ஐந்தாம் திருவாய்மொழி
வளவேழுலகு: ப்ரவேஶம்
*****
ப – அஞ்சாந்திருவாய்மொழியில், இப்படி கடகமுகத்தாலே இவ்வாழ்வார் தம் தஶையை அறிவித்த அநந்தரம், இவரார்த்தி தீரும்படியாக “அளவியன்ற ஏழுலகத்தவர் பெருமான்கண்ணன்” என்று ப்ரக்ருதமான ப்ரகாரத்திலே ஸ்வாமித்வ ஸௌஶீல்ய விஶிஷ்டனாய்க் கொண்டு அவ்வளவிலே வந்து ஸந்நிஹிதனான ஸர்வேஶ்வரனுடைய நிரவதிக ஸௌஶீல்யத்தை அருளிச்செய்வதாக, ததுபபாதகமான அவனுடைய ஸர்வேஶ்வரத்வத்தையும், ஸர்வகாரணத்வத்தையும், அஶேஷஜநஸம்ஶ்லேஷத்தையும், விபூதித்வயநிர்வாஹகத்வத்தையும், ஆஶ்ரிதார்த்த ப்ரவ்ருத்தியையும், போக்யமான ஸ்வபாவநாமயோகத்தையும், போக்யதாப்ரகாஶகமான ஸௌலப்யத்தையும், ஆஶ்ரிதவிஷயவ்யாமோஹத்தையும், ஸர்வாத்ம வத்ஸலத்வத்தையும், ஆஶ்ரிதோபகாராதிஶயத்தையும் அநுஸந்தித்து, “இப்படி விலக்ஷணனான ஸர்வேஶ்வரனை, அத்யந்தநிக்ருஷ்டரான நாம் அணுகுகை அவத்யாவஹம்; அதிஶயிதஜ்ஞாநர் அணுகிலும் அங்குத்தைக்கு மாலிந்யகரம்” என்று அகலப்புக, இவரைத் தன் ஶீலத்தைக் காட்டி ஆகவிடத் தேட, ஸமாஹிதராய் அநுபவித்தவர், பின்னையும் அவ்வநுஸந்தாநத்தாலே அகல, தன்னுடைய ஹேயப்ராதிபட்யத்தையும் ஆஶ்ரிதவ்யாமோஹத்தையும் ப்ரகாஶிப்பித்து ஆகவிட்டுக்கொள்ள, ஸமாஹிதராய், தம்பக்கல் ஈஶ்வரனுக்குப் பிறந்த உபகாரகத்வத்தையும் மேலுண்டான பாரிப்பையும் அநுபவித்து ஸந்துஷ்டராகிறார்.
ஈடு – ஸர்வேஶ்வரன் ஸர்வஸ்மாத்பரனாகையாலே அவனை ஆஶ்ரயிப்பார்க்கு ஒரு குறையில்லை என்றார்; அந்த ஆஶ்ரயணந்தான் – புருஷோத்தமனை ஆஶ்ரயிக்கிறதாகையாலே ப2லத்தோடே வ்யாப்தமாயல்லதிராது என்றார்; ப4ஜிப்பார்க்காகத் தான் அவதரித்து ஸுலப4னாகையாலே ப4ஜிக்கத்தட்டில்லை என்றார்; ஸுலப4னானவன்தான் அபராத4ஸஹனாகையாலே ப2லத்தோடே வ்யாப்தமாயல்லதிராது என்றார்; அயோக்3யதாநுஸந்தா4நம் பண்ணி அகலுவாரையும் தன் செல்லாமையைக்காட்டிப் பொருந்தவிட்டுக்கொள்ளும் ஶீலவான் என்கிறார் இதில்.
கீழ் கலங்கித் தூதுவிட்டவிடம் ப்ரேமகார்யம்; இங்கு அகலப்பார்க்கிறவிடம் ஜ்ஞாநகார்யம்; “மயர்வற மதிநலமருளினன்” (1-1-1) என்று ப4க்திரூபாபந்ந ஜ்ஞாநமிறே இவர்தாம் பெற்றது. தூ3தப்ரேஷண வ்யாஜத்தாலே தம்முடைய ஆற்றாமையை அறிவித்த அநந்தரம், “இவரை இங்ஙனே நோவுபடவிட்டோ மாகாதே!” என்ற பிற்பாட்டுக்கு நொந்து ஆனைக்கு உதவவந்து தோற்றினாற்போலே அரைகுலையத் தலைகுலைய வந்து தோற்றினான். அவனுடைய வைலக்ஷண்யத்தையும், தம்முடைய ஸ்வரூபத்தையும் கண்டார்; “தா4ர்மிகன் வைத்த தண்ணீர்ப்பந்தலை அழிப்பாரைப்போலே, நித்யஸூரிகளுக்கு அநுபா4வ்யமான வஸ்துவை நாம் கிட்டி தூ3ஷிக்கப் பார்ப்போமல்லோம், அகலுமித்தனை” என்று பார்த்தார். “அகன்றால் ஜீவிக்கவல்லரோ?” என்னில்; முடியுமித்தனையே; ஶேஷிக்கு அதிஶயத்தை விளைக்கத்தேடுமவர்கள் தந்தாம் விநாஶம் பாரார்களிறே; பெருமாளுக்கும் தே3வதூ3தனுக்கும் மந்த்ரம் ப்ரவ்ருத்தமான ஸமயத்திலே, து3ர்வாஸர், “என்னை உள்ளே புகவிடவேணும்” என்ன, “இவனைத் தகைந்து பெருமாளுக்கு அவத்3யத்தை விளைப்பதில், நாம் அகன்று முடியவமையும்” என்று பார்த்து, அவனைப்புகவிட்டு “யதி3 ப்ரீதிர் மஹாராஜ யத்3யநுக்3ராஹ்யதா மயி | ஜஹி மாம் நிர்விஶங்கஸ்த்வம் ப்ரதிஜ்ஞாமநுபாலய ||” என்று விடைகொண்டாரிறே இளையபெருமாள்; “த்யஜேயம் ராக4வம் வம்ஶே ப4ர்த்துர்மா பரிஹாஸ்யதி” என்று விடைகொண்டாளிறே பிராட்டி. அப்படியே இவரும்.
“ஊருணியிலே கள்ளியை வெட்டியெறிவாரைப்போலவும், அம்ருதத்திலே நஞ்சைக் கலந்தாற்போலவும், நித்யஸூரிகளுக்கு அநுபா4வ்யமான வஸ்துவை, நாம் புக்கு அழிக்கையாவதென்” என்று இவர் அகலப்புக, “இவரை இழந்தோமாகாதே” என்று ஈஶ்வரன், “ஆழ்வீர்! அகலப்பார்த்தீரோ” என்ன, “அடியேன் அகலப்பார்தேன்” என்ன, “நீர், நமக்கு அவத்3யம் வருமென்றன்றோ அகலப்பார்த்தது; நீர் அகலவே ‘இவ்விஷயம் அதி4க்ருதாதி4காரமாகாதே!’ என்று நமக்கு ஆள் பற்றாது; இப்படி தண்ணியராக நினைத்திருக்கிற நீரொருவரும் நம்மைக் கிட்டவே, ‘ஸர்வாதி4காரம்’ என்று தோற்றும்; ஆனபின்பு நீர் அகலுமதுகாணும் நமக்கு அவத்3யம்; இனித்தான், நமக்கு ஆகாதாரில்லை என்னுமிடம் பண்டே அடிபட்டுக்காணும் கிடப்பது” என்று, “நாம் கு3ணாகு3ண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் நம் காலை வைத்தோம் கண்டீரே” என்று தான் திருவுலகளந்தருளின ஸெளலப்4யத்தைக்காட்ட, “ஆகில் கிட்டுவோம்” என்று பாரா, “ஒரு கு3ணாதி4க்யமேயோ வேண்டுவது? நம்மால் வரும் கு3ணமும் அவனுக்கு வேண்டா” என்று அகலப்புக, “உம்மால் வரும் கு3ணாதி4க்யமேயன்றோ வேண்டாதது? உம்மால் வரும் நான்தான் வேணுமோ? வேண்டாவோ?” என்று, (நீர் அயோக்3யரென்று
அகலுகிறது ஸத்தாஹாநி; கிட்டுவது ஸத்தாதா4ரகங்காணும். ஆனபின்பு) “நீர் அயோக்3யரென்று அகலுமதிலும் ஸம்ஶ்லேஷிக்கிறது திருவாய்ப்பாடியில் வெண்ணெயோபாதி நமக்கு தா4ரகங்காணும்; இனி நீர் அகலில் திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க லோகம் புகுவீர் கிடீர்; நீர் அகலமது நமக்கு ஸத்தாஹாநி” என்று, “மித்ரபா4வேந ஸம்ப்ராப்தம்” என்று, “அவன்பக்கலுள்ளது போட்கனாகவுமாம்; நாம் அவனை விடில் உளோமாகோம்” என்று சேர்த்துக்கொண்டாற்போலவும், “ப3ந்து4வத4ம்பண்ணி ஜீவிக்கப்பார்க்கிறிலேன்” என்ற அர்ஜுநனை, “கரிஷ்யே
வசநம் தவ” என்னப்பண்ணினாற்போலவும் தம்மை வருந்தி இசைவித்து ஸம்ஶ்லேஷோந்முக2னானபடியே ஸம்ஶ்லேஷித்துத் தலைக்கட்டினான் என்கிறார்.
முதல் பாட்டு
*வளவே ழுலகின் முதலாய வானோரிறையை அருவினையேன்*
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்*
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லா னாயர் தலைவனாய்*
இளவே றேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்துநைந்தே.
ப – முதற்பாட்டில், அம்ருதத்திலே நஞ்சைக் கலக்குமாபோலே ஸர்வஜீவாதுவான ஸர்வேஶ்வரனை என்கரணத்ரயத்தாலும் தூஷித்தே னென்கிறார்.
வளம் – வளவிதான, ஏழுலகின் – ஏழுலகத்துக்கும், முதலாய – முதலான, வானோர் இறையை – வானவர்க்கு இறையான உபயவிபூதிநாதனை, அருவினையேன் – கழிக்க அரிதான பாபத்தையுடையனான நான், நினைந்து – (என்நெஞ்சினாலே) நினைத்து, நைந்து – (ஶரீரமும்) கட்டுக்குலைந்து, களவேழ் – களவுகிளம்பும்படியாக, வெண்ணெய் – வெண்ணெயை, தொடுவுண்ட – ஒளித்து உண்ட, கள்வா – க்ருத்ரிமனே! என்பன் – (என்ற தாயார்பாசுரத்தைச்) சொல்லுவன்; பின்னையும் – அதுக்குமேலே, தளவு – முல்லை, ஏழ் – தோன்றும்படியான, முறுவல் – முறுவலையுடைய, பின்னைக்கு – நப்பின்னைப்பிராட்டிக்கு, ஆய் – உன்னை ஆக்கிவைத்து, வல் – ப்ரபலரான, ஆனாயர் – கோபர்க்கு, தலைவனாய் – தலைவனாய் (வந்து), இள – இளமையாலே செருக்கின, ஏறு ஏழும் – எருதுகள் ஏழையும், தழுவிய – (அபிமதஸம்ஶ்லேஷார்த்தமாகையாலே உகந்து) தழுவி முடித்த, எந்தாய் – என் ஸ்வாமியே!, என்பன் – என்று (அபிமதை பாசுரத்தைச்) சொல்லுவன். ஏழுலகின் முதலாய வானோரென்று – ‘அஸ்த்ரபூஷணாத்யாயக்ரமத்தாலே ஸூரிகளுடைய ஜகத்காரணத்வஞ் சொல்லுகிறது’ என்றும் சொல்லுவர்கள். இவ்விடத்தில், வினையென்று – அத்தலைக்கு அவத்யகரமாம்படி தம்மை பகவத்விஷயத்திலே மூட்டுகையாலே அநிஷ்டாவஹையான பக்தியைச் சொல்லுகிறது. தளவு – முல்லை. ‘இனைந்துநைந்தே’ என்று பாடமாய், ‘இனைதல் – வருந்துதல்’ என்றும் சொல்லுவாருமுளர்.
ஈடு – முதற்பாட்டு. நித்யஸூரிகளுக்கு அநுபா4வ்யனானவனை என்னுடைய மநோவாக்காயங்களாலே தூ3ஷித்தேன் என்கிறார்.
(வளவேழுலகு இத்யாதி3) வளவிதான ஏழுலகு என்று – லீலாவிபூ4தியாய், “வானோரிறை” என்கையாலே – நித்யவிபூ4தியைச் சொல்லிற்றாய், ‘இப்படி உப4யவிபூ4திநாத3னைக்கிடீர் நான் அழிக்கப்பார்த்தது’ என்கிறார்; ‘வளவியனாய், ஏழுலகுக்கும் முதலாய், வானோரிறையாயிருக்குமவனை’ என்று, அவன்தனக்கே விஶேஷணமாகவுமாம்; ‘வளவியராய், ஏழுலகுக்கும் முதலாயிருக்கிற வானோர்’ என்று, நித்யஸூரிகளுக்கு விஶேஷணமாகவுமாம். இவர்கள் வளவியராகையாவது – ப4க3வத3நுப4வத்தில் குஶலராகை. அஸ்த்ரபூ4ஷணாத்4யாயத்திலே, ‘ஸ்ரீகௌஸ்து ப4த்தாலே ஜீவஸமஷ்டியை த4ரிக்கும்’ என்றும், ‘ஸ்ரீவத்ஸத்தாலே ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை த4ரிக்கும்’ என்றும் சொல்லாநின்றதிறே.
(வானோரிறையை) தே3ஶிகராகையாலே துறையறிந்தே இழிவர்கள். “ஸ்வாமி” என்றேயாயிற்று இவர்களுக்கு ப்ரதிபத்தி. “வானோரிறையைக் கள்வாவென்பன்” என்னவாயிற்று நினைத்தது; தொடங்கின வாக்யம் பூரிப்பதற்கு முன்னே தம்மை அநுஸந்தி4த்து “அருவினையேன்” என்கிறார். தா4ர்மிகனா யிருப்பானொருவன் ரஜஸ்தமஸ்ஸுக்களாலே அபி4பூ4தனாய், க்3ருஹத்திலே அக்3நிப்ரக்ஷேபத்தைப்பண்ணி, ஸத்வம் தலையெடுத்தவாறே அநுதபிக்குமாபோலே அநுதபிக்கிறார். (அருவினையேன்) இப்போது “அருவினையேன்” என்கிறது – “கள்வா” என்கைக்கு அடியான ப்ரேமத்தை. அத்தை “அருவினை” என்கிறார், “அநிஷ்டாவஹம் பாபம்” என்றிருக்குமவராகையாலே.
(களவேழ் இத்யாதி3) களவிலே வேழ்க்கையுடையனாய் – அபி4நிவிஷ்டனாய் என்னவுமாம்; அன்றிக்கே, களவு எழும்படி – களவு ப்ரஸித்3த4மாம்படி என்னவுமாம். ‘களவு ப்ரஸித்3த4மாம்படி, வெண்ணெயைக் களவுகண்டு அமுதுசெய்த க்ருத்ரிமனே!’ என்பன். இத்தால் – பரிவுடைய யஶோதைப் பிராட்டி சொல்லும் பாசுரத்தைக் கிடீர் சொல்லிற்று என்கை. என்பன் என்றது – சொன்னேன் என்றபடி.
(பின்னையும்) அதுக்குமேலே. (தளவு இத்யாதி3) பரிவுடைய யஶோதைப் பிராட்டிக்கு மறைத்தவற்றையும் வெளியிடும்படி அபி4மதையான நப்பின்னைப் பிராட்டி பாசுரத்தையும் சொன்னேன். (தளவேழ் முறுவல்) நப்பின்னைப் பிராட்டியுடைய த3ந்தபங்க்தியைக் கண்டவாறே முல்லையரும்பு ஸ்ம்ருதிவிஷயமாகை நெஞ்சிலே; க3வயத்தைக் கண்டவாறே க்3ருஹத்தில் கோ3 ஸ்ம்ருதிவிஷயமாமாபோலே. (“தளவெழும்படியான முறுவல்” என்னவுமாம். அதாவது, எழுகை – போகையாய், தோற்றுப் போம்படியான முறுவல்) “பல்லுக்குத் தோற்ற பனி முல்லை” என்னக்கடவதிறே. (பின்னைக்காய்) நப்பின்னைப் பிராட்டியுடைய ஸ்மிதத்திலே தோற்று அவளுக்குத் தன்னை இஷ்டவிநியோகா3ர்ஹமாக்கினான்.
(வல்லானாயர் தலைவனாய்) “க்ருஷ்ணாஶ்ரயா: க்ருஷ்ணப3லா: க்ருஷ்ணநாதா2ஶ்ச பாண்ட3வா:” என்னுமாபோலே, அவனைப்பற்றி நாட்டையழித்துத் திரியும் மிடுக்கைப்பற்ற “வல்லானாயர்” என்னவுமாம்; அன்றிக்கே, ஆனாயர் வலிய தலைவனாய்; அதாவது – உடம்பிருக்கத் தலைகுளித்தும், தலையிருக்க உடம்பு குளித்துமிறே திரிவது; கார்த்திகை புதியதுக்குக் குளித்தார்களாகில் இவன் அதுவும் செய்யாதே இடைத்தனத்திலே ஊன்றிநிற்கும்படியைச் சொல்லுதல். இப்படி யிருக்கிலல்லது பெண்கொடார்களிறே இடையர்; “குலேந ஸத்ருஶீ” என்னக் கடவதிறே; “துல்யஶீலவயோவ்ருத்தாம்” என்று இரண்டு தலையும் குறைவற்றிருக்க, எருதுகளை முன்னிட்ட வன்னெஞ்சர் என்னவுமாம். (இளவேறு) ம்ருத்யுஸமமமாயிருந்துள்ள ருஷப4ங்கள் ஏழையும் ஊட்டியாக ஒருகாலே தழுவினான். அநந்தரம் அவளை லபி4க்கையாலே அவள் முலையிலே அணைந்தாற்போலேயிருக்கையாலே “தழுவி” என்கிறது. (எந்தாய் என்பன்) எருதேழடர்த்த செயலுக்குத் தோற்று நப்பின்னைப் பிராட்டி சொல்லும் பாசுரத்தைச் சொன்னேன். உக்திமாத்ரமேயோ? – (நினைந்து) நெஞ்சாலும் தூ3ஷித்தேன். அவ்வளவோ? – (நைந்தே) பிறர் அறியும்படி ஶிதி2லனாய், காயிகத்தாலும் தூ3ஷித்தேன்.
‘வளவேழுலகு’ (1.5.1) இத்யாதி3க்கு – “அயர்வறுமமரர்கள் அதிபதி” (1.1.1) என்றேன்; “எத்திறம்” (1.3.1) என்றேன்; பிராட்டிமார் த3ஶையை ப்ராப்தனாய்த் தூதுவிட்டேன் (1.4) – என்று அவற்றுக்கு அநுதபிக்கிறார்.
“நினைந்து நைந்து வளவேழுலகின் முதலாய வானோரிறையைக் களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன்; பின்னையும், தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய் இளவேறு ஏழுந்தழுவிய எந்தாய் என்பன் அருவினையேன்” என்று அந்வயம்.
இரண்டாம் பாட்டு
நினைந்து நைந்துஉள் கரைந்துருகி இமையோர் பலரும் முனிவரும்*
புனைந்த கண்ணி நீர்சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்*
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே*
மனம்செய் ஞானத்து உன்பெருமை மாசூணாதோ மாயோனே.
ப – அநந்தரம், உம்முடைய ஸம்பந்தம் நமக்கு அவத்யகரமாவா னென்? என்று ஈஶ்வராபிப்ராயமாக, ‘என்னளவேயோ, விலக்ஷணரான தேவாதிகளும் அநந்யப்ரயோஜநஸமாதியாலே ப்ரேமயுக்தராய் ஆஶ்ரயிக்கிலும் ஸர்வகாரணபூதனான உன்னுடைய விலக்ஷணமாஹாத்ம்யத்துக்கு மாலிந்யகரமன்றோ’ என்கிறார்.
இமையோர் – (அநுபவத்தில்) அநிமிஷரான ப்ரஹ்மாதி தேவர்களும், முனிவரும் – மநநஶீலரான ஸநகாதி பரமருஷிகளுமான, பலரும் – அஸங்க்யாதபுருஷர்கள், நினைந்து – (உன் குணங்களை நெஞ்சாலே) அநுஸந்தித்து, நைந்து – அத்தாலே ஶரீரஶைதில்யம் பிறந்து, உள் கரைந்து – மநஸ்ஸு கட்டுக்குலைந்து, உருகி – நீர்ப்பண்டமாய்க்கொண்டு, புனைந்த – (இப்படி தாதா3த்விகமான ப்ரேமவிகாரத்தோடே) தொடுக்கப்பட்ட, கண்ணி – மாலை, நீர் – (அர்க்யாத்யுபயோகி) ஜலம், சாந்தம் – சாந்து (இப்படி இவற்றை), புகையோடு – அகிற்புகையோடே கூட, ஏந்தி – யாவதங்கீகாரம் தரித்து, வணங்கினால் – (அங்கீகாரோபகாரஸ்ம்ருதியாலே) வணங்கினால், மாயோனே – ஆஶ்சர்யமான விலக்ஷண விபூதியுக்தனே! (ஸ்ருஷ்டிதஶையிலே தயமாநமநாவாய்க்கொண்டு), நினைந்த – நினைக்கப்பட்ட, எல்லாப்பொருள்கட்கும் – ஸமஸ்தபதார்த்தங்களுக்கும், வித்தாய் – உபாதாநகாரணமாய், முதலில் சிதையாமே – ஸ்வரூபவிகாரம் பிறவாதபடி, மனம் – மநஸ்ஸாலே, செய் – செய்யப்பட்ட, ஞானத்து – ஸங்கல்பரூப ஜ்ஞாநத்தை யுடைய, உன் – உன்னுடைய, பெருமை – பெருமையானது, மாசூணாதோ – மலிநமாகாதோ? அகர்மவஶ்ய விபூதியாலே ஆராதிதனான உன்னுடைய பெருமைக்கு, அதிஶயிதரே யாகிலும் அவித்யாத்யுபஹிதருடைய ஆராதநம் மாலிந்யகரமென்று கருத்து. இங்கும் ‘இனைந்து’ என்று பாடஞ் சொல்லுவர்.
ஈடு – இரண்டாம் பாட்டு. “நெஞ்சாலே நினைந்தும், வாயாலே பேசியும், நைந்தும், தப்பச்செய்தேன்” என்றார் கீழ்; “ ‘தப்பச்செய்தேன்’ என்றவிடம் தப்பச் செய்தேன்” என்கிறார் இதில். “சண்டா3ளன் ‘ஓத்துப்போகாது’ என்றுதான் சொல்லப் பெறுமோ? அப்படியேயன்றோ நான் அயோக்3யன் என்று அகலுகையும்; ப்ரேமார்த்3ரசித்தரான ப்3ரஹ்மாதி3களன்றோ அதுதான் சொல்லப்பெறுவார்! நான் ‘தப்பச்செய்தேன்’ என்று அகலுமதில், கிட்டிநின்று பரிமாறுவது நன்றன்றோ” என்று கீழ் நின்ற நிலையையும் நிந்தி3த்துக்கொண்டு அகலுகிறார்.
(நினைந்து இத்யாதி3) ப்3ரஹ்மாதி3கள், ஸமாராத4நத்துக்கு ஒருப்படும்போது, திருமாலை தொடக்கமான உபகரணங்களைச் சமைத்துக்கொண்டாயிற்று இழிவது. (நினைந்து) “நாம் இவற்றையும் கொண்டுசென்றால் நம்மைக் குளிரக் கடாக்ஷிக்கக் கடவனே; “மாமக்ரூரேதி வக்ஷ்யதி” என்கிறபடியே நம்மை அவன் வினவக்கடவனே” என்று இங்ஙனே முந்துற நினைப்பார்கள். (நைந்து) அநந்தரம், த4ரித்திருக்கமாட்டாதே ஶிதி2லாந்த:கரணராவர்கள். (உள்கரைந்து) நையுமது ஸ்தூ2லம் என்னும்படி உள்கரைவர்கள். (உருகி) பின்னை ஓரவயவியாக்கி எடுக்கவொண்ணாதபடி மங்குவர்கள். இப்படி படுகிறவர்தாங்கள் ஆர்? என்றால் (இமையோர் பலரும் முனிவரும்) ப்3ரஹ்மாதி3களும் ஸநகாதி3களும். இவர்கள் ரஜஸ்தமஸ்ஸுக்களாலே அபி4பூ4தரானபோது பண்ணும் து3ர்மாநம் க4னத்திருக்குமாபோலேயாயிற்று, ஸத்வம் தலையெடுத்தபோது ப4க3வத்3கு3ணாநுப4வம்பண்ணி ஶிதி2லராம்படியும். இப்படி ப்ரேமஸ்வப4ாவ ராகையாலே திருமாலை தொடுக்கும்போது தொடங்கி, “அவன் இத்தைக் கண்டருளக்கடவனே!, சாத்தியருளக் கடவனே!” என்று ஸாத3ரமாகத் தொடுத்த மாலை, ஸமாராத4நோந்முக2னான(வன்) ஶ்ரமம் ஆறுகைக்கு அர்க்4யங் கொடுக்கைக்காக உண்டாக்கின ஜலம், அநந்தரம் சாத்தியருளுவதாகச் சமைந்த சந்த3நாதி3கள், தூ4பங்கண்டருள உண்டாக்கின அகிற்புகை, இவை தொடக்கமானவற்றை த4ரித்துக்கொண்டு வந்து, நிர்மமராய்த் திருவடிகளிலே விழுவர்கள். (ஏந்தி வணங்கினால்) அவன் இவைகொண்டு கார்யங்கொள்ளுமதிலும் “அவனுக்கு” என்று த4ரிக்குமதுவே பேறாயிருக்கும் இவர்களுக்கு; “சூட்டுநன்மாலைகள் தூயனவேந்தி” (திருவிருத்தம் – 21) என்னுமாபோலே. அவன்தான் இவைகொண்டு கார்யங்கொள்ளுமதிலும், இவர்கள் த4ரித்து(க் கொண்டு) நிற்கக் காணுமதுவே பேறாக நினைத்திருக்கும்; பா4வப3ந்த4ம் இரண்டுதலைக்கும் உண்டிறே. “வணங்கினால் உன்பெருமை மாசூணாதோ” என்கை.
(நினைந்த இத்யாதி3) மேலே, “மனஞ்செய் ஞானம்” என்று ஸங்கல்பரூப ஜ்ஞாநத்தைச் சொல்லாநிற்கச்செய்தே, “நினைந்த” என்கிற இதுக்குக் கருத்தென்? என்னில்; தே3வாதி3கார்யமாய்க்கொண்டு விஸ்த்ருதமானதடங்கலும் அழிந்து, “ஸதே3வ” என்று வ்யவஹரிக்கவேண்டும்படியான அன்று, புத்ர பௌத்ராதி3களோடே ஜீவித்தவன் அவர்களை இழந்து தனியனானால் தன் தனிமையை அநுஸந்தி4த்து வெறுக்குமாபோலவும், தே3ஶாந்தரக3தனான புத்ரனை மாதாபிதாக்கள் நினைக்குமாபோலவும், இவற்றினுடைய இழவை அநுஸந்தி4ப்ப தொரு அநுஸந்த4ாநம் உண்டு; அத்தைச் சொல்லுகிறது. (நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய்) “நினைத்தல் – கலத்தலும், கூடலுமாய், ஸத3வஸ்த4மாய்த் தன்னுடனே கூடிக்கிடக்கிற ஸகலபதா3ர்த்த2ங்களுக்கும் காரணமாய்” என்று பிள்ளையமுதனார் நிர்வஹிப்பர். அன்றியே, இப்படி தன் திருவுள்ளத்தாலே விஷயீகரிக்கப்பட்ட ஸகலபதா3ர்த்த3ங்களுக்கும் காரணமாய். (முதலில் சிதையாமே) அவற்றை உண்டாக்கச்செய்தே தானான தன்மையில் குறைவாராதபடி இருக்கும். ம்ருத்பிண்ட3ம் க4டஶராவாதி3 கார்யமானவாறே விஶிஷ்டாகாரம் நஶிக்கும்; இங்கு அதில்லை; நாட்டில் கார்யங்களை உண்டாக்குவதான காரணத்தின்படியல்ல இவன்படி என்கிறது.
ஆனால் பின்னை, ஸங்கல்பமோ ஜக3த்காரணம், ஸூக்ஷ்ம சித3சித்3 விஶிஷ்ட ப்3ரஹ்மமன்றோ? என்னில், ஆனாலும் காரணமாம்போது ஸங்கல்ப பூர்வகமாகவேணும்; ஸங்கல்பவிஶிஷ்டம் காரணமானாலும், “ப3ஹு ஸ்யாம்” என்கிற ‑ஸங்கல்ப ப்ராதா4ந்யத்தாலே சொல்லுகிறது. இப்படியிருக்கிற ஸங்கல்ப ரூப ஜ்ஞாநத்தையுடைய உன் பெருமையுண்டு – உன் வைலக்ஷண்யம், அது – இவர்கள் வணங்கினால் மாசூணாதோ? “தன் ஸங்கல்பத்தாலே ஸகலபதா3ர்த்த2ங்களையும் உண்டாக்கும்படியான வைலக்ஷண்யத்தை உடையவனுக்கு, அவனாலே ஸ்ருஜ்யரான நாம் ஸ்பர்ஶித்த த்3ரவ்யம் அங்குத்தைக்கு அர்ஹமோ?” என்று தந்தாமுடைய அயோக்3யதையை அநுஸந்தி4த்து, அகலுகைக்கு அதி4காரம் உள்ளது அவர்களுக்கன்றோ; அதுக்குத்தான் நான் ஆர்? (மாயோனே) ப்3ரஹ்மாதி3களையும் க்ஷுத்3ரமநுஷ்ய ஸ்தா2நத்திலே ஆக்கவல்ல உன்னுடைய ஆஶ்சர்யமான வைலக்ஷண்யமிருந்தபடியென்! (நினைந்த எல்லாப்பொருள்கட்கும் வித்தாய் முதலிற் சிதையாமே மனஞ்செய்ஞானத்து உன் பெருமை, இமையோர் பலரும் முனிவரும் நினைந்து நைந்து உள்கரைந்து உருகிப் புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் மாசூணாதோ மாயோனே).
மூன்றாம் பாட்டு
மாயோ னிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும்*
நீயோ னிகளைப் படையென்று நிறைநான் முகனைப் படைத்தவன்*
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைக ளெல்லாம் திருவடியால்
தாயோன்* எல்லா வெவ்வுயிர்க்கும் தாயோன் தானோ ருருவனே.
ப – அநந்தரம், நிரதிஶயோத்கர்ஷத்தோபாதி, தாரதம்யரஹிதமாக எல்லாரோடும் கலக்கும் நீர்மையுண்டென்று, அஶேஷஜந ஸம்ஶ்லேஷரூபமான லோகவிக்ரமண ஸ்வபாவத்தை ஈஶ்வரன் காட்டக்கண்டு விஸ்மிதராகிறார்.
மாயோனிகளாய் – விலக்ஷணஜந்மாக்களாய்க்கொண்டு, நடை கற்ற – ததநுரூப ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரத்தை அறிந்திருக்கிற, பலரும் – பலவகைப்பட்ட, வானோர் – தேவர்களும், முனிவரும் – ருஷிகளுமாகிற, யோனிகளை – ஜந்துக்களை, நீ படையென்று – நீ படையென்று, நிறை – (வ்யஷ்டி ஸ்ருஷ்டிக்கு உறுப்பாக ததுபயுக்த ஜ்ஞாநாதி) பௌஷ்கல்யத்தையுடைய, நான்முகனை – சதுர்முகனை, படைத்தவன் – ஸ்ருஷ்டித்தவனாய், எல்லா அறிவுக்கும் – அந்த ப்ரஹ்மாதி ஸமஸ்தசேதநர் ஜ்ஞாநங்களுக்கும், சேயோன் – தூரஸ்த்தனான மேன்மையையுடையனாய் வைத்து, திசைகளெல்லாம் – திகுபலக்ஷிதமான ஸமஸ்தலோகங்களையும், திருவடியால் – ஸுகுமாரமான திருவடிகளாலே, தாயோன் – (அவற்றுக்கு நோவுவாராதபடி) ஸ்பர்ஶித்தவனாய், (அத்தாலே), எல்லா எவ்வுயிர்க்கும் – (தாரதம்யரூபமான எவ்வகையையுடைய) எல்லாப்ராணிகளுக்கும், தாயோன் – மாத்ருவத் வத்ஸலனான, தான் – தான், ஓருருவனே – ஒருபடியாயிருக்கிறானே! மேன்மைபோலே நீர்மையும் அளவிறந்ததீ! என்று கருத்து.
ஈடு – மூன்றாம் பாட்டு. ‘நினைந்தும் பேசியும் நைந்தும் தப்பச்செய்தேன்’ என்றார் முதற்பாட்டில்; ‘தப்பச்செய்தேன் என்றவிடம் தப்பச்செய்தேன்’ என்றார் இரண்டாம் பாட்டில்; “நீர் நம்முடைய மேன்மையைப்பார்த்து அங்ஙன் நெகிழப்போகாதே; நான் தாழநின்று எல்லாரோடும் பொருந்தும் ஶீலகு3ணத்தையும் ஒருகால் பாரீர்” என்று திருவுலகளந்தருளின ஶீலகு3ணத்தைக் காட்டிக்கொடுக்க, அத்தை அநுஸந்தி4த்து, அகலமாட்டாதே அணுகவும் மாட்டாதே, நடுவே நின்று அணாவாய்த்துக் காலம் கழிக்கிறார். அப்படி காலம் கழிக்கவல்லரோ அவனை யொழிய? என்னில்; ‘சீர்கலந்த சொல்நினைந்து’ (பெரிய திருவ.86) போக்கும்போது போக்கவல்லரே; ஶீலகு3ணாநுஸந்தா4நத்தாலே போக்கலாமிறே.
(மாயோனிகள் இத்யாதி3) மஹாயோநிகளாய் – விலக்ஷணமான ஜந்மங் களையுடையராய். தந்தாமுடைய அதி4காராநுரூபமான மர்யாதை3களுண்டு – ஸ்ருஷ்ட்யாதி3கள், அவற்றில் வந்தால் அறிவித்த ஸர்வேஶ்வரன்பக்கல் இருகால்மட்டுச் சென்று கேள்விகொள்ள வேண்டாதபடி கற்றிருப்பாரான வானோர்பலரும் முனிவருமான யோநிகளை; அவர்களாகிறார் – “ஸப்தர்ஷிகள், த3ஶப்ரஜாபதிகள், ஏகாத3ஶருத்ரர்கள், த்3வாத3ஶாதி3த்யர்கள், அஷ்டவஸுக்கள்” என்று இப்படி சொல்லப்பட்டிருந்துள்ள ஜந்மங்களையுடையரானவர்களை, ‘நீ படை’ என்று, முந்துற சதுர்முக2னை உண்டாக்கினவன்; “யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம்” என்கிறபடியே ப்3ரஹ்மாவை ஸ்ருஷ்டித்து, “இவ்வருகு உண்டான கார்யவர்க்க3த்தை நீ உண்டாக்கு” என்று விட்டால், ஸர்வேஶ்வரனைக் கேள்விகொள்ள வேண்டாதபடி துப்பரவுடையனாகையாலே பூர்ணனான சதுர்முக2னைப் படைத்தவன். (சேயோன் எல்லா அறிவுக்கும்) அவ்யவதா4நேந தன்பக்கலிலே பிறந்து, தான் ஓதுவிக்க ஓதி, அவற்றாலே ஜ்ஞாநத்தில் குறைவற்றிருக்கிற ப்3ரஹ்மாதி3களுடைய ஜ்ஞாநத்துக்கும் தூ3ரஸ்த2னாயிருக்கும்.
(திசைகளெல்லாம் திருவடியால் தாயோன்) எத்தனையேனும் அதிஶயித ஜ்ஞாநரானவர்களுடைய ஜ்ஞாநத்துக்கும் தூ3ரஸ்த2னாயிருந்துவைத்து, தானே தன்னைக் கொடுவந்து காட்டுமன்று வருத்தமறக் கொடுவந்து காட்டும். தி3க்குக்களோடேகூடின பூ4மிப்பரப்படைய திருவடிகளாலே தாவி அளந்துகொண்டவன். ‘நாய்ச்சிமார் தொடும்போதும் பூத்தொடுமாபோலே கூசித்தொடும் திருவடிகளைக் கொண்டு கிடீர் காடும் ஓடையும் அளந்துகொண்டது!’ என்று ஆஶ்சர்யப்படுகிறார்.
கு3ணாகு3ணநிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் திருவடிகளைக் கொடுவந்து வைக்கைக்கு நிப3ந்த4நமென்? என்னில் (எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன்) ஸகல ப்ராணிகளுக்கும் தாய்போலே பரிவனாகை. எல்லா எவ்வுயிர்க்கும் என்கிறது- உத்கர்ஷாபகர்ஷம் பாராதே பரிவனாகை. (தானோரு ருவனே) ஒருவர்க்கும் நிலமல்லாத மேன்மையையும் அநு‑ஸந்தி4த்தார்; அப்படிப்பட்டவனுடைய நீர்மையையும் அநுஸந்தி4த்தார்; “இவனும் ஒருபடியை யுடையவனாயிருக்கிறானே!” என்று வித்3த4ராகிறார். கடுநடையிட்டோடுகிறவர், இவன் ஶீலகு3ணத்தை அநுஸந்தி4த்துக் கால்தாழ்கிறார்.
நான்காம் பாட்டு
தானோரு ருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய*
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்*
தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்*
வானோர் பெருமான் மாமாயன் வைகுந் தன் எம்பெருமானே.
ப – அநந்தரம், உபயவிபூதிநிர்வாஹகனான நிரபேக்ஷன், தன்ஶீலாதிமுகத்தாலே வஶீகரித்து எனக்கு நாதனே யானான் என்று ஸம்பந்தத்தை அநுமதிபண்ணுகிறார்.
தான் – (ஸச்சப்தவாச்யனான) தான், ஓருருவே – (ஸஹகாரிநிரபேக்ஷத்வத்தாலே) ஏகாகாரனாய்க்கொண்டே, தனி – (நிமித்தாந்தரரஹிதனாகையாலே) தனியாய், வித்தாய் – (உபாதாநமாகையாலே) வித்தாய்க்கொண்டு, தன்னில் – (இப்படி த்ரிவிதகாரணமுமான) தன் ஸங்கல்பாத்மகஸ்வரூபத்திலே, மூவர் – (ப்ரஹ்மருத்ரேந்த்ரர்கள்) மூவரும், முதலாய – முதலான, வானோர் – தேவர்களும், முனிவரும் – ருஷிகளுமாகிற, பலரும் – பலசேதநரும், மற்றும் – மற்ற மநுஷ்யஜாதியும், மற்றும் – மற்ற திர்யக்ஜாதியும் ஸ்தாவரமுமான, முற்றுமாய் – எல்லாமாமுமாகிற (பஹுத்வ விசிஷ்டனாய்), தான் – (இப்படி ஸங்கல்பயுக்தனான) தான், தன்னுள்ளே – ததாவித ஸ்வரூபத்திலே, ஓர் – (பூதாந்தரஸ்பூர்த்தி யில்லாமையாலே) அத்விதீயமான, பெருநீர் – ஏகார்ணவ ரூபகாரணஜலத்தை, தோற்றி – தோன்றுவித்து, அதனுள் கண்வளரும் – (ப்ரஹ்மாதிஸ்ருஷ்ட்யர்த்தமாக) அதிலே கண்வளர்ந்தருளுமவனாய், வைகுந்தன் – பரமபதநிலயனாய், வானோர்பெருமான் – நித்யஸூரிநிர்வாஹகனுமான, மாமாயன் – (நிரபேக்ஷனாய்வைத்துத்) தன் ஆஶ்சர்யகுணசேஷ்டிதாதிகளாலே நிரவதிகஶீலவானானவன், எம்பெருமானே – எனக்கு ஸ்வாமியே. இந்த ஸம்பந்தம் அவனுடைய ஶீலவத்தையாலே அவத்யகரமல்ல வென்று கருத்து.
ஈடு – நாலாம் பாட்டு. “அவன்படி இதுவாயிருந்தது; இனி நீர் செய்யப்பார்த்த தென்?” என்ன; “நாம் அகலப்பார்த்தால் உடையவர்கள் விடுவர்களோ” என்கிறார். “அத்யந்தநிரபேக்ஷனாயிருந்துவைத்து, ஸ்ருஷ்ட்யாத்3யநேக யத்நங்களைப் பண்ணி என்னைத் தனக்காக்கிக்கொண்ட கு3ணங்களாலே என்னை விஷயீகரித்தவன், இனி நான் ‘அல்லேன்’ என்னிலும், தன்னுடைய ஸௌஶீல்யகு3ணத்தாலே என்னை விடான்” என்று ஸமாஹிதராகிறார்.
(தானோருருவே தனிவித்தாய்) “ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமேவாத்3விதீயம்” – இங்கே அத்3விதீ3யபத3ங்கள் மூன்றுண்டா யிருந்தது; இவற்றால் கொள்ளுகிற விநியோக3மென்? என்னில்; ஸ்ருஷ்டியை ப்ரஸங்கி3க்கையாலே காரணவிஷயமாய்க் கிடக்கிறன. த்ரிவித3காரணமும் தானே என்கை. “தான்” என்கிற இத்தால் – உபாதா3நாந்தரமில்லை என்கை. “ஓர்” என்கிற இத்தால் – ஸஹகார்யந்தரமில்லை என்கை. “தனி” என்கிற இத்தால் – நிமித்தாந்தரமில்லை என்கை. “உரு” என்று – அழகு; அழகிய த்ரிவித4 காரணமுமாய்.
(தன்னில் மூவர் முதலாய) இக்ஷ்வாகு வம்ஶ்யர் நடுவே வந்து அவதரித்து அவர்களோடே எண்ணலாம்படி இருக்குமாபோலவும், யாத3வர்கள் நடுவே வந்து அவதரித்து அவர்களோடொக்க எண்ணலாம்படி இருக்குமாபோலவும், ப்3ரஹ்மாதி3கள் நடுவே அவர்களோடொக்கச் சொல்லலாம்படி அவதரித்து, ஸ்வேந ரூபேண நின்று பாலநத்தைப் பண்ணி, அவர்களுக்கு அந்தராத்மாவாய் நின்று ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைப் பண்ணிப்போருகையாலே, தன்னோடு கூடின மூவர் தொடக்கமான என்னுதல்; அன்றியே, “தன்னில்” என்றது – தன்பக்கலிலே என்றபடியாய், தன்னுடைய ஸங்கல்பரூப ஜ்ஞாநத்திலே, “மூவர் முதலாய” – “ஸேந்த்ர:” என்கிற இந்த்3ரனையும் கூட்டிச் சொல்லுதல். (வானோர் பலரும்) ப்3ரஹ்மாதி3கள் தொடக்கமான தே3வர்களையும். (முனிவரும்) ஸநகாதி3களையும். (மற்றும்) ஸ்தா2வரங்களையும். (மற்றும்) ஜங்க3மங்களையும். (முற்றுமாய்) அநுக்தமான எல்லாவற்றையும் உண்டாக்குகைக்காக.
(தானோர் இத்யாதி3) இப்படி ஸ்ருஷ்ட்யுந்முக2னான தான், தனக்குக் கண்வளர்ந்தருளுகைக்குப் போரும்படியான பரப்பையுடைத்தான ஏகார்ணவத்தைத் தன் பக்கல் நின்றும் உண்டாக்கி, அதனுள் கண்வளரும். இப்படி ஏகார்ணவத்திலே தனியே சாய்ந்தருளுகிறவன்தான் ஆர் என்னில் (வானோர் பெருமான்) நித்யஸூரிகளுக்கு நாத2னானவன். (மாமாயன்) ஆஶ்சர்யங்களான கு3ணசேஷ்டிதங்களை உடையவன். (வைகுந்தன்) ஸ்ரீவைகுண்ட2த்தைக் கலவிருக்கையாக உடையவன். (எம்பெருமானே) அவன் என் நாயனே. உடைமை தப்பிப்போகப்புக்கால், உடையவர்கள் ஆறியிருப்பர்களோ? பெறுகைக்கு ஈடாக ஏற்கவே நோன்புநோற்று வருந்தி ப்ரஜையைப்பெற்ற தாயானவள், அவன் நடக்கவல்லனான ஸமயத்திலே “தே3ஶாந்தரம் போவேன்” என்றால், விட்டு ஆறியிராளிறே; அப்படியே நெடுநாள் தன் வாசியறியாதே போந்த எனக்கு அறிவைத் தந்து தன்னை உள்ளபடி அறிவித்தவன், தான் தந்த அறிவைக்கொண்டு நான் அகன்றுபோகப் புக்கால், அவன் விட்டு ஆறியிருக்குமோ?
ஐந்தாம் பாட்டு
மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா*
கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா*
வானார் சோதி மணிவண்ணா மதுசூதாநீ யருளாய்* உன்
தேனே(ய்) மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே.
ப – அநந்தரம், ஆஶ்ரிதார்த்தமான வ்யாபாரங்க?ைள யுடையவனை – “இந்த பந்தாநுரூபமாக அநுபவரூப ஸம்ஶ்லேஷத்தைத் தரவேணும்” என்று அர்த்திக்கிறார்.
மானேய் – மானோடொத்த, நோக்கின் – நோக்கை யுடையளாய், மடவாளை – மடப்பத்தை நிரூபகமாகவுடையளான நாரீணாமுத்தமையை, மார்பில் – மார்பிலே, கொண்டாய் – வைத்துக்கொண்டவனாய், மாதவா – அத்தாலே மாதவனென்கிற திருநாமத்தைப் பெற்றவனாய், (வேறொரு அவயவத்துக்குக் குறைவற), கூனே – கூனிகூனே, சிதைய – சிதையும்படி, உண்டைவில் நிறத்தில் – உண்டைவில்லின்படியிலே (அநாயாஸேந தெறித்தாற்போலே), தெறித்தாய் – நிமிர்த்தவனாய், கோவிந்தா – அறிவில்லாத பசுக்களையும் (பெறாப்பேறாக) ரக்ஷித்தவனாய், வான் – அறிவுடையார்தேஶத்தை, ஆர் – நிறைக்கும், சோதி – ஒளியையுடைய, மணிவண்ணா – மாணிக்கம் போன்ற வடிவையுடையனாய், மதுசூதா – (ஆஶ்ரிதவிரோதியான) மதுவை நிரஸித்தவனே! நீ – நீ, உன் – உன்னுடைய, தேனே – மத்வ உத்ஸமாய், மலரும் – விகாஸியான, திருப்பாதம் – திருவடிகளை, வினையேன் – (இசைந்தபின்பும் விளம்பிக்கைக்கு அடியான) பாபத்தையுடையேனான நான், சேருமாறு – கிட்டும்படி, அருளாய் – க்ருபைபண்ணவேணும். இத்தால் – ப்ரார்த்தநீயனுடைய நித்யபுருஷகார யோகத்தையும், ஆஶ்ரிதவக்ரதையைக் கழிக்கும் ஆர்ஜவாபாதகத்வத்தையும், ரக்ஷணாபிநிவேஶத்தையும், ப்ராப்யமான தேஶவிக்ரஹவைலக்ஷண்யத்தையும், ப்ரதிபந்தகநிவர்த்தகத்வத்தையும் சொல்லிற்றாயிற்று. “கூனேசிதைய’ என்கிற இடம் – பெருமாள் சுண்டுவில்லாலே கூனிகூனைச் சிதைத்தபடிசொல்லிற்று’ என்பாரு முளர்; அப்போது கோவிந்தனென்று பூமிக்கு ரக்ஷக னென்று கொள்வது.
ஈடு – அஞ்சாம் பாட்டு. ஆபி4முக்2யம் பண்ணின அநந்தரம், “க்ரியதாமிதி மாம் வத3” போலே ஏவி அடிமைகொள்ளவேணும் என்று ப்ரார்த்தி2க்கிறார் என்னுதல்; இவர் ஆபி4முக்2யம் பண்ணச்செய்தே அவன் முகங்காட்டாதே அல்பம் விளம்பி3க்க, அதுபற்றாமை “அருளாய்” என்கிறார் என்னுதல்.
(மானேய் இத்யாதி3) அருளுவிப்பாரும் அருகே உண்டாயிருக்க, “எனக்கு அருளாய்” என்று ப்ரார்த்தி2க்கவேண்டுகிறதென்? (மானேய் நோக்கி) மானேய்ந்த நோக்கையுடையளாய். ஏய்கை – பொருந்துகை. மானோடு ஒத்த நோக்கை – கண்ணையுடையளாய். (மடவாளை) ஆத்மகு3ணோபேதையாயிருக்கிற பெரியபிராட்டியாரை. காரியப்பாடறக் கண்ணாலே அவனை ஒருகால் நோக்கினால், ஒருபாட்டம் மழைவிழுந்தாற்போலே குளிரும்படியாயிற்று நோக்கிருப்பது. அன்றிக்கே, (மடவாள்) மடப்பமாவது – துவட்சியாய், அவன்தான் கண்ணாலே இவளை நோக்கினால் “தெய்வவண்டு துதைந்த எம்பெண்மையம்பூ” (9-9-4) என்கிறபடியே, வண்டாலே ஆத்தஸாரமான பூப்போலேயாயிற்று இவளிருப்பது.
(மார்பிற்கொண்டாய் மாதவா) மாம்பழத்தோடு ஒரு ஸம்ப3ந்த4மின்றிக்கே யிருக்கச்செய்தே அப்பேரை த4ரிக்குமாபோலேயிறே இவனையொழிய ஸ்ரீமாந் என்னும் பேரை த4ரிக்கிறவர்கள். அங்ஙனன்றிக்கே, “விஷ்ணுவக்ஷஸ்ஸ்த2லஸ்த2யா” என்கிறபடியே, அவள், திருமார்பிலே நித்யவாஸம் பண்ணுகையாலே “மாதவன்” என்னும் திருநாமத்தை உடையவனே!
(கூனே சிதைய) அவள் அருகின்றிக்கேயொழியவானால்தான் உன்னைக் கிட்டினார்க்கு அவத்3யம் வருமோ? “கூனே சிதைய” என்றது – இவளுடைய அல்லாத அவயவங்களுக்கு ஒரு வாட்டம் வாராதபடி நிமிர்த்த அத்தைப்பற்ற. வநவாஸஹேது பூ4தையான குப்3ஜையைச் சொல்லிற்றாய், பா3ல்யத்திலே சுண்டுவிற்கொண்டு திரியாநிற்கப் பெருமாள் லீலாரஸம் அநுப4வித்தார் என்று உண்டு; அத்தைப்பற்றச் சொல்லிற்றாகவுமாம். அப்போது “கோவிந்தா” என்கிறது – பூ4மிக்கு ரக்ஷகனானவன் என்கிறது.
அன்றிக்கே, தீம்புசேருவது க்ருஷ்ணனுக்கேயாகையாலே “போம்பழி யெல்லாம் அமணன் தலையோடே” என்னுமாபோலே, அவன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுதல்; அதுவுமன்றிக்கே, சாந்திட்ட கூனிதன்னையே சொல்லிற்றாய், வருத்தமறச் சுண்டுவில் நிமிர்க்குமாபோலே நிமிர்த்தவன் என்னுதல். தெறிக்கையாகிறது – க்ரியையாய், நிமர்த்தாய் என்றபடி. க்ருஷ்ணனுக்கும் வில்லுண்டோ பின்னை? என்னில்; ‘வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி’(பெரியாழ்வார் திருமொழி (2-6-1)த் திரியுமிறே. “தருமம் அறியாக்குறும்பனைத் தன் கைச்சார்ங்கமதுவே போல்” (நாச்.திரு. 14.6) என்று வில்லுண்டாகவே அருளிச்செய்துவைத்தாளிறே. (கோவிந்தா) திர்யக்குகளோடும் பொருந்து மவனல்லையோ நீ?
(வானார் சோதிமணிவண்ணா) அதுக்கிடக்க; “ப4க்தாநாம்” என்னும் வடிவு படைத்தவனல்லையோ? குப்பியில் மாணிக்கம்போலே த்ரிபாத்3விபூ4தியிலும் அடங்காதே விம்மும்படியாயிற்று வடிவில் புகரிருப்பது. (மதுசூதா) அவ்வடிவை அநுப4விப்பார்க்கு வரும் விரோதி4யைப் போக்குவாயும் நீயன்றோ; மது4வாகிற அஸுரனைப் போக்கினாற்போலே என் விரோதி4யைப் போக்கினவனே! (உன் தேனே(ய்) மலரும் திருப்பாதம்) இவை ஒன்றுமில்லையானாலும் அடியில் உன் போ4க்3யதையைப் பார்த்தால்தான் விடப்போமோ? “விஷ்ணோ: பதே3 பரமே மத்4வ உத்ஸ:” என்னக்கடவதிறே; இவர், ‘பெருநிலங்கடந்த நல்லடிப்போதிறே’ (1. 3.10) ஆசைப்பட்டது; இவர் ஆசைப்பட்டபடியே “திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன்” (1.5.3) என்று அத்திருவடிகளையே காட்டிச் சேரவிட்டான். “உன்தேனே(ய்) மலரும் திருப்பாதம்” என்று அத்தையே அபேக்ஷிக்கிறார். (சேருமாறு வினையேனே) கலத்திலிட்ட சோற்றை விலக்குவாரைப்போலே, நீ வந்து கிட்டக்கொள்ள அகலுகைக்கடியான பாபத்தைப் பண்ணின நான் சேருமாறு அருளவேணும். தாம் இசைந்தபின்பும் கிடையாமையாலே “வினையேன்” என்கிறார்.
ஆறாம் பாட்டு
வினையேன் வினைதீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா*
மனைசேர் ஆயர் குலமுதலே மாமா யனே மாதவா*
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா*
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே.
ப – அநந்தரம், அபேக்ஷாநந்தரம் அநுபவம் ஸித்தியாமையாலே, தத்ஸித்திஹேதுவாய் போக்யமான ஸ்வபாவங்களையும் திருநாமங்களையும் ஸ்மரித்து ஶிதிலராகிறார்.
வினையேன் – வினையேனுக்கே அஸாதாரணமாய், வினை – (ப்ரேமாதிஶயத்தாலே ஆஸக்தியிலும் அபகர்ஷத்தை அநுஸந்தித்து அகலப்பண்ணும்) பாபத்துக்கு, தீர் – ஶாந்திகரமான, மருந்துஆனாய் – (ஶீலவத்த்வரூபமான) மருந்தானவனே! விண்ணோர் – (விரோதிப்ரஸங்கமில்லாத) ஸூரிகளுக்கு, தலைவா – நிர்வாஹகனானவனே! கேசவா – (அவர்களைப்போலன்றியே ப்ரயோஜநாந்தரபரரான ப்ரஹ்மருத்ராதிகளுக்கும் ஸத்தாஹேதுவாகையாலே) கேசவனெனுந் திருநாமமானவனே! மனைசேர் – (குடிசில்கூடக் கொண்டு திரிகையாலே) மனையோடு சேர்ந்த, ஆயர் குலம் – ஆயருடைய குலத்துக்கு, முதலே – மூலமானவனே! மாமாயனே – (அபர்யந்தமான நவநீத சௌர்யாதி) ஆஶ்சர்ய சேஷ்டிதங்களை யுடையவனே! மாதவா – (அதுக்கடியாய் “ஏஷ நாராயண: ஸ்ரீமாந்” என்று ப்ரமாணஸித்தமான இவ்வவதாரகதமான ஶ்ரிய:பதித்வத்தாலே) மாதவனென்று திருநாமமானவனே! சினை – பணைகளோடு, ஏய் – சேர்ந்து, தழைய – தழையையுமுடையவான, மராமரங்களேழும் – மராமரங்களேழையும், எய்தாய் – எய்தவனே! சிரீதரா – (அத்தாலேவந்த வீரஸ்ரீயாலே) ஸ்ரீதரனென்று திருநாமமானவனே! இனையாய் – (இப்படிப்பட்ட) ஸ்வபாவங்களை யுடையவனே! இனையபெயரினாயென்று – இப்படிப்பட்ட திருநாமங்களையுடையவனே யென்று, அடியேன் – (உன்னோடு நிருபாதிகஸம்பந்தத்தையுடைய) நான், நைவன் – ஶிதிலனாகாநின்றேன்.
இத்தால் அநுபவவிரோதிநிவர்த்தகத்வமும், அநுபாவ்யவிபூதியோகமும், ஆஶ்ரிதஸத்தாதிஹேதுத்வமும், தத்விஷய ஸௌலப்யாதிகளும், அத்தால் வந்த உந்மேஷமும், தத்தேதுவான லக்ஷ்மீஸம்பந்தமும், விஶ்வாஸஜநகத்வமும், தந்நிபந்தநௌஜ்ஜ்வல்யாதிஶயமும் தோற்றுகிறது.
ஈடு – ஆறாம் பாட்டு. இவர் ஆபி4முக்2யம் பண்ணினவாறே, அவன் அல்பம் தாழ்த்தான்; இவர் ‘என்னை இழந்தாய் கிடாய்’ என்கிறார்.
(வினையேன் இத்யாதி3) உன்னைப்பார்த்தல், என்னைப்பார்த்தல் செய்ய வேண்டாவோ? (வினையேன் வினை) சேதநர் எல்லார்க்குமுள்ள வினை போலல்லவாயிற்று இவரது; “ப4க3வத்ஸம்ஶ்லேஷம் பெறவேணும்” என்றிறே அவர்கள் இருப்பது; அகலநினைக்கிற இதுள்ளது இவர் ஒருவர்க்குமிறே. (தீர்மருந்தானாய்) “நான் கிட்டுகை அத்தலைக்கு அவத்3யம்” என்று அகலுகைக்கு அடியான வினையைப் போக்கும் மருந்தானவனே! வினையைப்போக்கிற்று எங்குநின்றும் வந்து? என்னில்: (விண்ணோர் தலைவா) நித்யாநுப4வம் பண்ணாநிற்கச்செய்தே, “நான் அயோக்3யன்” என்று அகலவேண்டாதார்க்கு நியந்தாவாயிருக்கும் இருப்பில் நின்றும் வந்தாயிற்று. (கேசவா) அதுக்கு இவ்வருகே ஒரு பயணம் எடுத்துவிட்டபடி. “ஆவாம் தவாங்கே3 ஸம்பூ4தௌ தஸ்மாத் கேஶவநாமவாந்” என்கிறபடியே. (மனைசேராயர் குலமுதலே) அந்நிலையில் நின்றும் இவ்வருகே போந்து கிட்டினபடி. பஞ்சலக்ஷம் குடியாகையாலே, மனையோடு மனை சேர்ந்த என்னுதல்; ஆயர்மனைகளிலே வந்து சேர்ந்து, அவர்கள் குலத்துக்கு முதலானவன் என்னுதல். அன்றிக்கே, நாலு மூங்கிலைக் கொண்டுபோய், தங்குமிடத்திலே வளைத்துத் தங்குகையாலே சொல்லிற்றாதல். (மாமாயனே) இடைக்குலத்திலே வந்து பிறந்து, அவர்கள் ஸ்பர்ஶித்த த்3ரவ்யமே தா4ரகமாய், அதுதான் களவுகண்டு பு4ஜிக்கும்படியாய், அதுதான் தலைக்கட்டமாட்டாதே வாயதுகையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலை. இவ்வெளிமைக்கு அடி சொல்லுகிறது, – (மாதவா) அவளோட்டைச் சேர்த்தி. (சினையேய் இத்யாதி3) மஹாராஜரை விஶ்வஸிப்பித்துக்கார்யம் செய்தபடி; சினையென்று பணை; ஏய்கை – நெருங்குகையாய், பணைகளொடு பணைகள் நெருங்கித் தழைத்து, நினைத்தபடி இலக்குக்குறிக்க வொண்ணாதபடிநின்ற மராமரங்கள் ஏழையும் எய்தவனே! இத்தால் – ஆஶ்ரிதர் தன்னுடைய ரக்ஷணத்திலே ஶங்கித்தால், ஶங்காநிராகரணம்பண்ணி ரக்ஷிக்குமவன் என்றபடி. (சிரீதரா) மராமரங்கள் எய்கைக்கு இலக்குக்குறித்து நின்றபோதை வீரலக்ஷ்மியைச் சொல்லுகிறது. (இனையாய்) ஏவம்வித4மான கு3ணசேஷ்டிதங்களை உடையவனே! (இனைய பெயரினாய்) கு3ணசேஷ்டிதங்களுக்கு வாசகங்களான திருநாமங்களை உடையவனே! (என்று நைவன்) “காணவேணும், கேட்கவேணும்” என்னமாட்டாதே நையாநின்றேன். (அடியேனே) ‘ஆருடைமை அழிகிறது? உடையவர்கள் தங்கள்வஸ்துவை வேணுமாகில் நோக்கிக்கொள்ளுகிறார்கள்’ என்கிறார். இது ஏதேனும் ஸ்வதந்த்ர வஸ்துவாய்ப் படுகிறதோ? பிறர்க்கு உரித்தாய் அழிகிறதோ? உன்னால் ரக்ஷிக்கவொண்ணாமே அழிகிறதோ? என்னால் ரக்ஷிக்கலாய் அழிகிறதோ?
ஏழாம் பாட்டு
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை*
கடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை*
செடியா ராக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை*
அடியேன் காண்பா னலற்றுவன் இதனில் மிக்கோ ரயர்வுண்டே.
ப – அநந்தரம், ‘அஜ்ஞரான நாம், அத்யந்தஸுலபனாய் போக்யபூதனாய் வைத்து, அதிசயிதனான அவனைக் காணவேணுமென்று அலற்றுகையாவது என்? என்ன அறிவுகேடோ?’ என்று பழைய நிகர்ஷாநுஸந்தாநம் தலையெடுத்து நிராஶராய் அகலத் தேடுகிறார்.
சிறியஞானத்தன் – அல்பஜ்ஞனான, அடியேன் – நான், ஆர்க்கும் அறிதல்
அரியானை – அதிஶயிதஜ்ஞாநராலும் அறிய அரியனானவனாய், கடி சேர் – பரிமளஞ் செறிந்து, தண் – குளிர்ந்த, அம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னை – திருத்துழாய்மாலையைப் புனைபவனான தன்மையையுடையனாய், கண்ணனை – (துரவபோதத்வபோக்யத்வோத்கர்ஷங்கள் ப்ரகாஶிக்கும்படி) க்ருஷ்ணனாய்வந்து அவதரித்து, (அந்நிலையிலே), செடி ஆர் – ஸம்ஸாரகாந்தாரஸம்ஸ்ருஷ்டமான, ஆக்கை – ஶரீரஸம்பந்தத்தை, அடியாரை – தன்னோடே அவ்யவஹிதஸம்பந்தமுடையார், சேர்தல் தீர்க்கும் – கிட்டாதபடி பண்ணி ரக்ஷிக்கும், திருமாலை – ஶ்ரிய:பதியானவனை, அடியேன் – ஶேஷபூதனாய் வைத்து, காண்பான் – காணவேணுமென்று, அலற்றுவன் – (அத்தலைக்கு அவத்யகரமாம்படி நான்) அலற்றாநின்றேன்; இதனில் – இதில், மிக்கு – விஞ்சிற்று, ஓர் அயர்வு – ஓர் அறிவு கேடு, உண்டே – உண்டோ? அடியாராவார் – அதிசயகரரென்று கருத்து. முதலடியில் ‘அடியேன்’ என்றது – ஶேஷத்வநிரூபிதமான அஹமர்த்தத்தைக் காட்டுகையாலே, நான் என்றபடி. ‘செடியாராக்கை என்கிற விடம் – கைவல்யார்த்திகளான ஶேஷபூதர்க்கு ஶரீரத்தைக் கழித்துக்கொடுக்கையைச் சொல்லுகிறது’ என்றும் சொல்லுவர்.
ஈடு – ஏழாம் பாட்டு. “நைவன்” (1.5.6) என்றார்; இவரை நையக்கொடுக்க மாட்டாமையாலே வந்து முகங்காட்டினான்; அவனைப்பார்த்து, ‘நம்மால் வரும் கு3ணாதி4க்யமும் இவனுக்கு வேண்டா?’ என்று அகலுகிறார்.
(அடியேன் சிறிய ஞானத்தன்) ஸம்ஸாரிகளில் அறிவுகேடர் ஸர்வஜ்ஞர் என்னும்படிகிடீர், என் அறிவுகேடு. “அல்லேன்” என்று அகலுகிற இவர் “அடியேன்” என்கிறது வாஸனையாலே. அன்றிக்கே, “அடியேன்” என்கிறது அடிமைக்கு
இசைந்தன்று; ஜ்ஞாநாநந்த3ங்களோபாதி நிரூபகமாக ஶேஷத்வத்தை ப்ரதிபத்திபண்ணியிருக்கையாலே, “அஹம்” என்றவோபாதி “அடியேன்” என்கிறார். (சிறிய ஞானத்தன்) அத்யல்பஜ்ஞாநத்தையுடையவன். (அறிதலார்க்கும்அரியானை) எத்தனையேனும் அதிஶயிதஜ்ஞாநராயிருப்பார்க்கும் அறியப்போகாதவனாயிற்று அவன்; ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனான தனக்கும் அறியப்போகாது; ‘தனக்கும் தன் தன்மை அறிவரியா’(8-4-6)னிறே. தம: ப்ரகாஶங்களுக்குள்ள சேர்த்திபோருங்கிடீர் எனக்கும் அவனுக்கும்! (கடிசேர்) அறிவரிய வஸ்துவுக்கு அடையாளம் திருத்துழாய்மாலை; நாட்செல்ல நாட்செல்ல, பரிமளமேறிவாராநின்றுள்ள திருத்துழாய் மாலையைப் புனைந்தவனை. (கண்ணனை) அறிவரியனாயிருந்துவைத்து, இடையர்க்கும் இடைச்சிகளுக்கும் தன்னை எளியனாக்கிவைத்தவனை.
(செடியார் இத்யாதி3) செடி – பாபம். ஆர்தல் – மிகுதி; பாபம் மிக்கிருக்கிற ஶரீரம். ‘நோயெலாம் பெய்ததோராக்கை’(திருமொழி 9-7-7)யிறே. “ஜராமரணமோக்ஷாய மாமாஶ்ரித்ய யதந்தி யே” என்று, அவனையே உபாயமாகப்பற்றி, தூறுமண்டின ஶரீரத்தை அறுத்துக்கொள்ளும் அடியாருண்டு – கேவலர். அவர்களுக்கு அத்தைத் தவிர்த்துக்கொடுக்கும் ஸ்ரீமானை. அவர்கள் பின்னை அடியாரோ? என்னில்; “அடியாராவார் அவர்களே” என்றிருக்கிறார். என்றிய? என்னில், ஶேஷிக்கு அதிஶயத்தை விளைக்குமவர்களிறே ஶேஷபூ4தராகிறார்; என்னைப்போலே கிட்டி அவனுக்கு அவத்3யத்தை விளைக்கப்பாராதே, ஸம்ஸார ஸம்ப3ந்த4த்தை அறுத்துக்கொண்டு கடக்க நிற்கிறவர்களிறே.
உமக்கு இப்போது வந்ததென்? என்ன (அடியேன் காண்பானலற்றுவன்) “அடியேன்” என்பது, “காணவேணும்” என்பதாகாநின்றேன் நான். (இதனின் மிக்கோர் அயர்வுண்டே) ஸம்ஸாரியான நாளில் அறிவே நன்றாயிருந்ததிறே. அது நன்றானபடி என்னென்னில்; அப்போது கடக்கநின்று ப4க3வத்தத்வத்தைக் குறியழியாமே வைத்தேன்; இப்போதன்றோ நான்கிட்டி அழிக்கப்பார்த்தது; இதிற்காட்டில் அறிவுகேடு உண்டோ?
எட்டாம் பாட்டு
உண்டாய் உலகேழ் முன்னமே உமிழ்ந்து மாயை யால்புக்கு*
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை நிலையெய்தி*
மண்டான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க் காகும் பீர்* சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே.
ப – அநந்தரம், இப்படி நிராஶராய் இவர் அகலத்தேட, ‘நம்மோடு ஸம்பந்தமுடையாரைக் கைவிடோம்: அவர்களையொழிய நமக்குச் செல்லாது; இத்தால் வருவதொரு அவத்யமில்லை யென்னுமிடம் நம் அபதாநத்திலே கண்டுகொள்ளீர்’ என்று ஈஶ்வரன் தன்னுடைய ஆஶ்ரிதவிஷய வ்யாமோஹத்தை ப்ரகாஶிப்பிக்கக் கண்டு ஸமாஹிதராகிறார்.
மாயோனே – (ஸர்வரோடும் ஸர்வப்ரகார ஸம்ஶ்லேஷம் பண்ணச்செய்தே அவத்யம்தட்டாத) ஆஶ்சர்யபூதனே! முன்னமே – முற்காலத்திலே, உலகுஏழ் – (ஒன்றுக்கொன்று பரிஹார ரூபமான) ஸமஸ்தலோகத்தையும், உண்டாய் – அமுது செய்தாய்; உமிழ்ந்து – (அத்தை நிஶ்ஶேஷமாக) உமிழ்ந்து, சிறுமனிசர் – அல்பரான மநுஷ்யருடைய, உவலை – ஹேயமான, ஆக்கை – ஶரீரத்தினுடைய, நிலை – நிலையை, எய்தி – அடைந்து, மாயையால் – க்ருத்ரிமத்தாலே, புக்கு – ப்ரவேஶித்து, வெண்ணெய் – வெண்ணெயை, உண்டாய் – அமுதுசெய்தாய்; (இது) மண்தான் – அக்காலத்திலே அமுதுசெய்த மண்ணிலேகதேஶம், சோர்ந்தது உண்டேலும் – சோர்ந்தது உண்டேயாகிலும், மனிசர்க்கு – மநுஷ்யர்க்கு, ஆகும் – உண்டாகக்கடவ, பீர் – வெளுப்பானது, சிறிதும் – அல்பமும், அண்டாவண்ணம் – கிட்டாவண்ணம், மண் – அந்தமண், கரைய – கரைகைக்கு, நெய் யூண் – (அவதாராந்தரத்தில்) நெய்யூண்,
மருந்தோ – மருந்தல்லவிறே. அதுவும், ஆஶ்ரித ரக்ஷணார்த்தமான ஸம்ஶ்லேஷம்: இதுவும், அவர்கள் வஸ்துவொழியச் செல்லாமையென்று கருத்து. பீர் – வெளுப்பு. வெண்ணெயும், நெய்யும் – பர்யாயம்.
ஈடு – எட்டாம் பாட்டு. இவர் இப்படி அகலப்புக்கவாறே, “இவர் துணிவு பொல்லாதாயிருந்தது; இவரைப் பொருந்தவிடவேணும்” என்று பார்த்து, “வாரீர் ஆழ்வீர்! திருவாய்ப்பாடியில் வ்ருத்தாந்தங்கேட்டறியீரோ?” என்ன, “அடியேன் அறியேன்” என்றார், அது கேட்கையில் உண்டான ஶ்ரத்3தை4யாலும், “அவன்தான் அருளிச்செய்யக் கேட்கவேணும்” என்னும் ஶ்ரத்3தை4யாலுமாக; “முன்பொருகாலத்திலே பூ4மியை எடுத்து வயிற்றிலே வைத்தோம்; பின்பு அதுதன்னை வெளிநாடுகாண உமிழ்ந்தோம்; அதில் ஏதேனும் ஶேஷித்ததுண்டாகக் கருதி, திருவாய்ப்பாடியில் வெண்ணெயை விழுங்கினோம் காணும்” என்ன, “அது இதுக்குப் பரிஹாரமாகச் செய்தாயோ!, அது ஒருகாலவிஶேஷத்திலே; இது ஒருகாலவிஶேஷத்திலே” என்ன, “ஆனால் நாம் இது ஏதுக்காகச் செய்தோம்?” என்ன, “ஆஶ்ரிதஸ்பர்ஶமுள்ள த்3ரவ்யம் உனக்கு தா4ரகமாகையாலே செய்தாயத்தனை” என்ன; “ஆனால், அவ்வெண்ணெயோபாதி உம்மோட்டை ஸம்ஶ்லேஷமும் நமக்கு தா4ரகங்காணும்; ஆனபின்பு நீர் உம்மைக்கொண்டு அகலுவீராகில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய்விலக்கினார் புக்க லோகம் புகுவீர் கிடீர்” என்றான். அவன் கருத்தைத் தாமறிந்தமை தோற்ற அநுபா4ஷிக்கிறார் இப்பாட்டில்.
(உண்டாய் உலகேழ் முன்னமே) லோகங்களேழையும் எடுத்து வயிற்றிலே வைத்தாய் முன்பொரு காலத்திலே. (உமிழ்ந்து) பின்னை அதுதன்னை வெளிநாடு காண உமிழ்ந்து. (மாயையால் புக்கு உண்டாய் வெண்ணெய்) “மாயா வயுநம் ஜ்ஞாநம்” என்கிறபடியே இச்சா2பர்யாயமாயிருக்கிற ஜ்ஞாநத்தாலே புக்கு உண்டாய் வெண்ணெய். அது செய்யுமிடத்தில் சக்கரவர்த்தி திருமகனாய்ப்புக்கு “வெண்ணெய் அமுதுசெய்ய” என்றால் கொடார்களே. (சிறுமனிசர் இத்யாதி3) க்ஷுத்3ரரான மனுஷ்யர்களுடைய ஹேயமான ஶரீரத்தினுடைய நிலையை, அப்ராக்ருத தி3வ்ய ஸம்ஸ்தா2நத்துக்கு உண்டாக்கிக்கொண்டு வந்தாயிற்று இப்படி செய்தது. “கறையினார் துவருடுக்கை” (4-8-4) என்கிறபடியே இடையரளவிலே தன்னை அமைத்துவந்து கிட்டியிறே வெண்ணெய் அமுதுசெய்தது; “ஸப2லம் தே3வி ஸஞ்ஜாதம் ஜாதோஹம் யத் தவோத3ராத்” என்னாநிற்கச்செய்தேயிறே, “நைஷ க3ர்ப்ப4த்வமாபேதே3 ந யோந்யாமவஸத் ப்ரபு4:” என்கிறது.
இக்ஷ்வாகுவம்ஶ்யரிலே ஒருவன் யாக3ம் பண்ணாநிற்க, பிபாஸை வர்த்தி4த்த வாறே மந்த்ரபூதமான ஜலத்தைப் பாநம்பண்ண, க3ர்ப்ப4முண்டாயிற்றது, ஶுக்லஶோணிதரூபத்தாலே பரிணதமாயன்றிறே; ஶக்த்யதிஶயத்தாலே இப்படி கூடக்கண்டபின்பு, ஸர்வஶக்திக்குக் கூடாததில்லை என்று கொள்ளத்தட்டில்லை யிறே. மண்ணை அமுதுசெய்தது – அதின் ஸத்தைக்காக; வெண்ணை அமுது செய்தது – உன் ஸத்தைக்காக. (மண்தான் இத்யாதி3) பூ4மியைத் திருவயிற்றிலே வைத்து உமிழ்ந்தபோது ஶேஷித்தது ஏதேனும் மண்ணுண்டாகிலும், பிற்பட்ட மநுஷ்யர்க்கு அத்யல்பமும் ஶேஷியாதபடி நெய்யமுதுசெய்தது அதுக்கு மருந்தோ? ஒன்றும் ஶேஷியாதபடி அமுதுசெய்யிலோ மருந்தாவது? அன்றிக்கே, “பீர்” என்று வைவர்ண்யமாய், மண்ணிலே சிறிது ஶேஷித்தால் மநுஷ்யர்க்கு வரக்கடவதான வைவர்ண்யம் சிறிதும் வாராதபடி நெய்யூண் மருந்தோ? அன்றிறே. “ஆனால் எதுக்காகச் செய்தோம்?” என்னில், (மாயோனே) ஆஶ்ரிதஸ்பர்ஶமுள்ள த்3ரவ்யத்தாலல்லது தா4ரணமில்லாதபடியான ஆஶ்ரிதவ்யாமோஹத்தாலே செய்தாயித்தனையன்றோ.
ஒன்பதாம் பாட்டு
மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய்வீய*
தூய குழவி யாய்விடப்பாலமுதா அமுது செய்திட்ட
மாயன்* வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன்* தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தி யைச்சார்ந்தே.
ப – அநந்தரம், ஸர்வாத்மவத்ஸலனான ஸ்வாமியைக் கிட்டி உஜ்ஜீவிக்கக்கடவோமென்கிறார்.
தீய – கொடிய நினைவையுடையளாய், அலவலை – வாய்பாறி ஏத்துமவளாயுள்ள, பெரு – அளவிறந்து, மா – பெருத்த, வஞ்சம் – வஞ்சநத்தையுடையளான, பேய் – பேய்ச்சி, வீய – முடியும்படி, தூய – புரையற்ற, குழவியாய் – பிள்ளைத்தனத்தையுடையனாய், விடப்பால் – விஷங்கலந்தபால், அமுதா – அம்ருதமாம்படி, அமுதுசெய்திட்ட – அமுதுசெய்த, மாயன் – ஆஶ்சர்யஸ்வபாவனாய், வானோர் – நித்யஸூரிகளுக்கும், தனித்தலைவன் – அத்விதீயநிர்வாஹகனாய், மலராள் – தாமரையைப் பிறப்பிடமாகவுடைய லக்ஷ்மிக்கு, மைந்தன் – போக்யமான யௌவநத்தையுடையனாய், எவ்வுயிர்க்கும் – ஸர்வாத்மாக்களுக்கும், தாயோன் – மாத்ருவத் வத்ஸலனாய், தம்மான் – தனக்குத்தானே ஈஶ்வரனாய், என் அம்மான் – என்னை அகலாமல் ஆகவிட்ட ஸ்வாமியாய், அம்மா மூர்த்தியை – (அதுக்கடியான) விலக்ஷணவிக்ரஹத்தை யுடையவனை, சார்ந்து – கிட்டி, மாயோம் – இரண்டுதலையையும் முடித்துக்கொள்ளக் கடவோமல்லோம். பிரியாதிருக்க, இரண்டு தலையும் ஸத்தை பெறு மென்று கருத்து.
ஈடு – ஒன்பதாம் பாட்டு. “திருவாய்ப்பாடியில் யஶோதா3தி3கள் வெண்ணெயோ பாதி தா4ரகங்காணும் நீர் தண்ணிதாக நினைத்திருக்கிற உடம்பு” என்றான்; “பா4வப3ந்த4முள்ளவர்களுடைய வெண்ணெய் உனக்கு தா4ரகம்; அதில்லாத என்னோட்டை ஸ்பர்ஶம் உனக்கு நஞ்சு” என்றார்; “நஞ்சோதான்? நஞ்சானமை குறையில்லையே?” என்றான் அவன்; இவரும் “இது நஞ்சே; இதுக்கொரு குறையில்லை” என்றார்; “ஆனால், பூதனையுடைய நஞ்சு தா4ரகமான நமக்கு ஆகாததில்லைகாணும்” என்றான்; என்னப் பொருந்துகிறார். அன்றிக்கே, “பூதனையை முடித்தாற்போலே, ‘நான் அல்லேன்’ என்று அகலப்புக என் நிர்ப்ப3ந்த4த்தைப் போக்கினான்” என்பாரும் உண்டு.
(மாயோம்) “பிரிகையாவது விநாஶம்” என்று இருக்கையாலே, இனி அகன்று மாயக்கடவோமல்லோம் என்கிறார். நானும் என்னோடு ஸம்ப3ந்த4முடையாரும் முடியக்கடவோமல்லோம். அன்றியே, இரண்டு தலையையும் அழித்துக் கொள்ளக்கடவோமல்லோம். (தீய இத்யாதி3) “ஸ்தந்யம் தத்3விஷஸம்மிஶ்ரம் ரஸ்யமாஸீஜ்ஜக3த்3கு3ரோ:” என்கிறபடியே – ஜக3த்துக்கு வேர்ப்பற்றானவனை முடிக்கப்பார்த்த நெஞ்சில் தீமையை உடையளாய், யஶோதை3ப் பிராட்டியைப்போலே பரிவுதோற்ற ஜல்பித்துக்கொண்டு வருவாளாய், ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனானவனும் “தாய்” என்று ப்4ரமிக்கும்படி தோற்றின மஹாவஞ்சகையான பூதனை முடியும்படியாக. (தூய குழவியாய்) ஐஶ்வரமான மேன்மையும் நடையாடாநிற்கச்செய்தே, அது தோற்றாதபடி கலப்பற்ற பிள்ளைத்தனத்தை உடையனாய். இவனுக்குப் பிள்ளைத்தனத்தில் குறையில்லையாகில், அதின் கார்யம் காணாதொழிவானென்? என்னில்; (விடப்பாலமுதா) விஷம் அம்ருதமாம் முஹூர்த்தத்திலேயாயிற்றுப் பிறந்தது. த4ர்மியை வேறாக்க வொண்ணாமையாலே விரோதி4த்த ஆஸுரப்ரக்ருதிகள் முடிய ப்ராப்தம். (மாயன்) விஷம் அம்ருதமாம்படி அமுதுசெய்து, தன்னைத்தந்து நம்மை உண்டாக்கின ஆஶ்சர்யபூ4தன். (“எனக்குமல்ல, பிறர்க்குமல்ல, அவனுக்கே” என்று அவள் அநந்யார்ஹமாக்குகையாலே அம்ருதமாயிற்று).
பூதனையுடைய விஷம் அம்ருதமாம்படி அமுதுசெய்தவன்தான் ஆர்? என்னில்; (வானோர் தனித்தலைவன்) ‘அயர்வறும் அமரர்’களுக்குத் தனித்தலைவனானவன். (மலராள் மைந்தன்) அவர்கள் பரிந்து பரிசர்யைபண்ண, பெரியபிராட்டியாரும் தானுமாயிருக்குமவன். “தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்றமரராட்செய்வார்” (8-1-1) என்கிறபடியே. (மைந்தன்) அவளுக்கு மிடுக்கானவன்; அவளோட்டைச் சேர்த்தியாலே நித்யமான நவயௌவநத்தை உடையவன் என்னுதல். (அவளோட்டைச் சேர்த்தியாலே அழகிய மணவாளப்பெருமாளாய் இருக்கிறவன் என்னுதல்.) (எவ்வுயிர்க்கும் தாயோன்) ஸகலாத்மாக்களுக்கும் தாய்போலே பரிவனானவன். (தம்மான்) ஸர்வேஶ்வரன். (என்னம்மான்) நான் தன்னை அகன்று முடிந்துபோகாதபடி நோக்கினவன். நித்யஸூரிகளும் மற்றுமுள்ள ஸகலாத்மாக்களும் ஒருதட்டும், நான் ஒருதட்டுமாம்படி என்பக்கலிலே விஶேஷகடாக்ஷத்தைப் பண்ணினவன் என்றுமாம். (அம்மா மூர்த்தியைச் சார்ந்தே) விலக்ஷணமான திருமேனியையுடைய அம்மஹாபுருஷனைக் கிட்டி மாயக்கடவோமல்லோம்.
பத்தாம் பாட்டு
சார்ந்த இருவல் வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து*
தீர்ந்து தன்பால் மனம்வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்*
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ்மே லளவிறந்து*
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றி னுயிராம் நெடுமாலே.
ப – அநந்தரம், இவர் இப்படி ஸமாஹிதரானபடியைக் கண்டு, ப்ரீதனான ஈஶ்வரனுடைய உபகாரத்தில் பாரிப்பைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார்.
ஆர்ந்த – (யாவதாஶ்ரயம்) பரிபூர்ணமான, ஞானச்சுடர் ஆகி – ஸ்வயம்ப்ரகாஶஜ்ஞாநப்ரபையையுடையனாய்க்கொண்டு, அகலம் – சுற்றும், கீழ் – கீழும், மேல் – மேலுமான (பத்துத்திக்கிலும்), அளவிறந்து – அபரிச்சிந்நஸ்வரூபனாய், நேர்ந்த – அதிஸூக்ஷ்மமான, உருவாய் அருவாகும் – அசித்தும் சித்துமாகிற, இவற்றின் – இவற்றுக்கு, உயிர் ஆம் – அந்தராத்மாவாய், நெடுமால் – (என் பக்கலிலே) நிரவதிகவாத்ஸல்யத்தை உடையவன், சார்ந்த – (என்னோடு) பொருந்தி, இரு – (புண்யபாபரூபேண) இரண்டு வகையான, வல் – துர்மோசமாயுள்ள, வி?ைனகளும் – கர்மங்களையும், சரித்து – (ஒன்றொழியாமல் ஒருகாலே) தள்ளி, மாயம் – அஜ்ஞாநகார்யமான, பற்று – விஷயஸங்கத்தையும், அறுத்து – அறுத்து, தீர்ந்து – (அநந்யப்ரயோஜந) வ்யவஸாயத்தை யுடையேனாய்க்கொண்டு, தன்பால் – தன்னிடத்திலே (அநுபவார்த்தமாக), மனம் – நெஞ்சை, வைக்க – ப்ரதிஷ்டிதமாக்கும்படி, திருத்தி – (என்னை) நன்றாகப்பண்ணி, வீடு – (எனக்குத்தருவதான) மோக்ஷஸ்த்தலத்திலும், திருத்துவான் – ஒருபுதுமை செய்யாநிற்கும். இங்குச்சொன்ன உபயவ்யாப்தியும் தமக்காகவென்று கருத்து.
ஈடு – பத்தாம் பாட்டு. இவரை இப்படி இசைவித்துவைத்து, ஒரு புதுமை செய்ய வேண்டாதபடியான பரமபத3த்தைக் கோடிக்கத் தொடங்கினான்.
(சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து) “திலதைலவத்3தா3ருவஹ்நிவத்” என்கிறபடியே பிரிக்கவொண்ணாதபடி பொருந்திக் கிடக்கிற புண்யபாபரூப கர்மங்களையும் சரித்து – ஸர்வஶக்தியான தான் போக்குமன்றும் போக்க வொண்ணாதபடி ஶதஶாக2மாகப் பணைத்த வினைகளை, விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாபோலே போக்கி. (மாயப் பற்றறுத்து) ருசிவாஸனைகளையும் கழித்து. (தீர்ந்து) தான் க்ருதக்ருத்யனாய் என்னுதல்; அன்றிக்கே, (தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி) “அல்லேன்” என்று அகலாதே தனக்கே தீர்ந்து தன்பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி. (வீடு திருத்துவான்) ‘கலங்காப் பெருநகரத்துக்கும்’ (மூன்.திரு.51) ஒரு புதுமை பிறப்பியாநின்றான். (ஆர்த்த ஞானச்சுடராகி) பரிபூர்ண ஜ்ஞாநப்ரப4னாய். (அகலம் கீழ்மேல் அளவிறந்து) பத்து தி3க்கிலும் வ்யாபித்து. (நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றினுயிராம்) அதிஸூக்ஷ்மமான சேதநாசேதநங்களுக்கும் ஆத்மாவாயிருக்கிற. அன்றிக்கே, நேர்ந்த – கிட்டின. அதாவது – ப்ரத்யக்ஷ பரித்3ருஷ்டமான ப்ரக்ருத்யாத்மாக்களுக்கும் ஆத்மாவாய் என்றுமாம்.
(நெடுமால்) இப்படியிருக்கிற நெடுமால் வீடுதிருத்துவானானான். வ்யாப்தியும் இவரைப் பெற்றபின்பு புதுக்கணித்தது என்னுதல்; அன்றியே, ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப்போலே, இவரைத் திருத்துகைக்காக வ்யாப்தனாயிருந்தான் என்னுதல். (நெடுமாலே) முனியே நான்முக(10-10)னளவும் அவன் பண்ணின உபகாரத்தைச் சொல்லுகிறது. அவன் தெளிந்துவந்து கொடுபோகப்பற்றாமே கூப்பிடுகிறாரிறே நடுவெல்லாம்.
பதினொன்றாம் பாட்டு
மாலே! மாயப் பெருமானே! மாமா யனே! யென்றென்று*
மாலே யேறி மாலருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்*
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட* இவைபத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே.
ப – அநந்தரம், இத்திருவாய்மொழிக்கு பலமாக, இதில் அந்வயித்தார்க்கு ஸ்வநிகர்ஷாநுஸந்தாநத்தாலே வரும் து:கமில்லை என்று அருளிச்செய்கிறார்.
மாலே – ஸர்வாதிக ஶேஷித்வ ரூபமான ஸ்வரூபோத்கர்ஷத்தையுடையவனே! மாயப்பெருமானே – (நித்யஸம்ஸாரியையும் நித்யஸூரிமத்யத்திலேயாக்கும்) ஆஶ்சர்ய குணங்களால் அளவிறந்தவனே! மாமாயனே – அபரிச்சிந்நமான விபூதிவிக்ரஹ சேஷ்டிதங்களை யுடையவனே!, என்று என்று – என்று (ஶேஷித்வஶரண்யத்வ ப்ராப்யத்வங்களில் தனித்தனியுண்டான உத்கர்ஷத்தை) அநுஸந்தித்து, மாலேயேறி – (ஸ்வநிகர்ஷமடியாக ‘அகலுவோம்’ என்று) ப்ரமித்து, மால் – நிரதிஶயவாத்ஸல்யயுக்தனான ஸர்வேஶ்வரனுடைய, அருளால் – நிரவதிகக்ருபையாலே, மன்னு – ஸமாஹிதராய்ச்சேர்ந்த, குருகூர்ச்சடகோபன் – ஆழ்வாருடையதாய், பாலேய் – பால்போலே இனிய, தமிழர் – இயல்தமிழறிவாரும், இசைகாரர் – இசையறிந்து உணர்ந்து பாடவல்லாரும், பத்தர் – பொருளறிந்து ப்ரவணராய் பக்தியுடையாரும், பரவும் – கொண்டாடும், ஆயிரத்தின்பாலே – ஆயிரந்திருவாய்மொழியினிடத்திலே, பட்ட – (‘கடலிலே முத்துப்பட்டது’ என்னுங்கணக்கிலே) உண்டாய், இவைபத்தும் – (ஈஶ்வரனுடைய ஶீலாத்யதிஶயப்ரகாஶகமான) இவைபத்தையும், வல்லார்க்கு – (பாவயுக்தமாக) அப்யஸிக்கவல்லார்களுக்கு, பரிவது – (ஸ்வநிகர்ஷாநுஸந்தாநத்தாலே வரும் விஶ்லேஷமடியான) க்லேஶம், இல்லை – இல்லை. பரிவது – து:கம். ‘பாலேய்தமிழர்’ என்று – தமிழ்ப்பகுதியான நூலோடு பொருந்தினவ ரென்றுமாம். இது அறுசீராய்க்கழிநெடிலடி நான்கு மொத்திருத்தலால், ஆசிரியவிருத்தம்.
ஈடு – நிக3மத்தில் – இத்திருவாய்மொழியை அப்4யஸிக்க வல்லார்க்கு அவன் வரக்கொள்ள அயோக்3யதாநுஸந்தா4நம்பண்ணி அகன்று இவர் பட்ட க்லேஶம் பட வேண்டா என்கிறார்.
(மாலே) ஸ்வரூபத்தால் வந்த விபு4த்வம். (மாயப்பெருமானே) கு3ணத்தால் வந்த விபு4த்வம். (மாமாயனே) சேஷ்டிதங்களால் வந்த ஆதி4க்யம். (என்றென்று மாலேயேறி) ஏவம்வித4மான வைலக்ஷண்யத்தை அநுஸந்தி4த்து, “நான் அயோக்3யன்” என்று அகலும்படி பிச்சேறி. (மாலருளால் மன்னுகுருகூர்ச் சடகோபன்) தன்னை முடித்துக்கொள்வதாகக் கழுத்திலே கயிற்றையிட்டுக்கொண்டவனை அறுத்து விழவிடுவாரைப்போலே, அகன்று முடியப்புக்க இவரைப் பொருந்தவிட்டுக்கொள்ள, அவனருளாலே பொருந்தின ஆழ்வார். பிடிதோறும் நெய்யொழியச்செல்லாத ஸுகுமாரரைப்போலே, நின்றநின்ற நிலைகள்தோறும் அவனருளொழிய நடக்கமாட்டார்.
(பாலேய் தமிழர்) பால்போலே இனிய தமிழையுடையவர்கள். (இசைகாரர்) இயலுக்கு இசைய இசையிடவல்லவர்கள். ஸ்ரீமது4ரகவிகளையும் நாத2முனிகளையும் போலே இருக்குமவர்கள். (பத்தர்) ப4க3வத்3கு3ணாநுப4வத்தில் இவர் தம்மைப்போலே “காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்” (பெரிய திருவந்தாதி -34) என்று இருக்குமவர்கள். ஆழ்வான் ஓர் உருவிலே – ஸ்ரீபராங்குஶ நம்பியை “பாலேய் தமிழர்” என்கிறது; “இசைகாரர்” என்கிறது – ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையரை; “பத்தர்” என்கிறது – பிள்ளையுறங்காவில்லிதாஸரை – என்று பணித்தானாம். “பாலேய் தமிழர்” என்கிறது – முதலாழ்வார்களை; “இசைகாரர்” என்கிறது – திருப்பாணாழ்வாரை; “பத்தர்” என்கிறது – பெரியாழ்வாரை – என்று ஆளவந்தார் அருளிச்செய்வர்.
இயலறிவார் இசையறிவார் ப4க3வத்3கு3ணவித்3த4ராயிருப்பார்; இவர்கள் – (பரவும்) இவர் அகலுகை தவிர்ந்து பாடினபின்பு உண்டான லோகபரிக்3ரஹத்தைச் சொல்லுகிறது. (ஆயிரத்தின் பாலே பட்ட) “கடலிலே முத்துப் பட்டது” என்னுமாபோலே ஶ்லாக்4யமான ஆயிரத்தின் நடுவே பட்ட இத்திருவாய்மொழி வல்லார்க்கு. (இல்லை பரிவது) பரிவதில்லை. ‘அஞ்சிறைய மடநாரை’யிலே (1.4) தூதுவிட்டு, அவன் வந்து ஸம்ஶ்லேஷோந்முக2னானவாறே “அயோக்3யன்” என்று அகன்று படும் து3:க்க2மில்லை.
முதற்பாட்டில், “அயோக்3யன்” என்று அகன்றார்; இரண்டாம் பாட்டில், அகலுகைக்குத்தானும் அதி4காரியல்லேன் என்றார்; மூன்றாம்பாட்டில், ஶீலகு3ணத்தைக் காட்டித் துவக்கத் துவக்குண்டார்; நாலாம்பாட்டில், அகலவொட்டுவர்களோ உடையவர்கள் என்றார்; அஞ்சாம்பாட்டில், உடைய உன் திருவடிகளைக் கிட்டும்படி பார்த்தருளவேணும் என்றார்; ஆறாம்பாட்டில், அவன் அரை க்ஷணம் தாழ்க்க, முடியப்புகாநின்றேன் என்றார்; ஏழாம்பாட்டில், அவ்வளவில் அவன் வரக்கொள்ள, அயோக்3யன் என்றார்; எட்டாம் பாட்டில், ‘திருவாய்ப்பாடியில் வெண்ணெயோபாதி உம்மோட்டை ஸம்ஶ்லேஷம்’ என்றான் அவன்; ஒன்பதாம்பாட்டில், ‘அப்படியல்ல, இது நஞ்சு’ என்ன, ‘நஞ்சு தானே நமக்கு தா4ரகம்’ என்றான்; பத்தாம்பாட்டில், தம்மை இசைவித்துப் பரமபத3த்தைக் கோடிக்கத் தொடங்கினான் என்றார்; நிக3மத்தில், கற்றார்க்குப் ப2லஞ்சொல்லித் தலைக்கட்டினார்.
நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்
த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி – வளவேழுலகு
ஸ்வாலிங்க3நாதி3 சபலே புருஷோத்தமேண்பி
ஸ்வாயோக்3யதாமபி4த3த4த்3விமுக2ஶ்ஶடா2ரி: |
த்ரைவிக்ரமாதி3 சரிதம் ப்ரதிபோ3த்4ய தேந
நீதஸ்ஸ்வஶீலவஶதாமத2 பஞ்சமேபூ4த் || 5
த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளி — வளவேழுலகு
க்ஷுத்3ராஹ்வாநாபி4முக்2யாந்நிஜமஹிமதிரஸ்காரகார்ச்சாப்ரியத்வாத்
ஸர்வத்ராப்யங்க்4ரிதா3நாத் ஸவித4ஶயநத: ஸ்வாங்க்4ரிஸக்தைகரஸ்யாத் |
கோ3பாத்3யாப்தேரஶேஷேக்ஷணவிஷயதயா ப4க்தவஸ்துப்ரஸக்தே:
ஶ்லிஷ்யந்நாஶவ்யபோஹாத் தத3ஹிதஶமநாத் ப்ராஹ நாத2ம் ஸுஶீலம் || 5
திருவாய்மொழி நூற்றந்தாதி
வளமிக்க மால்பெருமை மன்னுயிரின் தண்மை*
உளமுற்றங் கூடுருவ வோர்ந்து* — தளர்வுற்று
நீங்கநினை மாறனைமால் நீடிலகு சீலத்தால்*
பாங்குடனே சேர்த்தான் பரிந்து. 5
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்