பெரிய திருமொழி
எட்டாம் பத்து
ஆறாம் திருமொழி
தொண்டீர் ! உய்யும் வகை கண்டேன்
துளங்கா அரக்கர் துளங்க, முன் *
திண்தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திருமார்பன் *
வண்டார் கூந்தல் மலர்மங்கை வடிக்கண் மடந்தை மான் நோக்கம்
கண்டான் * கண்டு கொண்டுகந்த கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.1 திருக்கண்ணபுரம்
பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப்
பொன்ற அன்று புள்ளூர்ந்து *
பெருந்தோள் மாலி தலை புரளப் பேர்ந்த அரக்கர் * தென்னிலங்கை
இருந்தார் தம்மை உடன் கொண்டு
அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒளிப்பக் *
கருந்தாள் சிலை கைக்கொண்டானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.2 திருக்கண்ணபுரம்
வல்லியிடையாள் பொருட்டாக மதிள் நீரிலங்கையார் கோவை *
அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் *
வல்லாளரக்கர் குலப்பாவை வாட முனிதன் வேள்வியைக் *
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.3 திருக்கண்ணபுரம்
மல்லை முந்நீர் அதர்பட வரிவெஞ்சிலை கால் வளைவித்துக் *
கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோ னிலங்கை புகலுற்றுத் *
தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவக் *
கல்லால் கடலை யடைத்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.4 திருக்கண்ணபுரம்
ஆமையாகி அரியாகி அன்னமாகி * அந்தணர் தம்
ஓமமாகி ஊழியாகி உலகு சூழ்ந்த நெடும் புணரிச் *
சேமமதிள் சூழிலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து * முன்
காமற் பயந்தான் கருதுமூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.5 திருக்கண்ணபுரம்
வருந்தாதிரு நீ மடநெஞ்சே ! நம்மேல் வினைகள் வாரா * முன்
திருந்தா அரக்கர் தென்னிலங்கை செந்தீயுண்ணச் சிவந்து * ஒருநாள்
பெருந்தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி * முன்
கருந்தாள் களிறொன் றொசித்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.6 திருக்கண்ணபுரம்
இலையார் மலர்ப்பூம் பொய்கை வாய்
முதலை தன்னால் அடர்ப்புண்டு *
கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய
அதனுக்கு அருள் புரிந்தான் *
அலை நீரிலங்கைத் தசக்கிரீவற்கு
இளையோற்கு அரசை யருளி * முன்
கலை மாச்சிலையால் எய்தானூர்
கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.7 திருக்கண்ணபுரம்
மாலாய் மனமே அருந்துயரில் வருந்தாதிரு நீ * வலி மிக்க
காலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும் *
மாலார் விடையும் மதகரியும் மல்லருயிரும் மடிவித்துக் *
காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.8 திருக்கண்ணபுரம்
குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேரிடையாள் பொருட்டாக *
வன்தாள் விடையேழ் அன்றடர்த்த வானோர் பெருமான் மாமாயன் *
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகாற் சகடம் சினமழித்துக் *
கன்றால் விளங்கா யெறிந்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.9 திருக்கண்ணபுரம்
கருமா முகில் தோய் நெடுமாடக் கண்ணபுரத்தெம்மடிகளைத் *
திருமாமகளால் அருள் மாரி செழுநீராலி வளநாடன் *
மருவார் புயற்கைக் கலிகன்றி மங்கை வேந்தனொலி வல்லார் *
இருமா நிலத்துக்கரசாகி இமையோரிறைஞ்ச வாழ்வாரே. 8.6.10 திருக்கண்ணபுரம்