பெரிய திருமொழி
எட்டாம் பத்து
முதல் திருமொழி
சிலை யிலங்கு பொன்னாழி
திண் படை தண்டு ஒண்சங்க மென்கின்றாளால் *
மலை யிலங்கு தோள் நான்கே
மற்றவனுக் கெற்றே காணென்கின்றாளால் *
முலையிலங்கு பூம்பயலை
முன்போட, அன்போடி யிருக்கின்றாளால் *
கலை யிலங்கு மொழியாளர்
கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ? 8.1.1 திருக்கண்ணபுரம்
செருவரை முன் ஆசறுத்த சிலையன்றோ?
கைத்தலத்தது என்கின்றாளால் *
பொருவரை முன் போர் தொலைத்த
பொன்னாழி, மற்றொரு கை என்கின்றாளால் *
ஒருவரையும் நின்னொப்பார்
ஒப்பிலா என்னப்பா ! என்கின்றாளால் *
கருவரை போல் நின்றானைக்
கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ? 8.1.2 திருக்கண்ணபுரம்
துன்னு மாமணி முடிமேல், துழாயலங்கல்
தோன்று மாலென்கின்றாளால் *
மின்னு மாமணி மகர குண்டலங்கள்
வில்வீசு மென்கின்றாளால் *
பொன்னின் மாமணியாரம்
அணியாகத்திலங்கு மாலென்கின்றாளால் *
கன்னி மாமதிள் புடைசூழ்
கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ? 8.1.3 திருக்கண்ணபுரம்
தாராய தண்துளப
வண்டுழுத வரை மார்ப னென்கின்றாளால் *
போரானைக் கொம்பொசித்த
புட்பாகன் என்னம்மா னென்கின்றாளால் *
ஆரானும் காண்மின்கள்
அம்பவளம் வாயவனுக் கென்கின்றாளால் *
கார்வானம் நின்றதிரும்
கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ? 8.1.4 திருக்கண்ணபுரம்
அடித்தலமும் தாமரையே
அங்கைகளும் பங்கயமே யென்கின்றாளால் *
முடித்தலமும் பொற்பூணும்
என்நெஞ்சத்துள் அகலா தென்கின்றாளால் *
வடித்தடங்கண் மலரவளோ
வரையாகத் துள்ளிருப்பா ளென்கின்றாளால் *
கடிக் கமலம் கள்ளுகுக்கும் *
கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ ? 8.1.5 திருக்கண்ணபுரம்
பேராயிரமுடைய பேராளன் பேராள னென்கின்றாளால் *
ஏரார் கனமகர குண்டலத்தன் எண்தோளனென்கின்றாளால் *
நீரார் மழை முகிலே நீள்வரையே ஒக்குமா லென்கின்றாளால் *
காரார் வயலமரும் கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ? 8.1.6 திருக்கண்ணபுரம்
செவ்வரத்த வுடையாடை
அதன் மேலோர் சிவளிகைக் கச்சு என்கின்றாளால் *
அவ்வரத்த வடியிணையும்
அங்கைகளும் பங்கயமே யென்கின்றாளால் *
மைவளர்க்கும் மணியுருவம்
மரதகமோ ! மழைமுகிலோ ! என்கின்றாளால் *
கைவளர்க்கும் அழலாளர்
கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ ? 8.1.7 திருக்கண்ணபுரம்
கொற்றப் புள்ளொன்றேறி
மன்றூடே வருகின்றா னென்கின்றாளால் *
வெற்றிப் போர் இந்திரற்கும்
இந்திரனே யொக்குமா லென்கின்றாளால் *
பெற்றக்கால் அவனாகம்
பெண் பிறந்தோ முய்யோமோ ! என்கின்றாளால் *
கற்ற நூல் மறையாளர்
கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ? 8.1.8 திருக்கண்ணபுரம்,
திருப்பாற்கடல்
வண்டமரும் வனமாலை
மணிமுடி மேல் மணநாறு மென்கின்றாளால் *
உண்டிவர் பால் அன்பெனக் கென்று ஒருகாலும்
பிரிகிலே னென்கின்றாளால் *
பண்டிவரைக் கண்டறிவது எவ்வூரில் ?
யாமென்றே பயில்கின்றாளால் *
கண்டவர் தம் மனம் வழங்கும்
கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ? 8.1.9 திருக்கண்ணபுரம்
மாவளரு மென்னோக்கி
மாதராள், மாயவனைக் கண்டாளென்று *
காவளரும் கடிபொழில் சூழ்
கண்ணபுரத்தம்மானைக் கலியன் சொன்ன *
பாவளரும் தமிழ் மாலை
பன்னிய நூல் இவை யைந்து மைந்தும் வல்லார் *
பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில்
மன்னவராய்ப் புகழ்தக்கோரே. 8.1.10 திருக்கண்ணபுரம்