ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பொதுத்தனியன்கள்
மணவாள மாமுனிகள் தனியன்
(அழகிய மணவாளன் அருளிச் செய்தது)
ஶ்ரீஶைலேஶதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்|
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்||
குருபரம்பரை தனியன்
(கூரத்தாழ்வான் அருளிச் செய்தது)
லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம்|
அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||.
எம்பெருமானார் தனியன்
(கூரத்தாழ்வான் அருளிச் செய்தது)
யோநித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ்ததிதராணித்ருணாயமேநே|
அஸ்மத்குரோர்பகவதோஸ்யதயைகஸிந்தோ:
ராமாநுஜஸ்யசரணௌ சரணம்ப்ரபத்யே.||
நம்மாழ்வார் தனியன்
(ஆளவந்தார் அருளிச் செய்தது)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்|
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா.||
(ஸ்ரீ பராசரபட்டர் அருளிச்செய்தது)
பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்டநாத
ஸ்ரீபக்திஸார குலஶேகர யோகிவாஹாந்|
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ரமிஶ்ராந்
ஸ்ரீமத் பராங்குஶமுநிம் ப்ரணதோஸ்மிநித்யம்.||
*******
ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்விய பிரபந்தங்களுள்
முதலாயிரம்
பெரியாழ்வார் திருமொழிகளின்
தனியன்கள்
(நாதமுனிகள் அருளிச்செய்தது)
குருமுகமநதீத்ய ப்ராஹவேதாநஶேஷாந்
நரபதிபரிக்லுப்தம் ஶுல்கமாதாதுகாம:|
ஶ்வஶுரமமரவந்தயம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுலதிலகம்தம் விஷ்ணுசித்தம் நமாமி.II
(பாண்டியபட்டர் அருளிச்செய்தவை)
மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று* ஒருகால்
சொன்னார் கழற்கமலஞ் சூடினோம்* – முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம்* கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து.
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று
ஈண்டியசங்க மெடுத்தூத* – வேண்டிய
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்*
பாதங்கள்யாமுடையபற்று
பெரியாழ்வார் திருமொழி
திருப்பல்லாண்டு
முதல் பத்து
முதல் திருமொழி
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு *
பலகோடி நூறாயிரம் *
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா ! * உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு. 1.1.1
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு*
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு *
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு *
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்ச ன்னியமும் பல்லாண்டே. 1.1.2
வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் *
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் *
ஏழாட்காலம் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர்வாழ் இலங்கை *
பாழாளாகப்படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 1.1.3
ஏடுநிலத்தில்இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து *
கூடுமனமுடையீர்கள்வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ *
நாடும்நகரமும்நன்கறிய நமோ நாராயணாயவென்று *
பாடுமனமுடைப்பத்தருள்ளீர் ! வந்து பல்லாண்டு கூறுமினே. 1.1.4
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை *
இண்டக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன் தனக்கு *
தொண்டக்குலத்திலுள்ளீர் வந்துஅடிதொழுது ஆயிரம் நாமம் சொல்லி *
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே. 1.1.5
எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி *
வந்துவழிவழியாட் செய்கின்றோம் * திருவோணத்திருவிழவில் *
அந்தியம்போதில் அரியுருவாகி அரியையழித்தவனை *
பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே. 1.1.6
தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின் *
கோயிற்பொறியாலே ஒற்றுண்டுநின்று குடிகுடியாட் செய்கின்றோம் *
மாயப்பொருபடைவாணனை ஆயிரம் தோளும்பொழிகுருதி
பாய * சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 1.1.7
நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும் அத்தாணிச்சேவகமும் *
கைஅடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும் *
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னை வள்ளுயிராக்கவல்ல *
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே. 1.1.8
உடுத்துக்களைந்த நின்பீதக வாடைஉடுத்து கலத்ததுண்டு *
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம் *
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில் *
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 1.1.9
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோமென்று எழுத்துப் பட்ட
அந்நாளே * அடியோங்கள்அடிக்குடில்வீடுபெற்று உய்ந்தது காண் *
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து * ஐந்தலைய
பைந்நாகத்தலைப்பாய்ந்தவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. 1.1.10
அல்வழக்கொன்றுமில்லாஅணிகோட்டியர்கோன் * அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே ! நானுமுனக்குப் பழவடியேன் *
நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி *
பல்வகையாலும்பவித்திரனே ! உன்னைப் பல்லாண்டு கூறுவனே. 1.1.11
பல்லாண்டென்றுபவித்திரனைப் பரமேட்டியை * சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன் விரும்பியசொல் *
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாய வென்று *
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்துஏத்துவர் பல்லாண்டே. 1.1.12