பெரிய திருமொழி
ஆறாம் பத்து
மூன்றாம் திருமொழி
துறப்பேனல்லேன், இன்பம் துறவாது * நின்னுருவம்
மறப்பேனல்லேன், என்றும் மறவாது * யான் உலகில்
பிறப்பேனாக எண்ணேன், பிறவாமை பெற்றது * நின்
திறத்தேனா தன்மையால், திருவிண்ணகரானே ! 6.3.1 திருவிண்ணகர்
துறந்தேன் ஆர்வச் செற்றச், சுற்றம் துறந்தமையால் *
சிறந்தேன் நின்னடிக்கே அடிமை, திருமாலே ! *
அறந்தானாய்த் திரிவாய் ! உன்னை என் மனத்தகத்தே *
திறம்பாமல் கொண்டேன், திருவிண்ணகரானே ! 6.3.2 திருவிண்ணகர்
மானேய் நோக்கு நல்லார், மதிபோல் முகத்து உலவும் *
ஊனேய் கண்வாளிக் குடைந் தோட்டந் துன்னடைந்தேன் *
கோனே ! குறுங்குடியுள் குழகா ! திருநறையூர்த்
தேனே ! * வருபுனல் சூழ், திருவிண்ணகரானே ! 6.3.3 திருவிண்ணகர்,
திருநறையூர்,
திருக்குறுங்குடி
சாந்தேந்து மென்முலையார், தடந்தோள் புணரின்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் * அருநரகத் தழுந்தும், பயன் படைத்தேன் *
போந்தேன் புண்ணியனே ! உன்னை யெய்தி என் தீவினைகள்
தீர்ந்தேன் * நின்னடைந்தேன், திருவிண்ணகரானே ! 6.3.4 திருவிண்ணகர்
மற்றோர் தெய்வம் எண்ணேனுன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் * பெற்றதுவும், பிறவாமை எம்பெருமான் ! *
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை, இராவணனைச்
செற்றாய் ! * கொற்றவனே! திருவிண்ணகரானே ! 6.3.5 திருவிண்ணகர்
மையொண் கருங்கடலும், நிலனும் மணிவரையும் *
செய்ய சுடரிரண்டும், இவையாய நின்னை * நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தே னுண்மையால் இனி * யாதும் மற்றோர்
தெய்வம் பிறிதறியேன், திருவிண்ணகரானே ! 6.3.6 திருவிண்ணகர்
வேறே கூறுவதுண்டு, அடியேன் விரித்துரைக்கு
மாறே * நீ பணியாது அடை நின் திருமனத்துக் *
கூறேன் நெஞ்சு தன்னால், குணங் கொண்டு * மற்றோர் தெய்வம்
தேறேன் உன்னை யல்லால், திருவிண்ணகரானே ! 6.3.7 திருவிண்ணகர்
முளிந்தீந்த வேங்கடத்து, மூரிப் பெருங் களிற்றால் *
விளிந்தீந்த மாமரம் போல், வீழ்ந்தாரை நினையாதே *
அளிந்தோர்ந்த சிந்தை, நின்பாலடியேற்கு * வானுலகம்
தெளிந்தே என்று எய்துவது? திருவிண்ணகரானே ! 6.3.8 திருவிண்ணகர்
சொல்லாய் திருமார்வா ! உனக்காகித் தொண்டு பட்ட
நல்லேனை * வினைகள் நலியாமை, நம்பு நம்பீ *
மல்லா ! குடமாடீ ! மதுசூதனனே ! * உலகில்
செல்லா நல்லிசையாய் ! திருவிண்ணகரானே ! 6.3.9 திருவிண்ணகர்
தாரார் மலர்க்கமலத், தடம் சூழ்ந்த தண்புறவில் *
சீரார் நெடுமறுகில், திருவிண்ணகரானைக் *
காரார் புயல் தடக்கைக், கலியனொலி மாலை *
ஆரார் இவை வல்லார், அவர்க்கு அல்லல் நில்லாவே. 6.3.10 திருவிண்ணகர்