ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
பிள்ளைலோகம் ஜீயர் அருளிச்செய்த திருவாசிரியத் தனியன் வ்யாக்யானம்
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச்செய்த
தனியன்
காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து
ஆசிரியப்பா வதனாலரு மறைநூல் விரித்தானைத்
தேசிகனைப் பராங்குசனைத் திகழ் வகுளத்தாரானை
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே.
பதவுரை –
காசினியோர்தாம் – இப்பூமியிலுள்ள மநுஷ்யர்கள்
(உய்யும்பொருட்டு)
கலியுகத்தே – கலியுகத்தில்
வந்து – (பரமபதத்தில் நின்றும்) வந்து
உதித்து – அவதரித்து
ஆசிரியப்பா அதனால் – ஆசிரியப்பா என்னும் பாட்டுக்களாலே
அரு மறை நூல் – சிறந்த வேதமாகிற ஶாஸ்த்ரத்தை
விரித்தானை – பரப்பியவரும்
தேசிகனை – (எல்லாருக்கும்) ஆசார்யரும்
திகழ் வகுளத் தாரானை – விளங்கா நின்றுள்ள மகிழம்பூ மாலையை அணிந்தவருமான
பராங்குசனை – நம்மாழ்வாரை
மாசு அடையா – அழுக்கற்ற
மனத்து வைத்து – மனஸ்ஸிலே வீற்றிருக்கச் செய்து
மறவாமல் – மறவாதபடி
வாழ்த்துதுமே – மங்களாஶாஸநம் பண்ணக் கடவோம்.
அவதாரிகை – (காசினியோர் தாம் வாழ) திருவாசிரியமாகிய திவ்ய ப்ரபந்த தர்ஶியாய், தேஶிகராயிருக்கிறவரை நிர்மலமான ஹ்ருதயத்திலே வைத்து விஸ்ம்ருதி யின்றிக்கே நிரந்தர மங்களாஶாஸநம் பண்ணுங்கோள் என்கிறது.
வ்யாக்யானம் – (காசினியோர் தாம்வாழ) கண்டதுக்குமேல் ஒன்றறியாத பூமியிலுண்டான மநுஷ்யர் ஜீவிக்க, (கலியுகத்தே வந்துதித்து) “கலௌ புந: பாபரதாபிபூதே – பக்தாத்மநா – ஸ உத்பபூவ” என்கிறபடியே ஜ்ஞாநத்துக்கு அடைவில்லாத கலிகாலத்திலே யுகவர்ணக்ரமாவதார மென்னலாம்படி, ஆழ்வார் அவதரித்தருளி னாராயிற்று. (வந்துதித்த) லோகாந்தரத்தில் நின்றும் இங்கே வந்துதித்தார் என்னுமது தோற்றுகிறது “முன்னே வந்துதித்து” (உபதேச ரத் – 7) என்னுமாபோலே. வகுளபூஷண பாஸ்கரோதயமிறே (ஶடகோபாஷ்டகம் – 4). மேலே “வகுளத்தாரானை” என்றிறே இருக்கிறது.
அவதரித்துச் செய்த கார்யமின்னதென்கிறது மேல். (ஆசிரியப்பாவதனால் அருமறைநூல் விரித்தானை) என்று. தமிழுக்கு அனேகம் பாக்கள் உண்டாயிருக்கவும் ஆசிரியப்பாவாலே யாயிற்று திருவாசிரியம் அருளியது. அருமறைநூல் விரிக்கையாவது – அரிய வேதமாகிற ஶாஸ்த்ரத்தை விஸ்த்ருதமாக்கி அதுவே நிரூபகமாம்படி யானவரை. அருமறை நூலை வண்டமிழ் நூலாக்கினவரை (திருவாய் – 4.5.10) (தேசிகனைப் பராங்குசனை) வேதார்த்த தர்ஶியான பராங்குஶ தேஶிகரை. (திகழ் வகுளத் தாரானை) விளங்கா நின்றுள்ளத் திருமகிழ்மாலையைத் திருமார்பிலே உடையவரை. “தண்டுளவத்தாரானை” என்னுமாபோலே. “தாமம் துளவோ வகுளமோ” என்னக்கடவதிறே. (மாசடையா மனத்து வைத்து) “மாசற்றார் மனத்துளானை” (திருமாலை – 22) என்றும், “தெளிந்தவென் சிந்தையகங்கழியாமே” (திருவாய் – 9.2.4) என்றும், நிர்மலமான மநஸ்ஸிலே வைத்து. “வண்குருகைக் கோனாரும் நம்முடை குடிவீற்றிருந்தார்” என்னும்படி ஸஹ்ருதயமாக வைத்து. பரமஹம்ஸராகையாலே மாநஸபத்மாஸநத்திலேயிறே இருப்பது. (வகுளத்தாரானை மாசடையா மனத்து வைத்து) “நாட்கமழ் மகிழ்மாலை மார்வினன் மாறன் சடகோபன்” (திருவாய் – 4.10.11) என்னும்படியான ஆழ்வாரை. “சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கிசையும் பெரியவர் சீர்” (இராமாநுச நூற்ற – 18) என்னும்படி ஶுபாஶ்ரயமாக பாவித்து பக்தி பண்ணிவைத்து.
(மறவாமல் வாழ்த்துதுமே) விஸ்ம்ருதி யின்றிக்கே இவ்விருப்புக்கு மங்களாஶாஸநம் பண்ணுவோம். அவரும் “ஊழிதோறூழி ஓவாது வாழியவென்று யாம் தொழவிசையுங்கொல்” (திருவாசி – 4) என்றாரிறே.
இத்தால் – ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹமே ஶுபாஶ்ரயமென்னுமத்தையும், மங்களாஶாஸந விஷய மென்னுமத்தையும் சொல்லிற்றாயிற்று.
திருவாசிரியத் தனியன் வ்யாக்யானம் முற்றிற்று.
பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே ஶரணம்
அவதாரிகை
திருவிருத்தத்தில், ஸர்வேஶ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்கக் கண்டு, அவனுடைய நித்ய விபூதி யோகத்தையும் லீலாவிபூதி யோகத்தையும் அநுஸந்தித்து, நித்யவிபூதியிலுள்ளார் நிரதிஶயாநுபவமே யாத்ரையாயிருக்கிற படியையும், அதுண்டறுகைக்கீடான ஆரோக்யத்தை உடையராயிருக்கிற படியையும், இவ்வருகுள்ளார் கர்மபரதந்த்ரராய், இதரவிஷயங்களிலே ப்ரவணராய், தண்ணிதான தேஹயாத்ரையே போகமாயிருக்கிறபடியையும் அநுஸந்தித்து, ப்ராதாக்களிலே சிலர் ஜீவிக்க ஒருவன் குறைய ஜீவிக்கப் புக்கால் தன் குறையை யநுஸந்தித்து வெறுக்குமாபோலே, ஸர்வேஶ்வரனோடே நித்யாநுபவம் பண்ணுகிறவர்களோடொக்கத் தமக்கு ப்ராப்தி உண்டாயிருக்கச் செய்தேயும் தாமத்தை இழந்திருக்கிறபடியை அநுஸந்தித்து, “இதுக்கடி தேஹஸம்பந்தம்” என்று பார்த்து, இத்தைக் கழித்துக் கொள்ளலாம் வழி தம் பக்கலில் ஒன்றுங்காணாமையாலே “இந்த ப்ரக்ருதி ப்ராக்ருதங்களினோட்டை ஸம்பந்தத்தை அறுத்துத் தரவேணும்” என்று அவன் திருவடிகளிலே தம்முடைய தசையை விண்ணப்பம் செய்தார். இது பின்னை முதற்பாட்டுக்குக் கருத்தன்றோவென்னில், முதலிலேயும் இப்பாசுரத்தை அருளிச்செய்து, முடிவிலேயும் “அழுந்தார் பிறப்பாம் பொல்லாவருவினை” என்று உபக்ரம உபஸம்ஹாரங்கள் ஏகரூபமாயிருக்கையாலே இப்ரபந்தத்திற்குத் தாத்பர்யமும் அதுவே. தாம் நினைத்தபோதே தம்முடைய அபேக்ஷிதம் கிடையாமையாலே பிறந்த ஆற்றாமையை ஆவிஷ்கரித்தபடி நடுவில் பாட்டுக்களடைய,
ஸர்வேஶ்வரனுக்கு இவரபேக்ஷிதம் சடக்கெனச் செய்யப்போகாது; அதுக்கடி – ஶரதல்பத்திலே கிடந்த ஶ்ரீபீஷ்மரைக்கொண்டு நாட்டுக்குச் சிறிது வெளிச்சிறப்பைப் பண்ணிக் கொடுத்தாற்போலே, இவரை இடுவித்துச் சில ப்ரபந்தங்களை ப்ரவர்த்திப்பித்து ஸம்ஸாரத்தைத் திருத்த நினைத்தவனாகையாலே, இங்கே வைக்கலாம்படியல்ல இவருடைய த்வரை. “இவர்தாம் நிர்ப்பந்தம் பண்ணுகிறதும் அவ்வருகே போய் நம்முடைய குணாநுபவம் பண்ணுகைக்காகவிறே; இவை தன்னை யநுபவிப்போம்” என்று பார்த்துத் தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க, தேஹத்தினுடைய தண்மையை அநுஸந்திப்பதற்கு முன்பு காட்டிக் கொடுத்தது இவையேயாகிலும் “அவ்வருகேபோய் அநுபவிப்பதுமோர் அநுபவமுண்டு” என்று தோற்றாதபடி ஒரு வைஶத்யத்தைப் பிறப்பிக்க, அவற்றிலே அந்யபரராய் அநுபவிக்கிறார்.
ஸ்வரூப ரூப குணங்களென்றிறே அடைவு; ஸ்வரூபத்தைவிட்டு ரூபத்திலே இழிந்து அநுபவிக்கவேணும் என்கிறாராயிற்று. தான் துவக்குண்டிருப்பதும் இதிலேயாகையாலே. இனி இவ்வஸ்து தான் நேர்கொடுநேரே அநுபவிக்கவொண்ணாதபடி முகத்திலே அலையெறிகையாலே கிண்ணகத்திலிழிவார் மிதப்புக் கொண்டிழியுமாபோலே “உபமான முகத்தாலே இழிந்தநுபவிக்கவேணும்” என்று பார்த்தார். ஸர்வதா ஸாம்யமில்லாதொரு வஸ்துவாகையாலே பகவத்விஷயத்துக்கு உபமானமாகச் சொல்லலாவதுதானில்லை; ஆனாலும் அல்ப ஸாத்ருஶ்யமுள்ள தொன்றைப்பற்றி இழியவேணுமிறே. ஒரு மரகதகிரியையாயிற்று உபமானமாகச் சொல்லுகிறது. அதின் பக்கல் நேர்கொடுநேர் கொள்ளலாவது ஒன்றில்லையாகையாலே அது தன்னை ஶிக்ஷித்துக் கொண்டிழிகிறார். ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தைப் பற்றினவோபாதி ரூபந்தன்னையும் விட்டு உபமாநத்திலே இழிந்து அது தனக்கொப்பனை தேடியெடுத்துப் பேசுகிறார்.
நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாசிரியம்
முதற்பாட்டு
செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதி சூடி அஞ்சுடர்மதியம் பூண்டு
பலசுடர் புனைந்த பவளச்செவ்வாய்
திகழ்பசுஞ் சோதிமரதகக்குன்றம்
கடலோன் கைமிசைக் கண்வளர்வதுபோல்
பீதகவாடைமுடி பூண்முதலா
மேதகுபல் கலனணிந்து சோதி
வாயவுங் கண்ணவுஞ் சிவப்ப மீதிட்டுப்
பச்சைமேனி மிகப்பகைப்ப
நச்சுவினைக் கவர்தலை யரவினமளியேறி
எறிகடல் நடுவு ளறிதுயிலமர்ந்து
சிவனயனிந்திர னிவர் முதலனைத்தோர்
தெய்வக்குழாங்கள் கைதொழக்கிடந்த
தாமரையுந்தித் தனிப்பெருநாயக
மூவுலகளந்த சேவடியோயே. (1)
பதவுரை –
செக்கர் மாமுகிலுடுத்து – சிவந்த பெரிய மேகத்தை அரையிலே கட்டி
மிக்க செம் சுடர் – மிகவும் சிவந்த கிரணங்களையுடைய
பரிதி சூடி – ஸூரியனை ஶிரஸ்ஸிலே தரித்து
அம் சுடர் – அழகிய (குளிர்ந்த) கிரணங்களையுடைய
மதியம் பூண்டு – சந்திரனை அணிந்து
பல சுடர் – (நக்ஷத்ரங்களாகிற) அநேக தேஜஸ்ஸுக்களை
புனைந்த – தரித்துள்ளதாய்
பவளம் செம் வாய் – பவளம் போன்ற சிவந்த இடங்களையுடையதாய்
திகழ் பசும் சோதி – விளங்கும்படியான பச்சை நிறத்தை உடையதான
மரதக குன்றம் – மரதகமலையானது
கடலோன் கைமிசை – கடலுக்கதிபனான வருணனுடைய (திரைகளாகிற) கையின் மேலே
கண் வளர்வதுபோல் – நித்திரை செய்வது போல்
பீதகவாடை – பீதாம்பரம்
முடி – கிரீடம்
பூண் – கண்டி
முதலா – முதலான
மேதகு பல் கலன் அணிந்து – பொருந்தி தகுதியாயிருக்கிற பல ஆபரணங்களையும் அணிந்து
சோதி வாயவும் – ஒளிவிடா நின்றுள்ளத் திருப்பவளமும்
கண்ணவும் – திருக்கண்களும்
சிவப்ப – சிவந்திருக்கும்படியாகவும்
மீதிட்டு – மிக அதிகமான
பச்சை மேனி மிக பகைப்ப – பசுமை நிறமானது மிகவும் போட்டியிடும்படி யாகவும்
நச்சு வினை – (எதிரிகளை அழிக்கையில்) விஷத்தைப் போன்ற வ்யாபாரங்களை உடையனாய்
கவர் தலை – கவிழ்ந்திருந்துள்ள தலைகளை உடையனாய்
அரவு அமளி – ஆதிஶேஷனாகிற படுக்கையில்
ஏறி – ஏறி
எறி கடல் நடுவுள் – அலையெறியும்படியான கடலின் நடுவே
அறி துயில் அமர்ந்து – ஜகத்ரக்ஷண சிந்தையாகிற யோக நித்ரையை அடைந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் – சிவன், பிரமன், இந்திரன் இவர்கள் முதலான
அனைத்தோர் தெய்வ குழாங்கள் – எல்லா தேவர்களுடைய கூட்டங்களும்
கை தொழ – கைகூப்பி வணங்கும்படி
கிடந்த – பள்ளி கொண்டிருப்பவனும்
தாமரை உந்தி – (எல்லா உலகின் உற்பத்திக்கும் காரணமான) நாபீ கமலத்தை உடையவனும்
தனி பெரு நாயக – ஒப்பற்ற ஸர்வாதிகனுமாயிருப்பவனான எம்பெருமானே!
மூ உலகு அளந்த – மூன்று உலகங்களையும் அளந்த
சேவடியோயே – திருவடிகளை உடையவனே!
வ்யாக்யானம் – முதற்பாட்டு. (செக்கர்மா முகிலுடுத்து) ஆனையைக் கண்டார் “ஆனை ஆனை” என்னுமாபோலே, அநுபவஜநித ப்ரீதி உள்ளடங்காமையினாலே ஏத்துகிறார்.. ஶ்யாமமான நிறத்துக்குப் பரபாகமான சிவப்பை யுடைத்தாய், கொடுக்கும் கொய்சகமும் வைத்துடுக்கலாம்படியான அளவையுடைத்தாய், ஸௌகுமார்யத்துக்குச் சேர்ந்து குளிர்ந்திருக்கிற முகிலை அரையிலே பூத்தாற்போலே உடுத்து, (மிக்க செஞ்சுடர் பரிதி சூடி) “திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் உகபதுத்த்திதா” என்று சொல்லுகிறபடியே, ஸஹஸ்ர கிரணங்கள் என்றாற்போலே ஒரு ஸங்க்யை உண்டிறே ஆதித்யனுக்கு; அப்படி பரிச்சின்ன கிரணனன்றிக்கே அநேகமாயிரம் கிரணங்களை யுடையானொரு ஆதித்யன் வந்துதித்தாற்போலே யாயிற்று திருவபிஷேகமிருப்பது. மிக்க சிவந்திருந்துள்ள கிரணங்களையுடைய பரிதியைச்சூடி. (அஞ்சுடர் மதியம் பூண்டு) தன்னுடைய ஸ்வாபாவிகமா யிருந்துள்ள ப்ரதாபத்தாலே ஒருவருக்கும் கிட்டவொண்ணாதபடி இருக்கிற ஆதித்யனைப்போல் அன்றிக்கே சீதளமான கிரணங்களை உடையனாய், குறைதல், நிறைதல், மறுவுண்டாதலின்றிக்கே வைத்தக்கண் வாங்காதே கண்டிருக்க வேண்டும்படியான அழகையுடைய சந்திரனைப் பூண்டு. (பல சுடர் புனைந்த) மற்றும் பல நக்ஷத்ராதிகளையும் பூண்டு. (பவளச்செவ்வாய்) பவளமாகிற சிவந்த வாயையுடைத்தாய். உபமேயத்தில் வந்தால், பவளம் போலே சிவந்த அதரத்தை உடையனாய் என்றாகிறது. இங்கு பவளம் போலே சிவந்த இடங்களை உடைத்தாய் என்றாகிறது. (திகழ் பரஞ்சோதி மரதகக் குன்றம் கடலோன் கைமிசைக் கண் வளர்வதுபோல்) தனக்கிவ்வருகுள்ளவை எல்லாம் கீழாம்படி மிகைத்து உஜ்ஜ்வலமாகாநின்றுள்ள ஶ்யாமமான தேஜஸ்ஸையுடைத்தான மரகத கிரியானது கடலுக்கதிபதியான வருணனுடைய திரைக்கையிலே கண் வளர்வதுபோல், சாய்வதுபோலென்ன அமைந்திருக்க, உபமாநத்திலும் கூசி (கண் வளர்வதுபோல்) என்கிறார். திருமலை நம்பி எம்பெருமானாருக்கு ஒருவரை அடையாளம் சொல்லுகிற விடத்திலே “பொன்னாலே தோடு பண்ணினால் இடவொண்ணாதபடியான காதை உடையராயிருக்குமவரை அறிந்திருக்கை உண்டோ?” என்றாராம். (பீதகவாடை) “செக்கர் மா முகிலுடுத்து” என்கிறது. (முடி) “செஞ்சுடர் பரிதி சூடி” என்கிறது. (பூண்) “அஞ்சுடர் மதியம் பூண்டு” என்கிறது. இவை தொடக்கமாக (மேதகு பல்கலனணிந்து) “பல சுடர் புனைந்த” என்கிறத்தை. (மேதகு) ஸ்வரூபாநுரூபம் என்னும்படியாய் இருக்கை. மேவித் தகுதியாக என்னவுமாம். கீழ்ச் சொன்னவை முதலாகத் தகுதியாயிருந்துள்ள பல ஆபரணங்களை அணிந்து. அவன் விபூதியைப் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்கப் போகாததாயிருக்கை. பாஷ்யகாரர் அநேக பூஷணங்களை அருளிச் செய்து பின்னையும் ஆதி ஶப்தத்தாலே தலைக்கட்டுமாபோலே “பல்கலன்” என்று தலைக்கட்டுகிறார். “நூபுராதி அபரிமித திவ்ய பூஷண” என்பரிறே. (சோதிவாயவும் கண்ணவும் சிவப்ப) த்ருஷ்டாந்தத்திலே ஒன்றைச்சொல்லி இங்கே இரண்டைச் சொல்லுவானென் என்னில், அதுக்காகவிறே சிவந்த இடங்கள் என்கிறது. (மீதிட்டு) கீழ்ச்சொன்னவற்றாலும் அவற்றை நெருக்குகிறதன்னாலும் ஒன்றையொன்று ஸ்பர்த்தித்து ஶ்யாமமான நிறம் மிகவும் உஜ்ஜ்வலமாக; அவற்றையடைய நெருக்கி உள்ளேயிட்டுக்கொள்ளப் பார்த்ததான அத்தையுமழித்து ப்ரஸரிக்க. (நச்சுவினை) “வாயந்த மதுகைடபரும் வியிறுருகி மாண்டார்” என்கிறபடியே தனியிடத்திலும் எதிரிகளாய் வருவாரும் முடியும்படியான நச்சுத் தொழிலையுடைத்தாயிருக்கை. (கவர்தலை) பலதலைகளை உடைத்தாய். ஸ்வஸ்பர்ஶத்தாலே பணைத்ததென்றுமாம். ப்ரஜையை மடியில் வைத்திருக்கும் தாயைப்போலே, பெரிய பெருமாளை மடியிலே வைத்திருக்கும் தாய்தானாம். அநந்தாழ்வான் திருக்கோட்டியூருக்கு நடந்தவிடத்திலே பட்டரைக்கண்டு அவர் திருமேனியிலே இப்படி செய்தானாம். ஆண்டாளுக்கு முந்துற ஒரு பிள்ளையுண்டாய், அவனையிழக்க, “அங்ஙனே செய்யவொண்ணாது, இவன் ஜீவிக்கவேணும்” என்று எம்பெருமானார் பெரியபிராட்டியாருக்கு நீராட்டி, “மஞ்சணீர் குடித்த பிள்ளையாக வளர்க்கவேணும்” என்று காட்டிக் கொடுத்து அருளினாராயிற்று. அந்த வாஸனையாலே “பெரிய பிராட்டியார் மகன்” என்றுதான் பட்டரை அநந்தாழ்வான் சொல்லுவது.
(அரவினமளி) நாற்றம் குளிர்த்தி மென்மைகளையுடையனான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே ஏறி; படுக்கையிலே ஏறுகிறவிது தன் பேறாக விருக்கையாலே, நம்பெருமாள் ஆறுகால் சிவிகையை ஸாதரமாகப்பார்த்து ஏறியருளுமாபோலே பெரிய ஆதரத் தோடேயாயிற்று ஏறியருளுவது; அமளி – படுக்கை. (எறி கடல்நடுவுள்) ஸ்வஸந்நிதாநத்தாலே அலையெறிகிற கடலிலே. (அறிதுயிலமர்ந்து) அறிவே வடிவாகவுடைத்தா யிருந்துள்ள நித்ரையிலே பொருந்தி; அல்லாதார்க்கு முதல் தன்னிலே ஒன்று தோன்றாதே நெஞ்சிருண்டிருக்கும்; சக்ஷுராதிகரணங்களாலே பதார்த்த தர்ஶநம் பண்ணிப் போதுபோக்குவர்கள். அக்கண்தன்னையுஞ்
செம்பளித்தால் உள்ளோடு புறம்போடு வாசியற இருண்டிருக்கும். இவன்தான் திருக்கண்கள் செம்பளித்தால் ப்ரகாஸமுள்ளே உறைந்திருக்குமத்தனை. ஜகத்ரக்ஷணசிந்தை பண்ணுதல், த்யேயவஸ்து தனக்குப் புறம்பில்லாமையாலே ஸ்வாநுஸந்தாநம் பண்ணுதல் – திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்தருளினாலிருக்கும்படி. (சிவனயனிந்திரனிவர் முதலனைத்தோர் தெய்வக்குழாங்கள் கைதொழ) நாட்டுக்கு ஆஸ்ரயணீயராக ப்ரஸித்தரானவர்கள் தாங்கள் பக்தாபிமாநராய்த் தொழாநிற்பர்கள், ப்ரஹ்மாதிகள் தொடக்கமாக அநேக தேவதா ஸமூஹமானது தங்களிறுமாப்பைப்பொகட்டு, சாய்ந்தருளின அழகிலே தோற்று
எழுத்துவாங்கி நிற்பர்கள். இவர்கள் இப்படியே தொழா நின்றால் அவன் செய்வதென்னென்னில், – (கிடந்த) கடலிலே இழிந்த கொக்குத்திரள்கள் விக்ருதமாங்காட்டில் அக்கடலுக்கொரு வாசி பிறவாதிறே. ஏகரூபமாகச் சாய்ந் தருளுமாயிற்று. “சிலர் தொழாநிற்கக் கிடந்தோம்” என்கிறதுணுக்கும் பிறவாதாயிற்று ஐஸ்வர்யச்செருக்காலே. இவர்க்குமிரண்டும் ஸ்வரூபாந்தர்க்கதமாயிற்று. (தாமரை யுந்தி) ஸகல ஜகதுத்பத்திகாரணமான திருநாபி கமலத்தையுடையனாய்; இப்படியிருப்பார் அவ்வருகாரேனுமுண்டோ? என்ன, (தனிப்பெருநாயக) இத்தால் அவ்வருகில்லை என்னுமிடத்தைச் சொல்லுகிறது. அவ்வருகில்லையாகில் தன் னோடொக்கச் சொல்லலாவாருண்டோவென்னில்: தனி அத் விதீயநாயகன்; புறம்பேயுஞ்சிலரை நாயகராகச் சொல்லக் கடவது ஔபசாரிகம் ( ருத்ரம் ஸமாஶ்ரித தே,வா ருத்ரோ ப்ரஹ்மாணமாஶ்ரித: ) ப்ரஹ்மா மாஸ்ரிதோ ராஜந் நாஹம் கஞ்சிதுபாஸ்ரித}]) என்றாற் போலே ஆபேக்ஷிகமான ஐஸ்வர்யத்தையுடையராயிறே இவர்களிருப்பது. இவ்வருகுள்ளார்க்கெல்லாம் தான் நிர் வாஹகனாயிருக்கிறவோபாதி தனக்கவ்வருகொரு நிர்வா ஹகனையுடையனல்லாத அத்விதீயபரதேவதை; நிமித்தோ பாதநஸஹகாரிகளும் தானேயென்கை. (மூவுலகளந்த) தன்பக்கல் வந்து அநுபவிக்கமாட்டாதார்க்கு அவர்களிருந்த விடத்திலே சென்று அநுப,விப்பிக்கும். (சேவடியோயே) இழந்த இழவை மீட்டு ரக்ஷியாதே காதுகனானானேயாகிலும் விடவொண்ணாதபடியாயிற்று திருவடிகளின் போக்யதை யிருக்கிறபடி. கண்ணழிவற்ற அழகையும் குணங்களையும் அநுபவித்தார்.
@@@@@
இரண்டாம் பாட்டு
உலகுபடைத் துண்ட வெந்தை அறைகழல்
சுடர்பூந் தாமரை சூடுதற்கு அவாவா
ருயிருருகி யுக்க, நேரிய காத
லன்பி லின்பீன் றேறல் அமுத
வெள்ளத் தானாம் சிறப்புளிட்டு ஒருபொருட்
கசைவோ ரசைக, திருவொடு மருவிய
இயற்கை, மாயாப் பெருவிற லுலகம்
மூன்றி னொடுநல் வீடு பெறினும் (2)
பதவுரை–
உலகு படைத்து -(எல்லா) உலகங்களையும் ஸ்ருஷ்டித்து
உண்ட – (ப்ரளயகாலத்தில்) விழுங்கிய
எந்தை – என் ஸ்வாமியாகிய எம்பெருமானுடைய
அறை கழல் – சப்தியா நின்றுள்ள வீரக்கழலையுடைய திருவடிகளாகிற
சுடர் பூ தாமரை – ஜ்வலிக்கும்படியான அழகிய தாமரைப்பூவை
சூடுதற்கு – அணிவதற்காக
௮வா – ஆசையினால்
ஆர் – நிறைந்த
உயிர் உருகி உக்க – ஆத்மா வானது உருகிவிழ
நேரிய காதல் -(அதனால்) உண்டான (பக்திரூபமான) அன்பென்ன
அன்பில் -(பக்தியினா லுண்டான பரமபக்திரூபமான ) ப்ரீதியிலுள்ள
இன்பு – இனிமை என்ன, (இவைகளிலுள்ள)
ஈன் தேறல் அழத வெள்ளத்தானாம் – இனிமையின் வைலக்ஷண்யமாகிற அமுதக் கடலில் மூழ்கியிருக்கும்படியான
சிறப்பு விட்டு- மேன்மையை விட்டு,
ஒருபொருட்கு- கீழான புருஷார்த்தத்திற்காக
அசைவோர் – அல்லலுறுபவர்கள்,அசைக அலை யட்டும்
திருவொடு மருவிய – ஐஸ்வர்யத்துடன் கூடிய
இயற்கை – ஸ்வபாவத்தோடும்
மாயா பெரு விறல் – அழி யாத மிகுந்த ஆலத்தோடும்
உலகம் மூன்றினொடு – மூன்று உலகங்களோடும் கூட
நல் வீடு பெறினும் – மேலான புரு ஷார்த்த,மான மோக்ஷத்தைப் பெற்றலும் தெள்ளியோர் – தெளிந்த ஜ்ஞாநத்தையுடைய பெரியோர்களுடைய
குறிப்பு – அபிப்ராயம்
கொள்வது – (இவைகளை) பெறுகைக்கு
எண்ணுமோ – நினைக்குமோ?
அவதாரிகை: இரண்டாம் பாட்டு – (ஆதி,த்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் என்று கொண்டு த்யேயமாகச் சொல்லுகிற வஸ்துவினுடைய விக்ரஹவைலக்ஷண்யஞ் சொன்னார் முதற்பாட்டில்; அந்த த்யேய வஸ்துவின் பக்கல் பிறக்கும் பரபக்தி தொடங்கி ப்ராப்யாந்தர்க்க,த மாக இருக்கையாலே தத்; விஷயபக்தியே அமையுமென்கிறது இரண்டாம் பாட்டில். முதற்பாட்டில் வடிவழகும் மேன்மையும் நீர்மையுஞ்சொல்லிற்று; அவை கர்மஜ்ஞா நங்களினுடைய ஸ்த்தாநேயாய் நிற்க, அநந்தரம் பிறக்கும் பரபபுக்தி பரஜ்ஞாந பரமபக்திகளைப் பெறும்பேற்றுக்கவ் வருகில்லாத ப்ராப்யங்களென்கிறார். ஜ்ஞாநகர்மங்களினுடைய ஸ்த்தாநத்தில் அவனுடைய வடிவழகும் மேன்மையும் நீர்மையுமாக, அநந்தரம் பிறக்கும் பரபக்த்யாதிகளையிறே உத்தேயஶ்மாகச் சொல்லிற்று. அந்த ஜ்ஞாநகர்மங்களினுடைய ஸ்த்தாநத்திலே நிற்கிறவற்றை அநுபாஷிக்கிறார், “உலகுபடைத்துண்டவெந்தை அறைகழல் சுடர்ப் பூந்தாமரை” என்கிற இவ்வளவிலே.
வ்யாக்யானம் (உலகுபடைத்துண்ட) (ப,ஹு ஸ்யாம்) என்கிற ஸங்கல்பமாத்ரத்தாலே ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களையுமுண்டாக்கி, உண்டான இவற்றுக்கு ப்ரளயாபத்து வர. இவற்றையடைய வயிற்றிலேவைத்து ரக்ஷித்துப் பண்ணின வ்யாபாரத்தாலே கண்ணழிவற்ற மேன்மை சொல்லுகிறது. (எந்தை) ஸ்வாமித்வப்ரயுக்தமான மேன்மையை உடையனாயிருந்துவைத்து. எத்தனையேனும் தம்மை தாழ நினைத்திருந்தபடியாலே, தம்மைத் விஷயீகரித்தவத்தால் வந்த – நீர்மை சொல்லுகிறார். ”மூவுலகளந்த” இதினுடைய எல்லை தாமாக நினைத்திருக்கிறார். (அறை) த்,வநியநின்றுள்ள வீரக்கழலையுடைத்தாய், அத்யுஜ்ஜ்வலமாய் நிரதிஸய போக்யமாயிருக்கிற திருவடிகளை. இத்தால் அழகு சொல்லுகிறது. (தாமரை சூடுதற்கு) தாமரைபோலேயிருக்கிற திருவடிகளென்றவாறே (கதா புந:) என்ன வேண்டியிருக்குமிறே. (சூடுதற்கவாவாருயிர்) அத்தலையில் வைலக்ஷண்யத்தை அநுஸந்தித்தால் அவன்பக்கல்ருசிபண்ணியல்லது நில்லானிறே சேதநன். (சூடுதற்கவாவாருயிர்) சூடுகையிலே அவாவியிருக்கிற. ஆருயிர் -ஆசைப்படுகிற ஆத்மவஸ்து. (உருகியுக்க) அத்தலையில் வைலக்ஷண்யத்தை அநுஸந்தித்தவாறே அச்சேத்யமான ஆத்மவஸ்து த்ரவத்ரவ்யமாய், ஓரவயவியாக்கிக்காண வொண்ணாதபடி மங்கிற்றாயிற்று. (நேரியகாதல்) அந்த அவாவானது விலக்ஷணமானதொரு ஸங்கத்தையும் பிறப்பித்தது;(ஸங்காத் ஸஞ்ஜாயதே காம:) – அந்த ஸங்கந்தானொரு அன்பைப்பிறப்பித்தது. (த்ருவா ஸ்ம்ருதி:) இத்யாதிகளை நினைக்கிறது. விஷயம் குணாதிகவிஷயமாகையாலே அந்த அன்பிலே ஓரின்புண்டு-இனிமை; அதென் பட்டது? அதுதான் இனிதாயிருக்குமிறே. துஃக்காத்மகமான விஷயத்தைப்பற்றி வந்ததன்றிக்கே, ஸூஸூகம் கர்த்துமவ்யயம் என்கிறபடியே, ஸ்மர்த்தவ்ய விஷயத்தினுடைய ரஸ்யதையாலே இது தானே ரஸிக்குமிறே. அதுதானென்போலே? (ஈன்தேறல்) அம்ருதஸமுத்ரத்தில் கடைந்த அம்ருதம் போலே போக்யமாயிருக்கும் விஷயத்தினுடைய வைலலக்ஷண்யத்தாலே ௮துதான் (ஆநந்தமய:) என்கிற விஷயத்தைப்பற்றி வருகையாலே ஒரு ரஸஸாகரமாயிருக்குமிறே; விலக்ஷண விஷயமாகையாலும் இவனுடைய ருசியாலும் ஒருகடலிலே ஏகாகி விழுந்தாற்போலேயிருக்குமிறே. (அமுதவெள்ளத்தானாம்) இன்பவெள்ளத்திலே உளனாகையாகிற. (சிறப்புவிட்டு) இந்தப் பரமபபூக்திகளையுடையனாகையாகிறதிறே ஐஶ்வர்யம். அத்தைவிட்டு, (ஒருபொருட்கு) இத்தை விட்டால் இனிப் பெற நினைப்பது இவ்வருகே சிலவையிறே. அவையாகிறன – தர்மார்த்த காமமோக்ஷங்களில் சொல்லுகிறவையிறே; அவற்றை ஒன்றாக நினைத்திராத அநாதரந்தோற்ற ஒருபதார்த்தமெனகிறார். (அசைவோரசைக) அவைதான் இது போலே ஸுலபமாயிராது யதநித்துப் பெறவேண்டுமதாய், பெற்றால் ப்ரயோஜநம் அல்பமாயிருக்கும். அவற்றுக்கு ஆசைப்படுவார் அங்ஙனே க்லேஶப்படுக. (க்லேஶோதிகதர:) என்கிறபடியே நிரூபித்தால் துக்காத்மகமென்றாலும் நாட்டிலே சில புருஷர்கள் அவற்றை விரும்பா நின்றார்களேயென்ன; அறிவுகேடர் படியோ நான் சொல்லுகிறது? புத்திமான்கள் இவற்றை ஸ்வீகரிப்பதாக மநோரதிப்பார்களோ? (திருவொடு இத்யாதி) ஐஶ்வர்யம் நிலைநின்று அதுதானே யாத்ரையாயிருப்பது; இத்தாலும்பலமில்லையிறே போக்தாவுக்கு ஶக்தி வைகல்யமுண்டாகில்; அவனுமொருநாளுமழியாத மிடுக்கை யுடையனாவது; ஐஸ்வர்யந்தான் ப்ராதேஶிகமாவதன்றிக்கே த்ரைலோக்யமும் விஷயமாவது; இத்தோடேயடுத்து- நல்வீடு பெறினும்) நல்வீடென்று உத்தம -(புருஷார்த்தத்தைச் சொல்லுகையாலே. நடுவில் கைவல்ய புருஷார்த்தத்தைச் சொல்லிற்றாகிறது. இதுதான் பெறக் கடவதென்றிருக்கையன்றிக்கே இதிலே தோள்மாறும்படி யானாலும். (கொள்வதெண்ணுமோ) இவை ஸ்வீகரிக்கக் கடவதான மநோரத ஸமயத்திலேதானுண்டோ? ஐஸ்வர்யம் அஸ்திரமாகையாலே கழியுண்டது; ஆத்மலாபம் பரிச்சிந்நமாகையாலே கழியுண்டது; பகவத்புருஷார்த்தம் ஆசைப்பட்ட உடம்பையொழிய வேறோருடம்பைக் கொண்டு போய் அநுபவிக்குமதாகையாலே கழியுண்டது; அவ்வுடம்போடே இருக்கச்செய்தே பெறக்கடவதான பரபக்த்யாதிகளோடு இவை ஒவ்வாதே நிற்கிறவிடம் விசாரவிஷயமோ? ஆனாலுஞ் சிலபேர் நினையா நிற்கிறார் களேயென்னில்,- (தெள்ளியோர் குறிப்பு எண்ணுமோ) ஸாராஸாரவிவேகம் பண்ணியிருப்பார்க்கு மநோரத,த்துக்கு விஷயமல்ல; ஸாராஸார விவேகஜ்ஞர் நல்லதுக்கும் தீயதுக்குந் தரமிட்டுப் பிறந் (பிரித்தறிந்)து இருப்பார்கள். (ஸாராஸாரவிவேகஜ்ஞா: சூரியாம்ஸ:) ”கூடுமாசை” இத்யாதி.
@@@@@
மூன்றாம் பாட்டு
குறிப்பில்கொண்டு நெறிப்பட உலகம்
மூன்றுடன் வணங்கு தோன்று புகழாணை
மெய்பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகிச் சுடர் விளங்ககலத்து
வரைபுரை திரைபொரு பெருவரை வெருவுற
உருமுர லொலிமலி நளிர்கடற் படவர
வரசு உடல் தடவரை சுழற்றிய தனிமாத்
தெய்வத் தடியவர்க் கினிநா மாளாகவே
இசையுங்கொல் ஊழிதோ றூழி யோவாதே (3)
பதவுரை –
மூன்று உலகம் – மூன்று லோகங்களும்
நெறிபட – நல்வழியில் செல்லும்படியாக
குறிப்பில் கொண்டு – திருவுள்ளத்தில் நினைப்பவனாய்
உடன் வணங்கு – (அம்மூவுலகங்களும்) ஒருபடிப்பட்டுத் தொழுகையாகிற
தோன்று புகழ் – (ஶ்ருதி) ப்ரஸித்தமான புகழை உடையவனாய்
ஆணை மெய்பெற நடாய – தன் ஆணையை சரிவர நடத்துமவனாய்
தெய்வம் மூவரில் – ப்ரஹ்மா ருத்ரன் இந்திரன் என்னும் மூவரிலும்
முதல்வன் ஆகி – மேலானவனாய்
சுடர் விளங்கு – (ஆபரணங்களின்) ஒளியையுடைத்தான
அகலத்து – திருமார்பை உடையனாய்
வரைபுரை திரை – மலைபோன்ற அலைகள்
பொரு – மோதா நின்றதாய்
பெருவரை வெருவு உற – பெரிய பர்வதங்கள் நடுங்கும்படியாக
உருமு உரல் ஒலி மலி – இடியின் முழக்கம் போன்ற கோஷமானது மிகுந்திருப்பதான
நளிர்கடல் – குளிர்ந்த ஸமுத்ரத்தை
படம் அரவு அரசு – படங்களையுடைய ஸர்ப்பராஜாவாகிய வாஸுகியினுடைய
உடல் – ஶரீரத்தை
தடம் வரை சுழற்றிய – மிகப் பெரிய (மந்தர) மலையில் சுற்றிக் கடைந்தவனாய்
தனி மாத் தெய்வம் – ஒப்பற்ற பரதேவதையாய் உள்ளவனான எம்பெருமானுக்கு
அடியவர்க்கு – தாஸபூதர்களான ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு
இனி நாம் – இனி நாங்கள்
ஊழிதோறூழி – ஒவ்வொரு கல்பத்திலும்
ஓவாது – இடைவிடாமல்
ஆளாக – அடியவர்களாம்படி
இசையுங்கொல் – (இப்பேறு) பொருந்துமோ?
அவதாரிகை – மூன்றாம் பாட்டு. (குறிப்பித்யாதி) முதலிட்டிரண்டு பாட்டில், அதில் முற்பாட்டில் அவன் வடிவழகைப் பேசியநுபவித்தார்; அவன்றன்னைப் பெற்று அநுபவித்துக்கொண்டு இருக்குமிருப்பில் அவன் விஷயமாகப் பண்ணும் பக்தியே இனிதென்றார் இரண்டாம் பாட்டில். இப்பாட்டில் பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்னில், அவன் தொடங்கி ததீய ஶேஷத்வ பர்யந்தமாக என்கிறது.
வ்யாக்யானம் – (குறிப்பில் கொண்டு நெறிப்பட உலகம் மூன்றுடன் வணங்கு தோன்று புகழாணை மெய்பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வன்) என்று – இவனோடே அந்வயித்தல். (நெறிப்படக் குறிப்பில் கொண்டு) “பஹுஸ்யாம்” என்று ஸங்கல்பிக்கிறபடியே அரும்பும்படி திருவுள்ளத்திலே கொண்டு. ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த்த வஸ்த்துக்களும் நெறிப்படும்படியாக – வழிபடும்படியாகத் திருவுள்ளத்திலே கொண்டு என்றுமாம். இப்படி நெறிப்படுவார் சிலராய் சிலரன்றிக்கே இருக்கையன்றிக்கே (உலகம் மூன்று) தன்னையொழிந்தாரடையத் தன்னை ஆஶ்ரயிக்கும்படியாக, அது தன்னில் அந்யோந்ய மாஶ்ரயிப்பாரும் ஆஶ்ரயணீயருமாகிற வைஷம்யமுண்டேயாகிலும் தன்னளவிலே வந்தால் எல்லாருமொக்கக்கூடித் திருவடிகளிலே ஆஶ்ரயிக்கும்படிக்கீடாக. (உடன் வணங்கு) தனித்தான போதாயிற்று அவாந்தர விஷயமுள்ளது. இவன் பக்கலிலே எல்லாரும்கூடித் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பார்கள். இத்தால் வந்த ப்ரஸித்தி கிடந்தவிடம் தெரியாதபடி ஒருமூலையிலே அடங்கிக் கிடக்குமோவென்னில், (தோன்று புகழ்) ஶ்ருதி ப்ரஸித்தம். (ஆணை மெய்பெற நடாய) ஆஜ்ஞையை பத்தும்பத்தாக நடத்தா நிற்பானுமாய். (தெய்வம் மூவரில் முதல்வனாகி) தன்னையொழிந்த இருவரளவில் அவர்களுடைய ஶரீரத்துக்கும் ஆத்மாவுக்கும் நியாமகனாய், அஸாதாரண விக்ரஹத்தோடே நின்று அதுக்கு நியாமகனாய். அன்றிக்கே இந்திரனையுங்கூட்டி மூவரென்னவுமாம். (சுடர் விளங்க கலத்து) ஆபரணஶோபை உடைத்தான திருமார்பை யுடையனாய். அன்றிக்கே சந்த்ர ஸூர்யர்களாலே விளங்கா நின்றுள்ள ஆகாஶத்தில் பாழ் தீரும்படியாக வென்னுதல். (வரைபுரை இத்யாதி) அவன் ஆஶ்ரிதார்த்தமாகச் செய்யும் செயல்களில் இதொன்றும் அமையாதோ இவனே ஆஶ்ரயணீயன் என்னுமிடத்துக்கு? (வரைபுரை திரை) மலையோடொத்த திரை. அவை மலையும் மலையும் தாக்கினாற்போலே தன்னில்தான் பொருகிறபோது. (பெருவரை வெருவுற) குலபர்வதங்கள் நடுங்க. (உரு முரலொலி) அப்போது உருமு இடித்தாற்போலேயிருக்கிற த்வநியானது மிக. (நளிர் கடல்) பொறியெழக் கடையச் செய்தேயும் அவனுடைய கடாக்ஷமாத்ரத் தாலே கடல் குளிர்ந்தபடி; குமுறாதபடி நடுங்க என்னுதல் (படவரவரசு) ஒரு சேதனனைப்பற்றிக் கடையச் செய்தேயும் ஒரு நலிவின்றிக்கேயிருக்கையில் ஸ்வஸ்பர்ஶத்தால் வந்த ப்ரீதிக்கு போக்குவிட்டுப் படத்தை விரிக்கிற, அரவரசுண்டு – வாஸுகி, அதினுடைய உடலைச்சுற்றி. (தடவரை) கடலைக் கண்செறியிட்டாற்போலே இருக்கும் மந்தர பர்வதத்தைக் கொடுபுக்கு நட்டு. (சுழற்றிய) கடல் கலங்கிக் கீழ்மண்கொண்டு மேல்மண்ணெறிந்து அம்ருதம் படுமளவுஞ்செல்ல. தொட்டாற் கெல்லாம் நான் கடைந்தேன் என்று சொல்லலாம்படி தானே சுழன்று வரும்படியாகவாயிற்று கொடுபுக்கு வைத்த நொய்ப்பம். (தனிமாத்தெய்வம்) அத்விதீய பரதேவதை. இப்படி அத்விதீய பரதேவதைக்காளாகவோ ஆசைப்படுகிறதென்னில் (அடியவர்க்கு ப்ரயோஜநாந்தரபரரான தேவதைகளுக்காகத் தன்னுடைய உடம்புநோவக் கடலைக்கடைந்து அம்ருதத்தைக் கொடுத்த மஹோபகாரத்தை அநுஸந்தித்து அவன் நீர்மையிலே தோற்று எழுதிக் கொடுத்திருக்கும் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு. (இனி நாம்) ஆத்மஸத்தை உள்ளவன்று தொடங்கி பாகவதஶேஷமாய்ப் போருவது ப்ராப்தமாயிருக்க, கர்மத்தாலே “நான்” என்றும் “என்னது” என்றும் போந்தோம். இனி ஶேஷித்தக் காலமாகிலும் இவ்வஸ்து பாகவதஶேஷம் என்னுமிடத்தை அவன் காட்ட அவன் ப்ரஸாதத்தாலே கண்ட நாம். அவர்களோடொப்பூணாய் ஒத்தத்தரமாகவோ என்னில் (ஆளாக) ஶேஷபூதராக. அவர்களுக்கும் ஆளாய், “நான்” “எனக்கு” என்றிருக்கும் இருப்பும் கலந்து செல்லவோவென்னில், (ஆளாகவே) ஆளாந்தரமின்றிக்கே ஶேஷத்வமே வடிவாக. (இசையுங்கொல்) அவன் ஆள்பார்த்து உழிதருவனாகையாலே இவ்வர்த்தத்திலிவனை இப்போதாக இசைவிக்கவேண்டா “இவர் எப்போதோ” என்று பார்த்திருக்கிறா ராகையாலே இவர்க்கிசைவுண்டு, “இசையுங்கொல்” என்பானென்னென்னில் ; பாகவத ஶேஷத்வமாகையாகிறது கூடுவதொன் றல்லாமையாலே கூடாத அர்த்தமிங்கே கூடவற்றோ? என்கிறார். இதுதான் சிலகாலமாய்க் கழியவொண்ணாது. (ஊழிதோறூழி) கல்பந்தோறுமாகவேணும். அது தன்னிலும், (ஓவாதே) ஒரு க்ஷணமும் இடைவிடாதே ஆகவேணும். அவாப்த ஸமஸ்தகாமநாய், ஶ்ரீய:பதியாய், அயர்வறும் அமரர்களதிபதியான ஸர்வேஶ்வரன் ஸம்ஸாரிகளுடைய ரக்ஷணத்துக்காகத் தன்னைப் பேணாதே இங்கே வந்தவதரித்த விடத்து, துஷ்ப்ரக்ருதிகளான சிசுபாலாதிகள் அது பொறுக்கமாட்டாமே முடிந்து போனாற்போலே, இப்போது பாகவதர்களுடைய பெருமையறியாதே “இவர்களும் நம்மோடொக்க அந்நபாநாதிகளாலே தரியாநின்றார்களாகில் நம்மிற்காட்டில் வாசியென்?” என்று ஸஜாதீய புத்தி பண்ணி ஸம்ஸாரிகள் அநர்த்தப்படுகிறபடி. (கண்டு) அவதரித்த ஸர்வேஶ்வரன் இதர ஸஜாதீயனாமன்றிறே இவர்களும் ஸம்ஸாரிகளோடு ஸஜாதீயராவது.
@@@@@
நாலாம் பாட்டு
ஊழிதோ றூழி யோவாது வாழிய
வென்று யான் தொழவிசை யுங்கொல்
யாவகை யுலகமும் யாவருமில்லா
மேல்வரும் பெரும்பாழ் காலத்து இரும்பொருட்
கெல்லா மரும்பெறல் தனிவித்து ஒருதா
னாகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
யீன்று முக்கணீச னொடுதேவு பல நுதவி
மூவுலகம் விளைத்த வுந்தி
மாயக்கடவுள் மாமுத லடியே. (4)
பதவுரை –
யாவகை உலகமும் – எவ்வகைப்பட்ட லோகங்களும்
யாவரும் இல்லா – எவ்வகைப்பட்ட ப்ராணிகளும் இல்லாதவாறு
மேல் வரும் – முன்னரே கழிந்துபோன
பெரும்பாழ் காலத்து – மிகவும் நீண்ட (உலகம்) அழிந்து கிடந்த (ப்ரளய) காலத்திலே
இரும் பொருட்கு எல்லாம் – எண்ணற்ற ஜீவராசிகளுக்கெல்லாம்
பெறல் அரும் – அடைவதற்கு அரியனாய்
தனி ஒரு வித்து – ஒப்பற்றவனாய், ஸஹாயமற்றவனான, காரணவஸ்துவாக
தான் ஆகி – தானே நின்று
தெய்வம் நான்முகன் – தேவதையாகிய பிரமனென்னும்
கொழுமுளை – பூர்ணமான அங்குரத்தையும்
முக்கண் ஈசனொடு – மூன்று கண்களை உடைய ருத்ரனுடன்
பல தேவு – பல தேவதைகளையும்
ஈன்று – ஸ்ருஷ்டித்து
நுதலி – (இவர்களை ஸ்ருஷ்டி, ஸம்ஹாரங்களுக்காக) ஸங்கல்பித்து
மூ உலகம் – மூன்று லோகங்களையும்
விளைத்த – படைத்த
உந்தி – திருநாபியை உடையனாய்
மாயன் – ஆஶ்சர்ய ஶக்தியுக்தனாய்
கடவுள் – பரதேவதையாய்
மா முதல் – பரமகாரணபூதனான எம்பெருமானின்
அடி – திருவடிகளை
ஊழிதோறூழி – கல்பங்கள்தோறும்
ஓவாது – இடைவிடாமல்
“வாழிய” – “வாழவேண்டும்”
என்று – என்று
யாம் – நாம்
தொழ – (மங்களாஶாஸநம் செய்து) துதிக்க
இசையும் கொல் –நேர்படுமோ?
அவதாரிகை – நாலாம் பாட்டு. (ஊழிதோறூழி) கீழிற்பாட்டில் பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவென்னில், ஸர்வேஶ்வரன் தொடங்கி ததீயஶேஷத்வ பர்யந்தமாக அநுஸந்திக்கை என்றது. அப்படிப்பட்ட அநுஸந்தாநத்தை உடையரானார் பரிமாறும் பரிமாற்றம் இருக்கும்படி என்னென்னில் (ஊழிதோறூழி ஓவாது) வாழிய என்று “அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு” என்றாயிற்றிருப்பது. பெரியாழ்வார் “பல்லாண்டு” என்று ஆண்டாக்கி, அதுதன்னைப் பலவாக்கி, ஆயிரமாக்கி, அதுதன்னைக் கோடியாகப் பெருக்கி மங்களாஶாஸநம் பண்ணுகிறார். இவர் அவ்வளவமையாமல் முதலிலே கல்பத்தை விவக்ஷித்து அதுதன்னை மேன்மேலென பெருக்குகிறார்.
வ்யாக்யானம் – (ஊழிதோறூழி) கல்பந்தோறும் கல்பந்தோறும். அதுதான் நித்யாக்நிஹோத்ரமாக வொண்ணாது. (ஓவாது) ஒரு க்ஷணமும் இடைவிடாதே. இத்தால், மேலெல்லாம் கூடிச் செய்யப் புகுகிற தென்னென்னில் “வாழிய” என்னுமித்தனை. ஸர்வேஶ்வரனுடைய ஶேஷித்வத்தை உபக்ரமித்துத் ததீயஶேஷத் வத்தளவும் செல்ல அநுஸந்தித்து, அந்த ஶேஷத்வகாஷ்ட்டா ப்ராப்தியைக் கொண்டு அவன் திருவடிகளுக்கு மங்களாஶாஸநம் பண்ணுகிறது நித்யமாய்ச் செல்லவேணும். “ஆயுராஶாஸ்தே” என்று கண்டதடைய “எனக்கு” என்று போந்த நாம் இப்போது அது தவிர்ந்து (தொழ) தொழுகையாகிறது – மங்களாஶாஸநம் பண்ணுகையாயிற்று.
(இசையுங்கொல்) எனக்கென்று போந்த அது தவிர்ந்து உனக்கென்கையாகிறது நெடுவாசியிறே, கூடாத இப்பேற்றோடே கூடுவார்க்கு. இப்படி ப்ரார்த்திக்கிறது அவனுடைய எந்த செயலை அநுஸந்தித்தோ வென்னில் (யாவகை இத்யாதி) முன்பேயுள்ளதொரு வஸ்துவுக்கு ஒரு குணாதாநம் பண்ணினவளவன்றிக்கே முதலிலே அழிந்துகிடந்த வஸ்துவை அடிதொடங்கி உண்டாக்கி நமக்குப் பண்ணின மஹோபகாரத்துக்கு. (யாவகை உலகமும்) இங்ஙனிட்டு மூன்று லோகம் கழிந்து மேலே ஒரு லோகம் குடிவாங்கக் கடவதாய், அவ்வருகொன்று குடியிருக்கக் கடவதாயிருப்பதொரு ப்ரளயம் உண்டிறே; அப்படியன்றிக்கே எவ்வகைப்பட்ட லோகங்களும். அன்றிக்கே, (யாவருமில்லா) எல்லாருமொக்க லயிக்கச்செய்தே மார்க்கண்டேயாதிகள் “நித்யத்வம்” என்றலைவாருமுண்டிறே. அங்ஙனுமொருவ ரின்றிக்கே. (மேல்) மேலென்று – பண்டென்றபடி. (வரும்) என்றது போனவென்றபடி. பண்டுபோன. (பெரும் பாழ் காலத்து) கர்ஷகன் உவர்தரையை உவர்கழிய நீர் நிறுத்துமாபோலே விளைகைக்கு இவற்றினுடைய துர்வாஸநையை அழிக்கைக்காக ஒரு ப்ரஹ்மாவினுடைய ஆயுஸ்ஸித்னையும் அழித்திட்டு வைக்குமாயிற்று. (இரும்பொருட்கெல்லாம்) தேவமநுஷ்யாதி ரூபமாய், அஸங்க்யேயமாய், அசித் ஸம்ஸ்ருஷ்டங்களுமான ஜீவ வஸ்துக்களெல்லாம். (அரும்பெறல்) இவ்வளவில் வந்து முகம் காட்டுவானொருவனைக் கிடையாதிறே. ஆகையால் பெறுதற்கரிய (தனி வித்தொருதானாகி) நிமித்தோபாதாந ஸஹகாரி காரணத்ரயமும் தானேயாய். “வித்து” என்கையாலே காரணவஸ்துவென்கை. “தனி” என்கையாலே “ஏகோ ஹ வை” என்று அத்விதீயனென்கை. அன்றிக்கே, எங்களை உண்டாக்கவேணுமென்று அபேக்ஷிக்கைக் கொருவரில்லை என்கை. “ஒரு” என்கையாலே, இதுக்கு ஸஹகாரிகள் ஒருவருமில்லை என்கை. (தானாகி) கார்யரூபமான ப்ரபஞ்சத்துக் கெல்லாம் வேண்டும் காரணகணங்களெல்லாம் தானேயாய். இப்படி அண்டஸ்ருஷ்டியளவும் தானே உண்டாக்கி, இவ்வருகுள்ளவற்றை உண்டாக்குகைக்காகக் கோயிலுக்கு ஶ்ரீமதுரகவிதாஸரை நிர்வாஹகராக விட்டாற்போலே ப்ரஹ்மாவை இப்பாலுள்ள ஸ்ருஷ்டிக்காக உண்டாக்கினான். (தெய்வ நான்முகன்) இதர ஸஜாதீயனான சதுர்முகனாகிற. (கொழுமுளையீன்று) இவ்வருகில் கார்யவர்க்கத்தையடைய உண்டாக்குகைக்கீடான ஶக்தியையுடைய ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்து, அவனொருவனுமே மூன்று கார்யமும் செய்யமாட்டானே, அதற்காக (முக்கணீசனித்யாதி) ஸம்ஹாரக்ஷமனான ருத்ரனோடே கூட மற்றும் கார்யத்துக்கு வேண்டும் தேவதைகள் பலரையும் உண்டாக்கி. இவை பலரும் தேவைக்கெல்லாம் அவன் பண்ணின வ்யாபாரமென்னென்னில், (நுதலி) “பஹு ஸ்யாம்” என்று ஸங்கல்பித்து. “நுதலி” என்றது – கருதி என்றபடி. (மூவுலகம் விளைத்த) கீழும் மேலும் நடுவுமான லோகங்களை உண்டாக்கிற்று அவன் திருவுந்தியாயிற்று. அவனையொழியவே தானே இவையடைய உண்டாக்கிற்றாயிற்றுத் திருவுந்தி. திருவுந்தி என்றொரு பத்மமாய், அதடியாகவாயிற்று லீலாவிபூதியடைய உண்டாக்கிற்று. (மாயக்கடவுள்) ஆஶ்சர்யஶக்தியுக்கதனான பரதேவதை. (மா முதல்) பரமகாரணமான மாயக்கடவுள் என்னுதல்; மாயக்கடவுளா னவனுடைய மாமுதலடி என்னுதல். ஆஶ்சர்யஶக்தியுக்தனான பரதேவதையான பரமகாரணபூதனானவனுடையத் திருவடி என்னுதல் அவனுடைய பரமப்ராப்யமான திருவடிகளென்னுதல். (அடியே வாழியவென்று யாம் தொழ இசையுங்கொல்) “உன் சேவடி செவ்வித் திருக்காப்பு” என்கிறபடியே.
@@@@@
ஐந்தாம் பாட்டு
மாமுதலடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி
மண்முழுது மகப்படுத்து ஒண்சுட ரடிப்போ
தொன்று விண்செலீஇ நான்முகப் புத்தேள்
நாடுவியந் துவப்ப வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ தாமரைக் காடு
மலர் கண்ணொடு கனிவா யுடையது
மாய் இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன
முடிதோ ளாயிரந் தழைத்த
நெடியோய்க் கல்லது மடியதோ வுலகே. (5)
பதவுரை –
மா முதல் – பரமகாரணனான (உன்னுடைய)
அடி – திருப்பாதமாகிற
ஒன்றுபோது – ஒரு (சிவந்த தாமரைப்) பூவை
கவிழ்த்து அலர்த்தி – கவிழ்த்துப் பரப்பி
மண் முழுதும் அகப்படுத்து – பூமி பரப்பையெல்லாம் கைப்பற்றியும்
ஒண் – அழகிய
சுடர் – தேஜஸ்ஸையுடைய
போது – புஷ்பம் போன்றதான
ஒன்று அடி – மற்றொரு திருவடியை
நான்முகன் புத்தேள் – பிரமனாகிற தேவதையின்
நாடு வியந்து உவப்ப – லோகமானது அதிசயப்பட்டு மகிழ்ச்சியுறவும்
வானவர் – (அவ்வுலகத்திலுள்ள) தேவதைகள்
நெறீஇ – சரியான வழியில் செல்லுகையை
முறை – முறையிடுகிற
முறை – ஶாஸ்த்ர வழிப்படி
வழிபட – வணங்கும்படியும்
விண் – ஆகாஶத்தில்
செலீஇ – செலுத்தியும்
தாமரை காடு – தாமரைப் பூக்கள் நிறைந்த காடு
மலர் – புஷ்பித்தாற்போலிருக்கிற
கண்ணோடு – திருக்கண்களோடுகூட
கனி வாய் உடையதுமாய் – பழம் போன்ற (சிவந்த) திருப்பவளத்தை உடையவனாய்
இரு – பரந்த (அநேகமான கிரணங்களையுடைய)
ஆயிரம் நாயிறு – ஆயிரம் ஸூர்யர்கள்
மலர்ந்தன்ன – உதித்தாற்போலே இருக்கிற
முடி பற்பல – பல கிரீடங்களையும்
கற்பகக் காவு அன்ன – கற்பகவநம் போலிருக்கிற
தழைத்த – ஓங்கி வளர்ந்துள்ள
ஆயிரம் தோள் – ஆயிரம் திருத்தோள்களை உடையவனாய்
நெடியோய்க்கு அல்லதும் – எல்லோருக்கும் மேலானவனாய் விளங்குகிற எம்பெருமானையொழிந்த மற்றெவர்க்கும்
உலகு – இவ்வுலகமானது
அடியதோ – அடிமைப் பட்டதோ?
அவதாரிகை – ஐந்தாம் பாட்டு. (மாமுதலடி இத்யாதி) “மாமுதலடியே வாழியவென்று யாம் தொழ இசையுங்கொல்” என்றார் கீழ். நமக்கு மங்களாஶாஸநம் பண்ணப்புக்க உமக்குக் கருத்தென்னென்னில் உறங்குகிற ப்ரஜைக்குத் தானறிந்தபடி ஹிதம் பார்க்கும் தாயைப்போலே நீ பண்ணின உபகாரம் அறிகைக்கடி ஒருவருமின்றியே இருக்க, அழிந்து கிடந்தவற்றை உண்டாக்கி, உண்டானவற்றுக்குக் காவலாக திக்பாலாதிகளை அடைத்துவிட்ட அநந்தரம், சிறியத்தைப் பெரியது நலியாதபடி நீ நாட்டுக்காவலாக நிறுத்தின இந்திரன், ஒரு ஆஸுரப்ரக்ருதியான மஹாபலிகையிலே ராஜ்யத்தைப் பறிகொடுத்துக் கண்பிசைய, “முதலிலே இவற்றை உண்டாக்கினோம், அநந்தரமாக இவற்றுக்குக் காவலாக திக்பாலாதிகளைக் கையடைப்பாக்கி நோக்கினோம், ஆகில், இனி அவை பட்டது படுகின்றன” என்று கைவாங்கி இராதே ஶ்ரீய:பதியான உன்னையழித்து இரப்பாளனாக்கிக் கொடுத்து, இட்டு வளர்ந்த கையைக்கொண்டு இரந்து, இந்த்ரன் கார்யம் செய்து தலைக்கட்டின செயலொன்றையும் அநுஸந்தித்தால் உனக்கன்றிக்கே மற்றையார்க்கோ மங்களாஶாஸநம் பண்ண வகுப்பது என்று இந்த ப்ரஸங்கத்திலே திருவுலகளந்தபடி ப்ரஸ்துதமாக அத்தைப் பேசி அநுபவிக்கிறார்.
வ்யாக்யானம் – (மாமுதலடிப் போதொன்று கவிழ்த்தலர்த்தி) நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப (முதல் திருவந்தாதி – 61) – திருவுலகளந்தருளுவதாக நின்றபோது நின்ற திருவடி. அந்நிலையில் “ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப” (திருநெடு – 5) என்கிறபடியே ஆவரண ஜலத்துக்குட்பட்டத்தை அடைய தன் கீழே இட்டுக்கொண்டது வளர்ந்த திருத்தோள்கள் வ்யாபித்துத் திக்குகளை அளந்து கொண்டன. (அன்று கருமாணியாய்) ஶ்ரீய:பதியான நீ “உண்டு” என்றிட்டபோதோடு “இல்லை” என்று மறுத்தபோதோடு வாசியற ப்ரீதியோடே போம்படியான இரப்பிலே தகணேறின வடிவை உடையையாய்க்கொண்டு இரந்து உன்படி ஒருவர்க்கும் தெரியாதபடி மறைத்து வர்த்திக்கிறவனே! நீ இச்செயல் செய்தது இந்த்ரனொருவனுடைய அபேக்ஷிதம் செய்கைக்கன்றிறே. “ஆரேனுமாகத் தன் திருவடிகளிலே தலை சாய்த்தார்க்காகத் தன்னை அழியமாறியும் கார்யம் செய்வானொருவன்“ என்று உன் படியை அநுஸந்தித்து ஆஶ்ரிதர் மார்விலே கைவைத்து உறங்குகைக்காகச் செய்த செயலிறே இது. கீழ்ச்சொன்னபடியே “மாமுதலடிப்போது” என்று பரமகாரணமானவனுடைய திருவடி என்னுதல்; அன்றிக்கே “மாமுதலடிப்போது” என்று திருவடி தனக்கேயாய், ஶேஷபூதரடைய வந்து சேருவது திருவடிகளிலே ஆகையாலே அவர்களுக்குப் பரமப்ராப்யமான திருவடி என்னுதல். “அடிப்போது” என்றது, அடியாகிற செவ்விப்பூ என்றபடி. (அடி – திருவடி) திருவடியாகிற செவ்விப்பூவை. (கவிழ்த்தலர்த்தி) திருவடியைப் பரப்பி எல்லாவற்றையும் அளந்துகொள்ளுகிற விடத்தில் சிறியதின் தலையிலே பெரியது இருந்தால் சிறியது நெருக்குண்ணக் கடவது; அப்படியேத் திருவடியின் கீழ்ப்பட்ட பதார்த்தங்கள் நெருக்குண்ட தில்லையோ என்னில், ஒரு செவ்வித் தாமரைப்பூவைக் கவிழ்த்தலர்த்தினால் அதினுள் அல்லிக்குள்ள நெருக்கிறே திருவடியின் கீழ்ப்பட்ட பதார்த்தங்களுக்குள்ளது. “ஒண்மிதி” என்னக்கடவதிறே. (மண்முழுதுமகப்படுத்து) “புனலுருவி” என்கிறபடியே ஆவரண ஜலத்துக்குட்பட்டதடையத் தன் கீழிட்டுக்கொண்டு. இதுவாகில் இத்திருவடி செய்தது, மற்றைத்திருவடி செய்ததென்னென்னில், (ஒண்சுடரடி) “ஒருகாலும் காமருசீர்” என்று தொடங்கி மேல் சொல்லுகிறபடியே மேலுள்ள லோகங்களடைய அளந்துகொண்டது. (ஒண்சுடரடிப்போதொன்று) மநுஷ்யர்களெல்லார்க்குமுள்ள துர்மாநம் இந்த்ராதிகளில் ஓரொரு வர்க்கும் உண்டாயிருக்கும்; அப்படிப்பட்டவர்களை யடைய பக்நாபிமாநராக்கிக் கொள்ளுகையாலே வந்த புகரை உடைத்தாயிருக்கை. அழகிய சுடரை உடைய செவ்விப்பூவாகிற ஒரு திருவடி. (விண்செலீஇ) விண்ணையடைய வ்யாபித்தது. எவ்வளவிலே சென்றதென்னில் (நான்முகப்புத்தேள் நாடு வியந்துவப்ப) சதுர்முகனாகிற தேவதையினுடைய லோகமான இத்தைக்கண்டு வியப்பதும் செய்தது. “அந்நீர்மை ஏறிப்பாயாததொரு மேடுதேடிப் போந்தோமானோம், நீர்மை இங்கே வந்தேறுவதே! இதோர் ஆஶ்சர்யமிருந்தபடியென்!” என்று விஸ்மயப்படுவதும் செய்தது. “திருவடிகளுக்கு ஆகாதாரில்லையாகாதே, அவன் உளனாக்க நாமல்லோம் என்று அகலப்பார்த்தாலும் அகலவிரகின்றிக்கே இருந்ததீ! இதொரு அலப்யலாபம் இருந்தபடியே!” என்று உகப்பதும் செய்தது. அவ்வளவில் ப்ரஹ்மா செய்ததென்னென்னில் (குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து) நினைவின்றிக்கே இருக்கத் திருவடி கையிலே வந்திருந்தவாறே அலப்யலாபத்தாலே தடுமாறிச் சுற்றிலே பார்த்தான். அவ்வளவிலே தர்ம தத்வம் நெகிழ்ந்து நீராய் குண்டிகையிலே புக்கிருந்தது. அத்தைக்கொண்டு திருவடியை விளக்கினான். அவ்வளவில் “இது நமக்கு நல்லவிடம்” என்று சிவன் தன் தலையை மடுத்தான். “பாவநார்த்தம் ஜடாமத்யே ததார ஶிரஸா ஹர:” என்று தன்னுடைய ஶுத்யர்த்தமாக ஜடையிலே தரித்தான். “யோக்யோ அஸ்மீத்யவதாரணாத்” திருவடிகளுக்கு யோக்யரல்லாதாரில்லை என்று பார்த்தான். “வர்ஷாயுதாந்யத பஹூந் ந முமோச ததா ஹர:” என்கிறபடியே நற்சரக்கு வந்தால் விடுவாரில்லையிறே. கிடையாதது கிடைத்தவாறே “விடேன்” என்று தலையிலே வைத்துத் திருவடியைக் கட்டிக்கொண்டு நெடுங்காலம் நின்றான். (சதுமுகன் கையில் சதுப்புயன்றாளில் சங்கரன் சடையினில் தங்கி) (பெரியாழ்வார் திரு – 4.7.3) என்றிறே கங்கைக்கு வரலாறு சொல்லுவது. முந்துற ப்ரஹ்மாவின் கையிலே இருந்து, பின்னை ஸர்வேஶ்வரன் திருவடிகளிலே தங்கி, அநந்தரம் ருத்ரன் தலையிலே வந்து விழுந்தது. இத்தால் ப்ரஹ்மாதான் பெற்றது என்னென்னில் (தரணி நிமிர்ந்தளப்ப நீட்டிய பொற்பாதஞ்சிவந்ததன் கையனைத்து மாரக்கழுவினான்) அனேகம் கைகளைப் படைத்ததால் உள்ள ப்ரயோஜநம் பெறும்படி திருவடியை விளக்கப் பெற்றான். (குறைகொண்டு) தன்னுடைய வறுமையை முன்னிட்டுக் கொண்டு (குண்டிகை நீர் பெய்து மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி) வேதத்தில் அநந்யபரமான வாக்யங்களைக் கொண்டு மங்களாஶாஸநம் பண்ணி. (கறைகொண்ட) “இவன் அவிவேகத்தாலே விளைவதறியாமே அநர்த்தரூபங்களா யிருக்குமவற்றைச் செய்யாநின்றான், இனி இங்ஙனொத்த அமங்களங்கள் வாராதொழியவேணும்” என்று விஷமப்ரஜைகள் மேலே தீர்த்தத்தைக்கொண்டு “விநீதனாகவேணும்” என்று தெளிக்குமாபோலே ருத்ரன் ஜடையிலே விழும்படி கழுவினான்.
இதுவாகில் அவன் செயல். அவ்வவ லோகத்திலுள்ள தேவதைகள் செய்ததென்னென்னில் (வானவர்கள் முறைமுறை வழிபட நெறீஇ) தேவர்கள் நெறிபட்டு பகவத் ஸமாஶ்ரயணம் பண்ணும்படியைச் சொல்லுகிற ஶாஸ்த்ரங்களின் வழியே திரளாக ஆஶ்ரயிக்க; திருவணுக்கன் திருவாசலில் திரள் திரளாகப் புக்குத் திருவடி தொழுமாபோலே ஸமாராதந விதியின்படியே வழிபட்டாஶ்ரயிக்க, அவ்வளவிலவன் செயததென்னென்னில் (தாமரைக்காடு இத்யாதி) ஆரேனுமாகத் தன் திருவடிகளிலே தலையை வைத்தால் ஆதித்ய ஸந்நிதியில் தாமரைபோலே திருக்கண் செவ்விபெறுமாயிற்று. தாமரைக் காடு அலர்ந்தாற்போலே இருக்கிற திருக்கண்ணோடே கனிந்த வாயையுமுடைத்தா யிருப்பதுமாய். (இருநாயிறு இத்யாதி) நாமிங்கு காண்கிற ஆதித்யனைப் போலன்றிக்கே அனேகமாயிம் கிரணங்களையும் கீழ்ச் சொன்ன விஶேஷங்களையும் உடையராயிருப்பார். ஆயிரமாதித்யர்கள் சேர உதித்தாற்போலேயாய். பலவான கற்பகச்சோலை போலேயுமாய், இப்படி இருக்கிறதேதென்னில், (முடி தோளாயிரம் தழைத்த) ஞாயிராயிரம் மலர்ந்தாற்போலே இருக்கிறது திருவபிஷேகம். பலவகைப்பட்ட கற்பகச்சோலைபோலே இருக்கிறது அனேகமாயிரமாய்ப் பணைத்த திருத்தோள்கள். (நெடியோய்க்கு) இப்படி தன்னையழிய மாறி இரந்து அவன் கார்யம் செய்து தலைக்கட்டச் செய்தேயும், தன்னை விஶ்வஸித்துடனே கிடந்தவன் முடியவிழ்த்தவனைபோலே அநுதபித்து, “மஹாபலிபோல்வார் நலிவதற்கு முன்னே முற்கோலி நோக்கப் பெற்றிலோம், பறிகொடுத்தோம், பிற்பாடரானோம்” என்று நோக்கி லஜ்ஜித்து ஒன்றும் செய்யாதானாய்த் தன் குறையை நினைத்திருக்கு மவனாயிற்று. (நெடியோய்க்கல்லதும் அடியதோவுலகே) இப்படி ஸர்வரக்ஷகனான தன்னையொழிய ஜகத்து மற்றும் சிலர் கால்கீழே கிடந்ததோ? மங்களாஶாஸநம் பண்ண? எல்லாரையும் ஆஶ்ரயிப்பித்துக் கொள்ளுகிறவர்கள் தலைமேலே காலை வைத்த உனக்கு மங்களாஶாஸநம் பண்ணவடுக்குமோ? உன் காலின்கீழே துகையுண்டவர்களுக்கு மங்களாஶாஸநம் பண்ணவடுக்குமோ? சொல்லிக்காண்.
@@@@@
ஆறாம்பாட்டு
ஓ ஓ உலகினதியல்வே ஈன்றோளிருக்க
மணைநீராட்டிப் படைத்திடந்துண்டுமிழ்ந்
தளந்து தேர்ந்துலகளிக்கும் முதற்பெரும்
கடவுள் நிற்பப் புடைப்பலதானறி
தெய்வம் பேணுதல் தனாது
புல்லறிவாண்மை பொருந்தக் காட்டிக்
கொல்வனமுதலாவல்லன முயலும்
இனையசெய்கையின்புதுன்பளித்
தொன்மாமாயப் பிறவியுள் நீங்காப்
பன்மாமாயத்தழுந்துமா நளிர்ந்தே. (6)
பதவுரை –
உலகு – இப்பூமண்டலத்தை
படைத்து – (ஆதியில்) உண்டாக்கி
இடந்து – (வராஹாவதார காலத்தில் அண்டபித்தியிலிருந்து) குத்தி எடுத்து
உண்டு – (ப்ரளயகாலத்தில்) அமுது செய்து
உமிழ்ந்து – (அவாந்தர ஸ்ருஷ்டி காலத்தில்) வெளிப்படுத்தி
அளந்து – (த்ரிவிக்ரமாவதார காலத்தில் திருவடிகளால்) அளந்து
தேர்ந்து – (அதற்கு மேல் ரக்ஷணோபாயத்தைச்) சிந்தை செய்து
அளிக்கும் – ரக்ஷிக்கும்படியான
முதல் பெரும் கடவுள் – ஆதிகாரணனும் பரதேவதையுமான ஶ்ரீமந்நாராயணன்
நிற்ப – (ஆஶ்ரயணீயனாக) இருக்க
(அவனை விட்டு)
புடை – (அவனுடைய) விபூதியாகச் சொல்லப்பட்டனவாய்
பல – பலவகைப்பட்டனவாய்
தான் அறி தெய்வம் – (ஆஶ்ரயிக்கும்) தானறிந்த (சில) தேவதைகளை
பேணுதல் – (ரக்ஷகனாக) ஆதரிக்கை
தனாது புல் அறிவு – தன்னுடைய கீழான புத்தியை
ஆண்மை பொருந்த காட்டி – பெரியோர்கள் (மனத்தில்) படும்படி காண்பித்து
ஈன்றோள் இருக்க – பெற்றவள் இருக்கும்போது
(அவளை கவனியாமல்)
மணை நீராட்டி – (அசேதனமான) மணைக்கு நீராட்டுவது போலிருக்கிறது
செய்கை – (அத்தேவதைகளின்) செய்கைகள்
கொல்வன முதலா – ஹிம்ஸிக்கை முதலிய
அல்லன முயலும் – செய்யத் தகாத காரியங்களைச் செய்கையாகிற
இனைய – இப்படிப்பட்டத் தன்மையையுடையவை
அளி – (அத்தேவதைகள் அளிக்கும்) பலமாவது
துன்பு – து:க்கத்துடன் கூடிய
இன்பு – ஸுகமாகும்
(ஆகையால் அத்தேவதைகளை ஆஶ்ரயிக்கை)
தொல் – அநாதியாய்
மா – பெரியதாய்
மாயம் – ஆஶ்சர்யகரமான
பிறவியுள் – ஸம்ஸாரத்தில் நின்றும்
நீங்கா – நீங்குகையன்றிக்கே
பல் மா – பலவாய் பெரியதாய்
மாயத்து – (மோஹத்தை உண்டாக்கக் கூடிய) ஶப்தாதி விஷயங்களில்
நளிர்ந்து – நன்றாக
அழுந்துமா – அழுந்துகைக்கு இடமாகும்
உலகினது இயல்வு – லோகத்தின் ஸ்வபாவம்
ஓ ஓ – என்னே!
அவதாரிகை – ஆறாம்பாட்டு. (ஓ ஓ உலகு) இவற்றினுடைய ஸத்தையை ஸார்த்தமாக உபாதாநம் பண்ணி ஸ்ருஷ்டித்து, ஸ்ருஷ்டித்த அநந்தரம் ”இனிமேலவை பட்டது படுகின்றன” என்றிராதே, சிறியத்தைப் பெரியது நலிந்து மஹாபலி போல்வார் பருந்திறாஞ்சினாற்போலே அபஹரிக்க, ஶ்ரீய:பதியானவன் தன் மேன்மை பாராதே தன்னையழித்து ரக்ஷித்த செயலை அநுஸந்தித்து, சேதநராயிருப்பார்க்கு, இவனுக்கு மங்களாஶாஸநம் பண்ணி வர்த்திக்கவிறே செய்ய வடுப்பது என்றார் கீழ். “இவர்கள் தாங்கள் சேதநரானபின்பு இதிலே ஒருப்படாதொழிவார்களோ?” என்று லௌகிகரைப் பார்த்தார். அவர்கள் வருந்திக் கைவிடுவது இவனொருவனுமேயாய், விரும்புகைக்கும் இவனையொழிந்த வையாக அமைந்து “நான்” என்றும் “என்னது” என்றும், பகவத் வ்யதிரிக்தரை ரக்ஷகராகத் தேடியும் போருகிறபடியைக் கண்டு இதிருந்தபடியென், “ஏகஸ்மிந்நப்யதிக்ராந்தே முஹூர்த்தே த்யாந வர்ஜிதே தஸ்யுபி: முஷிதேநேவ யுக்தமாக்ரந்திதும் ப்ருஶம்” என்கிறபடியே பகவத் த்யாநத்திற்கு விச்சேதம் பிறந்தால் அதுக்குப் பரிஹாரமாகத் திருநாமஸங்கீர்த்தநம் பண்ணுகை, சீரிய தநம் அபஹ்ருதமானால் எல்லாருமறியக் கூப்பிடுமாபோலே கீழ்ப் பிறந்த விச்சேதத்திற்குக் கூப்பிடக் கடவதிறே. அப்படித் தங்களிழவுக்குக் கூப்பிடவேண்டியிருக்க, அவர்கள் அதுதானும் அறியாதே இருக்க, அவர்கள் இழவு பொறுக்கமாட்டாமை தாம் “ஓ!ஓ!” என்று கூப்பிடுகிறார்.
வ்யாக்யானம் – (ஓ ஓ) இருந்தார் இருந்தவிடங்களிலே செவிப்படும்படி கூப்பிடுகிறார். (உலகினதியல்வே) ஒரு விபூதியாகத் தன்னை அநுபவிக்கிற அநுபவத்துக்கு விச்சேதமின்றிக்கே செல்லுகிறாப்போலே இதொரு விபூதி தன் பக்கல் வைமுக்யம் பண்ணும்படி வைப்பதே! இதொரு லோகத்தினுடைய ஸ்வபாவமே! நீரிங்கனே “ஓ” என்றிட்டு நெடுவாசிபடக் கூப்பிடுகைக்கு லோகமாகத் தான் செயததென்னென்னில், (ஈன்றோளிருக்க மணைநீராட்டி) இராநின்றார்கள். உற்பத்திக்கு முன்னே உண்டாக்குகைக்கு ஸாதநாநுஷ்டாநம் பண்ணி, பின்னை கர்ப்பத்திலே தரித்து, ப்ரஸவ வேதனையை அநுபவித்து, அநந்தரம் தண்ணிய தரையிலே இட்டுக்கொடு துவண்டு நோக்கினால், அறிவு பிறந்து பண்ணின உபகாரத்தை ஸ்மரிக்குமளவானவாறே அவளை விட்டு, ஒரு உபகாரமும் பண்ணவுமறியாதே இவன் பண்ணின உபகாரத்தை ஸ்மரிக்கவுமறியாதே இருப்பதொரு அசித் பதார்த்தத்தை கொண்டாடுவாரைப்போலே, வகுத்த விஷயத்தை விட்டு அப்ராப்த விஷயத்தை ஆதரியாநின்றார்கள். நீர் “ஈன்றோள்” என்று தாயாக நினைக்கிறது தானாரை என்னில், (படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகளிக்கும் முதற்பெருங்கடவுள்) இவையடங்கலும் போகமோக்ஷஶூந்யமாய்த் தமோபூதமாய் அசித்கல்பமாய் இழந்து கிடக்கிறபோது இவற்றினுடைய தஶையைக்கண்டு “ஐயோ”! என்றிரங்கி “பஹு ஸ்யாம்” என்று ஸ்ருஷ்டித்து, ஸ்ருஷ்டமான அநந்தரம் ப்ரளயங்கொள்ள, நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹாவராஹமாய் எடுத்து, திரிய ப்ரளயம் வருமென்று முற்கோலி வயிற்றிலே வைத்து, உள்ளே கிடந்து தளராதபடி வெளிநாடுகாண உமிழ்ந்து, எல்லை நடந்து மீட்டு, இப்படி ஸர்வவித ரக்ஷணங்களையும் பண்ணச்செய்தே, பின்னையும் தன்னை விஶ்வஸித்து அருகே கிடந்தவனை மடிதடவினவனைப்போலே அநுதபித்து, ஒன்றுஞ்செய்யாதானாய் மேன்மேலென ரக்ஷணோபாயங்களை சிந்தித்து, ஒருவரை இருவரையன்றிக்கே வரையாதே எல்லாரையுமொக்க ரக்ஷிக்கிற அத்விதீய பரதேவதை யானவன். “ஆரோ வருவார்” என்று “ஆஶயா யதி வா ராம:” என்கிறபடியே அவஸரப்ரதீக்ஷனாய் நிற்க. இவ்வோ உபகாரங்களை பண்ணிற்றிலனாகிலும் ஆஶ்ரயிக்கைக்கு முட்டுப் பொறுக்கும் அத்விதீய பரதேவதை இவனல்லதில்லை.
யயாதி ஸாதநாநுஷ்ட்டாநம் பண்ணி ஸ்வர்க்கத்திலே இந்த்ரனோடு அர்த்தாஸநத்திலே இருக்கச் செய்தே, “கர்மபூமியில் புண்யக்ருத் துக்களார்” என்று அவனைக் கேட்க, ஒரு தேவதை முன்பே பொய் சொல்லிற்றாகவொண்ணாது என்று “நான் வர்த்தித்த காலத்தில் என்னை எல்லார்க்கும் மேலாகச் சொல்லுவார்கள்” என்ன, “ஆத்ம ப்ரஶம்ஸை பண்ணினாய், “த்வம்ஸ” என்று பூமியிலே விழும்படி ஶபித்தானென்று. இவ்விடத்தை பட்டர் வாசித்துப் போந்தகாலத்திலே “இந்த்ரன் தன்னை ஆஶ்ரயித்துப் பெற்ற உத்கர்ஷமாயிருக்க அர்த்தாஸநத்திலே இருந்தது பொறுக்கமாட்டாமே “ஆத்ம ப்ரஶம்ஸை பண்ணினாய்” என்றொரு வ்யாஜத்தையிட்டுத் தள்ளினானாய் இருந்தது. இதுதான் வேதோபப்ருஹ்மணார்த்தமாக ப்ரவ்ருத்தமான மஹாபாரதத்திலே எவ்வர்த்தத்தினுடைய விஶதமாக ருஷி எழுதினான்” என்று கேட்க, “தான் தன்னோடொக்க உத்கர்ஷத்தைக் கொடுக்க வல்லதுவும், அத்தைப் பொறுக்கவல்லதுவும் பரதேவதையானபின்பு ஆஶ்ரயிக்கப் படுமதுவும் பரதேவதை. அல்லாதார் ஆஶ்ரயணீயரல்லர் என்னுமிடம் ப்ரகாஶிக்கைக்காக” என்றருளிச் செய்தார்.
அவனைவிட்டால் சுருக்கமொழிய அவனோடு தோள்தீண்டியாயிருப்பாரை ஆஶ்ரயிக்கப் பெறினுமாமிறே. (புடைப்பலதானறி தெய்வம் பேணுதல்) ஒரு புடைகளிலே – அர்த்தவாதித்து அவனுடைய விபூதியைப் பேசுகிறவிடத்திலே, அவனுடைய உத்கர்ஷத்துக்காக இவ்வருகே சிலருக்குச் சில மினுக்கஞ்சொல்லுமே; அத்தைக்கொண்டு கிடந்தவிடமறியாமே ஒதுங்கிக் கிடந்தவற்றை யாயிற்று ஆதரிப்பது. அதுதன்னிலும், ஒரு தேவதையே இவனுடைய ஸர்வாபேக்ஷிதங்களையும் கொடுக்க மாட்டாதே. ஒருவனாய் பரமபுருஷார்த்தலக்ஷண மோக்ஷத்தைக் கொடுக்கிறானன்றே. அது வேண்டில் “கதிமிச்சேத் ஜநார்த்தனாத்” என்னக்கடவதிறே. ஆக, விபூதிகாமனாகில் இன்னானைப் பற்றுவான், புத்ரகாமனாகில் இன்னானைப் பற்றுவான், பஶுக்காமனாகில் இன்னானைப் பற்றுவான் என்றிங்ஙனே ஒன்றுக்கொருவராய்ப் பலராயிருக்கும். (தானறி தெய்வம்) ப்ரமாண ப்ரஸித்தமாய் இருப்பதொன்றன்றே. ரஜோகுணத்தாலும் தமோகுணத்தாலும் மிக்கிருக்கிறதானறியும் தெய்வத்தையாயிற்றுப் பற்றுவது. (பேணுதல்) அவைதனக்கென்னவொரு உத்கர்ஷமில்லாமையாலே, மொட்டைத்தலையனை “பனியிருங்குழலன்” என்று கவி பாடுவாரைப்போலே ஆஶ்ரயிக்கிற இவனுக்கே பரமாயிற்று, அத்தேவதைகளுக்கு ஈஶ்வரத்வம் ஸம்பாதித்துக் கொடுக்கையும். (தனாது) இவன் சொன்னபோதாக அவை ஆஶ்ரயணீயங்களாகிறனவு மல்ல; இவன்றான் அங்கே சில பெற்றானாகிறானுமல்லன்; இத்தால் பலித்ததாயிற்று விஶேஷஜ்ஞர்க்குத் தன்னறிவில் குறைவை ப்ரகாஶிப்பித்தானாமித்தனை. (தனாது புல்லறிவாண்மை பொருந்தக் காட்டி) தன்னுடைய ஜ்ஞாநத்தில் அல்பதையை விஶேஷஜ்ஞர்க்குத் தேறும்படி தெரிவிப்பித்து,
பலம் பெறும்போது பரதேவதையை ஆஶ்ரயித்துப் பெறவேணுமே, ஆஶ்ரயிக்குமிடத்தில் “நிதித்யாஸிதவ்ய:” என்றும் “தமேவம் வித்வாந் அம்ருத இஹ பவதி நாந்ய: பந்தா:” என்றும் உபாஸந வாக்யங்களில் சொன்னபடியே காரணவஸ்துவை உபாஸிக்கிறதன்றிறே. (கொல்வன முதலாவல்லன முயலுமினைய செய்கை) “ஆட்டை அறுத்துத் தா, ப்ரஜையை அறுத்துத்தா” என்பன சிலவும், நிஷித்த த்ரவ்யங்களைக்கொண்டு பரிமாறவேண்டுவன சிலவும் இவையாயிற்றுச் செயல்கள். ஆஶ்ரயணங்கள் தானே நரகமாயிருந்ததே!” இப்படி ஆஶ்ரயித்துப் பெறும் பலத்தைப் பார்த்தால் அதுபெறுமதில் பெறாதொழிகை நன்றாயிருக்கும். (இன்பு துன்பளி) ஸுகது:க்க மிஶ்ரமான பலத்தையாயிற்றுத் தருவது. நிஷ்க்ருஷ்ட ஸுகமான மோக்ஷம் அவற்றுக்கில்லையே. ஆகச் செய்ததாயிற்று என்னென்னில் தன்னோடொத்திருப்பானொருவனாய், பவோபகரண பூதனாய், நித்யஸம்ஸாரியா யிருப்பானொருவனை ஆஶ்ரயித்துப் பலம்பெறப் பார்த்தவிதுதான் நித்யஸம்ஸாரி யாகைக்குக் க்ருஷி பண்ணினானாயிற்று. (தொன் மாமாயப் பிறவியுள் நீங்கா வித்யாதி) பழையதாய், காரணமாயிருக்கிற மாமாயமுண்டு – இம்மாயை, “இது ஒருவரால் கடக்க வொண்ணாது” என்று அவனருளிச் செய்த ப்ரக்ருதி. இப்ரக்ருதி ஸம்பந்த நிபந்தந ஜன்மங்களிலே புக்கு மீள விரகின்றிக்கே பலவகைப்பட்டிருக்கிற மாமாயமுண்டு – ஶப்தாதி விஷயங்கள், அவற்றிலே (நளிர்ந்தழுந்துமே) எடுத்ததனையும் தரையளவும் அழுந்தாநின்றன. (உலகினதியல்வே) வகுத்த விஷயத்தைப் பற்றி நிஷ்க்ருஷ்ட ஸுகத்தைப் பெறப்பாராதே சேதநர் அப்ராப்த விஷயத்தை ஆஶ்ரயித்து அநர்த்தத்தைப் பெறப்பார்ப்பதே! இதென்ன படுகொலை! என்கிறார்.
@@@@@
ஏழாம்பாட்டு
நளிர்மதிச்சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளியிமையவர் தலைவனுமுதலா
யாவகையுலகமும் யாவருமகப்பட
நிலம் நீர் தீகால் சுடரிருவிசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒருபொருள் புறப்பாடின்றி முழுவது
மகப்படக்கரந்து ஓராலிலை சேர்ந்தவெம்
பெருமாமாயனை யல்லது
ஒரு மாதெய்வம் மற்றுடையமோ யாமே. (7)
பதவுரை –
நளிர்மதி சடையனும் – குளிர்ந்த சந்த்ரனை தலையில் தரித்துள்ள ருத்ரனும்
நான் முகம் கடவுளும் – நாலு முகங்களையுடைய பிரமனும்
தளிர் ஒளி – தளிர்போன்ற (அழகிய) தேஜஸ்ஸையுடைய
இமையவர் தலைவனும் முதலா – தேவர்களின் அதிபனான இந்த்ரனும் இவர்கள் முதலான
யாவகை உலகமும் – எல்லாவிதமான லோகங்களும்
யாவரும் அகப்பட – எல்லா சேதநர்களும் உட்பட
நிலம் – பூமியும்
நீர் – ஜலமும்
தீ – அக்நியும்
கால் – காற்றும்
சுடர் – தேஜஸ்ஸினால்
இரு – வ்யாபிக்கப்பட்டுள்ள
விசும்பும் – ஆகாஶமும்
மலர் சுடர் – மலர்ந்த கிரணங்களையுடைய சந்த்ர ஸூர்யர்களும்
பிறவும் – மற்றுமுள்ள வஸ்துக்களும்
உடன் – ஒரே காலத்தில்
சிறிது – (வயிற்றில்) ஏகதேஶத்தில்
மயங்க – வஸிக்கும்படி
ஒரு பொருள் – ஒரு வஸ்துவும்
புறப்பாடு இன்றி – வெளிப்படாதபடி
முழுவதும் – எல்லாவற்றையும்
அகப்பட – உள்ளே இருக்கும் வண்ணம்
கரந்து – (உண்டு வயிற்றிலே) மறைத்து
ஓர் ஆலிலை – ஒரு ஆலினிலைமேல்
சேர்ந்த – நித்ரை செய்யுமவனாய்
எம் – என்னுடைய ஸ்வாமியாய்
பெரு – பெரியனாய்
மா – அளவிட்டறிய முடியாதவனாய்
மாயனை அல்லது – ஆஶ்சர்ய ஶக்தியுக்தனான ஶ்ரீமந்நாராயணனையொழிய
மற்று – வேறான
மா – பெரிய
ஒரு தெய்வம் – ஒரு தேவதையை
யாம் – நாம்
உடையமோ – (ஆஶ்ரயணீயராக) உடைத்தாவோமோ?
அவதாரிகை – ஏழாம்பாட்டு. (நளிர்மதி இத்யாதி) “சேதநரெல்லாருக்கும் செய்யவடுப்பது – அவனுக்கு மங்களாஶாஸநம் பண்ணுகையாயிருக்க, இதரதேவதைகளை ஆஶ்ரயித்து ஸம்ஸாரபந்தம் வர்த்திக்கும்படி பண்ணா நிற்பர்கள், இதென்ன படுகொலை, இவ்வநர்த்தமென்னால் பொறுக்கப் போகிறதில்லை” என்றார் கீழ். “அல்லாதார் செய்தபடி செய்கிறார்கள் ; நாம் முந்துற முன்னம் இவ்வநர்த்தத்தைத் தப்பப் பெற்றோம்” என்று உகக்கிறார் இதில். நாட்டார் கண்டார் காலிலே குனிந்து திரியாநிற்க, நமக்கு முந்துறமுன்னம் தேவதாந்தர ஸ்பர்ஶமின்றிக்கே இருக்கப் பெற்றோமே, இந்த லாபமே அமையாதோ என்று ஸ்வலாபத்தைப் பேசி இனியராகிறார். “அவன் ஸர்வபதார்த்தங்களையும் வயிற்றில் வைத்து நோக்குகிறபோது நம்மோடொக்க அவன் வயிற்றிலே புக்குப் புறப்பட்டவர்களிலே சிலரை ஆஶ்ரயித்து, பலத்துக்கு அவர்கள் கைபார்த்திருக்கையாகிற இப்புன்மையின்றிக்கே ஒழியப்பெற்ற இதுவே அமையாதோ?” என்று ப்ரீதராய், அல்லாத ப்ரபந்தங்களை அந்தாதியாக்கிக்கொண்டுப் போந்த இவர், இத்தை அந்தாதி ஆக்கமாட்டாதே உகப்புக்கிதுக்கு மேற்பட இல்லாமையாலே இவ்வநுபவத்தோடே தலைக்கட்டுகிறார். “நளிர்மதிச் சடையனும்” என்று தொடங்கி யாவகையுலகமும் யாவருமகப்பட வாயிற்று அவனுண்டது, தன்னோடொக்கச் சிறையிருந்தவர்களில் சிலரை ஆஶ்ரயித்துப் பெறுவதொரு பலமுண்டோ?
வ்யாக்யானம் – (நளிர்மதி சடையனும்) ஸாதக வேஷம் தோற்ற ஜடையைத் தரித்துக் கொண்டிருக்கச் செய்தேயும் துர்மாநத்தாலே “ஸுகப்ரதாநன்” என்று தோற்றும்படி தாழைமடலைக்கீறித் தலையிலே வைப்பாரைப்போலே குளிர்ந்த சந்திரனை ஜடையிலே தரித்த ருத்ரனும். (நான்முகக் கடவுளும்) அவன்றனக்குங்கூட ஜநகனாய் ஸ்ருஷ்டிக்குறுப்பாக நாலு முகத்தையுடையனா யிருக்கிற சதுர்முகனாகிற தெய்வமும். இவர்களிருவரும் இரண்டு கார்யத்துக்குக் கடவராய் அதிகாரிகளாயிறே இருப்பது. குசவனையும் புறமடக்கியையும்போலே. (தளிரொளி இத்யாதி) போகப்ரவண னாகையாலே அப்ஸரஸ்ஸுக்களை மெய்க்காட்டுக் கொண்டு வடிவை பேணி தேவர்களுக்கு நிர்வாஹகனாயிருக்கிற இந்த்ரன் தொடக்கமாக எவ்வகைப்பட்ட லோகங்களையும், அவ்வவ லோகங்களிலுண்டான எல்லாச் சேதநரையும் தப்பாமே (நில நீரித்யாதி) அவர்கள் எல்லாருக்கும் காரணமாயிருக்கிற பூதபஞ்சகமும், “சுடரிருவிசும்பும்” என்றது உண்டாமிடத்தில் மற்றை நாலுக்கு முன்னே உண்டாமதாகையாலும், அழியுமிடத்தில் அவையழிந்தாலும் தான் சிறிது காலம் நின்றழியுமதாகையாலும், வந்தப் புகரைப்பற்ற. (மலர் சுடரித்யாதி) சந்த்ர ஸூர்யர்களும் மற்றுமுள்ள மநுஷ்யாதிகளும் இவையடைய. (சிறிதுடன் மயங்க) சிறியதாய்க்கொண்டு உடனே மயங்க. சிலபேருக்கிடச்சொல்லி உண்பார் பலருண்டானால் சோறு மட்டமாமாப்போலே, ரக்ஷ்யமாய்க்கொண்டு நாநாவாய்ப் புகுகிற பதார்த்தங்கள் அளவுபடும்படியாகவாயிற்று தன் வயிற்றிலே வைக்கிறபோது பாரிப்பின் பெருமை. இவையடங்க அல்பமாகக் கொண்டு ஒன்று ஒன்றை விடாதே தன் பக்கலிலே கலச. அன்றிக்கே, “சிறிதுடல் மயங்க” என்று பாடமாய், ஓராலந்தளிரிலுள்ளடங்கின வடிவிலே கலச. “உடன், உடல்” என்கிறவிடத்தில் நகர லகரங்களுக்கொரு விரோதமில்லை. (ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதுமகப்பட) ஒரு பதார்த்தமும் பிறிகதிர் படாதபடி எல்லாவற்றையும். (கரந்து) ப்ரளயம் வந்தால் முன்புற்றைக் காட்டிலும் வயிற்றை இளைத்துக் காட்டலாம்படி ஒரு விக்ருதியின்றிக்கே இருக்கை. (ஓராலிலை சேர்ந்த எம்பெருமா மாயனை யல்லது) இவற்றை இப்படி வயிற்றிலே வைத்துத் தான் முகிழ் விரியாதே பவனாயிருப்பதொரு ஆலந்தளிரிலே கண்வளர்ந்த நம்முடைய ஆஶ்சர்யஶக்தியுக்தனையொழிய. (பாலன்றனது உருவாய் ஏழுலகுண்டு) “யஶோதா ஸ்தநந்தயம் அத்யந்தம் விமுக்தம்” என்னும்படியான முக்தமான வடிவையுடையனாய், ஸகலலோகங்களையும் வயிற்றிலே வைத்து. (ஆலிலையின் மேலன்று நீ வளர்ந்த மெய்யென்பர்) “ஆலின்மேல் ஓரிளந்தளிரிற் கண்வளர்ந்தவீசன்” என்கிறபடியே முகிழ் விரியாத ஆலந்தளிரிலே தரிக்கைக்கு ஓர் யசோதாதிகள் இன்றிக்கே இருக்க, நீ கண்வளர்ந்தருளினவற்றை “மெய்” என்று ஆப்தரான ருஷிகள் எழுதாநின்றார்கள். “கதம் ந்வயம் ஶிஶுஶ்ஶேதே லோகே நாஶமுபாகதே ஶாகாயாம் வடவ்ருக்ஷஸ்ய பல்லவே து ஶுசிஸ்மித:” என்றாயிற்று அவர்களெழுதுகிற பாசுரம். (ஆலன்று வேலை நீருள்ளதோ) அவ்வால்தான் அன்று மண்ணைக் கரைத்துப் பொகட்ட ஜலத்திலே யுள்ளதோ? நிராலம்பனமான ஆகாஶத்திலே யுள்ளதோ? அன்றிக்கே, கார்யாகாரங்குலைந்து கரந்து கிடக்கிற மண்ணிலேயுள்ளதோ? (சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு) பருவம் நிரம்புவதற்கு முன்னே ஏழு பிராயத்திலே ஒரு படிப்பட மலையை தரித்துக்கொண்டு நின்ற நீ சொல்லு. இதுவுமோராச்சர்யமிறே. இதுவுஞ்சொல்லவேணும், அதுவுஞ்சொல்ல வேணும். இவை மூன்றும் விஸ்மயமாயிருப்பன சில அகடிதங்களாயிருந்தன. “அவன் பின்னை இவர்களுக்குச் சொன்ன உத்தரமேது” என்று பட்டரைக் கேட்க, “அவன்றானும் ஆழ்வார் வந்தால் கேட்கக் கடவோம்” என்று நினைத்திருந்தான் காணும்” என்ன, பின்னையும் “நீ ஸர்வாதார பூதனாமித்தனை போக்கி, உன்னையொழியப் புறம்பே ஒன்றுக்கொன்று ஆதாரமாக வல்லதொன்றுண்டோ?” என்று அவன் ஸர்வாதாரபூதனாயிருக்கிற படியைக் கண்டு இதோராச்சர்யமே! என்று விஸ்மிதராகிறார்” என்று அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆச்சர்ய யோகத்தைச் சொல்லுகிறது (பெருமாமாயன்) என்று. அவனையொழியப் புறம்பே கால்காணித் தெய்வமுடையோமோ நாம்? “முந்துற ரக்ஷகனாகிறேன்” என்று பச்சையிடுவித்துக்கொண்டு சில நாள் கழிந்தவாறே வடிவைக்காட்டி “நானுமுன்னைப்போலே ஸாதகன்காண்” என்று சொல்ல, அவனை விட்டாற்போலே எடுத்துக் கழிகைக்குத் தானொரு தேவதையுண்டோ நமக்கு? மார்க்கண்டேயனை ரக்ஷிக்கிறேன் என்று சொல்லி, பச்சையிடுவித்துக்கொண்டு அநந்தரம் ஜடையைக்காட்டி “நானுமுன்னைப்போலே ஸாதகன், ஒரு தலையைப் பற்றிக்காண் இருப்பது. என்னை ஆஶ்ரயிங்கோள் என்று பிறர் சொல்லும் வார்த்தையை மெய் என்று விஶ்வஸித்திருக்கும்படி ப்ரமித்தாயாகாதே, பொறு, உனக்காஶ்ரயணீய ஸ்த்தலங்காண்” என்று கொடுபோய் ஸர்வேஶ்வரனைக்காட்டிக் கொடுத்தானிறே. “ப்ரஹ்மாணம் நீலகண்டஞ்ச யாஶ்சாந்யா தேவதாஸ்ஸ்ம்ருதா: ப்ரதிபுத்த்தா ந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்” ப்ரஹ்மாவையும் ருத்ரனையும் அல்லாத தேவதைகளையும் அறிவுடையராயிருப்பார் ஆஶ்ரயியார்கள். அதுக்கடி யென்னென்னில், பரமபுருஷார்த்தலக்ஷண மோக்ஷத்திலே இவனுக்கபேக்ஷையுண்டானால் அவர்கள் அது கொடுக்கமாட்டார்களே. அவர்களுக்கு மோக்ஷப்ரதத்வமில்லா மையாலே. இனி இவ்வருகே சிலவற்றையிறே கொடுப்பது. அவை அல்பமிறே. அவை அவன் இவனுக்குக் கொடுக்கவுமாய், இவன் அவனுக்குக் கொடுக்கவுமாயிறே இருப்பது.
“ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா: ப்ரதிஷித்தாஸ்து பூஜநே” “திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்னக்கடவதிறே. பர்த்தாவின் பக்கல் ஆநுகூல்ய மற்றிருக்க, பர்த்யந்தர பரிக்ரஹம் பண்ணாதொழிகையிறே இவள் அவனுக்காகையாகிறது. பகவத்ப்ராவண்யம் க்ரமத்திலே பிறக்கவுமாம், இவனுக்கு முந்துற வேண்டுவது – தேவதாந்தர ஸ்பர்ஶமறுகையிறே. இதுண்டானால் யோக்யதை கிடக்குமிறே.
ஆழ்வார் திருவடிகளே ஶரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே ஶரணம்
திருவாசிரிய வ்யாக்யாநம் முற்றிற்று.