முதல் அத்தியாயம்
அர்ச்சுனனுடைய சோக யோகம்
அத்தியாயப் பொருள் சுருக்கம்
வேண்டிடத்தில் அன்றி வெறுத்து நலம் இரக்கம்
பூண்டவற்றைப் பொல்லாப்புலம் என்று- மீண்டு அகன்று
சுற்றமது நோக்கியே சோகித்த தேர்விசயன்
உற்ற மயல் சொல்லும் முதல் ஓத்து. (1)
தன்மநிலும்ஆகும் குருநிலத்துத் தாம் சேர்ந்து வன்மைஅமர் இச்சித்து என் மைந்தரும்- தன்மையுறப் பஞ்சவரும் என்செய்தார் என்று அந்தன் பண்புரைப்பச் சஞ்சயனும் சொன்னான் சமைந்து. (2)
பாண்டவர்கள் தங்கள் படை வகுத்த பாங்கதனைப்
பூண்டுமிக நோக்கிப் பொறாமையினால் தூண்டு பரித்
தேர் ஆர் துரோணன்பால் சென்றடைந்து செப்பினான் . தாரார் துரியோதனன்.(3)
பார் ஆரியனே! இப்பாண்டவர்கள் சேனையினைத் தாராரும் பாஞ்சாலன் தந்தமகன்-சீரார்
மதியுடைமை நீகொடுத்த வண்மையினால் காக்கும் விதியுடைமை பூண்ட வியப்பு. (4)
வென்றியமர் வில்லாளர் வீமன் விசயன் என
நன்றியமர் தன்னுள் நலம் புனைவோர் நின்று இகல்வோன்
வெல்லும் விராடன் மிகுதேரான் பாஞ்சாலன்
சொல்லும் அளவோ தொகை. (5)
மற்றும் பல அரசர் மாரதராய் நிற்கின்றார்
முற்றும் அபிமனுடன் முந்துற்றுப்-பற்றி
அமர்முயற்றி சேர்வர் அதுநிற்க கேளாய்
நமர் முயற்றி தன்னை நயந்து. (6)
மின்னுநூல் வேதியனே! வெற்றியரை யான் உரைக்கேன்
முன்னு நீ பாட்டன் முயல்கன்னன்- முன்னங்
கிருபன் அச்வத்தாமா விகன்னனுடன் கேளிர்
நிருபர் பலரும் நிறைந்து.(7)
வேறும் பலசூரர் மெய்யே எனக்காக
ஊறு பட உடலும் உள்ளுயிர் விட்டு – ஏறு
நிலையுடைய பல்படையார் நின்றமருள் என்றும் அலையும் அவர் எல்லாரும் வந்து. (8)
நாங்கள் படை பாட்டன் நயந்து இனிது காக்கவே
இங்கு அமைவு போதாது இராநிற்கும் – அங்கு அவர் தம்
வீமன் மிகக்காக்கும் வென்றிப் படை அமைந்து
சேமம் உறுதி பெறும் சேர்ந்து. (9)
வேகப்படை நடப்பில் எல்லாம் வியந்தும் அது
பாகத்தை நீங்காது பாட்டனையே- ஏகமாய்
ஆங்கமர்ந்து சூழ்ந்தே அமர்முகத்து நோக்குங்கோள் பாங்கமர்ந்து நீங்கள் பலர். (10)
இவ்வாறு இயம்பும் இகல் அரசன் உள்மகிழ
தெவ்வார் குருமுதலாஞ் சீர்பாட்டன்-எவ்வாறும்
சிங்க வரவம் செலுத்தினான் வீடுமன் நல்
சங்கு முழங்குவித்தான் தான். (11)
பின்னும் பலசங்கம் பேரி பெருமுரசு
துன்னும் பணவமுதல் தொல்லியங்கள் -பன்னி
அறைந்தெழுந்த அந்த ஒலி மேலாகும் ஆழி
நிறைந்தெழுந்த பேரொலிபோல் நின்று. (12)
ஆங்கு அதன்பின் வெள்ளைப் புரவி அணி தேரின்மேல்
பாங்கு அமரும் மாதவனும் பாண்டவனும்- ஓங்கு அரவச்
சங்கமலர்க்கைகளினால் தம்முகம் வைத்து ஊதினார்
அங்கமலத்து அன்னம் அதுவாம். (13)
பன்னியசீர் பாஞ்சசனிய பணவத்தை
முன் இருடீகேசன் முழக்கினான் -மன்னியபூந்
தாரார் தனஞ்சயனும் தன் தேவதத்தமெனும்
சீரார் சங்கு ஊதினான் சேர்ந்து. (14)
பாடு ஆர் பவுண்டிரமாம் பாரப் பணிலத்தை
ஓடா விறல் வீமன் ஊதினான் -சேடு ஆர்ந்த
அந்தருமன் மைந்தன் அனந்த விசயம் எனும்
நந்து அரவஞ் செய்தான் நயந்து. (15)
துங்கப் பரி நகுலன் தொல்சீர்ச் சுகோடம் எனும்
சங்கத்து அரவம் தனை விளைத்தான் -துங்கமலர்
மிக்கமணிப் புட்பகத்தை வென்றிச் சகதேவன்
ஒக்க எடுத்து ஊதினான் உற்று. (16)
வில்லாண்மைக் காசிமனும் வென்றிச் சிகண்டியுடன் மல்லார் பாஞ்சாலனவன் மைந்தனும்மற்று -எல்லாரும் சாத்திகியும் சௌபத்திரனும் தனித்தனியே
வாய்த்த தம் சங்கு ஊதினார் மற்று. (17)
அக்கடிய பேரரவம் அந்தன் சுதர் இதயம்
சிக்கெனத் தீரச் சிதைத்ததே -தொக்கு எழுந்து
வான்திசையும் மண்ணகமும் மற்றும் பலவிடமும்
தான் திகழ ஓங்கித்தழைத்து. (18)
போர்முகத்தில் வந்து உன் புதல்வர் தமை நோக்கிக்
கார்முகத்தை வாங்கிக் கவித்துவசன்-போர்முகத்து நின்றார் இருப்படைக்குள் நீ நிறுத்து என் தேர் கண்ணா
என்று ஆங்கு உரைத்தான் இது. (19)
பொல்லாத அந்தன் புதல்வனுக்குப் போர்முயல எல்லாரும் வந்து இங்கு எதிர் நின்றே- வில்லாண்மை ஏவருடன் காட்டுவது என்று ஏவும் படைமுனையில் யாவரையும் காண்பன் இனியான். (20)
என்று விசயன் இசைப்ப எழில் கண்ணன்
சென்று அங்கு இரு படையுள் தேர் நிறுத்தி –நின்று அணியும்
பாட்டன் துரோணன் முன் பார்த்தேனே பல்குருக்கள் ஈட்டம் பார் என்றான் எடுத்து. (21)
பந்தமுற ஆங்கு அவனும் பார்த்தன் படை இரண்டில்
தந்தையர்கள் பாட்டர் தாம் தாழ் குருக்கள்- மைந்தர்
உடன் பிறந்தார் பேரர் உயர் மாமர் தோழர்
மடந்தை அருள் மாமடிகண் மற்றும. (22)
மேவலராய் நின்று எதிர்ந்த மிக்க பெரும் சுற்றமாம் காவலரை நோக்கிக் கவுந்தேயன் – நோவதனால்
மிக்க மனம் பேர் இரக்கம் மேவிப்பிரான் முன்தான்
தக்க உரை செய்தான் தளர்ந்து. (23)
நன்றி புனையும் நமர் எல்லாம் நாள் அமருள்
கன்றிவரக் கண்டு கண்ணனே- குன்றி
முகம் சுவறி மெய்ந் நடுங்கி முற்றும் தளர்ந்து என்
அகம் குழைய ரோமாஞ்சம் ஆம். (24)
கைந் நின்றும் காண்டீவம் வீழும் கனன்று உடல் தோல் மெய் நின்று தாங்க மிக மாட்டேன்- மைந்நின்ற
நெஞ்சம் திகைக்கும் நிமித்தங்களும் தீதா
அஞ்சும்படி ஆம் அவை. (25)
தன் தமரைக் கொன்று சமரத்து தான் சேரும்
நன்றிதனை ஒன்றும் நான்காணேன் – கொன்ற
விசையமும் நான் கண்ணனே! வேண்டேன் அரசும் அசைவில் வரும் சுகமும் ஆங்கு. (26)
இந்த உயிர் அரசு போகங்களால் எமக்கு என்
அந்த அவை யாவர்க்கா அர்த்தித்தோம்- நம் தமராம்
அங்கு அவர்கள் எல்லாம் அமர் தலையிலே நின்றார்
தங்கள் உயிர் வித்தம் தவிர்ந்து. (27)
தந்தை குரு பாட்டர் தம் மாமர் மாமடிகள்
மைந்தர் அவர் மைந்தர் மற்றுள்ள -பந்தத்து
இயன்ற இவர் தம்மை யான் கொல்ல எண்ணேன்
முயன்று கொலினும் எனை மொய்த்து. (28)
மூவுலகும் பேறு எனினும் உன்னேன் கொலையதனில்
பாவுதரைக்காகப் பகைப்பனோ – மேவுசினத்து
அந்தன் புதல்வர்களை ஆங்கு அமருள் கொன்று எங்கட்கு
எந்த உகப்பு உண்டாம் இனி. (29)
பாவிகளாம் மற்று இவரைக் கொன்றாலும் பாவமே மேவும் எமை ஆதலின் இம்மேவலரைச் – சாவ நினைந்து
ஏதம் முயல்கிற்கிலோம் என்சுற்றம் கொன்று
இங்கே மாதவனே! யாம் சுகிப்போம் வந்து. (30)
கோது இல் குலம் செற்ற குற்றம் குலக்கேளைக்
காதிவரும் பாவம் காணாத -ஏதிலர்கள்
ஈங்கு இவர்களேலும் இஃது அறிந்த யாம் தவிர்தல் ஆங்கு இசைகை ஆன அமைவு. (31)
குலம் குறையின் ஆளும் குலத்து அறங்கள் மீது விலங்கு நெறிஅமுக்கி மேல் ஆம் -நலம் குலைந்து
மாதர் நெறி அழிவர் வண்ணம் கெடும் அதுவே
போத நகரப் புணர்ப்பு. (32)
மீதும் அவர் பிதுக்கள் வீழ்வர் மிகுபழியால்
சாதி குலதன்மம் தான் அழியும் -ஆதலினால்
நீங்கா நிரயத்து நிற்பவர் என்று உரைக்கும்
பாங்கு ஆர் சுருதிப் பயன். (33)
மீதும் அவர் பிதுக்கள் வீழ்வர் மிகுபழியால்
சாதி குலதன்மம் தான் அழியும் -ஆதலினால்
நீங்கா நிரயத்து நிற்பவர் என்று உரைக்கும்
பாங்கு ஆர் சுருதிப் பயன்.(35)
. ஐயோ! பெரும் பாவத்து ஆங்கு அமைந்தோம் ஆதலினால்
மெய் ஓரும் சுற்றத்தை வீழ்த்துதலால்-வையோவாச்
சத்திரத்தால் வீண் கைஎனைத் தாம் தடிவரேல் மாற்றார்
அத்திரத்தால் அஃதே கடன். (36)
. இவ்வாறு சொல்லி இகல் விசயன் அன்புடனே
தெவ்வார் சிலை பொகட்டுச் சிந்தைதளர்ந்து -அவ்வாறு
நின்றதேர் மீது நிலைகுலைந்து தானிருந்தான்
துன்று சோகத்தால் திகைந்து .(37)
முதல் அத்தியாயத்தின் கருத்தை கூறும் பாடல்
இப்படியார் பார்த்தன் எழுந்த பெருஞ்சோகத்தால் அப்படியாந் தன்மையினைச் சார்ந்தனை -மைப்படியாம்
மாயனருள் கீதை மன்னு முதல் ஓத்து உரைக்கும்
மேய பொருள் முடிந்தது இங்கு. (1)
பகவத் கீதை வெண்பா முதல் அத்தியாயம் முற்றுப்பெற்றது