ஸ்ரீ:
ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த
திருவாய்மொழி
பரமகாருணிகரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்த
ஆறாயிரப்படி வ்யாக்2யாநம்
பகவத் விஷயம் – இரண்டாம் பத்து
ப்ரவேஶம் 2-1
வாயும்திரையுகளும் – ப்ரவேஶம்
(வாயும்திரை) இப்படி நிரவதி4க ஸௌந்த3யாதி3 கல்யாண கு3ணக3ண பரிபூர்ணனாயிருந்த எம்பெருமானை ப்ரத்யக்ஷித்தாற் போலே தம்முடைய திருவுள்ளத்தாலே அநுப4வித்து, பா3ஹ்ய ஸம்ஶ்லேஷத்திலுள்ள அபேக்ஷையாலே அதிலே ப்ரவ்ருத்தராய், அது கைவாராமையாலே அத்யந்தம் அவஸந்நராய், அந்யாபதே3ஶ த்தாலே ஸ்வத3ஶையைப் பேசுகிறார். ப4க3வத் ஸம்ஶ்லேஷ வியோகை3 ஸுக2து3:க்கை2யாய், தத்3விஶ்லேஷத்தினாலே அத்யந்தம் அவஸந்நையாயிருந்தாளொரு பிராட்டி, ஸ்வத்3ருஷ்டி கோ3சரமான பதா3ர்த்த2ங்களினுடைய ப்ரவ்ருத்தி விஶேஷங்களை ப4க3வத்3 விஶ்லேஷஜநித து3:க்க2 ஹேதுகமாக ஸ்வாத்மாநுஸந்தா4 -நத்தாலே அநுஸந்தி4த்து, அந்தச் சேதநாசேதந பதா3ர்த்த2ங்களைக் குறித்து, ‘நீங்களும் நான் பட்டது பட்டிகளாகாதே!’ என்கிறாள்.
முதல் பாட்டு
*வாயும் திரையுகளும் கானல் மடநாராய்!*
ஆயும் அமருலகும் துஞ்சிலும்நீ துஞ்சாயால்*
நோயும் பயலைமையும் மீதூரஎம்மேபோல்*
நீயும் திருமாலால் நெஞ்சங்கோட் பட்டாயே.
வ்யா:- (வாயும்) வாயும் திரையுகள் உகளுகிற கழியிலே வர்த்திக்கிற மடநாராய் நீ உறங்கிலும் உறங்காத / உன்னுடைய தாய்மாரும், ஸவபா4வத ஏவ உறங்காத தே3வலோகமும் உறங்கிலும் நீ உறங்குகிறலை; ஆதலால், விரஹவ்யஸந வைவர்ண்யத்தாலே அபி4பூ4தையான் என்னைப்போலே நீயும் எம்பெருமானை ஆசைப்பட்டாயாகாதே? என்கிறாள்.
இரண்டாம் பாட்டு
கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே!*
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்*
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்*
தாட்பட்ட தண்துழாய்த் தாமம்காமுற்றாயே.
வ்யா:- (கோட்பட்ட) கூர்வாய் அன்றிலே! அபஹ்ருதமான நெஞ்சையுடையையாய் நீளியவான ராத்ரிகளில் உறங்காதே இரங்காநின்றாய்; நீயும் என்னைப்போலே பெரியபெருமாள் திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்பட்டாயாகாதே? என்கிறாள்.
மூன்றாம் பாட்டு
காமுற்ற கையறவோடு எல்லே! இராப்பகல்*
நீமுற்றக் கண்துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்*
தீமுற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள்நயந்த*
யாமுற்றது உற்றாயோ? வாழி கனைகடலே!
வ்யா:- (காமுற்ற) எம்பெருமானை ஆசைப்பட்டுப் பெறாமையாலே நீ இரவுபகலெல்லாம் கண் துயிலாதே நெஞ்சுருகி ஏங்காநின்றாய்; தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினவன் திருவடிகளை ஆசைப்பட்ட நான் பட்டது பட்டாயாகாதே, ஐயோ கடலே! என்கிறாள். ‘நீ’ ‘உன்னுடைய’ என்பதற்கு பதிலாக, ‘நான்’ என்னுடைய’ என்று பாட2மிருந்தால் ஸ்வரஸம்; மற்ற வியாக்கியானங்களோடும் பொருந்திருக்கும்.
நான்காம் பாட்டு
கடலும் மலையும் விசும்பும் துழாய்எம்போல்*
சுடர்கொள் இராப்பகல் துஞ்சாயால் தண்வாடாய்!*
அடல்கொள் படையாழி அம்மானைக் காண்பான்நீ*
உடலம்நோ யுற்றாயோ ஊழிதோ றூழியே.
வ்யா:- (கடலும்) என்னைப்போலே ‘’எங்குற்றாய் எம்பெருமான்!’’ என்று கடலும் மலையும் விசும்பும் துழாவி இராப்பகல் உறங்குகிறிலை; நீயும் எம்பெருமானுடைய திருவாழியும் கையும் காண ஆசைப்பட்டுப் பெறாமையாலே காலதத்வ மெல்லாம் உடலம் நோயுற்றாயாகாதே தண்வாடாய்! என்கிறாள்.
ஐந்தாம் பாட்டு
ஊழிதோறூழி உலகுக்கு நீர்கொண்டு*
தோழியரும் யாமும்போல் நீராய் நெகிழ்கின்ற*
வாழிய வானமே! நீயும் மதுசூதன்*
பாழிமையில் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே.
வ்யா:- (ஊழிதோறூழி) லோகமெல்லாம் நிறையும்படி (இக்) காலமெல்லாம் நின்று நீராய் உருகுகிற வாழிய வானமே! நீயும் எங்களைப்போலே எம்பெருமானுடைய கு3ணசேஷ்டிதங்களிலே அகப்பட்டு அவன் பக்கலுள்ள ஸங்க3த்தாலே இப்படி நைந்தாயாகாதே? என்கிறாள்.
ஆறாம் பாட்டு
நைவாய எம்மேபோல் நாள்மதியே! நீஇந்நாள்*
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்*
ஐவாய் அரவணைமேல் ஆழிப் பெருமானார்*
மெய்வாச கம்கேட்டுஉன் மெய்ந்நீர்மைதோற்றாயே?
வ்யா:- (நைவாய) நாண்மதியே! நீ இந்நாள் வலிதான இருளை அகற்றுகிறிலை; மழுங்கித்தேயாநின்றாய். நைவும் தானாயிருந்த என்னைப்போலே நீயும், A ‘’பேதை நின்னைப் பிரியேன்’’ என்றும், 1. ‘’एतद् व्रतं मम’’ (ஏதத்3வ்ரதம் மம) என்றும், 2. ‘’मा शुच:’’ (மா ஶுச:) என்றும் எம்பெருமான் அருளிச்செய்த வார்த்தையைக்கேட்டு, ‘’திருவனந்தாழ்வான் தொடக்கமாக்வுள்ள தி3வ்யபுருஷர்களோடே பழகி வர்த்திக்கிற இவன் மெய்யல்லது சொல்லான்’’ என்று கொண்டு அவ்வார்த்தையை விஶ்வஸித்து அகப்பட்டாயாகாதே? என்கிறாள்.
ஏழாம் பாட்டு
தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு* எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீநடுவே*
வேற்றோர் வகையில் கொடிதாய் எனையூழி*
மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனையிருளே!
வ்யா:- (தோற்றோம்) எம்பெருமானுடைய ஆஶ்ரித ஸுலப4த் வாதி3கு3ணங்ககளாலே அவனுக்குத்தோற்று அடிமையானோம்; ஆதலால், ‘’அவனைப் பிரிந்த வ்யஸநத்தை ஒன்றும் பொறுக்க மாட்டுகிறிலோம்’’ என்று சொல்லிக்கொண்டு அழுகிற எங்களை, நீ நடுவே ஶத்ருக்களிலும் கொடியையாய்நின்று எத்தனைகாலம் பா3தி4க்கக்கடவை, கனையிருளே? என்கிறாள்.
எட்டாம் பாட்டு
இருளின் திணிவண்ணம் மாநீர்க் கழியே! போய்*
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும்நீ துஞ்சாயால்*
உருளும் சகடம் உதைத்த பெருமானார்*
அருளின் பெருநசையால் ஆழாந்து நொந்தாயே?
வ்யா:- (இருளின்) இருளின் திணிவண்ண மாநீர்க்கழியே! போய் அறிவழிந்து இராப்பகல் முடியிலும் நீ உறங்குகிறிலை; நீயும் என்னைப்போலே உருளும் சடகம் உதைத்த பெருமானாரோடே ஸம்ஶ்லேஷிக்கையில் உள்ள அபி4நிவேஶத்தாலே ஆழாந்து நொந்தாயாகாதே? என்கிறாள்.
ஒன்பதாம் பாட்டு
நொந்தாராக் காதல்நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த*
நந்தா விளக்கமே! நீயும் அளியத்தாய்*
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவா யெம்பெருமான்*
அந்தாமத் தண்துழாய் ஆசையால் வேவாயே?
வ்யா:- (நொந்தாரா) நந்தாவிளக்கே! இப்பாடுபடுகைக்கு ஈடன்றியேயிருந்த நீயும், என்னைப்போலே கலதத்வமெல்லாம் அநுப4வித்தாலும் ஆராத காதல் நோயானது உன்னுடைய மெல்லாவியை உள்ளுலர்த்த, செந்தாமரைத் தடங்கண் செங்கனி -வாய் எம்பெருமான் அந்தாமத் தண்டுழாயினுள்ளே ஆசையாகிற மஹாக்3நியாலே வேவா நின்றாயாகாதே? என்கிறாள்.
பத்தாம் பாட்டு
வேவாரா வேட்கைநோய் மெல்லாவி யுள்ளுலர்த்த*
ஓவாது இராப்பகல் உன்பாலே வீழ்த்தொழிந்தாய்*
மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்ணளந்த*
மூவா முதல்வா! இனிஎம்மைச் சோரேலே.
வ்யா:- (வேவாரா) அதா3ஹ்யமான என்னுடைய மெல்லாவி முடிந்தாலும், தவிராதே நின்று வேட்கை நோயானது த3ஹிக்கும்படி உன்னுடைய கு3ணசேஷ்டிதங்களாலே என்னை ஓவாதே இராப்பகல் உன்பட்டலிலே விழுந்து கிடக்கும்படி பண்ணினாய்; இனி அடியேனைச் சோராவிடாதொழியவேணும் என்கிறார்.
பதினொன்றாம் பாட்டு
*சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே*
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்*
ஓரா யிரம்சொன்ன அவற்றுள் இவைபத்தும்*
சோரார் விடார்கண்டீர் வைகுந்தம் திண்ணனவே.
வ்யா:- (சோராத) இப்படி எம்பெருமானைப் பிரிந்த வஸநத்தாலே முடியப்புகுகிற தம்மை உஜ்ஜீவிப்பிக்கைக்காக வந்து தோற்றியருளின எம்பெருமானைக் கண்டு தாமும் உஜ்ஜீவித்து, ஸ்வோஜ்ஜீவநத்தாலே எம்பெருமான் ஸர்வேஶ்வரத்வம் அவிகலமான படியைக்கண்டு ப்ரீதராய், ‘’அடியேன் இவனுடைய ஸர்வேஶ் -வரத்வம் அவிகலமாகப் பெற்றேனாகாதே!’’ என்று உகந்துகொண்டு எம்பெருமானுடைய ஸர்வேஶ்வரத்வத்தை அநுப4வித்து, ‘இப்படி ஸர்வேஶ்வரனாயிருந்த எம்பெருமான் பக்கலுள்ள நிரவதி4கமான ஆசையாலே சொன்ன இத்திருவாய்மொழியை விடாதார் ஒரு நாளும் எம்பெருமானைப் பிரியார்; இது நிஶ்சிதம்’ என்கிறார்.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 2-2
திண்ணன்வீடு – ப்ரவேஶம்
(திண்ணன்வீடு) இப்படி ப்ரஸ்துதமான ஸர்வேஶ்வரத்வத்தை, தம்முடைய ப்ரீத்யதிஶயத்தாலே ஸஹேதுகமாக உபபாதி3க்கிறார்.
முதல் பாட்டு
திண்ணன் வீடு முதல் முழுதுமாய்*
எண்ணின் மீதியன் எம்பெரு மான்*
மண்ணும் விண்ணுமெல்லாம் உட னுண்ட*நம்
கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே.
வ்யா:- மோக்ஷாத்3யஶேஷபுருஷார்த்த2ப்ரத3நாய், வாங்மநஸாபரிச்சே2த்3ய கல்யாணகு3ணங்களையுடையனாய், எனக்கு ஸ்வாமியாய், ஸர்வாத்ம ஸம்ரக்ஷகனாயிருந்த A வண்துவரைப் பெருமாளே இஜ்ஜக3த்தில் ஈஶ்வரன்; மற்று ஈஶ்வரன் இல்லை; இதில் ஒரு ஸம்ஶயம் இல்லை என்கிறார்.
இரண்டாம் பாட்டு
ஏ! பா வம்பரமே ஏழுலகும்*
ஈபா வஞ்செய்து அருளால் அளிப்பாரார்*
மாபா வம்விட அரற்குப் பிச்சைபெய்*
கோபாலகோளரி ஏறன்றியே.
வ்யா:- (ஏ பா வம்) இஜ்ஜக3த்துக்கு வேறு ரக்ஷகனில்லை -யோ? என்னில்; 1. ‘’नहि पालनसामर्थ्यमृते सर्वेश्वरं हरिम्’’ (நஹி பாலநஸாம்ர்த்2 யம்ருதே ஸர்வேஶ்வரம் ஹரிம்) என்றுகொண்டு, ருத்3ரனுடைய மஹாபாபத்தைப்போக்கி அவனை ரக்ஷித்தருளின பரமகாருணிக -னாயிருந்த கோபாலகோளரியேறன்றி, இந்த ஸர்வலோகங்களினு -டைய பாபத்தைப்போக்கி ரக்ஷிப்பார் உளரோ? ரக்ஷிக்கவல்லார் தான் உளரோ? இது உபபாதி3க்கவேணுமோ? என்கிறார்.
மூன்றாம் பாட்டு
ஏறனைப் பூவனைப் பூமகள் தன்னை*
வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து*
மேல்தன்னை மீதிட நிமிர்ந்துமண் கொண்ட*
மால்தனில் மிக்கும்ஓர் தேவும் உளதே?
வ்யா:- (ஏறனை) அயர்வறும் அமரர்கள், தன்னுடைய ஸௌஶீல்ய கு3ணத்தைக்கண்டு தொழுகைக்காக, ஸர்வேஶ்வரி யான பெரிய பிராட்டியாரோடு ஒக்க, அத்யந்தம் அபக்ருஷ்டரான ப்3ரஹ்மருத்3ராதி3களுக்கும் தன்னை ஆஶ்ரயமாகக் கொடுத்துக் கொண்டிருக்கையாலும், ஸர்வலோகங்களுட் திருவடிகளினுள்ளே அடங்கும்படி அளந்த்ருளுகையாலும் இவனே ஸர்வேஶ்வரன் ; மற்றில்லை என்கிறார்.
நான்காம் பாட்டு
தேவும் எப்பொருளும்படைக்கப்*
பூவில் நான்முக னைப்ப டைத்த*
தேவன் எம்பெரு மானுக் கல்லால்*
பூவும் பூச னையும் தகுமே.
வ்யா:- (தேவும்) சதுர்முகா2தி3 ஸகலபதா3ர்த்த2 ஸ்ருஷ்டி லீலனாய், தன்னுடைய ஸொந்த3ர்ய கு3ணத்தாலே எனக்கு ஸ்வாமியாயிருந்த எம்பெருமானல்லது ஸர்வேஶ்வரனும் அழகியாரும் உள்ரோ? என்கிறார்.
ஐந்தாம் பாட்டு
தகும்சீர்த் தன்தனி முதலி னுள்ளே*
மிகுந்தே வும் எப்பொருளும் படைக்க*
தகும்கோலத் தாமரைக் கண்ண னெம்மான்*
மிகுஞ்சோ திமே லறிவார் யவரே.
வ்யா:- (தகும் சீர்) தன்னுடைய தி3வ்யாத்ம ஸ்வரூபத்துக்கு உசிதமான கல்யாணகு3ணங்களையுடையனாய், ஸ்வஸங்கல்ப கல்பித திகி2லஜக3த்தையுடையனாய், தன்னுடைய ஸர்வேஶ்வரத் -வோசிதமான அழகிய திருக்கண்களையுடையனாயிருந்த எம்பெருமானுடைய திருமேனியின் அழகு ஒருவர்க்கு நினைக்க ந்லமோ? என்கிறார்.
ஆறாம் பாட்டு
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்*
கவர்வின்றித் தன்னு ளொடுங்க நின்ற*
பவர்கொள் ஞானவெள் ளச்சுடர் மூர்த்தி*
அவர்எம் மாழியம் பள்ளி யாரே.
வ்யா:- (யவரும்) அஸம்பா3த4மாகத் தன்னுள்ளே வைக்கப்பட்ட ஸர்வ ஜக3த்தையுமுடையனாய், ஸ்வாபா4விக ஸார்வஜ்ஞத்தையுடையனாய், க்ஷீரார்ணவ நிகேதநனான வண்துவரைப் பெருமாளே ஸர்வேஶ்வரன் என்கிறார்.
ஏழாம் பாட்டு
பள்ளி ஆலிலை ஏழுல கும்கொள்ளும்*
வள்ளல் வல்வ யிற்றுப் பெருமான் *
உள்ளு ளார்அறி வார்அ வன்தன்*
கள்ள மாய மனக்க ருத்தே.
வ்யா:- (பள்ளி ஆலிலை) ஸர்வலோகாவகாஶ ப்ரத3த்வ பரமௌதா3ர்யத்தையுடைத்தாய், ஸர்வலோக ப4ரண ஸமர்த்த2மா யிருந்த தன் வயிற்றிலே ஸர்வளொகத்தையும் வைத்துக்கொண்டு, ஆலிலையிலே கண்வளர்ந்தருளுகிற இவனுடைய ஸர்வேஶ்வரத்வ சிஹ்நபூ4த தி3வ்யசேஷ்டிதங்களுக்கு ஒரு முடிவுண்டோ? என்கிறார்.
எட்டாம் பாட்டு
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்*
வருத்தித்த மாயப் பிரானையன்றி* ஆரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும்* தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வி னரே.
வ்யா:- (கருத்தில்) ஸ்ருஷ்டி ரக்ஷணங்கள் பி4ந்நகர்த்ருக மல்லவோ, இவற்றைப் பரமபுருஷைக கர்த்ருகமாகச் சொல்லுவா ருண்டோ? என்னில்; பெற்ற மாதாவே புத்ர ரக்ஷணம் பண்ணுகிறாப்போலே ஸ்ருஷ்டித்தவனே ரக்ஷிக்க ப்ராப்தம். ஆதலால் ரக்ஷிக்கிறான் பரமபுருஷனே, ஸ்ருஷ்டி ரக்ஷணங்களிரண்டும் பரமபுருஷைக கரித்ருகம் என்கிறார்.
ஒன்பதாம் பாட்டு
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்*
சேர்க்கை செய்துதன் னுந்தி யுள்ளே*
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்*
ஆக்கி னான்தெய்வ வுலகு களே.
வ்யா:- (காக்கும்) கேவலம் ஸ்ருஷ்டி மாத்ரமேயன்று பரமபுருஷ கர்த்ருகம்; ப்3ரஹ்மாதி3 ஸ்தம்ப3 பர்யந்த ஸர்வஜக3த் ஸ்ருஷ்டி ஸ்தி2தி ஸம்ஹாரங்கள் மூன்றும் பரமபுருஷகர்த்ருகம்; ஆதலால் அவனே ஸர்வேஶ்வரன் என்கிறார்.
பத்தாம் பாட்டு
கள்வா! எம்மையும் ஏழுலகும்*நின்
னுள்ளே தோற்றிய இறைவ! என்று*
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்*
புள்ளூர் திகழல் பணிந்தேத் துவரே.
வ்யா:- (கள்வா) இப்படி சதுர்முக2 பஶுபதி ஶதமக2 ப்ரப்4ருதி தே3வர்களுக்கும் எம்பெருமானே காரணபூ4தனுமாய் ஈஶ்வரனுமாயிருக்கும் என்னுமிடத்தில் ப்ரமாணம் என்னென்னில்; அவர்கள் தங்களுடைய வாக்யமே ப்ரமாணம் என்கிறார்.
பதினொன்றாம் பாட்டு
*ஏத்த ஏழுல குங்கொண்ட கோலக்
கூத்தனை* குரு கூர்ச்சட கோபன்சொல்*
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்*
ஏத்த வல்லவர்க்கு இல்லையோர் ஊனமே.
வ்யா:- (ஏத்த ஏழுலகும்) ஸர்வலோகங்களும் தன்னுடைய விஜயத்தைச் சொல்லிக்கொண்டு நின்று ஏத்த ஏழுலகுங்கொண்ட -ருளின இது தொடக்கமாகவுள்ள தி3வ்ய சேஷ்டித்ங்களாலே எம்பெருமானுடைய ஸர்வேஶ்வரத்வத்தை ப்ரதிபாதி3க்கிற இந்தத் திருவாய்மொழியை எந்த பாவனையோடேகூட ஏத்தவல்லார்க்கு இனி ஒரு நாளும் எம்பெருமானோடு விஶ்லேஷமில்லை என்கிறார்.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 2-3
ஊனில்வாழ் – ப்ரவேஶம்
(ஊனில் வாழுயிர்) இப்படி ஸ்வோஜ்ஜீவநார்த்த2மாக வந்து தோற்றியருளினவன் த்ம்மோடே கலந்தருளினபடியைச் சொல்லுகிறார்.
முதல் பாட்டு
*ஊனில்வா ழுயிரே! நல்லைபோ உன்னைப்பெற்று*
வானுளார் பெருமான் மதுசூதன் என்னம்மான்*
தானும்யா னுமெல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்*
தேனும்பா லும்நெய்யும் கன்னலும் அமுதுமொத்தே.
வ்யா:- ‘’ஆஶ்ரித ஸம்ஶ்லேஷைக போ4கனாய், ஆஶ்ரித விரோதி4 நிரஸந ஸ்வபா4வனாய், எனக்கு ஸ்வாமியாயிருந்த எம்பெருமான்தானும் யானும் எல்லாப் படியாலும் இந்தக் கலவியினுள்ளே எல்லா ரஸங்களுமுண்டாம்படி கலந்தொழிந்தோம்; திருநாட்டிலே சென்றால் ரஸிக்கக்கடவ ப4க3வதே3க போ4க3த்வத்தை, இந்த ப்ரக்ருதியிலே இருந்துவைத்தே பெற்று வாழுகிற நெஞ்சே! உன்னைப்பெற்றே இந்த ஸம்ருத்3தி4யெல்லாம் விளைந்தது; நல்லை நல்லை!’’ என்று நெஞ்சைக் கொண்டாடுகிறார்.
இரண்டாம் பாட்டு
ஒத்தார்மிக் காரை இலையாய மாமாயா!*
ஒத்தாய்எப் பொருட்கும் உயிராய்* என்னைப்பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து*
அத்தா!நீ செய்தன அடியேன் அறியேனே.
அவ:- (ஒத்தார்) இப்படி நெஞ்சைக் கொண்டாடி, எம்பெருமான் தமக்குச் செய்தருளின ஸம்ருத்3தி4யை அவன்தனக்குச் சொல்லிக்கொண்டு அநுப4விக்கிறார்.
வ்யா:- நிரஸ்தஸ்மாப்4யதி4கனாய் ஆஶ்சர்ய பூ4தனாயிருந்து -வைத்து, ஆஶ்ரிதஜனங்கள் எல்லாரோடும் ஸஜாதீயனாய் வந்து பிறந்தருளி, அவர்களுக்கு அத்யந்த ஸுலப4னாயிருந்து, எனக்கு அவ்வளவன்றியே, ஒருவன் தான் தனக்குச் செய்யும் நன்மையும், மாதா புத்ரனுக்குச் செய்யும் நன்மையும், பிதா புத்ரனுக்குச் செய்யும் நன்மையும், ஆசார்யன் சிஷ்யனுக்குச் செய்யும் நன்மையும் செய்தருளில்னாய்; இன்னம் அடியேன் திறத்து நீ செய்தருளினவற்றுக்கு ஒரு முடிவு காண்கிறிலேன் என்கிறார்.
மூன்றாம் பாட்டு
அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து*
அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்*
அறியா மைக்குறளாய் நிலம்மாவலி! மூவடியென்று*
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி யுள்கலந்தே.
வ்யா:-(அறியா) தம் திறத்தில் எம்பெருமான் செய்தருளின நன்மைகளைப் பேசுகிறார்.
நான்காம் பாட்டு
எனதாவியுள் கலந்தபெரு நல்லுதவிக் கைம்மாறு*
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வ தென்பதுண்டே*
எனதாவி யாவியும்நீ பொழிலேழு முண்டஎந்தாய்*
எனதாவி யார்?யான்ஆர்? தந்தநீகொண் டாக்கினையே.
வ்யா:-(எனதாவி) இப்படி எம்பெருமானோடு கலந்த கலவியால் உள்ள நிரவதி4க ப்ரீதியாலே அறிவழிந்து, ‘’இவ்வாத்மா தம்முடையதன்று’’ என்று நிரூபிக்க மாட்டராய், அவன் தம்மோடு கலந்த இப்பெருநல்லுதவிக்குக் கைம்மாறாக தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளா அடிமையகக் கொடுத்து, பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து, ‘’தருகிற நான் ஆர்? தரப்புகுகிற இவ்வாத்மா ஆர்? பண்டே உனக்கு ஶேஷமா யிருக்கிற இவ்வாத்மாவை நீ கொண்டருளினாயத்தனையிறே’’ என்கிறார்.
ஐந்தாம் பாட்டு
இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாதஎந்தாய்*
கனிவார் வீட்டின்பமே! என்கடல் படாஅமுதே!*
தனியேன் வாழ்முதலே! பொழிலேழும் ஏனமொன்றாய்*
நுனியார் கோட்டில்வைத்தாய் உனபாதம் சேர்ந்தேனே.
வ்யா:-(இனியார்) அநாஶ்ரிதர் எத்தனையேனும் உத்க்ருஷ்ட -ரேயாகிலும் அவர்களுடைய ஜ்ஞாநங்களுக்கு அகோ3சரனாய், அநந்யப4க்திகளாயிருப்பார்க்குப் பரம ஸுலப4னாய், தாத்3ருஶ ப்4க்தி ஹீநனாயிருக்கச்செய்தே எனக்கு அயத்நஸித்3த4 போ4க்3ய -னாய், ஸமுத்3ரத்திலே அழுந்திக்கிடக்கிற ஆத்மவர்க்க3த்தை நிர்ஹேதுகமாக எடுத்து உஜ்ஜீவிப்பித்தாற்போலே, உன்னுடைய க்ருபையாலே, அனந்யக3தியாயிருந்த என்னுடைய உஜ்ஜீவந ஹேதுபூ4தனானவனே! உன் திருவடிகளை இனி ஒரு நாளும் பிரியாதொருபடி சேர்ந்தேனே என்கிறார்.
ஆறாம் பாட்டு
சேர்ந்தார் தீவினைகட்கு அருநஞ்சைத் திண்மதியைத்*
தீர்ந்தார் தம்மனத்துப் பிரியா தவருயிரைச்*
சோர்ந்தே போகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்கு
ஈர்ந்தாயை* அடியேன் அடைந்தேன் முதல்முன்னமே.
வ்யா:-(சேர்ந்தார்) ‘’போனகலமும் ஸம்ஶ்லேஷித்தோம்’’ என்று தமக்குத் தோற்றும்படி எம்பெருமானோடே தாம் ஸம்ஶ்லேஷிக்கையாலே – ‘’ஆஶ்ரிதருடைய ஸ்வவிஷய தி3வ்ய ஜ்ஞாந விரோதி4பாபங்களுக்கு நஞ்சாய், அவர்களுக்கு ஸ்வவிஷய த்3ருட4ஜ்ஞாநப்ரத3னாய், இப்படி தன்னுடைய ப்ரஸாத3த்தாலே லப்3த4ஜ்ஞாநராகையாலே ஸம்யக்3 வ்யவஸிதராயிருந்தவர்களை ஸம்ஸாரத்தில் புகவிடாதே அவர்களோடு பிரியாதே ஸம்ஶ்லேஷி -க்கும் ஸ்வபா4வனுகாய், ஆஶ்ரித விரோதி4 நிரஸந ஸ்வபா4வனுமா -யிருந்த உன்னோடு இன்றோ அடியேன் ஸம்ஶ்லேஷிக்கப்பெற்றது. இவ்வாத்மாவுள்ளவவ்றே பெற்றேன்னறோ?’’ என்கிறார்.
ஏழாம் பாட்டு
முன்நல் யாழ்பயில்நூல் நரம்பின் முதிர்சுவையே!*
பன்ன லார்பயிலும் பரனே! பவித்திரனே!*
கன்னலே! அமுதே! கார்முகிலே! என்கண்ணா!* நின்னலால் இலேன்காண் என்னைநீ குறிக்கொள்ளே.
வ்யா:-(முன்நல்) ஸர்வகரணங்களுக்கும் நிரவதி4க போ4க்3யபூ4தனாய், உன் திருவடிகளுக்கு நல்லராயிருப்பார் எல்லாருக்கும் உன்னைக்கொடுக்கும் ஸ்வபா4வனாய், அவர்க -ளுடைய த்வத3நுப4வ விரோதி4 ஸர்வதோ3ஷ நிரஸநஸ்வபா4வனா யிருந்த உன்னை எனக்கு நிர்ஹேதுகமாகத் தந்தருளினாய்; நீயல்லது எனக்கு ஒரு தா4ரகமில்லை; இனி என்னைக் கைவிடாதே கிடாய்! என்று கொண்டு, ‘’எம்பெருமானோடு தமக்கு வ்ருத்தமான ஸம்ஶ்லேஷத்துக்கு ப4ங்க3ம் வருகிறதோ?’’ என்னும் அதிஶங்கை யாலே எம்பெருமானை அபேக்ஷிக்கிறார்.
எட்டாம் பாட்டு
குறிக்கொள் ஞானங்களால் எனையூழி செய்தவமும்*
கிறிக்கொண்டு இப்பிறப்பே சிலநாளில் எய்தினன்யான்*
உறிக்கொண்ட வெண்ணெய்பால் ஒளித்துண்ணும் அம்மான்பின்*
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர்கடிந்தே.
வ்யா:-(குறிக்கொள்) தாம் இப்படி எம்பெருமானை அபேக்ஷிக்க, அவனும், ‘’நாம் விஶ்லேஷிக்க ப்ரஸ்ங்க3மென்?’’ என்று அருளிச்செய்ய, தாமும் நிவ்ருத்தாதிஶங்கராய்க்கொண்டு, ‘’அதிது3ஷ்கரமாய், அநேககால ஸாத்4யமான ஸம்ஸாரநிவ்ருத்தி பூரவக ப4க3வத3நுப4வத்தை இஜ்ஜந்மத்திலே அல்பகலத்திலே அயத்நேந நான் பெற்றேன்’’ என்று தாம் பெற்ற ஸம்ருத்3தி4யைச் சொல்லி அநுப4விக்கிறார்.
ஒன்பதாம் பாட்டு
கடிவார் தண்ணந்துழாய்க் கண்ணன்விண் ணவர்பெருமான்*
படிவா னமிறந்த பரமன் பவித்திரன்சீர்*
செடியார் நோய்கள்கெடப் படிந்து குடைந்தாடி*
அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே.
வ்யா:-(கடிவார்) நிரவதி4கபோ4க்3யபூ4தனாய், A அயர்வறும் அமரர்களதிபதியாய், திருநாட்டிலுங்கூடத் தன்னோடு ஒத்தாரையும் மிக்காரையும் உடையவனல்லாமையாலே பரமனாய், ஸ்வாஶ்ரிதருடைய ஸ்வஸம்ஶ்லேஷ விரோதி4 ஸர்வதோ3ஷங் -களையும் போக்கும் ஸ்வபா4வனாயிருந்த எம்பெருமானுடைய கல்யாணகு3ணங்களாகிற அம்ருதவெள்ளத்திலே என்னுடைய விடாயெல்லாம் கெடும்படி போய்ப்புக்குப்படிந்து குடைந்தாடி வாய்மடுத்துப் பருகிக் களித்தேன் அடியேன் என்கிறார்.
பத்தாம் பாட்டு
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப்பிணி மூப்பிறப்பற்று*
ஒளிக்கொண்ட சோதியமாய் உடன்கூடுவது என்றுகொலோ*
துளிக்கின்ற வானிந்நிலம் சுடராழி சங்கேந்தி*
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே.
வ்யா:-(களிப்பும்) இப்படி எம்பெருமானுடைய கு3ணங்களாகிற அம்ருதத்தை பு4ஜிக்கிற ஆழ்வார் ‘’இந்த அம்ருதத்தை நிரஸ்த ஸமஸ்தப்ரதிப3ந்த4கனாய்க் கொண்டு ப4க3வத்3கு3ணைக போ4க3ரான நித்யஸித்3த4 புருஷர்களுடைய தி3வ்ய பரிஷத்திலே சென்று அவர்களோடே கூட நான் பு4ஜிப்பது என்றோ? ‘’ என்கிறார்.
பதினொன்றாம் பாட்டு
குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனை*
குழாங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த*
குழாங்கொ ளாயிரத்துள் இவைபத்தும் உடன்பாடி*
குழாங்களாய் அடியீருடன் கூடிநின் றாடுமினே.
வ்யா:-(குழாங்கொள்) ஸபுத்ரஜனபா3ந்த4வமாக ராவணன் மடியும்படி சிவந்தவனை உள்ளபடி கண்டு சொன்ன இத்திருவாய் மொழியை ப4க3வதே3கபோ4க3ராயிருப்பார் எல்லாருங்கூடி பு4ஜியுங்கோள் என்கிறார்.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 2-4
ஆடியாடி – ப்ரவேஶம்
(ஆடியாடி) இப்படி நித்யபுருஷர்க்ளோடேகூட எம்பெருமானை அநுப4விக்க ஆசைப்பட்ட ஆழ்வார், அப்போதே அப்படி அநுப4விக்கப் பெறாமையாலே வந்த நிரதிஶயாவஸாத3த்தாலே ஒரு க்ஷணமாத்ரம் ஆத்மதா4ரணம் பண்ணவொண்ணாத த3யநீய த3ஶாபந்நராய், அந்த த3ஶாநுகு3ணமாக எம்பெருமானைக் குறித்துத்தாம் சொல்லுகிற வார்த்தைகளையும் செய்கிற சேஷ்டிதங்களையும் கண்டு தம்மோடு ஸமாந ஶோகரான தம்முடைய ப3ந்து4க்கள் எம்பெருமானை நோக்கித் தம்முடைய த3ஶையை விண்ணப்பஞ்செய்து சொல்லுகிறபடியை அநுஸந்தி4த்து; இப்பொருளை-எம்பெருமானை ஆசைப்பட்டு அத்யந்தம் அவஸந்னையாயிருந்தாளொரு பிராட்டியுடைய திருத் தாயார் அவளுடைய த3ஶையை விண்ணப்பஞ்செய்துகொண்டு, ‘’இவள் முடிவதற்கு முன்பே ஈண்டென வந்து விஷயீகரித்தருள வேணும்’’ என்று கொண்டு எம்பெருமானை அபேக்ஷிக்கிற வாக்யாப்தே3ஶத்தாலே அருளிச்செய்கிறார்.
முதல் பாட்டு
ஆடியாடி அகம்க ரைந்து*இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி*எங்கும்
நாடிநாடி நரசிங்கா என்று*
வாடி வாடும் இவ் வாணுதலே.
வ்யா:- எம்பெருமானைப் பிரிந்த வ்யஸநத்திலே தன்னைக் கொண்டு த4ரிக்க மாட்டாமையாலே, தன்னுடைய ஆஶ்வாஸார்த்த2 – மாக அவனுடைய கு3ணசேஷ்டிதங்களைப் பாடியாடின விடத்திலும், அது தனக்கு ஆஶ்வாஸகரமாகாதே அவஸாத3கரமே யாக ‘’இனி அவனைக் கண்டாலல்லது த4ரிக்கமுடியாது’’ என்று பார்த்து, அவனை எங்கும் தேடி, ‘’ஆஶ்ரிதருடைய து3ர்த3ஶைகளில் ஸஹஸைவ தோன்றிக்கொண்டுநிற்கும் ஸ்வபா4வனானவனே!’’ என்று அழைத்து, ‘’பின்னையும் கண்டாலும் தேறாததொருபடி அற வாடிப்போய் அற வாடினாள் இவ்வாணுதல்’’ என்று திருத்தாயார் ப்ரலாபிக்கிறாள்.
இரண்டாம் பாட்டு
வாணுதல்இம் மடவரல்* உம்மைக்
காணும்ஆசையுள் நைகின்றாள்*விறல்
வாணன்ஆயிரம் தோள்துணித்தீர்*உம்மைக்
காணநீர் இரக்க மிலீரே.
வ்யா:- (வாணுதல்) ‘’உம்மைக் காணவேணும்’’ என்னும் ஆசையாலே இவள் நையாநின்றாள்; உம்மைக்காணும்படி இவள் பக்கல் க்ருபை ப்ண்ணுகிறிலீர்; ப்ரதிகூலர் திறத்திலன்றோ இப்படி நைர்க்4ருண்யம் பண்ணுவது; உம்மை ஆசைப்பட்டார் திறத்திலும் இப்படி நைர்க்4ருண்யம் பண்ணலாமோ? என்கிறாள்.
மூன்றாம் பாட்டு
இரக்க மனத்தோடு எரியணை*
அரக்கும் மெழுகும் ஒக்கும்இவள்*
இரக்க மெழீர்இதற்கு என்செய்கேன்*
அரக்க னிலங்கைசெற் றீருக்கே.
வ்யா:- (இரக்கமனத்தோடு) அவஸந்நமான மநஸ்ஸை யுடையளாய், எரியணை அரக்கும் மெழுகும்போலே விரஹாக்3நி யாலே த3ஹ்யமாநையான இவள் பக்கல் க்ருபையுங்கூடப் பண்ணுகிறிலீர்; இதற்கு என்செய்கேன்? கெட்டேன்! ஓ! கொடுமையே இது! என்கிறாள்.
நான்காம் பாட்டு
இலங்கைசெற் றவனே என்னும்*பின்னும்
வலங்கொள் புள்ளுயர்த்தாய்! என்னும்*உள்ளம்
மலங்கவெவ் வுயிர்க்கும்* கண்ணீர்மிகக்
கலங்கிக் கைதொழும் நின்றுஇவளே.
வ்யா:- (இலங்கை) இப்படி நான் அவனுடைய கொடுமையை நினைந்து ‘’இலங்கை செற்றீர்!’’ என்று சொல்லுமளவில், தான் அத்தைக் கேட்டு அவனுடைய ப்ரணயித்வத்தையே நினைத்து, ‘இலங்கை செற்றவனே’ என்னும்; என்றால் அப்போதே வரக்காணாமையாலே உள்ளம் மலங்கவெவ்வுயிர்க்கும்; கண்ணீர் மிகக் கலங்கி இவள் நின்று கைதொழாநிற்கும் என்கிறாள்.
ஐந்தாம் பாட்டு
இவள்இராப் பகல்வாய் வெரீஇ*தன
குவளையொண் கண்ணநீர் கொண்டாள்*வண்டு
திவளும்தண் ணந்துழாய் கொடீர்*என
தவள வண்ணர் தகவுகளே.
வ்யா:- (இவள்) ‘’இலங்கை செற்றவனே’’ என்றும், ‘’வலங் கொள் புள்ளுயர்த்தாய்’’ என்றும் இப்படி இராப்பகல் வாய்வெருவி, தன குவளையொண் கண்ணநீர் கொண்டான்; இப்படி த3யநீய த3ஶை வரச்செய்தேயும் வண்டுதிவளும் தண்ணந்துழாய் கொடுக் -கிறிலீர்; பரமகாருணிகரான உம்முடைய காருண்யமிருக்கும்படி இதுவோ? என்கிறாள்.
ஆறாம் பாட்டு
தகவுடை யவனே என்னும்*பின்னும்
மிகவிரும் பும்பிரான்! என்னும்*எனது
அகவுயிர்க்கு அமுதே! என்னும்*உள்ளம்
உகஉருகிநின் றுள்ளுளே.
வ்யா:- (தகவு) இப்படி இவளுடைய ப்ரஸங்க3த்தாலே அவனுடைய க்ருபையை நினைத்து, பரமகாருணிகனே! என்று கூப்பிடும்; ‘இப்படி க்ருபையையுடையவன் நம்மைக் கைவிடான்’ என்று பார்த்துப் பின்னையும் மிகவும் ஆசைப்படும்; ஆசைப்பட்ட அப்போதே பெறாமையாலே வந்த அவஸாத3த்தாலே நெஞ்சு உருகும்படி உருகிநின்று, கேட்கச் சொல்ல க்ஷமையல்லாமையாலே போய்த் தன்னுள்ளுளே பிரானே! என்றும், என்னுடைய போ4க்3ய மென்றும் சொல்லாநிற்கும் என்கிறாள்.
ஏழாம் பாட்டு
உள்ளு ளாவி உலர்ந்துலர்ந்து*என
வள்ளலே! கண்ணனே! என்னும்*பின்னும்
வெள்ளநீர்க் கிடந்தாய்! என்னும்*என
கள்விதான் பட்ட வஞ்சனையே!
வ்யா:- (உள்ளுளாவி) எம்பெருமானைப் பிரிகையாலே பரிதப்தையாய், அந்தப் பரிதாபத்தைப் பொறுக்கமாட்டாமை -யாலே, விடாய்பட்டார் ‘’தண்ணீர் தண்ணீர்’’ என்னுமாபோலே ‘என் வள்ளலே! என் கண்ணனே!’ என்னும்; பின்னும் ‘வெள்ளநீர்க் கிடந்தாய்’ என்னும்; எம்பெருமானையுங்கூட வஶீகரிக்கும் அழகுடையளான இவள் அவனுடைய கு3ணங்களிலே இங்ஙனே அகப்பட்டாள் என்கிறாள்.
எட்டாம் பாட்டு
வஞ்சனே! என்னும் கைதொழும்*தன
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும்*விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர்* உம்மைத்
தஞ்சமென்று இவள்பட் டனவே.
வ்யா:- (வஞ்சனே) உன்னுடைய கு3ணங்களிலே என்னை அகப்படுத்தினவனே! என்னும்; பின்னைத் தன் திருவாயால் ஒன்றும் சொல்லமாட்டாமையாலே, தன் கையாலே தொழுதிருக்கும்; அப்போதே அவனைக் காணாமையாலே, ‘தன் நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும்; உம்மை ‘’தன்னுடைய ஆபத்துக்குத் துணை’’ என்று விஶ்வஸித்திருந்த இவளும், உமக்கு ப்ரதிகூலனான கம்ஸன் பட்டது படுவதே! என்கிறாள்.
ஒன்பதாம் பாட்டு
பட்ட போதுஎழு போதறியாள்*விரை
மட்டலர் தண்துழா யென்னும்*சுடர்
வட்ட வாய்நுதி நேமியீர்!*நுமது
இட்டம் என்கொல் இவ் வேழைக்கே?
வ்யா:- (பட்டபோது) ஆஶ்ரிதரக்ஷணார்த்த2மாகத் திருவாழியை ஏந்திக்கொண்டிருக்கிற நீர், உம்மோடு ஸம்ஶ்லேஷிக்கையிலுள்ள அபி4நிவேஶத்தாலே மற்றொன்றும் அநுஸந்தி4க்க க்ஷமையன்றிக்கேயிருக்கிற இவள் திறத்தில் செய்யநினைத்தருளிற்றென்? என்கிறாள்.
பத்தாம் பாட்டு
ஏழை பேதை இராப்பகல்*தன
கேழில்ஒண் கண்ணநீர் கொண்டாள்* கிளர்
வாழ்வைவேவ இலங்கைசெற்றீர்!*இவள்
மாழைநோக்கு ஒன்றும் வாட்டேன்மினே.
வ்யா:- (ஏழை பேதை) உம்மை ஆசைப்படும் ஸ்வபா4வை -யாய், உம்முடைய து3ர்லப4த்வத்தை அறியமட்டாத பா3லத3ஶாபந் – நையாயிருந்த இவன், உம்மை ஆசைப்பட்டுப் பெறாத வ்யஸநத்தாலே அத்யந்தம் அவஸந்நையானாள்; இவள் முடிவதற்கு முன்னே ப்ரதிப3ந்த4கங்களையும் நீரே போக்கிக் கொண்டு ஈண்டினவந்து ரக்ஷித்தருளவேணும் என்று எம்பெருமானை அபேக்ஷிக்கிறாள்.
பதினொன்றாம் பாட்டு
*வாட்ட மில்புகழ் வாமனனை*இசை
கூட்டி வண்சட கோபன்சொல்*அமை
பாட்டு ஓராயிரத்திப்பத்தால்*அடி
சூட்ட லாகும் அந் தாமமே.
வ்யா:- (வாட்டமில்) ஆழ்வார் இப்படி அவஸ்ந்நரான விடத்தில் அவருடைய அவஸாத3மெல்லம் போம்படி வந்து தோன்றி – யருளுகையாலே, வாட்டமில்லாத ப்ரண்யித்வ வாத்ஸல்ய காருண்ய ஸௌஶீல்யாதி3 கல்யாணகு3ணங்களை யுடையனாயிருந்த எம்பெருமானைச்சொன்ன இத்திருவாய்மொழி, அவன் திருவடிகளிலே அழகியதொரு திருமாலையாகச் சூட்டலாம் என்கிறார்.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 2-5
அந்தாமத்தன்பு – ப்ரவேஶம்
(அந்தாமத்தன்பு) இப்படி தோற்றியருளின எம்பெருமான் தம்மோடு கலந்த கலவியையும், அக்கலவியால் தமக்குப் பிறந்த ஸம்ருத்3தி4யையும் சொல்லுகிறார்.
முதல் பாட்டு
*அந்தாமத் தன்புசெய்துஎன் ஆவிசேர் அம்மானுக்கு*
அந்தாம வாழ்முடிசங்கு ஆழிநூல் ஆரமுள*
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்*
செந்தா மரையடிக்கள் செம்பொன் திருவுடம்பே.
வ்யா:- நித்யநிர்த்தோ3ஷ நிரதிஶயகல்யாண தி3வ்யதா4மத்தில் பண்ணும் ப்ரேமத்தை என்பக்கலிலே பண்ணிக் கொண்டு, ஸர்வதி3வ்யபூ4ஷணாயுத3பூ4ஷிதமாய், நிரதிஶய ஸௌந்த3ர்யாதி3 கல்யாணகு3ணவிஶிஷ்டமாய், ஶுத்3த4 ஜாம்பூ3நத3 ப்ரப4மான தி3வ்யரூபத்தோடே வந்து என்னோடே கலந்தருளினான் என்கிறார்.
இரண்டாம் பாட்டு
திருவுடம்பு வான்சுடர்செந் தாமரைக்கண் கைகமலம்*
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்*
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ*
ஒருவிடமொன் றின்றிஎன் னுள்கலந் தானுக்கே.
வ்யா:- (திருவுடம்பு) என்னோடே கலந்தருளுகிறான் – ஸர்வேஶ்வரியான பெரிய பிராடியாரோடும், ஆஶ்ரிதரான ப்3ரஹ்மருத்3ராதி3களோடும் கலந்தருளினாற்போலன்றியே, தன்னுடைய நிரதிஶய தேஜோமயமான திருவுடம்பில் ஒரு தே3ஶமொழியாமே ஸமஸ்த ப்ரதே3ஶத்தாலும் கலந்தருளினான்; ஒருவனுடைய அபி4நிவேஶமே ஈது! என்கிறார்.
மூன்றாம் பாட்டு
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்*
மின்னும் சுடர்மலைக்குக் கண்பாதம் கைகமலம்*
மன்னு முழுவே ழுலகும் வயிற்றினுள*
தன்னுள் கலவாதது எப்பொருளும் தானி(ல்)லையே.
வ்யா:- (என்னுள்) நிரதிஶய கல்யாணகு3ண தி3வ்யரூபத்தை யுடையனாய், ஸ்வஸங்க்கல்பாதீ4ந ஸமஸ்தவஸ்துஸ்வரூப ஸ்தி2தி ப்ரவ்ருத்திகனாயிருந்தவன் என்னுள்ளே கலந்தருளினான் என்கிறார்.
நான்காம் பாட்டு
எப்பொருளும் தானாய் மரதகக் குன்றமொக்கும்* அப்பொழுதைத் தாமரைப்பூக் கண்பாதம் கைகமலம்*
எப்பொழுதும் நாள்திங்கள் ஆண்டுஊழி யூழிதொறும்*
அப்பொழுதைக் கப்பொழுதுஎன்னாரா வமுதமே.
வ்யா:- (எப்பொருளும்) ஸர்வாந்தராத்மபூ4தனாய், அளவிறந்த அழகையுடையனாயிருந்த இவன், அழகாலே ஸர்வ -காலமும் ப்ரதிக்ஷணம் எனக்கு அபூர்வவத்3போ4க்3யமாயிரா -நின்றான்; ஒருவனுடைய அழகிருக்கும்படியே ஈது! என்கிறார்.
ஐந்தாம் பாட்டு
ஆரா வமுதமாய் அல்லாவி யுள்கலந்த*
காரார் கருமுகில்போல் என்னம்மான் கண்ணனுக்கு*
நேராவாய் செம்பவளம் கண்பாதம் கைகமலம்*
பேரார நீள்முடிநாண் பின்னும் இழைபலவே.
வ்யா:- (ஆராவமுதமாய்) நிருபமமான ஸௌந்த3ர்யத்தை யுடையனாய், அபரிமித தி3வ்ய பூ4ஷணோபேதனாய், ஸர்வகாலமும் அநுப4வித்தாலும் ஆராத போ4க்3ய மாயிருந்தவன் – அத்யந்தம் அவஸ்துபூ4தனாயிருந்த என்னுள்ளே கலந்தருளினான் என்கிறார்.
ஆறாம் பாட்டு
பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே*
பலபலவே சோதி வடிவுபண்பு எண்ணில்*
பலபல கண்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம்*
பலபலவே ஞானமும் பாம்பணைமே லாற்கேயோ.
வ்யா:- (பல பலவே) அஸங்க்2யேய தி3வ்யபூ4ஷணங்களை -யும், அஸங்க்2யேய கல்யாண்கு3ணங்களையும், அஸங்க்2யேய தேஜோமய கல்யாண தி3வ்ய ரூபங்களையும், அஸங்க்2யேய தி3வ்யபோ4க3ங்களையும், அஸங்க்2யேய தி3வ்யஜ்ஞாநங்களையும் உடையனாய், நாக3பர்யங்க ஶாயியாய், இப்படி பரிபூர்ணனாய் இருந்துவைத்து என்னோடே கலந்தருளினான் என்கிறார்.
ஏழாம் பாட்டு
பாம்பணைமேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்*
காம்பணைதோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதுவும்*
தேம்பணைய சோலை மராமரமேழ் எய்ததுவும்*
பூம்பிணைய தண்துழாய்ப் பொன்முடியம் போரேறே.
வ்யா:- (பாம்பனை) தன்னுடைய ஸர்வசேஷ்டிதங்களையும் எனக்கே போ4க்3யமாகச் செய்தருளினான் என்கிறார்.
எட்டாம் பாட்டு
பொன்முடியம் போரேற்றை எம்மானை நால்தடந்தோள்*
தன்முடிவொன் றில்லாத தண்டுழாய் மாலையனை*
என்முடிவு காணாதே யென்னுள் கலந்தானை*
சொல்முடிவு காணேன்நான் சொல்லுவதுஎன் சொல்லீரே.
வ்யா:- (பொன்முடி) வாங்மநஸாபரிச்சே2த்3ய நிரதிஶய கல்யாண ஸ்வரூபகு3ணவிபூ4திகளையுடையனாயிருந்துவைத்து, என்னுடைய ஸ்வரூபஸ்வபா4வ கு3ணவ்ருத்தாதி3களினுடைய நிஹீ -நதையைப் பாராதே இன்னுள்ளே கலந்த இஸ்ஸௌஶீல்யத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேன்; ஆனபின்பு எத்தைச்சொல்லுவது சொல்லீர்? என்கிறார்.
ஒன்பதாம் பாட்டு
சொல்லீர்என் னம்மானை என்னாவி ஆவிதனை*
எல்லையில் சீர்என் கருமாணிக் கச்சுடரை*
நல்ல அமுதம் பெறற்கரிய வீடுமாய்*
அல்லி மலர்விரையொத்து ஆணல்லன் பெண்ணல்லனே.
வ்யா:- (சொல்லீர்) இப்படி அவனுடைய கு3ணங்கள் சொல்ல நிலமன்றியேயிருக்கச்செய்தேயும், தம்முடைய ஆராமையாலே – ‘அவன் கு3ணங்களைக் காலதத்வமெல்லாம் சொன்னாலும் அவற்றுக்கு ஒரு முடிவு காண்கிறிலேன்’ என்று பின்னையும் அவனுடைய கு3ணங்களைச்சொல்லி, ‘பரமபோ4க்3யனாய் ஸ்த்ரீபுந் – நபும்ஸகாதி3 ஸர்வதா3ர்த்த2 விஸஜாதீயனாயிருந்துவைத்து, தன் அழகாலே எனக்கு தா4ரகனாய், என்னுள்ளே புகுந்து கலந்தருளின எம்பெருமானுடைய எந்த ஸௌஶீல்யாதி3 கு3ணங்களை நீங்களும் சொல்லிகோள்’ என்று ஸ்ரீவைஷ்ணவர்களைக் குறித்து அருளிச் செய்கிறார்.
பத்தாம் பாட்டு
ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்*
காணலு மாகான் உளனல்லன் இல்லையல்லன்*
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்*
கோணை பெரிதுடைத்துஎம் பெம்மானைக் கூறுதலே.
வ்யா:- (ஆணல்லன்) ஸ்த்ரீபுந்நபும்ஸ்காதி3 ஸர்வபதா4ர்த்த2 விஸஜாதீயனாதலால் தத்3கோ3சர ப்ரமாணங்களுக்கு அகோ3சரனாயிருந்துவைத்து, ஆஶ்ரிதஸுலப4னாய், ஆஶ்ரிதருடைய விவக்ஷாநுகு3ணமான தி3வ்யரூப சேஷ்டிதங்களை யுடையனாய், அநாஶ்ரிதருக்கு து3ர்லப4னாயிருந்த எம்பெருமான் என்னோடு கலந்த இக்கு3ணம் சொல்ல நில மன்றாகிலும், சொல்லாதொழிய முடிகிறதில்லை என்கிறார்.
பதினொன்றாம் பாட்டு
*கூறுதலொன் றாராக் குடக்கூத்த அம்மானை*
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்*
கூறினஅந் தாதிஓராயிரத்துள் இப்பத்தும்*
கூறுதல்வல் லாருளரேல் கூடுவர்வை குந்தமே.
வ்யா:- (கூறுதல்) காலதத்வமெல்லாம் சொன்னாலும் ஆராத கு3ணசேஷ்டிதங்களையுடையனான எம்பெருமானைச் சொன்ன இத்திருவாய்மொழியைச் சொல்லவல்லார், திருநாட்டிலே போய் எம்பெருமானை அநுப4விக்கப்பெறுவார் என்கிறார்.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 2-6
வைகுந்தா – ப்ரவேஶம்
(வைகுந்தா) ஆழ்வார், தம்மோடு கலந்த கலவியால் எம்பெருமானுக்கு வந்த ப்ரீதியைப் பேசுகிறார்.
முதல் பாட்டு
வைகுந்தா! மணிவண்ணனே! என்பொல்லாத் திருக்குறளா! என்னுள் மன்னி*
வைகும் வைகல்தோறும் அமுதாய வானேறே! *
செய்குந் தாவருந் தீமைஉன் னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா!* உன்னைநான் பிடித்தேன்கொள் சிக்கெனவே.
வ்யா:- ஸ்ரீவைகுண்ட2நிலயனாய், ஆஶ்ரித ஸுலப4னாய், நிரவதி4கஸௌந்த3ர்யத்தையுடையனாய், என்னுள்ளே புகுந்திருந்து எனக்கு அபூர்வவத் பரமபோ4க்3யபூ4தனாய், A அயர்வறும் அமரர்கள் அதிபதியாய், ஆஶ்ரிதருடைய அநுப4வைக விநாஶ்ய -மான ஸமஸ்த பாபங்களையும் போக்கி, ப்ரதிகூலர்க்கு து3:க்க2ங்களையும் விளைவிக்கும் ஸ்வபா4வனாய், நிர்மலனா யிருந்த உன்னைப் பரமப்ராப்யமாகப் பற்றினேன் என்கிறார்.
இரண்டாம் பாட்டு
சிக்கெனச் சிறிதோ ரிடமும் புறப்படாத் தன்னுள்ளே* உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின்*
மிக்கஞான வெள்ளச் சுடர்விளக்காய்த் துளக்கற்று அமுதமாய்* எங்கும்
பக்கநோக் கறியான்என் பைந்தா மரைக்கண்ணனே.
அவ:- (சிக்கென) இப்படி தம்முள்ளே புகுந்த பின்பு எம்பெருமானுக்குப் பிறந்த ஸம்ருத்3தி4யைப் பேசுகிறார்.
வ்யா:- ஜக3த்ஸ்ருஷ்ட்யாத்3யந்ய பரதையைப் போக்கிக்கொண்டு என்னுள்ளே புகுந்தான்; புகுந்தத்ற்பின் ஆள்விறந்த ஜ்ஞாநாதி3 ஸகல கல்யாண கு3ணவிஶிஷ்டனாய், விஜ்வரனாய், ப்ரமுதி3த -னாய், ஹர்ஷாதிஶயத்தாலே புதுக்கணித்த திக்கண்களையுடை -யனாய், என்னையல்லது எங்கும் பக்கநோக்கறியான் என்கிறார்.
மூன்றாம் பாட்டு
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை* துழாய் விரைப்
பூமருவு கண்ணிஎம் பிரானைப் பொன்மலையை*
நாமருவி நன்கேத்தி உள்ளி வணங்கி நாம்மகிழ்ந்து ஆட*நாவலர்
பாமருவி நிற்கத்தந்த பான்மையே(ய்) வள்ளலே.
வ்யா:- (தாமரை) நிரதிஶய ஸௌந்த3ர்யலாவண்யாதி3 கல்யாணகு3ண விஶிஷ்டனாய், நிரதிஶய ஸுக3ந்த4 தி3வ்யமால்யா – லங்க்ருதனாய், ஶேஷ ஶேஷாஶந வைநதேயாதி3 தி3வ்ய புருஷர்களாலே ஸம்ஸ்தூயமாநனாயிருந்தவனை நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாமகிழ்ந்து ஆடும்படி நம்முடைய நாவிலே அலருகிற சொற்களுக்குத்தனை விஷமாகத் த்ருகையே ஸ்வபா4வமாயிருப்பதே! என்ன வதா3ந்யனோ என்கிறார்.
நான்காம் பாட்டு
வள்ளலே! மதுசூதனா! என்மரகத மலையே!* உனை நினைந்து
எள்கல்தந்த எந்தாய்உன்னை எங்ஙனம் விடுகேன்*
வெள்ள மேபுரை நின்புகழ் குடைந்தாடிப் பாடிக்களித்து உகந்துகந்து*
உள்ளநோய்க ளெல்லாம்துரந்து உய்ந்து போந்திருந்தே.
வ்யா:- (வள்ளலே) ஆஶ்ரிதர்க்கு ஆத்மதா3நம் பண்ணும் ஸ்வபா4வனே! தத்3விரோதி4 நிரஸனஸ்வபா4வனே! என்னுடைய பரமபோ4க்3யமே! உன்னை நினைந்தால் நீராயுருகும் ப்ரக்ருதியாக என்னைப் பண்ணினவனே! உன்னுடைய ஏவம்வித4மான கல்யாண கு3ணங்களாகிற அம்ருதவெள்ளத்தைக் குடைந்தாடிப் பாடிக்களித்துகந்துகந்து உள்ள நோய்களெல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்து உன்னை எங்ஙனே விடும்படி? என்கிறார்.
ஐந்தாம் பாட்டு
உய்ந்து போந்துஎன் னுலப்பிலாத வெந்தீவினைகளை நாசஞ் செய்து*உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ?*
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப்பாற்கடல் யோக நித்திரை*
சிந்தைசெய்த எந்தாய்உன்னைச் சிந்தை செய்துசெய்தே.
வ்யா:- (உய்ந்து) த்வத3நுப4வஜநிதமான ப்ரீதியாலே களித்தாடுகிற திருவனந்தாழ்வான் மேலே உன்னுடைய தி3வ்யரூப -கு3ணங்களை அநுப4வித்துக்கொண்டு கண்வளர்ந்தருளுகிற உன்னை அநுப4வித்து உய்ந்து போந்திருந்து, என்னுடைய முடிவில்லாத மஹாது3:க்க2ங்களைப்போக்கி உன் அந்தமில் அடிமை அடைந்தேன்; இனி விடுவேனோ? என்கிறார்.
ஆறாம் பாட்டு
உன்னைச் சிந்தை செய்துசெய்து உன்நெடு மாமொழிஇசை பாடியாடி*என்
முன்னைத் தீவினைகள் முழுவே ரரிந்தனன்யான்*
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்மார்வம் கீண்ட*என்
முன்னைக் கோளரியே! முடியாத தென்எனக்கே?
வ்யா:- (உன்னை) இப்படி உன்னை ஸர்வகரணங்களாலும் அநுப4வித்து என்னுடைய ஸமஸ்தப்ரதிப3ந்த4கங்களையும் போக்கினேன். ஆஶ்ரிதன் உன்னைக் கோலுவதற்கு முன்பு அவனுடைய இஷ்டத்தை முடித்துக்கொண்டிருக்கும் ஸ்வபா4வனா -னவனே! எனக்கு முடியாததென்? இந்த ஸம்ருத்3தி4யெல்லாம் உன்னுடைய ப்ரஸாத3த்தாலே விளைந்தது என்கிறார்.
ஏழாம் பாட்டு
முடியாத தென்எனக் கேல்இனி முழுவேழுலகும் உண்டான்* உகந்துவந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி*
செடியார் நோய்க ளெல்லாம் துரந்துஎமர் கீழ்மே லெழுபிறப்பும்*
விடியாவெந் நரகத்துஎன்றும் சேர்தல் மாறினரே.
வ்யா:- (முடியாததென்) ஸர்வேஶ்வரனாயிருந்த எம்பெருமானுக்கு என்பக்கல் அபி4ந்வேஶம் என்னளவில் பர்யவஸியாதே, என்னோடு ஸம்ப3ந்தி4த்தார் பக்கலுங்கூட வெள்ளங்கோத்தது; ஆதலால் அவன் என்னை அகல நினைக்கிறிலன்: இனி முடியாதொன்றுண்டோ? என்கிறார்.
எட்டாம் பாட்டு
மாறி மாறிப் பலபிறப்பும் பிறந்துஅடியை யடைந் துள்ளம்தேறி*
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்*
பாறிப் பாறி அசுரர்தம் பல்குழாங்கள் நீறெழ* பாய்பறவையொன்று
ஏறிவீற்றிருந் தாய்உன்னை என்னுள் நீக்கேல்எந்தாய்.
வ்யா:- (மாறி மாறி) உன்னோடு ஸம்ஶ்லேஷிக்கைக்கு விரோதி4யான ஸம்ஸாரத்தில் வர்த்திக்கிற நான், நிர்ஹேதுகமாக உன் திருவடிகளையே ப்ராப்யமாகப் பெற்று, அதிலே உள்ளம் தேறி, முடிவில்லாத அழகிய இன்பவெள்ளத்திலே முழுகினேன்; ஆஶ்ரித -ருடைய அபேக்ஷிதங்களைச் செய்யும் ஸ்வபா4வனாயிருந்த நீ இனி என்னக் கைவிடாதொழியவேணும் என்று அபேக்ஷிக்கிறார்.
ஒன்பதாம் பாட்டு
எந்தாய்! தண்திரு வேங்கடத்துள் நின்றாய்! இலங்கைசெற்றாய்!* மராமரம்
பைந்தா ளேழுருவ ஒருவாளி கோத்தவில்லா!*
கொந்தார் தண்ணந் துழாயினாய் அமுதே!உன்னை என்னுள்ளே குழைத்தஎம்
மைந்தா!* வானேறே! இனியெங்குப் போகின்றதே?
வ்யா:- (எந்தாய்) திருமலையிலே புகுந்து நின்றருளின படியையும், உன்னுடைய திருவவதாரங்களையும், உன்னுடைய தி3வ்யசேஷ்டிதங்களையும், உன்னுடைய அழகையும், ஸ்ரீவைகுண்ட2நாதனாய் இருந்தருளும்படியையும், மற்றுமுள்ள படியையடங்க எனக்கு போ4க்3யமாகக் காட்டியருளி, உன்னை என்னுள்ளே ஒன்றாகக் குழைத்தருளின நீ இனி எங்கே போவது? போவேனென்றால்தான் போகமுடியுமோ? என்கிறார்.
பத்தாம் பாட்டு
போகின்ற காலங்கள் போய காலங்கள் போகுகாலங்கள்* தாய் தந்தையுயி
ராகின்றாய் உன்னைநான் அடைந்தேன் விடுவேனோ?*
பாகின்ற தொல்புகழ் மூவுலகுக்கும் நாதனே! பரமா!* தண்வேங்கடம்
மேகின்றாய்! தண்துழாய் விரைநாறு கண்ணியனே!
வ்யா:- (போகின்ற) ‘’ஸர்வாத்மாக்களுக்கும் மாதா செய்யும் நன்மையும், பிதாசெய்யும் நன்மையும் தான் தனக்குச்செய்யும் நன்மையும், ஸர்வகாலமும் எனக்குச் செய்தருளும் ஸ்வபா4வனாய், நிரவதி4க நித்யஸித்3த4 கல்யாணகு3ண விஶிஷ்டனாய், ஸர்வ லோகேஶ்வரனாய், நிரஸ்தஸமாப்4யதி4கனாய், திருமலையிலே புகுந்தருளி எனக்குங்கூடப் பரமஸுலப4நாய், பரமபோ4க்3யனா யிருந்த உன்னை நான் அடைந்தேன்; இனி விடுவேனோ?’’ என்று கொண்டு தாம் எம்பெருமானோடு கலந்த கலவிக்குத் தம்மாலும், அவனாலும், ஹேத்வந்தரத்தாலும் ஒழிவில்லை என்கிறார்.
பதினொன்றாம் பாட்டு
*கண்ணித் தண்ணந் துழாய்முடிக் கமலத் தடம்பெருங் கண்ணனை* புகழ்
நண்ணித் தென்குருகூர்ச் சடகோபன் மாறன்சொன்ன*
எண்ணில் சோர்வி லந்தாதி ஆயிரத் துள்ளிவையும்ஓர் பத்திசை யொடும்*
பண்ணில் பாட வல்லாரவர் கேசவன்தமரே.
வ்யா:- (கண்ணி) எம்பெருமானுடைய ஸ்வரூபரூபகு3ண விபூ4திகளை உள்ளபடியே அநுப4வித்தபடியே சொன்ன இத் -திருவாய்மொழியை இசையோடும் பண்ணிலே பாடவல்லார்க்கு, ‘’கேசவன்தமர்’’ என்னும் இவ்வாகாரமல்லாத ஆகாராந்தரமில்லை என்கிறார்.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 2-7
கேசவன்தமர் – ப்ரவேஶம்
(கேசவன்தமர்) என்பக்கலுள்ள அபி4நிவேஶத்தாலே என்னோடு ஸம்ப3ந்தி4த்தாரையுங்கூட விஷயீகரித்தருளினான் என்று ப்ரஸ்துதமான பொருளை விஸ்தரிக்கிறது.
முதல் பாட்டு
கேச வன்தமர் கீழ்மே லெமரே ழெழுபிறப்பும்*
மாசதி ரிதுபெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா*
ஈசன் என்கரு மாணிக்கம்என் செங்கோலக் கண்ணன்விண்ணோர்
நாயகன்* எம்பிரான் எம்மான் நாரா யணனாலே.
வ்யா:- ஸர்வேஶ்வரனாய், நிரதிஶய ஸௌந்த3ர்யாதி3 கல்யாணகு3ணகனாய், அயர்வறும் அமரர்கள் அதிபதியாய், எனக்கு ஸ்வாமியாயிருந்த நாராயணனாலே, யேந கேநாபி ப்ரகாரேண ஸாக்ஷாத்3வா பரம்பரயாவா என்னோடு ஸம்ப3ந்த4முடையார் எல்லாரும் ப4க3வதே3க போ4க3ரானார்கள். தத்ஸம்பத்தினாலே ப4க3வதே3க போ4க3த்வ லக்ஷணமான ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நமக்கு விளையும்படியே இது! என்கிறார்.
இரண்டாம் பாட்டு
நாரணன் முழுவே ழுலகுக்கும் நாதன் வேதமயன்*
காரணம் கிரிசை கரும மிவை முதல்வன் எந்தை*
சீரணங் கமரர் பிறர்பல ரும்தொழு தேத்தநின்று*
வாரணத் தைமருப் பொசித்த பிரான்என் மாதவனே.
வ்யா:- (நாரணன்) ‘’ஈசன்’’ என்று ப்ரஸ்துதமான ஈஶ்வரத்வத்தை உபபாதி3க்கிறது. ஸர்வாந்தராத்மபூ4தனாய், ஸர்வலோகேஶ்வரனாய், ஸர்வவேத3 வேத்3யனாய், காரணத்துக்கும் க்ரியைக்கும், கார்யத்துக்கும் நிர்வாஹகனாயிருந்துவைத்து, எனக்கு போ4க்3யமாகைக்காக, பெரியபிரட்டியாரும் அயர்வரும -மரர்களும் தொழுதேத்த, அதினாலே ஸம்வர்த்தி4த ப3லனாய் நின்று வாரணத்தை மருப்பொசித்த பிரான் மாத4வனாலே எமரேழெழு பிறப்பும் கேசவன் தமராயிற்று என்கிறார்.
மூன்றாம் பாட்டு
மாதவன் என்றதே கொண்டுஎன்னை யினிஇப்பால் பட்டது*
யாத வங்களும் சேர்கொடே னென்றுஎன்னுள் புகுந்திருந்து*
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாம ரைக்கண்குன்றம்*
கோதவ மிலென்கன்னற் கட்டிஎம் மான்என் கோவிந்தனே.
அவ:- (மாதவன்) இப்படி எம்பெருமான் என்னோடு ஸம்ப3ந்தி4த்தாரையுங்கூட விஷயீகரிக்கும்படி என்னை வைஷ்ணவனாக்குகைக்கு ஹேதுவான என்பக்கலுள்ள சதிராகிறதேன்? என்னில்; அது இன்னதென்று சொல்லுகிறது.
வ்யா:- யத்3ருச்ச2யா பிராட்டி பரிக்3ரஹித்தார் சொல்லுவதொரு சொல்லைச் சொல்ல, அச்சொல்மாத்ரத்தையே கொண்டு மெய்யே பிராட்டி பரிக்3ரஹமாயிருப்பாரைப் பார்த்தருளும் பார்வையாலே என்னைப்பார்த்தருளி, ‘’இவரையாகாதே தான் நெடுங்கால -மெல்லாம் இழந்தது’’ என்ற இழந்தகாலத்தை அநுஸந்தி4த்து மோஹித்து, பின்னை நெடும்போது கூட ப்ரபு3த்3த4னாய், போன காலத்தை இனிச்செய்யலாவதில்லையிறே, இனி இப்பாலுள்ள காலமாகிலும் என்னை விடேன் என்று, நிரதிஶய ஸௌந்த3ர்யத்தை யுடையனாய், நிரதிஶய போ4க்3ய பூ4தனாய், ஆஶ்ரிதஸுலப4னாய், பரமகாருணிகனாயிருந்த எம்பெருமான் என்னுள் புகுந்திருந்து, என்பக்கலுள்ள ஸ்வஸம்ஶ்லேஷ விரோதி4யான ஸ்வரூபப்ர்யுக்த தோ3ஷத்தையும், ஹேதுக்ருதமான தோ3ஷத்தையும் போக்கி, எனக்குப் பரமபோ4க்3யனானான் என்கிறார்.
நான்காம் பாட்டு
கோவிந் தன்குடக் கூத்தன் கோவலனென் றென்றேகுனித்து*
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி* என்னைக்கொண்டுஎன்
பாவந் தன்னையும் பாறக்கைத்துஎமரே ழெழுபிறப்பும்*
மேவும் தன்மைய மாக்கினான் வல்லன்எம் பிரான்விட்டுவே.
வ்யா:- (கோவிந்தன்) இப்படி என்னுள்ளே புகுந்திருந்து தன்னுடைய கு3ணசேஷ்டிதங்களைஏத்திக் களிக்கும்படியாகவும், தன்னுடைய ஸர்வேஶ்வரத்வத்தையும், ஆஶ்ரித பராதீ4நத்வமாகிற தன்னுடைய ஸ்வரூபத்தையும் பாடியாடும்படியாகவும் என்னைத் திருத்தி, இப்படி என்னை விஷயீகரித்து, பின்னை என்பக்கலுள்ள ப்ரதி ப3ந்த4கங்களையெல்லாம் போக்கி அவ்வளவில் பர்யவஸியாதே, என்னோடு ஸம்ப3ந்தி4த்தாரையுங்கூட என்னைப்போலே தன் திருவடிகளை ஸம்ஶ்லேஷிக்கும் ஸ்வபா4வராக்கினான்; வல்லன் வல்லன் எம்பிரான், வல்லன் என்நாயன், வல்லன் என் அப்பன், வல்லன் என்றென்று அவனைப் புகழுகிறார்.
ஐந்தாம் பாட்டு
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள்கண்கள்*
விட்டிலங்கு கருஞ் சுடர் மலையே திருவுடம்பு*
விட்டிலங்கு மதியம் சீர்சங்கு சக்கரம் பரிதி*
விட்டிலங்கு முடி யம்மான் மதுசூதனன் தனக்கே.
வ்யா:- (விட்டிலங்கு) இப்படி என்னை வைஷ்ணவனாக்கு கைகுக்குத் தன் அழகை உபகரணமாகக்கொண்டு என்னுள்ளே புகுந்த்ருளினான் என்கிறார்.
ஆறாம் பாட்டு
மதுசூ தனையன்றி மற்றிலேனென்றுஎத்தாலும் கருமமின்றி*
துதிசூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றுஊழி யூழிதொறும்*
எதிர்சூழல் புக்குஎனைத் தோர்பிறப்பும்எனக்கே அருள்கள்செய்ய*
விதிசூழ்ந்த தால்எனக் கேல்அம்மான் திரிவிக் கிரமனையே.
வ்யா:- (மாதுசூதனை) அநாதி3காலம் தொடங்கி இன்றளவும்வர நான் பிறந்த பிறவிகள்தோறும் என்னை வஶீகரிக்கைக்கு ஈடான வடிவுகளைக்கொண்டு வந்து பிறந்தருளி என்னை வஶீகரித்து, மதுசூதனல்லது எனக்கு மற்றொரு ப்ராபய மில்லை என்று அத்4யவஸித்து, தத்3வ்யதிரிக்தங்களையெல்லாம் விட்டு, ஸர்வகாலமும் நின்று துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாடுகை யாகிற இஸ்ஸம்ருத்3தி4யை எனக்கே தந்தருளுகைக்காக. திரிவிக்கிரமனை எனக்காகவே க்ருபையாகிற விதி4 சூழ்ந்தது என்கிறார்.
ஏழாம் பாட்டு
திரிவிக் கிரமன் செந்தாமரைக்கண்எம் மான்என் செங்கனிவாய்*
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்த(ன) னென்றென்று*உள்ளிப்
பரவிப் பணிந்து பல்லூழி யூழிநின் பாதபங்கயமே*
மருவித் தொழும்மன மேதந்தாய் வல்லைகாண்என் வாமனனே!
வ்யா:- (திரிவிக்கிரமன்) ஆஶ்சர்ய தி3வ்யசேஷ்டிதன், ப்ரபு3த்3த4 முக்3தா4ம்பு3ஜ சாருலோசநன், அழகிய திருப்பவளத்தை யுடையவன், ஶுசிஸ்மிதன், இவற்றாலே என்னை அடிமையாக்கி -னவன் என்றென்று உள்ளிப் பரவிப்பணிந்து இப்படியே ஸர்வ காலமும் உன்னுடைய பாதபங்கயமே மருவித்தொழும் மனமே தந்தாய்; வல்லைகாண், எம்பிரானே! வல்லைகாண், ஒருவர்க்கும் செய்யமுடியாதனவெல்லாம் வெய்யவல்லானொருவனல்லையோ! என்கிறார்.
எட்டாம் பாட்டு
வாமனன்என்மரதக வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய்!* என்றென்றுஉன் கழல்பாடி யேபணிந்து* தூமனத் தனனாய்ப் பிறவித் துழதி நீங்க* என்னைத்
தீமனங் கெடுத்தாய்உனக்குஎன் செய்கேன்என் சிரீதரனே!
வ்யா:- (வாமனன்) நிரதிசய ஸௌந்த3ர்ய ஜந்மபூ4மியாயிருந்த உன்னுடைய வடிவையும், அழகையும் அநந்யப்ரயோஜநனாய்க் கொண்டு பாடி, உன் திருவடிகளைப் பணிந்துகொண்டு ப்ரதிப3ந்த4கங்களைப் போக்கும்படி என்னுடைய மநஸ்ஸை உன் திருவடிகளல்லது மற்றொன்று அறியாதபடி பண்ணினாய்; ஸ்ரீமானே! உனக்கு நான் என்ன கைமாறு செய்வது? என்கிறார்.
ஒன்பதாம் பாட்டு
சிரீஇதரன் செய்ய தாமரைக் கண்ணனென்றென்று இராப்பகல்வாய்
வெரீஇ* அலமந்து கண்கள்நீர் மல்கிவெவ் வுயிர்த்துயிர்த்து*
மரீஇய தீவினை மாள இன்பம்வளர வைகல்வைகல்
இரீஇ* உன்னைஎன் னுள்வைத் தனைஎன் இருடீகேசனே!
வ்யா:- (சிரீஇதரன்) ஸ்ரீத4ரனாகையாலே செய்யதாமரைக் கண்ணன் என்றென்று இராப்பகல் வாய்வெருவி அலமந்து கண்கள் நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து, மருவியிருந்த தீவினைகள் மாள, இன்பம் வளர, எப்போதும் உன்னை என்னுள்ளேயிருத்திவைத் தருளினாய்; இப்படி உன் அழகாலே என்னுடைய கர்ணங்களையும் தோற்பித்தவனே! உனக்கு என்செய்கேன்? என்கிறார்.
பத்தாம் பாட்டு
இருடீ கேசன் எம்பிரான் இலங்கை யரக்கர்குலம்*
முருடு தீர்த்த பிரான்எம்மான் அமரர்பெம்மா னென்றென்று*
தெருடி யாகில் நெஞ்சே! வணங்குதிண்ணம் அறிஅறிந்து*
மருடி யேலும் விடேல்கண்டாய் நம்பிபற்ப நாபனையே.
வ்யா:- (இருடீகேசன்) தன் அழகாலும் செயலாலும் என்னை அடிமை கொண்டவன், அவர்வறும் அமரர்களதிபதி என்றென்று அவனை ஏத்தி நினைந்து வணங்கு; இத்தை அழகிய -தாகக் கைக்கொள்ளக்கொண்டு, மறந்தும் நம்பி பற்பநாபனை விடாதே கிடாய் நெஞ்சே! என்றுகொண்டு தம்முடைய நெஞ்சைக் குறைகொள்ளுகிறார்.
பதினொன்றாம் பாட்டு
பற்ப நாபன் உயர்வற வுயரும் பெருந்திறலோன்*
எற்பரன்என்னை யாக்கிக்கொண்டுஎனக்கே தன்னைத்தந்த
கற்பகம்* என்அமுதம் கார்முகில் போலும் வேங்கடநல்
வெற்பன்* விசும்போர் பிரான்எந்தை தாமோ தரனே.
வ்யா:- (பற்பநாபன்) ‘அவன் நம்மைவிடில் செய்வதென்?’ என்னில்; அளவிறந்த அழகையுடையனாய், நிரவதி4கதேஜ: ப்ரப்4ருதி கல்யாண கு3ணங்களை யுடையனாய், என்னை ஸ்வேதர ஸர்வவிஷயவைராக்3யபூர்வக ஸ்வாநுப4வைகபோ4க3 போ4க்3ய மாய், நிரதிஶய ஸௌந்த3ர்ய பரிபூர்ணமான திருமலையோடுள்ள ஸம்ப3ந்த4த்தாலே லப்3த4மான இந்த ஔதா4ர்யத்தையுடையனாய், திருநாட்டில் தி3வ்யபுருஷர்களுக்கு நாத2னாய், எனக்கு ஸ்வாமியாய், ஆஶ்ரிதபராதீ4நனான எம்பெருமான் என்னை யல்லதறியான்; ஆதலால் அவன் என்னைவிடான் என்கிறார்.
பன்னிரண்டாம் பாட்டு
தாமோ தரனைத் தனிமுதல்வனை ஞால முண்டவனை*
ஆமோ தரமறிய ஒருவர்க் கென்றே தொழுமவர்கள்*
தாமோ தரனுரு வாகிய சிவற்(ர்க்)கும் திசைமுகற்(ர்க்)கும்*
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே.
வ்யா:- (தாமோதரனை) ‘’ ‘ஆஶ்ரிதபரதந்த்ரனாய், ஸர்வ ஜக3தே3க காரணமாய், ஸர்வஜக3த்3ரக்ஷகனாயிருந்த எம்பெருமானை, ஒருவர்க்குந்தான் அறியலாமோ?’ என்று தொழுகிற, பரமபுருஷ ஶேஷதைக ஸ்வபா4வரான சிவற்கும், திசைமுகற்கும் எம்மானை என்னாழி வண்ணனைத் தரமறிய லாமோ?’’ என்று கொண்டு, அவனுடைய அபரிச்சே2த்3ய மஹத்த் வத்தைச்சொல்லி, ‘ஏவம் பூ4தனானவன் கிடீர் எற்பரனா யிருக்கிறவன்’ என்கிறார்.
பதிமூன்றாம் பாட்டு
*வண்ண மாமணிச் சோதியை அமரர் தலைமகனை*
கண்ணனை நெடுமாலைத் தென்குரு கூர்ச்சட கோபன்*
பண்ணிய தமிழ்மாலை ஆயிரத்துள் இவைபன் னிரண்டும்*
பண்ணில் பன்னிரு நாமப்பாட்டு அண்ணல்தாள் அணைவிக்குமே.
வ்யா:- (வண்ண மாமணி) இத்திருவாய்மொழி வல்லார் எம்பபெருமானைப் பெறுவார் என்கிறார்.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 2-8
அணைவதரவணை– ப்ரவேஶம்
(அணைவது) ‘’தாமோதரனை’’ என்கிற பாட்டில் ப்ரஸ்துதமான ஸர்வேஶ்வரத்வத்தைத் தம்முடைய ப்ரீத்யதிஶயத்தாலே ஸஹேதுகமாக உபபாதி3த்து, இப்படி ஸர்வேஶ்வரனான எம்பெருமானை ஆஶ்ரயியுங்கோள் என்று பரரை நோக்கி அருளிச்செய்கிறார்.
முதல் பாட்டு
*அணைவது அரவணைமேல் பூம்பாவை யாகம்
புணர்வது* இருவ ரவர்முதலும் தானே*
இணைவனாம் எப்பொருட்கும் வீடுமுதலாம்*
புணைவன் பிறவிக் கடல்நீந்து வார்க்கே.
வ்யா:- நாக3பர்யங்கஶாயியாகையாலும், ஶ்ரிய:பதி யாகையாலும், ப்3ரஹ்ம ருத்3ராதி3களுக்கு நிர்வாஹகனாகை யாலும், ஸர்வாத்மஸஜாதீயதயா அவதீர்ணனாய்க்கொண்டு ஸர்வஜக3த்3ரக்ஷகனாகயாலும், முமுக்ஷுக்குளுக்கு ப்ரதிப3ந்த4க நிவர்த்தகனாய்க்கொண்டு மோக்ஷப்ரத3னாகையாலும் நாராயணணே ஸர்வேஶ்வரன் என்கிறார்.
இரண்டாம் பாட்டு
நீந்தும் துயர்ப்பிறவி உட்படமற் றெவ்வெவையும்*
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்*
பூந்தண் புனல்பொய்கை யானை யிடர்கடிந்த*
பூந்தண் துழாய்என் தனிநா யகன்புணர்ப்பே.
வ்யா:- (நீந்தும்) ‘’வீடு முதலாம்’’ என்கிற பத3த்தை விவரிக்கிறது. ஜந்ம ஜராமரணாத்3யபரிமித ஸமஸ்த து3:க்க2 ரஹிதமான மோக்ஷத்துக்குக் காரணம் எம்பெருமானோடுள்ள ஸம்ப3ந்த4ம்; அதெங்கே கண்டோம்? என்னில், ஸ்ரீக3ஜேந்த3ராழ்வான் பக்கலிலே கண்டோம் என்கிறார்.
மூன்றாம் பாட்டு
புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்*
புணர்த்ததன் னுந்தியோடு ஆகத்து மன்னி*
புணர்த்த திருவாகித் தன்மார்வில் தான்சேர்*
புணர்ப்பன் பெரும்புணர்ப்பு எங்கும் புலனே.
வ்யா:- (புணர்க்கும்) ஜக3த்ஸ்ரஷ்டாவான ப்3ரஹ்மாவுக்கும் தன் உந்தியை ஆஶ்ரயமாகக் கொடுத்து வைக்கும்; ஜக3த் ஸம்ஹர்த்தாவான ருத்3ரனுக்கும் தன் திருவுடம்பை ஆஶ்ரயமாகக் கொடுத்து வைக்கும்; ஸர்வலோகேஶ்வரியான பிராட்டிக்கும் தன் திருமார்வைக் கொடுத்து வைக்கும்; திருவனந்தாழ்வான் மேலே கண்வளர்ந்தருளும்; இப்படி எம்பெருமானுடைய ஸர்வேஶ்வரத்வ சிஹ்நபூ4தமான தி3வ்யசேஷ்டிதங்கள் எங்கும் ப்ரத்யக்ஷிக்கலாம் என்கிறார்.
நான்காம் பாட்டு
புலனைந்து மேயும் பொறியைந்தும் நீங்கி*
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்!*
அலமந்து வீய அசுரரைச் செற்றான்*
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே.
வ்யா:- (புலன்) ப்ரக்ருதிப3ந்த4 விநிர்முக்தராய்க்கொண்டு நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர்! இப்படி ஸர்வேஶ்வரனாயிருந்த எம்பெருமானுடைய நிறதிஶய போ4க்3யமான கல்யாண கு3ணங்களிலே ஓவாதே படியுங்கள் என்கிறார்.
ஐந்தாம் பாட்டு
ஓவாத் துயர்ப்பிறவி உட்படமற் றெவ்வெவையும்*
மூவாத் தனிமுதலாய் மூவுலகும் காவலோன்*
மாவாகி ஆமையாய் மீனாகி மானிடமாம்*
தேவாதி தேவ பெருமான்என் தீர்த்தனே.
அவ:- (ஓவா) ‘’இணைவனாம்’’ (1) என்கிற பத3த்தை விவரிக்கிறது.
வ்யா:- ஸம்ஸாரசக்ர ப்ரவர்த்தகனாகையாலும், ப்3ரஹ்மேஶாநாதி3 தே3வர்களுக்குக் காரணபூ4னாய், அயர்வறும் அமரர்களுக்கு ‘’இணைவனாம் எப்பொருட்கும்’’ என்கிற பத3த்தை விவரிக்கிறது ஸ்வாமியாகையாலும், அஶேஷதோ3ஷப்ரத்ய நீகனாகையாலும், தே3வமநுஷ்யாதி3 வ்யாபாரங்களைப் பண்ணிக்கொண்டு ஸர்வஜக3த்3 ரக்ஷகனாகையாலும் அவனே ஸர்வேஶ்வரன் என்கிறார்.
ஆறாம் பாட்டு
தீர்த்த னுலகளந்த சேவடிமேல் பூந்தாமம்*
சேர்த்தி அவையே சிவன்முடிமேல் தான்கண்டு*
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழா யான்பெருமை*
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே.
வ்யா:- (தீர்த்தன்) யாவனொருவனுடைய பாதோ3த3கத்தை ஶிரஸாவஹிக்கையாலே ருத்3ரன் பரிஶுத்தனானான், யாவ னொருவன் திருவடிகளிலே சாத்தின பூந்தாமம் ருத்3ரன் தலையிலே காணப்பட்டது, அங்ஙனேயிருந்த பைந்துழாயான் பெருமை ஸுப்ரஸித்3த4மன்றோ; சொல்லவேணுமோ? என்கிறார்.
ஏழாம் பாட்டு
கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க் கீழ்புக்கு
இடந்திடும்* தன்னுள் கரக்கும் உமிழும்*
தடம்பெருந்தோ ளாரத் தழுவும் பாரென்னும்
மடந்தையை* மால்செய்கின்ற மால்ஆர்காண் பாரே.
வ்யா:- (கிடந்து) எம்பெருமான் தனக்கு இந்த ஜக3த்தானது இஷ்ட ஸர்வசேஷ்டாவிஷயமாயிருக்கையாலே அவனுக்கே ஶேஷம் என்கிறார்.
எட்டாம் பாட்டு
காண்பாரார்எம்மீசன் கண்ணனைஎன் காணுமாறு*
ஊண்பேசில்எல்லா வுலகும்ஓர் துற்றாற்றா*
சேண்பால வீடோ உயிரோமற் றெப்பொருட்கும்*
ஏண்பாலும் சோரான் பரந்துளனாம் எங்குமே.
வ்யா:- (காண்பாரார்) ஸர்வஜக3ந்நிக3ரண நியமந ஸமர்த்தனான எம்பெருமானுடைய ஸர்வேஶ்வரத்வம் ஒருவர்க்கு அறிகைக்கு பூ4மியோ? என்கிறார்.
ஒன்பதாம் பாட்டு
எங்கு முளன்கண்ண னென்ற மகனைக்காய்ந்து*
இங்கில்லை யாலென் றிரணியன் தூண்புடைப்ப*
அங்குஅப் பொழுதே அவன்வீயத் தோன்றிய*என்
சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே?
வ்யா:- (எங்கும்) ஆஶ்ரிதார்த்த2மாகத் தன்னுடைய ஸர்வாந்தராத்மத்வத்தை ப்ரத்யக்ஷமாக்கியருளின எம்பெருமானுடைய ஸர்வேஶ்வரத்வ மஹிமை ஒருவர்க்கு ஆராய நிலமோ? ஆனபின்பு இங்ஙனேயிருந்த இவனை ஆஶ்ரயியுங்கள் என்கிறார்.
பத்தாம் பாட்டு
சீர்மைகொள் வீடு சுவர்க்கம் நரகீறா*
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்*
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற*
கார்முகில்போல் வண்ணன்என் கண்ணனைநான் கண்டேனே.
வ்யா:- (சீர்மை) ‘’ஸ்வர்க்கா3பவர்க்கா3த்3யஶேஷ புருஷார்த்த2ங்களுக்கும், நரகாத்3யபுருஷார்த்த2ங்களுக்கும், இவற்றுக்கு போ4க்தாக்களான தே3வாதி3 ஸ்தா2வராந்தமான ஸகலாத்மவர்க்க2த்துக்கும் தா4ரகனாய், ப்ராணபூ4தனாய், நியந்தாவாய், ஸ்வேதர ஸமஸ்த விஸஜாதீயாப்ராக்ருத மஹாவிபூ4தியை யுடையனாய் நின்ற எம்பெருமானை நான் காணப்பெற்றேன்’’ என்று கொண்டு ஸ்வலாப4த்தைப் பேசி முடிக்கிறார்.
பதினொன்றாம் பாட்டு
கண்தலங்கள் செய்ய கருமேனி யம்மானை*
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்*
பண்தலையில் சொன்னதமிழ் ஆயிரத்துஇப் பத்தும்வல்லார்*
விண்தலையில் வீற்றிருந் தாள்வர்எம் மாவீடே.
வ்யா:- (கண்டலங்கள்) இத்திருவாய்மொழியை வல்லார் இக்க வழக்காம் திருநாடு என்கிறார்.
ததிருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 2-9
எம்மாவீடு– ப்ரவேஶம்
(எம்மாவீடு) ‘’நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர்’’ என்ற ப்ராப்ய ப்ரஸங்க3த்தாலே, ஸ்வாபி4மதமான நிஷ்கர்ஷித்து அத்தை ப்ரார்த்தி2க்கிறார்.
முதல் பாட்டு
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்*நின்
செம்மா பாதபற்புத் தலைசேர்த்து ஒல்லை*
கைம்மா துன்பம் கடிந்த பிரானே!*
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே.
அவ:- முதற்பாட்டில் – ஸர்வப்ரகார விஶிஷ்டமான மோக்ஷத்திலும் திருவடிகளோட்டை ஸம்ப3ந்த4மே உத்3தே3ஶ்யம் என்று அபேக்ஷிக்கிறார்.
வ்யா:- எத்தனையேனும் உத்க்ருஷ்டபுருஷார்த்த2மான ஸ்ரீ வைகுண்ட2த்திலும் எனக்கு அபேக்ஷையில்லை; மற்றெதிலே அபேக்ஷையுள்ளது? என்னில்; ‘’உன்னுடைய அழகிய திருவடி மலர்களை என் தலையிலே வைத்தருளவேணும்; அது செய்தருளு மிடத்து ஸ்ரீ க3ஜேந்த்3ராழ்வானுக்குச் செய்தருளினாற்போலே வ்ந்து செய்தருளப்பற்றாது; செய்து கொண்டு நிற்கவேணும்; ஈதே அடியேன் வேண்டுவது’’ என்கிறார்.
இரண்டாம் பாட்டு
ஈதேயா னுன்னைக் கொள்வதுஎஞ் ஞான்றும்*என்
மைதோய் சோதி மணிவண்ண எந்தாய்!*
எய்தா நின்கழல் யானெய்த* ஞானக்
கைதா காலக் கழிவுசெய் யேலே.
வ்யா:- (ஈதே) எற்றைக்கும் இதுவே நான் உன்பக்கல் கொள்ளும் ப்ராப்யம்; ‘ப3க்தியோக3த்தாலல்லது ஸித்3தி4க்குமோ?’ என்னில்; அந்த ப4க்தியோக3ந் தன்னையும் நீயே ஈண்டெனத் தந்தருளவேணும்’ என்கிறார்.
மூன்றாம் பாட்டு
செய்யேல் தீவினை யென்றுஅருள் செய்யும்*என்
கையார் சக்கரக் கண்ண பிரானே!*
ஐயார் கண்டம் அடைக்கிலும்* நின்கழல்
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே.
வ்யா:- (செய்யேல்) உன் கையும் திருவாழியுமாயிருக்கிற அழகைக்காட்டி வ்யதிரிக்தவிஷயத்தில் ப்ராவண்யத்தைத் தவிர்த்து, உன் திருவடிகளில் என்னை ப்ரவணனாக்கினவனே! உத்க்ராந்தித3ஶையிலுங்கூட உன் திருவடிகளை நான் இளையாது ஏத்தும்படி பிரானே!க்ருபைபண்ணியருளவேணும் என்கிறார்.
நான்காம் பாட்டு
எனக்கேயாட் செய்எக் காலத்தும் என்று*என்
மனக்கே வந்துஇடை வீடின்றி மன்னி*
தனக்கே யாக எனைக்கொள்ளும் ஈதே*
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.
அவ:- (எனக்கே) தம்மை அடிமை செய்வித்திக்கொள்ளும் படியை எம்பெருமானக் கற்பிக்கிறார்.
வ்யா:- ‘’ஸர்வகாலமும் எனக்கே அடிமைசெய்’’ என்று திருவாயாலே அருளிச்செய்தருளி, ஒரு க்ஷணமாத்ரமொழியாமே என் நெஞ்சிலே புகுந்து இருந்தருளி, தாம் சாத்தியருளும் சாத்து, சந்த3னம், திருமாலை, திருப்பரிவட்டங்கள்போலே என்னைத் தனக்கே ஶேஷமாகக்கொள்ளும் இதுவே எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பு என்கிறார்.
ஐந்தாம் பாட்டு
சிறப்பில் வீடு சுவர்க்க நரகம்*
இறப்பி லெய்துக எய்தற்க* யானும்
பிறப்பில் பல்பிற விப்பெரு மானை*
மறப்பொன் றின்றிஎன் றும்மகிழ் வேனே.
வ்யா:- (சிறப்பில்) தே3ஹாமே ஆத்மாவாகலாம், தே3ஹாதிரிக்த்மாய் நித்யஸித்3த4ஜ்ஞாநகு3ணமான அஹமர்த்த2மே ஆத்மாவாகலாம். அதில் ஓர் ஆத3ரமில்லை; கர்ம நிப3ந்த4நமான ஜந்மரஹிதனாய்வைத்து ஆஶ்ரித பரித்ராணார்த்த2 – மாக தே3வ மநுஷ்யாதி3ரூபேண வந்து பிறந்தருளும் ஸ்வபா4வனா யிருந்த எம்பெருமானுடைய ஸர்வ தி3வ்யாவதாரங்களையும், ஸர்வ தி3வ்யசேஷ்டிதங்களையும், ஸர்வகல்யாண கு3ணங்களையும் மறவாதே என்றும் அநுப4விக்கப் பெறவேணும் என்கிறார்.
ஆறாம் பாட்டு
மகிழ்கொள் தெய்வம் உலோகம் அலோகம்*
மகிழ்கொள் சோதி மலர்ந்தஅம் மானே!*
மகிழ்கொள் சிந்தைசொல் செய்கைகொண்டு* என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்கவா ராயே.
வ்யா:- (மகிழ்கொள்) பரமகாருண்யத்தாலே இஜ்ஜக3த்தை யெல்லாம் படைத்தருளினவனே! என்னுடைய ஸர்வகரணங்களாலும் ஸர்வகாலமும் த்வத3நுப4வைக ஸ்வபா4வனாய்க் கொண்டு உன்னை அநுப4விக்கும்படி வந்தருளவேணும் என்கிறார்.
ஏழாம் பாட்டு
வாராய் உன்திருப் பாத மலர்க்கீழ்*
பேரா தேயான் வந்துஅடை யும்படி
தாராதாய்!* உன்னை யென்னுள் வைப்பில்என்றும்
ஆரா தாய்* எனக்குஎன்றும்எக் காலே.
வ்யா:- (வாராய்) உன்னுடைய நிரவதி4கபோ4க்3யதையை எனக்குக்காட்டிவைத்து உன்னை ப4ஜிக்கத் தாராதிருக்கிற நீ, ஸர்வகாலமும் உன் திருப்பாதமலர்க்கீழ் பேராதே யான் வந்தடையும்படி, பிரானே! வாராய் என்கிறார்.
எட்டாம் பாட்டு
எக்காலத் தெந்தையாய்என்னுள் மன்னில்*மற்று
எக்கா லத்திலும் யாதொன்றும் வேண்டேன்*
மிக்கார் வேத விமலர் விழுங்கும்*என்
அக்காரக் கனியே! உன்னை யானே.
வ்யா:- (எக்காலத்து) ‘எக்காலமும் என்னை எல்லா அடிமையும் செய்வித்துக்கொண்டு என்னுள்ளே மன்னில், உன்னைப் பின்னை ஒருகாலமும் ஒன்றும் அபேக்ஷிக்கிறிலேன்’ என்று கொண்டு எம்பெருமானை அபேக்ஷித்து, பின்னையும் எம்பெருமானுக்கு அடிமை செய்கையிலுள்ள ஸ்ப்ருஹையாலே, ‘எம்பெருமானை உள்ளபடிகண்டு அநுப4விக்கிற மஹாத்மாக்கள் ஆரோ?’ என்கிறார்.
ஒன்பதாம் பாட்டு
யானே என்னை அறியகி லாதே*
யானே என்தனதே என்றிருந்தேன்*
யானே நீஎன் னுடைமையும் நீயே*
வானே யேத்தும்எம் வானவ ரேறே.
வ்யா:- (யானே) நானும் என்னுடைமையும் உனக்கே அடிமையாயிருக்கச் செய்தே, இதுக்கு முன்பு போனகாலமெல்லாம் ‘’ உனக்கு அடிமை’’ என்னுமிடத்தை அறியாதே, நானென்றும், என்னுடையதென்றும் உண்டான ஸ்வாதந்த்ர்யாபி4மாநத்தாலே நஷ்டனானேன் – என்று தம்முடைய இழவை அநுஸந்தி4த்து அத்யந்தம் அவஸந்நராய், ‘’ஸ்வப4வத ஏவ அஸ்க2லித ஜ்ஞாநராய், ஒரு க்ஷணமாத்ரமும் எம்பெருமானை இழவாதே திருநாட்டிலே யிருந்து அநுப4விக்கிறவர்க்ள் ஆரோ?’’ என்கிறார்.
பத்தாம் பாட்டு
ஏறேல் ஏழும்வென்று ஏர்கொ ளிலங்கையை*
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி!*
தேறே லெ(னெ)ன்னை உன்பொன்னடிச் சேர்த்து ஒல்லை*
வேறே போகஎஞ் ஞான்றும் விடலே.
வ்யா:- (ஏறேல்) ‘இந்த ப்ராப்யத்தைப் பெறுகைக்கு ப்ரதிப3ந்த4கங்கள் உளவே’ என்னில். ‘அவற்றையெல்லாம் – நப்பின்னைப் பிராட்டிக்கும், அஶோகவநிகையில் பிராட்டிக்கும் உன்னோடு ஸம்ஶ்லேஷிக்கைக்கு ப்ரதிப3ந்த4கங்களை நீயே போக்கினாற் போலே போக்கியருளி, உன் திருவடிகளிலே என்னை ஈண்டினச் சேர்த்தருளி, உன் திருவடிகளில், தி3வ்யரேகை2போலே பின்னை ஒருகாலமும் உன்னைப் ப்ரியாததொருபடி பண்ணியருள வேணும்; இப்படி இக்ஷணமே செய்தருளாவிடில் ஒன்றும் த4ரியேன்’ என்கிறார்.
பதினொன்றாம் பாட்டு
விடலில் சக்கரத் தண்ணலை* மேவல்
விடலில் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்*
கெடலி லாயிரத் துள்இவை பத்தும்*
கெடலில் வீடுசெய் யும்கிளர் வார்க்கே.
வ்யா:- (விடலில்) இப்படி ஆழ்வார் அபேக்ஷிக்க, அபேக்ஷித்தபடியே திருமலையிலே புகுந்தருளி, ஆழ்வாரோடே, திருவாழியாழ்வானோடு ஸம்ஶ்லேஷித்தாற்போலே ஒருகாலும் பிரியாதபடி ஸம்ஶ்லேஷித்த எம்பிருமானைச் சொன்ன இத்திருவாய்மொழி வல்லார் ஆழ்வார்பெற்ற பேறு பெறுவர் என்கிறார்.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
ப்ரவேஶம் 2-10
கிளரொளி– ப்ரவேஶம்
(கிளரொளி) இப்படி தம்மோடு கலந்தருளின் எம்பெருமான் நின்றருளின திருமலையை அநுப4விக்கிறார்.
முதல் பாட்டு
கிளரொளி யிளமை கெடுவதன் முன்னம்*
வளரொளி மாயோன் மருவிய கோயில்*
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ் சோலை*
தளர்வில ராகில்(ச்) சார்வது சதிரே.
வ்யா:- யாதொன்றிலே நின்றருளுகையாலே, அங்குத்தைச் சோலைபோல எம்பெருமானுடைய திருவுடம்பு அதிஶீதளமாய் அதிவர்த்தி4ஷ்ணுவான ஔஜ்ஜ்வல்ய யௌவநாதி3 கல்யாண கு3ணங்களையுடைத்தாயிற்று, அங்ஙனேயிருந்த திருமாலிருஞ்சோலையை, உங்களுக்குக் கரணபாடவமுள்ளபோதே உங்களுடைய க்லேஶமெல்லாம் தீரும்படி என்று பு4ஜியுங்கள்; இது பரமப்ராப்யம் என்கிறார்.
இரண்டாம் பாட்டு
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது*
அதிர்குரல் சங்கத்து அழகர்தம் கோயில்*
மதிதவழ் குடுமி மாலிருஞ் சோலை*
பதியது ஏத்தி எழுவது பயனே.
வ்யா:- (சதிரிளமடவார்) ப்ராக்ருத விஷயங்களில் ப்ராவண்யத்தை விட்டு, ப்ரதிகூலஹ்ருத3ய பே4த3கமான தி3வ்ய த்4வனியை யுடைத்தான ஸ்ரீபாஞ்சஜந்யத்தை ஏந்துகையாலே நிரவதி4கமான அழகையுடையனாய், அத்தாலே ‘’அழகர்’’ என்னும் திருநாமத்தை யுடையனான எம்பெருமானுக்குக் கோயிலாய், பரிபூர்ண சந்த்3ரமண்ட3லத்தாலே அலங்க்ருதமான ஶிக2ரங்களையுடைத்தான திருமாலிருஞ்சோலைப்பதியை ஏத்தி எழுங்கள்; அதுவே பரமப்ரயோஜநம் என்கிறார்.
மூன்றாம் பாட்டு
பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே!*
புயல்மழை வண்ணர் புரிந்துறை கோயில்*
மயல்மிகு பொழில்சூழ் மாலிருஞ் சோலை*
அயல்மலை யடைவது அதுக ருமமே.
வ்யா:- (பயனல்ல) ப்ரயோஜந ஶூந்யமாயிருந்த செயல்களைச் செய்து ஒரு ப்ர்யோஜநமில்லை, நெஞ்சே! ஆதலால் அவற்றைத் தவிர்ந்து ஆஶ்ரிதர்க்கு ஆத்மதா3நம் பண்ணிக் கொண்டு நிற்கிற கோயிலாய், தன்னுடைய போ4க்3யதையாலே ப்ரவிஷ்டரையும் மதி3ப்பியாநின்ற பொழில்களையுடைத்தான மாலிருஞ்சோலையினுடைய அயன்மலை அடைவது; அதுவே நமக்குப் பரமஹிதம் என்கிறார்.
நான்காம் பாட்டு
கருமவன் பாசம் கழித்துழன் றுய்யவே*
பெருமலை யெடுத்தான் பீடுறை கோயில்*
வருமழை தவழும் மாலிருஞ் சோலை*
திருமலை யதுவே அடைவது திறமே.
வ்யா:- (கருமம்) நிரஸ்தப்ரதிப3ந்த4கராய்க்கொண்டு தன் திருவடிகளிலே நாம் அடிமைசெய்து உஜ்ஜீவிக்கைக்காகவே, பரமகாருணிகனான தான் வந்துறைகிண்ற ஸமஸ்தஸ்ந்தாப நாஶகமான திருமலையை அடைகையே அடிமை செய்கைக்கு உபாயம் என்கிறார்.
ஐந்தாம் பாட்டு
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது*
அறமுய லாழிப் படையவன் கோயில்*
மறுவில்வண் சுனைசூழ் மாலிருஞ் சோலை*
புறமலை சாரப் போவது கிறியே.
வ்யா:- (திறமுடை) விரகாலும் ப3லத்தாலும் தீவினை பெருக்காதே, ஆஶ்ரிதரக்ஷணைக ஸ்வபா4வனான திருவாழியை தி3வ்யாயுத4மாகவுடையனானவன் நின்றருளுகிற, நிர்மலமாய், ஸர்வபோ4க்3யமாயிருந்த சுனைகளையுடைத்தான மாலிருஞ்சோலை மலையினுடைய புறமலை சாரப் போவது பரமப்ராப்யம் என்கிறார்.
ஆறாம் பாட்டு
கிறியென நினைமின் கீழ்மைசெய் யாதே*
உறியமர் வெண்ணெய் உண்டவன் கோயில்*
மறியொடு பிணைசேர் மாலிருஞ் சோலை*
நெறிபட அதுவே நினைவது நலமே.
வ்யா:- (கிறியென) இத்தையே, பரமப்ராப்யமென்று நினையுங்கள்; வேறொன்றை ப்ராபயமென்று நினையாதே, உறியமர் வெண்ணெயுண்டவன் அச்சுவடழியாமே புகுந்து நின்றருளுகிற ஸர்வபோ4க்3யமான திருமலையை அநந்யப்ரயோஜநராய்க் கொண்டு நினைக்குமதுவே ப்ராப்யம் என்கிறார்.
ஏழாம் பாட்டு
நலமென நினைமின் நரகழுந் தாதே*
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்*
மலமறு மதிசேர் மாலிருஞ் சோலை*
வலமுறை யெய்தி மருவுதல் வலமே.
வ்யா:- (நலம்) இதுவே ப்ராப்யமென்று நினையுங்கள். வேறொன்றை ப்ராப்யமாக நினையாதே, நிலமுனமிடந்தான் என்றைக்கும் தனக்குக் கோயிலாகக் கொண்ட பரமபுருஷ நிர்மல ஜ்ஞாநஜநகமான திருமலையை அநந்யப்ரயோஜநராய்க்கொண்டு வலம் செய்து மருவுங்கள்; இதுவே பரமப்ராப்யம் என்கிறார்.
எட்டாம் பாட்டு
வலஞ்செய்துவைகல் வலங்கழியாதே*
வலஞ்செய்யும் ஆயமாயவன்கோயில்*
வலஞ்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை*
வலஞ்செய்துநாளும் மருவுதல்வழக்கே.
வ்யா:- (வலம் செய்து) ஹேயவிஷயங்களிலே விநியோகி3த்து அருமந்த ப2லத்தைப் போக்காதே, ஆஶ்சர்யபூ4தனாய் ஆஶ்ரிதஸுலப4னாயிருந்த எம்பெருமானும், அயர்வறுமமரர்களும் வலம்செய்துகொண்டு அநுப4விக்கிற திருமாலிருஞ்சோலையை வலம்செய்து நாளும் மருவுகை வழக்காவது என்கிறார்.
ஒன்பதாம் பாட்டு
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது*
அழக்கொடி யட்டான் அமர்பெருங் கோயில்*
மழக்களிற் றினம்சேர் மாலிருஞ் சோலை*
தொழக்கரு துவதே துணிவது சூதே.
வ்யா:- (வழக்கென) வேறொன்றை யுக்தமென்று பாராதே, இதுவே யுக்தமென்று பார்த்து, ‘ஆஶ்ரிதவிரோதி4நிரஸந ஸ்வபா4வனாயிருந்தவனுடைய அபி4மதமான தி3வ்ய ஸ்தா2நமாய், ஸர்வாத்ம போ4க்3யமாயிருந்த திருமலையைத் தொழுவோம்’ என்று உண்டான ஸங்கல்போத்3யோக3மாத்ரத்தைப் பண்ணுகை அவனுக்கு அடிமை செய்கைக்கு நல்ல உபாயம் என்கிறார்.
பத்தாம் பாட்டு
சூதென்று களவும் சூதும்செய் யாதே*
வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில்*
மாதுறு மயில்சேர் மாலிருஞ் சோலை*
போதவிழ் மலையே புகுவது பொருளே.
வ்யா:- (சூதென்று) ‘புருஷார்த்த2மான செயலைச் செய்கிறோம்’ என்றுகொண்டு சௌர்யக்ருத்ரிமங்களைச் செய்யாதே, ‘‘ஸர்வவேத3ங்களுக்கும் தானே ப்ரதிபாத்3யன்’’ என்னுமிடத்தை ஸ்ரீ கீ3தையாலே அருளிச்செய்தருளின அந்த மஹா கு3ணத்தையுடைய எம்பெருமான் தனக்குங்கூட ஸ்ப்ருஹணீய மான திருமலையிலே போய்ப் புகுவதுவே பரமபுருஷார்த்தம் என்கிறார்.
பதினொன்றாம் பாட்டு
பொருளென்றுஇவ் வுலகம் படைத்தவன் புகழ்மேல்*
மருளில்வண் குருகூர் வண்சட கோபன்*
தெருள்கொள்ளச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்து* அருளுடை யவன்தாள் அணைவிக்கும் முடித்தே.
வ்யா:- (பொருள் என்று) ‘ஸம்ஸாரிகளான ஆத்மாக்களினுடைய ஸம்ருத்3தி4யே நமக்கு ப்ரயோஜநம்’ என்று பார்த்து, தத்ஸம்ருத்3த்4யர்த்த2மான ஜக3த் ஸ்ருஷ்டியைப் பண்ணியருளினவன் கு3ணங்களில் ஓர் அஜ்ஞாந க3ந்த4மின்றியே யிருந்த வண்குருகூர்ச்சடகோபன். எல்லாருக்கும் எம்பெருமானை ப்ர்த்யக்ஷித்தாற்போலே அறியலாம்படி சொன்ன இப்பத்து அழகர் திருவடிகளிலே சேர்வித்து முடிக்கும் என்கிறார்.
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்
திருவாய்மொழி இரண்டாம் பத்து ஆறாயிரப்படி வ்யாக்2யானம் முற்றிற்று.