இரண்டாந் திருவாய்மொழி – முந்நீர்ஞாலம் : ப்ரவேசம்
பன்னீராயிரப்படி – இரண்டாந்திருவாய்மொழியில், இப்படி ஸ்வாபாவிகமான சேஷத்வத்துக்கு ப்ரதிஸம்பந்தியான சேஷியினுடைய திவ்யஸௌந்தர்யாதிகளை அநுபவிக்க ப்ராப்தமாயிருக்க, அது ஸித்தியாதொழிகிறது தத்விரோதியான சரீரஸம்பந்தாதிகளடியாக என்று அநுஸந்தித்து, தந்நிவ்ருத்தியில் அபேக்ஷையாலே, அது அவன்தனக்கு விதேயமாம்படியான ஸ்ரஷ்ட்ருத்வத்தையும், ஸ்ருஷ்டமான ஜகத்தை அநந்யார்ஹமாக்கின அபதாநத்தையும், ஆஸ்ரிதவிரோதிநிரஸநஸ்வபாவத்தையும், ஆஸ்ரித ஸம்ரக்ஷணார்த்தமான வ்யாப்தியையும், அநுபவித்தல்லது நிற்கவொண்ணாத விலக்ஷணவிக்ரஹயோகத்தையும், ஸமஸ்தசேதநரும் ஸ்வாதீநராம்படியான பாரம்யத்தையும், வ்யாப்தியிலும் கார்யகரமான ஸௌலப்யத்தையும், அந்தஸௌலப்ய மடியாக வந்த குணவிக்ரஹௌஜ்ஜ்வல்யத்தையும், ஜ்ஞாநாஜ்ஞாநவிபாகமில்லாத படியான உபகாரகத்வத்தையும், அதுக்கு ப்ரகாசகமான ஸகலவேதவேத்யத்வத்தையும் அநுஸந்தித்துச் சொல்லிக் கூப்பிட்டு, ஸ்வஸந்நிதியாலே ஆர்த்தி சமிப்பித்த ஸுலபனான ஈஸ்வரனை அபரோக்ஷித்து ப்ரதிஷ்டிதராகிறார்.
ஈடு – பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கச்செய்தே, சீராமப்பிள்ளை ‘இவர் பரத்வாநுபவத்தை யாசைப்பட்டு, அது ஒரு தேசவிசேஷத்திலே போனால் அநுபவிக்குமதாய் நோவுபடுகிறாரல்லர்; அவதாரங்களில் அநுபவிக்க ஆசைப்பட்டு, ‘பிற்பாடரானோம்’ என்று நோவுபடுகிறாரல்லர்; உகந்தருளின நிலங்களிலேயாய், அதுதன்னிலும் திருமலையிலேயாகில் அநுபவிக்க இழிந்தது; பின்னை மேன்மேலென அநுபவிக்குமதொழிய, இவர் இழந்து நோவுபடுகைக்குக் காரணமென்?’ என்று கேட்க, ‘பரவ்யூஹவிபவங்களோடு அர்ச்சாவதாரத்தோடு வாசியற தர்ம்யைக்யத்தாலே விஷயம் எங்குமொக்கப் பூர்ணமாயிருக்கும்; குறைந்துதோற்றுகிறவிடம் ப்ரதிபத்தாக்களுடைய ப்ரதிபத்திதோஷத்தாலே. கடலருகே போகாநின்றால் தன்கண்ணாலே முகக்கலாமளவிறே காண்பது; அப்படியே அழகருடைய ஸௌந்தர்யாதிகளை அநுபவிக்கப் புக்கவிடத்தில் விளாக்குலை கொண்டு அநுபவிக்கலா யிருந்ததில்லை; பெருவிடாய்ப்பட்டவன், சேர்ந்த குளிர்ந்த தண்ணீர் ஸந்நிஹிதமாயிருக்க, ஆஸ்யம் பிஹிதமானால் துடிக்குமாபோலே விஷயமும் ஸந்நிஹிதமாய் விடாயும் மிக்கிருக்கச் செய்தே, அபரிச்சிந்நவிஷய மாகையாலே பரிச்சேதித்து அநுபவிக்க வொண்ணாதொழிய, ‘இது விஷயதௌர்ஜந்யத்தாலே வந்தது’ என்று அறியமாட்டாதே, தம்முடைய கரணஸங்கோச நிபந்தநமாக வந்ததென்று அநுஸந்தித்து, ‘அவன்தான் முதலிலே இத்தைக்கழித்துத் தன்னையநுபவிக்கைக்கு உறுப்பாக ஜகத்ஸ்ருஷ்டியைப் பண்ணினான்; ஸ்ருஷ்டமான ஜகத்திலே தான் வந்து அவதரித்தான்; அதுக்குமேலே அந்தர்யாமிரூபேண நின்று ஸத்தாதிகளை நிர்வஹித்தான்; அவன் இப்படி உபகாரபரம்பரைகளைப் பண்ண, நான் அவற்றையெல்லாம் அஸத்ஸமமாக்கிக்கொண்டேன்; இனி நான் அவனைக்கிட்டுகையென்று ஒன்று உண்டோ?’ என்று நிர்மர்யாத வ்யஸந ஸாகராந்தர்நிமக்நராய் ‘முடிந்தேனேயன்றோ’ என்று இவர் சோகிக்க, ‘நீர் கரணஸங்கோசத்தாலே வந்தது என்று சோகிக்கவேண்டா; கரணஸங்கோச மில்லாதாரும் நம்மை அநுபவிக்குமிடத்தில் இப்படியேகாணும் படுவது’ என்று இவரிழவைப் பரிஹரிக்கக்கோலி, ‘நீர் நினைத்த வகைகளெல்லாம் பரிமாறுகைக்கு ஈடாக வடக்கில் திருமலையிலே நின்றோம்; அங்கே கிட்டி அநுபவியும்’ என்று தான் அங்குநிற்கிற நிலையைக் காட்டி ஸமாதாநம்பண்ண, ஸமாஹிதராய்த் தலைக்கட்டுகிறார்.
தெற்குத்திருமலையிலே நிற்கிறநிலையை அநுபவிக்கக் கோலிப் பெறாதே நோவுபட்ட இவரை, வடக்குத்திருமலையில் நிற்கிறநிலையைக் காட்டி ஸமாதாநம்பண்ணினபடி என்னென்னில்; முலைவேண்டியழுத ப்ரஜைக்கு முலையைக்கொடுத்துப் பரிஹரிக்குமித்தனையிறே. ‘இன்னமுலையைத் தரவேணும்’ என்று அழுதால் அம்முலையையே கொடுத்து ஆற்றவேண்டாவோ?, என்னில்; வேண்டா; இவர்தாம் வழிதிகைத்தலமருகையாலே ‘அதுவே வேணும்; அதுவன்று இது’ என்கிற தெளிவில்லையாயிற்று. இன்னமுந்தான், ஒருவஸ்துதானே ஒருபோது தாரகமாய், மற்றைப்போது அதுதானே பாதகமாகக் காணாநின்றோமிறே; ஆமத்தில் பாதகமான சோறுதானே அதுகழிந்தவாறே தாரகமாகா நின்றதிறே; ‘இவர்க்கு இன்னது இன்னபோது தாரகமாம்; இன்னது இன்னபோது பாதகமாம்’ என்று தெரியாது; குணாவிஷ்காரத்தாலே தரிப்பித்துக்கொண்டு போருகிற ஈஸ்வரனுக்கும் தரித்த இவருக்கும் தெரியுமத்தனை இதுதான். ஆரியர்களிழந்த ம்லேச்சபூமியிலுள்ளார்க்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிற நீர்மையிறே அங்கு; ‘கானமும் வானரமும் வேடும்’ (நான்.திரு.47) ஆனவற்றுக்கு முகங்கொடுத்த நீர்மையுண்டிறே இங்கு.
முதல்பாட்டு
முந்நீர்ஞாலம்படைத்த எம்முகில்வண்ணனே*
அந்நாள்நீதந்த ஆக்கையின் வழி உழல்வேன்*
வெந்நாள் நோய்வீய வினைகளைவேரறப்பாய்ந்து*
எந்நாள்யானுன்னை இனிவந்துகூடுவனே.
ப – முதற்பாட்டில், ‘ஸகலஜகத்ஸ்ரஷ்டாவான நீ ஆஸ்ரயணார்த்தமாகத் தந்த சரீரத்தின் வழியே அலமருகிற நான் தத்தேதுக்களைப்போக்கி உன்னைப்ராபிப்பது என்றோ?’ என்கிறார்.
முந்நீர் – மூன்றுவகைப்பட்ட நீரையுடைய, ஞாலம் – ஜகத்தை, படைத்த எம் முகில்வண்ணனே – ஸ்ருஷ்டித்து (அத்தாலே ஜல ஸ்தல விபாகமில்லாத) மேகத்தின் ஸ்வபாவத்தையுடையனாய்க்கொண்டு எனக்கு உபகாரகனானவனே! அந்நாள் – அந்தஸ்ருஷ்டிகாலத்திலே, (தயமாநமநாவாய்க்கொண்டு), நீ – நீ, தந்த – (ஆஸ்ரயணார்த்தமாகத்) தந்த, ஆக்கையின் – சரீரத்தினுடைய, வழி – (பந்தகத்வ) மார்க்கத்திலே போய், உழல்வேன் – (கர்ப்பநரகாதிகளிலே போய்) அலமருகிற நான், வெம் – (ஜ்ஞாநம்பிறந்தபின்பு) பரிதாபஹேதுவான, நாள் – நாளிலே, நோய் – (அஹங்காரார்த்தகாமாதிரூபமான) த்யாதிகள், வீய – நசிக்கும்படி, வினைகளை – (தத்தேதுவான) கர்மங்களை, வேர் – ஸவாஸநமாக, அறப் பாய்ந்து – கொத்தியெடுத்துப்பொகட்டு, யான் – (அநுகூலிக்கத் தந்த கரணங்களை ப்ரதிகூலிகைக்கு உறுப்பாக்கின) நான், உன்னை – (ப்ரதமோபகாரகனான) உன்னை, இனி – இப்படி க்ருதக்நனானபின்பு, வந்து – (இந்நிலையைவிட்டு) வந்து, கூடுவன் – கூடுவது, எந்நாள் – எந்நாளாயிருக்கிறது? நாள் அறுதியிடிலும் தரிக்கலாமிறே யென்று கருத்து.
ஈடு-முதற்பாட்டில் -ஜகத்ஸ்ருஷ்டியைப் பண்ணி, உன்னை வழிபடுகைக்கு உடலாகக் கரணகளேபரங்களைக் கொடுத்துவிட்டாய் நீ; நான் அவற்றை இதர விஷயப்ராவண்யத்துக்கு உடலாக்கி அநர்த்தப்பட்டுப் போனேன்; இங்ஙனேயிருக்கிற நான் உன்னை வந்து கிட்டுவதொரு நாள் சொல்லவேணும் என்கிறார்.
(முந்நீர்) ஆற்றுநீர், ஊற்றுநீர், வர்ஷஜலமென்று சொல்லுகிறவற்றை, *அப ஏவ ஸஸர்ஜ் ஜாதௌ* என்று முற்பட ஜலஸ்ருஷ்டியைப் பண்ணி, பின்பிறே அண்ட ஸ்ருஷ்டிதான் பண்ணிற்று. (ஞாலம் படைத்த) விசித்ரமாக ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணின. தயநீய தசையைக் கண்டு, ‘இவை கரணகளேபரங்களைப் பெற்றுக் கரைமரஞ்சேரவேணும்’ என்று தயாபரதந்த்ரனாய் ஸ்ருஷ்டித்தபடி; (எம்முகில் வண்ணனே) அவன் ஸர்வவிஷயமாக உபகரிக்கச் செய்தே, ‘மதர்த்தம்’ என்றிருக்கிறார் இவர். ஒருவன் ஸாதநாநுஷ்ட்டாநம்பண்ணி வர்ஷிப்பிக்க நாடு வாழ்ந்துபோமாபோலே, ‘அவன் எனக்காக ஜகத்ஸ்ருஷ்டியைப் பண்ணினான்; நாடு வாழ்ந்துபோயிற்று’ என்று இருக்கிறார். ஸர்வவிஷயமாக உபகரித்தபடியும், ப்ரத்யுபகாரங்கொள்ள இராமையும் பற்ற ‘முகில் வண்ணனே’ என்கிறார். (அந்நாள்) கரணகளேபரவிதுரமாய் தமோபூதமாய், தயநீயதசையை ப்ராப்தமாய்க் கிடந்த அந்நாள். (நீ) இத்தசையிலே *ஏகாகீ ந ரமேத* என்று இழவு உன்னதாய் முகங்காட்டின நீ, (தந்த) திருவடிகளிலே தலைசாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாக உடம்பை யுபகரித்த, (நீதந்த) பரமதயாளுவான நீ தந்த. இவை அர்த்திக்கச் செய்கையன்றிக்கே, தன் தயையாலே தந்த இத்தனை. *துர்லபோ மாநுஷோ தேஹ:* , *மாநுஷ்யம் ப்ராப்ய* இத்யாதி. ‘இத்தை உபகாரமாகச் சொல்லுகிறதென்? கர்மாநுகுணமாயன்றோ ஸ்ருஷ்டி இருப்பது’ என்னில்; ஸ்ருஷ்டிப்பது கர்மத்தைக் கடாக்ஷித்தாகிலும், யௌகபத்யம் அநுக்ரஹகார்யம்; *அசிதவிசேஷிதாந் ப்ரலய ஸீமநி ஸம்ஸரத: கரணகலேபரைர்க் கடயிதும் தயமாநமநா:* (மநுஸ்ம்ருதி1-8) என்னக்கடவதிறே; ஓரோ காலங்களிலே சிறைவெட்டிவிடுமாபோலே தன் தயையாலே உண்டாக்கு மத்தனையிறே. (ஆக்கையின் வழியுழல்வேன்) நீ ஒன்றை நினைத்துத் தந்தாய்; நான் அதின் வழியே போந்தேன். ‘தெப்பத்தை நூக்கிப்போய்ப் பெருமாளையநுபவிக்கலாயிருக்க, ‘சரீரம் பாங்கன்று’ என்று நீர்வாக்காலே போய்க் கடலிலே புகுவாரைப் போலே, இதர விஷய ப்ராவண்யத்துக்கு உடலாக்கி அநர்த்தத்தை விளைத்துக்கொண்டேன்’ என்றார் எம்பார். (வெந்நாள்) ஸ்வரூபஞ்ஞாநம் பிறந்தபின்பு ஸம்ஸாரத்திலிருக்கிற இருப்பு, பிராட்டி லங்கையிலேயிருந்தாற்போலே தோற்றாநின்றது காணும் இவர்க்கு.
பகவத்விஸ்லேஷத்தோடேயிருக்கையாலே, நெருப்பையெறட்டினாப்போலே இராநின்றதாயிற்று நாள். (நோய்) – பிறவி. ஸ்ரீ பரதாழ்வானுடைய நோய் சாதுர்த்திகமாயிராதே, ராமவிரஹத்தாலேயாயிருக்குமே; அப்படியே இவர்நோயும் ப்ரஸித்தங்காணும். (வீய) – முடிய. (வினைகளை வேரறப் பாய்ந்து) *ராக்ஷஸாநாம் க்ஷயம் க்ருத்வா ஸூதயித்வாச ராவணம், லங்காமுந்மூலிதாம் க்ருத்வா கதா த்ரக்ஷ்யதி மாம் பதி:* என்கிறபடியே இவரும் மநோரதித்து விஸ்லேஷத்யஸநத்துக்கு அடியான அவித்யாதிகளை வாஸனையோடே போக்கி. _பாய்ந்து_ என்று சினம் தோற்றுகிறது. ஒரு ஸர்வசக்தி செய்யுமத்தை நான் செய்யவோ? (எந்நாள்) எனக்கு ‘இப்போதே பெறவேணும்’ என்னும் அபேக்ஷையில்லை. ‘இன்ன நாள் பெறக்கடவை’ என்று ஒரு நாளிட்டுத் தர அமையும்; *பூர்ணே சதுர்த்தசே வர்ஷே* என்னுமாபோலே. (யான்) நீ தந்த உபகரணங்களை இதரவிஷய ப்ராவண்யத்துக்கு உடலாக்கி அநர்த்தத்தைச் சூழ்த்துக் கொண்ட நான். (உன்னை) ‘நான் விளைத்துக்கொண்ட அநர்த்தத்துக்குப் போக்கடி சொல்லாய்’ என்று வளைக்கலாம்படியிருக்கிற உன்னை. (இனி) நீ தந்த கைம்முதலை யழித்துக்கொண்ட பின்பு. (இனி வந்து கூடுவனே) ‘இனி வந்துகிட்டுகை என்று ஒரு பொருளுண்டோ? என்று நிராசராகிறார்’ என்று முன்புள்ள முதலிகள்; எம்பெருமானார் ‘நிராசரானால் பின்னை முடிவாரொருவர்; ஒன்பதாம் பாட்டில் நிராசராக, பத்தாம்பாட்டில் அவன் வந்து ஸமாதாநம் பண்ணினானாக அமையும்’ என்று அருளிச் செய்வர். ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய்’ என்கிறார்.
இரண்டாம் பாட்டு
வன்மாவையமளந்த எம்வாமனா!* நின்
பன்மாமாயப் பல்பிறவியில் படிகின்றயான்*
தொன்மாவல்வினைத் தொடர்களைமுதலரிந்து*
நின்மாதாள் சேர்ந்து நிற்பதுஎஞ்ஞான்றுகொலோ*.
ப – அநந்தரம், அர்த்தியாய்வந்து ஜகத்தை அநந்யார்ஹமாக்கின உன் ஸ்லாக்யமான திருவடிகளைச் சேருவது என்றோ? என்கிறார்.
வல் – காடிந்யத்தாலே சிக்கென்ற, மா-பெரிய, வையம்-ப்ருதிவியை, அளந்த – (ஸுகுமாரமான திருவடிகளாலே) அளந்து, எம் – அத்தாலே என்னை அநந்யார்ஹமாக்கின, வாமனா-வாமநனே! நின் – உனக்கு லீலோபகரணமாய், பல் – (குணபேதத்தாலும் கார்யபேதத்தாலும்) பலவகையாய், மா-துரத்யயையான, மாயம் – மாயையாகிற ப்ரக்ருதியடியான, பல்பிறவியில்-(தேவாதி) பஹுவிதஜந்மத்திலே, படிகின்ற-பொருந்திவர்த்திக்கிற, யான் – நான், தொல் – அநாதியாய், மா-அபரிச்சேத்யமாய், வல்-விடுவிக்க அரிதான, வினை-பாபங்களினுடைய, தொடர்களை – அநுபந்தங்களை, முதல்-ஸமூலமாக, அரிந்து-அறுத்து,நின்-(ப்ராப்தனான) உன்னுடைய, மா -(பெறுதற்கரிய) பெருமையையுடைத்தான, தாள்-திருவடிகளை, சேர்ந்து-சேர்ந்து, நிற்பது-(கதாகதம் பண்ணாதே) நிற்பது, எஞ்ஞான்றுகொல்-எக்காலமாயிருக்கிறதோ?
ஈடு – இரண்டாம் பாட்டு. _உம்முடைய உடம்புகொண்டு நாம் இருந்தவிடத்தே வந்து கிட்டமாட்டிற்றிலீராகில், நம்முடம்பைக் கொண்டு நீர் இருந்தவிடத்தே வந்து கிட்டினோமே; வாமநவேஷத்தைக் கொண்டு மஹாபலிமுன்னே வந்து நின்றோமே; அங்கே கிட்டமாட்டிற்றிலீரோ?_ என்ன, ‘அதுக்குந் தப்பினேன்’ என்கிறார்.
(வன்மாவையமளந்த) அவன் தானே தன்னைக் கொண்டுவந்து காட்டினவிடத்திலும் நெஞ்சில் நெகிழ்ச்சியின்றிக்கேயிருந்த பூமியிறே. ஆஸுரப்ரக்ருதியான மஹாபலிக்கு உள்ள இரக்கமும் இல்லையிறே; ஸுக்ராதிகள் விலக்கச் செய்தேயும் அவர்கள்வழி போயிற்றிலனிறே அவன். மஹாபலி மிடுக்காலே புக்குஅளக்க அரிதான பூமியென்னுதல்; இப்படி வன்மையையுடைத்தான மஹாப்ருதிவியை அளந்த. *வடிவிணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி*(9-2-10)யைக் கொண்டுகிடீர் காடும் மலையுமான பூமியை அளந்தது என்னுதல். ஸம்ஸாரிகளுடைய நெஞ்சில் வன்மையைச் சொல்லுதல், பூமியினுடைய காடிந்யத்தைச் சொல்லுதல், மஹாபலி தோள்மிடுக்காலே ஒருவர்க்கும் ப்ரவேசிக்க அரிதான வன்மையைச் சொல்லுதல். (எம்வாமனா) அபஹ்ருத ராஜ்யனான இந்த்ரனுக்காகவல்ல; வாமநாவதாரமும் மதர்த்த மென்றிருக்கிறார். (நின்) *மம மாயா துரத்யயா* என்று சொன்ன இது எனக்கு ஒருவனுக்கும் பலித்துவிட்டது. (பன்மாமாயம்) மாயமென்கிறது மூலப்ரக்ருதியை: பன்மையாவது என்? என்னில்,-கார்யகதமான தேவாதி நாநாத்வத்தைக் காரணத்தே யேறிட்டுச் சொல்லுகிறதாதல். அன்றிக்கே, குணத்ரயங்களுக்கு ஆஸ்ரயமா யிருக்கையாலே குணபேதங்களையிட்டுப் பலவாகச் சொல்லுதல். (பல்பிறவியில்) ப்ரக்ருதி ஸம்பந்த நிபந்தநமாகவிறே அநேக ஜந்மங்கள் தான் உண்டாகிறது. அவற்றிலே (படிகின்ற) தறைகாணாதே அவகாஹிக்கிற. ‘விழுகின்ற’ என்னாதே, ‘படிகின்ற’ என்கிறது இத்வநர்த்தத்திலே வெறுப்பின்றிக்கே பொருந்தியிருக்கை. வர்த்தமாந நிர்த்தேத்தால் இன்னம் தறை கண்டதில்லையென்கை. (யான்) ஸம்ஸாரபாந்தனான நான் (தொன்மா இத்யாதி) இச்சேதநனுள்ளவன்றே உண்டாய், அநுபவித்தாலும் நசியாததாய் ஈஸ்வரன் போக்குமன்றும் ஒரு நிலை நின்று போக்கவேண்டும்படி ப்ரபலமாய், ஒன்றோடொன்று அநுபந்தித்துத் தான் குவாலாயிருக்கிற பாபத்தை வாஸனையோடே போக்கி. தொடர் என்று விலங்கு. (நின்மாதாள் சேர்ந்து) பரமப்ராப்யமாய் நிரதிசயபோக்யமாயிருக்கிற திருவடிகளைக் கிட்டி, (நிற்பது) பறக்கிறதொன்றிலே பாரம் வைத்தாற்போலேயிருப்பதொன்றிறே, நித்யஸம்ஸாரி களுக்கு பகவத்ஸமாஸ்ரயணம். *அத ஸோபயங்கதோ பவதி* என்னக்கடவதிறே. (நிற்பதெஞ்ஞான்றுகொலோ) அது எந்நாளாகவற்றோ? _அபீதாநீம் ஸகாலஸ் ஸ்யாத்_ என்னுமாபோலே. ‘இந்நாள்’ என்று ஓரவதி பெற்றதாகில், இன்றுபெற்றத்தோடு ஒக்குமென்றுஞ் சொல்லுவர்கள்.
மூன்றாம் பாட்டு
கொல்லாமாக்கோல் கொலைசெய்துபாரதப்போர்*
எல்லாச்சேனையும் இருநிலத்து அவித்தஎந்தாய்*
பொல்லாவாக்கையின் புணர்வினையறுக்கலறா*
சொல்லாய்யான்உன்னைச் சார்வதோர்சூழ்ச்சியே.*
ப – அநந்தரம், ஆஸ்ரிதவிரோதிநிரஸநசீலனான உன்னை நான் கிட்டுகைக்கு ஒரு விரகு அருளிச்செய்யவேணும் என்கிறார்.
கொல்லா – கொல்லுகைக்குக் கருவியன்றியே, மா-குதிரையை நடத்துவதான, கோல் – முட்கோல் கருவியாக, ஸ(மயைவைதே நிஹதா:) என்று ஸங்கல்பமாத்ரத்தாலே, கொலை செய்து – கொலையைச் செய்து, பாரதப்போர் – பாரதயுத்தத்திலே, எல்லாச் சேனையும் – (சத்ருஸேனையோடு பாண்டவஸேனையோடு வாசியற பூபாரமான) ஸமஸ்தஸேனையையும், இருநிலத்து – (தர்மக்ஷேத்ரமான) பெரியபூமியிலே, அவித்த – நசிப்பித்த, எந்தாய் – என்னுடைய ஸ்வாமியே! பொல்லா – அநர்த்தஹேதுவான, ஆக்கையின் – சரீரத்தோடுஉண்டான, புணர்வினை – ஸம்பந்தத்தை, அறுக்கல் – அறுக்க உத்யோகித்தாலும், அறா – (என்னால்) அறுக்கலாம்படியல்ல; யான் – (இதிலே அகப்பட்ட) நான், உன்னை – (விரோதியையழித்துக்கொடுக்கவல்ல) உன்னை, சார்வது – கிட்டலாம்படி, ஓர் சூழ்ச்சி – அத்விதீயமாயிருப்பதொரு நல்விரகு, சொல்லாய் – (அர்ஜுநனுக்குச் சொன்னாற்போலே) சொல்லவேணும்.
ஈடு – மூன்றாம்பாட்டு. ‘வாமநாவதாரம் முற்காலத்திலேயாகையாலும், நீர் பிற்பாடராகையாலும் இழந்து அங்குக் கிட்டப்பெற்றிலீராகில், ஒருத்தியுடைய மங்களஸூத்ரத்துக்காகப் பாண்டவர்களுக்குச் சொல்லிற்றுச் செய்து திரிந்தோமே; அங்கே வந்து கிட்டமாட்டிற்றிலீரோ?’ என்ன, ‘அங்குந் தப்பினேன்’ என்கிறார்.
(கொல்லா) துர்யோதநனும் அர்ஜுநனுமாக க்ருஷ்ணன் பள்ளி கொண்டருளாநிற்கச் செய்தே படைத்துணை வேண்டி வந்து, துர்யோதநன் திருமுடிப்பக்கத்திலேயிருந்தான்; அர்ஜுநன் திருவடிகளின் பக்கத்திலேயிருந்தான்; பள்ளியுணர்ந்தருளி, ‘ராஜாக்கள் போந்ததென்?’ என்ன, துர்யோதநன் ‘நான் முற்படவந்தேன்’ என்ன, _பவாநபிகத: பூர்வ மத்ர மே நாஸ்தி ஸம்சய:_ என்று ‘நீர் முற்பட வந்ததுக்குக் குறையில்லை; நங்கண் முற்படப்பட்டது இவன்பக்கலிலே’ என்று அவனுக்காகத்தான் சில வழக்குச் சொல்லி, ‘உங்களுக்கு வேண்டுவது என்?’ என்ன, ‘படைத்துணை வேண்டி வந்தோம்’ என்ன, ‘ஆகில், நாராயண கோபாலர்களை ஒருவன் கொள்ளுவது, என்னை ஒருவன் கொள்ளுவது’ என்ன, அசேதந க்ரியாகலாபங்களைப் பற்றுவாரைப்போலே துர்யோதநன் அவர்களைக் கொண்டுபோக, பீஷ்மாதிகள் கேட்டு ‘தப்புச் செய்தாய்; இனி க்ருஷ்ணன் ஆயுதமெடாதொழிவானாக வேண்டிக் கொண்டு போராய்’ என்ன, அவனும் வந்து ‘நீ ஆயுதம் எடாதொழியவேணும்’ என்ன, ‘அப்படியேயாகிறது’ என்று சொல்லிவிட்டு, கொலைக்குப் பரிகரமன்றிக்கே குதிரையை நடத்துகிற கோலைக் கொண்டு முடித்துப் பொகட்டான். (பாரதப் போர்) பாரத ஸமரத்திலே. (எல்லாச் சேனையும்) துர்வர்க்கமடையத் திரண்டதிறே உபய ஸேநையிலும். இங்கே நாலைந்துபேரும் அங்கே ஒன்றிரண்டுபேரும் ஒழிய முடித்துப் பொகட்டானாயிற்று. (இருநிலத்து) அவர்கள்பக்கல் நன்மையில்லையேயாகிலும், அங்கே பட்டார்க்கு வீரஸ்வர்க்கங் கிட்டுந் தேசத்திலே. (அவித்த) பீஷ்மாதிகள் காட்டுத்தீ கிளர்ந்தாற்போலே வர, காளமேகம் வர்ஷிக்குமாபோலே அவித்தான். ‘மழை கொலோ வருகின்றது’ *(பெரியாழ்வார் திருமொழி 3-4-1) என்றிறே அவன் வரத்துத்தான் இருப்பது. (எந்தாய்) பாண்டவர்களுக்கு அன்று உதவிற்றும் தமக்கு என்று இருக்கிறார். (பொல்லாவாக்கை) நீ அழியச்செய்த துர்யோதநாதிகள் அளவல்லகிடாய் இதின் தண்மை; அநுகூலம் போலேயிருந்து பாதகமாமிறே இது. தன் பக்கலிலே போக்யதா புத்தியைப் பிறப்பித்து ஈஸ்வரனுடைய போக்யதையைத் திரஸ்கரிப்பிக்கும். சிஷ்டர்கள், ஒருவனுக்கு அநேக தோஷமுண்டானால் ‘அவன் தண்ணியன்’ என்று விடுமித்தனையிறே; அப்படியே இவர் இதின் தண்மைகளையெல்லாம் திரளநினைத்து, ‘பொல்லாவாக்கை’ என்கிறார். சரீரத்துக்கடியாய் ஒன்றோடொன்று பிணைந்திருக்கிற பாபங்களானவை. ‘புணர்வினை’ என்று – சரீரஸம்பந்தந்தன்னை என்னுதல். (அறுக்கலறா) ராவணன் தலைபோலே முளையாநிற்கும். (சொல்லாய்) இத்தைக் கழித்து நான் உன்னைக் கிட்டுமதொரு விரகு அருளிச்செய்யவேணும். நான் அறியில் தப்புவன்; நான் அறியாதபடி விரகுபார்க்க வேணும்; அது தன்னை எனக்குச் சொல்லவும் வேணும் என்கிறார். (யான்) சிறையிலே கிடப்பாரைப்போலே, ப்ரக்ருதியோடே பிணையுண்டிருக்கிற நான். (உன்னை) ஒரு தேசவிசேஷத்திலே நித்யஸூரிகள் அநுபவிக்கும் உன்னை. (சார்வதோர் சூழ்ச்சியே) சேருவதொரு ப்ரகாரஞ் சொல்லாய். அதாவது *ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி* என்று அருளிச் செய்கையிறே.
நான்காம் பாட்டு
சூழ்ச்சிஞானச் சுடரொளியாகி* என்றும்
ஏழ்ச்சிக்கேடின்றி எங்கணும் நிறைந்தஎந்தாய்!
தாழ்ச்சிமற்றெங்கும் தவிர்ந்து நின்தாளிணைக்கீழ்
வாழ்ச்சி* யான்சேரும்வகை அருளாய்வந்தே.
ப – அநந்தரம், ரக்ஷணார்த்தமான வ்யாப்தியையுடைய உன் திருவடிகளை நான் கிட்டும் ப்ரகாரம், என்முன்னேவந்து முகந்தோன்றநின்று அருளிச்செய்யவேணும் என்கிறார்.
சூழ்ச்சி – (எல்லாவற்றையுஞ்) சூழ்ந்திருக்கிற, ஞானச்சுடர் – ஜ்ஞாநப்ரபையையுடைத்தான, ஒளிஆகி – ஸ்வயம்ப்ரகாச ஸ்வரூபனாய், என்றும் – ஸர்வகாலத்திலும், ஏழ்ச்சி-விகாஸமும், கேடு – ஸங்கோசமும், இன்றி – இன்றிக்கே, எங்கணும் – ஸர்வப்ரதேசத்திலும், நிறைந்த – பரிபூர்ணமாக வ்யாபித்து, எந்தாய் -(ஊரைவளைந்துஒருவனைப்பிடிக்குமாபோலே) என்னையங்கீகரித்த ஸ்வாமியே!, மற்று – (உன்னை) ஒழிந்த, எங்கும் – ஸமஸ்தவிஷயங்களிலும், தாழ்ச்சி – கால்தாழ்கை, தவிர்ந்து – தவிர்ந்து, நின் – (ப்ராப்தனான) உன்னுடைய, தாள் – (போக்யமான) திருவடிகள், இணை-இரண்டின், கீழ்-கீழே, வாழ்ச்சி-(பரதந்த்ரனாய்) வாழும் வாழ்க்கையை, யான்-(இதுக்குமுன் அந்வயித்தறியாத) நான், சேரும் – ப்ராபிக்கும், வகை – ப்ரகாரத்தை, வந்து – (அவதாரமுகத்தாலே என்முன்னே) வந்துநின்று, அருளாய் – அருளிச்செய்யவேணும். த்யாப்தமான ஸ்வரூபத்தால் போராது என்று கருத்து.
ஈடு – நாலாம் பாட்டு. ‘இப்படி நீர் இருந்தவிடத்தே நாம் வரச்செய்தேயும் இழந்தீராகில், அவதாரங்களைப்போலே ஒரு காலவிசேஷத்திலேயாகாதே எல்லாக் காலத்திலும் அந்தர்யாமித்வேந உகவாதார்பக்கலிலும் விடமாட்டாமையாலே புகுந்து நின்றோமே; அங்கே அநுகூலித்து உம்முடைய அபேக்ஷிதம்பெற்றுப் போகமாட்டிற்றிலீரோ?’ என்ன, ‘அதுக்கும் தப்பினேன்’ என்கிறார்.
(சூழ்ச்சி இத்யாதி) சேதநரைத் தப்பாதபடி அகப்படுத்திக்கொள்ளுகையாலே, த்யாப்தியை ‘சூழ்ச்சி’ யென்கிறது. எங்குமொக்க வ்யாபித்திருப்பதாய் விசததமமாயிருக்கிற ஜ்ஞாநப்ரபையையுடையையாய். ஜ்ஞாநத்துக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தைச் சொல்லுதல்; ஜ்ஞாநத்தைச் சொல்லுதல். ஸ்வரூபத்யாப்தியும் ஜ்ஞாநத்யாப்தியும் இரண்டும் சொல்லக் கடவதிறே; இரண்டும் பரார்த்தமாகையாலே. (என்றும் ஏழ்ச்சி கேடின்றி) எல்லாக்காலத்திலும், ஏழ்ச்சியாதல் கேடாதல் இன்றிக்கே. கர்மமடியாக ஆத்மாவுக்கு வரக்கடவதான ஸங்கோசவிகாஸங்களின்றிக்கேயிருக்கை. ஏழ்ச்சி – எழுச்சி-விகாஸம். கேடு-குறைவு – ஸங்கோசம். (எங்கணும்நிறைந்த) இப்படி வ்யாபிப்பது ஒரு ப்ரதேசத்திலேயோ வென்னில், (எங்கணும்) கண்ணென்று இடமாய், _இடந்திகழ் பொருள்தொறும் கரந்து (1-1-10)_ என்கிறபடியே, எல்லாவிடத்திலும் உண்டான எல்லாவற்றிலும், ஜாதி வ்யக்திதோறும் பரிஸமாப்ய வர்த்திக்குமாபோலே பூர்ணமாக வ்யாபித்திருக்கும். (எந்தாய்) ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போலே, வ்யாப்தியும் தமக்காகவென்று இருக்கிறார். உன்பக்கலிலே அகப்படுத்திக் கொள்ள விரகு தேடியுணர்ந்து என்னை வ்யாபித்துக்கொண்டு நிற்கச் செய்தேயும், விஷய ப்ரவணனாய்த் தப்பினேன் என்கை. (தாழ்ச்சி மற்றெங்குந் தவிர்ந்து) உன்னையொழிந்த மற்றுள்ள விடத்தில் வரக்கடவதான தாழ்ச்சியையும் தவிர்ந்து. _யாதானும்பற்றி_ (திருவிருத்தம் 95) என்கிறபடியே. நீயன்றிக்கேயொழிய அமையுமே, நான் மேல் விழுகைக்கு. (நின் தாளிணைக்கீழ் வாழ்ச்சி) வகுத்ததாய் நிரதிசயபோக்யமாயிருக்கிற உன் திருவடிகளிலுண்டான கைங்கர்யத்தை, இதுக்கு முன் புதியது உண்டறியாத நான் கிட்டுவதொரு ப்ரகாரம் அருளிச்செய்ய வேணும். இரண்டிடத்திலும் ப்ராவண்யம் ஒத்திருக்க, தாழ்ச்சியென்றும், வாழ்ச்சியென்றும் சொல்லுகிறார்-*ஸர்வம் பரவசம் து:க்கம்* என்றும், *ஸேவா ஸ்வத்ருத்தி:* என்றும் அவற்றைச் சொல்லாநின்றதிறே; *சாயா வா ஸத்த்வமநுகச்சேத்* என்று இத்தை விதியா நின்றது; அவற்றைப்பற்ற. இவ்வாழ்ச்சிக்கு இட்டுப்பிறந்து வைத்து அத்தை யிழந்திருக்கிற நான் கிட்டுவதொரு ப்ரகாரம் அருளிச் செய்ய வேணும். (வந்தே) அதுதானும் முகம் தோற்றாதபடி நின்றருளவொண்ணாது; என் கண்ணுக்கு இலக்காம்படி, ராமக்ருஷ்ணாத்யவதாரங்கள் போலே எனக்காக ஓரவதாரத்தைப் பண்ணியே யாகிலும் வந்தருளவேணும்.
ஐந்தாம் பாட்டு
வந்தாய்போலேவந்தும் என்மனத்தினை நீ*
சிந்தாமல்செய்யாய் இதுவேயிதுவாகில்*
கொந்தார்காயாவின் கொழுமலர்த்திருநிறத்த
எந்தாய்* யான்உன்னை எங்குவந்தணுகிற்பனே*.
ப:- அநந்தரம், விலக்ஷணவிக்ரஹயுக்தனான நீ வந்து என் நெஞ்சை தரிப்பியாயாகில், உன் அழகை நான் இழக்குமித்தனையிறே என்கிறார்.
வந்தாய்போலே – (ப்ரஹ்லாத கஜேந்த்ரர்களுக்கு) வந்தாற்போலே, வந்தும் – (ஒரு ப்ராதுர்பாவம் பண்ணி) வந்தாகிலும், என் – (உன்னைக்கிட்ட ஆசைப்பட்ட) என்னுடைய, மனத்தினை – நெஞ்சை, நீ – (ஆபத்திலேயுதவின) நீ, சிந்தாமல் – (விரோத்யநுஸந்தா நத்தாலே)–திலமாகாதபடி, செய்யாய் – பண்ணுகிறிலை; இதுவே- (உதவாமையாகிற) இதுவே, இது – (ஸ்வபாவமென்னும்) இதுவாய், ஆகில் – நடக்குமாகில், கொந்து – கொத்துக்களாலே, ஆர்-நிறைந்த, காயாவின் – காயாவினுடைய, கொழுமலர் – செத்விப்பூவின், திருநிறத்த – நிறத்தையுடையனாய், எந்தாய் – (அத்வழகைக் காட்டி என்னையடிமைகொண்ட) ஸ்வாமியே! யான் – (உன்னழகுஒழியச்செல்லாத) நான், உன்னை – (இத்வழகைக்காட்டின) உன்னை, எங்கு -எங்கே, வந்து-வந்து, அணுகிற்பன் – கிட்டவல்லேனாவது?
ஈடு-அஞ்சாம்பாட்டு. ‘நீர் ‘வந்தேயருளவேணும்’ என்னாநின்றீர்: இது நமக்குத் தட்டுப்படும்; ஒருவிசை பதினோராயிரமாண்டு இருந்தோம்; ஒருவிசை நூறாண்டு இருந்தோம்: வருகை நமக்குப் பணியுண்டுகாணும்’ என்ன, ‘எனக்கும் அவைபோலே சில நாளிருந்து உபகரித்தருளப்பெறில் அழகியது; அது செய்யத் திருவுள்ள மல்லவாகில், ‘ஆனைக்குத் தோற்றினாப்போலேயும் ப்ரஹ்லாதனுக்குத் தோற்றினாப்போலேயும், எனக்கும் ஒரு தோற்றரவு தோற்றியேயாகிலும் உதவவேணும்’ என்கிறார்.
(வந்தாய்போலே வந்தும்) வந்து சிலநாள் இருந்தவைபோலன்றிக்கே, வந்தாய்போலே வந்தும். (என் மனத்தினை நீ) உன்னையொழியத் தரியாதபடியான என் மநஸ்ஸை தசையறிந்து தரிப்பிக்கும் நீ; உருவழிந்தவற்றையுண்டாக்கவல்ல நீ. (சிந்தாமல் செய்யாய்) இது த்ரவீபூதமாய் மங்கிப்போகாதபடி செய்கிறிலை. ‘இதுவே இதுவாகில் -எங்குவந்தணுகிற்பன்’ என்கிறார். (இதுவே இதுவாகில்) உன்னையொழிய மங்கிப்போகையும் இதுக்கு ஸ்வபாவமாய். இது மங்கக் கொடுத்துப் பார்த்திருக்குமது உனக்கு ஸ்வபாவமாய்விட்டதாகில். (கொந்தார் இத்யாதி) ‘சிறியதுக்கு இனியது இடேன்’ என்று இப்படி செய்யக் கடவதாக இருந்த நீ இத்வடிவில் சுவட்டை எனக்கு அறிவித்ததென்? கொந்தார்ந்து தழைத்திருந்துள்ள காயாவினுடைய கொழுவிய மலர்போலே குளிர்ந்திருந்துள்ள திருநிறத்தைக் காட்டி என்னை எழுதிக்கொண்டவனே! (யான் இத்யாதி) உன்னைக் கிட்டுகைக்கு ஒரு கைம்முதலில்லாத நான். இத்வடிவில் போக்யதையறிந்த நான். பிரியில் தரியாத வடிவு படைத்திருக்கிற உன்னை, *தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்* என்று நீயே அநுபவிப்பிக்கும் உன்னை, என்ன ஸாதநாநுஷ்ட்டாநத்தைப் பண்ணி எங்கே வந்து கிட்டக்கடவேன்? ‘நான் உன்னைக் கிட்டுகை’ என்று ஒரு பொருளுண்டோ?
ஆறாம் பாட்டு
கிற்பன்கில்லேனென்றிலன் முனநாளால்*
அற்பசாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன்*
பற்பல்லாயிரம் உயிர்செய்த பரமா!* நின்
நற்பொற்சோதித்தாள் நணுகுவதுஎஞ்ஞான்றே?
ப – அநந்தரம், அநாதிகாலம்விஷயப்ரவணனாய் அகன்ற நான், எல்லாவற்றையும் நினைத்தபடி செய்யவல்ல நிரவதிகசக்தி யுக்தனான உன்னைக் கிட்டுவது என்று? என்கிறார்.
முனநாளால் – முற்காலமெல்லாம், கிற்பன் (என்றிலன்) – (‘குர்யாத்’ என்று – நன்மை செய்ய அடுக்குமென்றால்) வல்லேனென்று இசைந்திலேன்; கில்லேன் என்றிலன் – (‘ந குர்யாத்’ என்று – தீமை செய்யலாகாதென்றால்) மாட்டேனென்று தவிர்ந்திலன்; (இப்படி விதிநிஷேதங்களுக்கு அவிஷய பூதனாய்க்கொண்டு), அற்பம் – அத்யல்பமான, சாரங்கள் – பசையையுடைத்தான, அவை – நாநாவித துர்விஷயங்களை, சுவைத்து – (பசையுண்டாக ப்ரமித்து எதிர்ப்பசை கொடுத்து) புஜித்து, அகன்று ஒழிந்தேன் – (அதடியாக) தூரஸ்தனாய்விட்டேன்; பற்பல் – நாநாவிதமாய், ஆயிரம் – அஸங்க்யாதமான, உயிர் – ப்ராணிஜாதங்களை, செய்த – (நினைத்தபடி) உண்டாக்கவல்ல, பரமா – சக்திபாரம்யத்தையுடையவனே! நின் – (வகுத்தஸ்வாமியான) உன்னுடைய, நல் – அப்ராக்ருதமாய், பொன் – அதிரமணீயமாய், சோதி – தேஜோமயமான, தாள்-திருவடிகளை, நணுகுவது – கிட்டுவது, எஞ்ஞான்று – எக்காலம்?
சக்திமானான நீ கிட்டுவிக்குமதொழிய, என்னைப்பார்த்தால் கிட்ட விரகில்லையென்று கருத்து.
ஈடு – ஆறாம்பாட்டு. ‘என்னைப் பார்த்தால் கிட்ட விரகில்லை; உன்னைப் பார்த்தால் தப்ப விரகில்லை; ஆனபின்பு, நிரதிசய போக்யமான உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார். ‘விதிநிஷேதங்களுக்கு வஸ்யனன்றிக்கே இதர விஷய ப்ரவணனாய்க் கைகழிந்துபோன நான் உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார்.
(கிற்பன் கில்லே னென்றிலன்) ‘ஆழ்வீர்! பகவத் விஷயத்தில் வந்தால் இச்சைக்கு மேற்பட ஓராயாஸமின்றிக்கே, பேற்றில் வந்தால் அபுநராத்ருத்தி லக்ஷண மோக்ஷமாயிருக்கும்; அதுக்கு ஈடாக ஒன்றைச் செய்யவல்லீரே’ என்றால், ‘ஓம், அப்படி செய்கிறேன்’ என்றிலன். ‘இதர விஷய ப்ராவண்யமாகிறது ஆயாஸம் கனத்துப் பேற்றில் ஒன்றின்றிக்கேயிருப்பதொன்று; அத்தைத் தவிரவல்லீரே?’ என்றால், ‘ஓம், தவிருகிறேன்’ என்றிலன். ‘இப்படி விஹிதத்தைச் செய்யாமையும், அவிஹிதத்தைச் செய்கையும், என்று தொடங்கி?’ என்ன, (முன நாளால்) ‘காலமெல்லாம் எனக்கு இதுவேயன்றோ யாத்ரை?’ இப்படி நெடுநாள்பட, ‘நம்மையொழியப் புறம்பே துவக்கவல்லபடி போக்ய பூதமான விஷயங்களும் உண்டாயிற்றோ?’ என்னில். (அற்பசாரங்கள்) ‘உன் பக்கல் வாராதபடி தகைய வேண்டுவது உண்டு; அது தன் பக்கலொன்றில்லை. முள்ளிப்பூவில் ரஸம்போலே தான் அல்பமாய், அவைதாம் பலவாய், தன்னாவில் பசை கொடுத்து புஜிக்க வேண்டும்படி யிருக்கிற விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து, ஸர்வசக்தியான தேவரை *_ஓடினேன்_ (திருமொழி 1-1 -1) என்கிறபடியே கைகழியப் போனேன்’. ‘நெடுநாள் இப்படி நம்மைக் கைகழிந்தீராகில் நம்மை இனிச் செய்யச் சொல்லுகிறது என்?,’ என்ன, (பற்பல்லாயிரமுயிர் செய்தபரமா) உயிர் செய்கையாவது-ஸ்த்திதி கமந சயநாதிகளுக்கு யோக்யமாம்படி சரீரத்தோடே ஸம்பந்திப்பிக்கை. ‘எண்ணிறந்த பதார்த்தங்களை உண்டாக்கின ஸர்வாதிகனே! இல்லாத வஸ்துவையுண்டாக்கின உனக்கு, உள்ள வஸ்துவுக்கு ஒரு குணாதாநம் பண்ணுகை அரிதோ?’ (நின் இத்யாதி) ‘உன்னுடைய-நன்றாய் ஸ்ப்ருஹணீயமாய் நிரவதிக தேஜோரூபமான திருவடிகளை நான் என்று வந்து கிட்டக்கடவேன்?’
ஏழாம் பாட்டு
எஞ்ஞான்றுநாம்இருந்திருந்து இரங்கிநெஞ்சே*
மெய்ஞ்ஞானமின்றி வினையியல்பிறப்பழுந்தி*
எஞ்ஞான்றும்எங்கும் ஒழிவறநிறைந்துநின்ற*
மெய்ஞ்ஞானச்சோதிக் கண்ணனைமேவுதுமே.
ப – அநந்தரம், த்யாப்தனானவன் ஸுலபனானானென்றால், ப்ராப்திஸாதநமில்லா தார் புக்குக் கிட்டப்போமோ? என்கிறார்.
நெஞ்சே – நெஞ்சே!, எஞ்ஞான்றும் – எப்போதும், இருந்து இருந்து – இருந்திருந்து, இரங்கி – (ப்ராப்யாகாங்க்ஷையாலே) து:கித்து, மெய்ஞ்ஞானம்-(தத்ஸாதநமான) தத்த்வஜ்ஞாநம், இன்றி – இன்றியே, வினை – (தத்விரோதியான) பாபத்தாலே, இயல் – ப்ரத்ருத்தமான, பிறப்பு – ஜந்மங்களிலே, அழுந்தி – அழுந்தி, நாம் – (இதுவே யாத்ரையான) நாம், எஞ்ஞான்றும் – என்று மொக்க, எங்கும் – எல்லாவஸ்துக்களிலும், ஒழிவு அற – ஒன்றுஞ்சோராதபடி, நிறைந்து – பரிபூர்ணமாகத்யாபித்து, நின்ற – நின்ற, மெய்ஞ்ஞானம் – நித்யஜ்ஞாநமான, சோதி – தேஜஸ்ஸையுடையனாய், கண்ணனை – (ஆஸ்ரிதஸௌலப்யார்த்தமாக வந்து அவதரித்த) க்ருஷ்ணனை, மேவுதுமே – எக்காலம் கூடக்கடவோம்?
ஈடு – ஏழாம்பாட்டு. ‘நின்நற்பொற்சோதித்தாள் (3-2-6)’ என்று திருவடிகளின் போக்யதையை அநுஸந்தித்தவாறே திருவுள்ளம் பதறத் தொடங்கிற்று; ‘கெடுவாய்! உன்படி ஆராயாதே நல்லத்தை ஆசைப்பட்டால் கிடைக்குமோ?’ என்கிறார்.
(எஞ்ஞான்றும் இத்யாதி) காலமெல்லாம் நாம் இருந்து சிழகிச் சிழகி * (‘சீழ்கிச் சீழ்கி’ என்பது பாடம் என்பர் சிலர்) அழுதால் என்ன ப்ரயோஜநமுண்டு? (நெஞ்சே) ‘உன்னை நீ அறியாயோ? இதுக்கு முன்பெல்லாம் பந்தஹேதுவாய்ப் போந்தாயல்லையோ? ஏன் தான், நமக்குப் பெறுகைக்குக் குறையென்? – அல்பாநுகூல்யம் அமையும் விஷயத்தைப் பெற?’ என்ன, – இதுவன்றோ நம்முடைய பூர்வத்ருத்தம்? மெய்ஞ்ஞானமில்லை கண்டாயே; *தஜ்ஜ்ஞாந மஜ்ஞாநமதோணந்யதுக்தம்*, *வித்யாணந்யா சில்பநைபுணம்* என்று புறம்பே சில ஜ்ஞாநமுண்டத்தனை யல்லது ஸம்யக்ஜ்ஞாநமில்லை கண்டாயே. ஆமாறறிவிலோமே. மெய்ஞ்ஞானமில்லாதவளவேயோ? பாபங்களிலே கொண்டுபோய் மூட்டக்கடவதான ஜந்மங்களிலே அழுந்திப் போரும்படியாயன்றோ நம்நிலை இருக்கிறது. (எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவறநிறைந்து நின்ற) எல்லாக் காலத்திலும் எல்லா வஸ்துக்களிலும் ஒன்றும் பிரிகதிர்ப் படாமே குறைவற வ்யாபித்து நின்ற. (மெய்ஞ்ஞானச் சோதிக்கண்ணனை) நம்நிலையறியாதானொருவனாய்க் கிட்டப்பார்க்கிறோமோ? நித்யவஸ்துவாயிருக்கச் செய்தே ஜ்ஞாநஸங்கோசவிகாஸார்ஹமாகாநின்றதிறே இவ்வஸ்து; அங்ஙனன்றிக்கே, மெய்யான ஞானச் சோதியையுடைய க்ருஷ்ணனை. *ஏகோணஹ மஸ்மீதி ச மந்யஸே த்வம்* என்னும்படியே. (நெஞ்சே மெய்ஞ்ஞானச்சோதிக் கண்ணனை மேவுதுமே) ‘ஸுலபன்’ என்னா, ‘நம்மாலே கிட்டப்போமோ?’ என்னுதல். ‘நிர்வாஹகனானவனை நம்மால் கிட்டப்போமோ’ என்னுதல். மெய்ஞ்ஞானச் சோதிக்கண்ணனை மேவுதுமே-நம்மாலே கிட்டப்போமோ? ‘நெஞ்சே! மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை எஞ்ஞான்று மேவுதும்?’ என்று அந்வயமாகவுமாம்.
எட்டாம் பாட்டு
மேவுதுன்பவினைகளை விடுத்துமிலேன்*
ஓவுதலின்றி உன்கழல்வணங்கிற்றிலேன்*
பாவுதொல்சீர்க்கண்ணா! என்பரஞ்சுடரே!*
கூவுகின்றேன்காண்பான் எங்கெய்தக்கூவுவனே.
ப – அநந்தரம், ஸௌலப்யகாரிதமான குணவிக்ரஹௌஜ்ஜ்வல்யத்தை அநுஸந்தித்து, நிஸ்ஸாதநனான நான் எங்கே காணக் கூப்பிடுவது? என்கிறார்.
மேவு துன்பம் – அவிநாபூதது:கத்தையுடைத்தான, வினைகளை – பாபங்களை, விடுத்துமிலேன் – (தந்நிவர்த்தகமான தபோஜ்ஞாநஸமாதிகளாலே) போக்குவதுஞ் செய்திலேன்; ஓவுதல் இன்றி – நிரந்தரமாக, உன் – (ப்ராப்தனான) உன், கழல் – திருவடிகளை, வணங்கிற்றிலேன் – (வணக்குடைத்தவநெறியாலே) வணங்குவதுஞ் செய்திலேன்; பாவு – (எங்குமொக்கப்) பரம்பி, தொல் – ஸ்வாபாவிகமான, சீர் – (ரக்ஷணைகாந்த) குணங்களையுடைய, கண்ணா-க்ருஷ்ணனாய், என்-எனக்கு ஆசாஜநகமான, பரஞ்சுடரே – நிரவதிகதேஜோ ரூபனானவனே! காண்பான் – காணவேணுமென்று, கூவுகின்றேன் – (ஸாதநாநுஷ்டாநம்பண்ணியிழந்தார் கூப்பிடுமாபோலே) அழைத்துக்கூப்பிடா நின்றேன்; எங்கு – எங்கே, எய்த – கிட்டுவதாக, கூவுவன் – கூப்பிடுவேன்?
ஈடு – எட்டாம்பாட்டு. ‘ஸாதநாநுஷ்ட்டாநம் பண்ணினார் பலம்தாழ்த்துக் கூப்பிடக் கடவ கூப்பீட்டை, பேற்றுக்கு ஈடாயிருப்பதொரு கைம்முதலில்லாத நான் எங்கே வந்து கிட்டக் கூப்பிடுகிறேன்?’ என்கிறார்.
(மேவு) *திலதைலவத் தாருவஹ்நிவத்* என்கிறபடியே, இத்வாத்மாவோடு பிரிக்க வொண்ணாதபடியிருப்பதாய், து:க்கத்தைவிளைப்பதாயிருக்கிற பாபங்களை, *தர்மேண பாபமபநுததி* என்கிறபடியே விஹிதகர்மாநுஷ்ட்டாநத்தாலே போக்கிற்றிலேன். (ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்) *நிதித்யாஸிதவ்ய:* என்கிறபடியே அநவரதபாவநைபண்ணி உன்னை ஸாக்ஷாத்கரிக்க விரகு பார்த்திலேன். _ஒவுதலின்றி மேவு துன்பவினைகளை விடுத்துமிலேன்; ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்_ என்று எம்பார் அருளிச் செய்யும்படி. ‘கண்ணாலப் பெண்டாட்டிக்கு உண்ண அவஸரமில்லை’ என்னுமாபோலே, இந்த்ரியங்களுக்கு இரையிட்டுத் திரிந்தேனித்தனை; எனக்கு ஒன்றும் ஹிதம்பார்த்திலேன். (பாவு தொல்சீர்க் கண்ணா) இங்ஙனேயிருக்க, உன்னை அநுஸந்தித்தவாறே விடமாட்டுகிறிலேன்; *விதித:* என்கிறபடியே. உகவாதார்கோஷ்ட்டியிலும் ப்ரஸித்தமான ஸ்வாபாவிக கல்யாண குணங்களை யுடைய க்ருஷ்ணனே! (என் பரஞ்சுடரே) ஸர்வ ப்ரகாரத்தாலும்உண்டான உத்கர்ஷத்தை எனக்கு அறிவித்தவனே! (கண்ணா என் பரஞ்சுடரே) தாழ நின்று இவ்வடிவழகை எனக்கு முற்றூட்டாக்கினவனே! என்றுமாம். _பரஞ்சுடருடம்பாய்_ (6-3-7) என்னக்கடவதிறே. (கூவுகின்றேன் காண்பான்) ஸாதநாநுஷ்ட்டாநம்பண்ணி பலம் கைப்புகுராதார் கூப்பிடுமாபோலே, காணவேணுமென்று கூப்பிடாநின்றேன். (எங்கெய்தக்கூவுவனே) ‘ஒருகொசுகு கூப்பிட்டது’ என்று ப்ரஹ்மாவின் ஓலக்கத்திலே கேட்கப்புகுகிறதோ? எங்ஙனே வந்து கேட்கக் கூப்பிடுகிறேன்?
ஒன்பதாம் பாட்டு
கூவிக்கூவிக் கொடுவினைத்தூற்றுள்நின்று*
பாவியேன்பலகாலம் வழிதிகைத்துஅலமருகின்றேன்*
மேவியன்றாநிரைகாத்தவன் உலகமெல்லாம்*
தாவியஅம்மானை எங்கினித்தலைப்பெய்வனே.
ப – அநந்தரம், ‘அறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியறும்படி உபகரித்த உபகாரத்துக்குத் தப்பின நான் கிட்டுவது எங்கே?’ என்கிறார்.
கொடு – க்ரூரமான, வினை – பாபங்களுக்கு ஆகரமாய், தூற்றுள் – (புக்கால் புறப்பட வொண்ணாத ஸம்ஸாரமாகிற) தூற்றில் அகப்பட்டு, நின்று – நின்று, பலகாலம் – அநேக காலம், வழி திகைத்து – (புறப்பட) வழி அறியாதே ப்ரமித்து, அலமருகின்றேன் – (அதுக்குள்ளே) அலமராநிற்கிற, பாவியேன் – மஹாபாபியான நான், அன்று – (கோபத்ருத்தர்கள் பசுமேய்க்கக் கோலைக்கொடுத்த) அன்று, மேவி – (கார்யப்பாடாகவன்றியே) நெஞ்சுபொருந்தி, ஆநிரை – பசுக்களை, காத்தவன் – ரக்ஷித்தவனாய், உலகமெல்லாம் – (இப்படி ப்ராதே–கமன்றியே) ஸர்வலோக விஷயமான, தாவிய – த்ரைவிக்ரமாபதாநத்தையுடைய, அம்மானை – ஸர்வஸ்வாமியை, இனி – அன்றைக்குத்தப்பினபின்பு, கூவிக்கூவி-(ஆர்த்தியாலே) பலகாலும் கூப்பிட்டுக் கூப்பிட்டு, எங்கு-எங்கே, தலைப்பெய்வன் – கிட்டுவேன்?
ஈடு – ஒன்பதாம்பாட்டு. ‘வரையாதே எல்லார்க்குமொக்க முகங்கொடுத்த அவதாரங்களுக்குத் தப்பின நான் இனி உன்னைக்கிட்டுகையென்று ஒரு பொருளுண்டோ?’ என்று நிராசராகிறார்.
(கூவி) ஸ்வரூபஜ்ஞாநத்தாலே ஆறியிருக்கமாட்டாதே ஸம்ஸாரத்திலே யிருந்து கூப்பிடா நிற்பர். (கூவி) ஒருகால் கூப்பிட்டு அநுதபித்து மீளுமதன்றிக்கே மேன்மேலெனக் கூப்பிடாநிற்பர். (கொடுவினைத்தூற்றுள் நின்று) கூப்பீடு கேட்டு இரங்கி எடுப்பதாக ஈஸ்வரன் கைநீட்டினால், நீட்டின கை வாங்கவொண்ணாத நிலத்திலேயிருந்தாயிற்றுக் கூப்பிடுவது. (பாவியேன்) ஒரு வால்மீகிபரிஸரத்திலே யிருந்துதான் கூப்பிடப்பெற்றேனோ? (பலகாலம் வழிதிகைத்து அலமருகின்றேன்) காலமெல்லாம் அறிவுகெட்டுத் தடுமாறுகிற நான். (மேவி இத்யாதி) ஆபத்துக்கு உதவாதவனாய்த்தான் படுகிறேனோ? *கோகோபீஜநஸங்குலம் அதீவார்த்தம்* (ஸ்ரீவிஷ்ணுபுராணம் 5-11-13) என்கிறபடியே நோவுபட்ட அன்று ஒரு பசுவின் மேலே ஓரிடையன் மேலே ஒரு துளி விழாதபடி, தோற்றிற்று ஒரு மலையை யெடுத்து உபகரித்தவனை. (மேவி) ‘நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனான தன் கையிலே கோலைத் தந்து ‘பசுமேய்’ என்றால், ரக்ஷகனான நமக்கு விஹிதமிறே’ என்றிருக்கையன்றிக்கே அலப்யலாபமாகப் பொருந்தி. (அன்று) அதுவும் ஒருகாலமே.
(வழிதிகைத்தலமருகின்றேன் – மேவி அன்று ஆநிரைகாத்தவன்) காட்டிலே வழி திகைத்தார்க்கு இடையர் போலேகாணும் வழிகாட்டுவார்; *மாமேகம் சரணம் வ்ரஜ* என்று வழிகாட்டினவனிறே, வேறு வழிகாட்டினாரில்லையே. திருத்தேர்த்தட்டிலே நின்று ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்கும்படி வழிகாட்டினான் அவனிறே. (உலகம் இத்யாதி) ஓரூர்க்கு உதவினவளவன்றிக்கே, ஸகலபதார்த்தங்களிலும் ஒன்றும் பிரிகதிர்ப்படாத படி எல்லார் தலைகளிலுமொக்கத் திருவடிகளை வைத்து ‘தான் ஸ்வாமி’ என்னுமிடத்தை அறிவித்தவனை. (எங்கு இனித் தலைப்பெய்வனே) எங்ஙனே கிட்டப் போகிறேன்? அந்த தூளிதாநத்துக்கும் தப்பின நான் பரீக்ஷை சொல்லிப் பெறப்புகுகிறேனோ? இத்தால், ‘அவன் தானே வந்து உபகரித்தவன்று தப்பின நான், ஸாதநாநுஷ்ட்டாநம் பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ?’ என்று நசையறுகிறார்.
பத்தாம் பாட்டு
தலைப்பெய்காலம் நமன்தமர்பாசம்விட்டால்*
அலைப்பூணுண்ணும் அவ்வல்லலெல்லாம்அகல*
கலைப்பல்ஞானத்து என்கண்ணனைக்கண்டுகொண்டு*
நிலைப்பெற்றுஎன்னெஞ்சம்பெற்றது நீடுயீரே.
ப – அநந்தரம், _எங்கினித்தலைப்பெய்வன்_ (3-2-9) என்கிற நைராஸ்யத்தைக் கண்ட க்ருஷ்ணன் தான் பிற்பாடர்க்கு உதவும்படி ப்ரமாணஸித்தமான ஆஸத்தியை
ப்ரகாசிப்பிக்க, அத்தாலே க்லேசநிவ்ருத்தி பிறந்து ஸந்துஷ்டராகிறார்.
நமன்தமர் – நமன்தமர், தலைப்பெய் காலம் – தலைப்படுங் காலம், பாசம் – பாசத்தை, விட்டால் – வீசினால், அலைப்பூண் – (அவர்களால்) அலைக்கப்படுகையை, உண்ணும் – அநுபவிக்குமா போலே (விரோதிதர்சநத்தால்) வந்த, அ – அந்த, அல்லலெல்லாம் – து:கமெல்லாம், அகல-விட்டுப்போம்படியாக, பல் – பலவகைப்பட்ட, கலை – வேதங்களாலே, ஞானம் – அறியப்பட்டு, என் – எனக்கு ஸுலபனான, கண்ணனை – க்ருஷ்ணனை, கண்டுகொண்டு – கண்டுகொண்டு, என் நெஞ்சம் – (–திலமான) என்நெஞ்சு, நிலை – ஸ்தைர்யத்தை, பெற்று – பெற்று, உயிர் – (ஆர்த்தியாலே முடியப்புக்க) ஆத்மாவும், நீடு – நித்யதையை, பெற்றது – பெற்றது.
ஈடு – பத்தாம்பாட்டு. இவர் நசையற்றவாறே ‘க்ரமப்ராப்தி பற்றாதுபோலே யிருந்தது’ என்று ‘நீர் ஒரு பெருவிடாயருண்டு என்று அறிந்து, உமக்காக வன்றோ வடக்குத் திருமலையிலே நிற்கிறது’ என்று அந்நிலையைக்காட்டித் தரிப்பிக்கத் தரித்து இனியராகிறார்.
(தலைப்பெய்காலம் நமன்தமர்) தலைப்பெய் காலம்-யமபடர் வந்து கிட்டுங்காலம் – இவன் ஜீவிக்கும் நாள் (‘நமக்கு எதிருண்டோ?’ என்று மூலையடியே நின்று வேண்டிற்றுச் செய்து திரியும்; நமன் தமர், நாடோறும்) செய்த குற்றங்களுக்குப் பட்டோலையெழுதி, பலாநுபவ ஸமயத்திலே வந்து முகங்காட்டுவார்கள். (பாசம் விட்டால்) அவர்கள் தங்கள்கையில் பாசத்தை வீசினால். (அலைப்பூணுண்ணும்) இவனுக்கு இத்வருகே நசை கிடக்கையாலே அது இங்கே இசிக்க, அவர்கள் அங்கே இசிக்க, படும் க்லேசத்துக்கு ஓரவதியில்லையிறே. ‘அவ்வல்லல்’ என்னுமித்தனை; த்ருஷ்டாந்தமில்லை. ‘அதெல்லாம் காணக்காண விட்டுக் கடக்கநிற்க. அத்தோடு ஸஜாதீயமான அல்லல்’ என்று எம்பார் அருளிச் செய்வது; அத்வோபாதி க்லேசம் போருமாயிற்று பகவத்விஸ்லேஷத்தால் வருமது, இவர்க்கு. அன்றிக்கே ‘பகவதலாபமேயான பின்பு யமவஸ்யதையும் வந்ததே யன்றோ? என்று அந்த யமவஸ்யதை போம்படியாக’ என்று ஆண்டான் நிர்வஹிக்கும்படி. (கலை இத்யாதி) *வேதைஸ்ச ஸர்வை ரஹமேவ வேத்ய:* என்கிறபடியே பல கலைகளாலும் அறியப்பட்ட உத்கர்ஷத்தையுடையனா யிருந்துவைத்து, நெடுங்கை நீட்டாக ப்ரமாணங்களிலே கேட்டுப் போகாதபடி கண்ணுக்கு விஷயமாக க்ருஷ்ணனாய் வந்து அவதரித்தவனைக் கண்டுகொண்டு. (நிலைப்பெற்று என் நெஞ்சம்) ‘சிந்தாமற்செய்யாய்’ (3-2-5) என்ற நெஞ்சும் ஒருபடி தரிக்கப் பெற்றது. (உயிர்-நீடு- பெற்றது) அச்சேத்யமாய் அதாஹ்யமாயிருக்கிற ஆத்மவஸ்துவும் அழியப்புக்கது, இப்போதாயிற்று நித்யத்வம் பெற்றது. நித்யமான ஆத்மவஸ்துவுக்கு நாசமாவது- தாஸ்யாஸித்தி. ‘ச்சேத்யாதிவிஸஜாதீயம்’ என்ற இத்தனை போக்கி, தன்னில் ஸூக்ஷ்மமாய்ப் புக்கு த்யாபித்து அழிக்கவல்ல பகவத்குணங்களுக்கு அழியாமையில்லையிறே; சேஷவஸ்துவுக்கு சேஷத்வம் நிரூபகமானால், நிரூபகத்தை யொழிய நிரூப்யஸித்தியில்லையே.
பதினொன்றாம் பாட்டு
உயிர்களெல்லாவுலகமு முடையவனை*
குயில்கொள்சோலைத் தென்குருகூர்ச்சடகோபன்*
செயிரில்சொல்லிசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்*
உயிரின்மேலாக்கை ஊனிடையொழிவிக்குமே.
ப – அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் பலமாக, தாம் அபேக்ஷித்த சரீரஸம்பந்த நிவ்ருத்தியை அருளிச்செய்கிறார்.
எல்லாவுயிர்கள் – எல்லா உயிர்களையும், எல்லாவுலகமும் – எல்லா லோகங்களையும், உடையவனை – உடையவனை, குயில்கொள் – குயில்களையுடைத்தான, சோலை – சோலைகளையுடைய, தென் – அழகிய, குருகூர்ச் சடகோபன்-திருநகரிக்குநிர்வாஹகரான ஆழ்வார் அருளிச்செய்த, செயிர்-லக்ஷணக்குறை, இல் – அற்ற, சொல் – சொல்லையுடைத்தாய், இசை – இசையோடுங்கூடின, மாலை – தொடையையுடைத்தான, ஆயிரத்துள் – ஆயிரத்துள், இப்பத்தும் – இப்பத்தும், உயிரின்மேல்-ஆத்மாவுக்கு வந்தேறியாய் பந்தகமான, ஊன்ஆக்கையிடை – மாம்ஸாதிமயசரீரத்தினிடையினின்றும், ஒழிவிக்கும் – கழியும்படி பண்ணும். செயிர் – குற்றம். இது – கலிவிருத்தம்.
ஈடு – நிகமத்தில் (இத்திருவாய்மொழி, அப்யஸித்தார்க்கு சரீரஸம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் என்கிறார்) தம்முடைய ஆர்த்தியெல்லாம் போம்படி அவன் வந்து முகங்காட்ட, ‘நிலைப்பெற்றென்னெஞ்சம் பெற்றது நீடுயிர்’ (3-2-10) என்றார் இவர்; அவன் முகத்தைப் பார்த்தவாறே அவனுயிர் நீடுபெற்றதாயிருந்தது.
(உயிர்கள் இத்யாதி) இவர் தரித்தபின்பாயிற்று அவன் எல்லாவுலகமும் எல்லாவுயிரு முடையவனாயிற்று; இங்கு இவரொருவரையுமிறே இழக்கப்புக்கது. அங்கு ஸவிபூதிகனானவனை யாயிற்று இழக்கப் புக்கது. ஏகாங்கம் விகலமானாலும் அங்கவைகல்யமுண்டிறே; இவரைப் பெற்ற பின்பாயிற்று ஈச்வரத்வம் பூர்ணமாயிற்று. (குயிலித்யாதி) ப்ரகாரியானவன் தரித்து, ப்ரகாரபூதரான இவரும் தரித்து, இவர்தம்மளவன்றிக்கே திருநகரியும் தரித்து, அங்கு உண்டான சோலைகளும் தரித்து, அங்கு உண்டான திர்யக்குகளுடைய ஹர்ஷஸூசகமானத் வநியும் கேட்கும்படியாயிற்று. *அகாலபலிநோ த்ருக்ஷா:* என்னும்படியாயிற்று. (செயிரில்சொல் இத்யாதி) குற்றமற்ற இயலையும் இசையையுமுடைத்தான மாலை. தேஹஸம்பந்தத்தோடே பொருத்தமுண்டாயிருக்கச் சொல்லுதல், பகவல்லாபமொழியச் செல்லும்படியாயிருத்தல் செய்யச் சொன்ன வார்த்தையல்ல. ‘எங்கினித் தலைப்பெய்வன்’ (3-2-9) என்கிற உக்திக்கு நினைவு தப்பியிருக்குமாகில் அது குற்றமிறே. இப்பத்துஞ் செய்வதென்? என்னில்,-(உயிரின்மேல் – ஊனிடை – ஆக்கையொழிவிக்குமே) ராஜபுத்ரனையும் வேடனையும் கூடப் பிணைத்தாற்போலே, நித்யமாய் ஜ்ஞாநாநந்தலக்ஷணமாய் ஈச்வர சேஷமாயிருக்கிற வஸ்துவையும், பரிணாமித்ரவ்யமான அசித்தையும் தன்னிலே பந்தித்துக் கிடக்கிற அவித்யாதிகளை வாஸநையோடே போக்குவிக்கும். இவர்க்கு இப்போது உண்டாய்ப் போக்குவிக்குமென்கிறதல்ல; _பொல்லாவாக்கையின் புணர்வினையறுக்கலறா (3-2-3)_ என்கிறது, பாதிதாநுத்ருத்தியாலே; _இந்நின்றநீர்மை யினியாமுறாமை_ (திருவிருத்தம் 1) என்ற போதே ஈச்வரன் இவர்க்கு இதுபோவதாக நினைப்பிட்டான்; ஆனாலும், இவர் கூப்பீட்டுக்கும் ஒருபலம் வேணுமே? இவரோடு ஸம்பந்தமுடையாரானவர்கள் சரீரஸம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.
முதற்பாட்டில் – ‘நீ தந்த கரணங்களைக் கொண்டு அநர்த்தத்தை விளைத்துக் கொண்ட நான் உன்னை வந்துகிட்டுகை என்று ஒன்றுண்டோ?’ என்றார்; இரண்டாம் பாட்டில் – ‘இப்படி சூழ்த்துக்கொண்ட பாபங்களைப் போக்கித் தேவரீரை நான் எப்போது வந்து கிட்டக்கடவேன்?’ என்றார்; மூன்றாம்பாட்டில் – ‘இதுக்கு முன்பு உன்னைப் பெறுகைக்குத் தந்த கரணகளேபரங்களைக்கொண்டு நான் சூழ்த்துக்கொண்ட பாபங்கள் ‘நான் போக்கிவர’ என்றால் அது செய்யப் போகாது; இனி நான் அறியாததாய், நீ அறிந்திருப்பதொரு உபாயத்தை அருளிச் செய்ய வேணும்’ என்றார்; நாலாம் பாட்டில் – ‘உன்னை யொழிந்த வ்யதிரிக்தங்களிலே என்னுடைய தாழ்ச்சியைத் தவிர்த்து, உன் திருவடிகளிலே வாழ்ச்சியேயாம்படி பண்ணவேணும்’ என்றார்; அஞ்சாம்பாட்டில் – ‘அப்படி செய்யப் பார்த்திலையாகில் உன் போக்யதையை எனக்கு என்றிய அறிவித்தாய்?’ என்றார்; ஆறாம் பாட்டில் ‘இல்லாதவன்று உண்டாக்கின அருமையுண்டோ உண்டாக்கின இதுக்கு ஒருகுணாதாநம் பண்ண?’ என்றார்; ஏழாம்பாட்டில் – ‘நம்படியறியாதே நாம் அவனை வெறுக்கிறதென்?’ என்றார்; எட்டாம் பாட்டில் – ‘தீரக்கழிய ஸாதநாநுஷ்ட்டாநம் பண்ணினேனோ நான் இங்ஙனங் கூப்பிடுகைக்கு?’ என்றார்; ஒன்பதாம் பாட்டில் – ‘அந்த த்ரைவிக்ரமாபதாநத்துக்குத் தப்பின நான் இனி எங்கே கிட்டப்போகிறேன்?’ என்றார்; பத்தாம் பாட்டில் – அத்வளவிலே வந்து அவன் முகங்காட்டித் தரிப்பிக்கத் தரித்தார்; நிகமத்தில் – பலஞ்சொல்லித் தலைக்கட்டினார்.
நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்
த்3ரமிடோபநிஷத் ஸங்கதி
ஸங்கொசித ஸ்வகரண ஸ ஹரிம் யதெஷ்டம்
புஞ்ஜெ ந சாஹமிதி பிந்நமதிஶ்ஶடாரி:।
ஆஶ்வாஸிதஶ்ச ஹரிணா ஸ்வமஹத்தயைவ
பொகெஶ்வஶக்திரிதி தத்கதிதம் த்விதீயெ||
த்ரமிடோபநிஷத்-தாத்பர்யரத்நாவலீ
35 ஸ்ரஷ்டா க்ராந்தா ச லோகாந் ஹ்ருததரணிபரோऽநந்யபோக்யாங்க்ரியுக்ம:
சித்தோத்யந்நீலரூப: நிரவதிரஸத ஸ்வாங்க்ரிரத்யக்ஷமூர்தி: ।
நித்யோபாஸ்யஸ்வபாத: நிகிலவஸுமதீகோபநஸ்வாங்க்ரிவ்ருத்தி:
முஷ்ணந் மூர்திப்ரதீத்யா யமபரவஶதாம் ப்ரைக்ஷி லோகைகநாத: || (3-2)
திருவாய்மொழி நூற்றந்தாதி
முன்னம் அழகர் எழில் மூழ்கும்குருகையர்கோன்*
இன்ன அளவென்ன எனக்கரிதாய்த் தென்ன* கண்ணன்
கரணக்குறையின் கலக்கத்தை*
ஒருமைப்படுத்தான் ஒழித்து. 22
ஆழ்வார் திருவடிகளே ஶரணம், எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்,
ஜீயர் திருவடிகளே ஶரணம்.