ஸ்ரீ:
ஆழ்வார் திருவடிகளே ஶரணம்
மதுரகவியாழ்வார் திருவடிகளே ஶரணம்
ஸ்ரீமந்நாதமுனிகள் திருவடிகளே ஶரணம்
எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்
ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த
திருவாய்மொழி
பரமகாருணிகரான நஞ்சீயர் அருளிச்செய்த
ஒன்பதினாயிரப்படி வ்யாக்2யாநம்
இரண்டாம்பத்து – முதல் திருவாய்மொழி
வாயும்திரையுகளும் ப்ரவேசம்
“மணியை வானவர் கண்ணனைத் தன்னதோரணியை” (1-10-11), என்று – நம்பியுடைய ஸௌலப்4யத்தையும் வேண்டப்பாட்டையும் அழகையும் அநுஸந் தி4த்து பா3ஹ்ய ஸம்ஸ்லேஷத்திலே ப்ரவ்ருத்த ராய், அது கைவாராதொழி ந்தும், இவ்வளவும் வர ப4க3வத்3கு3ணங்க ளிலே அவகா3ஹித்துப் பிரிகை யாலும், அஞ்சிறைய மடநாரையிற் (1-4), போலுமின்றியே தூ3தப்ரேஷணத்து க்கு ஆளில்லாதபடி தம்மைப் போலே எல்லாப் பதா3ர்த்த2ங்களும் எம்பெருமானைப் பிரிந்து நோவு படுகிறனவாக அநுஸந்தி4த்துக் கலங்கி, அத்தாலும் மிகவும் விஷண்ண ரான ஆழ்வார் தம்முடைய த3சையை அந்யாபதே3சத்தாலே அருளிச்செய்கிறார்; எம்பெருமானோடே புணர் ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி, மஹாந்த4காரமான மத்4யராத்ரத்திலே தன் ஆற்றாமை கைகொடுக்கக் கடற்கரையோடு தோள்தீண்டியான க்3ருஹோ பவநத்திலே சென்று, ராமவிச்லேஷ ப்ரஸங்க3த்திலே தம்முடைய த4ரியாமைக்கு நீர்பிரிந்த மத்ஸ்யத்தை த்3ருஷ்டாந்தமாய்ச் சொல்லும் இளையபெருமாளையும் பிராட்டியையும் போலன்றியே, எல்லா லோகத்தில் அந்யபரமான ஸகல பதா3ர்த்த2ங்களும் தன்னைப்போலே எம்பெருமானைப் பிரிந்து நோவுபடுகிறனவாகக் கொண்டு, அவற்றினுடைய து3:க்கா2நுஸந்தா4நத்தாலும் தன்னுடைய து3:க்க2ம் இரட்டித்து, து3:க்கி2தர் து3:க்கி2தரோடே கூடி ப்ரலாபித்து த4ரிக்குமாபோலே அவற்றோடே ப்ரலாபித்து த4ரிக்கிறாள்.
முதல் பாட்டு
*வாயும் திரையுகளும் கானல் மடநாராய்!*
ஆயும் அமருலகும் துஞ்சிலும்நீ துஞ்சாயால்*
நோயும் பயலைமையும் மீதூரஎம்மேபோல்*
நீயும் திருமாலால் நெஞ்சங்கோட் பட்டாயே.
அவ:- முதற் பாட்டில் – ஆமிஷார்த்த2மாக ஏகாக்3ரசித்தமா யிருக்கிறதொரு நாரையைக்கண்டு, தன்னைப்போலே எம்பெருமானாலே அபஹ்ருத சித்தையாயிருக்கிற தாகக்கொண்டு, ‘ஐயோ! நீயும் இங்ஙனே பட்டாயாகாதே?’ என்கிறாள்.
வ்யா:- (வாயும் என்று தொடங்கி) வருகிற திரைகள் தலைமேலே போக, அத்தால் வந்த து3:க்க2பரிப4வங்களைப் பொறுத்திருக்கிற நெய்தல் நிலத்தில் நாராய்! என்னுடைய வ்யஸநத்திலே உறங்காத தாயும், உறங் காமையே ஸ்வபா4வமான தே3வலோகமும் உறங்கக்கூடிலும் நீ உறங்கு கிறிலை. (நோயும் என்று தொடங்கி) விரஹ வ்யஸநமும் அத்தால் வந்த வேறுபாடும் மிகவும் அபி4ப4விக்க எம்மைப்போலே நீயும் மைந்தன் மலராள் மணவாளனாலே (1-10-4) நெஞ்சு பறியுண்டாயோ?
இரண்டாம் பாட்டு
கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே!*
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்*
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்*
தாட்பட்ட தண்துழாய்த் தாமம்காமுற்றாயே.
அவ:- இரண்டாம் பாட்டில் – விஸ்லிஷ்டமான அன்றிலினுடைய தா3ருண த்4வநியைக்கேட்டு அத்தைக்குறித்து சோகிக்கிறாள்.
வ்யா:- (கோட்பட்ட என்று தொடங்கி) அபஹ்ருதமான நெஞ்சையு டையையாய், கேட்டார்க்கும் பிழைக்கவொண்ணாதபடி தா3ருண த்4வநி யையுடைய அன்றிலே! அறநெடிய சாமங்கள் படுக்கையிற்சேராதே கண்டார்க்கு த3யநீயமாம்படி நோவுபடா நின்றாய். (ஆட்பட்ட என்று தொடங்கி) அடிமைச் சுவட்டிலே அகப்பட்ட எங்களைப் போலே து3:க்க2ம் பொறுக்கமாட்டாத நீயும் – பெரிய பிராட்டியாரும் தானும் கூடத் திருவணைமேலே கண்வளர்ந்தருளு மிடத்தில் அந்தரங்க3 ஸேவையை ஆசைப்பட்டு இங்ஙனே படுகிறாயே?
மூன்றாம் பாட்டு
காமுற்ற கையறவோடு எல்லே! இராப்பகல்*
நீமுற்றக் கண்துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்*
தீமுற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள்நயந்த*
யாமுற்றது உற்றாயோ? வாழி கனைகடலே!
அவ:- மூன்றாம் பாட்டில் – கோ4ஷிக்கிற கடலைக்கண்டு, ஐயோ! நீயும் ராம கு3ணத்திலே அகப்பட்டு நான் பட்டதே பட்டாயாகாதே! என்கிறாள்.
வ்யா:- (காமுற்ற கையறவோடு) ஆசைப்பட்ட பொருள் பெறாமையால் வந்த வ்யஸநத்தோடே; ‘எல்லே’ என்று – தோழியை ஸம்போ3தி4க்கு மாபோலே, துணையாகையாலே அத்தை ஸம்போ3தி4 க்கிறாள். (இரா என்று தொடங்கி) உறங்காமைக்குக் கண்ட பகலோடு உறங்குகைக்குக் கண்ட இரவோடு வாசியின்றிக்கே ஒருகாலும் உறங்குகிறிலை; ஹ்ருத3யம் சிதி2லமாய் த4ரிப்பின்றியே ஏங்கா நின்றாய். (தீமுற்ற என்று மேலுக்கு) அக்3நி ஹ்ருஷ்டமாம்படியாக லங்கையை விருந்திட்ட பெருமாளுடைய திருவடிகளை ஆசைப்பட்ட நாங்கள் பட்டதே பட்டாயன்றே? (முற்ற) என்று – லங்கையை எல்லாம் என்றுமாம்.
நான்காம் பாட்டு
கடலும் மலையும் விசும்பும் துழாய்எம்போல்*
சுடர்கொள் இராப்பகல் துஞ்சாயால் தண்வாடாய்!*
அடல்கொள் படையாழி அம்மானைக் காண்பான்நீ*
உடலம்நோ யுற்றாயோ ஊழிதோ றூழியே.
அவ:- நாலாம் பாட்டில் – ஸஞ்சரிக்கிற காற்றைக்கண்டு நீயும் என்னைப்போலே க்ருஷ்ணனுடையகையும் திருவாழியும் காண ஆசைப்பட்டு நோவுபட்டாயோ? என்கிறாள்.
வ்யா:- (கடலும் என்று தொடங்கி) கடலிலும் மலையிலும் விசும்பி லும் ஓரிடமொழியாமே தேடிக்கொண்டு எம்பெருமானாலல்லது செல்லாதே அலமருகிற எங்களைப்போலே. (சுடர்கொளிராப்பகல்) விச்லேஷ வ்யஸநத்தாலே நெருப்பையுருக்கி வார்த்தாற்போலேயிருக் கிற இராவும் பகலும்; சந்த்3ரஸூர்யர்களுடைய இரவும் பகலும் என்று மாம். (துஞ்சாயால்) உறங்குகிறிலை. (அடல்கொள் என்று தொடங்கி) பா4ரத ஸமரத்தில் சக்ரோத்3தா4ர த3சையில் விபக்ஷஸேநையடைய மண்ணுண்ணும் படியான திருவாழியைக் கையிலே உடையனான ஸர்வேச்வரனைக் காண்கைக்காக நெடுங்காலமெல்லாம் சென்று ஶரீரத்தோடே முடியும் நோய் நீ கொண்டாயே?
ஐந்தாம் பாட்டு
ஊழிதோறூழி உலகுக்கு நீர்கொண்டு*
தோழியரும் யாமும்போல் நீராய் நெகிழ்கின்ற*
வாழிய வானமே! நீயும் மதுசூதன்*
பாழிமையில் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – நீராய் இற்று விழுகிற மேக4த்தைக் கண்டு “என்னைப்போலே எம்பெருமானுடைய கு3ணசேஷ்டிதாதி3களிலே அகப்பட்டு, அத்தாலே நோவுபடுகிறாய்” என்று ஶோகிக்கிறாள்.
வ்யா:- (ஊழி என்று தொடங்கி) கல்பந்தோறும் கல்பந்தோறும் லோகமெல்லாம் வெள்ளமிடவேண்டும் நீரைக்கொண்டு தோழி மாரைப் போலேயும் எங்களைப்போலேயும் நீராய் நெகிழாநின்றுள்ள வானமே! உன்னுடைய அவஸாத3ம் நீங்கி வாழ்ந்திடுக; (நீயும் என்று தொடங்கி) எங்களைப்போலே நீயும் ஆச்ரித விரோதி4களைப் போக்கும் ஸ்வபா4வ னானவனுடைய வீர்யகு3ணத்திலே அகப்பட்டு, அவன் பக்கலுண்டான நசையாலே நோவுபடுகிறாயே? பாழிமை என்று – இடமுடைமையுமாம்.
ஆறாம் பாட்டு
நைவாய எம்மேபோல் நாள்மதியே! நீஇந்நாள்*
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்*
ஐவாய் அரவணைமேல் ஆழிப் பெருமானார்*
மெய்வாச கம்கேட்டுஉன் மெய்ந்நீர்மைதோற்றாயே?
அவ:- ஆறாம் பாட்டில் – கலாமாத்ரமாம்படி தேய்ந்த சந்த்3ரனைக் குறித்து “நீயும் எம்பெருமானுடைய அஸத்யவசநத்தை விச்வஸித்து நான் பட்டது பட்டாயாகாதே?” என்கிறாள்.
வ்யா:- (நைவு என்று தொடங்கி) விரஹவ்யஸநத்தாலே நைகிற எங்களைப்போலே பண்டு பூர்ணனான சந்த்3ரனே!, இப்போது மைபோலே யிருக்கிற இருளை ஆகாசத்தினின்றும் போக்குகிறிலை; ஒளிமழுங்கித் தேயாநின்றாய். மைவானிருள் – மிக்க இருள் என்றுமாம். (ஐவாய் அரவணை என்று மேலுக்கு) பல்வார்த்தை சொல்லுகைக்கு ஐந்து வாயை யுடைய திருவனந்தாழ்வானோடும், ஜயத்3ரத2வத4த்திலே பகலை இரவாக் கின பொய்க்குப் பெருநிலைநின்ற திருவாழியாழ்வானோடும் பழகி அவர்களும் தன் பக்கலிலே பொய் ஓதவேண்டும்படி பெரியனான எம்பெருமான். 1. “एतद् व्रतं मम” (ஏதத்3வ்ரதம் மம) என்ற பெரும் பொய்யை மெய்யாகக் கருதி உன்னுடைய உடம்பில் அழகிய ஒளியை இழந்தாயே?
ஏழாம் பாட்டு
தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு* எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீநடுவே*
வேற்றோர் வகையில் கொடிதாய் எனையூழி*
மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனையிருளே!
அவ:- ஏழாம் பாட்டில் – பரஸ்பரம் காணவொண்ணாதபடி மூடின அந்த4காரத்தைக் குறித்து, ‘எங்களை எத்தனை காலம் நலியக்கடவை?’ என்கிறாள்.
வ்யா:- (தோற்றோம் என்று தொடங்கி) சபலமான நெஞ்சை எம்பெருமானுடைய ஆஶ்ரிதஸுலப4த்வாதி3 கு3ணங்களாலே இழந்தோம்; எங்கள் த4ரியாமை சொல்லி ப்ரலாபிக்கிற எங்களை விரோத4ம் பண்ணு கைக்கு ஒரு ஹேதுவின்றியே யிருக்கச்செய்தே, ஆபத்து வந்தால் ஶத்ருக் களும் ஐயோவென்பர், அவர்களிற்காட்டிலும் கொடிதான படியையுடை யையாய். (மாற்றாண்மை நிற்றியோ) ஶாத்ரவத்திலே நிற்கக்கடவை யோ? (வாழி) பா3தி4யாமைக்கு மங்க3ளாஶாஸநம். (கனையிருளே) செறிந்த இருளே! “தம:பதா3ர்த்த2ந்தான் மழுங்கியிருக்கை ஸ்வபா4வ மிறே” என்று பாரதே, எம்பெருமானைப் பிரிந்த அதிமாத்ர து3:க்க2த்தாலே ஒளியும் மழுங்கி, வாய் திறந்து கதறவும் மாட்டாதே இருக்கிறதாகக் கொண்டு “பண்டே நோவுபடுகிற எங்களை உன்னுடைய து3:க்க2த்தைக் காட்டி என்னுடைய ஸத்ருக்கள் நலியும் நலிவும் ஸுக2மென்னும்படி கொடியையாய்க்கொண்டு எத்தனை காலம் நலியக்கடவை? ஐயோ உனக்கு து3:க்க2ம் நீங்குக” என்றுமாம்.
எட்டாம் பாட்டு
இருளின் திணிவண்ணம் மாநீர்க் கழியே! போய்*
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும்நீ துஞ்சாயால்*
உருளும் சகடம் உதைத்த பெருமானார்*
அருளின் பெருநசையால் ஆழாந்து நொந்தாயே?
அவ:- எட்டாம் பாட்டில் – இருளாலே ஜலஸ்த2லவிபா4க3 மறியாதே ஒருகழியிலே சென்று “நீயும் என்னைப்போலே எம்பெருமான் பக்கல் நசையாலே தரைப்பட்டு நொந்தாயாகாதே!” என்கிறாள்.
வ்யா:- (இருள் என்று தொடங்கி) இருள் செறிந்தாற்போலேயிருக் கிற பெருநீரையுடைய கழியே! மிகவும் அறிவுகெட்டு, காலம்முடியிலும் நீ முடிகிறிலை. (உருளும் சகடம் என்று மேலுக்கு) அஸுராவேசத்தாலே உருளுகிற சகடத்தை உதைத்த உபகாரத்தாலே சேதநரையெல்லாம் அடிமைகொண்ட க்ருஷ்ணன் அவ்வாபத்தை நீக்கினாற்போலே இவ்வாபத்துக்கு உதவுமென்னும் பெருநசையாலே முடியாதே ஆழவிழுந்து நோவு பட்டாயே?
ஒன்பதாம் பாட்டு
நொந்தாராக் காதல்நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த*
நந்தா விளக்கமே! நீயும் அளியத்தாய்*
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவா யெம்பெருமான்*
அந்தாமத் தண்துழாய் ஆசையால் வேவாயே?
அவ:- ஒன்பதாம் பாட்டில் – ஆற்றாமையாலே தன் மாளிகையிலே புகுந்து அங்கே எரிகிற விளக்கைக் கண்டு, ப4க3வத்3 விச்லேஷத்தாலே வெதும்புகிறதாகக்கொண்டு, ‘என்னைப்போலே நீயும் இங்ஙனே பட்டாயாகாதே?’ என்கிறாள்.
வ்யா:- (நொந்தாரா என்று தொடங்கி) விடாதே நலிகிற ப்ரேம வ்யாதி4, ப4க3வத்3கு3ணாநுஸந்தா4நத்தாலே நைந்திருக்கிற ஆத்மாவை உள்ளுள்ள பசையெல்லாம் அறும்படி உலர்த்த, விச்சே2தி3யாதே உருவச் செல்லுகிற விளக்கே! நானேயன்றிக்கே நீயும். (அளியத்தாய்) அருமந்த நீ. (செந்தாமரைத் தடங்கள் என்று மேலுக்கு) அப்போதலர்ந்த செந்தமரைப் பூப்போலேயாய், பெருத்திருக்கிற திருக்கண்களாலே நோக்குகை பூர்வக மாக ஸாந்த்வநம்பண்ணித் திருத்தோளில் தோள் மாலையை வாங்கித் தோளிலேயிட்டு அவன் பண்ணும் ப்ரஸாத3த்தை நினைத்து, அதில் ஆசை யாலே பரிதபிக்கிறாயே?
பத்தாம் பாட்டு
வேவாரா வேட்கைநோய் மெல்லாவி யுள்ளுலர்த்த*
ஓவாது இராப்பகல் உன்பாலே வீழ்த்தொழிந்தாய்*
மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்ணளந்த*
மூவா முதல்வா! இனிஎம்மைச் சோரேலே.
அவ:- பத்தாம் பாட்டில் – இப்படி தன்னுடைய அவஸாத3மெல் லாம் தீருமப்டி வந்து ஸம்ஶ்லேஷித்த எம்பெருனாமைக்குறித்து, ‘இனி ஒருநாளும் என்னை விடாதொழியவேணும்’ என்று அவனை அர்த்தி2க்கி றார்.
வ்யா:- (வேவாரா என்று தொடங்கி) சிலநாள் நலிந்து விடக்கடவ தன்றிக்கே, மேன்மேலென மிகவும் நலியக்கடவதான விரஹவ்யஸநம் பா4ரமில்லாத ஆத்மாவை மிகவும் நோவுபடுத்த, நிரந்தரமாக உன்னுடைய கு3ணசேஷ்டிதாதி3களைக்காட்டி என்னை அகப்படுத்திக் கைவிட்டாய். (மாவாய் பிளந்து என்று மேலுக்கு) கேசியை நிரஸித்து, யமளார்ஜுநங்களின் நடுவே போய், திருவுலகளந்தருளி மஹாப3லியால் வந்த ஆபத்தை இந்த்3ரனுக்குப் போக்கியருளி, ஒன்றுஞ்செய்யாதாரைப் போலே மீளவும் ஜக3த்3ரக்ஷணத்திலே ஒருப்படுமாபோலே, என்னுடைய ப்ரதிப3ந்த4கத்தைப்போக்கி இம்மஹாவஸாத3த்திலே வந்து ஸம்ச்லேஷித்து என்னை உண்டாக்கினவனே!
பதினொன்றாம் பாட்டு
*சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே*
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்*
ஓரா யிரம்சொன்ன அவற்றுள் இவைபத்தும்*
சோரார் விடார்கண்டீர் வைகுந்தம் திண்ணனவே.
அவ:- நிக3மத்தில் – ‘இத்திருவாய்மொழி கற்றார் திருநாட்டிலே நித்யவாஸம் பண்ணப்பெறுவார்; இது நிஸ்சிதம்’ என்கிறார்.
வ்யா:- (சோராத என்று தொடங்கி) ஆழ்வாரோடே ஸம்ச்லேஷி த்து அவரை உளராக்குகையாலே ஒன்றொழியாமே ஸகல பதா3ர்த்த2த்துக்கும் ஈஶ்வரனானவன் திருவடிகளிலே, லோகத்தில் அந்யபரமான பதா3ர்த்த2ங்களெல்லாம் தம்மைப் போலே எம்பெருமானைப் பிரிந்து நோவுபடுகிறனவாக ப்4ரமிக்கைக்கீடான நிரவதி4க ப4க்தியையுடையரான ஆழ்வார். ஓராயிரம் – விலக்ஷண மாயிருக்கை.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
அவதாரிகை 2-2
திண்ணன்வீடு – ப்ரவேசம்
இரண்டாம் திருவாய்மொழியில் – கீழ் தமக்கு வந்த வ்யஸநாதிசயத்தை யும் மறக்கும்படி வந்த ப்ரீதி ப்ரகர்ஷத்தையும் அநுப4வித்து விஸ்மிதராயுள்ள ஆழ்வார், “இப்படி ப்ரீதராகைக்குக் காரணம் எம்பெருமான் நிரதிஶய போ4க்3யனாகையால்” என்றும், “இந்த போ4க்3யதைக்கு ஹேது, ஸ்ரஷ்ட்ருத்வ வாத்ஸல்ய ப்ரமுக2மான ஸமஸ்த கல்யாண கு3ணாத்மகனான ஸர்வேச்வரனாகை” என்றும் இம்முக2த்தாலே அவனுடைய ஈச்வரத்வத்தையும் அநுஸந்தி4த்து, அத்தை உபபாதி3க்கிறார்.
முதல் பாட்டு
திண்ணன் வீடு முதல் முழுதுமாய்*
எண்ணின் மீதியன் எம்பெரு மான்*
மண்ணும் விண்ணுமெல்லாம் உட னுண்ட*நம்
கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே.
அவ:- முதற் பாட்டில் – இஜ்ஜக3த்துக்கு க்ருஷ்ணனே ஈச்வரன் என்கிறார்.
வ்யா:- (திண்ணம்) த்3ருட4ம். (வீடுமுதல் முழுதுமாய்) மோக்ஷப்ரப்4ரு த்யசேஷ புருஷார்த்த2 ப்ரத3னாய். (திண்ணன் வீடுமுதல் முழுதுமாய்) ஒருநாளும் அழியாத பரமபத3ம் தொடக்கமான அசேஷ விபூ4தியை யுடையனாய் என்றுமாம். (எண்ணின் என்று தொடங்கி) அஸங்க்2யேய கல்யாணகு3ணங்களையுமுடையனாய், ப்ரளயாபத்து வந்தபோது பூ4மி தொடக்கமான ஸகலலோகத்தையும் தரம்பாராதே ஒக்கத் திருவயிற்றி லே வைத்துக்கொண்ட நம்முடைய க்ருஷ்ணனே இஜ்ஜக3த்துக்கு த்3ருஷ்டி. ‘நம் கண்ணன்’ என்று – ரக்ஷகத்வ ப்ரஸித்3தி4யைச் சொல்லுகிறது.
இரண்டாம் பாட்டு
ஏ! பா வம்பரமே ஏழுலகும்*
ஈபா வஞ்செய்து அருளால் அளிப்பாரார்*
மாபா வம்விட அரற்குப் பிச்சைபெய்*
கோபாலகோளரி ஏறன்றியே.
வ்யா:- (மாபாவம் என்று தொடங்கி) ருத்3ரனுக்கு, லோக கு3ருவாயும் பிதாவாயுமுள்ள ப்3ரஹ்மாவினுடைய சிரஸ்ஸை அறுக்கையில் வந்த மஹாபாபம் நீங்கும்படி அவனுடைய பி4க்ஷாபாத்ரமான கபாலத்தைத் தன் திருவுடம்பிலே ஸ்வேத3 ஜலத்தாலே நிறைப்பதுஞ்செய்து, இங்ஙனொத்த ஆபத்துக்களுக்கு உதவுகைக்காக ஸ்ரீ நந்த3கோ3பர் திருமகனாய் வந்து திருவவதாரம் பண்ணினவனாகையாலே மேனாணித்திருந்துள்ள எம்பெருமானன்றி!
மூன்றாம் பாட்டு
ஏறனைப் பூவனைப் பூமகள் தன்னை*
வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து*
மேல்தன்னை மீதிட நிமிர்ந்துமண் கொண்ட*
மால்தனில் மிக்கும்ஓர் தேவும் உளதே?
அவ:- மூன்றாம் பாட்டில் – ஸௌசீல்யத்தாலும், த்ரைவிக்ரம மான அதிமாநுஷ ப்ரவ்ருத்தியாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார்.
வ்யா:- (ஏறனை என்று தொடங்கி) ருஷப4வாஹநனையும், திரு நாபி4கமலத்திலே பிறந்த ப்3ரஹ்மாவையும், தனக்கு ஸ்ப்ருஹணீயை யான பெரியபிராட்டியாரையும் விஷயீகரிக்கும் ப்ரகாரத்தைக்கண்டு அயர்வறும் அமரர்கள் கொண்டாடும்படி, அவர்களைத் தரம்பாராதே தன் பக்கலிலே ஒக்க வைத்து. (மேல்தன்னை என்று தொடங்கி) மேல் லோகங்களையெல்லாம் விஞ்சும்படி அநாயாஸேந வளர்ந்து, பூ4ம்யந்தரிக்ஷாதி3 லோகங்களையெல்லாம் அளந்துகொண்ட அபரிச்சே2த்3ய மஹிமனான எம்பெருமானையொழிய வேறு ஈஸ்வரதயா ஸங்கிக்கலாம் தை3வம் உண்டோ?
நான்காம் பாட்டு
தேவும் எப்பொருளும்படைக்கப்*
பூவில் நான்முக னைப்ப டைத்த*
தேவன் எம்பெரு மானுக் கல்லால்*
பூவும் பூச னையும் தகுமே.
அவ:- நாலாம் பாட்டில் – பூவுக்கு ஈடான ஸௌந்த3ர்ய ஸௌகுமார்யங்களும், பூஜைக்கு ஈடான ப்ராதா4ந்யமும் எம்பெருமானையொழிய வேறு சிலர்க்கு இல்லாமையாலே அவனே ஸர்வேச்வரன் என்கிறார்.
வ்யா:- (தேவும் என்று தொடங்கி) தே3வமநுஷ்யாதி3 ஸகல பதா3ர்த் தங்களையும் உண்டாக்குகைக்காக வல்லனான ப்3ரஹ்மாவைத் திருநாபி4கமலத்திலே படைப்பதும் செய்து, தன்னுடைய ஸௌந்த3ர்யாதி3 களாலே என்னை அடிமை கொண்டவனுக்கல்லது.
ஐந்தாம் பாட்டு
தகும்சீர்த் தன்தனி முதலி னுள்ளே*
மிகுந்தே வும் எப்பொருளும் படைக்க*
தகும்கோலத் தாமரைக் கண்ண னெம்மான்*
மிகுஞ்சோ திமே லறிவார் யவரே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – புண்ட3ரீகாக்ஷனாகையாலே அவனே ஈச்வரன் என்கிறார்.
வ்யா:- (தகும் சீர்த் தன் தனி முதலினுள்ளே) ஸ்ரஷ்ட்ருத்வ சக்தி யுக்தமான தன்னுடைய ஸங்கல்பத்தினுள்ளே. “தனிமுதல் – ப்ரக்ருதி” என்று சொல்லுவர். (மிகும் தேவும் என்று தொடங்கி) ஐஸ்வர்யங்க ளாலே மிக்கிருந்த தே3வர்களையும், மற்றுமுள்ள பதா3ர்த்த2ங்களையு மெல்லாம் படைக்கத் தகும் என்னுமித்தைத் தெரிவியாநின்றுள்ள திருக்கண்களையுமுடையனாய், அவ்வழகாலே என்னை அடிமை கொண்டருளின எம்பெரு மானே பரதத்வம். (மேலறிவார் யவரே) இவனொழிய வேறு சில ஈஶ்வரர் களுண்டென்னுமிடத்துக்கு ப்ரமாணமில்லை.
ஆறாம் பாட்டு
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்*
கவர்வின்றித் தன்னு ளொடுங்க நின்ற*
பவர்கொள் ஞானவெள் ளச்சுடர் மூர்த்தி*
அவர்எம் மாழியம் பள்ளி யாரே.
அவ:- ஆறாம் பாட்டில் – சேதநாசேதநாத்மகமான ஸகல பதா3ர்த் த2ங்களையும் தன் திருவயிற்றிலே வைத்து ரக்ஷிக்கையாலே அவனே ஈஸ்வரன் என்கிறார்.
வ்யா:- (யவரும் யாவையும் எல்லாப்பொருளும்) சேதநாசேதந பதா3ர்த்த2ங்கள் ஒன்றுமொழியாமே எல்லாவற்றையும். (கவர்வின்றி என்று மேலுக்கு) ப்ரளயகாலத்துக்குப் பரஸ்பரம் நெருக்குப்படாதபடி திருவயிற்றிலே வைப்பதுஞ்செய்து, பரந்திருந்துள்ள ஜ்ஞாந வெள்ளத் தையும், தேஜோரூபமான திருமேனியையுமுடையராயிருந்துள்ளவர் ஜக3த்3 தி4தார்த்த2மாக வந்து ப்ரளயார்ணவத்திலே கண்வளர்ந் தருளுவர்.
ஏழாம் பாட்டு
பள்ளி ஆலிலை ஏழுல கும்கொள்ளும்*
வள்ளல் வல்வ யிற்றுப் பெருமான் *
உள்ளு ளார்அறி வார்அ வன்தன்*
கள்ள மாய மனக்க ருத்தே.
அவ:- ஏழாம் பாட்டில் – அக4டிதமான வட்த3ள ஸயந ப்ரகாரத்தைச் சொல்லி அத்தாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார்.
வ்யா:- (ஏழுலகும் என்று தொடங்கி) ஜக3த்தெல்லாம் உள்ளே புக்காலும் பின்னையும் இடமுண்டாய், ரக்ஷகமான வயிற்றையுடைய ஈஸ்வரனை. (உள்ளுள் என்று தொடங்கி) அத்யகா3த4மாய், தெரியாதே, ஆஸ்சர்யமான அவனுடைய மநோவ்ருத்தியை ஒருவர்க்கும் அறிய வொண்ணாது.
எட்டாம் பாட்டு
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்*
வருத்தித்த மாயப் பிரானையன்றி* ஆரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும்* தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வி னரே.
அவ:- எட்டாம் பாட்டில் – ஸங்கல்பத்தாலே ஸ்ருஷ்டி ரக்ஷணங்களைப் ப்ண்ணுகையாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார்.
வ்யா:- (கருத்தில் என்று தொடங்கி) தன் ஸங்கல்பத்திலே தே3வர் கள் தொடக்கமான ஸகல பதா3ர்த்த2ங்களயும் உண்டாக்கின ஆஸ்சர்ய பூ4தனேயன்றி மற்று ஆர்? (திருத்தி என்று தொடங்கி) திண்ணிதான நிலைமையுடைத்தாம்படி மூவுலகையும் திருத்தி, தம் ஸங்கல்பத்திலே வைத்துக்கொண்டு காக்கும் ஸ்வபா4வர்.
ஒன்பதாம் பாட்டு
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்*
சேர்க்கை செய்துதன் னுந்தி யுள்ளே*
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்*
ஆக்கி னான்தெய்வ வுலகு களே.
அவ:- ஒன்பதாம் பாட்டில் – ஸ்ருஷ்டி ஸ்தி2தி ஸம்ஹாரங்கள் மூன்றும் இவனிட்ட வழக்காகையாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார்.
வ்யா:- (காக்கும் இயல்வினன்) ரக்ஷணத்தை ஸ்வபா4வமாக வுடையவன்; 2. “न संपदां समाहारॆ” (ந ஸம்பதா3ம் ஸமஹாரே) இத்யாதி3. (கண்ண பெருமான்) ரக்ஷணார்த்த2மாக க்ருஷ்ணனாய் வந்து அவதரித்த ஸர்வேஸ்வரன். (சேர்க்கை செய்து) ஸம்ஹாரகாலம் வந்தவாறே 1. “तम एकीभवति” (தம ஏகீப4வதி) என்கிறபடியே தன் பக்கலிலே சேர்க்கையைச் செய்து. (தன் உந்தி இத்யாதி3) தன்னுடைய திருநாபி4கமலத்திலே, ஸ்ரஷ்ட்ருத்வத்தில் விலக்ஷணனான ப்3ரஹ்மா, இந்த்3ரன், அல்லாத தே3வதைகள், தே3வலோகங்கள் இவற்றை உண்டாக்கினான்.
பத்தாம் பாட்டு
கள்வா! எம்மையும் ஏழுலகும்*நின்
னுள்ளே தோற்றிய இறைவ! என்று*
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்*
புள்ளூர் திகழல் பணிந்தேத் துவரே.
அவ:- பத்தாம் பாட்டில் – கீழ் “எம்பெருமானே ஈஸ்வரன், அல்லாதார் அநீஸ்வரர்கள்” என்றும் சொன்னபோதுக்கு அவர்கள் தங்களுடைய ஸ்துதிவாக்யமே ப்ரமாணம் என்கிறார்.
வ்யா:- (கள்வா) உன் ஐஸ்வர்யத்தை மறைத்து எங்களுக்குத் தெரியாதபடி வந்து நிற்கிறவனே! (எம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவ என்று) எங்களையும், நாங்களிருந்த லோகங்களையும் உன் ஸங்கல்பத்தலே தோன்றுவித்த ஸ்வாமி என்று. (புள்ளூர்தி கழல் பணிந்தேத்துவரே) லோகார்த்த2மாகப் பெரிய திருவடிமேலே ஏறிப் புறப்படுமிடத்திலே அவன் திருவடிகளிலே விழுந்து ஏத்தாநிற்பர்.
பதினொன்றாம் பாட்டு
*ஏத்த ஏழுல குங்கொண்ட கோலக்
கூத்தனை* குரு கூர்ச்சட கோபன்சொல்*
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்*
ஏத்த வல்லவர்க்கு இல்லையோர் ஊனமே.
அவ:- நிக3மத்தில், இப்பத்தும் ஸாபி4ப்ராயமாக வல்லார்க்கு, “எம்பெருமான் அநீஸ்வரன்” என்று பு3த்3தி4 பண்ணுதல், “இதர தே3வதை கள் ஈஸ்வரர்கள்” என்று பு3த்3தி4 பண்ணுதல் செய்யும் இவ்வநர்த்த2ங்கள் ஒன்றும் வாராது என்கிறார்.
வ்யா:- (ஏத்த என்று தொடங்கி) தே3வாதி3களெல்லாம் நின்று புகழ லோகங்களை எல்லாம் அளந்துகொண்ட மநோஹாரி சேஷ்டிதத்தை உடையவனை நேர்பட்ட.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
அவதாரிகை 2-3
ஊனில்வாழ் – ப்ரவேசம்
மூன்றாம் திருவாய்மொழியில் – எத்தனையேனும் அளவுடையார்க்கு பா3ஹு ப3லத்தால் ஸம்பாதி3க்கவொண்ணாததுமாய், தமக்கு நிர்ஹே துக ப4க3வத் ப்ரஸாத3 லப்3த4முமாய், நிஸ்ஸமாதி4கமுமாயிருந்துள்ள ப4க3வத் ஸம்ஸ்லேஷ ஸுக2த்தை அநுப4வித்து, அப்படிப்பட்ட ஸுக2ம் தம்மால் தனியநுப4விக்கவொண்ணாமையாலே, அதுக்கு நிலவரான ‘அயர்வறும் அமரர்க’ளோடு கூட அநுப4விக்கைக்காக, “அவர்களை நான் என்றோ கிட்டுவது?” என்று மநோரதி2த்து முடிக்கிறார்.
முதல் பாட்டு
*ஊனில்வா ழுயிரே! நல்லைபோ உன்னைப்பெற்று*
வானுளார் பெருமான் மதுசூதன் என்னம்மான்*
தானும்யா னுமெல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்*
தேனும்பா லும்நெய்யும் கன்னலும் அமுதுமொத்தே.
அவ:- முதற் பாட்டில் – “அபரிச்சே2த்3யமான ஸுக2ம் பிறக்கும்படி எம்பெருமானும் நானும் கலந்தோம்; இதெல்லாம் உன்னாலே வந்த ஸம்ருத்3தி4யிறே” என்று நெஞ்சைக் கொண்டாடுகிறார்.
வ்யா:- (ஊனில் வாழுயிரே) ப்ரக்ருதியிலே யிருந்துவைத்தே ப3க3வத்3கு3ணங்களே தா4ரகமாகக்கொண்டு வாழுகிற நெஞ்சே! ப்ரக்ருதியே தா4ரகமாக வாழுகிற நெஞ்சே! என்று பழைய த3ஶையைச் சொல்லி ற்றாகவுமாம். “நல்லை நல்லை” என்று கொண்டாடுகிறது. (உன்னையெ ன்று தொடங்கி) நீ பாங்காகையாலே அயர்வறும் அமரர்களதிபதி (1-1-1) யாய் வைத்து என்னோட்டை ஸம்ஸ்லேஷத்துக்குள்ள விக்4நங்களை யெல்லாம் போக்கி என்னை அடிமைகொண்டு, அத்தாலே நிரதிசய போ4க்3யனான தானும், தன்னோடு யதா2மநோரத2ம் ஸம்ஸ்லேஷிக்கப் பெறாமையாலே வாயுந்திரையுகளிற் (2-1), படியே மிகவும் நோவுபட்ட நானும் – ஸர்வஸுக2 மும் இக்கலவியிலே உண்டாம்படி பூர்ணமாக்க் கலந்தோம்; ரஸவஸ்துக்க ளெல்லாம் சேர்ந்தால் அதினுள்ளே ஸர்வ ரஸமுண்டாயிருக்குமாபோலே. இதிலே சொன்னவை ஸர்வ வஸ்துக்களுக்கும் உபலக்ஷணம்.
இரண்டாம் பாட்டு
ஒத்தார்மிக் காரை இலையாய மாமாயா!*
ஒத்தாய்எப் பொருட்கும் உயிராய்* என்னைப்பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து*
அத்தா!நீ செய்தன அடியேன் அறியேனே.
அவ:- இரண்டாம் பாட்டில் – நிரபேக்ஷனாயிருக்கிற நீ என் பக்கலிலே ஸாபேக்ஷனாய்க்கொண்டு, என் ஹ்ருத3யத்தையும் எனக்கு அநுகூலமாக்கி, எனக்குப் பண்ணின உபகார பரம்பரைகளை என்னால் பரிக3ணித்து முடியவொண்ணாது என்கிறார்.
வ்யா:- (ஒத்தார் இத்யாதி3) ஸமாதி4க த3ரித்3ரனாய் அத்யாஶ்சர்ய மான படியையுடையவனே! ஆஸ்ரித ஸுலப4த்வார்த்த2மாக தே3வமனுஷ் யாதி3 ஸஜாதீயனாய். (உயிராய் என்று தொடங்கி) ஒருவன் தான் தனக்குப் பண்ணிக்கொள்ளும் நன்மைகளையும், பெற்ற தாய் செய்யும் நன்மைகளையும், தமப்பன் செய்யும் நன்மைகளையும், ஆசார்யன் செய்யும் நன்மைகளையும் செய்து இவ்வழியாலே என்னை அடிகை கொண்டு என் ஸ்வாமீ!
மூன்றாம் பாட்டு
அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து*
அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்*
அறியா மைக்குறளாய் நிலம்மாவலி! மூவடியென்று*
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி யுள்கலந்தே.
அவ:- மூன்றாம் பாட்டில் – “உமக்கென்ன உபகாரம் செய்தோம்?” என்று எம்பெருமான் கேட்க, “என்பக்கல் யோக்3யதையின்றிக்கேயிருக்க, உன்னோட்டைக்கலவிக்கு என்னை நிலவனாக்கிவைத்தாய்” என்கிறார்.
வ்யா:- (அறியா என்று தொடங்கி) மிகவும் அறிவுகேட்டைப் பண்ணவற்றான ஸம்ஸாரத்திலேயிருக்கிற என்னை அறிவு பிறக்கைக்கு ஸம்பா4வனையில்லாத பா3ல்யத்திலே, அடிமையிலே ஸ்நேஹத்தைப் பிறப்பித்துவைத்தாய். (அறியாமை என்று தொடங்கி) அழகிலே மஹாப3லி மதிமயங்கி “ஈச்வரன்” என்று ஆராயாதபடி வாமநனாய், மநோஹரமான பேச்சாலே மஹாப3லி மதிமயங்கும்படி பண்ணி, அவன் ஸர்வஸ்வாபஹாரத்தை பண்ணினாய். (எனதாவியுள் கலந்தே என்றது) அப்படியே என்னுள்ளே புகுந்து உன்னுடைய கு3ணசேஷ்டிதங்களைக் காட்டி வஶீகரித்து.
நான்காம் பாட்டு
எனதாவியுள் கலந்தபெரு நல்லுதவிக் கைம்மாறு*
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வ தென்பதுண்டே*
எனதாவி யாவியும்நீ பொழிலேழு முண்டஎந்தாய்*
எனதாவி யார்?யான்ஆர்? தந்தநீகொண் டாக்கினையே.
அவ:- நாலாம் பாட்டில் – தமக்கு எம்பெருமான் பண்ணின உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரங்காணாதே தடுமாறுகிறார்.
வ்யா:- (எனதாவியுள் கலந்த என்று தொடங்கி) அத்யந்த நிக்ருஷ்ட னான என்னுடைய ஆர்த்தி தீரும்படி உன்பேறாக வந்து கலந்த மஹோப காரத்துக்கு ப்ரத்யுபகாரமாக என் ஆத்மாவை உனக்கே தந்தேன். (எனதாவி என்று தொடங்கி) என் ஆத்மாவுக்கு சேஷியாயிருக்கிற நீ, ப்ரளயம் நலியாதபடி லோகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்துக் கொண்டாற்போலே, உன்னைப் பிரிந்து நான் பட்ட வ்யஸநமெல்லாம் தீரும்படி என்னோடே வந்து கலந்து என்னை அடிமைகொண்டவனே! கொடுக்கப்படுகிறேனாய் நிற்கிற என்னோடும், கொடுக்கிறேனாய் நிற்கிற என்னோடும் எனக்கு என்ன அடைவுண்டு, உன்னதை நீ கொண்ட பின்பு?
ஐந்தாம் பாட்டு
இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாதஎந்தாய்*
கனிவார் வீட்டின்பமே! என்கடல் படாஅமுதே!*
தனியேன் வாழ்முதலே! பொழிலேழும் ஏனமொன்றாய்*
நுனியார் கோட்டில்வைத்தாய் உனபாதம் சேர்ந்தேனே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – “ப்ரளயார்ணவத்திலே மக்3நமான ஜக3த்தை எடுதத்ருளினாற்போலே, ஸம்ஸார ஸாக3ரத்திலே முழுகிக் கிடக்கிற என்னை உன் திருவடிகளில் உறவை அறிவித்து எடுத்தருளுகை யாலே, இனி உன் திருவடிகளைப் பெற்றேன்” என்று த்ருப்தராகிறார்.
வ்யா:- (ஆர் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்) திருவடிகளில் அடைவிலராகில் எத்தனையேனும் அளவுடையாருடைய அறிவுகளாலும் பரிச்சே2தி3க்க வொண்ணாத என் நாத2னே! (கனிவார் என்று தொடங்கி) ஓரளவுமில்லையே யாகிலும், திருவடிகளில் ஆசையுடையார்க்கு மோக்ஷ ஸுக2ம்போலே போ4க்3யமாமவனே! ப4க்திமான்களில் பரிக3ணிக்கப் படாதேயிருக்கிற எனக்கும் அயத்நஸித்3த4 போ4க்3யமே! வீட்டின்பம் – அவர்களிருந்தவிடத்தே வந்து போ4க்3யமாகையுமாம். (தனியேன் என்று தொடங்கி) ஸம்ஸாரியாய், திருவடிகளில் உறவும் அறியாதிருக்கிற காலத்திலே திருவடிகளைப் பெறுகைக்கு அடியான ஸுக்ருதத்துக்கு உத்பாத3கனே! நுனியார் கோடு – கூர்மைமிக்க கொம்பு.
ஆறாம் பாட்டு
சேர்ந்தார் தீவினைகட்கு அருநஞ்சைத் திண்மதியைத்*
தீர்ந்தார் தம்மனத்துப் பிரியா தவருயிரைச்*
சோர்ந்தே போகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்கு
ஈர்ந்தாயை* அடியேன் அடைந்தேன் முதல்முன்னமே.
அவ:- ஆறாம் பாட்டில் – அநாதி3காலம் விஸ்லேஷித்த, விஸ்லேஷ மெல்லாம் தெரியாதபடி எம்பெருமான் தன்னோடே ஸம்ஸ்லேஷிக்கை யாலே, ‘இன்றோ பெற்றது, இவ்வாத்மாவுள்ளவன்றே தேவரீரைப் பெற்றே னல்லவோ?’ என்கிறார்.
வ்யா:- (சேர்ந்தார் என்று தொடங்கி) ஆஸ்ரிதருடைய பாபங்களை மறுவலிடாதபடி போக்குவதுஞ்செய்து, ஒருவராலும் கலக்கவொண்ணாத அறிவைக்கொடுக்கும் ஸ்வபா4வமாய், உனக்கே தீர்ந்து, உன்னாலல்லது செல்லாதேயிருக்கிறவர்கள் ஹ்ருத3யத்தி னின்றும் ஒருகாலும் பிரியாதே யிருந்து, உன்னைப்பிரிந்து அவர்கள் ஆத்மா மங்கிப்போகாதபடி பரிஹரி த்து, அத்தாலே உஜ்ஜ்வலனாய், பிராட்டியோட்டை ஸம்ஶ்லேஷத்துக்கு விரோதி4யான சூர்ப்பணகி2யைப் போக்கினாற்போலே அவர்களோட் டைப் பரிமாற்றத்துக்கு விரோதி4யைப்போக்கும் ஸ்வபா4வனானவனை.
ஏழாம் பாட்டு
முன்நல் யாழ்பயில்நூல் நரம்பின் முதிர்சுவையே!*
பன்ன லார்பயிலும் பரனே! பவித்திரனே!*
கன்னலே! அமுதே! கார்முகிலே! என்கண்ணா!* நின்னலால் இலேன்காண் என்னைநீ குறிக்கொள்ளே.
அவ:- ஏழாம் பாட்டில் – ‘கலந்த கலவிக்கு விச்சே2த3ம் பிறக்கி லோ?’ என்று ஶங்கித்து “விஸ்லேஷிக்கில் த4ரிக்கும் ப்ரக்ருதியல்ல” என்று என்னைத் திருவுள்ளத்திலே கொண்டருளவேணும் என்கிறார்.
வ்யா:- (முன் நல் யாழ்பயில் நூல்நரம்பின் முதிர்சுவையே) பழைய தாய், விலக்ஷணமாய், அப்4யஸிக்கப்படுவதுமாய், யாழ்விஷயமாக ப்ரவ்ருத்தமான சாஸ்த்ரம் சொன்ன லக்ஷணத்தையுடைய நரம்பாலே பிறந்த முதிரான ரஸம்போலே போ4க்3யனானவனே! (பன்னலார் என்று தொடங்கி) அஸ்ப்ருஷ்ட ஸம்ஸாரக3ந்த4ரான ‘அயர்வறும் அமரர்கள்’ எல்லாரும் எப்போதும் அனுப4வித்தாலும் தொலையாத போ4க்3யதையை யுடையையாய், ஸம்ஸாரிகளையும் அந்யபரதையைக் கொடுத்து உன் பக்கலிலே ப்ரவணராக்கிகொள்ளுமவனே! உன் திருவடிகளுக்கு நல்லார் பலரும் எப்போதும் அநுப4வியாநின்றாலும் தொலையாத போ4க்3யதை யையுடையையாய், அவர்களுக்கு த்வத3நுப4வ விரோதி4களைப் போக்கு மவனே! என்றுமாம். (கன்னலே என்று தொடங்கி) நிரதிசய போ4க்3யனாய், பரமோதா3ரனாய், நிர்ஹேதுகமாக எனக்கு உன்னைத் தந்தவனே! உன்னையொழிய த4ரியேன்.
எட்டாம் பாட்டு
குறிக்கொள் ஞானங்களால் எனையூழி செய்தவமும்*
கிறிக்கொண்டு இப்பிறப்பே சிலநாளில் எய்தினன்யான்*
உறிக்கொண்ட வெண்ணெய்பால் ஒளித்துண்ணும் அம்மான்பின்*
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர்கடிந்தே.
அவ:- எட்டாம் பாட்டில் – “கீழ்பாட்டில் நீர் எண்ணின விஸ்லேஷத்துக்கு ப்ரஸங்க3முண்டோ?” என்று எம்பெருமான் அருளிச் செய்ய, அத்தாலே த4ரித்த ஆழ்வார், ‘அநேக காலஸாத்4யமான நிரதிசய புருஷார்த்த2த்தை இஜ்ஜந்மத்திலே அல்பகாலத்திலே அயத்நேந பெற்றேன்’ என்று ப்ரீதராகிறார்.
வ்யா:- (குறிக்கொள் என்று தொடங்கி) யமநியமாதி3க்ரமங்களா லே அவஹிதராய்க்கொண்டு ஸம்பாதி3க்கும் ப4க்திரூபஜ்ஞாநங்க ளாலே அநேக கால ஸாத்4யமான புருஷார்த்த2த்தை. (யான்) “இங்ஙனே யிருப்ப தொரு புருஷார்த்த2முண்டு” என்றும் அறியாத நான், அநாவிலமாயிருப்ப தோர் உபாயத்தைக்கொண்டு. (உறிக்கொண்ட வெண்ணெய் என்று மேலுக்கு) தன் திருவடிகளை ஆஸ்ரயித்தாரது ஏதேனும் ஒரு த்3ரவ்யத் தாலல்லது த4ரியாத ப்ரக்ருதியாகையாலே, உறிகளிலே வைத்த வெண்ணெயும் பாலும் எல்லாம் போக்கினேன்; இது- பேறாவது. கிறியாவது-ப4க3வத்ப்ரஸாத3ம்; (உறிக்கொண்ட வெண்ணெய் பால் என்று தொடங்கி) எம்பெருமான் சர்மஸ்லோகத்தில் அருளிச்செய்தபடியே; பிறவித்துயுர்கடிந்து-ப4க3வத் ப்ராப்திக்கு உபலக்ஷணம். இப்படியும் நிர்வஹிப்பர்.
ஒன்பதாம் பாட்டு
கடிவார் தண்ணந்துழாய்க் கண்ணன்விண் ணவர்பெருமான்*
படிவா னமிறந்த பரமன் பவித்திரன்சீர்*
செடியார் நோய்கள்கெடப் படிந்து குடைந்தாடி*
அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே.
அவ:- ஒன்பதாம் பாட்டில் – எம்பெருமானுடைய கு3ணங்களைப் பெரிய விடாயோடேகூட அனுப4வித்துக் களிக்கப்பெற்றேன் என்கிறார்.
வ்யா:- (கடிவார் என்று தொடங்கி) திருவுடம்பில் ஸ்பர்ஸத்தாலே எப்போதும் ப்ரவ்ருத்த மது4தா4ராகமான திருத்துழாயாலே அலங்க்ருத னான இருஷ்ணன். (விண்ணவர் என்று தொடங்கி) இவ்வழகாலே அயர் வறும் அமர்களை (1-1-1), ப்ரதிக்ஷணம் தோற்ப்பித்து அவர்களை அடிமைகொள் ளுவதும் செய்து, திருநாட்டிலுங்கூட ஒர்படியாலும் தன்னோடு ஒத்தாரை உடையனன்றிக்கே, எல்லாரிடம் மேற்பட்டு உள்ளானுமாய், ஸம்ஸாரத் தில் ஆஸ்ரயித்தார்க்குத் தன்னோட்டை ஸம்ஸ்லேஷத்துக்கு விரோதி4 யான பாபத்தைப் போக்குமவனுடைய கல்யாண கு3ணங்களிலே, வாயுந்திரையுகளில் (2-1), பிறந்த வ்யஸந மெல்லாம் தீரும்படி ப்ரவேசித்து மிகவும் அவகா3ஹித்து. (படிவான மிறந்த பரமன்) மேக4ம் ஒப்பாக மாட்டாத திருநிறத்தையுடைய வன் என்றுமாம். “செடியார் நோய்” என்று – ஸம்ஸாரது3ரிதம் என்னவுமாம்.
பத்தாம் பாட்டு
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப்பிணி மூப்பிறப்பற்று*
ஒளிக்கொண்ட சோதியமாய் உடன்கூடுவது என்றுகொலோ*
துளிக்கின்ற வானிந்நிலம் சுடராழி சங்கேந்தி*
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே.
அவ:- பத்தாம் பாட்டில் – “ஸாம்ஸாரிக து3ரிதமெல்லாம் ஸமூல மாக நீங்கி, அயர்வறும் அமரர்களுடைய ஸமூஹங்களிலே சென்று புகுவது என்றோ?” என்று அநுப4வித்த ப4க3வத்3 கு3ணங்களுக்கு உசாத் துணை தேடுகிறார்.
வ்யா:- (களிப்பும் என்று தொடங்கி) விஷயலாப4ங்களால் வரும் களிப்பையும், விஷயஸங்க3த்தையும் அற்று, ஜந்மமும் ஜந்மப்ரயுக்த மான து3ரிதங்களும் எல்லா மற்று, ப4க3வத3நுப4வத்துக்குப் பாங்கான தே3ஹத் தையுடையோமாய். (துளிக்கின்று வானிந்நிலம் என்று மேலுக்கு) வர்ஷிக்கிற ஆகாசத்தையும், வர்ஷத்தாலே ஜீவித்துக் கிடக்கும் இந்த பூ4மியை யும் தானே தி3வ்யாயுத4த4ரனாய்க்கொண்டு ரக்ஷித்தருளுகிற ஆஸ்சர்ய பூ4தனான எம்பெருமான்.
பதினொன்றாம் பாட்டு
குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனை*
குழாங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த*
குழாங்கொ ளாயிரத்துள் இவைபத்தும் உடன்பாடி*
குழாங்களாய் அடியீருடன் கூடிநின் றாடுமினே.
அவ:- நிக3மத்தில் – “இத்திருவாய்மொழியை ப4க3வதே3க போ4க3 ராயிருப்பார் எல்லாரும், என்னைப்போலே தனிமைப்படாதே, கூடி பு4ஜியுங்கோள்” என்கிறார்.
வ்யா:- (குழாங்கொள் பேரரக்கன் குலம் வீய முனிந்தவனை) அஸங்க்2யேயமான ஸேநாஸமூஹங்களை உடையனாய், அதிப3லவா னான ராவணன் குலம் முடியும்படி சீறினவனை. (குழாங்கொள் என்று தொடங்கி) தம்மை அநுப4விக்க வந்த வைஷ்ணவ ஸமூஹங்களோடு கூடின திருநகரியையுடைய ஆழ்வார் உள்ளபடியை அநுஸந்தி4த்துச் சொன்ன. (குழாங்கொள் என்று தொடங்கி) ஓரோ திருவாய்மொழி யாய்க் கொண்டு குழாமான ஆயிரத்திலும் இத்திருவாய்மொழியைக் கருத்தோடேகூடப் பாடி.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
அவதாரிகை 2-4
ஆடியாடி – ப்ரவேசம்
நாலாம் திருவாய்மொழியில் –“அடியார்கள் குழாங்களை உடன் கூடுவ தென்றுகொலோ” (2-3-10), என்று மநோரதி2த்தபடி அக்ஷணத்திலே கைவாராமை யாலே, கீழ்ப்பிறந்த ப்ரீதியையும் மாறி மிகவும் அவஸந்நரான ஆழ்வார், ஸ்வகீயரானவர்கள் தம்முடைய த3சையை எம்பெருமானுக்கு விஜ்ஞாபி க்கிறபடியை அந்யாபதே3சத்தாலே பேசுகிறார்; எம்பெருமானோடே புணர்ந்து பிரிந்தாளொரு பிராட்டி க்ஷணமாத்ர விஸ்லேஷத்தாலே அறத் தளர்ந்து, ஆரித்தியாலே கிடந்தவிடத்திற்கிடவாதே, மோஹமும் உணர்ச்சியுமாய் மாறி மாறிச் சென்று, கண்டார்க்கெல்லாம் த3யநீயையான த3ஶையை ப்ராப்தையாய், ராமக்ருஷ்ணாதி3ரூபேண வந்து திருவவதாரம் பண்ணியருளி, ஆஸ்ரித ஸம்ரக்ஷணம்பண்ணும் நீர்மைகளை அநு ஸந்தி4த்து, தனக்கு உதவாமையாலே மிகவும் நோவுபடுகிற பெண்பிள் ளையுடைய வ்ருத்தாந்தத்தை அநுஸந்தி4த்து, இவளுடைய திருத்தாயார் அத்தை எம்பெருமானுக்கு அறிவித்து, “ஆஸ்ரிதர்க்கு உண்டான விரோதி4 களையெல்லாம் போக்கி அவர்களை ரக்ஷிக்கும் ஸ்வபா4வரான நீர், இவள் முடிவதுக்கு முன்னே வந்து இவளை விஷயீகரிக்கவேணும்” என்று ப்ரார்த்தி2க்கிறாள்.
முதல் பாட்டு
ஆடியாடி அகம்க ரைந்து*இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி*எங்கும்
நாடிநாடி நரசிங்கா என்று*
வாடி வாடும் இவ் வாணுதலே.
அவ:- முதற் பாட்டில் – “நரஸிம்ஹமாய் வந்து ஸ்ரீப்ரஹ்லாதா3ழ்வானுடைய ஆபத்துக்கு உதவினவன் எனக்கு உதவிகிறிலன்” என்று பெண் பிள்ளை அவஸந்நையாகாநின்றாள் – என்று சொல்லித் திருத்தாயார் சோகிக்கிறாள்.
வ்யா:- (ஆடியாடி) வ்யஸநாதிசயத்தாலே மேன்மேலெனப் பண்ணு கிற சேஷ்டிதங்கள் மநோஹாரிகளாயிருக்கிறபடி; துடிப்பின் மிகுதியைச் சொல்லிற்றாகவுமாம்; 1. “नृत्यन्तीमिव मातरम्” (ந்ருத்யந்தீமிவ மாதரம்) இதிவத். (அகங்கரைந்து) வ்யஸநாதிசயத்தாலே மிகவும் சிதி2லாந்த: கரணையாய். (இசைபாடிப்பாடி) ஆற்றாமை சொல்லுகிற சொல்பாட்டா யிருக்கிறபட்டி. (மல்கி) மிக்கு. (எங்கும் நாடி நாடி) “இவ்வவஸாத3த்தில் ஸர்வதா2 வாராதொழியான்” என்று எங்கும் பலகாலும் தேடி, அநந்தரம் அவனைக் காணாமையாலே மிகவும் வாடாநின்றாள். (இவ்வாணுதலே) அழகிய நுதலையுடைய இவள்.; “இவ்வழகு அழியவும் பேசாதிருப்பதே!” என்று இன்னாதாகிறாள் என்று கருத்து.
இரண்டாம் பாட்டு
வாணுதல்இம் மடவரல்* உம்மைக்
காணும்ஆசையுள் நைகின்றாள்*விறல்
வாணன்ஆயிரம் தோள்துணித்தீர்*உம்மைக்
காணநீர் இரக்க மிலீரே.
அவ:- இரண்டாம் பாட்டில் – பா3ணனுடைய பா3ஹுவநத்தைச் சே2தி3த்து அநிருத்3தா4ழ்வானுக்கு உதவின நீர் இவளுக்கு இத்த3சையில் இரங்காதொழிவதே! என்கிறாள்.
வ்யா:- (வாணுதல் என்று தொடங்கி) மிக்க அழகையுடையளாய், பொறுப்பின்றிக்கேயிருக்கிற இப்பெண்பிள்ளை “பிரிந்தால் த4ரிப்பது அரிதாம்படி இருக்கிற உம்மைக் காணவேணும்” என்னும் ஆசையிலே ஶிதி2லையாகாநின்றாள். (விறல்) வெற்றி. (உம்மைக் காண நீர் இரக்க மிலீரே) உம்மை இவள் காணும்படி நீர் இரக்கமுடையீராகிறிலீர்.
மூன்றாம் பாட்டு
இரக்க மனத்தோடு எரியணை*
அரக்கும் மெழுகும் ஒக்கும்இவள்*
இரக்க மெழீர்இதற்கு என்செய்கேன்*
அரக்க னிலங்கைசெற் றீருக்கே.
அவ:- மூன்றாம் பாட்டில் – ஸ்ரீஜநகராஜன் திருமகள்திறத்து நீர் செய்த செயல்களை அநுஸந்தி4த்து உம்மை ஆசைப்பட்டு இவள் நோவு படாநின்றாள்; இதுக்கு நீர் இரங்குகிறிலீர்; நான் என்செய்வேன்? என்று செயலற்றுச் சொல்லுகிறாள்.
வ்யா:- (இரக்கம் என்று தொடங்கி) அவஸந்நமான மநஸ்ஸை யுடையளாய், எரியைக் கிட்டின அரக்கும் மெழுகும் போலே வ்யஸநத்தாலே கரையாநின்றாள்.
நான்காம் பாட்டு
இலங்கைசெற் றவனே என்னும்*பின்னும்
வலங்கொள் புள்ளுயர்த்தாய்! என்னும்*உள்ளம்
மலங்கவெவ் வுயிர்க்கும்* கண்ணீர்மிகக்
கலங்கிக் கைதொழும் நின்றுஇவளே.
அவ:- நாலாம் பாட்டில் – ராம வ்ருத்தாந்தத்தை நான் சொல்லக் கேட்டுச்சிறிது த4ரித்த இவள், பின்னையும் தன் ஆற்றாமையாலே அலற்றுவது தொழுவதாகாநின்றாள் என்கிறாள்.
வ்யா:- (வலங்கொள் என்று தொடங்கி) நினைத்தவிடத்திலே கொடு வரவல்ல பெரிய திருவடியை வாஹநமாக உடையவனே! என்னா நின்றாள். (உள்ளம் மலங்க என்று தொடங்கி) வருகைக்கு ஒரு தட்டின்றிக் கேயிருக்க அவன் வாராமையாலே ஹ்ருத3யம் கலங்கும்படி நெடுமூச் செறியும். கண்ணீர் மல்கும்படியாகத் தான் நோவுபட்டு வருந்தி விழித்து, தன்னுடைய நோவு வாயால் சொல்லமாட்டாமையாலே, தன் கருத்தைக் கைதொழுகையாலே ஆவிஷ்கரியாநின்றாள். ‘இவளே’ என்றது – தன்னைப் பிரிந்தார் இப்பாடுபடும்படி விலக்ஷணை என்று கருத்து.
ஐந்தாம் பாட்டு
இவள்இராப் பகல்வாய் வெரீஇ*தன
குவளையொண் கண்ணநீர் கொண்டாள்*வண்டு
திவளும்தண் ணந்துழாய் கொடீர்*என
தவள வண்ணர் தகவுகளே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – இப்படி து3ர்த்த3 சாபந்நையான இவள் பக்கல் த3யைபண்ணுகிறிலீர்; இங்ஙனேயோ உம்முடைய த3யாவத்தை யிருக்கும்படி? என்று உபாலம்பி4க்கிறாள்.
வ்யா:- (இவள் இராப்பகல் வாய்வெரீஇ) இப்படி அவஸந்நையான இவள் இரவும் பகலும் வாய்வெருவி. (தன் குவளையொண் கண்ணநீர் கொண்டாள்) சோகத்துக்கு அநர்ஹமாய், குவளைப்பூப்போலேயிருக் கிற தன்னுடைய கண்கள் சோகஜமான அஸ்ருவாலே பூர்ணமாயிற்று. (வண்டென்று தொடங்கி) இவளுக்கு நிரதிசயபோ4க்3யமான சோதிருத் துழாயைக் கொடுத்து ஆஸ்வஸிப்பிக்கிறிலீர். உம்முடைய பரது3:க்கா2 ஸஹத்வம் இவள் பக்கலிலே கண்டோமிறே. திவளும் – படியும்.
ஆறாம் பாட்டு
தகவுடை யவனே என்னும்*பின்னும்
மிகவிரும் பும்பிரான்! என்னும்*எனது
அகவுயிர்க்கு அமுதே! என்னும்*உள்ளம்
உகஉருகிநின் றுள்ளுளே.
அவ:- ஆறாம் பாட்டில் – நான் எம்பெருமானை கு3ணஹாநி சொல்லிற்றுப் பொறுக்கமாட்டாமை அவனுடைய த3யாதி3 கு3ணங்களைப் பேசப்புக்கு, அந்த கு3ணங்களிலே அழுந்தாநின்றாள் என்கிறாள்.
வ்யா:- (பின்னும் என்று தொடங்கி) இப்படி சொல்ல வாரா தொழியச்செய்தேயும் மிகவும் விரும்பும்; அவன் பண்டு தனக்குப் பண்ணின உபகாரங்களை ஸ்மரித்து, பிரான்! என்னும். (எனதகவுயிர் என்று தொடங்கி) என் ஆத்மாவுக்கு நிரதஶய போ4க்3யனானவனே! என்னும்; அந்த:கரணம் மிகவும் ஸிதி2லமாம்படி தான் தளர்ந்து நின்று; (உள்ளுளே) ஹ்ருத3யத்திலே செல்லுகிற வ்யஸநம் வாசாமகோ3சரம்.
ஏழாம் பாட்டு
உள்ளு ளாவி உலர்ந்துலர்ந்து*என
வள்ளலே! கண்ணனே! என்னும்*பின்னும்
வெள்ளநீர்க் கிடந்தாய்! என்னும்*என
கள்விதான் பட்ட வஞ்சனையே!
அவ:- ஏழாம் பாட்டில் – இவளவஸாத3த்தையும், அவன் தன் கு3ணங்களாலே இவளை வஞ்சித்தபடியையும் சொல்லுகிறாள்.
வ்யா:- (உள்ளுள் என்று தொடங்கி) பா4வப3ந்த4த்தாலே வந்த நோவாகையாலே, ஆத்மா உள்ளே மிக உலர்ந்து, தனக்கு தா4ரகமாக அவனுடைய ஔதா3ர்ய ப4வ்யதைகளைச் சொல்லாநிற்கும். (பின்னும் என்று தொடங்கி) தன்னுடைய விடாயாலே, பின்னையும், நீர்வெள்ளத் திலே கண்வளர்ந்தருளினபடியைச் சொல்லாநிற்கும்; என்னுடைய அதி சதுரையான இவள் அவனைப் படுத்தும் பாட்டைத் தான் படுவதே!
எட்டாம் பாட்டு
வஞ்சனே! என்னும் கைதொழும்*தன
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும்*விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர்* உம்மைத்
தஞ்சமென்று இவள்பட் டனவே.
அவ:- எட்டாம் பாட்டில் – உம்மை அபாஸ்ரயமாகப் பற்றின இவள், ப்ரதிகூலர் பட்டபாட்டைப் படக்கடவளோ? என்கிறாள்.
வ்யா:- (வஞ்சனே என்று தொடங்கி) கு3ணசேஷ்டிதாதி3களாலே என்னை வஞ்சித்தவனே! என்னும்; அதுவே உபகாரமாகத் தொழா நிற்கும்; முன்னமே உலர்ந்திருக்கிற நெஞ்சம் விரஹாக்3நியாலே வேம்படி நெடுமூச்செறியும்.
ஒன்பதாம் பாட்டு
பட்ட போதுஎழு போதறியாள்*விரை
மட்டலர் தண்துழா யென்னும்*சுடர்
வட்ட வாய்நுதி நேமியீர்!*நுமது
இட்டம் என்கொல் இவ் வேழைக்கே?
அவ:- ஒன்பதாம் பாட்டில் – உம்மை விஸ்லேஷித்து நிரந்தர மாக நோவுபடுகிற சபலையான இவள்திறத்தில் செய்தருளநினைத்த தென்? என்கிறாள்.
வ்யா:- (பட்டபோது என்று தொடங்கி) உதி3த்ததும், அஸ்தமித்ததும் அறியாள்; திருஉடம்பில் ஸ்பர்சத்தாலே வந்த பரிமளத்தாலும், மது4 வாலும் பூர்ணமான திருத்துழாயை “வேணும்” என்று வாய்வெருவா நிற்கும். (சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்) ஆஸ்ரிதருடைய ப்ரதிப3ந்த4க நிரஸநார்த்த2மாகவன்றோ சுடரையும் வட்டமான வாயையும் கூர்மை யையுமுடைய திருவாழியை த4ரித்தருளுகிறது.
பத்தாம் பாட்டு
ஏழை பேதை இராப்பகல்*தன
கேழில்ஒண் கண்ணநீர் கொண்டாள்* கிளர்
வாழ்வைவேவ இலங்கைசெற்றீர்!*இவள்
மாழைநோக்கு ஒன்றும் வாட்டேன்மினே.
அவ:- பத்தாம் பாட்டில் – இவளுடைய முக்3த4மான நோக்கே நோக்காக அல்லாததெல்லாம் இழந்தாள்; இவ்வழகிய நோக்கையித்த னையும் போக்காதொழியவேணும் என்கிறாள்.
வ்யா:- (ஏழை பேதை) “கிடையாது” என்றாலும் விடாதபடி அத்யந்த சபலையுமாய், ஹிதஞ்சொன்னால் கேளாதபடி பா3லையுமான இவள். (இராவென்று தொடங்கி) இரவோடு பகலோடு வாசியின்றிக்கே, தன்னு டைய ஒப்பில்லாத அழகிய கண்கள் அஸ்ருபூர்ணமாயிருக்கும். கண்ண நீராலே மிகவும் அழகிதான இவள் கண்ணை எம்பெருமான் காணில் என் பாடு படுமோ? என்று கருத்து. (கிளர் என்று தொடங்கி) இவளோட்டை ஸம்ஸ்லேஷத்துக்கு ப்ரதிப3ந்த4கம் பெரிது என்னில்; கிளர்ந்திருந்துள்ள இலங்கையில் வாழ்வையெல்லாம் போக்கின உமக்குப் போக்க வொண்ணாததொரு ப்ரதிப3ந்த4கமுண்டோ?
பதினொன்றாம் பாட்டு
*வாட்ட மில்புகழ் வாமனனை*இசை
கூட்டி வண்சட கோபன்சொல்*அமை
பாட்டு ஓராயிரத்திப்பத்தால்*அடி
சூட்ட லாகும் அந் தாமமே.
அவ:- நிக3மத்தில் – இப்பத்தும் கற்றார்க்கு எம்பெருமான் திருவடிகளிலே ஆழ்வார் பட்ட க்லேசமெல்லாம் படாதே திருமாலை சாத்தி அடிமை செய்யப்பெறலாம் என்கிறார்.
வ்யா:- (வாட்டமில் புகழ் வாமனனை) இவ்வவஸாத3த்திலே வந்து ஸம்ஸ்லேஷித்து ஆழ்வாரை உளராக்குகையாலே வாட்டமின்றி க்கே பரிபூர்ணமான கல்யாணகு3ணங்களையுடையனான வாமனனை. (இசை கூட்டி) இசையோடே கூட்டி. (அமை பாட்டு) அர்த்த2பௌஷ்கல்யத்துக்கும் ஶப்3த3 பௌஷ்கல்யத்துக்கும் அமைந்த கா3தை2கள்.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
அவதாரிகை 2-5
அந்தாமத்தன்பு – ப்ரவேசம்
அஞ்சாம் திருவாய்மொழியில் – ஸ்ரீ க3ஜேந்த்3ராழ்வானுடைய ஆர்த்த த்4வநியைக் கேட்டு மிகவும் வ்யாகுலனாய் எழுந்தருளி, அவனுடைய ஆர்த்தியெல்லாம் தீர்த்து, அத்யந்த ஸுகி2தனாம்படி பண்ணியருளினாற் போலே, க்ருபாஸமுத்3ரமான எம்பெருமான் ஆழ்வாருடைய ஆர்த்த த்4வநி யைக்கேட்டுத் தான் மிகவும் ஆர்த்தனாய், “அழகிதாக ஜக3ந்நிர்வஹணம் பண்ணினோமாகாதே!” என்று தன்னுடைய ரக்ஷண ஸ்வபா4வத்தை நிந்தி3யா நின்று கொண்டு சீக்4ரமாக வந்து, தம்முடைய ஆர்த்தியைத் தீர்த்து மிகவும் நிர்வ்ருத்தராம்படி பண்ணி, தம்மோட்டை ஸம்ஸ்லேஷத் தாலே தான் அத்யுஜ்ஜ்வலனாய், தம் பக்கலிலே அத்யபி4நிவிஷ்டனாய், தன்னுடைய ஸ்வரூப ரூப கு3ண விபூ4திகளையும், தி3வயாப4ரணங்களை யும், தி3வ்ய சேஷ்டிதங்களையும், மற்றும் தனக்குள்ள தி3வ்ய போ4க3ங்க ளையும், இவற்றையெல்லாம் தமக்குக் காட்டிக்கொடுத்து க்ருதக்ருத்ய னானபடியை அநுஸந்தி4ஹ்த்து ஹர்ஷவிஸ்மய நிர்ப்ப4ரரான ஆழ்வார், தமக்குப் பிறந்த ஸம்ருத்3தி4யைப்பேசி அநுப4விக்கிறார்.
முதல் பாட்டு
*அந்தாமத் தன்புசெய்துஎன் ஆவிசேர் அம்மானுக்கு*
அந்தாம வாழ்முடிசங்கு ஆழிநூல் ஆரமுள*
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்*
செந்தா மரையடிக்கள் செம்பொன் திருவுடம்பே.
அவ:- முதற் பாட்டில் – தாம் மநோரதி2த்தபடியே தன் பரிகரங்க ளோடே கூடத் தம்மோடே வந்து ஸம்ஸ்லேஷிக்கையாலே எம்பெருமானு க்குப் பிறந்த ஔஜ்ஜ்வல்யத்தைப் பேசுகிறார்.
வ்யா:- (அந்தாமத்தென்று தொடங்கி) திருநாட்டிலுள்ளார்பக்கல் பண்ணும் அபி4ந்வேசத்தை என்பக்கலிலே பண்ணி, என்னோடே வந்து ஸம்ஸ்லேஷித்த ஸர்வேஸ்வரனுக்கு – அழகிய மாலை, செவ்விபெறா நின்றுள்ள திருவபி4ஷேகம், ஸ்ரீ பாஞ்சஜந்யம், திருவாழி, தி3வ்யாப4ரணங்கள் என்று தொடக்கமாக், பண்டு என்னோட்டை விரஹத்தாலே அநுஜ்ஜ்வலமானவை ஸம்ஸ்லேஷத்தாலே உளவான என்னும்படி உஜ்ஜ்வலமாயின; தா4ம்ம் – தேஜஸ்ஸாகவுமாம். (செந்தாமரைத் தடங்கண்) ஹர்ஷ ப்ரகர்ஷத்தலே உத்பு2ல்ல புண்ட3ரீக தடாகம்போலே விகஸிதமான திருக்கணகள்.
இரண்டாம் பாட்டு
திருவுடம்பு வான்சுடர்செந் தாமரைக்கண் கைகமலம்*
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்*
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ*
ஒருவிடமொன் றின்றிஎன் னுள்கலந் தானுக்கே.
அவ:- இரண்டாம் பாட்டில் – லக்ஷ்மீப்ரப்4ருதிகளும் தன்பக்கல் ஓரோ ப்ரதே3சத்தையே பற்றி லப்3த4 ஸத்தாகராம்படியிருக்கிற ஸர்வேஸ்வரன், ஸர்வாங்க3ங்களாலும் என்னோடே ஸம்ஸ்லேஷித்து, அத்தாலே உஜ்ஜ்வலனானான் என்கிறார்.
வ்யா:- (திருவுடம்பு என்று தொடங்கி) தேஜோரூபமான திருவுடம்பு மிகவும் ஒளிபெற்றது. (ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனே) பிராட்டி க்கும் ப்3ரஹமாவுக்கும் அபாஸ்ரயமானவிடத்தே யொழிய நீங்கினவிடத் தைப் பற்றி லப்3த4 ஸ்வரூபனாயிருக்கும் ருத்3ரனும். “ஓ” என்று விஸ்மயம். (ஒருவிடமென்று தொடங்கி) இப்படியிருக்கிற ஸர்வேஸ்வரன் என்னுடைய அங்க3த்தில் ஏகதேசத்திலே தன்னுடைய ஸர்வாங்க3த்தோடு ஸம்ஸ்லேஷித்தான்.
மூன்றாம் பாட்டு
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்*
மின்னும் சுடர்மலைக்குக் கண்பாதம் கைகமலம்*
மன்னு முழுவே ழுலகும் வயிற்றினுள*
தன்னுள் கலவாதது எப்பொருளும் தானி(ல்)லையே.
அவ:- மூன்றாம் பாட்டில் – ருத்3ராதி3கள் மாத்ரமன்றிக்கே ஸகல லோகங்களுக்கும் அபாஸ்ரயமான எம்பெருமான், தன்னையொழிந்தால் இவ்வுலகங்களெல்லாம் படும் பாட்டை என்னைப் பிரிந்து தான் பட்டு, என்னோடே ஸம்ஸ்லேஷிக்கையாலே அத்யந்தம் புஷ்கலனானான் என்கிறார்.
வ்யா:- (மின்னுஞ்சுடர்மலைக்கு) என்னோடே ஸம்ஸ்லேஷிக்கை யாலே வளர்ந்து உஜ்ஜ்வலமான திருமேனியையுடையவனுக்கு. (மன்னு மென்று தொடங்கி) ஸமஸ்த லோகங்களும் தன் ஸங்கல்பத்தைப்பற்றி நிலைநிற்கிறன; தன் திருவுள்ளத்தை அபாஸ்ரயமாகவுடைத்தன்றி க்கே யிருக்கும் வஸ்துதான் முதலிலேயில்லை.
நான்காம் பாட்டு
எப்பொருளும் தானாய் மரதகக் குன்றமொக்கும்* அப்பொழுதைத் தாமரைப்பூக் கண்பாதம் கைகமலம்*
எப்பொழுதும் நாள்திங்கள் ஆண்டுஊழி யூழிதொறும்*
அப்பொழுதைக் கப்பொழுதுஎன்னாரா வமுதமே.
அவ:- நாலாம் பாட்டில் – என்னோடே கலந்த எம்பெருமான், கால தத்வ முள்ளதனையும் அநுப4விக்கிலும் க்ஷணந்தோறும் நிரதிசய போ4க்3யனாயிருக்கும் என்று விஸ்மிதராகிறார்.
வ்யா:- (எப்பொருளும் என்று தொடங்கி) எல்லாப் பதா3ர்த்த2மும் தானிட்ட வழக்காய், என்னோடே ஸம்ஸ்லேஷித்து அத்யுஜ்ஜ்வல னாகை யாலும், வளர்த்தியாலும், என்னை விட்டுப்போகாதே நிற்கையாலும் மரதகக்குன்றம் ஒக்கும். (அப்பொழுதைத் தாமரைப்பூ) அப்போதலர்ந்த தாமரைப்பூ. (எப்பொழுதும்) ஒரு க்ஷணமும். –
ஐந்தாம் பாட்டு
ஆரா வமுதமாய் அல்லாவி யுள்கலந்த*
காரார் கருமுகில்போல் என்னம்மான் கண்ணனுக்கு*
நேராவாய் செம்பவளம் கண்பாதம் கைகமலம்*
பேரார நீள்முடிநாண் பின்னும் இழைபலவே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – எம்பெருமானுக்கு என்னோட்டை ஸம்ஸ்லேஷத்திற் பிறந்த அழகுக்கு உபமாநமில்லை என்கிறார்.
வ்யா:- (ஆராவமுதமாய் என்று தொடங்கி) நிரதிசய போ4க்3யனாயிருந்து வைத்து அத்யந்தஹீநனான என்னோடே கலப்பதுஞ்செய்து, அத்தாலே கார்காலத்தில் ஆர்ந்த கருமுகில்போலே உஜ்ஜ்வலனாய், என் ஸ்வாமியான க்ருஷ்ணனுக்கு. (நேராவாய் என்று தொடங்கி) வாயை ஒவ்வாது செம்பவளம்; கண் பாதம் கைகளோடு ஒவ்வாது கமலம். இழை – ஆப4ரணம்.
ஆறாம் பாட்டு
பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே*
பலபலவே சோதி வடிவுபண்பு எண்ணில்*
பலபல கண்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம்*
பலபலவே ஞானமும் பாம்பணைமே லாற்கேயோ.
அவ:- ஆறாம் பாட்டில் – தம்மோடே கலந்த எம்பெருமானுடைய அஸங்க்2யமான தி3வ்யபூ4ஷணாதி3களை அநுப4விக்கிறார்.
வ்யா:- (பலபலவே ஆபரணம் என்று இப்பாட்டெல்லாம்) பாம்பணை மேலாற்கு ப்ரகாரங்களை எண்ணப்புகில் – ஆப4ரணங்கள், கு3ணசேஷ்டி தங்களுக்கு வாசகமான திருநாமங்கள், தி3வ்யவிக்3ரஹங் கள், ஐந்த்3ரிய ஸுக2ங்கள், ஜ்ஞாநங்கள், இவை எல்லாம் அஸங்க்2யே யங்கள். ஞான மென்று – ஜ்ஞாந ஸாத4னமான சக்ஷுராதீ3ந்த்3ரியங்க ளாகவுமாம். ஸர்வேந்த்3ரியங்களுக்கும் போ4க்3யமாயிருக்கும் பரிகரங்களை உடைய வன் என்னுமிடத்துக்கு உபலக்ஷணம். (பாம்பணைமேலாற்கேயோ) என்றது.
ஏழாம் பாட்டு
பாம்பணைமேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்*
காம்பணைதோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதுவும்*
தேம்பணைய சோலை மராமரமேழ் எய்ததுவும்*
பூம்பிணைய தண்துழாய்ப் பொன்முடியம் போரேறே.
அவ:- ஏழாம் பாட்டில் – தி3வ்யசேஷ்டிதங்களை எம்பெருமான் காட்டியருளக்கண்டு அநுப4விக்கிறார்.
வ்யா:- (பாம்பணை என்று தொடங்கி) தே3வர்களுக்கு ஸமாஸ்ரயணீயனாய்க்கொண்டு திருப்பாற்கடலிலே திருவரவணைமேலே கண் வளர்ந்தருளிற்றும், ஏறேழைச்செற்றதும், நிரதிசயபோ4க்3யையான நப்பின்னைப் பிராட்டிக்காக. காம்பு – மூங்கில். (தேம்பணைய என்று தொடங்கி) தேனையும் பணைகளையு முடைத்தாய், அடிக்குறிக்கவொண் ணாதபடி சோலைசெய்த மராமரம் ஏழ் எய்ததுவும். (பூம்பிணைய என்று தொடங்கி) நல்ல தொடையை யுடைத்தாயுள்ள திருத்துழாயாலே அலங்க்ருதனாய், பொன்முடியை யுடையனாய், அத்தாலே மிகவும் மேனாணித் திருந்தவன்.
எட்டாம் பாட்டு
பொன்முடியம் போரேற்றை எம்மானை நால்தடந்தோள்*
தன்முடிவொன் றில்லாத தண்டுழாய் மாலையனை*
என்முடிவு காணாதே யென்னுள் கலந்தானை*
சொல்முடிவு காணேன்நான் சொல்லுவதுஎன் சொல்லீரே.
அவ:- எட்டாம் பாட்டில் – வாங்மநஸங்களுக்கு நிலமன்றிக்கே விலக்ஷணனாயிருந்துவைத்து என்னோடே ஸம்ஸ்லேஷித்த இம்மஹா கு3ணம் எனக்குப் பேச நிலமன்று என்கிறார்.
வ்யா:- (பொன்முடி என்று தொடங்கி) பொன்முடியையுடைய னாய், மிகவும் செருக்கையுடைய ஏறுபோலே மேனாணித்திருப்பதும் செய்து, தன்னுடைய கு3ணசேஷ்டிதங்களாலே என்னை அடிமை கொண்டவனை. (நால் தடந்தோள் என்று தொடங்கி) அழகிய திருத்தோள்கள் நாலையு முடையனாய், அபரிச்சே2த்3யமான வைலக்ஷண்யத்தையுமுடையனாய், ஸர்வைஶ்வர்ய ஸூசகமாய் நிரதிசயபோ4க்3யமான திருத்துழாய் மாலையை உடையவனை. (என்முடிவு என்று தொடங்கி) என்னுடைய நிர்மர்யாதை3யான நிஹீநதையைப் பாராதே என்னுள்ளே கலந்தவனைச் சொல்லி முடிக்கும்படி அறியேன்.
ஒன்பதாம் பாட்டு
சொல்லீர்என் னம்மானை என்னாவி ஆவிதனை*
எல்லையில் சீர்என் கருமாணிக் கச்சுடரை*
நல்ல அமுதம் பெறற்கரிய வீடுமாய்*
அல்லி மலர்விரையொத்து ஆணல்லன் பெண்ணல்லனே.
அவ:- ஒன்பதாம் பாட்டில் – தமக்கு எம்பெருமானைப் பேசமுடியா மையாலே பேசவும் தவிர்ந்த ஆழ்வார், பின்னையும் தம்முடைய சாபலத் தாலே எல்லாரையும் அழைத்து, அவர்களும் தாமும் கூடப் பேசுகையிலே உபக்ரமிக்கிறார்.
வ்யா:- (என்னாவி ஆவிதனை) நான் உஜ்ஜீவிக்கும்படி தன்னுடைய கு3ணசேஷிட்தங்களைக் காட்டிக்கொண்டு என்னுள்ளே நின்றவனை. (எல்லையில் சீர் என் கருமாணிக்கச்சுடரை) எல்லையில்லாத அழகையு டைய கருமாணிக்கத்தின் ஒளியையுடைய தன்னை எனக்குத் தந்த வனை. (நல்ல அமுதம் என்று தொடங்கி) ப்ராக்ருதபோ4க்3யங்களில் தலைக்கட்டான அமுதம்போலே போ4க்3யமுமாய், பரமப்ராப்யமான மோக்ஷ புருஷார்த்த2முமாய், தன்னுடைய போ4க்3யதைக்குத் தாமரைப் பூவில் பரிமளத்தை உபமாநமாக உடையனுமாய். (ஆணல்லன் பெண்ண ல்லனே) நாட்டில் காண்கிற ஆணின்படியுமல்லன் பெண்ணின்படியு மல்லன்.
பத்தாம் பாட்டு
ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்*
காணலு மாகான் உளனல்லன் இல்லையல்லன்*
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்*
கோணை பெரிதுடைத்துஎம் பெம்மானைக் கூறுதலே.
அவ:- பத்தாம் பாட்டில் – எம்பெருமானுடைய ஸ்த்ரீபுந்நபும்ஸ காதி3 ஸர்வ வஸ்துவைலக்ஷண்யாதி3களைச் சொல்லாநின்று கொண்டு, ஏவம்வித4னானவன் என்னோடு கலந்தபடி பேசி முடியாது என்கிறார்.
வ்யா:- (ஆணல்லன் என்று தொடங்கி) ஸ்த்ரீபுந்நபும்ஸகாதி3 ஸர்வவஸ்துவிலக்ஷணன் ஸ்த்ரீநபும்ஸ்கங்களிற்காட்டில் விலக்ஷணன் என்று சொல்லிற்று – எம்பெருமானோடு ஒவ்வாமைக்கு ஸ்த்ரீநபும்ஸ கங்களோடு புருஷர்களோடு வாசியில்லை என்று தோற்றுகைக்காக. (காணலும் என்று தொடங்கி) இவ்ற்றோடு அவனோடு ஏகப்ரமாண க3ம்யத் வஸாம்யமுமில்லை; அநாஸ்ரிதர்க்கு து3ர்லப4ன்; ஆஸ்ரிதர்க்கு ஸுலப4ன்; ஆஸ்ரிதர் ஏதேனுமொன்றை “இவனுக்கு வடிவாகவேணும்” என்று நினைத்தால், அத்தையே தனக்கு வடிவாகக்கொள்ளும். அவ்விருப் பிலே அநாஸ்ரிதர்க்கு அருகு வரவொண்ணாதபடியிருக்கும். இப்படி யிருக்கிற எம்பெருமான் என்னோடே ஸம்ஸ்லேஷித்தபடி பேசுவோ மென்றால் மிறுக்குடைத்து.
பதினொன்றாம் பாட்டு
*கூறுதலொன் றாராக் குடக்கூத்த அம்மானை*
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்*
கூறினஅந் தாதிஓராயிரத்துள் இப்பத்தும்*
கூறுதல்வல் லாருளரேல் கூடுவர்வை குந்தமே.
அவ:- நிக3மத்தில் – இப்பத்தை அப்4யஸிப்பார், இதில் சொன்ன படியே பரிபூர்ணமாக எம்பெருமானைத் திருநாட்டிலே என்றும் அநுப4விக்கப்பெறுவர் என்கிறார்.
வ்யா:- (கூறுதல் என்று தொடங்கி) தன்னுடைய ஓரோ சேஷ்டிதமே காலதத்வமெல்லாம் கூடினாலும் பேசவொண்ணா திருக்கிறவனை ஸர்வ கு3ணசேஷ்டிதாதி3களோடும் பரிபூர்ணனான படியே பேசுகையிலே துணிந்து.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
அவதாரிகை 2-6
வைகுந்தா – ப்ரவேசம்
ஆறாம் திருவாய்மொழியில் – கீழ் ப்ரஸ்துதமான ஸம்ஸ்லேஷத்தாலே மிகவும் பூர்ணனுமாய், அத்யந்த ஹ்ருஷ்டனுமாய், “இவர்க்கு எத்தைக் கொடுப்பன்? எத்தைச் செய்வன்? இவர் என்னைவிடாரிறே” என்று அதிசங்கை பண்ணாநின்றுள்ள ஸ்ரீவைகுண்ட2நாத2னான எம்பெருமா னுக்குத் தம் பக்கலுண்டான பாரதந்த்ர்ய வாத்ஸல்யாதி3களைக் கண்டு அத்யந்த விஸ்மிதராய், தாம் எம்பெருமானை விடாத தன்மையரா யிருக்கிறபடியை அவனுக்கு அறிவித்து அவனை நிலைநிறுத்துகிறார்.
முதல் பாட்டு
வைகுந்தா! மணிவண்ணனே! என்பொல்லாத் திருக்குறளா! என்னுள் மன்னி*
வைகும் வைகல்தோறும் அமுதாய வானேறே! *
செய்குந் தாவருந் தீமைஉன் னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா!* உன்னைநான் பிடித்தேன்கொள் சிக்கெனவே.
அவ:- முதற் பாட்டில் –ஆழ்வார், எம்பெருமான் “இவர் நம்மை விடில் செய்வதென்” என்று அதிசங்கைபண்ண, அத்தை நிவர்த்திப்பிக்கிறார்.
வ்யா:- (வைகுந்தா என்று தொடங்கி) அத்யந்த புஷ்கலனாய், அதிஸுந்த3ரனாயிருந்துவைத்து எனக்கு மிகவும் ஸுலப4னாய், ‘அயர்வறும் அமரர்களோடு’ ஸம்ஸ்லேஷிக்குமாபோலே என்னுள்ளே புகுந்து என்னோடே ஸம்ஸ்லேஷியாநின்று கொண்டு நாடோறும் அபூர்வவத்3 போ4க்3யமானவனே! பொல்லா என்று – பிறர் கண்ணெச்சில் படாமைக்கு. விபரீதலக்ஷணையாகவுமாம். (செய்குந்தா என்று தொடங்கி) அநுப4வ விநாஸ்யமான பாபகர்மங்கள் ஆஸ்ரிதர் பக்கல் வாராதபடி பண்ணி, அவற்றை ஆஸ்ரிதவிரோதி4கள் பக்கலிலே போக்குகையாகிற ஸுத்3தி4 யையுடையவனே! இப்படி அபி4நிவிஷ்டனாய் வந்து என்னோடே கலந்து ஸம்ஸ்லேஷித்த உன்னைப் பிரிந்து உறாவின நான் இனி ஒருநாளும் விடாதபடி பிடித்தேன் என்று கொண்டருள அமையும்.
இரண்டாம் பாட்டு
சிக்கெனச் சிறிதோ ரிடமும் புறப்படாத் தன்னுள்ளே* உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின்*
மிக்கஞான வெள்ளச் சுடர்விளக்காய்த் துளக்கற்று அமுதமாய்* எங்கும்
பக்கநோக் கறியான்என் பைந்தா மரைக்கண்ணனே.
அவ:- இரண்டாம் பாட்டில் – தம்மோடு கலந்தபின்னை எம்பெருமானுக்குப் பிறந்த பௌஷ்கல்யத்தைப் பேசுகிறார்.
வ்யா:- (சிக்கென என்று தொடங்கி) என்னோடு கலக்கும்போது அந்யபரதை பிறவாமைக்காக, க்ஷுத்3ரபதா3ர்த்த2ங்களும் ஒழியாதபடி எல்லா லோகங்களுக்கு வேண்டும் ஸம்விதா4நத்தை ஒருகாலே தன் திருவுள்ளத்தாலே பண்ணியருளி, பிரியாதபடி என்பக்கலிலே புகுந்தான். (புகுந்ததற்பின் என்று தொடங்கி) புகுந்த பின்பு விகஸித ஸஹஜ ஸார்வ ஜ்ஞ்யனாய், விஜ்வரனாய், தன்னுடைய ப்ரமோத3 ரஸத்தாலே எனக்கு போ4க்3யமாய், பெரியபிராட்டியார் வந்து ஸ்பர்சித்தாலும் விலங்கப் பார்க்க அறியாதபடியானான், என்னோட்டைக் கலவியாலே குளிர்ந்த திருக்கண்களையுடையவன்.
மூன்றாம் பாட்டு
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை* துழாய் விரைப்
பூமருவு கண்ணிஎம் பிரானைப் பொன்மலையை*
நாமருவி நன்கேத்தி உள்ளி வணங்கி நாம்மகிழ்ந்து ஆட*நாவலர்
பாமருவி நிற்கத்தந்த பான்மையே(ய்) வள்ளலே.
அவ:- மூன்றாம் பாட்டில் – அயர்வறும் அமரர்களுக்குப்போலே எனக்குத் தன்னுடைய ஸௌந்த3ர்யாதி3களை வர்ணிக்கைக்கு ஈடான வாக்கைத் தந்தருளினான்; ஒருவனுடைய ஔதா3ர்யமிருக்கும்படியே! என்று ஹ்ருஷ்டராகிறார்.
வ்யா:- (தாமரைக் கண்ணனை என்று தொடங்கி) திருக்கண்களின் அழகிலே ஈடுபட்டு ஸ்துதிக்கிற அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியா யுள்ளவனை. (துழாய் என்று தொடங்கி) விரையும் பூவும் மாறாதேயிருக் கும் திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதனான தன்னுடைய திரு வழகை எனக்கு நிர்ஹேதுகமாகக் காட்டினவனை. (பொன்மலையை) என்னோட்டைக் கலவியாலே அபரிச்சே2த்3யமான திருவழகையுடைய னாய், என்னைப் பிரிந்துபோகைக்கு க்ஷமனன்றிக்கேயிருக்கிறவனை. (நாமருவி என்று தொடங்கி) அயர்வறும் அமரர்கள் ஏத்தக்கடவ நிலத்து க்கு நாம் நிலவராய், ஸத்3ருசமாம்படி ஏத்தி கு3ணாநுஸந்தா4நத்தைப் பண்ணி, இக்கு3ணாநுஸந்தா4ந ப3லாத்காரத்தாலே நிர்மமராய்க் கொண்டு திருவடிகளிலே விழுந்து, ப்ரீதி தத்வம் புதியதுண்டு அறியாத நாம் ஹர்ஷப்ரகர்ஷத்தாலே மகிழ்ந்து ஆடும்படி. (நாவலர் என்று தொடங்கி) ஹர்ஷப்ரகர்ஷம் அநாயாஸேந சொல்லுவிக்கச்சொல்லுகிற கவிக்கு நிலவராய் நிற்கும்படி நம்மைப் பண்ணுகை ஸ்வபா4வமாகவுடையவ னாயிருக்கிற வள்ளல்.
நான்காம் பாட்டு
வள்ளலே! மதுசூதனா! என்மரகத மலையே!* உனை நினைந்து
எள்கல்தந்த எந்தாய்உன்னை எங்ஙனம் விடுகேன்*
வெள்ள மேபுரை நின்புகழ் குடைந்தாடிப் பாடிக்களித்து உகந்துகந்து*
உள்ளநோய்க ளெல்லாம்துரந்து உய்ந்து போந்திருந்தே.
அவ:– நாலாம் பாட்டில் – நிர்ஹேதுகமாக உன்னைத்தரும் ஸ்வபா4 வனாய், விரோதி4 நிரஸந ப்ரமுக2மான கல்யாணகு3ணாந் -விதனாயிருந் துள்ள உன்னை அநுப4வித்துவைத்து, விட உபாயமுண்டோ? என்கிறார்.
வ்யா:- (வள்ளலே என்று தொடங்கி) பரமோதா3ரனாய், உன்னை பு4ஜிக்கைக்கு விரோதி4யான ப்ரதிப3ந்த4கங்களைப்போக்கும் ஸ்வபா4வ னாய். (என் மரகதமலையே) ஸ்ரமஹரமாய், அபரிச்சே2த்3யமான உன்னுடைய அழகை எனக்கு அநுப4விக்கத் தந்தவனே! (உனை நினைந்து எள்கல் தந்த எந்தாய்) உன்னை அநுப4வித்தால் புறம் புள்ளவற்றையெல் லாம் இகழும் ஸ்வபா4வத்தை எனக்குத் தந்தவனே! உன்னை அநுப4வித் தால், ஈடுபடும் ஸ்வபா4வத்தை எனக்குத் தந்தவனே! என்றுமாம். (வெள்ளமே என்று தொடங்கி) அப்ரிச்சே2த்3யமான உன்னுடைய கல்யாண கு3ணங்களை ஓரிடமொழியாமே அவகா3ஹித்து, அத்தால் வந்த ப்ரீத்யதிஶயத்தாலே ஆடிப்பாடிக் களித்து ப்ரதிக்ஷணம் ப்ரீதி பெருகிவர, அநர்ஹதாநு ஸந்தா4நத்தாலும் விஸ்லேஷத்தாலும் வந்த வ்யஸநங்களெல் லாவற் றையும் போக்கி உஜ்ஜீவித்து உன் திருவடிகளிலே வந்திருந்து.
ஐந்தாம் பாட்டு
உய்ந்து போந்துஎன் னுலப்பிலாத வெந்தீவினைகளை நாசஞ் செய்து*உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ?*
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப்பாற்கடல் யோக நித்திரை*
சிந்தைசெய்த எந்தாய்உன்னைச் சிந்தை செய்துசெய்தே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – நித்யகைங்கர்யத்தை ப்ராபித்திருந்து ள்ள எனக்கு உன்னை விட ஸம்பா4வநையுண்டோ? என்கிறார்.
வ்யா:- (உய்ந்து என்று தொடங்கி) ஸ்வரூபஸத்3பா4வம் பெற்று ஸம்ஸாரிகளிற் காட்டில் வ்யாவ்ருத்தனாய், முடிவின்றிக்கே மிகவும் கொடிதான என் கர்மங்களை நஶிப்பித்து. (ஐந்து என்று தொடங்கி) திருப் பாற்கடலிலே உன்னோட்டை ஸம்ஸ்லேஷஸுக2த்தாலே அலர்ந்த ஐந்து ப2ணங்களையுடைத்தாய், கண்வளர்ந்தருளுகைக்கு ஈடாம்படி அசைந்து வாராநின்றுள்ள திருவரவணைமேலே சாய்ந்தருளி, ஜக3த்3ரக்ஷாசிந்தாத் மகயோக3நித்3ரையைப் பண்ணியருளின இக்கு3ணத்தைக்காட்டி என்னை அடிமை கொண்டவனே! இப்படி உபகாரகனான உன்னை மிகவும் அநுஸந்தி4த்து.
ஆறாம் பாட்டு
உன்னைச் சிந்தை செய்துசெய்து உன்நெடு மாமொழிஇசை பாடியாடி*என்
முன்னைத் தீவினைகள் முழுவே ரரிந்தனன்யான்*
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்மார்வம் கீண்ட*என்
முன்னைக் கோளரியே! முடியாத தென்எனக்கே?
அவ:- ஆறாம் பாட்டில் – “உமக்கு இனிச் செய்யவேண்டுவதென்?” என்று எம்பெருமான் கேட்டருள; “நான் பெறாததுண்டோ? எல்லாம் பெற்றேன்” என்கிறார்.
வ்யா:- (உன்னை என்று தொடங்கி) நிரதிசயபோ4க்3யனான உன்னை நிரந்த்ரமாக அநுஸந்தி4த்து, ப்ரீதிப3லாத்கருதனாய்க் கொண்டு அபரிசேத்3யரஸமான இயலை நல்லிசையாலே பாடியாடி, அவ்வழியாலே என்னுடைய ப்ராக்தநமான ப்ரதி ப3ந்த4கங்களை ஸவாஸநமாகப் போக்கினேன். (உன்னை என்று தொடங்கி_) நிரதிசய போ4க்3யனான உன்னை மநஸ்ஸாலே இகழ்ந்த ஹிரண்யனுடைய அகன்ற மார்வைப்பிளந்து பண்டே எனக்கு உபகரித்த நரஸிம்ஹமே!
ஏழாம் பாட்டு
முடியாத தென்எனக் கேல்இனி முழுவேழுலகும் உண்டான்* உகந்துவந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி*
செடியார் நோய்க ளெல்லாம் துரந்துஎமர் கீழ்மே லெழுபிறப்பும்*
விடியாவெந் நரகத்துஎன்றும் சேர்தல் மாறினரே.
அவ:- ஏழாம் பாட்டில் – நீர் எல்லாம் பெற்றுச்சமைந்தீரோ? என்ன; என் பக்கல் எம்பெருமான் பண்ணின பக்ஷபாத ராஜகுலத்தாலே என்னோடு ஸம்ப3ந்தி4 ஸம்ப3ந்தி4களானாருங்கூட ஸம்ஸாராது4த் தீர்ணரானார்கள்; ஆனபின்பு, நான் பெறாததுண்டோ? என்கிறார்.
வ்யா:- (முடியாததென் எனக்கேல் இனி) எனக்கு ஆப்தவ்யமாயிருப் பதொன்று உண்டோ? (முழுவேழுலகும் என்று தொடங்கி) ப்ரளயகாலத் தில் இஜ்ஜக3த்தையடையத் தன் திருவயிற்றிலே வைத்துக்கொண்டவன் ஜக3த்துக்குத் தன்னை யொழியச் செல்லாதாப்போலே என்னையொழியத் தனக்குச் செல்லாமையாலே அதய்பி4நிவிஷ்டனாய் என்னுள்ளே புகுந் தான்; இனி ஒரு காலமும் விஶ்லேஷிப்பதும் செய்யான். (செடியார் என்று தொடங்கி) ஸாம்ஸாரிக து3:க்க2ங்களெல்லாம் போக்கி, கீழும் மேலும் ஏழு படிகாலான அஸ்மதீ3யர் ஸம்ஸாரத்திலே என்று கிடக்கக் கடவதான தன்மையைத் தவிர்ந்தார்கள்.
எட்டாம் பாட்டு
மாறி மாறிப் பலபிறப்பும் பிறந்துஅடியை யடைந் துள்ளம்தேறி*
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்*
பாறிப் பாறி அசுரர்தம் பல்குழாங்கள் நீறெழ* பாய்பறவையொன்று
ஏறிவீற்றிருந் தாய்உன்னை என்னுள் நீக்கேல்எந்தாய்.
அவ:- எட்டாம் பாட்டில் – நிர்ஹேதுகமாக உன்னுடைய ப்ரஸாத3த் தாலே பெற்ற இஸ்ஸம்ருத்3தி4 இனி ஒருநாளும் விச்சே2தி3யாதொழிய வேணும்; இதுவே எனக்கு வேண்டுவது என்று எம்பெருமானை ப்ரார்த்தி2க்கிறார்.
வ்யா:- (மாறிமாறி என்று தொடங்கி) பர்யாயேண சாவது பிறப்ப தாய், ஒரு நன்மையின்றியேயிருக்கச்செய்தே, ஸாம்ஸாரிக விஷயநிவ் ருத்தி பூர்வகமாகத் திருவடிகளைப்பெற்று, விஷயவாஸநையாலும், ப4க3வத3லாப4த்தாலுமுள்ள அந்த:கரண காலுஷ்யமெல்லாம் நீங்கி, முடி வில்லாத ஆநந்த3 ஸமுத்3ரத்திலே நான் முழுகினேன். (பாறிப்பாறியெ ன்று தொடங்கி) தன் திருச்சிறகில் வேக3த்திலே அஸுர ஸமூஹங்களா னவை சி2ந்நம்பி4ந்நமாய் தூ4ளியாம்படி ஸஞ்சரிக்கும் ஸ்வபா4வனாய், அத்யந்த விலக்ஷணனான பெரியதிருவடிமேலே ஏறி, உன்னுடைய ஸர் வைஸ்வர்யத்தாலே வரும் வீறுதோற்றும்படி இருந்தவனே! இத்தால் – இப்படியே தமக்குண்டான பர்திப3ந்த4க நிரஸநம் பண்ணி, அத்தாலே மேனாணித்திருந்த இருப்பைச் சொல்லுகிறது. ஆஶ்ரிதருடைய அபேக்ஷிதம் செய்யும் ஸ்வபா4வம் என்றுமாம். (உன்னை என்று தொடங்கி) என்னோடே இப்படி வந்து கலந்த நீ ஒரு நாளும் பிரியா தொழியவேணும், இப்படி யுள்ள கலவியாலே என்னை அடிமை கொண்டவனே!
ஒன்பதாம் பாட்டு
எந்தாய்! தண்திரு வேங்கடத்துள் நின்றாய்! இலங்கைசெற்றாய்!* மராமரம்
பைந்தா ளேழுருவ ஒருவாளி கோத்தவில்லா!*
கொந்தார் தண்ணந் துழாயினாய் அமுதே!உன்னை என்னுள்ளே குழைத்தஎம்
மைந்தா!* வானேறே! இனியெங்குப் போகின்றதே?
அவ:- ஒன்பதாம் பாட்டில் – உன்னுடைய கு3ணசேஷ்டிதங்க ளைக் காட்டி என்னை வசீகரித்து, விஸ்லேஷிக்க முடியாதபடி என்னோடே கலந்திருந்துள்ள உனக்கு இனி போக உபாயமில்லை என்கிறார்.
வ்யா:- (எந்தாய் என்று தொடங்கி) என்னை அடிமைகொண்ட ருளுகைக்காக நிரதிசய போ4க்3யமான திருமலையிலே நின்றருளின வனே! (மராமரம் என்று தொடங்கி) பரந்த அடியையுடைய மராமரம் ஏழும் உருவ அநாயாஸேந எய்தவனே! (கொந்தார்) தழைத்திருக்கை. (உன்னை என்னு ள்ளே குழைத்த எம்மைந்தா) விஸ்லேஷாநர்ஹமாம் படி என்னோடே ஸம்ஸ்லேஷித்து, அக்கலவியாலே நவீக்ருதமான யௌவநத்தையுடைய வனே! (வானேறே) தம்மோடே கலந்தபடிக்கு த்3ருஷ்டாந்தம்.
பத்தாம் பாட்டு
போகின்ற காலங்கள் போய காலங்கள் போகுகாலங்கள்* தாய் தந்தையுயி
ராகின்றாய் உன்னைநான் அடைந்தேன் விடுவேனோ?*
பாகின்ற தொல்புகழ் மூவுலகுக்கும் நாதனே! பரமா!* தண்வேங்கடம்
மேகின்றாய்! தண்துழாய் விரைநாறு கண்ணியனே!
அவ:- பத்தாம் பாட்டில் – காலத்ரயத்திலும் உன் க்ருபையாலே எல்லாப் படியலும் எனக்கு உபகாரகனான உன்னை ஸாக்ஷாத்கரித்து வைத்து, இனி விட ஸம்பா4வநையுண்டோ? என்கிறார்.
வ்யா:- (போகின்ற என்று தொடங்கி) காலத்ரயத்திலும் தாயும் தமப்பனும் செய்யும் நன்மைகளையும், என் ஆத்மா தான் தனக்குப் பார்த் துக்கொள்ளும் நன்மைகளையும் செய்யும் ஸ்வபா4வனான வனே! ‘இப்படி உபகாரகனாய் நின்றுள்ள உன்னைக் காணவல்லேனோ?’ என்றிருக்கிற நான் காணப்பெற்றுவைத்து, இனி விட உபாயமுண்டோ? (பாகின்ற என்று மேலுக்கு) உன்னுடைய ஐஸ்வர்யாதி3களுக்கு ஒத்தாரும் மிக்காரு மில்லாதபடியிருந்துவைத்து, என்னோட்டை ஸம்ஸ்லேஷத்துக்காக நிரதிஶயபோ4க்3யமான திருமலையை விடாதே எழுந்தருளிநிற்பதுஞ் செய்து, என்னோட்டைக் கலவியாலே பருவம்செய்து அதிபரிமளமான திருத்துழாய்மாலை யாலே அலங்க்ருதனானவனே!
பதினொன்றாம் பாட்டு
*கண்ணித் தண்ணந் துழாய்முடிக் கமலத் தடம்பெருங் கண்ணனை* புகழ்
நண்ணித் தென்குருகூர்ச் சடகோபன் மாறன்சொன்ன*
எண்ணில் சோர்வி லந்தாதி ஆயிரத் துள்ளிவையும்ஓர் பத்திசை யொடும்*
பண்ணில் பாட வல்லாரவர் கேசவன்தமரே.
அவ:- நிக3மத்தில், இப்பத்தை இனிதாய் அநுஸந்தி4க்குமவர் கள் ப4க3வத் பரிக்3ரஹமாவர் என்கிறார்.
வ்யா:- (கண்ணித் தண்ணந்துழாய் முடிக் கமலத் தடம்பெருங் கண்ணனை) தம்மோடே கலக்கையால் அவனுக்குப் பிறந்த செவ்வியைச் சொல்லிற்று. (புகழ்நண்ணி) அவன் தம்பக்கல் பண்ணின அபி4நிவேச கு3ணத்திலே மிகவும் அவகா3ஹித்து. (தென்குருகூர் என்று தொடங்கி) ஆயிரம் திருவாய்மொழியிலும், எம்பெருமான் தம்பக்கல் பண்ணின வ்யாமோஹத்தில் ஒன்றுங்குறையாமே ஆழ்வார் அருளிச்செய்த இப்பத்தை இசையோடும் பண்ணோடும் பாடவல்லார்களுக்கு “கேசவன் தமர்” என்னும் ஆகாரம்போக்கி ஆகாராந்தரமில்லை.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
அவதாரிகை 2-7
கேசவன்தமர் – ப்ரவேசம்
ஏழாம் திருவாய்மொழியில் – எம்பெருமான் பண்ணின அபி4நிவேசாதிசயம் ஆழ்வார் தம்பக்கல் அடங்காதே தம்மோடு பரம்பரயா ஸம்ப3த்3த4 ரானார்பக்கலிலுங்கூட வெள்ளமிட்ட படியைக்கண்டு, “இது என்பக்கல் உண்டான விஷயீகாராதிசயமிறே” என்று கொண்டு ப்ரீதராய், தம்மை இப்படி விஷயீகரிக்கைக்கு ஈடான கு3ணசேஷ்டிதாதி3களை அநுஸந்தி4 த்து, தத்ப்ரதிபாத3கமான திருநாமங்களாலே பேசி அநுப4விக்கிறார்.
முதல் பாட்டு
கேச வன்தமர் கீழ்மே லெமரே ழெழுபிறப்பும்*
மாசதி ரிதுபெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா*
ஈசன் என்கரு மாணிக்கம்என் செங்கோலக் கண்ணன்விண்ணோர்
நாயகன்* எம்பிரான் எம்மான் நாரா யணனாலே.
அவ:- முதற் பாட்டில் – ஸ்வஸம்ப3ந்தி4கள் பக்கலிலும் எம்பெருமானபி4நிவிஷ்டனானபடியைக் கண்டு, இதெல்லாம் என்பக்கலு ண்டான விஷயீகாராதிசயமிறே என்று ஹ்ருஷ்டராகிறார்.
வ்யா:- (கேசவன் தமர் கீழ்மேல் எமர் ஏழெழுபிறப்பும்) கீழ் ஏழுபடிகாலும், மேல் ஏழுபடிகாலும் என்னோடு ஸம்ப3ந்தி4களாயிருப் பார் எல்லாம் ப4க3வத் பரிக்3ரஹமானார்கள். (மாசதிரிது பெற்று) கேசவன்தமராகிற இப்பெருஞ்சதிரைப் பெற்று; ஆகஸ்மிக ப4க3வத் ப்ரஸாத3த்தைப் பெற்று என்னவுமாம். (நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா) நம்முடைய இஸ்ஸம்பத்து மிகுகிறபடியென்! அவ்வழியே அயர் வறும் அமரர்களைப் போலே என்னை அடிமைகொண்ட ஆஸ்ரித வத்ஸலனான நாராயணனாலே.
இரண்டாம் பாட்டு
நாரணன் முழுவே ழுலகுக்கும் நாதன் வேதமயன்*
காரணம் கிரிசை கரும மிவை முதல்வன் எந்தை*
சீரணங் கமரர் பிறர்பல ரும்தொழு தேத்தநின்று*
வாரணத் தைமருப் பொசித்த பிரான்என் மாதவனே.
வ்யா:- இரண்டாம் பாட்டில் – ஸர்வலோகங்களுக்கும் ஸ்வாமியாய், க்ரியாஸாத4நம், க்ரியை, தத்ஸாத்4யமான கார்யம் இவற்றுக்கு நிர்வாஹகனுமாய், இப்படி வேத3த்திலே மிகவும் ப்ரதிபாதி3க்கபடுகிறவன் க்ருஷணனாய் வந்து திருவவதாரம்பண்ணி, சீர்மையையுடையராய் அப்ராக்ருத ஸ்வபா4வரான நித்யஸூரிகளும் மற்றும் பலரும் தொழுது ஏத்தும்படி நின்று, குவலயாபீட3த்தின் கொம்பைப்பறிக்கையாகிற மஹோபகாரத்தைப் பண்ணுவதுஞ் செய்து இப்படிகளாலே “நாராயணன்” என்னும் திருநாமத்தையுடைய னுமாய் என் பக்கலிலே ப்ரவணனான ச்ரிய:பதி என்னை அடிமை கொண்டான். “சீரணங்கென்று பெரியபிராட்டியார்” என்றுஞ்சொல்லுவர்.
மூன்றாம் பாட்டு
மாதவன் என்றதே கொண்டுஎன்னை யினிஇப்பால் பட்டது*
யாத வங்களும் சேர்கொடே னென்றுஎன்னுள் புகுந்திருந்து*
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாம ரைக்கண்குன்றம்*
கோதவ மிலென்கன்னற் கட்டிஎம் மான்என் கோவிந்தனே.
அவ:- மூன்றாம் பாட்டில் – மாதவன் என்கிற உக்திமாத்ரத்தாலே என்னுடைய ஸகல தோ3ஷங்களையும் போக்கி என்னை விஷயீகரித்த ருளினான் என்கிறார்.
வ்யா:- (மாதவன் என்று தொடங்கி) மாதவன் என்னும் திருநாமத்தி னுடைய உக்திமாத்ரத்தையே அநேக வ்யயாயாஸஸாத்4ய ஸமாஸ்ரயண மாகக்கொண்டு, என்னை ‘போன நெடுங்கால மெல்லாம் இழந்தோம், இனி, மேலுள்ள காலமாகிலும் இவர் பக்கல் ஒரு தோ3ஷமும் சேரவொட்டேன்’ என்று என்னுள்ளே வந்து புகுந்து நிரந்தர வாஸம்பண்ணி, எனக்கு நிரதிசயபோ4க்3யமாய்க்கொண்டே, “ஸ்வரூபப்ரயுக்தம்” என்னலாம்படி அநாதி3யாய் வருகிற தோ3ஷத்தை யும், நாடோறும் ஒரு ஹேதுவசத்தாலே வருகிற தோ3ஷத்தையும் போக்குவதும் செய்து, என்னோட்டை ஸம்ஸ்லேஷத்தாலே விகஸிதமாய்ச் சிவந்திருந்துள்ள திருக்கண்களையும் வளர்ந்த திருமேனியையுமுடையான். “தீது, அவம்” என்றது – நிஷ்க்ருதியில்லாத பாபமும், நிஷ்க்ருதியுண்டான பாபமும் என்றுமாம். (கோதவம் என்று தொடங்கி) பாகு தப்பாதல், மற்றொன்றினுடைய ஸம்ஸர்க்க3த்தாலே வரும் தோ3ஷமாதல் ஒன்றுமின்றிக்கே யிருந்துள்ள கன்னற்கட்டி போலே நிரதிஶய போ4க்3யமாய், தன்னுடைய போ4க்3யதை யைக் காட்டி என்னை அடிமை கொண்டவன். (என் கோவிந்தன்) என்னை விஷயீகரிக்கைக்காக கோ3விந்த3னானவன்.
நான்காம் பாட்டு
கோவிந் தன்குடக் கூத்தன் கோவலனென் றென்றேகுனித்து*
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி* என்னைக்கொண்டுஎன்
பாவந் தன்னையும் பாறக்கைத்துஎமரே ழெழுபிறப்பும்*
மேவும் தன்மைய மாக்கினான் வல்லன்எம் பிரான்விட்டுவே.
அவ:- நாலாம் பாட்டில் – “என்னோடு ப்ரம்பரயா ஸம்ப3த்3த4ரானாரையுங்கூட என்னைப்போலேயாக்கினான்; ஒருவருடைய ஸாமர்த்2யமிரு ந்தபடியே!” என்று விஸ்மிதராகிறார்.
வ்யா:- (கோவிந்தன் என்று தொடங்கி) தன்னுடைய கு3ணசேஷ்டி தாதி3களுக்கு வாசகமான திருநாமங்களைச் சொல்லாநின்று கொண்டே ப்ரீதிப்ரகர்ஷத்தாலே குனிக்கவும், தன்னுடைய ஐஸ்வர்யத்தையும், ஆஸ்ரிதபாரதந்த்ர்யத்தையும் பாடி ஆடும்படியாகவும் என்னைத்திருத்தி. (என்னை என்று தொடங்கி) ஸம்ஸாரத்திலே மக்3நனாயிருக்கிற என்னைப்பரிக்3ரஹித்து, பின்னை என்னுடைய து3ஸ்ஸாத4மான பாபங்களையும் போக்கி, கீழ் ஏழுபடி காலும் மேல் ஏழுபடிகாலும் என்னோடு ஸம்ப3ந்தி4 களானாரைத் தன்னாலல்லது செல்லாத ஸ்வபா4வராக்கினான்; என்னை விஷயீகரிக் கைக்காக ஜக3த்தெங்கும் வ்யாப்தனாயிருக்கிறவன் தான் நினைத்தபடி செய்யவல்லன்.
ஐந்தாம் பாட்டு
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள்கண்கள்*
விட்டிலங்கு கருஞ் சுடர் மலையே திருவுடம்பு*
விட்டிலங்கு மதியம் சீர்சங்கு சக்கரம் பரிதி*
விட்டிலங்கு முடி யம்மான் மதுசூதனன் தனக்கே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – தம்மையும் தம்மோடு ஸம்ப3ந்தி4களா னாரையும், ததே3கபோ4க3ராக்கிற்று தன் திருவழகைக்காட்டி என்கிறார். தம்மையும் தம்முடன் ஸம்ப3ந்தி4களானாரையும் பெறுகையாலே எம்பெருமானுக்கு நிரதிசயமான ஔஜ்ஜ்வல்யம் பிறந்ததென்கிறார் என்றுமாம்.
வ்யா:- விட்டிலங்குகை – மிகவும் விளங்காநிற்கை. மதியம்-சந்த்3ரன். பரிதி-ஆதி3த்யன். அம்மான்-ஸர்வேஸ்வரன். மதுசூதனன்-தம்முடைய ப்ரதிப3ந்த4கநிராஸகன்.
ஆறாம் பாட்டு
மதுசூ தனையன்றி மற்றிலேனென்றுஎத்தாலும் கருமமின்றி*
துதிசூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றுஊழி யூழிதொறும்*
எதிர்சூழல் புக்குஎனைத் தோர்பிறப்பும்எனக்கே அருள்கள்செய்ய*
விதிசூழ்ந்த தால்எனக் கேல்அம்மான் திரிவிக் கிரமனையே.
அவ:- ஆறாம் பாட்டில் – தன்பக்கலிலே நான் ப்ரவணனாகைக்கு எம்பெருமான் அநேக காலம் வருந்திற்றெல்லாம் தன்னுடைய க்ருபை யாலே என்கிறார்.
வ்யா:- (மதுசூதனை என்று தொடங்கி) மது4ஸூத3நனையொழிய மற்றொரு ப்ராப்யத்தை உடையேனல்லேன் என்று அத்4யவஸித்து, மற்றுள்ள புருஷார்த்த2ங்களைக்கொண்டு கார்யமின்றிக்கே காலமுள்ள தனையும் நின்று தன்னுடைய ஸ்தோத்ராத்மகமாய், ஸ்பஷ்டமாக வாசக மான பாட்டுக்களைப்பாடி, அந்த ஹர்ஷத்தாலே ஆடும்படியாக. (எதிர் என்று தொடங்கி) அநேக ஜந்மங்களையெல்லாம் என்னை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஈடான திருவவதாரங்களைப்பண்ணி. (எனக்கே அருள்கள் செய்ய வென்று மேலுக்கு) ஸர்வேஸ்வரனாய் வைத்து ஸர்வசுலப4த்வார்த்த2 மாக த்ரிவிக்ரமனாயிருக்கிற எம்பெருமானை, அதுக்குமேலே எனக்கே நிரவதி4க ப்ரஸாத3ம் பண்ணும்படி எனக்கென்னவே விதி4 சூழ்ந்தது. தம்மை விஷயீகரித்தல்லது எம்பெருமானையிருக்கவொட்டாமை யால், அவனுடைய க்ருபாகு3ணத்தை-விதி4 என்கிறது.
ஏழாம் பாட்டு
திரிவிக் கிரமன் செந்தாமரைக்கண்எம் மான்என் செங்கனிவாய்*
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்த(ன) னென்றென்று*உள்ளிப்
பரவிப் பணிந்து பல்லூழி யூழிநின் பாதபங்கயமே*
மருவித் தொழும்மன மேதந்தாய் வல்லைகாண்என் வாமனனே!
அவ:- ஏழாம் பாட்டில் – உன்னுடைய கு3ணாநுஸந்தா4நபூர்வக மாக ஸ்துதிப்ரணாமாதி3களைப் பண்ணிக்கொண்டு உன்னை அநுப4விக்குமிதுவே ப்ரயோஜநமாகக்கொண்டிருக்கும் மநஸ்ஸை எனக்குத் தந்தாய்; ஸ்ரீவாமநனான உனக்கு அரியதுண்டோ? என்கிறார்.
வ்யா:- (என்செங்கனிவாய் என்று தொடங்கி) சிவந்து தோற்றின திருவத4ர நிறத்திலே பகைத்தொடையனாய் அதித4வளமான திருமுத்தின் நிறத்தைக்காட்டி என்னை ஈடுபடுத்தினவன். (என்றென்று தொடங்கி) இப்படி பலகால் நினைத்தும், அடைவுகெடப் பேசியும், கு3ண பரவசனாய் வணங்கியும், இப்படி காலதத்வமுள்ள தனையும் அநந்ய ப்ரயோஜநனாய்க்கொண்டு உன் திருவடிகளிலே அடிமை செய்யும்படி யான மநஸ்ஸைத் தந்தாய் என் வாமனனே! என்று – எம்பெருமானை உகக்கிறார்.
எட்டாம் பாட்டு
வாமனன்என்மரதக வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய்!* என்றென்றுஉன் கழல்பாடி யேபணிந்து* தூமனத் தனனாய்ப் பிறவித் துழதி நீங்க* என்னைத்
தீமனங் கெடுத்தாய்உனக்குஎன் செய்கேன்என் சிரீதரனே!
அவ:- எட்டாம் பாட்டில் – எம்பெருமான் பண்ணின உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரமில்லை என்கிறார்.
வ்யா:- (என் மரதகவண்ணன்) எனக்கு ஸ்ரமஹரமான நிறத்தை யுடையவன். (காமனைப்பயந்தாய்) லோகத்தையெல்லாம் தன் அழகாலே பிச்சேற்றும் காமனுடைய அழகுக்கும் உபாதா3நமானவனே! (என்றென்று தொடங்கி) கீழ்ச்சொன்ன திருநாமங்களை இனிதாகச் சொல்லாநின்று கொண்டே உன் திருவடிகளிலே விழிந்து நிர்தோ3ஷா ந்த:கரணனாய் ஸாம்ஸாரிக து3:க்க2மெல்லாம் நீங்கும்படியாக என்னுடைய மநோதோ3 ஷத்தைப் போக்கினாய்; பூர்ணனாகையாலே உனக்கு ப்ரத்யுபகாரமாக என்னால் செய்யலாவது காண்கிறிலேன்.
ஒன்பதாம் பாட்டு
சிரீஇதரன் செய்ய தாமரைக் கண்ணனென்றென்று இராப்பகல்வாய்
வெரீஇ* அலமந்து கண்கள்நீர் மல்கிவெவ் வுயிர்த்துயிர்த்து*
மரீஇய தீவினை மாள இன்பம்வளர வைகல்வைகல்
இரீஇ* உன்னைஎன் னுள்வைத் தனைஎன் இருடீகேசனே!
அவ:- ஒன்பதாம் பாட்டில் – ஆடியாடியில் (2-4), பிறந்த வ்யஸநமெல்லாம் போய் மிகவும் ப்ரீதனாம்படி என்னுள்ளே வந்து போராதபடி புகுந்தருளி, என்னுடைய இந்த்3ரியங்களை நீயிட்ட வழக்காக்கினாய் என்று ப்ரீதராகிறார். ப4க்தி பூர்வகமாக உன்னை அநுப4வியாநிற்க, ப்ரதி ப3ந்த4கங்களும் நீங்கி, நிரதிசய ஸுக2மும் பிறக்கும்படியாக உன்னை என்னுள்ளே வைத்தாய் என்று ப்ரீதராகிறார் என்றுமாம்.
வ்யா:- வாய்வெரீஇ – வாய்வெருவி. மரீஇய-மருவின. இரீஇ வைத்தனை-இருத்திவைத்தாய்.
பத்தாம் பாட்டு
இருடீ கேசன் எம்பிரான் இலங்கை யரக்கர்குலம்*
முருடு தீர்த்த பிரான்எம்மான் அமரர்பெம்மா னென்றென்று*
தெருடி யாகில் நெஞ்சே! வணங்குதிண்ணம் அறிஅறிந்து*
மருடி யேலும் விடேல்கண்டாய் நம்பிபற்ப நாபனையே.
அவ:- பத்தாம் பாட்டில் – ‘நமக்கு மிகவும் உபகாரகனானவனை ஒருகாலும் விடாதே கிடாய்’ என்று திருவுள்ளத்தைக் குறித்து அநுசாஸிக்கிறார்.
வ்யா:- (இருடீகேசன் என்று தொடங்கி) லங்கையில் ராக்ஷஸ ஸந்தாநத்தில் முருடனான ராவணனை முடித்து உபகரித்தாற்போலே, தன் அழகாலே என் இந்த்3ரியங்களை அநந்யபரமாக்குகையாகிற மஹோபகாரத்தைப் பண்ணினவன். (எம்மானென்று தொடங்கி) ‘அயர் வறும் அமரர்களதிபதியாய்வைத்து என்னை அடிமை கொண்டான்’ என்று கொண்டு மிகவும் அநுஸந்தி4த்து, நெஞ்சே! அறிவுடையை யாகில்அவனை அநுப4வி; இத்தை த்3ருட4தரமாகக்கொள். (அறிந்தென்று தொடங்கி) “அவனை விட அடாது” என்று அறிந்து, ஸர்வகு3ண ஸம்பந்நனாய் நிரதிஶய ஸுந்த3ரனானவனை நம்முடைய அயோக்3யதாநுஸந்தா4நத் தாலே “விடுவோம்” என்று தோற்றினாலும் விடாதேகிடாய்.
பதினொன்றாம் பாட்டு
பற்ப நாபன் உயர்வற வுயரும் பெருந்திறலோன்*
எற்பரன்என்னை யாக்கிக்கொண்டுஎனக்கே தன்னைத்தந்த
கற்பகம்* என்அமுதம் கார்முகில் போலும் வேங்கடநல்
வெற்பன்* விசும்போர் பிரான்எந்தை தாமோ தரனே.
அவ:- பதினோராம் பாட்டில் – அத்யந்த விலக்ஷணனாயிருந்து வைத்து, அத்யந்த ஸுலப4னாய் என்னை அடிமைகொண்டவன் என்னை யல்லதறியான் என்கிறார்.
வ்யா:- (பற்பநாபன் என்று தொடங்கி) ஜக3து3த்பத்திகாரண மான திருநாபி4கமலத்தை உடையனாய், அபரிச்சே2த்3யமானவன், ஸம்ஸ்த கல்யாணகு3ணகனானவன், மதே3கசித்தன். (என்னையென்று தொடங்கி) என்னைத் தனக்கு அர்ஹனாக்கிப் பர்க்3ரஹித்து எனக்குத் தன்னை அஸாதா4ரணமாகத் தந்த விலக்ஷண கல்பமுமாய் நிரதிசய போக்3யமானவன். (கார்முகில் போலும் வேங்கடநல் வெற்பன்) இவனுக்கு இவ்வௌதா4ர்யம் உண்டாயிற்றது திருமலையின் மிதியாலே. (விசும்போர் பிரான்) ‘அயர் வறும் அமரர்களதிபதி’.
பன்னிரண்டாம் பாட்டு
தாமோ தரனைத் தனிமுதல்வனை ஞால முண்டவனை*
ஆமோ தரமறிய ஒருவர்க் கென்றே தொழுமவர்கள்*
தாமோ தரனுரு வாகிய சிவற்(ர்க்)கும் திசைமுகற்(ர்க்)கும்*
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே.
அவ:- பன்னிரண்டாம் பாட்டில் – ப4க3வத்3 ஜ்ஞாநத்தில் அபி4மாநிகளாயிருந்துள்ள ப3ரஹ்மாதி3களுக்கும் எம்பெருமானை அறிய வொண்ணாது என்கிறார்.
வ்யா:- (தாமோதரனை என்று தொடங்கி) ‘ஜக3த்காரணபூ4த னாய். ஜக3த்துக்கு ப்ரள்யாபத்ஸக2னுமாய், ஆஸ்ரித ப4வ்யனானவனை ஒருவர்க்கு அளவிடலாமோ?’ என்று அறிந்தார்களாகக்கொண்டு தொழும் ஸ்வபா4வருமாய், எம்பெருமானுக்கு சரீரவத் அந்தரங்க3ரான ருத்3ரனுக்கும் ப்3ரஹ்மாவுக்கும்–தன்னுடைய கு3ணார்ணவத்தை என் பக்கலிலே மடுத்து என்னை அடிமைகொண்டவனைப் பரிச்சே2தி3க்க லாமோ?
பதிமூன்றாம் பாட்டு
*வண்ண மாமணிச் சோதியை அமரர் தலைமகனை*
கண்ணனை நெடுமாலைத் தென்குரு கூர்ச்சட கோபன்*
பண்ணிய தமிழ்மாலை ஆயிரத்துள் இவைபன் னிரண்டும்*
பண்ணில் பன்னிரு நாமப்பாட்டு அண்ணல்தாள் அணைவிக்குமே.
வ்யா:- நிக3மத்தில் – இத்திருவாய்மொழியைக் கற்றவர்களை இத்திருவாய்மொழிதானே எம்பெருமான் திருவடிகளிலே சேர்க்கும் என்கிறார்.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
அவதாரிகை 2-8
அணைவதரவணை – ப்ரவேசம்
எட்டாம் திருவாய்மொழியில் – தம்முடைய பரிகரத்தையும் தம்மைப் போலே ஆக்கி, “இத்தால் போராது” என்று பார்த்தருளி, தனக்கு அஸாதா4ர ணமாய், பர்யங்கவித்3யையில் சொல்லுகிறபடியே பெரிய பிராட்டியாரை யும், தனக்குப் பர்யங்கபூ4தனான திருவனந்தாழ்வான் தொடக்கமான ‘அயர்வறும் அமரர்களையும்’ பரிகரமாக வுடைத்தாய், எத்தனையேனும் அளவுடைய ப்3ரஹ்மாதி3களுக்கும் ஸ்வபா3ஹு ப3லத்தால் து3ஷ்ப்ராப மாய், ஓரளவுமில்லையேயாகிலும் திருவடிகளையே பற்றினார்க்கு அநா யாஸேந பெறலாய், து3:க்க2க3ந்த4 ரஹிதமாய், அத்யந்த ஸுக2ரூபமாய், நிரதிசய மங்க3ளமாய், அநுப4விப்பார்க்கு அதிஸ்பு2டமாய், அபரிச்சே2த்3 யமாய், உத்தமமுமாயுள்ள முக்தப்ராப்யமான தன்னுடைய ஐஸ்வர்யத்தை, ஸர்வேஸ்வரனாகையாலே அபேக்ஷித ஸம்விதா4நக்ஷமனாயுள்ள ஸ்ரிய:பதியான எம்பெருமான், தமக்கும் தம் பரிகரத்துக்கும் தருகை யிலே உபக்ரமித்தருளுகிற இருப்பைக் கண்டு அதிப்ரீதரான ஆழ்வார், “எல்லாரையும் ஈத்3ருஶ போ4க்3பா4கி3களாக்கவேணும்” என்று பார்த்த ருளி, அவனுடைய மோக்ஷ ப்ரத3த்வத்தையும், அதுக்கு உறுப்பாக ஐஸ்வர்யத்தையும் உபதே3சித்து, ‘நானும் இவர்களைப்போலே ஆகாதே ததே3க போ4க3னாய்க்கொண்டு அவனை பு4ஜிக்கப்பெற்றேன்’ என்று த்ருப்தராய் முடிக்கிறார்.
முதல் பாட்டு
*அணைவது அரவணைமேல் பூம்பாவை யாகம்
புணர்வது* இருவ ரவர்முதலும் தானே*
இணைவனாம் எப்பொருட்கும் வீடுமுதலாம்*
புணைவன் பிறவிக் கடல்நீந்து வார்க்கே.
அவ:- முதற் பாட்டில் – இத்திருவாய்மொழியில் ப்ரதிபாதி3க்கிற அர்த்த2த்தை ஸங்க்ஷேபிக்கிறார்.
வ்யா:- (அணைவது என்று தொடங்கி) பெரிய பிராட்டியாரும், எம்பெருமானும் திருவனந்தாழ்வான்மேலே இருக்குமிருப்பைக் காண்கை முக்தப்ராப்யம் என்று கருத்து. ஆகம் – உடம்பு. (இருவரவர்) ப்ரஸித்3த4 ரான ப்3ரஹ்மரு3த்ரர்கள். (இணைவன் என்று தொடங்கி) தே3வமநுஷ் யாதி3 ஸமஸ்த ஜந்துஸஜாதீயனாய் வந்து திருவவதாரம் பண்ணி மோக்ஷ ப்ரத3னாம். (புணைவன்) “து3ஸ்தரமான ஸம்ஸாரத் தைக் கடக்கவேணும்” என்றிருக்கும் ஆஸ்ரித ப4ரமெல்லாம் தானே நிர்வஹிப்பானாகை.
இரண்டாம் பாட்டு
நீந்தும் துயர்ப்பிறவி உட்படமற் றெவ்வெவையும்*
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்*
பூந்தண் புனல்பொய்கை யானை யிடர்கடிந்த*
பூந்தண் துழாய்என் தனிநா யகன்புணர்ப்பே.
அவ:- இரண்டாம் பாட்டில் – “வீடுமுதலாம்” என்கிற பத3த்தை விவரியா நின்றுகொண்டு, எம்பெருமான்தானே வேணுமோ? அவனோடுள்ள ஸம்ப3ந்த4மே மோக்ஷப்ரத3ம் என்கிறார்.
வ்யா:- (நீந்தும் என்று தொடங்கி) கடக்க அரிதான து3:க்க2த்தையுடைத்தான ஜந்மமரணாதி3களொன்றும் இல்லாத மோக்ஷத்துக்கு அடியாம்; (பூந்தண் புனல் என்று தொடங்கி) பூத்துக் குளிர்ந்த நீரையுடைய பொய் கையிலே முதலையாலே நலிவுபட்ட ஆனையினுடைய இடரைப் போக் கின நிரதிஶய போ4க்3யனாய், என்னை அநந்யார்ஹமாக அடிமை கொண்ட எம்பெருமானோட்டை ஸம்ப3ந்த4ம். இங்கு, ஸ்ரீக3ஜேந்த்3ராழ்வானுடைய ஆபந்நிவாரணம் – த்3ருஷ்டாந்ததயா சொல்லிற்று.
மூன்றாம் பாட்டு
புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்*
புணர்த்ததன் னுந்தியோடு ஆகத்து மன்னி*
புணர்த்த திருவாகித் தன்மார்வில் தான்சேர்*
புணர்ப்பன் பெரும்புணர்ப்பு எங்கும் புலனே.
அவ:- மூன்றாம் பாட்டில் – “இருவரவர் முதலுந்தானே” (1) என்கிற பத்3த்தை விவரியாநின்றுகொண்டு, ஸ்ரிய:பதியான எம்பெருமானுடைய ஐஸ்வர்ய ஸூசகமான சேஷ்டிதங்களை எங்கும் ப்ரத்யக்ஷிக்கலாம் என்கிறார்.
வ்யா:- (புணர்க்கும் என்று தொடங்கி) ஸ்ரஷ்டாவான ப்3ரஹ்மா வுக்கும் ஸம்ஹர்த்தாவான ருத்3ரனுக்கும் திருநாபி4கமலத்திலும் திருவுடம்பி லுமாக இடங்கொடுத்து அவர்களுக்கு நிர்வாஹகனாய்; உந்திக்குப் புணர்ப்பாவது – ப்3ராஹ்மாவுக்கு உத்பத்தி ஸ்தா2நமாகை. (புணர்த்த என்று தொடங்கி) தன் மார்விலே ஸம்ஸ்லிஷ்டையான பெரியபிராட்டியாரை யுடையனாய், ஏகார்ணவத்திலே ஸ்ருஷ்ட்யர்த்த2 மாக சயாநனாயிருந்துள்ளவனுடைய பெருந்தொழில். தான் தனக்கு ஸத்3ருசமான சேஷ்டிதங்களையுடையன் என்றுமாம்.
நான்காம் பாட்டு
புலனைந்து மேயும் பொறியைந்தும் நீங்கி*
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்!*
அலமந்து வீய அசுரரைச் செற்றான்*
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே.
அவ:- நாலாம் பாட்டில் – ‘க்ஷுத்3ரமான விஷயஸுக2ங்களை விட்டு நிரதிசய ஸுக2ரூபமான மோக்ஷபுருஷார்த்த2த்தை வேண்டியிருப்பீர்! எம்பெருமானை ஆஸ்ரயியுங்கோள்’ என்கிறார்.
வ்யா:- (புலனைந்தும் என்று தொடங்கி) ஐந்து விஷயங்களிலும் ப்ரவணமாம் ஐந்து இந்த்3ரியங்களுக்கும் வஸ்யராகையைத் தவிர்ந்து, நிரதிசய போ4க்3யமான திருநாட்டிலே புகவேண்டியிருப்பீர்! (அலமந்து என்று தொடங்கி) உங்களுடைய ஸமாஸ்ரயணவிக்4நங்களை நிஸ்ஸேஷமாகப் போக்கும் ஸ்வபா4வனான எம்பெருமானுடைய ஸமாஸ்ரயிக்கும் த3சையிலே ஸாத்4யத3சையிற்போலே இனிதாயிருந் துள்ள கல்யாண கு3ணங்களிலே நிரந்தரமாக ப்ரவணராகுங்கோள்.
ஐந்தாம் பாட்டு
ஓவாத் துயர்ப்பிறவி உட்படமற் றெவ்வெவையும்*
மூவாத் தனிமுதலாய் மூவுலகும் காவலோன்*
மாவாகி ஆமையாய் மீனாகி மானிடமாம்*
தேவாதி தேவ பெருமான்என் தீர்த்தனே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – ‘ஹயக்3ரீவாதி3ரூபத்தினாலே திருவவதாரம் பண்ணியருளி, தன்னாலே ஸ்ருஷ்டமான ஜக3த்தை யெல்லாம் ரக்ஷித் தருளாநிற்கும்’ என்று கொண்டு, முதற்பாட்டில் ப்ரஸ்துதமான ஸர்வஸஜா தீயத்வத்தை விவரிகிறார்.
வ்யா:- (ஓவா என்று தொடங்கி) நிரந்தர து3:க்கா2வஹமான ஜந்ம மகப்பட மற்றும் எல்லாவற்றுக்கும் “நிஷ்ப2லம்” என்று கைவிடாத காரணமாய். (தேவாதி தேவபெருமான்) ப்3ரஹ்மாதி3தே3வர்களுக்கும் ஆதி3தேவ ராயுள்ள அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன். (என் தீர்த்தனே) என்னை ப்ரயோஜநாந்தரபரதையைத் தவிர்த்தவன்.
ஆறாம் பாட்டு
தீர்த்த னுலகளந்த சேவடிமேல் பூந்தாமம்*
சேர்த்தி அவையே சிவன்முடிமேல் தான்கண்டு*
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழா யான்பெருமை*
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே.
அவ:- ஆறாம் பாட்டில் – அர்ஜுநன் ஆராய்ந்த ப4க3வத்பரத்வம் இன்னமும் சில(வ)ர் ஆராயவேண்டும்படியாயிருந்ததோ? என்கிறார்.
வ்யா:- (தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமம் சேர்த்தி) திரு வடிகளில்நின்றும் புறப்பட்ட க3ங்கா3ஸ்பர்ஸத்தாலே ருத்3ரன் ஸுத்3த4 னாய், “சிவன்” என்னும் பேரையுடையனாம்படி பண்ணின எம்பெருமானுடைய ஸர்வஸுலப4மான திருவடிகளிலே அழகிய பூமாலைகளைச் சாத்தி. (பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை) அர்ஜுநன் இப்படி ஆராய்ந்த ப4க3வத்ப்ரத்வம்.
ஏழாம் பாட்டு
கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க் கீழ்புக்கு
இடந்திடும்* தன்னுள் கரக்கும் உமிழும்*
தடம்பெருந்தோ ளாரத் தழுவும் பாரென்னும்
மடந்தையை* மால்செய்கின்ற மால்ஆர்காண் பாரே.
அவ:- ஏழாம் பாட்டில் – “ப4க3வதை3ஶ்வர்ய ஸாத4நத்தில் ஓரோ வொன்றே நிரபேக்ஷ ஸாத4நமான க்ஷீரார்ணவ சயநாதி3களாகிற உபபத் திகளைச் சொல்ல வேணும்” என்று உபக்ரமித்த ஆழ்வார், அவற்றினுடைய ஆநந்த்யத்தாலே ஒருவர்க்கும் அறியமுடியாது என்கிறார்.
வ்யா:- கேழல் – வராஹம். பாரென்னும் மடந்தையை – பூ4மிக்கு அபி4மாநினியான பிராட்டியை. மால் – ஸர்வேஶ்வரன்; செய்கின்ற மால் – பண்ணுகிற வ்யாமோஹம்.
எட்டாம் பாட்டு
காண்பாரார்எம்மீசன் கண்ணனைஎன் காணுமாறு*
ஊண்பேசில்எல்லா வுலகும்ஓர் துற்றாற்றா*
சேண்பால வீடோ உயிரோமற் றெப்பொருட்கும்*
ஏண்பாலும் சோரான் பரந்துளனாம் எங்குமே.
அவ:- எட்டாம் பாட்டில் – அவனுடைய அத்3பு4த கர்மங்கள் தனித் தனியும் எத்தனையேனும் அளவுடையார்க்கும் பரிச்சே2தி3க்க முடியாது என்கிறார்.
வ்யா:- (காண்பாரார் என்று தொடங்கி) ஸர்வேஸ்வரனான க்ருஷ்ணனைக் காண்கைக்கு அளவுடையார் இல்லை. எத்தனை யேனும் அளவுடையார்க்கும் காணவொண்ணாதபடி அபரிச்சே2த்3ய மாய் இருக்கும் அவன் படி. (ஊண் என்று தொடங்கி) ப்ரளயகாலத்தில் திருவயிற்றிலே ஜக3த்தை வைக்கிறபோது ஜக்3த்தெல்லாங்கூட ஓரவதா3நத்துக் கும் போந்ததில்லை; இது அபரிச்சே2த்3யதைக்கு உதா3ஹரணம். (சேண் என்று தொடங்கி) உயர்த்தியே ஸ்வபா4வமாக வுடைத்தான பரமபத3ஸ்த2 ரான நித்யஸூரி ப்ரப்4ருதிகளென்ன, முக்தாத்ம ஸ்வரூபமென்ன, ப3த்3த4 ரான திர்யகா3தி3கள் அகப்பட எல்லாப் பதா3ர்த்த2ங்களுக்கும் ஓரிடமும் விடாதே எங்கும் வ்யாபித்து உளனாம்.
ஒன்பதாம் பாட்டு
எங்கு முளன்கண்ண னென்ற மகனைக்காய்ந்து*
இங்கில்லை யாலென் றிரணியன் தூண்புடைப்ப*
அங்குஅப் பொழுதே அவன்வீயத் தோன்றிய*என்
சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே?
அவ:- ஒன்பதாம் பாட்டில் – எம்பெருமானுடைய ஸர்வக3தத்வ த்தை இசையாதார் இசையவேண்டும்படியாம ஸ்ரீ ப்ரஹலாதா3ழ்வானு க்காக அபேக்ஷா ஸமகாலத்திலே தூணிலே வந்து தோற்றியருளின ஸ்ரீ நரஸிம்ஹத்தினுடைய பெருமை ஒருவராய் ஆராயுமளவல்ல என்கிறார்.
வ்யா:- வீய – முடிய.
பத்தாம் பாட்டு
சீர்மைகொள் வீடு சுவர்க்கம் நரகீறா*
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்*
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற*
கார்முகில்போல் வண்ணன்என் கண்ணனைநான் கண்டேனே.
அவ:- பத்தாம் பாட்டில் – அல்லாதார் செய்தபடி செய்கிறார்; உப4யவித4 மஹாவிபூ4திகனாயிருந்த எம்பெருமானை நான் அநுப4விக்க ப்பெற்றேன் என்கிறார்.
வ்யா:- (சீர்மை என்று தொடங்கி) பரமபத3ம், ஸ்வர்க்க3ம், நரகம் இவை முடிவாக, ஈரப்பாடு உடைத்தான தே3வர்கள் நடுவாக, மற்றும் உண்டான ஸகல பதா3ர்த்த2ங்களுக்கும் த்ரிவித4காரணமும் தானே யாய்க்கொண்டு ஸர்வக3தனாய். (தனிநின்ற என்று தொடங்கி) ஸம்ஸாரிகளோடு வ்யாவ்ருத்தனாய், திருநாட்டிலே வர்ஷுகவலா ஹகம் போலேயிருக்கிற திருநிறத்தையுடையனாய், என்னை விஷயீகரித்த க்ருஷ்ணனை.
பதினொன்றாம் பாட்டு
கண்தலங்கள் செய்ய கருமேனி யம்மானை*
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்*
பண்தலையில் சொன்னதமிழ் ஆயிரத்துஇப் பத்தும்வல்லார்*
விண்தலையில் வீற்றிருந் தாள்வர்எம் மாவீடே.
அவ:- நிக3மத்தில் – இத்திருவாய்மொழி கற்றவர்கள் இத்திருவாய் மொழியில் சொன்னபடியே எல்லாப்படியாலும் விலக்ஷணமாய் முக்தப்ரா ப்யமான ஐஸ்வர்யத்தைப் பெறுவர் என்கிறார்.
வ்யா:- (கண்டலம் என்று தொடங்கி) ஆழ்வாரோட்டைக் கலவி யாலே விஸ்த்ருதமாய், சிவந்த திருக்கண்களையும், நிறம் பெற்ற திருமேனியையும் உடையனான ஸர்வேஸ்வரனை, ப4க3வத்3 விஷயீகாரத்தாலே புஷ்டமாகையாலே வண்டுகள் தேனிலே அலையாநின்ற திருச்சோலையையுடைய திருவழுதிவளநாட்டை யுடையரான. பண்தலையில் – பண்ணின்மேல். விண்தலையில் – விண்ணின்மேலே.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
அவதாரிகை 2-9
எம்மாவீடு – ப்ரவேசம்
ஒன்பதாம் திருவாய்மொழியில் – கீழில் திருவாய்மொழியில் ப்ராப்யமாகச்சொன்ன மோக்ஷத்தை இவர்க்கு எம்பெருமான் கொடுப்பானாக உபக்ரமிக்க, இளையபெருமாளையும் ஸ்ரீப4ரதாழ் வானையும் போலே ப4க3வத் பாரதந்த்ரயத்தாலல்லது செல்லாத படியை உடைய ஆழ்வார், அப்படியன்றிக்கே “ ‘தமக்கு’ என்றொரு புருஷார்த்த2த்தைக் கோலுமது, ‘அஹம், மம’ என்கிற அபி4மாநத்துக்கு விஷமாகையால் ஐஶ்வர்யாதி3கள் ஹேயமானாப்போலே ஹேயம்” என்று பார்த்து, அத்தை உபேக்ஷித்து, “பரமபத3 ஸ்த2னாய் ஸுகி2யாக வுமாம், ஸம்ஸாரத்திலே து3:க்கி2யாகவுமாம், இவற்றில் நிர்ப்ப3ந்த4 மில்லை, உனக்கேயாயிருக்குமிருப்பே எனக்கு வேண்டுவது” என்று ஸ்வப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து, அத்தை ஈண்டெனத் தந்தருள வேணும் என்று எம்பெருமானை அபேக்ஷிக்கிறார்.
முதல் பாட்டு
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்*நின்
செம்மா பாதபற்புத் தலைசேர்த்து ஒல்லை*
கைம்மா துன்பம் கடிந்த பிரானே!*
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே.
அவ:- முதற் பாட்டில் – எத்தனையேனும் உத்க்ருஷ்ட புருஷார்த்த2 மான ஸ்ரீவைகுண்ட2த்திலும் எனக்கு அபேக்ஷையில்லை; உன் திருவடி களை என் தலையிலே வைக்குமித்தனையே வேண்டுவது என்கிறார்.
வ்யா:- வீட்டுத்திறம் – வீட்டிடையாட்டம். செப்பம் – சொல்லோம். (நின் செம்மா பாதபற்புத் தலைசேர்த்து) உமக்குச் செய்யவேண்டுவ தென்? என்னில்; அகவாய் சிவந்து, புறங்கரியதாய், நிரதிசய போ4க்3ய மான உன்னுடைய திருவடிகளை என் தலையிலே சேர்த்தருளவேணும். ஆஸ்ரிதர்க்கு அருமைப்படவேண்டாதபடி செவ்விதாய், பரமபூஜ்ய மான பாத3பத்3மம் என்றுமாம். ஒல்லை – ஈண்டென. (கைம்மாதுன்பம் கடிந்த பிரானே) ஸ்ரீக3ஜேந்த்3ராழ்வானுடைய ஆபந்நிவாரணமாகிற மஹோப கார்த்தைப் பண்ணினவனே! இது த்3ருஷ்டாந்தம். (அம்மா அடியேன்) ‘உம்முடைய அபேக்ஷிதம் செய்கைக்கு உறவறியவேணு மிறே’ என்னில்; ‘நீநாத2ன், நான் அடியேன்’, (வேண்டுவது) “உறும்” என்று வேண்டுகிறேன ல்லேன்; உகந்து அபேக்ஷிக்கிறேன். (ஈதே) இவ்வடிமையும், மற்று என்ன புருஷார்த்த2மும் வேணும்? என்னில்; இதுவே அமையும்.
இரண்டாம் பாட்டு
ஈதேயா னுன்னைக் கொள்வதுஎஞ் ஞான்றும்*என்
மைதோய் சோதி மணிவண்ண எந்தாய்!*
எய்தா நின்கழல் யானெய்த* ஞானக்
கைதா காலக் கழிவுசெய் யேலே.
அவ:- இரண்டாம் பாட்டில் – “இப்புருஷார்த்த2ம் பெற்றேன்” என்று நான் தேறும்படி ஈண்டெனப் பண்ணியருளவேணும் என்கிறார்.
வ்யா:- (ஈதே யானுன்னைக் கொள்வது) பலகாலும் கேட்கிலும் நான் உன்னைக் கொள்வது இதுவே. (எஞ்ஞான்றும்) இவ்வபி4ஸந்தி4 எத்தனை நாளைக்கு நிற்கும்? என்னில்; யாவதா3த்மபா4வி. (என் மைதோய் சோதி மணிவண்ண எந்தாய்) இங்ஙனேயிருக்கிற அடிமைச் சுவடு உமக்கு எங்ஙனே வந்தது? என்னில்; ஸ்ரமஹரமான உன் திருவழகை எனக்குக் காட்டி அவ்வழியே நீ என்னை அடிமை கொள்கையாலே. (எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்கை தா) பெறுதற்கு அரிதான திருவடிகளை நான் பெற்றேன் என்னுமது அறியும்படி பண்ணவேணும். ஞானமென்று – ப4க்திப்யோக3முமாம். ஜ்ஞாநப்ரதா3நம் அமிழ்ந்தினார்க்குக் கைகொடுத் தாற்போலே யிருத்தலால் (ஞானக்கை தா) என்கிறார். (காலக்கழிவு செய் யேலே) “செய்கிறோம்” என்ன ஒண்ணாது; செய்துகொடுநிற்கவேணும்.
மூன்றாம் பாட்டு
செய்யேல் தீவினை யென்றுஅருள் செய்யும்*என்
கையார் சக்கரக் கண்ண பிரானே!*
ஐயார் கண்டம் அடைக்கிலும்* நின்கழல்
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே.
அவ:- மூன்றாம் பாட்டில் – உத்க்ரமண த3சையான து3ர்க்க3தியி லும் நான் இளையாதே உன் திருவடிகளை ஏத்தும்படி பண்ணியருள வேணும் என்கிறார்.
வ்யா:- (செய்யேல் என்று தொடங்கி) கையும் திருவாழியுமா யிருக்கிற அழகைக்காட்டி எனக்குண்டான பா3ஹ்யவிஷய ப்ராவண்யத்தைத் தவிர்த்த மஹோபகாரகனான க்ருஷ்ணனே! (ஐயார் கண்டமடைக்கிலும்) மிக்க ஸ்லேஷ்மம் மிடற்றைக்கட்டிலும்.
நான்காம் பாட்டு
எனக்கேயாட் செய்எக் காலத்தும் என்று*என்
மனக்கே வந்துஇடை வீடின்றி மன்னி*
தனக்கே யாக எனைக்கொள்ளும் ஈதே*
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.
அவ:- நாலாம் பாட்டில் – உபநிஷத்3 கு3ஹ்யமான பாரதந்த்ர்யமே எனக்குத் தந்தருள வேண்டுவது என்கிறார்.
வ்யா:- (எனக்கே என்று தொடங்கி) ‘எல்லாக் காலத்திலும் எனக்கே அடிமைசெய்’ என்று நான் த4ரிக்கும்படி அருளிச்செய்து, என் ஹ்ருத3யத்திலே வந்து நிரந்தரமாக இருந்தருளுவதும் செய்து. (தனக்கே என்று தொடங்கி) ஸ்ரக் சந்த3நாதி3களைப்போலே தனக்கே சேஷமாக என்னைக்கொள்ளும் இது எனக்கு அஸாதா4ரணமாக க்ருஷ்ணனை நான் கொள்ளும் புருஷார்த்த2ம்.
ஐந்தாம் பாட்டு
சிறப்பில் வீடு சுவர்க்க நரகம்*
இறப்பி லெய்துக எய்தற்க* யானும்
பிறப்பில் பல்பிற விப்பெரு மானை*
மறப்பொன் றின்றிஎன் றும்மகிழ் வேனே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – தே3ஹமே ஆத்மாவாகவுமாம்; தே3ஹாதிரிக்தனாயிருப்பானொருவன் ஆத்மாவாகவுமாம்; அவ்விடத்தில் ஆத3ரமி ல்லை; ஆஸ்ரிதார்த்த2மான அநேகாவதாரங்களில் ஒன்றொழியாமே அநுப4விக்கவேணும் என்கிறார்.
வ்யா:- (சிறப்பில் என்று தொடங்கி) சரீரவிஸ்லேஷம் பிறந்தால் ஸுகை2கதானமான மோக்ஷம், ஸ்வர்க்க3ம், நரகம் இவற்றைப் பெறவு மாம், தவிரவுமாம். (யானும்) நானும் அத்தனையும் பெற்றேனாய் விடுவது காண்! என்று கருத்து. (பிறப்பில் என்று தொடங்கி) கர்மவஸ்யமான பிறவியின்றிக்கேயிருக்கச்செய்தே, ஸம்ஸாரிகள் பக்கலுண்டான க்ருபாதிசயத்தாலே அஸங்க்2யாவதாரங்களைப் பண்ணியருளும் ஸர்வேஸ்வரனை ஒன்றும் மறவாதே ப்ரீதிபூர்வகமாக அநுப4விக்க வேணும்.
ஆறாம் பாட்டு
மகிழ்கொள் தெய்வம் உலோகம் அலோகம்*
மகிழ்கொள் சோதி மலர்ந்தஅம் மானே!*
மகிழ்கொள் சிந்தைசொல் செய்கைகொண்டு* என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்கவா ராயே.
அவ:- ஆறாம் பாட்டில் – தேவாதி3பதா3ர்த்த2ங்களைத் தனித்தனியே நியத ஸ்வபா4வங்களாம்படி ஸ்ருஷ்டித்தாற் போலே, ப்ரீதியுக்தமான மநோவாக்காயங்களோடே கூட நானும் ப்ரீதியுக்தனாய்க்கொண்டு என்றும் உன்னை அநுப4விக்கும்படி பண்ணவேணும் என்கிறார்.
வ்யா:- (மகிழ்கொள்) ஆநந்த3யுக்தம். (உலோகம் அலோகம்) சேதநா சேதநங்கள். (சோதி) சந்த்3ரஸூர்யாதி3கள். (மலர்ந்த அம்மானே) உண்டாக்கின ஸர்வேஸ்வரனே!
ஏழாம் பாட்டு
வாராய் உன்திருப் பாத மலர்க்கீழ்*
பேரா தேயான் வந்துஅடை யும்படி
தாராதாய்!* உன்னை யென்னுள் வைப்பில்என்றும்
ஆரா தாய்* எனக்குஎன்றும்எக் காலே.
அவ:- ஏழாம் பாட்டில் – தம்முடைய அபி4நிவேசத்தின் மிகுதி யாலே, ‘எல்லாக் காலமும் என்னை அடிமை கொள்ளலாம்படி வரவேணும்’ என்கிறார்.
வ்யா:- (உன் என்று தொடங்கி) உன் திருவடிக்கீழ் நிரந்தர கைங்கர்யத்தை எனக்குத் தராதேயிருந்துவைத்து மறக்க வொண்ணா தபடி உன்னை என்னுள்ளே நிரந்தரமாகக் காட்டுகிறவனே!
எட்டாம் பாட்டு
எக்காலத் தெந்தையாய்என்னுள் மன்னில்*மற்று
எக்கா லத்திலும் யாதொன்றும் வேண்டேன்*
மிக்கார் வேத விமலர் விழுங்கும்*என்
அக்காரக் கனியே! உன்னை யானே.
அவ:- எட்டாம் பாட்டில் – “அத்யல்பகாலமாகிலும் சேஷியாய் என் னோடே ஸம்ஸ்லேஷிக்கப்பெறில், பின்னை ஒருகாலமும் அதுவும் வேண்டா” என்று தமக்கு அடிமைசெய்கையிலுள்ள விடாயாலே அருளிச் செய்கிறார்.
வ்யா:- (எக்காலம்) எல்லாக் காலமுமாகவுமாம். (மிக்கார் என்று தொடங்கி) விமலதயா வேத3ப்ரதிபாத்3யராய், ஜ்ஞாநப4க்திகளால் மிக்கிருந்துள்ள அயர்வறும் அமரர்களுக்கு நிரதிசய போ4க்3யனான உன்னை எனக்குக் காட்டினவனே!
ஒன்பதாம் பாட்டு
யானே என்னை அறியகி லாதே*
யானே என்தனதே என்றிருந்தேன்*
யானே நீஎன் னுடைமையும் நீயே*
வானே யேத்தும்எம் வானவ ரேறே.
அவ:- ஒன்பதாம் பாட்டில் – நிரதிசய போ4க்3யமான இவ்வடிமை-யை அநாதி3காலம் நான் இழந்தேன் என்று சோகிக்கிறார்.
வ்யா:- (யானே என்று தொடங்கி) நானும் என்னுடைமையும் உனக்கு சேஷமாயிருக்கச்செய்தே, இதுக்கு முன்பு போன கால மெல்லாம் உனக்கு அடிமை என்னுமிடத்தை அறியாதே, ‘நான்’ என்றும் ‘என்னது’ என்றும் உண்டான விபரீத ஜ்ஞாநத்தையுடையேனாய் இருந்தேன். “யானே” என்கிறவிடத்தில் அவதா4ரணைக்குக்கருத்து – இவ்வஜ்ஞாநம் ப4க3வத்க்ருதமன்று, என் தோ3ஷத்தாலே வந்தது என்று, (வானே என்று தொடங்கி) அயர்வறுமமரர்கள் என்றும் அடிமை செய்து வாழாநிற்க, நீயும் அவர் களை அடிமைகொண்டு செல்லாநிற்க, இஸ்ஸம்பத்தில் எங்களுக்கும் அவர்களோபாதி ப்ராப்தியுண்டா யிருக்க இழப்பதே என்று கருத்து.
பத்தாம் பாட்டு
ஏறேல் ஏழும்வென்று ஏர்கொ ளிலங்கையை*
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி!*
தேறே லெ(னெ)ன்னை உன்பொன்னடிச் சேர்த்து ஒல்லை*
வேறே போகஎஞ் ஞான்றும் விடலே.
அவ:- பத்தாம் பாட்டில் – “இவன் தானே வந்து ஸ்வப்ராப்ய த்தை ஸாதி4த்துக்கொள்ளுகிறானிறே” என்று கைவிடாதே, ப்ரதிப3ந்த4 கங்களை நீக்கி என்னை ஈண்டென உன்தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்டருளவேணும் என்கிறார்.
வ்யா:- (ஏறேல் என்று தொடங்கி) நப்பின்னைப் பிராட்டியோட்டை ஸம்ஸ்லேஷத்துக்கு விக்4நமான எருது ஏழையும் அடர்த்தருளி, ஸ்ரீஜநக ராஜன் திருமகளோட்டைஸம்ஸ்லேஷத்துக்கு விக்4நமாய், அதிஸம்ருத்3த4 மான லங்கையை ப4ஸ்மமாக்கின வீரஶ்ரீயாலே வந்த அத்யௌஜ்ஜ்வல்யத்தையுடையவனே! (தேறேல்) தேறாதேகொள்; ‘தேறேன்’ என்று பாட2மான போது – த4ரியேன் என்கிறது. (என்னை என்று தொடங்கி) என்னை உன் திருவடிகளிலே ஈண்டெனச் சேர்த்தருளி, ஒருநாளும் பிரியாதபடி பார்த்தருளவேணும்.
பதினொன்றாம் பாட்டு
விடலில் சக்கரத் தண்ணலை* மேவல்
விடலில் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்*
கெடலி லாயிரத் துள்இவை பத்தும்*
கெடலில் வீடுசெய் யும்கிளர் வார்க்கே.
அவ:- நிக3மத்தில், இத்திருவாய்மொழியிலே ஸ்ரத்3த4தா4நரா னார்க்கு இதுதானே தாம் நிஷ்கர்ஷித்த ப்ராப்யத்தைக் கொடுக்கும் என்கிறார்.
வ்யா:- (விடலில் சக்கரத்தண்ணலை) கையில் திருவாழியை ஒரு நாளும் விடாத ஸர்வேஸ்வரனை. “இத்திருவாழியை விடிலன்றோ நாம் ஆஸ்ரிதரைப்பிரிவது; ‘எஞ்ஞான்றும் விடலே’ என்னக்கடவீரோ?” (மேவல் விடலில் வண்குருகூர்ச்சடகோபன் சொல்) அவன் விடிலும், அவனை விடில் த4ரியாத ஆழ்வார் அருளிச்செய்தது. வண்மையாவது – இவ்வநுப4 வத்துக்குப் பாசுரமிட்டு உபகரித்தபடி. (கெடலில் ஆயிரத்துள் இவை பத்தும்) அப்4யஸித்தார்க்கு அநர்த்த2க3ந்த4 மில்லாதபடியிருக்கிற ஆயிரத் திலும் வைத்துக்கொண்டு இப்பத்தும். கிளர்வார்க்கு – கெடலில் வீடுசெய் யும்) ஸஸ்ரத3த4ராய் இதிலே இழிவார்க்கு, இதுதானே – “தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே” (4) என்று நிஷ்கரிஷித்த அஹங்காரக3ந்த4மில்லாத பேற்றைக் கொடுக்கும்.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
அவதாரிகை 2-10
கிளரொளி – ப்ரவேசம்
பத்தாம் திருவாய்மொழியில் – எம்மாவீட்டில் ஆழ்வார் தாம் அபேக்ஷித்து எம்பெருமானும் தந்தருளக்கடவனாக இசைந்த புருஷார்த்த2த்தை “இங்கே இவ்வுடம்போடே பெறவேணும்” என்று தாம் அபேக்ஷிக்க, எம்பெருமானும் இவர்க்கு அடிமையிற்பிறந்த விடாய்க்கு ஈடாக அடிமைகொள்கை க்கு ஈடாகத் திருமலையைக் காட்டியருளக் கண்டு அதிப்ரீதராய், ’இனி அடிமைதான் வேணுமோ? திருமலைதானே எனக்குப் ப்ரமப்ராப்யம்’ என்கிறார்.
முதல் பாட்டு
கிளரொளி யிளமை கெடுவதன் முன்னம்*
வளரொளி மாயோன் மருவிய கோயில்*
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ் சோலை*
தளர்வில ராகில்(ச்) சார்வது சதிரே.
அவ:- முதற் பாட்டில் – திருமலையை ப்ராபிக்கையே நிரதிசய புருஷார்த்த2ம் என்கிறார்.
வ்யா:- (கிளரொளி என்று தொடங்கி) கரணபாடவம் கெடுவதற்கு முன்னே திருமலையோட்டை ஸம்ப3ந்த4த்தாலே பிறந்த அழகாலே ஆஸ்சர்யபூ4தனானவன் போ4க்3யதையின் மிகுதியாலே விடாதேயிருக்கிற கோயிலாய், நிலமிதியாலே வளரா நின்றுவைத்து, நாள்தோறும் இளகிப் பதியாநின்ற திருச்சோலை சூழ்ந்திருந்துள்ள திருமலையை. (தளர்வு என்று தொடங்கி) திருமலையையொழிய இருக்கும் இருப்பாகிற அநர்த்த2 பா4கி3களன்றிக்கே அத்தை ப்ராபிக்கையே சதிர்.
இரண்டாம் பாட்டு
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது*
அதிர்குரல் சங்கத்து அழகர்தம் கோயில்*
மதிதவழ் குடுமி மாலிருஞ் சோலை*
பதியது ஏத்தி எழுவது பயனே.
அவ:- இரண்டாம் பாட்டில் – திருமலையிற்காட்டிலும் அத்தோடே சேர்ந்த திருப்பதியை அநுப4விக்கையே பரமப்ரயோஜநம் என்கிறார்.
வ்யா:- (சதிர் என்று தொடங்கி) ஆத்மகு3ணங்களையும், வடிவழ கையுமுடைய ஸ்த்ரீகள் உங்கள்பக்கல் பண்ணும் ப்ராவண்யத்தை ஜந்ம ப்ரயோஜநமாக நினையாதே, க3ம்பீ4ரத்4வநியையுடைய ஸ்ரீபாஞ்சஜந்யத் தை ஏந்தின அழகாலே “அழகர்” என்னும் திருநாமத் தையுடையவர்க்கு ஸ்ப்ருஹணீயமான கோயில். (மதிதவழ் குடுமி) சந்த்3ரனுக்கு வருந்திப் போகவேண்டும்படியாய் உயர்ந்திருக்கை. (ஏத்தியெழுவது) ஏத்தி உஜ்ஜீ விக்கை. மாலிருஞ்சோலையாகிற பதியை என்றுமாம்.
மூன்றாம் பாட்டு
பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே!*
புயல்மழை வண்ணர் புரிந்துறை கோயில்*
மயல்மிகு பொழில்சூழ் மாலிருஞ் சோலை*
அயல்மலை யடைவது அதுக ருமமே.
அவ:- மூன்றாம் பாட்டில் – திருமலையைச்சேர்ந்த அயன் மலையை ப்ராபிக்கையே செய்ய அடுப்பது என்கிறார்.
வ்யா:- (புயல் என்று தொடங்கி) வர்ஷுகமான மேக4ம்போலே ஜல ஸ்த2ல விபா4க3மின்றிக்கே ஸர்வஸ்வதா3நம் பண்ணி வர்த்திக்கிற அழகருடைய கோயில். (மயல்மிகு பொழில்) போ4க்3யதையாலும் இருட்சியாலும் புக்கார் மிகவும் மதிமயங்கும் படியான திருச்சோலை.
நான்காம் பாட்டு
கருமவன் பாசம் கழித்துழன் றுய்யவே*
பெருமலை யெடுத்தான் பீடுறை கோயில்*
வருமழை தவழும் மாலிருஞ் சோலை*
திருமலை யதுவே அடைவது திறமே.
அவ:- நாலாம் பாட்டில் – கர்மப3ந்த4த்தைப் போக்கி ஆஸ்ரிதரானவர்கள் அடிமை செய்து வாழ்கைக்கு ஈடாம்படி ஸர்வேஸ்வரன் வர்த்திதருளுகிற திருமலையை ஆஸ்ரயிக்கையே ஸத்3ருசமானபடி என்கிறார்.
வ்யா:- (பெருமலை என்று தொடங்கி) ஆஸ்ரிதாபத்ஸக2னான க்ருஷ்ணன் தன் ஐஸ்வர்யத்தோடே உறைகிற கோயில் (வருமழை என்று தொடங்கி) மேக4 பத3த்திற்காட்டிலும் உயர்ந்து அறப்பெருத்துள்ள திருச்சோலையை உடைத்தான திருமலை.
ஐந்தாம் பாட்டு
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது*
அறமுய லாழிப் படையவன் கோயில்*
மறுவில்வண் சுனைசூழ் மாலிருஞ் சோலை*
புறமலை சாரப் போவது கிறியே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – திருமலைக்குப் புறம்பான மலையை ப்ராபிக்கையே நல்விரகு என்கிறார்.
வ்யா:- (திறம் என்று தொடங்கி) மிக்கிருந்துள்ள ப3லத்தாலே இதர புருஷர்த்த2 ப்ராவண்யமான பாபத்தை வர்த்தி4ப்பியாதே. (அறம் என்று தொடங்கி) ஆஸ்ரிதபரித்ராணமான பரமத4ர்மத்திலே மூளும் திருவாழியை தி3வ்யாயுத4மாக உடையவனுக்கு ஸ்தா2நமாய், ரமணீய மான சுனைகளாலே சூழப்பட்ட திருமலையின்.
ஆறாம் பாட்டு
கிறியென நினைமின் கீழ்மைசெய் யாதே*
உறியமர் வெண்ணெய் உண்டவன் கோயில்*
மறியொடு பிணைசேர் மாலிருஞ் சோலை*
நெறிபட அதுவே நினைவது நலமே.
அவ:- ஆறாம் பாட்டில் – திருமலைக்குப் போகக்கடவ மார்க்க3 சிந்தனை நல்லது என்கிறார்.
வ்யா:- (கிறி என்று தொடங்கி) இதர புருஷார்த்த2ங்களில் ப்ரவண ராகாதே இதுவே நிரதிஶய புருஷார்த்த2ம் என்று நினையுங் கோள். (உறியமர் என்று தொடங்கி) எட்டாதபடி உறியிலேயிருந்த வெண்ணெயை அமுதுசெய்து அச்சுவடழியாமே வந்து நின்றருளுகிற க்ருஷ்ணனுடைய கோயிலாய், நிலமிதியாலே திர்யக்குகளுங்கூடத் தந்தாமுடைய இன்ங்க ளைப் பிரியாதபடியான திருமலைக்குப் போம் வழி நெஞ்சிலேபட, அத்தை நினையாநிற்கை. நெறிபட நினைகை – மிகவும் நினைக்கை என்றுமாம்.
ஏழாம் பாட்டு
நலமென நினைமின் நரகழுந் தாதே*
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்*
மலமறு மதிசேர் மாலிருஞ் சோலை*
வலமுறை யெய்தி மருவுதல் வலமே.
அவ:- ஏழாம் பாட்டில் – “திருமலை” என்றால் அநுகூலிக்கையே வென்றி என்கிறார்.
வ்யா:- (நலம் என்று தொடங்கி) இது புருஷார்த்த2ம் என்று நினையுங்கோள். இதர புருஷார்த்த2மாகிற நரகத்தில்புகாதே. (நிலம் என்று தொடங்கி) ஸ்ரீவராஹமாய் ஜக3த்தை எடுத்தருளினவனைக் காணப் பெற்றிலோம் என்னாதே, அவன் நித்யவாஸம் பண்ணுகிற கோயிலாய், தன் கோடுகளிலே தேய்ந்து களங்கம் போம்படி சந்த்3ரன் வந்து சேருகிற திருமலையை அநுகூலனாய்க்கொண்டு சேர்ந்து.
எட்டாம் பாட்டு
வலஞ்செய்துவைகல் வலங்கழியாதே*
வலஞ்செய்யும் ஆயமாயவன்கோயில்*
வலஞ்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை*
வலஞ்செய்துநாளும் மருவுதல்வழக்கே.
அவ:- எட்டாம் பாட்டில் – திருமலையைச் சென்று நிரந்தரமாக வலம் செய்கையே வழக்கு என்கிறார்.
வ்யா:- (வலம் என்று தொடங்கி) நல்ல ப3லங்களை ஸம்பாதி3த்து க்ஷுத்3ர விஷயப்ராவண்யத்தாலே அந்த ப3லங்களை வ்யர்த்த2மாக்காதே. (வலம் என்று தொடங்கி) நம்மோடு ஒக்கத் திருமலையை வலம் செய்யாநின்றுள்ள ஆஶ்சர்ய பூ4தனான க்ருஷ்ணனுடைய கோயில். (வலம்செய்யும்) ப3லத3ன் என்றுமாம். (வலம்செய்யும் என்று தொடங்கி) எம்பெருமானோடு ஒக்க வலம் செய்யாநின்றுள்ள அயர்வறும் அமரர்களுடைய திருமலையை.
ஒன்பதாம் பாட்டு
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது*
அழக்கொடி யட்டான் அமர்பெருங் கோயில்*
மழக்களிற் றினம்சேர் மாலிருஞ் சோலை*
தொழக்கரு துவதே துணிவது சூதே.
அவ:- ஒன்பதாம் பாட்டில் – திருமலையைத் தொழுவோமென்று நினைக்கையே அமையும் என்று அத்4யவஸிக்கையே விஜயஹேது என்கிறார்.
வ்யா:- (வழக்கு என்று தொடங்கி) இதுவே ந்யாயம் என்று நினையுங்கோள், இதர புருஷார்த்த2த்திலே ப்ரவணராய்த் தலைமடாதே. (அழக் கொடி என்று தொடங்கி) பூதனையை முடித்தவனுக்கு போ4க்3யதையாலே விடவொண்ணாதபடியாய், அஸங்குசிதமாக வர்த்திக்கலாம் கோயில். (மழக்களிறு என்று தொடங்கி) அழகரைப்போலே முக்3த4மான க3ஜயூத2ங்கள் சேர்ந்த திருமலை.
பத்தாம் பாட்டு
சூதென்று களவும் சூதும்செய் யாதே*
வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில்*
மாதுறு மயில்சேர் மாலிருஞ் சோலை*
போதவிழ் மலையே புகுவது பொருளே.
அவ:- பத்தாம் பாட்டில் – பலபடிகளாலும் திருமலையே பரம ப்ராப்யமென்று உபக்ரமித்தபடியே உபஸம்ஹரிக்கிறார்.
வ்யா:- (சூது என்று தொடங்கி) நேர்பாடு என்று பார்த்துக் களவு காணுதல், பஶ்யதோஹரதையாதல் செய்யாதே. (வேதம் என்று தொடங்கி) ஸ்ரீ கீ3தையாலே வேதா3ர்த்த2த்தை விவரித்தவன் “வேதா3ர் த்த2பூ4தனான தன்னை ஆஸ்ரிதர்க்குக் காட்டலாம் நிலம்” என்று விரும்பின கோயில். (மாதுறு மயில் என்று தொடங்கி) அங்குள்ள ஸத்வங்களெல்லாம் மிது2நமாயே வர்த்திக்கும்படியிருக்கிற மாலிருஞ்சோலையாகிற நித்யவஸந்தமான திருமலையிலே புகுகை பர்மப்ரயோஜநம். மாதுறு மயில் என்றது – மார்த்த3வத்தையுற்ற மயில் என்னவுமாம்.
பதினொன்றாம் பாட்டு
பொருளென்றுஇவ் வுலகம் படைத்தவன் புகழ்மேல்*
மருளில்வண் குருகூர் வண்சட கோபன்*
தெருள்கொள்ளச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்து* அருளுடை யவன்தாள் அணைவிக்கும் முடித்தே.
அவ:- நிக3மத்தில் – இத்திருவாய்மொழி கற்றாரை இத்திருவாய்மொழி தானே ஜந்மத்தை முடித்து அழகர் திருவடிகளிலே சேர்க்கும் என்கிறார்.
வ்யா:- (பொருள் என்று தொடங்கி) பலகால் ஸ்ருஷ்டிக்க, விதத2 மாகா நின்றாலும், என்றேனும் ஒருநாள் ப்ரயோஜநப்படும் என்று கருதி இந்த லோகத்தை உண்டாக்கினவனுடைய கல்யாண கு3ணங்களிலே அஜ்ஞாநக3ந்த4ம் இல்லாத ஆழ்வார் தம்மிற்காட்டிலும் கேட்டார்க்குத் தெளிவு பிறக்கும்படி அருளிச்செய்த ஆயிரத்திலும் இத்திருவாய்மொழி.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருவாய்மொழி இரணடாம்பத்து ஓன்பதினாயிரப்படி வ்யாக்2யானம் முற்றிற்று.