எட்டாம் திருவாய்மொழி
ஏறாளும் : ப்ரவேசம்
******
ப :- எட்டாந்திருவாய்மொழியில், கீழ் இவர் ஆசைப்பட்டுக் கூப்பிட்டபடியிலே வந்து முகங்காட்டக் காணாமையாலே அவன் அநாதரித்தானாக நினைத்து, ஆஶ்ரிதாநாஶ்ரிதவிஷயங்களில் அதி4க3ம்யத்வ அப்ரத்ருஷ்யத்வத்தாலுண்டான உபாயப4ாவத்தையும், கைங்கர்ய ப்ரதிஸம்பந்தித்வத்தால் வந்த உபேயத்வபூர்த்தியையும், உபாயகார்யமான அநுகூலஶத்ருநிரஸநத்தையும், அபிமதவிரோதி மர்த3நத்தையும், அஸஹ்யவிரோதிநிரஸநத்தையும், அர்த்தோபதேஶத்தாலும் அநந்யார்ஹமாக்கும் அறிவுடைமையையும், உத்துங்கவிரோதி விதரணத்தையும், விரோதிஶத விநாஶகத்வத்தையும், விரோதிஶரீர விஹஸ்ததாகரணத்தையும், அஶேஷவிரோதி கண்டநத்தையும் அநுஸந்தித்து, ‘இப்படி ஆஶ்ரிதோபகாரகன் அநாதரித்த ஆத்மாத்மீயங்களாலே எனக்கு ஒருகார்யமில்லை’ என்று தமக்குப் பிறந்த அநாதரவிஶேஷத்தை, நாயகனான ஈஶ்வரன் ஆதரியாத ஆத்மாத்மீயங்களை அநாதரிக்கிற நாயகிவார்த்தையாலே அருளிச்செய்கிறார்.
ஈடு:- கீழில் திருவாய்மொழியிலே – கேட்டாரடைய நீராம்படி கூப்பிட்டார்; ‘இப்படி கூப்பிடச்செய்தேயும் ஸர்வேஶ்வரன் நமக்கு முகம் தாராதிருந்தது நம்பக்கல் உபேக்ஷையாலேயாக அடுக்கும்’ என்று பார்த்து, ‘ப்ராப்தனுமாய் ஸுஶீலனுமாய் விரோதிநிரஸந ஶீலனுமாயிருக்கிறவன் ‘இதுவேண்டா என்றிருக்குமாகில் எனக்கோதான் இது வேண்டுவது’ என்று விடப்பார்த்து, ‘அவனுக்கு வேண்டாத நானும் என் உடைமையும் வேண்டா எனக்கு’ என்று ஆத்மாத்மீயங்களில் நசையற்றபடியை அந்யாபதேஶத்தாலே அருளிச்செய்கிறார். அவன் விரும்பின வழியாலே காணும் ஆத்மவஸ்துவை விரும்ப ப்ராப்தி உள்ளது; இங்ஙன் விரும்பாதவன்று பழைய தேஹாத்மாபிமாநத்தோபாதியாமிறே; “ந தே3ஹம்” – இத்தனை சாந்துநாற்றத்துக்காக நிலைநின்ற அத்ருஷ்டத்தையுங்கூட கஅழியமாறும்படியிறே தேஹத்தில் பண்ணியிருக்கும் அபிமாநம்; அப்படிப்பட்ட தேஹம் வேண்டா. “ந ப்ராணாந்” – தேஹந்தன்னை ஆதரிக்கிறது ப்ராணனுக்காக; அப்ப்ராணன்களும் வேண்டா. “நச ஸுக2ம்” – ப்ராணன்களை விரும்புகிறது ஸுகத்துக்காக; அந்த ஸுகமும் வேண்டா. இதுக்கு உறுப்பாக வருமல்லாதவையும் எனக்கு வேண்டா. இவையெல்லாம் புருஷார்த்தமாவது – ஆத்மாவுக்கிறே; அவ்வாத்மாதானும் வேண்டா. இங்ஙன் பிரித்துச் சொல்லுகிறதென்? உன்திருவடிகளில் சேஷத்வ ஸாம்ராஜ்யத்துக்குப் புறம்பானவை யாவை சில, அவையொன்றும் எனக்கு வேண்டா. “நாத2” – உடையவனுக்குப் புறம்பாயிருக்கு மவற்றை விரும்ப ப்ராப்தியுண்டோ? அங்ஙனேயாமாகில் க்ரமத்தாலே கழித்துத் தருகிறோம் என்ன, ‘ஒரு க்ஷணமும் பொறுக்கமாட்டேன். இவை தன்னைத் தவிர்த்துக் கடக்க வைக்கவொண்ணாது, நசித்துப்போம்படி பண்ணவேணும். இது கண்டாதூர்த்வமான வார்த்தையன்றோ?’ என்ன “தத்ஸத்யம்” – மெய். “மது4மத2ந” – இங்ஙனன்றாகில் தேவர்முன்பு பொய்யரானார்பட்டதுபடுகிறேன். “ந ஹி மே ஜீவிதே – நார்த்தே2ா நைவார்த்தை2ர்ந ச பூ4ஷணை: ஐ வஸந்த்யா ராக்ஷஸீமத்4யே விநா ராமம் மஹாரத2ம்” ஐஐ – ப்ராணாதிகளால் கார்யமின்றிக்கேயொழிகிறதென், என்னில்; இருக்கிறது ராக்ஷஸிகள் நடுவே; பிரிகிறது பெருமாளை; இவற்றால் என்ன ப்ரயோஜநமுண்டு?
முதல் பாட்டு
ஏறாளுமிறையோனும் திசைமுகனும்திருமகளும்
கூறாளுந்தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை
நீறாகும்படியாக நிருமித்துப்படைதொட்ட
மாறாளன்கவராத மணிமாமைகுறைவிலமே.
ப:- முதற்பாட்டில், ஆஶ்ரிதர்க்கு அபாஶ்ரயமான —லவத்தையையும், அநாஶ்ரிதர்க்கு விநாஶகமான ஆண்பிள்ளைத்தனத்தையுமுடைய உபாயபூதன் ஆதரியாத அழகியநிறத்தால் எனக்கு ஒரு கார்யமில்லையென்கிறாள்.
ஏறுஆளும் – ருஷபவாஹநத்தை யுடையனாய், இறையோனும் – “(ஈஶோஹம் ஸர்வதே3ஹிநாம்*என்று நாட்டுக்கு ) ஈஶ்வரனாகத் தன்னை அபிமாநித்திருக்கும் ருத்ரனும், திசைமுகனும் – பஹுமுகமாக ஸ்ருஷ்டியைப் பண்ணுகைக்கு யோக்யனான சதுர்முகனும், (ஈஶ்வராபிமானிகளான இவர்களோடொக்க), திருமகளும் – தனக்கு நித்யாநபாயிநியான ஸம்பத்தாயுள்ள லக்ஷ்மியும், கூறு – ப்ரதிநியதமாம்படி, ஆளும் – அநுபவித்துத் தங்களுக்கிருப்பிடமாக அபிமாநித்துக் கொண்டுபோருமதாய், தனி – அத்விதீயமாம்படி அப்ராக்ருதவைலக்ஷண்யத்தையுடைத்தான, உடம்பன் – திருமேனியையுடையனாய், (ஆஶ்ரிதவிஷயத்தில் ‘அபிமாநதூஷிதர்’ என்றும், ‘அநபாயிநி’ என்றும் வாசிவையாத ஶீலத்துக்குமேலே அவர்கள் விரோதியைப் போக்குமிடத்தில்), குலம்குலமா – திரள்திரளாக, அசுரர்களை – அஸுரர்களை, நீறாகும்படியாக – தூளிசேஷமாய்ப்போம்படி, நிருமித்து – திருவுள்ளத்தாலே அறுதியிட்டு, படைதொட்ட – ஆயுதமெடுத்து வ்யாபரித்த, மாறாளன் – ஶாத்ரவநிர்வாஹகனானவன், கவராத – விரும்பாத, மணிமாமை – ஒளியையுடைய நிறத்தால், குறைவு இலம் – நமக்கு ஒரு கார்யமில்லை.
நிருமித்தல் – நிரூபித்தல். மாறாளன் – எதிர்த்தலையுடையவன். கவர்தல் – விரும்புதல். மணியென்று – ஒளியைக் காட்டுகிறது. மாமை – நிறம். குறைவிலமென்றது – இத்தால் கொள்ளுவதொரு ப்ரயோஜநமுண்டாய் அக்குறை கிடப்பதில்லை யென்றபடி; இது – எல்லாப்பாட்டிலுமொக்கும்.
ஈடு:- முதற்பாட்டு. அத்யந்தகுணவானுமாய் விரோதிநிரஸந ஸமர்த்தனுமாயிருக்கிற எம்பெருமான் விரும்பாத ஶ்லாக்யமான நிறங்கொண்டு எனக்கு ஒரு கார்யமில்லை என்கிறாள்.
(ஏறாளும் இத்யாதி) – ‘நான், நான்’ என்பாருக்கும் அணையலாம்படியான உடம்பைக்கிடீர் நான் இழந்திருக்கிறது என்கிறாள். கண்ட காபாலிகந்தர் பெற்றுப்போகிறதுகிடீர் எனக்கு அரிதாகிற தென்கிறாள். (ஏறாளும்) – ஸர்வேஶ்வரன் வேதாத்மாவான பெரியதிருவடியை வாஹநமாகவுடையனாயிருக்குமாகில், தானும் கைக்கொள்ளாண்டிகளைப்போலே ‘ஒரு எருத்தையுடையேன்’ என்று அபிமாநித்திருக்கும். (ஆளும்) – இவனுடைய உபயவிபூதி யிருக்கிறபடி. (இறையோனும்) – அவன் உபயவிபூதிக்கும் கடவனாய் ஸர்வேஶ்வரனாயிருக்கும்; கள்ளியை ‘மஹாத்ருக்ஷம்’ என்கிறவோபாதி, தானும் ‘ஈஶ்வரன்’ என்றிருக்கும். தர்மதர்மிகளுக்கு ஐக்யமுண்டித்தனைபோக்கி, தர்மித்வயத்துக்கு ஐக்யமில்லை. (திசைமுகனும்) – ஸ்ருஷ்டிக்கு உறுப்பாக நாலுவேதங்களையும் உச்சரிக்கைக்கு ஈடான நாலுமுகத்தையுடையனாய், ‘நான் ஸ்ரஷ்டா’ என்று அபிமாநித்திருக்கிற சதுர்முகனும். (திருமகளும்) – “அநந்யா ராக4வேணாஹம்” என்று சொல்லுகிறபடியேயிருக்கிற பெரியபிராட்டியாரும். (கூறாளும் இத்யாதி) – இவர்கள் கூறிட்டாளும்படி அத்விதீயமான உடம்புபடைத்தவன். ‘நாங்கள் அதிகாரிபுருஷர்களுடையவர்கள்’ என்று பிராட்டி பரிஸரத்திலே புக்குச் சிலர் அழிவுசெய்தல், ‘நாங்கள் படுக்கைப்பற்றிலுள்ளோம்’ என்று சிலர் அவர்களெல்லையிலே புக்கு அழிவுசெய்தல் செய்யவொண்ணாதபடி ஆளுமாயிற்று. திவ்யாத்மஸ்வரூபத்திலும் வீறுடையது திருமேனியிறே. ஸர்வாபாஶ்ரயமாயிறே திருமேனிதான் இருப்பது. இப்படி சீலவானாயிருக்கிறவனைக்கிடீர் நான் இழந்திருக்கிறது. (குலங்குலமா) – அணைக்கைக்கு ப்ரதிபந்தகமுண்டாய்த்தான் இழக்கிறேனோ? “கோந்வஸ்மிந் ஸாம்ப்ரதம்லோகே கு3ணவாந்” என்றாற்போலே கீழ்; “வீர்யவாந்” என்றாற்போலே இது. குலங்குலமாக அஸுரவர்க்கத்தை (நீறாகும்படியாக நிருமித்து) – “நிஹதா: பூர்வமேவ” என்கிறபடியே, ‘உறவு வேண்டோம்’ என்றபோதே பஸ்மமாய்ப்போம்படி ஸங்கல்பித்து. (படைதொட்ட) – ஜகத்ஸ்ருஷ்டியில்வந்தால் ஸங்கல்பமேகொண்டு நிர்வஹிக்குமவன், ஆஶ்ரிதவிரோதிகளை அழியச்செய்யுமிடத்தில் ஸாயுதனாய்க்கொண்டு மேல்விழும். ஸ்ருஷ்ட்யாதிகளில் ஸத்யஸங்கல்பனாயிருக்கும், ஆஶ்ரிதவிரோதிகளளவில் அஸத்யஸங்கல்பனாயிருக்கும். (நீறாகும்படியாக) – “சி2ந்நம்பி4ந்நம்ஶரைர்தக்3த4ம்” என்கிறபடியே, தூளியாம்படியாக ஸங்கல்பித்து ஆயுதமெடுக்குமவன். “யஜ்ஞவிக்4நகரம் ஹந்யாம் பாண்ட3வாநாஞ்சது3ர்ஹ்ருத3ம்” – தன்னைமிடற்றைப்பிடித்தாரையும், உயிர்நிலையிலே நலிந்தாரையும் நலியுமவன். (மாறாளன்) – மிடுக்கனென்னுதல், எதிரியென்னுதல். துர்யோதநன் ‘அமுது செய்யவேணும்’ என்ன “த்3விஷத3ந்நம் நபே4ாக்தத்யம் த்3விஷந்தம் நைவ பே4ாஜயேத்” என்று ஆஶ்ரிதவிரோதிகளைத் தனக்கு விரோதிகளாகக் கொண்டு வழக்குப்பேசுமவன். (கவராத) – விரோதிகளை அழியச்செய்து விடாய்த்து ‘தண்ணீர் தண்ணீர்’ என்று அவன் வந்தணையாத நல்லநிறத்தால் ஒரு அபேக்ஷையுடையோமல்லோம். ‘நிற’த்திலே அவன் ஆதரிக்குமன்றன்றோ இத்தால் கார்யமுள்ளது? அல்லது நிறக்கேடாமித்தனையிறே.
இரண்டாம் பாட்டு
மணிமாமைகுறைவில்லா மலர்மாதருறைமார்பன்
அணிமானத்தடவரைத்தோள் அடலாழித்தடக்கையன்
பணிமானம்பிழையாமே அடியேனைப்பணிகொண்ட
மணிமாயன்கவராத மடநெஞ்சால்குறைவிலமே.
ப:- அநந்தரம், பிராட்டியோடுகூடின விக்ரஹவைலக்ஷண்யத்தைக் காட்டி அடியிலே என்னை அடிமைகொண்ட உபேயபூதன் ஆதரியாத நெஞ்சால் ஒருகார்யமில்லை யென்கிறாள்.
மணி – (நித்யஸம்ஶ்லேஷத்தாலே) நிரதிஶயௌஜ்ஜ்வல்யமான, மாமை – நிறத்துக்கு, குறைவில்லா – குறையற்றிருப்பாளாய், (இந்த ஆபிரூப்யத்துக்குமேலே), மலர்மாதர் – பூவிற்பிறந்த ஆபிஜாத்யத்தால் வந்த ஸௌகுமார்யாதிகுணவிஷ்டையான போக்யதையையுடைய நாரீணாமுத்தமையானவள், உறை – நிரந்தரவாஸத்தைப் பண்ணுகிற, மார்பன் – திருமார்பையுடையனாய், அணி – ஆபரணஶோபிதமாய், மானம் – ஆயதமாய், தடம் – ஸுத்ருத்தமாய், வரை – மலையைக் கணையமாக வகுத்தாற்போலே சிக்கென்ற, தோள் – தோள்களையுடையனாய், அடல் –விரோதிநிரஸநஶஶீலமான, ஆழி – திருவாழியையுடைத்தான, தட கையன் – பெரிய கையையுடையவனாய், பணிமானம் – கைங்கர்யத்ருத்திகளில் ஓரளவும், பிழையாமே – தப்பாதபடி, அடியேனை – அடியேனான ஸ்வரூபத்தையுடைய என்னை, பணிகொண்ட – அதுக்கு ஈடாக அடிமைகொண்ட, மணிமாயன் – நீலரத்நம்போல் கறுத்தநிறத்தையுடையனானவன், கவராத – விரும்பாத, மடநெஞ்சால் – விதேயமான நெஞ்சால், குறைவுஇலம் – ஒருகார்யமுடையோமல்லோம்.
அணி – ஆபரணம். மானம் – அளவுடைமை. தடம் – சுற்றுடைமை. மாயன் – கரியவன்.
ஈடு:- இரண்டாம்பாட்டு. இஶ்ஶீலத்துக்கும் அடியான பிராட்டியோடேகூட வடிவழகைக்காட்டி அடிமைகொண்டவன் விரும்பாத பத்யமான நெஞ்சால் என்னகார்யமுண்டு? என்கிறாள்.
(மணிமாமைகுறைவில்லா) – ‘மணிமாமைகுறைவிலமே’ என்ன வேண்டாதவள். அவளுடைய நித்யஸந்நிதியாலே என்னை அடிமைகொண்டவன். “நகஶ்சிந்நாபராத்4யதி” என்கிறவளும் கூட இருக்கச்செய்தே என்னை உபேக்ஷித்திருக்குமாகில், என்னுடைமையால் எனக்குத்தான் ப்ரயோஜநமென்? (மலர்மாதர்) – நிறமேயன்றிக்கே பிரியத்தகாத ஸௌகுமார்யத்தையுடையவள். புஷ்பத்தில் பரிமளத்தை வடிவாக வகுத்தாற்போலேயிருக்கை. (உறைமார்பன்) – அவள் நித்யவாஸம்பண்ணுகிற திருமார்வையுடையவன். பூவில் பிறப்பேயாய், நித்யவாஸம்பண்ணுவது மார்விலேயாயிருக்கை. தான்பிறந்த பூநெருஞ்சிக்காடாம்படியான மார்வு படைத்தவன். “அனிச்சமும் அன்னத்தின்தூவியும் மாதரடிக்கு நெருஞ்சிப்பழம்” என்றானிறே. முக்தன் ஸம்ஸாரயாத்ரையை ஸ்மரியாதாப்போலே பூவை நினையாதே வர்த்திக்கும் மார்புபடைத்தவன். பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்தபின்பு ஸ்ரீமிதிலையை நினைக்கிலாயிற்று, இவள் பூவைநினைப்பது. அவள் “அகலகில்லேன்” (6.10.10) என்கிற வடிவை நான் இழப்பதே! (அணிமானத்தடவரைத்தோள்) – அணியென்று – ஆபரணம். மானமென்று – அளவு. “ஸர்வபூ4ஷணபூ4ஷார்ஹா:” என்கிறபடியே “ஆபரணத்துக்கு ஆபரணமான தோள்” என்று சீயர் அருளிச்செய்வர். ‘அணியென்று – அழகாய், மானமென்று – பெருமையாய், அணிபெருகியதோள்’ என்று ஒரு தமிழன். அத்தாலும் – “ஆப4ரணஸ்யாப4ரணம்” என்கிறபடியாயிருக்கை. “ஆயதாஶ்ச ஸுத்ருத்தாஶ்ச” என்கிறபடியே, அளவுடைத்தாய்ச் சுற்றுடைத்தாய் ஒருவரால் சலிப்பிக்கவொண்ணாத தோள்படைத்தவன். (அடலாழித்தடக்கையன்) – பிராட்டியும் தானுமான சேர்த்திக்கு அஸ்த்தாநே பயஶங்கைபண்ணி எப்போதுமொக்க யுத்தோந்முகமாய் ப்ரதிபக்ஷத்தையடர்க்கும் ஸ்வப4ாவமான திருவாழியைப் பூர்ணமான கையிலே யுடையவன். இவனுடைய ‘த்ருத்தம்’ கைமேலே காணலாயிருக்கிறபடி. (பணிமானம்பிழையாமே) – பணியென்று கைங்கர்யம். மானமென்று – அளவு. அதில் ஓரளவும் குறையாமே. “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்கிறபடியே. (அடியேனைப் பணிகொண்ட) – இளையபெருமாளை அடிமை கொண்டாற்போலே, இருவருங் கூட இருந்துகாணும் இவரை அடிமைகொண்டது. (அடியேனை) – குமரிருந்துபோகாமே. பரதந்த்ரஜந்மமாயிருக்க வகுத்தவனுக்கு உறுப்பன்றிக்கே போகாமே. இங்கே அருளிச்செய்யும் வார்த்தை: ‘எழுந்தருளியிருக்கிற மடத்திலே ஸ்ரீவைஷ்ணவர்கள் அமுதுசெய்யாநிற்க, ஆச்சான் தண்ணிரமுது பரிமாறுகிறவர், ஓரருகே சாயநின்று பரிமாறினார்; அத்தை உடையவர் கண்டு ஓரடிவந்து முதுகிலே மோதி, ‘நேரேநின்றன்றோ வுடோ பரிமாறுவது?’ என்றார்; என்ன, ஆச்சான் ‘பணிமானம் பிழையாமேயடியேனைப்பணிகொண்ட’ என்று பணித்தான். (பணிகொண்ட மணிமாயன்) – “தஹ, பச” என்றல்ல அடிமைகொண்டது; பிடாத்தை விழவிட்டு வடிவைக்காட்டி. நீலரத்நம்போன்ற கறுத்தநிறத்தையுடையவன். (கவராத) – வடிவில் சுவட்டையறிவித்து என்னை அநுபவிப்பியானாகில், பத்யமான நெஞ்சால் எனக்கு என்னகார்யமுண்டு? சீயர் இவ்விடத்திலே அருளிச்செய்வதொரு வார்த்தை உண்டு – “பூசும்சாந்தென்னெஞ்சமே” (4.3.2) என்கிறபடியே அன்று அப்படியே இத்தை விரும்பினவன் இன்று இப்படியே உபேக்ஷிக்கையாலே, நாயகன் வரவுதாழ்த்தான்’ என்று அவன் முன்னே சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே ‘என்நெஞ்சு எனக்குவேண்டா’ என்கிறாள்” என்று. பிராட்டி அவனோடே சேர இருந்திலளாகில் நான் ஆறியிரேனோ? தோளழகை எனக்குக் காட்டிற்றிலனாகில், நான் ஆறியிரேனோ? கையும் திருவாழியுமான அழகைக் காட்டிற்றிலனாகில் ‘அப்ராப்தவிஷயம்’ என்று ஆறியிரேனோ? வடிவழகாலன்றி குணத்தாலே என்னை விஷயீகரித்தானாகில் நான் ஆறியிரேனோ? என்கிறாள்.
மூன்றாம் பாட்டு
மடநெஞ்சால்குறைவில்லா மகள்தாய்செய்தொருபேய்ச்சி
விடநஞ்சமுலைசுவைத்த மிகுஞானச்சிறுகுழவி
படநாகத்தணைக்கிடந்த பருவரைத்தோட்பரம்புருடன்
நெடுமாயன்கவராத நிறைவினாற்குறைவிலமே.
ப:- அநந்தரம், உபாயகார்யமான அநிஷ்டநித்ருத்யாதிகளை மேல் முழுக்க ப்ரதிபாதிப்பதாக, முதலிலே அநுகூலஶத்ருவான பூதநாநிரஸநத்தைச் சொல்லி, ஆஶ்ரிதார்த்தமாக நாகபர்யங்கத்தில் நின்றும்வந்த க்ருஷ்ணன் விரும்பாத அடக்கத்தால் ஒரு காரியமில்லை என்கிறாள்.
மடம் நெஞ்சால் – (முலையுண்கிறபிள்ளைபக்கலிலே) ப்ரவணமான நெஞ்சால், குறைவில்லா – குறைவற்றிருக்கிற, தாய்மகள் – (யசோதையாகிற) தாய்மகளாக, செய்து – தன்னைப்பண்ணி வந்தவளாய், ஒரு – (எதிர்த்தலையை) நலிகைக்கு அத்விதீயையா யிருக்கிற, பேய்ச்சி – பேய்ச்சியுடைய, விடம் நஞ்சம் முலை – (நாட்டில் விஷங்கள் அம்ருதமென்னலாம்படி) மிக்க விஷத்தையுடைத்தான நச்சுமுலையை, சுவைத்த – பசையறச்சுவைத்த, மிகுஞானம் – மிக்கரஸஜ்ஞாநத்தையுடைய, சிறுகுழவி – முக்3த4
ஸிஶுவாய், (இப்படி வந்த விரோதியை நிரஸிக்கைக்காக ஏலக்கோலி), படம் நாகத்து அணை – (ஸ்வஸ்பர்ஶத்தாலே விரிந்த) பணத்தையுடைய நாகபர்யங்கத்திலே, கிடந்த – கண்வளர்ந்தவனாய், பரு வரை தோள் – பெரிய மலைபோலேவளர்ந்த தோளையுடையவனாய், பரம்புருடன் – (*உத்தம:புருஷ:” என்னும்) பரமபுருஷனாய், நெடுமாயன் – நிரவதிகமான ஆஶ்சர்யகுணசேஷ்டிதங்களையுடைய க்ருஷ்ணன், கவராத – விரும்பாத, நிறைவினால் – ஸ்த்ரீத்வபூர்த்தியாலே, குறைவு இலம் – என்னகாரியமுண்டு? நிறைவாவது – நெஞ்சு பிறரறியாமல் அடக்கும் நிரப்பம். விடநஞ்சமென்றது – மீமிசை. ‘பேய்ச்சிவிடவென்று – அவள்நசிக்க’ என்றும் சொல்லுவர்.
ஈடு:- மூன்றாம்பாட்டு. விரோதிநிரஸநஸமர்த்தனாய் அத்யந்த விலக்ஷணனாய், முன்பு என்பக்கல் அத்யபிநிவிஷ்டனானவன் விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டா என்கிறாள்.
(மடநெஞ்சால் குறைவில்லா) மடப்பமாவது – மென்மை; அதாவது – நெஞ்சில் நெகிழ்ச்சி. அதாவது – முலையுண்ணும்போது யஶோதைப்பிராட்டிக்குப் பிறக்கும் பரிவையும் ஏறிட்டுக்கொண்டுவந்தபடி. அகவாயிலுள்ளது த்வேஷமாயிருக்கச் செய்தே, அத்தைமறைத்துக் கொண்டு ஆநுகூல்யம் தோற்ற வந்தாளாயிற்று. (மகள்தாய்செய்து) – தாய் மகள்செய்து; மக்களென்று – மநுஷ்யர்க்குப் பேர். பேயான தான் மநுஷ்யவேஷத்தைக்கொண்டு, அதுதன்னிலும் “பெற்றதாய்போல்” (திருமொழி 1.3.1) என்கிறபடியே தாய்வடிவைக்கொண்டு. (ஒருபேய்ச்சி) – இதென்ன நிக்ருதிதான்? நிக்ருதிக்கு அத்விதீயையென்கை. ‘நலியவந்தாள்’ என்னுஞ் சிவிட்காலே அநாதரோக்தியாகவுமாம். (விட நஞ்சம்) – விடமென்றும், நஞ்சமென்றும் மீமிசையாய், நாட்டில் விஷங்களெல்லாம் அம்ருதகல்பமாம் படியான விஷமென்னுதல். (பேய்ச்சி விட) – பேயானவள் உயிரைவிடும்படி. (நஞ்சமுலை சுவைத்த) – நச்சுமுலையை அமுதுசெய்த. அம்முலைவழியே “உயிரைவற்ற வாங்கியுண்ட வாயான்” (திருமொழி 1.3.1) என்கிறபடியே, பாலும் உயிரும் ஒக்க வற்றிவரும்படி சுவைத்த; “ப்ராணஸஹிதம் பபௌ” என்கிறபடியே பசையறும்படியாக. (மிகுஞானச்சிறுகுழவி) – மௌக்3த்4யத்தில் கண்ணழிவற்றிருக்கச் செய்தேயும், ரஸஜ்ஞாநத்தாலே ‘இது தாய்முலையல்ல, வேற்றுமுலை’ என்று அமுதுசெய்தான். அவள் தாயாய்வந்தாலும், இவன் ‘தாய்’ என்றே முலையுண்டாலும், வஸ்துஸ்வப4ாவத்தாலே வருமது தப்பாதிறே; அத்தாலே தப்பிற்றித்தனை. (படநாகத்தணைக்கிடந்த) – உணவுக்கீடாகக் காணும் கிடந்தபடியும். நஞ்சையுண்டு நச்சரவிலேயிறே கிடக்கிறதே. நஞ்சுக்கு நஞ்சு மாற்றிறே. விரோதியை அழியச்செய்துபோய்ப்படுக்கையிலே சாய்ந்தபடியாதல்; அன்றிக்கே “நாக3பர்யங்கமுத்ஸ்ருஜ்ய” என்கிற படுக்கையை விட்டுப்போந்து விரோதியைப் போக்கினபடியாதல். ஆஶ்ரிதர் ஆர்த்தநாதங்கேட்டால் ‘போக’த்திலே நெஞ்சு பொருந்தாதிறே. ஸர்வேஶ்வரன் திருமேனியிலே சாய்கையாலுண்டான ஹர்ஷத்தாலே விகஸிதமான பணங்களையுடையனாயிருக்கும். அஸுரவர்க்கம் கிட்டினால் “வாய்ந்தமதுகைடபரும் வயிறுருகிமாண்டார்” (மூன்.திரு.66) என்று முடியுமாபோலேயாயிற்று. அநுகூலவர்க்கம் கிட்டினால் வாழும்படி. (பருவரைத்தோள்) – திருவநந்தாழ்வானோட்டை ஸ்பர்ஶத்தாலே, ஏகரூபமான விக்ரஹத்துக்குப் பிறக்கும் விகாரத்தைச் சொல்லுகிறது. கர்மநிபந்தநமான விகாராதிகளில்லையென்ற இத்தனை போக்கி, ஆஶ்ரித ஸம்ஶ்லேஷத்தில் விகாரமில்லையென்னில், அவ்வஸ்துவை அணைய ஆசைப்படவேண்டாவே. (பரம்புருடன்) – தகட்டிலழுத்தின மாணிக்கம் நிறம்பெறுமாபோலே, திருவநந்தாழ்வான்மேலே சாய்ந்தபின்பாயிற்று, ‘ஸர்வாதிகன்’ என்று தோற்றிற்று. (நெடுமாயன்) – என்மடியிற் சுவடறிந்தபின்பு படுக்கையிற் பொருந்தி யறியாதவன். *(பெரியமலைபோலேவளர்ந்த தோளுடையவன்; ‘உத்தம:புருஷ:’ என்னும் பரமபுருஷனாய், நிரவதிகமான ஆஶ்சர்ய குணசேஷ்டிதங்களையுடைய க்ருஷ்ணன்). (கவராத) – அப்படி ஆதரித்தவன் இப்படி உபேக்ஷித்தபின்பு, எனக்கு என்னுடைய ஸ்த்ரீத்வத்தால் என்னகார்யமுண்டு? (நிறைவு) – அடக்கம். அதாவது – தன்னகவாயிலோடுகிறது பிறர்க்குத் தெரியாதபடியிருக்கும் ஸ்த்ரீத்வம்.
நான்காம் பாட்டு
நிறைவினாற்குறைவில்லா நெடும்பணைத்தோள்மடப்பின்னை
பொறையினான்முலையணைவான் பொருவிடையேழடர்த்துகந்த
கறையினார்துவருடுக்கைக் கடையாவின்கழிகோற்கைச்
சறையினார்கவராத தளிர்நிறத்தாற்குறைவிலமே.
ப:– அநந்தரம், அபிமதையான நப்பின்னைப்பிராட்டியை புஜிக்கைக்காக, ஆஸுரமான எருதேழடர்த்தவன் விரும்பாத நிறத்திற்செவ்வியால் ஒரு ப்ரயோஜநமில்லை என்கிறாள்.
நிறைவினால் – ஸ்த்ரீத்வபூர்த்தியால், குறைவில்லா – குறைவற்றிருப்பாளாய், நெடும்பணைத்தோள் – நீண்டுபணைத்ததோளையுடையளாய், மடம் – ப்ரணயவிஷயத்தில் ப4த்யையான, பின்னை – நப்பின்னைப்பிராட்டி, முலை -முலையை, அணைவான் – அணைக்கைக்காக, பொறையினால் – (தன்னுடைய த்யஸநஸஹமான) மிடுக்காலே, பொருவிடைஏழ் – யுத்தோந்முகமான ருஷபங்கள் ஏழையும், அடர்த்து உகந்த – அடர்த்து (‘அபிமதம்பெற்றோம்’ என்று) உகந்தவராய், (இவளைப்பெறுகைக்கீடான ஜாத்யுசிதத்ருத்தியாலே), கறையின்ஆர் – (காட்டில்பழம்பறித்திட்ட) கறை நிரம்பி, துவர் – துவரூட்டின, உடுக்கை – உடைத்தோலையும், கடையாவின் – (பசுக்கறக்கைக்கு ஸாதநமான) கடையாவையும், கழிகோல் – கழிகோலையும், கை – கையிலேகொண்டு, சறையினார் – (அரையிற்கட்டின) சறைமணியையுடையரானவர், கவராத – விரும்பாத, தளிர்நிறத்தால் – தளிர்போலே செவ்விய நிறத்தால், குறைவிலம் – (நமக்கு ஒரு) ப்ரயோஜநமில்லை. நெடும்பணையென்று – நீண்டமூங்கி லென்றுமாம். துவருடுக்கை – துவரூட்டின உடைத்தோல். கடையா – கறக்கும் மூங்கிற்குழாய். கழிகோல் – பசுக்கள் பாயாமல் வீசுங்கோல். சறைமணி – பசுக்கள் த்வநிகேட்டு வருகைக்குத் தன்அரையிற் கட்டின மணி. சறையனென்று – உடம்பைப்பேணாதவ னென்றுமாம். தளிரென்று – தளிர்போன்ற செதவ்வியை நினைக்கிறது.
ஈடு:– நாலாம்பாட்டு. தன்னைப்பேணாதே, பெண்பிறந்தாரைப் பேணும் க்ருஷ்ணன் விரும்பாத நிறம் எனக்கு வேண்டா என்கிறாள்.
(நிறைவினால்குறைவில்லா) – க்ருஷ்ணன் தன்னைப்பெறுகைக்கு எருதுகளின் மேலே விழுகிற த்யாபாரங்களில் தான் அவிக்ருதையாயிருக்கிற ஸ்த்ரீத்வத்தாற் குறைவற்றிருக்கை. விகாரஹேது வுண்டாயிருக்கத் தான் அவிக்ருதையா யிருந்தபடி. (நெடும்பணைத்தோள்) – கீழ் ஆத்மகுணம் சொல்லிற்று; இங்கு – ரூபகுணம் சொல்லுகிறது. (நெடும்பணை இத்யாதி) – நெடியதாய்ப் பணைத்த தோளென்னுதல், நெடிய வேய்போலே யிருந்த தோளென்னுதல். அரியனசெய்தும் பெறவேண்டும்படி காணும் வடிவழகு. (மடப்பின்னை) – ம்ருதுஸ்வப4ாவை. (முலையணைவான்) ஸம்ஶ்லேஷிக்கைக்காக. (பொறையினால்) – த்யஸநஸஹனாய். எருதுகளின் கொம்பாலும் குளம்பாலும் நெருக்குண்ட இத்தை, அவள்முலையாலே பிறந்த விமர்த்தமாக நினைத்திருந்தான். (பொருவிடை) – கேவலம் த்ருஷபமல்லகிடீர், அஸுராவேஶத்தாலே யுத்தோந்முகங்களாய் வந்தவை. ஒன்றிரண்டல்ல; ஏழையும் ஒருகாலே ஊட்டியாக நெரிக்கை. (உகந்த) – ‘இனி நாம் இவளை லபித்தோமே’ என்றுஉகந்தான். நப்பின்னைப்பிராட்டியை, ‘விடைகொண்டு வந்து’ காணும் கைப்பிடித்தது. ‘நிறைவினால் குறைவில்லா நெடும்பணைத்தோள் மடப்பின்னை – முலையணைவான் – பொறையினால் பொருவிடையேழடர்த்துகந்த’. (கறையினார்துவருடுக்கை) – கறைமிக்குத் துவரூட்டின சிவந்த தோலாயிற்று உடுக்கை. இடையர் காட்டுக்குப் போம்போது முள்கிழியாமைக்கு உடுக்கும் உடைத்தோலைச் சொல்லுகிறது. ‘துவர்’ என்னாநிற்க, கறையினாரென்கிறது – காட்டில் பழங்களைப் பறித்து இடுகையாலே கறை மிக்கிருக்கும்; அத்தாலே கறைமிக்க துவராயிற்று, உடுக்கை. அறையிற் ‘பீதகவண்ணவாடை’ (நாச்.திரு.13.1) வேண்டாளாயிற்று இவள்; கே3ாரக்ஷணம்பண்ணின வடிவோடே அணையக் கணிசிக்கிறாள். (கடையா) – ப்ராப்தகாலங்களிலே கறக்கைக்குக் கையிலே கடையாவும் கொண்டாயிற்றுத் திரிவது. கடையா – மூங்கிற்குழாய். (கழிகோல்கை) – கழிகோலாவது – வீசுகோல். கடையாவையும் வீசுகோலையும் கையிலேயுடையவர். (கடையாவின் கழிகோற்கை) – கொடுவைப் பசுக்களை நியமித்துக் கறக்கைக்காக வீசுகோலைக் கையிலேகொண்டு திரியுமவ ரென்றுமாம். (கழிகோல்) – முன்னணைக்கன்று பசுக்களோடேபோனால் முலையுண்ணாமைக்கு, கொறுக்கோலென்று அதின்மூஞ்சியிலே கட்டிவிடுவர்கள்; அத்தைச் சொல்லுதல். ஸந்யாஸிகள் தந்தாமுக்கென்ன ஓரிருப்பிடம் இல்லாமையாலே மாத்ரைதொடக்கமானவற்றைக் கையிலே கூடக்கொண்டு திரிவர்களாயிற்று, அதுபோலே பசுக்களுக்குப் புல்லும் நீரும் உள்ளவிடத்திலே தங்குமித்தனையிறே இவர்களும். (சறையினார்) – சறைகைமணியென்று ஒரு மணி யுண்டாயிற்று, இடையர் அரையிலே கோத்துக்கட்டி முன்னேபோகாநின்றால் அந்த த்வநிவழியே பசுக்களெல்லாம் ஓடிவரும்படியாயிருப்பதொன்று; அத்தையுடையவரென்னுதல். அன்றிக்கே, சறையென்று – தாழ்வாய், ப்ரதாநவர்ணங்களி லொக்க எண்ணவொண்ணாத தாழ்ந்த இடைக்குலத்தே பிறந்தவ னென்னுதல். சறையென்று – சறாம்புகையாய், அல்லாத இடையர் விஷ்வயநஸங்க்ரமணங்களுக்கு உடம்பிருக்கத் தலைகுளித்தல், உடம்பிலே துளிநீரேறிட்டுக்கொள்ளுதல் செய்வர்களாகில், அதுக்கும் அவஸரமற்றிருக்குமாயிற்றுப் பசுக்களின்பின்னே திரிகையாலே. ரக்ஷ்யவர்க்கத்தினுடைய ரக்ஷணத்துக்காகத் தன்னைப்பேணாத அவ்வடிவை அணைக்கைக்காயிற்று இவள் ஆசைப்படுகிறது. “தீ3க்ஷிதம் த்ரதஸம்பந்நம் வராஜி நத4ரம் ஶுசிம் ஐ குரங்க3ஶ்ருங்க3பாணிஞ்ச பஶ்யந்தீத்வா ப4ஜாம்யஹம்*ஐஐ. (கவராத தளிர்நிறத்தால் குறைவிலம்) – அவன்விரும்பாத ப்ரஹ்மசாரி நிறத்தால் என்னகார்ய முண்டு? ராவணவதாநந்தரம் பிராட்டி திருமஞ்சனம்பண்ணி யெழுந்தருளினபோதை நிறம்போலே அவனுக்கு உபேக்ஷாவிஷயமான நிறம் நமக்கு என்செய்ய? ‘இவளை’ப் போலே இப்படி ‘நிற’த்திற்சொன்னாரில்லையே, மற்றைப்பிராட்டிமாரில். முதற்பாட்டிலே “மணிமாமைகுறைவிலம்” என்றது, இங்கே “தளிர்நிறத்தால் குறைவிலம்” என்றது: இவற்றுக்கு வாசியென்? என்னில்; அங்கு, மணிமாமையென்று – அழகையும் மென்மையையும் சொல்லிற்றாய், இங்கு – நிறத்தைச்சொல்லிற்றாகவுமாம்; அங்கு – நிறத்தைச் சொல்லிற்றாகில், இங்கு – ஸ்நிக்தமான நிறத்தைச் சொல்லுகிறது.
*(தீ3க்ஷிதம் இத்யாதி) – பிராட்டி ஆசார ப்ரதாநமான ஜநககுலத்திற் பிறப்பாலே அவ்வடிவை விரும்பினாள்; ஆசாரநிர்ப்பந்தமில்லாத இடைக்குலத்திலே பிறந்தவளாகையாலே இவ்வடிவை விரும்பினாளாயிற்று இவள். ( “தீ3க்ஷிதம்*) – உறுப்புத் தோலும் வெண்ணெய்பூசின உடம்புமான யஜமாநவேஷத்தோடே நின்ற நிலையைக் காண ஆசைப்படாநின்றே னென்கிறாள். (த்ரதஸம்பந்நம்) – ருஷி ஒரு பட்டினிவிடச் சொன்னானாகில், ‘இவன் நம்முடைய ஸௌகுமார்யத்துக்குப் பொறாது என்று சொன்னானித்தனை’ என்று நாலுபட்டினிவிட ஒருப்படுவராயிற்று, தர்மஶ்ரத்தையாலே. (*வராஜிநத4ரம்*) – கூறையுடையையும் காற்கடைக்கொள்ளவேண்டும்படியாயிருக்கை. (*ஶுசிம்*) ஒரு ஸ்த்ரீயையும் தீண்டலாகாது; தர்மபத்நியாகையாலே பிராட்டியைத் தீண்டினால் வருவதொரு சேதமில்லையிறே; ஆனபின்பு, அதொழியப் பரிஹரிப்பது’ என்றால், அதுதன்னிலும் அதிஶங்கைபண்ணி, பிராட்டியுடைய திருப்பரிவட்டம் தாக்கினாலும் முழுகத்தேடாநிற்பர். (*குரங்க3ஶ்ருங்க3பாணிஞ்ச*) – “ஏகவஸ்த்ரத4ரோத4ந்வீ” என்னுமதிற்காட்டிலும், கையும் கலைக்கொம்புமாயிருக்குமதுதானே போந்திருக்கை. (*பஶ்யந்தீ த்வா ப4ஜாம்யஹம்*) – மேல்வரும்பலத்தை அபேக்ஷிக்கவே, நடுவுள்ளது ஆநுஷங்கிகமாய் வருமிறே’ என்னுமத்தைப் பற்றச் சொல்லுகிறாள்; (*பஶ்யந்தீ த்வா ப4ஜாம்யஹம்*) – பகவத்பஜநம்பண்ணுவார் பண்ணுவதெல்லாம் த்ருஷ்டத்துக்கிறே; ஆகையாலே, த்ருஷ்டத்துக்காக பஜிக்கிறாள்காணும். ஸதாபஶ்யந்தியிறே அங்கும். ‘வழிப்போக்கில் கண்ணெச்சில் வாராதொழியவேணும்’ என்றிறே மங்களாசாஸநம்பண்ணுகிறது; அது தன்னடையேவருமிறே, மேல்வரும் பலத்தை அபேக்ஷிக்கவே. ஸாவித்ரி தன்பர்த்தாவைக் காட்டி, ‘இவனுக்கு நான் அநேகம் பிள்ளைகளைப் பெறவேணும்’ என்று வேண்டிக்கொண்டாளிறே.
ஐந்தாம் பாட்டு
தளிர்நிறத்தாற்குறைவில்லாத் தனிச்சிறையில்விளப்புற்ற
கிளிமொழியாள்காரணமாக் கிளரரக்கன்நகரெரித்த
களிமலர்த்துழாயலங்கல்கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான்கவராத அறிவினாற்குறைவிலமே.
ப:- அநந்தரம், ஸ்ரீஜநகராஜன் திருமகளுக்காக, அஸஹ்யாபராதியான ராவணனை அழியச் செய்த சக்ரவர்த்தி திருமகன் விரும்பாத அறிவால் என்ன காரியமுண்டு? என்கிறாள்.
தளிர்நிறத்தால் – தளிர்போலே தர்ஶநீயமாய் ஸுகுமாரமான நிறத்தால், குறைவில்லா – பரிபூர்ணையாய், தனிச்சிறையில் – (ப்ரபாப்ரபாவான்களைப் பிரிக்குமா போலே பிரிக்கப்பட்டுத்) தனியே (ராக்ஷஸீமத்யத்திலே) நிருத்தையாய், விளப்புற்ற – (லோகமடைய ‘ஒருத்தி சிறையிலிருந்து ரக்ஷிக்கும்படியே’ என்றுகொண்டாடும்படி) ப்ரஸித்தையாய், (*மது4ராமது4ராலாபா*), என்னும்படி கிளிமொழியாள் – கிளிபோலே இனியமொழியை யுடையளான பிராட்டி, காரணமா – காரணமாக, கிளர் – அநீதியாலே பெரிய கிளர்த்தியையுடையனான, அரக்கன் – ராவணனுடைய, கிளர் நகர் – ஸம்ருத்தமான நகரத்தை, எரித்த – நெருப்புக்கிரையாக்கினவனாய், (மீண்டு வந்து முடிசூடி), களிமலர் – தேனையுடைத்தாய் மலர்ந்த, துழாயலங்கல் – திருத்துழாய் மாலையாலே, கமழ் – பரிமளோத்தரமான, முடியன் – அபிஷேகத்தை யுடையனாய், கடல் ஞாலத்து – கடல்சூழ்ந்த பூமியிலே, அளிமிக்கான் – தண்ணளி விஞ்சும்படி எழுந்தருளியிருந்தவன், கவராத – விரும்பாத, அறிவினால் – அறிவால், குறைவிலம் – ஒருகாரியமுடையோ மல்லோம். களி – தேன், அலங்கல் – மாலை. அளி – தண்ணளி; உபகாரமாகவுமாம்.
ஈடு:- அஞ்சாம்பாட்டு. பரமப்ரணயியாய் ஸர்வரக்ஷகனான தஶரதாத்மஜன் விரும்பாத அறிவினால் என்ன ப்ரயோஜநமுண்டு எனக்கு? என்கிறாள்.
(தளிர்நிறத்தால் குறைவில்லா) – “குர்வந்தீம் ப்ரப4யா தே3வீம் ஸர்வாவிதிமிரரதி3ஶ:” – பிராட்டி பத்துமாஸம் திருமஞ்சநம்பண்ணாமையாலே திருமேனியில் புகர் அகஞ்சுரிப்பட்டபடி, பத்துத்திக்கிலுமுண்டான அந்தகாரத்தைப்போக்குமளவாயிற்று; “ஶோகதமோபஹம்*. (தனிச்சிறையில்) – ப்ரபை4யையும் ப்ரப4ாவானையும் பிரித்துவைத்தாற்போலே இருப்பதொன்றிறே ராக்ஷஸீமத்4யத்தில் நிருத்தையாயிருந்தபடி. (விளப்புற்ற) “க்ருஶாமநஶநேநச” என்றாற்போலே. தன்னைப் பேணாதேயிருந்தாள்’ என்று திருவடியாலே பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்யப்பட்டவளென்னுதல்; அன்றிக்கே, தேவஸ்த்ரீகள்காலில் விலங்கைவெட்டிவிடுகைக்காகத் தன்னைப்பேணாதே அங்கேபுக்குத் தன்காலிலே விலங்கைக் கோத்துக்கொண்டவ ளென்று நாட்டிலே ப்ரஸித்தையானவளென்னுதல். (கிளிமொழியாள் காரணமா) – திருவடிவாயிலே ஒன்றுதங்கிய அவள் வார்த்தையைக் கேட்டு, அவ்வழியாலே “மது4ராமது4ராலாபா” என்றாரிறே அத்தை ஸ்மரித்து; அப்படிப்பட்ட வார்த்தையையுடையவள் ஹேதுவாக. (கிளரரக்கன்) – தாயும் தமப்பனும் சேரஇருக்கப்பொறாதபடியான கிளர்த்தியிறே; “உதீர்ணஸ்ய ராவணஸ்ய” என்கிறபடியே. (நகர் எரித்த) – பையல்குடியிருப்பையழித்து மூலையடியே வழிநடத்தின. ராவணனுடைய ஸம்ருத்தமான நகரத்தை தக்தமாக்கின. (களிமலர் இத்யாதி) – களி – தேன். தேனையுடைத்தான மலரோடு கூடின திருத்தழாய்மாலை கமழாநின்றுள்ள திருவபிஷேகத்தையுடையவன். அவன்தான் இதரஸஜாதீயனாய்க்கொண்டு அவதரித்தால், அப்ராக்ருதமான பதார்த்தங்களும் அதுக்கீடான வடிவைக் கொண்டு வந்து தோற்றுமித்தனையிறே; ஆகையாலே, அவன் கலம்பகன்கொண்டு வளையம்வைத்தாலும் இவர்கள் சொல்லுவது திருத்துழாயையிட்டிறே. அஸாதாரணமானவற்றையிட்டிறே கவிபாடுவது; பாண்டியர்கள் மற்றையார் கருமுகைமாலையைக்கொண்டு வளையம்வைத்தாலும், அவர்களுக்கு அஸாதாரணமான வேம்பு மற்றையவற்றையிட்டிறே கவிபாடுவது. (கடல்ஞாலத்து அளிமிக்கான்) – ஸம்ஸாரத்திலே தண்ணளிமிக்கவனாயிற்று. ஸம்ஸாரிகள் படுகிற க்லேஶத்தை அநுஸந்தித்து, ‘இத்தைப் போக்கவேணும் என்று திருவுள்ளம் இங்கே வேரூன்றினபடி; பிராட்டியைப்பிரிப்பது, இளையபெருமாளை அகற்றுவதாய், அநந்தரம் ‘அவதாரத்துக்குக் காலமாயிற்று’ என்று தேவகார்யத்திலே ஒருப்படுவித்துக் கிளப்பவேண்டும்படியிறே. (கவராத இத்யாதி) – அப்படிப்பட்டவன் விரும்பாத, அறிவினால் கார்யமுடையோமல்லோம். பிராட்டியுடைய இரண்டாம் பிரிவுக்கு அடியான வநவாஸஜ்ஞாநம் போலேயிருக்கிற இவ்வறிவால் என்ன ப்ரயோஜநமுண்டு? பிரிவோடே ஸந்திக்கும்படியாயிறே அதுஇருப்பது.
ஆறாம் பாட்டு
அறிவினாற்குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய
நெறியெல்லாமெடுத்துரைத்த நிறைஞானத்தொருமூர்த்தி
குறியமாணுருவாகிக் கொடுங்கோளால்நிலங்கொண்ட
கிறியம்மான்கவராத கிளரொளியாற்குறைவிலமே.
ப:- அநந்தரம், உபதேஶத்தாலும் அர்த்தித்வத்தாலும் தனக்கேயாக என்னைக் கொள்ளும் ஸர்வஜ்ஞன் விரும்பாத ஒளியால் ஒரு காரியமில்லை யென்கிறாள்.
அறிவினால் – ஜ்ஞாநத்தில் அபேக்ஷையில்லாமையாலே, குறைவில்லா – குறைவு பட்டிராத, அகல் ஞாலத்தவர் – விஸ்தீர்ணையான பூமியிலுள்ளார், அறிய – அறியும்படி, (ஸர்வலோகமும் திரண்ட படைக்கு நடுவே), நெறியெல்லாம் – (கர்மயோகம் முதலாக ப்ரபத்திபர்யந்தமான) ஸகலோபாயங்களையும், எடுத்து உரைத்த – (த்யக்தமாம்படி தானே) எடுத்து அருளிச்செய்த, நிறைஞானத்து – பரிபூர்ணஜ்ஞாநவானான, ஒரு மூர்த்தி – அத்விதீயஸ்வப4ாவனானவனாய், குறிய – மஹாமேருவை மஞ்சாடியாக்கினாற்போலே வாமநத்வத்தாலே ஆகர்ஷகமாய், மாணுருவாகி – (அர்த்தித்வமே நிரூபகமென்னலாம்படி) ப்ரஹ்மசாரிவேஷத்தையுடையனாய், கொடுங்கோளால் – (அழகைக்காட்டி மாறாதபடி பண்ணி, சிற்றடியைக்காட்டியிசைவித்து இப்படி) கொடிதாகவஞ்சித்த பரிக்ரஹத்தாலே, நிலம்கொண்ட – பூமியைத் தன்னதாக்கிக் கொண்ட, கிறி – நல்விரகையுடைய, அம்மான் – ஸர்வேஶ்வரன், கவராத – விரும்பாத, கிளர்ஒளியால் – கிளர்ந்த ஒளியால், குறைவிலம் – என்னப்ரயோஜநமுண்டு? ஒளி – லாவண்யகுணமான ஸமுதாயஶோபை.
ஈடு:- ஆறாம்பாட்டு. அறிவில்லாதார்க்கு ஸ்வப்ராப்த்யுபாயங்ளை உபதேசித்து, அறிவு பிறக்கைக்கு யோக்யதையில்லாதாரை வடிவழகாலே தனக்காக்கிக் கொள்ளுமவன் விரும்பாத லாவண்யத்தால் என்ன கார்யமுண்டு? என்கிறாள்.
(அறிவினால் குறைவில்லா) – நாட்டார் அந்நபாநாதிகளெல்லாவற்றாலும் கார்யமுடையராயிருப்பார்களிறே; அறிவொன்றிலுமாயிற்றுக் குறைவுபட அறியாதது. அறிவினால் குறைவுபட அறியாத. அறிவால் கார்யமின்றிக்கே இருப்பாராயிற்று. (அகல்ஞாலத்தவர்) – பரப்பையுடைத்தான பூமியில், அறிவில் குறைவுபட அறிவாரொருவருமில்லையாயிற்று. (அவர் அறிய) – கல்லைத்துளைத்து நீரைநிறுத்தினாற் போலே இவர்கள் நெஞ்சிலேபடும்படி. (நெறியெல்லாம் எடுத்துரைத்த) – சேதநபேதத்தோபாதி போருமிறே உபாயபேதமும். கர்மயோகம் முதலாக ப்ரபத்திபர்யந்தமாக ஸகலோபாயங்களையும் த்யக்தமாக உபதேசித்தபடி. கர்மஜ்ஞாநபக்திகள், அவதாரரஹஸ்யஜ்ஞாநம், புருஷோத்தமவித்யை, ஸ்வஸ்வரூபயாதாத்ம்யம், விரோதிநிவ்ருத்திக்கு ப்ரபத்தி, ஆத்மப்ராப்திக்கு ப்ரபத்தி, பகவல்லாபத்துக்கு ப்ரபத்தி இவற்றை அடங்க விஶததமமாக அருளிச்செய்தவன். கர்மயோகத்தை உபதேசிக்க, அவன் ‘இந்த்ரியஜயம்பண்ணுகைஅரிது’ என்ன, ‘ஆகில், என்பக்கலிலே நெஞ்சைவை’ என்று கர்மத்தை அநுஷ்ட்டித்தாரை ப்ரஸங்கியா, அந்தப்ரஸங்கத்தாலே அவதாரரஹஸ்யத்தை உபதேசியா, அநந்தரம் ஜ்ஞாநயோகத்தை உபதேசித்து, ‘ஜ்ஞாந வைஶத்யத்துக்கு உறுப்பாக என்பக்கலிலே நெஞ்சைவை’ என்று, அநந்தரம் பக்தியோகத்தை உபதேசித்து, அங்கு ‘விரோதிபாபக்ஷயத்துக்கும் பக்திவித்ருத்திக்குமாக என்பக்கலிலே நெஞ்சை வை’ என்று, அநந்தரம் “யத: ப்ரத்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ*, “தமேவ ஶரணம் க3ச்ச*, “மாமேவ யே ப்ரபத்3யந்தே” என்றும் அவற்றுக்கு உறுப்பாக ப்ரபத்தியை விதியா, அவ்வழியாலே ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து, “பூ4மிராபோநலோவாயு:” என்று தொடங்கி “ஜீவபூ4தாம்” என்கிற சேதநாசேதநங்கள் எனக்கு ஶரீரமென்று அவ்வழியாலே தன்பேற்றுக்குத் தனக்கு ஸாதநாநுஷ்டாநம்பண்ணுகையில் யோக்யதையின்றிக்கேயிருக்கிறபடியைக் காட்டி, ‘இவைதான் செய்து தலைக்கட்டப்போகாது’ என்று சொல்லும்படி இதின் அருமையை அவன்நெஞ்சிற்படுத்தி, அவன்தான் அறிந்து கேட்டவற்றுக்குப் பரிஹாரம் பண்ணி, அவன் அறியாதே கேட்கமாட்டாதவற்றையும் தானே அறிவித்து, ப்ரபத்திபர்யந்தமாக உபதேசித்தபடியைச் சொல்லுகிறது. (நிறைஞானத்து ஒருமூர்த்தி) ‘ஒருவன் சொன்னான்’ என்னுங்காட்டில் அது ப்ரமாணமோ? ஆப்தமாக வேண்டாவோ? என்னில்; இத்தலையில் அஜ்ஞாநமும் அகிஞ்சித்கரமாம்படியான ஜ்ஞாநபூர்த்தியையுடையவனாவது, ப்ரமாணமாய் எல்லார்க்கும் வெளிச்சிறப்பைப் பண்ணிக்கொடுப்பதான வேதத்தினுடைய நித்யத்வாபௌருஷேயத்வங்கள் ஸ்வாதீ4நாமாம்படி அவற்றை ஸ்மரித்துச்சொல்லுமவனாயிற்று வேதார்த்தத்தை விசதீகரித்தானாயிற்று. பரிபூர்ணஜ்ஞாநத்தையுடைத்தான அத்விதீயமான ஸ்வரூபத்தையுடையவன். (குறிய இத்யாதி) – அறிவிக்கக் கேளாதாரை வடுக விடுநகமிட்டு வடிவழகாலே தனக்காக்கிக் கொள்ளுமவனாயிற்று. (குறிய) – கோடியைக் காணியாக்கிக்கொண்டாற்போலே வளர்ந்தபோதையிற்காட்டிலும் ஆகர்ஷகமாயிருந்தபடி. (மாணுருவாகி) – பிறந்தபோதே இரப்பிலே அதிகரித்து, அதுவே வாஸிதமாயிருந்தபடியாலே, ‘பிறப்பதற்கு முன்புமெல்லாம் இதுவேயோ யாத்ரை?’ என்னும்படிக்கு ஈடாகவாயிற்று. ‘உண்டு’ என்று இட்டபோதோடு, ‘இல்லை’ என்று சொல்லிக் கதவடைத்தபோதோடு வாசியற முகமலர்ந்துபோம்படிக்கு ஈடாகவாயிற்று இரப்பிலே தகணேறினபடி. (கொடுங்கோளால்) – வெட்டிய கோளாலேயென்றபடி. அதாவது – வடிவழகைக்காட்டி அவனை வாய் மாளப்பண்ணினபடி. அன்றிக்கே, கோடு என்றத்தைக் குறுக்கி, அத்தை ‘கொடு’ என்றதாய், அதாவது – விலங்குகையாய், செவ்வைக்கேட்டைநினைத்து மூன்றடியை அபேக்ஷித்து இரண்டடியாலே அளப்பது, சிறுகாலைக்காட்டிப் பெரியகாலாலே அளப்பதாகக் கொண்டு அவனை வஞ்சித்தபடியைச் சொல்லிற்றாதல். துஷ்டஸாதநப்ரயோகம் பண்ணினவர்களுக்கு அதுக்கு ஈடாக உத்தரம்சொல்லுவாரைப் போலே, அவன் செவ்வைக்கேட்டுக்கு ஈடாகத் தானும் செவ்வைக்கேடனாய்க் கொண்டபடி. (கிறியம்மான்) – அவன்தரும் விரகறிந்து வாங்கவல்ல பெருவிரகனான ஸர்வேஶ்வரன். ‘பெருங்கிறியான்’ (திருவிரு.91) என்னக்கடவதிறே. (கவராத இத்யாதி) – செவ்வை கெடவாகிலும் தன்னுடைமையைத் தனக்காக்கிக் கொள்ளுமவன்; முன்பே இசைந்து தன்னை ‘பெறவேணும்’ என்றிருக்கிற எனக்கு வந்து முகங்காட்டித் தனக்காக்கிக் கொள்ளாதபின்பு எனக்கு இத்தால் கார்யமுண்டோ? கிளரொளி – மிக்கவொளி; ஸமுதாயஶோபை.
ஏழாம் பாட்டு
கிளரொளியாற்குறைவில்லா அரியுருவாய்க்கிளர்ந்தெழுந்து
கிளரொளியவிரணியனது அகல்மார்பங்கிழித்துகந்த
வளரொளியகனலாழி வலம்புரியன்மணிநீல
வளரொளியான்கவராத வரிவளையாற்குறைவிலமே.
ப:- அநந்தரம், உத்துங்கவிரோதியான ஹிரண்யனைப் பிளந்த நரஸிம்ஹன் விரும்பாத வளையால் என்ன கார்யமுண்டு? என்கிறாள்.
மணி – ஶ்லாக்யமான, நீலம் – நீலரத்நத்தினொளிபோலே அத்யுஜ்ஜ்வலமாய், வளர் – அஸாதாரணமான, ஒளியான் – விக்ரஹதேஜஸ்ஸையுடையனாய், (ஆஶ்ரிதார்த்தமாக அவ்வடிவழகை அழியமாறி), கிளர் – (*ஜ்வலந்தம்” என்னும்படி) அபித்ருத்தமாவ்ன, ஒளியால் – ஔஜ்ஜ்வல்யத்தால், குறைவில்லா – பரிபூர்ணமான, அரியுருவாய் – ஸிம்ஹரூபமாய்க்கொண்டு, கிளர்ந்து எழுந்து – ஶத்ருநிரஸநத்திலே உத்யோகித்து ஆவிர்ப்பவித்து, கிளர் ஒளிய – மிக்க தேஜஸ்ஸையுடையனான, இரணியனது – ஹிரண்யனுடைய, அகல் மார்பம் – விஸ்தீர்ணமான மார்பை, கிழித்து – (அநாயாஸேந) கிழித்து, உகந்த – (ஆஶ்ரிதவிரோதிபோனபடியாலே) உகந்தவனாய், (இரைபெறாத பாம்புபோலே சீறுகையாலே), வளர்ஒளிய – வளர்கிற ஜ்வாலையையுடைய; கனல் ஆழி – அக்நிபோலேயிருக்கிற திருவாழியையும், வலம்புரியன் – ஸ்ரீபாஞ்சஜந்யத்தையு முடையனானவன், கவராத – ஆதரியாத, வரிவளையால் – வரியையுடைய வளையாலே, குறைவிலம் – என்ன ப்ரயோஜநமுண்டு?
ஈடு:- ஏழாம்பாட்டு. பெற்ற தமப்பன் பகையாக பாலனானவனுக்கு உதவினவன்தான் உதவாமை நோவுபடுகிற எனக்கு உதவானாகில், நான் ஆபரணம் பூண்டு ஒப்பித்திருக்கிற இவ்வொப்பனை யார்க்கு? என்கிறாள்.
(கிளரொளி இத்யாதி) – “ஜ்வலந்தம்” என்கிற மந்த்ரலிங்கம் தோற்றச் சொல்லுகிறதாயிற்று. கிளர்ந்த ஒளியால் குறைவின்றிக்கேயிருக்கிற நரஸிம்ஹமாய். (கிளர்ந்தெழுந்து) – சீறிக்கொண்டு தோற்றி. “பிறையெயிற்றன்றடலரியாய்ப் பெருகினானை” (திருமொழி 2.5.8) என்கிறபடியே. சிறுக்கன்மேலே அவன்முடுகினவாறே கிளர்ந்தபடி. (கிளரொளிய இரணியன்) – மிக்கதேஜஸ்ஸையுடைய ஹிரண்யன். ஆஸுரமான தேஜஸ்ஸு. நரஸிம்ஹமும் பிற்காலித்து வாங்கும்படியாயிற்று, பையல்கிளர்த்தி யிருந்தபடி. (அகல்மார்பம்) – தேவதைகளினுடைய வரத்தை ஊட்டியாக இட்டுத் திருவுகிருக்கு இரைபோரும்படியாக வளர்ந்த அகன்ற மார்வை. (கிழித்து) – நரஸிம்ஹத்தினுடைய மொறாந்த முகத்தையும், நா மடிக்கொண்ட உதட்டையும், குத்த முறுக்கின கையையும், அதிர்ந்த அட்டஹாஸத்தையும் கண்டவாறே, பொசுக்கின பன்றிபோலே உருகினானாயிற்று; பின்னை அநாயாஸேந கிழித்துப்போகட்டான். நெற்றியது கண்ணும் உச்சியது புருவமுமாய்க்கொண்டு தோற்றினபோது, கோடரகதமான அக்நிபோலே பயாக்நி உள்ளேநின்று எரியப்புக்கவாறே பதஞ்செய்யுமிறே. (உகந்த) – ‘சிறுக்கனுடைய விரோதி போகப்பெற்றோமே’ என்று உகந்தபடி. “மத்பிதுஸ்தத்க்ருதம்பாபம் தே3வதஸ்ய ப்ரணஶ்யது” என்று இவன்தான் காற்கட்டி ஆணையிடாதே, இவன்தானே ‘கொல்லவேணும்’ என்று இசையப்பெற்றோமிறே” என்று உகந்தானாயிற்று. (வளரொளிய கனலாழி வலம்புரியன்) – காவற்காட்டில் துஷ்டம்ருகங்களுக்கு ஊட்டியிட்டு வளர்க்குமாபோலே, தேவதைகளுடைய வரங்களை ஊட்டியாக இட்டு வளர்த்த பையலுடைய அகலமெல்லாம் திருவுகிருக்கு அரைவயிறாம்படியாயிற்றிறே; ‘ஒருவன் கைபார்த்திருப்பார்’ அநேகருண்டானால், அவர்களிலே சிலவர் இவனோடே ‘கைசெய்து’, அவனுக்குள்ள உடலையும் தாங்கள் கண்டபடியழித்து, நீக்கியுள்ள உடலையும் கூறிட்டுத் தாங்களே கொண்டுவிட்டால், மற்றுள்ளார் ‘கதகதென்ன’ச் சொல்லவேண்டாவிறே. இவர்கள் தாம் ‘நுனியாடி’களிறே. ‘இப்படி இவர்கள் தாமேயாவதென் நாமிருக்க?’ என்று திவ்யாயுதங்கள் கிளர்ந்தனவாயிற்று. (மணிநீலவளரொளியான்) – நீலமணிபோலேவளராநின்றுள்ள ஒளியையுடையவன். கைமேலே ‘இலக்கை’ பெறாதார்க்கு அன்றாடு படி விட வேணுமிறே; ‘படி’விடாதபோது அரைக்ஷணம் நில்லார்களிறே அவர்கள். இவர்கள் த்ருத்தவான்களாகையிறே கைமேலே இப்படிபெற்று ஜீவிக்கிறது; “படிகண்டறிதியே” (மூன். திரு.85) என்கிறபடியே. இப்படி கண்டு ஜீவிக்குமதிறே. “ஸத3ாபஶ்யந்தி*யிறே. “மணிநீலவளரொளி” என்பானென்? அப்போது திருமேனி வெளுத்தன்றோ இருப்பது? என்னில் – ‘சிறுக்கனார்த்தி தீரப்பெற்றோமே’ என்று திருமேனி குளிர்ந்த படியைச் சொல்லுகிறது. (கவராத இத்யாதி) – அவ்வடிவை யுடையவன்தானே வந்து மேல்விழுந்து விரும்பி வாங்கியிட்டுக் கொள்ளாத இவ்வளையால் எனக்கு என்னகார்யமுண்டு? என்கிறாள்.
எட்டாம் பாட்டு
வரிவளையாற்குறைவில்லாப் பெருமுழக்காலடங்காரை
எரியழலம்புகவூதி இருநிலமுன்துயர்தவிர்த்த
தெரிவரியசிவன்பிரமன் அமரர்கோன்பணிந்தேத்தும்
விரிபுகழான்கவராத மேகலையாற்குறைவிலமே.
ப:- அநந்தரம், பூ4ப4ாரநிர்ஹரணார்த்தமாக துர்யோதநாதிவிரோதிஶதத்தையும் நிரஸித்த நிரதிஶயகீர்த்தியை யுடையவன் விரும்பாத மேகலையால் என்னகார்யமுண்டு? என்கிறாள்.
வரி – (முகத்தில்) வரியையுடைய, வளையால் – ஸ்ரீபாஞ்சஜந்யத்தாலுண்டான, குறைவில்லாப் பெருமுழக்கால் – மஹாகோஷத்தாலே, அடங்காரை – அப4த்யரான ஶத்ருக்களை, எரி – கிளர்ந்தெரிகிற, அழலம் – பயாக்நியானது, புக – உள்ளே ப்ரவேசிக்கும்படியாக, ஊதி – ஊதி, முன் – முற்காலத்திலே, இருநிலம் – மஹாப்ருதிவியினுடைய, துயர் – பாரக்லேசத்தை, தவிர்த்த – தவிர்த்தவனாய், (இவ்வுபகாரத்தாலே), தெரிவரிய – (தன்னோடொக்க நினைத்து ப்ரமித்து) விவேகிக்க அரிய ப்ராதாந்யத்தையுடைய, சிவன் – ருத்ரன், பிரமன் – ப்ரஹ்மா, அமரர்கோன் – தேவநிர்வாஹகனான இந்த்ரன், பணிந்து ஏத்தும் – க்ருதஜ்ஞதாபரவஶராய்க் கொண்டு வணங்கி ஸ்தோத்ரம் பண்ணும்படி, விரி புகழான் – விஸ்தீர்ணமான புகழையுடையவன், கவராத – ஆதரியாத, மேகலையால் – காஞ்சீகுணத்தால், குறைவிலம் – என்ன ப்ரயோஜநமுண்டு? மேகலை – பரிவட்டத்தின் மேற் கட்டும் காஞ்சி; பரிவட்டமாகவுமாம்.
ஈடு:- எட்டாம்பாட்டு. ஜகத்துக்காக உபகரிக்குமவன் தனக்கு அஸாதாரணையான என்னை உபேக்ஷிக்குமாகில் என்னுடைய மேகலையால் என்ன ப்ரயோஜநமுண்டு? என்கிறாள்.
(வரிவளையால்) – வளையென்று – சங்கு *(முகத்திலே வரியையுடைய) ஸ்ரீபாஞ்சஜந்யத்தாலே. (குறைவில்லாப் பெருமுழக்கால்) – சத்ருக்களளவல்லாத மஹாத்வநியாலே; “ஸகே4ாஷோத4ார்தராஷ்ட்ராணாம் ஹ்ருத3யாநிவ்யத3ாரயத்” என்கிறபடியே, “ஜக3த் ஸபாதால வியத்3தி3கீ3ஶ்வரம் ப்ரகம்பயாமாஸ” என்கிறபடியே. (வரிவளையால் – பெருமுழக்கால்) – “ஹஸ்தேந ராமேண” என்னுமாபோலே. (அடங்காரை) – அடங்காருண்டு சத்ருக்கள், அவர்களை. (எரி யழலம் புக வூதி) – எரியாநின்றுள்ள அக்நியானது அவர்கள் ஹ்ருதயத்திலே ப்ரவேசிக்கும்படி ஊதி. பயாக்நி கொளுந்தும்படி பண்ணி. ஆஶ்ரிதவிரோதிகளைக் கழியவூதிற்று இவளையிட்டிறே. (இருநில முன் துயர்தவிர்த்த) – பரப்பையுடைத்தான பூமியில் முன்பே யுண்டான துக்கத்தைப் போக்கின. முன்பே பிடித்து து:3க்க2நிவர்த்தகனாய்ப் போருமவனின்றித் தலையை நோவுபடவிட்டிருக்குமாகில், பின்னை எனக்கு என்னுடைமைகொண்டு கார்யமென்? ஸ்ரீபாஞ்சஜந்யகோஷமாகிற இதுதான் அநுகூலர் கேட்க ஆசைப்பட்டிருப்பதுமாய், ப்ரதிகூலர்முடிகைக்கு ஹேதுவுமாயிருப்ப தொன்றிறே; “தே3வாநாம் வத்ருதே4தேஜ: ப்ரஸாத3ஶ்சைவயோகி3நாம்*, “ஸகே4ாஷோத4ார்த ராஷ்ட்ராணாம் ஹ்ருத3யாநிவ்யத3ாரயத்” இத்யாதிவத். ” *பெரியாழ்வார் திருமகளுக்கும் விசேஷித்து ஜீவநமாயிருப்பதொன்றிறே இது. (பூங்கொள்இத்யாதி) (நாச்.திரு. 9.9) – ஸ்ரீஜநகராஜன் திருமகளுக்கும் ருக்மிணிப்பிராட்டிக்கு முண்டான விடாய் தனக்கொருத்திக்கும் உண்டாகையாலே, அவர்களிருவரும் பெற்ற பேற்றை நானொருத்தியும் ஒருகாலே பெறவேணுமென்கிறாள்; ‘இது பட்டர் அருளிச்செய்ய நான் கேட்டேன்” என்று பிள்ளை அருளிச்செய்வர். சிசுபாலன் ஸ்வயம்வரத்திலே ப்ரத்ருத்தனானபோது ருக்மிணிப்பிராட்டி, இவ்வளவிலே க்ருஷ்ணன் வந்து முகங்காட்டிற்றிலனாகில் நான் பிழையேன்’ என்ன அவர் கலங்கின ஸமயத்திலே புறச்சோலையிலே நின்று ஸ்ரீபாஞ்சஜந்யத்தை முழக்க, அது வாராச் செவிப்பட்டது; ராவணன் மாயா–ரஸ்ஸைக் காட்டினபோது பிராட்டி தடுமாற, அவ்வளவிலே ஜ்யாகோஷம் வாராச் செவிப்பட்டது; அவ்விருவர் விடாயும் தனக்கொருத்திக்கும் உண்டாகையாலே, இரண்டும் ஒருகாலே பெறவேணுமென்று ஆசைப்படுகிறாளாயிற்று இவள்.” (தெரிவரிய இத்யாதி) பாரத ஸமரத்தை முடியநடத்தினபடியைக் காண்கையாலே, தங்களை துர்ஜ்ஞேயராக நினைத்திருப்பாருமாய்ப் பூமியில் கால்பாவாமையால் வந்த துரபிமாநத்தை யுடையருமான ருத்ரன் தொடக்கமானார் ப4க்3நாபிமாநராய்க் கொண்டு வந்து விழுந்து ஏத்தும்படியான பரந்த புகழையுடையவன். ஒரு கொசுகுத்திரள் இருந்ததென்னா, திருப்பாற்கடலில் ஒரு மூலை சுவறாதிறே; அப்படியே, இவர்கள் ஏத்தாநின்றால் ஏத்தினவிடம் அளவுபட்டு ஏத்தாதவிடம் மிஞ்சும்படியான புகழையுடையவன். (கவராத இத்யாதி) – அவன் விரும்பாதே நானே உடுத்து முசியும்படியான மேகலை எனக்கு என்செய்ய? உடைமாறாத பரிவட்டங்கொண்டு கார்யமென்? ரக்ஷகனாய்த் தான் வந்து புகழ்படைத்துப் போருகிறவன், ‘இத்தலையை ரக்ஷித்து வரும் புகழ் வேண்டா, அது தவிர்ந்தால் வரும் அவத்யம் வர அமையும்’ என்றிருந்தானாகில், நான் எனக்கு அவத்யமாம்படி பரிவட்டம் பேணியிருக்கவோ? (வரிவளையால்) – ‘வாயாடி வாய்க்கரைப்பற்றை அடுத்தூணாகவுடையவன்’. எதிரிகள் முடுகினால், இவன்தான் வாய்க்கரையிலே யிருந்து பண்ணும் ஆர்ப்பரவத்தைக் கேட்டு எதிரிகள் முழுக்காயாக அவியும்படியாயிருக்கும். அந்த:புரத்திலுள்ளார் ‘எங்கள் வாய்புகுசோற்றைப் பறித்து ஜீவியாநின்றான்’ என்று முறைப்பட்டால், அவன் ‘வாய்விடாச்சாதி’ யென்னலாம்படியிறே இருப்பது. ஓசையும் ஒளியு முடையனாய் எதிரிகளை ஊதப்பறக்கும்படி பண்ணியிறேயிருப்பது. அல்லாத ஆழ்வார்கள் ‘கூரிய’ரேயாகிலும் ‘தடியர்’ ‘கழுந்த’ரென்னலாய், இவனைப்போலே ‘ஸுஷி’யுடையாரில்லையிறே. ‘மரங்கள்போல் வலிய நெஞ்ச’ (திருமாலை 27)ராகையாலே எரியழலம்புக ஊதிக்கொளுத்தினபடி. இப்படி ஆஶ்ரிதரக்ஷணம் பண்ணினவன் விரும்பாத மேகலையால் எனக்கு என்ன ப்ரயோஜநமுண்டு?
ஒன்பதாம் பாட்டு
மேகலையாற்குறைவில்லா மெலிவுற்றவகலல்குல்
போகமகள்புகழ்த்தந்தை விறல்வாணன்புயந்துணித்து
நாகமிசைத்துயில்வான்போல் உலகெல்லாம்நன்கொடுங்க
யோகணைவான்கவராத உடம்பினாற்குறைவிலமே.
ப:- அநந்தரம், ஆஶ்ரிதவிரோதியான பாணனை விஹஸ்தனாக்கின க்ருஷ்ணன் விரும்பாத ஶரீரத்தால் என்ன ப்ரயோஜநமுண்டு? என்கிறாள்.
மேகலையால் – உடையழகால், குறைவுஇல்லா – குறை இன்றியிலே, மெலிவு உற்ற – (அநிருத்தஸம்ஶ்லேஷத்தால் வந்த) துவட்சியை உடைத்தாய், அகல் அல்குல் – விஸ்தீர்ணமான நிதம்பவைலக்ஷண்யத்தை யுடையளாய், போகம் மகள் – பே4ாக3ாநுகூலமான ஸ்த்ரீத்வத்தையுடையாளான உஷைக்கு, தந்தை – பிதாவென்கிற, புகழ் – ப்ரதையையுடையனாய், விறல் – ஶௌர்யவீர்யாதிகளால் குறைவற்ற, வாணன் – பாணனுடைய, புயம் – (*ப4ாராய மம கிம்பு4ஜை:” என்று யுத்தகண்டூதியையுடைத்தாகச் சொல்லப்பட்ட) தோள்களை, துணித்து – (தின்றவிடம் சொறிந்தாற்போலே) துணித்து, (அவதார கார்யாநந்தரம்), நாகமிசை – பழையநாகபர்யங்கத்திலே சாய்ந்து, துயில்வான்போல் – உறங்குவான்போலே, உலகெல்லாம் – ஸர்வலோகமும், நன்கு ஒடுங்க – (ஸ்வப்ராப்தியாகிற) நன்மையிலே ஒதுங்கும்படி, யோகு அணைவான் – உபாயசிந்தையைப் பண்ணுமவன், கவராத – விரும்பாத, உடம்பினால் – உடம்பால், குறைவிலம் – என்ன ப்ரயோஜநமுண்டு? யோகு – உபாயம்.
ஈடு:- ஒன்பதாம்பாட்டு. ஆஶ்ரிதவிரோதியான வாணனை அழியச்செய்து, ஸர்வரும் உஜ்ஜீவிக்கும்வழி யெண்ணுமவன் விரும்பாத உடம்புகொண்டு கார்யமென்? என்கிறாள்.
(மேகலையால் குறைவில்லா) – ‘உஷைக்குக் கூறையுடை அழகியதாயிருக்கும்போலே காண் என்னுமாம் வங்கிப்புரத்துநம்பி. (மெலிவுற்ற) – ம்ருதுஸ்வப4ாவையாயுள்ளாள். பிரிந்து தனியிருக்கப் பொறாதவள். (அகல்அல்குல்) – அகன்ற நிதம்ப ப்ரதேஶத்தை யுடையளாயிருக்கை. (போகமகள்) பே4ாக3யோக்3யையான பெண்பிள்ளை. (புகழ்த்தந்தை) – உஷைக்குப் பிதாவான வார்த்தைப்பாட்டாலுள்ள புகழையுடையவ னென்னுதல், ஶௌர்யவீர்யாதிகளாலுள்ள ப்ரதையையுடையவ னென்னுதல். (விறல்வாணன்) – மிடுக்கையுடைய வாணன். ஒரு தேவதை ஸந்நிதியிலேயிருந்தால் ஸத்வம் உத்ரிக்தமாயிருக்கக்கடவதாயிருக்குமிறே எல்லார்க்கும்; அவ்வளவிலும் யுத்தகண்டூதி வர்த்தித்து ‘எனக்கு எதிரியாயிருப்பானொருவனைக் காட்டவேணும்’ என்று வேண்டிக்கொள்ளும்படியான பெருமிடுக்கனானவன். (புயம் துணித்து) “இவன் அறக் கைவிஞ்சினான்” என்று கரத்தைக் கழித்துவிட்டான். தலையையறுத்துவைக்கவேண்டுங் குறையுண்டாயிருக்கச் செய்தேயும், ‘உஷை பித்ருஹீநையாக வொண்ணாது’ என்று உயிரை நிறுத்திவைத்துக் கழித்தானாயிற்று. (நாகம் இத்யாதி) – பாணனுடைய புஜவநத்தைத் துணித்த பின்பாயிற்று, ‘போ4க’த்தில் பொருந்திற்று. ‘துயில்வான்போல்’ என்பானென்? அங்ஙனன்றோ வென்னில் (உலகெல்லாம் நன்கொடுங்க யோகணைவான்) – ‘இன்னமும் பாணன்போல்வார் எதிரிட்டாருண்டாகில் அவர்களையும் நிரஸித்து, லௌகிகர் நம்மையே பற்றிக் கரைமரம்சேரும் விரகேதோ?’ என்று இத்தையே சிந்தித்துக்கொண்டு யோகநித்ரை பண்ணாநிற்கும். (கவராத) இப்படி எல்லார்பக்கலிலும் பண்ணும் பரிவை அவன் என்பக்கலிலே பண்ணாதேயிருக்க, நான் என்னுடம்பைக் கட்டிக்கொண்டு கிடக்கவோ? அவனுக்காகக் கண்ட உடம்பாயிற்று, இவளது. அவனுக்கு உடலாகவிறே இவள்தான் இத்தை விரும்புவது. அவன்தான் தன்னுடம்பு “பக்தாநாம்” என்றிருக்குமாபோலே ஶேஷிக்காகக் கண்ட உடம்பாயிற்று, இது.
பத்தாம் பாட்டு
உடம்பினாற்குறைவில்லா உயிர்பிரிந்தமலைத்துண்டம்
கிடந்தனபோல்துணிபலவா அசுரர்குழாந்துணித்துகந்த
தடம்புனலசடைமுடியன் தனியொருகூறமர்ந்துறையும்
உடம்புடையான்கவராத உயிரினாற்குறைவிலமே.
ப:- அநந்தரம், அஶேஷவிரோதிநிவர்த்தகனான ஸர்வேஶ்வரன் விரும்பாத ஆத்மாவால் என்ன ப்ரயோஜநமுண்டு? என்கிறாள்.
உடம்பினால் குறைவில்லா – ஶரீரபோஷணத்தாலே மஹாகாயரான, அசுரர்குழாம் – அஸுரஸமூஹங்களை, உயிர் பிரிந்த – (இந்த்ரச்சிந்நமாய்) நிஷ்ப்ராணமான, மலைத்துண்டம் – பர்வதகண்டங்கள், கிடந்தனபோல் – கிடந்தாற்போலே, பல துணியா – நாநாகண்டமாம்படி, துணித்து உகந்த – துணித்து (அத்தாலே ‘ஜகத்விரோதிகழிந்தது’ என்று) உகக்குமவனாய், தடம்புனல – அதிவிஸ்தீர்ணஜலையான கங்கையைத் தரிக்கிற, சடைமுடியன் – ஜடாமகுடத்தையுடையவனாகையாலே அதிஶயிதஶக்திகனாக அபிமாநித்திருக்கிற ருத்ரன், தனி அமர்ந்து – தனக்கபாஶ்ரயமாகப் பற்றி, ஒரு கூறு – ஒரு பார்ஶ்வத்திலே, உறையும் – நித்யவாஸம்பண்ணும்படியான, உடம்பு உடையான் – திருமேனியை உடையவன், கவராத – விரும்பாத, உயிரினால் – ஆத்மாவால், குறைவிலம் – ஒருப்ரயோஜநமுடையோமல்லோம். “நசாத்மாநம்” என்கிற கணக்கிலே அவன் விரும்பாத ஆத்மீயங்களோபாதி ஆத்மாவையும் வேண்டேனென்றபடி.
ஈடு:- பத்தாம்பாட்டு. முதற்பாட்டிற் சொன்ன ஶீலகுணத்தையும் விரோதிநிரஸநத்தையும் சொல்லி, அவன் விரும்பாத ஸத்தையால் என்ன கார்யமுண்டு? என்று உபக்ரமத்தோடே சேர உபஸம்ஹரிக்கிறாள். ‘உடம்பினாற்குறைவில்லா வுயிர்பிரிந்த மலைத்துண்டம் கிடந்தனபோல் துணிபலவாஅசுரர்குழாந் துணித்து’ என்றத்தால் “நீறாகும்படியாக நிருமித்துப்படைதொட்ட” என்றத்தைச் சொல்லுகிறது. ‘தடம்புனலசடைமுடியன் தனியொருகூறமர்ந்துறையு முடம்புடையான்’ என்றத்தால் – “கூறாளும் தனியுடம்பன்” என்றத்தைச் சொல்லுகிறது.
(உடம்பினாற்குறைவில்லா) – அசுரர்குழாமாயிற்று. உயிரிலேயாயிற்று, குறையுண்டாகில் உள்ளது; உயிரைத்தேய்த்து உடம்பைவளர்த்திருந்தவர்கள் நித்யஸம்ஸாரிகளாய்ப் போமித்தனையிறே. (உயிர்இத்யாதி) – ஸப்ராணனாய்க்கொண்டு ஸஞ்சரிக்கிற பர்வதங்கள் இந்த்ரன் கையில் வஜ்ராயுதத்தாலே பலகூறாம்படி துணியுண்டு கிடந்தாற்போலே அஸுரவர்க்கத்தைப் பலகூறாம்படி துணித்து உகந்தானாயிற்று. ‘உயிர்பிரிந்த மலைத்துண்டம் கிடந்தனபோல் – உடம்பினால்குறையில்லா – அசுரர்குழாம் – துணிபலவா – துணித்துகந்த’, “தே3வாநாம் த3ாநவாநாஞ்ச ஸாமாந்யம்” என்கிற ப்ராப்தி எல்லார்பக்கலிலுமுண்டாயிருக்க, ‘இவர்கள் ஆஶ்ரிதவிரோதிகள்’ என்னும் ஆகாரத்தாலே இவர்களை நிரஸித்து, ‘ஆஶ்ரிதவிரோதிகளை அறப்பெற்றோமிறே’ என்றத்தாலே உகந்தானாயிற்று. (தடம்புனல இத்யாதி) – திருமேனியிலே இடங்கொடுக்கச் செய்தே, இது தன்னைக் குணமாக உபபாதிக்கும்படியாயிற்று, அவர்களுடைய துர்மாநம். அபிமாநஶூந்யர் அணையக்கடவ உடம்பிலேயாயிற்று அபிமாநிகளுக்கும் இடங்கொடுக்கிறது. மிக்கநீர்வெள்ளத்தையுடைத்தான கங்கையைத் தன் ஜடையில் ஏகதேசத்திலே தரிக்கையால்வந்த அபிமாநத்தையுடைய ருத்ரனானவன், பிராட்டி திருமார்வைப் பற்றி ‘இவ்விடம் என் இருப்பிடம்’என்று அபிமாநித்திருக்குமாபோலே, ஒரு பார்ஶ்வத்தைப் பற்றி ‘இவ்விடம் என் இருப்பிடம்’ என்று அபிமாநிக்கும்படி அவனுக்கு இடங்கொடுத்துக் கொண்டிருக்கிற திருமேனியையுடையவன். (கவராத இத்யாதி) – இப்படி பொதுவான உடம்பு படைத்தவன் ஆசைப்பட்ட எனக்கு உதவானாகில், இவ்வாத்மவஸ்துவைக் கொண்டு என்னகார்யமுண்டு? என்கிறாள். இதுக்கு முன்பெல்லாம் – தேஹத்தையும் தேஹாநுபந்தி பதார்த்தங்களையுமிறே ‘வேண்டா’ என்றது; அவைதான் அநித்யமாயிருக்கையாலே தன்னடையே கழியுமத்தை வேண்டா’ என்றதாயிருக்குமிறே; அதுக்காக நித்யமான ஆத்மவஸ்துவையும் ‘வேண்டா’ என்கிறாள். இத்தை ‘வேண்டா’ என்கிறதுக்கு அடியென்? என்னில்; இது கிடக்குமாகில், இன்னமும் ஒரு ஜந்மமுண்டாய்ப் பழையவையெல்லாம் வந்துதோற்றி முலையெழுந்து நோவுபடுகைக்கு உடலாயிருக்குமிறே. இனித்தான் அவனுடைய நித்யேச்சையாலேயிறே இதினுடைய நித்யத்வமும்; அவனுக்கு இச்சையில்லாதபோது பின்னை இதுதான் கொண்டு கார்யமில்லையிறே.
பதினொன்றாம் பாட்டு
உயிரினாற்குறைவில்லா உலகேழ்தன்னுள்ளொடுக்கித்
தயிர்வெண்ணெயுண்டானைத் தடங்குருகூர்ச்சடகோபன்
செயிரில்சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால்
வயிரஞ்சேர்பிறப்பறுத்து வைகுந்தம்நண்ணுவரே.
ப:- அநந்தரம், இத்திருவாய்மொழிக்கு பலமாக, பகவச்சேஷத்வ பூர்வகமான பரமபதப்ராப்தியை அருளிச்செய்கிறார்.
உயிரினால் – ஆத்மாக்களால், குறைவில்லா – குறைவில்லாத, ஏழுலகு – ஸமஸ்தலோகங்களையும், தன்னுள் ஒடுக்கி – ஸங்கல்பாந்தர்ப்பூதமாம்படி ரக்ஷிக்கும்பரத்வத்தையுடையனாய், (ரக்ஷ்யைகதேசத்திலே அவதீர்ணனாய், ஆஶ்ரிதருகந்த), தயிர் – தயிரையும், வெண்ணெய் – வெண்ணெயையும், உண்டானை – அமுதுசெய்த ஸௌலப்யத்தையுடையவனைப்பற்ற, தடம் குருகூர் – மஹாவகாசமான திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வாருடைய, செயிர்இல் – (சப்தார்த்தங்களில்) குற்றம் அற்ற, சொல் – சொல்லாயிருக்கிற, இசை – இசையோடுகூடின, மாலை – ஸந்தர்ப்பமாயிருக்கிற, ஆயிரத்துள் – ஆயிரந்திருவாய்மொழிக்குள்ளும், இப்பத்தால் – இப்பத்தாலே, வயிரம்சேர் – காழ்ப்பேறும்படி அநாதிஸித்தமான, பிறப்பு – ஸம்ஸாரஸம்பந்தத்தை, அறுத்து – அறுத்து, வைகுந்தம் – பரமபதத்தை, நண்ணுவர் – கிட்டப்பெறுவர்கள். இது கலிவிருத்தம்; நாலடித்தாழிசையுமாம்.
வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் திருவடிகளே ஶரணம்
ஈடு:- பதினோராம்பாட்டு. நிகமத்தில் இத்திருவாய்மொழியை அப்யஸித்தவர்கள், காழ்ப்பேறின ஸம்ஸார துரிதமற்றுப் பரமபதத்திலே புகப்பெறுவர்கள் என்கிறார்.
(உயிரினால் இத்யாதி) – அஸங்க்யேயரான ஆத்மாக்களால் பூர்ணமாயிருந்துள்ள ஏழுலகத்தையும். (தன்னுள் ஒடுக்கித் தயிர்வெண்ணெயுண்டானை) – தயிரும் வெண்ணெயும் களவு காணப்புகுகிறபோது, ‘செருப்புவைத்துத் திருவடி தொழுவாரைப் போலே அந்யபரதைக்கு உடலாக வொண்ணாது’ என்று, எல்லாலோகங்களுக்கும் வேண்டும் ஸம்விதாநம் தன்ஸங்கல்பத்தாலே செய்து, பின்னையாயிற்று வெண்ணெய் அமுதுசெய்தது. (உலகேழ் தன்னுள் ஒடுக்கித் தயிர்வெண்ணெயுண்டானை) – கர்ப்பிணிகள் வயிற்றில் பிள்ளைக்கீடாக போஜநாதிகள் பண்ணுமாபோலே, உள்விழுங்கின லோகங்களுக்கு ஜீவநமாகத் தயிர்வெண்ணெயுண்டான். ஸர்வேஶ்வரனாயிருந்து வைத்து, ஆஶ்ரிதஸ்பர்ஶமுள்ள த்ரவ்யத்தாலல்லது செல்லாதபடி இருக்குமவனாயிற்று; “ஸர்வஸ்ய ஜக3த: பாலௌ வத்ஸபாலௌப3பூ4வது:” என்னுமாபோலே. (தடங்குருகூர்ச்சடகோபன்) – “ப்3ருந்த3ம்ப்ருந்த3மயோத்4யாயாம்’ என்கிறபடியே ‘பெருமாளுடைய திருவபிஷேக மங்கள மஹோத்ஸவத்தைக் காணவேணும்’ என்று நாடடையத் திரண்டு கிடந்தாற்போலே, இவர் ‘ஆத்மாத்மீயங்கள் வேண்டா’ என்று கழித்திருக்கிற இருப்பைக் காண்கைக்காகத் திரண்ட ஸ்ரீவைஷ்ணவ ஜநத்துக்கு அடைய இடம் போரும்படியான பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார். (செயிரில் சொல்லிசைமாலை) – ‘செயிர்’ என்று குற்றம்; ‘இல்’ என்று இல்லாமை; குற்றமின்றிக்கேயிருக்கை. அதாவது – ‘ஆத்மாத்மீயங்கள் வேண்டா’ என்ற வார்த்தையில் புரையற்றிருக்கை. (வயிரஞ்சேர்பிறப்பறுத்து) – இவர் ‘வேண்டா’ என்று கழித்தாலும் விடாதபடி காழ்ப்பேறிக்கிடக்கிற ஸம்ஸாரத்தைக் கழித்து. (வைகுந்தம் நண்ணுவரே) – ஓருடம்பாய், இதுதானும் வேண்டா’ என்று கழிக்கும்படியான இத்வுடம்பை விட்டு, “ஸ ஏகத3ா பவதி த்ரித3ா ப4வதி” என்கிறபடியே, அவனுடைய ஸங்கல்பாதீநமாகவும் அதடியான தன்ஸங்கல்பாதீநமாகவும் அநேகஶரீரபரிக்ரஹம் பண்ணி அடிமைசெய்யலாம் தேசத்திலே போய்ப் புகப்பெறுவர். பலபடியாலும் அடிமைசெய்யப்பெறுவர். அவன் விரும்பினபடி இது என்று அறியாதேயிறே இவர்தாம் ‘வேண்டா’ என்கிறது.
நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்
த்ரமிடோபநிஷத் ஸங்கதி – ஏறாளும்
ஏவம்ருதந்நபிஶடாரிரலப்தகாம :
ஸ்வோபேக்ஷணைகபரதாமவதார்ய ஶௌரே:।
தச்சேஷதாதிரஹிதேஸகலேஸ்வகீயே
ஸ்வஸ்மிந்நபிஸ்புரிதநி:ஸ்ப்ருஹதோऽஷ்டமேபூத்।। ||38||
த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்நாவளி —- ஏறாளும்
ஸௌந்தர்யாதௌஸ்வகீயேஹ்ருதிசகநிகரேபூர்ணதாயாஞ்சகாந்தௌ ஸம்யக்ஜ்ஞாநேப்ரகாஶேவலயரஶநயோவர்ஷ்மணி ஸ்வஸ்வரூபே । ஸ்யாத்விஷ்ணோர்யத்யுபேக்ஷாததிதமகிலமுந்மூலநீயந்ததீயை:
இத்யூசேகாரிஸூநுஸ்ததுபரிகதயம்ஸ்தம்ஶிவாத்யாஶ்ரிதாங்கம்|| 4-9
திருவாய்மொழி நூற்றந்தாதி
ஏறுதிருவுடையை ஈசன்உகப்புக்கு
வேறுபடில்என்னுடைமைமிக்கவுயிர் – தேறுங்கால்
என்றனக்கும்வேண்டா எனும்மாறன்தாளைநெஞ்சே!
நந்தமக்குப்பேறாகநண்ணு. 38
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
******