பெரிய திருமொழி
ஆறாம் பத்து
ஆறாம் திருமொழி
அம்பரமும் பெருநிலனும் திசைகளெட்டும்
அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் *
கொம்பமரும் வடமரத்தி னிலைமேல், பள்ளி
கூடினான் திருவடியே கூடுகிற்பீர் ! *
வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு
மணிவண்டு வகுளத்தின் மலர்மேல் வைகு *
செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 6.6.1 திருநறையூர்
கொழுங்கயலாய் நெடுவெள்ளம் கொண்ட காலம்
குலவரையின் மீதோடி அண்டத்தப்பால் *
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை
இணையடிக்கீழ் இனிதிருப்பீர் ! இனவண்டாலும் *
உழும் செறுவில் மணிகொணர்ந்து கரை மேல் சிந்தி
உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள *
செழும் பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 6.6.2 திருநறையூர்
பவ்வ நீருடை ஆடையாகச் சுற்றிப்
பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா *
செவ்வி மாதிரமெட்டும் தோளா, அண்டம்
திருமுடியா நின்றான் பால் செல்லகிற்பீர் ! *
கவ்வை மாகளிறுந்தி விண்ணியேற்ற
கழல் மன்னர் மணிமுடிமேல், காகமேறத் *
தெய்வ வாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 6.6.3 திருநறையூர்
பைங்கணாளரி யுருவாய் வெருவ நோக்கிப்
பருவரைத் தோளிரணியனைப் பற்றி வாங்கி *
அங்கை வாளுகிர் நுதியால் அவனதாகம்
அங்குருதி பொங்குவித்தானடிக் கீழ் நிற்பீர் ! *
வெங்கண் மாகளிறுந்தி விண்ணியேற்ற
விறல் மன்னர் திறலழிய வெம்மா வுய்த்த *
செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 6.6.4 திருநறையூர்
அன்றுலக மூன்றினையும் அளந்து, வேறோர்
அரியுருவாய் இரணியனதாகம் கீண்டு *
வென்றவனை விண்ணுலகில் செலவுய்த்தாற்கு
விருந்தாவீர் ! மேலெழுந்து விலங்கல் பாய்ந்து *
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப்
புலம்பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் *
தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 6.6.5 திருநறையூர்
தன்னாலே தன்னுருவம் பயந்ததானாய்த்
தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய் *
தன்னாலே தன்னுருவின் மூர்த்தி மூன்றாய்த்
தானாயனாயினான் சரணென்று உய்வீர் ! *
மின்னாடு வேலேந்து விளைந்த வேளை
விண்ணேறத் தனிவேலுய்த்து உலகமாண்ட *
தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 6.6.6 திருநறையூர்
முலைத் தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி
முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே *
இலைத் தடத்த குழலூதி, ஆயர் மாதர்
இனவளை கொண்டானடிக் கீழ் எய்துகிற்பீர் ! *
மலைத்தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய
வளங்கொடுக்கும் வருபுனல் அம்பொன்னி நாடன் *
சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 6.6.7 திருநறையூர்,
துவாரகை (துவரை)
முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன்
மன்னெல்லாம் முன்னவியச் சென்று * வென்றிச்
செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன்
சிரம் துணித்தான் திருவடி, நும் சென்னி வைப்பீர் ! *
இருக்கிலங்கு திருமொழி வாயெண் தோளீசற்கு
எழில்மாடம் எழுபது செய்து உலகமாண்ட *
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 6.6.8 திருநறையூர்
தாராளன் தண்ணரங்கவாளன், பூமேல்
தனியாளன் முனியாளரேத்த நின்ற
பேராளன் * ஆயிரம் பேருடைய வாளன்
பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர் ! *
பாராளர் அவரிவரென்று அழுந்தை யேற்ற
படை மன்னருடல் துணியப் பரிமா வுய்த்த
தேராளன் * கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 6.6.9 திருவரங்கம்,
திருநறையூர்
செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும்
திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலைப் *
பொய்ம்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன்
புலமங்கைக் குலவேந்தன் புலமையார்ந்த *
அம்மொழிவாய்க் கலிகன்றி இன்பப் பாடல்
பாடுவார், வியனுலகில் நமனார் பாடி *
வெம்மொழி கேட்டு அஞ்சாதே, மெய்ம்மை சொல்லில்
விண்ணவர்க்கு விருந்தாகும் பெருந்தக்கோரே. 6.6.10 திருநறையூர்