ஸ்ரீ:
ஆழ்வார் திருவடிகளே ஶரணம்
மதுரகவியாழ்வார் திருவடிகளே ஶரணம்
ஸ்ரீமந்நாதமுனிகள் திருவடிகளே ஶரணம்
எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்
ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த
திருவாய்மொழி
பரமகாருணிகரான நஞ்சீயர் அருளிச்செய்த
ஒன்பதினாயிரப்படி வ்யாக்2யாநம்
மூன்றாம்பத்து – முதல் திருவாய்மொழி
முடிச்சோதி – ப்ரவேசம்
3-1
மூன்றாம்பத்தில் – முதல் திருவாய்மொழியில் – இப்படி திருமலையின் போ4க்3யதையை அநுப4வித்த ஆழ்வார் – வேத3ங்கள் வைதி3க புருஷர்கள் ப்3ரஹ்ம ருத்3ரர்கள் தொடக்கமானாருடைய ஸ்தோத்ராதி3களுக்கு அபூ4 மியாய், ஸமாஶ்ரிதர்க்கு அத்யந்த பராதீ4நராய், A “வடமாமலையுச்சி” என்னுமாபோலே திருமலைக்கு அவயவமாயிருப்பதொரு கல்பகதரு போலே யிருக்கிற அழகருடைய அபரிச்சே2த்3யமான ஸௌந்த3ர்யாதி3 களை அநுப4வித்து விஸ்மிதராகிறார்.
முதல் பாட்டு
முடிச்சோதியாய் உனதுமுகச்சோதிமலர்ந்ததுவோ*
அடிச்சோதிநீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ*
படிச்சோதியாடையொடும் பல்கலனாய்* நின்பைம்பொன்
கடிச்சோதிகலந்ததுவோ திருமாலேகட்டுரையே.
அவ:- முதற் பாட்டில் – அழகருடைய தி3வ்யாவயவங்களுக்கும் திரு வணிகலன்களுக்கும் உண்டான ஸுக4டிதத்வத்தைக் கண்டு விஸ்மிதராகிறார்.
வ்யா:- (முடியென்று தொடங்கி) உன்னுடைய திருமுகத்தின் ஒளி முடிச்சோதியாய் விகஸிதமாயிற்றோ? திருவடிகளின் அழகு ஆஸநபத்3ம மாய்க்கொண்டு விகஸிதமாயிற்றோ? (படியென்று தொடங்கி) உன்னுடைய கடிப்ரதே3ஶத்தின் விலக்ஷணமான ஒளி ஸ்வாபா4விகமான அழகையுடைத்தான திருப்பீதாம்ப3ரமாயும் மற்றுமுள்ள திருவணிகலன் களாயும் திருமேனியிலே கலந்ததோ? பிராட்டியும் நீயுங்கூட எனக்கு அருளிச்செய்யவேணும்.
இரண்டாம் பாட்டு
கட்டுரைக்கில்தாமரை நின்கண்பாதம்கையொத்வா*
சுட்டுரைத்தநன்பொன் உன்திருமேனியொளியொத்வாது*
ஒட்டுரைத்துஇத்வுலகுன்னைப் புகழ்வெல்லாம்பெரும்பாலும்*
பட்டுரையாய்ப்புற்கென்றே காட்டுமால்பரஞ்சோதி.
அவ:- இரண்டாம் பாட்டில் – அழகருடைய அழகுக்கு ஒப்பாகப் போருவன இல்லாமையாலே, லோகத்தார் பண்ணும் ஸ்தோத்ரம் அங்குத் தைக்கு கு3ணாதா4னம் பண்ணமாட்டாதபடி அவத்3யாவஹமாமத்தனை என்கிறார்.
வ்யா:- (கட்டுரைக்கில்) சொல்லில். ஒட்டுரைத்து – உன்னோடு கூடு வனவுரைத்து. ஆவன – ஸத்3ருஶங்கள். பெரும்பாலும் – மிகவும். பட்டு ரையாய் – இருந்தபடியொழியத் தோற்றிற்றுச் சொல்லுகையாலே அவாச கமாய். புற்கென்றே கட்டுமால் – அவத்3யாவஹமாம். பரஞ்சோதி – சிலவற்றை த்3ருஷ்டாந்தமாகச் சொல்லி ஸ்துதிக்கும் ஸ்தோத்ரத்துக்கு நிலமல்லாத அழகின் மிகுதியையுடையவனே!
மூன்றாம் பாட்டு
பரஞ்சோதிநீபரமாய் நின்னிகழ்ந்துபின்* மற்றோர்
பரஞ்சோதியின்மையின் படியோவிநிகழ்கின்ற*
பரஞ்சோதிநின்னுள்ளே படருலகம்படைத்த* எம்
பரஞ்சோதிகோவிந்தா பண்புரைக்கமாட்டேனே.
அவ:- மூன்றாம் பாட்டில் – ‘எம்முடைய படி வேறு சிலர்க்குப் பேச நிலமல்லவாகில், நீர் பேசினாலோ?’ என்னில், எனக்கு முடியாது’ என்கிறார்.
வ்யா:- (பரஞ்சோதி நீ பரமாய்) பரஞ்சோதி நீயே; அழகால் எல்லாரிலும் மேற்பட்டு மிக்கிருக்கையால். (நின்னிகழ்ந்து பின்னென்று தொடங்கி) உன்னைத் தவிர மற்றொரு பரஞ்சோதியில்லாமயாலே ஒப்பின்றிக்கே வர்த்தியாநிற்கையாலும். பரஞ்சோதியாய் இப்ரபஞ்சத் தையெல்லாம் உன் ஸங்கல்பமாத்ரத்தாலே ஸ்ருஷ்டிக்கையாலே ஜக3த் காரணத்வ ப்ரயுக்தமான உத்க்ருஷ்ட தேஜஸ்ஸையுமுடையையாய் ஆஸ்ரித ஸுலப4னானவனே! பண்புபடி.
நான்காம் பாட்டு
மாட்டாதேயாகிலும் இம்மலர்தலைமாஞாலம் *நின்
மாட்டாயமலர்புரையும் திருவுருவம்மனம்வைக்க*
மாட்டாத பலசமயமதிகொடுத்தாய் மலர்த்துழாய்*
மாட்டேநீமனம்வைத்தாய் மாஞாலம்வருந்தாதே.
அவ:- நாலாம் பாட்டில் – “ஸமஸ்தசேதநரும், அத்யந்த விலக்ஷணனாய், உபநிஷத், ரஹஸ்யனான உன்னை இழந்தேபோமத்தனையாகாதே!” என்று கொண்டு. அழகருடைய திருவழகின் மிகுதி சொல்லுவிக் கச்சொல்லுகிறார்.
வ்யா:- (மாட்டாதேயென்று தொடங்கி) ப்3ரஹ்மாதி3 பிபீலிகாந்த மான ஸமஸ்தசேதநரும் ப்ரக்ருதி ஸம்ப3ந்த4ப்ரயுக்தமான தங்கள் அஜ்ஞா நத்தாலே நிதி4, போலே ஸ்லாக்4யமாய் நிரதிசயபோ4க்யமாயிருந்துள்ள உன்னுடைய திருவடிவை அநுஸநிதி4க்கைக்கு அறிவுடையாரன்றிக்கே யிருக்கச்செய்தே அதுக்கு மேலேயும் அறிவக்கெடுக்கும் ஸ்வபா4வமாய். ஒன்றோடொன்று சேராத பா3ஹ்யஸமய பு3த்3தி4களை ப்ரவர்த்திப்பித் தாய். (மலர்த்துழாயென்று தொடங்கி) பேரளவுடைய உன்னுடைய திருவுள்ளத்தையுங்கூட அந்யபரமாக்கவல்ல திருத்துழாய் முதலான போ4க்3ய ஜாதத்திலே நீ ப்ரவணசித்தனானாய்.
ஐந்தாம் பாட்டு
வருந்தாத அருந்தவத்த மலர்கதிரின்சுடருடம்பாய்*
வருந்தாதஞானமாய் வரம்பின்றிமுழுதியன்றாய்*
வருங்காலம்நிகழ்காலம் கழிகாலமாய்* உலகை
ஒருங்காக அளிப்பாய்சீர் எங்கு உலக்க ஓதுவனே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – ‘அஜ்ஞமான லோகம் மாட்டாதாகில், நீர் பேசினாலோ?’ என்று எம்பெருமான் அருளிச்செய்ய; ‘நிஸ்ஸீமமான கு3ண விபூ4த்யாதி3களையுடைய உன்னை என்னால் முடியப்பேச முடியாது’ என்கிறார்.
வ்யா:- (வருந்தாத என்று தொடங்கி) யத்நஸித்3த4மன்றிக்கே ஸஹஜமாயுள்ள நிரதிசயதப:ப2லரூபமாய் விகஸ்வரதேஜோரூபமான திருவடிவை உடையையாய். யத்நேந ஸம்பாதி3க்கவேண்டாதே ஸஹஜ மான ஜ்ஞாநத்தையும் மற்றும் எல்லையிலாத கு3ணவிபூ4த்யாதி3களை யும் உடையையாய், கால்த்ரயத்திலும் லோகத்தைஒருபட்யே ரக்ஷிக்கிற உன்னுடைய கு3ணங்களை. உலக்க – முடிய.
ஆறாம் பாட்டு
ஓதுவாரோத்தெல்லாம் எத்வுலகத்துஎத்வெவையும்*
சாதுவாய்நின்புகழின் தகையல்லால்பிறிதில்லை*
போதுவாழ்புனந்துழாய்முடியினாய்* பூவின்மேல்
மாதுவாழ்மார்பினாய் என்சொல்லியான்வாழ்த்துவனே.
அவ:- ஆறாம் பாட்டில் – “வேத3ங்கள் எங்ஙனே நம்மை ஸ்துதிக்கிற படி, அப்படியே நீரும் நம்மை ஸ்துதிப்பீர்” என்ன; “அவையும் உன்னை ஸ்துதிக்கையிலே உபக்ராந்தமாய் நிவ்ருத்தமானவத்தனை, இங்ஙனேயி ருக்கிற உன்னை அளவில்லாத நான் ஸ்துதிக்க விரகுண்டோ?” என்கிறார்.
வ்யா:- (ஓதுவார் என்று தொடங்கி) லோகந்தோறும் தரதமபா4வேந உண்டான அத்4யேதாக்களுக்கீட்டாகச் சிறுத்தும் பெருத்துமிருக்கிற ப்ரதிபாத3கமான வேத3ங்களெல்லான் உன்னுடைய கு3ணைகதே3ச விஷயமாயிற்றொழிய, புறம்பு போயிற்றில்லை. வேத3ங்கள் உன்னுடைய கல்யாணகு3ண விஷயமாயிற்று என்று மித்தனையல்லது. உன்னை உள்ளபடி எல்லாமறிந்து பேசிற்று என்ன முடியாது என்றுமாம். (போது வாழ் என்று தொடங்கி) பூவையுடைத்தாய், தன்னிலத்திலே நின்றாற் போலே செவ்வி மிகாநின்றுள்ள திருத்துழாயைத் திருமுடியிலேயுடையையாய், நிரதிசய போ4க்3யையான பெரியபிராட்டியார் நித்யாநுப4வம் பண்ணி வாழுகிற திருமார்வையுடையவனே!
ஏழாம் பாட்டு
வாழ்த்துவார்பலராக நின்னுள்ளே நான்முகனை*
மூழ்த்தநீருலகெல்லாம் படையென்றுமுதல்படைத்தாய்*
கேழ்த்தசீர் அரன்முதலாக் கிளர்தெய்வமாய்க்கிளர்ந்து*
சூழ்த்தமரர்துதித்தால் உன்தொல்புகழ்மாசூணாதே.
அவ:- ஏழாம் பாட்டில் – “இருந்ததே குடியாக எல்லாருமேத்துதல். அதி4கஜ்ஞாநரான ருத்3ராதி3களேதுதல் செய்தாலோ?” என்னில்; த்வத் ஸ்ருஷ்டனான ப்3ரஹ்மாவாலே ஸ்ருஷ்டராகையாலே, ஸங்குசிதஜ்ஞாந ரானவர்களுடைய ஸ்தோத்ரமும் உன்னுடைய கல்யாண கு3ணங்களுக்கு த்திரஸ்காரத்தைப் பண்ணுமித்தனை” என்கிறார்.
வ்யா:- (வாழ்த்துவார் பலராக) ஒருவரேத்தினவிடம் ஒருவரேத்தாதே ஸர்வாதி4காரமாக ஏத்தினாலும் ஏத்தமுடியாது. (நினுள்ளே என்று தொடங்கி) ஏகார்ணவத்திலே சயானனாய்க்கொண்டு ‘லோகங்களை யெல்லாம் படை’ என்று கொண்டு சதுர்முக2னை உன் ஸங்கல்பத்தாலே முதலிலே படைத்தவனே! (கேழ்த்தசீரென்று தொடங்கி) மிக்கிருந்துள்ள ஜ்ஞாநாதி3கு3ணங்களையுடையரான ருத்3ரமுக2ரான தே3வர்கள் ஸ்தோத்ரகரண ஶக்தியோடே உத்3யுக்தராய், ஓரோ ப்ரயோஜகங்களில் உன்னுடைய கு3ணசேஷ்டிதாதி3களெல்லாம் அகப்படும்படி விரகுகளாலே காலதத்வமுள்ளதனையும் நின்று ஸ்தோத்ரம் பண்ணினால். சூழ்த்து – சூழ்ந்து என்னவுமாம்.
எட்டாம் பாட்டு
மாசூணாச்சுடருடம்பாய் மலராதுகுவியாது*
மாசூணாஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்*
மாசூணாவான்கோலத்து அமரர்கோன்வழிப்பட்டால்*
மாசூணாஉனபாத மலர்ச்சோதிமழுங்காதே.
அவ:- எட்டாம் பாட்டில் – “உப4ய பா4வநையுடையனான ப்3ரஹ்மா வை வநஸ்பதிகோடியிலே நிறுத்தி, அதிசயித ஜ்ஞாநனாக உத்ப்ரேக்ஷித னான ப்3ரஹ்மா ஏத்தினாலும் உன்னுடைய வைலக்ஷண்யத்துக்குத் திரஸ்காரமாமத்தனை என்கிறார்.
வ்யா:- (மாசூணா என்று தொடங்கி) ஹேயப்ரத்யநீகமாய், ஶுத்3த4 ஸத்வமய தேஜோரூபமாய், ஸங்குசிதமாதல் விகஸிதமாதல் செய்யாதே நிரதிசய போ4க்3யமாய்க் கொண்டு என்றும் ஏகரூபமாயிருக்கிற திரு மேனியையுடையையாய், ஹேயப்ரத்யநீகமாய், ஜ்ஞாநப்ரமுக2மான கு3ணவிபூ4த்யாதி3கள் எல்லாவற்றையுமுடையையாய், அவற்றை நிர்வ ஹிக்கும் ஸ்வபா4வனானவனே! (மாசூணா வான்கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்) அப்ராக்ருதமான ஜ்ஞாநாதி3 பூ4ஷணங்களையுடையனா யிருப்பான் ஓர் அமரர்கோனுண்டாய், அவன் திருவடிகளிலே ஸ்தோத்ர ரூபபரிசர்யைகளைப் பண்ணினால். சதுமுக2ன் தானாகவுமாம். (மாசூணா உன பாதமலர்ச்சோதி) ஹேய ப்ரதிப4டமான உன்னுடைய திருவடிகளின் அழகு.
ஒன்பதாம் பாட்டு
மழுங்காதவைந்நுதிய சக்கரநல்வலத்தையாய்*
தொழுங்காதற்களிறளிப்பான் புள்ளூர்ந்துதோன்றினையே*
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்*
தொழும்பாயார்க்களித்தால் உன்சுடர்ச்சோதிமறையாதே.
அவ:- ஒன்பதாம் பாட்டில் – எம்பெருமானுடைய ஆஸ்ரித வாத்ஸல் யத்தை த்3ருஷ்டாந்த ஸஹிதமாக அருளிச்செய்கிறார்.
வ்யா:- (மழுங்காத என்று தொடங்கி) மழுங்காத கூர்மையையு டைய நேமியோடு கூடின திருவாழியை த3ர்ஶநீயமாம்படி வலவருகே த4ரியாநின்று கொண்டு, தொழவேணுமென்னும் காதலையுடைய ஸ்ரீக3ஜேந்த்3ராழ்வானை ரக்ஷித்தருளுகைக்காக, பெரியதிருவடியை ப்ரேரித்து நடத்திக்கொண்டு தோற்றினாயே! (மழுங்காத என்று தொடங்கி) அநேக கார்யங்களிலே ப்ரயோகி3த்தாலும் மழுங்கக் கடவதன் றிக்கே மிகவும் உஜ்ஜ்வலமாகக்கடவதான உன்னுடைய ஸங்கல்ப ரூப ஜ்ஞாநத்தையே ஸாத4நமாகக்கொண்டு திருநாபீ4 கமலத்தை அடியாக வுடைய ஸம்ஸாரத்திலே அடிமையானார்க்கு ரக்ஷைபண்ணினால் “பெரு முதலியாயிருந்து வைத்துத் திருவடிகளை ஆஶ்ரயித்தார்க்குத் தானே தடுமாறிக் கொண்டு வந்து உதவும்” என்னும் இவ்வழகிய தேஜஸ்ஸை இழந்தாயாகாதே! தொழும்பு – அடிமை; ஆயார் – ஆனார்.
பத்தாம் பாட்டு
மறையாயநால்வேதத்துள் நின்றமலர்ச்சுடரே*
முறையால் இத்வுலகெல்லாம் படைத்திடந்துண்டுமிழ்ந்தளந்தாய்*
பிறையேறுசடையானும் நான்முகனும்இந்திரனும்*
இறையாதல்அறிந்தேத்த வீற்றிருத்தல்இதுவியப்பே.
அவ:- பத்தாம் பாட்டில் – வேதை3கஸமதி4க3ம்யனாய் ஸர்வேஸ்வரனாயிருந்த உனக்கு, த்வத்ஸ்ருஷ்டரய், உன்னாலே லப்3த4ஜ்ஞாநரான ப்3ரஹ்மாதி3க்ள் “ஈஸ்வரன்” என்றறிந்து ஏத்த இருக்குமிது விஸ்மயமோ? என்கிறார்.
வ்யா:- (மறையாய என்று தொடங்கி) அநாஸ்ரிதர்க்குத் தோற்றா மே, ஆஸ்ரிதர்க்குக் காட்டும் ஸ்வாபா4வமான வேத3 ப்ரதி பாத்3யமான நிரதிஶய போ4க்3யதையையுடையையாய், ஸ்வாமித்வ ப்ராப்தியாலே இவ்வுலகத்துக்கு ஸ்ருஷ்டயாத்3யுபகாரங்களைப் பண்ணினவனே!
பதினொன்றாம் பாட்டு
வியப்பாயவியப்பில்லா மெய்ஞ்ஞானவேதியனை*
சயப்புகழார்பலர்வாழும் தடங்குருகூர்ச்சடகோபன்*
துயக்கின்றித்தொழுதுரைத்த ஆயிரத்துள் இப்பத்தும்*
உயக்கொண்டுபிறப்பறுக்கும் ஒலிமுந்நீர்ஞாலத்தே.
அவ:- நிக3மத்தில் – இத்திருவாய்மொழிகற்றாரை உஜ்ஜீவிப்பித்து. பின்னை ஸாம்ஸாரிக து3:க்க2த்தையெல்லாம் இத்திருவாய்மொழிதானே போக்கும் என்கிறார்.
வ்யா:- (வியப்பென்று தொடங்கி) வேறொரு ஆஸ்ரயத்திலே கண்ட தாகில் விஸ்மயமாம்படி இருக்குமவையெல்லாம். இங்கே கண்ட்தாகில் விஸ்மயமில்லாத படியையுடையனாய். யதா2பூ4தவாதி3யான வேத3 ப்ரதி பாத்3யனாயுள்ளவனை. (சயப்புகழ்) ஸம்ஸாரத்தை வென்ற புகழ். (துயக்கின்றி) ஸம்சயவிபர்யய ஜ்ஞாநங்களில்லாதபடி.
நஞ்சீயர் திருவடிகளே ஶரணம்
அவதாரிகை 3-2
முந்நீர்ஞாலம் – ப்ரவேசம்
இரண்டாம் திருவாய்மொழியில் – பெருவிடாய்ப்பட்டவன் ஸுஸம்ஸ்க்ருத மான தண்ணீர் ஸந்நிஹிதமாயிருக்கச்செய்தே, ஆஸ்யம் பிஹிதமானால் துடிக்குமாபோலே, தமக்கு போ4க்3யமான விஷயம் ஸந்நிஹிதமாய், ஆசையும் மிக்கிருக்கச்செய்தே விஷயத்தின் பெருமையாலே தமக்கு விளாக்குலை கொள்ளவொண்ணாதொழிய, அத்தை “ப்ரக்ருதி ஸம்ப3ந் தா4யத்தமான கரணஸங்கோச நிப3ந்த4நம்” என்று பார்த்து மிகவும் அவஸந்நராய், “இப்ரக்ருதி ஸம்ப3ந்த4த்தை அறுத்து எல்லாரும் தன் திரு வடிகளைப் பெறுகைக்காக எம்பெருமான் பண்ணின ஜக3த் ஸ்ருஷ்டியும், ஸ்ருஷ்டமான ஜக3த்திற்பண்ணின அநேகாவதாரங்களும் எனக்குக் கார்யகரமாயிற்றில்லை, இனி நான் ப்ரக்ருதி ஸம்ப3ந்த4மற்று எம்பெரு மானைப்பெற விரகில்லையாகாதே” என்று நைராஶ்யத்தோடே முடியப்புக்க ஆழ்வார், அவ்வவதாராதி3களில் தப்பினார்க்கும் இழக்கவேண்டாத படி திருமலையில் நின்றருளியபடியக் காட்டியருளக்கண்டு உஜ்ஜீவித்து ப்ரீதராய் முடிக்கிறார்.
முதல்பாட்டு
முந்நீர்ஞாலம்படைத்த எம்முகில்வண்ணனே*
அந்நாள்நீதந்த ஆக்கையின் வழி உழல்வேன்*
வெந்நாள் நோய்வீய வினைகளைவேரறப்பாய்ந்து*
எந்நாள்யானுன்னை இனிவந்துகூடுவனே.
அவ:- முதற் பாட்டில் – ‘உன்னை ஸமாஸ்ரயிக்கைக்குத் தந்த சரீரத்தைக் கொண்டு உன்னை ஸமாஸ்ரயியாதே அதின் வழியே ஒழுகி அந்தரப்பட்டேன், நான் உன்னை என்று காண்பது?’ என்று ஆர்த்தராய்க் கூப்பிடுகிறார்.
வ்யா:- (முந்நீர் என்று தொடங்கி) எனக்காகக் கடலோடு கூடின ப்ரபஞ்சத்தை உண்டாக்கின பரமோதா3ரனே! அக்காலத்திலே உன் திரு வடிகளிலே சேரவற்றான சரீரத்தை நீ தர. அத்தைக்கொண்டு உன் திரு வடிகளைப்பெறும் விரகு பார்க்கமாட்டாதே. அதின் வழியே ஒழுகி து3:க்க2ப்படுகிற நான் உன்னோட்டை விஸ்லேஷத்திலே து3ஸ்ஸஹமாய்க் கொண்டு செல்லுகிற நாளில் பிரிந்து நோவு படுகைக்கீடான பாபங்களை வேரறுத்து.
இரண்டாம் பாட்டு
வன்மாவையமளந்த எம்வாமனா!* நின்
பன்மாமாயப் பல்பிறவியில் படிகின்றயான்*
தொன்மாவல்வினைத் தொடர்களைமுதலரிந்து*
நின்மாதாள் சேர்ந்து நிற்பதுஎஞ்ஞான்றுகொலோ*.
அவ:- இரண்டாம் பாட்டில் – ‘ஜலஸ்த2ல விபா4க்3மின்றிக்கே எல்லார் தலைமேலும் வைத்தருளின திருவடிகளையும் தப்பின நான் உன் திருவடிகளிலே சேருவதென்று?’ என்று கூப்பிடுகிறார்.
வ்யா:- (வன்மா என்று தொடங்கி) என்னை ஸம்ஸாரத்தினின்றும் எடுத்தருளுகைக்காக உன் அழகைக் கண்டாலும் ஈடுபடக்கடவதன்றிக் கேயிருந்துள்ள மஹாப்ருதி2வியை அளந்தருளின ஸ்ரீ வாமநனே! ஸத்வா தி3கு3ண பே4த3த்தையுடைத்தாய் து3ரத்ய்யையான ப்ரக்ருதி ஸம்ப3ந்த4 ப்ரயுக்தமாய் தே3வ மநுஷ்யாதி3 ரூபத்தினாலே பலபடியான் ஜந்மங்க ளிலே அபி4நிவிஷ்டனாய் விழுகிற நான். (தொன்மா என்று தொடங்கி) பழையதாய் ஈஸ்வரனான உன்னாலும் அறுக்கமுடியாதபடியான பாபத் தொடர்ச்சிகளை முதலிலே அறுத்து. உன்னுடைய பர்மபூஜ்யமான திருவடிகளைச் சேர்ந்து நான் ப்ரதிஷ்டி2தனாவது என்றோ?
மூன்றாம் பாட்டு
கொல்லாமாக்கோல் கொலைசெய்துபாரதப்போர்*
எல்லாச்சேனையும் இருநிலத்து அவித்தஎந்தாய்*
பொல்லாவாக்கையின் புணர்வினையறுக்கலறா*
சொல்லாய்யான்உன்னைச் சார்வதோர்சூழ்ச்சியே.*
அவ:- மூன்றாம் பாட்டில் – ஸ்ரீவாமநனான அக்காலம் தப்பினாரை யும் விஷயீகரிக்கைக்காக க்ருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி யருள, அத்தையும் தப்பின் நான் உன்னைப் பெறும் விரகு நீயே பார்த்தருளாய் என்கிறார்.
வ்யா:- (கொல்லா என்று தொடங்கி) என்னை விஷயீகரிக்கைக்கெ ன்று வந்து திருவவதாரம் பண்ணியருளி அஹிம்ஸாஸாத4நமான உழவு கோலைக்கொண்டு பா4ரத ஸமரத்திலே ஸேநையையடையைக்கொன்று தரைப்படுத்தினவனே! (பொலாவாக்கை என்று தொடங்கி) உன்பக்கல் நின்று அகற்றக்கடவதான ப்ரக்ருதி ஸம்ப3ந்த4ம் என்னால் அறுக்க முடியாது.
நான்காம் பாட்டு
சூழ்ச்சிஞானச் சுடரொளியாகி* என்றும்
ஏழ்ச்சிக்கேடின்றி எங்கணும் நிறைந்தஎந்தாய்!
தாழ்ச்சிமற்றெங்கும் தவிர்ந்து நின்தாளிணைக்கீழ்
வாழ்ச்சி* யான்சேரும்வகை அருளாய்வந்தே.
அவ:- நாலாம் பாட்டில் – எல்லாரையும் ரக்ஷிக்கைக்காக நீ ஸர்வ க3தனாயிருக்கிற இருப்பும் எனக்குக் கார்யகரமாயிற்றதில்லை. நான் உன்னைப் பெறும் வழி நீயே பார்த்தருளவேணும் என்கிறார்.
வ்யா:- (சூழ்ச்சி என்று தொடங்கி) ஸமஸ்த சேதநரையும் உன்பக்க லிலே சூழ்த்துக்கொள்ளவற்றான அத்யந்த விலக்ஷண ஜ்ஞாநத்தையுடை யையாய். வ்ருத்3தி4 நாசங்களன்றிக்கே என்றும் எங்கும் என்னை அடிமை கொள்ளுகைக்காக வ்யாபித்தவனே! (தாழ்ச்சி என்று தொடங்கி) திருவடிகளொழிய பா3ஹ்ய விஷயங்களில் நசையெல்லாமற்று. உன் திருவடிகளில் நிரதிசய போ4க்3யமான கைங்கர்யத்தை, இன்னுமோர் திருவவதாரம் பண்ணியாகிலும், நான் பெறும்படி பண்ணியருளவேணும்.
ஐந்தாம் பாட்டு
வந்தாய்போலேவந்தும் என்மனத்தினை நீ*
சிந்தாமல்செய்யாய் இதுவேயிதுவாகில்*
கொந்தார்காயாவின் கொழுமலர்த்திருநிறத்த
எந்தாய்* யான்உன்னை எங்குவந்தணுகிற்பனே*.
அவ:- அஞ்சாம் பாட்டில் – நீயேவந்து என்னை விஷயீகரித்து த4ரிப்பியாயாகில், என் ஸாமர்த்2யத்தாலே உன்னை ப்ராபிக்கைக்கு உபாயமில்லை. அத்யந்த போ4க்3யமான உன் திருவழகை, நான் இழந்தே போமி த்தனையாகாதே? என்கிறார்.
வ்யா:- (வந்தாய் என்று தொடங்கி) ராமக்ருஷ்ணாதி3களய்த் திருவ வதாரம் பண்ணினாற்போலேயன்றிக்கெ ஸ்ரீக3ஜேந்த்3ராழ்வானுக்கு வந்தாற்போலே யாகிலும் வந்து பரமத3யாளுவான நீ என் மனஸ்ஸு சிதி2லமாகாதபடி பண்ணுகிறிலை. என்னை அங்கீ3கரியாமையாகிற இதுவே உருவச்செல்லுமாகில். (கொந்தார் என்று தொடங்கி) பூங்கொத்து க்களாலே நிறைந்திருந்துள்ள காயாவின் கொழுவிய பூப்போலே யிருக்கிற திருநிறத்தைக் காட்டி என்னை அடிமைகொண்டவனே!
ஆறாம் பாட்டு
கிற்பன்கில்லேனென்றிலன் முனநாளால்*
அற்பசாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன்*
பற்பல்லாயிரம் உயிர்செய்த பரமா!* நின்
நற்பொற்சோதித்தாள் நணுகுவதுஎஞ்ஞான்றே?
அவ:- ஆறாம் பாட்டில் – மீளவும் சாபலாதிசியத்தாலே, நிரதிசய போ4க்3யமான உன்னுடைய திருவடிகளை நான் கிட்டுவதென்று? என்கிறார்.
வ்யா:- (கிற்பன் கில்லேன் என்று தொடங்கி) போன காலமெல்லாம் அல்பயத்நமாய், ப3ஹுப2லமான புண்யங்களைப் பண்ணுவேன் என்னு தல் செய்திலேன்; அல்பப2லமாய் ப3ஹ்வநர்த்த2 மான பாபத்தை பண்ணு வேனல்லேன் என்னுதல் செய்திலேன்; அல்பாஸ்வாத3மாம் விஷயரஸங் களை அநுப4வித்து ஸர்வசக்தியான உன்னாலும் அப்ரதிஸமாதே4ய த3ஶையாம்படி அகன்றேன். (பற்பல் என்று தொடங்கி) ப்ரளயகாலத்திலே மங்கி அஸத்கல்பராய் அஸங்க்2யேயரான ஆத்மாக்களைக் கரண களே ப3ரங்களோடே கூட்டி உண்டாக்கின அபரிமிதசக்திகனானவனே!
ஏழாம் பாட்டு
எஞ்ஞான்றுநாம்இருந்திருந்து இரங்கிநெஞ்சே*
மெய்ஞ்ஞானமின்றி வினையியல்பிறப்பழுந்தி*
எஞ்ஞான்றும்எங்கும் ஒழிவறநிறைந்துநின்ற*
மெய்ஞ்ஞானச்சோதிக் கண்ணனைமேவுதுமே.
அவ:- ஏழாம் பாட்டில் – திருவடிகளில் போ4க்3யதையை அநுஸந்தி4 த்துப் பதறுகிற திருவுள்ளம் பதறாமைக்காக அயோக்3யரான நாம் அவனை ஆசைப்பட்டால் ப்ரயோஜநமுண்டோ? என்கிறார்.
3-2-7.__வ்யா:- (எஞ்ஞான்றும் என்று தொடங்கி) ஸம்யக்ஜ்ஞாநமின்றிக்கே அவித்3யாகர்மாதி3களைப் பிறப்பிக்கும் ஸம்ஸாரத்திலே அழுந்தியிருக் கிற நாம். நெஞ்சே! காலமுள்ளதனையும் இருந்திருந்து து3:க்க2ப்பட்டு. (எஞ்ஞான்றும் என்று மேலுக்கு) எல்லாக் காலத்திலும் ஒன்றொழியாமே எல்லாப் பதா3ர்த்த2ங்களிலும் வ்யாபித்திருப்பதும் செய்து, இவர்களுடைய ஜ்ஞாநங்களெல்லாம் அஸத்கல்பமாம்படி விசத3மான ஜ்ஞாநப்ர பை4யை யுடைய க்ருஷ்ணனை ப்ராபிக்க விரகுண்டோ? எஞ்ஞான்று – மேவுதும்? என்றுமாம்.
எட்டாம் பாட்டு
மேவுதுன்பவினைகளை விடுத்துமிலேன்*
ஓவுதலின்றி உன்கழல்வணங்கிற்றிலேன்*
பாவுதொல்சீர்க்கண்ணா! என்பரஞ்சுடரே!*
கூவுகின்றேன்காண்பான் எங்கெய்தக்கூவுவனே.
அவ:- எட்டாம் பாட்டில் – உன்னைப்பெறுகைக்கு ஈடான விரகுகள் என்பக்கல் ஒன்றுமின்றிக்கேயிருக்கச்செய்தே உன்னைக்காணவேணும் என்று கூப்பிடாநின்றேன். எங்கே வந்து ப2லிக்கக் கூப்பிடுகிறேன்? என்கிறார்.
வ்யா:- (மேவென்று தொடங்கி) து3:க்க2த்தை விளைப்பதாய், அனாதி3காலம் அனுசரித்திருக்கிற த்வத்ப்ராப்தி விரோதி4களை ஏதேனும் ஒரு விரகாலே போக்கவும் மாட்டிற்றிலேன்; நிரந்தரமாக உன் திருவடிகளை ஆஸ்ரயிக்கவும் பெற்றிலேன். (பாவென்று தொடங்கி) எங்கும் ப்ரஸித்3த4மான கல்யாணகு3ணங்களையுடைய உன்னுடைய அழகை எனக்குக்காட்டினவனே!
ஒன்பதாம் பாட்டு
கூவிக்கூவிக் கொடுவினைத்தூற்றுள்நின்று*
பாவியேன்பலகாலம் வழிதிகைத்துஅலமருகின்றேன்*
மேவியன்றாநிரைகாத்தவன் உலகமெல்லாம்*
தாவியஅம்மானை எங்கினித்தலைப்பெய்வனே.
அவ:- ஒன்பதாம் பாட்டில் – க்ருஷ்ணனாயும் ஸ்ரீவாமனனாயும் நீ லோகத்துக்குப் பண்ணின மஹாநுக்3ரஹத்துக்குப் புறம்பானேன்; இனி நான் உன்னைப்பெறுகையென்றொரு பொருளுண்டோ? என்று நிராசராகிறார்.
வ்யா:- (கூவியென்று தொடங்கி) ஸம்ஸாரத்திலே நின்று. அத்தோடு பொருத்தமில்லாமையாலே பெரிய ஆர்த்தியேடே பலகாலும் கூப்பிட்டு, என்னுடைய பாபத்தின் மிகுதியாலே அவனைப்பெறுகைக்கு விரகும் அறியாதே நெடுங்காலம் அலமராநின்றேன். (மேவியென்று தொடங்கி) திருவுள்ளத்தில் பொருத்தத்தோடே கூட பசுநிரை மேய்ப்பதுஞ் செய்து. அதுபோலேயன்றிக்கே தன்னுடைய திருவடிகளை எல்லார் தலை மேலும் படும்படி லோகத்தையெல்லாம் அளப்பதுஞ்செய்து இச்செயலா லே லோகத்தையடைய அடிமை கொண்டிருக்கிறவனை அன்றும் தப்பின நான் இனிப் பெறுகைக்கு விரகுண்டோ?
பத்தாம் பாட்டு
தலைப்பெய்காலம் நமன்தமர்பாசம்விட்டால்*
அலைப்பூணுண்ணும் அவ்வல்லலெல்லாம்அகல*
கலைப்பல்ஞானத்து என்கண்ணனைக்கண்டுகொண்டு*
நிலைப்பெற்றுஎன்னெஞ்சம்பெற்றது நீடுயீரே.
அவ:- பத்தாம் பாட்டில் – இப்படி நிராசராய் முடியப்புக்க ஆழ்வார், எம்பெருமான் தம்முடைய ஆர்த்தியெல்லாம் தீரத் திருமலையிலே நின்றருளின படியைக் காட்டியருளக் கண்டு த4ரிக்கிறார்.
வ்யா:- (தலைப்பெய் என்று தொடங்கி) கிட்டுங்காலம் யமப4டர் பாசத்தை வீசினால் படும் து3:க்க2ம்போலேயிருக்கிற ப4க3வத்3 விச்லேஷஜநிதமான நிரதிசய து3:க்க2மெல்லாம் அகல. (கலையென்று தொடங்கி) வேதை3க ஸமதி4க3ம்யனாயிருக்கிற க்ருஷ்ணனை அவனு டைய ப்ரஸாத3த்தாலே ஸாக்ஷாத்கரிக்கப்பெற்று என்னுடைய மனஸ்ஸும் நிலைநின்று ஆத்மநித்யத்வமும் நிலைநின்றது.
பதினொன்றாம் பாட்டு
உயிர்களெல்லாவுலகமு முடையவனை*
குயில்கொள்சோலைத் தென்குருகூர்ச்சடகோபன்*
செயிரில்சொல்லிசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்*
உயிரின்மேலாக்கை ஊனிடையொழிவிக்குமே.
அவ:- நிக3மத்தில், இத்திருவாய்மொழி கற்றார் தம்மைப்போலே நோவுபடாதே ஸம்ஸார விமோசனத்தைப் பெறுவர் என்கிறார்.
வ்யா:- (உயிர்களென்று தொடங்கி) தம்மைபெறுகையாலே பூர்ண மான ஐஸ்வர்யத்தையுடையனானவனை, தாம் உஜ்ஜீவிக்கையாலே ஸம்ருத்3த4மான திருச்சோலையோடு கூடின திருநகரியையுடைய ஆழ்வார் அருளிச்செய்த நிர்தோ3ஷமான சப்3த3 ஸந்த3ர்ப்ப4த்தையுடைய ஆயிரத் திலும் இத்திருவாய்மொழியானது தன்னை அப்4யஸித்தார்க்கு ஆத்மாவுக்கு ப்ரக்ருதி ஸம்ப3ந்த4 ஹேதுவான கர்மத்தைப்போக்கும் என்கிறது.
நஞ்சீயர் திருவடிகளே ஶரணம்
அவதாரிகை 3-3
ஒழிவில்காலம் – ப்ரவேசம்
மூன்றாந்திருவாய்மொழியில் – “உன்னை அனுப4விக்கைக்கு விரோதி4 யான ப்ரக்ருதியைப்போக்கவேணும்” என்று எம்பெருமானை ஆழ்வார் அர்த்தி2க்க, “உமக்கு அப்ரக்ருதி நம்மோட்டைப் பரிமாற்றத்துக்கு விரோதி4யல்ல. அனுகூலம், இப்ரக்ருதியோடே கூட உம்மை அடிமை கொள்ளுகையிலுள்ள அபி4நிவேசத்தாலேயன்றோ இங்கு நிற்கிறது” என்று வேதை3க ஸமதி4க3ம்யனானதான் திருமலையில் நின்றருளுகிற படியைக் காட்டியருளக் கண்டு ப்ரீதராய், அவன் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட அடிமைகளும் செய்யவேணுமென்று பாரிக்கிறார். –
முதல் பாட்டு
ஒழிவில்காலமெல்லாம் உடனாய்மன்னி*
வழுவிலா அடிமை செய்யவேண்டுநாம்*
தெழிகுரலருவித் திருவேங்கடத்து*
எழில்கொள்சோதி எந்தைதந்தைதந்தைக்கே.
அவ:- முதற் பாட்டில் – திருவேங்கடமுடையானுக்கு எல்லா அடிமைகளும் செய்யவேணும் என்கிறார்.
வ்யா:- (ஒழிவில் காலமெல்லாம்) அநந்தகாலமெல்லாம். (உடனாய்) ஸர்வ தே3சத்திலும். (மன்னி) ஸர்வாவஸ்தை2யிலும். (வழுவிலா அடிமை செய்யவேண்டும்) ஸர்வசேஷவ்ருத்தியும் பண்ணவேணும். (நாம்) என்கிற பன்மை – திருவுள்ளத்தையாதல், (2-7-4) “மேவும் தன்மையமாக்கி னான்” என்று சொல்லபட்ட அநுகூலஜநங்களையாதல் குறித்து. (தெழிகுரலருவியென்று மேலுக்கு) ஸ்ரமஹரமாய், க3ம்பீ4ரமாக த்4வநியாநின்றுள்ள திருவருவியை யுடைய திருமலையில் நிலமிதியாலே நிறம்பெற்ற தன்னுடைய ஸ்வாபா4விகமான அழகையுடையனாய், அவ்வழகாலும் திருமலை யிலே நின்றருளின ஸௌலப்4யத்தாலும் என்னைத் தோற்பித்து. எனக்குப் பரமசேஷியான திருவேங்கடமுடையானுக்கு.
இரண்டாம் பாட்டு
எந்தைதந்தைதந்தை தந்தைதந்தைக்கும்
முந்தை* வானவர் வானவர்கோனொடும்*
சிந்துபூமகிழும் திருவேங்கடத்து*
அந்தமில்புகழ்க் காரெழிலண்ணலே.
அவ:- இரண்டாம் பாட்டில் – “திருநாட்டிலே சென்று எம்பெருமானுக்கு அடிமைசெய்கையன்றோ எல்லாருக்கும் பரமப்ராப்யம்” என்னில், திருநாட்டிலுள்ள நித்யஸூரிகளும் ஆசைப்படும்படி முடிவில்லாத ஸௌந்த3ர்யாதி ஶீலாதி3களையுடைய திருவேங்கடமுடையான் என்னைத் தனக்கு அத்யந்தசேஷமாக்கிக் கொண்டான். ஆனபின்பு அவனுக்கு ஸர்வசேஷவ்ருத்தியும் பண்ணவேணும் என்கிறார்.
வ்யா:- (வானவர் என்று தொடங்கி) ஸ்ரீஸேனாபதியாழ்வா னோடுங்கூட அயர்வறும் அமரர்கள் உபஹாரமாகத் தூவின பூக்கள் நிலமிதியிற் குளிர்த்தியாலே செவ்விபெறும்படியான திருமலையிலே. (அண்ணல்) ஸர்வேஸ்வரன்.
மூன்றாம் பாட்டு
அண்ணல்மாயன் அணிகொள்செந்தாமரைக்
கண்ணன்* செங்கனிவாய்க் கருமாணிக்கம்*
தெண்ணிறைசுனைநீர்த் திருவேங்கடத்து*
எண்ணில்தொல்புகழ் வானவரீசனே.
அவ:- மூன்றாம் பாட்டில் – ஏவம்வித4மான ஸ்வாநுப4வரூப ஸம்ரு த்3தி4யைத் தந்தருளுமோ? என்னில்; நிரதிசய ஸௌந்த3ர்யத் தையும் எண்ணில்லாத கல்யாண கு3ணங்களையுமுடைய தன்னை அஸங்க்2யே யரான நித்யஸித்3த4 புருஷர்கள் எல்லார்க்கும் பு4ஜிக்கக் கொடுத்துக் கொண்டிருக்கிறானொரு பரமோதா3ரனல்லனோ அவன்; ஆதலால் நமக்குத் தன்னை பு4ஜிக்கத் தரும் என்கிறார்.
வ்யா:- (மாயன் என்று தொடங்கி) திருமலையில் வந்த ஐஸ்வர்யத் தினாலே அத்யாஸ்சர்யபூ4தனாய், தானே ஆப4ரணமாம் படியான அழகிய திருக்கண்களையுடையான். (தெண்ணிறை என்று தொடங்கி) தெளிந்து நிறைந்திருந்துள்ள நீரையுடைத்தான கனைகளாலே அலங்க்ருதமான திருமலையிலே.
நான்காம் பாட்டு
ஈசன்வானவர்க்கென்பன் என்றால்* அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
நீசனேன் நிறைவொன்றுமிலேன்* என்கண்
பாசம்வைத்த பரஞ்சுடர்ச்சோதிக்கே.
அவ:- நாலாம் பாட்டில் – அதிநிக்ருஷ்டனான என்பக்கலிலே ஸங்க3 த்தைப் பண்ணினவனுக்கு ‘அயர்வறும் அமரர்களுக்கு ஆத்மதா3நம் பண்ணினான்’ என்னும் இது ஓர் ஏற்றமோ? என்கிறார்.
வ்யா:- (நீசனேன் நிறைவொன்றுமிலேன்) அநாத்மகு3ணத்துக்கெல்லாம் ஓர் ஆகரமாய், ஆத்மகு3ணக3ந்த4மில்லாதேன். (என்னென்று தொடங்கி) என் பக்கலிலே ஸங்க3த்தைப்பண்ணி ஸம்ஸ்லேஷிக்கையாலே அத்யுஜ்ஜ்வலனாயிருக்கிறவனுக்கு.
ஐந்தாம் பாட்டு
சோதியாகி எல்லாவுலகும்தொழும்*
ஆதிமூர்த்தியென்றால் அளவாகுமோ?*
வேதியர்முழுவேதத் தமுதத்தை*
தீதில்சீர்த் திருவேங்டத்தானையே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – திருவேங்கடமுடையான் படிக்கு என்னை விஷயீகரித்தான் என்றால்தான் கு3ணமாகப்போருமோ? என்கிறார்.
வ்யா:- (சோதியென்று தொடங்கி) அத்யந்த விலக்ஷணமன ஸௌந்த3ர்யாதி3 கல்யாணகு3ணங்களையுடையனான தன்னை எனக்கு பு4ஜிக்க த்தாந்தான் என்ற இது அவனுக்கு ஓர் ஏற்றமாகப்போருமோ? நிக்ருஷ்டதைக்குத் தமக்கு அப்பாலில்லாமையாலே, எல்லாவுலகும் தொழுமென்னவே – தம்மையே சொல்லிற்றாம். வைதி3கருடைய த4நமான வேத3ங்க ளெல்லாவற்றாலும் நிரதிசய போ4க்3யமாக ப்ரதிபாதி3க்கப்படுகிற வனை. அவனுடைய சீருக்குத் தீதிலாமையவது – “இன்னாராவர். இன்னாராகார்” என்று வரையாமை ஒரு கு3ணமன்றிக்கே ஸ்வரூபமாகை.
ஆறாம் பாட்டு
வேங்கடங்கள் மெய்ம்மேல்வினைமுற்றவும்*
தாங்கள்தங்கட்கு நல்லனவேசெய்வார்*
வேங்கடத்துறைவார்க்கு நமவென்ன
லாங்கடமை* அதுசுமந்தார்கட்கே.
அவ:- ஆறாம் பாட்டில் – ப்ரதிப3ந்த4க கர்மங்கள் அடிமைக்கு விக்4நத்தைப் பண்ணாவோ? என்னில்; “அடிமைசெய்வோம்” என்று இசையவே தானே நசிக்கும் என்கிறார்.
வ்யா:- (வேங்கடங்கள் என்று தொடங்கி) ருணத்ரயங்களும் தே3ஹோபாதி4கமான பாபங்களும் தானே நசிக்கும்; உத்தரபூர்வாக4ங் கள் நசிக்கும்; இது ஸத்யம் என்றுமாம். (தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்) தாங்கள் தங்களுக்கு ப்ராப்யமென்று இருந்த அடிமைகளைச் செய்ய அமையும். (வேங்கடத்து என்று தொடங்கி) ‘திருவேங்கடமுடையானுக்கே சேஷம்; எனக்குரியேனல்லன்’ என்று ஆத்மாவுக்கு ப்ராப்தமாய் எளிதுமாயிருக்கிற இந்த உக்திமாத்ரத்திலே உத்3யுக்தரானவர்களுக்கு.
ஏழாம் பாட்டு
சுமந்துமாமலர் நீர்சுடர்தூபங்கொண்டு*
அமர்ந்துவானவர் வானவர்கோனொடும்*
நமன்றெழும் திருவேங்கடம்நங்கட்கு*
சமன்கொள்வீடுதரும் தடங்குன்றமே.
அவ:- ஏழாம் பாட்டில் – நம்முடைய அபி4லஷிதமான அடிமைகளெல்லாம் பெறுகைக்குக்த் திருவேங்கடமுடையானை ஆஸ்ரயிக்க வேண்டு வதில்லை; திருமலைதானே தரும் என்கிறார்.
வ்யா:- (சுமந்து என்று தொடங்கி) ஸ்லாக்4யமான புஷ்பாத்3யுபகர ணங்களை ஸாத3ரமாக த4ரித்துக்கொண்டு. (அமர்ந்து என்று தொடங்கி) பரமைகாந்திகளைப்போலே இந்த்3ராதி3தே3வர்களும் ப்ரயோஜநாந்தரங்களை மறந்து பூண்டு அடிமைசெய்து உஜ்ஜீவிக்கும்படியான நிலமதியையுடைய திருவேங்கடமான தடங்குன்றமே நமக்குத் தன்னுடைய சேஷத்வம் போலேயிருக்கு சேஷத்வத்தைத் தரும். “சமன்கொள்” என்றது – ஆத்மாவுக்கு ஸத்3ருசமாகவுமாம்.
எட்டாம் பாட்டு
குன்றமேந்திக் குளிர்மழைகாத்தவன்*
அன்றுஞாலம் அளந்தபிரான்* பரன்
சென்றுசேர் திருவேங்கடமாமலை*
ஒன்றுமேதொழ நம்வினை ஓயுமே.
அவ:- எட்டாம் பாட்டில் – கோ3வர்த்த4நோத்3த4ரணாதி3களாலே நிரதிசய போ4க்3யனான எம்பெருமானுக்குங்கூட பரமப்ராப்யமான திருமலைதான் நமக்கொன்று தரவேணுமோ. அதுதானே பரமப்ரப்யம் என்கிறார்.
வ்யா:- (குன்றம் என்று தொடங்கி) கோ3வர்த்த4நோத்3த4ரணம் பண்ணி ஆஸ்ரிதருடைய ஆபத்தைப்போக்கும் ஸ்வபா4வனாய் அவ்வளவன்றிக்கே ஆஸ்ரிதருக்காக லோகத்தையெல்லாம் அளக்கையாகிற மஹோபகாரத்தைப் பண்ணின ஸர்வேஸ்வரன். (சென்று என்று தொடங்கி) சென்று தனக்குப் பரமப்ராப்யமாகப் பற்றும் திருமலை ஒன்றையுமே அநுப4விக்க, “ஒரு ப்ராப்யம் பெற்றிலோம்” என்னும் வ்யஸநம் நீங்கும். ஆஸ்ரயிப்பார்க்குண்டான அடிமைக்கு விரோதி4யைத் திருமலைதானே போக்கும் என்றுமாம்.
ஒன்பதாம் பாட்டு
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப்பிணி*
வீயுமாறுசெய்வான் திருவேங்கடத்
தாயன்* நாள்மலராம் அடித்தாமரை*
வாயுள்ளும்மனத்துள்ளும் வைப்பார்கட்கே.
அவ:- ஒன்பதாம் பாட்டில் – அடிமை தருகைக்கும் அதுக்கு விரோதி4 நிரஸநத்துக்கும் திருமலையெல்லாம் வேண்டா. திருமலைக்கு அவயபூ4த னான திருவேங்கடமுடையானே அமையும் என்கிறார்.
வ்யா:- (ஓயுமூப்புப் பிறப்பு இறப்பு) ஜந்மாதி3ஸகலது3:க்க2ங்களும் ஓயும். (பிணி என்று தொடங்கி) ஸகலது:3க்க2நிவர்த்தகனாய், திருமலையிலே நின்றருளின ஸர்வஸுலப4னான திருவேங்கடமுடையானுடைய நிரதிசய போ4க்3யமான திருவடிகளை மநோவாக்காயங்களினால் அநுப4விப்பார்க்கு.
பத்தாம் பாட்டு
வைத்தநாள்வரை எல்லைகுறுகிச்சென்று*
எய்த்திளைப்பதன் முன்னம்அடைமினோ*
பைத்தபாம்பணையான் திருவேங்கடம்*
மொய்த்தசோலை மொய்பூந்தடந்தாழ்வரே.
அவ:- பத்தாம் பாட்டில் – தம்முடைய ப்ரீதிப்ரகர்ஷத்தாலே எல்லீரும் திருத்தாழ்வரையை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.
வ்யா:- (வைத்தநாள்வரை என்று தொடங்கி) திருமலைக்குப் போகைக்காக ஈஸ்வரன் நியமித்த ஆயுஸ்ஸின் எல்லையளவில் அணித் தாகச் சென்று திருமலையை அநுசந்தி4க்கவொண்ணாதபடி கலங்கி அவ ஸந்நராவதற்கு முன்பே ஆஸ்ரயியுங்கோள். (பைத்த பாம்பணை என்று தொடங்கி) தன்னோட்டை ஸ்பர்ச ஸுகா2திசயத்தாலே விகஸிதமான ப2ணங்களையுடைய திருவநந்தாழ்வானைக் காட்டிலும் எம்பெருமானுக்கு நிரதிசய போ4க்3யமான திருமலையினுடைய செறிந்திருந்துள்ள திருச்சோலைகளையும் அழகிய பூத்த பொய்கைகளையுமுடைய திருத்தாழ்வரையை.
பதினொன்றாம் பாட்டு
தாள்பரப்பி மண்தாவிய ஈசனை*
நீள்பொழில் குருகூர்ச்சடகோபன்சொல்*
கேழிலாயிரத்து இப்பத்தும்வல்லவர்*
வாழ்வர்வாழ்வெய்தி ஞாலம்புகழவே.
அவ:- நிக3மத்தில், இத்திருவாய்மொழியை அப்4யஸிக்க வல்லார், ஆழ்வார் மனோரதி2த்தபடியே எப்பேர்ப்பட்ட அடிமையும் செய்யப்பெறுவர் என்கிறார்.
வ்யா:- (தாள் என்று தொடங்கி) ஸ்ரீவாமநனான தன்னுடைய கு3ண சேஷ்டிதாதி3களாலே லோகத்தையடைய அடிமைகொண்ட திருவேங்கட முடையானை, பரம்பியிருந்த திருச்சோலையாலே அலங்க்ருதமான திரு நகரியையுடைய ஆழ்வார் அருளிச்செயலான ஒப்பில்லாத ஆயிரத்து இப்பத்தும் வல்லவர். (வாழ்வர் என்று தொடங்கி) இஜ்ஜக3த்திலுள்ளார் “இவனைப் புகழப்பெற்று க்ருதார்த்த2ரானோம்” என்று புகழும்படி இத் திருவாய்மொழியில் தாம் மநோரதி2த்தாற்போலே அடிமை செய்யப் பெறுவர்.
நஞ்சீயர் திருவடிகளே ஶரணம்
அவதாரிகை 3-4
புகழும் – ப்ரவேசம்
நாலாம் திருவாய்மொழியில் – தாம் முன்பு ப்ரார்த்தி2த்த அடிமை கொள் கைக்காக எம்பெருமான் தன்னுடைய ஸர்வாத்ம பா4வத்தைக் காட்டியருளக் கண்டு ஸம்ப4ராந்தரான ஆழ்வார், பூ4தங்களையும் பௌ4திகங்களை யும் விளக்குகளில் உஜ்ஜ்வலபதா3ர்த்த2ங்களையும் ரஸ்யமான பதா3ர்த்த2 ங்களையும் செவிக்கினிய கா3நாதி3களையும் மோக்ஷாதி3 புருஷார்த்த2ங் களையும் ஜக3த்துக்கு ப்ரதா4நரான ப்3ரஹ்மருத்3ராதி3களையும் ஜக3த்துக் கெல்லாம் காரணமான ப்ரக்ருதி புருஷர்களையும் விபூ4தியாகவுடைய னாய், அந்த சரீரபூ4தமான விபூ4தியிலே ஆத்மதயா வ்யாபித்து தத்3க3த் தோ3ஷைரஸம்ஸ்ப்ருஷ்கனான மாத்ரமன்றிக்கே, இவ்விபூ4தியோக3த் தாலே தன்னுடைய அஸாதா4ரணமான திருமேனியால் பெறும் ஏற்றத்தை யுமுடையனாய், ஸ்ரிய:பதியாயிருந்துள்ள எம்பெருமானை அநுஸந்தி4 த்து. ப4க3வத்3 கு3ணாநுஸந்தா4நம் பண்ணினால் (பெரிய திருவ 34) “காலாழும் நெஞ்சழி யும் கண்சுழலும்” என்னும் கணக்காலே காயிகமான அடிமையில் க்ஷம ரல்லாமையாலும், (4-3) கோவை வாயாளிற்படியாலே எம்பெருமான் இவர் தாம் பேசின பேச்சை எல்லா அடிமையுமாகக் கொள்ளுவானொருவனா கையாலும். விபூ4திவாசகமான சப்3த3ம் விபூ4திமுக2த்தாலே அவனுக்கு ப்ரதிபாத3கமாகையாலும் அவற்றைச் சொல்லும் சொல்லாலே அவற்றையுடையனான இவனைச் சொல்லி வாசிகமான அடிமையிலே ப்ரவ்ருத்தராகிறார்.
முதற்பாட்டு
புகழும் நல்லொருவனென்கோ? பொருவில்சீர்ப்பூமியென்கோ*
திகழுந்தண்பரவையென்கோ? தீயென்கோ? வாயுவென்கோ?*
நிகழும் ஆகாசமென்கோ? நீள்சுடரிரண்டுமென்கோ?*
இகழ்வில் இத்வனைத்துமென்கோ? கண்ணனைக்கூவுமாறே.
அவ:- முதற் பாட்டில் – இத்திருவாய்மொழியில் சொல்லுகிற அர்த2த்தை ஸங்க்3ரஹேண அருளிச்செய்கிறார்.
வ்யா:- (புகழுநல்வொருவனென்கோ) ஸ்ருதி ஸம்ருத்யாதி3களாலே புகழப்பட்ட நன்மையையுடையனான அத்3விதீயபுருஷனென்பேனோ? (பொருவில்சீர்ப்பூமியென்கோ) ஒப்பில்லாத க்ஷமாதி3கு3ணங்களையு டைய பூ4மியென்பேனோ? (நிகழுமாகாசமென்கோ) ஸ்வவ்யதிரிக்த பூ4தசதுஷ்டயம் ஸம்ஹ்ருதமானாலும் சில நாள் வரித்திக்கும் ஆகாச மென்பேனோ? (நீள்சுடரிரண்டுமென்கோ) மிக்க ஒளியையுடைய சந்த்3ர ஸூர்யர்களென்பேனோ? (இகழ் விலிவ்வனைத்துமென்கோ) ஒன்றொழி யாமே இப்பதா3ர்த்த2ங்களெல்லாம் என்பேனோ?
இரண்டாம் பாட்டு
கூவுமாறறியமாட்டேன் குன்றங்களனைத்துமென்கோ?*
மேவுசீர்மாரியென்கோ? விளங்குதாரகைகளென்கோ?*
நாவியல்கலைகளென்கோ? ஞானநல்லாவியென்கோ?*
பாவுசீர்க்கண்ணனெம்மான் பங்கயக்கண்ணனையே.
அவ:- இரண்டாம் பாட்டில் – பூ4தங்கள் ஐந்தினுடைய கார்யமான பதா3ர்த்த2ங்களையும் அடைவே பேசி, அவற்றை விபூ4தியாகவுடைய னான தன்மையை அருளிச்செய்கிறார்.
வ்யா:- (நாவியல் கலைகளென்கோ) நாவாலே இயற்றப்படா நின்றுள்ள வாயுகார்யமான வித்3யைகள் என்பேனோ? வித்3யைகளுக்கு வாயு கார்யத்வமாவது – வித்3யாரூப சப்3தோ3ச் சாரணம் வாயுஜந்ய ப்ரயத்ந கார்யம். (ஞானநல்லாவியென்கோ) ஆவியென்று – லக்ஷணையாலே ஶரீரத்தைச் சொல்லுகிறது. ஜ்ஞாநத்துக்கு சரீரமென்று – ஜ்ஞாநஸாத4ந மான சப்3த3த்தைச் சொல்லுகிறது.
மூன்றாம் பாட்டு
பங்கயக்கண்ணனென்கோ? பவளச்செத்வாயனென்கோ?*
அங்கதிரடியனென்கோ? அஞ்சனவண்ணனென்கோ?*
செங்கதிர்முடியனென்கோ? திருமறுமார்பனென்கோ?*
சங்குசக்கரத்தனென்கோ? சாதிமாணிக்கத்தையே.
அவ:- மூன்றாம் பாட்டில் – இந்த விபூ4தியோக3ம் அவனுடைய அப்ராக்ருதமாய். தி3வ்யபூ4ஷணாதி3களாலே அலங்க்ருதமான திருமேனி யோடொக்கத் தகுதியாயிருக்குமென்னுமிடந்தோற்றுகைக் காக. விபூ4தி கத2நத்தின் நடுவே அவனுடைய திருமேனியின் அழகைப் பேசுகிறார். மற்றைப் பாட்டுக்களிலும் அவனுடைய அஸாதா4ரண மான படியைப் பேசின விடங்களுக்கும் இதுவே ப்ரயோஜநம். கதிரென்று – ஒளி.
வ்யா:- (சாதிமாணிக்கத்தை) சாதிமாணிக்கமென்றது – நிர்த் தோ3ஷமாய் ஸஹஜமான அழகையுடையவன் என்கை.
நான்காம் பாட்டு
சாதிமாணிக்கமென்கோ? சவிகொள்பொன்முத்தமென்கோ?*
சாதிநல்வயிரமென்கோ? தவிவில்சீர்விளக்கமென்கோ?*
ஆதியஞ்சோதியென்கோ? ஆதியம்புருடனென்கோ?*
ஆதுமில்காலத்தெந்தை அச்சுதன் அமலனையே.
அவ:- நாலாம் பாட்டில் – தேஜோவிசிஷ்டமான மாணிக்யாதி3 பதா3ர்த்த2ங்களை விபூ4தியாகவுடையனானபடியைப் பேசுகிறார்.
வ்யா:- (சாதி மாணிக்கமென்கோ) ஆகரத்திலே பிறந்த மாணிக்க மென்பேனோ? (சவிகொள்பொன் முத்தமென்கோ) நிறைந்த ஒளியை யுடைய பொன்னென்பேனோ? நீர்மையுடைய முத்தமென்பேனோ? (தவி வில்சீர் விளக்கமென்கோ) விச்சே2தி3யாத அழகையுடைய ப்ரகாசமென்பேனோ? (ஆதியஞ்சோதியென்கோ) விலக்ஷண தேஜோரூபமான திருநாட்டைத் தனக்கு விபூ4தியாக இருக்கிற இருப்பு. (ஆதியம் புருடனென்கோ) ஸர்வகாரணமாய், ஸர்வவிலக்ஷணனாய், திருநாட்டிலே எழுந்தரு ளியிருக்கிற இருப்பு. (ஆதுமில் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே) எனக்கு ஒருதுணையில்லாத காலம் நிர்ஹேதுகமாக அடிமை கொண்டு என்னை மங்காதபடி காத்தவன்.
ஐந்தாம் பாட்டு
அச்சுதனமலனென்கோ? அடியவர்வினைகெடுக்கும்*
நச்சுமாமருந்தமென்கோ? நலங்கடலமுதமென்கோ?*
அச்சுவைக்கட்டியென்கோ? அறுசுவையடிசிலென்கோ?*
நெய்ச்சுவைத்தேறலென்கோ? கனியென்கோ? பாலென்கேனோ?
அவ:- அஞ்சாம் பாட்டில் – ரஸ வஸ்துக்களெல்லாம் அவனுக்கு விபூ4தி என்கிறார்.
வ்யா:- (அச்சுதன் அமலன் என்கோ) நித்யவிபூ4தியோடே கூடியிருக் கும் இருப்புக்கு ஒருநாளும் ஓரழிவில்லாதனாய், தன்பக்கல் ஆச்ரயண லேசமுடையாரை உபேக்ஷிக்கையாகிற தோ3ஷமின்றிக்கே அவர்களை அங்கீகரிக்கும் ஸ்வபா4வனென்பேனோ? (நச்சு மாமருந்தம்) நச்சப்படும் மஹௌஷத4ம். (அச்சுவை) கீழ்ச்சொன்ன அம்ருதம்போலேயிருந்த சுவை. (நெய்ச்சுவைத் தேறலென்கோ) நெய்ச்சுவை என்பேனோ, மது4 வென்பேனோ?
ஆறாம் பாட்டு
பாலென்கோ? நான்குவேதப்பயனென்கோ? *சமயநீதி
நூலென்கோ? நுடங்குகேள்வியிசையென்கோ? *இவற்றுள்நல்ல
மேலென்கோ? வினையின்மிக்கபயனென்கோ? *கண்ணனென்கோ?
மாலென்கோ?மாயனென்கோ? வானவராதியையே.
அவ:- ஆறாம் பாட்டில் – வேத3ம் தொடக்கமான இயலும் இசையு மான சப்3த3 ராசியை விபூ4தியாகவுடையனாயிருக்கிறபடியைப் பேசுகிறார்.
வ்யா:- (நான்கு வேதப் பயனென்கோ) ப்ரமாண ஜாதத்தில் ஸார பூ4தமான வேத3ம் நாலுமென்பேனோ? (சமயநீதி நூலென்கோ) வைதி3க ஸமயத்துக்கு உபப்3ரும்ஹணமான சாஸ்த்ரங்களென்பேனோ? (நுடங்கு கேள்வி இசையென்கோ) ஸ்ரவணமாத்ரத்திலே ஈடுபடுத்தவல்ல இசை யென்பேனோ? (இவற்றுள் நல்ல மேலென்கோ) இவற்றிலும் அறவில க்ஷண போ4க்3யதமமென்பேனோ? (வினையில்மிக்க பயனென்கோ) ஸாத4நரூபமான யத்நத்தின் அளவன்றிக்கே அதிமாத்ரமான ப2லரூப மென்பேனோ? வானவர் என்றது – ப்3ரஹ்மாதி3களை.
ஏழாம் பாட்டு
வானவராதியென்கோ? வானவர்தெய்வமென்கோ?*
வானவர் போகமென்கோ? வானவர்முற்றுமென்கோ?*
ஊனமில்செல்வமென்கோ? ஊனமில்சுவர்க்கமென்கோ?*
ஊனமில்மோக்கமென்கோ? ஒளிமணிவண்ணனையே.
அவ:- ஏழாம் பாட்டில் – ஐஸ்வரயாதி3 புருஷார்த்த2ங்கள் எல்லாவற்றையும் விபூ4தியாக உடையனாயிருக்கிறபடியைப் பேசுகிறார்.
வ்யா:- (வானவர் என்று தொடங்கி) அயர்வறும் அமரர்களுக்கு ஸ்வரூப ஸ்தி2யாதி3களும் மற்றுள்ளன எல்லாமென்பேனோ? (ஊனைமில் என்று தொடங்கி) பரிபூர்ணமான மோக்ஷாதி3 புருஷர்த்த2மென்பேனோ? (ஒளி மணிவண்ணனை) விலக்ஷணமான அழகயுடையவனை.
எட்டாம் பாட்டு
ஒளிமணிவண்ணனென்கோ? ஒருவனென்றேத்தநின்ற*
நளிர்மதிச்சடையனென்கோ? நான்முகக்கடவுளென்கோ?*
அளிமகிழ்ந்துலகமெல்லாம் படைத்தவையேத்தநின்ற*
களிமலர்த்துளவனெம்மான் கண்ணனைமாயனையே.
அவ:- எட்டாம் பாட்டில் – ஜக3த்ப்ரதா4நரான ப்3ரஹ்மருத்3ராதி3 களை விபூ4தியாகவுடையனானபடியைப் பேசுகிறார்.
வ்யா:- (ஒருவனென்று ஏத்த நின்ற நளிர்மதிச் சடையனென்கோ) ப்ரதா4நனென்று ஏத்துகைக்குப் பாத்தமுண்டாய்நின்ற ருத்3ரனென் பேனோ? நளிர்மதி – குளிர்ந்த சந்த்3ரன். (நான்முகக் கடவுளென்கோ) சதுர்முக2னான தை3வமென்பேனோ? (அளிமகிழ்ந்து) க்ருபையை உகந்து. களியென்று – தேன்.
ஒன்பதாம் பாட்டு
கண்ணனைமாயன்தன்னைக் கடல்கடைந்து அமுதங்கொண்ட*
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்தன்மேல்*
நண்ணிநன்குறைகின்றானை ஞாலமுண்டுமிழ்ந்தமாலை*
எண்ணுமாறு அறியமாட்டேன் யாவையும்யவரும்தானே.
அவ:- ஒன்பதாம் பாட்டில் – அவனுடய விபூ4திவிஸ்தாரங்கள் தனித் தனியே பேசமுடியாது; கார்யகாரண ரூபமான சேதநாசேதநங்களடைய அவனுக்கு விபூ4தியென்று ப்ரயோஜகத்தாலே சொல்லலாமத்தனை என்கிறார்.
வ்யா:- (கடல்கடைந்து அமுதங்கொண்ட அண்ணலை) க்ஷுத்3ர புருஷார்த்த2த்தை இரந்தார்களென்று பாராதே, தானே ஆயாஸித்து அவர்களுடைய ப்ரயோஜநங்களை முடித்துக்கொடுத்த பெரியோனை. (அச்சுதனை) ஆஶ்ரிதர்க்கு ச்யுதியில்லாதபடியிருக்கிறவனை.
பத்தாம் பாட்டு
யாவையும்யவரும்தானாய் அவரவர்சமயந்தோறும்*
தோய்விலன்புலனைந்துக்கும்சொலப்படான் உணர்வின்மூர்த்தி*
ஆவிசேருயிரினுள்ளால் ஆதுமோர்பற்றிலாத*
பாவனையதனைக்கூடில் அவனையும்கூடலாமே.
அவ:- பத்தாம் பாட்டில் – சேதநாசேதநங்களுக்கு அந்தராத்மதயா வ்யாபித்து நின்றால் தத்3க3ததோ3ஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனாயிருக்கும் என்கிறார்.
வ்யா:- (யாவையும் என்று தொடங்கி) சேதநாசேதநங்களுக்கு அந்தராத்மாவாய் வைத்து அவற்றினுடைய து3:க்கி2த்வபரிணாமித் வாதி3 வ்யவஸ்தை2களொன்றிலும் தோய்விலன்; அவரவரென்று – இரண்டுக்கும் உபலக்ஷணம். (புலனைந்துக்கும் சொலப்படான்) சக்ஷுராதி3கரணங்க ளுக்கு விஷயமாகச் சொல்லப்படான். (உணர்வின் மூர்த்தி) ஜ்ஞாநஸ்வ ரூபன். (ஆவியென்று தொடங்கி) அநாதி3காலம் கார்யகாரணோப4யரூப மான ப்ரக்ருதியோடே கலசியிருக்கிற ப்ரத்யகா3த்மாவுக்கு, ப்ரக்ருதியினுடைய பரிணாமித்வாதி3கள் தட்டாதேயிருக்கிறாப்போலே எம்பெருமானு க்கும் இரண்டோடு கலசியிருந்துவைத்தே அவற்றினுடைய ஸ்வபா4வம் தட்டாதே யிருக்கக்கூடும்.
பதினொன்றாம் பாட்டு
கூடிவண்டறையுந்தண்தார்க்கொண்டல்போல்வண்ணன்தன்னை*
மாடலர்பொழில் குருகூர்வண்சடகோபன்சொன்ன*
பாடலோராயித்துள் இவையுமொருபத்தும்வல்லார்*
வீடிலபோகமெய்தி விரும்புவர் அமரர்மொய்த்தே.
அவ:- நிக3மத்தில், இப்பத்தும் கற்றவர்கள் நித்யகைங்கர்யத்தைப்பெற்று ‘அயர்வறும் அமரர்’களாலே விரும்பப்படுவர் என்கிறார்.
வ்யா:- (கூடிவண்டு என்று தொடங்கி) வண்டுகளெல்லாம் கூடி வந்து அலைக்கும்படியான போ4க்3யதையையுடைத்தான மாலையை யும், வர்ஷுகவலாஹகம் போலேயிருக்கிற நிறத்தையுமுடையவனை. இத்திருவாய்மொழியிற்பேசின விபூ4தி தோளில் தோள்மாலையோடும் நிறத்தோடுமொக்கத் தகுதியென்னுமிடத்தை – நிக3மத்திலே சொல்லு கிறது என்று கருத்து. “ஏவம் வித4தி3வ்யரூபத்தை யுடையனாய்க்கொ ண்டு என்றும் திருநாட்டிலே எழுந்தருளியிருக்கும்” என்றும் சொல்லுவர். “அசேஷ தோ3ஷ ப்ரத்யநீகனாய், ஆஸ்ரிதரோடு நித்யஸம்ஸ்லேஷ ஸ்வபா4வனாய், ஆஸ்ரித ஜநஸமஸ்த து3:க்கா2பநோத3ந ஸ்வாப்வனாய், பரமோதா3ரனாயிருக்கும்.” என்றும் சொல்லுவர். மாடு-பர்யந்தம். பாடல்-கா3நம்.
நஞ்சீயர் திருவடிகளே ஶரணம்
அவதாரிகை 3-5
மொய்ம்மா – ப்ரவேசம்
அஞ்சாம் திருவாய்மொழியில் – மது4வநம் புக்க ஹநுமத்ப்ரமுக2ரான முதலிகளைப்போலே ப4க3வத்3கு3ண ப3லாத்க்ருதராய்க்கொண்டு அடிமை செய்யப்பெற்று ஹ்ருஷ்டராய்க்களித்த ஆழ்வார். ஸ்ரீகீ3தையில் எம்பெருமான் தே3வாஸுர விபா4க3ம் பண்ணியருளி ஆஸுரப்ரக்ருதி களை நிந்தி3த்து தை3வ ப்ரக்ருதிகளை கொண்டாடினாற்போலே, அறிவி ல்லாதாரையும், ப4க3வத் ஸம்ப3ந்தி4களன்றிக்கே சிஷ்டாபி4மாநிகளாயிருப்பாரையும், சதிரடிப்பாரையும், அப3ஹுஸ்ருதரையும், எம்பெருமானை ஆஸ்ரயித்து ப்ரயோஜநாந்தரபரரானவர்களையும், ராக்ஷஸப்ரக் ருதிகளையும், ஆஸுர ப்ரக்ருதிகளையுமகப்பட ஆரேனுமாக எம்பெருமானுடைய கு3ணங்களை அநுஸந்தி4த்தால் பரவசராய், கும்பிடுநட்டமிட்டாடிக் கோகுகட்டுண்டுழலாதாரை நிந்தி3த்து, ப4க3வத்3கு3ண ப்ரஸ்தாவத் திலே கலங்கும் ப்ரக்ருதியானவர்களுடைய படி நமக்கு நினைக்கவும் பேசவும் நிலமல்லவென்று இவர்களைக் கொண்டாடுகிறார். ஸாத்விகா க்3ரணிகளாயிருக்கிற ஆழவார்க்குக் களிக்கையும், சிலரை இகழ்கையும் கூடினபடியென்? என்னில்; “விஷயாஸ்வாத3த்தாலே பிறந்த த3ர்ப்பமும், ஒரு ஹேதுவின்றியேயிருக்க, சிலரை இகழ்கையுமாகாது” என்றாயிற்று சாஸ்த்ரஞ்சொல்லுகிறது; ப4க3வத்3தா3ஸ்யாநுப4வத்தால் வந்த களிப்பும். அதில்லாதாரை இகழ்கையும் சாஸ்த்ரங்களோடு அவிருத்3த4மென்னுமிட மும், முக்தருடையவும் ஸ்ரீநாரத3 ப4க3வானுடையவும் வ்ருத்தாந்தங்க ளிலே ப4க3வத3நுப4வஜநிதமான ப்ரீதியில் அவை ஆமென்றும் கொள்வது.
முதற்பாட்டு
மொய்ம்மாம்பூம்பொழில்பொய்கை முதலைச்சிறைப்பட்டுநின்ற*
கைம்மாவுக்கு அருள்செய்த கார்முகில்போல்வண்ணன்கண்ணன்*
எம்மானைச்சொல்லிப்பாடி எழுந்தும்பறந்தும்துள்ளாதார்*
தம்மால்கருமமென்? சொல்லீர்தண்கடல்வட்டத்துள்ளீரே!
அவ:- முதற் பாட்டில் – ஸ்ரீக3ஜேந்த்3ராழ்வானை ரக்ஷித்தருளின எம்பெருமானுடைய இந்த ஆஸ்ரித வாத்ஸல்யத்தை அநுஸந்தி4த்தும் அவிக்ருதராயிருப்பார் வ்யர்த்த2 ஜந்மாக்கள் என்கிறார்.
வ்யா:- (மொய்ம்மாம் பூம்பொழில்) மநோஹரமாய், பெருத்திருக் கிற திருச்சோலை; கைம்மா – ஆனை. (கார்முகில்போல் வண்ணன் கண்ணனெம்மானை) வடிவழகாலே என்னை அடிமைகொண்ட க்ருஷ்ணனை. (சொல்லிப்பாடியென்று மேலுக்கெல்லாம்) வாயாலே பேசி, கு3ணஜிதராய்ப்பாடி, இருந்தவிடத்தில் இருக்கமாட்டாதே பறப்பாரைப் போலே நெஞ்சு துடிக்கமாட்டாதார்தங்களுடை ஸத்3பா4வத்தால் இஹ லோக பரலோகங்களிற்கொண்ட ப்ரயோஜநம் என்? இப்பூ4மியில் உள்ளீர்! சொல்லிகோள். (தண்கடல் வட்டத்துள்ளீர்) இப்பூ4மியிற் பிறந்தது அவனு டைய கு3ணாநுஸந்தா4நம் பண்ணுகைக்கு என்று கருத்து.
இரண்டாம் பாட்டு
தண்கடல்வட்டத்துள்ளாரைத் தமக்கிரையாத்தடிந்துண்ணும்*
திண்கழற்காலசுரர்க்குத் தீங்கிழைக்குந்திருமாலை*
பண்கள்தலைக்கொள்ளப்பாடிப் பறந்துங்குனித்துழலாதார்*
மண்கொளுலகிற்பிறப்பார் வல்வினைமோதமலைந்தே.
அவ:- இரண்டாம் பாட்டில் – ஸகல ஜக3த்தினுடைய உபத்3ரவங்க ளைப் போக்கி ரக்ஷிக்கும் ஸ்வபா4வனான ஸ்ரிய:பதியினுடைய இந்நீர் மையில் அகப்படாதார் மஹாது3:க்க2ம் பொறுக்கவொண்ணாதபடி வந்து அபி4ப4விக்க ஸம்ஸாரத்திலே வந்து பிறக்கிறவர்கள் என்கிறார்.
வ்யா:- (தண்கடலென்று தொடங்கி) ஜக3த்தில் உள்ளாரை நிர் நிப3ந்த4நமாகக் கொன்று தந்தாமுக்கு இரையாக பு4ஜித்து, இங்ஙனேயிரு க்கும் அநீதிகள் பண்ணுகைக்கு, காலிலே ஒருவரால் தவிர்க்கவொண்ணாத வீரக்கழலிட்டிருக்கிற அஸுரர்க்கு, பிராட்டியும், தானுங்கூட அநர்த் த2ங்களை எண்ணா நிற்குமவனை. (பண்களென்று தொடங்கி) பண்கள் உஜ்ஜ்வலமாம்படி பாடி, நெஞ்சம் அலமந்து கூத்தாடி, இதுவே படியாய்த் திரியாதார்.
மூன்றாம் பாட்டு
மலையையெடுத்துக்கல்மாரிகாத்துப் பசுநிரைதன்னை*
தொலைவுதவிர்த்தபிரானைச் சொல்லிச்சொல்லிநின்றுஎப்போதும்*
தலையினோடாதனந்தட்டத் தடுகுட்டமாய்ப்பறவாதார்*
அலைகொள்நரகத்தழுந்திக் கிடந்துழைக்கின்றவம்பரே.
அவ:- மூன்றாம் பாட்டில் – உபகாரமறியாத பசுக்களுக்கும் தத் ப்ராயருக்கும் வந்த ஆபத்தை நீக்குகைக்காக கோ3வர்த்த4நோத்3த4ரணம் பண்ணியருளின இம்மஹாகு3ணத்தை அநுஸந்தி4த்துவைத்து, அவிக்ருதராயிருக்கும் இருப்புக்கிடீர் நரகாநுப4வமாவது என்கிறார்.
வ்யா:- (தொலைவு தவிர்த்த பிரானை) விநாசத்தைத் தவிர்த்த மஹோபகாரகனை. (தலையென்று தொடங்கி) கும்பிடு நட்டமும் குணா லையுமிட்டு ஸம்ப்4ராந்தராகாதார் து3:க்க2 ப3ஹுளமான நரகத்திலே நாடோறும் து3:க்க2ப்படாநின்றுகொண்டு யமப4டர்க்கு பா3த்4யதயா அபூர்வவத்லாலநீயரானவர்கள்.
நான்காம் பாட்டு
வம்பவிழ்கோதைபொருட்டா மால்விடையேழுமடர்த்த*
செம்பவளத்திரள்வாயன் சிரீதரன்தொல்புகழ்பாடி*
கும்பிடுநட்டமிட்டாடிக் கோகுகட்டுண்டுழலாதார்*
தம்பிறப்பாற்பயனென்னே சாதுசனங்களிடையே.
அவ:- நாலாம் பாட்டில் – நப்பின்னைப் பிராட்டிக்காக எருதேழடர் த்து அவளோடே ஸம்ஸ்லேஷித்த ப்ரணயித்வகு3ணத்தை அநுஸந்தி4த்து ஈடுபடாதவர்கள் வைஷ்ணவர் நடுவே என்செய்யப் பிறந்தார்கள்? என்கிறார்.
வ்யா:- (வம்பவிழ் என்று தொடங்கி) நறுநாற்றம் புறப்படாநின்று ள்ள பூமாலையையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக, பெரியவிடை ஏழையும் ஊட்டியாக நெருக்கி, அவை பாத்தம் போராமே. முறுவல் செய்கையாலே சிவந்து தோன்றின திருப்பவளத்தையுடையனாய், இத்தாலே பிறந்த வீரஸ்ரீயையுமுடையனான க்ருஷ்ணனுடைய ப்ரணயித்வகு3ணத் தை ப்ரீத்யா சொல்லி. (கும்பிடுநட்டம் என்று தொடங்கி) ஹர்ஷப்ரகர்ஷத் தாலே கும்பிடுநட்டமிட்டுக் கூத்தாடி அமர்யாத3மான ப்ரவ்ருத்திகள் மிக்கு, இதுவே போ4க்3யமாய் வர்த்தியாதார்.
ஐந்தாம் பாட்டு
சாதுசனத்தைநலியும் கஞ்சனைச்சாதிப்பதற்கு*
ஆதியஞ்சோதியுருவை அங்குவைத்திங்குப்பிறந்த*
வேதமுதல்வனைப்பாடி வீதிகள்தோறும்துள்ளாதார்*
ஓதியுணர்ந்தவர்முன்னா என்சவிப்பார்மனிசரே?
அவ:- அஞ்சாம் பாட்டில் – ஆஸ்ரித விரோதி4நிரஸனார்த்த2மாக ஸ்வாஸாதா4ரண தி3வ்யரூபவிசிஷ்டனாய்க்கொண்டு திருவவதாரம் பண்ணின கு3ணத்தைக் கேட்டால் அவிக்ருதராயிருக்குமவர்கள் வஸ்து பூ4தரன்று என்கிறார்.
வ்யா:- (ஆதியென்று தொடங்கி) நித்யமாய், அப்ராக்ருத தேஜோ ரூபமான திருவுடம்பை அங்கிருந்தபடியே வைத்துக்கொண்டு இங்கே வந்து பிறப்பதும் செய்து இப்படி வேத3 ப்ரதிபாத்3யனானவனை. (ஓதி யுணர்ந்தவர்முன்னா) ஓதியுணர்ந்து வைத்து ஜ்ஞானப2லமில்லாமை யாலே அவர்கள் நிந்த்3யரில் ப்ரத2மபா4விகள் என்று கருத்து. (என் சவிப் பார் மனிசரே) எத்தை ஜபிப்பது? அவர்கள் சேதநரோ?
ஆறாம் பாட்டு
மனிசரும்மற்றும்முற்றுமாய் மாயப்பிறவிபிறந்த*
தனியன்பிறப்பிலிதன்னைத் தடங்கடல்சேர்ந்தபிரானை*
கனியைக்கரும்பினின்சாற்றைக் கட்டியைத்தேனையமுதை*
முனிவின்றியேத்திக்குனிப்பார் முழுதுணர்நீர்மையினாரே.
அவ:- ஆறாம் பாட்டில் – மநுஷ்யாதி3ரூபேண வந்து திருவவதாரம் பண்ணியருளின எம்பெருமானுடைய போ4க்3யதையை அநுஸந்தி4த்துப் பரவசராயிருப்பர்களாகில், அவர்கள் எல்லா அறிவினுடைய ப2லமும் கைவந்தவர்கள் என்கிறார்.
வ்யா:- (மனிசரும் என்று தொடங்கி) மநுஷ்யாதி3ரூபேண அத்யா ஸ்சர்யமான பிறவியையுடையனாய்க்கொண்டு வந்து பிறப்பதுஞ்செய்து, இந்நீர்மையில் தனக்கு ஒருவரும் அகப்படாதே தானேயாம்படி தனியனானால் சோம்பிவிடக்கடவனன்றிக்கே. இதுக்குமுன்பு ஆஸ்ரிதர்க்காகப் பிறவாதானாய், திருவவதாரங்களுக்கெல்லாம்படியாகத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்தருளி, ஸகல ஜந்துக்கள் பக்கலும் அநுக்3ரஹ சீலனானவனை. (கனியை என்று தொடங்கி) நிரதிஶய போ4க்3யனான வனை அநஸூயுக்களாய் ஏத்திக்குனிப்பார். முனித்வ மாகிறதெளி வின்றிக்கே ஏத்திக்குனிப்பார் என்றுமாம்.
ஏழாம் பாட்டு
நீர்மையில்நூற்றுவர்வீய ஐவர்க்கருள்செய்துநின்று*
பார்மல்குசேனையவித்த பரஞ்சுடரைநினைந்தாடி*
நீர்மல்குகண்ணினராகி நெஞ்சங்குழைந்துநையாதே*
ஊன்மல்கிமோடுபருப்பார் உத்தமர்கட்கென்செய்வாரே?
அவ:- ஏழாம் பாட்டில் – ஆஸ்ரிதரான பாண்ட3வர்களுடைய விரோதி4களைப்போக்கின எம்பெருமானுடைய கு3ணாநுஸந்தா4னத் தாலே சிதி2லராகாதார் ஜநநீக்லேசகாரிகள் என்கிறார்.
வ்யா:- (நீர்மையென்று தொடங்கி) “ப3ந்து4க்கள் ஜீவிக்கவேணும்” என்னும் நீர்மை ஒன்றுமின்றிக்கேயிருக்கிற து3ர்யோத4நாதி3கள் நூற்று வரும் முடியும்படி பாண்ட3வர்களுக்கு ப்ரஸாத3த்தைப் பண்ணிநின்று பூ4மிக்கு பா4ரமாம்படி பல்கின ஸேனையெல்லாம் முடிப்பதுஞ்செய்து ஸாரத்2ய வேஷமாகிற விலக்ஷணமான அழகையுடையவனைநினைத்து ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே ஆடி. (நீர்மல்கு என்று தொடங்கி) கண்ணநீர் செற்றி சிதி2லாநத:கரணராய் ஒசியாதே, சரீரங்கள் மாம்ஸளமாய், பிசல் பருத்திருக்குமவர்கள் வைஷ்ணவர்களுக்கு ஒரு ப்ரயோஜநத்துக்கு உறுப்பல்லர்.
எட்டாம் பாட்டு
வார்புனலந்தண்ணருவி வடதிருவேங்கடத்தெந்தை*
பேர்பலசொல்லிப்பிதற்றிப் பித்தரென்றேபிறர்கூற*
ஊர்பலபுக்கும்புகாதும் உலோகர்சிரிக்கநின்றாடி*
ஆர்வம்பெருகிக்குனிப்பார் அமரர்தொழப்படுவாரே.
அவ:- எட்டாம் பாட்டில் – ஸம்ஸாரத்திலேயிருந்துவைத்து ஸர்வ காலத்திலும் ஸர்வாஸ்ரயணீயனான திருவேங்கடமுடையானுடைய கு3ணங்களுக்கு ஈடுபடுமவர்கள் அயர்வறும் அமரர்களிலும் ஸ்ரேஷ்ட2ர் என்கிறார்.
வ்யா:- (வார்புனல் என்று தொடங்கி) நிரதிசய போ4க்3யமான திருமலையிலே நின்றருளி என்னை அடிமைகொண்ட திருவேங்கடமுடையானுடைய விபூ4திமுக2மாக வாசகமான நாமங்களையும் அஸாதா4ரண மான நாமங்களையும் சொல்லிப் பிதற்றி. (பித்தரென்றே பிறர்கூற) வைஷ்ணவர்களல்லாதார் பித்தரென்று சொல்லும்படி. வைஷ்ணவர்களு டைய விஷயீகாரத்திலும் அவைஷ்ணவர்கள் இகழுகையே புருஷார்த்த2 மென்று கருத்து. (ஊர் பலவென்று தொடங்கி) மநுஷ்யர் ஸந்நிதா4நத் தோடு அஸந்நிதா4நத்தோடு வாசியின்றிக்கே லௌகிகர் சிரித்த அச்சிரிப்பே தாளம்போலே உத்தம்ப4கமாம்படி ஸஸம்ப்4ரம சேஷ்டிதத் தையுடையராய் அபி4நிவேசம்மிக்குக் கூத்தாடுமவர்கள்.
ஒன்பதாம் பாட்டு
அமரர்தொழப்படுவானை அனைத்துலகுக்கும்பிரானை*
அமரமனத்தினுள் யோகுபுணர்ந்து அவன்தன்?ேனாடொன்றாக*
அமரத்துணியவல்லார்களொழிய அல்லாதவரெல்லாம்*
அமரநினைந்தெழுந்தாடி அலற்றுவதேகருமமே.
அவ:- ஒன்பதாம் பாட்டில் – கைவல்ய புருஷார்த்த2நிஷ்ட2ரை நிந்தி3த்து, மற்றுள்ளார் எல்லாரும் ப்ரேம பரவசராய் கு3ணங்களை அநுப4வியுங்கோள். இதுவே புருஷார்த்த2ம் என்கிறார்.
வ்யா:- (அமரர் என்று தொடங்கி) அயர்வறும் அமரர்கள் அதிபதி யாய், ஸர்வேஸ்வரனாயிருந்துள்ள எம்பெருமானை மநஸ்ஸிலே தயலுற யோகா3ப்4யாஸம் பண்ணி அவனோடு ஸாம்யத்தை ப்ராபிக்கவேணு மென்று துணியவல்லாரையொழிய. (அல்லாதவர் என்று தொடங்கி) அல்லாதவர் எல்லாம் ப4க3வத்3கு3ணங்களை நெஞ்சிலே ஈடுபடும்படி அநுஸந்தி4த்து, கிளம்பியாடி, அவற்றைச் சொல்லிக் கூப்பிடுகையே கர்த்தவ்யம்.
பத்தாம் பாட்டு
கருமமும்கருமபலனுமாகிய காரணன்தன்னை*
திருமணிவண்ணனைச் செங்கண்மாலினைத்தேவபிரானை*
ஒருமைமனத்தினுள்வைத்து உள்ளங்குழைந்தெழுந்தாடி*
பெருமையும் நாணும்தவிர்ந்து பிதற்றுமின்பேதைமைதீர்ந்தே.
அவ:- பத்தாம் பாட்டில் – ப4க3வத்3கு3ணங்களைக் கேட்டால் விக்ரு தரன்றிக்கேயிருக்கும் இருப்பாகிற அறிவுகேட்டைத் தவிர்ந்து எல்லீரும் அவனுடைய கு3ணங்களை அநுஸந்தி4த்து, பரவசராய், லஜ்ஜாபி4மானங்களை விட்டு அவனை ஏத்துங்கோள் என்கிறார்.
வ்யா:- (கருமமும் என்று தொடங்கி) புண்ய பாப ரூபமான கர்மங் களுக்கும் கர்மப2லங்குளுக்கும் நியந்தாவாய், ஸர்வஜக3த் காரணமுமாய், வடிவழகையும் கண்ணழகையுங்காட்டி அயர்வறும் அமரர்களைப் போலே என்னை அடிமைகொண்டவனை. (ஒருமை என்று தொடங்கி) அநந்ய ப்ரயோஜனராய்க்கொண்டு ஹ்ருத3யத்திலே வைத்து சிதி2லாந்த: கரணராய்க்கிளம்பி ஆடி.
பதினொன்றாம் பாட்டு
தீர்ந்த அடியவர்தம்மைத் திருத்திப்பணிகொள்ளவல்ல*
ஆர்ந்தபுகழச்சுதனை அமரர்பிரானைஎம்மானை*
வாய்ந்தவளவயல்சூழ் தண்வளங்குருகூர்ச்சடகோபன்*
நேர்ந்தவோராயிரத்திப்பத்து அருவினைநீறுசெய்யுமே.
அவ:- நிக3மத்தில், இத்திருவாய்மொழி கற்றார்க்கு ப4க3வத்3 கு3ணாநுஸந்தா4னத்தால் ஒரு விக்ருதி பிறவாமையாகிற மஹா பாபத்தை இதுதானே நிஸ்ஸேஷமாகப் போக்கும் என்கிறார்.
வ்யா:- (தீர்ந்த என்று தொடங்கி) எம்பெருமானையே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று அத்4யவஸித்திருக்கும் ஆஸ்ரிதரை நிரஸ்தஸமஸ்த ப்ரதிப3ந்த4கராக்கி அடிமை செய்வித்துக்கொள்ளும் மிக்கிருந்துள்ள புகழையுடையனாய். அவர்களோடு நித்யஸம்ஸ்லிஷ்டனானவனை. (அமரர் பிரானை எம்மானை) “தானொருவனுளன்” என்று அறியாத என்னை அயர்வறும் அமரர்களோடொக்க அடிமைகொண்டவனை. (வாய்ந்த என்று தொடங்கி) வாய்ந்த திருநகரியையுடைய ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரம் திருவாய்மொழியிலும் இத்திருவாய்மொழி.
நஞ்சீயர் திருவடிகளே ஶரணம்
மூன்றாம்பத்து – முதல் திருவாய்மொழி
அவதாரிகை 3-6
செய்யதாமரை – ப்ரவேசம்
ஆறாம் திருவாய்மொழியில் – “எம்பெருமான் இப்படி அடிமையாலே உகப்பிக்கக்கடவனாயிருக்க, சேதனர் இவன்பக்கல் விமுக2ராய், ஸ்தப்3த4ரா யிருக்கைக்குக் காரணம் ப4க3வத்3கு3ணஜ்ஞானமில்லாமை” என்று பார்த்தருளி. முதல்திருவாய்மொழியே தொடங்கி இவ்வளவும்வரத் தாம் அநுப4 வித்த ஐஸ்வர்யஸௌலப்4யாதி3களை அநுபா4ஷித்து, பத்துடையடியவரில் சொன்ன ஸௌலப்4யமும் முதல் திருவாய்மொழியில் சொன்ன பரத்வத்தோடொக்கும் என்னும்படியான அர்ச்சாவதார பர்யந்தமான ஸௌலப்4யகாஷ்டை2யை அருளிச்செய்து. “அவனை ஆஸ்ரயியுங்கோள்” என்கிரார். பத்துடையடியவரிற்காட்டிலும் அர்ச்சாவதார ஸௌலப்4ய மாவதென்? என்னில்; எல்லாக்காலத்திலும் அநுப4விக்கலாம்படி ஸந்நிதி4 யுண்டாகையும். ஆஶ்ரிதனானவன் ஏதேனும் த்3ரவ்யத்தைத் திருவுடம் பாகக் கோலினால் அத்தையே மிகவும் விரும்பக்கடவனாகையும், எல்லார்க்கும் அநுப4விக்கலாம்படி கைவந்து போ4ஜந ஸம்பா4ஷணாஸந ஶயநாதி3கள் தொடக்கமான ஸகலப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஆஶ்ரித பராதீ4நமாகையும்; இவை தொடக்கமான இப்படிகளை ஸ்ரிய:பதியான தான் ஒரு ஹேதுவாலன்றிக்கே நைஸர்க்கி3கமாக உடையவனாயிருக்கை.
முதற்பாட்டு
செய்யதாமரைக்கண்ணனாய் உலகேழுமுண்டஅவன்கண்டீர்*
வையம்வானம்மனிசர்தெய்வம் மற்றும்மற்றும்மற்றும்முற்றுமாய்*
செய்யசூழ்சுடர்ஞானமாய் வெளிப்பட்டிவைபடைத்தான்* பின்னும்
மொய்கொள்சோதியோடாயினான் ஒருமூவராகியமூர்த்தியே.
அவ:- முதற் பாட்டில் – ஜக3த் ஸ்ரஷ்ட்ருத்வாதி3 கு3ணகனான எம்பெருமானை உத்3தேஶித்து அவனுக்குப் புண்ட3ரீகாக்ஷத்வாதி3களை விதி4யாநின்றுகொண்டு, ஸமாஸ்ரயணீயபுருஷன் இன்னான் என்கிறார்.
வ்யா:- (செய்யதாமரைக் கண்ணனென்று தொடங்கி) ஸ்ருதீதி ஹாஸ புராணாதி3களில் ஈஸ்வரத்வைகாந்தமாகச் சொல்லப்படுகிற அப்போதலர்ந்த செந்தாமரைப் பூப்போலேயிருந்த திருக்கண்களையுடையனாய், ப்ரளயார்ணவத்திலே அந்தரப்படாதபடி ஜக3த்தைத் திருவயிற் றிலே வைத்து ரக்ஷித்த அவன் கிடீர் பூ4மியும் மேலுள்ள லோகங்களும் அவற்றில் வர்த்திக்கக்கடவ மநுஷ்யரும் தே3வதைகளும் திர்யக் ஸ்தா2வரங்களும் ஜக3தா3ரம்ப4கமான பூ4தபஞ்சகங்களும் மஹதா3தி3 விகாரங்களுமாய்க்கொண்டு ப்ரத்யக்ஷாதி3 ப்ரமாணப்ரதிபந்நமான இவற்றையெல்லாம் வருத்தமின்றிக்கே வ்யாபியாநின்ற விஶத3தமமான தன்னுடைய ஸங்கல்ப ரூபஜ்ஞானத்தாலே படைத்தான். (பின்னும் மொய்கொள் சோதியோடு ஆயினான்) இதுக்குமேலே அப்ராக்ருத நித்ய விபூ4தியுக்தனானான். “தேஜ: ப்ரப்4ருத்யஸங்க்2யேய கல்யாண கு3ண விஶிஷ்டதையும்” என்பர். (ஒரு மூவராகிய மூர்த்தி) ப்3ரஹ்மாவுக்கும் ருத்3ரனுக்கும் அந்தர்யாமியாய் ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைப்பண்ணி, ஸ்வேநரூபேண ஜக3த்3ரக்ஷணம் பண்ணுகிற ஸர்வேஸ்வரன், ப்3ரஹ்ம ருத்3ரேந்த்3ரர்கள் மூவரையும் மூர்த்தியாகவுடையன் என்றுமாம்.
இரண்டாம் பாட்டு
மூவராகியமூர்த்தியை முதல்மூவர்க்கும்முதல்வன்தன்னை*
சாவமுள்ளனநீக்குவானைத் தடங்கடற்கிடந்தான்தன்னை*
தேவதேவனைத் தென்னிலங்கையெரியெழச்செற்றவில்லியை*
பாவநாசனைப் பங்கயத்தடங்கண்ணனைப்பரவுமினோ.
அவ:- இரண்டாம் பாட்டு தொடங்கி மேலெல்லாம் – அவனுடைய ஸௌலப்4யம் சொல்லுகிறது. இரண்டாம் பாட்டில் – இப்படி ஸர்வேஸ்வரனாயிருந்தானேயாகிலும், ஆஸ்ரயிப்பார்க்கு எளியனாகைக்காக அவர்களோடு ஸஜாதீயனாய் வந்து திருவவதாரம் பண்ணியருளின ஸ்ரீத3ஶரத2 சக்ரவர்த்தித் திருமகனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.
வ்யா:- (மூவராகிய மூர்த்தியை) ப்ரஸ்துதமான ஸாமாநாதி4 கரண்ய நிப3ந்த4நம் சொல்லுகைக்காகக் கீழ்ச்சொன்ன ஸாமாநாதி4 கரண்யத்தை அநுபா4ஷிக்கிறது. ஜக3த்துக்கு ப்ரதா4நரான ப்3ரஹ்மருத் ரேந்த்3ரர்களுக்குக் காரணமானவனை; இஸ்ஸாமாநாதி4கரண்யம் – கார்யகாரண பா4வநிப3ந்த4நம் என்கிறது. (சாவமுள்ளன நீக்குவானை) அவர்களுக்குள்ள சாபங்களை அநாயாஸேந போக்குமவனை. (தடங்க டற்கிடந்தாந்தன்னை) தே3வர்களுடைய ஆபந்நிவாரணாதி3களுக்காக அவர்களுக்கு அணித்தாகத் திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளின வனை. (தேவதேவனை) அங்குக் கண்வளர்ந்த்ருளுகிறது தே3வர்களுக்கு ஸ்மாஸ்ரயணீயனாய், மநுஷ்ய ஸஜாதீயனாய்வந்து திருவவதாரம் பண்ணியருளினாலும், மநுஷ்யரிற்காட்டில் தேவர்கள் விலக்ஷ்ணராயிருக் கிறாப்போலே தேவர்களிற்காட்டிலும் விலக்ஷணனானவனை என்றுமாம். (தென்னிலங்கை என்று தொடங்கி) ராவணனுக்கு அஞ்சி லங்கையைச் செற்று, கையும் வில்லும் கண்டாருடைய ஸகலபாபங்களையும் போக்கும் ஸ்வபா4வனாய், ஒரு பாபங்களையும் போக்காவிடிலும் காண்கையே ப்ரயோஜநம் போரும்படியான உத்பு2ல்ல புண்டரீகதடாகம்போலே யிருக்கிற திருக்கண்களையும் உடையவனை.
மூன்றாம் பாட்டு
பரவிவானவரேத்தநின்ற பரமனைப்பரஞ்சோதியை*
குரவைகோத்த குழகனை மணிவண்ணனைக்குடக்கூத்தனை*
அரவமேறியலைகடலமரும் துயில்கொண்டஅண்ணலை*
இரவும் நன்பகலும்விடாது என்றும் ஏத்துதல் மனம்வைம்மினோ.
அவ:- மூன்றாம் பாட்டில் – த3சரதா2த்மஜனானவனிற்காட்டிலும் ஸுலப4னாய் வந்து திருவவதாரம் பண்ணியருளின ஸ்ரீநந்த3கோ3பர் திருமகனை நிரந்த்ரமாக ஆஸ்ரயிக்கப்பாருங்கோள் என்கிறார்.
வ்யா:- (பரவி வானவர் என்று தொடங்கி) ஒத்தாரும் மிக்காருமின்றி க்கே தன்னுடைய ஸௌந்த3ர்யாதி3களுக்குத் தோற்று அயர்வறும் அமரர்கள் அக்ரமமாக ஏத்தும்படியையுடையனாய், அவர்கள் ஏத்துகையாலே தீ3ப்யமாநனுமாய், இங்ஙனே விலக்ஷணனாயிருந்துவைத்து ஸ்ரீநந்த3கோ3 பர் திருமகனாய்த் திருக்குரவை கோத்தருளி இடைப்பெண்களை ஈடுபடு த்தி அவர்களோடே கலக்கவல்லனுமாய், அத்தாலே பெருவிலையனான மாணிக்கம்போன்ற அழகையுடையனுமாய், பெண்களே வாழ்ந்துபோ கையன்றிக்கே எல்லாரும் கண்டு வாழும்படி குடமடியருளுவதும் செய்து, அத்தாலுண்டான இளைப்பு ஆறும்படி திருப்பாற்கடலிலே திருவநந்தாழ் வான்மேலே கண்வளர்ந்தருளின நிரதிசய போ4க்3யபூ4தனை.
நான்காம் பாட்டு
வைம்மின்நும்மனத்தென்று யானுரைக்கின்றமாயவன்சீர்மையை*
எம்மனோர்களுரைப்பதென் அதுநிற்கநாடொறும்* வானவர்
தம்மையாளுமவனும் நான்முகனும்சடைமுடியண்ணலும்*
செம்மையால்அவன்பாதபங்கயம் சிந்தித்தேத்தித்திரிவரே.
அவ:- நாலாம் பாட்டில் – மிகவும் அபி4மானிகளான ப்3ரஹ்மேசா நாதி3களுக்கும் தடையின்றிக்கே புக்கு ஆஸ்ரயிக்கலாம்படியிருக்கிற எம்பெருமானுடைய சீலத்வத்தையைப் பேசுகிறார்.
வ்யா:- (வைம்மின் நும்மனத்து என்று தொடங்கி) ‘உங்கள் மநஸ்ஸிலேவைத்து ஆஸ்ரயியுங்கோள்’ என்று நான் சொல்லுகிற ஸௌந்த3ர்யா தி3களால் அத்யாஸ்சர்யபூ4தனான அவனுடைய சீர்மையை என்போல் வார் உரைத்தால் ப4க்திவாத3மென்கிறிகோள்; அது கிடக்கிடீர். (நாடொறு மென்று மேலுக்கு) தே3வாதி4 பதியான இந்த்3ரனும், சதுமுக2னும் ஸாத4க னாயிருந்துவைத்து ஈஸ்வரத்வேந அபி4மாநியான ருத்3ரனும் என்றுமொக் கத் தடையின்றிக்கே புக்கு அவனை ஸமாஸ்ரயித்து வேண்டினபடி ஸஞ்சரியாநிற்பர்கள்.
ஐந்தாம் பாட்டு
திரியும்காற்றோடுஅகல்விசும்பு திணிந்தமண்கிடந்தகடல்*
எரியும்தீயோடுஇருசுடர்தெய்வம் மற்றும்மற்றும்முற்றுமாய்*
கரியமேனியன்செய்யதாமரைக்கண்ணன் கண்ணன்விண்ணோரிறை*
சுரியும்பல்கருங்குஞ்சி எங்கள்சுடர்முடியண்ணல்தோற்றமே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – தன் விபூ4தியிலே ஒன்றைப்பிரியில் தனக்குச் செல்லாமையாலே, எப்போதும் அவற்றோடேகூடி எம்பெருமானுடைய தோற்றாவிருப்பது என்கிறார். 1. “भूतानामीश्वरॊऽपि सन्” (பூ4தாநாமீஸ்வ ரோऽபி ஸந்) என்னும்படியாலே ஐஶ்வர்யாதி3களோடே கூட வந்து திருவவதாரம் பண்ணும் என்றுமாம்.
வ்யா:- (திரியும் என்று தொடங்கி) தனித்தனியே நியதஸ்வபா4வ மான பூ4தபஞ்சகங்கள், சந்த்3ர ஸூர்யர்கள், தே3வர்கள், மநுஷ்யர்கள், திர்யக் ஸ்தா2வரங்கள் இவை இத்தனையோடும் கூடி. (கண்ணன் என்று தொடங்கி) க்ருஷ்ணனான நீர்மையாலே அயர்வறும் அமரர்களை அடிமைகொண்டு,சுழன்று தனித்தனியே எண்ணிக்கொள்ளலாம்படியான திருக்குழலையுடையனாய், ஆஸ்ரித பரதந்த்ரதயா நிரவதி4க தேஜஸ்ஸான திருவபி4ஷேகத்தையுடைய னான ஸர்வேஸ்வரனுடைய தோற்றரவு.
ஆறாம் பாட்டு
தோற்றக்கேடவையில்லவனுடையான் அவனொருமூர்த்தியாய்*
சீற்றத்தோடருள்பெற்றவன் அடிக்கீழ்ப்புகநின்றசெங்கண்மால்*
நாற்றத்தோற்றச்சுவையொலி உறலாகிநின்ற* எம்வானவ
ரேற்றையேயன்றி மற்றொருவரையானிலேன்எழுமைக்குமே.
அவ:- ஆறாம் பாட்டில் – அயர்வறும் அமரர்களுக்குப்போலே எல்லாப் படியாலும் எனக்கு போ4க்3யனான நரஸிம்ஹத்தையொழியக் காலமுள்ளதனையும் மற்றொருவரை எனக்கு தா4ரகாதி3களாகவுடையே னல்லேனாகப்பெற்றேன் என்று ஹ்ருஷ்டராகிறார்.
வ்யா:- (தோற்றக்கேடு என்று தொடங்கி) உத்பத்திவிநாஶாதி3 ரஹிதனாய் ஜந்மாதி3 தோ3ஷயுக்த பதா3ர்த்த2ங்களுக்கெல்லாம் நியாமகனானவன் அத்யந்த விலக்ஷணமான திருமேனியையுடையனாய், ஹிரண் யன் பக்கல் சீற்றம் செல்லா நிற்கச்செய்தே தன்னுடைய அநுக்3ரஹ பாத்ரமான ஸ்ரீப்ரஹ்லாதா3ழானுக்கு வந்து அணையலாம்படி நிற்பதும் செய்து, ஹிரண்யன் மேலுள்ள சீற்றத்தாலும் பிள்ளைபக்கலுள்ள வாத்ஸ ல்யத்தாலுமாகக் கலங்கிச் சிவந்த திருக்கண்களையுமுடையனாய், அவன் பக்கல் வ்யாமுக்3த4னுமாய், அயர்வறும் அமரர்களுக்கு ஸர்வ ப்ரகார போ4க்3யமானாற்போலே எனக்கு எல்லாப்படியாலும் போ4க்3யமா னவனையல்லது மற்றொருவரைக் காலமுள்ளதனையும் உஜ்ஜீவநஹேது வாகவுடையேனல்லேன்.
ஏழாம் பாட்டு
எழுமைக்கும்எனதாவிக்கு இன்னமுதத்தினைஎனதாருயிர்*
கெழுமியகதிர்ச்சோதியை மணிவண்ணனைக்குடக்கூத்தனை*
விழுமியஅமரர்முனிவர்விழுங்கும் கன்னற்கனியினை*
தொழுமின்தூயமனத்தராய் இறையும்நில்லாதுயரங்களே.
அவ:- ஏழாம் பாட்டில் – இப்படி ஆஸ்ரித ஸுலப4னான பின்பு அவன் பக்கல் நீங்கள் பண்ணின து3ர்லப4த்வஶங்கையைத் தவிர்ந்து அவனை ஆஸ்ரயியுங்கோள், உங்கள து3:க்க2ங்கள் நிஸ்ஸேஷமாகப் போம் என்கிறார்.
வ்யா:- (எழுமைக்கும் என்று தொடங்கி) காலமுள்ளதனையும் எனக்கு நிரதிசய போ4க்3யனாய், அத்யந்த நிக்ருஷ்டமான என் ஆத்மா வோடே வந்து கலந்து பெறாப்பேறு பெற்றாற்போலே உஜ்ஜ்வலனுமாய், எல்லாரையும் தன்பக்கலிலே ஆகர்ஷித்துக்கொள்ளவற்றான ஸௌந்த3 ர்ய சேஷ்டிதங்களையுடையனுமாய், பேரளவுடைய (10-9-9) வைகுந்தத்தமரர்க் கும் முனிவர்க்கும் ஸ்ப்ருஹணீயமான போ4க்3யதையை யுடையவனை.
எட்டாம் பாட்டு
துயரமேதருதுன்பவின்பவினைகளாய் அவையல்லனாய்*
உயரநின்றதோர்சோதியாய் உலகேழுமுண்டுமிழ்ந்தான்தன்னை*
அயரவாங்கும்நமன்தமர்க்கு அருநஞ்சினைஅச்சுதன்தன்னை*
தயரதற்குமகன்தன்னையன்றி மற்றிலேன்தஞ்சமாகவே.
அவ:- எட்டாம் பாட்டில் – மற்றுள்ளாரும் தம்முடைய பக்ஷத்தை அறிந்து அதிலே ருசி பண்ணுகைக்காக “நான் த3ஶரத2 சக்ரவர்த்தித்திரு மகனையல்லது மற்றொருவரை ஆபத்3த4நமாகப் பற்றியிரேன்” என்று ஸ்வஸித்3தா4ந்தத்தைச் சொல்லுகிறார்.
வ்யா:- (துயரம் என்று தொடங்கி) து3:க்கை2கஹேதுவான புண்ய பாபரூப கர்மங்களுக்கு நியாமகனாய், தான் அகர்மவஸ்யனாய் தமஸ: பரஸ்தாத் வர்த்தமாநமாய் அப்ராக்ருத தேஜோரூபமான திருநாட்டை யுடையனாய், இங்ஙனே புஷ்கலனாயிருந்துவைத்துத் தன்னதான க்ஷுத்3ரஸம்ஸார்விபூ4த்யேகதே3சத்துக்கு ப்ரளயாத்3யாபத்துக்கள் வந்தால் தானே கைதொட்டு நோக்குமவனை. (அயர என்று தொடங்கி) அங்ஙனே பொதுவான ரக்ஷணத்தை யொழியத் திருவடிகளை ஆஸ்ரயித்தார்க்கு யமாதி3பா3தை4கள் மறுவலிடாதபடி போக்கவல்லனுமாய், அவர் களோடு நித்யஸம்ஶ்லேஷம் பண்ணும் ஸ்வபா4வனானவனை. ‘தயரதற் குமகன்’ என்று விதே4யத்வம் சொல்லுகிறது.
ஒன்பதாம் பாட்டு
தஞ்சமாகியதந்தைதாயொடு தானுமாய் அவையல்லனாய்*
எஞ்சலிலமரர்குலமுதல் மூவர்தம்முள்ளுமாதியை*
அஞ்சிநீருலகத்துள்ளீர்கள் அவனிவனென்றுகூழேன்மின்*
நெஞ்சினால்நினைப்பான்யவன் அவனாகும்நீள்கடல்வண்ணனே.
அவ:- ஒன்பதாம் பாட்டில் – எம்பெருமான் ஸ்ரீவைகுண்ட2த்திலே எழுந்தருளியிருக்கும் இருப்பு எங்களுக்கு கோ3சரமன்று. திருவவதாரம் பண்ணி ஸர்வ ஸுலப4னாய் வர்த்தித்தருளுகிற காலத்தில் உதவப் பெற்றிலோம்; எங்ஙனே அவனைக்கண்டு ஆஸ்ரயிக்கும்படி? என்னில், – நீங்கள் ஏதேனும் ஒருபடி உகந்தருளப்பண்ணி ஆஶ்ரயிப்பது; அது ஆஸ்ரிதர்க்கு அத்யந்த ஸுலப4மாகையால் அத்திருவுடம்பையே அப்ராக்ருத தி3வ்ய ஸம்ஸ்தா2நத்தோடொக்க விரும்பும் என்கிறார்.
வ்யா:- (தஞ்சமாகிய என்று தொடங்கி) தங்களை அழியமாறி நோக்கும் தாயும் தந்தையும்போலே பரிவுடையனாய். ஆத்மா தான் தனக்குப் பண்ணும் ஸ்நேஹத்தையும்பண்ணி, இங்ஙன் சில த்3ருஷ்டாந் தங்களால் அளவிடவொண்ணாத நிரவதி4க ஸ்நேஹத்தையுமுடைய னாய், ப4க3வத3நுப4வ ஸங்கோசமின்றிக்கே பரஸ்பரம் கூடியல்லது செல் லாதபடியான அமரஸமூஹத்துக்கு உஜ்ஜீவந ஹேதுவாயிருந்துவைத்து ப்3ரஹ்மருத்3ரர்களுடைய ஹ்ருத3யத்திலேயும் வந்து நின்றருளி, அவர்களு க்கு நியாமகனுமானவனை; மூவரிலும் வைத்துக்கொண்டு ஆதி3யான வனை என்றுமாம். (அஞ்சி நீர் என்று தொடங்கி) லோகத்திலுள்ள நீங்கள் கலங்கி ‘அவன் அப்ராக்ருத தி3வ்யஸம்ஸ்தா2நயுக்தன்; இங்கு நாங்கள் காண உகந்தருளின படியாவானன்று; ஆகையால், ஸமாஸ்ரயணம் கூடாது’ என்று ஸம்சயிக்க வேண்டா; யாதொன்றை அவனுக்கு ஸ்வரூப மாக நினைத்திகோள், அத்தையே அவன் தன்னுடைய ஸம்ஸ்தா2நத்தோ டொக்க விரும்பும். இங்கு உகந்தருளின இடத்தை நீள்கடல்வண்ணனான இடத்துக்கு விபூ4தியென்று நினையாதே, உகந்தருளின இடத்துக்கு நீள் கடல்வண்ணனான இடம் விபூ4தியாகக்கொள்ளுங்கோள் என்றுமாம்.
பத்தாம் பாட்டு
கடல்வண்ணன்கண்ணன் விண்ணவர்கருமாணிக்கம் எனதாருயிர்*
படவரவினணைக்கிடந்த பரஞ்சுடர்பண்டுநூற்றுவர்*
அடவரும்படைமங்க ஐவர்கட்காகிவெஞ்சமத்து* அன்றுதேர்
கடவியபெருமான் கனைகழல்காண்பது என்றுகொல்கண்களே.
அவ:- பத்தாம் பாட்டில் – தாம் உபதே3சிக்கத் தொடங்கின ஸௌலப்4ய காஷ்டை2யை உபதேசித்துச் சமைந்து ப்ரஸ்துதமான க்ருஷ்ண வ்ருத்தாந்தத்தை ஸ்மரித்துத் திருத்தேரிலேயிருந்து ஸாரத்2யம் பண்ணினவனுடைய நிரதிசய போ4க்3யமான திருவடிகளை என்றோ நான் காணப்பெறுவது? என்கிறார்.
வ்யா:- (கடல்வண்ணன் என்று தொடங்கி) கடல்வண்ணனான கண்ணன் விண்ணவர்க்கு போ4க்3யமானாற்போலே எனக்கு போ4க்3யமா கைக்கீடாக வருகைக்காகத் திருப்பாற்கடலிலே தன்னோட்டை ஸ்பர்சத்தாலே விகஸிதமான ப2ணங்களையுடைய திருவநந்தாழ்வான்மேலே கண்வளர்ந்தருளுகையாலே அத்யுஜ்ஜ்வலனாயுள்ளான். (பண்டு நூற்று வர் என்று மேலுக்கு) பண்டு பா3த4கமாய் வருகிற ஸேநையோடு கூடின நூற்றுவர் மங்கும்படி பாண்ட3வர்களுக்காக யுத்3த4ம் செல்லாநிற்க. கனைக்கை – த்4வநிக்கை; செறிகை என்றுமாம். ‘பண்டு’ என்னச்செய்தே திரியவும் ‘அன்று’ என்பானென்? என்னில், ஒன்று போனகாலத்திலே இங்ஙன் வ்ருத்தமென்கிறது; ஒன்று அன்றைக்கு உதவதே நான் இழந்தேன் என்கிறது.
பதினொன்றாம் பாட்டு
கண்கள்காண்டற்கரியனாய்க் கருத்துக்குநன்றுமெளியனாய்*
மண்கொள்ஞாலத்துயிர்க்கெல்லாம் அருள்செய்யும்வானவரீசனை*
பண்கொள்சோலைவழுதிநாடன் குருகைக்கோன்சடகோபன்சொல்*
பண்கொளாயிரத்திப்பத்தால் பத்தராகக்கூடும்பயிலுமினே.
அவ:- நிக3மத்தில், “இத்திருவாய்மொழியை அப்4யஸிக்கப் பழுதில்லாத, ப4க்தராகை நிஸ்சிதம்; ஆனபின்பு, இத்திருவாய்மொழியை அப்4யஸியுங்கோள்” என்கிறார்.
வ்யா:- (கண்கள் காண்டற்கரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்) கண்ணால் காண அரியனாய் ஹ்ருத3யத்திலே மிகவும் ஸுலப4னாய்; இது ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களுக்கு ப்ரயோஜகம். (மண் கொள் ஞாலத்து உயிர்க்கெல்லாம் அருள் செய்யும் வானவர் ஈசனை) ‘அயர்வறும் அமரர்களு’க்கு ஸுலப4னானாற்போலே ஸம்ஸாரிகளெல்லா ருக்கும் ஸுலப4னாகைக்கீடான அர்ச்சாவதார பர்யந்தமான ஸௌலப்4ய த்தையுடையவனை. (பண்கொள் சோலை) வண்டுகளினுடைய த்4வநியையுடைத்தாகை.
நஞ்சீயர் திருவடிகளே ஶரணம்
அவதாரிகை 3-7
பயிலும் – ப்ரவேசம்
ஏழாம் திருவாய்மொழியில் – ப4க3வத்3தா3ஸ்யம் வருந்திக்கற்க வேண் டும்படியான அவர்களோட்டைப் பரிமாற்றத்தாலே உறாவின ஆழ்வார் அவ்வுறாவுதல் தீர எம்பெருமானுக்கு அடிமைசெய்யவென்றால் அடைத் தேற்றலன்றிக்கே அடிமையே தா4ரகமாயிருக்கும் ஸ்ரீவைஷ்ணார்கள் ஜந்மவ்ருத்த ஸ்வபா4வங்களால் குறைய நின்றார்களேயாகிலும் அவர்கள் எனக்கு நாத2ரென்றும், நான் அவர்களுக்கு அடிமையென்றும், அவர்களோட்டை ஸம்ப3ந்த4த்தை அநுப4வித்து ப்ரீதராகிறார். எம்மாவீடு (2-9) – ப்ராப்ய த்தினுடைய ப்ரத2மாவதி4. இத்திருவாய்மொழி – சரமாவதி4.
முதற்பாட்டு
பயிலுஞ்சுடரொளிமூர்த்தியைப் பங்கயக்கண்ணனை*
பயிலவினிய நம்பாற்கடற்சேர்ந்தபரமனை*
பயிலுந்திருவுடையார் யவரேலும் அவர்கண்டீர்*
பயிலும்பிறப்பிடைதோறு எம்மையாளும்பரமரே.
அவ:- முதற் பாட்டில் – எம்பெருமானுடைய அழகிலும் கு3ணங்களி லும் தோற்று அடிமைசெய்யுமவர்கள் ஆரேனுமாகிலும் எனக்கு ஸ்வாமிகள் என்று த3சகார்த்த2த்தை ஸங்க்3ரஹேண அருளிச்செய்கிறார்.
வ்யா:- (பயிலும் என்று தொடங்கி) அத்யந்த விலக்ஷணமாய்ச் செறிந்திருந்துள்ள தேஜஸ்ஸையே திருவுடம்பாகவுடையனாய், இவ்வடிவழகி லும் அகப்படாதாரையும் அகப்படுத்திக்கொள்ளவற்றான அழகிய திருக் கண்களையுடையனுமாகையாலே பயில இனியனுமாய், ஆஸ்ரிதாநுக்3ர ஹார்த்த2மாகத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்தருளுவதும் செய்து கு3ணவத்தையால் எல்லார்க்கும் மேலாய் உள்ளவனை. (பயிலும் என்று தொடங்கி) ப்ரயோஜநாந்தரங்களைக்கொண்டு அகலாதே நிரதிசய போ4க்3யனான தன்னையே செறிகையாகிற மஹாஸம்பத்தையுடைய ராய், ஏதேனும் ஜந்மவ்ருத்தாதி3களையுடையரேயாகிலும் அவர்கிடீர் வைஷ்ணவத்வ விரோதி4யான அபி4மாநஹேதுவான ஜந்மவ்ருத்தங்களில் குறையநின்றாரேயாகிலும் உத்3தே3ஸ்யர் என்று கருத்து. (பயிலும் என்று தொடங்கி) ஒன்றின்மேல் ஒன்றாக நிரந்தரமாக வருகிற ஜந்மங்களின் இடந்தோறும் என்னை அடிமைக்கொள்ளக்கடவ ஸ்வாமிகள்.
இரண்டாம் பாட்டு
ஆளும்பரமனைக்கண்ணனை ஆழிப்பிரான்தன்னை*
தோளும் ஓர்நான்குடைத் தூமணிவண்ணன் எம்மான் தன்னை*
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர்கண்டீர்*
நாளும்பிறப்பிடைதோறு எம்மையாளுடைநாதரே.
அவ:- இரண்டாம் பாட்டில் – எம்பெருமானுடைய தி3வ்யாவயவ ஸௌந்த3ர்ய வஶீக்ருதரான ஸ்ரீவைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார்.
வ்யா:- (ஆளும் பரமனைக் கண்ணனை) ஆளக்கடவ ஸ்வாமியான க்ருஷ்ணனை. (ஆழிப்பிரான் என்று தொடங்கி) கையும் திருவாழியுமான அழகைக்காட்டி அநுகூலரை வாழ்விக்கும் ஸ்வபா4வனாய், கல்பகதரு பணைத்தாற்போலே விலக்ஷணமான நாலு திருத்தோள்களையுமுடைய னாய், பழிப்பற்ற நீலமணிபோலே குளிர்ந்திருக்கிற நிறத்தையுடைய னாய், அவ்வழகாலே என்னை அடிமை கொண்டவனை. (தாளும் என்று தொடங்கி) தன்னைத் தொழவென்றால் தடத்துக்கொடுக்கக் கடவதான அங்க3ங்களோடேகூடப் பணியுமவர்கண்டீர் பிறந்த இடந்தோறும் அதிலே வைத்துக்கொண்டு நாடோறும் என்னை அடிமைகொள்ளக்கடவ நாத2ர்.
மூன்றாம் பாட்டு
நாதனைஞாலமும்வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனை* பொன்னெடுஞ்சக்கரத்து எந்தைபிரான்தன்னை*
பாதம்பணியவல்லாரைப் பணியுமவர்கண்டீர்*
ஓதும்பிறப்பிடைதோறு எம்மையாளுடையார்களே.
அவ:- மூன்றாம் பாட்டில் – திருத்துழாயாலே அலங்க்ருதனான எம்பெருமானுடைய அழகிலே ஈடுபட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார்.
வ்யா:- (நாதனை என்று தொடங்கி) இருந்ததே குடியாக எல்லார்க்கும் நாத2னாய் விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசியின்றிக்கே எல்லாருக்கும் ஆகர்ஷகமான திருத்துழாய்மாலையாலே அலங்க்ருதனா வதும்செய்து, ஒளியையுடைத்தாய் அறப்பெருத்திருக்கிற திருவாழியின் அழகைக்காட்டி என்னை அடிமைகொண்ட உபகாரகனை. (பதம் என்று தொடங்கி) அபி4மாநத்தைத் தவிர்ந்து திருவடிகளிலே பணியும் மஹாத் மாக்களைப் பணியுமவர்கிடீர் ‘பிறந்தான்’ என்ற சொல்மாத்ரம் அமையும் படியான பிறப்பிடைதோறும் என்னை அடிமைகொள்ளக்கடவர். (ஓதும் பிறப்பு) சாஸ்த்ரங்களிலே நிஷேத்4யதயா ஓதுகிற பிறப்பு என்றுமாம்.
நான்காம் பாட்டு
உடையார்ந்தஆடையன் கண்டிகையன்உடைநாணினன்*
புடையார்பொன்னூலினன் பொன்முடியன்மற்றும்பல்கலன்*
நடையாவுடைத்திருநாரணன் தொண்டர்தொண்டர்கண்டீர்*
இடையார்பிறப்பிடைதோறு எமக்கு எம்பெருமக்களே.
அவ:- நாலாம் பாட்டில் – திருவணிகலன்களின் அழகிலே ஈடுபட்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை புக்கிருக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார்.
வ்யா:- (உடையார்ந்த ஆடையன்) திருவரையிலே பூத்தாற்போலே தகுதியான திருப்பரிவட்டம், திருக்கழுத்திலே சாத்துவன, திருவரையில் சாத்தும் கோவை, திருயஜ்ஞோபவீதம், திருவபி4ஷேகம் முதலான மற்றும் அநேகம் திருவாப4ரணங்களை நித்யமாகவுடையனாய், ஸ்ரீமானான நாராயணனுடைய அடியார் அடியார்கிடீர் எங்களுக்கு நிரந்தரமான ஜந்மந்தோறும் ஸ்வாமிகள். புடையார்கை – தான் கிடந்த பார்ஸ்வம் தன் ஒளியாலே பூர்ணமாகை.
ஐந்தாம் பாட்டு
பெருமக்களுள்ளவர் தம்பெருமானை* அமரர்கட்கு
அருமையொழிய அன்று ஆரமுதூட்டிய அப்பனை*
பெருமைபிதற்றவல்லாரைப் பிதற்றுமவர்கண்டீர்*
வருமையும் இம்மையும் நம்மையளிக்கும்பிராக்களே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – ப்ரயோஜநாந்தரபரருடைய அபேக்ஷிதத் தைக் கொடுக்கும் ஸ்வபா4வனான எம்பெருமனுடைய தன்மையை அநு ஸந்தி4த்துக் கலங்கி அவற்றைச் சொல்லுமவர்களுடைய கு3ணத்தைப் பிதற்றுமவர்கள் இஹலோக பர்லோகங்களில் நம்மை ரக்ஷிக்கும் ஸ்வாமிகள் என்கிறார்.
வ்யா:- (பெருமக்கள் என்று தொடங்கி) எம்பெருமானுக்கு அடிமை யென்று இசைகையாலே என்றும் உளரான அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய் இந்த்3ராதி3 தே3வர்களுக்கு தா3ரித்3ர்யம் நீங்கும்படி நிரதிஶய போ4க்3யமான அம்ருதத்தை பு4ஜிப்பித்த பரமப3ந்து4வை இம் மஹோபகாரத்திலே ஈடுபட்டு அக்ரமமாகப் பேசுமவர்கள்.
ஆறாம் பாட்டு
அளிக்கும்பரமனைக்கண்ணனை ஆழிப்பிரான்தன்னை*
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணிவண்ணன் எம்மான்தன்னை*
ஒளிக்கொண்டசோதியை உள்ளத்துக்கொள்ளுமவர்கண்டீர்*
சலிப்பின்றியாண்டுஎம்மைச் சன்மசன்மாந்தரங்காப்பரே.
அவ:- ஆறாம் பாட்டில் – கீழ்ச்சொன்ன ஸௌந்த3ர்யாதி3களை யெல்லாம் திரள நெஞ்சிலே அநுப4விக்குமவர்கள் எனக்கு ஸர்வகாலமும் ரக்ஷகர் என்கிறார்.
வ்யா:- (அளிக்கும் பரமனைக் கண்ணனை) ரக்ஷண ஸ்வபா4வத் தில் தனக்கு மேற்பட்டார் இல்லாத க்ருஷ்ணனை. (ஆழிப்பிரான் தன்னை என்று தொடங்கி) கையும் திருவாழியுமான அழகைக் காட்டி சேதநரை உஜ்ஜீவிப்பிப்பதும் செய்து. திருமேனியின் ஸ்பர்சத்தாலே மது4ஸ்யந்தி3 களான மாலைகளையுடையனாய்ப் பழிப்பற்ற நீலரத்நம்போலே ஸ்ரம ஹரமான திருநிறத்தையுடையனுமாய். அத்தாலே என்னை அடிமை கொள்வதும் செய்து விலக்ஷணமான அழகையுடையவனை நெஞ்சாலே அநுப4விக்குமவர்கள் கிடீர். (சலிப்பின்றி ஆண்டு) 1. “न पित्र्यमनुवर्तन्तॆ” (ந பித்ர்யமநுவர்த்தந்தே) என்னும் படியாலே ஜக3ஜ்ஜந்நியான பெரிய பிராட்டியார் சாயலாகையாலே குற்றங்கண்டாலும் என்னை விடாதபடி யாகப் பரிக்3ரஹித்து.
ஏழாம் பாட்டு
சன்மசன்மாந்தரம்காத்து அடியார்களைக்கொண்டுபோய்*
தன்மைபெறுத்தித் தன்தாளிணைக்கீழ்க்கொள்ளும் அப்பனை*
தொன்மைபிதற்றவல்லாரைப் பிதற்றுமவர்கண்டீர்*
நன்மைபெறுத்துஎம்மை நாளுய்யக்கொள்கின்றநம்பரே.
அவ:- ஏழாம் பாட்டில் – ஆஸ்ரித விஷயத்தில் அவன் பண்ணும் மஹோபகாரங்களை அநுஸந்தி4த்து அப்படிகளைப் பிதற்றவல்லாரைப் பிதற்றுமவர்கள் கிடீர். எனக்கு எற்றைக்கும் ஸ்வாமிகள் என்கிறார்.
வ்யா:- (சன்மம் என்று தொடங்கி) ஜந்மங்கள்தோறும் வந்து ரக்ஷித்து ஆஸ்ரிதரைக் கொண்டுபோய்ப்பரிபூர்ண ஜ்ஞாநராக்கித் தன் திருவடிக்கீழே நிரந்த கைங்கர்யத்தைக்கொள்ளும் பரமப்3ந்து4வை. (தொன்மை என்று தொடங்கி) நைஸர்க்கி3கமான கு3ணங்களிலே ஈடு பட்டுப் பேசுமவர்களைப் பிதற்றுமவர் கிடீர் பா4க3வத சேஷத்வ ஸம்பத்தை நமக்குத் தந்து அத்தை என்றும் நடத்தக்கடவ முதலிகள்.
எட்டாம் பாட்டு
நம்பனைஞாலம்படைத்தவனைத் திருமார்பனை*
உம்பருலகினில்யார்க்கும் உணர்வரியான்தன்னை*
கும்பிநரகர்களேத்துவரேலும் அவர்கண்டீர்*
எம்பல்பிறப்பிடைதோறு எம்தொழுகுலம்தாங்களே.
அவ:- எட்டாம் பாட்டில் – அவனுடைய ஸர்வஸம்பத்துக்கும் நிதா3நமான ஸ்ரிய:பதித்வத்தை அநுஸந்தி4த்திருக்குமவர்கள் எனக்குப் பிறந்த பிறவிகளெல்லாம் ஸஸந்தாநமாக வந்த்3யர் என்கிறார்.
வ்யா:- (நம்பனை என்று தொடங்கி) ஏதேனும் த3சையிலும் ஆத்மாவுக்குத் தஞ்சமாக நம்பப்படுமவனுமாய், ஜக3த்தையெல்லாம் உண்டாக்கு வதும்செய்து, இந்நீர்மைக்கு அடியான ஸ்ரிய:பதியுமாய், மேலான லோக ங்களில் எத்தனையேனும் அளவுடைய ப்3ரஹ்மாதி3களுக்கும் உணரமுடி யாதிருக்கிறவனை. (ஞாலம் படைத்தவனை) என்றது – கரணகளேப3ரங் களைக் கொடுத்து ஸ்ருஷ்டிக்கையாலே தஞ்சமென்னுமிடத்துக்கு உதா3ஹரணம். (கும்பிநரகர்கள் என்று தொடங்கி) கும்பீ4பாகமான நரகத்தை அநுப4வியாநின்றே ஏத்தினாரேயாகிலும் அவர்கள் கிடீர். ‘கும்பிநரகர்கள்’ என்றது. ஏதேனும் து3ர்க்க3தரேயாகிலும் அவ்விருப்பிலே நமக்கு ப்ராப்யரென்று கருத்து.
ஒன்பதாம் பாட்டு
குலந்தாங்குசாதிகள்நாலிலும் கீழிழிந்து* எத்தனை
நலந்தானிலாத சண்டாளசண்டாளர்களாகிலும்*
வலந்தாங்குசக்கரத்தண்ணல் மணிவண்ணற்காளென்று*உள்
கலந்தாரடியார்தம் அடியார் எம்அடிகளே.
அவ:- ஒன்பதாம் பாட்டில் – கையும் திருவாழியுமான அழகைக் கண்டு அடிமைபுக்கவர்களுடைய அடியார் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார்.
வ்யா:- (குலந்தாங்கு என்று தொடங்கி) ஸந்தாநங்களை த4ரிக்கக் கடவதான ப்3ராஹ்மணாதி3ஜாதிகள் நாலிலும் கீழ்ப்பட்டு ஒரு நீர்மையு மின்றிக்கே ப்3ராஹ்மணர்க்குச் சண்டா3ளர் நிக்ருஷ்டரானாற்போலே சண்டா3ளர்க்குங்கூட நிக்ருஷ்டரானாராகிலும். (வலந்தாங்கு என்று தொடங்கி) ஸ்ரமஹரமான திருநிறத்தையுடையனாய், அதுக்குமேலே வல வருகே த4ரியாநின்றுள்ள திருவாழியை யுடையனாய் அவ்வழகாலே எல்லாரையும் அடிமைகொண்டவனுக்கு அடிமையே ப்ரயோஜநம் என்றிரு க்குமவர்களுக்கு அஸாதா4ரணரான அடியார் எனக்கு ஸ்வாமிகள்.
பத்தாம் பாட்டு
அடியார்ந்தவையமுண்டு ஆலிலையன்னவசஞ்செய்யும்*
படியாதுமில்குழவிப்படி யெந்தைபிரான்தனக்கு*
அடியாரடியார்தம்மடியாரடியார் தமக்கு
அடியாரடியார்தம்* அடியாரடியோங்களே.
அவ:- பத்தாம் பாட்டில் – ஐஸ்வர்யார்த்தி2கள் ஐஸ்வர்யத்தில் இனியில்லை என்ன மேற்பட்ட நிலத்தை ஆசைப்படுமாபோலே வடத3ளஶாயி யினுடைய ஆஸ்சர்யமான படிகளில் ப்ரவணராயிருந்துள்ளவர்களுடைய தா3ஸ்யத்தை தொடங்கி தா3ஸ்யத்தினுடைய பர்யவஸாநபூ4மியை ஆசைப்படுகிறார்.
வ்யா:- (அடியார்ந்த வையம் என்று தொடங்கி) திருவடிகளுக்கு அளவான ஜக3த்தைத் திருவயிற்றிலே வைத்துக்கொண்டு அதுக்கு ஈடாக ஆலிலையிலே இடம் வலங்கொள்ளும் ஸ்வபா4வனாய், ஒப்பு ஒன்றுமின்றி க்கேயிருக்குற தன்னுடைய பிள்ளைத்தனத்தாலே என்னை அடிமை கொண்டு என்னை உஜ்ஜீவிப்பித்தவனுக்கு.
பதினொன்றாம் பாட்டு
அடியோங்குநூற்றுவர்வீய அன்று ஐவர்க்கருள்செய்த
நெடியோனை* தென்குருகூர்ச்சடகோபன் குற்றேவல்கள்*
அடியார்ந்த ஆயிரத்துள் இவைபத்துஅவன்தொண்டர்மேல்
முடிவு*ஆரக்கற்கிற்கில் சன்மம்செய்யாமைமுடியுமே.
அவ:- நிக3மத்தில், பா4க3வத சேஷத்வப்ரதிபாத3கமான இத்திரு வாய்மொழியை அப்4யஸித்தவர்கள் இப்புருஷார்த்த2த்துக்கு விரோதி4 யான ஸம்ஸார்த்தைக் கடந்தேவிடுவர் என்கிறார்.
வ்யா:- (அடியோங்கு என்று தொடங்கி) ராஜ்யத்திலே வேர்விழுந்த து3ர்யோத4நாதி3கள் நூற்றுவரும் முடியும்படி பாண்ட3வர்களுக்குப் பண்ணலாம் ப்ரஸாத3ங்களெல்லாம் பண்ணி, பின்னையும் ஒன்றும் செய் யப்பெற்றிலோம் என்று இருக்கும் ஸ்வபா4வத்தையுடைய எம்பெருமா னை. (குற்றேவல்கள் என்று தொடங்கி) அந்தரங்க3வ்ருத்திரூபமாய், பாத3ங்கள் பூர்ணமான ஆயிர்ந்திருவாய்மொழியிலும் இத்திருவாய் மொழி வைஷ்ணவ சேஷத்வமே புருஷார்த்த2மென்று உபபாதி3த்தது -இத்தை நெஞ்சிலே படும்படி கற்க ஶக்தராகில்.
நஞ்சீயர் திருவடிகளே ஶரணம்
அவதாரிகை 3-8
முடியானே – ப்ரவேசம்
எட்டாந்திருவாய்மொழியில். “அன்று தேர்கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்றுகொல் கண்கள்” (3-6-10) என்று “செய்யதாமரைக்கண்ண” (3-6) னில் எழுந்த ஆசையானது உத்தமப4கமான “பயிலுஞ் சுடரொளி” (3-7)யில் அநு ஸந்தா4நத்தாலும் சதசாக2மாகப் பணைத்துத் தாம் அபேக்ஷித்தபடி காணப்பெறாமையாலே அத்யந்தம் அவஸந்நராய், ஓரோவொன்றே ஸர்வேந்த்3ரிய வ்ருத்தியையும் ஆசைப்படுகிற தம்முடைய இந்த்3ரியங்க ளும் அப்படியே விடாய்த்த ஆழ்வார்தாமும், து3ர்பி4க்ஷகாலத்தில் த3ரித்3ர னாய் ப3ஹுப்ரஜனானவன் ப்ரஜைகளுடைய பசிக்கும் தன் பசிக்கும் ஆற்றாமே கூப்பிடுமாபோலே, தி3வ்யபூ4ஷணங்களையும் தி3வ்யாயுத4ங் களையும் அப்ராக்ருதமாய் ஸ்வாஸாதா4ரணமான திருமேனியையும் ஸமஸ்த கல்யாணகு3ணங்களையும் ஆஸ்ரிதார்த்த2மான சேஷ்டிதங்க ளையுமுடையனான எம்பெருமானைக்காணவேணும் என்றுகூப்பிடு கிறார். இந்த்3ரியங்கள் ஆசைப்பட்டனவென்றும், ஓரோ இந்த்3ரியமே இந்த்3ரியாந்தரங்களுடைய விஷயங்களையும் ஆசைப்பட்டதென்றும் சொல்லுகிற இவற்றால் ஆழ்வாருடைய அபி4நிவேசத்துக்கு அளவில்லாமை சொல்லிற்றாய்விட்ட்து.
முதற்பாட்டு
முடியானேஎ மூவுலகுந்தொழுதேத்தும் சீர்
அடியானேஎ!* ஆழ்கடலைக்கடைந்தாய்! புள்ளூர்
கொடியானே!* கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில்
நெடியானே!* என்றுகிடக்கும் என்நெஞ்சமே.
அவ:- முதற் பாட்டில் – திருவுள்ளம் எம்பெருமானைக் காணவேணுமென்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே அவஸந்நமாய்க் கிடக்கிறபடியை அருளிச்செய்கிறார்.
வ்யா:- (முடியானே என்று தொடங்கி) ஆதி4ராஜ்யஸூசகமாய், எப்போதும் த3ர்சநீயமான திருவபி4ஷேகத்தையுடையையுமாய், கு3ணா கு3ணநிரூபணம் பண்ணாதே ஸகலலோகங்களுக்கும் சரண்யனானவனே! அழகிய திருவடிகளை என் தலையிலே வைக்கப்பெறுகிறதில்லை என்று கருத்து. (ஆழ்கடலை என்று தொடங்கி) ப்ரயோஜநாந்தரபரர்க்குங் கூட மஹாவ்யாபாரங்களைப் பண்ணி அபேக்ஷிதங்களைக் கொடுப்பதும் செய்து நினைப்பதுக்குமுன்னே ஆஸ்ரிதர் இருந்தவிடத்தில் செல்லுகைக்கும், செல்லுமதுக்கு முன்னே தூ3ரத்திலேகண்டு ‘வாராநின்றான்’ என்று உகக்கைக்கும் ஈடாகப் பெரியதிருவடியை வாஹநமாகவும் த்4வ்ஜமாக வும் உடையையுமாய், பெரியதிருவடிமேலே மேருவின்மேலே வர்ஷுக வலாஹகம்போலேயிருந்தருளுவதும் செய்து ஐஸ்வர்ஹ்யாதி3களால் ப்3ரஹ்மாதி3களிற்காட்டில் அதி4கனானவனே!
இரண்டாம் பாட்டு
நெஞ்சமேநீள்நகராக இருந்த என்
தஞ்சனேஎ!* தண்ணிலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனேஎ!* ஞாலங்கொள்வான்குறளாகிய
வஞ்சனேஎ!* என்னும் எப்போதும் என்வாசகமே.
அவ:- இரண்டாம் பாட்டில் – 1.”मन: पूर्वॊ वागुत्तर:”(மந: பூர்வே வாகு3த்தர:) என்னும் கணக்காலே மநஸ்ஸுக்கு அநந்தரமான வாகி3ந்த்3ரியத்தினு டைய சாபலத்தை அருளிச்செய்கிறார்.
வ்யா:- (நெஞ்சமே நீள்நகராக இருந்த என்தஞ்சனே) ஹ்ருத3யத்தை இட்டளமில்லாத நக3ரமாகக் கொண்டிருந்த என் ஆபத்ஸக2னே! நெஞ்ச மேயென்கிற ஏவகாரம் வாக்கு மநோவ்ருத்தியை ஆசைப்பட்டமையை ஸூசிப்பிக்கிறது. ஸர்வேந்த்3ரியவ்ருத்தியையும் ஆசைப்பட்டமைக்கு உபலக்ஷணம். இப்படி எல்லாப் பாட்டுக்களிலும் அநுஸந்தி4ப்பது. (தண் இலங்கை என்று தொடங்கி) ஆஶ்ரித விரோதி4 நிரஸநஸமர்த்த2னாய் அவர்களுடைய அபேக்ஷிதம் முடிக்கும் விரகறியுமவனே!
மூன்றாம் பாட்டு
வாசகமேயேத்தஅருள்செய்யும் வானவர்தம்
நாயகனேஎ!* நாளிளந்திங்களைக்கோள்விடுத்து*
வேயகம்பால்வெண்ணெய்தொடுவுண்ட ஆனாயர்
தாயவனேஎ!* என்றுதடவும் என்கைகளே.
அவ:- மூன்றாம் பாட்டில் – தம்முடைய கைகளுக்குத் தனக்கு அடைத்த வ்ருத்தியிலும் வாக்3வ்ருத்தியுலுமகப்பட உண்டான சாபலத்தை அருளிச்செய்கிறார்.
வ்யா:- (வாசகமே யேத்த அருள்செய்யும் வானவர்தம் நாயகனே) ‘அயர்வறும் அமர்ர்’களுக்கு அதிபதியாய்வைத்து வாக்குக்கே ஸ்துதி ஸாமர்த்2யத்தைத் தந்தாய்; ‘அப்படி நாங்களும் ஏத்தும்படி பண்ண வேணும்’ என்று கைகளுக்குக் கருத்து. (நாள் இளந்திங்கள் என்று மேலுக்கு) இடையருடைய மூங்கிற்குடில்களிலே வெண்ணெய் களவு காணப்புக்கு வெண்ணெயைப் பெற்ற ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே பூரணனாய், நாளால் இளையனான சந்த்3ரனைப்போலேயிருக்கிற திருமுகத்தின் ஒளி புறப்படும்படியாக ஸ்மிதம்பண்ணி வெண்ணெயமுதுசெய்து ஆனாயர் பக்கல் தாய்போலே பரிவனானவனே!
நான்காம் பாட்டு
கைகளாலாரத் தொழுதுதொழுது உன்னை*
வைகலும்மாத்திரைப்போதும் ஓர்வீடின்றி*
பைகொள்பாம்பேறி உறைபரனே!* உன்னை
மெய்கொள்ளக்காண விரும்பும் என்கண்களே.
அவ:- நாலாம் பாட்டில் – “கண்களானவை ‘கைகளுடைய பரிமாற்றமும் வேணும், ஸ்வவ்ருத்தியான த3ர்ஶநமும் வேணும்’ என்னாநின்றன” என்கிறார்.
வ்யா:- (கைகளால் என்று தொடங்கி) விடாய் தீரும்படி கைகளாலே உன்னை மிகவும் தொழுது என்றும் ஒரு க்ஷணமும் இடைவிடாதே. (பைகொள் என்று தொடங்கி) உன்னுடைய ஸ்பர்சத்தாலே விகஸிதமான ப4ணங்களையுடைய திருவநந்தாழ்வான் மேலே உறைகையாலே அதிஸ்லாக்4யனாயுள்ளவனே! உருவெளிப்பாடுபோலன்றியே மெய்யாகக் காணவேணுமென்று விரும்பாநிற்கும்.
ஐந்தாம் பாட்டு
கண்களால்காண வருங்கொல் என்று ஆசையால்*
மண்கொண்டவாமனன் ஏற மகிழ்ந்துசெல்*
பண்கொண்டபுள்ளின் சிறகொலிபாவித்து*
திண்கொள்ளஓர்க்கும் கிடந்து என்செவிகளே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – ஸ்ரோத்ரேந்த்3ரியம் ‘காணவும் வேணும் கேட்கவும்வேணும் ‘ என்னாநின்றது என்கிறார்.
வ்யா:- (கண்களால் என்று தொடங்கி) ‘கண்களாலே காணவரு மோ?’ என்னும் ஆசையாலே ஆஸ்ரிதர் இருந்தவிடத்தே தானே வந்து அவர்கள் அபேக்ஷிதங்களை முடிக்கும் ஸ்வபா4வனான ஸ்ரீவாமநன் ஏறு கையாலே ஹ்ருஷ்டனாய்க்கொண்டு நடவாநின்றுள்ள பெரியதிருவடியினுடைய பண்ணை வென்றிருக்கிற திருச்சிறகிலுண்டான ப்3ருஹத்3ரத2ந் தராதி3 ஸாமத்4வநியை நினைந்து. (திண்கொள்ள என்று தொடங்கி) அவன்வர உத்3யோக3த்திலே தொடங்கி இந்த த்4வநி கேட்கவேணு மென்று மிகவும் குறிக்கொண்டிராநின்றன.
ஆறாம் பாட்டு
செவிகளாலார நின்கீர்த்திக்கனியென்னும்
கவிகளே* காலப்பண்தேன் உறைப்பத்துற்று*
புவியின்மேல் பொன்னெடுஞ்சக்கரத்து உன்னையே*
அவிவின்றி ஆதரிக்கும் எனதாவியே.
அவ:- ஆறாம் பாட்டில் – என்னுடைய ப்ராணனானது உன்னுடைய கீர்த்தியைக் கேட்கவேணுமென்று ஆசைப்படாநின்றது என்கிறார்.
வ்யா:- (செவிகளால் என்று தொடங்கி) உன்னுடைய கீரித்திரூப மான கவியாகிற கனிகளைக் காலப்பண்ணாகிற தேனை மிகக்கலந்து செவிகளாலே பூர்ணமாக பு4ஜித்து. (புவியின்மேல் என்று மேலுக்கு) அற அழகியதாய்ப் பெருத்திருக்கிற திருவாழியைத் திருக்கையிலே உடை யையாயிருக்கிற உன்னை இங்ஙனே காணலாம் திருநாட்டிலே போயன்றியே காணக்கடவதல்லாத ஸம்ஸாரத்திலே காணவேணும் என்று ஆசைப்படாநின்றது என்னுடைய ப்ராணன்.
ஏழாம் பாட்டு
ஆவியே! ஆரமுதே! என்னையாளுடை*
தூவியம்புள்ளுடையாய்! சுடர்நேமியாய்!*
பாவியேன்நெஞ்சம் புலம்பப்பலகாலும்*
கூவியும்காணப்பெறேன் உனகோலமே.
அவ:- ஏழாம் பாட்டில் – மஹாபாபியாகையாலே நெஞ்சின் விடாய் தீர்க்கவும் பெற்றிலேனான நான் நெடுநாள் கூப்பிட்டவிடத்திலும் உன்னுடைய அழகுகாணவும் பெற்றிலேன் என்கிறார்.
வ்யா:- (ஆவியே ஆரமுதே) தா4ரகனுமாய் மிகவும் போ4க்3யமுமான வனே! (என்னை என்று தொடங்கி) பெரியதிருவடிமேலேயிருந்த இருப்பை க்காட்டி என்னை அடிமைகொள்வதும் செய்து நிரவதி4கதீ3ப்தியுக்தமான திருவாழியையுடையவனே! இவையிரண்டு பத3த்தாலும் வருகைக்கும் விரோதி4 நிரஸநத்துக்கும் பரிகரவத்தையைச் சொல்லிற்று என்றுமாம்.
எட்டாம் பாட்டு
கோலமே! தாமரைக்கண்ணது ஓரஞ்சன
நீலமே!* நின்றுஎனதாவியை ஈர்கின்ற
சீலமே!* சென்றுசெல்லாதன முன்னிலாம்
காலமே!* உன்னை எந்நாள்கண்டுகொள்வனே?
அவ:- எட்டாம் பாட்டில் – உம்முடைய அபேக்ஷிதம் செய்கைக்கு ஈடான காலம் வரவேண்டாவோ? என்னும் பக்ஷத்தில் அதுவும் நீ இட்ட வழக்கன்றோ? ஆனபின்பு. நான் இழக்கப்போமோ? என்கிறார்.
வ்யா:- (கோலமே) அழகு ஒருவடிவு கொண்டாற்போலேயிருக்கிற வனே! (தாமரை என்று தொடங்கி) மநோஹரமான திருக்கண்களையும், விலக்ஷணமாய் ஸ்ரமஹரமாய் நீலவர்ணத்தை வகுத்தாற்போலேயிருக் கிற வடிவையுமுடையையாய், நீ நெடுநாள் பொகட்டாலும் மறக்கவொண்ணாதபடி என்னை ஈர்கிற சீலமே ஸ்வபா4வமானவனே! அதாகிறது –செய்யதாமரைக் கண்ணனில் (3-6) சீலவத்தை – (சென்று என்று தொடங்கி) பூ4த ப4விஷ்யத்3 வர்த்தமாந காலத்ரயமும் நீ இட்ட வழக்காம்படி யிருக்கிறவனே!
ஒன்பதாம் பாட்டு
கொள்வன்நான்மாவலி! மூவடிதாவென்ற
கள்வனே!* கஞ்சனைவஞ்சித்து வாணனை
உள்வன்மைதீர* ஓராயிரம்தோள்துணித்த
புள்வல்லாய்!* உன்னைஎஞ்ஞான்றுபொருந்துவனே?
அவ:- ஒன்பதாம் பாட்டில் – ஆஸ்ரித ரக்ஷணோபாயஜ்ஞனுமாய், ப்ரதிகூல நிரஸநஸமார்த்த2னுமாயிருக்கிற உன்னை நான் சேர்வது என்று? என்கிறார்.
வ்யா:- (கொள்வன் என்று தொடங்கி) ‘மஹாப3லீ! எனக்கு மூவடி வேணும், தா’ என்று முக்3த4மான பேச்சாலே அவனை ஸர்வஸ்வாபஹர ணம் பண்ணினவனே! (கஞ்சனை என்று தொடங்கி) கம்ஸன் உன்திறத்துச்செய்ய நினைத்த தீங்கு அவன் தன்னோடே போம்படி பண்ணி. ‘ருத்3ர னையுடையம்’ என்கிற அபி4மாநமெல்லாம் ப4க்3நமாம்படி பா3ணனை அநாயாஸேந ஆயிரந்தோளையும் துணிப்பதும் செய்து, பெரியதிருவடி யை யுத்3த4த்தில் கருத்தறிந்து நடத்த வல்லவனே!
பத்தாம் பாட்டு
பொருந்தியமாமருதினிடைபோய எம்
பெருந்தகாய்!* உன்கழல்காணியபேதுற்று*
வருந்திநான் வாசகமாலைகொண்டு* உன்னையே
இருந்திருந்து எத்தனைகாலம்புலம்புவனே?
அவ:- பத்தாம் பாட்டில் – உன்னுடைய கு3ணஜிதனாய் உன்னைக் காணப்பெறாத வ்யஸநத்தாலே து3:க்க2ப்படுகிற நான் இன்னம் எத்தனை காலம் து3:க்க2ப்படக்கடவன்? என்கிறார்.
வ்யா:- (பொருந்திய என்று தொடங்கி) அல்பவிவரமாய்ப் பெருத் திருகிற மருதுகளின் நடுவே அகப்படாதே போய் என்னை ரக்ஷித்த மஹா ப்ரபா4வனே! மருதின் நடுவே தவழ்ந்துபோன திருவடிகளைக் காண வேணுமென்று ஆசைப்பட்டு. (வருத்தி என்று மேலுக்கு) பெரிய வருத்தத் தோடே உன் கு3ணத்தைச் சொல்லிக் கொண்டு.
பதினொன்றாம் பாட்டு
புலம்புசீர்ப் பூமியளந்தபெருமானை*
நலங்கொள்சீர் நன்குருகூர்ச்சடகோபன்சொல்*
வலங்கொண்டவாயிரத்துள் இவையுமோர்பத்து*
இலங்குவான் யாவரும்ஏறுவர்சொன்னாலே.
அவ:- நிக3மத்தில், இத்திருவாய்மொழி இயல்மாத்ரத்தை த4ரித்த வர்கள் ஆரேனுமாகிலும் இதில் ப்ரார்த்தி2த்தபடியே அநுப4விக்கையில் தட்டில்லாத நிரதிஶய போ4க்3யமான திருநாட்டிலே செல்வர் என்கிறார்.
வ்யா:- (புலம்பு என்று தொடங்கி) எல்லாராலும் ஏத்தப்படும் கு3ணங்களையுடையனாய்க்கொண்டு பூ4மியை அளந்து இக்கு3ணத்தாலே எல்லாருக்கும் ஸ்வாமியாயிருக்கிறவனை. (நலங்கொள் என்று தொடங்கி) இத்திருவாய்மொழியிற்சொன்ன படியே ப4க்தியையுடைய ஆழ்வார் அருளிச்செயலுமாய் எம்பெருமானை உள்ளபடி ப்ரதிபாதி3த்த ஆயிருத்திலும் இப்பத்து.
நஞ்சீயர் திருவடிகளே ஶரணம்
அவதாரிகை 3-9
சொன்னால் – ப்ரவேசம்
ஒன்பதாம் திருவாய்மொழியில் – இப்படி தாமும் தம்முடைய கரணக்3ராமமும் எம்பெருமானைக்காண ஆசைப்பட்டு நெடும்போது கூப்பிட்டுப் பெறாமையாலே மிகவும் அவஸந்நரான ஆழ்வார் ‘நம்மோடு ஸமது3:க்கி2 களாயிருபாருண்டோ?’ என்று பார்த்தவிட்த்துத் தாமொழிய வ்யதிரிக்தரெல்லாம் தாம் ப4க3வத்ப்ரவணரானாற்போலே ஶப்3தாதி3 விஷயங்க ளிலே மிகவும் ப்ரவணராய் அதுக்கு உறுப்பாக மநுஷ்யாதி3க ளைக் கவி பாடித்திரிகிறபடியைக்கண்டு, தம்முடைய வ்யஸநமெல்லாம் மறந்து. “ஸமஸ்தமல்யாண கு3ணாத்மகனாய், அத்யந்தஸுந்த3ரனாய், ஸ்ரிய:பதியாய், கொண்டாடுகைக்கு ஈடான பரிஜநங்களையுமுடையனாய், கவி பாடினார்க்கு வழங்கு மோக்ஷாதி3 ஸகலபுருஷார்த்த2ங்கள் கொடாவிடிலும் தன்னைப்பாடுகையே ப்ரயோஜநம் போந்திருக்கிற எம்பெருமானையொழியக் கவிபாடுகைக்கு ஈடான நன்மைகளொன்றுமின்றிக்கே கவிபாடினார்க்குத் தருவதும் ஒன்றுமின்றிக்கே தாங்கள் நிஸ்ஸ்ரீகராய் அதுக்குமேலே கவிபாடினவர்கள் ஸந்தி4க்குந்தனைநாள் நிலை நிற்பதுஞ் செய்யாதே முடியும் ஸ்வபா4வராய், கவிபாடினால் ஒரு ப்ரயோஜநம் பெறாமையேயன்றியே கவிபாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளை ஏறிட்டுப் பாடுகையாலே அவனுக்குள்ள தோ3ஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே அவனுக்கு அவத்3யாவஹராய், அப்ராப்தவிஷயத்திலே பாடுகையாலே கவிபாடினார் நரகம்புகும்படியிருக்கிற க்ஷுத்3ரரை – ப4க3வத3ர்ஹமான உங்களுடைய அழகிய கவிகளைக்கொண்டு ஸ்துதிக் கை ஈடன்று” என்று அருளிச்செய்து, ‘உங்களைப்போலே அன்றியே நான் வேறு சிலரை ஸ்துதிக்கைக்கு அநர்ஹகரணனாகப்பெற்றேன்’ என்று ப்ரீத்ராய் முடிக்கிறார். “ஊனில் வாழுயி” (2-3)ரில் ப்ரீதிக்கு நித்யஸூரி களை ஸஜாதீயராகத்தேடினாற் போலே இங்கு வ்யஸநத்துக்கு ஸம்ஸாரிகளை ஸஜாதீயராகக்கருதி இங்ஙனல்லாமையாலே அவர்களைத் திருத்தப் பார்க்கிறார்.
முதல்பாட்டு
சொன்னால்விரோதமிது ஆகிலும் சொல்லுவன்கேண்மினோ*
என்னாவிலின்கவி யானொருவர்க்குங்கொடுக்கிலேன்*
தென்னாதெனாவென்று வண்டுமுரல்திருவேங்கடத்து*
என்னானைஎன்னப்பன் எம்பெருமான்உளனாகவே.
அவ:- முதற் பாட்டில் – வேறு சிலரைக் கவிபாடுகிறவர்குளுக்கு ஹிதம் உபதே3சிக்கைக்காக ப்ரவ்ருத்தரான ஆழ்வார் அவர்களுக்கு ருசி பிறக்கைக்காகத் தம்முடைய மதத்தை அருளிச்செய்கிறார்.
வ்யா:- (சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன்) ப்ரயோஜ நாந்தரபரராயிருக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிற ஹிதம் அஸஹ்ய மாகக்கடவது. ஆகிலும், உங்களநர்த்த2ம் பொறுக்கமாட்டாமையாலே சொல்லத் தவிரேன். எம்பெருமானையொழிய வேறு சிலரைக் கவிபாடா தே கொள்ளுங்கோளென்று நிஷேத்4யதயா சொல்லுகையும் ஈடல்லவாகி லும் ப4க3வத3நுரூபமாயிருக்கிற உங்களுடைய கவிகள் அவனுக்கேயாக வேணும் என்னும் லோப4த்தலே சொல்லுகிறேன் என்றுமாம். (கேண்மினோ) நான் சொன்ன பொருள் அநுஷ்டி2க்க மாட்டிகோளாகிலும் இத்தனையும் கேட்டுத் தீரவேணும். (என்னாவிலன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன்) நிரதசய போ4க்3யமாய் எம்பெருமானுக்கே அர்ஹமான கவிகளை அவனைத்தவிர மற்றொருவர்க்கு நான் கொடுக்க க்ஷமனல்லேன். (தென்னா என்று தொடங்கி) நிரதிசய போ4க்3யமான திருமலையிலே எனக்கு நித்யாபூர்வமாய்க்கவிபாட விஷயம் போந்து எனக்கு மஹோபகாரத்தைப் பண்ணவல்லனாய் அப்ராப்த ஸ்த2லத்திலே கவிபாடுகை ஆகாதபடி எனக்கு நாத2நுமாயிருக்கிறவன், என்னைக் கவிபாடுவித்துக்கொள்ள வந்து நிற்க.
இரண்டாம் பாட்டு
உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத்தன்செல்வத்தை*
வளனாமதிக்கும் இம்மானிடத்தைக் கவிபாடியென்?*
குளனார்கழனிசூழ் கண்ணன்குறுங்குடிமெய்ம்மையே*
உளனாய எந்தையை எந்தைபெம்மானையொழியவே.
அவ:- இரண்டாம் பாட்டில் – ஸத்யமாய் ஸமக்3ரமாயிருந்த கல்யாணகு3ண ஸம்பத்துக்களையுடையனாயிருந்துள்ள எம்பெருமானை விட்டு அஸத்கல்பராய் அவஸ்துபூ4த ஸம்பத்துக்களை யுடையரானவர்க ளைக்கவிபாடுவாரை நிந்தி3க்கிறார்.
வ்யா:- (உளனாகவே என்று தொடங்கி) 1. “असन्नॆव स भवति” (அஸந்நேவ ஸ ப4வதி) என்னும் கணக்காலே இன்றிக்கேயிருக்கிற தன்னை ஒரு சரக்காக அநுஸந்தி4த்துத் தனக்குத் தக்க க்ஷுத்3ரஸம்பத்தை ஒரு ஸம்பத் தாகக் கொண்டாடும் இம்மதிகேடரைக் கவிபாடி என்ன ப்ரயோஜநம் உண்டு? (குளனார் என்று தொடங்கி) நல்ல பொய்கையாலே அலங்க்ருத மான கழனி சூழ்வதுஞ்செய்து எம்பெருமான் ‘என்னது’ என்று அபி4மாநிக் கவேண்டும்படி நன்றாயிருந்துள்ள திருக்குறுங்குடியிலே சொன்ன கு3ணங்களெல்லாம் பத்தும்பத்தாகவுடையனாய், எனக்கு நாத2னுமாய் என்குடிக்கு நாத2னுமாய் நிற்கிறவனையொழிய.
மூன்றாம் பாட்டு
ஒழிவொன்றில்லாத பல்லூழிதோறுழிநிலாவ* போம்
வழியைத்தரும் நங்கள்வானவரீசனைநிற்கப்போய்*
கழியமிகநல்ல வான்கவிகொண்டுபுலவீர்காள்!*
இழியக்கருதி ஓர்மானிடம் பாடல் என்னாவதே.
அவ:- மூன்றாம் பாட்டில் – அத்யந்த விலக்ஷணனாய் மஹோபகார கனான எம்பெருமானையொழிய க்ஷுத்3ரமநுஷ்யரைக் கவிபாடி என்ன ப்ரயோஜநம் உண்டு? என்கிறார்.
வ்யா:- (ஒழிவு என்று தொடங்கி) காலமுள்ளதனையும் இடை விடாதே ப்ரக்ருதிவஶ்யனன்றிக்கே ஈஶ்வரபரதந்த்ரனாய் வர்த்திக்கை க்கு ஈடான உபாயத்தை அயர்வறுமமரர்களும் தானும் கூட விரும்பித் தரு மவனைத் தவிர வேறே கவிபாடுகைக்கு விஷயம் தேடிப்போய். ‘வழி’ என்று அர்ச்சிராதி3மார்க்க3மென்றும் ப்ராப்யமான கைங்கர்யமென்றும் சொல்லுவர். (கழிய என்று தொடங்கி) அறமிகநல்லவாய். வலியவன கவி களைக்கொண்டு விசேஷஜ்ஞரான நீங்கள் உங்களுக்கு ஸ்வரூபஹாநிவரும்படி பார்த்து.
நான்காம் பாட்டு
என்னாவது?எத்தனைநாளைக்குப்போதும்? புலவீர்காள்!*
மன்னாமனிசரைப்பாடிப் படைக்கும்பெரும்பொருள்*
மின்னார்மணிமுடி விண்ணவர்தாதையைப்பாடினால்*
தன்னாகவேகொண்டு சன்மஞ்செய்யாமையுங்கொள்ளுமே.
அவ:- நாலாம் பாட்டில் – தன்னைக் கவிபாடினார்க்குத் தன்னோ டொத்த வரிசையைக் கொடுக்குமவனைத் தவிர மந்தா3யுஸ்ஸுக்களா யிருக்கிற மநுஷ்யரைக் கவிபாடினால் பெறுவது அத்யல்பம் என்கிறார்.
வ்யா:- (என் ஆவது என்று தொடங்கி) – கவிபாடினார் கவிகொண்டு வந்து கேட்பிக்குந்தனை நாள் இருக்கைக்கு ஆயுள் இல்லாத மநுஷ்யரைக் கவிபாடினால் அவர்கள் இருந்தார்களாகிலும் பெறுமது ஒன்றில்லை, பெற்றாலும் அத்யல்பம். ‘பெரும்பொருள்’ என்று உபாலம்ப4ம். (மின்னார் மணிமுடி என்று மேலுக்கு) ஒளிமிக்கிருந்துள்ள மணிகளோடுகூடின முடி யையுடைய அயர்வறுமமரர்கள் அதிபதியைக் கவிபாடினால் தன்னோடொத்த வரிசையைக்கொடுத்துப்பின்னை ஸம்ஸாரத்தையும் அறுக்கும். (தன்னாகவே கொண்டு) – தனக்கு ஆக்கிக்கொள்ளும் என்றுமாம். ‘மின்னார்மணிமுடி விண்ணவர்தாதை’ என்றதுக்குக் கருத்து – கவிபாடின வர்கள் தலையிலே முடியை வைத்து அயர்வறுமமரர்களும் தானும் கொண்டாடும் என்று.
ஐந்தாம் பாட்டு
கொள்ளும்பயனில்லை குப்பைகிளர்த்தன்னசெல்வத்தை*
வள்ளல்புகழ்ந்து நும்வாய்மையிழக்கும்புலவீர்காள்!*
கொள்ளக்குறைவிலன் வேண்டிற்றெல்லாந்தரும்கோதில்* என்
வள்ளல்மணிவண்ணன்தன்னைக் கவிசொல்லவம்மினோ.
அவ:- அஞ்சாம் பாட்டில் – ஹேயகு3ணராய் உபகாரகருமன்றிக்கே யிருந்துள்ள ஜனங்களைவிட்டு ஸமஸ்த கல்யாண கு3ணாகரனாய் நமக்கு அபேக்ஷிதமெல்லாம் தரும் ஸ்வபா4வனான எம்பெருமானைக் கவிபாட வாருங்கோள் என்கிறார்.
வ்யா:- (கொள்ளும் என்று தொடங்கி) – அவர்கள் பக்கல் கொள்ளக் கடவது ஒரு ப்ரயோஜநமின்றிக்கே குப்பையைக்கிளறினாற்போலே ஆராயப்புகில் ஹேயமாயிருக்கிற ஸம்பத்தை நன்றாகப் புகழ்ந்து அவர்க ளுடைய தோ3ஷத்தை வெளிப்படுத்தி உங்களுடைய வாக்3மிதையையும் இழந்திருக்கிற நீங்கள் விசேஷஜ்ஞராயிருக்கிறிகோள். (கொள்ளக் குறை விலன் என்று மேலுக்கு) – நம்முடைய கவிக்கு விஷயமாகவேண்டும் பௌஷ்கல்யத்தையுடையனாய், அபேக்ஷிதமான போ4க3 மோக்ஷாதி3 களையெல்லாம் தரும் ஸ்வபா4வனாய், உபகரிக்குமிடத்தில் ஜலஸ்த2ல விபா4க3ம் பாராதே புஷ்கலமாகக் கொடாநின்றால் ‘இங்ஙனே கொடா நின்றோம்’ என்னும் அபி4மாநமுமின்றிக்கே இந்நீர்மைகளொன்றும் இல்லையேயாயகிலும் கைக்கூலி கொடுத்துக் கவிபாட வேண்டும் அழகையுடையனானவனைக் கவிசொல்ல வாருங்கோள்.
ஆறாம் பாட்டு
வம்மின்புலவீர்! நும்மெய்வருத்திக்கைசெய்து உய்ம்மினோ*
இம்மன்னுலகினில் செல்வர் இப்போதில்லைநோக்கினோம்*
நும் இன்கவிகொண்டு நும்நும் இட்டாதெய்வமேத்தினால்*
செம்மின்சுடர்முடி என்திருமாலுக்குச்சேருமே.
அவ:- ஆறாம் பாட்டில் – ‘ஜீவநார்த்த2மாக மநுஷ்யாதி3களை ஸ்துதி க்கிறோம்’ என்று அவர்கள் சொல்ல, ‘அதிக்ஷுத்3ரரான மநுஷ்யரை ஆஶ்ர யித்து ஜீவநம் பெறுமதைக் காட்டிலும் சரீரங்கள் நோவச் சுமைசுமந்தும் கைத்தொழில்கள் செய்தும் ஜீவிக்கை நன்று’ என்ன. அவர்களும் ‘அத்தால் எங்களுக்கு வேண்டுவதெல்லாம் கிடையாது; ஆதலால், எங்கள் இஷ்டதே3வதைகளை கவிபாடி எங்களபேக்ஷிதங்கள் பெறுவோம்’ என்ன. ‘நீங்கள் அவர்களை ஸ்துதிக்கைக்கு ஈடான நீர்மைகள் அவர்களுக்கு இல்லாமையாலே அந்நீர்மைகளையுடைய எம்பெருமான் பக்கலிலே சேரும். உங்களுக்குச் சௌர்யமே ஸித்3தி4ப்பது; ஆனபின்பு எம்பெருமா னையே கவிபாட வாருங்கோள்’ என்கிறார்.
வ்யா:- (வம்மின்) வாருங்கோள். (இம் மன் என்று தொடங்கி) நித்ய மாய் வருகிற இவ்வுலகத்தில் உங்கள் கவியின் தரம் அறிந்து கொண்டாடி க்கொடுக்கும் செருக்குடையாரை இப்போது ஆராய்ந்து பார்த்த்விடத்தி லே கண்டிலோம். கவிபாட்டுண்கிற தே3வதையின் பேரும் அவ்வளவும் சென்று அவற்றுக்கு வாசகமாம் வகையாலும் அவனையே கவி பாடிற்றாம்.
ஏழாம் பாட்டு
சேருங்கொடைபுகழ் எல்லையிலானை* ஓராயிரம்
பேருமுடையபிரானையல்லால் மற்றுயான்கிலேன்*
மாரியனையகை மால்வரையொக்கும்திண்தோளென்று*
பாரிலோர்பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள்பேசவே.
அவ:- ஏழாம் பாட்டில் – எம்பெருமானையொழிய வேறு சிலரைக் கவிபாடுகைக்கு நான் க்ஷமனன்றிக்கே யொழியப்பெற்றேன் என்று ப்ரீதராகிறார்.
வ்யா:- (சேரும் என்று தொடங்கி) ஏதேனும் கொடுத்தானென்றாலும் அவனுக்கு ஆகிற்கும் என்றிருக்கிற தன்னுடைய கொடையாலே வந்த புகழுக்கு எல்லையில்லாதானுமாய்க் கவிபாடுகைக்கு ஈடாக கு3ணசேஷ்டிதாதி3களுக்கு ப்ரதிபாத3கமான அஸங்க்2யாதமான திருநாமங்களை யுடையவனை ஒழிய. (மாரியனைய என்று மேலுக்கு) ‘ஔதா3ர்யத்துக்குக் கை மேக4த்தோடு ஒக்கும். திண்மைக்குத்தோள் மலையோடு ஒக்கும்’ என்று பூ4மியிலே த்ருணஸமாநனாயிருப்பானொருவனாகிற க்ஷுத்3ர ஜந்துவைக் கவிபாடுகையாகிற கலப்பில்லாத பொய் சொல்ல. பாரி லோர்பற்றையை – குடிப்பற்றில்லாத அதிலுப்3த4னை என்றுமாம்.
எட்டாம் பாட்டு
வேயின்மலிபுரைதோளி பின்னைக்கும௰ளனை*
ஆயபெரும்புகழ் எல்லையிலாதனபாடிப்போய்*
காயம் கழித்து அவன்தாளிணைக்கீழ்ப்புகும்காதலன்*
மாயமனிசரை என்சொல்லவல்லேன்என்வாய்கொண்டே?
அவ:- எட்டாம் பாட்டில் – அகி2லஹேயப்ரத்யநீக கல்யாணகு3ண ஸாக3ரமாய் நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லப4னாயிருக்கிறவனை யொழிய வேறு சில க்ஷுத்3ர மநுஷ்யரைக் கவிபாட நான் உபக்ரமிக்கி லும் என்வாய் அதுக்குப் பாங்காகாது என்கிறார்.
வ்யா:- (வேயின் என்று தொடங்கி) வேயிற்காட்டிலும் அழகிய தாய்ப் பரஸ்பரம் ஒத்த தோளையுடைய நப்பின்னப் பிராட்டிக்கு வல்லப4 னானவனுடைய கல்யாணமாய் அஸங்க்2யாதமான மஹா கு3ணங்களை நெடுநாள் இனிதாக அநுப4வித்துப் பின்னை இந்த ப்ராக்ருத சரீரத்தை விட்டு ப4க3வத3ர்ஹமான அப்ராக்ருத சரீரத்தைப் பெற்று அவன் திருவடி க்கீழே புகவேண்டியிருந்த நான்.
ஒன்பதாம் பாட்டு
வாய்கொண்டுமானிடம்பாடவந்த கவியேனல்லேன்*
ஆய்கொண்டசீர்வள்ளல் ஆழிப்பிரான்எனக்கேயுளன்*
சாய்கொண்டஇம்மையும்சாதித்து வானவர்நாட்டையும்*
நீகண்டுகொள்ளென்று வீடுந்தரும்நின்றுநின்றே.
அவ:- ஒன்பதாம் பாட்டில் – ‘பரமோதா3ரனாயிருந்துள்ள எம்பெருமானாலே தன்னைக் கவிபாடுகையே ஸ்வபா4வமாகப் பண்ணப்பட்டே னான எனக்கு இதர ஸ்தோத்ரங்களில் அதி4காரமில்லை’ என்கிறார்.
வ்யா:- (ஆய் கொண்ட என்று தொடங்கி) ஸமஸ்த கல்யாண கு3ணாத்மகனாய்த் திருவாழி முதலான தி3வ்யாயுத4ங்களையுடையவன் பரமௌதா3ர்யத்தாலே என்னுடைய கவிகளுக்கே தன்னை விஷயமாகத் தந்தருளினான். (சாய் கொண்ட என்று தொடங்கி) மோக்ஷ ஸுக2த்திலும் நன்றாம்படி இஹலோகத்திலே ஸ்வாநுப4வத்தை எனக்குப் பண்ணித் தந்து ‘ஸ்ரீவைகுண்ட2த்தை நீ கண்டுகொள்’ என்று கொண்டு அந்த மோக்ஷத்தையும் தரும்; பின்னையும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்று மிறுக்குப்படாநிற்கும். (நின்று நின்றே) கீழ்ச்சொன்னவை தருமிடத்து அடைவடைவே தரும் என்றுமாம்.
பத்தாம் பாட்டு
நின்றுநின்றுபலநாளுய்க்கும் இத்வுடல்நீங்கிப்போய்*
சென்றுசென்றாகிலுங்கண்டு சன்மங்கழிப்பானெண்ணி*
ஒன்றியொன்றிஉலகம்படைத்தான் கவியாயினேற்கு*
என்றுமென்றும்இனி மற்றொருவர்கவியேற்குமே?
அவ:- பத்தாம் பாட்டில் – ஸர்வேஸ்வரன் கவியான எனக்கு இதர ஸ்தோத்ரகரணமானது அநுரூபமன்று என்கிறார்.
வ்யா:- பத்தாம் பாட்டெல்லாவற்றுக்கும் – நெடுங்காலம் கூடவா கிலும் நின்றுநின்று பலநாளும் ஆத்மாவுக்கு பா3த4கமான சரீரத்தை விட்டுப்போய் இனிப் பிறவாதபடி இவ்வாத்மாக்களைப் பண்ணவேணு மென்று எண்ணி. அதிலே மிகவும் ஒருப்பட்டு, லோகத்தையெல்லாம் உண்டாக்கினவனுடைய கவியான எனக்குக் காலமுள்ளதனையும் வேறு சிலரைக் கவிபாடுகை தகுதியன்று. (சென்று சென்றாகிலும் கண்டு) நெடுநாள் கூடவாகிலும் தன்னைக்கண்டு என்றுமாம்.
பதினொன்றாம் பாட்டு
ஏற்கும்பெரும்புகழ் வானவரீசன்கண்ணன்தனக்கு*
ஏற்கும்பெரும்புகழ் வண்குருகூர்ச்சடகோபன்சொல்*
ஏற்கும்பெரும்புகழ் ஆயிரத்துள்ளிவையுமோர்பத்து*
ஏற்கும்பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லைசன்மமே.
அவ:- நிக3மத்தில், இத்திருவாய்மொழியைப் பாட2மாத்ரத்தைச் சொல்லவல்லார்க்கு, ‘வேறு சிலரைக் கவிபாடவேண்டா’ என்று கற்பிக்க வேண்டும்படியான ஸம்ஸாரத்தில் ஜந்மமில்லை என்கிறார்.
வ்யா:- (ஏற்கும்) இப்பாட்டுக்குத் தகுதியான மிக்க புகழையுடைய னாய், அயர்வறுமமரர்களதிபதியாயிருந்துள்ள க்ருஷ்ணன் தனக்கு ஏற்றி ருந்துள்ள பெரும்புகழையுடைய ஆழ்வார் அருளிச்செயலாய், சொன்ன புகழெல்லாம் தக்கிருந்துள்ள ஆயிரத்துள்ளே ஏற்கும் பெரும்பகழான இத் திருவாய்மொழி சொல்லவல்லார்க்கு
நஞ்சீயர் திருவடிகளே ஶரணம்
அவதாரிகை 3-10
சன்மம்பலபல – ப்ரவேசம்
பத்தாந்திருவாய்மொழியில், இப்படி ஹேயரான ஸம்ஸாரிகளைப் போலன்றியே, எம்பெருமானுடைய தி3வ்யாவதாரங்களையும், தி3வ்யகு3ணங்க ளையும் பலவகையாய் ஜக3த்3ரக்ஷணார்த்த2மாகவுள்ள சேஷ்டிதங்களை யும் அநுஸநிதி4த்துக்கொண்டு போது போக்கப் பெற்றேனுக்கு இதிற்காட் டில் வேண்டுவது ஒன்று உண்டோ? என்று தாம் ப4க3வத3ர்ஹகரணராய் க்ருதார்த்த2ரானபடியை அநுஸந்தி4த்து மிகவும் ப்ரீதராகிறார்.
முதற்பாட்டு
சன்மம்பலபலசெய்துவெளிப்பட்டுச் சங்கொடுசக்கரம்வில்*
ஒண்மையுடையஉலக்கைஒள்வாள்தண்டுகொண்டுபுள்ளூர்ந்து*உலகில்
வன்மையுடைய அரக்கர் அசுரரை மாளப்படைபொருத*
நன்மை உடையவன்சீர்பரவப்பெற்ற நான்ஓர்குறைவிலனே.
அவ:- முதற் பாட்டில் – ஆஸ்ரிதஸம்ரக்ஷணார்த்த2மாகப் பல காலும் வந்து திருவவதாரம் பண்ணியருளி அவர்கள் சத்ருக்களை நிரஸியாநின்றுள்ள எம்பெருமானுடைய கல்யாணகு3ணங்களை ப்ரீதிபூர்வக மாக அநுப4விக்கப்பெற்றேன் என்று இத்திருவாய்மொழியில் ப்ரதிபாதி3க்கிற பொருளை ஸங்க்3ரஹேண அருளிச்செய்கிறார்.
வ்யா:- (சன்மம் பலபல செய்டு வெளிப்பட்டு) அஸங்க்2யாவதாரங் களைப் பண்ணிக்கொண்டு ஒருவரால் காணமுடியாத தான் தோற்றி. (வண்மை) தன் அழகு கண்டால் சிதி2லராகாமை. படை – ஆயுத4ம். (நன்மை) ப்ரதிகூலவிஷயத்தில் ஆந்ருஸம்ஸ்யம் பண்ணாமை. (சீர்பரவப் பெற்ற நான்) கல்யாண கு3ணங்களை சிதி2லகரணனாய் அநுஸந்தி4க்கப்பெற்ற நான்.
இரண்டாம் பாட்டு
குறைவில்தடங்கடல்கோளரவேறித் தன்கோலச்செந்தாமரைக்கண்*
உறைபவன்போல ஓர்யோகுபுணர்ந்த ஒளிமணிவண்ணன்கண்ணன்*
கறையணிமூக்குடைப்புள்ளைக்கடாவி அசுரரைக்காய்ந்த அம்மான்*
நிறைபுகழேத்தியும்பாடியும் ஆடியும் யான் ஒருமுட்டிலனே.
அவ:- இரண்டாம் பாட்டில் – திருவவதாரம் பண்ணியருளுகைக்கு அடியாகத் திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளி ஸ்ரீவஸுதே3வர் திருமகனாய் வந்து திருவவதாரம் பண்ணியருளி ஆஸ்ரிதவிரோதி4 நிரஸநம் பண்ணாநின்றிருந்துள்ள க்ருஷ்ணனுடைய கீர்த்தியை ப்ரீதிப்ரேரிதனாய்க்கொண்டு பலபடியும் அநுப4விக்கப்பெறுகையாலே எனக்கு ஒரு தட்டில்லை என்கிறார்.
வ்யா:- (குறைவில் தடங்கடல் கோளரவேறி) – தன்னுடைய ஸந்நிதா4நத்தாலே குரைவற்றுக் கண்வளர்ந்தருளப் போரும்படியான பெரிய கடலிலே நிரவதி4க தீ3ப்தியுக்தனான திருவநந்தாழ்வான் மேலே யேறி; கோளாகிறது மிடுக்கு என்றும் சொல்லுவர். கண்ணுறைகை – கண்வளர்ந் தருளுகை. (ஓர் யோகு புணர்ந்த என்று தொடங்கி) – திருவநந்தாழ்வானோட்டை ஸ்பர்சத்தாலும் ஸ்வகு3ணாநுஸந்தா4நத் தாலும் உஜ்ஜ்வல மான திருநிறத்தையுடையனாய், ஆஸ்ரிதாபந் நிவாரணார்த்த2மாக க்ருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணியருளி ப்ரதிகூலருடைய ருதி4ரத்தாலே கறையேறி அதுவே ஆப4ரணமான திருமூக்குடைய பெரிய திருவடியை நடத்தி அஸுர நிரஸநம் பண்ணின ஸர்வேஸ்வரனுடைய பரிபூர்ணமான புகழை ஹ்ருஷ்டனாய்க் கொண்டு மிகவும் அநுப4விக்கப் பெறுகையாலே நான் ஒன்றும் ப்ரதிஹதபோ4க3னல்லேன்.
மூன்றாம் பாட்டு
முட்டில்பல்போகத்தொருதனிநாயகன் மூவுலகுக்குரிய*
கட்டியைத்தேனையமுதை நன்பாலைக்கனியைக்கரும்புதன்னை*
மட்டவிழ்தண்ணந்துழாய்முடியானைவணங்கி அவன்திறத்துப்
பட்டபின்னை* இறையாகிலும் யான் என்மனத்துப்பரிவிலனே.
அவ:- மூன்றாம் பாட்டில் – ஸர்வேஸ்வரனுடைய போ4க்3யதாநு ஸந்தா4நப்ரீதி ப3லாத்காரத்தாலே அவனுக்கு அடிமை செய்கையிலே ப்ரவ்ருத்தனான எனக்கு ஒரு மநோது3:க்க2மில்லை என்கிறார்.
வ்யா:- (முட்டில்பல்போகத்து என்று தொடங்கி) அப்ரதிஹத அஸங்க்2யேய போ4க3னாய், நிரஸ்த ஸமஸ்த ஸமாதி4கனான ஸர்வேஶ் வரனாய். (மூவுலகுக்குரிய கட்டி என்று தொடங்கி) எல்லாருக்கும் ஒக்க ப்ராப்தமான ஜக3த்தில் ரஸவஸ்துக்களெல்லாம் போலேயுமாய், இவ்வள வென்று பரிச்சே2தி3க்கவொண்ணாதபடி நிரதிசய போ4க்3யமாயிருந்துள்ள அவன் திருவடிகளிலே அடிமையிலே அந்வயித்தபின்பு. “மூவுலகுக் குரிய ஒருதனி நாயகன்” என்று கூட்டிக்கொள்ளவுமாம்.
நான்காம் பாட்டு
பரிவின்றிவாணனைக்காத்துமென்று அன்றுபடையொடும்வந்தெதிர்ந்த*
திரிபுரஞ்செற்றவனும்மகனும் பின்னும்அங்கியும்போர்தொலைய*
பொருசிறைப்புள்ளைக்கடாவியமாயனை ஆயனைப்பொற்சக்கரத்து
அரியினை* அச்சுதனைப்பற்றி யான்இறையேனும்இடரிலனே.
அவ:- நாலாம் பாட்டில் – “தே3வதாந்தரங்கள் ஆஸ்ரயித்தாருடைய ஆபத்துக்குத் துணையல்லரென்னுமிடத்தைக் காட்டின எம்பெருமானை ஆஸ்ரயித்து உந்மூலித ஸமஸ்த து3:க்க2னானேன்” என்கிறார்.
வ்யா:- (பரிவின்றி) வருத்தமின்றி, படை – ஸேநை. (திரிபுரம் செற்றவன்) த்ரிபுரத3ஹநாபதா3ந ஸஞ்ஜாதாபி4மாநனான ருத்3ரன். (மகன்) ஸுப்3ரஹ்மண்யன். (அங்கி) அக்3நி. (போர்தொலைய என்று தொடங்கி) ப3லஹீநராம்படி பொருகிற திருச்சிறகையுடைய பெரிய திரு வடியை அத்யாஸ்சர்யமாம்படி கடவி. ரமணீய த3ர்சநமான திருவாழியை த4ரிக்கையாலே ஶத்ருக்களுக்கு அப்ரத்4ருஷ்யனாய், திருவடிகளை ஆஸ்ரயித்தார்க்கு ஒரு சோர்வு வாராதபடி பண்ணும் ஸ்வபா4வனான ஆயனைப் பற்றுகையாலே.
ஐந்தாம் பாட்டு
இடரின்றியேஒருநாளொருபோழ்தில் எல்லாவுலகுங்கழிய*
படர்புகழ்ப்பார்த்தனும்வைதிகனும் உடனேறத்திண்தேர்கடவி*
சுடரொளியாய்நின்றதன்னுடைச்சோதியில் வைதிகன்பிள்ளைகளை*
உடலொடுங்கொண்டுகொடுத்தவனைப்பற்றி ஒன்றும் துயரிலனே.
அவ:- அஞ்சாம் பாட்டில் – வைதி3கபுத்ராநயந மஹாபதா3நத்தை அநுஸந்தி4த்துத் துஷ்டராகிறார்.
வ்யா:- (இடரின்றியே என்று தொடங்கி) – ஒருநாளிலே ஒரு முஹூர்த்தத்திலே ஒருவருத்தமின்றிக்கே அண்ட3த்துக்குப் புறம்பான ஆவரணலோகங்களும் கழியும்படி தன்னையே நாத2னாகவும் தோழனா கவும் தூ3தனாகவும் ஸாரதி2யாகவும் மற்றும் எல்லாப்பரிஜநமாகவும் உடையனான பெரும்புகழையுடைய அர்ஜுநனும் வைதி3கனும் உடனே ஏற, கார்யரூபமாய்வைத்துத் தன் ஆகாரம் அழியாதிருக்கச் செய்தே கார்யங்களுக்கெல்லாம் மூலகாரணமான ப்ரக்ருதிபர்யந்தமாகப்போம் படி திருத்தேரை நடத்தி (சுடரொளியாய் என்று மேலுக்கு) அப்ராக்ருத தேஜோரூபமாய், தனக்கு அஸாதா4ரணமான திருநாட்டிலே புக்கருளி வைதி3கபுத்ரர்களை அவ்வுடம்போடே அப்பருவத்தோடே கொண்டுவந்து கொடுத்தவனைப் பற்றுகையாலே நிர்த்து3:க்க2னானேன்.
ஆறாம் பாட்டு
துயரில்சுடரொளிதன்னுடைச்சோதி நின்றவண்ணம்நிற்கவே*
துயரில்மலியும்மனிசர்பிறவியில் தோன்றிக்கண்காணவந்து*
துயரங்கள்செய்துதன்தெய்வநிலை உலகில் புகவுய்க்கும் அம்மான்*
துயரமில்சீர்க்கண்ணன்மாயன்புகழ்துற்ற யான்ஓர்துன்பமிலனே.
அவ:- ஆறாம் பாட்டில் – “க்ருஷ்ணனுடைய நிரவதி4கமான அழகை அநுப4வித்த எனக்கு ஒரு து3:க்க2 க3ந்த4மில்லை” என்கிறார்.
வ்யா:- (துயரில் என்று தொடங்கி) ஹேயப்ரத்யநீகமாய் தேஜோ ரூபமாய் ஸ்வாஸாதா4ரணமான தி3வ்யரூபத்தைக் கூடக்கொண்டே து3:க்க2ஸாக3ரமக்3நரான மநுஷ்யருடைய பிறவியிலே அவர்களை ரக்ஷித் தருளுகைக்காக வந்து திருவவதாரம் பண்ணியருளி அவர்களுடைய சக்ஷுர்விஷயமாய் வந்து தன் ஸௌந்த3ர்யாதி3 களாலே அவர்களை மிகவும் ஈடுபடுத்தி. (தன் தெய்வநிலை என்று தொடங்கி மேலுக்கு) தன்னு டைய அப்ராக்ருத ஸ்வபா4வத்தை லோகத்திலே ஆவிஷ்கரித்து அத்தாலே எல்லாரையும் அடிமை கொண்டு அச்செயலாலே அத்யாஶ்சர்ய பூ4தனாய் ஹேயப்ரத்யநீக கல்யாண கு3ணகனான க்ருஷ்ணனுடைய புகழை.
ஏழாம் பாட்டு
துன்பமும் இன்பமுமாகிய செய்வினையாய்உலகங்களுமாய்*
இன்பமில்வெந்நரகாகி இனியநல்வான்சுவர்க்கங்களுமாய்*
மன்பல்லுயிர்களுமாகிப் பலபலமாயமயக்குக்களால்*
இன்புறும் இவ்விளையாட்டுடையானைப்பெற்று ஏதும் அல்லல் இலனே.
அவ:- ஏழாம் பாட்டில், லீலோபகரணத்தாலே எம்பெருமானுக்கு உண்டான ரஸத்தை அநுப4வித்து நிர்த்து3:க்க2னானேன்” என்கிறார்.
வ்யா:- (துன்பமுமின்பமுமாகிய செய்வினையாய்) ஸுக2 து3:க்க2 ங்களை விளைக்கக்கடவ புண்யபாபரூப கர்மங்களுக்கு நியாமகனாய், (உலகங்களுமாய்) அவை ஆர்ஜிக்கும் கர்மபூ4மிக்கு நிர்வாஹகனாய்; ப2லாநுப4வபூ4மி என்றுமாம். (இன்பமில் வெந்நரகாகி இனியநல்வான் சுவர்க்கங்களுமாய்) ஸுக2க3ந்த4மில்லாத து3:க்க2மே அநுப4விக்கக்கடவ தான நரகத்துக்கு நிர்வாஹகனாய், ஸுத்3த4 ஸுக2மே அநுப4விக்கக் கடவதான ஸ்வர்க்க3த்துக்கு நிர்வாஹகனாய், நரகென்றும் சுவர்க்க மென்றும் ஸுக2து3:க்க2ங்களாகவுமாம். (மன் பல்லுயிர்களுமாகி) ஸ்வர்க்க3 நரகாதி3களை என்றும் பு4ஜிக்கக் கடவதான ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனாய். (பலபல மாயமயக்கு என்று மேலுக்கு) இப்படியுள்ள அஸங்க்2யேயமான ப்ரக்ருதிவிகாரமுக2 த்தாலுண்டான சேதநருடைய மதிவிப்4ரமங்களாலே ப்ரீத்யாவஹமான லீலைகளையுடையவனைப் பெற்று. பரமகாருணிகனான எம்பெருமானுக்குப் பிறருடைய து3:க்கா2நு ஸ்ந்தா4நம் ப்ரீதிஹேதுவானபடி எங்ஙனேயென்னில், தன்னுடைய கருணையாலே அவற்றை ரக்ஷிக்க நினைத்தால், அந்த ரக்ஷணம் அவற்றுக்கு அநிஷ்டமாயிருக்கிற இருப்பு அவனுக்கு ஹாஸ்யஹேதுவாய் அவ்வழியாலே லீலாரஸஸாத4நமாய்விட்டன.
எட்டாம் பாட்டு
அல்லலில் இன்பம் அளவிறந்து எங்கும் அழகமர் சூழொளியன்*
அல்லிமலர்மகள்போகமயக்குக்களாகியும் நிற்குமம்மான்*
எல்லையில்ஞானத்தன் ஞானமஃதேகொண்டுஎல்லாக்கருமங்களுஞ்செய்*
எல்லையில்மாயனைக்கண்ணனைத்தாள்பற்றி யான் ஓர்துக்கமிலனே.
அவ:- எட்டாம் பாட்டில், எம்பெருமான் நித்ய விபூ4த்யநுப4வம் பண்ணும் படியைப்பேசி அநுப4விக்கிறார்.
வ்யா:- (அல்லலில் என்று தொடங்கி) து3:க்க2 க3ந்த4மின்றிக்கே நிரவதி4கமான ஆநந்த3த்தையுடையனாய் நிரதிசய ஸௌந்த3ர்யத்தையுடையனாய், போ4க்3யையான பெரியபிராட்டியாரோட்டைக் கலவி யாலே வந்த நிரதிசய ஆநந்த3ங்களையுடையனாயிருக்கையாகிற ஐஸ்வர்யத்தை யுடையனான. (எல்லையில் ஞானத்தன்) அக்கலவிக்கு ஈடான பேரளவையுடையான். (ஞானமஃதேகொண்டு என்று மேலுக்கு) ஸஹாகராந்தர நிரபேக்ஷமான தன் ஸங்கல்பரூபஜ்ஞாநத்தாலே பெரிய பிராட்டியார்க்கும் ப்ரியமாகக் கார்யபூ4த ஜக3த்தையெல்லாம் உண்டாக்கும் ஸ்வபா4வனாய் இப்படிப்பட்ட முடிவில்லாத ஆஸ்சர்யங்களையுடைய னான க்ருஷ்ணனுடைய திருவடிகளைச்சேர்ந்து.
ஒன்பதாம் பாட்டு
துக்கமில்ஞானச்சுடரொளிமூர்த்தி துழாயலங்கல்பெருமான்*
மிக்கபன்மாயங்களால்விகிருதஞ்செய்து வேண்டுமுருவுகொண்டு*
நக்கபிரா னோடு அயன்முதலாக எல்லாரும் எவையும்* தன்னுள்
ஒக்கவொடுங்கவிழுங்கவல்லானைப்பெற்று ஒன்றும் தளர்விலனே.
அவ:- ஒன்பதாம் பாட்டில், ஸர்வாஸ்சர்ய பூ4மியான வடத3ளசாயியை அநுப4விக்கப்பெற்ற எனக்கு ஒரு தளர்வுமில்லை என்கிறார். மஹாப்ரளய வ்ருத்தாந்தத்தை அநுஸந்தி4க்கிறார் என்றுமாம்.
வ்யா:- (துக்கமில்ஞானம் என்று தொடங்கி) ஹேயரஹிதமான ஜ்ஞாநத்தையும் நிரதிஶய தேஜோமயமான தி3வ்ய ரூபத்தையுமுடைய னாய், ஸர்வேஸ்வரத்வ ஸூசகமான திருத்துழாய் மாலையாலே அலங் க்ருதனாய். (மிக்கபன்மாயங்களால் என்று தொடங்கி) அபரிச்சே2த்3ய மான அநேக ஆஸ்சர்ய சக்திகளாலே ஸ்வாபி4மத தி3வ்ய தே3ஹங்களைக்கொண்டு ஆஸ்சர்ய சேஷ்டிதங்களைப் பண்ணி ப்ரதா4நரான ருத்3ரன் ப்3ரஹ்மா என்கிற இவர்கள் தொடக்கமாகச் சேதநாசேதநங்களையடையத் தன் திருவயிற்றிலே ஒருகாலே சென்று சேரும்படி விழுங்கவல்லவனை.
பத்தாம் பாட்டு
தளர்வின்றியே என்றும் எங்கும்பரந்த தனிமுதல்ஞானமொன்றாய்*
அளவுடை ஐம்புலன்களறியாவகையால் அருவாகிநிற்கும்*
வளரொளியீசனைமூர்த்தியைப் பூதங்களைந்தை இருசுடரை*
கிளரொளிமாயனைக்கண்ணனைத்தாள்பற்றி யான் என்றுங்கேடிலனே.
அவ:- பத்தாம் பாட்டில், ஸமஸ்தவஸ்துக்களிலும் ஆத்மதயா வ்யாப்தனாய், அவர்களுடைய இந்த்3ரியங்களுக்கும் கோ3சரமன்றிக்கே ஜக3ச்ச2ரீரனான க்ருஷ்ணனை வணங்கப்பெற்ற எனக்கு ஒரு நாளும் ஒரு கேடில்லை என்கிறார்.
வ்யா:- (தளர்வு என்று தொடங்கி) ஏகரூபமாக என்றும் எல்லாவிட த்திலும் வ்யாபிப்பதும் செய்து ஜக3த்துக்கு ஸஹாயாந்தர நிரபேக்ஷமான காரணமாய், விலக்ஷண ஜ்ஞாநஸ்வரூபனாய் பரிச்சி2ந்நவஸ்துக்3ராஹக மான இந்த்3ரியங்களால் அறியவொண்ணாதபடி அவற்றுக்கு அவிஷய மாய்நிற்கும். (வளரொளியீசனை என்று தொடங்கி) வ்யாப்ய வஸ்துக3த தோ3ஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனாய், அவற்றுக்கு நியாமகனாய், மிக்கிருந் துள்ள ஔஜ்ஜ்வல்யத்தையுடைய தி3வ்யதே3ஹயுக்தனாய், பூ4தபௌ3திக மான ஜக3த்தை ஶரீரமாகவுடையனாய், நிரவதி4க தேஜோவிஶிஷ்ட தி3வ்யரூபத்தோடே வந்து வஸுதே3வக்3ருஹே அவதீர்ணனான எம்பெருமானுடைய திருவடிகளை.
பதினொன்றாம் பாட்டு
கேடில்விழுப்புகழ்க்கேசவனைக் குருகூர்ச்சடகோபன்சொன்ன*
பாடலோராயிரத்துள் இவையுமொருபத்தும் பயிற்றவல்லார்கட்கு* அவன்
நாடும்நகரமும்நன்குடன்காண நலனிடையூர்திபண்ணி*
வீடும்பெறுத்தித்தன்மூவுலகுக்குந்தரும் ஒருநாயகமே.
அவ:- நிக3மத்தில், “இத்திருவாய்மொழியை அப்4யஸிக்குமவர் களை இந்த லோகத்திலே எல்லாரும் அறியும்படி வைஷ்ணவ ஸ்ரீயிலே நடத்திப் பின்னைத் திருநாட்டில் கொண்டுபோவதும் செய்து தன்னுடைய ஐஸ்வர்யமெல்லாம் இவர்கள் இட்ட வழக்காக்கும்” என்கிறார்.
வ்யா:- (கேடில் என்று தொடங்கி) நித்யஸித்3த4 கல்யாண கு3ணங் களை யுடையனான கேசிஹந்தாவை ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரந் திருவாய்மொழியிலும் இத்திருவாய்மொழியை அப்4யஸிக்கவல்லார்க்கு, (நாடு நகரமும்) விசேஷஜ்ஞரும், அவிசேஷஜ்ஞரும்.
நஞ்சீயர் திருவடிகளே ஶரணம்
திருவாய்மொழி மூன்றாம்பத்து ஓன்பதினாயிரப்படி வ்யாக்2யானம் முற்றிற்று.