ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
திருப்பாவை தனியன்கள்
பராஶர பட்டர் அருளிச்செய்த தனியன்
நீளாதுங்க ஸ்தநகிரி தடீ ஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஶ்ருதிஶதஶிரஸ்ஸித்தமத்யாபயந்தீ ।
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புஙக்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய: ।।
பதவுரை –
நீளாதுங்க ஸ்தநகிரிதடீ ஸுப்தம் – நப்பின்னை பிராட்டியின் உயர்ந்த திருமுலைத்தடங்களாகிற மலைச்சாரலில் திருக்கண்வளர்ந்தருளுபவனும்
ஸ்வ உச்சிஷ்டாயாம் – தன்னால் சூடிக்களையப்பட்ட
ஸ்ரஜி – மாலையிலே
நிகளிதம் க்ருஷ்ணம் – விலங்கிடப்பட்டவனுமான கண்ணபிரானை
உத்போத்ய – திருப்பள்ளியுணர்த்தி
ஶ்ருதி ஶத ஶிரஸ்ஸித்தம் – பற்பல வேதங்களின் தலையான பாகங்களாலே தேறின (வேதாந்த ஸித்தமான)
ஸ்வம் – தன்னுடையதான
பாரார்த்யம் – பாரதந்த்ர்யத்தை
அத்யாபயந்தீ – அறிவியாநின்றவளாய்
பலாத்க்ருத்ய – வலியச்சென்று
யா கோதா – யாவளொரு ஆண்டாள்
புங்க்தே – (அக்கண்ணபிரானை) அநுபவிக்கிறாளோ
தஸ்யை – அப்படிப்பட்ட பெருமையையுடையவளான ஆண்டாளின் பொருட்டு
பூயோ பூய ஏவ – காலதத்வமுள்ளவரையிலும்
இதம் இதம் நம: – இந்த இந்த நமஸ்காரமானது
அஸ்து – ஆயிடுக
திருப்பாவையின் தனியன்களுக்குப் பிள்ளைலோகம் ஜீயர் அருளிச் செய்த வ்யாக்யானம்
அவதாரிகை – (நீளாதுங்கேத்யாதி) பரதசையில் மற்றைப் பிராட்டிமார்களுக்கு பெரியபிராட்டியார் முன்னிலையாக வேண்டினாற்போலே, க்ருஷ்ணா வதாரத்தில் பெரியபிராட்டியார்க்கும் ஆண்டாளுக்கு மகப்பட நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாகவேணும். அங்குத்தை ஐஶ்வர்யத்துக்கு் பிராட்டி ஸத்ருஶை யானாற்போலே, இங்குத்தைக்கு இவளுடைய எல்லாப் படிகளுக்கும் குலஶீலாதிகளால் ஸத்ருஶையா யிருக்குமவள். இந்த ஶ்லோகம், பட்டர் தென்னாட்டிலே எழுந்தருளியிருக்க, பெருமாளைப் பிரிந்த வ்யஸநத்தாலே திருவுள்ளம் கலங்கியிருக்கிற தசையிலே திருவுள்ளம் ப்ரஸன்னமாகைக்காக, நஞ்சீயர் “ஆண்டாளுக்கு ஒரு ஶ்லோகமும் ஆழ்வார்களை ஒரு ஶ்லோகமும் அருளிச்செய்யலாகாதோ”? என்ன, அதி ப்ரீதராய் திருப்பாவைக்கு வாக்யார்த்தமாக அருளிச்செய்து ஆண்டாளை ஶரணம் புகுருகிற ஶ்லோகம் – சேதனரடைய நஞ்சுண்டாரைப்போலே அநாதி மாயையாலே மயங்கிக் கிடந்து உறங்க, இப்படியிருக்கிற ஸம்ஸாரத்துக்குள்ளே, திருவாய்ப்பாடிப் பெண்பிள்ளைகள் பரஸ்பரம் உணருவாரும் உணர்த்துவாருமாய்ப் பரமபதத்தில் யாத்ரைபோலே செல்ல நிற்பதே என்று ஆண்டாள்தானும் அநுகாரத்தாலே இவர்களை உணர்த்தினவோபாதி அவன்தன்னையும் உணர்த்தினாள்.
வ்யாக்யானம் – (நீளா) அவன் “நந்தகோபன் தன்னின்னுயிற் சிறுவனே யஶோதைக்கடுத்தப் பேரின்பக்குல இளங்களிறே“ என்றும் (திருவாய் 8.1.3) “நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்” (திருப்பாவை – 1) இருவருக்கும் மகனாக அவதரித்தாற்போலே, இவளும் யஶோதை பிராட்டி ஸகோதரரான ஶ்ரீகும்பர் குமாரத்தியாக அவதரித்தபடி.
ஸ்யாலோத நந்தகோபஸ்ய மிதிலேஷு கவாம்பதி:
ப்ரவ்ருத்த கோதநோ தக்ஷ: கும்பகோ நாம நாமத:
தாதா துக்தஸ்ய ஸர்வேஷாம் தக்ரஸ்ய ச க்ருதஸ்ய ச
ஜநஸ்ய ப்ரியவாக் நித்யம் யஶோதாயா ஜகந்யஜ:
தர்மதா தஸ்ய பார்யாஸீத் தர்மதைவதநாமத:
ஸா அஸுதாபத்ய யுகளம் ஶோபநம் கோபபூஷணம்
தயோஸ்தத்ர புமான் ஜஜ்ஞே ஶ்ரீதாமா நாமவிஸ்த்ருத:
ஸர்வைஶ்சாஸீத் குணைர்யுக்த ஸர்வப்ராணீ மநோரம:
நீளாநாமா ச கந்யா ஸா ரூபோதார்ய குணான்விதா
“நீளா குலேந ஸத்ருஶ:” ஆகையாலே “நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்” (திருப்பாவை – 18) என்றதும், அவன் “ஆயர்கொழுந்து” (திருவாய் – 1.7.2) “ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்” (திருவாய் – 4.2.5) மற்றை பிராட்டிமாரில் ஆபிஜாத்யத்தாலும் உகக்கைப்படி யாகையாலும் உள்ள வாசி. “கோவலர் பட்டம் கவித்தது” (பெரியாழ்வார் திரு – 3.8.7) இவளுக்கேயாகையாலே “சூட்டு நன்மாலைகள்” (திருவிருத்தம் – 21) “ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்து இமிலேற்று வன் கூன் கோட்டிடையாடினைக் கூத்து அடலாயர்தம் கொம்பினுக்கே” என்னக்கடவதிறே. (துங்க ஸ்தநகிரிதடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்) நப்பின்னை பிராட்டியுடைய ஓங்கி பணைத்திருந்துள்ள திருமுலைத்தடங்களாகிற மலைத்தாழ்வரையிலே நஞ்சுண்டார்போலே மயங்கிக் கிடந்து உறங்குகிற க்ருஷ்ணனாகிற ஸிம்ஹத்தை உணர்த்தினாள். “நப்பின்னை கொங்கைமேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா” (திருப்பாவை – 19) என்றும், “அசோதை இளஞ்சிங்கம்” என்றும் சொல்லக்கடவதிறே. இக்ஷ்வாகுஸிம்ஹமான பெருமாள், பிராட்டியைப் பிரிந்து மால்யவனாகிற மலையிலே “மன்னிக்கிடந்து உறங்கப்” பெறாமல் (திருப்பாவை – 23) அநித்ரராயிருந்தார்; இங்கு அங்ஙனன்றிக்கே பிரிவாற்றகில்லாமையையறிந்து தானே மேல் விழுந்து அநுபவித்தபடி. பகுகுடும்பியாயிருப்பார் சிலர் ஒரு மலையடியைப்பற்றி ஜீவிக்குமாபோலே ஸர்வலோக குடும்பியான ஸர்வேஶ்வரன் இவள் முலையடியைப்பற்றிக் கிடக்கிறான். “துங்கம்” என்கையாலே அளவிறந்த போக்யதாதிஶயம் சொல்லுகிறது. “தடீ ஸுப்தம்” என்கையாலே அவயவைக தேஶத்திலே மக்நநானபடி. “மலராள் தனத்துள்ளான்” என்னுமாபோலே “ஸ்தநகிரிதடீ ஸுப்தம்” என்கையால் அவயவாந்தரத்தில் செல்லாதே அஸ்தமித அந்யபரமாவாயிருந்தபடி; இத்தால், எம்பெருமானுடைய போக்த்ருத்வம் சொல்லுகிறது.
(நீளாதுங்க ஸ்நகிரிதடீ ஸுப்தம்) “நிறைவினால் குறைவில்லா நெடும்பணைத்தோள் மடப்பின்னை, பொறையினால் முலையணைவான் பொருவிடை யேழடர்த்துகந்த” (திருவாய் – 4.8.4) என்னக்கடவதிறே; ப்ராப்திக்கு உகப்பானும் அவனேயிறே; “உத்போத்ய” என்று உணர்த்தவேண்டும்படி போகபரவஶனானான். இப்படி அந்யபரனானவன்தான் ஆரென்னில் – நிரதிஶய சுகரூபனான க்ருஷ்ணனென்கிறாள் – (க்ருஷ்ணம்) என்று. “க்ருஷிர்பூவாசகஶ்ஶப்தோ, ணஶ்ச நிர்வ்ருத்திவாசக:” என்னக்கடவதிறே. “ரஸோ வை ஸ:” “ஆநந்தோ ப்ரஹ்ம” “ஆநந்தயாதி” “நந்தகோபன் மகன் கண்ணன்” (பெரிய திருமொழி – 3.8.8) “பரமாநந்தம்” என்னும்படியிறே இருப்பது. (ஸ்தநகிரிதடீ ஸுப்தம் க்ருஷ்ணம்) என்கையாலே பொற்குப்பியின் நுனியிலே கருமாணிக்கத்தை அழுத்திவைத்தாற்போலவும், விகாஸோன்முகமான பத்ம கோஶத்திலே ஷட்பதம் படிந்தாற்போலவும் இருக்கை. “மஞ்சரீ ஸுப்த ப்ருங்கா” “போதில் பொறிவண்டு கண் படுப்ப” (திருப்பாவை – 3) “தெய்வ வண்டு” (திருவாய் – 9.9.4) என்று “ஶ்ரீரங்கராஜப்ருங்க:” என்று சொல்லக்கடவதிறே. “மலராள் தநத்துள்ளான்” (மூன்றாம் திரு – 3) என்று ஶ்ரீஸ்தநத்திலும் ”தென்னனுயர் பொருப்பும் தெய்வ வடமலையும்” என்னுமிவையே முலையாவடிவமைந்த – அன்னநடைய அணங்கு” என்கிற பூஸ்தநத்திலும் மக்நனாய் நிலையாற நின்றாற்போலே நீளாஸ்தநத்திலும் ஸுப்தநானபடி. “வடமாமலை யுச்சியை” (பெரிய திருமொழி – 7.10.3) “மாலிருஞ்சோலையென்னும் மலையையுடைய மலையை” (பெரிய திருமொழி – 4.3.11) என்னக்கடவதிறே. “உத்போத்ய” என்கையாலே “துயிலெழப்பாடி” (திருப்பாவை – 16) “உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்” (திருப்பாவை – 17) “செற்றாற்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்” (திருப்பாவை – 20) என்று எழுப்பும்படி சொல்லுகிறது. இத்தசையிலே இவர்களுணர்த்த உணர்வானாகில் ப்ரணயித்வத்துக்கு நமஸ்கார மன்றோ என்னில் – நெருப்புப்பட்டு வேவா நிற்கும் ப்ரணயிநிகள் என்னுங்காட்டில் உறங்கப்போமோ? இவர்களுடைய ஆர்த்தநாதம் அக்நிஜ்வாலை கதுவினாற்போலே கதுவ, தாய் வேறு கன்று வேறாய்த் துடித்துக்கொண்டு எழுந்திருந்தார்கள்.
இப்படி உணர்த்தினவதுக்கு ப்ரயோஜனம் சொல்லுகிறது மேல் – (பாரார்த்யம் ஸ்வம் ஶ்ருதி ஶத ஶிரஸ்ஸித்தம்) தன்னுடையதாயிருந்துள்ள உபநிஷத்குஹ்யமான பாரதந்த்ர்யத்தினை “மந்த்ர ப்ரஹ்மணி மத்யமே நமஸா பும்ஸஸ்வரூபம்” என்கிறபடியே ஆத்ம நிதிக்கு நிலைநின்றதாய் ஸ்வம்மாயிறே பாரதந்த்ர்யந்தானிருப்பது. “யஸ்யாஸ்மி” “பரவாநஸ்மி” “தனக்கேயாக” (திருவாய் – 2.9.4) “உனக்கே நாமாட்செய்வோம்” (திருப்பாவை – 29) என்னக்கடவதிறே. ஸ்வத்வமுண்டானால் ஸ்வாமித்வம் தன்னடையே வரக்கடவது. “ஸ்வத்வமாத்மனி ஸஞ்சாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்” இதுக்கு ப்ரமாணம் காட்டுகிறார். (ஶ்ருதி ஶத ஶிரஸ் ஸித்தம்) என்று. மஹாநிதி பர்வத குஹரங்களிலே ஸஞ்சிதமாய்க் கிடக்குமாபோலே, உபநிஷத்துக்களிலே ஸுரக்ஷிதமா யிருக்கிறபடி. (ஶ்ருதி ஶத ஶிரஸ்ஸித்தம்) என்கையாலே – இதுதான் ஓரோ ப்ரதேஶங்களி லன்றிக்கே எங்குமுண்டாயிருக்கை. “ஸர்வே வேதா:” “வேதைஶ்ச ஸர்வை:” என்னும்படி எங்குமுண்டாயிருக்கை. ஶேஷியைச் சொன்ன விடமெங்கும் ஶேஷபூதருமுண்டாயிறே இருப்பது. இந்த ஶேஷ ஶேஷி பாவமாகிற பரிமாற்றம் பரமபதத்தில் பரிமாறக்கடவதாயிருக்கும். இப்படி பரமபதத்தில் பரிமாறக்கடவதான பாரதந்த்ர்யத்தை, அதுக்கு எதிர்தட்டான ஸ்வாதந்த்ர்யமே பரிமாறும் வழிபறிக்குந்தேஶத்திலே இம்மஹாநிதியை வெளியிடுகிறாள். (அத்யாபயந்தீ) “பதிம் விஶ்வஸ்ய” “யஸ்யாஸ்மி” என்று ஓதிக்கிடக்கிற ஶேஷ ஶேஷி பாவம் அநுஷ்டிப்பாரில்லாமையினாலே, இவர்களைப் போலே அவனும் மறந்து கைவிட்டிருக்க, “பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்” (திருப்பாவை – 29) என்று அவனை மறித்துவைத்து “உன்தன்னோடு உற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம்” என்று ஓதுவித்தாள். “யோ வை வேதாம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை” “எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகலோதுவித்து” (பெரிய திருமொழி – 5.2.3) என்கிற நிலை குலைந்தது. பரதந்த்ரைகளாயிருக்கிற இவர்கள் நியமிக்கப் பெறுவார்களோ? என்னில் – ஸ்வதந்த்ரரோபாதி ஆற்றாமையுடையாரும் நியமிக்கப்பெறுவார்கள். ஆர்த்தர்பாடும் ஸ்வாதந்த்ர்யமேறிப்பாய்வது. “நான்” “என்னது” என்று அவனையொழியவும் செல்லுவார்பாடேயும் ஸ்வாதந்த்ர்யம் ஏறிப்பாய்வது. நம் திருவுள்ளந்தன்னை நியமிக்குங்காட்டில் ஸ்வாதந்த்ர்யமாகமாட்டாதிறே. பண்டும் இப்படி நியமித்தாருண்டு. “ஸ்த்ரீ சாபலாதேததுதாஹ்ருதம் மே தர்மஞ்ச வக்தும் தவ கஸ்ஸமர்த்த: விசார்ய புத்த்யாது ஸஹாநுஜேன யத்ரோசதே தத்குரு மா சிரேண” என்றார். அப்படியே இவனும் நியமித்து “சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே” (திருப்பாவை – 28) என்கிறாள்.
இப்படி ஸர்வஜ்ஞனுக்கு௩்கூட அத்யயனம் பண்ணுவிக்கிறவளுடைய வைலக்ஷண்யஞ்சொல்லுகிறது மேல். (ஸ்வோச்சிஷ் டேத்யாதி) தான் சாத்திக்கழித்த மாலையாகிற விலங்காலே இவனைப் பேராதபடி விலங்கிட்டு யாவளொருத்தி அவனை பலாத்கரித்துப் புஜித்தாள்; (கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய:” . இப்படி வேண்டற்பாட்டை யுடையவளாய், எம்பெருமானுக்கு “மார்வத்து மாலை” (திருவாய் – 10.10.2) என்கிறபடியே நிரதிஶய போக்யையா யிருக்கையாலே “கோதை” என்றும் திருநாமத்தை யுடைய ஆண்டாள் திருவடிகளிலே காலதத்வ முள்ளதனையும் அடிமை (அடிமை அடிமை) என்கிறார்.
ஸ்வோச்சிஷ்டமாவது – சூடிக்களைந்தது; “தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடுமித் தொண்டர்களோம்” (திருப்பல்லண்டு – 9) ”த்வயோபபுக்த ஸ்ரக் கந்த – உச்சிஷ்ட பக்ஷிணோ தாஸ்யா:” என்னுமது ப்ரணயித்வத்தாலே மாறாடிக்கிடக்கிறது. இப்படி ஈஸ்வரன் யதேஷ்ட விநியோகார்கனாம்படி தன்னை ஓக்கி வைக்கையாலே, அவனுடைய ஆஶ்ரித பாரதந்த்ர்யம் தோன்றுகிறது. “பார்வண்ணமடமங்கை” (திருநெடு – 18) பத்தரிறே; “அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவளிறே (இராமானுச – 10) “வாசஞ்செய் பூங்குழலிலே வாஸிதமாக்கிக் கொடுத்தபடி. (ஸ்ரஜி நிகளிதம்) மாலை மாலையாலே விலங்கிட்டாள். கால் விலங்காகிலிறே கழற்றுவது; “தந்தை காலில் விலங்கற” (பெரிய திருமொழி – 8.5.1) “தந்தை தளை கழல” (பெரிய திருமொழி – 11.5.2) என்னக்கடவதிறே. எல்லாரையும் கர்மாநுகுணமாகக் கட்டுமவன் காமிநி கழித்த கண்ணியாலே கட்டுண்டான். கண்ணியார் குறுங்கயிற்றாற் கட்டுண்டபடி யாய்த்து (பெரிய திருமொழி – 11.5.5) “மல்லிகை மாமாலை கொண்டார்த்ததும்” (பெரியாழ்வார் திரு – 3.10.2) “மன்னிலங்கு பாரதத்தை மாளவூர்ந்த வரையுருவின் மாகளிற்றைப் பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக்கொண்டு அனுபவித்தாள். (திருநெடு – 28) தறியார்த்த கருங்களிறிறே. ஸ்வேச்சாவிஹாரம் பண்ணித்திரிகிற க்ருஷ்ண மஹாமதங்கஜத்தைத் தன்னுடைய குசகுட்மமாகிற ஆளாநத்தோடே அணைத்து அநுபவித்தாள்.
(யா பலாத்க்ருத்ய புங்க்தே) யாவளொருத்தி பலாத்கரித்து புஜித்தாளென்கையாலே, அதுவும் அவனுகப்புக்கு உறுப்பாயிருக்கும்; “அஹமந்நமந்நாதமத்மி” அல்லாதபோது அவனுக்கு அநுபவம் குலையும். (கோதா) என்று கோதையென்றபடி. “குழற்கோதை” என்றாரிறே (நாச்சி. திரு – 9.10) கோதை – மாலை; மாலைபோலே போக்யமாயிருக்கை; ஶ்ரீமாலாகாரர் மகளாகையாலே மாலை என்னலாம் படியானாள்; மாலையான தான் தலையாய மாலையை வழங்கினாள்; திருமாலை வழங்கினாளிறே. “ரங்கீநேத்ரஶரேண தாடித தநுஶ்ஶேதே ஸ்வாம் ஸுந்தரோ பத்தஶ்ச –தாமபி: குசதடே போகபாடவலஜ்ஜயா வடமஹாதாமா பணீந்த்ரே அபதத்ரம் யேஶஸ்தவ விஸ்மிதேந மநஸா கோதே பரம் திஷ்ட்டதி” என்றிறே ஆண்டாள் வீறுடைமையிருப்பது.
(அத்யாபயந்தீ) என்கையாலே – பாமாலை பாடிக் கொடுத்தபடி சொல்லிற்று. (ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே) என்கையாலே பூமாலை சூடிக்கொடுத்தபடி சொல்லுகிறது. எல்லாபடியாலும் இவளுக்கு எம்பெருமானை வஶீகரித்து ஆத்மாக்களை ரக்ஷிக்கவல்ல புருஷகாரத்வமும், இருவருமான சேர்த்தியாலே ப்ராப்யத்வமும் சொல்லுகிறது. ஆகையாலேயிறே எம்பெருமானார் “நாறு நறும்பொழிலில்” (நாச்சி திரு – 9.6) இவள் ப்ரார்த்தித்தபடி நடத்தியும், திருப்பாவையை நாடோறும் நடத்தியும், அத்தாலே “சூடிகொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல்” இராமானுசனானதும் ஆழ்வார் திருமகளானதுக்கு மேலே ராமானுசனை அண்ணராக அபிமாநித்த ஏற்றமும் உண்டிறே.
இப்படி எல்லாவற்றாலும் நிரவதிக ஸ்வபாவத்தையுடைய அந்த ஆண்டாள் பொருட்டு அடிமையாய் அற்றுத் தீர்ந்து ஓரொன்றுகளிலே தம்மை எழுதிக்கொடுத்து ஆழங்காற்படுகிறார். (பூய ஏவாஸ்து பூய:) அவள்தான் “எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கு முந்தன்னோ டுற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம்” (திருப்பாவை – 25) என்றத்தை தத்விஷயத்திலே ப்ரார்த்திக்கிறாள். “நாராயணாய நம” இதி ப்ரணம்யோத்தாயோத்தாய பந: புந: ப்ரணம்ய என்றிறே எம்பெருமானார் பரிமாற்றமிருப்பது. இதுதான் “அத்ர பரத்ரசாபி நித்யம்” என்னக்கடவதிறே. அங்கும் “பூமிநீளாநாயக” என்றும் ”உபாப்யாம் பூமிநீளாப்யாம் ஸேவித: பரமேஶ்வர:” என்றும் சொல்லக்கடவதிறே. இத்தால் திருப்பாவையின் அரத்தத்தை அநுஸந்தித்து ஆநந்தமக்நராய் அத்தாலே தாம் ஆண்டாளை ஶரணம் புக்கபடியை அனைவரும் அநுஸந்திக்கும்படி அருளிச்செய்தாராய்த்து.
உய்யக்கொண்டார் அருளிச்செய்த தனியன்கள்
அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.
பதவுரை –
அன்னம் வயல் – ஹம்ஸங்கள் (உலாவுகின்ற) வயல்களையுடைய
புதுவை – ஶ்ரீவில்லிபுத்தூரில் (திருவவதரிப்பித்த)
ஆண்டாள் – ஆண்டாள் என்னும் திருநாமத்தை யுடையவளும்
பன்னு – ஆராய்ந்து அருளிச்செய்யப்பட்ட
திருப்பாவை பல் பதியம் – திருப்பாவை என்னும் பல பாட்டுக்களை
இன் இசையால் பாடி – இனிய இசையுடன் பாடி (அவற்றை)
அரங்கற்கு – ஶ்ரீ ரங்கநாதனுக்கு
நற்பாமாலை – விலக்ஷணமான பாமாலையாக
கொடுத்தாள் – ஸமர்ப்பித்தவளும்
பூமாலை – செண்பகம் முதலிய பூக்களாலான மாலையை
சூடி – (தான் முதலில்) சூடி
கொடுத்தாள் – (பிறகு ஶ்ரீரங்கநாதனுக்கு) ஸமர்ப்பித்தவளுமான கோதையை
சொல்லு – அநுஸந்திப்பாயாக
அவதாரிகை – (அன்னவயல் புதுவை) இதில், ௮பிஜாத்யத்தையுடையளாய், பெரியபெருமாளுக்கு வாசிக காயிகரூப மாலாப்ரதயாய் “கோதை” என்று நிரூபகமான சூடிக் கொடுத்தாளைச் “சொல்” – என்கிறது நெஞ்சையாதல், நெஞ்சுபோல் வாரையாதல்,
வ்யாக்யானம் – (அன்னவயல் புதுவை) “மென்னடையன்னம் பரந்து விளையாடும்” (நாச்சி திரு – 5.5); வில்லிபுத்தூரிறே; அன்னநடைத் திங்கள் முகவல்லியான ஆண்டாள் போலேயிறே அவையுமிருப்பது; அன்னங்கள் சஞ்சரிக்கும் வயலையுடைய புதுவை “புரவிமுகஞ்செய்து சென்னெலோங்கி விளைகழனிப் புதுவை பட்டர்பிரான் (பெரியாழ்வார் திரு – 4.1.10) “தண்புதுவை பட்டன்” (பெரியாழ் திரு – 3.8.10) என்றிறே திருதமப்பனாருக்கு நிரூபகம்; இவளுக்கும் அப்படியேயாயிருக்கை. (புதுவை யாண்டாள்) ஶ்ரீ பூமி நீளைகளுடைய ப்ராதாந்யமாயிறே திருவெள்ளறை ஶ்ரீவில்லிபுத்தூர் திருநறையூரென்கிற த்ரிஸ்தாநமிருப்பது; ஶ்ரீ பூமிபிராட்டியாரான ஆண்டாள் ஶிஷ்ய தாஸி பக்தைகளாய் பாடி, வருடி “உனக்கே நாமாட்செய்வோம்” (திருப்பாவை – 29) என்று அடிமை செய்ய ஆழ்வார் திருமகளாராய் வந்து அவதரித்தபடி (உபதேச – 22) ஆகிலும் அடியில் திருநாமமே ஆண்டாளென்று அநுவர்த்திக்கிறது.
(ஆண்டாளரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் இன்னிசையால் பாடிக்கொடுத்தாள்) இவள் க்ருஷ்ணனையன்றோ திருப்பாவை பாடிற்று; பெரியபெருமாளுக்குப் பாடிக்கொடுக்கையாவது – “அண்ணாந்திருக்கவே ஆங்கவளைக் கைப்பிடித்த பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கம்” (நாச்சி திரு – 11.9) என்றும், “செம்மையுடைய திருவரங்கர் தாம்பணித்த மெய்ம்மை பெருவார்த்தை “ (நாச்சி திரு – 11.10) என்றும், “பாசிதூர்த்துக்கிடந்த பார்மகட்கு பண்டொருநாள் மாசுடம்பில் நீர்வாரா மானமிலா பன்றியாந் தேசுடைய தேவர் திருவரங்கர்” (நாச்சி திரு – 11.8) என்றும்; “நிலமகள் கேள்வன்” (திருவாய் – 7.2.9) என்றும் பூமிபிராட்டியான இவள் ஆதரித்துப் போருகிற ஶ்ரீவராஹநாயனார்படியும் அநுகாரத்தாலே ஆதரித்துப் போருகிற கோபாலர்படியும் தர்ம்யைக்யத்தாலும் ஆஶ்ரித வ்யாமோஹ குணத்தாலும் பெரியபெருமாளிடத்திலே காணலாயிருக்கும். இனித் தான் “பள்ளிகொள்ளுமிடத்தே” (நாச்சி திரு 4.11) “துயிலெழப்பாடி” (திருப்பாவை – 16) திருப்பள்ளி யுணர்த்துவதும் இங்கேயுண்டிறே; வடபெருங்கோயிலு டையானை க்ருஷ்ணனாக அநுகரித்தாற்போலே “கோவலனாய் வெண்ணெயுண்ட” (அமலநாதி – 12) வாயோடே கண்வளர்ந்தருளுவதாக அநுஸந்திக்க லாமிறே. “பள்ளிகொள்ளுமிடத்தடி கொட்டிட” (நாச்சி திரு – 4.1) என்று ப்ரார்த்தித்தபடியே “பணவாளரவணை பற்பலகாலமும் பள்ளிகொள்” (நாச்சி திரு – 10.1) மணவாளரோடு மணம் புணர்ந்து கூடினாளிறே. விஶேஷித்துப் பாட்டினால் கண்டு வாழும் பாணர் (அமலநாதி தனியன்) பாட்டுக்கேட்டு மிடமாகையாலும், இவள் அவர் மகளாகையாலும் பாடவல்ல நாச்சியாராய் அவ்விஷயத்தையே பாடினாளாய்த்து. (அரங்கற்கு பன்னு திருப்பாவைப் பல்பதியம்) அர்த்தத்தின் சீர்மையாலே எல்லாராலும் ஆராய்ந்து அநுஸந்திப்பதான திருப்பாவை என்னுதல்; ஆராய்ந்து அருளிச்செய்த திருப்பாவை என்னுதல்; நிரூபித்தால் பல்பதியம் – பல பத்யமென்றபடி. “சங்கத்தமிழ் மாலை முப்பதும் தப்பாமலிறே” அருளிச் செய்தது, அதுதான் இன்னிசையாயாய்த்துப் பாடிக்கொடுத்தது. ஸம்ஶ்ரவே மதுரம் வாக்யம்” “செவிக்கினிய செஞ்சொல்” (திருவாய் – 10.6.11) என்னுமாபோலே (நற்பாமாலை) விலக்ஷணமாய் சந்தோரூபமாயிருப்பதான மாலையைப் பாடிக் கொடுத்தாள். அதாவது “சூடினேன் சொல்மாலை” (முதல் திரு – 1) என்னும்படி, ஶிரஸா தரிக்கும்படி பண்ணுகை. பூமாலை சூடிகொடுக்கையாவது – செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சியாலும் இடையிட்டுத் தொடுத்த துழாய்மாலையை (சூடிக்கொடுத்தாள்) தன் வாஸஞ்செய் பூங்குழலிலே வாஸிதமாக்கிச் சூடிக்கொடுத்தாளாய்த்து. ஆகையால் திருப்பாவை அநுஸந்தானத்துக்கு முன்னே (சூடிக்கொடுத்தாளைச் சொல்லு) என்று – அவளை அநுஸந்திக்கச் சொல்லுகிறது. இத்தால் அவள் திவ்ய ப்ரபந்தத்திலும் அவள் திருநாமமே ப்ரதமம் அநுஸந்தேயமென்றதாய்த்து.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் – நாடிநீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.
பதவுரை –
சூடிக்கொடுத்த – (பூமாலையை திருக்குழலில்) சூடி (அதனை எம்பெருமானுக்கு) ஸமர்ப்பித்த
சுடர் கொடியே – ஒளிமயமான கொடிபோன்றவளே!
தொல்பாவை – அநாதியான ஆசாரத்தினால் ஸ்திரமான நோன்பை
பாடி – (திருப்பாவை முகமாகக்) கூறி
அருளவல்ல – (அடியார் திறத்து) கருணை புரிய வல்லவளும்
பல் வளையாய் – பல வளைகளை கையில் அணிந்துள்ளவளுமான கோதாய்!
நீ – நீ
நாடி – (மன்மதனை) நாடி
என்னை வேங்கடவற்கு விதி என்ற இம்மாற்றம் – “காமதேவா ! நீ என்னை திருவேங்கடமுடையானுக்கு வாழ்க்கைப் படுத்தவேணும்” என்று காமனைக் குறித்துக் கூறியவற்றை
நாம் கடவா வண்ணம் – யாம் மீறாதொழியுமாறு
நல்கு – அருள் புரிவாயாக
அவதாரிகை – (சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே) இதில் சூடிக்கொடுத்த படியையும் பாடிக்கொடுத்தபடியையும் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணி, திருவேங்கட முடையானடியாகச் சொன்ன இதன் அர்த்தங்களை நாம் அதிக்ரமியாதபடி அநுக்ரஹிக்க வேணுமென்று ஆண்டாளை அர்த்திக்கிறது. கீழ் “அரங்கற்கு” என்றது; இதில் “வேங்கடவற்கு” என்றது. கோயில் திருமலைகளிலேயாய்த்து கோதை சூடிக்கொண்டிருப்பது.
வ்யாக்யானம் – (சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே) குழற்கோதையாகையாலே (நாச்சி திரு – 9.10) அளகத்திலே வளையமாக சூடிக்கொடுத்தவளாய்த்து. (சுடர்கொடி) – ரூபஸம்ஸ்தாநம் பொற்கொடி என்னலாம்படியிருக்கை “ஹேமலேகாம்” “மங்களதீப லேகாம்”. கொடி – அவனைக் கட்டலாம் கொடி “பெண்ணாக்கையாப்புண்டு” (நாச்சி திரு – 11.7) என்னக்கடவதிறே; (சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே) நிரூபகம். (தொல்பாவை பாடியருளவல்ல பல்வளையாய்) தொல் – பழையதான, பாவை – நோன்பை; பஞ்சலக்ஷங்குடியிற்பெண்களுங்கூடி நோற்ற நோன்பை “ஹேமந்தே ப்ரதமே மாஸி நந்தவ்ரஜகுமாரிகா:” என்று – எல்லாருங்கூடி க்ருஷ்ணனைப் பெறுகைக்கு மார்கழி நீராடி நோற்ற நோன்பை, பிற்பாடற்கும் அநுஸந்தேயமாம்படி ப்ரபந்தமாகப் பாடியருளவல்ல – பாடியுபகரிக்க வல்லவளென்னுதல்; அன்றிக்கே, பழையதாய்ப் போருகிற திருப்பாவை என்கிற சந்தோரூபமான ப்ரபந்தத்தை என்னுதல். (பல்வளையாய்) “பல்வளையாள்” (பெரியாழ்வார் திரு – 2.2.5) என்னுமாபோலே வளையே நிரூபகமாயிருக்கை. (நாடி நீ வேங்கடவற்கென்னை விதி என்ற) நீ திருவேங்கடத்தானை நாள் சென்று நாடி (பெரியாழ்வார் திரு – 6.8.1) என்கிறபடியே அபிநிவேஶத்தைப் பண்ணி, “காமதேவா” (நாச்சி திரு – 1.2) என்று – உன்னுடைய காமத்தீயாலே “வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே” (நாச்சி திரு – 1.1) என்ற (இம்மாற்றம்) இந்தச் சொல்லை என்னுதல்; இந்த ப்ரகாரமென்னுதல்; பகவத்காமத்தாலே சொன்ன பாஶுரத்தை என்னுதல்; அர்த்தத்தை என்னுதல். (நாம் கடவா வண்ணமே நல்கு) உனக்கு அடிமையாயிருக்கிற நாங்கள் அதிக்ரமியாத ப்ரகாரம் உபகரிக்கவேணும், நல்குதல் – கொடுத்தல்.
இத்தால் ஆண்டாளுடைய பகவத்ப்ரேமம் உண்டாகவேணுமென்று அவளை வேண்டுகிறது.
பிள்ளைலோகம் ஜீயர் திருவடிகளே ஶரணம்
@@@@
திருப்பாவை – முதற்பாட்டு
மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்*
சீர்மல்கு மாய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்*
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்*
நாராயணனே நமக்கே பறைதருவான்*
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை – சீர் மல்கும் ஆய்ப்பாடி – செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில், செல்வச்சிறுமீர்காள் – கைங்கர்யமாகிற செல்வத்தையும், இளம் பருவத்தையுமுடைய பெண்காள்! நேரிழையீர் – சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ளவர்களே! மார்கழி திங்கள் – (மாதங்களில் சிறந்த) மார்கழி மாஸமும், மதி நிறைந்த நன்னாள் – பூர்ண சந்த்ரோதயத்தையுடைய (சுக்ல பக்ஷத்தில்) நல்ல நாளும் (நமக்கு வாய்த்திரா நின்றன); கூர்வேல் – கூர்மை பொருந்திய வேலாயுதத்தை உடையவனும், கொடுந்தொழிலன் – (கண்ணபிரானுக்குத் தீங்கு செய்யவரும் க்ஷுத்ர ஜந்துக்கள் பக்கலிலும் சீறிக்) கொடுமைத் தொழிலைப் புரியுமவனுமான, நந்தகோபன் குமரன் – நந்தகோபனுக்குப் பிள்ளையும், ஏர் ஆர்ந்த கண்ணி – அழகு நிறைந்த கண்களையுடையளான, அசோதை இளஞ் சிங்கம் – யசோதைப்பிராட்டிக்கு சிங்கக்குட்டி போலிருப்பவனும், கார் மேனி – காளமேகத்தோடு ஒத்த திருமேனியையும், செங்கண் – செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையும், கதிர் மதியம்போல் முகத்தான் – ஸூரியனையும் சந்த்ரனையும் போன்ற திருமுகத்தையுடையவனுமான, நாராயணனே – ஸ்ரீமந்நாராயணன்தானே, நமக்கே – (‘அவனால் பேறு’ என்று இருக்கிற) நமக்கே, பறை – பறையை (கைங்கர்யத்தை), தருவான் – கொடுக்குமவனாயிராநின்றான், ஆல் – ஆதலால், பாரோர் புகழ – இவ்வுலகத்தவர்கள் கொண்டாடும்படி, படிந்து நீர் ஆட போதுவீர் – நன்கு நீராட வர விருப்பமுடையீர்களே! போதுமின் – வாருங்கள். ஏல் ஓர் எம்பாவாய்! – (இது நோன்புக் குறிப்பு) .
@@@@
இரண்டாம் பாட்டு
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை – வையத்து – இப்பூவுலகில், வாழ்வீர்காள் – வாழப்பிறந்தவர்களே! நாமும் – (அவனாலே பேறு என்றிருக்கும்) நாமும், உய்யும் ஆறு எண்ணி – உஜ்ஜீவிக்கும் உபாயத்தை உணர்ந்து, உகந்து – மகிழ்ச்சியுடன், நம் பாவைக்கு – நம்முடைய நோன்புக்கு, செய்யும் கிரிசைகள் – பண்ணும் காரியங்களை, கேளீரோ – கேளுங்கள்; நாம், பால் கடலுள் – திருப்பாற்கடலினுள், பைய துயின்ற பரமன் – கள்ள நித்திரை கொள்ளும் புருஷோத்தமனுடைய, அடிபாடி – திருவடிகளைப்பாடி, ஐயமும் – தகுந்தவர்களுக்குக் கொடுக்கும் பொருளையும், பிச்சையும் – (ப்ரஹ்மசாரிகளுக்கும் ஸந்யாஸிகளுக்கும் கொடுக்கும்) பிக்ஷையையும், ஆந்தனையும் – (அவர்கள்) கொள்ளவல்லராயிருக்குமளவும், கைகாட்டி – கொடுத்து, நெய் உண்ணோம் – நெய் புசிக்கமாட்டோம்; பால் உண்ணோம் – பாலும் அமுது செய்ய மாட்டோம்; நாட்காலே – விடியற்காலையில், நீராடி – ஸ்தாநம் செய்துவிட்டு, மை இட்டு எழுதோம் – (கண்ணில்) மையிட்டு அலங்கரித்துக் கொள்ள மாட்டோம்; மலர் இட்டு முடியோம் – பூக்களைக்கொண்டு குழலிலே முடியமாட்டோம்; செய்யாதன – (பெரியோர்கள்) செய்யாதவற்றை, செய்யோம் – செய்யமாட்டோம்; தீக்குறளை – (பிறருக்கு) அநர்த்தத்தைத் தரும் கோட்சொற்களை, சென்று ஓதோம் – (எம்பெருமானிடம்) சென்று சொல்லமாட்டோம்.
@@@@@
மூன்றாம் பாட்டு
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாறி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை – ஓங்கி – உயர வளர்ந்து, உலகு – மூன்று உலகங்களையும், அளந்த – (தன் திருவடிகளாலே) அளந்து கொண்ட, உத்தமன் – புருஷோத்தமனுடைய, பேர் – திருநாமங்களை, நாங்கள் பாடி – (திருநாமத்தைச் சொல்லாவிடில் உயிர் தரிக்காத) நாங்கள் பாடி, நம் பாவைக்கு சாற்றி – எங்கள் நோன்புக்கு என்று ஒரு வ்யாஜத்தையிட்டு, நீராடினால் – ஸ்நாநம் செய்தால், நாடு எல்லாம் – தேசமெங்கும், தீங்கு இன்றி – ஒரு தீமையுமில்லாமல், திங்கள் – மாதந்தோறும், மும்மாரி பெய்து – மூன்று மழை பெய்திட, (அதனால்) ஓங்கு பெரும் செந்நெல் ஊடு – உயர்ந்து பருத்த செந்நெற்பயிர்களின் நடுவே, கயல் உகள – கயல் மீன்கள் துள்ள, பொறி வண்டு – அழகிய வண்டுகள், பூங்குவளைப் போதில் – அழகியநெய்தல் மலரிலே, கண் படுப்ப – உறங்க, வள்ளல் – வண்மையை உடையனவாய், பெரும் பசுக்கள் – பெருத்திருப்பனவான பசுக்களை, தேங்காதே – தயங்காமல், புக்கு – (பால் கறக்கப்) புகுந்து, இருந்து – நிலையாக இருந்து, சீர்த்த முலை – பருத்த முலைகளை, பற்றி – (இரு கைகளாலும்) அணைத்து, வாங்க – இழுக்க, குடம் நிறைக்கும் – குடங்களை நிறைக்கும்; நீங்காத செல்வம் – (இப்படிப்பட்ட) அழிவில்லாத ஸம்பத்து, நிறைந்து – நிறைந்திடும். (ஏல் ஓர் எம்பாவாய் – அசைகள்).
@@@@
நான்காம் பாட்டு
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ(டு) ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை – ஆழி – கடல் போலே கம்பீரமான ஸ்வபாவத்தையுடைய, மழைக்கண்ணா! – மழைக்குத் தலைவனான வருணதேவனே!, நீ – நீ, ஒன்றும் – சிறிதும், கை கரவேல் – ஒளிக்கக் கூடாது. ஆழியுள் புக்கு – சமுத்திரத்தினுள் புகுந்து, முகந்து கொடு – (அங்குள்ள நீரை) மொண்டு கொண்டு, ஆர்த்து – இடி இடித்துக்கொண்டு, ஏறி – ஆகாசத்தில் ஏறி, ஊழி முதல்வன் – காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் காரணபூதனான எம்பெருமானுடைய, உருவம் போல் – திருமேனி போல், மெய் கறுத்து – உடம்பு கறுத்து, பாழி அம்தோள் உடை – பெருமையையும் அழகையும் கொண்ட தோளையுடையவனும், பற்பநாபன் கையில் – நாபி கமலத்தையுடையவனுமான எம்பிரானுடைய வலது கையிலுள்ள, ஆழி போல் மின்னி – திருவாழியாழ்வானைப்போலே மின்னி, வலம்புரி போல் – (இடது கையிலுள்ள) பாஞ்சஜந்ய ஆழ்வானைப்போலே, நின்று அதிர்ந்து – நிலை நின்று முழங்கி, தாழாதே – கால தாமதம் செய்யாதே, சார்ங்கம் உதைத்த சரமழை போல் – ஸ்ரீசார்ங்கத்தினாலே தள்ளப்பட்ட பாண வர்ஷம்போலே, வாழ – (உலகத்தார் அனைவரும்) வாழும்படியாகவும், நாங்களும் – (நோன்பு நோற்றார்) நாங்களும், மகழ்ந்து – ஸந்தோஷத்துடன், மார்கழி நீராட – மார்கழி நீராடும்படியாகவும், பெய்திடாய் – மழை பெய்வாயாக.
@@@@
ஐந்தாம் பாட்டு
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்று மணி விளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.
பதவுரை – மாயனை – ஆச்சர்யமான செயல்களை உடையவனும், மன்னு வடமதுரை மைந்தனை – (நித்யமான பகவத் ஸம்பந்தத்தாலே) விளங்காநின்றுள்ள வடமதுரைக்கு அரசனும், தூய பெரு நீர் – பரிசுத்தமானதும், ஆழம் மிக்கிருப்பதுமான நீரையுடைய, யமுனைத்துறைவனை – யமுனைக் கரையிலே விளையாடுபவனும், ஆயர் குலத்தினில் தோன்றும் – இடைக்குலத்தில் திருவவதரித்த, அணி விளக்கை – மங்களதீபம் போன்றவனும், தாயை குடல் விளக்கம் செய்த – தாயாகிய யசோதைப்பிராட்டியின் திருவயிற்றை விளங்கச் செய்த, தாமோதரனை – (கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய) எம்பிரானை, நாம் – (அவனால் அணுகத்தக்க) நாம், தூயோம் ஆய் வந்து – பரிசுத்தர்களாகக் கிட்டி, தூ மலர் தூவி – நல்ல மலர்களைத் தூவி, தொழுது – வணங்கி, வாயினால் பாடி – வாயாரப்பாடி, மனத்தினால் சிந்திக்க – மனத்தாலே தியானிக்க, போய பிழையும் – (பகவத் ஸம்பந்தம் உண்டாவதற்கு) முன் செய்த பாபங்களும், புகுதருவான் நின்றனவும் – பின்பு (நம்மை அறியாமல்) வருபவையும், தீயினில் தூசு ஆகும் – நெருப்பிலிட்ட பஞ்சு போலே உருவழிந்து போகும்; செப்பு – (ஆகையாலே) அவனைப்பாடு.
@@@@
ஆறாம்பாட்டு
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை – புள்ளும் – பறவைகளும், சிலம்பின காண் – கூவிக்கொண்டு செல்லா நின்றன காண்; புள் அரையன் கோ இலில் – பட்சிகளுக்கு அரசனான கருடாழ்வானுக்கு ஸ்வாமியான ஸர்வேஶ்வரனுடைய ஸந்நிதியிலே, வெள்ளை விளி சங்கின் – வெண்மையானதும், (எல்லாரையும்) கூப்பிடுவதுமான சங்கத்தினுடைய, பேர் அரவம் – பெரிய ஒலியையும், கேட்டிலையோ – கேட்கவில்லையோ? பிள்ளாய்! – (பகவத் விஷயத்தில்) புதியவளான பெண்ணே! எழுந்திராய் – (சீக்கிரமாக) எழுந்திரு; பேய்முலை நஞ்சு – (தாய் வடிவு கொண்ட) பேயாகிய பூதனையின் முலையில் (தடவியிருந்த) விஷத்தை, உண்டு – (அவளுடைய ஆவியுடன்) அமுது செய்து, கள்ளச் சகடம் –வஞ்சனை பொருந்திய சகடாசுரனை, கலக்கு அழிய – கட்டுக் குலையும்படி, கால் ஓச்சி – திருவடிகளை நிமிர்த்து, வெள்ளத்து – திருப்பாற்கடலில், அரவில் – ஆதிஶேஷன் மீது, துயில் அமர்ந்த – திருக்கண் வளர்ந்தருளிய, வித்தினை – ஜகத்காரணபூதனான எம்பெருமானை, முனிவர்களும் – (பகவானை) மனனம் செய்பவரும், யோகிகளும் – யோகாப்யாஸம் செய்யும் கைங்கர்யபரர்களும், உள்ளத்துக் கொண்டு – ஹ்ருதயத்திலே (எம்பெருமானை) த்யானித்து, மெள்ள எழுந்து – (ஹ்ருதயத்திலிருக்கும் அப்பெருமான் அசையாதபடி) ஜாக்ரதையாக எழுந்திருந்து, அரி என்ற – “ஹரிர் ஹரி:” என்ற, பேர் அரவம் – பெரிய ஒலியானது, உள்ளம் புகுந்து – எங்களுடைய நெஞ்சிலே புகுந்து, குளிர்ந்து – குளிர்ந்தது;
@@@@
ஏழாம்பாட்டு
கீசு கீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.
பதவுரை – பேய்ப்பெண்ணே! – (பகவத் விஷய ரஸத்தை அறிந்தும் மறந்து கிடக்கிற) மதிகேடீ!. எங்கும் – எல்லா திசைகளிலும், ஆனைச்சாத்தன் – வலியன் என்னும் பரத்வாஜ பக்ஷிகள், கீசு கீசு என்று – கீச்சு கீச்சு என்று, கலந்து பேசின – கலந்து பேசிய, பேச்சு அரவம் – பேச்சின் ஒலியை, கேட்டிலையோ – (நீ) கேட்கவில்லையோ?, வாச நறுங்குழல் – மிக்க பரிமளத்தை உடைய மயிர் முடியையுடைய, ஆய்ச்சியர் – இடைச்சிகளுடைய, காசும் – அச்சுத்தாலியும், பிறப்பும் – முளைத்தாலியும், கலகலப்ப – கலகல என்று ஒலிக்கும்படியாக, கைபேர்த்து – கைகளை அசைத்து, மத்தினால் – மத்தினாலே, ஓசை படுத்த – ஓசைப்படுத்திய, தயிர் அரவம் – தயிரோசையும், கேட்டிலையோ – (நீ) கேட்கவில்லையோ?. நாயகப்பெண்பிள்ளாய் – பெண்களுக்கெல்லாம் தலைவியாயிருப்பவளே!. நாராயணன் மூர்த்தி கேசவனை – நாராயணனுடைய அவதாரமான கண்ணனை, பாடவும் – (நாங்கள்) பாடச் செய்தேயும், நீ – நீ, கேட்டே கிடத்தியோ – (அப்பாட்டைக்) கேட்டும் (இப்படிக்) கிடக்கலாமோ? தேசம் உடையாய் – மிகுந்த தேஜஸ்ஸை உடையவளே!. திற – கதவைத் திறந்து விடு.
@@@@@@
எட்டாம்பாட்டு
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்.
பதவுரை – கோது கலம் உடைய பாவாய் – (க்ருஷ்ணனுடைய) விருப்பத்தை உடைய பெண்ணே!. கீழ்வானம் – கிழக்கு திக்கில் ஆகாசமானது, வெள்ளென்று – வெளுத்தது; எருமை – எருமைகள், மேய்வான் – (பனிப்புல்) மேய்கைக்காக, சிறுவீடு – (விடியற்காலையில்) சிறிது நேரம் அவிழ்த்து விடப்பட்டு, பரந்தன காண் – (வயல்களெங்கும்) பரவின; போவான் போகின்றார் – போவதையே ப்ரயோஜனமாகக் கொண்டு போகின்றவர்களான, மிக்குள்ள பிள்ளைகளும் – –மற்றுமுள்ள பெண்பிள்ளை களையும், போகாமல் காத்து – போகாதபடி தடுத்து, உன்னைக் கூவுவான் – உன்னைக் கூப்பிடுவதற்காக, வந்து நின்றோம் – (உன் வாசலில்) வந்து நிலையாக நின்றோம், எழுந்திராய் – எழுந்திரு; பாடி – (கண்ணனுடைய குணங்களைப்) பாடி, பறை கொண்டு – (அவனிடம்) பறையைப்பெற்று, மா வாய் பிளந்தானை – குதிரை வடிவு கொண்ட கேசியின் வாயைப் பிளந்தவனும், மல்லரை மாட்டிய – (சாணூர முஷ்டிகர்கள் என்னும்) மல்லர்களை அழியச் செய்தவனும், தேவாதி தேவனை – நித்ய ஸூரிகளுக்கெல்லாம் தலைவனுமான அவனை, நாம் சென்று சேவித்தால் – நாம் (அவனிடம்) சென்று பணிந்தால், ஆராய்ந்து – (நம்முடைய குறைகளை) விசாரித்து, ஆ ஆ என்று அருள் – ஐயோ! என்று தயை பண்ணுவன்.
@@@@@
ஒன்பதாம் பாட்டு
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
பதவுரை – தூ மணி மாடத்து – தூய்மையை இயற்கையாக உடைய ரத்னங்களினால் இழைக்கப்பெற்ற மாளிகையில், சுற்றும் – எல்லாவிடத்திலும், விளக்கு எரிய – மங்கள தீபங்கள் ஒளிவிடவும், தூபம் கமழ – (அகில் முதலியவற்றின்) புகை மணம் வீசவும், துயில் அணைமேல் – (படுத்தாரைத்) தூங்கச்செய்யும் படுக்கையின் மேல், கண் வளரும் – கண் உறங்குகிறவளான, மாமான் மகளே! – மாமன் மகளே!. மணி கதவம் தாள் – மாணிக்கக் கதவுகளின் தாள்களை, திறவாய் – திறந்துவிட வேண்டும்; மாமீர் – மாமியே!. அவளை எழுப்பீரோ – உம்முடைய மகளைத் துயில் எழுப்ப வேணும்; உன் மகள் தான் – உன்னுடைய மகள், ஊமையோ – வாய்பேச மாட்டாத ஊமைப்பெண்ணோ?. அன்றி – அல்லாவிடில், செவிடோ? – காது கேளாத செவிடியோ?. அனந்தலோ? – (களைப்பினால்) உறங்குகிறாளோ?. ஏமப்பட்டாளோ – காவலிடப்பட்டாளோ?. பெருந்துயில் மந்திரப்பட்டாளோ – நெடுநேரம் தூங்கும்படி மந்திரத்தால் கட்டுண்டாளோ?. மாமாயன் – நினைக்கவொண்ணாத ஆச்சர்யச் செயல்களை உடையவன், மாதவன் – லக்ஷ்மீநாதன், வைகுந்தன் என்று என்று – ஸ்ரீவைகுண்டநாதன் என்று இம்மாதிரியாக, நாமம் பலவும் நவின்று – பல பல திருநாமங்களை நாங்கள் சொல்லிவிட்டோம் (அப்படியும் உன்மகள் எழுந்திருக்கவில்லையே!).
@@@@
பத்தாம் பாட்டு
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.
பதவுரை – நோற்று – நோன்பு நோற்று, சுவர்க்கம் புகுகின்ற – ஸுகத்தை இடைவிடாமல் அனுபவிக்கின்ற, அம்மனாய் – அம்மா!. வாசல் திறவாதார் – வாசற் கதவைத் திறக்கமாட்டாதவர்கள், மாற்றமும் தாராரோ – ஒரு பதில் வார்த்தையாவது பேசாரோ?. நாற்றத்துழாய் முடி – வாசனை வீசுகின்ற திருத்துழாய் மாலையை முடியிலே சூடியுள்ளவனும், நாராயணன் – நாராயணன் என்னும் ஒப்பற்ற திருநாமத்தை உடையவனும், நம்மால் போற்ற பறை தரும் – நம்மால் பல்லாண்டு பாடப்பெற்று, நமக்கு ப்ராப்யமான கைங்கர்யங்களைக் கொடுப்பவனும், புண்ணியனால் – தர்மமே வடிவெடுத்தவனுமான எம்பெருமானால், பண்டு ஒரு நாள் – முன்னொரு காலத்தில், கூற்றத்தின் வாய் வீழ்ந்த – யமன் வாயில் விழுந்தொழிந்த, கும்பகர்ணனும் – கும்பகர்ணனும், உனக்கே தோற்று – உனக்குத் தோல்வி அடைந்து, பெரும் துயில் தான் – (தன்) பெருந்தூக்கத்தை, தந்தானோ – உனக்குக் கொடுத்துப் போயினானோ?. ஆற்ற அனந்தல் உடையாய் – அழகிய உறக்கத்தை உடையவளே!. அருங்கலமே – அடையவரிய ஆபரணம் போன்றவளே!. தேற்றமாய் வந்து திற – தெளிந்து வந்து (கதவைத்) திறப்பாயாக.
@@@@
பதினோராம் பாட்டு
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத்தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
பதவுரை – கற்றுக்கறவை – கன்று போலே இருக்கும் பசுக்களுடைய, பல கணங்கள் – பல கூட்டங்களையும், கறந்து – கறப்பவர்களாய், செற்றார் – எதிரி களினுடைய, திறல் அழிய – பலம் அழிந்து போகும்படி, சென்று – (படை எடுத்துப்) போய், செருச்செய்யும் – போர் புரியுமவர்களாய், குற்றம் ஒன்று இல்லாத – ஒருவிதமான குற்றமற்றவர்களான, கோவலர்தம் – ஆயர்களுடைய (குலத்தில் பிறந்த), பொன் கொடியே – பொன் கொடி போன்றவளே!. புற்று அரவு அல்குல் – புற்றிலிருக்கும் பாம்பின் படம் போல் உள்ள நிதம்ப ப்ரதேஶத்தையுடையவளாய், புனமயிலே – தன் நிலத்திலே உள்ள மயில் போன்று இருப்பவளே!. போதராய் – புறப்பட்டு வருவாயாக; சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் – (உனக்கு) உறவினரான தோழிகள் அனைவரும், வந்து – (சேர்ந்து) வந்து, நின் முற்றம் புகுந்து – உன்னுடைய மாளிகை முற்றத்திலே புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட – நீலமேக வண்ணனான கண்ணபிரானுடைய திருநாமங்களைப் பாடியும், செல்வப் பெண்டாட்டி நீ – (எங்களுக்கு) எல்லாச் செல்வமுமாயிருக்கும் நீ, சிற்றாதே பேசாதே – அசையாமலும், பேசாமலும், உறங்கும் பொருள் எற்றுக்கு – உறங்கும் காரியம் எதற்காகவோ?.
@@@@@,
பன்னிரண்டாம்பாட்டு.
கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை – இளம் கற்று எருமை – இளங்கன்றுகளையுடைய எருமைகளானவை, கனைத்து – (கறப்பாரில்லாமையாலே) கதறிக் கொண்டு, கன்றுக்கு இரங்கி – (தம்) கன்றுகளிடம் இரக்கம் கொண்டு, நினைத்து – அக்கன்றுகளை நினைத்து, முலை வழியே நின்று பால் சோர – (அந்நினைவின் முதிர்ச்சியாலே) முலைகளின் வழியாகப் பால் இடைவிடாமல் பெருக, இல்லம் நனைத்து – (அதனால்) வீடு முழுவதும் ஈரமாக்கி, சேறு ஆக்கும் –{துகைத்துச்) சேறாக்கும்படி இருப்பவனாய், நல் செல்வன் – க்ருஷ்ண கைங்கர்யமாகிற மேலான செல்வத்தை உடையவனானவனுடைய, தங்காய் – தங்கையே!. தலை பனி வீழ – (எங்கள்) தலையிலே பனி பெய்யும்படியாக, நின் வாசல் கடை பற்றி – உன் வாசற்கடையைப் பிடித்துக்கொண்டு, தென் இலங்கை கோமானை – செல்வத்தையுடைத்தான இலங்கைக்கு அரசனான இராவணனை, சினத்தினால் செற்ற – (பிராட்டியைப் பிரித்தான்) என்னும் கோபத்தாலே கொன்றவனாய், மனத்துக்கு இனியானை – மநஸ்ஸுக்கு இனிமையைத் தருமவனான இராமபிரானை, பாடவும் – (நாங்கள்) பாடியபோதிலும், நீ வாய் திறவாய் – நீ வாய் திறந்து பேசுகிறாயல்லை; இனித்தான் – இனியாவது, எழுந்திராய் – எழுந்திருப்பாயாக; ஈது என்ன பேருறக்கம் – இது என்ன பெருந்தூக்கம்? அனைத்து இல்லத்தாரும் – (ஆய்ப்பாடியிலுள்ள) எல்லா வீட்டினராலும், அறிந்து – (உன்னுடைய பெருந்தூக்கம்) அறியப்பட்டுவிட்டது.
@@@@@
பதின்மூன்றாம் பாட்டு
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதறிக்கண்ணினாய்
குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை – புள்ளின் வாய் கீண்டானை – பறவை உருவம் கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும், பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை- பொல்லாங்குகளுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்துப் போட்டவனுமான எம்பிரானுடைய, கீர்த்திமை பாடி போய் – வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று, பிள்ளைகள் எல்லாரும் – எல்லாப்பெண் பிள்ளைகளும், பாவைக்களம் – (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்துக்கு, புக்கார் – புகுந்தனர்; வெள்ளி எழுந்து – சுக்கிரன் மேலெழுந்து, வியாழம் உறங்கிற்று – குரு அஸ்தமித்தது; (மேலும்) புள்ளும் சிலம்பின காண் – (பறவைகளும் இரைதேடச்) சிதறிச் செல்கின்றன; போது அரி கண்ணினாய் – பூவையும், மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! பாவாய் – இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே!. நீ – நீ, நல் நாள் – க்ருஷ்ணனும் தாமும் கூடப்போகும் இந்த நல்ல நாளில், கள்ளம் தவிர்ந்து – (க்ருஷ்ண குணங்களைத் தனி இருந்து அனுபவிக்கையாகிற) கபடத்தை விட்டு, கலந்து – எங்களோடு சேர்ந்து, குள்ளக் குளிர குடைந்து நீராடாதே – மிகக் குளிர்ச்சியாயிருக்கும் நீரில் நன்றாக நீராடாமல், பள்ளி கிடத்தியோ – படுக்கையில் கிடந்து உறங்குகின்றாயோ?. ஆல் – ஆச்சர்யம்!.
@@@@@
பதினான்காம் பாட்டு
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.
பதவுரை – எங்களை – (உன் தோழியராகிய) எங்களை, முன்னம் எழுப்புவான் – முதல் முதலில் எழுப்புவதாக, வாய் பேசும் – வாயாலே சொல்லி வைத்த, நங்காய் – பரிபூர்ணையே!. நாணாதாய் – (‘சொன்னபடி செய்யாதொழிந்தோமே என்னும்’) வெட்கமுமற்றவளே!. நா உடையாய் – (இன் சொற்களைப்பொழியும்) நாவை உடையவளே!. உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள் – உங்களுடைய புழக்கடையிலுள்ள தோட்டத்தில் விளங்கும் குளத்தினுள், செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து – செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண் – கரு நெய்தல் மலர்கள் குவிந்து கொண்டன காண்! (மேலும்) செங்கல் பொடி கூறை – காஷாயம் படிந்த உடையை அணிந்தவரும், வெண்பல் – வெளுத்த பற்களையுடையவரும், தவத்தவர் – தபோ வேஷத்தை உடையவருமான சைவ ஸந்யாஸிகளும், தங்கள் திருக்கோயில் – தங்களுடைய தெய்வ ஸந்நிதிகளில், சங்கு இடுவான் – சங்கு ஊதுகைக்காக, போகின்றார் – செல்கின்றனர்; சங்கொடு சக்கரம் – சங்கத்தையும் சக்கரத்தையும், ஏந்தும் – (இரு கைகளிலும்) லாவகமாக தரித்தும், தட கையன் – பெரிய கைகளை உடையவனாய், பங்கய கண்ணானை – செந்தாமரை போன்ற கண்களை உடையவனான ஸர்வேஶ்வரனை. பாட – (ப்ரீதிக்குப் போக்குவிட்டுப்) பாடுவதற்காக, எழுந்திராய் – எழுந்திருப்பாயாக.
@@@@
பதினைந்தாம் பாட்டு
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடைமை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
பதவுரை – இளம் கிளியே – (பேச்சிலும் அழகிலும்) இளமை தங்கிய கிளி போல் இருப்பவளே!. எல்லே – (உன் பேச்சின் இனிமை) என்னே!. இன்னம் – எல்லோரும் வந்து நின்ற பிறகும், உறங்குதியோ – தூங்குகிறாயோ? (என்று எழுப்ப), நங்கைமீர் – பெண்பிள்ளைகளே!. சில் என்று அழையேல்மின் – சிலுகு சிலுகு என்று அழைக்காதீர்கள். போதர்கின்றேன் – (இப்போதே) புறப்பட்டு வருகிறேன் (என்று உள்ளிருப்பவள் விடை கூற), வல்லை – (வாய்ப்பேச்சில் நீ) ஸமர்த்தையாயிரா நின்றாய். உன் கட்டுரைகள் – உன்னுடைய கடும் சொற்களையும், உன் வாய் – உன்னுடைய வாயையும், பண்டே அறிதும் – நெடுங்காலமாகவே நாங்கள் அறிவோம் (என்று எழுப்புகிறவர்கள் சொல்ல), நீங்களே வல்லீர்கள் – (இப்படி எதிர்வாதம் செய்யும்) நீங்களே வாய் வன்மை யுடையவர்கள், நானே தான் ஆயிடுக – (அன்றிக்கே) நானே வாய் வன்மையுடையவளாய் இருக்கட்டும். (உங்களுக்கு நான் செய்ய வேண்டுவது என்? என்று உள்ளிருப்பவள் கேட்க), நீ – நீ, ஒல்லை போதாய் – சீக்கிரம் எழுந்திருப்பாயாக; உனக்கு என்ன வேறு உடையை – உனக்கு என்று வேறு என்ன பலனை நீ உடையவளாயிருக்கிறாய்?. (என்று உணர்ந்தவர்கள் வினவ), எல்லாரும் போந்தாரோ – (வர வேண்டியவர்) யாவரும் வந்தனரோ? என்று உள்ளிருப்பவள் கேட்க, போந்தார் – (எல்லோரும்) வந்தனர், போந்து எண்ணிக்கொள் – (நீயும்) வந்து எண்ணிப்பார்த்துக் கொள். (என்று உணர்ந்தவர்கள் சொல்ல), ‘நான் வெளி வந்து செய்ய வேண்டுவது என்’ என்று உள்ளிருப்பவள் உசாவ), வல்லானை – (குவலயாபீடம் என்னும்) வலிய யானையை, கொன்றானை – அழித்தவனும், மாற்றாரை – சத்ருக்களை, மாற்று அழிக்க வல்லானை – வலியற்ற வர்களாகச் செய்யவல்லவனும், மாயனை –ஆச்சர்யமான செய்கைகளை உடையவனுமான கண்ணனை, பாட –பாடுவதற்காக, (எழுந்திராய் என்று அழைக்கிறார்கள்).
@@@@@
பதினாறாம் பாட்டு
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்றலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேசநிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
பதவுரை – நாயகன் ஆய் நின்ற – (எங்களுக்கு) ஸ்வாமியாயிருக்கிற, நந்த கோபனுடைய – நந்தகோபருடைய, கோயில் – திருமாளிகையை, காப்பானே – காக்குமவனே@!. கொடி தோன்றும் – த்வஜங்கள் விளங்கா நிற்கும். தோரண வாயில் – தோரணவாசலை, காப்பானே – காக்குமவனே!. மணி – ரத்னங்கள் பதிக்கப்பெற்ற, கதவம் – கதவினுடைய, தாள் – தாழ்ப்பாளை, திறவாய் – திறக்க வேணும்; ஆயர் சிறுமியரோமுக்கு- இடைச்சிறுமிகளான எங்களுக்கு, மாயன் – ஆச்சர்ய செயல்களை உடையவனும், மணி வண்ணன் – நீல ரத்னம் போன்ற திருநிறத்தை உடையவனுமான கண்ணபிரான், நென்னலே – நேற்றே, அறை பறை வாய் நேர்ந்தான் – ஶப்திக்கும் பறையைக் கொடுப்பதாக வாக்களித்தான்; துயில் எழ – (அவன்) தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும்படி, பாடுவான் – பாடுவதற்காக, தூயோமாய் வந்தோம் – பரிஶுத்தைகளாக வந்திருக்கின்றோம்; அம்மா! – ஸ்வாமி. முன்னம் முன்னம் – முதன் முதலில், வாயால் – (உம்முடைய) வாயினாலே, மாற்றாதே – மறுக்காமல், நேயம் நிலை கதவம் – (கண்ணனிடம்) பேரன்பு பூண்ட நிலைமையையுடைய கதவை, நீ – நீயே, நீக்கு – நீக்க வேணும்.
@@@@
பதினேழாம் பாட்டு
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற்கழலடி செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேல் ஓரெம்பாவாய்.
பதவுரை – அம்பரமே – வஸ்த்ரங்களையும், தண்ணீரே – ஜலத்தையும், சோறே – சோற்றையுமே, அறம் செய்யும் – தர்மம் செய்யும், எம்பெருமான் நந்தகோபாலா! – எம் ஸ்வாமியான நந்தகோபரே!. எழுந்திராய் – எழுந்திருக்க வேணும்; கொம்பு அனார்கெல்லாம் – வஞ்சிக்கொம்பு போன்ற பெண்களுக்கெல்லாம், கொழுந்தே – மேலாயிருப்பவளே!. குலம் விளக்கே – ஆயர் குலத்துக்கு மங்களதீபமாயுள்ளவளே!. எம்பெருமாட்டி – எமக்குத் தலைவியாயிருப்பவளே!. அசோதாய் – யசோதைப் பிராட்டியே!. அறிவுறாய் – உணர்ந்து எழுவாயாக!. அம்பரம் ஊடு அறுத்து – ஆகாசவெளியைத் துளைத்துக் கொண்டு, ஓங்கி – உயர்ந்து, உலகு அளந்த- ஸகல லோகங்களையும் அளந்தருளிய, உம்பர் கோமானே! – தேவதேவனே!. உறங்காது – கண் வளர்ந்தருளாமல், எழுந்திராய்! – எழுந்திருக்க வேணும்; செம்பொன் கழல் அடி – சிவந்த பொன்னால் செய்த வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையுடைய, செல்வா – ஸ்ரீமானே!. பலதேவா – பலதேவனே!. உம்பியும் நீயும் – உன் தம்பியாகிய கண்ணனும் நீயும், உறங்கேல் – தூங்காதொழிய வேணும்.
@@@@
பதினெட்டாம் பாட்டு
உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை – மதம் உந்து களிற்றன் – மதஜலத்தைப் பெருக்குகின்ற யானை போலே பலமுள்ளவராய், ஓடாத தோள் வலியன் – (யுத்தபூமியில்) பின்வாங்க வேண்டாத தோள்வலியை உடையவரான, நந்தகோபாலன் – ஸ்ரீநந்தகோபருடைய, மருமகளே! – மருமகளே!. நப்பின்னாய் – நப்பின்னை என்னும் பெயரை உடையவளே!. கந்தம் கமழும் குழலீ – பரிமளம் வீசும்படியான கூந்தலை உடையவளே!. கடை திறவாய் – வாயிலைத் திறப்பாயாக;. கோழி – கோழிகள், எங்கும் வந்து – நாற்புறங்களிலும் பரவி, அழைத்தன காண் – கூவின காண்!. (மேலும்) மாதவி பந்தல் மேல் – குருக்கத்திக்கொடிகளாலான பந்தல் மேல் (உறங்கும்), குயில் இனங்கள் – குயில் கூட்டங்கள், பல் கால் – பலமுறை, கூவின காண்! – கூவாநின்றன காண்!. பந்து ஆர் விரலி – (கண்ணனை, விளையாட்டில் தோற்பிக்கைக்கு உபகரணமாயிருந்த) பந்து விளங்கும் விரல்களையுடையவளே!. உன் மைத்துனன் பேர் பாட- உன் நாதனாகிய கண்ணபிரானுடைய நாமங்களை (நாங்கள்) பாடும்படியாக, சீர் ஆர் வளை ஒலிப்ப – சீர்மை பொருந்திய (உன்) கை வளைகள் ஒலிக்கும்படி, வந்து – நடந்து வந்து, செம் தாமரை கையால் – சிவந்த தாமரை போன்ற உன் திருக்கையால், மகிழ்ந்து திறவாய் – மகிழ்ச்சியுடன கதவைத் திறப்பாயாக.
@@@@@
பத்தொன்பதாம் பாட்டு
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக்கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்
மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனைபோதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்.
பதவுரை. – குத்து விளக்கு – நிலை விளக்கானது, எரிய எரியாநிற்க, கோடு கால் கட்டில் மேல் – யானைத் தந்தங்களால் செய்த கால்களையுடைய கட்டிலிலே, மெத்தென்ற மெத்தென்று இருக்கும், பஞ்ச சயனத்தின் மேலேறி – பஞ்சினாலான படுக்கையின் மீது மேலேறி, கொத்து அலர் பூ குழல் – கொத்துக் கொத்தாக மலரும் பூக்களை அணிந்த குழலையுடைய, நப்பின்னை – நப்பின்னை பிராட்டியுடைய, கொங்கை மேல் – திருமுலைத் தடங்களின் மேலே, வைத்துக்கிடந்த மலர் மார்பா – (தன்னுடைய) அகன்ற மார்பை வைத்துக் கிடப்பவனே!. வாய் திறவாய் – வாய் திறந்து வார்த்தை சொல்லுவாயாக; மை தடம் கண்ணினாய் – மை இட்டு அலங்கரித்த பரந்த கண்களை உடையவளே!. நீ – நீ, உன் மணாளனை – உனக்குக் கணவனான கண்ணனை, எத்தனை போதும் – ஒரு கணநேரமும், துயில் எழ – திருப்பள்ளி எழ, ஒட்டாய் காண் – சம்மதிக்கிறாயல்லை;. எத்தனையேலும் – சிறிதுபோதும், பிரிவு ஆற்றகில்லாய் ஆல் – (அவனை விட்டுப்) பிரிந்திருப்பதைப் பொறுக்கிறாயல்லை அன்றோ; தத்துவம் அன்று – (இது) உன் ஸ்வரூபத்துக்குத் தகுந்ததன்று; தகவு அன்று – உன் ஸ்வபாவத்துக்கும் தகுந்ததன்று.
@@@@
இருபதாம் பாட்டு
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.
பதவுரை – முப்பத்து மூவர் அமரர்க்கு – முப்பத்து முக்கோடி தேவர்கட்கு, முன் சென்று – (இடர் வருவதற்கு) முன்னமே எழுந்தருளி, கப்பம் – (அவர்களுடைய) நடுக்கத்தை, தவிர்க்கும் – போக்கி அருளவல்ல, கலியே – பலத்தையுடைய கண்ணபிரானே, துயில் எழாய் – படுக்கையினின்றும் எழுந்திராய்; செப்பம் உடையாய் – (ஆஶ்ரிதர்களை ரக்ஷிக்கும் விஷயத்தில்) நேர்மை உடையவனே!. திறல் உடையாய் – (ஆஶ்ரித விரோதிகளை அழியச் செய்ய வல்ல) பலத்தை உடையவனே!. செற்றார்க்கு – எதிரிகளுக்கு, வெப்பம் – துக்கத்தை, கொடுக்கும் – தரும்படியான, விமலா – பரிசுத்தனே! துயில் எழாய் செப்பு அன்ன – பொற்கலசம் போன்ற, மென்முலை – மிருதுவான முலைகளையும், செவ்வாய் – சிவந்த வாயையும், சிறு மருங்குல் – நுண்ணிய இடையையுமுடைய, நப்பின்னை நங்காய் – நப்பின்னைப் பிராட்டியே!. திருவே – பெரிய பிராட்டியை ஒத்தவளே!. துயில் எழாய;. உக்கமும் – (நோன்புக்கு உபகரணமான) ஆலவட்டத்தையும் (விசிறியையும்), தட்டொளியும் – கண்ணாடியையும், தந்து – கொடுத்து, உன் மணாளனை – உனக்கு நாதனான அவனையும், எம்மை – எங்களையும், இப்போதே நீராட்டு – இக்கணத்திலேயே, நீராட்டக்கடவாய்.
@@@@@
இருபத்தொன்றாம் பாட்டு
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்!
ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை – ஏற்ற கலங்கள் – (தானாகச் சுரக்கும்) பாலை ஏற்றுக்கொள்ள இடப்பட்ட பாத்திரங்களெல்லாம், எதிர் பொங்கி – எதிரே பொங்கி, மீது அளிப்ப – மேலே வழியும் படியாக, மாற்றாதே – இடைவிடாமல், பால் சொரியும் – பாலைப்பொழியும்படியான, வள்ளல் – வண்மையையுடைய, பெரும் பசுக்கள் – பெரிய பசுக்களை, ஆற்ற படைத்தான் மகனே – விஶேஷமாக உடையவரான நந்தகோபனுக்குப் பிள்ளையானவனே!. அறிவுறாய் – திருப்பள்ளி உணரவேணும். ஊற்றம் உடையாய் – (மேலான ப்ரமம்மாகிற வேதத்தில் சொல்லப்படுகையாகிற) திண்மையை உடையவனே!. பெரியாய் – (அந்த வேதத்தாலும் அறியப்படாத) பெருமையை உடையவனே!. உலகினில் – இவ்வுலகத்தில், தோற்றம் ஆய் நின்ற – (ஸகல சேதனருடைய கண்ணுக்கும்) தோன்றி நின்ற, சுடரே – தேஜோ ரூபியானவனே!. துயில் எழாய் – துயில் உணர்வாயாக; மாற்றார் – உன்னுடைய எதிரிகள், உனக்கு வலி தொலைந்து – உன்னிடத்தில் (தங்கள்) வலி மாண்டு போய், உன் வாசல் கண் – உன் திருமாளிகை வாசலிலே, ஆற்றாது வந்து – கதியற்று வந்து, உன் அடிபணியும் ஆ போலே – உன் திருவடிகளை வணங்கிக் கிடப்பது போல், யாம் – நாங்கள், புகழ்ந்து – (உன்னைத்) துதித்து, போற்றி – (உனக்கு) மங்களாசாசனம் பண்ணிக்கொண்டு, வந்தோம் – (உன் திருமாளிகை வாசலில்) வந்து அடைந்தோம்.
@@@@@
இருபத்திரண்டாம் பாட்டு
அங்கண் மாஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை – அம் கண் மா ஞாலத்து அரசர் – அழகியதாய், இடமுடையதாய், பெரிதாயுள்ள பூமியில் (ஆண்டு வரும்) அரசர்கள், அபிமான பங்கமாய் வந்து – (தங்களுடைய) அஹங்காரம் குலைந்து வந்து, நின் பள்ளிக்கட்டில் கீழே – உன் சிங்காதனத்தின் கீழே, சங்கம் இருப்பார் போல் – திரளாகக் கூடி இருப்பதைப்போல், வந்து – (நாங்களும் நீ இருக்குமிடம்) வந்து, தலைப்பெய்தோம் – அணுகினோம்;. கிங்கிணிவாய்ச் செய்த – கிங்கிங்கிணியின் வாய்போலே பாதி மலர்ந்த, தாமரை பூ போலே – தாமரைப்பூவைப்போலே, செங்கண் – சிவந்திருக்கும் திருக்கண்கள், சிறுச்சிறிதே – சிறிது சிறிதாக, எம்மேல் விழியாவோ – (அடியாரான) எங்கள்மேல் விழிக்கமாட்டாவோ?. திங்களும் ஆதித்தியனும் – சந்திரனும் ஸூரியனும், எழுந்தால் போல் – உதித்தாற்போல், அம் கண் இரண்டும் கொண்டு – அழகிய கண்கள் இரண்டாலும், எங்கள்மேல் நோக்குதியேல் – எங்களைக் கடாக்ஷித்தருளுவாயாகில், எங்கள் மேல் சாபம் – எங்களிடமுள்ள துக்கம், இழிந்து – அழிந்து விடும்.
@@@@@@
இருபத்து மூன்றாம் பாட்டு
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்.
பதவுரை – மாரி – மழை காலத்தில், மலைமுழைஞ்சில் – மலைக்குகை ஒன்றில், மன்னிக்கிடந்து – (பேடையோடு ஒன்றாகப்) பொருந்திக் கிடந்து, உறங்கும் – தூங்குகின்ற, சீரியசிங்கம் – (வீர்யமாகிற) சீர்மையை உடைய சிங்கம், அறிவுற்று – உணர்ந்தெழுந்து, தீ விழித்து – நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து, வேரி மயிர் – பரிமளம் நிரம்பிய பிடரி மயிர்கள், பொங்க – எழும்படி, எப்பாடும் – எல்லாப்பக்கங்களிலும், பேர்ந்து – அசைந்து, உதறி – (தேஹத்தை) உதறி, மூரி நிமிர்ந்து – உடல் ஒன்றாகும்படி நிமிர்ந்து, முழங்கி – கர்ஜனை செய்து, புறப்பட்டு – வெளிப்புறப்பட்டு, போதரும் ஆ போலே – வருகிறது போல், பூவை பூ வண்ணா – காயாம்பூப் போல் நிறத்தையுடையவனே!. நீ – நீ, உன் கோயில் நின்று – உன்னுடைய, திருகோயிலிலிருந்து , இங்ஙனே போந்தருளி – இவ்விடத்திலே எழுந்தருளி, கோப்பு உடைய – அழகிய அமைப்பை உடைய, சீரிய – மேன்மை பெற்ற, சிங்காசனத்து – ஸிம்ஹாஸனத்தின் மீது, இருந்து – எழுந்தருளியிருந்து, யாம் வந்த காரியம் – நாங்கள் (மநோரதித்துக் கொண்டு) வந்த காரியத்தை, ஆராய்ந்து அருள் – விசாரித்து அருளவேணும்
@@@@@.
இருபத்து நாலாம் பாட்டு
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்று உன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.
பதவுரை– அன்று – (இந்த்ரன் முதலானவர்கள் மஹாபலியினால் வருந்திய) அக்காலத்தில், இ உலகம் – இந்த உலகங்களை, அளந்தாய் – (இரண்டடிகளால்) அளந்தருளினவனே!. அடி – (உன்னுடைய அந்தத்) திருவடிகள், போற்றி – பல்லாண்டு பல்லாண்டு வாழ்க; . அங்கு – இராவணன் இருக்குமிடத்தில், சென்று – எழுந்தருளி, தென் இலங்கை – (அவன் நகரமாகிய) அழகிய இலங்கையை, செற்றாய் – அழித்தவனே!. திறல் – உன்னுடைய பலம், போற்றி – பல்லாண்டு வாழ்க!. சகடம் –சகடாசுரனானவன், பொன்ற – அழிந்துபோகும்படி, உதைத்தாய் – (அச்சகடத்தை) உதைத்தவனே!. புகழ் – (உன்னுடைய) கீர்த்தியானது, போற்றி – நீடூழி வாழ்க!. கன்று – கன்றாய் நின்ற வத்ஸரஸுரனை, குணிலா – எறிதடியாகக் கொண்டு, எறிந்தாய் – விளங்கனியாய் நின்ற அஸுரன் மீது எறிந்தருளியவனே!. கழல் – (அப்போது மடக்கி நின்ற) உன் திருவடிகள், போற்றி – நீடூழி வாழ்க; குன்று – கோவர்த்தன மலை., குடை – குடையாக, எடுத்தாய் – தூக்கினவனே!. குணம் – (இரக்கம் முதலான உன்) குணங்கள், போற்றி – பல்லாண்டு விளங்க வேணும். வென்று – (எதிரிகளை) ஜயித்து, பகை கெடுக்கும் – அப்பகைவர்களை அழியச் செய்யும், நின் கையில் வேல் – உன் கையிலுள்ள வேல், போற்றி – நீண்ட நாள் வாழ வேணும்; என்று என்று – என்று இப்படிப் பல தடவை மங்களாசாசனம் பண்ணிக்கொண்டு, உன் சேவகமே – உன்னுடைய வீர்யங்களையே, ஏத்தி – புகழ்ந்து, பறை கொள்வான் – பறை கொள்வதற்காக, யாம் – நாங்கள், இங்கு – இவ்விடத்திற்கு, வந்தோம் – வந்து சேர்ந்தோம்; இரங்கு – க்ருபை புரிய வேண்டும்.
@@@@@
இருபத்தைந்தாம் பாட்டு
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை – ஒருத்தி – தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு, மகன் ஆய் – பிள்ளையாய், பிறந்து – தோன்றி, ஓர் இரவில் – (அவதரித்த அந்த) ஒப்பற்ற இரவிலேயே, ஒருத்தி – யசோதைப்பிராட்டியாகிய ஒருத்தியுடைய, மகன் ஆய் – பிள்ளையாக ஆகி, ஒளித்து வளர – ஒளிந்திருந்து வளரும் காலத்தில், தான் – (கம்ஸனாகிற) தானே, தரிக்கிலான் ஆகி – (ஒளிந்து வளருவதையும்) பொறுக்கமாட்டாதவனாய், தீங்கு நினைந்த – (இவனைக் கொல்லவேணும் என்னும்) தீச்செயலை நினைத்த, கஞ்சன் – கம்சனுடைய, கருத்தை – எண்ணத்தை, பிழைப்பித்து – வீணாக்கி, (கஞ்சன்) வயிற்றில் – அக்கம்சனுடைய வயிற்றில், நெருப்பு என்ன நின்ற – ‘நெருப்பு’ என்னுமபடி நின்ற. நெடுமாலே – ஸர்வாதிகனே!. உன்னை – உன்னிடத்தில், அருத்தித்து வந்தோம் – (எங்களுக்கு வேண்டியவற்றை) யாசித்துக் கொண்டு வந்தோம்; பறை தருதி ஆகில் – எங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவாயாகில், திரு தக்க செல்வமும் – பிராட்டியும் ஆசைப்படத் தக்க (உன்) செல்வத்தையும், சேவகமும் – வீர்ய குணத்தையும், யாம் பாடி – நாங்கள் பாடி, வருத்தமும் தீர்ந்து – (உன்னைப் பிரிந்து படும்) துக்கமும் நீங்கி, மகிழ்ந்து – மகிழ்ந்திடுவோம்.
@@@@@
இருபத்தாறாம் பாட்டு
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்.
பதவுரை – மாலே – அடியாரிடத்தில் அன்புடையவனே!. மணி வண்ணா – நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனே. ஆலின் இலையாய் – (ப்ரளய காலத்தில்) ஆலந்தளிரில் கண்வளர்ந்தவனே!. மார்கழி நீராடுவான் – மார்கழி நீராட்டத்துக்காக, மேலையார் – முன்னோர்கள், செய்வனகள் – செய்யும் கிரியைகளுக்கு, வேண்டுவன – வேண்டும் உபகர்ணங்களை, கேட்டியேல் – கேட்டாயாகில், (அவற்றைச் சொல்லுகிறோம்;) ஞாலத்தை எல்லாம் – பூமி முழுவதும், நடுங்க – நடுங்கும்படி, முரல்வன – ஒலிக்கக் கூடிய, பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்யமே போல்வன – பால் போன்ற நிறமுடையதான உன்னுடைய ஸ்ரீபாஞ்சஜன்யம் போன்ற, சங்கங்கள் – சங்கங்களையும், போய் பாடு உடையன – மிகவும் இடமுடையனவாய், சால பெரு – மிகவும் பெரியனவான, பறை – பறைகளையும், பல்லாண்டு இசைப்பார் – திருப்பல்லாண்டு பாடுமவர்களையும், கோலம் விளக்கு – மங்கள தீபங்களையும், கொடி – த்வஜங்களையும், விதானம் – மேற்கட்டிகளையும், அருள் – அளித்தருள வேண்டும்.
@@@@@@
இருபத்தேழாம் பாட்டு
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே. தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை – கூடாரை – தன் அடிபணியாதாரை, வெல்லும் சீர் – ஜயிக்கின்ற குணங்களையுடைய, கோவிந்தா – கோவிந்தனே!. உன் தன்னை – உன்னை, பாடி – வாயாரப்பாடி, பறை கொண்டு – பறையைப் பெற்று, யாம் பெறும் சம்மானம் – (மேலும்) நாங்கள் அடையவிருக்கும் பரிசாவது; – நாடுபுகழும் பரிசினால் – ஊரார் புகழும்படியாக, சூடகம் – (கைக்கு ஆபரணமான) தோடுகளும், செவிப்பூ – கரண புஷ்பமும், பாடகம் – (காலுக்கு ஆபரணமான) பாதகடகம், என்று அனைய பல் கலனும் – என்று சொல்லப்படும் இவ்வாபரணங்கள் போன்று பல ஆபரணங்களையும், யாம் நன்றாக அணிவோம் – (உன்னாலும் நப்பின்னையாலும் அணிவிக்கப்பட்ட) நாங்கள் நன்றாக அணிந்து கொள்வோம்;. ஆடை – (உங்களால் அணிவிக்கப்பட்ட) ஆடைகளை, உடுப்போம் – உடுத்துக் கொள்வோம்;. அதன் பின்னே – அதற்குப்பிறகு, பால் சோறு – பாலாலே சமைக்கப்பட்ட சோறு, மூட – மறையும்படியாக, நெய் பெய்து – நெய்யை இட்டு, முழங்கை வழி வார –முழங்கையால் வழியும்படியாக, கூடி இருந்து – (நாம்) ஒன்றாக இருந்து (உண்டு) ,குளிர்ந்து – குளிர வேணும்.
@@@@@
இருபத்தெட்டாம் பாட்டு
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்கவொழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
பதவுரை – குறை ஒன்றுமில்லாத கோவிந்தா – ஒரு குறையும் இல்லாதவனான கோவிந்தனே!. யாம் – நாங்கள், கறவைகள் பின்சென்று – பசுக்களின் பின்னே போய், கானம் சேர்ந்து – காடு சேர்ந்து, உண்போம் – உண்டு திரிவோம்; அறிவு ஒன்றும் இல்லாத – சிறிதும் அறிவற்ற, ஆய்க்குலத்து – இடைக்குலத்தில், உன் தன்னை – உன்னை, பிறவி பெறும் தனை புண்ணியம் உடையோம் – பிறக்கப்பெறுவதற்குத் தக்க புண்ணியம் உடையவர்களாய் இராநின்றோம்; இறைவா – எம்பிரானே!. உன்தன்னோடு உறவு – உன்னோடு (எங்களுக்கு உள்ள) உறவானது, இங்கு நமக்கு ஒழிக்க ஒழியாது – இங்கு உன்னாலும் எங்களாலும் ஒழிக்க ஒழியமாட்டாது; அறியாத பிள்ளைகளோம் – (உலக வழக்கொன்றும்) அறியாத சிறு பெண்களான நாங்கள், உன் தன்னை – உன்னை, அன்பினால் – ப்ரீதியினாலே, சிறுபேர் அழைத்தனவும் – சிறு பேராலே அழைத்ததைக் குறித்தும், நீ – (ஆச்ரித வத்ஸலனான) நீ, சீறி அருளாதே – கோபித்தருளாமல், பறை தாராய் – (நாங்கள் விரும்பும்) ப்ரயோஜனத்தைத் தரவேணும்.
@@@@
இருபத்தொன்பதாம் பாட்டு
சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
பதவுரை – கோவிந்தா – கண்ணபிரானே!. சிற்றஞ்சிறுகாலே – உஷஸ்காலத்திலே, வந்து – (இங்கு) வந்து, உன்னை சேவித்து – உன்னை வணங்கி, உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள் – உனது அழகிய திருவடித்தாமரைகளை மங்களாசாசனம் பண்ணுவதற்குப் பலனை, கேளாய் – கேட்டருள வேணும்; பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ – பசுக்களை மேய்த்துண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ, எங்களை – எங்களிடத்தில், குற்றேவல் – அந்தரங்க கைங்கர்யத்தை, கொள்ளாமல் போகாது – திருவுள்ளம் பற்றாதொழியவொண்ணாது; இற்றைப் பறை கொள்வான் அன்று காண் – இன்று (கொடுக்கப்படுகிற இப்) பறையைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்; எற்றைக்கும் – காலமுள்ளவளவும், ஏழ் ஏழ் பிறவிக்கும் – எவ்வளவு பிறவி எடுத்தபோதிலும், உன்தன்னோடு – உன்னோடே, உற்றோமே ஆவோம் – உறவுடையவர்களாகக் கடவோம்; உனக்கே – உழக்கு மாத்திரமே, நாம் – நாங்கள், ஆள் செய்வோம் – அடிமை செய்யக்கடவோம்; நம் – எங்களுடைய, மற்றை காமங்கள் – இதர விஷய விருப்பங்களை, மாற்று – தவிர்த்தருள வேணும்.
@@@@@@
முப்பதாம் பாட்டு
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்டவாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத்தண்டெரியற் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச்செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்.
பதவுரை – வங்கம் கடல் – கப்பல்களையுடைய திருப்பாற்கடலை, கடைந்த – (தேவர்களுக்காகக்) கடைந்த, மாதவனை – ஶ்ரிய:பதியான, கேசவனை – கண்ணபிரானை, திங்கள் திருமுகத்து சேயிழையார் – சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள், சென்று – அடைந்து, இறைஞ்சி – வணங்கி, அங்கு – அத்திருவாய்ப்பாடியில், அப்பறை கொண்ட ஆற்றை – ப்ரஸித்தமான (தங்கள்) புருஷார்த்தத்தைப் பெற்ற வ்ருத்தாந்தத்தை, அணி புதுவை – அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த, பை கமலம் தண் தெரியல் பட்டர்பிரான் – பசுமை பொருந்திய தாமரைமலர்களினாலான குளிர்ந்த மாலையையுடைய பெரியாழ்வாருடைய (திருமகளான), கோதை – ஆண்டாள், சொன்ன – அருளிச்செய்த, சங்கம் தமிழ் மாலை முப்பதும் – திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ்மாலையாகிய, இம்முப்பது பாசுரங்களையும், தப்பாமே – தப்பாமல், இங்கு – இந்நிலத்தில், இ பரிசு – இவ்விதமாக, உரைப்பார் – ஓதுமவாகள், ஈர் இரண்டு மால் வரை தோள் – பெரிய மலை போன்ற நான்கு திருத்தோள்களையுடையவனும், செம் கண் திரு முகத்து – சிவந்த கண்களையுடைய திருமுகத்தையுடையவனும், செல்வம் – ஐஶ்வர்யத்தையுடையவனும், திருமாலால் – ஸ்ரீமானுமான எம்பெருமானாலே, எங்கும் – எல்லாவிடத்திலும், திரு அருள் பெற்று – (அவனுடைய) க்ருபையைப் பெற்று, இன்புறுவர் – ஆனந்தமுறுவர்.
@@@@@