நான்காம் திருவாய்மொழி
ஆடியாடி – ப்ரவேசம்
******
ப – நாலாம் திருவாய்மொழியில் இப்படி தாம் ஆசைப்பட்டபடியை அநுபவிக்கப் பெறாமையால் அவஸந்நராய், “தமக்குப் பிறந்த ஆர்த்யதிசயத்தை ஸமிப்பிக்கைக்கு, ஸர்வரக்ஷகனாய் போக்யபூதனான அவனையொழிய இல்லை” என்று அறுதியிட்டு; அவன் ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு உதவினபடியையும், அநிருத்தனுக்கு உதவினபடியையும், அபிமதையான பிராட்டிக்கு உதவினபடியையும், நாட்டுக்கு உதவினபடியையும், ஸுத்தபா4வத்தையும், நிரதிசயபோக்யதையையும், ரக்ஷணார்த்தமான ஆஸத்தியையும், ஆஸந்ந ஜநங்களுக்கு அநுபவவிரோதிகளைப் போக்கினபடியையும், ரக்ஷணோபகரணவத்தையையும், விரோதி மிகுந்தாலும் வெந்துவிழப்பண்ணும் வீரப்பாட்டையும் அநுஸந்தித்து, தம்முடைய ஆர்த்தியைப் பரிவர் முகத்தாலே அவனுக்கு அறிவித்தபடியை, பிரிந்த தலைமகள் ஆற்றாமைக்கு நற்றாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச்செய்கிறார்.
ஈடு – கீழில் திருவாய்மொழியிலே – “பருகிக் களித்தேனே” (2–3-9) என்று ஹ்ருஷ்டராய், “அதுதன்னை பா4க3வதர்களோடே உசாவி த4ரிக்கவேணும்” என்று பாரித்து, அதுக்கு இவ்விபூ4தியில் ஆளில்லாமையாலே, நித்யவிபூ4தியிலே நித்யஸூரிகள் திரளிலே போய்ப்புக்கு போ3த4யந்த:பரஸ்பரம் பண்ணி அநுப4விக்கக்கோலி, நினைத்தபோதே அத்திரளிலே போய்ப்புக்கு அநுப4விக்கப் பெறாமையாலே மிகவும் அவஸந்நராய், தம்முடைய த3ஶையை ஸ்வகீயரான ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிறபடியை அந்யாபதே3ஶத்தாலே பேசுகிறார்.
அஞ்சிறைய மடநாரை(1-4)யில் – தூதுவிட க்ஷமரானார்; வாயுந்திரையுகளில் (2-1) – கண்ணாற்கண்ட பதா3ர்த்த2ங்களடைய ப4க3வத3லாப4த்தாலே நோவுபடுகிறனவாகக் கொண்டு அவற்றுக்குமாக நோவுபட க்ஷமரானார்; அவ்வளவன்றிக்கே ஆற்றாமை கரைபுரண்டு, தாமான தன்மை அழிந்து ஒரு பிராட்டி த3சையை ப்ராப்தராய், அது தன்னிலும் தன்த3சை தான் வாய்விட்டுப் பேசமாட்டாதே பார்ஸ்வஸ்த2ர் அறிவிக்க வேண்டும்படியாய், ஸ்தி2திக3மநசயநாதி3களில் ஒரு நியதியின்றியிலே அரதியாய் நோவுபட, இப்பெண்பிள்ளை த3சையை அநுஸந்தி4த்த திருத்தாயார், “ராமக்ருஷ்ணாத்3யவதாரங்களைப் பண்ணி, ஆர்த்தரானார் ஆர்த்தியெல்லாம் பரிஹரிக்கக்கடவ ஸ்வபா4வரான நீர், உம்மை ஆசைப்பட்ட இவள் நோவுபடப் பார்த்திருப்பதே!”என்று, எல்லாவளவிலும் அவனையிட்டுப் பரிஹரித்துக்கொள்ளும் குடியாகையாலே, அவன் திருவடிகளிலே பொகட்டு, “இவளிடையாட்டத்தில் நீர் செய்யநினைத்திருக்கிறதென்?” என்று கேட்கிற பாசுரத்தாலே தம்முடைய த3சையை அருளிச்செய்கிறார்.
காசையிழந்தவனுக்கும், பொன்னையிழந்தவனுக்கும், ரத்நத்தை யிழந்தவனுக்கும் ஒத்திராதிறே க்லேசம்; அவதாரத்திலே *பெருநிலங்கடந்த நல்லடிப்போதை (1-3-10) அநுப4விக்க ஆசைப்பட்டுக் கிடையாமையாலே வந்த ஆற்றாமை – அஞ்சிறைய மடநாரை(1-4)யில்; *“நம்பியைத் தென்குறுங்குடி நின்ற” (1-10-9) என்று அர்ச்சாவதாரத்திலே அநுப4விக்க ஆசைப்பட்டுக் கிடையாமையாலே வந்த ஆற்றாமை – வாயுந்திரையுகளில் (2-1); இதில் – அவன் தனக்கும் ப்ராணபூ4தரான நித்யஸூரிகளை அநுப4விக்க ஆசைப்பட்டுக் கிடையாமையாலே வந்த ஆற்றாமையாகையாலே அவற்றிலும் இதுக்கு ஆற்றாமை விஞ்சியிருக்கும். நித்யஸூரிகள் திரளிலே போய்ப்புக்கு அநுப4விக்கப்பெறாமையாலே நோவுபடுகிறதாகில், பின்னை அவர்களைச்சொல்லிக் கூப்பிடாதே அவனைச்சொல்லிக் கூப்பிடுவானென்? என்னில்; எங்கேனும் ஒரு காட்டிலே ரத்நங்கள் பறியுண்டாலும், நாட்டிலே ராஜாவின் வாசலிலே அவன்பேர் சொல்லியிறே கூப்பிடுவது; அவர்களோட்டை ஸம்ஸ்லேஷத்துக்கும் கடவன் அவனாகையாலே அவனைச்சொல்லிக் கூப்பிடுகிறது. ப4க3வத்3 விஸ்லேஷத்திலே உட்புக நின்றாலிறே பா4க3வத விஸ்லேஷந்தான் தெரிவது.
“கதா3ந்வஹம் ஸமேஷ்யாமி ப4ரதேந மஹாத்மநா | சத்ருக்4நேந ச வீரேண த்வயா ச ரகு4நந்த3ந ||” ஸ்ரீ ப4ரதாழ்வானோடும் ஸ்ரீ சத்ருக்4நாழ்வானோடும் கூடப்பெறாத கிழிக்குறையாலே, கூடநிற்கிற இளையபெருமாளோடும் கூடிற்றாய்த் தோற்றிற்றில்லையிறே பெருமாளுக்கு; “கு3ஹேந ஸஹிதோ ராம: லக்ஷ்மணேந ச ஸீதயா” கூடப்போன இளையபெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய்த் தோற்றிற்று ஸ்ரீகு3ஹப்பெருமாளோடு கூடின பின்பிறே; இப்படியிறே அவன்தனக்கும் அந்வயவ்யதிரேகங்களிருக்கும்படி; ததீ3யஸம்ஸ்லேஷத்தை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவு, பெற்ற ப4க3வத்ஸம்ஸ்லேஷம் இழந்து அடியே பிடித்து ப்ரார்த்தி2க்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது. வாயுந்திரையுகளில் (2-1) ஆர்த்தி தீர வந்து ஸம்ஸ்லேஷித்த ஸம்ஸ்லேஷம் முற்றுவதற்கு முன்னே வந்த பிரிவாகையாலும் ஆற்றவொண்ணாதிறே.
முதல் பாட்டு
ஆடியாடி அகம்க ரைந்து*இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி*எங்கும்
நாடிநாடி நரசிங்கா என்று*
வாடி வாடும் இவ் வாணுதலே.
ப – முதற்பாட்டில் “ப்ரஹ்லாதனுக்கு உதவினாற்போலே வந்து உதவுகிறிலன்” என்று இவள் தளராநின்றாள் என்கிறாள்.
இவ்வாணுதல் – ஒளிவிடுகிற நெற்றியையுடையளான இவள், ஆடியாடி – (வல்லாராடினாற்போலே தர்சநீயமாம்படி, தன் ஆற்றாமையாலே நின்றவிடத்தில் நில்லாதே) பலகாலும் உலாவி, அகங்கரைந்து – மநஸ்ஸைதில்யம் பிறந்து, இசை பாடிப்பாடி – (அந்த க்லேசமடியாக) இசையிலே பலகாலும் பாடுவாரைப்போலே ப்ரலாபித்து, கண்ணீர்மல்கி – (கரைந்த நெஞ்சு ப்ரவஹிக்குமாபோலே) கண்கள் நீர்மல்கி, எங்கும் – ஸர்வதேசத்திலும், நாடி நாடி – (அவன் வரவை) ஆராய்ந்து பலகாலும் பார்த்து, நரசிங்கா என்று – (எங்கும் தோற்றவல்ல) நரஸிம்ஹரூபத்தையுடையவனே! என்று, வாடி வாடும் – (அவ்வளவிலும் வரக்காணாமையாலே) வாட்டத்தின்மேல் வாட்டமாம்படி தளராநிற்கும்.
ஈடு – முதற்பாட்டில். ஆபத்தே செப்பேடாக ஆஸ்ரிதன் ப்ரதிஜ்ஞாஸமகாலத்திலே வந்து உதவும் ஸ்வபா4வனான அவனைச்சொல்லிக் கூப்பிடாநின்றாள் என்கிறாள்.
(ஆடியாடி) ஸ்தி2திக3மநசயநாதி3களில் ஒரு நியதியின்றிக்கே அரதியாலே படுகிற பாடுதான், திருத்தாயார்க்கு ஆகர்ஷகமாயிராநின்றதாயிற்று; ஸ்ரீகௌஸல்யையார் பெருமாளைப் பிரிந்து துடிக்கிற துடிப்பை “ந்ருத்யந்தீமிவ மாதரம்” என்றானிறே; வடிவழகியார் வ்யாபாரங்களெல்லாம் இனிதாயிருக்குமிறே; பிரிந்து அழகழிந்திருக்கிற ஸமயத்திலேயிறே – “ஸுபா4ம்” என்றது. (ஆடி) முதல் “ஆடி” என்றதுக்கு அவ்வருகே ஒரு நிலையிறே இரண்டாம் ஆடி; முதலிலே ஸஞ்சாரம் அரிதாம்படியிருக்கச்செய்தே, ஆற்றாமை ப்ரேரிக்க ஸஞ்சரியாநிற்கும்; கு3ணாதி4கவிஷயமாகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாதே. “ராமாக3மநகாங்க்ஷயா” – “இன்னமொருகால் அவர் முக2த்திலே விழிக்கலாமாகில் அருமந்த ப்ராணனைப் பாழே போக்குகிறதென்?” என்று ராஜ்யத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தானிறே. முதல் “ஆடி” என்கிறதிற்காட்டில், இருகால்மட்டு “ஆடி”என்றதில் – அவஸாத3த்தின் மிகுதி, தாளங்கொண்டு அறியுமித்தனை.
(அகங்கரைந்து) ஸஞ்சாரம் செல்லாநிற்கச் செய்தே, ஸஞ்சாரம் அடியற்றிருக்கும். இவள் வ்யாபாரம் கண்ணுக்கு இலக்கானாற்போலே, அகவாயும் இவள் நெஞ்சுக்கு இலக்காயிருக்கிறபடி. மநஸ்தத்த்வம் நீராய் உருகிப்போயிற்று என்கிறாள். (இசை பாடிப்பாடி) “மந:பூர்வோ வாகு3த்தர:” என்கிற க்ரமநியமமில்லை; ஆற்றாமையாலே கூப்பிடுகிற கூப்பீடுதான் பாட்டாய்த் தலைக்கட்டுகிற இத்தனை; *பண்ணைவென்ற இன்சொல் மங்கை(திருச்சந்தவிருத்தம் -105)யிறே இவள்தான்; (மது4ரா மது4ராலாபா). ஆற்றாமையாலே துடித்த துடிப்பு ஆடலானாற் போலே, ஆற்றாமையாலே கூப்பிட்ட கூப்பீடும் பாட்டாய் விழாநின்றது. முதல் கூப்பீடுபோலன்றிக்கே, இரண்டாம் கூப்பீடு தளர்ந்திருக்குமிறே.
(கண்ணீர் மல்கி) உருகின மநஸ்தத்த்வம், இசையாய் ப்ரவஹித்து, மிக்கது கண்ணீராய் ப்ரவஹிக்கிறபடி. நெஞ்சொழியப் பாய்கிற கண்ணீரிறே. (மல்கி) மிக்கு. (கிமர்த்த2ம் தவ நேத்ராப்4யாம் வாரி ஸ்ரவதி ஸோகஜம்) “ஆநந்தா3ஸ்ருவுக்கு யோக்3யமான கண்களாலே ஸோகாஸ்ரு ப்ரவஹிக்கிறது ஆர்குடி வேரற?” என்று ப4ட்டர் அருளிச்செய்யும்படி. அன்றிக்கே, பிள்ளான், “ஆரைச் சேதநராகக்கொண்டு?” என்று பணிக்கும். (புண்ட3ரீகபலாஸாப்4யாம் விப்ரகீர்ணமிவோத3கம்) பாவியேன், இவ்வரவு உடைய பெருமாள் வரவாய்க் காணப்பெற்றதில்லை.
(எங்கும் நாடிநாடி) தன் ஆபத்தே செப்பேடாக, வர ஸம்பா4வநையில்லாத தி3க்கையும் பார்க்கும். (ஸா திர்யகூ3ர்த்4வஞ்ச ததா2ப்யத4ஸ்தாத்) நினைவின்றிக்கேயிருக்கச்செய்தே வாராத் திருநாமம் செவிப்பட்டவாறே, விலங்கப் பார்ப்பது, மேலே பார்ப்பது, கீழே பார்ப்பதானாள். கீழ் பார்த்ததுக்குக் கருத்தென்? என்னில்; “பூ4மியைப் பிளந்துகொண்டு புறப்பட்டு ஒருவன் திருநாமம் சொல்ல ஸம்பா4வநை உண்டாகில், அல்லாத தி3க்குகளிலுமுள்ளது” என்று பார்த்தாள்; அன்றிக்கே, மாஸோபவாஸிகள், “சோறு” என்றவாறே அலமாக்குமாபோலே பார்த்தாள் என்னுதல்; அங்ஙனன்றிக்கே ஸிம்ஸுபா வ்ருக்ஷத்தை எங்குமொக்கப்பார்த்தாள் என்னுதல்.
(தமசிந்த்யபு3த்3தி4ம் த3த3ர்ச) அவன் வடிவு காண்பதற்கு முன்னே அகவாயையாயிற்று பரிச்சே2தி3த்தது, “இந்நிலத்திலே புகுந்து இடங்கொண்டு நாம் இருந்தவிடம் துருவி நிலைகுத்தவல்ல நெஞ்சையுடையவனன்றோ” என்று. (பிங்கா3தி4பதேரமாத்யம்) “இவன் ஸ்வதந்த்ரனல்லன், ராஜகார்யம் இவன் கையிலேயுண்டு” என்று அறிந்தாள். (வாதாத்மஜம்) பெருமாளுக்கு ப்ராணஹேதுவான பிராட்டிக்கு ப்ராணங்களைக் கொடுக்கையாலே, “இவன் ஸர்வர்க்கும் ப்ராணஹேதுவான வாயுபுத்ரன்” என்று தோற்ற இருந்தான்.
(ஸூர்யமிவோத3யஸ்த2ம்) லங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது; “பெருமாளாகிற ஆதி3த்யோத3யத்துக்கு அருணோத3யம்” என்னலாம்படி இருந்தான்; ஆகையிறே லங்கை நாலு மதிளுக்கு நடுவு “ஹரிஹரி” என்றபடியே யிருக்கிறது. இப்படி வருகைக்கு ஸம்பா4வநையில்லாத தி3க்கிலும் தேடுவானென்? என்னில், ஸம்பா4வநை இல்லாதவிடத்தேயும் வந்து தோற்றுமவனாகையாலே; பத்துடையடியவர்(1-3)க்குப் பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போகமாட்டார். “(எங்கும் நாடிநாடி) தன் கொய்சகமுட்படப் பாராநின்றாள்” என்று பட்டர் அருளிச்செய்யும்படி. அதுக்குக் கருத்து – “கண்ணன் என் ஒக்கலையானே” (1-9-4) என்று அவனிருந்த ப்ரேத3சமாகையாலே.
(நரசிங்கா என்று) ப்ரஹ்லாத3னைப்போலே ஒரு தம்பமில்லாதபடியிருக்கையாலே வாடும். “மத்தஸ்ஸர்வமஹம் ஸர்வம்” என்னும் தெளிவுடையவனுக்குத் தோற்றினவன் கலங்கின அப3லைக்குத் தோற்றானோ! என்னுமத்தாலே – தமப்பன் பகையானாலோ உதவலாவது, நீர் பகையானாலும் உதவலாகாதோ? ஜ்ஞாநநிஷ்ட2ர்க்கோ உதவலாவது, ப4க்திநிஷ்ட2ர்க்கு உதவலாகாதோ? ஆண்களுக்கோ உதவலாவது, பெண்களுக்கு உதவலாகாதோ? சேராதவடிவு சேர்த்து உதவிலோ உதவலாவது, இருந்தபடி உதவலாவார்க்கு உதவலாகாதோ? ஒரு அதி4காரிநியதி, ஒரு காலநியதி, ஒரு அங்க3நியதி என்கிற நிர்ப்ப3ந்த4ம் வேணுமோ இவளுக்கு? இவளுடைய ரக்ஷணத்துக்கும் ஏதேனும் முகம்பண்ண வேணுமோ? (வாடி வாடும்) கொம்பையிழந்த தளிர்போலே வாடும். “முதல் வாட்டம் தளிர்” என்னும்படியிறே அநந்தரத்தில் வாட்டம். (வாடும்) த4ர்மிலோபம் பிறந்ததில்லை; “வரும்” என்னும் ஆசையாலே முடியப்பெறுகிறிலள்.
(இவ்வாணுதலே) ஒளியுடன்கூடின நுதலையுடைய இவள். இவ்வழகுக்கு இலக்கானார் படுமத்தை இவள் படுவதே! “இவள் முடிந்தால், உம்முடைய மேன்மையாலே இன்னம் இப்படியிருப்பதொரு வ்யக்தியை உண்டாக்கலாம்” என்றிருக்கிறீரோ? “தா4தா யதா2பூர்வமகல்பயத்” என்கிறபடியே ஸ்ருஷ்டிக்கலாம் என்றிருக்கிறீரோ? “ஊனில் வாழுயிரில் (2–3) கலவியாலுண்டான புகர் இன்னம் அழிந்ததில்லைகாணும்; அம்புபட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முக2த்திலே தெரியுமிறே; கு3ணாதி4கவிஷய விரஹத்தாலே வந்த இழவு என்னுமிடம் முக2த்தின் எழிலிலே தெரியாநின்றதுகாணும்.
இரண்டாம் பாட்டு
வாணுதல்இம் மடவரல்* உம்மைக்
காணும்ஆசையுள் நைகின்றாள்*விறல்
வாணன்ஆயிரம் தோள்துணித்தீர்*உம்மைக்
காணநீர் இரக்க மிலீரே.
ப – அநந்தரம், அநிருத்தனை நிரோதித்த பாணனைத் தோள்மிடுக்கு அறுத்த நீர் இவளுக்கு இரங்குகிறிலீர் என்கிறாள்.
வாள் – ஒளிவிடுகிற, நுதல் – நுதலையுடையளாய், இம்மடவரல் – மடப்பத்தால் விஞ்சின இவள், உம்மை – (தர்சநீயரான) உம்மை, காணும் ஆசையுள் – “காணவேணும்” என்கிற ஆசையிலே, நைகின்றாள் – ஸிதிலையாகாநின்றாள்; விறல் – பெருமிடுக்கனான, வாணன் – பாணனுடைய, ஆயிரம் தோள் துணித்தீர் – ஆயிரந்தோள் துணித்தவரே! உம்மை – உம்மை, காண – காண்கைக்கு, நீர் – நீர், இரக்கமிலீர் – இரக்கமில்லாமையாயிராநின்றீர்.
இவள் ஆசைப்பட்டாலும் பசையில்லை; உம்முடைய இரக்கமிறே காட்டுவது என்று கருத்து.
ஈடு – இரண்டாம் பாட்டு. “நடுவே வாடுமித்தனையேயோ வேண்டுவது விரோதி4 கிடக்கச்செய்தே” என்ன, “பா3ணனுடைய பா3ஹுவநத்திலும் ப்ரப3லமோ இவள் விரோதி4?” என்கிறாள்.
(வாணுதல்) இவ்வவயவசோபை4 போ4க3ஹேதுவாகை யன்றிக்கே, நைகைக்கு உறுப்பாவதே! பெற்ற எனக்கு ஆகர்ஷஹேதுவான இது, கைப்பிடித்த உமக்கு அநாத3ரஹேதுவாவதே! “இயம் ஸீதா மம ஸுதா ஸஹத4ர்மசரீ தவ | ப்ரதீச்ச2சைநாம் ப4த்3ரம் தே பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா ||” (இம்மடவரல்) மடப்பம் வந்திருக்கையாவது – மென்மையை உடையளாகை; பிரிந்து கலக்கப் பொறாத ஸௌகுமார்யத்தை உடையவள்.
பிராட்டித3சையைக் கண்ட திருவடியைப்போலே இருக்கிறதுகாணும் இப்பெண்பிள்ளைத3சையைக்கண்ட திருத்தாயார்க்கு. (து3ஷ்கரம் க்ருதவாந் ராம:) இவளைப் பிரிந்து ஸமாதாநம் பண்ணி இருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார். (ஹீநோ யத3நயா ப்ரபு4🙂 இவளைப்பிரிந்து தே3ஹத்தை த4ரித்திருந்தார் என்பது யாதொன்று, அது சால அரிதாகச் செய்தார்.
(ப்ரபு4🙂 ஆனைகுதிரையேறவும், நாடாளவும் கற்றாரித்தனை; ப்ரணய தா4ரையில் புதியதுண்டிலர். மால்யவானில் பெருமாள் இருந்தபோது மேக4த3ர்சநத்திலே பட்டபாட்டைக் கண்டு, “வஸிஷ்ட2 சிஷ்யன் ஒரு ஸ்த்ரீ நிமித்தமாக இப்படிபடுவதே!” என்று க3ர்ஹித்துச் சிரித்திருந்தான் விரக்தனாகையாலே; இப்போது “இவளைப் பிரிந்து தே3ஹத்தை த4ரித்துக் கொண்டிருப்பதே!” என்கிறானாயிற்று விசேஷஜ்ஞனாகையாலே. (தா4ரயத்யாத்மநோ தே3ஹம்) இது ஏதேனும் இரவலுடம்போ சுமந்து கொண்டி ருக்கைக்கு? போ4கா3யதநமன்றோ, து3:க்கா2யதநமோ இது? பிரிந்தால் “க்ரமத்திலே கூடுகிறோம்” என்று த4ரித்திருக்கவல்லளல்லளே. (உம்மை) இவள்படியன்றோ உமக்கு உபதே3சிக்க வேண்டுவது; உம்மை நீர் அறியாமையில்லையே. “நம்மைப் பிரிந்தார் பிழையார்கள்” என்றிருக்கவேண்டாவோ? (வாணுதல் இம்மடவரல் உம்மை) (துல்யஸீலவயோவ்ருத்தாம்) என்னும்படிகாணும் இருக்கிறது. (உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள்) விஷயாநுரூபமாயிறே ஆசையுமிருப்பது (காணும் ஆசையுள்) உம்மோடே அணைய ஆசைப்பட்டாளோ? காட்சியிலேயும் அருமைப்படுத்துவீரோ? (நைகின்றாள்) இவளை த4ரிப்பிக்க வேண்டா; அடியில் நிலையிலே நிறுத்த அமையும். (உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள்) கடலிலே அழுந்தா நின்றாள். “ஆசையென்னும் கடலிறே” (பெரிய திருமொழி 4-9-3). வாடுகைதான் தேட்டமாம்படியாயிற்று.
(விறல் வாணன் ஆயிரந்தோள் துணித்தீர்) “நையும் இதுவேயோ வேண்டுவது ப்ரதிப3ந்த4கம் கிடக்க?” என்றே நீர் சொல்லுவது? பா3ணனுடைய பா3ஹுவநத்தில் பரப்புண்டோ இவளுடைய விரோதி4 வர்க்க3ம்? உஷாநிருத்3த4 க4டகரன்றோ நீர். பேரனுமாய் ஆணுமாகிலோ உதவலாவது? உம்மோடே கலந்த அப3லைக்கு உதவலாகாதோ? (உம்மைக் காண) கருமுகைமாலை தேடுவார் சூடவிறே தேடுவது; சும்மாட்டைக் கொள்ளவல்லவிறே; இவ்வஸ்துவை ஆசைப்படுவார் படுவது காட்சிக்காகவாயிற்று. “அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண” (நான்முகன் திருவந்தாதி – 39) “காரார் திருமேனி காணுமளவும்” (சிறியதிருமடல் -69); இவர் தாமும், “கண்களால் காண வருங்கொலென்று”(3-8-5). உம்மை இவள் காண்கைக்கீடாக நீர் இரக்கத்தையுடையீராகிறிலீர்.
(நீர் இரக்கமிலீரே) “நைவ த3ம்ஸாந்” என்கிறபடியே நீர் நோவுபடுகை தவிர்ந்தால், ஸாமாந்யமான இரக்கமும் போகவேணுமோ? “இவள்நைவு பேற்றுக்கு உபாயமல்ல, அவனிரக்கம் பேற்றுக்கு ஸாத4நம்” என்றுகாணும் திருத்தாயார் இருக்கிறது. “இவள்நைவு அவனிரக்கத்துக்குப் பரிகரம்; அவனிரக்கம் பேற்றுக்கு ஸாத4நம்” என்றிருக்கிறாள். “தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்” என்று தானே காட்டக் காணுமித்தனையிறே.
மூன்றாம் பாட்டு
இரக்க மனத்தோடு எரியணை*
அரக்கும் மெழுகும் ஒக்கும்இவள்*
இரக்க மெழீர்இதற்கு என்செய்கேன்*
அரக்க னிலங்கைசெற் றீருக்கே.
ப – அநந்தரம், பிராட்டிக்காக ராவணனையும் லங்கையையும் அழித்த நீர் இரங்குகிறிலீர்; இதற்குச் செய்வதென்? என்கிறாள்.
இரக்கம் – க்லேசோத்தரமான, மனத்தோடு – நெஞ்சோடே, இவள் – இவள், அரக்கும் – (சிக்கென்ற) அரக்கும், மெழுகும் – (மெத்தென்ற) மெழுகும், எரியணை ஒக்கும் – அக்நிஸகாஸத்தில் ஒக்க உருகுமாபோலே, கற்பும் மடமும் கட்டுக் குலையாநின்றாள்; இரக்கமிலீர் – நீர் இரக்கந்தோற்ற இருக்கிறிலீர்; இதற்கு – இது நிமித்தமாக, அரக்கன் – ராக்ஷஸனான ராவணனுடைய, இலங்கை – லங்கையை, செற்றீருக்கு – அழித்த உமக்கு, என் – எத்தை, செய்கேன் – செய்வேன்?
இல்லாத இரக்கத்தை உண்டாக்கவோ? இவள் சைதில்யத்தை (தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்) என்றவள் நெஞ்சுபோலே சிக்கெனப் பண்ணவோ? என்று கருத்து.
ஈடு – மூன்றாம் பாட்டு. இன்று இச்செயல் செய்யக்கடவதாக நினைத்த நீர், அன்று “உண்ணாதுறங்காது ஒலிகடலை ஊடறுத்து” (நாச்சியார் திருமொழி 11-7) அச்செயலை என்றிய (= எதுக்காக) செய்தீர்? என்கிறாள்.
(இரக்கம் இத்யாதி3) இரக்கம் – நெஞ்சில் நெகிழ்ச்சியாதல், ஈடுபாடாதல், ஈரிப்பாதல். இரங்கின நெஞ்சையுடைய இவள், எரியை அணைந்த அரக்கும் மெழுகும்போலே உருகாநின்றாள். அரக்கும் மெழுகும் என்கிற இரண்டையும் – நெஞ்சுக்கு ஒன்றும், இவள்தனக்கு ஒன்றும் ஆக்கி நிர்வஹிப்பர் பிள்ளை திருநறையூரரையர். நெஞ்சும் இவள் தனக்குக் கையடைப்பாகையாலே இவள் தனக்கே இரண்டையுமாக்கி அருளிச்செய்வர் ப4ட்டர்.
“விஷ்ணுநா ஸத்3ருஸோ வீர்யே” என்கிறபடியே, எல்லாம் இவள்தன்படிக்கு த்3ருஷ்டாந்தமாகவேண்டும்படியிறே இவள்தன் நிலை; அக்3நிக்குள்ளே புகில் கரிந்துபோம்; கடக்கவிருக்கில் வலிக்கும்; அக்3நிஸகாசத்திலே உருகாநிற்குமிறே; முடிந்துபிழைக்கவும் பெறாதே, த4ரித்திருக்கவும் பெறாதே, நோவுபடும்படி பண்ணுவீரே! இவள் த3சையிது. (இரக்கமெழீர்) “நீரும் இவளைப் போலே உருகவேணும்” என்று வளைக்கிறோமோ? நொந்தார்பக்கல் பண்ணும் க்ருபையும் பண்ணுகிறிலீர். இரக்கமனத்தையுடையளாகாநின்றாள் இவள்; நீர் இரக்கமெழுகிறிலீர்; நீர் இரங்காவிட்டால், உம்மைப்போலேயிருப்பதொரு நெஞ்சை இவளுக்குக் கொடுத்தாலாகாதோ?
(இதற்கு என்செய்கேன்) உம்முடைய இரக்கமொழிய ஏதேனும் உபாயாந்தர ஸாத்4யமோ இப்பேறு? (என்செய்கேன்) உம்மை இரங்கப்பண்ணவோ, இவளை இரங்காமற்பண்ணவோ? (அரக்கன் இலங்கை செற்றீருக்கே) உமக்கு இரக்கமின்றியே ஒழிந்தால், இவள் இரங்குவதொரு செயலைச் செய்துவைக்க வேணுமோ? “ஒரு ப்ரணயிநிக்கு உதவினவன் நமக்கு உதவானோ?” என்று ஈடுபடாநின்றாள்; புழுக்குறித்தது எழுத்தானாற்போலே ஒன்று வாய்த்ததைக் கொண்டு. “அது அந்யார்த்த2ம்” என்றிராதே நோவுபடாநின்றாள். “அரக்கன் இலங்கை செற்றீருக்கு – இரக்கமனத்தோடு – இவள் – எரியணை அரக்கும் மெழுகுமொக்கும்; இரக்கமெழீர்; இதற்கு என்செய்கேன்?” என்று அந்வயம்.
நான்காம் பாட்டு
இலங்கைசெற் றவனே என்னும்*பின்னும்
வலங்கொள் புள்ளுயர்த்தாய்! என்னும்*உள்ளம்
மலங்கவெவ் வுயிர்க்கும்* கண்ணீர்மிகக்
கலங்கிக் கைதொழும் நின்றுஇவளே.
ப – அநந்தரம், நாட்டுக்கு உதவினபடியைச் சொல்லி க்லேசியாநின்றாள் என்கிறாள்.
இவள் – இவள், பின்னும் – (முன்புத்தை க்லேசத்தளவன்றியே) பின்னையும், இலங்கை – (மாலிப்ரப்ருதிகள் இருந்த) லங்கையை, செற்றவனே – செறுத்தவனே! என்னும் – என்னும்; (அதுக்கு உறுப்பாக) வலங்கொள் – பலவானான, புள் – பெரியதிருவடியை, உயர்த்தாய் – வாஹநமும் த்வஜமுமாக உடையவனே! என்னும் – என்னும்; (அப்படி தனக்கு வந்து தோற்றாமையாலே) உள்ளம் – நெஞ்சு, மலங்க – அலமாக்கும்படி, வெம் – வெவ்விதாக, உயிர்க்கும் – மூச்சுவிடும், கண்ணீர் – கண்ணீரானது, மிக – மேலிட, கலங்கி – அறிவு கலங்கி, நின்று – (வருகிறானாக) நினைத்து, கைதொழும் – அஞ்சலி பண்ணாநிற்கும்.
ஈடு – நாலாம் பாட்டு. “அரக்கனிலங்கை செற்றீர்(ருக்கு)” (2.4.3) என்கிற இது “நியதஸ்வபா4வமன்று காண்; காதா3சித்கங்காண்” என்றாள் திருத்தாயார்; அது பொறுக்கமாட்டாமை, அதுதன்னையே சொல்லுகிறாள்.
(இலங்கை செற்றவனே என்னும்) “எனக்குப் பண்டே உதவி உபகரித்தவனே” என்னாநின்றாள். முன்பு தனக்கு உதவினவன் இப்போது தனக்கு உதவாதொழிந்தாற்போலே கூப்பிடாநின்றாள். கடலடைத்தல், மலையெடுத்தல், அம்பேற்றல் செய்யவேணுமோ? என்பக்கல் வரும்போது என்ன ப்ரதிப3ந்த4கமுண்டு? திருத்தாயார் இவள் விடுகைக்குச் சொன்னதுதானே அவளுக்குப் பற்றுகைக்கு உடலாய்விட்டது.
(பின்னும் இத்யாதி3) அதுக்குமேலே, “விடாய் இருந்தவிடத்தே சாய்கரகம் போலே உயரவைத்துக்கொண்டு வந்து காட்டும் பரிகரமுடையவனே!” என்னா நின்றாள். மிடுக்கையுடைய புள்ளை த்4வஜமாகவுடையவனென்னுதல்; அன்றியே, புள்ளாலே வஹிக்கப்பட்டவனென்னுதல். கொண்டுவருகைக்குப் பரிகரமுண்டா யிருக்கச் செய்தே வரக்காணாமையாலே, மநஸ்தத்த்வம் வேர்பறியும்படி நெடுமூச்செறியா நிற்கும்; “த3ஹந்தீமிவ நி:ஸ்வாஸைர் வ்ருக்ஷாந் பல்லவ தா4ரிண:” என்னுமாபோலே.
(கண்ணீர் மிக) நெடுமூச்சாய்ப்புறப்பட்டு, புறப்படாதது கண்ணீராய்ப் புறப்படாநின்றது. (கலங்கிக் கைதொழும்) தெளிந்திருந்து தொழுமதில்லையிறே ப்ரணயிநி. (இவளே) அவன் தொழும்படியான வேண்டற்பாடுடைய தான் தொழா நின்றாள்.
ஐந்தாம் பாட்டு
இவள்இராப் பகல்வாய் வெரீஇ*தன
குவளையொண் கண்ணநீர் கொண்டாள்*வண்டு
திவளும்தண் ணந்துழாய் கொடீர்*என
தவள வண்ணர் தகவுகளே.
ப – அநந்தரம், ஸுத்தபா4வரான உம்முடைய ஸ்வபாவமிருந்தபடியென்! என்கிறாள்.
இவள் – (விலக்ஷணையான) இவள், இராப்பகல் – இரவோடு பகலோடு வாசியற, வாய்வெரீஇ – (திருத்துழாயை) வாய்வெருவி (அது கிடையாமையாலே), தன – தன்னுடைய, குவளை – நெய்தல்போலே, ஒண் – அழகியவான, கண் – கண்களிலே, நீர் – சோகாஸ்ருவை, கொண்டாள் – உடையளானாள்; வண்டு – வண்டுகள், திவளும் – (மதுபாநம்பண்ணி, ரஸாயநஸேவை பண்ணினாரைப்போலே) படிந்து ஒளிவிடும்படியான, தண்ணந்துழாய் – திருத்துழாயை, கொடீர் – கொடுக்கிறிலீர், தவளவண்ணர் – (ஆஸ்ரிதவிஷயத்தில்) ஸுத்தஸ்வபாவரான உம்முடைய, தகவுகள் – க்ருபாதிஸ்வபாவங்கள், என – என்னென்னவாயிருக்கின்றன?
வாய்வெருவினதற்கு இரக்கமற்று, கண்ணநீர்க்கு இரக்கமற்று, “இவளுக்குக் கொடுக்கவேணும்” என்று இரக்கமற்று, வண்டுகளுக்குக் கொள்ளை கொடுத்தது என்ன ஸ்வபாவம்? என்று கருத்து.
ஈடு – அஞ்சாம் பாட்டு. இவள் இப்படி க்லேசிக்கிறவிடத்திலும் வரக்காணாமை யாலே, நிர்த்த3யர் என்கிறாள்.
(இவள் இராப்பகல் வாய் வெரீஇ) “ஸீதேதி மது4ராம் வாணீம் வ்யாஹரந் ப்ரதிபு3த்4யதே” என்று வாய்வெருவுவான் அவன்கிடீர்! (அநித்3ரஸ்ஸததம் ராம:) நித்3ரையோடே காலக்ஷேபம் பண்ணவேண்டும் செல்வுடையவர், ஸததம் அநித்3ர ராயிருப்பர். (ஸுப்தோःபி ச) (“ஸததமநித்3ர:”) என்றுவைத்து, (“ஸுப்தோःபி ச”) என்கிறது – பராக3ர்த்தா2நுஸந்தா4நாபா4வத்தைப்பற்ற. (நரோத்தம:) அபி4மத விஸ்லேஷத்தில் இங்ஙனேயிருக்கைபோலே புருஷோத்தமத்வமாவது. (இராப்பகல்) பொய்ந்நின்ற ஞானம் (திருவிருத்தம் – 1) தொடங்கி இவ்வளவு வாய்வெருவின இத்தனை காணும்! (வாய்வெரீஇ) வாய் வெருவி. அவதா4நம் பண்ணிச் சொல்லுகிறது ஒன்றுமில்லை; வாஸநையே உபாத்4யாயராகச் சொல்லுகிறது இத்தனை. (தன குவளை ஒண் கண்ணநீர் கொண்டாள்) (தன) ஆநந்தா3ஸ்ரு ப்ரவஹிக்கக்கடவ கண், சோகாஸ்ரு ப்ரவஹியாநின்றது. இக் கண்ணுக்கு இலக்கானார் கண்ணிலே காணக்கடவ கண்ணீரைத் தன் கண்ணிலே கொண்டாள். தன்னுடையவாய், குவளைப் பூப்போலேயிருக்கிற அழகிய கண்களிலே நீரைக் கொண்டாள். நம்மைச் செய்யச்சொல்லுகிறதென்? என்ன (வண்டு திவளும் தண்ணந்துழாய் கொடீர்) விரஹஜ்வரத்தாலே வாடின இவள் மார்வில் மாலையை வாங்கி, உம்முடைய மார்வில் செவ்விமாறாத மாலையைக் கொடுக்கிறிலீர். அவ்வண்டுகளுக்கு என்ன கண்ணீரைக் கண்டு கொடுக்கிறீர்? திவளுகை – படிகை, அசைகை, ஒளி விடுகை இவையித்தனையும் சொல்லக் கடவது. (என) இவை என்னென்பின? (தவள வண்ணர் தகவுகளே) “ஸுத்3த4 ஸ்வபா4வரான உம்முடைய தகவுகள் எங்கே போயிற்றின?” என்று எம்பார் அருளிச்செய்யும்படி. அன்றிக்கே, ப4ட்டர், “உம்மைப் போலே நாலு ஶிஷ்டர் களமையுமிறே அப3லைகள் குடிகெட” என்றார்.
ஆறாம் பாட்டு
தகவுடை யவனே என்னும்*பின்னும்
மிகவிரும் பும்பிரான்! என்னும்*எனது
அகவுயிர்க்கு அமுதே! என்னும்*உள்ளம்
உகஉருகிநின் றுள்ளுளே.
ப – அநந்தரம், தன்னிலே சிதிலையாய், உம்முடைய போக்யதாதிஶயத்தைப் பேசி வாய்புலற்றாநின்றாள் என்கிறாள்.
உள்ளம் – தன் நெஞ்சு, உக – அழியும்படி, உருகி – (ஸ்வரூபம்) நீராய் உருகி, உள்ளுளே – தன்னிலே தன்னிலே, நின்று – நின்று, தகவு – (என்னை புஜிப்பிக்கைக்கு அடியான) க்ருபாதிஸ்வபாவங்களை, உடையவனே – உடையவனே, என்னும் – என்னும், பின்னும் – அவ்வளவிலே நில்லாதே, மிக – மேன்மேலும், விரும்பும் – விரும்பும்படியான, பிரான் – உபகாரகனே, என்னும் – என்னும், எனது – என்னுடைய, அகவுயிர்க்கு – அந்தராத்மாவுக்கு, அமுதே – நித்யமான நிரதிஶயபோக்யமே, என்னும் – என்னாநிற்கும்.
“மிக விரும்பும்” என்று – தன்னை அவன் விரும்பினபடியாகவுமாம்.
ஈடு – ஆறாம் பாட்டு. இவள் அவஸாத3த்தைக்கண்ட திருத்தாயார் “நிர்த்த3யர்” என்றாள்; இவள் அதுபொறாதே, “தகவுடையவனே!” என்று அத்தை நிரூபகமாகச் சொல்லாநின்றாள் என்கிறாள். (தகவுடையவனே என்னும்) கெடுவாய்! ஆகரத்தில் தகவு மறுக்குமோ? நம் குற்றங்காண் என்னாநின்றாள். “ ‘தகவில்லை’ என்றவள் வாயைப் புதைத்தாற்போலே வந்து தோற்றுவதே!” என்று அவன் வந்தால் பண்ணும் விருப்பத்தைப் பண்ணாநிற்கும். (பின்னும் மிக விரும்பும்) பா4வநாப்ரகர்ஷம் இருக்கிறபடி. (பிரான் என்னும்) பெற்ற தாய்க்கு அவகாசம் வையாதே வந்து தோற்றுவதே! இதென்ன உபகாரந்தான்! என்னும். (எனதகவுயிர்க்கு அமுதே என்னும்) என்னுடைய ப்ரத்யகா3த்மாவுக்கு போ4க்3யனானவனே! என்னும். நித்யவஸ்து அழியாமல் நோக்கும் அம்ருதமாயிற்று இது. போ4க3த3சையில் சொல்லுமவையெல்லாம் சொல்லா நின்றாள்.
(உள்ளம் உக உருகிநின்று) உள்ளென்பது – மேல். அமூர்த்தமானது மூர்த்தீ – ப4வித்து உருகி த்3ரவீபூ4தமாய் மங்கிப்போகாநின்றது. “உள்ளம் உகவுருகிநின்று தகவுடையவனே என்னும், பின்னும் மிக விரும்பும், பிரான் என்னும், எனது அகவுயிர்க்கமுதே என்னும்; இது, நாம் பேச்சுக்கொண்டு அறிந்த அம்சம்; உள்ளோடுகிறது – (உள்ளுளே) வாசாமகோ3சரம். “உள்ளுளே உருகிநின்று” என்பாருமுண்டு.
ஏழாம் பாட்டு
உள்ளு ளாவி உலர்ந்துலர்ந்து*என
வள்ளலே! கண்ணனே! என்னும்*பின்னும்
வெள்ளநீர்க் கிடந்தாய்! என்னும்*என
கள்விதான் பட்ட வஞ்சனையே!
ப – அநந்தரம், “அபேக்ஷித்தார்க்கு உபகரிக்க அணித்தாக வர்த்திக்கிறவனே!” என்னாநின்றாள் என்கிறாள்.
என கள்வி – எனக்கு (தன் நெஞ்சில் விகாரம் தோன்றாதபடி மறைக்கும்) களவையுடைய இவள், தான் பட்ட – தான் அகப்படும்படி அவன்செய்த, வஞ்சனை – வஞ்சநைகளிருந்தபடி, உள்ளுள் – ஹ்ருதயஸ்தாநத்துக்குள்ளே நிற்கிற, ஆவி – (அசோஷ்யமான) அந்தராத்மாவானது, உலர்ந்துலர்ந்து – உலர்த்திமேல் உலர்த்தியாம்படியாய், என – எனக்கு உன்னை முற்றூட்டாகத் தந்த, வள்ளலே – மஹோதாரனே! கண்ணனே – (அதுதான் உன்பேறாம்படியான தாழ்ச்சியையுடைய) க்ருஷ்ணனே! என்னும் – என்னும்; பின்னும் – அதுக்குமேலே, (அவதார கந்தமாம்படி அணித்தாக) வெள்ளநீர் – பரிபூர்ண ஜலமான கடலிலே, கிடந்தாய் – கண்வளர்ந்தருளினவனே!, என்னும் – என்னும். அப்படுக்கை தனக்குறுப்பென்று இருக்கிறாள்.
ஈடு – ஏழாம் பாட்டு. தன்நெஞ்சில் ஓடுகிறது பிறர் அறியாதபடி அடக்கமுடைய இவள், வாய்விட்டுக் கூப்பிடும்படி இவளை வஞ்சித்தான் என்கிறாள்.
(உள்ளுளாவி) ஆந்தரமான மநஸ்ஸுக்கு தா4ரகமான ஆத்மா சருகாய் வருகிறபடி. “அச்சே2த்3யோःயமதா3ஹ்யோःயமக்லேத்3யோःசோஷ்ய ஏவ ச” என்று – அசோஷ்யம் என்று சொல்லுகிற இதுவும் போயிற்று என்கிறாள். பா4வப3ந்த4மடியாக வருகிற நோயாகையாலே அகவாயே பிடித்து வெந்து கொண்டு வருமாயிற்று. விடாயர் கற்பூரநிகரம் வாயிலிடுமாபோலே – (என வள்ளலே கண்ணனே என்னும்) இவ்வளவான ஆர்த்திகளிலே வந்து உன்னை எனக்குக் கையாளாகத் தருமவனே! என்னாநின்றாள்.
அதுக்குமேலே, (“தாபார்த்தோ ஜலஶாயிநம்”) என்று, என் விடாய்க்கு உதவத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தருளிற்றே! என்னும். இக்கிடை, இவளுக்கு ஒரு படுக்கையிலே சாய்ந்தாற்போலே இருக்கிறதுகாணும்! (என கள்வி) தன் ஹ்ருத3யத்தில் ஓடுகிறது பிறர் அறியாதபடி மறைத்துப் பரிமாறக்கடவ இவள் படும்பாடே இது! (தான் பட்ட) (“ந ஜீவேயம் க்ஷணமபி”) என்கிற தான் அவிக்ருதனாய், இவள் விக்ருதையாவதே! (வஞ்சனை) அளவுபடைக்குப் பெரும்படை தோற்பது வஞ்சநத்தாலேயிறே. பகலை இரவாக்கியும், “ஆயுதமெடேன்” என்று எடுத்தும் செய்த செயல்போலே இவளை வஞ்சித்தீரித்தனை.
எட்டாம் பாட்டு
வஞ்சனே! என்னும் கைதொழும்*தன
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும்*விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர்* உம்மைத்
தஞ்சமென்று இவள்பட் டனவே.
ப – அநந்தரம், ஆஸந்ந ஜநங்களுக்கு அநுபவவிரோதிநிவர்த்தகரான உம்மை விஸ்வஸித்து இவள் பட்டபாடுகள் என்! என்கிறாள்.
வஞ்சனே – (உட்புகுந்தாரைப்போலே ப4வ்யதையைக் காட்டி) வஞ்சித்தவனே! என்னும் – என்னும்; கைதொழும் – (“அவ்வஞ்சநத்துக்குத் தொழவேண்டாவோ?” என்று ப்ரணயரோஷத்தாலே) கையெடுத்துத் தொழாநிற்கும்; (பூர்வ ஸம்ஸ்லேஷ ப்ரகாரத்தை நினைத்து) தன நெஞ்சம் – தன் நெஞ்சானது, வேவ – தக்தமாம்படி, நெடிது உயிர்க்கும் – நெடுமூச்செறியும்; விறல் – பெருமிடுக்கனான, கஞ்சனை – கம்ஸனை, வஞ்சனை செய்தீர் – அவன் வஞ்சனை அவனோடே போம்படி பண்ணினவரே! உம்மை – (மதுரையில் பெண்களுக்கு உதவின) உம்மை, தஞ்சமென்று – (தனக்குத்) தஞ்சமென்று, இவள் – இவள், பட்டன – பட்ட வெள்ளம், ஏ – என்!
இப்படி கரணத்ரயமும் சி திலமாம்படி பண்ணவேணுமோ? என்று கருத்து.
ஈடு – எட்டாம் பாட்டு. உம்மை அநுப4வித்து ஸுகி2க்கவைத்தீரல்லீர்; கம்ஸனைப் போலே முடித்துவிட்டீரல்லீர்; உம்மை “ரக்ஷகர்” என்றிருந்த இவள்படும் பாடே இது! என்கிறாள்.
(வஞ்சனே என்னும்) தாயார் “வஞ்சித்தான்” என்னப் பொறுத்திலள்; நான் “அல்லேன்” என்றாலும் தவிரவொண்ணாதபடி வஞ்சித்து உன் திருவடிகளிலே சேர்த்துக்கொண்ட உபகாரகனே! என்னாநின்றாள்; * தானொட்டி வந்து என் தனிநெஞ்சை வஞ்சித்து ஊனொட்டிநின்று என்னுயிரில் கலந்து (1-7-7) இயலுமவனன்றோ. இப்படி என்னையும்அறியாதே வஞ்சித்து உன் திருவடிகளிலே சேர்த்த உபகாரகனே! என்னாநின்றாள். (கைதொழும்) வஞ்சித்த உபகாரத்துக்குத் தோற்றுத் தொழும்.
தாயார் சொன்ன கு3ணஹாநிக்கு ஒரு பரிஹாரம் பண்ணினவாறே ஆற்றாமை போகாதே; தன நெஞ்சம் வேவ நெடுமூச்செறியாநிற்கும்; “ததோ மலிநஸம்வீதாம் ராக்ஷஸீபி4ஸ்ஸமாவ்ருதாம் | உபவாஸக்ருஸாம் தீ3நாம் நி:ஸ்வஸந்தீம் புந: புந: ||” “உள்ளம் மலங்க” (2–4–4) என்று – வெட்டி விழுந்தபடி சொல்லிற்று; “உள்ளுளாவி உலர்ந்துலர்ந்து” (2–4-7) என்கிறவிடத்திலே – உலர்ந்தபடி சொல்லிற்று; இங்கே, (தன நெஞ்சம் வேவ) என்கையாலே – நெருப்புக் கொளுந்தினாற்போலே சொல்லுகிறது. (விறற்கஞ்சனை வஞ்சனை செய்தீர்) மிடுக்கனான கம்ஸனை அழியச்செய்தீர். உம்மைத்தோற்பிக்க நினைத்தாரை நீர் தோற்பிக்குமவராயிருந்தீர். ஆஸ்ரிதாநாஸ்ரித விபா4க3மற உமக்கு இரண்டு இடத்திலும் கார்யம் ஒன்றேயோ? (உம்மைத் தஞ்சமென்று) தஞ்சமல்லாதாரைத் தஞ்சம் என்றிருந்தால் சொல்லுமாபோலே சொல்லுவதே! “தஞ்சமாகிய தந்தை தாயொடு தானுமாய்” (3-6-9) என்னும் ஸர்வரக்ஷகனை, கா4துகரைச் சொல்லுமாபோலே சொல்லுகிறாளிறே, மகள்த4ஶையைப் பார்த்து. (இவள் பட்டனவே) ஒரு மஹாபா4ரதத்துக்குப் போரும்போலே. ஸம்ஸாரிகளைப்போலே உண்டு உடுத்துத் திரியவைத்தீரல்லீர்; உம்மை நித்யஸூரிகளைப்போலே அநுப4விக்கக் கொடுத்தீரல்லீர்; எங்களைப்போலே “தத் தஸ்ய ஸத்3ருசம் ப4வேத்” என்னுமளவில் இருக்கப்பெற்றிலள்; கம்ஸனைப்போலே முடித்தீரல்லீர். என் வழி வாராதே உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்தவேணும்?
ஒன்பதாம் பாட்டு
பட்ட போதுஎழு போதறியாள்*விரை
மட்டலர் தண்துழா யென்னும்*சுடர்
வட்ட வாய்நுதி நேமியீர்!*நுமது
இட்டம் என்கொல் இவ் வேழைக்கே?
ப – அநந்தரம், இவ்வளவில், ரக்ஷணோபகரணவத்தையையுடைய உம்முடைய நினைவு ஏதாயிருக்கிறது? என்கிறாள்.
(உறங்காமையாலும், உணர்ந்து தெளிவுடையளாயிராமையாலும்) பட்ட போது – அஸ்தமித்தபோதும், எழுபோது – உதித்தபோதும், அறியாள் – அறிகிறிலள்; (அறிகிறது நெஞ்சத்திலேயாகையாலே). விரை – பரிமளமும், மட்டு – மதுவும், மலர் – பரம்பின, தண்துழாய் – செவ்வித்திருத்துழாய், என்னும் – என்னாநிற்கும்; சுடர் – ஜ்வாலைகளையுடைய, வட்டம் – வட்டமான, வாய் – வாயையும், நுதி – கூர்மையையுமுடைய, நேமியீர் – திருவாழியையுடையவரே! நுமது – (ப்ரதிபந்தகத்தைக் கழித்துக் கிட்டப் பரிகரமுடையீரான) உம்முடைய, இட்டம் – நினைவானது, இவ்வேழைக்கு – (பற்றிற்று விடமாட்டாத) இச்சபலைக்கு, என்கொல் – ஏதாயிருக்கிறது?
ஸத்தைக்குறுப்பாயிருக்கிறதோ, முடிவுக்குறுப்பாயிருக்கிறதோ? என்று கருத்து.
ஈடு – ஒன்பதாம் பாட்டு. “இவள் பட்டன” என்கைக்கு என்பட்டாள்? என்ன, படுவதெல்லாம் பட்டாளாகில், இவள் இனி என்படுவாள்? என்கிறாள்.
(பட்டபோது எழுபோது அறியாள்) உதி3த்ததும் அஸ்தமித்ததும் அறிகிறிலள். இவள் அறிவதும் ஏதேனுமுண்டோ? என்னில் (விரை இத்யாதி3) விரை – இதொரு பரிமளமே! மட்டு – இதொரு தேனே! அலர் – இதொரு பூவே! தண் – இதொரு குளிர்த்தியே! என்று திருத்துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும். உம்முடைய *பேரும் தாரு(6-7-2)மொழிய அறியாள் என்கிறாள். என்றவாறே, “நம்மை ஆசைப்பட்டு இப்படி படப்பெற்றோமே!” என்று அலப்4யலாப4த்தாலே கையில் திருவாழியை விதிர்த்தான் – (சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்) சுடரையும், வட்டமான வாயையும், கூர்மையையுமுடைய திருவாழியைக் கையிலேயுடையீர்! இப்போது “சுடர்வட்ட வாய் நுதி” என்கிற விசேஷணமென்? என்னில்; பெண்பிள்ளையைக் காட்டில் திருத்தாயார், கையுந்திருவாழியுமான அழகுக்கு ஈடுபட்டு, விஶேஷணங்களிட்டு அநுப4விக்கிறாள். ஆஸ்ரிதாநாஸ்ரித விபா4க3மற உமக்கு அழிக்கைக்குப் பரிகரம் ஒன்றேயோ? “ஆழிப்படை அந்தணனை மறவியையின்றி மனத்துவைப்பாரே” (1-7-1) என்றிறே இவர் தம்முடைய வார்த்தையும். கையும் திருவாழியுமான அழகைக் கண்டால் நெஞ்சழியுமவர்களிறே.
(நுமதிட்டம் என்கொல்) ராவணஹிரண்யாதி3களைப்போலே முடிக்க நினைக்கிறீரோ? நித்யஸூரிகளைப்போலே கையும் திருவாழியுமான அழகை அநுப4விப்பிக்கிறீரோ? தன்னையும் மறந்து, உம்மையும் மறந்து, ஸம்ஸாரிகளைப் போலே உண்டு உடுத்துத் திரியவைக்கிறீரோ? இவள் பேற்றில் நீர் நினைத்திருக்கிறதென்? (இவ்வேழைக்கே) (பற்றிற்றுவிடாத) அத்யந்த சபலையான இவள் விஷயத்தில் நீர் நினைத்திருக்கிறதென்?
பத்தாம் பாட்டு
ஏழை பேதை இராப்பகல்*தன
கேழில்ஒண் கண்ணநீர் கொண்டாள்* கிளர்
வாழ்வைவேவ இலங்கைசெற்றீர்!*இவள்
மாழைநோக்கு ஒன்றும் வாட்டேன்மினே.
ப – அநந்தரம், விரோதி மிக்கால் வெந்துவிழப்பண்ணும் வீரப்பாட்டையுடைய நீர் – இவள் நோக்கொன்றுமொழியச் சென்றற்றது; இத்தை முடியாதொழியவேணும் என்கிறாள்.
ஏழை – (கிட்டாதொழியிலும் விடாத) சபலையுமாய், பேதை – (என்சொற்கேளாத) பேதையுமான இவள், இராப்பகல் – இரவோடு பகலோடு வாசியற, தன – தன், கேழ் – ஒப்பு, இல் – இல்லாத, ஒண் – அழகிய, கண் – கண்கள், நீர் கொண்டாள் – நீர் கொள்ளும்படியானாள்; கிளர் – மிக்க உயர்த்தியையுடைத்தாய் (பரபீடா3 ப2லமான), வாழ்வு – ராவணைஸ்வர்யம், வேவ – அக்நிஸாத்தாம்படி, இலங்கை – லங்கையை, செற்றீர் – அழியச்செற்றவனே! (அவளுக்கு உதவினாற்போலே) இவள் – இவளுடைய, மாழை – முக்3த4மான மானின் நோக்குப்போலேயிருக்கிற, நோக்கொன்றும் – நோக்கையொன்றையுமாகிலும், வாட்டேன்மின் – க்ஷயிப்பியாதொழியவேணும்.
இவள் நோக்குக்கிடீர் எல்லார்க்கும் உஜ்ஜீவநஹேது என்று கருத்து.
ஈடு – பத்தாம் பாட்டு. இவள் நோக்கொன்றுமொழிய அல்லாததெல்லாம் ஒழிந்தாள்; இந்நோக்கொன்றையும் நோக்கிக்கொள்ளீர் என்கிறாள்.
(ஏழை) “கிடையாது” என்று ப்ரமாண ப்ரஸித்3த4மானத்திலே, கிடைக்குமதில் பண்ணும் சாபலத்தைப் பண்ணுகை. (பேதை) “கிடையாது” என்று அறிந்து மீளும் பருவமல்ல; நான் ஹிதஞ்சொன்னாலும் கேளாத பருவம். (இராப்பகல் தன கேழிலொண் கண்ணநீர்கொண்டாள்) ஆநந்தா3ஸ்ருவுக்குத் தகுதியாய்; (கேழில்) கேழ் என்று – ஒப்பாய், இல் என்று – இல்லாமையாய், ஒப்பின்றிக்கேயிருப்பதாய்; ஒண்கண் – கண்ணநீரில்லாவிடிலும், கண்டார்க்கு ஆலத்திவழிக்க வேண்டும்படியான கண் ஸர்வகாலமும் அஸ்ருபூர்ணமாயிற்று. தாமரையிலே முத்துப்பட்டாற்போலே இக்கண்ணும் கண்ணநீருமாயிருக்கிற இருப்பை, காட்டிலெறித்த நிலாவாக்குவதே! இவ்விருப்புக்கு க்ருஷிபண்ணி, ப2லவேளையிலே இழப்பதே! பொன்னும் முத்தும் விளையும்படியிறே க்ருஷிபண்ணிற்று; இப்போது இவளிழவுக்கன்றியே, அவனிழவுக்காயிற்று இவள் கரைகிறது.
(கிளர் இத்யாதி3) நடுவே கண்ணீர் விழவிடுமித்தனையோ விரோதி4 கனத்திருக்க? என்ன; ராவணனிலும் வலிதோ இவளுடைய விரோதி4வர்க்க3ம்? “உதீ3ர்ணஸ்ய ராவணஸ்ய” என்கிறபடியே – தாயும் தமப்பனும் சேரவிருக்கப் பெறாத ஐஸ்வர்யமிறே; கிளர்ந்த ஐஸ்வர்யமானது வேம்படி லங்கையை நிரஸித்தீர். ஒன்றை அழிக்க நினைத்தால், முதல் கிடவாமே அழிக்குமவராயிராநின்றீர். (இவள் மாழை நோக்கொன்றும் வாட்டேன்மினே) இவளுடைய முக்3த4மான நோக்கொன்றும் கிடக்கும்படி கார்யம் பார்க்கவேணும். மாழை யென்று – இளமை. (நோக்கொன்றும் வாட்டேன்மினே) இவள் தானே முடிந்துபோகிறாள்; நாங்கள் தானேயிழக்கிறோம்; ஜீவிக்கவிருக்கிற நீர் வேணுமாகில், உம்முடைய ஜீவநத்தை நோக்கிக் கொள்ளப்பாரும்.
பதினொன்றாம் பாட்டு
*வாட்ட மில்புகழ் வாமனனை*இசை
கூட்டி வண்சட கோபன்சொல்*அமை
பாட்டு ஓராயிரத்திப்பத்தால்*அடி
சூட்ட லாகும் அந் தாமமே.
ப – அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் ப2லமாக பகவதாராதநரூப கைங்கர்யத்தை அருளிச்செய்கிறார்.
(நோக்கு வாடாதபடி தன் குறைவுதோன்ற அர்த்தியாய் வந்து முகங்காட்டினபடியாலே) வாட்டம் – வாட்டம், இல் – இல்லாத, புகழ் – குணப்ரதையையுடைய, வாமனனை – வாமநனைக்குறித்து, வண் – உதாரரான, சடகோபன் – ஆழ்வார், இசை – இசையோடே, கூட்டி – கூட்டி, சொல் – சொன்ன, அமை – (லக்ஷணபூர்த்தியாலே) அமைதியையுடைய, ஓர் – அத்விதீயமான, பாட்டு – பாட்டுக்கள், ஆயிரத்து – ஆயிரத்திலும், இப்பத்தால் – இப்பத்தால், அடி – அந்த வாமநனடியிலே, அம் – அழகிய, தாமம் – மாலையை, சூட்டலாகும் – சூட்டலாம். இது வஞ்சி விருத்தம்.
ஈடு – நிக3மத்தில் – இத்திருவாய்மொழியை அப்4யஸிக்கவல்லார், இவர் ப்ரார்த்தி2த்தபடியே நித்யஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு, ஸர்வேஶ்வரன் திருவடிகளிலே சூட்டுநன்மாலை(திருவிருத்தம்-21)ப்படியே திருமாலை சாத்தி அடிமைசெய்யப் பெறுவர்கள் என்கிறார்.
(வாட்டமில் புகழ் வாமனனை) இவ்வளவிலே வந்து முக2ங்காட்டிற்றிலனாகில், அவன் புகழுக்கு வாட்டம் வந்ததிறே. (வாமனனை) தன் உடைமை பெறுகைக்கு இரப்பாளனாமவனிறே.
(இசைகூட்டி) பரிமளத்தோடே பூ அலருமாபோலே, இசையோடே புணர்ப் புண்டதாயிற்று. (வண்சடகோபன் சொல்) “உதா3ரதீ4ர்முநி:” என்னுமாபோலே, மாநஸாநுப4வமன்றிக்கே வாசிகமாக்கி நாட்டை வாழ்வித்த ஔதா3ர்யம். (அமை பாட்டோராயிரத்து) அமைவு – சமைவாய், சப்3தா3ர்த்த2ங்கள் நிறைந்திருக்கை. (இப்பத்தால் இத்யாதி3) இப்பத்தையும் அப்4யஸிக்கவல்லவர்களுக்குச் செவ்வி மாலையைக்கொண்டு அவன் திருவடிகளிலே நித்யகைங்கர்யம் பண்ணப் பெறலாம். “கைங்கர்யம் பண்ணவேணும்” என்று ஆசைப்பட்டு அது பெறாமையாலே போலேகாணும் இவ்வாற்றாமையெல்லாம் பிறந்தது; பித்ருத4நம் புத்ரனுக்கு ப்ராப்தமாமாபோலே, இவ்வாற்றாமையால் வந்த க்லேசம் இது கற்றவர்களுக்கு அநுப4விக்க வேண்டாதே, “அடியார்கள் குழாங்களை – உடன்கூடுவதென்றுகொலோ” (2–3-10) என்று ஆசைப்பட்டபடியே அத்திரளிலே போய்ப்புக்கு அநுப4விக்கப்பெறுவர் என்கிறார்.
முதற்பாட்டில், ஆஸ்ரிதராபத்தே செப்பேடாக உதவும் ஸ்வபா4வனானவன், இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகிறிலன் என்றாள்; இரண்டாம் பாட்டில், “விரோதி4யுண்டே” என்று நினைவாக, பா3ணனுடைய பா3ஹுவநத்திலும் வலிதோ இவள் விரோதி4? என்றாள்; மூன்றாம் பாட்டில், இப்படிசெய்ய நினைத்த நீர் முன்பு அச்செயலை என்றிய (=எதுக்காக) செய்தீர்? என்றாள்; நாலாம் பாட்டில், அது பொறுக்கமாட்டாமல் அதுதன்னையே உபகாரமாகச் சொல்லாநின்றாள் என்றாள்; ஐந்தாம் பாட்டில், அவ்வளவிலும் வாராமையாலே, நிர்த3யன் என்றாள் திருத்தாயார்; ஆறாம் பாட்டில், அதுபொறுக்கமாட்டாமல், ‘கெடுவாய்! ஆகரத்தில் தகவு மறுக்குமோ? அது நம் குறைகாண்’ என்கிறாள் என்றாள்; ஏழாம் பாட்டில், அவன் கு3ணஹாநிதன்னையே கு3ணமாகக் கொள்ளும்படி இவளை வஞ்சித்தான் என்றாள்; எட்டாம் பாட்டில், ‘உம்மை அபாஶ்ரயமாகப் பற்றின இவள் படும்பாடே இது’ என்றாள்; ஒன்பதாம் பாட்டில், ‘இவள்பேற்றில் நீர் செய்தருள நினைத்திருக்கிறதென்?’ என்றாள்; பத்தாம் பாட்டில், ‘சேஷித்தது நோக்கொன்றுமேயாயிற்று; இது ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்’ என்றாள்; நிக3மத்தில், இத்திருவாய்மொழியை அப்4யஸித்தார்க்குப் ப2லஞ்சொல்லித் தலைக்கட்டினார்.
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்
த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி– ஆடியாடி
தத்ப்ரார்த்தி2தாநதி4க3மேந ஸமுத்தி2தார்த்தி:
அக்3ரே ஹரே: பரமுகே2ந யதா2 விதே4யம் |
ஆர்த்தேர் நிவேத3நமபாகரணார்த்த2நஞ்ச
மூர்ச்சா2ம் ததா2 முநிரகா3ந்மஹதீம் சதுர்த்தே2 || 14
த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளி —ஆடியாடி
ப்ரஹ்லாதா3ர்த்தே2 ந்ருஸிம்ஹம் க்ஷபிதவிபது3ஷாவல்லப4ம் க்ஷிப்தலங்கம்
க்ஷ்வேளப்ரத்யர்த்தி2கேதும் ஶ்ரமஹரதுளஸீமாலிநம் தை4ர்யஹேதும் |
த்ராணே த3த்தாவதா4நம் ஸ்வரிபுஹதிக்ருதாஶ்வாஸநம் தீ3ப்தஹேதிம்
ஸத்ப்ரேக்ஷாரக்ஷிதாரம் வ்யஸநநிரஸநம் வ்யக்தகீர்த்திம் ஜகா3த3 || 16
திருவாய்மொழி நூற்றந்தாதி
ஆடிமகிழ் வானி லடியார் குழாங்களுடன்
கூடியின்ப மெய்தாக் குறையதனால் – வாடிமிக
அன்புற்றார் தன்நிலைமை யாய்ந்துரைக்க மோகித்துத்
துன்புற்றான் மாறனந் தோ. 14
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
*******