பெரிய திருமொழி
ஏழாம் பத்து
முதல் திருமொழி
கறவா மடநாகு, தன் கன்று உள்ளினாற் போல் *
மறவாது அடியேன், உன்னையே அழைக்கின்றேன் *
நறவார் பொழில் சூழ், நறையூர் நின்ற நம்பி ! *
பிறவாமை எனைப் பணி, எந்தை பிரானே ! 7.1.1 திருநறையூர்
வற்றா முது நீரொடு, மால் வரை யேழும் *
துற்றாக முன் துற்றிய, தொல் புகழோனே ! *
அற்றேன் அடியேன், உன்னையே அழைக்கின்றேன் *
பெற்றேன் அருள் தந்திடு, என் எந்தை பிரானே ! 7.1.2 திருநறையூர்
தாரேன் பிறர்க்கு, உன்னருள் என்னிடை வைத்தாய் *
ஆரேன், அதுவே பருகிக் களிக்கின்றேன் *
காரேய் கடலே மலையே திருக்கோட்டி
யூரே * உகந்தாயை, உகந்து அடியேனே. 7.1.3 திருநறையூர்,
திருக்கோட்டியூர்,
திருவேங்கடம் திருப்பதி,
திருப்பாற்கடல்
புள் வாய் பிளந்த புனிதா ! என்று அழைக்க *
உள்ளே நின்று, என்னுள்ளம் குளிரும் ஒருவா ! *
கள்வா ! கடல்மல்லைக் கிடந்த கரும்பே ! *
வள்ளால் ! உன்னை எங்ஙனம், நான் மறக்கேனே? 7.1.4 திருநறையூர்,
திருக்கடல்மல்லை
வில்லேர் நுதல், வேல் நெடுங்கண்ணியும் நீயும் *
கல்லார் கடுங்கானம் திரிந்த, களிறே ! *
நல்லாய் ! நரநாரணனே! எங்கள் நம்பி ! *
சொல்லாய் உன்னை யான், வணங்கித் தொழுமாறே. 7.1.5 திருநறையூர்
பனியேய் பரங்குன்றின், பவளத்திரளே ! *
முனியே ! திருமூழிக்களத்து விளக்கே ! *
இனியாய தொண்டரோம் பருகு, இன்னமுதாய
கனியே ! * உன்னைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே. 7.1.6 திருநறையூர்,
திருமூழிக்களம்,
திருப்பிரிதி
கதியேலில்லை, நின்னருளல்லது எனக்கு *
நிதியே ! திருநீர்மலை நித்திலத்தொத்தே ! *
பதியே ! பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே ! * உன்னைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே. 7.1.7 திருநறையூர்,
திருநீர்மலை
அத்தா ! அரியே ! என்று உன்னை அழைக்கப் *
பித்தா வென்று பேசுகின்றார், பிறர் என்னை *
முத்தே ! மணிமாணிக்கமே ! முளைக்கின்ற
வித்தே ! * உன்னை எங்ஙனம், நான் விடுகேனே? 7.1.8 திருநறையூர்
தூயாய் ! சுடர் மாமதி போல் உயிர்க்கெல்லாம் *
தாயாயளிக்கின்ற, தண் தாமரைக் கண்ணா ! *
ஆயா ! அலை நீருலகேழும், முன்னுண்ட
வாயா ! உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே ? 7.1.9 திருநறையூர்
வண்டார் பொழில் சூழ், நறையூர் நம்பிக்கு * என்றும்
தொண்டாய கலியன், ஒலி செய் தமிழ் மாலை *
தொண்டீர்! இவை பாடுமின், பாடி நின்றாட *
உண்டே விசும்பு, உந்தமக்கு இல்லை துயரே. 7.1.10 திருநறையூர்