ஸ்ரீ:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பகவத் விஷயம்
திருவாய்மொழி மூலமும் அதன் வ்யாக்யானங்களுள் வாதி3கேஸரி அழகியமணவாளச்சீயர் அருளிய பன்னீராயிரப்படியும், நம்பிள்ளை அருளிய ஈடுமுப்பத்தாறாயிரப்படியும்
முதல் திருவாய்மொழி
முடிச்சோதி : ப்ரவேசம்
பன்னீராயிரப்படி
மூன்றாம்பத்தில், கீழிரண்டுபத்தாலும் – ப்ராப்யமான ப்ரஹ்மஸ்வரூபத்தினுடைய சேஷித்வஸித்தமான ரக்ஷகத்வபோக்யத்வங்கள் சொல்லிற்றாய், அநந்தரம் மூன்றாம்பத்தாலும், நாலாம்பத்தாலும் – ப்ராப்தாவான ப்ரத்யகாத்மஸ்வரூபத்தினுடைய பகவதேகசேஷத்வஸித்தமான ததேகாநு பவத்வமும் ததேகப்ரியத்வமும் சொல்லுகிறது. அதில் ததேகாநுபவத்வபரமான இம்மூன்றாம்பத்தில் – பகவச்சேஷித்வ பாரம்ய ஸித்தமான ஆத்மசேஷத்வத்தினுடைய ஸ்வாபாவிகத்வத்தையும், அதுக்குவிரோதியான தேஹஸம்பந்தாதி நிவர்த்தநீய மென்னுமிடத்தையும், நித்ருத்தவிரோதிகனுக்கு சேஷத்ருத்திப்ரகாரம் ப்ரார்த்தநீயமென்னுமிடத்தையும், சேஷியினுடைய ஸர்வாத்மபாவப்ரயுக்தமான சேதநனுடைய அப்ருதக்ஸித்தப்ரகாரத்வம் சேஷத்வவேஷ மென்னுமிடத்தையும், ஏவம்வித சேஷத்வரஸத்தால் வந்த ப்ரேமவிகாரத்தையும், சேஷத்வப்ரதிஸம்பந்தி அர்ச்சாவதாரபர்யந்த மென்னுமிடத்தையும், தச்சேஷத்வாபித்ருத்திரூபமான ததீயசேஷத்வகாஷ்டையையும், ததீயபாரதந்த்ர்ய நிதாநமான ததநுபவாபிநிவேசத் தையும், அநுபவவிசேஷமான வாசிகாநுபவ வைலக்ஷண்யத்தையும், ஸர்வப்ரகாராநுபவ ஸித்தமான ஸமஸ்தவிரோதிநித்ருத்தியையும் அருளிச்செய்து, இச்சேதநனுடைய பகவதேகாநுபவத்வத்தை ப்ரதிபாதிக்கிறார்.
இதில், முதல்திருவாய்மொழியில் – சேஷத்வத்தினுடைய ஸ்வாபாவி கத்வத்துக்கு மூலமான சேஷியினுடைய ஸர்வப்ரகார பாரம்யத்தை ப்ரதிபாதிப்பதாக, தெற்குத் திருமலையிலே கைங்கர்யப்ரதிஸம்பந்திதயா ஸந்நிஹிதரான அழகருடைய திவ்யஸௌந்தர்யத்தை அபரோக்ஷித்து- ஆபரணாவயவ ஶோபையினுடைய ஸுகடிதத்வத்தையும், உஜ்ஜ்வலமான ஸௌந்தர்யத்தினுடைய உபமாநராஹித்யத்தையும், ஸர்வப்ரகார ஔஜ்ஜ்வல்யத் தாலுண்டான ஸர்வேஸ்வரத்வத்தையும், அந்தப்பாரம்யத்தினுடைய போக்ய தாதிஸயத்தையும், இந்தவைலக்ஷண்யத்தினுடைய வாசாமகோசர மாஹாத்ம் யத்தையும், ஸமஸ்தவேதங்களாலும் ஸாகல்யோக்தி பண்ணவொண்ணாமையையும், அதிஸயித ஞாநரான ப்ரஹ்மருத்ராதி தேவதாவர்க்கமும் சொல்ல நினைத்தாலும் அத்வௌஜ்ஜ்வல்யத்துக்கு மாலிந்யாவஹமென்னுமிடத்தையும், அபூர்வனாய் அதிசயிதஜ்ஞாநனாயிருப்பானொரு ப்ரஹ்மா தலைப்படிலும் அதேஜஸ்கரமென்னுமிடத்தையும், ஆஸ்ரிதவாத்ஸல்யாதிஶயத்துக்கு ஸங்கல்ப முகத்தாற் பண்ணும் ஸம்ஸ்ரிதரக்ஷணபாரம்யமும் திரஸ்காரகரமென்னு மிடத்தையும், ஏவம்விதமான பாரம்யத்தை அறிந்து ஈஸ்வராபிமாநிகளும் ஆஸ்ரயிக்கை ஏற்றமல்லவென்னுமிடத்தையும் அருளிச்செய்து, பரமசேஷியான ஈஸ்வரன் ஸந்நிதியிலே தச்சேஷத்வத்தினுடைய ஸ்வாபாவிகத்வத்தையும் உபபாதித்தருளுகிறார்.
ஈடு–முப்பத்தாறாயிரப்படி
“பொருளென்றித்வுலகம் படைத்தவன்புகழ்மேல் மருளில் வண்குருகூர் வண்சடகோபன்” (2-10-11) என்று அவன் கல்யாணகுணவிஷயமாக அஜ்ஞான மில்லையென்றார் கீழில் திருவாய்மொழியில்; அந்த குணாதிக விஷயந்தன்னில் ஓர் அஜ்ஞானம் அநுவர்த்திக்கிறபடி சொல்லுகிறார் இதில். கீழ்சொன்ன அஜ்ஞாநத்துக்கு அடி கர்மமாயிருக்கும்; இங்குத்தை அஜ்ஞாநத்துக்கு அடி விஷயவைலக்ஷண்ய மாயிருக்கும். நித்யஸுரிகளுக்கும் உள்ளதொரு ஸம்சயமாயிற்று இது. ஸ்வரூபாநுபந்தியா யிருப்பதொரு ஸம்சயமாகையாலே, ஸ்வரூபமுள்ளதனையும் நிற்பதொன்றிறே இது.
திருமலையை அநுபவித்துக்கொண்டு வாராநிற்கச்செய்தே, “வடமாமலையுச்சியை” (திருமொழி 7.10.3) என்னுமாபோலே திருமலையில் ஏகதேசமென்னலாம்படியாய், கல்பகதரு பஹுசாகமாகப் பணைத்துப் பூத்தாப்போலே நிற்கிற அழகருடைய ஸௌந்தர்யத்தை அநுபவித்தார்; வேதங்களோடு வைதிக புருஷர்களோடு ப்ரஹ்மருத்ராதிகளோடு வாசியற ஸ்வயத்நத்தால் காணுமன்று காணவொண்ணாதபடி யிருக்கிற இருப்பையும், தானேகொடுவந்து காட்டுமன்று ஜந்ம த்ருத்தாதிகளால் குறையநின்றார்க்கும் காணலாயிருக்கிற இருப்பையும் அநுஸந்தித்து விஸ்மிதராகிறார்.
முதல் பாட்டு
முடிச்சோதியாய் உனதுமுகச்சோதிமலர்ந்ததுவோ*
அடிச்சோதிநீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ*
படிச்சோதியாடையொடும் பல்கலனாய்* நின்பைம்பொன்
கடிச்சோதிகலந்ததுவோ திருமாலேகட்டுரையே.
ப – முதற்பாட்டில், ஸ்ரிய:பதியான சேஷியினுடைய ஆபரணாவயவ சோபைகளினுடைய ஸுகடிதத்வத்தாலே விவேகாயோக்யமாம்படி பிறந்த ஸம்ஶயத்தைத் தீர அருளிச் செய்ய வேணுமென்று அவன் தன்னை அபேக்ஷிக்கிறார்.
உனது – உன்னுடைய, முகம் – திருமுகத்தின், சோதி – ஒளியானது, முடி- திருவபிஷேகத்தின், சோதியாய் – ஒளியாய், மலர்ந்ததுவோ – மேலே கிளம்பிற்றோ அடி- திருவடிகளின், சோதி – ஒளி, நீ நின்ற – நீ நின்ற, தாமரையாய் – ஆஸநபத்மமாய், அலர்ந்ததுவோ – கீழே பரம்பிற்றோ? பை – பரந்த, பொன் – அழகையுடைய, நின் – உன்,
கடி – கடியின், சோதி – சோதியானது, படி – ஸ்வாபாவிகமான, சோதி – ஒளியையுடைய, ஆடையொடும் – திருப்பரிவட்டத்தோடே, பல்கலனாய் – பல தித்யாபரணங்களுமாய், கலந்ததுவோ – கீழும் மேலுங் கலந்ததோ? திருமாலே – ஸ்ரிய:பதியாகையாலே, “அர்த்தோவிஷ்ணுரியம்வாணீ” என்கிறபடியே சப்தார்த்தங்களிரண்டுக்கும் கடவனே! கட்டுரை – இத்தை ஸம்ஶயமற அருளிச்செய்யவேணும்.
ஸம்சயம் இரண்டு கோடியிலும் கிடக்கையாலே, முடிமுதலான ஆபரணாதிஶோபை முகம் முதலான அவயவசோபையாயிற்றோ? என்றும் கொள்வது. படி-ஸ்வபாவம், கடி-அரைக்கட்டு, பை-விரிவு.
ஈடு – முதற்பாட்டில், அழகருடைய திவ்யாவயவங்களுக்கும் திருவணிகலன்களுக்கு முண்டான ஸுகடிதத்வத்தைக் கண்டு விஸ்மிதராகிறார்.
(முடிச்சோதியாய் உனதுமுகச்சோதி மலர்ந்ததுவோ) உன்னுடைய திருமுகத்திலுண்டான தேஜஸ்ஸானது திருவபிஷேகத்தின் தேஜஸ்ஸாய்க் கொண்டு விகஸிதமாயிற்றோ? உன்னுடைய திருவபிஷேகத்தின் தேஜஸ்ஸானது திருமுகத்தின் தேஜஸ்ஸாய்க் கொண்டு விகஸிதமாயிற்றோ? என்றும் வரக்கடவது. சேஷபூதனுக்கு முற்படத்தோற்றுவது தன்னுடைய சேஷத்வ ப்ரதிஸம்பந்தியான அவனுடைய சேஷித்வமிறே. அவனுடைய ஶேஷித்வப்ரகாஶகமான திருவபிஷேகத்தின் அழகு திருவடிகளிலே போரவீசிற்று. (அடிச்சோதி) திருவடிகளின் தேஜஸ்ஸானது தேவர் நின்ற ஆஸநபத்மமாய்க் கொண்டு விகஸிதமாயிற்றோ? நீ நின்ற தாமரை அடிச்சோதியாய்க்கொண்டு விகஸிதமாயிற்றோ? (நீநின்ற) ஏகரூபனானவனும் நீரிலே நின்றாற்போலே ஆதரித்து நிற்கும்படி. இது ப்ராப்யத்தினுடைய சரமாவதியாகையாலே அத்வருகு போக்கில்லையே; திருவடிகளின் தேஜஸ்ஸானது ஏறக் கொழித்தது; கடலுக்குள் பட்டதொரு த்ருணம் ஒருதிரை ஒருதிரையிலே தள்ளக் கிடந்து அலையுமாபோலே, ஓரழகு ஓரழகிலே தள்ளக் கிடந்து அவற்றை அநுபவிக்கிறார்; (படிச்சோதி) திருமேனியழகு பல்கலனாய்க் கலந்ததுவோ? பல்கலன் படிச்சோதியாய்க் கலந்ததுவோ? சோதியாடை கடிச்சோதியாய்க் கலந்ததுவோ? கடிச்சோதி சோதியாடையாய்க் கலந்ததுவோ? நின் பைம் பொற்கடிச்சோதி படிச்சோதியாடை யொடும் பல்கலனாய்க்கொண்டு கலந்ததுவோ – உன்னுடைய அழகியதாய் ஸ்ப்ருஹணீயமான தித்ய கடிப்ரதேசத்திலுண்டான தேஜஸ்ஸானது, ஸ்வாபாவிகமான தேஜஸ்ஸையுடைத்தான திருப்பீதாம்பரம் தொடக்கமான பல திருவாபரணங்களாய்க் கொண்டு சேர்ந்ததுவோ? நீரிலே நீர் கலந்தாற்போலே பேதக்ரஹணத்துக்கு அநுபபத்தியேயாயிருக்கை. அன்றியே, படிச்சோதி-படியாணியான ஒளி யென்னவுமாம், (திருமாலே) – இதுவும் ஒரு சேர்த்தியழகு இருக்கிறபடி. “அகலகில்லேன்” (6-10-10) என்று பிரியமாட்டாமலிருக்கிற பிராட்டியும், ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான நீயுங்கூட விசாரித்து இதுக்கு ஒருபோக்கடி அருளிச்செய்யவேணும். இன்று அநுபவிக்கப்புக்க இவர் _என்றுமோரியல்வினரென நினைவரியவர்_ (1-1-6) என்பர்; நித்யாநுபவம் பண்ணுமவர்கள் “பண்டிவரைக் கண்டறிவதெத்வூரில்யாம்” (பெரிய திருமொழி
8-1-9) என்றே பயிலாநிற்பர்கள்; ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனானவன் ‘தனக்கும் தன் தன்மை அறியவரியனாயிருக்கும்’ (8.4.6); ஆக, இப்படி இன்று அநுபவிக்கப்புக்க இவரோடு நித்யாநுபவம் பண்ணுகிறவர்களோடு அவன்தன்னோடு வாசியில்லை, இஸ்ஸம்சயம் அநுவர்த்திக்கைக்கு. தமக்கு இந்த ஸம்சயம் அறுதியிடவொண்ணாதாப் போலே அவர்களுக்கு மென்றிருக்கிறார். (கட்டுரையே) சொல்லவேணுமென்றபடி.
இரண்டாம் பாட்டு
கட்டுரைக்கில்தாமரை நின்கண்பாதம்கையொத்வா*
சுட்டுரைத்தநன்பொன் உன்திருமேனியொளியொத்வாது*
ஒட்டுரைத்துஇத்வுலகுன்னைப் புகழ்வெல்லாம்பெரும்பாலும்*
பட்டுரையாய்ப்புற்கென்றே காட்டுமால்பரஞ்சோதி.
ப – அநந்தரம், உக்தமான வடிவழகினுடைய உபமாநராஹித்யத்தை அருளிச் செய்கிறார்.
பரஞ்சோதி – பரஞ்சோதியானவனே! கட்டுரைக்கில் – நிர்ணயித்துச் சொல்லில், தாமரை – தாமரையானவை, நின் – உன்னுடைய, கண் பாதம் கை -திருக்கண்கள், திருவடிகள், திருக்கைகளை, ஒவ்வா – ஒவ்வா; சுட்டு – ஓடவைத்து, உரைத்த-ஒப்பமிட்ட, நன்பொன் – நல்ல பொன்னானது, உன் – உன்னுடைய, திருமேனி – (அப்ராக்ருதமான) திருமேனியின், ஒளி – ஸமுதாயசோபையை, ஒவ்வாது – ஒவ்வாது, (ஆகையால்), இ உலகு – இந்தலோகம், ஒட்டு – உவமைச் செறிவை, உரைத்து – சொல்லி, உன்னை – உன்னை, புகழ்வு எல்லாம் – புகழுமது எல்லாம், பெரும்பாலும் – ப்ராயேண, பட்டுரையாய் – தோற்றிற்றுச் சொல்லிற்றாய், (தார்ஷ்டாந்திகமான வாக்யத்தை), புற்கென்றே – புல்லியதாகவே, காட்டும் – காட்டாநிற்கும்.
புற்கு – புன்மை. ஒட்டு-உவமைச்செறிவு. தாமரையும் பொன்னும் ஒவ்வாமை – ஆகந்துகவைலக்ஷண்ய யுக்தமானவை ஸ்வபாவதோ விலக்ஷண வஸ்துவுக்குத் தகுதியல்லாமையாலே. பெரும்பாலும் – மிகவுமென்றுமாம்.
ஈடு – இரண்டாம்பாட்டு. அழகருடைய ஸௌந்தர்யத்துக்கு ஸத்ருசமில்லாமையாலே லோகத்தார் பண்ணும் ஸ்தோத்ரம் அங்குத்தைக்கு அவத்யமாமித்தனை என்கிறார்.
(கட்டுரைக்கில்)-அநுபவித்துக் குமிழிநீருண்டுபோமித்தனை போக்கிச் சொல்லப் போகாது. கட்டுரைக்கில் – கட்டுரையென்று முழுச்சொல்லாய், சொல்லில் என்றபடி. சொல்லில், தாமரை ஜாதியாக உன்னுடைய திருக்கண்களுக்கும் திருவடிகளுக்கும் திருக்கைகளுக்கும் ஒப்பாகாது. ஓரோ த்யக்திகளுக்கும் தாமரை ஜாதியாக ஒப்பாகாது. குளிர நோக்கின கண், தோற்றுவிழும் திருவடிகள், எடுத்தணைக்கும் திருக்கைகள் இவை இருக்கிறபடி *_ந சாஸ்த்ரம் நைவ ச க்ரம:_* என்கிறவிடத்தில் அடைவு சொல்லுகிறதன்றே; இவரும் அநுபவத்துக்குப் பாசுரமிட்டுச் சொல்லுகிறாரித் தனையிறே; (நின்கண்) என்கையாலே, ‘உனது முகச்சோதி’ (3-1-1) என்றத்தை நினைக்கிறது; (பாதம்) என்று ‘அடிச்சோதி’ (3-1-1) என்றத்தை நினைக்கிறது. (கை) என்று தாம் நடு அநுபவித்த அழகுக்கு உபலக்ஷணம்.
(சுட்டுரைத்த இத்யாதி) பொன்னை, உபமாநமாகப் போராதென்கைக்கு சிக்ஷிக்கிறார். சுட்டுரைத்த-காய்ச்சி ஓடவைத்து உரைத்த நன்றான பொன், உன்னுடைய ஸ்வாபாவிகமான திவ்யவிக்ரஹத்தினொளிக்கு ஒப்பாகாது. இத்தனை சிக்ஷித்தாலாயிற்று ஒப்பாகச் சொல்லப் பாத்தம் போராதது. *_ருக்மாபம்_* என்னக்கடவதிறே.
(ஒட்டுரைத்து) – ஒட்டாவது – கூடுகை: அதாவது சேருகை: ஸத்ருசமாயிருக்கை. உனக்கு ஸத்ருசமாகச் சொன்னார்களாய். (இவ்வுலகு) *_மஞ்சா: க்ரோசந்தி_* என்கிறபடியே காண்கிற இதுக்கு மேற்பட அறியாத இந்த லௌகிகர், ப்ராக்ருத பதார்த்த வைலக்ஷண்யமும் அறியாதவர்கள். (உன்னை)- சாஸ்த்ரைக ஸமதிகம்யனாய், அவைதானும் புகழப் புக்கால் *_யதோ வாசோ நிவர்த்தந்தே_* என்னும்படியான உன்னை. (புகழ்வெல்லாம்)-உள்ளதுஞ் சொல்லி, இல்லாததுமெல்லாம் இட்டுக்கொண்டு சொன்னார்களாயிருக்கிறதுமெல்லாம். (பெரும்பாலும்) – மிகவும்; ப்ராயேண. (பட்டுரையாய்) – பட்டது உரைக்கை, நெஞ்சில் பட்டதைச் சொல்லுகை; விஷயத்தைப்பாராதே ப்ரதிபந்நத்தைச் சொல்லுகை. (புற்கென்றே காட்டுமால்)- புன்மையையே காட்டாநின்றது. ‘இவன் ப்ரதிபந்நத்தைச் சொன்னானாய் விஷயத்தில் ஸ்பர்–யாதே யிருக்குமாகில், அங்குத்தைக்குப் புன்மையே காட்டும்படியென்?’ என்னில்; ரத்நமறியாதானொருவன் ‘குருவிந்தக் கல்லோடு ஒக்கும் இது’ என்றால், அத்வளவாகவிறே இவனுக்கு இதில் ப்ரதிபத்தி: அவ்வழியாலே அதுக்கு அவத்யமாமிறே; அப்படியே இவன் பண்ணும் ஸ்தோத்ரம் இங்குத்தைக்கு அவத்யமாயே தலைக்கட்டும். இங்குத்தைக்குப் புன்மையைக் காட்டுகைக்கு நிபந்தநமென்? என்னில், – (பரஞ்சோதி) *_நாராயண பரோஜ்யோதி:_* என்கிறபடியே, நீ ஸர்வ வஸ்து விஸஜாதீயனாகையாலே.
மூன்றாம் பாட்டு
பரஞ்சோதிநீபரமாய் நின்னிகழ்ந்துபின்* மற்றோர்
பரஞ்சோதியின்மையின் படியோவிநிகழ்கின்ற*
பரஞ்சோதிநின்னுள்ளே படருலகம்படைத்த* எம்
பரஞ்சோதிகோவிந்தா பண்புரைக்கமாட்டேனே.
ப: அநந்தரம், ஸர்வப்ரகாரஔஜ்ஜ்வல்யாதிசயத்தையுடைய உன்ஸ்வபாவம் எனக்குச் சொல்ல முடியாது என்கிறார்.
பரமாய் – ஸர்வஸ்மாத்பரனாய்க்கொண்டு, பரஞ்சோதி – நிரதிசயதேஜோரூபன், நீ-நீ; நின் – உன்னை, இகழ்ந்து – ஒழிந்து, பின் மற்று ஓர் பரஞ்சோதி – வேறு பரமாயிருப்பதொரு உஜ்ஜ்வலவஸ்து, இன்மையின் – இல்லாமையாலே, படி ஓவி- உபமாநமில்லாதபடி, நிகழ்கின்ற – வர்த்தியாநிற்கிற, பரஞ்சோதி – பரஞ்சோதிஸ்ஸப்த வாச்யனான, நின்னுள்ளே – உன்ஸங்கல்பத்துக்குள்ளே, படர் – விஸ்தீர்ணமான, உலகம் – லோகத்தை, படைத்த – ஸ்ருஷ்டித்து, எம் பரஞ்சோதி – ஸ்ருஷ்டமான லோகத்தினுடைய ஸ்வபாவம் உனக்குத் தட்டாதபடிநிற்கிற நிரதிசயௌஜ்ஜ்வல்யத்தை எனக்கு ப்ரகாசிப்பித்தவனாய், கோவிந்தா – அந்தப்பரத்வத்திலுங்காட்டில் கோபாலநாதி சீலௌஜ்ஜ்வல்யத்தையுடையவனே! பண்பு – உன்னுடைய விலக்ஷணவிக்ரஹ பாரம்யத்தாலும், உபமாநராஹித்யாதிசயத்தாலும், ஜகத்காரணத்வ பாரம்யத்தாலும்,
சீலாதிசயத்தாலும் உன்னுடைய ஔஜ்ஜ்வல்யஸ்வபாவத்தை, உரைக்க – பாசுரமிட்டுச் சொல்ல, மாட்டேன் – சக்தனல்லேன்.
ஈடு -மூன்றாம் பாட்டு. நம்பக்கல் முதலடியிடாத லௌகிகரை விடும்; த்யாத்ருத்தரே நீர்; பேசினாலோ? என்ன,-என்னாலேதான் பேசப்போமோ? என்கிறார்.
(பரஞ்சோதி நீ பரமாய்) பரமாய் – பரஞ்சோதி நீ. வடிவழகிலேயாதல், ஐஸ்வர்யத்திலேயாதல் அல்பமேற்றமுடையா னொருவனைக் கண்டால், ‘உன்தனை தேஜஸ்ஸு உடையானொருவனில்லை, உன்தனை ஐஸ்வர்யமுடையானொருவனில்லை’ என்பர்களிறே; அங்ஙனன்றிக்கே, ‘இனி ஒருத்யக்தியில் அவையில்லை’ என்னும்படி பூர்ணமாகவுள்ளது உன் பக்கலிலே யாகையாலே, பரமாய்க்கொண்டு பரஞ்ஜ்யோதிஸ்ஸாயிருக்கிறாய் நீ; *_தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி_* என்கிறபடியே. (நின் இத்யாதி) லோகத்தில் தன்னோடு ஒத்தாரும் தனக்கு மேற்பட்டாரும் அநேகராயிருக்கச் செய்தே ‘உனக்கு ஸமராதல், அதிகராதல் உண்டோ?’ என்னக் கடவதிறே; அங்ஙனன்றிக்கே, உன்னையொழிய வேறொரு பரஞ்ஜ்யோதிஸ்ஸு இல்லாமையாலே உபமாநரஹிதனாய்க் கொண்டு வர்த்தியாநின்றுள்ள பரஞ்ஜ்யோதிஸ்ஸு நீ.
தனக்குங்கூடக் கடவனல்லாதானொருவனை ‘நீயேயிறே நாட்டுக்கெல்லாம் கடவாய்’ என்னக்கடவது; அங்ஙனன்றிக்கே, உன்னுடைய ஸங்கல்பலவலேசத்திலே கார்யாகாரமாய்க் கொண்டு விஸ்த்ருதமாகாநின்றுள்ள லோகங்களையெல்லாம் உண்டாக்கின எம் பரஞ்ஜ்யோதி. *_புத்ரஸ்தே ஜாத:_* என்னுமாபோலே, அவற்றை யுண்டாக்கின பின்பு திருமேனியிலே பிறந்த புகர். ஸ்வாபாவிகமான மேன்மை அது, காரணத்வப்ரயுக்தமான புகர் இது; இப்படியிருக்கிற மேன்மையை எல்லைகாணிலும். (கோவிந்தா) நீர்மை தரை காணவொண்ணாதாயிருக்கிறது. (பண்பு) உன்னுடைய ப்ரகாரம். அது என்னால் சொல்லப்போகாது. அநுபவித்துப் போமித்தனை. (கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே) _நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெயூ ணென்னுமீனச்சொல்_ (திருவிருத்தம்-98) என்று, நெஞ்சால் நினைக்கவொண்ணாதது சொல்லத்தானே போகாதிறே.
நான்காம் பாட்டு
மாட்டாதேயாகிலும் இம்மலர்தலைமாஞாலம் *நின்
மாட்டாயமலர்புரையும் திருவுருவம்மனம்வைக்க*
மாட்டாத பலசமயமதிகொடுத்தாய் மலர்த்துழாய்*
மாட்டேநீமனம்வைத்தாய் மாஞாலம்வருந்தாதே.
ப : அநந்தரம், இந்த வைலக்ஷண்யத்தினுடைய போக்யதையிலே நீ அந்யபரனானால், அறிவில்லாத ஜகத்து க்லேசியாதோ? என்கிறார்.
மலர் – திருநாபீ கமலத்தை, தலை – (தனக்குத்) தலையாகவுடைய, இ மா ஞாலம் – இந்த பெரிய ஜகத்தானது, நின் – (ப்ராப்தனான) உன்னுடைய, மாட்டு ஆய – ஸ்வரூபத்திலேயாய், மலர் புரையும் – புஷ்பம்போலே ஸுகுமாரமான, திருவுருவம் – திருமேனியை, மனம் – நெஞ்சிலே, வைக்க – வைக்கைக்கு, மாட்டாதேயாகிலும் – (அநாதியாக) மாட்டாதிருக்கச் செய்தேயும், மாட்டாத -(விக்ரஹாநுஸந்தாநத்துக்கு) யோக்யமல்லாத, பல சமய மதி – பல ஸமயஜ்ஞாநங்களை, கொடுத்தாய் – கொடுத்தாய்; நீ -நீதான், மலர் – விகஸிதமான, துழாய்மாட்டே – திருத்துழாயினிடத்திலே, மனம் வைத்தால் – நெஞ்சை வைத்து போகப்ரஸக்தனானால், மா ஞாலம் – இந்த மஹாலோகம், வருந்தாதே – (அந்யபரமாய்) க்லே–யாதோ?
க்லேசித்தே விடுமிறே என்று கருத்து. மாடு-இடம். மலர்தலை-மலர்மேலென்றுமாம்.
ஈடு -நான்காம் பாட்டு. தாம் _உரைக்கமாட்டேன்_ (3-1-3) என்றார். இவனுடைய போக்யதாதிசயம் இருந்தபடியால் சிலராலே கிட்டலாயிருந்ததில்லை; இனி ஸம்ஸாரிகள் இழந்து நோவுபட்டுப் போமித்தனையாகாதே என்று அழகருடைய அழகின்மிகுதி பேசுவிக்கப் பேசுகிறார்.
(மாட்டாதே இத்யாதி)-நின்மாட்டாய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க இம்மலர் தலைமாஞாலம் மாட்டாதேயாகிலும். ‘நின்மாட்டாய – உன்னிடத்திலேயான, உன்பக்கலிலேயான. மட்டை – _மாட்டு_ என்று நீட்டிக்கிடக்கிறதாய், _மத்வ உத்ஸ:_ என்கிறபடியே மதுஸ்யந்தியாகையாலே நிரதிசயபோக்யமான திருமேனியை யென்னுதல், ‘இம்மலர்தலைமாஞாலம்’ என்கிறது மாட்டாமைக்கு நிபந்தநம், ஸ்ருஜ்யத்வ கர்மவஸ்யத்வங்களென்கை. மாட்டை – மாடாய், நிதியாய்; உன்னுடைய நிதிபோலே ஸ்லாக்யமாய் புஷ்பஹாஸஸுகுமாரமாயிருந்துள்ள திருமேனியிலே நெஞ்சை வைக்க, திருநாபீகமலத்தை அடியாகவுடைத்தான இம்மஹாப்ருதிவியானது மாட்டாதேயாகிலும். ‘ஆகிலும்’ என்றது-மாட்டாதிருக்கச் செய்தே என்றபடி. இதுதானே போருமிறே அநர்த்தம்; கர்மஸம்ஸ்ருஷ்டரான சேதநர்க்கு, கர்மஸம்பந்தமற்றால் அநுபவிக்கும் உன் திருமேனியிலே நெஞ்சை வைக்கப் போகாதிறே; அத்வநர்த்தத்துக்குமேலே. (நின் திருவுருவம் மனம் வைக்கமாட்டாத பல சமயமதி கொடுத்தாய்)-உன் திருமேனியிலே நெஞ்சை வைக்கமாட்டாதவையாய், அவைதான் பலவாயிருக்கிற சமயமுண்டு- மதாந்தரங்கள்; அவற்றின் பக்கலிலே நெஞ்சை வைக்கப் பண்ணினாய். ‘திருவுருவம் மனம் வைக்க’ என்கிற இடம் கீழ்மேலிரண்டிடத்திலும் அந்வயிக்கிறது. உன் திருமேனியிலே நெஞ்சை வைக்க வொண்ணாதபடி பாஹ்யமான பலசமய மதிபேதங்களையும் பண்ணி வைத்தாய். பண்டேஉன்னை அறியமாட்டாத ஸம்ஸாரிகளுக்கு மதி பேதங்களை உண்டாக்கினாய்; இவையித்தனையும் அஸத்ஸமமாமிறே, நீதான் இவற்றுக்கு வந்து கிட்டலாம்படியிருந்தாயாகில்; – (மலர்த்துழாய்மாட்டே நீ மனம் வைத்தாய்) உன் திருவுள்ளத்தையும் கால்தாழப்பண்ணவல்ல திருத்துழாய் தொடக்கமான போக்யஜாதத்திலே திருவுள்ளத்தை வைத்தாய். இத்தால் – உன்னுடைய போக்யதை சிலரால் கிட்டலாயிருந்ததோ? என்றபடி. _மாடு_ என்கிற இத்தை மாட்டென்று கிடக்கிறதாய், மாடு – இடம், அதின் பக்கலிலே என்றபடி. (மாஞாலம் இத்யாதி) இம்மஹாப்ருதிவியானது இங்ஙனமே நோவு பட்டேபோமித்தனை யாகாதே. கர்மவஸ்யராகையாலே, தானே உன்பக்கலிலே நெஞ்சை வைக்கமாட்டிற்றிலர்; அதுக்கு மேலே நீ பல விலக்கடிகளையும் உண்டாக்கி வைத்தாய்; நீயோ, நிரதிசயபோக்ய ஜாதத்திலே ப்ரவணனானாய்; உன்னைவிட்டால் பின்னை _புத்திநாசாத் ப்ரணஸ்யதி_ என்னும் விஷயங்களில் இவர்கள் ப்ரவணராய் இங்ஙனே நோவுபட்டேபோ மித்தனையாகாதே.
ஐந்தாம் பாட்டு
வருந்தாத அருந்தவத்த மலர்கதிரின்சுடருடம்பாய்*
வருந்தாதஞானமாய் வரம்பின்றிமுழுதியன்றாய்*
வருங்காலம்நிகழ்காலம் கழிகாலமாய்* உலகை
ஒருங்காக அளிப்பாய்சீர் எங்கு உலக்க ஓதுவனே.
ப – அநந்தரம், ஏவம்வித வைலக்ஷண்யயுக்தனான உன்குணங்களை எங்ஙனே முடியச் சொல்லுவேன்? என்கிறார்.
வருந்தாத – யத்நஸாத்யமன்றியிலே, அரு-பெறுதற்கரிய, தவத்த-தபஸ்ஸினுடைய பலமென்னலாம்படி, மலர் – விகஸிதமான, கதிரின் – ப்ரபையையுடைத்தான, சுடர் – தேஜஸ்தத்வத்தை, உடம்பாய்-வடிவாகயுடையவனாய், வருந்தாத – யத்நஸித்தமன்றியே ஸ்வாபாவிகமான, ஞானமாய் – ஜ்ஞாநத்தையுடையையாய்க்கொண்டு, வரம்பு இன்றி – பரிச்சேதம் இல்லாதபடி, முழுது – ஸர்வபதார்த்தத்திலும், இயன்றாய்-வர்த்திப்பானாய், வருங்காலம் நிகழ்காலம் கழிகாலம் ஆய் – காலத்ரயத்திலும் ஸந்நிஹிதனாய், உலகை – லோகத்தை, ஒருங்காக – ஒருபடிப்பட, அளிப்பாய் – ரக்ஷிக்குமவனே! சீர் – (உன்னுடைய ஸ்வரூபௌஜ்ஜ்வல்யத்தாலும் ஜ்ஞாநௌஜ்ஜ்வல்யத்தாலும் த்யாப்தியாலும் ரக்ஷணத்தாலு முள்ள) குணங்களை, எங்கு – எங்கே, உலக்க – முடிய, ஓதுவன் – சொல்லுவேன்? முடியச்சொல்ல முடியாது என்று கருத்து. உலக்க – முடிய.
ஈடு – ஐந்தாம் பாட்டு. மூன்றாம்பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் நேரே ஸங்கதி; நாட்டாரிழவு நடுவு ப்ரஸங்காத் ப்ரஸ்துத மித்தனை. _கோவிந்தா பண்புரைக்கமாட்டேனே_ (3-1-3) என்று சொல்லுவானேன்? நாட்டார் பேரிழவு கிடக்கிடீர்: ‘மயர்வறமதிநலம்’ பெறுகையாலே நீர் த்யாத்ருத்தரே; நாட்டாரில் த்யாத்ருத்தரான அளவேயோ? விண்ணுளாரிலும் த்யாத்ருத்தரே; நீர் நம்மைப் பேசமாட்டீரோ? என்ன, ‘என்னை த்யாத்ருத்தனாக்கினாயித்தனையல்லது உன்னை ஸாவதியாக்கிற்றில்லையே’ என்கிறார்.
(வருந்தாத இத்யாதி) இத்வடிவழகை என்னாலேதான் பேசலாயிருந்ததோ? (வருந்தாத அருந்தவத்த) ஸ்வாபாவிகமாய் வருவதாய் மிகவும் விகஸிதகிரணதேஜோ ரூபனாய். தவ-மிகுதி. திருமேனியைக் கண்டவாறே, ‘அரிய தப:பலமோ?’ என்று தோற்றியிருக்கும்: சிறிது அவகாஹித்தவாறே, ‘ஒருதப:பலமல்ல: ஸஹஜபாக்ய பலம்’ என்று தோற்றியிருக்கும். (மலர்கதிரின் சுடருடம்பாய்) விகஸ்வரகிரணதேஜோரூபமாய், அதுதன்னில் மண்பற்றைக் கழித்து, ரஜஸ்தமோமிச்ரமாயிருக்கையன்றிக்கே சுத்தஸத்த்வமயமாய், நிரவதிகதேஜோரூபமாய், ஆத்மகுணங்களுக்கும் ப்ரகாசகமான தித்ய விக்ரஹத்தையுடையனாயிருக்கும் இருப்பு. கர்மநிபந்தநமான தேஹங்கள்போலன்றிறே இச்சாக்ருஹீதமானது இருப்பது. அஸ்மதாதிகளுடைய சரீரங்கள், பாபத்தாலே யாயிருப்பன சிலவும், புண்யத்தாலேயாயிருப்பன சிலவும், உபயத்தாலேயாயிருப்பன சிலவுமாயிருக்குமிறே. (_நாகாரணாத் காரணாத்வா காரணாகாரணாந்நச_) – அகாரண மென்கிறது, கார்யத்தை. காரணமென்கிறது மூலப்ரக்ருதியை. காரணாகாரணமென்கிறது மஹதாதிகளை. (அன்றியே, ஸுகசரீரமோ, து:க்கசரீரமோ, உபயத்தாலுமான சரீரமோ? கம்-ஸுகம்: அகம்-துக்கம். துக்கம் காரணமோ? ஸுகம் காரணமோ? ஸுகதுக்கங்களிரண்டும் காரணமோ வென்னில்; இவை இத்தனையு மன்று). (_சரீரக்ரஹணம் த்யாபிந்_) – ஸர்வகதனாய் ஜகச்சரீரனாயிருக்கிற நீ சரீர க்ரஹணம் பண்ணுகிறது, (_தர்மத்ராணாய கேவலம்_) – _காணவாராய்_ (8-5-2) என்று விடாய்த்திருப்பார் கண்டு அநுபவிக்கைக்குத் தண்ணீர்ப்பந்தல் வைக்கிற படியிறே; (_நசாகார: – பக்தாநாம்_) – என்கிறபடியே – (வருந்தாத ஞானமாய்) ஒரு ஸாதநாநுஷ்ட்டாநத்தாலே யாதல், ‘மயர்வறமதிநலம்’ அருளப்பெற்றாதல் வந்ததன்றிக்கே, ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனாய். (வரம்பின்றி முழுதியன்றாய்) வரம்பில்லாத எல்லாவற்றையும் நிர்வஹித்தாய். உடையவனிறே உடைமையை நிர்வஹிப்பான். (இயன்றாய்)-இயலுகையாவது- நிர்வஹிக்கை. உடையவனாய்க் கடக்க நிற்கையன்றிக்கே நோக்கும்படி சொல்லுகிறது. (வருங்காலம் இத்யாதி) – ‘காலத்ரயத்துக்கும் நிர்வாஹகனாய் லோகங்களை ஒருபடிப்பட ரக்ஷித்துக்கொண்டு போருகிற உன்னுடைய கல்யாண குணங்களை என்னாலே முடியச்சொல்லித் தலைக்கட்டலாயிருந்ததோ? உன்னுடைய விக்ரஹ வைலக்ஷண்யம் அது. ஸர்வத்தையும் யுகபத் ஸாக்ஷாத்கார ஸமர்த்தனாயிருக்கிற இருப்பு அது. ரக்ஷகத்வம் அது. ஏதென்று பேசித் தலைக்கட்டுவன்?’
ஆறாம் பாட்டு
ஓதுவாரோத்தெல்லாம் எத்வுலகத்துஎத்வெவையும்*
சாதுவாய்நின்புகழின் தகையல்லால்பிறிதில்லை*
போதுவாழ்புனந்துழாய்முடியினாய்* பூவின்மேல்
மாதுவாழ்மார்பினாய் என்சொல்லியான்வாழ்த்துவனே.
ப – அநந்தரம், ஸர்வவேதங்களும் கூடிச்சொல்லப்புக்காலும் முழுக்கச் சொல்லவொண்ணாத உன்னை என்ன பாசுரமிட்டுச் சொல்லுவேன்? என்கிறார்.
ஓதுவார் – நியதஸாகரான அதிகாரிகளுக்கு அத்யேதத்யமாய் ருக்யஜுஸ்ஸாமாதி பேதத்தையுடைத்தான, ஓத்து எல்லாம் – வேதங்களெல்லாம், எத்வுலகத்து – எல்லாலோகங்களிலுமுண்டான, எத்வெவையும் – ஸாகாபேதங்களெல்லாவற்றையு முடைத்தாய், சாதுவாய் – (யதாவதர்த்தபோதகத்வமாகிற) நன்மையையுடைத்தாய்க் கொண்டு, நின் புகழின் – உன் குணகணங்களினுடைய, தகையல்லால் – ப்ரகாராந்வயமாத்ரத்திலே பர்யவஸிக்குமதொழிய, பிறிது – முழுக்கச்சொல்லுதல் புறம்புபோதல்செய்கை, இல்லை – இல்லை; போது – பூவையுடைத்தான, புனம் – தன்னிலத்தில், வாழ்துழாய் – செத்வித்துழாயாலே அலங்க்ருதமான, முடியினாய் – திருவபிஷேகத்தையுடையாய், (அத்வொப்பனையழகை அநுபவிக்கைக்கு), பூவின்மேல் – தாமரைப்பூவின்மேலே நித்யவாஸம்பண்ணுகிற, மாது – லக்ஷ்மியானவள், வாழ் – (அத்தைவிட்டு உகந்து) நித்யவாஸம் பண்ணுகிற, மார்பினாய் – திருமார்பையுடையவனே! என்சொல்லி – (போக்யதைக்குப் பாசுரமிட்டுச் சொல்லுவேனோ? ப்ரணயித்வத்துக்குப் பாசுரமிட்டுச்சொல்லுவேனோ?) எத்தைச் சொல்லி, யான் – யான், வாழ்த்துவன் – வாழ்த்துவது? சாதுவாய் – நன்றாய். தகை – ப்ரகாரம்.
ஈடு – ஆறாம்பாட்டு. _எங்குலக்கவோதுவன் (3-1-5)_ என்றார்; வேதங்கள் நம்மைப் பேசாநின்றனவே. உமக்குப் பேசத் தட்டுஎன்? என்ன, ‘அவையும் இவ்வளவன்றோ செய்தது’ என்கிறார்.
(ஓதுவாரோத்தெல்லாம்) – ஓதுவாரென்கையாலே அதிகாரி வைவித்யத்தைச் சொல்லுகிறது. (ஓத்தெல்லாம்) ருகாதி சதுர்வேதங்களும். ஆக, அத்யேத்ருபேதத்தாலே ஶாகா பேதங்களாய்க்கொண்டு பிரியுண்ட வேதங்களெல்லாம். (எத்வுலகத் தெத்வெவையும்) எல்லா லோகங்களிலுமுண்டான வெல்லாம். ஸ்வர்க்கலோகத்திலும் ப்ரஹ்மலோகத்திலும் அங்குள்ள புருஷர்களுடைய ஜ்ஞாநாதிக்யங்களுக்குத் தக்கபடியே அவையும் பரந்திருக்குமிறே; ஸ்ரீராமாயணமென்றால், ப்ரஹ்மலோகத்தில் அநேகம் க்ரந்தமா யிருக்கச்செய்தே, இங்கு இருபத்துநாலாயிரமாயிராநின்றது. (சாதுவாய்) – சப்தத்துக்கு ஸாதுத்வமாவது, அர்த்தத்துக்கு போதகமாயிருக்கை. அன்றியே, சாதுவான புகழென்று குணவிசேஷணமாகவுமாம். (சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை) உன்னுடைய கல்யாணகுணவிஷயமான இத்தனைபோக்கிப் புறம்புபோயிற்றில்லை ; விஷயந்தன்னை எங்குமொக்க விளாக்குலைகொண்டதுமில்லை. *_வர்ஷபிந்தோரிவாப்தௌ ஸம்பந்தாத் ஸ்வாத்மலாப:_* என்னுமாபோலே கடலிலே ஒருவர்ஷபிந்து விழுந்தால் கடலை எங்கும் வ்யாபிக்கமாட்டாதே, தன்ஸத்பாவத்துக்கும் அழிவில்லையிறே.
(போது இத்யாதி) வேதங்களுங்கூட ஏங்குவது இளைப்பதாகாநிற்க, நான் இச்சேர்த்திக்குப் பாசுரமிட்டு ஏத்தவோ? பூவையுடைத்தாய், தன்னிலத்திலே நின்றாற்போலே செத்விபெற்று வாழாநின்றுள்ள திருத்துழாயைத் திருவபிஷேகத்திலே யுடையவனே! திருத்துழாய் பூமுடிசூடி வாழாநிற்கிறது; இவ்வொப்பனை என்னாலே பேசலாயிருந்ததோ? (பூவின் மேல் இத்யாதி) – பிராட்டிபிரிந்திருக்கிலிறே வைத்த வளையம் சருகாவது (வளையம்-முடிவில் வட்டமாகச்சுற்றி அணியும் மாலை) இவ்வொப்பனையை ஒப்பனையாக்கும் அவளோட்டைச் சேர்த்திதான் என்னாலே பேசலாயிருந்ததோ? தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பெரியபிராட்டியார் பூஅடிகொதித்துப் போந்து வர்த்திக்கும் மார்வையுடையவனே! பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு பிறந்தகமான ஸ்ரீமிதிலையை நினைக்குமன்றாயிற்று, இவளும் இம்மார்வைவிட்டுப் பிறந்தகமான தாமரையை நினைப்பது. (என்சொல்லியான் வாழ்த்துவனே) இவ்வொப்பனைக்கும் இச்சேர்த்திக்கும் என்னாலே பாசுரமிட்டுச் சொல்லலாயிருந்ததோ?
ஏழாம் பாட்டு
வாழ்த்துவார்பலராக நின்னுள்ளே நான்முகனை*
மூழ்த்தநீருலகெல்லாம் படையென்றுமுதல்படைத்தாய்*
கேழ்த்தசீர் அரன்முதலாக் கிளர்தெய்வமாய்க்கிளர்ந்து*
சூழ்த்தமரர்துதித்தால் உன்தொல்புகழ்மாசூணாதே.
ப – அநந்தரம், அதிசயிதஜ்ஞாநரான ருத்ராதிகளெல்லாரும் திரண்டு ப்ரயோஜகத்திலே சொல்லப்பார்த்தாலும், உன்னுடைய ஸ்வாபாவிககுணங்களுக்கு மாலிந்யாவஹம் என்கிறார்.
வாழ்த்துவார் – (ஸ்தவப்ரியனாகையாலே உன்னை) வாழ்த்துவார், பலர்ஆக – பலர் உண்டாகைக்காக, நின்னுள்ளே – உன் ஸங்கல்ப ஸ்வரூபத்துக்குள்ளே, நான்முகனை – சதுர்முகனை, மூழ்த்த நீர் – காரணஜலமான ஏகார்ணவத்துக்குள்ளே, உலகெல்லாம் – ஸமஸ்தலோகத்தையும், படை – ஸ்ருஷ்டி, என்று -என்று, முதல் – ப்ரதமனாக, படைத்தாய் – படைத்தவனே! (அவனாலே ஸ்ருஷ்டமாய்), கேழ்த்த – கெழுமின, சீர் – ஜ்ஞாநாதி குணங்களையுடைய, அரன் – ருத்ரன், முதலா – முதலாக, கிளர் – கிளர்ந்த தித்ய சக்தியுக்தராய்க்கொண்டு, அமரர் – நித்யத்வ விசிஷ்டரான, தெய்வம் ஆய் – தேவர்கள் யாவதாயுஷம், கிளர்ந்து – உத்யுக்தராய், சூழ்த்து -(ப்ரயோஜகங்களாலே குணங்களை) வளைத்து, துதித்தால் – ஸ்தோத்ரம்பண்ணினால், உன் – உன்னுடைய, தொல் புகழ் – ஸ்வாபாவிகமான குணௌஜ்ஜ்வல்யம், மாசூணாதே – மாசேறாதோ? மூழ்த்த – நிரம்பின, கேழ்த்த – செறிந்த.
ஈடு – ஏழாம்பாட்டு. ‘வேதங்கள் கிடக்கிடும்; வைதிகபுருஷர்களென்று சிலருண்டே, அவர்கள் நம்மை யேத்தக் குறையென்?’ என்ன, ‘அதுவும் உனக்கு நிறக்கேடு’ என்கிறார்.
(வாழ்த்துவார்பலராக) – ‘ஆனால்தான் வந்ததென்? வேதங்களில் அவர்கள் செய்த ஏற்றம் என்?’ என்றாம் பட்டர் அருளிச்செய்வது. அன்றிக்கே, வாழ்த்துவார் பலருண்டாகைக்காக என்னுதல். (நின் இத்யாதி) – உன்னுடைய ஸங்கல்ப ஸஹஸ்ரைகதேசத்திலே, சதுர்முகனை, ‘கடல்சூழ்ந்த பூமியையெல்லாம் உண்டாக்கு’ என்று முதல்படைத்தாய். மூழ்த்தநீரிலே – ஏகார்ணவத்திலே, லோகங்களை உண்டாக்கென்று சதுர்முகனை உண்டாக்கினாய் என்னவுமாம்; உன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டரானவர்கள் உன்னை ஏத்தவென்று ஒரு பொருளுண்டோ?
‘ஆனால் இவர்களையொழிய ஜ்ஞாநாதிகரான ருத்ராதிகளையுங் கூட்டிக் கொண்டாலோ?’ என்ன, ‘அவர்களுக்கும் நிலமன்று’ என்கிறது, மேல். (கேழ்த்த) இப்பங்களத்தைவிட்டுக் கால்கடியரானவர்கள் ஏத்தப்புக்கால் எல்லை காணப்போமோ? கிளர்ந்த சீருண்டு – ஜ்ஞாநாதி குணங்கள்; அவற்றையுடையனான ருத்ரன் தொடக்கமாக ஈச்வரனோடு மசக்குப்பரலிடலாம்படி கிளர்ந்த தேவதைகள், முசுகு வாலெடுத்தாப்போலே கிளர்ந்து, ஒருவர் சொன்னவிடம் ஒருவர் சொல்லாதே ஓரோப்ரயோஜகங்களிலே மிகைத்த ஆயுஸ்ஸுக்களையுடையராயிருக்கிறவர்கள் ஸ்தோத்ரம் பண்ணினால், உன்னுடைய ஸ்வாபாவிகமான கல்யாணகுணங்கள் மாசூணாதோ? ‘இவர்கள் ஏத்துமளவோ இவன்குணங்கள்?’ என்ற அவ்வழியாலே அவத்ய மாய்த் தலைக்கட்டாதோ?
எட்டாம் பாட்டு
மாசூணாச்சுடருடம்பாய் மலராதுகுவியாது*
மாசூணாஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்*
மாசூணாவான்கோலத்து அமரர்கோன்வழிப்பட்டால்*
மாசூணாஉனபாத மலர்ச்சோதிமழுங்காதே.
ப – அநந்தரம், அதிசயிதஜ்ஞாநனாய்க்கொண்டு ஒரு ப்ரஹ்மா திருந்தி, அவன் ஸ்துத்யாதிகளிலே தலைப்பட்டாலும் உன் ஔஜ்ஜ்வல்யம் மழுங்காதோ? என்கிறார்.
மாசூணா – அவத்யஸ்பர்சமின்றியிலே, சுடர் – தேஜோரூபமான, உடம்பாய் – வடிவையுடையையாய், மலராது குவியாது – ஸங்கோசவிகாஸரஹிதமாய், மாசூணா – ஸம்சயவிபர்யயாதி ஹேயகந்தரஹிதமான, ஞானமாய் – ஜ்ஞாநத்தை ஸ்வபாவமாகவுடையையாய், முழுதுமாய்-ஸமஸ்தகுணவிபூதிகளையும் ப்ரகாரமாக உடையையாய்க்கொண்டு, முழுது – அவையெல்லாம், இயன்றாய் – உன்பக்கலிலே வர்த்திக்கும்படி ஆஸ்ரயமானவனே! மாசூணா – மாலிந்யரஹிதமான, வான்கோலத்து – விலக்ஷணஜ்ஞாநாதி பூஷணனாயுள்ள, அமரர்கோன் – தேவஸேத்யனான ப்ரஹ்மாவானவன், வழிப்பட்டால் – ஸ்தோத்ரரூபபரிசர்யையிலே ஒருப்பட்டால், மாசூணா – ஹேயப்ரதிபடமாயிருக்கிற, உனபாதமலர்-உன் திருவடித்தாமரைகளுடைய, சோதி – தேஜஸ்ஸானது, மழுங்காதே – மஸ்ருணமாகாதோ?
ஸ்வாபாவிகௌஜ்ஜ்வல்யத்தையுடைய திருவடிகளுக்கு ஆக்கனான ப்ரஹ்மா கிட்டுகை அதேஜஸ்கரமென்று கருத்து.
ஈடு – எட்டாம் பாட்டு. கீழ்ப்பாட்டில், ருத்ரன் தொடக்கமானார் ஏத்தமாட்டார்களென்றதாய், இப்பாட்டில் ‘அவன்தனக்குங்கூட ஜநகனான ப்ரஹ்மா ஸ்தோத்ரம் பண்ணினால், அதுவும் உனக்கு அவத்யமாம்’ என்பாருமுண்டு; ‘அவனையும் கீழ்ப்பாட்டிலே சொல்லிற்றாய், இதில் உபயபாவனையுமுடைய இவனைப்போலன்றியே, கேவலம் ப்ரஹ்ம பாவனையேயாயிருப்பா னொரு ப்ரஹ்மாவை உத்ப்ரேக்ஷித்து, அவன் ஏத்தினாலும் தேவர்க்கு அவத்யமா மித்தனையன்றோ? என்கிறார்’ என்று பட்டர் அருளிச் செய்யும்படி.
(மாசூணாச் சுடருடம்பாய்) ஹேயப்ரத்யநீகமாய் சுத்தஸத்த்வமாகையாலே நிரவதிகதேஜோரூபமான தித்யவிக்ரஹத்தை யுடையையாய். (மலராது குவியாது) _அரும்பினையலரை_ (திருமொழி 7-10-1) என்னும்படியாயிருக்கும்; *யுவா குமார:* என்கிறபடியே, ஏககாலத்திலே இரண்டு அவஸ்த்தையும் சொல்லலாயிருக்கை; *ஸதைகரூபரூபாய* என்கிறபடியே, க்ஷயத்ருத்திகளின்றிக்கேயிருக்குமென்றுமாம். (மாசூணா ஞானமாய்) ஒரு ஹேதுவாலே மாசேறக் கடவதல்லாத ஜ்ஞாநத்தை யுடையையாய். ‘மலராது குவியாது’ என்கிறது, கீழும் மேலும் அந்வயிக்கக்கடவது; ஸம்ஸாரிகள் கர்மநிபந்தநமாகப் பரிக்ரஹித்த தேஹத்துக்கு வரக்கடவதான ஸ்வரூபாந்யதாபாவமும் இல்லை, இவன் திருமேனிக்கு; அவர்கள் ஜ்ஞாநத்துக்கு வரக்கடவதான ஸ்வபாவாந்யதாபாவமும் இல்லை, இவனுடைய ஜ்ஞாநத்துக்கு என்கை. (முழுதுமாய்) அநுக்தமான குணங்களையுடையையாய். (முழுதுமாய்) ஜகச்ச்சரீரனாய் நிற்கும் நிலை. (முழுதியன்றாய்) _வரம்பின்றி முழுதியன்றாய் (3-1-5)_ என்றதின் அநுவாதமாய், எல்லாவற்றையும் நிர்வஹித்தாய் என்றபடி. (மாசூணா இத்யாதி) *சதுர்முகாயு:* இத்யாதி; அப்படிப்பட்ட அமரர்கோன், உன்னை ஸ்தோத்ரம் பண்ணினால், அவனும் அடிக்கழிவு செய்தானாய்விடுமித்தனை. ஆழ்வார்களேயிறே அவனடியறிந்து மங்களாசாஸநம் பண்ணுவார். திரோதாந ஹேதுவில்லாத ஜ்ஞாநாதி பூஷணங்களையுடையான் ஒரு அமரர்கோனை உண்டாக்குவது, ‘உத்ப்ரேக்ஷிதனான ப்ரஹ்மா’ என்கைக்கு நிதாநம் இது; இத்வருகில் ப்ரஹ்மாவுக்குத் தன் அதிகாராவஸாநத்திலே ஜ்ஞாநத்துக்குத் திரோதாந முண்டிறே; இவனுக்கு அதின்றிக்கேயிருப்பது. வழிபடுகைக்கு உறுப்பாகச் சொல்லுகிற கோலமாகையாலே அதுக்கு உறுப்பான ஜ்ஞாநத்திலே கிடக்கு மித்தனையிறே. அப்படியிருக்கிற அமரர்கோன்தான் உன்னை ஸ்தோத்ரம் பண்ணினால், ஒரு ஸம்ஸர்க்கத்தால் மாசூணக்கடவதன்றிக்கேயிருக்கிற உன்திருவடிகளின் தேஜஸ்ஸானது, ‘இவனேத்துமளவே இத்திருவடிகள்’ என்று மழுங்காதோ? தம்முடைய சேஷத்வாநுரூபமாக, உன் திருமேனியென்னாதே ‘உனபாதம்’ என்கிறார்.
ஒன்பதாம் பாட்டு
மழுங்காதவைந்நுதிய சக்கரநல்வலத்தையாய்*
தொழுங்காதற்களிறளிப்பான் புள்ளூர்ந்துதோன்றினையே*
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்*
தொழும்பாயார்க்களித்தால் உன்சுடர்ச்சோதிமறையாதே.
ப – அநந்தரம், உன்னுடைய ஆஸ்ரிதவாத்ஸல்யாதிஶயத்துக்கு ஸங்கல்ப மாத்ரத்தாலே ஸமாஸ்ரிதரக்ஷணம் பண்ணுகையாகிற மேன்மை திரஸ்காரஹேது என்கிறார்.
மழுங்காத-மழுங்குதலில்லாத, வை – கூர்மையையுடைத்தான, நுதிய – வாயையுடைய, சக்கரம்-திருவாழியை, நல்-தர்ஶநீயமான, வலத்தை ஆய் – வலத்திலேயுடையையாய், தொழும் – பரிசர்யைபண்ணுகையாலே, காதல்-அபிநிவேஶத்தையுடைய, களிறு – ஆனையை, அளிப்பான் – ரக்ஷிக்கைக்காக, புள் – பெரியதிருவடியை, ஊர்ந்து-அதித்வரையோடே நடத்தி, தோன்றினையே-அதின்முன்னே வந்து தோன்றினாயே: (இப்படியிருக்க), மழுங்காத – அமோகமான, ஞானமே – ஸங்கல்பரூபஜ்ஞாநமே, படையாக – பரிகரமாக, மலர் – விகஸிதமான, உலகில் – லோகத்திலே, தொழும்பு ஆயர்க்கு-(உனக்குத்) தொழும்பானார்க்கு, அளித்தால் – உபகரித்தால், (ஆர்த்தரக்ஷணம் பண்ணுகைக்கு மடுவின்கரையிலே த்வரித்துவந்தாயென்கிற), உன் – உன்னுடைய, சுடர் – அத்யுஜ்ஜ்வலமான, சோதி – தேஜஸ்ஸு, மறையாதே – திரஸ்க்ருதமாகாதோ?
ஈடு – ஒன்பதாம் பாட்டு. மேன்மைதானே பேசவொண் ணாதென்கைக்கு நீர்மைதானோ பேச்சுக்கு நிலமாயிருக்கிறது? என்கிறார்.
(மழுங்காத) சத்ருசரீரங்களிலே படப்படச் சாணையிலேயிட்டாப்போலே புகர்பெற்று வாராநிற்குமாயிற்றுத் திருவாழி. மழுங்கக்கடவதன்றியே கூரிய முனையையுடைய திருவாழியை, _வடிவார் சோதிவலத்துறையும்_ (திருப்பல்லாண்டு 2) என்னும்படியே வலவருகே யுடையையாய். (நல்வலத்தையாய் – தோன்றினையே) கையில் திருவாழியிருந்தது அறிந்திலன்; அறிந்தானாகில், இருந்தவிடத்தே இருந்து அத்தை ஏவிக் கார்யங்கொள்ளலாமிறே. ஆர்த்தநாதம் செவிப்பட்டவாறே தன்னை மறந்தான். நினைத்தாலும் இருந்த விடத்திலேயிருந்து து:க்கநித்ருத்தி பண்ணவொண்ணாது; தொழுங்காதல்களிறாயிற்று: கையுந்திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டிருக் கிறவனாயிற்று இவன். (காதல் களிறு) *சதுர்த்தந்தி* என்னுமாபோலே – காதல் இதுக்கு நிரூபகமாயிருக்கை. (அளிப்பான்) இதன்கையில் பூ செத்வியழியாமே திருவடிகளிலே இடுவித்துக் கொள்ளுகைக்காக. (புள்ளூர்ந்து தோன்றினையே) ஸங்கல்பத்துக்கு முற்பட்டாயிற்று திருவடிவேக மிருப்பது; அவன்வேகம் போராமல் அவனையும் இடுக்கிக்கொண்டிறே வந்து விழுந்தது. (தோன்றினையே) இடர்ப்பட்டார் தாமாய், தமக்குத் தோற்றினாப்போலேகாணும் இருக்கிறது. (மழுங்காத ஞானமே படையாக) ‘திருவாழியை மறந்தான்’ என்கைக்கு, அதிலும் அண்ணிய ஸங்கல்பரூப ஜ்ஞாநத்தையோ நினைக்கிறது? அநேக கார்யங்களிலே ஏவாநின்றாலும் மழுங்கக் கடவதன்றியே புகர்பெற்று வாராநின்றுள்ள ஸங்கல்பரூபஜ்ஞாநமே கருவியாகத் திருநாபீகமலத்தை அடியாக வுடைத்தான ஸம்ஸாரத்தில். (தொழும்பாயார்க்கு) சேஷபூதரானார்க்கு. ‘மலருலகில் தொழும்பாயார்க்கு-மழுங்காத ஞானமே படையாக – அளித்தால் உன்சுடர்ச்சோதி மறையாதே’; இருந்தவிடத்தேயிருந்து ஸங்கல்பரூபஜ்ஞாநத்தாலே ரக்ஷித்தாயாகில்; _ஆனையிடர்ப்பட்ட மடுவின் கரையிலே அரைகுலையத் தலைகுலைய உணர்த்தியற்று வந்து விழுந்தான்_ என்கிற நிரதிவதிகதேஜஸ் இழந்ததேயன்றோ? ‘மறையாதே’ என்ற இதுக்கு ‘மறையும் மறையும்’ என்று சிற்றாட்கொண்டான்வார்த்தை.
பத்தாம் பாட்டு
மறையாயநால்வேதத்துள் நின்றமலர்ச்சுடரே*
முறையால் இத்வுலகெல்லாம் படைத்திடந்துண்டுமிழ்ந்தளந்தாய்*
பிறையேறுசடையானும் நான்முகனும்இந்திரனும்*
இறையாதல்அறிந்தேத்த வீற்றிருத்தல்இதுவியப்பே.
ப – அநந்தரம், ஈஸ்வராபிமாநிகளும் உன்ஶேஷித்வத்தையறிந்து ஆஸ்ரயிக்க இருக்கிற இருப்பு ப்ராப்தமாகையால் ஆஸ்சர்யமல்ல என்கிறார்.
மறையாய-(ரஜஸ்தம: ப்ரசுரர்க்கு ஸ்வார்த்தத்தை) மறைப்பதாய், நால்வேதத்து-(ஸத்வப்ரக்ருதிகளுக்கு அர்த்தப்ரகாஶகமான ருகாதி)சாதுர்வித்யத்தை யுடைத்தான வேதங்களுக்கு, உள்நின்ற – ஆந்தரமான தாத்பர்யமாய் நின்ற, மலர் – விகாஸத்தை யுடைத்தான, சுடரே – ஜ்யோதீரூபமாய், முறையால் – பர்யாயந்தோறும், இ – இந்த, உலகெல்லாம் – லோகங்களையெல்லாம், படைத்து-ஸ்ருஷ்டித்து , இடந்து – (ப்ரளயத்திலே புக்கு) இடந்தெடுத்து, உண்டு – (மஹாப்ரளயத்திலே) உண்டு, உமிழ்ந்து – உமிழ்ந்து, அளந்தாய் – (அந்யாபிமாநம்கழியும்படி) அளந்துபோந்தவனே! இறையாதல் – (இப்படி வேதைகவேத்யதையாலும் ஜகத்ஸ்ருஷ்ட்யாதி த்யாபாரங்களாலும்) சேஷியாக, அறிந்து – (உன்னை) அறிந்து, பிறையேறு – சந்த்ரகலாதாரணத்தாலும், சடையானும் – ஜடாதாரணத்தாலும் போகதபஸ்ஸுகளிலே தத்பரனான ருத்ரனும், நான்முகனும்-(ஸர்வதோமுகமான ஸ்ருஷ்ட்யாதி சக்தியையுடைய) ப்ரஹ்மாவும், இந்திரனும்-(த்ரைலோக்யேஸ்வரனான) இந்த்ரனும், ஏத்த – (ஸ்துத்யாதி முகத்தாலே) ஆஸ்ரயிக்க, வீறு – ஆஸ்ரயணீயத்வாகாரத்தாலே) த்யாத்ருத்தனாய், இருத்தல் இது – இருக்கிற இந்த இருப்பு, வியப்பே – ஆஸ்சர்யமோ?
ப்ரமாணோபபத்தி ஸித்தமான இது ப்ராப்தமென்று கருத்து. முறையாலென்று – உடையவனாகையாலே என்றுமாம். மலர் – மலர்த்தியாய், விகாஸம்.
ஈடு – பத்தாம்பாட்டு. வேதைகஸமதிகம்யனாய் ஸர்வேஸ்வரனாயிருந்த உனக்கு, த்வத்ஸ்ருஷ்டராய் உன்னாலே லப்தஜ்ஞாநரான ப்ரஹ்மாதிகள் ‘ஈஸ்வரன்’ என்று அறிந்தேத்த இருக்குமது விஸ்மயமோ? என்கிறார்.
(மறையாய்) _ஆதௌ வேதா: ப்ரமாணம் ஸ்ம்ருதிருபகுருதே ஸேதிஹாஸை: புராணை:, ந்யாயை ஸ்ஸார்த்தம் த்வதர்ச்சாவிதிமுபரி பரிக்ஷீயதே பூர்வபாக: | ஊர்த்வோபாகஸ்த்வதீஹாகுணவிபவ பரிஜ்ஞாபநைஸ் த்வத்பதாப்தௌ, வேத்யோ வேதைஸ்ச ஸர்வைரஹமிதி பகவந்! ஸ்வேந ச த்யாசகர்த்த_|| – மறை என்றும், வேதம் என்றும் இரண்டு படியாகச் சொல்லுகிறது. பாஹ்யராய் நாஸ்திகராயிருப்பார்க்குத் தன் படிகளை மறைக்கையாலும், ஆஸ்திகராயிருப்பார்க்குத் தன் அர்த்தத்தை வெளியிட்டுக் காட்டுகையாலும்; பூர்வபாகம் ஆராதநஸ்வரூபத்தைச் சொல்லுகிறதாய், உபரிதநபாகம் ஆராத்யஸ்வரூபத்தைச் சொல்லுகிறதாய், *வேதைஸ்ச ஸர்வை ரஹமேவ வேத்ய:* என்கிறபடியே ஸகல வேதங்களும் தன்னையே ப்ரதிபாதிக்கும்படியாயிருக்கையாலே வந்த புகரைச் சொல்லுகிறது. வேதங்களிலே ஸர்வாதிகனாகவும் நிரதிஶய போக்யனாகவும் ப்ரகாசிக்கிறவனே! (முறையால் இத்யாதி) வேதங்கள் தான் ப்ரதிபாதிப்பது இவனுடைய ரக்ஷகத்வத்தையாயிற்று. (முறையால்) ஸ்வாமித்வ ப்ராப்தியாலே என்னுதல், பர்யாயேண என்னுதல்; கரணகளேபர விதுரமாய் போகமோக்ஷ ஸுந்யமுமாய்க் கிடந்தவன்று இவற்றையுண்டாக்கி, ஸ்ருஷ்டமான ஜகத்தை ப்ரளயங்கொள்ள மஹாவராஹமாய் இடந்து, திரிய ப்ரளயம்வர வயிற்றினுள்ளே வைத்து நோக்கி, பின்னை வெளிநாடுகாண உமிழ்ந்து, மஹாபலிபோல்வார் பருந்து இறாய்ஞ்சினாப்போலே அபஹரிக்க, எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, இப்படி ஸர்வவிதரக்ஷணங்களையும் பண்ணினவனே! விஷம ஸ்ருஷ்டிக்கு அடியான கர்மவிசேஷமிறே சேதநர் பண்ணிவைப்பது; யௌகபத்யம் அநுக்ரஹ கார்யமென்கை. (பிறையேறு சடையானும் இத்யாதி) ஜடை கழற்றாதே ஸாதக வேஷத்தோடே யிருக்கச்செய்தே, கலாமாத்ரமான சந்த்ரனை தரித்துக்கொண்டு ஸுகப்ரதாநனாயிருக்கிற ருத்ரனும், அவனுக்குங்கூட ஜநகனான சதுர்முகனும், இவர்களோடொக்க எண்ணலாம்படியிருக்கிற இந்த்ரனும், நீ ஸ்வாமியான முறையறிந்து ஏத்த, அத்தாலே உன்னுடைய த்யாத்ருத்திதோற்ற இருந்தா யென்றால் இது உனக்கு விஸ்மயமோ? ஒருவன் ஒரு குழமணனைப் பண்ணி, அதின் கழுத்திலே காக்கைப் பொன்னைத் தொற்றி, அதின் தலையிலே காலைவைத்து, ‘இது என்னை வணங்கிற்று’ என்று இறுமாந்திருக்குமாபோலே _நன்மைப் புனல்பண்ணி நான்முகனைப்பண்ணி (7-5-4)_ என்கிறபடியே உன்னாலே மனையப்பட்ட ப்ரஹ்மாவும், அவனாலே ஸ்ருஷ்டரான இவர்களும் உன்னை ஏத்த, அத்தாலே இறுமாந்திருந்தாயென்றால் இது உனக்கு ஏற்றமோ? ஹாஸ்யமாய்த் தலைக்கட்டுமத்தனையன்றோ?
பதினொன்றாம் பாட்டு
வியப்பாயவியப்பில்லா மெய்ஞ்ஞானவேதியனை*
சயப்புகழார்பலர்வாழும் தடங்குருகூர்ச்சடகோபன்*
துயக்கின்றித்தொழுதுரைத்த ஆயிரத்துள் இப்பத்தும்*
உயக்கொண்டுபிறப்பறுக்கும் ஒலிமுந்நீர்ஞாலத்தே.
ப – அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் பலமாக ஸாம்ஸாரிக ஜந்மராஹித்யத்தை அருளிச்செய்கிறார்.
வியப்பாய் – (ஏகதேசஸம்பந்தத்தாலும் புறம்புள்ளவிடத்தில்) ஆஸ்சர்யாவஹமான குணசேஷ்டிதாதிகள், வியப்பில்லா – (ஸ்வவிஷயத்தில்) ஆஸ்சர்யமாகையன்றியே (தன்னைப்பற்றியவைதான் மினுங்கும்படியான), மெய்ஞ்ஞானம் – இந்த யாதாத்ம்ய ஜ்ஞாநத்தை ப்ரதிபாதிக்கிற, வேதியனை – வேதங்களாலே வேத்யனானவனை, சயம்-(ஸம்ஸார)ஜயத்தால் வந்த, புகழார்-(ஜ்ஞாந வைராக்ய) ப்ரதையையுடையரானார், பலர் – பலரும், வாழும் – (இவருடைய வைலக்ஷண்யத்தையநுபவித்து) வாழ்கிற, தடம்-பேரிடமுடைத்தான, குருகூர் – திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வார், துயக்கு-(ஸம்ஶயவிபர்யயரூபமான) மனந்திரிவு, இன்றி – அற்று, தொழுது-(யதார்த்தஜ்ஞாநகார்யமான) சேஷவ்ருத்தியோடே, உரைத்த-அருளிச்செய்த, ஆயிரத்துள்இப்பத்தும் -ஆயிரத்துளிப்பத்தும், ஒலி – கோலாஹலோத்தரமாய், முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர், வர்ஷஜலம் ஆகிய மூன்று நீருங் கூடின கடலையுடைத்தான, ஞாலத்து – பூமியிலே, உயக்கொண்டு – (ஜ்ஞாநப்ரதாநாதிகளாலே) உஜ்ஜீவிப்பித்து, பிறப்பு-ஜந்மஸம்பந்தத்தை, அறுக்கும் – அறுக்கும்.
வியப்பு – ஆஸ்சர்யம், துயக்கு – மனந்திரிவு. இது – நாலடித்தாழிசை. கலிவிருத்தம் என்பாருமுளர்.
ஈடு – நிகமத்தில், இத்திருவாய்மொழிதானே இதுகற்றாரை உஜ்ஜீவிப்பித்துப் பின்னை ஸாம்ஸாரிகமான ஸகலதுரிதத்தையும் போக்கும் என்கிறார்.
(வியப்பாயவியப்பில்லா) வேறு சில வ்யக்திகளிலே கண்டால் விஸ்மய ஹேதுவா யிருக்குமவையடைய, இவன்பக்கலிலே கண்டால் ப்ராப்தமாயிருக்கும். ஒருவன் ஒருவனுக்கு நாலுபசுக் கொடுத்தால் அது விஸ்மயஹேதுவாயிருக்கும்; பெருமாள் செய்தார்’ என்றவாறே ப்ராப்தமாயிருந்ததிறே; ஸர்வஸ்வதாநம்பண்ணிக் கையொழிந்தவளவிலே ‘த்ரிஜடன்’ என்பானொரு ப்ராஹ்மணன் வர, அப்போது ஒன்றுந்தோற்றாமையாலே ‘உனக்கு வேண்டும் பசுக்களை அடித்துக் கொண்டுபோ’ என்ன, தண்டைச் சுழற்றியெறிந்து, அதுக்கு உட்பட்ட பசுக்களையடைய அடித்துக்கொண்டுபோனானிறே. (மெய்ஞ்ஞான வேதியனை) யதாபூதவாதியான வேதத்தாலே ப்ரதிபாதிக்கப்பட்ட உத்கர்ஷத்தையுடையவனை. (சயம் இத்யாதி) _இந்நின்ற நீர்மையினியா முறாமை (திருவிரு. 1)_ என்ற இவர்தம்மைப் போலே ஸம்ஸாரத்தை ஜயிக்கையால் வந்த புகழையுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் பலரும் ஆழ்வாரையனுபவித்து வர்த்திக்கைக்கு ஈடான பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார். (துயக்கின்றி) துயக்காவது மனந்திரிவு. ஸம்சய விபர்யய ரஹிதமாக ஸாக்ஷாத்கரித்து அருளிச்செய்த ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தும். (ஒலிமுந்நீர்ஞாலத்தே உயக்கொண்டு பிறப்பறுக்கும்) ஒலியையுடைத்தான முந்நீரையுடைய பூமியிலே *அஸந்நேவ* என்று அஸத்கல்பரானவர்களை *ஸந்தமேநம் ததோவிது:* என்று உஜ்ஜீவிப்பித்து விரோதிகளையும் போக்கும். அராஜகமான தேசத்தில் ராஜபுத்ரன் தலையிலே முடியை வைத்து விலங்குவெட்டி விடுமாபோலே, அழகர் திருவடிகளிலே கைங்கர்யத்தில் அந்வயிப்பித்துப் பின்னை தத்விரோதியான ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுத்துக்கொடுக்கும்.
முதற்பாட்டில், அழகருடைய திருவணிகலன்களுக்கும் திருமேனிக்கும் உண்டான ஸுகடிதத்வத்தை அநுஸந்தித்தார்; இரண்டாம்பாட்டில் அதுக்கு நாட்டார் த்ருஷ்டாந்தமிட்டுச் சொல்லுமவையெல்லாம் உனக்கு அவத்யத்தை விளைக்கு மென்றார்; மூன்றாம்பாட்டில் ‘நாட்டாரைவிடும், மயர்வறமதிநலம் அருளப்பெற்ற நீர் சொல்லீர்’ என்ன, ‘என்னாற் சொல்லி முடியாது’ என்றார்; நாலாம்பாட்டில் ‘இப்படி விலக்ஷணனாய் நிரதிசய போக்யனாயிருக்கிற உன்னை நாட்டார் இழந்துபோம்படி அவர்களை மதிவிப்ரமங்களைப் பண்ணினாய்’ என்றார்; அஞ்சாம்பாட்டில் ‘நாட்டாரில் த்யாத்ருத்தரல்லீரோ? உம்மால் பேசவொண்ணாமைக்குக் குறையென்?’ என்ன, ‘என்னை வ்யாவ்ருத்தனாக்கினவோபாதி உன்னை ஸாவதியாக்கிற்றில்லையே’ என்றார்; ஆறாம்பாட்டில் ‘வேதங்களும் நீருங்கூடப் பேசினாலோ?’ என்ன, ‘அவையும் உன்னைப் பரிச்சேதிக்கமாட்டாது’ என்றார்; ஏழாம்பாட்டில் ‘வேதங்கள் கிடக்கிடும்; வைதிகபுருஷர்களென்று சிலருண்டே, அவர்கள் ஏத்தக்குறையென்?’ என்ன, ‘அதுவும் உனக்கு நிறக்கேடு’ என்றார்; எட்டாம்பாட்டில் கர்மபாவநையின்றிக்கே ப்ரஹ்மபாவனையேயாயிருப்பானொரு ப்ரஹ்மாவை உத்ப்ரேக்ஷித்து ‘அவனேத்திலும் தேவர்க்கு அவத்யம்’ என்றார்; ஒன்பதாம்பாட்டில் ‘மேன்மை பேச வொண்ணாது’ என்கைக்கு ‘நீர்மையோதான் பேசலாயிருக்கிறது’? என்றார்; பத்தாம்பாட்டில் ‘உன்னாலே ஸ்ருஷ்டனான ப்ரஹ்மாவாலே ஸ்ருஜ்யரான இவர்கள் உன்னையேத்துகையாவது உனக்கு அவத்யமன்றோ?’ என்றார்; நிகமத்தில் ‘இத்திருவாய்மொழிதானே ப்ராப்யத்தைத் தரும்’ என்றார்.
நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்
த்3ரமிடோபநிஷத் ஸங்கதி
ஆத்யெ த்ருதீய ஶதகஸ்ய வநாத்ரிபர்துராபாத
மௌள்யவயவாபரணாபிரூப்யம்।
ப்ரஹ்மாதி வாகவிஷயஞ்ச மஹாப்ரபாவம்
ஸௌந்தர்யமக்ந ஹ்௫தயஹ ஶ்ஶடஜித்ச்சஶம்ஸ||
த்ரமிடோபநிஷத்-தாத்பர்யரத்நாவலீ
34 ஸுஶ்லிஷ்டாகல்பமங்கை: அநுபமஸுஷமம் வக்தி நிஸ்ஸீமதீப்திம்
ஸ்வாந்தஸ்வாதுஸ்வதேஹம் ஸுகபஜநபதம் மண்டிதாங்கம் மஹிஷ்யா ।
ஸ்தோத்ராதிக்ராந்தகீர்திம் மலிநிமரஹிதௌஜ்ஜ்வல்யமிஷ்டௌபவாஹ்யம்
வீதாஶ்சர்யத்ரிணேத்ரப்ரப்ருதிஸுரநுதிம் சித்ரஸௌந்தர்யவித்தம் || (3-1)
திருவாய்மொழி நூற்றந்தாதி
முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்*
அடிவாரந் தன்னில் அழகர் வடிவழகைப்
பற்றி* முடியும்அடியும் படிகலனும்*
முற்றும் அனுபவித்தான் முன். 21
ஆழ்வார் திருவடிகளே ஶரணம்
எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்.
ஜீயர் திருவடிகளே ஶரணம்