பெரிய திருமொழி
ஐந்தாம் பத்து
ஏழாம் திருமொழி
பண்டை நான்மறையும் வேள்வியும், கேள்விப்
பதங்களும் பதங்களின் பொருளும் *
பிண்டமாய் விரிந்த பிறங்கொளி அனலும்
பெருகிய புனலொடு நிலனும் *
கொண்டல் மாருதமும் குரைகடலேழும்
ஏழுமாமலைகளும் விசும்பும் *
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான்
அரங்கமாநகரமர்ந்தானே. 5.7.1 திருவரங்கம்
இந்திரன் பிரமன் ஈசனென்றிவர்கள்
எண்ணில் பல்குணங்களே இயற்றத் *
தந்தையும் தாயும் மக்களும் மிக்க
சுற்றமும் சுற்றி நின்றகலாப்
பந்தமும் * பந்தமறுப்பதோர் மருந்தும்
பான்மையும் பல்லுயிர்க்கெல்லாம் *
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான்
அரங்கமாநகரமர்ந்தானே. 5.7.2 திருவரங்கம்
மன்னுமா நிலனும் மலைகளும் கடலும்
வானமும் தானவருலகும் *
துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித்
தொல்லை நான்மறைகளும் மறையப் *
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப்
பிறங்கிருள் நிறங்கெட * ஒருநாள்
அன்னமாயன்று அங்கரு மறை பயந்தான்
அரங்கமாநகரமர்ந்தானே. 5.7.3 திருவரங்கம்
மாயிருங் குன்றமொன்று மத்தாக
மாசுண மதனொடும் அளவிப் *
பாயிரும் பெளவம் பகடு விண்டலறப்
படுதிரை விசும்பிடைப் படரச் *
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும்
தேவரும் தாமுடன் திசைப்ப *
ஆயிரந்தோளால் அலைகடல் கடைந்தான்
அரங்கமாநகரமர்ந்தானே. 5.7.4 திருவரங்கம்
எங்ஙனே யுய்வர் ? தானவர் நினைந்தால்,
இரணியனிலங்கு பூணகலம் *
பொங்கு வெங்குருதி பொன்மலை பிளந்து
பொழிதரும் அருவி யொத்திழிய *
வெங்கண் வாளெயிற்றோர் வெள்ளி மாவிலங்கல்
விண்ணுறக் கனல் விழித்தெழுந்தது *
அங்ஙனே யொக்க அரியுருவானான்
அரங்கமாநகரமர்ந்தானே. 5.7.5 திருவரங்கம்
ஆயிரங் குன்றம் சென்று தொக்கனைய
அடல்புரை எழில் திகழ் திரள்தோள்
ஆயிரந்துணிய * அடல் மழுப்பற்றி
மற்றவனகல் விசும்பணைய *
ஆயிரம் பெயரால் அமரர் சென்றிறைஞ்ச
அறிதுயிலலைகடல் நடுவே *
ஆயிரஞ் சுடர்வாய் அரவணைத் துயின்றான்
அரங்கமாநகரமர்ந்தானே. 5.7.6 திருவரங்கம்,
திருப்பாற்கடல்
சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த
கொடுமையிற் கடுவிசை யரக்கன் *
எரிவிழித் திலங்கு, மணிமுடி பொடி செய்து
இலங்கை பாழ் படுப்பதற்கெண்ணி *
வரிசிலை வளைய, அடுசரம் துரந்து
மறிகடல் நெறிபட * மலையால்
அரிகுலம் பணிகொண்டு அலைகட லடைத்தான்
அரங்கமாநகரமர்ந்தானே. 5.7.7 திருவரங்கம்
ஊழியாய் ஓமத்துச்சியாய், ஒருகா
லுடைய தேரொருவனாய் * உலகில்
சூழிமால் யானைத் துயர் கெடுத்து
இலங்கை மலங்க அன்று அடுசரம் துரந்து *
பாழியால் மிக்க பார்த்தனுக்கருளிப்
பகலவனொளி கெடப் * பகலே
ஆழியால் அன்றங்கு ஆழியை மறைத்தான்
அரங்கமாநகரமர்ந்தானே. 5.7.8 திருவரங்கம்
பேயினார் முலையூண் பிள்ளையாய், ஒருகால்
பெருநிலம் விழுங்கி * அது உமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து
மணிமுடி வானவர் தமக்குச்
சேயனாய் * அடியேற்கு அணியனாய் வந்து
என் சிந்தையுள், வெந்துயரறுக்கும்
ஆயனாய் * அன்று குன்றமொன் றெடுத்தான்
அரங்கமாநகரமர்ந்தானே. 5.7.9 திருவரங்கம்
பொன்னும் மாமணியும் முத்தமும் சுமந்து
பொருதிரை மாநதிபுடை சூழ்ந்து *
அன்னமாடுலவும் அலைபுனல் சூழ்ந்த
அரங்கமாநகரமர்ந்தானை *
மன்னு மாமாட மங்கையர் தலைவன்
மானவேற் கலியன் வாயொலிகள் *
பன்னிய பனுவல் பாடுவார், நாளும்
பழவினைப் பற்றறுப்பாரே. 5.7.10 திருவரங்கம்