பெரிய திருமொழி
எட்டாம் பத்து
மூன்றாம் திருமொழி
கரை யெடுத்த சுரி சங்கும் கன பவளத் தெழு கொடியும் *
திரை யெடுத்து வருபுனல் சூழ் திருக்கண்ணபுரத்துறையும் *
விரை யெடுத்த துழாயலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர *
வரை யெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரிவளையே. 8.3.1 திருக்கண்ணபுரம்
அரிவிரவு முகிற் கணத்தால் அகிற் புகையால் வரையோடும் *
தெரிவரிய மணி மாடத் திருக்கண்ணபுரத்துறையும் *
வரியரவி னணைத் துயின்று மழை மதத்த சிறு தறுகண் *
கரி வெருவ மருப்பொசித்தாற்கு இழந்தேன் என் கனவளையே. 8.3.2 திருக்கண்ணபுரம்
துங்க மாமணி மாட நெடு முகட்டின் சூலிகை * போம்
திங்கள் மாமுகில் துணிக்கும் திருக்கண்ணபுரத்துறையும் *
பைங்கண் மால் விடை யடர்த்துப் பனிமதி கோள் விடுத்துகந்த *
செங்கண் மாலம்மானுக்கு இழந்தேன் என் செறிவளையே. 8.3.3 திருக்கண்ணபுரம்
கண மருவு மயிலகவு கடி பொழில் சூழ் நெடு மறுகில் *
திண மருவு கனமதிள் சூழ் திருக்கண்ணபுரத்துறையும் *
மண மருவு தோளாய்ச்சி ஆர்க்கப் போய் * உரலோடும்
புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே. 8.3.4 திருக்கண்ணபுரம்
வாயெடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள் *
தீயெடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்துறையும் *
தாயெடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடித் * தயிருண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரிவளையே. 8.3.5 திருக்கண்ணபுரம்
மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர் பவளம் *
திடலெடுத்துச் சுடரிமைக்கும் திருக்கண்ணபுரத்துறையும் *
அடலடர்த் தன்றிரணியனை முரணழிய * அணியுகிரால்
உடலெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என்னொளி வளையே. 8.3.6 திருக்கண்ணபுரம்
வண்டமரும் மலர்ப் புன்னை வரிநீழல் அணிமுத்தம் *
தெண்திரைகள் வரத் திரட்டும் திருக்கண்ணபுரத்துறையும் *
எண்திசையும் எழுகடலும் இருநிலனும் பெருவிசும்பும் *
உண்டுமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என்னொளி வளையே. 8.3.7 திருக்கண்ணபுரம்
கொங்குமலி கருங்குவளை கண்ணாகத் * தெண்கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக்கண்ணபுரத்துறையும் *
வங்கமலி தடங்கடலுள் வரியரவினணைத் துயின்ற *
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறிவளையே. 8.3.8 திருக்கண்ணபுரம்
வாராளும் இளங்கொங்கை நெடும்பணைத் தோள் மடப்பாவை *
சீராளும் வரை மார்பன் திருக்கண்ணபுரத்துறையும் *
பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாயரவணை மேல் *
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய்வளையே. 8.3.9 திருக்கண்ணபுரம்
தேமருவு பொழில் புடைசூழ் திருக்கண்ணபுரத்துறையும்
வாமனனை * மறிகடல்சூழ் வயலாலி வளநாடன் *
காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை *
நாமருவி இவை பாட வினையாய நண்ணாவே. 8.3.10 திருக்கண்ணபுரம்