ஐந்தாம் திருவாய்மொழி
வீற்றிருந்து : ப்ரவேசம்
*******
ப :- ஐந்தாந்திருவாய்மொழியில், கீழ் – ஸத்ருசமாயும் ஸம்பந்தியாயுமுள்ள வஸ்துக்களுடைய தர்சநத்தாலே ப்ரமிக்கும்படி இவர்க்கு உண்டான ஆர்த்ந்யதிசயம் தீருகைக்காக ஸர்வேஸ்வரன் தன்னுடைய நிரதிசயபோக்யமான ஸ்வரூபரூப குணங்களையும், மஹிஷீபூ4ஷாயுத4 பரிஜநாதிரூபமான விபூ4திவைலக்ஷண்யத்தையும், மஹோதா3ரசேஷ்டிதங்களையும் அநுபவிப்பிக்க அநுபவித்து ப்ரீதராய், அவனுடைய அகிலலோக நிர்வாஹகத்வத்தையும், அதுக்கு அடியான லக்ஷ்மீபதித்வத்தையும், உப4யஸித்3த4மான ஆநந்தாதிகுண யோகத்தையும், இக்குணாதி போக்தாக்களைக் காத்தூட்டும் வாஹநாயுதத்வத்தையையும், போகாநுகுணமான ஜ்ஞாநப்ரேமாதி ப்ரதத்வத்தையும், அஸ்கலித ஜ்ஞாநர்க்கு அநுபா4த்யமான விக்ரஹவைலக்ஷண்யத்தையும், இந்த போக்யதைக்கு ஸர்வாவஸ்தையிலும் ஒத்தாரும் மிக்காருமில்லாத மேன்மையையும், அதுக்கு உபபாதகமான விபூதி த்வய யோகத்தையும், தத்விஷயமான வ்யாப்த்யாதிகளையும், வ்யாப்யரக்ஷணார்த்தமான தர்சநீயத்யாபாரங்களையும் அநுஸந்தித்து, இப்படி பரிபூர்ணனான ஸர்வேஸ்வரனை அநுபவித்துப் பிறந்த ஹர்ஷாதிசயத்தாலே ஸூரிகளைப்போலே வாய்விட்டுப் புகழ்ந்து, இந்தளத்தில் தாமரைபோலே இங்கே இந்த அநுபவங் கிடைக்கையாலே எனக்கு ஸத்ருசருண்டோ? என்று தமக்குப்பிறந்த செருக்கை அருளிச்செய்கிறார்.
ஈடு :- கீழில்திருவாய்மொழியிலே அப்படி விடாய்த்தவர் “இனியென்ன குறையெழுமையுமே” (4.5.1) என்னப்பெறுவதே! ‘பொய்ந்நின்ற ஞானம்’ (திருவிரு. 1) தொடங்கிக் கீழெல்லாம் “மண்ணையிருந்து துழாவி*(4.4)யில் விடாய்க்கு க்ருஷிபண்ணினபடி; அப்படி விடாய்க்கப்பண்ணின க்ருஷியின்பலம் சொல்லுகிறது இதில். பேற்றுக்கு இதுக்கு அவ்வருகு சொல்லலாவது இனியொன்றில்லை. “சூழ்விசும்பணிமுகிலு*(10.10.10)க்கு அநந்தரம் இத்திருவாய்மொழியாகப் பெற்றதில்லையே” என்று அருளிச்செய்வர் சீயர். பெருமாளும் இளையபெருமாளுமான இருப்பிலே பிராட்டிக்குப் பிரிவு உண்டாக, மஹாராஜரையும் பரிகரத்தையும் கூட்டிக்கொண்டு சென்று விரோதிவர்க்கத்தைக் கிழங்கெடுத்து அவளோடே கூடினாற்போலே போலிகண்டு இவர் ப்ரமித்த இழவெல்லாம் போம்படி, நித்யவிபூதியையும் லீலாவிபூதியையும் உடையனாயிருக்கிற தன்படிகளொன்றும் குறையாதபடி கொண்டு வந்து காட்டிக்கொடுத்து, ‘கண்டீரே நாமிருக்கிறபடி? இந்த ஐஸ்வர்யமெல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டுவது, நீர் உம்முடைய வாயாலே ஒரு சொல்லுச் சொன்னால்காணும்’ என்று இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க, அவ்விருப்புக்கு, மங்களாசாஸநம்பண்ணு *(உபயவிபூதியிலும் என்னோடொப்பாரில்லையென்று அதிப்ரீதரா)கிறார். “நின்றகுன்றத்தினைநோக்கி” (4.4.4) என்று ப்ரமித்ததுக்கு, வானமாமலையான தன்னைக் காட்டிக்கொடுத்தான்; ‘நீறுசெவ்வேயிடக்காணில் நெடுமாலடியாரென்றோடினதுக்கு’, (4.4.7) “தூவியம்புள்ளுடையானடலாழியம்மான்” (4.5.4) என்கிற நித்யஸித்த புருஷர்களைக் காட்டிக்கொடுத்தான்; ‘செய்யதோர் நாயிற்றைக் காட்டிச் சிரீதரன்மூர்த்தி யீதென்றது’(4.4.2)க்கு, “மையகண்ணாள் மலர்மேலுறைவாள் உறைமார்பினன்” (4.5.2) என்று தானும் பெரிய பிராட்டியாருமாக இருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான். “திருவுடைமன்னரைக்காணில் திருமால்” (4.4.8) என்றதுக்கு, உபயவிபூதியுக்தனான தன் ஐஸ்வர்யத்தைக் காட்டிக் கொடுத்தான்; பிறர்வாயாலே ‘என்செய்கேன்’ (4.4.10) என்றத்தைத் தவிர்த்து, தம் வாயாலே “என்னகுறையெழுமையும்” (4.5.1) என்னப் பண்ணினான்; “விரும்பிப் பகவரைக்காணில் வியலிடமுண்டான்” (4.4.9) என்று – ஆநந்தலேசமுடையாரைக் கண்டு ப்ரமித்தவர்க்கு, “வீவிலின்பமிக வெல்லைநிகழ்ந்த நம்மச்சுதன்” (4.5.3) என்று – ஆநந்தமயனாயிருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான்.
முதல் பாட்டு
வீற்றிருந்துஏழுலகும் தனிக்கோல்செல்லவீவில்சீர்
ஆற்றல்மிக்காளும்அம்மானை வெம்மாபிளந்தான்தன்னைப்
போற்றியென்றேகைகளாரத் தொழுதுசொல்மாலைகள்
ஏற்றநோற்றேற்கு இனியென்னகுறைஎழுமையுமே?
ப:– முதற்பாட்டில், ஸமஸ்தலோக நிர்வாஹகனான ஸர்வேஸ்வரனை மங்களாசாஸநம் பண்ணி ஸ்துதிக்கப்பெற்ற எனக்கு ஸர்வகாலத்திலும் ஒரு குறையில்லை என்கிறார்.
வீற்று – (ஸர்வாதா4ரத்வ ஸர்வநியந்த்ருத்வ ஸர்வசேஷித்வ ஸர்வத்யாபகத்வாதிகளாலே) ஸ்வேதரஸமஸ்த வ்யாவ்ருத்தனாய்க் கொண்டு, இருந்து – (லோகாநாமஸம்பேதார்த்தமாக திவ்யவிபூதியிலே திவ்யபர்யங்கத்திலே) இருந்து, ஏழுலகும் – (வ்யக்தாவ்யக்தகாலரூபமாயும் ஸுத்தஸத்த்வரூபமாயும் சதுர்விதமான அசேதநவர்க்கமும் பத்த முக்த நித்ய ரூபேண த்ரிவிதமாயுள்ள சேதநவர்க்கமுமாகிற) ஏழுவகைப்பட்ட லோகங்களிலும், தனி – (ஸ்வஸங்கல்பரூபமாய்) அத்விதீயமான, கோல் – செங்கோல், செல்ல – நடக்கும்படி, வீவில் – அப்ரதிஹதமான, சீர் – (ஜ்ஞாநசக்த்யாத்யஸங்க்யேய) கல்யாணகுணகனாய்க்கொண்டு, ஆற்றல்மிக்கு – (ஸ்வாபாவிக மாகையாலே மதோத்ரேகரஹிதமாய்) நிரவதிகமான சாந்தியோகத்தாலே, ஆளும் – (இது ஸாத்ம்யமாம்படி) ஸ்வரூப வைபவத்தையுடையனாய்க்கொண்டு போருகிற, அம்மானை – ஸர்வ ஸ்வாமியாய், வெம் – (ரக்ஷணீயவர்க்கத்துக்கு விரோதியாய் “மஹாரௌத்ர:” என்கிறபடியே) வெம்மையே நிரூபகமான, மா – (கேசியாகிற அஸுராவிஷ்டமாயுள்ள) குதிரையை, பிளந்தான் தன்னை – (*நிபபாதத்3விதா4பூ4த:” என்னும்படியே இருகூறாய் விழும்படி) வாய்பிளந்த ஸர்வேஸ்வரனை, போற்றி என்றே – போற்றி போற்றியென்று இப்பெருமைக்கு மங்களாசாஸநம் பண்ணிக்கொண்டே, கைகள் (*விண்ணைத்தொழுது*) என்ற கைகள், ஆர – வயிறுநிறையும்படி, தொழுது – அஞ்சலிபந்தம்பண்ணி, சொல் – சப்தஸந்தர்ப்பரூபமான, மாலைகள் – மாலைகளை, ஏற்ற – (அவன்–ரஸாவஹிக்கும்படி) ஸமர்ப்பிக்கைக்கு, நோற்றேற்கு – (*விதிவாய்க்கின்று” என்கிறபடியே அவனுடைய நிர்ஹேதுக) க்ருபாரூபபுண்யத்தையுடைய எனக்கு, இனி – இனிமேல், எழுமையும் – (*ஸப்தஸப்தசஸப்தச” என்கிறபடியே) ஏழேழுபடிகாலான ஜன்மமுண்டாகிலும், என்ன குறை – என்ன குறையுண்டாம்?
சரீரவிமோசந தேசப்ராப்த்யாதிகளாகிற குறை உண்டாகாதென்று கருத்து. ஆற்றல் – பொறையும், மிடுக்கும்.
ஈடு:- முதற்பாட்டில், ஸர்வேஸ்வரனாய்வைத்து ஆஸ்ரிதரக்ஷணார்த்தமாக மநுஷ்ய ஸஜாதீயனாய்வந்து அவதரித்த க்ருஷ்ணனைக் கவிபாடப் பெற்ற எனக்கு ஒருநாளும் ஒரு குறையில்லை யென்கிறார்.
(வீற்றிருந்து) – வீற்றென்று – வேறுபாடாய், தன்வேறுபாடு அடங்கலும் தோற்ற இருக்கை. ஸ்வத்யதிரிக்த ஸமஸ்தவஸ்துக்களும் தனக்கு சேஷமாகத் தான் சேஷியாகையாலே வந்த வ்யாவ்ருத்தி தோற்ற இருக்கை; இங்ஙனன்றாகில், பரஸ்பரம் வ்யாவ்ருத்தி எல்லார்க்குமுண்டிறே. ஸகலாத்மாக்களுக்கும் அவனோடு ஜ்ஞாநைகாகாரதயா ஸாம்யமுண்டாயிருக்கச் செய்தேயும், விபுத்வ சேஷித்வ நியந்த்ருத்வங்களாகிற இவை அவ்வாஸ்ரயமொன்றிலுமே கிடக்குமவையிறே. தன்னையொழிந்தாரடையத் தனக்குக் கிஞ்சித்கரிக்கக்கடவனாய், தான் ஸர்வக3தனாய், ஆகாச வ்யாப்திபோலன்றிக்கே ஜாதி வ்யக்திதோறும் பரிஸமாப்ய வர்த்திக்குமாபோலே வர்த்திக்கக்கடவனாய், இப்படி வ்யாபரிக்கிறதுதான் நியமநார்த்தமாகவிறே. ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்தவஸ்துக்களையுமுடையனாகையால் வந்த ஆநந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது. வீற்றிருந்தென்று இவ்வருகுள்ளாரையடையக் கலங்கப்பண்ணக்கடவதான அஜ்ஞாநாதிகளையடையத் தன்னாஸநத்திலே கீழேயமுக்குண்ணும்படி அவற்றை அதிஷ்டித்துக்கொண்டிருக்கும் படியைச் சொல்லுகிறது. (ஏழுலகும் தனிக்கோல் செல்ல) – சுற்றுப்பயணம்வந்து ஜகந்நிர்வாஹம் பண்ணுகையன்றிக்கே, இருந்த இருப்பிலே லோகமடையச் செங்கோல்செல்லும்படியாகவாயிற்று இருப்பது. ஏழுலகென்று – விபூதித்வயத்தையும் சொல்லிற்றாகில், ‘வீவில்சீர்’ என்கிற இடம் – கல்யாணகுணவிஷயமாகக்கடவது; அன்றிக்கே, ஏழுலகென்று – லீலாவிபூதிமாத்ரத்தைச் சொல்லிற்றாகில், வீவில்சீரென்கிற விடம் – நித்யவிபூதிவிஷயமாகக் கடவது. உபயவிபூதியையும் சொல்லிற்றானபோது, த்ரிவிதசேதநரையும் சதுர்விதப்ரக்ருதியையும் சொல்லிற்றாகிறது. சதுர்வித ப்ரக்ருதியாகிறது – கார்யகாரணரூபமான த்வைவித்யம் அங்கு; இங்கும், அப்படியுண்டான த்வைவித்யம். லீலாவிபூதிமாத்ரத்தைச் சொல்லிற்றான பக்ஷத்தில், பாதாளாதிகளையும் பூமியோடேகூட்டி ஒன்றாக்கி, பரமபதத்துக்கு இவ்வருகுள்ளத்தை ஆறாக்கி, ஆக ஏழையும்சொல்லிற்றாகிறது. (வீவில்சீர்) – நித்யமான குணங்களைச் சொல்லுதல், நித்யமான விபூதியைச் சொல்லுதல். இப்படி உபயவிபூதியுக்தனான செருக்காலே தன்பக்கல் சிலர்க்குக் கிட்டவொண்ணாதபடியிருக்குமோ? என்னில், (ஆற்றல்மிக்காளும்) – அநுத்ததனாய் ஆயிற்று ஆள்வது; (ராமோராஜ்யமுபாஸித்வா) என்கிறபடியே; ராஜ்யத்தை ஸவிநயமாக நடத்துகையாலே ராஜ்யத்தை உபாஸித்தா ரென்றதிறே. வழியல்லாவழியே வந்த ஐஶ்வர்யமுடையவன் பிறர்க்குத் திரியவொண்ணாதபடி நடக்குமிறே; உடையவனுடைய ஐஶ்வர்யமாகையாலே ப்ராப்தமாயிருந்தபடி. அன்றிக்கே, ஆற்றலென்று – வலியாய், ‘இத்தையடைய நிர்வஹிக்கைக்கு அடியான தாரணஸாமர்த்யத்தையுடையனாயிருக்கும்’ என்று சொல்லுவாருமுண்டு. (அம்மானை) – நியந்த்ருத்வத்தால் வந்த ஐஸ்வர்யம் தோற்ற இருக்கிற ஸர்வேஸ்வரனை. (வெம்மாபிளந்தான் தன்னை) – ‘ஆற்றல்மிக்காளும்படி சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச்செய்யும்படி. ‘ஆற்றல்மிக்காளுமம்மான் ஆரென்றால், இன்னானென்கிறது’ என்று அம்மங்கியம்மாள் நிர்வஹிக்கும்படி. இவற்றையடைய உடையவனானால், இருந்தவிடத்தேயிருந்து “த3ஹ பச” என்று நிர்வஹிக்கையன்றிக்கே, இவற்றோடே ஸஜாதீயனாய் வந்து அவதரித்து, இவர்கள் பண்ணும் பரிபவங்களை அடையப்பொறுத்து, களைபிடுங்கி ரக்ஷிக்கும்படி சொல்லுகிறது. ஸ்யமந்தகமணி ப்ரப்ருதிகளிலே பரிபவம் ப்ரஸித்தம்; “தாஸ்யமைஸ்வர்யவாதேந ஜ்ஞாதீநாஞ்சகரோம்யஹம்” என்றும், “அர்த்தபோக்தாசபோகாநாம் வாக்துருக்தாநிசக்ஷமே” என்றும் அருளிச்செய்தான். (வெம்மாபிளந்தான்) கேசி பட்டுப்போகச் செய்தேயும், தம்வயிறெரித்தலாலே ‘வெம்மா’ என்கிறார் இவர். “வ்யாதிதாஸ்யோ மஹாரௌத்ர ஸோஸுர: க்ருஷ்ணபாஹுநாஐ நிபபாதத்விதாபூதோ வைத்யுதேநயதாத்ரும:” கேசி, வாயை அங்காந்துகொண்டு வந்தபோது, சிறுப்ரஜைகள் த்வாரம்கண்டவிடங்களிலே கையைநீட்டுமாபோலே, இவன் மௌக்த்யத்தாலே அதின்வாயிலே கையைநீட்டினான்; அபூர்வதர்சநத்தாலே, கை பூரித்துக்கொடுத்தது, கையைப் புரிந்துவாங்கினான், அவன் இருபிளவாய் விழுந்தான். (போற்றி) ஸ்வரூபாநுரூபமாயிறே பரிவுகள் இருப்பது. கேசி பட்டுப்போகச்செய்தேயும் ஸமகாலத்திற்போலே வயிறெரிந்து படுகிறாராயிற்று இவர். (என்றே) – ஒருகால் “பல்லாண்டு” என்றால் பின்னையும் “பல்லாண்டு பல்லாண்டு” என்னுமத்தனை. (நம இத்யேவவாதிந:) என்னுமாபோலே. (கைகளாரத்தொழுது) – “வைகுந்தமென்று கைகாட்டும்” (4.4.1) என்று வெறுமாகாசத்தைப் பற்றித்தொழுத கைகளின் விடாய் தீர்ந்து வயிறுநிறையும்படி தொழுது. (சொல்மாலைகள்) – வாடாத மாலைகள். அநஸூயை கொடுத்த மாலைபோலே செவ்வியழியாத மாலைகள். (ஏற்ற) – திருக்குழலிலே ஏற்றும்படியாக, “க்ருஹ்ணாதி சிரஸா ஸ்வயம்” என்கிறபடியே. (நோற்றேற்கு) – இவர் இப்போது நோற்றாராகச்சொல்லுகிறது – “மண்ணையிருந்துதுழாவி*(4.4)யில் விடாயையாதல், பகவத்க்ருபையையாதல்; பூர்வக்ஷணவர்த்தியிறே ஒன்றுக்கு ஹேதுவாவது. (இனியென்னகுறை) – அவ்வருகுபோனாலும் கிஞ்சித்காரத்தாலேயாகில் ஸ்வரூபம்; அத்தை இங்கே பெற்ற எனக்கு ஒருகுறையுண்டோ? இது எத்தனைகுளிக்கு நிற்கும்? என்னில், (எழுமையுமே) – முடியாநிற்குமவற்றை எவ்வேழாகச் சொல்லக்கடவதிறே. (தசபூர்வாந்தசாபராநாத்மாநஞ்ச). (ஸப்தஸப்தசஸப்தச). இங்கேயிருந்தே அங்குத்தையநுபவத்தை அநுபவிக்கப் பெற்ற எனக்கு ‘அங்கே போகப்பெற்றிலேன்’ என்கிற குறையுண்டோ? அங்கேபோனாலும் ‘சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே’யிறே.
இரண்டாம் பாட்டு
மையகண்ணாள்மலர்மேலுறைவாள் உறைமார்பினன்
செய்யகோலத்தடங்கண்ணன் விண்ணோர்பெருமான்தன்னை
மொய்யசொல்லால் இசைமாலைகளேத்தி உள்ளப்பெற்றேன்
வெய்யநோய்கள்முழுதும் வியன்ஞாலத்துவீயவே.
ப:– அநந்தரம், இந்தமேன்மைக்கு அடியான லக்ஷ்மீஸம்பந்தத்தையுடையவனை ஜகத்ஸம்பந்தியான ஸகலக்லேசமுந் தீரும்படி புகழப்பெற்றேன் என்கிறார்.
மைய – (அவன் மார்பிலே எப்போதும் கணிசமாகையாலே அவ்வடிவு நிழலிட்டதடியாக அஸிதேக்ஷணையான ஸ்வபா4வத்துக்குமேலே) மையணிந்த தென்னலாம்படியான, கண்ணாள் – கண்ணையுடையளாய், (இந்த ஆபிரூப்யத்துக்கு மேலே), மலர்மேல் உறைவாள் – தாமரைப்பூவில் பிறப்பாலும் வாஸத்தாலும் அபிஜாதையுமாய்ப் பரிமளம்வடிவுகொண்டாற்போலே போக்யபூதையுமான லக்ஷ்மி, உறை – நித்யவாஸம் பண்ணும்படி, நிரதிசயபோக்யமான, மார்பினன் – மார்பையுடையனாய், செய்ய – (பத்மவர்ணையான அவளை அநுபவிக்கையாலே பழைய சிவப்புக்குமேலே) சிவந்து, கோலம் – அழகையுடைத்தாய், தடம் – (ப்ரேமபாரவஸ்யத்தாலே) விஸ்தீர்ணமான, கண்ணன் – திருக்கண்களையுடையனாய், விண்ணோர் – (இப்படி பரஸ்பரஸம்ஸ்லேஷ ஸாரஸ்யத்தைப்) பரமபதவாஸிகளுக்கு அநுபவிப்பித்து, பெருமான்தன்னை – (அவர்களுக்கு) அதிபதியாயிருக்கிற ஸர்வேஸ்வரனை, மொய்ய – (அவர்கள் ஸாமகாநம் பண்ணுமாபோலே) செறிந்த, சொல்லால் – சொற்களாலே சமைந்ததாய், இசை – இசையையுடைத்தான, மாலைகள் – மாலைகளாலே, வியல் – விஸ்தீர்ணமான, ஞாலத்து – ஜகத்திலேயிருக்கச்செய்தே, (*ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி” என்னுமாபோலே) பரிதாபஹேதுவாயிருக்கிற, நோய்கள் முழுதும் – (அவித்யாகர்மவாஸநாருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களான) ஸமஸ்தக்லேசங்களும், வீய – (நாட்டிலேநடையாடாதபடி ஸ்வயமேவ) நசிக்கும்படியாக, ஏத்தி – ஏத்தி, உள்ள – (ஸ்தவப்ரியனான அவனுடைய முகமலர்த்தியை) என்னெஞ்சாலே அநுபவிக்க, பெற்றேன் – பெற்றேன்.
மையகண்ணாள், செய்யகோலத்தடங்கண்ணன் என்கிறவிடம் – அவர்கண் நிழலீட்டாலே இவனுடைய ஸ்யாமளத்வமும், இவன் கண்நிழலீட்டாலே அவளுடைய பத்மவர்ணமுமென்று கருத்தாகவும் சொல்லுவர்கள்; ஆகிலும், கண்ணுக்கு விஷயாதீநத்வம் உசிதம்.
ஈடு:– இரண்டாம்பாட்டு. இம்மஹைஸ்வர்யத்துக்கு அடியான ஸ்ரிய:பதித்வத்தை அருளிச்செய்கிறார். ஸர்வேஸ்வரன் ப்ரஸாதத்தாலே அவன் கருத்தறிந்து நடத்தும் ப்ரஹ்மாவின் ப்ரஸாதமடியாக, நாரதாதிகள் முன்னிலையாக ஆயிற்று ஸ்ரீமத்ராமாயணம் ப்ரஸ்துதமாயிற்றது; இப்படிப்பட்ட ஸ்ரீராமாயணத்திற்காட்டில் தாம் அருளிச்செய்த ப்ரபந்தத்துக்கு ஏற்றம் அருளிச்செய்கிறார். “திருமாலாலருளப்பட்ட சடகோபன்” (8.8.11) என்கிறபடியே அவர்களிருவருடையவும் ப்ரஸாதமடியாகவாயிற்று இப்ப்ரபந்தங்கள் பிறந்தது. (ஸீதாயாஸ்சரிதம்மஹத்) என்கிறது இரண்டுக்கும் ஒக்கும்; “திருமாலவன் கவியாதுகற்றேன்” (திருவிரு.48) என்றாரிறே இவரும். அவன் பாடித் தனியே கேட்பித்தான்; அவளோடேகூடக் கேட்பித்து அச்சேர்த்தியிலே மங்களாசாஸநம் பண்ணப் பெற்றார் இவர்; மையகண்ணாள் மலர்மேலுறைவாளுறை மார்பினனானவனையாயிற்றுக் கவிபாடிற்று.
(மையகண்ணாள்) – (அஸிதேக்ஷண) என்னக்கடவதிறே. பெரியபிராட்டியார் திருக்கண்களாலே ஒருகால் கடாக்ஷித்தால், ஒரு பாட்டம் மழைவிழுந்தாற்போலே ஸர்வேஸ்வரன் திருமேனி குளிரும்படியாயிற்று இருப்பது; “மழைக்கண் மடந்தை” (திருவிரு.52) யிறே. இவள் கடாக்ஷ மில்லாமையிறே அல்லாதார் விரூபாக்ஷராகிறது. “நமஸ்ஸ்ரீரங்கநாயக்யை யத்ப்ரூவிப்ரமபேதத: |ஈசேஸிதவ்யவைஷம்ய நிம்நோந்நதமிதம்ஜகத் ||*; ஒருவன் அழகியமணவாளப்பெருமாளாயிருக்கிறதும், ஒருவன் பிக்ஷுகனாயிருக்கிறதும். (மலர்மேலுறைவாள்) – செவ்வித்தாமரைப் பூவில் பரிமளம் உபாதாநமாகப் பிறந்தவள். அவயவஶோபை அது, ஸௌகுமார்யம் இது. (உறைமார்பினன்) – பூவிலும் கூசி அடியிடுமவள் பொருந்திவர்த்திக்கும் மார்பு படைத்தவன். ஸ்ரீஜநகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீமிதிலையை நினையாதாப்போலே, இவளும் இவன்மார்வில் சுவடறிந்தபின்பு தாமரையை நினையாதபடி; (நோபஜநம்ஸ்மரந்நிதம்சரீரம்) என்று முக்தர் ஸம்ஸாரயாத்ரையை ஸ்மரியாதாப்போலே, இவள் பூவை ஸ்மரியாதபடி. (செய்யகோலத் தடங்கண்ணன்) – ஒரு சாயையிலே மேகம் வர்ஷியாநின்றால் அவ்விடம் குளிர்ந்திருக்குமாபோலே, இவள் திருக்கண்ணிலே அவன் திருமேனியில் நிறமூறி இவள் மையகண்ணாளாயிருக்கும்; “மைப்படிமேனி” (திருவிரு.94)யிறே. அத்தை ஒருபடியே பார்த்துக்கொண்டிருக்குமிறே இவள். அவளை ஒருபடியே கடாக்ஷித்துக் கொண்டிருக்கையாலே அவள் திருமேனியில் சிவப்பூறி இவன் புண்டரீகாக்ஷனாயிருக்கும்; *”செய்யாள் திருமார்பினில் சேர்திருமா*(9.4.1)லிறே. ‘இருவர்படி’யும் இருவர் கண்ணிலும் காணலாம். அவன்படி இவள்கண்ணிலே காணலாம், இவள்படி அவன்கண்ணிலே காணலாம். இவர்களுடைய கண்கலவி இருக்கிறபடியிறே இது. சிவந்து தர்சநீயமாய்ப் பரப்பையுடைத்தான திருக்கண்களையுடையவன். இவர் கவி விண்ணப்பம்செய்யக் கேட்டு அத்தாலேவந்த ப்ரீதிக்குப் போக்குவிட்டு அவன் பிராட்டியைப் பார்க்க, அவள் ‘அந்யபரதை பண்ணாதே அத்தைக் கேட்கலாகாதோ?’ என்று ப்ரேரிக்க, இப்படிகாணும் கேட்டது. (விண்ணோர் பெருமான் தன்னை) – இக்கண்ணின் குமிழிக்கீழே விளையும் நாட்டைச் சொல்லுகிறது. இக்கண்ணழகும் இச்சேர்த்தியழகும் காட்டிலெறித்த நிலாவாகாமே அநுபவிக்கைக்கு போக்தாக்களையுடையவனை; “தாமரைக்கண்ணனை விண்ணோர்பரவும் தலைமகனை” (2.6.3) என்கிறபடியே. பெரியபிராட்டியாரும் அவனுங் கூடவிருக்க, நித்யஸூரிகள் ஓலக்கங்கொடுக்கவாயிற்றுக் கவி கேட்பித்தது. (மொய்யசொல்லால்) – விஷயவைலக்ஷண்யத்தை அநுஸந்தித்து “கவிபாட” என்று ஒருப்பட்டு, (யதோவாசோநிவர்த்தந்தே) என்று மீளுகையன்றிக்கே விஷயத்துக்கு நேரானபாசுரமிட்டுக் கவி பாடப்பெற்றேன். மொய் என்று செறிவைச் சொல்லுதல், பெருமையைச் சொல்லுதல்: ஸ்லத2பந்த4மாயிருக்கையன்றிக்கே கட்டுடைத்தாயிருக்கையாதல், விஷயத்தை விளாக்குலைகொள்ளவற்றாயிருக்கையாதல். (இசை மாலைகள்) – பரிமளப்ரசுரமான மாலைபோலே, கேட்டார் துவக்குண்ணும்படி இசைவிஞ்சி யிருக்கை. (ஏத்தியுள்ளப்பெற்றேன் மந:பூர்வோவாகுத்தர:) என்கிற நியதியில்லையாயிற்று இவர்பக்கல். நினைத்தன்று போலேகாணும் ஏத்திற்று. அவன்நினைவு மாறாமையாலே இது சேர விழுமிறே; “என்முன்சொல்லும்” (7.9.2) என்றாரிறே. ‘நாமுதல்வந்துபுகுந்து நல்லின்கவிதூமுதல்பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன’ (7.9.3)தாகையாலே சேரவிழுமிறே. “முடியானே*(3.8.1)யில் கரணங்கள் விடாய்த்தாற்போலே, இங்கும் தனித்தனியேயாயிற்று அநுபவிக்கிறது. தாமும் கரணங்களோபாதி அந்வயித்தார். “நாட்டினாயென்னையுனக்குமுன்தொண்டாக” (திருமொழி 8.10.9) – அடிமையில் சுவடறியாத என்னை, ‘இவன் நம்முடையான்’ என்று அங்கே நாட்டென்று நிறுத்திவைத்தாய்; உன்னுடைய அங்கீகாரத்தைக்கொண்டு என் ப்ராக்தநமான கர்மங்களை வாஸனையோடே போக்கினேன். “பாட்டினால் இத்யாதி” – பாடின கவிவழியாலே, ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தியாயிருக்கிற நீ என் ஹ்ருதயத்திலே யிருந்தமையை ப்ரகாசிப்பித்தாய். “கண்ணபுரத்துறையம்மானே” – பாடுவித்த ஊர் திருக்கண்ணபுரம். பாடுவித்த முக்கோட்டை இருக்கிறபடி. அப்படியே இவர் வாக்குக் கவிபாட, இவர்தாம் நம்மோபாதி அநுஸந்தித்தாரித்தனை. (வெய்யநோய்கள் முழுதும்) – அவஸ்யமநுபோக்தவ்யம் என்கிறபடியே அநுபவித்தாலல்லது நசிக்கக்கடவதல்லாத கர்மங்கள் அடைய நசித்து. (வியன்ஞாலத்துவீயவே) – இவ்விபூதியிலே யிருக்கச் செய்தே, இது அடையப்போயிற்று என்று சொல்லலாம்படியாயிற்று பகவதநுபவத்தாலே பிறந்த வைசத்யம். பனைநிழல்போலே என்னையொருவனையும் நோக்கிக் கொள்ளுகையன்றிக்கே, ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போலேயாம்படி, நான் இருந்த விபூதியிலுண்டான கர்மங்களும் அடைய நசித்த தென்னவுமாம். அங்ஙனுமன்றிக்கே, ‘வியன்ஞாலமென்று – வேறொரு தேசம்போலே யிருக்கச் சொல்லுகையாலே, தாம் “வீற்றிருந்தேழுலகு” அருளிச்செய்கிறது பரமபதத்திலேயிருந்து போலேகாணும்’ என்று அருளிச்செய்வர். பா4வநாப்ரகர்ஷத்தாலே அங்குற்றாராய்த் தோற்றினபடி, திருவுள்ளம் அங்கேயாய். விஸ்மயநீயமான ஞாலமென்னுதல், பரப்பையுடைத்தான ஞால மென்னுதல்.
மூன்றாம் பாட்டு
வீவிலின்பம் மிக எல்லைநிகழ்ந்தநம்அச்சுதன்
வீவில்சீரன்மலர்க்கண்ணன் விண்ணோர்பெருமான்தன்னை
வீவில்காலமிசைமாலைகளேத்தி மேவப்பெற்றேன்
வீவிலின்பம்மிக எல்லைநிகழ்ந்தனன்மேவியே.
ப:– அநந்தரம், மேன்மையாலும் ஸ்ரிய:பதித்வத்தாலும் ஸித்தமான ஆநந்தாதி குணயோகத்தையுடையவனை ஸ்தோத்ரம்பண்ணிக் கிட்டப்பெற்று நிரதிசயாநந்தபூர்ணனானேன் என்கிறார்.
வீவுஇல் இன்பம் – அவிச்சிந்நமான ஆநந்தமானது, மிக எல்லை நிகழ்ந்த – (ஆநந்த வல்லீக்ரமத்திலே அவாங்மநஸகோசரமாம்படி) மிகுதியான எல்லையிலே வர்த்திக்கிற, நம் அச்சுதன் – (ஆகாரத்தை) என்போல்வார்க்கு அநுபவிப்பிக்கிற அப்ரச்யுதஸ்வபா4வனாய், (அத்வாநந்தத்துக்கு அடியாகச் சொல்லப்பட்ட), வீவுஇல் – முடிவில்லாத, சீரன் – யுவத்வாதிநித்யகுண விபூதிவைலக்ஷண்யத்தையுடையனாய், மலர்க்கண்ணன் – (இவ்வதிசயத்துக்கு ஸூசகமாம்படி) புண்டரீகாக்ஷனாய், (இக்கண்ணழகாலே), விண்ணோர் – விண்ணோர்பரவும், பெருமான்தன்னை – தலைமகனானவனை, வீவுஇல் – ஒழிவு இல்லாத, காலம் – காலமெல்லாம், இசை – காநரூபமான, மாலைகள் – ஸந்தர்ப்பத்தாலே, ஏத்தி – ஸ்துதித்து, மேவப்பெற்றேன் – கிட்டப்பெற்றேன்; மேவி – “லப்3த்4வாநந்தீ3ப4வதி” என்கிறபடியே ஆநந்தமயனானவனைக்) கிட்டி, (*ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய” என்னும் கணக்கிலே அவனோடொத்த), வீவுஇல் – முடிவில்லாத, இன்பம் – ஆநந்தத்தினுடைய, மிகஎல்லை – அபரிச்சேத்யமான அபிவ்ருத்திகள், நிகழ்ந்தன – உண்டாயிற்றன. நிகழ்ந்தனமென்று – ப்ரீதியாலே பஹுமாநோக்தியாகவுமாம்.
ஈடு:- மூன்றாம்பாட்டு. ஸமஸ்தகல்யாணகுணாத்மகனாய் உபயவிபூதியுக்தனான ஸர்வேஸ்வரனைக் கிட்டிக் கவிபாடுகையாலே, அவனுடைய ஆநந்தத்தையும் விளாக்குலைகொள்ளும்படியான ஆநந்தத்தையுடையனானேன் என்கிறார்.
(வீவிலின்பம் இத்யாதி) – வீவின்றிக்கே – ஒருவிச்சேதமின்றிக்கேயிருப்பதான தான், இன்பமாய் – ஆநந்தமாய்; அதுதான் எவ்வளவுபோதும்? என்னில், (மிக எல்லைநிகழ்ந்த) ‘இனி இதுக்கு அவ்வருகில்லை’ என்னும்படியான எல்லையிலே வர்த்திக்கிற. (நம்) – ஆநந்தவல்லியில் ப்ரஸித்தி. (அச்சுதன்) – இது ஒரு ப்ரமாணங்கொண்டு உபபாதிக்கவேணுமோ? இதுக்கு ஒருகாலும் விச்சேதமில்லை யென்னுமிடம் திருநாமமே சொல்லுகிறதன்றோ? (வீவில்சீரன்) – இவ்வாநந்தத்துக்கு அடியான நித்யவிபூதியையுடையவன். நித்யமான குணங்களையுடையவனென்றுமாம். குணவிபூதிகள் ஆநந்தாவஹமாயிறே இருப்பது. (மலர்க்கண்ணன்) ஸ்வாபா4விகமான ஆநந்தத்தையுடையவனென்னுமிடம் திருக்கண்கள்தானே கோள்சொல்லிக்கொடுக்கும். (விண்ணோர்பெருமான்தன்னை) – இக்கண்ணழகுக்குத் தோற்று ‘ஜிதம்’ என்பாரை ஒருநாடாக வுடையவனை. “தாமரைக்கண்ணனை விண்ணோர்பரவும் தலைமகனை” (2.6.3) என்னக்கடவதிறே. (வீவில்காலம் இத்யாதி) – க்ஷுத்ரவிஷயங்களை அநுபவிக்கப் புக்கால், அவை அல்பாஸ்திரத்வாதி தோஷதுஷ்டமாகையாலே அநுபவிக்கும் காலமும் அல்பமாயிருக்கும்; இங்கு, அநுபாத்யவிஷயம் அபரிச்சிந்நமாகையாலே காலமும் அநந்தகாலமாகப் பெற்றது. “ஒழிவில்காலமெல்லாம்” (3.3.1) என்ன வேண்டியிருக்கும். (இசைமாலைகள்) வாசிகமான அடிமையிறே செய்கிறது. “கருமுகைமாலை” என்னுமாபோலே, இசையாலே செய்த மாலை. (ஏத்திமேவப்பெற்றேன்) – ஏத்திக்கொண்டுகிட்டப்பெற்றேன். இத்தால் பலித்தது என்? என்னில், – (வீவிலின்பம்மிக எல்லைநிகழ்ந்தனன்) – நித்யமாய் நிரதிசயமான ஆநந்தத்தையுடையேனானேன். அவனுடைய ஆநந்தத்தையும் உம்முடைய ஆநந்தத்தையும் ஒக்கச்சொன்னீர்; பின்னை உமக்கு வாசியென்? என்னில், – சிறிது வாசியுண்டு எனக்கு; (மேவியே) – அவனுக்கு ஸ்வத:, எனக்கு அவனை மேவி; அவனுடைய ஆநந்தத்துக்கு அடியில்லை, என்னுடைய ஆநந்தத்துக்கு அடியுண்டு. “ஏஷஹ்யேவாநந்தயாதி” என்கிற ஏற்றமுண்டு எனக்கு, அவனுக்கு அது தான்தோன்றி.
நான்காம் பாட்டு
மேவிநின்றுதொழுவார் வினைபோகமேவும்பிரான்
தூவியம்புள்ளுடையான் அடலாழியம்மான்தன்னை
நாவியலால்இசைமாலைகளேத்தி நண்ணப்பெற்றேன்
ஆவியென்னாவியை யானறியேன்செய்தவாற்றையே.
ப:- அநந்தரம், போக்தாக்களான அநந்யப்ரயோஜநரைக் காத்துஊட்டும் வாஹநாயுதா4திகளையுடையவனை ஸ்துதித்துக் கிட்டப்பெற்றேன் என்கிறார்.
மேவி – (அநந்யப்ரயோஜநராய்க்) கலந்து, நின்று – நிலைநின்று, தொழுவார் – அநுபவிப்பாருடைய, வினை – (அநுபவவிரோதி) பாபங்கள், போக – (ஸ்வயமேவ) நசிக்கும்படி, மேவும் – (தான் அவர்களோடே) ஸம்ஸ்லேஷிக்கும், பிரான் – மஹோபகாரகனாய், தூவி – (*அஞ்சிறைப்புள்ளுமொன்றேறிவந்தார்” என்கிறபடியே இவர்களிருந்தவிடத்தே தன்னைக் கொண்டுவருவதான) பக்ஷபாதத்தையும், அம் – அழகையுமுடைய, புள் – பெரியதிருவடியை, உடையான் – வாஹநமாகவுடையனாய், அடல் – (*கைகழலாநேமியான் நம்மேல் வினைகடிவான்” என்கிறபடியே ஆஸ்ரிதவிரோதி நிரஸநார்த்தமாக) யுத்தோந்முகமான, ஆழி – திருவாழியையுடையனான, அம்மான்தன்னை – ஸர்வேஸ்வரனை, நா – நாவினுடைய, இயலால் – வ்ருத்தியாலே, இசை – காநரூபமான, மாலைகள் – ஸந்தர்ப்பங்களையிட்டு, ஏத்தி – ஏத்துகையாகிற, நண்ண – நண்ணுதலை, பெற்றேன் – பெற்றேன்; ஆவி – எனக்கு அந்தராத்மபூதனாய் தா4ரகனானவன், என் – (தனக்கு சரீரமான) என்னுடைய, ஆவியை – ஆத்மாவை, செய்த ஆற்றை – ஸ்துதிப்பித்து உகப்பித்து விரும்புகிற ப்ரகாரம், யான் – நான், அறியேன் – (*ஏவம் வித4ம்” என்று) பரிச்சேதித்து அறியமாட்டுகிறிலேன். அறிவும் ஆழங்காற்படுகைக்கு உறுப்பாயிற்று என்று கருத்து.
ஈடு:- நாலாம்பாட்டு. அநந்யப்ரயோஜநரையும், முதலிலே ப்ரயோஜநாந்தரங்களில் இழியாத நித்யஸூரிகளையுமுடையனாய்வைத்து, நித்யஸூரிகளுக்கு அவ்வருகான தான் நித்ய ஸம்ஸாரியான என்பக்கல் பண்ணின மஹோபகாரம் என்னால் பரிச்சேதிக்கவொண்கிற தில்லை என்கிறார்.
(மேவிநின்றுதொழுவார்) – கிட்டக்கொண்டு (தேஹிமே ததாமிதே) என்று ப்ரயோஜநாந்தரத்துக்கு மடியேற்றுக்கொண்டு போகையன்றிக்கே, “வழுவாவகை நினைந்துவைகல்தொழுவார்” (முதல் திரு.26) என்கிறபடியே அவன்தன்னையே ப்ரயோஜநமாகக் கொண்டு தொழுமவர்கள். “இன்றுவந்தித்தனையும் அமுதுசெய்திடப்பெறில்” (நாச்.திரு.9.7) என்று தொழுமவர்கள். (வினைபோக) – அவர்களுக்குப்பின்னை வினையுண்டோ? என்னில்; ப்ரயோஜநாந்தரத்திலே நெஞ்சு செல்லுகைக்கு அடியான பாபங்கள் போம்படியாக. (மேவும் பிரான்) – இவன் அநந்யப்ரயோஜநனாகக் கிட்டினவாறே அவனும் அநந்யப்ரயோஜநனாய்க் கிட்டுமே; நடுவு வினைக்கு ஒதுங்க நிழலில்லாமையாலே நசித்துப்போம்; “வல்வினையார்தாம் – மடியடக்கி நிற்பதனில் – மீண்டு அடியெடுப்பதன்றோ அழகு” (பெரிய திருவ.30) என்றாரிறே. (பிரான்) – உபகாரமேலமாம்படி யிருக்குமவன். முன்பு சிலநாள் ப்ரயோஜநாந்தரபரராய்ப் பின்பு தன்னையே ப்ரயோஜநமாக விரும்பினார் திறத்தில் உபகரிக்கும்படி சொல்லிற்று; முதலிலே ப்ரயோஜநாந்தரத்தில் நெஞ்சுசெல்லாதபடியான அநந்தவைநதேயாதிகளையுடையனா யிருக்கும்படி சொல்லுகிறது. (தூவி) – சிறகு. இத்தால் நினைத்தவிடத்திலே கொண்டு ஓடுகைக்கு அடியான பரிகரத்தையுடையனாய். (அம்புள்) – (த்வதங்க்ரிஸம்மர்த்த கிணாங்கசோபிநா) என்னும்படியான அழகையுடையனாகையால் வந்த ஏற்றத்தையுடையவன். (அடலாழி) – அஸ்தாநே பயசங்கியாகையாலே எப்போது மொக்க யுத்3தோ4ந்முக2னாயிருக்கும். அடல் – மிடுக்கு. (அம்மான் தன்னை) – பெரியதிருவடி திருத்தோளிலே பேராதிருத்தல், திருவாழியைச் சலியாதே பிடித்தல் செய்ய வல்லனாயிற்று – ஸர்வாதிகனாவான். (நாவியலாலிசைமாலைகளேத்தி) – நெஞ்சுஒழியவே, வாக்ப்ரத்ருத்திமாத்ரமே இசைமாலைகளாயிற்றின. நாப்புரட்டினதெல்லாம் இயலும் இசையுமாய்க் கிடக்கை. (ஏத்திநண்ணப்பெற்றேன்) – இவர், நண்ணியல்ல ஏத்திற்று; ஏத்தியாயிற்று நண்ணிற்று. (ஆவியென்னாவியை – செய்தவாற்றை – யானறியேன்) – ஆவி – நிருபாதிகனான ஸர்வாத்மா. “உலகங்கட்கெல்லாம் – ஓருயிர்*, (8.1.5) “ஆத்மநஆகாசஸ்ஸம்பூ4த:*, “ஸர்வாத்மா*. (என்னாவியை) – அத்யந்தம் நிஹீநனான என்னை. (செய்தவாற்றை அறியேன்) – விபுவான தான் அணுவான என்னை, (ஏஷஹ்யேவாநந்தயாதி) “வீவிலின்பம்மிகவெல்லைநிகழ்ந்தனன்” (4.5.3) என்று தன்னோடொத்த ஆநந்தத்தையுடையேனாம்படி பண்ணினான். ஸர்வசரீரியானவன் ஸ்வசரீரத்திலே ஒன்றைப் பெறாப்பேறு பெற்றானாகத் தலையாலே சுமப்பதே! (யான்அறியேன்) – அநுபவித்துக் குமிழிநீருண்டு போமித்தனை போக்கி, அது பேச்சுக்கு நிலமல்ல என்கிறார். உபகாரஸ்ம்ருதியும் அவனது என்னவுமாம்.
ஐந்தாம் பாட்டு
ஆற்றநல்லவகைகாட்டும் அம்மானை அமரர்தம்
ஏற்றை எல்லாப்பொருளும்விரித்தானைஎம்மான்தன்னை
மாற்றமாலைபுனைந்தேத்தி நாளும்மகிழ்வெய்தினேன்
காற்றின்முன்னம்கடுகி வினைநோய்கள்கரியவே.
ப:– அநந்தரம், அநுபவோபகரணமான ஜ்ஞாநாதிகளைக் கொடுத்து அநுபவிப்பிக்கும் ஸர்வேஸ்வரனை, ஸகலக்லேஶமும் ஸகாரணமாகச் சடக்கென ஸ்வயமேவ நஸிக்கும்படி ஸ்துதிக்கப்பெற்றேன் என்கிறார்.
(ஆஸ்ரயாநுரூபமாக), ஆற்ற – பொறுக்கும்படி, நல்ல – (அநுபவோபகரணமாம்படி) விலக்ஷணமாயுள்ள, வகை – (ஜ்ஞாநபக்திகள் பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளாகிற) ப்ரகாரங்களை, காட்டும் – (போக்தாக்களுக்கு) ப்ரகாசிப்பிக்கும், அம்மானை – நிருபாதிகஸ்வாமியாய், அமரர்தம் – (இந்தப்ரகாரமுடையாரை) நித்யஸூரிகளநுபவிக்குமாபோலே அநுபவிப்பிக்கும், ஏற்றை – செருக்கையுடையனாய், (கீதோபநிஷந்முகத்தாலே) எல்லாப்பொருளும் – இவ்வர்த்த விசேஷங்களை, விரித்தானை – விஸ்தீர்ணமாக உபதேசித்து, எம்மான் தன்னை – எனக்கு நிர்ஹேதுகமாக உபகரித்த ஸ்வாமியானவனை, வினை – (ஜ்ஞாநப்ரேமாதிப்ரதிபந்தகங்களான) பாபங்களும், நோய்கள் – (ராகத்வேஷாதி) மஹாத்யாதிகளும், காற்றின் – (சீக்ரகா3மியான) காற்றுக்கு, முன்னம் – முற்பட, கடுகி – சடக்கென ஓடிப்போய், கரிய – (*அக்3நௌப்ரோதம்” என்கிறபடியே) வெந்து போம்படியாக, மாற்றம் மாலை – சப்தஸந்தர்ப்பங்களை, புனைந்து – நிர்மித்து, ஏத்தி – ஸ்தோத்ரம்பண்ணி, நாளும் – ஸர்வகாலமும், மகிழ்வு எய்தினேன் – மகிழ்ச்சியைப்பெற்றேன். மாற்றம் – சப்தம். புனைதல் – தொடுத்தல்.
ஈடு:- அஞ்சாம்பாட்டு. தான் ஸர்வாதிகனாய்வைத்து அர்ஜுநனுக்கு ஸர்வார்த்தங்களையும் ஸாத்மிக்க ஸாத்மிக்க அருளிச்செய்தாற்போலே எனக்குத் தன்படிகளைக் காட்ட, கண்டு அநுபவித்து நான் என்னுடைய ப்ரதிபந்தகங்களெல்லாம் போம்படி திருவாய்மொழிபாடி நிரதிஶயாநந்தியானேன் என்கிறார்.
(ஆற்ற) – அமைய. பொறுக்கப்பொறுக்க. குளப்படியிலே கடலை மடுத்தாற்போலே யன்றிக்கே, ஸாத்மிக்க ஸாத்மிக்கவாயிற்று, தன்கல்யாணகுணங்களை அநுபவிப்பித்தது. “இந்நின்றநீர்மை யினியாமுறாமை” (திருவிரு.1) என்ற அநந்தரத்திலே “வீற்றிருந்தேழுலகி” லநுபவத்தை அநுபவிப்பித்தானாகில், என்னைக் கிடையாதுகிடீர். (நல்லவகைகாட்டும்) – தன்குணசேஷ்டிதங்களை அநுபவிப்பிக்கும். (அம்மானை) – உடையவன் உடைமையின்நிலையறிந்தன்றோ நடத்துவது. (அமரர்தம் ஏற்றை) – க்ஷுத்ரவிஷயங்களையும் உண்டறுக்கமாட்டாதே போந்த என்னைக்கிடீர் நித்யஸூரிகள் நித்யாநுபவம்பண்ணுகிற தன்னை அநுபவிப்பித்தது. தனக்கு ஒருகுறையுண்டாயன்று, போக்தாக்கள்பக்கல் குறையுண்டாயன்று; தான் ஸர்வேஸ்வரனாவது, தன்படிகளை அநுபவிப்பிக்க நித்யஸூரிகளையுடையனாவது; இப்படியிருக்கக்கிடீர் என்னையநுபவிப்பித்தது. (எல்லாப் பொருளும்) – தம்மையநுபவிப்பித்த ப்ரகாரத்தைச் சொல்லுகிறார். முதல்வார்த்தையிலே ‘தர்மாதர்மங்கள் இன்னதென்று அறிகிறிலேன், (சிஷ்யஸ்தேஹம் சாதிமாம்த்வாம்ப்ரபந்நம்) என்ற அர்ஜுநனுக்கு ப்ரக்ருதிபுருஷவிவேகத்தைப் பிறப்பித்து, கர்மயோகத்தை விதித்து, ‘அதுதன்னை, கர்த்ருத்வத்தைப்போகட்டுப் பலாபிஸந்திரஹிதமாக அநுஷ்டி’ என்று, அநந்தரம் ஆத்மஜ்ஞாநத்தைப் பிறப்பித்து, அநந்தரம் பகவத்ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து, அநவரதபா4வநாரூபமான உபாஸநக்ரமத்தையறிவித்து, இவ்வளவும் கொண்டு போந்து இதின் அருமையை இவன்நெஞ்சிலே படுத்தி, ‘இவை அசக்யம்’ என்று சோகித்தவநந்தரம் ‘ஆகில், என்னைப்பற்றி நிர்ப்பரனாயிரு’ என்று தலைக்கட்டினாற்போலேயாயிற்று, க்ரமத்தாலே தன் குணசேஷ்டிதங்களை இவரையநுபவிப்பித்தபடி. (எம்மான்தன்னை) – அர்ஜுநனுக்கு பலித்ததோ இல்லையோ, அறியேன்; அந்த உபதேசப2லம் நான்பெற்றேன். அவனும் இவ்வர்த்தத்தைக் கேட்டவநந்தரம் “ஸ்தி2தோஸ்மி” என்னச்செய்தேயும், ‘நூநம்ஸம்சயோஸ்தி’ என்றானிறே; உபதேசிக்கிறவனும் ஸர்வஸாதாரணனாய் உபதேசிக்கிற அர்த்தமும் ஸர்வஸாதாரணமாகையாலே, அதறிந்த இவர்க்குப் பலித்ததென்னத் தட்டில்லையிறே; “விட்டுசித்தர் கேட்டிருப்பர்” (நாச்.திரு. 11.10) என்னக் கடவதிறே. இவர் ‘மநோரத’த்திலே நின்றுபோலேகாணும் அருளிச்செய்தது. (மாற்றமாலை புனைந்தேத்தி) – சொன்மாலையைத் தொடுத்தேத்தி. அவன்பண்ணின உபகாரத்திலே தோற்று ஏத்தினார், அது திருவாய்மொழியாய்த் தலைக்கட்டிற்று. மாற்றம் – சொல்லு. (நாளும்மகிழ்வெய்தினேன்) – நித்யாநந்தியானேன். எய்துகை – கிட்டுகை. இப்படி பெரியபேற்றைப் பெற்றீராகில் விரோதி செய்தது என்? என்ன, (காற்றின்முன்னம்கடுகி வினைநோய்கள்கரியவே) – வினைகளும் வினைப்பயனான ஜந்மங்களும் காற்றிற்காட்டிலும் கடுகி தக்தமாயிற்றின. புதுப்புடைவை அழுக்குக்கழற்றுமாபோலே, க்ரமத்தாலே போக்கவேண்டுவது தானேபோக்கிக்கொள்ளப் பார்க்குமன்றிறே; அவன் போக்குமன்று அவனுக்கு அருமைப்படவேண்டாவே; “வினைப்படலம்விள்ளவிழித்து” (பெரிய திருவ.76) என்கிறபடியே, ஒருகால் பார்த்துவிட அமையுமே (மேருமந்தர) இத்யாதி. நிதாநஜ்ஞனான பி4ஷக்கைக் கிட்டின வ்யாதிபோலேயிறே ஸர்வேஸ்வரனைக் கிட்டினால் இவை நசிக்கும்படி. “வானோ மறிகடலோ” (பெரிய திருவ.54) இத்யாதி.
ஆறாம் பாட்டு
கரியமேனிமிசை வெளியநீறுசிறிதேயிடும்
பெரியகோலத்தடங்கண்ணன் விண்ணோர்பெருமான்தன்னை
உரியசொல்லால் இசைமாலைகளேத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியதுண்டோஎனக்கு இன்றுதொட்டும் இனியென்றுமே.
ப:– அநந்தரம், அஸ்கலிதஜ்ஞாந ப்ரேமரானார்க்கு நிரதிசயாநுபா4வ்யமான அழகையுடையவனை ஸ்தோத்ரமுகத்தாலே அநுபவிக்கப்பெற்ற எனக்கு துர்லபமுண்டோ? என்கிறார்.
கரிய – ஸ்யாமளமான, மேனிமிசை – வடிவழகுக்குமேலே, வெளிய நீறு – அஞ்சந சூர்ணத்தை, சிறிதே – அளவில், இடும் – அணிகிற, பெரிய கோலம் – நிரதிசயஸௌந்தர்யயுக்தமாய், தடம் – விஸ்தீர்ணமான, கண்ணன் – கண்ணழகையுடைனாய், (இவ்வழகு வெள்ளத்திலே), விண்ணோர் பெருமான் தன்னை – ஸூரிகளைக் குமிழிநீருட்டும் மேன்மையையுடையனான ஸர்வேஸ்வரனை, உரிய – (இவ்வழகுக்குத்) தகுதியான, சொல்லால் – சொல்லாலேசமைந்த, இசைமாலைகள் – கா3நரூபஸந்தர்ப்பங்களையிட்டு, ஏத்தி – ஸ்துதித்து, உள்ள – அநுபவிக்க, பெற்றேற்கு எனக்கு – பெற்றேனான எனக்கு, இன்று தொட்டும் – (அநுபவாரம்பமான) இன்று தொடங்கி, இனி – இனி, என்றும் – மேலுள்ள காலமெல்லாம், அரியது – துர்லபமாயிருப்பது, உண்டோ – ஓரர்த்தமுண்டோ?
வெளியம் – அஞ்சநம், அன்றியே, ஸ்யாமளமான திருமேனிமேலே “கர்பூரதூ4லீத4வலம்க்ருத்வா தே3வஸ்ய விக்3ரஹம்” என்கிறபடியே அலங்காரார்த்தமான கர்ப்பூரசூர்ணத்தை அளவுபடச் சாத்தின பெரிய ஒப்பனையையுடைய என்றுமாம்.
ஈடு: – ஆறாம் பாட்டு. ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே அடிமைசெய்யவும் பெற்று ப்ரதிபந்தகமும் போகப்பெற்றே னென்றார் – கீழ்; ‘ஆனால், இனி உமக்குச் செய்ய வேண்டுவதென்?’ என்றான் ஈஸ்வரன்; இதுக்குமுன்பு பெறாததாய் இனிப்பெறவேண்டுவதொன்றுண்டோ? என்கிறார் இதில்.
(கரியமேனிமிசை) – மேனியென்று – நிறமாய், திருக்கண்களில் கருவிழியினுடைய கறுத்தநிறத்தால் வந்த அழகுக்குமேலே. “கரியவாகிப்புடைபரந்து” (அமலனாதி. 9) என்னக்கடவதிறே. (வெளியநீறு) – அஞ்சநசூர்ணம். அத்தை அளவேகொண்டு அலங்கரிக்கும். “ஆராரயில்வேற்கண்அஞ்சனத்தின்நீறணிந்து” (சிறியதிரு.10) என்னக்கடவதிறே. (சிறிதே இடும்) – அழகுக்கு இடவேண்டுவதில்லையே, இனி மங்களார்த்தமாகையாலே அளவேயாயிற்று இடுவது. (பெரியகோலம்) – ஒப்பனை வேண்டாதபடி அழகு அளவிறந்திருக்கிறபடி. (தடங்கண்ணன்) – போக்தாக்களளவன்றிக்கே போக்யம் மிக்கிருக்கிறபடி. அதவா, (கரியஇத்யாதி) – கறுத்தநிறத்தாலே வந்த அழகுக்குமேலே அதுக்குப்பரபா4க3மான திருக்கண்களிலே அஞ்சநத்தையிடு மென்றுமாம். அன்றிக்கே, ‘கரிஎன்று – ஆனையாய், அத்தால்நினைக்கிறது – குவலயாபீடமாய், குவலயாபீடமானது, அம்மேனியிலே – அழகியதிருமேனியிலே, வெளிய – சீற, அத்தை, நீறு சிறிதேயிடும் – பொடியாக்கும்’ என்று ஒரு தமிழன் நிர்வஹித்தான். (விண்ணோர்பெருமான்) – இக்கண்ணழகுக்கு போக்தாக்கள் நித்யஸூரிகளாயிற்று. (பெருமான்) – த்ரிபாத்விபூதியாக அநுபவியாநின்றாலும், அநுபூ4தாம்சம் சுருங்கி அநுபாத்யாம்சம் விஞ்சியிருக்கும். (உரிய சொல்லால்) – அவயவசோபை4 அது, போக்தாக்கள் அவர்கள், இப்படியிருந்தால், ‘நாம் பாடுகிற கவிகளுக்கு இது விஷயமன்று’ என்று மீளவிறே அடுப்பது: இப்படியிருக்கச் செய்தேயும், இவ்விஷயத்துக்கு நேரேவாசகமான சொல்லாலே. (இசைமாலைகள்) – ‘ஸம்ஸ்ரவேமதுரம் வாக்யம்’ என்கிறபடியே, திருச்செவிசாத்தலாம் படியிருக்கை. (ஏத்தி உள்ளப்பெற்றேற்கு) – ஏத்தி யநுபவிக்கப்பெற்ற எனக்கு. (அரியது உண்டோ) – (நாநவாப்தமவாப்தத்யம்) என்கிறபடியே. இதுக்கு முன்பு அடையாததாய் இனி எனக்கு அடையப்படுவது ஒன்று உண்டோ? (எனக்கு) – ” ஈஸ்வரோஹம்” என்றிருக்கிற ஸம்ஸாரத்திலே சேஷத்வம் ரஸிக்கப்பெற்று, ஸ்வரூபாநுரூபமாக வாசிகமான அடிமைசெய்யப்பெற்று, ‘வினைநோய்கள்கரிய’ (4.5.5) என்று விரோதி கழியப்பெற்றிருக்கிற எனக்கு. (இன்று தொட்டும் இனியென்றுமே) – அடிமையிலிழிந்த இன்று தொடங்கி இனிமேலுள்ள காலமெல்லாம் அரியதுஇல்லை. (அதஸோபயங்கதோபவதி) என்கிறபடியே, அநந்தரம் “தீர்ப்பாரையாமினி” (4.6) யாவது அறியாமலிறே இவர் இவ்வார்த்தை சொல்லுகிறது.
ஏழாம்பாட்டு
என்றுமொன்றாகி ஒத்தாரும்மிக்கார்களும் தன்தனக்கு
இன்றிநின்றானை எல்லாவுலகும்உடையான்தன்னை
குன்றமொன்றால்மழைகாத்தபிரானைச் சொல்மாலைகள்
நன்றுசூட்டும்விதியெய்தினம் என்னகுறைநமக்கே.
ப:- அநந்தரம், ஸமாப்யதிகரஹிதையான போக்யதையையுடைய க்ருஷ்ணனை ஸ்துதிக்கப்பெற்ற எனக்கு என்னகுறையுண்டு? என்கிறார்.
என்றும் – (பரத்வத்தோடு அவதாரத்தோடு வாசியற) ஸர்வாவஸ்தையிலும், ஒன்று ஆகி – ஒரு ப்ரகாராந்வயியாய்க் கொண்டு, ஒத்தாரும் – ஸமராயும், மிக்கார்களும் – அதிகராயுமிருப்பார், தன்தனக்கு – தன்னுடைய நிரதிசயபோக்யமான ஸௌலப்யாதிகளாகிற அஸாதாரணாகாரத்துக்கு, இன்றி – இன்றியிலே, நின்றானை – நின்றவனாய், (*க்ருஷ்ணஸ்யஹிக்ருதே” என்கிறபடியே அந்நிலையிலே), எல்லாவுலகும் – ஸமஸ்தலோகத்தையும், உடையான் தன்னை – தனக்கு சேஷமாகவுடையனாய், மழை – (சேஷவஸ்துக்களுக்கு இந்த்ரனால் வந்த) வர்ஷாபத்தை, குன்றம் ஒன்றால் – (கண்டதொரு) மலையாலே, காத்த – காத்த, பிரானை – மஹோபகாரகனானவனை, சொல் மாலைகள் – சப்தமயமான மாலைகளை, நன்று சூட்டும் – அவன் ஆதரித்துச் சூடும்படி பண்ணுகைக்கீடான, விதி – (அவன் க்ருபாரூபமான) பாக்யத்தை, எய்தினம் – கிட்டப்பெற்றோம்; நமக்கு – நமக்கு, என்ன குறை – ஒரு குறையுண்டோ?
அத்தலையில் க்ருபையில் குறையுண்டாகிலிறே இத்தலையில் பேற்றிற் குறையுண்டாவது என்று கருத்து. விதி – தப்பவொண்ணாத க்ருபையை நினைக்கிறது. நமக்கு என்கிற பன்மை – பஹுமாநத்தாலே, ஆத்மநி ப3ஹுவசநம்.
ஈடு:– ஏழாம்பாட்டு. ‘அரியதுண்டோ எனக்கு (4.5.6) என்கிற இப்பூர்த்தி உமக்கு எத்தாலே வந்தது?’ என்ன, ‘பகவத்க்ருபையாலே வந்தது’ என்கிறார்.
(என்றும்) – எல்லாக்காலமும். (ஒன்றாகி ஒத்தாரும் மிக்கார்களும்) – எல்லாங்கூடின ஸமுதாயத்துக்கு ஒப்பில்லாமையேயன்றிக்கே, ஓரோவகைக்கும் ஓர் ஒப்பு இன்றிக்கேயிருக்கும்; (நதத்ஸமஸ்ச) என்கிறபடியே, ஒருப்ரகாராந்வயியாய்க் கொண்டு ஸமராயும் அதிகராயுமிருப்பார். (தன் தனக்கு இன்றிநின்றானை) – எம்பெருமானார் தெற்கே எழுந்தருளின நாளிலே ஆளவந்தார் மகனார் சொட்டைநம்பி ப்ரஸாதித்த வார்த்தை: “தன் தனக்கு என்றது – தானான தனக்கு என்றபடி. ஒருவகைக்கு ஒப்பின்றிக்கேயிருக்கிறது பரத்வத்திலல்ல; (ஆத்மாநம் மாநுஷம் மந்யே) என்கிறபடியே – அவதரித்து மனிச்சு ஏறிட்டுக் கொண்டு நிற்கிறநிலையிலே” என்றாராம். (எல்லாவுலகுமுடையான் தன்னை) – ஸர்வலோகேஸ்வரனான க்ருஷ்ணனை. (க்ருஷ்ணஏவஹிலோகாநாம்) இறே. இப்படி எல்லாவற்றையுமுடைய செருக்காலே, உடைமை நோவுபடவிட்டுப் பார்த்திருக்குமோ? என்னில், (குன்றம் இத்யாதி) – இந்த்ரன் பசிக்கோபத்தாலே பசுக்களும் இடையரும் தொலைய வர்ஷித்தபோது, தோற்றிற்று ஒரு மலையை எடுத்து அந்த ஆபத்தை ரக்ஷித்த உபகாரகனை. ‘தீமழை’ (7.4.10)யிறே. (சொல்மாலைகள் இத்யாதி) – பரத்வத்தில்வந்தால் குணஸத்பா4வமிறே உள்ளது, அவதரித்தவிடத்தேயிறே அது ப்ரகாசிப்பது; இப்படி விஷயம் பூர்ணமானால் ‘பேசவொண்ணாது’ என்று மீளுகையன்றிக்கே, இந்நிலையிலே விளாக்குலைகொண்டு பேசும்படியானேன். சொல்மாலைகள் நன்று சூட்டும்படியான பாக்யத்தை ப்ராபிக்கப்பெற்றோம். இவர் இப்போது, ‘விதி’ என்கிறது – பகவத்கிருபையை. தமக்குப் பலிக்கையாலும், அவனுக்குத் தவிரவொண்ணாதாகையாலும் – ‘விதி’ என்கிறார். *”விதிசூழ்ந்ததால்” (2.7.6) என்றதிறே. (என்னகுறை நமக்கே) – ‘நக்ஷமாமி’க்கு இலக்காகாதே க்ருபைக்கு விஷயமான நமக்கு ஒருகுறையுண்டோ? நமக்கு ஒருகுறையுண்டாகையாவது – க்ருபையைப் பரிச்சிந்நமாக்குகையிறே. “ஸ” “(ஸ:) – ரக்ஷணமே ஸ்வரூபமாயிருக்குமவர். (தம்) – ப்ராதிகூல்யத்திலே முதிர நின்றவனை. (நிபதிதம்பூமௌ) – தேவத்வத்தாலே தரையில் கால்பாவாதவன் போக்கற்றுத் தரையிலே வந்து விழுந்தான். ப்ரஜை தீம்புசெய்தால் பிதா சிக்ஷிக்கத் தொடர்ந்தால் மாதாவின்காலிலே விழுமாபோலே காணும், இவன் பூமியிலே விழுந்தது. (சரண்ய) – ஏதேனும் தசையிலும் சரணவரணார்ஹரானவர். (*சரணாக3தம்*) – கண்வட்டத்திலே அநந்யகதித்வம் தோற்றவிழுந்துள்ளவனை. (வதார்ஹமபி) – பெருமாள் ஸித்தாந்தத்தாலும் வதார்ஹனே. (காகுத்ஸ்த்த:) – குடிப்பிறப்பால்வந்த நீர்மையாலே ரக்ஷித்தார். ‘குடிப்பிறப்பு தண்ட்யரை தண்டிக்கைக்கும் உடலாயிராதோ?’ என்னில், (க்ருபயா) – நாம் தொடங்கின கார்யம் ப்ரபலகர்மத்தால் தலைக்கட்டவொண்ணாதாப்போலே, அவரும் க்ருபாபரதந்த்ரராகையாலே நினைத்தவை தலைக்கட்டமாட்டார். அவன் க்ருபை விளையும் பூ4க3தனானான், அதுக்குமேலே க்ருபை விளைந்தது, இனி அவர் எவ்வழியாலே தண்டிப்பர்?” (என்னகுறைநமக்கே) – எனக்குக் குறை யுண்டாகையாவது – அவன் க்ருபை பரிச்சிந்நவிஷயமாகையிறே.
எட்டாம் பாட்டு
நமக்கும்பூவின்மிசைநங்கைக்கும்இன்பனை ஞாலத்தார்
தமக்கும்வானத்தவர்க்கும்பெருமானைத் தண்தாமரை
சுமக்கும்பாதப்பெருமானைச்சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்கவல்லேற்கு இனியாவர்நிகர்அகல்வானத்தே.
ப:– அநந்தரம், உபயவிபூதியுக்தனான ஸர்வேஸ்வரனை ஸ்துதிக்கிற எனக்குப் பரமபதவாஸிகளில் ஸத்ருசருண்டோ? என்கிறார்.
நமக்கும் – (அநாத்யஜ்ஞாநாதி ஸம்ஸர்க்கத்தாலே நித்யஸம்ஸாரிகளுக்கும் இவ்வருகான) நமக்கும், பூவின்மிசை நங்கைக்கும் – பூவிற்பிறப்பால்வந்த போக்யதையாலும் ஆத்மகுணபூர்த்தியாலும் நித்யஸூரிகளுக்கும் அவ்வருகான பிராட்டிக்கும், இன்பனை – (தன்போக்யதாதிசயத்தாலே) ஆநந்தஜநகனானவனாய், (இவ்விரண்டாகாரத்துக்கும் உபபாதகமாய்), ஞாலத்தார்தமக்கும் – (அவிசேஷஜ்ஞரான) லீலாவிபூதியிலுள்ளாரோடு, வானத்தவர்க்கும் – (விசேஷஜ்ஞரான) பரமபதவாஸிகளோடு வாசியற, பெருமானை – நிருபாதிகமான ஸர்வசேஷித்வத்தையுடையனாய், (இந்தபோக்யதைக்கும் மேன்மைக்கும் மேலே ஸௌந்தர்யஸௌகந்த்ய ஸௌகுமார்ய லாவண்யாதி குணங்களுக்குத் தோற்று), தண் – செவ்வியையுடைய, தாமரை – தாமரை, சுமக்கும் – சுமக்கும்படியான, பாதம் – திருவடிகளையுடையனான, பெருமானை – ஸர்வாதிகனை, (இவ்வாகாராநுஸந்தாநத்தாலே உடைகொலைப்படாதே), சொல்மாலைகள் – சப்தஸந்தர்ப்பங்களை, சொல்லும்ஆறு – சொல்லும்படியாக, அமைக்க வல்லேற்கு – (என்னை அமைத்து) தரிக்கவல்ல எனக்கு, அகல் – அதிவிஸ்தீர்ணையான, வானத்து – த்ரிபாத்விபூதியில், யாவர் – (அவிகாராகாரராய் அநுபவிக்கிறவர்கள்) ஆர்தான், இனி – இனி, நிகர் – ஒப்பார்?
இந்தளத்தில் தாமரைபோலே இருள்தருமாஞாலத்திலே அநுபவிப்பார்க்கு, தெளிவிசும்பிலநுபவிப்பார் ஸத்ருசரல்லர்க ளென்று கருத்து.
ஈடு:– எட்டாம்பாட்டு. எம்பெருமானுக்குத் தம்பக்கலுண்டான ஸங்காதிசயத்தை அநுஸந்தித்து, அவனுடைய உபயவிபூதியோகத்துக்கும் ஸௌகுமார்யத்துக்கும் தகுதியாகக் கவிசொல்லவல்ல எனக்குத் திருநாட்டிலும் நிகரில்லை யென்கிறார்.
(நமக்கும்) – இன்று தன்திருவடிகளை ஆஸ்ரயித்த நமக்கும். நித்யஸம்ஸாரிகளுக்கும் இவ்வருகாயிருக்கிற நமக்கும். “நீசனேன் நிறைவொன்றுமிலேன்” (3.3.4) என்றாரிறே. (பூவின்மிசை நங்கைக்கும்) – நித்யஸூரிகளுக்கும் அவ்வருகாய், ரூபகுணத்தாலும் ஆத்மகுணத்தாலும் பூர்ணையாயிருக்கிறவளுக்கும். (பூவின்மிசைநங்கை) – புஷ்பத்தில் பரிமளத்தை வகுத்தாற்போலே யிருந்துள்ள ஸௌகுமார்யத்தையும் போக்யதையையும் உடையவள். இத்தலை நிறைவின்றியிலே யிருக்கிறாப்போலேயாயிற்று, அத்தலை குறைவற்றிருக்கிறபடி. (இன்பனை) – இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பாயிற்று அவளுக்கு ஸ்நேஹித்திருப்பது. “த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம” – “பெருமாள் எழுந்தருளி நிற்கச்செய்தே ராவணன் கோபுரசிகரத்திலே வந்து தோற்றினவாறே, ‘ராஜத்ரோஹியான பையல் திருமுன்பே நிற்கையாவதென்?’ என்று மஹாராஜர் அவன்மேலே எழப்பாய்ந்து வென்றுவந்தபோது பெருமாள் அருளிச்செய்கிறார்; “ஏவம் ஸாஹஸயுக்தாநி ந குர்வந்தி ஜநேஸ்ரா:” சிலர்மேல்விழ வேண்டினால், பரிகரபூதர் நிற்க ப்ரதாநரோ மேல்விழுவார்? (லோகநாத2 புராபூ4த்வா ஸுக்ரீவந் நாதமிச்சதி) – கிடைப்பது கிடையாதொழிவது, இச்சியாநின்றார். “ஸுக்3ரீவம் சரணம்க3த:” – ‘ஸ்ரீவிபீஷணாழ்வானைப் புகுரவொட்டேன்’ என்றார், மஹாராஜர்; ‘இவன் புகுராவிடில் நாம் உளோமாகோம்’ என்கிறார் பெருமாள்; இப்படி இருவரும் விப்ரதிபத்திபண்ணின இதுக்குக் கருத்தென்?’ என்று சீயர் கேட்க, ‘இருவரும் சரணாகதரானவர்களை விடோம் என்று விப்ரதிபத்திபண்ணுகிறார்கள்காணும்’ என்று பட்டர் அருளிச்செய்த வார்த்தை. “ஸுக்3ரீவம்சரணங்க3த:” என்றத்தை நடத்தப்பார்த்தார் மஹாராஜர்; (ராகவம்சரணங்கத:) என்றத்தை நடத்தப்பார்த்தார் பெருமாள்; ஆகையிறே, “ஆநய” என்று – அவரை இடுவித்து அழைத்துக்கொள்ளவேண்டிற்று. “த்வயி கிஞ்சித் ஸமாபந்நே” – ‘நீர் மஹாராஜரான தரம் குலைய அவன் ஒருவார்த்தை சொல்லுமாகில், நீர் தேடிப்போகிற சரக்குத்தான் நமக்கு என்செய்ய?’ என்றாரிறே.” ‘இப்படி அவன் இருக்கைக்கு அடியென்?’ என்னில், (ஞாலத்தார் இத்யாதி) – இப்படி நெடுவாசிபட்ட விஷயங்களிலே ஸ்நேஹம் ஒத்திருக்கைக்குஅடி, இரண்டிடத்திலுள்ளாரோடும் ஒத்திருக்கச்செய்தே ப்ராப்தி, இவர் படுக்கைப்பற்றிலுள்ளவராகையாலே. அவன் சேஷியான நிலையும் இத்தலை பரதந்த்ரமான நிலையும் ஒத்திருக்கையாலே. மாதாபிதாக்கள் ப்ரஜைகளில் குறைவாளர்பக்கலிலேயிறே இரங்குவது; அத்தாலே ஸம்ஸாரிகள் முற்பட வேண்டுகிறது. அவ்விபூதியும் உண்டாயிருக்கவிறே, (ஸ ஏகாகீ ந ரமேத) என்கிறது. (தண்தாமரைசுமக்கும் பாதப்பெருமானை) – குளிர்ந்த ஆஸநபத்மத்தாலே தரிக்கப்பட்ட திருவடிகளையுடைய ஸர்வஸ்வாமியை. குளிர்த்தியாலும் பரிமளத்தாலும் செவ்வியாலும் தாமரை திருவடிகளுக்குத் தோற்றுச் சுமக்கிறாப்போலேயாயிற்று இருக்கிறது. “தாமரைநின்கண்பாதம்கைவ்வா” (3.1.2) என்றதிறே. (சொல்மாலைகள்) – “ஸர்வேஸ்வரன் ‘ஆழ்வீர்! நம்மை ஒருகவி சொல்லும்’ என்றால், அப்போதே கவிசொல்லிச் சமையும்படியாக வல்ல எனக்கு என்கிறார்” என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும்படி; அங்ஙனன்றிக்கே, பட்டர், “என்னாகியே தப்புதலின்றித் தனைக் கவிதான்சொல்லி” (7.9.4) என்கிறபடியே ஸர்வேஸ்வரன் கவிபாடினானாகையாலே கவிபாடத் தட்டில்லை; அவன் அங்கீகரித்துத் திருக்கண்களாலே குளிரக்கடாக்ஷித்து, ‘நீர் ஒருகவி சொல்லும்’ என்றால், ப்ரீதியாலே உடைகுலைப்படாதே தரித்துநின்று சொல்லவல்லேனான எனக்கு” என்று அருளிச்செய்வர். அவனுடைய உபயவிபூதியோகத்தால் வந்த ஐஸ்வர்யத்துக்கும் ஸௌகுமார்யத்துக்கும் தகுதியாம்படியான கவிபாடவல்ல எனக்கு. (இனி யாவர்நிக ரகல்வானத்தே) – பரமபதத்திலே தரித்துநின்று, (அஹமந்நமஹமந்நமஹமந்நம்) என்னுமவர்கள் எனக்கு என்கொண்டார்? த்ரிபாத்விபூதியாய்ப் பரப்புடைத்தாம் அத்தனையோ வேண்டுவது? ‘தெளிவிசும்பா’ (9.7.5) கையாலே அந்நிலம் தானே சொல்லுவிக்கும், ‘இருள்தருமாஞால’ (10.6.1) மாகையாலே இந்நிலம் அத்தைத் தவிர்ப்பிக்கும்; “சீதனையேதொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்” (திருவிரு.79) என்னக்கடவதிறே.
ஒன்பதாம் பாட்டு
வானத்தும்வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும்மண்ணின்கீழ்த்
தானத்தும் எண்திசையும்தவிராதுநின்றான்தன்னை
கூனற்சங்கத்தடக்கையவனைக் குடமாடியை
வானக்கோனைக் கவிசொல்லவல்லேற்கு இனிமாறுண்டே.
ப:- அநந்தரம், வ்யாப்திதசையோடு அவதாரதசையோடு வாசியற விளாக்குலை கொண்டு ஸ்துதிக்கவல்ல எனக்கு ஸத்ருசருண்டோ? என்கிறார்.
வானத்தும் – ஆகாச சப்தவாச்யமான ஸ்வர்க்கத்திலும், உள் வானத்து – ஊர்த்வாகாசவர்த்திகளான, உம்பரும் – உபரிதநலோகங்களிலும், மண்ணுள்ளும் – பூமிக்குள்ளும், மண்ணின்கீழ் தானத்தும் – பூமியின்கீழ் பாதாளஸ்தாநங்களிலும், எண் திசையும் – (இவற்றிலுண்டான தேவாதி ஜாதிபேதத்தாலும் ப்ராஹ்மணாதி வர்ணபேதத்தாலும்) அஷ்டவிதமான பதார்த்தங்களிலும், தவிராது – ஒன்றும் நழுவாதபடி, நின்றான்தன்னை – வ்யாபித்துநின்ற ஸ்வரூபத்தையுடையனாய், (இப்படி முகந்தோன்றாமேநின்று ரக்ஷிக்கையன்றியே), கூன் – புடையுடைமையாலே கூனியாய், நல் – தர்சநீயமான, சங்கம் – ஸ்ரீபாஞ்சஜந்யத்தையுடைய, தட – பெரிய, கையவனை – திருக்கையையுடையனாய், குடமாடியை – குடக்கூத்துமுகத்தாலே ஸர்வஜநமநோஹாரியான சேஷ்டிதங்களையுடையனாய், (இந்நிலையிலே), வானம்கோனை – நித்யஸூரிகளும் அநுபவிக்கும் மேன்மையையுடையனானவனை, (வ்யாப்தியோடு அவதாரத்தோடு சேஷ்டிதத்தோடு பரத்வத்தோடு வாசியறக் கபளீகரித்து), கவி சொல்ல வல்லேற்கு – கவி சொல்லவல்ல எனக்கு, இனி – இனி, மாறு – எதிர், உண்டே – உண்டோ?
ஓரோராகாரத்தை ஸ்துதிக்கப்புக்குப் பிற்காலிக்கும் உபயவிபூதியிலும் எதிரில்லையென்று கருத்து.
ஈடு:– ஒன்பதாம்பாட்டு. அவனுடைய வ்யாப்த்யவதாராதிகள் எங்கும்புக்குக் கவிசொல்லவல்ல எனக்கு எதிருண்டோ? என்கிறார். நித்யஸூரிகள் தாங்கள் அநுபவிக்கிற விஷயத்தில் போக்யதாப்ரகர்ஷத்தாலே வேறொன்று அறியார்கள்; முக்தர் (நோபஜநம் ஸ்மரந்நிதம்சரீரம்) என்று ஸம்ஸாரயாத்ரையை ஸ்மரியாதே நிற்பர்களாகையாலே, அவர்களும் நித்யரோடு ஒப்பர்கள்; இங்குள்ள பராசரபாராசர்யாதிகள் ஓரோதுறையிலே மண்டியிருப்பர்கள்; ஸ்ரீவால்மீகிபகவான் ராமாவதாரமல்லது அறியாதேயிருக்கும். ஸ்ரீபராசரபகவானும் ஸ்ரீவேதவ்யாஸ பகவானும் க்ருஷ்ணாவதாரமல்லது அறியார்கள்; ஸ்ரீஸௌநகபகவான் அர்ச்சாவதாரத்திலே ப்ரவணனாயிருக்கும்; அங்ஙனன்றிக்கே, ஸர்வேஸ்வரனை எங்கும்புக்குக் கவிபாடப்பெற்ற என்னோடு ஒப்பாருண்டோ? என்கிறார்.
(வானத்தும்) – ஸ்வர்க்கத்திலும். (வானத்துள்ளும்பரும்) – அதுக்குள்ளாய்ப் பெரியதாயிருக்கிற மஹர்லோகாதிகளிலும். (மண்ணுள்ளும்) – பூமியிலும். (மண்ணின்கீழ்த்தானத்தும்) – கீழிலுண்டான பாதாளாதிகளிலும். (எண்திசையும்) – எட்டுத்திக்கிலும். (தவிராது நின்றான் தன்னை) – அவ்வவதேசங்களிலும் அவ்வவதேசவர்த்திகளான தேவாதிஸகலபதார்த்தங்களிலும், கடல்கோத்தாற்போலே எங்குமொக்க வ்யாபித்துப் பூர்ணமாக வர்த்திக்கிறவனை. இத்தால், அணுத்ரவ்யங்களிலும் விபுத்ரவ்யங்களிலும் வாசி சொல்லுகிறது. அணுவான ஆத்மா சரீரமெங்கும் வ்யாபிக்கமாட்டான்; விபுவான ஆகாசத்துக்கு நியந்த்ருதயா வ்யாப்தியில்லை. அதவா, (வானத்தும் இத்யாதி) – ஸ்வர்க்காதி உபரிதநலோகங்களிலும் அதுக்குள்ளே மேலாயிருக்கிற ப்ரஹ்மாதிகளிலும் என்றுமாம். (கூனல்சங்கத்தடக்கையவனை) – இப்படி எங்கும் வ்யாபித்துநிற்கிறவன் வ்யாப்யமான பதார்த்தங்களோடு ஒக்க வந்து அவதரிக்கும்படி சொல்லுகிறது. இப்படி அவதரிப்பது தான் இதரஸஜாதீயனாயோ? என்னில்; “ஆதியஞ்சோதியுருவையங்குவைத்திங்குப் பிறந்த” (3.5.5) என்கிறபடியே தன்னுடைய அப்ராக்ருத திவ்யஸம்ஸ்த்தாநத்தை இதரஸஜாதீயமாக்கிக்கொண்டாயிற்று. “ஜாதோஸி தே3வதே3வேசசங்க2சக்ரக3தா3த4ர” என்று சொல்லும்படியாயிற்று. (கூனல்சங்கம்) – (ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வமாஸீம்) என்கிற இளையபெருமாளைப்போலே, பகவதநுபவத்தால் வந்த ஹர்ஷத்தாலே ப்ரஹ்வீகரித்திருக்கை. ‘வாயதுகையதாக’ அநுபவிக்கிறவனே. (தடக்கையவனை) – உபயவிபூதியும் வந்து ஒதுங்கினாலும் பின்னையும் கைவிஞ்சியிருக்குமாயிற்று. (குடமாடியை) – எங்குமொக்க வ்யாபித்துநின்றாற்போலே, ஓரூராகக் காணும்படி குடக்கூத்தாடினபடி. சேஷ்டிதங்களுக்கெல்லாம் உபலக்ஷணம். (வானக்கோனை) – ஓரூரளவன்றிக்கே ஒருநாட்டுக்காகக் காட்சிகொடுத்துக் கொண்டிருக்கிறபடி. (கவிசொல்லவல்லேற்கு) – இப்படியிருக்கிறவனை எங்கும்புக்குக் கவி சொல்லவல்ல எனக்கு. (இனி மாறு உண்டே) – ‘அகல்வானம்’ (4.5.8) என்று விசேஷிக்கவேணுமோ? உபயவிபூதியிலும் எதிரில்லை.
பத்தாம் பாட்டு
உண்டும்உமிழ்ந்தும்கடந்தும்இடந்தும் கிடந்தும்நின்றும்
கொண்டகோலத்தொடுவீற்றிருந்தும் மணங்கூடியும்
கண்டவாற்றால் தனதேயுலகெனநின்றான்தன்னை
வண்தமிழ்நூற்கநோற்றேன் அடியார்க்குஇன்பமாரியே.
ப:- அநந்தரம், வ்யாப்யவிஷய ரக்ஷணார்த்தமான மநோஹாரி சேஷ்டிதங்களையுடையவனை, ஆஸ்ரிதர்க்கு ஆநந்தாவஹமாம்படி கவிபாட பாக்யம் பண்ணினேன் என்கிறார்.
உண்டும் – (ப்ரளயாபத்திலே) வயிற்றிலேவைத்தும், உமிழ்ந்தும் – (அநந்தரத்திலே) உமிழ்ந்தும், கடந்தும் – (அந்யாபிமாநம்போம்படி) அளந்து காற்கீழேயிட்டும், இடந்தும் – (அவாந்தரப்ரளயத்திலே வராஹரூபியாய்) இடந்தெடுத்தும், கிடந்தும் – (*ப்ரதிஸிஸே மஹோத3தே4:” என்று கடற்கரையிலே) கிடந்தும், நின்றும் – (*அவஷ்டப்4ய ச திஷ்ட2ந்தம்*என்று ராவணவதாநந்தரம் தேவர்களுக்குக் காட்சிகொடுத்து) நின்றும், கொண்ட – மீண்டுவந்து திருவபிஷேகம்பண்ணின, கோலத்தொடு – திருக்கோலத்தோடே, வீற்றிருந்தும் – எழுந்தருளியிருந்தும், மணம் – நித்யோத்ஸவமாம்படி, கூடியும் – (பூமியுடனே) ஸம்ஸ்லேஷித்து ராஜ்யம் பண்ணியும், கண்ட – இப்படி ப்ரத்யக்ஷஸித்தமான, ஆற்றால் – சேஷ்டிதப்ரகாரங்களாலே, (*பதிம்விஸ்வஸ்ய” என்கிற ப்ரமாணநிரபேக்ஷமாக) உலகு – லோகம், தனதே – தனக்கே சேஷம், என – என்று நாடாகச் சொல்லும்படி, நின்றான் தன்னை – நின்ற ஸர்வேஸ்வரனைப்பற்ற, வண்தமிழ் – விலக்ஷணமாய் ஸர்வாதிகாரமான த்ராவிடப்ரபந்தத்தை, நூற்க – நிர்மிக்கைக்கு, நோற்றேன் – (அவனுடைய அங்கீகாரமாகிற) புண்யத்தைப் பண்ணினேன்; அடியார்க்கு – அவனுக்கு அடியாரான பாகவதர்க்கு, (இப்ப்ரபந்தம்), இன்பமாரி – ஆநந்தவர்ஷியான மேகமாயிறே இருக்கிறது.
ஈடு:- பத்தாம்பாட்டு. அவன்சேஷ்டிதங்களடங்க என்சொல்லுக்குள்ளேயாம்படி கவிபாட வல்லேனாய், ப்ராப்தவிஷயத்திலே வாசிகமாக அடிமை செய்யப்பெற்ற அளவன்றிக்கே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆநந்தாவஹனானேன் என்கிறார்.
(உண்டும்) – ப்ரளயாபத்திலே திருவயிற்றிலே வைத்து நோக்கியும், (உமிழ்ந்தும்) – திருவயிற்றிலேயிருந்து நெருக்குப்படாதபடி வெளிநாடுகாணப் புறப்படவிட்டும். (கடந்தும்) மஹாபலிபோல்வார் பருந்து இறாஞ்சினாற்போலே பறித்துக்கொண்டால் எல்லைநடந்து மீட்டும். (இடந்தும்) – ப்ரளயங்கொண்ட பூமியை மஹாவராஹமாய் அண்டபித்தியிலேசெல்ல முழுகி எடுத்துக்கொண்டு ஏறியும். (கிடந்தும்) – “பா3ஹும் பு4ஜக3 போ4கா3ப4முபதா4யாரிஸூத3ந: |அஞ்ஜலிம் ப்ராங்முக2: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோத3தே4:” என்று கிடந்த கிடையிலே லங்கை குடிவாங்கும்படியாக, ஒருகடல் ஒருகடலோடே சீறிக்கிடந்தாற்போலே கடற்கரையிலே கிடந்தபடி. (நின்றும்) – “அவஷ்டப்4யச திஷ்ட2ந்தம் த3த3ர்ச த4நுரூர்ஜிதம்” என்று நின்ற நிலை. (கொண்டகோலத்தொடு வீற்றிருந்தும்) (உடஜேராமமாஸீநம்) என்றிருந்த இருப்பாதல், க்ஷாத்ரமான ஒப்பனையோடே பதினோராயிரமாண்டு இருந்த இருப்பாதல். (மணங்கூடியும்) – பதினோராயிரமாண்டு தன்படுக்கைப்பற்றான பூமியை ரக்ஷிக்கையாலே ஸ்ரீபூமிப்பிராட்டி அணைக்க, அவளோடே கலந்தும். (கண்ட ஆற்றால் இத்யாதி) – ப்ரமாணங்கொண்டு அறியவேண்டாதே, அநாத்யநுபவங்கொண்டு ‘இவனுக்கே சேஷம்’ என்று அறியலாயிருக்கை; ஒருவன் ஒரு க்ஷேத்ரத்தைத் திருத்துவது கமுகுவைப்பது எருவிடுவதாய்க் க்ருஷிபண்ணாநின்றால் ‘இது இவனது’ என்று அறியலாமிறே; “பெய்தகாவுகண்டீர் பெருந்தேவுடைமூவுலகு” (6.3.5) என்னக்கடவதிறே. (வண்தமிழ்நூற்கநோற்றேன்) – திருவாய்மொழி பாடுகைக்கு பாக்யம்பண்ணினேன். வண்தமிழாவது – உதாரமாயிருக்கை; தன்னை அநுஸந்தித்தமாத்ரத்திலே ஸகலபலப்ரதமாயிருக்கை. அன்றிக்கே, பழையதாகச்செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல்போலே ஸ்பஷ்டமாயிருக்கை. “சிரநிர்வ்ருத்தமப்யேதத் ப்ரத்யக்ஷமிவ த3ர்சிதம்*. கண்டவாற்றா லென்று – ப்ரத்யக்ஷமாயிருக்கிறதிறே. (அடியார்க்கு இன்பமாரியே) – ஸர்வேஸ்வரனைக் கவிபாடப்பெற்ற இதுவேயோ? இது ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆநந்தாவஹமுமாயிற்று. (இன்பமாரி) – இன்பத்தையுண்டாக்கும் மேகம். இது எனக்கு இருக்கிறபடி கண்டால், இது உகக்குமவர்களுக்கு எங்ஙனேயிருக்கிறதோ? என்கை. “தொண்டர்க்கமு துண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்” (9.4.9) என்றாரிறே.
பதினொன்றாம் பாட்டு
மாரிமாறாததண்ணம்மலை வேங்கடத்தண்ணலை
வாரிமாறாதபைம்பூம்பொழில்சூழ் குருகூர்நகர்க்
காரிமாறன்சடகோபன் சொல்லாயிரத்துஇப்பத்தால்
வேரிமாறாதபூமேலிருப்பாள் வினைதீர்க்குமே.
ஆழ்வார் திருவடிகளே சரணம்
ப:- அநந்தரம், இத்திருவாய்மொழிக்கு ப2லமாக, இதில் அந்வயமாத்ரத்தாலே பகவதநுபவ விரோதியான ஸகலபாபங்களையும் தன்கடாக்ஷத்தாலே லக்ஷ்மி போக்கியருளும் என்கிறார்.
மாரி மாறாத – வர்ஷம் மாறாதபடியாலே, தண் – குளிர்ந்து, அம் – த3ர்சநீயமாய், வேங்கடம் – திருவேங்கடமென்று திருநாமமான, மலை – திருமலையிலே, (தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கைக்காக வந்து நிற்கிற சீலத்தையுடைய), அண்ணலை – நிருபாதிகஸ்வாமியை, வாரி மாறாத – (பாதபாதிகளுக்கு ஸிஸிரோபசாரம்பண்ணுகிற) ஜலஸம்ருத்தி மாறாத, பைம்பூம்பொழில் – த3ர்சநீயமான புஷ்பஸம்ருத்தியையுடைய பொழிலாலே, சூழ் – சூழப்பட்ட, குருகூர்நகர் – திருநகரியில், காரி – காரியென்றுபேரான பித்ருஸம்பந்தத்தையுடையராய், மாறன் – மாறனென்னும் குடிப்பேரையுடைய, சடகோபன் – ஆழ்வார், சொல் – அருளிச்செய்த, ஆயிரத்து – ஆயிரத்தில், இப்பத்தால் – இப்பத்தாலே, வேரிமாறாத – மதுப்ரவாஹம் மாறாத, பூ மேல் – தாமரையிலே, இருப்பாள் – நித்யவாஸம்பண்ணுகிற லக்ஷ்மி, வினை – (அநுபவவிரோதியான) ஸமஸ்த பாபங்களையும், தீர்க்கும் – (தன்கடாக்ஷத்தாலே) போக்கும்.
இவள் கடாக்ஷித்த விஷயத்தில் ஈஸ்வரனுடைய அபராதஸஹத்வம் அவர்ஜநீயமென்று கருத்து. இது கலித்துறை.
வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் திருவடிகளே சரணம்
ஈடு:- நிகமத்தில், இத்திருவாய்மொழி கற்றாரைப் பெரியபிராட்டியார் தமக்கே ப4ரமாகக் கொண்டு ஸமஸ்தது:கங்களையும் போக்குவர் என்கிறார்.
(மாரி இத்யாதி) – நிரந்தரமாக வர்ஷிக்கையாலே ஸ்ரமஹரமாய் தர்சநீயமான திருமலையையுடைய ஸர்வேஸ்வரனையாயிற்றுக் கவிபாடிற்று; “விண்முதல்நாயகன் நீள்முடி வெண்முத்தவாசிகைத்தாய் மண்முதல்சேர்வுற்று அருவிசெய்யாநிற்கும் மாமலை” (திருவிரு.50)யாகையாலே, ‘அறற்றலை’யாய் த3ர்சநீயமாயிறே இருப்பது. “நமக்கும் பூவின்மிசை நங்கைக்குமின்பனை” (4.5.8) என்று – நித்யாநபாயிநியான பெரியபிராட்டியாருக்கு முன்பே நித்யஸம்ஸாரிகளுக்கும் முகங்கொடுக்கும் சீலவத்தையைச் சொல்லிற்றாகையாலே, சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையானையாயிற்றுக் கவிபாடிற்று. (வாரிஇத்யாதி) – திருமலை மாரிமாறாதாப்போலே திருநகரியும் வாரிமாறாதிருக்கும். இதுக்குஅடி – திருநகரிக்கு ஸஹ்யம் திருமலை ஆகையாலே. அழகியதாய் தர்சநீயமாயிருந்துள்ள பொழிலாலே சூழப்பட்ட திருநகரி. (காரிமாறன் இத்யாதி) – சொன்ன அர்த்தத்தில் அதிசங்கைபண்ணாமைக்கு ஆப்த்யதிசயம் சொல்லுகிறது. (வேரி இத்யாதி) – இத்திருவாய்மொழி கற்றார்க்கு ப2லங்கொடுப்பாள் பெரியபிராட்டியா ரென்கிறது. திருமலை மாரிமாறாதாகையாலே, திருநகரி வாரிமாறாது. ஆறாக்கயமாகையாலே பிராட்டியுடைய ஆஸநபத்மம் வேரிமாறாது. வேரியென்பது – பரிமளம். இதுகற்றார்க்கு இவள் ப2லம்கொடுக்கவேண்டுவானென்? என்னில்; தனக்குமுன்பே தான்காட்டிக்கொடுத்த ஸம்ஸாரியை விரும்பும் ஶீலகுணமாயிற்று, இதில் சொல்லிற்று; இஸ்சீலகுணம் ஒருவர்க்கும் நிலமல்ல; தான் அறிதல், ‘மயர்வறமதிநலம்பெற்றவர்’ அறிதல்செய்யும் அத்தனையாயிற்று; ‘இப்ப்ரபா4வத்தை யறிந்து இவர் வெளியிட்டார்’ என்னும் ப்ரஸாதாதிசயத்தாலே, ஸர்வேஸ்வரன் ப2லம் கொடுக்கிற தசையிலே அவனைவிலக்கி ‘நானே இதுக்கு ப2லங் கொடுக்கவேணும்’ என்று தனக்கு ப4ரமாக ஏறிட்டுக்கொண்டு பலம்கொடுக்கும். (வினைதீர்க்குமே) – இத்திருவாய்மொழி கற்றாருடைய பகவதநுபவ விரோதியான ஸகலப்ரதி பந்தகங்களையும் போக்கும். இத்திருவாய்மொழி கற்றார்க்கு அந்த:புரத்திலே படியும் நடையுமென்கை.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்
த்ரமிடோபநிஷத் ஸங்கதி _ வீற்றிருந்து
ஆநந்தநிர்பரமதீநவிபூதியுக்தம்வைகுண்டநாதமதவீக்ஷ்யமுநிஸ்ஸ்துவந்ஸ:।
நாந்யஸ்ஸமோऽஸ்திமமநாப்யநவாப்யமத்யேத்யாநந்தபூரமதிபஞ்சமமாஸஸாத।||35||
த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்நாவளி — வீற்றிருந்து
ஆபந்நாநந்யபந்தௌஸரஸிஜநிலயாவல்லபேஸாந்த்ரமோதே பக்தாகத்வம்ஸஶீலே ததுசிதஸமயாஶ்வாஸதாநப்நவீணே । கர்பூராலேபஶோபேஸமதிகரஹிதேதோஷகேஸர்வபூர்ணே
க்ருஷ்ணேஸ்துத்யாதிபாஜாம்ஶடரிபுரவதத்தந்யதாம்நிந்திதாந்ய: || 4-5
திருவாய்மொழி நூற்றந்தாதி
வீற்றிருக்கும்மால்விண்ணில்மிக்கமயல்தன்னை*
ஆற்றுதற்காத்தன்பெருமையானதெல்லாம்* – தோற்றவந்து
நன்றுகலக்கப்போற்றி நன்குகந்து வீறுரைத்தான்
சென்றதுயர்மாறன்தீர்ந்து. ||35||
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
******