ஶ்ரீ:
ஶ்ரீமதே ராமானுஜாய நம:
மயற்வறமதிநலம் அருளப்பெற்ற தொண்டரடிப்பொடி
ஆழ்வார் திருவாய்மலர்ந்தருளிய
திருப்பள்ளியெழுச்சி
தனியன்
திருமாலையாண்டான்அருளிச்செய்தது
தமேவமத்வா பரவாஸுதேவம்
ரங்கேஶயம் ராஜவதர்ஹணீயம்-
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே
பதவுரை –
யம் – யாவரொரு ஆழ்வார்
ராஜவத் – அரசனைப் போல்
அர்ஹணீயம் – பூஜிக்கத்தக்கவராய்
ரங்கேஶயம் – திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்பவரான
பெரிய பெருமாளை
பரவாஸுதேவம் ஏவ – அப்படிப்பட்ட ஸாக்ஷாத் பரவாஸு தேவனாகவே
மத்வா – ப்ரதிபத்திப் பண்ணி (எண்ணி)
ப்ராபோதிகீம் – திருப்பள்ளியுணர்த்துமதான
ஸூக்திமாலாம் – பாமாலையை
அக்ருத – அருளிச்செய்தாரோ
(தம் – அப்படிப்பட்ட)
பகவந்தம் – ஜ்ஞானம் முதலிய குணங்கள் அமைந்த பக்தாங்க்ரிரேணும் – தொண்டரடிப்பொடி ஆழ்வாரை
ஈடே – துதிக்கின்றேன்
பிள்ளைலோகம்ஜீயர் அருளிச்செய்த தனியன் வ்யாக்யானம்
அவதாரிகை – (தமேவமத்வேத்யாதி) இஶ்லோகத்தில் செய்யும் பசுந்துளவத் தொழில் மாலையை எப்போதும் செய்து போருவராய், விஶேஷித்துச் செந்தமிழில் “பெய்யும் மறைத் தமிழ் மாலையும்” (இராமானு – 13) பேராத சீரரங்கத்தையன் கழற்கணியுமவரான தொண்டரடிப்பொடி ஆழ்வாரை ஸ்துத்யபிவாதனம் பண்ணும்படிச் சொல்லுகிறது. “திருமாலை” என்கிற திவ்ய ப்ரபந்தமன்றிக்கே திருப் பள்ளியெழுச்சியையும் (ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்) என்று சொல்மாலையாகவிறே சொல்லுவது. இதுதான் திருப்பள்ளியெழுச்சித் தனியனாய்த்திருப்பது.
வ்யாக்யானம் – (ராஜவதர்ஹணீயம் – ரங்கேஶயம் – பரவாஸுதேவம் – மத்வா) அதாவது – ராஜவத் பூஜ்யராய், ரங்கராஜதானியிலே கண்வளர்ந்தருளுமவரான ஶ்ரீரங்க ராஜரை ஶ்ருதி ப்ரஸித்தரான பரவாஸுதேவராகவே ப்ரதிபத்தி பண்ணி என்றபடி. ராஜவதர்ஹணீயராகையாவது – ராஜவத்பூஜ்யர் என்றபடி; ராஜாதிராஜரான சக்ரவர்த்தித் திருமகரானாலும் ஆராதநீயராயிருக்கை. (ரங்கேஶயம்) அதாவது – “செருவிலே யரக்கர்கோனைச் செற்ற நம் சேவகனார் மருவிய பெரியகோயில்” (திருமாலை-11) என்றும், “புனரபி புரஸ்கர்தும் ஶ்ரீரங்கிண: பணிபுங்கவே” (ரங்க ஸ்த – 1-106) என்றும், “அரங்கத்தரவணைப் பள்ளியான்” (பெரியாழ்.திரு – 4.10) என்றும் பேசும்படி, “அரங்கந்தன்னுள் பாம்பணைப் பள்ளிகொள்ளுகை”.
இப்படி படுக்கைவாய்ப்பாலே பள்ளிகொண்டருளும் பெரியபெருமாளை (பரவாஸுதேவம் மத்வா) “வாஸுதேவோஸி பூர்ண:” என்கிற அந்தப் பரவாஸுதே வனாகவே புத்தி பண்ணி; இங்குத்தையின்படியை விசாரியாதே அங்குத்தையிற்படியாகவே அனுஸந்தித்து, “ஆதியஞ்சோதியுருவை அங்குவைத் திங்குப் பிறந்த (திருவாய்மொ- 3.5.5) என்றும், “நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள்கடல் வண்ணன்” (திருவாய்மொ – 3.6.9) என்றும் சொல்லக் கடவதிறே. “கடலிடங்கொண்ட கடல்வண்ண” ரிறே பெரியபெருமாள் (திருவாய்மொ – 7.2.7). ஆகையால் பூர்ணஷாட்குண்யமாய், ஸர்வம் பூர்ணமாயாய்த்து இங்குத்தையில் அவர் படியிருப்பது. அத்தாலே “யாவரும் வந்து அடி வணங்கும்படி” (பெருமாள்திரு – 8.10) ஸர்வ ஸமாஶ்ரயணீயமாயாய்த்து இவ்விஷயமிருப்பது. அவதாரணத்தாலே – கைங்கர்யம் பண்ணுமிடத்து “முகப்பே கூவி” (திருவாய்மொ – 8.5.7) “க்ரியதாமிதி” என்று ஏவிக்கொண்டு ”வானாட வரும் குளிர் விழிகளாலே” (திருவிருத்தம் – 63) எதிர்விழி கொடுக்கும் விஷயமாகவே இவரை புத்தி பண்ணி “ஆதிமூர்த்தி அரங்கமாநகருளானே” (திருமாலை – 16) என்றும், “இந்திர லோகமாளுமச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே” (திருமாலை – 2) என்றுமன்றோ இவ்விஷ யத்திலே இவர் மண்டியிருப்பது. (ராஜவதர் ஹணீயம் தம் ரங்கேஶயம்) என்று இங்குத்தையில் ஸௌலப்ய ப்ரஸித்தியைச் சொல்லுகிறதாகவுமாம்.
“பரவாஸுதேவம்” என்கையாலே – வ்யூஹ வாஸுதேவரில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது. “ஆத்மானம் வாஸுதேவாக்யம் சிந்தயன் மதுஸூதன:” என்னும்படி “இவள் திறத்தென் சிந்தித்தாயே” (திருவாய்மொ- 7.2.4) என்றும், “உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை” (திருவாய்மொ – 5.4.11) என்றும் வ்யூஹ ஸௌஹார்த்தமுமுண்டிறே – இங்கு; இவர் பரிபூர்ணாநுபவம் பண்ணும் பரவிஷயமாகவே பெரியபெருமாளை ப்ரீதி பண்ணியிருப்பாராய்த்து. “காவேரீ விரஜாஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம், ஸ வாஸுதேவோ ரங்கேஶ: ப்ரத்யக்ஷம் பரமம்பதம்” (ஶ்ரீரங்க மாஹாத்ம்யம்) என்னக் கடவதிறே. “அண்டர்கோன் அணியரங்கன்” என்றும், (அமலநாதி – 10) “வடிவுடை வானோர் தலைவனே என்னும் வண்திருவரங்கனே” (திருவாய் – 7.2.10) என்றும், “பொங்கோதம் சூழ்ந்த புவனியும் மண்ணுலகு மங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்” என்றும் (நாச்சிதிரு – 11.3) அடியறிவார் அநுஸந்தித்தார்கள்.
விஶேஷித்து, கோயில் திருத்வாதஶாக்ஷரி ப்ரதாநமாயிறே திருவாராதநம் கொண்டருளுவது. “த்வாதஶாக்ஷர மந்த்ரோயம் மந்த்ராணாம் த்ராய உச்யதே” என்கிறபடியே ஶ்ரீரங்கநாத ஜகந்நாத என்னும்படி அர்ச்யரான இவரும் ஸர்வர்க்கும் ராஜாவாயிருப்பர்; இங்கும் (ராஜவதர்ஹணீயம்) என்றதிறே. ஆகையாலே, ராஜாக்களைப் பள்ளி யுணர்த்துமாபோலே அந்த ராஜாக்களுக்கும் ராஜாவான ஶ்ரீரங்கராஜரைத் திருப்பள்ளியுணர்த்தினபடி சொல்லுகிறது.
(ப்ராபோதிகீம் – சூக்திமாலாம் – ய: அக்ருத தம் – பகவந்தம் – பக்தாங்க்ரிரேணும் – ஈடே) என்கிறது – அங்குத்தைக்கு அநுரூபமா யிருப்பதாய், ஸ்வரஸமாய், திருப்பள்ளி யுணர்த்துவதான பாமாலையை யாதொருத்தர் பணித்தார் – அப்படிப்பட்ட வைபவத்தையுடையராய், ஜ்ஞானாதி குணபூர்ணரான தொண்டரடிப்பொடி யாழ்வாரைத் துதித்துத் தொழுகிறேனென்கிறது. (ஈடே) என்கிற ஶப்தம் இரண்டையும் வசிக்கக்கடவது.
ராஜவதர்ஹணீயராகையாலே – ராஜவதுபசாரமாம்படி திருப்பள்ளியுணர்த்த வேணுமிறே. “அயோத்தியெம்மரசே அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே” என்றிறே இவர் திருப்பள்ளியுணர்த்துவது. “ஶ்ரீமத: ராஜராஜேன ராஜாதிராஜ: ஸர்வேஷாம்” (பார – ஆஸ்வலாயன – 43-13) என்னும்படியான பெருமாளை“ “வீர ஸௌம்ய விபுத்யஸ்வ கௌஸல்யா நந்தவர்த்தந” ( ராமா – உ.கா. – 37-4) “கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரஶார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்னிகம்” (ராமா-பால- 23.2) என்று வந்திகள் உணர்த்துமாபோலே அவர்க்கும் பெரியபெருமாளாய் ஶ்ரீபெரியபெருமாளான ஶ்ரீரங்க ராஜரையிறே இவர் திருப்பள்ளியுணர்த்துவது. இவர்தாம் இப்ரபந்தத்திலே காலாதிக்ரமமானபடியையும் ப்ரஹ்மாதி தேவதைகள் ஸாவதானராய் வந்து திருவாசலிலே காத்து நிற்கிறபடியையும், அங்குத்தையில் ஸம்மர்திதத்தையும், திருப்பள்ளியுணர்ந்ததால் கண்டருளும்படி மங்களவஸ்துக்கள் பாரித்தபடியையும், மங்களவாத்யங்கள் முழங்குகிறபடியையும், மங்களதீபம் போலே ஆதித்யன் உதித்துத் தோன்ற அதில் அரவிந்தங்கள் தீபிகைபோலே விகஸித்தபடியையும் சொல்லியிறே திருப்பள்ளியுணர்த்துகிறது. இவையெல்லாம் ராஜவதர் ஹணீயதைக்கு ஏற்கும்படியாய்த்திருப்பது.
(ரங்கேஶயம் – ப்ராபோதகீம் – சூக்திமாலாம் – அக்ருத) என்கையாலே – அடிக்கடி, “அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தருளாய்” என்றும், விஶேஷித்து “ இலங்கையர்கோன் வழிபாடுசெய் கோயில் எம்பெருமான் பள்ளி யெழுந்தருளாயே” (திருப்பள்ளி – 7) என்றுமிறே அருளிச்செய்தது. (ப்ராபோதகீம் – சூக்திமாலாம்) என்கையாலே திருப்பள்ளியெழுச்சியாகிற சொன்மாலையை யிறே இவர் சொல்லிற்று; திருமாலையும் சூக்திமாலையிறே. அதிலும் “என்னை நோக்காதொழிவதே” (திருமாலை – 36) “அளியன் நம்பையலென்னார்” (திருமாலை – 37) என்றிறே ஆலோகநாலாபாதிகளை அபேக்ஷித்தது. அபேக்ஷித்து அதில் “கிடந்ததோர் கிடக்கை” (திருமாலை – 23) என்று கிடையழகை அனுபவித்து, நடையழகு தொடக்கமானவற்றைக்கண்டு அனுபவிக்கத் “துயிலெழப்பாடுகிறார்”. இரண்டும் பெரிய பெருமாளை ப்ரதிபாதித்த ப்ரபந்தமிறே; ஆகையால் (சூக்திமாலாம்) என்கிறதிலே இரண்டும் அந்தர்பூதம்.
(பகவந்தம்) என்கையாலே – ஜ்ஞானாதிகனைச் சொல்லி (வி.பு – 6.5.74) ஜ்ஞான பலம் ததீய ஶேஷத்வமென்றது தோன்ற, (பக்தாங்க்ரிரேணும்) என்கிறது. அவரும் “அடியார்க் காட்படுத்தாய்” (திருப்பள்ளி – 10) என்றும், ”துளவத் தொண்டாயத் தொல்சீர் தொண்டரடிப்பொடி” (திருமாலை – 42) என்றுமிறே தலைக்கட்டிற்று. “தொடையொத்தத் துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தொண்டரடிப்பொடி” (தி.ப.எ – 10) என்று திருப்பள்ளியுணர்த்தி, “சூட்டு நன்மாலையிற்படியே” (திருவிருத்தம் – 21) பாகவதமு௧ோல்லாஸஹேதுவான பகவத்கைங்கர்யத்தை ப்ரார்த்தித்தார். அவர் (ஈடே) என்று – இதில் அவர் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யத்தைச் சொல்லித் தலைக்கட்டுகிறது.
திருவரங்கப் பெருமாளரையர் அருளிச்செய்தது
மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த்
தொண்டரடிப்பொடி தொன்னகரம் – வண்டு
திணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானைப் பள்ளி
உணர்த்தும் பிராநுதித்த வூர்
பதவுரை –
வண்டு – வண்டுகளானவை
திணர்த்த – நெருங்கி படிந்திருக்கப் பெற்ற
வயல் – கழனிகள் சூழ்ந்த
தென் – அழகிய
அரங்கத்து – திருவரங்கத்தில் (கண்வளர்ந்தருளுகிற)
அம்மானை – பெரியபெருமாளை
பள்ளியுணர்த்தும் – திருப்பள்ளியுணர்த்துமவராய்
பிரான் – பரமோபகாரகராய்
தொண்டரடிப்பொடி – “தொண்டரடிப்பொடி” என்னும் திருநாம முடையவரான ஆழ்வார்
உதித்தஊர் – திருவவதரித்த திவ்ய தேஶமானது
சீர் மன்னிய – சீர்மையுடைய
மண்டங்குடி – திருமண்டங்குடி என்கிற
தொல்நகரம் – அநாதியான நகரமாகும்
என்பர் மாமறையோர்–என்றுவேதம்வல்ல பெரியோர் கூறுவர்
அவதாரிகை – இவ்விரண்டாவது தனியனை அருளிச் செய்தவர் எம்பெருமானாருடைய மற்றொரு ஆசார்யரான திருவரங்கப்பெருமாளரையர். ஶேஷத்வத்தின் எல்லை நிலத்திலே நிற்கும் தொண்டரடிப்பொடியாழ்வாருடைய திருவவதார ஸ்தலமான திருமண்டங்குடி வைதிக ஶ்ரேஷ்டர்களாலே எப்போதும் அநுஸந்திக்கப்படுவதாய் இருக்கிறது என்கிறது இந்தத் தனியன்.
வ்யாக்யானம்– (மாமறையோர் – வண்டு திணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானைப் பள்ளியுணர்த்தும் பிரான்- தொண்டரடிப்பொடி- உதித்தவூர் – தொல் நகரமான – மண்டங்குடி என்பர்) கண்ணங்குடி, குறுங்குடி, புள்ளம் பூதங்குடி என்று உகந்தருளின நிலங்களைச் சொல்லுமாபோலே இவரும் “மண்டங்குடி என்பர் மாமறையோர்” என்கிறது. இவர் மாமறையோராகையாலே மண்டங்குடியைச் சொல்லுமவர்களும் மாமறையோராய்த்து. “மாமறையோராகிறார் – மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருளை ததீயவைபவத்தை அறிந்தவர்கள்.
அதுதான் தொண்டரடிப்பொடி தொல்நகரமிறே- (தொல்நகரம்) பழையதாய்ப்போருகிற நகரம். நகரங்களிலேயிறே நல்ல வஸ்துக்களுண்டாவது, “நல்லார் நவில் குருகூர்” என்னுமாபோலே. இது நகரமாகைக்கு ஹேது சொல்லுகிறது (வண்டுதிணர்த்த) இத்யாதியால் வண்டுகள் நெருங்கின வயலையுடைய, “வயலுளிரிந்தன சுரும்பினம்” என்றருளிச்செய்தாரிறே ”பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண் படுப்ப” (திருப்பாவை – 3). இப்படி நீர்ப்பூவிலே வண்டுகள் நெருங்கின வயல்சூழ்ந்த கோயிலுக்கு நிர்வாஹகரான பெரிய பெருமாளை.
“வண்டு திணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானைப் பள்ளியுணர்த்தும்” என்கையாலே “வயலுளிரிந்தன சுரும்பினம்” இத்யாதிப்படியே “மஞ்சரீ ஸுப்தப்ருங்கா” என்று பூக்களிலே கண்படுத்த வண்டுகள் உணர்ந்தன. ஶ்ரீரங்கநாச்சியார் ஸ்தநஸ்தபகத்திலே கண்வளர்ந்தருளுகிற ஶ்ரீரங்கராஜப்ருங்கத்தை “அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தருளாயே” என்று திருப்பள்ளியுணர்த்துமவர். (பள்ளியுணர்த்தும்பிரான்) திருப்பள்ளியுணர்த்தி பின்புள்ளார்க்கும் இப்ரபந்தத்தை உண்டாக்கி உபகரித்தருளினவர்.
(உதித்தவூர்) “அறிவிலாமனிசர்க்கு” (திருமாலை – 13) “அறியாதன அறிவித்து” (திருவாய்மொழி – 2.3.2) அஜ்ஞாநத்தைப் போக்குகைக்காக இவர் அவ்வூரிலே உதித்தது. “கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான் கனவிருளகன்றது” என்னும்படியன்றிக்கே ஆந்தரமான அந்தகாரத்தைப் போக்கிற்று. ஆகையால் தொண்டரடிப்பொடி தொன்னகரம் மண்டங்குடி என்பர்.
பிள்ளைலோகம்ஜீயர் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சித் தனியன் வ்யாக்யானம் முற்றிற்று.
பிள்ளைலோகம் ஜீயர் திருவடிகளே ஶரணம்
பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யானம்
அவதாரிகை – இவ்வாழ்வாராகிறார் – முதலிலே ஸ்வரூபோபாய புருஷார்த்த விவேக ஶூன்யராய் தேஹத்தில் ஆத்மபுத்தியைப் பண்ணி ததநுபந்திகளான ஶப்தாதி விஷயங்களிலே மண்டி, தம்மோடு சேர்ந்தாரையும் தத்ஸ்வபாவராக்கி போராநிற்க, “மாதராற் கயற்கணென்னும் வலையுள்பட்டழுந்துவேனைப் போதரேயென்று சொல்லி புந்தியிற்புகுந்து தன்பாலாதரம் பெருகவைத்த அழகன்” (திருமாலை – 16) என்கிறபடியே பெரியபெருமாள் தன் நிர்ஹேதுக க்ருபையாலே தன் வடிவழகைக் காட்டி, விஷயாந்தரப்ராவண்யத்தை மாற்றி, ஸ்வரூபாநுரூபமாக்கித் தன் பக்கலிலே அபிநிவேஶத்தைப் பிறப்பிக்க, இவரும் ப்ரீதிகாரிதமான கைங்கர்யத்தைப் பாரித்துக்கொண்டு பெரியபெருமாள் திருவடிகளிலே சென்றவிடத்திலே, திருக்கண்களாலே குளிர நோக்குதல், கையை நீட்டி அணைத்தல், குஶலப்ரஶ்னங்களும் பண்ணுதல் “ஶிரஸா தேவ: ப்ரதிக்ருஹ்ணாதி” (பா. மோக்ஷ – 171-63) என்கிறபடியே “சூட்டு நன்மாலைகளை” ஶிரஸாவஹித்தல் செய்யாதே பள்ளிகொண்டருளினார் பெரியபெருமாள்.
அதற்கு நிபந்தனம் அநாதரமென்னவொண்ணாது, ப்ரிய பூதராகையாலே; உண்டது அருமையாலேயாதல், தமோபிபவத்தாலே யாதல் என்னவொண்ணாது, ஶுத்தஸத்வ மாகையாலே. பின்பு இதற்கு நிபந்தநமென்னென்னில், “ஆதலால் பிறவிவேண்டேன்” (திருமாலை – 3) என்னும்படி ப்ரக்ருதி ஸம்பந்தம் அப்ராப்தமென்னும்படியான ஜ்ஞானவிஶேஷத்தை உடையரென்னும்படியையும், “போனகம் செய்த சேடந்தருவரேல் புனிதம்” (திருமாலை – 41) என்னும்படி ததீயஶேஷத்வ பர்யந்தமாக ஸ்வரூபயாதாத்ம்ய ஜ்ஞானம்பிறந்த படியையும் “இச்சுவைதவிர அச்சுவைபெறினும் வேண்டேன்” (திருமாலை – 2)என்னும்படி ப்ரக்ருதி புருஷயாதாத்ம்யஜ்ஞாநம் பிறந்தபடியையும், “காவலிற் புலனைவைத்து” (திருமாலை – 1) என்னும்படி இந்த்ரியங்களை நியமித்தபடியையும், “குளித்து மூன்றனலையோம்புங் குறிகொளந்தணமை தன்னை யொளித்திட்டேன்” (திருமாலை – 25) என்னும்படி உபாயாந்தரங்களில் துவக்கற்றபடியையும், “உன்னருளென்னுமாசைதன்னால் பொய்யனேன் வந்து நின்றேன்” (திருமாலை – 33) என்னும்படி உபாயயாதாத்ம்யஜ்ஞாநம் பிறந்தபடியையும் அநுஸந்தித்து, “சோம்பரையுகத்திபோலும்” (திருமாலை – 38) என்கிறபடியே இவரையிப்படிப் பெறுவோமென்கிற ப்ரீதிப்ரகர்ஷத்தாலும், “ஆத்மாநம் வாஸுதேவாக்யம் சிந்தயந்” என்கிறபடியே இவரைப் புகுரநிறுத்தின தன் வைபவத்தையுமநுஸந்தித்து, “நாகமிசைத்துயில்வான் போலுலகெல்லாம் நன்கொடுங்க யோகணைவான்” (திருவாய் – 4.8.9) என்கிறபடியே “எல்லாரையும் இவரைப்போலே நம் பக்கலிலே ப்ரவணராக்கும் விரகேதோ?” என்று ததேகாந்த சித்தராய்க் கொண்டு பள்ளிகொண்டருளினார்.
“மாதரார் கயற்கணென்னும் வலையுட்பட்டு” (திருமாலை – 18) – என்கிறபடியே இந்த்ரியவஶ்யராய்க் கைகழிந்தவன்று “அநித்ர:ஸததம் ராம:” என்கிறபடியே – உறங்காதிருந்த பெரியபெருமாள், “அடியரோர்க்ககலலாமே” (திருமாலை – 20) என்னும்படி கைபுகுந்தபின்பு கரைச்சல் கெட்டு மார்பிலே கைவைத்து உறங்கப்புக்கார். “எம்பிராற் காட்செய்யாதே என்செய்வான் தோன்றினேனே” (திருமாலை – 28) என்றிருக்கு மவராகையாலே கைங்கர்யத்வரையாலே “உத்திஷ்ட நரஶார்தூல” “ஸமயாபோதித: ஶ்ரீமான்” (ரா.ஸு- 38-25) “உம்பர் கோமானே உறங்காதெழுந்திராய்” (திருப்பாவை – 17) என்னுமாபோலே “அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே” என்று திருப்பள்ளியுணர்த்தி, “உனக்கே நாமாட்செய்வோம்” (திருப்பாவை – 29) என்றாற் போலே, தொண்டரடிப்பொடி என்னுமடியேனை “அளியனென்றருளி உன்னடியார் காட்படுத்தாய்” (திருப்பள்ளி – 10) என்று ததீயபர்யந்தமான கைங்கர்யத்தைக் கொண்டருளவேணுமென்று ப்ரார்த்திக்கிறாராய்த்திருக்கிறது.
திருப்பள்ளியுணர்த்துகைக்கு நிபந்தனமென்னென்னில் : – “ஆம்பரிசறிந்துகொண்டு” என்கிறபடியே – கைங்கர்ய தாதாத்ம்ய மறியுமவராகையாலே “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஶ்ச தே” (ரா-அர- 31-25) “ஒழிவில் காலமெல்லாம் உடனாய்மன்னி” (திருவாய்- 3.3.1) என்கிறபடியே – ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வா வஸ்தைகளிலும் ஸர்வவிதகைங்கர்யத்தையும் பண்ணுமிடத்தில் “தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே” (திருவாய்- 2.9.4) என்று அவநுகந்த கைங்கர்யமாக வேணும்; அது செய்யுமிடத்தில் “க்ரியதாமிதி மாம் வத” என்றும், “எனக்கேயாட்செய்” (திருவாய் – 2.9.4) என்றும், ”முகப்பே கூவி பணிகொள்ளாய்” (திருவாய் – 8.5.7) என்றும் சொல்லுகிற படியே – ஏவிக் கொள்ளவேணுமென்றிருக்குமவராகையாலே ப்ரபாத சூசகங்களைச் சொல்லித் திருப்பள்ளியுணர்த்துகிறார்.
திருமாலையில் திருப்பள்ளியெழுச்சிக்கு வாசி என்னென்னில், அநாதி மாயையா ஸுப்தரான இவரைப் பெரியபெருமாள் உணர்த்தினார் அதில்; இவர் தம்பக்கல் வ்யாமோஹத்தாலே ஸுப்தரான அவரைத் திருப்பள்ளியுணர்த்துகிறார் – இதில். “புன்கவிதையேலும் எம்பிரார்க்கினியவாறே” (திருமாலை – 45) என்று வாசிக கைங்கர்யத்தை இனிதாகக் கைக் கொண்டபடி சொல்லிற்று – அதில்; “தொடையொத்தத் துளவமும் கூடையும் பொலிந்து தோன்றியதோள் தொண்டரடிப்பொடி என்னும் அடியனை அளியனென்றருளி” (திருப்பள்ளி – 10) என்கையாலே காயிக கைங்கர்யத்தை இனிதாக கைக்கொள்ள வேணுமென்கிறது இதில். “எம்பிரார்க்கினியவாறே” என்று (திருமாலை – 45) பெரியபெருமாளுக்கினியதான கைங்கர்யத்தைப் பெற்று நின்றார் – அதில்; “அடியார்க்காட்படுத்தாய்” என்று – ததீயருகந்த கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிறார் – இதில். அதில் பெரியபெருமாளுடைய க்ருஷியைச் சொல்லிற்று; இதில் அவருடைய க்ருஷி பலித்தபடியைச் சொல்லுகிறது. “எளியதோரருளுமன்றே என் திறத்து” (திருமாலை – 37) என்று தம்மை விஷயீகரிக்க வேணுமென்றார் அதில்; “அவர்க்கு நாளோலக்கமருள” (திருப்பள்ளி – 9) என்று பரஸம்ருத்தியை ஆஶாஸிக்கும்படியாகப் பாகம் பிறந்தபடி சொல்லுகிறது இதில்.
- கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனயிரு ளகன்றது காலையம் பொழுதாய்
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி
எதிர்திசை நிரைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே .
பதவுரை –
அரங்கத்து அம்மா – திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
கதிரவன் – சூர்யனானவன்
குணதிசை – கிழக்குத்திக்கிலே
சிகரம் – (உதயகிரியின்) உச்சியிலே
வந்து அணைந்தான் – வந்து கூடினான்
கன இருள் – (இரவில்) மிகுந்திருந்த இருளானது
அகன்றது – நீங்கியொழிந்தது
அம் – அழகிய காலைப் பொழுது வர
மாமலரெல்லாம் – சிறந்த புஷ்பங்களெல்லாம்
விரிந்து – மலர்ச்சி பெற்று
மது ஒழுகின – தேன் பெருக்குகின்றன
வானவர் – தேவர்களும்
அரசர்கள் – ராஜாக்களும்
வந்து வந்து – முற்கோலி வந்து
ஈண்டி – திரண்டு
எதிர்திசை – திருகண்ணோக்குக்கு விஷயமான தெற்கு திக்கிலே
நிறைந்தனர் – நிறைந்து நின்றார்கள்
இவரொடும் புகுந்த – அவர்களோடு கூட வந்த
(இவர்களது வாஹனங்களாகிய)
இருங்களிறு ஈட்டமும் – பெரிய ஆண்யானைத் திரள்களும்
பிடியொடு – பெண்யானைத் திரள்களும்
முரசும் – பேரி வாத்யங்களும்
அதிர்தலில் – ஶப்திக்கும்போது
எங்கும் – எத்திசையும்
அலை – அலையெறியாநின்ற
கடல் போன்று உளது – ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது
(ஆதலால்)
பள்ளி எழுந்தருளாய் – திருப்பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்.
அவதாரிகை – முதற்பாட்டு (கதிரவநித்யாதி) ஆதித்யனானவன் தன் ஸ்வரூப ஸித்திக்காக விளக்காய் வந்து தோற்றினான்; அவனைக் குஶல ப்ரஶ்னம் பண்ண வேண்டாவோ? என்கிறார். “வெய்யக் கதிரோன் விளக்காக” (முதல்திரு – 1) என்றாரிறே. “நாட்டை யெல்லாம் எழுப்புகிற ஆதித்யநுதித்தால் எங்களாதித்ய நுதிக்கவேண்டாவோ? பாஹ்யமான அந்தகாரமிறே அவனால் போக்கலாவது, ஆந்தரமான அந்தகாரம் போக்கும்போது தேவரீர் உணர்ந்தருளவேண்டாவோ? ஆதித்யன் உதய பர்வதத்தை வந்து அணையாநின்றான்; இருள் நீங்காநின்றது; ஸமாராதனோபகரணமான திருப்படித்தாமங்கள் விகஸிதமாகாநின்றன; ஆராத்யர் தேவரீரென்று ஆராதிப்பாரெல்லாரும் தந்தாம் பரிகரணங்களோடே வந்தார்கள். இத்தையெல்லாம் அடைய தேவரீர் திருப்பள்ளியுணர்ந்தருளி விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளவேணுமென்கிறார்.
வ்யாக்யானம் – (கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்) கண்வளர்ந்தருளுகிற தேவரீருக்கு ப்ராத: காலத்திலே ஸந்த்யா தீபம் கொண்டு வருவாரைப்போலே, திநகரனானவன் தன் கிரணங்களெல்லா வற்றோடும் கீழ்திக்கில் உதயகிரியை வந்தணையா நின்றான். “கதிரவரவரவர் கைந்நிரை காட்டினர்” (திருவாய் – 10.9.4) “நாரணன் தமரைக் கண்டுகந்து” (திருவாய் – 10.9.2) என்று தேவரீருடையார் அர்ச்சிராதிகதியே போம்போது, ஆதிவாஹிகர் தந்தாம் பதங்கள் நிலைநிற்கைக்காக, தேவரீருடையார்க்குத் தரங்கொடுத்த விளக்குடையரோபாதி, விளக்கு பிடிக்கிறவர்கள் வகுத்த விஷயத்தில் கிஞ்சித் கரியாதிரார்களிறே. கண்வளர்ந்தருளுகிற தேவரீர் திருப்பள்ளியுணர்த்துவதெப்போதோவென்று அவஸர ப்ரதீக்ஷனாய், “பீதோதேதி ஸூர்ய:” என்கிறபடியே கீழ்திக்கில் உதயகிரியிலே வந்து தோன்றினான். குன்றத்திட்ட விளக்காக உதயபர்வதத்தினருகே ஊரையும் சோலையையும் கண்வளர்ந்த ருளுகிறபடியையும் காண்கையிலுண்டான ஆசைப்பாடு தோன்ற வந்துகொடு நின்றான்.
(கனவிருளகன்றது) ஆதித்யன் வரவுக்குத் தக்கபடியே – செறிந்த இருளானது குறைய வாங்கிற்று. “இருள் வீற்றிருந்தது பார் முழுதும்” (திருவிருத்தம் – 13) என்கிறபடியே ராஜாஜ்ஞையை பங்கித்து வன்னியர் குறும்பு செய்யுமாபோலே ஸாம்ராஜ்யம் பண்ணிற்று. மதிப்பனான ராஜா ஸபரிகரனாய் எடுத்து விட்டவாறே ஒரு பயணங்குறைய வாங்குமா போலே இருட்டும் ஒரு பயணங்குறைய வாங்கிற்று. (காலையம் பொழுதாய் மதுவிரிந்தொழுகின மாமலரெல்லாம்) இருட்டுப் போய் நின்றவளவிலே “ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய” “சிற்றஞ்சிறுகாலே” (திருப்பாவை – 29) என்கிறபடியே ஸமாராதன யோக்யமான அழகிய காலமாய், அக்காலத்திலே, தேஶாந்தரம் போன பந்துக்கள் வாராநின்றார்கள் என்றறிந்தவாறே ஸ்வதேஶத்திலிருந்த பந்துக்கள் முகமலருமாபோலே இவ்வெயிற் கொழுந்து தாமரைப்பூக்களை வந்தணாவும்படியான கால வண்ணிமையாலே பூக்கள் ஸ்மிதம் பண்ணினவாறே, பூக்களினுடைய செறிவு நெகிழ, சித்ரங்களாலே பூவில் தேன்களடைய ஒழுகாநின்றன. மாமலர் – பெரியமலர். “மாமலரெல்லாம்” என்கையாலே புஷ்ப ஜாதிக்கெல்லாம் உபலக்ஷணம். (மதுவிரிந்தொழுகின) மது வெள்ளமிடா நின்றது.
(வானவரித்யாதி) ஆராதகரான தேவர்களும் ராஜாக்களும் தந்தாம் பதப்ரம்ஶம் வாராமைக்கு இதுவே யாத்ரையாக ஆராத்யரான தேவரீரைத் திருவடித் தொழுகையி லுண்டான த்வரையாலே முற்பட்டார் முற்பட்டபடி ஒருவரிருவராய் வந்து திரண்டு திக்குகளெங்கும் நிறையப் புகுந்தார்கள். திருக்கண்ணோக்கிலும், அல்லாத திக்குகளெங்கும் நிறைந்தார்களென்னவுமாம். தேவரீருடைய பரிகரமென்னில் இங்ஙனே இருக்க வேண்டாவோ? (இவரொடுமித்யாதி) இவர்களுடனே வந்த பெரிய யானைத்திரள்களும் இனம்பிரியாத பிடிகளுமாய்; ஶ்ரீரங்கமிறே வாத்யகோஷங்களும், இந்த ஸமுதாயமாக முழங்குகிற முழக்கமானது, உறங்குகிற பிள்ளைகளை ஒருவகைகளாலே எழுப்புமாபோலே வாத்ய கோஷங்களாலே திருப்பள்ளியுணரும்படி. (அதிர்தலில்) இப்படி கோஷிக்கையில் “குமுறுமோசைவிழவொலி” (திருவாய் – 6.5.2) என்னுமா போலே இந்த ஸமுதாய கோஷமானது – சந்த்ரோதயத்தில் கடல்போலே கிளர்ந்தது. “பெரும் புறக்கடலான” (பெரியதிருமொ – 7.10.1) தேவரீர் உணர வேண்டாவோ? உபய விபூதியுக்தரான தேவரீர் திருப்பள்ளியுணர்ந்து இவர்களுக்கு முகம் கொடுத்தருளி, அடிமை கொண்டருளவேணுமென்று கருத்து.
- கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்
கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்
ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயி றுறவதன் விடத்தினுக் கனுங்கி
அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த
அரங்கத்தம் மா! பள்ளி யெழுந்தரு ளாயே.
பதவுரை –
குணதிசை மாருதம் – கிழக்குக் காற்றானது
கொழு கொடி – செழுமை தங்கிய கொடியை யுடைத்தான
முல்லையின் – முல்லைச் செடியிலுண்டான
கொழு மலர் – அழகிய மலர்களை
அணவி – அணைத்துக் கொண்டு
இதுவோ – இதோ
கூர்ந்தது – மிகவும் வீசாநின்றது
மலர் அணை – பூம்பள்ளியில்
பள்ளிகொள் – உறங்குகின்ற
அன்னம் – ஹம்ஸங்களானவை
ஈன்பனி நனைந்த – (மழைபோலே) சொரிகிற பனியாலே நனைந்த
தம் – தங்களுடைய
இருஞ்சிறகு – அழகிய இறக்கைகளை
உதறி – உதறிக் கொண்டு
எழுந்தன – உறக்கம் விட்டெழுந்தன
விழுங்கிய – (தன்காலை) விழுங்கின
முதலையின் – முதலையினுடைய
பிலம்புரை – பாழி போன்ற
பேழ்வாய் – பெரிய வாயிலுள்ள
வெள் எயிறு உர – பெருத்த கோரைப்பற்கள் ஊன்ற
அதன் – அந்த முதலையினுடைய
விடத்தினுக்கு – பல்விஷத்திற்கு
அனுங்கி அழுங்கிய – மிகவும் நோவுபட்ட
ஆனையின் – கஜேந்த்ராழ்வானுடைய
அருதுயர் – பெரிய துக்கத்தை
கெடுத்த – போக்கியருளின
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாய் – .
அவதாரிகை – இரண்டாம்பாட்டு. (கொழுங்கொடி இத்யாதி) முல்லையின் பரிமளத்தை முகந்து கொண்டு கீழ்காற்று வந்து தாமரைப்பூவில் கிடந்துறங்குகிற ஹம்ஸமிதுநங்களைக் கிளப்பிற்றின; ஶ்ரீகஜேந்த்ராழ்வானுடைய விரோதியை அறுக்க அரைகுலையத் தலைகுலைய வந்து ரக்ஷித்தருளின தேவரீர் கண்வளர்ந்தருளுகிறதென்? திருப்பள்ளி யுணர்ந்தருளவேணுமென்கிறார்.
வ்யாக்யானம் – (கொழுங்கொடி இத்யாதி) ஸஶ்ரத்தமான முல்லையினுடைய ஸஶ்ரத்தமான பூவை அணவி, அல்லியுந்தாதும் அரும்புமான கந்தல் படாமே அருமிதியான மணத்தை வாங்கிக்கொண்டு “புதுமாதவிமீதணவி” (திருவாய் – 5.9.2) என்னுமாபோலே கீழ்திக்கில் காற்றானது கூர்ந்தது – விஞ்சிற்று. கூருகையாவது – மிகுகை.
ஆதித்யனுக்கு நேரே உறவான தாமரைப் பூவினுடைய விகாஸமேயன்றியே நிலத்தில் பூவான முல்லைப்பூவும் விகஸித்து, அதன் மணத்தைக் கொண்டு தேவரீரைத் திருப்பள்ளி யுணர்த்துமாபோலே வந்து கொடு நின்றது. “இதுவோ” என்றது – ராஜாக்களுக்கு அந்தரங்கரானவர்கள் வந்தவர்களைக் காட்டுமாபோலே பார்த்தருளீர் என்கிறார். ஸ்பர்ஶேந்த்ரியக்ராஹ்யமானதை “இதுவோ” என்கையாலே – காற்று ஸததகதித்வம் தவிர்ந்து நின்றாற்போலே இருக்கிறது.
(எழுந்தன மலரணை இத்யாதி) இக்காற்று வீசினவாறே விடிந்ததாகாதே என்று மலராகிற படுக்கையிலே. பள்ளி கொள்ளுகிற ஹம்ஸமிதுநங்கள் உணர்ந்தன. “பள்ளிகொள்” என்கிறது, உகந்தருளின நிலத்திலே உள்ளவையாகையாலே உபசாரமாகவல்லது சொல்லாரிறே, “நம்மில் சிறியாரில்லை இங்கு வர்த்திப்பாரில்” என்றிருப்பார்களே. பூப்படுக்கையிலே தனிப்படுக்கை தணலோடொக்குமாகையாலே மிதுநமாயல்லது ஶயியாமை தோற்றுகிறது; “மென்மலர் பள்ளி வெம்பள்ளியாமே” (திருவாய் – 9.9.4).
(ஈன்பனிநனைந்த) உண்டான பனியாலே நனைந்த என்னுதல்; சொரிகிற பனி என்னுதல்; “ஒழுகி நுண்பனிக் கொடுங்கிய (பெரியதிருமொ – 8.5.8) இத்யாதி. (இருஞ்சிறகுதறி) பெரிய சிறகுகளை உதறிக் கொண்டு; பேடையை சிறகுக்குள்ளே வளர்த்தித் தன் சிறகையிட்டுக் கவித்துக் கொண்டாய்த்துக் கிடப்பது. நாடோடியான அன்னங்களெல்லாமுணர்ந்தன; அன்னமாயன்றங்கருமறை பயந்த தேவரீர் திருப்பள்ளியுனரவேண்டாவோ?
(விழுங்கிய வித்யாதி) முதலையின் கையிலே யானை அகப்பட்டதென்றாலோ தேவரீர் அரைகுலையத் தலைகுலையப் புறப்படலாவது? காலிலே முதலை கடிக்க “விழுங்கிய” என்கிறார் – பசல்கள் கிணற்றினருகே போயிற்றென்றால்“ இனி இழந்தேன்” என்பாரைபோலே. (பிலம்புரை பேழ்வாய்) பில த்வாரத்தோடொத்திருக்கிற பெரியவாயின். (வெள்ளெயிறுற) அங்கு ஆமிஷ மில்லாமையாலே மணலையிறே பக்ஷிப்பது. “மென்மலர் பள்ளி வெம்பள்ளியாலோ” (திருவாய்மொ – 9.9.4). ஆகையாலே சாணையிலிட்ட ஶஸ்த்ரம் போலே காணுமிருப்பது. (அதன் விடத்தினுக் கனுங்கி அழுங்கிய ஆனையினருந்துயர் கெடுத்த) ஆனையினுடையக் காலைப் பற்றின முதலையினுடைய பல்லின் விஷத்தாலேயனுங்கி நோவுபட்ட ஆனையுடைய (அழுங்கிய) நோவுபட்ட. (அருந்துயர் கெடுத்த) “அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம்” இத்யாதி. (அருந்துயர்) இனி அவ்வருகில்லை என்னும்படியான க்லேஶ மென்னவுமாம்; பெறுதற்கரிய துயரென்றுமாம். ஸர்வேஶ்வரனை வந்து விழப் பண்ணின நோவிறே. (அரங்கத்தம்மா இத்யாதி) இப்படி ஆர்த்தரானார் கூக்குரல் கேட்கிற இடத்திலே உறங்குமத்தனையோ? ஒரு முதலை பிடித்தாலோ உதவலாவது? ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே ஆழவிழுந்து இந்த்ரியங்களாகிற முதலைகள் ஐந்தின் வாயிலே விழுந்து அகப்பட்டாரை உணர்ந்தருளி ரக்ஷிக்கவேண்டாவோ?
- சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ
பாயிரு ளகன்றது பைம்பொழில் கமுகின்
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ
அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.
பதவுரை –
சூழ்திசை எல்லாம் – கண்டவிடமெங்கும்
சுடரொளி – சூர்ய கிரணங்களானவை
பரந்தன – பரவிவிட்டன
துன்னிய – (ஆகாஶத்தில்) நெருங்கிய
தாரகை – நக்ஷத்ரங்களுடைய
மின் ஒளி – மிக்க ஒளியானது
சுருங்கி – குறைவுபட்டதுமட்டு மன்றி
படரொளி – பரந்த ஒளியையுடைய
பனிமதி இவன் – இக்குளிர்ந்த சந்திரனும்
பசுத்தனன் – உளி மழுங்கினான்
பாய் இருள் – பரந்த இருட்டானது
அகன்றது – நீங்கிற்று
வைகறை மாருதம் இது – இந்த விடியற்காற்றானது
பை – பசுமை தங்கிய
பொழில் – சோலைகளிலுள்ள
கமுகின் – பாக்கு மரங்களினுடைய
மடலிடைக் கீறி – மடலைக் கீறினதாலே
வண் பாளைகள் நாற – அழகிய பாளைகளானவை மணம் கமழ
(அம்மணத்தை முகந்து கொண்டு)
கூர்ந்தது – வீசா நின்றது
அடல் – பெரிய பலத்தை உடையதாய்
ஒளி திகழ் தரு – தேஜஸ்ஸு விளங்கா நின்றுள்ள
திகிரி – திருவாழியாழ்வானை
அம் தடக்கை – அழகிய பெரிய திருக்கையிலே உடைய
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாய் –
அவதாரிகை – மூன்றாம் பாட்டு. (சுடரொளி இத்யாதி) ஆதித்யன் கிரணங்கள் எங்கும் பரந்தன; நக்ஷத்ராதிபதியான சந்திரனும் விவர்ணனானான்; திருச்சோலையில் படல் விரிந்த பாளையின் மணத்தைக் கொண்டு விடிகாற்றானது வந்தது; கையும் திருவாழியுமான அழகைக் கொண்டு உணர்ந்தருள வேணுமென்கிறார். முதற்பாட்டில், கிழ் திக்கில் உதயகிரியிலே வந்தணைந்தான் என்றது; இதில் – நேராக உதித்து, தன்னுடைய தேஜஸ்ஸை எங்கும் பரப்பிக் கொண்டு வந்து தோற்றினானென்கிறார்.
வ்யாக்யானம் – (சுடரொளி பரந்தன சூழ்திசையெல்லாம்) சூழ்ந்த திக்குகளெங்கும், சுடரொளியானது – ஆதித்யனுடைய தேஜஸ்ஸானது விஸ்த்ருதமாய்த்து. “தேஜஸாம் ராஶிமூர்ஜிதம்” (வி.பு – 1-9.67), “பயிலும் சுடரொளி” (திருவாய் – 3.7.4) என்றும் சொல்லுகிறபடியே தேவரீருடைய திருமேனி ஒளியானது எங்குமொக்க விஸ்த்ருதமாம்படியாக உணர்ந்தருளலாகாதோ? என்று கருத்து. (துன்னிய இத்யாதி) நெருங்கின நக்ஷத்ரங்களினுடைய பரஞ்செய்கிற தேஜஸ்ஸானது ஸங்குசிதமாய், விஸ்த்ருதமான ஒளியையுடைய குளிர்ந்த சந்த்ரனும், (பசுத்தனன்) விவர்ணனானான்; கருகினான் என்று கருத்து. “தாரகையின் புறம் தடவியப்பால் மிக்கு” (திரு.நெடு – 5) என்றும், “சந்த்ரகாந்தானனம் ராமம்” (ரா.அ – 3-29) என்றும் ஸர்வபதார்த்தங்களையும் தரிப்பிக்கப் பண்ணும் திருவடிகளையுடையவராய், ஸகலகலா பரிபூர்ணரய், நிஷ்களங்கனான சந்திரனைப் போலேயிருக்கிற குளிர்ந்த திருமுகத்தையுடையவரான தேவரீர் திருப்பள்ளியுணர்ந்தருளலாகாதோ? ஆகாஶ பரப்பெல்லாம் முப்பல் (முத்துப்பந்தல்) விரித்தாற் போலேயிருக்கிற நக்ஷத்ரங்களினுடைய தீப்தியும் மறைந்து, இவற்றுக்கு நிர்வாஹகனான சந்த்ரனுடைய பரந்த தீப்தியும் போய்த்து; தேவரீர் அமலங்களாக விழித்தருளாமையாலே, (திருவாய் – 1.9.9) சந்திரன் தன் பரிகரமும் தானும் வேற்றுருக் கொண்டான்.
(பாயிருள்) வ்யாபித்த இருள். (அகன்றது) நிரஸ்தமாய்த்து. (பைம்பொழிலித்யாதி) கலக்கந்தெளிந்தால் தந்தாமுடைய போகம் ஒருக்குவாரைப்போல. (மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற) பாளைக்கு வண்மை பசுமையை உடைத்தான சோலைக் கமுகுகளின் பாளைகளானவை விரிய அதின் பரிமளத்தை முகந்துகொண்டு விடிவோரைக் காற்றானது யாவது – காற்றுக்குத் தன பக்கலுள்ளளத்தைக் கோடுக்கையிறே (வைகறை) என்று விடியற்காலம். (மாருதம்) காற்று; விடிக்காற்று வருகையும், கமுகிலுண்டான பாளைகள் விகஸிதமாகையும், இதிலுண்டான மணத்தைக் காற்றுக் கொண்டுவருகையாலே மணம்விஞ்சிற்று. கூருகையாவது – மிகுகை. “மன்றூடு தென்றலுலா” (பெரியாழ்- திரு – 4.8.9) என்று – பொதுவான காற்றன்றியே விடிந்தமைக்கு அடையாளம் தெரியக் காற்று வரச் செய்தேயும் கண்வளர்ந்தருளவேணுமோ?
(அடலொளியித்யாதி) ஆதித்ய கிரணங்கள் மின்மினி யாம்படியிறே திருவாழியாழ்வானொளி; பெரிய மிடுக்கையுடைத்தாய், ஒளி திகழாநிற்பதாய், தேஜஸ்ஸு விளங்கா நின்றுள்ள திகிரியையுடைத்தாய், வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கவேண்டும்படியான அழகையுமுடைய திருக்கையிலே (தடக்கை) திருவாழியாழ்வானுக்கு இடம் போரும்படியான திருக்கை. (அரங்கத்தம்மா) ஆர்த்தரானார்க்கு முகம் கொடுக்க வந்தவிடத்தே கிடந்துறங்குமத்தனையோ? தேவரீர் திருப்பள்ளியுணர்ந்தருளவேணுமென்கிறார்.
- மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள்
வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும்
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவ ரேறே !
மாமுனி வேள்வியைக் காத்து அவ பிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே !
அரங்கத்தம் மா! பள்ளி யெழுந்தரு ளாயே.
பதவுரை –
மேடு இள மேதிகள் – உயரமும் இளமையும் உடைய எருமைகளை
தளைவிடும் – (மேய்கைக்குக்) கட்டவிழ்த்துவிடுகிற
ஆயர்கள் – இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழலோசையும் – புல்லாங்குழலின் நாதமும்
விடை – எருதுகளின்
மணி – மணிகளினுடைய
குரலும் – ஓசையும் (ஆகிய)
ஈட்டிய இசை – இவ்விரண்டும் கூடிய ஒலியானது
திசை பரந்தன – திக்குகளெங்கும் பரவிவிட்டது
வயலுள் – கழனிகளிலுள்ள
சுரும்பு இனம் – வண்டுகளின் திரள்
இரிந்தன – ஆரவாரித்துக்கொண்டு கிளம்பின
இலங்கையர் குலத்தை – ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய – உருவழித்த
வரிசிலை – அழகிய ஶார்ங்கத்தையுடைய
வானவர் ஏறே – தேவாதிதேவனே !
மாமுனி – விஶ்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை – யாகத்தை
காத்து – ரக்ஷித்து
அவபிரதம் ஆட்டிய – அவப்ருத ஸ்நாநம் செய்வித்து நிறைவேற்றிய
அடு திறல் – (விரோதிகளை) அழிக்கவல்ல பலத்தை யுடையவனாய்
அயோத்தியெம் அரசே – அயோத்யாபுரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமியானவனே!
அரங்கத்தம்மா ! பள்ளியெழுந்தருளாய் –
அவதாரிகை – நான்காம் பாட்டு. (மேட்டிள மேதிகளித்யாதி) “எருமை சிறுவீடு” (திருப்பாவை – 8) என்கிறபடியே சிறுவீடின்றியே பெருவீடும் விடும்படியாய், இளங்கன்று மேய்க்க ஒருப்பட்டுத் தளைவிடுகிற ஆயர் ஊதுகிற குழலோசையும், நாகுகளின்மேலே செருக்கியோடுகிற விடையினுடைய கழுத்தில் மணியோசையும், “கார்மணியினாவாடல்” என்கிறபடியே மணிக்குரலும் திக்குகளெங்கும் பரந்தது; மதுபானம் பண்ணின வண்டுகள் ஆரவாரித்துக்கொண்டு கிளம்பிற்றின; இவற்றின் ஆர்ப்பரவமறப்போய் அதிக்ரமித்துச் செல்லாநின்றது; விரோதி நிரஶனஶீலராய் ஸர்வ ரக்ஷகரான தேவரீர் திருப்பள்ளியுணர்ந்தருள வேணுமென்கிறார்.
வ்யாக்யானம் –(மேட்டிளமேதிகள்) இளங்கன்றாயிருக்கச் செய்தே ஓங்கியிருப்பனவான எறுமைக்கன்று. இவற்றினுடைய (தளைவிடுமாயர்கள்) தளைவிடுகை யாவது – கட்டு விடுகை. சிறுவீடின்றியே விடிந்து மேய்கையாலே பராக்கற்று மேயுமே; பின்பு அவர்களுக்குப் பராக்கற்றபடியாலே குழலூது மித்தனையிறே.
(விடைமணிக்குரலும்) பசுக்களும் விட்டு இவற்றுக்குக் கடவதான விடைமணியோசையும்; ஜ்ஞாநேந ஹீன: பஶுபி:ஸமாந:” (நரஸிம்ஹ .புரா – 16.13) என்னக் கடவதிறே. இப்படிக்கொத்த ஜ்ஞாநஹீனமான பதார்த்தங்கள் விட்டு ஸஞ்சரியா நின்றன. ஸர்வஜ்ஞரான தேவரீர் உணர்ந்தருளவேண்டாவோ? இப்படிப்பட்ட குழலோசையாலும் மணியோசையாலும் (ஈட்டியவிசை திசை பரந்தன) திரண்ட த்வநிகளானவை திக்குகளெங்கும் பரந்தன – விஸ்த்ருதமாய்த்து. (வயலுள் இரிந்தன சுரும்பினம்) சோலைக்குள்ளி லன்றியே வெளிநிலமான வயலில் தடாகங்களிலுண்டான தாமரை செங்கழுநீரிலே மதுபானம் பண்ணின வண்டுகளானவை ஆரவாரித்துக்கொண்டு சிதறிற்றின.
(இலங்கையர் குலத்தை வாட்டிய) லங்கையிலுண்டான ராவண ஸந்தானத்தை வாட்டிய; வாட்டுகையாவது – நிஶ்ஶேஷமாக முடிக்கை; கரியாக்குகை. “வாட்டிய” என்றால் கரியாக்குமோவென்னில், வீரபத்நியாகையாலே “கிள்ளிக்களைந்தானை” என்னுமாபோலே (திருப்பாவை – 13), இவரும் தம்முடைய வையாத்யத்தாலே வீரோதித்தார் (க்குச்)சொல்லும்படியே அநாயாஸமாகச் செய்தபடியைக் கொண்டு “வாட்டிய” என்றதித்தனை; இவை எரிசிதரும் சரமாகையாலே தீப்தபாவக ஸங்காஶங்களாகையாலே – அவைகளைக் கரியாக்கி யல்லது விடாதே; “நேயமஸ்தி” (ரா.சு. 43.25) யிறே; “ஸீதாயாஸ்தேஜஸா தக்தா” (ரா.சு. 51-37 “காஞ்சனபூஷணை:” (ரா.யு. 16-22) என்னக்கடவதிறே. (வரிசிலை வானவரேறே) தர்ஶநீயமான வில்லையுடைய வானவரேறே! ராக்ஷஸரை நிரஸித்து அனுகூலனான ஶ்ரீ விபீஷணாழ்வானை வைத்தாபோலே இந்த்ரனுடைய அமராவதியை தரிப்பித்து இந்த்ரனுக்கு ஸ்வர்க்க லோகத்தையும் கொடுத்தபடி. (மாமுனியித்யாதி) முனிகளாகிறார் மநநஶீலரிறே, “நினைத்திருந்தே சிரமம் தீர்ந்தேன்” (பெரிய திருமொ – 5.4.8) “ஏஹி பஶ்ய ஶரீராணி” (ரா.ஆ. 6-16) இத்யாதி. எங்கள் பக்கலுள்ளதெல்லாம் குழைச்சரக்கு; உன் அம்பு பார்த்திருந்தோமென்னவல்லவர்களிறே; அப்படிப்பட்ட மஹர்ஷிகள் வந்தாலோ போகலாவது? (மாமுனி வேள்வியைக் காத்து) லங்கையை அழிக்கைக்கடியான வீரஶ்ரத்தையைச் சொல்லுகிறார். தந்தாம் கார்யங்களை தந்தாமே மநநம் பண்ணுமவர்கள் முனிகள்; இவனுக்கு மாமுனித்வமாவது – தன்னுடைய பாரதந்த்ர்யத்தையு மழித்து, பகவத் ஸ்வாதந்த்ர்யத்தையும் தலைக்கட்டிக் கொள்ளுகை. அத்வரத்ராணம்பண்ணி அவரைக் கொண்டே அவப்ருதஸ்நாநம் பண்ணி அதுக்கீடான ப்ரதிபக்ஷத்தை முடிக்கைக்கடியான திறலையுடைய பராபிபவன ஸாமர்த்யமுடையருமாய், “தஶவர்ஷ ஸஹஸ்ராணி” (ரா.பா. 1-97) என்றாப்போலே தீர்த்தம் ப்ரஸாதிக்கையன்றிக்கே பிற்பாடரானாரும் பெறும் படியாகக் கோயிலிலே கண்வளர்ந்தருளுகிற இதுக்கு ப்ரயோஜனம் வேண்டாவோ? விரோதிநிரஸநம் பண்ணினோமாகில் இனியென்னென்று கிடக்கலாமோ? அப்படியே ராக்ஷஸராலே பீடிதரான தேவஜாதிகள் வந்தால் உங்களுக்கு நான் செய்தபடி அழகிதென்று வினவியருளவேண்டாவோ? என்கிறார். “உத்திஷ்ட நரஶார்தூல” என்றுகொண்டு பண்டேயெழுப்பின ரிஷிகள் வந்தெழுப்பினாலோ தேவரீர் திருப்பள்ளி உணர்ந்தருள பார்க்கிறது? அடியோங்களை ரக்ஷிக்கைக்காக எழுந்திருந்தாலாகாதோ?
- புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசைக் கனைகட லரவம்
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா!
இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.
பதவுரை –
பூ – பூத்திருக்கும்
பொழில்களின் வாய் – சோலைகளிலுள்ள
புட்களும் – பறவைகளும்
புலம்பின – (உணர்ந்து) ஆரவாரம் செய்யாநின்றன
கங்குல் – இரவானது
போயிற்று – கழிந்தது
புலரி – காலைநேரம்
புகுந்தது – வந்தது
குணதிசை – கீழ்திசையிலே
கனை – கோஷஞ்செய்கின்ற
கடல் – கடலினுடைய
அரவம் – ஓசையானது
கலந்தது – வியாபித்தது
களி – தேனைப் பருகிக் களிக்கின்ற
வண்டு – வண்டுகளானவை
மிழற்றிய – ஶப்திக்கப் பெற்றதாய்
கலம்பகம் புனைந்த – பலவகைப் பூக்களால் தொடுக்கப்பட்டதாய்
அம் – அழகியதான
அலங்கல் தொடையல் கொண்டு – அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள் – தேவர்கள்
அடியிணை பணிவான் – (தேவரீருடைய) திருவடியிணைகளில் வணங்குவதற்காக
புகுந்தனர் – வந்து நின்றனர்
ஆதலில் – ஆகையாலே
அம்மா – ஸர்வஸ்வாமின்!
இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில் – லங்கேஶ்வரனான விபீஷணாழ்வான் தாஸவ்ருத்தி பண்ணப்பெற்ற கோயிலிலே (கண்வளர்ந்தருளுகிற)
எம்பெருமான் – எங்கள் ஸ்வாமியே!
பள்ளியெழுந்தருளாயே –
அவதாரிகை – ஐந்தாம் பாட்டு. (புலம்பினவித்யாதி) முன்னில் பாட்டிலே – “வயலுளிரிந்தன சுரும்பினம்” என்றது; இப்பாட்டிலே போதுவைகினால் உணரக்கடவதான பக்ஷிகளுமுணர்ந்தன என்கிறது. முன்னில் பாட்டில் உணர்ந்தவற்றுக்கும் இப்பாட்டில் உணர்ந்தவற்றுக்கும் பகவத் ப்ரவணர்க்கும் ஸம்ஸாரிகளுக்குமுள்ள வாசிபோருங்காணும் வயலிலுள்ளவைபோலன்றிறே; சோலையாய் அதிலே பூம்பொழிலிருக்கச்செய்தே உணருகின்றனவிறே. போது வைகியபடி.
வ்யாக்யானம் – (புலம்பின புட்களும்) “வண்டினம் முரலும் சோலை மயிலினமாலுஞ்சோலை கொண்டல்மீதணவுஞ்சோலை” (திருமாலை – 14) என்றாரிறே. அவையெல்லாம் ப்ரீதிப்ரகர்ஷத்தாலே சில பாட, சில ந்ருத்தகீத வாத்யங்கள் பண்ண, அதுக்கு இசைய சிலராடச் சிலர் கொண்டாடவிருந்ததிறே அங்கு; இங்கு “பெரியபெருமாள் இப்போது வைகவும் பள்ளிகொள்வதே!“ என்று கூப்பிடுமாபோலே இருக்கிறது. (போயிற்று கங்குல்) முன்புபோலே அகன்ற மாத்ரமே யன்றிக்கே ராத்ரியானது நிஶ்ஶேஷமாய்த்து; (புகுந்தது புலரி) தமஸ்ஸு நேராகப் போனால் பின்பு ஸத்வமேயாயிருக்குமாபோலே. ஆகையாலேயிறே “பகற்கண்டேன்” (இரண்டாம் திரு – 81) என்கிறது. (கலந்தது குணதிசைக் கனைகடலரவம்) கோஷமாத்ரமே யன்றிக்கே எங்குமொக்க வ்யாபித்தது. (களிவண்டித்யாதி) உறவுமுறையாரைப் பட்டினிவிட்டு விருந்துணவைக் காலும் கலமும் வைத்து ஊட்டு வாரைப்போலேயிறே தேவரீர்படி.
ப்ரயோஜநாந்தரபரரான தேவர்கள் தந்தாம் பதப்ரம்ஶம் வராமைக்காக நன்றாய்ச் செறிந்து வண்டுகள் மதுபானம் பண்ணிக் களித்துப் பாடிக்கொண்டு ஸேவியா நிற்பதாய், கலம்பகனாயிருந்துள்ள தொடையலங்கல்கள் கொண்டு வந்தார்கள்; அவர்களுக்காகிலும் முகங் கொடுத்துள்ளீரோ? என்கிறார். (ஆதலில் அம்மா) என் மாலை சாத்தாதபோதும் “என்னாயனன்று” என்னவொண்ணாதிறே. இப்படி விண்ணப்பம் செய்யும் இவர்பேச்சு இனிதாயிருந்தவாறே பள்ளிகொண்டருள; (இலங்கையர்கோன் வழிபாடுசெய்கோயில்) பள்ளிகொண்டருளவேணுமென்றவன் தானே வந்து “எழுந்திரும்” என்றாலோ திருப்பள்ளியுணர்ந்தருளுவது? வழிபாடு செய்கையாவது – திருவுள்ளக்கருத்தறிந்து அடிமை செய்கையிறே. (இலங்கையர்கோன் வழிபாடு செய்கோயில்) இதுவுமோரேற்றமிறே இங்குத்தைக்கு; (எம்பெருமான்) ஆஶ்ரிதபராதீனரான தேவரீர் திருப்பள்ளியுணர்ந்தருளவேணுமென்கிறார்.
- இரவியர் மணிநெடுந் தேரோடு மிவரோ
இறையவர் பதினொரு விடையரு மிவரோ
மருவிய மயிலின னறுமுக னிவனோ
மருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி
புரவியோ டாடலும் பாடலுந் தேரும்
குமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம்
அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.
பதவுரை –
மணி – சிறந்ததாய்
நெடு – பெரிதான
தேரொடும் – தேரோடுகூட
இரவியர் – பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர் – ஸம்ஸாரிகளுக்கு நிர்வாஹகர்களான
பதினொரு விடையரும் – ஏகாதஶருத்ரர்களும்
மருவிய – பொருந்திய
மயிலினன் – மயில்வாஹனத்தையுடைய
அறுமுகன் – சுப்ரஹ்மண்யனும்
மருதரும் – மருத்கணங்களான நாற்பத்தொன்பதின்மரும்
வசுக்களும் – அஷ்ட வசுக்களும்
வந்து வந்து – ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு வந்து
ஈண்டி – நெருங்கி நிற்க
(இவர்களுடைய வாஹனமான)
புரவியொடு தேரும் – குதிரைகள் பூண்ட ரதங்களும்
ஆடலும் பாடலும் – பாட்டும் ஆட்டமுமாய்
குமரதண்டம் புகுந்து – தேவசேனா சமூகங்கள் வந்து புகுந்து
ஈண்டிய வெள்ளம் – நெருங்கியிருக்கிற திரளானது
அரு வரை அனைய – பெரிய மலை போன்ற
கோயில் – கோயிலில்
நின் முன் – தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே
இவரோ – இவனோ – இதோ – நிற்கின்றனர்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாய் –
வ்யாக்யானம் – ஆறாம் பாட்டு. (இரவியரித்யாதி) தேவரீர் பணிக்கடைத்த ஆதித்யனேயன்றிக்கே, மற்றும் சோம்பியிருக்கிற ஆதித்யர்களும் வந்தார்கள். (இறையவரித்யாதி) “பஶூநாமதிபதி:” என்கிறபடியே கேவலம் பஶுஸமராயிருப்பார்க்கு கடவனாகவேணுமென்றானிறே. (மருவிய மயிலினன்) அவர்கள் தேர்களினின்றும், ருஷபங்களினின்றும் இழியவுங்கூடும்; இவனை மயிலோடேகூடக் கருப்பிடித்தது என்னும்படியாயிருக்கை. தேவஸேனாபதியிறே. (மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி) மருத் தேவதைகளும், அஷ்ட வசுக்களும் முற்பட்டார் முற்பட்டபடியே வந்து திரண்டு. (புரவியோடித்யாதி) தேர் ப்ரஸ்துதமாகையாலே தேர் பூண்ட புரவியென்னவுமாம். அன்றியே, அவரவர் ஏறிவந்த வாஹனமென்னவுமாம். (குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்) “தேவஸேநாபதி” என்று முன்னே சொல்லுகையாலே, “குமரன்” என்று அவன் பேராய், (தண்டம்” என்று – தண்டுக்குப் பேராய், இத்தால் – தேவஸேனா ஸமூகத்துக்குப் பேராய், தேவஸேனாபதி வந்தால் தேவஸேனையும் வரக்கடவதிறே. அங்ஙனன்றியே தேவஜாதியாகையாலே ஷோடஶவயஸ்கராயிருப்பார்களிறே. இனி “தண்டம்” என்கிறது – அவ்வவருடைய பெரியதிரளை; அவ்வவராயுத பேதங்களை என்னவுமாம்.
(ஈண்டிய வெள்ளம்) நால்வரிருவரோ? வெள்ளமாயன்றோ கிடக்கிறது? (அருவரை இத்யாதி) “அணியினார் செம்பொனாய அருவரையனைய கோயிலிறே” (திருமாலை – 2). த்வாதஶாதித்யர்கள், ஏகாதஶருத்ரர்கள், தேவஸேனாபதியான சுப்ரஹ்மண்யன், மருத்துக்களாகிற தேவதைகள், அஷ்ட வஸுக்கள், மற்றுஞ்சொல்லிச் சொல்லாத தேவதைகளடைய ஸபரிகரராய், தேவரீர் திருப்பள்ளியுணர்ந்தருளும் போதில் ப்ரதமகடாக்ஷத்தை நினைத்து, “நான்முற்பட, நான்முற்பட” என்று எல்லாரும் திரண்டுவந்து நின்றார்கள்; திருப்பள்ளியுணர்ந்தருளி கடாக்ஷித்தருள வேணுமென்கிறார்.
- அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ
அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ
இந்திர னானையும் தானும்வந் திவனோ
எம்பெரு மானுன கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே
பதவுரை –
எம்பெருமான் – எனக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல் – தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும் – தேவேந்த்ரனும்
ஆனையும் – (அவனது வாஹனமான) ஐராவத யானையும்
வந்து – வந்திருப்பதுமன்றி
அந்தரத்து அமரர்கள் – அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும்
கூட்டங்கள் – இவர்களுடைய பரிவாரங்களும்
அரு தவம் முனிவரும் – மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும்
மருதரும் – மருத்கணங்களும்
இயக்கரும் – யக்ஷர்களும்
சுந்தரர் நெருக்க – கந்தருவர் நெருக்கவும்
விச்சாதரர் நூக்க – வித்யாதரர்கள் தள்ளவும்
திருவடி தொழுவான் மயங்கினர் – (தேவரீருடைய) திருவடிகளை தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர்
அந்தரம் – ஆகாஶமும்
பார் – பூமியும்
இடம் இல்லை – இடைவெளியில்லாமலிருக்கிறது
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாய் –
அவதாரிகை – ஏழாம் பாட்டு. (அந்தரவித்யாதி) முன்னிற்பாட்டில் தேவஸேனாபதியானவன் தன் வாஹநத்தோடும் தன் பரிகரங்களோடும் வந்தமை சொல்லிற்று; இப்பாட்டில் – தேவஜாதிக்கு நிர்வாஹகனான இந்த்ரன் தன் வாஹநத்தோடே – ஸபரிகரனாய் வந்தபடி சொல்லுகிறது. தேவஜாதியை மெய்காட்டுக்கொள்ள தேவரீரிட்ட வகை செய்வானாய் வந்தானென்கிறது; “பீஷாஸ்மாத்” (தைத்.ஆர – 8.1) இத்யாதிப்படியே.
வ்யாக்யானம் – “இந்திரனானையுந்தானும் வந்திவனோ” என்கிற பதம் அர்த்தக்ரமத்தாலே முதலாகக்கடவது; இப்படியாமோவென்னில், இப்பாட்டுக்குத் தாத்பர்யம் – இந்த்ரன் வந்தபடி சொல்லுகையாகையாலே முதலாகக்கடவது. அக்ந்யாஹிதரென்னக்கடவரயிருக்கச் செய்தே ஶப்தச்சேர்த்தி அர்த்தச்சேர்த்திக்காக ஆஹிதாக்நியாரென்றதிறே. ப்ரணவம் ஶப்தத: ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்றேயாகிலும் அர்த்தத: பகவத் ஸ்வரூபமிறே சொல்லுகிறது. “ராஜ புருஷன்” என்றால் புருஷன் விஶேஷணமாய், ராஜாவின் பக்கலிலே ப்ராதாந்யம் கிட்டுமாபோலே.
(அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ) அந்தரம் அண்டம் ஆகாஶம் என்று – தேவலோகத்துக்குப் பேர். “கேஶவன் தமர்” என்கிறதல்லவே, அவர்கள் வர்த்திக்கிற தேஶத்தையிட்டுச் சொல்லுமித்தனையிறே தேவர்களை; பன்மை – கூட்டங்களின் பன்மை. (அருந்தவ முனிவர்) சப்த ரிஷிகளாகவுமாம். பெறுதற்கரிய தபஸ்ஸைப் பண்ணி விரோதிநிவ்ருத்தி பண்ணினவர்களென்னவுமாம். (மருதருமிவரோ) மருத் தேவதைகள்; “கூட்டங்கள்” என்கிறது மூன்றிடத்திலும் வைத்துக் கொள்ளலாம்.
(எம்பெருமானுன கோயிலின் வாசல்) அணைந்தார்கள், வந்தார்களென்கிறவளவல்ல; பார்த்தருளீர்! திரு வாஶலிலே வந்தார்கள்; “பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டுப் புகலரிய (பெரிய திரு – 4.3.4) என்கிறபடியே. (சுந்தரர் நெருக்க) தேவஜாதியிலே ஒரு பேதம். “சுந்தரர்” என்று அழகாய் அத்தாலே – பாடுவாரென்னவுமாம். சுந்தரர் என்று கந்தர்வர். (விச்சாதரர் நூக்க) அதிலே முன்கை வலியதாயிருப்பார் சிலர். (இயக்கரும் மயங்கினர்) யக்ஷரென்றுகொண்டு ம்ருது ப்ரக்ருதிகளாயிருப்பார் சிலர். (மயங்கினர்) நெருக்கம் பொறுக்கமாட்டாமையாலே மோஹித்தார்கள். இவர்கள் இங்ஙனே படவேண்டுமோவென்றால் – (திருவடி தொழுவான்) தேவரீரை திருவடி தொழுகையிலுள்ள நசையிருந்தபடி. உள் நெருக்கத்தை கண்டோமென்றால், புறம்புதான் நெருக்கற்றிருக்கிறதோ வென்கிறார். மேல் – (அந்தரமித்யாதி) ஆகாஶத்தோடு பூமியோடு வாசியற விவரமற நெருங்கிற்று; தேவரீர் திருப்பள்ளியுணர்ந்தருளப் பார்த்தருளீரென்கிரார்.
- வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை யொண் கண்ணாடி முதலா
எம்பெரு மான்படி மைக்கலம் காண்டற்கு
ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ
தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி
அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய்
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே
பதவுரை –
வழங்க – தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக
வாயுறை – அறுகம்புல்லும்
மா – சிறந்த
நிதி – ஶங்க நிதி, பத்மநிதிகளும்
(கையிலே உடையராய்க் கொண்டு)
வம்பு அவிழ் – மணம் மிகுந்த
வானவர் – தேவர்களும்
கபிலை – காமதேனுவும்
ஒண் – ஒளி பொருந்திய
கண்ணாடி முதலா – கண்ணாடி முதலாக
எம்பெருமான் – ஸ்வாமியான தேவரீர்
காண்டற்கு – கண்டருளுகைக்கு
ஏற்பன ஆயின – தகுதியாயுள்ளவையான
படிமக் கலம் கொண்டு – உபகரணங்களெல்லா வற்றையும் கொண்டு
நல் முனிவர் – மஹர்ஷிகளும்
தும்புரு நாரதர் – தும்புரு நாரதர்களும்
புகுந்தனர் – வந்து நின்றார்கள் (இதுவுமன்றி)
இரவியும் – சூரியனும்
துலங்கு ஒளி – (தனது) மிக்க தேஜஸ்ஸை
பரப்பி – எங்கும் பரவச் செய்துகொண்டு
தோன்றினன் – உதயமானான்
இருள் – இருளானது
அம்பரத் தலத்தில் நின்று – ஆகாஶத்தினின்றும்
போய் அகல்கின்றது – விலகிப் போயிற்று
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாய் –
அவதாரிகை – எட்டாம் பாட்டு. (வம்பவிழித்யாதி) முன்னிற் பாட்டில் இந்த்ரன் ஸபரிகரனாய் வந்தபடி சொல்லிற்று; இப்பாட்டில் – திருப்பள்ளி யுணர்ந்தருளினால் கண்டருளக்கடவ உபகரணங்களை மங்களார்த்தமாக அவரவர்கள் கொடுவந்து நின்றார்களென்கிறது.
வ்யாக்யானம் – (வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க) வானவர் – தேவஜாதி. வம்பவிழ் வானவர் – நித்யமான யௌவநத்தை உடையவர்களென்னுதல்; ஸௌகந்த் யத்தை உடையவர்கள்; தந்தாம் பதங்களுக்குத் தக்க பூமலர்களை உடையவர்களென்னுதல். (வாயுறை வழங்க) “வாயுறை வழக்க” என்றத்தை மெலித்து “வாயுறை வழங்க” என்றாக்கி, அவர்களுடைய நியமன ப்ரகாரத்தை நினைக்கிறது; “வாயுறை” என்றது – அறுகம்புல். வம்பவிழ் என்று – ஸஶ்ரத்தமாயிருக்கை. (மாநிதி) “நிதி” என்று ஶங்க நிதி, பத்ம நிதியாகவுமாம்; “நிதி” என்று நவரத்நாதிகளென்னவுமாம்; மாநிதி என்றது – மஹார்க்கமென்றபடி. நித்ய தானத்துக்கு தனராசிகளைச் சொல்லிற்றாகவுமாம்
(கபிலை) பசுக்கள் வரக்கடவதிறே வழக்கத்துக் குறுப்பாக; வாயுறை, மாநிதி, கபிலை மற்றும் சொல்லிச்சொல்லா உபகரணங்களெல்லாம் வந்தன; கண்டருளுகைக் குறுப்பாக திருக்கண்ணாடி தொடக்கமானவையும் எல்லாம் வந்தன. (ஏற்பனவாயின கொண்டு) தேவரீருக்கு ஸத்ருஶமானவை, அநுரூபமானவை. (நன் முனிவர்) அத்தலைக்குப் பாங்கானவற்றையே மநநம் பண்ணுமவர்கள்.
(தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ) பெருமாள் பள்ளிகொண்டருளின பின்பு இசை கேட்டருளு மாபோலே . (தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி) அவ்வோ பணிக்குக் கடவர்கள் எடுத்து வந்தார்கள்; அவற்றைக் கண்டருளவேணும் என்று காட்டுவாரைபோலே, ஸஹஸ்ர கிரணங்களாகிற பந்தத்தைக் கொண்டு ஆதித்யனும் வந்தான். (அம்பரதலத்திலித்யாதி) இருளானது ஒரு பயணமெழ வாங்கிற்று என்றாப்போலேயிறே முன்பு சொல்லிற்று அவ்வளவல்ல; ஆகாஶத்திலும் ஸஞ்சரிக்க வொண்ணாதபடி நிரஸ்தமானபடி சொல்லுகிறது. பாஹ்யமான இருளானது நிரஸ்தமானால் ஆந்தரமான இருளைப் போக்கியருளவேண்டாவோ? திருப்பள்ளி யுணர்ந்தருளி அமலங்களாக விழித்தருளீரென்கிறார் (திருவாய் – 1.9.9).
- ஏதமில் தண்ணுமை யெக்கம் மத்தளி
யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்
கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்
மாதவர் வானவர் சாரண ரியக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே
பதவுரை –
ஏதமில் – குற்றமற்ற
தண்ணுமை – சிறுபறையும்
எக்கம் – ஒற்றைத் தந்தி உடைய வாத்தியமும்
மத்தளி – மத்தளமும்
யாழ் – வீணையும்
குழல் – புல்லாங்குழல்களுமாய்
திசை – திக்குகளெங்கும்
முழவமோடு – இவற்றின் முழக்கத்தோடு
இசை கெழுமி கீதங்கள் பாடினர் – இசை நிரையும்படி பாட்டுக்கள் பாடக்கடவரான
கின்னரர் – கின்னரர்களும்
கெருடர் – கருடர்களும்
கந்தருவர் அவர் – அதோ நிற்கும் கந்தர்வர்களும்
கங்குலுளெல்லாம் – இரவெல்லாம்
மாதவர் – மஹர்ஷிகளும்
வானவர் – தேவர்களும்
சாரணர் – சாரணர்களும்
இயக்கர் – யக்ஷர்களும்
சித்தரும் – ஸித்தர்களும்
திருவடி தொழுவான் – தேவரீருடைய திருவடிகளில் வணங்குகைக்காக
மயங்கினர் – (நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்
ஆதலின் – ஆகையாலே
அவர்க்கு – அவர்களுக்கு
நாள் ஓலக்கம் அருள – பகலோலக்கமருளுகைக்காக
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாய் –
அவதாரிகை – ஒன்பதாம் பாட்டு. (ஏதமிலித்யாதி) முன்னிற்பாட்டில் நித்ய தானத்துக்குறுப்பானவையும் மற்றும் கண்டருளக் கடவனவும் வந்தனவென்றது; இப்பாட்டில் – தேவரீர் திருப்பள்ளியெழுச்சிக்கு ந்ருத்த கீத வாத்யங்களுக்குக் கடவரானவர்கள் வந்தார்களென்கிறது.
வ்யாக்யானம் – (ஏதமில் தண்ணுமை) ஏதமென்றது குற்றம்; இல் என்று இல்லாமை; குற்றமற்ற வாத்யமென்கிறது. “தண்ணுமை” என்கிறது சிறுபறை, ஒருதலைப்பறை; எக்கம் – தாளம், ஏகதந்த்ரி என்னவுமாம்; மத்தளி – சிறு மத்தளி; யாழ் என்று – இசைக்கு முன்னோட்டுக் கொள்வதொன்று; குழல் என்று ஜாத்யேகவசனம். (முழவம்) பெருவாயன்; பெருமத்தளி என்றுமாம். இவற்றிலுண்டான நாதமானது திக்குகள் தோறும் கெழுமிற்று – நிறைந்தது. ஏதமில் – தண்ணுமை, ஏதமில் – எக்கமென்று எல்லாவற்றிலும் வைத்துக் கொள்ளலாம். (கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்) எல்லோரும் விடிவோறே வருவாரும்; விடிந்து வருவாருமிறே; இவர்களைத் திருவுள்ளம் பற்றியருள வேணும்.
(கின்னரர் கெருடரித்யாதி) மங்களகானம் பாடுவார் அதில் தலைவரான கந்தர்வர்களுள்ளிட்டவர்களைப் பார்த்தருளீர். (கங்குலுளெல்லாம்) ராத்ரியெல்லாம். (மாதவர்) மஹா தபஸ்ஸையுடைய ரிஷிகள். (வானவர்) வைமாநிகரான தேவர்கள். (சாரணர்) தேவஜாதி தன்னிலே உலாவித்திரியுமவர்கள். (இயக்கர்) யக்ஷரென்று – தேவஜாதியிலே சிலர்; (சித்தர்) ஸித்தர்கள்; (சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்) வைமாநிகரான தேவஜாதியோடு பெரிய தபஸ்ஸுக்களைப் பண்ணின மதிப்பரான ரிஷிகளோடு யக்ஷசித்த சாரணரென்கிற தேவர்களோடு கின்னரர் கெருடரென்கிற மங்களகானம் பாடுவாரோடு இவர்களில் தலைவரான கந்தர்வரோடு வாசியற சிறியார் பெரியாரென்னாதே தேவரீர் திருப்பள்ளியுணர்ந்தருளும் போதில் ப்ரதம கடாக்ஷத்தை நினைத்து ஒருவர்க்கொருவர் முற்கோலி நெருக்குண்ணா நின்றார்கள்; மங்களவாத்யங்கள், குழல்கள் இவைகொண்டு அடிமை செய்யுமவர்களும் திருப்பள்ளியெழுச்சிக்கு உதவ வந்தார்கள். (ஆதலிலித்யாதி) ” நன்மணிவண்ணனூர்” என்கிறபடியே (நான்.திரு – 47) திருப்பள்ளியுணர்ந்தருளி எல்லாரும் வாழும்படி கடாக்ஷித்தருளவேணுமென்கிறார்.
- கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன விவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனன் னிவனோ
துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித்
துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா
தொடையொத்தத் துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி யென்னும்
அடியனை அளியனென் றருளியுன் னடியார்க்
காட்படுத் தாய்பள்ளி யெழுந்தரு ளாயே
பதவுரை –
புனல் சூழ் – திருக்காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட
அரங்கா – ஶ்ரீரங்கத்தில் கண்வளர்ந்தருளுமவனே!
கடி – பரிமளமுடைய
கமலம் மலர்கள் – தாமரைப் பூக்களானவை
மலர்ந்தன – (நன்றாக) மலர்ந்துவிட்டன
கதிரவன் – (தாமரையை மலர்த்தவல்ல) சூரியனானவன்
கனைகடல் – கோஷஞ்செய்கையையே இயற்கை யாகவுடைய கடலில்
முளைத்தனன் – உதயகிரியிலே வந்து தோன்றினான்
துடி இடையார் – உடுக்கைப் போன்ற (நுண்ணிய) இடையையுடைய மாதர்
சுரிகுழல் – (தமது) சுருண்ட மயிர் முடியை
பிழிந்து உதறி – (நீர்ப் பசையறப்) பிழிந்து உதறிவிட்டு
துகில் உடுத்து – (தந்தம்) ஆடைகளை உடுத்துக் கொண்டு
ஏறினர் – கரையேறிவிட்டார்கள்
தொடை ஒத்த – ஒழுங்காக தொடுக்கப்பெற்ற
துளவமும் – திருத்துழாய் மாலையும்
கூடையும் – பூக்குடலையும்
பொலிந்து தோன்றிய – விளங்கா நிற்கப்பெற்ற
தோள் – தோளையுடைய
தொண்டரடிப்பொடியென்னும் – “தொண்டரடிப்பொடி” என்ற திருநாமமுடைய
அடியனை – தாஸனை
அளியன் என்று அருளி – கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம் என்று திருவுள்ளம் பற்றி (அங்கீகரித்தருளி)
உன் அடியார்க்கு – தேவரீருடையார்களான பாகவதர்களுக்கு
ஆட்படுத்தாய் – ஆளாக்கவேணும்
(அதற்காக)
பள்ளி எழுந்தருளாய் – திருப்பள்ளியைவிட்டு எழுந்தருளவேணும்
அவதாரிகை – நிகமத்தில், (கடிமலரித்யாதி) உபக்ரமோபஸம்ஹாரங்கள் சேர்ந்திருக்கிறது எங்ஙனேயென்னில் – “அடியேன் செய்யும் விண்ணப்பம்” (திருவி – 1) என்று தொடங்கி “மாறன் விண்ணப்பம் செய்த” (திருவி – 100) என்றும், “நமக்கே பறை தருவான்” (திருப்பாவை – 1) என்று தொடங்கி “அங்கப்பறைகொண்ட” (திருப்பாவை – 30) என்றும், “நாதாய முனயே” (ஸ்தோத்ர ரத் – 1) என்று தொடங்கி பின்பு முடிக்கிறவிடத்திலும் “பிதாமஹம் நாதமுனிம் விலோக்ய” (ஸ்தோ.ரத் – 65) என்றும் – உபக்ரமோபஸம்ஹாரங்கள் சேரகிடக்குமாபோலே, இவரும் உபக்ரமோபஸம்ஹாரங்கள் சேரத் தலைக்கட்டாநிற்கச் செய்தே இவருக்கோரேற்றமுண்டு; இப்ரபந்தந்தன்னில் பாட்டுக்குப்பாட்டு போது வைகினபடி சொல்லுகையாயிற்றுக – கருத்து.
முதற்பாட்டிலே செய்தது – ஆதித்யனானவன் உதயபர்வதத்தை வந்தணுகினான். “தேஶாந்தரம் போன பிள்ளைகள் வாராநின்றார்கள்” என்று கேட்டால் அவர்களுடன் ஸ்பர்ஶமுடைய மனுஷ்யருக்கு முகத்திலே விகாஸமுண்டாமாபோலே ஆதித்யனோடே தாமரைக்கு ஒரு சேர்த்தியுண்டிறே; அத்தாலே முன்பு நின்ற மாத்ரையில் சிறிது விகஸிக்கக் கோலி அது கட்டு நெகிழ்கிறவளவிலே சித்ரத்தின் வழியே தேன் ப்ரவஹித்ததென்றிறே சொல்லிற்று. இதில் அவ்வளவு மன்றியே இத்தாமரையோடு சேர்த்தியுடைய ஆதித்யனும் உதித்து மேலே போனான்; தாமரைகளும் கழிய அலர்ந்தன வென்று போது வைகினபடி சொல்லுகிறது.
வ்யாக்யானம் – (கடிமலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ) கடி என்று நறுநாற்றம். கந்தமுண்டாகச் சொல்ல வேணுமோ வாஸஞ்செய் பூங்குழலாளுடைய வாஸஸ்தான மன்றோ. (மலர்ந்தன இவையோ) முன்பு சொன்ன மாத்ரமேயல்ல, தேவரீர் கண்டருளவல்ல வளம்பூ. (கதிரவன் கனைகடல் முளைத்தன னிவனோ) முன்பும் இவன் ப்ரஸ்துதனானவிடத்தில் “இவனோ” என்ற விடமில்லை; இவனை வினவியருளீர்; அவனுக்கு தாரகம் தேவரீர் குஶலப்ரஶ்னம் பண்ணுகையன்றோ.
இவர்கள் தந்தாமுடைய ஸத்தாதாரகமிழக்குமளவல்ல; இவர்களை வினவியருளாதே தேவரீருடைய ஸத்தா தாரகமிழக்கப்புக்காநின்றீர் என்கிறார் மேல்; (துடியிடையாரித்யாதி) “தோழியும் நானும் தொழுதோம்” (நாச்.திரு – 3.1) “கோலங்கரியபிரானே குருந்திடைக் கூறை பணியாய்” (நாச்.திரு – 3.5) என்கிற இந்த ரசம் இழக்கபுகாநின்றீர். இத்தால் – பழைய மடுவின் கரையையும், குருந்திலேறின படியையும் நினைக்கிறது. “கோவலனாய் வெண்ணையுண்ட வாயனிறே” (அமலநாதி – 10) பள்ளிகொள்ளுகிறவன். (சூழ்புனலரங்கா) நீர்ச்சிறை (நீரை) யிட்டுக்கொண்டு கண்வளர்ந்தருளலாமோ?
(தொடையொத்தத் துளவமும்) திருமாலையெடுத்தால் திருக்குழலுக்கும் திருமார்வுக்கும் அளவாயிருக்கை. திருமாலையாயும் திருப்பரியட்டமாயும் நிற்கிறாப் போலே சேதநவர்க்கமிறே. (கூடையும் பொலிந்த தோன்றிய தோள்) “ஆழியும் சங்குமுடைய நங்களடிகள்” (பெரிய திருமொ – 11.2.6) என்று அவை அவனுக்கு ஶேஷித்வ சூசகமிறே “மஹாத்மன:ஶங்கசக்ராஸிபாணே:” (பா.கர்ண – 83-65) என்னுமாபோலேயிறே ஶேஷகதனானவனுக்கும் திருப்படலிகை சூசகமாயிருக்கிறபடி. “கநித்ரபிடகாதர:” (ரா.அர. 31-25) இத்யாதி. (தொண்டரடிப்பொடி) {துளவத்தொண்டாய} திருத்துழாய்க் கெழுதிகொடுத்திருக்கும் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு அடியேனென்றிருக்குமவர், இவருடைய அடியாரடியா ரிருக்கிறபடி; இப்படிப்பட்ட ஶ்ரீ வைஷ்ணவர்கள் ஶ்ரீபாதரேணு என்கிறார். (அடியனை) அவ்வாத்மாவினுடைய ஆர்ப்பைத் துடைத்தால் நிலைநின்ற பேர் இதுவிறே. (அளியனென்றருளி) ஸ்நேஹியென்று திருவுள்ளம்பற்றி; அங்ஙனன்றியே, தேவரீர் அளிமிக்காரிறே; இஜ்ஜந்துவை க்ருபை பண்ணவடுக்குமென்று திருவுள்ளம்பற்றி எல்லாமற்றானென்று திருவுள்ளம்பற்றி. (உன்னடியார்க்காட்படுத்தாய்) உன்னளவிலே நிற்கில் முதல்நிலை; “உனக்காட்பட்டு நின்கண்பெறுவதெது கொலென்று பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும்” (திருவாய் – 9.4.4) என்னாதபடி அடியார்க்காட்படுத்தாய்; முதல்நிலையுமன்றியே இவ்வருகில் ஸம்ஸாரமு மன்றியே “தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்” (திருவாய் – 8.9.11) (திருமாலை – 37) என்னுமாபோலே எல்லை நிலத்திலே நிறுத்தினாய்; “ரத்நம்பட்டது, முத்துப்பட்டது” என்னுமாபோலே. (பள்ளியெழுந்தருளாயே) அபிமதஸித்தியுண்டானாலும் உறங்குமித்தனையோ? தேவரீருடைய யோகநித்திரை பலபர்யந்தமானாலும் உறங்குமித்தனையோ?
பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யானம் முற்றிற்று.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே ஶரணம்.