ஸ்ரீ:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பகவத் விஷயம்
திருவாய்மொழி மூலமும் அதன் வ்யாக்யானங்களுள்
வாதிகேஸரி அழகியமணவாளச்சீயர் அருளிய பன்னீராயிரப்படியும்,
நம்பிள்ளை அருளிய ஈடுமுப்பத்தாறாயிரப்படியும்
******
இரண்டாம் பத்து
முதல் திருவாய்மொழி
வாயும் திரை – ப்ரவேசம்
பன்னீராயிரப்படி
இரண்டாம்பத்தில், இப்படி பரத்வாதி குணங்களாலே பரமசேஷியான ஸர்வேஸ்வரனுடைய ஸர்வரக்ஷகத்வப்ரயுக்தமான உபாயத்வத்தை ப்ரதிபாதித்து, அநந்தரம் இப்பத்தாலே உபேயத்வோபயுக்தமான அவனுடைய நிரதிசய போக்யதையை அருளிச்செய்வதாக அந்த போக்யதாதிசய ஸூசகமான, அல்பகாலவிஸ்லேஷத்திலும் அதிக்லேஸாவஹத்வத்தையும், ஆஸ்சர்யரூபமான உத்துங்கலலிதத்வத்தையும், ஸர்வஸாரஸ்ய ஸமவாயரூப திவ்யபோக்யதையையும், போகாலாபத்தில் வந்த ஆர்த்தியைப்போக்கி ரக்ஷிப்பான் அவனே என்னுமிடத்தையும், ஆர்த்தி தீரும்படி கிட்டினவனுடைய ஹர்ஷகாரிதமான ஸௌந்தர்யாதிஶயத்தையும், ஆஸ்ரித ஸம்ஸ்லேஷப்ரீதனுடைய தத்விஸ்லேஷ பீருத்வத்தையும், ஸம்ஸ்ரித ஸம்பந்திகுலஸந்தாநபர்யந்த ஸம்ரக்ஷணத்தையும், ரக்ஷணகாஷ்ட்டையான மோக்ஷப்ரததத்வத்தையும், மோக்ஷதாத்பர்யமான பாரதந்த்ர்யத்தையும், போகப்ரதிஸம்பந்திதயா ஸாந்நித்யத்தையும் அருளிச்செய்து போக்யதையை உபபாதித்தருளுகிறார். அதில் முதல் திருவாய்மொழியில் க்ஷணவிளம்பத்திலும் க்லேஸாதிஸயஜநகமான ஈஸ்வரனுடைய போக்யதையை அருளிச்செய்வதாக ததுபபாதகமான அவனுடைய ஸ்ரிய:பதித்வத்தையும், சேஷஸாயித்வத்தையும், அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும், நிவர்த்தந பரிகரவத்வத்தையும், சக்தியோகத்தையும், ஸத்யவாதித்வத்தையும், ஸம்பந்தவிசேஷத்வத்வத்தையும், காருணிகத்வத்தையும், கமநீயவிக்ரஹயோகத்தையும், காரணத்வத்தையும் அநுஸந்தித்து, ஏவம்விதபோக்யபூதனுடைய அல்பகால விளம்பத்தில் ஆற்றாமையாலே அசேஷபதார்த்தங்களும் தம்மைப்போலே அவனைப் பிரிந்து நோவுபடுகிறனவாக அபிஸந்திபண்ணும்படி கலங்கின ப்ரகாரத்தை, நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்தாள் ஒரு நாயகி, ஸகலபதார்த்தங்களும் தன்னைப்போலே தத்விரஹது:க்கத்தாலே ஈடுபடுகிறனவாக நினைத்துப் போலிமைக்கு இரங்கியுரைத்த பாசுரத்தாலே அருளிச்செய்கிறார். “இது தன்னுடையாறெய்திடுகிளவி” என்பர்.
ஈடுமுப்பதாறாயிரப்படி
முதற்பத்தால் – ப4க3வத்கைங்கர்யம் புருஷார்த்த2மென்று அறுதியிட்டார்; இரண்டாம் பத்தால் – அந்தக் கைங்கர்யத்தில் களை பறித்தார் ((பா.) (யறுத்தார்)); மூன்றாம் பத்தால் – விரோதி4 கழிந்த கைங்கர்யவேஷம் பா4க3வத சேஷத்வ பர்யந்தமான ப4க3வத்கைங்கர்யம் என்றார்; நாலாம் பத்தால் – இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி4 – ஐஸ்வர்ய கைவல்யம் என்றார்; அஞ்சாம் பத்தால் – அந்த விரோதி4யைப் போக்குவானும் அவனே என்றார்; ஆறாம் பத்தால் – விரோதி4 நிரஸநசீலனானவன் திருவடிகளிலே சரணம் புக்கார்; ஏழாம் பத்தால் – இப்படிப் பெரியபிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்கவிடத்திலும், த3க்3த4பட ந்யாயம் போலே ஸம்ஸாரம் அநுவர்த்திக்கிறபடியைக் கண்டு விஷண்ணராகிறார்; எட்டாம் பத்தால் – “இப்படி ப்ரபந்நராயிருக்கச்செய்தேயும் த3க்3த3பட ந்யாயம்போலே நம்மை விடாதே அநுவர்த்திக்கிறது நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசையறாதபடியாலே” என்று பார்த்து, அவற்றில் ஒரு நசையில்லை என்கிறார்; ஒன்பதாம் பத்தால் – “இப்படி நசையற்றபின்பும் ரக்ஷியாதொழிவானென்?” என்று அதிஸங்கை பண்ண, “நான் நாராயணன், ஸர்வசக்தியுக்தன், உம்முடைய ஸர்வாபேக்ஷிதங்களும் செய்து முடிக்கிறோம்” என்று அருளிச்செய்ய, அவனுடைய சீலகு3ணத்திலே ஆழங்காற்படுகிறார்; பத்தாம் பத்தால் – ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு, திருமோகூரிலே தங்குவேட்டையாக வந்து தங்கி, இவர்க்கு அர்ச்சிராதி3க3தியையுங்காட்டி இருவடைய அபேக்ஷித ஸம்விதா4நம் பண்ணினபடியை அருளிச்செய்தார்.
கீழில் திருவாய்மொழியிலே, “மணியை வானவர் கண்ணனைத் தன்னதோ ரணியை” (1-10-11) என்று ஸௌலப்4யத்தையும், மேன்மையையும், வடிவழகையும் சொல்லிற்று; இவை ஓரொன்றே போருமிறே மேல்விழப்பண்ணுகைக்கு; இங்ஙனன்றிக்கே, இவை மூன்றும் குறைவற்ற விஷயமானால் அநுப4வியா திருக்கப் போகாதிறே; “இவ்விஷயத்தை இப்போதே அநுப4விக்க வேணும்” என்று பா3ஹ்யஸம்ஸ்லேஷாபேக்ஷை பிறந்தது; அப்போதே நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே, பிறந்த அவஸாதா3திஶயத்தை, எம்பெருமானோடே கலந்து பிரிந்து ஆற்றாமையாலே நோவுபடுகிறாளொரு பிராட்டி, ஆற்றாமை கைகொடுக்க லீலோத்3யாநத்திலே புறப்பட்டு, அங்கே வர்த்திக்கிற பதா3ர்த்த2ங்களைக்கண்டு, அவையுமெல்லாம் ப4க3வத3லாப4த்தாலே நோவுபடுகிறனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தான் நோவுபடுகிற பாசுரத்தாலே பேசுகிறார்.
அஞ்சிறையமடைநாரை(1-4)யிலும் இதுக்கு ஆற்றாமை கரைபுரண்டிருக்கும். அதுக்கு அடியென்? என்னில்; “பெருநிலங்கடந்த நல்லடிப்போது அயர்ப்பிலன் அலற்றுவன்” (1-3-10) என்று – அவதாரத்திலே அநுப4விக்கக் கோலிப் பெறாத தாகையாலே, “அது ஒருகாலத்திலே, நாம் பிற்பாடராகை” என்று ஆறலாம்; இது அங்ஙனன்றிக்கே, அவதாரத்தில் பிற்பாடர்க்கும் இழக்கவேண்டாதபடி முகங்கொடுக்கைக்கு நிற்கிறவிடமிறே உகந்தருளின நிலங்கள்; “நம்பியைத் தென்குறுங்குடிநின்ற” (1-10-9) என்று உகந்தருளின நிலத்திலே அநுப4விக்க ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாகையாலே இது கனத்திருக்கும். அஞ்சிறைய மடநாரை(1-4)யில் – தூதுவிடுகைக்கு த4ரிப்புண்டாயிற்று; இதில் – அங்குத்தூது விட்டவையும் நோவுபடுகிறனவாக அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிறார்.
அநுப4விக்கிற இவர்தம்படியாலும் இத்திருவாய்மொழிக்கு ஆற்றாமை கனத்திருக்கும்; பத்துடையடியவர்(1-3)க்கு முன்பு அவ்விஷயத்தை அநுப4வித்துப் பிரிந்த அளவாலுள்ள ஆற்றாமையிறே அதிலுள்ளது; அஞ்சிறைய மடநாரைக்குப் பின்பு இவ்வளவும் வர அவனுடைய கு3ணங்களை அநுப4வித்துப் பிரிந்த பிரிவாகையாலே, ஆற்றாமை மிகவும் கனத்திருக்கும் இதில்; பயிலப்பயிலவிறே இனிதாயிருப்பது இவ்விஷயம்.
நாரையாகில் வெளுத்திருக்கையும், அன்றிலாகில் வாயலகு நெகிழ்த்தவாறே கதறுகையும், கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிடுகையும், காற்றாகில் ஸததக3தியாய்த் திரிகையும், மேக4மாகில் நீராய் இற்றிற்று விழுகையும், சந்த்3ரனாகில் தேய்வது வளருவதாகக் கடவது என்றும், தமஸ்ஸாகில் பதா3ர்த்த2த3ர்சநம்பண்ணவொட்டாது என்றும், கழியாகில் அலைவாய் முக2மாய் ஏறுவது வடிவதாகக்கடவது என்றும், விளக்காகில் இற்றிற்று எரியக்கடவது என்றும், இவற்றுக்கு இவை நியதஸ்வபா4வமென்று அறியாதே, இவையெல்லாம் தம்மைப்போலே ப4க3வத்3விஸ்லேஷத்தாலே வ்யஸநப்படுகிறனவாகக்கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் அநுசோகிக்கிறார்.
இத்திருவாய்மொழியால் – இளையபெருமாளிற்காட்டில் இவர்க்கு உண்டான வ்யாவ்ருத்தி சொல்லுகிறது. எங்ஙனே? என்னில்; மத்ஸ்யத்துக்கு ஜலம் தா4ரகமாக அறுதியிட்டார் அவர். இவர் அந்த மத்ஸ்யத்தோடு ஜலத்தோடு தம்மோடு வாசியற ப4க3வத்3கு3ணங்களே தா4ரகமென்றிருக்கிறார். ஆகையாலே து3:க்கி2களாயிருப்பார் தங்களோடு ஸமது3:க்கி2களைக் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டு ஆற்றாமைக்குப் போக்குவிட்டு த4ரிக்குமாபோலே, இவளும் கண்ணுக்கு இலக்கான பதா3ர்த்த2ங்களெல்லாவற்றோடும் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து “நீ பட்டதோ, நான் பட்டதோ” என்று கூப்பிடுகிறாளாயிருக்கிறது. “அபி வ்ருக்ஷா: பரிம்லாநா:” என்னுமாபோலே சேதநாசேதந விபா4க3மற நோவுபடுத்தவற்றாயிறே இவள் பிரிந்த விஷயந்தான் இருப்பது. “உபதப்தோத3கா நத்3ய: பல்வலாநி ஸராம்ஸி ச” என்று ஆறுகளோடு சிறுகுழிகளோடு பெருங்குழிகளோடு வாசியற, கரையருகுஞ்சென்று கிட்ட வொண்ணாதபடி ராமவிரஹத்தாலே கொதித்ததிறே. “பரிஸுஷ்கபலாஸாநி வநாந்யுபவநாநி ச” என்று சிறுகாட்டோடு பெருங்காட்டோடு வாசியற, விரஹாக்3நி கொளுத்திற்று.
பெருமாள் “ஸீதே! ம்ருதஸ்தே ஸ்வஸுர: பித்ரா ஹீநோஸி லக்ஷ்மண!” என்று ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டாப்போலே கூப்பிடுகிறார் இங்கு.
முதல் பாட்டு
*வாயும் திரையுகளும் கானல் மடநாராய்!*
ஆயும் அமருலகும் துஞ்சிலும்நீ துஞ்சாயால்*
நோயும் பயலைமையும் மீதூரஎம்மேபோல்*
நீயும் திருமாலால் நெஞ்சங்கோட் பட்டாயே.
ப – முதற்பாட்டில், “மணியை வானவர் கண்ணனை” என்று கீழ் ப்ரஸ்துதமான போக்யதாதிஸயத்துக்கு வர்த்தகமாயுள்ள லக்ஷ்மீ ஸம்ஶ்லேஷத்தை அநுஸந்தித்து ஈடுபட்ட நாயகி, கடற்கரைக்கு அருகான தன் உத்யாநத்திலே இருந்ததொரு நாரையைப் பார்த்து, நீயும் அவனாலே நெஞ்சு பறியுண்டாயோ? என்கிறாள். வாயும் – மேன்மேலும் கிட்டுகிற, திரை – திரையிலே, உகளும் – அமுக்கி நடப்பதாய், கானல் – கடற்கரையிலே, மடம் – (உன் நினைவு கைவருந்தனையும்) ஓங்கியிருக்கிற, நாராய் – நாராய்! ஆயும் – (உறக்கமில்லாத) தாயும், அமருலகும் – (உறங்காமை நித்யமான) தேவலோகமும், துஞ்சிலும் – உறங்கிலும், நீ – நீ, துஞ்சாய் – உறங்குகிறிலை; ஆல் – ஆதலால், நோயும் – உள்ளே நோவுமுண்டாய், பயலைமையும் – (அதின் கார்யமான) பயலைமையாகிற உடம்பில் வெளுப்பு, மீதூர – மேலிட்டுவர, எம்மேபோல் – (அபிமத விஷயமாய் அகப்பட்ட) எங்களைப்போலே, நீயும் – (அதுக்கு அடைவற்றிருக்கிற) நீயும், (ஆஸத்திமாத்ரமே ஹேதுவாக), திருமாலால் – ச்ரிய:பதியாலே, நெஞ்சும் – நெஞ்சு, கோட்பட்டாயே – பறித்துக்கொள்ளப்பட்டாயே?
“ஏ” என்னும் அசை – வினா. இத்தால் – ஸாம்ஸாரிக கல்லோலத்தை மதியாதிருப்பார்க்கு உறங்காமையும் ரூபவிபர்யாஸமும் பகவத்விஸ்லேஷ ஜநிதம் என்றிருக்கை.
ஈடு – முதற்பாட்டு. பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலேயாகையாலே, கடற்கரைச் சோலையைப்பற்ற இவள் பிரிவுக்கு இரங்கியிருக்கச்செய்தே, அங்கே ஆமிஷார்த்த2மாக அவதா4நம் பண்ணிக்கொண்டிருக்கிறதொரு நாரை கண்ணுக்கு இலக்காக, அதின் உடம்பில் வெளுப்பைக்கண்டு, அதுவும் தன்னைப்போலே பிரிவாற்றாமையாலே வந்த வைவர்ண்யத்தோடே இருக்கிறதாகக்கொண்டு, ‘பாவியேன், நீயும் நான் அகப்பட்ட விஷயத்திலே அகப்பட்டு நெஞ்சு பறியுண்டாயாகாதே?’ என்கிறாள்.
(வாயும் திரையுகளும்) வாய்கை – கிட்டுகை. பெரிய மலைபோலே வந்து கிட்டுகிற திரைகள் மேலே தாவிப்போகாநின்றாலும் நினைத்தது கைபுகுருமளவும் சலியாதே இருக்குமாயிற்று. ப4க3வத்3த்4யாநபரர் இருக்குமாபோலே இருக்கும். ‘அலைகடல்நீர் குழம்ப அகடாடவோடி அகல்வானுரிஞ்ச முதுகில் மலைகளைமீது கொண்டு வருமீனை’ (பெரியதிருமொழி 11-4-1) மறவாதிருப்பார்க்குப் போலியாயிராநின்றது, அலைகளை மீதுகொண்டு வருமீனை மறவாதிருக்கிற இதுவும். “கி3ரயோ வர்ஷதா4ராபி4ர் ஹந்யமாநா ந விவ்யது2: | அபி4பூ4யமாநா வ்யஸநைர் யதா2தோ4க்ஷஜசேதஸ: ||” என்று சொல்லக்கடவதிறே; நிரந்தரமாக வர்ஷதா4ரைகள் விழாநிற்கச் செய்தேயும், மலைகள் சலியாதே நின்றன; என்போலே? என்றால்; “ஸர்வேஸ்வரனே ரக்ஷகன்” என்றிருப்பார் தாபத்ரயங்களால் வந்த வ்யஸநங்களுக்கு இடையாதேயிருக்குமாபோலே. வந்து கிட்டுகிற திரை உகளாநின்றுள்ள, கானலிலே – நெய்தல் நிலத்திலேயிருக்கிற மடநாராய்! யாக3ங்களும் பண்ணிப் பவித்ரங்களும் முடிந்திட்டு “தா4ர்மிகர்” என்னும்படித் திரியாநிற்பர்களிறே பரஹிம்ஸை பண்ணாநிற்கச்செய்தே க்3ராமணிகள்; அப்படியே க்ஷுத்3ரமத்ஸ்யங்கள் வந்தாலும் அநாத3ரித்திருக்குமாயிற்று நினைத்தது கைப்புகுருமளவும்; பற்றிற்று விடாதொழிகையிறே – மடப்பமாவது. (ஆயும்) என் பிறப்பே பிடித்து உறங்காத தாயும் உறங்கிலும், (அமருலகும் துஞ்சிலும்) தங்கள் ஸத்தையே பிடித்து உறங்காத நித்யஸூரிகள் உறங்கிலும் நீ உறங்குகிறிலை.
இவளைப் பெற்ற தாய்க்கு உறக்கமின்றிக்கேயொழிவானென்? என்னில்; முன்பெல்லாம் “இவளுக்கு ஸத்3ருசனாயிருப்பானொருவனைப் பெற்றுக் கொடுத்தோமாகவல்லோமே” என்று கண் உறங்காது; பின்பு நாயகனைப் பிரிந்து இவள் நோவுபடுகிறபடியைக் கண்டு, அத்தாலே கண் உறங்காது; “பதிஸம்யோக3 ஸுலப4ம் வயோ த்3ருஷ்ட்வா ச மே பிதா | சிந்தார்ணவ க3த:” என்றாளிறே பிராட்டி – “ஒரு உபக்4நத்திலே கொண்டு போய்ச் சேர்த்து நோக்கில் நோக்கலாய், இல்லையாகில் கிடையாதபடியான பருவமாயிராநின்றது; இவளுக்கு ஈடாயிருப்பானொருவனைப் பெற்று அவன்கையில் காட்டிக் கொடுத்தோமாக வல்லோமே” என்று – எங்கள் ஐயர் சிந்தார்ணவக3தரானார் என்றாளிறே பிராட்டி. அப்படியேயிறே இவளைப் பெற்ற தாயாரும் கண்ணுறங்காதே படும்படி. அநிமிஷராய் ஸதா3த3ர்சநம் பண்ணுகிறவர்களாகையாலே நித்யஸூரிகளுக்குந் தானே நித்3ரையில்லையே.
(நோயும் பயலைமையும்) மாநஸவ்யதை2யும், அத்தாலே வந்த வைவர்ண்யமும் தன்பக்கலிலே காண்கையாலே அவ்விரண்டும் அதுக்குண்டு என்றிருக்கிறாள். (மீதூர) விஷமேறினாற்போலே உடம்பிலே பரக்க. (எம்மேபோல்) இப்படி க்லேசப்படுகைக்கு நானொருத்தியும் என்றிருந்தேன்; நீயும் என்னைப் போலேயாவதே! து3:க்க2பரிப4வங்களைப் பொறுத்திருக்கையாலும், பற்றிற்று விடாதிருக்கிறபடியாலும், வைவர்ண்யத்தாலும் என்னைப்போலேயிராநின்றாய். (நீயும்) விரஹவ்யஸநம் பொறுக்கமாட்டாத மார்த்த3வத்தையுடைய நீயும். “தத் தஸ்ய ஸத்3ருசம் ப4வேத்” என்றிருக்கமாட்டாமைக்கு இருவரும் ஒத்தோமோ? (திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே) மாநஸவ்யதை2யும் வைவர்ண்யமும் இருந்தபடி கண்டேனுக்கு, நீயும் நான் அகப்பட்ட துறையிலே அகப்பட்டாயாகாதே? மைந்தனை மலராள் மணவாளனை(1-10-4)யோ நீயும் ஆசைப்பட்டது? (நெஞ்சம் கோட்பட்டாயே) நெஞ்சு பறியுண்டாயாகாதே? தோற்புரையன்றியே மறுபாடுருவ வேர்ப்பற்றிலே நோவுபட்டாயாகாதே?
இரண்டாம் பாட்டு
கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே!*
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்*
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்*
தாட்பட்ட தண்துழாய்த் தாமம்காமுற்றாயே.
ப – அநந்தரம், ஓரன்றிலைப்பார்த்து, நீயும் சேஷசாயியான அவன் திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்பட்டாயோ? என்கிறாள்.
கோட்பட்ட – பறியுண்ட, சிந்தையையாய் – நெஞ்சை உடையையாய்க் கொண்டு, கூர்வாய – (அந்த ஆர்த்தியடியாக கத்கதமாகையாலே) செறிந்த குரலையுடைத்தான, அன்றிலே – அன்றிலே! சேட்பட்ட – நெடிதான, யாமங்கள் – யாமங்கள், சேராது – சேர்க்கையிற்சேராதே, இரங்குதி – து:க்கியாநின்றாய், ஆல் – ஆதலால், ஆட்பட்ட – அடிமைப்பட்ட, எம்மேபோல் – எங்களைப்போலே, நீயும் – (பிரிவாற்றாமை தோற்றியிருக்கிற) நீயும், அரவணையான் – திருவரவணையைத் தனக்கு நிரூபகமாக உடையவனுடைய, தாள் – திருவடிகளிலே, பட்ட – (போகதசையிலே) மிதியுண்ட, தண் – செவ்வியையுடைய, துழாய்த்தாமம் – திருத்துழாய் மாலையை, காமுற்றாயே – ஆசைப்பட்டாயோ?
வாயென்று – வாய்மையாய், குரலைச்சொல்லுகிறது. கூர்தல் – செறிவு. அன்றியே, கூர்த்த வாயென்று – பிரிந்தாரை ஈரும் குரல் என்றுமாம். இத்தால் – ஆர்த்தத்வநியுடையார் அவனைப் பிரிந்து கூப்பிடுகிறார்கள் என்றிருக்கை.
ஈடு – இரண்டாம் பாட்டு. இப்படி நாரையைப்பார்த்து வார்த்தைசொல்லா நிற்கச் செய்தே, அருகேநின்ற பனையிலே தங்கின அன்றிலானது வாயலகு நெகிழ்த்தவாறே கூப்பிட்டது; இதினுடைய ஆர்த்தத்4வநியைக்கேட்டு, “பாவியேன், நீயும் என்னைப்போலே அகப்பட்டாயாகாதே?” என்கிறார்.
(கோட்பட்ட சிந்தையையாய்) அபஹரிக்கப்பட்ட ஹ்ருத3யத்தையுடையையாய். “அபஹ்ருதமான மநஸ்ஸு” என்றறிந்தபடி என்னென்னில்; அதினுடைய அடியற்ற த்4வநிதான் “நெஞ்சிழந்தது” என்று தோற்றநின்றது காணும் இவளுக்கு. (கூர்வாய அன்றிலே) தனியராயிருப்பாரை இரு துண்டமாக இடவல்ல த்4வநியாயிற்று. (கூர்வாய) வாயென்று வார்த்தை. அன்றியே, கூர்த்த வாயலகையுடைய என்னுதல். (சேட்பட்ட யாமங்கள்) ராத்ரியாய் நெடுகுகையன்றிக்கே, யாமங்கள்தோறும் நெடுகாநின்றதாயிற்று. (சேராது இரங்குதியால்) நெடுகுகிற யாமங்களில் படுக்கையிற்சேராதொழிந்தாலும் த4ரிக்கலாமிறே. அங்ஙனே செய்யாதே சிதி2லையாகாநின்றாய்.
(ஆட்பட்ட எம்மேபோல்) நெஞ்சு பறியுண்டு படுக்கையிலும் சேராதே நோவு படுகைக்கு என்னைப்போலே நீயும் அவன் திருவடிகளில் தா3ஸ்ய பரிமளத்திலேயாகாதே அகப்பட்டது? (நீயும்) நாட்டாரில் வ்யாவ்ருத்தமாகப் போந்திருக்கிற நீயும். “பதிம் விஶ்வஸ்ய” “யஸ்யாஸ்மி” என்றோதினாயல்லை. மயர்வற மதிநலம் (1-1-1) பெற்றாயில்லை. என்தனை உட்புகாத நீயும் இப்படியாவதே!
(அரவணையான் இத்யாதி3) “திருமாலால்” (1) என்றதிறே கீழே; இருவருமானால் இருப்பது படுக்கையிலேயாயிருக்குமே; “அவனும் அவளுமாய்த் துகைத்த திருத்துழாய்மாலை பெறவேணும்” என்று அத்தையோ நீயும் ஆசைப்பட்டது? (தாட்பட்ட தண்டுழாய்த்தாமம்) சுடர்முடிமேல்(1-9-7) துழாயொழிய, அவர்களிருவரும்கூடத் துகைத்த துழாயையோ நீயும் ஆசைப்பட்டது? புழுகிலே தோய்த்தெடுத்தாற்போலே பரிமளத்திலே தெரியுமே; கலம்பகன் நாறுமே. “தாளிணைமேல் அணிதண்ணந்துழாய்” (4–2-5) என்றிறே தான் கிடப்பது. தாமம் – ஒளியும், மாலையும். (காமுற்றாயே) ஸங்க3த்தளவிலே நின்றிலையாகாதே? பெறில் ஜீவித்தல், பெறாவிடில் முடிதலான அவஸ்தை2யை ப்ராபித்தாயாகாதே?
மூன்றாம் பாட்டு
காமுற்ற கையறவோடு எல்லே! இராப்பகல்*
நீமுற்றக் கண்துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்*
தீமுற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள்நயந்த*
யாமுற்றது உற்றாயோ? வாழி கனைகடலே!
ப – அநந்தரம், கத்துகிற கடலைப்பார்த்து, “விரோதிநிவர்த்தகனான அவனுடைய திருவடிகளை ஆசைப்பட்ட என்னைப்போலானாயோ?” என்று சொல்லுகிறாள்.
காமுற்ற – காமிக்கப்பட்ட போகங்கள், கையறவோடு – கைப்படாத இழவோடே கூடினாற்போலே, நீ – நீ, இராப்பகல் – இராப்பகல், முற்ற – முழுக்க, கண் துயிலாய் – கண் உறங்குகிறிலை; நெஞ்சு – அகவாயும், உருகி – நீராய், ஏங்குதி – (ஏங்கின குரல் இறங்காமல்) முழுக்கக் கூப்பிடாநின்றாய்; ஆல் – ஆதலால், தென்னிலங்கை – தென்னிலங்கையை, முற்ற – முற்ற, தீயூட்டினான் – தீயூட்டினவன், தாள் – திருவடிகளை, நயந்த – ஆசைப்பட்ட, யாம் – நாங்கள், உற்றது – பட்டது, உற்றாயோ – பட்டாயோ? கனை – இரைக்கிற, கடலே – கடலே! வாழி – (உன் க்லேஶம் தீர்ந்து) வாழ்வாயாக.
எல்லே! என்று – கடலுக்கு ஸம்புத்தியாதல், என்னே! என்னும் வெறுப்பாதல். இத்தால் – மஹத்தையையுடையார் வாய்விட்டு அலறுவது அவனைப்பிரிந்தால் என்றிருக்கை.
ஈடு – மூன்றாம் பாட்டு. அன்றிலினுடைய த்4வநிக்கு இடைந்திருக்கிறவளவிலே; கடலென்றொரு மஹாதத்த்வமாய், அது தன் கா3ம்பீ4ர்யமெல்லாம் இழந்து கரையிலே வருவது, கரையேறமாட்டாதே உள்ளே விழுவதாய், எழுத்துஞ்சொல்லும் பொருளும் தெரியாதபடி ஊமைக்கூறனாகக் கூப்பிடுவதாகிறபடியைக் கண்டு, “பாவியேன், நீயும் ராமகு3ணத்தில் அகப்பட்டு நான்பட்டது பட்டாயாகாதே?” என்கிறாள்.
(காமுற்ற கையறவோடு) “நெஞ்சுருகி ஏங்குதியால்” என்று அந்வயம். (காமுற்ற கையறவோடு) ஆசைப்பட்ட பொருளிழவோடே. “கைத்து” என்றது – பொருள். ஆசைப்பட்ட பொருள் கைப்புகுராமையால் வந்த இழவோடே. காமுறுகையும் இழவும் கடலுக்கின்றிக்கேயிருக்க, த்3ருஷ்டாந்தபூ4தையான தனக்குண்டாகையாலே, “இதுக்குமுண்டு” என்று அநுமித்துச் சொல்லுகிறாள்.
(எல்லே) இரவோடு பகலோடு வாசியறக் கதறுகிறபடியைக்கண்டு, தன் படிக்குப் போலியாயிருக்கையாலே தோழியை ஸம்போ3தி4க்குமாபோலே ஸம்போ3தி4க்கிறாள்; சிறையுறவுபோலே. “ஓதமும் நானும் உறங்காதிருந்தேனே” (பெரியதிருமொழி 9-4-9) என்னக்கடவதிறே. அன்றிக்கே, “எல்லே” என்றது – என்னே! என்று ஆஸ்சர்யமாதல். (இராப்பகல் நீ முற்றக் கண்துயிலாய்) உறங்கக் கண்ட இரவுக்கும், உறங்காமைக்குக் கண்ட பகலுக்கும் உன்பக்கல் ஒரு வாசி கண்டிலோமீ! உன் கா3ம்பீ4ர்யமெல்லாம் எங்கே போயிற்று? (நெஞ்சுருகி ஏங்குதியால்) உறக்கமின்றிக்கேயொழிந்தால், நெஞ்சுதான் அழியாதிருக்கப் பெற்றதோ? (பேற்றுக்கேற்ற) நெஞ்சழிந்து கூப்பிடாநின்றாய்.
(தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான்) பாவியேன்! பரத்வத்திலே ஆசைப்படமாட்டிற்றில்லையாகாதே, ப்ரணயிநிவிரஹம் பொறுக்கமாட்டாத சக்ரவர்த்தித் திருமகனையாகாதே நீயும் ஆசைப்பட்டது. தென்னிலங்கை முற்றத் தீயூட்டினான். விபீ4ஷணக்3ருஹம் லங்கைக்குள் அன்றுபோலே; அவன் அவர்களுக்குக் கூட்டில்லாதாப்போலே, அவனகமும் அவர்கள் அகத்துக்குக் கூட்டில்லைகாணும்! அவனகம் தா3ஸோஹமிறே. அன்றிக்கே (தீ முற்றத் தென்னிலங்கை யூட்டினான்) ராவண ப4யத்தாலே முன்பு அரைவயிறாக ஜீவித்த அக்3நி, “ஒள்ளெரி மண்டியுண்ண” (பெரியதிருமொழி 10-9-1) என்கிறபடியே வயிறுநிறைய உண்டு ஜீவிக்கப்பெற்றதாயிற்று பெருமாளை அண்டைகொண்ட ப3லத்தாலே; “செந்தீயுண்டு தேக்கிட்டதே” (கம்பராமாயணம் ஸுந்தரகாண்டம் இலங்கை எரியூட்டுப்படலம் 46ம் பாட்டில் “நெருப்புத்தின்று தேக்கிடுகின்றது” என்று உள்ளது.) என்னக் கடவதிறே.
(தாள் நயந்த யாமுற்றதுற்றாயோ) பரமப்ரணயியான சக்ரவர்த்தித் திருமகன் திருவடிகளை ஆசைப்பட்ட நான் பட்டது பட்டாயாகாதே நீயும்? தாள் நயந்தாரோடு தோள் நயந்தாரோடு வாசியறுவதே க்லேஶப்படுகைக்கு! பிராட்டியோடு ஸ்ரீப4ரதாழ்வானோடு வாசியற்றதிறே. (வாழி) இவ்வவஸாத3ம் நீங்கி நீ ஜீவித்திடுக. (கனைகடலே) வாய்விட்டுக் கூப்பிடமாட்டாதே, விம்மல் பொருமலாய்ப் படுகிறாயாகாதே? கோ4ஷிக்கிற கடலே! என்னவுமாம்.
நான்காம் பாட்டு
கடலும் மலையும் விசும்பும் துழாய்எம்போல்*
சுடர்கொள் இராப்பகல் துஞ்சாயால் தண்வாடாய்!*
அடல்கொள் படையாழி அம்மானைக் காண்பான்நீ*
உடலம்நோ யுற்றாயோ ஊழிதோ றூழியே.
ப – அநந்தரம், “விரோதிநிரஸந பரிகரத்தை உடையவனைக் காணவேணும் என்னும் வ்யஸநத்தை நீயுற்றனையோ?” என்று ஒரு வாடையைப் பார்த்துச் சொல்லுகிறாள்.
தண் – (ஸந்நிபதித ஶரரீ ம்போலே) குளிர்ந்திருக்கிற, வாடாய் – வாடாய், கடலும் – கடலும், மலையும் – மலையும், விசும்பும் – விசும்பும், துழாய் – தடவிக் கொண்டு, எம்போல் – (அம்ப4ஸ்யபாரே பு4வநஸ்ய மத்4யே நாகஸ்ய ப்ருஷ்டே2) என்று க்ஷீராப்தியிலும் திருமலையிலும் பரமபதத்திலும் அவனை ஆராய்கிற) எங்களைப்போலே, சுடர் – சந்த்ராதித்ய தேஜஸ்ஸுகளை, கொள் – நிரூபகமாகவுடைய, இரா – இரவும், பகல் – பகலும், துஞ்சாய் – (ஓரிடத்தில் பர்யவஸித்து) உறங்குகிறிலை; ஆல் – ஆதலால், அடல் – மஹாபாரதயுத்தத்திலே, கொள் – (“ஆயுதமெடேன்” என்று வைத்து) எடுத்த, படை யாழி – திருவாழியையுடைய, அம்மானை – ஸர்வேஶ்வரனை, காண்பான் – (அந்த பீஷ்மன் கண்டாற்போலே) காண நினைத்து, நீ – (ஸர்வோபகாரகமான) நீ, ஊழிதோறூழி – கல்பபேதங்கள் பிறந்து நடந்தாலும் காலமுள்ளதனையும் (அவனை ஒருப்பட்டு) உடலம் – சரீரமுள்ளதனையும் வ்யாப்தமான, நோய் – வ்யாதியை, உற்றாயே – கொண்டாயோ? உபகாரசீலர்க்கும் உடம்பில் வரும் விகாரங்கள் அவனைக் காணப்பெறாமல் என்று கருத்து.
ஈடு – நாலாம் பாட்டு. காற்று என்று ஒரு வ்யாபகதத்த்வமாய், அதுதான் அபி4மத விரஹவ்யஸநத்தாலே இருந்தவிடத்திலிருக்கமாட்டாதே, மடலூருவாரைப் போலே உடம்பிலே புழுதியை ஏறிட்டுக்கொண்டு வடிவு தெரியாதபடியாய், ஜ்வர ஸந்நிபதிதரைப்போலே குளிர்ந்திருந்தது; அத்தைப்பார்த்து, ‘நீயும் நான்பட்டது பட்டாயாகாதே?’ என்கிறாள்.
(கடலும் மலையும் விசும்பும் துழாய்) “காரார் திருமேனி காணுமளவும் போய்” (சிறியதிருமடல் – 69) என்று – க்ஷீராப்3தி4யோடு திருமலையோடு பரமபத3த்தோடு வாசியறத் தேடுவார்க்குப் போலியாயிருக்கிறபடி. ஊராய வெல்லாமொழியாமே (சிறியதிருமடல் -75) தேடுவார்க்குப் போலியாயிருக்கிறபடி. “தௌ வநாநி கி3ரீம்ஸ்சைவ ஸரிதஸ்ச ஸராம்ஸி ச | நிகி2லேந விசிந்வாநௌ ஸீதாம் த3சரதா2த்மஜௌ ||” என்று தேடித்திரிந்தவர்களுக்குப் போலியாயிரா நின்றது. (“ஸீதாம்”) “தேடிக்கண்டிலோம்” என்று ஆறியிருக்கலாம் விஷயமன்று. (“த3சரதா2த்மஜௌ”) தேடப்பிறந்தவர்களல்லர்; அவர்கள் ஜீவிக்கை என்றொரு பொருளுண்டோ? இத்தால் – சென்றற்றது என்றபடி.
(கடல் இத்யாதி3) அபரிச்சி2ந்நமான கடல், நிர்விவரமான மலை, அவகாச ப்ரதா3நம் பண்ணுகிற ஆகாசம்; அன்றியே, அச்ச2மான ஆகாஶம். (எம்போல் சுடர்கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்) ஜ்வரஸந்நிபதிதரைப்போலே சென்றற்றாயாகாதே என்னைப்போலே? சுடரென்ற ஆதி3த்யன். சுடரைக் கொள்ளப்பட்டது என்றது – ஆதி3த்யன் அஸ்தமித்த இரவோடு, சுடரையுடைத்தான பகலோடு வாசியற உறங்குகிறிலை, குளிர்ந்த வாடாய்! (அடல்கொள் இத்யாதி3) அடலென்று மிடுக்கு. எதிரிகள் மிடுக்கைக் கொள்ளுகை என்னுதல், தான் மிடுக்கையுடைத்தாயிருக்கும் என்னுதல்; “ஏதத்3வ்ரதம் மம” என்றவளவன்றிக்கே, ஆஸ்ரிதார்த்த2மாக அஸத்யப்ரதிஜ்ஞனானவன் ஓரத்தளவு அகப்பட்டாயாகாதே?
பா4ரத ஸமரத்திலே சக்ரோத்3தா4ரணத்தினன்று அர்ஜுனன் இளைத்துக் கைவாங்கினவாறே, பண்ணின ப்ரதிஜ்ஞையை அழித்துத் திருவாழியைக் கொண்டு ஸ்ரீபீ4ஷ்மரைத் தொடர்ந்தானிறே. (ஏஹ்யேஹி) கெட்டோடுகிறவன் பிற்காலித்து நின்று “எங்கள் அம்மைநாயனார் மாறிமாறி இடுகிற அடியிருக்கிற அழகென்!” என்றான். (பு2ல்லாம்பு3ஜபத்ரநேத்ர) என்றும் ஆணைமறுத்தால் சேதமென், சீறிச்சிவந்த கண்ணழகைக் காணப்பெற்றால்? (ப்ரஸஹ்ய மாம் பாதய) “ஆயுத4மெடேன்” என்ற நீர் ஆயுத4ம் எடுத்தாலும், அடியேன் கையில் ஆயுத4மிருக்கில் தோலேன்; ஆயுத4த்தைப் பொகடச்சொல்லித் தலையறுத்தருளீர். (லோகநாத2) உமக்கும் வீரத்துக்கும் தோலேன்; முதன்மைக்குத் தோற்பன்.
(அடல்கொள் படையாழி) மிடுக்கையுடைத்தான படையாகிற திருவாழி. (ஆழியம்மானை) கையிலே திருவாழியையுடைய ஸர்வேச்வரனையாகாதே நீயும் காண ஆசைப்பட்டது? (நீ உடலம் நோயுற்றாயோ) ப்ரத்யுபகார நிரபேக்ஷமாக உபகரிக்கும் நீ, ஸர்வரக்ஷகமான சரீரத்திலே நோவு வரும்படி பட்டாயாகாதே? என்கிறாள். ஸஞ்சாரம் இதுக்கு நியதஸ்வபா4வமிறே. (ஊழிதோறூழியே) கல்பந்தோறும் கல்பந்தோறும் நோவுபடாநிற்கச் செய்தே தவிராதபடி சரீராந்தமான நோவுகொண்டாயாகாதே? காலம் மாறிவரச்செய்தேயும் நோவு மாறாதே ஏகரூபமாய்ச் செல்லுகிறபடி.
ஐந்தாம் பாட்டு
ஊழிதோறூழி உலகுக்கு நீர்கொண்டு*
தோழியரும் யாமும்போல் நீராய் நெகிழ்கின்ற*
வாழிய வானமே! நீயும் மதுசூதன்*
பாழிமையில் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே.
ப – அநந்தரம், “நீயும் அவன் சக்தியோகத்திலே அகப்பட்டு ஸிதிலமாகிறாயோ?” என்று ஒரு மேகத்தைக்கண்டு உரைக்கிறாள்.
தோழியரும் – (ஸமாநது:க்கைகளான) தோழிமாரும், யாமும்போல் – (து:க்கோத்தரைகளான) நாங்களும்போலே, உலகுக்கு – லோகம் நிரம்ப வேண்டும், நீர் கொண்டு – நீரைக்கொண்டு, ஊழிதோறூழி – காலமுள்ளதனையும், நீராய் – ஜலமயமாய், நெகிழ்கின்ற – இற்று விழுகிற, வானமே – மேகமே! நீயும் – உதாரஸீலமான நீயும், மதுசூதன் – மதுமர்த்தநனுடைய, பாழிமையில் – பெருமிடுக்கிலே, பட்டு – அகப்பட்டு, அவன்கண் – அவன்பக்கல், பாசத்தால் – ஸ்நேஹத்தாலே, நைவாயே – ஸிதிலமாகிறாயே; வாழிய – இந்த ஸைதில்யம் தீர்ந்து வாழ்வாயாக.
உதாரஸ்வபாவர்க்கு ஸைதில்யம் பகவத்விரஹஜநிதம் என்கை.
ஈடு – அஞ்சாம் பாட்டு. அவ்வளவிலே ஒரு மேக4மானது கரைந்து நீராய் விழப்புக்கது; ‘நீயும் அவனுடைய விரோதி4நிரஸந ஸீலதையிலே அகப்பட்டாயாகாதே?’ என்கிறாள்.
(ஊழிதோறூழி – நீராய் நெகிழ்கின்ற) கல்பந்தோறும் கல்பந்தோறும் நீராய் நெகிழ்கின்ற. (உலகுக்கு நீர்கொண்டு) லோகமடங்க வெள்ளமிடவேண்டும்படி நீரை முகந்துகொண்டு. உனக்கு நல்ல நித3ர்சநமுண்டு, (தோழியரும் யாமும் போல்) என் இழவுக்கு எம்மின் முன் (9-9-5) அவனுக்கு மாயும் தோழிமாரையும், என்னையும் போலே. (நீராய் நெகிழ்கின்ற) கரைந்து நீராய் விழுகிற. (வாழிய) ஜக3த்துக்கு உபகாரகமாயிருக்கிற நீ, உன்னுடைய கண்ணநீர் நீங்கி வாழ்ந்திடுக. (வானமே) மேக4த்தைச் சொல்லுதல்; ஆகாசத்தைச்சொல்லுதல். அதிஸூக்ஷ்மமான ஆகாசம் நீரை முகந்துகொண்டு சிதறி உருகி நீராய் விழுகிறதென்று நினைக்கிறாள். வானமென்று – மேக4த்துக்குப் பேர்; “வான் கலந்த வண்ணன்” (இரண்டாம் திருவந்தாதி – 75) என்றதிறே; “வானம் வழங்காவிடிவில்” (திருக்குறள்-19) என்றானிறே தமிழனும்.
(நீயும்) லோகோபகாரகமாக வடிவு படைத்த நீயும். (மதுசூதன் இத்யாதி3) விரோதி4நிரஸந ஶீலனானவனுடைய வீரகு3ணத்திலே அகப்பட்டு, அவன் பக்கலுண்டான நசையாலே ஜீவிக்கவும்மாட்டாதே முடியவும்மாட்டாதே நோவுபடுகிறாயாகாதே? பாழிமை – ப3லம்; இடமுடைமை என்றுமாம். (அவன்கண் பாசத்தால்) அவன் பக்கல் நசையாலே; விஷயாநுகூலமாயிறே நசையிருப்பது; எவ்வளவு நசையுண்டு, அவ்வளவும் நைவுண்டாமிறே வ்யதிரேகத்தில். (நைவாயே) நைவே ப2லம்.
ஆறாம் பாட்டு
நைவாய எம்மேபோல் நாள்மதியே! நீஇந்நாள்*
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்*
ஐவாய் அரவணைமேல் ஆழிப் பெருமானார்*
மெய்வாச கம்கேட்டுஉன் மெய்ந்நீர்மைதோற்றாயே?
ப – அநந்தரம், “எங்களைப்போலே அவன் ஸத்யவாதித்வத்திலே நீ அகப்பட்டாயோ?” என்று க்ஷீணனான சந்த்ரனைக்குறித்துச் சொல்லுகிறாள்.
நைவு – நைகையே, ஆய – ஸ்வபாவமான, எம்மேபோல் – எங்களைப்போலே, நாள் – கலாமாத்ரமான, மதியே – சந்த்ரனே! நீ – (தேஜோரூபமான) நீ, இந்நாள் – இக்காலத்திலே, மை – மைபோலேயிருக்கிற, வான் – ஆகாசத்தில், இருள் – இருளை, அகற்றாய் – போக்குகிறிலை; மாழாந்து – மழுங்கி, தேம்புதி – குறையாநின்றாயே; ஆல் – ஆதலால்; ஐவாய் – பொய்ம்மைக்குப் பல முகமும் இரண்டு நாவுமுடைய, அரவணைமேல் – திருவரவணை மேற்கொண்டு, ஆழி – (பொய்க்குப் பெருநிலை நிற்கும்) திருவாழியையுடையராய், பெருமானார் – (இவர்களைப் பொய் கற்பிக்கும்) பெருமையையுடையவருடைய, மெய் – பெரும் பொய்யான, வாசகம் – வார்த்தையை, கேட்டு – கேட்டு, உன் – உன், மெய் – வடிவில், நீர்மை – உஜ்ஜ்வலபாவத்தை, தோற்றாயே – இழந்தாயோ?
நாண்மதி – புதுமதி. மைவானிருள் – கறுத்த பெரிய இருள் என்றுமாம். மாழாந்து – மழுங்கி. இத்தால் – உஜ்ஜ்வல ஸ்வபாவருடைய ஒளிமழுக்கம் அவனுடைய உக்திவையர்த்ய சங்காவஹமான விளம்பம் என்று கருத்து.
ஈடு – ஆறாம் பாட்டு. மேக4த்தினருகே கலாமாத்ரமான சந்த்3ரன் தோற்றினான்; அவனைப்பார்த்து “உன் வடிவில் எழிலிழந்தாயாகாதே?” என்கிறாள்.
(நைவாய எம்மேபோல்) நைவையுடைய எங்களைப்போலே என்னுதல்; நைவுதான் ஒரு வடிவுகொண்டாற்போலே என்னுதல். (ஸபங்காம்) பூ4மியில் நின்றும் தோற்றினபோதுபோலே இருந்தாள். (அநலங்காராம்) அத்தையழித்து ஒப்பிக்கும் அவர் அஸந்நிதி4யாலே ஒப்பனை அழிந்திருந்தாள். (விபத்3மாமிவ பத்3மிநீம்) “பெருமாள் வந்தாலும் இவ்வாஸ்ரயத்தை உண்டாக்கவொண்ணாது” என்னும்படி முதலிலே தாமரை குடிபோன பொய்கைபோலே இருந்தாள்.
(அவ்யக்தலேகா2மிவ சந்த்3ரலேகா2ம்) போய்த் தேய்ந்தற்றபடிக்கும் வைவர்ண்யத்துக்கும் நித3ர்சநமாகச் சொல்லுகிறது. (பாம்ஸுப்ரதி3க்3தா4மிவ ஹேமலேகா2ம்) “நற்சரக்குக்கு வந்த அழுக்கு” என்று தோற்றவிருந்தாள். (க்ஷதப்ரரூடா4மிவ பா3ணலேகா2ம்) அம்புவாய் உள்ளேகிடக்கப் புறம்பே ஸமாதா4நம் பண்ணினாற்போலே, “அகவாயில் இழவு பெரிது” என்று தோற்ற இருந்தாள். (வாயுப்ரப4க்3நாமிவ மேக4லேகா2ம்) பெருங்காற்றாலே சிதற அடியுண்ட மேக4ஸகலம்போலே இருந்தாள்.
(நாண்மதியே) நாளால் பூர்ணனான சந்த்3ரனே! பண்டு பூர்ணனாகக் கண்டு வைக்குமே. (நாண்மதியே) “நாட்பூ” என்னுமாபோலே இளமதி என்றுமாம். (நீ) த3ர்சநீயனான நீ. (இந்நாள்) இக்காலம். (மை வானிருளகற்றாய்) இப்படி குறையற்றிருக்கக்கடவ நீ இக்காலத்திலே வந்தவாறே ஆகாசத்தில் கறுத்த இருளைப்போக்கமாட்டுகிறிலை என்னுதல்; கறுத்து வலிதான இருளைப் போக்க மாட்டுகிறிலை என்னுதல். எதிரி எளியனானால் சத்ருக்கள் கூடநின்று உறுமுமாபோலே மேலிடாநின்றது. ஸஹாவஸ்தா2நமும் உண்டாகாநின்றதீ! (மாழாந்து தேம்புதியால்) ஒளி மழுங்கிக் குறைந்திராநின்றாய்.
(ஐவாய் இத்யாதி3) அவருடைய பெரும்பொய்யிலே அகப்பட்டாயாகாதே நீ? “தம் பாம்புபோல் நாவுமிரண்டுளவாயிற்று” (நாச்சியார் திருமொழி 10-3) என்கிறபடியே, தமக்குப் பொய்சொல்ல ஒரு வாயுண்டாகில், தம் பரிகரத்துக்கு அஞ்சு வாயுண்டு. அவனுக்குப் பள்ளித் தோழமை ப2லித்தபடி. (ஆழிப் பெருமானார்) அல்லாத பரிகரமோதான் நன்றாயிருக்கிறது? தாம் பகலை இரவாக்க நினைக்கில், அதுக்குப் பெருநிலை நிற்கும் பரிகரம். பேறு அவர்களாலேயானால், இழவிலும் இன்னாதாக ப்ராப்தியுண்டு என்கை. (பெருமானார்) அவர்களுக்கும் தம் பக்கலிலே பொய்யோத வேண்டும்படி பொய்யால் பெரியவர். “பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம்பொதியறை” (பெரிய திருமொழி 10-7-4) என்னக்கடவதிறே.
“ஆழிப்பெருமானார் மெய்வாசகம்” என்னவே “பொய்” என்று ப்ரஸித்3த4மாயிருக்கும்போலே காணும்! பொய்யென்னாதொழிவானென்னென்னில்; “பொய்” என்னில் – நாட்டார் பொய்யோபாதியாமே. அவர் “ஏதத்3வ்ரதம் மம” என்ற வார்த்தை கேட்டே நீயும் இப்படி அகப்பட்டது? இப்போது உதவாமையாலே “பொய்” என்றிருக்கிறாளிறே. ராமாவதாரத்தில் மெய்யும் க்ருஷ்ணாவதாரத்தில் பொய்யுமிறே ஆஸ்ரிதர்க்குத் தஞ்சம். (உன் மெய்ந் நீர்மை தோற்றாயே) உன் வடிவில் எழில் இழந்தாயாகாதே? த3ர்சநீயமான தண்ணளியேயாய் லோகோபகாரகமான உன் உடம்பின் ஒளியை யாகாதே இழந்தது?
ஏழாம் பாட்டு
தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு* எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீநடுவே*
வேற்றோர் வகையில் கொடிதாய் எனையூழி*
மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனையிருளே!
ப – அநந்தரம், “நிருபாதிக ஸம்பந்தயுக்தனானவனைப் பிரிந்து ஆர்த்தையான என்னை, உன் ஈடுபாட்டைக்காட்டி நலிவதே!” என்று இருளைக் கண்டு ஈடுபட்டு உரைக்கிறாள்.
எம் – எங்கள், பெருமான் – ஸ்வாமியான, நாரணற்கு – நாராயணனுக்கு, மடம் – எங்களுக்கு விதேயமான, நெஞ்சம் – நெஞ்சை, தோற்றோம் – இழந்தோமாய், எம் ஆற்றாமை – (அதடியான) எங்கள் ஆற்றாமையை, சொல்லி – வாய்விட்டுச் சொல்லி, அழுவோமை – அழுகிற எங்களைப்பற்ற, நீ – நீ, நடுவே – (பாத்யபாதகஸம்பந்த மற்றிருக்க) நடுவே புகுந்து, வேற்றோர் வகையில் – ஶத்ருக்கள் படியிலும், கொடிதாய் – கொடிதாம்படி, எனையூழி – காலமுள்ளதனையும், மாற்றாண்மை – (எங்கள் நோவுக்கு) மறுதலையான ஆளாகையிலே, நிற்றியோ – நிலைநிற்கிறாயோ? கனை – திணுங்கின, இருளே – இருளே! வாழி – உன் ஸந்நிதியைக் காட்டி நலியாதே க்லேசம் தீர்ந்து வாழவேணும்.
கனையிருள் – திணுங்கின இருள். இவள் நோவுக்கு மறுதலையான ஆளாகையாவது – இருள்தானும் ஈடுபடுகை. இதின் கருகுதல் விரஹத்தாலே என்று நினைத்து, பொறுக்கமாட்டாமல் உரைத்தாளாயிற்று. இத்தால் – தம:ப்ரக்ருதிகளுடைய மாலிந்யமும் ஸர்வேஸ்வரனைப் பிரிந்து என்றிருக்கை.
ஈடு – ஏழாம் பாட்டு. “மதிகெட்டவாறே அந்த4காரம் வந்து மேலிட்டது” என்கிறாள்.
(தோற்றோம் இத்யாதி3) கீழும் மேலும் போருகிறபடியொழிய, சப்3த3ஸ்வாரஸ்யத்தைப்பற்ற எம்பெருமானார் அருளிச்செய்துபோருவதொன்றுண்டு; அம்மங்கியம்மாளும் அத்தையே நிர்ப3ந்தி4த்துப்போரும். அதாகிறது – தான், பிரிவாற்றாதார் அநேகர் கூடக் கட்டிக்கொண்டு கூப்பிடாநிற்க, இருள் வந்து முக2த்தை மறைக்க, அத்தைப்பார்த்து, ஆற்றாமைக்குப் போக்குவிட்டு த4ரிக்கவொட்டாதே நீ வந்து நலியக் கடவையோ? என்கிறாள். “எம்மேபோல்”(6) என்கிற பதா3ர்த்த2ங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு சொல்லுகிறது. (தோற்றோம் மடநெஞ்சம்) ப4க3வத்3விஷயமென்றால் விடமாட்டாதபடி சபலமான நெஞ்சை இழந்தோம். அன்றியே, ப4வ்யமான நெஞ்சை இழந்தோம் என்னுதல். (எம்பெருமான் நாரணற்கு) கெடுவாய்! வகுத்த விஷயத்திலேயன்றோ நாங்கள் நெஞ்சிழந்தது. “தன்னுடைமை” என்றால் வத்ஸலனாயிருக்குமவனுக்கன்றோ இழந்தது. ஸுலப4னுக்கு என்றுமாம்.
(எம் ஆற்றாமை சொல்லியழுவோமை) ஆற்றாமையுடையார், தந்தாம் ஆற்றாமை சொல்லிக் கூப்பிடக்கடவதன்றோ? நாங்கள் பெறப்புகுகிறதொரு ப்ரயோஜநமுண்டாய், “அத்தை விலக்கி நாம் பெறவேணும்” என்றுதான் செய்கிறாயன்றே. அவனைப் பெறவோ, போன நெஞ்சைப் பெறவோ, எங்கள் ஆற்றாமையாலே அழப்பெறோமோ?
(நீ நடுவே) அல்லாதவற்றுக்குள்ளது அமையாதோ உனக்கு? அவனை யொழிந்த நம்மில் நாம் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிடுகையொழிய பா3த்4யபா3த4கபா4வமுண்டோ? நலிகைக்கு ஒரு ஹேதுவின்றிக்கேயிருக்கச் செய்தே. (வேற்றோர்வகையில் கொடிதாய்) வேற்றோருண்டு – சத்ருக்கள். வகையுண்டு – அவர்கள் நலியும் ப்ரகாரம். அதிலும் கொடிதாக நலியாநின்றாய். சத்ருக்களானாலும், நோவுபட்டாரை “ஐயோ” என்னவன்றோ அடுப்பது. (எனையூழி மாற்றாண்மை நிற்றியோ) காலதத்த்வமுள்ளதனையும் ஸாத்ரவத்திலே நிற்கக்கடவையோ? ராவணாதி3கள், பிரித்த இத்தனை; கூப்பிடப்பொறுத்தார்கள்; நீர்மையுடையார், “ஸஞ்ஜாத பா3ஷ்ப:” என்று கண்ணநீரை விழவிட்டார்கள். நீர்மையுடையார் படியும் கண்டிலோம்; சத்ருக்கள் படியும் கண்டிலோம்; உன்னது வ்யாவ்ருத்தமாயிருந்ததீ!
(வாழி) கா4துகரை “உடன்பிறந்தீர்!” என்னுமாபோலே. (கனையிருளே) செறிந்த இருளே! என்னுதல், கனையிருள் – கனைத்துக்கொண்டு செருக்கிவருகிற இருளே! என்னுதல்.
அன்றியே, ப்ரகரணத்தோடே சேர்ந்த பொருளாவது – தமஸ்ஸென்று ஒரு பதா3ர்த்த2மாய், “அதுதான் ஒளிமழுங்கி அடங்கியிருக்கை ஸ்வபா4வம்” என்றறியாதே, அபி4மத விஸ்லேஷத்தாலே ஒளிமழுங்கி, வாய்விட்டுக் கூப்பிடவும் மாட்டாதே நோவுபடுகிறபடியைக்கண்டு, ‘உன்னிழவு கனத்திருந்ததீ!’ என்கிறாள். ‘வகுத்த விஷயத்திலே நாமெல்லாம் நெஞ்சிழந்து கூப்பிடாநிற்க, நீ உன் ஆற்றாமையைக் காட்டி நலியாநின்றாய்; உன் அவஸாத3ம் நீங்கி நீ ஜீவித்திடுக’ என்கிறாள்.
எட்டாம் பாட்டு
இருளின் திணிவண்ணம் மாநீர்க் கழியே! போய்*
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும்நீ துஞ்சாயால்*
உருளும் சகடம் உதைத்த பெருமானார்*
அருளின் பெருநசையால் ஆழாந்து நொந்தாயே?
ப – அநந்தரம், ‘அவன் காருணிகத்வத்திலே நசைபண்ணி ஆழங்காற்பட்டாயோ?’ என்று கழியைப்பார்த்துக் கலங்கி உரைக்கிறாள்.
இருளின் – இருளினுடைய, திணி – செறிந்த, வண்ணம் – நிறத்தையுடைத்தான, மா – பெரிய, நீர் – நீரையுடைய, கழியே – கழியே! போய் – மிகவும், மருளுற்று – அறிவுகெட்டு, இராப்பகல் – அஹோராத்ரரூபமான காலமும், துஞ்சிலும் – முடியிலும், நீ – நீ, துஞ்சாய் – உறங்குகிறிலை; ஆல் – ஆதலால், உருளும் – உருளுதலையுடைத்தான, சகடம் – சகடத்தை, உதைத்த – (திருவடிகளாலே) உதைத்த, பெருமானார் – பெரியவருடைய, அருளின் – க்ருபாகுணத்திலுண்டான, பெரு – பெரிய, நசையால் – ஆசையாலே, ஆழாந்து – ஆழங்காற்பட்டு, நொந்தாயே – நொந்தாயோ?
“மாநீர்” என்றது – கறுத்த நீர் என்றுமாம். இத்தால் – ஜல(ட)ப்ரக்ருதிகளும் அவன் க்ருபாகுணத்திலே அகப்பட்டால் கால்தாழ்வர் என்று கருத்து.
ஈடு – எட்டாம் பாட்டு. அவ்விருளுக்கு இறாய்த்து அங்கேயிங்கே ஸஞ்சரியா நிற்க, இருள் செறிந்தாற்போலேயிருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்; அது மடலெடுப்பாரைப்போலே கட்டோடாநிற்குமே; ‘பாவியேன், சகடாஸுரநிரஸநம் பண்ணின அச்செயலிலே நீயும் அகப்பட்டாயாகாதே?’ என்கிறாள்.
(இருளின் திணிவண்ணம்) அச்ச2மான இருள்; வெளிறான இருளன்றிக்கே, இருளன் புறவிதழை வாங்கி வயிரத்தைச் சேரப்பிடித்தாற்போலே இராநின்றது. இருளின் திணிபோலேயிருக்கிற நிறத்தையுடைத்தாய், பெருநீரையும் உடைத்தான கழியே! (போய் மருளுற்று) மிகவும் அறிவுகெட்டு. மயர்வற மதிநலம் (1-1-1) அருளப்பெற்றார் அறிவுகேட்டுக்கும் அவ்வருகேயாயிராநின்றதீ உன் அறிவு கேடு! (இராப்பகல் இத்யாதி3) காலத்துக்கு ஓரெல்லைகாணிலும் உன் ஆற்றாமைக்கு ஓரெல்லைகாண்கிறிலோம்.
(உருளும் சகடம் உதைத்த) “காவலாக வைத்த சகடந்தானே அஸுராவேசத்தாலே ஊர்ந்து வர, தாயுங்கூட உதவாத ஸமயத்திலே முலைவரவு தாழ்த்துச் சீறி நிமிர்த்த திருவடிகளாலே முடித்து, ஜக3த்துக்கு ஶேஷியைத் தந்த உபகாரகன் ப்ரணயிநிக்கு உதவானோ” என்னும் நசையாலே. (அருளின் பெருநசையால்) அருளின் கனத்துக்குத் தக்கபடியிறே நசையின் கனமிருப்பது. (ஆழாந்து நொந்தாயே) தரைப்பட்டு நோவுபட்டாயாகாதே?
ஒன்பதாம் பாட்டு
நொந்தாராக் காதல்நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த*
நந்தா விளக்கமே! நீயும் அளியத்தாய்*
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவா யெம்பெருமான்*
அந்தாமத் தண்துழாய் ஆசையால் வேவாயே?
ப – அநந்தரம், “கமநீயவிக்ரஹனானவனுடைய போக்யதாவிஷயமான ஆசையாலே வெதும்புகிறாயோ?” என்று ஒரு விளக்கை உரைக்கிறாள்.
நந்தா – ஒன்றாய் வீவற்ற, விளக்கமே – விளக்கே! அளியத்தாய் – (இப்படி) விலக்ஷணமான, நீயும் – நீயும், நொந்தாரா – ஈடுபட்டிருக்கச் செய்தேயும் ஈடுபடுத்துகிறதால் வயிறுநிறையாத, காதல் – காதலாகிற, நோய் – நோயானது, மெல் – (உன்மேனிபோலே) மெல்லிதான, ஆவி – ப்ராணனையும், உள் – உள்ளே, உலர்த்த – உலர்த்தும்படியாக, செம் – சிவந்த, தாமரை – தாமரைபோன்ற, தடம் – பெரிய, கண் – கண்களையும், செம் – சிவந்த, கனி – கனிபோன்ற, வாய் – வாயையுமுடையனான, எம்பெருமான் – என் ஸ்வாமியானவனுடைய, அம் – அழகிய, தண் துழாய்த்தாமம் – திருத்துழாய் மாலையிலுண்டான, ஆசையால் – ஆசையாலே, வேவாயே – பரிதபிக்கிறாயோ? “அளியத்தாய்” என்று – “அருமந்த” என்னுமாபோலே, நன்மையைக் காட்டுகிறது. இத்தால் – அவன் வடிவழகில் ஆசை தேஜஸ்விகளையும் பரிதபிக்கும் என்கை.
ஈடு – ஒன்பதாம் பாட்டு. அக்கழிக்கு ஒரு கரை காணமாட்டாதே மீண்டுவந்து படுக்கையிலே விழுந்தாள்; அங்கு எரிகிற விளக்கைக் கண்டாள்; அது உடம்பில் கைவைக்கவொண்ணாதபடி விரஹஜ்வரம் பற்றி எரியாநின்றது என்று அத்தைப் பார்த்து “நீயும் நோவுபட்டாயாகாதே?” என்கிறாள்.
(நொந்து இத்யாதி3) “நோவ” என்று புக்கால், நொந்து தலைக்கட்டக் கடவதன்றிக்கேயிருக்கிற ப்ரேமவ்யாதி4யானது, தொட்டார் மேலே தோ3ஷமாம்படி ம்ருது3வாயிருக்கிற ஆத்மாவைக் குறுத்துவற்றாக உலர்த்த. (மெல்லாவி) ப4க3வத்3 கு3ணாநுப4வத்தாலே நைந்திருக்கை. காற்றுப்படப்பொறாதிருக்கை. (நந்தா விளக்கமே) ஜ்வாலாபே4தா3நுமானமிருந்து பார்க்கிறாளன்றே. ஸந்தாநவிச்சே2த3மின்றிக்கே உருவ நோவுபடுகிறாயாகாதே? (நீயும் அளியத்தாய்) நாட்டுக்குக் கண்காட்டியான நீ படும்பாடே இது! (அளியத்தாய்) அருமந்த நீ. பரார்த்த2மான உடம்பிலே உனக்கு நோவு வருவதே!
(செந்தாமரை இத்யாதி3) “ ‘பதிஸம்மாநிதா ஸீதா ப4ர்த்தாரமஸிதேக்ஷணா’ என்ற பேறு பெறவேணும்” என்றத்தையோ நீயும் ஆசைப்பட்டது? (செந்தாமரைத் தடங்கண்) முக2த்தைப் பார்த்துக் குளிர நோக்கினபோதைத் திருக்கண்களில் செவ்வி சொல்லுகிறது. (செங்கனிவாய்) இன்சொல் சொல்லுகிற போதைத் திருவத4ரத்தில் பழுப்பைச் சொல்லுகிறது. (எம்பெருமான் இத்யாதி3) “நோக்காலும் ஸ்மிதத்தாலும் என்னை அநந்யார்ஹையாக்கினவனுடைய அழகிய திருத்துழாய்மாலை பெறவேணும்” என்னும் ஆசையாலே. (வேவாயே) உக்கக் காலுக்கு உளையக்கடவ உன்னுடம்பே நெருப்பாக வேகிறாயாகாதே!
பத்தாம் பாட்டு
வேவாரா வேட்கைநோய் மெல்லாவி யுள்ளுலர்த்த*
ஓவாது இராப்பகல் உன்பாலே வீழ்த்தொழிந்தாய்*
மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்ணளந்த*
மூவா முதல்வா! இனிஎம்மைச் சோரேலே.
ப – அநந்தரம், இவ்வார்த்தியைக்கண்டு ஸந்நிஹிதனான ஸர்வகாரணபூதனாயுள்ள ஈஸ்வரனை, ‘நீ என்னை நழுவாதொழியவேணும்’ என்று அபேக்ஷிக்கிறார்.
வேவாரா – வேவித்து த்ருப்தமாகாத, வேட்கை – ஆசையாகிற, நோய் – நோயானது, மெல் – (விரஹத்தாலே) ப3லஹீநமான, ஆவி – ஆத்மாவை, உள் – குறுத்துவற்றாக, உலர்த்த – வற்றுவிக்க, இராப்பகல் – இராப்பகல், ஓவாது – இடைவிடாதே, உன்பாலே – உன் ஸ்வபாவங்களிலே, வீழ்த்தொழிந்தாய் – தாழ்ந்து அகப்படும்படி பண்ணினவனாய், மா – (உன்னைக் கிட்டுவார்க்கு விரோதியான கேஶியாகிற) குதிரையின், வாய் – வாயை, பிளந்து – பிளந்து, மருது – (த்வந்த்வமான) மருது (முறியும்படி), இடை – நடுவே, போய் – போய், (அநந்யார்ஹமாம்படி) மண் – பூமியை, அளந்த – அளந்துகொண்டு, மூவா – அத்தாலே இளகிப் பதித்த, முதல்வா – ஸர்வகாரணபூதனே! இனி – இனி ஒரு காலமும், எம்மை – எங்களை, சோரேல் – நழுவவிடாதொழியவேணும்.
“மூவா முதல்வா” என்றது – நித்யயௌவந ஸ்வபாவனான உத்பாதகன் என்றுமாம். இத்தால் – தம்முடைய அநிஷ்டங்களைப்போக்கி ஸத்தையை உண்டாக்கினபடியை அநுஸந்தித்தாராயிற்று. இதில் ஏகாரம் தேற்றம்.
ஈடு – பத்தாம் பாட்டு. இவள் அவஸாத3மெல்லாம் தீர வந்து ஸம்ஸ்லேஷித்த எம்பெருமானைக் குறித்து ‘இனி ஒருநாளும் என்னை விடாதொழியவேணும்’ என்கிறார்.
(வேவாரா வேட்கைநோய்) “வேவ” என்று தொடங்கினால், ஒருகால் வெந்து தலைக்கட்டமாட்டாதாயிற்று. அல்லாதவை போலன்றிக்கே, ப்ரேம வ்யாதி4க்குள்ளதொன்றாயிற்று இதுதான். (மெல்லாவி) சரீரத்திலுண்டான ஸௌகுமார்யம் ஆத்மாவிலும் உண்டாயிருக்கிறதாயிற்று இவர்க்கு. (உள்ளுலர்த்த) (கூ3டோ4க்3நிரிவ பாத3பம்) என்கிறபடியே, உள்ளே பிடித்துப் புறம்பே வர வேவாநின்றதாயிற்று. அதா3ஹ்யமாயிருப்பது கேவலாக்2நியாகிலிறே. (மஹதா ஜ்வலதா நித்யமக்3நிநேவாக்3நிபர்வத:) என்று வெந்தவிடமே விறகாக வேவாநின்றது.
(ஓவாது இராப்பகல்) வேவாரா வேட்கைநோய்போலே இராப்பகல் ஓவாதொழிகிறபடி. (உன்பாலே வீழ்த்தொழிந்தாய்) அகப்பட்டார்க்கு மீள வொண்ணாத உன்பக்கலிலே விழவிட்டுக்கொண்டாய் என்னுதல்; உன்பாலே வீழ்த்து – உன் பக்கலிலே விழவிட்டுக்கொண்டு, ஒழிந்தாய் – முக2ங்காட்டாதே கடக்க நின்றாய் என்னுதல். (மாவாய் இத்யாதி3) கேசி வாயை அநாயாஸேந கிழித்து, யமளார்ஜுநங்களின் நடுவே போய், மஹாப3லி அபஹரித்துக்கொண்ட பூ4மியை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, இப்படி உபகாரங்களைப்பண்ணி, பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்க் குறைப்பட்டு, இவற்றினுடைய ரக்ஷணத்திலே உத்3யுக்தனா யிருக்குமவனே! இப்படி எல்லாம் செய்யச் செய்தேயும் ஒன்றும் செய்யாதாரைப்போலே ஜக3த்ஸ்ருஷ்ட்யாதி3களைப் பண்ணினவனே! (இனி எம்மைச் சோரேலே) கேசி தொடக்கமான விரோதி4களைப் போக்கினாற் போலே தம் விரோதி4யையும் போக்கி அவன்வந்து முக2ங்காட்ட, சொல்லுகிறாராதல்; “தம்முடைய ஆபத்தின் க4னத்தாலே வந்து முக2ங்காட்டும்” என்னும் விஸ்வாஸத்தாலே சொல்லுகிறாளாதல். (இனி) (பு3த்3த்4வா காலமதீதஞ்ச முமோஹ பரமாதுர:) என்னுமாபோலே, முன்புள்ள காலம் இழந்ததாகிலும், இனி மேலுள்ள காலம் இவ்வஸ்துவைக் கைவிடாதொழியவேணும்; “போன காலத்தை மீட்கவொண்ணாது” என்றதுக்கு ஶோகிக்கிறார். (ந மே து3:க்க2ம் ப்ரியா தூ3ரே) என்னுடைய ப்ரியையானவள் தூ3ரத்திலேயிருக்கிறாள் என்றதுக்கு சோகிக்கிறேனல்லேன்; அது ஒரு பயணமெடுத்துவிடத்தீரும். (ந மே து3:க்க2ம் ஹ்ருதேதி வா) வலிய ரக்ஷஸ்ஸாலே பிரிவு வந்தது என்றதுக்கு சோகிக்கிறேனல்லேன்; அது அவன் தலையை அறுக்கத் தீரும். (ஏததே3வாநுஶோசாமி) இது ஒன்றுமே எனக்கு சோகநிமித்தம். (வயோஸ்யா ஹ்யதிவர்த்ததே) போன பருவம் இப்பால் மீட்கவொண்ணாதிறே.
பதினொன்றாம் பாட்டு
*சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே*
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்*
ஓரா யிரம்சொன்ன அவற்றுள் இவைபத்தும்*
சோரார் விடார்கண்டீர் வைகுந்தம் திண்ணனவே.
ப – அநந்தரம், இத்திருவாய்மொழிக்கு ப2லம் பரமபதப்ராப்தி என்று அருளிச்செய்கிறார்.
சோராத – ஒன்றும் சோராதபடி, எப்பொருட்கும் – எல்லாப்பொருளுக்கும், ஆதியாம் – காரணபூதனான, சோதிக்கே – பரஞ்ஜ்யோதிஶ்ஶப்த வாச்யனுக்கே, ஆராத – (ஒருகாலும்) த்ருப்தி பிறவாத, காதல் – அபிநிவேஸத்தையுடைய, குருகூர்ச்சடகோபன் – ஆழ்வார், ஓர் – அத்விதீயமான, ஆயிரம் – ஆயிரமாக, சொன்ன அவற்றுள் – சொன்னவற்றுக்குள்ளே, இவை பத்தும் – (அதிப்ரேம ப்ரகாசகமான) இவை பத்தையும், சோரார் – நழுவநில்லாதவர்கள், வைகுந்தம் – பரமபதத்தை, திண்ணன – அறுதியாக, விடார் கண்டீர் – விடாதவர்கள் கிடீர்.
இது கலிவிருத்தம். நாலடித்தாழிசையுமாம்.
ஈடு – நிக3மத்தில் – இத்திருவாய்மொழி கற்றார், கண்ணால் கண்டதெல்லாம் ப4க3வத3லாப4த்தாலே நோவுபடுகிற ஸம்ஸாரத்திலேயிருந்து நோவுபடாதே, கண்டாரெல்லாம் ப4க3வல்லாப4த்தாலே களித்து வர்த்திக்கும் நாட்டிலே புகப்பெறுவர் என்கிறார்.
(சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே) இவ்வளவிலே வந்து இவரோடே கலந்து இவரை உளராக்குகையாலே, ஒன்றொழியாதபடி ஸகல பதா3ர்த்த2ங்களுக்கும் ஈஸ்வரனுமாய், இவரோடே வந்து கலந்தத்தாலே உஜ்ஜ்வலனுமாயிருந்தான். இவர்க்கு வந்து முக2ங்காட்டுவதற்கு முன்பு ஸர்வேஸ்வரத்வமும் அழிந்ததுபோலே கிடந்தது; இவரொருத்தரையும் சோரக் கொடுக்கவே ஸர்வேஸ்வரத்வம் அழியுமிறே. இவர் இழவுதீர வந்து முக2ங்காட்டின பின்பு எல்லாப் பொருட்கும் நிர்வாஹகனானான். (சோதிக்கே) பேறிழவுகள் இவரதன்றிக்கே, “தன்னது” என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்றாநின்றது. “க்ருதக்ருத்ய:” என்னும்படியானான்.
(ஆராத காதல்) இத்திருவாய்மொழியால் சொல்லிற்றாயிற்று – கண்ணால் கண்ட பதா3ர்த்த2ங்களுமெல்லாம் ப4க3வத3லாப4த்தாலே தம்மைப்போலே நோவுபடுகின்றனவாகக்கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் நோவுபடும்படியான இவருடைய அபி4நிவேசமாயிற்று. (காதல் குருகூர்ச்சடகோபன்) காதலையிட்டாயிற்று இவரை நிரூபிப்பது. தம்படிசொல்லும்போதும் தாமே சொல்லவேணுமே. (சொன்ன) இக்காதலோடேயாயிற்று ஆயிரம் அருளிச்செய்தது. (அவற்றுள் இவை பத்தும்) அல்லாதவை ஒருதலையாக, இது ஒருதலையாம்படி அக்காதலை முக்தகண்ட2மாகச் சொன்ன திருவாய்மொழியாயிற்று இது. (இவை பத்தும் சோரார் விடார் கண்டீர் வைகுந்தம்) இங்கேயிருந்து, கண்ணுக்கு இலக்கான பதா3ர்த்த2ங்கள் அடங்கலும் ப4க3வத3லாப4த்தாலே நோவுபடுகிறனவாக அநுஸந்தி4க்குமவர்கள், இவ்விருப்பை விட்டு, கண்ணால் கண்டார் அடங்கலும் ப4க3வல்லாப4த்தாலே களிக்கும் நித்யவிபூ4தியை விடாதே நித்யாநுப4வம் பண்ணப் பெறுவர்கள். கண்டீரென்று கையெடுத்துக் கூப்பிடுகிறார். (திண்ணனவே) இது ஸுநிஶ்சிதம். இவ்வருகே சிலரைப்பற்றிச் சொல்லிற்றோர் அர்த்த2மாகிலிறே ஸம்ஸயவிபர்யயங்களுள்ளது; ப4க3வத்ப்ரபா4வத்தைப் பற்றிச் சொன்னதாகையாலே இது தனக்கு எங்கேனும் ஸபத2ம் பண்ணலாம்.
முதற்பாட்டிலே தொடங்கி, நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேக4ம், சந்த்3ரன், இருள், கழி, விளக்கு இப்பதா3ர்த்த2ங்களைக் குறித்து அநுசோகித்து மிகவும் தளர்ந்த வளவிலே அவன் வந்து முக2ங்காட்ட, “இனி என்னை விடாதொழியவேணும்” என்று, இத்திருவாய்மொழி கற்றார்க்குப் ப2லத்தைச் சொல்லித் தலைக்கட்டினார்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்
த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி– வாயுந்திரை
பூர்வாநுபூ4தமுரவைரிகு3ணாபி4வ்ருத்3த4–
தத்3பா3ஹ்யஸங்க3மருசிஸ்தத3லாப4கி2ந்ந: |
ஸர்வாநபி ஸ்வஸமது3:கி2ந ஏவ பா4வா-
நாஹ த்3விதீயஶதகஸ்ய ஶடா2ரிராத்3யே || 11
த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளி — வாயுந்திரை
நித்3ராதி3ச்சே2த3கத்வாத3ரதிஜநநதோஜஸ்ரஸங்க்ஷோப4கத்வாத்
அந்வேஷ்டும் ப்ரேரகத்வாத்3 விலயவிதரணாத் கார்ஶ்யதை3ந்யாதி3க்ருத்த்வாத் |
சித்தாக்ஷேபாத்3 விஸம்ஜ்ஞீகரணத உபஸம்ஶோஷணாவர்ஜநாப்4யாம்
த்ருஷ்டாஸ்வாத3ஸ்ய ஶௌரே: க்ஷணவிரஹத3ஶாது3ஸ்ஸஹத்வம் ஜகா3த3 || 13
திருவாய்மொழி நூற்றந்தாதி
வாயுந் திருமால் மறையநிற்க ஆற்றாமை
போய்விஞ்சி மிக்க புலம்புதலாய்-ஆய
அறியா தவற்றோ டணைந்தழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து. 11
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
*****