பெரிய திருமொழி
ஏழாம் பத்து
ஐந்தாம் திருமொழி
தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ * நள்ளிருட்கண்
வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும் *
முந்தி வானம் மழை பொழியும் மூவாவுருவின் மறையாளர் *
அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே. 7.5.1 திருவழுந்தூர்
பாரித்தெழுந்த படை மன்னர் தம்மை மாளப் * பாரதத்துத்
தேரில் பாகனா யூர்ந்த தேவ தேவனூர் போலும் *
நீரில் பணைத்த நெடுவாளைக்கு அஞ்சிப் போன குருகினங்கள் *
ஆரல்கவுளோடு அருகணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே. 7.5.2 திருவழுந்தூர்
செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக் கிறைவன்
சிரங்கள் ஐயிரண்டும் *
உம்பர் வாளிக்கு இலக்காக உதிர்த்த வுரவோனூர் போலும் *
கொம்பிலார்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டினங்கள் *
அம்பராவும் கண் மடவார் ஐம்பாலணையும் அழுந்தூரே. 7.5.3 திருவழுந்தூர்
வெள்ளத்துள் ஓராலிலைமேல் மேவிஅடியேன் மனம்புகுந்து*என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார், நின்ற ஊர் போலும் *
புள்ளுப் பிள்ளைக் கிரை தேடிப் போன, காதல் பெடையோடும் *
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே. 7.5.4 திருவழுந்தூர்
பகலும் இரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய் *
நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர் போலும் *
துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல் வாய் *
அகிலின் புகையால் முகிலேய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே. 7.5.5 திருவழுந்தூர்
ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி *
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் *
நீடுமாடத் தனிச்சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ *
ஆடலரவத் தார்ப்பு ஓவா அணியார் வீதி அழுந்தூரே. 7.5.6 திருவழுந்தூர்
மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி
அடியேன் மனம் புகுந்து * என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும் *
வேலைக் கடல் போல் நெடுவீதி
விண்தோய் சுதை வெண் மணி மாடத்து *
ஆலைப் புகையால் அழற் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே. 7.5.7 திருவழுந்தூர்
வஞ்சி மருங்குலிடை நோவ மணந்து நின்ற கனவகத்து * என்
நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் நின்ற ஊர் போலும் *
பஞ்சியன்ன மெல்லடி நற்பாவைமார்கள் * ஆடகத்தின்
அஞ்சிலம்பி னார்ப்பு ஓவா அணியார் வீதி அழுந்தூரே. 7.5.8 திருவழுந்தூர்
என்னைம் புலனும் எழிலும் கொண்டு
இங்கே நெருநல் எழுந்தருளி *
பொன்னங் கலைகள் மெலிவெய்தப் போன, புனிதர் ஊர் போலும் *
மன்னு முதுநீரரவிந்த மலர் மேல் வரிவண்டு இசை பாட *
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார்வயல்சூழ் அழுந்தூரே. 7.5.9 திருவழுந்தூர்
நெல்லில் குவளை கண்காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட *
அல்லிக் கமலம் முகங்காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை *
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன் *
சொல்லில் பொலிந்த தமிழ் மாலை சொல்லப், பாவம் நில்லாவே. 7.5.10 திருவழுந்தூர்