வறிந்து) த்ருடமாக வறிந்து.  தத்வஸ்திதியை யாராய்ந்தால், இத்தலைக்கு ஸ்வத்வமும், அத்தலைக்கு ஸ்வாமித்வமும் வ்யவஸ்திதமாயிறே இருப்பது.  ஆகையாலே உடைமையானவிவனிருந்த விடத்திலே வருவானும், இவனைத்தன்னுடனே சேர்த்துக் கொள்ளுவானும், சேர்ந்தால் தன்பேறாக உகப்பானு மவனாயிற்று. ஆகவிறே, “ப்ராப்தாவும், ப்ராபகனும், ப்ராப்திக்கு உகப்பானும்  அவனே” என்று பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்தது.  திடமாக வறிகையாவது – இப்படி யிருக்கிற ஸம்பந்தத்தை ஸம்ஶயவிபர்யயமறவறிகை.  இப்படி இஸ்ஸம்பந்தத்தை யறிந்து .  (அவன் தன் தாளிலடைந்தவர்க்கும்) ஸ்வாமியானவன் திருவடிகளிலே பூர்வவாக்ய ப்ரக்ரியையாலே ஶரணம் புகுந்தவர்களுக்கும். 

(உண்டோ படுநீடுயரம் பின்) அதாவது – பின்பொரு ஜன்மம் பிறந்தநுபவிக்கத்தக்க தீர்க்கமான கர்மமுண்டோவென்கை.  ஶரணாகதரானால் ஆர்த்தராகில் அப்போதே முக்தராகையும் த்ருப்தராகில் ஆரப்தஶரீராவஸாநத்திலே முக்தராகையு மொழிய ஜந்மாந்தராந்வயமில்லையிறே. 

“ஆர்தாநாமாஶுபலதா ஸக்ருதேவ க்ருதாஹ்யஸௌ த்ருப்தாநாமபி ஜந்தூநாம் தேஹாந்தரநிவாரிணீ” (60) என்று ப்ரபத்தி ஸ்வபாவம் சொல்லுகிற ஶாஸ்த்ரமே இவ்வர்த்தத்தைச் சொல்லாநின்றதிறே.  ஆகையாலே யாயிற்று, இவரும் உண்டோவென்றருளிச் செய்தது.  “ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம்  ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் உபயோரேஷ ஸம்பந்தோ ந பரோபிமதோமம” (61) என்கிற விஷ்ணுதர்ம வசநம் இப்பாட்டில் சொன்ன ஸ்வஸ்வாமி ஸம்பந்தத்துக்கு ப்ரமாணமாக ௮நுஸந்தேயம். 

@@@@@

இருபத்துமூன்றாம்பாட்டு

23.  ஊழிவினைக்குறும்ப ரோட்டறுவரென்றஞ்சி

    ஏழைமனமே இனித் தளரேல் – ஆழிவண்ணன்

    தன்னடிக்கீழ் வீழ்ந்து சரணென்றிரந்தொருகால்

    சொன்னதற்பி னுண்டோ துயர்.

பதவுரை

ஊழிவினை – பழையதாக ஆர்ஜிக்கப்பட்ட கர்மமாகிற

குறும்பர் – ஸ்வதந்த்ரர்கள்

ஓட்டருவரென்று – ஓடிவந்து நலிவர்களென்று

அஞ்சி – பயப்பட்டு

ஏழை மனமே – அறிவிலியான நெஞ்சே!

இனி தளரேல் – இனிமேல் ஶோகிக்கவேண்டாம்

ஆழிவண்ணன்தன் – கடல்போன்ற வடிவையுடைய ஸர்வேஶ்வரனுடைய

அடிக்கீழ் – திருவடிகளின் கீழே

வீழ்ந்து – விழுந்து

சரணென்று – நீயே எனக்கு ஶரணமாகவேணுமென்று

இரந்து – யாசித்து

ஒருகால் – ஒருதடவை

சொன்னதற்பின் – இந்த வார்த்தையைச் சொன்னபின்பு

துயர் – கர்மபலமாய் வருகிற து:க்கமானது

உண்டோ – உண்டாகுமோ?

அவதாரிகைஇருபத்துமூன்றாம்பாட்டு.  பூர்வாகபலத்தை யநுஸந்தித்து அது நம்மை வந்து நலியுமென்று தளருகிற திருவுள்ளத்தைத் தேற்றுகிற பாசுரத்தாலே ஶரணாகதனானபின்பு பூர்வாகபலமான து:க்காநுபவமில்லை யென்னுமத்தை ஸகலருமறியும்படி   ௮ருளிச்செய்கிறார். 

வ்யாக்யானம் – (ஊழிவினைக்குறும்பர்) பழையதாக ஆர்ஜிக்கப்பட்ட கர்மமாகிற குறும்பர்.  ஊ.ழென்றது – பழைமை.  ஊழ்வினையென்றது – பழையவினை யென்றபடி.  இத்தால் பூர்வாகத்தைச் சொல்லுகிறது.  கர்மங்களைக் குறும்பரென்கிறது –சேதநஸமாதியாலே.  குறும்பரானவர்கள் பலத்தாலே நாட்டை த்வம்ஸமாக்கி மூலையடி நடத்துமாபோலே கர்மங்களும் இவ்வாத்மாவைத் தம்வழியே இழுத்து மூலையடியே நடத்துமவையிறே. 

(ஓட்டருவரென்றஞ்சி) ஓடிவருவரென்று பயப்பட்டு.  குறும்பராகையாலே ஓட்டருவரென்கிறது.  கீழ்ச்சொன்ன கர்மங்கள் ஶீக்ரகதியாய்வந்து நலியுமென்று பயப்பட்டு.  (ஏழைமனமே) அறிவிலியான நெஞ்சே! அதாவது – ஶரண்யவைபவமும்  ஶரணாகதிவைபவமும் ஶரணாகதன் பெறும் பேறும்  அறிகைக்குத்தக்க வளவில்லாத  நெஞ்சே யென்கை. 

(இனித்தளரேல்) இதுக்கு முன்பு தளர்ந்தாயாகிலும் இனித் தளராதேகொள்.  இத்தால் திருவுள்ளத்தை “மா ஶுச:” என்கிறார்.  இனியென்றதின் கருத்தை வ்யக்தமாக வருளிச்செய்கிறார் மேல்.  (ஆழிவண்ணன்) கம்பீரஸ்வபாவன்.  அன்றிக்கே கடல்போலே ஶ்ரமஹரமான வடிவையுடையவன் என்னவுமாம்.  (தன்னடிக்கீழ் வீழ்ந்து) “ஆழிவண்ணன் நின்னடியிணை அடைந்தேன்” (திருமொழி 5.8.1) என்கிறபடியே அவன் திருவடிகளின் கீழ் விழுந்து. 

(சரணென்றிரந்து) “த்வமேவோபாயபூதோ மே பவ” (அஹிர்புத்நஸம்ஹிதை 37.30.31) (62) என்கிறபடியே நீயே எனக்கு சரணமாகவேண்டுமென்று அர்த்தித்து.  (ஒருகால் சொன்னதற்பின்) ப்ரபத்தி ஸக்ருத்கரணீயையாகையாலே இப்படி ஸக்ருதுச்சாரணம் பண்ணினபின்பு. 

(உண்டோ துயர்) அதாவது – இப்படி சரணாகதனானபின்பு பூர்வாக பலமாய்வருகிற து:க்கமுண்டோ;  ஶரணாகதனானபோதே  பூர்வாகோத்தராக ப்ராரப்த கண்டங்களெல்லாம்  கழியுண்டுபோமென்கிற ப்ரமாண பலத்தை நினைத்து உண்டோவென்கிறார்.

“மாபீர்மந்தமநோ விசிந்த்ய பஹுதா யாமீஶ்சிரம் யாதநா நாமீந: ப்ரபவந்தி பாபரிபவ: ஸ்வாமீ நநு ஶ்ரீதர: ஆலஸ்யம் வ்யபநீய பக்தி ஸுலபம் த்யாயஸ்வ நாராயணம் லோகஸ்ய வ்யஸநாபநோதநகரோ தாஸ்ஸ்ய கிம் ந க்ஷம: ||” (63) என்கிற ஶ்ரீமுகுந்தமாலையில் ஶ்லோகத்தை “ஏழைமனமே இனித் தளரேல்” என்கிறவிதுக்கு ஸம்வாதமாகச் சொல்லுவர்கள்.

@@@@@

இருபத்துநாலாம்பாட்டு

24.  வண்டுபடி துளபமார்பனிடைச் செய்தபிழை

    உண்டு பலவென்று உளந்தளரேல் – தொண்டர்செய்யும்

    பல்லாயிரம் பிழைகள் பார்த்திருந்தும் காணுங்கண்

    இல்லாதவன்  காணிறை.

பதவுரை .

வண்டுபடி – மதுபானார்த்தமாக வண்டுகள் படிந்து கிடக்கிற

துளபமார்பினிடை – திருத்துழாயாலே அலங்க்ருதமான திருமார்பையுடைய ஸர்வேஶ்வரன் விஷயத்தில்

செய்தபிழை – செய்த குற்றங்களானவை

பல உண்டென்று – அநேகங்களுண்டென்று

உளம் – மநஸ்ஸே!

தளரேல் – தளராதேகொள்

இறை – ஸர்வஸ்வாமியானவன்

தொண்டர் செய்யும் – தன் பக்கல் பக்தரானவர்கள் செய்யும்

பல்லாயிரம் பிழைகள் – அநேகமாயிரம் குற்றங்களை

பார்த்திருந்தும் – ஸர்வஜ்ஞனாகையாலே பார்த்துக் கொண்டிருக்கச் செய்தேயும்

காணும் கண் – அப்பிழைகளை தர்ஶிக்கும் ஜ்ஞாநரூபமான கண்ணை

இல்லாதவன்காண் – உடைத்தாகாதவன் காண்.

அவதாரிகைஇருபத்துநாலாம்பாட்டு. உத்தராக பாஹுள்யத்தை நினைத்துத் தளருகிற திருவுள்ளத்தைத் தேற்றுகிற  பாஶுரத்தாலே ஸர்வேஶ்வரன் உத்தராகத்தில் கண்வையானென்னுமத்தை ஸகலருமறிய  ௮ருளிச் செய்கிறார்.

வ்யாக்யானம் – (வண்டுபடி துளப மார்பினிடைச் செய்தபிழை) மதுபானார்த்தமாக வண்டுகள் ஸர்வகாலமும் படிந்து கிடக்கிற திருத்துழாயாலே அலங்க்ருதமான  திருமார்பை யுடையவன் விஷயத்தில் செய்த குற்றங்களானவை.  இப்போது இந்த விஶேஷணம் சொல்லிற்று ஶரணாகதரானவர்களை அநுபவிப்பிக்கைக்காக ஸர்வகாலமும் தன்னை யலங்கரித்துக்கொண்டிருக்குமவன் அவர்கள் ப்ராமாதிகமாகப் பண்ணும் குற்றங்களில் கண்வையானென்று தோற்றுகைக்காக. 

(உண்டு பலவென்று) ப்ரக்ருதியோடிருக்கையாலே மநோவாக்காயங்களால் செய்தவை பலவுமுண்டென்று ஒன்றும் செய்யக்கடவோ மல்லோமென்றிருந்தாலும் ப்ராமாதிகமாக வந்து புகுகிறவை பலவுமுண்டிறே;  அத்தை நினைத்து. 

(உளந்தளரேல்)  நெஞ்சே! தளராதேகொள்.  உளமென்றது – உள்ளமென்றபடியாய் ஸம்புத்தியாயிருக்கிறது.  உள்ளமே என்றபடி.  தளராமலிருக்கத்தக்க தருளிச்செய்கிறார் மேல்.  (தொண்டர் செய்யும்) தன் பக்கல் பக்தரானவர்கள் செய்யும்.   தொண்டரென்றது – சபலரென்றபடியாய். பக்தரானவர் களென்றபடி.  அன்றிக்கே தனக்கு ஶேஷபூதரானவர் களென்னவுமாம்.

(பல்லாயிரம் பிழைகள்) குணத்ரயாஶ்ரயமான தேஹத்தோடே யிருக்கையாலே ரஜஸ்தமஸ்ஸுக்களாலே கலங்கி கரணத்ரயத்தாலும் ப்ராமாதிகமாக நாள்தோறும் செய்யுமவை  அநேகமாகையாலே அநேகமாயிரம் பிழைகளென்கிறார்.  பிழை – குற்றம்.  இத்தால், “அக்ருத்யகரண க்ராத்யாகரண பகவதபசாரபாகவதாபசார அஸஹ்யாபசாரரூப நாநாவித அநந்தாபசாரான் (ஶரணாகதிகத்யம்) (64) என்றவற்றைச் சொல்லுகிறது. (பார்த்திருந்தும்) ஸர்வஜ்ஞனாகையாலும், அந்தர்யாமியாகையாலும் ஸர்வகாலமும் ஸர்வருடைய வ்யாபாரமும் பார்த்துக்கொண்டிருக்கச் செய்தேயும்.

(காணுங்கண்ணில்லாதவன் காணிறை)  அதாவது – அவர்கள் செய்யும் பிழைகளை தர்ஶிக்கும் கண்ணில்லாதவன் காண் ஶேஷியானவனென்கை.  இப்போது கண் என்கிறது – ஜ்ஞாநத்தையிறே.  அதில்லாதவன் என்கையாலே – ஆஶ்ரிதர் செய்யும் குற்றங்களில் அவிஜ்ஞாதாவாயிருக்கு மென்றதாயிற்று.  இறையென்று – ஈஶ்வரன் என்னவுமாம்.

“அவிஜ்ஞாதா ஹி பக்தானாம் அகஸ்ஸு கமலேக்ஷண: ஸதா ஜகத்ஸமஸ்தஞ்ச பஶ்யந்நபி ஹ்ருதிஸ்தித: ||” (65) என்னக்கடவதிறே. 

@@@@@

இருபத்தஞ்சாம்பாட்டு

25.  அற்றமுரைக்கி லடைந்தவர்பா லம்புயைக்கோன்

    குற்றமுணர்ந்திகழும் கொள்கையனோ – எற்றேதன்

    கன்றினுடம்பின் வழுவன்றோ காதலிப்பது

    அன்றதனை யீன்றுகந்தவா.

பதவுரை

அற்றமுரைக்கில் – அறுதியானது (பரமார்த்தமானது) சொல்லில்

அம்புயைகோன் – ஶ்ரீய:பதியானவன்

அடைந்தவர்பால் – ஆஶ்ரிதரானவர்கள் பக்கல்

குற்றம் – குற்றங்களை

உணர்ந்து – தர்ஶித்து

இகழும் கொள்கையனோ – அதடியாக அவர்களை இகழ்ந்துவிடும் ஸ்வபாவத்தை உடையவனோ? 

எற்றே – என்னே?  (அவன் ஸ்வபாவமறியாதவர் நினைவு என்னே என்கிறார்)

தன் கன்றின் – தன் கன்றினுடைய

உடம்பின் – உடம்பிலுண்டான

வழுவன்றோ – அழுக்கையன்றோ

அன்று – அப்போது

அதனையீன்றுகந்த – அந்தக்கன்றைப் பெற்றதாலுண்டான உகப்பையுடைய

ஆ – பசுவானது

காதலிப்பது – விருப்பத்துடன் புஜிப்பது. 

அவதாரிகைஇருபத்தஞ்சாம்பாட்டு.  காணுங்கண்ணில் லாதவன் காணென்று உத்தராகத்தில் அஜ்ஞனாயி ருக்குமென்றார் கீழ்.  பூர்வாகம் தன்னிலேதேனுமொன்றை தர்ஶித்தாலும் வத்ஸலனாகையாலே  அத்தை போக்யமாகக் கொள்ளுமதொழிய அத்தையிட்டு இவர்களை இகழானென்னுமத்தை ஸத்ருஷ்டாந்தமாக  ௮ருளிச் செய்கிறார். 

வ்யாக்யானம் – (அற்றமுரைக்கில்) அறுதியானது சொல்லில்.  அதாவது – பரமார்த்தமானது சொல்லிலென்கை.  (அடைந்தவர்பால்) ஆஶ்ரிதரானவர்கள பக்கல். 

(அம்புயைகோன்) ஶ்ரீய:பதியானவன்.  அவள் புருஷகார மாகவிறே அடியிலங்கீகரித்தது.  அப்படி யங்கீகரித்தால் பின்னையென்றுமொக்க அவர்கள் பக்கல் வத்ஸலனா யிருக்குமாயிற்று.  தான் காட்டிக்கொடுத்தவர்களை  அவன் கைக்கொண்டவதினுரப்பை யறிகைக்காக, அவள்தானே அவர்கள் குற்றங்களைக் காட்டினாலும் “என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” (பெரியாழ்வார் திரு – 4.9.2) என்னுமவனிறே. 

(குற்றமுணர்ந்திகழும் கொள்கையனோ) அதாவது – அவர்கள் குற்றங்களை தர்ஶித்து அதடியாக அவர்களை இகழ்ந்துவிடும் ஸ்வபாவத்தை யுடையவனோ வென்கை.  கொள்கை – ஸ்வபாவம்.  அத்தால், புருஷகார புரஸ்ஸரமாகத் தன்னாலே அங்கீகரிக்கப்பட்டவர்களுடைய  குற்றந்தான் முதலிலே உணரக்கூடாது.  உணர்ந்தாலும் வாத்ஸல்யத்தாலே அத்தை போக்யமாகக்  கொள்ளுமதொழிய, அத்தையிட்டு அவர்களை இகழக்கூடாதென்னுமிடம் சொல்லுகிறது.  இகழும் கொள்கையனோ வென்கிறவிதிறே, குற்றத்தை யுணர்ந்தானாகில் அத்தை போக்யமாகக் கொள்ளுமித்தனை என்கிற வர்த்தத்தைக் காட்டுகிறது. 

(எற்றே) என்னே! அவனுடைய வாத்ஸல்ய ப்ரகாரமறியாதாரிறே இகழுமென்று நினைக்கிறவர்களென்று என்னேயென்கிறார்.  அவன் வாத்ஸல்யத்துக்கு ஒரு த்ருஷ்டாந்த மருளிச்செய்கிறார் மேல். 

(தன் கன்றினுடம்பின் வழுவன்றோ  காதலிப்பதன்றதனை  யீன்றுகந்தவா) என்று.  அதாவது – சுவடுபட்ட தரையில் புல் கவ்வாததாயிருக்கச்செய்தே தன்கடையில் நின்றும் விழுந்த கன்றினுடைய உடம்பில் வழும்பையன்றோ ஸ்நேஹித்து புஜிப்பது, அன்றுப் பெற்றவத்தாலே அதின் பக்கலுகப்பை  யுடைத்தான பசுவானதென்கை.  இதுதான் ஸர்வேஶ்வர னுடைய வாத்ஸல்யத்துக்கு த்ருஷ்டாந்தமாக ஸகலருமருளிச் செய்யுமதிறே. 

“ப்ரபந்நான் மாதவஸ்ஸர்வான் தோஷேண பரிக்ருஹ்யதே  அத்யஜாதம் யதாவத்ஸம் தோஷேணஸஹவத்ஸலா” (66) என்னக்கடவதிறே.  இந்த ஶ்லோகத்தில்  “பரிக்ருஹ்யதே” என்கிறவிது ஆர்ஷம்.  பரிக்ருஹ்ணாதி யென்றபடி. 

@@@@@

இருபத்தாறாம்பாட்டு

26.  தப்பில் குருவருளால் தாமரையாள் நாயகன்றன்

    ஒப்பிலடிகள் நமக்குள்ளது – வைப்பென்று

    தேறியிருப்பார்கள் தேசுபொலிவைகுந்தத்

     தேறியிருப்பார் பணிகட்கேய்ந்து.

பதவுரை

தப்பில் – ஜ்ஞாநாநுஷ்டானங்களில் ஒரு  தவிர்தலில்லாத

குரு – ஆசார்யனுடைய

அருளால் – ப்ரஸாதத்தாலே

தாமரையாள் நாயகன்றன் – ஶ்ரீய:பதியினுடைய

ஒப்பில் – ஒப்பில்லாத (ஸஹாயாந்தரநிரபேக்ஷமான)

அடிகள் – திருவடிகள்

நமக்கு – அகிஞ்சனராய், அநந்யகதிகளான நமக்கு

உள்ளத்து – ஹ்ருதயத்திலிருக்கிற

வைப்பென்று – சேமநிதியென்று

தேறியிருப்பார்கள் – விஶ்வஸித்திருக்குமவர்கள்

தேசுபொலி – தேஜஸ்ஸுமிக்கிருக்கிற

வைகுந்தத்து – பரமபதத்திலே

ஏறி – அர்ச்சிராதி கதியாலேபோய்

பணிகட்கு – பகவத்கைங்கர்யங்களுக்கு

ஏய்ந்திருப்பார் – அநுரூபமான அதிகாரிகளாயிருப்பர்கள்.

அவதாரிகைஇருபத்தாறாம்பாட்டு.  ஆசார்யப்ரஸாதத்தாலே அவனருளிச்செய்த ஶரணாகதியினுடைய அர்த்தத்தை யநுஸந்தித்து விஶ்வஸித்திருக்குமவர்கள் பரமபதத்திலே போய் பகவத் கைங்கர்யபரராயிருப்பரென்கிறார். 

வ்யாக்யானம் – (தப்பில் குருவருளால்) தப்பில்லாத குருவினுடைய வருளாலே.   அதாவது – ஜ்ஞாநாநுஷ்டா னங்களில் ஒரு தவிர்தலில்லாத ஆசார்யனுடைய ப்ரஸாதத்தாலேயென்கை. 

(தாமரையாள் நாயகன்றன்) ஶ்ரீய:பதியானவன் தன்னுடைய,  இத்தால் ஶ்ரீமத்பத நாராயணபதங்களினர்த்தத்தைச் சொல்லுகிறது.  எங்ஙனேயென்னில், தாமரையாள் நாயகன் என்கையாலே  புருஷகாரபூதையான பிராட்டியோடுண்டான நித்யயோகத்தையும், “நாயகன்றன்” என்றவுறைப்பாலே ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகமாயும் ஆஶ்ரிதகார்யா பாதகமாயுள்ள வாத்ஸல்யாதியும் ஜ்ஞாநாதியுமான குணங்களுக்கு ஆஶ்ரயமாயிருக்கு மாகாரத்தையும் சொல்லுகையாலே.

(ஒப்பிலடிகள்) ஒப்பில்லாத திருவடிகள்.  இத்தால் “சரணௌ” என்கிற பதத்திலர்த்தத்தைச் சொல்லுகிறது.  திருவடிகளுக் கொப்பில்லாமையாவது –  ஸஹாயாந்தர நிரபேக்ஷமா யிருக்கை. 

(நமக்குள்ளத்து வைப்பென்று) அகிஞ்சனராய் அநந்யகதிகளான நமக்கு ஹ்ருதயத்திலிருக்கிற சேமநிதியென்று. இத்தால் சரண பதத்திலும் கரியாபதத்திலுமுண்டான வர்த்தங்களைச் சொல்லுகிறது.  எங்ஙனேயென்னில் – வைப்பென்று தன்னைக்கொண்டு  ஸகலமுமுண்டாக்கிக் கொள்ளலாம், சேமநிதியாகச் சொல்லுகையாலே;  உபாயத்வத்தையும்; உள்ளத்து வைப்பென்று – ஹ்ருதயஸம்பந்தத்தையும் தத்விஷயமான மாநஸஸ்வீகாரத்தையும்  சொல்லுகையாலே. 

இப்படியநுஸந்தித்து, (தேறியிருப்பார்கள்) இவ்வநுஸந்தாந முண்டானாலும் மஹாவிஶ்வாஸம் வேணுமிறே.  ஆகையாலே அப்படி விஶ்வஸித்திருக்குமவர்கள்.  (தேசுபொலிவைகுந்தத்தேறி) அதாவது – பகவதநுபவ கைங்கர்யங்களுக்கு  அநுரூபமான தேஶமென்னும் தேஜஸ்ஸுமிக்கிருக்கிற ஶ்ரீவைகுண்டத்தில்போய். 

(இருப்பார் பணிகட்கேய்ந்து) பணிகளுக்கேய்ந்திருப்பார் – பணிகளென்று – பகவத்கைங்கர்யங்களைச் சொல்லுகிறது.  அதுக்கு ஏய்ந்திருக்கையாவது – அநுரூபமான அதிகாரிகளா யிருக்கை.  இருப்பாரென்றது – இருப்பரென்றபடி.  அன்றிக்கே, பணியென்று – திருவநந்தாழ்வானாய், பஹுவசனம் பூஜ்யவாசியாய், தத்துல்யராயிருப்பரென்னவுமாம்.  அதாவது – திருவநந்தாழ்வான் “சென்றால் குடையாம்” (முதல் திருவந் – 53) என்கிறபடியே அகிலஶேஷவ்ருத்திகளிலும் அதிக்ருதனாயிருக்குமாபோலே, அஶேஷஶேஷவ்ருத் திகளிலும்  அந்விதராயிருப்பாரென்கை.   “ஆசார்யஸ்ய ப்ரஸாதேந மமஸர்வமபீப்ஸிதம் ப்ராப்நுயாமீதி விஶ்வாஸோ யஸ்யாஸ்தி ஸ ஸுகீ பவேத்” (67) என்னக்கடவதிறே.

@@@@@

இருபத்தேழாம்பாட்டு

27.   நெறியறியாதாரு மறிந்தவர்பால் சென்று

     செறிதல் செய்யாத் தீமனத்தர்தாமும் – இறையுரை

     தேறாதவரும் திருமடந்நை கோனுலகத்

     தேறாரிடரழுந்துவார்.

பதவுரை

நெறி – ஸம்ஸாரத்தைத் தப்புவிக்கு முபாயத்தை

அறியாதாரும் – அறியாதவர்களும்

அறிந்தவர்பால் சென்று – உஜ்ஜீவநோபாயமறிந்தவர்கள் பக்கல் சென்று

செறிதல் செய்யா – ப்ரணிபாதாதிரூபமான ஶுஶ்ரூஷாதிகளைச் செய்யாத

தீமனத்தர்தாமும் – துஷ்டஹ்ருதயரானவர்களும்

இறையுரையை – ஸர்வேஶ்வரனருளிச்செய்த சரமஶ்லோகார்த்தத்தை

தேறாதவரும் – விஶ்வஸியாதவர்களும்

திருமடந்தைகோனுலகத்து – ஶ்ரீய:பதியின் லோகமான ஶ்ரீவைகுண்டத்தை

ஏறார் – ப்ராபியார்கள்.

இடர் – ஸம்ஸாரமாகிற து:க்கத்தில்

அழுந்துவார் – மக்நராய்ப்போருவர்கள். 

அவதாரிகைஇருபத்தேழாம்பாட்டு.   உஜ்ஜீவநோபாய மறியாதாரும், அத்தையுபதேஶிக்கு மவர்கள்பக்கல் சேர்ந்தறியாதாரும், சரமஶ்லோகார்த்தத்தை விஶ்வஸியாத வர்களும் பரமபதத்திலேறப்பெறாதே பவது:க்கமக்நராய்ப் போருவர்களென்கிறார். 

வ்யாக்யானம் – (நெறியறியாதாரும்) ஸம்ஸாரத்தைத் தப்புவிக்கும் உபாயமறியாதாரும்.  நெறி – வழியாய், உபாயத்தைச் சொல்லுகிறது.  (அறிந்தவர்பால் சென்று செறிதல் செய்யாத் தீமனத்தர்தாமும்) உஜ்ஜீவநோபாயமறிந்தவர்கள் பக்கல் சென்று, அவர்கள் இத்தைத் தங்களுக்குபதேஶிக்கைக் குறுப்பாக.  ப்ரணிபாதாபிவாதந பரிப்ரஶ்நஸேவாரூபமான செறிதலைச் செய்யாதே ஸஜாதீயபுத்தியாலே அவர்கள் பக்கல் தோஷதர்ஶனம்பண்ணி யிருக்கும் துஷ்டஹ்ருதயரானவர்கள் தாங்களும்.

(இறையுரையைத் தேறாதவரும்) ஸர்வேஶ்வரன் கீதோபநிஷதாசார்யனாய் நின்று ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்குறுப்பாக அர்ஜுநவ்யாஜத்தாலே அருளிச் செய்த சரமஶ்லோகார்த்தத்தை விஶ்வஸியாதவர்களும்.  (திருமடந்தை கோனுலகத்தேறார்) “திருமால் வைகுந்தம்” (திருவாய் – 10.7.8) என்கிறபடியே ஶ்ரீய:பதியினுடைய லோகமான ஶ்ரீவைகுண்டத்திலேறப்பெறார்கள்.  (இடரழுந் துவார்) ஸம்ஸாரது:க்கமக்நராய்ப் போருவர்களென்கை. 

“அஜ்ஞஶ்சாஶ்ரத்ததாநஶ்ச ஸம்ஶயாத்மா விநஶ்யதி நாயம்லோகோஸ்தி நபரோ நஸுகம் ஸம்ஶயாத்மந:” (கீதை 4.40) (68) என்று ஶ்ரீகீதையில் அவனருளிச்செய்த வசநம் இப்பாட்டில்சொன்ன வர்த்தத்துக்கு  ஸம்வாதமாக வநுஸந்தேயம். 

@@@@@

இருபத்தெட்டாம்பாட்டு

28.  சரணாகதி மற்றோர் சாதனத்தைப்பற்றில்

    அரணாகாதஞ்சனைதன் சேயை – முரணழியக்

    கட்டியதுவேறோர் கயிறுகொண்டார்ப்பதன்முன்

    விட்டபடைபோல் விடும்.

பதவுரை

சரணாகதி – மஹாவிஶ்வாஸபூர்வகமாக அகிஞ்சனாதிகாரியாலே  அநுஷ்டிக்கப்படும் ப்ரபத்தியானது

மற்றோர் ஸாதநத்தை – ஸ்வயத்நரூப கர்மஜ்ஞாநாதிகளான உபாயங்களிலொன்றை

பற்றில் – பேற்றுக்கு ஸாதனமாக அவலம்பிக்கில்

அரணாகாது – தான் ரக்ஷணமாகாமல் நழுவிப்போம்

அஞ்சனைதன் சேயை – அஞ்சனாபுத்ரனான திருவடியை

முரணழிய – அவர் பலமழியும்படியாக

கட்டியது – ராக்ஷஸர்களாலே கட்டப்பட்டதாய்

வேறு ஓர் கயிறுகொண்டு – தன் பக்கல் விஶ்வாஸமில்லாமல் வேறொரு சணற்கயிற்றைக்கொண்டு

ஆர்ப்பதன்முன் – கட்டுகையில் ப்ரவ்ருத்தமானபோதே

விட்ட – தான் விட்டுப்போன

படைபோல் – ப்ரஹ்மாஸ்த்ரம்போலே

விடும் – இவனைவிட்டு நீங்கிப்போம்.

அவதாரிகைஇருபத்தெட்டாம்பாட்டு.   கீழீரண்டுபாட்டாலே பரமபதத்தில் போமவர்கள் படியையும், போகாதவர்கள் படியையும் அருளிச்செய்தார்.  இனி, இப்பாட்டில் பரமபதத்தில் போமவர்களுக்கு இப்பேற்றுக்கடியாகச்சொன்ன ஶரணாகதியானது, தன்னை யவலம்பித்து நிற்குமவன் உபாயாந்தரத்திலே கைவைக்கில் தான் ரக்ஷகமாகாதே தன்னைக்கொண்டு நழுவும்படியை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச் செய்கிறார். 

வ்யாக்யானம் – (சரணாகதி) “அநந்யஸாத்யே ஸ்வாபீஷ்டே மஹாவிஶ்வாஸபூர்வகம் ததேகோபாயதாயாஞ்சா ப்ரபத்திஶ்ஶர,ணாகதி:” (விஷ்வக்ஸேந ஸம்) (69) என்றும், “அஹமஸ்ம்யபராதாநாமாலயோ அகிஞ்சநோ அகதி: த்வமேவோபாயபூதோ மே பவேதி ப்ரார்த்தநாமதி: ||” (௮ஹி.ஸம் 36-38) (70) என்றும் சொல்லுகிறபடியே மஹாவிஶ்வாஸபூர்வகமாக அகிஞ்சநனாய் அநந்யகதியான அதிகாரியாலே அநுஷ்டிக்கப்படுமதாய் “ஆர்த்தாநாம் ஆஶுபலதா” (பகவத் சாஸ்த்ரே) (71) இத்யாதிப்படியே அமோகையாய்க்கார்யம் செய்யும் ஶரணாகதியானது,

(மற்றோர் சாதனத்தைப் பற்றில்)  தன்னோடந்விதனான சேதநன் தன் வைபவத்தையறிந்து இதுவே நமக்கு ரக்ஷகமென்று விஶ்வஸித்து நிற்கையன்றிக்கே, இதுக்குத் துணையாக நாமும் சில செய்வோமென்று  ஸ்வயத்நரூபோபாயங்களி லொன்றையவலம்பிக்கில், (அரணாகாது) தான் இவனுக்கு ரக்ஷகமாகாதே இவனைவிட்டுப்போம். 

இதுதன்னை த்ருஷ்டாந்த பூர்வகமாக உபபாதிக்கிறார் மேல். (அஞ்சனைதன் சேயை) அஞ்ஜனையினுடைய புத்ரனான திருவடியை.  சேய் – புத்ரன்.  (முரணழியக்கட்டியது) பலமழியும்படி யாகக்கட்டினது.   முரண் – மிடுக்கு.  (வேறோர் கயிறுகொண்டு ஆர்ப்பதன்முன்) தன் பக்கல் துர்ப்பலபுத்திபண்ணி வேறேயொரு சணற்கயிற்றைக்கொண்டு கட்டுவதற்குமுன்னே, முன்னேயென்றது – கட்டுகையிலே ப்ரவ்ருத்தமானபோதே யென்றபடி. 

(விட்டபடைபோல் விடும்) முன்பவனைக்கட்டினதாய் வேறேயொரு கயிற்றைக்கொண்டு கட்டுகிறவளவிலே தான் விட்டுப்போன ப்ரஹ்மாஸ்த்ரம் போலே தன்னைப்பற்றி நின்றவிவன் உபாயாந்தரத்திலே அந்வயித்தபோது தான் இவனைவிட்டுப்போமென்கை.

“ப்ரபத்தே: க்வசிதப்யேவம் பராபேக்ஷாநவித்யதே ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாமபலப்ரதா  ஸக்ருதுச்சாரிதா யேந தஸ்யஸம்ஸாரநாஶிநீ ராக்ஷஸா நாமவிஸ்ரம்பாத் ஆஞ்ஜநேயஸ்ய பந்தநே  யதாவிகளிதா ஸத்யஸ்த்வமோகா ப்யஸ்த்ரப்ரபந்தநா  ததாபும்ஸாமவிஸ்ரம்பாத் ப்ரபத்தி: ப்ரச்யுதா பவேத் தஸ்மாத்விஸ்ரம்பயுக்தாநாம் முக்திம் தாஸ்யதி ஸாசிராத்” (72) என்று இவ்வர்த்தந்தான் ஸநத்குமாரஸம்ஹிதையிலே சொல்லப்பட்டதிறே. 

@@@@@

இருபத்தொன்பதாம்பாட்டு

29.  மந்திரமுமீந்த குருவு மம்மந்திரத்தால்

    சிந்தனை செய்கின்ற திருமாலும் – நந்தலிலா

    தென்றுமருள்புரிவர் யாவரவரிடரை

    வென்று கடிதடைவர் வீடு.

பதவுரை

மந்திரமும் – அநுஸந்தாதாவுக்கு ரக்ஷகமான திருமந்த்ரமும்

ஈந்தகுருவும் – அம்மந்த்ரப்ரதனான வாசார்யனும்

அம்மந்திரத்தால் – அந்த திருமந்த்ரத்தால்

சிந்தனைசெய்கின்ற – அநுஸந்திக்கப்படுகிற

திருமாலும் – ஶ்ரீய:பதியும்

நந்தலிலாது – கேடில்லாமல் (இடைவிடாமல்)

என்றும் – ஸர்வகாலமும்

அருள்புரிவர் – ப்ரஸாதத்தைப்பண்ணுகைக்கு விஷயபூதர்

யாவர் – யாவர்சிலர்

அவர் – அவர்களே

இடரை – ஸாம்ஸாரிகது:க்கங்களை

வென்று – ஜயித்து

கடிது – ஶீக்ரமாக

வீடு – மோக்ஷத்தை

அடைவர் – ப்ராபிப்பர்கள்.

அவதாரிகை –  இருபத்தொன்பதாம்பாட்டு.  மந்த்ரகுரு தேவதைகள் மூன்றினுடையவும் ப்ரஸாதத்துக்கு ஸர்வகாலமும் விஷயமாய்ப் போருமவர்கள் ஸம்ஸாரது:க்கத்தைவென்று  சடக்கென மோக்ஷத்தைப் பெறுவரென்கிறார். 

வ்யாக்யானம் – (மந்திரமும்) “மந்தாரம் த்ராயத இதி மந்த்ர:” (73) என்கிறபடியே அநுஸந்தாதாவுக்கு ரக்ஷகமான திருமந்த்ரமும்.  (ஈந்த குருவும்) மந்த்ரப்ரதனான வாசார்யனும் (அம்மந்திரத்தால் சிந்தனை செய்கின்ற திருமாலும்) அந்த மந்த்ரப்ரதிபாத்யனாய் அத்தாலே அநுஸந்திக்கப்படுகிற ஶ்ரீய:பதியும்.

(நந்தலிலாது)  நந்துதலின்றிக்கே .  அதாவது – நந்துதல் – கேடாய், அதில்லையென்கையாலே விச்சேதமின்றிக்கே யென்கை.  (என்றும் அருள் புரிவர் யாவர்) ஸர்வகாலமும் ப்ரஸாதத்தைப் பண்ணுகைக்கு  விஷயபூதராயிருக்குமவர்கள் யாவர் சிலர்  (அவரிடரை வென்று கடிதடைவர் வீடு) அதாவது – அவர்கள் ஸாம்ஸாரிகமான து:க்கங்களையும் ஜயித்து ஶீக்ரமாக பரமபுருஷார்த்தலக்ஷண மோக்ஷத்தை ப்ராபிப்பர்களென்கை. 

“தேவதாயா குரோஶ்சைவ மந்த்ரஸ்யைவ ப்ரஸாதத: ஐஹிகாமுஷ்மிகா ஸித்திர்த்விஜஸ்ய ஸ்யாந்நஸம்ஶய:” (74) என்று புராணஸார ஸமுச்சயத்தில் மூலமந்த்ர மாஹாத்ம்யத்தில் சொன்ன வசநம் இதுக்கு ப்ரமாணமாக வநுஸந்தேயம்.   “மந்த்ரேதத்தேவதாயாஞ்ச ததா மந்த்ரப்ரதேகுரௌ த்ரிஷுபக்திஸ்ஸதாகார்யா ஸாஹி ப்ரதமஸாதநம்” (75) என்னக் கடவதிறே.   

@@@@@

முப்பதாம்பாட்டு

30.  மாடுமனையும் கிளையுமறை முனிவர்

    தேடுமுயர்வீடும் செந்நெறியும் – பீடுடைய

    எட்டெழுத்தும் தந்தவனே யென்றிராதாருறவை

    விட்டிடுகை கண்டீர்விதி.

பதவுரை

மாடும் – தனக்கு க்ஷீராதிகளைக் கொடுக்கும் பசுக்களும்

மனையும் – போகஸ்தானமான க்ருஹமும்

கிளையும் – ஸஹவாஸயோக்யரான பந்துக்களும்

மறைமுனிவர்தேடும் – வைதிகரான முனிவர்களாலே  விரும்பித் தேடப்படுவதான

உயர்வீடும் – உத்க்ருஷ்டமான மோக்ஷமும்

செந்நெறியும் – அம்மோக்ஷத்தை ப்ராபிக்கும் அர்ச்சிராதி மார்க்கமும்

பீடுடைய – ஸம்ஸார நிவர்த்தகத்வமாகிற பெருமையையுடைய

எட்டெழுத்தும் – திருவஷ்டாக்ஷரத்தை

தந்தவனேயென்றறியாதார் – ப்ரஸாதித்தருளின வாசார்யனே யென்றறியாதவர்களுடைய

உறவை – ஸம்பந்தத்தை

விட்டிடுகை – பரித்யஜிக்கைதானே

விதி – ஶாஸ்த்ரவிஹிதமென்று

கண்டீர் – காணுங்கோள்.

அவதாரிகைமுப்பதாம்பாட்டு.  தனக்கபேக்ஷிதமான ஐஹிகாமுஷ்மிக ஸகலவஸ்துக்களும் திருவஷ்டாக்ஷர ப்ரதனான ஆசார்யனேயென்றிராத வர்களோடுள்ள ஸம்பந்தத்தைவிடுகை ஶாஸ்த்ர விஹிதமென்கிறார். 

வ்யாக்யானம் – (மாடும்) தனக்குபோக்யமான க்ஷீராதிகளையுண்டாக்குமவை யென்றாதரிக்கப்படும் பசுக்களும்,  (மனையும்) போகஸ்தானமான க்ருஹமும்,  (கிளையும்) தங்களோட்டை கலவிதானே போகமாம்படி யிருக்கும் பந்துக்களும்;  இவைமற்றும் ஐஹிகமான போக்யவஸ்துக்களுக்கெல்லா முபலக்ஷணம். 

(மறைமுனிவர் தேடுமுயர்வீடும்) வைதிகராய் பகவந்மநநஶீலராயிருக்குமவர்கள் ப்ராப்யமென்று விரும்பித் தேடப்படுமதாய் கைவல்யமோக்ஷம்போலன்றிக்கே உத்க்ருஷ்டமான மோக்ஷமும்.  (செந்நெறியும்) அந்த மோக்ஷத்தை ப்ராபிக்கைக்குடலாகப் போருமர்ச்சிராதி மார்க்கமும்.  அன்றிக்கே, செந்நெறியென்று அந்த மோக்ஷத்தை ப்ராபிக்கைக் குறுப்பான உபாயத்தைச் சொல்லவுமாம். 

(பீடுடைய வெட்டெழுத்தும் தந்தவனே யென்றிராதாருறவை) கீழுக்தமானவையெல்லாம் ஸம்ஸாரவர்த்தகங்களுமாய், க்ஷுத்ரங்களுமான மந்த்ராந்தரங்கள் போலன்றிக்கே ஸம்ஸாரநிவர்த்தகமாகையாலே வந்த பெருமையையுடைய  திருவஷ்டாக்ஷரத்தைத் தந்தருளின ஆசார்யனே யென்றறியாதவர்களோடுண்டான ஸம்பந்தத்தை. 

(விட்டிடுகை கண்டீர்விதி) விடுகையாவது – ஶாஸ்த்ரவிஹிதம் காணுங்கோளென்கை.  இத்தால் அவர்களோட்டை ஸம்பந்தம் அவஶ்யம் விடவேணுமென்றதாயிற்று.

“ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் குருரஷ்டாக்ஷரப்ரத: இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்தவ்யாஸ்தே மநீஷிபி:” (76) என்னக்கடவதிறே. 

@@@@@

முப்பத்தோராம் பாட்டு

31.  வேதமொருநான்கினுட்பொதிந்தமெய்ப்பொருளும்

    கோதில் மனுமுதல் நூல் கூறுவதும் – தீதில்

    சரணாகதிதந்த தன்னிறைவன்தாளே

    அரணாகுமென்னுமது.

பதவுரை

தீதில் – அப்ராப்தத்வாதி தோஷமில்லாத

சரணாகதி – ப்ரபத்தியை

தந்த – தனக்கு உபகரித்த

தன் இறைவன் – தனக்கு அஸாதாரண ஶேஷியான ஆசார்யனுடைய

தாளே – திருவடிகளே

அரணாகுமென்னுமது – ரக்ஷகமாமென்னுமதுவே

ஒரு – அத்விதீயமாய்

நான்கு – ரிகாதிபேதத்தாலே சதுர்விதமான

வேதம் – வேதத்தினுடைய

உட்பொதிந்த – உள்ளே நிதிபோலே சேமித்துவைத்த

மெய் – தத்வரூபமான

பொருள் – அர்த்தமாம் 

      (இதுவுமன்றி)

கோதில் – அயதார்த்தப்ரதிபாதகத்வமாகிற தோஷமில்லாத

மநுமுதல் நூல் – மந்வாதி ஸகல ஸ்ம்ருதிகள்

கூறுவதும் – சொல்லும்படியான வர்த்தமும் இதுவேயாம்.

அவதாரிகைமுப்பத்தோரா ம் பாட்டு.  ஸகலவேதாந்தர்க் கதமான பரமார்த்தமும், ததுபப்ருஹ்மணங்களான ஶாஸ்த்ரங்கள் சொல்லுமதுவும் ஶரணாகதிப்ரதனான ஸ்வாசார்யன் திருவடிகளே ரக்ஷகமென்னுமது வென்கிறார். 

வ்யாக்யானம் – (வேதமொருநான்கினுட்பொதிந்த மெய்ப்பொ ருளும்) அபௌருஷேயமாய் நித்யநிர்தோஷமாய் ஆப்ததமமாயிருக்கையாலே அத்விதீயமாய், ரிகாதி பேதத்தாலே சதுர்விதமான வேதத்தினுள்ளே எட்டுப்புரியுமிட்டுக் கட்டிவைக்குமாப்போலே சேமித்துவைத்த பரமார்த்தமும்.  இத்தால் வேதமென்கையாலே இ்வர்த்தப்ரதிபாதகமான ப்ரமாணத்தினுடைய கௌரவமும், நான்கினென்கையாலே அதுதன்னில் எங்ஙேனுமொரு ப்ரதேஶத்தில் ப்ரதிபாதிக்கப்படுவதன்றிக்கே, அனேகஶாகா ரூபமான  வதுக்கெல்லாம் தாத்பர்யம் இதுவென்னுமிடமும், உட்பொதிந்தவென்கையாலே – அதுதான் மேலெழச் சொல்லிப்போருமதின்றிக்கே உள்ளே சேமித்துவைக்கப்பட்ட தென்னுமிடமும்;  மெய்ப்பொருள் என்கையாலே – அதுதான் அர்த்தவாதரூபமானதன்றிக்கே தத்வரூபமான அர்த்தமென்னு மிடமும் சொல்லிற்றாயிற்று. 

(கோதில் மனுமுதல் நூல் கூறுவதும்) கோதில்லாத மந்வாதி ஶாஸ்த்ரங்கள் சொல்லுவதும்.  கோதில்லாமையாவது – குற்றமில்லாமை.  அதாவது – அயதார்த்த ப்ரதிபாதகமாகிற தோஷமில்லாமை.  இது மனுவுக்கு விஶேஷணமாதல், எல்லாத்துக்கும் விஶேஷணமாதல்.  மனுவுக்கு விஶேஷணமானபோது – “யத்வைகிஞ்ச மநுரவதத் தத்பேஷஜம்”  (யஜு.வேதம் 2, காண்ட் 2,   ப்ர 10.8) (77)என்றும், மந்வர்த்தவிபரீதாது யா ஸ்ம்ருதிஸ் ஸாநஶஸ்யதே” (78) என்றும் சொல்லும்படியான அதினுடைய ப்ராமாண்ய கௌரவம்  சொல்லுகிறது.  எல்லாத்துக்கும் விஶேஷணமானபோது அவற்றினுடைய ஆப்ததமத்வம் சொல்லுகிறது.  மனுமுதல் நூல்களாவன – மற்றுமுண்டான ஸாத்விக ஸ்ம்ருதிகளும், இதிஹாஸபுராணங்களும்,  பாஞ்சராத்ராதிகளுமாகிற ஶாஸ்த்ரங்கள்.  கூறுகையாவது – இவையெல்லாம் ஏககண்டமாக வேதஹ்ருதயமான அர்த்தத்தைச் சொல்லுகை.  வேதார்த்தத்தை விஶதீகரிக்கையிறே இவற்றுக்கு க்ருத்யம். 

(தீதில் ஶரணாகதிதந்த) தீதில்லாத ஶரணாகதியையுபகரித்த.  அதாவது – அதிக்ருதாதிகாரத்வமும், அபாயபஹுளத்வமும், அப்ராப்தத்வமுமாகிற  தோஷமின்றிக்கேயிருக்கிற ஶரணாகதியை தரித்ரனுக்கு சீரியநிதியைக் கொடுக்குமாபோலே உபகரித்தவென்கை.

“பீடுடை எட்டெழுத்தும் தந்தவனே” என்றார் கீழ்;  இங்கே ஶரணாகதி தந்தவனென்கிறார்;  கீ.ழதுபோலுமன்றிறே இது. நம்மாசார்யர்கள் மற்ற ரஹஸ்யங்களிரண்டிலும் அர்த்தத்தை மறைத்து ஶப்தத்தை வெளியிட்டுக்கொண்டு போருவர்கள்.  இதிலர்த்தம்போலே ஶப்தத்தையும் மறைப்பார்க ளென்னும்படி  யிருப்பதொன்றாகையாலே, திவ்யமங்கள விக்ரஹமும், விக்ரஹகுணங்களும், திவ்யாத்மஸ்வரூபமும், ஸ்வரூபகுணங்களும் நித்யமுக்தருக்கு ப்ராப்யமாயிருக்கு மாப்போலே முமுக்ஷுவாய் ப்ரபந்நனானவதிகாரிக்கு  த்வயஶரீரமே ப்ராப்யமாயிருக்கு மென்றிறே நஞ்சீயரருளிச் செய்தது.  இப்படியிருக்கிற வற்றையிறே இவனுக்கு உபகரித்தது. 

(தன்னிறைவன்) தன்னுடையவாசார்யன்.  இறைவனென்றது – ஶேஷியென்றபடி.  தன்னிறைவனென்கையாலே – ஸர்வஸாதாரணஶேஷியான ஈஶ்வரனைப்போலன்றிக்கே தனக்கஸாதாரண ஶேஷியானவனென்கை.  (தாளே) அவனுடைய திருவடிகளே.  ப்ரதமபர்வத்தோபாதி சரமபர்வத்திலும் திருவடிகளேயிறே உத்தேஶ்யம்.  அவதாரணத்தாலே அதினுடைய ஸஹாயாந்தர நைரபேக்ஷ்யம் சொல்லுகிறது. 

(அரணாகுமென்னுமது) ரக்ஷகமாமென்கிற அர்த்தமென்கை.  அரணாவது – ரக்ஷகம்.  தன்னிறைவனென்றும், தானே அரணாகுமென்றும்,  ஶேஷித்வ ஶரண்யத்வங்களைச் சொல்லுகையாலே ப்ராப்யத்வம் அர்த்தாத் ஸித்தமிறே.

“குருரேவ பரம் ப்ரஹ்ம  குருரேவ பராகதி: குருரேவ பராவித்யா குருரேவ பரம் தநம் குருரேவ பர:காமோ குருரேவ பராயணம் யஸ்மாத்ததுபதேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோகுரு: || அர்ச்சநீயஶ்ச வந்த்யஶ்ச கீர்த்தநீயஶ்ச ஸர்வதா| த்யாயேஜ்ஜபேந் நமேத்பக்த்யா பஜேதப்யர்ச்சயேந்முதா|  உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்  இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வஶாஸ்த்ரேஷு ஸம்மதம்  ஏவம் த்வயோபதேஷ்டாரம் பாவயேத்  புத்திமாந் தியா” (79) என்றும் ஶ்ரீஸாத்விகதந்த்ரத்திலே த்வயப்ரஸங்கத்திலே ததுபதேஷ்டாவான ஆசார்யனுடைய வைபவம் பகவானாலே அருளிச்செய்யப்பட்டதிறே. 

@@@@@

முப்பத்திரண்டாம் பாட்டு

32.  மானிடவனென்றும் குருவை மலர்மகள்   கோன்

    தானுகந்தகோல முலோகமென்றும் – ஈனமதா

    வெண்ணுகின்ற நீசரிருவருமே யெக்காலும்

    நண்ணிடுவர் கீழாம்நரகு.

பதவுரை

குருவை – தனக்கு உபகாரகனான வாசார்யனை

மானிடவனென்றும் – மநுஷ்யனென்றும்

மலர்மகள்கோன் – ஶ்ரீய:பதியானவன்

தானுகந்தகோலம் – தானுகந்தருளின அர்ச்சாவிக்ரஹத்தை

உலோகமென்றும் – அதினுபாதாநமான லோஹமென்றும்

ஈனமதா – ஹீநமாக

எண்ணுகின்ற – சிந்தியாநிற்கிற

நீசர் – அத்யந்த நிக்ருஷ்டரான

இருவருமே – இவர்களிருவருமே

எக்காலும் – காலதத்வமுள்ளதனையும்

கீழாம் – மிகவும் தண்ணியதான

நரகு – நரகத்தை

நண்ணிடுவர் – ப்ராபிப்பர்கள்.

அவதாரிகைமுப்பத்திரண்டாம் பாட்டு.  திருவஷ்டாக்ஷர ப்ரதனான  வாசார்யன் திருவடிகளே ஸகலப்ராப்யமென்றறியாதா ருறவை விடுகை ஶாஸ்த்ரவிஹிதமென்றும், ஸகல ஶாஸ்த்ரமும் ப்ரதிபாதிப்பது ஶரணாகதி ப்ரதனான  ஆசார்யன் திருவடிகளே ரக்ஷகமாமென்னுமது வென்றுமருளிச் செய்கையாலே ஆசார்யவைபவத்தை ப்ரகாஶிப்பித்தார் கீழிரண்டு பாட்டாலே.  இப்பாட்டில் இப்படி யிருந்துள்ள வாசார்யனை அவதார விஶேஷமென்று  ப்ரதிபத்தி பண்ணாதே  மாநுஷ ப்ரதிபத்தி பண்ணுமவனுக்கு வருமநர்த்தத்தை அர்ச்சாவதாரத்தில் உபாதாந நிரூபணம் பண்ணுமவனோடு சேர்த்தருளிச் செய்கிறார். 

வ்யாக்யானம் – (மானிடவனென்றும் குருவை) ஆசார்யனை மநுஷ்யனென்றும்;  அதாவது – “ஸக்ஷாந் நாராயணோ தேவ: க்ருத்வா மர்த்த்யமயீம் தநும்” இத்யாதிப்படியே தன்னைஸம்ஸாரத்தில் நின்று மெடுக்கைக்காக ஈஶ்வரன் மநுஷ்யரூபங்கொண்டு  வந்திருக்கிறானென்றறியாதே  மேலெழுந்த வாகாரத்தைப் பார்த்து ஆசார்யனை மநுஷ்யனென்று ப்ரதிபத்தி பண்ணுகை.  “யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீபப்ரதே குரௌ மர்த்தயபுத்திஶ்ஶ்ருதம் தஸ்ய ஸர்வம் குஞ்ஜரஶௌசவத்” (பாகவதம்) (81) என்று ஆசார்யனை மநுஷ்யனென்று நினைக்கிறவன் புத்தி அஸத்புத்தி யென்றும், அவன் கற்ற கல்வியெல்லாம் நிஷ்ப்ரயோஜநமென்றும் ஶ்ரீபாகவதத்திலே சொல்லிற்றிறே.

(மலர்மகள்கோன் தானுகந்த கோலமுலோகமென்றும்) ஶ்ரீய:பதியானவன் தானுகந்தருளின விக்ரஹத்தை லோஹமென்றும்;  அதாவது – “உமருகந்துகந்த வுருவம் நின்னுருவம்” (திருவாய் 8.1.4) என்கிறபடியே ஆஶ்ரிதரானவர்க ளுகந்ததடியாக அவனுகந்து பரிக்ரஹித்துநிற்கிற அர்ச்சாரூபத்தை அப்ராக்ருதவிக்ரஹத்தோபாதியாக ப்ரதிபத்தி பண்ணவேண்டியிருக்க, மேலெழுந்த வாகாரத்தையே பார்த்து அதினுடைய உபாதாந நிரூபணம்  பண்ணுகை.  “அர்ச்சாவதாரோபாதாநம் வைஷ்ணவோத்பத்தி சிந்தநம் மாத்ருயோநி பரீக்ஷாயாஸ்துல்ய மாஹுர்மநீஷிண:” (82) என்று அர்ச்சாவதாரோபாதந நிரூபணத்தை மாத்ருயோநி பரீக்ஷா ஸமமாக ஶாஸ்த்ரம் சொல்லிற்றிறே. 

(ஈனமதா) ஹீநமாக – இப்படித் தண்ணியதாக என்றபடி.  (எண்ணுகின்ற நீசர்) சிந்தியா நிற்கிற நீசர்.  இவர்களிற்காட்டில் தண்ணியரில்லையென்கை.  அதாவது – ஆசார்யவிஷயத்தையும் அர்ச்சாவதார விக்ரஹத்தையும் கீழ்ச்சொன்னபடியே தண்ணியதாக ப்ரதிபத்தி பண்ணுமவர்கள் கர்மசண்டாளர்களென்கை. 

(இருவருமே) இவ்விருவரோடு துல்யபாபிகளில்லாமையாலே மேற்சொல்லுகிறவநர்த்தம் இவர்களிருவர்க்குமே யுள்ளதென்கை.  (எக்காலும்)  எல்லாகாலத்திலும்.  காலதத்வமுள்ளதனையு மென்றபடி.  (நண்ணிடுவர் கீழா நரகு) இதுக்குமேல் பொல்லாததில்லை என்னும்படித் தண்ணியதான நரகத்தை ப்ராபிப்பர்களென்கை.  எக்காலும் நண்ணிடுவரென்கையாலே நரகத்திலே ஸ்ருஷ்டியும் நரகத்திலே ஸம்ஹாரமுமாய்ச் செல்லுமாயிற்று.  அன்றிக்கே, எக்காலும் கீழாநரகென்று விடியாவெந்நரகான ஸம்ஸாரத்தைச் சொன்னபோது நித்யஸம்ஸாரிகளாய்ப் போருவர்களென்றபடி. 

“விஷ்ணோரர்ச்சாவதாரேஷு லோஹபாவம் கரோதி ய: யோ குரௌ மாநுஷம்பாவ முபௌ நரகபாதிநௌ” (83) என்கிற ப்ரஹ்மாண்டபுராண வசநம் இவ்வர்த்தத்துக்கு ஸம்வாதமாக அநுஸந்தேயம். 

@@@@@

முப்பத்துமூன்றாம்பாட்டு

33.  எட்டவிருந்தகுருவை யிறையன்றென்று

    விட்டோர்பரனை விருப்புறுதல் – பொட்டெனத்தன்

    கண்செம்பளித்திருந்துக் கைதுருத்திநீர்தூவி

    அம்புதத்தைப் பார்த்திருப்பானற்று.

பதவுரை

எட்டவிருந்த – ஸந்நிஹிதனா யிருக்கிற

குருவை – ஆசார்யனை

இறையன்றென்று – ஶேஷியன்றென்று

விட்டு – த்யஜித்து

ஓர் பரனை – தனக்கு அணுகவரியனாயிருக்கும் பரனான ஸர்வேஶ்வரனை

விருப்புறுதல் – லபிக்கவேணுமென்று ஆசைப்படுகை

பொட்டென – சடக்கென

தன்கண் – தன் கண்ணை

செம்பளித்திருந்து – மூடிக்கொண்டிருந்து (மேல் விளைவதை விசாரியாமலிருந்து)

கைதுருத்திநீர் – கையில் துருத்தியில் விடாய்க்காக சேர்த்துவைத்திருந்த ஜலத்தை

தூவி – நிலத்திலே உகுத்து

அம்புதத்தை – ஆகாஶவர்த்தியான மேகத்தை

பார்த்திருப்பானற்று – விடாய் பிறந்தபோது ஜலபானம்செய்ய ப்ரதீக்ஷித்திருக்குமவன் போன்றதாகும்.

அவதாரிகைமுப்பத்துமூன்றாம்பாட்டு.  ஆஸந்நனா யிருக்கிற வாசார்யனை அவமதிபண்ணிக்கைவிட்டு அதிதூரஸ்தனான வீஶ்வரனை அபேக்ஷித்ததசையில் உதவுமென்று நினைத்து ஆசைப்படுமவன் அறிவுகேடனென்னுமத்தை த்ருஷ்டாந்தமுகேன முப்பத்துமூன்றாம்பாட்டு அருளிச் செய்கிறார். 

வ்யாக்யானம் – (எட்டவிருந்தகுருவை) ஆஸந்நமாகவிருந்த வாசார்யனை.  அதாவது – சக்ஷுர்கம்யனாய்த் தனக்கு வேண்டியபோது ரக்ஷகனாகவும், போக்யனாகவும் உஜ்ஜீவிக்கலாம்படி ஸந்நிஹிதனாயிருக்கிற ஆசார்யனை யென்கை. 

(இறையன்றென்று விட்டு) ஶேஷியன்றென்று விட்டு.  அதாவது – ஶாஸ்த்ரகம்யனாய். அதிதூரஸ்தனாய், தனக்கணுகவரியனாயிருக்கும் ஈஶ்வரனை ரக்ஷகனாகவும் போக்யனாகவும் அநுஸந்தித்து அவனைலபிக்கவேணுமென்று ஆசைப்படுகையென்கை. 

(பொட்டென) சடக்கென.  (தன் கண் செம்பளித்திருந்து) தூங்குவாரைப்போலே தன் கண்ணை மூடிக்கொண்டிருந்து.  மேல் விளைவது விசாரியாமலிருந்தென்றபடி.  (கைத் துருத்தி நீர் தூவி) விடாய்பிறந்தபோது உபஜீவிக்கலாம்படி துருத்தியிலே சேர்த்துத் தன்கரஸ்தமாயிருக்கிற ஜலத்தை நிலத்திலே உகுத்து.

(அம்புதத்தைப் பார்த்திருப்பானற்று) மேககதமான ஜலம் விடாய்க்கு உதவுமென்று நினைத்து ஆகாஶவர்த்தியாய் அதிதூரஸ்தமாயிருக்கிற அம்புதத்தைப் பார்த்திருக்கு மவனைப் போலே.  அவனைப்போலேயென்றது – அவன் செயலைப்போலே என்றபடி.  அல்லது விருப்புறுதல் என்றதோடு சேராதிறே. 

“சக்ஷுர்கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ரகம்யந்து  யஸ்ஸ்மரேத் கரஸ்தமுதகம் த்யக்த்வா கநஸ்தமபிவாஞ்சதி” (84) என்றிவ்வர்த்தந்தான் பகவத்போதாயநக்ருதமான புராண ஸமுச்சயத்தில் ஆசார்யமாஹாத்ம்ய ப்ரகரணத்தில் சொல்லப்பட்டதிறே.  

@@@@@

முப்பத்துநாலாம் பாட்டு

34.  பற்றுகுருவை பரனன்றென விகழ்ந்து

    மற்றோர்பரனை வழிப்படுதல் – எற்றே தன்

    கைப்பொருள் வி்ட்டாரேனும் காசினியில் தாம்புதைத்த

    அப்பொருள் தேடித்திரிவானற்று. 

பதவுரை

பற்றும் குருவை –  தன்னாலே பற்றப்பட்டிருக்கிற ஆசார்யனை

பரனன்றென – ரக்ஷகனன்றென்று

இகழ்ந்து – அவமதிபண்ணிக் கைவிட்டு

மற்றோர் பரனை – வேறேயொரு பரனான ஸர்வேஶ்வரனை

வழிப்படுல் – தன் ரக்ஷணார்த்தமாக அநுவர்த்திக்கை

தன்கைப்பொருள் – தன் கையிலிருக்கிற தநத்தை

விட்டு – அல்பமென்ற நினைவாலே த்யஜித்து

ஆரேனும் – மற்றெவராகிலும்

தாம் – தாங்கள்

காஶினியில் – பூமிக்குள்ளே

புதைத்த – மறைத்துவைத்திருக்கும்

அப்பொருள் – அந்த தநத்தை

தேடித்திரிவானற்று – தேடித்திரியுமவன் செயல்போலாகும்

எற்றே – என்னேயென்று து:க்கிக்கிறார். 

அவதாரிகைமுப்பத்துநாலாம் பாட்டு.  அதிஸுலபனாய்த் தனக்குக் கைபுகுந்திருக்கிற ஆசார்யனை அபரத்வபுத்தியாலே உபேக்ஷித்து, அதிதுர்லபனாய் அநேகயத்நப்பட்டுக் காணவேண்டும்படியிருக்கும் ஈஶ்வரனை அபேக்ஷித்த ஸமயத்தில் தமக்கு உதவுமென்று நினைத்து அநுவர்த்திக்கை அஜ்ஞாநகார்யமென்னுமதை இன்னமொரு த்ருஷ்டாந் தத்தாலே தர்ஶிப்பிக்கிறார். 

வ்யாக்யானம் – (பற்றுகுருவை) தன்னாலே பற்றப்பட்டிருக்கிற வாசார்யனை.  அதாவது – அதிஸுலபனாய் தனக்கபேக்ஷிதமான தசையில் ரக்ஷகனாகவும் போக்யனாகவும் ஆஶ்ரயிக்கப்பட்டிருக்கிற வாசார்யனை என்கை.  (பரனன்றெனவிகழ்ந்து) “யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீபப்ரபே குரௌ” (85) என்று பகவதவதாரமாக ஶாஸ்த்ரம் சொல்லுகையாலே பரனாயிருக்கிறவனை, ஸஜாதீயபுத்தி யாலே இவன் பரனன்றென்று அவமதிபண்ணிக் கைவிட்டு. 

(மற்றோர் பரனை வழிப்படுதல்) வேறேயொரு பரனை வழிப்படுகை.  அதாவது – அதி துர்லபனாய்த் தன்கண்ணுக்கு விஷயமன்றிக்கே அநேகம் வருத்தப்பட்டுக் காணவேண்டும்படி யிருப்பானான வீஶ்வரனைத் தனக்கு ரக்ஷகனும் போக்யனுமாக நினைத்துத் தல்லாபார்த்தமாக வநுவர்த்திக்கையென்கை.  (எற்றே) இவன் விட்ட விஷயத்துக்கும் பற்றின விஷயத்துக்குமுள்ள நெடுவாசியைத் திருவுள்ளம்பற்றி விஷண்ணராய் என்னேயென்கிறார். 

(தன் கைப்பொருள்விட்டு) வேண்டினபோது விநியோகம் கொள்ளலாம்படி மடிச்சீலையிலே கட்டித் தன்கையிலிருக்கிற  தநத்தை அல்பமென்ற நினைவாலே விட்டு. 

(ஆரேனும் காசினியில் தாம் புதைத்த) வெளிநிலத்திலன்றிக்கே பூமிக்குள்ளே மற்றாரேனும் தாங்கள் புதைத்துவைத்த.  (அப்பொருள் தேடித்திரிவானற்று) அந்த தநத்தைத் தான் லபிக்கைக்குத் தேடித்திரியுமவன்போலே.  இங்குமவன் செயல்போலேவென்றபடி.  வழிப்படுதல் என்றத்தோடு சேரவேணுமிறே. 

“ஸுலபம் ஸ்வகுரும்த்யக்த்வா  துர்லபம் உபாஸதே  லப்தம் த்யக்த்வா தநம் மூடோ குப்தமந்வேஷதி க்ஷிதௌ” (86) என்னக்கடவதிறே.  இந்த ஶ்லோகத்திலே உபாஸதே – என்றது ஆர்ஷம்.  உபாஸ்தே யென்றபடி (ஸித்தம்). 

@@@@@

முப்பத்தஞ்சாம்பாட்டு

35.  என்றுமனைத்துயிர்க்கு மீரஞ்செய்நாரணனும்

    அன்றும் தன்னாரியன்பாலன்பொழியில் – நின்ற

    புனல் பிரிந்த பங்கயத்தைப் பொங்கு சுடர் வெய்யோன்

    அனலுமிழ்ந்து தானுலர்த்தியற்று.

பதவுரை

நின்றபுனல் – தனக்கு தாரகமாயிராநின்ற ஜலத்தை

பிரிந்த – விட்டகன்ற

பங்கயத்தை – தாமரைப்பூவை

பொங்கு சுடர் – கிளர்ந்த தேஜஸ்ஸையுடைய

வெய்யோன் – ஆதித்யனானவன்

தான் – முன்பு விகாஸத்தைப் பண்ணும் தானே

அனலுமிழ்ந்து – நெருப்பையுமிழ்ந்து

உலர்த்தியற்று – உலர்த்திவிடுமாப்போலே

என்றும் – ஸர்வகாலமும்

அனைத்துயிர்க்கும் – ஸர்வாத்மாக்களுக்கும்

ஈரம் செய் – தண்ணளி பண்ணாநிற்கும்

நாரணனும் – ஸர்வேஶ்வரனும்

தன்னாரியன்பால் – தனக்கு தாரகனான ஆசார்யன் பக்கல்

அன்பொழியில் – ப்ரேமம் குலைந்தால்

அன்றும் – நிக்ரஹத்தைப் பண்ணா நிற்கும்.

அவதாரிகைமுப்பத்தஞ்சாம்பாட்டு.  ஆஸந்நமாய் ஸுலபமான ஆசார்ய விஷயத்தைவிட்டு தூரஸ்தமாய் துர்லபமான ஈஶ்வர விஷயத்தை ஆசைப்படுவார் அறிவிலிகளென்னுமத்தை த்ருஷ்டாந்தத்வயத்தாலே தர்ஶிப்பித்தார் கீழ்.  ஆசார்ய விஷயத்தில் ப்ரேமமற்றவனுக்கு ஈஶ்வரன்  ஒருகாலமும் அநுக்ரஹம் பண்ணான்;  நிக்ரஹமே பண்ணுமென்னுமத்தை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச்செய்கிறார் இதில். 

வ்யாக்யானம் – (என்றும்) எக்காலத்திலும்.  (அனைத்துயிர்க்கும்) எல்லாவாத்மாக்களுக்கும்.  (ஈரஞ்செய் நாரணனும்) தண்ணளி பண்ணாநிற்கும் ஸர்வேஶ்வரனும்.  நாரணனுமென்றது – “உறவேல் நமக்கிங்கொழிக்க வொழியாது” (திருப்பாவை – 28) என்கிறபடியே ஸகலாத்மாக்களோடும் அவர்ஜநீயமான ஸம்பந்தமுடைய வனாகையாலே  ஸர்வவத்ஸலனென்று தோற்றுகைக்காக.  (அன்றும்) நிக்ரஹத்தைப் பண்ணாநிற்கும்.  அன்றுதல் – சீறுதல். 

(தன்னாரியன்பாலன்பொழியில்) தன்னாசார்யன்பக்கல் ப்ரேமமற்றால். அதாவது – கீழ்ச்சொன்னபடியே இறையன்றென்றும் பரனன்றென்றும் நினைத்துத் தானவனைவிடும்படி தத்விஷயப்ரேமம் குலையிலென்கை.

(நின்ற புனல்பிரிந்த பங்கயத்தை) உத்பத்தியேதுடங்கித் தனக்குத்தாரகமாகப் பற்றிநின்ற ஜலத்தைவிட்டகன்ற தாமரையை.  (பொங்குசுடர் வெய்யோன்) கிளர்ந்த தேஜஸ்ஸையுடையனாய் உஷ்ணகிரணனான ஆதித்யன்.  அதாவது – “செங்கமலமந்தரஞ்சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” (பெருமாள் திரு – 5.6) என்கிறபடியே நீரைப்பிரியாமல் நிற்குங்காலத்தில் என்றுமொக்கத் தன்னுடைய  கிரணங்களாலே அதுக்கு விகாஸத்தைச் செய்துகொண்டு போருமவனென்கை. 

(அனலுமிழ்ந்து தானுலர்த்தியற்று) நெருப்பை யுமிழ்ந்து தான் அத்தை உலர்த்திவிடுமாப் போலென்கை.  இத்தால் நீரைப்பிரியாமல்  நிற்குங்காலத்தில்  தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன்றானே நீரைப்பிரிந்த காலத்தில் நெருப்பையுமிழ்ந்து அத்தையுலர்த்தி விடுமாப்போலே.   ஆசார்யஸம்பந்தம் குலையாமல் நின்றகாலத்திலே என்றுமொக்க அநுக்ரஹஶீலனாய் இவன் ஸ்வரூபத்தை விகஸிப்பிக்கும் ஈஶ்வரன்றானே ஆசார்யஸம்பந்தம் குலைந்தால் நிக்ரஹஶீலனாய் இவன் ஸ்வரூபத்தை ஸங்கோசிப்பித்து விடுமென்றதாயிற்று. 

“நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ: ப்ரச்யுதஸ்ய துர்புத்த்தே:  கமலம் ஜலாதபேதம் ஶோஷயதி ரவிர் நதோஷயதி” (87) என்னக்கடவதிறே. 

@@@@@

முப்பத்தாறாம்பாட்டு

36.  வில்லார்மணிகொழிக்கும் வேங்கடப்பொற்குன்றுமுதல்

    செல்லார்பொழில் சூழ்த்திருப்பதிக – ளெல்லாம்

    மருளாமிருளோட மத்தகத்துத்தன்தாள்

    அருளாலே வைத்தவவர்.

பதவுரை

வில்லார் – தேஜஸ்ஸு மிக்கிருந்துள்ள

மணி – ரத்நங்களை

கொழிக்கும் – குவித்தெறடா நிற்கும்

வேங்கடம் – திருவேங்கடமென்கிற

பொற்குன்றுமுதல் –  ஸ்ப்ருஹணீயமான  திருமலைத் தொடக்கமாயுள்ள

செல்லார் – மேகங்கள் வந்து படியும்படியிருக்கும்

பொழில் – பொழில்களாலே

சூழ் – சூழப்பட்டிருக்கிற

திருப்பதிகளெல்லாம் – உகந்தருளின திவ்யதேஶங்க ளெல்லாம்

மருளாமிருள் –  அஜ்ஞாநமாகிற அந்தகாரமானது

ஓட – அதிஶீக்ரமாகப் போம்படியாக

மத்தகத்து – ஶிஷ்யனானவன் ஶிரஸ்ஸிலே

தன் தாள் – தம்முடைய திருவடிகளை

அருளாலே – நிர்ஹேதுக க்ருபையாலே

வைத்த – வைத்தருளின

அவர் – ஆசார்யரான அவரேயாவர்.

அவதாரிகைமுப்பத்தாறாம்பாட்டு.  ஸச்சிஷ்யனாய் ஸதாசார்ய ப்ரேமமுடையவனா யிருக்குமவனுக்கு ஸகலதிவ்யதேஶங்களும் தன்னாசார்யனே யென்கிறார். 

வ்யாக்யானம் – (வில்லார்மணிகொழிக்கும்) தேஜஸ்ஸு மிக்கிருந்துள்ள ரத்நங்களைத் திருவருவிகளானவை கொழித்தெறடாநிற்கும்.  வில்லாவது – தேஜஸ்ஸு.  ஆர்தல் – மிகுதி.  பன்மணி நீரோடுபொருதுருளும் கானமுடைய வேங்கடமிறே. 

(வேங்கட பொற்குன்று முதல்) திருவேங்கடமென்கிற திருநாமத்தை யுடைத்தாய் ஸர்வைஸ்ஸ்ப்ருஹணீயமான திருமலை தொடக்கமாயுள்ள.   (செல்லார்பொழில் சூழ்) உயரத்தினதிஶயத்தாலே மேகங்கள் வந்து படியும்படி யிருக்கும் பொழில்களாலே சூழப்பட்டிருக்கிற.  செல் – மேகம்.  ஆர்தல் – படிதல்.  (திருப்பதிகளெல்லாம்) உகந்தருளின நிலங்களான திவ்யதேஶங்களெல்லாம்.

(மருளாமிருளோட) அஜ்ஞாநாந்தகாரமானது அதிஶீக்ரமாகப் போம்படியாக.  (மத்தகத்துத்தன் தாளருளாலே வைத்தவவர்) ஶிஷ்யன் ஶிரஸ்ஸிலே தம்முடைய திருவடிகளை ஹேத்வந்தரங்களாலன்றிக்கே க்ருபையாலே வைத்தருளின ஆசார்யரானவவரென்கை.  அர்ச்சாஸ்தலங்களைச் சொன்னவிது – பரவ்யூஹாதிஸ்தலங்களுக்கெல்லாம் உபலக்ஷணம்.  பரவ்யூஹாதி பஞ்ச ஸ்தலமும் ஆசார்யனே என்றிருக்கக் கடவனென்னுமத்தை “பாட்டுக்கேட்குமிடம்” (ஶ்ரீவசநபூஷணம்) என்று தொடங்கி பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்தாரிறே. 

“யேநைவகுருணா யஸ்ய ந்யாஸவித்யா ப்ரதீயதே தஸ்யவைகுண்டதுக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவஸ:” (88) என்கிற வசனம் இதுக்கு ஸம்வாதமாக வநுஸந்தேயம். 

@@@@@

முப்பத்தேழாம்பாட்டு

37.  பொருளுமுயிரு முடம்பும் புகலும்

    தெருளும் குணமும் செயலும் – அருள்புரிந்த

    தன்னாரியன் பொருட்டாச் சங்கற்பம் செய்பவர் நெஞ்சு

    எந்நாளும் மாலுக்கிடம்.

பதவுரை

பொருளும் – தனக்குண்டான தநமும்

உயிரும் – தன் ப்ராணனும்

உடம்பும் – தன் ஶரீரமும்

புகலும் – தன் க்ருஹமும்

தெருளும் – தன் ஜ்ஞாநமும்

குணமும் – தன்னுடைய ஶமதமாதி குணங்களும்

செயலும் – தன் வ்யாபாரங்களும் – ஆகிய இவையெல்லாவற்றையும்

அருள் புரிந்த – நிர்ஹேதுக க்ருபை பண்ணித் தன்னையங்கீகரித்தருளின

தன்னாரியன் பொருட்டா – தன் ஆசார்யனுக்குச் சேஷமாக

சங்கற்பம் செய்பவர் – ஸங்கல்பித்திருக்குமவர்களுடைய

நெஞ்சு – ஹ்ருதயமானது

எந்நாளும் – எப்போதும்

மாலுக்கு – ஸர்வேஶ்வரனுக்கு

இடம் – விரும்பி வர்த்திக்கும் இடமாகும்.

அவதாரிகைமுப்பத்தேழாம்பாட்டு.  அர்த்தப்ராணஶரீராதிக ளெல்லாம் ஆசார்யஶேஷமாக வநுஸந்தித்திருக்குமவர்கள் நெஞ்சு, ஸர்வேஶ்வரனுக்கு ஸர்வகாலமும்  வாஸஸ்தாநமென்கிறார். 

வ்யாக்யானம் – (பொருளும்) தனக்குண்டானவர்த்தமும்.  (உயிரும்) தன்னுடைய ப்ராணனும்.  (உடம்பும்) தன்னுடைய ஶரீரமும்.  (புகலும்) தன்னுடைய க்ருஹமும்.  (தெருளும்) தன்னுடைய ஜ்ஞாநமும்.  (குணமும்) தன்னுடைய ஶமாதிகுணங்களும் (செயலும்) தன்னுடைய ப்ரவ்ருத்திகளும் – இவை எல்லாவற்றையும்.

(அருள்புரிந்த தன்னாரியன் பொருட்டா) ஒரு ஹேதுவின்றிக்கே யிருக்கச்செய்தே க்ருபையைப் பண்ணித் தன்னையங்கீகரித்த தன்னுடைய வாசார்யன் பொருட்டாக.  தச்சேஷமாக வென்றபடி.  (சங்கற்பம் செய்பவர் நெஞ்சு) ஸங்கல்பம் பண்ணுமவர்கள் நெஞ்சு.  அப்படி ஸங்கல்பித்திருக்கு மவர்களுடைய ஹ்ருதயமென்றபடி. 

(எந்நாளுமாலுக்கிடம்) எல்லா காலமும் ஸர்வேஶ்வரனுக்கு வாஸஸ்தாநம்.  இவன் ஸகலமும் தன்னாசார்யனுக்குச் சேஷமென்று ஸங்கல்பித்து “தேவுமற்றறியேன்”  (கண்ணி – 2) என்றிருக்க, அவன் இவனுடைய ஹ்ருதயத்தைத் தானாதரித்துக் கொண்டிருக்கு மாயிற்று. 

“ஶரீரம் வஸு விஜ்ஞாநம் வாஸ: கர்ம குணாந் அஸூந்  குர்வர்த்தம் தாரயேத் யஸ்து ஸ ஶிஷ்யோ நேதரஸ்ஸ்ம்ருத:”  “குர்வர்த்தம் ஸ்வாத்மந: பும்ஸ: க்ருதஜ்ஞஸ்ய மஹாத்மந: ஸுப்ரஸந்நஸ்ஸதா விஷ்ணுர் ஹ்ருதி தஸ்ய விராஜதே” (89) என்று ஜயஸம்ஹிதையில் ஶ்ரீவராஹநாயநார் அருளிச்செய்த வசநம் இதுக்கு ஸம்வாதமாக அநுஸந்தேயம்.  

@@@@@

முப்பத்தெட்டாம் பாட்டு

38.  தேனார்கமலத் திருமாமகள் கொழுநன்

    தானே குருவாகித் தன்னருளால் – மானிடர்க்காய்

    இந்நிலத்தேத் தோன்றுதலால் யார்க்குமவன் தாளிணையை

    உன்னுவதே சாலவுறும்.

பதவுரை

தேனார் – மது ஸம்ருத்தி மாறாத

கமலம் – செவ்வித் தாமரைப்பூவை வாஸஸ்தானமாகவுடைய

திருமாமகள் – பெரியபிராட்டியாருக்கு

கொழுநன் – வல்லபனான ஸர்வேஶ்வரன்

தானே – ஸர்வாதிகனான தானே

குருவாகி – மநுஷ்யரூபங்கொண்டு ஆசார்யனாகி

தன்னருளால் – தன்னுடைய க்ருபையாலே

மானிடர்க்காய் – உபதேஶத்தால் திருந்துவதற்கு யோக்யரான மநுஷ்யர்களுக்காக

இந்நிலத்தே – அவர்களிருந்த இப்பூமியிலே

தோன்றுதலால் – அவதரிக்கையால்

யார்க்கும் – எல்லா சேதநர்க்கும்

அவன் தாளிணையை – ஶேஷியான அந்தவாசார்யன் திருவடிகளை

உன்னுவதே – ப்ராப்யமாக அநுஸந்திக்குமதுவே

சால உறும் – மிகவும் ஸ்வரூபத்துக்குச் சேரும்.

அவதாரிகைமுப்பத்தெட்டாம் பாட்டு.  ஆசார்ய வைபவத்தை பஹுவிதமாக வருளிச்செய்தார் கீழ்.  அதெல்லாம் தகுமென்கைக்காக ஆசார்யன் பகவதவதாரமென்னுமத்தை ப்ரகாஶிப்பித்து, இப்படி யிருக்கையாலே எல்லார்க்கும் அவன் திருவடிகளை அநுஸந்திப்பதே மிகவும் அநுரூபமென்று இவ்வர்த்தத்தை நிகமிக்கிறார். 

வ்யாக்யானம் – (தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்) தன்னோட்டை ஸ்பர்ஶத்தாலே எப்போதுமொக்க செவ்விபெற்றிருக்கையாலே மதுஸம்ருத்தி மாறாத  தாமரைப்பூவை வாஸஸ்தானமாகவுடையவளாய் ஶ்ரீயென்று திருநாமமாயிருக்கும்  பெரியபிராட்டியாருக்கு வல்லபனா னவன்.  (தானே) ஶ்ரீய:பதியாகையாலே ஸர்வாதிகனான தானே.  (குருவாகி) திவ்யரூபத்தை மறைத்து மநுஷ்யரூபங்கொண்டு ஆசார்யனாய். 

இதுக்கடி யென்னென்னில் – (தன்னருளால்) தன்னுடைய க்ருபையாலே.  ஹேத்வந்தரமில்லையென்கை.  இப்படி அவதரிக்கிறது தானாருக்காகவென்னில்  (மானிடர்க்காய்) ஶாஸ்த்ரவஶ்யமான மநுஷ்யஜன்மத்திலே பிறந்து உபதேஶாதிகளாலே திருத்தினால் திருந்தி உஜ்ஜீவிக்கைக்கு யோக்யரான ஆத்மாக்களுக்காக.

(இந்நிலத்தே தோன்றுதலால்)  ப்ரஜை விழுந்த கிணற்றிலே யொக்கக்குதிக்கும் தாயைப்போலே இவர்கள் ஸம்ஸாரார்ண வமக்நராய்க் கிடக்கிற இந்த பூமியிலே அவதரிக்கையால்.  (யார்க்கும்) வர்ணபேதத்தாலும், ஆஶ்ரமபேதத்தாலும், ஸ்த்ரீபுருஷ பேதத்தாலும் பலவகைப்பட்டிருக்கிற ஆத்மாக்களெல்லார்க்கும். 

(அவன் தாளிணையை யுன்னுவதே) ஶேஷியாய், ஶரண்யனாய், ப்ராப்யனாயிருக்கிறவவனுடைய திருவடிகளிரண்டையும் உத்தேஶ்யமாகவும் ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும்  அநுஸந்தித்திருக்குமதே.  அவதாரணத் தாலே, இதொழிய மற்றொன்றும் வேண்டாவென்கை.  (சாலவுறும்) மிகவுமுறும்.  உறுகை – தேறுகை.  இத்தால் மிகவும் ஸ்வரூபத்துக்கு அநுரூபமென்கை. 

“ஸாக்ஷாந் நாராயணோ தேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும் மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ரபாணிநா தஸ்மாத் பக்திர்குரௌகார்யா ஸம்ஸாரபயபீருணா” (90) என்று ஜயாக்யஸம்ஹிதையிலே ஶாண்டில்யன் சொன்ன வசனம்  இப்பாட்டில் சொன்னவர்த்தத்துக்கு ஸம்வாதமாக அநுஸந்தேயம். 

@@@@@

முப்பத்தொன்பதாம் பாட்டு

39.  அலகைமுலை சுவைத்தாற்கன்பரடிக்கன்பர்

    திலதமெனத் திரிவார்தம்மை – உலகர்பழி

    தூற்றில் துதியாகும் தூற்றாதவரிவரைப்

    போற்றிலது புன்மையேயாம்.

பதவுரை

அலகைமுலை – பெற்ற தாய்போல் வந்த பேயின் முலையை

சுவைத்தார்க்கு – அவள் ப்ராணனோடே புஜித்துத் தன்னைநோக்கித் தந்தவன்பக்கல்

அன்பரடிக்கு – ப்ரேமயுக்தரானவர்களுடைய திருவடிகளில்

அன்பர் – ப்ரேமயுக்தராய்

திலதமென – லோகத்துக்குத் திலகபூதரென்று ஶ்லாகிக்கும்படி

திரிவார்தம்மை – ஸஞ்சரிக்கும் மஹாத்மாக்களை

உலகர் – லௌகிகரானவர்கள்

பழிதூற்றில் – பகவத்விஷயத்திலும், வர்ணாஶ்ரமாதி  விபாகமற  பாகவதவிஷயத்தில் அதிப்ராவண்யமுடையவ ரென்பதே  ஹேதுவாக நிந்திக்கில்

துதியாகும் – அது இவர்கள் குணப்ரகாஶகமாகையால் ஸ்துதியாகும்

அவர் – அந்த லௌகிகர்

தூற்றாது – அப்படி நிந்தியாமல்

இவரை- இந்த பாகவத ப்ராவண்யமுடையவர்களை

போற்றில் – நல்லவரென்று புகழில்

அது – அந்த புகழ்கை

புன்மையேயாம் – நிந்தையேயாய்விடும்.

அவதாரிகைமுப்பத்தொன்பதாம் பாட்டு.  இவ்வாசார்ய வைபவமறிந்து, இவ்விஷயத்திலற்றுத் தீர்ந்துநிற்பா ரேற்றமறிவார் விஶேஷஜ்ஞரன்றோ?  அறியாத லௌகிகர் “பகவத்விஷத்திலுங்காட்டில் இவ்விஷயமே உத்தேஶ்ய மென்று பற்றித்திரியாநின்றார்” என்று பழிதூற்று வர்களாகிலோவென்ன – இது பகவத்விஷயத்தி லூன்றிநிற்பாரெல்லார்க்கு மொக்குமிறேயென்று பார்த்து தத்விஷயத்திலுங்காட்டில் ததீயவிஷயத்திலூன்றி நிற்பாரேற்றத்தைச் சொல்லி, இப்படி நிற்குமதிகாரிகளுக்கு லௌகிகர் பண்ணும் நிந்தை(ஸ்துதி?)யும் ஸ்துதி நிந்தையுமாய் விடுமென்கிறார். 

வ்யாக்யானம் – (அலகைமுலை சுவைத்தார்க்கு) அலகையென்று – பேய்க்குப்பேர்.  “பெற்றதாய்போல் வந்த பேய்ச்சி” (பெரிய திருமொழி – 1.3.1) என்கிறபடியே தன் வடிவைமறைத்துத் தாய்வடிவைக்கொண்டு வந்த பேய்ச்சியுடைய முலையை ப்ராணஸஹிதமாகப் பசையறச் சுவைத்தவனுக்கு. 

(அன்பரடிக்கன்பர்) “ஸ்தந்யம் தத்விஷஸம்மிஶ்ரம் ரஸ்யமாஸீஜ்ஜகத்குரோ: “ (ஹரிவம்ஶம் 35) (91) என்றும் ”விடப்பாலமுதா வமுது செய்திட்ட மாயன்” (திருவாய் – 1.5.9) என்றும் சொல்லுகிறபடியே அவள்கையிலகப்படாமல் அந்த விஷப்பாலே அமுதாக்கி அமுதுசெய்து ஜகத்துக்கு வேர்பற்றான தன்னை நோக்கித்தந்தவனென்று அந்தகுணத்துக்குத் தோற்று, அவன்பக்கல் ப்ரேமயுக்கதரா யிருக்குமவர்கள் திருவடிகளில் ப்ரேமயுக்தராயிருக்குமவர்கள். 

(திலதமெனத்திரிவார்தம்மை)  இப்படி பாகவதவிஷய ப்ரேமயுக்தராய்   லோகத்துக்கு இவர்களொரு திலகமென்று விஶேஷஜ்ஞர் ஶ்லாகிக்கும்படி  திரியும் மஹாத்மாக்களை. அன்றிக்கே,  அன்பரடிக்கன்பர்க்கு – இவர்கள் திலகபூதரென்று அறிவுடையார் கொண்டாடும்படித் திரியும் பெரியோர்கள் என்னவுமாம். 

(உலகர் பழி தூற்றில் துதியாகும்) இப்படி யிருக்கும் அதிகாரிகளை வர்ணாஶ்ரமாதி விஶேஷங்களொன்றும் பாராமல் பாகவதரென்கிற மாத்ரமே பற்றாசாகக்கொண்டு பகவத்விஷயந்தன்னிலுங்காட்டில் இவர்களே உத்தேஶ்ய ரென்று நினைத்து அநுவர்த்தித்துத் திரியா நின்றார்களென்று  லௌகிகரானவர்கள் பழிதூற்றில்; அவர்கள் குணப்ரகாஶகமாகையாலே ஸ்தோத்ரமாய்விடும். 

(தூற்றாதவரிவரை போற்றிலது புன்மையேயாம்) இப்படி பழிதூற்றாதே லௌகிகரானவர்கள் கீழ்ச்சொன்னவந்த  வதிகாரிகளை லோகஸங்க்ரஹாதிகளுக்காக மேலெழச் செய்துகொண்டுபோருமாசாரங்களைக் கண்டு அவையடியாக நல்லவர்களென்று புகழில், அது இவர்களதிகாரத்துக்குச் சேராமையாலே புன்மையேயாய்விடுமென்கை.  புன்மை – பொல்லாங்கு, நிந்தையென்றபடி. 

“ந்யாஸவித்யைக நிஷ்டாநாம் வைஷ்ணவாநாம் மஹாத்மநாம் ப்ராக்ருதாபிஸ் ஸ்துதிர்நிந்தா நிந்தாஸ்துதிரிதி ஸ்ம்ருதா”  (92) என்னக்கடவதிறே. 

@@@@@

நாற்பதாம்பாட்டு

40.  அல்லிமலர்ப் பாவைக்கன் பரடிக்கன்பர்

    சொல்லுமவிடுசுருதியாம் – நல்ல

    படியாம் மனுநூற்கவர் சரிதை பார்வை

    செடியார் வினைத்தொகைக்குத் தீ. 

பதவுரை

அல்லிமலர் பாவைக்கு – பெரியபிராட்டியார் விஷயத்தில்

அன்பர் – ப்ரேமயுத்தனாயிருக்கும் ஸர்வேச்வரனுடைய

அடிக்கன்பர் – திருவடிகளில் ப்ரேம யுக்தராயிருக்குமவர்கள்

அவிடுசொல்லும் – விநோதமாய்ச் சொல்லும் வார்த்தையும்

சுருதியாம் – வேதத்தோபாதி ப்ரமாணமாய்ப் பரிக்ரஹிக்கலாயிருக்கும்

அவர்சரிதை – அவர்களுடைய அநுஷ்டாநமானது

மனுநூற்கு – ஸதாசாரப்ரதிபாதகமான மநுஸ்ம்ருதிக்கு

நல்லபடியாம் – நன்றான மூலமாயிருக்கும்;

பார்வை – அவர்களுடைய கடாக்ஷம்

செடியார் – தூறுமண்டிக்கிடக்கிற

வினைத்தொகைக்கு நீ – கர்மஸமூஹத்துக்கு அக்நி போலே நாசகரமாயிருக்கும்

அவதாரிகைநாற்பதாம்பாட்டு.  இப்படியானாலும் இவர்களுடைய சொலவும் செயலும் நாட்டார்க்குப் பொருந்தாமையாலே அதுதன்னையிட்டுப் பழிக்கிலோ வென்ன,  இது ப்ரதமபர்வநிஷ்டர்க்கு மொக்குமிறே யென்றுபார்த்து ஸாமாந்யேந பாகவதர்களுடைய உக்திவ்ருத்திகடாக்ஷங்களினுடைய வைபவத்தைச் சொல்லி இப்ரபந்தத்தை நிகமிக்கிறார். 

வ்யாக்யானம் – (அல்லிமலர்பாவைக்கன்பரடிக்கன்பர்) “கோலமலர்பாவைக்கன்பா”  (திருவாய் – 10.106) என்று இதுவே நிரூபகமாகச் சொல்லி ஸம்போதிக்கும்படித் தாமரைப்பூவை யிருப்பிடமாகவுடைய பெரியபிராட்டி விஷயத்தில் ப்ரேமயுக்தனாயிருக்கு மீஶ்வரன் திருவடிகளில் ப்ரேமமே நிரூபகமாம்படியிருக்கும் பாகவதர்கள்.

(சொல்லுமவிடுசுருதியாம்) வினோதமாய்ச் சொல்லும் வார்த்தை வேதார்த்தமாயிருக்கையாலே  அபௌரு ஷேயமாய்  நித்யநிர்தோஷமாய் ஆப்ததமமாயிருக்கும் வேதத்தோபாதி ப்ரமாணமாய் பரிக்ரஹிக்கலாயிருக்கும். 

(நல்லபடியாம் மநுநூற்கவர் சரிதை) அவர்கள் சரித்ரமானது – தர்மஶாஸ்த்ரங்களில் தலையாய் ஸதாசாரப்ரதிபாதகமா யிருக்கும்  மாநவஶாஸ்த்ரத்துக்கு, இத்தைக்கொண்டோ இது சொல்லிற்றென்னும்படி நன்றானமூலமா யிருக்கும்.  படியாவது – தன்னைக்கொண்டு தனக்குப் போலியானது செய்யலாம்படி மூலமாயிருக்குமதிறே. 

(பார்வை செடியார் வினைத்தொகுதிக்குத்தீ) அவர்களுடைய கடாக்ஷமானது, தூறுமண்டிக்கிடக்கிற கர்மஸமூஹத்துக்கு அக்நிபோலே நாஶகரமாயிருக்குமென்கை.  அதாவது – இவர்களுடைய கடாக்ஷம் – ஸ்வவிஷயமானவர்கள் கர்மத்தை நிஶ்ஶேஷமாகப் போக்குகையாலே ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலமாக்கு மென்றதாயிற்று. 

“வேதஶாஸ்த்ரரதாரூடா: ஜ்ஞாநகட்கதராத்விஜா: க்ரீடார்த்தமபி  யத்ப்ரூயுஸ் ஸதர்ம: பரமோமத:” (93) என்றும் “வாஸுதேவம் ப்ரபந்நானாம் யாந்யேவசரிதாநிவை  தாந்யேவ தர்மஶாஸ்த்ராணீத்யேவம் வேதவிதோ விது:” (94) “ந கத்த்யதி ததா ஜந்து ஸ்தீத்தவாரி சதைரபி லீலயைவ யதாபூப வைஷ்ணவாநாம் ஹி வீக்ஷணை:” (95) என்றும் இதிஹாஸபுராணங்களில் சொல்லப்பட்ட வசனங்கள் இப்பாட்டில் சொன்ன வர்த்தத்துக்கு ப்ரமாணங்களாக வநுஸந்தேயங்கள். 

பெரியஜீயர் அருளிச்செய்த

ஞானஸார வ்யாக்யானம் முற்றிற்று.

பெரியஜீயர் திருவடிகளே சரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.