ஒன்பதாந்திருவாய்மொழி
நண்ணாதார் : ப்ரவேஶம்
*******
ப :- ஒன்பதாந்திருவாய்மொழியில், இப்படி அவன்விரும்பாத ஆத்மாத்மீயங்களிலும் அநாதரம்பிறந்தவளவிலும் அநுபவம் ஸித்தியாமையாலே அத்யந்தம் ஆர்த்தரான தமக்கு உசாத்துணையாகைக்கு யோக்யரல்லாதபடி ஸம்ஸாரத்திலுள்ளாரும் அதிஶயித து3:க்க2மக்3நராய்க் கொண்டு க்லேஶிஸிக்கிறபடியைக் கண்டு, ஸகலக்லேஶநிவர்த்தகனாய் நிரதிஶயபோக்யனான ஸர்வேஶ்வரனுடைய அர்த்திதார்த்தகரணத்தையும், ஸாதாரணபந்தத்தையும், அபரிச்சிந்நஸௌந்தர்யத்தையும், அவ்வழகை அநுபவிப்பிக்கும் ஔதார்யத்தையும், அநுபவிப்பார்க்குக் கைக்கடங்கும் படியான ஸௌலப்யத்தையும், போக்யதாதிஶயத்தையும், ஸர்வாத்மபாவத்தையும், ஸகலஜகத்காரணத்வத்தையும், ஆஶ்ரிதஸமஶ்லேஷஸ்வ பாவத்தையும், லக்ஷ்மீஸகத்வத்தால் வந்த பரமப்ராப்யத்வத்தையும் அநுஸந்தித்து ‘ஏவம்விஶிஷ்டனான நீ அத்யந்தாஸஹ்யமாம்படி க்லேஶோத்தரமான ஸம்ஸாரத்திலே யிருத்தி என்னை க்லே–ப்பியாதே, உன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளவேணும்’ என்று கூப்பிட்டு, இவர் அபேக்ஷாநுரூபமாக அவனும் பரமபதத்திலே “ஶ்ரியாஸார்த4ம் ஜக3த்பதி:” என்றிருக்கிற இருப்பைக் காட்ட, மாநஸஜ்ஞாநத்தாலே கண்டு, ஐஶ்வர்யகைவல்யங்களினுடைய ஹேயதாப்ரதிபத்திபூர்வகமாக அவன் திருவடிகளையே பரமப்ராப்யமாகப்பற்றின படியை அருளிச்செய்கிறார்.
ஈடு:- ‘உடம்பு வேண்டா, உயிர்வேண்டா’ என்று இவற்றை உபேக்ஷித்துப்பார்த்தார்; தாம் ‘வேண்டா’ என்றவாறே தவிருமாகக் கொண்டு; அவை தவிர்ந்தனவில்லை; ஒன்றைப் பெறுகைக்கேயன்றிக்கே முடிகைக்கும் உன் தரவு வேணுமாகில் அத்தைத்தந்தருளவேணு மென்கிறார். இத்வமங்கள ஶப்தத்தைத் திருமுன்பே விண்ணப்பஞ் செய்யவேண்டும்படியாகக் காணும் இவர் ஸம்ஸாரத்தை வெறுத்தபடி. எம்பார், ‘உன்னைப்பிரிந்திருந்து படுகிற க்லேஶத்தினளவல்ல உன்னையொழியப் புறம்பே பேறும் இழவுமாயிருக்கிற ஸம்ஸாரிகள் நடுவேயிருக்கிற இருப்பால் படுகிற க்லேஶம்; இத்தைத் தவிர்த்தருள வேணுமென்கிறார்’ என்று அருளிச்செய்வர். “உத்பபாத3க3த3ாபாணி:” – ராவணனோடு பொருந்தாமை பிறந்தபின்பு, நெருப்புப்பட்ட தரையில் கால்பாவாதாப்போலே அத்விடம் அடிகொதித்துப் போந்தானாயிற்று; “க3த3ா” – அங்குள்ளாரில் “ந நமேயம்” என்னாதது தடியொன்றுமேயாயிற்று “சதுர்ப்பி4:” – அதுவும் எடுத்துத்தோளிலே வைக்கவேணுமே. அதுவும் வேண்டாதார் நால்வருமேயாயிற்று. இத்தால் ஒருவன் ‘பகவத்விரோதத்திலே நிலைநின்றான்’ என்று அறிந்தால் தன்னைக்கொண்டு அகலவிறே அடுப்பது. ஆழ்வான் அங்ஙனன்றிக்கே, “ஏறாளுமிறையோ” (4.8)னில் ‘தம்முடைய ஆற்றாமைக்குக் கூட்டாவார் உண்டோ?’ என்று லோகத்ருத்தாந்தத்தை அந்வேஷித்து ஸம்ஸாரிகளைப் பார்த்தார்; அவர்கள், தாம் இத்விஷயத்தில் ப்ரவணராயிருக்கிறாப்போலே ஶப்தாதி விஷயங்களிலே ப்ரவணராய், அவற்றினுடைய பேறிழவுகளே லாபாலாபமாம்படியிருந்தார்கள்; வாளேறுகாணத் தேளேறுமாய்ந்து, அத்தைக்கண்டவாறே தம் இழவை மறந்தார்; இவர்களுடைய இழவே நெஞ்சிலே பட்டது; ஸர்வேஶ்வரனைப் பார்த்தார்; அவன் ஸர்வஜ்ஞனாய் ஸர்வஶக்தியாய்ப் பரமோதாரனாய் எல்லாருடையரக்ஷணத்திலே தீக்ஷித்திருக்குமவனாய் ஸர்வாபராதஸஹனாய் ஸர்வநியந்தாவாயிருந்தான்; அவன்படி இதுவாயிருக்க, இவை இப்படி நோவுபடுகைக்கு இத்விடம் தன்னரசுநாடோ? என்று பார்த்து, ‘நீ ஸர்வேஶ்வரனாய் பரமக்ருபாவானாய் ப்ராப்தனுமாய் இவற்றின் க்லேஶம் அறிந்து பரிஹரிக்கைக்கு ஈடான ஜ்ஞாநஶக்தியை உடையையுமாயிருக்க, இவை இங்ஙனே கிடந்து நோவுபடுகை போருமோ? இவற்றைக் கரைமரஞ்சேர்க்க வேணும்’ என்று அவன் திருவடிகளைப்பிடிக்க, ‘நம்மால் செய்யலாவதுண்டோ? இவை சேதநரான பின்பு இவைதனக்கே ருசியுண்டாகவேணுமே; நாம் கொடுக்கிற இது புருஷார்த்தமாக வேணுமே; புருஷன் அர்த்திக்கக் கொடுக்குமதிறே புருஷார்த்தமாவது; அசித்தாய் நாம் நினைத்தபடி கார்யங்கொள்ளுகிறோமல்லோமே; இவற்றுக்கு நம்பக்கலிலே ருசி பிறக்கைக்கு நாம் பார்த்து வைத்த வழிகளையடையத் தப்பினபின்பு நம்மாற் செய்யலாவதில்லைகாணும்; நீர் இத்தைவிடும்’ என்று ஸமாதாநம்பண்ண, “நீ பண்ணின இது பரிஹாரமாய் நான் ஸமாஹிதனாவது ‘இவை தங்கார்யத்துக்குத் தாம்கடவவாய் நோவுபடுகிறன’ என்று உன்னால் சொல்லலாமன்றன்றோ?” என்ன, “இவை சேதநராகையாலே இவற்றின் வாசியறியவேணுமென்று நம்மை ஒருதட்டும் ஶப்தாதிகளை ஒரு தட்டுமாகவைத்து உங்களுக்கு வேண்டிற்றொன்றைக் கொள்ளுங்கோள்” என்ன, ஶப்தாதிகள் இருந்த தட்டு தாழ்ந்திருக்கையாலே அத்தட்டை ‘அமையும்’ என்று பற்றிற்றின; “நாமும் ஆந்தனையும்பார்த்து முடியாமைகாணும் கைவாங்கிற்று; இனி நம்மாற் செய்யலாவதில்லை; இனிநீரும் இத்தைவிடும்” என்ன, “ஆகில், உன்னையொழியப் புறம்பே பேறும்இழவுமாயிருக்கிற இவர்கள் நடுவில் நின்றும் என்னை முன்னம் வாங்கவேணும்” என்ன, “முன்பே உம்மை வாங்கினோமே; ஸம்ஸாரிகளோடு பொருந்தாதபடி பண்ணினோமாகில், ஸம்ஸாராநுஸந்தாநத்தாலே வந்த க்லேஶமெல்லாம் போம்படி உம்முடைய இருப்பு இதுகாணும்” என்று பரமபதத்தில் ‘அயர்வறுமரர்கள்’ அடிமைசெய்யப் பெரியபிராட்டியாரும் நாமுமாக த்யாத்ருத்தமாக இருக்கிற இருப்பைக் காட்டித்தந்து ‘அங்கே உம்முடைய நெஞ்சு ப்ரவணமாம்படி பண்ணினோமாகில், இனி உமக்குப் பேற்றுக்குக் குவாலுண்டோ? நாம் செய்யவேண்டுவதென்?’ என்ன, இவையிரண்டையும் அநுஸந்தித்து த4ரித்து க்ருதார்த்தராய்த் தலைக்கட்டுகிறார்” என்று பணிக்கும். (*மையகண்ணாள் மலர்மேலுறைவாளுறைமார்பினன் செய்யகோலத்தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை” என்றுகண்டு அநுபவித்தாரிறே.) ஆழ்வான் தான் ஓரிடத்தே வழிபோகாநிற்க, ஓரு ஸர்ப்பம் தவளையைப் பிடித்துக் கூப்பிடாநிற்க, ‘இது ஆர் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோஹித்தானாம்; இவ்வாழ்வான் ப்ரக்ருதிக்குச் சேருமே இவர் நிர்வாஹமும்.
முதல் பாட்டு
நண்ணாதார்முறுவலிப்ப நல்லுற்றார்கரைந்தேங்க
எண்ணாராத்துயர்விளைக்கும் இவையென்னவுலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கேவரும்பரிசு?
தண்ணாவாதடியேனைப் பணிகண்டாய்சாமாறே.
ப:- முதற்பாட்டில், ‘ஸம்ஸாரிகள் படுகிற து3:க்க2ம் அஸஹ்யமாயிராநின்றது; ஆனபின்பு, ஆஶ்ரிதர்க்கு அருந்தொழில்செய்தும் அபேக்ஷிதங்கொடுக்கும் நீ இத்து3:க்க2ம் காணாதபடி என்னை ஶரீரவிஶ்லேஷம் பிறப்பிக்கவேணும்’ என்கிறார்.
நண்ணாதார் – ஶாத்ரவத்தாலே இவனை அணுகியிராதவர்கள், முறுவலிப்ப – (இவன் அநர்த்தத்துக்கு ப்ரீதராய்) ஸ்மிதம் பண்ணும்படியாகவும், நல் உற்றார் – ஸ்நேஹத்தாலே கிட்டியிருக்கிற பந்துக்கள், கரைந்து ஏங்க – இவன் அநர்த்தத்துக்கு
–திலராய் “என்னாகிறதோ” என்று ஏங்கி க்லேசிக்கவும், எண் ஆரா – எண்ணுதலில் அடங்காத, துயர் – து:கங்களை, விளைக்கும் – (தன்னில்தான்) விளைத்துக்கொண்டு போருகிற, இவை உலகியற்கை – இந்த லோகயாத்ரைகள், என்ன – என்னாயிருக்கிறன? கண்ணாளா – (நிருபாதிகநிர்வாஹகனாகையாலே) காருணிகனாய், கடல் கடைந்தாய் – (ப்ரயோஜநாந்தரங்களை வேண்டிலும்) கடலைக் கடைந்து கொடுக்கும் ஸ்வபாவத்தையுடையவனே! (இந்த லோகக்லேஶம் காணாதே), உன கழற்கே – ப்ராப்தனான உன் திருவடிகளுக்கேயுறுப்பாய், வரும் பரிசு – நான் வரும்படி, தண்ணாவாது – விளம்பியாதே, அடியேனை – (உனக்கேஶேஷபூதனான) என்னை, சாமாறு – ஶரீரவிஶ்லேஷம் பிறக்கும்படி, பணிகண்டாய் – (*மோக்ஷயிஷ்யாமி” என்கிற கணக்கிலே) ஒருவார்த்தை அருளிச்செய்யவேணும். ‘ஸர்வபாப’ஶப்தத்திலே ஶரீரமும் அந்தர்பூதமென்று கருத்து. கண்ணாளன் – கண்ணையுடைய ஆளனென்று, க்ருபையையுடைய நிர்வாஹகனென்றபடி.
ஈடு:- முதற்பாட்டு. உன்னையொழியப் புறம்பே பேறும் இழவுமாயிருக்கிற இவர்கள் நடுவில்நின்றும் நான் உன் திருவடிகளிலே வந்து கிட்டும்படி எனக்கு இஶ்ஶரீரவிஶ்லேஷத்தைப் பண்ணித் தந்தருளவேணும் என்கிறார்.
(நண்ணாதார்முறுவலிப்ப) – பிறரநர்த்தங்கண்டு சிலர் உகக்கும்படியாவதே, இது என்ன விஸ்மயந்தான்! “ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம்” – அர்ஜுநன் ‘என் பரகுபரகு கெடுவது என்று?’ என்ன, “நான் ‘ஸர்வபூதஸுஹ்ருத்து’ என்று அறிந்தவாறே நீயும் என்னோபாதி என் விபூதிக்குப் பரியத் தேடுவுதிகாண்” என்றானிறே. நண்ணாதாரென்று – ஶத்ருக்களுக்குப் பேர். ஒருவனுக்கு ஓரநர்த்தம் வந்தவாறே, அவற்றைக்குமுன்பு வெற்றிலை தின்றறியார்களேயாகிலும் அன்றாக ஒருவெற்றிலைதேடித்தின்பது, ஓருடுப்புவாங்கி யுடுப்பது, சிரிப்பதாகாநிற்பர்களாயிற்று. (நல்உற்றார்) – ஸர்வேஶ்வரனே நிருபாதிக பந்துவாய், அவனைப்பற்றினவர்களையே “அவன் தமரெத்வினையராகிலு மெங்கோனவன் தமரே” (முதல். திரு.55) என்று, “அவர்களை ஒருகாலும்பிரிகிலேன்” என்றிருக்கப்ராப்தமாயிருக்க ஶரீரஸம்பந்தநிபந்தநமாக வருகிறவர்களை நிருபாதிகபந்துக்களாக நினைத்து அவர்களுக்கு ஒன்றுவந்தவாறே, “நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்” (9.6.2) என்று இவர் பகவத் விஷயத்தை நினைத்தல் சொல்லுதல் செய்யப் புக்கால் படுவதெல்லாம் படாநிற்பர்களாயிற்று. “ஸர்வபூதாத்மகே*. “கரைந்தேங்க, முறுவலிப்ப” என்ற இரண்டையுமிறே – “மித்ராமித்ரகதாகுத:” என்றது. ராகத்வேஷங்களைப்பற்றி வருகையாலே மைத்ரியோடு ஶாத்ரவத்தோடு வாசியில்லையிறே. (த்வந்த்வைர்விமுக்தா: ஸுக2து3:க்க2ஸம்ஜ்ஞை:) என்று ‘ஸுக2து3:க்க2ங்கள்’ என்று சிலபேர்மாத்ரமேயிறே உள்ளது; இரண்டும் து3:க்க2மாயிறே இருப்பது. இரண்டாய்வரும் து3:க்க2ங்களையடையநினைக்கிறது. ” *ராமமேவ” – திருவயோத்யையிலுள்ளார், ஒருவரையொருவர் வேரோடே வாங்கிப் போகடவேண்டும்படியான ஶாத்ரவம் அநுவர்த்தியாநிற்கச் செய்தேயும் எல்லாரும் ஒருமிடறாக அர்த்தித்தார்கள்; அதுக்கு அடியென்? என்னில்; – ஶாத்ரவம் நெஞ்சிலேபட்டு அவர்களை நலியநினைத்தபோதாகப் பெருமாளை நினைப்பார்கள்; ‘அவர்முகஞ்சுளியும்’ என்னுமத்தாலே அதின்கார்யம் பிறக்கப்பெற்றதில்லை.” “புஷ்பாங்கராகைஸ்ஸமம்” என்றிறே இத்விஷயத்தில் கைவைத்தார் இருப்பது. ஸர்வேஶ்வரன் பெரியபிராட்டியாரோடு பரிமாறும்போது மற்றுள்ள பிராட்டிமார், ஸ்ரக்சந்தநாதிகளோபாதி பே4ாகே3ாபரணகோடியிலே அந்வயித்துநிற்பர்கள்; அவர்களோடு இவன் கலந்தால் பிராட்டிதான் தன்இடையிலும் முலையிலும் கலந்தாற்போலேயிருக்கும். “திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவா றென்கொல்” (முதல்.திரு.42) – அவர்களோடே இவன்கலந்தால் பிராட்டிக்கே அற்றானாயிருக்கும்; அதுக்கடி அத்தால்பிறக்கும் முகவிகாஸம் அவள்பக்கலிலே காண்கையாலே – அல்பம் குணாதிக்யம் உள்ளவிடத்தேயும் “யதாயதாஹிகௌஸல்யா” என்கிறதிறே; ஸாபத்ந்யம் தோற்றாதபடி பரிமாறிப்போந்தாளிறே சக்ரவர்த்திக்கு. “யதாயதாஹி” – காலந்தோறும் காலந்தோறும் அவன் நினைவுக்கு ஈடாகப் பரிமாறிப்போந்தாளாயிற்று தனக்கென்ன ஓர் ஆகாரமின்றிக்கே. ஶேஷம் பூர்வவத். (எண்ணாராத்துயர்விளைக்கும்)-முறுவலிக்கிறதும், கரைந்தேங்குகிறதும், இரண்டும் துயராய்த் தோற்றுகிறதாயிற்று இவர்க்கு. ‘அந்தமில் பேரின்ப’த்துக்கு எல்லைகாணிலும் து:கத்துக்கு எல்லைகாணவொண்ணாதபடியாயிற்று இருப்பது. அங்கு நிஷ்க்ருஷ்டஸுகமேயாயிருக்குமாபோலே இதுவும் நிரவதிகது:கமேயாய் இருக்குமாயிற்று. “ராஜ்யாத்பரம்ஶ:” இத்யாதி – இவர்கள்படுகிற க்லேசத்தைக் கண்டு தன் க்ருபையாலே அவன் எடுக்கக் கைநீட்டினவிடத்திலே படுகிறபாடிறே இது. திருவபிஷேகம் பண்ண நாளிட்டவாறே, ‘ராஜ்யம் எனக்கு வேணும்’ என்றார்கள் சிலர். அத்தையிழந்தால் படைவீட்டிலே இருக்கப் பெற்றதாகிலுமாமிறே. ‘என்மகன் ராஜ்யம் பண்ணவேண்டா, பிக்ஷைபுக்காகிலும் என்கண்வட்டத்திலே இருக்க அமையும்’ என்றாளிறே ஸ்ரீகௌஸல்யையார். “ஸீதாநஷ்டா” – “பிராட்டியும் தாமுமாய் ஏகாந்தமாகபுஜிக்கலாம்” என்று போர, இருவரும் இரண்டிடத்திலேயாம்படியாய் விழுந்தது. பிராட்டிக்குத் தனியிடத்திலே உதவப்புக்க பெரியவுடையாரையும் இழந்தது. “ராஜ்யநாஶோபகர்ஷதி” என்றும், “வநவாஸோ மஹோதய:” என்றும் சொல்லிப்போந்தவற்றை இப்போது அநர்த்தமாகச் சொல்லுகிறதென்? என்னில்; ‘ஆஶ்ரிதஸம்ஶ்லேஷத்துக்கும், ருஷிகளையெடுக்கைக்கும்’ என்றிறே போந்தது; அத்தோடே விரோதிக்கையாலே சொல்லுகிறார். பிராட்டியைப் பிரிகையாலும், பெரியவுடையாரிழவுபலிக்கையாலும், இவற்றுக்கு அடியானவையும் இப்போது அநர்த்தமாய்த் தோற்றுகையாலே சொல்லுகிறார். இத்விரண்டாலும் வரும் து:கங்களையடைய நினைக்கிறது. “நிர்த3ஹேத3பிபாவகம்” – பிரியாத இளையபெருமாளையும் பிரிக்கவும் வற்றாயிறே இருக்கிறது. (இவையென்னவுலகியற்கை) – ‘உன்னையொழியப் புறம்பேயும் இந்தலோகம் பேறிழவாம்படி இது ஒருலோகயாத்ரையை நீ பண்ணிவைத்தபடியென்? பிரானே! நான் பண்ணுகையாவதென்?’ ‘இவர்கள் தாங்கள் பண்ணின கர்மத்தினுடைய பலம் அநுவர்த்திக்கிற இத்தனையன்றோ? நம்மால் வந்ததன்று காணும்’ என்று பகவதபிப்ராயமாக, மேல்சொல்லுகிறார்.
(கண்ணாளா) – ‘இவைபண்ணின கர்மம் தனக்கே அநுபவிக்க வேணுமாயிற்றதாகில், உன் க்ருபைக்குப் புறம்பு விஷயம் எங்கே?’ க்ருபாவானை – “கண்ணுடையவன்” என்னக்கடவதிறே. அன்றிக்கே கண்என்று – இடமாய், அத்தால் – *அகலிட மென்றபடியாய்; ‘இது ஏதேனும் தன்னரசுநாடோ? நீ நிர்வாஹகனாயிருக்க இவை ஸ்வரூபவிரோதங்களிலே ப்ரவர்த்திக்கிறதென்?’ கண்ணென்று – நிர்வாஹகனுக்கும் பேர். ‘தாந்தாம் சூழ்த்துக்கொண்ட கர்மம் தாந்தாம் அநுபவிக்க வேண்டாதபடி நாம் உதவ எங்கே கண்டீர்?’ என்ன; ‘ஒருவெள்ளமன்றோ’ என்று உதாஹரணம் காட்டுகிறார்; (கடல்கடைந்தாய்) – ‘துர்வாஸஶ்ஶாபத்தால் வந்த அநர்த்தத்தைத் தப்புகைக்கு ப்ரயோஜநாந்தரபரர்க்கும் அரியனசெய்து உதவுமவனன்றோ?’ ‘அவர்களுக்கு இச்சையுண்டு; அநிச்சுக்களுக்கு நம்மாற் செய்யலாவதுண்டோ?’ என்ன, ‘ஆகில் இவர்கள் நடுவிராதபடி என்னை உன் திருவடிகளிலே வரும்படி பண்ணவேணும்;’ (உனகழற்கேவரும்பரிசு) – ‘விலக்கடிகளில் போகாமே, ப்ராப்தமுமாய் போக்யமுமான உன் திருவடிகளிலே வந்து கிட்டுவதொரு ப்ரகாரம்.’ இவர்க்குக் காற்கூறு இச்சையுண்டாயிருந்தபடியாலே, ‘அப்படி செய்கிறோம்’ என்றான் ஈஶ்வரன். (தண்ணாவாது) – தண்ணாக்கையாவது – தாழ்க்கை. தாழாது. ‘செய்கிறோம்’ என்று ஆறியிருக்கவொண்ணாது; செய்துகொண்டு நிற்கவேணும். இப்படி பதறிச்செய்ய வேண்டுகிறதென்? நமக்கென்ன, (அடியேனை) – ஸ்வரூபஜ்ஞாநத்தாலே ஸம்ஸாரிகளோடு பொருந்தாத என்னை. (பணிகண்டாய்சாமாறே) – பணிக்கையாவது – சொல்லுகை; சொலவு நினைவோடே கூடியிறே இருப்பது. சாமாறு பணிக்கவேணும். ‘உனக்கு ஒரு சொலவு; அடியேன் பெறுகிறது ஸத்தை.’ (சாமாறே – பணி) – ஶரீரவிஶ்லேஷத்தைப் பெறும்படி பார்த்தருளவேணும்; கேவலரைப்போலே இவ்வளவை அபேக்ஷிக்கிறதென்? என்னில், “வரம்ஹுதவஹஜ்வாலா பஞ்ஜராந்தர்த்யவஸ்திதி: ஐ நஶௌரிசிந்தாவிமுகஜந- ஸம்வாஸவைஶஸம்” என்கிறபடியே, இவர்கள் நடுவிருக்கிற இருப்புத் தவிருகைதானே இப்போது தேட்டமாகையாலே. காட்டுத்தீயில் அகப்பட்டவனுக்கு நீரும் நிழலுமிறே முற்படத் தேட்டமாவது, பின்பிறே போக்யாதிகளில் நெஞ்சுசெல்வது; அப்படியே இப்போது இவர்கள் நடுவிருக்கைக்கு அடியான ஶரீரவிஶ்லேஷத்தைப் பிறப்பிக்கவேணு மென்கிறார்.
இரண்டாம் பாட்டு
சாமாறும்கெடுமாறும் தமருற்றார்தலைத்தலைப்பெய்து
ஏமாறிக்கிடந்தலற்றும் இவையென்னவுலகியற்கை?
ஆமாறொன்றறியேன் நான்அரவணையாய்அம்மானே!
கூமாறேவிரைகண்டாய் அடியேனைக்குறிக்கொண்டே.
ப:- அநந்தரம், லௌகிகக்லேசம் என்னாய் முடியப்புகுகிறது? என்று அறிகிறிலேன்; நிருபாதிகஶேஷியான நீ என்னை அழைக்கும்படி விரையவேணும் என்கிறார்.
சாமாறும் – (சிரகாலம் ஜீவிக்கவிருக்க மத்யே) சாகிற ப்ரகாரமும், கெடுமாறும் – (ஐஶ்வர்யத்தைப்பாரிக்க அது) நசிக்கிற ப்ரகாரமும், (இதடியாக), தமர் – தமரான ஜ்ஞாதிகளும், உற்றார் – உற்றாரான ஸம்பந்திகளும், தலைத்தலைப்பெய்து – ஒருவர்க்கொருவர் மேல்விழுந்து, ஏமாறி – ஏங்குதலற்று, கிடந்து – கிடந்து, அலற்றும் – கூப்பிடுகிற கூப்பீடும் ஆகிற, இவை – இவை, என்ன உலகியற்கை – என்ன லோகயாத்ரைகளிருக்கிறனதான்? நான் – நான், ஆம் ஆறு – இது என்னளவிலேயாய் முடியப்புகுகிற ப்ரகாரம், ஒன்று – ஒன்றும், அறியேன் – அறிகிறிலேன், அரவணையாய் – ஶேஷபூதனான அநந்தனை ஶேஷ வ்ருத்தி கொள்ளுமவனாய், அம்மானே – அதுபோலே எல்லாரோடும் உறவொத்த ஸ்வாமியானவனே! அடியேனை – ஶேஷபூதனான என்னை, குறிக்கொண்டு – (து:கஸஹனல்லன்) என்று குறிக்கொண்டு, கூமாறு – அழைக்கும்படி, விரைகண்டாய் – விரையவேணும். ஏமாற்றம் – க்லேசமாகவுமாம். தலைத்தலைப்பெய்தல் – தலையொடு தலை சேர்த்தலாகவமாம்.
ஈடு:- இரண்டாம்பாட்டு. “எண்ணாராத்துயர்” என்று திரளச்சொன்னார், முதற்பாட்டிலே; அவற்றிலே சிலவகைகளைச் சொல்லி விஷண்ணராய், ‘இவர்கள்
துக்கத்தைப் போக்காயாகில் என்னை உன் திருவடிகளிலே அழைத்தருள வேணும்’ என்கிறார்.
(சாமாறும் கெடுமாறும்) – சாம்படியும் கெடும்படியும்; இதுக்குமேற்பட இவற்றிலே சிலப்ரகாரங்களு முண்டோ? என்னில்; உருவ ஒருபடிப்பட ஜீவிக்கக்கடவனாகவும், தன்னோடொக்க ஜீவிப்பாரை அழியச்செய்யக்கடவனாகவும் கோலிக்கொண்டு போராநிற்க, நினைவற முடிந்துகொடு நிற்கும்படியும்; நாலு சின்னம் கைப்பட்டவாறே ‘நமக்கு இனிஉள்ளதனையும் ஜீவிக்கைக்கு ஒருகுறையில்லை’ என்று நினைத்திருக்கச்செய்தே, அத்தையிழந்து க்லேசப்பட்டுக் கூப்பிடும்படியும் இவை. இவர்கள் இப்படிநோவுபடுகைக்கு வேறே சில உண்டாயிற்று; “நின்னலாலிலேன்காண்” (2.3.7) என்றும், “பலநீகாட்டிப்படுப்பாயோ” (6.9.9) “இன்னம்கெடுப்பாயோ” (6.9.8) என்றும் பகவதலாபம் விநாஶஹேது வென்றும், இதரவிஷயதர்ஶநம் அந்ர்த்தஹேது வென்று மாயிற்று, இவர் இருப்பது. இவர்கள் இவையொழியவிநாஶமும் அநர்த்தமும் எங்கே தேடிக் கொண்டார்கள்? “என்னொருவர் தீக்கதிக்கண்செல்லும்திறம்” (முதல்.திரு.95) என்னுமவர்களிலே இவர்கள் “குருஷ்வ” என்றும் “யஸ்த்வயாஸஹஸஸ்வர்க்க:” என்றும் இவை விநாசமும் அநர்த்தமுமாகவிறே இவர்கள் நினைத்திருப்பது. (கெடுமாறும்) – தன் விநாசத்தையும் இசையும், கையிலகப்பட்ட த்ரவ்யம் தப்பினால்; அத்தையேயிறே இவன் தஞ்சமாக நினைத்திருப்பது. ஒருத்தனை ‘ராஜத்ரோஹி’ என்று கையையும் காலையும் தறிக்க, இவனை வினவப்புகுந்தவர்கள், இப்படிப்பட்டதாகாதே’ என்ன, ‘ஆயிரம், ஐந்நூறென்று சிலகாசு தா’ என்னாதே இவ்வளவோடே போயிற்று, உங்களநுக்ரஹமிறே’ என்றானாம். (தமருற்றார்) – இதொழியவே வேறே “தமர்கள் தமர்கள் தமர்கள்” (8.10.9) என்று ஒரு உறவுமுறை உண்டாயிற்று இவர்க்கு; அங்ஙனன்றிக்கே, ஶரீரஸம்பந்தநிபந்தநமாக வந்தவர்களாய் ‘ஜ்ஞாதிகள்’ என்றும், ‘ஸம்பந்திகள்’ என்றும் சிலரை உறவாக நினைத்து நிர்ப்பரராயிருப்பர்களாயிற்று. (தலைத்தலைப்பெய்து) – மேல்விழுந்து மேல்விழுந்து. (ஏமாறிக்கிடந்தலற்றும்) – ஏவென்று – ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ஏங்காதே கூப்பிட்டென்னுதல்; அன்றியே, ‘ஏமாற்றம்’ என்று ஒருசொல்லாய், அதாவது – து:கமாய், து:கித்துக் கிடந்து கூப்பிட்டு என்னவுமாம். ‘ஏவென்று – தெளிவு; ஏமாறுகை – தெளிவழிகை’ *(என்று ‘கலங்கிக் கூப்பிடாநிற்பர்கள்’) என்று பிள்ளையமுதனார் பணிப்பர். “ஏமாற்றமென்னைத்தவிர்த்தாய்” (பெரியா.திரு. 2.7.8) என்னக்கடவதிறே. (இவையென்னவுலகியற்கை) – ‘இதொரு லோகயாத்ரை இருக்கும் படியென்?’ ஜீவிக்க மநோரதியாநிற்க முடிவது; நாலு காசு கையிலே உண்டானவாறே ‘இது நமக்கு உண்டு’ என்றிருக்க, அது நசித்துப்போவது ஶரீரஸம்பந்தநிபந்தநமாய் வருகிறவர்களையே தனக்கு ஸர்வவிதபந்துவுமாக நினைத்து, இவற்றுக்கு ஒன்று வந்தவாறே ‘பட்டேன், கெட்டேன்’ என்று கூப்பிட்டு அலற்றுகிற இதுவும் ஒரு லோகயாத்ரையே பிரானே! என்கிறார். ‘அவர்கள் என்படில் நல்லது உமக்கு? நீர் நம்மையே சொல்லிக்கூப்பிடும்படி பண்ணினோமே! “சீலமில்லாசிறிய*(4.7)னில் கூப்பீடன்றோ உம்மது?’ என்ன, (ஆமாறொன்றறியேன்நான்) – ‘அவர்கள்தான் கூப்பிடுகிறது உன்னோடு ஸம்பந்தமில்லையாயோ? ப்ரக்ருதியோடேயிருக்கையாலேயன்றோ, அது என்னைத் தவிர்த்தாயோ? இவ்வுடம்பு கிடக்கையாலே, ‘இன்னதுக்கு நான் கூப்பிடப்புகுகிறேன்’ என்று அறியாநின்றேனோ?’ அன்றிக்கே, ‘ஸம்ஸாரிகளுடைய இந்த து:கநிவ்ருத்திக்கு விரகேதோ?’ என்று அறிகிறிலேனென்னுதல். ‘நீ எனக்குப் பண்ணித்தந்த வாசி நான் இவர்களுக்குப் பண்ணிக்கொடுக்கும் விரகேதோ?’ என்று அறிகிறிலேன்.
(அரவணையாய் அம்மானே) – ‘இவற்றினுடைய ரக்ஷணார்த்தமாகத் திருவநந்தாழ்வான் மேலே திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளி, இவற்றினுடைய ரக்ஷணம் உன்பேறாம்படியான குடல்துடக்கையுடையவனே!’ ‘மெய்’யான குடல்துடக்கிறே இவற்றுக்கு இவனோடு. இவனுடைய ‘பொய்’யோடு ‘மெய்’யோடு வாசியற இவனுக்கு இரண்டும் உடலாயிருக்கும் ரக்ஷிக்கைக்கு. (கூமாறேவிரை) ‘ஸுலபனாய் இவற்றினுடைய ரக்ஷணார்த்தமாகத் திருப்பாற்கடலிலே கூக்குரல் கேட்கைக்காகக் கிட்டிவந்து கிடக்கிற நீ, நான் உன் திருவடிகளை வந்துகிட்டும்படி என்னை அழைத்துக்கொள்கையிலே விரையவேணும்.’ இப்படி விரைய வேண்டுகிறதென்? என்னில், (கண்டாய்) – ‘என்னைக்கண்ட உனக்கு விரையாதே யிருக்கலாயிருந்ததோ? பாரா’யென்று தம் வடிவைக் காட்டுகிறார். “ஏஹிபஶ்யஶரீராணி” என்னுமாபோலே. ‘ஆனாலும் அநாதிகாலம் நீர் பிரியில் தரியாதே போந்த உடம்பும் உற்றாருமன்றோ’ என்ன, (அடியேனைக் குறிக்கொண்டே) – ‘இந்த லோகயாத்ரையால் செல்லாதபடியாயிருக்கிற என்வாசியைத் திருவுள்ளம்பற்றியருளவேணும்.’ உன் திருவடிகளில் ஸம்பந்தமறிந்தவன்று தொடங்கி உன்னோபாதி பராநர்த்தம் பொறுக்கமாட்டாதபடியான என்வாசியைத் திருவுள்ளம்பற்றியருளவேணுமென்னுதல். “கூமாறே விரைகண்டாய்” என்னுங்காட்டில் – பராநர்த்தம் பொறுக்கமாட்டாரென்னுமிடம் தோற்றுமோ? என்னில்; – இவையென்ன உலகியற்கை யென்று இந்த லோகயாத்ரையை அநுஸந்தித்து வெறுத்து, என்னை அங்கே அழைக்கவேணு மென்கையாலே தோற்றுமிறே.
மூன்றாம் பாட்டு
கொண்டாட்டும்குலம்புனைவும் தமருற்றார்விழுநிதியும்
வண்டார்பூங்குழலாளும் மனையொழியவுயிர்மாய்தல்
கண்டாற்றேனுலகியற்கை கடல்வண்ணா! அடியேனைப்
பண்டேபோற்கருதாது உன்னடிக்கேகூய்ப்பணிகொள்ளே.
ப:- அநந்தரம், தாங்கள் நன்மையாக நினைத்திருக்கிறவை ஒழிந்துபோகத் தாங்கள் நசிக்கும்படி கண்டு பொறுக்கமாட்டுகிறிலேன்; அபரிச்சிந்ந ஸௌந்தர்யனான உன் திருவடிகளிலே அழைத்து அடிமைகொள்ளவேணும் என்கிறார்.
கொண்டாட்டும் – ஸம்பத்தடியாக நாட்டார் ஆரோபித்துச் சொல்லும் கொண்டாட்டமும், குலம்புனைவும் – (இல்லாத குலத்தை ஏறிட்டுக்கொண்ட) ஆபிஜாத்யாபிமாநமும், தமர் – (ஐஶ்வர்யம் கண்டு வந்த) ஜ்ஞாதிகளும், உற்றார் – ஸம்பந்திகளும், (இதுக்கடியான) விழுநிதியும் – சீரிய அர்த்தஸஞ்சயமும், (அதடியாக ஸ்வீகரித்த) வண்டு ஆர் பூ குழலாளும் – வண்டு நிறைந்த மாறாத குழலையுடையளாகையாலே போக்யபூதையான ஸ்த்ரீயும், மனை – போகஸ்த்தாநமாம்படி விலக்ஷணமாக எடுத்த மனையும், ஒழிய – (தன்னைவிட்டுக்) குறியழியாமலிருக்க, உயிர்மாய்தல் – ப்ராணவிநாஶம் பிறக்கையாகிற, உலகியற்கை – இந்த லோகயாத்ரை, கண்டு – கண்டு, ஆற்றேன் – பொறுக்க மாட்டுகிறிலேன்; கடல்வண்ணா – கடல்போல அளவிறந்த வடிவழகையுடையவனே! அடியேனை – (உன் வடிவழகுக்குத் தோற்று) அடிமைபுகுந்த என்னை, பண்டே போல் – (உன்னைப் பிரிந்து கூப்பிட்ட) பண்டுபோலே, கருதாது – நினைத்திராதே, உன் அடிக்கே – உன் திருவடிகளுக்கேயாம்படி, கூவி – அழைத்து, பணிகொள் – அடிமை கொண்டருளவேணும்.
ஈடு:- மூன்றாம்பாட்டு. ஆபிஜாத்யாதிகளெல்லாம் கிடக்க, இவை முடிகிறபடியைக் கண்டு பொறுக்கமாட்டுகிறிலேன்; து:கபந்தமில்லாத உன் திருவடிகளிலே அடிமைகொள்ளவேணும் என்கிறார்.
(கொண்டாட்டும்) – முன்பு ‘இன்னான்’ என்று அறியவொண்ணாதபடி அவஸ்துவாய்ப் போந்தானொருவன் அல்பம் ஜீவிக்கப்புக்கவாறே ‘முதலியார்’ என்றாற்போலே சொல்லுவர்கள். “பயிலுந்திருவுடையார்” (3.7.1) என்றிறே தாங்கள் கொண்டாடும் விஷயம். (குலம்புனைவும்) – ஜீவிக்கப்புக்கவன்று தொடங்கி இவனுக்கு ஒரு குலமுண்டாகத் தொடுத்துச் சொல்லுவர்கள். (தமர்) – “அவன்தமர்” என்று இவர்களுக்குத் ‘தமர்’புறம்பேயிறே. முன்பு ‘இவனோடு நமக்கு ஓருறவு உண்டாகச் சொல்லுமது நமக்குச் சாலத்தண்ணிது’ என்று போனவர்கள், இவன் ஜீவித்தவாறே உறவு சொல்லிக்கொடுவந்து கிட்டுவர்கள். (உற்றார்) – முன்பு ‘இவனோடு ஸம்பந்திக்கை தரமன்று; நிறக்கேடாம்’ என்று போனவர்கள் இப்போது ‘இவனோடே ஒரு ஸம்பந்தம் பண்ணினோமாகவல்லோமே’ என்று ஆதரித்து மேல்விழாநிற்பர்கள். (விழுநிதியும்) – நினைவின்றிக்கேயிருக்கச்செய்தே சருகிலை திரளுமாபோலே சீரியநிதி வாராக் கைப்புகுருமே; அதுக்குப்போக்கடி காணாமையாலே செய்வதறியாமை அத்தையிட்டு ஒரு ஸ்த்ரீயை ஸ்வீகரிக்கும். அவள்தான் – வண்டார் பூங்குழலாளாயிற்று. இவள்செவ்வி வண்டே புஜித்துப்போமித்தனை போக்கித் தான் புஜிக்கமாட்டான். பே4ாக3யோக்யதையில்லாத பருவத்திலேயாயிற்று ஸ்வீகரிப்பது. ‘சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய்தந்தையும்’ இவையெல்லாம் ஏகவிஷயமிறே தமக்கு. (மனையொழிய) – அவளுக்கும் தனக்கும் ஏகாந்தமாக அநுபவிக்கைக்கு, தன் இயற்றியெல்லாங்கொண்டு பலநிலமாக அகத்தையெடுக்கும். (உயிர்மாய்தல்) – இவை குறியழியாதிருக்க, இவளைக் கூட்டோடேகொடுத்து. இப்படி பாரித்த தான் முடிந்துகொடுநிற்கும். (கண்டாற்றேன் உலகியற்கை) – ‘இப்படிப்பட்ட லோகயாத்ரை என்னாற் பொறுக்கலாயிருக்கிறதில்லை.’ (கடல்வண்ணா) – இந்த லோகயாத்ரையின்படி யன்றிக்கே அநுபவிக்கலாவதும் ஒரு‘படி’யுண்டே. ‘இவர்கள் து:காநுஸந்தாநத்தால் வந்த க்லேஶந் தீர ஶ்ரமஹரமான உன்வடிவைக் காட்டியருளாய்.’ (அடியேனைப் பண்டேபோல் கருதாது) – ‘ *பொய்ந்நின்ற ஞான” (திருவிரு.1)த்தில் “இந்நின்ற நீர்மையினியாமுறாமை” என்றவளவாக என்னைத் திருவுள்ளம்பற்ற வொண்ணாது.’ இதர விஷயங்களினுடைய தோஷதர்ஶநம் பண்ணிச் சொல்லுகிறவளவன்றிறே, பகவத்விஷயத்தில் அவகாஹித்துச் சொல்லுகிறது. சிற்றாள்கொண்டார், ‘இவர்க்காகில் இது சேர்க்கைப்பல்லிபோலே பணியன்றோ என்றிருக்கவொண்ணாது’ என்றாராம். அன்றிக்கே, கீழ் உன்னைப்பிரிந்து நான் கூப்பிட்ட அவ்வளவாக நினைக்கவொண்ணாது, பராநர்த்தங்கண்டு கூப்பிடுகிற இத்தை. (உன் இத்யாதி) – உன் திருவடிகளிலே அழைத்து என்னை அடிமைகொண்டருளவேணும். ‘உன் திருவடிகளிலே அழைத்தாலும், அடிமைச்சுவடு அறியிலிறே நான் மீளாதொழிவது; ஆனபின்பு, என்னை நித்ய கைங்கர்யங் கொண்டருளவேணும்.’ (கூய்ப்பணிகொள்ளே) – ‘சோற்றையிட்டுப் பணிகொள்’ என்னுமாபோலே.
நான்காம் பாட்டு
கொள்ளென்றுகிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்நெருப்பாகக்
கொள்ளென்றுதமம்மூடும் இவையென்னவுலகியற்கை?
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கேவரும்பரிசு
வள்ளல்செய்தடியேனை உனதருளால்வாங்காயே.
ப:- அநந்தரம், நஶ்வரமான ஐஶ்வர்யத்தை ஆதரிக்கிற லோகயாத்ரையைக் காணாதபடி உன் வடிவை எனக்கு உபகரித்த மஹோதாரனான நீ என்னை அங்கே ஸ்வீகரிக்கிற ஔதார்யத்தையும் பண்ணவேணும் என்கிறார்.
கொள் என்று – ‘என்னைக்கொள் என்னைக்கொள்’ என்று, கிளர்ந்து எழுந்த – மேன் மேலென அபிவ்ருத்தமாய்த்தோற்றுகிற, பெரு செல்வம் – பெரிய ஐஶ்வர்யம், நெருப்பாக – (விநாஶாதிகளாலும் ப்ரதிபக்ஷங்களபிபவிக்கைக்கு ஹேதுவாகையாலும் பரிதாபகரமாய்க் கொண்டு) அக்நிகல்பகமாகச் செய்தே, (வாஸநையாலும் சாபல்யத்தாலும்), கொள்என்று – ‘(பின்னையும் இத்தையே) ஸ்வீகரி’ என்று, தமம் மூடும் – அஜ்ஞாநதமஸ்ஸானது அபிபவியாநிற்கிற, இவை – இவை, என்ன உலகியற்கை – என்ன லோகயாத்ரைகள்? வள்ளலே – நிரதிஶயௌதார்யத்தையுடையையாய், மணி வண்ணா – நீலரத்நம்போலேதர்ஶநீயமான வடிவையுடையவனே! உனகழற்கே – (ஏவம்பூதனான) உன் திருவடிகளிலே, வரும் பரிசு – வரும்படி, வள்ளல் செய்து – இதுக்கென்னவும் ஓர் ஔதார்ய விஶேஷத்தைப்பண்ணி, அடியேனை – (உனக்கே அநந்யார்ஹனான) என்னை, உனது அருளால் – உன் க்ருபையாலே, வாங்காய் – கைக்கொண்டருளவேணும்.
ஈடு:- நாலாம்பாட்டு. சேதநர், ஐஶ்வர்யத்தை விரும்பினால் அது விநாஶஹேதுவாகக் காணாநிற்கச்செய்தே, திரியவும் அந்த ஐஶ்வர்யத்தை விரும்புகையே ஸ்வப4ாவமாம்படி இருக்கிற இதுக்கு ஹேது ஏதோ? நான் இதுகண்டு பொறுக்கமாட்டுகிறிலேன்; என்னை முன்னம் இவர்கள் நடுவில்நின்றும் வாங்கவேணும் என்கிறார்.
(கொள்ளென்றுஇத்யாதி) – இவன்தான் அர்த்தியாதிருக்கச்செய்தேயும், ‘கொள், கொள்’ என்று மொண்டெழுபானைபோலே கிளர்ந்துவருகிற நிரவதிகஸம்பத்தானது. (நெருப்பாக) – நிஶ்ஶேஷமாக நசிக்க வென்னுதல்; தனக்குவிநாஶஹேதுவாக வென்னுதல். ஐஶ்வர்யம் விநாஶஹேது ஆகையாவதென்? என்னில், ‘இவன் ஜீவிக்கிறான்’ என்கிற இது கேட்டுப் பொறுக்கமாட்டாமையிறே பிறர் இவனை அழியச்செய்வது. இப்படி ஐஶ்வர்யம் விநாஶஹேதுவாகக் காணச்செய்தேயும், பிறர் இவனை ‘கொள், கொள்’ என்று ப்ரேரிக்க, தமோபிபூதனாய், துராசையாலே முன்பு விநாஶஹேதுவான அத்தை ஸ்வீகரியாநிற்கும். திரியவும் அத்தை ஸ்வீகரிக்கிறது தமோகுணாபிபூதராயிறே. அன்றிக்கே, கொள்ளென்று ப்ரேரிக்கிறது – மநஸ்ஸாகவுமாம்; அன்றிக்கே, ‘இது விநாஶஹேதுவாம்’ என்று அறியச்செய்தேயும், தன்னுடைய ஹ்ருதயமானது தமோகுணாபிபூதமாய், அத்தைக்கொள் என்று ப்ரேரித்து இவனை ஸ்வீகரிப்பிக்கும். இதினுடைய ப3லம் “ஹதேபீஷ்மேஹதேத்ரோணே ஹதேகர்ணேமஹாரதே ஆஶாபலவதீராஜந் ஶல்யோஜேஷ்யதிபாண்டவாந்” – அதிரதமஹாரதரடையப் பட்டுப்போகாநிற்கச்செய்தேயும், பின்னையும் சல்யனைக்கொண்டே பாண்டவர்களை ஜயிக்கப்பார்த்தானிறே துர்யோதநன். (இவையென்னவுலகியற்கை) – இவை சிலலோகயாத்ரை இருக்கிறபடியே! (வள்ளலே) – ‘ஐஶ்வர்யம் விநாஶஹேது’ என்னுமிடத்தை என்னெஞ்சிலே படுத்தி எனக்கு ஔதார்யத்தைப் பண்ணினவனே! (மணிவண்ணா) – மாணிக்கப்பண்டாரத்தையிறே ஔதார்யம்பண்ணிற்று. ஸாதநாநுஷ்டாநம், மற்றொன்றைப் பண்ணவன்றாயிற்று. அன்றிக்கே, ஐஶ்வர்யாதிகளில் குத்ஸையைப் பிறப்பித்தது, பிடாத்தை விழவிட்டு வடிவழகைக்காட்டியாயிற்று. (உனகழல் இத்யாதி) – ஜ்ஞாநலாபமாத்ரத்தால் போருமோ? ப்ராப்தியைப்பண்ணித் தர வேண்டாவோ? ‘மயர்வறமதிநலமருளின’வோ பாதி ‘துயரறுசுடரடிதொழுதெழப்’பண்ணவேண்டாவோ? பசியைவிளைத்தால் சோறிடவேண்டாவோ? (வள்ளல்செய்து) – உன் திருவடிகளிலே நான் வந்துகிட்டும்படியாக ஔதார்யத்தைப்பண்ணி. ‘இவன்இப்பேற்றைப் பெறுவான்’ என்று விஷயீகரித்து. (அடியேனை) – ‘பிறருடைமை(யையோநான் நோக்கச் சொல்லுகிறது? ‘உன்னுடைமை) நசியாமல் நோக்கவேணும்’ என்று ப்ரார்த்திக்கிறஎன்னை. (உனதருளால்) – ‘மயர்வற மதிநல மருளின’வோபாதி, ப்ராப்திக்கு ஈடாயிருப்பதும் ஓரருளைப்பண்ணவேணும். (வாங்காயே) – ‘வாங்காய்’ என்று – அசித்ஸமாதியாலே சொல்லுகிறார். அதுக்கு அடி – இத்தலையிலே பரமபக்திபர்யந்தமாகப் பிறந்தாலும், பெறுகிற பேற்றின் கனத்தைப் பார்க்க, அத்தலையில் க்ருபையாலே பெற்றதாம்படி யிருக்கையாலே.
ஐந்தாம் பாட்டு
வாங்குநீர்மலருலகில் நிற்பனவும்திரிவனவும்
ஆங்குயிர்கள்பிறப்பிறப்புப் பிணிமூப்பால்தகர்ப்புண்ணும்
ஈங்கிதன்மேல்வெந்நரகம் இவையென்னவுலகியற்கை?
வாங்கெனைநீமணிவண்ணா! அடியேனைமறுக்கேலே.
ப:- அநந்தரம், ஜந்மஜராமரணாதி க்லேஶங்கள் நடையாடுகிற தேஶத்தில் இராதபடி ஆஶ்ரிதஸுலபமான வடிவையுடைய நீ அங்கீகரிக்கவேணும் என்கிறார்.
வாங்கும் – (திரைக்குளகப்பட்ட பதார்த்தங்களை) உள்ளே வாங்கும், நீர் – ஸமுத்ர ஜலத்தையுடைய, மலருலகில் – விஸ்தீர்ணபூமியில், நிற்பனவும் – நிற்பனவும், திரிவனவும் – திரிவனவுமான, ஆங்கு – அந்தஸ்த்தலங்களிலே வர்த்திக்கிற, உயிர்கள் – ப்ராணாஶ்ரயமான ஆத்மாக்கள், ஈங்கு – இவ்விடத்தில், பிறப்புஇறப்புபிணிமூப்பால் – ஜந்மமரணத்யாதிஜரைகளாலே, தகர்ப்புண்ணும் – நெருக்குண்ணாநிற்கும்; இதன்மேல் – இதற்குமேல், வெம்நரகம் – க்ரூரமான ரௌரவாதி நரகங்களாயிருக்கும்; இவை – இவை, என்ன உலகியற்கை – என்ன லோகயாத்ரைகள்? மணி – (ஆஶ்ரிதர்க்கு முடிந்தாளலாம்படி) நீலரத்நம் போலே தர்ஶநீயமாய் ஸுலபமான, வண்ணா – வடிவையுடையவனே! நீ – நீ, எனை – (இந்த து:கம்பொறுக்கமாட்டாத) என்னை, வாங்கு – அங்கீகரித்தருளவேணும்; அடியேனை – (உன் அடியேனான) என்னை, மறுக்கேல் – மறுகப் பண்ணாதேகொள். மறுக்குதல் – கலக்குதல்.
ஈடு:- அஞ்சாம்பாட்டு. ஜந்மஜராமரணாதிகளாலே நோவுபடுகிற ஸம்ஸாரிகள் நடுவினின்றும், இதுநடையாடாத தேஶத்திலே அழைத்துக்கொண்டருளவேணும் என்கிறார்.
(வாங்குநீர்மலருலகில்) – கார்யங்களுக்கெல்லாம் காரணத்திலே லயமாகக்கடவதிறே; இவ்வருகுண்டான கார்யவர்க்கத்தையடையத் தன்பக்கலிலே வாங்காநின்றுள்ள நீரிலே விஸ்த்ருதமாகாநின்றுள்ள லோகத்திலே என்னுதல்; அப்யயபூர்விகையாயிறே ஸ்ருஷ்டி இருப்பது; அன்றிக்கே, வாங்குதல் – வளைதலாய், நீராலே சூழப்பட்டுத் திருநாபீகமலத்திலே பிறந்தலோக மென்றுமாம். (நிற்பனவும் திரிவனவும்) – ஸ்தாவரங்களும் ஜங்கமங்களும். (ஆங்கு உயிர்கள்) – அவ்வவஶரீரஸ்த்தமான ஆத்மாக்கள். அன்றிக்கே, ஆங்கு என்கிற இது – மற்றோரிடத்திலே அந்வயிப்பதாக விட்டுவைத்து, ‘நிற்பனவும் திரிவனவுமான – உயிர்கள்’ என்றாய், ஸ்த்தாவரஜங்கமாத்மகமான ஆத்மாக்கள். (பிறப்பு இத்யாதி) – ஜந்மஜராமரணாதிகளாலே நெருக்குண்ணாநிற்பர்கள், ஸம்ஸாரத்தில் வர்த்திக்கும் நாளித்தனையும். (இதன்மேல் வெந்நரகம்) – இதுக்கு மேல் போனால் கொடிதான நரகம். இங்கு இருந்த நாள் மூலையடியே ஸுகாநுபவம்பண்ணித் திரிந்தார்களாம்படியன்றிறே, அங்குப்போனால் படும் து3:க்க2ம். ஸுகப்ராந்தியாகிலும் உண்டு இங்கு; அங்கு நிஷ்க்ருஷ்ட து3:க்க2மேயாயிற்று உள்ளது. உயிர்க்கழுவிலிருக்குமவன், பிபாஸையும் வர்த்தித்துத் தண்ணீரும் குடித்து த்ருப்தனாமோபாதியிறே இங்குள்ளவை; அதுவுமில்லை, அங்கு. ‘இதொரு லோகயாத்ரையைப் பண்ணிவைக்கும்படியே!’ ஆனால், ‘உமக்குச் செய்யவேண்டுவது என்?’ என்ன, (ஆங்கு வாங்கு எனை) “ஶ்ரியாஸார்த்தம்ஜகத்பதி: ஆஸ்தேவிஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர்பாகவததைஸ்ஸஹ” என்கிறபடியே, ‘ஏழுலகும் தனிக்கோல்செல்ல’ (4.5.1) ‘நீ விற்றிருக்கிறவிடத்திலே என்னை வாங்கவேணும்.’ (மணிவண்ணா) ‘ஶப்தாதிவிஷயங்களிலே ப்ரவணனாய் அவற்றின் வடிவிலே துவக்குண்டிருக்கிற என்னை’, “அவ்வடிவை நாய்க்கிடாய்” என்னும்படியான உன்வடிவைக் காட்டிக்கொண்டு போகவேணும். “மனைப்பால் – பிறந்தார்பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் – துறந்தார் தொழுதாரத்தோள்” (இரண்.திரு. 42) என்கிறபடியே, ‘இவன்படி’யைக் கண்டால் வேறொன்றும் பிடியாதிறே. (அடியேனை) – ‘உன்படியறிந்த என்னை, நீயும் அவ்வோலக்கமுமா யிருக்கிற இருப்பில் சுவடறிந்தஎன்னை’. (மறுக்கேலே) – ‘ஜந்மஜராமரணாதிகளாலே நெருக்குண்கிற இவர்கள் நடுவே யிருந்து என்னெஞ்சு மறுகாதபடி பண்ணவேணும். என்னைக் கலங்கப்பண்ணாதேகொள். தெளிவிசும்பிலே வாங்கியருளவேணும்’. (அடியேனை மறுக்கேலே) – அஸாதாரணராய் ஶேஷபூதரா யிருப்பாரையுங் கொண்டு லீலாரஸம் அநுபவிக்கக் கடவதோ?
ஆறாம் பாட்டு
மறுக்கிவல்வலைப்படுத்திக் குமைத்திட்டுக்கொன்றுண்பர்
அறப்பொருளையறிந்தோரார் இவையென்னவுலகியற்கை?
வெறித்துளவமுடியானே! வினையேனையுனக்கடிமை
யறக்கொண்டாய் இனியென்னாரமுதே! கூயருளாயே.
ப:- அநந்தரம், பரபீடாகரமான ஸம்ஸாரஸ்வபாவத்தைக் காணாதபடி, நிரதிஶயபோக்யனான நீ என்னை அழைத்துக்கொண்டருளவேணும் என்கிறார்.
மறுக்கி – (பயஹேதுக்களான வார்த்தைகளைச் சொல்லி இவன் நெஞ்சைக்) கலக்கி, (பயநிவ்ருத்திக்குத் தன்னையே தஞ்சமாகப் பற்றும்படி தன்வஶமாக), வல்வலைப்படுத்தி – சிக்கென்ற வலையிலே அகப்படுத்தி, குமைத்திட்டு – (இவன் தன்பதார்த்தங்களை ஸ்வயமேவ நெகிழும்படி) பீடித்து, கொன்று – பின்தொடர்த்தியறும்படி கொன்று, உண்பர் – தங்கள்வயிறுவளர்க்காநிற்பர்கள்; அறம்பொருளை – தர்மமாகிற ப்ரதமபுருஷார்த்தத்தை, அறிந்து – அறிந்து, ஓரார் (‘இதுவே நமக்கு உஜ்ஜீவநஹேது’ என்று) நிரூபியார்; இவை என்ன உலகியற்கை – இவை என்ன லோகயாத்ரைகள்?, வெறி துளவம் – பரிமளோத்தரமான திருத்துழாயை யுடைத்தான, முடியானே – திருமுடியையுடையவனே!, (இந்த போக்யதையைக் காட்டி), வினையேனை – பாபமே நிரூபக மென்னலாம்படியான என்னை, உனக்கு – உனக்கு, அற – அநந்யார்ஹமாக, அடிமை கொண்டாய் – அடிமைகொண்டவனே!, என் – எனக்கு, ஆர் – பரிபூர்ணமாய் நித்யபோக்யமான, அமுதே – அம்ருதமானவனே!, (இனி ஸம்ஸாரத்திலே அத்யந்தார்த்தி பிறந்த பின்பு), கூயருளாய் – அழைத்தக்கொண்டருளவேணும். அறப்பொருளை யறிந்தோராரென்று – மிகவும் பொருளையேயறிந்து வேறொன்றையும் விசாரியா ரென்றுமாம்.
ஈடு:- ஆறாம்பாட்டு. ஸம்ஸாரிகளுடைய பகவத்வைமுக்யாதிதோஷங்களை அநுஸந்தித்து ஈஶ்வரனை இன்னாதாகை தவிர்ந்து, ஜீவநார்த்தமாகப் பரஹிம்ஸைபண்ணுகிற ஸம்ஸாரிகள் நடுவினின்றும் என்னை உன் திருவடிகளிலே அழைத்தருளவேணும் என்கிறார்.
(மறுக்கி இத்யாதி) – க்ராமணிகள் த்ரத்யார்ஜநம்பண்ணும்படி: ‘ஸாது’ என்று தோற்ற வர்த்திப்பானொருவன், ‘ஒரு தேசத்திலே வர்த்தியாநின்றால் ஓர் அபாஶ்ரயத்தைப் பற்றியிருக்கவேணும்’ என்று ஒரு க்ராமணிபாடே சென்று சேரும்; ‘இவன் ஸாது’ என்று தோற்றினவாறே ‘உன்னை இன்னாரும் இன்னாருமாக இன்னபடி சொன்னார்களீ!’ என்னும்; அவன் பீ4தனாய், ‘இவன் நமக்கு ரக்ஷகன்’ என்று விஶ்வஸித்தபடியாலே, ‘அதுக்குப்பரிஹாரமென்?’ என்று இவன் தன்னையே கேட்கும்; ‘உனக்கு ஒன்று வந்தால் சொல்லலாவதில்லாதபடி என்னகத்திலே உனக்குள்ள அர்த்தத்தையும் போகட்டு உன்க்ஷேத்ரத்தையும் என்பேரிலே திரியவிட்டுவை’ என்னும்; இப்படி இவன் நெஞ்சை மறுகப்பண்ணி. (வல்வலைப்படுத்தி) – இவனுக்கு இனி இவை கொண்டு தப்பவொண்ணாதபடி தன்பக்கலிலே அகப்படுத்தி. (குமைத்திட்டு) – பின்பு இவனிட்டகாசுதன்னையடையத் தன்பேரிலே செலவு எழுதிச் சிகைக்கடிப்பிக்கும். (கொன்று) – ‘இவன் இருக்குமாகில் ஒருநாள்வரையில் சிலரை ஆஶ்ரயித்துத் தொடரிலோ?’ என்று, இவனை ஹிம்ஸிக்கும். (உண்பர்) – இப்படிசெய்தால் தான் செய்வது வயிறுவளர்க்கையிறே. (அறப்பொருளையறிந்து) – ‘தேஹாத்
த்யதிரிக்தமாயிருப்பதொரு ஆத்மவஸ்து உண்டு; நாம் இப்போது செய்கிறவை அதிலே வந்தவாறே தட்டுப்படும்’ என்று த4ர்மதத்த்வத்தையறிந்து. (ஓரார்) – அதினுடைய நிரூபணத்திலே முதலிலே இழியார்கள். அன்றிக்கே, பரஹிம்ஸையில் நின்றும் நீங்கா ரென்றுமாம். ஓருதல் – ஓருவுதலாய், ஒருவுதல் – நீங்குதலாய், அந்தப் பரஹிம்ஸையில் நின்றும் நிவ்ருத்தராகார். அன்றிக்கே, அர்த்தபுருஷார்த்த மொன்றையுமே அறவிரும்பி, நன்மை தீமை நிரூபணம்பண்ணா ரென்னுதல். இது ஒரு லோகயாத்ரையிருக்கும்படியே பிரானே! (வெறி இத்யாதி) ‘இஸ்ஸம்ஸாரிகள் நடுவே யிருக்கிற என்னை உன்னுடைய பே4ாக்3யதையைக் காட்டி அடிமைகொண்டாய். பரிமளிதமான திருத்துழாயை முடியிலே யுடையவனே!’ (வினையேனை) – சப்தாதிவிஷய ப்ரவணராயிருக்கிற இவர்களிலே ஒருவனாய்ப் பிறக்கைக்கு அடியான பாபத்தையுடைய என்னை. நான் நின்ற நிலைக்குச் சேராதபடியான நின்திருவடிகளில் அடிமையை நிர்ஹேதுகமாக என்னைக் கொண்டருளினாய். (இனி) – அடிமைகொண்டபின்பு. (என் ஆரமுதே) – எனக்கு நிரதிஶயபோக்யனானவனே! நான் இவர்கள் நடுவே யிருக்கிற இருப்பைவிட்டு உன் திருவடிகளிலே சேரும்படி அழைத்துக் கொண்டருளவேணும். அன்றிக்கே, (இனியன்) – அவர்கள் ஒருபடியாலும் அத்ருஷ்டத்தில் நெஞ்சுவையாரான பின்பு, நான் அவர்களநர்த்தத்துக்குக் கரைந்ததுக்கு ப்ரயோஜநமென்? அத்தைவிடலாகாதோ? என்னை முதல் அங்கே அழைத்துக்கொண்டருளவேணும்.
ஏழாம் பாட்டு
ஆயேயிவ்வுலகத்து நிற்பனவுந்திரிவனவும்
நீயேமற்றொருபொருளு மின்றிநீநின்றமையால்
நோயேமூப்பிறப்பிறப்புப் பிணியேயென்றிவையொழியக்
கூயேகொள்ளடியேனைக் கொடுவுலகங்காட்டேலே.
ப:- அநந்தரம், ஸர்வாத்மபூதனான நீ, க்ரூரமான து:கோத்தரஜகத்தைக் காணாதபடி என்னை அழைத்துக்கொண்டருளவேணும் என்கிறார்.
இ உலகத்து – இந்தலோகத்தில், நிற்பனவும் – நிற்பனவும், திரிவனவும் – திரிவனவும். நீயே ஆய் – நீயே ஆய், மற்று ஒரு பொருளும் – வேறு ஒருபதார்த்தமும், இன்றி – இன்றி, நீ – நீ, நின்றமையால் – நின்றபடியாலே, (ஸ்வஶரீரத்தில் த்யாத்யாதிகளை ஶரீரி தானே சமிப்பிக்குமோபாதி), நோயே – நோய், மூப்பே – மூப்பு, பிறப்பே – பிறப்பு, இறப்பே – இறப்பு, பிணியே – பிணி, என்ற – என்றுசொல்லப்பட்டுத் தனித்தனியே து3:க்க2த்துக்கு நிரபேக்ஷஹேதுவான, இவை – இவை, ஒழிய – போம்படியாக, அடியேனை – (உனக்கு) அடியேனான என்னை, கூயேகொள் – அழைத்துக்கொண்டருளவேணும்; (இவற்றாலே ஈடுபடுகையாலே), கொடு – கொடிதாய் (க்லேஶோத்தரமான), உலகம் – ஜகத்தை, காட்டேல் – (என்கண்ணுக்கு) இலக்காக்காதொழியவேணும். மூப்பு பிறப்பு என்கிற சொற்கள் – ஸந்திகார்யத்தாலே, புகரம் மறைந்து மூப்பிறப்பு என்று கிடக்கிறது. பிணியென்று – தாரித்ர்யத்துக்கும் பேர்.
ஈடு:- ஏழாம்பாட்டு. அபேக்ஷிதம் அப்போதே கிட்டாமையாலே, ‘பேறு தம்மதானபின்பு தாமே யத்நம்பண்ணிவருகிறார்’ என்று நினைத்தானாகக்கொண்டு, ‘ஸகல பதார்த்தங்களும் த்வததீநமான பின்பு நீயே என்னைக்கிட்டும்வழி பார்த்தருளவேணும்’ என்கிறார்.
(ஆயே) – தாயேயென்றபடியாய், “மாதாபிதா” என்கிறபடியே எனக்கு ஸர்வவிதபந்துவர்க்கமுமானவனே! அன்றிக்கே, (இவ்வுலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே – ஆயே) இந்தலோகத்தில் ஸ்த்தாவரஜங்கமாத்மகமான ஸர்வபதார்த்தங்களும், ‘நீ’ என்கிற சொல்லுக்குள்ளேயாம்படி ப்ரகாரமாயற்று, நீ யொருவனுமே ப்ரகாரியாய். (மற்றொரு பொருளுமின்றி) – “தே3ஹ நாநாஸ்தி*, ஆத்மைவாபூ4த் தத்கேநகம் பஶ்யேத்” என்றும் சொல்லுகிறபடியே, அப்ரஹ்மாத்மகமாய் ஸ்வதந்த்ரமாயிருப்பதொரு பதார்த்தங்களை யாயிற்றில்லை யென்கிறது. (நீ நின்றமையால்) – நீ இப்படி நின்றபின்பு. (நோயித்யாதி) – ஶரீரத்துக்கு வந்தவற்றுக்கு ஶரீரியான ஆத்மா ஸுகித்தல் து:கித்தல் செய்யுமோபாதி, எனக்கு வந்தவற்றுக்கு ஸுகித்தல் து:கித்தல் செய்வாய் நீயாம்படி ஸம்பந்தமுண்டாயிருந்த பின்பு; ஜந்மநிபந்தநமான இத்த்யஸநங்களைக் கழித்து – நோயும் பிணியுமென்று – ஆதித்யாதிகள். (கூயேகொள்) – இவன் ‘தானே’ வருகிறான் என்றிராதே நீயே அழைத்துக்கொண்டருளவேணும். (கொடுவுலகம்) – உன்னைவிட்டு ஶப்தாதிகளாலே போதுபோக்கியிருக்கிற லோகம். (காட்டேலே) – த்ருஷ்டிவிஷம் போலே, காணில்முடிவன். இந்தலோகயாத்ரை என் கண்ணுக்கு இலக்காகா தொழியவேணும் என்கையாலே – இந்த லோகயாத்ரை இவர் கண்ணில் பட்டதில்லையாயிருந்தபடி. ‘மயர்வற மதிநல மருளின’வோபாதி ஸர்வஶக்தியானவன் இத்தைக்காட்டில், காணுமித்தனை. ஆனால், “இவையென்னவுலகியற்கை” என்றத்தோடு சேரும்படியென்? என்னில், “பரஹிதம்” என்கிற புத்தியாலே முன்பு அநுஸந்தித்தார்; ‘இதுதான் என்னைவந்து கிட்டாதபடி பண்ணவேணும்’ என்கிறார் இதில்.
எட்டாம் பாட்டு
காட்டிநீகரந்துமிழும் நிலம்நீர்தீவிசும்புகால்
ஈட்டிநீவைத்தமைத்த இமையோர்வாழ்தனிமுட்டைக்
கோட்டையினிற்கழித்தென்னை உன்கொழுஞ்சோதியுயரத்துக்
கூட்டரியதிருவடிக்கள் எஞ்ஞான்றுகூட்டுதியே?
ப:- அநந்தரம், ‘ஸகலஜகத்காரணபூதனான நீ, இந்த ஜகதந்தர்பாவத்தைக் கழித்து என்னை உன்திருவடிகளிலே கூட்டுவது என்று? என்கிறார்.
காட்டி – (பூர்வஸ்ருஷ்டியிலே) ப்ரகாஸிப்பித்து, நீ- நிரபேக்ஷகாரணபூதனான நீ, கரந்து – (ஸம்ஹ்ருத்யவஸ்த்தையிலே “தம:ஏகீப4வதி” என்கிறபடியே நாமரூப விப4ாக3ரஹிதமாம்படி ஸ்வரூபத்திலே) மறைத்து, உமிழும் – (ஸ்ருஷ்டிதசையிலே “யத2ாபூர்வமகல்பயத்” என்கிறபடியே) உண்டது உமிழ்ந்தாற்போலே உருக்குலையாதபடி ஸ்ருஷ்டிக்கும், நிலம் நீர் தீ விசும்பு கால் – ப்ருதிவ்யாதிபூதங்களைந்தையும், ஈட்டி – (பஞ்சீகரணப்ரகாரத்தாலே) திரட்டி, வைத்து – (இவற்றைப் புறவாயிலே ஆவரணமாகவும்) வைத்து, (அகவாயிலே), இமையோர் – ப்ரஹ்மாதிகளான அநிமிஷர்க்கு, வாழ் – வாஸஸ்த்தாநமாம்படி, அமைத்த – சமைத்த, தனிமுட்டை – அத்விதீயமான அண்டமாகிற, கோட்டையினை – முட்டுக்கோட்டையை, கழித்து – கழித்து, என்னை – (இதிலிருப்பு து:கமாய் உன்னைப்ராபிக்கையிலே) ஆசையுடைய என்னை, உன் கொழுஞ்சோதி – உனக்கு அஸாதாரணமாய் அதிஶயிததேஜோரூபமாய், உயரத்து – (*விஶ்வத:ப்ருஷ்டே2ஷு ஸர்வத: ப்ருஷ்டேஷு” என்கிறபடியே எல்லாவற்றுக்கும்) மேலான பரமபதத்திலே, (விதிஸிவ ஸநாகதிகளுக்கும் அத்யந்ததூரமாம்படி). கூடு அரிய – பெறுதற்கு அரிதான, திருவடிக்கள் – திருவடிகளை, எஞ்ஞான்று – எக்காலம், கூட்டுதி – கூட்டுதி? காலம் அறிந்தேனாகில் தரித்திருக்கலாமென்று கருத்து. ‘கரந்துமிழுமென்று – உண்டுமிழ்ந்து’ என்றுஞ் சொல்லுவர்கள்.
ஈடு:- எட்டாம்பாட்டு. நாமே செய்யப்புக, நீர் “வேண்டா” என்றவாறே யன்றோ தவிர்ந்தது; இதுக்கு நம்மைக் காற்கட்டவேணுமோ? என்ன, ‘செய்யக்டவதாகில் அது என்று செய்வது?’ என்கிறார். “எம்மாவீட்டுத் திறமும் செப்பம்” (2.9.1) என்றாரே.
(காட்டி) – ஐந்த்ரஜாலிகரைப்போலே; முன்பு தானேதானாம்படி இவற்றையடையத் தன்பக்கலிலே உபஸம்ஹரித்து ஸதவஸ்த்தமான ஜகத்தை, “த4ாதா யத2ாபூர்வமகல்பயத்” என்கிறபடியே, இத்தை யுண்டாக்கிக் காட்டி. (நீ கரந்துமிழும்) – ஸ்ரஷ்டாவான நீயே ப்ரளயம் வந்தவாறே உள்ளேவைத்து ரக்ஷித்து, அதுகழிந்தவாறே வெளிநாடுகாண உமிழும். அன்றிக்கே, நீ கரந்து – காட்டி, உமிழ்ந்து – காட்டுமென்றுமாம். இப்படி உண்பது உமிழ்வதான ப்ருதித்யாதிகளாலே, (ஈட்டி) – திரட்டி. த்ரித்ருத்தகரணத்தைச் சொன்னபடி. “ஸமேத்யாந்யோந்யஸம்யோகம் பரஸ்பரஸமாஶ்ரயா:” – இவை தனித்தனியும் காரியத்தைப் பிறப்பிக்கமாட்டா; கூடினாலும் ஸமப்ரதாநமாய், நிற்கில் காரியம் பிறப்பிக்க மாட்டாது; செதுகையும் மண்ணையும் நீரையுங் கூட்டி குலாலாதிகள் க3டாதிகளைப் பிறப்பிக்குமாபோலே; பரஸ்பரம் காரணம் ஏகரூபமாய்நிற்கில் கார்யமும் ஏகரூபமாயிருக்குமிறே; தேவாதிகார்யநாநாவித்யம் பிறக்கும்படி கு3ணப்ரத4ாநப4ாவேந நிற்கும். இப்படி இவற்றைத்திரட்டி இவற்றாலே. (நீவைத்தமைத்த) – நீ சமைத்து வைத்த. (இமையோர் இத்யாதி) – ப்ரஹ்மாதிகள் வன்னியம் செய்கிற அத்விதீயமான அண்டமாகிற கோட்டையினின்றும் என்னைப் புறப்படவிட்டு. கோட்டையாவது – புறம்புள்ளாரால் புகுரவொண்ணாததுமாய், உள்ளுள்ளாரால் புறப்படவுமொண்ணாதே, புக்கவிடமும் புறப்பட்டவிடமும் தெரியாதாயிருக்குமதிறே. “து3ரத்யயா” என்றானிறே தானும். (என்னை) – இக்கோட்டையிலேயகப்பட்டுப் புறப்பட வழியறியாதிருக்கிற என்னை. “மாமேவ யே ப்ரபத்3யந்தே மாயாமேதாந் தரந்திதே” என்று நீ சொன்னபடியே உன்னையே பற்றின என்னை. ‘உம்மை இத்தைக் கழித்துக்கொடுபோகச் சொல்லுகிறது எங்ஙனே?’ என்ன, (உன் கொழுஞ்சோதியுயரத்து) – அஸ்ப்ருஷ்ட ஸம்ஸாரகந்தமாய் ஶுத்தஸத்த்வமயமாய் நிரவதிக தேஜோரூபமான பரமபதத்திலே. (கூட்டரிய திருவடிக்கள்) – ஸ்வயத்நத்தால் துஷ்ப்ராபமான திருவடிகளை. (எஞ்ஞான்று) – “மாஶுச:” என்று ஒருவார்த்தை சொல்லிலும், “ஸ்த்தி2தோஸ்மி” என்றிருக்கலாயிறே இருப்பது; அப்படியே ‘நான் கூட்டக்கடவேன்’ என்று ஒருவார்த்தை அருளிச்செய்யவேணும். “ஆருரோஹ ரத2ம் ஹ்ருஷ்ட:” என்னலாம்படி, “பூர்ணே சதுர்த3ஶே வர்ஷே” என்கிறவோபாதி வார்த்தை அருளிச்செய்தருளவேணும். ‘இத்தைக்கழிக்கவேணும்’ என்றிருக்கிற என்னை; நீ உகந்தாரைக் கொடுபோய் வைக்கும் தேசத்திலே, ஸர்வஶக்தியான நீயே என்று கொடுபோய் வைக்கக்கடவை? இக்கோட்டையிட்ட இவன்தானே கழிக்கவேணுமிறே. விரோதியைப் போக்கிலும் இவனைப்பற்றவேணும், தன்னைப்பெறிலும் தன்னாலே பெறவேனும்; “மாமேவ யே ப்ரபத்3யந்தே*, “தமேவ ஶரணம் க3ச்ச*. பிள்ளைதிருநறையூரரையர், “ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கவொண்கிறதில்லை; ஒரு ஸர்வஶக்தி, கர்மாநுகூலமாகப் பிணைத்த பிணையை, அவனைக் காற்கட்டாதே, இவ்வெலியெலும்பனான ஸம்ஸாரியால் அவிழ்த்துக்கொள்ளப்போமோ?” என்று பணிப்பர்.
ஒன்பதாம் பாட்டு
கூட்டுதிநின்குரைகழல்கள் இமையோரும்தொழாவகைசெய்து
ஆட்டுதிநீஅரவணையாய் அடியேனு மதுவறிவன்
வேட்கையெல்லாம்விடுத்தென்னை உன்திருவடியேசுமந்துழலக்
கூட்டரியதிருவடிக்கள் கூட்டினைநான்கண்டேனே.
ப:- அநந்தரம், இவருடைய ஆர்த்தி தீரும்படி பரமபதத்திலிருப்பை ப்ரகாசிப்பிக்க, ஆஶ்ரிதஸம்ஶ்லேஷ ஸ்வபாவனான நீ என்னை உன் திருவடிகளை ப்ராபிப்பிக்கக் கண்டேனென்று த்ருப்தராகிறார்.
நீ – (ஸர்வஶக்தியான) நீ, (கூட்ட நினைத்தாரை அளவிலிகளேயாகிலும்), குரை – நிரதிஶயபோக்யமான, நின் கழல்கள் – உன்திருவடிகளை, கூட்டுதி – சேர்த்துக்கொள்ளுதி; (ஸ்வயத்நத்தாலே காணநினைக்கில்), இமையோரும் – (விஶதஜ்ஞாநரான) தேவர்களும், தொழாவகை – கண்டநுபவியாதபடி, செய்து – பண்ணி, ஆட்டுதி – அலமருவிப்புதி; அரவு – (ஆஶ்ரிதர்க்கு அக்ரக3ண்யனான) திருவநந்தாழ்வானை, அணையாய் – படுக்கையாகக் கொண்டவனே! அது – ஆஶ்ரிதாநாஶ்ரிதவிஷயத்தில் ஸௌலப்யதௌர்லப்ய ரூபமான ஸ்வபாவத்தை, அடியேனும் – ஶேஷபூதனான நானும், அறிவன் – அறிவன்; (எங்ஙனே யென்னில்) , வேட்கை எல்லாம் – இதர விஷயங்களில் அபிநிவேஶத்தை யெல்லாம், விடுத்து – ஸவாஸநமாகக் கழித்து, என்னை – உன்னை யொழியச் செல்லாத ஆசையையுடையேனான என்னை, திரு – நிரதிஶயபோக்யமான, உன் அடி – உன் திருவடிகளை, சுமந்து – –ரஸாவஹித்து, உழல – (*யேந யேந த4ாதா க3ச்ச2தி” என்கிறபடியே) அநுஸஞ்சரணம் பண்ணும்படியாக, கூட்ட – (எத்தனையேனும் அளவுடையார்க்கும்) கூட்டிக்கொள்ள, அரிய – அரிய, திருவடிக்கள் – திருவடிகளிலே, கூட்டினை – கூட்டிக்கொண்டாய்; நான் – (ப்ராப்தாவான) நான், கண்டேன் – (இந்தப்ராப்யத்தை) அபரோக்ஷித்து அநுபவித்தேன். ஏ – நிஶ்சிதமென்று கருத்து.
ஈடு:- ஒன்பதாம்பாட்டு. இவருடைய ஸம்ஸாராநுஸந்தாநத்தாலே வந்த வ்யஸநமெல்லாம் தீரும்படி, திருநாட்டிலிருந்த இருப்பைக் காட்டியருள, கண்டு அநுபவிக்கப்பெற்றே னென்று த்ருப்தராகிறார்.
(கூட்டுதி நின்குரைகழல்கள்) – அளவிலிகளாகவுமாம், நீ உகந்தாரை உன் திருவடிகளிலே சேர்த்துக்கொள்ளுதி. குரையென்று – பெருமையாதல், ஆபரணத்வநியாதல். (இமையோர் இத்யாதி) – ப்ரஹ்மாதிகளேயாகிலும், நீ நினையாதாரை வந்துகிட்டாதபடி பண்ணி அலைப்புதி. (அரவணையாய்) – ‘கூட்டுதி’ என்றதுக்கு உதாஹரணம். (அடியேனும் அதுவறிவன்) – லோகவேதங்களிலே ப்ரஸித்தமான உன்படியை நானும் அறிவேன். அறிந்தபடிதான் என்? என்னில்; – (வேட்கையெல்லாம் விடுத்து) – எனக்கு உன்னையொழிந்தவையாம் அத்தனையன்றோ ஆசைப்படுகைக்கு; உன் விபூதியில் நான் ‘எனக்கு, எனக்கு’ என்னாததுண்டோ? ‘யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு’ (திருவிரு.95) செய்திலையோ? (உன்திருவடியே சுமந்துழல) – பாஹ்ய விஷயங்களிலுண்டான ஆசையெல்லாம் உன்பக்கலிலேயாய், உன் திருவடிகளையே நான் ஆதரித்து, அதுவே யாத்ரையாய்ச் செல்லும்படிக்காக. (கூட்டரிய இத்யாதி) – யாவர்சிலர்க்கும் தந்தாமால் சேர்த்துக்கொள்ளவரிய திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக்கொண்டாய். இது நான் கேட்டார்வாய்க் கேட்டுச் சொல்லுகிறேனல்லேன்; அநுபவத்தாலே சொல்லுகிறேன்.
பத்தாம் பாட்டு
கண்டுகேட்டுற்றுமோந்து உண்டுழலுமைங்கருவி
கண்டவின்பம்தெரிவரிய வளவில்லாச்சிற்றின்பம்
ஒண்டொடியாள்திருமகளும் நீயுமேநிலாநிற்பக்
கண்டசதிர்கண்டொழிந்தேன் அடைந்தேனுன்திருவடியே.
ப:- அநந்தரம், உமக்கு இதரபுருஷார்த்தங்களைக்கழித்து பரமபுருஷார்த்தத்தைக் கூட்டின கணக்கு என்? என்ன; ஐஶ்வர்யகைவல்யங்களை நானேவிட்டு, ஶ்ரிய:பதியான உன்னையே புருஷார்த்தமாக நிஶ்சயித்து ப்ராபிக்கும்படியானேன் என்கிறார்.
கண்டு – (ரூபகுணத்தைக்) கண்டும், கேட்டு – (சப்தகுணத்தைக்) கேட்டும், உற்று – (ஸ்பர்ஶகுணத்தைக்) கிட்டியும், மோந்து – (கந்தகுணத்தை) மோந்தும், உண்டு – (ரஸகுணத்தை) புஜித்தும், உழலும் – (லப்தவிஷயத்தில் பசைபோராமல் ஸஜாதீயவிஷயந்தேடி) அலமாக்கும், ஐங்கருவி – ஐந்திந்த்ரியங்களாலேயும், கண்ட – பரிச்சேதித்து அநுபவித்த, இன்பம் – ஐஶ்வர்யஸுகமும், தெரிவு – இந்த இந்த்ரியங்களுக்கு க்ரஹித்து அநுபவிக்க, அரிய – அரிதாய், அளவில்லா – (இவ்வைஶ்வர்யஸுகத்திற் காட்டில் நித்யத்வாதிகளாலே) அபரிச்சிந்நமாய், சிறு இன்பம் – பகவதநுபவத்தைப்பற்ற அத்யல்பமான ஆத்மாநுபவஸுகமும், ஒண் தொடியாள் – விலக்ஷணமான முன்கைச்சரியை உடையளாய், திருமகளும் – ஸர்வஸம்பத்ஸமஷ்டி பூதையாகையாலே திருவென்று சொல்லப்பட்ட நாரீணாமுத்தமையும், நீயுமே – (புருஷோத்தமனான) நீயுமே, நிலா நிற்ப – (அந்த ஸம்பத்தும் ஆத்மஸ்வரூபமும் உபயப்ரகாரமுமாம்படி) ஒருபடிப்பட்டு நிற்கும்படியாக, கண்ட – நிரூபித்துவைத்த, சதிர் – நல்விரகை, கண்டு – அபரோக்ஷித்துக்கண்டு, ஒழிந்தேன் – (கேவலைஶ்வர்யத்தையும் கேவலாத்மாநு பவத்தையும்) ஒழிந்தேன்; உன் திருவடி – (ஸகலபதார்த்தமும் உனக்குள்ளேயாம்படி ஶ்ரிய:பதியாய் பரமபுருஷார்த்த பூதனான) உன்திருவடிகளை, அடைந்தேன் – (அநுபவமுகத்தாலே) ப்ராபித்தேன்.
ஈடு:- பத்தாம்பாட்டு. கீழிற்பாட்டில், ‘விடுத்து’ என்றும், ‘கூட்டினை’ என்றும் ப்ரஸ்துதமான பேற்றை, ப்ரீத்யதிஶயத்தாலே ‘விட்டது இது, பற்றினது இது’ என்று த்யக்தமாக அருளிச்செய்கிறார்.
(கண்டு இத்யாதி) – காட்சிக்குக் கருவியாயிருக்கும் கண், கேட்கைக்குக் கருவியாயிருக்கும் செவி, ஸ்பர்ஸித்தறிக்கைக்குக் கருவியாயிருக்கும் த்வகிந்த்ரியம், க3ந்தகரஹணத்துக்குக் கருவியாயிருக்கும் க்ராணேந்த்ரியம், ரஸநை ரஸாநுபவத்துக்குக் கருவியாயிருக்கும். கண்டு, கேட்டு, உற்று, மோந்து, உண்டு, இப்படி இதுவே யாத்ரையாய்ப் போருகைக்கு ஸாமக்ரியாயிருக்குமிறே சக்ஷுராதி கரணங்கள். (ஐங்கருவிகண்ட இன்பம்) – உழக்காலே அளக்குமாபோலே பரிச்சிந்நவஸ்து க்ராஹகமான இந்த்ரியங்களாலே அநுபவிக்கப்பட்ட ஐஹிகஸுகம். ஆத்மாவுக்கு நித்யதர்மமாய் ஜ்ஞாநம், அதுதான் ஸங்குசிதமாயிருக்கக்கடவது; கர்மநிபந்தநமாக ஸங்குசிதமாய், மநஸ்ஸடியாகப் புறப்பட்டு, பாஹ்யேந்த்ரியத்வாரா விஷயங்களை க்ரஹிக்கக்கடவதாயிறே இருப்பது. (தெரிவரிய வளவில்லாச்சிற்றின்பம்) – இவ்வருகிலநுபவத்தைப் பற்றத் தான் தெரிவரியதாய் – துர்ஜ்ஞேயமாய், அளவிறந்து – அவ்வருகில் பகவதநுபவத்தைப் பற்றத் தான் அளவிலியாய், அணுவான ஆத்மவஸ்துவைப்பற்ற வருகிற போகமாகையாலே ஸ்வரூபத: பரிச்சிந்ந மாயிருக்கிற ஆத்மாநுப4வஸுகம். இவற்றை (ஒழிந்தேன்) – விட்டேன். (சிற்றின்பம்) – அந்தமில் பேரின்பத்துக்கு எதிர்த்தட்டானதிறே. விட்டது இதுவாகில் பற்றிற்று எது? என்னில், (ஒண்தொடியாள் இத்யாதி) – பெரியபிராட்டியாரும் நீயுமாய்ச் சேரவிருக்கிற உங்களிருவருடையவும் அபிமாநத்திலே ஒருவிபூதியாக அடங்கியிருக்கிற இருப்பைக் கண்டேன். தொடியென்பது – முன்கைவளை. அதுக்கு ஒண்மையாவது – இவளைக் கைகழியாதிருக்கை. நித்யாநபாயிநியாகையாலே, முன்பு ஒருகால் கழன்று பின்பு ஸாத்மிக்கவேண்டும்படியிருப்பதில்லையிறே. “சங்குதங்கு முன்கை நங்கை” (திருச்சந்த. 57) என்னக்கடவதிறே. (திருமகளும் நீயுமே) – இப்படியிருக்கிற பிராட்டியும், அவள்தானுங்கூட “இறையும் – அகலகில்லேன்” (6.10.10) என்னும்படியிருக்கிற நீயும். (நீயுமே நிலாநிற்ப) – இருவருடையவும் அபிமாநத்துக்குள்ளே த்ரிபாத்விபூதியாக அடங்கிக்கிடக்கும். “நாநயோர்வித்3யதே பரம்” என்னாநிற்க, வாசல்தோறும் ஈஶ்வரர்களிறே இங்கு. (நிலாநிற்பக் கண்டசதிர்) – உங்களிருவருடையவும் அபி4மாநத்திலே கிடக்குமதுவேயாத்ரையாம்படி நீபார்த்து வைத்த, சதிருண்டு – நேர்பாடு; “வைகுண்டே2” இத்யாதிப்படியே நீ பார்த்துவைத்த வாய்ப்பு, அத்தைக்கண்டு. (உன் திருவடியே – அடைந்தேன்) “அந்நித்யஸுரிகளோடே ஒரு கோவையாய் உன் திருவடிகளிலே அடிமைசெய்யவேணும்” என்று உன் திருவடிகளைக் கிட்டினேன். இது நான் உற்றது, கீழ்ச்சொன்னவை நான் விட்டது. ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே யென்னும் காட்டில் நித்யவிபூ4தியோக3த்தைச் சொல்லிற்றாமோ? என்னில்; “அடியார்கள் குழாங்களை – உடன் கூடுவது என்றுகொலோ?” (2.3.10) என்று இவர் சொல்லுகையாலும், “ப4க்தைர்ப்ப4ாக3வதைஸ்ஸஹ” என்று ப்ரமாணாந்தரங்கள் உண்டாகையாலும். இனித்தான் “நிற்பனவும் திரிவனவும் நீயே மற்றொருபொருளுமின்றி” (4.9.7) என்று வைத்து ‘கொடுவுலகங்காட்டேல்’ என்றவோபாதி, அவர்களிருவருமே என்ற விடத்தில் – அவர்களபிமாநத்திலே அடங்கிக் கிடப்பதொரு விபூதியுண்டாகச் சொல்லத் தட்டில்லையிறே. அதுதான் இதுவானாலோ? என்னில்; அஸாதாரண விக்ரஹத்தோடே, “ப4வாம்ஸ்துஸஹவைதே3ஹ்யா” என்கிறபடியே தானும் பிராட்டியுமாக இருந்து “க்ரியதாம்” என்று சொல்லுகிறபடியே இளைய பெருமாளை அடிமைகொண்டாற் போலே, இவரை அடிமைகொள்ளுவதொரு தேஶவிசேஷத்திலே யாயிருக்குமிறே.
பதினொன்றாம் பாட்டு
திருவடியைநாரணனைக் கேசவனைப்பரஞ்சுடரைத்
திருவடிசேர்வதுகருதிச் செழுங்குருகூர்ச்சடகோபன்
திருவடிமேலுரைத்ததமிழ் ஆயிரத்துளிப்பத்தும்
திருவடியேயடைவிக்கும் திருவடிசேர்ந்தொன்றுமினே.
ஆழ்வார் திருவடிகளே ஶரணம்
ப:- அநந்தரம், இத்திருவாய்மொழி அப்யஸித்தவர்களை அவன் திருவடிகளை அடைவிக்குமென்று ப2லத்தை அருளிச்செய்கிறார்.
திருவடியை – ஸர்வஶேஷியாய், நாரணனை – ஶேஷித்வநிர்வாஹகமான அந்தராத்மத்வத்தையுடையனாய், கேசவனை – ஶேஷபூ4தருடைய விரோதிகளைக்
கேஸிநிரஸநம் பண்ணினாற்போலே போக்குமவனாய், பரஞ்சுடரை – (ஸம்பந்தத்தாலும் வாத்ஸல்யத்தாலும் விரோதிநிரஸநத்தாலும் ஸித்தமான) நிரதிஶயௌஜ் ஜ்வல்யத்தையுடைய க்ருஷ்ணனை உத்தேசித்து, திருவடி – அவன் திருவடிகளை, சேர்வது – பற்றவேணுமென்கிற, கருதி – அபிஸந்தியை யுடையராய்க் கொண்டு, செழும் குருகூர் – நிரதிஶய போக்யமான திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வார், திருவடிமேல் – (*பரனடிமேல்” என்று ப்ராப்யமான) அவன் திருவடிகளின்மேலே, உரைத்த – அருளிச்செய்த, தமிழ் ஆயிரத்துள் – தமிழ் ஆயிரத்துள், இப்பத்தும் – இப்பத்தும், திருவடியே – அந்தத் திருவடிகளைத் தானே, அடைவிக்கும் – ப்ராபிப்பிக்கும்; (இத்திருவாய்மொழியில் அந்வயமுடைய நீங்கள்), திருவடி – அத்திருவடிகளை, சேர்ந்து – ப்ராபித்து, ஒன்றுமின் – (ப்ருதக்ஸ்த்திதியில்லாதபடி) அடிமைசெய்யப் பாருங்கோள். இது நாலடித்தாழிசை; கலிவிருத்தமுமாம்.
வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் திருவடிகளே ஶரணம்
ஈடு:- நிகமத்தில், இத்திருவாய்மொழி அப்யஸித்தாரை இதுதானே அவன் திருவடிகளிலே சேர்க்கும் என்கிறார்.
புறம்புண்டான ருசியைப்போக்கித் தன்பக்கலிலே ருசியைப்பிறப்பித்த உபகாரத்தை அநுஸந்தித்து ஏத்துகிறார்; (திருவடியை) – ஸர்வஸ்வாமியாயுள்ளவனை. (நாரணனை) – கேவலம் ஸ்வாமித்வமேயன்றிக்கே இவை ‘அல்லோம்’ என்றவன்றும் தான் விடமாட்டாதபடி வத்ஸலனாயுள்ளவனை. (கேசவனை) – வத்ஸலனாய்க் கடக்க இருக்கையன்றிக்கே இவற்றோடே ஸஜாதீயனாய் வந்து அவதரித்து அவர்கள் விரோதிகளைப் போக்குமவனை. (பரஞ்சுடரை) – இப்படி அவதரித்து நின்றவிடத்திலே உண்டான மநுஷ்யத்வே பரத்வத்தைச் சொன்னபடி. (திருவடி சேர்வதுகருதி) – அவன் திருவடிகளைக் கிட்டினோமாகவேணுமென்னும் மநோரதத்தை யுடையராய். அடியேபிடித்து மநோரதம் இதுவேயிறே, “துயரறுசுடரடிதொழுதெழு” என்று. (செழுங்குருகூர்ச்சடகோபன்) – அவ்வூரில் பிறப்பாயிற்று இவர்க்கு இந்த ப்ராவண்யத்துக்கு அடி; திருவயோத்யையில் மண்பாடுதானே ராமபக்தியைப் பிறப்பிக்குமாபோலே. (திருவடி மேலுரைத்த இத்யாதி) – அவன் திருவடிகளிலே சொன்ன தமிழாயிரத்திலும் வைத்துக்கொண்டு இந்தப்பத்தும் அவன் திருவடிகளிலே சென்று அடைவிக்கும்; நீங்களும் அதுக்கு உறுப்பாகத் திருவடிகளிலே சென்று கிட்டுங்கோள். அவன் திருவடிகளிலே கிட்டக்கொள்ள, அடிசிற்பானைபோலே, உங்களுக்குமாயிராதே அவன் திருவடிகளில் நித்யகைங்கர்யத்திலே அந்வயிக்கப் பாருங்கோள். “ஸாயுஜ்யம் ப்ரதிபந்நாயே” என்றும், “யேந யேந த4ாதா க3ச்ச2தி தேந தேந ஸஹ க3ச்ச2தி” என்றும் சொல்லுகிறபடியே, இளையபெருமாளைப்போலே பிரியாதே நின்று அவன் நினைவுக்கீடாக அடிமைசெய்யப்பாருங்கோள். இப்படி அடிமை செய்வார்க்கு, இவர் விட்டவையும் விட்டுப் பற்றிற்றும் பற்றவேணுமோ? என்னில், இவர் அருளிச்செய்த இந்தத் திருவாய்மொழியை அநுஸந்திக்கவே, தன்னடையே ஶப்தாதிகளில் விரக்தியையும் பிறப்பித்து அவன் திருவடிகளிலே சேரவிடும் இதுதானே.
நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்
த்ரமிடோபநிஷத் ஸங்கதி – நண்ணாதார்
ஶோசந்முநிஸ்ஸ்வஸத்ருஶம் சஸஹாயமிச்சந்
லோகம்விலோக்யவிபரீதருசிம்விஷண்ண:।
அத்ரத்யவாஸமஸஹந்ஹரிணாஸ்வவாஸம்
வைகுண்டகம்ப்ரகடிதமந்நவமேததர்ஶ।। ||40||
த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்நாவளி —- நண்ணாதார்
காருண்யாதப்திமாதீததுபரி ஶயிதஸ்தத்ஸமாநாங்கவர்ண:
க்யாதௌதார்யஸ்ஸ்வதாநேருசிரமணிருசிர்வேஷதோதீவபோக்ய: । ஆத்மத்வேநாநுபாவ்யோதுரதிகமபதோபந்தமோக்ஷஸ்வதந்த்ர: ஸ்வாந்யப்ரேமோபரோதீஸ்வதத இஹவிபுஸ்தத்பதோத்கண்டிதாய || 4-9
தாபைஸ்ஸம்பந்திது:கைஸ்வவிபவமரணை:தாபக்ருத்போக்யஸங்கை: துர்கத்யாஜ்ஞாதிவ்ருத்தேரநிதரவிதுதேரண்டகாராநிரோதாத் । ப்ரஹ்வீபாவோஜ்ஜிதத்வாத்ப்ரலகுஸுகபரிஷ்வங்கதஶ்சாதிஶோச்யம்
விஶ்வந்த்ரஷ்டும் நஶக்தோநிஜபதநயநேநாததி ஸ்ம ஸ்வநாதம் || 4-10
ஸ்வாநாம் நிர்வாஹகத்வாதஅஹிபதிஶயநாதப்தி
வர்ணஸ்வபாவாதத்யந்தோதாரபாவாத்வலபிதுபலவத்தர்ஶநீயத்வயோகாத் । ஸந்மௌலித்வாத்துலஸ்யாப்ரியகரணமுகைரண்டஸ்ருஷ்டௌ படுத்வாத் ஸுப்ராபத்வாதிபிஸ்தம்பலமதுலமவைத்பேஜுஷாமேஷநாதம் || 4-11
திருவாய்மொழி நூற்றந்தாதி
நண்ணாதுமாலடியைநானிலத்தேவல்வினையால்
எண்ணாராத்துன்பமுறும்இவ்வுயிர்கள்* – தண்ணிமையைக்
கண்டிருக்கமாட்டாமல் கண்கலங்கும்மாறனருள்
உண்டு நமக்குஉற்றதுணையொன்று. 39
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்