[highlight_content]

03-04 12000/36000 Padi

நான்காந் திருவாய்மொழி  – புகழும் : ப்ரவேஶம்

பன்னீராயிரப்படி – நாலாந் திருவாய்மொழியில், கீழ் ப்ரஸ்துதமான கைங்கர்யத்துக்கு ப்ரதிஸம்பந்தி ஸகலசேதநாசேதந விசிஷ்டனான நாராயணனாகையாலே அவனுடைய ஸர்வப்ரகார விசிஷ்டத்வத்தையும் அநுஸந்தித்து; பூதபௌதிகாத்மக ஸகலப்ரகாரத்வத்தையும், பூதகார்யவிஶேஷ ப்ரகாரத்வத்தையும், அஸாதாரண விக்ரஹயோகத்தையும், ரத்நாதிவிலக்ஷணபதார்த்தப்ரகாரத்வத்தையும், ஸரஸமான போக்யவஸ்துப்ரகாரத்வத்தையும், வேதவைதிகரூபமான காநபர்யந்த சப்தராசிப்ரகாரத்வத்தையும், போகமோக்ஷரூபமான புருஷார்த்தப்ரகாரத்வத்தையும், லோக ப்ரதாநரான ப்ரஹ்மாதிசரீரகத்வத்தையும், இப்படி ஸமஸ்த சேதநாசேதநப்ரகாரத்வத்தையும், தத்கததோஷைரஸம்ஸ்ப்ருஷ்டத்வத்தையும் அநுஸந்தித்து, ப்ரகாரவாசகசப்தங்களாலே ப்ரகாரியான தன்னைச் சொல்லும்படியான அவிநாபாவத்தை ப்ரகாசிப்பிக்கையாலே அவனுக்கு ப்ரகாரதயா சேஷபூதராயிருக்கிற இவர், ப்ரகாரவாசகசப்தங்களும் அஸாதாரண திவ்யநாமங்களோபாதி அங்குத்தைக்கு வாசகமாகையாலே, தத்தச்சப்தங்களாலே தம்முடைய ஸ்வரூபாநுரூபமான வாசிககைங்கர்யம் பண்ணுகிறார்.

ஈடு – கீழே _ஒழிவில்காலமெல்லாமுடனாய்மன்னி வழுவிலாவடிமைசெய்ய வேண்டும் நாம்_ என்று (3-3-1) – அடிமைசெய்யப் பாரித்தார் ; இவர் பாரித்த பாரிப்புக்கெல்லாம் போரும்படி ஈச்வரனும் தன்னுடைய ஸர்வாத்மபாவத்தைக் காட்டிக்கொடுத்தான். இருவரும் இலையகலப்படுக்கு மித்தனைபோக்கி அவனும் அடிமைகொள்ளமாட்டான், இவரும் அடிமைசெய்யமாட்டார்; (ந சேச்ச2தி  ஜநார்த்த3ந:) என்கிறபடியே ஸ்வாராதனாய் இத்தலையில்பெற்றது கொண்டு  த்ருப்தனாமவனே அவன்; இவரதுதானே *ஆராதகாதலிறே (2-1-11); இவருடைய பாரிப்புக்கு ஈடாக அவன் ஸர்வாத்மபாவத்தைக் காட்டிக்கொடுத்தவிடத்தில் அடிமைசெய்கை(ய)யின்றிக்கே, அவனுடையகுணங்களை அநுஸந்தித்து சிதிலாந்த:கரணராய், _காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்_ (பெரிய.திருவ.34) என்னும் ஸ்வபாவரே இவர். _புனையும்கண்ணியெனதுடைய வாசகஞ்செய்மாலையே வான்பட்டாடையுமஃதே_
(4-3-2) என்று – இவருடைய உக்திமாத்ரத்தை எல்லாமாகக் கொள்ளும் ஸ்வபாவனிறே அவனும். அவன் ஸ்வரூபத்தோடு குணத்தோடு விபூதியோடு சேஷ்டிதங்களோடு வாசியின்றிக்கே எல்லாம் உத்தேஸ்யமாயிருக்குமிறே இவர்க்கு. அவைதன்னைக் கண்டகண்டவிடங்களிலே அநுபவிக்கையன்றிக்கே, மாணிக்கத்தையும் வயிரத்தையும் முத்தையும் ஓராரத்திலே சேர்த்து அநுபவிப்பாரைப்போலே, அவற்றையடைய அவன்பக்கலிலே சேர்த்து அநுபவிக்கிறார். இவர்க்கு அவன்குணங்களோடு விபூதியோடு வாசியின்றிக்கேயிறே இருப்பது. குணங்களுக்குப் பிரித்து ஸ்திதியாதல் உபலம்பமாதலில்லாதாப்போலே, விபூதிக்கும் அவனையொழிய ஸ்திதியாதல் உபலம்பமாதலில்லாதபடியும். இன்னமும் முக்தனுக்கு  லீலாவிபூதியும் அநுபாத்யமாகா நின்றதிறே ததீயத்வாகாரத்தாலே; (நோபஜநம் ஸ்மரந்) என்கிறவிடத்தில் கர்மநிபந்தநமான ஆகாரத்தை ஸ்மரியானென்கிற இத்தனையிறே. கர்மநிபந்தநமான ஆகாரம் ஸ்ம்ருதிவிஷயமாகாதபடியான பாகம் பிறந்தால், ததீயமாயே தோற்றி எல்லாமொக்க அநுபாத்யமாக இருக்குமிறே. இத்விபூதி தன்னிலே _எண்ணாதமானிடத்தை எண்ணாத போதெல்லாமினியவாறே_ (திருமொழி 11-6-7) என்று சிலரைச்சொல்லி, _பேராளன்பேரோதும் பெரியோரையொருகாலும் பிரிகிலேனே_ (திருமொழி 7-4-4) என்று சிலரை ஒருகாலும் மறக்கவொண்ணாதபடியாகவும் சொல்லாநின்றதிறே; ஜ்ஞாநம்பிறந்த தசையிலேயிருக்கும்படியாயிற்று, இது; ப்ராப்திஸமயத்தில் வந்தால் இவ்வாசியின்றிக்கே, எல்லாமொக்க அநுபாத்யமாகாநின்றதிறே. ஈச்வரவிபூதியாயிருக்கச் செய்தேயிறே, சிலரை _பொல்லாததேவரைத் தேவரல்லாரைத் திருவில்லாத்தேவரைத் தேறேன்மின்_ (நான்.திரு.53) என்கிறது; நின்ற நின்ற நிலைகளிலே ஹேயோபாதேயவிபாகம்பண்ணி அநுஸந்திக்கவேண்டி வருமிறே, சாஸ்த்ரங்களெங்குமொக்கச் சேரக்கிடக்கும்படி பார்க்கும்போது. இவர்க்கு அவன் குணங்களோடு விபூதியோடு வாசியற அநுபாத்யமாம்படியிறே ‘மயர்வறமதிநலமருளிற்று;’ (1-1-1)  கர்மநிபந்தநமான ஸ்ம்ருதி பின்னாடாதபடியிறே இவர்க்கு ஈச்வரன் வெளிச்சிறப்புப் பண்ணிக்கொடுத்தது. இவர்க்குத் தன் ஸ்வரூபரூபகுணாதிகளை அடையக் காட்டிக்கொடுக்கக் கண்டு, விபூதிகாரணமான பூதங்கள், பௌதிகங்கள், அவற்றில் உஜ்ஜ்வலமான மாணிக்யாதிகள், ரஸ்யமான பதார்த்தங்கள், செவிக்கினிய காநாதிகள், மோக்ஷாதி புருஷார்த்தங்கள், இஜ்ஜகத்துக்கு ப்ரதாநரான ப்ரஹ்மாதிகள், இவற்றுக்கு அடையக் காரணமான ப்ரக்ருதி புருஷர்கள் – இவற்றையடைய விபூதியாகவுடையனாய், இதினுள்ளே அந்தராத்மதயா அநுப்ரவேசித்து இவற்றோடே கலசிநிற்கச்செய்தேயும் தத்கததோஷைர ஸம்ஸ்ப்ருஷ்டனாய், (அநஸ்நந்நந்ய:) என்கிற ப்ரமாணப3லத்தாலே இச்சேதநனுக்கு வரக்கடவதான ஸுகித்வது:கித்வாதிகள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கையேயன்றிக்கே நியாமகத்வத்தால் வந்த புகரையுடையவனுமாய், விபூதியில் அத்வோபதார்த்தங்களுக்கு வாசகமான சப்தங்கள் அசித்தையும் அசித்துக்கு அபிமாநியான ஜீவனையும் காட்டுகிற கணக்கிலே ததந்தர்யாமியான பரமாத்மாவையும் காட்டி, இஸ்ஸங்காதத்துக்கு வாசகங்களாய் அவன்பக்கலிலே பர்யவஸித்திருக்கையாலே, அஸாதாரணமான நாராயணாதி சப்தங்களோடு விபூதிவாசகமான சப்தங்களோடு வாசியற, ஸர்வஶப்தங்களும் அவனையே சொல்லுகிறனவாயிருக்கிறபடியையும், இத்விபூதிதான் புறம்பாய் விஞ்சிக்காட்டுகையன்றிக்கே தோளில் தோள்மாலையோபாதி தகுதியாய்,  அநுபாத்யத்திலே அந்தர்ப்பூதமாயிருக்கிறபடியையும் அநுஸந்தித்து க்ருதார்த்தராய், பாரித்தபடியே எல்லா அடிமையும் செய்யமாட்டாமையாலும், அவன்தான் _கோவைவாயா_(4-3)ளிற்படியே ஒன்றையே எல்லா அடிமையுமாகக் கொள்ளும் ஸ்வபாவனாகையாலும், வாசிகமான அடிமையிலே ப்ரத்ருத்தராய், மஹாவாதத்தில் ப2லோபாதாநம் பண்ணுவாரைப்போலே, அத்தைச்சொல்லுவேனோ? இத்தைச்சொல்லுவேனோ? என்று இங்ஙனே அலமருகிறார். ஆக, இத்தால் – _வழுவிலா அடிமைசெய்யவேண்டும் நாம்_ (3-3-1) என்று தாம் பாரித்தபடியே அடிமைசெய்து தலைக்கட்டுகிறார்.

முதற்பாட்டு

புகழும் நல்லொருவனென்கோ? பொருவில்சீர்ப்பூமியென்கோ*

திகழுந்தண்பரவையென்கோ? தீயென்கோ? வாயுவென்கோ?*

நிகழும் ஆகாசமென்கோ? நீள்சுடரிரண்டுமென்கோ?*

இகழ்வில் இத்வனைத்துமென்கோ? கண்ணனைக்கூவுமாறே.

: முதற்பாட்டில் – பூதபௌதிகாத்மக ஸகல ப்ரகாரத்வத்தை ஸங்க்ரஹேண அருளிச்செய்கிறார்.

கண்ணனை – (ஸர்வாத்மபா4வ ப்ரகாசகனான) க்ருஷ்ணனை, கூவுமாறு – சொல்லும்ப்ரகாரம், புகழும் – (வேதங்களாலும் வைதிகபுருஷர்களாலும்) புகழப்பட்ட, நல் – விலக்ஷணகுண விக்ரஹவிபூதியுக்தனான, ஒருவன் – அத்விதீயன், என்கோ – என்பேனோ? பொரு இல் – ஒப்பு இல்லாத, சீர் – (தாரகத்வாதி) குணபூர்த்தியையுடைய, பூமியென்கோ – பூமியென்கோ? திகழும் – ப்ரஸந்நதையாலே உஜ்ஜ்வலமாய், தண் – சீதளஸ்வபாவமான, பரவையென்கோ – ஜலராசியென்கோ? தீயென்கோ – (ஜாட்யநிவர்த்தகமான) அக்நியென்கோ? வாயுவென்கோ – (ப்ராணநாதி ஹேதுவான) வாயுவென்கோ? நிகழும் – (ஸ்வகார்யவஸ்துக்களை ஆவரித்து) ஸந்நிஹிதமான, ஆகாசமென்கோ – ஆகாசமென்கோ? நீள் – (கிரணத்வாரத்தாலே) எங்கும்போய் ப்ரகாசகமான, சுடரிரண்டுமென்கோ – சந்த்ராதித்யர்களாகிற இரண்டு தேஜஸ்ஸுமென்கோ?, இகழ்வில் – ஒன்றொழியாமல், இ அனைத்துமென்கோ – இவையெல்லாமென்கோ? ‘இகழ்வில்’என்றது – த்யஜிக்கப்படாத உபாதேயமென்றுமாம்.

ஈடு: – முதற்பாட்டில் – அவனுடைய குணங்களையும் விபூதிகாரணமான பூதபஞ்சகங்களையும் சேரப்பிடித்து இத்திருவாய்மொழியிலே மேல் பரக்கச் சொல்லுகிற அர்த்தத்தை ஸங்க்ரஹேண அருளிச்செய்கிறார்.

(புகழுநல்லொருவனென்கோ) _உயர்வறவுயர்நலம்_ (1-1-1) தொடங்கி இத்வளவும் வரத்  தாம் அநுபவித்த குணங்களையடைய ஒரு சொல்லாலே திரள அருளிச்  செய்கிறார். ஸ்ருதிஸ்ம்ருதீதிஹாஸாதிகளெல்லாம் கையெடுத்துக் கூப்பிடாநின்றுள்ள வைலக்ஷண்யத்தையுடையவனான அத்விதீயபுருஷனென்பேனோ? ‘என்கோ’ என்றது
– என்று சொல்லுகேனோ? என்றபடி. குணயோகத்தால் வந்த வைலக்ஷண்யத்தைச் சொல்லி, மேல் விபூதியைச் சொல்லுகிறது. (புகழுநல் இத்யாதி) ஸர்வைஸ் ஸம்ஸ்தூயமாநனென்பேனோ? (நல்) ஆநந்தாதி குணங்களையுடையனென்பேனோ? (ஒருவன்) ஸமாப்யதிக தரித்ரனென்பேனோ? (பொருவில் இத்யாதி) _முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ_ (3-1-1) என்று திருமுகத்தினழகையும் திருவபி ஷேகத்தினழகையும் சேர்த்து அநுபவித்தாற்போலே, குணங்களுக்கும் விபூதிகளுக்கும் உண்டான சேர்த்தியாலே குணங்களோடு ஒக்க விபூதியையும் சேர்த்து அநுபவிக்கிறார். ‘பொருவென்று – ஒப்பு, இல் என்று – இல்லாமை, ஒப்பில்லாத க்ஷமாதி குணங்களையுடைய பூமியென்பேனோ? அடியிலே பிறந்துடையதொன்றிறே! ஆகையாலே ‘ஒப்பில்லாத பூமி’ என்கிறார். *பத்ப்யாம் பூமி: * இறே. (திகழும் இத்யாதி) கீழ்ச்சொன்ன பூமிதான் கடிநையாயிறே இருப்பது; அத்தைக்கொண்டு காரியங்கொள்ளும் போது காடிந்யத்தை நெகிழ்த்துக்கொள்ள வேணுமிறே; அத்தை நெகிழ்த்துத் தரும் ஜலத்தைச் சொல்லுகிறது. காரணத்வப்ரயுக்தமான புகரையுடைத்தாய், ஸ்ரமஹரமான ஜலமென்பேனோ? (தீயென்கோ) அந்நெகிழ்ச்சி கார்யங்கொள்ள வொண்ணாத அளவானால் அத்தைவலிக்கப்பண்ணித் தரும் தேஜ:பதார்த்தத்தைச் சொல்லுகிறது. ஊர்த்வ ஜ்வலந ஸ்வபாவமான அக்நியென்பேனோ? (வாயுவென்கோ) அது உறைத்தால் அத்தை ஆற்றிக் காரியங்கொள்ளவேணுமிறே; அத்தை ஆற்றக்கடவதான காற்று என்பேனோ? (நிகழும் இத்யாதி) எல்லார்க்கும் மூச்சு விடுகைக்கு அவகாசப்ரதாநம் பண்ணவேணுமே; நிகழுகையாவது – வர்த்திக்கை. இத்வருகில் பூதசதுஷ்டயமும் அழிந்து தன் பக்கலிலே வருமளவும் வர்த்திக்கு மென்றாதல்; அன்றிக்கே, பதார்த்தங்களெல்லாம் தன்பக்கலிலே வர்த்திக்கும்படி அவகாச ப்ரதாநம் பண்ணுமென்றாதல். ஆக, காரணமான பூதபஞ்சகத்தையும் சொல்லிற்று. (நீள்சுடரிரண்டுமென்கோ) கார்யவர்க்கத்துக்கு அடைய உபலக்ஷணமாகச் சந்த்ர ஸூர்யர்களைச் சொல்லுகிறது, இவற்றின் நீர்க்களிப்பை அறுக்கைக்கும் தாபத்தை ஆற்றுகைக்கும். (இகழ்வில்) ஒன்றொழியாமே எல்லாம் என்பேனோ? *மயா விநா யத் ஸ்யாத், நததஸ்தி* என்றானிறே. அன்றிக்கே, இவைதான் சில பதார்த்தமாத்ரமாய்த் தோன்றுகையன்றிக்கே அவனுக்கு விபூதியாய்த் தோன்றுகையாலே, அநுபாதேயமொன்று மன்றிக்கே உபாதேயதமமான எல்லாம் என்பேனோ? (கண்ணனைக் கூவுமாறே) அர்ஜுநன் _ஹே! க்ருஷ்ண!_ என்றத்தோடு, தாம் _பொருவில்சீர்ப் பூமி_ என்றத்தோடு ஒருவாசியற்றிருக்கிறதாயிற்று இவர்க்கு. (கண்ணனைக் கூவுமாறு – புகழுநல்லொருவன்) இத்யாதி.

இரண்டாம் பாட்டு

கூவுமாறறியமாட்டேன் குன்றங்களனைத்துமென்கோ?*

மேவுசீர்மாரியென்கோ? விளங்குதாரகைகளென்கோ?*

நாவியல்கலைகளென்கோ? ஞானநல்லாவியென்கோ?*

பாவுசீர்க்கண்ணனெம்மான் பங்கயக்கண்ணனையே.

:– அநந்தரம், உக்தமான மஹாபூதங்களினுடைய கார்யவிசேஷத்தை அருளிச்செய்கிறார்.

குன்றங்களனைத்தும்-(காடிந்யத்தாலே பூமி கார்யமான) எல்லாப் பர்வதங்கள், *என்கோ, மேவு சீர் – (ஸகலஜீவநத்வரூப) குணோந்மேஷத்தையுடையதாய் ஜலகார்ய விசேஷமான, மாரியென்கோ – வர்ஷம்; விளங்கு – (ஔஜ்ஜ்வல்யத்தாலே) தேஜ:கார்யமான, தாரகைகளென்கோ – நக்ஷத்ராதிகள், (வாயுகார்யமான), நா-நாவில், இயல் – இயற்றியையுடைத்தான, கலைகளென்கோ – வித்யாஸ்தாநங்கள்; ஞானம் – அர்த்தஜ்ஞாநத்துக்கு, நல்லாவியென்கோ – ஶரீரமாய் ஆகாஶகார்யமான ஶப்தவிஶேஷங்களென்று சொல்வே?ேனா? பா – பரந்த,  சீர் – குணவிபூதிகளையுடையனாய், கண்ணன் – எனக்கு ஸுலபனாய், பங்கயம் – பங்கயம்போன்ற, கண்ணனை – கண்ணழகாலே, எம்மான் – என்னைத் தோற்பித்துக்கொண்ட ஸ்வாமியை, கூவுமாறு – சொல்லும் ப்ரகாரம், அறிய மாட்டேன் – அறியமாட்டுகிறிலேன்.

‘நல்லாவி’ என்றது – ஜ்ஞாநத்துக்கு அத்யவதாநேந உத்பாதகமாகை.

குறிப்பு : **‘என்கோ’ என்பது பல முறை வருவதால், பன்னீராயிரப்படியில் இறுதியில் வருகிற ‘என்கோ’ என்பதற்கு மாத்ரம் ‘என்று சொல்வேனோ’ என்று அருளிச் செய்தனர். மற்றை இடங்களில் ஸேவிப்பவர் இப்படியே பொருள் காணக்கடவர்.

ஈடு: – இரண்டாம்பாட்டு. கீழ்ச்சொன்ன பூதபஞ்சகங்களுடைய கார்யங்களை க்ரமத்திலே பேசுகிறார்.

(கூவுமாறு) பாசுரமிட்டு அழைக்கும்படி அறிகிறிலேன். கூவுதலாவது அழைக்கை. _கூவக்கூவ நீ போதியேல்_ (பெரியாழ்வார் திருமொழி 1-4-5) என்னக் கடவதிறே. பகவத் ப்ரஸாதத்தால் வந்த வெளிச் சிறப்பாலே அர்த்தமடைய ஜ்ஞாதமாயிரா நின்றது; பக்தி பாரவச்யத்தாலே பேச மாட்டுகிறிலேன் என்னுதல், இயத்தாராஹித்யத்தாலே பேசமாட்டேன் என்னுதல். (குன்றங்கள்) _பொருவில்சீர்ப்பூமி_ (3-4-1) என்றதனுடைய கார்யம்; பூமியினுடைய காடிந்யம் ஓரிடத்திலே திரண்டாற் போலேயாய், பூமிக்கு ஆதாரமாயிருக்கிற பர்வதங்களென்பேனோ? (மேவுசீர்) _தண்பரவை_ (3-4-1) என்றதனுடைய கார்யம். கண்டார் மேவும்படியான வடிவழகையும் குளிர்த்தியையுமுடைய  மேக மென்பே?ேனா? இவர் தமக்கு இரண்டொரு கார்யமிறே இது; திருமேனியிலழகுக்குப் போலியாயிருக்கையாலேயும், விடமாட்டார். (விளங்கு) _தீயென்கோ_ (3-4-1) என்ற தேஜ:கார்யமான விளக்கத்தையுடைய நக்ஷத்ராதிகளென்பேனோ? இவை எல்லாத் தேஜ:கார்யங்களுக்கும் உபலக்ஷணம். (நாவியல்) _வாயுவென்கோ_ (3-4-1) என்ற வாயுகார்யம். நாவாலே இயற்றப்பட்ட சதுஷ்ஷஷ்டி கலைகள். சப்தங்களினுடைய அபித்யக்தி வாயுகார்யமிறே, ப்ரயத்நாபித்யங்க்யமாயிருக்கையாலே. (ப்ரயத்நாபித்யங்க்யம் = ப்ரயத்நத்தால் உண்டாக்கத்தக்கது) ப்ரயத்நந்தான் வாயுவைத் தொற்றியிறே இருப்பது (ஞான நல்லாவியென்கோ) _ஆகாசமென்கோ_ (3-4-1) என்ற ஆகாச குணமிறே சப்தம். த்ரவ்யத்தினுடைய காரணகுணமேயிறே, தத்கத குணத்துக்கும் காரணம்; தந்துகதமான சௌக்ல்யமேயிறே படகதமான சௌக்ல்யத்துக்கும் காரணம். (தந்துகத சௌக்ல்யம் – நூலிலுள்ள வெண்மை; படம் – வஸ்த்ரம்) பாரிசேஷ்யாத் ப்ரயத்நத்தாலே ஆகாசகுணத்தையே சொல்லிற்றாமத்தனையிறே இதில். ஆவியென்றுகொண்டு லக்ஷணையாலே சரீரத்தைச் சொல்லுகிறது. ஜ்ஞாநத்தைப் பொதிந்து கொண்டிறே சப்தமிருப்பது. இந்த்ரியாதிகளைப் போலன்றிக்கே சப்தத்துக்கு ஸ்வதோ தோஷ மில்லாமையாலே, ‘நல்லாவி’ என்கிறார். (பாவுசீர்க்கண்ணன்) *விதித:* என்கிறபடியே எங்குமொக்கப் பரம்பின கல்யாண குணங்களையுடைய க்ருஷ்ணன்.  (எம்மான் இத்யாதி) கண்ணழகாலேயாயிற்று இவரை ஒடியெறிந்தது. _பங்கயக்கண்ணன்_ என்றத்தோடு, _குன்றங்களனைத்தும்_ என்றத்தோடு வாசியற்றிருக்கிறதாயிற்று இவர்க்கு.   _பெரும்புறக் கடல்_ (திருமொழி 7-10) என்கிற திருமொழி நிர்வஹிக்கிற க்ரமத்திலே ‘குன்றங்களனைத்தும்’ என்றது – _நின்ற குன்றத்தினைநோக்கி_ (4-4-4) என்னுமாபோலே வடிவுக்குப் போலியாய், ‘மேவுசீர்மாரி’ என்று மேகத்தைச் சொன்ன இடம் திருநிறத்துக்குப் போலியாயிருக்கிறது’ என்று நிர்வஹிப்பாரு முண்டு.

மூன்றாம் பாட்டு

பங்கயக்கண்ணனென்கோ? பவளச்செத்வாயனென்கோ?*

அங்கதிரடியனென்கோ? அஞ்சனவண்ணனென்கோ?*

செங்கதிர்முடியனென்கோ? திருமறுமார்பனென்கோ?*

சங்குசக்கரத்தனென்கோ? சாதிமாணிக்கத்தையே.

– அநந்தரம், இந்த ப்ரகாரங்களினுடையஆநுரூப்யஸூசநார்த்தமாக மத்யே அஸாதாரணவிக்ரஹத்தை அநுஸந்திக்கிறார்.

சாதி – ஆகரஜமான, மாணிக்கத்தை – மாணிக்கம்போலே (அத்யுஜ்ஜ்வலமான) விக்ரஹத்தையுடையவனை, பங்கயம் – பங்கயம்போலும், கண்ணனென்கோ – கண்ணையுடையவன்; பவளம் – பவளம்போலும், செம் – சிவந்த, வாயனென்கோ – வாயன், அம் – தர்ஶநீயமாய், கதிர் – ஒளிவிடுகிற, அடியனென்கோ – திருவடிகளையுடையவன்; அஞ்சன – அஞ்சநம்போலும், வண்ணனென்கோ – நிறத்தையுடையவன்; செம்-சிவந்த, கதிர் – ப்ரபையையுடைத்தான, முடியனென்கோ  – திருவபிஷேகத்தையுடையவன்; திரு – லக்ஷ்மீஸ்தாநமான, மறு – (ஸ்ரீவத்ஸத்தாலே) சிஹ்நிதமான, மார்பனென்கோ – திருமார்பையுடையவன்; சங்குசக்கரத்தனென்கோ – (அந்த:புரத்துக்குக் காவலென்னலாம்படியான) ஆயுதபூர்த்தியையுடையவனென்று சொல்லுவேனோ?

ஈடு: மூன்றாம் பாட்டு.  ஜகச்சரீரனாய் நின்றத்தோடு அஸாதாரணவிக்ரஹயுக்தனாய் நின்றத்தோடு வாசியற்றிருக்கையாலே, ஜகதாகாரனாய் நின்ற நிலையோடே அஸாதாரண விக்ரஹத்தையும் சேர்த்து அநுபவிக்கிறார்.

(பங்கயக்கண்ணனென்கோ) சேதநரோடு கலப்பது கண்விழியேயிறே. தம்மோடு முதலுறவு பண்ணின கண்ணழகைச் சொல்லுகிறார். (பவளச்செத்வாயனென்கோ) அந்நோக்குக்குத் தப்பினாலும் தப்பவொண்ணாத முறுவலைச் சொல்லுகிறது. (அங்கதிரடியனென்கோ) நோக்குக்கும் ஸ்மிதத்துக்கும் தோற்றார் விழும் நிலத்தைச் சொல்லுகிறது. அழகிய புகரையுடைய திருவடிகளையுடையவனென்பேனோ? (அஞ்சனம்) அத்திருவடிகளிலே விழுந்தார்க்கு அநுபாத்யமான வடிவைச் சொல்லுகிறது. (செங்கதிர் முடியனென்கோ) இது ப்ராப்தவிஷயத்தில் அநுபவமென்னுமிடத்தைக் காட்டித் தருவது, ஶேஷித்வ ப்ரகாசகமான திருவபிஷேகமிறே. (திருமறுமார்பனென்கோ) திருவபிஷேகத்தைக் கண்டால் ஸ்வாதந்த்ர்யத்தை அநுஸந்தித்து இறாய்க்குமத்தைத் தவிர்த்துத் தருவது லக்ஷ்மீஸம்பந்தமிறே. திருவையும் மறுவையும் மார்பிலேயுடையவ னென்பேனோ? (சங்கு இத்யாதி) ‘இச்சேர்த்திக்கு என் வருகிறதோ?’ என்று அஸ்தாநே பயசங்கைபண்ணும் ப்ரேமாந்தருடைய வயிறெரித்தலைத் தவிர்ப்பது தித்யாயுதங்களிறே; _வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு_ (திருப்பல்லாண்டு-2) என்னா, _சுடராழியும் பல்லாண்டு_ (திருப்பல்லாண்டு – 2) என்னாநின்றார்களிறே. (சாதி இத்யாதி) போலியன்றிக்கே ஆகரத்திலே பிறந்து நன்றான மாணிக்கம்போலே நிர்த்தோஷமாய் ஸ்வதஸ் ஸித்தமான வடிவழகையுடையவனை.

நான்காம் பாட்டு

சாதிமாணிக்கமென்கோ? சவிகொள்பொன்முத்தமென்கோ?*

சாதிநல்வயிரமென்கோ? தவிவில்சீர்விளக்கமென்கோ?*

ஆதியஞ்சோதியென்கோ? ஆதியம்புருடனென்கோ?*

ஆதுமில்காலத்தெந்தை அச்சுதன் அமலனையே.

: – அநந்தரம்,  உஜ்ஜ்வலமான ரத்நாதி ப்ரகாரத்வத்தை அருளிச்செய்கிறார். ஆதும் – ஒன்றும், இல் – இல்லாத, காலத்து-ஸம்ஹ்ருதிகாலத்தில், எந்தை-நிருபாதிகஸம்பந்தமடியாக அவிபக்த நாமரூபசிதசிச்சரீரியாய், அச்சுதன்-(ஸ்வஸ்வரூபாதிகளுக்கு) ப்ரச்யுதியின்றியே, அமலனை – (சரீரபூத சிதசித்தோஷம் தட்டாத) ஹேயப்ரத்யநீகனை, சாதி-ஆகரோத்பத்தி வைலக்ஷண்யத்தையுடைய, மாணிக்கம் என்கோ – மாணிக்கம்; சவி கொள் – ஒளியை யுடைய, பொன்-பொன், முத்தம் என்கோ- முத்துக்கள்: சாதி-ஆகரஜமாய், நல்-ரத்நாந்தரவிலக்ஷணமான,  வயிரம் என்கோ – வயிரம்: தவிவு இல் – விநாசரஹிதமாய், சீர் – ப்ரகாச குணவிசிஷ்டமான, விளக்கம் என்கோ – தீபம்: ஆதி – ப்ரதமபா4வியாய், அம் – ஸௌந்தர்ய குணயுக்தமான,  சோதி என்கோ – தேஜோமய தித்யவிக்ரஹவிசிஷ்டன்; ஆதி – ப்ரதாநபூதனாய், அம் – ஆநந்தாதி குணவிசிஷ்டனான; புருடன் என்கோ – பரமபுருஷனென்று சொல்வேனோ? ஆதி விக்ரஹமென்றது – பரமபதநிலயவிக்ரஹத்தை, ஆதிபுருஷன் என்றது-தித்யாத்ம ஸ்வரூபத்தை. இவற்றினுடைய ஔஜ்ஜ்வல்யத்தோபாதி உஜ்ஜ்வலரத்நாதிகளும் அஸாதாரண ப்ரகாரம் என்று கருத்து. சவி-ஒளி. தவி(ர்)வு-விநாஶம். விளக்கம்-ப்ரகாசகத்வமாகவுமாம்.

ஈடு: – நாலாம்பாட்டு. நம்முதலிகளிலே ஒருவரை ஒருவன் ‘எனக்கு எம்பெருமானை நினைக்க விரகு சொல்லவேணும்’ என்ன, ‘நான் உனக்கு அது சொல்லுகிறேன்; நீ எனக்கு அவனை மறக்க ஒரு விரகு சொல்ல வல்லையே?’ என்றாராம், அதுக்குக் கருத்து-பகவத் வ்யதிரிக்த ஸமஸ்த பதார்த்தங்களுக்கும் அவனையொழிய வஸ்துத்வ நாமபாக்த்வங்கள் இல்லாமையாலே, ஏதேனுமொரு பதார்த்தம் தோற்றும்போதும் அவனை முன்னிட்டுக் கொண்டாயிற்றுத் தோற்றுவது. ஜாதிகுணங்களுக்குப் பிரித்து ஸ்திதியாதல் உபலம்பமாதல் இல்லாதாப்போலே, த்ரவ்யமாயிருக்கச் செய்தேயும் அவனையொழியப் பிரித்து ஸ்திதியாதல் உபலம்பமாதல் இல்லையாம்படியிருக்கிறதிறே ப்ரமாணபலத்தாலே. அல்லாதார்க்கு விசேஷணாம்ஶந் தோற்றுகிறவோபாதி விசேஷ்யம் தோற்றும்படியாயிருக்கிறதிறே இவர்களுக்கு. விசேஷணாம்சத்திலே தாத்பர்யமின்றிக்கேயிருக்குமதுவுமன்றிக்கே, விசிஷ்டத்திலும் விசேஷ்யமே தோற்றுகிறதாயிற்று, விசேஷ்ய ப்ராதாந்யத்தாலே. (*விசேஷ்யமே அதிஸ்ப்புடமாயிருக்கும் என்றபடி*) இதிறே வேதாந்தஸ்ரவணமுடையாருக்கு இருக்கும்படி. *வேதாந்தச்ரவணேந ஹி த்யுத்பத்தி: பூர்யதே* என்னா நின்றதிறே. இத்தால் ஸமஸ்தவஸ்துக்களும் ப்ரகாரமாகத்  தான்ப்ரகாரியாயிருக்கும்படியைச் சொல்லுகிறது. இதுதன்னிலும்  *யத்யத் விபூதிமத் ஸத்த்வம் ஸ்ரீமதூர்ஜ்ஜிதமேவ வா, தத்தத் ஏவ அவகச்ச த்வம் மம தேஜோம்சஸம்பவம்* என்கிறபடியே எல்லாம் தனக்கு விபூதியாயிருக்கச் செய்தேயும் உத்க்ருஷ்டமான பதார்த்தங்கள் விசேஷித்து என்னுடைய விபூதியென்றானிறே; அப்படியே இவரும் உஜ்ஜ்வலமான மாணிக்யாதி பதார்த்தங்கள் அவனுக்கு விபூதியாயிருக்கிறபடியை அநுபவிக்கிறார்.

(சாதிமாணிக்கம் என்கோ) நல்ல ஆகரத்திலே பிறந்த மாணிக்யமென்பே?ேனா? (சவிகொள்) சவியென்று-பொன்னிலே வந்தால் புகராகக் கடவது; முத்திலே வந்தால் நீர்மையாகக்கடவது. புகரையுடைத்தான பொன் என்பே?ேனா? நீர்மையையுடைத்தான முத்து என்பேனோ? (சாதி) நல்ல ஆகரத்திலே பிறந்த நன்றான வைரமென்பேனோ? (தவிவில் சீர் விளக்கம் என்கோ) (தவிவென்று) விச்சேதம். விச்சேதமில்லாத அழகையுடைய விளக்க மென்பேனோ? ப்ரகாசவத்த்ரத்யத்தைச் சொல்லுதல்; ப்ரகாசாம்சத்தைச் சொல்லுதல்; அதாவது – ஆதித்யாதிகளைச் சொல்லுதல்: ஆதித்யாதி தேஜஸ்ஸுக்களைச் சொல்லுதல். (ஆதியஞ்சோதியென்கோ) *கார்யாணாம் காரணம் பூர்வம்* என்கிறபடியே இவ்வருகுண்டான கார்யங்களுக்கெல்லாம் தான் காரணமாய், இவற்றினுடைய உத்பத்திக்கு முன்னேயுண்டாய்த் தான் ஏகரூபமாய் *அத்யர்க்காநல தீப்தம் தத் ஸ்த்தாநம்* என்கிறபடியே நிரவதிக தேஜோரூபமாயிருந்துள்ள பரமபதத்தை விபூதியாகவுடையவன் என்பேனோ? *கார்யாணாம் காரணம்* என்கிற க்ரந்தத்துக்கு நித்யவிபூதி விஷயமாகவும் யோஜநையுண்டு. கார்யத்துக்கு நியமேந பூர்வக்ஷணவர்த்தியானதுக்கிறே காரணத்வம் உள்ளது. அன்றிக்கே, (*ஆதித்வம் ஈஸ்வரத்வாரா*.) ஆதி என்கிறது அஸ்த்ர பூஷணாத்யாயத்தின்படியே சொல்லிற்றாகவுமாம். ஸ்ரீவத்ஸரூபத்தாலே ப்ரக்ருத்யம்சத்தை தரிக்கு மென்றும், ஸ்ரீகௌஸ்துபத்தாலே ஜீவஸமஷ்டியை தரிக்கு மென்றும் சொல்லா நின்றதிறே – அந்தத் திருமேனிதானும் அந்த விபூத்யந்தர்ப்பூதமாயிருக்குமிறே. (*நித்யவிபூதி, – ஸ்வாந்தஸ்ஸ்த்திதேஸ்வர விக்ரஹாந்தர்ப்பூதாஸ்த்ரபூஷணாதித்வாரா காரணம் என்றபடி). ‘ஆதியஞ்சோதி யென்கோ’ என்றதும், ‘சாதி மாணிக்கமென்கோ’ என்றதுபோலே இருக்கிறது. (ஆதியம்புருடனென்கோ) விபூதிமானைச் சொல்லுகிறது. ஸர்வகாரணபூதனாய், உபயவிபூதியுக்தனாய், புருஷ ஶப்தத்தாலும் புருஷோத்தம சப்தத்தாலும் சொல்லப்படாநின்றுள்ள ஸர்வேஸ்வரனென்பேனோ? (ஆதுமில் இத்யாதி) ஆதுமில்காலத்திலே – ஸம்ஸாரகாலத்திலே; எனக்குத் தன்னைப் பெறுகைக்கு முதலொன்றுமில்லாத காலத்திலே தான் எந்தையான முறையை எனக்கு அறிவித்து, பின்பு ஒரு காலமும் நழுவவிடாதே ரக்ஷித்து, இதுதான் என்பக்கலிலே ஒரு ப்ரயோஜநங் கொண்டன்றிக்கே நிர்ஹேதுகமாகத் தன்பேறாக ரக்ஷித்தவனை; அதவா, ஆதுமில் காலமுண்டு – ப்ரளயகாலம். கார்யாகாரமான இது அடங்கலும் அழிந்து ஸதவஸ்தமாய்க் கிடக்கிற அன்று, தான் ஸ்வாமியான ப்ராப்தியைக் கொண்டு நாமரூபங்களையிழந்த இவற்றை ஸத்தை இழந்து போகாமே தன்பக்கலிலே ஏறிட்டுக்கொண்டு இவற்றைத் தரித்து, ‘தான்’ என்று சொல்லலாம்படி இவை தன்பக்கலிலே கலந்தவன்றும் இவற்றில் தோஷங்கள் தன்பக்கல் தட்டாதபடியிருக்கிறவனை. ‘நாமரூபங்களையுடையனவாய் வஸ்துவாகச் சொல்லலாம்படி பிரியநின்ற போதும் இவற்றோடே கலந்து இவற்றின் தோஷம் தன்பக்கல் தட்டாதபடி நிற்கும்; இவை ‘தான்’ என்கிற சொல்லுக்குள்ளேயாம் படி கலந்து நின்ற போதும், தத்கததோஷைரஸம்ஸ்ப்ருஷ்டனாயிருக்கும் என்றதாகிறது,’ என்று அருளிச்செய்வர். அதுக்கு அடி ப்ரவேசஹேதுவிசேஷம்.

ஐந்தாம் பாட்டு

அச்சுதனமலனென்கோ? அடியவர்வினைகெடுக்கும்*

நச்சுமாமருந்தமென்கோ? நலங்கடலமுதமென்கோ?*

அச்சுவைக்கட்டியென்கோ? அறுசுவையடிசிலென்கோ?*

நெய்ச்சுவைத்தேறலென்கோ? கனியென்கோ? பாலென்கேனோ?

– அநந்தரம்,  விலக்ஷணரஸவத்பதார்த்த விபூதித்வத்தை அருளிச்செய்கிறார்.

அச்சுதன் – போக்தாக்களை நழுவவிடாத இனிமையையுடையவன், அமல னென்கோ – (தன்பேறாக அநுபவிப்பிக்கும்) நைர்மல்யத்தையுடையவன்: அடியவர் – உறவுடையாரை, வினை – போகாலாபக்லேசத்தை, கெடுக்கும்-போக்குமதாய், நச்சும்-(ஸாரஸ்யத்தாலே) நச்சப்படுவதான, மாமருந்தம் என்கோ – பசுமருந்து: நல் – (க்ஷீராத்மகதையால்வந்த) வைலக்ஷண்யத்தையுடைத்தாய், அம் – (பகவத்ஸம்பந்தத்தாலே) தர்சநீயமான, கடல் – கடலில், அமுதம் என்கோ – (அவன் கடைந்தெடுத்த) அம்ருதம்: அ – அந்த அம்ருதத்தினுடைய, சுவை – ரஸத்தையுடைத்தான, கட்டி என்கோ – கருப்புக்கட்டி: அறுசுவை – (மதுர அம்ல லவண கடு கஷாய திக்தாதமக) ஷட்ரஸயுக்தமான, அடிசில் என்கோ – அடிசில்: நெய் – நெய்யின், சுவை – சுவையையுடைத்தான, தேறல் என்கோ – மது, கனிஎன்கோ – (பக்வமாய் புஜித்தல்லது நிற்கவொண்ணாத) கனி, பால்என்கேனோ- (ஸ்வாபாவிகரஸவத்தான) பாலென்று சொல்லுவேனோ?

பசுமருந்தென்று – விக்ரஹம். மருந்தென்கிறது – க்லேசநாசகரத்வத்தாலே; கடைய வேண்டாத கடலில் கிடந்த அம்ருத மென்றுமாம். நெய்த்தலையும் சுவையையு முடைத்தான தேற லென்றுமாம்.

ஈடு: – அஞ்சாம்பாட்டு. ரஸவத்பதார்த்தங்களை விபூதியாகவுடையனாயிருக்கிற படியை அருளிச்செய்கிறார்.

(அச்சுதன் அமலன் என்கோ) நித்யவிபூதியோடே கூடியிருக்கும் இருப்புக்கு ஒருநாளும் அழிவில்லாதபடியிருப்பானாய் ஹேயப்ரத்யநீகனாய் கல்யாணைகதாநனா யுள்ளவன் என்பேனோ? (அடியவர் இத்யாதி) இப்படி ‘தூரஸ்த்தன்’ என்று ஆஸ்ரிதர்க்கு இடர்படவேண்டாதபடி, ஆனையிடர்பட்ட மடுவின் கரையிலே விழும் ஸ்வபாவன். (அடியவர் வினை கெடுக்கும்) தன் பக்கலிலே ந்யஸ்தபரரானாருடைய ஸகல துரிதங்களையும் போக்கி ரக்ஷிக்குமவன். (நச்சுமாமருந்தம்) இடர்பட்ட போதாகப் போய் மலைபுகவேண்டாதே, ‘அவன் தூரஸ்த்தனானானேயாகிலும் நாம் ஆபந்நரான ஸமயத்திலே வந்து ரக்ஷிக்கும்’ என்று விஸ்வஸிக்கலாம்படியிருப்பானொருவன். (நச்சுமாமருந்தம்) ஆசைப்படும் ஓர் ஔஷதம். (மாமருந்தம்) மஹௌஷதம்; த்யாதியினளவல்லாத பேஷஜம்; அதாவது – மேல்காற்றிலே காட்ட நோய் தீருமா யிருக்கை: ஏகமூலிகையாய் ஸக்ருத்ஸேத்யமாயிருக்கை; அன்றிக்கே, அபத்யஸஹமான ஔஷதமென்னுதல்; அதாவது இவன் ப்ராமாதிகமாகப் பண்ணும் பாபங்களையும் காணாக் கண்ணிடவல்லனாயிருக்கை. புத்திபூர்வகமாகப் பண்ணுமன்று, பிறந்த ஜ்ஞாநத்தோடு விரோதிக்குமிறே; தன்னையறிந்தபின்பு முதலிலே இவற்றில் மூளான்; ஆனபின்பும், விரோதியான தேஹம் அநுவர்த்திக்கையாலே நெஞ்சிருண்டு பாபங்களிலே ப்ரவர்த்தியா நிற்கை தவிரான்; அநந்தரம் ஜ்ஞாநம் பிறவா அநுதபித்துக் கைவாங்கும்; அங்ஙனன்றிக்கே, புத்தி பூர்வம் ப்ரவர்த்தித்தானாகில் ஜ்ஞாநம் பிறந்த தில்லையேயா மித்தனை. (நலங்கடலமுதம் என்கோ) கடலிலே கடையாதே வந்த அம்ருத மென்பேனோ? (அச்சுவைக்கட்டி என்கோ) அம்ருதாநந்தரம் சொல்லுகிற கட்டியாகையாலே, கருப்புக்கட்டியாமித்தனை. ப்ரஸ்துதமான அம்ருதத்தோடொத்த ரஸத்தையுடைத்தான கருப்புக்கட்டியென்பேனோ? (அறுசுவை) அவையாவன – கைப்பு, புளிப்பு, கார்ப்பு, தித்திப்பு, துவர்ப்பு, உவர்ப்பு; இப்படி ஆறுபடிப்பட்ட ரஸத்தையுடைத்தான அடிசிலென்பேனோ?  (நெய்ச்சுவைத்தேறல் என்கோ) நெய் -மிகுதி. – மிக்க சுவையையுடைய தேன். சுவையையுடைத்தான நெய்யென்பேனோ? சுவையை யுடைத்தான மதுவென்பேனோ? (கனி இத்யாதி) ஒரு காலத்திலே இனியதாம் பழமென்பேனோ? இனியதான பால்  என்பேனோ?

ஆறாம் பாட்டு

பாலென்கோ? நான்குவேதப்பயனென்கோ? *சமயநீதி

நூலென்கோ? நுடங்குகேள்வியிசையென்கோ? *இவற்றுள்நல்ல

மேலென்கோ? வினையின்மிக்கபயனென்கோ? *கண்ணனென்கோ?

மாலென்கோ?மாயனென்கோ? வானவராதியையே.

– அநந்தரம், வேதவைதிகாத்மகமாய் கா3நபர்யந்தமான சப்தராசிப்ரகாரத்வத்தை அருளிச்செய்கிறார்.

வானவர் – ஸமஸ்ததேவர்களுக்கும், ஆதியை – ஸத்தாதி ஹேதுபூதனானவனை, நான்கு வேதம் – வேதங்களினுடைய, பால் என்கோ – சாகாதிவிபாகங்கள்: நான்குவேதம் – ததாவிதசதுர்விதவேதங்களின், பயன்என்கோ – ப்ரயோஜநம்: சமயம் – அர்த்தத்யவஸ்தாபகமான, நீதி – ந்யாயத்துக்கு ப்ரதிபாதகமாயுள்ள, நூல்என்கோ – மீமாம்ஸாசாஸ்த்ரம்: நுடங்கு – (ஸ்ரோதாக்களை) ஈடுபடுத்தும், கேள்வி – கேள்வியையுடைத்தான, இசை என்கோ – கீதம்: இவற்றுள் – (உக்தமான) இவற்றுக்குள்ளே, நல்ல – விலக்ஷணமாய், மேல்என்கோ – (அநவதிகாதிசயமான) போக்யம்: வினையில் – ஸாதநத்தினளவன்றியே, மிக்க – அதிசயிதமான, பயன்என்கோ – பலம், கண்ணன் என்கோ – (அந்தப2லரூபனாய் ஆநந்தாத்மகனான) க்ருஷ்ணன், மால் என்கோ – (தன்னைபுஜிக்குமவர்களை) த்யாமுக்தனாய் புஜிக்குமவன்: மாயன் என்கோ – (ததநுரூபமான) ஆஸ்சர்யசேஷ்டிதாதியுக்த னென்பேனோ? பாலென்று – பகுதியாய், சாகாதி விபாகம்.

ஈடு: – ஆறாம்பாட்டு.  வேதம் தொடக்கமான இயலும் இசையுமான சப்தராசியை விபூதியாகவுடையனா யிருக்கிறபடியைப் பேசுகிறார்.

(பால் என்கோ) கீழில் ரஸ்யதை பின்னாடினபடி; (நான்குவேதப்பயனென்கோ) நாலு வகைப்பட்ட ப்ரமாணஜாதத்தில் ஸாரபூதமான வேதமாகிற ப்ரயோஜநம் என்பேனோ? வேதத்திலே வேறேயும் ஓரம்சம் ஒருவனை ஸ்துதிக்கிலிறே, ‘நான்கு வேதத்தில் பயனென்கோ’ என்ன வேண்டுவது? அங்ஙனன்றியே, வேதம்தான் – ஆராதநஸ்வரூபஞ் சொல்லுமிடமும் ஆராத்யஸ்வரூபஞ் சொல்லுமிடமுமாய்க் கட்டடங்க இவனையே சொல்லுகையாலே, வேதத்தில் நாலுமூலைக்குமுள்ள ப்ரயோஜநமில்லாத இடம் இல்லை; *வேதைஸ்ச ஸர்வை ரஹமேவ வேத்ய;* என்றானிறே. (சமயம்) வைதிக ஸமயத்துக்கு நிர்வாஹகமான இதிஹாஸ புராணங்கள் என்பேனோ? வேதார்த்தத்தை விசதீகரிக்குமவையிறே இவை; *இதிஹாஸபுராணாப்யாம் வேதம் ஸமுபப்ரும்ஹயேத்* (நுடங்கு) கேட்டாரை நஞ்சுண்டாற்போலே நுடங்கப்பண்ணக்கடவ ஸ்ரவணத்தையுடைத்தான இசை என்பேனோ? (இவற்றுள் நல்ல மேல் என்கோ) எல்லாம் சொல்லவேணும், எல்லாம் சொல்லமாட்டார். கீழ்ச்சொன்னவற்றிலெல்லாம் விலக்ஷணமாய் அத்வருகாயிருப்பதொன்று என்பேனோ? (வினையில் மிக்க) அல்பயத்நத்தாலே அநேக பலத்தைப் பலிப்பதொன்று என்பேனோ? கலநெல்லை வித்தி நூறாயிரக்கலமாக விளைத்துக் கொள்வாரைப்போலே, இத்தலையிலுள்ளது மித்ரபாவமாய் அதுக்கு *ந த்யஜேயம்* என்னும்படியிருக்கை. (கண்ணன் என்கோ) ‘உனக்கு நான் இருந்தேனே’ என்று *மாசுச: என்னும் க்ருஷ்ணன் என்பேனோ? ‘நாம் தரும் அத்தை நீ விலக்காதே ஸ்வீகரிக்குமித்தனையே வேண்டுவது. உனக்கு நான் இருந்தேன்’ என்னுமவனிறே. (மால் என்கோ) (ஆஸ்ரித விஷயத்தில் த்யாமுக்தன் என்பேனோ?) இப்பாசுரத்தைச் சொல்லா, *இதம்தே நாதபஸ்காய* என்னும் த்யாமுக்தன் என்பேனோ? *இதம்து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாமி* என்றவோபாதி, *இதம்தே நாதபஸ்காய* என்றதுவும் முன்னே சொல்லிக்கொள்ளவிறே அடுப்பது; அங்ஙனன்றிக்கே, முந்துறச் சொல்லி, பின்னை *இதந்தே நாதபஸ்காய* என்றானிறே. ‘இதுதனக்கு அடியென்?’ என்று சீயர் பட்டரைக்கேட்க, _த்ரௌபதி குழலை விரித்துக் கிடக்கையாலே அதுமுடிக்கைக்காக, செய்வதறியாமையாலே மூலையில் கிடந்தாரை முற்றத்தே யிட்டான்; பின்னை அர்த்தத்தின் சீர்மையை அநுஸந்தியா, ‘ஆர் அதிகாரிகளாகச் சொன்னோம்? கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலேயிட்டோம்’ என்று பதண்பதண் என்றான்காணும்_ என்று அருளிச்செய்தார் (மாயன் என்கோ) ஆஸ்ரிதர்க்கு தூத்யஸாரத்த்யாதிகளைப் பண்ணும் ஆஸ்சர்யபூதனென்பேனோ? *க்ருதார்த்தா புஞ்ஜதே தூதா:*. (வானவராதியையே) ப்ரஹ்மாதிகளுடைய ஸத்தாதிகள் தன் அதீநமாம்படியிருக்கிறவன் என் அதீநமான ஸத்தாதிகளை யுடையனாயிருக்கிற இருப்பை நான் எத்தையென்று சொல்லுவது?

ஏழாம் பாட்டு

வானவராதியென்கோ? வானவர்தெய்வமென்கோ?*

வானவர் போகமென்கோ? வானவர்முற்றுமென்கோ?*

ஊனமில்செல்வமென்கோ? ஊனமில்சுவர்க்கமென்கோ?*

ஊனமில்மோக்கமென்கோ? ஒளிமணிவண்ணனையே.

:- அநந்தரம், போகமோக்ஷவிபூதித்வத்தை அருளிச்செய்கிறார்.

ஒளி – உஜ்ஜ்வலமான, மணி – மாணிக்கம்போலேயிருக்கிற, வண்ணனை – வடிவையுடையவனை, வானவர் – (போகஸக்தரான) தேவர்களுக்கு, ஆதி என்கோ – உத்பாதகன்; வானவர் – அவர்களுக்கு, தெய்வம் என்கோ – ஆராத்யதைவதம்: வானவர் – அவர்களுக்கு, போகம் என்கோ-(ஆராதநபலமான) போகம்: வானவர் – அவர்களுடைய, முற்றும் என்கோ – ஸர்வவிதரக்ஷணம்: ஊனம் இல் – அநஸ்வரமான, செல்வம் என்கோ – ஐஸ்வர்யம்: ஊனம் இல்- ஆகல்பாவஸாநஸ்தாயியான, சுவர்க்கம் என்கோ – ஸ்வர்க்கஸ்தாநம்; ஊனமில் – (இந்த போகத்துக்கு அத்வருகுபட்ட கைவல்யம்போலன்றியே) அஸங்குசிதமான, மோக்கம் என்கோ – மோக்ஷாநந்த மென்பேனோ?

‘வானவரென்கிற இடம் – ஸூரிகளைச் சொல்லுகிறது’ என்பாரு முளர்.

ஈடு: – ஏழாம்பாட்டு. ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்க ளெல்லாம் தனக்கு விபூதியாக வுடையனா யிருக்கிறபடியைப் பேசுகிறார்.

(வானவராதியென்கோ) கீழ், ‘வானவராதி’ (3-4-6) என்ற இடம் ப்ரஹ்மாதிகளுக்குக் காரணபூத னென்னுமிடம் சொல்லிற்று; இங்கு நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் அவர்கள் ஸத்தாஹேதுவா யிருக்கும்படியைச் சொல்லுகிறது. இரண்டிடத்திலும் சப்தம் ஒத்திருக்க, இத்விபாகம் பண்ணித்தருவார் ஆரென்னில், – ப்ரஹ்மாதிகளுக்கு அவர்கள் உத்பத்தியிலே உபகரித்துவிடுமித்தனை; அத்வளவன்றிக்கே, நித்யஸூரிகளுக்கு _எல்லாம்கண்ணன்_ (6-7-1) என்கிறபடியே எல்லாம் தானேயாயிருக்கும். அவர்கள்தாங்களும், *வாஸுதேவஸ் ஸர்வம்* என்கிறபடியே எல்லாம் தானேயாக நினைத்திருப்பர்கள். (வானவராதியென்கோ) நித்யஸூரிகளுக்கு ஸத்தாஹேதுவானவனென்பேனோ? ‘ஸத்தாஹேதுவாகையாவது என்? அது பின்னை நித்யையாயன்றோ இருப்பது?’ என்னில்,-நித்யையாகவுமாம், அநித்யையாகவுமாம். அவனுடைய நித்யேச்சையாலேயிருக்கும் இதனுடைய நித்யத்வம்; அந்த இச்சை நெகிழில் இதினுடைய நித்யத்வமும் மாறும்படியாயிருக்கும். *_எத்தேவர்வாலாட்டும் எத்வாறு செய்கையும் அப்போதொழியும்_ (நான்முகன் திருவந்தாதி – 38) என்கிறபடியே அவன் நெகிழ்ந்தவன்று பின்னையில்லையிறே. (வானவர்தெய்வமென்கோ) அவர்களுக்கு ஆஸ்ரயணீயனென்பேனோ? (வானவர் போக மென்கோ) அவர்களுக்கு _உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்_ (6-7-1) ஆனவன் என்பேனோ? (வானவர் முற்றுமென்கோ) அவர்களுக்கு அநுக்தமான எல்லாமென்பேனோ! (ஊனமில் செல்வமென்கோ) சிலநாள் நின்று வற்றுமதன்றிக்கே, ஒருநாளும் அழியாத ஸம்பத்து என்பேனோ! (ஊனமில்சுவர்க்கமென்கோ) சிலநாளிருந்து பின்னை *த்வம்ஸ* என்று தள்ளும்படியான தன்றிக்கே ஒழிவில்லாத ஸ்வர்க்க மென்பேனோ! இவைதானும் அவனுக்கு விபூதியன்றோ;  இங்ஙன் சொல்லுவானென் என்னில், – ஸ்ரீமதூர்ஜ்ஜித மேவ வா* என்று விஶேஷித்துச்சொல்லா நின்றதிறே. (ஊனமில்மோக்க மென்கோ)
ப்ரகாரமான ஆத்மாநுபவமாத்ரத்திலன்றிக்கே ப்ரகாரியளவும் செல்ல அநுஸந்திக்கையாலே, பரம புருஷார்த்தலக்ஷண மோக்ஷமென்பேனோ! (ஒளிமணிவண்ணனையே) இத்வஸாதாரண விக்ரஹத்தோபாதியிருக்கிறதாயிற்றுக் கீழ்ச்சொன்னவையுமெல்லாம்.

எட்டாம் பாட்டு

ஒளிமணிவண்ணனென்கோ? ஒருவனென்றேத்தநின்ற*

நளிர்மதிச்சடையனென்கோ? நான்முகக்கடவுளென்கோ?*

அளிமகிழ்ந்துலகமெல்லாம் படைத்தவையேத்தநின்ற*

களிமலர்த்துளவனெம்மான் கண்ணனைமாயனையே.

– அநந்தரம், லோகப்ரதாநகாரணேஸ்வர விபூதித்வத்தை அருளிச்செய்கிறார்.
அளி – ரக்ஷணோபகாரநிமித்தமான, மகிழ்ந்து – உகப்பையுடையனாய்க்கொண்டு, உலகமெல்லாம் – ஸமஸ்தலோகங்களையும், படைத்து – ஸ்ருஷ்டித்து, (உபகார ஸ்ம்ருதியாலே), அவை-அவை, ஏத்த – ஸ்தோத்ரம்பண்ண, நின்ற – (அத்தாலே க்ருதக்ருத்யனாய்) நிற்பானாய், களி – மதுஸ்யந்தியாய், மலர் – விகஸிதபுஷ்பமான, துளவன் – திருத்துழாய்மாலையழகாலே, எம்மான் – என்னை அநந்யார்ஹனாக்கின, மாயனை – நவநீதசௌர்யாத்யாஸ்சர்ய சேஷ்டிதயுக்தனான, கண்ணனை – க்ருஷ்ணனை, (_ஆயர்கொழுந்தா யவராற்புடையுண்ணும் மாயப்பிரானை யென் மாணிக்கச்சோதியை_ என்கிறபடியே அவர்கள் கட்டியடிக்க), மணி – (சாணையிலேறிட்ட) மாணிக்கம்போலே, ஒளி – ஒளிபெற்று ஸ்லாக்யமான, வண்ணன் என்கோ – வர்ணத்தையுடையவன்; ஒருவன் என்று – _ஏக ஏவ ருத்ர:_ என்கிறபடியே ஸ்வாஸ்ரிதர்) ஒருவனென்று, ஏத்த-ஸ்துதிக்கும்படி, நின்ற – நிற்குமவனாய், நளிர் – குளிர்ந்த, மதி – சந்த்ரகலாதாரணத்தாலும், சடையன் என்கோ – ஜடாதரத்வத்தாலும் போகதப:பரனான ருத்ரன்;நான்முகன் – (தேவதாவர்க்கம் கையெடுக்கும்படி) சதுர்முகனான, கடவுள் என்கோ – தைவமென்பேனோ?

ஈடு: – எட்டாம்பாட்டு. ஜகத்தில் ப்ரதாநரான ப்ரஹ்மருத்ராதிகளை விபூதியாக வுடையனானபடியைப் பேசுகிறார்.

(ஒளிமணிவண்ணன் என்கோ) கீழ்ச்சொன்ன வடிவழகு பின்னாடினபடி. (ஒருவன் இத்யாதி) ‘இவன் ஜகத்துக்கு ப்ரதாநன்’ என்று அவிவேகிகள் ஏத்தும்படியாய், குளிர்ந்த மதியையும் சடையையுமுடைய ருத்ரன் என்பேனோ? (நளிர்மதிச்சடையன் என்கோ) தலையான மதியையுடையவன் என்பேனோ? அவர்கள்ப்4ரமம் போக்கித் தன் பக்கல் ஒன்றுமில்லை. அவனுக்குங்கூட ஜநகனான சதுர்முகனாகிற தைவம் என்பேனோ? (அளிமகிழ்ந்து) ரக்ஷணத்தையே ஆதரித்து லோகங்களையடைய ஸ்ருஷ்டித்து அவை யேத்தநின்ற. யாதொரு ப்ரயோஜநத்தை நினைத்து ஸ்ருஷ்டித்தான், அந்த ப்ரயோஜநம் பெற்றுநின்ற. (களிமலர் இத்யாதி) களியென்று – தேன், மலரென்று – பூ; மதுவையும் மலரையுமுடைத்தான திருத்துழாய்மாலையையுடையனாய், அம்மாலையாலே என்னை அநந்யார்ஹமாக எழுதிக் கொண்டவனுமாய், எனக்கு ஸுலபனுமாய், ஆஸ்சர்யமான குணசேஷ்டிதங்களையுடையவனுமானவனை.

ஒன்பதாம் பாட்டு

கண்ணனைமாயன்தன்னைக் கடல்கடைந்து அமுதங்கொண்ட*

அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்தன்மேல்*

நண்ணிநன்குறைகின்றானை ஞாலமுண்டுமிழ்ந்தமாலை*

எண்ணுமாறு அறியமாட்டேன் யாவையும்யவரும்தானே.

– அநந்தரம், உக்தவிபூதிமாத்ரமன்றியே ஸகல சேதநாசேதநங்களும் தானேயானவனைப் பரிச்சேதிக்கும் ப்ரகாரம் அறியேன் என்கிறார்.

யாவையும் – எல்லாவகைப்பட்ட அசேதநமும், யவரும்-எல்லாவகைப்பட்டசேதநரும், தான் – தானேயாய்வைத்து, கண்ணனை – ஆ•ரிதஸுலபனாய், மாயன்தன்னை – ஆஸ்சர்யாவஹமான குணசேஷ்டிதநிரூபணீயனாய், (அர்வாசீநப்ரயோஜநார்த்தி களுக்கும்), கடல் – கடலை, கடைந்து – கடைந்தும், அமுதம்கொண்ட – கார்யஞ்செய்யும், அண்ணலை – ஸர்வஸ்வாமியாய், அச்சுதனை – ஆஸ்ரிதரை நழுவவிடாதவனாய், அனந்தனை – அபரிச்சிந்த ஸ்வரூபாதி வைபவத்தையுடையனாய், அனந்தன்தன்மேல் – (அத்தனையும் தனக்குள்ளேயடங்கும்படியான) திருவநந்தாழ்வான் மேலே, நண்ணி – பொருந்தி, நன்கு உறைகின்றானை – உகந்து கண்வளராநிற்குமவனாய், ஞாலம் – ரக்ஷ்யத்துக்கு ஆபத்துவந்தால், உண்டு – வயிற்றிலேவைத்து நோக்குவது, உமிழ்ந்த – வெளிநாடு காட்டுவதான, மாலை – வாத்ஸல்யத்தையுடையவனானவனை, எண்ணும்ஆறு-பரிச்சேதித்து நினைக்கும்படி, அறியமாட்டேன் – அறிகிலேன்.

ஈடு: – ஒன்பதாம்பாட்டு. அவனுடைய விபூதி விஸ்தாரங்கள் தனித்தனியே பேச முடியாது; கார்யகாரணரூபமான சேதநாசேதநங்கள் அவனுக்கு விபூதியென்று ப்ரயோஜகத்திலே சொல்லலாமித்தனை என்கிறார்.

(கண்ணனை மாயன் தன்னை) ‘எத்திறம்!’ (1-3-1) என்னவேண்டும்படியான குணசேஷ்டிதங்களை யுடையவனை. (கடல் இத்யாதி) ப்ரயோஜநாந்தரபரரானவர்களுக்கும், உடம்பு நோவக் கடல்கடைந்து அவர்களபேக்ஷிதஸம்விதாநம் பண்ணும் ஸ்வாமியை. (அச்சுதனை) தன்னையாஸ்ரயித்தாரை ஒருநாளும் நழுவவிடாதே ரக்ஷிக்கும் ஸ்வபாவனானவனை. (அனந்தனை) ஸ்வரூபரூப குணவிபூதிகளால் அபரிச்சிந்நனானவனை. (அனந்தன் இத்யாதி) சேஷத்வகாஷ்ட்டையிலே நிற்கையாலே சேஷியானவனையும் விளாக்குலைகொள்ளவல்லனான திருவனந்தாழ்வான்மேலே கிட்டி பிராட்டிமார் திருமுலைத்தடத்தாலும் நெருக்கி யெழுப்பவொண்௰தபடி கண்வளர்ந் தருளுகிறவனை (ஞாலமுண்டுமிழ்ந்தமாலை) ஆபந்நர் உண்டானால் அப்படுக்கையிலும் பொருந்தாதவனை. (எண்ணுமாறு அறிய மாட்டேன்) அவனும் விபூதிவிஷயமாகப் பரக்கச் சொல்லிக்கொண்டுபோரா, * நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே* என்றானிறே; அப்படியே இவரும் கீழே சிலவற்றைச் சொல்லா, இவனைச் சொல்லும் ப்ரகாரம் அறிகிறிலேன் என்கிறார்; ஆனாலும், ப்ரயோஜகத்திற் சொன்னாலோவென்னில், (யாவையும்யவரும் தானே) சேதநாசேதங்களடைய ப்ரகாரமாகத்  தான் ப்ரகாரியாயிருக்கு மித்தனை.

பத்தாம் பாட்டு

யாவையும்யவரும்தானாய் அவரவர்சமயந்தோறும்*

தோய்விலன்புலனைந்துக்கும்சொலப்படான் உணர்வின்மூர்த்தி*

ஆவிசேருயிரினுள்ளால் ஆதுமோர்பற்றிலாத*

பாவனையதனைக்கூடில் அவனையும்கூடலாமே.

– அநந்தரம், இப்படி ப்ரகாரபூத சிதசித்துக்களின்படி அவன்தனக்குத் தட்டாதபடியை அநுஸந்திக்கிறார்.

யாவையும் – எல்லா அசேதநமும், யவரும் – எல்லாச்சேதநரும், தானாய் – தானேயாய், அவரவர் – அந்தந்தசேதநருடைய, சமயந்தோறும் – (அசித்ஸம்ஸர்க்கநிபந்தநமான) தேவாதித்யவஸ்தைகளில், தோய்விலன் – (அவர்களைப்போல் தனக்கு) ஸங்கமில்லாதவனாய், புலனைந்துக்கும் – இந்த்ரியபஞ்சகத்துக்கும், சொலப்படான் – (விஷயமாகச்) சொல்லப்படாதவனாய், உணர்வின்மூர்த்தி – ஸவயம்ப்ரகாசஜ்ஞாந ஸ்வரூபனாயிருக்கும்; (ஆதலால்), ஆவி – ப்ராணாஸ்ரயமான சரீரத்தோடு,  சேர் – சேர்ந்த, உயிரின்-ஆத்மாவினுடைய, உள் – ஸ்வரூபத்தில், ஆதும் – (சரீரகதமான) ஜடத்வபரிணாமித்வாதிஸ்வபாவங்கள், ஓர் – ஒன்றிலும், பற்று இலாத – தொற்று இல்லாத, பாவனை – ப்ரதிபத்தியானது, அதனை – அந்தஸ்வரூபத்தை, கூடில் – கிட்டுமாகில், ஆதும் ஓர்பற்றிலாத பாவனை-(ஸமஸ்தசேதநாசேதநஸ்வபாவங்களிலும்) ஒரு தொற்றில்லையென்கிற ப்ரதிபத்தி,  அவனையும் – (கீழ்ச்சொன்ன ஸ்வயம்ப்ரகாசஜ்ஞாந ஸ்வரூபனான) ஈஸ்வரனையும், கூடலாம்-சேரலாம்;  ஏ – நிஸ்சிதம்.

ஈடு: – பத்தாம்பாட்டு.  சேதநாசேதநங்களுக்கு அந்தராத்மதயா வ்யாபித்து நின்றால் தத்கததோஷை; அஸம்ஸ்ப்ருஷ்டன் என்கிறார்.

(யாவையும் யவரும் தானாய்) சேதநாசேதநங்களடைய ‘தான்’ என்கிற சொல்லுக் குள்ளே அடங்கும்படி ப்ரகாரமாகத் தான் ப்ரகாரியாய். (அவரவர் இத்யாதி) அவரவ ரென்கிறது – சேதநருடைய பன்மையைப்பற்ற: கீழே _யாவையும் யவரும்_ (3-4-9) என்று ஒக்க எடுக்கையாலே, அநுபாஷிக்கிற விடத்திலும், அவையவை என்று அசித்தும் தன்னடையே வரும். அவைதன்னை எடா தொழிவானென்? என்னில்,-அப்ராதாந்யத்தாலும் ப்ரகரணபலத்தால் தன்னடையேவருமென்னுமிடங்கொண்டும். ‘சமயம்’ என்கிறது த்யவஸ்த்தைகளை; அசித்தினுடைய பரிணாமாதிகளையும் சேதநத்தினுடைய ஸுகித்வ து:க்கித்வங்களையும் நினைக்கிறது. (தோய்விலன்) சேதநாசேதநங்கள் ‘தான்’ என்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படி அவற்றோடே கலந்துநிற்கச்செய்தே, அவற்றினுடைய தோஷங்கள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கும். ‘சேதநர்க்கு அசித்கதமான பரிணாமாதிகளில்லையேயாகிலும், அந்த அசித்ஸம்ஸர்க்கத் தாலே ஸுகித்வ து:கித்வங்கள் உண்டாகாநின்றதே; அப்படியே இச்சேதநா சேதநங்களெங்கும் புக்கு வ்யாபித்து நின்றால், தத்கததோஷம் இவனை ஸ்பர்சியாதோ?’ என்றால், – அவற்றால் அஸம்ஸ்ப்ருஷ்டனாயிருக்கும். ‘எல்லாம்செய்தாலும் இவற்றுக்கு ஸுகித்வது:க்கித்வங்களின்றியிலேயிருக்க,  இத்வசித்தோட்டைச் சேர்த்தியாலேயன்றோ உண்டாகிறது; அப்படி இவனுக்கும் கூடாதோ?’ என்னில்; – கூடாது. அதுக்கு அடி ப்ரவேசஹேதுவிசேஷத்தாலே. இவனைப்போலே கர்மமடியாகவன்றிக்கே அநுக்ரஹமடியாகவிறே அவனுக்கு இவற்றோட்டை ப்ரவேசம் இருப்பது. சிறைக்கூடத்திலே சிறையனும் கிடந்தான், ராஜகுமாரனும் இருந்தான்; சிறையன் கர்மமடியாக ப்ரவேசிக்கையாலே து:க்கஹேதுவாயிற்று; ராஜகுமாரன் இச்சையாலே ப்ரவேசிக்கையாலே போகரூபமாயிருந்தது: *ஸமாநம் த்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே அநஸ்நந்நந்ய:* என்னாநின்றதிறே. (புலனைந்துக்கும் சொலப்படான்) ஸ்ரோத்ராதிகளைந்துக்கும் விஷயதயா சொல்லப்படான் என்னுதல்; அன்றிக்கே, நினைத்திறே சொல்லுவது, அச்சொலவுக்கும் முன்பில் நினைவை லக்ஷித்து, அவற்றால் ஸ்மரிக்கப்படான் என்னுதல். பின்னை அவன்தான் இருக்கும்படியென்? என்னில்,-(உணர்வின் மூர்த்தி) ப்ரகாசத்தையே வடிவாகவுடையனாயிருக்கும். (*மூர்த்திசப்தம் ஸ்வரூபவாசி*) ‘எல்லாஞ்செய்தாலும் இவற்றோடு உண்டான ஸம்ஸர்க்கம் மெய்யாயிருக்க இவற்றினுடைய தோஷம் தன்பக்கல் தட்டாதபடியிருக்கு மென்னுமிது கூடுமோ?’ என்னில், (ஆவிசேர் இத்யாதி) ‘ஆவியுண்டு – ப்ராணாஸ்ரயமான சரீரம். அத்தோடு சேர்ந்திருந்துள்ள உயிருண்டு – ஆத்மா; அதின்பக்கல் அந்த சரீரகதமான பால்யயௌவநாதிகளொன்றாலும் ஒரு ஸம்பந்தமுமில்லையாம்படியாக அநுஸந்திக்கிற அநுஸந்தாநமானது அந்த ஆத்மாவுக்குக் கூடாநின்றபின்பு, அப்பொருள் அவனையுங் கூடத்தட்டில்லை’ இங்ஙனன்றிக்கே; ‘இதுக்கு வேறேயும் இரண்டுபொருள் சொல்லுவர்கள்’ என்று அருளிச்செய்வர்:- ‘அவன்பக்கலிலே பக்தியுண்டாகில் அவனைக் கிட்டலாம்’ என்றும்; ‘புறம்புண்டான உபாயாந் தரங்களிலுண்டான பற்று அடையவிட்டு, அவனையேபற்றில் அவனைக்கிட்டலாம்’ என்றும். அன்றியே ‘அந்திம ப்ரத்யயம் உண்டாமாகில் அவனைக்கூடலாம்’ என்றுமாம். இத்தை எம்பெருமானார் கேட்டருளி, ‘கீழ் வ்யாப்தியைச் சொல்லி நின்ற பின்பு, இனி வ்யாப்யவஸ்துகதமான தோஷங்கள் வ்யாபகனானவனுக்குத் தட்டாதென்னுமிடம் அவஸ்யம் சொல்லவேணும்; ஆனபின்பு, இத்தையே சொல்லிற்றாக அமையும்’  என்று அருளிச்செய்வர்.

பதினொன்றாம் பாட்டு

கூடிவண்டறையுந்தண்தார்க் கொண்டல்போல்வண்ணன்தன்னை*

மாடலர்பொழில் குருகூர்வண்சடகோபன்சொன்ன*

பாடலோராயித்துள் இவையுமொருபத்தும்வல்லார்*

வீடிலபோகமெய்தி விரும்புவர் அமரர்மொய்த்தே.

– அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் ப2லமாக  அவிச்சிந்நபகவதநுபவத்தை அருளிச்செய்கிறார்.

வண்டு – வண்டுகள், கூடி – கூடி, அறையும் – (மதுபாநப்ரீதியாலே) சப்திக்கிற, தண்-குளிர்ந்த, தார் – திருமாலையையுடையவனாய், கொண்டல்போல் – காளமேகம் போலேயிருக்கிற, வண்ணன்தன்னை – நிறத்தையுடையனானவனை, மாடு – சுற்றும், அலர் – அலர்ந்த, பொழில்-சோலைகளையுடைத்தான, குருகூர் – திருநகரிக்கு நிர்வாஹகரான, வண் சடகோபன் – ஆழ்வார், சொன்ன – அருளிச்செய்த, பாடல் – இசையோடுகூடின, ஓர் – அத்விதீயமான, ஆயிரத்துள் – ஆயிரத்துக்குள்ளும், ஒரு – அத்விதீயமான, இவையும் பத்தும் – (அஸாதாரண விக்ரஹத்தோபாதியாக அகிலவிபூதிப்ரகாரத்வத்தை ப்ரதிபாதித்த), -இப்பத்தையும்,  வல்லார் – அப்யஸிக்கவல்லவர்கள், வீடு இல  – அவிச்சிந்நமான, போகம் – பகவதநுபவத்தை, எய்தி-பெற்று, அமரர் – நித்யஸூரிகள், மொய்த்து – மொய்த்துக்கொண்டு, விரும்புவர் – விரும்பும்படியாவர்கள். இது – அறுசீராசிரிய விருத்தம்.

ஈடு: – நிகமத்தில், இத்திருவாய்மொழிகற்றவர்கள் நித்யகைங்கர்யத்தைப் பெற்று ‘அயர்வறுமமரர்களாலே’ (1-1-1) விரும்பப்படுவர்கள் என்கிறார்.

(கூடிவண்டறையும் இத்யாதி) கீழ் பரக்கச்சொன்ன விபூதியடைய, தோளில் தோள் மாலையோபாதி அவனுக்குத் தகுதியாயிருந்தபடியைச் சொல்லுகிறது. கிண்ணகத்திலேயிழிவாரைப் போலே வண்டுகளானவை திரண்டு மதுபாநம்பண்ணி த்வநியா நின்றுள்ள ஸ்ரமஹரமான மாலையையும்,  ஸ்ரமஹரமான மேகம்போலேயிருக்கிற திருமேனியையு முடைய ஸர்வேஸ்வரனையாயிற்றுக் கவி பாடிற்று. (மாடலர் இத்யாதி) பர்யந்தங்களிலே அலர்ந்த பொழிலையுடைய திருநகரிக்கு நிர்வாஹகராய், பரமோதாரரான ஆழ்வார் அருளிச்செய்த. (பாடலோராயிரம்) புஷ்பம் பரிமளத்தோடே அலருமாபோலே, இசையோடு கூடின ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் அப்யஸிக்க வல்லவர்கள். (வீடிலபோக மெய்தி) ஒரு நாளும் விச்சேதசங்கை யில்லாத மோக்ஷஸுகத்தை ப்ராபித்து. (விரும்புவர் அமரர்மொய்த்தே) அமரராலே மொய்த்து விரும்பப்படுவர். லீலாவிபூதியைத் ததீயத்வாகாரத்தாலே அநுஸந்திப்பார் நித்யஸூரிகளாகையாலே, தாங்கள் அநுபவிக்கக் கடவ அநுபவத்தை, ‘ஸம்ஸாரத்தே யிருந்துவைத்து இப்படியிருப்பதொரு ஜ்ஞாநபாகம் பிறந்து அநுஸந்திப்பதே!’ என்று ஆழ்வார்பக்கல் பண்ணின ப்ரேமாதிசயத்தாலே, அவருடைய ப்ரபந்தங்களை அப்யஸித்தவர்களை, ஸர்வேஸ்வரனைவிட்டு இவர்களை நெருங்கி ஆதரியாநிற்பர்கள் நித்யஸூரிகள்.

முதற்பாட்டில் – இத்திருவாய்மொழியில் பரக்க அருளிச்செய்த அர்த்தத்தை ஸங்க்ரஹேண அருளிச்செய்தார்; இரண்டாம்பாட்டில் – கீழ்ச்சொன்ன பூதங்களினுடைய கார்யத்தை க்ரமத்திலே பேசினார்; மூன்றாம்பாட்டில் – ஜகதாகாரனாய்நின்ற நிலையோடே அஸாதாரணவிக்ரஹத்தைச் சேர்த்தநுபவித்தார்; நாலாம்பாட்டில் – உஜ்ஜ்வலமான மாணிக்யாதி பதார்த்தங்களை விபூதியாகவுடையவன் என்றார். அஞ்சாம்பாட்டில் –  ரஸவத்பதார்த்தங்களை விபூதியாகவுடையனாயிருக்கிறபடியை அருளிச்செய்தார்; ஆறாம்பாட்டில் – வேதம் தொடக்கமான இயலும் இசையுமான சப்தராசியை விபூதியாகவுடையன் என்றார்; ஏழாம்பாட்டில் – ஐஸ்வர்யாதிபுருஷார்த்தங்களை விபூதியாகவுடையன் என்றார்; எட்டாம்பாட்டில் – ஜகத்தில்  ப்ரதாநரான ப்ரஹ்மருத்ராதிகளை விபூதியாகவுடையன் என்றார்; ஒன்பதாம்பாட்டில் – அவனுடைய விபூதிவிஸ்தாரங்கள் தனித்தனியே பேசமுடியாமையாலே சேதநாசேதநங்களை விபூதியாகயுடையன் என்று ப்ரயோஜகத்திலே அருளிச்செய்தார்; பத்தாம்பாட்டில் – இவற்றுக்கும் அந்தராத்மாவாய் த்யாபித்துநின்றால் தத்கததோஷைரஸம்ஸ்ப்ருஷ்டன் என்றார்; நிகமத்தில் இது கற்றார்க்குப் ப2லஞ்சொல்லித் தலைக்கட்டினார்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

வடக்குவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்

 

த்ரமிடோபநிஷத் ஸங்கதி

ஸர்வம் ஜகத்ஸமவலொக்ய விபொஶ்ஶரீரம் தத்வாசிநஶ்ச ஸகலாநபி ஶப்தராஶீந்।

தாந்பூத பௌதிகமுகாந் கதயந் பதார்தாந் தாஸ்யம் சகார வசஸைவ முநிஶ்சதுர்தெ||

 

த்ரமிடோபநிஷத்-தாத்பர்யரத்நாவலீ

37 பூதைஸ்தத்கார்யபூதை: ஶுபநிஜவபுஷா தீப்திமத்பி: பதார்தை:

பத்யாஸ்வாதோபபந்நை: ஶ்ருதிமுகஸுபகாஶேஷஶப்தப்ரபஞ்சை: ।

நாநாகாரை: புமர்தை: ஜகததிபதிபி: சேதநாசேதநௌகை:

ஜுஷ்டம் தோஷைரதுஷ்டம் நிகிலதநுதயா ஸம்ப்ரதுஷ்டாவ துஷ்ட: || (3-4)

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

புகழ் ஒன்றுமால்  எப்பொருள்களும் தானாய்*

நிகழ்கின்ற நேர்காட்டிநிற்க* மகிழ்மாறன்

எங்கும் அடிமை செய்ய   இச்சித்துவாசிகமாய்*

அங்கடிமைசெய்தான் மொய்ம்பால்.24

 

ஆழ்வார் திருவடிகளே சரணம், எம்பெருமானார் திருவடிகளே சரணம்,

ஜீயர் திருவடிகளே சரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.