நான்காம் திருவாய்மொழி
மண்ணையிருந்து : ப்ரவேசம்
*******
ப : நாலாந்திருவாய்மொழியில், இப்படி மாநஸஸம்ஸ்லேஷத்தாலே அநுபவிப்பித்துக் கற்பித்த ஈஸ்வரனுடைய ப்ரணயித்வகுணத்தை அநுஸந்தித்த ஆதராநுரூபமான பாஹ்யாநுபவாபிநிவேசத்தைப் பண்ணி அது கிட்டாமையாலே ஆர்த்தரான இவர், தம்முடைய ஆர்த்திசாந்திஹேதுவான ஸ்வபாவங்களையுடையனான ஈஸ்வரனுடைய விபூதித்வயயோகத்தையும், ஸர்வஸமாஸ்ரயணீயத்வத்தையும், ப்ரதாபாநுக்ரஹவத்தையையும், உஜ்ஜ்வலமாய் உத்துங்கமாய் ஸ்ரமஹரமான விக்ரஹ வைலக்ஷண்யத்தையும், ரக்ஷணார்த்த ப்ரத்ருத்திகளையும், அநு பா4த்யசேஷ்டிதங்களையும், பரத்வசிஹ்நங்களையும், ஐஸ்வர்யாபிரூப்ய விசிஷ்டமான ஆதரணீயத்வத்தையும், ஆஸ்ரிதவிஷயத்தில் உபகாரகத்வத்தையும், ஸௌலப்யபாரம்யத்தையும் அநுஸந்தித்து, ஏவம்விசிஷ்டனான ஸர்வேஸ்வரனுக்கு ஸம்பந்திகளாயும் ஸத்ருசங்களாயுமுள்ள பதார்த்த தர்சநத்தாலே ஈடுபட்ட ப்ரகாரத்தை பார்ஸ்வஸ்தரான பரிவர் சொன்ன பாசுரத்தை, நாயகனைப்பிரிந்த தலைவியுடைய ஆற்றாமை கண்ட நற்றாய் வார்த்தையாலே அருளிச்செய்கிறார்.
ஈடு. – கீழில்திருவாய்மொழியில் – அவனுடைய ப்ரணயித்வகுணத்தை அநுஸந்தித்துப் பிச்சேறினார். இவர்க்குக் கீழ்ப்பிறந்த நிர்வதிகப்ரீதியானது இருவருடைய ஆஸ்ரயமும் அழியுமென்னும்படியாயிற்று; அந்த ரஸத்தை அரையாறுபடுத்தி ஸாத்மிப்பிக்கைக்காக அக்கலவியை அல்பம் நெகிழநின்றான் ஈஸ்வரன். ஆனாலும், பிரிந்தது அவனையாகையாலே அது தன்கார்யம் செய்தன்றி நில்லாதே; ஆற்றாமை மீதூர்ந்து, த4நலுப்3த4னானவன் கிழிச்சீரையைக் கெடுத்தால் அத்தோடு போலியான முடிகளெல்லாம் அவிழ்த்தவிழ்த்துப் பார்க்குமாபோலே; “வைப்பாம்மருந்தாம்” (1.7.2) என்னும்படியே இவர்க்குச் சேமநிதியிறே அவன்; ஆகையாலே, அவனோடு ஸத்ருசபதார்த்தங்களையும் ஸம்பந்திபதார்த்தங்களையும் அகப்பட அவனாகக்கொண்டு ப்ரமித்துக் கிட்டிப்பார்த்து அவனன்றிக்கே யொழிந்தால் மீளவும் மாட்டாதே நோவுபட்டுச் செல்லுகிறது. (க்வசிது3த்ப்4ரமதே வேகா3த் க்வசித்3விப்4ரமதே ப3லாத் |க்வசிந்மத்த இவாபா4தி காந்தாந் வேஷணதத்பர:) என்கிறபடியே – பிராட்டியைப்பிரிந்த அநந்தரம் ஆற்றாமையாலே மேல்நோக்கிப் பார்த்து விலங்க ஸஞ்சரிப்பது, அதுதானும் மாட்டாதொழிவது, ஒரு வ்ருக்ஷத்தில்நின்றும் வ்ருக்ஷாந்தரத்திலே சென்று கிட்டுவது, `மைதிலியைக் கண்டிகோளோ?’ என்றுகேட்பது, ஆணாறுபெண்ணாறுக ளொன்றின்றிக்கே தேடுவதாய் அவர்பட்டாற்போலே இவளும் அப்படியே படுகிறாள் இப்போது. இப்படி நோவுபடுகிற இவள் தஶையை அநுஸந்தித்த திருத்தாயார், இவள்படுகிற பாடுகளையும் இவள் சொல்லுகிற வார்த்தைகளையும் சொல்லி, இதுகண்டு தான்பொறுக்கமாட்டாமே நோவுபடுகிறபடியும் சொல்லி இவள் கைவாங்குமளவாக, அவன் வந்து முகங்காட்டி ஆஸ்வஸிப்பிக்கத் தரித்ததாய்த் தலைக்கட்டுகிறது இத்திருவாய்மொழி.
முதல் பாட்டு
மண்ணையிருந்துதுழாவி வாமனன்மண்ணிதுவென்னும்
விண்ணைத்தொழுதுஅவன்மேவு வைகுந்தமென்றுகைகாட்டும்
கண்ணையுண்ணீர்மல்கநின்று கடல்வண்ணனென்னுமன்னே! என்
பெண்ணைப்பெருமயல்செய்தார்க்கு என்செய்கேன்பெய்வளையீரே.
ப : முதற்பாட்டில், வினவ வந்த அயலார்க்கு, ‘அவனுடைய விபூதித்வய ஸம்பந்தத்தை அநுஸந்தித்து பூம்யந்தரிக்ஷங்களைக் கண்டு விக்ருதையாகாநின்றாள்’ என்கிறாள்.
மண்ணை – பூமியை, இருந்து – இருந்து, துழாவி – துழாவி, இது – இது, வாமனன் – (அந்யாபிமாநம் வாராதபடி) வாமநனாய் அவனிரந்தளந்துகொண்ட, மண் – மண், என்னும் – என்னாநிற்கும்; விண்ணை – (ஊர்த்வமான) ஆகாசத்தை, தொழுது – (நோக்கி) அஞ்சலிபண்ணி, அவன் – அவன், மேவு – நித்யவாஸம்பண்ணுகிற, வைகுந்தம் – (பரமத்யோமசப்தவாச்யமான) ஸ்ரீவைகுண்டம், என்று – என்றுசொல்லி, (அபரோக்ஷித்தாரைப்போலே), கை – ஹஸ்தமுத்ரையாலே, காட்டும் – (பிறர்க்கும்) காட்டாநிற்கும்; உள் – அகவாயில், நீர் – அஸ்ருஜலமானது, கண்ணை – கண்ணையும், மல்க -விஞ்சிப் புறப்படும்படி, நின்று – நின்று, (இப்படிதன்னோடுஸம்பந்தித்த விபூதித்வயமும் எனக்கு விஷயமாம்படி), கடல் – கடல்போலே ஸ்ரமஹரமான, வண்ணன் – தன்வடிவழகைக்காட்டி அநுபவிப்பித்த அபரிச்சிந்நஸ்வபாவன், என்னும் – என்னும்; அன்னே – அம்மே! என் – என்னுடைய, பெண்ணை – (முக்தையான) பெண்ணை,
பெரு – இப்படி அதிசயிதமான, மயல் – பிச்சை, செய்தார்க்கு – பண்ணினவருக்கு, பெய் வளையீரே – (இவள்வளைபோலே கழலுகையன்றியே) இடப்பட்ட வளையையுடையவர்களே! என் – எத்தை, செய்கேன் – செய்வேன்?
அவரை யழைத்துக் கொடுக்கமாட்டுகிறிலேன், அவர்தாமே வருமளவும் இவள் பிச்சைத் தணிக்கமாட்டுகிறிலேனென்று கருத்து. அன்னேயென்று – வெறுப்பைக் காட்டுகிறது. பெய்வளையீரே என்கையாலே – நீங்கள் கையும் வளையுமாயிருக்க, இவள் கை நிலம் துழாவும்படி யாவதே! என்கை. விண்ணென்று பூதாகாசமாயிருக்க, அவ்வளவும் ப்ரகாசித்தபடி.
ஈடு. – முதற்பாட்டு. வினவவந்தவர்களுக்குத் தன்மகள்செய்தியை அறிவியாநின்று கொண்டு, `இப்படி இவளை எம்பெருமான் பிச்சேற்றினான்: நான் இதுக்கு என்செய்வேன்?’ என்கிறாள்.
(மண்ணையிருந்துதுழாவி) – “மண்முழுதுமகப்படுத்துநின்ற வெந்தை” (திருநெடு. 5) என்கிற படியே அவன் திருவடிகளுக்கு உட்பட்ட பூமிப்பரப்படைய இருந்து துழாவாநிற்கும். அவன்ஸம்பந்தங்கொண்டே இத்தை விரும்புகிறது; அது ப்ராதேசிகமன்றே. (மயா து ப4க்த்யா தஸ்யைவ வாமநஸ்யோபபு4ஜ்யதே). `முன்புதோற்றுகிற சோலை யென்யென்புது?’ என்று பெருமாள் கேட்டருள, பண்டு `ஸித்தாஸ்ரமம்’ என்று ஸ்ரீவாமநன் எழுந்தருளியிருந்த தேசமாயிற்று: அவன் எழுந்தருளினபின்பு அவன்பக்கல் பக்தியாலே விடமாட்டாமே அம்மண்ணை மோந்துகொண்டு கிடப்பன்’ என்றானிறே விஶ்வாமித்ரன். (விஷ்ணுர்மாநுஷரூபேண சசார வஸுதா4தலே) என்று அவன்பக்கல்ருசியுடையார் விடமாட்டார்களிறே. (இருந்து) – இவ்விருப்புக்குப்பூர்வ க்ஷணத்தில் ஸ்திதிகமநசயநாதிகளில் ஒருநியதியின்றிக்கே நோவுபட்டமை தோற்றுகிறது. (துழாவி) – இதுதன்னை விடமாட்டாமையும் தோற்றுமிறே; பித்தோபஹதன் சந்தநபங்கத்தில்நின்றும் கைவாங்க மாட்டாதாப்போலே; கைவாங்கில் விரஹாக்நியாலே வேம்போலே. தாங்கள்தெளிந்திருக்கிறார்களாய் `இவள் ப்ரமித்தாரைப்போலே செய்கிறதென்னென்புது?’ என்பர்களே, அவர்களை `நீங்கள் ப்ரமித்திகோளோ?’ என்னுமாயிற்று இவள். (வாமனன்மண்இதுவென்னும்) – வாமனன்மண்ணன்றோ இது? என்னும். ‘ `அடி’யிலேபிறந்துடைய கந்தமன்றோ?’ என்னாநின்றாள். (கந்தவதிப்ருதிவீ) என்றிறே நாட்டில் ப்ரஸித்தி; (ஸர்வகந்த:) என்கிற விஷயத்தோட்டை ஸம்பந்தமேயாயிற்று இவள் அறிவது. அவன் இரந்து தனக்காக்கிக் கொண்டதன்றோ என்னாநின்றாள். அவனதானால் இந்த்ரனுக்குப்போலே கொடுக்க வேண்டாகாணும் இவளுக்கு; அவனதானபோதே இவளதாயேயிருக்கும். `அவனதன்று காண்’ என்று இவளை மீட்கவொண்ணாதே. (இதுவென்னும்) – ப்ரத்யக்ஷத்திலும் உங்களுக்கு ஸம்சயம் அநுவர்த்தியாநின்றதோ? என்னும். பூதகாலத்திலுள்ளதும் இவளுக்கு வர்த்தமாநகாலத்திற்போலே தோற்றுகிறவித்தனைபோக்கி, அளந்தவனை இப்போது காணவொண்ணாதே. (விண்ணைத்தொழுது) – கழிந்தகாலத்திலுள்ளதும் வர்த்தமாநகாலத்திற்போலே தோற்றுகிறாப்போலே, லோகாந்தரத்திற்பரிமாற்றமும் இங்கே தோற்றாநின்றது. “அக்கரை, இக்கரை” (பெரியா.திரு. 5.3.7) என்னும்படி, அவர்களுக்கு இவ்விடத்திலும் அவ்விடம் அணித்தாய்த்தோன்றுமிறே; நமக்கு அவ்விடத்திலும் இவ்விடம் அணித்தாயிருக்குமாபோலே. ஆர்ஷ்டிஷேணனாஸ்ரமத்திலேநின்று பரமபதங் கண்டார்களிறே சிலர். நாமஸாம்யத்தாலும், ஊர்த்வாகாரத்தாலும், இவ்வாகாசத்தைப் பரமபதமென்று தொழாநிற்கும். (அவன்மேவு வைகுந்தம்) – என்னோடேகலந்து அகன்றவிடம்போலே பிரிவோடே வ்யாப்தமாயிராதே அவன் நித்யவாஸம்பண்ணும் தேசம் என்னாநின்றாள். அவதாரவ்யாவ்ருத்தியும் தனக்கு இழக்க வேண்டாமையும். (கைகாட்டும்) – அவன் ஏகரூபமாயிருக்கிற இருப்பை அநுஸந்தித்து, அவ்விருப்பிலும் தான் அநுபவிக்கப் பெறாமையாலே நடுவே தளர்ந்து, சொல்லப்புக்க வார்த்தை தலைக்கட்டமாட்டாதே ஹஸ்தமுத்ரையாலே தலைக்கட்டாநின்றாள். `பரமபதத்திலே நித்யஸூரிகள் நித்யாநுபவம்பண்ணாநிற்க, அவர்களோடொத்த ப்ராப்தி நமக்கும் உண்டாயிருக்க, நாம் இழப்போமே’ என்று தளர்ந்து தொடங்கின வார்த்தை தலைக்கட்டமாட்டுகிறிலள். (கண்ணையுண்ணீர்மல்கநின்று) – அவதாரம் போலன்றிக்கே என்று மொக்க அநுபவிக்கலாம்படியிருக்கிற பரமபதத்திலிருப்பிலும் நான் இழப்பதே! என்று கண்ணீர்மல்குமாயிற்று. (கடல்வண்ணனென்னும்) – அவ்வடிவைக் காட்டிக்காணும் இவளை அவன் பிச்சேற்றிற்று; இவளும் தன்னைப் பிச்சேற்றினபடியே சொல்லாநின்றாள். ஒருகருங்கடல்வடிவுகொண்டு செவ்வேயிருந்தாற்போலே அங்கிருக்கு மிருப்பைச் சொல்லும். (அன்னே) – `அம்மே’ என்று விஷாதாதிசய ஸூசகமாயிருப்பதொரு அவ்யயம். மன்னே என்னவுமாம். (என்பெண்ணை) – (யுவதிஸ்சகுமாரிணீ) என்கிறபடியே கலவியிலும் உட்புகமாட்டாத பருவமாயிற்று இவளது. (பெருமயல் செய்தார்க்கு) – தம்மைக் கலந்து பிரிந்தார் படும் வ்யஸநத்தளவுமல்ல இவளைப்படுத்திற்று. ஸத்ருச பதார்த்தத்தைக் கண்டு கலங்கினாள் இவளேயிறே. (என்செய்கேன்) – இவளாற்றாமைதீர அவனை வரப்பண்ணவோ? `அவன்வருமளவும் க்ரமப்ராப்தி பார்த்து ஆறியிருக்கவேணுங்காண்’ என்று இவளைத் தரிப்பிப்பேனோ? (பெய்வளையீரே) – இடப்பட்ட வளையையுடையீர்! ப்ரளயத்திலே புறவடிநனையாமேயிருப்பாரைப்போலே, இவ்வளவிலும் கையும் வளையுமா யிருப்பதே நீங்கள்! நீங்கள் வளைதொங்குகைக்குச் செய்த பரிஹாரத்தைச் சொல்லவல்லிகோளே; நானும் கைமேலே அநுஷ்டித்துப்பார்க்க.
இரண்டாம் பாட்டு
பெய்வளைக்கைகளைக்கூப்பிப் பிரான்கிடக்கும்கடலென்னும்
செய்யதோர்ஞாயிற்றைக்காட்டிச் சிரீதரன்மூர்த்திஈதென்னும்
நையும்கண்ணீர்மல்கநின்று நாரணனென்னுமன்னே! என்
தெய்வவுருவிற்சிறுமான் செய்கின்றதொன்றறியேனே.
ப : அநந்தரம், `அவனோடு ஸம்பந்தமுடைய கடலையும் ஆதித்யனையுங்கண்டு சிதிலையாகாநின்றாள்’ என்கிறாள்.
பெய் – (பலகாலும் கழன்று) இடப்படாநிற்கிற, வளை – வளைகளையுடைய, கைகளை – கைகளை, கூப்பி – கூப்பி அஞ்சலிபண்ணி, (தன்முன்பே கோஷிக்கிற கடலைப்பார்த்து), பிரான் – (சரணம்புக்க தேவர்களுக்கு முகங்காட்டும்) உபகாரகனானவன், கிடக்கும் – (எனக்கு முகங்காட்டக்) கிடக்கிற, கடல் – கடல், என்னும் – என்னாநிற்கும்; (ராத்ர்யவஸாநத்திலே உதித்து), செய்யது – சிவந்த ஒளியாலே, ஓர் – அத்விதீயனான, ஞாயிற்றை – ஆதித்யனை, காட்டி – கைகாட்டி, சிரீதரன் – “வித்3யாஸஹாயவந்தம் மாமாதி3த்யஸ்தம் ஸநாதநம்” என்று பெரிய பிராட்டியாரோடே கூடி உபாஸ்யனான) ஸ்ரீதரன் இருக்கிற, மூர்த்தி – வடிவு, ஈது – இது, என்னும் – என்னாநிற்கும்; நையும் – (இப்படி சரண்யனுமாய் உபாஸ்யனுமானவனைக் கிட்டி அநுபவிக்கப்பெறாமையாலே)
சிதிலையாகாநிற்கும்; (அந்தசைதில்யத்தாலே), கண்ணீர் – கண்ணீர், மல்க – மல்க, நின்று – நின்று, நாரணன் – (நிருபாதிகஸம்பந்த யுக்தனான) நாராயணன், என்னும் – என்னாநிற்கும்; அன்னே – அம்மே!, என் – என்னுடைய, தெய்வவுருவில் – ஸூரிகள்வடிவுபோலே அப்ராக்ருதமான வடிவை யுடையளாய், சிறு – முக்தமான, மான் – மான்போலே இளையபருவத்தை யுடையளான இவள், செய்கின்றது – செய்கிறது, ஒன்று – ஒன்றும், அறியேன் – அறிகிறிலேன்.
சரண்யஸ்தலத்தை அஞ்சலிபண்ணாநின்றாள், உபாஸ்யஸ்தலத்தைக் காட்டா நின்றாள், ஒன்றிலேநின்றாளாக அறியப்போகிறதில்லையென்று கருத்து.
ஈடு. – இரண்டாம்பாட்டு. `அப்ராக்ருதரூபையான இவள் செய்கிறன ஒன்றும் தெரிகிறதில்லை’ என்கிறாள்.
(பெய்வளைக்கைகளைக்கூப்பி) – அவனைத்தொழுவித்துக்கொள்ளும் பரிகரத்தையுடையவள், தான்தொழாநின்றாள். அவனைத்தொழுவித்துக்கொள்ளப்போலே காணும் கையில் வளையிட்டது. `கடல்வண்ணன்’ (4.4.1) என்றவாறே கழன்ற வளைகளொழியச் சரிந்த வளைகள் பூரித்தனகாணும். கையிலே ப்ரஹ்மாஸ்த்ரமிருக்கப்படும் பாடே இது. வீரக் கழலோடே பட்டுக்கிடப்பாரைப் போலேயிறே இவள்கிடக்கிற கிடை. இங்ஙனே நோவுபடாநிற்கச்செய்தே கடலோசை வாராச் செவிப்படுமே. (பிரான்கிடக்குங் கடலென்னும்) – `திருப்பாற்கடலிலே சாய்ந்தால் நம் ஆர்த்திக்குக் கடுக உதவவொண்ணாது’ என்று, அணித்தாக இக்கடலிலே சாய்ந்தருளின மஹோபகாரக னென்னும். இப்படி ராத்ரியெல்லாம் கடலோசையோடே அலைந்து, விடிந்தவாறே ஆதித்யன்வாராத் தோற்றுமே. (செய்ய இத்யாதி) – உதயகாலத்தில் ஆதித்யனைக் கண்டு, ஸ்ரீதரனுடைய வடிவு இது என்னும். ஸர்வதாஸாத்ருஸ்யம் வேண்டாதே, அல்பஸாத்ருஸ்யம் அமையாநின்றதாயிற்று, இவள் ப்ரமிக்கைக்கு. ப்ரபா4-ப்ரபா4வான்களைக் கண்டவாறே, அவளும் அவனுமாக இருக்கும் இருப்பை நினையாநின்றாள்; “பாஸ்க4ரேணப்ரபா4யதா2*. (நையும்) – மாதாபிதாக்கள் சேரஇருக்க, அவர்கள் ஸந்நிதியிலே பசித்த ப்ரஜைகளைப்போலே –திலையாகாநின்றாள். “புருஷகாரபூதை அருகேயிருக்கப்பெறாத நான் இனி யார் புருஷகாரமாகப் பெற இருக்கிறேன்?” என்று –திலையாகாநின்றாள். (கண்ணீர்மல்கநின்று) – தளர்த்தியின் மிகுதியாலே கண்ணீர் வெள்ளமிடாநின்றது. (நாரணனென்னும்) – `அம்மே’ என்பாரைப்போலே. “ஸ்ரீமந்நாராயணன்” என்றுகூடச் சொல்லமாட்டாதே தளர்ந்து, கண்ணீராலே கைகழுவி, பின்னை நாரணனென்னாநின்றாள். (அன்னே) – “மைத்ரேய” என்னுமாபோலே, தனக்கு ஓர் ஊற்றங்கோல் தேடுகிறாள். (என்தெய்வவுருவில்) – ஸத்ருசபதார்த்தங்களையும் ஸம்பந்திபதார்த்தங்களையும் அநுஸந்திக்க அநுஸந்திக்க, நித்யாநுபவம்பண்ணுகிற நித்யஸூரிகள்வடிவிற் பிறக்கும் புகர் பிறவா நின்றதாயிற்று இவளுக்கு; அவர்களில் இவளுக்கு வாசியுண்டு: – (சிறுமான்) – “புராணா:” என்றும், “விண்ணாட்டவர்மூதுவர்” (திருவிரு.2) என்றுஞ் சொல்லுகிறபடியே பழையராயிருப்பர்களிறே அவர்கள். (செய்கின்றதொன்றறியேனே) – இவள் தொடங்குகிறது எது? தலைக்கட்டுகிறது எது? என்று ஒன்றும் தெரிகிறதில்லை.
மூன்றாம் பாட்டு
அறியும்செந்தீயைத்தழுவி அச்சுதனென்னும்மெய்வேவாள்
எறியும்தண்காற்றைத்தழுவி என்னுடைக்கோவிந்தனென்னும்
வெறிகொள்துழாய்மலர்நாறும் வினையுடையாட்டியேன்பெற்ற
செறிவளைமுன்கைச்சிறுமான் ய்கின்றதென்கண்ணுக்கொன்றே.
ப : அநந்தரம், அவனுடைய ப்ரதாபாநுக்ரஹங்களை நினைத்து, அக்நியையும் வாயுவையும் அவன்தானாக ப்ரதிபத்திபண்ணி மேல்விழாநின்றாள் என்கிறாள்.
அறியும் – சுடுமென்று அறிந்துபோரப்படுவதாய், செம் – சிவந்தநிறத்தையுடைத் தான, தீயை – நெருப்பை, தழுவி – (தேஜோமயவிக்ரஹத்தை உடையவனாகக்கொண்டு மேல்விழுந்து) அணைத்து, அச்சுதன் – என்னைவிடாதவனன்றோ? என்னும் – என்னும்; (இப்படி தாஹகமான அக்நியை மேல்விழச்செய்தே ப்ரஹ்லாத சரீரம்போலே), மெய் – உடம்பு, வேவாள் – வேகிறிலள்; (இவள் ப்ரமித்தாலும் அவனுக்கு அஞ்சுகையாலே தஹியாதிறே); எறியும் – வீசுகிற, தண் – குளிர்ந்த, காற்றை – தென்றலை, தழுவி – (அணைத்து அதுகுளிர்ந்திருக்கையாலே ப்ரணயியான அவனாக நினைத்துத்) தழுவி, என்னுடை – எனக்குப4த்யனான, கோவிந்தன் – கோவிந்தன் (பசுமேய்க்கப்போய் `நான்
க்லேசிக்கிறேன்’ என்று காற்றிற்கடியனாய் வந்ததென்?) என்னும் – என்னும்; (இவள்), வெறிகொள் – பரிமளப்ரசுரமான, துழாய்மலர் – திருத்துழாய், நாறும் – நாறாநிற்கும்; (*ஒர்தண்தென்றல் வந்து – அம்பூந்துழாயின் இன்தேன் புயலுடைநீர்மையினால் தடவிற்று என்புலன்கலனே” என்கிறபடியே இவள் உயலிடம்பெற்று உய்கைக்காகக் காற்றோடே கலந்துபுகுந்தாராகக்கூடும்); வினையுடையாட்டியேன் – இப்படி ப்ரமிக்கக் காணும்படியான) பாபத்தையுடைய நான், பெற்ற – பெற்றவளாய், செறி – (போலிகண்டு அவனாகநினைத்து மேல்விழுகையாலே பூரித்துச்) செறிந்த, வளை – வளையையுடைத்தான, முன்கை – முன்கையையுடையளாய், சிறு – முக்தமான, மான் – மான்போலேயிருக்கிற இவள், செய்கின்றது – செய்கிற வ்யாபாரம், என் கண்ணுக்கு – என் கண்ணுக்கு, ஒன்றே – ஒன்றாக இருக்கிறதில்லை; (பஹுவிதமாயிருக்கிறது.)
நெருப்புச் சுடாமையாலே லோகத்தார்படி அல்லள்; காற்றுச் சுடாமையாலே பிரிந்தார்படி அல்லள்; போலிகண்டு ப்ரமிக்கையாலே கூடினார்படி அல்லள்; திருத்துழாய் மணக்கையாலே கூடாதார்படிஅல்லளென்று கருத்து.
ஈடு. – மூன்றாம்பாட்டு. இவளுடைய அதிப்ரத்ருத்திகளைச் சொல்லப்புக்கு, அவற்றுக்கு எண்ணில்லை என்கிறாள்.
(அறியும்செந்தீயைத் தழுவி) – `ஒன்றால் அவிக்கவொண்ணாது, தாஹகம்’ என்று அறியும் நெருப்பைத் தழுவாநின்றாள். இவள்தானும் ப்ரமத்துக்குமுன்பு அறிந்து பரிஹரித்துப் போருமதாயிற்று; `மந்த்ரௌஷதாதிகளாலே ப்ரதிபத்தசக்திகம்’ என்று தான் தழுவுகிறாளோ? (செந்தீயைத்தழுவி) – “தேஜஸாம்ரா–மூர்ஜிதம்” என்று ஒளியுடைமையையே பார்த்துத் தழுவாநின்றாள். “பொருநீர்க்கடல் தீப்பட்டெங்கும் திகழுமெரியோடு செல்வதொப்ப” (8.9.3) என்னுமாபோலே. இப்போது தனக்காக ஒரு மாணிக்கப்படி சாத்தி அணைக்கைக்காக வந்தான் என்றிருக்கிறாள் இவள். (அச்சுத னென்னும்) – உடைமையை மங்கக்கொடாமைக்காக வந்ததே! என்னும். (மெய்வேவாள்) – இவள்தான் ப்ரமத்தாலே கட்டிக்கொள்ளுகிறாள்: அது பின்னை ஸ்வகார்யம் செய்யாதொழிவானென்? என்னில்; – ‘அச்சுதன்முகத்தாலே’ வந்ததாகையாலே;
*முகாதிந்த்ரஸ்சாக்நிஸ்ச” இறே. (செந்தீயைத் தழுவி அச்சுதனென்னும் மெய்வேவாள்) – இவளுடைய அக்நிஸ்தம்பநமந்த்ரம் இருக்கிறபடி. (மெய்வேவாள்) – “தத்ஸ்ம்ருத்யாஹ்லாதஸம்ஸ்த்தித:” என்கிறபடியே, அவனுடைய ஸ்ம்ருதியாலே நனைந்திருக்கையாலே சுடமாட்டுகிறதில்லை; “பஸ்யாமிபத்மாஸ்தரணாஸ்த்ருதாநிசீதாநி ஸர்வாணிதிசாம் முகாநி” என்றானிறே ப்ரஹ்லாதன். ” சீதோப4வ” என்றாருமில்லை கிடீர், “சீதோப4வ” என்றவள்தானிறே இங்ஙனேசெய்கிறாள். ‘வாயுபுத்ரனை’த் தழுவுகை நாயகனுக்கும் நாயகிக்கும் பணியிறே விஸ்லேஷத்தில்; “பரிஷ்வங்கோஹநூமத:” “வாயோரக்3நி:” இறே. (எறியும் இத்யாதி) – வீசுகிற குளிர்ந்த காற்றைத் தழுவி. இதிறே ஆஸ்சர்யம்; விரஹிணிகளைச் சுடுமதிறே காற்று. இக்காற்றும் அவனுடைய ‘ப்ராணபூதமா’யிருப்பதொன்றிறே; ஆகையாலே, அதுவும் சுட்டதில்லை; “ப்ராணாத்வாயுரஜாயத” இறே. (என்னுடைக்கோவிந்தனென்னும்) – “நஜீவேயம் க்ஷணமபி” என்கிறபடியே பிரிவில் பொறுக்கவல்லனோ? அவனுண்மை பரார்த்த மாயன்றோ இருப்பது என்றுசொல்லாநிற்கும். (என்னுடைக்கோவிந்தனென்னும்) – கன்றுமேய்த்த வடிவோடே என் ஆர்த்திதீர அணைக்கவந்தான் என்னும். லௌகிகர்படியுமன்று, விரஹிணிகள் படியுமன்று; லௌகிகர்படியாகில் நெருப்புச் சுடவேணும்; விரஹிணிகள் படியாகில் காற்றுச் சுடவேணும்; இரண்டும் கண்டிலோமென்கை.
(வெறிகொள்துழாய்மலர்நாறும்) – “கோவைவாயா*(4.3.1)ளில் கலவியால் வந்த பரிமளம் பத்தெட்டுக்குளிக்கும் நிற்குமிறே, அத்தாலேயாதல்; வந்தேறி கழிந்தால் ஆத்மஸ்வரூபம் பகவதர்ஹமாயிறே இருப்பது, அத்தாலேயாதல். அன்றிக்கே, காற்றோடே கலந்துவந்து புகுந்து அணைந்தானென்று காரியத்தைக்கொண்டு கல்பித்தல். “அன்றிமற்றோருபாயமென் இவளந்தண் துழாய் கமழ்தல்” (8.9.10) என்னக்கடவதிறே. (வினையுடையாட்டியேன்பெற்ற) – இவள் இத்தனை அவகாஹித்தது நான் பண்ணின பாபமிறே. அநேகஜந்மஸஞ்சிதமான புண்யபலத்தைப் பாபபலமாகச் சொல்லுகிறாளிறே, இப்போதையிழவைப் பற்ற. பிரிவிலும் வடிவு திருத்துழாய் நாறும்படி அவகாஹித்து, பின்பு போலிகண்டு ப்ரமிக்கும்படி ப்ரமமேயாய் விடுகைக்கு அடி, பாபத்தைப்பண்ணின என்வயிற்றிற் பிறப்பிறே. பகவத்விஷயத்தில் அவகாஹித்தவர்கள் பெற்றவர்களுக்கு ஆகார்களிறே; “அன்னையுமத்தனு மென்றபடியோமுக்கிரங்கிற்றிலள்” (திருமொழி 3.7.7) என்னக்கடவதிறே. (செறிவளை முன்கைச்சிறுமான்) – இதுகிடீர் இருக்கத்தகும்படி! இவள் வளைத்தழும்பு அவனுடம்பிலே காண்கையன்றிக்கே, இவளுடம்பிலே அவனுடம்பில் திருத்துழாய் காணுமத்தனையாவதே. (சிறுமான்) – முன்கையிலே செறிந்த வளையையுடையவள். முன்பிருக்கும்படியாதல், பின்பும் அப்படியேயிருக்கத் தகுமவ ளென்னுதல். (சிறுமான்) – இதுக்கெல்லாம் ஆஸ்ரயம் எங்குத்து? அதிமுக்தை. (செய்கின்ற தென்கண்ணுக்கொன்றே) – ஒன்றன்று, அநேகமென்கிறாள். நெருப்பைக் கட்டிக்கொள்வது, காற்றைத் தழுவுவது, திருத்துழாய் நாறுவதாகாநின்றாள். ‘லௌகிகை’ என்று நிஸ்சயிக்கவொண்கிறதில்லை, நெருப்புச் சுடாமையாலே; ‘ஸம்ஸ்லிஷ்டை’ என்னவொண்ணாது, போலியான காற்றைத் தழுவுகையாலே; ‘விரஹிணி’ என்னவொண்ணாது, திருத்துழாய் நாறுகையாலே; ஆகையால், ஒன்றிலே வைக்கப்பட்டிருக்கிறதோ இவள்படி?
நான்காம்பாட்டு
ஒன்றியதிங்களைக்காட்டி ஒளிமணிவண்ணனேயென்னும்
நின்றகுன்றத்தினைநோக்கி நெடுமாலே! வாவென்றுகூவும்
நன்றுபெய்யும்மழைகாணில் நாரணன்வந்தானென்றுஆலும்
என்றினமையல்கள்செய்தார் என்னுடைக்கோமளத்தையே.
ப:– அநந்தரம், ‘உஜ்ஜ்வலமாய் உத்துங்கமாய் ஸ்ரமஹரமான வடிவையுடைவனை அநுஸந்தித்து, சந்த்ரனையும் மலையையும் மேகத்தையும் கண்டு அவனாக ப்ரமியாநின்றாள்’ என்கிறாள்.
ஒன்றிய – (எல்லாக்கலைகளாலும்) ஒன்றப்பட்ட, திங்களை – சந்த்ரனை, காட்டி – (அருகுநின்றார்க்குக்) காட்டி, (*ஸுத்3த4ஸ்ப2டிகஸங்காசம்” என்கிறபடியே) ஒளி – ஒளியையுடைத்தான, மணி – ஸ்படிகமணி போன்ற, வண்ணனே – வடிவையுடையவனே! என்னும் – என்னாநிற்கும்; நின்ற – (அந்தச்சந்த்ரபதத்தளவும் உயர்ந்து முன்னே) நிற்கிற, குன்றத்தினை – மலையை, நோக்கி – பார்த்து, நெடுமாலே – (உன்னுடைய வடிவுபோலே) நெடிதான ஸ்நேஹத்தையுடையவனே! வா – (ஸாபராதரைப்போலே தேங்கிநிற்கிறதென்? கேளாமற்போன நீ யாரைக்கேட்டுப் புகுருகைக்கு நிற்கிறது?) வாராய்; என்று – என்று, கூவும் – (‘தன்ப்ரணயம்’ தோன்ற) அழையாநிற்கும்; நன்று – (உறாவின பயிர் கொந்தளிக்கும்படி) நன்றாக, பெய்யும் – வர்ஷிக்கும், மழை – மேகத்தை, காணில் – காணில், நாரணன் – நாரசப்தவாச்யமான அப்புக்களையுடைய நாராயணன், வந்தான் – (நம் உறாவுதல் தீர) வந்தான், என்று – என்று, ஆலும் – (‘மேகஸந்நிதியில் மயில் ஆலிக்குமாபோலே ஹர்ஷசப்தத்துடன்) ஸஸம்ப்ரமந்ருத்தம் பண்ணாநிற்கும்; என்னுடை – என்னுடைய, கோமளத்தை – ம்ருதுஸ்வபாவையான பெண்பிள்ளையை, என்று – என்றுகாண், இன – இப்படிப்பட்ட, மையல்கள் – ப்ரமங்களை, செய்தார் – பண்ணினார்? இவ்வவஸ்தையிலே இதுக்கெல்லாம் கலமுண்டோ? என்று கருத்து.
ஈடு:– நாலாம்பாட்டில், ‘வ்யஸநஸஹையல்லாத இவளை இப்படி நோவுபடுத்துவதே!’ என்கிறாள்.
(ஒன்றிய திங்களைக் காட்டி) – எல்லாக்கலைகளும் நிரம்பின சந்த்ரனைக் காட்டி அருகு நின்றவர்களுக்கு. (ஒளிமணிவண்ணனேயென்னும்) – ஒளிமணிவண்ணனே! என்று ஸம்போதியாநின்றாள். புகரையுடைத்தான ரத்நம்போலே குளிர்ந்த வடிவோடே அணைக்கவந்ததே யென்னும். இவன் ஔஜ்ஜ்வல்யத்தையுடைய ஸர்வேஸ்வரனென்று அவர்களுக்குச் சொல்லாநிற்குமென்றுமாம். ‘இம்மழுங்கல்சந்த்ரன் அவனாகையாவ தென்?’ என்பர்களே. (ஒளிமணி வண்ணனே) – ஸுநிஸ்சிதம், இவன் அவனேயென்னா நின்றாள். (நின்றகுன்றத்தினை நோக்கி) – இவ்வளவிலே ஏதேனுமொரு மலை வாராக் கண்ணுக்குத் தோற்றுமே; அத்தைப் பார்த்து. (நெடுமாலே வாவென்று கூவும்) – வடிவில் பெருமையைக் கண்டவாறே, ‘ஜகத்தையடையத் தன் திருவடிகளின் கீழே இட்டுக்கொள்ளும்படி பெரிய வடிவையுடைய திருவுலகளந்தருளின ஸர்வேஸ்வரன்’ என்று நினைத்து, ‘இங்ஙனே வாராயோ? என்று அழைக்கும்’ என்று பிள்ளான் பணிக்கும்; அங்ஙனன்றிக்கே, சீயர் “மலை பேரமாட்டாதே பலகால் வர்ஷிக்கையாலே அழுக்கற்றுப் பசுகுபசுகு என்றிருக்குமே; அத்தைக் கண்டு, ‘அவன் ஸாபராதனாகையாலே லஜ்ஜித்து, வந்து கிட்ட மாட்டாமையாலே பச்சைப்படாத்தையிட்டு முட்டாக்கிட்டு நிற்கிறான்’ என்று, ‘ஆனைக்கூட்டத்துக்குக் கதவிடிலன்றோ உமக்கு லஜ்ஜிக்கவேண்டுவது? இங்ஙனே போரீர்’ என்னாநின்றாள்” என்று. (நன்று இத்யாதி) – கெட்டுமழையன்றிக்கே ப்ராப்தகாலத்தில் வர்ஷத்தைக் கண்டவாறே, நிர்ஹேதுகமாக ஸத்தைநோக்குமவன் வந்தானென்று, மயில்கள் வர்ஷாகாலத்திலே ஸஸம்ப்ரம ந்ருத்தம் பண்ணுமாபோலே ஸம்ப்ரமியாநின்றாள். (என்று) – இப்படிகளைச் சொல்ல. (இன மையல்கள் செய்தார்) – இப்படி பிச்சுக்களைப் பண்ணினார். இப்படி பிச்சேற்றிற்று என்று? என்றுமாம். இவள் எனக்கு ப4த்யையாகை தவிர்ந்தபின்பு இதுக்கெல்லாம் காலமுண்டோ? என்கிறாள். “என்சொல்லுமென்வசமுமல்லள்” என்றது எப்போது? இப்படி இவளைப் பிச்சேற்றிற்று எப்போது? (என்னுடைக் கோமளத்தையே) – அதுதான் செய்யும்போது ஆஸ்ரயம் வேண்டாவோ? கலவியும் கூடப் பொறாத ஸுகுமாரியைப் பிரிவு பொறுக்கப் பண்ணுவதே!
ஐந்தாம் பாட்டு
கோமளவான்கன்றைப்புல்கிக் கோவிந்தன்மேய்த்தனவென்னும்
போமிளநாகத்தின்பின்போய் அவன்கிடக்கைஈதென்னும்
ஆமளவொன்றுமறியேன் அருவினையாட்டியேன்பெற்ற
கோமளவல்லியைமாயோன் மால்செய்துசெய்கின்றகூத்தே.
ப:- அநந்தரம், ‘அவனுடைய ரக்ஷணப்ரத்ருத்திகளை அநுஸந்தித்து, கன்றுகளையும் ஸர்ப்பத்தையும் கண்டு, அவன் ரக்ஷித்தவை யென்றும், ரக்ஷணார்த்தமாக வந்து கிடக்கும் படுக்கையென்றும் சொல்லாநின்றாள்’ என்கிறாள்.
கோமளம் – இளையவாய், வான் – பெரியவான, கன்றை – கன்றுகளை, புல்கி – தழுவி, கோவிந்தன் – (பசுமேய்க்கமுடிசூடின) கோவிந்தன், மேய்த்தன – (இனிது உகந்து) மேய்த்தன, என்னும் – என்னாநிற்கும்; போம் – (ஸ்வைரஸஞ்சாரமாகப்) போகாநிற்கிற, இளம் நாகத்தின் – இளையதான நாகத்தின், பின் – பின்னே, போய் – (‘இது போனவிடத்திலே அவனையும் காணலாம்’ என்று நினைத்துப்) போய், அவன் கிடக்கை – அவன் கிடக்கிற படுக்கை, ஈது – இது, என்னும் – என்னாநிற்கும்; அரு – (அநுபவித்துமுடிக்க) அரிய, வினையாட்டியேன் – பாபத்தையுடையேனான நான், பெற்ற – (இப்படி ஈடுபடுகைக்கு உறுப்பாகப்) பெற்ற, கோமளம் – ம்ருது ஸ்வபா4வையாய், வல்லியை – (கொள்கொம்பில்லாத) கொடிபோலே தரைப்படுகிற இவளை, மாயோன் – ஆஸ்சர்யகுணசேஷ்டிதங்களையுடையவன், மால்செய்து – பிச்சேற்றி, செய்கின்ற – பண்ணுகிற, கூத்து – கூத்தாட்டு, ஆமளவு – எத்வளவாமென்று, ஒன்றும் – ஒன்றும், அறியேன் – அறிகிறிலேன். இவள் பாம்பின்வாயிலே அகப்பட்டு முடியுமாகில் அவனும் அவன் விபூதியுங்கூட முடியுமிறே யென்று கருத்து. கிடக்கை – படுக்கை, ‘ஆண்கன்றை’ என்று பாடமாகவுமாம்.
ஈடு:- அஞ்சாம்பாட்டு. ‘இவளுக்கு இவ்வவஸாதம் எவ்வளவாய் முடியக்கடவது? என்று அறிகிறிலேன்’ என்கிறாள்.
(கோமளவான்கன்றைப்புல்கி) – பருவத்தால் இளையதாய் வடிவால் பெருத்திருக்கிற கன்றுகளைத் தழுவி யென்னுதல், மாணிக்கம்போலே அறவிலக்ஷணமாய்ப் பெருத்திருக்கிற கன்றுகளைப் புல்கி யென்னுதல். கோமளமென்று – மாணிக்கத்துக்கும், இளமைக்கும் பேர். ஆக, இப்படி தர்சநீயமுமாய் ஸுகுமாரமுமான கன்றுகளைத் தழுவி. க்ருஷ்ணன் பருவம்போலேயாயிற்று இவற்றின் பருவம் இருக்கும்படி; கிட்டினார்க்கு ஸாம்யாபத்தியிறே ப2லம். (கோவிந்தன் மேய்த்தனவென்னும்) “வத்ஸமத்4யக3தம் பா3லம்” என்று, “கன்றுமேய்த்தினிதுகந்தகாளாய்” (திருநெடு.16) என்கிறபடியே, இவற்றினுடைய ரக்ஷணத்துக்கு முடிசூடினவன் உகந்து ரக்ஷித்தவை யென்னும். ‘ப்ராப்தனானவன் உணர்ந்துநோக்கினவை’ என்று தோற்றுகிறதாயிற்று, இவற்றின்வடிவில் பௌஷ்கல்யம். கன்றின் கழுத்தைக் கட்டிக்கொண்டவாறே அது துள்ளிப் போகாநிற்குமே; அவன்பரிகரமாயேயிருந்ததென்னும். அவ்வளவிலே ஒரு ஸர்ப்பம் போகாநிற்குமே; அதன்பின்னே போகாநிற்கும். இவளுடைய போ4க3ப்ராவண்யம் இருக்கும்படி: (இளநாகம்) – முக்தர் பஞ்சவிம்சதிவார்ஷிகராயிருப்பர்களிறே, நிரந்தரபகவதநுபவத்தாலே; அவ்விளமை இதுவென்றிருக்கும். ‘கன்றைப்புல்கினாள்’ என்றது, ‘இதின்பின்னே போனாள்’ என்னாநின்றது; இத்தனை உணர்த்தி உண்டோ? என்னில் – அது ஓரிடத்தே நிற்கையாலே கழுத்தைக் கட்டிக்கொள்ளும்; இது ஓடாநிற்குமே அம்புக்கு எட்டாதபடி; ஆகையாலே, பின்னே போகாநிற்கும். ‘அதுபுக்கவிடத்திலே அவன்வரவு தப்பாது’ என்று காண்கைக்காக அதின்பின்னே போகாநிற்கும். அவன்தானும் பரம‘போகி’யா யிருப்பா னொருவனிறே. (அவன்கிடக்கை யீதென்னும்) – அது ஒரு தூற்றிலே போய்ப்புகுமே; அத்தை நோக்கிக் கொண்டு கிடக்கும், அவன் வந்தால் காண்கைக்கு. (ஆமளவொன்றுமறியேன்) – ஜகதுபஸம்ஹாரம் பிறக்கப் புகுகிறதோ? அறிகிறிலேன். ‘ஸர்ப்பம்’ என்று மீளமாட்டுகிறிலள், இது என்னாய் விளையக்கடவது? என்கிறாள். பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற்போலே (திருமொழி 11.8.3) யிறே திருத்தாயார்க்கு இருக்கிறது. இவளை இழக்கவே ஜகத்காரணமானவனைக் கிடையாது; காரணம் இல்லாமையாலே கார்யம் தன்னடையே இல்லையாமிறே. (அருவினையாட்டியேன்பெற்ற) – இவளுக்கு இங்ஙனே ஒரு புத்தி பிறந்து படுகிறது நான் பண்ணினபாபமிறே. அன்றியே, “நெடுங்காலமும் கண்ணனீண் மலர்ப்பாதம் பரவிப்பெற்ற” என்கிறபடியே செய்து முடிக்கவொண்ணாத புண்ணியங்களைப் பண்ணிப்பெற்ற ஸுகுமாரையான இவளையென்றுமாம். (பெற்ற) – “பிறந்திட்டாள்” என்கிறபடியே, அக்கரையளாய் இவள் தனக்கு அலப்யலாபமா யிருக்கிறபடி. (கோமளவல்லியை) – கேவலம் வல்லியல்ல, கோமளவல்லியாயிற்று. உபக்நத்தோடே சேர்க்கவேண்டும் பருவம்; பிள்ளைப்பருவம். (மாயோன்) – தன்னைக்கண்டால் தந்தாமையறியாதபடி பண்ணவல்ல ப்ரணயித்வகுணத்தை யுடையவன். (மால்செய்து) – பிச்சேற்றி. (செய்கின்ற கூத்து) – அடிக்கிற ஆட்டம். ‘ஆமளவு ஒன்றுமறியேன்’ என்று அந்வயம்.
ஆறாம் பாட்டு
கூத்தர்குடமெடுத்தாடில் கோவிந்தனாமெனாஓடும்
வாய்த்தகுழலோசைகேட்கில் மாயவனென்றுமையாக்கும்
ஆய்ச்சியர்வெண்ணெய்கள்காணில்அவனுண்டவெண்ணெய் ஈதென்னும்
பேய்ச்சிமுலைசுவைத்தார்க்கு என்பெண்கொடியேறியபித்தே!
ப:- அநந்தரம், ‘அவனுடைய மநோஹரசேஷ்டிதங்களை அநுஸந்தித்து, அவற்றுக்குப் போலிகண்டு ப்ரமியாநின்றாள்’ என்கிறாள்.
கூத்தர் – கூத்தாடுமவர்கள், குடம் எடுத்து – குடம் எடுத்து, ஆடில் – ஆடினார்களாகில், கோவிந்தன் – (கோஸம்ருத்தியையுடையனாகையாலே செருக்குமிக்குக் கூத்தாடுகையே ஸ்வபா4வமாகவுடைய) க்ருஷ்ணன், ஆம் – ஆம், எனா – என்று, ஓடும் – (காண்கைக்கு) ஓடாநிற்கும்; வாய்த்த – நன்றாய் நெஞ்சைவருத்தும், குழலோசை – குழலோசை, கேட்கில் – கேட்டாளாகில், மாயவன் – (இடைப்பெண்களுடைய ப்ரணயரோஷம் ஆறும்படி தன்தாழ்ச்சிவைத்தூதும் குழலோசையையுடைய ஆஸ்சர்யபூதனான) க்ருஷ்ணன், என்று – என்று, மையாக்கும் – மோஹியாநிற்கும்; ஆய்ச்சியர் – இடைச்சிகள்கையிலே, வெண்ணெய்கள் – வெண்ணெயை, காணில் – கண்டாளாகில், அவன் உண்ட – அவன் அமுதுசெய்த, வெண்ணெய் – வெண்ணெயோடு ஸஜாதீயம், ஈது – இது, என்னும் – என்னாநிற்கும், பேய்ச்சி – பூதநையுடைய, முலை – முலையை, சுவைத்தார்க்கு – ப்ராணனோடேசுவைத்துத் தம்மை லோகத்துக்குக்கொடுத்த மஹோபகாரகர்க்கு, கொடி – கொடிபோலே மெல்லியவடிவையுடைய, என் பெண் – என் பெண் பிள்ளை, ஏறிய – தலைமண்டையிடும்படிகொண்ட, பித்து – பிச்சு இருந்தபடி.
ஈடு:- ஆறாம் பாட்டு. தன்மகள் பிச்சுக்கு நிதாநத்தையும் அதடியாகவந்த பிச்சுத் தன்னையும் சொல்லுகிறாள்.
(கூத்தர் குடமெடுத்தாடில்) – இவள்ப்ரக்ருதி அறிந்திருக்கையாலே ‘இவளைக்கிடையாது’ என்று கூத்துவிலக்கிப்போலே காணும் கிடப்பது. இடையர் செருக்குக்குப் போக்குவிட்டாடுவதொரு கூத்தாயிற்று – குடக்கூத்தாகிறது. விளைவதறியாதே வழிப்போக்கர் புகுந்து ஆடாநிற்பர்களே, அத்தைக்கண்டு, (கோவிந்தனாமெனா ஓடும்) – இக்குடக்கூத்தாடும்போது கோஸம்ருத்தியையுடைய க்ருஷ்ணனாகவேணு மென்று காண ஓடும். இரந்துதிரிகிற இவர்கள் அவனா கையாவதென்? என்பர்களே; (ஆமெனா ஓடும்) அவன் க்ருஷ்ணனேயென்று காண ஓடும். (வாய்த்தகுழலோசை கேட்கில்) – ‘விசேஷஜ்ஞர், அவிசேஷஜ்ஞர்’ என்று வாசியின்றிக்கே எல்லாரையுமொக்க ஈடுபடுத்தும், குழலின் நல்லிசை வந்து செவிப்படில். (மாயவனென்று மையாக்கும்) *”நுடங்குகேள்வியிசை” (3.4.6) என்னக்கடவதிறே அவன்தன்னை. அதவா, ‘பகலெல்லாம் பசுக்களின்பின்னே போனேன், பித்ராதிகளுக்குப் பரதந்த்ரனானேன், பிரிந்தேன், ஆற்றேன், “ஒரு பகலாயிரமூழி” (10.3.1) என்றாற்போலே சொல்லி ஸாந்த்வநம்பண்ணிக் கொண்டுவந்து தோற்றுமவனென்று, அவன் குழலிலே வைத்துச்சொல்லும் தாழ்ந்தசொற்களை நினையா மோஹிக்கும். (ஆய்ச்சியர் வெண்ணெய்கள்காணில்) – ‘ப்ராஹ்மணிகள் ஸ்பர்சித்த வெண்ணெய் இது’ என்றால் கொள்ளாள்; முடைநாற்றம் மிக்க வெண்ணெய்கள் காணில்; (அவனுண்ட வெண்ணெ யீதென்னும்) – களவுகாணப்புக்கு வாயதுகையதாக அகப்பட்டபோது சேஷித்த வெண்ணெயோடே ஸஜாதீயமான வெண்ணெய் ஈதென்னும். இவள் இப்படி கலங்குகைக்கு நிதாநமென்? என்னில், (பேய்ச்சிமுலைசுவைத்தார்க்கு) – அவன் முன்பே ஒரு உபகாரத்தைப் பண்ணிவைத்தான்; அதிலே தோற்றவன்று தொடங்கி இவள் பிச்சேறத் தொடங்கினாள். தாயுங்கூட உதவாத ஸமயத்திலே பூதநை வந்து முலைகொடுக்க, அத்வளவிலே உணர்த்தியுண்டாய் அவளை முடித்துத் தன்னை நோக்கித் தந்தானே; அவ்வுபகாரத்திலே தோற்று அன்று தொடங்கி இவள் பிச்சேறினாள். “பூத்தருபுணர்ச்சி, புனல்தருபுணர்ச்சி, களிறுதருபுணர்ச்சி” என்றிவை புணர்ச்சிக்கு ஹேது. அதாவது – எட்டாதகொம்பிலே நின்றதொரு பூவை ஆசைப்பட்டால் இவன் தன்னைப்பேணாதே இவளாசையை முடித்துக்கொடுக்கை, ‘இவன் தன்னைப்பேணாதே நம்நினைவை முடித்தானே’ என்று அதுக்காகத் தன்னைக்கொடுக்கை – பூத்தருபுணர்ச்சி. ஆற்றிலேயழுந்துகிற இவளைத் தான்புக்கு ஏறவிட்டதுக்காகத் தன்னைக்கொடுக்கை – புனல்தருபுணர்ச்சி. அசிந்திதமாக ஆனையின் கையிலே அகப்பட்டவளை மீட்டுக்கொடுத்ததுக்காகத் தன்னைக்கொடுக்கை – களிறுதருபுணர்ச்சி. இவையொன்றுமல்ல; அவன் தன்னைநோக்கினதுக்கு இவள் தன்னை எழுதிக்கொடுக்கிறாள். (என்பெண்கொடி) – அவர்களில் வ்யாவ்ருத்தி, நிருபாதிக ஸ்த்ரீத்வத்தையுடையவள். (ஏறியபித்து) – இவள்கொண்ட பிச்சு.
ஏழாம் பாட்டு
ஏறியபித்தினோடு எல்லாவுலகும்கண்ணன்படைப்பென்னும்
நீறுசெவ்வேயிடக்காணில் நெடுமாலடியாரென்றோடும்
நாறுதுழாய்மலர்காணில் நாரணன்கண்ணிஈதென்னும்
தேறியும்தேறாதும்மாயோன் திறத்தனளேஇத்திருவே.
ப:– அநந்தரம், ‘அவனுடைய பரத்வ சிஹ்நங்களை அநுஸந்தித்துக் கலங்கினபோதோடு தேறினபோதோடு வாசியற அவன்படிகளிலே உள்ளாயிரா நின்றாள்’ என்கிறாள்.
ஏறிய – மிகைத்த, பித்தினோடு – ப்ரமத்தோடே கூடியிருக்கச்செய்தே, (வேதாந்த வித்துக்கள் சொல்லுமாபோலே “க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்தி:” என்று), எல்லாவுலகும் – ஸர்வலோகமும், கண்ணன் – க்ருஷ்ணனுடைய, படைப்பு – ஸ்ருஷ்டி, என்னும் – என்னாநிற்கும்; நீறு – பஸ்மத்தைக் கொண்டு, செவ்வே – செவ்விதாக, இட – இட, காணில் – கண்டாளாகில், (‘த்ரவ்யம் இன்னது’ என்று அறியாதே ஊர்த்வபுண்ட்ரமே அடையாளமாக), நெடுமால் – (ஆஸ்ரிதர்பக்கல்) அத்யந்தத்யாமுக்தனான ஸர்வேஸ்வரனுடைய, அடியார் – அடியார், என்று – என்று ப்ரமித்து, ஓடும் – (அவர்களிருந்தவிடத்தை நோக்கி) ஓடா நிற்கும்; நாறு – பரிமளோத்தரமான, துழாய் மலர் – திருத்துழாயின் பூந்தாரை, காணில் – காணில், நாரணன் – ஸர்வ ஸ்வாமியான நாராயணனுடைய, கண்ணி – மாலை, ஈது – இது, என்னும் – என்னாநிற்கும்; (இப்படி), தேறியும் – தேறினவளவிலும், தேறாதும் – கலங்கினவளவிலும், இத்திரு – “நாத்யார்த2ம் க்ஷுப்4யதே” என்றும் “தத்தஸ்யஸத்3ருசம்ப4வேத்” என்றும் என்னும்படி மிகவும் கலங்காத அந்தத் திருவைப்போலன்றியே பிரிந்ததசையில் ஸத்ருச வஸ்துக்களையும் ஸம்பந்திபதார்த்தங்களையும் கண்டு கலங்கும்) இத்திருவானவள், மாயோன் – ஆஸ்சர்யமான பரத்வசிஹ்நங்களையுடையவன், திறத்தனள் – திறத்திலே ஆகாநின்றாள்.
அநபாயிநியான ஸம்பத்தாயிருக்கை இருவர்க்கும் ஒக்குமிறே.
ஈடு:- ஏழாம்பாட்டு. தேறினபோதோடு தேறாதபோதோடு வாசியற எப்போதும் அவன் திறமல்லது அறியாளே என்கிறாள்.
(ஏறிய இத்யாதி) – இவள் பிச்சேறிச்சொல்லும் வார்த்தை கேட்கைக்கு, மைத்ரேயாதிகளைப்போலே. தொடர்ந்துதிரியவேண்டிக்காணும் திருத்தாயார்க்கு இருக்கிறது. “விஷ்ணோஸ்ஸகாஶாது3த்3பூ4தமஜக3த்” என்னாநின்றாள். ப்ராஹ்மணர் பித்தேறினாலும் ஓத்துச்சொல்லுமாபோலே இவ்விஷயத்தில் வாஸநை யிருக்கிறபடி. “க்ருஷ்ணஏவஹிலோகாநாமுத்பத்திரபிசாப்யய:” என்கிற இதில் ஒருகாலும் கலக்கமில்லை; இவள் பிச்சேறியிருக்கிற தசையிலே, இஜ்ஜகத்தெல்லாம் க்ருஷ்ணனாலே ஸ்ருஷ்டமாயிற்றுஎன்னும். (நீறுசெதவ்வேயிடக்காணில்) – ப்ராயஸ்சித்த ப்ரகரணங்களிலே ப்ரஹ்மஹத்யாதி பாபங்களைப் பண்ணினார்க்கு ப்ராயஸ்சித்தமாக விதித்த த்ரவ்யத்தைத் தாமஸபுருஷர்கள் தரித்துப்போந்தார்கள்; அந்த த்ரவ்யத்தைப் பாராதே செவ்வைமாத்ரத்தைக் கொண்டு ப்ரமிக்குமாயிற்று இவள்; அது பொடிபட்டுக்கிடக்கிறதென்று அறிகிறிலள். அவர்கள் செவ்வேயிடுவர்களோ? என்னில், – அதுவுமன்றிக்கே (இதுவுமன்றிக்கே) மசகப்ராயராயிருப்பார்கள் தரிப்பர்களிறே. அல்பஸாம்யம் அமையுமாயிற்று இவளுக்கு ப்ரமிக்கைக்கு. இந்த ஊர்த்வதாமாத்ரத்தையே கொண்டு “உத்3த்4ருதாஸிவராஹேண” இத்யாதியிற் சொல்லுகிறபடியே, என்றுமொக்க பகவத்ஸம்பந்தம் மாறாத தேசத்தில் மண்ணைக்கொண்டு தரித்துப்போருமவர்களாகக் கொண்டு ப்ரமித்து, இவர்கள் ஸர்வேஸ்வரனடியார் என்று ஓடாநிற்கும். அதஸ்மிந்தத்புத்தி இருக்கிறபடி. (நாறுதுழாய்மலர்காணில்) – அதல்லாதத்தை அதாக ப்ரமிக்கிறவள் அதுதானானவற்றைக் கண்டால் விடாளிறே. அவன் சிரஸாவஹித்து அடியார்க்குக்கொடுக்குமதிறே அதுதான். அதாவது – ஸ்ரீசடகோபனுக்குச் சாத்துகையிறே. ‘சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாயிறே’ (1.9.7). பரிமளத்தையுடைத்தான திருத்துழாயைக் காணில், உபயவிபூதியுக்தனான ஸர்வேஸ்வரன் ஐஸ்வர்யத்துக்கு இட்ட தனிமாலை ஈதென்னும். (தேறியும் இத்யாதி) – ‘தேறியும்’ என்கிறது – ‘துழாய்மலர்காணில்’ என்றத்தை; ‘தேறாதும்’ என்கிறது – ‘நீறு செவ்வேயிடக்காணில்’ என்றத்தை. அன்றிக்கே, “கோவைவாயா*(4.3.1)ளிற்படியும், இத்திருவாய்மொழியிற்படியுமாகவுமாம். (மாயோன் இத்யாதி) – பிறந்த ஜ்ஞாநம் கலக்கத்துக்கு உடலாம்படி பண்ணவல்ல ஆஸ்சர்யபூதன். அவனிடையாட்டத்திலாள் இத்திரு. (இத்திரு) – அநபாயிநியான அவளோடொக்க விகல்பிக்கலாம்படிகாணும் இவள்படிகள்தான். அவளுக்கு அவன் உத்தேஸ்யன், இருவரும் உத்தேஸ்யரான சேர்த்தியுண்டு இவளுக்கு.
எட்டாம் பாட்டு
திருவுடைமன்னரைக்காணில்திருமாலைக்கண்டேனேயென்னும்
உருவுடைவண்ணங்கள்காணில் உலகளந்தானென்றுதுள்ளும்
கருவுடைத்தேவில்களெல்லாம் கடல்வண்ணன்கோயிலேயென்னும்
வெருவிலும்வீழ்விலு மோவாக் கண்ணன்கழல்கள்விரும்புமே.
ப:– அநந்தரம், அவனுடைய ஐஸ்வர்யாபிரூப்யாதரணீயத்வங்களை அநுஸந்தித்து, போலிகண்டாலும் ஸர்வாவஸ்தையிலும் அவனையே விரும்பாநின்றாள் என்கிறாள்.
திரு – பூர்ணமான ஐஸ்வர்யத்தை, உடை – உடைய, மன்னரை – ராஜாக்களை, காணில் – காணில், திருமாலை – (பரிபூர்ணவிபூதிகனான) ஸ்ரிய:பதியை, கண்டேனே – கண்டேனே, என்னும் – என்னா நிற்கும்; (கடலும் காயாவும் கருவிளையும் தொடக்கமான), உரு – விலக்ஷணரூபங்களை, உடை – உடையவாயுள்ள, வண்ணங்கள் – பதார்த்தங்களை, காணில் – காணில், உலகளந்தான் – திருவுலகளந்தருளினபோது ஒருநாளே வளர்ந்தருளின செவ்வியையுடைய ரூபசோபையையுடையவன், என்று – என்று, துள்ளும் – ஸம்ப்ரமித்து ஆடாநிற்கும்; கரு – ப்ரதிமாகர்ப்பத்தை, உடை – உடைத்தான, தேவில்கள் எல்லாம் – தேவக்ருஹங்கள் எல்லாம், (ஆஸ்ரிதர் ஆதரிக்கைக்காக), கடல் வண்ணன் – கடல்போலே தர்சநீயமான வடிவையுடைய ஸர்வேஸ்வரன், கோயிலே – (ஸந்நிதி பண்ணின) கோயில்களே, என்னும் – என்னாநிற்கும்; வெருவிலும் – (பந்துஸந்நிதியால்) அஞ்சினபோதோடு, வீழ்விலும் – ஆர்த்தியாலே மோஹித்த போதோடு வாசியற, ஓவாள் – இடைவிடாதாளாய்க்கொண்டு, கண்ணன் – க்ருஷ்ணன், கழல்கள் – திருவடிகளை, விரும்பும் – ஆதரியாநிற்கும்.
வெருவுதல் – அஞ்சுதல், வீழ்தல் – மோஹித்தல்.
ஈடு:– எட்டாம்பாட்டில், ‘அத்யந்த துர்த்தசை வர்த்தியாநின்றாலும் இவள் ததேக பரையா யிருக்கும்’ என்கிறாள்.
(திருவுடைமன்னரைக்காணில்) – குறைவற்ற ஐஸ்வர்யங்களையுடையரான ராஜாக்களைக் காணில், ஸ்ரிய:பதியை ஒருபடி காணப்பெற்றேனே யென்னும். நாதமுநிகள், ராஜா ஸாமந்தன் தலையிலே அடியையிட்டு ஆனைக்கழுத்திலே புக்க படியைக் கண்டு, ‘ஸர்வேஸ்வரன் ப்ரஹ்மாதிகள் தலையிலே அடியிட்டுப் பெரியதிருவடியை மேற்கொள்ளும்படி இது வாகாதே’ என்னா மோஹித்தா ரென்று ப்ரஸித்தமிறே; ராஜா ஸபரிகரமாக கங்கைகொண்ட சோழபுரத்தேறப் போகச்செய்தே, பெரியமுதலியார் மன்னனார் திருவடிகளிலே ஸேவித்திருக்கச் செய்தே பெண்பிள்ளை வந்து ‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாக வந்து புகுந்தார்கள்’ என்றவாறே, ‘பெருமாளும் இளையபெருமாளும் பிராட்டியும் ஐந்த்ரவ்யாகரண பண்டிதனும்’ என்று புத்திபண்ணிப் பின்தொடர்ந்துபோய், முன்னேபோய், ‘போகிறார்கள், போகிறார்கள்’ என்னக் கேட்டுக் கீழைவாசலிலே சென்றவாறே, ‘இப்படிபோகிறவர்களைக் கண்டிகோளோ?’ என்று வாசலிலவர்களைக் கேட்க, அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே ஹேதுவாகத் திருநாட்டுக்கு எழுந்தருளினாரிறே. (உருவுடைவண்ணங்கள்காணில்) – நீலம் குவளை காயா உருப்பெற எழுதினசித்ரம் இவற்றைக் காணில், நிறம்மாத்ரத்தையும் மாம்ஸசக்ஷுஸ்ஸுக்கு விஷயமான ஸௌலப்யத்தையுங் கொண்டு, குணாகுண நிரூபணம்பண்ணாதே எல்லார்தலையிலும் திருவடிகளை வைத்தவனென்று, பசுவினருகே கட்டிவைத்த கன்று துள்ளுமாபோலே ஸஸம்ப்ரமத்யாபாரத்தைப் பண்ணாநிற்கும். (கருவுடை இத்யாதி) – கல் புதைத்துக்கிடக்கும் ஸ்தாநங்கள் காணில், அவையெல்லாம் பெரியபெருமாள் பள்ளிகொண்டருளுகிற கோயிலே என்னும். இவற்றுக்கு உள்ளீடு ஸர்வேஸ்வரனாகையாலே, இவற்றை ‘கரு’ என்கிறார். “திசைமுகன்கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்” (5.10.8) என்கிறபடியே. (கருவென்று – கர்ப்பத்துக்கும், கர்ப்பாதாரத்துக்கும் பேர். ப்ரதிமையையுடைத்தான, தேவில்கள் – தேவாலயங்க ளெல்லாம் கண்டால்). (வெருவிலும் இத்யாதி) – தெளிவுடையளாய் பந்துக்களைக் கண்டு அஞ்சியிருக்கும்போதோடு அறிவழிந்து மோஹித்த ஸமயத்தோடு வாசியற, இடைவிடாதே க்ருஷ்ணன் திருவடிகளை விரும்பாநிற்கும். இது என்றும் ஏகரூபமாயிருக்கும். மாறாடிவருவது மோஹமும் உணர்த்தியும்; ஸ்தாயியாயிருப்பது இதுவே. இத்தால் – பகவத்ப்ராவண்யம் இவர்க்கு ஸத்தாப்ரயுக்தமென்கை.
ஒன்பதாம் பாட்டு
விரும்பிப்பகவரைக்காணில் வியலிடமுண்டானேயென்னும்
கரும்பெருமேகங்கள்காணில் கண்ணனென்றேறப்பறக்கும்
பெரும்புலவாநிரைகாணில் பிரானுளனென்றுபின்செல்லும்
அரும்பெறல்பெண்ணினைமாயோன் அலற்றியயர்ப்பிக்கின்றானே.
ப:- அநந்தரம், ‘ஆஸ்ரிதர்பக்கல் அவனுடைய உபகாரகத்வத்தை அநுஸந்தித்து, தத்ஸத்ருச ஸம்பந்திகளைக் கண்டு வாய்புலற்றி மோஹிக்கும்படி பண்ணினான்’ என்கிறாள்.
பகவரை – (ஜ்ஞாநாதிகுணபூர்த்தியாலே ஆஸ்ரிதரை ஸ்வாபி4மாநாந்தர்க3தராக்கி ரக்ஷிப்பாராயுள்ள) பகவத்ரூபரான மோக்ஷாஸ்ரமிகளை, காணில் – காணில், விரும்பி – அத்யாதரத்தைப்பண்ணி, வியல் இடம்- விஸ்தீர்ணமான ஜகத்தை, உண்டானே – வயிற்றிலே வைத்து நோக்கின ஸர்வரக்ஷகனே, (இது நிஸ்சிதம்), என்னும் – என்னாநிற்கும்; கரு – கறுத்து, பெரு – பெருத்த, மேகங்கள் – மேகங்களை, காணில் – காணில், கண்ணன் – (ஜ்ஞாநஅஜ்ஞாநவிபா4க3மறத் தன் வடிவைக்காட்டி உபகரிக்கும்) க்ருஷ்ணன், என்று – என்று, ஏற – மேலேயெழ, பறக்கும் – பறக்கத் தேடாநிற்கும்; பெரு – அதிப்ரபூதமாய், புலம் – தர்சநீயமான, ஆநிரை – பசுத்திரளை, காணில் – கண்டாளாகில், பிரான் – (இவற்றை வயிறு நிறையமேய்த்து ரக்ஷிக்கும்) மஹோபகாரகன், உளன் – கூடவருகிறான், என்று – என்று, பின் – அவற்றின்பின்னே, செல்லும் – போகாநிற்கும்; பெறல்அரும் – பெறுதற்கு அரியளான, பெண்ணினை – இப்பெண்ணை, மாயோன் – (இப்படி உபகாரசேஷ்டிதங்களையுடைய) ஆஸ்சர்யபூதன், அலற்றி – வாய்விட்டலற்றும்படி பண்ணி, அயர்ப்பிக்கின்றான் – (அதுக்குமேலே) மோஹிக்கும்படி பண்ணாநின்றான்.
பகவர் – ஸந்ந்யாஸிகள்.
ஈடு:- ஒன்பதாம்பாட்டு. ‘பெறுதற்கரிய இவள், தன்னையே வாய்வெருவி மோஹிக்கும்படி பண்ணாநின்றான்’ என்கிறாள்.
(விரும்பிப் பகவரைக் காணில்) – (பகவரைக்காணில் விரும்பி) – ஜ்ஞாநாதிகுணங்களால் பூர்ணராய் இதரவிஷயங்களில் விரக்தராயிருக்கும் ஸந்யாஸிகளைக் காணில் ஆதரித்து, ப்ரளயாபத்திலே ஜகத்தையடைய வயிற்றிலே வைத்து நோக்கி, ரக்ஷ்யவர்க்கத்தினுடைய ரக்ஷணத்தைப் பண்ணுகையாலே வந்த நைரபேக்ஷ்யம் தோற்ற இருக்கிற ஸர்வேஸ்வரனென்னும். வியலிடம் – விஸ்மயநீயமான பூமி. “நின்றகுன்றத்தினை நோக்கி ‘நெடுமாலே’ ” (4.4.4) என்று ப்ரமித்தவோ பாதி காணும் சேஷபூதரை சேஷியாகக்கொண்டு ப்ரமிக்கிற இதுவும். (கரும்பெரு மேகம் இத்யாதி) – கறுத்துப்பெருத்து ஸ்ரமஹரமான மேகத்தைக் கண்டவாறே, அத்வடிவையுடைய க்ருஷ்ணனென்று பறப்பாரைப்போலேயிருக்க ஸம்ப்ரமியா நிற்கும். மேகதர்சநத்தில் சிறகெழும் போலேகாணும். மேகத்தைக் கண்டவாறே ஒருபக்ஷபாத முண்டாகக்கடவதிறே. ராஜேந்த்ரசோழனிலே திருவாய்க்குலத்தாழ்வாரென்றொருத் தருண்டு; அவர் வர்ஷாவிலே ‘பயிர்பார்க்க’ என்று புறப்பட்டு மேகதர்சநத்திலே மோஹித்து விழுந்தார்; இவர் விழுந்ததைக் கண்டு நின்ற குடிமகன் ஓடிவந்து அவரையெடுத்துக் கொண்டுவந்து க்ருஹத்திலே விட்டு, ‘இவர்ப்ரக்ருதியறிந்திருந்தும் இந்நாளிலே இவரை வயல்பார்க்கப் புறப்படவிடுவா ருண்டோ?’ என்றான். (பெரும் புலம் இத்யாதி) – அளவுபட்டிருக்கையன்றிக்கே பெருத்து தர்சநீயமாயிருக்கிற பசுநிரைகளைக் காணில். என்தசையறிந்து வந்து உதவுகைக்காகக் கடைக்கூழையிலே வாராநின்றா னென்று, அவற்றுக்குப்பின்பு ஏறப் போகாநிற்கும். அன்றிக்கே, அவற்றின் திரளுக்குள்ளே அவனையும் காணலாமென்று அவற்றின் பின்னே போகாநிற்கு மென்றுமாம். (அரும்பெறல்பெண்ணினை) (மஹதாதபஸாராம) என்று தம்மைப் பெற்றவர்கள் பட்ட வருத்தமல்லகிடீர் நான் இவளைப் பெறப்பட்டது; ‘அடி’யிலே நெடுங்காலமும் தபஸ்ஸுபண்ணியிறே இவளைப்பெற்றது இவள். (மாயோன்) (குரவ:கிங்கரிஷ்யந்தி) என்று பெற்றவர்களைக் கைவிடும்படி பண்ண வல்லவன். (அலற்றி அயர்ப்பிக்கின்றான்) – எப்போதும் தன்னையே வாய்வெருவும்படி பண்ணி, அவ்வளவிலுமன்றிக்கே மோஹிக்கும்படி பண்ணாநின்றான்.
பத்தாம் பாட்டு
அயர்க்கும்சுற்றும்பற்றிநோக்கும் அகலவேநீள்நோக்குக்கொள்ளும்
வியர்க்கும்மழைக்கண்துளும்ப வெவ்வுயிர்கொள்ளும்மெய்சோரும்
பெயர்த்தும்கண்ணாஎன்றுபேசும் பெருமானேவாவென்றுகூவும்
மயற்பெருங்காதலென்பேதைக்கு என்செய்கேன்வல்வினையேனே.
ப:- அநந்தரம், அவனுடைய ஸௌலப்யாதிசயத்தை அநுஸந்தித்து ஸத்ருச ஸம்பந்திவஸ்துக்களையும் காண்கைக்கு யோக்யதையில்லாத ஆர்த்தி விஞ்சினபடியைச் சொல்லி ‘இவளுக்கு என்செய்வேன்?’ என்கிறாள்.
அயர்க்கும் – (துல்யஸம்பந்திவஸ்துக்களையும் காணவொண்ணாதபடி) மோஹியாநிற்கும்; (உணர்த்திவந்தவாறே, ‘இவ்வவஸ்தையில் அவன் வாராதொழியான்’ என்று நினைத்து), சுற்றும் – சுற்றும், பற்றி நோக்கும் – பலகாலும் பாராநிற்கும்; (அவ்வளவிலும் காணாவிட்டவாறே தூரத்திலே நிற்கிறானாக நினைத்து), அகல – (பார்த்தகண்ணை) ஒட்டி, நீள்நோக்குக் கொள்ளும் – நெடும்போது பாராநிற்கும்; வியர்க்கும் – (அங்கும் காணாமையாலே ப்ரணயரோஷத்தாலே) வேர்த்து நீராகாநிற்கும்; மழை – மழைபோலே, (அருவிச்சொரிகிற கண்ணீரானது கோபாக்நியாலே சுவறி அடியற்று), கண் – கண்ணளவிலே, துளும்ப – துளும்பும்படி, வெம் – அவ்வெம்மைதோன்ற, உயிர்கொள்ளும் – நெடுமூச்செறியும்; மெய் – (அந்தப்பரிதாபத்தாலே) சரீரம் தரிக்கமாட்டாமல், சோரும் – சோரும்; பெயர்த்தும் – பின்னையும், (ஆசை பேசாதிருக்க வொட்டாமையாலே), கண்ணா – (பெண்களுக்கு ஸர்வகாலஸுலபனான) க்ருஷ்ணனே!, என்று – என்று, பேசும் – ஸம்போதித்துச் செல்லாநிற்கும்; (இப்பேர் கேட்டவாறே வந்தானாக நினைத்து), பெருமானே – (என்நினைவளவன்றியே அதிசயிதமாக உபகரிக்கும் என்னுடைய) நாதனே! வா – வரலாகாதோ?, என்று – என்று, கூவும் – அழையாநிற்கும்; மயல் – (இப்படி) பிச்சேறும்படி, பெருகாதல் – பெரிய காதலையுடைய, என் பேதைக்கு – என் சொற்கேளாப் பெண்ணுக்கு, வல்வினையேன் – (இவளை இப்படிகாண்கைக்கு அடியான) அதிப்ரபலபாபத்தையுடைய நான், என்செய்கேன் – எத்தைச்செய்வேன்? – வாராதவனை வரப்பண்ணுவேனோ? இதுகண்டு பொறுத்திருப்பேனோ? என்று கருத்து.
ஈடு:- பத்தாம்பாட்டு. ஸத்ருசபதார்த்தங்களை அநுஸந்திக்க க்ஷமமல்லாத வ்யஸநாதி சயத்தாலே இவளுக்குப் பிறந்த விக்ருதிகளைச் சொல்லி, நான் என்செய்வேன்? என்கிறாள்.
(அயர்க்கும்) – நின்றாற்போலே நில்லா, சிந்தாத்யாபாரமற்று மோஹிக்கும் (சுற்றும் பற்றிநோக்கும்) – பின்னையும் அறிவுகுடிபுகுரா, தன்னாபத்தே செப்பேடாக அவன்வரவை அத்யவஸித்து வந்து அருகேநின்றானாக ஸாதரமாகச் சுற்றும் பாராநிற்கும். அங்குக் காணாமையாலே, ‘ஸர்வதா இவ்வளவில் புறப்படாதொழியான்’ என்று ப்ரதமபரிஸ்பந்தந் தொடங்கிக் காண்கைக்காகப் பரக்கக்கொண்டு பரமபதத்தளவும் செல்லப் பாராநிற்கும். அங்குக் காணாமையாலே, ‘என்னளவு இதுவாயிருக்க, வாராதொழிவதே’ என்று நொந்து, (வியர்க்கும்) – இளைப்பாலே வேராநிற்கும். (மழை இத்யாதி) – ஸ்வேதமாய்ப் புறப்பட்டுப் புறப்படாதது கண்ணீராய்ப் புறப்படும்; கண்ணீராய்ப் புறப்படாதது நெடுமூச்சாய்ப் புறப்படும். மழைபோலே அருவிச்சொரிகிற கண்ணநீரானது கோபாக்நியாலே சுவறி அடியற்றுக் கண்ணளவிலே துளும்பும்படி அவ்வெம்மை தோன்ற நெடுமூச்செறியும். (மெய்சோரும்) – அகவாயிலுள்ளது நேராகப்போனவாறே பரவசகாத்ரையாம். இவள்‘படி’யே இப்படி துவளுவது அறமுடியவொட்டாதே ஆசாபந்தம் (பெயர்த்தும் கண்ணாவென்றுபேசும்) – திரியவும் க்ருஷ்ணனேயென்று ஸம்போதித்து, அந்தத்திருநாமத்தாலே பிறந்த அநுஸந்தாந ப்ரகர்ஷத்தாலே வந்த உருவெளிப்பாட்டாலே வந்தானாகக் கொண்டு. (பெருமானே வாவென்று கூவும்) – பின்னையும் ‘உடையவன் உடைமையை இழக்கவிடுமோ? நாம் படுவது காண மறைய நின்றானத்தனை’ என்று வாவென்னும். (மயல்இத்யாதி) – மயலைப்பண்ணக்கடவதான பெரியகாதலையுடைய என்பாலைக்கு. (என்செய்கேன்) – இவள் மோஹியாதபடி பண்ணவோ? அவனை வரப்பண்ணவோ? நான் இத்தைப் பொறுத்திருக்கவோ? (வல்வினையேனே) – இவளை இப்படிகாணும்படி மஹாபாபத்தைப்பண்ணினேன். ஆழ்வான் திருநயனங்கள் நோவுபட்ட பின்பு எம்பெருமானார் திருவுள்ளம் நோவுபட்டாற்போலேகாணும், திருத்தாயார் திருவுள்ளமும் படுகிறது.
பதினொன்றாம் பாட்டு
வல்வினைதீர்க்கும்கண்ணனை வண்குருகூர்ச்சடகோபன்
சொல்வினையாற்சொன்னபாடல் ஆயிரத்துள்இவைபத்தும்
நல்வினையென்றுகற்பார்கள் நலனிடைவைகுந்தம்நண்ணித்
தொல்வினைதீரஎல்லாரும் தொழுதெழவீற்றிருப்பாரே.
ஆழ்வார் திருவடிகளே சரணம்
ப:– அநந்தரம், இத்திருவாய்மொழி அப்யஸித்தவர்கள் நித்யஸூரிகளாதரிக்கும் படியாக ஸ்வசேஷத்வ ஸாம்ராஜ்ய ப்ரதிஷ்டிதராவர்கள் என்று ப2லத்தை அருளிச்செய்கிறார்.
வல் – ஆஸ்ரிதர் தன்னை ஸம்ஸ்லேஷிக்கைக்கு விலக்கான, வினை – ஸகலபாபங்களையும், தீர்க்கும் – (*ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி” என்று) போக்கும் ஸ்வபா4வனான, கண்ணனை – க்ருஷ்ணனை, வண் – ஸர்வஸம்பத் ஸம்ருத்தமான, குருகூர் – திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வார், சொல்வினையால் – வாசிகசேஷ வ்ருத்திரூபத்தாலே, சொன்ன – அருளிச்செய்த, பாடல் – காநரூபமான பாட்டுக்கள், ஆயிரத்துள் – ஆயிரத்துள், இவைபத்தும் – இவைபத்தையும், நல்வினை – விலக்ஷணவ்ருத்திவிசேஷம், என்று – என்று, கற்பார்கள் – கற்குமவர்கள், நலன் – பகவதநுபவாநந்தத்தை, உடை – உடைத்தான, வைகுந்தம் – பரமபதத்தை, நண்ணி – கிட்டி, தொல் – அநாதிஸித்தமான, வினை – அவித்யாதிதோஷங்கள், தீர – மறுவலிடாதபடி, எல்லாரும் – அங்குள்ள ஸூரிகளெல்லாரும், தொழுது – (தங்களுடைய ததீயசேஷத்வம் தோன்றும்படி) தாழ்ந்து ஆதரித்து, எழ – (ஸம்ப்ரமத்தாலே) பெரியகிளர்த்தியை யுடையராம்படியாக, வீற்று இருப்பார் – (தங்கள் சேஷத்வஸாம்ராஜ்யத்தாலுள்ள) வேறுபாடு தோன்ற இருக்கப்பெறுவார்கள்.
இது அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் திருவடிகளே சரணம்
ஈடு:- நிகமத்தில் – இத்திருவாய்மொழி கற்றார், ஸம்ஸாரதுரிதமும் போய் பகவத் விஸ்லேஷகந்தமில்லாத திருநாட்டிலே எல்லாரும் சிரஸாவஹிக்கும் மேன்மையோடே இருக்கப்பெறுவர் என்கிறார்.
(வல்வினைதீர்க்கும்கண்ணனை) – பெற்றவர்கள் கைவிட்டால் பிடித்தவர்கள் கைவிடார்களே. ஆஸ்ரிதருடைய விஸ்லேஷஹேதுவான மஹாபாபத்தைப் போக்கும் ஸ்வபா4வனான க்ருஷ்ணனை. (வண்குருகூர்ச்சடகோபன்) – பரமோதாரரான ஆழ்வார். இன்று நாமுங்கூட இருந்து பகவத்குணாநுஸந்தாநம்பண்ணும்படி பண்ணின ஔதார்யமிறே. (சொல்வினையால் சொன்னபாடல்) – சொல்லியல்லது நிற்கவொண்ணாத பக்திபாரவஸ்யத்தாலே யென்னுதல், பகவத் குணபலாத்காரத்தாலே யென்னுதல், சொற்றொழிலாலேயென்னுதல்; அதாவது – வாசிகமான அடிமை. (ஆயிரத்துள்ளிவைபத்தும்) – ஆயிரம் திருவாய்மொழியிலும், இவர் ஸத்ருசபதார்த்தங்களைக் கண்டு அவனாகப்பிச்சேறின இத்திருவாய்மொழி. இப்படி பிச்சேறின இது எல்லார்க்கும் கூடுவதொன்றன்றிறே; ஆனபின்பு, (நல்வினையென்றுகற்பார்கள்) – இது பாவநமென்றாகிலும் அப்யஸிக்க வல்லவர்கள். இது விலக்ஷணக்ருத்யமென்று கற்குமவர்களென்றுமாம். (நலனிடைவைகுந்தம் நண்ணி) – விஸ்லேஷகந்தமில்லாத பரமபதத்தைக் கிட்டி. (தொல்வினை தீர) – அநாதியாய் வருகிற அவித்யாதிகள் தீர்ந்து. (எல்லாரும் தொழுதெழ) – அஸ்ப்ருஷ்டஸம்ஸாரகந்தரான நித்யஸூரிகளும் தொழுதுஆதரிக்க. பணியாஅமரருங்கூட, “பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்” (10.9.10) என்கிறபடியே, அவர்கள் அநுவர்த்தித்து ஆதரிக்கும்படி யாவர்கள். “தொழுதெழென்மனனே” (1.1.1) என்று – அநாதிகாலம் “அஸந்நேவ” என்னும்படி போந்தவர் அவனைத்தொழுது உஜ்ஜீவித்தாற்போலேகாணும். இவர்பாடின திருவாய்மொழியைக் கற்றவர்களைத் தொழுது நித்யஸூரிகள் உஜ்ஜீவிக்கும்படி. (வீற்றிருப்பாரே) – அவன் சேஷித்வத்துக்கு முடிசூடி இருக்குமாபோலே, இவர்களும் சேஷத்வஸாம்ராஜ்யத்துக்கு முடிசூடியிருக்கப்பெறுவர்கள். “ஸஸ்வராட்ப4வதி” என்னக்கடவதிறே. வீற்றென்பது – வேறுபாடு.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்
த்ரமிடோபநிஷத் ஸங்கதி – மண்ணையிருந்து
தேநப்ரஹர்ஷமதிமாத்ரபவம் ஸ்வகீயம்
ஸாத்ம்யம் விதாதுமததூரகதே முகுந்தே।
ஸம்பந்திநஶ்சஸத்ருஶாம்ஶ்சவிலோக்ய ஶௌரே:
ப்ராம்யம் ஸ்தமேவ முநிரார்திமகாச்சதுர்தே || ||34||
த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்நாவளி – மண்ணையிருந்து
பூம்யாத்யைஸ்ஸாகராத்யைர்ஜ்வலநஶஶிமுகைர்வஸ்துபிர்வத்ஸபூர்வை: ந்ருத்யத்பிஸ்ஸ்வைஶ்சலோகாதிபிரதப்ருதிவீக்ஷித்பிராத்மீயதாஸை: । ஸௌலப்யைஶ்வர்யவர்கைரபிசகுணகணைர்வாஸுதேவோவியோகே ஸ்வீயைஸ்துல்யைஶ்சபக்தாந்வ்யதயதி மதுஹேத்யப்ரவீத்காரிஸூநுK| 4-4
திருவாய்மொழி நூற்றந்தாதி
மண்ணுலகில் முன்கலந்து மால்பிரிகையால்
மாறன் பெண்ணிலைமையாய்க் காதல் பித்தேறி _ எண்ணிடில்
முன் போலி முதலான பொருளை அவனாய்நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு. 34
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
*******