ஶ்ரீ:
ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
திருப்பாணாழ்வார் அருளிச்செய்த
அமலனாதிபிரான்
பெரியநம்பிகள் அருளிச்செய்த தனியன்
ஆபாத சூடம் அநுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேரதுஹிது: முதிதாந்தராத்மா .
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிஶ்சிகாய மநவை முநிவாஹநம் தம் ||
பதவுரை:-
ய: – யாவரொரு திருப்பாணாழ்வார்,
கவேரது ஹிது:- திருக்காவிரியின்,
மத் யே – நடுவில்,
ஶயாநம்-திருக்கண் வளர்ந்தருளுகிற,
ஹரிம் – ரங்கநாதனை,
ஆபாத சூடம் -திருவடி தொடங்கித் திருமுடியளவாக,
அநுபூய – அநுபவித்து,
முதி தாந்தராத்மா – உகந்தவராய்,
நயநயோ: விஷயாந்தராணாம் அத்ரஷ்ட்ருதாம் – (தமது) திருக்கண்கள் (அப்பெருமானைத் தவிர) – மற்றொன்றையும் காணமாட்டாமையை,
நிஶ்சிகாய – அறுதியிட்டருளினாரோ,
தம் -அப்படிப்பட்ட,
முநிவாஹநம் -லோக ஸாரங்க மஹாமுநியை வாஹநமாகக் கொண்ட திருப்பாணாழ்வாரை,
மநவை- சிந்திக்கக்கடவேன்.
பிள்ளைலோகம் ஜீயர் அருளிச்செய்த தனியன் வ்யாக்யானம்
அவதாரிகை – (ஆபாதசூடமித்யாதி) இதில் “கெருடவாகனனும் நிற்க” (திருமாலை-10) என்றும், “அஞ்சிறைப்புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே” (பெரியதிரு 5-6-6) என்றும் சொல்லுகிறபடியே பெரிய பெருமாளை ஸேவித்து அநுபவித்த முநிவாஹநரை மநஸ்ஸாலே அநுபவிக்கும்படி சொல்லுகிறது. கருடவாஹநத்வமும் ஶேஷஶாயித்வமும் ஶ்ரிய:பதித்வமுமிறே ஸர்வஶேஷியான ஸர்வாதிகவஸ்துவுக்கு லக்ஷணம். இப்படி ஸர்வாதிகவஸ்துவினுடைய ஸர்வாவயவங்களையும் ஸக்ரமமாக அனுபவித்தபடி சொல்லுகிறது.
வ்யாக்யானம் – (ஆபாதசூடம்) திருப்பாதகேசத்தை (பெரியாழ்.திரு. 1-2-21) (அநுபூய) அமலனாதிபிரானடைவே அனுபவித்து (ஹரிம் ஶயாநம்) ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப: (ரா.ஸு. 38-25) என்னும்படியாய்க் கிடக்கை. கிடந்த கிடையிலே உட்குடையசுரர் உயிரெல்லாமுண்ட(திருவாய். 7-2-3)வரிறே. ஹரதீதி ஹரி:. அநுகூலர் மநஸ்ஸையும் ப்ரதிகூலர் ப்ராணன்களையும் ஹரிக்குமவரென்கிறது. அநுகூலரை த்ருஷ்டி சித்தாபஹாரம் பண்ணும்படியாடிருக்கை. கிடந்ததோர் கிடக்கை கண்டுமெங்ஙனம் மறந்து வாழ்கேன் (திருமாலை-23), ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் (திருவாய். 5-8-1) என்னும்படி தாபஹரரானவரை. அவர்தாம், அரவினணை மிசை மேயமாயனா(அமலன்-7)ரான முகில்வண்ண(திருவாய். 7-2-11)ரிறே. இப்படி அநுகூல ப்ரதிகூலரக்ஷண சிக்ஷணங்களைப் பண்ணுமவரானவரை.
(கவரேதுஹிதுர் மத்யே) கவேரகந்யையான காவேரி மத்யே. கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டிலே(திருமாலை-23)யிறே படுகாடு கிடக்கிறது. வண்பொன்னி(பெருமாள் திரு. 2-3) திருக்கையாலடிவருட (பெருமாள் திரு. 1-1) திருவாளனினிதாகவாய்த்துத் திருக்கண்கள் வளருகிறது (பெரியாழ்.திரு. 4-9-10). இப்படி (கவரேதுஹிதுர்மத்யே சயாநம் ஹரிம் ஆபாதசூடம்) என்று குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்புகாட்டித் தென்திசையிலங்கை நோக்கிக் கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத் துயிலுமா கண்டு (திருமாலை-19) அநுபவித்தாரென்கை. (முதிதாந்தராத்மா) இப்படி அநுபவித்து ஹ்ருஷ்டமநாவானார், அகமகிழப்பெற்றார். உவந்தவுள்ளத்த(அமலன்-2)ரானார். ஸந்துஷ்ட சித்தஸமாஹிதரானார். மகிழ்ந்தது சிந்தை (இர.திருவ-32) என்னக்கடவதிறே.
இனி அவ்வளவில் நில்லாதே (அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்) என்னும்படி காணாக்கண்(முதல் திருவ-11)ணையுடையரானார். அணியரங்கனென்னமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே (அமலன்-10) என்றாய்த்து இவர் விஷயத்திலே அஸ்தமிதாந்யபாவராயிருப்பது, ஏததேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி: (சாந். 3-6) அரங்கமா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்குமாறே(திருமாலை-17), ராமம் மேநுகதா த்ருஷ்டி:, ந த்வா பச்யாமி (ரா.அ. 42-34)யிறே. ஸௌந்தர்ய ஸாகரத்திலே மக்நரானார், இவர்க்கு அழகு அஜ்ஞாநத்தை விளைத்ததாய்த்து. அத்ருஷ்டம் த்ருஷ்டமாகையாலே த்ருஷ்டம் அத்ருஷ்டமாய்த்து. அன்றிக்கே, சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லா(திருவாய். 7-10-10), பாவோ நாந்யத்ர கச்சதி (ரா.உத். 40-15)என்னும்படி பரத்வாதிகளாய்த்து பரோக்ஷ விஷயமாகிறதென்னுதல், கட்கிலீ (திருவாய். 7-2-3) என்னும் வடிவையிறே கண்ணால் கண்டஞுபவித்தது. காணாதவையும் கண்ட வஸ்துவில் உண்டிறே. இப்படி மைப்படி மேனி(திருவிரு-94)யையநுபவித்து மற்ற விஷயங்களைக் காணாக் கண்ணாயிருக்குமவரைச் சொல்லுகிறது.
(யோ நிஶ்சிகாய மநவை முநிவாஹநம் தம்) என்று யாவரொருவர் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே (அமலன்-10)என்று அறுதியிட்டார் அப்படிப்பட்ட அந்த முநிவாஹநரை. (மநவை) மநஸ்ஸாலே ப்ரதிபத்தி பண்ணுகிறேனென்றபடி. அயனலர்கொடு தொழுதேத்த (பெரிய.திரு. 4-2-6) என்னும்படி ஹம்ஸவாஹநனான சதுர்முகன் பஹுமுகமாக அநுபவித்தாப்போலே முநிவாஹநரான இவரும் ஏகமுகமாக இரண்டு கண்ணாலும் கண்டனுபவித்தார். க்ரீடகேயூரக ரத்நகுண்டலம் ப்ரலம்பமுக்தாமணி ஹேமபூஷிதம் . விஶால வக்ஷஸ்ஸ்தலஶோபிகௌஸ்துபம் ஶ்ரியா ச தேவ்யாத்யுஷிதோருவிக்ரஹம் .. ப்ரதப்த சாமீகரசாருவாஸஸம் ஸுமேகலாநூபுர ஶோபிதாங்க்ரிகம் . ஸுவர்த்துநீஜாத ம்ருணால கோமலம் ததாநமச்சச்சவி யஜ்ஞஸூத்ரகம் .. புஜோபதாநம் ப்ரஸ்ருதாந்யஹஸ்தம் நிகுஞ்சிதோத்தாநித பாதயுக்மம் . ஸுதீர்க்கமுர்வம்ஸமுதக்ரவேஷம் புஜங்கதல்பம் புருஷம் ததர்ஶ (ஹஸ்திகிரி மாஹாத்ம்யம்) என்று ப்ரஹ்மாவானவன் அபிமாநியாகையாலே, முடியே தொடங்கியனுபவித்தான், இவர் அடியாராகையாலே அடியே தொடங்கி அநுபவித்தார். அவன் கண்டவநந்தரம் விஷயங்களையும் கண்டான், இவர் விஷயங்களைக் கண்டிலர். திருக்கமலபாதம் வந்தென் கண்ணினுள்ளன (அமலன்-1), கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே (அமலன்-10) என்றார்.
வீணையும் கையுமாய் ஸேவிக்கிற இவர்க்கு சேமமுடை நாரத (பெரியாழ்.திரு. 4-9-5) னாரும் ஒருவகைக்கு ஒப்பாகார்.
பெரியாழ்வார் அவதாரத்தில் அநுபவம் இவர்க்கு அர்ச்சாவதாரத்திலே, அவர் பாதக்கமலம் (பெரியாழ்.திரு. 1-2-1) என்றத்தை திருக்கமலபாதம் (அமலன்-1) என்றார், பீதகச்சிற்றாடையொடும் (பெரியாழ்.திரு. 1-7-3) என்றதை அரைச்சிவந்த ஆடையின்மேல் (அமலன்-2) என்றும், அழகியவுந்தி (பெரியாழ்.திரு. 1-2-8) யை அயனைப் படைத்ததோரெழில் உந்தி (அமலன்-3) என்றும், பழந்தாம்பாலார்த்த உதர (பெரியாழ்.திரு. 1-2-9) த்தை திருவயிற்று உதரபந்தம் (அமலன்-4) என்றும், குருமாமணிப்பூண் குலாவித்திகழும் திருமார்வை (பெரியாழ்.திரு. 1-2-10) திருவாரமார்பு (அமலன்-5) என்றும், அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டத்தை (பெரியாழ்.திரு. 1-2-13) முற்றும் உண்ட கண்டம் (அமலன்-6) என்றும், நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலத்தை (பெரியாழ்.திரு. 1-2-12) கையினார் சுரிசங்கனலாழியர் (அமலன்-7) என்றும், செந்தொண்டை வாயை (பெரியாழ்.திரு. 1-2-14) செய்யவாய் (அமலன்-7) என்றும், கண்கள் இருந்தவா (பெரியாழ்.திரு. 1-2-16) றென்றதை அப்பெரியவாய கண்கள் (அமலன்-8) என்றும், உருவுகரிய ஒளிமணிவண்ணன் (பெரியாழ்.திரு. 1-2-17) என்றதை எழில் நீலமேனி (அமலன்-9) என்றும், குழல்கள் இருந்தவா (பெரியாழ்.திரு. 1-2-20) என்றதை துளவவிரையார் கமழ் நீண்முடி (அமலன்-7) என்றும் அருளிச் செய்தார். கோவலனாய் வெண்ணையுண்ட வாய (அமலன்-10) னிறே பெரியபெருமாள். ஆகையால் அநுபவத்தில் இருவரும் ஸகோத்ரிகளாயாய்த்திருப்பது. இப்படி மன:ப்ரீதி பிறக்கும்படி அனுபவித்த ஆழ்வாரை இங்கு மன:ப்ரீதி பிறக்கும்படி (மநவை) என்று மனஸ்ஸாலே ஸேவிக்கும்படி சொல்லிற்று.
பிள்ளைலோகம் ஜீயர் அருளிச்செய்த தனியன் வ்யாக்யானம் முற்றிற்று
@@@@@
திருமலை நம்பி அருளிச்செய்த தனியன்
காட்டவே கண்ட பாதகமலம் நல்லாடை உந்தி
தேட்டரும் உதர பந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிபுகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே.
பதவுரை:-
முனி ஏறி – லோகஸாரங்கமுனியின் (தோளின்மேல்) ஏறி,
தனி புகுந்து – தனியே உள்ளே புகுந்து,
காட்டவே கண்ட -(எம்பெருமான்) காண்பித்தபடியே கண்டு ஸேவிக்கப்பட்ட,
பாத கமலம்-திருவடித் தாமரைகளும்,
நல் ஆடை – சிறந்த திருப்பீதாம்பரமும்,
உந்தி- திருநாபியும்,
தேட்டரும் -கிடைத்தற்கு அரிதான,
உதரபந்தம் – பொன்அரைநாணும்,
திருமார்வு- பிராட்டி வாழ்கிற மார்பும்,
கண்டம் -திருக்கழுத்தும்,
செவ்வாய் – சிவந்த வாயும்,
வாட்டம் இல் – சோர்வுஇல்லாத,
கண்கள் – திருக்கண்களும் (ஆகிய இவற்றோடு கூடிய),
மேனி -திருமேனியை,
பாட்டினால் கண்டு வாழும் – பாசுரங்களின் அநுஸந்தானத்தோடேகூட ஸேவித்து ஆனந்தித்த,
பாணர் -திருப்பாணாழ்வாருடைய,
தாள் – திருவடிகளை,
பரவினோம் -துதிக்கப்பெற்றோம்.
அவதாரிகை – (காட்டவே கண்ட பாதகமலம்) பெரியபெருமாளைப் பாதாதிகேஶாந்தமாய் அனுபவிக்கப் பெற்ற பாண்பெருமாளை ஸ்தோத்ரம் பண்ணி ஹர்ஷிக்கும்படி சொல்லுகிறது.
வ்யாக்யானம் – (காட்டவே கண்ட பாதகமலம்) அரங்கத்தம்மான் திருக்கமலபாதம் வந்தென் கண்ணினுள்ளன வொக்கின்றவே (அமலன்-1) என்று ஸ்ரீரங்கேஶயபாதபங்கஜயுகம் (ர.ஸ்த. 1-125) என்ற ஸ்ரீரங்கராஜ சரணாம்புஜ(யதிராஜவிம்ஶதி-2) ங்களைச் சொல்லுகிறது. (நல்லாடை) அரங்கத்தம்மான் அரைச்சிவந்தவாடை (அமலன்-2) என்று ரங்கதுரந்தரனுடைய பீதாம்பர(ர.ஸ்த. 1-120) த்தைச் சொல்லுகிறது. (உந்தி) அரங்கத்தரவினணையான் அயனைப் படைத்ததோரெழிலுந்தி (அமலன்-3) என்று விதிஶிவநிதாநமான நாபீபத்ம(ர.ஸ்த. 1-116) த்தைச் சொல்லுகிறது.
(தேட்டருமுதரபந்தம்) தேட்டரும் திறல் தேனான தென்னரங்க(பெருமாள் திரு. 2-1) னுடைய தேடற்கரிய (பெரிய திரு. 9-9-10) உதரபந்தம். அரங்கத்தம்மான் திருவயிற்றுதரபந்தம் (அமலன்-4) என்று பட்டம் கிலோதரபந்தநம் (ர.ஸ்த. 1-115) என்றத்தைச் சொல்லுகிறது. (திருமார்வு) அரங்கத்தம்மான் திருவாரமார்பு (அமலன்-5) என்று லக்ஷ்மீலளித க்ருஹ(ர.ஸ்த. 1-111) மான வக்ஷஸ்ஸ்தலத்தைச் சொல்லுகிறது. (கண்டம்) அரங்கநகர் மேயவப்பன் முற்றுமுண்ட கண்டம் (அமலன்-6) என்று ஸ்ரீரங்கநேதாவின் கண்ட(ர.ஸ்த. 1-104) த்தைச் சொல்லுகிறது. (செவ்வாய்) அணியரங்கனார் – செய்யவாய் (அமலன்-7) என்று, அதரமதுராம்போஜம் (ர.ஸ்த. 1-103) என்று அருணாதர பல்லவத்தைச் சொல்லுகிறது. (வாட்டமில் கண்கள்) க்ஷணோஜ்ஜ்வலமாய் அழலானியையுடைய தாமரைப் பூவில் வ்யாவ்ருத்தமாய், ஸதைகரூபமாய், அரங்கத்தமலன் முகத்துக் கரியவாகிப்புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள் (அமலன்-8) என்று விசாலஸ்பீதாயத்ருசிரஶிஶிரதாம்ரதவளமான ஸ்ரீரங்க ப்ரணயி நயநாப்ஜங்களை(ர.ஸ்த. 1-99)ச் சொல்லுகிறது. (மேனி) ஏவம்விதமான திவ்யமங்கள விக்ரஹத்தை.
(முனியேறி) – முநிவாஹநராய். (தனிபுகுந்து) – இந்த மஹாபோகத்திலே தாம் ஏகராய் உள்புகுந்து. (பாட்டினால்) அனுபவத்துக்குப் பாசுரமிட்டுப் பேசின அமலனாதிபிரான் என்கிற ப்ரபந்தத்தின் பாட்டுக்களாலே அண்டர்கோனணியரங்கனைக் (அமலன்-10) கண்டு வாழுமவராய்த்து இவர். பின்பு இவ்வனுபவத்துக்கு பட்டர் தேசிகரானார். (கண்டுவாழும்) காட்சியே வாழ்ச்சியாக வாழுகிற. (பாணர் தாள்) வீணாபாணியாய்ப் பெரியபெருமாள் திருவடிக்கீழே நிரந்தர ஸேவை பண்ணிக்கொண்டு நிற்கிற திருப்பாணாழ்வார் திருவடிகளை. (பரவினோம்) ஸ்தோத்ரம் பண்ணினோம். அலப்யலாபமானது லபிக்கவும் பெற்றோம், இனியொரு குறைகளுமில்லையென்கிறது.
திருமலை நம்பி அருளிச்செய்த தனியன் வ்யாக்யானம் முற்றிற்று
@@@@@
பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த அமலனாதிபிரான் வ்யாக்யானம்
அவதாரிகை
ப்ரணவம் போலே அதிஸங்குசிதமாயிருத்தல், வேதமும் வேதோபப்ரும்ஹணமான மஹாபாரதமும் போலே பரந்து துறுப்புக் கூடாயிருத்தல் செய்யாதே பத்துப்பாட்டாய் ஸுக்ரஹமாய் ஸர்வாதிகாரமுமாயிருக்கும். வேதோபப்ரும்ஹணார்த்தாய தாவக்ராஹயத ப்ரபு: (ரா.பா. 4-6) என்றும், வேதாநத்யாபயாமாஸ மஹாபாரதபஞ்சமாந் (பார. ஆதி. 64-131) என்றும் சொல்லுகிறபடியே வேதோபப்ரும்ஹணமான மஹாபாரத ராமாயணங்களும், நாராயணகதாமிமாம் (பார. ஆதி. 1-27) இத்யாதிகளைச் சொல்லி வைத்து பகவத்கதை அல்லாதவற்றையும் சொல்லி வைத்தது.
திருவாய்மொழியும் அமர்சுவையாயிரம் (திருவாய். 1-3-11), பாலோடமுதன்னவாயிரம் (திருவாய். 8-6-11), “உரைகொளின்மொழி” (திருவாய். 6-5-3) என்று “ஏதமிலாயிரமா” (திருவாய். 1-6-11) யிருந்ததேயாகிலும் அந்யாபதேஶஸ்வாபதேஶமென்ன,
ஸாமாநாதிகரண்யநிர்ணாயகமென்ன, த்ரிமூர்த்திஸாம்ய ததுத்தீர்ண தத்வநிஷேதமென்ன இவை தொடக்கமான அருமைகளையுடைத்தாயிருக்கும், திருநெடுந்தாண்டகமும் பரப்பற்று முப்பது பாட்டாயிருந்தேயாகிலும் அதுக்கும் அவ்வருமைகளுண்டு, திருமாலைக்கு அவ்வருமைகளில்லையேயாகிலும் தம்முடைய லாபாலாபரூபமான ப்ரியாப்ரியங்களை ப்ரதிபாதியாநிற்கும், திருப்பல்லாண்டுக்கு இக்குற்றங்களில்லையேயாகிலும் அதுக்குமொரு குற்றமுண்டு, த்ரிவிதாதிகாரிகளுடைய குணாகுணங்களை ப்ரதிபாதிக்கையாலே, ப்ரணவம் போலே அல்ல, அதிஸங்குசிதமாய் துர்ஜ்ஞேயமாயிராமையாலே. யதிஹாஸ்தி ததந்யத்ர யந்நேஹாஸ்தி ந தத்க்வசித் (பார.ஆதி. 62-26) என்கிறபடியே ஆயிரத்திலொன்றும் கடலில் குளப்படியும் போலே புறம்பில்லாதவையெல்லாம் இதிலேயுண்டாய் இதிலில்லாததொன்றும் புறம்பின்றியேயிருக்கும்.
பரவ்யூஹவிபவங்களை ப்ரதிபாதிக்கையன்றிக்கே அர்ச்சாவதாரரூபேண வந்தவதரித்து திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி, திரைக்கையாலடிவருடப் பள்ளிகொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு (பெருமாள் திரு. 1-1), மணத்தூணே பற்றி நின்று வாயார வாழ்த்துகிற (பெருமாள் திரு. 1-2) ப்ரபந்தமாகையாலே எல்லாப் ப்ரபந்தங்களிலும் இப்ப்ரபந்தத்துக்கு வைலக்ஷண்யமுண்டு.
மற்றையாழ்வார்களிற் காட்டிலும் இவர்க்கு நெடுவாசியுண்டு. பல்லாண்டு (பெரியாழ். திரு. 1-1), போற்றி (திருப்பாவை-24) என்று பாவிக்க வேண்டிற்று அவர்களுக்கு. அது வேண்டாதே ஜன்மஸித்தமாய்த்து இவர்க்கு. குலங்களாய வீரிரண்டிலொன்றிலும் பிறந்திலேன் (திருச்சந்த. 90) என்கிறபடியே இவர் தம்மை நாலு வர்ணத்திலும் புறம்பாக நினைத்திருப்பர். பெரியபெருமாளும் அப்படியே நினைத்திருப்பர். நித்யசூரிகள் நாலுவர்ணத்திலுமுள்ளாரல்லரே. ஆழ்வார்கள் இருகரையர் என்னும்படியிறே ஸ்ரீதொண்டரடிப்பொடியாழ்வார் ஐகாந்த்யம். அவரிலும் இவர் பரோபதேசமும் இதரநிரஸனமும் அனுபவவிரோதி என்று வெறும் பெரியபெருமாளையே அடித்தலை செவ்விதாக அனுபவிக்கிறார்.
ஸ்நேஹோ மே பரம: (ரா.உத். 40-15), என்றனளவன்றால் யானுடைய வன்பு (இரண்டாம் திருவ. 100), ராஜம்ஸ்த்வயி இதுதானும் என்னால் வந்ததன்று, அதுவுமவனதின்னருளே (திருவாய். 8-8-3). நித்யம் ப்ரதிஷ்டித: இன்றன்றாகில் மற்றொருபோது கொடுபோகிறோமென்ன, அங்ஙன் செய்யுமதன்று. தர்மியைப் பற்றி வருகிறதாகையாலே நின்னலாலிலேன் காண் (திருவாய். 2-3-7) என்னுமாபோலே. பக்திஶ்ச நியதா ஸ்நேஹமாவதென்? பக்தியாவதென்னென்னில் பெருமாளையொழியச் செல்லாமை பிறந்து வ்யதிரேகத்தில் முடிந்த சக்ரவர்த்தி நிலை – ஸ்நேஹம். பக்தியாவது நில் என்ன குருஷ்வ (ரா.அ. 31-24) என்னும்படியாய் முறையறிந்து பற்றின இளையபெருமாள் நிலை. வீர தன்னைத் தோற்பித்த துறை. உம்முடைய வீரங்கொண்டு புறம்பே வென்றீரென்று இங்கு வெல்லமுடியாது. தானும் வீரனாகையாலே தோற்பித்த துறையைப் பிடித்துப் பேசுகிறான். பாவோ நாந்யத்ர கச்சதி – என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சை மீட்கப்போகாது. அந்யத்ர – என்கிறது மற்றாரானுமுண்டென்பார் (சிறிய திருமடல்-) என்னுமாபோலே கொடுபோக நினைத்த தேஶத்தின் பேருங்கூடத் தனக்கு அஸஹ்யமாயிருக்கிறபடி. இப்படி ராமாவதாரமல்லதறியாத திருவடியைப் போலேயாய்த்து இவரும், இவர் தேவாரமான பெரியபெருமாளையல்லது பரவ்யூஹவிபவங்களை அறியாதபடி.
ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் திருவவதாரஸ்தலம் உகந்தருளின திருப்பதிகள் இவையெல்லாம் பெரியபெருமாளேயானாப்போலே அவ்வோவிடங்களிலுண்டான ஸௌந்தர்ய குணசேஷ்டிதாதிகளெல்லாம் பெரியபெருமாள் பக்கலில் காணலாம். பெரியபெருமாளழகும் ஐச்வர்யமுமெல்லாம் பரமபதத்திலே முகுளிதமாயிருக்கும், அவதாரத்தில் ஈரிலைபோரும், இங்கே வந்த பின்பு தழைத்தது. எங்ஙனேயென்னில் – பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகுமங்காதும் சோராமேயாள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனாராகையாலே அவ்வோவிடங்கள் ஸங்குசிதமாயிருந்ததிறே.
தன்னையுகந்தாரை அனுபவிக்கையன்றியே தான் என்றால் விமுகராயிருப்பாரும் கண்டனுபவிக்கலாம்படி இருக்கையாலே நீர்மையினால் வந்த ஏற்றமிங்கேயுண்டு. குணாதிக்யத்தாலேயிறே வஸ்துவுக்கு உத்கர்ஷம். குணம் விலைபெறுவது இங்கேயிறே. குணத்தில் அகப்பட்டார் இவ்விஷயம் போக்கி அறியார்களிறே.
யதோ வாசோ நிவர்த்தந்தே (தை. ஆந 9-1) என்று வேதங்களுக்கெட்டாத ஸர்வேச்வரனை, ஆற்றில் தண்ணீரோபாதி ஆற்றுக்குள்ளே கண்டனுபவிக்கலாம்படி இருக்கிறவிடமிறே. மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தன்மதுரவாறான (திருமாலை -36) அவ்வாறு இவ்வாறாய்த்துக் காணும். இவர் தமக்கு ப்ராப்யரும் ப்ராபகரும் ருசிஜநகரும் விரோதிநிவர்த்தகமுமெல்லாம் பெரியபெருமாளே என்றிருக்கிறார்.
பலபோக்த்ருத்வம் தம்மதாயிருக்க எல்லாமவரே என்கிறபடி எங்ஙனே யென்னில் ப்ரதமஸுக்ருதமும் தானாய் பேற்றுக்கு வேண்டுவன நிர்வஹித்துப் போந்த ஸௌஹார்த்தமும் அத்தலையிலே கிடக்கையாலே, பேற்றுக்கு இத்தலையிலுள்ளது சொல்லப்பாத்தம் போராதிறே உள்ளதுண்டாகில் அனுக்ரஹத்துக்கு ஹேதுவாமித்தனை. இதர விஷயங்களில் அருசியும் பகவத் விஷயத்தில் அப்ரதிஷேதமும் விளைந்த இம்மாத்ரத்திலே பெரியபெருமாள் தம்முடைய ஸ்வரூபரூப குணவிபூதிகளைக் காட்டக் கண்டனுபவித்து ப்ரீதராகிறார். ஆநயைநம் ஹரிச்ரேஷ்ட (ரா.யு. 18-34) என்று மஹாராஜரையிட்டு ஸ்ரீவிபீஷணாழ்வானை அருள் பாடிட்டாப்போலே, தாழ்ச்சி மற்றெங்கும் தவிர்ந்து (திருவாய் 3-3-4) கடைத்தலையிருந்து வாழும் சோம்ப (திருமாலை -38) ராயிருக்கிற லோகஸாரங்க மஹாமுனிகளை அருள் பாடிட்டு, நம் பாடுவோனை அழைத்துக் கொண்டு வாரும் என்ன, அவரும் அருள்பாடருள்பாடு என்று சொல்ல, இவரும் அடியேன் அடிப்பாணனடிப்பாணன் என்று இறாய்க்க, அவரும் விடாதே தோள் மேலே எழுந்தருளப் பண்ணுவித்துக் கொண்டுபோக, வழியிலே ஒன்பது பாட்டுப்பாடித் திருப்பிரம்புக்குள்ளே நின்று பத்தாம் பாட்டுப் பாடித் தலைக்கட்டுகிறார்.
@@@@@
முதற்பாட்டு
1. அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆள்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள்மதிள் அரங்கத்து அம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணில் உள்ளன ஒக்கின்றனவே
பதவுரை:-
அமலன் – பரிசுத்தனாய்,
ஆதி – ஜகத்காரணபூதனாய்.
பிரான் – (எனக்கு) உபகாரகனாய்,
என்னை – (தாழ்ந்தகுலத்தவனான) என்னை,
அடியார்க்கு – (தனது) அடியவர்களாய பாகவதர்களுக்கு,
ஆள்படுத்த- அடிமையாக்குவதாலே வந்த,
விமலன்- சிறந்த ஒளியையுடையவனாய்,
விண்ணவர்கோன்-நித்யஸூரிகட்குத் தலைவனாய் இருந்துவைத்து,
(ஆஸ்ரிதர்க்காக) விரை ஆர் பொழில் – பரிமளம் மிக்க சோலைகளையுடைய,
வேங்கடவன் – திருவேங்கட மலையில் வந்து தங்குமவனாய்,
நிமலன்- கைம்மாறு கருதாமையாகிற சுத்தியை உடையவனாய்,
நின்மலன் – தன்பேறாக உதவும் சுத்தியை உடையவனாய்,
நீதிவானவன் – ஶேஷஶேஷி முறை வழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாஹகனாய்,
நீள்மதிள் – உயர்ந்த மதிள்களையுடைய,
அரங்கத்து – கோயிலிலே (கண்வளர்ந்தருளுகிற)
அம்மான் – ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய,
திருக்கமலபாதம் – திருவடித்தாமரைகளானவை,
வந்து – தானேவந்து,
என் கண்ணின் உள்ளன ஒக்கின்றவே – என்கண்ணுக்குள்ளே புகுந்தன போலிரா நின்றனவே.
அவதாரிகை – முதற்பாட்டு, பெரியபெருமாள் திருவடிகளிலழகு மேல்விழுந்து தம்மை அடிமைகொண்டதென்கிறார்.
வ்யாக்யானம் – (அமலன்) – நித்யஸம்ஸாரியாய்த் தண்ணியராயிருக்கிற தாம் கிட்டுகை அத்தலைக்கு அவத்யமென்றிருந்தார். வந்து கிட்டின பின்பு பெரியபெருமாளுக்குப் பிறந்த வைலக்ஷண்யத்தைக் கண்டு அமலன் என்று கொண்டாடுகிறார். அமலன் என்றது ஹேய ப்ரத்யநீகனென்றபடி. அபஹதபாப்மத்வாதிகுணங்கள் ஆத்மாவுக்குண்டாயிருக்கச்செய்தேயும் ஹேயஸம்பந்தாவஹமாய், பகவத் ப்ரஸாதத்தாலே உண்டாக வேண்டியிருக்கும். இவன் அங்ஙனன்றிக்கேயிருக்கை.
(அமலன்) ஶுத்தனென்றபடி. இவன் ஶேஷஶேஷி ஶுத்தனாகையாவது தான் ஒருத்தன் சுத்தனாகையன்று, தன்னோடு ஸம்பத்தித்தாரையும் ஶுத்தராக்கவல்ல அடியுடைமை. துயரறு சுடரடி (திருவாய் 1-1-1) யிறே. பாவநஸ் ஸர்வலோகாநாம் த்வம் ஏவ ரகுநந்தந (ரா.உத் 82-9) என்னுமாபோலே. (அமலன்) என்கிறது – ஜன்மவ்ருத்தாந்திகளால் குறைய நின்ற தம்மை விஷயீகரித்த பின்பு தன்பக்கல் தோஷம் தட்டாதே அநச்நந்நந்யோ அபிசாகஶீ தி (முண்டக 3-1-1) என்கிறபடியே விளங்குகிறபடி. என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.
(ஆதி) ஆதீயத இதி ஆதி: – ஸ்ப்ருஹணீயனென்றபடி. தம்மை விஷயீகரிக்கைக்கு அடியானானென்று ஆதி என்னவுமாம். ஜகத்காரணத்வாதிகளைச் சொல்லவுமாம். ஆக இரண்டு பதத்தாலும் ஹேயப்ரத்யநீகத்வமும் கல்யாணகுணயோகமும் சொல்லுகிறது.
(பிரான்) – இவ்வோநிலைகளை எனக்கறிவித்த உபகாரகன். (பிரான்) உபகாரத்தைச் சொல்லி, சொல்லப்பற்றாமே எத்திறம் (திருவாய் 1-3-1) என்கிறார். (அடியார்க்கு) – ரத்நஹாரீ ச பர்த்திவ: (ரா.பா 53-9) என்கிறபடியே இவ்வஸ்துவின் சீர்மையாலே இது நம்மளவிலடங்காது, நம்மடியார்க்காமித்தனையென்று அவர்களுக்காக்கி னானென்கிறார். (அடியார்) – தன் பக்கலிலே நிக்ஷிப்தபரராயிருக்குமவர்கள்.
(என்னையாள்படுத்த விமலன்) – தன்னிடையாட்டமுமறியாதவென்னைத் தன்னடியார்க்கு ஶேஷபூதனாக்கின சுத்தனென்கிறார். (என்னை) ப்ரக்ருதிக்கடிமை செய்து போந்தவென்னை. தந்த தனத்தின் சீர்மை அறியாத என்னை. (என்னை) – தேஹாத்மாபிமாநிகள் தீண்டாதவென்னை. நன்மைக்குத் தனக்கவ்வரு கில்லாதாப்போலே தீமைக்கு எனக்கவ்வருகில்லாத என்னை. (ஆள்படுத்த) – அவர்களோடே ஒப்பூணுண்ண வைத்திலன். அவர்களுக்கு ஶேஷமாக்கினான். பகவச்ஶேஷத்வத்தளவிலே நின்றால் மீளசங்கையுண்டு, பாகவத ஶேஷத்வத்தளவும் சென்றால் மீளப்போகாதே. உகப்பாலே வருமதாகையாலே. ஒரு க்ஷேத்ரம் பத்தெட்டு க்ரயம் சென்றால் மீள விரகில்லை. ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு முதலிகளுடைய விஷயீகாரம் பெருமாளுடைய விஷயீகாரத்துக்கு முற்பட்டாப்போலே இவர்க்குத் ததீய விஷயீகாரம் முற்பட்டபடி. தத்ருசூ:, ஆநயைநம் ஹரி ச்ரேஷ்ட அங்கு. இங்கு லோகஸாரங்கமஹாமுனிகளைப் போய் ஆழ்வாரை அழைத்துக் கொண்டுவாரும் என்றான்.
(அடியார்க்கென்னை ஆட்படுத்த) – தான் ஶேஷித்வத்தினுடைய எல்லையிலே நின்றாப்போலே ஶேஷத்வத்தினெல்லையிலே என்னை வைத்தான். (விமலன்) – என் சிறுமை பாராதே ததீயர்க்கு ஶேஷமாக்குகையால் வந்த ஔஜ்வல்யம். எதிரிகளை தரம்பாராதே சீரியர் தந்தாமளவிலேயிறே கொடுப்பது.
(விண்ணவர்கோன்) – ஆளில்லாதவன் கிடீர் இப்படி விஷயீகரித்தான். நித்யசூரிகள் எடுத்துக் கைநீட்டும்படி இருக்கிறவன் கிடீர் கதிர் பொறுக்கி ஜீவிப்பாரைப்போலே நித்யஸம்ஸாரியாயிருக்கிறவென்னை நித்யமுக்தரோடொக்க விஷயீகரித்தான். இவ்வௌதார்யம் கற்றதும் அவர்களோடே கிடீரென்றுமாம். அஸ்மாபிஸ்துல்யோபவது (ரா.யு 18-38) என்றார்களிறே. (விண்ணவர்கோன்) – இங்குத்தைக் குழாத்தையொழிய அங்குத்தைக் குழாத்தையும் காட்டித்தந்தான். உடன் கூடுவதென்று கொலோ (திருவாய் 2-3-10) என்று இவர் ஆசைப்படவேண்டுவதில்லை. (கோன்) – அவர்களாலும் எல்லை காணவொண்ணாது. (விரையார் பொழில் வேங்கடவன்) – பரிமளம் நிறைந்திருந்துள்ள சோலையையுடைய திருவேங்கட மலையையுடைவன். பெரியபெருமாளைப் பாடாநிற்கத் திருமலையிலே போவானென்னென்னில் – ஒருவனைக் கவிபாடும்போது அவனுடைய வரத்துச்சொல்லியிறே கவிபாடுவது. பரமபதத்தில் நின்றும் ஸ்ரீமதுரையிலே தங்கித் திருவாய்ப்பாடிக்கு வந்தாப்போலே, ஸ்ரீவைகுண்டத்தினின்றும் திருமலையிலே தங்கிக்காணும் கோயிலுக்கு வந்தது என்று பட்டரருளிச்செய்யும்படி. அன்றியே, கோயில் போக்யதை தமக்கு நிலமல்லாமையாலே திருமலையிலேபோய் தரிக்கப்பார்க்கிறாரென்றுமாம். (விரையார்) – நித்யஸூரிகளையுடையனாவதுக்கு மேலே ஓர் ஐச்வர்யம்.
(விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன்) – ஆற்றிலே அழுந்துவார் ஆழங்காலிலே இளைப்பாறத் தேடுமாபோலே அவர்களும் வந்து அடிமை செய்யுமிடம். (வேங்கடவன்) – அர்ச்சாவதாரத்துக்குப் பொற்கால் பொலியவிட்டவிடம்.
(நிமலன்) – இத்தலையில் அர்த்தித்வமும் கூடவின்றிக்கேயிருக்க, இப்படி உபகரிக்கையால் வந்த ஔஜ்வல்யம். இவனும் ஓரடியிடப்பார்த்திராதொழிகை. அசித்வயாவ்ருத்தியாலே ஓரடியிட்டாருண்டாகில் பத்ப்யாமபிக மாச்சைவ ஸ்நேஹஸந்தர்சநேநச (ரா.௮ 50-41) . (நின்மலன்) – இத்தலைக்கு உபகரித்தானா யிருக்கையன்றிகே தன் பேறாயிருக்கை. அமலன் என்று தனக்காக்கினபடி, விமலன் என்று தன்னடியார்க்காக்கினபடி, நிமலன் என்று நான் பச்சையிடாதிருக்க என்கார்யம் செய்தானென்கிறார். (நின்மலன்) – இது தன் பேறாகச் செய்தானென்கிறார். க்ருத்க்ருத்யஸ்ததாராம: ((ரா.பா. 1-85) என்கிறபடியே.
(நீதிவானவன்) – ஶேஷஶேஷித்வங்கள் முறைமாறாத நித்யவிபூதியிலேயுள்ளவன். ஈஶ்வரோஹம் (கீதா 16-14) என்று எதிரிட்டிருக்குமிடமிறே இவ்விடம், அங்கு கலக்குவாருமில்லை, கலங்குவாருமில்லை, இங்கு கலக்குவாருமுண்டு., கலங்குவாருமுண்டு. (நீள்மதிளரங்கத்தம்மான்) – நீதிவானவன் என்னா, நீண் மதிளரங்கத்தம்மா னென்கிறார், அளப்பரியவாரமுதை அரங்கமேயவந்தணனை (தி௫.நெடு 1-14) என்னுமாபோலே (நீண்மதிள்) – ரக்ஷகத்வத்துக்குப் போரும்படியான மதிளையுடைய பெரியகோயிலிலே கண்வளர்ந்தருளுகிற பரமஶேஷி. (அம்மான்) – ஈரரசு தவிர்த்தாலிறே ஶேஷித்வம் பூர்ணமாவது. திருமலையில் போக்யதை நிலமல்லாமையாலே மீளவும் கோயிலிலே புகுகிறார். வௌ்ளத்தைக் கள்ளமடையாலே பள்ளத்தே விடுமாபோலே, திருவேங்கடமுடையான் வடக்குத் திருவாசலாலே வந்து புகுந்தானத்தனை என்றுமாம். (திருக்கமலபாதம்) – செவ்வியும் குளிர்த்தியும் விகாஸமும் பரிமளமும் தொடக்கமானவை.
ஆதித்யனைக் கண்டாலிறே தாமரையலருவது, இத்தாமரைக்கு ஆதித்யன் இவர். பிராட்டி திருமுலைத்தடங்களிலும் திருக்கண்களிலும் ஒற்றிக்கொள்ளும் திருவடிகள். இவருடைய தளிர்புரையும் திருவடிகளிருக்கிறபடி. (அம்மான் திருக்கமலபாதம்) – தொடர்ந்து வருகைக்கு ப்ராப்தி. (வந்து) – த்வீபாந்தரத்தில் சரக்குச் சேரவேண்டினால் பாதிப்பாதி வழியாகிலும் வருதல், ஒருதலைப்பற்றுதல் செய்யவேணுமிறே, அங்ஙனன்றியே, வந்துனதடியேன் மனம் புகுந்தாய் என்கிறபடியே வழிவந்தானும் தானே, பற்றினானும்தானே என்கிறது. (நீதிவானவன்-கமலபாதம்-என் கண்ணினுள்ளன) – ஸதாதர்சநம் பண்ணுகிறவர்கள் கண்ணுக்கிலக்கானதுகிடீர் என் கண்ணுக்கிலக்காகிறது. வல்லதனை நாளும் விரோதம் பண்ணினேன், போக்கற்றவாறே என் கண்ணைச் செம்பளித்தேன், தொடர்ந்து வந்து செம்பளித்த கண்ணையுறுத்து உள்ளே புகுந்து நிற்கையாலே என் கண்ணினுள்ளன என்கிறார்.
அன்றியே தம் கண்ணாலே பார்க்கை அவத்யமென்று கண்ணைச் செம்பளித்தார், கண்ணினுள்ளே ப்ரகாஶிக்கத் தொடங்கிற்று.
(ஒக்கின்ற) – ப்ரயோஜநம் இரண்டு தலைக்கும் ஒத்திரா நின்றது. அங்குத்தைக்கு சீலஸித்தி, இங்குத்தைக்கு ஸ்வரூபஸித்தி. (ஒக்கின்ற) – ப்ரத்யக்ஷ ஸமாநாகார மாயிருந்ததென்னுதல். என் கண்ணுக்கிலக்கான விடத்திலும் பழைய நிலை குலையாதிருந்ததென்னுதல். ஸம்சாரிகளைப் பார்த்து உங்களுக்கும் ஒக்குமோ வென்கிறாராதல். இந்த லாபம் அத்தலைக்கும் ஒக்குமோவென்கிறாராதல்.
(அமலன்) – உயர்வற உயர் நலம் உடையவன் (திருவாய் 1-1-1) . (ஆதி) – யவன் (திருவாய் 1-1-1). (பிரான்) – மயர்வற மதிநலம் அருளினான் (திருவாய் 1-1-1). (அடியார்க்கு) – பயிலும் சுடரொளி (திருவாய் 3-7). (விண்ணவர்கோன்) – அயர்வறும் அமரர்கள் அதிபதி (திருவாய் 1-1-1). (வந்து) – அவர் தொழுதெழு (திருவாய் 1-1-1) என்றார், இவர்க்கு அவை தானே வந்து நின்றன.
@@@@@
இரண்டாம்பாட்டு
2. உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெம் கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே.
பதவுரை:-
உவந்த உள்ளத்தன் ஆய் – (என்னைப் பெற்றதால்) மகிழ்ச்சியோடு கூடிய மனத்தையுடையனாய்க் கொண்டு,
உலகம் அளந்து – மூவுலகங்களையும் அளந்து,
அண்டம் உற – அண்ட பித்திவரைசென்று முட்டும்படி,
நிவர்ந்த- உயர்த்தியை அடைந்த,
நீள்முடியன் – பெரிய திருமுடியை உடையனாய்,
அன்று-முற்காலத்தில்,
நேர்ந்த – எதிர்த்து வந்த,
நிசாசரரை-ராக்ஷஸர்களை,
கவர்ந்த – உயிர்வாங்கின,
வெம்கணை – கொடிய அம்புகளையுடைய,
காகுத்தன் – இராமபிரானாய்,
கடிஆர்- மணம்மிக்க,
பொழில் – சோலைகளையுடைய,
அரங்கத்து- ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான,
அம்மான்- எம்பிரானுடைய,
அரை – திருவரையில் (சாத்திய),
சிவந்த ஆடையின்மேல் – பீதாம்பரத்தின் மேல்,
என சிந்தனை – என்னுடைய நினைவானது,
சென்றது ஆம்-பதிந்ததாம்.
அவதாரிகை – இரண்டாம்பாட்டு. முதற்பாட்டில் – அவன் தொடர்ந்து வந்தபடி சொன்னார்; இப்பாட்டில் – தாம் மேல்விழுந்தபடி சொல்லுகிறார்.
திருவடிகளிலே தொடர்ந்த திருவுள்ளம் திருப்பரியட்டத்தின் மேல் சேர்ந்தபடி எங்ஙனேயென்னில், தானறிந்து சேரில் விஷயத்தின் போக்யதைக்குக் குற்றமாம். ஆகையாலே போக்யதை அளவுபட்டதுமல்ல, ஆசை தலைமடிந்ததுமல்ல, கடலோதம் கிளர்தலை கப்புக்கால் உள்ளே கிடந்ததொரு துரும்பு கடலை அளவிட்டலல்லவே கரையேறுவது. ஒரு திரை ஒரு திரையிலே ஏற வீசுமத்தனையிறே.
வ்யாக்யானம் – (உவந்தவுள்ளத்தனாய்) – ஆழ்வாரை அகப்படுத்துகையால் வந்த ப்ரீதி, ஸர்வேச்வரனாய் ஸ்ரீய:பதியாய் அவாப்தஸமஸ்த காமனாயிருக்கிறவன் அர்த்தியாய் வந்து, தன் திருவடிகளைத் தலையிலே வையா நின்றால் மதீயமூர்த்தாநம லங்கரிஷ்யதி (ஸ்தோ. ர – 31) என்று உகக்க வேண்டியிருக்க, அவையறியாதொழிய ப்ரஜை பால் குடிக்கக்கண்டு உகக்கும் மாதாவைப்போலே உகந்த திருவுள்ளத்தை உடையவனாய். இவற்றைப் பிரிந்தால் வ்யஸநமும் தன்னதேயிறே வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி (ரா.௮ 2-40) என்கிறபடியே.
(உலகமளந்து) – வகுத்த திருவடிகள் தலையிலே வந்திருந்தாலும் உகக்கவறியாத லோகத்தைக் கிடீர் தானும் விடாதே அளந்தது. உகக்கவறியாமைக்கு வன்மாவைய (திருவாய் 3-2-2) மிறே. குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லோர் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்தபடியாலே, பக்திமான்களும் பாதகிகளும் ஒக்க வாழ்ந்து போய்த்து.
(அண்டமுற நிவர்ந்த நீண்முடியன்) – அண்டகடாஹத்திலே சென்று சேர்ந்த திருவபிஷேகத்தை உடையவன். அண்டகடாஹம் வெடித்து அடைகட்ட வேண்டும்படியிறே அபேக்ஷிதம் பெற்று வளர்ந்தபடி. (அண்டமுற) – அண்டம் மோழையெழ (திருவாய் – 7-4-1).
(நிவர்ந்த) – நிமிர்ந்த பூவலர்ந்தாப்போலே. (நீண்முடியன்) – உபயவிபூதிக்கும் நிர்வாஹனென்று தோற்றும்படியிருக்கிற திருவபிஷேகத்தையுடையவன். ரக்ஷ்யவர்க்கத்தை நோக்கினாலிறே ரக்ஷகன் முடிதரிப்பது. (அன்றித்யாதி) – கண்ட காட்சியிலே ஜிதம் என்ன வேண்டும்படியிருக்குமவனிறே. எதிரிட்ட பையல்களை முடிக்கைக்கு வெவ்விய சரத்தையுடைய சக்ரவர்த்தித் திருமகன். (அன்று) – ரக்ஷகனானவன் ரக்ஷ்யத்தை நோக்கக்கடவதாக வந்து நின்றவன்று. (நேர்ந்த நிசாசரரை) – எதிரிட்ட நிசாசரரை. நேர்ந்த நிசாசரரை என்கிறது திருப்பல்லாண்டு பாடவேண்டும் அழகைக் கண்டும் எதிரம்பு கோப்பதே என்று. நிசாசரர் – வெளியில் முகங்கண்டறியாத பையல்கள். (கவர்ந்த) – புறப்படும்போது விநயத்தோடு புறப்பட்டு, வேட்டை நாய்கள் ஓடி மேல் விழுமாபோலே விழுகை. (வெங்கணை) – விடும்போது அம்பாய், படும்போது காலாக்நிபோலேயிருக்கை. தீப்த பாவக ஸங்காஶைஶ்ஶரை ( ரா.யு. 16-32) என்கிறபடியே பெருமாள் கண்பார்க்கிலும் முடித்தல்லது நில்லாத வெம்மை.
(காகுத்தன்) – குடிப்பிறப்பாலே தரம் பாராதே விஷயீகரித்தபடியும் வீரவாதியும்.
(கடியார்பொழில்) – திருவுலகளந்தருளினவிடமே பிடித்து அடியொற்றி, ராவணவதம் பண்ணித் தெற்குத் திருவாசலாலே புகுந்து சாய்ந்தருளினான். இன்னமும் வேர்ப்படங்கிற்றில்லை, திருச்சோலையில் பரிமளம் விடாய்க்கு ஶிஶிரோபசாரமானபடி. (அரங்கத்தம்மான்) – அவதாரத்துக்குப் பிற்பாடர்க்கும் இழவு தீரக் கோயிலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறபடி. (அம்மான்) – இங்கே வந்த பின்பு ஈச்வரத்வம் நிலைநிற்கை.
(அரைச்சிவந்தவாடை) – உடையார்ந்த வாடை (திருவாய் 3-7-4), செக்கர்மாமுகில் (தி௫வாசிரியம் – 1) , திருமேனிக்குப் ப்ரபாகமான திருப்பீதாம்பரம். (சிவந்தவாடையின் மேல் சென்றதாம்) – சோற்றின்மேலே எனக்கு மனம் சென்றது என்னுமாபோலே ஆச்சர்யப்படுகிறார். (எனசிந்தனை) ஆருடைய கூறையுடையைக் கண்டு உகக்கக் கடவ நெஞ்சு இதிலேயகப்பட்டது. (எனசிந்தனை) – திருவடிகளின் சுவடறிந்த பின்பு புறம்பு போகமாட்டாத நெஞ்சு. தீர்த்தமாடா நிற்கத் துறையிலே பிள்ளையைப் கெடுத்துத் திருவோலக்கத்திலே காண்பாரைப்போலே திருவடிகளில் நின்றும் திருப்பீதாம்பரத்திலே திருவுள்ளத்தைக் கண்டபடி.
இத்தால் திருவுலகளந்தருளினத்தையும் ராமாவதாரத்தையும் பெரியபெருமாள் பக்கலிலே ஓரோவகைகளாலே காண்கிறார்.
@@@@@
மூன்றாம்பாட்டு
3. மந்தி பாய் வடவேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன் உயிரே.
பதவுரை:-
மந்தி-ஆண் குரங்குகளானவை,
பாய் – (ஒருகிளையில் நின்றும் மற்றொரு கிளையில்) பாயப்பெற்ற,
வடவேங்கடம் மாமலை -வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே, வானவர்கள் -நித்யஸூரிகள்,
சந்தி செய்ய நின்றான்- பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய்
அரங்கத்து-கோயிலிலே,
அரவு இன் அணையான் – திருவநந்தாழ்வானாகிற இனிய படுக்கையை உடையவனான அழகியமணவாளனுடைய,
அந்திபோல் நிறத்து ஆடையும்- செவ்வானம் போன்ற நிறத்தையுடைய திருப்பீதாம்பரமும்,
அதன்மேல்-அப்பீதாம்பரத்தின் மேலே,
அயனை படைத்தது ஓர் எழில்உந்தி மேலது அன்றோ- பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகையுடைய திருநாபீகமலமும் ஆகிய இவற்றின் மேற்படிந்ததன்றோ,
அடியேன் உள்ளத்து இன் உயிர்-என்னுடைய உட்புறத்திலிருக்கும் நல்ல மனம்.
அவதாரிகை – மூன்றாம்பாட்டு, திருப்பீதாம்பரத்தின் அழகு திருநாபீ கமலத்திலே வீசிற்று.
வ்யாக்யானம் – (மந்திபாய்) – திருமலையில் பலாக்கள் வேரே பிடித்துத் தலையளவும் பழுத்துக் கிடக்கையாலே அங்குத்தைக் குரங்குகள் ஜாத்யுசித சாபலத்தாலே ஒரு பழத்தை புஜிக்கப் புக மற்றை மேலில் பழத்திலே கண்ணையோட்டி இத்தை விட்டு அதிலே பாய்ந்து தாவா நிற்கும் அத்தனையாய்த்து. பெரியபெருமாளுடைய திவ்யாவயவங்களிலே தாம் ஆழங்கால் படுகிறாப் போலேயாய்த்து அவைகளும். கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடமிறே. (மந்திபாய்) – ஒன்றையொன்று பற்றி மாலையாக நாலாநிற்கும். திருச்சின்னக்குரல் கேட்டவாறே பாய்ந்தோடா நிற்குமென்றுமாம். பரமபதமும் திருமலையும் கோயிலும் திருவயோத்யையும் திருச்சோலையும் ஒரு போகியாயிருக்கிறபடி. எங்கும் மாறிமாறித் தங்குகை. (மந்திபாய்) – பலாக்கள் வேரோடு பணையோடு வாசியறப் பழுத்துக் கிடக்கையாலே ஒன்றிலே வாய் வைக்கப் பெறாதேதான் வேண்டினபடியே திரியும்படியாய்த்து.
(வடவேங்கடம்) – தமிழ்தேஶத்துக்கு எல்லை நிலம். (மாமலை) போக்யதை அளவற்றிருக்கை. உபயவிபூதியும் ஒரு மூலையிலே அடங்குமென்றுமாம்.
(வானவர்கள் சந்தி செய்ய நின்றான்) – எத்தனையேனும் தண்ணியார்க்கும் முகங்கொடுத்து நிற்கிற இந்நீர்மையை அனுஸந்தித்து, நித்யஸூரிகள் வந்து படுகாடு கிடப்பது இங்கேயாய்த்து. மேன்மையை அனுபவிக்குமத்தனையிறே அங்கு. ஶீலானுபவம் பண்ணலாவது இங்கேயிறே.
நித்யஸூரிகள் திருமலையிலே நிற்கிற ஶீலவத்தையிலே ஈடுபட்டு வந்து ஆஶ்ரயிக்க, குருடர்க்கு வைத்த அறச்சாலையிலே விழிகண்ணர் புகுரலாமோவென்று, தான் ஆனைக்குப்பாடுவாரைப் போலே மந்திகள் பக்கலிலே திருவுள்ளத்தை வைத்தான் என்றுமாம்.
(அரங்கத்தரவினணையான்) – அங்கு நின்றும் இங்கே சாய்ந்தபடி. பரமபதத்தினின்றும் அடியொற்றினான், திருமலையளவும் பயணமுண்டாயிருந்தது. அங்கு நின்றும் வடக்குத் திருவாசலாலே கோயிலிலே சாய்ந்தான். ராமாவதாரத்தே பிடித்து அடியொற்றினான். ராவணவதம் பண்ணித் தெற்குத் திருவாசலாலே வந்து சாய்ந்தவித்தனையாயிருந்ததென்றுமாம். (அரவினணையான்) – திரிகிறவன் சாய்ந்தருளினால் உள்ளவழகு. (அரவு) – நாற்றம், குளிர்த்தி, மென்மையும். (அரங்கத்தரவினணையான்) – ஶேஷ்யே புரஸ்தாச்சாலாயாம் (ரா.௮ 111-14) ஸ்ரீபரதாழ்வானை கிடந்தாற்போலே கிடக்கிறான். வளைப்புக் கிடக்க விட்டுப்போந்து கடற்கரையிலே போகேனென்று வளைப்புக் ஸம்ஸாரிகளைப் பெற்றாலல்லது வளைப்புக் சக்ரவர்த்தித் திருமகனைப் போலே முதலில் ஶரணம்புக்கு முகங்காட்டாவிட்டவாறே சாபமாநய (ரா.யு 21-22)- என்று சீறுமவரல்லர். ஆற்றாமையைக் காட்டிச் சரணம் புக்குக் கிடக்குமவரிறே இவர்.
(அந்திபோல் நிறத்தாடையும்) – ஸந்த்யாராகம் __போலேயிருந்துள்ள. திருப்பீதாம்பரமும், அரைச்சிவந்தவாடை என்றது பின்னாட்டுகிறபடி
(அதன்மேல்) – இவ்வழகினின்றும் கால்வாங்க மாட்டிகிறிலர். (அயனித்யாதி) – சதுர்த்தஶபுவந ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கு உத்பத்தி ஸ்தாநமான திருநாபீ கமலத்தின் மேலதன்றோ. சதுர்முகஸ்ருஷ்டி பூர்வகாலத்திலேயாகிலும் இப்போது(ம்) ப்ரஹ்மாவுக்கு உத்பத்தி ஸ்தாநமென்று கோள்சொல்லித்தாரா நின்றது, திருநாபீகமலம் (எழிலுந்தி) – இளகிப்படிக்கை ப்ரஸவாந்தஞ்ச யௌவநம் என்கிறபடியன்றிக்கேயிருக்கை.
(அடியேன்) – பதிம் விஶ்வஸ்ய (தை.நா – 11), யஸ்யாஸ்மி (யஜுர்.ப்ரா3-7) என்கிற ப்ரமாணத்தாலே அடியேன் என்கிறாரல்லர், அழகுக்குத் தோற்று அடியேன் என்கிறார். (அடியேனுள்ளத்தின்னுயிரே) – என்னுடைய நற்சீவனானது திருநாபீகமலத்ததன்றோவென்கிறார்.
விடாமைக்குப் பற்றாக, மருடியேலும் விடேல் கண்டாய் (திருவாய் 2-7-10) என்னுமாபோலே. இப்பாட்டில் பெரியபெருமாள் பக்கலிலே திருவேங்கடமுடையான் தன்மையுமுண்டென்கிறது.
@@@@@
நான்காம்பாட்டு
4. சதுரம் மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர ஓட்டி ஓர் வெம்கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுரமா வண்டு பாட மாமயில் ஆட அரங்கத்தம்மான் திருவயிறு
உதரபந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.
பதவுரை:-
சதுரம் – நாற்சதுரமாய்,
மா-உயர்ந்திருக்கிற,
மதிள் சூழ்-மதிள்களாலே சூழப்பட்ட,
இலங்கைக்கு -லங்கா நகரத்திற்கு,
இறைவன்-அரசனான இராவணனை,
ஓட்டி -(முதல் நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து,
தலைபத்து- (அவனது) தலை பத்தும்,
உதிர-(பனங்காய்போலே) உதிரும்படி,
ஓர் – ஒப்பற்ற,
வெம் கணை-கூர்மையான ப்ரஹ்மாஸ்திரத்தை,
உய்த்தவன்-எய்தவனும்,
ஓதம்வண்ணன் – கடல் போன்ற (குளிர்ந்த) வடிவையுடையவனும்,
வண்டு-வண்டுகளானவை,
மதுரமா-இனிதாக,
பாட-இசைபாட,
(அதற்குத் தகுதியாக) மா மயில் ஆடு-சிறந்த மயில்கள் கூத்தாடப்பெற்ற,
அரங்கத்து அம்மான் – திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய,
திருவயிறுஉதரபந்தம் – திருவயிற்றில் அணிந்திருக்கும் ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது,
என் உள்ளத்துள் நின்று- என் நெஞ்சினுள் நிலைத்துநின்று,
உலாகின்றது- உலாவுகின்றது.
அவதாரிகை – நான்காம்பாட்டு திருநாபீகமலத்தோடே சேர்ந்த திருவுதரபந்தத்தை அனுபவிக்கிறார்.
வ்யாக்யானம் – (சதுரமாமதிளித்யாதி) – கட்டளைப்பட்டிருக்கை. (மாமதிள்) – துர்க்கத்ரயம். ஈஶ்வரன் என்றறியச்செய்தே எதிர்க்கப்பண்ணின மதிள். (இலங்கைக்கிறைவன்) – முழஞ்சிலே ஸிம்ஹங்கிடந்ததென்னுமாபோலே. லங்காம் ராவண பாலிதாம். (ரா.ஸூ 1-39) (இலங்கைக்கிறைவன்) – ஸர்வேஶ்வரன் ஸ்ரீவைகுண்டத்தைக் கலவிருக்கையாகக் கொண்டு வீற்றிருந்தாப்போலே காணும் இவனும் இலங்கைக்கு ஈஶ்வரனென்றிருந்தபடி.
வீரக்தனான திருவடியுங்கூட மதித்த ஐஶ்வர்யமிறே. யத்யதர்மோ ந பலவாந் ஸ்யாதயம் ராக்ஷஸேஶ்வர: ஸ்யாதயம் ஸுரலோகஸ்ய ஶ்க்ரஸ்யாபி ச ரக்ஷிதா ((ரா.ஸூ 49-17) என்றானிறே. யாவனொருவனுக்காக இவனை அழியச்செய்ய நினைக்கிறார், அவன்றன்னையே இவ்வரணுக்குக் காவலாக வைப்பர்கிடீர் அல்பம்னுகூலித்தானாகில்.
(தலைபத்துதிர) – பனங்குலை உதிர்ந்தாப்போலேயுதிர. அறுக்கவறுக்க முளைத்த சடங்கு. (ஓட்டி) – அனுகூலிக்குமாகில் அழியச்செய்ய வேண்டாவிறேயென்று பூசலிலே இளைப்பித்து விட்டபடி. கச்சானுஜாநாமி (ரா.யு. 59-144) என்கிறபடியே.
(ஓர்வெங்கணையுய்த்தவன்) – பிற்றைநாளைப் பூசலிலே ஜயாபஜயங்கள் அவ்யவஸ்திதமன்றோவென்று ப்ரஹ்மாதிகள் கருதினவாறே, அத்தலைகளுக்கு வேர்ப்பற்றான நெஞ்சிலே அத்விதீயமான ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டவன். அவன் ப்ராதிகூல்யத்தில் நிலை நின்றானென்று அறிந்தபின்பு ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டபடி.
(ஓதவண்ணன்) – ராவணவதம் பண்ணி ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு முடி கொடுத்து க்ருதக்ருத்யனாய் ப்ரஹ்மாதிகள் புஷ்பவ்ருஷ்டியும் ஸ்தோத்ரமும் பண்ண வீரஸ்ரீதோற்ற ஶ்ரமஹரமான வடிவோடே நின்ற நிலை.
(மதுரமாவண்டுபாட) – வினையற்றவாறே ஆடல் பாடலுக்கு இடங்கொடுத்தபடி. சிலர் பாடினால் ஆடுவாரும் வேணுமே, மயில்கள் ஆடப்புக்கன. (மாமயில்) – ஒரு மயில் தோகை விரித்தால் அத்திருச்சோலைக்கு அணுக்கனிட்டாப்போலிருக்கை. ருஷிகள் கொண்டைக்கோல் கொண்டாடுகை தவிர்ந்து மயில்கள் ஆடப்புக்கன. குரங்குகள் கூத்தாட்டாதல், இவற்றின் கூத்தாட்டாதல் என்றும் திர்யக்யோநிகளுக்கு நிலமாகை. (வண்டுபாட மாமயிலாட) – ஸ்ரீவைகுண்டநாதன் பெரியபெருமாளானவாறே, நித்யஸூரிகளும் வண்டுகள் மாமயில்களுமானபடி. ஸர்வை: பரிவ்ருதோ தேவைர் வாநரத்வம் உபாகதை: (ரா.யு 114-17) என்னக்கடவதிறே. ராஜா வௌ்ளைச்சட்டையிட்டால் அடியார் கறுப்புச்சட்டையிடுமித்தனையிறே.
(அரங்கத்தம்மான்) – பெரியகோயிலிலே கண்வளர்கிற பரமஶேஷியிடைய. (திருவயிற்றுதர பந்தம்) – ஆபரணத்துக்காபரணம். பெற்ற வயிற்றுக்குப் பட்டங்கட்டினபடி. (என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே) – என்னெஞ்சினுள்ளே அழகு செண்டேறா நின்றதே. நெஞ்சம் நாடிறே (திருவாய் 8-6-4) . அகல நின்றாலும் பசையில்லை. இப்பாட்டில் தசரதாத்மஜன்படியும் இங்கே உண்டென்கிறார்.
@@@@@
ஐந்தாம்பாட்டு
5. பாரமாய பழவினை பற்று அறுத்து என்னைத்தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான் திரு
ஆரம் மார்பு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
பதவுரை:-
பாரம் ஆய- மிகவும் பொறுக்கமுடியாத சுமையாயிரா நின்ற,
பழவினை-அநாதியான பாபங்களின்,
பற்று அறுத்து-ஸம்பந்தத்தைத் தொலைத்து,
என்னை – (பாபத்துக்குக் கொள்கலமான) அடியேனை,
தன் வாரம் ஆக்கிவைத்தான்-தன்னிடத்தில் அன்பு உடையவனாகப் பண்ணிவைத்தான் சங்கநாதன்);
வைத்தது அன்றி-இப்படிச் செய்துவைத்ததுமல்லாமல்,
என்னுள் புகுந்தான் – என் ஹ்ருதயத்திலும் நுழைந்துவிட்டான்;
(இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுதற்கு உறுப்பாக, நான்)
கோரம் மா தவம் -உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை,
செய்தனன் கொல்-(முற்பிறவியில்) செய்திருப்பேனோ என்னவோ?
அறியேன்-அறிகிறேனில்லை;
அரங்கத்து அம்மான்-ஸ்ரீரங்கநாதனுடைய,
திரு ஆரம்-பிராட்டியையும் முக்தாஹாரத்தையும் உடைத்தான,
மார்பு அது அன்றோ- அத்திருமார்பன்றோ,
அடியேனை-தாஸனான என்னை,
ஆள் கொண்டது- அடிமைப்படுத்திக் கொண்டது.
அவதாரிகை – ஐந்தாம்பாட்டு எனக்குப் பற்றாசான பெரியபிராட்டியாரிருக்கிற திருமார்புகிடீர் என்னை ஸ்வரூபானுரூபமான கைங்கர்யங்கொண்டதென்கிறார்.
வ்யாக்யானம் – (பாரமாய) – ஸர்வசக்தியான ஸர்வேச்வரனே தள்ளுமிடத்திலும் ஒரு நிலை நின்று தள்ளவேண்டும்படி இருக்கை. ஸம்ஹரிப்பதும் நரகத்திலேயாய் ஸ்ருஷ்டிப்பதும் நரகத்திலேயாயிருக்கை.
(பழவினை) – காலமநாதி. ஆத்மாவோ நித்யன். அசித்ஸம்ஸர்க்கமுமன்றேயுண்டிறே. இக்காலமெல்லாங்கூடக் கூடுபூரித்ததாயிருக்குமிறே. ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி (கீதா சரமஶ்லோகம் 18-66) என்றவன்றானே தள்ள வேண்டும்படியிருக்கை.
(பற்றறுத்து) – அடியறுத்து நெடுஞ்சுவர் தள்ளுமாபோலே ஸவாஸநமாகப் போக்கி, நித்யஸூரிகளுக்குப் பாபஶங்கை உண்டாகிலும் இவர்க்கில்லாதபடி பண்ணி.
(என்னை) – பாபத்துக்குப் போக்கடியறியாத என்னை. பாபம் படும் ஆகாரமான என்னையென்றுமாம். அகமஹோததி: (?). (தன் வாரமாக்கி வைத்தான்) – தான் என்றால் பக்ஷபதிக்கும்படி பண்ணினான். என் கார்யம் தனக்குக்கூறாக என்பேரிலே தனக்கு இருப்பென்று தன்பேரிலே எனக்கிருப்பாக்கினபடி. அன்றியே, விஷயாந்தரங்களை விட்டுத் தன்னையே கூறாகப் பற்றும்படி பண்ணினான். (வைத்தான்) – இச்சந்தாநச்சாபம் வைத்தான். (வைத்ததன்றி) – இந்த நன்மைகளுக்கு மேலே. (என்னுள் புகுந்தான்) – பின்னையும் தன்னாற்றாமையாலே, விடாய்த்தவன் தடாகத்தை நீக்கி உள்ளே முழுகுமாபோலே, என்னுள்ளும் புகுந்தான். வாலி புக்கவிடத்தே மலையிட்டடைத்து, மஹாராஜரிருந்து குறும்பு
செலுத்தினாப்போலேயாக ஒண்ணாதென்று என் ஸ்வரூப அஜ்ஞாநம் குலையாதபடி என்னெஞ்சிலே வந்து புகுந்தான். அநஶ்நந்நந்ய: (முண்டக 3-1-1) என்கிறபடியே இத்தோ டொட்டற்றிருக்குமவனுக்கும் இத்தாலல்லது செல்லுகிறதில்லை என்கிறது.
(கோரமாதவமித்யாதி) – இப்பேற்றுக்கடி என்னென்று பார்த்தார். இந்த்ரியங்களை யொறுத்து மஹாதபஸ்ஸைப் பண்ணினேனோ அறிகிலேன். நானறியவொன்றுமில்லை. இப்படி ஶங்கிப்பானென்னென்னில், பெற்ற பேறு அப்படிப்பட்டார்க்குக் கிடைக்கு மதாகையாலே. அவன்றானே நதீதீரத்திலே கிடந்து தபஸ்ஸுபண்ணினானோ அறிகிறிலேன். கோரமான தபஸ்ஸாகிறது – அத்தலையாகத் தம்மையழிய மாறின பெரியவுடையாரைப் போலே இருக்கை. எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே (திருவாய் 10-6-8) என்னுமாபோலே.
(அரங்கத்தம்மான்) – இப்பேற்றுக்கு ஆற்றங்கரையைப் பற்றிக்கிடந்து தபஸ்ஸு பண்ணினாலும் அவனாயிருந்தது. இச்சீரிய. பேற்றுக்கு வேறு உபாயமுண்டாகமாட்டாதே.
(திருவாரமார்பதன்றோ) – பெரிய பிராட்டியாரையும் ஹாரத்தையுமுடைத்தான மார்வன்றோ. தமக்குப் பற்றாகத் தாய் நிழலிலே ஒதுங்குகிறார். இவனைக் குறித்து தேந மைத்ரீ பவது (ரா.ஸூ 21-20) என்றும், அவனைக் குறித்து ந கஶ்சித் ந அபராத்யதி (ரா.யு 116-44) என்றும் சிறையிலிருந்தே சேரவிடப்பார்க்கிறவள், மார்பிலே இருந்தால் சேரவிடச் சொல்லவேணுமோ? அழகிய மார்விலாரம். ஆரத்துக்கு அழகு கொடுக்க வற்றாயிருக்கை. ஆரம் அழகை மறைக்கைக்குடலாமித்தனையிறே. ஶர்வ பூஷணபூஷார்ஹா: (ரா.கி 3-15) என்னுமாபோலே.
(அடியேனை) – முன்பெல்லாம் கூலிச்சேவகரைப்போலே அழகுக்குத் தோற்ற பிராட்டி அடிமை, இது பிறந்துடையவடிமை. முந்துற தூதோ ராமஸ்ய (ரா.ஸூ 36-2) என்றவன், கடாக்ஷம் பெற்றவாறே தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய (ரா.ஸூ 42-34) என்றானிறே. (ஆள்கொண்டது) இழந்த ஶேஷத்வத்தைத் தந்தது.
(அடியேனையாட்கொண்டதே) – ராஜ்யமிழந்த ராஜபுத்ரனையழைத்து முடிசூட்டுமாபோலே, அழகிலே அழுந்தின என்னை அவன் குணங்கிடீர் பிழைப்பித்ததென்கிறார். அழகிலே அழுந்தினாரை குணத்தைக் காட்டிப் பிழைப்பிக்கலாம், குணத்திலே அழுந்தினார்க்கு குணமே வேணும். நீரிலே அழுந்தினார்க்கு நீரையிட்டுப் பிழைப்பிக்க விடுமித்தனையன்றோ உள்ளது.
இப்பாட்டால் அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் சொல்லுகிறபடியே ஸர்வ வ்யாபகத்வசக்தியும் இங்கே உண்டென்கிறார்.
@@@@@
ஆறாம்பாட்டு
6. துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் அம் சிறைய
வண்டு வாழ் பொழில்சூழ் அரங்கநகர் மேய அப்பன்
அண்டர் அண்ட பகிரண்டத் தொருமாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக்கொண்டதே.
பதவுரை:-
துண்டம்-ஒரு துண்டாயிருக்கிற (கலாமாத்ரமான)
வேண்பிறையன்- வெளுத்த சந்திரனை (சடையிலே ) உடையவனான சிவனுடைய,
துயர்-(பிச்சையெடுத்துத் திரிந்த) பாவத்தை,
தீர்தவன்-போக்கினவனும்,
அம் சிறைய வண்டு -அழகிய சிறகையுடைய வண்டுகள்,
வாழ்- வாழ்தற்கிடமான.
பொழில் சூழ்-சோலைகள் சூழப்பெற்ற,
அரங்கம் நகர் -திருவரங்கப் பெருநகரிலே,
மேய-பொருந்தியிராநின்ற,
அப்பன்-ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய,
அண்டர்-அண்டத்துக்குட்பட்ட சேதநரையுடைய,
அண்டம்-இவ்வண்டத்தையும்,
பகிரண்டம் – வெளியண்டங்களையும் (இவற்றை தரிக்கையாலே),
ஒருமாநிலம்- ஒப்பற்ற மஹாப்ருதிவி யையும்,
எழுமால்வரை- ஏழு குல பர்வதங்களையும்,
முற்றும்-சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும்,
உண்ட-அமுதுசெய்த,
கண்டம் கண்டீர்-திருக்கழுத்துக்கிடீர்,
அடியேனை-தாஸனான என்னை,
உய்யக் கொண்டது-உஜ்ஜீவிப்பித்தது.
அவதாரிகை – ஆறாம்பாட்டு – ஸர்வலோகத்தையும் அமுது செய்தருளின கண்டத்தினழகு என்னையுண்டாக்கிற் றென்கிறார். திருமார்பினழகு திருக்கழுத்திலே ஏறிட்டதென்னவுமாம்.
வ்யாக்யானம் – (துண்டமித்யாதி) – கலாமாத்ரமாய் வெளுத்திருந்துள்ள பிறையை ஜடையிலே யுடையனான ருத்ரன் தனக்குப் பிதாவுமாய் லோககுருவுமாயிருந்துள்ள ப்ரஹ்மாவினுடைய தலையையறுக்கையால் வந்த பாபத்தைப் போக்கினவன். சுமையராயிருப்பார் சும்மாட்டுக்குள்ளே தாழைமடலைச் சொருகுமாபோலே, ஸாதகனாயிருக்கச்செய்தே ஸுகப்ரதாநனாக அபிமானித்திருக்குமாய்த்து. ஆனாலும் ஆபத்து வந்தால் அவனல்லது புகலில்லையே. சந்த்ரனுடைய க்ஷயத்தைப் போக்கினானென்றுமாம். அவனுடைய துரிதத்தைப் போக்கினாப்போலே தம்முடைய துரிதத்தையும் போக்குமென்று கருத்து.
(அஞ்சிறைய வண்டு வாழ்பொழில்சூழ் அரங்கநகர் மேயவப்பன்) – லோகத்தில் ப்ரதாநரானவர்கள் ப்ரஹ்மஹத்யையைப் பண்ணி அலைந்து கொடுகிடக்கப்புக்கவாறே தான் கடக்க நிற்கவொண்ணாதென்று இவர்களுடைய ரக்ஷணார்த்தமாகக் கிட்டவந்து கண்வளர்ந்தருளுகிற உபகாரகன். அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் வாழா நின்ற சோலை சூழ்ந்த பெரியகோயிலிலே கண்வளர்ந்தருளுகிற பிதாவானவன்.
(வண்டுவாழ்பொழில்) யோக்யதையிலே – வண்டுகள் அவன் பாய்ந்து பக்கல் செல்லாது, திருச்சோலையின் இளமணல் கால்வாங்கமாட்டாதே நிற்கும். அவ்வண்டுகளைப்போலே தம்மையனுபவிப்பித்து விடாய் கெடுத்தானென்கிறார்.
(அண்டரண்டமித்யாதி) – அண்டாந்தர்வர்த்திகளுடைய அண்டம். பகிரண்டம் – புறவண்டம். அத்விதீயமான மஹாப்ருதிவி. பூமிக்கு ஆணியடித்தாப் போலேயிருக்கிற ஏழுவகைப்பட்ட குலகிரிகள். ஒன்றொழியாமே ஆடிக்காற்றில் பூளைபோலே பறந்து திருவயிற்றிலே புகும்படியுண்ட கழுத்துக்கிடீர். இவற்றைத் தனித்தனியே சொல்லுவானென்னென்னில் – தனியே சொல்லுகை போக்யமாயிருக்கையாலே.
(முற்றுமுண்டகண்டங்கண்டீர்) பெரியபெருமாள் திருக்கழுத்தைக் கண்டால் ப்ரளயாபத்திலே ஜகத்தை எடுத்துத் திருவயிற்றிலே வைத்தமை தோற்றா நின்றதாய்த்து. விடுகாது தோடிட்டு வளர்ந்ததென்று தெரியுமாபோலே.
(அடியேனை பிறவாதபடி பண்ணிற்று. உய்யக்கொண்டதே) – முன்பு பெற்ற கைங்கர்யத்துக்கு விச்சேதம் பிறவாதபடி நோக்கிற்று. என்னை ஸம்ஸாரத்தில் ஒரு நாளும் அகப்படாதபடி பண்ணிற்று.
இப்பாட்டால் ஆபத்ஸகனான ஸர்வேச்வரன்படியும் இங்கே உண்டென்கிறார்.
@@@@@
ஏழாம் பாட்டு
7. கையின் ஆர் சுரி சங்கு அனல் ஆழியர் நீள்வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீண்முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.
ஆழ்வாரின் சிந்தை கவர்ந்த நம்பெருமாளின் திருப்பவளச் செவ்வாய்
பதவுரை:-
கையின் – திருக்கைகளில்,
ஆர் – பொருந்தியிருக்கிற
சுரி சங்கு – சரியையுடைய திருச்சங்கையும்,
அனல் ஆழியர்- தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய்,
நீள் வரை போல்- பெரிய தொரு மலை போன்ற
மெய்யனார் –திருமேனியையுடையராய்
துளபம் விரை ஆர்- திருத்துழாயின் பரிமளம் மிகப்பெற்று (அதனால்),
கமழ் – பரிமளியா நின்றுள்ள
நீள்முடி -உயர்ந்த திருமுடியுடையராய்
எம்ஐயனார் – எமக்கு ஸ்வாமியாய்,
அணி அரங்கனார்- ஆபரணம் போன்ற திருவரங்கத்திற் கண்வளர்ந்தருள்பவராய்,
அரவு இன் அணைமிசை மேய- திருவநந்தாழ்வானாகிற இனிய திருப்பள்ளியின் மீது பொருந்திய,
மாயனார்-ஆஸ்சர்யச் செய்கைகளையுடையரான பெரியபெருமாளுடைய
செய்யவாய் – சிவந்த திருப்பவளமானது.
என்னை-என்னுடைய,
சிந்தை- நெஞ்சை,
கவர்ந்தது- கொள்ளை, கொண்டது,
ஐயோ–(ஆநந்தாதிசயக் குறிப்பு)
அவதாரிகை – ஏழாம் பாட்டு – திருவதரத்திலே. அகப்பட்டபடி சொல்லுகிறார். நீஞ்சப்புக்குத் தெப்பத்தையிழந்தே என்னுமாபோலே
வ்யாக்யானம் – (கையினாரித்யாதி) – வெறும்புறத்திலே படவடிக்கவல்ல கையிலே அழகு நிறைந்து சுரியையுடைத்தான ஸ்ரீபாஞ்சஜந்யம், ப்ரதிபக்ஷத்தின் மேலே அனலையுமிழா நின்றுள்ள திருவாழி, இவற்றையுடையராயிருக்கை.
ஸ்ரீபாஞ்சஜந்யத்துக்குச் சுரி ஸ்வபாவமானாப்போலே திருவாழியாழ்வானுக்கும் ப்ரதிபக்ஷத்தின்மேலே அனலுமிழ்கை ஸ்வபாவம். திருக்கோட்டியூரிலே அனந்தாழ்வான் பட்டரை – ஸ்ரீவைகுண்டநாதன் த்விபுஜனோ, சதுர்ப்புஜனோ – என்ன, இருபடிகளுமடுக்குமென்ன, இரண்டிலுமழகிதேதென்ன, த்விபுஜனாகில் பெரியபெருமாளைப் போலே இருக்கிறது, சதுர்ப்புஜனாகில் நம்பெருமாளைப் போலே இருக்கிறது – என்றார்.
(நீள்வரை) – மலையைக் கடலை ஒப்பாகச் சொல்லுமித்தைனையிறே. நீட்சிபோக்யதாப்ரகர்ஷம். பச்சைமாமலைபோல் மேனி (தி௫மாலை 2), அதுக்கு மேலே ஒப்பனையழகு.
(துளபவிரையார் மாலையாலே கமழ்நீண்முடி) – பரிமளம் மிக்கிருந்துள்ள திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதமாய் ஆதிராஜ்ய ஸூசகமான திருவபிஷேகத்தை உடையருமாய். (எம்மையனார்) – உறவு தோற்றுகை, எனக்கு ஜனகரானவர்.
(அணியரங்கனார்) – ப்ராப்த விஷயமாயிருக்கக் கடக்கவிராதே ஸம்ஸாரத்துக்கு ஆபரணமான கோயிலிலே வந்து அண்ணியருமாயிருக்கிறபடி.
(அரவினணைமிசை) – ரத்னங்களையெல்லாம் தங்கத்திலே புதைத்துக் காட்டுமாபோலே தன்னழகு தெரியத் திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்து காட்டுகிறபடி. (மேயமாயனார்) – மின்மினி பறக்கிறபடி. ஸ மயா போதித: ஸ்ரீமாந் (ரா.ஸூ 38-25) எல்லார்க்கும் ஒன்றிலே சாய்ந்தவாறே பொல்லாங்குகள் தெரியும், இங்கு பழையவழகுகளும் நிறம் பெறும்.
(செய்யவாய்) – ஸ்த்ரீகளுடைய பொய்ச்சிரிப்பிலே துவக்குண்டார்க்கு இச்சிரிப்புக் கண்டால் பொறுக்கவொண்ணுமோ.
(ஐயோ) – திருவதரமும் சிவப்பும் அனுபவிக்க அரிதாய் ஐயோ! என்கிறார். (என்னை) – பண்டே நெஞ்சு பறிகொடுத்த என்னை அந்யாயம் செய்வதே! என்று கூப்பிடுகிறார். (என்னை) – கல்லை நீராக்கி, நீரையும் தானே கொண்டது. இப்பாட்டில் ஸ்ரீவைகுண்டநாதன்படியும் இங்கே காணலாமென்கிறார்.
@@@@@
எட்டாம்பாட்டு
8. பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதி பிரான் அரங்கத்து அமலன் முகத்து
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே.
பதவுரை:-
பரியன் ஆகி-மிகவும் பருத்த வடிவையுடையனாய்க் கொண்டு,
வந்த -(ப்ரஹ்லாதனை நலிய) வந்த,
அவுணன்- அஸுரனான இரணியனுடைய,
உடல் கூரீரத்தை,
கீண்ட கிழித்தவனும்.
அமரர்க்கு- பிரமன் முதலிய தேவர்கட்கும்,
அரிய-அணுகமுடியாதவனும்,
ஆதி-ஜகத்காரணபூதனும்,
பிரான்- மஹோபகாரகனும்,
அரங்கத்து – கோயிலில் எழுந்தருளியிருக்கிற,
அமலன் -பரமபாவநனுமாகிய எம்பெருமானுடைய,
முகத்து-திருமுக மண்டலத்தில்,
கரிய ஆகி- கறுத்த நிறமுடையவையாய்,
புடை பரந்து- விசாலங்களாய், மிளிர்ந்து – அலையெறியுமவையாய்,
செவ்வரிஒடி செவ்வரி படர்ந்திருப்பனவாய்,
நீண்ட- (காதுவரை ) நீண்டிருப்பனவாய்,
பெரிய ஆய- பெருமை பொருந்தியவையுமான
அக்கண்கள்-அந்தத் திருக்கண்களானவை,
என்னை-அடியேனை,
பேதைமை செய்தன-உந்மத்தனாகச் செய்துவிட்டன.
அவதாரிகை – திருக்கண்கள் என்னை அறிவுகெடுத்ததென்கிறார்.
வ்யாக்யானம் – (பரியனாகி வந்த) பகவத் குணங்களை அநுஸந்தித்து நைந்திராமே, போஷத்வத்தையறிந்து மெலிந்திராமே, ஸர்வேஸ்வரனை ஆசைப்பட்டுத் தளர்ந்தவுடம்பாயொசிந்திராமே. (பரிய) நரஸிம்ஹத்துக்கும் பிற்காலிக்க வேண்டும்படியிருக்கை. ஊட்டியிட்டு வளர்த்த பன்றி போலே உடம்பை வளர்த்தானித்தனை. (வந்த) இப்போது தாம் வயிறுபிடிக்கிறார்.
(அவுணனுடல்கீண்ட) – நரஸிம்ஹத்தினுடைய மொறாந்த முகமும், நாமடிக் கொண்ட உதடும், செறுத்து நோக்கின நோக்கும், குத்தமுறுக்கின கையும் கண்டபோதே பொசுக்கின பன்றி போலே மங்குநாரைக் கிழிக்குமாபோலே கிழித்தபடி.
(அமரர்க்கு அரிய ஆதிப்பிரான்) – தேவர்களுக்கு உத்பாதகனான மாத்ரமே, கையாளனாய் நிற்பது ஆஶ்ரிதர்க்கு. சிறுக்கனுக்கு உதவி நிற்கிற நிலை தன்னிலே ப்ரஹ்மாதிகளுக்குப் பரிச்சேதிக்கவொண்ணாதபடி நிற்கிற ப்ரதாநன். க்வாஹம் ரஜ: ப்ரக்ருதிரீச தமோதிகே அஸ்மிந் ஜாதஸ்ஸுரேதரகுலே க்வ தவானுகம்பா ந ப்ரஹ்மணோ ந ச பவஸ்ய ந வை ரமயா யோ மேர்பித: சிரஸி பத்மகரப்ரஸாத:. (பாகவதம் 7-9-26).
(ஆதிப்பிரான்) – தான் முற்கோலி உபகரிக்குமவன். (பிரான்) நிலையும் – ப்ரஹ்லாதனுக்கு எளியனான நிலையும் ப்ரஹ்மாதிகளுக்கு அரியனான இரண்டும் தமக்கு உபகாரமாயிருக்கிறது.
(அரங்கத்தம்மான்) எல்லார்க்குமுதவும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்தருளுகையாலே வந்த ஶீத்தி ஒருகால் தோற்றிப்போதல், அவதாரம் போலே தீர்த்தம் ப்ரஸாதித்துப்போதல் செய்யாமையாலே வந்த ஶீத்தியாகவுமாம்.
(முகத்து) – அவனுடைய முகத்து. (கரியவாகி) – விடாய்த்தார் முகத்திலே நீர்வௌ்ளத்தை வெட்டிவிட்டாப் போலேயிருக்கை.
(புடைபரந்து) கடலைத் தடாகமாக்கினாப்போலே இடமுடைத்தாயிருக்கை
(மிளிர்ந்து) திரைவீசித் கரையாலும் வழிபோகவொண்ணாதிருக்கை. (செவ்வரியோடி) – ஶ்ரிய: பதித்வத்தாலும் வாத்ஸல்யத்தாலும் சிவந்திருக்கை. (நீண்ட) செவியளவும் அலையெறிகை.
(அப்பெரியவாய கண்கள்) – பின்னையும் போக்தாவினளவன்றிக்கே இருக்கையாலே அப்பெரியவாய கண்கள் என்கிறார். இது என்னவொண்ணாதே பரோக்ஷ நிர்தேஶம் பண்ணவேண்டும்படியிருக்கை. (என்னை) – பெரியமனிச்சங்கிடீர் நான். என் வைதக்த்யத்தைப் பறித்துப் பொகட்டு மௌக்த்யத்தைத் தந்தன. ஒருவன் எய்தத்தை மற்றவனும் எய்யுமாபோலே.
(பேதைமை செய்தனவே) – ராமரஶம்போலே முடிந்து பிழைக்கவொட்டுகிறனவில்லை. இத்தால் நரஸிம்ஹாவதாரத்தின்படியும் இங்கேயுண்டென்கிறார்.
@@@@@
ஒன்பதாம்பாட்டு
9. ஆலமாமரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவு இன் அணையான்
கோலம் மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லது ஓர் எழில்
நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.
பதவுரை:-
மா- பெரியதான,
ஆலமரத்தின் ஆலமரத்தினுடைய,
இலைமேல்-(சிறிய) இலையிலே,
ஒரு பாலகன் ஆய்-ஒரு சிறு பிள்ளையாகி,
ஞாலம் ஏழும் உண்டான்- ஏழுலகங்களையும் திருவயிற்நிலே வைத்து ரக்ஷித்தவனும்
அரங்கத்து – கோயிலிலே
அரவு இன்அணையான்-திருவனந்தாழ்வானாகிய இனிய திருப்பள்ளியின் மீது கண்வளர்ந்தருள்பவனுமான ஸ்ரீரங்கநாதனுடைய,
கோலம் – அழகிய,
மா-சிறந்த
மணி ஆரமும்- ரத்நங்களால் செய்யப்பட்ட ஹாரமும்,
முத்துத்தாமமும்- முத்துவடமும்,
முடிவில்லது-எல்லைகாணமுடியாததாய்,
ஓர்எழில் – ஒப்பற்றதான அழகையுடையதும்,
நீலம்-கருநெய்தல்மலர் போன்றதுமான,
மேனி-திருமேனியானது,
என் நெஞ்சினை-எனது நெஞ்சினுடைய,
நிறை-அடக்கத்தை,
கொண்டது- கொள்ளை கொண்டுபோயிற்று,
ஐயோ!-(இதற்கென் செய்வேன்?)
அவதாரிகை – ஒன்பதாம்பாட்டு – ஊரழிபூசல்போலே திருமேனியின் நிறமானது எல்லாவற்றையுங்கூடக் கொண்டு என்னெஞ்சைக் கொள்ளை கொண்டதென்கிறார்.
வ்யாக்யானம் – (ஆலமாமரத்தினித்யாதி) – பெரிய ஆலமரத்தினுடைய சிற்றிலையிலே யஶோதாஸ்தநந்தயமும் பெரியதென்னும்படி அத்விதீயனான பாலனாய். (ஒரு பாலகனாய்) -யஶோதாஸ்தநந்தயனான க்ருஷ்ணனும் முரணித்திருக்கும்படி இவனுடைய பால்யம் செம்பால் பாயா நிற்கும்.
(ஞாலமித்யாதி) சிறு ப்ரஜைகள் புரோவர்த்தி பதார்த்தங்களை எடுத்து வாயிலிடுமாபோலே பூமிப்பரப்படைய வாயிலே வைத்தானாய்த்து பிள்ளைத்தனம். ப்ரளயத்தில் தன்னகடித கடநத்தோடொக்கும் என்னை அகப்படுத்தினபடியும்.
(அரங்கத்தரவினணையான்) – ஸம்ஸார ப்ரளயத்தினின்றும் எடுக்கக் கிடக்கிறபடி. அந்த ஆலினிலையில் நின்றும் இங்கே வரச்சருக்கினவித்தனை காணும். அந்தவுறவொன்றுமே இவரச்சங்கெடுக்கிறவித்தனை காணும் இப்ரமாத த்தோடே கூடின செயலைச் செய்தானென்று பயப்படுமவர்கள் அச்சம்கெடும்படி கிடக்கிறவிடம்.
(அரவினணையான்) ப்ரளயத்தில் தன்வயிற்றிலே புகாவிடில் ஐகத்து ஜீவியாதாப்போலே, ஸம்ஸாரிகள் தன்முகத்தே விழியாவிடில் தனக்குச் செல்லாதானபடி.
(கோலமாமணியாரமும்) – அழகியதாய்ப் பெருவிலையனாயிருந்துள்ள ரத்நங்களாலே செய்யப்பட்ட ஆரமும். (முத்துத்தாமமும்) – முத்துமாலையும். (கோலம்) – இது பெருமாளைச் சொல்லுகிறது.
(முடிவில்லதோரெழில் நீலமேனி) – அவதி காணவொண்ணாத அழகையுடைய நெய்த்த திருமேனி. (ஐயோ) – பச்சைச்சட்டையிட்டுத்துத் தனக்குள்ளத்தையடையக்காட்டி எனக்குள்ளத்தையடையக் கொண்டான். (நிறை கொண்டதென்னெஞ்சினையே) – எனக்கு அகவாயில் காம்பீர்யத்தைப் போகவடித்தது.
இப்பாட்டால் வடதளஶயநமும் பெரியபெருமாள் பக்கலிலே உண்டென்கிறது.
@@@@@
பத்தாம் பாட்டு
10. கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
பதவுரை:-
கொண்டல்வண்ணனை-நீருண்ட மேகம் போன்ற வடிவையுடையவனும்,
கோவலன் ஆய் வெண்ணெய் உண்டவாயன்- இடைப்பிள்ளையாகப் பிறந்து வெண்ணெயமுது செய்த திருவாயை யுடையவனும்,
என் உள்ளம் -என்னுடைய நெஞ்சை
கவர்ந்தானை – கொள்ளை கொண்டவனும்
அண்டர் கோன் -நித்யஸூரிகட்குத் தலைவனும்,
அணி அரங்கன் – (பூமண்டலத்துக்கு) அலங்காரமான திருவரங்கத்தில் கண்வளர்ந்தருள்பவனும்,
என்அமுதினை-எனக்கு (பரமபோக்யமான) அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனை, ,
கண்ட கண்கள்- ஸேவிக்கப்பெற்ற (எனது) கண்களானவை,
மற்று ஒன்றினை – வேறொன்றையும் (பரமபதநாதனையும்),
காணா – காணமாட்டா.
அவதாரிகை – பத்தாம் பாட்டு – நிகமத்தில், இவ்வளவும் ஜ்ஞாநஸாக்ஷாத்காரம், மேல் லோகஸாரங்க மஹாமுனிகள் தோளில் வந்து புகுந்து விண்ணப்பஞ்செய்கிறார். பெரியபெருமாளழகைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவென்கிறார்.
வ்யாக்யானம் – (கொண்டல்வண்ணனை) – தாபத்ரயத்தாலே விடாய்த்த தம் விடாய் தீரும்படியாய் அத்ரௌ ஶயாளுரிவ ஶீதளகாளமேக: என்கிறபடியே வர்ஷுகமான காளமேகம் போலேயிருக்கிற திருநிறத்தையுடையவனை பன்னீர்க்குப்பிபோலே உள்ளுள்ளவையெல்லாம் புறம்பே நிழலிட்டபடி.
(கோவலனாய் வெண்ணெயுண்டவாயன்) – இடையனாய் வெண்ணெய் உண்ட திருப்பவளத்தை உடையவனை. சக்ரவர்த்தித் திருமகனாகில் வெண்ணெயுண்ணவொட்டார்களென்று கருத்து. (கோவலன்) – ஆபிஜாத்யம், பெருமாளுக்குக் கட்டுண்பது அடியுண்பதாகக் கிடைக்குமோ?
(வெண்ணெயுண்டவாயன்) களவு கண்டு ஒளித்து வந்து கிடக்கிறவன்; பெரியபெருமாள் கொறுட்டை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறாநிற்கும்
(என்னுள்ளங்கவர்ந்தானை) – என்னெஞ்சை அபஹரித்தவனை. கோவலனாய் வெண்ணெயுண்டாப்போலே கொண்டல்வண்ணனாய் என்னுள்ளங்கவர்ந்தவனை. யஶோதைப் பிராட்டியுடைய வெண்ணெயிலே பண்ணின ஶ்ரத்தையை என்னெஞ்சிலே பண்ணி புஜித்தவனை. வைத்த குறியழியாதிருக்க வெண்ணெய் குடிபோனாப் போலேயாய்த்து இவருடம்பிருக்க அகவாய் குடிபோனபடி.
(அண்டர்கோன்) – திருவாய்ப்பாடியிலிடைக்குலத்துக்கு நிர்வாஹகனென்னுதல், அண்டாந்தர்வர்த்திகளான ஆத்மவர்க்கத்துக்கு நிர்வாஹகனென்னுதல் (அணியரங்கனென்னமுதினை) – தேவர்களிடைய உப்புச்சாறு போலன்று இவருடைய அம்ருதம்.
(என்னமுதினை) – ப்ரஹ்மாதிகளுக்கு முதலியாயிருக்கும், எனக்குச் சாகாமல் காக்கும் அம்ருதமாயிருக்கும். (கண்டகண்கள்) – சுவையறிந்த கண்கள், ஶ்ரவணேந்த்ரிய மாத்ரமன்றியே விடாய் தீரக்கண்ட கண்கள்.
(மற்றொன்றினைக் காணாவே) – பாவோ நாந்யத்ர கச்சதி (ரா. உத் 40-15) போலே கண்களுக்குப் பச்சையிட்டாலும் வேறொரு அர்ச்சாவதாரம் அவதார விஶேஷம் இவற்றை இப்படி விரும்பி போக்யமென்று கருதாது. காட்சியொழிய வேறொரு பலம் சொல்லாவிட்டது பலமும் காட்சியேயாகையாலே. முக்தப்ராப்யமென்று ஒரு தேஶவிஶேஷத்திலே போனாலும் ஸதாபச்யந்தி (ருக் வேத ம் 1-2-7,ஸாமவேத ம் 3-18-2-4)யிறே.
தம்மைச் சொல்லுதல், பாட்டுக்கு ஸங்க்யை சொல்லுதல் செய்யில் கரைமேலே நின்ற அல்லாத ஆழ்வார்களோபாதியாவர். அஸ்தமிதாந்யபாவமாம்படி அழகிலே ஈடுபட்டுத் தம்மை மறந்தார். நோபஜநம் ஸ்மரந்நிதம் ஶரீரம் (சாந் 8-12-3) என்கிறபடியே முக்தப்ராப்யமான புருஷார்த்தத்தை அனுபவித்தாரென்கையாலே எல்லாம் அவன் சொல்லேயாய்விட்டது.
இப்பாட்டில் க்ருஷ்ணனுடைய படியும் இங்கே உண்டென்கிறார்.
பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த வ்யாக்யாநம் முற்றிற்று.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே ஸரணம்.