[highlight_content]

Naanmukan Thiruvandadi

திருமழிசைப்பிரான் அருளிச்செய்த

நான்முகன் திருவந்தாதி

தனியன்

(சீராமப்பிள்ளை அருளிச்செய்தது)

நாராயணன்படைத்தான்நான்முகனை* நான்முகனுக்கு

ஏரார்சிவன்பிறந்தானென்னுஞ்சொல்* – சீரார்

மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே!* மொய்பூ

மழிசைப்பரனடியேவாழ்த்து.

நான்முகனை நாராயணன் படைத்தான் * நான்முகனும்

தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் *- யான் முகமாய்

அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளைச் *

சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து. 1

தேருங்கால் தேவன் ஒருவனே யென்று உரைப்பர் *

ஆருமறியார் அவன் பெருமை *- ஓரும்

பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும் *

அருள் முடிவது ஆழியான் பால். 2

பாலில் கிடந்ததுவும் பண்டரங்கம் மேயதுவும் *

ஆலில் துயின்றதுவும் ஆரறிவார்? *- ஞாலத்து

ஒரு பொருளை வானவர்தம் மெய்ப் பொருளை * அப்பில்

அருபொருளை யான் அறிந்தவாறு. 3.      திருவரங்கம்,

திருப்பாற்கடல்

ஆறு சடைக் கரந்தான் அண்டர் கோன் தன்னோடும் *

கூறுடைய னென்பதுவும் கொள்கைத்தே *- வேறொருவர்

இல்லாமை நின்றானை எம்மானை * எப்பொருட்கும்

சொல்லானைச் சொன்னேன் தொகுத்து. 4

தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம் *

வகிர்த்த வளை யுகிர் தோள் மாலே! *- உகத்தில்

ஒரு நான்று நீ யுயர்த்தி உள் வாங்கி * நீயே

அரு நான்கும் ஆனாய் அறி. 5

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் *

சிறியார் சிவப்பட்டார் * செப்பில் – வெறியாய

மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் *

ஈனவரே ஆதலால் இன்று. 6

இன்றாக நாளையே யாக * இனிச் சிறிதும்

நின்றாக நின்னருள் என் பாலதே *- நன்றாக

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் * நாரணனே !

நீ யென்னை யன்றி யிலை. 7

இலை துணை மற்றென் னெஞ்சே ! ஈசனை வென்ற *

சிலை கொண்ட செங்கண்மால் சேரா *- குலை கொண்ட

ஈரைந்தலையான் இலங்கையை யீடழித்த *

கூரம்பனல்லால் குறை. 8

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து *

மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் *- கறை கொண்ட

கண்டத்தான் சென்னி மேலேறக் கழுவினான் *

அண்டத்தான் சேவடியை யாங்கு. 9

ஆங்காரவார மது கேட்டு * அழலுமிழும்

பூங்கார ரவணையான் பொன் மேனி *- யாம் காண

வல்லமே யல்லமே? மாமலரான் வார் சடையான் *

வல்லரே யல்லரே ? வாழ்த்து. 10

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி * மகுடம்

தாழ்த்தி வணங்குமின்கள் தண்மலரால் *- சூழ்த்த

துழாய் மன்னு நீள்முடி என் தொல்லை மால் தன்னை *

வழா வண் கைகூப்பி மதித்து. 11

மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ

மதித்தாய் * மதிகோள் விடுத்தாய்! *- மதித்தாய்

மடுக்கிடந்த மாமுதலை கோள் விடுப்பான் ஆழி

விடற்கு * இரண்டும் போயிரண்டின் வீடு. 12

வீடாக்கும் பெற்றி யறியாது * மெய் வருத்திக்

கூடாக்கி நின்றுண்டு கொண்டுழல்வீர்! *- வீடாக்கும்

மெய்ப் பொருள் தான் வேதமுதற் பொருள் தான் * விண்ணவர்க்கு

நற்பொருள் தான் நாராயணன். 13

நாராயணன் என்னை யாளி * நரகத்துச்

சேராமல் காக்கும் திருமால் தன் *- பேரான

பேசப் பெறாத பிணச் சமயர் பேசக் கேட்டு *

ஆசைப் பட்டு ஆழ்வார் பலர். 14

பல தேவரேத்தப் படி கடந்தான் பாதம் *

மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த – வலராகில் *

மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் *

நீர்க்கண்டன் கண்ட நிலை. 15

நிலை மன்னும் என்னெஞ்சம் * அந்நான்று தேவர்

தலை மன்னர் தாமே மாற்றாகப் *- பல மன்னர்

போர் மாள வெங்கதிரோன் மாயப் பொழில் மறையத் *

தேராழியால் மறைத்தாரால். 16

ஆல நிழற் கீழ் அறநெறியை * நால்வர்க்கு

மேலை யுகத்துரைத்தான் * மெய்த் தவத்தோன் – ஞால

மளந்தானை ஆழிக் கிடந்தானை * ஆல் மேல்

வளர்ந்தானைத் தான் வணங்குமாறு. 17

மாறாய தானவனை * வள்ளுகிரால் மார்விரண்டு

கூறாகக் கீறிய கோளரியை *- வேறாக

ஏத்தி யிருப்பாரை வெல்லுமே * மற்றவரைச்

சாத்தி யிருப்பார் தவம். 18

தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை *

அவஞ்செய்த ஆழியாய் அன்றே *- உவந்து எம்மைக்

காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ * வைகுந்தம்

ஈப்பாயும் எவ்வுயிர்க்கும் நீ. 19

நீயே உலகெல்லாம் நின்னருளே நிற்பனவும் *

நீயே தவத் தேவ தேவனும் *- நீயே

எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் * அண்டத்து

இருசுடருமாய இவை. 20

இவையா ! பிலவாய் திறந்தெரி கான்ற *

இவையா ! எரிவட்டக் கண்கள் *- இவையா !

எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான் *

அரி பொங்கிக் காட்டு மழகு. 21

அழகியான் தானே அரியுருவன் தானே *

பழகியான் தாளே பணிமின் *- குழவியாய்த்

தானே ழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே *

மீனாய் உயிரளிக்கும் வித்து. 22

வித்துமிட வேண்டுங் கொல்லோ? * விடை யடர்த்த

பத்தி யுழவன் பழம் புனத்து *- மொய்த்தெழுந்த

கார்மேக மன்ன கருமால் திருமேனி *

நீர்வானம் காட்டும் நிகழ்ந்து. 23

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்

இகழ்ந்தாய் இருவரையும் வீயப் *- புகழ்ந்தாய்

சினப் போர்ச் சுவேதனைச் சேனாபதியாய் *

மனப்போர் முடிக்கும் வகை. 24

வகையால் மதியாது மண்கொண்டாய் * மற்றும்

வகையால் வருவதொன் றுண்டே ? *- வகையால்

வயிரங் குழைத்துண்ணும் மாவலி தானென்னும் *

வயிர வழக்கொழித்தாய் மற்று. 25

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை *

கற்றைச் சடையான் கரிக் கண்டாய் *- எற்றைக்கும்

கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா ! * யான் உன்னைக்

கண்டு கொள்கிற்குமாறு. 26

மால் தான் புகுந்த மட நெஞ்சம் * மற்றதுவும்

பேறாகக் கொள்வனோ? பேதைகாள் ! *- நீறாடி

தான் காண மாட்டாத தாரகலச் சேவடியை*

யான் காண வல்லேற்கு இது. 27

இது விலங்கை யீடழியக் கட்டிய சேது *

இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் *- இது விலங்கை

தானொடுங்க வில் நுடங்கத் தண்தாரி ராவணனை *

ஊனொடுங்க வெய்தா னுகப்பு. 28

உகப் புருவன் தானே ஒளி யுருவன் தானே *

மகப் புருவன் தானே மதிக்கில் *- மிகப்புருவம்

ஒன்றுக் கொன்று ஓசனையான் வீழ * ஒரு கணையால்

அன்றிக் கொண்டெய்தா னவன். 29

அவன் என்னை யாளி அரங்கத்து * அரங்கில்

அவன் என்னை யெய்தாமல் காப்பான் *- அவன் என்னது

உள்ளத்து நின்றான் இருந்தான் * கிடக்குமே

வெள்ளத் தரவணையின் மேல். 30             திருவரங்கம்

மேல் நான்முகன் அரனை யிட்ட விடு சாபம் *

தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் *- வானோர்

பெருமானை ஏத்தாத பேய்காள் ! * பிறக்கும்

கரு மாயம் பேசின் கதை. 31

கதைப் பொருள் தான் * கண்ணன் திரு வயிற்றினுள்ள

உதைப்பளவு போது போக்கின்றி *- வதைப் பொருள் தான்

வாய்ந்த குணத்துப் படாதது * அடைமினோ

ஆய்ந்த குணத்தானடி. 32

அடிச் சகடம் சாடி அரவாட்டி* யானை

பிடித்தொசித்துப் பேய்முலை நஞ்சுண்டு *- வடிப்பவள

வாய்ப் பின்னை தோளிக்கா வல்லேற் றெருத் திறுத்துக் *

கோப்பின்னு மானான் குறிப்பு. 33

குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த *

குறிப்பு எனக்கு நன்மை பயக்க *- வெறுப்பனோ ?

வேங்கடத்து மேயானை, மெய்வினை நோய் எய்தாமல்*

தான் கடத்தும் தன்மையான் தாள். 34      திருக்கோட்டியூர்,

திருவேங்கடம் திருப்பதி

தாளால் உலகம் அளந்த அசைவே கொல் ? *

வாளா கிடந்தருளும் வாய் திறவான் *- நீளோதம்

வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான் *

ஐந்தலை வாய் நாகத்தணை. 35                 திருவல்லிக்கேணி

நாகத்தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள் *

நாகத்தணை யரங்கம் பேரன்பில் *- நாகத்

தணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால் *

அணைப்பார் கருத்தனாவான். 36                திருவரங்கம்,

அன்பில்,

திருப்பேர்நகர்,

திருக்குடந்தை (கும்பகோணம்),

திருவெ:கா,

திருவெவ்வுள்,

திருப்பாற்கடல்

வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு *

தானுலவு வெங்கதிரும் தண்மதியும் *- மேல்நிலவு

கொண்டல் பெயரும் திசை யெட்டும் சூழ்ச்சியும் *

அண்டம் திருமா லகைப்பு. 37

அகைப்பில் மனிசரை, ஆறுசமயம்

புகைத்தான் * பொருகடல் நீர் வண்ணன் *- உகைக்குமேல்

எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் *

அப்போ தொழியு மழைப்பு. 38

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண *

இழைப்பன் திருக்கூடல் கூட * மழைப்பேர்

அருவி மணி வரன்றி வந்திழிய * யானை

வெருவி யரவொடுங்கும் வெற்பு. 39          திருவேங்கடம் திருப்பதி

வெற்பென்று வேங்கடம் பாடினேன் * வீடாக்கி

நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் *- கற்கின்ற

நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் *

கால் வலையில் பட்டிருந்தேன் காண். 40                    திருவேங்கடம் திருப்பதி

காண லுறுகின்றேன் * கல்லருவி முத்துதிர

ஓணவிழவி லொலியதிரப் *- பேணி

வருவேங்கடவா ! என்னுள்ளம் புகுந்தாய்

திருவேங்கட மதனைச் சென்று. 41            திருவேங்கடம் திருப்பதி

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை *

நின்று வினை கெடுக்கும் நீர்மையால் *- என்றும்

கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும் *

அடிக்கமல மிட்டேத்து மங்கு. 42                 திருவேங்கடம் திருப்பதி

மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானைக் *

கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் *- திங்கள்

சடையேற வைத்தானும் தாமரை மேலானும் *

குடையேறத் தாங்குவித்துக் கொண்டு. 43                     திருவேங்கடம் திருப்பதி

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்த் *

தண்ட வரக்கன் தலை தாளால் *- பண்டெண்ணிப்

போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே *

போம் குமரருள்ளீர்! புரிந்து. 44                      திருவேங்கடம் திருப்பதி

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம் *

பரிந்து படுகாடு நிற்பத் *- தெரிந்தெங்கும்

தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே *

வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு. 45             திருவேங்கடம் திருப்பதி

வைப்பன் மணிவிளக்கா மாமதியை மாலுக்கென்று *

எப்பொழுதும் கைநீட்டும் யானையை *- எப்பாடும்

வேடு வளைக்கக் குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே *

நாடு வளைத் தாடுதுமேல் நன்று. 46       திருவேங்கடம் திருப்பதி

நன்மணி வண்ணனூர் * ஆளியும் கோளரியும்

பொன் மணியும் முத்தமும் பூமரமும் *- பன்மணி நீ

ரோடு பொருதுருளும் கானமும் வானரமும் *

வேடுமுடை வேங்கடம். 47       திருவேங்கடம் திருப்பதி

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் *

வேங்கடமே மெய்வினை நோய் தீர்ப்பதுவும் *- வேங்கடமே

தானவரை வீழத் தன்னாழிப் படை தொட்டு *

வானவரைக் காப்பான் மலை. 48               திருவேங்கடம் திருப்பதி

மலை ஆமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றித் *

தலையாமை தானொரு கை பற்றி *- அலையாமல்

பீறக் கடைந்த பெருமான் திருநாமம்

கூறுவதே * யாவர்க்கும் கூற்று. 49

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா * தீ

மாற்றமும் சாரா வகை யறிந்தேன் *- ஆற்றங்

கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் *

உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு. 50  கவித்தலம்

எனக்காவார் ஆரொருவரே? * எம்பெருமான்

தனக்காவான் தானே மற்று அல்லால் *- புனக்காயா

வண்ணனே ! உன்னைப் பிறரறியார் * என் மதிக்கு

விண்ணெல்லா முண்டோ விலை?   51

விலைக் காட்படுவர் விசாதி யேற்றுண்பர் *

தலைக்காட் பலி திரிவர் தக்கோர் *- முலைக்கால்

விடமுண்ட வேந்தனையே வேறா ஏத்தாதார் *

கடமுண்டார் கல்லாதவர். 52

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன்

அல்லால் * ஒரு தெய்வம் யானிலேன் *- பொல்லாத

தேவரைத் தேவரல்லாரைத் * திருவில்லாத்

தேவரைத் தேறேன்மின் தேவு. 53

தேவராய் நிற்கும் அத்தேவும் * அத்தேவரில்

மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும் *- யாவராய்

நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார் *

கற்கின்ற தெல்லாம் கடை. 54

கடை நின்றமரர் கழல் தொழுது * நாளும்

இடை நின்ற இன்பத்தராவர் *- புடை நின்ற

நீரோத மேனி நெடுமாலே ! * நின்னடியை

யாரோத வல்லாரவர்? 55

அவரிவ ரென்றில்லை அனங்க வேள் தாதைக்கு *

எவரும் எதிரில்லை கண்டீர் *- உவரிக்

கடல் நஞ்ச முண்டான் * கடனென்று, வாணற்கு

உடன் நின்று தோற்றான் ஒருங்கு. 56

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையு மாவான் *

பெருங் குருந்தம் சாய்த்தவனே பேசில் *- மருங்கிருந்த

வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் * என்னெஞ்ச

மானவர் தாம் அல்லாததென் ? 57

என்னெஞ்ச மேயான் இருள் நீக்கி எம்பிரான் *

மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் *- என்னெஞ்சம்

மேயான் இல்லா விடையேற்றான் வெவ்வினை தீர்த்து *

ஆயானுக் காக்கினேன் அன்பு. 58

அன்பாவாய் ஆரமுதமாவாய் * அடியேனுக்கு

இன்பாவாய் எல்லாமும் நீயாவாய் *- பொன்பாவை

கேள்வா ! கிளரொளியென் கேசவனே ! கேடின்றி

ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள். 59

ஆட்பார்த் துழிதருவாய் கண்டு கொளென்றும் * நின்

தாட்பார்த் துழிதருவேன் தன்மையைக் *- கேட்பார்க்கு

அரும் பொருளாய் நின்ற அரங்கனே ! * உன்னை

விரும்புவதே விள்ளேன் மனம். 60.            திருவரங்கம்

மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னைக் *

தனக்கே தான் தஞ்சமாக் கொள்ளில் *- எனக்கே தான்

இன்று ஒன்றி நின்று உலகையேழ் ஆணை யோட்டினான் *

சென்று ஒன்றி நின்ற திரு. 61

திரு நின்ற பக்கம் திறவி தென்றோரார் *

கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் *- திருவிருந்த

மார்பின் சிரீதரன் தன் வண்டுலவு தண் துழாய்த்

தார் தன்னைச் * சூடித் தரித்து. 62

தரித்திருந்தே னாகவே தாரா கணப் போர் *

விரித்துரைத்த வெந்நாகத் துன்னைத் *- தெரித்தெழுதி

வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் *

பூசித்தும் போக்கினேன் போது. 63

போதானை இட்டிறைஞ்சி யேத்துமினோ * பொன் மகரக்

காதானை ஆதிப்பெருமானை *- நாதானை

நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்

சொல்லானைச் * சொல்லுவதே சூது. 64

சூதாவது என் நெஞ்சத்து எண்ணினேன் * சொல் மாலை

மாதாய மாலவனை மாதவனை *- யாதானும்

வல்லவா சிந்தித் திருப்பேற்கு * வைகுந்தத்து

இல்லையோ சொல்லீர் இடம். 65

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் * பண்டு

படநாகணை நெடிய மாற்குத் *- திடமாக

வையேன் மதிசூடி தன்னோடு அயனை நான் *

வையேன் ஆட் செய்யேன் வலம். 66

வலமாக மாட்டாமை தானாக * வைகல்

குலமாகக் குற்றந்தானாக *- நலமாக

நாரணனை நாபதியை ஞானப் பெருமானைச் *

சீரணனை யேத்தும் திறம். 67

திறம்பேன்மின் தொண்டீர் திருவடி தன் நாமம்

மறந்தும் புறந் தொழா மாந்தர் *- இறைஞ்சியும்

சாதுவராய்ப் போதுமின்க ளென்றான் * நமனும் தன்

தூதுவரைக் கூவிச் செவிக்கு. 68

செவிக்கின்ப மாவதுவும் செங்கண் மால் நாமம் *

புவிக்கும் புவியதுவே கண்டீர் *- கவிக்கு

நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் * பார்க்கில்

மறைப் பொருளும் அத்தனையே தான். 69

தானொருவனாகித் தரணி யிடந்தெடுத்து *

ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் *- யானொருவன்

இன்றா அறிகின்றே னல்லேன் * இருநிலத்தைச்

சென்றாங்கடிப் படுத்த சேய். 70

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் *

ஆயன் துவரைக் கோனாய் நின்ற – மாயன் * அன்று

ஓதிய வாக்கதனைக் கல்லார் * உலகத்தில்

ஏதிலராய் மெய்ஞ்ஞானமில். 71                   துவாரகை (துவரை)

இல்லற மில்லேல் துறவற மில்லென்னும்

சொல் * அறமல்லனவும் சொல்லல்ல *- நல்லற

மாவனவும் நால்வேத மாத்தவமும் * நாரணனே

யாவது ஈதன்றென்பா ரார்?   72

ஆரே யறிவார் ?, அனைத்துலகும் உண்டுமிழ்ந்த *

பேராழியான் தன் பெருமையைக் *- கார் செறிந்த

கண்டத்தான் எண்கண்ணான் காணான் * அவன் வைத்த

பண்டைத் தானத்தின் பதி. 73

பதிப் பகைஞர்க் காற்றாது பாய் திரை நீர்ப் பாழி *

மதித்தடைந்த வாளரவந் தன்னை *- மதித்து அவன் தன்

வல்லாகத்து ஏற்றிய மாமேனி மாயவனை *

அல்லாது ஒன்றேத்தாது என் நா. 74

நாக் கொண்டு மானிடம் பாடேன் * நலமாகத்

தீக்கொண்ட செஞ்சடையான் சென்று * என்றும் – பூக்கொண்டு

வல்லவாறு ஏத்த மகிழாத * வைகுந்தச்

செல்வனார் சேவடி மேல் பாட்டு. 75

பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும் *

ஈட்டிய தீயும் இரு விசும்பும் *- கேட்ட

மனுவும் சுருதி மறை நான்கும் * மாயன்

தன மாயையில் பட்ட தற்பு. 76

தற்பென்னைத் தானறியானேலும் * தடங்கடலைக்

கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் *- எற்கொண்ட

வெவ்வினையும் நீங்க விலங்கா மனம் வைத்தான் *

எவ்வினையும் மாயுமால் கண்டு. 77

கண்டு வணங்கினார்க்கு என்னாங் கொல் ? * காமனுடல்

கொண்ட தவத்தாற்கு உமை யுணர்த்த *- வண்டலம்பும்

தாரலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து * அங்

காரலங்க லானமையால் ஆய்ந்து. 78

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை * அன்பினால்

வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் *- ஏய்ந்த தம்

மெய் குந்தமாக விரும்புவரே * தாமும் தம்

வைகுந்தம் காண்பார் விரைந்து. 79

விரைந்தடைமின் மேலொரு நாள் வெள்ளம் பரக்கக் *

கரந்துலகம் காத்தளித்த கண்ணன் *- பரந்துலகம்

பாடின ஆடின கேட்டுப் * படுநரகம்

வீடின வாசற் கதவு. 80

கதவு மனமென்றும் காணலா மென்றும் *

குதையும் வினையாவி தீர்ந்தேன் *- விதையாக

நல் தமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய் *

கற்ற மொழியாகிக் கலந்து. 81

கலந்தான் என்னுள்ளத்துக் காமவேள் தாதை *

நலந்தானும் ஈதொப்பதுண்டே ? *- அலர்ந்தலர்கள்

இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் * என்றிவர்கள்

விட்டேத்த மாட்டாத வேந்து. 82

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய் *

மாந்தராய் மாதாய் மற்றெல்லாமாய்ச் *- சார்ந்தவர்க்குத்

தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் *

பின்னால் தான் செய்யும் பிதிர். 83

பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் தன்னோடு *

எதிர்வன் அவன் எனக்கு நேரான் *- அதிரும்

கழற்கால மன்னனையே கண்ணனையே * நாளும்

தொழக் காதல் பூண்டேன் தொழில். 84

தொழில் எனக்குத் தொல்லை மால் தன்னாம மேத்தப் *

பொழுது எனக்கு மற்றதுவே போதும் *- கழி சினத்த

வல்லாளன் வானரக் கோன் வாலி மதனழித்த *

வில்லாளன் நெஞ்சத்துளன். 85

உளன் கண்டாய் நன்னெஞ்சே, உத்தம னென்றும்

உளன் கண்டாய் * உள்ளுவா ருள்ளத்து – உளன் கண்டாய் *

தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கும் *

என்னொப்பார்க் கீசனிமை. 86

இமயப் பெருமலை போல் * இந்திரனார்க்கிட்ட

சமய விருந்துண்டு ஆர் காப்பார்? *– சமயங்கள்

கண்டான் அவை காப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு *

உண்டா னுலகோ டுயிர். 87

உயிர் கொண் டுடலொழிய ஓடும் போதோடி *

அயர்வென்ற தீர்ப்பான் பேர் பாடிச் *- செயல் தீரச்

சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் * சிறு சமயப்

பந்தனையார் வாழ்வேல் பழுது. 88

பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம் *

வழுவா வகை நினைந்து வைகல் – தொழுவாரைக் *

கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து *

விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு. 89      திருப்பாற்கடல்

வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார் * வேங்கடத்தான்

பால் திருந்தி வைத்தாரே பல்மலர்கள் *- மேல் திருந்தி

வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் * மற்றவர்க்கே

தாழ்வாயிருப்பார் தமர். 90       திருவேங்கடம் திருப்பதி

தமராவார் யாவர்க்கும் தாமரை மேலாற்கும் *

அமரர்க்கும் ஆடரவார்த்தாற்கும் *- அமரர்கள்

தாள் தாமரை மலர்களிட்டிறைஞ்சி * மால் வண்ணன்

தாள் தாமரை யடைவோ மென்று. 91

என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத்தே வைத்து *

நின்றும் இருந்தும் நெடுமாலை *- என்றும்

திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய் *

கருவிருந்த நாள் முதலாக் காப்பு. 92

காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன் *

ஆப்பு அங்கொழியவும் பல்லுயிர்க்கும் *- ஆக்கை

கொடுத்தளித்த கோனே! குணப்பரனே! * உன்னை

விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம். 93

மெய் தெளிந்தார் என் செய்யார்? வேறானார் நீறாகக் *

கை தெளிந்து காட்டிக் களப்படுத்து *- பைதெளிந்த

பாம்பினணையாய் ! அருளாய் அடியேற்கு *

வேம்பும் கறியாகுமேன்று. 94

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை *

ஆன்றேன் அமரர்க் கமராமை * – ஆன்றேன்

கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு மேலை

இடநாடு காண இனி. 95              பரமபதம்

இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்

இனியறிந்தேன் எம்பெருமான்! உன்னை *- இனியறிந்தேன்

காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ * நற்கிரிசை

நாரணன் நீ நன்கறிந்தேன் நான். 96

நான்முகன் திருவந்தாதி முற்றும்

திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.