பெரிய திருமொழி
எட்டாம் பத்து
இரண்டாம் திருமொழி
தெள்ளியீர்! தேவர்க்கும் தேவர், திருத்தக்கீர் *
வெள்ளியீர் ! வெய்ய விழுநிதி வண்ணர் * ஓ !
துள்ளுநீர்க் கண்ணபுரம், தொழுதாளிவள்
கள்வியோ ! * கைவளை கொள்வது, தக்கதே ! 8.2.1 திருக்கண்ணபுரம்
நீணிலா முற்றத்து நின்று, இவள் நோக்கினாள் *
காணுமோ ! கண்ணபுர மென்று காட்டினாள் *
பாணனார் திண்ண மிருக்க, இனி இவள்
நாணுமோ ? * நன்று நன்று, நறையூரர்க்கே. 8.2.2 திருக்கண்ணபுரம்,
திருநறையூர்
அருவி சோர் வேங்கடம் நீர்மலை யென்று, வாய்
வெருவினாள் * மெய்யம் வினவி யிருக்கின்றாள் *
பெருகு சீர்க், கண்ணபுர மென்று பேசினாள் *
உருகினாள் உள் மெலிந்தாள், இது என் கொலோ? 8.2.3 திருக்கண்ணபுரம்,
திருமெய்யம்,
திருநீர்மலை,
திருவேங்கடம் திருப்பதி
உண்ணும் நாளில்லை, உறக்கமும் தானில்லை *
பெண்மையும் சால நிறைந்திலள், பேதை தான் *
கண்ணனூர் கண்ணபுரம் தொழும், கார்க்கடல்
வண்ணர் மேல் * எண்ணம் இவட்கு, இது என் கொலோ? 8.2.4 திருக்கண்ணபுரம்
கண்ணனூர் கண்ணபுரம், தொழும் காரிகை *
பெண்மையும், தன்னுடை உண்மை உரைக்கின்றாள் *
வெண்ணெயுண்டு ஆப்புண்ட, வண்ணம் விளம்பினால் *
வண்ணமும் பொன்னிறமாவது, ஒழியுமே. 8.2.5 திருக்கண்ணபுரம்
வடவரை நின்றும் வந்து, இன்று கணபுரம் *
இடவகை கொள்வது, யாமென்று பேசினாள் *
மடவரல் மாதர் என்பேதை, இவர்க்கு இவள்
கடவதென் ? * கண்துயில் இன்று, இவர் கொள்ளவே. 8.2.6 திருக்கண்ணபுரம்
தரங்க நீர் பேசினும், தண்மதி காயினும் *
இரங்குமோ? எத்தனை நாளிருந்து எள்கினாள் ? *
துரங்கம் வாய் கீண்டுகந்தானது, தொன்மையூர் *
அரங்கமே யென்பது, இவள் தனக்கு ஆசையே. 8.2.7 திருவரங்கம்,
திருக்கண்ணபுரம்
தொண்டெல்லாம் நின்னடியே, தொழுதுய்யுமா
கண்டு * தான் கணபுரம், தொழப் போயினாள் *
வண்டுலாம் கோதை என்பேதை, மணிநிறம்
கொண்டுதான் * கோயின்மை செய்வது, தக்கதே. 8.2.8 திருக்கண்ணபுரம்
முள்ளெயிறேய்ந்தில, கூழை முடி கொடா *
தெள்ளிய ளென்பதோர் தேசிலள், என் செய்கேன் ? *
கள்ளவிழ் சோலைக், கணபுரம் கை தொழும்
பிள்ளையைப் * பிள்ளை யென்று எண்ணப் பெறுவரே ? 8.2.9 திருக்கண்ணபுரம்
கார்மலி, கண்ணபுரத் தெம்மடிகளைப் *
பார்மலி மங்கையர் கோன், பரகாலன் சொல் *
சீர்மலி பாடல், இவை பத்தும் வல்லவர் *
நீர்மலி வையத்து, நீடு நிற்பார்களே. 8.2.10 திருக்கண்ணபுரம்