பெரிய திருமொழி
ஆறாம் பத்து
முதல் திருமொழி
வண்டுணு நறுமலரிண்டை கொண்டு
பண்டை நம் வினை கெட என்று * அடி மேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று, அங்கு
அண்டமொடு அகலிடம் அளந்தவனே !
ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே ! 6.1.1 திருவிண்ணகர்
அண்ணல் செய்து அலைகடல் கடைந்து, அதனுள்
கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே !
விண்ணவ ரமுதுண அமுதில் வரும்
பெண்ணமுதுண்ட எம்பெருமானே !
ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே ! 6.1.2 திருவிண்ணகர்
குழல்நிறவண்ண ! நின் கூறு கொண்ட
தழல்நிறவண்ணன் நண்ணார் நகரம்
விழ * நனிமலை சிலை வளைவு செய்து, அங்கு
அழல்நிற அம்பது வானவனே !
ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே ! 6.1.3 திருவிண்ணகர்
நிலவொடு வெயில் நிலவிரு சுடரும்
உலகமும் உயிர்களுமுண்டு ஒருகால் *
கலைதரு குழவியின் உருவினையாய்
அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே !
ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே ! 6.1.4 திருவிண்ணகர்
பாரெழு கடலெழு மலையெழுமாய்ச்
சீர்கெழும் இவ்வுலகேழு மெல்லாம் *
ஆர்கெழு வயிற்றினில் அடக்கி நின்று, அங்கு
ஓரெழுத்து ஓருருவானவனே !
ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே ! 6.1.5 திருவிண்ணகர்
கார்கெழு கடல்களும் மலைகளுமாய்
ஏர்கெழும் உலகமுமாகி * முத
லார்களும் அறிவரு நிலையினையாய்ச்
சீர்கெழு நான்மறை யானவனே ! *
ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே ! 6.1.6 திருவிண்ணகர்
உருக்குறு நறுநெய் கொண்டு, ஆரழலில்
இருக்குறும் அந்தணர் சந்தியின் வாய் *
பெருக்கமொடு அமரர்களமர நல்கும்
இருக்கினில், இன்னிசை யானவனே ! *
ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே ! 6.1.7 திருவிண்ணகர்
காதல் செய்து இளையவர் கலவி தரும்
வேதனை வினையது வெருவுதலாம் *
ஆதலின் உனதடி யணுகுவன் நான்
போதலர் நெடுமுடிப் புண்ணியனே ! *
ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே ! 6.1.8 திருவிண்ணகர்
சாதலும் பிறத்தலும் என்றிவற்றைக்
காதல் செய்யாது உன கழலடைந்தேன் *
ஓதல் செய் நான் மறையாகி, உம்பர்
ஆதல் செய் மூவுருவானவனே ! *
ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே ! 6.1.9 திருவிண்ணகர்
பூமரு பொழிலணி, விண்ணகர் மேல் *
காமரு சீர்க் கலிகன்றி சொன்ன *
பாமரு தமிழிவை, பாட வல்லார் *
வாமன னடியிணை, மருவுவரே. 6.1.10 திருவிண்ணகர்