தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த
திருமாலை
தனியன்கள்
(திருவரங்கப்பெருமாள் அரையர் அருளிச்செய்தது)
மற்றொன்றும்வேண்டாமனமே!* மதிளரங்கர்
கற்றினம்மேய்த்தகழலிணைக்கீழ்* – உற்ற
திருமாலைபாடும்சீர்த் தொண்டரடிப்பொடிஎம்
பெருமானை* எப்பொழுதும்பேசு.
காவலில் புலனை வைத்துக், கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து *
நாவலிட்டு உழிதருகின்றோம், நமன்தமர் தலைகள் மீதே *
மூவுல குண்டுமிழ்ந்த முதல்வ ! நின் நாமம் கற்ற *
ஆவலிப் புடைமை கண்டாய், அரங்கமா நகருளானே ! 1 திருவரங்கம்
பச்சை மாமலை போல்மேனி, பவளவாய் கமலச்செங்கண் *
அச்சுதா அமரரேறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும் *
இச்சுவை தவிர யான் போய், இந்திர லோகம் ஆளும் *
அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருளானே ! 2 திருவரங்கம்
வேத நூல் பிராயம் நூறு, மனிசர் தாம் புகுவரேலும் *
பாதியும் உறங்கிப் போகும், நின்ற இப்பதினை யாண்டு *
பேதை பாலகன் அதாகும், பிணிபசி மூப்புத் துன்பம் *
ஆதலால் பிறவி வேண்டேன், அரங்கமா நகருளானே ! 3 திருவரங்கம்
மொய்த்த வல்வினையுள் நின்று, மூன்றெழுத்துடைய பேரால் *
கத்திரபந்து மன்றே, பராங் கதி கண்டு கொண்டான் *
இத்தனை அடியரானார்க்கு இரங்கும், நம் அரங்கனாய
பித்தனைப் பெற்றும் * அந்தோ ! பிறவியுள் பிணங்குமாறே. 4 திருவரங்கம்
பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு *
உண்டு இராக் கிடக்குமப்போது உடலுக்கே கரைந்து நைந்து *
தண்துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடித் *
தொண்டு பூண்டமுத முண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே. 5 திருவரங்கம்
மறம் சுவர் மதிளெடுத்து, மறுமைக்கே வெறுமை பூண்டு *
புறம் சுவரோட்டை மாடம், புரளும் போது அறிய மாட்டீர் *
அறம் சுவராகி நின்ற, அரங்கனார்க்கு ஆட்செய்யாதே *
புறஞ் சுவர் கோலஞ் செய்து, புள் கவ்வக் கிடக்கின்றீரே. 6 திருவரங்கம்
புலையறமாகி நின்ற, புத்தொடு சமணமெல்லாம் *
கலையறக் கற்ற மாந்தர், காண்பரோ கேட்பரோ தாம் ? *
தலையறுப் புண்டும் சாகேன், சத்தியம் காண்மின் ஐயா ! *
சிலையினால் இலங்கை செற்ற தேவனே, தேவனாவான். 7 திருவரங்கம்
வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் * நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக் *
குறிப்பெனக்கு அடையுமாகில் கூடுமேல் * தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமா நகருளானே ! 8 திருவரங்கம்
மற்றுமோர் தெய்வமுண்டே? மதியிலா மானிடங்காள் ! *
உற்ற போதன்றி நீங்கள், ஒருவனென்று உணர மாட்டீர் *
அற்றமே லொன்றறியீர், அவனல்லால் தெய்வ மில்லை *
கற்றினம் மேய்த்த எந்தை, கழலிணை பணிமின் நீரே. 9 திருவரங்கம்
நாட்டினான் தெய்வம் எங்கும், நல்லதோரருள் தன்னாலே *
காட்டினான் திருவரங்கம், உய்பவர்க்கு உய்யும் வண்ணம் *
கேட்டிரே நம்பிமீர்காள் !, கெருட வாகனனும் நிற்கச் *
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே. 10 திருவரங்கம்
ஒரு வில்லால் ஓங்கு முந்நீரடைத்து, உலகங்களுய்யச் *
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற, நம் சேவகனார் *
மருவிய பெரிய கோயில், மதிள் திருவரங்க மென்னாக் *
கருவிலே திருவிலாதீர் ! காலத்தைக் கழிக்கின்றீரே. 11 திருவரங்கம்
நமனும் முற்கலனும் பேச, நரகில் நின்றார்கள் கேட்க *
நரகமே சுவர்க்க மாகும், நாமங்களுடைய நம்பி *
அவனதூர் அரங்க மென்னாது, அயர்த்து வீழ்ந்தளிய மாந்தர் *
கவலையுள் படுகின்றாறென்று, அதனுக்கே கவல்கின்றேனே. 12 திருவரங்கம்
எறியும் நீர் வெறிகொள் வேலை மாநிலத்து உயிர்களெல்லாம் *
வெறிகொள் பூந்துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த *
அறிவிலா மனிசரெல்லாம் அரங்க மென்றழைப்ப ராகில் *
பொறியில் வாழ் நரக மெல்லாம் புல்லெழுந் தொழியுமன்றே ? 13 திருவரங்கம்
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை *
கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை *
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்க மென்னா *
மிண்டர் பாய்ந் துண்ணும் சோற்றை விலக்கி, நாய்க் கிடுமினீரே. 14 திருவரங்கம்
மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா என்னைப் போலப் *
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி யுடைய கோமான் *
உய்யப் போமுணர்வினார்கட்கு ஒருவனென்று உணர்ந்த பின்னை *
ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்க மன்றே ? 15 திருவரங்கம்
சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம் *
மாதரார் கயற்கணென்னும் வலையுள் பட்டழுந்துவேனைப் *
போதரே யென்று சொல்லிப், புந்தியுள் புகுந்து * தன்பால்
ஆதரம் பெருக வைத்த அழகனூர் அரங்க மன்றே ? 16 திருவரங்கம்
விரும்பி நின்றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன்றில்லை *
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறையிறை உருகும் வண்ணம் *
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட *
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணிணை களிக்குமாறே ! 17 திருவரங்கம்
இனிதிரைத் திவலை மோத, எறியும் தண் பரவை மீதே *
தனிகிடந்து அரசு செய்யும், தாமரைக் கண்ணன் எம்மான்! *
கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள் *
பனியரும்பு உதிருமாலோ, என் செய்கேன் பாவியேனே ? 18 திருவரங்கம்
குடதிசை முடியை வைத்துக், குணதிசை பாதம் நீட்டி *
வடதிசை பின்பு காட்டித், தென்திசை இலங்கை நோக்கிக் *
கடல் நிறக்கடவு ளெந்தை, அரவணைத் துயிலுமா கண்டு *
உடலெனக்கு உருகுமாலோ! என்செய்கேன் ? உலகத்தீரே. 19 திருவரங்கம்
பாயும் நீரரங்கந் தன்னுள், பாம்பணைப் பள்ளி கொண்ட *
மாயனார் திருநன் மார்வும், மரகத வுருவும் தோளும் *
தூய தாமரைக் கண்களும், துவரிதழ்ப் பவள வாயும் *
ஆயசீர் முடியும் தேசும், அடியரோர்க்கு அகலலாமே? 20 திருவரங்கம்
பணிவினால் மனமதொன்றிப் பவளவா யரங்கனார்க்குத் *
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே ! நீ சொல்லாய் *
அணியினார் செம்பொனாய அருவரை யனைய கோயில் *
மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்கலாமே ? 21 திருவரங்கம்
பேசிற்றே பேசலல்லால், பெருமை யொன்று உணரலாகாது *
ஆசற்றார் தங்கட்கல்லால், அறியலாவானு மல்லன் *
மாசற்றார் மனத்துளானை, வணங்கி நாமிருப்ப தல்லால் *
பேசத் தானாவ துண்டோ, பேதை நெஞ்சே ! நீ சொல்லாய் 22 திருவரங்கம்
கங்கையில் புனிதமாய, காவிரி நடுவு பாட்டுப் *
பொங்கு நீர் பரந்து பாயும், பூம்பொழி லரங்கந் தன்னுள் *
எங்கள் மாலிறைவ னீசன், கிடந்ததோர் கிடக்கை கண்டும் *
எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே. 23 திருவரங்கம்
வெள்ள நீர் பரந்து பாயும், விரிபொழி லரங்கம் தன்னுள் *
கள்வனார் கிடந்தவாறும், கமலநன் முகமும் கண்டும் *
உள்ளமே ! வலியை போலும், ஒருவனென்று உணர மாட்டாய் *
கள்ளமே காதல் செய்து, உன் கள்ளத்தே கழிக்கின்றாயே. 24 திருவரங்கம்
குளித்து மூன்றனலை யோம்பும் குறிகொள் அந்தணமை தன்னை
ஒளித்திட்டேன் * என் கணில்லை நின் கணும் பத்தனல்லேன் *
களிப்பது என் கொண்டு ? நம்பீ ! கடல்வண்ணா ! கதறுகின்றேன் *
அளித்தெனக் கருள் செய் கண்டாய் அரங்கமா நகருளானே! 25 திருவரங்கம்
போதெலாம் போதுகொண்டு உன்பொன்னடி புனையமாட்டேன் *
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன் *
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் * அது தன்னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே ! என் செய்வான் தோன்றினேனே ? 26 திருவரங்கம்
குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டோடித் *
தரங்க நீரடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன் *
மரங்கள் போல் வலிய நெஞ்ச வஞ்சனேன் நெஞ்சு தன்னால் *
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே. 27 திருவரங்கம்
உம்பரால் அறியலாகா ஒளியுளார், ஆனைக்காகி *
செம்புலா லுண்டு வாழும், முதலை மேல் சீறி வந்தார் *
நம்பரமாய துண்டே? நாய்களோம் சிறுமை யோரா *
எம்பிராற்கு ஆட் செய்யாதே, என் செய்வான் தோன்றினேனே. 28 திருவரங்கம்
ஊரிலேன் காணியில்லை, உறவு மற்றொருவ ரில்லை *
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன், பரம மூர்த்தி ! *
காரொளி வண்ணனே ! என் கண்ணனே ! கதறுகின்றேன் *
ஆருளர் ? களைகண் அம்மா ! அரங்கமா நகருளானே ! 29 திருவரங்கம்
மனத்திலோர் தூய்மை யில்லை, வாயிலோரின் சொலில்லை *
சினத்தினால் செற்றம் நோக்கித், தீவிளி விளிவன் வாளா *
புனத்துழாய் மாலையானே! பொன்னிசூழ் திருவரங்கா ! *
எனக்கினிக் கதியென் சொல்லாய்? என்னை யாளுடைய கோவே ! 30 திருவரங்கம்
தவத்துளார் தம்மிலல்லேன், தனம் படைத்தாரி லல்லேன் *
உவர்த்த நீர் போல, என்தனுற்றவர்க் கொன்று மல்லேன் *
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன் *
அவத்தமே பிறவி தந்தாய், அரங்கமா நகருளானே ! 31 திருவரங்கம்
ஆர்த்து வண்டலம்பும் சோலை அணி திருவரங்கந் தன்னுள் *
கார்த்திர ளனைய மேனிக் கண்ணனே ! * உன்னைக் காணும்
மார்க்க மொன்றறிய மாட்டா, மனிசரில் துரிசனாய *
மூர்க்கனேன் வந்து நின்றேன், மூர்க்கனேன் மூர்க்கனேனே. 32 திருவரங்கம்
மெய்யெல்லாம் போக விட்டு விரிகுழலாரில் பட்டுப் *
பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன் வந்து நின்றேன் *
ஐயனே ! அரங்கனே ! உன்னரு ளென்னு மாசை தன்னால் *
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே. 33 திருவரங்கம்
உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவானுணர் வொன்றில்லாக் *
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு *
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந்து அறிதி யென்று *
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே. 34 திருவரங்கம்
தாவியன்று உலகமெல்லாம், தலைவிளாக் கொண்ட எந்தாய் ! *
சேவியேன் உன்னை யல்லால், சிக்கெனச் செங்கண் மாலே ! *
ஆவியே! அமுதே !, என்த னாருயி ரனைய எந்தாய் ! *
பாவியேன் உன்னை யல்லால், பாவியேன் பாவியேனே. 35 திருவரங்கம்
மழைக்கு அன்று வரை முனேந்தும் மைந்தனே ! மதுரஆறே ! *
உழைக்கன்றே போல நோக்க முடையவர் வலையுள் பட்டு *
உழைக்கின்றேற்கு என்னை நோக்கா தொழிவதே !* உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி ! அரங்கமா நகருளானே ! 36 திருவரங்கம்
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ், திருவரங்கத்து ளோங்கும் *
ஒளியுளார் தாமே யன்றே, தந்தையும் தாயுமாவார் *
எளியதோ ரருளுமன்றே, என் திறத்து எம்பிரானார் *
அளிய நம் பையல் என்னார், அம்மவோ கொடியவாறே ! 37 திருவரங்கம்
மேம்பொருள் போகவிட்டு, மெய்ம்மையை மிக உணர்ந்து *
ஆம் பரிசு அறிந்து கொண்டு, ஐம்புல னகத் தடக்கிக் *
காம்பறத் தலை சிரைத்து, உன் கடைத்தலை யிருந்து வாழும் *
சோம்பரை உகத்தி போலும், சூழ்புன லரங்கத்தானே ! 38 திருவரங்கம்
அடிமையில் குடிமை யில்லா, அயல் சதுப்பேதிமாரில் *
குடிமையில் கடமைப் பட்ட, குக்கரில் பிறப்பரேலும் *
முடியினில் துளபம் வைத்தாய் ! மொய்கழற்கு அன்பு செய்யும் *
அடியரை உகத்தி போலும், அரங்கமா நகருளானே ! 39 திருவரங்கம்
திருமறு மார்வ !, நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து *
மருவிய மனத்தராகில், மாநிலத் துயிர்க ளெல்லாம் *
வெருவுறக் கொன்று சுட்டிட்டு, ஈட்டிய வல்வினைய ரேலும் *
அருவினைப் பயன துய்யார், அரங்கமா நகருளானே. 40 திருவரங்கம்
வானுளார் அறியலாகா வானவா ! என்பராகில் *
தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் ! என்பராகில் *
ஊனமாயினகள் செய்யும், ஊனகாரகர்க ளேலும் *
போனகம் செய்த சேடம் தருவரேல், புனிதமன்றே. 41 திருவரங்கம்
பழுதிலா ஒழுகலாற்றுப், பலசதுப்பேதி மார்கள் *
இழி குலத்தவர்க ளேலும், எம்மடியார்க ளாகில் *
தொழுமின் நீர் கொடுமின் கொண்மின் என்று, நின்னோடும் ஒக்க *
வழிபட அருளினாய் போல், மதிள் திருவரங்கத்தானே. 42 திருவரங்கம்
அமரவோ ரங்கமாறும், வேதமோர் நான்குமோதி *
தமர்களில் தலைவராய, சாதி யந்தணர்க ளேலும் *
நுமர்களைப் பழிப்பராகில், நொடிப்பதோ ரளவில் ஆங்கே *
அவர்கள் தாம் புலையர் போலும், அரங்கமா நகருளானே. 43 திருவரங்கம்
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்*
எண்ணிலா வூழியூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப *
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணறா ! * உன்னை என்னோ? களைகணாக் கருதுமாறே. 44 திருவரங்கம்
வளவெழும் தவள மாட மதுரை மாநகரந் தன்னுள் *
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்கமாலைத் *
துளவத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப்பொடி சொல் *
இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே. 45 திருவரங்கம்
திருமாலை முற்றும்
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்