குலசேகரப் பெருமாள் அருளிச்செய்த
ஸ்ரீராமாயணஸாரமாகிய
பெருமாள் திருமொழி
தனியன்கள்
(உடையவர் அருளிச்செய்தது)
–
இன்னமுதமூட்டுகேன்இங்கேவாபைங்கிளியே!*
தென்னரங்கம்பாடவல்லசீர்ப்பெருமாள் * பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள்சேரலர்கோன்* எங்கள்
குலசேகரன்ன்றேகூறு.
(மணக்கால்நம்பி அருளிச் செய்தது)
ஆரம்கெடப்பரனன்பர்கொள்ளாரென்று* அவர்களுக்கே
வாரங்கொடுகுடப்பாம்பிற்கையிட்டவன்* மாற்றலரை
வீரங்கெடுத்தசெங்கோல்கொல்லிகாவலன் வில்லவர்கோன்*
சேரன்குலசேகரன்முடிவேந்தர்சிகாமணியே.
முதல் திருமொழி
இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த *
அரவரசப் பெருஞ்சோதி அனந்த னென்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவித் *
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் *
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு,
என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே? ! 1 1.1 திருவரங்கம்
வாயோரீரைஞ்ஞூறு துதங்களார்ந்த
வளையுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ *
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் *
காயாம்பூ மலர்ப் பிறங்கலன்ன மாலைக்
கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *
மாயோனை மணத்தூணே பற்றி நின்று, என்
வாயார என்று கொலோ வாழ்த்து நாளே ? 2 1.2 திருவரங்கம்
எம்மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு *
எம்மாடும் எழிற்கண்களெட்டினோடும்
தொழுதேத்தி இனிதிறைஞ்ச நின்ற * செம்பொன்
அம்மான் தன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற
அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *
அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்களிட்டு,
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகு நாளே? 3 1.3 திருவரங்கம்
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை
வேலைவண்ணனை என் கண்ணனை * வன்குன்றமேந்தி
ஆவினை அன்று உய்யக்கொண்ட ஆயரேற்றை
அமரர்கள்தம் தலைவனை அந்தமிழின் இன்பப்
பாவினை * அவ்வடமொழியைப் பற்றற்றார்கள்
பயில் அரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும்
கோவினை * நாவுற வழுத்தி என்தன் கைகள்
கொய்ம்மலர் தூய் என்று கொலோ கூப்பு நாளே ? 4 1.4 திருவரங்கம்
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனும் இறைஞ்சியேத்தத் *
துணையில்லாத் தொன்மறைநூல் தோத்திரத்தால்
தொன்மலர்க்கண் அயன் வணங்கி ஓவாதேத்த *
மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ
மதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *
மணிவண்ணன் அம்மானைக் கண்டு கொண்டு,
என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே? 5 1.5 திருவரங்கம்
அளிமலர்மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும் *
தெளிமதி சேர் முனிவர்கள் தம் குழுவுமுந்தித்
திசைதிசையில் மலர் தூவிச் சென்று சேரும் *
களிமலர் சேர் பொழிலரங்கத்து உரகமேறிக்
கண்வளரும் கடல்வண்ணர் கமலக்கண்ணும் *
ஒளிமதி சேர் திருமுகமும் கண்டு கொண்டு
என் உள்ளம் மிக என்று கொலோ உருகு நாளே? 6 1.6 திருவரங்கம்
மறம்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி
வன்புலன்களடக்கி இடர்ப்பாரத் துன்பம் துறந்து *
இருமுப் பொழுதேத்தி எல்லையில்லாத்
தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான *
அறம் திகழும் மனத்தவர்தம் கதியைப், பொன்னி
அணி யரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *
நிறம் திகழும் மாயோனைக் கண்டு, என்கண்கள்
நீர்மல்க என்று கொலோ நிற்கு நாளே ? 7 1.7 திருவரங்கம்
கோலார்ந்த நெடுஞ் சார்ங்கம் கூனற் சங்கம்
கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள் *
காலார்ந்த கதிக் கருடனென்னும் வென்றிக்
கடும் பறவை இவையனைத்தும் புறஞ்சூழ் காப்பச் *
சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
திருவரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *
மாலோனைக் கண்டு இன்பக் கலவி யெய்தி
வல்வினையேன் என்று கொலோ வாழு நாளே ? 8 1.8 திருவரங்கம்
தூராத மனக்காதல் தொண்டர் தங்கள்
குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி*
ஆராத மனக்களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர
நினைந்துருகி யேத்தி * நாளும்
சீரார்ந்த முழவோசை பரவை காட்டும்
திருவரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *
போராழி யம்மானைக் கண்டு துள்ளிப்
பூதலத்தில் என்று கொலோ புரளு நாளே ? 9 1.9 திருவரங்கம்
வன் பெரு வானகமுய்ய அமரருய்ய
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்யத் *
துன்பமிகு துயரகல அயர்வொன்றில்லாச்
சுகம் வளர, அகமகிழும் தொண்டர் வாழ *
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளி கொள்ளும்
அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் *
இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்
இசைந்து உடனே என்று கொலோ இருக்கு நாளே? 10 1.10 திருவரங்கம்
திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டுத்
திருவரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் *
கடல் விளங்கு கருமேனியம்மான் தன்னைக்
கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால் *
குடை விளங்கு விறல் தானைக் கொற்ற ஒள்வாள்
கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற்செய்த *
நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே. 11 1.11 திருவரங்கம்
இரண்டாம் திருமொழி
தேட்டரும்திறல் தேனினைத் தென்னரங்கனைத்* திருமாதுவாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால்கொள் சிந்தையராய் *
ஆட்டமேவி அலர்ந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் *
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே. 1 2.1 திருவரங்கம்
தோடுலா மலர்மங்கை தோளிணை தோய்ந்ததும் சுடர்வாளியால்*
நீடு மாமரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து *
ஆடிப் பாடி அரங்கவோ ! என்றழைக்கும் தொண்டரடிப்பொடி
ஆட நாம்பெறில் *கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே? 2 2.2 திருவரங்கம்
ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன் இராமனாய் *
மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப் பாடி * வண்பொன்னிப்பேர்
ஆறுபோல் வரும் கண்ணநீர் கொண்டு அரங்கன் கோயில்திருமுற்றம்*
சேறுசெய்தொண்டர் சேவடிச் செழுஞ்சேறு என் சென்னிக்கணிவனே. 3 2.3 திருவரங்கம்
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடனுண்டலும்
உடன்று ஆய்ச்சி கண்டு *
ஆர்த்த தோளுடை எம்பிரான் என்னரங்கனுக்கு அடியார்களாய் *
நாத்தழும்பெழ நாரணா என்றழைத்து மெய் தழும்பத் தொழுது
ஏத்தி * இன்புறும் தொண்டர் சேவடி
ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே. 4 2.4 திருவரங்கம்
பொய்சிலைக் குரலேற்றெருத்தமிறுத்துப் போரரவு ஈர்த்தகோன் *
செய்சிலைச் சுடர் சூழொளித் திண்ணமாமதிள் தென்னரங்கனாம் *
மெய்சிலைக் கருமேகமொன்று தம் நெஞ்சில் நின்று திகழப் போய் *
மெய்சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என்மனம் மெய்சிலிர்க்குமே. 5 2.5 திருவரங்கம்
ஆதி யந்த மனந்த மற்புதமான வானவர் தம்பிரான் *
பாத மாமலர் சூடும் பத்தியிலாத பாவிகள் உய்ந்திடத் *
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கனெம்மானுக்கே *
காதல்செய்தொண்டர்க்குஎப்பிறப்பிலும் காதல்செய்யும்என்நெஞ்சமே. 6 2.6 திருவரங்கம்
காரினம் புரைமேனி நற்கதிர் முத்த வெண்ணகைச் செய்யவாய் *
ஆரமார்வ னரங்க னென்னும் அரும் பெருஞ் சுடரொன்றினைச் *
சேரும் நெஞ்சினராகிச் சேர்ந்து கசிந்திழிந்த கண்ணீர்களால் *
வார நிற்பவர் தாளிணைக்கு ஒரு வாரமாகும் என் நெஞ்சமே. 7 2.7 திருவரங்கம்
மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறுந் துழாய் *
மாலையுற்ற வரைப் பெருந் திருமார்வனை மலர்க்கண்ணனை *
மாலையுற்றெழுந்தாடிப் பாடித் திரிந்து அரங்கனெம்மானுக்கே *
மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு மாலையுற்றது என்நெஞ்சமே. 8 2.8 திருவரங்கம்,
திருப்பாற்கடல்
மொய்த்துக்கண்பனிசோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்துநின்று*
எய்த்துக் கும்பிடு நட்டமிட்டு எழுந்து ஆடிப்பாடி இறைஞ்சி *
என் அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி * அவனுக்கே
பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே. 9 2.9 திருவரங்கம்
அல்லி மாமலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள் தம் *
எல்லையில் அடிமைத் திறத்தினில் என்று மேவு மனத்தனாம் *
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேகரன் * சொல்லின்இன்தமிழ்மாலைவல்லவர் தொண்டர் தொண்டர்களாவரே. 10 2.10 திருவரங்கம்
மூன்றாம் திருமொழி
மெய்யில் வாழ்க்கையை, மெய்யெனக் கொள்ளும் * இவ்
வையந் தன்னொடும், கூடுவதில்லை யான் *
ஐயனே ! அரங்கா ! என்றழைக்கின்றேன் *
மையல் கொண்டொழிந்தேன், என்தன் மாலுக்கே. 1 3.1 திருவரங்கம்
நூலினே ரிடையார், திறத்தே நிற்கும் *
ஞாலந் தன்னொடும், கூடுவதில்லை யான் *
ஆலியா வழையா ! அரங்கா ! என்று *
மாலெழுந்தொழிந்தேன், என்தன் மாலுக்கே. 2 3.2 திருவரங்கம்
மாரனார் வரிவெஞ்சிலைக்கு, ஆட்செய்யும் *
பாரினாரொடும், கூடுவதில்லை யான் *
ஆரமார்வன், அரங்கன் அனந்தன் * நல்
நாரணன், நரகாந்தகன் பித்தனே. 3 3.3 திருவரங்கம்
உண்டியே உடையே, உகந்தோடும் இம்
மண்டலத்தொடும், கூடுவதில்லை யான் *
அண்டவாணன், அரங்கன் * வன்பேய் முலை
உண்டவாயன் தன், உன்மத்தன் காண்மினே. 4 3.4 திருவரங்கம்
தீதில் நன்னெறி நிற்க, அல்லாது செய்
நீதியாரொடும், கூடுவதில்லை யான் *
ஆதி ஆயன், அரங்கன் அந்தாமரைப்
பேதை மாமணவாளன் தன், பித்தனே. 5 3.5 திருவரங்கம்
எம்பரத்தரல்லாரொடும், கூடலன் *
உம்பர் வாழ்வை, ஒன்றாகக் கருதலன் *
தம்பிரான், அமரர்க்கு அரங்கநகர்
எம்பிரானுக்கு, எழுமையும் பித்தனே. 6 3.6 திருவரங்கம்
எத்திறத்திலும், யாரொடும் கூடும் * அச்
சித்தந்தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்*
அத்தனே! அரங்கா ! என்றழைக்கின்றேன் *
பித்தனா யொழிந்தேன், எம்பிரானுக்கே. 7 3.7 திருவரங்கம்
பேயரே எனக்கு, யாவரும் * யானும் ஓர்
பேயனே எவர்க்கும், இது, பேசியென்? *
ஆயனே ! அரங்கா !, என்றழைக்கின்றேன் *
பேயனா யொழிந்தேன், எம்பிரானுக்கே. 8 3.8 திருவரங்கம்
அங்கையாழி, அரங்கனடியிணை *
தங்கு சிந்தைத், தனிப் பெரும் பித்தனாய்க் *
கொங்கர் கோன், குலசேகரன் சொன்ன சொல் *
இங்கு வல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. 9 3.9 திருவரங்கம்
நான்காம் திருமொழி
ஊனேறு செல்வத்து, உடற்பிறவி யான் வேண்டேன் *
ஆனேறேழ் வென்றான், அடிமைத் திறமல்லால் *
கூனேறு சங்கமிடத்தான் தன், வேங்கடத்துக் *
கோனேரி வாழும், குருகாய்ப் பிறப்பேனே. 1 4.1 திருவேங்கடம் திருப்பதி
ஆனாத செல்வத்து, அரம்பையர்கள் தற்சூழ, *
வானாளும் செல்வமும், மண்ணரசும் யான் வேண்டேன் *
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் *
மீனாய்ப் பிறக்கும், விதியுடையெ னாவேனே. 2 4.2 திருவேங்கடம் திருப்பதி
பின்னிட்ட சடையானும், பிரமனும் இந்திரனும் *
துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள்வாசல் *
மின்வட்டச் சுடராழி, வேங்கடக்கோன் தானுமிழும் *
பொன் வட்டில் பிடித்து, உடனே புகப்பெறுவெ னாவேனே. 3 4.3 திருவேங்கடம் திருப்பதி
ஒண்பவள வேலை, உலவு தண்பாற்கடலுள் *
கண் துயிலும் மாயோன், கழலிணைகள் காண்பதற்கு *
பண்பகரும் வண்டினங்கள், பண்பாடும் வேங்கடத்து *
செண்பகமாய் நிற்கும், திருவுடையெ னாவேனே. 4 4.4 திருவேங்கடம் திருப்பதி,
திருப்பாற்கடல்
கம்ப மத யானைக், கழுத்தகத்தின் மேலிருந்து *
இன்பமரும் செல்வமும், இவ்வரசும் யான் வேண்டேன் *
எம்பெருமானீசன், எழில் வேங்கட மலை மேல் *
தம்பகமாய் நிற்கும், தவமுடையெ னாவேனே. 5 4.5 திருவேங்கடம் திருப்பதி
மின்னனைய நுண்ணிடையார், உருப்பசியும் மேனகையும் *
அன்னவர் தம் பாடலொடும், ஆடலவை ஆதரியேன் *
தென்னவென வண்டினங்கள், பண்பாடும் வேங்கடத்துள் *
அன்னனைய பொற்குவடாம், அருந்தவத்தெ னாவேனே. 6 4.6 திருவேங்கடம் திருப்பதி
வானாளும் மாமதிபோல், வெண்குடைக்கீழ் * மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து, கொண்டாடும் செல்வறியேன் *
தேனார் பூஞ்சோலைத், திருவேங்கடமலை மேல் *
கானாறாய்ப் பாயும், கருத்துடையெ னாவேனே. 7 4.7 திருவேங்கடம் திருப்பதி
பிறையேறு சடையானும், பிரமனும் இந்திரனும் *
முறையாய பெரு வேள்விக், குறை முடிப்பான் மறையானான் *
வெறியார் தண்சோலைத், திருவேங்கட மலைமேல் *
நெறியாய்க் கிடக்கும், நிலையுடையெ னாவேனே. 8 4.8 திருவேங்கடம் திருப்பதி
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே ! *
நெடியானே ! வேங்கடவா !, நின் கோயிலின் வாசல் *
அடியாரும் வானவரும், அரம்பையரும் கிடந்தியங்கும் *
படியாய்க் கிடந்து * உன் பவளவாய், காண்பேனே. 9 4.9 திருவேங்கடம் திருப்பதி
உம்பருலகாண்டு, ஒரு குடைக்கீழ் * உருப்பசி தன்
அம்பொற் கலை யல்குல் பெற்றாலும், ஆதரியேன் *
செம்பவள வாயான், திருவேங்கட மென்னும் *
எம்பெருமான் பொன்மலை மேல், ஏதேனு மாவேனே. 10 4.10 திருவேங்கடம் திருப்பதி
மன்னிய தண்சாரல், வட வேங்கடத்தான் தன் *
பொன்னியலும் சேவடிகள் காண்பான், புரிந்திறைஞ்சிக் *
கொன்னவிலும் கூர்வேல், குலசேகரன் சொன்ன *
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே. 11 4.11 திருவேங்கடம் திருப்பதி
ஐந்தாம் திருமொழி
தருதுயரம் தடாயேல், உன் சரணல்லால் சரணில்லை *
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட்டம்மானே !
அரிசினத்தால், ஈன்றதாய் அகற்றிடினும் * மற்றவள்தன்
அருள் நினைந்தேயழும் குழவி, அதுவே போன்றிருந்தேனே. 1 5.1 வித்துவக்கோடு
கண்டாரிகழ்வனவே, காதலன் தான் செய்திடினும் *
கொண்டானை யல்லால், அறியாக் குலமகள்போல் *
விண்தோய் மதிள்புடைசூழ், விற்றுவக்கோட்டம்மா ! * நீ
கொண்டு ஆளாயாகிலும், உன் குரைகழலே கூறுவனே. 2 5.2 வித்துவக்கோடு
மீன்நோக்கும் நீள்வயல்சூழ், விற்றுவக்கோட்டம்மா !*
என் பால் நோக்காயாகிலும், உன் பற்றல்லால் பற்றிலேன் *
தான் நோக்காது, எத்துயரம் செய்திடினும் * தார்வேந்தன்
கோல்நோக்கிவாழும், குடிபோன்றிருந்தேனே. 3 5.3 வித்துவக்கோடு
வாளால் அறுத்துச் சுடினும், மருத்துவன் பால் *
மாளாத காதல், நோயாளன் போல் மாயத்தால் *
மீளாத்துயர் தரினும், விற்றுவக்கோட்டம்மா ! நீ *
ஆளா உனதருளே பார்ப்பன், அடியேனே. 4 5.4 வித்துவக்கோடு
வெங்கண் திண்களிறடர்த்தாய் விற்றுவக்கோட்டம்மானே *
எங்குப் போய் உய்கேன் உன்னிணையடியே அடையலல்லால் *
எங்கும் போய்க் கரை காணாது, எறிகடல் வாய் மீண்டேயும் *
வங்கத்தின் கூம்பேறும், மாப்பறவை போன்றேனே. 5 5.5 வித்துவக்கோடு
செந்தழலே வந்து, அழலைச் செய்திடினும் * செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோற்கல்லால், அலராவால் *
வெந்துயர் வீட்டாவிடினும், விற்றுவக்கோட்டம்மா ! உன்
அந்தமில் சீர்க்கல்லால், அகம் குழைய மாட்டேனே. 6 5.6 வித்துவக்கோடு
எத்தனையும் வான் மறந்த காலத்தும், பைங்கூழ்கள் *
மைத்தெழுந்த மாமுகிலே, பார்த்திருக்கும் * மற்றவை போல்
மெய்த்துயர் வீட்டாவிடினும், விற்றுவக்கோட்டம்மா ! * என்
சித்தம் மிக உன் பாலே வைப்பன் அடியேனே. 7 5.7 வித்துவக்கோடு
தொக்கிலங்கு ஆறெல்லாம், பரந்தோடித் * தொடுகடலே
புக்கன்றிப், புறம் நிற்க மாட்டாத மற்றவை போல் *
மிக்கிலங்கு முகில் நிறத்தாய்!, விற்றுவக்கோட்டம்மா !* உன்
புக்கிலங்கு சீரல்லால், புக்கிலன் காண் புண்ணியனே ! 8 5.8 வித்துவக்கோடு
நின்னையே தான் வேண்டி, நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே * தான் வேண்டும் செல்வம் போல் * மாயத்தால்
மின்னையே சேர் திகிரி, விற்றுவக்கோட்டம்மா ! *
நின்னையே தான் வேண்டி, நிற்பன் அடியேனே. 9 5.9 வித்துவக்கோடு
விற்றுவக்கோட்டம்மா!, நீ வேண்டாயேயாயிடினும் *
மற்றாரும் பற்றிலேனென்று, அவனைத் தாள் நயந்த *
கொற்றவேல் தானைத் குலசேகரன் சொன்ன *
நற்றமிழ் பத்தும் வல்லார், நண்ணார் நரகமே. 10 5.10 வித்துவக்கோடு
ஆறாம் திருமொழி
ஏர்மலர்ப் பூங்குழலாயர் மாதர்
எனைப் பலருள்ள இவ்வூரில் * உன்தன்
மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே
உன்தன் பொய்யைக் கேட்டுக் *
கூர்மழைபோல் பனிக்கூதலெய்திக்
கூசிநடுங்கி யமுனை யாற்றில் *
வார்மணற்குன்றில் புலர நின்றேன்
வாசுதேவா ! உன் வரவு பார்த்தே. 1 6.1
கெண்டை யொண்கண் மடவாளொருத்தி
கீழையகத்துத் தயிர் கடையக்
கண்டு * ஒல்லை நானும் கடைவனென்று
கள்ள விழியை விழித்துப் புக்கு *
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ
வாள் முகம் வேர்ப்பச் செவ்வாய் துடிப்ப *
தண்தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்
தாமோதரா ! மெய்யறிவன் நானே, 2 6.2
கருமலர்க் கூந்தலொருத்தி தன்னைக்
கடைக்கணித்து * ஆங்கே ஒருத்தி தன் பால்
மருவி மனம் வைத்து, மற்றொருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்குப் பொய் குறித்து *
புரி குழல் மங்கை யொருத்தி தன்னைப்
புணர்தி, அவளுக்கும் மெய்யனல்லை *
மருதிறுத்தாய் ! உன் வளர்த்தியூடே
வளர்கின்றதால், உன் தன் மாயை தானே. 3 6.3
தாய் முலைப்பாலில் அமுதிருக்கத்
தவழ்ந்து தளர்நடையிட்டுச் சென்று *
பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு
பித்தனென்றே பிறர் ஏச நின்றாய் *
ஆய்மிகுகாதலோடு யானிருப்ப
யான்விட வந்த என் தூதியோடே *
நீ மிகு போகத்தை நன்குகந்தாய்
அதுவும் உன் கோரம்புக்கு ஏற்குமன்றே. 4 6.4
மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு
வீங்கிருள்வாய் என்தன் வீதியூடே *
பொன்னொத்த வாடை குக்கூடலிட்டுப்
போகின்றபோது நான் கண்டு நின்றேன் *
கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டுக்
கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் *
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?
இன்னம் அங்கே நட நம்பி ! நீயே. 5 6.5
மற்பொரு தோளுடை வாசுதேவா !
வல்வினையேன் துயில் கொண்டவாறே *
இற்றை இரவிடையேமத்து என்னை
இன்னணை மேலிட்டகன்று நீ போய் *
அற்றை யிரவும் ஓர் பிற்றை நாளும்
அரிவையரோடும் அணைந்து வந்தாய் *
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் ?
எம்பெருமான் ! நீ எழுந்தருளே. 6 6.6
பையரவினணைப் பள்ளியினாய் !
பண்டையோமல்லோம் நாம் * நீ உகக்கும்
மையரியொண் கண்ணினாருமல்லோம்
வைகி எம் சேரி வரவொழி நீ *
செய்ய வுடையும் திருமுகமும்
செங்கனி வாயும் குழலும் கண்டு *
பொய்யொரு நாள் பட்டதே யமையும்
புள்ளுவம் பேசாதே போகு நம்பி ! 7 6.7
என்னை வருக எனக் குறித்திட்டு
இனமலர் முல்லையின் பந்தர் நீழல் *
மன்னியவளைப் புணரப்புக்கு
மற்றென்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய் *
பொன்னிறவாடையைக் கையில் தாங்கிப்
பொய்யச்சம் காட்டி நீ போதியேலும் *
இன்னம் என் கையகத்து ஈங்கொரு நாள்
வருதியேல், என் சினம் தீர்வன் நானே. 8 6.8
மங்கல நன் வனமாலை மார்விலிலங்க
மயில்தழை பீலி சூடி *
பொங்கிள வாடை அரையில் சாத்திப்
பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து *
கொங்கு நறுங்குழலார்களோடு
குழைந்து, குழலினிது ஊதி வந்தாய் *
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத
உன் குழலின்னிசை போதராதே. 9 6.9
அல்லிமலர்த் திருமங்கை கேள்வன் தன்னை
நயந்து, இளவாய்ச்சிமார்கள் *
எல்லிப் பொழுதினில் ஏமத்தூடி
எள்கி யுரைத்த உரையதனைக் *
கொல்லி நகர்க்கிறை கூடற் கோமான்
குலசேகரன் இன்னிசையில் மேவி *
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே. 10 6.10
ஏழாம் திருமொழி
ஆலை நீள் கரும்பன்னவன் தாலோ அம்புயத்தடங்கண்ணினன் தாலோ *
வேலைநீர் நிறத்தன்னவன் தாலோ
வேழப்போதகமன்னவன் தாலோ *
ஏலவார் குழலென் மகன் தாலோ
என்றென்று உன்னை என் வாயிடை நிறைய *
தாலொலித்திடும் திருவினையில்லாத்
தாயரில் கடையாயின தாயே. 1 7.1
வடிக்கொ ளஞ்சன மெழுது செம்மலர்க்கண்
மருவி மேலினி தொன்றினை நோக்கி *
முடக்கிச் சேவடி மலர்ச் சிறு கருந்தாள்
பொலியும் நீர் முகில் குழவியே போல *
அடக்கியாரச் செஞ்சிறு விரலனைத்தும்
அங்கையோடு அணைந்து ஆனையிற் கிடந்த *
கிடக்கை கண்டிடப் பெற்றிலேன் அந்தோ !
கேசவா ! கெடுவேன் கெடுவேனே. 2 7.2
முந்தை நன்முறை யன்புடை மகளிர்
முறை முறை தந்தம் குறங்கிடை யிருத்தி *
எந்தையே! என்தன் குலப்பெருஞ்சுடரே !
எழு முகில் கணத்தெழில் கவரேறே ! *
உந்தை யாவன் ? என்றுரைப்ப, நின் செங்கேழ்
விரலினும் கடைக் கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் * நல்வினை யில்லா
நங்கள் கோன், வசுதேவன் பெற்றிலனே. 3 7.3
களிநிலாவெழில் மதிபுரை முகமும்
கண்ணனே ! திண்கை மார்வும் திண்தோளும் *
தளிர் மலர்க் கருங்குழல் பிறையதுவும்
தடங்கொள் தாமரைக் கண்களும் * பொலிந்த
இளமை யின்பத்தை இன்று என்தன் கண்ணால்
பருகுவேற்கு இவள் தாயென நினைந்த *
அளவில் பிள்ளைமை யின்பத்தை இழந்த
பாவியேன் எனதாவி நில்லாதே. 4 7.4
மருவும் நின் திருநெற்றியில் சுட்டி யசைதர
மணிவாயிடை முத்தம்
தருதலும் * உன்தன் தாதையைப் போலும்
வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர *
விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து
வெகுளியாய் நின்றுரைக்கும் அவ்வுரையும் *
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன், எல்லாம்
தெய்வநங்கை யசோதை பெற்றாளே. 5 7.5
தண்ணந் தாமரைக் கண்ணனே ! கண்ணா !
தவழ்ந்தெழுந்து தளர்ந்ததோர் நடையால் *
மண்ணில் செம்பொடியாடி வந்து, என் தன்
மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ! *
வண்ணச் செஞ்சிறு கை விரலனைத்தும்
வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சில் *
உண்ணப் பெற்றிலேன் * ஓ ! கொடு வினையேன்
என்னை என் செய்யப் பெற்றது எம்மோயே. 6 7.6
குழகனே ! என்தன் கோமளப்பிள்ளாய் !
கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி *
ஒழுகு பேரெழிலிளஞ்சிறு தளிர் போல்
ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா *
மழலை மென்னகை இடையிடை யருளா
வாயிலே முலையிருக்க என் முகத்தே *
எழில் கொள் நின் திருக்கண்ணிணை நோக்கம்
தன்னையும், இழந்தேன் இழந்தேனே. 7 7.7
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத் தாமரைக் கையும் *
எழில் கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு
நிலையும், வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும் *
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும் * இவை கண்ட அசோதை
தொல்லை யின்பத் திறுதி கண்டாளே. 8 7.8
குன்றினால் குடை கவித்ததும், கோலக்
குரவை கோத்ததும் குடமாட்டும் *
கன்றினால் விளவெறிந்ததும், காலால்
காளியன் தலை மிதித்ததும் முதலா *
வென்றிசேர் பிள்ளை நல் விளையாட்ட மனைத்திலும்
அங்கு என்னுள்ளம் உள் குளிர *
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன், அடியேன்
காணுமாறு இனி உண்டெனில் அருளே. 9 7.9
வஞ்சமேவிய நெஞ்சுடைப்பேய்ச்சி
வரண்டு நார் நரம்பெழக் கரிந்துக்க *
நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ !
சுவைத்து, நீ அருள் செய்து வளர்ந்தாய் *
கஞ்சன்நாள் கவர் கருமுகிலெந்தாய் !
கடைப்பட்டேன் வெறிதே முலை சுமந்து *
தஞ்சமேலொன்றிலேன் உய்ந்திருந்தேன்
தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே. 10 7.10
மல்லை மாநகர்க் கிறையவன் தன்னை
வான் செலுத்தி வந்தீங்கணை மாயத்து *
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் *
கொல்லி காவலன், மாலடி முடிமேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன *
நல்லிசைத் தமிழ்மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணனுலகே. 11 7.11
எட்டாம் திருமொழி
மன்னுபுகழ்க் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே !
தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் * செம்பொன் சேர்
கன்னிநன் மாமதிள் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே !
என்னுடைய இன்னமுதே ! இராகவனே ! தாலேலோ. 1 8.1 திருக்கண்ணபுரம்
புண்டரீக மலரதன்மேல், புவனியெல்லாம் படைத்தவனே !
திண்திறலாள் தாடகைதன், உரமுருவச் சிலை வளைத்தாய் ! *
கண்டவர் தம் மனம் வழங்கும், கணபுரத்து என் கருமணியே !
எண்திசையும் ஆளுடையாய் இராகவனே ! தாலேலோ. 2 8.2 திருக்கண்ணபுரம்
கொங்குமலி கருங்குழலாள், கெளசலை தன் குலமதலாய் ! *
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா ! தாசரதீ ! *
கங்கையிலும் தீர்த்தமலி, கணபுரத்து என் கருமணியே ! *
எங்கள் குலத்து இன்னமுதே ! இராகவனே ! தாலேலோ. 3 8.3 திருக்கண்ணபுரம்
தாமரைமேல், அயனவனைப் படைத்தவனே !* தயரதன்தன்
மாமதலாய் ! மைதிலி தன் மணவாளா ! * வண்டினங்கள்
காமரங்களிசை பாடும், கணபுரத்து என் கருமணியே ! *
ஏமருவுஞ் சிலைவலவா ! இராகவனே ! தாலேலோ. 4 8.4 திருக்கண்ணபுரம்
பாராளும் படர் செல்வம், பரதநம்பிக்கே யருளி *
ஆராவன் பிளையவனோடு, அருங்கான மடைந்தவனே ! *
சீராளும் வரைமார்பா ! திருக்கண்ணபுரத்தரசே ! *
தாராளும் நீண்முடி, என் தாசரதீ ! தாலேலோ. 5 8.5 திருக்கண்ணபுரம்
சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கான மடைந்தவனே !*
அற்றவர்கட் கருமருந்தே ! அயோத்திநகர்க் கதிபதியே ! *
கற்றவர்கள் தாம் வாழும், கணபுரத்து என் கருமணியே ! *
சிற்றவை தன் சொற்கொண்ட, சீராமா ! தாலேலோ. 6 8.6 திருக்கண்ணபுரம்,
திருவயோத்தி
ஆலினிலைப் பாலகனாய், அன்று உலகமுண்டவனே ! *
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக் களித்தவனே ! *
காலின் மணி கரையலைக்கும், கணபுரத்து என் கருமணியே ! *
ஆலிநகர்க்கு அதிபதியே ! அயோத்திமனே ! தாலேலோ. 7 8.7 திருக்கண்ணபுரம்,
திருவாலி,
திருவயோத்தி
மலையதனால் அணைகட்டி, மதிளிலங்கை யழித்தவனே ! *
அலைகடலைக் கடைந்து, அமரர்க் கமுதருளிச் செய்தவனே ! *
கலைவலவர் தாம் வாழும், கணபுரத்து என் கருமணியே ! *
சிலைவலவா ! சேவகனே ! சீராமா ! தாலேலோ. 8 8.8 திருக்கண்ணபுரம்
தளையவிழும் நறுங்குஞ்சித், தயரதன்தன் குலமதலாய் ! *
வளைய ஒரு சிலையதனால், மதிளிலங்கை யழித்தவனே ! *
களைகழுநீர் மருங்கலரும், கணபுரத்து என் கருமணியே !*
இளையவர்கட் கருளுடையாய் ! இராகவனே ! தாலேலோ. 9 8.9 திருக்கண்ணபுரம்
தேவரையும் அசுரரையும், திசைகளையும் படைத்தவனே ! *
யாவரும் வந்து அடிவணங்க, அரங்கநகர்த் துயின்றவனே ! *
காவிரி நல்நதி பாயும், கணபுரத்து என் கருமணியே ! *
ஏவரி வெஞ்சிலை வலவா ! இராகவனே ! தாலேலோ. 10 8.10 திருவரங்கம்,
திருக்கண்ணபுரம்
கன்னிநன் மாமதிள் புடைசூழ், கணபுரத்து என் காகுத்தன்
தன்னடி மேல் * தாலேலோ வென்றுரைத்த, தமிழ் மாலை *
கொல்நவிலும் வேல் வலவன் குடைக் குலசேகரன் சொன்ன *
பன்னிய நூல் பத்தும் வல்லார், பாங்காய பத்தர்களே. 11 8.11 திருக்கண்ணபுரம்
ஒன்பதாம் திருமொழி
வன்தாளினிணை வணங்கி வளநகரம்
தொழுதேத்த, மன்னனாவான்
நின்றாயை * அரியணை மேலிருந்தாயை
நெடுங்கானம் படரப் போகு
என்றாள் * எம்இராமாவோ !
உனைப் பயந்த கைகேசிதன் சொற்கேட்டு *
நன்றாக நானிலத்தை யாள்வித்தேன்
நன்மகனே ! உன்னை நானே. 1 9.1
வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு, இருநிலத்தை
வேண்டாதே விரைந்து * வென்றி
மைவாய களிறொழிந்து தேரொழிந்து
மாவொழிந்து, வனமே மேவி *
நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும்
இளங்கோவும் பின்பு போக *
எவ்வாறு நடந்தனை ? எம்மிராமாவோ !
எம்பெருமான் ! என் செய்கேனே ? 2 9.2
கொல்லணை வேல் வரிநெடுங்கண், கெளசலைதன்
குலமதலாய் ! * குனிவில்லேந்தும்
மல்லணைந்த வரைத்தோளா ! வல்வினையேன்
மனமுருக்கும் வகையே கற்றாய் *
மெல்லணை மேல் முன் துயின்றாய்
இன்று இனிப் போய் வியன் கான மரத்தின் நீழல் *
கல்லணை மேல் கண்துயிலக் கற்றனையோ?
காகுத்தா ! கரிய கோவே ! 3 9.3
வா, போகுவா இன்னம் வந்து
ஒருகால் கண்டு போ * மலராள் கூந்தல்
வேய்போலும் எழில் தோளிதன் பொருட்டா
விடையோன்தன் வில்லைச் செற்றாய் *
மாபோகு நெடுங்கானம் வல்வினையேன்
மனமுருக்கும் மகனே ! * இன்று
நீ போக என்னெஞ்சம் இருபிளவாய்ப்
போகாதே நிற்குமாறே ! 4 9.4
பொருந்தார் கைவேல் நுதி போல் பரல்பாய
மெல்லடிக்கள் குருதிசோர *
விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப
வெம்பசி நோய் கூர * இன்று
பெரும்பாவியேன் மகனே ! போகின்றாய்
கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற *
அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன்
என் செய்கேன் ? அந்தோ ! யானே. 5 9.5
அம்மாவென்றுகந்தழைக்கும், ஆர்வச்சொல்
கேளாதே * அணிசேர் மார்வம்
என் மார்வத்திடை யழுந்தத் தழுவாதே
முழுசாதே மோவாதுச்சி *
கைம்மாவின் நடையன்ன மென்னடையும்
கமலம் போல் முகமும் காணாது *
எம்மானை என் மகனை இழந்திட்ட
இழிதகையேன் இருக்கின்றேனே. 6 9.6
பூமருவு நறுங்குஞ்சி புன்சடையாய்ப் புனைந்து
பூந்துகில் சேரல்குல் *
காமரெழில் விழலுடுத்துக் கலனணியாது
அங்கங்கள் அழகு மாறி *
ஏமரு தோளென் புதல்வன், யான் இன்று
செலத் தக்க வனம் தான் சேர்தல் *
தூமறையீர் ! இது தகவோ ? சுமந்திரனே !
வசிட்டனே ! சொல்லீர் நீரே. 7 9.7
பொன் பெற்றாரெழில் வேதப் புதல்வனையும்
தம்பியையும் * பூவைபோலும்
மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென்
மருகியையும், வனத்திற் போக்கி *
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள்வானில் போக்க *
என் பெற்றாய் ? கைகேசி ! இருநிலத்தில்
இனிதாக இருக்கின்றாயே. 8 9.8
முன்னொருநாள் மழுவாளி சிலை வாங்கி
அவன் தவத்தை முற்றும் செற்றாய் *
உன்னையும் உன்னருமையையும் உன்மோயின்
வருத்தமும், ஒன்றாகக் கொள்ளாது *
என்னையும் என்மெய்யுரையும் மெய்யாகக்
கொண்டு, வனம்புக்க வெந்தாய் ! *
நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன்
ஏழ்பிறப்பும், நெடுந்தோள் வேந்தே ! 9 9.9
தேன் நகுமாமலர்க் கூந்தல், கெளசலையும்
சுமித்திரையும் சிந்தை நோவக் *
கூனுருவில் கொடுந் தொழுத்தை சொற் கேட்ட
கொடியவள் தன்சொற்கொண்டு * இன்று
கானகமே மிக விரும்பி, நீ துறந்த
வளநகரைத் துறந்து * நானும்
வானகமே மிக விரும்பிப் போகின்றேன்
மனுகுலத்தார் தங்கள் கோவே ! 10 9.10
ஏரார்ந்த கருநெடுமா லிராமனாய்
வனம் புக்க, அதனுக்கு ஆற்றா *
தாரார்ந்த தடவரைத் தோள் தயரதன் தான்
புலம்பிய, அப் புலம்பல் தன்னைக் *
கூரார்ந்த வேல் வலவன் கோழியர் கோன்
குடைக் குலசேகரன் சொற்செய்த *
சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார்
தீநெறிக் கண் செல்லார் தாமே. 11 9.11
பத்தாம் திருமொழி
அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தி யென்னும்
அணிநகரத்து உலகனைத்தும் விளக்கும் சோதி *
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர்விளக்காய்த் தோன்றி
விண்முழுதும் உயக்கொண்ட வீரன் தன்னைச் *
செங்கணெடுங் கருமுகிலை இராமன் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *
எங்கள் தனிமுதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ ? கண்குளிரக் காணும் நாளே. 1 10.1 சித்திரகூடம்,
திருவயோத்தி
வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக்கீறி
வருகுருதி பொழிதர வன்கணை யொன்றேவி *
மந்திரம் கொள் மறைமுனிவன் வேள்வி காத்து
வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின் *
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண்சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *
அந்தணர்களொரு மூவாயிரவர் ஏத்த
அணிமணி யாசனத்திருந்த அம்மான் தானே. 2 10.2 சித்திரகூடம்
செவ்வரிநற் கருநெடுங்கண் சீதைக்காகிச்
சினவிடையோன் சிலையிறுத்து மழுவாளேந்தி *
வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு
வேல்வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னைத் *
தெவ்வரஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர்த்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை
இறைஞ்சுவா ரிணையடியே இறைஞ்சினேனே. 3 10.3 சித்திரகூடம்
தொத்தலர் பூஞ்சுரிகுழல் கைகேசி சொல்லால்
தொன்னகரம் துறந்து, துறைக்கங்கை தன்னைப் *
பத்தியுடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்குப்
பரதனுக்குப் பாதுகமும் அரசுமீந்து *
சித்திரகூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *
எத்தனையும் கண் குளிரக் காணப்பெற்ற
இருநிலத்தார்க்கு இமையவர் நேரொவ்வார் தாமே. 4 10.4 சித்திரகூடம்
வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று
வண்தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கிக் *
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்
கரனோடு தூடணன்தன் உயிரை வாங்கிச் *
சிலை வணக்கி மான்மறிய எய்தான் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *
தலை வணக்கிக் கைகூப்பி ஏத்த வல்லார்
திரிதலால், தவமுடைத்துத் தரணி தானே. 5 10.5 சித்திரகூடம்
தனமருவு வைதேகி பிரியலுற்றுத்
தளர்வெய்திச் சடாயுவை வைகுந்தத் தேற்றி *
வனமருவு கவியரசன் காதல் கொண்டு
வாலியைக் கொன்று இலங்கை நகரரக்கர் கோமான் *
சினமடங்க மாருதியால் சுடுவித்தானைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *
இனிதமர்ந்த அம்மானை இராமன் தன்னை
ஏத்துவா ரிணையடியே ஏத்தினேனே. 6 10.6 சித்திரகூடம்
குரை கடலை அடலம்பால் மறுகவெய்து
குலை கட்டி மறு கரையை அதனாலேறி *
எரிநெடுவேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்
இன்னுயிர் கொண்டு, அவன் தம்பிக் கரசுமீந்து *
திருமகளோ டினிதமர்ந்த செல்வன் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *
அரசமர்ந்தா னடிசூடும் அரசை யல்லால்
அரசாக எண்ணேன் மற்றரசு தானே. 7 10.7 சித்திரகூடம்
அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி
அரசெய்தி அகத்தியன் வாய்த் தான்முன் கொன்றான்
தன் * பெருந்தொல் கதைகேட்டு, மிதிலைச் செல்வி
உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் *
செம்பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் *
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம், இன்னமுதம் மதியோமன்றே. 8 10.8 சித்திரகூடம்,
திருவயோத்தி
செறிதவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று
செழு மறையோனுயிர் மீட்டுத் தவத்தோனீந்த
நிறைமணிப் பூணணியும் கொண்டு, இலவணன் தன்னைத்
தம்பியால் வானேற்றி * முனிவன் வேண்டத்
திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
உறைவானை * மறவாத உள்ளந் தன்னை யுடையோம்,
மற்றுறு துயர மடையோ மன்றே. 9 10.9 சித்திரகூடம்
அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி
அடலரவப் பகையேறி அசுரர் தம்மை
வென்று * இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர்வரத் தன் தாம மேவிச்
சென்று * இனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத்
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
என்றும் நின்றான் அவனிவ னென்றேத்தி, நாளும்
இறைஞ்சுமினோ, எப்பொழுதும் தொண்டீர் ! நீரே. 10 10.10 சித்திரகூடம்
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை *
எல்லையில் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று
அது முதலாத், தன்னுலகம் புக்கதீறா *
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள்
கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொற்செய்த *
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே. 11 10.11 சித்திரகூடம்
பெருமாள் திருமொழி முற்றும்
குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்