ஒன்பதாம் திருவாய்மொழி
இவையும்: ப்ரவேஶம்
*****
ப – ஒன்பதாந்திருவாய்மொழியில், இப்படி ஆர்ஜவகுணத்தையுடைய ஸர்வேஶ்வரன், “பொய்கலவாதென்மெய்கலந்தான்” (1.8.5) என்றும், “என்னெண்தானானான்” (1.8.7) என்றும், கீழ் இவர் சொன்ன க்ரமத்திலே தன்னுடைய குணவிக்ரஹமஹிஷீபரிஜநவிபூதி சேஷ்டிதங்களோடே கூட இவரோடே பரிபூர்ணமாக ஸம்ஶ்லேஷித்து அநுபவிப்பிக்கப் பாரித்து, ‘இவர் வெள்ளக்கேடாய் உடைகுலையப்படிற் செய்வதென்?’ என்று பார்த்து, ஸாத்மிக்க ஸாத்மிக்க புஜிப்பிப்பானாக, இவர்பரிஸரத்திலே வர்த்திப்பது, இவருக்கு அந்திகஸ்த்தனாவது, கூட நிற்பது, இவர் ஶரீரத்தில் ஒரு பக்கத்திலேயாவது, ஹ்ருதயப்ரதேஶத்திலேயாவது, தோள்களிலே சேர்வது, நாவிலே நிற்பது, கண்ணுக்குள்ளேயாவது, நெற்றியிலேயாவது, உச்சியிலேயாவதாகக் கொண்டு, க்ரமத்திலே போகம் தலைமண்டையிடும்படி ஸாத்மிக்க ஸாத்மிக்க ஸம்ஶ்லேஷித்தபடியை அருளிச்செய்கிறார்.
ஈடு – கீழில் திருவாய்மொழியிலே அவனுடைய ஆர்ஜவகு3ணாநுஸந்தா4நம் பண்ணினார்; இப்படி அநுஸந்தி4த்தார் விஷயத்தில் ஸர்வேஶ்வரன் இருக்கும்படியை அருளிச்செய்கிறார் இதில். ஸர்வேஶ்வரனாய், ஶ்ரிய:பதியாய், பரமரஸிகனாயிருக்கிறவன், ஆழ்வார்ப4க்தியிலே துவக்குண்டு இவரோடே ஏகரஸனாயிருந்தான்; ஆழ்வாராகிறார் – கீழில் ஆர்ஜவகு3ணாநுஸந்தா4நத்தாலே அவன்பக்கலிலே பெரியவிடாயையுடையரானார்; “இது நமக்கு நல்ல வாய்ப்பா யிருந்தது” என்று பார்த்து, அர்ஜுனன் விபூ4திஶ்ரவணத்தாலே “விபூ4திமானானவனைக் காணவேணும்” என்று அபேக்ஷிக்க, அதுக்கு உறுப்பாக “தி3வ்யம் த3தா3மி தே சக்ஷு:” என்கிறபடியே தி3வ்யசக்ஷுஸ்ஸைக் கொடுத்து வைஶ்வரூப்யத்தைக் காட்டினாற்போலே, இவர்க்கும் தன்னை அநுப4விக்கைக்கீடான விடாயைப் பிறப்பித்துத் தன்னை அநுப4விப்பிக்கிறான், நித்யவிபூ4தியிலுள்ளாரோடு பரிமாறுமாபோலே பரிமாறக் கோலி; அதாவது – பிராட்டிமாரோடு பரிமாறுவது மஹிஷிகளான முறையாலே; திருவடியோடு பரிமாறுவது வாஹநமான முறையாலே; திருவநந்தாழ்வானோடு பரிமாறுவது படுக்கையான முறையாலே; இப்படி அவர்களோடு ஓரோ முறையாலே பரிமாறும் பரிமாற்றமெல்லாம் இவரொருவரோடு பரிமாறுகிறானாய், அதுதன்னை, குளப்படியிலே கடலை மடுத்தாற்போலேயன்றிக்கே, பொறுக்கப் பொறுக்கப் பரிமாற, இவரும் அவனை ஸர்வேந்த்3ரியத்தாலும் ஸர்வகா3த்ரத்தாலும் யதா2மநோரத2ம் அநுப4வித்து, அவ்வநுப4வஜநிதப்ரீதியாலே அவனைப் பேசி அநுப4விக்கிறார்.
முதல் பாட்டு
*இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்*
எவையும் யவரும்தன் னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்*
அவையுள் தனிமுதல் எம்மான் கண்ண பிரான்என் னமுதம்*
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலு ளானே.
ப – முதற்பாட்டில், ஸர்வகாரணத்வ ஸர்வாந்தராத்மத்வத்தாலே ஸர்வஸ்மாத்பரனாய் ஸர்வஸுலபனான ஶ்ரிய:பதி, என்னுடைய பரிஸரத்திலே அதூரவர்த்தியாகாநின்றா னென்கிறார்.
இவையும் அவையும் உவையும் – அந்திகஸ்த்தமாயும் தூரஸ்த்தமாயும் அதூரவிப் ரக்ருஷ்டமாயுமுள்ள அசேதநங்களும், இவரும் அவரும் உவரும் – ஏவம்வித சேதநரும், யவையும் யவரும் – எல்லாம், ஸம்ஹ்ருதி ஸமயத்திலே, தன்னுள்ளே – தன்னுள்ளே, ஆகியும் – ஆம்படியாயும், ஆக்கியும் – (ஸ்ருஷ்டிஸமயத்திலே) உண்டாக்கியும், காக்கும் – (ஸ்ருஷ்டமானவற்றுக்கு ஆபத்துக்க?ைளப் போக்கி அபிமதங்களைக் கொடுத்து) ரக்ஷிக்குமவனுமாய், அவையுள் – அவற்றினுள்ளே அந்தராத்மாவாயுமுள்ள, தனி முதல் – ஸஹாயாந்தர நிரபேக்ஷ காரணமுமாய், அம்மான் – ஸ்வாமியுமாய், கண்ணபிரான் – க்ருஷ்ணனான ஸௌலப்யத்தைக் காட்டி, என் அமுதம் – எனக்கு போக்யபூதனாய், சுவையன் – அத்தாலே தானும் ரஸிகனானவன், திருவின்மணாளன் – லக்ஷ்மியோடேகூட, என்னுடை – என்னுடைய, சூழலுளான் – சூழலிலேயானான்.
ஈடு – முதற்பாட்டு. ஸ்ருஷ்ட்யாதி3 ஹேதுபூ4தனுமாய், ஸர்வாந்தராத்மாவுமான க்ருஷ்ணனானவன் என்னுடைய பர்யந்தத்தை விட்டுப் போகமாட்டாதபடியானான் என்கிறார். அவனுடைய கு3ணாநுப4வத்தோடு விபூ4த்யநுப4வத்தோடு வாசியில்லையிறே இவர்க்கு. முதல் திருவாய்மொழியிலே பரக்க அநுப4வித்த இத்தை விஶத3மாயிருக்கையாலே திரள அநுப4விக்கிறார்.
(இவையும் அவையும் இத்யாதி3) சித்3வர்க்க3த்தையும் அசித்3வர்க்க3த்தையும் திரளச் சொல்லுகிறது. (தன்னுள்ளேயாகியும்) “இவையும் அவையும்” என்று இங்ஙனே பிரித்து வ்யவஹரிக்கவொண்ணாதபடி “ஸதே3வ” என்கிறபடியே – தான் என்கிற சொல்லுக்குள்ளேயாம்படி தன்மேலே ஏறிட்டுக்கொண்டு த4ரிக்கும்படியைச் சொல்லுகிறது. (ஆக்கியும்) “ப3ஹு ஸ்யாம்” என்கிறபடியே தன்பக்கலிலேநின்றும் பிரித்து, நாமரூப விபா4கா3ர்ஹமாம்படி பண்ணியும். (காக்கும்) ஸ்ருஷ்டமான பதா3ர்த்த2ங்களை ஈரக்கையாலே தடவி ரக்ஷிக்கும்படி.
(அவையுள் தனிமுதல்) ஸ்ருஷ்டமான பதா3ர்த்த2ங்களிலே, இவை ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியாதி3களுக்கு யோக்3யமாம்படி அந்தராத்மாவாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது. இது பின்னை, “ஆக்கியும்” என்று ஸ்ருஷ்டியைச் சொன்னபோதே சொல்லிற்றாகாதோ? என்னில்; “தத3நுப்ரவிஶ்ய” என்று இவற்றினுடைய வஸ்துத்வ நாமபா4க்த்வங்களுக்காகப் பண்ணும் அநுப்ரவேஶத்தைச் சொல்லுகிறது அங்கு. இங்கு, இவற்றுக்குச் சொல்லும் வாசகஶப்3த3ம் தன்னளவிலே பர்யவஸிக்கும்படியாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.
(எம்மான்) தன் விபூ3திவிஷயமாகத் தனக்கு உண்டான ஓரத்தைக் காட்டி என்னை அநந்யார்ஹமாக்கினவன். (கண்ணபிரான்) இப்படியிருக்கிறவன்தானே க்ருஷ்ணன் என்கையும், அவன்தான் கண்ணுக்குத் தோற்றிநின்று உபகரிக்கும் என்கையும். (என் அமுதம்) தே3வர்கள் அதி4காரிகளாம் அம்ருதத்தில் வ்யாவ்ருத்தி. (சுவையன்) அவ்வம்ருதத்துக்கு போ4க்த்ருத்வமில்லையே. சுவையன் – பரமரஸிகன். இந்த ரஸிகத்வத்துக்கு ஊற்றுவாய் சொல்லுகிறது – (திருவின் மணாளன்) இவருடைய அம்ருதம் ஒரு மிது2நமாயிற்று.
(என்னுடைச் சூழலுளானே) பெரியபிராட்டியார் “அகலகில்லேனிறையும்” (6-10-10) என்னப்பிறந்தவன், என் பரிஸரத்திலே வர்த்திக்கை தன்பேறாக வர்த்தியா நின்றான். “யஸ்ய ப்ரஸாதே3 ஸததம் ப்ரஸீதே3யுரிமா: ப்ரஜா: | ஸ ராமோ வாநரேந்த்3ரஸ்ய ப்ரஸாத3மபி4காங்க்ஷதே ||” என்கிறபடியே; “லோகநாத2: புரா பூ4த்வா ஸுக்3ரீவம் நாத2மிச்ச2தி” – தம்மையொழிந்தார்க்கெல்லாம் நாத2ரானவர் ஸுக்3ரீவனை நாத2னாக இச்சி2யாநின்றார். கிடைப்பது, கிடையாதொழிவது; தாம் முந்துற முன்னம் இச்சி2யாநின்றார்.
இரண்டாம் பாட்டு
சூழல் பலபல வல்லான் தொல்லையங் காலத்து உலகைக்*
கேழலொன் றாகி யிடந்த கேசவன் என்னுடை அம்மான்*
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ண லரியான்*
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவனென் னருகலி லானே.
ப – அநந்தரம், அவதாரமுகத்தாலே ஆஶ்ரிதோபகாரகனானவன், என் அருகே யானான் என்கிறார்.
சூழல் – (ஆஶ்ரிதரை வஶீகரிக்கைக்கீடான) சூழ்ச்சியையுடைய அவதாரங்களை, பல பல – பலவும், வல்லான் – (தன் இச்சையாலே) பண்ணவல்லனாய், தொல்லை – பழையதாய், அம் – (அவதாரோபயுக்தமாகையாலே) அழகியதான, காலத்து – வராஹகல்பத்தின் முதலிலே, உலகை – (ப்ரளயார்ணவமக்நமான) லோகத்தை, கேழல் ஒன்றாகி – அத்விதீய வராஹமாய்க்கொண்டு, இடந்த – இடந்தெடுத்து, கேசவன் – (ப்ரளயஜலத்திலே நனைந்த) மயிரழகையுடைய, என்னுடை அம்மான் – என் ஸ்வாமியாய், (க்ருஷ்ணனாய் வந்தவதரித்து), வேழம் – (ப்ரதிபந்தகமான) குவலயாபீடத்தை, மருப்பை ஒசித்தான் – ஶ்ருங்கபங்கம் பண்ணினவனாய், (இவ்வுபகாரம்), விண்ணவர்க்கு – (அதிஶயிதஜ்ஞாநரான) தேவர்களுக்கும், எண்ணல் – நினைக்க, அரியான் – அரியனாய், (பின்னையும் ஆஶ்ரிதர்க்கு உதவுகைக்காக), ஆழம் – அகாதமாய், நெடும் – பெருத்த, கடல் – க்ஷீரார்ணவத்திலே, சேர்ந்தான் அவன் – கண்வளர்ந்தருளினவன், என் அருகலிலான் – என்அருகான இடத்திலே யானான். அருகலிலென்று – ஏழாம்வேற்றுமை.
ஈடு – இரண்டாம் பாட்டு. என் பரிஸரத்திலே வர்த்தித்தவன், அது ஸாத்மித்த வாறே, என் அருகே வந்துநின்றான் என்கிறார்.
(சூழல் பலபல வல்லான்) இப்போது சூழலென்கிறது அவதாரத்தை. அவதாரத்தை “சூழல்” என்பானென்? என்னில்; சேதநரை அகப்படுத்திக் கொள்ளுமதாகையாலே. ஜாதிபே4த3த்தையும், அவாந்தரபே4த3த்தையும்பற்ற (பல பல) என்கிறது. (வல்லான்) கர்மநிப4ந்த4நமாகப் பிறக்குமவனுக்கும் முடியாத பிறவிகளைப் பிறக்கவல்லான். கர்மம் செய்யவல்லதன்றிறே, அநுக்3ரஹம் செய்யவல்லது. அவற்றிலே ஒரு சூழல் சொல்லுகிறார், – (தொல்லை) வாராஹ கல்பத்தின் ஆதி3யிலே. (அங்காலத்து) தன் வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கின காலமிறே; அத்தைப்பற்ற அம் காலம் என்கிறார். (உலகை) ஒரு திருவடி திருவநந்தாழ்வானுக்காகத்தான் இப்படிப் படப்பெற்றதோ? ஸங்கல்பத்துக்கும் பாத்தம்போராத பூ4மிக்காகக் கிடீர்! (கேழல் ஒன்றாகி) தன் மேன்மையோடு அணைந்திருப்பதொரு வடிவைத்தான் கொள்ளப்பெற்றதோ? (ஒன்றாகி) பின்பு ஸர்வஶக்தியான தானே “இவ்வடிவைக் கொள்ள” என்னிலும் ஒண்ணாதபடி அத்3விதீயமாயிருக்கிறபடி. பூ4மி ப்ரளயத்திலே அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டவித்தனை அவன்தான்; அது அவன்கொண்ட வடிவாகையாலே அழிவுக்கிட்ட வடிவுதனக்கே ஆலத்தி வழிக்கவேண்டியிருக்கும்; ‘பன்றியாம் தேசு’ (நாச்சியார் திருமொழி 11-8) இறே.
(இடந்த) அஜ்ஜாதிக்காகவுள்ளதொரு கு3ணமாயிற்றுச் செருக்கு; ஶ்ரிய:பதி அவ்வடிவைக் கொண்டால் சொல்லவேண்டாவிறே. அண்ட3பி4த்தியிலே சேர்ந்த பூ4மியைப் புக்கு எடுத்துக்கொண்டு ஏறினான். (கேசவன்) ப்ரஶஸ்தகேஶன். அப்போதைத் திருமேனியும் உளைமயிருமாய் நின்ற நிலை. (என்னுடை அம்மான்) ஸம்ஸார ப்ரளயங்கொண்ட என்னை எடுத்தவன். (வேழ மருப்பை ஒசித்தான்) குவலயா பீட3த்தினுடைய மருப்பை அநாயாஸேந முறித்தவன். அப்படியே என்னுடைய ‘மதக்களிறு ஐந்தினையும் சேரி திரியாமல்’ (முதல் திருவந்தாதி – 47) பண்ணினவன்; விரோதி4நிரஸநஶீலன் என்றபடி. (விண்ணவர்க்கு எண்ணல் அரியான்) தனியே குவலயாபீட3த்தோடே பொருதவன், ப்3ரஹ்மருத்3ராதி3கள் மநோரத2த்துக்கும் அவ்வருகானவன். (ஆழநெடுங்கடல் சேர்ந்தான்) அந்த ப்3ரஹ்மாதி3கள் கூக்குரல் கேட்கத் திருப்பாற்கடலிலே சாய்ந்தருளினவன். ஆழம் – உறுத்தாமைக்கு. நெடுமை – ‘தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பலபரப்பி’ (8-10-8) வேண்டினபடி கண்வளர்ந்தருளுகைக்கு. (அவன் என் அருகலிலானே) அவர்களைப்போலே எனக்கு அதூ3ரவிப்ரக்ருஷ்டமாகவும் நிற்கிறிலன்.
மூன்றாம் பாட்டு
அருகலி லாய பெருஞ்சீர் அமரர்க ளாதி முதல்வன்*
கருகிய நீலநன் மேனி வண்ணன்செந் தாமரைக் கண்ணன்*
பொருசிறைப் புள்ளுவந் தேறும் பூமக ளார்தனிக் கேள்வன்*
ஒருகதி யின்சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே.
ப – அநந்தரம், என்னோடே கூடிநின்று பஹுமுகமாக ரஸிப்பியாநின்றா னென்கிறார்.
அருகலில் – அபக்ஷயாதிதோஷரஹிதமாய், ஆய – ஸதாஸ்தித்வத்தாலே நித்யமாய், பெரும் – அபரிச்சிந்நமான, சீர் – குணங்களையுடையனாய், அமரர்கள் – நித்யஸூரிகளுக்கு, ஆதி – ஸத்தாதிஹேதுபூதனான, முதல்வன் – ப்ரதாநனாய், கருகிய – மிகவுங்கருகின, நீலம் – நீலரத்நம் போலே, நல் – நன்றான, மேனிவண்ணன் – திருமேனி நிறத்தையுடையனாய், செம் – (அவ்வடிவுக்குப் பரபாகமாம்படி) சிவந்த, தாமரை – தாமரைபோன்ற, கண்ணன் – திருக்கண்களையுடையனாய், பொரு – செறிந்த, சிறை – சிறகையுடையனான, புள் – பெரியதிருவடியை, உவந்து – மிகவும் விரும்பி, ஏறும் – மேற்கொள்ளக்கடவனாய், பூமகளார் – பூவில் மணம் வடிவுகொண்டாற்போலே போக்யபூதையான லக்ஷ்மிக்கு, தனிக்கேள்வன் – அத்விதீயபோக்தாவானவன், என்னோடு உடனே – என்னோடே கூடிநின்று, ஒரு கதியின் – ஒருவழியாலுள்ள,
சுவை – இனிமையை, தந்திட்டு – தந்து, ஒழிவிலன் – தவிருகிறிலன்.
ஹேயப்ரத்யநீகமாய் ஸமஸ்தகல்யாணகுணாத்மகமான ஸ்வரூபவைலக்ஷண்யமும், நித்யஸூரிநிர்வாஹகத்வரூபமான மேன்மையும், விலக்ஷணவிக்ரஹயோகமும், புண்டரீகாக்ஷத்வமும், கருடவாஹநத்வமும், ஶ்ரிய:பதித்வமுமாகிற பரத்வசிஹ்நங்களாயுள்ள அறுசுவையுந் தாராநின்றானென்று கருத்து. அருகலென்று – குறையாய், க்ஷயமென்றபடி.
ஈடு – மூன்றாம் பாட்டு. திருவடி, திருவநந்தாழ்வான், பிராட்டிமார் தொடக்க மானாரோடு ஓரோவகையாலே பரிமாறுமவன், என்னளவில் ஓரோவகையில் பரிமாறிவிடமாட்டுகிறிலன் என்கிறார்.
அருகல் – குறைகை; கேடு. இல்லென்பது – இல்லாமை; குறைவின்றிக்கே. ஆய – ஆன; நன்றான. ஹேயப்ரத்யநீகமுமாய், கல்யாணைகதாநமுமான நிரவதி4க கு3ணங்களையுடையனுமாய், அக்கு3ணங்களை நித்யஸூரிகளை ஸதா3நுப4வம் பண்ணுவிக்குமவனுமாய், அவர்கள் ஸத்தாதி3கள் தன் அதீநமாம்படியிருக்கிறவன். (கருகிய நீல நன்மேனி வண்ணன்) கறுத்து நெய்த்துப் பேச்சுக்கு அவிஷயமாம்படி விலக்ஷணமான திருமேனியில் நிறத்தையுடையவன்; விலக்ஷணமான திருமேனியில் கறுத்து நெய்த்த நிறத்தையுடையவன்; அவர்களை ஸதா3நுப4வம் பண்ணிவைக்கும்போது படிவிடும்படி. (செந்தாமரைக் கண்ணன்) அகவாயில் கு3ணங்களுக்கு ப்ரகாஶகங்களான திருக்கண்களையுடையவன். (பொருசிறைப் புள் உவந்தேறும்) ஸர்வேஶ்வரன் பெரியதிருவடியை மேற்கொள்ளுவதாக நினைத்து “வா” என்று அழைத்தால், அவனுடைய அங்கீ3காரத்தாலுண்டான ஹர்ஷத்தாலே பெருக்காறு சுழித்தாற்போலே சுழித்துத் தன்னில்தான் பொராநின்றுள்ள சிறகையுடையனாய்க் கொண்டாயிற்றுத் தோற்றுவது. அவனும் “நாம் இவனை மேற்கொள்ளப்பெற்றோமே” என்று திருவுள்ளத்தில் ப்ரீதியோடேயாயிற்று மேற்கொள்ளுவது. (பூமகளார் தனிக்கேள்வன்) புஷ்பத்தில் பரிமளம் வடிவுகொண்டாற்போலே இருப்பாளாய், போ4க்3யதைகவேஷையான பெரியபிராட்டியார்க்கு வல்லப4ன் என்றால், இப்படிப்பட்ட ஐஶ்வர்யத்துக்கு இரண்டாம் விரலுக்கு ஆளில்லாதபடி இருக்கிறவன்.
(ஒரு கதியின் இத்யாதி3) அவர்களோடு பரிமாறுமாபோலே ஒருவழியால் வந்த ரஸத்தைத் தந்துவிடுகிறிலன் என்னளவில்; நித்யஸூரிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் ஆத3ரத்தை என்பக்கலிலே பண்ணாநின்றான். (உடனே) “இவன் ஒரு விபூ4திமான், அந்யபரன்” என்று தோற்ற இருக்கிறிலன்; நித்யவிபூ4தியில் கேள்வியும் இங்கேயிருந்தேயாமித்தனை. “தண்டாமம் செய்து” (1-8-7) என்று – நித்யவிபூ4தியில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணினான் என்றார் கீழில் திருவாய்மொழியில்;
இதில், அவ்விபூ4தியிலுள்ளாரோடு பரிமாறும்படியை என்னொருவனோடு பரிமாறினான் என்கிறார்.
நான்காம் பாட்டு
உடனமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர்
மடமகள்* என்றிவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே*
உடனவை ஒக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான்*
கடல்மலி மாயப் பெருமான் கண்ணன்என் ஒக்கலை யானே.
ப – அநந்தரம், பூர்ணனாய் ஸர்வரக்ஷகனானவன் என்மருங்கிலே இராநின்றா னென்கிறார்.
உடன் – கூடியிருந்து, அமர் – தரிக்கும்படியான, காதல் – காதலையுடைய, மகளிர் – பிராட்டிமார், திருமகள் – (அதிஶயிதஸம்பத்ரூபையான) லக்ஷ்மி, மண்மகள் – (க்ஷமாதத்த்வமான) பூமி, ஆயர்மடமகள் – (அநுரூபமான) ஆபிஜாத்யந்தன்னையும், ஆத்ம குணத்தையுமுடைய நப்பின்னை, என்று – என்று ப்ரதாநதயா ப்ரஸித்தைகளான, இவர் – இவர்கள், மூவர் – மூவர்; ஆளும் – ரக்ஷணீயமான, உலகமும் – ஜகத்தும், மூன்றே – (ஸ்வர்க்கலோக பர்யந்தமான க்ருதகலோகமும், ஜநஸ்தபஸ்ஸத்யரூபமான அக்ருதகலோகமும், மஹர்லோகமாகிற க்ருதகாக்ருதகலோகமுமாகிற) மூன்றாயிருக்கும்; (பிரளயகாலத்திலே), அவை – அவற்றை, உடன் – தாரதம்யவிபாகரஹிதமாக, ஒக்க – ஏகோத்யோகத்திலே, விழுங்கி – விழுங்கி, ஆலிலை – ஆலிலையிலே, சேர்ந்தவன் – கண்வளர்ந்து, எம்மான் – (இவ்வபதாநத்தாலே) என்னை அடிமைகொண்ட ஸ்வாமியாய், கடல் – க்ஷீரார்ணவத்திலே, மலி – கண்வளரும் அபிவ்ருத்தியையுடையனாய், மாயம் – ஆஶ்சர்யகுணசேஷ்டிதங்களாலே, பெருமான் – அநவதிகஸ்வபாவனான, கண்ணன் – க்ருஷ்ணனானவன், என் ஒக்கலையான் – (யஶோதைபக்கல் போலே) என் ஒக்கலையிலே யானான். ‘கடலின் மிகுத்த மாயம்’ என்றுமாம்.
ஈடு – நாலாம் பாட்டு. மேன்மை அது; அக3டிதக4டநா ஸாமர்த்3யம் அது; இப்படி இருக்கிறவன், யசோதைப் பிராட்டி மருங்கிலே இருக்குமாபோலே என் மருங்கிலே வந்திருக்கை தனக்குப் பெறாப்பேறாக நினைத்திராநின்றான் என்கிறார்.
(உடனமர் காதல் மகளிர்) உடனே அமரவேண்டும்படியான காதலையுடைய பிராட்டிமார்; “அகலகில்லேன் இறையும்” (6-10-10) என்றாயிற்று இவர்களிருப்பது. அவர்கள் ஆரென்னில், – (திருமகள்) ஸர்வேஶ்வரனுக்கு ப்ரத4ாந மஹிஷியாய், பட்டத்துக்கு உரியளாய், “ந கஶ்சிந்நாபராத்4யதி” என்றிருக்கும் பெரியபிராட்டியார்; (மண்மகள்) முதலிலே “குற்றம் பார்க்கக் கடவதோ?” என்று அவனுக்குப் பொறைக்கு உவாத்தாய்ப் பொறை விளையும்படியான ஸ்ரீபூ4மிப்பிராட்டி; (ஆயர் மடமகள்) அநுப4வஸுக2ம்தானாய், தன் வடிவழகாலே துவக்கித் திருவுள்ளத்தில் குற்றம் படாதபடி இருக்கும் நப்பின்னைப்பிராட்டி. திருமகள் – அவன் ஐஶ்வர்யம்; மண்மகள் – அது விளையும் பூ4மி; ஆயர் மடமகள் – அத்தை பு4ஜிக்கிற போ4க்தாவானவள் என்றுமாம். (இவர் மூவர்) மேன்மைக்கும் புருஷகாரத்துக்கும் தனித்தனியே அமைந்திருக்கிற இவர்கள் மூவர். (ஆளும் உலகமும் மூன்றே) அவர்களுடைய படுக்கைப்பற்று இருக்கிறபடி. த்ரிவித4சேதநரையும் சொல்லுதல்; கீழும், மேலும், நடுவுமான லோகங்களைச் சொல்லுதல்.
(உடன் அவை ஒக்க விழுங்கி) அவற்றில் ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி ஏக காலத்திலே தன் திருவயிற்றிலே வைத்து; விபூ4தித்3வயமும் ரக்ஷ்யவர்க்க3 மென்றால், திருவயிற்றிலே வைக்குமது, ப்ரளயத்துக்குக் கர்மீப4விக்கும் எல்லையிலேயாகிறது. (ஆலிலைச் சேர்ந்தவன்) ஸகலலோகங்களையும் வயிற்றிலே வைத்து ஒரு ப4வனான ஆலந்தளிரிலே சாய்ந்தருளினவன். அக4டிதக4டநா ஸாமர்த்2யத்தையுடையவன். (எம்மான்) அச்செயலாலே என்னை எழுதிக் கொண்டவன். பத்ராலம்ப3நம் பண்ணிக்கிடீர் அடிமைகொண்டது! கீழில் அக4டிதக4டநாஸாமர்த்2யத்துக்கு மேலே ஒரு அக4டிதக4டநாஸாமர்த்2யமாயிற்று இது. “ந நமேயம்” என்றிருந்த என்னை அநந்யார்ஹமாக்கினபடி. (கடல் இத்யாதி3) திருப்பாற்கடலிலே குறைவறவந்து வர்த்திப்பானாய், ஆஶ்சர்யமான சேஷ்டிதங்களையுடைய ஸர்வேஶ்வரன். அன்றிக்கே, கடலிற்காட்டில் மிக்க ஆஶ்சர்யத்தையுடைய ஸர்வேஶ்வரன் என்றுமாம். (கண்ணன்) அந்த ஆஶ்சர்யங்கள் எல்லாம் தன்பக்கலிலே காணலாம்படியிருக்கிற க்ருஷ்ணன். (என் ஒக்கலையானே) யசோதைப்பிராட்டி மருங்கிலே இருக்குமாபோலே என் மருங்கிலே இராநின்றான்.
ஐந்தாம் பாட்டு
ஒக்கலை வைத்து முலைப்பா லுண்ணென்று தந்திட வாங்கி*
செக்கஞ் செகஅன்று அவள்பால் உயிர்செக உண்ட பெருமான்*
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக*
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன்என் நெஞ்சினுளானே.
ப – அநந்தரம், ஸர்வாதிகனாய் விரோதிநிவர்த்தகனான க்ருஷ்ணன், என் ஹ்ருதய ப்ரதேஶத்திலே அடங்கியிருந்தா னென்கிறார்.
நக்கபிரானோடு – திகம்பரனாய் ஈஶ்வரனாக ப்ரஸித்தனான ருத்ரனும், அயனும் – யோநிஜந்மமில்லாமையாலே அஜனென்று ப்ரஸித்தனான ப்ரஹ்மாவும், இந்திரனும் – பரமைஶ்வர்ய விஶிஷ்டனாக பாவித்திருக்கிற இந்த்ரனும், முதலாகவும் – முதலான ஸமஸ்தபதார்த்தங்களையும், ஒக்க – ஏகோத்யோகேந, தோற்றிய – உத்பாதித்த, ஈசன் – ஸர்வேஶ்வரனாய்வைத்து, (அவதாரதஶையிலே), ஒக்கலைவைத்து – யஶோதையைப் போலே எடுத்துவைத்து, (ப்ரேமபாவனையாலே), முலைப்பாலுண்ணென்று – முலைப்பாலையுண்ணென்று, தந்திட – (ஸத்வரமாகத்)தர, வாங்கி (அத்தை அஶங்கிதமாக) ஸ்வீகரித்து, செக்கம் செக – (அந்தப்பூதனையானவள்) “முடிக்கவேணும்” என்று வந்த நினைவு (அவள்தன்னோடே) முடியும்படி, அன்று – (அவள்நலிவதாக வந்த) அன்று, அவள்பால் – அவளிடத்து, உயிர் – ப்ராணனை, செக – முடியும்படி, உண்ட – (அவள் தந்த பாலை) அமுதுசெய்து, பெருமான் – (ஜகத்துக்கு ஈஶ்வரனையுண்டாக்கின) ஸர்வாதிகனான, மாயன் – ஆஶ்சர்யபூதன், என் – என்னுடைய (அவயவைகதேஶமான), நெஞ்சினுளான் – ஹ்ருதயப்ரதேஶத்துக்குள்ளே அடங்கினான். செக்கம் – செகுத்தல்; முடிதல்.
ஈடு – அஞ்சாம் பாட்டு. விரோதி4நிரஸநஶீலனாய், ஸர்வஸ்ரஷ்டாவானவன் வந்து என்னுடைய ஹ்ருத3யஸ்த2னானான் என்கிறார்.
(ஒக்கலை வைத்து) பரிவுடைய யஶோதைப் பிராட்டியைப்போலே தூக்கி எடுத்து மருங்கிலே வைத்து. (முலைப்பாலுண்ணென்று) “முலைக்கண்நெறித்து க்லேஶப்படாநின்றேன்; உண்” என்று உறுக்கிக் கொடுக்க. (தந்திட) “அஸ்மாந் ஹந்தும்” என்னுமாபோலே, அந்நஞ்சு தமக்குக் கொடுத்தாற்போலே யிருக்கையாலே “தந்திட” என்கிறாராதல்; தருகை – கொடுக்கையாய் வழங்குகையாலே, “தந்திட” என்கிறாராதல். (வாங்கி) அவள் முலைகொடாவிடில் த4ரியாதாளாய்க் கொடுத்தாற்போலே, இவனும் முலையுண்ணாவிடில் த4ரியாதானாய் உண்டபடி. (செக்கம் செக) “செக்கம்” என்று – மரணமாய்,அவள் கோலின மரணம் அவள்தன்னோடே போம்படி என்னுதல்; அன்றிக்கே; “செக்கம்” என்று சிவப்பாய், அத்தால் நினைக்கிறது சீற்றத்தையாய், அவள் சீறின சீற்றம் அவள்தன்பக்கலிலே ப2லிக்கும்படி என்னுதல்; “இலங்கை செந்தீயுண்ணச் சிவந்து” (திருமொழி 8-6-6) என்று – சிவப்பைச் சீற்றமாக ப்ரயோகி3த்ததிறே. அன்றியே, செக்கஞ்செக என்றது – செக்கஞ்சிவக்க என்றாய், முலைகொடுத்த உபகாரஸ்ம்ருதியாலே திருவத4ரத்தில் பழுப்புத்தோற்ற ஸ்மிதம் பண்ணினபடியாதல்.
(அன்று) ஜக3து3பஸம்ஹாரம் பிறக்கப் புக்க அன்று. தனி இடத்திலே இவள் நலியவந்த அன்று. (அவள்பாலுயிர்) அவள்பால் என்றது – அவளிடத்து என்றபடி. அவளுடைய ஹேயஶரீரத்தைப்பற்றி நிற்கிற உயிர். (செக) முடியும்படி. அன்றிக்கே, அவள் பாலையும் உயிரையும் முடியும்படி என்றுமாம். ‘முலையூடுயிரை வற்ற வாங்கியுண்ட வாயான்” (திருமொழி 1-3-1) என்னக்கடவதிறே. முலையால் நினைக்கிறது பாலையிறே அங்கு. “முலையுண்டான்” என்றால் – முலைப்பால் உண்டான் என்றபடியிறே. (உண்ட பெருமான்) அவள்முலை உண்டு அவளை முடித்து, ஜக3த்துக்கு ஒரு ஶேஷியைத் தந்தவன்; “ஸ்தந்யம் தத்3விஷஸம்மிஶ்ரம் ரஸ்யமாஸீஜ்ஜக3த்3கு3ரோ:” என்கிறபடியே. (நக்கபிரான் இத்யாதி3) ஸ்வகோ3ஷ்டி2க்கு உபகாரகனாக ப்ரஸித்3த4னாயிருக்கிற ருத்3ரனோடேகூட, அவனுக்கும் ஜநகனான சதுர்முக2னும், அவனுக்கும் இவ்வருகான இந்த்3ரனும் தொடக்கமாக இவ்வருகுள்ளார் எல்லாரையும், அத்திக்காயில் அறுமான்போலே ஒன்றாக அரும்பிக்கும்படி பண்ணின ஸர்வேஶ்வரன். (மாயன்) ஸ்ருஷ்டமான ஜக3த்திலே அநுப்ரவேஶம் முதலான ஆஶ்சர்யத்தையுடையவன். (ஸர்வஶரீரியாயிருக்கிற ஸர்வேஶ்வரன்.) (என் நெஞ்சினுளானே) என் ஶரீரத்தில் ஏகதே3ஶத்தைப் பற்றிநின்றான்.
ஆறாம் பாட்டு
மாயன்என் னெஞ்சி னுள்ளான் மற்றும் யவர்க்கும் அதுவே*
காயமும் சீவனும் தானே காலும் எரியு மவனே*
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன்*
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே.
ப – அநந்தரம், அநுகூலர்க்கு எளியனாய் ப்ரதிகூலர்க்கு அரியனானவன் என்னுடைய தோள்களை விடுகிறில னென்கிறார்.
என் – என்னுடைய, நெஞ்சினுள்ளான் – நெஞ்சிலே வர்த்திக்கிற, மாயன் – ஆஶ்சர்யபூதனானவன், மற்றும்யவர்க்கும் – மற்றும் எல்லார்க்கும், அதுவே – அப்படிசெய்யுமோ? (இப்படி என்னளவிலே எளியனாய், ஸர்வாத்மபூதனாய்க்கொண்டு), காயமும் – சரீரமும், சீவனும் – ஆத்மாவும், தானே – தானென்னலாம்படி தனக்கு ப்ரகாரமாகவுடையனாய், காலும் – வாயுவும், எரியும் – அக்நியும், அவனே – அப்படி தனக்கு ப்ரகாரமாய், சேயன் – (இந்நிலை அநாஶ்ரிதர்க்கு அறியவொண்ணாதபடி) தூரஸ்த்தனாய், அணியன் – (ஆஶ்ரிதர்க்கு அறியலாம்படி) ஆஸந்நனாய், யவர்க்கும் – எத்தனையேனும் அதிகர்க்கும், (ஸ்வயத்நத்தாற் காணுமளவில்) சிந்தைக்கும் – நினைக்கவும், கோசரமல்லன் – விஷயமல்லாதவனாய், தூயன் – (ஆஶ்ரிதர்க்கு அணியனாகைக் கீடான) பரிஶுத்தியையுடையனாய், துயக்கன் மயக்கன் – (அநாஶ்ரிதர்க்கு தூரஸ்தனாம்படி) ஸம்ஶய விபர்யய ஜ்ஞாநஜநகனானவன், (பெரியதிருவடியை மேற்கொள்ளுமாபோலே) என்னுடை – என்னுடைய, தோளிணையான் – இரண்டுதோளிலும் இராநின்றான்; (‘மற்றும் யவர்க்கும் அதுவே’ யென்று அந்வய•மாம்). துயக்கு – விபரீதஜ்ஞாநம். மயக்கு – ஸம்ஶயஜ்ஞாநம்.
ஈடு – ஆறாம் பாட்டு. ஸர்வாந்தராத்மாவானவன் என் தோளைப்பற்றி வர்த்தியா நின்றான் என்கிறார்.
(மாயன் என் நெஞ்சினுள்ளான்) இதென்ன பெறாப்பேறு! ஆஶ்சர்யமான கு3ணசேஷ்டிதங்களை உடையவன் என்னுடைய ஹ்ருத3யஸ்த2னானான்; இதென்ன சேராச்சேர்த்தி! (மற்றும் யவர்க்கும் அதுவே) மற்றும் ஆரேனும் நான் பெற்ற பேறு பெற்றாருண்டோ?
நீர்பெற்ற பேறுதான் என்னென்னில் (காயம் இத்யாதி3) இது என்கிறார் மேல். (காயமும் சீவனும் தானே) தே3வமநுஷ்யாதி3 ஶரீரங்களும். அவ்வவ ஶரீரஸ்த2மான ஆத்மாக்களும் அவனிட்ட வழக்கு. (காலும் எரியும் அவனே) காற்றும், தேஜஸ்தத்வமும் இரண்டும் அஞ்சுக்கும் உபலக்ஷணமாய், பூ4தபஞ்சகமும் அவனிட்ட வழக்கு.
(சேயன்) ஸ்வயத்நத்தாலே காண்பார்க்கு தூ3ரஸ்த2னாயிருக்கும். (அணியன்) அவனாலே அவனைக் காண்பார்க்குக் கைப்புகுந்து அணியனாயிருக்கும். (யவர்க்கும் சிந்தைக்கும் கோசரமல்லன்) தூ3ரஸ்த2னாம்படிக்கு எல்லை சொல்லுகிறது. எத்தனையேனும் அதிஶயிதஜ்ஞாநரா யிருக்குமவர்களுக்கும் கண்ணுக்கு விஷயமாகாமையேயன்றிக்கே, மநோரத2த்துக்கும் அவிஷயமாயிருக்கும். (தூயன்) இப்படியிருக்கிறவன், யஶோதா3தி3களுக்கு “யதி3 ஶக்நோஷி” என்னலாம்படி இருக்கும்.
(துயக்கன் மயக்கன்) உகவாதார்க்கு ஸம்ஶய விபர்யயங்களைப் பிறப்பிக்கும். (துயக்கன் மயக்கன்) துயக்கு – மனந்திரிவு. “அருவினையேன்” (1-5-1) என்று அகன்ற என் மநஸ்ஸைத் திரியவிட்டு – “உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு” (1-5-5) என்னும்படி. திரியவிட்டு – என்னுடனே கலந்தவன். மயக்கம் – கலத்தலும், கூடலும். (என்னுடைத் தோளிணையானே) என்னளவில் அங்ஙனன்றிக்கே,திருவடிதிருத்தோளிலே இருக்குமாபோலே இராநின்றான்.
ஏழாம் பாட்டு
தோளிணை மேலும்நன் மார்பின் மேலும் சுடர்முடி மேலும்*
தாளிணை மேலும் புனைந்த தண்ணந் துழாயுடை யம்மான்*
கேளிணை யொன்றுமி லாதான் கிளரும் சுடரொளி மூர்த்தி*
நாளணைந் தொன்றும் அகலான் என்னுடை நாவினு ளானே.
ப – அநந்தரம், நிரதிஶயபோக்யபூதனானவன் நிரந்தரமாக என் நாவினுள்ளே யானான் என்கிறார்.
தோளிணைமேலும் – (ரக்ஷகமான) திருத்தோள்களிலும், நல் – அபிமதவிஷயமிருக்கும், மார்பின்மேலும் – திருமார்பிலும், சுடர் – ஶேஷித்வௌஜ்ஜ்வல்யத்தையுடைய, முடிமேலும் – திருமுடியிலும், தாளிணைமேலும் – சேஷபூதர் பற்றும் திருவடிகளிலும், புனைந்த – அணியப்பட்ட, தண்ணந் துழாயுடை – செவ்வித் திருத்துழாயையுடைய, அம்மான் – ஸ்வாமியாய், கேள் – (இவ்வொப்பனையழகுக்குப்) பொருந்தின, இணை – உவமை, ஒன்றும் இலாதான் – ஒருபடியாலும் இல்லாதவனாய், கிளரும்சுடர் – (ஸ்வாபாவிக தேஜஸ்ஸோடே திருத்துழாயினொளியுங் கலந்து) அபிவ்ருத்தமான சுடர்விடுகிற, ஒளிமூர்த்தி – தேஜோமயதிவ்ய விக்ரஹத்தையுடையனானவன், நாள் – நாடோறும், அணைந்து – கிட்டி, ஒன்றும் – சிறிதும், அகலான் – அகலாதவனாய்க்கொண்டு, என்னுடை நாவினுளான் – என் ஜிஹ்வாஸ்த்தாநத்திலேயானான். கேள் – பொருத்தம்.
ஈடு – ஏழாம் பாட்டு. நான் உகந்தபடியே அலங்கரித்துக்கொண்டு வந்து என் நாவிலே கலந்தான் என்கிறார்.
(தோளிணை இத்யாதி3) அபி4மதவிஷயம் இருந்தவிடத்துக்குப் போவார், அவர்கள் உகந்தபடியே பூசிப் புலர்த்தி ஒப்பித்துக்கொண்டு போமாபோலே, ஆழ்வார் உகந்தபடியே திருத்துழாய்மாலையாலே அலங்க்ருதனாய் வந்தானாயிற்று. இவர் உகப்பதும் அதுவே, அவன் கொடுப்பதும் அதுவேயிறே. ‘புள்ளுர்தி கள்ளூரும் துழாய்க் கொயல்வாய் மலர்மேல் மனத்தை’ (திருவிருத்தம் – 24) உடையராயிருப்பர். திருத்தாயார் சொல்லும்போதும் “வண்டு திவளும் தண்ணந்துழாய் கொடீர்” (2–4-5) என்னும். இவர்தாம் ‘விரைமட்டலர் தண்டுழாய்’(2–4-9) என்னும்; ‘கண்ணன் கழல்துழாய் பொன் செய்பூண்மென் முலைக்கு என்று மெலியும்’ (4–2-10); அவனும் “தன் மன்னுநீள் கழல்மேல் தண்டுழாய் நமக்கன்றி நல்கான்” (6.8.6) என்று இவர்க்கல்லது கொடான். (தோளிணை மேலும்) “ஸுகா3ட4ம் பரிஷஸ்வஜே” என்கிறபடியே அணைக்கக் கணிசிக்கிற திருத்தோள்களிலும்.
(நன் மார்பின்மேலும்) அணைப்பிக்குமவளிருக்கிற திருமார்பிலும். (சுடர் முடிமேலும்) அணைத்துக்கொண்டு நின்று மேல்நோக்கிப் பார்த்தவாறே, தன்னுடைய ஶேஷித்வ ப்ரகாஶகமாயிருக்கிற திருவபி4ஷேகத்திலும். (தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாயுடை அம்மான்) தன்னுடைய ஶேஷித்வத்தை ஸ்தி2திப்பிக்கிற திருவடிகளிலும் சாத்தின திருத்துழாயையுடைய ஸர்வேஶ்வரன். தோளிணை இத்யாதி3களுக்கு ப4ட்டர் – “வீரராயிருப்பார் முற்பட ஆயுத4த்துக்கு இடுவர்கள்; அப்படியே திருத்தோள்களுக்கு இட்டான்; ப்ரணயிகளாயிருப்பார் அநந்தரம் அபி4மதவிஷயத்துக்கு இடுவர்கள். அப்படியே பெரியபிராட்டியார் எழுந்தருளியிருக்கிற கோயில்கட்டணத்துக்குக் கொடுத்தான்; ஆயுத4த்துக்கும் அபி4மதவிஷயத்துக்கும் இட்டால், பின்னைத் தாந்தாம் விநியோக3ம் கொள்ளுமித்தனையிறே; ஆகையாலே தான் சூடினான்; ஶேஷம் பின்னை அடியாரிறே கைக்கொள்ளுவார்; ஆகையாலே திருவடிகளுக்குச் சாத்தினான்; ஆபத்துக்கு உதவுவார் அடியாரிறே. ‘தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர் உடல் வேறாப் பிளந்து வீய’(6-9-4)ப்பொருவார் அடியாரிறே. நம்முடைய ஆபத்துக்களுக்குத் திருவடிகளே துணையானாற்போலேகாணும் அவனுடைய ஆபத்துக்களுக்கும் திருவடிகளே துணையானபடி” என்று அருளிச்செய்வர்.
(கேள் இணை ஒன்றும் இலாதான்) “கேள்” என்ற இத்தைக் கேழென்றாக்கி, அதாவது ஒப்பாய், இணையென்றும் ஒப்பாய், திரளவும் தனித்தனியும் ஒப்பில்லாதான் என்னுதல்; அன்றிக்கே, “கேள்” என்று உறவாய், சேர்ந்த ஒப்பில்லாதான் என்னுதல். (கிளரும்) ஆற்றுப்பெருக்குப்போலே மேல்மேலெனக் கிளராநிற்பதாய், நிரவதி4க தேஜோரூபமான தி3வ்யமங்க3ள விக்3ரஹத்தை உடையவன். “சுடர்” என்றும், “ஒளி” என்றும் – பர்யாயம். இரண்டாலும் – மிக்க ஒளி என்றபடி. ஒளி – பேரழகு. (மூர்த்தி) கீழ்ச்சொன்ன ஒப்பனை மிகையாம்படியான வடிவையுடையவன். (நாள் அணைந்து) நாள்தோறும் வந்து கிட்டுமத்தனையல்லது கால்வாங்கமாட்டுகிறிலன். (என்னுடைய இத்யாதி3) என்னுடைய ஸ்துதிவிஷயமானான் என்னுதல்; அன்றிக்கே, “வாசி திஷ்ட்ட2ந்” என்கிறபடியே என்னுடைய வாகி3ந்த்3ரியத்துக்கு விஷயமானான் என்னுதல்.
எட்டாம் பாட்டு
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம்*
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே*
பூவியல் நால்தடந் தோளன் பொருபடை யாழிசங் கேந்தும்*
காவிநன் மேனிக் கமலக் கண்ணன்என் கண்ணி னுளானே.
ப – அநந்தரம், தர்ஶநீயவிக்ரஹத்தோடே “சக்ஷுஷி திஷ்டந்” என்கிறபடியே என்கண்ணுக்குள்ளே யானா னென்கிறார்.
நாவினுள்நின்று – நாவினிடத்தில் நின்றும், மலரும் – பரவும், ஞானம் – ஜ்ஞான ஸாதநமான, கலைகளுக்கெல்லாம் – வித்யாஸ்த்தாநங்களுடைய, ஆவியும் – உயிரான அர்த்த•ம், ஆக்கையும் – உடம்பான ஶப்தமும், தானே – தானிட்ட வழக்காய், அழிப்போடு அளிப்பவன் தானே – அவற்றினுடைய உத்பத்தி விநாஶங்களும் தானிட்டவழக்கானவனாய், பூவியல் – பூமாறாத, நால் தடந்தோளன் – நாலு பெரியதோள்களையுடையனாய், (தோள்களிலே) பொரு – ஆஶ்ரிதவிரோதிகளைப் போக்குகைக்கு, படை – ஆயுதமான, ஆழி – திருவாழியையும், சங்கு – திருச்சங்கையும், ஏந்தும் – ஏந்துமவனாய், காவி – நெய்தல்போலே, நல் – நன்றான, மேனி – திருநிறத்தையும், கமலம் – கமலம்போன்ற, கண்ணன் – கண்களையுமுடையவன், என்கண்ணினுளான் – இவ்வழகோடே என்கண்ணுக்குள்ளேயானான். பூவியலென்று – பூவின் ஸ்வபாவமான மார்த3வத்தைச் சொல்லவுமாம்.
ஈடு – எட்டாம் பாட்டு. ஸகலவித்3யாவேத்3யனான ஸர்வேஶ்வரன், ப்ரமாணங் களாலே காணக்கடவ வடிவை என் கண்ணுக்கு விஷயமாக்கினான் என்கிறார்.
(நாவினுள் இத்யாதி3) ஜிஹ்வாக்3ரத்திலே விகஸியாநின்றுள்ள ஜ்ஞாந ஸாத4நமான வித்3யாவிஶேஷங்களுக்கெல்லாம். (ஆவியும் ஆக்கையும் தானே) ஆவியென்கிறது – அர்த்த2த்தை. ஆக்கையென்கிறது – ஶப்3த3த்தை. “இவ்வர்த்த2த்தை இஶ்ஶப்3த3ம் காட்டக்கடவது” என்று நியமித்துவிட்டான் அவனாயிற்று. ஆக, ஶப்3தா3ர்த்த2ஸம்ப3ந்த4ம் அவனிட்ட வழக்காயிற்று. (அழிப்போடு அளிப்பவன் தானே) மந்த3மதிகளான சேதநருடைய ப்ரதிபத்தி தோ3ஷங்களாலும், லேக2கதோ3ஷங்களாலும், பாட2பே4த3ங்களாலும் இவை உருமாயுமளவிலே ஸம்ஹரித்தும், அபேக்ஷித ஸமயத்திலே ஸ்ருஷ்டித்தும் போருகிறான் தானே. “அல்லாத ஸ்ருஷ்டிஸம்ஹாரங்களைச் சொல்லுகிறது” என்பாரும் உண்டு.
(பூவியல் இத்யாதி3) பூவாலல்லது செல்லாதபடி ஸுகுமாரமாய், கல்பகதரு பணைத்தாற்போலே, நாலாய்ச் சுற்றுடைத்தாயிருக்கிற திருத்தோள்களை உடையவன். பூவியல் – பூவாலே அலங்க்ருதமான தோள் என்னுதல்; பூவையொழியச் செல்லாத ஸௌகுமார்யத்தை உடையவன் என்னுதல். (பொரு படை) பணைத்துப் பூத்த கல்பகதருபோலேயாயிற்று – யுத்3த4த்துக்குப் பரிகரமான தி3வ்யாயுத4ங்களை த4ரித்தால் இருக்கும்படி. பொரு படை – யுத்3த4ஸாத4நங்களானவை. (காவி நன்மேனி) அவ்வாயுத4ங்களாலே விரோதி4யைப்போக்கி அநுப4விக்கும் வடிவழகு. (நன்மேனி) காவி – வடிவழகுக்கு உபமாநமாக நேர்நில்லாமையாலே, “நன்மேனி” என்கிறார். (கமலக்கண்ணன் என் கண்ணினுளானே) இவர் கண்வட்டமொழியப் புறம்பேபோனால் கண்வட்டக்கள்ளனாமே. பெருவெள்ளத்திலே ஒரு சுழிபோலே திருக்கண்கள். (என் கண்ணினுளானே) ப்ராக்ருத விஷயங்களை அநுப4வித்துப்போந்த என் கண்ணுக்குத் தன்னை விஷயமாக்கினான்.
ஒன்பதாம் பாட்டு
கமலக்கண்ணன்என்கண்ணினுள்ளான் காண்பன்அவன்கண்க ளாலே*
அமலங்க ளாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி*
கமலத் தயன்நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி*
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என்நெற்றியு ளானே.
ப – அநந்தரம், என்கண்களிலே நின்று ப்ரகாஶியாநிற்கச்செய்தே, ஸகலஜகத் ஸ்ரஷ்டாவானவன் என்னுடைய லலாடமத்யத்திலே ஆனான் என்கிறார்.
கமலக்கண்ணன் – கமலக்கண்ணனானவன், என்கண்ணினுள்ளான் – என் கண்ணுக்கு விஷயமாகாநிற்கும்; (அத்தாலே “ந சக்ஷுஷா பஶ்யதி” என்கிற நிலைதவிர்ந்து), காண்பன் – நானும் அவனைக் காணாநின்றேன்; (அதுக்கடி), அவன் – அக்கமலக்கண்ணன், கண்களாலே – தன் கண்களாலே, அமலங்களாக – அஜ்ஞாநாதி மலம் போம்படி, விழிக்கும் – பார்த்தருளாநிற்கும். (அத்தாலே), ஐம்புலனும் – சக்ஷுரிந்த்ரியமும் இந்த்ரியாந்தரங்களோடு வாசியற, அவன் மூர்த்தி – அவனுக்கு ப்ரகாரதயா ஶேஷமாயிற்று; (இப்படி செய்தவனாரென்னில்;), கமலத்து – கமல ஸம்பவனாகையாலே, அயன் – அஜனென்று பேராய், நம்பி தன்னை – ஸ்ருஷ்ட்யாத்யுபயுக்த ஜ்ஞாநாதிபூர்ணனான ப்ரஹ்மாவை, கண்ணுதலானொடும் – லலாடநேத்ரத்வத்தாலே வ்யக்த ஶக்திகனான ருத்ரனோடே, தோற்றி – தோற்றுவித்து, (அவர்கள் முதலாக), அமலம் – ஸத்வோத்தரைகளான, தெய்வத்தோடு – தேவதைகளோடே, உலகம் – லோகங்களையும், ஆக்கி – ஸ்ருஷ்டிக்கும் ஸ்வபாவனானவன், (இந்நிலைகுலையாதே), என் – என் அவயவைகதேஶமான, நெற்றியுளான் – நெற்றியிலேயானான். உலகமாக்கியென்று – பேர். கண்ணுதலானொடுமென்று – ருத்ரனுடைய அப்ரதாநத்வம் தோற்றுகிறது.
ஈடு – ஒன்பதாம் பாட்டு. கண்ணில் நின்ற நிலை ஸாத்மித்தவாறே, என் நெற்றியிலே வந்து நில்லாநின்றான் என்கிறார்.
(கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளான்) புண்ட3ரீகாக்ஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான். “ந சக்ஷுஷா க்3ருஹ்யதே” என்கிற மர்யாதை3 குலைந்தது. அவன் அவ்வடிவை உம்முடைய கண்ணுக்கு விஷயமாக்கினானாகில், நீர் பின்னைச்செய்ததென்? என்னில் (காண்பன்) நானும் கண்டு அநுப4வியாநின்றேன். இவ்விலக்ஷண விஷயத்தை நீர் கண்டு அநுப4விக்கவல்லீரானபடி எங்ஙனே? என்ன (அவன் இத்யாதி3) அவன் தன் திருக்கண்களாலே, என் தோ3ஷமெல்லாம் கழிந்து நான் காணவல்லேனாம்படி குளிரக் கடாக்ஷியாநின்றான்; ஆனாலும் இந்த்3ரியங்கள் என்று சில உண்டே காட்சிக்கு ப்ரதிப3ந்த4கங்கள், அவை செய்ததென்? என்ன (ஐம்புலனும் அவன் மூர்த்தி) காட்சிக்கு ப்ரதிப3ந்த4கங்களான ஶ்ரோத்ராதி3களும் அவனிட்டவழக்காம்படி அவனுக்கு ஶரீரவத்3விதே4யமாய் அங்கே படையற்றன.
(கமலத்தயன் இத்யாதி3) திருநாபீ4கமலத்திலே அவ்யவதா4நேந பிறந்து, எல்லாரிலும் விஸஜாதீயமான ஜந்மத்தையுடையனாய், தனக்கு இவ்வருகுள்ளவற்றை உண்டாக்குமிடத்தில் ஸர்வேஶ்வரனைக் கேள்விகொள்ளவேண்டாதபடி நிரபேக்ஷனான சதுர்முக2னை லலாடநேத்ரனான ருத்3ரனோடே உண்டாக்கி, அவ்வளவில் பர்யவஸியாதே, ஸத்வப்ரசுரரான தே3வதைகளோடே லோகங்களை உண்டாக்கினவன். “நெய்யுண்ணி” என்னுமாபோலே, “ஆக்கி” என்றது – ஆக்கும் ஸ்வபா4வனென்றபடி. (என் நெற்றியுளானே) கர்மாநுகு3ணமாக ஜக3த்தை ஸ்ருஷ்டித்துவிட்டான்; ப்ரயோஜந நிரபேக்ஷமாக என் நெற்றியிலே புகுந்து நின்றான்.
பத்தாம் பாட்டு
நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரைமலர்ப் பாதங்கள் சூடி*
கற்றைத் துழாய்முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்*
ஒற்றைப் பிறையணிந் தானும் நான்முக னும்இந் திரனும்*
மற்றை யமரரும் எல்லாம் வந்து எனது உச்சியு ளானே.
ப – அநந்தரம், ப்ரஹ்மாதிகளுக்கும் ஆஶ்ரயணீயனானவன் என்னுடைய உத்தமாங்கத்திலே ஆனான் என்கிறார்.
நெற்றியுள் நின்று – அபிமுகமாய்நின்று, என்னை – என்னை, ஆளும் – அடிமை கொள்வதாய், நிரைமலர் – (ஆஶ்ரிதரிட்ட) பூநிரையையுடைத்தான, பாதங்கள் – திருவடிகளை, சூடி – (தங்கள் தலையிலே) சூடி, கற்றை – செறிந்த, துழாய் – திருத்துழாயாகிற, முடிக்கோலம் – திருமுடியலங்காரத்தை யுடையனாய், கண்ணபிரானை – (ஆஶ்ரிதபவ்யனாய் உபகரிக்கும்) க்ருஷ்ணனை, தொழுவார் – (அஞ்சலி ப3ந்தாதி முகத்தாலே) ஆஶ்ரயிப்பார், ஒற்றைப்பிறை – ஏககலாரூபமான பிறையை, அணிந்தானும் – ஶிரோபூஷணமாகவுடைய ருத்ரனும், நான்முகனும் – சதுர்முகனும், இந்திரனும் – இந்த்ரனும், மற்றை – மற்றுமுள்ள, அமரருமெல்லாம் – தேவர்களெல்லாரும், (இப்படி அவர்களாலே தொழப்பட்டவன்), வந்து – (அந்த நெற்றியுள் நின்றும்) வந்து, எனது உச்சியுளான் – என்தலையின்மேலேயானான்.
ஈடு – பத்தாம் பாட்டு. ப்3ரஹ்மாதி3கள் தன்னைப் பெறுகைக்கு அவஸர ப்ரதீக்ஷராய்த் தடுமாறும்படி இருக்கிறவன் தான் என்னைப் பெறுகைக்கு அவஸரம் பார்த்து வந்து என் உச்சியுளானான் என்கிறார்.
(நெற்றி இத்யாதி3) நெற்றியுள்நின்று என்னை அடிமைகொள்ளுகிற. (நிரை மலர்ப்பாதங்கள் சூடி) மலரை நிரைத்தாற்போலே இருக்கிற திருவடிகளை ஶிரஸா வஹித்து. (கற்றைத்துழாய் இத்யாதி3) ஒரு வாடல் மாலையைக் கொண்டு வந்து திருமுடியிலே வைத்தாலும், திருக்குழலின் ஸ்பர்ஶத்தாலே செவ்விபெற்றுத் தழையாநிற்கும். “தழைக்கும் துழாய்” (பெரிய திருவந்தாதி – 39) என்னுமாபோலே. செவ்விபெற்றுத் தழைக்கிற திருத்துழாயோடே கூடின திருவபி4ஷேகத்தை உடையனாய், த3ர்ஶநீயமான வடிவையுமுடைய உபகாரஶீலனான க்ருஷ்ணனை – நிரைமலர்ப்பாதங்கள் சூடித்தொழுவார். (ஒற்றைப்பிறை அணிந்தானும்) ஒரு கலாமாத்ரமான சந்த்3ரனை ஜடையிலே த4ரித்து ஸுக2ப்ரதா4நனாயிருக்கிற ருத்3ரனும், அவனுக்கு ஜநகனான சதுர்முக2னும், தே3வர்களை மெய்க்காட்டுக் கொண்டிருக்கிற இந்த்3ரனும், மற்றுமுண்டான தே3வர்களுமெல்லாம். இப்படி அவர்கள் தடுமாறாநிற்க தன்னைப்பெறுகைக்கு, அதெல்லாம் தான் என்னைப் பெறுகைக்குப் பட்டு வந்து, என் உச்சியுளானாக நிற்கிறான். ராஜாக்கள் அந்த:புரத்தில், ஒருகட்டில் நின்றும் மற்றைக்கட்டேறப்போகாநிற்க, நடுவே அந்தரங்க3ர் முகங்காட்டித் தம் காரியங்கொண்டு போமாபோலே, இவர் திருநெற்றியில் நின்றும் திருமுடியேறப் போகாநின்றால், ப்3ரஹ்மாதி3கள் நடுவே முகங்காட்டித் தங்கள் காரியங்கொண்டு போமித்தனை.
பதினொன்றாம் பாட்டு
*உச்சியுள் ளேநிற்கும் தேவ தேவற்குக் கண்ண பிராற்கு*
இச்சையுள் செல்ல உணர்த்தி வண்குரு கூர்ச்சட கோபன்*
இச்சொன்ன ஆயிரத் துள் இவையுமோர் பத்துஎம்பி ராற்கு*
நிச்சலும் விண்ணப்பம்செய்ய நீள்கழல் சென்னி பொருமே.
ப – அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் பலமாக நித்யமான பகவத்ப்ராப்தியை அருளிச்செய்கிறார்.
உச்சியுள்ளே நிற்கும் – (இப்படியே) உச்சியிலே நிற்குமவனாய், தேவதேவற்கு – தேவதேவனுமாய், கண்ணபிராற்கு – கண்ணபிரானுமான (பரத்வஸௌலப்யங்களை யுடையவனுக்கு), இச்சை – (தம்பக்கல் அவன் பண்ணின) அபிநிவேசம், உள் – தம்முடையவுள்ளே, செல்ல – நடக்க, உணர்த்தி – அத்தை அவனுக்கு அறிவித்து, வண்குருகூர்ச்சடகோபன் – ஆழ்வார், இச்சொன்ன ஆயிரத்துள் – அருளிச்செய்த இந்தவாயிரத்துள், (அவனுடைய ஸம்ஶ்லேஷக்ரமஸூசகமான), இவை – இந்த, ஓர் – அத்விதீயமாயுள்ள, பத்து – பத்தையும், எம்பிராற்கு – எம்பெருமானுக்கு, விண்ணப்பஞ்செய்ய – விண்ணப்பஞ்செய்ய, நீள் – (ஆஶ்ரிதரிருந்த விடத்தளவும்) வருவதான, கழல் – அவன்திருவடிகள், சென்னி – இவர்கள் தலையிலே, நிச்சலும் – நிச்சலும், பொரும் – பொருந்தும். இத்திருவாய்மொழி – அறுசீராசிரிய விருத்தம்.
ஈடு – நிக3மத்தில் – இத்திருவாய்மொழியை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ் செய்ய, அவர்கள் தலையிலே எம்பெருமான் திருவடிகள் நாடோறும் சேரும் என்கிறார்.
இனி எங்கே போவதாக இருந்தான்? என்னில் (உச்சியுள்ளே நிற்கும்) அமரர் சென்னிப்பூவான தான், என் சென்னிக்கு அவ்வருகு க3ந்தவ்ய பூ4மியில்லை என்று என் உச்சியுள்ளே வர்த்தியாநின்றான்; என் உச்சியுள்ளே நிற்கையாலே தே3வதே3வனானான் என்றுமாம். (உள்ளே நிற்கும்) இனி அவ்வருகு போக்கில்லை. (தேவதேவற்கு) ‘அயர்வறும் அமரர்களதிபதி’யாயிருக்கிற இருப்பையும் நினைக்கிறிலன். (கண்ணபிராற்கு) உபகாரஶீலனான க்ருஷ்ணனுக்கு, (இச்சை உள் செல்ல உணர்த்தி) ஸர்வேஶ்வரனுக்குத் தம்பக்கலுண்டான இச்சை2யைத் தாம் அறிந்தபடியை அவன் திருவுள்ளத்திலே படும்படி உணர்த்தி. (வண்குருகூர்ச் சடகோபன்) ஸர்வேஶ்வரனுக்கு அறிவித்தவளவேயன்றிக்கே, ஸம்ஸாரிகளும் அறியும்படி பண்ணின உதா3ரரான ஆழ்வார். (இச்சொன்ன) இப்பா4வவ்ருத்தியாலே சொன்ன ஆயிரத்திலும் இவையும் ஓர் பத்து. (எம்பிராற்கு இத்யாதி3) எம்பிராற்கு விண்ணப்பஞ்செய்ய, நிச்சலும் நீள்கழல் சென்னி பொரும் – தனக்குப் பாங்கான ஸமயத்திலே ஒருகால் விண்ணப்பஞ்செய்ய, நாள்தோறும் ஆஶாலேஶமுடையார் இருந்தவிடத்திலே செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும். எம்பிரான் என்றது – இப்படி ஸாத்மிக்க ஸாத்மிக்கவும், இழவு மறக்கவும், அநுப4விப்பித்த உபகாரகன் என்றபடி. ஆழ்வார் க்ரமத்திலே “உச்சியுளானே” என்ற பேறு, இது கற்றார்க்கு முதலடியிலே உண்டாம். “பொரு” என்று – ஒப்பாய், ஒப்பாவது – சேருகையாய், சேரும் என்றபடி. “உச்சியுள்ளே நிற்கும்” என்று இவர் பெற்றதுவே பேறாகக் கடவது.
முதற்பாட்டில், என்னுடைய பர்யந்தத்திலே வந்து நின்றான் என்றார்; இரண்டாம் பாட்டில், அது ஸாத்மித்தவாறே அருகே நின்றான் என்றார்; மூன்றாம் பாட்டில், தம்முடனே கூட நின்றான் என்றார்; நாலாம் பாட்டில், ஒக்கலையிலே வந்திருந்தான் என்றார்; அஞ்சாம் பாட்டில், நெஞ்சிலே வந்து புகுந்தான் என்றார்; ஆறாம் பாட்டில், தோளிலே வந்திருந்தான் என்றார்; ஏழாம் பாட்டில், நாவிலே வந்து புகுந்தான் என்றார்; எட்டாம் பாட்டில், கண்ணுள்ளே நின்றான் என்றார்; ஒன்பதாம் பாட்டில், நெற்றியிலே நின்றான் என்றார்; பத்தாம் பாட்டில், திருமுடியிலே நின்றான் என்றார்; நிக3மத்தில், ஆக, இத்தால் – தம்முடனே ஸாத்மிக்கும்படி கலக்கையாலே, அவனை ஶிரஸா வஹித்தார்; ப2லஞ்சொல்லித் தலைக்கட்டினார்.
நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்
த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி– இவையும்
ஆத்மார்ஜவாநுப4வகௌதுகிநோஸ்ய ஶௌரி:
ஆத்மோபபோ4க3ருசிமப்4யதி4காம் த3தா3ந: |
தே3வ்யாதி3வத்3ரஸயிதா க்ரமதோகி2லாங்கா3ந்
யாஶிஶ்ரயத் தத3வத3ந்நவமே ஶடா2ரி: || 9
த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளி — இவையும்
பர்யந்தேங்கே ச த்3ருஷ்டம் ஸ்வவிரஹவிமுக2ம் டி3ம்ப4வத்பார்ஶ்வலீநம்
சித்தே க்லுப்தப்ரவேஶம் பு4ஜஶிக2ரக3தம் தாலுஸிஹ்மாஸநஸ்த2ம் |
சக்ஷுர்மத்4யே நிவிஷ்டம் ஸ்தி2தமலிகதடே மஸ்தகே தஸ்தி2வாம்ஸம்
ப்ரத்யாஹாரோக்தரீத்யா விபு4மநுபு3பு4ஜே ஸாத்ம்யபோ4க3ப்ரதா3நாத் || 9
திருவாய்மொழி நூற்றந்தாதி
இவையறிந்தோர் தம்மளவில் ஈசனுவந் தாற்ற*
அவயவங்கள் தோறு மணையும்– சுவையதனைப்
பெற்று* ஆர்வத் தால்மாறன் பேசினசொல் பேச*மால்
பொற்றாள்நம் சென்னி பொரும். 9
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்