எட்டாம் திருவாய்மொழி
ஓடும்புள்: ப்ரவேஶம்
*****
ப – எட்டாந்திருவாய்மொழியில், இப்படி ஸரஸனான ஸர்வேஶ்வரன், நிர்த்தோஷரான நித்யாஶ்ரிதரோபாதி இன்று ஆஶ்ரயிக்கிற நிகிலாஶ்ரிதருடைய லீலாவிபூதி ஸம்பந்தமடியான செவ்வைக்கேட்டைப் பார்த்து வைஷம்ய ப்ரதிபத்தி பண்ணாதே, அவர்கள் செவ்வைக் கேட்டைச் செவ்வையாம்படி தன்னையொக்க விட்டுச்சேரும்படியான ஆர்ஜவகுணத்தை அருளிச்செய்வதாக; அதுக்கு ப்ரதமபாவியான நித்யபுருஷ ஸம்ஶ்லேஷ ப்ரகாரத்தையும், நிகிலாஶ்ரித ஸம்ஶ்லேஷார்த்தமான அவதார வைலக்ஷண்யத்தையும், உபயவிபூதிஸாதாரணமான அர்ச்சாவதாரஸ்திதியையும், ஆஶ்ரித ஸம்ஶ்லேஷார்த்தமான ஆபத்ஸகத்வத்தையும், அந்த ஸம்ஶ்லேஷத்துக்கு எல்லையான ஸ்வஸம்ஶ்லேஷத்தையும், இது ஸகல ஸம்ஶ்லேஷ ஸாதாரண மென்னுமிடத்தையும், ஆஶ்ரிதர் நினைவே தன் நினைவாம்படி கலக்கு மென்னுமிடத்தையும், ஆஶ்ரிதஸங்கமடியான அவதாரத்துக்கு ஸங்க்யையில்லை யென்னுமிடத்தையும், அவதாரங்கள் ஆஶ்ரிதாநுபாவ்யமான அஸாதாரணசிஹ்நயுக்தங்க ளென்னுமிடத்தையும், ஏவம்விதஸ்வபாவன் வேதைகஸமதிகம்யனென்னுமிடத்தையும் அருளிச்செய்து, ஆஶ்ரிதார்த்தமான அவனுடைய ஆர்ஜவகுணத்தை ப்ரதிபாதித்தருளுகிறார்.
ஈடு – கீழில் திருவாய்மொழியிலே நிரதிஶயபோ4க்3யனென்றார்; இதில், அவனுடைய ஆர்ஜவகு3ணம் சொல்லுகிறார். ஸௌலப்4யமாவதென்? ஸௌஶீல்யமாவதென்? ஆர்ஜவமாவதென்? என்னில்; ஸௌலப்4யமாவது – ஸ்ரீவைகுண்ட2ம் கலவிருக்கையாக உடையவன், அங்கு நின்றும் ஸம்ஸாரிசேதநர் நின்றவிடத்தே வந்து அவதரித்து எளியனாகை; ஸௌஶீல்யமாவது – இப்படித் தாழவிட்டால், “சிறியாரளவில் நம்மைத் தாழவிட்டோமே!” என்று தன் திருவுள்ளத்திலும் இன்றிக்கேயிருக்கை. இனி, ஆர்ஜவகு3ணமாவது – இப்படி பொருந்தினால், நினைவும் சொலவும் செயலும் ஒருபடிப்பட்டிராதே பலவகைப்பட்ட சேதநரோடு தான் பரிமாறுமிடத்தில், அவர்கள் போனவழி தனக்கு வழியாம்படி தான் அவர்களுக்குச் செவ்வியனாய்ப் பரிமாறுகை. “கு3ணவாந்” என்று ஸௌஶீல்யகு3ணத்தைச் சொல்லாநிற்கச்செய்தே, “ருஜு:” என்று ஆர்ஜவகு3ணத்தைப் பிரிய அருளிச்செய்தாரிறே.
“இத்திருவாய்மொழிதான் – ஸர்வேஶ்வரனுடைய ஐஶ்வர்யத்தைச் சொல்லுகிறது” என்பாரும் உண்டு; அன்றிக்கே “ஈஶ்வரத்வ லக்ஷணம் சொல்லுகிறது” என்பாரும் உண்டு. அன்றிக்கே, “கீழே, ‘பாடி இளைப்பிலம்’ (1.7.10) என்றார்; அப்படியே பாடி அநுப4விக்கிறார்” என்பாரும் உண்டு, “ஆர்ஜவகு3ணம் சொல்லுகிறது” என்று ப4ட்டர் அருளிச்செய்யும்படி. “ப3த்3த4ர், முக்தர், நித்யர்” என்று சேதநர்க்கு ஒரு த்ரைவித்4யம் உண்டிறே; த்ரிவித4சேதநரோடும் பரிமாறுமிடத்தில், அவர்கள் தன் நினைவிலே வரும்படி பண்ணுகையன்றிக்கே, நீரேறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப்போலே தன்னை அவர்களுக்கு ஈடாக அமைத்துப் பரிமாறும் என்னும் அவ்வழியாலே இவனுடைய ஆர்ஜவகு3ணம் சொல்லுகிறார்.
முதல் பாட்டு
ஓடும் புள்ளேறி*
சூடும் தண்டுழாய்*
நீடு நின்றவை*
ஆடு மம்மானே.
ப – முதற்பாட்டில், நித்யரோடு பரிமாறும்படியை அருளிச்செய்கிறார்.
அம்மான் – நிருபாதிகஸ்வாமியானவன், புள்ஏறி – பெரியதிருவடி நினைவுக்கீடாக அவனை மேற்கொண்டு, ஓடும் – உலாவும்; தண்துழாய் – ஶ்ரமஹரமான திருத்துழாயை, சூடும் – (செவ்விகுலையாமல் தன் திவ்யாவயவங்களிலே) சூடும்; (இப்படி), நீடுநின்றவை – காலதத்த்வமுள்ளதனையும் நிலைநிற்கிற நித்யவஸ்துக்களோடே, ஆடும் – பரிமாறும், ‘நெடுங்காலம் அவற்றோடே நின்று பரிமாறும்’ என்று – “புள்ளு, துழாய்” என்ற ப்ரஸ்துதத்தைச் சொல்லிற்றாகவுமாம். அங்குத்தை திர்யக் ஸ்த்தாவர ஜந்மம் கர்மநிபந்தநமல்லாமையாலே ஈஶ்வரேச்சாதீந மென்று கருத்து.
ஈடு – முதற்பாட்டு. நித்யவிபூ4தியிலுள்ளாரோடே செவ்வியனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறது; அவர்களுக்குச் செவ்வைக்கேடு இல்லையிறே; அவர்கள் பலராய் ருசி பே4த3முண்டானால், அவர்கள் நினைவறிந்து பரிமாறவே அங்கும் ஆர்ஜவகு3ணம் ஏறுமிறே.
(ஓடும் புள்ளேறி) புள்ளேறி ஓடும்; பெரிய திருவடியை மேற்கொண்டு ஸஞ்சரியாநிற்கும். மஹிஷிக்கு ஸ்தந பரிரம்ப4ணம்போலே, தன்னை மேற்கொண்டு நடத்துமது அபேக்ஷிதமாயிருக்குமிறே வாஹநத்துக்கு. பெரிய திருவடியை மேற்கொள்ளுமதுதான் அவ்விபூ4தியிலுள்ளார்க்குக் காட்சி கொடுக்கைக்கும், அவனுடைய ஸ்வரூபலாப4த்துக்காகவுமாயிருக்குமிறே. “த்வத3ங்க்4ரி ஸம்மர்த்த3கிணாங்கஶோபி4நா” காமிநியானவளுக்கு போ4க3சிஹ்நங்கள் தா4ரகமாமோபாதி, திருவடிகள் உறுத்துகையால் வந்த தழும்பு இவனுக்கு த4ாரகமாயிருக்குமிறே.
(சூடும் தண்டுழாய்) “இப்போதே பறித்துத் திருக்குழலிலே வளையமாக வையாதொழியில் செவ்வியழியும்” என்னுமளவிலே அப்போதே பறித்துத் திருக் குழலிலே வைக்கும். இதுக்குச் சைதந்யம் உண்டோ? என்னில், “சிந்மயைஸ் ஸ்வப்ரகாஶைஶ்ச” என்னக்கடவதிறே. சில சேதநர் புள்ளாயும் துழாயாயும் அங்குத்தைக்கு உறுப்பாய் வர்த்திக்கிறபடியிறே. விரோதி4சைதந்யமே கழிந்தது; ராஜஸந்நிதி4யில் வர்த்திப்பார் கூனர் குறளராய் வர்த்திக்குமோபாதியிறே. கர்மநிப3ந்த4நமாகப் பரிக்3ரஹித்த ஶரீரங்களுமன்றே; இச்சை2யாலே பரிக்3ரஹிக்கிற இத்தனையிறே. இவ்விபூ4தியில் திர்யக்ஸ்தா2வரங்களாமவை கர்மத்தாலேயாயிருக்கும்; அங்கு ஸ்வேச்சா2தீ4நமாயிருக்கும் பரிக்3ரஹித்த ஶரீரங்கள்.
ஸம்ஸாரிகளுக்கன்றோ ருசிபே4த3மும் செவ்வைக்கேடும் உள்ளது; நித்ய ஸூரிகளுக்கு விஷயம் ஒன்றாகையாலே ருசிபே4த3முமில்லை; செவ்வைக் கேடுமில்லையே; அவர்களுடன் செவ்வையனாய்ப் பரிமாறுகையாவதென்? என்னில்; எல்லார்க்கும் விஷயம் ஒன்றேயாகிலும், அவ்விஷயந்தன்னில் வ்ருத்திபே4த3த்தாலே ருசிபே4த3ம் உண்டாம். (நீடுநின்று) கர்மாநுகூலமாகிலிறே அநித்யமாவது; ஸ்வரூபாநுரூபமான பரிமாற்றமாகையாலே இதுதான் நித்யமாயிருக்கும் அவனுக்கு இவர்களையொழியச் செல்லாது; இவர்களுக்கு அவனையொழியச் செல்லாது.
(அவை) “புள்” என்றும், “துழாய்” என்றும் சொல்லுகையாலே “அவை” என்கிறது. (ஆடும்) அவற்றோடே பரிமாறும் என்னாதே, அவை ஆடும் என்கிறது – ஸர்வேஶ்வரனுக்கு அவர்களோடு அணையுமது, விடாயர் மடுவிலே புக்கு ஆடினாற்போலேயிருக்கையாலே. (அம்மானே) நித்யஸூரிகளோடு நித்யஸம்ஸாரிகளோடு வாசியறும்படி ஸர்வாதி4கனாயிருந்துவைத்து, இப்படி பரிமாறும்.
இரண்டாம் பாட்டு
அம்மா னாய்ப்பின்னும்*
எம்மாண் புமானான்*
வெம்மா வாய்கீண்ட*
செம்மா கண்ணனே.
ப – அநந்தரம், லீலாவிபூதியில் ஆஶ்ரிதஸம்ஶ்லேஷார்த்தமான அவதார வைலக்ஷண்யத்தை அருளிச்செய்கிறார்.
அம்மானாய் – ஸர்வஸ்மாத்பரனான ஸ்வாமியாய் வைத்து, (ஆஶ்ரிதார்த்தமாக), வெம் – வெவ்விய, மா – குதிரையை, வாய்கீண்ட – வாயைப் பிளந்த, செம் – சிவந்த, மா – பெரிய, கண்ணன் – கண்ணையுடைய க்ருஷ்ணன், பின்னும் – அவ்வளவன்றியே பின்னையும், எம்மாண்பும் ஆனான் – எல்லாமாட்சியையுமுடையவன் ஆனான். எவ்வவதாரங்களில் அழகுமுடையனானானென்றபடி. அன்றியே, க்ருஷ்ணாவதாரந் தன்னிலேயாய், மாட்சிமையென்று – தர்ஶநீய சேஷ்டிதங்களாகவுமாம்.
ஈடு – இரண்டாம் பாட்டு. இப்பாட்டு, நித்யவிபூ4தியில்நின்றும் வந்து அவதரித்து விரோதி4களைப்போக்கி ஸம்ஸாரிகளுடன் செவ்வையனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறது.
(அம்மானாய்) இப்படி ஸர்வாதி4கனாயிருந்துவைத்து. (வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணன் பின்னும் எம்மாண்புமானான்) வெவ்விதான மாவுண்டு – கேஶி; அதினுடைய வாயைக் கிழித்துப்பொகட்ட. கேஶி, வாயை அங்காந்து கொண்டு வந்து தோற்றினபோது கண்ட ஸ்ரீநாரத3ப4க3வான் “ஜக3த3ஸ்தமிதம்” என்று கூப்பிட்டுக்கொண்டு வந்து விழுந்தானிறே. அவனுக்கு தத்காலத்தில் பிறந்த ப4யம்; அவன் பட்டுப்போகச்செய்தேயும், ஸ்ம்ருதிஸமயத்திலே அஞ்சுகிறார் இவர். (செம்மா கண்ணனே) விரோதி4போகையால் வந்த ப்ரீதியாலே சிவந்து மலர்ந்த திருக்கண்களையுடைய க்ருஷ்ணன். (பின்னும் எம்மாண்புமானான்) அவ்வவதாரத்திலே பர்யவஸிக்கையன்றிக்கே, அதுக்குமேலே அநேகாவதாரங்களைப் பண்ணினான், “ப4ஹூநி” என்கிறபடியே. மாண்பு என்று அழகு; பரத்வத்திலும் மநுஷ்யத்வே பரத்வத்தால் வந்த அழகைச் சொல்லுகிறது.
மூன்றாம் பாட்டு
கண்ணா வானென்றும்*
மண்ணோர் விண்ணோர்க்கு*
தண்ணார் வேங்கட*
விண்ணோர் வெற்பனே.
ப – அநந்தரம், உபயவிபூதிஸாதாரணமான திருமலையில் ஸ்த்திதியை அருளிச்செய்கிறார்.
(“சக்ஷுர் தேவாநாமுத மர்த்யாநாம்” என்கிறபடியே), மண்ணோர் – மண்ணோர்க்கும், விண்ணோர்க்கு – விண்ணோர்க்கும், என்றும் – என்றுமொக்க, கண்ணாவான் – கண்ணாமவன், தண் – குளிர்த்தியால், ஆர் – மிஞ்சியிருப்பதாய், வேங்கடம் – திருவேங்கடமென்று பேரான, விண்ணோர் வெற்பன் – ஸூரிஸேவ்யமான திருமலையையுடையவன்.
ஈடு – மூன்றாம் பாட்டு. இரட்டை ப்ரஜை பெற்ற மாதாவானவள், இருவர்க்கும் முலைகொடுக்கப் பாங்காக நடுவே கிடக்குமாபோலே, நித்யஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுக்கைக்காகத் திருமலையிலே நின்றருளின நீர்மையை அருளிச்செய்கிறார்.
(கண்ணாவான்) நிர்வாஹகனாவான் என்னுதல்; கண்ணாகைக்காக என்னுதல்; கண்ணாமவன் என்னுதல். கண்ணென்று – நிர்வாஹகன். “சக்ஷுர் தே3வாநாமுத மர்த்யாநாம்” என்கிற ஶ்ருத்யர்த்த2த்தை அருளிச்செய்கிறார். (மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான்) நித்யஸூரிகளோடு ஸம்ஸாரிகளோடு வாசியில்லையாயிற்று – தங்கள் காரியம் தாங்கள் செய்துகொள்ள மாட்டாமைக்கு. (தண்ணார் வேங்கடம்) “குளிர் அருவி வேங்கடம்” (நாச்சியார் திருமொழி 8-3) என்னுமாபோலே, அவனுக்கு ரக்ஷ்யம் பெறாமையால் வரும் தாபத்தையும் ஆற்றி, இவர்களுக்கு ரக்ஷகனைப் பெறாமையால் வரும் தாபத்தையும் ஆற்றவற்றாயிருக்கை.
(விண்ணோர் வெற்பனே) அவன் இரண்டு விபூ4தியிலுள்ளார்க்கும் முகங் கொடுக்க வந்து நின்றானேயாகிலும், திருமலைதான் நித்யஸூரிகளதாயிற்று. “வானவர் நாடு” (3-9-9) என்னுமாபோலே (விண்ணோர் வெற்பு) என்கிறார். ‘கானமும் வானரமு’(நான்முகன் திருவந்தாதி – 47)மான இவற்றுக்கு முகங்கொடுத்துக் கொண்டு நிற்கிற நீர்மையை அநுஸந்தி4த்து, “இதென்ன நீர்மை!” என்று ஈடுபட்டிருக்கையாலே அவர்களதே திருமலை என்கிறார்.
நான்காம் பாட்டு
வெற்பை யொன்றெடுத்து*
ஒற்க மின்றியே*
நிற்கு மம்மான்சீர்*
கற்பன் வைகலே.
ப – அநந்தரம், ஆஶ்ரிதவிஷயத்தில் ஆபத்ஸகத்வத்தை அருளிச்செய்கிறார்.
(இந்திரன் ப்ரவர்த்திப்பித்த அஶ்மவர்ஷத்தில் ரக்ஷ்யவர்க்கம் இடர்படாதபடி), ஒன்று – ஒரு, வெற்பை – மலையை, எடுத்து – எடுத்து, ஒற்கம் இன்றியே – ஒடுக்கம் இன்றியிலே, நிற்கும் – நிற்கிற, அம்மான் – ஸ்வாமியினுடைய, சீர் – (ஆபத்ஸகத்வ) கீர்த்தியை, வைகல் – கால தத்த்வமுள்ளதனையும், கற்பன் – அப்யஸியாநிற்பன். ஒற்கம் – ஒல்குதலாய், ப3ல ஸங்கோசத்தைக் காட்டுகிறது.
ஈடு – நாலாம் பாட்டு. அவனுடைய ஆர்ஜவகு3ணம் தம்மளவிலே ப2லித்த படியை அருளிச்செய்கிறார்.
(வெற்பை ஒன்று எடுத்து) பசுக்களும் இடையரும் தொலையும்படி வர்ஷிக்கப்புக்கவாறே, அதுக்கீடாயிருப்பதொன்றையிட்டு ரக்ஷிக்கப் பற்றாமையாலே, தோற்றிற்றொரு மலையை எடுத்துப் பரிஹரித்தானாயிற்று. இப்படி ஏழு பிராயத்தின் பா3லன் ஒருபடிப்பட்ட மலையை எடுத்து த4ரித்துக் கொண்டு நின்றவிடத்தில், இளைப்புண்டாயிற்றில்லையோ? என்னில் (ஒற்கம் இன்றியே நிற்கும்) ஒற்கமாவது – ஒடுங்குதல், அதாகிறது – இளைப்பு. ஏழுநாள் ஒருபடிப்பட்ட மலையை த4ரித்துக்கொண்டு நின்றவிடத்தில் இளையாமைக்கு ஹேது என்னென்னில்; (அவன் ரக்ஷணத்தைப் பகிர்ந்துகொள்வார் இல்லாமையாலே இளைப்பில்லை; தா4துக்ஷயம் பிறவாவிடில் இளைப்பில்லையிறே; உண்கிற சோற்றிலே மணலைத் தூவுகை இல்லாவிட்டால் இளைப்பில்லையிறே). (அம்மானே) வகுத்த ஸ்வாமியாகையாலே, ஸ்வாபா4விக ஸம்ப3ந்த4த்தாலே இளைப்பின்றிக்கே நின்றான். ப்ரஜாரக்ஷணத்தில் மாதாவுக்கு இளைப்பு உண்டாகாதிறே.
(சீர் கற்பன்) அவன் மலையை எடுத்து ரக்ஷ்யவர்க்க3த்தை நோக்கின நீர்மையை அநுஸந்தி4த்து, அவனுடைய கல்யாணகு3ணங்களை அந்த கு3ணப்ரேரிதனாய் அப்4யஸிப்பன், “கு3ணைர்தா3ஸ்யமுபாக3த:” என்னுமா போலே. (வைகலே) ஒருகால் இத்தைச் சொல்லி, பின்னை என் காரியத்துக்குப் போமவனல்லேன்; நித்யஸூரிகளைப்போலே எனக்கும் இதுவே யாத்ரையா யிருக்கும்; “விபந்யவ:” இறே.
ஐந்தாம் பாட்டு
வைகலும்வெண்ணெய்*
கைகலந்துண்டான்*
பொய்கலவாதென்*
மெய்கலந்தானே.
ப – அநந்தரம், ஏவம்பூதனான க்ருஷ்ணன் தம்மோடு ஸம்ஶ்லேஷித்தபடியை அருளிச்செய்கிறார்,
வைகலும் – என்றுமொக்க, வெண்ணெய் – வெண்ணெயை, கைகலந்து – கையுள்ளளவும் நீட்டி, உண்டான் – உண்டவன், பொய் கலவாது – (காரியப்பாடான) பொய் கலவாதபடிவிரும்பி, என் – என்னுடைய, மெய் – (ஹேயமான) ஶரீரத்திலே, கலந்தான் – ஒன்றுபடக் கலந்தான். கைகலந்தென்று – இரண்டுகையுங் கலந்து என்னவுமாம்.
ஈடு – அஞ்சாம் பாட்டு. நீர் அவன் கு3ணங்களை அப்4யஸியாநின்றீராகில், அவன்தான் செய்கிறதென்? என்னில்; நான் அவனைவிட்டு அவன் கு3ணங்களை விரும்புகிறாப்போலே, அவனும் என்னைவிட்டு என்னுடைய தே3ஹத்தை விரும்பாநின்றான் என்கிறார்.
(வைகலும்) “கற்பன் வைகலே” என்று – எனக்கு அவன் கு3ணம் என்றும் தா4ரகமாயிருக்கிறாப்போலே, ஆஶ்ரிதஸ்பர்ஶமுள த்3ரவ்யம் என்றுமொக்க தா4ரகமாயிருக்குமாயிற்று அவனுக்கு. (வெண்ணெய் கைகலந்து உண்டான்) வெண்ணெயில் உண்டான ஆத3ரத்தாலே இடக்கையாலும் வலக்கையாலும் வாங்கி அமுதுசெய்தான்.
அன்றியே, “தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி” (சிறிய திரு.32) என்கிறபடியே, “கைநிறையுந்தனையும் வயிறு நிறையும்” என்னும் மௌக்3த்4யத்தாலே திருக்கைகள் உள்ளளவும் கலந்து அமுதுசெய்தான் என்னுதல்; “கள்ளன்” என்று சிலுகிட்டவாறே அவர்கள்தங்களோடே கலந்து அமுதுசெய்தான் என்னுதல். “ஸர்வாதி4கனானவன் நித்யஸம்ஸாரியாய்ப் போந்தவனுடைய தே3ஹத்தைத் திருவாய்ப்பாடியில் வெண்ணெயோபாதி ஆத3ரித்தான்” என்றால், இது கூடுவதொன்றோ? என்னில்: (பொய் கலவாது என் மெய் கலந்தானே) ‘அவ்வெண்ணெயில் பண்ணின விருப்பத்தில் பொய்யில்லாதாப்போலே கிடீர் என் உடம்புடன் கலந்த கலவியிலும் பொய்யில்லாதபடி!’ என்கிறார். (என் மெய்) அவன் மேல்விழ மேல்விழத் தாம் இறாய்த்தமை தோற்றுகிறது. “அழுக்குடம்பு” (திருவிருத்தம் – 1) என்று நான் அநாத3ரிக்கிற ஶரீரம் இவனுக்கு ஆத3ரணீயமாவதே! என்கிறார்.
ஆறாம் பாட்டு
கலந்தென் னாவி*
நலங்கொள் நாதன்*
புலன்கொள் மாணாய்*
நிலம்கொண் டானே.
ப – அநந்தரம், லோகத்தை அநந்யார்ஹ மாக்கினாற்போலே என் ஆத்மாவையும் அநந்யார்ஹமாக்கினா னென்கிறார்.
கலந்து – (ஒரு நீராகக்) கலந்து, என் ஆவி – என் ஆத்மஸ்வரூபத்தினுடைய, நலம் – (ஸ்வாஸாதாரணஶேஷத்வமாகிற) நன்மையை, கொள் – (தனக்கு ப்ரயோஜநமாகக்) கொண்ட, நாதன் – ஶேஷியானவன், புலன் – இந்த்ரியங்களுக்கு, கொள் – ஆகர்ஷகமான, மாணாய் – வாமநப்ரஹ்மசாரிவேஷத்தையுடையவனாய், நிலம் – பூமியை, கொண்டான் – தன்னதாக்கிக்கொண்டவன். நிலமென்று – லோகாந்தரங்களுக்கும் உபலக்ஷணம்.
ஈடு – ஆறாம் பாட்டு. இப்படிக் கலந்து செய்ததென்? என்ன; ‘தே3ஹத்தளவிலே விரும்பி விட்டிலன்; என் ஆவிநலத்தையும் கொண்டான்’ என்கிறார்.
(கலந்து இத்யாதி3) என்னோடே ஒருநீராகக் கலந்து, பின்னை என் ஆத்மாவினுடைய நற்சீவனைக் கொண்டான். அவ்வளவேயோ? – (நாதன்) “என்னையாளுங்கொண்டு” (திருநெடுந்தாண்டகம் – 25) என்கிறபடியே, நான் எனக்குரியேனாயிருக்கிற இருப்பையும் தவிர்த்தான். இப்படி அகப்பட்டார் நீரேயோ? என்ன; மஹாப3லியும் அகப்பட்டான்; ஆவிநலம் கொடுத்திலன்; கழஞ்சுமண் கொடுத்தானித்தனை; (புலன்கொள் இத்யாதி) ஸர்வேந்த்ரியாபஹார க்ஷமமான வேஷத்தைப் பரிக்3ரஹித்து, அவன் “என்னது” என்று அபி4மாநித்திருக்கிற பூ4மியை அபஹரித்தான்.
ஏழாம் பாட்டு
கொண்டா னேழ்விடை*
உண்டா னேழ்வையம்*
தண்டா மஞ்செய்து* என்
எண்தா னானானே.
ப – அநந்தரம், என் நினைவே தனக்கு நினைவானா னென்கிறார்.
ஏழ்விடை – (அபிமதவிரோதியான) ஏழ்விடைகளையும், கொண்டான் – ப்ராணனைக் கொண்டவனாய், (ஆபத்திலே) ஏழ்வையம் – ஸர்வலோகத்தையும், உண்டான் – வயிற்றிலே வைத்து ரக்ஷித்தவன், தண் – ஸாம்ஸாரிகதாபஶாந்திகரமான, தாமம் – பரமபதத்தில் விருப்பத்தை, செய்து – (என்பக்கலிலே) பண்ணி, என் – என்னுடைய, எண் – மநோரதத்தின்படியே, தான் – தான், ஆனான் – மநோரதிக்கத் தொடங்கினான். அதாவது – நான் பரமபதத்திலே தன்னை அநுபவிக்க எண்ணுமாபோலே, தான் இங்கே என்னை அநுபவிக்க எண்ணாநின்றா னென்றபடி. என்எண்ணிலே தான் கைப்புகுந்தா னென்றுமாம்.
ஈடு – ஏழாம் பாட்டு. ஆவிநலங்கொண்டுவிட்ட அளவேயோ? நித்யவிபூ4தியில் பண்ணும் ஆத3ரத்தையும் என்பக்கலிலே பண்ணினான் என்கிறார்.
(கொண்டான் ஏழ்விடை) “இன்ன படைவீட்டைக் கொண்டான்” என்னுமா போலே. நப்பின்னைப் பிராட்டியோட்டை ஸம்ஶ்லேஷத்துக்கு ப்ரதிப3ந்த4கமான வ்ருஷப4ங்கள் ஏழையும் ஜயித்தான். (உண்டான் ஏழ்வையம்) ப்ரளயாபத்தில் பூ4மி தன் வயிற்றிலே புகாவிடில் த4ரியாதாப்போலே, தான் என்பக்கலிலே புகுந்தல்லது த4ரியாதானாய்க் கலந்தான். தனக்கு ஸ்நேஹிகளாயிருப்பார்க்குச் செய்யுமதும் செய்தான்; தான் பண்ணும் ரக்ஷணம் விலக்காதார்க்குச் செய்யுமதும் செய்தான். அதுக்குமேலே – (தண் தாமம் செய்து) தட்பத்தையுடைத்தான தா4மமுண்டு – பரமபத3ம்; அதில் பண்ணும் விருப்பத்தையும் என்பக்கலிலே பண்ணினான். தத்3விபூ4திகனாக என்னை ஆத3ரித்து என்றுமாம். (என் எண்தான் ஆனானே) நான் மநோரதி2த்தபடியே எனக்குக் கைப்புகுந்தான் என்னுதல்; அன்றிக்கே, என் மநோரத2த்தைத் தான் (கைக்) கொண்டான் என்னுதல். அதாவது – ‘மாக வைகுந்தம்’ (9-3-7) காண்பதற்கிறே இவர் ஏகமெண்ணுவது; “கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது((பா) சரிகின்றன) சங்கம்” (திருவிருத்தம் – 47) என்று, நான் “ஸ்ரீவைகுண்ட2த்தேறப் போகவேணும்” என்றும், “அங்கே அநுப4விக்க வேணும்” என்றும் ஆசைப்பட, அவன் “திருநகரியேறப் போகவேணும், ஆழ்வாரை அநுப4விக்கவேணும்” என்று பாரியாநின்றான்.
எட்டாம் பாட்டு
ஆனா னானாயன்*
மீனோ டேனமும்*
தானா னானென்னில்*
தானாயசங்கே.
ப – அநந்தரம், ஆஶ்ரிதார்த்தமான அவதாரத்துக்கு எல்லையில்லை யென்கிறார்.
ஆனாயன் ஆனான் – கோரக்ஷண ஸ்வபாவமான கோபஜாதியையுடைய, தான் – தான் (ஆபத்ரக்ஷணார்த்தமாக), மீனோடு ஏனமும் – மத்ஸ்யாவதாராதிரூபேண, ஆனான் – அவதீர்ணனானான், என்னில் – என்று சொல்லுமளவில், தானாய – (விலக்ஷண ஸ்வரூபனான) தன்னுடையவான அவதாரங்கள், சங்கு – சங்கென்கிற ஸங்க்யைக்குப் போரும். அன்றியே, என்னில் தானாய சங்கென்று – என்பக்கல் தான் பண்ணின
ஸங்கத்தாலே, ஆனாயனான தான் மீனோடேனமும் ஆனா னென்றுமாம். அன்றியே, ‘என்னில்’ என்று – அஞ்சாம் வேற்றுமையாய், என்நிமித்தமாகப் பண்ணினவை அஸங்க்யாதங்கள் என்றுமாம். சங்கு – பேரிலக்கம்; ஸங்கமுமாம்.
ஈடு – எட்டாம் பாட்டு. என்னைச்சுட்டி அவன் பிறந்த பிறவிகளுக்கு ஒரு முடிவில்லை என்கிறார்.
(ஆனான் ஆனாயன்) இடையனாய்ப் பிறந்து, முடிசூட இராதே ஜாத்யுசிதமான கோ3ரக்ஷணத்திலே அதி4கரித்தான்; இடையனாய்ப் பிறந்த மெய்ப்பாடு. அவ்வளவிலேதான் விட்டானோ? – (மீனோடு ஏனமும் தான் ஆனான்) கீழே க்ருஷ்ணாவதாரத்தைச் சொன்னார்; அது *அயர்வறும் அமரர்களதிபதியா யிருந்தவோபாதியிறே இவ்வவதாரங்களைப் பற்ற; ஸர்வாதி4கனான தான் இவற்றோடு ஸஜாதீயனானான்; அவன் க்ரமத்திலே பிறக்கச்செய்தே, அநுஸந்தா4நத்தில் பதற்றத்தாலே ஏககாலத்திலே இரண்டு அவதாரம்போலே யிருக்க அருளிச்செய்கிறார். (ஆனான்) வடிவும் செயலும் சொலவும் தஜ்ஜாதீயர்க்கு அடுத்தவையாயிருக்கை. இவைதான் வித்3யாவதாரங்கள். இதுக்கு அடி என்னென்னில், – (என்னில் தானாய சங்கே) என்பக்கல் தனக்குண்டான ஸங்கா3திஶயத்தாலே என்னுதல்; என்னைக்குறித்து, தான் ஆனவை – தன் அவதாரங்கள், சங்கே – மஹாஸங்க்2யை என்னுமத்தனை. அங்ஙனன்றிக்கே, சங்கே – மஹாஸங்க்2யையளவோ? முடிவுண்டோ? “ப3ஹூநி” என்னுமித்தனை.
ஒன்பதாம் பாட்டு
சங்கு சக்கரம்*
அங்கை யிற்கொண்டான்*
எங்கும் தானாய*
நங்கள் நாதனே.
ப – அநந்தரம், அவதாரங்களெல்லாவிடத்திலும் அஸாதாரண சிஹ்நயுக்தன் என்கிறார்.
எங்கும் – எல்லாப்ரதேசத்திலும், தானாய – (அவதாரமுகத்தாலே) தான் ஸந்நிஹிதனான, நங்கள் – நம்•டைய, நாதன் – நாதன், அம் – (வெறும்புறத்திலே) அழகிய, கையில் – திருக்கையிலே, சங்குசக்கரம் – (ஆஶ்ரிதர்க்கு அநுபாவ்யமான) சங்க சக்ரங்களை, கொண்டான் – கொண்டான்.
ஈடு – ஒன்பதாம் பாட்டு. இப்படி அவதரிக்குமிடத்தில் ஐஶ்வரமான
சிஹ்நங்களோடே வந்து அவதரிக்கும் என்கிறார்.
(சங்குசக்கரம் அங்கையில் கொண்டான்) சிலரை வஶீகரிக்க நினைத்தவர்கள் கையிலே மருந்துகொண்டு திரியுமாபோலே, அவதாரங்கள்தோறும் தி3வ்யாயுத4ங்களோடே வந்து அவதரிக்கும். தி3வ்யாயுத4ங்கள் எல்லா அவதாரங்களிலும் உண்டோ? என்னில், – எங்கும் உண்டு; ராஜாக்கள் கறுப்புடுத்துப் புறப்பட்டால், அந்தரங்க3ர் அபேக்ஷித த3ஶையிலே முகங் காட்டுகைக்காகப் பிரியத் திரிவர்கள்; அதுபோலே தோற்றாதேயும் நிற்பர்கள். “கூராராழி வெண் சங்கேந்தி – வாராய்” (6-9-1) என்னும் இவர்களுக்கு அப்படியேயிறே தோற்றுவது. (சங்கு சக்கரம்) வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்கவேண்டும் கையிலே தி3வ்யாயுத4ங்களை த4ரித்தான். (எங்கும் தானாய) தே3வமநுஷ்யாதி3 பே4த3ங்கள் தோறும் தான் வந்து அவதரித்து உளனாய். அன்றிக்கே, ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப்போலே, தம்மை விஷயீகரிக்கைக்காக வ்யாபித்தபடியைச் சொல்லுதல். (நங்கள் நாதனே) நம்மை எழுதிக் கொள்ளுகையே ப்ரயோஜநமாக.
பத்தாம் பாட்டு
நாதன் ஞாலங்கொள்*
பாதன் என்னம்மான்*
ஓதம் போல்கிளர்*
வேத நீரனே.
ப – அநந்தரம், ஏவம்வித ஸ்வபாவன் வேதைகஸமதிகம்ய னென்கிறார்.
நாதன் – நிருபாதிக ஸர்வசேஷியாய் (அந்த சேஷித்வநிர்வஹணத்துக்காக), ஞாலம் – ஸமஸ்தஜகத்தோடும், கொள் – (தாரதம்யம்பாராமல்) செறிந்த, பாதன் – திருவடிகளையுடையனாய், என்அம்மான் – (அத்தாலே) எனக்கு அஸாதாரண சேஷியானவன், ஓதம்போல் – ஸமுத்ரம்போலே, கிளர் – கிளர்ந்து (ஸ்தோத்ரம்பண்ணி ஸ்வஹ்ருதயத்தை வெளியிடுகிற), வேதம் – வேதங்களாலே சொல்லப்பட்ட, நீரன் – நீர்மையை யுடையவன்.
ஈடு – பத்தாம் பாட்டு. அவன் நீர்மையைப் பேசப்புக்கு, “நம்மால் பேசப்போமோ? கடல் கிளர்ந்தாற்போலே வேத3மே பேசவேண்டாவோ?” என்கிறார்.
(நாதன்) ஸர்வநியந்தாவானவன். (ஞாலம்கொள் பாதன்) வஸிஷ்ட2 சண்டா3ள விபா4க3ரஹிதமாக எல்லார் தலைகளிலும் திருவடிகளைப் பரப்பினவன். (என்னம்மான்) இம்மேன்மையையும், நீர்மையையும் காட்டி என்னை அநந்யார்ஹமாக்கினவன். அத2வா, (நாதன்) முதற்பாட்டில் சொன்ன ஶேஷித்வத்தையுடையவன். (ஞாலம் கொள் பாதன்) இரண்டாம் பாட்டில் சொன்ன அவதார ஸௌலப்4யத்தையுடையவன். (என்னம்மான்) எனக்குக் கிட்டலாம்படி திருமலையிலே வந்து என்னை அடிமைகொண்டவன். மூன்றாம் பாட்டில் “கண்ணாவான்” என்றத்தை நினைக்கிறார். (ஓதம் இத்யாதி3) இவனுடைய இந்நிலைமைகளைப் பேசும்போது, கடல் கிளர்ந்தாற்போலே கிளராநின்றுள்ள வேத3த்தாலே ப்ரதிபாதி3க்கப்பட்ட நீர்மையையுடையவன். நீர்மையாவது – ஆர்ஜவகு3ணம்.
பதினொன்றாம் பாட்டு
*நீர்புரை வண்ணன்*
சீர்சட கோபன்*
நேர்த லாயிரத்து*
ஓர்த லிவையே.
ப – அநந்தரம், இத்திருவாய்மொழி ஆர்ஜவகுணத்தினுடைய நிரூபணரூபமென்று அருளிச்செய்கிறார்.
நீர்புரை – (ஒருக்கினவிடத்திலே சென்று பாயும்) நீரின் செவ்வைபோலேயிருக்கிற, வண்ணன் – ஸ்வபாவத்தையுடையவனுடைய, சீர் – ஆர்ஜவகுணத்தை, சடகோபன் – ஆழ்வார், நேர்தல் – நேர்ந்து அருளிச்செய்த, ஆயிரத்து – ஆயிரத்தில், இவை – இவை, ஓர்தல் – ஓர்தலை வடிவாக வுடைத்தாயிருக்கும். இது – குறளடிவஞ்சித்துறை.
ஈடு – நிக3மத்தில், இத்திருவாய்மொழி, எல்லாத்திருவாய்மொழியிலும் அவனுடைய ஆர்ஜவகு3ணத்தை ஆராய்ந்து சொன்ன பத்து என்கிறார்.
(நீர் புரை வண்ணன்) ஆக, இத்திருவாய்மொழியில் சொல்லிற்றாயிற்று ஸர்வேஶ்வரனுடைய ஆர்ஜவகு3ணமாயிற்று. நீரோடு ஒத்த ஸ்வபா4வத்தை உடையவனுடைய ஆர்ஜவகு3ணத்தையாயிற்று சொல்லிற்று. ஆர்ஜவகு3ண மாவது – ஸம்ஸாரிகள் விலங்கிப்போனது தனக்கு வழியாம்படி தான் செவ்வையனாகை. (சடகோபன் நேர்தல்) இவைதான், இவ்வர்த்த2த்தைக் கடக்க நின்று ஒருவன் கவிபாடுகையன்றிக்கே, இவ்வார்ஜவகு3ணத்துக்கு இலக்கான ஆழ்வார் அருளிச்செய்தவை. (ஆயிரத்து ஓர்தல் இவையே) ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு ஓர்ந்து அருளிச்செய்யப்பட்டவை. அதாவது :- ஸம்ஸாரிகளுடைய செவ்வைக்கேட்டை அநுஸந்தி4த்து அத்தால் இழக்கவேண்டாதபடி அவனுடைய ஆர்ஜவகு3ணத்தை அநுஸந்தி4த்து அருளிச்செய்யப்பட்டவை. அன்றிக்கே, ஸம்ஸாரிகளுக்கு ஓரப்படுமவை என்னுதல். “ஆயிரத்திலும் சடகோபன் நீர்புரை வண்ணனுடைய சீரை நேர்ந்த இவை ஓர்தல்” என்று அந்வயம்.
முதற்பாட்டில், நித்யவிபூ4தியிலுள்ளாரோடு செவ்வையனாய்ப் பரிமாறும் படியை அருளிச்செய்தார்; இரண்டாம் பாட்டில், லீலாவிபூ4தியிலுள்ளாருடன் செவ்வையனாய்ப் பரிமாறும்படியை அருளிச்செய்தார்; மூன்றாம் பாட்டில், இரண்டு விபூ4தியிலுள்ளார்க்கும் முகங்கொடுக்கைக்காக, திருமலையிலே நிற்கிற படியை அருளிச்செய்தார்; நாலாம் பாட்டில், அவ்வார்ஜவகு3ணம் தம்மளவிலே ப2லித்தபடியை அருளிச்செய்தார்; அஞ்சாம் பாட்டில், ‘நான் அவன் கு3ணங்களை விரும்புமாபோலே, அவனும் என் தே3ஹத்தை விரும்பாநின்றான்’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘என்னுடைய தே3ஹத்தினளவன்றிக்கே, என்னுடைய ஆத்மாவையும் கைக்கொண்டான்’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘அவ்வளவுமல்ல, நித்யவிபூ4தியில் பண்ணும் ஆத3ரத்தை என்பக்கலிலே பண்ணினான்’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘என்னைச்சுட்டி அவன் பிறந்த பிறவிகளுக்கு முடிவில்லை’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘இப்படிப் பிறந்த பிறவிகள்தோறும் தன் ஐஶ்வர்யத்தோடே வந்து அவதரித்தான்’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘அவனுடைய ஆர்ஜவகு3ணத்தைப் பேசும்போது வேத3மே பேசவேணும்’ என்றார்; நிக3மத்தில், ‘இத்திருவாய்மொழி ஸம்ஸாரிகளுக்கு எப்போதும் ஒக்க அநுஸந்தி4க்கப்படும்’ என்றார்.
நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்
த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி–ஓடும்புள்
கௌடில்யவத்ஸு கரணத்ரிதயேபி ஜந்துஷ்-
வாத்மீயமேவ கரணத்ரிதயைகரூப்யம் |
ஸந்த3ர்ஶ்ய தாநபி ஹரிஸ் ஸ்வவஶீகரோதீத் –
யாசஷ்ட ஸாந்த்3ரகருணோ முநிரஷ்டமேந || 8
த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளி — ஓடும்புள்
ஸூரீணாம் ஸ்வைரஸேவ்யே ஸ்வயமவதரதி க்ஷுத்3ரதி3வ்யைகநேத்ரே
கோ3பாத்3யர்த்த2ம் த்4ருதாத்3ரௌ ஶ்ரிததநுரஸிகே வாமநீபா4வத்3ருஶ்யே |
ஸச்சித்தாநந்யவ்ருத்தௌ விப4வஸமதநௌ ஸ்வாயுதா4ரூட4ஹஸ்தே
நீசோச்சக்3ராஹ்யபாதே3 நிருபதி4ம்ருஜுதாம் நீரவர்ணே ஜகா3த3 || 9
திருவாய்மொழி நூற்றந்தாதி
ஓடுமனஞ் செய்கையுரை ஒன்றிநில்லா தாருடனே*
கூடிநெடு மாலடிமை கொள்ளும்நிலை* — நாடறிய
ஓர்ந்தவன்தன் செம்மை உரைசெய்த மாறனென*
ஏய்ந்து நிற்கும் வாழ்வா மிவை. 8
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்