பெரிய திருமொழி
ஏழாம் பத்து
நான்காம் திருமொழி
கண் சோர வெங்குருதி வந்திழிய
வெந்தழல் போல் கூந்தலாளை *
மண்சேர முலையுண்ட மாமதலாய் !
வானவர் தம் கோவே ! என்று *
விண் சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு
மணிமாடமல்கு * செல்வத்
தண்சேறை யெம்பெருமான் தாள்
தொழுவார் காண்மின் என் தலை மேலாரே. 7.4.1 திருச்சேறை
அம்புருவ வரிநெடுங்கண், அலர் மகளை
வரை யகலத்தமர்ந்து * மல்லல்
கொம்புருவ விளங்கனி மேல்
இளங்கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம் *
வம்பலரும் தண்சோலை, வண்சேறை
வானுந்து கோயில் மேய *
எம்பெருமான் தாள் தொழுவார்
எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே. 7.4.2 திருச்சேறை
மீதோடி வாளெயிறு மின்னிலக
முன்விலகும் உருவினாளைக் *
காதோடு கொடி மூக்கன்றுடனறுத்த
கைத்தலத்தா ! என்று நின்று *
தாதோடு வண்டலம்பும்
தண்சேறை யெம்பெருமான் தாளை யேத்திப்
போதோடு புனல் தூவும் புண்ணியரே
விண்ணவரில் பொலிகின்றாரே. 7.4.3 திருச்சேறை
தேராளும் வாளரக்கன்
தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப் *
போராளும் சிலையதனால், பொருகணைகள்
போக்குவித்தாய் ! என்று * நாளும்
தாராளும் வரைமார்பன்
தண்சேறை யெம்பெருமான் * உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை
ஒருகாலும் பிரிகிலேனே. 7.4.4 திருச்சேறை
வந்திக்கும் மற்றவர்க்கும், மாசுடம்பில்
வல் அமணர் தமக்கும் அல்லேன் *
முந்திச் சென்றரி யுருவாய், இரணியனை
முரணழித்த முதல்வர்க்கல்லால் *
சந்தப் பூமலர்ச் சோலைத்
தண்சேறை யெம்பெருமான் தாளை * நாளும்
சிந்திப்பார்க்கு என்னுள்ளம் தேனூறி
எப்பொழுதும் தித்திக்குமே. 7.4.5 திருச்சேறை
பண்டு ஏனமாய் உலகை, அன்றிடந்த
பண்பாளா ! என்று நின்று *
தொண்டானேன், திருவடியே துணையல்லால்
துணையிலேன் சொல்லுகின்றேன் *
வண்டேந்தும் மலர்ப்புறவில், வண்சேறை
யெம்பெருமானடியார் தம்மைக்
கண்டேனுக்கு * இதுகாணீர் என்நெஞ்சும்
கண்ணிணையும் களிக்குமாறே. 7.4.6 திருச்சேறை
பைவிரியும் வரியரவில், படுகடலுள்
துயிலமர்ந்த பண்பா ! என்றும் *
மைவிரியும் மணிவரை போல் மாயவனே !
என்றென்றும் * வண்டார் நீலம்
செய்விரியும், தண்சேறை யெம்பெருமான்
திருவடியைச் சிந்தித்தேற்கு * என்
ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு
ஆளாம் என் அன்பு தானே. 7.4.7 திருச்சேறை,
திருப்பாற்கடல்
உண்ணாது வெங்கூற்றம்
ஓவாத பாவங்கள் சேரா * மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும்
மென்தளிர் போலடியினானைப் *
பண்ணார வண்டியம்பும்
பைம்பொழில்சூழ் தண்சேறை யம்மான் தன்னைக் *
கண்ணாரக் கண்டுருகிக்
கையாரத் தொழுவாரைக் கருதுங்காலே. 7.4.8 திருச்சேறை
கள்ளத்தேன் பொய்யகத்தேனாதலால்
போதொரு கால் கவலை யென்னும் *
வெள்ளத்தேற்கு என்கொலோ?
விளை வயலுள் கருநீலம் களைஞர் தாளால்
தள்ளத் * தேன்மண நாறும்
தண்சேறை யெம்பெருமான் தாளை * நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு, இது காணீர்
என்னுள்ளம் உருகுமாறே. 7.4.9 திருச்சேறை
பூமாண் சேர் கருங்குழலார் போல் நடந்து
வயல் நின்ற பெடையோடு அன்னம் *
தேமாவினின் னிழலில் கண் துயிலும்
தண்சேறை யம்மான் தன்னை *
வாமான் தேர்ப் பரகாலன் கலிகன்றி
ஒலிமாலை கொண்டு தொண்டீர் ! *
தூமாண்சேர் பொன்னடி மேல் சூட்டுமின்
நும் துணைக் கையால் தொழுது நின்றே. 7.4.10 திருச்சேறை