பெரிய திருமொழி
ஐந்தாம் பத்து
எட்டாம் திருமொழி
ஏழை ஏதலன் கீழ்மகனென்னாது
இரங்கி, மற்று அவற்கு இன்னருள் சுரந்து *
மாழை மான்மடநோக்கி, உன் தோழி
உம்பி எம்பி என்றொழிந்திலை * உகந்த
தோழன் நீ எனக்கு, இங்கு ஒழியென்ற
சொற்கள் வந்து அடியேன் மனத்திருந்திட *
ஆழிவண்ண ! நின்னடியிணை யடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே! 5.8.1 திருவரங்கம்
வாதமாமகன் மர்க்கடம் விலங்கு
மற்றோர் சாதி யென்றொழிந்திலை * உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச், செய்
தகவினுக்கு இல்லை கைம்மாறென்று *
கோதில் வாய்மையினா யொடும், உடனே
உண்பன் நானென்ற ஒண்பொருள் * எனக்கும்
ஆதல் வேண்டு மென்று அடியிணை யடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே! 5.8.2 திருவரங்கம்
கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை
வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணம் * ஓர் முழுவலி முதலை
பற்ற, மற்றது நின் சரண் நினைப்பக் *
கொடியவாய் விலங்கின் னுயிர் மலங்கக்
கொண்ட சீற்றமொன் றுண்டுளதறிந்து * உன்
அடியனேனும் வந்து அடியிணை யடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே! 5.8.3 திருவரங்கம்
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம்
வெருவி வந்து நின் சரணெனச் சரணா *
நெஞ்சில் கொண்டு நின்னஞ்சிறைப் பறவைக்கு
அடைக்கலம் கொடுத்து, அருள் செய்ததறிந்து *
வெஞ்சொலாளர்கள் நமன் தமர் கடியர்
கொடிய செய்வனவுள * அதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடியிணை யடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே! 5.8.4 திருவரங்கம்
மாக மாநிலம் முழுதும் வந்திறைஞ்சும்
மலரடிக் கண்ட மாமறையாளன் *
தோகை மாமயிலன்னவரின்பம்.
துற்றிலாமையில் அத்த ! இங்கு ஒழிந்து *
போகம் நீயெய்திப் பின்னும் நம்மிடைக்கே
போதுவாயென்ற பொன்னருள் * எனக்கும்
ஆக வேண்டுமென்று அடியிணை யடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே ! 5.8.5 திருவரங்கம்
மன்னு நான்மறை மாமுனி பெற்ற
மைந்தனை, மதியாத வெங்கூற்றந்
தன்னை யஞ்சி * நின் சரணெனச் சரணாய்த்
தகவில் காலனை யுக முனிந்தொழியா *
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம்
எண்ணிய பேரருள் * எனக்கும்
அன்னதாகுமென்று அடியிணை யடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே ! 5.8.6 திருவரங்கம்
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்
உனக்கு முன் தந்த, அந்தணனொருவன் *
காதலென் மகன் புகலிடம் காணேன்
கண்டு நீ தருவா யெனக்கு என்று *
கோதில் வாய்மையினான் உனை வேண்டிய
குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய் *
ஆதலால் வந்து உன் னடியிணை யடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே ! 5.8.7 திருவரங்கம்
வேதவாய் மொழி அந்தண னொருவன்
எந்தை ! நின் சரண் * என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடியதோர் தெய்வம் கொண்டொளிக்கு மென்றழைப்ப *
ஏதலார் முன்னே இன்னருள் அவற்குச் செய்து
உன் மக்கள் மற்றிவரென்று கொடுத்தாய் *
ஆதலால் வந்து உன் னடியிணை யடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே ! 5.8.8 திருவரங்கம்
துளங்கு நீண்முடி யரசர் தம் குரிசில்
தொண்டை மன்னவன் திண்திறலொருவற்கு *
உளங்கொளன்பினொடு இன்னருள் சுரந்து
அங்கோடு நாழிகை யேழுடனிருப்ப *
வளங்கொள் மந்திரம் மற்றவற்கு, அருளிச்
செய்தவாறு அடியே னறிந்து * உலகம்
அளந்த பொன்னடியே யடைந்துய்ந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே ! 5.8.9 திருவரங்கம்
மாட மாளிகை சூழ் திருமங்கை
மன்னன், ஒன்னலர் தங்களை வெல்லும் *
ஆடல் மாவலவன் கலிகன்றி
அணிபொழில் திருவரங்கத்தம்மானை *
நீடுதொல் புகழாழி வல்லானை
எந்தையை நெடுமாலை நினைந்த *
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் !
பாட நும்மிடைப் பாவம் நில்லாவே. 5.8.10 திருவரங்கம்