நான்காம் திருவாய்மொழி
அஞ்சிறைய: ப்ரவேஶம்
*****
ப – நாலாந்திருவாய்மொழியில், இப்படி ஸுலபனாய் ஸுந்தரனான ஶேஷியைக் கரணத்ரயத்தாலும் அநுபவிக்க இழிந்தவர், அவன் சடக்கென முகங்காட்டாமையாலே அவஸந்நராய், போக விலம்ப ஹேது-பூர்வார்ஜிதாபராதங்களைப் பொறுத்து ரக்ஷிக்கைக்கு உறுப்பான பரிகரோச்ச்ராயத்தையும், அமலங்களாக விழிக்கும் புண்டரீகாக்ஷத்வத்தையும், அநந்யார்ஹமாக்கும் அபதாநவைபவத்தையும், அதுக்கு அவ்யவஹித ஸாதநமான அழகையும், ஸஸ்நேஹமான ஸர்வலோக ரக்ஷணத்தையும், ரக்ஷணத்வரைக்கீடான பரிகரவத்தையையும், ஆஶ்ரிததோஷத்தை அத4:கரிக்கும் அநவதிக க்ருபையையும், தோஷமே போக்யமான நிரதிஶயவாத்ஸல்யத்தையும், அதுக்கடியான நிருபாதிகபந்தத்தையும், அதூரவர்த்தித்வத்தையும் உடையனாகையாலே, நம் தஶையை அறியாமல் விளம்பித்தானித்தனை யென்று அறுதியிட்டு, கடகமுகத்தாலே ஸ்வார்த்தி அறிவிக்கப்பார்த்து, நாயகனான ஈஶ்வரனைப் பிரிந்த நாயகியினுடைய தூதப்ரேஷணமாகிற, அந்யாபதேஶத்தாலே அருளிச்செய்கிறார். இவருடைய ஸ்வரூபம் அநந்யார்ஹஶேஷமாயும், அநந்யரக்ஷ்யமாயும், அநந்யபோக்யமாயும் – ஶேஷிக்கு ஸர்வப்ரகாரத்தாலும் பார்யாவத்பரதந்த்ரமாகையாலும், ஈஶ்வரனுடைய ஸ்வாமித்வாத்மத்வ ஶேஷித்வ பும்ஸ்த்வாதிகளாகிற ஸ்வபாவங்களை அநுஸந்தித்து, சேதநனுக்கு தாஸத்வ தேஹத்வ ஶேஷத்வ ஸ்த்ரீத்வாதி ஸ்வபாவங்கள் அவர்ஜநீயமாய் வருகையாலும், புருஷோத்தம விஷயத்தில் இவருடைய ப்ரணயம் நாயகன்பக்கல் நாயகி ப்ரணயத்தோடு ஸரூபமாகையாலே நாயகிபாசுரத்தாலே அருளிச்செய்யக் குறையில்லை; இது, பிரிந்த தலைமகள் தூதாகையாலே கைக்கிளையா யிருக்கிறது.
ஈடு – பரத்வத்தையும், ப4ஜநீயதையையும், ஸௌலப்4யத்தையும் அநுப4வித்து ஹ்ருஷ்டராய்த் தாமாய்ப் பேசினார் கீழ்; இதில், தாமான தன்மை அழிந்து ஒருபிராட்டி த3ஶையை ப்ராப்தராய், ஹர்ஷத்தாலே சொல்லும் பாசுரம் போய் ஆற்றாமையாலே சொல்லும் பாசுரமாய்ச் செல்லுகிறது; “அயமபர: காரகநியம:” என்னுமாபோலே, கீழ்ப்போந்த ரீதியொழிய வேறொன்றாயிறே இருக்கிறது.
முற்காலத்திலே அல்பம் விவக்ஷிதனாயிருப்பான் ஒருவன், “வீதராக3ரா யிருப்பார் பரிக்3ரஹித்துப் போருகிறதொன்றாய் இருந்தது; தத்வபரமாக அடுக்கும்” என்று இத்திருவாய்மொழியளவும் வர அதி4கரித்து, இத்திருவாய்மொழி யளவிலே வந்தவாறே “இது காமுகவாக்யமாயிருந்ததீ” என்று கைவிட்டுப் போனானாம்; “நிதி3த்4யாஸிதவ்ய:” என்று விதி4க்கிற ப4க3வத்காமமென்று அறிந்திலன் பா4க்3யஹாநியாலே.
“அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன்” (1.3.10) என்ற இது – “அநுப4விக்கிறார்” என்று பிள்ளான் பணிக்கும் என்ற இது, இவருக்கு ‘முனியே நான்முக’(10-10)னளவுமுள்ளது மாநஸாநுப4வமாகையாலே அத்தோடே சேர விழுமிறே; “அநுப4விக்கப் பாரிக்கிறார்” என்கிறவிடம், இத்தோடே போரச் சேர்ந்திருக்கும். திருவுலகளந்தருளினவனுடைய திருவடிகளை அநுப4விப்பதாக ஒருப்பட்டுக் கட்டிக்கொண்டார். அது ஒரு காலவிஶேஷத்திலேயாய், தாம் பிற்பாடராய்த் தோற்றுகையாலே, துணுக்கென்று தாமான தன்மை அழிந்து, ஒரு பிராட்டித3ஶையை ப்ராப்தராய், ஹர்ஷத்தாலே சொல்லும் பாசுரம்போய், ஆற்றாமையாலே சொல்லும் பாசுரமாய்விட்டது.
“ஆர்த்தோ வா யதி3 வா த்3ருப்த:” என்கிற விஷயத்தை அநுப4வித்த இவர்க்கு இழவு வருகைக்கு ப்ரஸங்க3ம் என்னென்னில்; “ஆமத்திற் சோறு பா3த4கம்” என்னுமத்தாலே நிதா3நஜ்ஞரான பி4ஷக்குகள் போ4ஜந நிரோத4ம் பண்ணுமாபோலே, மேல் வரும் அநுப4வங்கள் ஸாத்மிக்கைக்காக நாலடி பேர நின்றான்; ‘மருத்துவனாய் நின்ற மாமணிவண்ண’(பெரியாழ்வார்திருமொழி 5-3-6)னிறே.
அநந்தரம் கலங்கினார். ‘மயர்வற மதிநலம் அருள’(1-1-1)ப்பெற்றவரிறே இப்படி கலங்கினார். அவன்தானே கொடுத்த அறிவும் விஶ்லேஷத்தில் அகிஞ்சித்கரமாம்படியிறே அவனுடைய வைலக்ஷண்யம்; “தத் தஸ்ய ஸத்3ருஶம் ப4வேத்” என்றிருந்தவள்தானே வேண்யுத்3க்3ரத2நாதி3களிலே ஒருப்பட்டாளிறே. “ஹம்ஸகாரண்ட3வாகீர்ணாம் வந்தே3 கே3ாத3ாவரீம் நதீ3ம்” என்றும், “அஶோக ஶோகாபநுத3ஶோகோபஹதசேதஸம்” என்றுமிறே அவர்கள் வார்த்தையும்.
பிராட்டிமார்த3ஶைதான் உண்டாகிறபடி எங்ஙனேயென்னில்; அநந்யார்ஹ ஶேஷத்வத்தாலும், அநந்யஶரணத்வத்தாலும், அந்வயத்தில் த4ரித்து, வ்யதிரேகத்தில் த4ரியாதொழிகையாலும், ததே3கபோ4க3ராகையாலும், அவன் நிர்வாஹகனாக இத்தலை நிர்வாஹ்யமாகையாலும், பிராட்டிமார்த3ஶை உண்டாகத் தட்டில்லை. ஆனால் பிராட்டிதானாகப் பேசுவானென் என்னில்; தாமரை, திருவடிகளுக்குப் போலியாயிருக்க, “வையங்கொண்ட தடந்தாமரை” (6-9-9) என்று – தாமரையாகவே திருவடிகளைப் பேசுகிறாப்போலே, இங்கும் பிராட்டியாகப் பேசுகிறது; முற்றுவமையிருக்கிறபடி.
ராஜர்ஷி, ப்3ரஹ்மர்ஷியான பின்பு க்ஷத்ரியத்வம் பின்னாட்டிற்றில்லை யிறே; எதிர்த்தலையில் பும்ஸ்த்வத்தை அழித்துப் பெண்ணுடை உடுத்தும்படியிறே அவனுடைய புருஷோத்தமத்வம் இருப்பது.
கூடுமிடம் – குறிஞ்சி, அதுக்கு பூ4தம் ஆகாஶம்; பிரியுமிடம் – பாலை, அதுக்கு பூ4தம் தேஜஸ்ஸு; ஊடலுக்கு ஸ்தா2நம் – மருதம், அதுக்கு பூ4தம் வாயு; பிரிந்தார் இரங்குமிடம் – நெய்தல், அதுக்கு பூ4தம் ஜலம். பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலே ஆகையாலே – பிராட்டி, தானும் தன்பரிகர•மாக லீலோத்3யாநத்திலே புறப்பட்டாளாய், தோழிமார் பூக்கொய்கையிலே அந்யபரைகளாக, நாயகனும் ‘தன்னேராயிரம் பிள்ளை’ (பெரியாழ்வார் திருமொழி 3-1-1)களும் தானுமாக வேட்டைக்குப் புறப்பட்டு வர, ஏவுண்ட ம்ருக3ம், இவனை இந்த உத்3யாநத்திலே தனியே கொண்டுவந்து மூட்டி, அது மறைய, தை3வயோக3த்தாலே இருவருக்கும் ஸம்ஶ்லேஷம் ப்ரவ்ருத்தமாய், கூட்டின தை3வம் பிரிக்கப் பிரிந்து, “இனி இரண்டு தலையையும் அழித்தாகிலும் கிட்டவேணும்” என்னும் ஆற்றாமை பிறந்து, தன் பரிஸரத்திலுள்ளார் “எம்மில் முன் அவனுக்கு மாய்வர்” (9-9-5) என்கிறபடியே தளர்ந்து, கால்நடை தருவாரில்லாமையாலே அப்பரிஸரத்திலே வர்த்திக்கிற சில திர்யக்குக்களைப் பார்த்து, “இவை வார்த்தை சொல்லமாட்டாது” என்னுமதறியாதே, “இவற்றுக்குப் பக்ஷபாதம் உண்டாயிருந்ததாகையாலே கடுகப்போய் நம் கார்யம் செய்யவற்று” என்று க3மநஸாத4நமான பக்ஷபாதமே பற்றாசாக, ராவண மாயையால் வரும் அதிஶங்கையுமில்லாமையாலே கண்ணால் கண்டவற்றையெல்லாம் தூதுவிடுகிறாள். “சக்ரவர்த்தி திருமகன் திருவவதரித்தபின்பு வாநரஜாதி வீறுபெற்றாப்போலே காணும் ஆழ்வார்கள் திருவவதரித்து திர்யக்3ஜாதி வீ‑‑றுபெற்றபடி” என்று பட்டர் அருளிசெய்வர்.
இனி, இவர்க்கு யாத்3ருச்சி2க ஸம்ஶ்லேஷமாவது -அநாதி3காலம் இவரைத் தன்னோடே சேரவிடுகைக்கு அவஸரப்ரதீக்ஷனாய்ப் போந்தவன் இவர்பக்கலிலே அப்ரதிஷேத4முண்டாவதொரு அவகாஶம்பெற்று, அவன் ‘மயர்வற மதிநலமருள’ (1-1-1)ப் பெற்ற இது. இவர்க்கு விஶ்லேஷமாவது – அவன் கொடுத்த ஜ்ஞாநம் பேற்றோடே தலைக்கட்டப்பெறாமை. தூதுவிடுகைக்குப் பற்றாசுதான் ஏதென்னில்; தன் மேன்மையாலே இத்தலையில் தண்மை பாராதே வந்து கலந்தான்; கிட்டினவாறே தே3ாஷத3ர்ஶநத்தைப் பண்ணினான்; பிரிந்தவளவிலே “இதுவன்றோ இருந்தபடி” என்று அநாத3ரித்தான்; தோ3ஷத3ர்ஶநம் பண்ணுமளவேயன்றிக்கே, தமக்கு அபராத4ஸஹத்வம் என்றொரு கு3ணமுண்டு நிரூபகமாயிருப்பதொன்று; அத்தை அறிவிக்க வருமென்று அந்த அபராத4 ஸஹத்வம் பற்றாசாகத் தூதுவிடுகிறாள்.
முதல் பாட்டு
*அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய்!* நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவா! என்று எனக்கருளி*
வெஞ்சிறைப்புள் ளுயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்*
வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டால் என்செய்யுமோ.
ப – முதற்பாட்டில், தன் புறச்சோலையில் தடாகத்திலே தன்சேவலோடும் இருக்கிற நாரையைக் கண்டு கருடத்வஜனுக்குத் தூதாக அபேக்ஷிக்கிறாள்.
அளியத்தாய் – எனக்கு அளிக்கத் தகுதியான ஸ்வபாவத்தையுடையையாய், அஞ்சிறைய – (நான் சொன்ன கார்யத்தில் செல்லுகைக்கீடான) அழகிய சிறகையும், மடநாராய் – (சேவலோடு உண்டான சேர்த்தியாலே வந்த துவட்சியாலே) மடப்பத்தையுமுடைய நாராய்! நீயும் – (சேவலையொழியச் செல்லாத) நீயும், நின் அஞ்சிறைய சேவலுமாய் – உன்னோட்டைச் சேர்த்தியாலே புதுக்கணித்த சிறகையுடைய சேவலுமாய், ஆ ஆ என்று என்தனிமை கண்டு ஐயோ! ஐயோ! என்று, எனக்கு அருளி – எனக்கு க்ருபையைப்பண்ணி, வெஞ்சிறை – (விரோதி விஷயத்தில்) வெவ்விய சிறகையுடைய, புள் – பெரிய திருவடியை, உயர்த்தார்க்கு – ரக்ஷணத்துக்குக் கொடியாக எடுத்தவனுக்கு, என்விடுதூதாய்ச் சென்றக்கால் – என்னாலே விடப்பட்ட தூதாய்ச் சென்றக்கால், வன்சிறையில் – (உங்கள் முகம்பார்த்து வார்த்தை கேளாமையாகிற) வலியசிறையிலே, அவன் வைக்கில் – ப்ரணயியான அவன்தானே வைக்கில், வைப்புண்டால் – அதுக்கு இசைந்திருந்தால், என்செய்யும் – (அவ்விருப்பு) என்ன குற்றஞ்செய்யும்?
ஓ என்கிற அசை – கூடாததுகூடுமோ? என்றபடி. பிறர்க்காகச் சிறையிருக்கை பெரிய கோன்மையென்று கருத்து. புள்ளாலே உயர்த்தப்பட்டவ ரென்னவுமாம். இவ்விடத்தில் நாரை தொடக்கமானவற்றைத் தூதாகச் சொல்லிற்று – கடகருடைய கார்யதேஶிகத்வ ஸூசநார்த்தமாக. சிறகைக் கொண்டாடிற்று – ஜ்ஞாநப்ரேமரூப பக்ஷத்வயாந்வயத்தாலே. பேடும் சேவலுமான சேர்த்தி – கடகருடைய பரஸ்பர ஶேஷஶேஷிபாவஸூசகம்.
ஈடு – முதற்பாட்டு. தன் பரிஸரத்திலே வர்த்திப்பதொரு நாரையைப் பார்த்து, “என்றும் சேவலைக் கார்யம் கொள்ளுவார் பேடையை முன்னாகக் கார்யங்கொள்ள வேணும்” என்றிருக்கும் தம் வாஸநையாலே பேடையை முன்னிட்டுச் சேவலைப் பற்றி, நீ என் த3ஶையை அறிவித்து என்னையும் அவனையும் சேர்க்கவேணும் என்கிறாள்.
(அஞ்சிறைய) ப்ரஜை, தாயினுடைய அவயவங்களெல்லாம் கிடக்க, முலையிலே வாய் வைக்குமாபோலே க3மநஸாத4நமான சிறகிலேயாயிற்று முற்படக் கண் வைத்தது. நீர் பாய்ந்த பயிர்போலே பரஸ்பர ஸம்ஶ்லேஷத்தால் பிறந்த ஹர்ஷம் வடிவிலே தொடைகொள்ளலாம்படியிராநின்றது. சிறையென்று – சிறகு. ஆசார்யன்ஜ்ஞாநத்தை அநுமித்து ஶிஷ்யன் உபஸத்தி பண்ணுமாபோலே, சிறகிலே கண் வைக்கிறாள். (மட) ஏவிக் கார்யம் கொள்ளலாம்படி ப4வ்யதை தோற்ற இருந்தது. ஸம்ஶ்லேஷத்தாலே துவண்டு தூதுபோகைக்கு யோக்3யமாம்படி இருக்கை. நாண், மடம், அச்சமென்று – ஸ்த்ரீத்வமாய், பிரிவில் வ்யஸநமறியும் தன் இனமான பேடையைப் பார்த்துச் சொல்லுகிறாள் என்றுமாம். (நாராய்) “அம்மே!” என்னுமாபோலே.
(அளியத்தாய்) அவன் பொகட்டுப்போன ஸமயத்திலே ஆற்றாமை அறிவிக்கலாம்படி வந்து முகங்காட்டின அநுக்3ரஹஶீலதை இருந்தபடியென்! அளி – க்ருபை; க்ருபை பண்ணத்தக்காய் என்றபடி. “பம்பாதீரே ஹநுமதா ஸங்க3த:” போலே; வழிபறிப்பார் கையிலே அகப்பட்டு நிற்க, தாய்முகத்திலே விழித்தாற்போலே. (நீயும்) “ஸ ப்4ராதுஶ்சரணௌ கா3ட4ம் நிபீட்3ய ரகு4நந்த3ந:, ஸீதாமுவாச” என்கிறபடியே – என்றும் சேவலைக் கார்யம் கொள்ளுவார் பேடையை முன்னிட்டுப் போலே காணும் கார்யம் கொள்வது.
(நின்னஞ்சிறைய சேவலுமாய்) பேடையையிட்டாயிற்று சேவலின்பக்கல் ப்ரதிபத்தி; “ஶ்ரிய:பதி” என்னுமாபோலே. (நின்னஞ்சிறைய சேவலுமாய்) “பெண்ணணைந்த வடிவு” என்று தோற்றாநின்றதாயிற்று. அது இட்டவழக்கான நீயும், நீ இட்டவழக்கான சேவலுமாய். (ஆவாவென்று) “ஐயோ! ஐயோ!” என்று. மிது2நமாயிருக்கிறது – தன் ஆர்த்தி பரிஹரிக்கைக்கு என்றிருக்கிறாள். (எனக்கு) “ஏஹி பஶ்ய ஶரீராணி” என்று விரஹம் தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள். அவனோடே கலந்து பிரிந்து, “கண்ணாலே காணப்பெறுவதுகாண்” என்னும் அபேக்ஷையோடே இருக்கிற எனக்கு. (அருளி) இரப்புக்குச் செய்ததாகை யன்றிக்கே உங்கள் பேறாக அருளி; த3யைபண்ணுகைக்கு அத்தலை குறைவற்றாப் போலேயன்றோ த3யாவிஷயமான இத்தலை குறைவற்றபடி. ப4க3வத்3விஷயத்திலும் உபகரிப்பார் ப்ரத்யுபகாரத்துக்கல்ல உபகரிப்பது; தங்கள் க்ருபையாலே யாயிற்று; உப4யவிபூ4தியுக்தனை அவர்கள் உபகரித்தால், அவனுக்கு ஸத்3ருஶமாக உபகரிக்கலாவதில்லையே இவனுக்கு. “விக்ராந்தஸ்த்வம் ஸமர்த்த2ஸ்த்வம் ப்ராஜ்ஞஸ்த்வம் வாநரோத்தம” என்றாற்போலேயிறே இவள் இவற்றை ஶ்லாகி4த்தது.
எங்களை இங்ஙன் கொண்டாடுகிறதென், உன் த3ஶையைக் கண்டு பொகட்டுப் போனவன் எங்கள் வார்த்தை கேட்கப்புகாநின்றானோ? இனித்தான் “நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி” என்கிறபடியே அங்குள்ளார் பரமஸாம்யாபந்நராயன்றோ இருப்பது. நாங்கள் அவனுக்கும் அவர்களுக்கும் வாசியறியும்படி என்? என்றன்றோ நாங்களிருக்கிறது – என்று அவற்றுக்குக் கருத்தாக, மேல் வார்த்தை சொல்லுகிறாள் (வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு) அவர்கள் பரமஸாம்யாபந்நராய் இருக்கையாலே, தனக்கு வ்யாவர்த்தக விஶேஷணமாகப் பெரிய திருவடியை த்4வஜமாக உடையனாயிருக்கும்; விரோதி4யைப் போக்கிக் கொண்டு வருகைக்கு அங்கே நமக்கு ஆள் உண்டென்கிறாளாதல்; நிர்த3யமாகப் பிரித்துக்கொண்டு போகையாலே, “அக்ரூர: க்ரூரஹ்ருத3ய:” என்னுமாபோலே சொல்லுகிறாளாதல். (புள்ளுயர்த்தார்க்கு) புள்ளாலே வஹிக்கப்பட்டவர் என்னுதல்; புள்ளை த்4வஜமாக உடையவர் என்னுதல். (என் விடு தூதாய்) அவன் ஆள்வரவிட இருக்கக்கடவ நானன்றோ விடுகிறேன்.
(விடு) “க்ரியதாம்” என்கிறபடியே நான் ஏவவன்றோ நீங்கள் போகிறது. பெருமிடுக்கரான பாண்ட3வர்கள் க்ருஷ்ணனைத் தூது விட்டாப்போலேயோ? அப3லையாய் அத்யார்த்தையான நான் ஏவவன்றோ போகிறது. பரார்த்த2மாகத் தூதுபோகை கிடைப்பதொன்றோ? (சென்றக்கால்) எனக்கு முன்னே உங்களுக்கு உத்3தே3ஶ்யமன்றோ ஸித்3தி4க்கப் புகுகிறது. உங்கள் போக்கு அடிக்கழஞ்சு பெறாதோ? (வன் சிறையில்) இவள்பாடு நின்றும் சென்றவற்றைச் சிறையிட்டு வைக்கிறானன்றே; இவர்களுக்கு முகம் கொடாதே அந்யபரனாகையிறே – இவர்களைச் சிறையிட்டுவைக்கையாவது. ராஜபுத்ரர்களுக்கு ப்ராப்த காலங்களிலே வெள்ளிலை இடாதபோது மாந்துவர்களிறே. (என் விடு தூதாய்ச் சென்றக்கால் வன்சிறையில் அவன் வைக்கில்) நீங்கள் ஏதேனும் அவனுக்குத் தூது போகிறிகளோ? சிறைகட்டுதல், சிங்கவிளக்கெரித்தல் செய்யில் செய்வதென் என்று கூசுகைக்கு? எனக்குத் தூதுபோனாரை “பரிஷ்வங்கே3ா ஹநூமத:” என்னுமாபோலே மார்பிலே அணைக்கும் காணுங்கோள். நான் அணைய ஆசைப்படுகிற மார்வன்றோ உங்களுக்குப் பரிசிலாகப் புகுகிறது. (அவன் வைக்கில்) “வ்யஸநேஷு மநுஷ்யாணாம்” என்றிருக்குமவன் வைக்குமோ? ஶிரஸா வஹியானோ. (வைப்புண்டால் என் செய்யுமோ) அது பொல்லாதோ கிடைக்குமாகில்? பரார்த்த2மாகச் சிறையிருக்கக் கிடைப்பதொன்றோ? ராவணன் தே3வஸ்த்ரீகளைச் சிறையிட்டு வைக்க, தான் அவர்கள் காலில் விலங்கைத் தன்காலிலே கோத்துச் சிறை மீட்டவளிறே.
இரண்டாம் பாட்டு
என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என்தூதாய்*
என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே*
முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்*
முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே.
ப – அநந்தரம், கீழ்ச்சொன்ன நாரைகளிற்காட்டில் திரளாகையாலே கார்யகரங்களென்று நினைனத்து, சில குயில்களை, ‘என்னுடைய புண்டரீகாக்ஷன்பக்கல் தூதாக வேணும்’ என்று அபேக்ஷிக்கிறாள்.
இனக்குயில்காள் – திரளான குயில்காள்! நீரலிரே – ஶ்ராவ்யமான வாய்வீட்டையுடைய நீங்களல்லீர்களோ? என் – எனக்கே தம்மை ஸ்வம்மாக்கித்தந்த, செய்ய தாமரைக்கண் – சிவந்த தாமரைபோலும் கண்ணையுடையராய், பெருமானார்க்கு – (பின்பு எனக்கு எட்டாமல் உயர்ந்திருக்கிற) ஸர்வாதிகருக்கு, என்தூதாய் – என்னுடைய தூதாய், உரைத்தக்கால் – வார்த்தைசொன்னால், என்செய்யும் – என்ன தப்புச்செய்யும்? முன்செய்த – முன்புசெய்த, முழுவினையால் – பூர்ணபாபத்தாலே, திருவடிக்கீழ் – (ஶ்லாக்யமான) திருவடிகளிலே, குற்றேவல் செய்ய – அந்தரங்கவ்ருத்தி பண்ணுகைக்கு, முன் – முன்புத்தை, முயலாதேன் – ஸாதநத்தில் முயலாத நான், இனம் – இன்னம், அகல்வதுவோ விதி – அகல்வதுவோ அறுதியிட்டது? இவ்விடத்தில் கடகருடைய உக்தி மாதுர்யமும் ஸமவாயமும் ஸூசிதம்.
ஈடு – இரண்டாம் பாட்டு. சில நாரைகளை, தூதுபோகவேணும் என்று இரந்தாள் கீழ்; அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தைக் குயில்களுக்குச் சொல்லாநின்றாள். “அந்யது3பக்ராந்தமந்யதா3பதிதம்” என்னும்படியாய் வந்துவிழுந்தது: இத்தனையும் கலங்கிற்றிலளாகில், இவள் பிரிந்த விஷயத்துக்கும், நாட்டார் பிரிந்த விஷயத்துக்கும் வாசியன்றிக்கேயொழியுமே; இப்படி கலங்கப் பண்ணாதவன்று கு3ணாதி4கவிஷயத்துக்கு நமஸ்காரமாமித்தனையிறே.
(என்) பிரிந்த ஸமயத்திலும் “என்னுடையவன்” என்று சொல்லலாம்படி காணும் கலக்கிற ஸமயத்திலே அவன் இவளிட்டவழக்காயிருந்தபடி. அன்றிக்கே, பிரிகிற ஸமயத்திலே – தான் வருமளவும் இவள் த4ரிக்கைக்காக “இது எங்கே யிருக்கிலென், எங்கே போகிலென், உன் சரக்கன்றோ!” என்று சொல்லிப்போமே; அத்தாலேயாகவுமாம். (என் செய்ய தாமரைக்கட் பெருமானார்க்கு) ஸ்வாபா4விகமான ஐஶ்வர்யத்தாலும் சிவந்திருக்கும்; ஸ்வகீயவஸ்துக்கள் பக்கல் வாத்ஸல்யத்தாலும் சிவந்திருக்கும்; மது4பாநமத்தரைப்போலே இவளோட்டைக் கலவியாலும் சிவந்திருக்கும்; பிரிவாலே அரையாறுபட்டுச் சிவந்திருக்கும்; இவையெல்லாம் இவள் அனுப4வித்தவளிறே. முதல் திருவாய்மொழியிலே ஐஶ்வர்யம்; மூன்றாம் திருவாய்மொழியிலே வாத்ஸல்யம்; இத்திருவாய் மொழியிலே கலவியும், பிரிவும்.
(பெருமானார்க்கு) பிரிகிறபோது கண்ணாலே நோக்கி அநந்யார்ஹை யாக்கிப் போனபடி; ஸ்வாபா4விகமான ஐஶ்வர்யத்துக்குமேலே, இத்தலையில் ஒடுக்குமாட்டால் உண்டான ஐஶ்வர்யமுமுண்டாகையாலே இரட்டித்திருக்குமிறே. (என் தூதாய்) கடலேறி வடிந்தாப்போலேகாணும் கிடக்கிறது. அவனோடே கலந்து பிரிந்து வெறுந்தரையாயிருக்கிற எனக்குத் தூதாய். (என் செய்யும் உரைத்தக்கால்) உப4யவிபூ4தியும் கண்டது உங்களுக்குக் கிஞ்சித்கரிக்க என்றிருக்கிறாள். (உரைத்தக்கால்) அவனைக் கொடுவந்து சேர்க்கச் சொல்லுகிறேனோ? ஒரு உக்தி நேர்ந்தால் என் செய்யும்? (இனக்குயில்காள்) என்னைப்போலேதனியிருக்கிறிகளன்றே. (நீரலிரே) நீர்மைக்கு நீங்களன்றோ. நானும் அவனுமானபோது கேட்டவார்த்தைக்கு ப்ரதிவசநம் பண்ணின நீங்கள், அவன் பிரிந்தவாறே வேறு சிலர் ஆனிகளோ? (முன்) நான் பாபம் பண்ணிப்போருகிற காலம் ஸாவதி4யோ? (செய்த) ஸங்கல்பித்துவிட்டவளவேயோ? (முழுவினை) அதுதன்னில் ஏதேனும் அகஞ்சுரிப்பட்டதுண்டோ? என்னால் பரிஹரிக்கலாதல், தம்மால் பரிஹரிக்க வொண்ணாதொழிதல் செய்யிலன்றோ எனக்கு இழக்க வேண்டுவது. திருக்கோட்டியூரிலே தெற்காழ்வான் கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத் துறையிலே சொன்ன வார்த்தை. “ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாதுகாண்; தெற்காழ்வார் கையில் திருவாழியாலே வினையை அறுத்துக்கொண்டு போகிலத்தனையொழிய ஒன்றிரண்டு முழுக்கால் போகாதுகாண் நான் பண்ணின பாபம்” என்று.
(திருவடிக்கீழ்) ப்3ராஹ்மணர் பிச்சேறினாலும் ஓத்துச் சொல்லுமாபோலே, இவர் பிராட்டியானாலும், முலையால் அணைக்க நினையார்; திருவடிகளிலே அணையத் தேடுமத்தனை. (குற்றேவல்) திருவடிகளிலே கிட்டி அந்தரங்க3 வ்ருத்திபண்ண ஆசைப்படுமத்தனை. (திருவடிக்கீழ் குற்றேவல் முன்செய்ய முயலாதேன்) ஏற்கவே கோலாத நான் என்னுதல்; முன் – “க்ரியதாமிதி மாம் வத3” என்கிறபடியே இன்னத்தைச் செய் என்று ஏவத் திருமுன்பே அடிமைசெய்ய முயலாதேன் என்னுதல். (அகல்வதுவோ விதி) திருவடிகளிலே அடிமை செய்கைக்கு ஈடாக இருப்பதொரு ஸாத4நாநுஷ்டா2நம் என் தலையால் பண்ணாத நான் அகன்றே போமித்தனையோ?
முதலில்லாதார் பலிசை இழக்குமித்தனையன்றோ? என்ன; முதலில்லாதாரன்றோ பலிசை இழப்பார்; அவன்தானே முதலாக இருக்கும் கோ3ஷ்டி2யிறே இவர்கள் கோ3ஷ்டி3; “களை கண் மற்றிலேன்” (5-8-8) என்றும், “உன் சரணல்லால் சரணில்லை” (பெருமாள் திருமொழி 5-1) என்றும். “மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவை” (பெருமாள் திருமொழி 5-7) என்றும், “நெறிவாசல் தானேயாய் நின்றானை” (முதல் திருவந்தாதி –4) என்றும், “விழிக்கும் கண்ணிலேன் நின்கண் மற்றல்லால்” (பெரியாழ்வார் திருமொழி 5-1-2) என்றும், “வாழும் சோம்பர்” (திருமாலை – 38) என்றும் இப்படிகளிலேயிறே இவர்கள்கோ3ஷ்டி2யில் வார்த்தைகளும் இருக்கும்படி.
(விதியினமே) விதியினன் என்றாய் – பாபத்தை உடையேனான நான் அகன்றே போமித்தனையோ? என்னுதல்; “இனம்” என்ற இத்தை, இன்னம் என்றாக்கி – “எங்கள் அபி4மதம் பெறுகைக்கு எங்கள்பக்கல் ஒரு நன்மையில்லாத பின்பும் தாழ்க்குமித்தனையோ? என்கிறாள்” என்று பிள்ளை திருநறையூரரையர் பணிக்கும்படி. விதியினம் – பாவியோம் என்றபடி.
கீழே “முழுவினை” என்று சொல்லிற்றே என்னில்; மஹாபாபத்தைப் பண்ணின பாவியோம் என்றபடி; “பாவமே செய்து பாவியானேன்” (பெரிய திருமொழி 1-9-9) என்னக் கடவதிறே.
மூன்றாம் பாட்டு
விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்*
மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வர்க்கு*
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று* ஒருத்தி
மதியெல்லாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே.
ப – அநந்தரம், அவற்றிற்காட்டில் நடப்பழகையும் ஶுத்தியையுமுடைய சில அன்னங்களைக் குறித்து, ‘என்னை அநந்யார்ஹையாக்கினவர்க்குக் தூதாகவேணும்’ என்று அபேக்ஷிக்கிறாள்.
விதியினால் – பாக்யத்தாலே, (என்னைப்போலே தனியாகாதபடியே), பெடை மணக்கும் – பேடையோடுங்கூட போகஸக்தராய்க் கலந்து, மென்னடைய அன்னங்காள் – அத்தாலே ம்ருதுகதிகளான அன்னங்காள்! மதியினால் – (இந்த்ரனுடைய அபேக்ஷையும் மஹாபலியௌதார்யமும் அவிருத்தமாம்படியான) புத்தி ஸாமர்த்த்யத்தாலே, குறள் மாணாய் – வாமநனான ப்ரஹ்மசாரியாய், உலகு இரந்த – லோகத்தை இரந்து, (சிறுகாலைக்காட்டிப் பெருகாலாலே யளந்துகொண்ட கணக்கிலே தாழநின்று கலந்து எட்டாது) நின்ற, கள்வர்க்கு – க்ருத்ரிமர்க்கு, மதியிலேன் – (அன்றே இக்களவறியப்பெறாதே) மதிகேடியான என்னுடைய, வல்வினையேயோ – (அநுபவவிநாஶ்யமல்லாத) வலிய வினையேயோ, மாளாதென்று – (சிந்தயந்தீ ப்ரப்ருதிகளுடைய வினைகள் முடியச்செய்தே) முடியாததென்று, ஒருத்தி – ஒருத்தி, மதியெல்லாம் – (நீர்கொடுத்த) மதியெல்லாம், உள் கலங்கி – ஆஶ்ரயத்தோடே கலங்கி, மயங்கும் – மோஹியாநின்றாள், என்னீர் – என்னுங்கோள். ஒருத்தியென்றாலே – “அது அவன்கையுணரும்” என்னுமாபோலே தாமே அறிவரென்று கருத்து. விதியினாலென்றது – போகஶாஸ்த்ரமர்யாதையாலே யென்றுஞ் சொல்லுவர். இத்தால் – கடகருடைய ஆசாரவைலக்ஷண்ய•ம் ஶ்ரைஷ்ட்ய•ந் தோற்றுகிறது.
ஈடு – மூன்றாம் பாட்டு. “அகல்வதுவோ?” என்றாப்போலே சொல்லுகிற ப4க்திவாத3ங்கள் நமக்குத் தெரியாது; “அவஶ்யமநுபோ4க்தவ்யம்” என்று சொல்லுகிறபடியே அநுப4வித்தே அறவேணும் – என்று ஈஶ்வராபி4ப்ராயமாகக் கொண்டு, “நான் பண்ணின பாபமேயோ அநுப4வித்தாலும் மாளாதது? என்று சொல்லுங்கோள்” என்று சில அன்னங்களை இரக்கிறாள்.
(விதியினால்) நீங்கள் ஶாஸ்த்ரம் சொல்லுகிறபடியே கலக்கையாலே, பிரிவின்றியே இருந்திகோள்; இவள் ‘அடைவு கெடக் கலக்கையிறே எனக்குப் பிரிவு வந்தது’ என்கிறாள். உங்களுடைய பா4க்3யத்தாலே என்னுதல். என்னுடைய பா4க்3யத்தாலே என்னுதல்.
அபி4மத ஸம்ஶ்லேஷம் புண்யப2லம், அபி4மத விஶ்லேஷம் பாபப2லம்;
(தங்களுடைய ஸுக்ருதத்தாலே) அன்றியே இவை சேரவிருக்கிற இருப்பு இவள் பா4க்3யமாகவுமாம். பெருமாள் பிராட்டியைப் பிரிந்து கடலும் மலையும் அரித்துக்கொண்டு வாராநிற்கச் செய்தே, ராஜ்யதா3ரங்களை இழந்த மஹாராஜரைக் கண்டு, அவர்குறை தீர்த்தபின்பிறே தம் இழவில் நெஞ்சு சென்றது. அங்ஙனன்றிக்கே, இவை குறைவற்று இருக்கிற இதுதான் இவள் கார்யமா யிருக்குமிறே; நீர்மையுடையார்க்குத் தந்தாம் இழவிலும் பிறருடைய இழவிறே நெஞ்சில் முற்படப்படுவது. (பெடை மணக்கும்) பேடையோடே கலக்கும். (பேடையினுடைய கருத்தறிந்து) அத்தை உகப்பிக்கை.
(மென்னடைய அன்னங்காள்) இவ்வன்ன நடைகொண்டோ என் கார்யம் செய்யப் புகுகிறது? (மென்னடைய அன்னங்காள்) “ஸா ப்ரஸ்க2லந்தீ” என்னுமாபோலே. இளையபெருமாளுடைய ஜ்யாகோ4ஷம் செவிப்பட்ட அநந்தரம் மது4பாநத்தாலே வந்த கலக்கமும் தெளிந்து, கழுத்தில் மாலையையும் அறுத்துப்பொகட்டு, “இச்சீற்றத்துக்கு நாம் முன்னிற்கவொண்ணாது” என்று தாரையைப் புறப்படவிட, அவள், கலவியாலுண்டான பாரவஶ்யமடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாப்போலேயிராநின்றதாயிற்று இவற்றின் நடையும். இளையபெருமாளுடைய திருவுள்ளத்தில் சிவிட்குத் தாரையையிட்டு ஆற்றவேண்டிற்று காணும். “ஸா” – ஒருகலவியும் பிரிவும் வேண்டாதபடியான நடையழகை உடையவள்; “ப்ரஸ்க2லந்தீ” – ஸம்ஶ்லேஷத்தால் உண்டான துவட்சியாலே தடுமாறி, அடிமேலடியாக இட்டு வந்தாள்; “மத3விஹ்வலாக்ஷீ” – மது4பாநாதி3களாலே தழுதழுத்த நோக்கையுடையளாய் இருந்தாள்; “ப்ரலம்ப3காஞ்சீகு3ணஹேமஸூத்ரா” – அரை நூல்வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையிற் கிடந்தபடியே பேணாதே வந்தாள். “ஸலக்ஷணா” – ஸம்போ4க3 சிஹ்நங்கள் காணலாம்படி வந்தாள். “லக்ஷ்மண ஸந்நிதா4நம் ஜகா3ம” -“தாய்க்கு ஒளிப்பதுண்டோ” என்று புறப்பட்டு வந்தாள். “தாரா” – தாரையானவள். “இளையபெருமாள் திருவுள்ளத்தில் சிவிட்கு எத்தாலே ஆற்றலாம்” என்று மஹாராஜரும் திருவடியுமாக விசாரித்து, “வேறொன்றால் ஆற்றுமதல்ல, தாரையையிட்டு ஆற்றவேணும்” என்று தாரையை வரவிட்டார்கள். “நமிதாங்க3யஷ்டி:” – உருகுபதத்திலே வளைந்தவை நிமிர்க்கவொண்ணாதாப்போலே, இத்துவட்சி நிரூபகம் இவளுக்கென்று தோற்றும்படி இருந்தாள். அப்படிப்பட்ட நடையழகாலே அவரைத் துவக்கிக் காரியங்கொள்ளவற்று இவையும் என்றிருக்கிறாள்.
(மதியினால்) அவர் சால தூ3ரத3ர்ஶிகள்கிடிகோள்! “ராவணனைப்போலே தலையறுத்துவிடவொண்ணாதபடி ஔதா3ர்யம் என்றொரு கு3ணலேஶத்தை ஏறிட்டுக்கொண்டிருந்தான்; இந்த்3ரன் ராஜ்யத்தை இழந்து நின்றான்; இரண்டுக்கும் அவிருத்3த4மாகச் செய்யலாவதென்?” என்று “கே3ாஸஹஸ்ர ப்ரதா3தாரம்” என்கிறபடியே கொடுத்து வளர்ந்த கையைக்கொண்டு நீரேற்று அவனுக்குக் கொடுத்த விரகர்க்கு. (குறள்) கோடியைக் காணி ஆக்கினாற்போலே, பெரியவடிவழகைக் கண்ணாலே முகந்து அநுப4விக்கலாம்படி சிறுக்கினபடி. (மாணாய்) ‘உண்டு’ என்று இட்டபோதோடு, ‘இல்லை’ என்று தள்ளிக் கதவடைத்தபோதோடு வாசியற முகம் மலர்ந்துபோம்படி இரப்பிலே தழும்பேறின வடிவை உடையனானபடி.
(உலகிரந்த) தன் ஸங்கல்பத்தாலே உண்டாக்கின லோகத்தை “கொள்வன் நான்” (3-8-9) என்று இரந்த. (கள்வர்க்கு) “வஞ்சகர்க்கு’‘ என்று திருமாலையாண்டான் நிர்வஹிக்கும்படி. எம்பெருமானார், “ஒன்றை நினைத்து ஒன்றைச் செய்தவர்க்கு” என்று அருளிச்செய்வர். மஹாப3லியை வஞ்சித்ததும் என்னை வஶீகரிக்கைக்காக. கீழ் தான் “பெருநிலங்கடந்த நல்லடிப்போது” (1-3-10) என்றிறே ஆசைப்பட்டதும்; “உலகங்கொண்ட அடியன் அறிவருமேனி மாயத்தனாகிலும் கொடிய என்னெஞ்சம் அவனென்றே கிடக்கும்” (5-3-5) என்றும், “அன்றொருகால் வையமளந்த பிரான் வாரானென்று ஒன்றொருகால் சொல்லாது உலகு” (5-4-10) என்றுமிறே இவர் கிடப்பது.
திருமங்கையாழ்வாரும் “முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன்” (பெரிய திருமொழி 9-4-2) என்று(ம்) இவர்களெல்லாரும் ஈடுபடுவது இச்செயலுக்கிறே.
(மதியிலேன்) பிரிகிற ஸமயத்திலே, “போகாதேகொள்” என்றேனாகில் இப்பாடு படாதொழியலாயிற்றே; அறிவுகேடியானேன். (வல்வினையே மாளாதோ) இவளொரு தீ3ர்க்க4சிந்தயந்தியாயிற்று. எல்லைச் சதிரியாய் கு3ரு த3ர்ஶநத்திலே முடிந்தாளிறே அவள்.
“தச்சித்தவிமலாஹ்லாத” இ3த்யாதி3 – அவன் பக்கலிலே நெஞ்சை வைக்கையாலே, புண்யப2லம் அநுப4வித்தாள்; அந்நினைவின்படி அநுப4விக்கப் பெறாமையாலே பாபப2லம் அநுப4வித்தாள்; ஆகையாலே புண்யபாபங்கள் இரண்டும் அரைக்ஷணத்திலே அநுப4வித்தாளிறே அவள். (ஒருத்தி) “ஒருத்தி” என்றாள் அறியுமோ? என்னில்; எய்தவன் கை உணராதோ? “இன்ன காட்டிலே மான்பேடை ஏவுடனே கிடந்து உழையாநின்றது” என்று ஊரிலே வார்த்தையானால், எய்தவன் கை உணராதோ? “நீயன்றோ எய்தாய்” என்று சொல்லவேண்டாவிறே. (ஒருத்தி) ஸம்ஸாரவிபூ4தியிலுள்ள இவள் ஒருத்தியுமிறே; ஸம்ஸாரிகள் புறம்பே அந்யபரர்; நித்யஸூரிகளுக்கு விஶ்லேஷமில்லை; மற்றையாழ்வார்கள் இவருக்கு அவயவமாயிருப்பர்கள்.
(மதிகலங்கி) அறிவழிந்தாள் என்னுங்கோள். தன்னறிவு அழிந்தாளாகிலும் நாம் கொடுத்த அறிவு உண்டு என்றிருப்பர்; (மதியெல்லாம் கலங்கி) நாம்கொடுத்த அறிவு கொண்டு “தத்தஸ்ய ஸத்3ருஶம் ப4வேத்” என்றிராளோ? என்றிருப்பர்; அறிவு தந்தார் தாமன்றோ? என்று அறிவியுங்கோள். தாம் ‘மயர்வறு‑த்துத்’ தந்த ஜ்ஞாநப்பரப்பெல்லாம் கலங்குகைக்கு உடலாயிற்று என்னுங்கோள். மேலெழச் சிறிது கலங்கிற்றாகிலும், பின்னையும் நாம் கொடுத்த அறிவன்றோ? அப்படி கலங்குமோ? என்பர் – (மதியெல்லாம் உள்கலங்கி) தாம் தந்த *மயர்வறு மதிநல மெல்லாம் அடிமண்டியோடே கலங்கிற்று என்னுங்கோள். அத்தனையோ? நாம் இருந்தோமே; பின்பு நாம் போனவாறே அறிவு கொடுத்துக் கொள்ளுகிறோம் என்றிராமே – (மயங்குமால்) “மயங்கினாள்” என்னில், “இனிப் போனால் செய்வது என்?” என்றிருப்பர்; முடியும் த3ஶையாயிற்று என்னுங்கோள். (என்னீரே) உங்கள் தலையில் பழியைத் துடைக்கப் பாருங்கோள்; அறிவித்தபின்பு வாராதொழிந்தால் அவனதன்றோ அவத்3யம். ஆர்த்தத்4வநி பொறுக்கமாட்டான், அறிவியுங்கோள். (என்னீரே) உங்களுக்கு ஸ்வரூபம்; அவனுக்கு கு3ணம்; எனக்கு ஸத்தை; உங்களுக்கு ஒரு உக்தி.
நான்காம் பாட்டு
என்நீர்மை கண்டிரங்கி இதுதகா தென்னாத*
என்நீல முகில்வண்ணர்க்கு என்சொ(ல்)லியான் சொல்லுகேனோ*
நன்னீர்மை இனியவர்கண் தங்காதென் றொருவாய்ச்சொல்*
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ.
ப – அநந்தரம், காளமேகநிபஶ்யாமமான வடிவழகையுடையவனுக்குத் தூதாக விடுவதாக நிறத்தழகையுடைய சில மகன்றில்களைப் பார்த்துச் சொல்லுகிறாள்.
(ஸம்ஶ்லேஷ தசையிலே), என்நீர்மை – என்னுடைய (விஶ்லேஷாஸஹ) ஸ்வபாவத்தை, கண்டு – (ஆலிங்கந ஶைதில்யாதிகளில் அங்கவிகாரத்தாலே) கண்டு வைத்து, இரங்கி – (இவள் ம்ருதுப்ரக்ருதியென்று) இரங்கி, இதுதகாதென்னாத – இந்த விஶ்லேஷம் தகுவதல்லவென்னாத, என் நீல முகில்வண்ணர்க்கு – காளமேகம்போலே எனக்குக்காட்டி ஊட்டாது நின்ற வடிவையுடையவருக்கு, என்சொல்லி – என்ன பாசுரத்தைச் சொல்லி, யான் – நான், சொல்லுகேனோ – வார்த்தைசொல்லுவது? (ஆனாலும்), நல் – (உமக்கு ஆதரணீயமாம்படி) நன்றான, நீர்மை – (அவளுடைய) ஸத்பாவம், இனி – இனிமேல், அவர்கண் – அவரிடத்து, தங்காதென்று – நிற்கமாட்டாதென்று, ஒருவாய்ச்சொல் – ஒருவார்த்தைசொல்லுதலை, நன்னீலமகன்றில்காள் – நல்ல நீலநிறத்தையுடைய மகன்றில்காள்! நல்குதிரோ – “வாசா தர்மமவாப்நுஹி” என்று உபகரிக்கிறீர்களோ? நல்கீரோ – உபகரியீர்களோ? “அவர்” என்கிற பஹுமாநோக்தி – நாயகியான கௌரவத்தாலே தூதர் தங்கள் வார்த்தையாகச் சொல்லுகிறாள். இதில் கடகருடைய ரூபவைலக்ஷண்யம் சொல்லிற்றாயிற்று.
ஈடு – நாலாம் பாட்டு. “அநுப4வித்தாலும் மாளாதது நான் பண்ணின பாபமேயோ?” என்று நின்றது கீழ்; இவள் அநுப4வித்தாளோ பின்னை என்னில்; அவன் அரைக்ஷணம் தாழ்ந்து முகமும் மாறவைத்தபோதே எல்லாம் அநுப4வித்தாளிறே. இவ்வளவிலே சில மகன்றில்கள் “நமக்குக் கிஞ்சித்கரிக்க நல்லவளவு” என்று, “நாங்கள் இங்குத்தைக்குச் செய்யவேண்டுவதென்ன?” என்று வந்து முகம் காட்டிற்றினவாகக்கொண்டு, அவற்றைப் பார்த்து, “என் த3ஶையைக் கண்டுவைத்து இரங்காதே போனவனுக்கு நான் எத்தைச் சொல்லுவது?” என்று நிராஶையாய், பின்னையும் சாபலத்தாலே, பலகால் சொல்லு மறுத்தார்க்குச் சொல்லுவாரைப்போலே, “இத்தனையும் சொல்லவல்லிகளோ மாட்டிகளோ?” என்கிறாள்.
(என் நீர்மை கண்டு இரங்கி) என் நீர்மையுண்டு – என் ஸ்வபா4வம் – என்மார்த3வம். (கண்டு இரங்கி இது தகாதென்னாத) இத்தைக்கண்டு த3யைபண்ணி “நாம் பிரியுமது தகாது” என்னாதே பொகட்டுப் போனவர்க்கு. ப4ட்டரை ஒரு தமிழன் “ ‘கேட்டு இரங்கி’ என்னாதே ‘கண்டு இரங்கி’ என்னப் பெறுமோ?” என்ன, “அணைத்த கை நெகிழ்த்தவளவிலே வெளுத்தபடி கண்டால், பிரியத்தகாது என்றிருக்க வேண்டாவோ?”; “இப்படி கூடுமோ?” என்னில்; “புல்லி” (திருக்குறள் – 1187) இத்யாதி3, “காதலர் தொடுவுழி” (குறுந்தொகை – 399) இத்யாதி3. ‘உனக்கு இத்தமிழ் போகாதோ?’ என்றார்.
(என் நீலமுகில்வண்ணர்க்கு என்சொல்லி யான் சொல்லுகேனோ) இத்3த3ஶையிலும் “என்னுடையவன்” என்னும்படிகாணும் முகங்கொடுத்தபடி கலந்தபோது. “அவர்க்கு நான் சொல்லிவிடுவது எத்தை” என்கிறாள். திருமுகம் மறுத்துப் போனவர்க்கு எத்தைச் சொல்லுவது என்கிறாள் காணும். இங்ஙன் சொல்லுவானென்? என்னில்; கண்டு இரங்காதவரோ கேட்டு இரங்கப் புகுகிறார்? என்னுமத்தாலே. கண்டானோ பின்னை? என்னில்; ஏன், கண்டிலனோ? கலக்கிற ஸமயத்தில் கைநெகிழ்த்தவிடமெல்லாம் வெளுக்கக் கண்டிருக்குமே. அன்றிக்கே, இவ்வளவிலே ஸந்நிஹிதனாய் என் த3ஶையைக்கண்டு இதுக்கொரு போக்கடி பாராதே, உங்கள் பக்கலிலே கேட்டறிய இருக்கிறவர்க்கு என்னவுமாம்.
(என் நீர்மை) அவனை அநுப4விக்குமதிலும் அவனைப் பிரிந்து நோவுபடுகிற தன் ஸ்வபா4வத்தைக் கட்டிக்கொண்டு கிடக்க அமைந்திரா நின்றதுகாணும்! (கண்டிரங்கி) “எத்திறம்” (1.3.1) என்னா, மோஹித்து உடம்பு வெளுத்துக் கிடக்கும்படி கண்டால் பிரியப்பொறாது என்றிருக்கவேண்டாவோ? (இது) தன் த3ஶைதானும் தனக்கும் பேச்சுக்கு நிலமல்ல காணும்.
(என் நீலமுகில்வண்ணர்க்கு) அடியிலே வடிவைக்காட்டிக்காணும் அநந்யார்ஹமாக்கிற்று; இவ்வடிவில் புகர் அகவாயிலும் சிறிது உண்டாகப்பெற்ற தில்லை. இல்லையோ? என்னில், ‘யாமுடை ஆயன்தன் மனம் கல்’(9.9.5)லிறே. (என் சொல்லி யான் சொல்லுகேனோ) என்ன பாசுரத்தையிட்டு எத்தை உங்களுக்கு நான் சொல்லிவிடுவது? நான் சொல்லிவிட இருக்கிறவன் நீங்கள் சொல்லுமளவையோ பார்த்திருக்கிறது.
கண்டு இரங்காதவர்க்கு நான் எத்தைச் சொல்லுவதென்று நிராஶையாய், பின்னையும் சாபலாதிஶயத்தாலே வார்த்தை சொல்லுகிறாள். திருமுகம் மறுத்தவன் கடையீட்டுக்குக் கேட்கப்புகுகிறானோ? ஸ்ரீகோ3பிமார் “அத2வா கிம் ததா3லாபை4:” என்ற அநந்தரத்திலே “அப்யஸௌ மாதரம் த்3ரஷ்டும் ஸக்ருத3ப்யாக3மிஷ்யதி” என்னுமாபோலே, “இக்க்ருஷ்ணன் பிதற்றொழிய வேறொன்றில்லையோ?” என்னா “கலந்த நாமன்றோ வேண்டாதது; பெற்ற தாயைக் காணவாகிலும் இங்ஙனே ஒருகால் போதானோ” என்பர்களிறே. (நன்னீர்மை) நல்லுயிர். (இனி) ஆனவளவும் கால்கட்டிப் பார்த்தாள் போலே காணும். (அவர்கண் தங்காது) ஶேஷியான உம்முடைய பக்கலிலே தங்கில் தங்குமத்தனை.
“ந சாஸ்ய மாதா” பெருமாள்பக்கல் குறையேயாய், தன்பக்கல் குறை தோற்றாதபடி பிராட்டி வார்த்தை அருளிச்செய்தவாறே, திருவடி, “நாமோதான் இங்கு நன்றாகச் செய்தோம்? பெருமாளைப் பிரிந்த அநந்தரம் முடிந்ததென்னும் வார்த்தை கேட்கப்பெற்றதில்லையே” என்ன; “மாதா” என்றும் “பிதா” என்றும் பலர்பக்கலிலே பாலிபாயக்கடவதான ஸ்நேஹத்தைப் பெருமாள் என் ஒருத்தி பக்கலிலும் ஒருமடைசெய்து போந்தார்; அவர் இவ்வாற்றாமையாலே ‘உண்ணாதுறங்காதொலிகடலை ஊடறுத்து’(நாச்சியார் திருமொழி 11-7)க்கொண்டு வரக்கொள்ள, விடாயன் தண்ணீர்ப்பந்தலிலே வரக்கொள்ளச் சால் உருண்டு கிடந்தாப்போலே ஆக வொண்ணாது என்று நோக்கி இட்டுவைத்தேனத்தனை; அவரைக்கண்ட பிற்றைநாள் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது’ என்றாளிறே.
(ஒருவாய்ச்சொல்) ஒரு உக்தி நேர அமையும். “வாசா த4ர்மமவாப்நுஹி” (நன்னீலம் இத்யாதி3) அவர் நீலமுகில்வண்ணராயிருந்தார்; நீங்களும் நீல மகன்றில்களாயிருந்திகோள்; செயலும் அவரைப்போலே ஆகிறதோ? இத்தனையும் செய்கிறிகோளோ? முதல் வார்த்தையிலே பதின்கால் சொல் மறுத்தாரைச் சொல்லுமாபோலே சொல்லுகிறாளிறே ஆற்றாமையின் க4னத்தாலே.
ஐந்தாம் பாட்டு
நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே*
நல்கத்தா னாகாதோ நாரணனைக் கண்டக்கால்*
மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே*
மல்குநீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங்கொண் டருளாயே.
ப – அநந்தரம், ஸர்வரக்ஷகனானவன் பக்கலிலே போய் ஒருவார்த்தை சொல்லவேணுமென்று வடிவின் சிறுமையாலே கமநஸௌகர்யத்தை நி?ைனத்து ஒரு குருகை அபேக்ஷிக்கிறாள்.
பொழிலேழும் – லோகங்களேழையும், நல்கி – (அவர்கள்நலம்பாராதே தானே) நல்கி, தான் – அவர்களபேக்ஷாநிரபேக்ஷமாக, காத்து – அநிஷ்டத்தை நிவர்த்திப்பித்து, அளிக்கும் – அபிமதங்களைக் கொடுக்கும், வினையேற்கேயோ – வினையேனான எனக்கேயோ, தான்நல்கஆகாது – தான் நல்கலாகாதென்று கொண்டு, நாரணனை – (ஸர்வரக்ஷகத்வத்துக்கு ஏகாந்தமான ஸம்பந்தத்தையுடைய) நாராயணனை, கண்டக்கால் – கண்டவளவிலே, மல்கும் – மிக்குவரும், நீர் – ஸ்வபாவத்தையுடைய, புனல் – புனலையுடைத்தான, படப்பை – கொடித் தோட்டங்களிலே, இரை தேர் – இரையை ஆராய்கிற, வண்சிறுகுருகே – கண்ணுக்கினிய சிறுகுருகே! மல்கும் நீர் கண்ணேற்கு – மிக்க நீரையுடைத்தான கண்களையுடைய எனக்கு, ஓர் வாசகம் – ஒரு வாசகம், கொண்டு – (என் பக்கலிலே) கைக்கொண்டு, அருளாய் – (அவனுக்குச்சொல்லுகையாகிற) உபகாரத்தைப் பண்ணவேணும். பொழில் – லோகம். நாராயணனென்று – அந்தராத்மத்வ ஸமுத்ரஶாயித்வங்களாகவுமாம். இத்தால், “சிறுமாமனிசர்” என்கிறபடியே கடகவிக்ரஹம் ஸுக்ரஹமென்று தோற்றுகிறது.
ஈடு – அஞ்சாம் பாட்டு. (நல்கித்தான் இத்யாதி3) ‘எங்களை விடீர்; முடிவார்க்கு வேண்டாவிறே; ஜீவிக்க நினைத்திருக்கிற தமக்குத் தாம் வேண்டாவோ?’ என்கிறாள். ‘தம்முடைய நாராயணத்வம் ஒறுவாய்ப் போகாமே நோக்கிக் கொள்ளச் சொல்லும்’ என்கிறாள்.
(நல்கி) விபூ4திரக்ஷணம் பண்ணும்போது, கர்த்தவ்யபு3த்3த்4யாவன்றிக்கே பேறு தன்னதாகக்கிடீர் ரக்ஷிப்பது. எனக்குத் தன்பக்கல் உண்டான வ்யாமோஹம் தனக்கு விபூ4தியிலே உண்டாயாயிற்று ரக்ஷிப்பது. (தான்) அபேக்ஷிப்பா ரின்றிக்கேயிருக்கத் தானே ரக்ஷிக்குமவன். (பொழிலேழும்) கீழும் மேலும் ஒன்றாக நினைத்துச் சொல்லுகிறதாதல், ஸப்தத்3வீபவதியான பூ4மியைச் சொல்லுகிறதாதல்; ஸ்வஶரீரரக்ஷணம் பண்ணுவது ஸ்நேஹபுரஸ்ஸரமாகவிறே. (நல்கித்தான் இத்யாதி3) நாமரூப விபா4கா3நர்ஹமாய்க் கிடந்தவன்று, ஆர் இருந்து அபேக்ஷிக்க இத்தை உண்டாக்கிற்று? ஶக்த்யவஸ்த2ப்ரபை4போலே தான் என்கிற சொல்லுக்குள்ளேயாய், தன்னையிட்டு வ்யவஹரிக்கவேண்டினவன்று தன்மேலே ஏறிட்டுக்கொண்டு நோக்கினானாயிற்று. (காத்தளிக்கும்) காத்துக்கொடுக்கும் என்னுதல்; நோக்கி ரக்ஷிக்கும் என்னுதல்.
(வினையேற்கே நல்கத்தானாகாதோ) இல்லாதவன்று உண்டாக்கினாய்; உண்டாக்கினதுக்குப் ப2லம் கர்மத்தை ஏறிட்டுக் கைவிடுகையோ? ஸ்வஜநரக்ஷணம் பண்ணலாகாதோ? நாட்டுக்கிட்ட நினைப்பு அந்த:புரத்துக்கு அரிதாக வேணுமோ? (வினையேற்கே) கடலிலே ஏற்றமிட்டுத் தண்ணீர் அரிதாம்படியான பாபத்தைப் பண்ணுவேனே! (நாரணனைக் கண்டக்கால்) ஜீவஸமூஹத்தினுடைய ஸ்வரூப ஸ்தி2த்யாதி3கள் ஸ்வாதீ4நமாய், இவை ப்ரகாரமாகத் தாம் ப்ரகாரியாய், இவற்றிலே ஒன்று குறையிலும் தம் இழவாம்படி இருக்கையாலே, நாராயணன் என்று விருதூதித் திரிகிறவரைக் கண்டால், “இப்பேர் யோக3ரூடி4யோ என்றிருந்தோம்; மஹா வ்ருக்ஷத்தோபாதியோ?” என்று கேளுங்கோள்.
(மல்குநீர் இத்யாதி3) உன் செயல் பரார்த்த2மாய் இருந்ததீ! பெருகா நின்றுள்ள நீரை உடைத்தான நீர்நிலம் உண்டு – கொடித்தோட்டம்; அதிலே, (இரைதேர்) பேடையின் வாய்க்கு அடங்குவது தேடாநின்றது. “புள்ளுப் பிள்ளைக்கிரை தேடும்” (திருமொழி 5-1-2) என்னக்கடவதிறே. கயல் உகளாநிற்கச் செய்தேயிறே பிள்ளைவாய்க்கு அடங்குவது தேடுகிறது.
(வண்சிறுகுருகே) குருகு – வண்டானம்; கொய்யடிநாரை. வண்மை – அழகும், ஓளதா3ர்யமும். கைப்பட்ட இரை தன் மிடற்றுக்குக் கீழ் இழித்தா தாயிற்று. நான் உபவாஸக்ருஶையாயிருக்க நினையாதிருக்கும் அவனைப் போலன்றே உன் ஔதா3ர்யம். (சிறுகுருகே) கார்யகாலத்தில் ப்ருஷத3ம்ஶகமாத்ரமாகவேண்டா. தூதுபோகைக்குச் சிரமம் செய்திருப்பாரைப்போலே இருந்தது உன் வடிவில் லாக4வம். (மல்குநீர்க் கண்ணேற்கு) இதுவும் ஒரு நீர்நிலம் இருக்கிறபடி பாராய். இரைதேடுகிற இத்தைவிட்டு இத்தைப் பார்க்குமோ? என்னில்; பார்க்குமிறே; இங்கேயும் சேலும் கயலும் உண்டாகையாலே. (மல்குநீர் கண்ணேற்கு) தனக்கு நிரூபகம் கண்ணநீர்போலேகாணும். அதாவது – கலவியில் ஆநந்தா3ஶ்ரு, பிரிவில் ஶோகாஶ்ரு. (ஓர் வாசகங்கொண்டு) நேரே உடம்பைத் தரவேணும் என்று சொல்லமாட்டாளே, “மறுப்பரோ” என்னும் ப4யத்தாலே. மறுக்கும் வார்த்தையும் அமையும் இத்தலைக்கு; அவர்பக்கலுள்ளது ஒன்றாமத்தனையே வேண்டுவது; “தாரான் தரும் என்றிரண்டத்தில் ஒன்றதனை” (சிறியதிருமடல் – கண்ணி 59) என்றிறே பிராட்டிமார் பாசுரம். “மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்று” (நாச்சியார் திருமொழி 13-9) என்றும், “பாவி நீ என்றொன்று சொல்லாய்” (4.7.3) என்றுமிறே இருப்பது. (அருளாயே) அவை திர்யக்குக்களாகவுமாம், தான் ஜநககுல ஸுந்த3ரியாகவுமாம், உபகரிக்கிறது ப4க3வத்3 விஷயமானால் இங்ஙனல்லது சொல்லவொண்ணாது. “நம்பி ஏறுதிருவுடையான் தா3ஸர் திருநாட்டுக்கு நடந்தார்” என்று ப4ட்டருக்கு விண்ணப்பஞ்செய்ய, துணுக்கென்று எழுந்திருந்து, “அவர் ஸ்ரீவைஷ்ணவர் களுடன் பரிமாறும்படிக்கு, திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்னவேணுங்காண்” என்று அருளிச்செய்தார்.
ஆறாம் பாட்டு
அருளாத நீர்அருளி அவராவி துவராமுன்*
அருளாழிப் புட்கடவீர் அவர்வீதி ஒருநாளென்று*
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி
அருள்* ஆழி வரிவண்டே யாமும்என் பிழைத்தோமே.
ப – அநந்தரம், கையும் திருவாழியுமான ஸர்வேஶ்வரனைக் கண்டு ஒருவார்த்தை சொல்லென்று தர்ஶநீயமான புகரையுடைத்தாயிருப்பதொரு வண்டைப்பார்த்துச் சொல்லுகிறாள்.
ஆழி – வட்டமான, வரிவண்டே – வரியையுடைத்தான வண்டே! அருள் – (தன்னிலும் ஆஶ்ரிதவிஷயத்தில்) க்ருபையையுடையனான, ஆழி அம்மானை – திருவாழியாழ்வானையுடைய ஸ்வாமியை, கண்டக்கால் – கண்டவளவிலே, அருளாத நீர் – (இவ்வளவில் அபராதபூயிஷ்டதையாலே) அருளக்கடவோமல்லோம் என்று அறுதியிட்டிருக்கிற நீர், அருளி – (ஸங்கல்பங் குலைந்து ஒருகால்) க்ருபைபண்ணி, அவர் – அவருடைய, ஆவி – ஆத்மா, துவராமுன் – நீர்மையுலருவதற்கு முன்னே, அருளாழி – க்ருபாஸமுத்ரமான, புள் – பெரிய திருவடியை, அவர்வீதி – அவரிருக்கிற வீதியே, ஒருநாள் – ஒருநாளாகிலும், கடவீரென்று – (ஸ்ரீகஜேந்த்ராதிகள் பக்கல் போவாரைப் போலே அந்யாபதேஶத்தாலே) நடத்தவேணுமென்று, இதுசொல்லியருள் – இத்தைச் சொல்லியருள்; (வாராத தாமேயன்றியே), யாமும் – நாமும், என்பிழைத்தோம் – என் தப்பச்செய்தோம்? இத்தால் கடகருடைய ஸாரக்ராஹித்வமும், ரூபஶோபையுந் தோற்றிற்று.
ஈடு – ஆறாம் பாட்டு. “எங்கள் ஆற்றாமை பரிஹரித்திலராகிலும், தம்•டைய நாராயணத்வம் ஒறுவாய்ப்போகாமே நோக்கிக்கொள்ளச் சொல்லுங்கோள்” என்று நின்றது கீழ்; இதுக்கு அவர்க்கு மறுமாற்றம் – “நம்முடைய நாராயணத்வமும் அழியவமையும், தரமல்லாதாருடன் கலந்து வரும் அவத்3யத்திற்காட்டில்” என்றிறே; “தமக்கு அவத்3யம் வாராமே, எங்கள் ஸத்தையுங்கிடக்கைக்கு ஒரு வழியுண்டு; தாம் அழகு செண்டேறப் புறப்படுதல், ஆனைக்கு அருள்செய்யப் புறப்படுதல் செய்வன சில உண்டிறே; அப்போது எங்கள் தெருவே போனால், தமக்கும் ஸ்வரூபஹாநி வாராது; நாங்களும் ஜாலகரந்த்4ரத்தாலே கண்டு ஜீவித்துக் கிடப்புதோம்; இப்படி அவிருத்3த4மாகச் செய்யலானபின்பு அத்தைச்செய்யச் சொல்” என்று ஒரு வண்டை இரக்கிறாள்.
(அருளாத நீர்) “ஏதத்3வ்ரதம் மம” என்று அருளுகைக்கு ஸங்கல்பித் திருக்குமாபோலே, அருளாமைக்கு ஸங்கல்பித்திருக்கிற நீர். “மயர்வறமதிநல மருளினன்” (1-1-1) என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர் “அருளாத நீர்” என்கிறது – என்ன த3ஶாவிஶேஷம் என்று அறிகிறிலோம். “அருளாத நீர்” என்று – ஒரு திருநாமம் சாற்றுகிறாள். அன்றிக்கே, த3யாவிஷயம் பெறாமையாலே த3யை குமரிருந்து த3யைபண்ணாதிருக்கிற நீர், த4யைக்கு விஷயம் போருமிடத்திலே த3யைபண்ணி என்னவுமாம். (அருளி) அருளே நிரூபகமான ஸ்வரூபம் உம்மது; நிர்த3யர்க்கும் “ஐயோ!” என்னவேண்டும் த3ஶை இவளது; அருளாதொழியும்படி எங்ஙனே? (அவராவி துவராமுன்) பின்னையும் அருளத் தவிரீரிறே; அது அஸத்ஸமமாவதற்கு முன்னே அருளப்பாரும். அவளுடைய ப்ராணன் பசையற உலருவதற்கு முன்னே அருளப்பாரும். “ஜீவந்தீம் மாம் யதா2 ராமஸ்ஸம்பா4வயதி கீர்த்திமாந்” என்னுமாபோலே.
“நாங்கள் சொல்லுமத்தனையேயோ வேண்டுவது? அவனருளப்புகா நின்றானோ?” என்ன; நீங்கள் அறிவிக்குமத்தனையே வேண்டுவது; கொடுவருவாரும் அங்கே உண்டு – (அருளாழிப்புள்) அருட்கடலான புள்ளு. “வெஞ்சிறைப்புள்” (1.4.1) என்றாள் கொண்டுபோனபடியாலே; இப்போது வரவுக்கு உடலாகையாலே “அருளாழிப்புள்” என்கிறாள். (கடவீர்) அநுகூலர் கண்டு வாழுகைக்கும் ஸுக2ஸ்பர்ஶத்தாலுமாகப் போகாதே பிசுகிச்சுழியாநிற்குமிறே; அசேதநமான ரத2த்தோபாதி வடிம்பாலே தாக்கி நடத்தவேணுமாயிற்று. எங்கேதான்? என்னில் (அவர் வீதி) அவள் தெருவிலே. அங்ஙன் ஒண்ணுமோ? ஒரு தெருவிலே பலகால் போகப்புக்கவாறே “இது வெறுமனன்று” என்றிரார்களோ? என்னில்; (ஒருநாள்) நாங்கள் ஜீவித்துக் கிடக்கைக்கு ஒருநாள் போகவமையும்.
(அருளாழி அம்மானை) பெரிய திருவடியும் மிகை; “தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார்” (பெரியாழ்வார் திருமொழி 4-9-2) என்னும்படி அருட்கடலானவனிறே. அன்றிக்கே, திருவடி ஒருவனாமா யிருந்ததோ? அங்கு கையாளாயுள்ளாரடைய நம் பரிகரமன்றோ; அருளை நிரூபகமாகவுடைய திருவாழியைக் கையிலே உடையவன். ‘அருளார் திருச்சக்கர’(திருவிருத்தம்-33)மிறே. ஸர்வேஶ்வரனுக்கும் கைக்குறியாப்பை வாங்குவது இங்கேயிறே. ஸர்வேஶ்வரன்பக்கல் அருள் மறுத்தாலும் அருள் கூடுகட்டிநிற்கும் இடமிறே.
(இது சொல்லியருள்) இத்தனையும் சொல்லியருளவேணும். ஏதென்னில், “அருளாழிப்புட்கடவீர் அவர்வீதி ஒருநாள்” என்கிற வார்த்தையைச் சொல்லியருள வேணும். (ஆழி வரிவண்டே) ஶ்ரமஹரமாய் அழகிதான வண்டே என்னுதல், வடிவு சிறுத்திருக்கச்செய்தே கா3ம்பீ4ர்யம் பெருத்திருக்கிறபடியைச் சொல்லுதல். ஆழி என்று – வட்டமாய், சுழலப் பறக்கிற வண்டே என்னுதல். க4டகருடைய ஆத்ம கு3ணத்தோபாதி, ரூபகு3ணமும் உத்3தே3ஶ்யம் என்கை.
(யாமும் என் பிழைத்தோமே) நாங்கள் என்ன தப்புச்செய்தோம்? தாம் பிரிந்து துவளவிட்டுவைத்தாற்போலே, நாங்களும் க்ரமத்திலே பெறுகிறோம் என்று ஆறியிருந்தோமோ? திர்யக்கின் காலிலே விழுவாரும், தூது விடுவாரும்தாமாயிருக்கிற அத்தலை இத்தலையாயும் வாராதிருக்கிற தம்மதோ குற்றம், எங்களதோ?.
ஏழாம் பாட்டு
என்பிழைகோப் பதுபோலப் பனிவாடை ஈர்கின்றது*
என்பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு*
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என் றொருவாய்ச்சொல்*
என்பிழைக்கும் இளங்கிளியே யான்வளர்த்த நீயலையே.
ப – அநந்தரம், ‘அவள் உம்முடைய அநவதிகக்ருபைக்குச் செய்ததொரு தப்புண்டோ? என்று சொல்’ என்று, தான் வளர்த்ததொரு கிளியைப் பார்த்து வார்த்தை சொல்லுகிறாள்.
என்பு இழைக்கும் இளங்கிளியே – (உன்னுடைய ரூபசோபையாலும் வடிவில் இளமையாலும் ஸ்மாரகமாய்க்கொண்டு) என் எலும்பைச் செதுக்குகிற கிளியே! யான்வளர்த்த நீயலையே – (பருவத்துக்கும் இளமைக்கு மீடாக) நான்வளர்த்துப்போந்த நீயல்லையோ? (என்க்லேசமிருந்தபடி)! என்பு – எலும்பிலே, இழை – நூலிழையை, கோப்பதுபோல – கோக்குமாபோலே, பனிவாடை – குளிர்ந்த வாடை, ஈர்கின்ற – ஈராநின்றது; என் பிழையே நினைந்தருளி – (இவ்வளவிலே) என்பக்கல் அபராதத்தை நினைந்தருளி, (தம்முடைய தப்புப் பாராமல்), அருளாத – என்பக்கலருளாதே, திருமாலார்க்கு – அருளுவிக்கும் அவளுக்கு நல்லராயிருக்கிற அவர்க்கு, திருவடியின் – ஸ்வாமியான உம்முடைய, தகவினுக்கு – ஸ்வாபாவிக க்ருபாகுணத்துக்கு, என் – என்ன, பிழைத்தாளென்று – தப்புச் செய்தாளென்று, ஒருவாய் – ஒருவார்த்தை, சொல் – சொல்லவேணும். வாய் – வார்த்தை. என்பிழைத்தாள் – உம்மைப்பெறுகைக்குத் தான் யத்நம்பண்ணினாளோ? என்று கருத்து. ஒரு வார்த்தை சொன்னால் என்ன பிழையுண்டாம் என்றுமாம். “ஈர்கின்றது” என்றும் பாடம். இதில் – கடகருடைய அவயவஶோபாதிகளும், கிஞ்சித்காரப்ரதிஸம்பந்தித்வாதிகளால் வந்த பவ்யதையுந் தோற்றுகிறது.
ஈடு – ஏழாம் பாட்டு. “தந்தாமுடைய அபராத4த்தைப் பாராதே, ‘அருளாழிப்புள் கடவீர் அவர் வீதி’ (1.4.6) என்று சொல்லுமித்தனையோ வேண்டுவது?” என்று அவர்க்குக் கருத்தாக, “ ‘எங்கள் குற்றம் ஒன்றுமேயோ பார்ப்பது? தம்முடைய அபராத4ஸஹத்வம் பார்க்கக்கடவதன்றோ?’ என்று சொல்” என்று தன் கிளியை இரக்கிறாள்.
(என்பிழை கோப்பது போல) எலும்பும் நரம்புமேயாம்படி ஶரீரந்தான் போர க்ருஶமாயிற்று. எலும்பைத் தொளைத்து, அதிலே மூர்த்தமாயிருப்பதொன்றை வ்யாபரிப்பித்தாப்போலேயாயிற்றுப் பனிவாடை ஈர்கின்றது. நஞ்சூட்டின வாடையானதிருக்கிறபடி. “பம்போபவநமாருதம்” என்று நாயகனுக்கு இருக்குமாபோலே இராநின்றது காணும் இவ்வாடை இவளுக்கு.
“பத்3மஸௌக3ந்தி4கவஹம்” – கலம்பகன் சூடுவாரைப் போலே தாமரை ஓடை செங்கழுநீர் ஓடைகளிலே சென்று புக்கு. “பூவிலிழியில் அதில் வெக்கை தட்டும்” என்று மேலெழநின்று, அரிமிதியான பரிமளத்தைக் கொய்துகொண்டு வாராநின்றது. “ஶிவம்” – கலப்பற்றப் பசுந்தென்றலாய் இராநின்றது. அதாவது – புறம்பே சிலர்க்கு உடம்பு கொடுத்துச் சுணங்கழியாதே தாய்த்தலைத்தென்றலாய் இருக்கை. “ஶோகவிநாஶநம்” – நம்மை இனி ப்ராணனோடே வைத்து நலியாது போலே இருந்தது. “த4ந்யா:” – காற்று வாராநின்றது என்றால், ஏகாந்தஸ்த2லந் தேடிப் படுக்கைபடுக்கிறவர்களும் சிலரே! “லக்ஷ்மண ஸேவந்தே” – இது எப்போதோ வருவது என்றிருப்பர்கள். “பம்போபவநமாருதம்” – “ஆகரத்தில் நெருப்பு” என்னுமாபோலே.
இப்படி மஹிஷியானவள் வாடைக்கு இடைந்து நோவுபடாநிற்க, இத்தைப் பரிஹரிக்கைக்கு அவர், கடலடைப்பது படைதிரட்டுவதாகிறபடி. நாயக நாயகிகள் ஒருவரை ஒருவர் பிரிந்தவாறே, அந்தரஜாதி காலிலே துகையுண்பதே இப்படி. (அந்தரத்திலே ஜாதமானது – அந்தரஜாதி. “ஆகாஶாத்3வாயு:” இறே. கால் – காற்று) (என்பிழையே நினைந்தருளி) நான் படுகிற க்லேஶம் போராது என்று கீழாண்டைச்சிகை வாசியாநின்றார். “அவிஜ்ஞாதா”வாகை தவிர்ந்து, “ஸஹஸ்ராம்ஶு:” என்கிறபடியே இப்போது தோ3ஷத்தில் ஸர்வஜ்ஞராயாயிற்று இருக்கிறது.
(அருளாத திருமாலார்க்கு) “ந கஶ்சிந்நாபராத்4யதி” என்பாரும் அருகேயிருக்க, எங்கள் குற்றம் பார்த்து அவள்பக்கல் முகம்பெற இருக்கிறாரே! – என்று நஞ்சீயர் அருளிச்செய்யும்படி. “நான் இப்படி நோவுபட வேண்டுகிறது – அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகையிறே என்று இன்னாதாகிறாள்” என்று பிள்ளான் பணிக்கும்படி. உறவுள்ள இடத்திலேயிறே வெறுப்புள்ளதும்.
அருளாதொழிகிறதென்? என்றால், “தந்தாம் குற்றம்பாராதே அருளச் சொல்லுமித்தனையோ வேண்டுவது” என்று சொல்ல நினைத்தாராகில், நீங்கள்தான் இங்ஙனே சொல்லுங்கோள் – “என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு” என்னுங்கோள். என்குற்றத்தைப் பார்த்து த3மிக்க நினைத்தாராகில், தம் பொறையாகிற நேர்தரவைக் காட்டுங்கோள். ஸ்வாமிகளான தம் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றஞ்செய்யப்போமோ? என்னுங்கோள். ஆஶ்ரயத்துக்குத் தக்கபடியன்றோ எல்லாம்; நாங்கள் குற்றஞ்செய்வதும் எங்கள் அளவிலே; தாம் பொறுப்பதும் தம் அளவிலேயன்றோ. (திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள்) “தேவரீர் க்ருபைக்குத் தண்ணீர்த் துரும்பாக ஏதேனும் ப்ரத3க்ஷிண நமஸ்காராதி3கள் பண்ணிற்றுண்டோ?” என்று நம்பிள்ளை அருளிச்செய்யும்படி.
(தகவினுக்கு) “ஆந்ருஶம்ஸ்யம் பரோ த4ர்ம:” என்று சொல்லும்படி இருக்கும் நிலைக்கு என் பிழைத்தாள் – என்ன தப்புச்செய்தாள்? “கிம் கோபமூலம்” என்றாளிறே தாரை. ராஜபுத்ரர்களை நாலு மாஸம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கித் தாங்கள் போ4க3ப்ரவணராயிருந்தவற்றை ஒன்றையும் பு3த்3தி4 பண்ணாதே, உம்முடைய கோபத்துக்கு அடியென் என்றாளிறே, அவர்கள் பொறையை நினைத்திருந்த க4னத்தாலே. “மநுஜேந்த்3ரபுத்ர” – அறுபதினாயிரமாண்டு, செய்தார் செய்த குற்றங்களைப் பொறுத்துச் சேரவிட்டு ஆண்டு கொண்டு போந்தான் உங்கள் தமப்பனார்; அவன் வயிற்றிலே பிறந்து குற்றம்செய்தோமென்று தலையறுக்க வந்துநின்றீர் நீர். அழகிதாயிருந்தது உம்முடைய போக்கு! “கஸ்தே ந ஸந்திஷ்ட்ட2தி வாங்நிதே3ஶே” – ஶாஸ்த்ரவஶ்யமன்றிக்கே, கண்டதிலே கடுகச் சாபலத்தைப்பண்ணி மீளமாட்டாத திர்யக்குக்களை, நீரே “இழந்த போ4க3ங்களை பு4ஜிப்பது” என்று சேர்த்துவிட்டு, நீர் சொல்லிற்றுச் செய்தன வென்று தலையறுக்க வந்துநின்றீர். இப்படி சொல்லலாம்படியிறே இவர் பொறையிருப்பது. (ஒருவாய் சொல்) “ஒருவாய்” என்றது – ஒரு வார்த்தை என்றபடி. “சொல்” என்றது – சொல்லு என்றாய், ‘ஒருவார்த்தை சொல்லு’ என்றபடி.
(என்பிழைக்கும் இளங்கிளியே) மௌக்3த்4யத்தாலும், ஸ்நிக்3த4மான ப2ணிதியினாலும், வடிவில் பசுமையாலும், வாயில் பழுப்பாலும், நாயகனுக்கு ஸ்மாரகமாய், எலும்பை இழைக்கிற கிளி என்னுதல்; என் பிழைக்கும் – என் த3ஶையை அறிவித்தால் என்ன தப்புண்டாம்? (யான் வளர்த்த நீயலையே) ஶ்ரிய:பதியாய், தான்தோன்றியாயிருப்பார் செய்வதை வயிற்றில் பிறந்தாரும் செய்வரோ? கலந்து பிரிந்தார் செய்வதை வளர்த்தவர்களும் செய்வர்களோ? (யான் வளர்த்த நீயலையே) அவன்தான் இப்படிச் செய்யவேண்டிச் செய்தானோ? என்னோட்டை ஸம்ப3ந்த4மன்றோ அவன் இப்படிச் செய்தது; அப்படி, என்னோட்டை ஸம்ப3ந்த4ம் உனக்கும் உண்டான பின்பு, நீ நலியச் சொல்ல வேணுமோ? (யான் வளர்த்த நீயலையே) எனக்குத் தக்காப்போலேயன்றோ நீயுமிருப்பது; உனக்குக் குறையோ?
எட்டாம் பாட்டு
நீயலையே? சிறுபூவாய் நெடுமாலார்க்கு என்தூதாய்*
நோயெனது நுவலென்ன நுவலாதே இருந்தொழிந்தாய்*
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்நான்* இனிஉனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே.
ப – அநந்தரம், ‘நிரதிஶயவத்ஸலனானவன் பக்கலிலே போய் என்நோயை அறிவித்திலை’ என்று, தான் வளர்த்ததொரு முக்3த4மான பூவையைப் பார்த்துச் சொல்லுகிறாள்.
சிறுபூவாய் – பால்யத்தாலே சிறுகின பூவாய்! நெடுமாலார்க்கு – (ஆஶ்ரிதவிஷயத்தில் நிரதிஶயவாத்ஸல்யத்தாலே) பெரும்பிச்சரானவர்க்கு, என்தூதாய் – என்னுடைய தூதாய்ச்சென்று, எனது – என்னுடைய, நோய் – விரஹவ்யாதியை, நுவலென்ன – சொல்லென்ன, நுவலாதே – சொல்லாதே, இருந்தொழிந்தாய் – செருக்கடித்திருந்துவிட்டாய், நீயலையே – நீயல்லையோ? நான் – நான், சாயலொடு – ஒளியோடுகூடின, மணி – ஶ்லாக்யமான, மாமை – நிறத்தை, தளர்ந்தேன் – இழந்தேன்; இனி – இப்படி ஈடுபட்டபின்பு, உனது – உன்னுடையதான, வாயலகில் – வாயலகுக்குள்ளே புக, இன் அடிசில் – மதுரமான அடிசிலை, வைப்பாரை – ஊட்டுவாரை, நாடாய் – புறம்பேபோய் ஆராயவேணுங்காண். இத்தால் – கடககிஞ்சித்காரம் பண்ணாதது தன் இழவென்று தோற்றிற்று. ‘சிறுபூவாய்’ என்று – கடகருடைய பருவச்சிறுமையும் உத்தேஶ்யமென்று தோற்றுகிறது.
ஈடு – எட்டாம் பாட்டு. முன்பு இவள் வார்த்தை சொல்லிக் கொண்டாடுகையாலே த4ரித்திருந்த பூவையானது இவள் உறாவப்புக்கவாறே தானும் உறாவப்புக்கது; அத்தைப்பார்த்து, “முன்பே என் த3ஶையை அறிவி’ என்ன, செருக்கடித்திருந்தாய்; நானோ முடியாநின்றேன்; இனி உன்னை ரக்ஷிப்பாரைத் தேடப்பாராய்” என்கிறாள். பூவை என்பது – நாகணவாய்ப்புள். அதாவது ஒருபக்ஷிவிஶேஷம்.
(நீயலையே) ‘என் த3ஶையை அறிவிக்கவேணும்’ என்ன, அறிவியாதே இருந்த உன்னாலே வந்ததன்றோ இது. அறிவித்தால் வாராதேயிருந்தானாகிலிறே அவனுக்குக் குறையாவது.
ப4க3வல்லாப4ம் சேர்ப்பாராலே என்றிருக்கிறாள்; அவ்யவதா4நேந ஸம்ப3ந்த4ம் எம்பெருமானோடேயாயிருக்க, ஆசார்யனை விரும்புகிறது – பண்ணின உபகாரத்தைப் பற்றவிறே; “ஆத3தீ3த யதோ ஜ்ஞாநம் தம் பூர்வமபி4வாத3யேத்” என்னாநின்றதிறே. (சிறு பூவாய்) உன் பருவம் நிரம்பாமையிறே நம் கார்யத்தைக் கெடுத்தது. (நெடுமாலார்க்கு) அவர்க்கு வ்யாமோஹத்தை உண்டாக்கிக் கொடுவரவேணும் என்றிருந்தாயல்லையே. (என் தூதாய்) எனக்கு அவர்பக்கல் வ்யாமோஹந்தான் இல்லாமை இருந்தாயுமன்றே. (வயிற்றில் பிறந்த உங்களைக் கொண்டு அபி4மதம் சேர்க்கவேண்டும்படியன்றோ எனக்குண்டான ஆசை).
(நோயெனது) “ஸ்ரீப4ரதாழ்வான் நோய்” என்றால் சாதுர்த்தி2கமாயிராதே. “ஜடிலம்” – நல்ல மாலை வந்தால் “பிள்ளை ப4ரதன் மயிருக்காயிருந்தது” என்றாயிற்று சக்ரவர்த்தி வாய்விடுவது; அவனாயிற்று சடைபுனைந்திருக்கிறான். “சீரவஸநம்” – நல்ல பரிவட்டங்கண்டால் “இது பிள்ளைக்காம்” என்று வாய்விடுவர்கள்; அவனன்றோ மரவுரி உடுத்திருக்கிறான். “ப்ராஞ்ஜலிம்” – அவர்கள் இரந்து கொடுக்கப்பெறுமவன், தன் அபி4மதத்துக்குத் தான் இரப்பாளனா யிருந்தான். “பதிதம் பு4வி”, – (அங்கே ‘ப4ரதமாரோப்ய’) என்னும் நிலை பெற்றதில்லை. “படுக்கை உறுத்தும்” என்று மடியிலே கண்வளருமவனாயிற்று தரைக்கிடை கிடக்கிறான். “த3த3ர்ஶ ராமோ து3ர்த3ர்ஶம்” – வைத்தகண் வாங்காதே கண்டுகொண்டிருக்கும் பெருமாளுக்கும் கண்வைக்கவொண்ணாதபடி இருக்கிறவனை. “யுகா3ந்தே பா4ஸ்கரம் யதா2” – பெருமாள் ஒருவர்க்கும் கண்வைக்க வொண்ணாமையேயன்றிக்கே, “ஜக3து3பஸம்ஹாரம் பிறக்கப் புகுகிறதோ” என்னும்படி இருந்தான். (நோயெனது நுவலென்ன) ‘என் த3ஶையை அங்கே சென்று சொல்’ என்ன, சொல்லாதே இருந்தொழிந்தாய். நுவலாதே இருந்தாய் என்னுதல், நுவலாதே ஒழிந்தாய் என்னுதல் செய்ய அமையாதோ? இரட்டிப்பு என்? என்னில்; “வந்தொழிந்தான், போயொழிந்தான்” என்னக் கடவதிறே; வழக்கச்சொல்லிருக்கிறபடி. இரண்டு த4ர்மியையும் ஒரு உக்தி மாத்ரத்தாலே நோக்கலாயிருக்கவன்றோ நீ ஆறியிருந்தது!
அதுக்கு இப்போது வந்ததென்? என்ன (சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான்) ஸமுதா3ய ஶோபை4யோடே நிறத்தில் பௌஷ்கல்யமும் இழந்தேன். “இனிப்போய் அறிவிக்கிறேன்” என்று த்வரிக்கப்புக்கது; ‘க3தே ஜலே ஸேதுப3ந்த4ம்’ போலே இனி அறிவித்தால் என்ன லாப4முண்டு? (இனி உனது இத்யாதி3) “இனி உனக்கு ரக்ஷகரைத் தேடப்பாராய்; அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது” என்றிருக்கிறாள். பெரிய திருமலைநம்பி, தம்முடைய அந்திம த3ஶையிலே, தமக்கொரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராத4நம், அவர் திருமுன்பில் திருத்திரையை வாங்கச்சொல்லி, “சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான், இனியுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே” என்றாராம்.
ஒன்பதாம் பாட்டு
நாடாத மலர்நாடி நாடோறும் நாரணன்தன்*
வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று*
வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ*
ஊடாடு பனிவாடாய் உரைத்தீராய் எனதுடலே.
ப – அநந்தரம், முன்புபோலன்றியே முடிப்பதாக அவன் பக்கல் நின்றும் வந்ததொரு வாடையைப்பார்த்து, ‘நிருபாதிக பந்துவானவருக்கு ஒருவார்த்தை சொல்லிவந்து பின்னை நலியாய்’ என்கிறாள்.
ஊடு – (அவர்க்கும் எனக்கும்) நடுவே, ஆடு – நடையாடித்திரிகிற, பனிவாடாய் – குளிர்ந்த வாடாய்! நாடாத – (ஆதராநுரூபமாகத்) தேட அரிய, மலர் – பூக்களை, நாடி – தேடி, நாடோறும் – நித்யமாக, நாரணன்தன் – (நிருபாதிக ஸம்பந்தத்தையுடைய ஸ்வாமியான) நாராயணனுடைய, வாடாத மலர் அடிக்கீழ் – செவ்வித் தாமரைப்பூப்போலே போக்யமான திருவடிகளிலே, வைக்கவே – ஸமர்ப்பிக்கவே, வகுக்கின்று – (கரணங்களை) வகுக்கிறதா யிருக்க, வீடு – விஶ்லேஷத்திலே, ஆடி – வர்த்தித்து, வீற்றிருத்தல் – தனியிருத்தலாகிற, வினை அற்றது – பாக்யஹீநக்ருத்யம், என்செய்வதோ – என்ன ப்ரயோஜநம் தருவதோ? என்று, உரைத்து – (அவனுக்கு) உரைத்து, (அநுகூலோத்தரம் பெற்றிலையாகில்), எனது உடல் – என்சரீரம், ஈராய் – இராதபடி ஈர்ந்துபொகடு. வீடு – பிரிவு. இத்தால் – கடகர் அவஸ்த்தாவிசேஷத்தாலே பாதகராகிலும் அதில் தாத்பர்யமில்லை, கார்யகரராகில் உத்தேஶ்யரென்று கருத்து.
ஈடு – ஒன்பதாம் பாட்டு. “சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான்” (1.4.8) என்று இருக்கிற ஸமயத்திலே ஒரு வாடை வந்து உடம்பிலே பட்டது; இதினுடைய தோற்றரவிருந்தபடியாலே வெறுமனன்று; மஹாராஜருடைய மிடற்றோசையில் தெளிவைக் கேட்டுத் தாரை, “பூர்வக்ஷணத்திலே வாலி கையாலே நெருக்குண்டு போனவர், இப்போது இப்படி தெளிந்து வந்து அறை கூறுகிற இது வெறுமனல்ல; இதுக்கு ஓர் அடி உண்டு” என்றாற்போலே, இவளும் “இவ்வாடைக்கு ஓர் அடி உண்டாக வேணும்” என்று பார்த்து, “ராஜாக்கள் ராஜத்3ரோஹம் செய்தவர்களை நலிகைக்கு வேற்காரரை வரவிடுமாபோலே, நம்மை நலிகைக்காக ஸர்வேஶ்ரன் இவ்வாடையை வரவிட்டானாகவேணும்” என்று பார்த்து, வேற்காரர் கொடுபோய் நலியப்புக்கவாறே “நிதி4யுண்டு” என்பாரைப்போலே, நான் சொல்லுகிற வார்த்தையை நீ அங்கே சென்று அறிவித்தால், “அத்தலையால் வரும் நன்மையும் வேண்டா” என்று இருந்தானாகில், ‘அவஶ்யம் வந்து என்னை முடிக்கவேணும்’ என்று அவ்வாடையை இரக்கிறாள்.
(நாடாத மலர் நாடி) “ஆத்ம புஷ்பத்தைச் சொல்லுகிறது” என்பாரும் உண்டு. அங்ஙனன்றிக்கே, ஜீயர் “எண்டிசையுமுள்ள பூக்கொண்டு” (4-7-8) என்கிறபடியே, தேட அரிய புஷ்பங்கள் எல்லாம் தேடி – என்று அருளிச்செய்வர். இதுதான் ஒருநாள் தேடிவிடுகையன்றிக்கே, – (நாடோறும்) விச்சே2தி3யாதபடி. கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெறும் வஸ்துவுக்கு விச்சே2த3ம் ஸ்வரூபஹாநியிறே. (நாரணன்) நித்யபரிசர்யை பண்ணவேண்டும்படி ஸர்வஸ்வாமியானவன்.
(வாடாத மலரடிக்கீழ்) செவ்விமாறாத பூப்போலேயிருக்கிற திருவடிகளின் கீழே. ஸ்வரூபஹாநியானாலும் விடவொண்ணாதபடி நிரதிஶய போ4க்3யமுமான திருவடிகள். (வைக்கவே) சேர்க்கவே. (வகுக்கின்று) உண்டாக்கிற்று. “ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாஸாய) போலே. இப்படி வகுத்ததுமாய், ஸுலப4முமாய், நிரதிஶய போ4க்3யமுமான திருவடிகளிலே ஸர்வவித4 கைங்கர்யங்களையும் பண்ணவாயிற்று இத்தையுண்டாக்கிற்று. ஶேஷபூ4தனுக்கு கிஞ்சித்கரித்து ஸ்வரூபஸித்3தி4யானாற்போலே ஶேஷிக்கும் கிஞ்சித்கரிப்பித்துக்கொண்டிறே ஸ்வரூபஸித்3தி4. இப்படியிருக்க – (வீடாடி வீற்றிருத்தல் வினையற்றதென் செய்வதோ) வீடென்று – விடுகை. அதாவது – விஶ்லேஷிக்கை. ஆடுகை – அவகா3ஹிக்கை. வீற்றிருக்கையாவது – விஶ்லேஷத்திலே மூர்த்தா4பி4ஷிக்தையா யிருக்கை. வினையறுகையாவது – நல்வினையறுகை.
இப்படி பா4க்3யஹாநியால் விஶ்லேஷத்திலே அபி4ஷேகம்பண்ணித் தம்மைப் பிரிந்திருக்கிற இப்பொல்லாத இருப்புண்டு, இது என் செய்யக்கடவதோ? என்னுதல்; அன்றிக்கே, தம்மையும் பிரிந்து, தம்மோடு ஒரு ஸம்ப3ந்த4த்தையிட்டு ப3ந்து4க்களும் கைவிட, அவர்களையும் விட்டு, வேறுபட்டிருக்கிற இவ்வஸ்து, என்செய்யக்கடவதோ? என்னுதல். “எமராலும் பழிப்புண்டிங்கென்? தம்மாலிழிப்புண்டு” (9-7-2) என்னக்கடவதிறே.
(ஊடாடு பனி வாடாய்) வேற்காரர் அங்குத்தை வார்த்தையை இங்கே சொல்லி, இங்குத்தை வார்த்தையை அங்கே சொல்லித் திரியுமாபோலே, அங்கோடு இங்கோடாய்த் திரியாநின்றதாயிற்று. ஊடென்று – உள்ளாய், ஆடுகை – ஸஞ்சரிக்கையாய், அங்கே அந்தரங்க3மாக ஸஞ்சரிக்கை. அன்றிக்கே, ஸம்ஶ்லேஷ ஸமயத்திலே கிட்டி வர்த்தித்துப்போந்த நீ என்னுதல். (உரைத்து) “நித்யகைங்கர்யத்துக்கு இட்டுப்பிறந்த வஸ்து இப்படியிருக்கக்கடவதோ?” என்று அறிவித்தால், “அத்தலையால் வரும் கைங்கர்யமும் நமக்கு வேண்டா” என்றிருந்தானாகில், ‘அவஶ்யம் வந்து அவனோட்டைப் பிரிவுக்குச் சிளையாத என் உடலை முடித்துவிடவேணும்’ – என்று ‘காலை’ப் பிடித்து வேண்டிக்கொள்ளுகிறாள்.
பத்தாம் பாட்டு
உடலாழிப் பிறப்புவீடு உயிர் முதலா முற்றுமாய்*
கடலாழி நீர்தோற்றி அதனுள்ளே கண்வளரும்*
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி*
விடல்ஆழி மடநெஞ்சே வினையோம் ஒன்றாமளவே.
ப – அநந்தரம், கீழ்ச்சொன்னவை போலன்றியே க்ஷீரார்ணவத்திலே அதூரவர்த்தியானவன் பக்கலிலே தானே போகிற நெஞ்சைக் குறித்துக் கார்யநிஷ்கர்ஷம் பண்ணிவிடுகிறாள்.
ஆழி – அகாதமாய், மடநெஞ்சே – (எனக்கு) பவ்யமான நெஞ்சே! உடல் – உடலிலே, ஆழி – சக்ராகாரமாக, பிறப்பு – மாறிமாறிப்பிறக்கிற ஸம்ஸாரஸ்தல•ம், வீடு – (ஏதந்நிவ்ருத்தி பூர்வகமாக ப்ராப்யமான) மோக்ஷ•ம், உயிர் – (இப்போகமோக்ஷங்களுக்கு அவஸ்த்தா பேதத்தாலே போக்தாவான) ஆத்மாவும், முதலாய் – முதலானவற்றுக்கு நிர்வாஹகனாய், முற்றுமாய் – (மற்றும் போக்யபோகோபகரணாதிகளெல்லாம் ஸ்வப்ரகாரமாம்படி) ப்ரகாரியாய், (ரக்ஷணார்த்தமாக), ஆழிநீர் – அகாதஜலமான, கடல் – க்ஷீரார்ணவத்திலே, தோற்றி – ஸந்நிஹிதனாய், அடல் – (ஆஶ்ரிதவிரோதிவிஷய) யுத்தத்தையுடைய, ஆழி – திருவாழியாழ்வானையுடையனான, அம்மானை – ஸ்வாமியை, கண்டக்கால் – கண்டக்கால், இது – (வர்த்தமாநமான) இந்த ஆர்த்தியை, சொல்லி – (அவனுக்குச்) சொல்லி, வினையோம் – (பிரிவுக்கடியான) பாபத்தையுடையோமான நாம், ஒன்றாமளவு – (அவனோடு) ஒன்றாமளவும், விடல் – விடாதேகொள். ‘என்னைவிடாதேகொள்’ என்றுஞ் சொல்லுவர். ‘ஆழிமடநெஞ்சே – சுழன்று வருகிற பேதைநெஞ்சே!’ என்றுஞ் சொல்லுவர். இத்தால் – கடகராவார் அந்தரங்கபூதரென்று கருத்து.
ஈடு – பத்தாம் பாட்டு. “அல்லாதவற்றையெல்லாம் விட்டு, நெஞ்சைத் தூதுவிடு கிறாள்” என்பாரும் உண்டு. அப்போது விடல் என்றது – அவனை விடாதேகொள் என்கை. அன்றிக்கே, கீழிற்பாட்டில் “வைக்கவே வகுக்கின்று” என்று கைங்கர்யம் ப்ரஸ்துதமானவாறே, தாய்முலையை நினைத்த கன்றுபோலே திருவுள்ளம் பதறி ஶரீரத்தை விட்டுப்போகப் புக்கது; ‘நம் கார்யம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீ என்னை விடாதேகொள்’ என்னுதல்.
(உடலாழிப் பிறப்பு) உயிரினுடைய உடலாழிப் பிறப்பு. (ஆத்மாவினுடைய ஸஹஜமான பிறப்பு) வீடுமுதலா முற்றுமாகைக்காக – மோக்ஷாதி3 புருஷார்த்த2ங்களைப் பெறுகைக்காக. ஶரீரத்தினுடைய வட்டமான பிறப்பு. அன்றிக்கே, ஆழியென்று கடலாய், அத்தால் கா3ம்பீ3ர்யமாய், அஸங்க்2யேயமான ஜந்மமென்னுதல். வீடு – மோக்ஷம். ஸ்ருஷ்டிக்கு ப்ரயோஜநம் மோக்ஷமாகையாலே சொல்லுகிறது.
அன்றிக்கே, (வீடுயிர்) ஜந்மங்கள் தோறும் உண்டான ஶரீரஸ்த2மான ஆத்மாக்கள். உயிர் தொடக்கமாக மற்றுமுண்டான கார்யஜாதத்தை உண்டாக்குகைக்காக. (ஆய்) “ப3ஹு ஸ்யாம்” என்கிறபடியே, தன் விகாஸமே ஆகையாலே. (கடலாழி நீர் தோற்றி) ஆழி நீர்-ஆழிய நீர். “அப ஏவ ஸஸர்ஜாதெ3ள” என்கிறபடியே மிக்க ஜலத்தையுடைத்தான ஏகார்ணவத்தையுண்டாக்கி, இவ்வருகுண்டான ஸ்ருஷ்ட்யாதி3களுக்காக அங்கே வந்து கண்வளர்ந்தருளும். (அடலாழி அம்மானை) ஸ்ருஜ்யபதா3ர்த்த2ங்களுக்கு விரோதி4களாயிருப்பாரை அழியச்செய்கைக்காக ஆசிலே வைத்த கையும் தானுமாயாயிற்றுக் கண் வளர்ந்தருளுவது. (கண்டக்கால்) என்னிலும் உனக்கன்றோ பேறு முற்பட்டிருக்கிறது. “சந்த்3ரே த்3ருஷ்டி ஸமாக3ம:” போலே கண்டாரைக் காணுமித்தனையிறே தனக்கு. (இது சொல்லி) “வைக்கவே வகுக்கின்று” (1.4.9) என்கிற வார்த்தையைச் சொல்லி என்னுதல்; ஸ்ருஷ்டிக்கு ப்ரயோஜநம் – “விசித்ரா தே3ஹஸம்பத்திரீஶ்வராய நிவேதி3தும்” – என்கிறபடியே, தேவர் திருவடிகளிலே ஸர்வகைங்கர்யங்களையும் பண்ணுகையன்றோ என்கை. “விடல்” என்கிற பத3ம் – மேலே அந்வயிக்கிறது.
(ஆழி மடநெஞ்சே) அளவுடையையாய், ப4வ்யமான நெஞ்சே என்னுதல்; சுழன்று வருகிற பேதைநெஞ்சே என்னுதல். (வினையோம் ஒன்றாமளவும் விடல்) ஸ்ருஷ்டிக்கு ப்ரயோஜநம் – அங்கே அவரைக்கிட்டி அடிமை செய்கையாயிருக்க, பிரிகைக்கீடான பாபத்தைப் பண்ணின நாம் அவரோடே சேருமளவும் நீ அவரை விடாதேயொழியவேணும்.
பதினொன்றாம் பாட்டு
*அளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை*
வளவயல்சூழ் வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த*
அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தின்*
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே.
ப – அநந்தரம், இத்திருவாய்மொழிக்கு பலம் மோக்ஷைஶ்வர்யபோக மென்று அருளிச்செய்கிறார்.
அளவு இயன்ற – எல்லையைக் கடந்த, ஏழு – ஏழுவகைப்பட்ட, உலகத்தவர் – லோகத்திலுள்ள சேதநவர்க்கத்துக்கு, பெருமான் – ஸ்வாமியான மேன்மையை யுடையனாய், கண்ணனை – (ஆஶ்ரிதஸுலபனான) க்ருஷ்ணனை, வளம் – ஸம்ருத்தமான, வயல் – வயலாலே, சூழ் – சூழப்பட்ட, வண் – அழகிய, குருகூர் – திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வார், வாய்ந்து உரைத்த – (தம்முடைய ஜ்ஞாந ப்ரேமங்களாலே) கிட்டி அருளிச்செய்த, அளவு – (எழுத்துசொல்பொருள் யாப்பு அலங்காரங்களைச் சொல்லுகிற) ப்ரமாணங்களிலே, இயன்ற – வர்த்திப்பதாய், அந்தாதி – அந்தாதியான, ஆயிரத்து – ஆயிரத்துள்ளும், உள் – இவருடைய பாவபந்த ப்ரகாஶகமான, இப்பத்தின் – இப்பத்தினுடைய, வளம் – இனிதான, உரையால் – ஶப்தமாத்ரத்தாலே, வான் – பரமபதத்தில், ஓங்கு – உத்துங்கமான, பெருவளம் – கைங்கர்யஸாம்ராஜ்யம், பெறலாகும் – பெறலாம். அளவியன்ற கண்ணனென்று – அளவுக்கீடாக வந்து முகங்காட்டினவ னென்றுமாம். அளவியன்ற அந்தாதியென்று – எல்லையிறந்த பெருமையையுடைய அந்தாதியென்றுஞ் சொல்லுவர். இத்திருவாய்மொழி – அளவடி நான்கு மொத்திருத்தலால் கலிவிருத்தமாம்; நாலடித்தாழிசை யாகவுமாம்.
ஈடு – நிக3மத்தில் – இத்திருவாய்மொழியில் ஶப்3த3மாத்ரத்தை அப்4யஸிக்கவே அமையும் திருநாட்டைப் பெறுகைக்கு என்கிறார்.
(அளவியன்ற) “வியந்த” என்கிற இது “வியன்ற” என்று கிடக்கிறது. – ‘த’வ்வுக்கு ‘ற’வ்வாய். வியத்தல் – கடத்தலாய், அளவைக் கடந்திருக்கும் என்றபடி. அபரிச்சே2த்3ய மஹிமனாகை. இத்தால், இத்த3ஶையிலே முகங்காட்டுகைக் கீடான ஜ்ஞாநாதி3 கு3ணபூர்ணன் என்கை. (ஏழுலகத்தவர் பெருமான்) நாராயணத்வம் விகலமாகாதபடி ஸர்வேஶ்வரனானான். ஏழுலகத்தவர் என்னவே – தாமும் அதிலே அந்தர்பூ4தரிறே.
(கண்ணனை) இவ்வளவிலே வந்து முகங்காட்டிற்றிலன் என்கிற குற்றந்தீர வந்து முகங்காட்டுகையாலே ஆஶ்ரித ஸுலப4னானான். ‘பத்துடை அடியவரில்’ (1.3) க்ருஷ்ணாவதாரத்திலே அநுப4விக்கப் பாரித்து, அது கிடையாமையாலே தூதுவிட்டாராகையாலே இங்கு முகங்காட்டினான் க்ருஷ்ணன் என்னவுமாம். இத்தால் – அவனுடைய மேன்மையும் ஸௌலப்4யமும் நிலைநின்றது, இவர்க்கு முகங்காட்டின பின்பாயிற்று என்றபடி.
(வளவயல்) “அகாலப2லிநோ வ்ருக்ஷா:” என்கிறபடியே திருநகரியும் தளிரும் முறியுமாயிற்று. (வாய்ந்துரைத்த) வாய்கை – கிட்டுகை; அதாவது – ப4ாவப3ந்த4த்தை உடையராகை; நெஞ்சு பிணிப்புண்டு சொன்னதாயிருக்கை. (அளவியன்றவந்தாதி) அபரிச்சே2த்3ய வஸ்துவுக்கு வாசகமாகையாலே தானும் அபரிச்சி2ந்நமாய், ஒருவராலும் சலிப்பிக்கவொண்ணாதாய் இருக்கிற ஆயிரத்துள் இப்பத்தினுடைய நன்றான உரையாலே. (வானோங்கு பெருவளம் பெறலாகும்) பால் குடிக்க நோய் தீருமாபோலே, இத்திருவாய்மொழியில் இனிய சொல்லாலே பெறலாம். ஸ்வயம்ப்ரயோஜநமான இத்தாலே ஸம்ஸாரத்தில் ஸங்குசிதமான நிலைபோய், பரமபத3த்திலே போய், ஸ்வஸ்வரூபத்தைப்பெற்று விஸ்த்ருத னாகையாகிற நிரவதி4க ஸம்பத்தைப் பெறலாம்.
முதற்பாட்டில், ஒரு நாரையைத் தூதுவிட்டாள்; இரண்டாம் பாட்டில், அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தைச் சில குயில்களுக்குச் சொன்னாள்; மூன்றாம் பாட்டில். ‘நான் பண்ணின பாபமேயோ மாளாததென்று சொல்லுங்கோள்’ என்று சில அன்னங்களை இரந்தாள்; நாலாம் பாட்டில், சில மகன்றில்களைப் பார்த்து, ‘என் த3ஶையை அங்கேசென்று சொல்லவல்லிகளோ மாட்டிகளோ?’ என்றாள்; அஞ்சாம் பாட்டில், சில குருகுகளைப் பார்த்து, ‘தன்னுடைய நாராயணத்வம் ஒறுவாய்ப்போகாமே நோக்கிக்கொள்ளச் சொல்லுங்கோள்’ என்றாள்; ஆறாம் பாட்டில், ஒரு வண்டைக்குறித்து, ‘தம்முடைய நாராயணத்வத்துக்கு ஒரு ஹாநி வாராமே எங்கள் ஸத்தையுங்கிடக்கும்படி இத்தெருவே எழுந்தருளச்சொல்’ என்றாள்; ஏழாம் பாட்டில், ஒரு கிளியைக் குறித்து, ‘இத்தலையில் அபராத4த்தையே பார்க்குமத்தனையோ? தம்முடைய அபராத4ஸஹத்வத்தையும் ஒருகால் பார்க்கச்சொல்’ என்றாள்; எட்டாம் பாட்டில், தான் உறாவினவாறே முன்கையிலிருந்த பூவையும் உறாவ, ‘நானோ முடியாநின்றேன்; நீ உனக்கு ரக்ஷகரைத் தேடிக்கொள்’ என்றாள்; ஒன்பதாம் பாட்டில் ஒருவாடையைக் குறித்து, “என் த3ஶையை அங்கே சென்று அறிவித்தால், அவன் ‘நமக்கு அவள் வேண்டா’ என்றானாகில் என்னை வந்து முடிக்க வேணும்” என்று இரந்தாள். பத்தாம் பாட்டில், தன் நெஞ்சைக் குறித்து ‘நம் கார்யம் ஓரறுதி பிறக்குமளவும் நீ அவனை விடாதேகொள்’ என்று போகவிட்டாள்; நிக3மத்தில், இத்திருவாய்மொழியை அப்4யஸித்தார்க்குப் ப2லஞ்சொல்லித் தலைக்கட்டினார்.
முதற்பாட்டில், ஆசார்யனுடைய ஜ்ஞாநவைபவத்தை அருளிச்செய்தார்; இரண்டாம் பாட்டில், மது4ரபா4ஷியாயிருக்கும் என்றார்; மூன்றாம் பாட்டில், ஸாராஸாரவிவேகஜ்ஞனென்றார்; நாலாம் பாட்டில், விக்3ரஹஸௌந்த3ர்யத்தை அநுஸந்தி4த்தார்; அஞ்சாம் பாட்டில், நினைத்தது கிட்டுமளவும் சலியாத ஶுத்3த4ஸ்வபா4வன் என்றார்; ஆறாம் பாட்டில், ப4க3வதே3கபோ4க3னாயிருக்கும்; ரூபவானுமாய் க்ருபாவானுமாய், க3ம்பீ4ரஸ்வப4ாவனுமாய் இருக்கும் என்றார்; மது4கரமிறே; ஏழாம் பாட்டில், தான் ஸர்வஜ்ஞனாகிலும் ஆசார்யர்கள் பக்கல் கேட்ட வார்த்தையல்லது அருளிச்செய்யான் என்று, அவனுடைய ஆப்தியை அநுஸந்தி4த்தார்; எட்டாம் பாட்டில், ஆசார்யனுடைய தே3ஹயாத்ரையே இவனுக்கு ஆத்மயாத்ரை என்றார்; ஒன்பதாம் பாட்டில் ஆசார்ய ஸம்ப3ந்த4மாத்ரமே ஸத்தாதா4ரகம்; இதர ஸ்பர்ஶம் ஸத்தாபா3த4கம் என்றார். பத்தாம் பாட்டில், ஆக இப்படி ஜ்ஞாநவானுமாய், மது4ரபா4ஷியாய், ஸாராஸாரவிவேகஜ்ஞனுமாய், த3ர்ஶநீயனுமாய், ஶுத்3த4ஸ்வபா4வனுமாய், க்ருபாகா3ம்பீ4ர்யங்களையும் உடையனாய், சிரோபாஸிதஸத்3வ்ருத்3த4 ஸேவ்யனுமாய், (லோகபரிக்3ரஹம் உடையனுமாய்) ஸச்சி2ஷ்யனாகையாலே ஏவம்பூ4தனான ஆசார்யனுடைய தே3ஹயாத்ரையே தனக்கு ஆத்மயாத்ரையாய், இதரஸ்பர்ஶமும் தனக்கு பா3த4கமாய், இப்படி ஸதா3சார்ய ஸேவை பண்ணுகையாலே ப4க3வத் கைங்கர்யத்திலே ப்ரவணமாய், “நின்னிடையேனல்லேன் என்று நீங்கி – ஓர் கோலநீல நன்னெடுங்குன்றம் வருவதொப்பான் நாண்மலர்ப்பாதமடைந்தது தம் திருவுள்ளம்” (8-2-10) என்று தலைக்கட்டினார்.
நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்
த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி–அஞ்சிறைய
தத்காங்க்ஷிதாநதி4க3மேந முநிர் விஷண்ண:
ப்ராப்தோ த3ஶாஞ்ச ஹரிபு4க்த வியுக்தநார்யா: |
ஸர்வாபராத4 ஸஹதாமவபோத்4ய தூ3தை:
ஶௌரே: ஸ்வதோ3ஷபரதாமலுநாச்சதுர்த்தே2 || 4
த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளி — அஞ்சிறைய
த்ராணே ப3த்3த4த்4வஜத்வாச்சு2ப4நயநதயா ஸ்வார்த்த2லாபே4ர்த்தி2பா4வாத்
திம்யந்மேக4ஸ்வபா4வாஜ்ஜக3து3பஜநநஸ்தா2பநாதிப்ரியத்வாத் |
காருண்யாப்தத்வயோகா3த3நுக3தமஹிஷீஸந்நிதே4ஸ் ஸங்க3தை3ர்க்4யாத்
நாநாப3ந்தை4ஸ்ஸுரக்ஷாவஹிததமதயா க்ஷாம்யதீத்யாஹ க்ருஷ்ணம் || 4
ஸத்4ரீப4வ்யாந் ஸுவாசஸ்ஸுசரிதஸுப4கா3ந் க்ருஷ்ணஸாரூப்யஸௌம்யாந்
ஸ்வாஹாரோதா3ரஶீலாம்ஸ்தநுத்4ருதப4க3வல்லக்ஷ்மணோ பா3ல்யகு3ப்தாந்ந
சா2த்ரஸ்வச்ச2ந்தவ்ருத்தீநபி4க3தஶிஶிராநந்தரங்கோ3க்தியோக்3யாந்
ஆசார்யாந் க்ருஷ்ணலப்3தெ4ள ஶரணமவ்ருணுத ப்ரேயஸீதூ3தநீத்யா || 4
திருவாய்மொழி நூற்றந்தாதி
அஞ்சிறைய புட்கள்தமை யாழியா னுக்கு* நீர்
என்செயலைச் சொல்லு மெனவிரந்து*–விஞ்ச
நலங்கியதும் மாறனிங்கே நாயகனைத் தேடி*
மலங்கியதும் பத்தி வளம். 4
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்