ஶ்ரீ:
ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
ஶ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த
கண்ணிநுண் சிறுத்தாம்பு
பிள்ளைலோகம் ஜீயர் அருளிச்செய்த தனியன் வ்யாக்யானம்
ஶ்ரீநாதமுனிகள் அருளிய தனியன்கள்
அவிதித விஷயாந்தரஶ்ஶடாரே ருபநிஷதமுபகானமாத்ர போக:
அபிசகுணவஶாத் ததேகஶேஷீ மதுரகவிர்ஹ்ருதயே மமாவிரஸ்து (1)
பதவுரை –
அவிதித விஷயாந்தர: – (நம்மாழ்வாரைத் தவிர) வேறொரு விஷயத்தையுமறியாதவரும்
ஶடாரே: – நம்மாழ்வாருடைய திவ்யசூக்திகளாகிய
உபநிஷதாம் – திவ்ய ப்ரபந்தங்களை
உபகானமாத்ர போக: – இசை பாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும்
குணவஶாதபி ச – குணமடியாகவும்
ததேகஶேஷீ – அந்த நம்மாழ்வார் ஒருவரையே தமக்கு ஶேஷியாகக் கொண்டவருமான
மதுரகவி – மதுரகவியாழ்வார்
மம ஹ்ருதயே – என் நெஞ்சில்
ஆவிரஸ்து – ஆவிர்ப்பவிக்கக் கடவர்
அவதாரிகை – (அவிதித விஷயாந்தரஶ் ஶடாரே: இத்யாதி) இதில் “வேறொன்றும் நானறியேன்” என்று ஆழ்வாரையொழிந்த விஷயங்களில் அவிதிதராயிருப்பாராய், ஶடகோபரென்னும் திருநாமத்தையுடையவரான நம்மாழ்வாருடைய அநுபவ பரீவாஹரூபமான திருவாய்மொழியின் கானமே போகமாயிருக்குமவராய், அவ்வளவிலும் நில்லாதே அதுக்கு மேலும் வாத்ஸல்ய குணத்தாலும் தோற்று, அவரையே தம்மை அடிமை கொள்ளும் ஶேஷியென்றறுதியிட்ட மதுரகவிகள்தாம் நிலையுண்டாம்படி என் ஹ்ருதயத்திலே ஸுப்ரதிஷ்டமாகக் கடவரென்கிறது.
வ்யாக்யானம் – (அவிதித விஷயாந்தர:) ஆழ்வாரையொழிந்த விஷயங்களிலே வ்யுத்பத்திபண்ணி அறியாரென்கிறது. “சிந்தை மற்றொன்றின் திறத்ததல்ல” (திருவாய்மொழி – 7.10.10) “மற்றொன்றினைக் காணாவே” (அமலநாதி – 10) பாவோ நான்யத்ர கச்சதி என்னக்கடவதிறே. இங்கு விஷயாந்தரங்களாகிறது பாட்டு கேட்குமிடமான பரவிஷயம்; கூப்பீடு கேட்குமிடமான வ்யூஹவிஷயம்; குதித்தவிடமான விபவ விஷயம்; வளைத்தவிடமான அர்ச்சாவதார விஷயம்; எல்லாம் வகுத்தவிடமான ஆழ்வாரேயாகையாலே மற்றொரு விஷயங்களையும் அறியாதேயிருப்பர்.
(மாதா பிதா) “அன்னையாயத்தனாய்” (திருவாய் – 6.7.1) ஸர்வம் யதேவ ஸமஸ்த ஸாம்ஸாரிக விஷய ஸூகங்களும் ஶடகோபாசார்யரென்றறுதியிட்டு ததன்யங்களை அறியாதவரென்றுமாம். ஆழ்வார் “எல்லாம் கண்ணன்” (திருவாய் – 6.7.1) என்றிருக்குமாபோலே.
“கோயில்கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்தவம்மான் – கோயில் கொண்டானதனோடு மென்னெஞ்சகம்” (திருவாய் – 8.6.5) என்றும், மொய்த்தே திரைமோது தண்பாற்கடலுளான் பைத்தேய் சுடர் பாம்பணை நம்பரனை வைத்தேன் மதியால்” (திருவாய் – 8.7.10) என்கையாலே, “அவன் கிடந்தும் என்னெஞ்சகலான்” (பெரிய திருவந் – 35) என்றும், “உருப்பிணி நங்கையணி நெடுந்தோள் புணர்ந்தான் என்று மெப்போது மென்னெஞ்சம் துதிப்பவுள்ளேயிருக்கின்ற பிரான்” (திருவாய்மொ – 7.10.4) என்றும், கண்கள் சிவந்தில்படியே “ஒருவனடியேனுள்ளான்” (திருவாய்மொ- 8.8.1) என்றும், “திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலை பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து இருப்பேன் என்றென்னெஞ்சு நிறைய புகுந்தான்” (திருவாய்மொ – 6.10.8) என்றும், “விண்மீதிருப்பாய் (திருவாய்மொ – 4.9.5) என்கிறவைந்தும் , “எனதாவியுள் மீதாடி” (திருவாய்மொ – 5.1.9) என்றும், “தேவர்கோலத்தொடுமானான்” (திருவாசி – 7) தெய்வ உருவிலே இவர்க்கு எல்லாமுண்டாகையாலேயாய்த்து கரியகோலத்திருவுருக் காண்பனென்றதும்.
“அவிதிதவிஷயாந்தரஶ்ஶடாரே:” என்கையாலே ஶடாரியைக்காட்டிலும் அறியாமலிருப்பதான அன்ய விஷயங்களை யுடையவரென்கிறது, அதாவது ஆழ்வார் கழிக்குமது இளந்தெய்வத்தையாய்த்து; இவர் கழிக்குமது கழிபெருந்தெய்வமாய் கருந்தேவனெம்மான் கண்ணனான பெருந்தேவனையாய்த்து. “கட்டுண்ணப் பண்ணிய பெருமாய னென்னப்பனில் நண்ணி” என்றாரிறே. “உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்” (திருவாய்மொ – 5.1.9) “ஒரு மா தெய்வம் மற்றுடையமோயாமே (திருவாசி – 7) “தேவுமற்றறியேன்” என்றாய்த்து இவர்கள் பேச்சிருப்பது. இப்படி ஆழ்வாரில் வ்யாவ்ருத்த ராயிருக்கிறவர்.
“ஶடாரேருபநிஷதமுபகான மாத்ரபோக:” என்கையாகிறவிது நாட்டியல்வொழிந்து ஶடரையோட்டின ஶடகோபன்”. மொழிபட்டோடும் கலியமுதமான யாழினிசை வேதத்தின், பண்ணார் பாடலின் அநுபவரஸஜ்ஞராய், “பாவினின்னிசை பாடித்திரிவனே” “நாவினால் நவிற்றின்பமெய்தினேன் மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே” என்றிருக்கையென்றபடி. இத்தால், அவரோபாதி அவர் ஸம்பந்தமுடையதும் உத்தேஶ்யமென்றாய்த்து இவர் விரும்புவது.
“அவிதித விஷயாந்தர ஶடாரே:” என்று ஸ்வரூபப்ரயுக்தமான தாஸ்யம் சொல்லிற்று. “அபி ச குணவஶாத் ததேகஶேஷீ” என்று குணக்ருத தாஸ்யமும் உண்டென்கிறது. (அபி ச) கீழ்ச் சொன்னவளவன்றிக்கே, பின்னையும், குணவஶாத் தம்மை எழுதிக் கொள்ளுகையாலே “ததேகஶேஷீ” என்கிறது. “குணவஶாத்” என்று த்ருதீயார்த்தே பஞ்சமியாய்க் கிடக்கிறது. ஆதலில், அன்னையாயத்தனாய் என்னையாண்டிடும் தன்மையான் ஶடகோபன் என் நம்பியே” என்றும், “பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான், குயில் நின்றால் பொழில் சூழ் குருகூர் நம்பி” என்று அநுஸந்தித்த வாத்ஸல்யாதிகுண பூர்த்தியாலும், குணைர்தாஸ்யமுபாகதராய் ததேகஶேஷியாயிருப்பாராய்த்து.
ஏவம்பூதரான மதுரகவிகள் “அண்ணிக்குமமுதூறுமென்னாவுக்கே” என்னும்படியான வாங்மாதுர்யத்தையுடையவர். (மம ஹ்ருதயே) மதுரகவிகள் நிஷ்ட்டையை அபேக்ஷிக்கிற வென்மனஸ்ஸிலே, அன்றிருந்து பட்டோலை கொண்ட நிலையோடே (ஆவிரஸ்து) ஆவிர்ப்பவிக்கக்கடவர்; ஸந்நிதானம் பண்ணக்கடவர். இத்தால் அநுகூலரான ஆசார்யபரதந்த்ரர் ஆதரணீயரென்னுமர்த்தம் சொல்லிற்றாய்த்து.
வேறொன்றும் நானறியேன் வேதந் தமிழ்செய்
மாறன் சடகோபன் வண்குருகூர் – ஏறெங்கள்
வாழ்வாமென் றேத்தும் மதுரகவியா ரெம்மை
ஆள்வா ரவரே யரண். (2)
பதவுரை –
வேறு ஒன்றும் நான் அறியேன் – (நம்மாழ்வார் தவிர) வேறொரு பொருளும் நானறியமாட்டேன்
வேதம் தமிழ் செய்த – வேதார்த்தங்களைத் தமிழாக அருளிச்செய்த
மாறன் – மாறனென்னும் நாமத்தையுடையவரும்
வண் குருகூர் ஏறு – அழகிய திருக்குருகூர் நகர்க்குத் தலைவருமான
சடகோபன் – நம்மாழ்வார்
எங்கள் வாழ்வு ஆம் என்று – எமக்கு உஜ்ஜீவனராவார் என்று
ஏத்தும் – தோத்திரஞ் செய்தருளின
மதுரகவியார் – மதுரகவியாழ்வார்
எம்மை ஆள்வார் – நம்மை ஆள்பவர்.
அவரே – அந்த மதுரகவிகளே
அரண் – (ப்ரபன்னகுலத்துக்கு) காவலாயிருப்பவர்
அவதாரிகை – (வேறொன்றும் நானறியேன்) ஆழ்வாரையொழியத் தேவு மற்றறியாத மதுரகவிகள் நமக்கு ஸ்வாமியும் ரக்ஷகருமென்கிறது.
வ்யாக்யானம் – வேறொன்றும் நானறியேன், வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண்குருகூரேறெங்கள் வாழ்வாமென்றேத்தும் மதுரகவியாரெம்மையாள்வார் என்னுமளவும் மதுரகவி சொல்லை அநுசரித்துச் சொல்லியபடி; மேல், ஏவம்விதரானவர் நமக்கு ஶேஷியும் ஶரண்யருமென்கிறது.
“தேவு மற்றறியேன்” என்றதை “வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்றது; “காரிமாறப்பிரான்” “சடகோபனென்னம்பி” என்றத்தை :மாறன் சடகோபன்” என்று; “பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்காளுரியனாயடியேன் பெற்ற நன்மையே” என்றத்தை “வண்குருகூரேறெங்கள் வாழ்வாம்” என்றது; “எழுமையுமெம்பிரான் நின்று தன் புகழேத்த வருளினான்” என்றத்தை “ஏறெங்கள் வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார்” என்றது; “என்னையாண்டிடும் தன்மையான்” என்றத்தை “எம்மையாள்வார்” என்கிறது. அவரை ஆளுகிறவர் ஆழ்வார்; நம்மையாளுகிறவர் இவர். அவரே அரண் – ரக்ஷை. “ஶரண்” என்று பாடமானபோதும் ரக்ஷை என்றே அர்த்தம். மதுரகவிகளுக்கு எல்லாம் ஆழ்வாரேயானாப்போலே நமக்கு எல்லாம் மதுரகவிகளென்கிறது.
பிள்ளைலோகம் ஜீயர் அருளிச்செய்த தனியன் வ்யாக்யானம் முற்றிற்று.
ஶ்ரீ:
ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வ்யாக்யானம்
அவதாரிகை – “த்ரைகுண்ய விஷயா வேதா:” என்கிறபடியே ஐஶ்வர்யாதி ஸகல புருஷார்த்தங்களையும் யதாதிகாரம் விதிக்கிற வேத மர்யாதையிலே நின்றார்கள் ரிஷிகள்.
அதாகிறது – வேதோபப்ரும்ஹண முகத்தாலே சேதநருடைய குணாநுகூலமாக ஐஶ்வர்யாதி க்ஷுத்ர புருஷார்த்தங்களையும், பரம புருஷார்த்த லக்ஷணமான மோக்ஷத்தையும் உபதேஶிக்கை. “ப்ரஜாபத்யம் க்ருஹஸ்த்தானாம் ப்ரஹ்மம் ஸந்யாஸினாம் ஸ்ம்ருதம்” என்று தொடங்கி கேவலாஶ்ரமாநுஷ்ட்டாநங்களையே ஐஶ்வர்ய விஶேஷர்களுக்கு ஸாதநமாக உபதேஶித்து, “யோகிநாமம்ருதம் ஸ்த்தானம் ஸ்வாத்ம ஸந்தோஷகாரிணாம்” என்று கைவல்ய நிஷ்டர்க்கு ஆத்ம ப்ராப்தியை உபதேஶித்து, “ஏகாந்திநஸ்ஸதா ப்ரஹ்ம த்யாயிநோ யோகிநோ ஹி யே தேஷாம் தத்பரமம் ஸ்த்தாநம் யத்வை பஶ்யந்தி சூரய:” என்று நித்ய ஸத்வர்க்கு பகவத் ப்ராப்தியை உபதேஶித்தானிறே ஶ்ரீபராஶர பகவான்.
இனி ரிஷிகளிற்காட்டில் ஆழ்வார்களுக்கு நெடுவாசியுண்டு. எங்ஙனேயென்னில், வேததாத்பர்யமாய் உத்தமபுருஷார்த்தமான பகவத் ப்ராப்தியிலே நிஷ்ட்டராய், பிறர்க்கு உபதேஶிக்குமிடத்திலும் ஶாஸ்த்ர ஸித்தமான ஐஶ்வர்யாதிகளையும் த்யாஜ்யமாக உபதேஶிக்குமவரன்றே. இவ்வாழ்வார்களுக்கும் மதுரகவியாழ்வார்க்கும் நெடுவாசியுண்டு; எங்ஙனேயென்னில், இவ்விலக்ஷண புருஷார்த்தத்தினுடைய காஷ்டையான ததீயஶேஷத்வத்தளவிலே புகுரநின்றார் ஶ்ரீமதுரகவிகள்.
இவர்க்கு இவ்வேற்றம் வந்தபடி எங்ஙனேயென்னில், ஆழ்வார் பொய்நின்ற ஜ்ஞானம் துடங்கி “அவாவற்று வீடு பெற்ற” என்னுமளவும் செல்லவநுபவித்தவிடத்தில் ஆழ்வார் தமக்கு புருஷார்த்த காஷ்டையாக அபிமதமான ததீயஶேஷத்வத்தைப் பற்றினார். “ஆசார்யருசி பரிக்ருஹீதமான அர்த்தமே ஸாத்விகர்க்குப் பரிக்ராஹ்யம்” என்னுமிடம் மஹாபாரத ஶ்ரீஸஹஸ்ரநாமாத்யாயத்தில் சொல்லிற்றிறே.
ஶ்ரீபீஷ்மர் பக்கலிலே ஸகலார்த்தங்களையும் குறைவறக் கேட்ட தர்மபுத்ரன் “இவர் தமக்கு உத்தேஶ்யமாக ஸ்வீகரித்த தத்வஹிதங்களே நமக்கு உத்தேஶ்யம்” என்று நினைத்து “கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:” என்று கேட்க “ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோதிகதமோ மத:” என்று தன்னுடைய ருசிபரிக்ருஹீதமான அர்த்தத்தை உபதேஶித்தாரிறே. த்ரிபுராதேவியாரை “ப்ரமாண ப்ராபல்யத்தாலேயோ எம்பெருமானே ஆஶ்ரயணீயர்” என்று நீங்கள் பற்றிற்று” என்ன, “அதுவொன்றுமன்று; எம்பெருமானார் காடிச்சால் மூலையில் தேவதையை ஆஶ்ரயித்தாராகில் அதுவே எங்களுக்கும் ஆஶ்ரயணீய வஸ்துவாகக்கடவது” என்றாள். அந்த ந்யாயத்தாலே ஆழ்வார் தமக்குத் தஞ்சமாக நினைத்திருக்கும் ததீய ஶேஷத்வத்தையே இவரும் தமக்கு புருஷார்த்தமாக அத்யவஸிக்கிறார்.
இதுதான் ராமாயண புருஷர்களில் ஶ்ரீஶத்ருக்நாழ்வான் பக்கலிலே அநுஷ்டான ஶேஷமாகக் காணப்பட்டது. எங்ஙனேயென்னில், “வேதோபப்ருஹ்மணார்த்தாய தாவக்ராஹயத ப்ரபு:” என்கிறபடியே வேதோபப்ருஹ்மணார்த்தமாக ப்ரவ்ருத்தமான ஶ்ரீராமாயணத்தில் ராமாயண புருஷர்கள் நால்வரும் தர்மஸம்ஸ்த்தாபநார்த்தமாக அவதரிக்கையாலே நால்வரும் நாலர்த்தத்தை அநுஷ்ட்டித்துக் காட்டினார்கள். “கர்தா காரயிதா ச ஸ:” என்கிறபடியே அநுஷ்ட்டிப்பிக்கைக்காக “ஒருவன் சொல்லிற்றை ஒருவன் செய்யக்கடவன்” என்கிற முறை நேராக அநுஷ்ட்டிக்கையாலே பித்ரு வசன பரிபாலனாதிகளாலே ஸாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் பெருமாள். “பிதுர்வசந நிர்தேஶாத், அகஸ்த்ய வசநாத், ஸுக்ரீவ வசநாத்” என்றிறே இவரநுஷ்ட்டாநம்.
“நிருபாதிக ஶேஷியைக்குறித்து ஶேஷபூதன் கிஞ்சித்கரித்துத் தான் உளனாகக்கடவன்” என்கிற விஶேஷ தர்மத்தை அநுஷ்ட்டித்தார் இளையபெருமாள். “குருஷ்வ மாமநுசரம்” “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” “ஸ ப்ராது:” இத்யாதி.
“ராஜ்யஞ்ச தவ ரக்ஷேயமஹம் வேலேவ ஸாகரம் ப்ரதிஜாநாமி தே வீர மாபூவம் வீரலோகபாக்)” என்கிறபடியே நிர்ப்பந்தித்தடிமை செய்கையன்றிக்கே, “ஶேஷியுகந்த அடிமையே ஶேஷபூதனுக்குக் கர்த்தவ்யம்” என்னுமிடத்தை அநுஷ்டித்தார் ஶ்ரீபரதாழ்வான். தன் செல்லாமையைப் பாராதே ஶேஷியுடைய ஹ்ருதயத்தைப் பார்த்து “ஆருரோஹ ரதம் ஹ்ருஷ்ட:” என்று ப்ரீதியோடே மீண்டானிறே.
(ராஜ்யஞ்ச தவ ரக்ஷேயம்) “ரரக்ஷ: தர்மேண பலேந” என்கிறபடியே உம்முடைய ரக்ஷணம் பண்ணுகையன்றிக்கே, உம்முடைய ராஜ்யத்தையும் ரக்ஷிக்கக்கடவேன். எனக்கு தாதர்த்த்யம் ஸ்வரூபமானாலும் உம்மாலென்னை மீறவொண்ணாது காணும். (அஹம் வேலேவ ஸாகரம்) கடலுக்குக் கரை ஶேஷமாயிருக்கச் செய்தேயும் கரையை அதிக்ரமிக்கமாட்டாதிறே கடல்; அப்படியே நீர் பெரியீரென்னா உம்மாலென்னை விஞ்சவொண்ணாது காணும். (ப்ரதிஜாநாமி) நான் இப்படி ப்ரதிஜ்ஞையைப் பண்ணுகிறேன். ( தே வீர) ஒரு கோழை முன்னேயோ ப்ரதிஜ்ஞை பண்ணிற்று? ப்ரதிஜ்ஞை பண்ணினால் அத்தைத் தலைக்கட்டித்தரவல்ல ஆண்பிள்ளைத்தனமுடைய உம்முடைய முன்னேயன்றோ? (மா பூவம்) இப்படிச் செய்திலேனாகில் உம்முடைய ஸந்நிதியில் வர்த்திக்கப் பெறாதொழிகையுமன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவனாகிறேன். (வீர லோக பாக்) “உம்மை முடிசூடி அநுபவிக்கப் பாரித்து அது பெறாதேபோன சக்ரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன்” என்கிறபடியே நிர்ப்பந்தித்தடிமை செய்கையன்றியே “ஶேஷியுகந்த அடிமை செய்யக்கடவேன்” என்னுமிடத்தை அநுஷ்ட்டித்தார் ஶ்ரீ பரதாழ்வான்.
தன் செல்லாமையைப் பாராதே ஶேஷியினுடைய ஆதரத்தையே பார்த்து “ஆருரோஹ ரதம் ஹ்ருஷ்ட:” என்று ப்ரீதியோடே மீண்டானிறே.
இப்படியிருக்கிற இவனையல்லது அறியாதே இருக்கையாலே பகவதச்சேஷத்வ காஷ்டையான ததீய ஶேஷத்வத்தை அநுஷ்டித்தான் ஶ்ரீஶத்ருக்நாழ்வான். “கச்சதா மாதுலகுலம் பரதேன ததாநக: ஶத்ருக்னோ நித்யஶத்ருக்னோ நீத: ப்ரீதிபுரஸ்க்ருத:”
(கச்சதா) என்கிற வர்த்தமான நிர்தேஶத்தாலே போகிற இடத்தில் தனக்கொரு ப்ரயோஜனமுண்டாயாதல், இங்கே மாதா பிதாக்களைக் கேள்வி கொள்ளுதல், பூர்வஜரான பெருமாளைக் கேள்விகொள்ளுதல் செய்யுமிவ்வளவுமன்றிக்கே அவனையொழிய ஜீவிக்க மாட்டாதபடியாலே போனானென்கை. (மாதுலகுலம்) யுதாஜித்து அழைத்தது அவனையாகையாலே போக்கிலுத்தேஶ்யதையும் அவனுக்கு; இவனும் அவநுத்தேஶ்யனாய்ப் போனானென்கை.
(பரதேந) சக்ரவர்த்தியும் துஞ்சி, பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப்போய், இளையபெருமாளும் “துடர்ந்தடிமை செய்யவேணும்” என்று போய், ஶத்ருக்நாழ்வானும் “நின்னதல்லதறியேன்” என்றிருக்கும் தசையிலே; “ராஜ்யத்தைப் பறிக்கக் கடவன்” என்றாய்த்து ஶ்ரீ வஶிஷ்ட பகவான் திருநாமம் சாத்திற்று. “பரத இதி ராஜ்யஸ்ய பரணாத்” என்றானிறே ஶ்ரீ ஸதாநீகன். (ததா) இருவரும் ராஜபுத்ரர்களாய் நக்ஷத்ரபேதமுண்டாயிருந்தால் பிரித்து முகூர்த்தமிட்டுப் போக ப்ராப்தமாயிருக்க, அவன் போனதுவே முகூர்த்தமாகப் போனானென்கை. “கச்சதா” என்கிறதிலே அர்த்தஸித்தமன்றோ? “ததா” என்கிறதென்னென்னில், அங்கு மமதா நிவ்ருத்தியைச் சொல்லிற்று; இங்கு அதுக்காஶ்ரயமான அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது. ஆகையாலே புநருக்தி தோஷமில்லை. ஶேஷத்வ விரோதியிறே இரண்டும்.
(அநக:) அகமில்லாதது இவனுக்கேயிறே. அகமாவது உத்தேஶ்யவிரோதியிறே; இவ்விடத்தில் அகமாவது ராமபக்தி. இத்தை பாபமென்னப்போமோவென்னில்; பாபத்தில் புண்யம் நன்றாயிருக்க, மோக்ஷவிரோதியாகையாலே புண்யமும் “அஶ்வ இவ ரோமாணி விதூய பாபம்” என்று பாப ஶப்தவாச்யமாயிற்றிறே; ஆகையாலே பரதாநுவ்ருத்தியாகிற உத்தேஶ்யத்துக்கு விரோதியாகில் ராம ஸௌந்தர்யத்தில் கால் தாழுமதுவும் பாபமாமித்தனையிறே. “ராமே ப்ரமாதம் மா கார்ஷீ:” என்று ராமாநுவ்ருத்திக்கும் இடைச்சுவராகச் சொல்லிற்றிறே ராம ஸௌந்தர்யத்தை. பரதாநுவ்ருத்திக்கு இடைச்சுவரென்னுமிடம் சொல்லவேண்டாவிறே.
(ஶத்ருக்ந: ) பிள்ளைகளுடைய ஸந்நிவேஶத்தைப் பார்த்துத் திருநாமம் ஸாத்துகிற ஶ்ரீ வஶிஷ்ட பகவான், பெருமாள் கண்டாரை அழகாலே துவக்கவல்லாராகத் தோன்றுகையாலே ராமனென்றும், இளையபெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே லக்ஷ்மணனென்றும் திருநாமம் சாத்தினாப்போலே, இவருடைய ஸந்நிவேஶத்தைக் காணவே ஶத்ருக்கள் மண்ணுண்ணும்படி இருக்கையாலே ஶத்ருக்நன் என்று திருநாமம் சாத்தினான்.
(நித்ய ஶத்ருக்ந: ) பாஹ்ய ஶத்ருக்களையேயன்றிக்கே ஆந்தர ஶத்ருக்களான இந்த்ரியங்களையும் ஜயித்திருக்குமென்கை. அவ்விந்த்ரிய ஜயத்தினெல்லை யெவ்வளவென்னில், ”பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்” என்கிற ராம ஸௌந்தர்யத்திலும் துவக்குண்ணாதிருக்கை. அதாகிறது பெருமாளைப் பற்றும்போதும், தன்னுகப்பாலேயாதல், அவருடைய வைலக்ஷண்யத்தாலே யாதலன்றிக்கே, தனக்கு உத்தேஶ்யனான இவநுகந்த விஷயமென்று பற்றுகை.
(நீத:) ராஜாக்கள் போம்போது உடைவாள் மற்றொன்றைக் கொண்டுபோமோபாதி இவன் கொடுபோகப் போனானென்கை. த்ரவ்யத்திற்கு த்ரவ்யாந்தரங்களோட்டை ஸம்யோகம் உபயநிஷ்ட்டமாயிருக்குமிறே. அதுபோலன்றிக்கே ஜாதிகுணங் களோபாதி போனான். (ப்ரீதி புரஸ்க்ருத: ) “ஜ்யேஷ்டாநுவ்ருத்தி கர்த்தவ்யம்” என்று போனானல்லன் . “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்று போன இளையபெருமாளைப்போலே, “போனவிடத்திலே ஸர்வஶேஷவ்ருத்தியும் பண்ணலாமென்று பாரித்துக்கொண்டு ப்ரீதி ப்ரேரிக்கப் போனான். படைவீட்டிலிருந்தால் பலருமுண்டாகையாலே விழுக்காட்டோபாதியிறே ஸித்திப்பது.
“நீத:” என்கையாலே ஶேஷத்வத்தில் அசித்கல்பனா யிருக்கக்கடவன். “ப்ரீதி புரஸ்க்ருத:” என்கையாலே ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தியிலே சைதன்யப்ரயுக்தமான தர்மங்களுண்டாயிருக்கை. “படியாய் கிடந்துன் பவள வாய் காண்பேனே” (பெருமாள் திரு – 4.9) என்றிறே அபியுக்த வார்த்தை.
“அநக:” “நித்ய ஶத்ருக்ந:” என்று பாவநத்வத்தாலும் போக்யதையாலும் அவனையே பற்றினானென்னவுமாம். “அநக:” “நித்ய ஶத்ருக்ந:” என்றதுக்கு ப்ரயோஜனமென்னென்னில், “ஶ்ரீ ஶத்ருக்நாழ்வான் பெருமாளுக்கு நல்லனானபடி அவனையல்லதறியாத ஶ்ரீ பரதாழ்வானையல்லது வேறொன்றறியாதபடியானான்” என்று எம்பெருமானார் அருளிச்செய்தார். இதுவே ப்ரயோஜனமானால் சொன்ன மிகையெல்லாம் பொறுக்குமிறே. ஆகவிப்படி ஶ்ரீ ஶத்ருக்நாழ்வானைப்போலே யிருப்பாரொருவராய்த்து ஶ்ரீ மதுரகவிகள்.
இனி இவர்க்குத் ததீயருத்தேஶ்யரென்னுமிடத்தில் பகவத்ஸம்பந்த மாத்ரத்திலே விஷயீகரித்தும், தத்விஷயத்திலே இப்போது அவகாஹிப்பித்தும், குணாநுஸந்தாநத்தாலல்லது செல்லாத தஶையிலே “போதயந்த: பரஸ்பரம்” என்கிறபடியே போதுபோக்குகைக்கு உசாத்துணையாகவும், “யத்ர பூர்வே ஸாத்யாஸ்ஸந்தி தேவா:” என்கிறபடியே ப்ராப்தி தஶையில் பகவதநுபவ ஸஹகாரிகளாயும், இப்படி பஹுமுகமான உபகாரத்தாலே ஸர்வாவஸ்தையிலும் ததீயரே உத்தேஶ்யரென்று அத்யவஸித்து தமக்கு வைஷ்ணவ விஷயீகாரத்துக்கு முன்பே அஜ்ஞாதஜ்ஞாபன முகத்தாலே பகவத்விஷயத்திலே மூட்டின மஹோபகாரகரான ஆழ்வார் தம்மையே பற்றுகிறார்.
பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யாநாவதாரிகை முற்றிற்று.
ஶ்ரீ:
ஶ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த
கண்ணிநுண்சிறுத்தாம்பு
பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்
முதற்பாட்டு
கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணியபெருமாயன் என்னப்பனில்
நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே (1)
பதவுரை –
கண்ணி – (உடம்பிலே உறுத்தும்படி பல) முடிகளையுடைத்தாய்
நுண் – (உடம்பிலே அழுத்தும்படி) சூக்ஷ்மமாய்
சிறு – (நீளம் போராதபடி) சிறியதாயிருக்கிற
தாம்பினால் – கயிற்றினால்
கட்டுண்ணப் பண்ணிய – யஶோதைப்பிராட்டி தன்னைக் கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட
பெருமாயன் – பெரிய ஆச்சரிய உக்தியை உடையனாய்
என் அப்பனில் – எனக்கு ஸ்வாமியான ஸர்வேஶ்வரனைவிட்டு
நண்ணி – (ஆழ்வாரை) கிட்டி ஆஶ்ரயித்து
தென் குருகூர் நம்பி என்றக்கால் – தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரி என்னும்) குருகூர்க்கு நிர்வாஹகரான ஆழ்வார் என்று (அவரது திருநாமத்தைச்) சொன்னால்
அண்ணிக்கும் – மிக இனியதாயிருக்கும்
என் நாவுக்கே – என் ஒருவனுடைய நாவுக்கே
அமுது ஊறும் – அம்ருதம் ஊறாநிற்கும்.
அவதாரிகை – முதற்பாட்டில் ஆழ்வாருடைய நிரதிஶய போக்யதையைச் சொல்லுகிறது. ப்ராப்ய காஷ்டையான ஆழ்வாரைப் பற்றுகிற இவர் ப்ரதமாவதியான பகவத்விஷயத்தி லிழிவானென்னென்னில், ஆழ்வாருடைய போக்யதாதிஶயம் தோன்றுகைக்காகவும், ஆழ்வாருடைய முகமலர்த்திக்காகவும், அவருகக்கும் பகவத்விஷயமாகையாலும் பேசுகிறார். “உரலினோடிணைந் திருந்தேங்கிய எளிவு எத்திறம்” “பிறந்தவாறும் வளர்ந்த வாறும் ” என்றும், “பையவே நிலையும்” என்றும், ஆழ்வார் ஆழங்காற்பட்ட விஷயமாகையாலே அத்தைப் பேசுகிறார்.
வ்யாக்யானம் – (கண்ணிநுண் சிறுத்தாம்பினால்) ஆழ்வார் பக்கல் இவருக்குண்டான உத்தேஶ்யதை இருந்தபடி – அவருடைய உத்தேஶ்ய வஸ்துவைக் கட்டினதொரு கயிற்றினுடைய உள்மானம் புறமானம் ஆராயும்படியாய்த்து. இவர் பகவத்விஷயத்திலே கையொழிந்தபடி இவர் ஆழ்வார்பக்கலிலே ந்யஸ்தபரரானபடியிறே.
(கண்ணித் தாம்பு) உடம்பிலே கட்டப் புக்கால் உறுத்தும்படி பல பிணைகளை உடைத்தாயிருக்கை. (கண்ணி) முடி. (நுண் தாம்பு) உடம்பிலே அழுத்தும்படி நேரியதாயிருக்கை. (சிறுத்தாம்பு) இவனைக் கட்டினபின்பு உரலோடே சேர்க்கைக்கு எட்டம் போராதிருக்கை.
(கட்டுண்ணப்பண்ணிய) “உரலை நேரிதாகச் செதுக்கப்போகாது, அப்போதாகக் கயிற்றை நெடுகவிடப்போகாது. இனி இவன்தன்னை விட்டு நெடிய கயிறு தேடி எடுக்கப்புகில் பின்னை இவன்றான் எட்டான். காற்றிற்கடியனாய் ஓடும்; இனிச் செய்வதென்? என்று அவள் தடுமாறுகிறபடியைக் கண்டான். (கட்டுண்ணப்பண்ணிய) “ஸதைகரூபரூபாய” என்கிற தன்னுடைய திருமேனியை நெருக்கி இடங்கொண்டு கட்டுண்ணும்படி பண்ணினான். “கட்டுகைக்கு பரிகரமில்லை” என்று நிவ்ருத்தையாமாகில் பிறந்து படைக்க நினைத்த குணத்தை இழக்குமத்தனையிறே. ஆகையாலே திருமேனியிலே இடங்கொடுத்தான். “கண்ணியார் குறுங்கயிற்றால் கட்ட வெட்டென்றிருந்தான் என்றும், “கண்ணிக் குறுங்கயிற்றினால் கட்டுண்டான்” என்றும் எல்லாரும் ஈடுபடும் துறையிறே இதுதான். “தாம்நா சைவ – யதி ஶக்னோஷி கச்ச த்வமதிசஞ்சலசேஷ்டித” என்று தாய் கட்டின கட்டை அவிழ்க்க ஶக்தனல்லேன் என்றிருந்தானிறே. “ஸம்ஸார பந்த ஸ்திதி மோக்ஷஹேது:” ஸ்வவ்யதிரிக்தாரையடையக் கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேதுவானவன்கிடீர் இப்போது ஓரபலை கட்டின கட்டை அவிழ்த்துக்கொள்ள ஶக்தனன்றிக்கே இருக்கிறான். செருக்கனான ஸார்வபௌமன் அபிமத விஷயத்தின் கையிலேயகப்பட்டு ஒரு கருமுகைமாலையாலே கட்டுண்டால் அதுக்கு ப்ரதிக்ரியை பண்ணமாட்டாதே இருக்குமாபோலேயிறே , இவள் கட்டின கட்டுக்கு ப்ரதிக்ரியை பண்ணமாட்டாதேயிருந்த இருப்பும். பிறருடைய கர்ம நிபந்தனமாக வரும் கட்டை அவிழ்க்கு மத்தனையல்லது தன்னநுக்ரஹத்தாலே வந்த கட்டு தன்னாலும் அவிழ்க்கப் போகாதென்கை.
ஆழ்வார் “மயர்வற மதிநலம் அருளப்பெற்றவராகையாலே “உயர்வற உயர்நலமுடையவனென்று அவன் குணத்தை வர்ணித்தார். இவர் முதலடியிலே ஆழ்வார் தம்மையே பற்றுகையாலே அவன் திருமேநியில் ஸ்பர்ஶித்ததொரு தாம்பை வர்ணிக்கிறார். அவருடைய உத்தேஶ்ய வஸ்து இவருக்கு வெளியதாய்க் கழிகிறதிறே.
இவன்றன்னைக் கட்டுவது – “ஒரு பெண்ணைக் களவுகண்டான்; வெண்ணையைக் களவுகண்டான்; ஊரை மூலையடியே நடத்தினான்” என்றிறே; இவன் ஸாமான்யனென்று இடுமீடுமிடமெல்லாம் இடுங்கோள்” என்றிருந்தாள். அதாவது – களவிலே தகணேறினபடி. இவள் கட்டிவைத்து அடிக்கப்புக்கவாறே, “தொழுகையும்” என்கிறபடியே தொழத்தொடங்குமே; எல்லாரையும் தொழுவித்துக் கொள்ளுமவனிறே தொழுகிறான். “இத்தஶையில் அபிமதஸித்திக்கு அஞ்சலியே ஸாதநம்” என்றறியுமவனிறே. (அதி சஞ்சல சேஷ்டித) துருதுருக்கையாகக் கொண்டு ஊர்ப்பூசல் விளைத்தவனல்லையோ? (இத்யுக்த்வா) ஒரு சொல்லாலே விலங்கி்ட்டுவைத்து. (அத நிஜம் கர்ம ஸ சகார) அவள் தான் கறப்பது கடைவதாகத் தொடங்கினாள். (குடும்பிநீ) இவனைப்போலே நியமிக்கவேண்டுவன அநேகமுண்டிறே.
(பெருமாயன்) நிரதிஶயாச்சர்யயுக்தன். இத்தால் அவாப்த ஸமஸ்த காமனுக்கு ஒரு குறையுண்டாய் அதுதன்னை க்ஷுத்ரரைப்போலே களவாகிற வழியல்லாத வழியாலே இழிந்து, ஸர்வஶக்தியான அவன்றான் அது தன்னையும் தலைக்கட்டமாட்டாதே வாயது கையதாக அகப்பட்டு கட்டுண்டடியுண்டு “பையவே நிலையும்” என்று உடம்பு வெளுத்து நின்ற நிலையளவும் செல்ல நினைக்கிறார்.
(என்னப்பனில்) ஆழ்வார் இவர்க்கு உத்தேஶ்யராய் நிற்க, இங்ஙனே சொல்லுவானென்னென்னில், பகவத் ஸம்பந்தமற வார்த்தை சொன்னாராகில் ஆழ்வாரோட்டை ஸம்பந்தத்தை அறுத்துக்கொண்டாராவரிறே; அத்தாலே சொல்லுகிறார். அதவா, “பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்” என்கிறபடியே அவ்வருகே போவாரையும் துவக்கவல்ல விஷயமாகையாலே துவக்குண்டு சொல்லுகிறாரென்னவுமாம்.
(என்னப்பனில் நண்ணி) பகவத்விஷயத்தில் நின்றும் ஆழ்வார் பக்கலிலே கிட்டி, ஶப்தாதி விஷய ப்ராவண்யங்களை விட்டு பகவத் விஷயத்தைக் கிட்டுகையிலுண்டான அருமை போரும், ப்ரதமாவதியான ததீயஶேஷத்வத்தை கிட்டுகை. ஶப்தாதி விஷயங்களை விடலாம் அதின் தோஷதர்ஶனத்தாலே. இங்கு அங்ஙனிராது தோஷங்காண விரகில்லையாகையாலே இது அதிலுமரிது.
(தென் குருகூர் நம்பி) “நல்கியென்னை விடான் நம்பி நம்பி” என்று ஆழ்வார்தாம் உத்தேஶ்யமாக பற்றின விஷயத்தின் பூர்த்தியாலன்றிறே இவர் பற்றின விஷயத்தின் பூர்த்தி. எங்ஙனேயென்னில், பகவத்விஷயத்தைப் பற்றினால் அதினெல்லையான ஆழ்வாரளவும் வரவேண்டியிருக்கும்; ஆழ்வாரைப்பற்றினால் அவ்வருகு கந்தவ்யபூமியில்லையிறே. “ஆசார்யர்களை நம்பி யென்னக் கற்பித்தார் ஶ்ரீமதுரகவிகளிறே!” என்று ஜீயர் அருளிச்செய்வர். (என்றக்கால்) மனோவாக்காயங்கள் மூன்றும் வேண்டியிருக்கும் பகவத்விஷயத்துக்கு. ஓருக்திமாத்ரமே அமையும் இவ்விஷயத்துக்கு. பூர்த்தியால் வந்த ஏற்றமேயன்று; ஸௌலப்யத்தாலு மேற்றமுண்டென்கை.
(அண்ணிக்கும்) தித்திக்கும். பகவத் விஷயத்தையநுபவித்தால் ஆழ்வாருக்குப் பிறக்குமாநந்தமெல்லாம் இவ்விஷயத்திலே ஓருக்திமாத்ரத்தாலே எனக்கு ஸித்தித்தது. (அமுதூறும்) அமுதூற்று மாறாதே நிற்கும். “ந ச புநராவர்த்ததே” என்று அவ்விஷயம் ஆழ்வாருக்கு தத்ப்ரஸாதத்தாலே நித்யமாய் செல்லுமாபோலே எனக்கு ஆழ்வார் ப்ரஸாதத்தாலே நித்யாபூர்வமாய்ச் செல்லப் பெற்றேன்.
(என் நாவுக்கே) இது பின்னை எங்களுக்கு ரஸிக்கிறதில்லையீ” என்னில், முதலடியான பகவத் விஷயமுங்கூட ரஸியாதிருக்கிறவுங்களுக்கு அதினெல்லையிலே நிற்கிறவெனக்கு ரஸிக்குமாபோலே ரஸிக்குமோ? (என் நாவுக்கே) அநாதி காலம் விஷயாந்தரங்களை ரஸித்துபோந்த என் நாவுக்கே இவ்விஷயம் ரஸிக்கிறதென்றுமாம்.
@@@@@
இரண்டாம் பாட்டு
நாவினால் நவிற்றின்ப மெய்தினேன்
மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறியேன் குருகூர் நம்பி
பாவினின்னிசை பாடித்திரிவனே (2)
பதவுரை –
நாவினால் நவிற்று – வாயாலே குருகூர் நம்பியின் திருநாமத்தைச் சொல்லி
இன்பம் எய்தினேன் – பேராநந்தத்தையடைந்தேன்
அவன் பொன்னடி – ஆழ்வாருடைய இனிய திருவடிகளை
மெய்ம்மையே மேவினேன் – இம்மை மறுமைகள் இரண்டிலுமே உத்தேஶ்யமாகக் கொண்டேன்
தேவு மற்றறியேன் – (ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் இருக்கும்) வேறொரு தெய்வத்தை அறியமாட்டேன்
குருகூர் நம்பி பாவின் இன்னிசை – ஆழ்வாருடைய பாடலின் இனிய இசையை
பாடித் திரிவனே – உகப்புடன் பாடி, அதுவே தாரகமாக வாழ்வேன்
அவதாரிகை – இரண்டாம் பாட்டு. முதற்பாட்டில் ஆழ்வார் என்றால் தமக்கு ரஸிக்கிறபடி சொன்னார். இப்பாட்டில் அவருடைய பாஶுரமே தேஹயாத்ரையாம்படி தாரகமானபடியைச் சொல்லுகிறார்.
வ்யாக்யானம் – (நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்) “என்றக்காலண்ணிக்கும்” என்று ப்ரஸ்துதமானத்தை அநுபாஷிக்கிறார் அதிலுண்டான ஆதராதிஶயத்தாலே; மனஸ்ஸஹகாரமில்லாத உக்திமாத்ரமடியாக நிரதிஶய ஸுகம் ப்ரயோஜநமானால் பின்னாட்டுகைத் தவிராதிறே. (நாவினால் நவிற்று) மநஸ்ஸஹகாரமில்லை என்கிறார். பகவத்விஷயத்திலுபகாரகரை ஸ்தோத்திரம் பண்ணக்கடவ நாவைக்கொண்டு அந்த கார்யத்தைக் கொள்ளப் பெற்றேனென்னவுமாம். “ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா:” என்னக்கடவதிறே. ஈஶ்வர ஸ்ருஷ்டிக்கு ப்ரயோஜநம் கொள்ளப் பெற்றேன் நானொருவனுமே என்கிறார்.
(இன்பமெய்தினேன்) “வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன் மேவி” (திருவாய்மொழி – 4.5.8) என்று ஆழ்வார் அவ்விஷயத்தில் பெற்ற பேற்றை இவ்விஷயத்திலே பெற்றேனென்கிறார். “சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்” (திருவாய்மொழி – 6.5.11) என்று கரண த்ரயத்தாலும் அவ்விஷயத்தை ஆஶ்ரயித்தவர் பெற்ற பேற்றை உக்தி மாத்ரத்தாலே பெற்றேன். அநாதி காலம் நரகத்திலே ஸ்ருஷ்டியும் நரகத்திலே ஸம்ஹாரமுமாம்படி பாபத்தைப் பண்ணிப் போந்த நாவாலே நிரதிஶயாநந்தத்தை ப்ராபித்தேனென்னவுமாம்.
(மேவினேன் அவன் பொன்னடி) ஆழ்வாருடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை உத்தேஶ்யமாகப் பொருந்தினேன். “க்ஷிபாமி” என்று ஈஶ்வரனும் கூட உபேக்ஷித்த தஶையிலே விஷயீகரித்த ஆழ்வாருடைய விலக்ஷணமான திருவடிகளோடே பொருந்தப் பெற்றேன். நீர் செய்ததிதுவாகில் பேற்றிலுறுதிப்பாடிருந்தபடி என்னென்ன, (மெய்ம்மையே மேவினேன்) உபகாரக விஷயத்திலே நிற்கிறவளவிலே வேறொரு விஷயம் உத்தேஶ்யமாய், அது கிட்டினவாறே அதிலே தோள்மாறும்படியன்றிக்கே ஐஹிகாமுஷ்மிகங்களிரண்டும் ஆழ்வார் திருவடிகளேயாகப் பொருந்தினேன். இங்கிருந்த நாள் அஜ்ஞாதஜ்ஞாபனத்தாலே உபகாரகராகவும் பகவல்லாபத்துக்குப் புருஷகாரமாகவும், நித்ய விபூதியில் “யத்ர ஸர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:” என்கிறபடியே ப்ராப்யமாகவும் இவர் தம்மையே பற்றினேன். ஆளவந்தார் “அத்ர பரத்ர சாபி” என்கைக்குமடி இவரிறே.
(தேவு மற்றறியேன்) ப்ராப்யமும் ப்ராபகமுமான வேறொரு வஸ்துவுண்டென்றறியேன். “மெய்ம்மையே” என்றவிடம் அந்வயத்தாலே சொன்னார். “தேவு மற்றறியேன்” என்று வ்யதிரேகத்தாலே சொல்லுகிறாரிறே. தம்முடைய அத்யவஸாயம் தோற்றுகைக்காக “மற்றறியேன் “ என்று புருஷார்த்தாந்தரங்களோபாதி பகவத் விஷயத்தையும் கழிக்கிறாரிறே. அதினெல்லையான ஆழ்வார் திருவடிகளளவும் வந்தவராகையாலே, ஶாஸ்த்ர வாஸனையாலேயாதல், ஆசார்யோபதேஶத்தாலேயாதல் சொல்லுகிறாரல்லர். உபகாரகரான ஆழ்வார் திருவடிகளில் பாவபந்தத்தாலே சொல்லுகிறார்.
(குருகூர் நம்பி) இவரையும் பற்றி வேறொரு விஷயத்தையும் பற்றவேண்டும்படியோ இவருடைய பூர்த்தி இருப்பது; “குருகூர் நம்பி” என்றது ஆழ்வார் திருவாயாலே அருளிச்செய்ததொன்றாய்த்து திருவாய்மொழிதன்னையுமாதரிப்பது. அதிலே “குருகூர் ஶடகோபன்” என்றருளிச் செய்தாரிறே. அவ்வழியாலேயாயிற்று திருவாய்மொழி யிலாதரம். ஆழ்வார் ப்ரதிபாத்யராகையாலே “குருகூர் நம்பிபா” என்று கண்ணிநுண்சிறுத்தாம்பைச் சொல்லுகிறதென்னவுமாம்.
(பாவினின்னிசை) பாவோடேகூட புணர்ப்புண்ட இனிய இசை. (பாடித்திரிவனே) உம்முடைய தேஹயாத்ரை நடத்தி போரும்படியென்னென்ன, ப்ரீதிப்ரேரிதனாய்க்கொண்டு சொல்லி இதுவே தாரகமாக ஸஞ்சரிப்பவன். “உண்டு திரிவான்” என்னுமாப்போலே “பாடித்திரிவன்” என்கிறார். “நமந்தமர் தலைகள் மீதே நாவலிட்டுழி தருகின்றோம்” (திருமாலை – 1) என்னுமாபோலே, இதுவே யாத்ரையாயிருக்கிற என்னுடைய கதி நிவ்ருத்தியைப் பண்ணவல்லாருண்டோ? என்றுமாம். ப்ராக்தநகர்மபலாநுபவத்தைப் பண்ணுவிக்கும் யமன் கதி பங்கம் பண்ணவோ? அதுக்கடியான விஷயாந்தரங்களை கதிபங்கம் பண்ணவோ?
@@@@@
மூன்றாம் பாட்டு
திரிதந்தாகிலும் தேவப்பிரானுடைக்
கரியகோலத் திருவுருக் காண்பன் நான்
பெரியவண் குருகூர்நகர் நம்பிக்கா
ளுரியனாடியேன்பெற்ற நன்மையே (3)
பதவுரை –
திரிதந்தாகிலும் – (ஆழ்வாரைவிட்டு) மீண்டாகிலும்
தேவப்பிரானுடை – திவ்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய
கரிய – (நீலமேகம் போற்) கறுத்ததாய்
கோலம் – அழகியதான
திருவுரு – திவ்ய ரூபத்தை
நான் காண்பன் – நான் ஸேவிப்பேன்
பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்கு – பெருமையும் ஔதார்யமுமுடைய ஆழ்வார்க்கு
உரிய ஆளாய் – அநன்யார்ஹ ஶேஷபூதனாயிருந்துவைத்து
அடியேன் பெற்ற நன்மை – அடியேன் பெற்றபேறு இது காணீர்
அவதாரிகை – மூன்றாம் பாட்டில், “தேவு மற்றறியேன்” என்று புருஷார்த்தாந்தரங்களோடேகூட பகவத்விஷயத்தையும் காற்கடைகொள்ளக்கடவீரோ? என்ன, எனக்கு அபுருஷார்த்த மென்னுமளவாய்த்து காற்கடைக்கொண்டது; ஆழ்வாருகந்த விஷயமென்னுமிவ்வழியாலே தேவுமற்றறியிலும் அறிவனென்கிறார்.
சூர்ப்பணகையைப் போலே கிடந்தானைக்கண்டேறுமதிறே தவிர்த்துக் கொண்டது. “விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவரேல் அது காண்டும்” (நாச்சி – 10.10) என்று பெரியாழ்வார் முன்னாகப் பற்றும் ஆண்டாளைப்போலே ஆழ்வார் முன்னாகப் பற்றும் பற்று தவிர்ந்தாலிறே. “பவத: பரமோ மத:” என்று கேட்க, “தர்மோதிகதமோ மத:” என்றாற்போலே ஆசார்யருசி பரிக்ருஹீதமாய் வருமது ஆதரணீயமிறே இவற்கு.
த்ரிபுரா தேவியார், “வடகீழ் மூலையில் தத்வத்தையும் ஆஶ்ரயணீயமென்று உடையவரருளிச்செய்தாராகில் எனக்கும் அதுவாமத்தனையன்றோ?” என்றாள். குணமலைப்பாடி உடையார் காங்கேயன் தெற்கே எடுத்துவிட்டபோது, பிள்ளையாத்தான் அங்கே குறைவற பச்சை சமைக்க, அவர் “உமக்கு வேண்டுவது என்?” என்று கேட்க, “இவர் உம்மைக்கொண்டு பண்டே உபகாரங்கொண்டோம் காணும்” என்ன, “ஆவதென்? என்னையறியாதே வருமதோர் உபகாரமுண்டோ?” என்ன, “எங்களாசார்யர் நான் கோயிலில் மண் பெற்றது அவ்வேளாளனிலே என்றருளிச்செய்ய கேட்டிருந்தோம். இதுக்கு மேற்பட்டதோருபகாரமுண்டோ நமக்கு” என்றார்.
உடையவர் வெள்ளை சாத்தி எழுந்தருளின காலத்திலே திருவடிகளில் ஸம்பந்தமுடையாரை பெருமாளை திருவடிதொழவிடவேண்டாவென்று விலக்க, ஆழ்வானை நீர் ஆரேனுக்கும் விரோதியோ? நீர் புக்குத் திருவடி தொழலாகாதோ? என்ன, ஆத்மகுணம் மோக்ஷஹேதுவென்றிருந்தோம், அது பந்தஹேதுவானபின்பு எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தத்தை அறுத்துக்கொள்ளவே என்று மீண்டு போந்தார்.
வ்யாக்யானம் – (திரிதந்தாகிலும்) திரிதருகையாவது மீளுகை; மீண்டாகிலும், திரிதருதல் என்பது அடைச்சொல்லாய், திரிதந்தாகிலும் போன வழியெல்லாம் மீண்டாகிலும்; அதாவது – திருவாய் மொழிப்பாவை விட்டு, இசைகளை விட்டு, ஆழ்வாரை விட்டு, அவரு கந்த விஷயமென்று ப்ரதமாவதியிலே வந்து. (தேவபிரானுடை கரிய கோல திருவுரு காண்பன்) – (தேவபிரான்) நித்ய ஸூரிகளுக்குத் தன்னை முற்றூட்டாக அநுபவிக்கக் கொடுத்துக்கொண்டிருக்கும் உபகாரகன். இவர் நின்ற நிலை குலைந்த பகவத்விஷயத்திலே நிற்கும்போதும் அதின் எல்லையான நித்யஸூரிகள் யாத்ரையாயாய்த்து இருப்பது. (தேவபிரானுடை கரிய கோல திருவுரு) நித்யஸூரிகளுக்கு படிவிடும் வடிவு காளமேகநிப ஶ்யாமமாய், அழகுதான் ஒரு வடிவு கொண்டாபோலேயிறே இருப்பது.
“கோலமே தாமரைக் கண்ணது ஓரஞ்சனநீலமே” (திருவாய் – 3.8.8) என்று ஆழ்வார் வாய்புலத்தக் கேட்டிருக்குமவராகையாலே பேசுகிறார். பரம யோகிகள் யோகம் கைபுகுந்தால் ஊர்வசியுடைய வடிவை வர்ணிக்குமாபோலே இவரும் இவ்விஷயத்தை வர்ணிக்கிறாரிறே. “கரிய கோலம்” என்று ஸ்ப்ருஹை பண்ணும்படி ஆழ்வார் வர்ணிக்கக் கேட்டிருந்தபடியாலே.
(காண்பன்) ஸாக்ஷாத்கரிப்பன். ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்கிற இவரை விட்டால் பரமபதநிலையனையாய்த்து ஸாக்ஷாத்கரிப்பது. (நான்) தேவு மற்றறியேனென்று பகவத்விஷயத்தை ஸந்யஸித்த நான்.
(பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு) மஹோதாரராய்க்கொண்டு திருநகரியிலே திருவவதரித்த ஆழ்வாருக்கு, ஸர்வேஶ்வரனுடைய ஔதார்யம் ஜீவியாத காலத்திலே தன் வாசியறிவித்த ஔதார்யமிறே.
(குருகூர் நகர்) என்று வைகுந்த மாநகரை வ்யாவர்த்திக்கிறது. பரமபதமென்பது, அயர்வறுமமரர்களதிபதியென்பதாய், ஆழ்வார் படுமதெல்லாம், இவரும், திருநகரி என்றாலும், ஆழ்வாரென்றாலும் அப்படியேயாய்த்து அநுபவிப்பது. (நம்பிக்கு) நான் ஒன்றைப் பற்றினேன், ஒன்றை விட்டேன் என்னலாம்படியோ ஆழ்வாருடைய பூர்த்தியிருப்பது. அதாவது ஆழ்வாரைநுபவிக்கும் அநுபவத்தில் பகவத்விஷயமும் அந்தர்பூதமாயிருக்கை.
(ஆளுரியனாய்) உரிய வடிவனாய், உரிய அடியார்க்குத் தந்தாமுக்கென்று ஒரு ப்ரிய அப்ரியங்களின்றிக்கே ஸ்வாமி உகந்ததையே பற்றி அவன் கைவிட்டவிடத்தே விட்டிருக்குமதிறே ஸ்வரூபம்.
(அடியேன்) ஆழ்வாருடைய நீர்மைக்குத் தோற்று அடியேன் என்கிறார். “தொண்டீரெல்லாரும் வாரீர்” (திருவாய் – 5.2.2) என்னும் நீர்மையிறே. (பெற்ற நன்மை) பெற்ற பகவல்லாபம். ஆழ்வாருக்குரிய அடியனால் பெற்ற பேறு இதிறே. நான் ப்ராப்தாப்ராப்த விவேகத்தில் ப்ராவண்யத்தால் வந்த நன்மையன்று என்கை.
@@@@@
நாலாம் பாட்டு
நன்மையால் மிக்கநான் மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவராதலில்
அன்னையா யத்தனா யென்னை யாண்டிடும்
தன்மையான் சடகோப னென் நம்பியே (4)
பதவுரை –
நன்மையால் மிக்க – நற்குணத்தால் மேன்மை பெற்றவர்களாய்
நால் மறை ஆளர்கள் – நான்கு வேதங்களிலும் வல்லவர்களான வைதிகர்கள்
என்னை – அடியேனை
புன்மையாக கருதுவர் ஆதலில் – தாழ்வே ஒரு வடிவு கொண்டதென் றெண்ணி உபேக்ஷித்திருப்பரென்பதுவே காரணமாக
அன்னை ஆய் – மாதாவாயும்
அத்தன் ஆய் – பிதாவாயும்
என்னை ஆண்டிடும் தன்மையான் – அடியேனை கைக்கொண்டு அருளுமியல்வினனான
சடகோபன் – நம்மாழ்வார்
என் நம்பி – எனக்குத் தலைவர்
அவதாரிகை – நாலாம் பாட்டில், என்னப்பனில் என்று காற்கடைகொண்ட விஷயத்தை ஆழ்வாருகந்தாரென்று விரும்புகைக்கு அடி என்னென்னில், என் தண்மை பாராதே என்னை விஷயீகரித்த நீர்மையை அநுஸந்தித்தால் அவருகந்த விஷயத்தை உகவாதொழிவனே என்ன, உம்முடைய தண்மை ஏது, அது பாராதே அவர் விஷயீகரித்தபடி என்னென்ன, அத்தைப் பேசுகிறார்.
வ்யாக்யானம் – (நன்மையாலித்யாதி) ஆத்மகுணங்களால் ப்ரசுரராய் ஸம்ஸாரிகளுக்கு அபாஶ்ரயபூதராயிருப்பாரில் ஆழ்வாரை யொழிந்தாரடங்க, இவன் அவஸ்து என்று கைவிடும்படியன்றோ என்னுடைய ஸ்திதியிருக்கும்படி.
ஒருத்தனுக்கு நன்மையாவது தோஷகுணங்கள் ஏகாஶ்ரயநிஷ்டர்களாய் இருந்தால் தோஷத்தை விட்டு குணாம்ஶத்தை ஸ்வீகரிக்கை; அதில் மிகுதியாவது குணமென்று பேரிடலாவது ஒன்றுமின்றிக்கே தோஷமேயாயிருந்தால் அதுதானே பற்றாசாகக் கொள்ளுகை.
(நான் மறையாளர்கள்) அதுக்கடியாக ஹிதாநுஶாஸனம் பண்ணிப்போருகிற வேதங்களிலே அவகாஹித்திருக்குமவர்கள். நாலு வகைப்பட்ட வேதங்களுக்கும் வ்யாஸபதம் செலுத்த வல்லவர்கள்; அவர்களாகிறார் ஶ்ரீஜநகராஜன் திருமகளாதல், கூரத்தாழ்வானாதல். இத்தால் சொல்லிற்றாயிற்று வேதார்த்த தாத்பர்யம் கைப்படுகை. அதாவது ஆந்ருஶம்ஸ்ய ப்ரதாநராகை என்றபடி.
(புன்மையாக கருதுவர்) புன்மை என்று ஒரு தர்மமும் அதுக்கு ஆஶ்ரயமான தர்மியுமாய் இருக்கையன்றிக்கே, புன்மைதான் ஒரு வடிவு கொண்டது என்றிருப்பர்கள். புன்மையாவது துக்கமாதல், பொல்லாங்காதல், விஷயாந்தர ப்ராவண்யமாதல், துர்மாநமாதல். இதுதான் மேலிற்பாட்டிலே ப்ரஸக்தமாகக்கடவது.
(ஆதலிலன்னையாயத்தனா யென்னையாண்டிடும் தன்மையான்) அப்புன்மையே ஹேதுவாக இவ்வளவில் நாமல்லது ரக்ஷகரில்லையென்று எனக்கு ஸர்வவிதபந்துவுமானார். “த்ரீன் லோகான் ஸம்பரிக்ரம்ய தமேவ ஶரணங்கத:” என்கிறபடியே காகத்தோபாதி இவனுக்கும் புறம்பொரு பற்றாசில்லையென்று, அதுவே ஹேதுவாக ஸர்வவித ரக்ஷகரானவர்.
ப்ரியமே செய்யக்கடவ மாதா செய்யுமதுவும், ஹிதமே செய்யக்கடவ பிதா செய்யுமதுவும், ஸ்வரூபாநுரூபமான அடிமைகொள்ளும் நாயன் செய்யுமதுவும் செய்யுமவர். “தாயாய் தந்தையாய் அறியாதன வறிவித்தவத்தா நீ செய்தன” என்று பகவத்விஷயத்தில் ஆழ்வார் சொல்லுவதெல்லாம் ஆழ்வார் விஷயத்திலே சொல்லுகிறார் இவர்.
(தன்மையான்) அக்நிக்கு ஔஷ்ண்யம் போலேயும் ஜலத்துக்கு ஶைத்யம் போலேயும் இஸ்வபாவங்களை நிரூபகமாகவுடையவர். அதாகிறது இவனுக்கு உபகரித்தோமென்று தாம் நினைத்தல், இவன்றனக்கு ப்ரத்யுபகாரத்திலிழியவேண்டியிருத்தல் செய்யாதொழிகை.
(சடகோபன்) என் பக்கல் ஶாட்யத்தைப் போக்கினவர். கீழ் மூன்று பாட்டிலும் தென் குர்கூர் நம்பி என்று சொன்னவர், இப்பாட்டில் சடகோபன் என்கிறார் ஸ்வதோஷத்தைப் போக்கினபடியாலே.
(என் நம்பியே) தாய் செய்வது தமப்பன் செய்யமாட்டான். அவன் செய்வது இவள் செய்யமாட்டாள். ஆசார்யன் செய்யுமது இருவரும் செய்யமாட்டார்கள். நாயன் செய்யுமது அடியான் செய்யமாட்டான். எல்லார் செய்வதும் செய்யவல்ல பூர்த்தியையுடையவர். (என் நம்பியே) என்னுடைய தண்மையாகிற பாழ்ந்தாறு நிரம்பும்படியான பூர்த்தியையுடையவரென்னுமத்தனை. இவரைக் குறித்துக் கீழ்ச்சொன்ன த்ருஷ்டாந்தங்களுக்கு ஸர்வதா ஸாம்யமில்லை, கர்மோபாதிகமாக வந்த ஸம்பந்தமாகையாலும் அபூர்ணஸ்தலமாகையாலும்.
@@@@@
ஐந்தாம் பாட்டு
நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம்பொன்மாடத் திருக்குரு கூர் நம்பிக்
கன்ப னாய் அடியேன்சதிர்த் தேன் இன்றே (5)
பதவுரை –
அடியேன் – (இன்று “அடியேன்” என்று சொல்லும்படியிருக்கும்) நான்
முன்னெலாம் – (ஆழ்வாருடைய விஷயீகாரம் பெறுவதற்கு) முன்பெல்லாம்
பிறர் – அயலாருடைய
நல் பொருள் தன்னையும் – நல்ல பொருள்களை
நம்பினேன் – ஆசைப்பட்டுக் கிடந்தேன்
(பிறர்) மடவாரையும் – பிறருடைய ஸ்த்ரீகளையும்
நம்பினேன் – விரும்பிப் போந்தேன்
இன்று – இப்போதோவென்றால்
செம் பொன் மாடம் – செவ்விய பொன்னால் ஸமைத்த மாடங்களையுடைய
திரு குருகூர் நம்பிக்கு – திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருக்கு
அன்பன் ஆய் – பக்தனாகப்பெற்று
சதிர்த்தேன் – சதிரையுடையேனானேன்.
அவதாரிகை – அஞ்சாம்பாட்டில், உம்மைப் புன்மையாகவும், உமக்கு ஆழ்வார் ஸர்வ ப்ரகாரத்தாலும் உபகாரகராகவும் சொன்னீர். உம்முடைய புன்மையையும் உமக்கு ஆழ்வார் உபகரித்த நன்மையையும் சொல்லிக்காணீர் என்னச் சொல்லுகிறார்.
வ்யாக்யானம் – (நம்பினேன் இத்யாதி) இது என்னுடைய புன்மை இருந்தபடி. (பிறர் நன் பொருள் – நம்பினேன்) பிறர் என்கிறது – ஸர்வேஶ்வரனை. நன்பொருள் என்கிறது – ஆத்மவஸ்துவை. த்ரிவிதாத்ம வர்க்கத்துக்கு அவ்வருகாய், விஸஜாதீயமான வைலக்ஷண்யத்தை உடையனாகையாலே பிறர் என்கிறது. “உத்தம: புருஷஸ்த்வந்ய:” என்னக்கடவதிறே. பொருளென்று – த்ரவ்யம். நன்பொருளென்கிறது – விலக்ஷணமான ஆத்மவஸ்துவை. “த்ரவ்யாணி நவ தே விது:” என்று த்ரவ்யங்களில் ப்ரதானமாக ஆத்மவஸ்துவை நிச்சயித்தார்களிறே. அத்தையிறே முன்பு நான் அபஹரித்தது. நம்புதல் – ஆசைப்படுதல். பரத்ரவ்யத்தை ஆசைப்படுகையிறே அபஹாரமாவது. “வன் கள்வன்” (திருவாய் – 5.1.4) என்றும் “கள்வனேனானேன்” (பெரியதிருமொழி – 1.1.5) என்றும் ஆழ்வார்கள் அநுஸந்தித்ததிறே இவர்க்கு முதல். “கிம் தேன ந க்ருதம் பாபம் சோரேண ஆத்மாபஹாரிணா” . முதல் பகவச்சேஷத்வத்தளவில் நில்லாதே ஶேஷத்வ காஷ்டையிலே நிற்கிற ஆத்மவஸ்துவைக்கிடீர் நான் அபஹரித்தது; ததீயஶேஷமானவன்றிறே இவ்வாத்மாவுக்கு அநன்யார்ஹத்வமுள்ளது.
அபஹாரத்தில் வந்தால் த்ரவ்யத்தினுடைய ஶ்லாக்யதைக்கும் அபிமாநித்தவன் ஶ்லாக்யதைக்கும் தக்கபடி ப்ராயச்சித்தம் கநத்திருக்குமிறே. ப்ராஹ்மணன் வஸ்துவை அபஹரித்தால் போலன்றே சண்டாளன் வஸ்துவை அபஹரித்தல். த்ரவ்யங்களிலும் குரு லகு பாவத்தாலே ப்ராயச்சித்த வைஷம்யமுண்டிறே. விறகு வைக்கோல் களவுகண்டாற்போலன்றிறே ரத்நத்தைக் களவுகண்டார்; ஆத்மவஸ்து ஶ்ரீகௌஸ்துபஸ்த்தாநீயமாய், உடையவன் ஸர்வேஶ் வரனாயிறே இருப்பது.
(நம்பினேன் மடவாரையும்) ஈஶ்வரனுக்கபிமதமான வஸ்துவை அபஹரித்த நான், தேஹாத்மாபிமானிகள் என்னதென்றபிமானித்த வஸ்துவை அபஹரிக்கச் சொல்லவேணுமோ? ராஜரத்நாபஹாரம் பண்ண அஞ்சாத நான் கதர்யனுடைய விறகும் வைக்கோலும் அபஹரிக்க அஞ்சுவனோ? இத்தால் ஈஶ்வரனுக்கபிமதமான வஸ்துவையும் அபஹரித்தேன். அந்யருடைய அபிமதவிஷயத்தையும் அபஹரித்தேனென்றபடி.
(முன்னெலாம்) இப்படி தேஹாத்மாபிமாநியாயும் விஷய ப்ரவணனாயும் போந்த காலந்தான் ஸாவதியாகப்பெற்றதோ? ஈஶ்வரனோபாதி ஆத்மாவும் நித்யன், காலமும் அநாதி, அசித் ஸம்பந்தமும் அநாதி. ஆகையாலே முன்புள்ள காலமெல்லாம் இதுவே யாத்ரையென்கை.
உம்முடைய தண்மை குறைவற்றிருந்தது; ஆழ்வார் உமக்கு நிர்ஹேதுகமாக உபகரித்தவளவேதென்ன, அத்தைச் சொல்லுகிறார் மேல். (செம்பொன்மாடத் திருகுருகூர் நம்பிக்கு) என்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஆராயுமத்தனை அபூர்ணரோ ஆழ்வார்? (என்னை உபேக்ஷித்த காலமிவ்வளவு, பாபமிவ்வளவு என்று பார்க்கும்படியன்றே ஆழ்வாருடைய பூர்த்தி. நான் ஆத்மாபஹாரம் பண்ணினேன், விஷயப்ரவணனானேனென்று கைவிடும்படியன்றே).
ஆழ்வார் திருவடிகளை நீர்தாம் கிட்டினபடி என்னென்ன, விஷயங்களுக்கு அர்த்தம் தேடி அர்த்தாபஹாரத்துக்கிடம் பார்த்துத் திரியாநிற்க அச்செம்பொன் மாடத்தை களவுகாணப் புக்கேன். அங்கே வைத்த மாநிதியைக் கண்டு அகப்பட்டேனென்கிறார். இவர்க்கு வைத்தமாநிதி ஆழ்வாரிறே; ஆழ்வார் திருவடிகளோபாதி திருநகரியும் இவர்க்கு ஸ்ப்ருஹணீயமாயிருக்கையாலே திருநகரியைக் கவி பாடுகிறார்.
(இன்று அன்பனாய்) இதுக்கு முன்பு எனக்கொரு நினைவின்றிக்கேயிருக்க அசிந்திதமாக ஆழ்வார் திருவடிகளிலே ப்ரவணனாகக் கண்டேன். அநாதி காலம் ஆத்மாபஹாரம் பண்ணியும் விஷயப்ரவணனாயும் போந்தவிது இழவுக்கு உடலாகையன்றிக்கே, ஶரண்ய ப்ரபாவத்தாலே பேற்றுக்குடலாக க்ருஷி பண்ணினாரைப்போலே பலித்துக்கொடு நிற்கக் கண்டேன். நான், என்னது என்றிருக்கை தவிர்ந்து இதர விஷயங்களில் விரக்தராய் பகவச்சேஷத்வத்தளவிலே நின்றார் ஆழ்வார்; இந்த க்ரமாபேக்ஷையின்றிக்கே முதலடியிலே நான் ஆழ்வார் திருவடிகளிலே ப்ரவணனாகப் பெற்றேன்.
(அடியேன்) ஆழ்வாருடைய வைபவத்தை அநுஸந்தித்து “குணைர்தாஸ்யமுபாகத:” என்கிறபடியே அதுக்குத் தோற்று அடியேனென்கிறார். ஆசார்யர்களை நம்பி என்னக் கற்பித்தாற்போலே ஆசார்யர்களழைத்தால் அடியேனென்கிறதும் ஶ்ரீமதுரகவிகள் வாஸனையாலேயாயிற்று.
(சதிர்த்தேன்) சதிரையுடையனானேன். ஈஶ்வரஶேஷமான ஆத்ம வஸ்துவை என்னதென்றிருக்கைக்கும் இதரவிஷய ப்ராவண்யத்துக்கும் மேற்பட்ட சதிர்க்கேடில்லையிறே. அவற்றை விட்டு பகவத்விஷயத்தளவிலே நில்லாதே ஆழ்வாரளவும் வரும்படியான சதிரையுடையனானேன்.
@@@@@
ஆறாம் பாட்டு
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன்புக ழேத்த வருளினான்
குன்ற மாடத் திருக்குரு கூர்நம்பி
என்றும் என்னை யிகழ்விலன் காண்மினே (6)
பதவுரை –
இன்று தொட்டும் – இன்று முதலாக
எழுமையும் – மேலுள்ள காலமெல்லாம்
நி்ன்று – (நான்) அத்யவஸாயம் நிலைக்கப் பெற்று
தன் புகழ் – தம்முடைய (ஆழ்வாருடைய) திருப்புகழ்களை
ஏத்த – துதிக்கும்படியாக
எம் பிரான் அருளினான் – எம் ஸ்வாமியான ஆழ்வார் க்ருபை பண்ணினார்
குன்றம் மாடம் – மலைபோன்ற மாடங்களையுடைய
திரு குருகூர் நம்பி – திருநகரிக்குத் தலைவரான அவ்வாழ்வார்
என்றும் – (இனி) எக்காலத்திலும்
என்னை – என் விஷயத்தில்
இகழ்வு இலன் – அநாதரமுடையவராக இருக்க மாட்டார்
காண்மின் – (இதனை அநுபவத்தில்) கண்டு கொள்ளுங்கள்.
அவதாரிகை – ஆறாம்பாட்டில், ஆழ்வார் இப்போது இங்கே விஷயீகரித்தாலும் நீர்தாம் அநாதிகாலம் வாஸனை பண்ணிப்போந்த விஷயமாகையாலே அது மறுவலிடிலோவென்ன, அங்ஙன் மறுவலிடும்படியாயாழ்வார் ப்ரஸாதம் என் பக்கலிருப்பதென்கிறார். “ஶுசீநாம் ஶ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோபிஜாயதே” என்றும், “ஸமாதிபங்கஸ்தஸ்யாஸீத்” என்றும் ப்ரம்ஶம் ப்ரஸங்கிக்கும் பகவத் க்ருபையளவிலே நினைத்திருக்கலாமோ ஆழ்வார் க்ருபையை?
வ்யாக்யானம் – (இன்று தொட்டும்) விஷயீகரித்த இன்று முதலாக; பகவத் ஸமாஶ்ரயணத்திற்போலே ஆஶ்ரயிப்பதொரு காலமும் பலிப்பதொரு காலமுமாயோ ஆழ்வாருடைய விஷயீகாரமிருப்பது? விஷயீகரித்தவின்று துடங்கி அநுபவகாலமாயன்றோ இருப்பது. (எழுமையும்) ஏழு ஜன்மமென்று உபலக்ஷணம். மேலுள்ள காலமெல்லாம் என்றபடி. (எம்பிரான்) “பிரான் பெருநிலங்கீண்டவன்” (திருவாய் – 1.7.6.) என்று பகவத்விஷயத்திலே ஆழ்வார் பேசும்படியை உபகாரஸ்ம்ருதியாலே ஆழ்வார் விஷயத்திலே பேசுகிறார். (எம்பிரான்) என் ஸ்வாமி.
(நின்று) ஒருபடிப்பட நின்று. உபகாரஸ்ம்ருதியாலே பகவல்லாபத்தளவும் ஆழ்வாரை அநுபவித்து, பின்பு அது கிட்டினவாறே தோள்மாறும்படியின்றிக்கே இருக்கை. (தன் புகழேத்த) ஆழ்வாருடைய அநுபவத்துக்குள்ளே பகவதநுபவமாம்படியாயன்றோ ஆழ்வாருடைய பெருமையிருப்பது. (அருளினான்) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணினார். “மயர்வற மதிநலமருளினன்” (திருவாய் – 1.1.1) என்று ஆழ்வார் பகவத்விஷயத்தில் சொன்ன வார்த்தையை ஆழ்வார் திருவடிகளிலே சொல்லுகிறாரிறே இவர்.
(குன்றமாட திருகுருகூர் நம்பி) தம்மையுமேத்தி இன்னுமொரு விஷயத்தையும் ஏத்தவேண்டும்படியோ ஆழ்வாருடைய பூர்த்தியிருப்பது. “குன்றம்போல் மணிமாட நீடு திருக்குருகூர்” (திருவாய் – 4.10.1) என்று ஆழ்வாரருளிச்செய்யுமதிறே இவர் நெஞ்சிலே வாஸிதமாயிருப்பது; அத்தைச் சொல்லுகிறார்.
(என்றுமென்னை இகழ்விலன்) – (என்றுமிகழ்விலன், என்னையிகழ்விலன்) . யாவதாத்மபாவி புறம்பே ஒரு விஷயத்திலே போக விட்டுக்கொடார். என் தண்மை பாராதே விஷயீகரித்தவர் என்னை விஷயாந்தரங்களிலே போகவொட்டுவரோ? தம் திருவடிகளையொழிய புறம்பு புகலற்றிருக்கிறவென்னை, புறம்பே போகவென்றாலும் போகலாம்படியென் கையிலே என்னைக் காட்டித்தருவரோ? (காண்மினே) இது ப்ரத்யக்ஷிக்கலாவ தொன்றாயிருக்க, ஆழ்வார் பெருமை நான் சொல்லக்கேட்கை மிகையன்றோ?
@@@@@
ஏழாம் பாட்டு
கண்டு கொண்டென்னைக் காரிமாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண்டிசையு மறிய வியம்புகேன்
ஒண்டமிழ் சடகோப னருளையே (7)
பதவுரை –
பிரான் – பரமோபகாரகராய்
காரி மாறன் – பொற்காரியார் திருக்குமாரரான நம்மாழ்வார்
என்னை – (தமது பெருமை அறியாத) என்னை
கண்டு – கடாக்ஷித்து
கொண்டு – கைக்கொண்டு
பண்டை வல்வினை – அநாதியாய் ப்ரபலமாயிருந்த பாபங்களை
பாற்றி அருளினான் – அழிந்து போம்படி போக்கடித்தருளினார்
(ஆதலால்) ஒண் தமிழ் சடகோபன் அருளையே – அழகிய தமிழ் கவிகளுக்கு இருப்பிடமான அவ்வாழ்வாருடைய அருளையே
எண் திசையும் – எட்டுத் திக்கிலுள்ளவர்களும்
அறிய – அறியும்படி
இயம்புகேன் – சொல்லக்கடவேன்.
அவதாரிகை – ஏழாம் பாட்டில், ஆழ்வார் தம் பக்கல் பண்ணின நிர்ஹேதுக விஷயீகாரத்தைக் கண்டு, இவ்விஷயீகாரத்துக்கு யோக்யதையுண்டாயிருக்க நாட்டார் இழக்கைக்கு அடியென்? என்று அநுஸந்தித்து, இவருடைய பெருமையை அறியாமையாலே எல்லாரும் அறியும்படி சொல்லக்கடவேன் என்கிறார்.
வ்யாக்யானம் – (கண்டு கொண்டு) நான் கிட்டினவளவில் ஆழ்வார் திருவுள்ளம் நிதியெடுத்தாற்போலேயிருந்ததென்கிறார். தம்மைப் பெறுகைக்கு எதிர்சூழல்புக்குத் திரிந்தாரிவர் என்று தோற்றும்படி இருந்ததென்கிறார். அவருடைய க்ருபைக்கு அநுத்தமமான பாத்ரமிறே நான். (என்னை) நாட்டாரிற்காட்டில் ஆழ்வாருக்குண்டான வாசியறியாதவென்னை. தம்முடைய நிர்ஹேதுக விஷயீகாரத்தை ப்ரதிபத்தி பண்ணவும் கூட மாட்டாத என்னை என்றுமாம்.
(காரி மாற பிரான்) ஆழ்வார் தம் பக்கலிலே பண்ணின உபகாரத்தை நினைத்து பிரான் என்கிறார். காரிமாற பிரான் என்கிற விஶேஷணத்தாலே ஆழ்வாருக்கு உபகாரகனான ஈஶ்வரன் பக்கல் போகாமைக்காக விஶேஷிக்கிறார். ஸுஹ்ருதம் ஸர்வ பூதானாம் என்கிறபடியே அவனுடைய உபகாரகத்வம் ஸர்வஸாதாரணமாய்த்து இருப்பது. அந்த ஸாமாந்யத்தில் புகாமைக்காக தம்முடைய ஸுஹ்ருத்தை விஶேஷிக்கிறார்.
(பண்டை வல்வினை) அநாதிகாலம் ஸஞ்சிதமாய் விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபம், சூர்ப்பணகையைப்போலே வகுத்த விஷயத்தைப் பற்றுகைக்கு வழியல்லாவழியில் இழிகைக்கடியான பாபம், ப்ரதமாவதியான பகவத் விஷயமே புருஷார்த்தமென்கிற புத்திக்கடியான பாபம். இவையாய்த்து – பண்டை வல்வினையாவது; வல்வினை – ப்ராயச்சித்தநாஶ்யமுமன்றிக்கே அநுபவவிநாஶ்யமு மன்றிக்கேயிருக்கை.
(பாற்றியருளினான்) “த்விஷந்த: பாபக்ருத்யாம்” என்றும் “சும்மெனாதே கைவிட்டோடி தூறுகள் பாய்ந்தனவே” ( பெரியாழ்வார் திரு – 5.4.3) என்றும் சொல்லுகிற ப்ரகாரங்களன்றிக்கே உருமாய்ந்துபோம்படி பண்ணினார். “தன் புகழேத்த அருளினான்” என்கிறபடியே தம்மையே வாய் புலத்தும்படி பண்ணினார்;
(எண்டிசையும் அறிய இயம்புகேன்) விஶேஷஜ்ஞரோடு அவிஶேஷஜ்ஞரோடு வாசியற எல்லாரும் அறியும்படி சொல்லுகிறேன். “தொண்டீரெல்லீரும் வாரீர்” (திருவாய் – 5.2.3) என்னும் ஆழ்வாரோட்டை வாஸனையால் சொல்லுகிறார். அவர் பகவத்விஷ\யத்தில் ருசியாலே அவ்விஷயத்தில் ருசியுடையா ரெல்லாரும் வாருங்கோள் என்கிறார், ஆழ்வார் பக்கல் பாவபந்தத்தாலே.
(ஒண்டமிழ் சடகோபன் அருளையே) மயர்வற மதிநலம் அருளினவனுடைய அருள் போலல்ல ஆழ்வாருடைய அருள். அவ்வருளுக்கும் அயலானவளவிலே வரப்பண்ணினவருளிறே.
(ஒண்டமிழ்) ஒள்ளிய தமிழ் – அழகிய தமிழ் என்றபடி. பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்படி. திருவாய்மொழி பாடினவருளுக்கு மேலேயிறே என்னை விஷயீகரித்தவருள்.
@@@@@
எட்டாம் பாட்டு
அருள் கொண்டாடு மடியவரின்புற
அருளினானவ் வருமறையின் பொருள்
அருள்கொண்டாயிர மின்தமிழ்ப்பாடினான்
அருள்கண்டீரிவ்வுலகினில் மிக்கதே (8)
பதவுரை –
அருள் கொண்டாடும் – பகவத் க்ருபையைக் கொண்டாடுகிற
அடியவர் – பக்தர்கள்
இன்புற – ஆநந்திக்கும்படி
அ அரு மறையின் பொருள் – அந்த அருமையான வேதத்தின் உட்பொருள்களை
அருளினான் – அருளிச் செய்தவராயும்
அருள் கொண்டு – பரம க்ருபையாலே
இன் தமிழ் – இனிய தமிழ் பாஷையிலே அமைந்த
ஆயிரம் – திருவாய்மொழி ஆயிரத்தை
பாடினான் –
அருள் கண்டீர் – க்ருபை ஒன்றுமாத்திரமன்றோ
இ உலகினில் – இந்த லோகத்திலே
மிக்கது – பெரியதாயிருக்கிறது
அவதாரிகை – எட்டாம் பாட்டில், எண்டிசையும் அறிய இயம்புகேன் என்கைக்கு ஹேதுவென்னென்னில், ஆழ்வாருடைய அருள் சிதசிதீஶ்வர தத்வத்ரயத்தளவும் கபளீகரித்திருக்கையாலே என்கிறார்.
வ்யாக்யானம் – (அருள் கொண்டாடும் அடியவர்) இவ்வாழ்வார் தம்மைப்போலே இருக்குமவர்கள். “அதுவும் அவனதின்னருள்” (திருவாய் – 8.8.3) என்றும், “அருள் பெறுவார்தம்மடியார்தம் அடியன்” (திருவாய் – 10.6.1) என்றும் இருக்குமிவர் தம்மைப்போலே. “ஆனைக்கன்று அருளை ஈந்த” (திருமாலை – 46) என்றும் “நின்னோடுமொக்க வழிபட அருளினார்” ( திருமாலை – 42) என்றும் “அருள் புரிந்த சிந்தை” (இரண்டாம் திருவந்தாதி – 56) என்றும் “நின்னருளே புரிந்திருந்தேன்” (பெரியாழ்வார் திரு – 5.4.1) என்றும் “அருளாதொழியுமே” (மூன்றாம் திருவந்தாதி – 16) என்றும் இப்படிகளால் அவனருளைக் கொண்டாடுமவர்கள்.
இப்படி பகவத் ப்ரஸாதத்தையே கொண்டாடிப்போருமவர்கள், பகவத் ப்ரஸாதஹேதுவாக ஸ்வகதமான கர்ம ஜ்ஞான பக்திகளை உபாயமாக ஆதரிக்குமவர்களன்றிக்கே, கேவல பகவத் ப்ரஸாதமே உஜ்ஜீவன ஹேதுவென்றிருக்குமவர்கள், தந்தாம் பக்கலுள்ள ஆநுகூல்யங்களை பகவத் ப்ரஸாத பலமாக நினைத்திருக்குமதொழிய, ப்ரஸாதமாக நினைத்திராதவர்கள். இவர் இப்படி நினைத்திருக்கிறது மற்றையாழ்வார்களையிறே. “ஆழியான் அருளே” (பெரிய திருமொழி – 1.1.4) “நின்னருளே புரிந்திருந்தேன்” (பெரியாழ்வார் திரு – 5.4.1) என்னுமதிறே அவர்கள் பாசுரங்கள்.
(இன்புற) ஆநந்த நிர்ப்பரராக “எண்ணாதனகள் எண்ணும் நன்முனிவர் இன்பம் தலைசிறப்ப” (திருவாய் – 10.7.5) என்கிறபடியே ஸாதநத்திலன்வயமின்றிக்கே பகவதநுபவமே யாத்ரையா யிருக்கும்படியாக.
(அருளினான் அவ்வருமறையின் பொருள்) (அவ்வருமறை) ப்ரஸக்தமாய், பெறுதற்கரிதாயிருக்கிற மறை. அதாகிறது – வேத ரஹஸ்யமான உபநிஷதிறே. (அவ்வருமறையின் பொருளை – அருளினான்) நித்ய ஸத்வர்க்கல்லது தோற்றாத உபநிஷதர்த்தத்தையருளிச்செய்தார். பரம ஸாத்விகர்க்கு நித்யமான ஐஶ்வர்யம் உபநிஷத் ரஹஸ்யமிறே. “ஸா ஹி ஶ்ரீரம்ருதா ஸதாம்“ என்னக்கடவதிறே. அதாவது “ஸர்வ ரஸ:” என்றும் “ரஸோ ஹ வை ஸ:” என்றும் சொல்லுகிற விஷயத்தை தத் ப்ரஸாதத்தாலே லபிக்கை. “ஏஷஹ்யேவாநந்தயாதி” என்றும், “தத்தேதுவ்யபதேஶாச்ச” என்றும் சொல்லக்கடவதிறே.
(அருள்கொண்டாயிர மின்தமிழ்பாடினான்) இவர்தாம் ஸ்வ புத்தியாலே அருளிச்செய்தாரன்று; “மயர்வற மதிநலம் அருளினன்” (திருவாய் – 1.1.1) என்கிறபடியே ப்ரஸாதலப்த ஜ்ஞாநத்தை முதலாகக்கொண்டு தத்ப்ரேரிதராய் கொண்டாயிற்று அருளிச்செய்தது. “என்னாகியே தப்பிதலின்றித்தனைக் கவிதான் சொல்லி” (திருவாய் – 7.6.4) என்கிறபடியே பிறரோபாதி கவிபாடுகிற தாமும் விஸ்மிதராம்படி நிரவத்யமாகவிறே கவிபாடுவித்துக்கொண்டது.
(ஆயிரமின் தமிழ்பாடினான்) “சதுர்விம்ஶ ஸஹஸ்ராணி ஶ்லோகானாம் உக்தவான் ரிஷி:” என்றாற்போலே ஆயிரமாகவாய்த்து பாடிற்று; ஓராத்மாவின் ஹிதாம்ஶத்துக்கு ஒரு பாட்டேயமை யும்படியிறே இவர் பாடிற்று. (இன் தமிழ் பாடினான்) துரவகாஹமான அர்த்தத்தை “பாட்யே கேயே ச மதுரம்” என்கிறபடியே ரஸகநமாகவும் ஸர்வாதிகாரமாம்படியாகவும் பாடினார்.
(பாடினான் அருள் கண்டீர்) “மயர்வற மதிநலம் அருளினன்” என்னும்படி அருளவல்ல அருள்தன்னையும் விளாக்குலை கொண்டிருக்குமருளிறே ஆழ்வாரருள்; ஈஶ்வரன் கைவிட்ட ஆத்மாக்களையும், அவர்களுடைய துர்க்கதியைக்கண்டு திருத்தவொருபட்ட படியாலே இவரருள் ப்ரத்யக்ஷமன்றோ என்கை.
(இவ்வுலகினில் மிக்கதே) சிதசிதீஶ்வர தத்வத்ரயத்தையும் கபளீகரித்திருக்கை. “அதனில் பெரியவென்னவா” (திருவாய் – 10.10.10) என்று பகவத்விஷயத்தில் தமக்குண்டான அபிநிவேஶத்தளவும் போருமாய்த்து என்னளவில் க்ருபையும்.
@@@@@
ஒன்பதாம் பாட்டு
மிக்கவேதியர் வேதத்தினுட் பொருள்
நிற்கபாடி என்னெஞ்சுள் நிறுத்தினான்
தக்கசீர் சடகோபன்னம்பிக்காள்
புக்க காதலடிமைப் பயனன்றே (9)
பதவுரை –
மிக்க வேதியர் வேதத்தின் – சிறந்த வைதிகர்களால் ஓதப்படுகின்ற வேதத்தினுடைய
உள் பொருள் – உள்ளுரை பொருளானது
நிற்க – நிலை நிற்கும்படி
பாடி – திருவாய்மொழியைப் பாடி
என் நெஞ்சுள் – என்னுடைய ஹ்ருதயத்திலே
நிறுத்தினான் – (அந்த வேதார்த்தங்களை அல்லது திருவாய்மொழியை) ஸுப்ரதிஷ்டமாக்கியருளினான் (ஆழ்வார்).
தக்க சீர் – தகுதியான குணங்களையுடையராய்
சடகோபன் – சடகோபனென்ற திருநாமத்தையுடையவரான
என் நம்பிக்கு – (அந்த) ஆழ்வார் விஷயத்திலே
ஆள் புக்க – அடிமை கொள்வதற்குறுப்பான
காதல் – ஆசையானது
அன்றே – அந்த க்ஷணத்திலேயே
அடிமைப் பயன் – (ஆழ்வார் திருவடிகளில்) கைங்கர்யம் செய்வதையே பயனாகவுடைத்தாய்த்து.
அவதாரிகை – ஒன்பதாம் பாட்டு. ஆழ்வாருடைய அருள் இவ்வுலகினில் மிக்கது என்கைக்கடியென்னென்னில், என்னுடைய தண்மை பாராதே ஸகல வேதங்களினுடைய ரஹஸ்யார்த்தத்தைப் பாடி அத்தை எனக்கு உபகரித்தானென்கிறார். “நீசனேன் நிறைவொன்றுமிலேன் நங்கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி” (திருவாய் – 3.3.4) என்று அவ்விஷயத்தில் ஆழ்வாரருளிச் செய்ததை ஆழ்வார் திருவடிகளிலே இவரருளிச் செய்கிறார்.
வ்யாக்யானம் – (மிக்க வேதியர்) ப்ரமாண ஶ்ரேஷ்டமான வேதத்தையே நிரூபகமாகவுடையவர்கள். “உளன் சுடர்மிகு சுருதியுள்” (திருவாய் – 1.1.7) என்று ஆழ்வார் அருளிச்செய்யக் கேட்டிருக்கையாலே ப்ரமாணஶ்ரேஷ்டமென்கிறார். அனேக ஶாகாத்யயனம் பண்ணின வர்களென்றுமாம். (வேதத்தின் உட் பொருள்) ஸகல வேதங்களினுடைய ரஹஸ்யார்த்தத்தை; வேதாந்த ரஹஸ்யம் ததீய ஶேஷத்வ பர்யந்தமான பகவத் ஶேஷத்வமென்றிறே வைதிக ஶாஸ்த்ரம் நிர்ணயித்தது.
(நிற்கப்பாடி) துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்டார்க்கு ப்ரபத்தி விஷயமாம்படி பாடி. “பரமனை பயிலும் திருவுடையார் எவரேலும்” (திருவாய் – 3.7.1) என்றும், “எம்மையாளும் பரமர்” (திருவாய் – 3.9.11) என்றும் அருளிச்செய்தாரிறே. (என் நெஞ்சுள் நிறுத்தினான்) பகவத் ஶேஷத்வத்துக்குங்கூட மேட்டுமடையான என் நெஞ்சிலே இத்தை ஸ்திரமாக்கினார். கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப்போலே நிர்விவரமான என் நெஞ்சுக்கு இதுவே விஷயமாம்படி பண்ணினார்; இதிறே என் தண்மை பாராதே என் திறத்தில் பண்ணினவுபகாரம்.
(தக்க சீர் சடகோபன்) இது தொடங்கி உபகார ஸ்ம்ருதியாலே தமக்குப் பிறந்த அபிநிவேஶத்தைப் பேசுகிறார். (தக்க சீர் சடகோபன்) ஸர்வேஶ்வரன் கவிகளென்றால் தகுதியான கல்யாண குணங்களையுடைய ஆழ்வார்போரும்படி அயர்வறும் அமரர்கள் அதிபதி என்றால் ஸர்வேஶ்வரத்துக்குப் போரும்படியிருக்குமாபோலே, ஸர்வேஶ்வரன் கவிகளென்றால் போரும்படியாய்த்து ஆழ்வாரிருக்கும்படி. “ஏற்கும் பெரும்புகழ் வானவரீசன் கண்ணன் தனக்கு” (திருவாய் – 3.9.11) ஏற்கும் பெரும்புகழ் வண்குருகூர் சடகோபன் என்று தாமே அருளிச்செய்தாரிறே.
(என் நம்பிக்கு) அதுக்கு மேலே ஒரு பௌஷ்கல்யமிறே இது. என்னை விஷயீகரிக்கைக்குத் தகுதியான ஶீலகுண பௌஷ்கல்யத்தை உடையவரானவர்க்கு. (ஆள் புக்க காதல்) அநந்யார்ஹஶேஷமாக்கின ருசி.
(அடிமை பயனன்றே) இந்த ருசியன்றோ அப்போதே தாஸ்யமான ப்ரயோஜனத்தோடே வ்யாப்தமாயிருப்பது. பகவத்விஷயத்தில் ருசியடியாக பிறந்த தாஸ்யம் ஶரீர விஶ்லேஷம் பிறந்து அர்ச்சிராதி மார்க்கத்தால் ஒரு தேஶவிஶேஷத்தில் சென்றால் பிறக்கக் கடவதாயிறேயிருப்பது; அங்ஙனன்றிக்கே ஆழ்வார் பக்கல் பிறந்த ருசி இஶ்ஶரீரத்தோடே இங்கே ஆழ்வார் திருவடிகளிலே எல்லாவடிமையும் செய்யலாம்படி பண்ணும்.
“துயரறு சுடரடி தொழுதெழு” – என்று முதலிலே அபிநிவேஶித்த ஆழ்வார்க்கு “முனியே நான்முகனுக்கு” (திருவாய்மொழி – 10.10) அவ்வருகேயிறே பேராய்த்து. இவ்விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பியாதென்கிறது, அன்றேயென்றது, ஆமென்றுமாம்.
@@@@@
பத்தாம் பாட்டு
பயனன்றாகிலும் பாங்கலராகிலும்
செயல்நன்றாகத் திருத்திப்பணிகொள்வான்
குயில்நின்றால் பொழில்சூழ் குருகூர்நம்பி
முயல்கின்றேனுன்றன் மொய்கழற்கன்பையே (10)
பதவுரை –
பயன் அன்று ஆகிலும் – (பிறர் திருந்துவதால்) தமக்கொரு பயனில்லாமல் போனாலும்
பாங்கு அலர் ஆகிலும் – (அவர்கள் திருந்துகைக்கும்) பாங்காக அமையாமற் போனாலும்
செயல் – தமது செய்கையாலே
நன்றாக திருத்தி – நன்றாக ஶிக்ஷித்து
பணி கொள்வான் – (அவர்களை) ஆட்கொள்ளுமவராய்
குயில் நின்று ஆல் பொழில் சூழ் – குயில்களானவை நின்று ஆரவாரஞ்செய்யப்பெற்ற சோலைகளாலே சூழப்பட்ட திருநகரியிலே (எழுந்தருளியிருக்கிற)
நம்பி – ஆழ்வாரே!
உன் தன் – தேவரீருடைய
மொய் கழற்கு – சிறந்த திருவடிகளில்
அன்பையே – அன்பு உண்டாவதைக் குறித்தே
முயல்கின்றேன் – முயற்சி செய்கின்றேன்
அவதாரிகை – பத்தாம் பாட்டில், ஆழ்வார் தமக்கு உபகரித்த உபகாரத்தை அநுஸந்தித்தவாறே தாம் இதுக்கு முன்பு ஆழ்வார் விஷயத்தில் நின்ற நிலையடங்க முதலடி இட்டிலராகத் தோற்றுகையாலே அவர் பண்ணின உபகாரத்தைப் பேசுகிறார். ஆசார்யன் பண்ணின உபகாரத்திற்கு ப்ரத்யுபகாரமில்லையோவென்னில், “க்ருத்ஸ்நாம் வா ப்ருத்வீம் தத்யான்ன தத்துல்யம் கதஞ்சன” என்று பஞ்சாஶத்கோடி விஸ்தீர்ணையான பூமியும் ஸத்ருஶமன்று என்றதிறே ஶாஸ்த்ரம்.
அவன் இவனுக்கு உபகரித்தது ஸர்வாதிகமாயிருப்பதொரு மிதுநத்தையானால் இப்படியே இருப்பதொரு மிதுநத்தை உபகரித்தாலிறே இவன் ப்ரத்யுபகாரம் பண்ணினானாவது; ஆகையாலே ஆசார்ய விஷயத்தில் எல்லாம் செய்தாலும் அவன் பண்ணினவுபகாரத்தைப் பார்த்தால் ஒன்றும் செய்திலனாய், என்றுமொக்கக் குறைவாளனாய்ப் போருமித்தனை.
வ்யாக்யானம் – (பயனன்றாகிலும்) – நாட்டில் ஒருவனுக்கொருவன் உபகரிப்பது ஒரு ப்ரயோஜநத்தைப் பற்றவிறே. அங்ஙனொரு ப்ரயோஜநமில்லாதிருக்கச் செய்தேயும். (பாங்கலராகிலும்) ப்ரயோஜநமில்லாவிட்டால் சொல்லுகிற ஹிதம் கேட்கைக்குப் பாங்காயிருக்கலாமிறே. அங்ஙன் பாங்கன்றிக்கே இருந்தார்களாகிலும், இப்படி இருக்குமவர்களுக்கு ஹிதம் சொல்லுகைக்கு ஹேதுவென்னென்னில், இவர்களநர்த்தம் பொறுக்கமாட்டாமையிறே.
இப்படி உபதேஶித்தாருண்டோவெனில், ராவணனுடைய துர்கதியைக் கண்டு “மித்ரம் ஔபயிகம் கர்த்தும்” என்று அவனுக்கு ஹிதம் சொன்னாளிறே பிராட்டி; ஒருவன் தலைக்கடையும் புறக்கடையும் அடைத்துக்கொண்டு அகத்துக்குள்ளே கிடக்க, அகம் நெருப்புப் பட்டு வேவா நின்றால், கண்டு நின்றார் அவிக்கும்போது, தங்களுக்கொரு ப்ரயோஜனத்தைப் பார்த்தாதல், உள்ளே கிடந்தவன் அபேக்ஷித்ததுக்காகவாதலன்றே அவிப்பது. இப்படியாய்த்து ஆழ்வார்படியும்.
(செயல் நன்றாக) தனக்கொரு ப்ரயோஜநமில்லையானாலும், எதிர்தலை பாங்கின்றியேயொழிந்தாலும், அவன் உஜ்ஜீவிக்கும்படி யென்னென்னில், தம்முடைய செயலாலே எல்லாம் நன்றாம்படி பண்ணி, இவன் செயல்தான் நன்றாகும்படி பண்ணி என்றாகவுமாம். (திருத்தி பணி கொள்வான்) “தீர்ந்தவடியவர் தம்மைத் திருத்தி பணிகொள்ள வல்ல” (திருவாய் – 3.5.11) என்று ப்ராப்யமும் ப்ராபகமும் தானேயென்று அத்யவஸிக்குமவர்களுடைய விரோதியைப் போக்கி அடிமை கொள்ளுமவன் என்றதிறே ஸர்வேஶ்வரனை. அங்ஙனன்றிக்கே, இவையொன்றுமின்றிக்கே இருக்குமவர்களையும் திரட்டி பணிகொள்ளுமவரிறே ஆழ்வார். பணிகொள்வான் – குருகூர் நம்பி என்றந்வயம்.
“குயில்நின்றார் பொழில்சூழ்” என்றவிடம் திருத்தி பணிகொள்ளும்படிக்கு த்ருஷ்டாந்தம். இவர் ஒரு காலத்திலே ஆற்றாமையாலே “காணவாராய்” (திருவாய் – 8.5.2) என்று கூப்பிடுவதுமொரு பாஶுரம் உண்டு; “யாவர் நிகர் அகல் வாநத்தே” (திருவாய் – 4.5.8) என்று களித்துச் சொல்லுவதுமொரு பாஶுரமுண்டு; இவர் பாஶுரத்தைக் கேட்ட குயில்களும் செவியேற்றாலே இப்பாஶுரத்தையே சொல்லும். ஆக, இரண்டு பாஶுரத்திற்கும் குயில்களாய்த்து பயிற்றுவன. (குருகூர் நம்பி) “ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல்” (திருவாய் – 6.7.2) என்று சேதநரளவன்றிக்கே திர்யக்குகளளவும் ஏவும்படியாயாய்த்து ஆழ்வாருடைய பூர்த்தியிருப்பது.
(முயல்கின்றேன் உன்றன் மொய்கழற்கன்பையே) உன்னுடைய ஶ்லாக்யமான திருவடிகளுக்கன்பையே, முயல்கின்றேன் – அர்த்தியா நின்றேன். செய்கிறவடிமையில் பர்யாப்தி பிறவாமையாலே திருவடிகளிலே எனக்கபிநிவேஶம் வேணுமென்று அர்த்திக்கிறார். “என்னை தீ மனம் கெடுத்தாய் உனக்கென் செய்கேன்” (திருவாய் – 2.7.8) என்று ஆழ்வார்தாம் அவ்விஷயத்திலே தடுமாறினாற்போலே ஆழ்வார் பண்ணின உபகாரத்திற்கு ப்ரத்யுபகாரம் பண்ணாமையாலே தடுமாறுகிறார்.
@@@@@
பதினோராம் பாட்டு
அன்பன்றன்னை யடைந்தவர்கட்கெல்லா
மன்பன் தென்குருகூர்நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே (11)
பதவுரை –
அன்பன் தன்னை – ஆஶ்ரித பக்ஷபாதியான எம்பெருமானை
அடைந்தவர்கட்கு எல்லாம் – ஆஶ்ரயித்தவர்களான ஸகல பாகவதர் பக்கலிலும்
அன்பன் – பக்தியையுடையவரான
தென் குருகூர் நகர் நம்பிக்கு – நம்மாழ்வார் விஷயத்திலே
அன்பன் ஆய் – பக்தனாயிருந்துகொண்டு
மதுரகவி சொன்ன சொல் – மதுரகவி அருளிச்செய்த இத்திவ்ய ப்ரபந்தத்தை
நம்புவார் – (தங்களுக்குத் தஞ்சமாக) விஶ்வஸித்திருப்பவர்களுக்கு
பதி – வாஸஸ்தாநமாவது
வைகுந்தம் காண்மின் – பரமபதமாம்.
அவதாரிகை – நிகமத்தில் இப்ரபந்தத்தையே தஞ்சமாக நினைத்திருக்குமவர்களுக்கு ஆவாஸ பூமி பரமபதமென்கிறது.
வ்யாக்யானம் – (அன்பன்) வாத்ஸல்யத்தை நிரூபகமாக உடையவனாய்த்து ஈஶ்வரன். இன்னானுக்கன்பனென்று விஶேஷியாமையாலே (ரிபூணாமபி வத்ஸல) என்கிறபடியே ஸர்வ விஷயமாய்த்து அவனுடைய வாத்ஸல்யமிருப்பது. அதுக்கு ஹேதுவென்னென்னில், “ஸர்வேஷாமேவ லோகானாம் பிதா மாதா ச மாதவ:” என்றும், “தேவாநாம் தாநவாநாஞ்ச ஸாமான்யம் அதிதைவதம்” என்றும் ஜநகத்வ ப்ரயுக்தமான ஸம்பந்தம் ஸர்வஸாதாரணமாகையாலே, வாத்ஸல்யமும் பொதுவாயிருக்கும்.
(தன்னை அடைந்தவர்க்கெல்லாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பி) ஆழ்வாருடைய அன்பு அங்ஙன் பொதுவாயன்றே இருப்பது. “பரமனை பயிலும் திருவுடையாரெவர் எம்மையாளும் பரமர்” (திருவாய் – 3.7.1) என்கிறபடியே பகவத் ஸம்பந்த நிபந்தநமாயிறே இருப்பது. தம்மைப்போலே “அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்” (திருவாய் – 6.10.10) என்பாரெல்லாரையும் தமக்கு நாதராகவாய்த்து நினைத்திருப்பது.
(தென் குருகூர் நகர் நம்பி) “அடியாரடியார் தம்மடியாரடியார்” (திருவாய் – 3.7.10) என்று தத்ஸம்பந்திகளளவும் பண்ணின ப்ரேமத்தாலே பூர்ணராயிருப்பர்.
(நம்பிக்கன்பனாய்) பகவத் விஷயத்தளவுமன்றிக்கே, ததீயரளவுமன்றிக்கே, ஆசார்ய விஷயத்திலே ஸக்தராய்; தனக்கு புருஷார்த்தம் வேண்டியிருக்கில் பகவத் விஷயத்தைப் பற்றவமையும். அங்ஙன் தாநுகந்ததன்றிக்கே, ஈஶ்வரன் உகப்பே புருஷார்த்தமென்றிருக்கில் பாகவதர்களைப் பற்றவமையும்; “ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம்” “மம ப்ராணா ஹி பாண்டவா:” என்று பாண்டவர்களை தனக்கு தாரகமாகவிறே நினைத்திருப்பது. ஈஶ்வரனோடு ஶ்ரீவைஷ்ணவர்களோடு வாசியற எல்லாருடைய உகப்பும் புருஷார்த்தமென்றிருக்கில் ஆசார்யனைப் பற்றவடுக்கும். ஆசார்யவான் என்றாயிற்று ஶ்ரீவைஷ்ணவர்களுகப்பது. ப்ரதமத்திலே ஆசார்யன் தனக்கு அஜ்ஞாதஜ்ஞாபன முகத்தாலே ஸ்வரூபஜ்ஞாநத்தைப் பிறப்பித்து பகவத்ஸமாஶ்ரயண வேளையிலே புருஷகாரபூதனாய், தன்னுடைய அநுஷ்டாநத்தாலே இவனை நல்வழியே கொண்டுபோய், ப்ராப்தி தஶையிலும் ஸாத்யவ்ருத்தியைப் பண்ணிக் கொடுக்கக் கடவனாய் இப்படி பகுமுகத்தாலே உத்தேஶ்யனாயிருப்பது.
(மதுரகவி சொன்ன சொல்) ஆழ்வாரை தாம் சொன்ன பாசுரம் தமக்கினியதாயிருக்கையாலே மதுரகவி என்கிறார். (சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே) இனிதாயிருந்ததில்லையாகிலும் இப்ரபந்தத்தைத் தஞ்சமாக நினைத்திருக்குமவர்களுக்கு வஸ்தவ்ய தேஶம் பரமபதம்.
ஆழ்வார் உத்தேயரானால் திருநகரியன்றோ ப்ராப்யபமாவது என்னில், திருநகரியில் பொலிந்து நின்ற பிரானாணையும் ஆழ்வாராணையுமாய் இருபுரியாய்ச் செல்லும். அங்ஙனன்றிக்கே ஆழ்வாராணையேயாய்ச் செல்லும் பரமபதம். “அடியார் நிலா நின்ற வைகுந்தம்” (திருவிருத்தம் – 75), “வானவர் நாடு” (திருவாய் – 3.9.9.) என்று சொல்லக்கடவதிறே.
நம்பி திருவழுதிவளநாடு தாஸர், நம்புவார் பதி வைகுந்தமென்று அவர்களிருந்த தேஶங்காண் பரமபதமென்று சொல்லுவர். “உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூரெல்லாம்” (திருவாய் – 5.3.9) என்னக்கடவதிறே.
கூரத்தாழ்வான் மகன் பிறந்தபின்பு ஸம்ஸாரமும் பரமபதமும் இடைச்சுவர் தள்ளி ஒரு போகியாய்த்துகாண் என்று பெற்றி பணித்தாரென்று பிள்ளை அருளிச்செய்வர்.
பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானம் முற்றிற்று
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே ஶரணம்.