பெரிய திருமொழி
ஐந்தாம் பத்து
இரண்டாம் திருமொழி
தாம் தம், பெருமையறியார் * தூது
வேந்தர்க்காய, வேந்தரூர் போல் *
காந்தள் விரல், மென்கலை நன்மடவார் *
கூந்தல் கமழும், கூடலூரே. 5.2.1 கூடலூர்
செறும், திண்திமி லேறுடைய * பின்னை
பெறும் தண் கோலம், பெற்றாரூர் போல் *
நறும் தண் தீந்தேன், உண்ட வண்டு *
குறிஞ்சி பாடும், கூடலூரே. 5.2.2 கூடலூர்
பிள்ளை யுருவாய்த், தயிருண்டு * அடியே
னுள்ளம் புகுந்த, ஒருவரூர் போல் *
கள்ள நாரை, வயலுள் * கயல் மீன்
கொள்ளை கொள்ளும், கூடலூரே. 5.2.3 கூடலூர்
கூற்றேருருவின், குறளாய் * நிலம் நீர்
ஏற்றான் எந்தை, பெருமானூர் போல் *
சேற்றேருழவர், கோதைப் போதூண் *
கோல் தேன் முரலும், கூடலூரே. 5.2.4 கூடலூர்
தொண்டர் பரவச், சுடர் சென்றணவ *
அண்டத்து அமரும், அடிகளூர் போல் *
வண்டல லையுள், கெண்டை மிளிரக் *
கொண்டல் அதிரும், கூடலூரே. 5.2.5 கூடலூர்
தக்கன் வேள்வி, தகர்த்த தலைவன் *
துக்கம் துடைத்த, துணைவரூர் போல் *
எக்கலிடு, நுண் மணல் மேல் * எங்கும்
கொக்கின் பழம் வீழ், கூடலூரே. 5.2.6 கூடலூர்
கருந்தண் கடலும், மலையும் உலகும் *
அருந்தும் அடிகள், அமரும் ஊர் போல் *
பெருந்தண் முல்லைப், பிள்ளை யோடிக் *
குருந்தம் தழுவும், கூடலூரே. 5.2.7 கூடலூர்
கலைவாழ் பிணையோடு, அணையும் * திருநீர்
மலைவாழ் எந்தை, மருவும் ஊர் போல் *
இலைதாழ், தெங்கின் மேல் நின்று * இளநீர்க்
குலை தாழ் கிடங்கின், கூடலூரே. 5.2.8 கூடலூர்,
திருநீர்மலை
பெருகு காதல், அடியேனுள்ளம் *
உருகப் புகுந்த, ஒருவரூர் போல் *
அருகு கைதை மலரக் * கெண்டை
குருகென்றஞ்சும், கூடலூரே. 5.2.9 கூடலூர்
காவிப்பெருநீர் வண்ணன் * கண்ணன்
மேவித் திகழும், கூடலூர் மேல் *
கோவைத் தமிழால், கலியன் சொன்ன *
பாவைப் பாடப், பாவம் போமே. 5.2.10 கூடலூர்