ஶ்ரீ:
ஶ்ரீமதே ராமானுஜாய நம:
திருப்பல்லாண்டு
Continued…..
- அண்டக்குலத்துக்கதிபதியாகிஅசுரர் இராக்கதரை
இண்டக்குலத்தை எடுத்துக்களைந்த இருடீகேஶன் தனக்கு
தொண்டக்குலத்திலுள்ளீர் வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே
பதவுரை –
அண்டக்குலத்துக்கு – அண்டங்களின் சமூகத்துக்கு
அதிபதி ஆகி – நியமிப்பவனாகி
அசுரர் – அசுரர்களும்
இராக்கதரை – ராக்ஷசர்களுமாகிற
இண்டக்குலத்தை – நெருங்கின கூட்டத்தை
எடுத்து – திரட்டி
களைந்த – ஒழித்த
இருடீகேஶன் தனக்கு – இந்த்ரியங்களுக்கு அதிபதியான எம்பெருமானுக்கு
தொண்டக்குலத்திலுள்ளீர் – அடிமை செய்பவர்கள் குலத்திலே
உள்ளீர் – உள்ளவர்களான நீங்கள்
வந்து – எங்கள் கோஷ்டிக்கு வந்து
அடி – அச்சுதனுடைய திருவடிகளை
தொழுது – சேவித்து
ஆயிர நாமம் – அவனுடைய ஆயிரம் பெயர்களையும்
சொல்லி – வாயாரச் சொல்லி
பண்டைக்குலத்தை – புருஷோத்தமனிடம் சென்று மற்றொரு
பயனைப் பெற்று அகலுபவர்களாயிருந்த பழைய ஜன்மத்தை
தவிர்ந்து – நீக்கி
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மின் – பலகால் மங்களாஶாஸனம் செய்யுங்கள்
அவதாரிகை –
ஐந்தாம் பாட்டு. (அண்டமித்யாதி) – முற்பட அனன்ய ப்ரயோஜனரை அழைத்தார். கேவலரும் ஐஶ்வர்யார்த்திகளும் ப்ரயோஜனாந்தரபரர்களா யிருக்கச் செய்தேயும் கேவலருடைய துர்கதியைக் கண்டு முந்துற அழைத்தார். இப்பாட்டிலே ஐஶ்வர்யார்த்திகளை அழைக்கிறார்.
வ்யாக்யானம் –
(அண்டக்குலத்துக்கதிபதியாகி ) தேவதைகளுடைய ஐஶ்வர் யத்துக்கெல்லாம் மேலான அண்டாதிபத்யமிறே ஐஶ்வர்யத்துக்கு மேலெல்லை. அந்த ப்ரஹ்மாதிகள் ஈஶ்வரனை ஆஶ்ரயிக்கும் ப்ரகாரம் சொல்லுகிறது. “அண்டாதிபதயே நம:” என்றிறே இப்பதப்ராப்திக்கு ஸாதனமான மந்த்ரம். அந்த அண்டாதிபத்யனாகவிறே ஸர்வேஶ்வரனை அனுஸந்திப்பது. “வ்யாஹரன் மாமனுஸ்மரன்” என்கிறபடியே இம்மந்திரத்தைச் சொல்லவும் நெஞ்சிலே ஐஶ்வர்யவிஶிஷ்டனாக அனுஸந்திக்கவுமாயிறே ஆஶ்ரயண ப்ரகார மிருப்பது. அண்டக்குலத்துக் கதிபதியான ப்ரகாரமேயன்றோ இச்சப்தத்திலுள்ளது. ஆஶ்ரயணப்ரகாரம் தோற்ற இருந்ததில்லையே! என்னில், உதாரனாயிருப்பான் ஒருவன் கையிலே எலுமிச்சைப் பழமிருந்தால் “இது இருந்த அழகென்?” என்று சொன்ன வளவிலே பாவஜ்ஞனாயிருப்பானவன் “கொள்ளலாகாதோ?” என்று கருத்தறிந்து கொடுக்குமிறே. அப்படியே அண்டாதிபத்யத்தாலே அபேக்ஷை உண்டென்று தங்கள் அபேக்ஷையை ஆவிஷ்கரிக்கிறார்கள். இத்தால், ப்ரயோஜனாந்தரபரரைக் குறித்து ‘உதாரா:’ என்னுமவனுடைய ஔதார்யம் ப்ரகாஶிக்கிறது.
(அண்டக்குலத்துக்கு) – “அண்டானாந்து ஸஹஸ்ராணாம்” என்று தொடங்கி “கோடி கோடி ஶதானி ச” என்று அஸங்க்யாதமான அண்டங்களுக்கு நிர்வாஹகனாகையாலே அபேக்ஷித்தால் அபேக்ஷித அண்டங்களை கொடுக்கைக்கு உடைமையைச் சொல்லுகிறது.
(அதிபதி) – உபயவிபூதிக்கும் நிர்வாஹகனாகை. (ஆகி) – ஆஶ்ரிதர் தன்னை அனுஸந்தித்தவளவிலேயாயிருக்கை.
ஐஶ்வர்யார்த்தி ஐஶ்வர்யவிஶிஷ்டனாக அனுஸந்தித்தால் அவ்வளவாயிருக்கும். கைவல்யார்த்தி, அஸ்ப்ருஷ்ட ஸம்ஸாரகந்தனாய் அனுஸந்தித்தால் அவ்வளவாயிருக்கும்.
(அசுரர் இராக்கதரை) – இப்பதத்துக்கு அசுரர்களாலே வேதாபஹாராத் யாபத்துக்களில் களையறுத்துக் கொடுக்கையும் ரக்ஷகனுக்கு பரமிறே. ‘ஆர்த்தன்’ என்றும் ‘அர்த்தார்த்தி’ என்றும் ஐஶ்வர்ய புருஷார்த்தம் இரண்டு முகமாயிறே இருப்பது. அதில் அர்த்தார்த்தியைக் கீழே சொல்லி இவ்வம்ஶத்தாலே ஆர்த்தனைச் சொல்லுகிறது. ஜன்ம ப்ரப்ருதி பரானர்த்தமே பண்ணிப்போருவது இரண்டு வரக்கமிறே. ஸம்பந்தம் ஒத்திருக்க நிரஸனத்திலே இழிகிறது ஆஶ்ரித விரோதிகள் என்றிறே.
(இண்டக்குலத்தை) – மிகவும் நெருங்கின திரளை. “இண்டர்” என்று சண்டாளர். இவர்களை சண்டாளர் என்று சொல்லுகிறது நிஹீனரென்னும் நினைவாலே. உத்கர்ஷத்துக்கு எல்லை பரஸம்ருத்யேக ப்ரயோஜனனாயிருக்கை. நிகர்ஷத்துக்கு எல்லை பரானர்த்தத்திலே யாத்ரையா யிருக்கை. இவ்வாபத்துக்களிலே ‘அசுர ஶத்ரவே நம:’ என்றிறே இவர்களுடைய ஆஶ்ரயணப்ரகாரமிருப்பது.
(எடுத்துக் களைந்த) – “பொல்லாவரக்கனை கிள்ளிக் களைந்தானை” (திருப்பாவை – 13) என்னுமாபோலே ஆஶ்ரிதர் பக்கல் அழல் தட்டாதபடி நிரஸிக்கை.
(‘இலங்கை பாழாளாக) – என்றதும் விபீஷண பரிக்ரஹத்துக்கு ஒரு நோவு வராதபடியிறே. விபீஷண க்ருஹத்துக்கு அழல் தட்டாதபடியிறே லங்காதகனம் பண்ணிற்றுத் திருவடியும்.
(இருடீகேஶன்) – ப்ரயோஜனாந்தரபரருக்கு ஐஶ்வர்யார்த்தரிலே கர்மானுகூலமாக ருசியை பிறப்பிக்கும். தன் பக்கலிலே ந்யஸ்தபரராயிருப்பார்க்கு ஸ்வரூபானுரூபமாக ருசியைப் பிறப்பிக்கும். ஐஶ்வர்யார்த்தமாக அவன் பக்கலிலே கண் வைக்கும்போதே அவன் வடிவழகிலே உறைக்க வையுங்கோள். அவன் ‘மமேதம்’ என்கிற அபிஸந்தியை குலைத்துத் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பிக்கும். அத்தாலே அபேக்ஷித்த ஐஶ்வர்யத்தை விஸ்மரித்து அவன் தன்னையே பற்றலாம்.
(தனக்கு தொண்டக்குலத்திலுள்ளீர்) – இப்படி ஐஶ்வர்யத்தில் ப்ரேமம் போய் பகவத் ப்ரேமயுக்தருடைய திரளிலே உளரான நீங்கள் ‘தொண்டக்குலம்’ என்று தனீயே ஒரு ஸந்தானம்போலே காணும். தேகமே ஸ்வரூபம் என்று இருப்பார்க்கும் ‘ஶேஷத்வமே ஸ்வருபம்’ என்றிருப்பார்க்கும் இத்தனை வாசியுண்டிறே.
இனி, அனன்யப்ரயோஜனராயிருப்பார்க்கு க்ருத்யம் இன்னதென்கிறார் மேல்.
(வந்தடிதொழுது) – திருவடிகளே ப்ரயோஜனமாக வந்து அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி. ஐஶ்வர்யமே ப்ரயோஜனமாய் விஷயானுபவமே யாத்ரையாயிருக்கைத் தவிர்ந்து திருவடிகளை ப்ரயோஜனமாய் அனுகூல வ்ருத்தியே யாத்ரையாய் இருக்கும்படி பாருங்கோள்.
(ஆயிரம் நாமம் சொல்லி) – இரண்டு திருநாமத்தையே நினைப்பதற்கு வேண்டுவது. ‘மமேதம்’ என்றிருந்த காலம் ஜன்மாந்தரமாய்த் தோற்றுமிறே. ஒரு ஜன்மத்திலே த்விஜன்மாவாகி ராஜர்ஷியான விஶ்வாமித்ரன். அந்த ஜன்மத்திலே ப்ரஹ்மரிஷியானானிறே. அவர் தபஸ்ஸாலே வர்ண பேதம் பிறந்தது. இங்கு பகவத் ப்ரஸாதத்தாலே ஸ்வரூப பேதம் பிறந்தது. ‘உனக்கு நான்’ என்றவநந்தரம் முன்பு ‘நான் எனக்கு’ என்றிருந்தவிது வ்யதிரேகமாய் தோற்றுமிறே.
(பல்லாண்டு) – இப்படி அனன்ய ப்ரயோஜனரான நீங்கள் மங்களாஶாஸனம் பண்ணுங்கோள். ப்ரயோஜனாந்தரபரனாய் போந்தவன் நமக்கு ஸம்ருத்தியை ஆஶாஸிக்குமித்தனை பரிவனாதல் பெற்றோமே என்று அவன் குளிர நோக்கும்.
(பல்லாயிரத்தாண்டென்மின்) – பின்னை பல்லாயிரத்தாண்டு என்னுங்கோள். அந்நோக்கழகு நித்ய ஶ்ரீயாய் செல்லவேணுமென்று மங்களாஶாஸனம் பண்ணுங்கோள். உங்களுக்கு இம்மாத்ரத்திலே ஸ்வரூபமும் அத்தாலே ஈஶ்வரனுக்கு ஸம்ருத்தியும் உண்டாகப் பெற்றால் ஆறியிருக்கிறதென்? சடக்கென மங்களாஶாஸனம் பண்ணுங்கோள் என்கிறார்.
- எந்தைதந்தைதந்தைதந்தை தம்மூதப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம்போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை
பந்தனைத்தீர பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே
பதவுரை –
எந்தை – நானும் என் தகப்பனும்
தந்தை – அவனுடைய தகப்பனும்
தந்தை – அவனுடைய தகப்பனும்
தந்தை – அவனுடைய தந்தையும்
தம் மூத்தப்பன் – அவனுக்கு தந்தையும் பாட்டனுமாகி
ஏழ் படிகால் தொடங்கி – ஏழு தலைமுறைகள் தொடங்கி
வந்து – (மங்களாஶாஸனம் பண்ணத்தக்க சமயங்களில் ) வந்து
வழி வழி – முறை முறையாக
ஆட்செய்கின்றோம் – அடிமை செய்கிறோம்
திருவோணத் திருவிழவில் – திருவோணம் என்கிற நாளிலே
அந்தியம்போதில் – (அசுரருடைய பலம் வளரும்) அந்தி வேளையிலே
அரியுருவாகி – நரசிம்ஹ ரூபத்தை உடையனாய்
அரியை – (தன் அடியவனான ப்ரஹ்லாதனுக்கு ) ஶத்ருவான இரணியனை
அழித்தவனை – உருவழித்தவனுக்கு
பந்தனை தீர – (அவனை ஸம்ஹரித்ததனால் உண்டான) ஆயாஸம் தீரும்படியாக
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதும் – காலதத்வ முள்ளவரையில் மங்களாஶாஸனம் செய்வோம்
அவதாரிகை –
ஆறாம் பாட்டு. (எந்தை இத்யாதி) – அனன்யப்ரயோஜனர்க்கும் ப்ரயோஜனாந்தரபரர்க்கும் உண்டான நெடுவாசி அறிந்திருக்கச் செய்தேயும், அனன்யப்ரயோஜனரை அழைத்த ஸமநந்தரம் இவர்களை அழைக்கைக்கடி “உதாரா: ஸர்வ ஏவைதே” என்னுமவன் ஶீலத்தாலும், அவனோடு இவர்களுக்கு உண்டான அவர்ஜனீய ஸம்பந்தத்தாலும். இவர்களுக்கு அவற்றையே நினைத்துத் தேங்காதே புகுரலாம்படியிறே இருப்பது. ஆகையாலே, அனன்யப்ரயோஜனரை அழைத்தவோபாதி இவர்களையும் அழைத்தாராய் நின்றார் கீழ். இதில் வாழாளில் அழைத்த அனன்யப்ரயோஜனரை , தங்கள் ஸ்வரூபத்தையும் ஸ்வரூபானுரூபமான வ்ருத்தியையும் சொல்லிக்கொண்டு வந்து புகுர, அவர்களைக் கூட்டிக் கொள்கிறார். ‘ஏழாட்காலம் பழிப்பிலோம்’ என்று ப்ரயோஜனாந்தரபரரைக் குறித்துத் தாமருளிச்செய்த தம்முடைய திரளுக்குண்டான ஏற்றத்தை புகுருகிறவர்கள் தங்களுக்குண்டாகச் சொல்லிக்கொண்டு வந்து புகுருகிறார்கள். தந்தாம் ஏற்றம் சொல்லிக்கொண்டு வந்து புகுருகை ஸாத்விகருக்கு யுக்தமோ? என்னில், ஆழ்வாருடைய திருவுள்ளம் பயம் கெடுகைக்காகச் சொல்லுகிறார்களாகையாலே யுக்தம். “பன்னகாஶனமாகாஶோ பதந்தம் பக்ஷி சேவிதே வைநதேயமஹம் ஶக்த: பரிகந்தும் ஸஹஸ்ரஶ:’ என்று திருவடி ஸ்வஶக்தியைச் சொன்னானிறே முதலிகளுடைய பயம் ஶமிக்கைக்காக.
வ்யாக்யானம் –
எந்தை – தானும் தகப்பனுமாக இருவர்.
தந்தை தந்தை தந்தை – என்று ஒரு மூவர்
தம் மூத்தப்பன் – ‘தம்’ என்று முடிந்தவனை அனுபாஷிக்கிறது. மூத்தப்பன் – ‘அப்பன்’ என்று தமப்பனார். ‘மூத்தப்பன்’ என்று பாட்டனார். ஆகையாலே இங்கே இருவர். ஆக, எழுவரையும் சொல்லுகிறது. ஆழ்வார் “ஏழாட்காலம் பழிப்பிலோம் நாங்கள்” என்று திரள அருளிச் செய்தார். இவர்களும் “ஏழ்படிகால்” என்று திரளச் சொல்லா நின்றார்கள். பிரித்துச் சொல்லுகிற இதுக்கு பலமென்? ஸ்வஸந்தாநத்தில் மங்களாஶாஸனம் பண்ணிப் போந்தவர்கள் பக்கலுண்டான ப்ரீத்யதிஶயத்தாலே சொல்லுகிறார்கள். ‘ஸ ஹி வித்யாதஸ்தம் ஜனயதி தச்ச்ரேஷ்டம் ஜன்ம கரீயான் ப்ரஹ்மத: பிதா’ என்று வித்யா ஸந்தாநத்தை கொண்டாடுமாபோலே “பிதரம் மாதரம் தாரான்” என்று த்யாஜ்யமான யோனி ஸந்தாநத்தை கொண்டாடுதல் யுக்தமோ? என்னில், யுக்தம். கொண்டாடுகைக்குப் ப்ரயோஜனம் பகவத் ஸம்பந்தமாகையாலே. வித்யா ஸந்தாநத்திலும் பகவத் விமுகர்கள் த்யாஜ்யரல்லரோ? என்னில்,
(ஏழ்படிகால் தொடங்கி) – அர்த்த க்ரமத்தாலே ஏழையும் சொல்லச் செய்தேயும் திரளச் சொல்லுகிறது ஸ்வஸந்தாநத்திலுண்டான ஆதராதிஶயத்தாலே.
(வந்து) – மங்களாஶாஸனம் பண்ணுகைக்கு யோக்யமான தசைகளிலே வந்து
(வழி வழி ஆட்செய்கின்றோம்) – முறை முறையாக தப்பாமே அடிமை செய்கின்றோம் இத்தால் இம்மங்களாஶாஸநத்துக்கு விச்சேத்யம் பிறந்ததில்லை என்கை. த்ரிபுருஷ விச்சித்தியாலே அப்ராஹ்மண்யம் சொல்லுமாபோலே மங்களாஶாஸன விச்சித்தியால் வைஷ்ணவத்வ ஹானி சொல்லும் குறை எங்கள் ஸந்தானத்தில் இல்லை என்கிறார்கள். “யஸ்ய வேதஶ்ச வேதீ ச விச்சித்யேதே த்ரிபூருஷம் ஸ வை துர்ப்ராஹ்மணோ ஜ்ஞேய: ஸர்வ கர்ம பஹிஷ்க்ருத:” என்னக் கடவதிறே. வழி வழி என்று ஶாஸ்த்ரமார்க்கத்தாலும் ஶிஷ்டாசாரத்தாலும் என்றுமாம். “ஶாந்தி ஶாந்தி ஶாந்தி:” என்றும், “பஶ்யேம ஶரதஶ்ஶதம்” என்றும், “மங்கலானி ப்ரயுஞ்சானா” என்றும் சொல்லக்கடவதிறே.
(ஆட்செய்கின்றோம்) – ஆட்செய்கையாவது, திருப்பல்லாண்டு பாடுகையிறே. மேலே “பந்தனை தீர பல்லாண்டு” என்றத்தை வ்ருத்தியாகச் சொல்லுகையாலே.
இதுக்குக் கீழ், தங்களுடைய ஸந்தாநத்தின் ஏற்றம் சொன்னார்களாய், மேல் தங்களுடைய வ்ருத்திவிஶேஷம் சொல்லுகிறார்கள்.
(திருவோணத்திருவிழவில்) – விஶேஷித்து திருநக்ஷத்ரம் சொல்லாதவிடத்து சொல்லும் இதுவே திருநக்ஷத்ரமாகக் கடவது. “திருவோணம்” என்கிறது ஜன்ம நக்ஷத்ரமென்னில் உகவாதாரறிந்து அபிசரிப்பார்களென்று அஞ்சி, ‘ “திருவோண மென்கிற திருநாளிலே” என்று மறைத்துச் சொல்லுகிறார்.
(அந்தியம்போதில்) – தேவர்களுக்கு பலம் க்ஷீணமாய் அசுரர்களுக்கு பலம் வர்த்திக்கும் ஸமயமிறே.
(அரியுருவாகி) – ஒரு கால விஶேஷம் வேண்டாதே ஸர்வ காலமும் மங்களாஶாஸனம் பண்ணவேண்டும்படியான வடிவை உடையனாய் “நாரஸிம்ஹ வபு: ஶ்ரீமான்” என்றும், “அழகியான்தானே அரியுருவம்தானே” என்றும் (நான்முகன் திரு – 22) “நரங்கலந்த சிங்கமாய்” (இரண். திரு – 84) என்றும் சொல்லக்கடவதிறே.
(அரியை அழித்தவனை) – அரி – ஶத்ரு. ஸஹஜ ஶத்ருவான ஹிரண்யனைக் குற்றுயிராக்கி விடாதே உருவழித்தவனை.
“சுகிர்ந்தெங்கும் சிந்த பிளந்த” (மூன்.திரு- 95) என்னக் கடவதிறே. கொண்டாடுவர் என்னுமத்தாலே .
(பந்தனை தீர) – துஷ்ட ப்ரக்ருதியான ஹிரண்யன் உடலைக்கீண்டு பொகடுகையால் வந்த அனுக்கம் தீர. திருவவதரித்த திவஸத்தில் உண்டான அபதானமாகையாலே அனுக்கம் என்கிதிறே.
(பல்லாண்டு) – அனுகூலர் வாயாலே ஒருகால் மங்களாஶாஸனம் பண்ண அவ்வஸ்துவினுடை அனுக்கம் போய் நித்யமாய்ச் செல்லுமென்றிறே இவர்கள் நினைவு.
(பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே) – ஒருகால் பல்லாண்டு என்றத்தால் பர்யாப்தி பிறவாமையாலே காலதத்வம் உள்ளதனையும் நித்யமாய்ச் செல்லவேண்டுமென்று மங்களாஶாஸனம் பண்ணுகையே எங்களுக்கு வ்ருத்தி என்கிறார்கள்.
- தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ்திருசக்கரத்தின்
கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்றுகுடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரம்தோளும் பொழிகுருதி
பாயசுழற்றிய ஆழிவல்லானுக்குபல்லாண்டு கூறுதுமே
பதவுரை –
தீயில் – அக்னி, சூரியன் முதலிய பொருள்களைக் காட்டிலும்
பொலிகின்ற – மிகவும் விளங்குகிற
செம் சுடர் – சிவந்த ஒளியை உடையவனாய்
ஆழி – வட்டமாக
திகழ் – ப்ரகாஶிக்கின்ற
திருச் சக்கரத்தின் கோயில் – ஶ்ரீ சுதர்ஶனாழ்வானுடைய இருப்பிடத்தில்
பொறியாலே – சின்னத்தாலே
ஒற்றுண்டு நின்று – அடையாளம் செய்யப்பட்டவராய் நின்று
குடிகுடி ஆட்செய்கின்றோம் – அடிமை செய்வதற்காக வந்தோம்
மாயப்பொருபடை – வஞ்சனையால் போர் செய்யும் சேனையை உடைய
வாணனை – பாணாசஸுரனுடைய
ஆயிரம் தோளும் – ஆயிரம் தோள்களிலிருந்தும்
பொழி குருதி பாய – பொழியா நின்றுள்ள ரத்த வெள்ளம் பாயும்படியாக
சுழற்றிய – சுழற்றப் பெற்ற
ஆழி – திருவாழியாழ்வானை
வல்லானுக்கு – ஏந்தி நிற்க வல்லவனுக்கு
பல்லாண்டு கூறுதும் – திருப்பல்லாண்டு பாடுகிறோம்.
அவதாரிகை –
ஏழாம் பாட்டு. (தீயிற் பொலிகின்ற ) ஏடு நிலத்திலே இவராலே ஆஹூதரான கைவல்யார்த்திகள் தங்கள் ஸ்வபாவத்தைச் சொல்லிக் கொண்டு வர, அவர்களோடே ஸங்கதராகிறார். இவர்களை அழைத்தபோது “வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ” என்று, நீங்கள் பற்றின புருஷார்த்தத்தை விட்டு வாருங்கோள் என்றும், “நமோ நாராயணாய” என்று அனன்ய ப்ரயோஜனராய் வாருங்கோள் என்றும், “நாடு நகரமும் நன்கறிய” என்று விஶேஷஜ்ஞர் பரிக்ரஹிக்கும் படியாகவும், அவிஶேஷஜ்ஞர் உபேக்ஷிக்கும்படியாகவும் வாருங்கோள் என்றிறே அவர்களை அழைத்தது. அதில் க்ஷுத்ர புருஷார்த்தத்தை விடுகையும் அனன்யப்ரயோஜனராகையும் நம்முடைய க்ருத்யம்.
அனுகூலர் பரிக்ரஹிக்கைக்கும், ப்ரதிகூலர் விடுகைக்கும் செய்ய அடுப்பதென்? என்று பார்த்து, வைஷ்ணவ சிஹ்னமான திருவிலச்சினையை தரிக்கவே த்யாகோபாதானங்கள் இரண்டும் ஸித்திக்குமென்று பார்த்து அத்தைத் தரித்துக்கொண்டு வந்தோம் என்கிறார்கள்.
வ்யாக்யானம் –
(தீயில் பொலிகின்ற செஞ்சுடராழி) – என்ற வைஷ்ணவ கோஷ்டியிலே புகுரப்பண்ணின உபகார ஸ்ம்ருதியாலே ஆழ்வானை கொண்டாடுகிறார்கள். தீயில் பொலிகின்ற – ‘தீ’ என்கிற ஶப்தம் சந்த்ராதித்யாதி தேஜ: பதார்த்தங்கள் எல்லாவற்றிர்க்கும் உபலக்ஷணம். அதிற்காட்டில் தேஜஸ்ஸு வர்த்திக்கையாகிறது “அத்யர்கானல தீப்தம் தத்ஸ்தானம்” என்கிற பரமபதத்தில் தேஜஸ்ஸு மிக்கிருக்கக் கடவது. ‘ஆதித்யாதி தேஜஸ்ஸுகளிற்காட்டில் அவனுடைய திவ்யமங்கள விக்ரஹ தேஜஸ்ஸு மிக்கிருக்கக் கடவது’. அதுக்கும் ப்ரகாஶகமாயிறே திருவாழியாழ்வானுடைய தேஜஸ்ஸு இருப்பது. “வடிவார் சோதி வலத்துறையும் சுடராழி” என்னக்கடவதிறே. “தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி” என்கிறபடியே அவனுடைய தேஜஸ்ஸாலே ஸர்வமும் விளங்காநின்றதென்னா நிற்க, திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு இவன் ப்ரகாஶகனாம்படி என்? என்னில்,
(செஞ்சுடர்) – காளமேகநிப ஶ்யாமமான வடிவுக்கு இருட்டறையில் விளக்கேற்றினாற்போலே பரபாக ரூபத்தாலே வந்த ப்காஶத்தைச் சொல்லுகிறது.
(ஆழி திகழ் திருச்சக்கரம்) – இட்டளத்தில் பெரு வெள்ளம்போலே புறம்பு போக்கற்று தன்னிலே மண்டலாகாரமாய்க் கொண்டு விளங்காநின்றுள்ள திருவாழியாழ்வான் என்கை.
(சக்கரத்தின் கோயில்) – ஆழ்வான் எழுந்தருளியிருக்கிற மண்டலாகாரமான வாஸஸ்த்தலம்
(பொறியாலே ஒற்றுண்டு நின்று) – அதாகிறது, சிஹ்னத்தாலே சிஹ்னிதராய் நின்று திருவிலச்சினையைத் தரித்த பின்பிறே இவன் ஜன்மாந்தரத்தில் போகாதே ஸுஸ்த்திரனாகப் பெற்றது. பகவதங்கீகாரமும் இதுண்டானாலிறே அதிஶயிப்பது. ஶ்ரீமத் த்வாரகையில் நின்றும் ஆஶ்ரித விரோதி நிரஸநார்த்தமாக எழுந்தருளியிருக்கிற போது திருவாஶல் காக்கின்ற முதலிகள் ‘மீண்டு எழுந்தருளுகிறவளவும் இங்கு புகுவார் ஆர்? அல்லாதார் ஆர்? என்று விண்ணப்பம் செய்ய “சக்ராங்கிதா: ப்ரவேஷ்டவ்யா: யாவதாகமனம் மம, நாமுத்ரிதா: ப்ரவேஷ்டவ்யா: யாவதாகமனம் மம” என்று இந்த லக்ஷணமுடையார் யாவர் சிலர், அவர்கள் நிஶ்ஶங்கமாக புகுரக்கடவர்கள். அல்லாதாரை பாவ பரீக்ஷை பண்ணி புகுரவிடக்கடவது என்றானிறே க்ருஷ்ணன். இதுதான் ஈஶ்வர ஸ்வீகாரத்துக்கும் உடலாய், இவன் பண்ணின பாபத்தை அனுஸந்தித்து க்ரூரமாகப் பார்க்கக்கடவ யமாதிகளும் அஞ்சும்படியா யிருப்பதொன்றிறே. “சக்ராதி தாரணம் பும்ஸாம் பரஸம்பந்தவேதனம் பதிவ்ரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம்” என்று பகவத் ஸம்பந்தத்துக்கு ஜ்ஞாபகமாயிறே இருப்பது.
(குடி குடி ஆட்செய்கின்றோம்) – “ஸபுத்ரபௌத்ரஸகண:” என்கிறபடியே ஸந்தானமாக அடிமை செய்யக் கடவோமாய் வந்தோம். இப்படி அனன்யார்ஹராயிருப்பார் செய்யும் அடிமையாவது திருப்பல்லாண்டு பாடுகையிறே.
எந்த அபதாநத்துக்கு நீங்கள் மங்களாஶாஸனம் பண்ணுவது? என்னில்,
(மாயப் பொருபடை இத்யாதி) – எங்களை புகுர நிறுத்தின ஆழ்வானுடைய வீரப்ரகாஶகமான துறையிலே திருப்பல்லாண்டு பாடக்கடவோம் என்கிறார்கள். (மாயப் பொருபடை வாணனை) – ஆஶ்சர்யமாய் போரும் ஸேனையையுடைய வாணன் என்னுதல், ஆஶ்சர்யமாக பொரும் ஆயுதத்தை உடைய வாணன் என்னுதல். “மாயம்” என்று க்ருத்ரிமமாய், க்ருத்ரிமமான யுத்தத்தை உடையவன் என்னவுமாம்.
(ஆயிரம் தோளும் பொழி குருதிபாய) – ஆயிரம் தோள்களும் மதகு திறந்தாற்போலே ரத்தவெள்ளம் குதிகொண்டு பூமி பரப்படைய பரம்பும்படி. பொழிதல் – சொரிதல். இதுக்கு இவன் பண்ணின வ்யாபாரத்தளவேது? என்னில்,
(சுழற்றிய) – திருவாழியை வீச வேண்டியதில்லை. சுழற்றின வித்தனை. அவன் ஒருகால் திருவாழியை சுழற்ற வாணனுடைய தோள்கள் ஆயிரமும் ஒரு காலை மலைமுடிகள் போலே முறிந்து விழுந்தன. வாணனுடைய தலையை அறுத்தொழிந்தது குற்றம் போராமையன்று, உஷை பித்ருஹீனை ஆகாமைக்காகவும், தேவதாந்தர பஜனம் பண்ணுவார்க்குப் பலமிது என்னுமிடத்துக்கு மச்சமாகவும். அதாவது, “பரிவின்றி வாணனை காத்தும்” என்று ப்ரதிஜ்ஞை பண்ணி, யுத்தத்திலே இவனைக் காட்டிக் கொடுத்து, ஸபரிகரனாய்க் கொண்டு முதுகு காட்டிப் போனான் ரக்ஷகன். ரக்ஷ்யபூதன் தோள் துணியுண்டான். “உன்னை ரக்ஷிக்கப்புக்கு நான் பட்டதோ” என்றும், “உன்னை ஆஶ்ரயித்து நான் பட்டதோ” என்றும் இருவரும் கூட கூட்டிக்கொண்டுக் கதறுகையிறே பலமாய்விட்டது.
(ஆழிவல்லானுக்கு) – “வில் வல்லான்” “வாள் வல்லான்” “தோள் வல்லான்” என்னுமாபோலே “யஸ்ய ஸா ஜனகாத்மஜா” என்கிறபடியே பிராட்டியை எனக்கென்ன இட்டுப் பிறத்தல், திருவடித் தோளிலே நல்தரிக்கவிருத்தல், கைபேராமல் திருவாழியைப் பிடித்தல் செய்யுமதாய்த்து ஸர்வாதிகத்துக்கு லக்ஷணம்.
(பல்லாண்டு கூறுதுமே) – அத்தசையிலே அடிமை செய்த ஆழ்வானுடைய வீரஶ்ரீக்கும், அடிமை கொண்ட க்ருஷ்ணனுடைய வீரஶ்ரீக்கும் மங்களாஶாஸனம் பண்ணுவாரைப் பெற்றதில்லை. அவ்விழவு தீர இன்றிருந்து திருப்பல்லாண்டு பாடுகிறோம் என்கிறார்கள்.
- நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடுகாதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்தென்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடை நாகப் பகை கொடியானுக்குப்பல்லாண்டு கூறுவனே
பதவுரை –
நெய் இடை – நெய்யின் நடுவிலிருக்கும்
நல்லது ஓர் சோறும் – பாவஶுத்தியுடன் இடப்பட்டதாய், ஒப்பற்ற சுவையை உடையதான ப்ரஸாதத்தையும்
நியதமும் – எப்போதும்
அத்தாணிச் சேவகமும் – பிரிவில்லாத சேவையையும்
கை – (எம்பெருமான்) தன் திருக்கையால் இட்ட
அடைக்காயும் – வெற்றிலைப் பாக்கையும்
கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் – கழுத்துக்கு ஆபரணமும், காதுக்குக் குண்டலமும்
மெய்யிட – உடம்பிலே பூசத்தக்க
நல்லது ஓர் சாந்தமும் – பரிமளம் நிறைந்த ஒப்பற்ற சந்தனமும்
தந்து – கொடுத்து
என்னை – (மிகவும் நிஹீனனான) என்னை
வெள் உயிர் ஆக்கவல்ல – ஶுத்த ஸ்வபாவனாக ஆக்கவல்ல
பையுடை – பணங்களை உடைய
நாகம் – ஸர்ப்பத்துக்கு
பகை – விரோதியான கருடனை
கொடியானுக்கு – கொடியாக உடையவனுக்கு
பல்லாண்டு கூறுவன் – மங்களாஶாஸனம் பண்ணக்கடவேன்.
அவதாரிகை –
எட்டாம் பாட்டு. (நெய்யிடை இத்யாதி) அண்டக்குலத்திலே அழைத்த ஐஶ்வர்யார்த்திகள் இசைந்துவர, அவர்களைக் கூட்டிக்கொள்கிறார். வாழாளிலழைத்த அனன்யப்ரயோஜனர் தங்களேற்றத்தைச் சொல்லிக்கொண்டு புகுந்தார்கள் எந்தை தந்தை தந்தையிலே. ஏடு நிலத்திலழைத்த கைவல்யார்த்திகள் தாங்கள் திருந்தி புகுந்தமைச் சொன்னார்கள். தீயில் பொலிகின்றதிலே இவர்கள் தாங்கள் க்ஷுத்ர புருஷார்த்தத்தை அபேக்ஷிக்க, அனன்யப்ரயோஜனர்க்கு முகம் கொடுத்தாற்போலே முகம் தந்து, அந்த ஐஶ்வர்யத்தைத் தந்த ஔதார்யத்துக்குத் தோற்று, ஐஶ்வர்யத்தை விட்டு ஶுத்த ஸ்வபாவராய் இவ்வுதாரனை மங்களாஶாஸனம் பண்ணுவோம் என்று புகுருகிறார்கள். அண்டக் குலத்திலே அண்டாத்யக்ஷத்வம் ஐஶ்வர்யத்துக்கு மேலெல்லையாய் பேசிற்று. அவ்வைஶ்வர்யார்த்திகள் பேச்சான இப்பாட்டிலே, ஶரீரத்துக்கு தாரக, போஷக, போக்யங்களை இரந்தவர்களாய், அத்தை அவன் தந்தானாகப் பேசுகிறது. இதற்கு நிபந்தனம் இன்று ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து புகுருகிறவர்கள் ஆகையாலே அதனுடைய க்ஷுத்ரதைத் தோற்றப் பேசுகிறார்கள். அண்டாத்யக்ஷனான ப்ரஹ்மாவுக்கும் தாரக, போஷக, போக்யங்களிலேயிறே ப்ரயோஜனம். அதற்கு மேற்பட்டு பகவத் விபூதியை “எனக்கு” என்கிற அபிமானத்தால் வந்த ஸ்வரூப ஹானியேயிறே பலம்.
வ்யாக்யானம் –
(நெய்யிடை) ‘இடை’ என்று நிறையாய், நெய்யோடொக்க சோறு என்னுதல். ‘இடை’ என்று நடுவாய், நெய்யிடையிலே சில சோறுமுண்டென்னுதல். இத்தால் போஷக ப்ரசுரமான தாரக த்ரவ்யத்தைத் தருமென்கை. (நல்லதோர் சோறும்) சோற்றுக்கு நன்மையாவது இட்டவன் ‘இட்டோம்’ என்றிருத்தல், உண்டவன் ‘இதுக்கென் செய்வோம்’ என்றிருத்தல் செய்யாதபோது. அதாவது, தாய் இட புத்ரன் உண்ணும் சோற்றுக்கு இவ்விரண்டும் இல்லையிறே.
(ஓர் சோறு) – இப்பாவஶுத்தியே அன்றிக்கே விலக்ஷண ரஸோபேதமாயிருக்கை. அதாகிறது, அஹங்காரோபேதமன்றிக்கே பக்த்யுபஹ்ருதமாயிருக்கை. ஈஶ்வரனும் “பக்தானாம்” என்கிற நினைவாலேயும் வத்ஸலனாயுமிறே இடுவது. அனன்யப்ரயோஜனன் ஸ்வாமி விஷயத்தில் இடும் சோறு எங்ஙனே இருக்கும்? என்னில், “விதுரான்னானி புபுஜே ஶுசீதி குணயந்தி ச” என்னும்படியிறே பாவனமுமாய் போக்யமுமாய் இருக்கை. “ஶுசீனி” என்கிறது, ஶுத்தங் களாய் இருக்கை. சோற்றுக்கு ஶுத்தியாவது, துர்யோதனன் தன் ஐஶ்வர்யத்தைப் பற்ற அபிமானித்தான். பீஷ்மன், ஜ்ஞானாதிகனென்று அபிமானித்தான். த்ரோணன் வர்ணத்தால் அதிகனென்று அபிமானித்தான். இவை ஒன்றுமின்றிக்கே பக்த்யுபஹ்ருதமாயிருக்கை.
(நியதமும்) – அதாகிறது, ஐஶ்வர்யம் ஈஶ்வரனே கொடுக்கிலும் அஸ்த்திரமாய் இருக்கக்கடவது. அது அழிந்தவன்றும் அவ்வைஶ்வர்யத்தை சமாதானம் பண்ணி கொடுக்குமவனாகையாலே ‘நியதமும்’ என்கிறது. இத்தாலேயிறே ‘அர்த்தார்த்தி’ என்றும் ‘ஆர்த்தன்’ என்றும் ஐஶ்வர்யத்துக்கு இரண்டு வகை சொல்லுகிறது. அங்ஙனன்றிக்கே தேவதாந்தரங்களைப் பற்றி ஈஶ்வரனை இல்லை செய்யுமன்றும் தந்முகேன சோறிடுமவனென்கை. ஸர்வேஶ்வரனிட்ட சோற்றைத் தின்று அவனை இல்லை செய்யும் க்ருதக்னனிறே ஸம்ஸாரிகள். தன்னை இல்லை செய்யுமன்றும் ரக்ஷிக்கும் உதாரனிறே ஸர்வேஶ்வரன்.
(அத்தாணிச் சேவகமும்) – “அத்தாணி” என்று பிரியாமை. “சேவகம்” என்று சேவை. ஐஶ்வர்யார்த்திக்கும் அனவரத பாவனையும் அந்திம ஸ்ம்ருதியும் அனன்ய ப்ரயோஜனரோபாதி கர்த்தவ்யமிறே. ஆனால், ஐஶ்வர்ய ஸாதனத்தையும் ‘தந்து’ என்று ப்ரயோஜனத்தோடொக்க சொல்லுவானென்? என்னில், வெள்ளுயிரானபின்பு சொல்லுகிறார்களாகையாலே அந்த ஸாதனமும் ஸ்வயம் ப்ரயோஜனமாயிறே இருப்பது. அனன்யப்ரயோஜனருக்கு ஸ்வயம் ப்ரயோஜனமான சேவை சாதனமாகக்கிடீர் க்ஷுத்ரமான ஐஶ்வர்யத்தை தந்ததென்கை.
(கையடைக்காயும்) – தாரக போஷகங்கள் கீழே சொல்லிற்றாய், மேல் போக்ய பதார்த்தங்களைத் தந்தபடி சொல்லுகிறது. திருக்கையாலே இட்ட வெற்றிலை பாக்கென்று. இவர்கள் பக்கல் கௌரவத்தாலே இட்ட சீர்மையைச் சொல்லுகிறது. ஶேஷபூதன் ஶேஷியைக் குறித்து இடும் ப்ரகாரத்தாலேயிறே ஶேஷியானவன் ஶேஷபூதனுக்கு இடுவது.
(கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்) – தேஹத்தை உத்தேஶ்யம் என்றிருக்குமவனாகையாலே தன்னுடம்பை அலங்கரித்து, அத்தை அனுபவித்திருக்குமவனிறே ஐஶ்வர்யார்த்தி. பகவத்பரனாய் ஈஶ்வரனை அலங்கரித்து ஸதாதர்ஶனம் பண்ணியிருக்கிறானல்லனே. ஸ்வரூபத்தை உணர்ந்து ஜ்ஞான வைராக்ய பக்திகளை ஸ்வரூபத்துக்கு ஆபரணமாக நினைத்திருக்கிறானல்லனே? “கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்” என்று விஶேஷிப்பான் என்? என்னில், தன் கண்ணுக்கு அவிஷயமாய், நாட்டார் கொண்டாடுமதுவே தனக்கு ப்ரயோஜனமாயிருக்கையாலே, அவயவாந்தரங்களில் அங்குல்யாதி ஆபரணங்கள் தன் கண்ணுக்கு விஷயமாயிருக்குமிறே. பெருமாள் மீண்டெழுந்தருளினவளவிலே இந்திரன் வரக்காட்டி ஹாரத்தை பிராட்டியும் தாமுமிருந்து திருவடிக்குப் பூட்டினாற்போலே ஈஶ்வரன் பரிந்து “இது கழுத்துக்காம், இது காதுக்காம்” என்று திருக்கையாலே பூட்டின ஆபரணமும் “ப்ரதேஹி உபகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமினி” என்கிறபடியே இந்திரன் கொடுத்து வரக்காட்டின ஹாரத்தை பெருமாள் வாங்கி பார்த்தருளி, பிராட்டிக்குக் கொடுக்கிறபோது, அத்தை வாங்குகிறவள் பெருமாளை ஒரு திருக் கண்ணாலும் திருவடியை ஒரு திருக்கண்ணாலும் பார்த்து வாங்கினாள். “ப்ரேக்ஷிதஜ்ஞாஸ்து கோஸலா:” என்று பார்வையில் கருத்தறியுமவராகையாலே அவனுக்குக் கொடுக்கலாகாதோ என்றருளினார். “ஶுபகே” அடியார் ஏற்றமறிந்து கொண்டாடுகைக்கீடான ஸௌபாக்யமுள்ளது உனக்கே யன்றோ? என்ன, “உம்முடைய திருவுள்ளத்தாலேயன்றோ நான் கொடுக்கிறது?” என்று பிராட்டி விண்ணப்பம் செய்ய, நான் முற்பாடனாகப் பெறாமையாலே “உன்னுடைய உகப்பின் கார்யத்தைக் கொடுக்கலாகாதோ” என்றார். இப்படி அனன்யப்ரயோஜனனுக்கு ஆதரித்துப் பூட்டினாப் போலேயாய்த்து க்ஷுத்ரனான என்னை ஆதரித்துப் பூட்டிற்றும்.
(மெய்யிட) – திருவடிகளில் ருசி பிறந்தபின்பாகையாலே “உடம்பு த்யாஜ்யம்” என்கிற நினைவு தோன்ற குத்ஸித்துச் சொல்லுகிறபடி.
(நல்லதோர் சாந்தமும்) – சாந்துதான் இதுக்குத் தரமாகப் பெற்றதோ ‘ஸர்வகந்த:’ என்கிற வடிவுக்கு ஸத்ருஶமாக? குப்ஜை ஆதரித்துச் சாத்தின சாந்துபோலே இருக்கும் சாந்தை அன்றோ எனக்கிட்டது? ‘ஸுகந்தமேதத்’. குப்ஜை கம்ஸனுக்கு பரணியோடே சாந்து கொண்டு போகா நிற்க “வாரீர்! பெண் பிள்ளாய்! நமக்கும் நம் அண்ணனுக்கும் சாந்திட வல்லீரோ?” என்ன, அவ்வடிவையும் விருப்பையும் கண்டு, ஸ்த்ரீத்வப்ரயுக்தமான சாபல்யத்தால் மறுக்கமாட்டிற்றிலள். ‘இவர்கள் இடைப் பிள்ளைகள். சாந்தின் வாசி அறிய மாட்டார்கள். என்று ஆக்கனாயிருப்பதொன்றை இட்டாள். அத்தைப் பார்த்து நாற்றம் கொளுத்தினபடி ‘அழகிது. தரமழகிதன்று’ என்ன அதுக்கு மேலே ஒரு சாந்தையிட ‘ராஜார்ஹம்’ இது கம்ஸனுக்கு செருக்கிலே பூசலாமித்தனை. வாசி யறிந்து பூசுவார்க்கு சத்ருஶமல்ல. வழக்கனான சாந்தென்னவுமாம். “ருசிரம்’ ஸௌகந்த்யம்” கிடக்க நிறமழகியதாயிருந்ததென்ன “இவர்கள் இடைப்பிள்ளைகள் என்றிருந்தோம். சாந்தின் வாசி அறிந்தபடி என்”? என்று ஆதரித்துப் பார்க்க, “ருசிரானனே” உன் முகத்திலாதரத்துக்கு ஸத்ருஶமாயிருக்க வேண்டாவோ நீ இடும் சாந்தும்?” என்ன, அவளும் தலையான சாந்தை இட “ஆவயோர்காத்ர ஸத்ருஶம்” எங்களுடம்புக்கு ஸத்ருஶமான மேதக வஸ்துவை இட்டு மர்த்தித்துத்தா என்றான். அதாவது, “பூசும் சாந்து” (திருவா. மொழி – 4.3.2) என்கிறபடியே “உன்னுடைய ஆதரத்தாலே ஸம்ஸ்க்ருதமாக்கித்தா” என்றபடி. இப்படி இவள் ஆதரித்து சாத்தின மாளிகைச் சாந்தைக் கிடீர் தம் திருக்கையாலே என்னுடம்பிலே பூசிற்று.
(தந்து) – தந்தபோதைத் திருமுகத்தில் கௌரவத்திலும் ஔதார்யத்திலும் தோற்று, ஐஶ்வர்யத்தை விட்டு, அவன்தானே அமையும் என்னும்படியாய்த்துத் தந்தது.
(என்னை வெள்ளுயிராக்கவல்ல) – “சோரேண ஆத்மாபஹாரிணா” என்கிறபடியே ஆத்மாபஹாரம் பண்ணி, அதனாலே க்ஷுத்ர ப்ரயோஜனகாமராய் ஸம்ஸாரியாய் போந்தவென்னை. வெள்ளுயிராக்கவல்ல – முன்பு க்ஷுத்ரனாய் போந்தானொருவன் ஶுத்த ஸ்வபாவனானானென்று தெரியாதபடி ‘அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரிலே ஒருவன்” என்னலாம்படியாய்த்து விஷயீகரித்தது. (வல்ல) – தன்னதொரு ஸ்வபாவ விஶேஷத்தாலே வஸ்துவை வஸ்த்வந்தரமாக்க ஶக்தனென்கை.
(பையுடை இத்யாதி) – மங்களாஶாஸனத்துக்கு விஷயமேது என்ன, அவ்விஷயத்தைச் சொல்லுகிறார். தன்னோட்டை ஸ்பர்ஶ ஸுகத்தாலே விகஸித பணமான நாகத்தினுடைய பகையுண்டு பெரிய திருவடி, அத்தைக் கொடியாக உடையானுக்கு. அநந்தஶாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களாஶாஸனம் பண்ணுகிறேன் என்கை. தகட்டில் அழுத்தின மாணிக்கம்போலே திருவநந்தாழ்வானோட்டைச் சேர்த்தியால் வரும் அழகு நித்யமாகவேணுமென்றும், ஏதேனுமொன்றை அபேக்ஷித்து வந்தவர்களையும் எனக்காக்கிக் கொள்ளவல்லேன் என்று கொடிகட்டியிருக்கிற ஶக்தி நித்ய ஶ்ரீயாய் செல்லவேணுமென்றும் திருப்பல்லாண்டு பாடுகிறேன் என்கிறார். அனன்ய ப்ரயோஜனரும் கைவல்யார்த்திகளும் சங்கதராகிறவிடத்தில் ஸமூகமாக பேசினார். இதில் ஐஶ்வர்யார்த்தியை ஏகவசனத்தாலே பேசுவானென்? என்னில், அவர்கள் திரள் பரிச்சின்னமாய், ஐஶ்வர்யார்த்திகள் திரள் அபரிச்சின்னமாகையாலே ஓரூருக்கு ஒருத்தர் வார்த்தை சொல்லுமாபோலே சொல்லுகிறார்.
- உடுத்துக் களைந்த நின் பீதகவாடைஉடுத்துக்கலத்ததுண்டு
தொடுத்தத் துழாய்மலர் சூடிக்களைந்தனசூடுமித்தொண்டர்களோம்
விடுத்தத்திசைக்கருமம் திருத்திதிருவோணத் திருவிழவில்
படுத்தப்பைந்நாகணை பள்ளிகொண்டானுக்குப்பல்லாண்டு கூறுதுமே.
பதவுரை –
உடுத்து – திருவரையில் உடுத்து
களைந்த – கழித்த
நின் – ஸ்வாமியான உன்னுடைய
பீதகவாடை – திருப்பீதாம்பரத்தை
உடுத்து – உடுத்தும்
கலத்தது – (நீ அமுது செய்த) கலத்தில் மிகுந்திருப்பதை
உண்டு – உண்டும்
சூடிக்களைந்தன – (உன்னால்) சூட்டிக்கொள்ளப்பட்டு களையப்பட்டதும்
தொடுத்த – (உன்னுடைய அடியரான எங்களால்) தொடுக்கப்பட்டதுமான
துழாய்மலர் – திருத்துழாய் மலர்களை
சூடும் – சூட்டிக்கொள்ளும்
இத்தொண்டர்களோம் – இப்படிப்பட்ட அடியார்களாயிருக்கும் நாங்கள்
படுத்த – படுக்கப்பட்டு
பை – (அதனால்) பணைத்தப் படங்களை உடைய
நாக அணை – திருவநந்தாழ்வானாகிற படுக்கையீலே
பள்ளிகொண்டானுக்கு – திருக்கண் வளர்ந்தருளுகிற உனக்கு
பல்லாண்டு கூறுதும் – திருப்பல்லாண்டு பாடுகிறோம்
அவதாரிகை –
ஒன்பதாம் பாட்டு. (உடுத்தித்யாதி) – வாழாளிலே அழைத்து எந்தை தந்தையிலே அனன்யப்ரயோஜனரை பாஶுரத்தாலே அவர்களோடே கூடித் திருப்பல்லாண்டு பாடுகிறார் இதில்.
வ்யாக்யானம் –
(உடுத்து) திருவரையில் ஸுஸங்கதமாக சாத்துகையாலும் திருவரையிலே முசிக்கையாலும் தத்ஸம்பந்தம் தோற்றும்படி. ஒற்று மஞ்சளாலும் மாளிகைச் சாந்தாலும் சிஹ்னிதமாம்படி உடுத்து, இவை இத்தனையும் ப்ரார்த்தநீயமாம்படி இருப்பார் சிலர் நாங்கள். ஶேஷிக்கு மங்களாஶாஸனமாகையும் தத்ஸம்பந்தங்கள் தோற்றின விஷயங்களை உடைத்தாகையும் ஶேஷபூதனுக்கு ஸ்ம்ருதி விஷயமாய்க் கொண்டு ஸர்வ காலமும் ப்ரியகரமாயிறே இருப்பது. (களைந்த) – ஆஸனபேதத்திலே கழித்தால் பொகடும் ஸ்த்தலம் தங்கள் தலையாம்படி இருக்கை. இதுவும் ஶேஷபூதனுக்கு ப்ரார்த்தநீயமிறே.
இங்ஙன் ப்ரார்த்தநீயமாக வேண்டுகிறதுக்கு ஹேது சொல்லுகிறது மேல்.
(நின் பீதகவாடை) – வகுத்த ஶேஷியதாகையாலே சாத்தும் திருபரியட்டமடையத் திருப்பீதாம்பரத்தினுடைய ஆவேஶா வதாரமாகை. (நின் பீதகவாடை) “ஸ்ரக் வஸ்த்ராபரணைர் யுக்தம் ஸ்வானுரூபைரனுபமை: சின்மயை: ஸ்வப்ரகாஶைஶ்ச அன்யோன்ய ருசிரஞ்சிதை:” ‘ என்று சேதனகோடியிலேயிறே திருப்பீதாம்பரத்தைச் சொல்லுகிறது.
(உடுத்து) – இதிறே அனன்யப்ரயோஜனருக்கு ஆபரணம். அங்ஙனன்றிக்கே , “பக்தானாம்” என்றிருக்குமவனாகையாலே இதுதான் ஶேஷியளவிலே வந்தவாறே ப்ரதிபத்தி வேறுபட்டிருக்கும். ராஜாக்களுடைய இரட்டைப் பிடித்து தங்கள் அரையிலே உடுத்திருந்து யோக்யமாம்படி பண்ணிக் கொடுப்பார்கள். அதுவாய்த்து இவனுக்கு நினைவு.
(கலத்ததுண்டு) – அமுது செய்து கை வாங்கின தளிகை மாற்றினால் ப்ரஸாதம் போஜ்யம். “த்வதீயபுக்தோஞ்சித ஶேஷபோஜினா” என்னக் கடவதிறே. ப்ரஸாதமே தாரகமாயிருப்பார் சிலர் நாங்கள். “குரோருச்சிஷ்டம் புஞ்சீத” என்று விதி ப்ரேரிதராய்க் கொண்டு ப்ரதிபத்தி பண்ணுமவர்கள் ஸ்வரூப ஜ்ஞானமில்லாதார். ஸ்வரூப ஜ்ஞானமுடையார் தத் ஸித்யர்த்தமாக ப்ரதிபத்தி பண்ணுவார்கள். பகவத் ப்ரேமயுக்தர் ஸ்வயம் ப்ரயோஜனமென்றிருப்பார்கள். இச்சேஷ்டத்வகாஷ்டையான ததீயருடைய ப்ரஸாதம் ‘தருவரேல்’ என்கிறபடியே அதிக்ருதா அதிகாரமாயிருக்கும். ஸர்வ ஸாதாரண மானதாகையாலே, ப்ரயோஜனாந்தரபரனுக்கும் போக்யமாயிறே பகவத் ப்ரஸாதமிருப்பது.
(தொடுத்தவித்யாதி) – திருத்துழாய் பறிக்கும் போதும், தொடுக்கும்போதும் “அவன் சாத்தியருளப் புகுகிறான்” என்னும் ஆதரத்தாலே ஸம்ஸ்க்ருதமாய், சாத்திக் கழித்தால் சூடுவது எங்களுக்கு உத்தேஶ்யம். சுவடர் பூச்சூடும்போது புழுகிலே தோய்த்துச் சூடுமாபோலே தத்ஸ்பர்ஶத்தாலே விலக்ஷணமாயிருக்குமென்கை. சிலர் சூடிக்கொடுத்த மாலையின் சுவடறியு மவனாகையாலே சூடிக் கொடுக்கிறானிறே.
(இத்தொண்டர்களோம்) – இப்படிப்பட்ட அடியார்களிறே நாங்கள். எமக்கென்று உடுத்தல், ஜீவித்தல், சூடுதல் செய்யுமவர்களன்றிக்கே, அவன் கழித்தவைக் கொண்டு தேஹயாத்ரையாம்படி இருக்குமவர்களிறே நாங்கள்.
ஸ்வரூப ஸித்யர்த்தமாக அத்தலையிலே உச்சிஷ்டங்களை ஆகாங்க்ஷித்து “புகையிலுண்பன்” என்றிருக்குமத்தனையோ? என்னில்.
(விடுத்த இத்யாதி) – ஸ்வாமி சந்தேஶகாரிகளாய்க் கொண்டு இப்படி தேஹயாத்ரை நடத்துமவர்களிறே நாங்கள். (விடுத்தத் திசைக் கருமம் திருத்தி) – “க்ரியதாம்” என்கிற சந்தேஶமே தாரகமாக ஏவிய கார்யத்தைச் செய்து தலைக்கட்டுகை. திசைக்கருமம் திருத்துகையாவது, அத்திக்குக்கு வேறொருவரை ஏவவேண்டாதபடி செய்து தலைக்கட்டுகை. ஸ்வாமி ஏவின கார்யத்தைக் குறையச் செய்யுமவன் அதமன். அத்தைக் குறையாமல் தலைக்கட்டுமவன் மத்யமன். அதுக்குமேலே அதுக்கு அவிருத்தமான கார்யங்களையும் விசாரித்துச் செய்து தலைக்கட்டுமவன் உத்தமன். “கார்யே நிர்திஷ்டே யோ பஹுன்யபி ஸாதயேத் பூர்வகார்யாவிரோதேன ஸ கார்யம் கர்துமர்ஹதி” என்கிற திருவடியிறே. அவனாகிறான். “பிராட்டியிருந்த இடம் அறிந்துவா” என்று விட, இருந்தவிடமும் அறிந்து, “அவன் பலமிருந்தபடி என்?” என்று பெருமாள் கேட்டருளினால் “அறிந்திலேன்” என்னவொண்ணாது என்று அத்தலையில் பலபரீக்ஷையையும் பண்ணி ஊரிலரணையும் தலையழித்து, மூலையடியே போம்படி பண்ணி வந்தானிறே.
(திருவோணத் திருவிழவில்) – ஏவின கார்யத்தைக் குறைவறச் செய்தவளவிலும் பர்யாப்தி பிறவாமையாலே திருவவதரித்தருளின திருவோணமாகிற மங்கள திவஸத்திலே என்ன தீங்கு வருகிறதோ என்று மங்களாஶாஸனம் பண்ணி வர்த்திக்குமவர்கள்.
(படுத்தவித்யாதி) – அத்தாலும் பர்யாப்தி பிறவாமையாலே திருவநந்தாழ்வான்மேலே சாய்ந்தபோதை அழகுக்கு கண்ணெச்சில் வாராமைக்கு மங்களாஶாஸனம் பண்ணுகிறார்கள். படுக்கப்பட்டு ஸ்வ ஸம்ஸ்லேஷத்தாலே விகஸிதமாகாநின்றுள்ள பணத்தை உடையனாய், மென்மை, குளிர்த்தி, நாற்றம் என்கிறவற்றை ப்ரக்ருதியாக உடைய திருவநந்தாழ்வானாகிற படுக்கையிலே கண்வளர்ந்தருளுகிற அழகுக்கு மங்களாஶாஸனம் பண்ணுகிறோம். ஸ்வத:ஸர்வஜ்ஞனையும் மயக்கப் பண்ணுகிற படுக்கை. அவன் ஸம்ஸ்ப்ர்ஶத்தாலே விக்ருதனாகப் பண்ணும் இவனுடைய வடிவும் அவனுடைய வடிவும் “கிடந்ததோர் கிடக்கை” (திருமாலை – 23) என்கிறபடியே பரிச்சேதிக்க வொண்ணாத அழகிலே. கண்வளர்ந்தருளுகிறபோதைக்கழகு ஒரு வெள்ளி மலையிலே காளமேகம் சாய்ந்தாற்போல் கண்வளர்ந்தருளுகிறபோதை பரபாக ரஸத்தை அனுஸந்தித்தால் மங்களாஶாஸனமொழியச் செல்லுமோ? என்கிறார்கள்.
- எந்நாள்எம்பெருமான் உன்றனுக்கடியோம்என்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள்அடிக்குடில் வீடுபெற்றுய்ந்ததுகாண்
செந்நாள் தோற்றி திருமதுரையில்சிலை குனித்து ஐந்தனையப்
பைந்நாகத்தலை பாய்ந்தவனே உன்னைப்பல்லாண்டு கூறுதுமே
பதவுரை –
எம்பெருமான் – எங்களுக்கு ஸ்வாமியானவனே
உந்தனக்கு – (ஸர்வஶேஷியான) உனக்கு
அடியோமென்று – ‘அடிமைப்பட்டவர்கள் நாங்கள்’ என்று
எழுத்துப்பட்ட – அடிமை ஓலை எழுதிக்கொடுத்த
அந்நாள் – நாள் எதுவோ
அந்நாளே – அந்த நாளே
அடியோங்கள் – ஶேஷபூதர்களான எங்களுடைய
குடில் – வீட்டீல் புத்ர பௌத்ராதிகளெல்லாம்
அடி – அடிமைப்பட்டதால்
வீடுபெற்று – கைவல்ய மோக்ஷத்திலிருந்து விடுதலைப் பெற்று
உய்ந்தது – உஜ்ஜீவித்தது
செம் நாள் – அழகியதான திருநாளிலே
தோற்றி – திருவவதாரம் செய்து
திருமதுரையுள் – அழகிய வடமதுரையில்
சிலை குனித்து – (கம்ஸனுடைய ஆயுதஶாலையில்) வில்லை முறித்து
ஐந்தலைய – ஐந்து தலைகளை உடையதாய்
பை – பரந்த படங்களையும் உடைத்தான
நாகம் – காளியனென்னும் நாகத்தின்
தலை – தலையின்மேல்
பாய்ந்தவனே – ஏறிகுதித்தருளின ஸர்வேஶ்வரனே!
உன்னை – உனக்கு
பல்லாண்டு கூறுதும் – மங்களாஶாஸனம் பண்ணக்கடவோம்
அவதாரிகை –
பத்தாம் பாட்டு. (எங்களித்யாதி) கீழிற் பாட்டில் புகுந்த அனன்ய ப்ரயோஜனர் தங்கள் பாரதந்த்ர்யமே ஸ்வரூப மாயிருக்கிற ஏற்றத்தைச் சொல்லிக்கொண்டு புகுந்தார்கள். இதில், ப்ரயோஜனாந்தரபரர் புகுருகிறார்களாகையாலே, தங்கள் பக்கல் அங்ஙன் இருப்பதோர் ஏற்றங்காண விரகில்லாமையாலே, பகவத் ப்ரபாவத்தால் தங்களுக்குப் பிறந்த ஏற்றத்தைச் சொல்லிக்கொண்டு வந்து புகுருகிறார்கள். ஐஶ்வர்யார்த்தியும் சங்கதனாகிற போது “சாந்தமும் தந்தென்னை வெள்ளுயிராக்கவல்ல” என்று பகவத் ப்ரபாவத்தைச் சொல்லிக்கொண்டு வந்திறே புகுந்தது. அவன்தான் நான் அபேக்ஷித்த க்ஷுத்ரபுருஷார்த்தத்தைத் தந்துவைத்து என்னை ஶுத்த ஸ்வபாவனாக்கினான் என்று ஆஶ்சர்யப்பட்டான்.. கைவல்யார்த்திகள் தங்கள் க்ஷுத்ரபுருஷார்த்த ஸம்பந்தம் யாவதாத்மபாவி விநாஶகரமாகையாலே ஆஶ்ரயணவேளையிலே மீட்ட ஆஶ்சர்யத்தைக் கொண்டாடுகிறார்கள்.
வ்யாக்யானம் –
(எந்நாள்) ‘அந்நாள்’ என்ன அமைந்திருக்க ‘எந்நாள்’ என்கிறது வகுத்த ஶேஷி பக்கலிலே க்ஷுத்ர புருஷார்த்தத்தை அபேக்ஷித்த காலமாயிருக்கச் செய்தேயும் “ஸுப்ரபாதா ச மே நிஶா” என்கிறபடியே மங்களாஶாஸனம் பண்ணுகைக்கு யோக்யமாம்படி புகுர நிறுத்தின திவஸமென்று அந்நாளைக் கொண்டாடுகிறார்கள். பகவத் ப்ரபாவம் தான் விஷயீகரி்த்தத் திவஸத்தையும் கொண்டாடும்படி யாயிருக்குமிறே. அவதாரத்தில் ஏற்றம் சொல்லுகிறவளவிலே தஜ்ஜன்யதிவஸமென்று அந்நாளும் கொண்டாடப்பட்டதிறே.
ப்ரயோஜனாந்தரத்தை அபேக்ஷித்து வந்தவன், அது ஒழிந்து அனன்யப்ரயோஜனனாகைக்கு அடியென்? என்னில்,
(எம்பெருமான்) க்ஷுத்ர ப்ரயோஜனத்தை அபேக்ஷித்து நிருபாதிக ஶேஷியான உன் பக்கலிலே வருகையாலே ஸ்வரூப ப்ராப்தமாய் வந்த ஶேஷத்வமே பலித்துவிட்டது. வகுத்த ஶேஷியானாலும் ஆபேக்ஷிதங்களை ஒழிய புருஷார்த்தாந்தரங்களை கொடுக்கும் போது அர்த்தி பக்கலிலே ஒரு கைம்முதல் வேண்டாவோ? என்னில், (உன் தனக்கடியோம் என்றெழுத்துப்பட்ட) ‘அடியோம்’ என்கிற அர்த்தத்துக்கு வாசகமான ஶப்தத்திலே எங்களுக்கு அன்வயமுண்டு. நெஞ்சிலின்றிக்கே இருக்கிலும் வாயிலுண்டான மாத்ரம் கொண்டு தரவல்ல ஶக்தியுண்டிறே உனக்கு. அடிமைக்கு வாசகமான ஶப்தம் கைவல்யார்த்தியுடைய உபாஸனத்திலே உண்டிறே. “ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாமநுஸ்மரன்” என்னக் கடவதிறே. அதவா, ஆரேனும் பக்கலிலே ஏதேனும் ஒன்றை வேண்டிச் செல்லும் நம:ஶப்த ப்ரயோகம் பண்ணக் கடவதாயிறே இருப்பது. அதுவும் ஆத்மயாதாத்ம்ய வாசகமிறே. அதுவே எங்கள் பக்கல் கைம்முதல் என்கிறார்கள்.
‘எம்பெருமான்’ என்கிற ப்ராப்தியாலும் ‘உன்றனக்கு’ என்கிற ஶக்தியாலும் ‘எழுத்துப்பட்ட’ என்கிற ஶப்தமாத்ரத்தாலும் பலிக்கக் கண்டோம் என்கிறார்கள். ‘பட்ட’ என்கிறது, ‘முத்துப்பட்ட’ என்கிறார்போலே. ‘வாழாட்பட்டு’ என்கிறவிடத்தில் அர்த்தத்தினுடைய துர்லபத்வம் சொல்லிற்று. வாசக ஶப்தத்தினுடைய துர்லபத்வம் சொல்லுகிறது. இங்கு. அஹங்காரக்ரஸ்த்தமான ஸம்ஸாரத்துக்குள்ளே தாஸ்ய ப்ரகாஶம் அலப்ய லாபமானாற்போலே பகு ஜல்பம் பண்ணிப் போருகிற வாயிலே நம: ஶப்தமுண்டாகை அலப்யலாபமிறே. (அந்நாள்) ‘எம்பெருமான் உந்தனக்கடியோம் என்று எழுத்துப்பட்ட நாள் – எந்நாள் – அந்நாள்’ என்று அன்வயம். ‘அந்நாளே’ என்கிற அவதாரணத்தாலே அதொழிய எங்கள் பக்கல் ஆனுகூல்ய லேஶமுமில்லை என்று கருத்து.
அத்தால் பெற்றதென்? என்ன, தாங்கள் பெற்ற ப்ரயோஜன பரம்பரைகளைச் சொல்லுகிறார்கள். (அடியோங்கள் இத்யாதி) அடியோங்களைப் பெற்றோம். உஜ்ஜீவிக்கப் பெற்றோம். குடிலும் அடிக்குடிலாகப் பெற்றது. வீட்டை லபிக்கப் பெற்றோம். உஜ்ஜீவிக்கப் பெற்றோம். (அடியோங்கள்) என்கிறார்கள் அஹங்கார க்ரஸ்த்தராய் ததனுகூலமான க்ஷுத்ர புருஷார்த்தத்தை அபேக்ஷித்து உன் திருவடிகளிலே வந்து ஒதுங்கின நாங்கள், அதுபோய் தாஸ்யைக ரஸமாகப் பெற்றோம். (அடிக்குடில்) ‘குடில்’ என்று க்ருஹம். அத்தாலே க்ருஹஸ்த்தரான புத்ர பௌத்ராதிகளிலும் அடியாராகப் பெற்றோம். ‘நல்ல பதத்தால் மனைவாழ்வர்’ (திருவா.மொ – 8.10.11) என்னக் கடவதிறே. எழுதப்பட்டது தங்களளவிலேயாகில் புத்ர பௌத்ராதிகளளவில் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தபடி என்? என்னில், முத்துப்பட்ட துறையைக் காவலிடுமவன் அசல் துறையையும் காவலிடுமாபோலே, ஸம்பந்தி ஸம்பந்திகளளவும் அஹங்கார மமகாரங்கள் புகுராதபடி விஷயீகரித்தான் என்கை.
இவர்கள் ஸங்கதராகிற பாட்டிலும் ‘குடி குடி ஆட்செய்கின்றோம்’ என்றார்களிறே. ஶேஷி ஸந்நிதியிலே ஶேஷபூதர் க்ருஹத்தை ‘குடில் வளைக்க’ என்று சொல்லக் கடவதிறே.
(வீடு பெற்று) – வீட்டை லபித்து. அதாகிறது – அஹங்கார மமகார கார்யமான ஐஶ்வர்ய கைவல்யாதிகளாகிற த்யாஜ்யங்களை விடப்பெற்று, ப்ராப்ய ஸித்தியோபாதி த்யாக ஸித்தியும் ப்ராப்யாந்தர்கதமிறே.
(உய்ந்ததுகாண்) – தாஸ்யம் என்றும் உஜ்ஜீவனம் என்றும் பர்யாயம் போலே காணும். ‘உய்ந்ததுகாண்’ என்று அறியாதாரை அறிவிப்பாரைபோலே சொல்லுகிற இதுக்குக் கருத்தென்? என்னில், உபகரித்து விஸ்மரித்துப் போவது நீ. நீ பண்ணின உபகாரம் நாங்கள் உபதேஶிக்கக் கேளாய் என்கிறார்கள்.
(செந்நாள் இத்யாதி) – ப்ரயோஜனாந்தரங்களை கை விட்டு அனன்யப்ரயோஜனரானிகோளாகில் இனி க்ருத்யமென்? என்னில், உனக்கு மங்களாஶாஸனம் பண்ணுகையே க்ருத்யம் என்கிறார்கள். விஷயமேது? என்ன,
(செம் நாள்) – அவதாரத்துக்கு ஏகாந்தமான நாளாகையாலே அழகிய நாள் என்கிறார்கள்.
(தோற்றி) – அதீந்த்ரியமான விக்ரஹத்தை “ஸகல மனுஜ நயன விஷயதாங்கத:” என்கிறபடியே உகவாதார் கண்ணுக்கும் விஷயமாம்படி தோற்றுவித்து
(திருமதுரையுள்) – அதுதானும் நிர்பயமான அயோத்தியிலன்றிக்கே ஶத்ருவான கம்ஸன் வர்த்திக்கிற ஊரிலே .
(சிலை குனித்து) – அவ்வூரில் தங்கவொண்ணாமையாலே திருவாய்ப்பாடியிலே போய் மறைய வளருகிற நீ, மறித்தும் அவ்வூரிலே புகுந்து கம்ஸனுடைய ஆயுத ஶாலையிலே புக்கு, வில்லை முறித்து பூசலை விளைத்தாய். அனுகூலரடைய ‘என் வருகிறதோ?’ என்று வயிறு பிடிக்க வேண்டும்படியான தசையிலே கம்ஸனுக்கு ‘மறம் பிறக்கும்படி’ சிலுகு படுத்துவதே!
(ஐந்தலைய இத்யாதி) – அது கிடக்க, நிர்ப்பயமாய் வர்த்திக்கிற காலத்திலே பிறந்த ப்ரமாதமே போராதோ வயிறெரிகைக்கு? என்கிறார்கள். (ஐந்தலைய பைந்நாகத்தலை பாய்ந்தவனே) கடிக்கைக்கு அஞ்சு வாயை உடைத்தாய், க்ரோதத்தாலே விஸ்த்ருதமான பணத்தை உடைத்தான ஸர்ப்பாஸ்யத்திலேயன்றோ புக்கது. “ஏகதா து வினா ராமம் க்ருஷ்ணோ வ்ருந்தாவனம் யயௌ” என்று தமயன் ஒருநாள் பேர நிற்க பாம்பின் வாயிலே புகும்படியிறே தீம்பு. “க்ருஷ்ணாவதாரமென்றால் ஆழ்வார்களெல்லாரும் ஒக்கப் பரிவராகி இருப்பார்கள். இதுக்கடி என்?” என்று ஜீயர் பட்டரை கேட்க, “ராமாவதாரத்தில் பிள்ளைகள் தாங்கள் மிடுக்கராய், குணாதிகருமாய், பிதா சம்பராந்தகனுமாய், மந்திரிகள் வஶிஷ்டாதிகளுமாய், ஊர் அயோத்யையுமாய், காலம் நல்லகாலமுமாய், இருக்கையாலே அங்குத்தைக்கு ஓரு பயமுமில்லை. இங்கு, பிறந்த இடம் ஶத்ரு க்ருஹமாய், கம்ஸன் இடம் பார்த்து நலியும் துஷ்ப்ரக்ருதிகளை வரக்காட்டும் க்ரூரனுமாய், தமப்பன் இடையனுமாய், ஊர் இடைச்சேரியாய், பிள்ளைகள் தாங்கள் தீம்பருமாய், காலம் கலிகாலத்தோடு தோள் தீண்டியாய் இருக்கையாலே என் வருகிறதோ என்று பரிகைக்கு ஆழ்வார்களல்லதில்லை காணும்” என்றருளிச் செய்தார்.
(உன்னைப் பல்லாண்டு கூறுதுமே) – இப்படிப்பட்ட உன்னை அனுஸந்தித்தால் மங்களாஶாஸனமொழியத் தரிக்க விரகுண்டோ? என்கிறார்கள்.
- அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன்அபிமானநத் துங்கன்
செலவனைப்போல திருமாலே நானும்உனக்குப்பழவடியேன்
நல்வகையால் நமோநாராயணாவென்றுநாமம் பல பரவி
பல்வகையாலும் பவித்திரனே உன்னைப்பல்லாண்டு கூறுவனே
பதவுரை –
திருமாலே – லக்ஷ்மீ நாதனே
அல்வழக்கு – தவறான வழக்குகளில்
ஓன்றும் இல்லா – சிறிதும் இல்லாதவராய்
அணி – (ஸம்ஸாரத்திற்கு) ஆபரணமான
கோட்டியூர் – திருக்கோட்டியூரிலுள்ளார்களுக்கு
கோன் – தலைவராய்
அபிமானதுங்கன் – ‘’நான் எம்பெருமானுக்கு அடியேன்’ என்னும் அபிமானத்தில் உயர்ந்தவராயுள்ள
செல்வனை போல – செல்வ நம்பியை போல
நானும் – அடியேனும்
உனக்கு – ஸ்வாமியான உனக்கு
பழவடியேன் – பழமையான அடிமையாக இருக்கிறேன்.
நல் வகையால் – அழகிய வகையில்
நமோ நாராயணா என்று – திருமந்திரத்தை அனுசந்தித்து
பல நாமம் – உன்னுடைய பல திருநாமங்களையும்
பரவி – க்ரமமில்லாமல் சொல்லி
உன்னைப் பல்லாண்டு கூறுவன் – உனக்கு மங்களா ஶாஸனம் செய்வேன்.
அவதாரிகை –
பதினொன்றாம் பாட்டு. (அல்வழக்கித்யாதி) அண்டக்குலத்திலே ஆஹூதராய் ‘நெய்யிடை’ என்கிற பாட்டிலே சங்கதரான ஐஶ்வர்யார்த்திகள் பாஶுரத்தாலே திருப்பல்லாண்டு பாடுகிறார்.
வ்யாக்யானம் –
(அல்வழக்கொன்றுமில்லா) வழக்கல்லாதவை அனேகமிறே. தேகத்தில் ஆத்ம புத்தி பண்ணுகை வழக்கல்ல. ப்ரக்ருதே:பரமான ஆத்ம வஸ்துவை ஸ்வதந்த்ரனென்று அனுஸந்திக்கை வழக்கல்ல. தேவதாந்தரங்களில் பரத்வ புத்தி பண்ணுகை வழக்கல்ல. பகவத் பஜநத்துக்கு பலம் ப்ரயோஜனாந்தரமென்றிருக்கை வழக்கல்ல. அனன்ய ப்ரயோஜனனானாலும் உபாயாந்தர ஸாத்யம் என்றிருக்கை வழக்கல்ல. பகவதனுபவத்தை “மமேதம்” என்றிருக்கை வழக்கல்ல. இனி, வழக்காவது, “ஶேஷிக்கு மங்களாஶாஸனம் பண்ணுமதொன்றுமே வழக்கு” என்றாய்த்து அவ்வூரிலுள்ளார் இருப்பது. இதுக்கடி இவர் தங்களுக்கு நிர்வாஹராகவாய்த்து நினைத்திருப்பது. “அணி” என்று ஆபரணமாய், ஸம்ஸாரத்துக்கு ஆபரணமான ஊர் என்கை.
(அபிமான துங்கன்) – அபிமானம் ஶேஷத்வ விரோதியாய் இருக்க, அத்தால் மிக்கிருப்பர் என்பானென்? என்னில், கர்மத்தால் வந்த துர்மானமாய்த்து த்யாஜ்யம். “தாஸோஹம்” என்கிற வைஷ்ணவாபிமானம் உபாதேயமாகையாலே அத்தால் பூர்ணராயிருப்பார் என்கிறது. அதாகிறது – உகந்தருளின நிலத்திலுண்டான குறைவு நிறைவுகளும் தம்மதாயிருக்கை. “செல்வன்” என்று ஸ்வரூப ப்ராப்தமான ஐஶ்வர்யத்தால் குறைவற்றவர் என்கை. அதாகிறது – ஜ்ஞான பக்தி வைராக்யங்களால் குறைவற்றிருப்பார் என்கையும், “லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன:” என்கிறபடியே “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்றிருக்கையும்.
(போல) – “உபமானம் அஶேஷாணாம் ஸாதூனாம்” என்கிறபடியே ஸாத்விகர்க்கு உபமானபூமியாய் இருக்குமவர். இவரை த்ருஷ்டாந்தமாக்கிக் கொண்டு “பழவடியேன்” என்று, முன்பு ஐஶ்வர்யார்த்தியாய் இன்று ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தவன்று சொல்லுகை அனுபபன்னமன்றோ? என்னில், கர்மத்தால் வந்த அஹங்காரம் போனால் தாஸ்யம் ஸர்வாத்மாக்களுக்கும் சத்தா ப்ரயுக்தமாகையாலே சொல்கிறார்கள். அதவா, நைஸர்கிகமான ஜ்ஞானமுடையார்க்கும் இன்று ஆஶ்ரயிக்குமவனுக்கும் வாசி வையாதே விஷயீகரிக்கும் ஈஶ்வராபிப்ராயத்தாலே சொல்லவுமாம்.
(திருமாலே) – ‘இவ்வாத்ம வஸ்து ஒரு மிதுன ஶேஷம்’ என்று ஶேஷத்வ ப்ரதிஸம்பந்தியைச் சொல்லுகிறார்கள். இத்தால் மாதா பித்ரு ஶேஷத்வமும் தேவதாந்தர ஶேஷத்வமும் கர்மோபாதிகமென்கை. அதவா, தேவரீருக்குப் பிராட்டி நிரூபக பூதையாய் இருக்கிறாப்போலே எங்களுக்கும் தாஸ்யம் நிரூபகம் என்கிறார்கள் என்றுமாம்.
(நானும்) – ப்ரயோஜநாந்தரபரதையாலே அநாதிகாலம் அனன்யார்கனாக போந்த நானும், ஶேஷி பக்கலிலே ப்ரயோஜனாந்தரத்தை அபேக்ஷிக்கையாவது – பதிவ்ரதை பர்த்தாவின் பக்கலிலே வ்யபிசாரத்தை அபேக்ஷித்தாற்போலேயிறே.
(உனக்குப் பழவடியேன்) – உனக்கு ஶேஷித்வம் அநாதியானவோபாதி எனக்கு ஶேஷத்வம் அநாதி என்கை. உனக்கு – ப்ரயோஜனாந்தரத்தை அபேக்ஷித்து திருவடியிலே கிட்டினதுவே ஹேதுவாக அனன்யப்ரயோஜனனாக ஆக்கவல்ல உனக்கு.
இந்த ஸ்வரூப ஜ்ஞானம் எவ்வழியாலே பிறந்தது? என்னில், ஸகல வேதாந்த தாத்பர்யமான இந்த ரஹஸ்யத்தாலே பிறந்ததென்கிறார் மேல்.
(நல்வகையால் நமோ நாராயணாயவென்று) . – நாராயணனுக்கே உரியேன் எனக்குரியேன் அல்லேன் என்கை. (நல் வகையால்) முன்பு அர்த்தவிதுரமாக ஜப ஹோமாதி முகத்தாலே பிறந்த அன்வயமடைய
என்றிருக்கிறார்கள். இதுதான் ஸர்வார்த்த ஸாதனமிறே. “நமோ நாராயணேதி மந்த்ர: ஸர்வார்த்த ஸாதக:” என்னக் கடவதிறே.
(நாமம் பல பரவி) – சிலர் இவர்களை அழைக்கிறபோது ‘அடி தொழுது ஆயிரநாமம் சொல்லி’ என்றாரிறே. அத்தையிறே இவர்களும் சொல்லுகிறது. (பரவி) – அக்ரமமாகச் சொல்லி. ஸாதனமானபோதிறே க்ரமாபேக்ஷை உள்ளது. முன்பு “மமேதம்” என்றிருந்தவர்களுக்கு மங்களாஶாஸன யோக்யராம்படி புகுர நிற்கைக்கு இசைவே வேண்டுவது.
(பல் வகையாலும் பவித்திரனே) – ப்ரயோஜனாந்தரபரனான அஶுத்தியைப் போக்கி, அதுக்கடியான அஹங்கார மமகாரங்களாகிற அஶுத்தியைப் போக்கி, ஶேஷத்வாந்தரங்களிலும் மாதா பித்ரு ஶேஷத்வமென்ன, தேவதாந்தர ஶேஷத்வமென்ன, இவ்வோ அஶுத்தியைப் போக்கி புகுர நிருத்தினவனே! ஸ்வரூப ரூப குண விபூதிகளை பார்த்தாலும் பாபஹரன் என்னவுமாம்.
(உன்னைப் பல்லாண்டு கூறுவனே) – ஸௌந்தர்யாதி குணயுக்தனான உன்னை மங்களாஶாஸனம் பண்ணுகிறேன். ஏகவசனத்தாலே, கீழ்ச் சொன்ன புருஷார்த்திகள் மூவர் முகத்தாலும் தாமே திருப்பல்லாண்டு பாடுகிறார் என்றவிடம் தோற்றுகிறது. ஐஶ்வர்யார்த்தி சங்கதனாகிற வளவிலும் ஏகவசனமாகையாலே இங்கேயும் அதுவேயாகிறது என்னவுமாம்.
- பல்லாண்டென்று பவித்திரனை பரமேட்டியைசார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார்நமோ நாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனை சூழ்ந்திருந்துஏத்துவர் பல்லாண்டே.
பதவுரை –
பவித்திரனை – (இயற்கையாகவே) பரிஶுத்தனாய்
பரமேட்டியை – மேலான ஸ்த்தானமான வைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பவனாய்
சார்ங்கமென்னும் – சார்ங்கமென்று திருநாமத்தையுடைய
வில் – வில்லை
ஆண்டான் தன்னை – ஆளும் எம்பெருமானைக் குறித்து
வில்லிபுத்தூர் – ஶ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த
விட்டுசித்தன் – விஷணுசித்தன் என்கிற திருநாமத்தை உடைய பெரியாழ்வார்
பல்லாண்டென்று – ‘நித்யமாய் மங்களம் உண்டாகவேண்டும்’ என்று
விரும்பிய – விருப்பத்துடன் அருளிச் செய்த
சொல் – ஶ்ரீசூக்தியை
நல் ஆண்டு என்று – (பல்லாண்டு பாடத்தக்க ) நல்லகாலம் (நேர்படுவதே) என்று
நவின்று உரைப்பார் – இடைவிடாமல் சொல்லுமவர்கள்
நமோ நாராயணாய என்று – திருமந்திரத்தை அநுஸந்தித்து
பரமாத்மனை – பரமாத்மாவான நாராயணனை
சூழ்ந்து இருந்து – சுற்றிலும் இருந்து
பல் ஆண்டும் – கணக்கற்ற காலங்கள்
பல்லாண்டு ஏத்துவர். – பல்லாண்டு பாடுங்கள்.
அவதாரிகை
நிகமம் (பல்லாண்டென்று இத்யாதி) இப்ரபந்தத்தை அநுஸந்தித்தார்க்கு பலம் சொல்லுகிறதாய்க் கொண்டு மங்களாஶாஸனம் பண்ணுகிறார். அனன்யப்ரயோஜனர்க்கும் தம்மோபாதி பகவத் ப்ரத்யாசத்தி உண்டாகையாலே அவர்களை அழைத்தார். ஐஶ்வர்ய கைவல்யங்களைப் பற்றி ஆஶ்ரயித்தவர்களும் பகவத் ப்ரபாவத்தாலே மங்களாஶாஸனத்துக்கு ஆளாவர்களென்று இப்பரபந்தத்தின் வைபவத்தை அருளிச் செய்கிறார்.
வ்யாக்யானம் –
பவித்திரனை – ஔபாதிமாகவன்றிக்கே ஶுத்தனானவனை ‘ஶாஶ்வதம் ஶிவம்’ என்னக்கடவதிறே. இத்தால் அஶுசி பதார்த்த ஸம்யோகத்தாலே தத்கத தோஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனாகையும், ஸ்வஸம்பந்தத்தாலே அஶுத்தன் ஶுத்தனாகையுமாகிற பரம பாவநத்வம் சொல்லுகிறது. அதாகிறது – சேதனாசேதனங்களில் வ்யாபித்தாலும் தத்கத தோஷம் ஸ்பர்ஶியாதொழிகையும், நிர்ஹேதுகமாக நித்ய ஸம்ஸாரியை நித்ய சூரிகளோடே ஒரு கோவையாக்குகையும்.
(பரமேட்டியை) – பரமே ஸ்த்தானே ஸ்த்திதனானவனை
(ஶார்ங்கமென்னும் இத்யாதி) – இது மஹிஷி, பூஷண, ஆயுத, பரிஜனங்களுக்கும் உபலக்ஷணம். அங்குள்ளாரை இட்டு தன்னை நிரூபிக்க வேண்டும்படியிறே அவர்களுக்கு தன்னோடுண்டான ப்ரத்யாசத்தி. (ஶார்ங்கமென்னும் வில்லாண்டான் தன்னை) – ஶார்ங்கமென்னும் வில் என்றேயாய்த்து அதற்கு ப்ரஸித்தி. மத்தகஜத்தை ஆளுமவன் என்னுமாபோலே அத்தை ஆளும் என்றாய்த்து இவனுக்கு ஏற்றம். ‘ஆலிகந்தம் இவாகாஶம் அவஷ்டப்ய மஹத்தனு:’ என்னக்கடவதிறே. இத்தால், – மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா’ என்கிற இடத்திலே பவித்ரதையை நினைத்து ‘பரமேட்டியை’ இத்யாதியாலே இரண்டாம் பாட்டில் சொன்ன நித்ய விபூதி யோகத்தை நினைக்கிறது.
(வில்லிபுத்தூர் விட்டுசித்தன் – பல்லாண்டென்று – விரும்பிய சொல்) இப்போது பகவத் ப்ராப்தி காமர் ப்ரயோஜநாந்தரபரர் என்று அடைவடைவே வந்து நின்றாரில்லையிறே. அவ்வவருடைய பாஶுரங்களாலே தாமே அருளிச் செய்தார் என்னுமிடம் தோற்றுகிறதிறே. தம்முடைய வார்த்தையாகத் தாம் தலைக்கட்டுகையாலே அவர்கள் பாஶுரமாக அங்கு சொல்லிற்று. ப்ரயோஜநாந்தரபரர்க்கும் பகவத் ப்ரபாவத்தாலே மங்களாஶாஸனம் பண்ணுகைக்கு யோக்யதை உண்டென்றும் இவ்வர்த்தத்தினுடைய ஸ்த்தைர்யத்துக்காகவும் மங்களாஶாஸனத்தில் தமக்குண்டான ஆதராதிஶயம் தோற்றுகைக்காகவுமாம். (வில்லிபுத்தூர் விட்டுசித்தன்) – அவ்வூரில் பிறப்பாலேயாய்த்து பகவத் ப்ரத்யாசத்தி. பகவத் ப்ரத்யாசத்தியாலேயாய்த்து மங்களாஶாஸன யோக்யமான ப்ரேமாதிஶயம். ‘விட்டுசித்தன்’ என்கிற திருநாமம் உண்டாய்த்து, ஆழ்வார் விடினும் தான் விடமாட்டாதே தன் பேறாக இவர் திருவுள்ளத்தை விமாட்டாமையாலே. ‘விட்டுசித்தன் மனத்தே கோயில்கொண்ட கோவலன்’ என்னக்கடவதிறே.
(நல்லாண்டென்று) இப்பாஶுரம் சொல்லுகைக்கு ஏகாந்தமான காலமென்று காலத்தைக் கொண்டாடி, ‘அத்ய மே ஸபலம் ஜன்ம’ என்னக் கடவதிறே. கண்டதடைய ‘மமேதம்’ என்று போந்த அநாதிகாலம் போலன்றிக்கே பகவத் ஸம்ருத்திக்கு மங்களாஶாஸனம் பண்ணக்கடவதாம்படி வந்ததொரு காலம் சேதனனுக்கு துர்லபமிறே.
(நவின்றுரைப்பார்) – நவிலுகை – பயிலுகை, இடைவிடாதே உரைக்கை.
(நமோ நாராயணாயவென்று) – அநாதிகாலம் ‘மமேதம்’ என்றத்தைத் தவிருகையும், ‘தவேதம்’ என்கையும். இத்தால் மங்களாஶாஸன யோக்யதைச் சொல்லுகிறது.
(பல்லாண்டும்) – காலமெல்லாம் யாவதாத்மபாவி என்கிறது. காலக்ருத பரிணாமமில்லாத தேஶத்தில் ஆண்டையிட்டுச் சொல்லுகிறது அந்த பரிணாமமுள்ள தேஶத்தில் வர்த்திக்கிறவராகையாலே.
(பரமாத்மனை) – தனக்கு மேலின்றிக்கே தம்மை யொழிந்ததோரடங்க ஸ்வாதீனமாம்படி இருக்கிறவனை. இத்தால் அமங்களுக்கு அவகாஶமின்றிக்கே இருக்கையாலே ஒருவனுடைய மங்களாஶாஸநத்தால் ஓரேற்றமுண்டாக வேண்டாதே இருக்குமவனை.
(சூழ்ந்திருந்தேத்துவர்) –‘நம: புரஸ்தாத் அத ப்ருஷ்டதஸ்தே நமோஸ்து தே’ என்கிறபடியே முன்பே நில்லா முறுவலை அனுபவித்து, அதிலே ஈடுபடும். பின்பே நில்லா பின்னும் பிறகு வாளியுமான அழகை அனுபவித்து அதிலே ஈடுபடும். இப்படி சுழியாறுபட நிற்கச் செய்தே கால் வாங்க வொண்ணாதபடி அழகு அதிஶங்கையை விளைத்து மங்களாஶாஸனத்திலே மூட்டுமென்கை.
பவித்திரனை பரமேட்டியை ஶார்ங்கமென்னும் வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் பல்லாண்டென்று விரும்பிய சொல் நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று பரமாத்மனை சூழ்ந்திருந்து பல்லாண்டும், பல்லாண்டென்று ஏத்துவர் என்றன்வயம்.
திருப்பல்லாண்டு வ்யாக்யானம் முற்றிற்று
பெரியாழ்வார் திருவடிகளே ஶரணம்
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே ஶரணம்