இரண்டாந் திருவாய்மொழி
பாலனாய் : ப்ரவேசம்
*******
ப : இரண்டாந்திருவாய்மொழியில், கீழ் – இதரபுருஷார்த்தங்களுடைய அபகர்ஷோபதேச பூர்வகமாக ஈஸ்வரனுடைய பரமப்ராப்யத்வத்தை உபதேசிக்கையாலே, ஆத்மாவினுடைய அநந்யபோக்யதையை அநுஸந்தித்து, அவ்வழியாலே, பஹுவிதஸஹஜபோக்யாகாரயுக்தனான ஸர்வேஸ்வரனுடைய விப்ரக்ருஷ்டாபதாநங்களில் போகாபிநிவேச யுக்தராய்; அவனுடைய வடதளசாயித்வத்தையும், கோபிகாலீலாஸங்கித்வத்தையும், த்ரைவிக்ரமப்ரகாரத்தையும், பரத்வவைபவத்தையும், ஸப்தருஷபநிரஸநத்தையும், ஸ்ரீவராஹப்ராதுர்ப்பாவத்தையும், அம்ருதமதநவ்ருத்தாந்தத்தையும், லங்காநிரஸநத்தையும், அஸாதாரணசிஹ்நங்களையும், ஆபரண சோபையையும் அநுஸந்தித்து, ஏவம்விசிஷ்டனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே போக்யதா ஸூசகமான திருத்துழாய்விஷயமாகத் தமக்குப்பிறந்த ஆதரவிசேஷத்தைப் பரிவர் பார்ஸ்வஸ்தர்க்குச் சொல்லுகிற பாசுரத்தை, விஸ்லிஷ்டையான நாயகியினுடைய ஆர்த்யதிசயங்கண்ட நற்றாயானவள் வினவினார்க்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச்செய்கிறார்.
ஈடு. – ராமவிரஹத்தில் திருவயோத்யையிலுள்ளார் கூப்பிட்டாற்போலே, தாமும் தம்முடைய கரணக்ராமமுமாய்ப் பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார் – “முடியானே” (3.8.1)யில்; இக் கூப்பீட்டை அல்லாதார் க்ஷுத்ரப்ரயோஜநங்களுக்காகப் புறம்பே கூப்பிடுகிறபடியைக் கண்டு, `இது இவ்விஷயத்திலேயாகப் பெற்றதில்லையே!’ என்று நொந்து, நாம் முந்துறமுன்னம் இத்விஷயத்திலே கூப்பிடப்பெற்றோமிறே’ என்று உகந்தார், “சொன்னால்விரோத*(3.9.1)த்தில்; ‘அத்வளவேயோ? பகவதர்ஹகரணனாகவும் பெற்றோம், என்றார் – “சன்மம்பலபல*(3.10.1)வில் அல்லாதார், தந்தாமுடைய கரணங்களைப் பாழேபோக்குகைக்குஅடியான ஐஸ்வர்யகைவல்யங்களிலே ப்ரவணராய் அநர்த்தப்படுகிறபடியைக் கண்டு, அவற்றினுடைய அல்பஅஸ்திரத்வாதி தோஷங்களையும், ஸர்வேஸ்வரன் பரமப்ராப்யனாயிருக்கிறபடியையும் உபதேசித்து, `அவற்றைவிட்டு அவனைப்பற்றுங்கோள்’ என்றார் – “ஒருநாயக*(4.4.1)த்தில். ப்ரஸங்காத், `இத்வொருநாயகம்’ அருளிச்செய்தவரேகிடிகோள் `சூழ்விசும்பணிமுகி’(10.9.1)லும் அருளிச்செய்தார்; `இத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவுள்ளம் பற்றுங்கோள்’ என்று பிள்ளை அருளிச்செய்வர். அதாவது – இது ப்ரத்யக்ஷிக்கிறாப்போலே இஸ்சரீரஸமநந்தரம் அதுவும் காணவன்றோ நாம் புகுகிறது; இனி எத்தனைநாள் என்று. ஆக, மூன்று திருவாய்மொழியாலும் – இப்படி பரோபதேசம்பண்ணினஇது ஸம்ஸாரிகள் திருந்துகைக்கு உடலன்றிக்கே, அத்தாலும் தமக்கு பகவத்விஷயத்திலே விடாய்பிறந்தபடி சொல்லுகிறார் – இதில். அதாவது – இதரவிஷயங்களினுடைய தோஷாநுஸந்தாந பூர்வகமாக பகவத்வைலக்ஷண்யத்தை அநுஸந்தித்திறே, `அவனைப் பற்றுங்கோள், இதரவிஷயங்களை விடுங்கோள்’ என்கிறது; அது அவர்களுக்கு உடலன்றிக்கே தமக்கு வைசத்யம்பிறக்கைக்கு உடலாயிற்று; ஸ்ரீவிபீஷணாழ்வான் ராவணனுக்குச்சொன்ன ஹிதம் அவனுக்கு உடலன்றிக்கே தனக்குப் பெருமாளைப் பற்றுகைக்கு உடலானாற்போலேயும், ஸ்ரீப்ரஹ்லாதாழ்வான் ஹிரண்யனுக்குச்சொன்ன ஹிதம் அவன் நெஞ்சிலே படாதே தனக்கு பகவத்பக்தி மிகுகைக்கு உடலானாற்போலேயும்; “வீடுமின்முற்ற*(1.2.1)த்திலும் “சொன்னால்விரோத*(3.9.1)த்திலும் “ஒருநாயக*(4.4.1)த்திலும் – பிறரைக்குறித்துச்சொன்ன ஹிதம் அவர்களுக்குஉறுப்பன்றிக்கே, மூன்று களையும் பறித்துச் சங்காயமும் வாரின பயிர் சதஸாகமாகப் பணைத்துப் பலிக்குமாபோலே தமக்கு அவன்பக்கலிலே அபிநிவேசம் சதஸாகமாகப் பணைக்கைக்கு உடலாயிற்று. இவர்களுக்குக் களையாவது – பகவத்த்யதிரிக்த விஷயங்களும், அஸேத்யஸேவைபண்ணித்திரிகையும், `ஐஸ்வர்யகைவல்யங்கள் புருஷார்த்தம்’ என்றிருக்கையும்; சங்காயமாவது – பயிர்தன்னிலேயுண்டாய் அறியாதார்க்குப் பயிர்போலே ப்ரதிபா4ஸித்து அச்சங்காயம் வாரிப்போகடாதபோது நெல் பதர்க்கும்படியாயிருப்பதொன்று; அப்படியே கைவல்யமும். இத்வபிநிவேசமும் இப்படிச் செல்லாநிற்கச்செய்தே முன்பு “முடியானே*(3.8.1)யிற் பிறந்த விடாய் ரஸாந்தரங்களாலே அபிபூதமாய்க்கிடந்தது; அந்தவிடாய் தலையெடுத்து, `தேசகாலங்களால் விப்ரக்ருஷ்டமான அவன்படிகளையும் தத்தத்தேசகால விசிஷ்டமாக்கி இப்போதே பெற்று அநுபவிக்கவேணும்’ என்னும் விடாயும் பிறந்தது; அது அப்போதே கிடையாமையாலே, அந்தவிடாய்தான் அவஸ்த்தாந்தரத்தைப் பிறப்பித்தது. அத்வவஸ்தாந்தரந்தான் – ஸர்வேஸ்வரனோடேகலந்து பிரிந்தாளொரு பிராட்டி தசையாய் – பிராட்டிதான் மோஹங்கதையாய்க் கிடக்க அவள் தசையை அநுஸந்தித்த திருத்தாயார் `தேசகாலங்களால் விப்ரக்ருஷ்டமான அவன்படிகளையும் தத்தத்தேசகால விசிஷ்டமாக்கி இப்போதே பெற்று அநுபவிக்க வேணு மென்னாநின்றாள்’ என்கிற பாசுரத்தாலே ஸ்வதசையைப் பேசுகிறார். திருவடியைக்கண்ட பீமஸேநன், (ஸாக3ரம் தர்த்துமுத்3யுக்தம் ரூபமப்ரதிமம் மஹத் |த்3ரஷ்டும் இச்சா2மி) என்று நீ முன்புகடல் கடந்த வடிவை நான் இப்போது காணவேணு மென்றானிறே, `இவன்சக்திமான்’ என்று தோற்றுகையாலே; அப்படியே இவளும் பகவச்சக்தியை யறிந்தபடியாலேயும், தன்சாபலாதிசயத்தாலேயும், அவாவின்மிகுதியாலேயும், பூதகாலத்திலுள்ளவற்றையும் இப்போதே பெறவேணு மென்று ஆசைப்படாநின்றாள் என்கிறாள்.
முதல் பாட்டு
பாலனாய் ஏழுலகுண்டுபரிவின்றி
ஆலிலைஅன்னவசஞ்செய்யும் அண்ணலார்
தாளிணைமேலணி தண்ணந்துழாயென்றே
மாலுமால் வல்வினையேன்மடவல்லியே.
ப : முதற்பாட்டில், வடதளசாயிதிருவடிகளில் திருத்துழாயைப் பெறவேணு மென்று ப்ரமியாநின்றாள் என்கிறாள்.
பாலனாய் – அதிபால்யமான வடிவையுடையனாய், ஏழ்உலகு – ஸமஸ்தலோகங்களை யும், உண்டு – அமுதுசெய்து, (அத்தால்), பரிவு இன்றி – ஒருமிறுக்கு இன்றியே, ஆலிலை -ஆலந்தளிர் மேலே, அன்னவசம்செய்யும் – உண்டதுக்கு ஈடாகக் கிடக்கும், அண்ணலார் – ஸ்வாமியானவருடைய, தாளிணைமேல் – திருவடிகளிரண்டின்மேலே, அணி – (இவ்வபதாநத்துக்குத்தோற்று அன்புடைய ஸூரிகள்) சாத்தின, தண் – குளிர்ந்த, அம் – செவ்வியையுடைய, துழாய் – திருத்துழாயை (ப்பெறவேணும்), என்றே – என்றே, மாலும் – (`அதீதகாலத்திலது இப்போது கிட்டாது’ என்றறியாதே) ப்ரமியாநின்றாள்; வல்வினையேன் – இக்கலக்கம் காண்கைக்கு அடியான பாபத்தையுடையளான என்னுடைய, மடம் – பற்றிற்றுவிடாத துவட்சியையுடையளாய், வல்லி – உபக்நாபேக்ஷமான கொடிபோலே யிருக்கிற இவள். அகடிதங்களை கடிப்பிக்கும் ஸர்வசக்திக்குச் செய்யவொண்ணாததில்லை யென்றிருக்கை. `காலிணைமேலணி தண்ணந்துழாய்’ என்று பாடம் சொல்வாரு முளர்.
ஈடு. – முதற்பாட்டு. வடதளசாயியினுடைய திருவடிகளில் சாத்தின திருத்துழாயைச் செவ்வியோடே இப்போதே பெறவேணு மென்று ஆசைப்படாநின்றாள் என்கிறாள்.
(பாலனாய்) – பருவம்நிரம்பினபின்பு லோகத்தையெடுத்து வயிற்றிலேவைத்து ஆலிலையிலே சாய்ந்தானாகில் என்மகள் இப்பாடுபடாள்கிடீர்; `அவன் ஒருதசையிலே காண் ரக்ஷகனாவது’ என்று மீட்கலாமிறே. (ஆய்) – (ஆத்மாநம் மாநுஷம் மந்யே) என்கிற படியே, இத்வவஸ்தையொழியப் பூர்வாவஸ்தை நெஞ்சிற்படாமை; “படியாதுமில்குழவிப்படி” (3.7.10) என்னக்கடவதிறே. கலப்பற்ற பிள்ளைத்தனத்தையுடையனாய். (ஏழுலகுண்டு) – ” இது ஸாத்மிக்கும், இது ஸாத்மியாது” என்று அறியாதே, ஏதேனுமாக முன்புதோன்றினத்தை வாயிலேயெடுத்து இடும்படியாயிற்றுப் பருவம். ரக்ஷகவஸ்துவினுடைய வ்யாபாரமாகையாலே இது ரக்ஷணமாய்த் தலைக்கட்டின இத்தனை. அவன் பொறுக்குஞ் செயலைச் செய்தானாகில், இவளும் பொறுக்கும்படியானவற்றை ஆசைப்படாளோ? (ஏழுலகுண்டு) – ஆபத்து உண்டானால் வரைந்து நோக்குமதில்லை. (பரிவின்றி) – ஒருவருத்தமின்றிக்கே. லோகங்களை எடுத்து வயிற்றிலே வைக்கிறவிடத்தில் அத்தால் ஒருவருத்தமின்றிக்கே. (ஆலிலை) – ஒரு பவனான ஆலிலையிலே. அவ்வடம்பண்ணிக் கொடுத்த ஸுத்தபத்ரத்திலே. (அன்னவசம்செய்யும்) – தன்வசமாகவன்றிக்கே (அஹமந்நம்) என்கிற அந்நத்துக்கு வசமாக. புக்தம்ஜரியாதபடி அதுக்கீடாகச் சாய்ந்தான். (அண்ணலார்) – அவன் சைசவத்திலும் ரக்ஷணத்தில் அவதாநம் போலேயாயிற்று இவள்மோஹத்திலும் முறையில் கலக்கமற்றுஇருந்தபடி. (அண்ணலார்) – ஸர்வரக்ஷகருமாய் ஸர்வஸ்வாமியுமானவர். ஸர்வரக்ஷகரானவர்க்கு உம்மையாசைப்பட்ட அபலையான என் அபேக்ஷிதம் செய்யத் தட்டுண்டோ? என்கிறாள். (அண்ணலார்தாளிணை) – சேஷபூதன் பற்றுவது சேஷியினுடைய திருவடிகளேயிறே. (தாளிணைமேலணிதண்ணந்துழாய்) – இப்படி இவள் ஆசைப்படுகைக்கு ‘அடி’யிலே பச்சையிட்டாள்காணும். ப்ராஹ்மணன் பிச்சேறினாலும் ஓத்துச்சொல்லுமாபோலே, இவளும் ‘அடி’யில் அப்யஸித்தத்தையே சொல்லாநின்றாள்; ‘தாட்பட்டதண்டுழாய்த்’ (2.1.2)தாமத்திலேயிறே வாஸனை பண்ணிற்று. (துழாயென்றே) – எப்போதும் அத்தையே சொல்லாநின்றாள். `கெடுவாய், இது துர்க்கடங்காண், பூதகாலத்திலுள்ளதொன்றுகாண்’ என்றால், அது செவியிற்படுகிறதில்லை. யுக்திஸாத்யையன்றிக்கே யிருக்கை. (மாலும்) – மோஹிக்கும். மாலுதல் – மயங்குதல். இது ஓருக்திமாத்ரமாய் அகவாயில் இன்றிக்கே யிருக்கையன்றிக்கே உள்ளழியாநின்றாள். மணிப்ரபையிலே அக்நிபுத்தி பிறந்தால் அது பின்னைச் சுடவும் வேணுமோ? (வல்வினையேன்) – மோஹங்கதையாய்க்கிடக்கிற இவளுக்கு ஒரு து:காநுஸந்தாந மில்லையிறே, உணர்ந்திருந்து அநுஸந்திக்கிற என் பாபமிறே. (மடவல்லியே) – பற்றிற்றுவிடாமை, மடப்பம். ஒருகொள்கொம்போடே சேர்க்க வேண்டும் பருவமாயிருக்கை. (வல்லி) – (பதிஸம்யோகஸுலப4ம் வய:) என்கிறபடியேயிருக்கை.
இரண்டாம் பாட்டு
வல்லிசேர்நுண்ணிடை ஆய்ச்சியர்தம்மொடும்
கொல்லைமைசெய்து குரவைபிணைந்தவர்
நல்லடிமேலணி நாறுதுழாயென்றே
சொல்லுமால் சூழ்வினையாட்டியேன்பாவையே.
ப : அநந்தரம், திருக்குரவைகோத்த க்ருஷ்ணன் திருவடிகளில் திருத்துழாயை எப்போதும் பிதற்றிடாநின்றாள் என்கிறாள்.
வல்லி – வல்லியோடு, சேர் – ஒத்த, நுண் – நுண்ணிய, இடை – இடையையுடைய, ஆய்ச்சியர்தம்மொடும் – ஆய்ச்சியர் தங்களோடு ஒருகோவையாக (அவர்கள் வரம்பழியும்படி), கொல்லைமை – அமர்யாதமான வ்யாபாரத்தை, செய்து – பண்ணி, குரவை – குரவையை, பிணைந்தவர் – கோத்தவருடைய, நல் – (ந்ருத்தத்துக்கீடாக மிதிக்கிற) அழகிய, அடிமேல் – திருவடிகளிலே, அணி – அணியப்பட்ட, நாறு – பரிமளோத்தரமான, துழாய்என்றே – திருத்துழாயென்றே, சொல்லும் – சொல்லாநின்றாள்; சூழ் – (இவளை இப்படிகாணும்படி தப்பாமல்) சூழ்ந்த, வினையாட்டியேன் – பாபத்தையுடைய என், பாவை – பெண்பிள்ளையானவள்.
ஈடு. – இரண்டாம்பாட்டு. `ஸர்வரக்ஷகனான ஸர்வேஸ்வரன் ப்ரளயாபத்திலே தன் விபூதிரக்ஷணம் பண்ணினானாகில், அது உன் பேற்றுக்கு உடலாமோ?’ என்ன, `அது’ உடலன்றாகில் தவிருகிறேன், என்பருவத்திற்பெண்களுக்கு உதவினவிடத்திலே எனக்கு உதவத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.
(வல்லிசேர்நுண்ணிடை) – “வள்ளிமருங்குல்” என்றாற்போலே, வள்ளிக் கொடிபோலேயிருக்கிற இடையையுடையவர்க ளென்னுதல்; வல்லிபோன்ற வடிவை யுடையராய், இடைக்கு உபமாநமில்லாமையாலே – நுண்ணிடை யென்னுதல். (ஆய்ச்சியர்தம்மொடும்) – என்பருவத்திற்பெண்கள்பலருக்கும் உதவினவர் அவர்களெல்லார்விடாயுமுடைய எனக்கு உதவத் தட்டு என்? என்னாநின்றாள். திருவாய்ப்பாடியில் இவள்பருவத்திற்பெண்கள்பலர்க்கும் உதவினானிறே. (கொல்லைமை செய்து) – வரம்பழிந்த செயல்களைச் செய்து; ஸௌந்தர்யாதிகளாலே அவர்கள்மர்யாதையை அழித்து. (குரவைபிணைந்தவர்) – அவர்களோடே தன்னைத் தொடுத்தபடி. (நல்லடி) – பெண்களுந் தானுமாய் மாறிமாறித் துகைத்த திருத்துழாய் பெறவேணும் என்று ஆசைப்படுகிறது. ப்ரஹ்மசாரியெம்பெருமான் திருவடிகளில் திருத்துழாய் ஆசைப்படுமவளன்றே இவள். (நாறுதுழாய்) – அவர்களும் அவனுமாகத் துகைத்ததென்று அறியுங்காணும் இவள் பரிமளத்தே; *கலம்பகன் நாறுமே. (என்றே சொல்லுமால்) – நினைத்தது வாய்விடமாட்டாத ஸ்த்ரீத்வமெல்லாம் எங்கேபோயிற்று? (சூழ்வினையாட்டியேன்) – தப்பாதபடி அகப்படுத்திக்கொள்ளும்படியான பாபத்தைப் பண்ணினேன். (நைவ மாம் கிஞ்சிதப்ரவீத்) என்றிருக்குமவள் வார்த்தைசொல்லுகிறது என் பாபமிறே. (பாவையே) – எல்லா அவஸ்தையிலும் தன்னகவாயிலோடுகிறது பிறரறியாதபடி இருக்கக்கடவ நிருபாதிக ஸ்த்ரீத்வத்தையுடைய இவள், தன்பேற்றுக்குத் தான் வார்த்தை சொல்லும்படியாவதே!
மூன்றாம் பாட்டு
பாவியல்வேத நன்மாலைபலகொண்டு
தேவர்கள்மாமுனிவர் இறைஞ்சநின்ற
சேவடிமேலணி செம்பொன்துழாயென்றே
கூவுமால் கோள்வினையாட்டியேன்கோதையே.
ப : அநந்தரம், ஸர்வலோகமும் ஸ்துதிக்கும்படியான த்ரிவிக்ரமன் திருவடிகளில் திருத்துழாயைச் சொல்லி அழையாநின்றாள் என்கிறாள்.
பா – சந்தஸ்ஸிலே, இயல் – வர்த்திப்பதான, வேதம் – வேதஸூக்தங்களையும், நல் – திவ்யமாய், பல – பலவகைப்பட்ட, மாலை – மாலைகளையும், கொண்டு – கொண்டு, (*ஸங்கை4ஸ்ஸுராணாம்” என்கிறபடியே), தேவர்கள் – தேவர்களும், மா முனிவர் – ஸ்லாக்யரான ஸநகாதி முனிகளும், இறைஞ்ச – ஆராதிக்கும்படி, நின்ற – (லோகத்தையளந்து நின்ற, சே அடிமேல் – சிவந்த திருவடிகளின்மேலே, அணி – (அவர்கள்) அணிந்த, செம் – சிவந்த, பொன் – பொன்போலே ஸ்ப்ருஹணீயமான, துழாயென்றே – திருத்துழாயைச் சொல்லியே, கூவும் – கூப்பிடா நின்றாள் : கோள்
வினையாட்டியேன் – ப்ரபலமான பாபத்தையுடையேனான என்னுடைய, கோதை-பூமாலை போலேயிருக்கிறவள். மாலையையுடையவளாகவுமாம். கோள் – மிடுக்கு. கூவுதல் – அழைத்தலாய், கூப்பிடுதல்.
ஈடு. – மூன்றாம்பாட்டு. ‘ஓ௹ருக்காக உதவினதேயன்றிக்கே, ஒருநாட்டுக்காக உதவினவன்பக்கலுள்ளது பெறத் தட்டுஎன்? என்னாநின்றாள்’ என்கிறாள்.
(பாவியல்வேதம்) பாவாலே இயற்றப்பட்ட வேதம். சந்தஸ்ஸுக்களாலே சொல்லப்பட்ட வேதம். அநுஷ்டுப் என்றும், த்ரிஷ்டுப் என்றும், ப்ருஹதீ என்றும் இத்யாதி சந்தஸ்ஸுக்களை யுடைத்தான வேதம். (நல்மாலை) – அதின் நன்றான மாலைகளைக்கொண்டு – ஸ்ரீபுருஷஸூக்தாதிகளைக் கொண்டு. (ஸர்வே வேதா3 யத் பத3மாமநந்தி), (வேதை3ஸ்ச ஸர்வைரஹமேவ வேத்3ய:) என்கிறபடியே – அல்லாதவிடங்களிலும் ப்ரதிபாத்யன் அவனேயாகிலும், ஸ்வரூபரூபகுணங்களுக்கு வாசகமான- வற்றைக்கொண்டு. அன்றிக்கே வேதம் நன்மாலை என்று பிரித்து – ஆராதநத்திலும் விபூதிவிஷயமாகவும் பரந்திருக்கும் வேதத்தையும் ஸ்ரீபுருஷஸூக்தாதிகளையும் கொண்டு என்றுமாம். (தேவர்கள்மாமுனிவரிறைஞ்சநின்ற) – தேவர்களும் ஸநகாதிகளும் (ஸங்கை4ஸ்ஸுராணாம்) என்கிறபடியே ஸ்தோத்ரம் பண்ணி ஆஸ்ரயிக்கத் திருவுலகளந்து நின்ற. (சேவடி) – “மாமுதலடிப் போதொன்றுகவிழ்த்தலர்த்தி” (திருவாசி. 5) என்கிறபடியே, தலையிலே பூப்போலே வந்திருக்கிறபோது மேலேபார்த்தவாறே அநுபாத்யமாயிருந்த சிவப்பையுடைத்தாயிருக்கை. அடியில் ராகமிறே இப்படி யாக்கிற்று இவளை. அன்றிக்கே, செவ்விய அடியென்றாய், அடிக்குச் செவ்வியாவது – “பொது நின்றபொன்னங்கழல்” (மூன். 88) என்கிறபடியே ஆஸ்ரிதாநாஸ்ரிதவிபாகமற எல்லார் தலையிலும் வைத்த செவ்வை. “தளிர்புரையும் திருவடியென்தலைமேலவே” (திருநெடு. 1) என்று ஈடுபடும்படியிறே அடியில் ஆர்ஜவம் இருப்பது. (சேவடி மேலணிசெம்பொற்றுழாய்) – அத்திருவடிகளிற் சாத்தின ஸ்ப்ருஹணீயமான திருத்துழாயென்று சொல்லிக் கூப்பிடா நின்றாள். (என்றே கூவுமால்) தோளில் சாற்றின மாலை கொடுக்கிலும் கொள்ளாள். ஆல் – ஆஸ்சர்யத்திலே; அசை. (கோள்வினையாட்டியேன்) – முடித்தல்லது விடாத பாபத்தைப் பண்ணின என்னுடைய. அன்றியே, கோளென்று – மிடுக்காய், அநுபவைக விநாஸ்யமான பாப மென்னுதல். (கோதையே) – தன்மாலையையும் மயிர்முடியையும் கண்டார் படுமத்தைத் தான் படுவதே! இம்மாலையையுடையஇவள் வேறொருமாலையை ஆசைப்படுவதே! மார்வத்துமாலையான இவள் வேறொருமாலையை ஆசைப்படுவதே! மார்வத்துமாலைக்கு மால் அவன், அம்மாலுக்கு மால் இவள்.
நான்காம் பாட்டு
கோதிலவண்புகழ் கொண்டுசமயிகள்
பேதங்கள்சொல்லிப் பிதற்றும்பிரான்பரன்
பாதங்கள்மேலணி பைம்பொன்துழாயென்றே
ஓதுமால் ஊழ்வினையேன் தடந்தோளியே.
ப : அநந்தரம், ‘ஸூரிபோக்யனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளில் திருத்துழாயைச்சொல்லிப் பாராயணம் பண்னாநின்றாள்’ என்கிறாள்.
கோது – (ஸ்வோத்கர்ஷார்த்தமாகிற) கோது, இல – இன்றியே ( பரார்த்தமாயே அநுபாத்யமா) யிருக்கிற, வண் – விலக்ஷணமான, புகழ் – குணங்களை, கொண்டு – கொண்டு, சமயிகள் – சீலாதிகளாயும் சௌர்யாதிகளாயும் ஆநந்தாதிகளாயுமிருக்கிற குணங்களிலே தனித்தனியே வ்யவஸ்திதராய், பேதங்கள் – (தத்தத்குணோத்கர்ஷ) பேதங்களை, சொல்லி – சொல்லி, பிதற்றும் – (ஸரஸமான) அக்ரமோக்திகளைப் பண்ணும்படி இவர்களை அநுபவிப்பிக்கிற, பிரான் – மஹோபகாரகனான, பரன் – ஸர்வஸ்மாத்பரனுடைய, பாதங்கள்மேல் – திருவடிகளிலே, அணி – (குணவித்தரான ஸூரிகள்) சாத்தின, பை – பசுத்து, பொன் – நன்றான, துழாயென்றே – திருத்துழாயென்றே, ஓதும் – (எப்போதும்) சொல்லாநின்றாள்; ஊழ்வினையேன் – அநாதிஸித்தமான மஹாபாபத்தையுடையேனான என்னுடைய, தடம் – சுற்றுடைத்தான, தோளி – தோளையுடையவள். ஊழ்வினை – பழவினை.
ஈடு. – நாலாம்பாட்டு. ‘பெருக்காறு வற்றினாற்போலே ஒருகால் எல்லாரையும் வாழ்வித்துப்போன அவதாரத்திலுள்ளத்தை நான் இப்போது எங்கே தேடுவேன்?’ என்ன, ‘அது தவிருகிறது, என்றுமொக்க ஏகரூபமாயிருக்கிற பரமபதநிலயன் திருவடிகளில் திருத்துழாய் பெறத் தட்டுஎன்? என்னாநின்றாள்’ என்கிறாள்.
(கோதில) – குற்றமற்ற; ஹேயப்ரத்யநீகமான. குணத்துக்குக் கோதில்லாமையாவது- ஒருகுணத்தை அநுஸந்தித்தால் குணாந்தரத்திற் போகாதபடி காற்கட்டுகை. அப்படியிராதாகில் அல்லாதவிஷயங்களிற்காட்டில் வாசியில்லையிறே. (வண்புகழ்) – கல்யாணகுணங்கள். இக்குணங்களை அநுஸந்தித்துக்கொண்டு. (சமயிகள்) – ஓரோகுணங்களிலே கால்தாழ்ந்து குணாந்தரத்திற் போகமாட்டாதவர்கள். ‘சீலகுணம் துவக்கவற்று அதிலும் வீரகுணம் துவக்கவற்று; அதிலும் ரூபகுணமான ஸௌந்தர்யாதிகள் துவக்கவற்று’ என்று இவற்றிலே நிஷ்டரானவர்கள். சொன்ன இவர்களையொழிய, ஸத்வித்யாநிஷ்ட தஹரவித்யாநிஷ்ட உபகோஸலசாண்டில்யாதி வித்யாநிஷ்டரைச் சொல்லவுமாம். (பேதங்கள்சொல்லி) – தாங்கள் அநுபவிக்கிற குணங்களுக்கு ஏற்றங்களைச் சொல்லி. அதாவது – சீலகுணத்தைஅநுபவித்து `இதுவும்ஒருகுணமே, இதுபோலேயோ வீரகுணம்?’ என்றாற்போலே சொல்லி. (பிதற்றும்) – அக்குணங்களிலே ஈடுபட்டு ஜ்வரஸந்நிபதிதரைப்போலே அடைவுகெடக் கூப்பிடாநிற்பர்கள். (பிரான்பரன்) – அவர்களுக்கு இப்படி உபகாரகனான ஸ்ரீவைகுண்டநாதன். அவர்களுக்கு உபகாரகனாகையாவது – “இமையோர் தமக்கும் – செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெயூணென்னுமீனச்சொல்” (திருவிரு. 98) என்கிறபடியே, இக்குணங்களை அவர்களுக்கு நிலமாக்கி அநுபவிப்பிக்கையாலே, `பிரான்’ என்கிறார். (பரன்பாதங்கள்மேலணி பைம்பொற்றுழாயென்றே யோதுமால்) – “சூட்டுநன்மாலைகள்தூயனவேந்தி” (திருவிரு.21) என்கிறபடியே மிக்கசீர்த் தொண்டரான நித்யஸூரிகள் அவன்திருவடிகளில் சாத்தினதாய், அதஏவ அத்யந்தம் ஸ்ப்ருஹணீயமான திருத்துழாயென்று எப்போதும் சொல்லாநின்றாள். (ஊழ்வினையேன்) – வந்ததடைய முறையாம்படியான பாபத்தைப் பண்ணினேன். ஊழென்பது – முறை. (தடந்தோளியே) – இப்படி கைவிஞ்சின அழகையுடையவள் குணாநாம்ஆகரமான அவன் திருவடிகளிலே திருத்துழாயை ஆசைப்படாநின்றாள். இத்தோளழகுக்கு இலக்கானாரோ இவளோ இப்படி அடைவுகெடப் பிதற்றுவார்!
ஐந்தாம் பாட்டு
தோளிசேர்பின்னைபொருட்டு எருதேழ்தழீஇக்
கோளியார் கோவலனார் குடக்கூத்தனார்
தாளிணைமேலணி தண்ணந்துழாயென்றே
நாளுநாள் நைகின்றதால் என்தன்மாதரே.
ப : அநந்தரம், ‘எருதேழடர்த்த க்ருஷ்ணன் திருவடிகளில் திருத்துழாயைச் சொல்லி சிதிலையாகாநின்றாள்’ என்கிறாள்.
தோளி – (அவன்விரும்பும்படியான) தோளையுடையளாய், சேர் – (சீலாதிகளால் அவனுக்கு) ஸத்ருசையான, பின்னைபொருட்டு – நப்பின்னைக்காக, எருதுஏழ் – எருது ஏழையும், தழீஇக்கோளியார் – (ஒருகாலே) தழுவிக்கொள்ளும் ஸ்வபாவராய், கோவலனார் – (அவர்களுக்கு அநுரூபமான) கோபகுலத்தையுடையராய், குடக்கூத்தனார் – குடக்கூத்தாலே மநோஹரசேஷ்டிதரானவருடைய, தாளிணைமேல் – திருவடிகளிரண்டின்மேலே, அணி – (அந்த வீராபதாநத்துக்குத்தோற்று அவர்கள்) இட்ட, தண் – குளிர்ந்து, அம் – அழகிய, துழாயென்றே – திருத்துழாயென்றே, நாளும்நாள் – நாடோறும் நாடோறும், என்தன் மாதர் – என்பெண்பிள்ளை, நைகின்றது – நைகிறது.
ஈடு. – அஞ்சாம்பாட்டு. `ஸர்வஸ்மாத்பரனாய்ப் பரமபதநிலயனாய் அப்ராப்யனா யிருக்கிறவன் திருவடிகளில் சாத்தின திருத்துழாயை என்னாலே தேடப்போமோ?’ என்ன `ஆனால், இங்கே என்னோட்டையா ளொருத்திக்காகத் தன்னைப்பேணாதே எருதேழடர்த்த க்ருஷ்ணன் திருவடிகளிற் சாத்தின திருத்துழாய்பெறத் தட்டுஎன்? என்னாநின்றாள்’ என்கிறாள்.
(தோளிசேர்பின்னை) – (துல்யசீலவயோத்ருத்தாம்) என்றுஆபிஜாத்யாதிகளால் பெருமாளுக்கு ஸத்ருசையாய், (அஸிதேக்ஷணா) என்று அவரிலும் இவளுக்கு ஏற்றமானாற்போலே, அல்லாத அழகெல்லாம் க்ருஷ்ணனோடு ஒத்திருக்கும்; தோளழகு அவனில் இவளுக்கு ஏற்றம். அவளுடைய அவயவசோபையிலே தோற்று அத்தோளோடே அணைக்கைக்காக. (எருதேழ்தழீஇக்கோளியார்) – எருதுகளேழையும் தழுவிக் கொள்ளுமவர். அநந்தரம் அவளைத் தழுவப்பார்க்கிறானாகையாலே, அவளைத்தழுவினாற்போலே யிருக்கிறதாயிற்று எருதுகளோடு பொருததும். ஆகையாலிறே `எருதேழ்தழீஇ’என்றது. அவளைப் பெறுகைக்கு ஹேதுவாகையாலே, அவற்றின்கொம்போடே பொருததும் இக்கொம்போடே சேர்ந்தாற்போலே போகரூப மாயிருக்கிறபடி. (கோவலனார் குடக்கூத்தனார்) – அவளைப்பெறுகைக்கு ஈடான ஆபிஜாத்யத்தையும் செருக்கையுமுடையவர். வில்முறித்தாலும் இக்ஷ்வாகு வம்ஸ்யர்க்கல்லது பெண்கொடாத ஜநகனைப்போலே, எருதேழடர்த்தாலும் இடைத்தனத்தில் குறையுண்டாகில் பெண்கொடார்களிறே. (தாளிணை இத்யாதி) – அவளுக்குஉதவின க்ருஷ்ணன் திருவடிகளிற் சாத்தின திருத்துழாயையாயிற்று இவள் ஆசைப்பட்டது. (நாளுநாள் நைகின்றதால்) – ஒருநாள் நைகைக்கும் ஆஸ்ரயமில்லாத மார்த்தவத்தை யுடையவள், நாள்தோறும் நாள்தோறும் நையா நின்றாள். ஆஸ்ரயத்தையுங் கொடுத்து நையப்பண்ணும் விஷயமிறே. (என்தன்மாதர்) – என்பெண்பிள்ளை. தன்னைப்போலே, பிறந்து விலங்குமுறித்துக்கொண்டுபோய்ப் பூதநாசகட-யமளார்ஜுநாதிகளோடேபொருது, “தழும்பிருந்ததாள் சகடஞ்சாடி” (முதல் திரு. 21) என்கிறபடியே தழும்பேறியிருப்பா ளொருத்தியோ என் பெண்பிள்ளை? “தொடுங்கால் ஒசியுமிடை யிளமான” (திருவிரு. 37) ன்றோ? என்கிறாள்.
ஆறாம் பாட்டு
மாதர்மாமண்மடந்தைபொருட்டு ஏனமாய்
ஆதியங்காலத்து அகலிடம்கீண்டவர்
பாதங்கள்மேலணி பைம்பொன்துழாயென்றே
ஓதும்மால்எய்தினள் என்தன்மடந்தையே.
ப : அநந்தரம், ‘ஸ்ரீபூமிப்பிராட்டிக்கு உதவின ஸ்ரீவராஹநாயனார் திருவடிகளில் திருத்துழாயென்று எப்போதும் சொல்லும்படி இவள் பிச்சேறினாள்’ என்கிறாள்.
மாதர் – நாரீணாமுத்தமையாய், மா – ஸ்லாக்யையான, மண்மடந்தைபொருட்டு – ஸ்ரீபூமிப்பிராட்டிக்காக, ஏனம் ஆய் – (நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத) வராஹ வேஷத்தை யுடையனாய், ஆதி – கல்பாதியாய், அம் – (ப்ராதுர்பாவயோக்யதையாகிற) நன்மையையுடைய, காலத்து – காலத்திலே, அகல் இடம் – விஸ்தீர்ணையான ப்ருதிவியை, கீண்டவர் – (அண்டத்தினின்றும்) ஒட்டுவிடுவித்து எடுத்துக்கொண்டு ஏறினவருடைய, பாதங்கள்மேல் – திருவடிகளின்மேலே, அணி – (ஸநகாதிகள்) சாத்தின, பை – பசுத்த, பொன் – தர்சநீயமான, துழாய் என்றே – திருத்துழாயென்றே, ஓதும் – (எப்போதும்) சொல்லும்படியான, மால் – ப்ரம்மத்தை, எய்தினள் – அடைந்தாள், என்தன் மடந்தை – விலக்ஷணமான மடப்பத்தையுடையவள்.
ஈடு. – ஆறாம்பாட்டு. ‘மனிச்சழியாமல் நப்பின்னைப்பிராட்டிக்கு உதவினாற் போலன்றிக்கே, ஸ்ரீபூமிப்பிராட்டிக்காகத் தன்னையழியமாறியும் உதவினவனுடைய திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்படாநின்றாள்’ என்கிறாள்.
(மாதர்) – அழகு. நிருபாதிக ஸ்த்ரீத்வத்தையுடையவளென்னுதல்; மாதரென்று – காதலாய், ஸ்நேஹயுக்தை யென்னுதல். (மாமண்மடந்தைபொருட்டு) – ஸ்லாக்யையான ஸ்ரீபூமிப்பிராட்டியின்பொருட்டு. (ஏனமாய்) – “பாசிதூர்த்துக்கிடந்தபார்மகள்” (நாச்.திரு. 8) என்கிறபடியே ப்ரணயிநியுடம்பு பேணாதே கிடக்க, ப்ரணயி உடம்புபேணியிருக்கையாவது ப்ரணயித்வத்துக்குப் போராதே; “மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப்பன்றியாம் தேசு” (நாச்.திரு. 8) என்கிறபடியே நீருக்கும் சேற்றுக்கும் இளையாத வடிவையுடையவனாய். (ஆதி) – வராஹ கல்பத்தினாதியிலே. (அம்காலத்து) – அழகிய காலத்து. ரக்ஷகனானவன் தன்விபூதி ரக்ஷணத்துக்காகக் கொண்ட ‘கோல’த்தை அநுபவிக்கிற காலமாகையாலே – அழகிய காலமென்கிறார். (அகலிடம்கீண்டவர் இத்யாதி) – மஹாப்ருதிவியை அண்ட பித்தியினின்றும் ஒட்டுவிடுவித்து எடுத்துக்கொண்டு ஏறினவனுடைய திருவடிகளிலே, (ரோமாந்தரஸ்த்தா முநயஸ்ஸ்துவந்தி) என்று ஸநகாதிகள் இட்ட திருத்துழாயையாயிற்று இவள் ஆசைப்படுகிறது. (ஓதும்மாலெய்தினள்) – இத்தை எப்போதும் சொல்லும்படி பிச்சேறினாள். (என்தன்மடந்தையே) – `அவனன்றோ பிச்சேறுவான்’ என்றிருக்கிறாள் இவள். இப்பருவத்தைக்கண்டார் படுமத்தை இப்பருவமுடைய இவள் படுவதே!
ஏழாம் பாட்டு
மடந்தையை வண்கமலத்திருமாதினைத்
தடங்கொள்தார்மார்பினில்வைத்தவர் தாளின்மேல்
வடங்கொள்பூந்தண்ணந்துழாய்மலர்க்கே இவள்
மடங்குமால் வாணுதலீர்! என்மடக்கொம்பே.
ப : அநந்தரம், அம்ருதமதநதசையிலே பிராட்டியைத் திருமார்பிலே வைத்தவனுடைய திருவடிகளில் திருத்துழாய்நிமித்தமாக இவள் துவளாநின்றாள் என்கிறாள்.
மடந்தையை – (நித்யாநுபாத்யமான) மடந்தைப்பருவத்தையுடையளாய், வண் – (*விகாஸிகமலே ஸ்தி2தா*என்கிறபடியே) தர்சநீயமான, கமலம் – தாமரைப்பூவை இருப்பிடமாகவுடையளாய், திரு – “ஸ்ரீர்தேவீ” என்கிறபடியே திருநாமத்தையுடையளாய், மாதினை – “ஸ்பு2ரத்காந்திமதீ” என்கிறபடியே மாதுமையாலுண்டான ஸௌந்தர்யாதிகளையுடையவளை, தடம் கொள் – பரப்பை உடைத்தாய், தார் – (ஈஸ்வரத்வஸூசகமான) மாலையையுடைய, மார்பினில் – திருமார்பிலே, வைத்தவர் – “யயௌ வக்ஷ:ஸ்தலம்” என்கிறபடியே அவளேறும்படி) வைத்தருளினவருடைய, தாளின்மேல் – திருவடிகளில் (தத்காலவர்த்திகளான தேவர்கள் சாத்தின), வடம் – தொடையை, கொள் – உடைத்தாய், பூ – தர்சநீயமாய், தண் – குளிர்ந்த, அம் – செவ்விய, துழாய்மலர்க்கு – திருத்துழாய்ப்பூந்தாருக்கு, வாள்நுதலீர் – உஜ்ஜ்வலமான நெற்றியையுடையவர்களே! என் – எனக்கு, மடம் – பத்யையாய், கொம்பு – வஞ்சிக்கொம்புபோலே தர்சநீயையான, இவள் – இவள், மடங்கும் – (அவஸந்நையாய்ச்) சுருளாநின்றாள். உங்களைப் போலே இவளையும் உஜ்ஜ்வலாவயவையாகக் காணவல்லேனே என்று கருத்து. வடங்கொள்கை – தழைத்தலாகவுமாம்.
ஈடு. – ஏழாம்பாட்டு. அம்ருதமதநதசையிலே பெரியபிராட்டியைத் திருமார்பிலே வைத்தருளினவனுடைய திருவடிகளிற் சாத்தின திருத்துழாயை ஆசைப்படாநின்றாள் என்கிறாள்.
(மடந்தையை) – எப்போதுமொக்க போகயோக்யமான பருவத்தையுடையவளை. (வண்கமலத்திருமாதினை) – அழகிய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய திருவாகிற பெண்பிள்ளையை. ஸாக்ஷாத் லக்ஷ்மியை. (தடங்கொள்இத்யாதி) – பெரிய பிராட்டியாருக்கு திவ்யாந்த:புரமாகப் போரும்படி இடமுடைத்தாய், ஐஸ்வர்ய ஸூசகமான மாலையையுடைத்தான மார்விலே வைத்தவர். (பஸ்யதாம் ஸர்வதே3வாநாம் யயௌ வக்ஷஸ்த்த2லம் ஹரே:) என்கிறபடியே – அம்ருதமதநஸமயத்திலே ‘அம்மா’ நமக்கு இம்மார்வு பெறவேணும் என்று தன்பாடு ஏற வர, அவளையும் மார்விலே வைத்துக் கொண்டவனுடைய திருவடிகளின்மேலே, செறியத்தொடையுண்டு தர்சநீயமாய்க் குளிர்ந்து செவ்வியையுடைத்தான திருத்துழாய்ப்பூவை ஆசைப்பட்டுக் கிடையாமையாலே சுருண்டுவிழுந்து கிடவாநின்றாள். (வாள்நுதலீர்) – ஒளியையுடைய நுதலையுடையவர்களே! உங்களைப்போலே இவளைக் காண்பது எப்போது? (என்மடக் கொம்பே) – என்னைப்பிரியாதே எல்லாவளவிலும் அவிக்ருதையாயிருக்குமவள் படும் பாடே இது!
எட்டாம் பாட்டு
கொம்புபோல்சீதைபொருட்டு இலங்கைநகர்
அம்பெரியுய்த்தவர் தாளிணைமேலணி
வம்பவிழ்தண்ணந்துழாய்மலர்க்கே இவள்
நம்புமால் நான்இதற்குஎன்செய்கேன்? நங்கைமீர்!
ப : அநந்தரம், ‘ஜநகராஜன்திருமகளுக்காக லங்காநிரஸநம்பண்ணின சக்ரவர்த்தி திருமகன்திருவடிகளில் திருத்துழாய்க்கு விருப்பத்தையுடையளாகாநின்றாள்’ என்கிறாள்.
கொம்புபோல் – வஞ்சிக்கொம்புபோலே அபிரூபையாய், சீதைபொருட்டு – (*க்ஷேரே ஹலமுக2க்ஷதே” என்கிறபடியே அயோநிஜையான) ஸ்ரீஜநகராஜன் திருமகளுக்காக, இலங்கைநகர் – லங்காநகரத்திலே, அம்பு எரி – சராக்நியை, உய்த்தவர் – ப்ரவே–ப்பித்தவருடைய, தாளிணைமேல் – திருவடிகளின்மேலே, அணி – “ப4வாந் நாராயணோ தே3வ:” என்று ஸ்துதித்த ப்ரஹ்மாதிகள்) சாத்தின, வம்புஅவிழ் – அபிநவபரிமளவிகாஸியாய், தண் – குளிர்ந்து, அம் – அழகிய, துழாய் – திருத்துழாயினுடைய, மலர்க்கு – பூந்தாருக்கு, இவள் – இவள், நம்பும் – விருப்பத்தையுடையளாகாநின்றாள்; நங்கைமீர் – பூர்ணைகளானவர்களே! இதற்கு – இந்த அதீதவிஷயாபிநிவேசத்துக்கு, நான் – நான், என்செய்கேன் – எத்தைச் செய்வேன்?
அவன்தான் இன்னமும் அவதரித்து உபகரிக்குமதொழிய என்னாற் செய்யலாவதில்லையென்று கருத்து.
ஈடு. – எட்டாம்பாட்டு. ‘ஸ்ரீஜநகராஜன் திருமகளுடைய விரோதியைப் போக்கின சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளில் சாத்தின திருத்துழாயை ஆசைப்படாநின்றாள்’ என்கிறாள். (கொம்புபோல்) – வஞ்சிக்கொம்புபோலே என்னுதல், “அநந்யா” என்கிறபடியே ஏகவஸ்துவில் ஏகதேச மென்னுதல். (சீதைபொருட்டு) – சீதைக்காக. (இலங்கைநகர்) – சந்த்ராதித்யர்கள் ஸஞ்சரிக்கப் பயப்படும் ஊர். (அம்புஎரிஉய்த்தவர்) – சராக்நியை ப்ரவேசிப்பித்தவர். சக்ரவர்த்திதிருமகன் இத்தைக்கைதொட்டு ஸிக்ஷித்து குணவானாக்கிப் பின்பிறே போகவிட்டது; ஆகையாலே, கேவலாக்நி ப்ரவேசிக்கக் கூசும் ஊரிலே தன் வாய்வலியாலே புக்கதாயிற்று. இப்படி தான் ‘முதுகிட்டாரையும்’ கூட, குணவான்களாக்கும்படி ‘ஏக்கற்றவ’ருடைய திருவடிகளிற் சாத்தப்பட்ட. (வம்பு அவிழ் தண்ணந்துழாய்மலர்க்கே) – பரிமளத்தையுடைத்தான மலரென்னுதல், நித்யாபூர்வமாயிருக்குமென்னுதல். அவன் சக்ரவர்த்தி திருமகனாயிருக்கச்செய்தேயும் அப்ராக்ருத திவ்யஸம்ஸ்தாந மேயாயிருக்கிறாப்போலே, அவன் ஏதேனும் ஒன்றாலே வளையம்வைத்தாலும் இவர்களுக்குத் தோற்றுவது திருத்துழாயாயே. (நம்புமால்) – அத்தை எப்போதும் விரும்பாநின்றாள். (நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்) – க்ருஷ்ணனைப்போலே ஊர்ப்பொதுவன்றிக்கே ஏகதார வ்ரதனானவன் திருவடிகளில் திருத்துழாயை நான் எங்கே தேடும்படி? சொல்லவல்லிகோளே. (நங்கைமீர்) – நீங்கள் பூர்ணைகளாயிருக்க, இவள் இப்படி படுகிறபடி கண்டிகோளே.
ஒன்பதாம் பாட்டு
நங்கைமீர் நீரும் ஓர்பெண்பெற்றுநல்கினீர்
எங்ஙனேசொல்லுகேன் யான்பெற்றஏழையைச்
சங்கென்னும்சக்கரமென்னும் துழாயென்னும்
இங்ஙனேசொல்லும் இராப்பகல்என்செய்கேன்?
ப : அநந்தரம், ‘அவனுடைய அஸாதாரணசிஹ்நங்களை எப்போதும் சொல்லாநின்றாள்’ என்கிறாள்.
நங்கைமீர் – பரிபூர்ணைகளான, நீரும் – நீங்களும், ஓர் பெண் – ஒரு பெண்ணை, பெற்று – பெற்று, நல்கினீர் – ஸ்நேஹித்துவளர்த்திகோள்; யான் – நான், பெற்ற – பெற்ற, ஏழையை – சபலையான இவளை, எங்ஙன் – எப்படி, சொல்லுகேன் – சொல்லுவேன்?
(ஆனமட்டும்சொல்லில்), சங்கு என்னும் – (அவனுக்கு அஸாதாரணசிஹ்நமான) சங்கென்பது, சக்கரமென்னும் – சக்கரமென்பது, துழாயென்னும் – (அவன் திருவடிகளில்) திருத்துழாயென்பதாய்க்கொண்டு, இராப்பகல் – அஹோராத்ர விபா4க3மில்லாதபடி, இங்ஙனே – இப்படி தனித்தனியே, சொல்லும் – சொல்லாநின்றாள்: என்செய்கேன் – இதற்கு ஏது செய்வேன்?
ஈடு. – ஒன்பதாம்பாட்டு. ” ‘அவனுடைய ஆயுதாதிகளைக் காணவேணும்’ என்று சொல்லப்புக்கு முடியச்சொல்லமாட்டாதே நோவுபடாநின்றாள்” என்கிறாள்.
(நங்கைமீர்) – உங்கள்பூர்த்தி, இவள்படுகிற பாடு நான் சொல்லக் கேட்டறிய வேண்டி யிருக்கிறதிறே உங்களுக்கு. (நீரும் ஓர்பெண்பெற்று நல்கினீர்) – நீங்களும் ஒருபெண்பிள்ளையைப் பெற்று வளர்க்கிறிகோளன்றோ? நல்குகை – வளர்க்கை. இவள்பட்டது பட்டாருண்டோ? எங்கள்பெண்பிள்ளைகளிற் காட்டிலும் உன்பெண் பிள்ளைக்கு வாசியென்? என்னில், – (எங்ஙனே சொல்லுகேன்) – இவள்படி பேச்சுக்கு நிலமாகிலிறே நான்சொல்லுவது. (யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ) என்கிற பகவத்குணங்கள் நிலமாய்ப்பேசிலும், குணாவகாடர் படி பேச்சுக்கு நிலமல்லவிறே. (ஸதா3பரகு3ணாவிஷ்டோ த்3ரஷ்டத்யஸ்ஸர்வதே3ஹிபி:) என்று கண்டிருக்கு மத்தனை போக்கிப் பேசமுடியாது. (ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்த2ம்) என்றிறே அவன் வார்த்தையும். தேசகால விப்ரக்ருஷ்டமான பதார்த்தங்களைத் தத்தத் தேசகாலவிசிஷ்டமாகப்பெறவேணு மென்கிற இவள்படி என்னாலே பேசலா யிருந்ததோ? ஆனாலும், எங்களிலும் நீ ஆஸந்நையன்றோ? தெரிந்தமட்டு அத்தைச் சொல்லிக்காணாய் என்ன, கைமேலே சொல்லுகிறாள்:- (சங்கென்னும்) – மலையெடுத்தாற்போலே பெருவருத்தத்தோடே சங்கென்னும்; அது ஸாத்மித்தவாறே (சக்கரமென்னும்) – மீளவும் மாட்டுகிறிலள், சொல்லவும் மாட்டுகிறிலள். இரண்டுக்கும் நடுவேகிடக்கிற மாலையை நினைத்து, (துழாயென்னும்) – “சங்குசக்கரங்கள்” (7.2.1) என்றும், “கூராராழிவெண்சங்கு” (6.9.1) என்றும் சொல்லமாட்டுகிறிலள். ஆபத்துமிக்கவாறே ஒருத்தி (சங்க2சக்ரகதா3பாணே) என்றாளிறே. (இங்ஙனே சொல்லும்) – சொல்லத்தொடங்குவது, சொல்லித் தலைக்கட்டமாட்டாதொழிவதாய்ப் படாநின்றாள். இப்படிசொல்லுவது எத்தனைபோது? என்னில், – (இராப்பகல்) – ஸர்வகாலமும். (என்செய்கேன்) – இவளைத் தொடங்கினதுசொல்லித் தலைக்கட்டப்பண்ணவோ? ஸ்த்ரீத்வத்தைப்பார்த்து மீளப்பண்ணவோ?
பத்தாம் பாட்டு
என்செய்கேன் என்னுடைப்பேதை என்கோமளம்
என்சொல்லும் என்வசமுமல்லள் நங்கைமீர்
மின்செய்பூண்மார்பினன் கண்ணன்கழல்துழாய்
பொன்செய்பூண்மென்முலைக்கென்று மெலியுமே.
ப : அநந்தரம், எனக்கு விதேயையன்றியே க்ருஷ்ணனுடைய ஆபரண சோபையிலே அகப்பட்டு அவனுடைய திருவடிகளில் திருத்துழாய் தன்முலைக்கு அலங்காரமாக வேணுமென்று உடம்பு இளையாநின்றாள் என்கிறாள்.
நங்கைமீர் – நங்கைமீர்! என்னுடை – என்னுடைய, பேதை – (ஹிதம்கேட்கும்பருவ மல்லாத) பேதையாய், என்கோமளம் – (ஹிதஞ்சொல்லப் பொறுக்கமாட்டாத) மார்த்தவத்தையுடைய இவள், என்சொல்லும் – என்சொல்லிலும், என்வசமும் – என் நினைவிலும், அல்லள் – வருகிறிலள்; என்செய்கேன் – (நான் இதற்குச்) செய்வதுண்டோ? (இவள் அவஸ்த்தை இருந்தபடி!) மின்செய் – ஒளியையுடைத்தான, பூண் – கௌஸ்துபாத்யாபரணசோபிதமான, மார்பினன் – மார்பையுடைய, கண்ணன் – க்ருஷ்ணன், கழல் – திருவடிகளில், துழாய் – திருத்துழாயை, பொன் – (விரஹவைவர்ண்யமாகிற) பொன்மையாலே, செய் – செய்யப்பட்ட, பூண் – ஆபரண சோபையையுடைய, மெல் – (விஸ்லேஷாஸஹமாய்த்) துவண்ட, முலைக்கு – முலைக்கு (அலங்காரமாகவேணும்), என்று – என்று ஆசைப்பட்டு, மெலியும் – (அது கிடையாமையாலே) க்ருஸ சரீரையாகாநின்றாள்.
ஈடு. – பத்தாம்பாட்டு. ‘உன்மகள் நீயிட்ட வழக்கன்றோ? அவளுக்கு ஹிதம் சொல்லி மீட்கத் தட்டு என் உனக்கு?’ என்றவர்களைத்குறித்து ‘நான் சொல்லிற்றுக் கேளாதே அவனையே ஆசைப்பட்டு மிகவும் அவஸந்நையாகாநின்றாள்’ என்கிறாள்.
(என்செய்கேன்) – இவள்தசை யிருந்தபடியால் இவளைக்கிடையாதாயிருந்தது; நான் என்செய்வேன்? (என்னுடைப்பேதை) – நான்சொல்லும் ஹிதவசநங் கேட்கும் பருவமல்லள். (என்கோமளம்) – `சொன்னஹிதங்கேட்டிலள்’ என்று கைவிட வொண்ணாதபடி, வ்யஸநஸஹமல்லாத ஸௌகுமார்யத்தை யுடையவள். (என்சொல்லு மல்லள், என்வசமுமல்லள்) – நான் சொன்ன ஹிதவசநங் கேட்பதும் செய்யாள்; எனக்கு ஹிதஞ்சொல்லலாம்படியிருப்பதும் செய்யாள். (நங்கைமீர்) – இதில் நீங்களறியாத தில்லையிறே. (மின் செய் இத்யாதி) – மின்னாநின்றுள்ள ஸ்ரீகௌஸ்துபத்தை மார்விலேயுடைய க்ருஷ்ணன் திருவடிகளில் திருத்துழாய், பொன்னாலே செய்த ஆபரணங்களையுடைத்தாய் விரஹஸஹமல்லாத முலைக்கு; அன்றிக்கே, பொன்செய் திருக்கை – விவர்ணமாயிருக்கை; “மென்முலை பொன்பயந்திருந்த” (திருமொழி 2.7.6) என்னக்கடவதிறே. அந்த வைவர்ண்யத்தையே ஆபரணமாகவுடைய முலைக்கு என்றுமாம்; (அநிந்தி3தாம்) என்னுமாபோலே. (மின்செய் பூண் மார்பினன் – பொன்செய்பூண்மென்முலை) – அவன் பும்ஸ்த்வத்துக்கு லக்ஷணமான கௌஸ்துபம்போலேயாயிற்று, ஸ்த்ரீத்வத்துக்கும் வைவர்ண்யம்; அபிமத விரஹத்தில் இப்படி பொன்பயக்கையிறே ஸ்த்ரீத்வலக்ஷணம். ‘தனம்’படைத்தாரில் இவளைப் போலே ‘தனம்’படைத்தாருண்டோ? (மென்முலை) – தன்அபிமதனைப் பிரியமாட்டாமையாலே பொன்னிட்டுக்கொள்ளுகிறதிறே. “மென்முலைக்குவேணும்” என்று சொல்லப்புக்கு மெலிவோடே தலைக்கட்டும்.
பதினொன்றாம் பாட்டு
மெலியும்நோய்தீர்க்கும் நம்கண்ணன்கழல்கள்மேல்
மலிபுகழ்வண்குருகூர்ச் சடகோபன்சொல்
ஒலிபுகழாயிரத்து இப்பத்தும்வல்லவர்
மலிபுகழ்வானவர்க்காவர் நற்கோவையே.
ஆழ்வார் திருவடிகளே சரணம்
ப : அநந்தரம், இத்திருவாய்மொழி கற்றார் நித்யஸூரிகளோடு ஒருகோவையாவர்கள் என்று பலத்தை அருளிச்செய்கிறார்.
மெலியும் – இப்படி சிதிலராகைக்கு அடியான, நோய் – விரஹத்யதையை, தீர்க்கும் – போக்கும், நம் – ஆஸ்ரிதஸுலபனான, கண்ணன் – க்ருஷ்ணன், கழல்கள்மேல் – திருவடிகள் விஷயமாக, மலி – (விப்ரக்ருஷ்டாநுபவத்திலும் அபிநிவிஷ்டரென்னும் படி) வளர்ந்த, புகழ் – புகழையுடையராய், – வண் – ஸ்லாக்யமான, குருகூர் – திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வார், சொல் – அருளிச்செய்த, ஒலி – கொண்டாடப்பட்ட, புகழ் – குணபௌஷ்கல்யத்தையுடைத்தான, ஆயிரத்து – ஆயிரந்திருவாய்மொழி யிலும், இப்பத்தும் – இப்பத்தையும், வல்லவர் – (பா4வயுக்தமாக அப்யஸிக்க) வல்லவர்கள், மலி – அபித்ருத்தமான, புகழ் – பகவதநுபவப்ரதையையுடைய, வானவர்க்கு – ஸூரிகளுக்கு, நல் – ஸ்லாக்யராய்க் கொண்டு, கோவை ஆவர் – ஒருகோவையாவர்கள். இது – கலிவிருத்தம்.
வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் திருவடிகளே சரணம்
ஈடு. – பதினோராம்பாட்டு. நிகமத்தில் – இத்திருவாய்மொழி அப்யஸிக்கவல்லார் நித்யஸூரிகளுக்கு ஸத்ருசராவர் என்கிறார்.
(மெலியும்நோய்தீர்க்கும்) – `மெலியும்’ என்று தாயார் கைவாங்கினாள், பின்னையும் உடையவன் கைவிடானே. “பெற்றார்பெற்றொழிந்தார்” (திருமொழி 8.9.7) இத்யாதி. (நங்கண்ணன்) – (தாஸாமாவிரபூ4ச்செ2ளரி:) என்று இப்படிப்பட்ட ஆபத்துக்களிலே வந்து முகங்காட்டு மென்னும் ப்ரமாணப்ரஸித்தி. இப்படி சிதிலையாகைக்கு அடியான விரஹத்யதையைப் போக்கும் ஆஸ்ரிதஸுலபனான க்ருஷ்ணன் திருவடிகள் விஷயமாக. (மலிபுகழ்) – `தேசகாலங்களால் விப்ரக்ருஷ்டமான அவன்படிகளையும் இப்போதே பெறவேணும்’ என்று விடாய்க்கும்படி பகவத்விஷயத்திலே விடாய்கையால் வந்த புகழிறே. இப்படிப்பட்ட புகழையுடைய ஆழ்வார் அருளிச்செய்தது (ஒலிபுகழாயிரத்து இப்பத்தும் வல்லவர்) – இவரை இப்படி விடாய்ப்பித்தவன் அவ்விடாய் போனவிடம் தெரியாதபடி பரிஹரிக்கவல்லனென்கிற கல்யாணகுணங்களை வ்யக்தமாகச் சொல்லுகிற இப்பத்தையும் அப்யஸிக்கவல்லவர்கள். (மலிபுகழ்வானவர்க்காவர் நற்கோவையே) – இவ்வாழ்வாரோடு ஒப்பர்களாயிற்று அவர்களும். நித்யாநுபவம் பண்ணாநிற்கச் செய்தே அவர்கள் விடாய்க்க வல்லராம்படி, பகவத்விஸ்லேஷத்தால் விடாய்க்கைக்கு ஸம்பாவநையில்லாத ஸம்ஸாரத்திலே யிருந்து இவர் விடாய்க்க வல்லரானாற்போலேயாயிற்று. வானவரோடு, (நற்கோவையாவர்) – நல்ல சேர்த்தியாவர்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்
த்ரமிடோபநிஷத் ஸங்கதி— பாலனாய்
தம் புருஷார்தமிதரார்தருசேநிவ்ருத்த்ய ஸாந்த்ரஸ்ப்ருஹாஸமயதேஶவிதூரகம்ச।
ஈப்ஸுஸ்ஶுசாததநவாப்திபுவாத்விதீயே
ஸ்த்ரீபாவநாம் ஸமதிகம்ய முநிர்முமோஹ।। ||32||
த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்நாவளி —- பாலனாய்
ஶைத்யாத்ஸௌகந்த்யபூம்நாருசிருசிரதயாபோஷணாதாபிரூப்யாத்
ஸந்தர்பாத் புஷ்பஸங்காந்மஹிததுலஸிகாமாலயாஶங்கதஶ்ச ।
சக்ராதீஶஸ்ய யோகாத் வடதளஶயநாத்யர்ஹணீயாபதாநை: ஸம்பந்நாநேகபோக்யந்நிரவிஶதஜிதம்க்ருஷ்ணமூர்திம்ஶடாரி|| 4-2
திருவாய்மொழி நூற்றந்தாதி
பாலரைப்போற்சீழ்கிப்பரனளவில்வேட்கையால்
காலத்தால்தேசத்தால்கைகழிந்தசால
அரிதான போகத்தில்ஆசையுற்றுநைந்தான்*
குருகூரில் வந்துதித்த கோ. ||32||
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
******