श्रीमते निगमान्तमहादेशिकाय नमः ॥
श्री हस्तिगिरिमाहात्म्यम्
ஸ்ரீ ஹஸ்திகிரி மாஹாத்ம்யம்
रामानुजदयापात्रं ज्ञानवैराग्यभूषणम् । श्रीमद्वेङ्कटनाथार्यं वन्दे वेदान्तदेशिकम् ॥
मानार्हं महतां महानटजटापर्यन्तनिर्यन्त्रणक्रीडाबन्धुरसिन्धुराजमहिषीजन्मास्पदं तत्पदम् ।
मातङ्गाचलमौळिमण्डनमणेर्वन्दारुबृन्दारकश्रेणीशेखरपारिजातकलिकाचूडालमीडामहे ॥
வாழி அருளாளர் வாழி அணி அத்திகிரி*
வாழி எதிராசன் வாசகத்தோர்* வாழி
சரணாகதியென்னும் சார்வுடன் மற்றொன்றை*
அரணாகக் கொள்ளாதாரன்பு. (1)
எண்டிசையும் கடலேழும் மலைகள் ஏழும்
ஈரேழு வையகமும் படைத்திலங்கும்*
புண்டரீகத்தயன் புணர்த்த பெரிய வேள்விப்
புனித நறும் போக்கியத்தை உகந்து வந்து*
தொண்டையெனும் மண்டலத்தில் நடுவில் பாரில்
தூநில மெய்விரதத்தில் தோன்றி நின்ற*
கொண்டல் அருள்குணமே நாம் கூறுகின்றோம்
கூர்மதியீர்! குறிப்பாகக் கொள்மின் நீரே. (2)
வம்மின் புலவீர் அருளாளப் பெருமாள் என்றும்
அருளாழி அம்மான் என்றும்*
திருமாமகளைப் பெற்றும் என் நெஞ்சம் கோயில்
கொண்ட பேரருளாளர் என்றும்*
வியப்பா விருதூதும்படி கரைபுரண்ட கருணைக் கடலை
எவ்வண்ணம் பேசுவீர் ஈதென்ன பாங்கே (3)
ஒன்றே புகலென்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்*
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்*
இன்றே இசையில் இணையடி சேர்ப்பர் இனிப்பிறவோம்*
நன்றே வருவதெல்லாம் நமக்குப் பரம் ஒன்றிலதே * (4)
வம்பவிழ் போதமர் மாதர் உகந்த அம்மாநிதியை*
தன் பலமே கொண்டு காணக் கருதிய தாமரையோன்*
முன்பல குற்றத்து வல்வினை மொய்க்க முகிழ்மதியாய்*
அம்புலி வேண்டிய பாலனைப் போல அழுதனனே. (5)
அடங்காக் கரணங்கள் ஐந்துடன் ஆறுமடக்கி முன்னம்*
நெடுங்காலம் இந்நிலமே நிலையாய்ப் பூண்டு நீடுறைவான்*
சடங்கார் பெரிய தவங்கள் செய்தேன் என்ன தன்மையிதென்று*
இடங்காத்திருந்த திசைமுகன் தன்னை இகழ்ந்தனனே. (6)
விண்ணுலகில் வீற்றிருந்த மேன்மையாலும்
வேதங்கள் ஈரிரண்டும் விரித்தலாலும்*
கண்ணனை நான் கருத்துறவே காண்பன் என்னக்
காணாமல் விலக்கிய தன் வினையைக் காணா*
எண்ணிய நற்புவனங்கள் ஏழும் ஆறும்
இரு மூன்று தீவமும் எட்டு இடமும் விட்டு*
பண்ணிய நல் விரதமெல்லாம் பலிக்கும் என்று
பாரதத்தைப் பங்கயத்தோன் படிந்திட்டானே. (7)
எத்திசை நிலனுமெய்தி அருந்தவம் செய்த வந்நாள்
சத்திய விரதம் செல்வாய் என்றதோர் உரையின் சார்வால்
அத்திசை சென்றழைத்து அங்கமரரில் எடுப்பான்தன்னை*
உத்தரவேதி செய்யென்று உரையணங்கு இறை உரைத்தான். (8)
உத்தம வமர்த்தலம் அமைத்ததோர்
எழில் தனுவுயர்த்த கணையால்
அத்திர வரக்கன் முடிபத்தும் ஒரு
கொத்தென உதிர்த்த திறலோன்*
மத்துறு மிகுத்த தயிர் மொய்த்த வெணெய்
வைத்ததுணும் அத்தனிடமாம்
அத்திகிரி பத்தர் வினை தொத்தற
அறுக்கும் அணி அத்திகிரியே. (9)
திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்
சிதையாத நூல்வழியிற் சேர்த்தியாலும்
வண்மை எழும் ஈரிரண்டு வண்ணத்தாலும்
வானவர்க்கும் வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடை வாசியொளி ஓசையாலும்
ஒரு காலும் அழியாத அழகினாலும்
மண்மகளாற்கு அலங்காரம் என்ன மன்னும்
மதிட்கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே. (10)
காமங்கள் பல கொண்ட வேதம் கொண்டு
கைதவமே செய்வார்க்குக் காணகில்லா*
பூமங்கை கேள்வனை நான் கண்டு போற்றப்
புண்ணியத்தின் நிகரில்லா விரதம் பூண்டேன்*
சாமங்கள் கழிவதன் முன் சடக்கெனப் போய்த்
தன்னாற்றில் தனியிருந்து தவம் செய்கின்ற*
நாமங்கை வந்திட நீ அழைப்பாய் என்று
நன்மகனை நான்முகன் தான் நவின்றிட்டானே. (11)
அன்னவடிவாள் அசையுமன்ன நடையாள்
உயருமன்ன வரசேறி வருவாள்*
அத்தனயன் அத்தநயன் உத்திதனை
அத்திதென வுத்தி புரியாள்*
நன்னடை விடா நடமிதென்ன நடவாநடுவுள்
நண்ணு குடகேறி யிழிவாள்*
நற்பதிக ளற்பதிகள் கற்புரள
வற்புத மருக் கதியினால்*
கன்னடை விடா விடமில் உன்னதி சிறாவிகட
மன்னுகிரி கூடமிடிய*
கட்ட விடை யிற்றுவிழ முற்றும் விழி†1
யுற்றடைய விட்டருகுற*
அன்ன நய சீரயனி தென்னென விழாவமரர்
மன்னுபதியேறி மகிழ*
அச்சுதன் அனைத்தனுவில் அத்திசைவரத்
தகைய வற்றணுகினாள். (12)
அன்று நயந்த அயமேத மாவேள்வி*
பொன்ற வுரையணங்கு பூம்புனலாய்*கன்றிவர
ஆதி அயனுக்கருள் செய்தணையானான்
தாதை அரவணையான் தான். (13)
தரணியில் மன்னி அயனார் தனித்தவம் காத்தபிரான்*
கருணையெனும் கடலாடித் திருவணைக் கண்டதற்பின்*
திரணர கெண்ணிய சித்திரகுத்தன் தெரித்துவைத்த*
சுருணையிலேறிய சூழ்வினை முற்றும் துறந்தனமே. (14)
சுகலேசமெண்ணிய சூழ்வினை தீர்க்கத் துணிந்தயனார்*
அகலாத அன்புடன் கொண்ட அயமேத வேதியின் மேல்*
புகலோங்கு பொன்மலை என்றதோர் புண்ணிய கோடியுடன்*
பகலோன் பகல் விளக்காகப் பரம் சுடர் தோன்றியதே. (15)
பெருமையுடை அத்திகிரிப் பெருமாள் வந்தார்
பேராது அருள்பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையின் உச்சிதனில் நின்றார் வந்தார்
அங்கமுடன் அவையாகும் பெரியோர் வந்தார்
திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்*
திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்*
மருவலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்*
வானேறவழி தந்தார் வந்தார் தாமே. (16)
அத்திகிரி அருளாளப்பெருமாள் வந்தார்*
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்*
கருத வரம் தரும் தெய்வப் பெருமாள் வந்தார்*
முத்திமழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்*
மூலமென ஓலமிட வல்லார் வந்தார்*
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்*
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே. (17)
திருபரிதியிசைந்த மகுடமும்
எழில்மதி திகழ்ந்த வதனமும்*
இருவகை இலங்கு குழல்களில்
எதிர் பொர உகந்த மகரமும்*
ஒரு தகவுயர்ந்த திருமகள்
ஒளிமறுவில் மன்னும் அகலமும்*
உருவரு உமிழ்ந்த உதரமும்
உலகடைய நின்ற கழல்களும்*
மருவினிடை யோங்கு புனலென
மலைகுனிய நின்ற மலையென*
மருளற விளங்கும் ஒளியென
மலரயன் உகந்த பயனென*
அருவில் உறைகின்ற உயிரென
அடியவர் உகந்த அமுதென*
அருமறைகள் ஒன்றி அடிதொழ
அருள் வரதர் நின்றபெருமையே. (18)
சித்தசித்தென விரித்துரைத்தன
அனைத்தமைத் துறையும் இறைவனார்*
சிறியபெரியவுரு வடைய உடலமென
நடலம் இலதிலகு நிலையினார்*
சித்திரத்தொழிலை யொத்த பத்தரொடு
முத்தர் பித்தியெனும் உணர்வினார்*
சிதைவின் மறை நெறியி லெறிய வுருமுறைகள்
முறிய சிறை யரிய நிறைவினார்
கத்துவிக்க வல கத்து வித்தைவழி
கற்றவர்க்கசைவில் மாயனர்*
கபிலர் கணசரணர் சுகதர் சமணரரர்
வழிகள் அழியும் அருள் மொழியினார்*
கத்திலக்கிலும் அருக்குலத்திலும்
அசித்திலொக்கும் ஒருமுதல்வனார்*
கரணமிடு கடிய பதினொரிருடிகமும்
அடையமுடியும் அடியிருடியார்*
ஒத்தனைத்துலகும் ஒற்றியொற்றிவரும்
இப்பவத்திசையும் இசைவினார்*
உருவமருவமெனும் உலகில் முடகிலெனில்
உவமையிலதிலகு தலைவனார்*
உத்தமப்படி வகுத்த வித்தைகளில்
உத்தரிக்க உணர் குணவனார்*
உரிய கிரிசைகளில் அரியதொருவிரகு
தெரிய விரையுமவர் பரிவினார்*
சத்தசெத்தெனும் அனைத்தணைத்தவினை
தொத்தறுக்க வல துணிவினார் *
சரியுமளவில் உரியவரை அறிவரிய
தமனி நெறிசொருகு விரகினார்*
தத்துவத்திரள் உதைத்துதைத் தடைவு
தத்துவிக்குமவர் தலைவனார்*
தருகவுணரு மவர் சரண மணுக
விடலரிய அருள் வரதரடியமே. (19)
திருமகள்மண்மகள் நீளைமுதலா எல்லாத்
தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்க*
தரும மிரு மூன்றுமுதல் அனைத்தும் தோன்றத்
தன்னனைய சூரிகள்தன் அடிக்கீழ் வாழ*
அருமரைசேர் அளவில்லா அவனியின் கண்
அரவணைமேல் வீற்றிருப்பால் அனைத்தும் காக்கும்
கருமணியைக் கரிகிரிமேல் கண்டேன், என்தன்
கடுவினைகள் அனைத்தும் நான் கண்டிலேனே. (20)
பெடையிரண்டை யொரனமடைந்து
பிரிந்திடா வகை பேசலாம்*
பெருகுமருவிகள் அருகு மருவிய
பெரிய மணிவரை பயிலலாம்*
பிடியிரண்டொடு களபமொன்று
பிணைந்த பேரழகோதலாம்*
பிரிவிலொளியொடு நிழலுமருகுறும்
இரவி யிலகுதல் பரவலாம்*
கொடியிரண்டொடு விடவியொன்று
குளிர்ந்தவாறு குலாவலாம்*
குறைவில் சுருதியும் நினைவுமிலகிய
தருமவருநிலை இதென்னலாம்*
அடியிரண்டையும் அடையுமன்பர்
அறிந்த பேரருளாளனார்*
அணுகு மலர்மகள் அவனிமகளொடு
கரடிகிரியினிலவிர்தலே. (21)
வேரொப்பார் விண்முதலாம் காவுக்கெல்லாம்
விழியொப்பார் வேதமெனும் கண் தனக்குக்
காரொப்பார் கருணைமழை பொழிந்திடுங்கால்
கடலொப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால்
நீரொப்பார் நிலமளிக்கும் தன்மை தன்னால்
நிலமொப்பார் நெடும்பிழைகள் பொறுக்கும் நேரால்*
ஆரொப்பார் இவர் குணங்கள் அனைத்தும் கண்டால்
அருளாளர் தாமெனினும் தமக்கொவ்வாரே. (22)
எந்நிலமும் குரத்தால் குறி செய்த வெழிற்பரி கொண்டு*
அன்னமுயர்த்த செய்யோன் அன்று வேள்வி செய்வேதியின் மேல்*
முன்னிலையாகிய மூர்த்தியுடன் நான்முக! மற்றுமுனக்கு*
என்னவரம் தருவோமென்று நாதனியம்பினனே. (23)
சென்றுமலர் பறித்து என் நாதன் சேவடிப்போதுகந்து*
நன்றென நீர் சுடர் நன்முகவாச விலைகொடுத்து*
கன்னலிலட்டுவத்தோடு அன்னம் சீடை கறி படைத்து*
பின்னும் செபித்தவன் பாதம் பணிமின்கள் என்றனனே. (24)
ஆழிநிலை வினைகடிவான் அயமேத முடிந்ததற்பின்*
வேழமலை நாயகனார் விடைகொடுக்க விண்ணேறி*
நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்முகன்தான்*
ஊழியெலா மழியாத உயோகமடைந்திருந்தானே. (25)
ஆதியுகத்தயன் கண்டிட நின்றவருள்வரதர்*
காதலுயர்ந்த களிற்றைத் திரேதையில் காத்தளித்து*
வாதுயர் தேவகுருவுக்கிரங்கித் துவாபரத்தில்*
சோதி அநந்தன் கலியில் தொழுதெழ நின்றனரே. (26)
புண்டரீக முயிர்த்த புராணனார்
பொய்யில் மாமக வுத்தரவேதியில்*
கொண்டலாரருள்மாரி பொழிந்திடக்
கொண்டதோருயர் கூர்மதியன்பினால்*
பண்டை நான்மறை மெளலி படிந்த யான்
பாரில் மெய்விரதக் கவி பாடினேன்*
தொண்டை மண்டல வேதியர் வாழவே
தூய தென்மறை வல்லவர் வாழவே. (27)
உய்விரத மொன்றின்றி அடைந்தார் உய்ய
ஒருவிரதம் தான் கொண்டஉயர்ந்தமாலை*
செய்விரதம் ஒன்றாலும் தெளியகில்லாச்
சிந்தையினால் திசைபடைத்த திசைமுகன் தான்*
பொய் விரத நிலமெல்லாம் போயே மீண்டு
புகலிதுவே புண்ணியத்துக் கென்று சேர்ந்த*
மெய்விரத நன்னிலத்து மேன்மை யேத்தி
வேதாந்த வாசிரியன் விளங்கினானே. (28)
சீராரும் தூப்புல் திருவேங்கடமுடையான்
தாராரருளாளர் தாள் நயந்து* சீராக
மெய்விரத நன்னிலத்து மேன்மையிது மொழிந்தான்*
கையில் கனிபோலக் கண்டு. (29)
कविकथकपञ्चवक्त्रः त्रय्यन्तगुरुस्त्रिलोकमहनीयम् ।
सत्यव्रतमाहात्म्यं व्यतनुत ललितमिति वेङ्कटेशकविः ॥
इति कवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु
श्रीहस्तिगिरिमाहात्म्यं संपूर्णम् ॥