பெரிய திருமொழி
ஏழாம் பத்து
மூன்றாம் திருமொழி
சினவில் செங்கணரக்கர் உயிர்மாளச்
செற்ற வில்லியென்று, கற்றவர் தந்தம்
மனமுள் கொண்டு * என்றும் எப்போதும் நின்றேத்தும்
மாமுனியை, மரமேழெய்த மைந்தனை *
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கரியானை
நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியை
கனவில் கண்டேன் * இன்று கண்டமையால், என்
கண்ணிணைகள் களிப்பக் களித்தேனே. 7.3.1 திருநறையூர்
தாய் நினைந்த கன்றே யொக்க, என்னையும்
தன்னையே நினைக்கச்செய்து * தான் எனக்
காய் நினைந்தருள் செய்யும் அப்பனை
அன்று இவ்வையக முண்டுமிழ்ந்திட்ட
வாயனை * மகரக்குழைக் காதனை
மைந்தனை மதிட்கோவ லிடைகழி
ஆயனை * அமரர்க் கரியேற்றை, என்
அன்பனை யன்றி ஆதரியேனே. 7.3.2 திருநறையூர்,
திருக்கோவலூர்
வந்த நாள் வந்து என்நெஞ்சிடம் கொண்டான்
மற்றோர் நெஞ்சறியான் * அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென்புலர்க்கு என்னைச்
சேர்கொடான், இது சிக்கெனப் பெற்றேன் *
கொந்துலாம் பொழில்சூழ் குடந்தைத் தலைக்
கோவினைக், குடமாடிய கூத்தனை *
எந்தையை எந்தை தந்தை தம்மானை
எம்பிரானை எத்தால் மறக்கேனே ? 7.3.3 திருக்குடந்தை (கும்பகோணம்),
திருநறையூர்
உரங்களால் இயன்ற மன்னர் மாளப்
பாரதத்து ஒரு தேரைவர்க்காய்ச் சென்று *
இரங்கி யூர்ந்து அவர்க்கு இன்னருள் செய்யும்
எம்பிரானை * வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி
ஆழிசூழிலங்கை மலங்கச் சென்று
சரங்களாண்ட * தண்தாமரைக் கண்ணனுக்கன்றி
என்மனம் தாழ்ந்து நில்லாதே. 7.3.4 திருவரங்கம்,
திருநறையூர்,
பரமபதம்
ஆங்கு வெந்நரகத்து அழுந்தும் போது
அஞ்சேலென்று அடியேனை அங்கே வந்து
தாங்கு * தாமரையன்ன பொன்னாரடி
எம்பிரானை, உம்பர்க்கணியாய் நின்ற
வேங்கடத்தரியைப் * பரிகீறியை
வெண்ணெயுண்டு உரலினிடை யாப்புண்ட
தீங்கரும்பினைத் * தேனை நன்பாலினை யன்றி
என் மனம் சிந்தை செய்யாதே. 7.3.5 திருநறையூர்,
திருவேங்கடம் திருப்பதி
எட்டனைப் பொழுதாகிலும், என்றும்
என்மனத்தகலாதிருக்கும் புகழ் *
தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின்
தாழ் பொழில் திருமாலிருஞ்சோலையங்
கட்டியைக் * கரும்பீன்ற இன்சாற்றைக்
காதலால் மறை நான்கும் முன்னோதிய
பட்டனை * பரவைத் துயிலேற்றை, என்
பண்பனை யன்றிப் பாடல் செய்யேனே. 7.3.6 திருநறையூர்,
திருமாலிருஞ்சோலை,
திருப்பாற்கடல்
பண்ணினின் மொழி யாழ் நரம்பில் பெற்ற
பாலையாகி, இங்கே புகுந்து * என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடங்கொண்டான்
கொண்ட பின் மறையோர் மனந்தன்னுள் *
விண்ணுளார் பெருமானை எம்மானை
வீங்குநீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் * மாமணி வண்ணன் எம் அண்ணல்
வண்ணமேயன்றி வாயுரையாதே. 7.3.7 திருநறையூர்
இனி எப்பாவம் வந்தெய்தும் ? சொல்லீர்
எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் * அடும்
துணியைத் தீர்த்து இன்பமே தருகின்றது, ஓர்
தோற்றத் தொன்னெறியை * வையம் தொழப்படும்
முனியை, வானவரால் வணங்கப் படும்
முத்தினைப், பத்தர்தாம் நுகர்கின்றதோர்
கனியை * காதல் செய்து என்னுள்ளம் கொண்ட
கள்வனை, இன்று கண்டு கொண்டேனே. 7.3.8 திருநறையூர்
என் செய்கேன் அடியேன் ? உரையீர் இதற்கு, என்றும்
என் மனத்தே இருக்கும் புகழ் *
தஞ்சை யாளியைப் பொன் பெயரோன்
நெஞ்சம் அன்று இடந்தவனைத் தழலே புரை *
மின்செய் வாளரக்கன் நகர் பாழ்படச்
சூழ்கடல் சிறை வைத்து * இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை, மணிக் குன்றினையன்றி
என் மனம் போற்றி யென்னாதே. 7.3.9 தஞ்சை மாமணிக் கோயில்,
திருநறையூர்
தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர்
தோன்றல், வாள் கலியன் திருவாலி
நாடன் * நன்னறையூர் நின்ற நம்பி தன்
நல்ல மாமலர்ச் சேவடி, சென்னியில்
சூடியும் தொழுதும் எழுந்தாடியும் *
தொண்டர்கட்கு, அவன் சொன்ன சொல் மாலை *
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் !
பாட நும்மிடைப் பாவம் நில்லாவே. 7.3.10 திருநறையூர்